Homeஇதழ்கள்2026 இதழ்கள்இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இது!

இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இது!

நேர்காணல்: பிரமிளா பிரதீபன்

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

பிரமிளா பிரதீபனின் சிறுகதைகள் சமகால இலக்கிய அலகில் தனித்துவம் வாய்ந்தவை. வரலாறு, பண்பாட்டு பின்புலத்தில் கூர்மையாக வார்க்கப்படும் கதாபாத்திரங்களும் அவர்கள் மேற்கொள்ளும் உரையாடல் வழியான தர்க்கங்களும் அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடியன. இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் முதுமாணி கற்கைநெறிக்கான  இணைப்பாளராகவும் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு பதிப்பு நூல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். விரும்பித் தொலையுமொரு காடு, கொலைச்சொல் ஆகியன அவருடைய முக்கியமான புனைவு ஆக்கங்கள் ஆகும். போர் நிலத்திலிருந்து எழுதப்படும் கதைகளில் மேலோங்கும் பெண்களின் குரலும், அவர்கள் மையமிட்ட பண்பாட்டு உரையாடல்களும் இவருடைய புனைவுகளைக் கூர்மையடையச் செய்கின்றன. இந்த நேர்காணல் அவருடைய கதைகள் குறித்தும், பொதுவாக புனைவுகள் குறித்தான அவருடைய பார்வையை அறியவும் உதவும் என்று நம்புகிறேன்.

கேள்வி: கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது?

பதில்: என் அப்பம்மாவுடன் வளர்ந்தவள் நான். அப்பம்மா எனக்கு ஏராளமான கதைகளைச் சொல்லுவார். நம்பவே முடியாத கற்பனைகளைக்கூட கதைகளாக்கி நம்ப வைப்பார். அப்பம்மா கதைகள் சொல்லும் போதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமாய் மெய்மறந்திருப்பேன்; ஆனால் அக்கதைகளில் வரும் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவராய் அப்பம்மா இருக்கவில்லை. குறிப்பாக என் சந்தேகங்களை தீர்க்கும் விடைகள் யாரிடமிருந்தும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. சமயங்களில் கதை சொல்லியவாறே அப்பம்மா உறங்கிய பின்னும் நான் அதன் தொடர்ச்சியை நீட்சியடையச் செய்தவாறே உறக்கமின்றிப் பல மணிநேரங்கள் கிடப்பேன்.

 ஒரு வகையில் இப்போது நான் சிறுகதைகளை எழுதும் நாட்களில் உணர்வதைப் போலவே…… 

“மகாராசனும் அவென் பொண்டாட்டியும் எப்பவும் சண்டை போட்டுப்பாங்களாம். மகாராசன் பொண்டாட்டிய திட்டிட்டே இருப்பானாம். எவ்ளோ தான் சண்ட போடறது? ஒரு நாள் அவென் பொண்டாட்டி ஒரு முடிவெடுத்தா. புருசன் பேசும் போது தன் சாரி முந்தானைய விரிச்சிப் புடிச்சி எல்லாத்தையும் சேர்த்துப்பாளாம். பின் அதை வீட்டு பின் பக்கம் இருக்கும் காய்கறிபாத்தியில கொண்டே கொட்டுவாளாம். அது அப்பிடியே சிவப்பு புளிச்ச கீரையா வளருமாம். கடைசில அந்த கீரையெல்லாம் ஆய்ஞ்சு அவனுக்கே சமைச்சுக் கொடுப்பாளாம்” 

இது அப்பம்மா எனக்குச் சொன்ன கதைகளில் ஒன்று. ஆறு ஏழு வயதுகளில் அடியோ நுனியோ முடிவுகளோ இல்லாத கதைகள் என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும். நான் அப்பம்மாவுக்குத் தெரியாமல் எல்லா கதைகளுக்கும் வெவ்வேறு முடிவுகள் எடுப்பேன். அப்படியே அக்கதைகளுக்கு உருவமும் களமும் கொடுப்பேன். அதனாலேயே அக்கதைகளில் அநேகமானவை இப்போது வரை காட்சிகளாக மனதில் பதிந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. 

