நேர்காணல்: சசி இனியன்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
சசி இனியன்: சிதம்பரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் ஆய்வக நுட்புநர் பணிபுரியும் சசி இனியன் கடந்த சில ஆண்டுகளாக நவீனத் தமிழ்க் கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதி வருகிறார். தத்துவம் மற்றும் இருப்பியல் சார்ந்த வெளிப்பாடுகளை மையமாகக் கொண்டு, மனித மனத்தின் ஆழங்களைத் தொடும் நவீனக் கவிதைகளைப் படைப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார். இதுவரை நீலிவனம், மாயக்கிளி ஆகிய இரண்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சசி இனியனின் சிறுகதை ஒன்று குவிகம் சிவசங்கரி அவர்களின் விருது பெற்றிருக்கிறது. சசி இனியனின் இரண்டாம் தொகுப்பு மாயக்கிளி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய விருது (2025) மற்றும் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் மினர்வா இலக்கிய விருது (2026) இரண்டு விருதுகளைப் பெற்று இருக்கிறது.
கேள்வி: உங்கள் படைப்புலகின் தொடக்கம் கவிதையிலிருந்துதானா? அல்லது வேறு ஏதேனும் இலக்கிய வடிவத்திலிருந்தா? கவிதைதான் உங்கள் முதல் மொழியாக மாறியதற்குக் காரணம் என்ன? இன்றைய தமிழ்க் கவிதையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:
(i) இளமைப் பருவத்தில் கவிதைதான் மிக எளிய வடிவம் என்கிற புரிதல் இருந்தது. நீர்க்குமிழி உடையும் போது அதனுள்ளிருக்கும் வண்ணங்களும் அதன் வடிவமும் இல்லாமல் போய்விடும் அல்லவா? அதுபோல ஒரு நாளில் கவிதை பற்றிய மாயைகள் விலகி, கவிதையும் அதன் நுட்பங்களும் புரிய ஆரம்பித்தன. அன்றிலிருந்து நல்ல கவிதைகள் என்றால் ஒருவித பயம்! ஆனாலும் கவிதை பற்றிய பயத்திலிருந்துதான் கவிதை எழுத ஆரம்பித்தேன்.
(ii) தமிழ்க் கவிதைகளின் வரலாற்றுத் தொடர்ச்சி நெடியது. சங்கப் பாடல்களின் திணை மரபில் தொடங்கி, இன்றைய பின்-பின்நவீனத்துவக் காலத்தில், அதன் பரந்துபட்ட பாடுபொருள்களுடனும் வடிவச் சோதனைகளுடனும் கவிதை ஓர் இயக்கம் போல இயங்கிக்கொண்டே இருக்கிறது. கவிதைக்கான பிரத்யேகமான கவித்துவ மொழி என்ற பிம்பமெல்லாம் உடைந்து, அன்றாடப் பேச்சுமொழியும் எளிய உரைநடையும் கூடக் கவிதையாகும் என்பதை இன்றைய -பின்நவீனத்துவக் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இருத்தலியல் குறித்த கேள்விகள், பின்நவீனத்துவக் காலகட்டத்தின் வாழ்வியல் நெருக்கடிகளைக் கடந்து அவநம்பிக்கையைத் தாண்டி, நம்பிக்கையூட்டும் விதமாக இன்றைய கவிதைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
கே: உங்கள் கவிதைகளில் துயரம் வெறும் உணர்வாக மட்டும் இல்லாமல், ஒரு அறிதலாகவும், தியானமாகவும், தத்துவமாகவும் மாறுகிறது.
அ. “துயரத்தை அருகே சென்று பார்ப்பது தியானம்” என்று எழுதுகிறீர்கள். துயரத்தின் அருகே செல்வது என்பது அதன் காரணங்களை ஆராய்வதா? அல்லது அதனுடன் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வதா?
ப: “எந்த ஒரு மரத்தின் கிளைகளும் சொர்க்கத்தை எட்ட வேண்டுமானால், அதன் வேர்கள் நரகம் வரை ஆழமாகச் செல்ல வேண்டும்” – இது கார்ல் யுங்கின் புகழ்பெற்ற கூற்று. ஆழ்மனதின் இருண்ட பக்கங்களை, தன் பலவீனங்களை, நன்மை தீமைகளை ஆராய்வதன் வழியாகவே மனிதன் முழுமையடைய முடியும் என்று ஆய்வுப்பூர்வமாகவே அவர் சொல்கிறார். இதுவே பௌத்த தர்மத்தில் ‘உலக வாழ்வு துக்கமயமானது’ என்பது முதலாவது உண்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நவீன வாழ்வின் சிக்கல்களும் சிடுக்குகளும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்கின்றன. அந்தப் புரிதலிலிருந்து, ‘ஏன் இந்த வாழ்வு அவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருக்கிறது?’ என்கிற கேள்வி இயல்பாக எழக்கூடியதுதான் அல்லவா? காரண காரியங்களை ஆராய்வதன் வழியாகவே மீட்புக்கு வழியுண்டு. சலனமற்ற நிலையில் அருகிருந்து மனதைப் பார்க்கக்கூடிய நிலை இது. இதைத்தான் ஞானிகள் ‘அறிவே துக்கத்தை நீக்குகிறது’ என்கிறார்கள்! இதையெல்லாம் ஆராய்ச்சி செய்வது கவிதையின் வேலையல்ல. ஆனாலும் எதையும் கவிதையில் செய்து பார்க்கக்கூடிய சுதந்திரம் உண்டு.
ஆ. உங்கள் கவிதைகளில் கைவிடப்படுவதன் வலியும், கைவிடுவதன் வலியும் இரண்டுமே இடம்பெறுகின்றன. இந்த இரண்டில் எது அதிக துயரமானது? அல்லது இரண்டின் வேரும் ஒன்றுதானா?
ப: சலிப்பிலிருந்து விடுபட ஏதோ ஒரு பற்றும் வலிமையும் தேவையாக இருக்கின்றன. அது கிடைக்காத போது மனிதர்கள் முற்றிலும் தன்வசத்தை இழந்துவிடுகிறார்கள். அது தீரா நோய்மையையும் தீரா வலியையும் தந்துவிடுகிறது; அலைக்கழிப்புடன் வாழ்நாளெல்லாம் இருக்கவேண்டி நேர்கிறது; போதாமையும் நிறைவின்மையும் சதா துன்பத்தில் உழல வைக்கின்றன. இரண்டின் வேரும் மனதின் இருண்ட பக்கங்களில் சந்தித்துக்கொள்ளும் போது, அதீத துயரம் ஏற்படுவதை நம்மால் தாங்கிக்கொள்ள இயல்வதில்லை. அது ஏதோவொரு தருணத்தில் வெடித்துச் சிதறிவிடுகிறது. “என்னை அழிக்க முடியாத எதுவும் என்னை மேலும் வலிமையாக்குகிறது” என்கிறார் ஃபிரெட்ரிக் நீட்சே. எவ்வளவு அற்புதமான கூற்று!
