Home Blog Page 102

நறுமுகை தேவி கவிதைகள்

2

1.

 

 

 

 

 

 

மாநகரும் 4ரூபாய் நாணயங்களும்

 
மாதக் கடைசி இன்னும் சம்பளம் ஆகவில்லை
அலுவலகம் சென்றேயாக வேண்டும்.
கையில் இருப்பதோ 4 ரூபாய் நாணயங்கள்
புறப்பட்டு வெளியே வருகையில்,
பிசுபிசுப்பாய் உணர்ந்தேன்.
அவசரமாய் நாப்கின் தேடுகையில்,
தீர்ந்து போயிருந்தது.
அவசரத்திற்கு பழைய துணியைத் தேடிக்
கிழித்தேன்.

லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில்,
நின்றிருந்த போது பழக்கமில்லாததால்
உள்ளே நழுவுவது போல சிக்கலாயிற்று.
எதிரேயும்
ஒரு வாலிபன் என்னை சைட் அடித்துக்
கொண்டிருந்ததைப் பொருட்படுத்தக் கூடவில்லை.

வந்த பேருந்தெல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகள்.
4ரூபாய்க்கும் அதிகக் கட்டணம்,
சொகுசுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.
வேண்டுமென்றே அவற்றைத் தவற விட்டேன்
அருகில் நின்றிருந்தவர்கள் விசித்திரமாகப் பார்க்கத் துவங்கினர்

உள்ளில் நழுவல் அதிகரித்ததை பீதியுடன் சமாளித்தேன்
அனத்தியபடி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி விட்டேன்.
அத்திப்பாளையம் பிரிவுக்குப் பயணச்சீட்டு எடுத்துக்
கிடைத்த இருக்கையில் அமர்ந்தாயிற்று.
செல்ல வேண்டிய பாதையில் இருந்து
சின்னவேடம்பட்டிச் சாலையில் வண்டி திரும்பியது.
அதிர்ந்தேன்..நடத்துனரை அழைத்து
அத்திப்பாளையம் என்று பயணச்சீட்டெடுக்கையில்
அந்த வழியில் போகாதென
ஏன் சொல்லவில்லை? என்று சீறினேன்
அவரோ பேந்தப்பேந்த விழித்தார்
வண்டியில் இருந்து இறங்கி நின்றேன்

கையில் காசில்லை
உள்ளே வைத்திருந்த கந்தலோ
படக்கென கழன்று விழுந்தது
என் தன்னம்பிக்கையும் கூட…..

——————————————————————————————–
2.

 

 

 

 

 

 

 

திரும்புதல் இல்லாத ’திருப்புதல்’

———————————————————-

உங்களுக்கும் எனக்குமிடையே தான் எத்துனை
திருப்புதல் தேர்வுகள்?
முதலாம் திருப்புதல் தேர்வில்,
எனக்குப் பாடங்கள் புரியவில்லை,
அடிக்கடி கதவோரமாய் நிறுத்தி
சோதனைகளுக்குட்படுத்தப்பட்டேன்.
இறுதியில்,
விசும்புதல்களுக்கு
மதிப்பெண் இல்லையென்று
நான் தோற்கடிக்கப்பட்டேன்.

இரண்டாம் திருப்புதல் தேர்வில்
உங்கள் பச்சை நிறப் பொத்தான்
கண்டுகொள்ளப்படாமல்
காயடிக்கப் பட்டதில்
நீங்களாக உங்களை என்னிடம்
ஒப்புக் கொடுத்தீர்கள்.

இது மூன்றாம் திருப்புதல் தேர்வு.
மறைக்கப்பட்ட பாடங்களில் இருந்தும்,
வழங்கப்படாத விடைகளிலிருந்தும்,
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்….
இப்போது என்னிடம்
கேள்வித் தாள்கள் மட்டுமே இருக்கின்றன.
விடைத் தாள்கள் வழங்கப்படவில்லை,
நீங்களோ எனக்கு மதிப்பெண் வழங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.

கடைசியில்,
சிவப்பு நிற மையில் அடர்த்தியாய்
எழுதுகிறீர்கள் ”அனைத்துப் பாடங்களிலும் கவனம் தேவை” என்று….
இது திருப்புதல் தேர்வா?
திரும்புதல் தேர்வா?

