Homeஇதழ்கள்2026 இதழ்கள்இலக்கியத்திற்கு நெற்றிக்கண்ணைத் திறக்கும் வல்லமை உண்டு!

இலக்கியத்திற்கு நெற்றிக்கண்ணைத் திறக்கும் வல்லமை உண்டு!

நேர்காணல்: பாலு

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

பாலு தொடக்க காலத்தில் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் அவருடைய இரண்டு நாவல்களால் அறியப்படுபவர். சொனாடா, ஸ்டேல்மேட் ஆகியன அவர் எழுதிய நாவல்கள். மனித மனங்களின் மென்னுணர்வுகளை கூர்ந்து நோக்கும் கதைக்களங்கள் அவை. ஒன்றில் உணர்வுகளை நேரடி வெளிப்பாடாக்கும் தன்மையுடனும் மற்றொன்று விளையாட்டை மையப்படுத்தியும் அமையப்பெற்றிருக்கிறது. அவற்றை அக்கருவோடு மட்டும் இணைக்காமல் அதற்கு துணைபுரியும் தகவல்கள், வரலாறு, தொன்மம் என்று இயன்றமட்டும் முழுமையான சித்திரத்தை அளிக்க முயன்றிருக்கிறார். இந்த நேர்காணல் அவருடைய எழுத்து முறைமைகளை அறிவதற்கு கதைகளின் பின்புலத்தை அறிந்து கொள்வதற்கும் வாசகர்களுக்கு உதவக்கூடும்.

கேள்வி: கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்குகிறது?

பதில்: எழுத்தில் ஆர்வமுடையோருக்குப் பால்யத்திலிருந்தே இலக்கியம் அறிமுகமாகியிருக்கும். குடும்பத்திலிருக்கும் வாசகர் வாயிலாக இலக்கியத்தைச் சென்றடைந்திருப்பர். எனக்கு அப்படி யாருமே இருந்ததில்லை. எவரும் என் கைகளில் ஒரு சிறார் நூலைத் தந்து வாசிக்கச் சொன்னதில்லை. பதின்வயதில் என் கனவு திரைத்துறை சார்ந்திருந்தது. என் அம்மா அப்துல் கலாமின் ‘அக்னி சிறகுகள்’ நூலை வாங்கித் தந்து, “இந்தாடா, படம்லாம் எடுக்கணும்னா நிறையப் புத்தகம் படிக்கணுமாம். அதான் வாங்கிட்டு வந்தேன்” என்றார். ஏவுகணை அறிவியல் பற்றிய அந்தப் புத்தகத்தை என்னால் வாசிக்க முடியவில்லை. அதன்பிறகு ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ நூலினைப் பரிந்துரைத்தார். ஒரு முழு வாழ்வைக் கொண்ட அபுனைவு நூலாக வாசிப்பின் ஆழத்தைத் தந்த புத்தகம் அது. கட்டுரைத் தொகுப்பாயினும் பல்வேறு மனிதர்களுடைய கதைகள் அடங்கியிருக்கும் புத்தகம். கதைகளைப் பலவடிவில் கேட்டுப் பழகியிருந்தாலும், என் வெளிப்படுத்தலை எழுத்தின் வடிவில் தர வேண்டுமென எண்ணியது அந்நூலை வாசித்ததிலிருந்துதான். 

கே: முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து?

ப: கல்லூரியில் ஒருதலையாய் காதலித்தேன். அவள் ஓர் உறவிலிருப்பதை அறிந்ததும் மனமுடைந்தேன். துயரத்தோடு வீடு திரும்பிய அன்று பள்ளிக் காலத்தில் நேசித்தவளைச் சந்தித்து சாந்தமாக உரையாடினேன். என் வலிக்குக் காயமாற்றும் மருந்தாக அமைந்தது அச்சிறு கதைத்தல். ஆறிய காயங்களைத் தொகுத்து விளையாட்டுத்தனமாக ‘பிராப்தம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். முதல் கதையை எழுதி நண்பர்களுடன் பகிரும்போது உருவாகும் சிக்கல் என்னவெனில், அக்கதை எத்தனை மோசமாக இருந்தாலும் நண்பர்களால் மெய்சிலிர்த்துப் பாராட்டப்படும். ‘எழுத்தாளர்’ எனும் புதிய அவதாரத்தில் நம்மைக் காணும்போது அவர்களுக்கு உண்டாகும் பரவசம் அது. நானும் அதை நம்பி அக்கதையை விரித்து, ‘கால வெளியிடை’ என்ற தலைப்பில் குறுநாவலாக எழுதினேன். எண்ணிப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

கே: அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?

