கு. ஜெயபிரகாஷ்
“The best way to keep a prisoner from escaping is to make sure he never knows he’s in prison.”
–Fyodor Dostoevsky
1
எனக்கான சவக்குழியை வெட்டத் தொடங்கினேன். மண்வெட்டி மண்ணைப் பிளந்து கீழே இறங்கும்போதெல்லாம் ஒரு ஈர வாசனை மேலெழுந்தது. இலுப்பை மரத்தின் நிழல் மதியம் நகர நகர சுருங்கிக்கொண்டிருந்தது. வெயில் அந்த நிழலின் ஓரத்தைத் தொட்டு எரித்தது. ஒவ்வொரு வெட்டிலும் மண் தன் பாரத்தை இழந்து பக்கவாட்டில் சரிந்தது. மண்வெட்டியின் கூர் மண்புழுவை இரண்டாகப் பிளந்தது. ஒவ்வொரு துண்டும் தனித்தனியே நெளிந்தது, முன் பாதி ஒரு திசையிலும், பின் பாதி இன்னொரு திசையிலும். அதன் உயிர்த் துடிப்பின் நெளிவு என்னை ஒன்றும் செய்யவில்லை. நான் தொடர்ந்து நோண்டிக்கொண்டேயிருந்தேன். மண்வெட்டியில் தட்டுப்பட்டு ஒரு மண்டை ஓடு தெரிந்தது.
மண்வெட்டியை அருகில் வைத்துவிட்டு மண்டை ஓட்டைக் கையில் எடுத்தேன். அதன் கண், நாசி, வாய் குழிகளுக்குள் மண் முழுவதுமாக நிறைந்திருந்தது. மண்டை ஓட்டின் மேற்பக்கத்தில் தட்டியதும் உள்ளிருந்த மண் வெளியே கொட்டியது. பாதி நோண்டப்பட்ட என் சவக்குழிக்குள் மண்டை ஓட்டுடன் உட்கார்ந்திருக்கும் என்னை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை அங்கிருந்து எழச்செய்தது. ஆனாலும் கையில் இருந்த மண்டை ஓட்டை மட்டும் விடாமல் எடுத்துவந்து தண்ணீரில் நன்கு கழுவினேன். நீரில் மூழ்காமல் மிதந்துவந்த அந்த மண்டை ஓட்டைத் தொட்டியிலிருந்து எடுக்கும்போது, அதன் கண், நாசி, வாய்ப் பகுதிகளிலிருந்து நீர் வடிவதைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது. முன்பைவிட மண்டை ஓடு இன்னும் சற்று வெண்மையுடன் தெரிந்தது.
இது ஆணின் மண்டை ஓடா? இல்லை, பெண்ணின் மண்டை ஓடா? வயதானவரினுடையதா? இளையவரினுடையதா? இயற்கை மரணமா? இல்லை, தற்கொலையா? கொலையா? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தன. இந்த மண்டை ஓட்டை வைத்து இது எந்தச் சாதியைச் சார்ந்தவரின் மண்டை ஓடு என்றும், அதனுள் அந்தச் சாதியின் பெருமைகள் அடங்கியிருக்குமா என்றும், கண்டுபிடிக்க முடியுமா?
என் மண்டை ஓடும் இப்படித்தான் இருக்குமா?
நாளுக்கு நாள் பைத்தியக்காரத்தனம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மண்டைக்குள் இருக்கும் மூளையைக் கழற்றி வைத்துவிட வேண்டும்; இந்த மூளைதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். இல்லையெனில் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்கும் அந்த நினைவை அழித்துவிட வேண்டும். மனதுக்குள் நானும் நானுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
பாதி வெட்டப்பட்ட சவக்குழி, ஈரம் சேர்ந்த மண், இலுப்பை மரத்தின் நிழலுக்குள்ளும் புகுந்துவிடும் வெயிலின் தாக்கமும், அதிகமாக வீசும் காற்றும், நானும், செத்துக்கொண்டிருக்கும் அந்த மண்புழுவும், இந்தத் தனிமையான இடத்தில் இருக்கிறோம்.
இங்கே எந்த ரூபாய்களும் செல்லாமல் போனாலும் கவலையில்லை. வெளி உலகம் தெரியாமல் தனித்திருக்கிறேன். எண்ணமும் மனமும் போட்டிபோட்டுக்கொண்டு எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்தன. உடல் முழுக்க வேர்த்துக் கொட்டியது. இன்றைக்கு எப்படியாவது அவனைக் கொலை செய்யவேண்டும். அவனால் இவ்வளவு பெரிய இம்சையா என்று கத்திக்கொண்டே, கையிலிருந்த மண்டை ஓட்டைத் தூக்கி எறிந்தேன். அது பாறையின்மேல் மோதி உடைந்து சிதறியது.