–

நறுமுகை தேவி

“அந்தர மீன்” – விமர்சனம்

0

தேவேந்திர பூபதியின் “அந்தர மீன்” – விமர்சனம்

 (யாவரும்.காம் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் வாசித்த ஜீவ கரிகாலனின் கட்டுரை)

 

இத்தொகுப்பினை வாசிக்கையில் எந்தப் பள்ளத்தாக்கிலும் வீழ்ந்துவிடாமல் பயணம் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தாலும், நான் கடல் மட்டத்தின் கீழே இருக்கும் உலகில் தான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்பதை தாமதமாகத் தான் உணர்ந்தேன், இப்போது எனக்கு மேலே தான் அந்த அந்தர மீன் தெரிகிறது. மெதுவாய் கவிஞரின் இத்தொகுப்பில் பிரதானமாக நான் காண்பதெல்லாம் ஒரு தனிமைத் துயரின் அகயிருப்பும், அறிவிற்கும் புறத்தே அல்லது கடந்திருக்கும் தீராத தேடல்களுமாக இரு கோடுகளாய் ஒரு தண்டவாளம் செல்கிறது. இவற்றை இணைக்கும் கற்களாக காதல் நினைவுகள், முத்த உஷ்னங்கள், பார்த்துச் சிலிர்க்கும் பயணங்கள், இயற்கையில் மயங்கும் புவியீர்ப்பு, கடந்தேயாக வேண்டிய புறவாழ்வின் துன்பங்கள் என ஒரு நெடிய பயணத்தை ஒரு வாசகனுக்கு தருகின்றன. ஆனால் இந்த பயணம் சலனமற்று இருக்கிறது.

புவியின் வெற்றிடம் புயலால் நிரம்ப,
அகத்தின் வெற்றிடம் கலையால்.

சலனமற்று இருப்பதால் அந்த நிசப்தம் புலன்களைச் சேராமல் போய் விடுமா என்ன? , முதல் கவிதையில் வரும் ஜன்னலின் சலனங்கள் அப்படித்தான் இருக்கிறது ! அவர் தன் வீட்டு வாசலில் நின்று யாரையும் வரவேற்க காத்திருந்தாலும், அவரின் சன்னல்கள் தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன, அதில் சில பலத்த தட்டல்கள், சில கீறல் சப்தம், சில சின்ன சுண்டிவிடும் ஒலிகள் கூட அவருக்கு பேரிரைச்சலாக இருக்கின்றது, அவர் தனிமையை முன்னிருத்துகிறது. தனிமை இருந்துவிட்டால் அப்படித் தான் நிசப்தமே காதை பிளக்கும் வாதையாக இருக்கும். ஒரு கதவைத் திறந்தும், மறு கதவையும் மூடியும் நீள்கிறது அந்த இரவு.

கவிஞரின் காதல் சில நேரம் அவருக்குப் பேருவகையாக இருக்கிறது, அது பழம்பெரும் பாடல்களையெல்லாம் கொண்டு வருகிறது, பின்னர் துரோகத்தின் நினைவாக அவளை மறக்கத் துடிக்கிறது, அது தோல்வியின் தழும்பாக மாறும் முன்னே முதலில் விருந்தளிக்கிறது பின்னர் அவரை கவிதை எழுதச் சொல்கிறது வார்த்தைகளை விரவி தேவையான சொற்களை மட்டும் பொறுக்க சொல்கிறது, சிலவற்றை ரகசிய கேப்சூல்களாக மாற்றிவிட்டு கவிகளில் இருந்து மறைத்துவிடுகிறது.

“உனக்குப் பதில் ஒரு புறாவைக்
 காதலித்திருக்கலாம்
 துரோகம் என்றே வைத்துக்கொள்
 நீ கூட ஒரு மன்னாந்தையைக் கொஞ்சலாம்”
 என்று புழுங்கிடும் ஒரு காதலனாகவும்

 “ காதலின் பெரும் பாடலொன்றில்
  கவிந்திருக்கும் என் மோனம்
  பிறிதொரு சமயம்
  இடமாற்றம் கேட்டு என் முன்
  நிற்கும் சிப்பந்தியிடம் சொல்கிறேன்
  உன்னை இழப்பது எவ்வளவு துக்ககரமானது” என்று காதலில் உள்ள உறவு எனும் புதிரில் விடை தெரியாத நிலையில் நம் நினைவுகளையும் தட்டி எழுப்புகிறார்.
மற்றொரு கவிதையில் உலகயியக்கங்களில் தன் அகத்தொடர்பை அறுத்துவிட்ட ஒருவனாய் சில பெண்களை பார்க்கிறார், அவர்கள் அன்பற்றவர்களாகவும், பல ஆண்களைக் கடந்து வந்தவர்கள் போலவும் இயங்கினார்கள்.“சில அடிகளுக்குப் பின்னால் தொடர்ந்தவன்
 நிலவொளியில் மிக மெதுவாக
 ‘கராமி’ என்று அழைக்கிறான்”
இந்த அழகுக் கவிதையில் இந்த வரிக்கு பின் அவள் என்னவெல்லாம் செய்திருப்பாள் என்று எண்ணிப் பார்த்தால்?? !!
*அதற்குப் பின்னால் அவள் வேறெங்கோ செல்வதும்,
*அவன் அழைப்பதை கவனித்து அவன் அருகில் வந்திருக்கலாம்,
*இல்லை அவள் வேரொருத்தியாய் இருந்திடும் சம்பவம் கூட வந்துவிடலாம்.  ஆனால் “கராமி” என்று அழைத்ததிலேயே கவிதை முற்றிற்று,
‎
“உலகிலுள்ள ஒரே ஒரு சுதந்திரம் காதல்தான். ஏனென்றால், சமுதாய சட்டங்களையும், இயற்கையின் விதிகளையும் மீறச் செய்து உயிரை மேலுயர்த்துவது அது ஒன்றுதான்” –என்று சொன்ன கலீல் கிப்ரானாக இந்த கவிதையில் அவர் தன்னை பாவித்ததை இப்போது உணர்கிறேன். ஒருவேளை அவளும் கிப்ரானை அறிந்திருந்தால்??(ஒரு நல்ல காதல் நாவலுக்கான தங்க முடிச்சு இங்கே சுருண்டுக் கிடக்கின்றது). பின்னொரு கவியில் “தன்னைக் களைந்த காதல் விளையாட்டில் தோற்றுப்போனது தான் மட்டும் அல்ல என்பதை, அவள் தன் சீட்டாட்டத்தில் கைவிட்டுப் போன ரம்மியை இழந்துவிட்டதைக் கொண்டு தன்னை இழந்தது போலச் செய்கிறார் கவிஞர் .

