Homeஇதழ்கள்2026 இதழ்கள்இரண்டாம் தேர்வு

இரண்டாம் தேர்வு

டி.எச்.லாரன்ஸ்

தமிழில்: சுபஸ்ரீ முரளிதரன்

ஓ, எனக்கு சோர்வாக இருக்கிறது” என எரிச்சலுடன் சிணுங்கிக்கொண்டிருந்த அதே வேளை, புல்தரையின் ஓரமாக ஃப்ரான்சஸ் சரிந்து அமர்ந்தாள். அவளுடைய பாசத்துக்குரிய ஃப்ரான்சஸின் இப்படியான எதிர்பாராத மாற்றங்களுக்கு பழகிப்போயிருந்த அனா, ஒரு கணம் வியப்புடன் நின்றுவிட்டு, சொன்னாள்,

“நேற்று லிவர்பூலிலிருந்து வந்த அந்த நீண்ட பயணத்திற்குப் பிறகு, உனக்கு சோர்வாக இருப்பது இயல்பானதுதானே? என்றபடி அவள் ஆதுரமாக தன் சகோதரியின் பக்கத்தில் பொத்தென அமர்ந்தாள். அனா, வாளிப்பானவள் என்பதோடு, இயல்பான அறிவும் பதினான்கு வயதுக்கேயான உடல்வாகும் கொண்ட புத்திசாலிப்பெண். ஃப்ரான்சஸ் அவளைவிட சற்று மூத்தவள், கணிக்க முடியாத மனநிலை கொண்டவள் என்பதோடு, திடீர்திடீரென மாறும் இயல்புடையவள். அந்தக் குடும்பத்தில் அழகும் அறிவும் கொண்ட பெண்ணாக அவள் திகழ்ந்தாள். தன்னுடைய உடையில் ஒட்டியிருந்த நாயுறுவியின் விதைகளை பதட்டமாக பிடுங்கிக்கொண்டிருந்தாள். அவளது மெலிந்திருந்த பழுப்புநிற கைகள் அதைப் பிய்த்தபடியிருக்க, கருங்கூந்தலுடன் பேரிக்காயின் கருஞ்சிவப்பு வண்ணத்திலான அவளுடைய முகம், ஏதோ முகமூடி அணிந்திருந்ததைப்போல அமைதியாக இருந்தது. 

    அனாவின் மழுப்பலுக்கு மறுப்பு சொல்லும்விதமாக, “அது பயணத்தினால் அல்ல” என்றாள். அனா, அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டி தன் அன்புக்குரிய சகோதரியைப் பார்த்தாள். தன்னம்பிக்கையும் யதார்த்தமும் கொண்ட அந்த இளம்பெண், சஞ்சல மனமுடைய அவள் சகோதரியை கணிக்க முனைந்தாள். ஆனால் அவள் ஃப்ரான்சஸின் கண்களை நேருக்குநேராகத் தான் பார்த்துக்கொண்டிருந்ததை உணர்ந்ததும், இருண்டதும் படபடத்துக் கொண்டிருந்ததுமான அந்த கண்கள், சவால் விடுவதாகத் தோன்றியதில் சற்று பின்வாங்கினாள். இப்படியான மறைப்பேதுமற்ற நேரிடையான பார்வைக்காக, ஃப்ரான்சிஸ் விசித்திரமானவளாக அறியப்பட்டாள் என்பதோடு, அந்த பார்வையில் தென்படும் வன்முறையும் அதன் சடுதித்தன்மையும் மனிதர்களை அசௌகரியப்படுத்திவிடும். 

“என்னாச்சு என் செல்லமே?” என்று பிடிவாதக்காரியான தன் அக்காவை கேட்டபடியே, மெலிந்திருந்த அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள் அனா. ஃப்ரான்சஸும் ஆறுதல் பெறும் விதமாக வலிமையான பெண்ணான அவளின் அரும்பிக்கொண்டிருந்த மார்பகங்களின் மீது சாய்ந்துகொண்டாள். 

“ஓ, எனக்கு சற்று சோர்வாக இருந்தது” என்று கண்ணீர் துளிர்த்திட முணுமுணுத்தாள்.

“சரி. உனக்கு சோர்வாக இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும்?” என்று இதமாகக் கேட்டாள் அனா. அவள் தன்னைவிட மூத்தவளைப்போல, கிட்டத்தட்ட அம்மாவின் நிலையிலிருந்து தன்னை நடத்துவது ஃப்ரான்சஸுக்கு வேடிக்கையாக இருந்தது. 

   ஃப்ரான்சஸ் தன் இருபத்து மூன்று வயதில் நிறையவே அனுபவித்து விட்டிருக்க, அந்த சமயத்தில் அனா கவலைகளேதுமற்ற பதின்பருவத்தில் இருந்தாள். ஆண்கள் அவளுக்கு பெரிய நாய்களைப்போலத் தோன்றினார்கள். 

