கேத்ரீன் மான்ஸ்ஃபீல்டு
தமிழில்: பாலா இளம்பிறை
அவள் கதவைத் திறந்த அந்த தருணத்தில் அங்கே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். எப்போதுமில்லாதது போல் அன்றைக்கு மிகுந்த கனிவை அவன் முன்னே வெளிப்படுத்தினாள். அவளைப் பின் தொடர்ந்து ஸ்டுடியோவுக்குள் வரும் அவனும் அவ்வாறே நடந்து கொண்டான். அங்கே வந்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைந்தவனாகவே தெரிந்தான்.
“பிஸி இல்லையே?”
“இல்லை. சும்மா ஒரு டீ சாப்பிடலாம்னு.”
“யாருக்காகவும் காத்திருக்கலையா?”
“யாருக்காகவும் இல்ல.”
“வாவ். நல்லது.”
அவன் தன்னுடைய கோட்டையும் தொப்பியையும் வெகு சிரத்தையாக ஓரிடத்தில் வைத்தது நீடித்தது போக, எதற்கும் நேரம் ஒதுக்கிச் செலவழிக்க ஏதுவாகவே இருப்பவன் போலத் தோன்றினான், அல்லது அங்கிருப்பவர்களிடமிருந்து என்றென்றைக்குமாக விடைபெற்றுச் சென்று விடுபவனாகவும். நேரே அங்கிருக்கும் கணப்பு அடுப்புக்கு அருகே வந்து சுடர் விட்டு எரிந்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் நெருப்பின் தழல் மீதாக கைகளை நீட்டினான்.ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த நெருப்புக்கு நடுவே அவர்களிருவரும் சிறிது நேரம் அமைதியாயிருந்தனர்.ஆயினும் இன்னமும் அவர்களுடைய உதடுகளின் மீது சுவையேற்றிக் கொண்டிருக்கும், ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டிய வாழ்த்துக்களின் சொற்கோர்வையின்அதிர்வை இரசித்துக் கொண்டிருந்தனர்.இருவரது உள்ளுக்குள்ளும் அந்த முணுமுணுப்பு தொடர்ந்தது :
“எதற்காக நாம் பேச வேண்டும். இது போதாதா?”
“ஹாங்.இது போதும்கறதுக்கும் மேல.இந்த ஒரு நொடியை நான் இதுவரைக்குமே அனுபவிச்சதில்ல”
“எவ்ளோ நல்லாருக்கு உன் கூட இது மாதிரி இருக்குறதுக்கு..”
“நல்லாருக்கா..”
“ஆமா.போதும்கறதுக்கும் மேல..”
ஆனால் அவன் உடனடியாய் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள்.
“சிகரெட் ஏதும் இருக்கா? கெட்டில்’ஐ தயார் பண்ணிட்டு வர்றேன். டீ குடிக்கணுமா உனக்கு?”
“இல்லை. குடிக்கணும்னு இல்ல.”
“நல்லது. எனக்கு வேணும்.”
“ஓ. உனக்கு.” அவன் அங்கிருந்த ஆர்மீனியன் தரைவிரிப்பை இழுத்து விட்டு அங்கே அழுத்தமான அசைவு கொடுக்காத சுருள் சுருளான சாம்மியர் விரிப்பை அதற்கும் கீழாக சரித்துவிட்டான். “நீ ஒரு சுத்தமான குட்டி சீனப் பெண்.”
“ஆமாம்,நான்,” சிரித்தாள். “நான் தேநீரை எப்போதும் இரசிக்கிறேன். வலிமையான மனிதர்கள் வைன்’ஐ விரும்புவதைப் போல்.”
அவள் ஆரஞ்சு நிற அடிப்பாகம் கொண்ட அங்கிருந்த விளக்கை ஏற்றினாள். திரைச்சீலையை இழுத்து விட்டுவிட்டு டீ மேசையை முன்னுக்கு இழுத்தாள். டீ கெட்டிலில் இரண்டு பாடும் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கணப்பு அடுப்பின் நெருப்பு படபடத்தது. அவன் உட்கார்ந்து கொண்டு கைகளால் கால் முட்டிகளை நீவிக் கொண்டிருந்தான். அவளோடு அமர்ந்து தேநீர் அருந்தும் நிகழ்வானது ஒரு மகிழ்வான தருணம். மேலும், சுவையான சத்தான உணவுகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பவள் அவள். கவர்ந்திழுக்கும் அழகான சாண்ட்விட்ச்கள். இனிப்பும், சுவையான பாதாம் குச்சிகளும். அதோடு கூடவே சுவை மிகுந்த அடர் நிறத்து கேக் -ஆனாலும், அங்கிருக்கும் மது கொஞ்சம் இடறலாக இருக்கலாம். அவன் நிறைவு செய்ய விரும்பினான். மேசையை இலேசாகச் தள்ளிவிட்டு வெளிச்சத்திற்கு நேரே அவர்களது இரண்டு நாற்காலிகளும் இழுத்து வைக்கப்பட்டன. அவன், உடனடியாய் அங்கிருந்த புகைக்கும் குழாயை எடுத்து புகையிலையை நிரப்பினான். அடிக் கிண்ணத்தில் புகையிலையை அழுந்த நிரப்பிக்கொண்டே சொன்னான் :
“போன தடவை நாம பார்த்துகிட்டப்போ. நீ கடைசியா சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். எனக்கும் அது போல தோணுச்சு.”
