“இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன் செம்பட்டு முடியுடன் காற்றைப் போல ஆண்களை உண்பேன்”
சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்துவார் ஏசு. அப்படி தன்னைத்தானே உயிர்த்தெழச் செய்பவள் என்பதை உணர்த்தும் வரிகள். மேலும் தீயில் கருகி சாம்பலான பின் அச்சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் திறன்கொண்ட ஃபீனிக்ஸ் பறவையையும் உணர்த்துகிறது. ப்ளாத்தின் கவிதைகளில் இப்படியான யுக்தியை —இருவேறு படிமங்களை தடையின்றி ஒருங்கிணைத்த வரிகள் பலவற்றை – வெகு இயல்பாகக் காணலாம். சில்வியாவின் கவிதைகளைப் படிப்பதென்பது நெருப்பை கையில் ஏந்துவதைப் போல, நம்மை சுட்டுப் பொசுக்கும் என்றாலும் நம்மையே துலக்கமாக காட்டும் பேரொளியாகவும் விளங்கும்.
1932 – 1963 முப்பது வருடங்கள் மட்டுமே குறைவாழ்வு வாழ்ந்தவர். அவரது 30 வயதுக்குள் ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு முறை இறந்து போனவள் என்று தன்னை பற்றி குறிப்பிடுகிறார். 10 வது வயதில் விளையாட்டாக நீரில் மூழ்கி இறப்பிற்கு அருகில் சென்றவர் பின்னர் 20 வது வயதில் ஒரு தற்கொலை முயற்சியிலிருந்து காபாற்றப்பட்டவர். 30 வது வயதில் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவரது வாழ்வை விட இறப்பால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான முறையினால் அறியப்பட்ட சில்வியா ப்ளாத்தின் உலகம் இருண்ட தனிமை, பெருத்த ஏமாற்றம், மறுக்கப்பட்ட நியாயமான அங்கீகாரம், அதனால் ஏற்பட்ட சுய சந்தேகம், அவரை விட்டு அகலாது தொடர்ந்த தோல்வி என்ற மனஉளைச்சல் தரும் புறவயமான காரணிகள் கொண்டது. கூடுதலாக கடுமையான, தயவு தாட்சண்யமற்ற சுயவிமர்சனம், அழுத்தத்தில் சிதைவுற்ற மிக மெல்லிய மனமும் அகவயமாக அவருக்கு பெரும் வாதையளித்தன.
ஆனால் இந்த சிக்கல்கள் எதையும் பொருட்படுத்தாமல், அவரது படைப்புகளை மட்டும் தனியாக நோக்கினால், ஆங்கிலக் கவிதை புலத்தின் பாதையை மாற்றிய, வேறோர் உயரிய திறனளவை நிறுவ காரணமாக இருந்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. கவிதையென்ற வடிவத்தையே வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றவர்.
இந்த அபூர்வ, அதீத படைப்பூக்கத் திறனாலேயே அவர் இன்றும் படித்துத் தீராத கவிஞராகவும், பேசித் தீராத எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். இன்று அவரை அங்கீகரித்து, அவரது கூறுகளைத் தங்களது படைப்பில் இனங்கண்டு எடுத்தியம்புவதாகட்டும் அல்லது எதிர்மறையாக அந்த்த தீவிர இருண்மைகள் காணக்கிடைக்காத நவீனமானது தங்கள் எழுத்து என்று அவரை மறுதலிப்பதாகட்டும், இருவிடங்களிலுமே சில்வியா ஒரு நியதியை நிர்ணயித்து நிரந்தரமானவராக தன்னை இருத்திக் கொண்டுள்ளார்.
ஆரம்பகால கவிதைகள் முதல், இறப்பதற்கு முன், வாழ்நாளின் இறுதி எட்டு மாதங்களில் எழுதப்பட்ட படைப்புகள் வரை, சில்வியாவின் தனித்துவ பாணி என்று இன்று கொண்டாடப்படுபவை எல்லாமுமே அவரது வாழ்வின் சூழலையும், மனச்சிதைவையும், தற்கொலையையும் சேர்த்தே கருத்தில் கொண்டு பேசப்படுவது சில்வியா என்ற அதிசய மனுஷியின் ஒப்பற்ற கவிமனதிற்கு தகுந்த அங்கீகாரம் அளிக்க தவறுவதாகவே தோன்றுகிறது. படைப்பின் பேசுபொருட்கள், தீர்மானங்கள், முடிவுகள், பார்வைகள், மனித மதிப்பீடுகள் இவையெல்லாம் வேண்டுமானால் வாழ்வோடு தொடர்புடையவையாக இருக்கலாமேயன்றி அவரது படிமங்கள் உருவகங்கள் மற்றும் அதுவரையில் காணக்கிடைக்காத கவித்துவம் (கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல் எல்லாவற்றிலும் தாராளமாக விரவிக் கிடக்கும்) எல்லாமும் மொழியின் பால் அவர் கொண்டிருந்த அசாதாரண திறத்தை எடுத்துக்காட்டுகின்றன.
அவரது கவிதைகளின் உள்ளீடுகளில் முக்கியமான தன்மையாக ஒப்புதல் வாக்குமூலம் (confessional) இருக்கிறது. சுயத்தை ஆழமாக வெளிப்படுத்தும் தன்மையிலான படைப்புகளின் மூலம் 1950களின் பிற்பகுதியிலும், 1960களின் முற்பகுதியிலும் அமெரிக்கவில் தோன்றிய இலக்கிய இயக்கமாக விளங்கியது இப்போக்கு. அதற்கு முன்னர் இல்லாத நவீன வகைமையான confessional poetry ‘நான்’ என்பதையும் ‘எனது’ எல்லா உணர்வுகளையும் உண்மைகளையும் தணிக்கை இன்றி முற்றிலுமாக பதிவுசெய்யும் போக்கை முன்வைத்தது. 1959 இல் வெளிவந்த அமெரிக்க கவிஞர் ராபர்ட் லோவெலின் ‘life studies’ என்ற கவிதை தொகுப்பு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்த திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
சில்வியா என்ற பெண்ணின் குரலும் அவரது படைப்பில் தெரியும் மொத்த ஆளுமையின் குரலும் முற்றிலும் வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்வது அல்லது ஒன்றிலிருந்து ஒன்று, கொண்டும் கொடுத்தும் உறவாடியவை என்கிற நோக்கத்தில் அவரது படைப்புலகத்தை அணுகுவது முற்றிலும் தவறான பார்வையாகும். எழுத்தில் காணக்கிடைக்கும் ஆளுமையின் குரல் கவிதை என்ற வடிவத்தை, எழுத்தின் நுட்பத்தை, மொழியின் வார்த்தைகளின் ரகசியங்களை அறிந்த, வரிசைகளை கலைத்து கலைத்து, உடைத்து உடைத்து ஒன்று சேர்க்கும் முறைகளை, தன்னளவில் சோதனை செய்து அறிந்த, தெளிவுற கற்ற, ஒரு தீர்கமான குரல். சில்வியா என்ற பெண்ணிற்கு இருந்த தயக்கமும், சந்தேகமும், தாழ்வுணர்ச்சிகளும், தடுமாற்றங்களும் எல்லாவற்றையும் களைந்து அதற்குபதிலாக நிமிர்வையும் நம்பிக்கையையும் நிறைத்துக் கொண்ட குரல். எந்தப் படைப்பிலும் எந்தத் தருவாயிலும் ஒரு அபலைப் பெண்ணின் குரலாக, தன் புராணமாக, சுயநலமாக தன் மீது மட்டுமே கவனம் கொண்ட சுயமோகம் நிறைந்த கவிதையின் குரலாக ஒருபோதும் ஒலிப்பதில்லை.
சில்வியா அக்டோபர் 27, 1932-ல் மாஸசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் பிறந்தவர். தாய் அவ்ரீலியா ப்ளாத் (1906–1994) ஐரோப்பாவின் ஆஸ்ட்ரிய நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். அப்பா ஓட்டோ ப்ளாத்(1885–1940) ஜெர்மானியர். பூச்சியியல் வல்லுனராக பாஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பம்பில் பீஸ் (பெரிய கருவண்டுகள்) என்ற புத்தகத்தை எழுதியவர். சில்வியாவின் எட்டாவது வயதில் அவரது தந்தை நோய்வாயப்பட்டு இறக்கிறார்.
“அப்பா உங்களை நான் கொன்றிருக்க வேண்டும் அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள்…. உங்கள் ஜெர்மானிய மொழியில் உங்களுடன் பேசமுடியவில்லை. என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது முள் வேலியல் அமைந்த பொறியில் மாட்டிக் கொண்டது … தடுமாறினேன். பேசமுடியவில்லை எல்லா ஜெர்மானியர்களையும் உங்களைப் போல பாவித்தேன். அந்த மொழியை ஆபாசமானதாகக் கருதினேன்.”
அவரது ‘அப்பா’ என்ற கவிதையில் தனது தந்தையைப் பற்றி எழுதுகிறார். அன்பைப் பகிர முடியாத கண்டிப்பான, தண்டனைகளைத் தவறாது தரும் தன் தந்தையைப் பற்றி கூறும் போது நாஸியான ஹிட்லருடன் ஒப்பிடுகிறார்.
‘லாசரஸ் அம்மையார்’யில் தந்தையைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.
“நான் உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த படைப்பு நீங்கள் சமைத்த மகத்தான இசைக்கோர்வை. கூச்சலில் கரைந்து போகும் நீங்கள் பிரசவித்த பொன்சிசு”
கருவண்டுகள் தேனீக்களைப் பற்றியும் கவிதைகள் உண்டு. ‘தேனீ வளர்க்கும் பெட்டியின் வருகை’ என்ற கவிதையில் அந்த பெட்டி சவப் பெட்டியைப் போல் உள்ளதாக எழுதுகிறார்.
“நாற்காலியைப் போல சதுரமாக தூக்குவதற்கு கனமானதாக.. உள்ளே இத்தனை இரைச்சல் இல்லாவிட்டால் இதை மீச்சிறிய மனிதனின் சவப்பெட்டி என்றோ சதுரமான குழந்தையின் சவப்பெட்டி என்றோ சொல்லலாம்… கதவுகளோ வெளியேரும் வழிகளோ இல்லை ஒரு கம்பிச் சட்டம் மட்டுமே நாளை அன்பான கடவுளாக அவற்றை விடுவிப்பேன் இந்தப் பெட்டி தாற்காலிகமானது”
1935-ல் சில்வியாவின் தம்பி வாரன் பிறக்கிறான். 1936-ல் மாஸாசூசெட்ஸ் மாகாணத்தில் வின்த்ராப் என்ற இடத்திற்கு, அவரது தாய் அவ்ரீலியாவின் பெற்றொர் வசிக்கும் இடத்திற்கு பக்கத்தில் குடியேறுகிறார்கள். அங்குதான் எட்டு வயது சில்வியாவின் முதல் கவிதை பாஸ்டன் ஹெரால்ட் பத்திரிகையின் குழந்தைகள் பிரிவில் பிரசுரமாகிறது. தொடர்ந்து பல குழந்தைகள் இதழ்களில் அவரது படைப்புகள் பிரசுரமாகின்றன. ஓவியத்திலும் தேர்ந்த கலைஞராக பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
நவம்பர் 5, 1940-ல் ஒட்டோ ப்ளாத் சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை நோயால் கால்கள் அழுகிய நிலையில் அதை நீக்க நடந்த அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்ட சிக்கலில் உயிரிழக்கிறார். அந்த சிறு வயதிலேயே தந்தையின் இழப்பிற்கு பிறகு யுனிட்டேரியனாக வளர்க்கப்பட்ட சில்வியா கடவுள் நம்பிக்கையற்றவராகிறார்.
1950-ல் வெல்லெஸ்லி பள்ளியில் தேர்ந்து பட்டம் பெறுகிறார். அந்நேரம் தி கிரிஸ்டியன் ஸயன்ஸ் மானிடர் என்ற இதழில் அவரது கவிதை பிரசுரமாகிறது.
1950-ல் ஸ்மித் காலேஜில் லிபரல் ஆர்ட்ஸ் பயில்கிறார். கல்லூரி இதழான ஸ்மித் ரிவ்யூவின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பிரபல பத்திரிகையான ’மாத்ம்வாசில்’லில் கௌரவ ஆசிரியர் பதவி அவரை நாடி வருகிறது. அந்நேரம் ஒரு மாதம் நியூயார்க் நகரில் பணியாற்றுகிறார். அவரது பிரசுரமான ஒரே நாவல் ‘பெல் ஜார்’ -இல் நியூயார்க் அனுபவங்களை பகடியாக எழுதியுள்ளார். அந்த பெண்கள் பத்திரிகையில் வேலை செய்தது சில்வியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தனது டயரியில் குறிப்பிடுகிறார். (தனது பதினொராவது வயதிலருந்து தொடர்ந்து தன்குறிப்புகளை எழுதிவந்துள்ளார்)
பெல் ஜார் லண்டனில் 1963 ஜனவரி மாதம் ’விக்டோரிய லூகஸ்’ என்ற புனைப் பெயரில் பிரசுரமானது சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு. அதில் இடம்பெற்றிருந்த பாத்திரங்களில் பலர் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடும் என்ற அச்சத்தில் அவர் புனைப்பெயரை எடுத்துக் கொண்டார். எனினும் அது பெரிய அளவில் பேசப்படும் என்பது பற்றிய எந்த சந்தேகமும் சில்வியாவிற்கு இல்லை. இதைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் அதன் உரிமைத் தொகையில் தன் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் அதை பிரசுரித்தார். எனினும் அமெரிக்காவில் இதைப் பிரசுரிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.
“இங்கிருந்து வெளியேறும் நேரம் என் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கப் பெறும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தேன். என் மனதின் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு சொல்வது தானே இங்குள்ள மருத்துவர்களின் கடமை. ஆனால் இப்போது எனக்கு தெரிவதெல்லாம் கேள்விக்குறிகள் மட்டுமே.” என்று பெல்ஜாரின் எஸ்தர் நாவலின் இறுதியில் சொல்கிறார்.
ஐம்பதுகளின் சமூக அரசியலைப் பகடி செய்த, பெண் உரிமை பேசிய எஸ்தர் க்ரீன்வுட் என்ற முக்கிய கதாபாத்திரம் சில்வியாவின் சாயலி்ல் இருப்பதை மறுக்கமுடியாது. மரத்தட்டுகளில் வைக்கப்படும் கேக் பேஸ்டிரி போன்ற இனிப்பு வகைகளைப் பாதுகாத்து அதே நேரம் காட்சிபடுத்தும் வண்ணம், ஆலய மணியின் வடிவத்தை ஒத்த தடிமனான கண்ணாடி மூடிகள் பெல் ஜார் என்று அழைக்கப்பட்டன. அதனுள் பாதுகாப்பாக இருந்து கொண்டு வெளி உலகை ஒரு பார்வையாளனைப் போல பங்கேற்காமல் கண்டு கழிக்க முடியும் என்று தன் வாழ்வை ஒட்டிய படிமத்தை எடுத்துறைக்க அந்தப் பெயரை பயன்படுத்தியுள்ளார். வேறொரு கோணத்தில் சுத்தமான வெளிகாற்று தரும் ஆசுவாசமின்றி தன் இனிப்பான ஆனால் திகட்டும் வாசத்திலேயே கிடந்து புழுங்கிப் புழுங்கிப் தவிக்கும் தன் அகவுணர்வையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது. பெண்ணாக இந்தக் குமைச்சல் எஸ்தரை கீழ் நோக்கி இழுக்கும் சுழலாக மனச்சிதைவிற்கு இட்டுச் செல்கிறது. தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று மனநல சிகிச்சை பெறுகிறார். இருந்தாலும் அவரை விடாது பின்தொடரும் இந்த பொல்லாப்பித்து எந்தேரமும் தன்னைத் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இந்தப் புதினம் முடிகிறது.
எஸ்தரின் குணவார்ப்பும், புத்திசாலித்தனமான கருத்துகளும் மனவோட்டமும் நம் வாசிப்பனுவத்தை வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றன. ஆண்களைப் பற்றியும், பெண்களைப்பற்றியும் அவர்கள் இடையில் உள்ள உறவைப் பற்றியும் எந்நாளைக்கும் பொருத்தமான விவரணைகளை எஸ்தரின் மூலமாக உலகிற்கு அளித்துச் செல்கிறார் சில்வியா. அது மட்டுமல்லாது பெருநகரத்தின் தனிமையும், அந்நியபடுத்துதலையும் அது எப்படி மனச்சிதைவிற்கு கொண்டு விடுகிறது என்பதையும் மிக உணர்வுப்பூர்வமாக எடுத்துறைக்கிறார். பெண்ணிற்காக தன் தேடலை முன்னெடுக்க இடம் கொடுக்காமல் சமூக பண்பாட்டு அரசியல், அவளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை எஸ்தர் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார்.
புனைப்பெயரில் இங்கிலாந்தில் வெளிவந்த போது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அவரது இறப்பிற்கு பின் டெட் ஹ்யூக்ஸால் 1966-ல் இங்கிலாந்திலும், 1971-ல் அமெரிக்காவிலும் மறு பிரசுரம் செய்யப்பட்டது. அவரது அம்மா அவ்ரீலியா அமெரிக்காவில் வெளியடுவதை சில்வியா விரும்பியிருக்க மாட்டார் என்று இதைத் தடுக்க முயன்றார். ஆனால் டெட்டிற்கு இங்கிலாந்தில் வீடு வாங்குவதற்கு பணம் தேவைபட்டது. மேலும் சில்வியாவின் உடைமைகள் முழுவதும் கணவன் என்ற உரிமையில் டெட் ஹ்யூக்ஸிடம் தான் வழங்கப்பட்டது. அவரது இறப்பிற்கு முன்னதான டயரி குறிப்புகள் மற்றும் சில கவிதைகள் கதைகளை தீயில் இட்டு கொளுத்தியதாக (அவை வெளி வந்தால் பிள்ளைகள் சங்கடப்படுவார்கள், மேலும் அவை ஒரு பெண் எழுதக்கூடாதவைகள் அதனால் சில்வியாவின் மரியாதையை காப்பாற்றுவதற்காக அவற்றை அழித்ததாக) டெட் பல இடங்களில் கூறியுள்ளார்.
வெல்ஷ் மொழிக் கவிஞரான டிலன் தாமஸ் மேல் பெருமதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார் சில்வியா. மாத்ம்வாசிலில் பணியாற்றிய நேரம் அவரை சந்திக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிடுகிறார். அவரது டயரிக் குறிப்புகளில் “என் வாழ்வினும் பெரிதான கவிஞர் டிலன்” என்று குறிப்பிடுகிறார். டிலன் தாமஸின்
‘எளிதாய் இந்த நல்லிரவிற்குள் சென்றுவிடாதீர்கள் மறைந்துகொண்டிருக்கும் ஒளியை எதிர்த்து ஆவேசங்கொண்டு போராடுங்கள்’
இறக்கும் தருவாயில் இருக்கும் தனது தந்தையிடம் மகன் சொல்வதாக அமைந்த இக்கவிதையையும் குறிப்பிட்டுள்ளார்.
டிலன் தாமஸை சந்திக்க முடியாத ஏமாற்றமும், ஃப்ராங்க் ஓ கானர் என்ற கவிஞரின் பயிற்சிப் பட்டறையில் (ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில்) அவருக்கு இடம் கிடைக்காத ஏமாற்றமும் சேர்ந்து ஒருவித சோர்வான மனநிலையில்
“நான் என் கால்களில் கத்தியால் ஆழமாக கிழித்துக் கொண்டேன்… தற்கொலை செய்து கொள்ளும் மனத்திடம் உள்ளதா என்று பார்ப்பதற்கு சுழலும் சுகமான இருட்டினுள் நிம்மதியாக அமிழ்ந்தேன். உண்மையாக அந்த இருட்டு நிரந்தரமானதென்று நம்பினேன்”
என்று தனது டயரியில் எழுதியுள்ளார்.
“ஒரு கேவல் என்னுள் குடியிருக்கிறது இரவானால் இறக்கைகளை அடித்துக் கொண்டு வெளியில் பறந்து செல்கிறது காதலிப்பதற்கு ஏதாவது இருக்கிறதாவென அதன் கொக்கிகளினால் தேடியலைகிறது என்னுள் உறங்கும் இக்கருமையைக் கண்டு நான் பயந்து நடுங்குகிறேன்; நாளெல்லாம் அதன் மென் இறகுகளின் படபடப்பையும் விரோதத்தையும் எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்”
அடுத்த ஆறு மாதங்கள் மனநல விடுதியில் கரண்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாங்கமுடியாத வலியும் வாதையும் பயமும் நிரம்பிய அந்நாட்களைப் பற்றி மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
(அந்நேரத்தில் நிறைய ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிபணிய வைக்க மனநல விடுதியின் சிகிச்சை முறைகளை சொல்லி பயங்காட்டியுள்ளனர். வேறு பெண்களை காதலித்த ஆண்கள், தங்கள் மனைவிகளை ஹிஸ்டீரியா பீடிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி இவ்விடுதிகளில் தள்ளி உள்ளனர். ஆண்கள் நிரம்பிய இச்சூழலில் கணவனின் வார்த்தை ஒன்றே போதுமானதாக இருந்ததுள்ளது. இவ்விடுதிகளில் ஆண்கள் எவரையும் காணமுடியாது, பெண்களாலேயே நிறைந்திருந்தது. ஹிஸ்டீரியா என்ற நோய் பெண்களை மட்டுமே தாக்கும் என்றும் நம்பப்பட்டது. பின்நாட்களில் இந்த இ.சி.டி சிகிச்சை முறை முற்றிலும் அறிவியல்பூர்மற்றது என்று நிரூபிக்கப்பட்டு கைவிடப்பட்டது )
சில்வியா நோயிலிருந்து தற்காலிகமாக மீண்டு ஜனவரி 1955-ஆம் ஆண்டு கல்லூரி திரும்புகிறார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை “மாயக் கண்ணாடி: டஸ்டாவேய்ஸ்கியின் இரு புதினங்களில் உள்ள இரட்டைகளைப் பற்றிய ஆய்வு” என்ற தலைப்பில் சமர்பிக்கிறார். சம்மா கம் லாட் என்ற முதன்மையான, இருப்பதிலேயே உயர்ந்த நிலையில் தேர்ந்த, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பலகலைகழகத்தில் முழு உதவித்தொகை பெற்ற மாணவியாக (இரண்டு மாணவிகள் மட்டுமே உள்ள வகுப்பு) சேர்கிறார். விடுமுறை நாட்களில் ஐரோப்பாவைச் சுற்றி பயணம் செய்கிறார்.
1956 பிப்ரவரி மாதம் கவிஞர் டெட் ஹ்யூக்ஸை சந்திக்கிறார்.
“சில இதழ்களில் டெட்டின் கவிதைகளை படித்திருக்கிறேன்; பிடித்திருந்தது அவரை சந்திக்க விரும்பினேன். ஒரு சிறிய விழாவில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தொடர்ந்து பல முறை சந்தித்தோம். டெட் கேம்ப்ரிஜ் பல்கலைக்கு திரும்பினார். ஒருவருக்கு ஒருவர் நிறைய கவிதைகளை பரிமாறிக் கொண்டோம்… சட்டென்று திருமணம் செய்து கொண்டோம். இருவரும் அவ்வளவு எழுதினோம்… இது இப்படியே தொடர வேண்டும்….
டெட் ஒரு பாடகன், கதைசொல்லி, சிங்கம், உலகம் சுற்றுபவன், கடவுளின் இடிமுழக்கம் போல குரல் கொண்டவன்”
ஜீன் 16, 1956-ல் லண்டனின் ஸேன்ட ஜார்ஜ் தி மார்ட்யர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். பாரீஸிலும் ஸ்பேயினிலும் தேன்நிலவு கொண்டாடினர்.
“உன் தெளிவான ஒளி உமிழும் கண்கள் போன்ற அழகான ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை அதை நான் காதலால் வண்ணங்களால் நிரப்ப வேண்டும்”
இருவரும் கல்லூரிக்குத் திரும்பினர். இந்த சமயத்தில் டெட்டிற்கு விய்ஜா பலகையை வைத்து ஆரூடம் பார்ப்பதிலும், சோதிடத்திலும் ஆர்வம் வந்தது. டெட் அதை சில நாட்கள் பயின்று வந்தார். தன் வாழ்வின் முடிவுகளை அதன் ஆரூடத்தின் பெயரில் எடுக்கத் தொடங்கினார். சில்வியாவும் கணவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று அதில் ஆர்வம் கொள்ள முயல்கிறார்.
1957-ல் இருவரும் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தான் பயின்ற ஸ்மித் கல்லூரியிலேயே பணியில் அமர்ந்தார் சில்வியா. ஆசிரியப் பணியுடன் சேர்ந்து எழுதுவதையும் தொடர்ந்து வந்தார். 1958-ல் பாஸ்டன் நகருக்கு மறுபடி இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் வரவேற்பாளாராக பணியில் சேர்ந்தார். இந்த இடமாற்றங்கள் எல்லாமுமே கணவன் டெட் ஹ்யூக்ஸின் வேலையின் நிமித்தமாக நடந்தவை.
சில்வியா எங்குமே தனக்கு வேண்டியதை அழுத்தமாகக் கூறிப் பெறமுடியாதவராக இருந்துள்ளார். கணவனுக்காக ஒவ்வொரு முறையும் தன் வாழ்வை, வேலையை மாற்றியமைக்க தயங்கவில்லை. ஒவ்வொரு முறையும் சில்வியா முதலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயதிற்கு உட்பட்டார். மேலும் ஒவ்வொரு இடப்பெயர்வும் தாங்கமுடியாத மன வாதையை அளித்துள்ளது. ஏற்கனவே மனச் சிக்கலில் உள்ளவர்களுக்கு ஒரு நிலையான இடமும் வேலையும் மிகவும் இன்றியமையாததாகும். ஒவ்வொரு முறையும் புது சூழலும் மனிதர்களும், தனது தகுதிக்கு சிறிதும் பொருந்தாத வேலையும் அவரது மன நோய் மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தன. ஆனால் விடாது ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே மீட்டெடுக்கவும் பெரு முயற்சிகள் மேற்கொள்கிறார். இங்கு ராபர்ட் லோவெல் நடத்திய வகுப்புகளில் சேர்ந்து தன் கவிமனதையும், இலக்கியச் செயல்பாட்டையும் தக்க வைத்துக் கொள்கிறார்.
உணர்வுப் பூர்வமான, சமகாலத்தைப் பேசிய லோவெல்(confessional poetry-இன் தந்தை) கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
“இந்த வாரம் எங்கள் வீடு விலைபேசப்பட்டது அந்நியர்களின் மத்தியில் விழித்தெழுந்தேன்; நான் ஒரு அறைக்குள் சென்றால் அது கூச்சத்தால் நெளிகிறது, சட்டென்று வெளியேறி வேறொர் அறைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது”
-ராபர்ட் லோவெல்
இந்தச் செஞ்சுவர் வலியில் ஓயாமல் நடுங்குகிறது சிவந்த கையொன்று முட்டியதால், திறந்து திறந்து மூடுகிறது.
-சில்வியா ப்ளாத்
சில்வியாவின் பல்வேறு கவிதைகளில் , அவர் தேர்ந்தெடுக்கும் பாடுபொருட்களில் லோவெலின் தாக்கத்தைக் காணலாம்.
இந்த வகுப்புகளில் சில்வியா ஆன் செக்ஸ்டன் என்ற கவிஞரையும் சந்திக்கிறார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். கவிஞர் லோவெல், ஆன் இருவரும் பின்னால் புலிட்சர் பரிசை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில்வியா, லோவொல், ஆன் ஆகிய மூவருமே இந்த வகைமை (confessional poetry) கவிதைகளின் பிதாமகர்களாக கருதப்படுகிறார்கள்.
லோவவல்லும் ஆனும் சில்வியாவை எழுதத்தூண்டுகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். சில்வியாவால் இவர்களிடன் மனம் திறந்து பேச முடிகிறது. தன்னுடைய மனச்சிக்கல்களைப் பற்றி வெளிப்படையாக உரையாட முடிகிறது. முன்முடிவுகள் ஏதும் இல்லாமல் சில்வியாவை, தன் மனதிற்கு பிடித்தமான செயல்களைச் செய்ய, தன்னியல்பாக எழுத உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த காலகட்டத்திலும், இதைத் தொடர்ந்தும் சில்வியாவின் கவிதைகள் வேறு வண்ணம் பூசிக் கொள்கின்றன. அவரது குரல் தயக்கமின்றி ஓங்கி ஒலிக்கிறது. அதுவரை பேசாத தனது அகமனச் சிடுக்குகளை, வெளிப்படையாக கவிதைக்குள் வைக்கிறார்.
“நான் காகிதத்தாலான லாந்தர் விளக்கு — என் தலை ஜப்பானியத் தாளால் செய்த நிலவு என் தோல் அடித்துத் தட்டையாக்கப்பட்ட பொன் அதி மிருதுவானது, விலைமதிப்பற்றது”
ஆண் கவிஞர்களின் அடியொட்டியே பெண்களும் எழுத வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்றும், சில்வியாவின் பெண்ணியப் பார்வை கொண்டு, ஆன்மாவிற்கு உண்மையாக எழுதுவதே சிறந்தது என்றும், அது சிலருக்கு உவப்பானதாக இல்லையென்றாலும் அதைப் பற்றிய கவலைக் கொள்ள அவசியமில்லை என்றும் ஆன் தான் சில்வியாவிற்கு நம்பிக்கைத் தருகிறார். கவிதை புலத்தின் வேறு வேறு தளங்களில் உலவ தைரியமூட்டுகிறார் ஆன். சில்வியாவின் கவிதைகளில் ஒலிக்கும் ஆளுமை மிகுந்த குரலை, கண்டடைய தனக்கு உதவியவர் ஆன்தான் என்று தனது டயரியில் சொல்லியிருக்கிறார். தான் ஒரு கவிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் உணரத்தொடங்கியதே ஆனை சந்தித்த பின்னர்தான் என்றும் சொல்கிறார்.
