வைரம்

மணிமொழி

(தழுவல் சிறுகதை)

இளஞ்சிவப்பைத் தோற்கடித்து மாநிறத்திற்கு “மா” என்ற சொல் ஏன் சேர்க்கப்பட்டது என்பதற்கு இலக்கணமாக இருந்தாள் அவள். இறுக்கிப்பின்னி போடாத சுருள் முடி, வட்டமான சிவப்புப் பொட்டு, இருள்பச்சை வளையல்கள், மிகச் சிறிய தங்கக் கம்மல்கள். தேநீர் குடிக்கும் போதும் இப்படித்தான் இருப்பாள்.

அவள் அழகுக்கேற்ற வானமும் பூமியும் இருக்க, அவளுக்கேற்ற, அவள் மனதிற்கேற்ற நீரும் காற்றும் இல்லை. மாறாக, சமைத்தால் புகைச் சூழும் அளவில், மழையை மக்கள் அனுபவிக்க உழைத்துக் கொண்டே இருக்கும் கூரையையும் கொண்ட வீடு. கூரைக்கு இணையாக உழைக்கும் தந்தையும், செலவே செய்யாத தாயும், வெளிச்சமாக இருக்கும் வீட்டுக்குள் விளையாடும் சகோதரர்களும் இருந்தனர்.

படைத்தவன் அழகைக் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவளுக்கும் வெளிச்சம் நிறைந்த வீடுதான் தெரிந்திருக்கும், ஆனால் குறைக் காணும் அறிவையும் கூட படைத்துவிட்டான். பிறகு அவனைத்தான் குறை சொல்ல வேண்டும்; தினமும் திட்டித் தீர்ப்பாள்.

திண்டாடிப் போனவன் தான் அவளை அவனிடம் அனுப்பியிருப்பான்.

*

முத்துவேல். நல்லவன். நல்ல படிப்பு. கேமரா வாங்க பணம் சேர்த்து வைக்கும் அளவிற்குச் சம்பாத்தியம். பெரிய வீட்டில் கணக்குப் பார்க்கிறான். பெரிய வீட்டுப் பழக்கம் ஏற்பட அதுதான் காரணம். தன் தகுதிக்கு மீறிய அழகிய மனைவியும் வந்துவிட்டதால் , தினம் தினம் இறைவனுக்கு நன்றி கூறி, பார்க்கும் அனைவருக்கும் சிரிப்புடன் வணக்கம் வைப்பான்.

அன்று முத்துவேல் அவள் தந்த மிக ருசியான தண்ணிச் சோற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளோ தன் அழகிற்கு பொருத்தமான அரண்மனை சொகுசு வாழ்க்கை, எண்ணிலடங்காப் புடவைகள் கொண்ட அலமாரி, புடவைக்கேற்ற நகைகள், இவற்றையெல்லாம் பராமரிக்கும் பணியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளம்- என விரல் நகங்கள் துண்டுப் பட யோசித்துக் கொண்டிருந்தாள்.

இந்த யோசனைக்கெல்லாம் காரணம் செல்லம்மாள் தான். இவள் அளவிற்கு இல்லையென்றாலும், செல்லம்மாளும் அழகுதான். பெரிய வீடு, இரண்டு கார்கள், பட்டுப் புடவைகள், நகைகள், வேலைக்காரர்கள்—எல்லாமே செல்லம்மாளுக்கு பொருத்தமாக இருந்தது.

 அழைப்பை ஏற்று செல்லம்மாளின் வீட்டிற்குச் சென்று வ‌ந்த அவள் தனக்குக் கிடைக்காததையெல்லாம் கணக்கிட்டு, “ஓ…” என்று ஒப்பாரி வைத்தாள். இனி அந்த வீட்டுப் பக்கமே போகக் கூடாது என்று முடிவு செய்தாள்.

***

மஞ்சளிலும் பளிச்சென்ற மஞ்சள். முத்துவேல் பற்கள் ஜொலித்தன. அந்த சிரிப்பைப் பார்த்த அனைவருக்கும் பொறாமை; அவர்கள் பொறாமையால் இன்னும் கூடும் சிரிப்பு. மனைவியை மகிழ்விப்பதில் அப்படி ஒரு ஆர்வம்.

வந்தவுடன் நீட்டிய திருமணப் பத்திரிகையைப் பார்த்து, மனைவியின் முகத்தில் சுருக்கம், அவனது பற்கள் காணாமல் போனது.

