Homeஇதழ்கள்2026 இதழ்கள்அந்தத் துண்டுக் கயிறு

அந்தத் துண்டுக் கயிறு

கை தே மாப்பசான்

தமிழில்: அரவிந்த் வடசேரி

அன்று சந்தை என்பதால் காடோர்வில்லை அடுத்த அனைத்துப் பாதைகளிலும் சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் அவர்களது மனைவியரும் அந்தப் பட்டணத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். ஆண்கள் அவர்களின் நெடிய வளைந்த கால்களின் ஒவ்வொரு அசைவிலும் முழு உடம்பும் முன் நோக்கி வளைய மெதுவாக எட்டு மேல் எட்டெடுத்து வைத்து நடந்து சென்றனர்; கடின உழைப்பினால், எடை மிகுந்த ஏரினால் இடது தோள் உயர்த்தப்பட்டு உடம்பும் திருகலானதாலும், கோதுமை அறுக்க நல்ல பிடி கிடைக்க காலை அகட்டி வைத்து நின்றதாலும், கிராமப்புறத்து நெடுநேர வலி மிகுந்த உழைப்பினாலும், உடல் உருக்குலைந்திருந்தனர். கஞ்சி முக்கிய விரைப்பு கொண்ட, வார்னிஷ் பூசியது போன்று மினுக்கும், கழுத்திலும் மணிக்கட்டிலும் வெண்ணிற வடிவங்களால் அழகுபடுத்தப்பட்ட அவர்களது நீல நிறச் சட்டைகள், வற்றலான உடம்பின் மீது உப்பி நின்று அவர்களை தூக்கிச் செல்லத் தயாராக இருக்கும் பலூன்கள் போலத் தெரிந்தன. ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு பாதங்கள் துருத்தி நின்றன. சிலர் கயிறு கட்டிய மாடு அல்லது கன்றினை இழுத்துச் சென்றனர்,

 அவர்களது மனைவியர் அந்த விலங்குகளின் பின்னால் நடந்து கொண்டு அவற்றின் முதுகில் இலைகள் கொண்ட கிளையால் அடித்து முடுக்கினர். அவர்களின் கையிலிருந்த பெரிய கூடைகளிலிருந்து சில நேரம் கோழிகளும் வாத்துகளும் எட்டிப் பார்த்தன. அவர்கள் தங்களது கணவர்களை விட விரைவாகவும் உயிர்ப்புடனும் நடந்தனர். அவர்களின் கொழுப்பற்ற நிமிர்ந்த உருவங்கள் தட்டையான மார்பின் மீது குத்தப்பட்ட போதுமான அளவில்லாத சிறிய போர்வையினால் போர்த்தப்பட்டும், தலைகள் தலைமுடியின் மீது ஒட்டப்பட்டதுபோல இறுக்கமாக சுற்றப்பட்ட வெள்ளைத்துணியுடனும் அதன் மீது அணிந்த தொப்பியுடனும் இருந்தன. 

இரண்டு ஆண்கள் அருகருகே அமர்ந்திருக்க, குலுங்கலின் தாக்கத்தைக் குறைக்க இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு ஒரு பெண் கீழே அமர்ந்திருக்க, கிழட்டுக்குதிரையின் தடுமாறும் ஓட்டத்தில் வித்தியாசமாகக் குலுங்கியபடி, பாரவண்டி ஒன்று கடந்து சென்றது. 

காடோர்வில்லின் நகர சதுக்கத்தில் மனிதர்களும் விலங்குகளும் கலந்த கும்பல் ஒன்று இருந்தது. கால்நடைகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீண்ட தொப்பிக்களின் துருத்திய மேல்பகுதிகளும் விவசாயப் பெண்களின் தலையணிகளும் கூட்டத்தின் மேற்பரப்பின் மேலாக உயர்ந்து நின்றன. உரத்தகுரலில் கத்திப்பேசும் கூச்சலால் உண்டான ஓயாத காட்டுத்தனமான இரைச்சலைத்தாண்டி வலுவான நுரையீரல் கொண்ட கிராமத்து ஆண்களின் சிரிப்பும் வீட்டுச் சுவற்றில் கட்டப்பட்ட மாடுகளின் கத்தலும் அவ்வப்போது ஒலித்தன. 