   அந்த நாட்டுப்புறம் இன்னமும் காலைப்பொழுதின் கனத்த அமைதியில் ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைத்தும் தங்களின் ஒளியை தத்தமது நிழலோடும் சேர்த்தே உமிழ்ந்து கொண்டிருக்க, மலைப்பகுதி மௌனமாக வெம்மையை வெளியிட்டபடியிருந்தது. தவிட்டு நிறத்தில் இருந்த புல்வெளி மென்மையாக தகித்திருக்க, ஓக் மரத்தின் இலைகள் பழுப்பான நிறத்தில் கருகிக் கிடந்தது. கருத்து அடர்ந்ததாக இருந்த இலைச்செறிவின் ஊடாக, தூரத்தில் செம்மையும் காவியும் கலந்த நிறத்தில் கிராமம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

   நீரோடையின் கரையோரமாக வளர்ந்திருந்த சவுக்குமரம், சட்டென காற்றில் தன்னை ஒருமுறை உலுக்கிக்கொண்டதில், வைரம் மின்னுவதைப்போலான தோற்றமளித்தது. அனா தன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள். அவளது கன்னங்களின் ஒருபுறம் பழுப்பும் இளஞ்சிவப்பும் கலந்த வண்ணத்தில் மாறியிருக்க, தன் முழங்காலை அகட்டிக்கொண்டு மடியில் ஒரு கையளவு வெண்மையும் பசுமையுமான இலைகளுடைய ஹேசல் நட்களை போட்டுக்கொண்டாள். அவள் அவற்றினை உடைத்து தின்னத் துவங்கியிருந்தாள். ஃப்ரான்சஸ் தலையைக் கவிழ்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 

 “ம்.. உனக்கு டாம் ஸ்மெட்லீயை தெரியும்தானே?” என்று கடினமான ஒரு விதையை அதன் ஓட்டிலிருந்து வெளியிலெடுக்க முயன்றவளாக அந்த இளம்பெண் கேட்டாள்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” ஃப்ரான்சஸ் நக்கலாக பதிலளித்தாள்.

 “அவர் எனக்கு தான் வேட்டையாடிப் பிடித்த உயிருள்ள ஒரு காட்டுமுயல்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்துக்கொள்ள கொடுத்திருக்கிறார்”

 “நல்ல விஷயம்தான்” என்று பற்றற்றவளாகவும் கிண்டலாகவும் உரைத்தாள்.

 “அதுசரிதான். அவர் என்னை ஓலர்ட்டன் விருந்திற்கு கூட்டிச்செல்வார் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் அதை செய்யவேயில்லை. இங்கே பார், அவர் தேவாலயத்தில் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணை அழைத்துச் செல்வதை நான் பார்த்தேன்”

“அவர் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்” என்றாள் ஃப்ரான்சஸ்.

“அப்படியொன்றும் அவசியமில்லை என்று நான் அவரிடம் சொல்லிவிட்டேன். அதோடு இந்த விஷயத்தை நான் உன்னிடம் சொல்வேன் என்றும் சொன்னேன், அதை செய்தும் விட்டேன்”

  அவள் பற்களுக்கிடையில் உடைபட்டு பிளந்தது ஒரு கொட்டை, அதிலிருந்து அவள் அதன் பருப்பை பொறுக்கி நிதானமாக சாப்பிட்டாள். 

 “அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” சொன்னாள் ஃப்ரான்சஸ்.

“இருக்கட்டும். அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போகட்டும். ஆனால், எனக்கு அவர்மீதான கோபம் அப்படியேதான் இருக்கிறது”

 “ஏன்?”

 “ஏனென்றால் அப்படித்தான். அவர் வேலைக்காரியை அழைத்துச் செல்ல எந்த உரிமையும் இல்லை”

 “அவர் செய்தது நிச்சயம் சரிதான்” என்று எந்த உணர்ச்சியும் காட்டாமல் தான் சொன்னதை தொடர்ந்து வலியுறுத்தினாள்.

 “இல்லை. அவர் என்னை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்த பொழுது, அது நிச்சயம் சரியில்லை”

    ஃப்ரான்சஸ் வேடிக்கையும் ஆறுதலும் கலந்த வகையில் வெடித்து சிரித்தாள்.

“ஓ, நான் கேட்க மறந்துவிட்டேன்” என்றவள் தொடர்ந்து, ”நீ என்னிடம் சொல்லப்போவதாக சொன்னதற்கு அவர் என்ன சொன்னார்?”

 “அவர் சிரித்தபடியே, ’அவள் ஒன்றும் அதற்காக வருத்தபடமாட்டாள்’ என்றார்”

 “அவள் மாட்டாள்” என்றபடி மூக்கை உறிஞ்சினாள்.

  அங்கு அமைதி நிலவியது. காய்ந்து பொன்மஞ்சளாகியிருந்த மலர்களும், குவியலாகப் படர்ந்திருந்த முள்கொடிகளும், வெய்யிலின் பளபளப்பில் பழுப்பு நிறமேறிப்போயிருந்த புல்வகைகளையும் கொண்ட அந்த வெளி, ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

  அந்தச் சிற்றோடைக்கு அப்பால் விவசாய நிலங்களின் மகத்தான வடிவமைப்பு தொடங்கியது. 