“என்னடி, எவ்வளோ பெரிய வீட்டுக் கல்யாணம் தெரியுமா? அஞ்சு நாளுக்கு நடக்குமாம். முதலாளி ஐயா எனக்கு மட்டும்தான் பத்திரிகை கொடுத்தார், வேற எந்த வேலக்காரனுக்கும் குடுக்கல. சுத்தி இருக்கிற எல்லா கோடீஸ்வரங்களும் வருவாங்க. கல்யாணம் அப்படியே திருவிழா மாறி இருக்கும். நீ சந்தோஷப்படுவன்னு பார்த்தா, ஏன் இப்படி முகத்தைச் சுழிச்சிட்டு நிக்கிற?”

“எதுக்கு இந்தக் கேள்வி? பதிலும் தான் நீங்களே சொல்லிட்டீங்களே! சுத்தி எல்லாரும் கோடீஸ்வரங்க. பட்டுப் புடவை, வைர நகைன்னு வருவாங்க. நடுவுல நான் மட்டும் ஒண்ணுமே இல்லாம நிக்கணுமா?”

“ஏன்டி இப்படிச் சொல்ற? உன் அழகுக்கு முன்னாடி அதெல்லாம் ஒரு விஷயமா? நம்ம கல்யாணம் ஆகி தியேட்டருக்குப் போனப்போ ஒரு நீல கலர் புடவை வாங்கிக் கொடுத்தேன்ல? அதைக் கட்டிக்கோயேன்.”

“அய்யய்யோ… என்ன பேச வைக்காதீங்க. இதுக்குலாம் நான் வரல. நீங்களே போயிட்டு வாங்க.”

“என்னடி நீ! சரி, உனக்கு ஒரு புதுப் பட்டுப் புடவை வாங்கிருவோம். எவ்வளவு வரும்னு சொல்லு…”

நிறைய கேட்டால் இருக்காது. கம்மியாகக் கேட்டால் போதாது. எவ்வளவு கேட்டால் கொடுப்பான்? எப்படி எல்லாம் ஜொலிக்கலாம்? சரியான கணக்கு போட்டாள்.

“ஒரு இரண்டாயிரம் ரூபாய்…”

அவன் கேமரா வாங்க ஆயிரத்து எண்ணூறு ரூபாய் சேர்த்து வைத்திருந்தான். இருநூறு ரூபாய் சேர்த்துக் கேட்டாள் அவள். சேர்த்துக் கொடுத்தான் இவன்.

சிவப்பு நிறப் பட்டுப் புடவையாக வந்த கேமரா நீல நிற புடவை அருகில் படுத்துக் கொண்டது.

*

“அடியே, என்னடி? இன்னும் உன் மூஞ்சி ஏன் இப்படி இருக்கு?”

“நகைக்கு என்ன பண்ணுவேன்? கழுத்தில் ஒத்த செயினோட வந்தா… அய்யோ… எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

“ஏன்டி, நகை வாங்குறதுக்கெல்லாம் நம்ம எங்கடி போறது? பேசாம உன்னோட சிநேகிதி அந்தச் செல்லம்மாகிட்ட ஏதாச்சும் கேட்டுப் பாரேன்.”

நல்ல யோசனை.

செல்லம்மாவிடம் கேட்டவுடன், வரிசையாகப் பல நகைகளைக் காட்டினாள்.

“வளையல், தோடு எல்லாம் வேண்டாம். கழுத்துக்கு மட்டும் எதாச்சும் வேண்டும் செல்லம்மா…”. தயக்கம்.

அந்த ஒரு வைர நெக்லஸ் அவள் கண்ணைப் பறித்தது. மிக ஆடம்பரமானது என்று சொல்ல முடியாது, ஆனால் கண்ணைப் பறிக்கும். அவள் புடவைக்கும் முகத்திற்கும் நடுவில் சரியாக பொருந்தும். 

திருமணத்திற்கு முதல் நாள் விழாவில், அத்தனை ஆடம்பரங்களுக்கு நடுவிலும் அனைவரையும் கவர்ந்தாள். அவள் சிரிப்பால் வைர நெக்லஸும் ஜொலித்தது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களாலும் கூட கண் நகர்த்த முடியவில்லை. அவ்வளவு அழகு. அவ்வளவு மகிழ்ச்சி அவள் முகத்தில். அன்றொரு நாள் படைத்தவன் திட்டேதும் வாங்கவில்லை . நாள் முடிந்துவிட்டதே. கிளம்ப வேண்டியதுதான்.

