ஆர்.கே.ஜி
நான் புனைவுகளின் உலகத்தில் வாழ்பவன் என்பதால், அ-புனைவு ஆக்கங்களை என் புனைவு உலகத்திற்குள் பொருத்தும் நோக்கில் மட்டுமே பெரும்பாலும் அணுகுவேன். தீவிரமான அ-புனைவு நூல்கள், என்னைப்போன்ற ஒருவனை, யதார்த்தத்திலிருந்து விடுபட்டு கற்பனை உலகிற்குள் நுழைய உதவுகின்றன. அந்த வகையில் நான் வாசித்து மகிழ்ந்த நூல், வெங்கட் அவர்கள் எழுதிய ‘ஒளியிலிருந்து இருளுக்கு.’
இப்புத்தகத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, வெங்கட் அவர்கள் குறித்து ஒரு சிறிய அறிமுகம்.
வெங்கட் அறிவியலை மிகுந்த நம்பிக்கையோடு அணுகுபவர். தனியார் நிறுவனத்தில் தலைமை அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றுவதோடு, கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். பல வருடங்களாக அதிக தம்மட்டம் இல்லாமல் தமிழ் படைப்புகளைத் தொடர்ந்து வரும் வெங்கட், சமீபத்தில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (Tamil Literary Garden) தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
ஒளியிலிருந்து இருளுக்கு நூலை வாசிக்கும் காலத்தில் தான், ஆண்டி வியர் (Andy Weir) நாவலின் தழுவலானப் ‘பிராஜெக்ட் ஹைல் மேரி’ (Project Hail Mary) திரைப்படத்தைக் காண நேர்ந்தது.
திரைப்படத்தின் களமும், அறிவியல் தர்க்கங்களுக்கு உண்மையாகப் படம் அமையப் படைப்பாளர்கள் எடுத்துக் கொண்ட முனைப்பும் வியப்பைத் தரக் கூடியது. ஆண்டி வியர் அத்திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான, வேற்று கிரக வாசி ‘ராக்கி’ (Rocky) உருவானது குறித்து நியூ யார்க் டைம்ஸ் இதழில் பகிர்ந்தவை:
இதழாளர்: ராக்கி என்ற கதாபாத்திரத்தை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பல வாசகர்கள் விரும்பினர். நீங்கள் ஒரு புதிய உயிரின வகையை உருவாக்கியுள்ளீர்கள். அதற்கான மொழி, தகவல் தொடர்பு முறை, உணவு உட்கொள்ளும் விதம், உறக்கம், கழிவு வெளியேற்றம் எனப் பல்வேறு கருத்துப்படிவங்களை நீங்கள் கற்பனை செய்து வடிவமைத்ததை நாங்கள் புத்தகம் வாசித்து அறிந்து கொண்டோம்.
ஆண்டி வியர்: எனக்கு ‘ஊக அடிப்படையிலான உயிரியல்’ (Speculative biology) என்றால் பிடிக்கும். அதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட தனி ‘ரெடிட்’ (Reddit) பக்கங்கள் உள்ளன. அத்துறை மிகவும் வசீகரமானமானது.
அந்த உயிரினத்தின் கிரகத்தைப் பொறுத்தவரை, நான் நிஜத்தில் உள்ள ஒரு புறக்கோளைத் (Exoplanet) தேர்ந்தெடுத்தேன். அது தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கு திரவ நிலையில் நீர் எப்படி இருக்க முடியும் என்பதை விளக்க வேண்டியிருந்தது.
அங்கு அதிக வெப்பம் இருக்கும்; ஆனால் வளிமண்டல அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், நீரை மிக அதிக வெப்பநிலையிலும் திரவ நிலையில் வைத்திருக்க முடியும். சரி, அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றால், அங்கு மிகவும் அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது என்று அர்த்தம். அடர்த்தியான வளிமண்டலம் இருந்தால், ஒளி மேற்பரப்பு வரை முழுமையாகச் சென்றடையாமல் போகலாம். அப்படியென்றால், பார்வைத் திறன் போன்றவற்றை அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சியில் பெற வேண்டிய அவசியமும் இருக்காது.
இப்படிப் படிப்படியாக அந்த உயிரினத்தை நான் உருவாக்கினேன். நான் குறிப்பாக இருந்தது, அந்த கதாப்பாத்திரம் முற்றிலும் வேற்றுலகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். ‘ஸ்டார் வார்ஸ்’ (Star Wars) அல்லது ‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) போன்ற படைப்புகளில் வருவது போல, வெறும் உடை அணிந்த மனிதனைப் போல இருக்கும் வேற்றுலக உயிரினமாக அது இருக்க நான் விரும்பவில்லை. அந்தத் தொடர்களை நான் குறை கூறவில்லை; அவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அறிவியல் புனைகதையை யதார்த்தமான கண்ணோட்டத்தில் அணுகும்போது, ஒரு வேற்றுலக உயிரினம் நமது சூழலில் வசதியாக இருக்க முடியும் என்றோ அல்லது அதற்கு நேர்மாறாக இயங்க முடியும் என்றோ நான் நம்பவில்லை.
இப்படி, கடும் தர்க்கங்களின் மூலம், ஆண்டி வியர் தனக்கானக் கற்பனை உலகைக் கண்டடைகிறார். இன்றைய நவீன அறிவியல் புனைகதைகள் பெரும்பாலும், இப்படி அறிவியலை தர்க்கத்தின் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அறிவியல் புனைவு போக, கற்பனை (Fantasy), அழிவுகாலத்திற்குப் பிந்திய புனைவு (Apocalyptic), திகில் புனைவு (Horror), மாற்று வரலாறு (Alternate history), மாய யதார்த்தவாதம் (Magical realism) போன்ற ஊகப் புனைவு (Speculative fiction) நூல்களுக்கும், அ-புனைவு ஒரு குடையாக அமையலாம்.