ஆம். அதற்காகத் தான் அவன் காத்திருந்தான் – அவளும் தான். ஆம், ஆவி பறக்கும் தேநீர்க் குடுவையை அவள் உலாத்துவது போல் ஒரு சுற்று சுற்றி கலக்கிக்கொண்டு திரும்பியபோதுதான் பார்த்தாள், அவனுக்குப் பின்னால் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த மற்ற இருவரையும். தனது இருக்கையில் ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டிருக்கும் அவன் அவளது நிம்மதியைப் பறித்துக் கொண்டிருந்தான். பூண்டு, வெண்ணெய், பார்லி சாஸ் கொண்டு தயார் செய்யப்பட்ட நத்தைக் கறி பதார்த்ததை – ‘எஸ்கார்கோ’வை அவன் முன்னால் மேசையில் நேர்த்தியாய் சுருளாய் வைத்துவிட்டு நீல நிற கைப்பிடிகள் கொண்ட நாற்காலியில் தானும் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அந்தச் சித்திரமானது மிகத் தெளிவாய்,மிகத் துல்லியமாய் தேநீர்க் கெட்டிலின் நீல நிற மூடியில் வரையப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் அவளால் அவசரப்படாமல் இருக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அவள் கத்திச் சொல்லியிருக்க வேண்டும் – “கொஞ்சம் டைம் வேணும்.”அவள் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவேணும் நேரம் வேண்டும். தொடர்ந்த இந்தப் பரிச்சயமான நேர்த்தியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நடைமுறை செயல்களில் இருந்தெல்லாம் தன்னை விடுவித்துக்கொள்ள காலம் வேண்டுமென்று விரும்பினாள். வயதுக்கேற்ற அழகான எல்லா விசயங்களோடும் தன்னிச்சையாய் அவளைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் இந்த அனைத்தும் அவளது வாழ்வின் ஒரு பகுதியாகி – குடும்பப் பாரம்பரியம் போல் – குடும்பத்தினர் அனைவரும் அறிந்துகொண்ட பிறகும் – தன்னுடைய தீவிரமான உணர்வுகளை மிக நீண்ட உரிமை கோரல்களாக அவள் இதுவரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். ஆனால், அவர்கள் இப்போது செல்ல வேண்டும். கட்டாயமாய் ஏதாவது செய்தாக வேண்டும். அவர்களிருவரும் அடித்துச் செல்லப்பட வேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும். துரத்தப்பட வேண்டும். கட்டளைக்கு இணங்கி நிழல் படிந்த மாடிப்படிகளைப் பிடித்துக்கொண்டு எந்தவொரு முணுமுணுப்புமில்லாமல் உடைமைகளை எடுத்துக்கொண்டு உறங்கச் செல்லும் குழந்தைகளைப் போல் அவர்கள் செல்ல வேண்டும்!
இந்தச் சிறப்பான வியப்பூட்டும் குண நலன்களோடு கூடிய அவர்களது நட்பானது அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புவிக்கத் தலைப்பட்டதில் இருந்தது. மிக நீண்ட புல்வெளியின் நடுவே இருக்கும் இரண்டு திறந்த நகரங்களைப் போல் அவர்களது இதயமானது ஒருவர் மற்றவருக்காய் விசாலமாய்த் திறந்து கிடந்தது. தன் விருப்பத்தில் வெற்றியடைந்த ஒருவன் அவளுக்குள் நுழைவது போன்ற மாயங்கள் ஏதுமில்லை. கண்களால் கவர்ந்திழுக்கும் தந்திரங்கள் ஏதுமில்லை. காமத்தின் சுழல்கள் கதிர்களாய் அங்கேதும் தோன்றியிருக்கவில்லை. கொட்டிக்கிடக்கும் பூவிதழ்கள் மீது நடந்து சென்று அவனுக்குள் தஞ்சம் புகும் நிகழ்வுகள் ஏதும் அவள் பொருட்டு நடக்கவில்லை. இல்லை. அவர்கள் ஒருவர் மீதொருவர் ஆர்வம் மிக்கவர்களாகவே இருந்தனர். சிரத்தையானதொரு பயணம் மேற்கொள்பவர்களாய் இருந்தனர். அறிந்துகொள்ள வேண்டியது எது என்பதையும், புரிதல்கள் பொருட்டும் மறைந்திருக்கும் எண்ணற்றவற்றைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தனர். இந்த முழுமுதல் அற்புதமான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதென்பது – அவனுக்கு அவள் மீது முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டிய நம்பிக்கையையும் – அவளுக்கு அவனுடனான உறவின் மீதான உறுதியான அக்கறையையும் பிடிப்பையும் உறுதி செய்து கொள்வதுமாகும்.