காதல் – நிலம் தவிர்த்த மற்ற கவிதைகளில் இந்த கவிஞரின் மொழி சிக்கலற்ற சிக்கலைக் கொண்டுவருகிறது. ஆம், எளிய வார்த்தைகளில் சொல்லிப் போகும் அநேகக் கவிதையில் மந்திர வார்த்தைக்கான தவமோ, பிரயர்த்தனமோ இல்லை, ஆனால் அதன் பௌதிக இயல்பின் பின்னால் மறைந்திருக்கும் உளவியல் பிம்பங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கவிதைகளில் வரும் மீனும், கனவும் நவீன ஓவியங்களின் வண்ணங்கள் போல் இருக்கிறது, ஆம் சில ஓவியங்களில் வலி, காமம், பசி போன்ற உணர்வுகள் வெறும் வண்ணமாக ஊற்றியிருப்பது போல் மீன் என்ற பதம் அந்தரத்தில் தொங்குவதாய் சொல்லும் இடத்தில் (பக்கம் 20) இங்கே அந்தர மீனாக மனிதனின் தவிப்பை உணர்கிறேன், அந்த தவிப்பு துள்ளிக் குதித்தலில் முடிந்து விடத் தான் வேண்டும், அப்படித் தான் முடிந்தும் விடுகிறது. ஆனால் துள்ளிக் குதித்து விழுந்த பின்னும் தவிப்பு மட்டும் அந்தரத்திலேயே இருக்கிறது. அது மறுபடியும் எம்பிக் குதிக்கச் செய்யும்…. தொடர்ந்து கொண்டே இருக்கும்.
காதல் என்ற வெளியைக் காண துள்ளிக் குதித்து விழுந்தது மீன்,
வானம் பார்த்த மீன் கீழே விழுந்தது- அதன்
தவிப்பு மட்டும் காதல் வெளியில் உறைந்தது,
மீன் வேறு மீனின் தவிப்பு வேறு அல்ல,
என் காதல் தான் “அந்தர மீன்”…. என்று அந்தர மீனாய் அந்தரங்கமாக சிலாகிக்கவும் வேண்டியிருக்கிறது.


இவரது பயணங்களாக வெறும் கவிதைகளை நான் சிலாகிக்க ஒரு காரணம், தமது பணி, கிடைத்திருக்கும் வாய்ப்புகள் வாயிலாக தன் கவிதைகளில் ஒரு சிங்கப்பூர் மது விடுதியையோ, இல்லை ஏதாவது அரசு விடுதிகளில் கிடைத்த ஓய்வையோ, அல்லது தம் நெடிய பயனத்தில் பார்த்திருக்க வாய்ப்பிருந்த காஷ்மீர் ஆப்பிளையோ இல்லை அதை விற்கும் பெண்களையோ தம் கவிகளில் பதிந்திடாமல், தமது சக்கரத்தில் சுருண்டு கொண்டிருக்கும் பயணத்தை எல்லாம் நகரத்தை தொலைக்கவே விரும்புகிறார் அவர் பதிவதும் கூட கண் திறக்காத வாத்துக் குஞ்சையும், தென்னையில் பூத்திருக்கும் கொக்கையும், காரின் கதவுகளை முட்டுவதாய் தோன்றும் கடந்து வந்த ஆடுகளையும், உடன் பயணிக்க வேண்டிய பெண்ணின் வெற்றிடத்தையும் தான்.