   வெண்நிறத்தில் சதுரங்கப் பலகையைப் போலப் பரவியிருந்த பார்லி வயல்களில், அறுவடைக்குப் பின் எஞ்சியிருந்த அதன் தண்டுகள், பழுப்பு நிறத்திலான கோதுமை வயல்களின் சதுர வடிவங்கள், காக்கி நிறமான மேய்ச்சல் நிலத் துண்டுகள், தரிசு நிலத்தின் சிவப்பு நிறக் கோடுகள்—இவற்றோடு சேர்ந்து, அந்த சிறிய கிராமமும் வனப்பகுதியும் கருத்த ஆபரணங்களெனத் தோன்றும்படியாக தொலைதூர மலைகளை நோக்கி நீண்டு செல்லச்செல்ல, அந்தச் சதுர வடிவ வயல்வெளி மேலும் மேலும் சிறிதாகிக்கொண்டே போயின; இறுதியில் வெப்பம் ஏற்படுத்திய புகைமூட்டத்தில், மிகத்தொலைவில், அறுவடைக்குப்பின் எஞ்சியிருந்த பார்லியின் தண்டுப்பகுதி மட்டும் சிறிதாக வெண்நிற சதுரங்களாக தனித்து கண்ணில் பட்டன.

 “ஏஏ… இங்கு ஒரு முயல்வளை இருக்கிறது” என அனா திடீரெனக் கூவினாள். ”ஏதாவது ஒன்று வெளியில் வருகிறதா என்று கவனிக்கலாமா? நீ பதட்டப்படத் தேவையில்லை சரியா?”

  இரண்டு பெண்களும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். ஃப்ரான்சஸ் தன்னைச் சுற்றியிருந்த சிலவற்றை கவனித்தாள். அவை வித்தியாசமானவைகளாக, சினேகமற்றவைகளாகக் காட்சியளித்தன; ஊதாவண்ண காம்புகளின் மேலிருந்த பச்சைநிற எல்டர்பெரிகளின் நிறையும், ஓரத்தில் வானத்தை நோக்கி உயரமாகவும் கொத்தாகவும் மஞ்சள் மினுங்கத் தொடங்கியிருந்த க்ராப் ஆப்பிள்களும் (crab apple), தளர்ச்சியூட்டின: புதரின் அடியில் ஒட்டிக்கொண்டு, வாடிக்கிடந்த ப்ரிம்ரோஸ் மலர்கள் என அனைத்துமே அவளுக்கு விசித்திரமாகத் தெரிந்தன. அப்பொழுது அவள் கண்கள் ஒரு அசைவை கவனித்தது. சிற்றெலி ஒன்று அமைதியாக வெம்மையான செம்மண்ணில் இங்கும் அங்குமென நகர்ந்துகொண்டே, மோப்பம்பிடித்தபடி, தட்டையாக, நிழல்போன்ற கருமையில் அசைந்து கொண்டிருந்த அது, திடீரென வாழ்வில் பற்று ஏற்பட்டுவிட்டதுபோல சுறுசுறுப்பானது. அந்த சிறிய ஜந்துவைக் கொல்ல சொல்லி அனாவை வழக்கம்போல அழைக்கப் போனவளுக்கு, அன்றைக்கு சோகமாகவும் மந்தமாகவும் இருந்தது. அந்த சிறிய விலங்கு தத்தித்தத்தி செல்வதையும், முகர்வதையும், பொருட்களை தொட்டுப் பார்த்துக் கண்டுபிடிப்பதையும், கண்தெரியாததுபோல ஓடிக்கொண்டு, சூரிய ஒளியின் வெளிச்சமும் அதன் வெம்மையும் தன் வயிற்றுப் பகுதியையும் மூக்கையும் தடவிக்கொடுத்ததில், கிறங்கிப்போய் மெய்மறந்து நின்றது. அவள் அந்த சிறிய உயிரின்மேல் அனுதாபம் கொண்டாள். 

 “ஏ ஃப்ரான், அங்கே பார். அது ஒரு சிற்றெலி”

  அனா எழுந்து நின்று, அந்தக் கருமையான சுயநினைவற்றிருந்த விலங்கை கவனித்துக் கொண்டிருந்தாள். ஃப்ரான்சஸ் பதட்டத்தில் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 “அது ஓடிப்போய்விடாதுதானே?” அந்த சிறுமி மென்மையாகக் கேட்டாள். அவள் ரகசியமாக அதனருகில் சென்றாள். அந்த சிற்றெலி தடுமாறியபடி நகர்ந்து சென்றது. நொடியில் அனா அதன்மீது தன் காலை அதிக அழுத்தம் தராமல் வைத்தாள். அந்த விலங்கு தன்னுடைய இளஞ்சிவப்புநிற கால்களை நீச்சலடிப்பதைப்போல அசைத்தபடி, தன்னுடைய கூரான மூக்கை முறுக்கியும், இழுத்தும் தவிப்புடன் பூட்ஸின் அடியில் போராடியபடி தவித்துக்கொண்டிருந்ததை ஃப்ரான்சஸால் பார்க்க முடிந்தது. 

 “அது அசைந்துகொண்டிருக்கிறது” என்று அந்த அழகி அருவருப்பான உணர்வினால் புருவங்களை சுருக்கிக்கொண்டு கூறினாள். அவள் தனக்குக் கீழே சிக்கியிருக்கும் அதைப் பார்க்கவேண்டி குனிந்தாள். இப்போது பூட்ஸின் அடிப்பகுதியின் விளிம்பைத் தாண்டி, அந்த விலங்கின் மெல்லிய வெல்வெட் போன்ற தோள்கள், ஏறி இறங்குவதையும், பார்வையற்ற அதன் முகம் பரிதாபமாகத் திரும்புவதையும், தட்டையான இளஞ்சிவப்பு கைகள் வெறித்தனமாகத் துடித்துக்கொண்டு அசைவதையும் பிரான்சஸால் பார்க்க முடிந்தது.