2
ஆடைகளற்ற என் உடல் நினைவின் சொரூபம். என் புலன்கள் அனைத்தும் என்னை மறதிக்குள் அழுத்தும் போதை வஸ்துக்கள். இந்தப் பிறவியில் எத்தனை மனிதர்களை என் கண்கள் கண்டிருக்கும், எத்தனை எத்தனை வகையான முகங்கள், எத்தனை விதமான பாவனைகள். இந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் என் முகமும், அதனுள் இருக்கும் மண்டை ஓடும், நினைவுகள் என எல்லாம் அழுக்குப் படிந்திருக்கும் மூளை மடிப்புகளும், அம்மனதின் அகோரமும், கவிச்சி வாசனை உமிழும் உடலும், அடையாளங்களும். என எல்லாவற்றையும் தேர்வுசெய்து அனுபவிக்கும் எனக்கு, என் உடலை என்னால் தேர்வுசெய்ய முடியவில்லை.
என் நிர்வாணம் என் குறைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. என் இழப்புகளை, பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. கண்ணாடியில் என் பிம்பத்தில் இருக்கும் கண்களும் மூக்கும் என் மூதாதையரை நினைவுபடுத்துகின்றன.
கேடு செய்யும் என் மூளையின் பிசுபிசுப்புத் தன்மை என்னை முகம் சுழிக்கவைக்கிறது. நான் எல்லாவற்றையும் மறந்து தவித்துக்கொண்டிருக்கிறேன். கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் பயணிக்கும், ஒன்றுக்கும் உதவாத என் உணர்வு நிலையை வைத்திருக்கிறேன். நான் நடுக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும் ஒற்றை விந்து; அல்லது எந்த விந்தையும் ஏற்றுக்கொள்ளாத முட்டை. நான் ஏற்பதையும் அடைவதையும் மறந்துவிட்டேன். மறந்ததால் நான் என்னையே இழந்துவிட்டேன். இழப்பின் வலைக்குள் சிக்கித் தவிக்கும் ஒற்றை மீன். காணாமல் போன உலகத்தில் தொலைந்து அலையும் தனிமை. கண்களைக் கேட்பதற்கும், காதுகளைப் பார்ப்பதற்கும், நாசியால் உண்டு வாயால் சுவாசிக்கும் விசித்திர உயிரி.
என் மறதி என் புலன்களைக் குழப்பிவிட்டது; அடையாளங்களை மரத்துப் போகவைத்தது. நான் முப்பாலுயிரியாக உருமாறியிருக்கிறேன். என் விரல்களில் பால் சுரக்கிறது. உதட்டு எச்சிலில் விஷம் வடிகிறது. ஆறுமாதம் ஆண்குறியும் ஆறுமாதம் பெண்குறியுமாக உருமாறியிருக்கும்போது, ஆணின் நினைவை பெண்ணும், பெண்ணின் நினைவை ஆணும் மறக்கிறது.
மனநோயாளிக்கான அறிகுறிகளுடன் நான் நடந்துகொள்கிறேன். எனக்கு எந்தக் கவலையும் இல்லை; இந்தக் காட்டில் கிடைக்கும் மாமிசங்களும் பழங்களும், போதை தரும் இலைகளும் காளான்களும் வைத்து உண்டு புகைத்துக்கொண்டிருக்கிறேன். புகையுடன் மெல்ல மெல்ல என் நிழலும் நிஜமும் உயிரும் கரைந்துகொண்டிருக்கின்றன.
என் பெயர் எனக்கு நினைவில்லை. நான் யார் என்றும் எனக்குத் தெரியவில்லை. என் உடைகளை அவிழ்த்து என்னை நானே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் உடல் முழுக்க விந்து ஓடுகிறது.
சில சமயம் நான் விந்துயிரி, சில சமயம் முட்டையுயிரி. இப்படி எல்லாம் நான் யோசிப்பதும், எனக்குள் நானே பேசிக்கொள்வதும், என்னைத் தவிர யாருக்கும் தெரியாது.
3
இதுவரையில் நோண்டிய சவக்குழியில் மண்டை ஓடுகள் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றன. ஒட்டுமொத்தப் பூமியுமே பிணங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது. நிலம் பிணத்தை உள்ளுக்குள் புதைத்தும், கடல் பிணங்களை வெளியே தள்ளி மிதக்கவும் விடுகிறது. நிலமும் கடலும் நினைவுடனேயே மறந்துவிடுகின்றன.
என் பிணத்தை எரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. தனித்திருக்கும் என்னை யார் வந்து எரிப்பார்கள், அல்லது யார் என்னைப் புதைப்பார்கள். நான் செத்தால் இந்தக் காட்டில் இருக்கும் கழுகுகளுக்கு உணவாவேன், அல்லது புழுத்து மண்ணுக்குள் கலந்துவிடுவேன்.