மனிதர்களும் விலங்குகளும் பிற அனைத்துமே வயல்களிருந்து வரும் மக்களுக்கே உரித்தான தொழுவமும் பாலும் குப்பையும் வைக்கோலும் வியர்வையும் கலந்த அருவருக்கச் செய்யும் நாற்றம் கொண்டிருந்தன.  

 ப்ரெயோட்டே வைச் சார்ந்த ஹாச்கோம் ஐயா, அப்போதுதான் காடோர்வில்லை அடைந்து, நகரச் சதுக்கத்தை நோக்கி கால்களைத் திருப்பி நடந்துக் கொண்டிருக்கையில், ஒரு துண்டுக் கயிறு கீழே கிடப்பது தெரிந்தது. உண்மையான நார்மன் போல சிக்கனக்காரரான ஹாச்கோம் ஐயா பயன்படக்கூடிய அனைத்தையுமே எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில், மூட்டுவலியால் அவதிப்பட்டிருந்தும், வலியையும் பொருட்படுத்தாது குனிந்தார். அந்த மெலிந்த துண்டுக் கயிற்றை நிலத்திலிருந்து எடுத்து கவனமாக சுற்றத் தொடங்கியபோது, குதிரைகளுக்கான கட்டுக்கயிறுகளை செய்யும் மாலாந்தான் ஐயா அவருடைய வாயிற்படியின் மேலிருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கிடையே முன்னரே ஒரு கடிவாளக் கயிறு தொடர்பான வியாபாரம் நடந்ததிலிருந்து நிலவரம் சரியில்லை, இருவருமே சரியான வெறுப்பாளர்கள் என்பதால் இன்னமும் அது தொடர்ந்தது.          

மண்ணிலிருந்து ஒரு துண்டுக் கயிற்றினை எடுப்பதை தன்னுடைய எதிரி பார்த்ததால் ஹாச்கோம் ஐயாவை வெட்கம் ஆட்கொண்டது. அவர் தன்னுடைய கண்டுபிடிப்பை சட்டென சட்டைக்கு அடியிலும் தொடர்ந்து கால்சட்டையின் பையிலும் ஒளித்தார்; பிறகு தலையை முன்னோக்கி நீட்டி, வலியால் குனிந்து, இன்னமும் கிடைக்காத ஏதோ ஒன்றை தரையில் தேடுவதுபோல நடித்துக் கொண்டே சந்தையின் பக்கம் நகர்ந்தார். 

சிறிது நேரத்திலேயே முடிவற்ற பேரங்களில் மூழ்கி, சத்தமிட்டு மெதுவாக அசைந்து கொண்டிருந்த கும்பலில் காணாமல் போனார். கடந்த காலங்களில் ஏமாற்றப்பட்டிருந்த விவசாயிகளும் கூலிகளும், தரகர்களின் கண்களைப்பார்த்துக் கொண்டு, அந்த மனிதனின் தந்திரங்களையும் கால்நடைகளின் குறைபாடுகளையும் மட்டுமே கவனத்தில் கொண்டு, முடிவெடுக்கும் துணிச்சலற்று, வெருண்டு, போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர்.     

பெண்கள் கூடைகளைக் காலடியில் வைத்து, அதிலிருந்த கால்கள் கட்டப்பட்டு, பயந்த கண்களும் செந்நிற உச்சியும் கொண்ட கோழிகளை வெளியே எடுத்து தரையில் கிடத்தி இருந்தனர்.

வாங்குபவர்கள் கேட்ட விலைக்கு, அணுக்கமற்ற பாவனையும் உணர்ச்சியற்ற முகமும் கொண்டு, தங்களது விலைகளை அவர்கள் சொன்னார்கள், மெதுவாக நடந்து விலகிச் செல்லும் வாடிக்கையாளரை அவர் கேட்ட விலைக் குறைப்பை ஏற்றுக்கொள்ள திடீரென முடிவுசெய்து, “சரிங்க, ஆதரீன் ஐயா, வாங்க நீங்க சொன்னதே தாங்க.” எனக் கத்தினர். 

மதிய ஆராதனைக்கான மணி ஒலிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் காலியானது, நெடுநேரமாக அங்கே இருந்தவர்கள் தங்களது கடைகளுக்கு கலைந்து சென்றனர்.  