இதில் முக்கியமான விசயம் என்னவெனில் அவர்களிருவரும் தங்களது சாகசப் பயணத்தை எந்தவித இடையூறுகள் இல்லாமலும் முட்டாள்தனமான உணர்வுச் சிக்கல்கள் ஏதுமில்லாமலும் தொடர்வதற்கு ஏதுவான வயதில் அவர்கள் இருந்தனர். உணர்ச்சி மேலீடு எதையும் சிதைத்து விட்டிருக்கும். அதையெல்லாம் தாண்டிய நிலையில் அவர்களிருவரும் புரிதலோடிருந்தனர். மேலும், அந்த வகையான உணர்ச்சி மேலீடுகள் ஏதும் அவர்களிடத்தில் இப்போது இல்லை. அதையெல்லாம் கடந்து விட்டிருந்தனர். அவன் தன்னுடைய முப்பத்தொன்றாவது வயதில் இருந்தான். அவள் முப்பதில். அவர்களிருவருக்குமான சொந்த அனுபவங்களும் தனிப்பட்டவைகளாய் இருந்தன. அவை மேலோங்கியதாய் இருவருக்கும் தனித்தனியாய் வேறுபாடுகள் நிறைந்ததாய் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இது அறுவடைக்கான காலம் – ஆம். அறுவடை. உண்மையில் அவனுடைய நாவல்கள் மிகப் பெரியவை இல்லையா? அவளுடைய நாடகங்களும் அப்படியே. உண்மையான ஆங்கில நகைச்சுவையின் நேர்த்தியான உணர்வானது அவளைத் தவிர வேறு எவருக்கும் இருந்திருக்குமா? பொறுமையும் அக்கறையுமாக அந்த கேக்’கை அவள் துண்டுகளாக்கினாள். அவனும் ஒரு துண்டுக்காக அவளருகே நகர்ந்தான்.
”எவ்ளோ நல்ல விசயம் இதுன்னு, நீ உணர்றியா”, மன்றாடுகிற தொனியில் கேட்டாள்.“நல்ல கற்பனைத் திறத்தோடு இதைச் சாப்பிடு. முடிந்தால் கண்களைச் சுழற்று – உயிர் மூச்சில் அதன் சுவையை உணர்ந்துகொள். இந்த சாண்ட்விட்ச் ஒண்ணும் ஹேட்டர்ஸ்’ பேக்’ல வெச்சு பத்திரமா எடுத்துட்டு வந்ததில்ல. இந்த கேக் எப்படின்னா, இறை நூலோட பழைய ஏற்பாட்டில குறிக்கப்பட்டிருக்கிற ஒரு வகையான கேக். கடவுள் சொன்னார் : அப்பமானது அப்படியே இருக்கட்டும். அது ஏற்கனவே அங்கேயே இருந்தது தான். அது நன்மை பயக்கக் கூடியதாய் இருந்ததை அந்த இறைவனே கண்டுகொண்டார்.”
“நீ எனக்கெதுவும் வேண்டுகோள் வைக்க வேண்டியதில்ல”, என்றான். “உண்மையிலேயே உனக்கு அது தேவையில்லை. எனக்கொரு விசித்திரமான உணர்வு எப்போதும் உண்டு. அதை நான் கவனிச்சிட்டே இருக்கேன். நான் இங்கே என்ன சாப்பிடறேனோ, அதுபோல வேறெங்கேயும் எனக்குக் கிடைச்சதில்ல. நான் நினைக்கிறேன், ரொம்ப நாளா தனிமையிலேயே இருக்கிறது – அப்புறம் ஏதாவது படிச்சிட்டு இருக்கும்போதே சாப்பிடுறது -என்னோட பழக்கம்னா சாப்பாட்டை,‘ஆமா அது சாப்பாடு’ அப்படின்னு நினைக்கிறது –ஏதோ அங்கே சாப்பிடுறதுக்கு இருக்கு, சில நேரங்கள்ல – ‘சாப்பிட்டாகணும்’ – ஆமா, அங்கே எதுவும் இல்லாட்டியும்.”, அவன் சிரித்தான். “உனக்கு அது அதிர்ச்சியளிக்கக் கூடியதா இருக்கு. இல்லையா?”
“உள்ளுக்குள்ள”, என்றாள்.
“ஆனா இங்கே பாரேன்”, தன்னுடைய கோப்பையைத் தள்ளி வைத்துவிட்டு வேகமாகப் பேசினான். “பொதுப்படையான வெளியுலக வாழ்க்கை, வெளியூரில் தங்கியிருந்த அனுபவமெல்லாம் எனக்கு எதுவும் இல்ல. பொருட்களின் பெயர்கள் எதுவும் கொஞ்சம் கூடத் தெரிவதில்லை. மரங்கள் மற்றவைகள். நான் ஒருபோதும் இடங்களையோ தளவாடங்களையோ இல்லைன்னா மக்கள் எப்படி இருப்பாங்களோன்னோ யோசிச்சதே இல்லை. ஒரு அறை என்பது எனக்கு மற்றொரு அறையைப் போலவே. அது போலத் தான் நான் உட்கார்றதுக்கு ஒரு இடம் – படிக்க – இல்லைன்னா பேச – ஒண்ணு தவிர்த்து,” கொஞ்சம் நிறுத்தினான். முற்றிலும் புதிதான அப்பாவியாய் சிரித்துக் கொண்டே சொன்னான், “இந்த ஸ்டுடியோவைத் தவிர்த்து.” சுற்றிலும் பார்த்துவிட்டு அவளை திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்துவது போல் நகைத்தான். தான் வந்து சேர வேண்டிய இடம் ஏற்கனவே வந்துவிட்டதோ என்கிற பரிதவிப்பும் பரபரப்புமாய் கண் விழித்துப் பார்க்கும் ஒரு இரயில் பயணி போலிருந்தான் பார்ப்பதற்கு.