இ. “துக்கம் இன்னும் கொஞ்சம் நவீனமாகியிருந்திருக்கலாம்” என்ற வரி, நவீன மனித வாழ்வின் அபத்தத்தைச் சுட்டுகிறதுபோல் தோன்றுகிறது. அந்த வரி உருவான அனுபவத்தைப் பகிர முடியுமா?
ப: பெரும் கொண்டாட்டத்திற்குப் பிறகான ஒருவரின் மரணம்; அதே நேரம் மரணம் நிகழ்வதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் நிகழ்ந்த அழகான, அபத்தமான மரணம் – இரண்டையும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்தது. இரண்டின் துக்கமும் வேறு வேறு அல்ல; துக்கத்தின் மூலப்பொருள் ஒன்றுதான். அதன் மூலக்காரணமும் எவ்விதத்திலும் மாறப்போவதில்லை. அந்தத் துக்கத்தை எங்கு அமரவைப்பது? கவிதையைத் தவிர வேறு கதியுண்டா? கொண்டாட்டங்கள் மேலும் மேலும் நவீனமாகிவிட்டன; ஆனால் துக்கம் அப்படியேதான் தன் இருண்ட ஆழங்களில் இருக்கிறது. விரக்தியான மனநிலையில் எழுதிய கவிதை அது.
ஈ. “இயலாமையின் முன்பு கைதொழுது தான் நிற்க வேண்டும்” என்ற உங்கள் வரி சரணாகதியைப் பேசுகிறதா? அல்லது மனிதனின் கையறுநிலையை ஏற்றுக்கொள்ளும் ஞானத்தைப் பேசுகிறதா?
ப: மனம் மிகவும் நுட்பமானது. நம்மால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை எனும் நிலையில்தான் மனம் அகந்தையைக் கைவிடுகிறது. ‘நான்’ எனும் அகந்தையைக் கைவிடுவதன் மூலமே மனிதர்கள் கடவுளின் முன் சரணாகதி அடைகிறார்கள். சரணாகதிக்குப் பின் நிகழ்பவை நன்மையோ தீமையோ, சொல்லால் சொல்ல முடியாத துயரங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு மனதைச் சமன் செய்ய, மனம் உருவாக்கும் நுட்பமான வழி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
உ. அறிவியல், தத்துவம், மனித உறவுகள் ஆகிய மூன்றையும் இணைக்கும் கவிதைகள் உங்கள் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக ‘மோனாட்’ கவிதையில், பிரபஞ்சத்தின் செறிவையும் மனிதத் துரோகத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கிறீர்கள். அறிவியல் கருத்துகளைக் கவிதைக்குள் கொண்டு வரும்போது ஏற்படும் சவால்கள் என்ன?
ப: இதுபோன்ற கவிதைகளை எழுதும்போது கொஞ்சம் தவறினாலும் கவிதையாகாமல் உரைநடையாகவோ, கட்டுரைத் தன்மையாகவோ, வெற்றுக்கருத்தாகவோ மாறிவிடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. அறிவியல் எவ்வளவு நவீனமோ மனமும் அத்தனை நவீனமானது இல்லையா? எல்லாவற்றையுமே கவிதையின் கருப்பொருளாகக் கொள்ளலாம் என்பது பின்நவீனத்துவக் கவிதைகளில் உள்ள ஓர் அம்சம். அறிவியலாகவும் ஆன்மிகமாகவும் ‘Inner being’ என்று சொல்வார்கள். அதுபோல எல்லாமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. காமம், குரோதம், லோபம் போன்ற மானுடக் குணங்களும், மோனாடும் ஒரே புள்ளியில் இணைவது போலத் தோன்றியது. அந்த வரிசையில், அக்கவிதையில் தன்னியல்பாக ‘மோனாட்’ வந்து அமர்ந்துகொண்டது.
கே: உங்கள் கவிதைகளில் காலம் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறது. அது ஒரு விளையாட்டாகவும், ஒரு வெளியாயும், ஒரு பொருளாயும், சில இடங்களில் ஒரு காட்சியாகவும் மாறுகிறது.
அ. ஆனித்தேரைப் பெண்டுல ஊசல் போலச் சித்தரித்திருப்பதும், பிரமிடு போல அடுக்கப்பட்ட காலம் போன்ற உருவகங்களும் மிகவும் புதுமையானவை. காலத்தை இவ்வாறு காட்சிப்படுத்தும் எண்ணம் எவ்வாறு உருவானது? ஏற்கனவே நிலைபெற்ற உருவகங்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வா, அல்லது எழுதும் தருணத்தில் இயல்பாக நிகழ்ந்த கண்டுபிடிப்பா?
ப: காலம் எப்பொழுதும் முன்னோக்கி நகரக்கூடிய கடிகார முள். மனித மனம் ஊஞ்சல் போல சதா முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருப்பதை கற்பனை செய்து பாருங்களேன்! மூன்று காலங்களிலும் ஆடிக்கொண்டிருக்கும் மனம்! பகிரப்படாத நினைவுகளும், சுகங்களும், துக்கங்களும் ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. காலப் பரிமாணத்தில் அன்றாடங்கள் சலிப்பில்லாமல் நகர்வதற்கான நகர்வு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் உண்டு. உருவத்திலிருந்து அருவத்திற்கு நகரும் காலத்தை, மனதை, கொஞ்சம் கவித்துவமாக எழுதும் கணத்தில் அதுவாகவே கூடிவந்தது. உருவகத்தைக் கவிதையில் திட்டமிட முடியாது. புனைவில் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தலாம்.
ஆ. அதேபோல் “காலத்தைத் தரையில் ஊன்றி நடந்தவர்” என்ற வரி மிகவும் வலிமையான குறியீடாகத் தெரிகிறது. தடியை ஊன்றி நடப்பது உடலின் மூப்பைக் குறிக்கலாம்; ஆனால் காலத்தையே ஊன்றி நடப்பது என்றால் அதற்கு நீங்கள் தரும் பொருள் என்ன?
ப: ரோமானிய ஸ்டோயிக் தத்துவஞானி செனெகா (Seneca), “நாம் எதற்காகக் காலத்தை இழக்க விரும்புகிறோமோ, அதற்காக மட்டுமே அதை இழக்க வேண்டும்” என்கிறார். காலத்தைக் கடப்பது என்பது விடுதலை அடைவதும் கூட. ஆனால் நவீன உலகம் காலத்தை ஓட்டப்பந்தயமாகவும், உற்பத்தித் திறனின் அளவுகோலாகவும் மாற்றியிருக்கும் சூழலில், ‘ஊன்றிக் கடப்பது’ என்பது நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் அர்த்தப்பூர்வமாக அனுபவித்துக் கடந்து முன்னே செல்வதின் குறியீடு. காலத்தின் போக்கில் சும்மா இழுத்துச் செல்லப்படுபவர்கள் வாழ்வதில்லை; வெறும் இருப்பாக மட்டுமே நீடிக்கிறார்கள். அந்தக் கணத்தில் வாழ்வதற்குப் பயிற்சியாக நம் வாழ்நாள் முழுவதையுமே இழக்கின்றோம். இந்த வாழ்வு எவ்வளவு நகைமுரணானது என்பதைக் குறிப்பிடும் நோக்கில் அப்படி எழுதினேன்.