ஜூர்தனின் பெரிய அறை, அதன் பெரிய முற்றம் சேறு படிந்து மஞ்சளான, கட்டியும் ஒட்டியும் சீர் செய்யப்பட்ட, இரண்டு தண்டுகளையும் கைகளைப்போல வானத்தை நோக்கி நீட்டி அல்லது தண்டுகள் பூமியில் ஊன்றியிருக்க பின்பக்கம் வான் நோக்கி நிற்கும், கைவண்டிகள், சவாரி வண்டிகள், கூடு வண்டிகள், கொட்டு பார வண்டிகள் போன்ற அனைத்து வகையான வண்டிகளால் நிறைந்திருந்ததைப் போன்று, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. 

சாப்பிடுபவர்கள் உட்காரந்திருந்த மேஜைக்கு எதிர்புறமாக பிரகாசமாக எரியும் சுடர்களைக் கொண்ட ஒரு பெரிய அடுப்பு, வலது பக்க வரிசையின் பின்புறம் கதகதப்பான ஒரு வெப்பத்தை பரப்பிக் கொண்டிருந்தது. கோழி, புறா, ஆட்டுத் தொடை என மூன்று குவியல்களாக வெந்து வெடித்துக் கொண்டிருக்க, வறுபடும் மாட்டிறைச்சியிலிருந்தும் பொன்னிறத் தோலின் மீதிருந்து சொட்டிக் கொண்டிருந்த சாறிலிருந்தும் அடுப்படியிலிருந்து பசியைக் கிளறும் வாசனையை எழுப்பி அந்த இடத்தின் களிப்பான மனப்பாங்கையும் அனைவரின் வாய்களில் ஊறும் நீரையும் பெருக்கிக் கொண்டிருந்தது.       

வணிகம் செய்யும் பெரிய மனிதர்கள் உணவருந்தும் இடம் ஜூர்தன் ஐயாவின் கடை, விடுதி உரிமையாளரும் குதிரை வியாபாரியுமான பணம் படைத்த திருட்டுப் பயல் அவன். 

ஆப்பிள் மதுவைப்போலவே உணவுத் தட்டுகளும் பரிமாறபபட்டு காலியாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் தங்களது நடவடிக்கைகளையும், அவர்கள் வாங்கியதையும் விற்றதையும் சொல்லிக்கொண்டிருந்தனர். விவசாயம் குறித்து விவாதித்தனர். வானிலை செடிகளுக்கு தோதானதாக இருந்தபோதும் கோதுமைக்கு இல்லை.      

திடீரென தண்டோரா போடும் சத்தம் கட்டிடத்தின் முற்றத்தில் கேட்டது. எதையும் கண்டுகொள்ளாத சிலரைத் தவிர, அனைவரும் வாய் நிறைய உணவோடும் கையில் மடி விரிப்புடனும் ஜன்னல்களுக்கும் வாயில்களுக்கும் ஓடினர். 

பறையடிப்பதை நிறுத்திய பிறகு தண்டோரா போடுபவர் தட்டுத்தடுமாறி திக்கித்திணறி அறிவித்தார் :

“இதன்மூலம் காடோர்வில் வாசிகளுக்கும் பொதுவாக சந்தையில் கூடியிருக்கும் அனைவருக்கும் தெரிவப்பது என்னவென்றால், இன்று காலை ஒன்பது மணிக்கும் பத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் பென்ஸேவில் செல்லும் சாலையில் ஐந்நூறு பிராங்க் பணமும் சில முக்கிய வணிகப் பத்திரங்களும் கொண்ட கறுப்புத் தோல் குறிப்புப் புத்தகமொன்று தவறவிடப்பட்டுள்ளது. கண்டெடுத்தவர்கள் அதை உடனடியாக மேயரின் அலுவலகத்திலோ அல்லது மானேவில்லின் ஃபார்சூன் ஹவுள்பிரெக் ஐயாவிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது; இருபது பிராங்க் சன்மானம் வழங்கப்படும்.” 

அறிவிப்பைத் தொடர்ந்து அந்த மனிதர் அந்த இடத்தை விட்டுப் போனார். சற்று தொலைவில் பறையின் சத்தமும் தண்டோரா போடுபவரின் குரலும் கேட்டது. 

