ஆர். பட்டாபிராமன்
அமைதியான, ஆன்மாவை தொலைத்துவிடாத, ஒவ்வொரு தனிநபரின் சுயாதீனத்துடன் கூடிய எளிய வாழ்க்கையை, உழைப்பு சார் வாழ்க்கையையே காந்தி மனிதர்களிடம் எதிர்பார்த்தார். இந்த சோதனையைத் தன்னால் செய்ய முடிந்ததாக்கி, எவர் ஒருவராலும் அவை சாதிக்க முடிந்த ஒன்றே எனச் சொல்லிச் சென்றவர் காந்தி.
’காந்தி வாசிப்பு’ என்பது தீராத ஒன்று. அவர் பலகோணங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அவரது உரையாடல்களையும், அவரைப் பற்றிய உரையாடல்களையும் உலகம் கேட்டுக்கொண்டே யிருக்கிறது. இந்திய விடுதலையின் பிதாமகன், அகிம்சையின் நாயகன், நெறிசார் மனசாட்சியின் மாதிரி, சர்வோதய கனவு, மேற்குமயம்- தொழில் மயம்- கிராமம்சார் பொருளாதார முன்னேற்றம், அரசியல்- தத்துவக் கூறுகள் என ஏதோவொரு கோணத்தில் காந்தி தொடர்ந்து ஆராயப்படுகிறார்.
உரிமைசார் உலகை, கடமைசார் பாதைக்கு திருப்ப தன் வாழ்நாள் முயற்சியை செய்தவர் காந்தி. இரகசியமில்லா பொதுவாழ்வு சோதனையை செய்து காட்டியவர். லட்சோப லட்ச வெகுஜனங்களை ஈர்த்து ஓரடியானாலும் நகரச் செய்தல், சிலரின் சாகசங்களின் தாவிப்பாய்ச்சல் அல்ல அரசியல் என்பதை நடைமுறையாக்கிக் காட்டியவர் காந்தி.
ஒவ்வொரு தனிநபரின் தன்னாட்சி என்பதை அவர் விடுதலைக்கான பொருளாக விரிவுபடுத்தி தந்தார். பிரிட்டிஷாரிடமிருந்து விடுபடுதல் என்பதுடன் சுதந்திரம் சுருங்கிவிடக்கூடாதென அவர் விழைந்தார். என்றோ ஒருநாள் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு மாற்றும் புரட்சிக்கான கோட்பாட்டு இசங்களை , மார்க்ஸ்- லெனின் போல காந்தி தரவில்லை. அதேபோல இந்திய வேதம் சார்ந்த அல்லது மறைபொருள் தன்மையிலான – ஒரு சிலருக்கேயான esoteric எழுத்துக்களையும் அவர் தரவில்லை.
காந்திக்கு ஓவ்வொருவரின் அன்றாட அனுசரிப்புகள் அவசியமானதாக தெரிந்தது. அவரது சிந்தை, செயல், பேச்சு எழுத்து அப்படியே அன்றாடங்களின், எளிய மனிதர்களின் தேவைகளை சுற்றியே அமைந்தது. எதையும் பின்னொரு தேதிக்கு ஒத்திப்போடல் என்கிற நிகழ்ச்சி நிரலை அவர் வைத்துக்கொள்ளவில்லை. இது இப்படி இருக்கிறது- நம்மிடம் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளது- அதன் மேன்மை அல்லது போதாமை- கொடுமைகளை உணர்தல், அவற்றை நீக்கி அனைவரும் உய்தல் என்பதற்கான பாதையையே அவர் தேர்ந்தெடுத்தார். ஒருவரின் சிறப்பு, பலம், ஆளுமை, அதிகாரம் என்பதை பலரின் மேம்பாட்டுக்கான பொதுமையான ஒன்றாக – ’டிரஸ்டி’க்கானதாக பாவிக்கும் குணத்தை அவர் விழைந்தார்.