கே: உங்கள் கவிதைகளில் சடங்குகள் வெறும் சமூக நிகழ்வுகளாக இல்லாமல், மனித உணர்வுகளின் ஆழமான பதிவுகளாக வருகின்றன.
அ. ‘திரை’, ‘இறுதிப் பல்லக்கு’ போன்ற கவிதைகள் சிறுகதையாக எழுதியிருக்க முடியும். அதை கவிதையாக சுருக்கியது ஏன்?
ப: சிறுகதையாக எழுதியிருந்தால் இவ்வளவு ஆழமாக அந்தத் தருணம் கடத்தப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. சில அபூர்வமான தருணங்களில் கவிதை தனது வடிவத்தைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்றே நினைக்கிறேன்.
ஆ. மறுபுறம் ‘அரிதான போகம்’ போன்ற கவிதைகளில் திருமணச் சடங்குகள் இடம் பெறுகின்றன. நவீன வாழ்க்கையில் அவற்றை கவிதையின் வழியாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்ததா?
ப: ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. சடங்கானது நம்பிக்கைகளின் வெளிப்பாடு. சங்க காலம் முதல் நமது சமூகக் கட்டமைப்பின் அங்கமாகச் சடங்குகள் இருந்துவருகின்றன. பண்பாட்டு வெளியில் சடங்குகள் காலத்தின் வெளிப்பாடாகவும் குறியீடாகவும் திகழ்கின்றன. அதை ஒரு கவிஞன் தவிர்க்க இயலாது.
கே. உங்கள் கவிதைகளின் அடிநாதமாக தத்துவ விசாரணை தொடர்ந்து இயங்குகிறது. அதே சமயம் தெய்வ நம்பிக்கையும், சந்தேகமும், பக்தியும், எதிர்ப்பும் ஒரே கவிதை உலகில் ஒன்றோடொன்று உரையாடுகின்றன.
அ. ஒருபுறம் “குறைபாடுள்ள தெய்வம்” என்று எழுதுகிறீர்கள்; மறுபுறம் தெய்வீக அனுபவங்களை மிகுந்த நுண்மையுடன் பதிவு செய்கிறீர்கள். இந்த இரண்டு துருவங்களும் உங்கள் உள்ளத்தில் எவ்வாறு இணைந்து இயங்குகின்றன?
ப: பெரும்பாலான காலங்களில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்வு கடுமையானதாக இருக்கிறது. எல்லாக் குறைபாடுகளும் சேர்ந்தே வருகின்றன. இந்தச் சூழலில்தான் மனிதர்கள் மீட்பை நோக்கிச் செல்கின்றனர். பெரும்பாலும் நான் காணும் காட்சிகள் யாவும் மீட்பைத் தேடி அலைகிற மனிதர்களைத்தான். சில நேரங்களில் தெய்வ நம்பிக்கைகள் கைகொடுப்பதாகவும், பல நேரங்களில் கைவிடுவதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைகளை அதிகமாகவும், வீழ்ச்சியைக் குறைவாகவும் எழுத நினைக்கிறேன். எல்லா முரண்பாடுகளுடனும் இயங்கிக்கொண்டிருப்பதுதான் மனித மனம். அம்மனதிற்குள் நிகழும் அகக் குழப்பங்கள், கடவுள், பகுத்தறிவு, நம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாமும் ‘நான்’ என்ற மனிதச் சாராம்சத்தின் அங்கங்கள். அந்த முரணான கூறுகளிலிருந்து வெளிப்பட்ட கவிதைகள் அவை.
ஆ. “இருள் புன்னகையாவது வெளிச்சம்”, “பேசாப் பெருநிலை தெய்வமாவது” போன்ற வரிகள் மிகவும் ஆழமான ஆன்மீகத் தரிசனங்களை உருவாக்குகின்றன. அவை வாழ்வனுபவத்தின் விளைவா? வாசிப்பின் தாக்கமா? அல்லது கவிதை எழுதும் தருணத்தில் நிகழ்ந்த அகத்தரிசனங்களா?
ப: சில விஷயங்களின் மீது அல்லது உண்மையின் மீது ஓர் ஆடையைப் போல நாம் அறியாத ஒன்று போர்த்தப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அதுவாகவே மறைந்தும் இருளாகவும் வெளிப்படுகிறது; மாயை என்றும் கூடப் பொருள் கொள்ளலாம். கவிதை அவற்றை அரிதாக விலக்கிக் காண்பிக்கிறது. விலகும் கண நேரத்து ஒளி கவிதையில் துலங்குகிறது; காரிருளில் கைவிளக்கு ஏற்றுவது போல. அதை அகத்தரிசனம் என்று சொல்வதற்கில்லை; உற்றுநோக்குவதினூடாக வெளிப்படுவது என்று எடுத்துக்கொள்ளலாம்.
இ. அதேபோல் “ஆகூழ் போகூழ் அறிந்தவள்”, “பிறப்பதென்பது நீர்மம்” போன்ற படிமங்கள் உங்கள் கவிதைகளில் தத்துவமும் மொழியும் ஒன்றாகக் கலக்கும் தருணங்களாகத் தெரிகின்றன. இத்தகைய உருவகங்கள் உங்களிடம் எவ்வாறு பிறக்கின்றன?
ப: அந்தந்த கணத்தில் வாழ்வதினூடாக அனுபவங்களை ஐம்புலன்கள் சேகரித்து வைத்துக்கொள்வது உடலின் இயல்பு. இருட்டு,வெளிச்சம், இயற்கை காட்சிகள் எல்லாமும் கவிதைகளுக்கு அழகு சேர்க்கக்கூடியவை. அந்த கண நேரக்காட்சி இன்பங்களின் சேகரமே படிமங்களாகின்றன. ஆனால் அவை மட்டுமே படிமங்களாவதற்கான தகுதியும் இல்லை. ஆனால் கவிதையொன்றை கோரும். புறக் காட்சிகளும், அகத் தூண்டுதல்களும் ஒன்றாக இணையும் புள்ளியில் படிமங்கள் பிறக்கக்கூடும் என்று என்னளவில் கருதுகிறேன். சங்க இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதன் வழியாக காட்சிகள் படிமங்களாகும் நுட்பம் புரிகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பது மிகுந்த சுவாரசியமான ஒன்று. தமிழ் அகராதிகள் தொடர்ந்து வாசிப்பேன்.
கே. உங்கள் கவிதைகளில் காமம் வெறும் உடல் சார்ந்த அனுபவமாக அல்லாமல், ஆன்மீகத்தையும் பேரமைதியையும் தொடும் ஓர் அனுபவமாக வெளிப்படுகிறது. ‘அரிதான போகம்’, ‘உள்குரல்’ போன்ற கவிதைகளில் உடலின் எல்லைகள் கரைந்து, புலன்கள் ஒன்றோடொன்று கலக்கும் தருணங்களை ‘செவியற்றுக் கேட்பது’, ‘கண்ணற்றுப் பார்ப்பது’ என்று மிக நுட்பமாகப் பதிவு செய்கிறீர்கள். காமத்திற்குப் பின்பான நிசப்தமான ஆற்றலைக் கவனித்து எழுதப்பட்டவை அவை.
