Homeஇதழ்கள்2026 இதழ்கள்முதல் திருட்டு

முதல் திருட்டு

அ. மனோஜ்குமார்

திங்கள்கிழமை, ஏழாம் வகுப்பின் கடைசி பாடப் பிரிவிற்கு ஆசிரியர் வரவில்லை. தலைமையாசிரியர் அறையில் அலுவல் பணியில் இருப்பதாக உளவுச் செய்தி. ஆசிரியர் இல்லையென்றாலும் வகுப்பறையில் அவ்வளவு அமைதி நிலவ காரணம் வகுப்பறைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கவனிக்கின்றன. வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே முடித்து விடலாம் என்ற முனைப்பிலிருந்தான் ஆதவன். இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவனின் கை எதிர் பாராமல் பட்டு எழுதுகோல் பெட்டி (பென்சில் பாக்ஸ்) கீழே விழ, தன் இருக்கைக்கு அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு மாணவியின் காலில் எதிர்பாராமல் மிதிபட நெகிழியாலான எழுதுகோல் பெட்டி உடைந்து விட்டது. ஒரு நொடி நெஞ்சு அடைத்தது. மூச்சை இழுத்து விட்டவனுக்கு கோபமெல்லாம் வரவில்லை பயம் தான் வந்தது அவன் தாயாரை நினைத்து.

***

மூர்த்தியின் தந்தை அவனிடம் ஒரு சிகரெட் (வெண்சுருட்டு) வாங்கி வர சொல்லி பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினார். அவன் குடியிருக்கும் வீட்டிலிருந்து வேண்டுமென்றே மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் ஒரு கடைக்கு வந்தான். காரணம், கயல்விழி (அவனுடன் வகுப்பில் படிக்கும் மாணவி) தான். அவள் வீடு நான்காவது தெருவில் தான் இருக்கிறது. அவள் வீட்டை கடக்கும் போது அவளைp பார்க்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற ஆசையில் அங்கு சென்றான் மூர்த்தி. அவள் வீடு திறந்துதான் இருந்தது ஆனால் அவள் தென்படவில்லை. அவள் வீட்டைk கடந்து கடைக்குச் சென்று சிகரெட் கேட்டான். 

11 வயது சிறுவன் என்பதால், 

“யாருக்கு”, என்றார் கடைக்காரர்.

“அப்பா வாங்கிட்டு வர சொன்னாரு”, என்றான் மூர்த்தி. 

பின், கயல்விழியின் வீட்டைக் கடக்கும் போது அவள் வெளியே இல்லை ஆனால் திறந்த கதவு வழியாக அவள் உள்ளே அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் அவளைப் பார்த்து விட்டான். மகிழ்ச்சியில் திளைத்து இரண்டாவது தெருவை நெருங்கும் போது அரைக்கால் சட்டைப் பையை தடவி பார்த்தான் சிகரெட்டைக் காணவில்லை. மூர்த்திக்கு மூச்சு அடைப்பது போல ஆகிவிட்டது. சிறு சிறு தவறுக்கே பிரம்பு உடையும் அளவிற்கு அடிப்பாரே…. சிகரெட் இல்லாமல் போனால் என்ன ஆகுமோ என்று பயந்தான். வியர்த்து விறுவிறுத்து போனான். வந்த வழியே  சாலை நெடுக தேடியபடி திரும்பி கடையை நோக்கி நடந்தான். சிகரெட் கிடைக்கவில்லை. கயல்விழியின் வீட்டையும் கடந்து விட்டான் கடை  கண் முன் தெரிகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை. நோட்டமிட்டபடி கடையைக் கடக்கலாம் என்று முன்னேற அவனுக்கு போக மனம் ஒப்பவில்லை. அங்கேயே எங்காவது விழுந்திருக்குமோ என்று கடைக்கு அருகில் பார்வையை செலுத்தினான். கடைக்கு முன் செல்லவில்லை. நேரம் ஆக ஆக அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. பீடி மட்டுமே பிடிக்கும் அவனது தந்தை என்றாவது தான் சிகரெட் வாங்கி பிடிப்பார். அப்படி என்றாவது பிடிக்கப்படும் சிகரெட்டை அவர் அப்படி ரசித்து ரசித்து உறிஞ்சி ஊதுவார். தன் தந்தை முன்னால் வெறும் கையுடன் நின்றால் என்ன ஆகும் என்ற பயத்தில் மூர்த்திக்கு கண் கலங்கியது.