உடனே அவர்கள் ஹவுள்பிரெக் ஐயாவிற்கு குறிப்பு புத்தகம் கிடைப்பதற்கான அல்லது கிடைக்க முடியாதற்கான வாய்ப்புகளைப் பற்றி பேசத் தொடங்கினர்,

சாப்பாடு முடிந்தது. அவர்கள் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது தலைமைக் காவலர் வாசலில் தோன்றினார். 

அவர் கேட்டார் : 

“பிரேயூட்டைச் சார்ந்த ஹாச்கோம் ஐயா இங்கே இருக்கிறாரா?” 

மேஜையின் எதிர் முனையில் அமர்ந்திருந்த ஹாச்கோம் ஐயா பதிலளித்தார் :

“இங்கே உள்ளேன்.”

அந்த அதிகாரி தொடர்ந்தார்: 

“ஹாச்கோம் ஐயா , மேயரின் அலுவலகம் வரைக்கும் என்னுடன் வர முடியுமா? மேயர் உங்களிடம் பேச விரும்புகிறார்.” 

அந்த விவசாயி வியப்பும் கலக்கமும் கொண்டு அவருடைய சிறிய குவளையில் இருந்த பிராந்தியினை ஒரே மடக்கில் விழுங்கி, ஒவ்வொரு முறை உட்கார்ந்து எழும் போதும் முதலில் சில அடிகள் வைப்பது மிகுந்த சிரமம் என்பதால், காலையில் இருந்ததை விட மேலும் குனிந்து “இதோ, இதோ” எனச் சொல்லிக் கொண்டே புறப்பட்டார். 

மேயர் அவருக்காக ஒரு கைவைத்த நாற்காலியில் காத்திருந்தார். அந்தப் பகுதியின் ஆவணப் பதிவாளரான அவர் பருத்த, கறாரான, பகட்டாகப் பேசும் ஒரு மனிதர். 

“ஹாச்கோம் ஐயா,” அவர் சொன்னார், “இன்று காலை பென்ஸேவில் சாலையில் மானேவில்லின் ஹவுள்பிரெக் ஐயா தவறவிட்ட குறிப்புப் புத்தகத்தை நீங்கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறார்கள்.”  

அந்த கிராமவாசி அதிர்ச்சியடைந்து மேயரைப் பார்த்தார், ஏன் எனத் தெரியாமலே தன் மீது விழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் அவர் மிகுந்த அச்சம் கொண்டார்.

“நானா? நானா? குறிப்புப் புத்தகத்தை எடுத்தேனா?”

“ஆமாம், நீங்கள் தான்.”

“சத்தியமா, நான் அதைக் கேள்விப்பட்டதுகூட இல்லை.” 

“ஆனா பாத்திருக்காங்களே.”

“பாத்தாங்களா, என்னையா? யாரு பாத்தது?”

“மாலாந்தான் ஐயா, குதிரைகளுக்கான கட்டுக்கயிறுகளை செய்பவர்.”

அந்த முதியவருக்கு ஞாபகம் வந்தது, புரிந்தது, கோபத்தால் முகம் சிவந்தது.

“ஓ! அவர் பார்த்தார், அந்த மண்டையில மசாலா இல்லாதவன், மேயர் ஐயா, அவர் நான் எடுப்பதைப் பார்த்தது இதோ இந்தத் துண்டுக் கயிற்றை”, அவர் தனது கால்சட்டைப் பையில் துழாவி அந்த சிறு துண்டுக் கயிற்றினை வெளியே எடுத்தார். 

அதை நம்பாத மேயர் தலை அசைத்து மறுத்தார்.

“நம்பிக்கைக்குரிய மாலாந்தான் ஐயா நீங்கள் குனிந்து இந்தக் கயிற்றை எடுத்ததை குறிப்புப் புத்தகம்னு தப்பா நினைச்சுட்டார் னு என்னை நம்பச் செய்ய உங்களால முடியாது ஹாச்கோம் ஐயா.”

அந்த ஏழை விவசாயி, சீற்றம் கொண்டு, தன் கையைக் காட்டி, அதன் மீது ஆணையிடும் விதமாக ஒரு பக்கத்தில் துப்பி, மீண்டும் சொன்னார் :

“கடவுள் மேல ஆணையா நான் சொல்வது உண்மை, இதுதான் பரிசுத்தமான உண்மை மேயர் ஐயா. என் ஆன்மாவின் மீதும் மோட்சத்தின் மீதும் சத்தியமா நான் மீண்டும் சொல்றேன்.”   