அ. தமிழ்ச் சமூகத்தில் காமத்தை எழுதுவது இன்னமும் தயக்கத்திற்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குடும்பத்தினர், சமூகப் பார்வை, தவறான வாசிப்புகள் போன்ற அச்சங்கள் இருந்தும், காமத்தைக் கவிதையாக்க வேண்டிய அவசியம் என்ன? உங்கள் பார்வையில் காமம் என்பது உடலைத் தாண்டி எதை அடைகிறது?
ப: இது மிகவும் அருமையான கேள்வி. காமத்தைப் பாலியல் தன்மையுடன் எழுதுவது ஒரு வகை; அதற்கு அப்பால் உடலைத் தாண்டி நிகழ்வதை எழுதுவது இன்னொன்று. காமம் வசீகரமானது; ஆனால் பயங்கரமானது. அதைக் கண்டு பயந்துகொண்டே இருப்பதைக் காட்டிலும், அதில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல்தான். காமம் உடலைத் தாண்டி செல்லும் போது எதுவுமே இல்லாத உன்னதநிலையை அடைகிறது. அந்தரத்தில் நடனமாடி, தன் ஆற்றலை இழந்ததும் பூமிக்குத் திரும்பும் பறவையைப் போல மீண்டும் அது உடலுக்குத் திரும்புகிறது. இன்னொன்று, உள்ளுயிரின் இருப்பைத் தேடுவது என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தாந்திரீகத்தில் மனித உடலானது பிரபஞ்சத்தின் ஒரு சிறிய வடிவமாகக் கருதப்படுகிறது. ஆற்றலின் ஸ்தூல வடிவத்தை உணர்வதன் வழியாகவே அதன் சூட்சுமத்தை அடைய முடியும். பாலியல் விடுதலையையும் ஆசைகளையும் எழுதிய காலகட்டங்களைத் தாண்டி, அதன் அடுத்த நிலையை எழுதுவதற்கான சுதந்திரம் தற்போது உள்ளது. அதன் காரணமாகவே காமத்தை எழுதுகிறேன்.
ஆ. ‘இசைப்படாத ஹார்மோனியத்தின் இசை இத்தனை காலமும் அங்குதானே இருந்தது?’ – இது அதீத துயரத்தைப் பேசுகிறதா? அல்லது அதியற்புத போகத்தைக் கண்டறிந்த இன்பத்தைக் குறிக்கிறதா?
ப: இரண்டு அதீதங்கள் அருகருகே இருப்பது போல, இரண்டுமே ஒன்றை ஒன்று நெருங்கியே இருக்கின்றன. எது அதீத இன்பம் தரக்கூடியதோ, அதுவே அதீத துயரத்தையும் தரக்கூடியது. இவ்விரண்டுமே அக்கவிதையில் இருக்கின்றன.
இ. ‘நா அகம்’ போன்ற வார்த்தையைப் பிரிக்கும் போது ‘நாகம்’ என்ற குறியீடு காமத்திலிருந்து தத்துவமாக மாறும் தருணங்கள் நிகழ்கின்றன. இத்தகைய உருவகங்கள் எழுதும் போதே பிறக்கின்றனவா, அல்லது நீண்டகாலச் சிந்தனையின் விளைவா?
ப: கவிதை அனுபவம் சார்ந்தே உருவாகின்றன. மேற்சொன்ன கவிதை அந்தக் கணத்தில் உருவாகி வந்ததுதான். ஒரு படிமத்தை ஓராண்டு காலமாக உருப்போட்டுக்கொண்டே இருக்கிறேன்; இன்னமும் கூட எழுதவில்லை. அதற்குரிய நேரம் வரும்போது கவிதை தானாக வெளிப்பட்டுவிடும். கவிதையின் இயல்பே அதுதான். கவிதையில் திட்டமிட முடியாது என்பதே அது கவிதையாக நிலைத்திருப்பதற்கான சான்று.
கே: உங்கள் கவிதைகளில் மரணம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஆனால் அது பயமூட்டும் முடிவாக அல்ல; வாழ்வைப் புரிந்துகொள்ளும் இன்னொரு கதவாக வருகிறது.
அ. ‘இறுதிப் பல்லக்கு’, ‘திரை’, ‘மரணத்தின் நிறம் நீலம்’, ‘பூஜ்ஜிய காலம்’, ‘சுடர்’, ‘நசிகேதன்’ போன்ற கவிதைகள் மரணத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன. தத்துவமாக எழுதப்படும் மரணமும், தனிப்பட்ட அனுபவத்தின் வழியாக எழுதப்படும் மரணமும் உங்களிடம் எவ்வாறு வேறுபடுகின்றன?
ப: மகான்கள் மரணத்தைப் பெரும் துயரமென்றோ ஒரு முடிவென்றோ கருதுவதில்லை. தாவோ நெறியின்படி, ‘உயிரோடு இருக்கும் போது மனிதன் மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருக்கின்றான்; உயிர் போன பிறகு அவன் கடினமாகவும் விறைப்பாகவும் மாறுகிறான். கடினத்தன்மை அழிவையும், நெகிழ்வுத்தன்மை வாழ்வையும் குறிக்கிறது’ என்கிறார் லாவோட்சு. வாழ்வும் மரணமும் பிரிக்க முடியாத கணிதச் சூத்திரங்களைப் போலத் தன்னளவில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அதில் தனிமனிதத் துயரங்களைக் கடந்து, மானுட இருப்பின் எல்லையைத் தத்துவத்தின் வழியாகப் பார்ப்பதன் வாயிலாக, சக மனிதர்கள் மீது இன்னும் கனிவுடனும் அனுசரணையுடனும் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
ஆ. அதேபோல் கனவு, விழிப்பு, பிரக்ஞை, உறக்கம் ஆகியவற்றின் எல்லைகளும் உங்கள் கவிதைகளில் அடிக்கடி கரைந்துவிடுகின்றன. உங்கள் கவிதையுலகில் மரணமும் உறக்கமும் ஒரே ஆன்மிக அனுபவத்தின் வெவ்வேறு நிலைகளா?
ப: ஆன்மிக நிலை என்று சொல்வதற்கில்லை; அப்படிப் புரிந்துகொள்ளலாம். மரணம் என்னும் தத்துவப் பிரச்சினையை சாக்ரடீஸ் மிக எளிதாக, “மரணம் என்பது கனவுகளற்ற உறக்கம்” என்கிறார்.
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
– என்கிறது குறள். என்னவொரு தரிசனம்!
இ. மொத்தத்தில் மரணம் என்பது மரணமின்மையே என்று நிறுவும் பல சான்றுகள் உங்கள் கவிதைகளில் உண்டு. இது சாத்தியமென்று நினைக்கிறீர்களா?