 “ திரும்புவதெனில்
   போய்ச் சேரும் இடமா
   வந்து சேரும் இடமா?
   பூமி சுற்றும் போது
   சாலை எந்தத் திசையில் நகரும் ?”அவரது பயனத்தில் அடுத்த தலைமுறையின் வாழ்வு இந்தக் கோடையில் எப்படியிருக்கும் என்று தான் சேமித்து வைத்த தண்ணீர் குடுவை வழியாக வாழ்வைப் பார்த்து கொண்டே வலம் வருகிறார். சோற்றுக்காக தன் இடத்தை மாற்றிக் கொண்ட சிங்கமும், அதன் எஜமானனும் சேர்ந்து எழுப்பிய கரகோஷம் நேஷனல் சர்கஸில் கேட்கின்றது, வாழ்வின் மிகப்பெரிய பலவீனம் பசியா? காமமா? 

அவரது பணிச் சூழலோடு வரும் கவிதைகளிலும் முதலில் பாதிப்பது அவர் காதலே, இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் பணி என்பது கூடுதல் வலியாகிறது, தன் சிப்பந்தியுடனே தன் காதலைப் பற்றி பேசுகிறார். அவளை சந்திக்கும் எத்தனிப்புகளில் எல்லாம் அலுவலக தணிக்கை நேரங்கள் வந்து விடுகின்றன. ஆளுக்கு ஒரு சொல் வைத்திருக்கும் உலகில் தம்து சொற்கள் எங்கேயே மறைந்து கிடைப்பதாய்ச் சொல்கிறார். தமது அலுவல்களில் மறைந்துவிடும் சொற்களை, தம் கவிதைகளுக்கு கொண்டுவராமலும் பார்த்துக் கொள்கிறார். அவர் வீடுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன, சதா இடமாற்றமாகிக் கொண்டிருப்பதால் எல்லாமுமே தற்காலிகமான முகவரி ஆகின்றன என்றாலும் தம்மை யாவரும் இந்த நகரத்தில் எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கவே செய்கிறது என்று எண்ணினாலும்,

 “எப்படி நகர்ந்தாலும் ஏதேனும் ஒன்று,
  மையத்தில் நிற்கும்போது நிகழ்வதுதானே
  தற்காலிகமாகிறது??” பதிகிறார். இடம் மாறும் பறவைகளில் தனது தவிர்க்க முடியாத இழப்புகளை சொல்கிறார் அதில் வலி கனத்திருக்கிறது.

கவிதைகளை நுகர்வு மட்டும் செய்யும் வாசகனின் பண்பு ரசனையைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? படிமங்கள், குறுக்குவெட்டுத் தோற்றம், நவீனத்துவம், காட்சி சித்தரிப்புகள் போன்ற எதனையும் விட ஒரு வாசகனுக்குப் பிரதானம் ரசனை தானே!! ரசனை ஒன்று தானே எல்லா இயங்களையும் தாண்டி பல்லயிரம் ஆண்டுகளாக கலையின் மாறாத எதிர்வினை.

இத்தொகுப்பில் சில கவிகளில் வரும் காட்சிகள் கண்ணில் வந்து ஒட்டிக் கொள்கின்றன, அல்லது நம் பார்வையாக இருக்கும் கோணத்தில் சில காட்சிகள் வருவது. கடைசிக் கவிதையான மாடு மேயும் பரப்பில் வரும் வட்டங்கள், கயிற்றில் கட்டிய பசுவிற்கு அனுமதிக்கப் பட்ட வட்டம், அதனுள் தன்னால் வாழ முடிகின்ற வட்டம் அதாவது அதன் மையம் விலகாத தன்மை, பசுமாட்டின் பார்வையில் இருக்கும் வட்டம், அதன் வால் சுழித்துக் கொண்டிருப்பதால் அமைந்த வட்டம் என மையம் குறித்துப் பதிவிடுகிறார். “செயல் மையமாகின்றபோது எல்லாம் நடக்கிறது” அதுவே கவிதையை ஆகச் சிறந்ததாகிறது, ஒவ்வொரு வட்டமுமே தத்துவமாகிறது.

அத்துவான வெளி எனும் கவிதையில் வரும் கிராமங்களில் இருக்கும் மனிதர்களின் துயர வாழ்வோடு சம்பந்தமிருக்கின்ற சிறுதெய்வங்களின் இன்றைய நிலையை சொல்கிறார் எந்த ஒரு வருமையிலும் மாடன் பெரும்பசியாற்றிவிடுகிறான், நல்ல தங்காள் இன்னும் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொண்டே இருக்கிறாள், சாமியாடும் மாரியாத்தக்களுக்கு டைம் கீப்பரா??? மறுபடியும் கிராமம் சென்று அதைப் பார்க்க வேண்டும்.