எவ்வளவு உயர்ந்த லட்சியத்தின் பெயரால் ஆயுதம் ஏந்தினாலும், ஆயுதம் ஏந்தியவரின் அதிகாரமாக அது முடியுமே தவிர, கோடானுகோடி மக்களுக்கான சுய அதிகாரமாக அது நிலைக்குமா என்கிற சந்தேகம் அவரிடம் இருந்தது. அகிம்சையின் வழியில் ஆன்ம பலத்தின் கூட்டு முயற்சியால் ஏற்படும் மாற்றம் மேம்பட்டு அமையும் என அவர் நம்பி அதற்காக உழைத்தார். கலாச்சாரங்களின் ஊடாட்டங்களை காந்தி மறுக்கவில்லை. என் ஜன்னல் திறப்பால் வீசும் வெளிக்காற்று காலைவாராமல் வரட்டும் என அவர் நிதானப்படுத்தினார். மேற்கின் தொழில்மய நாகரீகம் என்ற பெயரில் வந்தாலும், சோவியத் போல்ஷ்விச முன்னேற்றம் என்ற பெயரில் வந்தாலும் அவருக்கு காற்று காலைவாராமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையிருந்தது.
’சுய ஆட்சி’ அல்லது தன்னாட்சிக்கான காந்தியின் போராட்டங்கள் (Gandhi: Struggling for Autonomy By Ronald Terchek) குறித்து ரொனால்ட் டெர்செக் நூல் ஒன்றை எழுதியுள்ளார். காந்தியை அவர் பின் நவீனத்துவராக பார்க்கவில்லை. காந்தியின் உண்மை குறித்த தரிசனத்தை டெர்செக் அழகாகச் சொல்வார். காந்திக்கு முழுமுதல் உண்மையென ஏதுமில்லை. அந்த அந்த கணத்தின் தருண உண்மைதான். நாம் கண்டுணர்ந்த உண்மைக்கான நேரத்தில் அதற்குரிய நெறி ஆளுகைப்படி நடப்பதுதான்- சுற்றி இருப்போரின் கண்ணியம், சூழல் அமைதிக்கான உகந்த வழி என அவர் நினைத்தார்.
Autonomy stands at the centre of Gandhi’s political philosophy. காந்தியின் அரசியல் தத்துவத்தின் மய்யமென தன்னாட்சி நிற்கிறது. எந்தவொரு மனிதனின் அடையாளத்தையும் அவன் மேற்கொள்ளும் சில வாழ்க்கைமுறை- நெறி அறம் சார் செயல்களே சொல்லவேண்டும் என காந்தி கருதினார். மனிதன் தன் உடலைப் பேண உணவு, உடை, உறையுள் என்கிற அவசியங்கள் தேவை. காந்தி, இவை அனைவருக்குமானதாக இருந்திட வேண்டும் எனக் கருதினார்.
காந்தியின் சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி மனிதன் , சமுகத்திலிருந்து அப்பாற்பட்ட மனிதனல்லன். அவன் சமூக மனிதன். அவன் சபலங்களிடமிருந்து, ஆசை- ஆவல்களின் இழுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பயிற்சி கொண்ட மனிதனாக வேண்டும். இந்த ’தன்னிலை’ சமுகத்தின் ஒவ்வொருவரின் சமத்துவ மதிப்பை ஏற்கும். வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருக்கும் என்பதை ஏற்கும் தன்னிலை. எவரும் உயர்ந்தவரோ அல்லது தாழ்ந்தவரோ அல்ல. அவரவர் வாழ்க்கைப் பாதையை அவரவர் ஆங்காங்கே சேர்ந்து இசைந்து நின்று உருவாக்கிக்கொள்ள இயலும் என்கிற பார்வை கொண்ட தன்னிலை.