***

திங்கள் கிழமை மாலை கைபேசியைப் பார்த்து புதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தபோது பொருள் ஒன்று இல்லை என்று அவசரமாய் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு சென்று திரும்பியவர் மீதி சில்லறையை தொலைக்காட்சிப் பெட்டியிடம்   வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் ஆதவனின் தாயார். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும், விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும், சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும் போன்ற தாயாரின் கெடுபிடிகள் வீட்டில் அதிகம். அலுவலகத்திலிருந்து அவன் தந்தை வரும் வரையில் தாயாருடைய அட்டவணையின் அதிகாரத்திற்கு அடி பணிந்து தான் ஆக வேண்டும் ஆதவனும் அவன் தங்கையும். தாயார் கவனித்து விடுவாரோ என்ற பயத்துடன் ஆதவன் தன் தங்கையுடன் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியிடம் இருக்கும் 20 ரூபாய் பணத்தாளைப் பார்த்தான். பார்த்ததும் ஒரு யோசனை உதித்தது. வருவதும் போவதுமாய் இருந்த தாயார் அந்த பணத்தை கவனித்தது போல தெரியவில்லை. அவன் எடுத்து பையில் வைத்துக் கொண்டான். அடுத்த நாள் தங்கையிடம் ஐந்து ரூபாய், நண்பனிடம்  ஐந்து ரூபாய், எதிர்பாராமல் மிதித்த அந்த மாணவியிடம் ஐந்து ரூபாய் வாங்கி 20 ரூபாயுடன் சேர்த்து பள்ளிக்கு அருகில் இருக்கும் கடையில் புதிய பெட்டியை வாங்கி விட்டான் ஆதவன். கெடுவாய்ப்பாக அன்று மாலையே அவன் தாயார் பார்த்து, “ஏது” என்று கேட்க முன்யோசனை இல்லாமல் புதிய பெட்டியை வாங்கிய ஆதவன் தாயார் கேட்டதும் யோசிக்காமல், “தாத்தா வாங்கி கொடுத்தாரு” என்று சொல்லிவிட்டான். அந்த வாரம் தான் அவனும் அவன் தங்கையும் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று திரும்பியிருந்தார்கள். தாயாரும் அதனால் நம்பி நகர்ந்து விட்டார்.

***

கால் சட்டைப் பையில் கையை விட்டபடி சாலையின் இரு பக்கங்களும் பார்த்தபடி வாடிய முகத்துடன் வீடு நோக்கி நடந்தான் மூர்த்தி. நான்காவது தெருவுக்கும் மூன்றாவது தெருவுக்கும் இடைப்பட்ட  பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோயிலில் இருந்து மணி சப்தம் கேட்டது. திரும்பி பார்த்தான் மனித நடமாட்டம் எதுமில்லை, ஒருவர் மட்டும் கோயிலுக்கு வெளியே அமர்ந்து இருந்தார். சட்டென்று அந்த கோயில் நோக்கி நடந்தான். அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது இருக்கக்கூடிய கண் தெரியாத பெண்ணை சற்று தூரத்தில் நின்று கவனித்தான். வெயிலிலேயே அமர்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் இருந்த ஈயத் தட்டில் சில்லறைகள் இருந்தன. சுற்று முற்றும் பார்த்தான். மனித நடமாட்டம் இல்லை. சத்தமில்லாமல் நடக்க முயன்றான் ஆனால் சத்தம் கேட்டது. அந்த பெண்ணின் பக்கம் விறுவிறுவென  நடந்து சென்ற மூர்த்தி, நடந்த படியே குனிந்து தட்டத்திலிருந்த சில்லறைகளை ஒரு கையால் எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்தான். தட்டத்தில்  இருந்து சில்லறைகளை எடுக்கும்போது சில்லறைகளின் சப்தம் கேட்டது. அப்பெண் நினைத்திருந்தால் அவன் கையைப் பிடித்து இருக்கலாம் அல்லது காலையாவது பிடித்திருக்கலாம் ஆனால் அவர் அசையாமல் அமர்ந்து இருந்தார், சிறு சப்தம் கூட போடவில்லை. வேகத்தில் சில்லறைகளை அள்ளிக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு திரும்பி பார்த்தான். அந்த பெண்மணி ஆடாமல் அசையாமல் அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார். அவர் கண்களுக்கு அவன் தெரியவில்லை ஆனால் அவன் அவரின் பணத்தை திருடியதும், அதை எடுத்துக் கொண்டு இரண்டடி எடுத்து வைத்துவிட்டு நிற்பதும் அவருக்கு நன்றாக தெரிந்தது. அவனை பார்த்துக் கொண்டிருந்த அந்த முகமும், செயலிழந்த, வெண்மைப் பூத்திருந்த அந்த கண்களும், அந்த அமைதியும் என்ன சொல்லியது?

 13 ரூபாய் மூர்த்தியின் கையில் இருந்தது. ஒரு சிகரெட் வாங்கியது போக மீதம் இருந்த 3 ரூபாயை வேறொரு நாள் திரும்பி வந்து அந்த ஈயத்தட்டில் போட்டு விடலாம் என்று எண்ணினான். அன்று அந்த சிகரெட்டை கொடுத்தும் அவனக்கு ஒரு அரை விழுந்தது, தாமதமாய் வந்ததற்கு.