வாழ்வுதனில் எல்லொருக்குமே இருக்கும் ஒரு நிலையாமை நம்பிக்கையாகவும், அவநம்பிக்கையாகவும் மாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த நிலை/அநிலை எனும் கவிதையில் மனதுடன் உருவகப் படும் குரங்கும், அதன் சொற்களும் மாறி வந்து ஊஞ்சலாடிக் கொண்டே நிலைத் தன்மையின், நிலையாமையைச் சுட்டிக் காட்டுகிறது. என் மனமோ குரங்கின் பிம்பமாய் பிம்பமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கவியாக “காட்டிக் கொடுத்தல்” வருகிறது, அதனை வாசித்தலை விட வேறு என்ன சொல்வது ? (பக்கம் :32).  ஒரு மனிதனாக நாம் எப்போழுதும் பூமிக்கு நம்மால் முடிந்த ஊறுகளைத் தான் விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கவிதையில் உணர்ந்தாலும், அதை உணர்ந்தும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை.

 

– ஜீவ.கரிகாலன்

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

0

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம்.

கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று – இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு  New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும்?? என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா?

சமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order? இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா? இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order – மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.

 

இந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

******************************************************************

பொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.

 

புராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.

*****************************************************************

பதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.

இதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.

***************************************************************************

கதை

இந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).

தற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக “பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படைத் தலைவன் கோதம் நகருக்கு வருகிறான்.

கோதம் நகரில் பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசாங்கமும் அதைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்கிறார்கள். அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.

நகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.

நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்”  அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.

மேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்

மக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.

“CHANGE”  எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து  நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.

இதனால் இந்தப் படம் முக்கியமாகிறது

  • கம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.
  • மக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.
  • பேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.
  • இந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.
  • New world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.
  • அவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.
  • Change –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.
  • எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே??

பேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.

 

 

ஜீவ.கரிகாலன்

 

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

0

பெருந்திணைக்காரன்  


கணேச குமாரன் என்கிற G K –  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில் நதி நோக்கிய பயணத்தில், இதற்கு உபயம் நிலாரசிகனும் விழியனும் தான். அந்த பயணத்தில் கற்கோட்டைக்கும் பாறைகளுக்கும் இடையில் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொண்டவன், இன்றுவரை நகர மறுக்கிறான். 

தொகுப்பில் உள்ள  பெரும்பாலான கதைகளை வெளி வந்த இதழ்களிலேயே படித்திருந்தேன். மீதி கதைகளை இந்த தொகுப்பில் தான் படித்து முடித்தேன். தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள் உள்ளன. நான் இதில் நான்கு கதைகளை பற்றிய எனது பார்வையையும் தொகுப்பின் மொத்ததிலிருந்து வெளிப்படும் படைப்பு சார்ந்த எனது பொதுவான பார்வையையும் உங்களின் முன் பகிர்கிறேன். 

1 . மழை சன்னதம்  

தொகுப்பின் முன்னுரையில் சொன்னது போல் நான் வளர்ந்த ஊரிலும் இது போன்ற-இந்த கதைகளில் வரும் – மனிதர்களை கண்டு இருக்கிறேன். இந்த தொகுப்பில்  முதல் கதையில் (மழை சன்னதம்) வரும் அம்மாவை போன்று எனது நண்பனின் அம்மாவும் உண்டு. அடிக்கடி தொலைந்து போவார்கள். அவராகவே வந்தும் விடுவார். இப்படியான ஒரு தொலைதலில் ஊருக்கு மத்தியில் உள்ள குளத்தில் ஒரு மழை நாளில் விடிகாலையில் மிதந்தார். இதனை இங்கு சொல்வதற்கு காரணம் இந்த கதை படித்தவர்களுக்கு தெரியும்.கதையின் இறுதியில் மழைபேச்சியாக உருமாறும் போது எனது நண்பனின் தாயை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியாகவும் நடந்து  இருக்கலாம் என்ற அனுமானத்தை விட இப்படித்தானே என்ற  உணர்வை தருவதும்  படைப்பு தானே. அந்த விதத்தில் ஆகச் சிறந்த ஒன்று இந்த கதை. வெளிச்சம் படாத இடத்திலும் கதிரொளி பாய்ச்சுகிறான் G K . 

2 . கையறு நிலை

சில கதைகளில்/கட்டுரைகளில் ஏதேனும் மேற்கோள் கொண்டு தொடங்குவார்கள். அந்த படைப்பை முழுமையாக படித்த பின்பு அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் அந்த மேற்கோள் விளங்கும். (சிலவற்றில் முழுமையாக் படித்த பின்பும்  விளங்காது என்பது   வேறு கதை ). அப்படியான ஒரு வரலாற்று பதிவை கொண்டு தொடு(ட)ங்கும் ” கையறு நிலை” – அடுத்து வரும் சில பத்திலேயே இன்றைய நிலையை முகத்தில் அறைய வைக்கிறது.  கதையை படித்த முடித்த பிறகு கணேச குமாரனின் இடது கையை ஆறுதலாய் பற்ற வேண்டும் போல் இருந்தது .

