Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்திகைப்பின் பெருங்கடல்

திகைப்பின் பெருங்கடல்

தென்றல் சிவக்குமார்

ணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத் தீவில் ஓர் அணியைப் போல நிறுத்தி நீங்கியபோது மணிமேகலை ஒரு கணம் திகைத்திருக்கக் கூடும். மேகலையின் செய்யுள் மேற்கோளுடன் தொடங்கும் வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ நாவலில் திகைப்பு அலையலையாக எழுந்து வீசுகிறது.

செய்யுள் முடிந்து நாவலைத் தொடங்கி வைக்கும் முதற்சொல் ஷோபா. சின்னதொரு சுருக்கென்ற உணர்வுடனே எப்போதும் இந்தப் பெயரை அணுக முடிகிறது, எதோ ஓர் அபிமானம், அன்பென்று சொல்லத்தக்க ஒரு மனநிலை, இந்தப் பெயருக்குரியவளின் குணம் தெரியுமே என்கிறாற் போல் ஒரு நினைப்பு.

தன் தேநீரில் எவ்வளவு கசப்பு இருக்கலாம் என்ற முடிவைத் தானே எடுக்கும் ஷோபாவின் சொற்களற்ற வாழ்க்கை, அவள் வீட்டு கேட்டின் மீது ஓயாது விழுந்துகொண்டிருக்கும் ரோஸ் நிறக் கடிதாசிப் பூக்கள் என்று இந்தச் சித்திரம் தொடங்குவதே ஆழமான கோடுகளால்தான். 

பாதுகாப்பு, காவல் என்ற சொற்களின் அர்த்தங்களும் அனர்த்தங்களும் மணிபல்லவம் நெடுக சொல்லாமல் சொல்லப்படுகின்றன. 

புத்தருக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவை என்று கடற்படை நினைத்துக்கொண்டது முதலே ஊர் சனங்கள் தங்கள் முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று” – முதல் அத்தியாயத்தின் சில வரிகள் இவை. நீண்ட பிரதான வீதி, பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுக்கப்படும்போது எவ்வளவோ தொலைவு சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதைப் பற்றிக்கூட யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாத, எளிய, ஊர் சனங்கள்.

அதற்கு முன்பாக, காதலர்கள் ஓரிரவை வெளியில் கழித்துவிட்டால் அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துவிடும் எளிய ஊர் சனங்கள், அறிவிக்கப்படாத அழகுராணிப் போட்டிகளை அரவணைத்துச் செல்லும் எளிய ஊர் சனங்களாக இருந்தவர்கள், இப்போது வந்தடைந்திருக்கும் எளிமை எத்தனை வித்தியாசமானது.

சுவாமிநாதனின் சிங்கள அறியாமையும், அறிந்துகொள்ளும் முயற்சிகளும், கொத்தலாவவின் ஷோபா பற்றிய அறிதல் தனக்கு உண்டு என்று காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சியும் வந்து சேரும் இடம், எத்தனை நுட்பமான ஆனால் அழுத்தமான காட்சி. மஞ்சள் ரோஜா நீண்டிருக்கும் பனையோலைத் தொப்பி, காதலின் சமாதானக் கிரீடம் எனும் இடத்திலிருந்து முட்கிரீடமாக மாறுவதன் கனம் கொடியது. தொப்பியைத் தலையில் சுமந்திருக்கும் சுவாமிநாதனின் கண்களில் பண்டார கண்ட பிசாசு எது? பந்துல தேரர் எந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காக்கவென்று சுவாமிநாதனுக்குக் கையில் வெள்ளை நூலைக் கட்டினார்?

அறிந்த கதைகள்தான் என்று எத்தனை கதைகளைக் கடந்துவிடுகிறோம்? சந்திரிகாவின் கதை தெரியும்தானே என்று சொல்லிக்கொண்டு எளிதாகத் தவிர்க்கலாம். ஆனால், ஷோபா சாய்ந்துகொள்ளும் தனிமையின் மரக்கதிரைக்கும், சந்திரிகா ஓய்ந்து சரியும், சிறிமாவுக்கு அருகிலிருக்கும் மரக்கதிரைக்குமான ஒப்பீடு தவிர்க்க முடியாதது.

இன்னும் சொல்லப் போனால், கைகளைப் பரப்பி ஷோபா வீட்டுக்கு வெளியே விழுந்துகிடந்த பண்டாரவின் சைக்கிளுக்கும் ஷோபாவின் சைக்கிளுக்கும் இடையிலும், அவை சுமந்து வரும் மீன்களுக்கு இடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு, அல்லவா?

இலங்கைக்கு நயினாத் தீவு குட்டித் தீவு, உலகுக்கு இலங்கையே குட்டித் தீவுதான் என்று சொல்லப்படும்போது, பெருங்கடலுக்கு இவ்வுலகே குட்டித் தீவுதான் என்பது சொல்லாமலே விளங்கிவிடுகிறது. 

வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’ வாசித்தபோது, ‘இத்தனை பகடியை என்ன செய்ய?’ என்கிற திகைப்பு ஏற்பட்டது. பகடி கிட்டத்தட்ட இல்லை என்றாலும், புன்னகைத்துவிட்டதும் ஏற்படும் குற்ற உணர்வு இல்லை என்றாலும், ஓர் ஈழத்து நூல் ஏற்படுத்தும் தொந்தரவை, திகைப்பை ‘மணிபல்லவம்’ ஆழ்ந்து நேர்த்துகிறது.

சித்தானந்தன், தான் ஒரு கொலைக்கான சாட்சி என்பதையும், அதனால் தனக்கு எதுவும் நேரலாம் என்பதையும் புரிதுகொள்ளும் அதே நேரத்தில், உண்மையில் அந்தக் கொலையைப் பற்றித் தன் அறிவுக்கு எதுவுமே எட்டவில்லை என்பதை நினைத்துக் குழம்பும் இடம் இந்த நாவலுக்கு மிக முக்கியமான பார்வையை அளிக்கிறது. போலவே, இராணுவப் பயிற்சியைப் பற்றி நினைக்கும் பண்டார, ‘அவ்வளவு பயிற்சி போதுமானதா என்பதைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கான சிந்தனை வருவதற்கும் அங்கு எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை,’ என்றே நினைக்கிறான். இராணுவமும், இயக்கமும் யாரை யாராக மாற்றுகின்றன என்பதற்கான திறப்பு இங்கிருக்கிறது.

அழகன் விஜய குமாரதுங்க நடித்த தமிழ்த்திரைப்படம் என்பதை வாசித்தவுடன் பாடல்கள் நினைவுக்கு வந்தன. படத்தின் பெயரை யோசித்துக் கண்டடைகையில் நேர்ந்ததும் அதுவே: ‘நங்கூரம்.’ சரிதான்.

ஒருபோதும் போர்க்களம் போகவேண்டிய அவசியம் இல்லாத ஜனாதிபதிதான் பண்டாரவை போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார்.” இந்த விதிக்கு ஆட்படாத போர்க்களம் ஏது! 

ஷோபா என்பவள் ஒரே ஒருத்தி அல்ல; பண்டார என்பவன் ஒரே ஒரு ‘சின்னவன்’ அல்ல; படகு ஆடிக்கொண்டிருக்க, இடமும் வலமுமாக உயிரற்று உருண்ட சிறுமகவு ஷோபா ஒருத்தி ஈன்ற மகவு மட்டுமல்ல. எந்த எண்ணால் பெருக்கிச் சொல்வது என்று மட்டுமே தெரியாத கணக்கு அது, நிச்சயமாக இராணுவம் எழுதிய கணக்கும் அல்ல.

ஒரு காவல்கோபுரக் காவலனின் நிழல் நீரில் விழ, அவன்(அதன்) மார்பில், போர்க்களத்துடன் தொடர்பற்ற பெண்ணும், குழந்தையும் பிணங்களாக விழும் காட்சி, காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை வரைந்திருக்கிறது, அந்தப் பக்கத்தைப் புரட்டவும், அடுத்த பக்கத்தை வாசிக்கவும் முடிகிறது என்பதே ஒரு பெருந்திகைப்பாகத்தான் இருக்கிறது.

இந்த நாவலுக்குள், பரபரக்கும் ஓர் இளைஞன் (பண்டார) இருக்கிறான், அவனுக்குள் இயல்பான உற்சாகம் இருக்கிறது, கதைகளைக் கட்டும் ஆர்வம் இருக்கிறது, நசுக்கப்படுபவனோடு தோழமை கொண்டாட அவனால் முடிகிறது, சட்டென்று எதிர்பாராமல் எதையோ செய்துவிடவும் இயல்கிறது. இந்தச் சித்திரத்தை மட்டும் விரித்துத் தீட்டும்படி, மேலிருந்து தொங்கும் பச்சைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அவன் விமானத்தில் பயணிப்பதில் தொடங்கி ஏனைய எதுவும் நடவாதபடி இவ்வுலகம் இருந்துவிடாதா என்ற ஏக்கம், மணிபல்லவத்தை வாசித்ததும் மனமெங்கும் பரவுகிறது. 

வாசு முருகவேல் இந்த நாவலைத் தன் தீவை நான்கு பக்கமும் சூழ்ந்து கிடக்கும் கடலில் கலந்திருக்கும் அனைவரின் செந்நீருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார், நேர்த்தியான சமர்ப்பணம். 

***

தென்றல் சிவக்குமார்  – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்’ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல் முகவரி : thendralsivakumar@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here