ப: எல்லாப் படைப்புகளிலும் இது கைகூடுமா என்பது சந்தேகமே. ஆனால் அதை இலக்காகக் கருதி செயல்படுகிறேன். அனுபவத்தை வெளிப்படுத்தவே இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு வாழ்வின் அனுபவத்தில் மிஞ்சிப்போனால் எவ்வளவு எழுதிவிட முடியும்? இலக்கிய ஆர்வம் என்பதே அறிவின் வேட்கைதான். நெற்றிக்கண்ணைத் திறக்கும் வல்லமை உண்டு அதற்கு. கதைக்குக் கூர்மையான மொழி ஓவியத்துக்கு நிறம் போன்றது. மொழியின் அழகியல் படைப்புக்குக் கட்டாயமில்லை எனினும், அது தரும் வாசிப்பின்பம் அளப்பரியது. யூமா வாசுகியின் ‘மஞ்சள் வெயில்’ பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அந்நாவலின் மொழியால் பித்தனாகி மீள வாசித்து வருகிறேன். இதற்கு முன் ஃப்ரான்ஸிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலை வாசித்தபோதும் அதையேதான் உணர்ந்தேன். என் ஆரம்பக் காலக் கதைகளில் அனுபவம் மட்டுமே இருந்தது. அடுத்த வந்த இரு நாவல்களில் அறிவார்ந்த தருணங்கள் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். மொழி சார்ந்த முயற்சிகளை என் சமீபத்திய சிறுகதைகளில் மேற்கொண்டு வருகிறேன்.

கே: ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?

ப: இதுவரை என் ஊரையோ பால்யத்தையோ எழுதியதில்லை. அது திட்டமிட்ட முடிவல்ல; என் ஊரோ பால்யமோ நாடகீயத் தருணங்களையோ, ஆழ்ந்த துயரங்களையோ அல்லது தத்துவ முரண்பாடுகளையோ எனக்கு அளித்ததில்லை. ஆகவே இதற்கு வெளியேதான் என் கதைக்களம் அமைகின்றன.

கே: உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா? 

ப: என்னை எழுதத்தூண்டிய படைப்பாளர்களைச் சொல்ல முடியும். ஜெயமோகன், சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன் போன்ற மூத்த படைப்பாளிகள் தொடங்கி சரவணன் சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், யூமா வாசுகி போன்ற பலரின் எழுத்துகள் என்னை எழுதத் தூண்டியிருக்கின்றன.

கே: எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார்?

ப: ரஷ்யச் சிறுகதையாசிரியர் ஆண்டன் செகாவ். இன்றும் நான் எண்ணிச் சிலிர்க்கும் பருவமாக செகாவ் சிறுகதைகள் படித்த நாட்களையே சொல்வேன். சிறுகதைகள் மட்டுமின்றி அவர் பற்றிய நூல்களையும் அவர் தன் காதலிக்கு எழுதிய காதல் கடிதங்களையும்கூடப் படித்திருக்கிறேன். செகாவ் லட்சிய வாழ்வை வாழவில்லை. எழுத்து, நாடகம், மருத்துவம், காதல்கள் என அவருடைய வாழ்க்கை அந்தரங்கமானது. அதே சமயம் வசீகரமானது. செகாவை நோக்கிச் செல்லும் வாசகர்கள் எவராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரைக் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். இன்னும்கூடப் படிப்பதற்கு சில செகாவ் கதைகள் மிச்சமிருக்கின்றன. அவற்றின் இணைப்பைப் பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கிறேன். மனம் சலனமற்றிருக்கும்போது நிச்சயம் செகாவிடம் திரும்புவேன்.

அதையொட்டி மாப்பசானையும் தேடிப் படித்தேன். செகாவைப் போல் மாப்பசானும் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். அகால மரணத்திலும்கூட அவர்கள் இருவரின் வாழ்க்கை ஒத்திருந்தது. ஒரே வித்தியாசம் மாப்பசானின் எழுத்து பிறழ்வுத்தன்மை கொண்டது. வாழ்வின் கசப்பான காலகட்டத்திலிருக்கும் ஒருவன் மாப்பசானிடம் சென்றால் அவன் மனம் இன்னும் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறக்கூடும். எனக்கும் அதுவே நிகழ்ந்தது. இன்று என்னால் பெருமூச்சுடன் மாப்பசானைப் படித்துவிட முடியும். ஆனால் நான் பைத்தியமாகத் திரிந்த காலத்தில் அவரிடம் சென்றேன். அவர் எனக்கு மேல் பைத்தியமாய் இருந்தார்.

அதன்பிறகு தஸ்தயேவ்ஸ்கி & டால்ஸ்டாய் ஆகியோரின் பெரும் படைப்புகளை வாசிக்கும்போது ஏற்பட்ட சிலிர்ப்பு சொல்லில் அடக்க முடியாதது. இப்போது ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடரை அவ்வப்போது வாசித்து வருகிறேன். பெரும் பங்களிப்பாற்றிய படைப்பாளிகளை வாசிக்கும்போது அகங்காரம் நீங்கி நம்மைச் சிறு துளியாக உணர்வோம். அதே சமயம் பெருஞ்செயலாற்றுவதில் சுகங்காண்போம்.

கே: கதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? 