“நான் செங்குத்தானவள் ஆனாலும் கிடைமட்டமாக இருப்பதையே விரும்புகிறேன் … மீச்சிறு வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்கள் நிறைந்த இவ்விரவில் மரங்களும் பூக்களும் தங்கள் குளுமையான சுகந்தத்தை சிதறுகின்றன … இப்படிப் படுத்திருப்பதே எனதியல்பாக இருக்கிறது வானமும் நானும் இயல்பாக உரையாடுகிறோம் … மரங்கள் எனை தொடத் தோதாக பூக்கள் என்னுடன் பேச ஏதுவாக
இவர்கள் இருவர் தந்த ஊக்கத்தால் தனது கவி பயணத்தில் பல சோதனை முயற்சிகளை செய்ததாகவும், தன் பார்வையும், தனது எழுத்தின் தன்மையும் மாறியதாக குறிப்பிடுகிறார். எனினும் இது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
மறுபடியும் இடப்பெயர்வு செய்யவேண்டி வருகிறது. சில்வியாவும் டெட்டும் கனடா முழுவதும் ஊரூராக மாறி வசிக்கிறார்கள். தனது மனச் சிக்கலுக்கான சகிச்சையை மறுபடி தொடங்குகிறார். ஆனால் இந்த தொடர் இடப் பெயர்வுதான் தன்னை தனக்கே அறிமுகப்படுத்தியதாகவும் ஒரு கட்டத்தில் எழுதுகிறார் சில்வியா.
1959-ல் லண்டனுக்கு திரும்புகிறார்கள். 1960 ஏப்ரல் மாதம், முதல் மகள் ஃப்ரீடா பிறக்கிறார். அதே வருடம் அக்டோபரில் தனது முதல் கவிதைத் தொகுப்பான – The Colossus-யை பிரசுரிக்கிறார் சில்வியா.
1961 ஆம் ஆண்டு இரண்டாம் முறை கரு உண்டாகி அது கலைந்துவிடுகிறத. தனது மனநல மருத்துவருக்கு எழுதிய கடித்த்தில் கணவன் டெட் ஹ்யூக்ஸ் தன்னை இரு தினங்களுக்கு முன் அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“உங்களை பார்க்கப் பார்க்க அயர்ச்சியாக உள்ளது சுருக்கங்களுடன் தெளிந்த சிவப்பில் உதடுகளைப் போல அசைகிறீர்கள் இப்போது ரத்தம் வடியும் உதடுகள் ரத்தம் படிந்த பாவாடைகள்!”
அதே வருட ஆகஸ்ட் மாத்த்தில் தன்னுடைய நாவலான பெல் ஜாரை எழுதி முடித்துவிட்டார். லண்டனை விட்டு சிறு நகரமான டாய்டனில் குடி புகுகிறார்கள். இரண்டாவது மகன் நிக்கலஸ் 1962 ஜனவரியில் பிறக்கிறான். லண்டனுக்கு திரும்பிய காலம் முதலே அவரது கணவன் டெட் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இது நன்றாக அறிந்திருந்தும் சில்வியா, டெட் திருந்தி தன்னிடன் வருவார் என்று காதலோடு பொருமையாகக் காத்திருக்கிறார். ஆனால் வன்முறையும், விலகலும், அவமரியாதையும் வேறு பெண்களுடன் தொடர்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஜூன் 1962-ல் ஒரு சிறிய கார் விபத்தில் காயமடைகிறார் சில்வியா. இதைத் தனது டயரியில் தனது பல தற்கொலை முயற்சிகளில் ஒன்றெனக் குறிப்பிடுகிறார். அது விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என்று தெளிவாகத் தெரியவில்லை.
அந்நேரத்தில் டெட் ஆசிய வீவில் என்ற பெண்ணை காதலிப்பதாக சில்வியாவிடம் கூறுகிறார். 1962 செப்டெம்பரில் டெட் ஹ்யூக்ஸூம் சில்வியாவும் பிரிந்து வாழ முடிவு செய்கிறார்கள். (சட்டபூர்வமாக இல்லாமல், தங்களுக்குள் எழுதப்படாத உடன்படிக்கையாக)
அக்டோபர் மாதம் தொடங்கி தனது இறப்பு வரைக்கும் கவிதைப் பிசாசால் ஆட்கொண்டது போல கவிதைகளை எழுதிக் குவிக்கிறார். அவர் இறப்பிற்கு பின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ என்ற தொகுப்பின் பொரும்பான்மையான கவிதைகள் இந்த காலகட்டத்தில் எழுதியவையே. இத்தொகுப்பின் கவிதைகள் கலோசஸ் என்ற முந்தைய தொகுப்பின் கவிதைகளிலிருந்து முழுமையாக மாறுபட்டவை. தன் அகத்தை, அதன் அழுக்குகளை, மனதின் பிரத்யேகமான சிக்கல்களை, உணர்வெழுச்சிகளை, மனதின் அதலபாதாள வீழ்ச்சிகளை அவருக்கே உரிய பிரத்யேகP பாணியில் கவித்துவமாக வெளிப்படுத்திய தொகுப்பு “ஏரியல்”.
“இரவெல்லாம் இப்படியே நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவேன் யோசனையற்று வேகமாக உன் தலை கல்லாகும் வரை உன் தலையணை சிறு மைதானமாகும் வரை குளம்படிகள் உன்னுள் திரும்பத் திரும்ப எதிரொலிக்க…”
“இறப்பென்பது ஒரு கலை, எல்லாவற்றையும் போல அதில் கைதேர்ந்தவளாகி விட்டேன் அதை நரகமென்று உணரும் வகையில் செய்பவள் அதை உண்மையென்று உணரும் வகையில் செய்பவள்”
1962-1963 இன் கூதிர் காலம் மிகக் கடுமையானதாக இருந்தது. இங்கிலாந்தின் 100 வருடத்தில் அப்படி ஒரு குளிரை பார்த்ததில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வயதும் ஒன்பது மாதமும் ஆன, அடிக்கடி உடல்நலம் குன்றி அழுதுக் கொண்டும் இறுமிக் கொண்டும் இருக்கும் இரண்டு சிறு குழந்தைகளுடன், தண்ணீர் குழாயில் கூட நீர் வராமல், ஐஸ் கட்டியாக உரைந்து போயிருந்த கடும் குளிரில், தொலைபேசி வசதியில்லாத வீட்டில், அமெரிக்காவிற்கு அம்மா வீட்டிற்கு திரும்பிச் செல்ல பொருளாதார வசதியன்றி, தன் குழந்தைகள் பராமரிப்பிற்கு கூட பணம் தராமல் காதலியுடன் உல்லாசமாக பக்கத்துத் தெருவிலேயே வசிக்கும் டெட் ஹ்யூக்ஸை பற்றிய மன உளைச்சலுடன், தனது மனச்சிதைவிற்கும் மருத்துவம் பார்க்க இயலாத சூழலில் சில்வியா உலகின் கவிதைப் போக்கையே மடைமாற்றும், காலத்திற்கும் நிற்கும் மிக உன்னதமான கவிதைகளை தட்டச்சுசெய்துகொண்டிருந்தார்..
1963 ஜனவரியில் தன்னுடைய மருத்துவரிடம் பேசியுள்ளார். கடந்து எட்டு மாதங்களாக உணரும் கடுமையான மன உளைச்சலைப் பற்றி கூறியுள்ளார். தூக்கமின்னையாலும் பீடிக்கப்பட்டுள்ளார். தூக்க மாத்திரைகள் எடுத்தும் எந்த பயணும் இல்லாது இருப்பதை குறிப்பிட்டுள்ளார். பத்து கிலோ உடல் எடை குறைந்து காணப்பட்டுள்ளார். மருத்துவர் சில்வியாவின் தோழரும் கூட அதனால் தினமும் அவரைச் சென்று பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னாட்களில் டெட் ஹ்யூக்ஸ் அந்த மருத்துவரின் தப்பான சிகிச்சையே சில்வியாவின் இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் இறந்த செய்தி வரும் வரை டெட் சில்வியாவையோ தனது பிள்ளைகளையோ சென்று பார்க்கவில்லை. சில்வியாவின் தனது டயரி குறிப்புகளில் டெட்டை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது பற்றி எழுதி உள்ளார்.
எது எப்படியோ பெப்ரவரி 11, 1963 காலை ஒன்பது மணிக்கு அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது சில்வியா அடுப்பினுள் தலை வைத்த நிலையில் இறந்து கிடந்தார். அடுப்பின் வாயூ அடுத்த அறைக்கு போகாதவாறு துவாலைகள் டேப்புகள் கொண்டு இண்டு இடுக்குகளை அடைத்துள்ளார். அவருக்கு அப்போது 30 வயது. (ஆறு வருடங்கள் கழித்து ஹ்யூக்ஸின் காதலி ஆசிய வீவிலும் இதே போல அடுப்பை திறந்து விட்டு விஷ வாயுவினால் தற்கொலை செய்து கொண்டார்)
ஹெப்டோன்ஸ்டாலில் சென் தாமஸ் தி அபோஸில் ஆலய கல்லறைத் தோட்டத்தில் சில்வியாவின் கல்லறை உள்ளது.
அவரது மகள் ஃப்ரீடா ஹ்யூக்ஸ் ஓவியர் மற்றும் எழுத்தாளர். மகன் நிக்கோலஸ் மார்ச் 16, 2009-ல் அலாஸ்காவில் தற்கொலை செய்து கொண்டார். அவரும் தீவிர மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அறுபதுகளின் இறுதியில் அவரது தொகுப்பு கொலாசஸ் மற்றும் வேறு கவிதைகள் வெளிவந்த போதே சில்வியா பல விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் 1965 யில் பிரசுரமான தொகுப்பு ஏரியல் தான் உலகமெங்கும் அவரது புலமையை எடுத்துச் சென்றது.
“இது மூன்றாவது முறை என்ன ஒரு அவலம் ஒவ்வொரு தசாப்தத்தையும் அழித்து நிர்மூலமாக்குகிறேன்
ஆயிரம் வெளிச்ச இழைகள் வேர்கடலை கொரிக்கும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வரும்”
பத்து வயதில் ஒரு முறை, இருபதாவது வயதில் ஒரு முறை 30 வயதில் பலமுறைகள் என ஒவ்வொரு தசாப்தத்திலும் தான் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகிறார் லாசரஸ் அம்மையார் என்ற கவிதையில்.
“ஒரு வருடம் அல்ல ஏழு வருடங்களாக என் ரத்தத்தை குடித்த அந்த சாத்தான் உங்கள் அடையாளத்தைக் கொண்டிருந்தது”
அப்பா என்கிற கவிதையில் தன் தந்தையையும் கணவனையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
விடியல் கானம் என்ற கவிதை ஒரு கலைஞனின் வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் பற்றிய மிக உன்னதமான கவிதையாக இன்று வரை புகழப்படுகிறது
“காதலினால் உருவானவன் நீ தடித்த பொன் கடிகாரத்தைப் போல தலைகீழாகப் பிடித்து உன் பாதங்களை தட்டினாள் மருத்துவச்சி உணர்வற்ற உன் அழுகை இப்பிரபஞ்சத்தின் அங்கமானது….
சதுர ஜன்னல் வெளுத்து நட்சத்திரங்களை முழுங்குகிறது உயிரெழுத்தின் சுத்தமான ஒலிகள் ஒரு பலூனைப்போல மேலெழும்புகின்றன”
கவிஞராக பரவலாக அறியப்பட்ட சில்வியா ப்ளாத் கவிதைகளை மிஞ்சும் அளவு உரைநடைகளும் எழுதியுள்ளார். எண்ணிக்கையில் எழுவதிற்கும் அதிகமான பிரசுரிக்கப்படாத சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது தட்டச்சுப் பிரதியின் நகல்கள் இன்றும் பல நூலகங்களில் காணக்கிடைக்கின்றன. இந்தியானா பல்கலைக்கழகத்தின் லில்லி நூலகத்திற்கு சில்வியாவின் அம்மா அவ்ரீலிய ப்ளாத் வழங்கிய ஆவணங்களில் 70 சிறுகதைகள் 1960 யில் தொடங்கி அவரது இறுதி காலம் வரை எழுதியவை. அவரே எல்லாவற்றையும் நிராகரித்திருந்தார்.
பெல் ஜார் என்ற நாவல் வருவதற்கு முன் ‘stone boy with a dolphin’ என்ற நாவலின் பெரும்பான்மை பிரதி இன்றும் இருக்கிறது. பெல் ஜாரிற்கு பிறகு 130 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட, Double exposure என்று தலைப்பிடப்பட்ட நாவல் ஒன்று மர்மமான முறையில் 1970 களில் தொலைந்து போனது. டெட் அந்த நாவலின் 130 பக்கங்கள் மட்டும் உள்ளதென்று சில்வியாவின் இறப்பிற்குப் பின் சொன்னார். 2 வருடங்கள் போனதும் அதில் 60 பக்கங்கள் மட்டுமே உள்ளதென்றார். சிறிது வருடங்களுக்குப் பின் 20 பக்கங்கள் கூட இருக்காது அது நாவலாகவோ, சிறு கதையாகவோ மாற்ற முடியாத கரட்டு வடிவம் என்று கூறிவிட்டார்.
ஜானி பானிக் அண்ட் தி பைபில் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு டெட்டின் முன்னுறையுடன் 1977-ல் வெளியிடப்பட்டது. அதில்,
“இந்தத் தொகுப்பில் சில்வியா நிராகரித்த கதைகள் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன். அவர் தேர்ந்த கதைகள் சிலவற்றை நான் நிராகரித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“சில்வியா ஒரு கவிஞர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது அதுவும் அவரது வாழ்நாளின் கடைசி ஆறு மாதங்களில் எழுதிய கவிதைகள் மூலமாக மட்டுமே இன்றும் பேசப்படுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எழுதியுள்ளார் டெட்.
அதன் இரண்டாவது பிரசுரத்தில் மேலும் பல கதைகளையும் சேர்த்திருந்தார். தொகுப்பின் தலைப்பாக இருக்கும் சிறு கதையில் தன்னுடைய பதற்றத்திற்கு (panic) ஜானி என்ற பெயரிட்டு அதையும் ஒரு பாத்திரமாக சமைத்திருப்பார்.
“பயம்; அது ஒன்று மட்டுமே நம் காதலுக்குத் தகுதியானது பயத்தை காதலிப்பதே நம் ஞானத்தின் தொடக்கம் பயம் மட்டுமே நம் காதலுக்கு தகுதியானது பயம், பயம் மேலும் பயம் எல்லாவிடங்களிலும் பிரவகிக்கட்டும்”
“நான் தொலைந்து விட்டேன் என்று நம்பிய தருணத்தில் ஜானி பானிக்கின் முகம் விதானத்தில் பல வண்ணங்களில் மிளிர்ந்தது. அவனது தாடி மின்னலைப் போன்றது. அவனது கண்களில் மின்னல்; அவனது வார்த்தை பிரபஞ்சத்தில் உணர்வேற்றி ஒளியூட்டுகிறது. மின்னலை ஒளிவட்டமாகக் கொண்ட அவனது நீல நாக்குத் தேவதைகள் வெளியெங்கும் வியாபித்திருக்கிறார்கள். அவனது காதல் இருபது மாடி பாய்ச்சல், கழுத்தில் கயிறு, இதயத்தில் கத்தி. அவன் தனக்குண்டானவர்களை மறப்பதில்லை.
என்று அந்த சிறுகதையை முடித்துள்ளார். இதில் தன் பயங்களும், பதற்றங்களும் தன் வாழ்வை, எண்ணத்தை, எழுத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருப்பார்.”
1971-ல் வின்டர் ட்ரீஸ் மற்றும் க்ராசிங் த வாடர் என்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிடப் பட்டன. 1981-ல் தி கலெக்டெட் பொயம்ஸ் என்ற தொகுப்பை டெட் தன் திருத்தங்களோடு வெளியிட்டுள்ளார். இதில் 1956 முதல் இறுதி காலம் வரை அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் உள்ளன. 1982 ஆம் ஆண்டு இந்தத் தொகுப்பு புலிட்சர் பரிசு பெற்றது. சில்வியா இறப்பிற்கு பின் புலிட்சர் விருது பெற்ற முதல் படைப்பாளியாவார். ஆனால் 2006-ல் ஆனா ஜார்னி என்ற வர்ஜீனிய பல்கலைகழக மாணவி “ஆன்வி” என்ற சில்வியாவின் இதுவரை வெளிவராத சொனட் வகை கவிதை ஒன்றைக் (சில்வியா ஸ்மித் கல்லூரியில் இருந்த காலகட்டத்தில் எழுதியது) கண்டெடுத்தார். 2007-ல் அந்தக் கவிதை இணைய பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது.
சில்வியாவின் தாய் அவ்ரீலியா 1975-ல் அவரது கடிதங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து லெட்டர்ஸ் ஹோம்: கரஸ்பாண்டன்ஸ் 1950- 1963 என்று புத்தகமாக வெளியிட்டார். 1950 யிலிருந்த அவர் எழுதி வந்த டயரி குறிப்புகள் 1980-ல் டெட் ஹ்யூக்ஸின் திருத்தங்களுடன் தி ஜார்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத் என்று வெளியடப்பட்டன. ஆனால் அதில் சிலவற்றை டெட் தர மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
1959இல் சில்வியா குழந்தைகளுக்காக எழுதிய “இட் டஸன்ட் மேட்டர் சூட்” என்ற கதை 1996இல் வெளிவந்தது. 2003இல் அவரது வாழ்வு ஒரு திரைப்படமாக வெளிவந்தது. க்வினித் பால்ட்ரோ சில்வியா இன் பாத்திரைத்தை ஏற்று நடித்துள்ளார்.
1998இல் டெட் ஹ்யூக்ஸின் இறப்பிற்கு பிறகு 2000 தில் ஆங்கர் புக்ஸ் என்ற நிறுவனம் “தி அன்அப்ரிஜிட் ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத்” என்று டெட்டின் தலையீடு இல்லாமல் வெளியட்டது. இந்தப் புத்தக வெயீட்டை ஆங்கில இலக்கிய உலகு ஒரு உன்னத இலக்கிய செயல்பாடாக கொண்டாடியது. இதில் பாதிக்கும் மேல் புதிதாக வெளிவருபவை. முதல் முறையாக எந்தத் தணிக்கையும் இல்லாமல் சில்வியா என்ற மாபெரும் கவிஞரின், எழுத்தாளரின், மனுஷியின் உண்மையான முகத்தை உலகிற்கு காட்டிய நூல் இது.
சில்வியா ரேடியோவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு கவிஞர் எதற்காக நாவல் எழுதவேண்டும் என்று கேட்கப்பட்ட போது,
“கவிதை என்பது ஒரு கறாரான வடிவம் – ஒரு சர்வாதிகாரியைப் போன்றது இவ்வளவு தூரம் தான் செல்லலாம், இவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் இவ்வளவு இடம் தான் எடுத்துக் கொள்ளலாம் என்ற எழுதாச் சட்டதிட்டங்கள் நிறைந்தது. நான் ஒரு பெண். வெளிப்பார்வைக்கு அற்பமாகத் தோன்றுபவை, முக்கியமற்றவை, சாரமற்றவை எல்லாம் எனக்கு முக்கியம். அன்றாடங்களும், அன்றாடப் பொருட்களும் எனக்கு தேவை. உதாரணத்திற்கு பல்துலக்கியை எப்படி கவிதைக்குள் கொண்டு வர முடியும் ஆனால் நாவலில் பல்துலக்குதலை , பல்துலக்கியைப் பற்றி எழுதலாம். அதனால்தான் நாவல் எழுதினேன்”
என்று தேவையில்லாத கேள்விகளுக்கு பகடியாக பதில் தந்திருக்கிறார். அன்றாடங்களை தனது கவிதைகளில் பல இடங்களில் கையாண்டிருக்கிறார். அன்றாடங்களை உன்னதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
“ஒரு சோப்புக்கட்டி ஒரு தங்க மோதரம் ஒரு தங்கப் பல்
இச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன் செம்பட்டு கேசத்துடன்”
பெல் ஜார் நாவலில் “இங்கு நான் சந்திக்கும் ஒவ்வொருவரும், பெண்ணின் ஆளுமையை, நம்பிக்கையை, அவளடைந்த வெற்றிகளை குறைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆண்கள் செய்யும் மிகச்சாதாரணமானவற்றை எல்லாம் ஊதிப் பெருக்குகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் சில்வியா. இன்று வரை இந்த முரண்களும், இரட்டை மதிப்பீடுகளும் முழுவதுமாக நீங்கவில்லை. கேட்லின் மோர் எழுதிய “How to be a woman” மற்றும் டினா ஃபேயின் “Bossy pants” போன்ற சம கால நாவல்கள் சில்வியாவின் பெல் ஜார் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவையாக விளங்குவதிலிருந்து இதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது
“இறந்து பிறந்தவை இக்கவிதைகள் வாழவில்லை….. உயிரோடிருந்தால் நன்றாக இருக்கும் உயிரோடிருந்தவைகள்தாம் இப்போது இறந்துவிட்டன அவற்றின் தாய் கிட்டதட்ட இறந்துவிட்டாள் அவளது கவிதைகள் பொருளற்று விழிக்கின்றன அவளைப்பற்றி பேச மறுக்கின்றன”
மிகக் கொடூரமான தனது வாழ்வை மிக உன்னதமான கவிதைகளாக மடைமாற்றம் செய்கிறார்
“மடங்கிய விரலொன்றைப் போலத் தூங்கினேன்
நான் முதலில் பார்த்தது காற்று மட்டுமே வேறொன்றுமில்லை
…என் விரல்கள் கண்ணாடியைப் போல பளபளப்பாக வளர்ந்தன மார்ச் மாத மரங்களைப் போல கிளைத்துக் கிளைத்துப் படர்ந்தேன். வளர்ந்தேன்”
வசிக்கும் இடத்தின் நிலவியலே மனதின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது. மனதின் நிலவியலே எழுத்தின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது. மொழிதிறத்தாலும் கவித்திறத்தாலும் அற்புத ரசவாதங்கள் செய்து காலத்திற்கும் நிற்கும் கவிதைகளை உரைநடையைப் படைத்தது மட்டுமல்லாமல் நவீனக் கவி உத்திகளை கண்டெடுத்த சில்வியா, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட எட்டா உயரத்தின் உன்னத இலக்குகளை எட்டிப் பிடித்திருக்கிறார்.
அவரது ஆளுமையின் விஸ்தீரணமும், ஆழமும், கவித்திறனும் இன்னும் முழுதாக பேசப்படவில்லை என்பதே உண்மை.
***
அனுராதா ஆனந்த் – சென்னையில் வசித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இலக்கிய பங்களிப்புகளை மொழிபெயர்ப்புகளின் வழியேவும் நேரடிப் படைப்புகளின் வழியேவும் செய்துவருகிறார். இதுவரை ஒன்பது மொழிபெயர்ப்பு நூல்களும் “மயிற்பீலி” எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. அச்சிறுகதைத் தொகுப்பிற்காக ஜெயந்தன் விருது வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னஞ்சல்: anuradha_anand@yahoo.com
கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத் தொகுப்புகள், சிறார் கதைகள் தொகுப்பு ஒன்று, ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றன. கல்கி, தமிழ்வெளி போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். கார்த்திகாவை திரு. லக்ஷ்மணன் அவர்கள் வழியாக தெரியும். இவளுக்கு இவள் என்றும் பெயர் என்ற இவருடைய முதல் தொகுப்பு 2010-இல் வெளியாகியது. அதன் பின்னர் ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான், துமி, க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண், என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது, ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள் ஆகிய தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. கார்த்திகா இவற்றின் வழியே நவீன கவிதையுலகில் நீண்ட பயணம் செய்துள்ளார். அவருடைய தொகுப்புகளிலிருந்து நேர்காணல் செய்தால் நன்றாக இருக்குமென்று யோசித்தேன். அதன் வழியே எனக்கும் கார்த்திகாவுக்கும் மிக நல்ல உரையாடல் நிகழ்ந்தது அற்புதமானது. இதுவரை இவருடன் மிகவும் குறைவாகவே உரையாடியிருந்த நான் இவரை இப்போது அணுக்கமாக உணரத் தொடங்கி விட்டேன்.
கேள்வி:உங்கள் கவிதைகளை எங்கிருந்து தொடங்கினீர்கள்? இலக்கியத்துக்குள் நுழைந்தது எப்படி? சமகாலக் கவிதை உலகில் உங்கள் பயணம் எத்தகையது?
பதில்: கவிதை எழுதத் தொடங்கியது எப்போது என்றால், பதினைந்து வயதில் பள்ளிக்கூடங்களுக்கிடையே நடந்த ஒரு போட்டிக்காக எழுதியபோதுதான். ஆனால், கவிதைகளில் ஈடுபாடு வந்தது எப்போது என்று சொல்லவேண்டுமெனில் அதற்கும் மிக இளம் வயதில், முதன்முதலாகப் பள்ளியில் சேர்ந்தபோது என்று இப்போது தோன்றுகிறது. Prodigy என்பது போன்ற நோக்கில் இதைக் கூறவில்லை. உங்கள் கேள்விகளை வாசித்தபோது என் வாழ்வில் வெகுதூரத்துக்கு அவை என்னைத் திரும்பிப் பார்க்கவைத்தன. அதை வைத்தே கூறுகிறேன்.
முதன்முதலாகப் பள்ளியில் என்னைச் சேர்த்தபோது – அந்த விஜயதசமியில் பள்ளியில் சேர்ந்த ஒரே குழந்தை நான்தான். மற்றவர்கள் ஓரிரு மாதங்களாக ஏற்கெனவே வரத் தொடங்கியிருந்தார்கள். அரிச்சுவடி தொடங்கிய நாள், ஒரு விளையாட்டு போலச் சென்றுவிட்டது. ஆனால், நிஜமாகப் பள்ளிக்குச் செல்லவேண்டிய நாளில், நானும் பல குழந்தைகளைப் போலவும், அழுதும் புரண்டும் வகுப்புக்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினேன். என்னை வாசற்படியிலேயே அமர சுந்தரவல்லி டீச்சர் அனுமதித்தார். எனக்கு என்ன வேண்டும், ஏன் அழுகிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அவரிடம் சொன்னேன். எதற்கென்று கேட்டார். தண்ணீர் குடிக்க என்று சொன்னேன். அதற்காக என்னை அனுப்பிவிடுவார் என்று எண்ணியதை நினைத்தால் இப்போது சிரிப்பாக வருகிறது. ஆனால், அன்று மெய்யாகவே அவ்வாறு நம்பினேன். அவர் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு, அவர் நீரருந்த வைத்திருந்த செம்பிலிருந்து எனக்கு நீர் புகட்டினார். அக்கணத்திலிருந்து எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. மறுநாளிலிருந்து நான் பள்ளிக்குப் போக விரும்பிய முதல் காரணம் அவர் என்றால், இரண்டாவது காரணம் பள்ளியில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல். நான்காவது, ஐந்தாவது படிக்கும் அக்காக்களும், அண்ணன்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்று பாடும் பாடலை, மற்ற குழந்தைகள் எங்கள் வகுப்பில் நின்று பாடவேண்டும். அப்படி அத்தனை பேர் ஒன்றாகச் சேர்ந்து பாடியதை முதன்முதலாகக் கேட்டபோது எனக்கு அது ஏதோவொரு மிகப் பெரிய அதிசயமான விஷயமாக இருந்தது.
‘நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’ என்கிற பாடல். அது நாவுக்கரசர் தேவாரம் என்பதோ, அதன் பொருளோ அப்போது தெரியாவிட்டாலும், அதைப் பாடுகையில் எழும் ஓசைநயம் என்னை ஈர்த்திருக்கிறது என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.
அது போல, என் அம்மா பூஜை செய்யும்போது பாடும் பாடலின் இரு வரிகள் என்னை மிகவும் ஈர்ப்பவை. ‘சொல்லுக் கடங்காவே பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்’, ‘சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்’ – இவ்விரண்டு வரிகளும் எப்போது வருமெனக் காத்திருப்பேன். சில நாட்கள் நேரமில்லாவிடில், சஷ்டிக் கவசத்துடன் நிறுத்திக் கொள்வார். ஆனால், இந்தப் பாடல் பாடினால்தான் ஆயிற்று என்று நான் அடம்பிடித்து அடியும் வாங்குவதுண்டு. அந்த அளவுக்கு ஏனோ இவ்விரண்டு வரிகளும் என்னை ஆட்படுத்தியிருந்தன. பின்னால்தானே தெரிந்தது, அது பாரதியின் மாயமென்று.
அப்போதிலிருந்து, பாடப் புத்தகங்களில் இருக்கிற செய்யுள்களும் காப்பியப் பாடல்களும், சங்கப் பாடல்களும் மதிப்பெண்களுக்காக என்பதைத் தாண்டி மிகவும் விரும்பிப் படிப்பேன். நாமும் அதுபோல் எழுதவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன். எவ்வளவோ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கவிதை இப்போதும் நம்மை இவ்வளவு ஊன்றி வாசிக்க வைக்கிறதே… இதுபோல் நாமும் செய்யமுடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியிருக்கிறேன். உண்மையாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றி, அது ஒரு ஆசை என்கிற அளவில்தான் அப்போது இருந்தது. போட்டிக்காக எழுதிய கவிதைகூட, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பள்ளிக்குப் பரிசுகளை வாங்கியிருந்த காரணத்தால், இதையும் என்னால் செய்யமுடியும் என்று எங்கள் தலைமை ஆசிரியை ஊக்கிய ஒரே காரணத்தால் எழுதியதுதான். தொடர்ச்சியாக எழுதிப் பழகத் தொடங்கியது, ஒரு சுயநலத்துக்காக என்று சொல்லலாம்.
பொறியியல் படிப்பில் சேரவிருந்த சமயம், குடும்பச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடியால், பள்ளியிறுதியுடன் படிப்பைக் கைவிடும் நிலை. வேலையில் சேர்ந்துவிட்டேன். நிறையப் படிக்கவேண்டும், ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்ளவேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டுகொண்டிருந்த பெண் நான். இந்தத் திடீர் நிகழ்வுகள், மாற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன. மிகவும் தனியாக உணர்ந்தேன். உள்ளொடுங்கிப் போனேன். உடலும் நலிந்தது. அதனால் அல்ஸர் பிரச்னை ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சையளித்த மருத்துவர் என் பின்னணியைக் கேட்டபிறகு சொன்னார்,
‘நண்பர்கள் மட்டும்தான் நண்பர்கள் என்று இல்லை. நீ யாருடனாவது பேச வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைப்பதை ஒரு குறிப்பேட்டில் எழுது. பிறகு அப்படியே தொடர்ந்து எழுதிக்கொண்டிரு’ என்றார்.
அவர் சொன்னபடியே, நெஞ்சை முட்டும் உணர்வுக் கொந்தளிப்பு ஏற்படுகையில் எல்லாம் எழுதி வைக்கத் தொடங்கினேன். அது எனக்கு ஒரு ஆசுவாசம் அளிப்பதை உணர்ந்தேன். பின்னர், தொலைநெறியில் தமிழிலக்கியம் பயிலத் தொடங்கியபோது, தீவிர இலக்கியம் அறிமுகமாயிற்று. அதன் தாக்கத்தால், எழுத வேண்டும் என்ற ஊக்கம் அதிகரித்தது.