மேயர் தொடர்ந்தார்:

“அந்தப் பொருளை எடுத்த பிறகு நீங்கள் சிலை போல நின்றீர்கள், நெடுநேரம் அந்தச் சேற்றில் ரூபாய் நோட்டுகள் ஏதாவது வெளியே விழுந்துள்ளதா எனப் பார்த்துக் கொண்டு.”

அந்த முதிய நல்ல மனிதர் அச்சத்தாலும் சீற்றத்தாலும் வாயடைத்துப் போனார். 

“ஒருத்தர் எப்படி இப்படிச் சொல்ல முடியும் – ஒருத்தர் எப்படி இப்படிச் சொல்ல முடியும் – ஒரு நேர்மையான மனிதனின் நற்பெயரை அழிக்கக் கூடிய இப்படி ஒரு பொய்யை! ஒருத்தர் எப்படி இப்படி…”

அவர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பயனேதும் இல்லை; யாரும் அவரை நம்பவில்லை. அவர் மாலாந்தான் ஐயாவை நேருக்குநேர் கேட்டார் , அவர் மீண்டும் சொன்னதையே சொன்னதோடு அதை உறுதிப்படுத்தவும் செய்தார். அவர்கள் ஒருவரை ஒருவர் ஒரு மணிநேரம் வசைபாடினர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹாச்கோம் ஐயாவை சோதனை இட்டனர்; அவரிடம் எதுவும் இருக்கவில்லை. 

இறுதியாக, திகைத்துப்போன மேயர் அரசு வழக்குரைஞரை கலந்தாலோசித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் எச்சரிக்கையுடன் அவரை விடுதலை செய்தார் . 

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. மேயரின் அலுவலகத்திலிருந்து வெளியேறிய அந்த முதியவரை சூழ்ந்துகொண்டு நிஜமானதும் கிண்டலானதுமான கோபமற்ற ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பினர். அவர் கயிற்றின் கதையைச் சொல்லத் தொடங்கினார். யாரும் அவரை நம்பவில்லை. அவர்கள் அவரைப்பார்த்து நகைத்தனர். 

தொடர்ந்து நண்பர்களைத் தேடிச் சென்று தன்னுடைய வாக்குமூலத்தையும் மறுப்புகளையும் சொல்லிக்கொண்டு தன்னுடைய கால்சட்டைப் பையினை உட்புறம் வெளியாக்கி தன்னிடம் எதுவும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார் அவர்.

அவர்கள் சொன்னார்கள்: ”கிழட்டு ராஸ்கல், ஓடிப்போ!”

சினம் கொண்டு, எரிச்சலுற்று, கொதித்து, நம்பாததைக் கண்டு பரிதவித்து, என்ன செய்வதெனத் தெரியாமல் எப்போதும் சொன்னதையே, திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.  

 இரவு நெருங்கியது. வீடுதிரும்ப வேண்டும். உடன் வந்த மூன்று அண்டை வீட்டாருக்கும் தான் அந்தக் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைச் சுட்டிக்காட்டினார், வழி நெடுக தன்னுடைய பரபரப்பான அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே வந்தார். 

மாலையில் ப்ரெயோட்டே கிராமத்தில் ஒரு வலம் வந்து அனைவரிடமும் நடந்ததைச் சொன்னார். அவநம்பிக்கையே பதிலாகக் கிடைத்தது. 

இவையனைத்தும் இரவில் அவரை நோயுறச் செய்தது. 

மறுநாள் சுமார் ஒரு மணியளவில் மாரியஸ் பாமெல் எனும் ப்ரெடன் ஐயாவின் கூலியாள்களில் ஒருவன், மன்வில் விவசாயி, அந்தக் குறிப்புப் புத்தகதையும் அதில் இருந்தவற்றையும் மானேவில்லின் ஹவுள்பிரெக் ஐயாவிடம் திருப்பியளித்தான். 