என் அப்பாவின் தங்கை (சின்ன மாமி) எங்களுடனேயே வசித்தார். வாசிப்பதற்காக எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும் நான் அவருடைய பழைய பாடக்கொப்பிகளை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அதில் அனேகமாக ஏதேனும் கதைகள் எழுத ஆரம்பிக்கப்பட்டு ஒரு பந்தியுடன் நிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு நான் அவதானித்த சில பந்திகளை முடிப்பதற்கு கற்பனைகளுக்கூடாக முயற்சி செய்வேன். அந்தப் பழக்கமும் பரிச்சயமும் தான் நான் தனியே இருக்கும்போதும் நடக்கும்போதும் என்னைச் சிந்திக்கத்தூண்டின. என் வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்துபோக தனியே வாய்க்கும் போதெல்லாம் இப்படியான நினைவுகளுடனும் கதைமாந்தர்களுடனும் சஞ்சரிக்க ஆரம்பித்து, தொடர்ச்சியாக அதனையே பழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால் இது தொடர்பாக நான் அதிகம் யாருடனும் பேசிக்கொண்டதில்லை என்பதாகவே ஞாபகம். 

கே: முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து….

ப: நிஜத்தில் பாடசாலைக் காலங்களில் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதைகள் வாசித்தல் விமர்சித்தல் தொடர்பான அறிவு எனது க.பொ.த. உயர்தர (பு.ஊ.நு யுஃடு) கல்வியின் போது கிடைத்திருந்தாலும் நான் ஒரு சிறுகதையை எழுத வேண்டுமென முயற்சி செய்யவில்லை. முதன்முதலாக பத்திரிகையில் பிரசுரமான படைப்புகளாகவும் கவிதைகளே இருந்தன. ஆனால் எனது உயர் கல்வியின் நிமித்தம் நான் வீட்டையும் ஊரையும் நண்பர்களையும் பிரிந்து தலைநகரில் வாழத்தொடங்கிய நாட்களில் அந்தப் பிரிவு என்னைச் சரியாக வதைத்தது. மனது ஊருடனும் நண்பர்களுடனும் தொலைவிலிருந்தவாறே தொடர்புகொள்ளத் துடித்தது. அப்போது கைப்பேசிகள் பெருமளவில் புழக்கத்தில் இல்லை. நேரம் கிட்டும் போதிலெல்லாம் கடிதங்கள் எழுதுவேன். கடிதங்களில் நினைவுகளை மீட்டுவேன். அவ்வாறு நான் நினைவுகளை மீட்டி எழுதுகையில் அழுது தேம்பியவாறே எழுதியிருக்கிறேன். பிறகு, நான் எழுதிச்சேர்த்த பதிவுகளையெல்லாம் கவிதைகளாக்கி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஒரு சமயம் கவிதையாக்க முடியாத அதிக வார்த்தைகள் கொண்ட விபரிப்பொன்றை அப்படியே அனுப்புவதென தீர்மானித்து ஞானம் இலக்கிய சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தேன். நான் எழுதுவதும் அனுப்புவதும் ஒரு சிறுகதையாக வேண்டுமென்ற எண்ணம் அப்போது எனக்கு இருக்கவில்லை. அதனை வெறும் ஒரு அனுபவ பகிர்வாகவே செய்யத் துணிந்தேன். 

நான் விரும்பி குளிக்கச்செல்லும் பீலிக்கரை பற்றிய பதிவாக அது இருந்தது. 

“அப்போதெல்லாம் எனக்கு அன்றாட வேலைகளில் அதுவும் ஒன்றானது. மாலை ஐந்து மணிக்கெல்லாம் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்க பீலிக்கு சென்று விடுவேன். போகும் வழியில் என்னுடன் இணையும் ரேணு, பாமா, பார்வதி, சின்னவா, கட்டையா…. பிறகென்ன ஏழு மணி வரை ஒரே கும்மாளம்தான் போங்கள். வீட்டில் தண்ணீரும் நிறைந்து விடும் எங்கள் பொழுதும் போய்விடும்.