“இங்கே இன்னொரு விசித்திர விசயம். நான் கண்ணை மூடினாலும், இங்கே இந்த இடத்துல இருக்கிற ஒவ்வொண்ணையும் அக்கு வேறா ஆணி வேறா என்னால பார்க்க முடியும். இப்போ நான் ஒண்ணு நினைச்சுப் பார்க்கிறேன். உணர்வுபூர்வமா நான் இதுக்கு முன்னால இதை நினைச்சுப் பார்த்ததில்ல. எப்பவாவது நான் இங்கே இல்லாம இருந்தாலும், மனசுக்குள்ளேயே நான் இங்கே ஒரு சுற்று வந்துட்டுப் போயிடுவேன் – நீ உட்கார்ந்திருக்கிற சிவப்பு நிற நாற்காலியை சுத்தி வருவேன் – அந்த கருப்பு மேசையில இருக்கிற கிண்ணத்துல என்ன பழங்கள் இருக்குன்னு பார்ப்பேன் – அதை மெதுவா தொடவும் செய்வேன் – எப்படின்னா, தூங்கிட்டிருக்கிற குழந்தையோட தலையை மெதுவா தடவிக் கொடுப்போமே, அப்படி.”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஊன்றிக் கவனித்தான். மூலையில் பொருத்தப்பட்டிருந்த விளக்கின் மீது அந்தப் பார்வை நிலைத்திருந்தது. தலையை ஒருக்களித்துப் படுத்து உதடுகள் திறந்த நிலையில் இருக்கும் குழந்தையானது தனது கனவில் இனிய ஓசையொன்றைக் கேட்பது போலிருந்தது அது.
“எனக்கு அந்த சின்னக் குழந்தையை ரொம்பப் பிடிச்சிருக்கு”, அவள் முணுமுணுத்தாள். அதன் பிறகு இருவரும் அமைதியானார்கள்.
இருவருக்குமிடையே புதுவிதமானதோர் அமைதி நிலவியது.அவர்களின் முகமன் வரவேற்புகள், வாழ்த்துகளுக்குப் பிறகு வெளிப்பட்ட திருப்திகரமான இடைவெளி அளவுக்குக் கூட குறைந்தபட்சமாக அங்கே எதுவும் இல்லை.
“சரி, நாம இப்போ திரும்பவும் ஒண்ணா சேர்ந்திருக்கோம், அப்புறம் நாம போன தடவை விட்ட இடத்துல இருந்தே ஏன் தொடங்கக் கூடாதுங்கறதுக்கு எந்தக் காரணமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.” அந்த அமைதியானது அங்கே அவர்களைச் சூழ்ந்திருக்கும் வெம்மையிலும் மற்றும் தகதகக்கும் கணப்பு அடுப்பின் வெளிச்சத்திலும், மெல்லிய மங்கலான விளக்கொளியிலும் கூட அடக்கப்படலாம். எத்தனையோ தடவைகள் சுலபமாய் நமக்கு காணக் கிடைக்கின்ற -கரையோரமாய் வந்து உடைந்து போகின்ற சிற்றலைகள் எதையாவது வீசியெறிந்துவிட்டுப் போகுமே அதுபோன்றதொரு வேடிக்கை நிகழ்வாகக் கூட ஒரு சலசலப்பை உண்டாக்கி இருந்திருக்கலாமோ. ஆனால்,காலங்கள் முடிவுறாத உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தச் சிறுவனின் தலையானது அறிமுகமில்லாத இந்தக் குளத்தில் விழுந்து கிடக்கிறது -அலைகள் நுரைப்பெருக்குடன்வெளியே வழிந்தோடுகின்றன – வெளியே – இன்னும் வெளியே – கடக்கமாட்டாத எல்லைகளுக்கெல்லாம் அப்பால் – மின்னிக் கொண்டிருக்கும் ஆழ்ந்த இருளுக்குள்;
அதன் பின் இருவருமே அந்த அமைதியைக் குலைத்தனர். அவள் சொன்னாள், “நான் அந்த நெருப்பைத் தணிக்க வேண்டும்.”, அவன் சொன்னான் : “நான் புதிதான ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..”.இருவருமே தங்களது வார்த்தைளில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இருவருக்குமான விடுதலை. அவள் கணப்பு அடுப்பின் நெருப்பைத் தூண்டினாள், மேசையை பின்னுக்கு இழுத்து வைத்தாள், பிறகு நீல நாற்காலியை முன்னிழுத்து அதில் சுருண்டு படுத்துக் கொண்டாள். அவனும் மெத்தை இருக்கையில் தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டு பின்னால் சாய்ந்து படுத்துக் கொண்டான். சீக்கிரம்! சீக்கிரம்! திரும்பவும் அது நடவாமல் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
“போன தடவை நீ விட்டுட்டுப் போன புத்தகத்தைப் படிச்சேன்.”