இரவு ரிக்க்ஷாவில் செல்லும்போது, குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கொண்டு வந்த சால்வையை முத்துவேல் ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தான். அந்தச் சால்வை வைர நெக்லஸின் ஜொலிப்பை மட்டுமல்ல, அவளுடைய சிரிப்பையும் கூடக் காணாமல் போகச் செய்தது. கவனம் எல்லாம் இந்தச் சால்வையில் யாரும் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே. 

இந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூட காணோமே! 

எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

பெரும் மூச்சு.

*

கடைசியாக மீண்டும் ஒருமுறை தன் அழகிற்கேற்ற ஆபரண ஆடைகளை ரசித்துக் கொள்ளக் கண்ணாடி முன் நின்று சால்வையை விலக்கினாள்.

“அய்யோ….!”, என்று அவள் கதற, போதைத் தெளிந்து போன முத்துவேல்,

“என்னடி? ஏன் இப்படி கத்துற?”, என்று அலற, 

“ஏங்க… செல்லம்மா கொடுத்த நகையைக் காணோம் ங்க! அய்யோ…. என்ன பண்றதுன்னே தெரியலையே! அய்யோ கடவுளே! உனக்கு ஒரு நாள் கூட பொறுக்காதா? என்னைச் சோதிச்சிட்டே இருக்கணுமா?”, என்று திட்டித் தீர்த்து, அனைவரின் கொள்ளிக் கண்ணையும் வார்த்தைகளால் சுட்டுச் சாம்பலாக்கிக் கொண்டே, புடவை மடிப்பையெல்லாம் உதறி உதறி பார்த்தாள்.

“என்னடி சொல்ற? எப்போ கடைசியா பார்த்த?”. பதற்றம். 

“சால்வை போடுறதுக்கு முன்னாடி வரைக்கும் இருந்துச்சு. கண்டிப்பா தெரியும். மண்டபத்துக்கு வெளியிலதான் விழுந்திருக்கும். போய்த் தேடிப் பாருங்க. சீக்கிரம் போங்க! எவனாச்சும் திருடிரப் போறான்!”

ரிக்‌ஷா வந்த வீதியில் நடைப் பயணங்கள். மண்டபத்தினுள்ளும் தேடினான். வீட்டிற்கு வந்து மீண்டும் தேடிப் பார்க்கச் சொன்னான்.

மறுநாள் காலை மீண்டும் ஒரு முறை நடைப் பயணம்.

அவள் அந்தப் புடவையை இன்னும் மடித்து வைக்கவில்லை. நூறு முறை உதறிப் பார்த்துவிட்டாள். அத்தனை அழுகையிலும் கூட, நகையின் வடிவம் கண்களிலிருந்து கறையவில்லை. எத்தனை வைரக் கற்கள் இருந்தன என்பதை எண்ணிப் பார்த்தே விட்டாள்.

எப்படியாவது கிடைத்துவிட வேண்டும்.

படைத்தவனுக்கு மரியாதை கிடைக்க ஆரம்பம்.

முத்துவேல் காவல்துறையிடம் சொல்லிவிட்டான். வந்த ரிக்‌ஷா, வராத ரிக்‌ஷா என்று எல்லா ரிக்‌ஷாவிலும் தேடிவிட்டான். செய்தித்தாளில் உற்றுப் பார்த்தால் நகைக்கான வெகுமதியைக் கண்டுபிடிக்கலாம். 

“செல்லம்மாகிட்ட நகையில் கொக்கி விட்டுருச்சி சரி செய்ய ஒரு வார அவகாசம் வேணும்னு சொல்லி வைடி. அதுக்குள்ள கிடைச்சிரும்னு நம்புவோம்.”

வார்த்தை மாறாமல் அப்படியே செல்லம்மாவிடம் சொல்லிவிட்டாள்.

பத்து நாட்கள் ஆகிவிட்டது. செல்லம்மாள் இன்னும் எதுவும் கேட்கவில்லை. அவள் கேட்பதற்குள் கொடுத்தாக வேண்டும். வேறு வழி எதுவும் இல்லை, அதேபோல ஒரு வைர நகை வாங்குவதைத் தவிர.