ப: உடல் அழியக்கூடியதாக இருந்தாலும், மனிதன் விட்டுச் செல்லும் அடையாளங்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. காரைக்கால் அம்மையார் முதல் கம்பன் வரை நாம் புழங்குமிடத்தில் நாள்தோறும் எதன் வழியாக வந்து செல்கிறார்கள்? மொழியின் இருளும் ஒளியும் அவர்கள் வழியாகவே நம்மிடம் வந்து சேர்கின்றன. அவர்களுக்கு ஏது மரணம்?
கே: உங்கள் கவிதைகளில் வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், கிரேக்கத் தொன்மங்கள், ஓவியர்கள், சைவ சித்தாந்தம் எனப் பல்வேறு அறிவுலகங்கள் இயல்பாக வந்து கலக்கின்றன.
அ. யஜுர் வேத நசிகேதன், ரிக் வேத தீர்க்கதமஸ், கிரேக்கத் தொன்மக் கதையில் வரும் மெடூசா, நீலோற்பவ மலரைத் தேடும் பீமன் – ‘எது கண்ணோ அது உலகம்’ என்ற உபநிடத வரிகள் என விரியும் இந்த வாசிப்பு உலகம் உங்களிடம் எவ்வாறு உருவானது?
ப: பொதுவாகத் தீவிர வாசிப்பாளரிடம் இருக்கும் அதே ஆர்வம்தான் என்னிடமும் இருக்கிறது. வாசிப்பு எல்லா விரிவுகளையும் அளிக்கக்கூடியது. அந்த வகையில் நீதிநூல்கள் முதல் இதிகாசங்கள் வரை வாசிக்கிறேன். இந்தியத் தத்துவத்தையும் மெய்யியலையும் தொடர்ந்து கற்கிறேன். கவிதையை வளப்படுத்துவதற்கென்று மட்டும் தேடிச் சென்று வாசிப்பதில்லை; வாசிப்பு என்பது தொடர் ஓட்டம் போல இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
ஆ. அதேபோல் வான் கோ, க்ளாட் மோனே போன்ற ஓவியர்களும் உங்கள் கவிதைகளில் இடம்பெறுகின்றனர். காட்சி முதலில் உங்களிடம் கவிதையாக மாறுகிறதா, ஓவியமாக மாறுகிறதா?
ப: எல்லையில்லாத நினைவுகளையெல்லாம் ஆழ்மனம் காட்சியாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறது. அக்காட்சியின் மீது அரிதாக ஒளி விழும் கணத்தில் அவை படிமங்களாகின்றன. காட்சியின் விரிவுகள் நினைவுகளைக் கவிதைகளாகவும், கதைகளாகவும், கோட்டோவியங்கள் போலவும் உருவாக்குகின்றன. மொழியால் அவற்றுக்கு வண்ணம் பூசும்போது அவை அழகான கவிதைகளாக வடிவெடுக்கின்றன.
இ. மேலும் உங்கள் கவிதைகளில் சைவ சித்தாந்தத்தின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. அது ஒரு தத்துவ ஈர்ப்பா? தனிப்பட்ட ஆன்மிகப் பயணமா? அல்லது தமிழ்ச் சிந்தனையின் இயல்பான நீட்சியா?
ப: தத்துவம் சார்ந்த ஈர்ப்புதான். சைவ சித்தாந்தம் இந்திய மெய்யியலில் ஆற்றிய பங்கு அளப்பரியது. மதம் சித்தாந்தத்தைக் கைகொண்டுவிட்டதால் அது மத அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சைவ சித்தாந்தத்தில் உள்ள காரண காரியக் கொள்கை (சத்காரிய வாதம்), அறிவுக் கோட்பாடு (Epistemology) போன்றவை அறிவியல் பார்வையில் மிகவும் முக்கியமானவை. அறிவியலாகவும் மெய்யியலாகவுமே சைவ சித்தாந்தத்தை வாசித்துப் பொருள் கொள்கிறேன். ஆன்மிகப் பயணம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. உபநிடதங்கள், வேதாந்தம் முதலான அனைத்தையும் மெய்யியலை அறிந்துகொள்வதற்காகவே வாசிக்கிறேன். இந்திய மெய்யியலையும் தத்துவத்தையும் நமது நிலத்தின் மரபான வேரிலிருந்துதான் ஆழமாகக் கற்க முடியும்; அது இயல்பானது. அதற்காக அவற்றை மதச்சாயலாகவோ ஆன்மிகச் சிந்தனை மரபாகவோ மட்டுமே குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.
ஈ. இந்தச் சைவப் பித்தின் நீட்சியாக, கனவில் மட்டுமே வரும் விஷ்ணு கட்டுவதோ விழுந்தால் மீள முடியாத பெரும் பள்ளத்தாக்கு. நீங்கள் வீரசைவரா?
ப: வசிக்கும் சூழல் அப்படி இருக்கலாம். கொஞ்சம் ஆபத்தான பயணம்தான்!
கே. உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முதலில் மனதில் நிற்பது அவற்றின் படிம உலகம். எதிர்பாராத பொருட்களை இணைத்துப் புதிய காட்சிகளை உருவாக்கும் திறன் உங்கள் கவிதைகளின் தனிச்சிறப்பு.
அ. ‘மஞ்சள் நியான் விளக்குகள் வெயில் போல மினுமினுக்கும்’, ‘காற்றில் அசையும் முடிக்கற்றை போலப் பரவும் இசை’, பிறந்த குழந்தையின் ஆண்குறியை அத்திப்பழ விதைகளோடு ஒப்பிட்டது போன்ற உவமைகள் எவ்வாறு உருவாகின்றன?
ப: கவிதை என்பது ஓர் அழகான ஆபரணம் போல; எப்பொழுது, எந்தக் கணத்தில் அழகு சேர்க்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. ஆனால், அது நிகழும் சாத்தியத்தை எப்பொழுதும் தன்னுள் உள்ளடக்கியே வைத்திருக்கிறது. கவிதையை ஓர் அபூர்வ மலர் என்றும் சொல்லலாம்; நாம் பார்க்காத, நாம் அறியாத தருணத்தில் அது மலர்ந்திருக்கும். அதனால்தானே அது கவிதை!
ஆ. உங்கள் கவிதைகளில் சாதாரணக் கிராமியக் காட்சிகள்கூடப் புதிய அழகைப் பெறுகின்றன. கொய்யா தாமரை இதழ் வடிவம், மலர் ஊஞ்சல் காட்சி இதெல்லாம் நுணுக்கமாகக் கவனிப்பதற்காக நீங்கள் தனிப்பட்ட பயிற்சி ஏதேனும் மேற்கொள்கிறீர்களா?
ப: அடிப்படையில் தத்துவம் சார்ந்த வாசிப்பு உள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் அதன் மூலத்திலிருந்தே பார்க்கும் சாத்தியங்கள் உண்டு; எதையும் தர்க்கப்பூர்வமாகப் பார்க்க இயலும். மனம் எதில் லயித்து இருக்கிறதோ, சிந்தனை அதன் பூரண வடிவத்தைக் கண்டடைகிறது.