எம்.ஃபில்., முடித்திருந்த சமயத்தில் கல்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. நிறைய படைப்புகளை வாசிக்கவும், அவற்றை பத்திரிக்கைக்காகத் திருத்தவும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே காரணிகளாக அமைந்தன.
சமகாலக் கவிதையுலகில் என் பயணம் எத்தகையது என்று கேட்கிறீர்கள். அதை ஒரு பயணம் என்று கொண்டால், அதிகம் கவனம் ஈர்க்க விரும்பாத ஒரு அமைதியான வழிப்போக்கி நான் என்று நினைக்கிறேன். எனக்கு நானே சொல்லிக்கொள்வதையே பல வேளைகளில் எழுதி வைக்கிறேன். ‘சத்தமாகச் சிந்தித்தல்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் இருக்கிறதே… அதுபோல், நான் எழுதிச் சிந்திக்கிறேன் என்று சொல்லலாம். அப்படி எழுதி முடித்ததோடு, எனக்கு அதனோடு ஒரு தொடர்பும் இல்லாமலாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில், என் எழுத்து பிரசுரமாகி, அது சில மனிதர்களைத் தொட்டுவிடவும் செய்யும்போதுதான், அது எனக்கு மட்டுமானதில்லை என்கிற ஒருவித… அதை எப்படிச் சொல்வது… பொறுப்புணர்வு என்று சொல்லலாம்… – அல்லது ஒரு வித ஆச்சர்யம் என்றும் சொல்லலாம்.
கவிதைகள் நம் மொழியில் அதிகம் எழுதப்படுகின்றன. நானொருத்தி கவிதை எழுதுவதாலோ எழுதாததாலோ பெரிதாக ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும், நான் எழுதுகிறேன். எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.சிலவேளை, தொடர்ந்து பல மாதங்கள்கூட எழுதாமல் இருப்பேன். சொல்லப்போனால், என் முதல் தொகுப்புக்கும், இரண்டாவது தொகுப்புக்கும் இடையே பத்தாண்டுகள் இடைவெளி. ஆனால், எழுதாமல் இருக்கும்போதும், சில சமயம் எழுதுவதைப் பற்றியே சிந்தனை இருக்கும். பழக்கத்தாலோ என்னவோ… எங்கே சுற்றியும் எழுத்திடம்தான் நான் திரும்பிவர வேண்டியிருக்கிறது. தொகுக்கப்படுவதோ, வெளியிடப்படுவதோ குறித்து நான் எண்ணுவதேயில்லை. எழுத்து என் மனசின் வீடு. அது அங்கே திரும்பி வருவது இயல்பு. அதற்கு வேறு ஒரு பிரகடனமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
கே:பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கின்றீர்கள், சமகால இலக்கிய இதழ் ஒன்றில் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கின்றீர்கள். இதன் பொருட்டு படைப்பாளிகள் பலரின் கவிதைகளை, தேர்ந்தெடுக்கும் பொருட்டும் மெய்ப்பு பார்க்கும் பொருட்டும் வாசிக்க வேண்டியிருந்திருக்கும். இவை உங்கள் கவிதைகளை எவ்வாறு பாதிக்கின்றன? குறிப்பாக அயல் தேசத்துக் கவிதைகள் உங்கள் கவிதைகளை எப்படி மாற்றுகின்றன? வசந்தகால கான்லெஸ், முராகமியின் கண்ணாடி போன்ற கவிதைகள், கிழவனும் கடலும் கதையை கவிதையாக்கியிருப்பது, கின்ட்ஸுகி என்ற ஜப்பானியக் கலையில் உடைந்த பாண்டங்களை மீட்டுருவாக்கம் செய்வது போல உங்களை நீங்களே வனைந்து கொள்வதைக் கவிதையாக எழுதியிருப்பது அபாரமானது. உங்களின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று ‘கின்ட்ஸுகியும் ஒரு பாண்டமும்’. இவையெல்லாம் கவிதையுள் வந்தமர்ந்தது தற்செயலானதா?
ப: ஆசிரியர் குழுவில் இருந்தாலும், பிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்போது, முதலில் ஒரு வாசகியாகவே அவற்றை வாசிப்பேன். கவிதையின் சமகாலப் போக்குகள் குறித்த ஒரு கண்ணாடியாக அவை இருக்கும். அயல்தேசத்துக் கவிதைகளாயினும், கலாசார வேறுபாடுகள் தவிர்த்து, கவிதை மொழி எவ்விதம் இயங்குகிறது என்பதே என்னை அதிகம் ஈர்க்கும். அவை என் கவிதைகளை நேரடியாகப் பாதித்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஆனால், கவிதையில் சாத்தியங்கள் குறித்த புதிய எண்ணங்களை அவை தந்திருக்கின்றன. புதிய முறைகளில் எழுதிப் பார்க்கும் உத்வேகம் அவை மூலம் சில சமயம் கிட்டுகின்றது.
கிழவனும் கடலும், முராகமியின் கண்ணாடி போன்றவை சில அனுபவங்களால் தூண்டப்பட்டவை. முராகமியின் கண்ணாடி, என் மகள் பிறந்திருந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு வினோதமான சுவாரஸ்யமான அனுபவத்தால் தூண்டப்பட்டது
கிழவனும் கடலும் கவிதை முதலில் ஒவ்வொரு பகுதியாக, பலமுறை எழுதப்பட்டது. ஒரு முறை, அந்த நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ கைமறதியாக வைத்துத் தொலைத்துவிட்டேன். அப்போது, முதல் பகுதி, ‘கிழவனை எங்கோ கடலோடு தொலைத்துவிட்டேன்…’ என்று சில வரிகள் எழுதியிருந்தேன். பின்னர், தற்செயலாக, காரின் முன்னிருக்கையின் பின்னாலிருந்த பையில் வைத்திருந்தது, திரும்பக் கிட்டியது. அத்தோடு, அது கவிதையாகும் உத்தேசம் நின்றுவிட்டது.
பிறகு, சில வாரங்களுக்குப் பின், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த துக்க சம்பவம் நேரிட்டது. அது நிகழ்ந்த நான்கு தினங்களுக்குள், டைட்டானிக்கின் மூழ்கிய பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகிய துக்க சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுமே, கற்பனைக்கெட்டாத தீவிரத் தன்மை கொண்ட நிகழ்வுகள்தான்; என்றாலும், சில ஊடகங்கள் அவ்விரண்டு நிகழ்வுகளையும் அணுகியதிலிருந்த பாரபட்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக எழுதப்பட்ட, அகதியும் கடலும் கவிதையின் பின்னணி இதுதான். தற்செயலோ அல்லது ஆழ்மனவோட்டத்தின் விளைவோ… இவ்விரண்டு கவிதைகளும், intertextual படைப்புகளாக, வேறு பிரதிகளின் மேலாக அமைந்துவிட்டன.
ஆனால், வசந்தகால கான்லெஸ் மற்றும் கின்ட்ஸுகியின் கதை வேறு. ஓவியம் மற்றும் புகைப்படக் கலை, நிட்டிங் மற்றும் அது போன்ற பல்வேறு கைவினைக் கலைகளில் இருக்கும் ஈடுபாட்டால், அவை தொடர்பான சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். அதில் ஒரு குழுவில்தான் கின்ட்ஸுகி குறித்த ஒரு சிறிய கட்டுரையை வாசித்தேன். வாசிக்கும்போதே, ஏனோ, அது மனித மனங்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. எவ்வளவு தீவிரமான விளிம்பில் நிற்கும்போதும், எப்போதும் தீர்வுகளில் நம்பிக்கை கொண்டவள்தான் நான். அதனால், எனக்கு அந்தக் கலை ஒருவித மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளித்தது. அதன் அடையாளமாகவே அதை எழுதினேன்.
வசந்தகால கான்லெஸ், யுகேயில் வசிக்கும் ஒரு தோழி கெல்லி மென்ஸிஸின் அனுபவத்தினால் ஏற்பட்ட தாக்கம். புதிய உடைகள் வடிவமைக்க நிட்டிங் பாட்டர்ன்களை எழுதும்போது, அது பலதரப்பட்ட உடலமைப்புக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு அளவுகளுக்கு சிறுசிறு மாற்றங்களுடன் எழுதுவோம். அப்படி எழுதிய புதிய பாட்டர்ன்கள் சரியாக உள்ளனவா எனச் சோதிக்க இதுபோன்ற சிறு குழுக்களில் அழைப்பு விடுப்போம். நேரமிருக்கும் பிற உறுப்பினர்கள் அவர்கள் பாட்டர்ன்களைப் பின்னிப் பார்த்து, அது பிழையின்றி இருக்கிறதா என உறுதிசெய்வோம். அப்படி பாட்டர்ன்களைப் பகிரும்போது, அது போல் ஒன்றை வடிவமைக்க எது தூண்டுதலாக இருந்தது போன்ற விவரங்களைப் பதிவிடுவோம். அப்படித்தான், கெல்லி அந்த வயல்களைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து, அதிலிருந்து அந்த பாட்டர்ன் வடிவமைக்க, தமக்கு யோசனை தோன்றியதைக் கூறியிருந்தார். அருமையான படங்கள் அவை! அவற்றோடு அவர் அந்தக் காட்சி குறித்து வர்ணித்திருந்த விதம் என்னையே கெல்லியாக மாற்றிவிட்டது. அவர் வளர்ந்த இடத்தினருகேதான் இந்த கான்லெஸ் நதி ஓடுகிறது. கெல்லியை கான்லெஸ்ஸினருகே எண்ணிப் பார்த்தபோது, அதை ஒரு கவிதையாக மாற்றி அவருக்குப் பரிசளிக்கத் தோன்றியது. தமிழில் எழுதி, ஆங்கிலத்துக்கு மாற்றி அவருக்கு அனுப்பி வைத்தேன். பின்னர், தமிழ் வடிவம் ஒரு இதழிலும் பிரசுரமானதால், தொகுப்பிலும் இடம்பெற்றுவிட்டது. இதுதான், வசந்தகால கான்லெஸ் இங்கு வந்த பின்னணி.
இவ்வாறான அனுபவங்களும், அயல்தேசக் கலைகளும், intertextual முயற்சிகளும் – என் கவிதைகளில் வந்து சேரும்போது, முன்னரே சொன்னது போல், என் எழுத்தில் புதிய சாத்தியங்களைக் காட்டுகின்றன. சில சமயம், இவற்றை நான் எழுதினேன் என்று அல்ல, இவை தம்மைத் தாமே எழுதிக்கொண்டனவோ என்று தோன்றும். ஒருவேளை, இவை நானறியாமல் என்னில் சில புதிய பரிமாணங்களையும் உண்டாக்கி இருக்கலாம்.
கே:‘பழைய பகல்களின் வெளிச்சம் – என் / பால்யத்தின் வெளிச்சம்.’ உங்கள் கவிதைகளில் பால்யத்தில் வாழ்ந்த அனுபவித்த விஷயங்களின் மயக்கம் அல்லது கடந்த கால நினைவுகளில் அலைவுறும் நிகழ் காலத்தின் நிதர்சன ஏக்கங்கள் நிறைந்திருக்கின்றன. ‘ஏழாம் பக்கத்தில் எப்போதும் இளமையாக இருக்கும் ஊர்’ – இது ஏக்கத்தின் சாயலா இல்லை கடந்தகாலத்தின் மகிழ் தருணத்தில் உறைந்த கணத்தை மீட்டெடுக்கும் முயற்சியா? ‘இனி எப்போதும் நனைய முடியாத கடந்தகால மழை’ என்ற துயரம் ‘இன்றின் மழையை எப்படிக் காண்பது’ என்ற பயமாய் ஏன் மாறுகிறது? இப்படி நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் அலைவுறுதலை பல கவிதைகளிலிருந்து எடுத்து சொல்லி விடமுடியும். அந்த அனுபவங்கள் சார்ந்து சொல்ல முடியுமா? காலம் ‘ஊஞ்சல் போல பின்னாலும்/ ஒருமுறையேனும் வரக்கூடாதோ!’ என்ற ஏக்கம் எப்போதிருந்து தொடங்கியது?
ப: காலம் பின்னால் வரக்கூடாதா என்ற அந்த ஏக்கம் மிக இளம்வயதிலேயே இருந்திருக்கிறது. அப்படி ஏற்பட முக்கியமாக இரண்டு சூழல்கள் காரணமாக அமைந்தன. என் பத்தாவது வயதில், வீட்டில் நிறைய நேரம் நான் தனியாக இருக்கவேண்டிய சூழல் திடீரென ஏற்பட்டது. அது எனக்கு எதிர்கொள்ளத் தெரியாத பெரும் அதிர்ச்சியாக இருந்தது அப்போது.
நான் ஆறாவது வகுப்பில் சேர்ந்த சமயம், பள்ளிக் கட்டிடங்கள் பற்றாக்குறையால், ஏழாவதும், ஆறாவதும், பகுதி நேர வகுப்புகளாக நடந்து வந்தன. அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அக்கா பள்ளி சென்று விடுவார். நான் மத்தியானம் பள்ளிக்குச் செல்லும் வரை வீட்டில் தனித்திருக்க வேண்டும். அது என்னை மிக மிக பாதித்தது. பாதுகாப்பான வளவில்தான் குடியிருந்தோம் என்றாலும், எனக்கு மிகுந்த அச்சமும் பதற்றமுமாகவே இருக்கும். எனக்கு எப்படியிருக்கிறது என்று கேட்கவோ, கவனிக்கவோ யாருக்கும் நேரமில்லை. நானே தலை சீவி, உணவு எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு, தனியாக எப்படியோ நேரத்தைக் கடத்தவேண்டும். சில சமயங்களில், முன்னர் எங்கள் வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த மகமாயி என்கிற ஆச்சி வருவார். அவரைக் கண்டால் போதும், அவர் மடியில் விழுந்து அழத் தொடங்கிவிடுவேன். அவர் என் அழுகையை அமர்த்தி, எனக்குத் தலை சீவி விட்டு, உணவு பிசைந்து கையில் போட்டு என்னைச் சாப்பிட வைப்பார். நான் அவரோடு அவர் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று அழுது அடம்பிடிப்பேன். ‘ஒரு வருஷம்தானே… சரியாப் போயிடும் பாரு’ என்று ஆறுதல் சொல்வார். எனக்கு இன்னும் ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கக் கூடாதா… அல்லது அதற்கும் முன்னால் போய் முதலிலிருந்து மறுபடியும் வளரக் கூடாதா என்றெல்லாம் இருக்கும்.
அடுத்தது, என் பன்னிரண்டாவது வயதில், எங்கள் அம்மா எங்களைப் பிரிந்து தனித்துச் சென்றபோது. அம்மாவுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்கலாம்; ஆனால், அம்மா என்னைத் தேடவேயில்லை, என்னைப் பிரிந்து அவரால் இருக்கமுடியும் என்பது, அந்தச் சிறு வயதில் எனக்கு மிகுந்த துயரைத் தந்தது. எப்படியாவது, ஏதாவது நடந்து எங்கள் வாழ்க்கை முதலிலிருந்து மீண்டும் மகிழ்ச்சியாகத் தொடங்கக்கூடாதா என்ற தீராத ஏக்கம் அப்போது ஏற்பட்டது. அப்படி நாங்கள் திரும்பிப் போகவென ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அந்த நாளில், விடிகாலையில், அம்மாவும், அப்பாவுமாக என்னையும், அக்காவையும் பள்ளியில் கொண்டு விட ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றனர். வீட்டுக்குள் காலை வெயில் வந்து கொண்டிருக்கிறது. வானொலியில் ஏதோ பாட்டு. நான் சீருடை அணிந்துகொண்டு ஜம்மென்று நிற்கிறேன். கனவின் வெளிச்சத்தில் போல் ஒரு மயக்கப் பளபளப்புடன் அந்த நாளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். நான் திரும்பிப் போய் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க விரும்பும் நாட்களில், அந்த அழகிய காலைக்குத்தான் முதலிடம்.
நினைத்துப் பார்த்தால், என் மனசின் ஒரு பகுதி என் சின்ன வயசிலேயே தங்கிவிட்டது என்று தோன்றுகிறது. அதை என்ன செய்தும் நிகழ்காலத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. அங்கே ஏதோ தீராத கணக்கு ஒன்று அதற்கு இன்னும் இருக்கிறது. என்னவோ நிகழ்ந்து, ‘உம்… நீ இனி அடுத்த கட்டத்துக்குச் செல்’ என்று என்னை என்னிடம் அனுப்பி வைக்கும் அதிசயம் எதுவோ அங்கே இன்னும் நிகழக் காத்திருக்கிறது. ரொம்ப இனிப்பாக, ரொம்பக் கசப்பாக, ரொம்ப வெளிச்சமாக, ரொம்ப இருட்டாக, வேறு எங்கும் கிட்டாத ஒரு குளிர்ச்சியும், அமைதியும் அங்கே இருக்கின்றன. அதற்காகவே நான் அங்கே மீண்டும் மீண்டும் திரும்பிப் போகிறேன்.
‘மண்டவெல்லமொன்றைத் தன்னந்தனியாகப் புற்றுக்கு உருட்டிப் போகும் ஓரெறும்பு நான்’ என்று ஒரு வரி எழுதியிருக்கிறேன் அல்லவா… என் மண்டவெல்லம்தான் என் பால்யம். அதை என்னால் என்னோடு உருட்டிக்கொண்டு வர முடியவில்லை. அதனால், என் ஞாபகங்களுக்கு அடிக்கடி சென்று அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துப் பார்த்துத் தீர்க்கப் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
ஆனால் ஒரு விஷயம். ‘என் ஊர்’ எழுதியதற்கும் இந்த ஏக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ஊர் என்று குறிப்பிட்டிருப்பது, இரண்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் நான் படித்த ‘என் ஊர்’ என்ற பாடத்தை. அது இடம்பெற்றிருந்தது, ஏழாம் பக்கத்தில். அதில் ஒரு அழகிய ஓவியமும் இடம்பெற்றிருக்கும். வரிசையாக ஓட்டு வீடுகள் அமைந்த ஊரின் பறவைப் பார்வை ஓவியம் என்று சொல்லலாம். நான் அப்போது அந்த ஓவியத்தை, என்னுடைய அம்புப் பெரியம்மை இருந்த மீனாட்சிபுரத்தின் படம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது மட்டுமென்ன, இப்போதும் அப்படித்தான் எண்ணுகிறேன். அதை என் ஊர் என்று உரிமையாக எண்ணக் காரணம், அவர்கள் வீட்டில் அடிக்கடி நின்று வளர்ந்தது மட்டுமல்ல; தாமிரபரணி நாங்கள் வசித்த டவுனை விட, அவர்கள் ஊருக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்ததும்தான். ‘என் ஊர்’ – மகிழ்ச்சியான ஞாபகங்களின் அடையாளம்.
மகிழ்ச்சியோ, துக்கமோ… அலையடித்து ஓய்ந்ததும் ஞாபகங்களாகக் கரைசேர்கிற சிப்பிகள்தானே… அவற்றைச் சேர்த்து வைத்து அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வதும் இயற்கைதானே..!
கே:உங்கள் பல கவிதைகளில் காட்சிப் படிமங்கள் அபாரமாய் அமைத்தெழுதப்பட்டிருக்கின்றன. சூரியனைக் கிழிக்கும் கட்டுமரம், சூரிய வெளிச்சத் துண்டுகளை ஏந்தி வரும்/ ஏந்திச் செல்லும் கடலலை, கடலில் செதில் செதிலாய் உதிரும் சூரியன், ‘துடிக்கும் மணிக்கழுத்தை/ அடிக்கடி அடிக்கடி திருப்பி/ இறகுகள் கோதிக்கொள்ளும்’ புறாக்கள், இது போன்றவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதை நீங்கள் பார்க்கும் போதே எழுதுவீர்களா அல்லது காட்சி ஆழ்மனத்தில் புதைந்து கொண்டு பின் எப்போதேனும் கவிதையாகி வருமா? மேலும் ‘சைக்கிள் பூட்டை மெதுவாக விடுவித்து/சத்தமின்றி உருட்டித் திருப்பி/ஒற்றைக் காலால் மிதித்து/உருளத் தொடங்குகையில்/ஏறியமர்ந்து செல்ககையில்/ஒரு பூ காற்றில் செல்வதுபோல் இருக்கும்’ இது போல பால்யத்தில் கண்ட காட்சிகளை, அந்த வயதில் பயம் கொண்டதை கவிதைக்குள் ஏற்றியிருப்பது எப்படி நிகழ்ந்தது? ‘இரண்டு மஞ்சள் யானைகள்…/எடுத்து உயர்த்தவும்/இடித்து நகர்த்தவும்/ எங்களாலாகுமென்று/இரும்புத் துதிக்கை நீட்டி முழக்கும்/இயந்திர யானைகள்’ – JCB வாகனங்களை யானையாகவும், இந்த நகரத்தை கான்கிரீட் காடாகவும் பார்த்த பிரமாதமான சித்திரம் இயற்கையின் மீது உங்களுக்கு அக்கறையைப் பேசுகிறது. இயற்கைக்கும் உங்களுக்குமான பிணைப்பை இது போல இன்னும் சிலவற்றிலிருந்தும் காட்ட முடியும். இதெல்லாம் கவிதையுள் எப்படி சாத்தியமாகிறது?
ப: இவ்வளவு விஷயங்கள் ஒரு கோணத்தில் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட ஒரு கேள்வி. ஒவ்வொன்றாகப் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். முதலில் காட்சிகள், காட்சிப் படிமங்கள் பற்றி. காட்சி ஞாபகங்கள் எப்போதும் எனக்கு அதிகம். எதுவுமே காட்சியாக என்னை மிகவும் தாக்கும்; ஆழமாகப் பாதிக்கும். சிறு குழந்தையாக இருந்த சமயத்தில் நிகழ்ந்தவை கூட எனக்கு ஞாபகத்தில் உள்ளன.
நான் அதிகம் சேட்டை செய்யும் குழந்தை; வேலையாக இருக்கும் நேரங்களில் என் அம்மா எப்போதும் ஒரு தூணில் என்னைக் கட்டிப் போட்டிருப்பார். ஒரு ஓட்டுக்கையின் உள்புறம் அமைந்த தூண்களில் ஒன்று. அதற்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு வெளி தார்சால்; முற்றம் என்று சொல்வது போல். அந்தத் தூணில் இருந்து, வீட்டுப் பட்டாலையைப் பார்க்கலாம்; ஓட்டுச் சாய்வுக்குள், தூணுக்கு எதிரில், தண்ணீர் நிரப்பிய கொப்பரைகள் ஒரு கல் சுவரின் கீழே வரிசையாக இருக்கும். அதில் வெயில் சாயும்போது, கற்சுவர்களில் அழகழகாக வெளிச்சம் வட்டமிடும். அதையே பார்த்துக்கொண்டு இருந்த ஞாபகம் இருக்கிறது. அந்தக் கற்சுவரின் மென்பச்சை கலந்த பழுப்பு நிறமும், அதில் கிட்டுகிற குளிர்ச்சியும்கூட இதை எழுதும்போது என்னால் உணரமுடிகிறது.
அது போலவே, வானத்தையும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். வானின் நீலமோ, அல்லது மேகங்கள் விதவிதமாகப் போவதோ, கீச்சிட்டுக்கொண்டே மிதப்பது போல் பறக்கும் கழுகு, கருடன் போன்ற பறவைகளோ… எதன் மீது ஈர்ப்பென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று ஞாபகம் இருக்கிறது. எப்போதாவது நமக்கும் இறக்கைகள் முளைக்கும்; அப்போது நாமும் இந்தப் பறவைகள் போல மேலேயிருந்து கீழே பார்க்கலாம் என்பது போல் பின்னர் சில சமயங்களில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்திருக்கிறது.
இதுபோல் பல ஞாபகங்கள், காட்சிகளாகவே எனக்கு உள்ளன. எங்கள் பக்கத்து வீட்டுத் தட்டி ஆச்சியுடன் எனக்கு ரொம்ப சிநேகம். தினமும் ஒருமுறையாவது அவர் வீட்டில் போய், அவர் கையால் அச்சு வெல்லம் வாங்கித் தின்பேன். அவர் என் அம்மா ஏசுவார் என்று மறுப்பார். இருந்தாலும், நான் முரண்டு பிடித்து வாங்கித் தின்னுவேன். அப்படியொரு முறை, ஆச்சி எனக்கு வெல்லம் தந்துகொண்டிருந்தபோது, என் அம்மா ஆச்சி வீட்டின் ஒரு மூலையில் தட்டியை விலக்கிக்கொண்டு, வெளியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு புன்னகை. எனக்கு ‘அம்மா ஒன்றும் கோபப்படவில்லை’ என்ற ஆசுவாசம் ஏற்பட்டது. இது போல் காட்சிகளாக ஞாபகங்கள் பதிவதால், பின்னர் எப்போதேனும் எழுதும் கவிதைகளில்கூட அவற்றை என்னால் மீட்டெடுத்து எழுத முடிந்திருக்கிறது.
இப்போதும்கூட, வானம், வெயில், விதவிதமான ஒளிப் பிரதிபலிப்பு என்றால் எனக்கு அதிலொரு சுவாரஸ்யம், ஒரு லயிப்பு, ஒரு சுகம், ஒரு அமைதி. என்னுடைய ஞாபகங்கள், அனுபவங்கள்தாம் என்றில்லை; வாசிக்கும்போது கூட, காட்சி விவரணைகள், காட்சிப் படிமங்கள் என்றால் அவை என் மனசில் அதிகம் தங்கியிருக்கும்.
நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தபோது ஒரு முறை, – என் அக்காவின் தமிழ்த் துணைப்பாடப் புத்தகத்திலா அல்லது வேறெங்கேயோவா என்று நினைவில்லை – ‘மழை’ என்ற கதை வாசித்தேன். (பின்னர்தான் அது அசோகமித்திரனின் கதை என்று தெரிந்துகொண்டேன்.) ‘சட்டை சிறியதாகப் போகுமா, அப்பா?’ என்று அவன் கேட்கும் கேள்வி எப்படி இன்றும் புதிது போல் மனசில் நிற்கிறதோ, அதுபோலவே கருமேகங்கள் உயர்ந்து வரும் காட்சியை அவன் காண்பதும், மழை முடிந்த காலையில் எருமைகள் சுத்தமாகிப் போவதைக் காண்பதும், வாசல் மரத்தடியில் அந்தச் செடி இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பதைக் காண்பதும்… இந்தக் காட்சிகளெல்லாமும்கூட மனத்துக்குள் அப்படியே விரிந்து பதிந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் பொய்க்குதிரையில் சொல்லியிருப்பாரே… ‘கனவின் நிலவு போலும் மென்மையாக…’ என்று… இதுபோல் ஒரு வரியை வாசித்தபிறகு, அதை எப்போதேனும் மறக்கமுடியுமா, சொல்லுங்கள்.
ரூமியின் ஒரு கவிதையில், ‘What stops us from joining the dance the dust particles do? Look at the subtle motions in sunlight’ என்று இறப்பைப் பற்றி எழுதியிருப்பார். இறப்பை எவ்வளவு அழகான ஒரு அனுபவமாக எண்ண வைக்கின்றன இந்த வரிகள். இதுபோன்ற படிமங்கள் எப்போதும் என்னைச் சட்டென்று ஆட்கொண்டுவிடுகின்றன. மனசுக்குள் காட்சிகளாக அப்படியே படிந்துவிடுகின்றன.
சங்கிலி பூதத்தார் கவிதையில் அந்தப் பயத்தை உணர்த்த முடிந்திருப்பதும், அந்தக் காட்சி ஞாபகத்தின் புண்ணியத்தில்தான். எப்போதும் ஆராதனை வந்து ஆடும் அவரையே பார்த்திருந்துவிட்டு, ஒருமுறை அவர் சாவதானமாக சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்தபோது, அது அவர்தான் என்பதையே நான் நம்பமறுத்தேன். அவ்வளவு உக்கிரமாக அவர் ஆடும் காட்சி மனத்தில் பதிந்திருந்ததுதான் காரணம்.
இயற்கை சார்ந்த கவிதைகளைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இயற்கை தன் மொத்த ஆகிருதியில் இருக்கும் இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறு, கடலை விட மலைகள் காடுகளென்றால் ஒரு தனி ஆச்சர்யம். அதுபோன்ற அடர்ந்த காடுகள் வழியே போகும்போது, நாம் வெறும் மனுஷி… இவ்வளவு பெரிய அற்புதத்தின் முன் அற்பத்திலும் அற்பம் என்ற எண்ணம் மேலெழும். காடு, மலை சார்ந்த இடங்களுக்குப் போகும்போதெல்லாம் எனக்குக் குதூகலமும், இதுபோல் ‘தத்துவ’ விசாரமும், வேடிக்கை பார்த்துத் தீரா ஆர்வமுமாக ஒரே உணர்வுக் கலவையாக இருக்கும். நான் இயற்கையின் ஒரு சிறிய கைக் கருவி என்று தோன்றும். காடுகளில் அவ்வளவு உயர்ந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது, மிகமிக லேசாக, சொந்த வீட்டுக்கு வந்தது போல் இருக்கும். குறிப்பாக, முதுமலையைக் கடக்கும் சமயங்களில் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: “அடுத்த பிறப்பு ஒன்று நானே தேர்வு செய்யமுடியுமானால், இந்த மலையில் இந்தக் காட்டிலொரு மரமாகத்தான் நான் வந்து பிறப்பேன்”. ஒரு மரம் இந்தப் புவிக்கு ஆற்றமுடிந்த நன்மையில் ஆயிரத்தில் ஒரு பங்கு சிறு நன்மை என்னால் செய்யமுடியுமானால், நான் ஆறறிவுடன் பிறந்ததற்கு ஏதோ ஒரு பலனென்று எண்ணியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட ஒரு பயணம் முடிந்து திரும்பிவரும்போது எழுதிய கவிதைதான், நீங்கள் குறிப்பிட்ட ஜே.ஸி.பி. கவிதை. எப்போதும் முதுமலை வழியாகக் கடக்கும்போது, நிறைய மிருகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும். ஏதில்லாவிட்டாலும், நிறைய மான்கள் மற்றும் ஓரிரு யானைகளையாவது பார்க்காமல், பயணம் நிறைவுற்றதில்லை. ஆனால், ஏனோ அம்முறை ஒரு யானை கூட பார்க்கக் கிட்டவில்லை. பெங்களூர் வரும் வரை அதுவே நினைவாக இருந்தது. பெங்களூருக்குள் நுழையும்போது நல்ல மழை. போக்குவரத்து நெரிசலில், ஒரு கட்டுமானப் பணி நிறுவனத்தின் இரண்டு ஜே.ஸி.பி.களைக் கண்டபோது, என் ஏக்கத்துக்கு ஒரு சிறிய நிவாரணமாக அவற்றை யானைகளாகக் கற்பனை செய்தபோது எழுதிய கவிதை அது.