“அதைக் கொன்றுவிடு” அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள். 

 “மாட்டேன். நான் கொல்ல மாட்டேன்” கூச்சத்துடன் அனா சிரித்தாள், ”நீ விரும்பினால் அதை செய்துகொள்”

 “எனக்கு அதில் விருப்பமில்லை” என்று ஃப்ரான்சஸ் அரவமற்ற தீவிரத்தன்மையுடன் கூறினாள்.

     விளையாட்டுத்தனமான பல முயற்சிகளுக்குப் பிறகு, அனா அந்த சிறிய விலங்கை அதன் பிடரியைப் பிடித்து தூக்குவதில் வெற்றி பெற்றாள். அது தன் தலையை உயர்த்தி, கூரான நீண்ட மூக்கை இப்படியும் அப்படியுமாக ஆட்டியபடி, இளஞ்சிவப்பு நிறப் பற்களைக் கொண்ட தன் வாயை வித்தியாசமான நீள்வட்டமாக திறந்தது. பார்வையற்ற அந்த உயிரின் வாய், அகலத் திறந்திருந்த வகையில் அது நெளிந்தது. அதன் கனத்த மற்றும் குழைந்த உடல் மெதுவான அசைவுடன் தொங்கிக்கொண்டிருந்தது, 

“இது மிகவும் சுறுசுறுப்பான உயிரி இல்லையா?” அதன் பல்பகுதியை தவிர்க்க விரும்பி அதைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 “இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என ஃப்ரான்சஸ் நறுக்கென கேட்டாள்.

 “இது கொல்லப்பட வேண்டும். இது ஏற்படுத்தும் சேதத்தைப் பார். இதை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அப்பாவையோ அல்லது வேறு யாரையாவதோ வைத்து கொல்ல வைப்பேன். நான் இதைப் போகவிடமாட்டேன்”

  அவள் அதைத் தன்னுடைய கைக்குட்டையில் மேலோட்டமாகக் கட்டிவிட்டு, தன்னுடைய சகோதரியின் அருகில் அமர்ந்துகொண்டாள். அங்கு ஒரு அமைதிக்கான இடைவேளை நிலவியதில் அந்தச் சிற்றெலியின் முயற்சிகளை தடுக்க அனா போராடிக்கொண்டிருந்தாள்.

 “இந்த முறை ஜிம்மியைப் பற்றி சொல்ல உனக்கு அதிகமாக எதுவும் இல்லை. நீ லிவர்பூலில் அவரை அடிக்கடி பார்ப்பாயா?” என்று அனா திடீரெனக் கேட்டாள்.

“ஒன்றோ இரண்டோ முறை” என்று ஃப்ரான்சஸ், அந்தக் கேள்வி அவளுக்கு எவ்வளவு தொந்தரவை ஏற்படுத்தியது என்பதை வெளிக்காட்டாமல் பதிலளித்தாள்.

 “நீ அவர்மீது இனிமேல் ஆசையுடன் இருக்கப்போவதில்லையா?”

 “அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டடைப் பார்த்தால், இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்”

 “நிச்சயதார்த்தமா? ஜிம்மி பர்ராஸ்! சரி எல்லாவற்றையும் விடு. அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவேயில்லை”

 “ஏன் நடக்கக்கூடாது, எல்லாரையும்போல் அவருக்கும் அதற்கு உரிமை இருக்கிறது”, என்று திடீரெனக் கோபத்துடன் கத்தினாள்.

 அனா சிற்றெலியுடன் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

 “அப்படித்தான் நினைக்கிறேன்”, என்று நீட்டி முழக்கினாள். ”ஆனாலும் ஜிம்மிக்கு அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை”

 “ஏன் கூடாது?”, என ஆவேசமாக கத்தினாள் ஃப்ரான்சஸ்.

“எனக்குத் தெரியவில்லை. – ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்த சிற்றெலி, இதனால் அசையாமல் இருக்க முடிகிறதா – அவர் யாருடன் நிச்சயிக்கப்பட்டிருக்கிறார்?”

“எனக்கு எப்படி தெரியும்?”

“நீ கேட்டிருப்பாய் என்று நினைத்தேன். உனக்கு அவரை நீண்ட காலமாகத் தெரியுமே. அவர் இப்பொழுது வேதியலில் முனைவர் பட்டம் வாங்கி விட்டதால், நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம்”

   ஃப்ரான்சஸ் தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.

“அதற்கு என்ன இப்பொழுது?” என்று வினவினாள்.

“நிறையவே இருக்கிறது. அவர் தன்னை யாரென்று காட்டிக்கொள்ள விரும்பியிருக்கிறார். அதனால் நிச்சயம் செய்து கொண்டிருக்கிறார். ஹே, நிறுத்து. உள்ளே போ”

    இப்பொழுது அந்த சிற்றெலி தெளிவாக நெளிவதில் வெற்றி பெற்றிருந்தது. அது பரிதவித்தபடி தன்னை முறுக்கிக்கொண்டு, பொன்மஞ்சள் நிறமான தன்னுடைய கூர் தலையை ஆட்டியது, அதன் வாய் சிறிய தண்டைப்போல திறந்திருந்தது, சுருக்கங்கள் நிறைந்த அதன் பெரிய கரங்கள் விரிந்திருந்தன. 