பீலிக்கரை பற்றிச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்ப பிடித்த இடங்களில் இந்த பீலிக்கரைக்குத்தான் முதலிடம். இரண்டு வாழைப்பட்டைகளை ஒன்றாக இணைத்து ஓடும் தண்ணீர் அணைக்கப்பட்டு கற்பாறைக்குள் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். குளிக்க, குடிக்க, பூக்கன்று வளர்க்க, உடுப்பு கழுவ, பாத்திரம் கழுவ என்று எதற்கெடுத்தாலும் பீலிதான். ஓரத்தில் ரெண்டு பாக்கு மரம். முன்னால் பாக்கியம் கிழவியின் மரக்கறித்தோட்டம். சுற்றி பெரிய பெரிய பாறைகளும் மரங்களும். அந்த கறுப்பு நிற ஒற்றைக் கல்லில் அமர்ந்துகொண்டு எவ்வளவு நேரமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வழுவழுப்பான வாழைப்படைக்குள் தண்ணீர் ஓடுவதுதான் எவ்வளவு அழகு! அதற்கிடையில் கை வைத்துத் தண்ணீரை தடுக்கும்போது கையை மீறிப் பாயும் தண்ணீர், பட்ட இடமெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே….! அனுபவித்தால்தான் புரியும். சதா ஓடிக்கொண்டிருக்கும் அந்தத் தண்ணீரைப்போல அதைப் பார்ப்பதில் எனக்கு சலிப்பே வராது.

பந்தயத்திற்கு ஓடுவதுபோல் ஓடி, விழப்போவது தெரியாமல் தடுமாறி தொகையாய் வெண் நுரைகள் தள்ளத்தள்ள வந்து விழும் அந்த நீரில் நின்று கண்களை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் குளித்துக் கொண்டிருப்பேன். ஊர்க்கதைகள் எல்லாமே பீலிக்குத் தெரியும்….”

இவ்வாறு தொடரும் இந்த அனுபவமே 2006 செப்டெம்பர் மாத ஞானம் சஞ்சிகையில், இளம் படைப்பாளர் அறிமுகம் எனும் தலைப்புடன் ‘பீலிக்கரை’ எனும் சிறுகதையாகப் பிரசுரமானது. இதுவே இலக்கிய உலகின் சக படைப்பாளர்களிடத்து எனக்குச் சிறந்த அறிமுகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பிறகு சிறிது காலம் நான் பீலிக்கரை பிரமிளா என்றே அறிமுகமானேன். 

கே: அறிவு அனுபவம் மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது?

ப: ஒரு படைப்பின் உயிர் நீடித்தலில் வாசக அனுபவத்தின் பங்களிப்பே பிரதானமானது. அந்த உயிர் நீடிப்பை ஆதாரப்படுத்தும் பிரதான மூன்று விடயங்களாகவே இந்த அறிவு அனுபவம் மொழி ஆகிய மூன்றையும் கருதுகிறேன். 

அறிவானது சமூகத்தின் பொதுபுத்தி கட்டமைப்பிலிருந்து மாற்றி யோசிக்கும் திறனை நம்மிடத்தே வலுப்படுத்துவதோடு ஒரு கருத்தியல் அதிகாரத்தையோ அல்லது நடைமுறையிலிருக்கும் சராசரி மீறல்களையோ தனித்துவமான சிந்தனையாக மாற்றுகிறது. அத்தோடு குறித்த படைப்பிற்குள் சமூக பெறுமானத்தின் தீவிரத்தை அதிகரிக்கவும் அத்திவாரமாக அமைகிறது. ஆனால் ஒரு இலக்கிய படைப்பைக் கலைத்துவம் மிக்கதாக மாற்றுவதற்கும் அதன் தனித்துவத்தைத் தக்க வைப்பதற்கும் அனுபவமும் மொழியுமே மிகப்பிரதானமானவை. 

கதைநிகழ்வின் காட்சிப்படுத்தலையும் வாழ்வின் தத்துவார்த்தமான பிழிவையும் வெளிப்படுத்த அனுபவம் மிகசிறந்த அடிப்படையாக அமைவதுடன் படைப்பின் உயிர்த்தன்மையைத் தக்கவைக்கவும் உதவுகிறது. இவை இரண்டையும் தாண்டி மொழியானது படைப்பின் கலைத்தன்மையினை நிறுவுகிறது. மொத்தத்தில் ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவனைத் தீர்மானிக்கும் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் தொடர்பாகவும் நான் அதிக கவனம் கொண்டிருக்கிறேன். 