கிராம பஞ்சாயத்து- சுய ஆட்சி என்கிற விரிவை காந்தி இதில் நமக்குத் தருவார். இந்தியாவின் விடுதலை என்பதற்கான பொருளை, கிராம மக்கள் தங்களின் விடிவை, முன்னேற்றத்தை சுய சிந்தை மற்றும் சுய உழைப்பில் நிறைவேற்றிக்கொள்வது என்றும் காந்தி பார்த்தார். அவரவர் விதி அவரவர் வசம் – அவரவர் வாய்ப்பில் என்கிற புரிதலது. இங்கு விதி என்பது அன்றாட தொழிற்பாடு சார்ந்த செயல் என்கிற பொருளில் சொல்லப்படுகிறது. அப்பாலை தத்துவமாகவல்ல.
மனிதர்களை வெறும் உரிமை வாகனமாக (rights carrier) பார்த்த ஏராளமான சிந்தனையாளர்களிடமிருந்து, காந்தி வேறுபட்டு நின்றார். கடமைகளின் வழி கிடைக்கப்பெறும் உரிமைகள் எனப் பேசினார். எல்லோருக்கும் சம உரிமைகள் என மற்றவர் பேசும்போது, காந்தி ’எனக்கான கடமைகள்’ என்ற பேச்சை எழுப்பினார். பொறுப்பு என்பதை ஏற்காமல் உரிமைகள் மட்டுமே என அவரின் ’சுயம்-தன்னிலை’ பேசுவதில்லை. எவரையும் பற்றி கவலை கொள்ளாத தனித்த எனக்கான பாதை- விழைவு என்பதை அவர் சுதந்திரமாக ஏற்கவில்லை. காந்தியின் இந்த மேற்கோளை டெர்செக் கொடுத்திருப்பார்-
“there is no such thing as inherited or acquired superiority. . . . I believe implicitly that all men are born equal.”
நான் யார் தெரியுமா, என் பாரம்பரியம் எப்படியானது தெரியுமா என்கிற உரையாடல்கள் அவரின் சுய ஆட்சி உலகில் செலாவணியாக்கதக்கதல்ல. என் குடி, பால், இனம், மொழி, சாதி, வர்க்கம், மதம், தேசம் எனப் பெறப்பட்ட எதன் பெயராலும் அவரின் தன்னிலை தன் மேலாண்மையை அதிகாரத்தை காட்டமுடியாது. டெர்செக் இப்படி தந்திருப்பார்
Gandhi rejects the proposition that ascriptive properties, such as gender, birth, class, caste, education, or nationality, can justify unequal treatment and disqualify some as moral agents.
சுதந்திரம் என்பது விரிவடையக்கூடிய ஒன்று. எனக்கு மட்டுமே விடுதலை- உனக்கல்ல என்பது சுதந்திரமாகாது. அவரவர் அற வாழ்க்கையை அவரவரே தேர்ந்தெடுத்தல் என்பதில் தான் அதன் மேம்பட்ட நகர்வுகளை பார்க்கமுடியும்.
காந்தியைப் பொறுத்தவரை அறச்செயல் என்பது அவரவர் செயலாகவே இருக்கவேண்டும். “A moral act must be our own act.” Otherwise, there is no moral content in our act. இங்குதான் அவரின் அற்புதமான தொழிற்பாடு அமைகிறது. பிறர் என மற்றவரை ஒதுக்கப் போராடும் உலகில், பிறரின்றி ’நான்’ இல்லை என்கிற பேச்சை அவர் முன்னெடுத்தார். பிறர்க்கு சுதந்திரமின்றேல், எனக்கும் சுதந்திரமிருக்காது என்பதை அவர் எடுத்துரைத்தார். தனிமனிதரின் ’தளையற்ற சுதந்திரம்’ என்பதை அவர் ஏற்கவில்லை. எதையும் செய்வதற்கு ஓரு மனிதன் பெறும் லைசென்ஸ் என்பதை காந்தி சுதந்திர வரையறையில் ஏற்கவில்லை.