3 .  இடது பக்க அறையிலிருந்து சில பாடல்கள் இந்த சிறுகதையில் 80  களில் இருந்த இளைஞனின் மன ஓட்டத்தையும் நிலைமையும் படம் பிடித்து காட்டுகிறது. அதே காலவாக்கில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். இப்படியான சூழலும் இளைஞனும் இன்று இல்லை  என்ற நிலைக்கு வரும்போது இந்த கதையை ஒரு ஏக்கத்துடனே மறு வாசிப்பு செய்தேன் . அப்படியான காலத்தை பதிவு செய்ததாகவே இதனை பார்க்கிறேன்.

 4 .பெருந்திணைக்காரன் 

தனது சித்தப்பாவின் மூலம் வந்த சுய இன்ப பழக்கத்தினை கொண்டு அவரை தன்னுடைய ஆதர்ஷமாக கொண்டு சுயநலத்துடன் அவரின்(சித்தப்பாவின்) மகனின் மீது வெறுப்பை உமிழ்வதும் தன்னையே மாய்த்து கொள்ளும் அளவிற்க்குக் போவது சற்று அதிகபடியாக  இருக்கிறது. ஏனோ என்னை அது ஈர்க்கவில்லை. ஆனாலும் வாசனை தரும் கிளர்ச்சி ஞாபகங்கள் , தனிமை உணர்வை மறுக்க முடியாது தான். நிறங்களுக்கும் வாசனைக்கும் அந்த பண்பு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது தான். அதன் வடிவமாக இந்த கதையை எடுத்து கொள்ளும் போது இந்த கதையை தவிர்க்க முடியாது.


பொதுவாக : 

ஒரு படைப்பில் புனைவையும் உண்மை நிலையும் பிரித்தறியா முடியாதவையாக இருக்குமானால் அதன் சிறப்பு படைப்பாளியை சாரும். புனைவையும் யதார்த்தத்தையும் சரியான விகிகத்தில் கலந்து கட்டி அடிக்கிறார்  G . K -அனேகமாக விளிம்பு நிலை மனிதர்கள் தான்  கதையில்  உலாவும்  மாந்தர்கள்  என்று  கொண்டாலும்  அவர்கள்  அந்த  நிலைக்கு  தள்ளப்பட்ட  காரணத்தையும் சில இடங்களில் சொல்லித்தான் செல்கிறார்  g k – ஆனாலும் ஒரு சந்தேகம் உண்டு சுய இன்பத்தையும் ஓரின சேர்க்கையும் ஒரு வித குற்ற உணர்வுடன் அணுகுகிறாரோ என்கிற ஒரு எண்ணம் தோன்றி மறையத்தான் செய்கிறது. நடுத்தர குடும்பத்தின் மனப்போக்கு பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த இடத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு விளிம்பு நிலையை பார்க்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

‘இருள் யாசகன் ‘ நீங்கலாக. நல்ல வேலை மலையை அறிந்து கொள்ள மலை ஏறித்தான் ஆகவேண்டும் என்றில்லாமல் அதன் இறுக்கத்தை அறிந்தால் போதுமானது என்பதை உணர்த்துகிறார். G . K கவிதைகள்  எழுதிய பின்பு தான் கதைகள் எழுத தொடங்கினார் என்று நினைக்கிறேன்.பொதுவாகவே கவிதை எழுதுபவர்களின் Text  ஐ நான் சற்று உன்னிப்பாகப் படிப்பதுண்டு. அப்படி ரசித்து படித்த சில வரிகள் – (இதில் ஒரு கவித்துவம் மட்டுமில்லாமல் இயல்பு நிலையும்  இருப்பதாகவே நான் பார்க்கிறேன். )

அம்மா மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அம்மா மட்டும் இல்லை.

இரு கண்களிலும் சூரியனை ப் பதித்து கொண்டு அறைக்குள் வந்து படுத்தேன் ரகசிய அவமானங்கள் வரிசையாக் தொடர்கின்றன.