“ஓ. அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”
அவர்கள் வெளியே சென்று வந்தனர். வழமை போலவே எல்லாமும் சாதாரணமாகவே. ஆனால், அப்படித்தான் இருந்ததா? ஒரு சிறிய விசயத்திற்கு கூட அவர்கள் தீவிர அவசரம் காட்டியிருந்தார்களா – துரித பதில்களுக்கு பழக்கப்பட்டவர்களா அவர்கள் – ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் தயார் நிலையில் தான் இருக்கிறார்களா ? உண்மையிலேயே வெகு அழகாக நகலெடுக்கப்பட்ட ஒரு சம்பவத்தை விட மேலானதாகத் தான் அந்த நிகழ்வு இருந்ததா ? அவனது இதயம் துடித்தது; அவளது கன்னங்கள் வெம்மையேறிக் கிடந்தன. மேலும் மடத்தனமான ஒன்று எதுவென்றால், அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது என்ன நடந்தது என்றும் உணரமுடியவில்லை. அவற்றை மீட்டுருவாக்கி திரும்பிப் பார்க்க அவளிடம் நேரம் இருந்ததில்லை.மேலும், இதுவரை அவளுக்கு நிகழ்ந்தவைகள் போலவே இப்போது மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் தடுமாறினர் – அலைக்கழிக்கப்பட்டனர் – உடைந்து போயினர் – அமைதியாயினர். மீண்டும் அவர்கள் இருளைப் பற்றிய கட்டுகளற்ற கேள்விகள் எழுப்பும் தங்களது உணர்வுகளை அறிந்தேயிருந்தனர். மீண்டும் அவர்கள் இருவரும் வேட்டைச் சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகளாய் இருக்கின்றனர் – தங்களது இணக்க வெம்மைக்குள் அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள் -ஆனால்,ஒரு பலத்த சூறைக்காற்றின்அதிர்வுக்கு அப்பால் எழும் ஓர் ஓசையை நடுக்காட்டிலிருந்து கேட்கிற அனுபவம் – அழுகையைக் கேள்வியெழுப்புவது போன்றதாய்.
தலை நிமிர்ந்தாள், “மழை பெய்யுது”, என்று முணுமுணுத்தாள். மேலும் அவளுடைய குரலானது அவன் ஒரு நாள் சொன்னானே, “அந்தச் சின்னஞ் சிறு குழந்தையை நான் இரசிக்கிறேன்”,என்று, அது போன்றதொரு முணுமுணுப்பு.
அவர்கள் ஏன் அதற்கு இடம் கொடுக்கவில்லை – விளைவுகள் என்னவாயிருந்திருக்கும் – மேலும் என்னதான் நடக்குமென்றும் பார்க்கவில்லை? ஆனால், இல்லை. மாயங்களும் சிக்கல்களுமானதுமான நிலையில் அவர்கள் சிக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் – அவர்களின் உன்னதமான நட்பென்பது அபாயத்தில் இருந்தது என்பதைபோதுமான அளவுக்கு உணர்ந்துகொள்ள கற்றுத் தேர்ந்திருந்தனர். அவள் – அவள் மட்டுமே அழிக்கப்பட்டிருப்பாள் – அவர்கள் அல்ல – மேலும் அவர்கள் அதற்கொரு காரணியாகவும் இருந்திருக்க மாட்டார்கள்.
அவன் எழுந்தான். புகைப் பைப்பினை தட்டினான். தலைமுடிக்குள் விரல் விட்டு கோதிக் கொண்டான். “எனக்கு வியப்பா இருக்கு. ரொம்பத் தாமதமா நான் உணர்றது என்னன்னா, இந்த நாவலோட எதிர்காலப் போக்கு உளவியல் சார்ந்த நாவலா இருக்குமா – இல்லைன்னா அப்படி எந்தத் தாக்கமும் இல்லாமப் போயிடுமா. அதாவது –‘உளவியல்’‘உளவியல் சார்ந்தவை’ இப்படியானவற்றோடு இலக்கியத்துக்கு ஏதாவது ஒரு வகையில் தொடர்பிருக்கிறதா என்று எவ்வளவு உறுதியா உன்னால இதைச் சொல்ல முடியும்?”
“மர்மங்கள் நிறைத்து உருவமற்றவைகளை உருவாக்கம் செய்யும் இன்றைய இளைஞர்கள் ரொம்ப சாதாரணமா உளவியல் பகுப்பு வேலைகளைச் செய்யும் முயற்சிகளில் குதித்து விட்டார்கள் என்று நீ உணர்கிறாய் என்பதைத் தான் சொல்கிறாயா?”
“ஆமா. நான் அப்படித்தான் நினைக்கிறேன். இன்னும் நான் என்ன நினைக்கிறேன்னா, இந்தத் தலைமுறை இதைத் தெரிஞ்சிருக்குறதுல ஒரு படி மேல தான் – அதாவது அது ரொம்ப பலவீனமா இருக்கு – அதை குணமாக்குறதுக்கான ஒரே வாய்ப்பு என்னன்னா அதுக்குள்ளேயே போய் அதுக்கான அறிகுறிகளை உணர்ந்துக்கறது தான். அதை ஒரு முழுமையான ஆய்வா செய்யணும் – அதாவது, அதைப் பின் தொடர்தல் – பிரச்சினையின் வேரைத் தேடிக் கண்டுபிடித்தல்.”
“ஆனா.. என்ன சொல்ல.,” “எவ்வளவு மோசமான கருத்தில்லாத பார்வை.”,அவள் புலம்பினாள்.
அவன் சொன்னான். “அது மட்டுமில்ல,” “இங்கே பார்..” பேச்சு தொடர்ந்தது. இப்போது அவர்களுக்கு உண்மையிலேயே வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றியது. அவனுக்காக பதில் சொல்லுகையில் நாற்காலியைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவளுடைய புன்னகை பேசியது. “நாம் வெற்றி பெற்றுவிட்டோம்.” அவனும் புன்னகையுடன் திரும்பினான், நம்பிக்கையுடன். “முழுமையாக.”