என் நோக்கில், வெங்கட் அவர்களின் அறிவியல் கட்டுரைகள் நம் தமிழ் உலகில் அ-புனைவு, புனைவை சந்திக்கும் சாத்தியம் கொண்டவையாகப் பார்க்கிறேன்.
இப் புத்தகம் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், கீழ்க்கண்ட தலைப்புகள் என் சிந்தனைப் போக்கை விரிவுபடுத்த உதவின.
- இண்டிகோ ஒரு நிறத்தின் வரலாறு
- இஸ்லாமியக் கலைகளில் உயர்கணிதக் கோட்பாடுகள்
- ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர்வீரர்கள்
குறிப்பாக, இன்றைய இன்றைய போர் நுட்பம் குறித்த கட்டுரை.
“போரிடச் செல்வது என்பதன் நடைமுறையும் இப்பொழுது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. தன் வீட்டிலிருந்து காலை உணவு அருந்தி விட்டுக் காரில் ஏறிக் குழந்தைகளைப் பள்ளியில் இறக்கி விட்டு குளிரூட்டப்பட்ட அறையில் கணினித் திரையின் முன் அமர்ந்து பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் குட்டி விமானத்தைத் தொலைவில் இயக்குவது போர்வீரனின் தினசரி வேலை என்று ஆகியிருக்கிறது. இயற்கையின் நிர்பந்தங்கள் கலைத்துப் போடப்படுகின்றன.
2025 ஜூன் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இரானின் மீது ‘ஆபரேஷன் மிட்னயிட் ஹாம்மர்’ (Operation Midnight Hammer) என்று பெயரிடப்பட்ட தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில், இரானில் பெரும்பாலும் பறவிகளாலான நள்ளிரவுத் தாக்குதல்கள் நடக்கின்றன. அமெரிக்கப் பகலில், குளுகுளு அறைக்குள் இருந்து கொண்டு, இடது கையால் கோக் அருந்தியவாறு, வலது கை விசைப்பலகையை இயக்க குண்டு பொழியும் சாத்தியம் மெய்ப்படுகிறது. எட்டுமணி நேரப் போருக்குப் பின் மீண்டும் காரேறி, வயலின் பாடம் முடித்த குழந்தையைத் திரும்ப அழைத்து வீடு வந்து, மனைவியுடன் உணவருந்திப் பின்னிரவில் களித்திருப்பது எந்திரன் மூலம் போரை நடத்தும் அன்றாட வாழ்வாகியிருக்கிறது.”
இன்றைய நவீனப் போர்கள் போர்க்களத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, திரைகளுக்கு முன்னால் நடத்தப்படுவதால், போருக்குப் பிந்தைய மன உளைச்சல் (PTSD) போன்ற சவால்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன. ஒரு ஆயுத மோதலுக்குத் தயாராவதாலோ அல்லது அதில் வாழ்வதாலோ ஏற்படக் கூடிய உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. கவலைக்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ இடமில்லை.
மேற்பரப்பில், இது ஒரு பெரிய முன்னேற்றம் போல் தோன்றினாலும், இது உண்மையில் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பார்வையைக் குருடாக்குகிறது. மனிதர்கள், எந்த வருத்தமும் இன்றிச் சுடப்படக்கூடிய கருப்பு-வெள்ளைப் புள்ளிகளாக மாறுகிறார்கள். போர் உருவாக்கும் கோரத்தை, இனி எந்த குருசேத்திரக் களத்திலும், எந்தப் பார்த்தனும் பார்க்கப் போவதில்லை.
இந்த நெருக்கடிகளை அடையாளம் கண்டு ஒரு எழுத்தாளன் ஒரு மாற்று இருத்தலியல் நாவலை உருவாக்கலாம். கணினி வழியாக அனைத்து உணர்வுகளிலிருந்தும் தள்ளிப் போகும், எந்த நேரடி உணர்வும் தொட முடியாத ஒரு மனிதனின் வெறுமையை விரிவாக எழுதலாம். இது போல புனைவிற்கானப் பல சாத்தியங்களை இந்நூலில் எளிமையாகக் கண்டடைய முடிந்தது.
அனைத்தையும் புறம்தள்ளி, மனிதனின் ஒவ்வொரு தேடலுக்கும் அறிவியல் விடை என்று கூறி அறிவியலை மதமாக்கும் (Scientology) பொது மனப்பான்மையை நான் தனிப்பட்ட முறையில் நம்புவதில்லை. அறிவியல், இலக்கியம், தத்துவம், பயணம் ஆகிய அனைத்தும் உண்மையை நோக்கிச் செல்வதற்கான வெவ்வேறு கருவிகள்.
என் அளவில், இவ்வகை நூலுக்கான இடம், எவ்வளவுப் பேசப்பட்டும் ஒதுங்கி நிற்கும் வாழ்வின் முழுமையானப் பொருள் எது என்கிறப் போதாமை தான். அறிவியலின் வழியாக சில இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள, இந்நூல் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
திறவுகளைத் தந்த வெங்கட் அவர்களுக்கு என் நன்றிகள். வாழ்த்துக்கள் ஒரு சகப் பயணியாக.
***
ஆர். கே. ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்’, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. இவர் மொழிபெயர்த்த ‘கிருஷ்ணர்கள்’, கறுப்பினக் கவிஞர்களின் கவிதை தொகுப்பு, 2026ல் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: ramkarthiksgm@gmail.com