ரத்தம் சொட்டச் சொட்ட மீண்டும் மீண்டும் அடித்து விளாசும் ஊரின் நாக்கு 
நீர் சூலம் எடுத்து நீரை குத்தினாள். மழையை பிடுங்கி மழையில் எறிந்தாள்

தொடர்ந்து இவரின் கதைகள் கவிதைகள் மனித உறவில கிடக்கும் ரகசியங்களையும் வெளிச்சங்களையும் சொல்லி வருகின்றன.  உள்ளாடைகளை திருடும் முகர்வில் இருந்து தெருவின் மங்கிய ஒளியில் நடக்கும் ரகசியங்கள் வரை பல புள்ளிகளை தொகுப்பில் காண முடியும் பைத்தியமாகவே பிறந்த மேரி  மகனின்  கதை எழுதபடாதது போல் வீதியெங்கும் உலாவும் மனித மனங்களின் இருள்களை அள்ளி அள்ளி  இயல்பு மாறாமல் இனியும் தருவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

 

– வேல்கண்ணன்

பேன்ஸ்பெர்மியா

0

 

இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்வதுதான் பேன்ஸ்பெர்மியாவின் கோட்பாடு.

சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் எண்ணற்ற விண்கற்கள் தாக்குதல்கள் நடைபெற்றன என்றும், அதில் ஒரு விண்கல்லில் இருந்த பாக்டீரியா வளர்ந்து அதன் தொடர்ச்சியாக உயிரினங்கள் உருவாகத்தொடங்கின என்றும் இது சொல்கிறது. எங்கிருந்து வந்திருக்கும் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  15 மில்லியன் வருடங்களுக்கு முன் செவ்வாயில் இருந்து சிதறிய விண்கல் 1984 யில் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Allan Hills 84001 (ALH84001)   என்று பெயர் சூட்டி அதனை ஆராய்ந்ததில் அதில் நுண்ணியிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் செவ்வாயில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராயப்போவதாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.

செவ்வாயில் முன்பு நீர் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வியாழனின் அருகில் உள்ள யூரோப்பா என்ற நிலவில் கீழுலகக் கடல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நீர் மட்டுமே ஒரு உயிர் உருவாகக் காரணமில்லை. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கார்பனோடு தொடர்புடையவை. விண்கற்களில் சோதனையிடுபோது அதில் கூட்டுப் பொருட்களில் உள்ள கார்பன் மற்றும் அமினோ அமிலங்கள் ( புரோட்டின் அடுக்குகளை உருவாக்கும் ) இருப்பது தெரியவந்தது.  இந்தப் புரோடீன்களே உயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவை .

சில பாக்டீரியாக்கள் + 115 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திலும் சில நுண்ணுயிரிகள் – 18 டிகிரி செண்டிகிரேடு வெப்ப நிலையிலும் வளர்வதைப் பார்க்கும்போது, நுண்ணயிரிகள் எந்தச் சூழலிலும் வாழும் திறன் கொண்டவை என்று தெரிய வருகிறது.

எங்கும் பரவி உள்ள பாக்டீரியாக்கள் பூமியில் வாழ்வதைப் போல விண்வெளியில் உயிர் வாழ முடியுமா என்றும் ஆராய்ச்சி செய்தது ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். களிமண், செம்மணற்பாறை, வடிவமைக்கப்பட்ட விண்கல் ஒன்றில் ஒரு குவியல் போல செய்து பூமிக்கு வெளியே உள்ள ஒரு வெளியில் விண்கோள் மூலம் கொண்டு வந்து வைத்தனர். இரண்டு வாரங்கள் கழித்து சோதனை இடுகையில் செம்மணற்பாறையில் கலந்த பாக்டீரியாக்கள் தொடர்ந்து உயிரோடு இருப்பது தெரிய வந்தது. Extraterrestrial solar UV radiation    பாதுகாப்பு செய்யப்பட்டால் பாக்டீரியாக்கள் ஆறு வருடங்கள் கூட வெளியில்(SPACE ) வாழும் என்றும் ஆராய்ச்சி தெரிவித்தது.

பேன்ஸ்பெர்மியா தியரியில் வெளியில் இருந்து உயிரின் விதை பூமிக்கு வந்தது என்று சொல்லப்படுகிறதே ஒழிய அது எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தற்போதைய சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே உயிர் வாழும் சூழல் கொண்ட இடம் என்று சொன்னாலும் முழுக்க ஆராயாமல் சொல்ல முடியாதல்லவா? உலகெங்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்ப்போம் அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதன் வேறு கிரகத்தில் வாழும் சூழல் அமைக்கிறானா என்று?

 

–சாத்தப்பன் நா

 

 

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்

0
என்றோ ஒரு நாள்
வீசியெறிந்த உணவிற்கு
காலைச் சுற்றும் நாயென
ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்நினைவில் காடுள்ள
அங்காடித்தெரு பெரும்பசி யானையாய்
பிரிவை மாத்திரமே
அகோரமாய் வரைகிறாய் நீமிக உக்கிர வெயில்
நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறதுநாளையொரு பெருமழையில்
அழிந்தும் போகலாம் இத்தாவரம்
அல்லது
ஆழப் புதைந்துக் கிடக்கும் 
வேரிலிருந்து மெல்ல
தலையெடுக்கலாம் ஒரு சிறு துளிர்

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்
யாரால்தான் படித்துவிடமுடியும்?*****
—ஆறுமுகம் முருகேசன்

கால விஷம் – கிரிஷாந்

0

இதயம் கனத்த மழை
வழிவது காலத்தின் சீழ்.
இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன
விஷம் கக்கும் மேகங்கள் .
காலின் கீழே சரளைக் கற்கள்
ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ .
மோனங்கள் விழித்தன
பெரும்பகலை விழுங்கியது காலம் .