‘Our Town’ என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் பேசும் வரி: ‘Oh earth! You are too wonderful for anybody to realise you!” அது மிகவும் சத்தியம். நாம் எவ்வளவு முயன்றாலும், இயற்கையின் முழுமையான ரகசியங்களை, சக்தியை, அழகை நம்மால் எழுதிவிட முடியாது.
கே:‘எளிய இரவு/கனத்துக்கிடக்கிறது இன்று/சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென’ – இது பிரிவுத்துயருணர்த்தும் வரிகளென்றாலும், மரக்குச்சி, திருவைக்கல் காலச்சுழற்சியின் குறியீடாக, நம்மால் கைவிடப்பட்ட வரலாற்றை கவிதையில் பொதித்து அதன் பயன்பாட்டை நீட்டிக்கும் முயற்சியாக, ‘சிறு குச்சிதான்; ஆனால் அதுவே திருவைக் கல்லை இயக்கும் சூத்திரதாரி’ என்ற தத்துவ விசாரமாக வடிவமைத்த கற்பனை எங்ஙனம் எழுதப்பட்டது?
ப: திருவைக் கல் எங்கள் வீட்டில் அன்றாடப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அது போன்ற சிறிய இயந்திரங்கள் மீது, எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் ஈர்ப்பைப் போலவே எனக்கும் இருந்திருக்கிறது. பின்னாட்களில், நானே அதைப் பயன்படுத்திய அனுபவமும் உண்டு. அதன் பின்னால் இருக்கும் அறிவியல் தத்துவம்தான் அப்போது மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிற்று. ஆனால் கவிதையில் இவ்விதம் அதனைப் பயன்படுத்தியது, என்னை அறியாமல் நிகழ்ந்ததுதான். மனம் இப்படிப்பட்ட தொடர்புகளை எப்படி ஏற்படுத்திக்கொள்கிறது என்பது வினோதம்தான்.
கனத்துக் கிடக்கும் இரவை இழுத்துச் செல்வதைக் கற்பனை செய்தபோது, சட்டெனத் திருவைக் கல் என்று தோன்றியது.
இக்கவிதையில் என்று மட்டுமில்லை; வேறு சில கவிதைகளிலும் எளிமையான ஏதேனும் ஒரு விஷயம்தான் என்னை முதலில் எழுதத் தூண்டியிருக்கும். ஆனால், பிறகு அதுபோல் இருக்கும் பெரிய விஷயங்களைக் குறித்து சிந்தனை போய்க்கொண்டேயிருக்கும். அது எப்படியோ அந்தக் கவிதையில் வந்து சேர்ந்துவிடும். இது என்னையறியாமலே நிகழ்வதை, பல கவிதைகளில் உணர்ந்திருக்கிறேன். ஒரு வகையில், ஏதோ ஒரு பெரிய விஷயத்தின் எளிய கூறுகளை, அல்லது மாதிரிகளைக் கண்டுகொள்வது – சில சமயங்களில் அது ஒரு பாவனையாகக்கூட இருக்கலாம் – ஒரு புதிரை விடுவிப்பது போல் எனக்கு சுவாரஸ்யம் தருகிறது என்று நினைக்கிறேன்.
கே:மேய்ப்பரும் ஆட்டுக்குட்டிகளும் நிறைந்திருக்கும் கவிதைகளும் இருக்கும் அதே தொகுப்பில் காந்திமதியின் தாய்மையைத் தரிசிக்கும் கவிதைகளும் காட்சியாகின்றன. வெட்டவெளியில் எப்போதும் வசிக்கும் சின்னப் பிள்ளையாரின் எளிமையைப் பேசும் கவிதையிருக்கும் அதே தொகுப்பில் ஆடி தை மாதங்களில் வீட்டினுள் வழிபடப்படும் முறுக்கிய சேலையின் வடிவில் இருக்கும் கன்னி தெய்வத்துக்கும் இடமிருக்கிறது. வானம் பார்த்த மொட்டை மாடி உலவும் கவிதைவெளியில் வீட்டுக்குள்ளேயே சுழலும் மின்விறிசிக்கும் இடமுண்டு. வெயிலைக் கொண்டாடும் விந்தை நிகழ்ந்திருக்கும் கவிதையுலகுக்கு நிகராக மழை தூறிக்கொண்டு வசீகரத்தையும் வெறுப்பையும் ஒரே விதமாகப் பார்க்கும் மாயமும் நிகழ்கிறது. ‘நீர்காணா சங்குபுஷ்பம்’ வறட்சியின் இழப்பின் குறியீடாகும் கவிதையில் ‘ஆலம்பூ ஒன்று நீலத்தில் பூத்திருக்கிறது’ என்ற நீர்மையும் நிறைவும் பதிவாகிறது. இப்படி முரண்களை எல்லா முனைகளிலும் வெவ்வேறு கவிதைகளில் வெவ்வேறு மனநிலையில் புனைவது படைப்பாளியின் குணாதிசயங்களில் ஒன்றோ?
ப: அவற்றை முரண்கள் என்ற நோக்கில் நான் காண்பதில்லை; அப்படியொரு தொனி அதில் வந்திருந்தாலும். அவை வாழ்க்கையின் இயல்பான கூறுகளாகவே எனக்குத் தோன்றுகின்றன. ஆறாம் வகுப்பிலிருந்து என் பள்ளித்தோழி முத்துவேணி. அவள் சாமி கும்பிடும்போது என்ன சொல்லிக் கும்பிடுவாள் என்று ஒரு முறை அவளிடம் கேட்டேன். அவள் விவிலியத்திலிருந்து ஒரு வசனம் சொல்லிக் காட்டினாள். ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்கிற வசனம். ‘அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் நடத்தி அமர்ந்த தண்ணீரண்டையில் நிறுத்துகிறார்’ என்று சொல்லும்போது, அது அப்படியொரு காட்சியாகவே மனத்தில் பதிந்துவிட்டது. மிக அழகிய ஒரு வழிபாடாகத் தோன்றியது அது.
எப்படி அவள் வழிபாடு குறித்த ஆர்வம் எனக்கிருந்ததோ, அது போலவே, நாங்கள் நெல்லையப்பர், காந்திமதியம்மை கோயில்களுக்குச் செல்கையில் அவளும் எங்களுடன் வருவாள். மேய்ப்பரோ, காந்திமதியோ, சின்னப் பிள்ளையாரோ, கன்னியாக வணங்கும் என் பாலா அத்தையோ… தெய்வமென்று நினைத்தால் நமக்கு அது தெய்வம். அதன் மூலம் நாம் பெறும் அனுபவங்கள் வெவ்வேறு. என்றாலும் அது எப்படியெப்படியோ நம்மை வடிவமைக்கிறது. அதன் வெளிப்பாடாக, அவை கவிதைகளில் அப்படி இயல்பாக வந்து அமைந்திருக்கலாம். முரண்களைப் புனைந்து காட்டவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டதில்லை.
சங்குபுஷ்பம் கவிதை, ஒரு உபதேச நோக்கு சத்தமாக வெளிப்பட்டுவிட்டதோ என்று நானே என்னுள் அதிகம் நொந்துகொண்ட கவிதை. ஆனால், அதை ஒரு காட்சிப் படிமமாக மாற்றியதால், அவ்விதம் அது தொனிக்கவில்லை என்பதை உங்கள் கேள்வியின் மூலம் உணர்கிறேன்.
கே:ஆலம் பூ வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். நீங்கள் எழுதியிருக்கும் நீல ஆலம் பூ ஒரு புனைவா?
ப: நீர் பாய்ச்சப்படாத கொடியில் பூத்திருந்த சங்கு புஷ்பம்தான், அந்த நீல ஆலம் பூவும். நீ நினைத்தால் எந்தச் சூழலிலும் பூக்கலாம் என்ற ஒரு வெளிச்சத்தைத் தந்ததால் அது ஆலம் பூ. வேர் நெகிழ்ந்தாலும் விழுதூன்றிப் படரும் தருவல்லவா அது?! பிடிவாதமாக வேர் பிடித்து வளர்ந்து வந்த அந்த மெல்லிய கொடியிலும் ஒரு ஆலமரத்தின் பலம் இருப்பதாகத் தோன்றியது. அது பற்றியே அதனை நீல ஆலம்பூ என்று குறிக்க நினைத்தேன்.
கே:‘பால்யங்களைப் பதியனிடும் கண்ணாடி’, உங்களது கவிதைகளின் உச்சம். ஏழு கண்ணாடி ஏழு தலைமுறையைக் குறிப்பதா? பால்யங்களை கண்ணாடி வழியே பதியனிடுதல் – இந்தப் பதமே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. கிஜோ முராகமி ‘இலையுதிர் காலக் கண்ணாடியின் பால்யம் நினைவுகள்’ என்பதைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட கவிதை, காலத்தை உதிர்த்து மூன்று தலைமுறைக்கு முன் சென்று மூன்று தலைமுறையை முன் நோக்கி குழந்தைபோல் மாறும் நொடியைப் பதிவு செய்யும் கவிதை எழுதிய அனுபவத்தைப் பற்றிப் பகிருங்கள்.
ப: முன்னொரு முறை குறிப்பிட்டபடி, தற்செயலாக intertextual ஆக அமைந்த கவிதை இது. மனிதர்களுக்கு ஏழு பருவங்கள் இருப்பதாக, தமிழிலக்கிய மரபில் கூறப்படுகிறது. அதனடிப்படையில்தான் ஏழு கண்ணாடிகள் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால், முராகமியின் கவிதையுடன் ஒப்பிட்டு இதை ஏழு தலைமுறைகளாகப் பார்ப்பதும், அல்லது வேறு எந்த விதமாகப் பொருள்கொள்வதும் வாசிப்பவரின் சுதந்திரம்தான். அதன் மூலம் ஒரு கவிதைக்குப் புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன அல்லவா? இந்தக் கவிதைக்கு என்று மட்டுமல்ல; நவீன கவிதைகளுக்கு இது பொதுவாகப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன். எதையும் அப்படியப்படியே பொருள் கொள்ளக்கூடிய – லிட்டரல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே – அப்படியான ஒரு மனப் பழக்கம் எனக்குண்டு. பால்யத்தைப் பதியனிடுதல் என்ற பதமும் அதிலிருந்தே தோன்றியது. ஒரு செடியைப் பதியனிடும்போது, அந்தச் செடி ஒரு தொட்டியில் இருக்கும். அதை வளைத்து இன்னொரு தொட்டியில் அதன் நுனி மட்டும் வெளித் தெரியுமாறு, மண்ணுக்கடியிலாக அதைக் கொண்டு சென்று அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். சில நாட்களில் இந்தப் புதுச் செடி வேர் பிடித்துவிடும். ஆனால், உண்மையில் அது முந்தைய செடியின் ஒரு கிளைதான். நாமும், ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு தோற்றம் கொள்கிறோம். அதைத்தான் ஏழு கண்ணாடிகள் மூலம் குறிப்பிட விரும்பினேன்.
எங்கள் மகள் பிறந்திருந்த சமயத்தில், எனக்கு எந்தக் கண்ணாடியில் பார்த்தாலும், என் முகம் ஒரு குழந்தையின் முகம்போலவே தோன்றத் தொடங்கியிருந்தது; ஏனென்று தெரியவில்லை. ‘என்னடா இது… முராகமியின் கண்ணாடியில், வயதாகும்போது பிம்பத்தில் தந்தையின் முகம் தெரிகிறது. என் முகம் குழந்தையாக இருந்தபோதிருந்த முகமாக மாறிவருகிறதே…’ என்று வேடிக்கையாகத் தோன்றியது. அதனால்தான் அதில் வந்த இலையுதிர்காலம் என் கவிதையில் வசந்தகாலமாக மாறியது.
ஆனாலும், எனக்கு நான் குழந்தையாக இருந்தபோது, என் தாயின் முகம் எப்படியிருந்திருக்கும், அவர் குழந்தையாக இருந்தபோது என் ஆச்சியின் முகம் எப்படியிருந்திருக்கும் என்கிற கேள்விகளெல்லாம் தோன்றத் தொடங்கின. அப்போதுதான் ஒவ்வொரு தலைமுறையும் பதியன் போடப்பட்டு, அதிலிருந்து மீண்டும் பதியனிடப்பட்டு வரும் நீண்ட சங்கிலித்தொடர்… எல்லாம் ஒரு முதல் ஆதிச் செடியிலிருந்து என்கிற ஒரு சின்னக் குமிழ் அப்போது தெறித்ததுதான்.
கே:‘கர்ப்பக்கிருஹத்துக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது’ – நீங்கள் எழுதிப் பார்த்திருக்கும் பெண்ணியம் வித்தியாசமானது. குடும்பத்தலைவியாய் இழந்து பெற்றதை அவ்வளவு நாசூக்காய்ப் பேசும் கவிதை. இதைப் பதிவிட்ட மனநிலையைப் பற்றிச் சொல்ல முடியுமா? அதே போல் இன்னொன்று, “நான் கடவுள் இல்லை/தோசைகளை மட்டுமே சிருஷ்டிப்பவள்/அதுவும் சாயாத கல்லில்’ இதுவும் பெண்ணியக் கவிதை. மேலும் இது ‘பூமி இருபத்து மூன்றரைப் பாகை சாய்ந்துள்ளதுதான்’ என்ற அறிவியல் பௌதீக உண்மையைப் பேசுகிறது. இதைச் சார்ந்தும் சொல்லுங்கள். மேற்சொன்ன கவிதைகள் பெண் உலகுக்கே உரிய கவிதைகள் என்றாலும், உங்களில் பெரும்பாலான கவிதைகள் வீட்டுக்குள் இருக்கும் வெளியை விட வெளியுலகில் காணும் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவிடுகிறது. அகத்தனிமையை அதிகம் பேசும் கவிதைகள் புற உலகக் காட்சிகளில் திளைப்பது எதிர்த் துருவத்தில் இயங்கும் அனுபவங்களைத் தருகிறது. இது எப்படி சாத்தியமானது?
ப: பெண்ணியம் எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அன்று இக்கவிதைகள். ஆனால், பின்னர் அந்தச் சாயல் அதில் ஏற்பட்டுவிட்டது இயல்பாக நிகழ்ந்ததுதான். முந்தைய பதிலில் சொன்னபடி, எதையும் லிட்டரலாக இடையீடு செய்யும் தன்மை என்னிடம் உண்டு. (சில சமயங்களில் அது வெளியுலகுடன் இயங்குகையில் இடைஞ்சலாகவும் இருப்பதுண்டு.)
என் பால்யம் நெல்லையப்பர்-காந்திமதியம்மை கோயிலைச் சுற்றியே அமைந்தது. அனேகமாக, நிறைய மாலை நேரங்கள் அந்தக் கோயில்களுக்குச் செல்லாமல் நிறைந்ததில்லை. அவர்களை தெய்வங்கள் என்பதைவிட, அன்றாடம் சென்று காணும் ஒரு உறவாகவே அப்போது நினைத்திருந்தேன். ஏதேனும் வேலைகளினூடே தற்செயலாக, ஊர் ஞாபகங்கள் எழும்போது, அந்த ஞாபகமும் அப்போது செய்துகொண்டிருக்கும் வேலையும் தொடர்பாக இது போன்ற வினோதக் கற்பனைகள் தோன்றும். அப்படியொன்றுதான், காந்திமதியம்மையும், இதுபோல் அடுப்பில் கல்லைப் போட்டுவிட்டு வந்து பிராகாரப் பலகணி வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தால்… என்ற கற்பனை தோன்றியது. பெண்ணிய நோக்கில் அமைந்துவிடும் என்று உண்மையில் அப்போது தோன்றவில்லை.
தோசைக் கவிதையும் அப்படியே. பெண்கள் என்றால் சமையல் செய்யவேண்டும் என்ற ரீதியில் இதைச் சொல்லவில்லை; ஆணோ, பெண்ணோ… சமையலை உயிர்வாழத் தேவையான ஒரு அடிப்படைத் திறனாகத்தான் பார்க்கிறேன். ஒருவேளை அது இளமையிலிருந்து சமையலுக்கு சுயச்சார்புடன் இருந்துவிட்டதால் எழுந்த எண்ணமாகக்கூட இருக்கலாம். என் அப்பா சமைப்பதைப் பார்த்துத்தான் நானும் சமைக்கக் கற்றுக்கொண்டேன். அவர் இரவுப் பணிக்குச் செல்லும் காலங்களில், நான் காலை, மதிய உணவு தயாரித்துக்கொண்டு, பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், பதினேழு வயதிலிருந்தே அது ஒரு இயல்பான அடிப்படையான திறனாகவே பழகிவிட்டது. அன்றாட உணவு என்றில்லை; சில சமயம் தீபாவளி, திருக்கார்த்தியல், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில்கூட, அவர் பணிக்குச் செல்லவேண்டியிருக்கும். எங்கள் ஊரிலெல்லாம், கார்த்தியல் பெரிதாகக் கொண்டாடுவோம். அதுபோல, வீட்டு வாசல்களில் வைத்துப் பொங்கல் விடுவதே வழக்கம். நம் வீட்டில் மட்டும் இதெல்லாம் செய்யாமல் இருப்பதா என்கிற ஒரு தீவிரத்தில் அவற்றையெல்லாம் செய்து கற்றுக்கொண்டேன். எல்லாம் செய்துவிட்டு, தனியாக அமர்ந்து சாப்பிடும்போது, எது எப்படியானாலும் நமக்கு ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிற ஒரு சின்னப் பெருமிதம் இருந்தது ஞாபகமிருக்கிறது. காரணம், அந்த ஒரு திறனைக் கற்றுக்கொள்ள முயன்றதுதான்.
ஆனால், நீங்கள் கேட்க விரும்பும் கோணம் விளங்குகிறது. சமைப்பது மற்றும் சாப்பிடுவதில் அப்போது பெண்களுக்கு ஒரு நெருக்கடியும் கட்டாயமும் இருக்கத்தான் செய்தன; இப்போதும்கூட இருக்கின்றன. எங்கள் குடும்பங்களிலேயே, ஒன்றாகக் கூடும் சமயங்களில், ஆண்கள் முதலில் சாப்பிடுவார்கள். பிறகு பெரியவர்கள் சொல்வார்கள்: ‘ஆம்பளைப் பிள்ளைங்க முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் பொம்பளைப் பிள்ளைங்க சாப்பிடுங்க…’ என்று. ‘ஏன் எனக்கு மட்டும் வயிறு பசிக்காதா..?’ என்று எதிர்த்தும் நின்றிருக்கிறேன். திறன் என்று கற்றுக்கொள்வது வேறு; ஆனால், நீ பெண்ணென்பதால் இப்படியிரு என்று சொன்னால், என்னால் அப்படியிருக்க முடிந்ததில்லை. ஆண், பெண் என்று பார்ப்பதில் எனக்கு எப்போதும் குழப்பம் இருந்திருக்கிறது. என்னால், மனிதர்கள் என்றுதான் யாரையும் எண்ணமுடிந்திருக்கிறது; இப்போதும் அப்படித்தான்.
‘அவர் ஆண். அவர்தான் அதைச் செய்யவேண்டும்…’ அல்லது ‘செய்யக்கூடாது’ என்பதோ, அல்லது ஒரு பெண் என்பதால், இவர்கள் இப்படியிப்படியிருக்க வேண்டும் என்று சொல்வதோ, அதன் தாத்பர்யம் நிஜமாகவே எனக்கு விளங்குவதில்லை. நாமெல்லாரும் அடிப்படையில் மனிதர்கள்தானே..?
இந்த மனநிலைதான், வீட்டைவிட வெளியிலடையும் அனுபவங்களை அதிகம் எழுதவைக்கிறதோ… என்னவோ..! நீங்கள் குறிப்பிட்ட தோசைக் கவிதையிலே, சாய்ந்திருக்கும் பூமியின் கோணம் பற்றிக் குறித்திருப்பதைக் கேட்டீர்கள். சாய்ந்திருக்கும் பூமியே இவ்வளவு நிலையாகச் சுற்றுகிறதே… நாம் கல்லை நேராக வைக்க இவ்வளவு போராடுகிறோமே என்று ஒருமுறை சலிப்பான எண்ணம் தோன்றியது. அதுபோன்ற விஷயங்களில் ஒரு கட்டாயமான பிடிவாதம் எப்போதும் எனக்குண்டு. தோசைக் கல்லென்றால், சரியாக மையத்தில் இருக்கவேண்டும், பேனாக் கூடு என்றால், பேனாக்கள் ஒரு பிரிவில், பென்சில்கள் ஒரு பிரிவில், இன்னபிற ஒன்றில்… சரியாக இருக்கவேண்டும், செருப்பைக் கழற்றிவிட்டால் இரண்டும் சரியாக இணையாக சீராக இருக்குமாறு கழற்றி வைக்க வேண்டும் – இப்படிச் சின்ன சின்ன விஷயங்களில் ஏதோவொரு ஒழுங்கைக் கையாள்வதில் ஒரு பிடிவாதம். அதனால், அந்தக் கல்லை நிலைநிறுத்தப் போராடிய சிறு சலிப்பு, அவ்வளவு பெரிய விஷயத்தை அதில் இணைத்ததில் முடிந்தது. இதென்றில்லை… வேறு சில கவிதைகளிலும், அதில் அறிவியலோ அல்லது வேறு எத்துறையோ தொடர்பான ஒரு விஷயம் என்னையறியாமல் நினைவுக்கு வந்ததென்றால், அதனைச் சேர்த்து எழுதவே முயற்சிப்பேன். என் மனம் அப்போது இப்படி இயங்கிற்று என்று எனக்கே பின்னால் நினைவூட்டிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அத்தகைய கவிதைகளை எண்ணுகிறேன்.
இது போல் பிற துறை விஷயங்களை இணைத்துச் செல்லும் சில கவிதைகளுக்காக, சில நாட்கள் வாசித்து ஆராய்வதும் அதன் மூலம் அது பற்றிய பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் நேர்ந்திருக்கின்றன. இதெல்லாம், கவிதை எழுதும் அனுபவம் என்பதைவிட, அம்முயற்சியால் நான் கற்றுக்கொள்ளும் அனுபவம் என்று சொல்லலாம்.
கே: ‘அவள் கதைகளில் உலவும் / அத்தனை பேரும் நானே!’ வளரும் மகளும் குழந்தைமை மனம் மாறாத தாயும் அவள் வளர வளர, இவள் மனம் நகராத காலத்தில் சூல் கொண்டு தவிக்கும் பல கவிதைகளை உங்கள் துமி தொகுப்பில் பார்க்கிறேன். அதே நேரம் தாய் தன் மகளின் வளர்ச்சியை வியந்து நோக்கும் தருணங்களும் அந்தத் தொகுப்பில் உண்டு. குழந்தைமை மனம் கொண்ட தாய்க்கு தாய்மை மிகக் கடினமான பொறுப்பு என்பதாக தொனிக்கும் குரலும் உண்டு. தாய்க்கும் மகளுக்குமான உரையாடல்கள் எல்லாமே கவிதையாக விரிந்த விந்தை நிகழ்ந்தது எப்படி? அதே நேரம் நீங்கள் பால்யத்தில் பார்த்த கேட்ட அனுபவித்ததை அந்தக் காலத்துக்குள்ளேயே மையமிட்டுக் கிடக்கும் உங்கள் மனத்தை தற்காலத்துக்குப் பொருத்திக் கொள்ளும் முரண் வெளியாகும் கவிதைகளும் உண்டு. ஒரே மனுஷி தாயாகவும் அதே கணம் தன்னை குழந்தையாகவும் பதிவிடும் படைப்பாளி, வாசகர்க்குச் சொல்ல நினைப்பது என்னென்ன?
ப: கொஞ்ச காலத்துக்கேனும் முற்றமுழுக்க நம்மை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு சின்ன உயிர் என்பது மிகப் பெரிய பொறுப்பு. பெற்றோராக எப்படி இருக்க வேண்டுமென யாரும் நம்மை ஆயத்தம் செய்ய முடியாது. அதற்கு எந்தக் குறிப்புப் புத்தகமும் கிடையாது; உதவாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது. குழந்தை வளர்ப்பும், விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொள்வது போல்தான்; ஆனால் என்ன… அதனை இன்னொரு சின்ன உயிருடன் சேர்ந்து நாம் செய்யவேண்டும். மனத்தளவிலும், உடலளவிலும் நாம் ஏற்கவேண்டிய மாற்றங்கள், எவ்வளவு எதிர்பார்த்திருந்தபோதிலும், அதற்கும் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கும் இடையில், நாம் நம்மையே மீண்டுமொரு முறை கட்டமைத்துக்கொள்வது போன்ற செயல்முறை அது.
அதனைக் கவிதைகளில் பதிவு செய்யும்போது, பெற்றோர் என்கிற பொறுப்பிலிருந்து கொஞ்சம் மாறி நின்றுகொண்டு, அந்த அனுபவங்களைத் திரும்பிப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. நீங்கள் சொல்வது போல், குழந்தைமை மனநிலை என்று கொண்டால் (அது பற்றிய விரிவான பார்வையை அடுத்த பதிலில் தருகிறேன்.) அது பல வேளை எனக்கு இந்தப் பொறுப்பை லகுவாக்கியிருக்கிறது. குழந்தையோடு குழந்தையாக இருக்கவேண்டும்; தாயாக மாற வேண்டிய நேரங்களில் அந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். இந்த நுட்பம் பிடிபட்டுவிட்டால் போதும். பால்யத்தில் மையமிட்டிருக்கும் மனம் தற்காலத்துக்கு அதைப் பொருத்திப் பார்க்கும் முரண் என்று கேட்டிருக்கிறீர்கள். சிலபல கவிதைகளில் இது நேர்ந்திருக்கிறது. ஆனால், ஞாபகங்களை மீட்டிப் பார்த்தல் அல்லது ஒப்புநோக்குதல் என்ற முறையில் அமைந்ததாக அவற்றைச் சொல்லலாம்.
இப்போது, இதில் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் பற்றி எழுத, கவிஞர்களாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என்பேன். இயன்ற அளவு அவர்களுடனான உங்கள் தருணங்களை, உங்களுக்குக் கைவரும் மொழியில் பதிந்து வையுங்கள். அது புத்துணர்வு தரும் ஒரு அனுபவம்.
உங்களுடைய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடன் மெய்யாக நேரம் செலவழியுங்கள். அவர்களை அவதானியுங்கள். அவர்கள் குழந்தைகள் என்றாலும், சிறிய மனிதர்கள்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு; அதை வெளியிட அவர்களுக்கு இடம்தர வேண்டும். இயல்புக்கு மாறாக அவர்கள் இருக்கும்போது, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்கவேண்டும். சிலவேளை, அவர்களுக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், பெரியவர்களைக் காட்டிலும் தீவிரமாக உணர்வுகளை உள்வாங்குவார்கள் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். என் குழந்தை – அப்போது அவளுக்கு ஆறு வயது – ஒருமுறை பள்ளியிலிருந்து வருகையில் ஏதோ சிறு காயம்பட்டுக்கொண்டு வந்திருந்தாள். ஆனால், எப்படியென்பது அவளுக்கே தெரியவில்லை. என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள, அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, அவள் அழத் தொடங்கிவிட்டாள். பள்ளிச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்… ஆனால் அவள் அவ்வளவு அழ என்ன காரணம் எனக் கேட்டபோது, நான் அவள் சொல்வதை நம்பவில்லை என்பதால் அவளுக்கு அழுகை வருகிறது என்றாள். குழந்தைகளின் உணர்வுகள் எவ்வளவு நுட்பமானவை என்பதை நான் அறிந்துகொண்ட தருணங்களில் ஒன்று அது. சிலசமயம், அவர்களுக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை அடையாளம் காண நாம் அவர்களுக்குக் கற்றுத் தரமுடியும். வளரும் காலத்தில், வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைப் பகிர முடியாத சூழல் அமைந்தால், அது அவர்கள் வாழ்வில் நெடுங்காலம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
‘சிக்கல் தேவதை’ போன்ற சில கவிதைகளில், குழந்தைகள் மனம் செயல்படும் நுட்பங்களை இதுபோல் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். அவர்களுடன் நாம் செலவிடும் தருணங்களை, அனுபவங்களை, முடிந்த அளவு பதிந்து வைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். நம் பதிவுகள் நமக்கும் அவர்களுக்குமிடையிலான உறவின் வலிமையான இழையாக எப்போதுமிருக்கும். பின்னாளில் நாமே அதை வாசித்துப் பார்க்கலாம்; நாம் முன்னர் காணத் தவறவிட்டிருந்த புதிய உலகங்களை அது திறந்து காட்டும். ஏனெனில், குழந்தைகள் ஒரு நாள் நுட்பமான மெல்லியல் தன்மை கொண்ட செடியாக இருப்பார்கள். மறுநாளே வளர்ந்து அழகிய மரமாகக் கிளை பரப்பி நிற்பார்கள். அவர்கள் உலகில் காலத்துக்கு நமதைக் காட்டிலும் இரு மடங்கு சக்கரங்கள். அது வேகமாகத் தாண்டிச் செல்லும் முன், படம் பிடித்து வைத்துக் கொள்வதே நம்மால் செய்யமுடிந்தது.
கே:உங்கள் கவிதைகளில் நிறைய குழந்தைகள் வருகின்றார்கள். நீங்களும் பல கவிதைகளில் சிறுமியாக வருகின்றீர்கள். ‘சிக்கல் தேவதை’ , ‘கல்லு முத்தம் – சின்னக் கூழாங்கல் முத்தம்’ – இது போல இன்னும் பல கதைகளும் உங்கள் மகள் உங்களுக்குச் சொல்கிறாள். வளர்ந்து இந்த உலகின் கோர முகத்தைக் கண்ட பின்னரும் குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? இது இயல்பானதா அல்லது இயல்பை விட்டு விலகிய நிலையா? குழந்தைகளோடு இருக்கும் விந்தையுலகை எழுதுவதற்கும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்களை எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? அதில் சந்தித்த சவால்கள் என்ன? ‘மணித்தக்காளிக் கொத்தைப் பறிப்பது போல் மிக எளிதானதா’ அது அல்லது ‘கழற்சிக்காய் ஆட்டத்தில் எல்லாக் கற்களையும் அள்ளியெடுப்பது’ போல கவனநேர்த்தி கொண்டதா?