அற வாழ்க்கையின் அழகே, நாம் பிறர் மீது கொள்ளும் பொறுப்புணர்வில்தான் இருக்கிறது. சிலரின் பொருளாயத வாழ்க்கை பெருக்கத்தில் அல்ல, அனைவரின் அன்றாட அவசியங்களின் தேவைகள் நிறைவேற்றமே வளர்ச்சிக்கான குறியீடு என நாம் அறியவேண்டியுள்ளது. சக மனிதர்கள் தங்களின் பரஸ்பர மரியாதை, கூட்டுறவு இல்லாமல் சமுக வாழ்வை முழுமையுற செய்யமுடியாது.
A self that is unconnected to others cannot develop as a whole self. மற்றவர்களுடன் இணைக்கப்படாத ஒரு “தன்னிலை” முழுமையான தன்னிலையாக வளர முடியாது. இங்குதான் சமுக நல்லிணக்கத்திற்கு, இசைவு கொண்ட காந்தியின் இந்த நன்னோக்கு அவசியமாகிறது.
ஒரு சமுகம் சுதந்திர சமுகமா என்கிற அரசியல் கேள்வியைவிட, மனிதன் சுயேட்சையாக சமுகப் பொறுப்புடன் செயல்படமுடியுமா என்கிற கேள்வியே அவரிடம் முகத்து நின்றது. பிரிட்டிஷ் ஆட்சியேயானாலும், சுயேட்சையான செயல்பாடுகளை நோக்கி சக மனிதர்களை அவர் அழைத்துச் சென்றார். அதற்கான சுயத் தியாக சோதனைகளுக்கு சுற்றியிருந்தோரை பழக்கினார். அசமத்துவமும், ஒடுக்குமுறைகளும், மேலாதிக்க கட்டுகளும் நிறைந்த சமூகத்தை, மனிதர்கள் தங்கள் அற வாழ்க்கை மூலம் அச்சமின்றி எதிர்கொள்ளமுடியும் என்கிற நம்பிக்கையை சக மக்களுக்கு காந்தி ஏற்படுத்தினார்.
சலுகை என்பதையும் உரிமை என்பதையும் காந்தி வேறுபடுத்தினார். எனக்குள்ளதுபோல் பிறருக்கும் உரியது உரிமை. எனக்கு உரிமை அல்லது என் போன்றவர்களுக்கு உரிமை, அவருக்கோ அவர் சார்ந்தவருக்கோ இல்லை எனக் கோருவது சலுகையேயன்றி அது உரிமையாகாது. உரிமையெனில் அது பாத்தி கட்டாதது- பாரபட்சம் காட்டாதது. பிறரின் கடமையை செய்யவிடாமல் தடுக்கும் உரிமையையும் அவர் உரிமையென ஏற்பதில்லை.
விளைவுகளுக்கு அஞ்சாமல் அறநெறிப்படி வாழ்தல் என்பதில் அவரிடம் சமரசம் கிடையாது. மனிதன் மிருக உணர்வுகளில் வீழ சூழல் ஏதுவாக்கலாம். அவன் ஆன்ம உணர்வுகளுடன் போராடி தன்னை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த சுய போராட்டத்தின் வீச்சுதான் அவனின் அறப்பாதையை தீர்மானிக்கும். வாழ்க்கை ஒன்றும் நேர்க்கோடல்ல, இந்த நேரத்து அறச்செயல் என்பது அடுத்த நேரத்திற்கு பொருந்தாமல் போகலாம். எனவே முன்முடிவான நிகழ்ச்சிநிரல்கள், எல்லா காலத்திற்கும் பொருத்தமான கோட்பாடுகள் என அவர் பேசவில்லை. அந்த அந்த சூழலுக்கு மனசாட்சியுடன் உரையாடல்- செயல்படல் எனபதையே அவர் முன் வைத்தார். அவரின் இந்தப் புரிதல் அவருக்கானது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிற புரிதல்
Man is a fallible being. He can never be sure of his steps. What he may regard as an answer to prayer may be an echo of his pride. For infallible guidance man has to have a perfectly innocent heart incapable of evil. I can lay no such claim. Mine is a struggling, striving, erring, imperfect soul
மனிதர்களை நாம் விழையக்கூடிய ஒன்றை அடைவதற்கான வெறும் கருவிகளாக பார்ப்பது, மனித மதிப்பை குறைப்பதாக இருக்கும் என காந்தி கருதினார். அவர்களின் மதிப்பு அவர்களின் உணர்வுபூர்வ பங்கேற்பில்தான் இருக்க முடியும். பரந்த மானுடத்தை தழுவும் மனித மேன்மையை காந்தி கொண்டாடுகிறார்.