***

பணி முடிந்து இரவு வீடு திரும்பினார் ஆதவனின் தந்தை. சுவரில் சாய்ந்து நின்றபடி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான் ஆதவன். கண்ணைக் கசக்கி கொண்டு நின்று கொண்டிருந்த மகளைப் பார்த்து “என்னாச்சு” என்பது போல தலையசைத்தார். மகள் சமையலறையை நோக்கி கைக்காட்டினாள். சமையலறைக்குள் சென்றார், அடுப்பில் தோசை திருப்பியை நெருப்பில் காய்ச்சி பழுக்க வைத்துக் கொண்டு இருந்தார் ஆதவனின் தாயார். வேகமாய் சென்று அடுப்பை அணைத்துவிட்டு, தோசை திருப்பியை பிடுங்கி தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டுவிட்டு, “உனக்கு என்ன பைத்தியமா… இப்போ என்ன ஆச்சு”, என்றார்.

 ஆதவனின் தாயார், “ஸ்கூல்ல பென்சில் பாக்ஸ உடைச்சுட்டான். நா கடைக்கு போயிட்டு வந்து சில்லறைய டிவி கிட்ட வெச்சிருந்தேன். எங்க வச்சோம்? காச காணமேனு வீட்டையே நா தேடிக்கிட்டு இருக்குறேன். நேத்து சாயங்காலம் புது பாக்ஸ பார்த்துட்டு ஏதுன்னு கேட்டேன் தாத்தா வாங்கி கொடுத்தாருன்னு சொன்னான். இன்னிக்கு எங்க அப்பா கிட்ட போன்ல பேசும்போது கேக்குறேன்… இல்லன்னு சொல்றாரு. அப்புறம் இவளை கூப்பிட்டு என்ன ஏதுன்னு மிரட்டி கேட்ட வாட்டி தான் சொல்றா. அண்ணனும் தங்கச்சியும் கூட்டு களவானிங்க தான். எல்லா தெரிஞ்சு வாய் திறக்கவே இல்ல இவ. டிவி கிட்ட வெச்சிருந்த காச திருடி இருக்குறான், அந்த காசுல தான் புது பாக்ஸ் வாங்கி இருக்குறான். தாத்தா வாங்கி கொடுத்தாரு னு பொய் வேற  சொல்றான். இவனுக்கு சூடு வெக்காம மரியாதை பண்ண சொல்றீங்களா? நான் பைத்தியமா”, என்றார் காட்டுங்கோவதுடன்.

 மகனிடம் சென்று கண்ணீரை துடைத்தபடி, ” சொல்லிட்டு எடுத்திருக்கலாம்ல “, என்றார்.

 “அம்மா… திட்…டு  வாங்…கன்…னு தான்ப்…பா   இப்படி  ப…ண்ண. இனிமே பண்ண மாட்டே…ன்”  என்று அழுது கொண்டே திக்கி திக்கி சொன்னான் ஆதவன். சில நிமிட அமைதிக்கு பின் ஆதவன் படுக்கையில் உறங்கினான், அவன் தங்கையும் உறங்கிப் போனாள். இருவரும் சாப்பிடவேயில்லை. கணவனும் மனைவியும் வாசற்ப்படியில் வந்து அமர்ந்தார்கள். மனைவியின் கையைப் பற்றி கொண்டு,

“மொத திருட்டு எப்பவுமே பசினால நடக்கும் இல்லனா பயத்துனால நடக்கும். உடைஞ்சிடுச்சுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவியோனு பயந்து தான் காசு எடுத்து இருக்கான். பயம் இல்லன்னா உன்கிட்ட தைரியமா சொல்லி இருப்பான் திருட வேண்டிய அவசியம் அவனுக்கு வந்திருக்காது. யாருதான் இங்க தப்பு பண்ணல எல்லாரும் தப்பு பண்ணவங்கதான்”, என்று சொன்னவர் அப்படியே பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ ஒரு சிந்தனைக்குள் சென்றவராய் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார். பின் விட்டத்தை பார்த்தபடி, “குழந்தைகளுக்கு சில விஷயங்களை அன்பா சொல்லணும், சில விஷயங்கள அடிச்சு சொல்லணும். அடிக்காம வளத்தாலும் பிரச்சனை தான் அடிச்சு அடிச்சு வளத்தாலும் பிரச்சினை தான்”. பெருமூச்செறிந்து விட்டு, ” பொறுமையா இரு… பயத்துக்கும் ஒரு அளவு இருக்கு, பாசத்துக்கும் ஒரு அளவு இருக்கு. எல்லா அந்த அந்த அளவுக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் நல்லது”, என்று சொன்னார். அதை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்தார் ஆதவனின் தாயார். கைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. மனைவி எழுந்து உள்ளே வந்து எடுத்தார்,  

“ஹலோ”

“மூர்த்தி சார் இருக்காங்களா”

“இருங்க கொடுக்குறேன்”, என்று சொல்லிவிட்டு தன் கணவரான மூர்த்தியை நோக்கி நடந்தார் ஆதவனின் தாயார்.

***  

அ. மனோஜ்குமார் – சேலம் மாவட்டம் கஞ்சமலை அடிவாரத்தில் இருக்கும் பொந்திலியன் குட்டை எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு நெசவுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மின்னஞ்சல்: writingbirdmanoj@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here