ப: என் சில கவிதைகளில் குழந்தைகள் வருகின்றார்கள். சிலவற்றில் என் பால்யம் குறித்து எழுதுவதால், நானே சிறுமியாக வருகிறேன். இதில், குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்வது என்றால் என்ன? குழந்தைகள் வெளிப்படைத் தன்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள். உணர்வுகளை உடனுக்குடன் வெளியிடுகிறார்கள். அநேகமாக எல்லாவற்றின் மீதும் நேர்மறைப் பார்வை; எல்லாம் நல்லது என்கிற நம்பிக்கை. உலகின் மீது எப்போதும் புதிதான ஆர்வத்துடன் அதை அணுகுகிறார்கள். – இது போல இன்னும் சில குணங்கள். ஆனால், பெரியவர்களானதும் இவற்றில் விட்டுவிட வேண்டிய குணம் என்று என்னால் எதையும் காண முடியவில்லை. நண்பர்களும், குடும்பத்தினரும் என்னைப் பற்றி அடிக்கடி வைக்கும் அவதானம் இது: ‘நீ குழந்தை போல் இருக்கிறாய்.’ அந்த அவதானத்தை என்னால் மாற்றமுடிவதில்லை. சில சந்தர்ப்பங்களில்… – வெளிப்படைத் தன்மையுடன் அணுகுவது, அப்படியில்லாத சில சங்கேதங்களை விளங்கிக்கொள்வதில் குழப்பம் போன்றவற்றால் – வெளியுலகுடன் ஊடாடுகையில் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தேயிருக்கிறேன். உலகின் கோரமுகம் என்று நீங்கள் சொல்லும்போதே எனக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சமூகச் சூழலில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சில நண்பர்கள் எங்களுக்குள் உரையாடிக்கொண்டுதானிருக்கிறோம்.
என் மகளை தனக்கென சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் வளர்க்கிறோம்; தேவையான நேரங்களில் எப்போதும் அவள் அணுகும் தூரத்தில் ஒரு அரணாக இருந்துகொண்டு உலகை அவள் பார்வையில் கண்டறிய முடிந்த அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். அவர்கள் குழந்தைத்தன்மையைச் சிதைக்காமல், தற்போதைய சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளை ஆயத்தமாக்குவது நிச்சயம் ஒரு சவால்தான். அடிப்படை சரி தவறுகள் தெரிந்த மனசுக்கு, அதன்படி நடக்கவேண்டும் என்று நிற்கும் மனசுக்கு ஒரு விதத் துணிச்சல் உண்டு. அது சுற்றியுள்ளவர்களைப் பல சமயங்களில் ஆச்சர்யப்படுத்தும். அவளை அப்படியிருக்கத்தான் ஊக்குகிறோம். சொற்களின் மூலம் அச்சுறுத்துபவர்களோ, பூடகமாக நம்மைத் தாழ்த்திப் பேசுபவர்களோ… அல்லது பெர்சனல் ஸ்பேஸ் என்கிற நம் எல்லைக்குள் நுழைந்து நம்மை அச்சுறுத்தப் பார்ப்பவர்களோ… இவை போன்ற சூழல்களை நானும் சந்தித்திருக்கிறேன்; அமைதியான முறையிலும், உறுதியாகவும் அவற்றைக் கையாண்டும் இருக்கிறேன்.
இதைச் சொல்லி வருகையில், எனக்கொன்று ஞாபகம் வருகிறது. என் அப்பா விளையாட்டாக என்னை ‘நீ ஒரு ராஜபாளையம்’ என்று அடிக்கடி சொல்வார். ‘குழந்தை போல் அன்பு காட்டுவாய், ஆனால் உனக்கென்று இருக்கும் சில எல்லைகளை யாரும் தாண்டப் பார்த்தால், விழுந்து கடித்துவிடுவாய்’ என்று. ஆனால், இந்தக் குணம், என்னைத் தற்காத்துக்கொள்ள பல சமயங்களில் உதவுகிறது. ஏனெனில், நல்லதை மட்டும் காணும் மனம் நமக்கிருந்தாலும், உலகம் எல்லாவித மனிதர்களும் – அற்ப, ஈன புத்தி கொண்ட மனிதர்கள் உட்பட – உள்ளடக்கியதுதான். அப்படி ஒரு ஆள், ஒருமுறை பேருந்தில் என்னிடம் அத்துமீற முயன்றபோது, எதிர்த்துக் கண்டித்தும் விலகாதபோது, கையில் வைத்திருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பால் தாக்கியிருக்கிறேன். எனக்கென்று இல்லை; வேறு யாருக்கேனும் இதுபோன்று நிகழும்போதும், அச்சமயங்களில் நான் அஞ்சியோ, ஒதுங்கியோ போவதில்லை; குரலெழுப்பத் தயங்குவதும் இல்லை.
ஆனால், இதெல்லாம், அந்தந்தத் தருணங்களில்தான். மறுகணமே, நான் என் இயல்புக்குத் திரும்பிவிடுவேன். ரொம்பவும் கோபமாக, சோகமாக இருப்பதெல்லாம் எனக்கு ஒத்துவருவதில்லை. எவ்வளவு தீவிரமான சிக்கலோ, துக்கமோ, அந்தச் சூழலிலும், உள்ளே இன்னொரு மனசு, இதிலிருந்து மீண்டு எப்படிப் பழைய நிலைக்கு வருவது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சிதான் என் இயல்பான மனநிலை என்று தோன்றுகிறது. அது நான் எழுதும் முறையையும் பாதிக்கிறது. சோகக் குறிப்பு கொண்ட கவிதையாக இருந்தாலும், மறுவாசிப்பு செய்து எடிட் செய்கையில், எப்படியோ அதில் மகிழ்ச்சியின் அல்லது நம்பிக்கையின் சிறுகுறிப்பு வந்து சேர்ந்துவிடுகிறது.
ஒருமுறை, திருமண நிகழ்வொன்றில் சந்தித்த ஒரு பெண் கூறினார்: “அண்மையில் இவ்வளவு content ஆக உணரும் ஒருவரைப் பார்த்து வெகு காலமாயிற்று” என்று. ஒருவேளை அதுதான் என்னில் குழந்தைமையாகப் பார்க்கப்படுகிறதோ என்று அப்போதுதான் தோன்றியது. குழந்தைகள் அதுபோன்ற மனநிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேற்று, நாளை பற்றிய கவலைகள், எதிர்பார்ப்புகள் இல்லை. அவர்கள் உலகம் எளிமையானது. ‘இன்று, இப்போது’ – இதில் சுழல்வது. எனக்கும் என்னவோ குழந்தைகள் மற்றும் முதியவர்களோடு உணரும் நெருக்கம், மத்திய வயதினருடன் உணர முடிவதில்லை. அவர்களோடு பழகுவதை மிகவும் சிக்கலான விஷயம் போல் உணர்கிறேன். குழந்தைகளோடு இருக்கும் உணர்வை எழுதுவது, அவர்களை நெருங்கிக் கவனிப்பதில் கிடைக்கும் அவர்கள் தரும் எதிர்பாரா ஆச்சர்யங்களை, ஒரு அழகான சாட்சியமாகப் பதிவது எனத் தொடங்குவதுதான். சில வேளை அது வேறு கோணங்களில் நீண்டு விடுவதுமுண்டு.
குழந்தைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்து எழுதுவதென்பது, பல சமயங்களில் அவ்வளவு சுகமான அனுபவமில்லை. அந்தத் தருணங்களில் மீண்டும் வாழ்வது போன்ற ஒரு வலி, எழுதும் சமயங்களில் ஏற்படும். ஆனால், எழுதித் தீர்ப்பது அதைக் குணப்படுத்துவது போலுள்ளது. நான் அவற்றைத் தாண்டி வந்து, திரும்பிப் பார்த்து, அவற்றைப் பதிவு செய்ய முடிகிறது என்பது, அவை நடந்து முடிந்த நிகழ்வுகள் என்கிற ஒரு உறுதியை கொஞ்சகாலத்துக்கேனும் தருவதாக உணர்கிறேன். குழந்தைகளின் விந்தையுலகை எழுதுவது ஒரு சாட்சியம்; குழந்தைப் பருவத்தை எழுதுவது ஒரு குணமடைதல். இரண்டும் என் கவிதைகளுக்கு வேறு வேறு பரிமாணங்களைத் தருகின்றன.
கே:புதிர்கள் உங்களது கவிதையுள் பல விதமாய்ப் பரிமளிக்கின்றன. பின்னலைப் பின்னும் போது சில புதிர்களைப் போட்டு விடுகின்றீர்கள். நீங்களே ஜிக்ஸா புதிராகின்றீர்கள். இன்னொரு கவிதையில். ‘ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள்’ என்ற முழுத் தொகுப்பும் பல்வேறு மனப்புதிர்களைப் பேசுகின்றன. கவிதைக்குள் வாழ்க்கைப் புதிர்களுக்கு விடை தேடும் எண்ணம் எப்படி எழுந்தது? புதிர்களை, சிக்கல்களை கவிதைக்குள் எளிதாக்கி வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதைப் பார்க்கலாமா?
ப: புதிர்கள் என்றால் எனக்கு அதீத ஈடுபாடு. 1000 துண்டு ஜிக்ஸா புதிர்கள், எண்களே இல்லாமல் குறிப்புகள் மட்டும் இருக்கும் கில்லர் ஸுடொக்கு புதிர்கள் எல்லாம் நேரம் காலம் தெரியாமல் செய்து கொண்டேயிருக்கமுடியும் என்னால். வீட்டுக்கு மேஜை போன்ற பொருட்கள்கூட, சில சமயம் பாகங்களும், அவற்றை இணைக்கும் படிநிலைக் குறிப்புகளும் தரும் கடைகளில் வாங்கி, நானே அவற்றை வீட்டில் கொண்டு வந்து முழுமையாக்குவேன். இதெல்லாம் ஏனோ உலகைக் கொஞ்சம் புதுமையாக, இன்னும் வெளிச்சமாக ஆக்குகின்றன எனக்கு. எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒரு புதிரைத் தீர்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அந்தக் கணத்தில் மிகப் பெரியது.
என் பெரியப்பா (அம்மாவின் அக்காள் கணவர்) காவலராக இருந்தார். அவர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி. அவர், தங்கள் பயிற்சித் தேர்வில் கேட்கும் நிறைய புதிர்க் கேள்விகளை குழந்தைகளான எங்களிடம் போட்டுக் கேட்பார். மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும்.
போலவே, இன்னொரு விஷயமும் அப்போது என்னுள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம். என் அப்பா, வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாமே சரி செய்வார். மேஜை விசிறி, வானொலிப் பெட்டி, சிறிய அலாரம் கடிகாரம் – இது போல. எனக்கு அப்போது அது பெரிய சாகசமாகத் தோன்றியிருக்கிறது. அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில், நானாகவே வானொலியைக் கழற்றி அவர் செய்வதுபோல் நானும் செய்வதாக பாவனை செய்துகொண்டு திருகுதாளங்கள் செய்து வைப்பேன்; பின்னர் அடியும் வாங்குவேன். பெரியவளானதும், அது போன்ற பணியொன்றில்தான் ஈடுபட வேண்டுமென்று மிகத் திட்டவட்டமாக இருந்தேன். அப்படி நடவாதபோதும், புதிர்கள் மேல் ஏற்பட்ட நாட்டம் மட்டும் விட்டுப் போகவில்லை.
வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகளும், நமக்குப் புதிர்கள் என்பதே என் எண்ணம். ஏதேனும் சிக்கலோ, பிரச்னையோ… மனம் குழம்பி நிற்கும்போது, என்ன பிரச்னை என்பதை எழுதி வைத்துக்கொள்வேன். அப்போது எனக்கு அது குறித்த தெளிவு கிடைக்கும். தீர்க்க முடியாத ஏதாவது வருத்தம் மேலிடும் உணர்வு என்றாலும், அதை எழுதி வைத்துவிட்டால், மனசு அமைதியுற்று கொஞ்சம் நிலைபெறும். அதுவே என் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. கவிதையாக எழுதும்போது, தெளிவும், அமைதியும் மட்டுமன்றி, அதையொரு படைப்பாக மாற்றிய சிறிய மகிழ்ச்சியும் கூடக் கிட்டும். கவிதையும் புதிரும்கூட ஒன்றுதான். சில வேளை கவிதை புதிராக இருக்கிறது; சில வேளை புதிருக்கு விடையாக இருக்கிறது.
கே:உங்கள் கவிதைகளுக்கு மனதின் சத்தத்தை மௌனத்தின் பல வடிவில் மொழியாக்கம் செய்கின்றீர்கள். அங்கே மௌனம் அறையாகிக் கதவடைத்து நிற்கிறது, மௌனம் மின்மினியாக ஜ்வலிக்கிறது, மௌனம் ஆடைகளின் பூசப்படவேண்டிய வர்ணமாகிறது. இன்னொரு கவிதையில் ‘ஒரு மலை/ எவ்வளவு மௌனித்திருக்கிறது/எவ்வளவு தனித்திருக்கிறது’ என்று பிரகடனம் செய்கின்றீர்கள். இவ்வளவு மௌனத்தை கவிதையுலகு தாங்குமா?
ப: நான் எழுதுவதையே கவிதையுலகு தாங்கும்போது, இவ்வளவு மௌனத்தைத் தாங்க இயலாதா?! வேடிக்கைக்காகச் சொன்னேன். ஸ்தூலமான உணர்வுகளை எழுதுவதில் உள்ள வசதி இது. மௌனமும் பல சமயம் பல உணர்வுகளின் பிரதிபலிப்புதானே! அது என்னவென்று கற்பனை செய்ய இன்னும் ஏராளமான சாத்தியங்கள் உள்ளன எனும்போது, சில சமயம் அந்த மறுக்கமுடியாத உண்மை என்னை வாயடைக்கச் செய்துவிடுகிறது.
தடயமின்றி மௌனமாக ஒழுகிச் செல்லும் மெல்லிய நீர்த்தடம் நம் வாழ்வு. ஏதேனும் ஒரு சிறிய வெளிச்சம் அதனைக் கடக்கும்போது, சிறுகணம் அது ஒளிர்கிறது, தன் இருப்பை, தன் பொருளை, தன் பயனை தனக்கே ஞாபகமூட்டிக்கொண்டு. சில சமயம் அந்தச் சிறிய வெளிச்சம் ஒரு கவிதையாக வருகிறது. ‘ஒரு கடைசி வரி தோன்றிவிட்டது மனத்தில்’ கவிதையில் வரும் ‘ஆயிரம் பதினாயிரம் இலைகளின் அபூர்வ மௌனம்’ போல் இருக்கிறது அப்போது.
கே: ‘நெற்றியில் வெட்டுத் தழும்போடு/நெல்லையப்பர்’, ‘சிறுவீட்டுப் பொங்கல்’, குடிக்கன்னி வழிபாடு, இசைத் தூண்கள் – இவற்றைப் பற்றி குறிப்புகள் கவிதை நெடுகக் கிடக்கின்றன. இவை எல்லாம் நெல்லை மண்ணின் கலாசாரம், பண்பாடு, தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளை, சடங்குகளை, கதைகளைப் பதிவிடுகின்றன என்று நினைக்கிறேன். அதைப் போல உங்கள் கவிதைகளில் நெல்லை மண் மணக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. (ஆமை வடை அதை நாங்கள் மசால் வடை/பருப்பு வடை என்போம், பன்னீர்ப் பூக்கள் இதை நாங்கள் மரமல்லி என்போம், கழற்சிக்காய் இந்த வழக்கு திருச்சியிலும் அதற்கு வடக்கேயும் இல்லை; கல்லாங்கா ஆடுதல் என்போம். அதே போல அசேதனமாய் இந்த வார்த்தையும் திருச்சிக்குத் தெரியாது.) இதை எல்லாம் சார்ந்து சொல்லுங்கள்.
ப: ஆமாம். நெல்லையப்பரின் நெற்றித் தழும்புக்கு ஒரு கதை இருக்கிறது. எங்கள் ஊர்த்தல புராணம். சிறு வயதில், தினமும் கோயிலுக்குப் போனாலும், போகுந்தோறும் கேட்க விரும்பும் கதை அது. அங்குள்ள இசைத் தூண்கள் இப்போது கம்பிகளுக்குள் அடைபட்டுவிட்டன. ஞாபகத்தில் இருக்கும் எல்லாமே இப்போது வேறாக மாறிவிட்டன. அந்த ஏக்கம், என்னுடைய ஊரின் மேல் இருக்கும் தீராத ஏக்கம், இது போன்ற கவிதைகள் எழுதும்போது கொஞ்சம் நிறையும்; சில சமயம் பெருகவும் செய்யலாம். ஆனால், இது என்றும் தீராத ஏக்கம்தான்.
என் ஊர் என்று பிரியத்தோடும், வாஞ்சையோடும் நினைப்பது, நான் சின்னவளாக இருந்தபோது கண்ட அந்தத் திருநெல்வேலி டவுனை. அந்தக் காலத்திலிருந்து எங்கள் ஊர் இப்போது வெகுதூரம் நகர்ந்துவிட்டது. ஆனால், என் ஞாபகங்களில் இருக்கும் திருநெல்வேலியை அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்த்துக் கொள்வேன்; பார்க்கும் சமயம் இருக்கும் மனநிலைக்கேற்ப, இவை போன்ற கவிதைகளாக அவை மாறும். இப்படியெல்லாமும் இருந்தது என்று பதிந்து வைத்துக்கொள்கிற ஒரு வாய்ப்பு எனக்கு.
வட்டாரச் சொற்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எங்கள் ஊர்த் தமிழை விடுங்கள்… பொதுவாகத் தமிழில் பேசவே நாங்கள் இருக்குமிடத்தில் வாய்ப்பு குறைவு. முகுந்தின் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும், வீட்டில் தமிழ்தான் அதிகம் புழங்கும். ஆனால், மகளோடு மட்டும்தான் திருநெல்வேலித் தமிழ்ப் பழக்கம். அது இயல்பாக அமைந்துவிட்டது. அதுபோல்தான் கவிதையிலும்; எங்கள் வட்டாரச் சொல்லைச் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அது இயல்பாக அமைந்துவிடுவதுதான். பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் சொல் வேறாக இருக்கலாம் என்ற எண்ணம் அப்போது தோன்றுவதில்லை. கழச்சிக்காய்க்கு வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்கள் கேள்வியின் மூலம்தான் அறிந்துகொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களில், இவ்விளையாட்டு ‘கழங்காடுதல்’ என்றே குறிக்கப்படுகிறது. அதுதான் கழற்சிக்காய் என்றானதால், அதை ஒரு பொதுவான பயன்பாடு என்றே நான் கருதி வந்தேன். இதில் ஒரு விசித்திரமாக, கன்னடத்தில் ஆமவடை, ஆமவடை என்றுதான் வழங்கப் பெறுகிறது.
கே:‘பிச்சி மனங்களுக்குத் தேவை/கன்னத்தில் அறைந்து/கயிற்றைக் கழற்றச் சொல்லும்/கவுண்டமணிகள் மாத்திரமே!’ – உங்கள் தொகுப்பில் பித்துமை பற்றிப் பேசும் கவிதைகளை இவ்வளவு அப்பட்டமாய்ப் பதிவிட வேண்டுமா என்றே தோன்றுகிறது. இதைச் சார்ந்து சொல்லுங்கள். ‘பதியன்’ கவிதையில் பெண் மன உலகை, பழைய வீட்டின் வேப்பங்கொம்பில் சிக்கிய மனம், புது வீட்டில் விட்டுச் செல்லப்பட்ட இளம்பாகல்கொடியின் நுனியில் ஒட்டியிருக்கும் இன்னொரு மனத்தோடு உறவு கொள்வது அபூர்வமானது. நகரத்து இயந்திர வாழ்வில் இத்தகைய மனத்தை, குணத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள், சவால்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
ப: உடல் சார்ந்த பிணி மற்றும் உபாதைகளைப் பற்றிப் பேசுவது எப்படி இயல்பானதோ, அதுபோன்றே மனநிலை மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசுவதும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் நோக்கம். கவிதை என்பதே அகவெளிப்பாட்டின் ஒரு வடிவமல்லவா?
‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ என்று ஔவையார் எழுதிய ஒரு சங்கப் பாடல் உள்ளது. எத்தகைய பித்து நிலையில் நிற்கும் ஒரு தலைவியின் குரலாக அது உள்ளது… அவள் மனவெழுச்சியின் தீவிரத்தை எவ்வளவு தயக்கமின்றி அவர் ஒரு பாடலாக்கியிருக்கிறார். ஒரு கவிஞரோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எழுதும் படைப்பாளியோ… மனித உணர்வுகளை இதுபோல் நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு, எதிர்வினைகள் பற்றிய அச்சமும் தயக்கமும் தடையாக இருந்துவிடக்கூடாது. படைப்பு வெளியில் மனநிலை பற்றி எழுதுவதற்கு ‘இதை நம்முடன் தொடர்புபடுத்திய கண்ணோட்டங்கள் எழுமோ…’ என்பது போன்ற நெருக்கடிகள் இல்லாத சூழல், அதை எழுத நினைப்பவர்களுக்கு அமைய வேண்டும்.
‘பதியன்’ கவிதையைக் குறிப்பிட்டு, நகரத்து வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துக் கேட்டிருக்கின்றீர்கள். நகரம் என்றில்லை… வேறு எங்கும் இதுபோல் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருக்கும் சிக்கல்களில் ஒன்று, சிநேகமாக இருக்க விரும்புவதும், அன்பை எதிர்கொள்ளத் தெரியாததும்தான். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், எதிரில் வந்தால் அவர்களை நோக்கிப் புன்னகைப்பேன். அவர்களும் புன்னகைப்பார்கள். இந்த அளவிலேயே அந்த சிநேகம் இருக்கும்வரையில் என்னால் இயல்பாக இருக்கமுடியும். ஆனால், நான் நட்பானவள் என்று என்னிடம் உண்மையில் அன்பு பாராட்டத் தொடங்கினால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற திகைப்பு ஏற்பட்டுவிடும். பொதுவாக, எல்லாவற்றையும் நல்லதாகப் பார்க்கும் குணம் உண்டு எனினும் பிறரின் அன்பை இயல்பாக ஏற்றுக்கொள்வதில் மட்டும் எனக்கு எப்போதும் சிரமமுண்டு… அது எப்போதேனும் நம்மைக் காயப்படுத்தி விடும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு நம்பிக்கை ஏற்படும் இடத்தில் இயல்பாக அன்பை ஏற்றுக்கொண்டு குதூகலமாக இருப்பேன். முன்னர் சொன்னது போல், நாங்கள் இப்போது இருக்குமிடத்தில், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நட்புதான் எனக்கு அதிகம். அதனால், என் கவிதைகளிலும் அது அவ்விதமே வெளிப்படுகிறது. அதற்கு நான் வசிக்குமிடம் ஒரு தடையாவதில்லை. மனம் லயிக்கும் இடம் நம் வீடு; புறக்காரணிகள் செய்வதற்கு அங்கு அதிகம் வேலைகள் இல்லை.
கே:உங்கள் இசையறிவைக் காட்டும் கவிதை ‘தலைமுறை’, ‘ரோவன் மரங்களில் ஹாலுசினேஷன் தொட்டில்கள்’, ‘எதுவோ என் மூளையை நிரலமைத்திருக்கிறது’ போன்ற கவிதைகள்; பின்னலாடை புனைவதைப் பற்றி பல கவிதைகளில் குறிப்பிருக்கிறது; அது போல நீங்கள் பூப்பின்னல் வேலை செய்வது பற்றியும் எழுதியிருக்கின்றீர்கள்; நீங்கள் ஓவியம் வரைபவரும்கூட. அதைச் சார்ந்த குறிப்புகளும் சில கவிதைகளில் உண்டு. சிறுகதைகளும் சிறார் சிறுகதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். நிறைய கவிதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். இப்படிப் பல்கலை வித்தகராக இருப்பது கொடுப்பினையா அல்லது எந்தக் கலைக்கும் முழு நேரத்தையும் ஒதுக்க முடியவில்லையே என்பதொரு சுமையா? சமகாலத்தில் இந்த எல்லாத் துறைகளிலுமிருந்து இயங்கி வருபவர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகின்றீர்கள்? முக்கியமாக சமகால கவிதைகளில் நீங்கள் எதை அவதானிக்கின்றீர்கள்?
ப: இசை பயின்றவள் இல்லை நான். அதனால், இசையறிவு என்று சொல்ல முடியாது; ரசனை என்று சொல்லலாம். பல வகையான இசையும் எனக்குப் பிடிக்கிறது. பாடல்கள் என்று இல்லை; வாத்தியக் கருவிகள் மட்டும் கொண்ட இசையும் பிடிக்கும். அது எந்த அடிப்படையில் என்று எனக்கே தெரியாது. அதனால்தான், என்னுடைய ஒரு ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடல்களெல்லாம், ஒருநாள் வரிசையாக வானொலியில் ‘மோகன ராகப் பாடல்கள்’ என்கிற குறிப்பில் ஒலிபரப்பானபோது, ஆச்சர்யத்தை விட ஒரு வகையில் அதிர்ச்சியாக இருந்தது ஞாபகம் இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல், பல விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. உங்கள் கேள்வியில் இடம்பெறாத வேறு சிலவும் உள. புகைப்படங்கள் எடுப்பது, கீ போர்ட் வாசிப்பது போல் சில. சிறு வயதில் எல்லாக் குழந்தைகளிடமும் கேட்பது போல், நான் பெரியவளானதும் என்ன செய்யப் போகிறேன் என்று யாராவது கேட்டால், ‘நான் நிறைய நிறையப் படிப்பேன்… புதுசு புதுசாக எல்லாவற்றைப் பற்றியும் படிப்பேன். எப்பவும் படிச்சுக்கிட்டேயிருப்பேன்…’ என்று சொல்வேன். அது ஒருவகையில் உண்மையாகிற்று என்று தோன்றுகிறது. ஆனால், அதையொரு சுமையாக நான் எப்போதும் எண்ணுவதில்லை. எனக்கு எதையேனும் புதிதாகக் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். புதிய மொழிகள், புதிய கலைகள்… இப்படி. அதில்லாவிடில், எதையேனும் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும் – எழுதுவது, ஓவியம், புகைப்படங்கள் எடுப்பது அல்லது கைவினைக் கலையில் ஏதேனும் செய்வது… எல்லாமே இந்த மனநிலையால்தானே தவிர, பல்கலை வித்தகியெல்லாம் இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எதையேனும் க்ரியேட் செய்யாமல், அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது, உண்மையில் நான் இருப்பதாகவே தோன்றுவதில்லை; அவ்வளவுதான். இவையிரண்டில் ஒன்று இல்லாவிடினும் என்னால் நிலைகொள்ள முடியாது. தட்டழியுதல் என்றும், பொசமுட்டுதல் என்றும் பதங்கள் எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் உண்டு; எதுவும் செய்யாமல் சும்மாயிருக்க வேண்டுமென்றால் அப்படித்தானிருக்கும் எனக்கு.
மருத்துவமனைகளிலோ, வேறு எங்கோ காத்திருக்க வேண்டுமென்றால், வாசிப்பதற்குப் புத்தகம், அல்லது வரைய ஒரு சிறு நோட்டுப் புத்தகம் – இப்படி ஏதேனும் ஒன்றைக் கையோடு கொண்டு செல்வேன். இல்லாவிடில், என்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்கே தெரியாது.
இதுபோன்ற துறைகளில் இயங்கி வருபவர்களிடமிருந்து என்ன பெறுகிறேன் என்றால், முக்கியமாக எவ்வளவு புதிய சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்த அறிவு. மேலும், மேற்குறிப்பிட்ட துறைகள் சார்ந்து இயங்கும் சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு சில நல்ல நண்பர்களை அடையும் வாய்ப்பும் அதனால் எனக்குக் கிட்டியிருக்கிறது. தனிப்பட்ட நட்பு ஏற்படும்போது, எவ்வளவு ஊக்கத்துடன் அவர்கள் தங்கள் துறையில் இயங்குகிறார்கள் என்பதை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது. அது எனக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் அவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
வசந்தகால கான்லெஸ் எழுத உந்துதலாக இருந்த கெல்லி யு.கே.யைச் சார்ந்தவர். நிட்டிங் வடிவமைப்பாளர். அவருடைய பல புதிய பாட்டர்ன்களைச் சந்தைப்படுத்தும்முன் சோதித்துப் பார்க்க நான் டெஸ்ட் நிட்டராக இருந்திருக்கிறேன். ஒஹையோவில் லிடியா என்றொரு தோழி, ஓவியங்கள் சார்ந்த ஒரு குழுவில் அறிமுகமானவர். கோவிட் ஊரடங்குக் காலத்தில், அவர் பயிலத் தொடங்குவதாக இருந்த போர்ட்ரெய்ட் ஸ்கெட்ச் பயில என்னையும் ஊக்கி, ஒவ்வொரு நாளும் பாடங்களையும் என்னுடன் பகிர்ந்து வந்தார். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்துகொண்டு, இருவரும் ஒன்றாகப் பயின்றது, ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.
இதனால், பல விஷயங்களில் மனம் ஈடுபடுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக மட்டும் இல்லாமல், வாழ்வில் அழகிய பெறுமதி மிக்க பல விஷயங்களைக் கொண்டுவருவதாக உள்ளது எனக்கு. ஒன்றிலிருந்து இன்னொன்று… அதிலிருந்து வேறொன்று என ஓடிக்கொண்டேயிருக்கையில், கொஞ்சம் எழுதவும் செய்யலாம்; நிறையக் கற்றும் கொள்ளலாம்; இந்தச் சகட யோக மனசினால் கிடைக்கும் பரிசு இதுதான்.
தமிழில் சமகாலக் கவிதைகளில், இது போல் வேறு துறை சார்ந்த கோணத்திலிருந்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள். கவிஞர் ரவிசுப்பிரமணியன் கவிதைகளில், இசை சார்ந்த ப்ரயோகங்களையும், கோணங்களையும் பார்க்கமுடியும். இசையின் சில கவிதைகளிலும் பாடல்கள் மற்றும் இசை சார்ந்த ரசனை உள்ளோடிக்கொண்டிருப்பதைக் காண முடியும். கௌரிப்ரியாவின் கவிதைகளில் அவர் பணியாற்றும் மருத்துவத்துறை சார்ந்த சில அனுபவங்கள் கவிதையாகும் விதம் ஆச்சர்யப்படுத்தும். இதுபோல் இன்னும் பலரும் இருக்கலாம். இதன்றியும், பொதுவான ஒரு கவிதை வாசகியாக, எளிய மொழியில் ஆழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளை சமீபகாலங்களில் அதிகம் வாசிக்கிறேன். முகுந்தின் பல கவிதைகளும்கூட எளிய கூறுமுறையிலிருந்து கிளைப்பவையே. அதுபோன்ற அனுபவம் தரும் கவிதைகளை இப்போது அதிகம் வாசிக்கமுடிகிறது. இயல்பான மொழியில் பகிரப்படும் நுட்பமான அனுபவங்கள் தீவிரமான தாக்கம் ஏற்படுத்துகின்றன. மேலும், மரபு வடிவங்கள், குறிப்பாக சங்க இலக்கியத்தை வாசிக்கும் அனுபவங்களை நவீனப்படுத்தித்தரும் கவிதைகளையும் காண முடிகிறது. தம் சிலபல கவிதைகளில் பெருந்தேவி அச்சித்திரங்களை நவீன உலகின் பின்னணியில் வரைந்து காட்டுகிறார்.
