கௌரி ப்ரியா
1) தழும்புகளின் படல்
நீள் துயில் வேண்டி
குளிகைகளை விழுங்கியவள்
அதிர்ந்ததிர்ந்து அடங்கிய
நிலம் போலக் கிடக்கிறாய்
குலைந்த இருப்புப் பாதையின்
குறுக்குக் கட்டைகளென
முன்கையில் அடுக்கடுக்காய்
சுயம் சிதைக்க முற்பட்ட
தயக்கத்தின் கீறல்கள்
நார் முகை அணுக்கள்
இழைத்திழைத்து நெய்திருக்கும்
தழும்புகளின் வேலி
எதனை அஞ்சி, பெண்ணே..
எழுந்து வருவாயா?
படல் மேல் கொடிகளாய்ப்
படர்ந்து நீவ
நேயத்தின் விரல்கள் நீளுமந்நாளில்
பூக்களை அதன் மேல்
பச்சை குத்திக் கொள்வாயா?
2) சுயம்பு
கதியின்மை என்பதொரு தீப்பொறி.
அந்நியமாய்க் கருதும் பார்வையொன்றில் உதிக்கும்
சிறு பொறி.
கதியின்மை என்பது
வளரும் பிழம்பு.
அளக்கும் பார்வைகளில்
அழுந்தி அழுந்தி
அடிக்கடல் சென்றேகும் பிழம்பு.
கதியற்ற தனியள்
ஓர் எரிமலை.
அழுத்தம் விடுத்து
கடல் பிளந்து
மேலெழும் எரிமலை.
கதியற்றுக் குளிர்ந்த எரிமலை ஒரு தீவு.
நடுக்கடலில்
நடுங்கி மாயும் தனித்தீவு.
என்றாலும் மீண்டு
சூரியனை மோகிக்கும் தீவு.
கடலிடைத் தீவெல்லாம் சுயம்பு.
கல்லென்போர்
கல் என்க
கடவுளென்போர்
கடவுள் என்க..
கடலிடைத் தீவெல்லாம் காதற்ற சுயம்பு.
3) தூமலர்
அறுவை சிகிச்சையில்
முலை அகற்றப் பட்டவளை
அனுமதி பெற்றே
நலன் விசாரிக்கச் செல்லுங்கள்.
சென்றே விட்டீர் எனில்
போர்த்திய விலாவிலிருந்து
நீளும் குழாய் வழியே
நெகிழிப் பைக்குள் சேகரமாகும்
அவளது குருதியை வெறிக்காதிருங்கள்
தனது தாய்ப்பால் சுரப்பின் போதாமை ஒருநாள்
கூடத்துப்
பேசுபொருள் ஆனதை..
பேருந்து நெரிசலில் ஒரு கை
ரவிக்கையின் மேல் படர்ந்ததை..
இன்னும் எதையெதையோ
அவளுக்கு நினைவூட்டலாம்
அனுமதியற்ற உங்கள் வருகை.
உணவு சுமக்கும்
தூக்குச் சட்டிகள்
காப்பீடு குறித்த உபதேசங்கள் எதையும் கேட்பதில்லை அவள்
தற்காலிகக் கரிசனங்களை
முழக்கும் பறைகள்
அறுபட்ட தனது
மார்புத் தோலால் ஆனதாய்
உறக்கத்திலும் அதிர்கிறாள்.
அணுகிச் சென்று
முகர வேண்டாம்.
கானகத்துச் சிறுவெண்மலராய்
அவள்
சூடியிருப்பது
எவருடனும் பகிர விரும்பாத
வேதனையின்
தூய்மை.
***
கௌரி ப்ரியா : சென்னையில் வசிக்கிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். ஆழியின் மகரந்தம் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மின்னஞ்சல்: ggowripriya07@yahoo.co.in