ராத்திரி நீண்ட பயணம்
கால்களில் இரத்தம் வழிய வழிய
நடக்க வேண்டும்
வெளிறித் துடிக்கும் இதயத்தைக் கையில்ப்
பிடித்தபடி .
மரணம் நின்று கொண்டிருக்கிறது
வரும் வழியில் இரண்டு பறவைகள்
சொல்லிச் சென்றன .
அச்சமற்ற நிழலில் தொங்கிக்கொண்டிருந்தது
வலிமையற்ற எனதாசைகள் .
நெருங்கி விட்டேன்
கண்களில் மரணம்
கைகளில் நகங்களில் மயிரில்….
இதயம் கருகிகிறது ….வாசனை வருகிறது
யாருமில்லை ..யாருமே
பெரும் இருள்  சிதிலமடைந்தன  கேள்விகள் .

மீண்டும் விழித்தது காலம்
கவ்வியதை விட்டபடி சிறகுதைத்து மீள்கிறது
வெளிக்கே .

 

– கிரிஷாந்

 

 

 

 

அளவு – கிரிஷாந்

0


வானம்
குடையின்
இன்னுமொரு அளவு .
மழை பூமியின் அளவுகோல் .
கட்டடங்கள்
மனிதனின் .
சொற்கள் எனது .
வானம் விரிகிறது .

கிரிஷாந்.

சர்ப்பங்களிலான உலகம்

0

 

நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்ததே
நகர்தல் மறுதலிக்கிறோம்

விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்

ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும்
குறிப்புகள் சேகரித்து சேகரித்து
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்

யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்

****
—ஆறுமுகம் முருகேசன்

திட்டமிட்டு பெய்த மழை

2

மழை நீண்டுத் தணிந்த
முன்னிரவில் நடக்கிறோம்
ஒரு குடையில்….

ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும்
உன் தோள்களின் சுகந்தம்
விரகத்தின் காம்புகளை
உரசத்தான் செய்கிறது
உரையாடல்களில் மதியிருந்த போதும் ..

தற்காலிகமாய்க் குவிந்த
மழைப் பள்ளங்களுக்காகவும்,
இடரும் சிறு கற்களுக்காகவும்,
பரஸ்பரம் கரம் பற்றுகிறோம்.
(அவை
நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன)
வெப்பத்தின் மீட்சிகள்
விரைந்து கடக்கின்றன
உணர்ந்தும் உணராதவை போல்…

குடைக்கான நன்றியைப் பெருக்கிக் கொண்டே
அரவணைக்கிறாய்,
மாளாத வெப்பத்தில் திறக்கின்றன
நாணத்தின் அவிழாத முடிச்சுகள்-
அனைத்தும் ….

கூர்முனைக் கத்தியின் சீற்றத்தோடு
நெருங்கும் சீரற்ற சுவாசக்காற்று
உழுது கிளர்ந்தது
ஆழ்நிலத்துப் பெருங்காட்டை,
விவரிப்பில் அடங்காத
ஈரத்தின் வாசனை
விரவிப் பெருகியது…..

குளிரைப் பொருளாக்கி
தேநீருக்கு ஒதுங்கினோம்.
நீ
இதழ்வெளி பதிந்து
அருந்திய கோப்பையின்
விளிம்புகள் சுவைத்த போது
ஒரு துளி மதுவிருந்தது…..

வெகுதூரம் பயணத்திற்கான
வழியனுப்புதல் போல்
கனத்த இதயத்துடனான என்னைத்
தனித்தனுப்பிய போது
விஷமு மிருந்தது …

சிறு புற்கள் மீதமரும்
பனித்துளியாய்,
மயிர்க் காம்பில் உதிர்ந்து விழும்
மழைத் துளியைப் பருகிக் கொண்டே
கடந்து விடுகிறோம்
நிலமற்ற சொல்லோடும்
பொருளற்ற ஆமோதித்த லோடும்….

அமுதாய்ச் சொரியும் மாரிக்காலம்
அலையாய் தகித்தும்
அயர்ந்து உன் தோள்களில் சாயாமலேயே
மறைந்து விடுகிறது
நீ என்னை
வீடு வரை சேர்ப்பித்த
நெடும் பயணம்…..

உறங்காத மனத்தின் இரவெங்கும்
பெருவெள்ளம்……

–(பாலா இளம்பிறை)