பல்வேறு பின்னணிகளில், தமக்கென ப்ரத்யேகப் பாணிகளில், நிறைவான வாசிப்பனுபவம் தரும் கவிதைகளை எழுதும் பலர் சமகாலத்தில் இருக்கிறார்கள்.
எளிமையின் அழகியலையும் கவிதையின் உள்ளார்ந்த தீவிரத்தையும் ஒன்றாகக் கொண்டாடி வரும் காலமாக இதனை நான் உணர்கிறேன்.
கே:உங்கள் கவிதைகளில் கனவில் வரும் காட்சிகளை அப்படியே எழுதி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் உச்சம் ‘என் கனவு எழுதிய ஒரு பருத்திச் செடி’. இந்தக் கவிதையில் இறுதி இரண்டு வரி தவிர கவிதை வரிகளாவே கனவில் வந்தன என்று அடிக்குறிப்பு இடப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கான கவிதைப் பித்து உணர்த்துவது என்ன? கனவில் கூட கவிதை எழுதும் கவிஞரை உங்களுள் கண்ட தருணம் எப்படியிருந்தது?
ப: 2024-இல் எழுதப்பட்ட பல கவிதைகள், தூக்கத்தினிடையே எழுந்து எழுதப்பட்ட கவிதைகள். தூக்கத்தில் மங்கலான கோட்டுச் சித்திரம் போல சில சமயம் யோசனைகள் தோன்றும்; உடனே எழுந்து அதனை எழுதி வைப்பேன். சிலவற்றை, பின்னர் திருத்தியும் எழுதுவேன். ஆனால், நீங்கள் குறிப்பிடும் கவிதை மாறுபட்டது. இது ஒரு யோசனையாகவோ, கருப்பொருளாகவோ தோன்றவில்லை. ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட வடிவத்திலேயே கனவில் வந்தது. அது எனக்கே ஒரு வினோதமான அனுபவம்தான். ஆனால், விழிப்பு நிலையில் எழுதுவதற்கும் கனவில் எழுதுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பதே என் எண்ணம். நாம் விழிப்பு நிலையில் கவிதையெழுதும்போதுகூட, நாமாக இருந்தா எழுதுகிறோம்? எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. எழுதும்போது நாம் வேறு யாரோவாக இருக்கிறோம்; அல்லது ஒரு trance நிலை என்று வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் எழுதி முடித்தவுடன், பல சமயங்களில், அதனுடன் எந்தத் தொடர்பையும் உணர முடிவதில்லை. ஒவ்வொரு சமயம், என்ன நினைத்து அப்படி எழுதினோம் என்பது எனக்கே புதிராக இருப்பதும் உண்டு. சில சமயம் எழுதக் கூடாமல் கை நழுவிப் போவதும் உண்டு. விழித்தெழும்போதே ஏதோ ஒரு வரி தோன்றும். தூக்கத்தில் அவ்வளவு பெரியதொரு உண்மையைச் சொல்லும் பொருள் தருவதான வரி போலத் தோன்றும். ஆனால், உண்மையான பொருள் தரும் சிந்தனைகள் சட்டென மறந்து போய்விடுவதைக் கண்டிருக்கிறீர்களா… சில சமயம் ஊற்று நீர் பொங்கி அந்த ஊற்றிலேயே மறைந்துவிடும். அது போல் இந்தச் சிந்தனைகளும் மனசின் ஆழத்தில் தோன்றி மீண்டும் அங்கேயே போய் மறைந்துகொள்ளும். அதனால், விழித்திருக்கும்போது எழுதுவது, தூக்கத்தினிடையில் எழுந்து எழுதுவது அல்லது கனவில் எழுதுவது – எல்லாமே ஒரு வகையில் எனக்கு ஒன்றுதான்.
கே:தொழிற்நுட்பம் (chat GPT) மற்றும் மருத்துவச் சொற்கள் (ஹாலுசினேஷன், Alexithymic) போன்ற சொற்களும், கடல் கடந்த இலக்கியத்தின் மீதான தாக்கத்தால் எழுதிய கவிதைகளும், அந்தந்தச் சொற்களின் அடியாழம் உணராதபோது சம்பந்தப்பட்ட கவிதானுபவம் உணரப்படமால் போய் விடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கிறதா? அடிக்குறிப்புகள் தாண்டி அந்த அனுபவத்தைக் கடத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சி என்ன?
ப: நீங்கள் குறிப்பிடுவது போன்ற துறை சார்ந்த நுட்பமான சொற்களைச் சில கவிதைகளில் பயன்படுத்துகிறேன். Chat GPT அது எழுதப்பட்ட காலம் சார்ந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் அமைந்தது. மேலும், கவிதையில் நான் விரும்பும் உள்ளடக்கத்தைக் கடத்தத் தேவைப்படும்போது, துறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறேன். அது ஒரு பரிசோதனை முயற்சியாகப் பார்க்கப்படலாம். என்னைப் பொருத்த அளவில், கவிதைக்கு அது தேவையாக இருந்தது; அவ்வளவுதான். மட்டுமன்றி, இது போன்ற சிக்கல்களற்ற ஒரு கவிதையை வாசிக்கும்போதுகூட, ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வித வாசிப்பனுபவத்தைத் தரலாம். இச்சொற்கள் வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, அது பற்றி அவர்கள் தேடிக் கண்டறியலாம்; அல்லது இது எனக்கான கவிதையன்று என அவர்கள் விலகிச் செல்லலாம். அது வாசிப்பவரின் சுதந்திரம். அப்படிப்பட்ட சொற்களுக்கு ஒரு எளிய அறிமுகமாகத்தான், அடிக்குறிப்புகளைத் தருகிறேன். அதை விரித்தெழுதுவதோ அல்லது அதை வாசகர்கள் விளங்கிக்கொண்டு வாசிக்கவேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் வேறு எந்த முயற்சியுமோ, அவர்களின் வாசிப்பனுபவத்தில் குறுக்கீடு செய்துவிடும் என்றே எண்ணுகிறேன். அப்படி இடைப்படுவதை நான் விரும்புவதில்லை.
கே:நீங்கள் பல கவிதைகளில் ஒரு வரியையோ அல்லது வார்த்தையையோ இரண்டு முறை அல்லது மும்முறை சொல்கின்றீர்கள். சில கவிதைகளில் முதல் பத்தி, இரண்டாம் பத்தி – இரண்டும் ஒன்றாக இருக்கின்றன; மீதிக் கவிதை வேறாக இருக்கிறது. உங்களது கவிதைகள் free format-இல் இருப்பது, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கவிதை சொல்லும் முறையா? கவிதையின் வடிவம் சார்ந்த உங்கள் பார்வையைச் சொல்லுங்கள்.
ப: எங்கள் திருநெல்வேலி டவுன் நேதாஜி சந்தையில் மைய நூலகம் இருந்தது. அங்கே பொருநை வாசகர் வட்டம் என்ற அமைப்பு இருந்தது. நானும் அதில் உறுப்பினர். வாரம் ஒருமுறை வாசகர் வட்டக் கூட்டம் நடக்கும். அதில் ஒரு முறை, ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார்: “புதுக்கவிதை பக்கோடா போன்றது. ஒவ்வொன்றும் தன் வடிவத்தைத் தானேதான் தேர்ந்தெடுக்கும்’ என்று. இப்போது அதுதான் ஞாபகம் வருகிறது. எழுதி முடிக்கும் வரையிலும், இது இவ்வடிவத்தில் வரவேண்டும் என்ற எந்த நோக்கும் முன்னிற்பதில்லை. நான் உணர்ந்தது முழுமையாக என் மனத்தில் இருந்த அளவுக்கு அதே தொனியில் வெளிப்பட்டிருக்கிறதா என அதில் மட்டுமே என் முதற் கவனம் இருக்கும். அதற்காக, சில முறை, பல முறை எடிட் செய்வதும் உண்டு. நான் பகிர விழைந்தது அதே ரீதியில் எழுத்தாகவில்லை எனக் கைவிட்ட கவிதைகளும் உண்டு.
இருமுறை மும்முறை மீளெழுதப்படும் வரிகள், அது அப்படித்தான் தேவையென என் மனசுக்குத் தோன்றும். சொல்லிப் பார்ப்பேன்; சில சமயங்களில் அது பிடிவாதம் பிடிக்கும். சரியென அப்படியே விட்டுவிடுவேன். வடிவம் சார்ந்த என் பார்வை என்றால், எல்லாவிதப் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும். எனக்கு மரபு பிடிக்கும். சந்தம் பிடிக்கும். என் முதல் தொகுப்பின் ‘அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்’ போன்று சில கவிதைகள் சந்தத்தில் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனால், சந்தத்துக்கு குழந்தைப் பாடல்கள் ஒரு நல்ல வாய்ப்பு; உள்ளடக்கத்துக்கும், குழந்தைகளை ஈர்ப்பதற்கும். அப்படி எழுதியதில் ஒன்றிரண்டு தும்பியில் வெளியாகியிருக்கின்றன. சித்திரக் கவி பிடிக்கும். ஓரிரு கவிதைகள் சித்திரக் கவியாக எங்கள் தனிப்பார்வைக்கான கையெழுத்துத் தொகுப்பில் எழுதி வைத்திருக்கிறேன். நூல் வடிவமைப்பில் அது எவ்விதம் பொருந்தும் என்கிற தயக்கத்தால், இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை.
ஆனால், வடிவம் எதுவாயினும், கவிதை கடத்தும் உணர்வுதான் முக்கியம். அது நம் மனத்தின் மனத்திலிருந்து வெளிப்படும்போது, வடிவம் பொருட்டாவதில்லை.
கே:உங்கள் மொத்தக் கவிதையுலகை உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘எடையற்ற நிழல்’ என்ற பதத்துக்குள் அடக்கிவிட முடியும். உங்கள் கவிதைகள் வழியாக நீங்கள் எதையும் சுமக்கவோ சுமத்தவோ நினைக்கவில்லை. அது நிழல் போல எடையற்று எப்போதும் உடனிருக்கும்; ஆனால் எல்லாச் சமயத்திலும் வெளிப்படாது. இந்தக் கவிதைகளை எழுதி முடித்த பின்னர் நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்? அவற்றை வாசிப்பவர்களுக்கு அவை என்னவாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்?
ப: எப்போதும் எழுதி முடித்தவுடன், ஏதோ ஒரு நிறைவான உணர்வும் இருக்கும்; அதே வேளை, அதிலிருந்து சட்டென்று ஒரு விலக்கமும் தோன்றும். சில சமயம், நான் எழுதி முடித்து நானே வாசித்ததும், அதன் வேலை முடிந்தது என்று தோன்றும். முகுந்தின் தூண்டுதல் இல்லாவிட்டால், இவற்றையெல்லாம் நூலாக்கம் செய்யும் எண்ணம் தோன்றியிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், எப்போதேனும் என் கவிதையை வாசித்தவர்கள் அது பற்றி ஓரிரு வார்த்தைகள் பகிரும்போது, நாம் நம்மையறியாமல், இன்னொருவர் வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய பகுதியாகி அவர்களைத் தொட்டிருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.
என் கவிதைகள் வாசிப்பவர்களுக்கு வாழ்வின் இனிமையை எடுத்துக்காட்ட வேண்டும்; நம் பூமி என்கிற அற்புதத்தை, அதில் நாம் வாழக் கிட்டிய பெறுமதியை நினைவூட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கவிதையை வாசித்த நாளில், அதனால் அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையோ, மனசில் மகிழ்ச்சியின் ஒளியோ தோன்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், ஒரு பறவை என்னைவிட இதை அதிகம் சாதித்துவிட இயலும். பறவைகள் நம்மிலும் உயர்ந்த கவிஞர்கள். அவற்றுக்கு அன்றாடம் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அத்தனையும் சத்தியம்; அத்தனையும் உள்ளத்தில் அமைதி பரப்பும் ஒரு சுடர். என் கவிதைகள் அச்சுடரின் ஒரு நிழலாக இருந்தால்கூட, என் எண்ணம் கைகூடிவிடக் கூடும்.
கே:உங்களது கவிதைகள், உங்களை அமைதியான, கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவரென அடையாளப்படுத்துகிறது. உள்முகச் சிந்தனையாளராகவே உங்களைக் காட்டித் தருகிறது. ஆமவடை என்ற படிமம், ‘அடிக்கடி உடைக்கப்பட்ட மட்பாண்டம்’ என்ற படிமம், ‘கிறுக்கு பிடித்த சுவர்’ என்ற படிமம் எல்லாம் குறிப்பது அதுவே. எந்தச் சொல்லையும் புன்னகையில்லாமல் சொல்ல முடியாத உங்களது கவிதையுலகில் வெறுப்பின்மை, தாய்மை, எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு – இவையே பிரதானமாய் இருக்கின்றன. காய்கறி வண்டியிலிருந்து சிதறும் தக்காளிக்குப் பதறும், குட்டிப் பூனைகளின் பிரிவுக்கு தாய்ப் பூனையிடம் மன்னிப்பு கேட்கும் தூய மனமும் கொண்டது உங்கள் கவிதை மனம். அதற்கு தங்கரளியும் ஈர்க்குச்சியும் போதுமானதாக இருக்கிறது நினைவுகளைக் கொண்டாட. கையடக்க வான் கலைடாஸ்கோப் என்று உங்களை சுயப்பிரகடனம் செய்து கொள்கிற கலைமனம் உங்களது. அப்படிப்பட்ட நலம் சூழும் மனம் மொட்டை மாடியில் கட்டப்பட்ட ஆட்டுக்குட்டியென தனிமைக்குத் திரும்புவது ஏன்? ‘ஆயிரமாயிரம் ஒளிர்தனிமலர்களை’ அவை பூத்த போதும் அது எப்போதும் சூடவிரும்பவது ஒளிகுறைந்த வெளிச்சத்தை, அந்த மனத்தை சிக்கல் தேவதை விதவிதமான அலைவுறுதலுக்கு உட்படுவது ஏன் என்ற கண்டடைதலை நோக்கியே உங்கள் கவிதையுலகம் விரிகிறது. ‘மனசின் இருண்ட ஆயிரங்கால் மண்டபம்’ அதில் ‘தொலைதலும் மீள்தலும் ஒன்றுதான்’ என்று சொல்லும் உங்கள் கவிதைகளில் அகத் தனிமைக்குப் பெரிய இடமுண்டு. அது கண்டறியும் பெரிய சித்தாந்தம் தத்துவம் “காலைச் சூரியன் ஒன்றே/ என் தோசைகளுக்கு நிகரானது.’ இந்த பிரம்மாண்ட தன்னம்பிக்கைக்கு வந்து சேர்ந்ததைச் சார்ந்து சொல்ல முடியுமா?
ப: தனிமை பற்றி அவ்வளவா எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. காட்சி விவரிப்புகள், காட்சிப் படிமங்கள் கொண்ட கவிதைகளை எழுதும்போதோ அல்லது இயற்கையை உற்றுநோக்கும் கவிதைகளை எழுதும்போதோ, அதில் தனிமையுணர்வின் தொனி சேர்ந்துவிடலாம். தனிமை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு பொருள் தரக்கூடிய நுட்பமான உணர்வு என்பதால் எழுதியவரின் சுய அனுபவமாக இடையீடு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், எப்போதும் அது அப்படியிருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே, பலரும் என்னை அன்பான நட்பான மனுஷியாகவே காண்கிறார்கள். அது ஒருவகையில் உண்மையும்கூட. மீண்டும் மீண்டும் என்னைக் காயப்படுத்தியவர்களிடம், அந்த வலிக்கு அஞ்சி விலகியிருந்தாலும், அவர்கள் மீதும் எனக்கு எப்போதும் அதே அன்புதான். எனக்கு எல்லாரையும் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கிறது.
சில மாதங்களுக்குமுன் ஒரு முறை, நாங்கள் கடைவீதியிலிருந்து திரும்பிவரும்போது, ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி ஒன்று எங்களுடன் வந்துவிட்டது; சொல்லப்போனால், என் மகளின் பின்னாலேயே வந்தது. அதை எங்கள் குடியிருப்பின் சார்பாக இப்போது வளர்த்து வருகிறோம். குடியிருப்புக் காவலர்கள் அறை அருகே அதற்கு இருக்கை. அதன் பெயர் பிங்க்கி. சில சமயம் காலை நடையில், அது எங்கள் அருகே வந்து அமரும். அதைத் தடவிக் கொடுக்கும்போது, உலகில் உள்ள எல்லாவற்றின்மீதும் ரொம்ப ரொம்ப அன்பாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அன்பு தளும்பும்போது எல்லாருக்கும் அப்படித்தான் மனசு குழம்பும் போலும்; ஆனால் அதில் ஒரு நிறைவு.
என் நட்பு வட்டம் குறுகியதுதான்; ஆனால், அவ்வளவு தனிமையான ஆள் இல்லை நான். வீட்டிலும் நெருங்கிய வட்டத்திலும் எப்போதும் ஒரே குதூகலமாக இருப்பேன். அதற்கு எனக்குச் சிறிய காரணங்கள் போதும்; சில சமயம் காரணமே தேவையில்லை. என்னைப் பாதுகாப்பாக உணரவைக்கும் சிறிய வட்டத்துக்குள் இருப்பதால், தனிமையை நாடும் ஆள் போன்ற தோற்றம் வந்திருக்கலாமே தவிர, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு quirkiness இருக்கலாம்; அப்படியொரு தன்மை கொண்ட சாதாரண ஆள்தான் நானும்.
அம்மாவைத் தேடி ஒருமுறை போய், அவளைக் கட்டிக்கொள்ள நினைத்து, அவருடைய வெறுப்பான பார்வைதான் திரும்பக் கிடைத்த அதிர்ச்சி. அதற்குப் பெரியவர்களின் உலகில் ஏதோவொரு காரணம் இருந்தது, என் தவறு ஒன்றும் இல்லை என்று அதை ஏற்றுக்கொண்டு தாண்டி வர எனக்கு வெகு காலம் ஆனது. அந்த அனுபவங்கள், அன்பை நான் அணுகும் தன்மையை எப்படிப் பாதித்திருக்கின்றனவோ, அதே அளவுக்கு என்னை உறுதியானவளாகவும் ஆக்கியிருக்கின்றன.
இவ்விரண்டுமே என் கவிதைகளின் தன்மையைப் பாதிக்கின்றன என்று நினைக்கிறேன். தனிமையையும், மகிழ்ச்சியையும் இணையான முறையில் எழுத முடிவது அதனால்தான். எதையும் தாண்டி வந்து என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற உறுதியான எண்ணம்தான், கவிதைகளில் அப்படி அதீத தன்னம்பிக்கையாக வெளிப்படுகிறது போலும்.
முகுந்திடம் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: ‘இருக்கும் ஒரு வாழ்வின் மதிப்பையறிந்து, மகோன்னதங்களை உத்தேசிக்க வேண்டும். நான் இங்கு இருந்தேன் என்பதற்கு அடையாளமாக மிகப்பெரிய ஏதோவொன்றை விட்டுச் செல்ல வேண்டும்’. இதுவும் ஒரு பிரம்மாண்ட தன்னம்பிக்கை போல் தொனிக்கிறதல்லவா… ஆனால், என் வாழ்வில் இதுதான் மிகச் சிறிய ஆசை!
***
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com
நாளைக்கு என் நெற்றி முழுவதும் திருநீறு பூசுவேன்; வட்டமான சந்தனத்தை நடுவில் வைத்துக்கொள்வேன். தொலைவதற்கு முன்பு, அனைவரையும் இறுதியாக அணைத்துக்கொள்வேன். யாருடைய அழுகையெல்லாம் முடிந்துபோயிற்றோ, யாருக்கெல்லாம் பதற்றம் தீர்ந்துபோயிற்றோ மீண்டும் அதற்கெல்லாம் உயிர்தர நான் முயற்சி செய்வேன்.
முடிந்தவரையில், எதிர்காலமொன்றில் உங்களைச் சந்திப்பேன். அதுவரையில் நான், என்னுடைய தடயத்தை அதிர்ச்சியோடு விட்டுச் செல்வேன்.
பிறழ் நாவலில் நிஜந்தன்
கடந்த ஏப்ரல் 12 இரவு 11 மணி போல நிஜந்தனின் உறவினர் இருவரை மருத்துவர் அழைப்பதாக வாசலில் காத்திருந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது கோவை அரசு மருத்துவமனையின் ஐ சி யூ பிரிவு. 99 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்ததால் அனைவருக்குமே அதீத பதற்றம். ஜெயசீலனும் பார்த்திபனும் உள்ளே சென்றனர். அப்போது நிஜந்தனுக்கு CPR கொடுத்து கொண்டிருந்தனர். கடந்த சில மணி நேரங்களில் நான்கு முறை CPR கொடுத்து விட்டோம் என்றும் இனி கஷ்டம் என்றும் மருத்துவர்கள் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வது புரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜெயசீலன் மருத்துவர்களிடம் நிஜந்தனைப் பற்றி புலம்பியபடி இருந்தார். “நெறய படிப்பான் டாக்டர். புக்ஸா படிப்பான். நெறயா புக்ஸ் படிச்சி படிச்சே இப்படி ஆகிட்டான் டாக்டர்” எனப் புலம்பியபடியே இருந்தான். நிஜந்தனின் மரணத்திற்கு ஏதோ ஒருவகையில் அவனது அதீத வாசிப்பே காரணம் என ஜெயசீலன் நம்பினான்.
ஆம், நிஜந்தனை பலருக்கும் ஒரு நல்ல வாசகனாகதான் அறிமுகம். அவனது நண்பர்கள் குழுவில் பலர் அவனை அப்படியானவனாகத் தான் அறிமுகம் செய்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நல்ல வாசகனாக அவன் அவனை தக்க வைத்துக் கொள்ள பல போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தின் மனநிலையில் “இப்படி கத புத்தகமெல்லாம் காசு கொடுத்து வாங்கி படிக்கணுமா நிஜந்தா” எனப் புலம்பல்களாக ஆரம்பித்து, “புத்தகத்தை எல்லாம் தூக்கி வீசிவிடுவேன்” என கோப வார்த்தைகள் வரை நீண்டிருக்கின்றன.
பின் நாட்களில் மனநோயின் பிடியில் அவன் சிக்கி உழன்ற நேரங்களில், அந்தப் போராட்டம் இன்னமும் அதிகமானது. மருத்துவர்களின் பரிந்துரையின்படி திரைப்படங்களையும், புத்தகங்களையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. சில நாட்கள் அமைதியாக இருந்தான். நண்பர்களின் அழைப்புகளின் போது, “என்னால படிக்க முடியல, படம் பார்க்க முடியல” என புலம்பியபடி இருப்பான். அப்போதும் தான் முன்பு வாசித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களோடு உரையாடியபடியே இருந்தான்.
தொடர்ந்த சிகிச்சையில் மருத்துவர்களின் அனுமதியோடு மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். ஆனாலும் சோகம் கொள்ளச் செய்கிற, மனதைக் கனக்கச் செய்கிற எதையும் வாசிக்க கூடாது என்பது நிபந்தனை. அப்படியான புத்தகங்களை தேர்வு செய்து வாசித்தான். அப்படியாக தொடர்ந்த வாசிப்பு அவனது விருப்பமான புத்தகங்களையும் வாசிக்க வழி செய்தது. அ-புனைவுகள், அரசியல், புனைவுகள் என அவனது வாசிப்புப் பட்டியல் மிகப் பெரியது.
தொடர்ச்சியான மருந்துகளும், ஷாக் ட்ரீட்மென்ட்டும் அவனுக்கு அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தியது. வாசித்த புத்தகமெல்லாம் மறந்துவிட்டது. பிடித்த புத்தகங்களை எல்லாம் திரும்பவும் வாசித்தான். திரும்பத் திரும்ப வாசித்தான். அப்படியான வாசிப்பு சோர்வை தரவில்லையா என கேட்டால், “ஒவ்வொரு முறையும் அப்புனைவுலகில் புதிதாக பிரவேசிக்க முடிகிறது” என உற்சாகமாக பதில் சொல்லுவான்.
வாசிப்பின் வழியாகவே நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறான். எளிய குடும்பத்திற்கான மருத்துவ உதவிகள் பலவும் நிஜந்தன் என்னும் வாசகனுக்கு கிடைத்தது. பல புத்தகங்களையும் நண்பர்கள் அனுப்பினர். அப்படியாக புத்தகங்கள் கொரியரில் வருகிற நேரங்களில் உற்சாகமாக இருப்பான். அவனை சந்திக்கிற அனைவருக்கும் புத்தகங்கள் மேல் ஆர்வம்கொள்ளச் செய்யும் அவனது பேச்சு. அவனது கைப்பேசி அழைப்புகள் பலவும், பல மணிநேரங்களாக புத்தகம் சார்ந்த உரையாடல்களாகவே இருக்கும்.
தன் அன்றாட நாளை மனிதன் எதிர்காலத்தை வைத்தே கடத்துகிறான். ஆனால் நிஜந்தன் தன் இறந்த காலத்தின் மனவேதனைகளை இலக்கியத்தில் தொலைத்து, அந்த நொடி வாழ தனக்குப் பிடித்தமான ஒரு வாழ்வை புனைவுகளின் உதவியோடு தேர்ந்து கொண்டான்.
ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்காக வெளியூர் செல்லும் நேரங்களில் பயண காலத்திற்கேற்ப அத்தனை புத்தகங்களைத் தூக்கி செல்பவன், அத்தனையையும் படித்து முடித்து, நண்பர்களிடம் புத்தங்களை அனுப்ப சொல்லி படித்துக் கொண்டிருப்பான். பா. வெங்கடேசன், மண்ட்டோ, ஷோபா சக்தி, கோபிகிருஷ்ணன், ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் என அவனுக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பலர். விசித்திரத் தோட்டம் நாவலை திரும்பத் திரும்ப வாசித்தவன், கன்னி நாவலின் பாண்டியை கடைசி வரையும் நினைவு கூர்ந்தபடியிருந்தான். மனரீதியான பாதிப்புகளின் போதெல்லாம் பாண்டியுடன் அவன் தன்னைப் பொருத்தியிருக்க கூடும். கன்னி நாவலின் தாக்கம் பிறழ் நாவலில் அதிகமிருப்பதையும் உணர முடியும். ஆனாலும் பாண்டியைப் போல முழுவதும் தன்னுலகில் மட்டும் மூழ்கிவிடமால், தன்னைப்பற்றியும் சமூகத்தைப் பற்றிய மிகத் தெளிவான கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தான்.
புத்தகங்கள் மட்டுமில்லாது தொடர்ந்து எழுதியும் கொண்டிருந்தான். நக்கலைட்ஸ் சேனலில் பல கான்செப்ட் எழுதியிருக்கிறான். அவனது எழுத்தில் வெளிவந்த Back to School நிறைய பாராட்டுகளைப் பெற்றது. நக்கலைட்ஸ் சேனலின் நண்பர்கள் அவன் தொடர்ந்து எழுத ஊக்கப் படுத்தியபடி இருப்பார்கள். நண்பர் மித்துனுடன் இணைந்து திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதவும் தொடர்ந்த உரையாடலில் இருந்த நிஜந்தனுக்கு, நடிகர் ஷோபாவின் வாழ்வைத் திரைக்கதையாக்க மிகுந்த ஆசையிருந்தது. அதற்கான முன்தயாரிப்புகளில் சில நாட்களாக தன்னை ஈடுபடுத்தி, அவனளவில் பெரும் தேடலில் தன்னைத் தொலைத்து இருந்தான்.
பிறழ் நாவல் வெளிவருகிற தயாரிப்புகளில் இருக்கும்போதும், வெளிவந்த போதும் உற்சாக மிகுதியோடு இருந்தவன், சென்னை புத்தகக் காட்சியின்போது நிகழ்ந்த வெளியீட்டில் நிறைய நண்பர்களை சந்தித்தபடி சந்தோசமானவனாய் இருந்தான்.
(வீட்டிற்கு எதிரிலிருந்த மரத்தடியை காம்யூ தோட்டம் என அவன் பெயரிட்ட) வீட்டிற்கு வெளியே இருக்கிற சக்கரைப்பழ மரத்தின்கீழ் நாற்காலி போட்டு அமர்ந்தபடி இன்றும் அவன் வாசித்து கொண்டிருப்பதுபோல இருக்கிறது. என்னுடைய தம்பி என்பதெல்லாம் தாண்டி, ஒரு வாசகனாக அவனிடம் கற்றுக் கொள்ள எனக்கு நிறைய இருக்கிறது. ஒரு வாசகன் என்பதாக தன்னை அடையாளம் கொள்ளவே அவனும் விரும்புவான்.
வரலாற்றில் பெரும் அநீதிகள் இழைக்கப்படும்போது – அது காலனியம், போர்கள், ஆக்கிரமிப்புகளாகட்டும், சாதி-மத-இன ஒடுக்குமுறைகளாகட்டும், மனிதர்களால் உருவாக்கப்படும் பஞ்சங்களாகட்டும் – உடனுக்குடனாக பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பல உபாதைகள் ஏற்படுவது பற்றி அறிந்திருப்போம். சமகாலத்திலும் இவை ஓய்ந்தபாடில்லை. பாலஸ்தீனத்தில் அடிக்கடி வானிலிருந்து குண்டு மழை பொழிவதைக் கேட்டுப் பழகியிருக்கும் மக்கள், அங்கிருந்து புலம்பெயர்ந்தாலும் இரவு நேரத்தில் இல்லாத குண்டுச் சத்தம் கேட்டு எழுந்து அலறுவதைப் பதிவு செய்திருக்கின்றனர். ரபீப் ஜியாதாவின் (Rafeef Ziadah) We teach life, sir என்னும் அற்புதமான நிகழ்த்துகலைக் கவிதை, அந்த வலிமிகுந்த நினைவோட்டங்களைப் பதிவு செய்கிறது:
“I wish I could just run barefoot in every refugee camp and hold every child, cover their ears so they wouldn’t have to hear the sound of bombing for the rest of their life the way I do”
மேற்கத்திய தத்துவ மரபில் தெகார்தே இருமைவாதத்தை முன்வைத்தார். உடலையும் மனதையும் இரு துருவங்களாகக் கருதினார். மனம் பருப்பொருளல்லாத ஒன்று; உடல் ஓர் இயந்திரம் என்னும் நோக்கே அதன் சாரம். தத்துவ ரீதியில் இதற்கான எதிர்ப்புகள் பல காலமாக இருந்து வந்தாலும், மரபியல், நரம்பியல் துறைகளில் நடந்துவரும் ஆய்வுகள் இந்தப் பிரிவினையை முழுமுற்றாகத் தகர்க்கின்றன. மனதின் ஆழத்தில் நிகழும் பெருந்துயரமும் அதிர்ச்சியும் மனதுள்ளேயே இருந்துவிடுவதில்லை. உடலின் செல்களுள் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. மன அழுத்தங்கள் உடலைப் பாதிப்பது பற்றியும், உடல் நோய்கள் மன நிம்மதியைப் பாதிப்பது பற்றியும் மருத்துவ அறிவியல் பேசுகிறது. பெருந்துன்பங்களுக்கு ஆளாவோர்க்குத் தம் உடல்நிலையும் மனநிலையும் மட்டும் பாதிப்பதன்றி, அத்துன்பங்களின் சுவடுகள் அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன. இக்கட்டுரை மேல்மரபியல் ஆய்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கைக் கொண்டுள்ளது. (ஒரு அறிவியல் ஆசிரியரின் இலாவகத்தை இக்கட்டுரை பெற்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், நான் வரலாற்று ஆய்வாளன்.) இத்தகைய அறிவியல் ஆய்வுகள் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமகாலத்தைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வழித்தடம் அமைத்துக் கொடுக்கின்றன. ஒரு வகையில் இந்நெடிய வரலாற்றில் நம்மையும் நமது சமூகத்தையும் எப்படி இருத்திப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஒருவிதத் தெளிவை இந்த அறிவியல் ஆய்வுகள் எனக்குக் கொடுத்துள்ளன. மேலும், இத்தகைய ஆய்வுகளைச் சாதிச் சமூகத்தில் முன்வைக்கும்போது அதற்கெனத் தனியே சிந்திக்கும் வேலையையும் சேர்த்தே கொடுக்கிறது. மரபியலை வைத்துக்கொண்டு நம் ஊரில் அந்தக் காலத்தில் பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, இக்கட்டுரை அதைப் பற்றியும் இறுதியில் சில வார்த்தைகளைப் பேசுகிறது.