ஆனால் அவர்களின் புன்னகை அவர்களை இடைமறித்தது. அது வெகு நேரம் நீடித்தது. அதுவொரு அசட்டுச் சிரிப்பாக மாறியது.அசட்டுச் சிரிப்புடன் மேலும் கீழுமாய் அலைக்கழியும் நகைக்கும் இரண்டு சிறிய பொம்மைகளாக அவர்கள் தங்களைப் பார்த்துக்கொண்டனர்.
“என்ன பேசிக்கொண்டிருந்தோம்?” அவன் ஒரு கணம் யோசித்தான். அவன் மிகவும் சலித்துப் போய்விட்டான். கிட்டத்தட்ட அவனுக்குள் முனகிக்கொண்டான்.
“என்ன மாதிரியான ஒரு காட்சியை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டு விட்டோம்”, அவன் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான். அவள் அவனைக் கஷ்டப்பட்டு திரும்பிப் பார்த்தாள் – ஆம் – கஷ்டப்பட்டு – தனக்கான தளங்களை அமைத்துக்கொண்டு அதற்கேற்ப அதனை நோக்கி ஓடுகிறாள் –இங்கே ஒரு மரத்தை வைக்கிறாள் – அங்கேயொரு கொத்து மலர்ச்செடி – மேலும் இங்கே மினுமினுக்கும் மீன்கள் நிறைந்த குட்டை. இவ்வாறாக அவர்கள் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர்.
கடிகாரமானது ஆறுமுறை ‘பிங்’ஙென ஒலித்து முடிந்தது. நெருப்பு மென்மையாய் படபடத்தது. எவ்வளவு முட்டாள்கள் அவர்கள் – அழுத்தமான – மந்தமாகி தேங்கிப்போய் – முதிர்நிலையில் – அதே சமயம் அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த அமைதியானது இப்போது ஓர் உன்னதத்தில் இலயிக்கும் கம்பீரமான இசையைப் போல் தோன்றியது. அது துயரம் கப்பியது – அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கொடுமையான நிலை அவளுக்கு – அவன் இறந்து போய் விடுவான் – ஆம், அந்த அமைதியானது உடைந்து போனால் அவன் இறந்து போய் விடுவான். ஆனாலும், அதை உடைப்பதற்காக ஏங்கினான். பேச்சால் அல்ல. அதாவது வழக்கமான எரிச்சலூட்டுகிற உரையாடலாலும் அல்ல. அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கு வேறொரு வழியும் இருந்தது. அந்த வழியில் அவன் முணுமுணுக்க விரும்பினான். “நீயும் அதை உணர்கிறாயா? அதில் உனக்கு ஏதாவது புரியும்படியாய் இருக்கிறதா?”
அதற்குப் பதிலாக, அதிர்ச்சியளிக்கும் விதமாக – அவன் தனக்குள்ளே வந்து விழும் தகவலைக் கேட்டுணர்ந்தான்: “நான் போக வேண்டும்; ஆறு மணிக்கு ப்ராண்ட்’ஐ சந்திப்பதாய் சொல்லியிருக்கிறேன்.”
சொல்லவேண்டியவற்றை சொல்வதற்குப் பதிலாக வேறொன்றைச் சொல்வதற்கு எந்தப் பிசாசு அவனைத் தூண்டியது? குதித்தெழுந்தாள். நாற்காலியிலிருந்து விடுபட்டாள். அவள் அழுவது அவனுக்குக் கேட்டது: “பிறகென்ன, நீ கட்டாயம் அவசரமாய் போகத் தான் வேண்டும். அவர் நேரம் தவறாதவர். இதை ஏன் நீ என்னிடம் முன்னேயே சொல்லவில்லை?”
“நீ என்னைக் காயப்படுத்தி விட்டாய்; என்னைக் காயப்படுத்தி விட்டாய்! நாம் தோற்றுவிட்டோம்!”அவனது தொப்பியையும் கைத்தடியையும் அவனிடம் கையளித்தபோது, அவளது உள்ளுணர்வு அவளை எள்ளி நகையாடியது. பிறிதொரு சொல்லுக்காக அவன் ஒரு கணம் கூட கொடுக்கவில்லை. நடைபாதையைக் கடந்து சென்று அந்தப் பெரிய வெளிப்புறக் கதவைத் திறந்தான்.
அவர்களால் ஒருவரையொருவர் அவ்வாறு பிரிந்திருக்க முடியுமா?அதெப்படி அவர்களால் முடியும்? அவன் படிக்கட்டில் நின்றான். அவளோ கதவின் கைப்பிடியைப் பிடித்தவாறு உள்ளே நின்றுகொண்டிருந்தாள். அப்போது வெளியில் மழையாய் இருக்கவில்லை.