வழியில் கண்டெடுத்த அதை, எழுதப்படிக்க தெரியாததால் ,எடுத்துச் சென்று தனது முதலாளியின் வீட்டில் ஒப்படைத்ததாக அவன் தெரிவித்தான். 

இந்தச் செய்தி சுற்றுவட்டாரம் முழுக்கப் பரவியது. ஹாச்கோம் ஐயாவிடமும் இது தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ஊரெல்லாம் சுற்றிவந்து தன்னுடைய கதையை சுப முடிவுடன் மீண்டும் சொன்னார். அவர் வெற்றிக்களிப்படைந்தார். 

 “என்னை அவ்வளவு வருத்தியது அது பொய் என்பது மட்டுமல்ல. ஒரு பொய்யின் காரணமாக ஒருவரை சந்தேகத்தின் நிழலில் நிறுத்தப்படுவதை விட அவமானம் வேறு இல்லை.”

அவர் தன்னுடைய சாகசத்தை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டிருந்தார்; நெடுஞ்சாலையில் ஊரைக் கடந்து சென்றுக்கொண்டிருப்பவர்களிடமும், மதுக்கூடத்தில் குடித்துக் கொண்டிருப்பவர்களிடமும், அந்த ஞாயிறன்று தேவாலயத்திலிருந்து வெளியே வந்துக் கொண்டிருப்பவர்களிடமும் அவர் சொன்னார். இதைச் சொல்ல, முகம் தெரியாதவர்களையும் தடுத்து நிறுத்தினார் அவர். அவர், இப்போது அமைதியடைந்திருந்தார் இருப்பினும், இன்னதென்று குறிப்பிட்டு அறியமுடியாத ஏதோ ஒன்று அவரை தொந்திரவு செய்துக்கொண்டிருந்தது. அவர் சொல்வதைக் கேட்பவர்கள் ஏதோ நகைச்சுவையை கேட்கும் பாவனையில் இருந்தனர். அவர்கள் நம்புவதாகத் தெரியவில்லை. தன் முதுகுக்குப் பின்னால் அவர்கள் புறம்கூறுவதாக அவர் உணர்ந்தார். 

அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை இந்த வழக்கை விவாதிக்க வேண்டியதன் அவசியத்தின் உந்துதலால் மட்டும்தான் அவர் காடோர்வில் சந்தைக்குச் சென்றார்.

வாசலில் நின்றிருந்த மாலாந்தான் அவர் தாண்டிச் செல்கையில் சிரிக்கத் தொடங்கினான், ஏன்? 

கிரிக்கட்டாட்டைச் சார்ந்த விவசாயி ஒருவரை அவர் நெருங்கினார், பேசி முடிக்கும் முன்னரே வயிற்றில் செல்லமாகக் குத்தி அவரின் முகம் பார்த்துச் சொன்னார்:

“நீ பெரிய கில்லாடிதான்.”

பிறகு அந்த உழவன் அவரைத் தாண்டிச் சென்றார்.

ஹாச்கோம் ஐயாவிற்கு குழப்பமாக இருந்தது; எதற்கு அவர் தன்னை பெரிய கில்லாடி எனச் சொல்கிறார்?

ஜூர்தனின் விடுதியின் மேஜை ஒன்றில் அமர்ந்திருக்கையில் அவர் அந்த விஷயத்தை விளக்கத் தொடங்கினார். 

மான்வில்லிர்ஸைச் சார்ந்த குதிரை வியாபாரி ஒருவர் அவரின்பால் கத்திச் சொன்னார்:

“போதும், போதும், கிழட்டு மோசடிக்காரனே, அது ஒரு பழைய தந்திரம்; உங்க துண்டுக் கயிறு கதையெல்லாம் எனக்குத் தெரியும்!”

 ஹாச்கோம் தடுமாறினார் :

“ஆனால், குறிப்புப் புத்தகம்தான் கிடைத்து விட்டதே.”

அந்த மனிதன் பதிலிறுத்தான்: 

“மூடிகிட்டு இரு, அப்பா, ஒருத்தர் கண்டுபிடிக்கறார் ஒருத்தர் ஒப்படைக்கிறார். எப்படியானாலும் உனக்கு அதில தொடர்பிருக்கு.”