வலிந்து ஒரு கலைப்படைப்பை உருவாக்குதல் எவ்வளவு அபத்தமானதென நான் நன்கு அறிவேன். அப்படியான அபத்தங்கள் இல்லா ஒரு படைப்பை உருவாக்க அறிவு அனுபவம் மொழி ஆகிய மூன்றும் அனிச்சையாகச் சேரவேண்டும். அதில் ஒன்றையேனும் வலிந்து திணிப்பதால் உருவாகும் படைப்புகளே காலத்தை தாண்டித் தம்மை நிலைநிறுத்த முடியாமல் காணாமல் போகின்றன. 

எனவேதான் என்னால் அதிகளவான சிறுகதைகளை எழுத முடியவில்லையோ என எணணத் தோன்றுகிறது. இம்மூன்றும் ஒருங்கே வாய்க்கும் அந்தப்பொழுது ஒரு தவத்திற்கு ஒப்பானது. அப்படி மூன்றும் இணைந்து என்னை உந்தும் பொழுதில் எத்தனை வேலையிருந்தாலும் அவற்றைத்தாண்டி ஒரு சிறுகதையினை எழுதத் துணிவேன். பொதுவாக அப்படி அதுவாக என்னைப் பயன்படுத்திக்கொண்டு எழுதிக்கொண்ட அச்சிறுகதைகள் மாத்திரமே நிலையாக உயிர் பெற்றிருப்பதாய் நம்ப முடிகிறது. காரணம் அத்தகைய உந்தல் இன்றி நான் எழுதத்தொடங்கி முடிக்கப்பாடாத அனேக கதைகள் என்னிடத்தே உண்டு. 

கே: ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்தியேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளைச் சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங் கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம்? 

ப: எழுத்தாளர்களுக்கென்றில்லை. எவரொருவருக்கும் பால்யத்தின் நினைவுகளே வாழ்வின் தொடர்ச்சியை இயக்கும் சக்தியாகிறது. எனது ஊரினதும் பால்யத்தினதும் நினைவுச் சேகரிப்புகளே எனது இன்பத்தின் வேராக இருந்திருக்கிறது. குறிப்பாக இன்றுவரையிலும் எனது படைப்புகளில் ஏதோ ஒரு விதத்தில் அவை பங்களிப்பு வெய்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. 

அண்மையில் நான் எழுதிய பிம்பம் சிறுகதை மொத்தமாக என்னைத் தொந்தரவு செய்த பால்ய நினைவுகளின் எச்சங்கள் என்பதைப் பிறகே நான் உணர்ந்தேன். அவை எங்கே எப்படித் தேக்கங் கொண்டிருக்கிறன, எப்படி வெளிவருகின்றன என்பதைக் கணிக்கவே முடியாதிருக்கிறது. அவை அதுவாக வெளிப்படும் போதில்தான் சமயங்களில் எனக்கே அது நினைவிற்கு வருகிறது. ஆக பால்யத்தின் நினைவுகள் இன்பமாக அல்லது வடுவாக ஆழ்மனதில் பதிந்திருப்பதன் விளைவாகவே நான் ஒரு எழுத்தாளர் எனும் அடையாளம் பெற்றிருக்கிறேன் என்றுகூட கூறிக்கொள்ளலாம். 

ஆனால் பால்யத்தின் நினைவுகளை வெறுமனே அனுபவங்களாகக் கடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனூடாகவே அவை தர்க்கங்களாக மாற்றமுற்று சமூகப்பெறுமானத்தை அடைவதாக நினைக்கின்றேன். 

நான் ஏற்கனவே கூறியது போல அறிவும் மொழியும் எனது பால்ய அனுபவங்களுடன் கலக்கும் போதிலேயே என்னால் படைப்பூக்கம் பெற முடிந்திருக்கிறது. அதன் எச்சமாக வாழ்வில் நான் எதிர்கொள்ளும் எல்லா அனுபவங்களைகளயும் பிரதீயீடு செய்து படைப்புக்களாக மாற்ற முடிகிறது. 

கே: உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித்தள்ளிய படைப்பு என்று உண்டா?