சமூக ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் உளவியல் தொடர்பான உரையாடல்கள் பெருகியுள்ளன. நல்ல விஷயம். உளவியல் பிரச்சனைகள் உடல் ரீதியான அசௌகரியங்களையும், சமயத்தில் நோய்களையும் தர வல்லன என்பது ஓரளவு பொது அறிவாகிவிட்டது. மேலும், சில தீவிர உளவியல் நெருக்கடிகள் நம்மை ட்ராமாவுக்குள் (Trauma – அஞர்) தள்ள வல்லவை. அதிர்ச்சியும் வருத்தமும் பதற்றமும் உச்சம் பெறும் நிலையாக ட்ராமாவை வரையறுக்கலாம். நம்மை உளக்குலைவுக்கு உள்ளாக்கும் இத்துன்பங்களின் தடங்கள் நீங்காமல் PTSD (Post-Traumatic Stress Disorder) ஆக வடுவாக மாறுவதும் உண்டு. ஒரு பெருந்துன்பத்துக்குப் பிறகு, அதன் வடு ஆறாமல் நினைவுகளாகவும் (Memories), கனவுகளாகவும் (Dreams and Nightmares), அச்ச உணர்வாகவும் மாறி நமது அன்றாட வாழ்வையே பாதிக்கும் நிலையை PTSD என உளவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். நிறைய உளவியலாளர்கள் இப்படிப்பட்ட ட்ராமாக்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் (Intergenerational trauma) என்று பல காலமாகச் சொல்லி வருகின்றனர். நமக்கு இந்தச் சொல்லாடல்கள் எல்லாம் ஓரளவு பழக்கமானவை தான். எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் நமது பெற்றோரின் ட்ராமா நம்மை பாதித்திருக்கும். பெற்றோர் தமது வாழ்வில் நிகழும் துயரங்களைச் சரியாகக் கையாளாமல் விட்டு, அதைக் குழந்தைகள் மேல் ஒரு வகையில் ஏற்றிவிடுவது உண்டு. பெற்றோருடனே நாம் இருப்பதால் அவர்களது நடத்தை மூலம் நம்மிடம் வந்து சேர்வதுண்டு. குழந்தைகளிடம் இவ்வாறு ஏற்றப்படும் ட்ராமாவை அவர்கள் சரியாகக் கையாளாமல் விட்டால் அது அவர்களது குழந்தைகளுக்கும் கடத்தப்படும் என்பது உளவியலாளர்கள் கருத்து. இதைப் பற்றிப் படிக்கப் படிக்க ஏதோ ஒரு வம்சாவழியினருக்கே விட்ட சாபத்தைப் படிப்பது போலத்தான் உணர்ந்தேன்.
நம்மூர்க் கதைகளில் ஏதோ ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி நடந்திருக்கும். அதனால் கோபமுற்ற அப்பெண்ணோ அப்பெண்ணின் பேயோ அந்த அநீதி இழைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பரம்பரைக்கே சாபமிட்டுவிடுவாள். அதனால் அப்பரம்பரையினரே ஏதோ ஒரு வகையில் அந்தப் பாதிப்புகளைத் தாங்கியிருப்பார்கள். அக்கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அப்பெண்ணைத் தெய்வமாகவோ யட்சியாகவோ வழிபடுவர். பல ஆணவக் கொலை அம்மன்கள் இப்படி வழிபடப்படுபவர்கள்தான். தமிழ்க் கதைகள் மட்டுமன்றி புராண இதிகாசங்களிலும், பேய்க் கதைகளிலும் இந்த trope-ஐ நாம் பார்த்திருப்போம். Intergenerational trauma, Transgenerational trauma போன்ற பதங்களைப் பார்க்கையிலோ அவற்றைப் பற்றிப் படிக்கையிலோ இந்தப் பேய்க்கதையும் அதன் சாபமும்தான் நியாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில்கூட ஜெயமோகனின் ”ஓநாயின் மூக்கு” என்னும் அட்டகாசமான சிறுகதையும் இப்படிப்பட்ட சாபத்தை மையமிட்டு வந்ததுதான். கதைக்குள்ளேயே அதற்கு ஒரு பகுத்தறிவுவாத விளக்கமும் வைத்திருப்பார்.
சாபத்தையும் ட்ராமாவையும் இணைப்பதற்குக் காரணமுண்டு. மனிதர்கள் பரிணாம வளர்ச்சியினால் பெற்ற ஒரு பெரும் சொத்து pattern recognition. கற்காலத்தில் ஒரு புதர் அசைந்தால் அதை சிங்கம், புலி, பாம்பு என்று கருதி அங்கிருந்து ஓட்டம் பிடிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அங்கு இம்மிருகங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதைப் பார்த்து ஓடுவதால் தான் அப்படிப்பட்டோரின் சந்ததியினர் பிழைத்திருக்கின்றனர். அப்படி பயப்படுபவர்கள் தாம் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்வார்கள். சமயத்தில் அங்கு எதுவும் இல்லை என்று நினைத்து ஆயாசமாக அமர்ந்திருக்கும்போது மெய்யாலுமே சிங்கம், புலி, பாம்பு வந்து பாயுமல்லவா? அப்படி ஆயாசமாய் இருப்போர் அடுத்த தலைமுறையைக் காண இயலாது. எனவே, பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வு விதிகளின் அடிப்படையில் நாம் எல்லோரும் pattern recognition செய்து தப்பிப் பிழைத்தோரின் சந்ததியினரே. அந்த உணர்வே நம்மை இல்லாத இடங்களிலும் ஒரு pattern-ஐக் காண வலியுறுத்துகிறது. பரம்பரைச் சாபத்துக்கும் intergenerational trauma-வுக்கும் நாம் முடிச்சுப் போடுவது இந்த pattern recognition-ஆல்தான். ஒரு சாபம் இருப்பதாலேயே அதை நினைத்து மனம் வெதும்பி அச்சாபத்தை நாமே நிறைவேற்றி விடுவதும் உண்டு (Manifesting a curse). சில கிரேக்கக் கதைகளில் அசரீரி வாக்கைப் (prophesies) பொய்ப்பிக்க எடுக்கும் நடவடிக்கைகளே அந்த வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் போய் முடியும். பல தலைமுறைகளாக நம்மை வாட்டும் வாதைகளை விளக்க முற்படும் மனிதர்கள், அவற்றை சாபமாகவோ அசரீரி வாக்காகவோ புரிந்து கொள்வர். விளக்க இயலாத நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அதை விளங்கிக் கொள்ளவும் கையாளவும் இயலும்.
உளவியல் ஆய்வுகள், அதிலும் குறிப்பாக பெருந்துயரங்களைக் கண்டோரையும் அவர்களது குழந்தைகளையும் ஆய்வு செய்யும் உளவியல் வல்லுனர்கள், இதை intergenerational trauma என்று வகைப்படுத்தினர். அத்துயரங்களையே சந்திக்காத அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த PTSD-யை அனுபவிப்பதைப் பார்த்த அறிஞர்கள் அதை transgenerational trauma என்று அழைத்தனர். இந்த ட்ராமா எப்படி தலைமுறை தாண்டிக் கடத்தப்படுகிறது என்ற கேள்வியை யூத இன அழித்தொழிப்பிலிருந்து (Holocaust) தப்பிப் பிழைத்த யூதர்களையும் அவர்களது பிள்ளைகளையும் ஆய்வு செய்தோர் முதன்முதலில் ஆய்ந்தனர். பின்னர் வியட்நாமில் பணிபுரிந்த அமெரிக்க இராணுவத்தினர் வீடு திரும்பியதும் அவர்கள் சந்தித்த உளப் பிரச்சனைகளை ஆய்வு செய்தோர் PTSD பற்றிய புரிதல்களை நமக்கு அளித்தனர். அந்தத் துன்பங்களை நேரில் சந்திக்காத அடுத்த தலைமுறையினர் எவ்வாறு அதனால் எழும் மனச் சிதைவுக்கு ஆளாகின்றனர் என்பதை விளக்க முற்பட்ட உளவியல் வல்லுநர்கள், அத்துன்பத்துக்கு ஆளான பெற்றோரின் நடத்தைகளால் (behaviour) உந்தப்பெற்றே பிள்ளைகள் அவ்விளைவுகளைக் காண்கின்றனர் என முடிவுரைத்தனர். ஏற்கனவே சொன்னதுபோல், அத்துன்பங்களால் மன அழுத்தத்துக்கும் ட்ராமாவுக்கும் ஆளான பெற்றோர், குழந்தைகளிடம் கடுமையாகவும் கண்டிப்புடனும் அதீத பாதுகாப்புணர்வுடனும் நடந்துகொள்வார்கள். அவர்களை அறியாமலேயே உலகம் மீதான பயத்தையும் பதற்றத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் வெகுகாலமாய் இவ்வளர்ப்பு தந்த ட்ராமாவால் மன நோய்களுக்கு ஆளாகித் தவிப்பர். பின்னர் அது அடுத்த தலைமுறையினரையும் அவ்வாறே பாதிக்கும். மீள இயலாத சுழற்சியாக இத்துன்பங்களும் ட்ராமாக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அத்தொடர்ப் பின்னலில் யாரேனும் ஒருவர் இதைக் கண்டுகொண்டு உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அப்பிரச்சனையின் மூலத்தை அறிந்து கையாண்டு கட்டுப்படுத்துவர். அதன் மூலம் அதற்கடுத்த தலைமுறையினர் அத்துன்பங்களிலிருந்து விடுபடலாம். இவ்வாறு பெற்றோரின் நடத்தைகளால் (behavourial transmission) குழந்தைகள் தாங்கள் சந்திக்காத துயரங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர் என்றே உளவியல் ஆய்வுகள் நம்பி வந்தன. இது உண்மைதான். ஆனால், கடந்த முப்பது வருடங்களில் வளர்ச்சி பெற்ற மேல்மரபியல் துறை (Epigenetics), வெறும் நடத்தைகள் மட்டுமல்லாமல் உயிரியல் ரீதியாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ட்ராமா கடத்தப்படுகின்றன என்று ஒரு குண்டைப் போட்டது.
ஓரளவு நமக்குத் தெரிந்த விஷயத்திலிருந்தே தொடங்குவோம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோருக்கு ஓரளவு அறிமுகமான ஒன்றையே எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெரும் பஞ்சங்களைச் சந்தித்த பகுதி நம்முடையது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியா சந்தித்த பஞ்சங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சென்ற நூற்றாண்டில் கூட, சுதந்திரத்துக்கு கொஞ்சம் முன்பாக 1943-ம் வருடம் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் கிட்டத்தட்ட 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். நமது சென்னை மாகாணத்தில் 1876-78 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தில் 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நான்கிலொரு பங்கு மக்கள் இப்பஞ்சங்களால் மாய்ந்தனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மிச்சமுள்ள பல இலட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றனர். காலனியத்துக்கு முன்பும் மழை பொய்த்துப் பஞ்சங்கள் வந்திருக்கின்றன. எனினும் அவை யாவும் இவ்வளவு பரந்துபட்ட பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. காரணம் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களை அவை பாதிக்கும். அதில் பலர் இறந்தும் போவார்கள். அப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். பஞ்சம் பிழைத்தல் என்னும் சொல் தமிழில் பெரும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றும் விளையாட்டாகவேனும், தமது ஊர்களை விட்டு சென்னை தில்லி போன்ற பெருநகரங்களுக்கு வருவோர் “பஞ்சம் பிழைக்க வெளியூர் வந்திருக்கோம்” என்று சொல்வதுண்டு. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அன்றைய அரசுகளும் வணிகர்களும் ஊர்த்தலைவர்களும் நிலச்சுவான்தார்களும் செல்வந்தர்களும் வெவ்வேறு வகைகளில் பஞ்சங்களை அணுகியிருந்துள்ளனர்.
தார்மீகமாக எளிய மக்களுக்குச் செய்ய வேண்டியனவற்றை அவர்கள் கொஞ்சமேனும் செய்திருக்கிறார்கள். பஞ்சங்கள் இயற்கையாக வருவதுமுண்டு. மழை பொய்த்தால் வருபவை அவை. செயற்கைப் பஞ்சங்கள்தான் இன்று உலகில் நாம் அதிகம் காண்பவை. பண்டைக் காலத்திலும் போர்களாலும், சரிவர ஆட்சி நடத்தாததாலும் பஞ்சங்கள் தோன்றியுள்ளன. பழங்காலத்தை பொற்காலமாக நான் கட்டமைக்க முயலவில்லை. எனினும் அந்த தார்மீக உணர்வைப் பற்றிப் பேசியாக வேண்டும். அப்படிப்பட்ட தார்மீக உணர்வால் உந்தப்பெற்ற பலரும் எளிய மக்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்துள்ளனர். மக்களைக் கொடூரமாகச் சுரண்டிப் பிழைத்த நிலச்சுவான்தார்களும்கூட பஞ்ச காலத்தில் மக்களுக்கு நெல் மூட்டைகளை அவிழ்த்துத் தந்திருக்கிறார்கள். இதனால் ஓரளவேனும் சாவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்த தார்மீக உணர்வு புரவலர் மனநிலையிலிருந்து வருவது. மக்களைப் பாதுகாக்கும் பங்கை செல்வந்தர்கள் தமதாக எடுத்துக்கொண்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை இருத்தி வைத்துள்ளனர். நிச்சயம் பிரச்சனைக்குரியதுதான். எனினும் இந்த தார்மீக உணர்வுதான் பலரையும் வரலாற்றில் காப்பாற்றியுள்ளது. இந்த தார்மீக உணர்வை அறக்கணக்கு (Moral Economy) என்று ஏழை மக்கள் புரிந்து வைத்திருந்தனர் என்று ஈ.பி. தாம்சன் கூறுகிறார்.
எனினும் நவீன காலனிய ஆட்சி, சுரண்டலையே மையமாகக் கொண்டிருந்ததாலும், இங்கிலாந்து நாட்டின் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே ஆட்சி நடத்தப்பட்டதாலும், பஞ்சத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படாமல் ஆட்சி நடத்தியுள்ளனர். வட்டார அளவில் பல காலனி அதிகாரிகள் இதைப் பற்றி முறையிட்டாலும், மேலிடத்தில் பெரிய அளவு தாக்கத்தை இவை ஏற்படுத்தவில்லை. நவீன முதலாளியமும் இலாப வேட்கையும் இந்த தார்மீக உணர்வை அழித்தொழித்தது. மேலும், மையப்படுத்தப்பட்ட அரசு முடிவுகளால் ஒரு பெரும்பகுதி முழுவதுமே பஞ்சத்தில் வீழ்ந்த வரலாறும் உண்டு. எனவே காலனியம் வேர்கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க பல்வேறு பஞ்சங்களை நாம் சந்தித்துள்ளோம். தொன்றுதொட்டு வந்த அறப் பொருளியலின் வீழ்ச்சியை எளியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உலகம் முழுக்கவே முதலாளித்துவ ஆட்சிக்கும் காலனியாதிக்க ஆட்சிக்கும் எதிராகப் பல்வேறு கலகங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சென்னை மாகாணத்திலும் அரிசிக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாக டேவிட் அர்னால்ட் குறிப்பிடுகிறார். இது நிற்க. இப்பஞ்சங்களால் உடலும் உள்ளமும் மானமும் குறுகி நின்றமை குறித்தே வள்ளலார் வருந்துகிறார். சத்திய தருமச் சாலை நிறுவி வந்தோர்க்கெல்லாம் உணவிட்டுக் காப்பாற்றியுள்ளார். பசி எவ்வளவு தூரம் உடலையும் மனதையும் உருக்குலைக்கிறது என்பது பற்றித் தமது ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலில் உருகி உருகி விவரித்துள்ளார் வள்ளலார். இப்பசியும் பஞ்சமும் நம் மனதிலும் உடலிலும் ஆழமான பல தடங்களை விட்டுச் சென்றுள்ளன.
இன்றும் இந்தியர்கள் மட்டுமன்றி தெற்காசிய மக்கள் பலரும் Thin Fat Phenotype என்றொரு விநோதமான உடற்கூறு உள்ளதென்று ஆய்வாளர்கள் பலர் சொல்கின்றனர். சர்க்கரை நோய், அதீத கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு போன்ற நோய்களை நாம் அதிக உடல் எடைகொண்டோருடன் தொடர்புபடுத்துவது வழக்கம். ஆனால் பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கும் பல இந்தியர்களுக்கும் இந்நோய்கள் வருவதை இன்று நாம் காண்கிறோம். அதற்குக் காரணமாக இதுகாறும் நாம் சொல்லி வந்த காரணங்கள் – நவீன வேலைகள் தரும் மன அழுத்தம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, நல்ல உணவுப் பழக்கம் இல்லாமை – அதனோடு அதீத துரித உணவுகளை உட்கொள்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாமை, நேரம் தவறித் தூங்குவது, நவீன உலகத்தின் நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாதல் போன்றவையே. இவை எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடான இங்கிலாந்தில் இருக்கும் ஒருவருக்கும் இந்தியாவில் அதே அளவு உடல் எடையும் BMI-யும் உள்ள ஒருவருக்கும் உடல்ரீதியில் பல வேறுபாடுகள் உள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஒரே BMI இருந்தாலும், தெற்காசியாவைச் சார்ந்தவருக்கு அதிகக் கொழுப்பு இருக்கிறது. இதற்குக் காரணம் மேற்சொன்னவை மட்டுமல்ல. மிக அடிப்படையான காரணமுள்ளது. மேல்மரபியல் – Epigenetics.
உயிரியலுக்கு அடிப்படையானது மரபணு – DNA. இந்த மரபணு தான் குரோமோசோம்களாக அடுக்கப்பட்டிருக்கும். தாயிடமிருந்து 50 சதவிகிதமும் தந்தையிடமிருந்து 50 சதவிகிதமும் குழந்தைக்குக் கடத்தப்படுகிறது. இந்த மரபணு தான் பல தகவல்களை உள்ளடக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. மரபணுக் குறியீட்டு வரிசை (Genetic Code Sequence) மூலமே தலைமுறை கடந்து பல உயிரியல் பண்புகள் கடத்தப்படுகின்றன. கண்களின் நிறம், உடல் தோற்றம், மயிர் நிறம், உயரம், பருமன் முதல் தூக்கத்தில் வரும் குறட்டை வரை இந்த மரபணுக் குறியீடுகள் மூலமாகவே பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட மரபணுக் குறியீடுகள் எளிதில் மாற்றமடையாது. ஆனால், சில உட்காரணிகளாலும் புறக்காரணிகளாலும் இவை மாற்றமடையவும் சிதிலமடையவும் வாய்ப்புள்ளது. மரபணுக்கள் தம்மைத் தாமே பிரதி செய்துகொள்ளும் இயல்புடையது. அவ்வாறு பிரதி செய்யும்போது ஏற்படும் சில குளறுபடிகளால் மரபணு மாற்றம் பெறும். சூரியனில் இருக்கும் யூ.வி. கதிர்கள் (Ultraviolet Rays) முதற்கொண்டு பல்வேறு கதிர்வீச்சுகள் (Radiation), புகைப்பிடித்தல், அதீத மாசுபாடு, சில இரசாயனங்கள் போன்றவற்றால் மரபணுக் குறியீடு மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை யாவும் மரபணுவை, அதாவது DNA-வின் Genetic Code-ஐயே மாற்றும் வல்லமை பெற்றது. இதுவன்றி மேல்மரபணு என்று இன்னொரு சமாச்சாரம் உள்ளது.
மரபுவழி (heriditary) கடத்தப்படும் மாற்றங்கள் எல்லாம் மரபணு மாற்றம் மூலமோ மரபணுக் குறியீட்டு மாற்றம் மூலமோ மட்டுமே நிகழ்வனவல்ல. அதைச் சுற்றி இயங்கும் பிற சாதனங்களால் மாற்றம் நிகழ்வதைப் படிக்கும் துறை மேல்மரபியல் ஆகும். Epi என்ற பதத்தின் பொருள் “அதன் மேல்,” “அதற்கு மேல்,” “அதனோடு இணைந்த” என்பதாகும். Epicentre என்பது மையத்துக்குச் சற்று மேல் என்பதாகும். மரபணுவில் உள்ள கார்பன் கலவைகள் மாற்றமடைவது மூலம், ஒவ்வொரு மரபணுவும் எவ்வெவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் என்பது மாற்றமடையும். இதை Gene Expression என்பார்கள். மரபணு மாறாமல் இந்த மேல்மரபணு மாற்றம் பெறுவது ஒரு சில விளைவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும். கடந்த முப்பது வருடங்களில் பல்வேறு ஆய்வுகள் மூலம் பல்வேறு பாலூட்டிகளின் உடலில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய சீரிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த மேல்மரபணுச் செயல்பாட்டால்தான் இந்தியர்களுக்கும் பிற தெற்காசியர்களுக்கும் பல உடல் நோய்கள் வந்தவண்ணமுள்ளன என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல் காலனியத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பல பஞ்சங்களையும் அதன் விளைவாக ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் சந்தித்து வந்துள்ளோம். நம் மூதாதையர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களது உடல் மிகக் குறைந்த ஊட்டச்சத்தை எவ்வாறு எல்லாப் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற பிரச்சனையைச் சந்தித்தது. மூளை வளர்ச்சிக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு மூளைக்குச் செல்லும் சக்தி அதிகரித்தால் உடலில் பிற பகுதிகளுக்கு அதிகம் சக்தி செல்லாது. அன்றைய தாது வருடப் பெரும்பஞ்சத்தின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் உடல் சூம்பிப் போன நிலையில் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் காண இயலும். மூளைக்குச் செல்லாமல் பிற பகுதிகளுக்கு அச்சக்தியைச் செலவிட்டால், மூளை வளர்ச்சி குன்றியோராக அக்குழந்தைகள் வளரும். இவ்வாறு பல விதங்களில் ஊட்டச்சத்தை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்பவும் அவர்களது உடல்கள் ஒதுக்கீடு செய்து வந்தன. நிலவும் சூழலுக்கு ஏற்ப மரபணு வெளிப்பாடுகள் மாற்றம் பெறுகின்றன. உடலில் குளுக்கோஸ் அளவைச் சேமித்து வைத்து, முக்கியத் தேவைகளுக்கு மட்டுமே கொடுக்கும் வண்ணம் அம்மேல்மரபணுச் செயல்பாடுகள் அமைந்தன. அடுத்த சந்ததியினர் உருவாவதற்கு பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்பட்ட அனுகூலங்கள் இவை – Evolutionary advantages. அம்மேல் மரபணுக்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், அடுத்த தலைமுறை என்ற ஒன்றை நம் முன்னோர்கள் கனவுகண்டிருக்கக் கூட இயலாது. மூளை வளர்ச்சியை ஓரளவு பிரதானப்படுத்தியதால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோருக்குப் வேறு பல பக்க விளைவுகள் உண்டாயின. பல உறுப்புகள் செயலிழந்தன; உடல் தசைகள் சரிவர வளர்ச்சி பெறவில்லை; உடலின் செல்களால் இன்சுலின்களைச் சரிவரக் கையாள இயலவில்லை (Insulin resistance – இன்சுலின் எதிர்ப்பு). பிற உடல் பாகங்களுக்கு இன்சுலின் சரியாகச் செல்லாததால்தான், மூளைக்கு குளுக்கோஸ் சென்று பிற உடல் உறுப்புகள் ஏதாவது ஒருவகையில் செயல்பட வாய்ப்புகள் அமைந்தன. மேலும், உடலுக்குக் கொழுப்புச் சத்து அவசியமாகையால், அவை அடிவயிற்றுப் பகுதியில் அதிகமாகச் சேமிக்கத் தொடங்கின (Visceral Fat deposition in abdomen). பரிணாம வளர்ச்சி விதிப்படி, கொடூரப் பஞ்ச காலங்களில் உயிர் பிழைப்பதற்கு இப்படிப்பட்ட செயல்பாடுகள் தேவைப்பட்டன.
பஞ்ச காலம் முடிந்து உபரிகளின் காலம் உடனடியாக வந்துவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகும் வறுமையின் பிடியில் தான் பெரும்பான்மை மக்கள் இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட ஏழ்மையிலும் வறுமையிலும் உழலும் மக்கள் அதிகம் உள்ள நாடாகத்தான் இந்தியா உள்ளது. அரசுத் திட்டங்களாலும் நவீன வாய்ப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தர வர்க்கம் பெருகத் தொடங்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில்தான் இன்று நாம் காணும் பெருவளர்ச்சி சாத்தியமானது. என்னுடைய பாட்டி நீர் எடுப்பதற்காக நெடுந்தூரம் கடந்து ஒரு நிலவுடைமையாளர் வீட்டில் வரிசையில் நின்றதை இன்றும் கூறுவார். ஒரு நாளைக்கு ஒரு வேளை இரு வேளை என்று மட்டுமே உணவுண்டு வந்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையிலும் கூட மிக அதிகம். மூன்று வேளை உணவு என்பது மிகப் பெரும்பான்மையோருக்கு இந்தத் தலைமுறையில் தான் சாத்தியமாகியுள்ளது. அதிலும் கடந்த முப்பது வருடங்களில் பெருகிய உணவுக் கலாச்சாரம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. புதிது புதிதான வாய்ப்புகள், அதன் மூலம் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள், அது கொணரும் புதிய நோய்கள் என்று இவை பற்றிய உரையாடல்களை நாம் நிறையக் கேட்டாயிற்று. எனினும், கடந்த சில வருடங்களில்தான் இந்த நெடிய வரலாற்றின் உடலியல் தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுப் பொதுவெளியில் உரையாடப்படுகிறது.
அடுத்த தலைமுறையை உறுதிசெய்யும் இந்த பரிணாம வளர்ச்சி அனுகூலங்களே இப்போது நமக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன. கொஞ்சம் கொழுப்புச் சத்து சேர்ந்தாலும் நமது அடிவயிற்றில் சேமித்து வைப்பதற்கு நமது மேல்மரபணு பயிற்சி பெற்றிருக்கிறது. பஞ்ச காலம் முடிந்து மூன்று வேளையும் கார்போஹைட்ரைடு நிறைந்த அரிசிச் சோறு சாப்பிடும் நிலைக்கு வந்தாயிற்று. மேலும் துரித உணவுகளும் சிற்றுண்டியும் தின்பண்டங்களும் அதிகம் உண்கிறோம். திடீரென்று அதிகரித்த உணவு நுகர்வுக்கு ஏற்றாற்போல் நமது உடலுழைப்பு அதிகரிக்கவில்லை. உடலுழைப்புக்கு மாற்றாக உடற்பயிற்சிகள் இருந்து வந்தாலும் அதுவும் திடீரென்று அதிகரித்த உணவு விகிதத்துக்கு ஏற்றாற்போல் வளர்ச்சிபெறவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் மேலும் பல வாழ்க்கை முறை மாற்றங்களும் இவற்றோடு இணைந்துகொண்டன. பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்திய உடல் உபரியால் தவிக்கின்றன. பொருள் – சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனை போன்ற பலவும் இந்த உபரியால் மட்டும் நிகழ்ந்தவையல்ல. பஞ்சத்திலிருந்து உபரிக்கு திடீரென மாற்றம் பெற்றதால் நிகழ்ந்த ஒன்று. இவை இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான வளர்ச்சியன்று. காலனியத்தால் சுரண்டப்பெற்று விடுதலை பெற்ற பின் ஓரளவு பொருளாதார வளர்ச்சி பெற்ற பின்காலனிய நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கும் இத்தகைய உடல் சார்ந்த பிரச்சனைகள் வந்தவண்ணமுள்ளன.
பல மேற்கத்திய நாடுகளிலும் ஏழ்மையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் வரலாறுதோறும் இருந்து வந்தாலும், காலனியாதிக்க நாடுகளின் ஏழ்மையும் காலனியாதிக்கத்துக்குட்பட்ட நாடுகளின் ஏழ்மையும் வித்தியாசமானவை. ஒப்பீட்டளவின் தீவிரத்தன்மை கொண்டனவாய் மூன்றாம் உலக நாடுகளின் ஏழ்மை உள்ளது. புதிய செய்தியல்ல. மேற்சொன்ன எடுத்துக்காட்டை இந்தப் பின்னணியில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதை யுட்கின்-யஜ்னிக் முரண்பாடு (Yudgin-Yajnik Paradox) என்பர். யஜ்னிக் என்னும் இந்திய அறிவியல் அறிஞர் தமது நண்பரான யுட்கின் என்னும் இங்கிலந்து அறிஞருடன் எடுத்துக்கொண்ட உடற்கூறு ஆய்வின் முடிவுப்படி, இருவருக்கும் ஒரே அளவு BMI இருந்தாலும், இந்தியரது உடலில் ஒப்பீட்டளவில் அதிகக் கொழுப்புள்ளது தெரியவந்துள்ளது. உபரிக் கொழுப்புக்கு உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவை முக்கியக் காரணங்களாக இருப்பினும் வரலாற்று ரீதியில் அவரது இந்திய மூதாதையர்கள் சந்தித்து வந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை முக்கியக் காரணமாக முன்வைக்கிறார். யஜ்னிக் பிறந்தபோது அவர் குறைந்த எடையுடைவராக இருந்தது இதற்கொரு சான்றாகும். உடல் எவ்வாறு பஞ்சத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ, அதேபோல மனமும் வன்முறையை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. உடல் சேமிக்கும் கொழுப்பு (Visceral Fat), மனதின் அதீத விழிப்புணர்வுக்கு (Hyper-vigilance) இணையானது.