அந்த ஏழை விவசாயி விக்கித்து நின்றார். அவருக்கு புரிந்தது. அவர் தனக்கு வேண்டியவர், கூட்டாளி ஒருவர் வாயிலாக அந்தக் குறிப்பு புத்தகத்தை திருப்பியளிக்கச் செய்திருக்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

அவர் மறுக்க முயன்றார். எல்லா மேஜைகளிலிருந்தும் சிரிக்கத் தொடங்கினர்.       

அவர் தன்னுடைய இரவுணவை முடிக்காமல் கெக்கலிப்பினூடே வெளியேறிச் சென்றார்.

அவர்கள் குற்றம் சாட்டியதைச் செயல்படுத்தக்கூடிய தன்னுடைய நார்மானிய சாதுர்யத்தையும் அதை ஒரு திறமையென பெருமைபேசிக்கொண்டதையும் குறித்த வெட்கமும் சீற்றமும் கொண்டு, சினமும் குழப்பமும் தொண்டையை அடைக்க, தாங்கவொண்ணாத் துயர்கொண்டு, அவர் வீட்டை அடைந்தார். அந்தக் குழப்பமான நிலையில், தன்னுடைய புத்திசாலித்தனம் தெரிந்திருப்பதால், தான் நிரபராதி என நிரூபிப்பது இயலாததாக இருந்தது. சந்தேகம் கொள்வதின் நியாயமின்மை அவரது இதயத்தைத் தாக்கியது.      

 தன்னுடைய சாகசத்தை மீண்டும் சொல்லத் தொடங்கினார் அவர், ஒவ்வொரு நாளும் அது நீண்டுகொண்டே இருந்தது, ஒவ்வொரு முறையும் புதுப்புது காரணங்கள் சேர்க்கப்பட்டு, கூடுதல் வலுவான மறுப்புகளைக் கொண்டு, மேலும் ஆத்மார்த்தமான சத்தியங்களின் துணையோடு, தன்னுடைய தனிமையான நேரங்களில் கற்பனை செய்து உருவாக்க, அவரது மனம் முழுவதையும் அந்தச் சிறிய துண்டுக் கயிற்றின் கதை ஆக்கிரமித்திருந்தது. அவரது தற்காப்பு சிக்கலானதும் அவரது வாதங்கள் துல்லியமானவையுமாக மாறுவதற்கேற்ப அவர் மீதான நம்பிக்கை குறைந்தது. 

“அவை அனைத்தும் பொய்யான சாக்கு போக்கு” அவரது முதுகிற்கு பின்னால் அவர்கள் சொன்னார்கள். 

அவர் அதை உணர்ந்தார், அது அவருடைய இதயம் முழுவதையும் ஆக்கிரமித்து, பயனற்ற முயற்சிகளால் சோர்வடையச் செய்தது. அவர் அவர்களது கண்களுக்கு எதிரிலேயே வீணாகிக் கொண்டிருந்தார். 

வேலையற்றவர்கள் தங்களது வேடிக்கைக்காக, போருக்குச் சென்று திரும்பிய ஒரு போர்வீரனிடம் அவனது போர்க்கள அனுபவங்களைச் சொல்லக் கேட்பதைப் போன்று, அவரை கயிற்றைப் பற்றி சொல்லச் செய்வார்கள். ஆழமாக பாதிக்கப்பட்ட அவரது மனம் உறுதியிழக்கத் தொடங்கியது.

டிசம்பர் மாத இறுதிவாக்கில் அவர் படுக்கையில் விழுந்தார். 

ஜனவரி மாதத்தின் ஆரம்ப நாட்களில் இறந்த அவர் தன்னுடைய மரணப்படுக்கையில் மயக்கத்திலிருந்தபோதெல்லாம் தன்னுடைய குற்றமின்மையை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார் : 

“ஒரு துண்டுக் கயிறு, ஒரு துண்டுக் கயிறு, இதைப் பாருங்க மேயர் ஐயா.”       

கை தே மாப்பசான் – பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த ஃபிரெஞ்சு எழுத்தாளர். சிறுகதை எழுத்தாளர்களின் உலகளாவிய முன்னோடியாகக் கருதப்படுபவர்.

அரவிந்த் வடசேரி – பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று மாத்ருபூமி பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆவநாழி எனும் இருமாத இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மின்னஞ்சல் முகவரி : v.aravi.cbe@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here