“நீ என்னைக் காயப்படுத்தி விட்டாய்; என்னைக் காயப்படுத்தி விட்டாய்,” அவளது இதயம் சொன்னது. “நீ ஏன் போகக் கூடாது? இல்லை – போகக் கூடாது. அமைதியாய் இங்கேயே இரு. இல்லை – போ!” அதன்பின் அந்த இரவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் சரிந்து செல்லும் அழகிய படிக்கட்டுக்களையும், நெருக்கமாய் முகிழ்த்து படர்ந்து பரவிக் கிடக்கும் ஐவி கொடிகளால் இருண்டு கிடக்கும் வாசல் புறத்துக் கூரையையும், செறிந்து உயர்ந்து நிற்கும் மரங்களைத் தாண்டித் தெரியும் பளிச்சிடும் நட்சத்திரங்கள் நிறைந்த பரந்து விரிந்த வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கருத்து சரியே. அவன் ஏதொன்றையும் பார்க்கவேயில்லை. துன்பியல் நிகழ்வொன்று நிகழ்ந்துவிட்டது.அவன் தவறவிட்டு விட்டான். ஏதும் செய்ய முடியாத அளவுக்கு இப்போது எல்லாமும் மிகத் தாமதமாகிப் போய் விட்டது. அவ்வளவு தாமதமாகிப் போய் விட்டதா?ஆம், அப்படித்தான். முகத்திலறையும் வெறுக்கத்தக்க குளிர்ந்த காற்று தோட்டத்தில் கிளர்ந்தெழுந்தது. சபிக்கப்பட்ட வாழ்க்கை இது! நாசமாய்ப் போகட்டும்! அவளுக்குள் நிகழும் – ‘குட் பை; அடுத்த சந்திப்பு நிகழும் வரைக்கும்’ – என்கிற கதறலை அவள் உள்ளுக்குள் கேட்டாள். கதவு பாடாரென சாத்தப்பட்டது.
ஸ்டுடியோவுக்குள் வேகவேகமாக ஓடி வந்தவள், மிகவும் விசித்திரமாய் நடந்து கொண்டாள். “ஓ!. என்ன கொடுமை! என்னவொரு முட்டாள்தனம்! என்னவொரு அறிவீனம்!” கட்டிலின் அடிப்பாகத்து சுருள் மெத்தையை இழுத்துவிட்டு முடங்கிக் கொண்டாள். எந்தச் சிந்தனையும் இல்லை. ஆத்திரம் அடங்காமல் அப்படியே கிடந்தாள். எல்லாம் முடிந்து விட்டது. எது முடிந்து விட்டது? ஓ. ஏதோவொன்று முடிந்துவிட்டது. அவனைத் திரும்பவும் அவளால் ஒருபோதும் பார்க்க முடியாது. நெடீய நேரம் (அல்லது பத்து நிமிடங்கள் இருக்குமா) அந்த இருண்ட பள்ளத்தாக்குக்குள் கழித்த போது திடீரென்று உள்ளுக்குள் பொறி தட்டியது – மணி அடித்தது. ஆம் – நிச்சயமாக அது அவன் தான். அதற்குத் தகுந்தாற்போலவே அதன் போக்கிலேயே சிறிதளவே அதற்காக தன்னுடைய எண்ணத்தைச் செலுத்தி, அதை அப்படியே விட்டிருக்க வேண்டும். அவள் பதிலுக்காகப் பறந்தாள்.
கதவின் அருகே வயதான முதிர்கன்னி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள் – அவளை ஒரு பரிதாபமானகாரமான கடவுளாக அவளே உருவாக்கி வைத்திருந்தாள் (அவள் ஏன் அந்தச் சமயத்தில் அங்கே நின்றிருக்க வேண்டும் என்பதை இறையே அறியும்) மிகவும் பரிதாபகரமான முறையில் அவளால் பெண் தெய்வமாய் வழிபடப்பட்டு வருபவள். அவள் கதவைத் திறந்த போது, அந்தப் பெண் தெய்வமானவள் தனது தொடர் வழக்கமாக அவள் பக்கம் திரும்பி மணியை அடித்துவிட்டு சொல்ல ஆரம்பிப்பது வழக்கம். “பிரியத்துக்குரியவளே,. என்னை இப்படியே அனுப்பி விடு!”ஆனால் அவள் அதைச் செய்ய மாட்டாள். ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விதியின்படி அவளை உள்ளே வரச்சொல்லி அழைத்து அங்கிருந்த எல்லாவற்றையும் இரசிக்க அனுமதிப்பாள். பிறகு, கொஞ்சமாய் வாடிப் போயிருந்தாலும் அவள் கையளிக்கும் பூங்கொத்தை மிகுந்த கனிவோடு பெற்றுக்கொள்ளவும் செய்வாள். ஆனால் இன்றோ,
“ஓ. என்னை மன்னித்து விடுங்கள்,” கதறாத குறையாக சொன்னாள். “கூட ஒருத்தர் இருக்கிறார், என்னோட. கொஞ்சம் மரச் சிற்ப வேலைகள்ல பரபரப்பா இருக்கோம். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு பிஸி ஆயிட்டேன்.”
“பரவாயில்லை கண்ணே. ஒண்ணும் பிரச்சினையில்லை டார்லிங். அதைப்பத்தின கவலையெல்லாம் வேண்டாம்”, தூய அன்போடு பேசினாள் அவள்.
“நான் சும்மா இந்தப் பக்கமா போயிட்டிருந்தேன், உனக்கு என் தரப்பிலே இருந்து கொஞ்சம் நம்பிக்கையைத் தரலாமேன்னு நினைச்சேன் – அதுக்காகத் தான் இந்த ஊதா நிற மலர்கள்.” அரதப் பழசான கம்பிகள் கொண்ட ஒரு பெரிய குடையோடு தடுமாறியபடியே அவள் இறங்கினாள்.“நான் மலர்களை இங்கேயே வைக்கிறேன். வீசுற காத்துல இருந்து பூக்களைக் காப்பாத்தறதுக்கு இதுதான் சரியான இடம். இங்கே தான் வைக்கிறேன்.”வாடிய ஒரு சிறிய பூங்கொத்தை உதிர்த்துத் தள்ளினாள்.