கே. உங்கள் கவிதைகளில் ஒளியும் இருளும் இரண்டு முக்கியமான பாத்திரங்களாகத் தொடர்ந்து இயங்குகின்றன. அவை எதிரெதிரானவை மட்டுமல்ல; ஒன்றை ஒன்று உருவாக்கும் சக்திகளாகவும் தோன்றுகின்றன.
அ. ‘இருளிலிருந்து ஒளி பிரிவது போல’, ‘இருள் நிறைந்த உலகம் / ஒளி நிறைந்த உலகம்’, ‘இருள் ஒளி பாவனை’, ‘ஒளிக்கும் இருளுக்குமிடையே வந்து போகும் கடலலைகள்’ – இந்த இருமைகள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பது போலச் சிவப்பு (மஞ்சள்), நீலம், பச்சை என்ற வண்ணங்கள் மூன்றும் சரியான அளவில் கலந்த பரிசுத்த வெண்மை இரண்டாம் தொகுப்பின் முதல் கவிதையிலேயே வெளிப்படுகிறது. இந்த வண்ணங்களோடு உங்களுக்குள்ள உறவு என்ன? ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் குறிக்கிறதா?
ப: ஓவியத்தில் கோடுகளும் நிறங்களும் தனித்தனியாகச் செயல்படுவதில்லை; மாறாக அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து காட்சி மொழியை (Visual Language) உருவாக்குகின்றன. அந்தக் காட்சியின்பம் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னஞ்சிறு கண்ணாடி வளையல் துண்டுகளை ஒன்றாக வைத்து அதன் பிரதிபலிப்பைக் கண்டு குதூகலிக்கும் பருவத்திலிருந்தே நிறங்களின் மீதான காதல் உருவாகியிருக்க வேண்டும். பொன் உருகி உருகி வழியும் மஞ்சளின் மீது அலாதியான பித்து உண்டு. நிறங்கள் மனதின் ஆழமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கருவியாகவே செயல்படுகின்றன. ஆகாயம் எவ்வளவு விஸ்தீரணமோ, அவ்வளவு விஸ்தீரணம் கொண்டது நிறம்! அடர் நிறங்களிலிருந்து வெண்மைக்கு மாறியிருப்பது என் மூர்க்கம் குறைந்திருப்பதன் அடையாளமாகவே கருதுகிறேன்.
ஆ. அதேபோல் உங்கள் கவிதைகளில் சிறிய விளக்குகள், சுடர்கள், தீபங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன; சிறு சுடர்கள் கவிதையில் பல இடங்களில் அசைந்தாடுகின்றன. இருளில் விளக்கு பாய்ச்சும் சிறு வெளிச்சம் இந்த அளவுக்கு ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டிருப்பது பெரும் இருளில் மிகச் சிறிய ஒளி தரும் நம்பிக்கையா அல்லது இருளே அந்த ஒளியை அர்த்தமுள்ளதாக்குகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
ப: வாழ்வின் ரகசியங்கள் மீது அரிதாக விழும் ஒளி அளப்பரிய நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருளில் மின்மினிப் பூச்சியின் வெளிச்சத்தில் இந்த உலகை விஸ்தரித்துப் பார்க்கும்போது அதன் அழகு தாள முடியாததாகத் துலங்குகிறது. அறியவொண்ணாத இருட்டில் தற்செயலாக விழும் ஒளியின் அழகை, வாழ்வின் மீதான நம்பிக்கையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அனைத்து மதங்களிலும் ஒளி என்பது நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்றாகவே போற்றப்படுகிறது. ஆனால், இருளை உற்றுநோக்குவதன் வழியாகத்தான் ஒளியைக் கண்டடைய முடியும்.
கே: உங்கள் கவிதைகளில் பெரும்பாலும் சாதாரண மனிதர்களே வாழ்கின்றனர். முதியவர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள், வீதிப் பாடகர்கள், சிறு வியாபாரிகள், கோவில் ஓவியர்கள், கிராமத்துப் பெண்கள். . . இவர்களெல்லாம் உங்கள் கவிதைகளில் வெறும் பாத்திரங்களாக அல்லாமல் ஒரு வாழ்க்கைத் தரிசனமாக மாறுகின்றனர்.
அ. குறிப்பாக முதுமையை நீங்கள் பதிவு செய்யும் விதம் மிகவும் நுட்பமானது. உடல் சோர்ந்தாலும் சிறு பழக்கங்களை விட முடியாத மனிதர்கள் (வெற்றிலைப் பெட்டியைத் தன்னோடு மறக்காமல் எடுத்துச் செல்லும் மூதாட்டி), பெரும் பசியைத் தணிக்க அவசரமாக உண்ணும் முதியவர், குழந்தை மனதோடு கோவிலுக்குச் செல்லும் பெரியவர் – இவர்களைப் பார்க்கும் உங்கள் பார்வை என்ன?
ப: நம்மிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் காலப்போக்கில் என்னவாக மாறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு எனக்கு எப்போதும் உண்டு. மனிதர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மானுடத்தை உற்றுநோக்கும் ஒரு பார்வையாளராகவே நின்று கவனிக்கிறேன். அது ஒருவகையில் மானுடத்தின் மீதான பெருங்கரிசனத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
ஆ. உங்களுடைய இருவேறு கவிதைகளில் மனநிலை பிறழ்ந்தவர்கள் வருகிறார்கள். புத்தி சுவாதீனமில்லாத பெண் நிலவொளியில் நழுவும் மாராப்பைச் சரிசெய்யாமல் இருப்பதைத் தவறான காமத்தைத் தூண்டும் பாவனையாகக் காண்கிறீர்கள்; அதுவே புத்தி சுவாதீனமில்லாத ஆண் வரும் கவிதையில், அவன் பெண்ணை ஓர் இரும்பு நாற்காலி போல நோக்குகிறான் என்று எழுதியிருக்கிறீர்கள். இதன் பின் இயங்கும் உளவியல் என்ன?
ப: காமம் என்பது மானுட இயல்பு; காமமே இந்த உலகத்தை இயக்குகிறது. காமத்திற்கான வேட்கை மனம் பிறழ்ந்த நிலையில் எவ்வாறெல்லாம் இயங்கக்கூடும் என்பதையே அக்கவிதைகளில் எழுதினேன். நீங்களே சொல்வது போல அது பாவனையாகக்கூட இருக்கலாம். தன்னைத் துறந்து காமத்தைக் கைவிடுதல் என்பது ஞானத்தை நோக்கிச் செல்லும் ஆன்மிக உயர்நிலையாகப் பார்க்கப்படுகிறது. மனப்பிறழ்விலும், நோய்மையின் தீவிரத்திலும் இயங்கும் ஒரு மனதினுள் காமம் என்னவாக உருவெடுக்கிறது என்பதன் வெளிப்பாடு அது. மொழியால் வெளிப்படுத்த முடியாததை உடல் பாவனைகள் உணர்த்தும்போது அது எத்தகைய வடிவத்தைப் பெறுகிறது என்பதைத்தான் அக்கவிதைகள் பேசுகின்றன.