ப: எழுதுவதற்கு உந்தித்தள்ளிய படைப்பு என்று அடையாளப்படுத்தி என்னால் சொல்ல இயலவில்லை. ஆனால் என்னுடைய எழுத்தில் மொழி எப்படி இருக்கவேண்டும் என்று நான் கற்றுக்கொள்ள எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலைப் பல தடவைப் படித்திருக்கிறேன். சில குறிப்பிட்ட பக்கங்களை மீண்டும் மீண்டுமாய் படித்து எனக்குள் படைப்புச்சக்தியை ஏற்றிக் கொள்வதாய் நம்பியிருக்கிறேன்.

வாசிப்பில் என்று இல்லாமல் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய நபர்களாக அனேகர் என்னைப் பாதித்து எழுத வைத்ததுண்டு. 

கே: எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார்? 

ப: ஒற்றை எழுத்தை ஆதர்சமாகக் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை. அது போலச்செய்தலாக மாறிவிடும் என்று அஞ்சுவேன். தவிர நான் பல்வேறு வேலைகளையும் எழுத்தையும் தொடர்ச்சியாக கற்றலையும் மேற்கொள்பவள் எனும் வகையில் மிகச் சரியாகத் தெரிவு செய்த எழுத்தாளர்களின் படைப்புகளையே வாசிக்கிறேன். பொதுவாக அவை என் படைப்பூக்கத்தை அதிகப்படுத்தும் விதமானதாக… எழுத்தின் வழி புதிய ஒரு அணுகுமுறையை அல்லது ஏதோ ஒன்றைக் கற்றுத்தருவதாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொள்கிறேன். 

அந்த வகையில் சங்க இலக்கியங்களிலிருந்தே நான் தெரிவு செய்துதான் படித்திருக்கிறேன். சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலேயே ஒளவையாரின் எழுத்தை விரும்பிப் படிப்பதுண்டு. போலவே பிறமொழி எழுத்தாளர் வரிசையில் ஆன்டன் செகாவ், காப்கா, தஸ்தாயேவ்ஸ்கி, டோல்ஸ்டோய், எட்கர் ஆலன்போ அப்படியே தமிழில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் என்று எனது தெரிவுகள் தொடரும். சமீப காலமாக கே.ஆர். மீராவின் படைப்புகளை விரும்பிப் படிக்கிறேன். 

கே: சிறுகதைக்கான கருவை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? 

ப: இதுதான் இப்படிதான் என ஏதேனும் ஒரு கதைக்கருவைப் பிடித்துக்கொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. என்னைப் பாதிக்கும் சக மனிதரை அல்லது சில சம்பவங்களை எழுதவேண்டுமென ஆரம்பித்து அதனை அதன்வழியில் விடும்போது கதைக்கரு அதுவாகக் கட்டமைகிறது. சமயங்களில் கதை முடியும்போது நான் ஏலவே தீர்மானித்த கதைக்கரு மாற்றம் பெற்று வேறொன்றாய் மாறியிருப்பதையும் அவதானித்திருக்கிறேன். அதனையொத்ததாய் வாசகர்களிடத்திலிருந்தும் அவ்வாறான பிரிதொரு கரு அடையாளப்படுத்தலையும் காண்கிறேன். 

பொதுவாக மலையக வாழ்வியலை, அழகியலை, விளிம்புநிலை மக்கள்சார் இன்னல்களை, குறிப்பாகப் பெண்களை எழுதத்துணிந்த நான், என் கண்ணில் பட்டு உணர்வுரீதியாகத் திரண்டெழும் அவ்வாறான சிறுபுள்ளியைப் பற்றிக்கொண்டு அதன் வழியில் எழுத ஆரம்பிப்பேன். அது எதுவானாலும் அவற்றை என் அனுபவத்தோடு தொடர்புபடுத்தி அல்லது நான் அதுவாக உணர்ந்து எழுதும்போதிலேயே அப்படைப்பிற்கு முழுமையாக உயிர் தர முடிகிறது என்பதை அனுபவித்திருக்கிறேன். 

கே: சமகாலக் கதைகளில் வரலாறு, தொன்மம், நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணத்துடனான செயல்பாடா? 