 “நீ உள்ளே போ!” தன்னுடைய ஆட்காட்டி விரலை அதை நோக்கி நீட்டியபடி கைக்குட்டைக்குள் செலுத்த முயற்சித்தவளாக, அனா அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள். திடீரென வாய் பகுதியிலிருந்து பொறிபோல ஒன்று அவள் விரலைத் தீண்டியது.

 “ஓ” என்று அலறினாள். ”இது என்னைக் கடித்துவிட்டது”

  அவள் அதை தரையில் போட்டாள். அதிர்ச்சியில் அந்த ஜந்து வட்டமாக சுருண்டு கொண்டது. ஃப்ரான்சஸூக்கு கத்தவேண்டும்போல இருந்தது. அவள் அது ஒரு எலியைப்போல மின்னல் வேகத்தில் ஓடிவிட வேண்டுமென்று எதிர்பார்த்தாள், ஆனால் அது அங்கேயே தடுமாறிக் கொண்டிருந்தது. அவள் அதை அங்கிருந்து போகச் சொல்லி கத்தவேண்டுமென நினைத்தாள். அனா, சட்டென முடிவெடுத்தவளாக தன் அக்காவின் கைத்தடியை பற்றினாள். ஒரே அடியில் அந்த சிற்றெலி செத்துவிட்டது. ஃப்ரான்சஸ் அதிர்ச்சியில் திகைத்துப் போனாள். பரிதாபமான அது, ஒரு கணம் வெப்பத்தில் அவதியுற்று பிறகு கருப்பான அசைவற்ற நிலையில், எந்தவித போராட்டமோ, துடிப்போ இன்றி

ஒரு சிறிய பையைப்போலக் கிடந்தது. 

“அது செத்துப்போய்விட்டது” ஃப்ரான்சஸ் மூச்சுத்திணறியபடி கூறினாள். அனா வாயிலிருந்த தன் விரலை வெளியிலெடுத்து, சிறிய குத்துப்பட்ட அடையாளங்களைப் பார்த்தவாறு

“ஆமாம். அது செத்துப்போய்விட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இவை நமக்குத் தீமை உண்டாக்குபவைகள், தொல்லைப் பிடித்தவைகள்” என்றாள்.

   அதோடு அவளுடைய கோபம் தணிந்துபோனது. இறந்துக் கிடந்த அதைக் கையில் எடுத்தாள்.

“இதனுடைய தோல் அழகாக இருக்கிறதில்லையா” என்று யோசித்தபடியே தன் ஆட்காட்டி விரலால் தடவிக்கொடுத்துவிட்டு, பிறகு கன்னத்தில் தடவிப் பார்த்தாள்.

“கவனம்” ஃப்ரான்சஸ் நறுக்கென்று சொன்னாள். ”உன் பாவாடையில் ரத்தம் பட்டுவிடும்”

     இரத்தின சிவப்பில் துளிர்த்திருந்த ஒரு சிறிய துளி ரத்தம், விழத்தயாராக இருந்தது. அனா அதை அருகிலிருந்த பூண்டுச்செடியின்மீது தட்டிவிட்டாள். ஃப்ரான்சஸ் சட்டென அமைதியானாள். அந்தக் கணத்தில் அவள் முதிர்ச்சியடைந்தவளானாள்.

 “அவை கொல்லப்பட வேண்டியவைகள்தான் என்று நானும் நினைக்கிறேன்” அவளது அந்த வெறுமைக்குப்பின் ஒருவித சோர்வு நிலை ஏற்பட்டது. மின்னிக்கொண்டிருந்த க்ராப் ஆப்பிள்கள், ஜொலித்துக்கொண்டிருந்த ஓடை எல்லாமே அவளுக்கு கவனிக்கத் தேவையற்ற அற்பமானதாகத் தோன்றியது. அவளுள் ஏதோ ஒன்று உயிர்ப்பை விட்டிருந்தது என்பதாலேயே விஷயங்கள் அதன் கசப்புணர்வை ஏற்படுத்தவில்லை. அவளுடைய அமைதியான சோகத்தின்மேல் அலட்சியம் படர்ந்திருந்ததைப்போல அவள் சஞ்சலமற்று இருந்தாள். எழுந்து நீரோடையை நோக்கி நடந்தாள்.

 “இரு நானும் வருகிறேன்” என்று கத்திக்கொண்டு தடுமாறியபடி அவளைத் தொடர்ந்தாள் அனா. 

   ஃப்ரான்சஸ் பாலத்தின்மேல் நின்றபடி, கால்நடைகளின் பாதச்சுவடுகள் செம்மண்ணில் ஏற்படுத்தியிருந்த குழிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு தண்ணீர் ஒரு சொட்டுகூட இல்லை, ஆனாலும் எல்லாவற்றிலும் பசுமையின் சாறும் மணமும் வீசிக்கொண்டிருந்தது. தன்னை பெரிதும் விரும்பும் அனா மீது தான் ஏன் சற்றும் அக்கறை செலுத்துவதில்லை? அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள். அவள் ஏன் யார்மீதுமே அக்கறை செலுத்துவதில்லை? அவளுக்கே அது தெரியவில்லை,என்றாலும் தான் ஒதுங்கி அலட்சியமாய் இருப்பதில் அவள் உறுதியான தலைக்கனம் கொண்டிருந்தாள். 