நான் எப்படியும் மண்ணாய் மாறிடுவேன். என் கண்கள், என் நாசி, என் நினைவுகள், என் இதயம், என் புலன்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் அழிந்திடும். என் மண்டை ஓடு மட்டும் யாருடைய கைகளுக்காவது கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால், என்னைக் கொலை செய்பவனின் கைகளுக்கு மட்டும் அது கிடைத்துவிடக் கூடாது.
4
நான் அவனைக் கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் நான் தோற்றுவிட்டேன். இன்னொரு வகையில் நான் ஜெயித்துவிட்டேன். நான் சாகாமல் இருக்கிறேன். இதன் பெயர் தற்கொலையா? அல்லது கொலையா?
என்னை நானே அழித்துக்கொள்வதற்கு இத்தனை பெயர்களா? எல்லா இம்சையும் நான் இருப்பதனாலேயே நிகழ்கிறது. நான் இல்லை என்றால் இந்தச் சிக்கலும் இல்லை.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாக விளங்குகிறது. நான் வெற்றி கொண்டவனும், தோல்வி கொண்டவனும்; நானே தான்.
5
என் உடலை உண்ணும் புழுக்களும் பாக்டீரியாக்களும், என் உடலோடு என் நினைவுகளையும் சேர்த்துக் குழைத்தே உண்டுகொண்டிருக்கின்றன. அவற்றின் பசியை என் உடலும் நினைவுகளும் போக்கிக்கொண்டிருக்கின்றன. உறைந்த என் இரத்தத்தினுள் ஈரப்பதத்துடன் இருப்பது என் நினைவுகளே. இப்போது நான் எங்கும் நிறைந்திருக்கிறேன். என்னை உண்ட புழுவினுள்ளும், பாக்டீரியாவின் உள்ளும், மண்ணில் சேர்ந்த கழிவுடனும், மண்ணோடு மண்ணாய் நான் இணைந்திருக்கிறேன். என் நினைவுகள் கற்களுடன் கலந்து உறைந்துகொண்டிருக்கின்றன.
6
மரணம் மட்டுமே நிலைத்த மறதி என்பதை, இறந்தவன் வந்து சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். நான் இறந்தவன் அல்ல, எல்லாவற்றிலும் கலந்தவன். துரோகம், பாசம், பெண், காமம் என எல்லாவற்றினுள்ளும் என் பங்களிப்பு விசித்திரமானது. சொட்டுச் சொட்டாகக் கிளர்ந்தெழும் என் சுயத்தைக் கண்டு மிரண்டுபோன கற்பனை ஜீவி நான். மரணமும் மறதியும் நான் பருகவிரும்பும் பானம். ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து மறக்க நினைத்து, மறக்க முடியாமல் மரணத்தையே தேர்வுசெய்த சோம்பல் உயிரி. பிணமான பின்னரே தெரிகிறது, மரணம் நினைவின் கிடங்கு என்று. நானும் நினைவும் மட்டுமே இருக்கிறோம். திரும்பி வராத இடத்தில் நின்று புலம்புகிறேன் என்று நினைக்கையில். காலடியில், அந்த மண்புழுவின் இரு துண்டுகளும் இன்னும் மெதுவாக நெளிந்துகொண்டிருந்தன. ஒன்று மற்றொன்றிலிருந்து இப்போது இன்னும் தூரமாகி, ஆனால் இன்னும் இறக்கவில்லை. நான் அவற்றை உற்றுப் பார்த்தேன். பிறகு, மண்வெட்டியை எடுத்து, சிதறிய மண்டை ஓட்டுத் துண்டுகளையும் மண்ணையும் ஒன்றாக மூடத் தொடங்கினேன். வேலை முடிந்தபோது, குழி இருந்த இடத்தில் ஒரு மெல்லிய மேட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலுப்பை மரத்தின் நிழல் அதன்மேல் நீண்டு படர்ந்திருந்தது, இரவு நெருங்க நெருங்க, இன்னும் நீளமாக.
***
கு.ஜெயப்பிரகாஷ் – திருவண்ணாமலை மாவட்டம். “முனைவர்” “சா” என இரண்டு குறுநாவலும் “ஹீராபோரா” என்ற சிறுகதைத் தொகுப்பும் “மரமும் மண்ணுத்தாத்தா” என்ற குழந்தைகளுக்கான அறிவியல் கதைகளும் வெளிவந்திருக்கிறது. உயிரித்தொழில்நுட்பவியல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். கல்விப்புலத்தில பல சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளது. புழுதி என்ற இணைய இதழை நடத்திவருகிறார். மின்னஞ்சல்: phycojai@gmail.com