ப: வரலாறு, தொன்மம், நவீன வாழ்க்கை எல்லாமே இன்றைய இலக்கியத்திற்கான மூலப்பொருள்களாக இருக்கின்றன. வரலாறு என்பது வெறும் செய்தியல்ல அது காலத்தின் நகர்வு. காலத்தின் நகர்வு ஒரு கதைக்குள் இயங்குகின்றபொழுது அது ஒரு புதிய அனுபவத்தை வாசகருக்குத் தருகிறது. பின்நவீனத்துவ, பின் காலனிய, பெண்ணியச் சிந்தனைகள் வந்த பிறகு வரலாறுகள் மாற்று வாசிப்புக்கு உள்ளாகின்றன. தொன்மங்களுக்குப் புது வீரியம் கொடுக்கப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சிதறலான போக்குகள் உரையாடப்படுகின்றன. 

மாற்று உரையாடல்களின் வழியாக வரலாறுகளும் தொன்மங்களும் புதிய முகங்களைப் பெரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அது ஆப்பிரிக்க தொன்மங்களாகட்டும் தமிழ்த் தொன்மங்களாகட்டும் அல்லது சிங்களத் தொன்மங்களாகட்டும் எல்லாமே கதைக்குள் புகுந்து வீரியம் தரக்கூடியதாக இருப்பதையே அவதானிக்கிறோம். கடந்த சில பத்தாண்டுகளாாக இம்மரபு தீவிரம் பெற்று வருவதைக் காணமுடிகிறது. அத்துடன் மையங்களைக் கடந்த விளிம்புகளை நோக்கிய பயணமாகவும் அது இருக்கிறது. அதாவது சாதாரண மக்களின் பாடுகளிலிருந்து எழுகின்ற இலக்கியம் நாட்டுப்புறத் தொன்மங்களின் வழியாக உயிர்பெறுகிறதென்றும் சொல்லலாம்.  

என்னுடைய சிறுகதைகளில் அவ்வாறான வரலாறு, தொன்மம் தொடர்பான தாக்கம் இல்லாமலில்லை. உதாரணமாக நீலி, பச்சை வாசனை ஆகிய கதைகளைச் சொல்லலாம். எனினும் தொன்மங்களை, சமூக வரலாறுகளை எழுதவேண்டுமென்ற பிரயத்தனத்துடன் நான் அவற்றை எழுதத் துணியவில்லை. அவை இயல்பாக என் கதைக்குள் வந்து உட்கார்ந்துகொண்டன. 

கே: சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்ராயம்? 

ப: என்னுடைய பார்வையில் இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இதுவெனலாம். உலகம் முழுவதுமாகப் பெண்கள் ஏராளமாக எழுதுகிறார்கள் என்பதை அவதானிக்கிறோம். இதுவரை சிந்திக்க அனுமதிக்கப்படாத சரிபாதி மூளைகள் சிந்திக்கின்றன. அதாவது ஆண்களின் கண்களால் பார்க்கப்பட்ட உலகத்தைப் பெண்களின் கண்கள் வழியாக உணர்தல் இப்போது சாத்தியமாகியிருக்கிறது. தவிர சமூக மாற்றத்திற்கான பெண்ணெழுத்தாளர்களின் பார்வையை, அவர்களது படைப்பை, படைப்பு மொழியை இலக்கிய உலகம் மிக வாஞ்ஞையோடு ஏற்றுக்கொள்வதாகவும் தோன்றுகிறது. 

சமூகப் பொதுவெளியில் எக்காலத்திலும் உரையாடலுக்கு உட்படாத மனிதர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. விளிம்பில் கிடக்கும் மனித வாழ்வை மையமாக வைத்து உரையாடும் இலக்கிய ஆக்கங்களைக் காண்கிறோம். சமூக வரலாறுகளை, இனவரைவியல் கூறுகளைக் கொண்ட எழுத்துக்களும் எழுந்து வருகின்றன. உயர்ந்தது x தாழ்ந்தது என்று கட்டமைக்கப்பட்ட நிலவுடைமைச் சமூகக் கட்டமைப்புகள் எழுத்தில் நொறுங்குகின்றன. முகம் சுளித்த வாழ்வுகளுக்குள் புதைந்து கிடக்கும் வலிகளும் உரிமைக்குரல்களும் எழுத்தில் காலூன்றி நிற்கின்றன. 