     அவர்கள் பார்லியின் தண்டுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டும், சோளத்தின் நீண்ட பொன்னிற கதிர்கள் தரையில் வழிந்தும் தொங்கிக்கொண்டிருந்த ஒரு வயலுக்குள் நுழைந்தனர். கோடையின் தீவிரத்தினால் அறுவடைக்குப்பின் எஞ்சியிருந்த தண்டுப் பகுதிகள் சருகாகியிருந்த வயல்வெளி முழுவதும் வெள்ளை ஒளியில் கண்களைக் கூசச் செய்வதாக இருந்தது. அடுத்து இருந்த வயல் மறுபோகத்திற்கான விதைகளுடன் மென்மையாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மெலிதாக ஒழுங்கின்றி இருந்த சீமைசால் செடி(தீவனப்புல்) அடர் பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பு குமிழ்களைக் கொண்டு அழகாக இருந்தது. அதன் மணம் மயக்கமூட்டுவதாகவும் அருவருப்பானதாகவும் இருந்தது. ஃப்ரான்சஸ் முன் நடக்க, பெண்களிருவரும் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தனர். 

    வாசலுக்குப் பக்கத்தில், ஒருவன் கால்நடைகளுக்கு மதியநேர தீவனம் இடுவதற்காக கையில் புல்லரிவாளுடன் புல் வெட்டிக்கொண்டிருந்தான். அவன் அந்தப் பெண்களைப் பார்த்தவுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டு பராக்குப் பார்க்கத் தொடங்கினான். ஃப்ரான்சஸ் வெண்ணிற மஸ்லின் ஆடை அணிந்து, கண்ணியத்துடன் தன்னை மறந்து நடந்து கொண்டிருந்தாள். கலக்கமின்றி அலட்சியமாக அவள் நடந்து வந்ததில் அவனுக்குப் பதட்டம் ஏற்பட்டது. தொலைவில் இருந்த ஜிம்மியை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தாள், பதிலுக்கு அவன் அவளை பாதியில் தவிக்கவிட்டு சென்றுவிட்டான். ஆனால், இவன் அவளுள் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.

    டாம் நடுத்தர உடல்வாகுடன் திடமானவனாக இருந்தான். அவனுடைய வழுவழுப்பான வெண்ணிற சருமம் சூரிய வெப்பத்தினால் பழுப்பாகிப் போகாமல் சிவப்பாக மாறியிருந்தது. அந்த செம்மை அவனுடைய நகைச்சுவை மற்றும் எளிமைத்தனத்தை மேம்படுத்திக்காட்டியது. ஃப்ரான்சஸைவிட ஒருவயது மூத்தவன் என்பதால், அவள் மட்டும் தன் பார்வையை சற்று அவன் பக்கம் செலுத்தியிருந்தால் எப்பொழுதோ அவளை தன் வசப்படுத்தியிருப்பான். அவனது வாழ்க்கை அதுவரை எந்தவிதமான சம்பவங்களும் இன்றியே இருந்தது. பல பெண்களுடன் வாயாடியிருந்தாலும் எந்தவித பற்றுதலுமின்றியே இருந்தான். அதனால் பெரும்பாலும் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமலிருந்தது. அவனுக்கு ஒரு பெண் தேவை என்பது மட்டுமே தெரிந்திருந்தது. பெண்கள் நெருக்கமாக வருவதால், அனிச்சையாக தன் கால்சட்டையை சற்று மேலிழுத்துக் கொண்டான். ஃப்ரான்சஸ் மிக அரிதானவளாக, நேர்த்திமிக்கவளாகத் தோன்றினாள். அதை உணர்ந்தவுடன் அவனுடைய நரம்புகளில் வினோதமான இனிமையானதொரு பரவசம் படர்ந்தது. அவள் அவனுக்கு சற்றே இறுக்கமான உணர்வை ஏற்படுத்தியிருந்தாள். ஏதோ ஒரு வகையில் இன்று காலை உண்டான தாக்கம் எப்பொழுதையும்விட அதிகமானதாக இருந்தது. அவள் வெள்ளை நிறத்திலான உடை உடுத்தியிருந்தாள். சொல்லப்போனால் அவன் மனதில் அதை உணரவேயில்லை. அவனுடைய உணர்ச்சிகள் விழிப்புடனோ நோக்கம் கொண்டவைகளாகவோ இதுவரையிலும் இருந்ததில்லை. 

      ஃப்ரான்சஸுக்கு தன்னுடைய தகுதி என்னவென்று தெரியும். அவள் கண் அசைத்தால் போதும் டாம் அவளைக் காதலிக்கத் தொடங்கி விடுவான். இப்பொழுது அவளால் ஜிம்மியை அடையமுடியாது என்பதால் அவள் உருக்கமான அக்கறை எதையும் காட்டவில்லை. என்றாலுமே அவளுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அவளால் சிறந்த ஒன்றை அடையமுடியவில்லை என்றால் – ஜிம்மி, அவளுக்குத் தெரிந்தவரை அவன் ஒரு பகட்டு ஆசாமி – இரண்டாவது சிறந்ததாக அவளுக்கு டாம் இருக்கிறான். அவள் மிகவும் அலட்சியமாக முன்னேறினாள்.