So long as man remains selfish and does not care for the happiness of others, he is no better than an animal and perhaps worse. His superiority to the animal is seen only when we find him caring for his family. He is still more human, that is, much higher than the animal, when he extends his concept of the family to include his country or community as well. He climbs still higher in the scale when he comes to regard the human race as his family
காந்தியின் தன்னிலை என்பது “உண்மையையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டு, சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, தனிநபர் சுயாட்சியையும் சமூக நலனையும் ஒருங்கிணைக்கும் நிலை” ஆகும். அவர் “தன்னிலை” என்பதை வெறும் தனிப்பட்ட மனநிலையாக அல்லாமல், மனிதனின் நெறி, உண்மை, அன்பு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றோடு இணைந்த நிலையாகக் கருதினார்.
உண்மைக்கான பக்தி நம்மிடம் இருக்கவேண்டும் என காந்தி நினைத்தார். முழுமையான மனிதராக இருக்க, மக்கள் தாங்கள் உண்மையெனக் கருதுவதற்கு நேர்மையாக இருக்க வேண்டும் — அதாவது, தங்களுக்கே நேர்மையாக இருக்க வேண்டும்; அது அவர்களுக்கே துன்பத்தை ஏற்படுத்தினாலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றவர் காந்தி. காந்தியின் உண்மை எப்போதும் மனிதர்களின் சுயாட்சி, சமத்துவம், கண்ணியத்துடன் பேசுகிறது; அது ஆதிக்கத்தையும், அவமதிப்பையும் எதிர்க்கிறது.
காந்தியின் சுயாட்சி கொண்ட மனிதர்கள், தங்களைத் தாங்களே ஆள விரும்புகிறார்கள்; அவர்கள் எந்த ஆதிக்கத்தையும் எதிர்க்கிறார்கள் —எந்த பிரதியும் அல்லது உரையும், எந்த பொருளாதாரச் செயல்முறையும் தனிநபர்களின் சுயாட்சியை நீக்கும் உண்மையைப் பெற்றதாகக் கூற முடியாது. காந்தி பேசிய சுயாட்சிக்கு இரண்டு வகையான போராட்டங்கள் தேவைப்படுகிறது — ஒன்று உள்வயமானது, மற்றொன்று வெளிப்புறமானது
’காந்திய அன்பு’ பிறரின் அலட்சியம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றோடு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் பலவீனங்களோடும் போராட வேண்டியிருக்கிறது.
காந்தியின் மனித இயல்பைப் பற்றிய புரிதலில், ஒவ்வொருவருக்கும் அன்பு செலுத்தும் திறன், அன்புக்கு பதிலளிக்கும் திறன், அன்பை மீண்டும் வழங்கும் திறன் உள்ளது. காந்தி விழைந்த மனிதர்கள் பரஸ்பர அன்பின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கிறார்கள். மொழியால் மட்டுமல்ல — அவர்கள் செயல் மற்றும் பரிவின் மூலம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அவரின் தன்னிலை இதய இணைப்புகளை எதிர்நோக்குகிறது.
ஆர்.பட்டாபிராமன் – தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசித்து வருகிறார். பி.எஸ்.என்.எல் இல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்தியை கண்டுணர்தல், நேருவின் மரபு, மார்க்சியத் தடங்கள் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி: pattabieight@gmail.com.