கூடவே, எழுதவேண்டும் என்பதற்காகவும், நானும் இருக்கிறேன் என்பதற்காகவும் எழுதுகின்ற ஒரு பெருங்கூட்டமும் மேலெழுந்து வருவதையும் காண்கிறோம். விளம்பரங்களின் மூலம் மையத்துக்குத் தங்களை நகர்த்திக்கொள்வதற்கான சமூக ஊடகச் சாத்தியப்பாடுகளை மிகச்சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டு களமாடுபவர்களையும் காண்கிறோம். கும்பல் மனநிலையும் குரோத மனநிலையும்கூட எழுத்துலகில் இருப்பதைக் கண்டு அச்சமும் அதிர்ச்சியும் கொள்கிறேன். எது நிற்கும் எது காணாமல் போகும் என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்ற நம்பிக்கையோடு மௌனமாகக் கடந்து போகிறேன்.

கே: உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? எழுதும் செயல்பாட்டிற்குத் தனிப்பட்ட முறைமைகளைப் பின்பற்றுகிறீர்களா? 

ப: அன்றாடம் நேரம் ஒதுக்கி எழுதுதல் என்பது எனக்கு மிகத்தொலைவானது. மேலதிகத்தொழில், மேற்படிப்பு, குடும்பம், குழந்தைகள், வீடு இவையெல்லாம் தாண்டிய அடுத்தக்கட்ட நிகழ்வாக எழுத்தை வைத்தல் மட்டுமே சாத்தியம். இது எனக்கு மட்டுமல்ல, எழுதக்கூடிய அநேக பெண்களது அனுபவம் இதுவாகத்தான் இருக்கமுடியுமென்று தோன்றுகிறது. ஆனால், நான் முன்சொன்ன அத்தனையையும்விட எழுத்து மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதை இரகசியமாக உணர்கிறேன் என்பதும் உண்மை. 

அதனால்தான் ஏற்கனவே கூறியிருந்தேன். நான் எழுதவில்லை என்னைப் பயன்படுத்தி அவை எழுதிக்கொள்கின்றன. ஏதோவொரு உந்தலில் என்னை மீறி எல்லாவற்றையும் தூரமிட்டு, ஒரு படைப்பிற்குள் சில தினங்கள் வாழ்ந்து மீள்வேன். பரிசாக நான் உயிர்தந்த ஒரு படைப்பைப் பெறுவேன். அதனால்தான் அவ்வாறு எழுதக் கூடிவரும் மனநிலையை ஒரு தவமெனச் சுட்டினேன். எனக்கு எழுத்து அதுவாகதான் அமைகிறது. வாசிப்பதற்கு என்னை வருத்தி நேரமொதுக்குவதைப் போல எழுதுவதற்கான நேரத்தைத் திட்டமிட்டு அமைக்க முடியவில்லை. 

எனினும் நான் எழுதும் அந்தப் பொழுதுகள் ஒன்றில் இரவாகவோ அல்லது அதிகாலையாகவோ இருப்பதையே மனம் அதிகம் நாடுவதாகத் தோன்றுகிறது. 

கே: உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து… 

ப: முதற்தடவையாக அபுனைவு முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆய்வாளரும் என் சக தோழருமான என்.சரவணன் அவர்களுடன் இணைந்து ஒரு ஆழமான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இலங்கை வரலாற்றில் இதுவரை ஆழமாக ஆராயப்படாத வரலாற்றுப் பாத்திரமான ‘குவேனி’ பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறோம். ஏராளமான உசாத்துணை எழுத்துக்களை இதற்காகத் திரட்டி, அவற்றைப் பகுத்தாய்ந்து தொடர் உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். 

எனது முனைவர் பட்ட கற்கையில் கிடைக்கிற ஆய்வு முறையியல் பயிற்சிகள் இந்த ஆய்வுக்குப் பேருதவியாக இருக்கிறது. புனைவிலக்கியத்தைப் படைப்பவர்கள் ஆய்வுக்குள் நுழையும்போது எந்தளவு சிரமப்படவேண்டும் என்பதை அனுபவத்தில் அறிகிறேன். இது ஒரு புதிய அனுபவத்தையும் புதிய பயிற்சியையும் எனக்குத் தந்திருக்கிறது. கூடவே, குவேனி பற்றிய இவ்வாய்வினை ஒரு நாவல் வடிவாக்கும் திட்டமும் இருக்கிறது. 

***

நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here