“அப்படியானால் நீ திரும்பி வந்துவிட்டாய்” என்றான் டாம். அவன் குரலில் தெரிந்த ஐயத்தை கவனித்துவிட்டாள். 

 “இல்லை” என்று சொல்லி சிரித்தாள். ”நான் இன்னமும் லிவர்பூலில்தான் இருக்கிறேன்” அந்தக் குரலில் இழையோடிய அன்யோன்யம் அவனைத் தகிக்க வைத்தது. 

  “அப்படியென்றால் இது நீ இல்லையா?” என்று கேட்டான்.

 அவளது உள்ளம் ஆமோதிப்பினால் துள்ளியது. அவன் கண்களை உற்று நோக்கினாள், அடுத்த கணமே அவனுடன் ஒன்றிப்போயிருந்தாள்.

 “ஏன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு சிரித்தாள்.

   அவன் கவனம் சிதறியவனாய் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றினான். அவள் அவனை விரும்பினாள். அவனது விசித்திரமான கவர்ச்சியை, அவனது அறியாமையை மற்றும் நிதானமான அணுகுமுறையை விரும்பினாள். 

 “இங்கே பாருங்கள் டாம் ஸ்மெட்லீ” அனா குறுக்கிட்டாள். 

 ”முள்ளெலி! இது செத்துக் கிடந்ததா?” கேட்டான்.

 ”இல்லை. இது என்னைக் கடித்தது” என்றாள் அனா

 ”ஓ, ஐயோ அதுதான் உன்னைக் கோபமாக்கி விட்டதா?”

 ”இல்லை, அப்படி இல்லை” அனா கடுமையாக சாடினாள். ”அப்படி கொச்சையாகப் பேசாதே”

 ”அதனால் என்ன?”

“நீ இந்த வழக்கில் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”

“உன்னால் முடியாதா?”

    அவன் ஃப்ரான்சஸை நோட்டமிட்டான்.

“அது நன்றாக இல்லை” என்று ஃப்ரான்சஸ் சொன்னாள். உண்மையில் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. பொதுவாக அவளுக்கு இப்படியான கொச்சையான பேச்சு எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஜிம்மி ஒரு நாகரிகமான மனிதன். ஆனால் டாம் பேசியவிதம் அவளுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை.

“நீ நன்றாக பேசவேண்டுமென்று விரும்புகிறேன்” கூடுதலாகக் கூறினாள்.

“ஓ, அப்படியா” என்று தன் தொப்பியை சரிசெய்தவாறு கலக்கத்துடன் பதிலுரைத்தான்.

“பொதுவாக நீ அப்படித்தான் பேசுவாய் தெரியுமா” அவள் புன்னகைத்தாள்.

 “ஆனாலும் நான் இன்னும் நன்றாக பேச முயற்சிக்க வேண்டும்” பதட்டமாக இருந்தாலும் கண்ணியத்துடன் உரைத்தான்.

“என்ன?” பளிச்செனக் கேட்டாள்.

 “உன்னுடன் நன்றாகப் பேச” என்றான். கோபத்தில் முகம் சிவந்து, தன் தலையைக் குனிந்துகொண்ட ஃப்ரான்சஸ், அந்த குறிப்பை உணர்ந்து பின்னர் மெல்ல சிரித்தாள். 

 “ஏ இப்பொழுது என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனம் இருக்கட்டும்” அந்த இளைஞனின் முதுகில் எச்சரிக்கும் விதமாக ஒரு தட்டு தட்டினாள் அனா.

“நீ இந்த சிற்றெலிக்கு இதுபோன்று நிறைய அடிகள் கொடுத்திருக்கத் தேவையில்லை” தன் கைகளைத் தேய்த்தபடி இயல்புநிலைக்குத் திரும்பினான்.

“உண்மையில் அப்படியில்லை. அது ஒரே அடியில் இறந்துவிட்டது” அவளுக்கு இசைவில்லாத வகையில் துடுக்குத்தனமாக சொன்னாள்.

“நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்தானே?” அவள் பக்கமாகத் திரும்பிக்கொண்டே கேட்டான்.

“நான் கோபமாக இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை” ஃப்ரான்சஸ் தீர்மானமாகக் கூறினாள்.

“இல்லைதானே?” அவளைக் கூர்ந்து கவனித்தவனாகக் கேட்டான்.

 “இருந்திருக்கலாம்” என்றவள், ”தேவை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில்” என்றும் சேர்த்துக் கொண்டாள்.

   அவளது மாற்றத்தை புரிந்துகொள்ள அவனுக்கு நேரமெடுத்தது.

 “அப்படியானால் அது தேவை என்று நீ கருதவில்லையா?” சந்தேகத்துடன் கேட்டான்.

“ம்…ம்.. அப்படியா?” எந்த உணர்சியும் இன்றி அவனை நிலைத்த பார்வையால் பார்த்தாள்.

“அது தேவை என்றுதான் கருதுகிறேன்” உறுதியாக நின்றபடி பார்வையை வேறு பக்கமாக வைத்துக்கொண்டு பதிலளித்தான்.