ப: என்னை அதிர்ச்சியூட்டும் ஒரு நிகழ்வு பல்வேறு அதிர்ச்சிகளின் தொகுப்பாக அமையும்பட்சத்தில் அதனை எழுதுவதற்கு மனம் இயல்பாகவே திரண்டு வரும். ஒரு கண்டடைதலை மட்டுமே நம்பி எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. பல்வேறு சம்பவங்களும், உணர்வெழுச்சிகளும், திறப்புகளும் கூடிவரும்பட்சத்தில் அக்கதை ஆசிரியன் வாயிலாக அதுவே தன்னை எழுதிக்கொள்ளும். 

கே: சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா ?

ப: என் சிறுகதைகள் வாழ்வின் முழுச்சித்திரத்தை அளிப்பவை அல்ல; ஒரு காலகட்டத்தையோ கணத்தையோ விரித்துச் சொல்பவை. ஆனால் என் நாவல்களில் இந்த இணைவைக் காணலாம். ‘சொனாட்டா’ நாவலில் வரலாறும் நவீனமும் இணைத்துப் பேசப்பட்டிருக்கும். ‘ஸ்டேல்மேட்’ நாவலில் தொன்மம் தொடப்பட்டிருக்கும். இதையும் திட்டமிட முடியாது. தொன்மப் படிமங்களை நம் களம் கோரும்பட்சத்தில் அது தற்செயலாக நிகழாவிட்டாலும் அதைத் தேடிச் செல்வது ஆசிரியனின் பொறுப்பு. நாவலின் நோக்கமே ஒட்டுமொத்தத்தை அளிப்பதுதானே!

கே: சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து

ப: சமகாலத்தில் பிற எந்தக் கலைகளைவிடவும் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகள் வருகின்றன. ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘பறக்கும் முத்த ஸ்மைலிகள்’ சிறுகதைத் தொகுப்பு என்னைக் கவர்ந்திருந்தது. நாவல் ஒட்டுமொத்த வாழ்வைச் சொல்வதற்கான வடிவம் என்றும், சிறுகதை வாழ்வின் அங்கங்களை பூதக்கண்ணாடியாய் விரித்துக் காண்பிக்கும் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சிறுகதையிலும்கூட முழு வாழ்வினை எழுதிக்காட்டியவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனும் சரவணன் சந்திரனும் அதற்கு உதாரணம். சிறுகதை வடிவில் அவர்கள் இருவரும் விளையாடுவது Bazball என்றால் கார்ல் மார்க்ஸ் விளையாடுவது Traditional test cricket. அவர் தொடர்ந்து தன் கதைகளில் நுட்பமான பாத்திரங்களையும், தருணங்களையும் எழுதி வருகிறார். அவர் எழுதிய ‘சித்திரங்கள்’ கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து அவருடைய கதைகளைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். அவர் கதைகள் கூர்ந்த வாசிப்பைக் கோருபவை; வசீகரமான மொழி அவருடையது. எழுதுவதற்கு உந்துதல் தேவைப்படும்போது மீள் வாசிக்கத்தக்கத் தரமானவை. 

கே: உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?

ப: ‘தினமும் எதையேனும் எழுதுங்கள்’ என்பார் செகாவ். அதைக் கடைப்பிடிப்பதற்குப் போராடி வருகிறேன். ஒருநாளில் இலக்கியம் சார்ந்து செயல்படுவதற்கு ஓரிரு மணிநேரமே கிட்டுகிறது. எனது ஊடகப்பணியிலிருந்து மீண்டு புத்துயிர்ந்து எண்ணங்களைத் திரட்டி எழுதுவது சவாலானது. ஆனால் அந்த மனநிலைக்குள் சென்றுவிட்டால் கடல் பார்ப்பது போன்ற ஆழ்நிலைக்குச் சென்று எழுத்தைத் தியானிப்பேன். எனக்குக் கிடைக்கிற நேரத்தை எழுத்துக்காகச் செலவிடுகிறேன். அதன் கால அளவை அதிகரிப்பதே என் அன்றாட வாழ்வின் நோக்கம். 

எழுதும்போது வரிகளில்லாத இசை கேட்பேன். மேலைநாட்டு செவ்வியல் இசையும், நம்மூர் கலைஞர்களின் பின்னணி இசையும் எழுதும்போது என் துணை. எழுதியதை ஓரிரு நாட்களுக்குப் பின் மீள் வாசித்து திருத்துவது என் முறைமை. அப்போது எழுத்தாளனாக அல்லாமல் கறாரான எடிட்டராக செயல்படுவேன். ரசித்து எழுதிய பகுதிகளைக்கூடக் கருணையின்றி வெட்டி வீசுவேன். எனக்குள் இருக்கும் எழுத்தாளன் & எடிட்டர் ஆகிய இருவரின் தலையீட்டுக்குப் பிறகே ஒரு கதை அதன் இறுதி வடிவத்தை அடைகிறது.

கே: உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து…

ப: புதிய சிறுகதைத் தொகுப்பு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரவிருக்கிறது. எனது ஆரம்பக் காலச் சிறுகதைகளில் உள்ள சில நல்ல கதைகளோடு அண்மையில் எழுதிய புதிய சிறுகதைகளையும், இதுவரை எந்த இணைய இதழிலும் வராத கதைகளையும் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். அதன் தலைப்பு ‘பெருந்திணை’. 

***

நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here