இத்தனை நகைக் கடைகள் இருக்கிறது என்று அவளுக்கு இன்றுதான் தெரிந்தது. ஏனோ, எந்த நகையும் மின்னவில்லை. கண்கள் தேடியதெல்லாம் ஒரு வைர நகையை மட்டும்தான்.

படைத்தவனுக்கு மரியாதை கூடியது.

புதிய வைர நெக்லஸ், செல்லம்மாவிடம் வாங்கிய நெக்லஸ் அளவிற்க்கு ஜொலிக்கவில்லை. நிச்சயம் செல்லம்மா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் என்ன செய்வது? வேறு வழியில்லை. இதை வாங்கிக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

“தயவு செஞ்சு ரெண்டு நாள் பொறுங்க. யார்டயும் வித்துராதீங்க, கண்டிப்பா வாங்கிப்போம். இந்த நெக்லஸ்தான் எங்களுக்கு வேணும். ரெண்டே நாள்ல வந்து வாங்கிப்பேன்.” 

முத்துவேல் கெஞ்சவில்லை. கோரிக்கை வைத்தான்.

“உங்களுக்காகத்தான் போனா போகுதுன்னு இவ்வளவு கம்மி பண்ணிருக்கோம். ரெண்டு நாளுக்கு மேல ஒரு நிமிஷம் தாமதமானாலும் காத்துட்டு இருக்க மாட்டோம். இதைவிட நல்ல விலைக்கு யாரும் வாங்க வந்தா வித்துருவோம்.”

கடைக்காரன் மிரட்டவில்லை. சொல்லி வைத்தான்.

இரண்டு நாட்களில் கடன்காரனாகி, நகைக்கு சொந்தக்காரனாகி, செல்லம்மாவிடம் நகையைத் ஒரு வழியாக கொடுத்துவிட்டனர்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் நகையைத் திருப்பிக் கொடுத்துட்டீங்க…?”

செல்லம்மா நக்கலடிக்கவில்லை. விளையாட்டாகச் சொன்னாள்.

தவறை சரி செய்தாச்சு. ஆனாலும் தண்டனை.

கடன்.

வட்டி.

வட்டி கட்ட கடன்.

கடனுக்கு வட்டி.

*

பத்து வருடம் ஓடியது. அவன் அயராமல் உழைத்தான். அவள் செலவே செய்வதில்லை.

வீடு வெளிச்சமாக இருக்கிறது.

தண்டனைக் காலம் முடிந்தது.

பத்து வருடம்.

செல்லம்மாவிற்கு வயதே ஆகவில்லை. அழகு இன்னும் கூடியது போல இருக்கிறாள். அன்று நகையை இவளிடமிருந்து வாங்காமலே இருந்திருக்கலாம். 

சாலையைக் கடந்து சென்றவள், “செல்லம்மா…” என்றழைத்தாள்.

“ஹ்ம்ம்… மன்னிக்கணும், நீங்க…?” 

“நான்தான் வைரம். முத்துவேல் மனைவி…”

“அடடே! வைரம், நீயா? என்ன இப்படி அடையாளமே தெரியாம மாறி பொய்ட?” 

“எல்லாம் உங்களால்தான்…” 

“என்னாலா? என்ன சொல்ற? நான் என்ன பண்ணேன்?”

“நான் உங்ககிட்ட இருந்து வாங்கின வைர நெக்லஸ் ஞாபகம் இருக்கா”

“ஆமா” 

“அதை நான் தொலைச்சிட்டேன், பிறகு கடன் வாங்கி அதே மாதிரி வைர நெக்லஸ் வாங்கித்தான் உங்கள்ட்ட கொடுத்தோம். அந்த கடனெல்லாம் அடைக்கிறதுலயே பாதி வாழ்க்க போய்ருச்சு….”

“ஆனா… நான் குடுத்தது வைரமே இல்லையே…”

[Note: I would like to mention that this story is not a literal translation but an Intentionally localised adaption of the Guy de Maupassant’s “The Necklace.” The original story has been brought into Tamil cultural setting while also preserving the plot, themes, and emotional essence. Certain details have been changed to make it feel natural, including character names, clothing, francs been converted to rupees and occupations.

In short, this is an intentionally localised adaption of The Necklace, rather than a literal translation.]

***

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here