   அவள் உடனேயே சிரித்தாள்.

“ஆனால் எனக்கு அது தேவையில்லாதது” சற்று இகழ்ச்சியுடன் கூறினாள்.

 “ஆமாம். அது முற்றிலும் உண்மைதான்” என்றானவன்.

அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“அது எனக்குத் தெரியும்” என்றாள், அங்கு ஒரு அசௌகரியமான அமைதி நிலவியது.

“அப்படியானால் நான் சிற்றெலிகளை கொல்ல வேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?” உத்தேசமாக சிறிது நேரத்தில் கேட்டாள்.

“அவை எமக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்துகிறது” தன்னுடைய நிலத்தில் உறுதியாக நின்றபடி கோபத்துடன் சொன்னான்.

 “சரி அடுத்தமுறை அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தால் பார்த்துக்கொள்கிறேன்” என்று சளைக்காமல் எதிர் வார்த்தைக் கூறினாள். அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன, அவள் அவன் முன்னால் தளர்ந்து நின்றாள், அவளுடைய செருக்கு குலைந்தது. அவன் விதி வசப்பட்டவனாக சஞ்சலத்துடனும், வெற்றிக் களிப்புடனும் திகைத்து நின்றான். அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி வெளியேறினாள். 

“சரிதான்” சகோதரிகள் இருவரும் கோதுமை வயலை கடக்கும்போது ”சத்தியமாக நீங்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை” என்றாள் அனா.

 “உனக்குப் புரியவில்லைதானே?” ஃப்ரான்சஸ் அர்த்தமுள்ள ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

 “இல்லை. எனக்குப் புரியவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை டாம் ஜிம்மியைவிட சிறந்தவன். அவ்வளவுதான். அதோடு நல்லவனும்கூட”  

“அப்படித்தான் நினைக்கிறேன்” உணர்ச்சியற்றவளாக சொன்னாள்.

  அடுத்த நாள், ரகசியமாக அவள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, அவள் வெய்யிலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிற்றெலியைக் கண்டாள். அவள் அதைக் கொன்றும் விட்டாள்.

   அன்று மாலை டாம் தன்னுடைய இரவு உணவிற்குப்பின் புகைப்பிடிப்பதற்காக வாசல் பக்கமாக வந்தபோது, அவனை அந்த செத்துக்கிடந்த ஜந்துவிடம் கூட்டிச் சென்றாள்.

“இதோ பார்” என்றாள்.

“நீ இதைப் பிடித்தாயா?” அந்த வெல்வெட் போன்றிருந்த உடலை விரல்களால் தூக்கி அதை நுணுக்கமாக சோதித்தபடி கேட்டான்.

“என்னால் முடியாது என்று நினைத்துவிட்டாயா?” அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 “இல்லை. எனக்குத் தெரியவில்லை”

    அவள், அவனது முகத்தைப் பார்த்து ஒரு விசித்திரமான குறுநகையை உதிர்த்தாள்; பதற்றமும், கண்ணீரும், கட்டுக்கடங்காத ஆசையும் கலந்து, அவளது மூச்சை முட்டுவதாக இருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அச்சமடைந்தவனாகவும், நிலைதடுமாறியவனாகவும் காணப்பட்டான். அவள் அவனது கையின் மீது தன் கையை வைத்தாள்.

“நீ என்னுடன் வெளியில் வருவாயா?” அவன் கவலை தோய்ந்த ஏக்கமான குரலில் கேட்டான்.

   அவள் குலுங்கி சிரித்தபடி தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள். அவனுக்குள் ரத்தம் வேகமெடுத்தது, அவன் அதைக் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றான். ஆனால், அது அவனை சாய்த்துத் தள்ளியது. அவளது அழகிய, மென்மையான பின்னங்கழுத்தைக் கண்டதும், அவள் மீது அவனுக்கு அதிதீவிரமான காதலும் கனிவும் பொங்கியது.

 “நாம் உன்னுடைய தாயாரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றான். அவள் மீதான தன் இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்து நின்றான்.

“ஆம்” என அவள் ஜீவனற்ற குரலில் கூறினாள். ஆனாலும் அந்த ஜீவனற்ற குரலில் ஒரு களிப்பின் சிலிர்ப்பு இருக்கவே செய்தது.


D H Lawrence டி. எச். லாரன்ஸ் (1885–1930) ஆங்கிலத்தின் முக்கியமான நாவலாசிரியர், கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மனித மனத்தின் மறைமுக உணர்வுகள், உள்ளுணர்வு, ஆசை, அச்சம் ஆகியவற்றை வெளிப்படையாக ஆராய்ந்த ஆரம்பகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மனித மனத்தின் ஆழமான உணர்வுகளையும், காதல், இயற்கை, மனித உறவுகளின் சிக்கல்களையும் அவர் தனது படைப்புகளில் நுட்பமாகச் சித்தரித்தார். அவரது மொழிநடை கவித்துவம், உளவியல் நுண்ணறிவு மற்றும் இயற்கை வர்ணனைகளால் தனித்துவம் பெற்றது. இன்று உலக இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளராக மதிக்கப்படுபவரானாலும், அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துகளும் படைப்புகளும் பலரால் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன.

Second best (இரண்டாவது தேர்வு) 1911 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here