கே: உங்கள் கவிதைகளில் தாய்மை மிக வித்தியாசமான பரிமாணங்களில் வெளிப்படுகிறது. கருவறையை ‘முடிவுறா இருள்’ என்று உருவகப்படுத்துவதும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான மொழியற்ற உரையாடலைச் சித்தரிப்பதும், தாய்ப்பாலை உயிரின் முதல் தேடலாகக் காட்டுவதும் மிகவும் ஆழமான படிமங்கள். ‘தேவியின் முலைக்காம்பு அது ஆற்றலின் கண்’ என்ற இடமும் தாய்மையின் உச்சமென்று சொல்லலாம். அதே சமயம் தன் குழந்தையை நிராகரிக்கும் தாய், காரணமின்றி வெறுப்பை முலையூட்டும் அன்னை போன்ற எதிர்மறை முகங்களும் உங்கள் கவிதைகளில் வருகின்றன. உங்கள் கவிதையுலகில் தாய்மை என்பது உயிரியல் உறவா? கருணையின் வடிவமா? அல்லது மனிதன் அனுபவிக்கும் மிகப் பெரிய முரண்பாடுகளில் ஒன்றா?
ப: எவ்வளவு மேன்மை இருக்கிறதோ, அதே அளவு கீழ்மையும் இருக்கிறது. இவ்விரண்டு முரண்பாடுகளும் மனித இயல்புகளில் கலந்தே உள்ளன. மனம் என்னதான் விசாலமாக இருந்தாலும், பெண் சில நேரங்களில் எதிர்மறையாகவும் வெளிப்படுகிறாள்; அதுவும் ஓர் இயல்புதான். அந்தக் குணமும் சேர்ந்ததுதானே அவள்? விசித்திரங்களுக்கு உட்பட்டது மனம்; பெண்ணும் அவ்வாறே. எந்தக் கணத்திலும் எதையும் நிகழ்த்தக்கூடிய சாத்தியங்கள் உடையவள் அவள். அதீதத்தின் ருசியை அவள் எந்நேரமும் தன்னுள் வைத்திருப்பது போல, வெளிப்படாத கசப்பும் அவளிடம் உண்டு. இரண்டும் வேறு வேறு அல்ல. இந்த முரண்பாடுகளினூடே அவள் எல்லாவற்றிற்கும் கணக்குத் தீர்க்கிறாள்; கணக்கு வைக்கிறாள். அவள் அன்னை பராசக்தியாகவும், காளியாகவும், தேவியாகவும் தொடர்ச்சியாக இம்முரண்பாடுகளுடனே இயங்கிக்கொண்டிருக்கிறாள்.
கே: ‘கோணலாக இருப்பதைப் பார்ப்பது நேராக இருப்பதை விட அழகாக இருக்கிறது’ என்ற உங்கள் வரி எதை குறிக்கிறது?
ப: மானுடம் முழுமைக்கும் பொதுவாக சில குறியீடுகளும் நினைவுகளும் அடிப்படையிலே உள்ளது. அதன் அடிப்படையிலே நாம் வடிவங்களைக் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சம் பேரழகான வடிவமுடையது. மிகச் சிறிய ஒவ்வொன்றிலும் நாம் அறிந்தேயிராத பல்வேறு வடிவங்கள் உள்ளன. நாம் பொதுவாக கணிதவியல் வடிவங்களைத் தாண்டி அறிய முற்படுவதில்லை. அதனாலே நமக்கு பின்நவீனத்துவ விடிவங்கள் புரிவதில்லை. பின்நவீனத்துவ ஓவியங்கள் பொதுவான வடிவங்களை மீறி வரையப்படுபவை. நமக்கு அந்த வடிவங்களின் அடிப்படைத்தன்மை குறித்த புரிதலின்மையால் தான் நவீன ஓவியங்களைப் புரிந்துக்கொள்வதற்கும் நமக்கு சிரமமாக இருக்கிறது.
கோணல் என்பது ஒரு விதமான வடிவ அழகுடையது. அதை நாம் பார்ப்பதே இல்லை. ஏனெனில் அது நம் மனதின் இன்னொரு பக்கம். எல்லாவற்றையும் நம் ஒழுங்கிற்குள் வைத்துப்பார்ப்பது சமூக அமைப்பில் பழக்கமாகிவிட்டது.
எல்லாவற்றிலும் நமக்கு வடிவச் சிக்கல் உண்டு இல்லையா?
அதிலிருந்து விலகி அல்லது மீறி எது ஒன்று நிகழ்ந்தாலும் சமூகம் அதிர்வடைகிறது. வேர்கள் கிளைகள் மரங்கள் எல்லாம் தத்துவத்தில் மிகவும் முக்கியமான படிமங்கள். ஆழ்மனதின் குறியீடுகள்.
அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது நம்மைப் பிரதிபலிக்கக்கூடியது.
கே: உங்கள் முழு கவிதை உலகத்தையும் இணைக்கும் மையச்சரம் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அது தத்துவ விசாரணை என்று தோன்றுகிறது. ‘நான்’, ‘இருப்பு’, ‘இல்லாமை’, ‘ஞானம்’, ‘அஞ்ஞானம்’, ‘சூன்யம்’, ‘சக்கரங்கள்’, ‘சத்–சித்’, ‘நிறையாத பாத்திரம்’, ‘வெற்றிடம்’ போன்ற கருத்துகள் மீண்டும் மீண்டும் உங்கள் கவிதைகளில் வருகின்றன.
அ. ஞானத்தை அடைவதுதான் உங்கள் கவிதையின் நோக்கமா? அதுவே உங்கள் கவிதைகளைச் செலுத்துகிறதா? இந்தத் தேடல் இறுதியில் எதை நோக்கிச் செல்கிறது?
ப: கவிதை எப்பொழுதும் உண்மையை நோக்கியே செல்கிறது. அது உண்மைக்கு மிகவும் அருகாமையில் இருப்பதையே விரும்புகிறது. அதனால்தான் ஏனைய இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் கவிதை காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கிறது. சின்னச் சின்ன ஞானங்கள் கவிதையில் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. அந்தக் கணத்தில் மெய்யை உணர்வது கவிதையினால் கூடிவருகிறது. மெய்யை நோக்கிச் செல்லக் கவிதையை ஒரு வழியாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன். கவிதை எழுதுவதன் வழியாக உருவாகும் விடுதலை உணர்வை அடையும் பொருட்டே பெரும்பாலும் எழுதுகிறேன்.