ஒரு கணம் அந்த ஊதா நிற மலர்களை அவள் வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் கதவின் பின்னாலிருந்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்தபோது விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது. மீண்டும் அவள், அழகாகச் சரிந்து கிடக்கும் படிக்கட்டுக்களையும், ஐவி கொடிகளால் சூழப்பட்டிருக்கும் இருண்ட தோட்டத்தையும் வில்லோ மரங்களையும் பரந்து விரிந்த பளிச்சென்ற வானத்தையும் கண்டாள். கேள்வி போல் தொக்கி நிற்கும் அந்த மௌனத்தை அவள் மீண்டும் உணர்ந்தாள். ஆனால், இந்தமுறை அவள் தயங்கவில்லை. முன்னோக்கி நகர்ந்தாள். அங்கே சூழ்ந்திருந்த எல்லையற்ற அந்த அமைதிக் கடலில் ஒரு சிறு அதிர்வையும் ஏற்படுத்தி விடுவோமோ என்று அச்சம் கொண்டவளாய், மென்மையாகவும் இதமாகவும் அவள் தனது தோழியைக் கட்டியணைத்தாள்.
இந்த நன்றியுணர்ச்சியால் நெகிழ்ந்து போயிருந்த அவளது தோழி மனமுவந்து, “என் அன்பே” என்று முணுமுணுத்தாள். “உண்மையை சொல்லப்போனால் அவையெல்லாம் ஒன்றுமேயில்லை. ஒரு சின்னஞ் சிறிய நாணயக் குவியல்களைப் போன்றதொரு சிறிய எளிமையான அற்பமானதொரு கூட்டம்.”
ஆனால் அவள் பேசப்பேச இன்னுமின்னும் இதமாய் – மென்மையாய் – திடமாய் அவள் ஓர் அரவணைப்பில் மூழ்கினாள். மிக அழகான தழுவல் அது. அத்தகையதொரு மகிழ்வான அழுத்தத்தால் அரவணைப்பால் நெடு நேரம் சிறைபிடிக்கப் பட்டிருந்த அந்த பாவப்பட்டவளின் மனமானது உண்மையிலேயே நிலைகுலைந்து போயிருந்தது. அப்போதைக்கு இலேசாக நடுங்கிக் கொள்வதற்கு மட்டுமே அவளிடம் சக்தி இருந்தது. அவள் தள்ளாடிப் போனாள்; நடுக்கம் கலந்த குரலில், “அப்படியானால், நான் இங்கே இருப்பதிலே உனக்கு அவ்ளோ பெரிய தொந்தரவு ஏதுமில்லை தானே?” என்று கேட்கும் அளவுக்கு மட்டுமே அவளிடம் அப்போது தெம்பு இருந்தது.
“இரவு வணக்கம், தோழியே,” என்றாள் வந்திருந்தவள். “சீக்கிரமே மீண்டும் வாருங்கள்” என்றாள் இவள்.
“ஓ.கண்டிப்பாக. நிச்சயமாக.”
இந்த முறை அவள் ஸ்டுடியோவை நோக்கி மெதுவாகத் திரும்பி நடந்தாள். அறையின் நடுவில் கண்களை பாதி மூடிய நிலையில் நின்றிருந்த போது, மிகவும் இலேசாக உணர்ந்தாள். ஒரு குழந்தையின் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவள் போல், தளர்ந்து ஓய்வெடுப்பவள் போலிருந்தாள். மிக இலேசாகவும் புத்துணர்வுடன் இருப்பது போலவும் உணர்ந்தாள். சுவாசிப்பது கூட மகிழ்ச்சியாய் இருந்தது;
கட்டில் மெத்தையின் கீழ்ப்புறத்தில் இருந்த சுருள் விரிப்பானது அழுக்காய் இருந்தது. இருக்கை மெத்தைகள் “கோபமுற்ற மலைகளைப் போல் காட்சியளிக்கின்றன” அவள் அப்படித்தான் அவற்றைச் சொன்னாள். எழுதும் மேசைக்கு செல்லுமுன் அவைகளை ஒழுங்குபடுத்தினாள்.
“உளவியல் நாவல் குறித்த நமது உரையாடலைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று அவள் படபடத்தாள். அவசர அவசரமாய் எழுதிக்கொண்டாள். “உண்மையிலேயே இது மிகவும் சுவாரசியமானது”.. உரையாடலானது இப்படியாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
கட்டக் கடைசியாக அவள் இப்படி எழுதினாள்: “இரவு வணக்கம், தோழியே. சீக்கிரமே மீண்டும் வாருங்கள்”
கேத்ரீன் மான்ஸ்ஃபீல்ட்– நியுஸிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர். புகழ்பெற்ற டி.எச்.லாரன்ஸ், விர்ஜினியா வுல்ஃப் ஆகியோரின் சமகாலத்தவர். உளவியல் கூறுகள் நிரம்பிய நவீன சிறுகதைகளை எழுதியவர். 34 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
***
பாலா இளம்பிறை– இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