ஆ. உங்கள் தத்துவ விசாரங்களில் பாத்திரங்கள் பல்வேறு வடிவமெடுக்கின்றன. ‘நானொரு காலிபாத்திரம் – எதையும் நிரப்பவியலாத காலிப் பாத்திரம்’ – சுயபிரகடனம்; ‘விளிம்பு வரை நிறைந்த பாத்திரம் பிடித்திருப்பது கடினமான செயல் என்கிறீர்கள்’ – இதில் பாத்திரம் மறைபொருளை சுட்டுகிறது. ‘நச்சின் பாத்திரம்’ – குணாதிசயத்தைப் பேசுகிறது. இவற்றை தத்துவ விசாரத்திலிருந்து விலக்கிப் பிடித்தால், கவித்துவம் கூடுதலாக இருக்குமோ?
ப: கவித்துவத்திற்காகக் கவிதை எழுதப்படுவதில்லை. நாமல்லாத பாத்திரமே இல்லை. மிகச் சிறிய நொடியில்கூட மனம் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளும்; அந்த அளவுக்கு மனம் அதிவேகமாக இயங்கக்கூடியது. மனதின் விரிவை இன்னும் கூட முழுவதும் கற்பனை செய்ய இயலாது. அவ்வளவு புதிரான மனதைச் சொல்ல வேண்டிய இடத்தில் எனக்கு அழகியல் தேவைப்படவில்லை. கவிதையில் மனதின் ரகசியங்கள்—அதாவது மனம் உருவாக்கும் பாத்திரங்கள்—மறைக்கப்பட வேண்டியதில்லை.
மனம் என்பது ஒரு கருந்துளையைப் போல முழுவதும் இருளால் நிறைந்திருப்பது; ஆனால் அதனுள் செல்லச் செல்ல ஒளியே இருக்கிறது. ஆனால் அது நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கிறது அல்லது அவ்வாறு நாம் அறிந்திருக்கிறோம்.
எண்ணங்கள் பருப்பொருள் போல எந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தை எடுத்துக் கொள்ளும். அதற்கு உருவமும் நிறமும் கொடுத்தால் அது எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்தும் என்பது தான் அதன் புதிர். நியூரான்களின் வலைப்பின்னல் போல எண்ணங்கள் மிகவும் நாமறியாத உள்ளடுக்குகள் கொண்டது. ஆனால், அது மிகவும் தந்திரமாக எல்லாவற்றையும் கேட்கக்கூடியது; ஒவ்வொரு சிக்கலாகத் தேடி விரும்பிப் பெறக்கூடியது; ஒவ்வொரு நொடியும் ஒவ்வொன்றை விரும்புவது.
என் கற்பனையில் ஒரு நாள் நான் அதற்கு வெளிர் ஊதா நிறத்தைக் கொடுத்தேன்; இன்னொரு நாள் ரோஜாப்பூ நிறத்தை அளித்தேன்; மற்றொரு நாள் அரக்கு நிறம். அரக்கு நிறம் அளித்தபோது அது மிகவும் உக்கிரமாக இருந்தது. ஒரு கணம் இருள்தான் அதன் இயல்பு என்பதை உணர்ந்தது போல இருந்தது.
இந்தப் பேரண்டம் எனக்கு ஒரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறது. அதிலிருந்து அள்ளி நான் ஒன்றைக் கொடுக்கிறேன்; சில சமயம் பலவாகவும். பாத்திரங்களில் வண்ணம் பூசி அழகு செய்ய அது புறப்பொருள் அல்ல. நாம் எந்த வண்ணங்கள் அளித்தாலும் அதன் சுயம் மட்டுமே வெளிப்படும். அதற்கு எந்த மேற்பூச்சும் தேவையில்லை. அதன் வெளிப்பாடுகள் சில நேரம் நம்மை அதிர்ச்சியடையச் செய்யலாம்; ஆனால் அதன் இயல்பு அப்படித்தான்.
இ. தத்துவத்தைக் கவிதையாக்கும்போது அது வெறும் கருத்தாக மாறாமல், கவிதையாகவே உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென்றால் எதை அதிகம் கவனிக்க வேண்டும்?
ப: மணிமேகலை காப்பியத்தில் எனக்கு மிகவும் பிடித்தப் பகுதி
“சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை”.
சமயக்கணக்கர்’ என்போர் பல்வேறு மெய்யியல் கோட்பாடுகளை முன்வைக்கும் தத்துவவாதிகள்.
வஞ்சி மாநகரில் மணிமேகலை ஒவ்வொரு சமயவாதியிடமும் சென்று விவாதங்களை மேற்கொள்வாள். அங்கு அளவைகள் (பிரமாணங்கள்) குறித்த நுட்பமான தர்க்க விவாதங்கள் அரங்கேறும்.
அதில் பத்து அளவைகளில் ஒன்று உவமம்.
‘உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய மாஆப் போலும்எனக் கருதல்;
காணாத ஒன்றைக் காணும் பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்துகொள்ளுதல் –(கவயம்) என்னும் விலங்கை, நாம் நன்கறிந்த பசுவோடு ஒப்பிட்டு அறிதல்.
அதைப் போலவே இன்னொன்று
பிரமாணத்தில் – உணர்ந்ததை உணர்தல்.
“உணர்ந்ததை உணர்தல் உறுபனிக் குத்தீப்
புணர்ந்திடல் மருந்துஎனப் புலம்கொள நினைத்தல்.
பனி பொழிவதைப் பார்த்து தீ காய்தல் குளிருக்கு மருந்து என உணர்தல் –
மேலோட்டமாகப் பார்த்தால் இது கடினமான தத்துவ விசாரம்.
ஆனால் அது எங்கு கவிதையாகிறது என்று கவனித்தோம் என்றால் தத்துவக் கருத்துகளை அன்றாட வாழ்வின் நேரடிப் படிமங்களாக மாற்றும் இடத்தில்தான் கவிதை உயிர்பெறுகிறது.
தத்துவத்தின் ஆழ்ந்தப் பகுதிகளை உணர்ந்தால் தான் நாம் கவிதைக்குள் நுழைய முடியும்.
இந்தப் பகுதிகளை நான் திரும்பத் திரும்ப வாசிப்பேன். ஏனெனில் நாம் அறியாத அல்லது நாம் ஆழ்மனதில் உணராத ஒன்றை கவிதையில் உயிர்ப்புடன் கொண்டு வரவே இயலாது.
கே: இறுதியாக, உங்கள் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கடந்து பார்க்கும்போது, இன்று நீங்கள் எழுத விரும்பும் கவிதை எதை நோக்கிப் பயணிக்கிறது? இன்னும் எழுதப்படாத உங்கள் கவிதைகள் எந்த உலகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன?
ப: இன்னும் நான் அறிந்துகொள்ளாத புது உலகங்களை நோக்கிச் செல்ல விரும்புகிறேன். “எண்ணங்களின் வழியாகத்தான் உணர்ச்சிகள் அறிவாகி நிலைத்து, அவை உண்மையாகிக் கனியவும் தொடங்குகின்றன” என்று ‘சித்தார்த்தன்’ நாவலில் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதியிருப்பார். அந்த உண்மை கவிதையாக மலரும் சாத்தியங்கள் கூடினால், அது எவ்வளவு அழகான, கனிவான உலகமாக இருக்கும்!
***
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com