காலனியம் கொடுக்கும் ட்ராமா எத்தகையது? நிச்சயமாக காலனியம் உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உளவியல் சார்ந்தும் பல நெருக்கடிகளையும் தடங்களையும் தழும்புகளையும் விட்டுச் சென்றேயுள்ளது. அதுவும் நேரடியாக அதன் வன்முறைக்கு ஆளானவர்களும் அவற்றைக் கண்ணுற்றவர்களும் பல்வேறு உடல்-மன உபாதைகளுக்கு (Psycho-somatic illness) ஆளாவதைப் பற்றி உளவியலாளரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்ஸ் ஃபனோன் குறிப்பிடுகிறார். அச்சூழலுக்கு உட்பட்டோரை தம்மைத் தாமே மனித நீக்கம் செய்யும் நிலைக்குக் காலனியம் தள்ளுகிறது. அல்ஜீரிய இளைஞர்கள் பலருக்கு வயிற்றுப் புண் (Stomach ulcers) உண்டாயின; பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள் உருவாயின; விசாரணைக் கூடங்களில் (Interrogation centres) சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோருக்கு இளமையிலேயே முடி நரைத்துப் பல நரம்பியல் பிரச்சனைகள் உண்டாயின; அகதிகள் முகாமில் தங்கும் குழந்தைகள் பலருக்கும் அதீத இரைச்சல்களால் பயம் வந்தது (Noise phobia); அது மட்டுமல்லாமல், இந்த வன்முறைகளை நிகழ்த்துவோருக்கும் பல உளவியல் பிரச்சனைகள் வருவது பற்றியும் ஃபனோன் குறிப்பிடுகிறார். அதனால் தான் காலனிய நீக்கம், வன்முறைக்கு உட்பட்டோரை மட்டுமல்லாமல் வன்முறையாளரையும் விடுவிக்கும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.
போர் வன்முறைகளும் பஞ்சங்களும் ஒரு தலைமுறையை மட்டுமல்லாது அடுத்தடுத்த தலைமுறையையும் பாதித்து வருகின்றன. இது தொடர்பான முன்னோடி ஆய்வு டச்சுப் பஞ்சக் குளிர்காலத்தின் போது நிகழ்ந்தது (Dutch Famine Winter). இரண்டாம் உலகப்போரின் இறுதியில் (1944-45) ஜெர்மனி நெதர்லாந்துப் பகுதியை ஆக்கிரமித்தது. போரின் கொடூரத்தோடு கடும் பனிக்காலமும் இணைந்ததால் இரண்டு வருடங்களுக்கு இந்தப் பஞ்சம் நீடித்தது. ஐரோப்பாவில் மிகச் சமீபத்தில் நிகழ்ந்த பஞ்சமாகையால், அதன் விளைவுகளைப் பற்றி அதிக அளவிலான ஆய்வுகள் எளிதாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30,000 பேர் இந்தப் பஞ்சத்தால் மரணமடைந்தனர். 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். அப்போது கர்ப்பிணிப் பெண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அடுத்த ஐம்பது ஆண்டுகள் – அவர்களது முதல் தலைமுறையையும் இரண்டாம் தலைமுறையையும் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியதால் பல முக்கிய விஷயங்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. பஞ்சத்தின்போது கர்ப்பிணிகளாக இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகள் இருந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டன. அது மட்டுமன்றி புறச்சூழல்களுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக்கொண்ட மேல்மரபணுக்களின் செயல்பாட்டால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோரின் பேரப்பிள்ளைகளுக்கும் உடல் உபாதைகள் கடத்தப்பட்டன. குறிப்பாக அளவுக்கதிகமான கொழுப்பு உடலில் சேர்ந்துள்ளதைச் (Adiposity) சமீபத்திய ஆய்வுகள் நமக்கு வெளிக்காட்டுகின்றன.
அதேபோல யூத இன அழித்தொழிப்பிலிருந்து தப்பித்தவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் PTSD-யால் பாதிக்கப்பட்டுது தெரியவந்தது. உடலில் பலவித ஹார்மோன்கள் இருப்பது நமக்குத் தெரியும். அதில் கார்டிசாலும் (Cortisol) அட்ரினலைனும் (Adrenaline) மன அழுத்ததிற்கான ஹார்மோன்கள். ஆபத்துகளைச் சந்திக்கையில் இவ்விரு ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்கும். அட்ரினலைன் சுரக்கும்போது இருதயம் வேகமாகத் துடித்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உடனடியாக fight or flight response-ஐ இயக்கும் ஹார்மோன் அதுதான். கார்டிசால் அளவு நெடுநாளைய மன அழுத்தத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன். அது அதிகரித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து மன அழுத்தத்தம் அதிகரிக்கும். இவ்விரு ஹார்மோன்களும் ஆபத்துக்காலங்களில் நம்மை எச்சரிக்கையுணர்வுடன் வைத்திருக்கின்றன. இன அழித்தொழிப்பு, போர் வன்முறைகள் போன்றவை மிகக் கொடூரமான ட்ராமாவைத் தரும் வல்லமை படைத்தவை. இதனால் மனிதர்கள் பாதிக்கப்படும்போது, கார்டிசால் அளவும் அட்ரினலைன் அளவும் எப்போதும்போல் அதிகரிக்கும். ஆனால் நெடுங்காலம் இவை தொடரும் பட்சத்தில் கார்டிசால் நம்மைப் பாதுகாக்க வேண்டி, தாம் சுரப்பதைக் குறைத்துக் கொள்ளும். அதீத அளவு இந்த ஹார்மோன்கள் சுரக்குமானால், சமாளிக்க இயலாத அளவு உடல் உபாதைகள் பெருகுமாதலால், உடல் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ள இந்த ஹார்மோனைப் பயன்படுகிறது. மன அழுத்தம் இருப்போருக்கு வழக்கமாக அட்ரினலைன் அளவும் கார்டிசால் அளவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், ட்ராமா முடிந்து PTSD-யால் பாதிக்கப்பட்டோருக்குக் கார்டிசால் அளவு குறைந்து காணப்படும். மேற்பார்வையில் முரண்போலத் தெரியும் இந்த அளவுக் குறைபாட்டுக்கு இதுதான் காரணம்.
இத்தகைய சூழலில் சிக்கிய யூதர்களையும், அமெரிக்க இராணுவத்தினரையும், 9/11 தாக்குதலில் சிக்குண்டு தப்பித்தவர்களையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு PTSD இருப்பதையும், கார்டிசால் அளவு குறைந்ததையும் பதிவு செய்துள்ளனர். இவர்களது அடுத்த தலைமுறையினரில் பலருக்கும் கார்டிசால் அளவு குறைந்திருப்பதும் தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் பொருள் அவர்கள் எல்லோரும் PTSD-யால் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல. ஒருவேளை அவர்கள் தங்கள் வாழ்வில் துன்ப துயரங்களைச் சந்திக்கையில், குறைவாக உள்ள கார்டிசால் அளவால் அவர்களது மன அழுத்தங்களைக் கையாள இயலாது. அதனால் அட்ரினலைன் அளவு அதீதமாக அதிகரிக்கும். எனவே, குறைந்த கார்டிசால் அளவு உள்ளவர்கள் PTSD பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே இந்த ஆய்வுகள் சொல்லும் முடிவு. முப்பது வருடங்களாகத் தான் இந்த ஆய்வுகள் சீரிய முறையில் நடந்து வருகின்றன. இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டால் இதன் தீவிரத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவரும்.
மனிதர்கள் மேல் இது பற்றித் தொடர் ஆய்வுகள் நடத்த இயலாத காரணத்தால் (!), ஆய்வகங்களில் விலங்குகள் மீது வழக்கம்போல் பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிட்ட ஒரு ஆய்வு அடுத்தடுத்த தலைமுறைக்கு ட்ராமா கடத்தப்படும் பாங்கினை விளக்கத் தலைப்பட்டது. ஒரு எலியை எடுத்துக்கொண்டனர். செர்ரிப் பூவின் வாசத்தை நுகர வைத்து அதன் காலில் மின்சாரம் பாய்ச்சினர். சில நாட்கள் தொடர்ந்து அவ்வாறு நுகர வைத்து மின்சாரம் பாய்ச்சியவுடன், அந்த வாசத்தை நுகர்ந்த அடுத்த நொடியே அதன் உடல் நடுக்கம் பெறுவதைக் கவனித்தனர். இப்படியே சில நாட்கள் அதன் கால்களில் மின்சாரம் பாய்ச்சி அதைப் பெண் எலியுடன் புணரவிட்டனர். அதன் அடுத்த தலைமுறை எலி அந்த சுகந்தத்தை நுகர்ந்த உடனேயே நடுங்கத் தொடங்கி விட்டது. அதற்கடுத்த தலைமுறை எலியும் இவ்வாறு நடுக்கம் பெற்றதையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், மேல்மரபணு மூலம் கடத்தப்படும் உணர்வுகளையும் ட்ராமாவையும் பற்றிய முடிவுகளை அவர்கள் வெளியிட்டு விவாதித்து வருகின்றனர். இவை யாவும் முடிந்த முடிபுகள் அல்ல என்பதை அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் மூன்றாம் தலைமுறை எலிகளுக்கு அந்த சுகந்தத்தின் மீதிருந்த பயத்தைப் போக்குவதன் மூலம் இந்த தொடர்பு வலை அறுபடுவதையும் பதிவு செய்துள்ளனர்.
முதல் தலைமுறையினருக்கு ஏற்படும் தீவிர மன அழுத்தம் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கின்றன. அதற்கு தம்மைத் தாமே தகவமைத்து அடுத்த தலைமுறையின் இருப்பை உறுதி செய்யும் பரிணாம வளர்ச்சிச் செயல்பாடு அடிப்படைக் காரணமாக உள்ளது. முதல் தலைமுறையின் சூழலால் உந்தப்பெற்ற மேல்மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு நிகழும் என்ற எச்சரிக்கையுணர்வால், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திக் கடத்துகிறது. எனினும், சூழல் மாற்றம் பெற்ற போதும், மேல் மரபணுச் செய்லபாடுகள் உடனடியாக மாற்ற பெற இயலாமையால் பல நேரங்களில் அவை உடல் உபாதைகளாக மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளாதார சூழ்நிலைகள் உயிரியலோடு எந்த அளவு உரையாடுகிறது என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.
இதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கையிலும் நண்பர்களோடு உரையாடியபோதும் மிக முக்கியமான கேள்வியொன்று எழுந்தபடியே இருந்தது. குறிப்பாக இந்தியாவில் நாம் உள்ளபோது இப்படிப்பட்ட முடிவுகள் சாதிகளைப் பற்றியும் ஒரு சாதிக்குள் திருமணம் நடப்பது பற்றியும் அது எவ்வாறு அவ்வச் சாதிகளின் செயல்பாடுகளையும் துன்ப துயரங்களையும் வடிவமைக்கிறது என்பது அந்த கேள்வி.
இது பற்றி ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்லிக் கட்டுரையை முடிக்கிறேன். சில முக்கியமான திறமைகள் மரபியல் ரீதியாகக் கடத்தப்படுவது உண்மையே. சிலருக்கு ஓசை மிகத் துல்லியமாகக் கேட்கும். சிலருக்கு இயல்பிலேயே நினைவுத் திறனிருக்கும். சிலரது உடல் தடகளத்துக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றை மரபியல் அனுகூலம் (Genetic Advantages) என்று அறிவியல் அறிஞர்கள் வரையறுப்பர். ஆனால் இத்தகைய இயற்கைத் திறமைகள் எந்தவொரு சமூகத்தவரோ சாதியினரோ இனத்தவரோ முழுமையாக உரிமை கொண்டாட இயலாது. எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களிடமும் இனங்களைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய இயற்கைத் திறன்கள் உள்ளன. காலனிய ஆதிக்கவாதிகளும் சாதியவாதிகளும் இத்தகு திறன்கள் ஒரு சில சமூகத்தவரிடம் மட்டுமேயுள்ளன என்று அறிவியலுக்குப் புறம்பான முறையில் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பேசி வந்தனர். ஆனால், தற்போதைய பல ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் மனிதர்கள் அனைவரின் மரபணுவும் 99 சதவிகிதத்துக்கு மேல் ஒத்த தன்மையுடையது என்பதாகும். அந்த ஒரு சதவிகித வேறுபாடும் கூட இனத்துக்கு இனமோ சாதிக்குச் சாதியோ அதீத அளவு மாறுபடாது. சாதியோ இனமோ, ஒரு சமூகத்துக்குள்ளேயே இருக்கும் மரபியல் வேறுபாடு, ஒரு சமூகத்தவருக்கும் வேறொரு சமூகத்தவருக்கும் உள்ள வேறுபாட்டை விட அதிகம் என்றே ஆய்வுகள் நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றன. எனவேதான் இனங்களும் சாதிகளும் உயிரியல் யதார்த்தமில்லை; சமூக யதார்த்தம் என்ற வாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. சமூகப் பொருளியல் ரீதியில் மனிதர்களுக்குள் வேறுபாடுகள் நிலைநிறுவப்படுவதே உண்மை. இனம் பற்றிய உரையாடல் நடைபெறும்போது வெளித்தோற்றத்தில் தெரியும் உடலின் நிறம் முக்கியப் பங்கு வகிப்பது உண்மையே. அது மரபியல் ரீதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. அதற்கு பல நூறு தலைமுறைகள் வாழ்ந்து வந்த புவியியல் அமைப்பு, சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மெலனின் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகள் போன்ற பல சமூக-உயிரியல் செயல்பாடுகள் காரணமாகின்றன. வெறும் மரபியல் செயல்பாடுகள் மட்டுமே வேறுபாடுகளை உற்பத்தி செய்யக் காரணமாக இருப்பதில்லை.
அன்றைய காலனியாதிக்கக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தில் யார்யாரெல்லாம் சேரத் தகுதியானவர்கள் என்ற பேச்சு எழுந்தபோது, மராத்தியர்களும், ராஜபுத்திரர்களும், பஞ்சாபிகளும் இயல்பிலேயே வலுமிக்கோராகவும் ஆண்மைகொண்டோராகவும் கருதப்பட்டதால் அவர்களை இயல்பிலேயே போர்த்திறன் கொண்ட இனங்கள் (Martial Races) என்று வரையறுத்தனர். மாறாக வங்காளிகளும் தென்னிந்திய பிராமணர்களும் பெண்மைத்தன்மை பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு இராணுவங்களில் பெரிதாக இடம்தரவில்லை. ஒருவர் வளரும் சூழ்நிலையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படும் திறன்கள் பல இயல்பிலேயே வருவனவல்ல. காலனியாதிக்க காலத்தில் போர்களில் ஈடுபட்டு வந்த பல இனங்களை இவ்வாறு வகைப்படுத்துவது ஆங்கிலேயர்களுக்கு எளிதானதாக இருந்து வந்தது. மேலும், அன்றைக்கு அரசுப் பதவிகளில் அதிகம் இருந்து வந்த பிராமணர்கள் தம்மையும் தம் சாதியையும் இயல்பிலேயே அறிவுத் திறம் கொண்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டனர். அக்காலத்தில் இன அடிப்படையிலான போலி அறிவியல் கோரல்கள் (Pseudo-scientific claims based on race) இருந்துவந்ததால், அத்தகைய பார்வையை இந்திய சாதி-மதங்களின்மேல் வெள்ளை ஆதிக்கவாதிகள் செலுத்தியதில் வியப்பில்லை. கறுப்பினத்தவர் இயல்பிலேயே மூளை வளர்ச்சி அதிகம் இல்லாதவர்கள்; அடிமை எண்ணம் கொண்டவர்கள். வெள்ளை இனத்தவர் பிறரை ஆளும் திறன்களை இயல்பிலேயே கொண்டவர்கள்; அறிவில் உச்சம் பெற்றவர்கள் போன்ற அறிவியலுக்குப் புறம்பான பல பார்வைகளை அவர்கள் கொண்டிருந்தனர். இத்தகைய இனவாதப் பார்வையே பிற்காலத்தில் ஒவ்வொரு சாதியாரிடமும் ஒவ்வொரு இயற்கைத் திறன் உள்ளது என்கிற மேலாதிக்கக் கோட்பாடு வளர்வதற்குக் காரணமாக இருந்தது.
வறுமை நிலையில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் பல தலைமுறைகளை வைத்திருக்கும்போது அது மரபணு வெளிப்பாட்டை எப்படி பாதிக்கும் என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்குச் சுட்டிக்காண்பிக்கின்றன. மேலும், மரபணு வெளிப்பாடும் முடிந்த முடிபாக அல்லாமல் சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளும் வல்லமை பெற்றதால், நல்ல சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து சரியான ஊட்டச்சத்தையும் திறன்கள் வெளிப்படுத்துவதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுத்தால், அந்த மரபணு வெளிப்பாடு மாற்றம் பெறும் என்பதுமே அறிவியல் கூறுகிறது. இளையராஜாவுக்கு ஓசையைப் பிரித்தறியும் திறன் சராசரி மனிதர்களை விட அதிகமாக உள்ளது. அதை Perfect Pitch என்பார்கள். ஆனால் அவருக்குச் சிறுவயதில் ஊட்டச்சத்து சரியான அளவுக்குச் செல்லவில்லையெனில், அவரது மரபணு வெளிப்பாட்டை மேல்மரபணுக்கள் நிறுத்தி வைத்து அவர் உயிர்பிழைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும். மேலும் இத்தகு திறனை வெளிப்படுத்த வெளிகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் இசைமேதையாக உலவியும் இருக்க இயலாது. அதனால்தான் குழந்தை வளர்ப்புப் பற்றிப் பேசும்போது எல்லா விதமான துறைகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதன் முக்கியத்துவத்தை இன்று பேசி வருகிறோம்.
சமூகநீதி வட்டாரங்களில் நாம் கேள்விப்படாதது ஒன்றுமல்ல. காலம் காலமாக கல்வியறிவு பெற்ற சமூகம் கல்வியில் முன்னணியில் புதிதாய் ஏழ்மையிலிருந்து எழும் சமூகம் கல்வியில் ஓரளவு பின்தங்கி இருப்பதும் சூழலைப் பிரதானப்படுத்தியதே என்பது இன்றைக்குப் பொது அறிவாகிவிட்டது. அதிலும் கல்வி கற்பதற்கான சரியான சூழலை வீட்டில் அமைக்கவில்லையெனில் அது முன்னேற்றத்தை எவ்வாறு தடுக்கும் என்பதும் நமக்குத் தெரியும். சூழல் சரியாக அமையும்பொழுது இயல்பிலேயெ உருவாகும் ஒரு சில திறமைகள் வெளிச்சம் பெறும். சாதியவாதிகளுடன் போராடி வருவதால் சமூகநீதி வட்டாரங்களில் இருக்கும் நாம் ”இயல்பிலேயே” என்ற பதத்தை என்றும் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறோம். Nurture vs. Nature என்னும் பழங்காலச் சண்டையில் என்றும் Nurture பக்கமே நாம் நின்றுவருகிறோம். Nature என்று சொன்னால் அதைச் சாதியவாதிகள் தங்களுக்கான வாதமாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் எழுவது இயல்பே. எனினும், Nurture vs Nature என்ற உரையாடல் பெரும்பாலும் காலாவதியாகி Nature through Nurture என்னும் இடத்துக்கு இன்று வந்தடைந்திருக்கிறோம். இயல்பிலேயே மரபணுக்கள் சில திறன்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் வழங்கினாலும், சரியான சூழல் இல்லையெனில் மரபணு வெளிப்பாடு அடங்கிவிடும். இது Nature பக்கம் நிற்பது கிடையாது. இயற்கையும் சூழலும் என்றென்றும் முடியா உரையாடலில் இயங்கி வருகிறது. இத்தகு திறன்கள் எந்தவொரு சமூகத்தவரின் தனிச்சொத்தல்ல. அந்த ஒரு சதவிகித வேறுபாடுகள் தான் மானுட குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரிச் செயல்பாடுகளில் இயங்க முதன்மைக் காரணமாக இருக்கிறது. அந்த வேறுபாடுகள் இல்லையெனில் உலகம் சுவாரஸ்யமற்றுப் போய்விடும்.
இது நிற்க. மிக முக்கியமான இன்னொரு கேள்வியொன்றும் உள்ளது. எனில் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் நமக்குச் செய்வதுதான் என்ன? சாதி மேலாதிக்கக் கருத்தியலுக்கு முற்றிலும் மாற்றான ஒன்றே இங்கு நடந்து வருகிறது. ஒரே சாதிக்குள்ளும் வட்டத்துள்ளும் தொடர்ந்து திருமணம் செய்து இனப்பெருக்கம் செய்வது பலவித மரபணுக் கோளாறுகளையே வெளிப்படுத்துகின்றன. மரபணு வேறுபாடுகள் அதிகம் இல்லாத ஒரே சாதிக்குள் இனப்பெருக்கம் நிகழும்போது இருவருக்கும் பொதுவாக உள்ள மூதாதையர்களின் மரபணுக் கோளாறுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது இலகுவாக மாறுகிறது. ஆந்திராவில் உள்ள ஒரு வைசியச் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மரபணுக் கோளாறு உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு ட்ராமா அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதுபோல் குணங்களும் குணநலன்களும் கடத்தப்படுவது இல்லை. ஆரோக்கியமான மரபுவழிக் கடத்தல் என்று சொல்லப்படுவது பாதிப்புகளின்றி நடுநிலையான மரபுவழிப் பரிமாற்றமேயாகும். Healthy transmission of genes implies neutral inheritance rather than the transmission of advantages or disadvantages.
சாதி-மத ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் மக்கள் என்றும் விழிப்புநிலையிலேயே இருந்துவர வேண்டியுள்ளதால் அவர்களது உடலிலும் உள்ளத்திலும் எத்தகைய நோய்கள் குடிகொண்டிருக்கின்றன என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அந்த அச்சம் கடத்தப்பட்டுக்கொண்டே வரவேண்டிய சூழல் வேறு. பொதுவான கதையாடல் கூறுவதுபோல, தலித்துகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டோராய் இருந்ததில்லை. எவ்வாறு வளமும் பஞ்சமும் இடத்துக்கு இடமும் காலத்துக்குக் காலமும் மாற்றம் பெற்று வந்திருக்கிறதோ அதே போல சமூகச் சூழ்நிலைகளும் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஏதோ ஒரு புள்ளியில் இத்தகு வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் தொடங்கியிருக்கின்றன. எனில், சமூக அரசியல் ரீதியில் இத்தகைய ஒடுக்குமுறைகளை நிச்சயம் ஒழித்துக்கட்ட இயலும். அதே போலத்தான் – இச்சூழல்களால் உண்டான மன அழுத்தங்களும் ட்ராமாவும் ஒரு கட்டத்தில் முடிவுக்குக் கொண்டுவர இயலும். அதற்கு மனநலத்தைப் பேணுவது மட்டும் தீர்வு கிடையாது. சமூகப் பொருளியல் விடுதலையுடன் சேர்ந்த மனநல விடுதலைதான் முழுத் தீர்வாக இருக்க இயலும்.
ட்ராமாக்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது என்றைக்கும் முடிந்த முடிபாக இருக்கவேண்டியதில்லை. நம் வாழ்காலத்திலேயே ஒவ்வொருவரது ட்ராமாவும் ஓரளவேனும் சீர்செய்ய இயலும். அதற்குத் தகுந்தாற்போல சிகிச்சை எடுத்துக்கொள்வதும் மருந்துகள் உட்கொள்வதும் ஓரளவேனும் நம்மைச் சீர்செய்ய உதவும். மேலும், மேல்மரபியல் சூழலுக்கு ஏற்பச் செயல்படும் தன்மையுடையதால், சூழலை மேம்படுத்துவதன் வழியாகவும் சரியான சிகிச்சை வழியாகவும் மாற்றம் பெறும் என்று அறிஞர்கள் உரைக்கின்றனர். நம் மேல் விழும் வடுக்கள் மாற்ற முடியாதவை அல்ல. இதை Epigenetic Reversibility என்கிறோம்.
மேற்சொன்ன சமூகப் பொருளியல் காரணங்களால் ஏற்படும் ட்ராமாக்களை வெறும் மருந்து மாத்திரைகளாலும் தனிநபர் சிகிச்சைகளாலும் மட்டுமே மாற்ற இயலாது. காசாவில் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வெறும் மருந்து மாத்திரைகள் கொடுத்துச் சரிசெய்துவிட முடியாது. அதனால் தான் உளவியல் நலன் என்பது ஆழமான சமூக அரசியல் பிரச்சனையாக இன்று கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ நற்சூழல் அமைத்துக் கொடுப்பது சமூகப் பொருளியல் விடுதலை மட்டுமல்ல; அது அவர்களது அடுத்த தலைமுறையின் உயிரியல் விடுதலையுமாகும். நற்சூழ்நிலை, சத்தான உணவு, வன்முறையற்ற வாழ்வு ஆகியவை அந்த மேல்மரபணு சுவிட்சுகளை (Switches) மீண்டும் இயல்பு நிலைக்குத் திருப்ப வல்லவை.
References
Arnold, David. “Famine in Peasant Consciousness & Peasant Action: Madras 1876-78.” In Subaltern Studies: Writings on South Asian History and Society, edited by Ranajit Guha. 3. Oxford University Press, 1994.
González-Rodríguez, Patricia, Jens Füllgrabe, and Bertrand Joseph. “The Hunger Strikes Back: An Epigenetic Memory for Autophagy.” Cell Death & Differentiation 30, no. 6 (2023): 1404–15.
Jawaid, Ali, Martin Roszkowski, and Isabelle M. Mansuy. “Transgenerational Epigenetics of Traumatic Stress.” In Progress in Molecular Biology and Translational Science. Elsevier, 2018.
Kaur, Harjyot, and Pooja Jaggi. “Intergenerational Trauma in the Context of the 1947 India–Pakistan Partition.” Psychological Studies 68, no. 3 (2023): 374–87.
Kwon, Diana. “Borderline Personality Disorder May Be Rooted in Trauma.” Scientific American, January 1, 2022. https://www.scientificamerican.com/article/borderline-personality-disorder-may-be-rooted-in-trauma/.
Li, Yanping, Yuna He, Lu Qi, et al. “Exposure to the Chinese Famine in Early Life and the Risk of Hyperglycemia and Type 2 Diabetes in Adulthood.” Diabetes 59, no. 10 (2010): 2400–2406.
Mandal, Shreya. “Reading the Silence of the Bengali Diaspora: Bibliotherapy and the Inheritance of the 1943 Bengal Famine.” Psychology Today, June 8, 2025. https://www.psychologytoday.com/us/blog/bipoc-mental-health/202505/reading-the-silence-of-the-bengali-diaspora.
Sharma, Dinesh C. “Genetic Isolation in Casteist India Could Render Some People More Vulnerable to Disease.” The Wire: Science, July 19, 2017. https://science.thewire.in/science/caste-founder-events-endogamy-recessive/.
Thompson, E. P. “The Moral Economy of the English Crowd in the Eighteenth Century.” Past & Present, no. 50 (1971): 76–136.
Wells, Jonathan C. K., Emma Pomeroy, Subhash R. Walimbe, Barry M. Popkin, and Chittaranjan S. Yajnik. “The Elevated Susceptibility to Diabetes in India: An Evolutionary Perspective.” Frontiers in Public Health 4 (July 2016).
Yajnik, Chittaranjan S., and John S. Yudkin. “The Y-Y Paradox.” The Lancet 363, no. 9403 (2004): 163.
Yehuda, Rachel. “How Parents’ Trauma Leaves Biological Traces in Children.” Scientific American, July 1, 2022. https://www.scientificamerican.com/article/how-parents-rsquo-trauma-leaves-biological-traces-in-children/.
Yehuda, Rachel, Nikolaos P. Daskalakis, Amy Lehrner, et al. “Influences of Maternal and Paternal PTSD on Epigenetic Regulation of the Glucocorticoid Receptor Gene in Holocaust Survivor Offspring.” American Journal of Psychiatry 171, no. 8 (2014): 872–80.
Yehuda, Rachel, and Amy Lehrner. “Intergenerational Transmission of Trauma Effects: Putative Role of Epigenetic Mechanisms.” World Psychiatry 17, no. 3 (2018): 243–57.
Ziadah, Rafeef, dir. We Teach Life, Sir. n.d. Accessed May 20, 2026. https://www.youtube.com/watch?v=aKucPh9xHtM.
***
மா.க. பாரதி – கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக டில்லியில் வசித்து வருகிறார். அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவராகப் பணிபுரிந்து வருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக-சமய வரலாற்றை ஆய்வு செய்கிறார். மின்னஞ்சல் : barathyganesan96@gmail.com
ஒரு ஜதை புதிய காலணிகளை எப்படி அடக்கியாள்வது (திருமலேஷ்-க்கு)
அவற்றை ஒன்றாக வைக்காதீர்கள் அவற்றைத் தங்களுக்குள் பேச அனுமதிக்காதீர்கள் அவை ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கக்கூடும்
சுவர்-கடிகாரம், சட்டப்புத்தகங்கள், நாட்காட்டி, தேசியக்கோடி, காந்தியின் புகைப்படம் அல்லது செய்தித்தாளுக்கு அருகில் ஒருபோதும் அவற்றை விட்டுப்போகாதீர்கள் சுதந்திர தினம், சத்தியாகிரகம், விடுமுறைகள், வேலை நேரங்கள், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊழல் குறித்து அவை தெரிந்து கொள்ளக்கூடும்
உங்களுடைய ஆலயத்துக்கு அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள் நீங்கள் மிகவும் பலவீனமானவர் என்பதையும் உங்கள் கடவுள் போலியானவர் என்பதையும் உடனடியாக அதைத் தெரிந்துகொண்டு அவை உங்களை கடிக்கக்கூடும்
உங்களுடைய உணவு-மேசைக்கு அருகில் ஒருபோதும் அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள் அவை உணவளிக்கும்படி கேட்கக்கூடும் அல்லது உங்களின் செழுமையான இரவுணவின் மீது அவற்றின் கொள்ளிக்கண்களை வைக்கக்கூடும்
முதலில் அவற்றை சிறிய நடைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பிறகு மெல்ல மெல்ல தூரத்தை அதிகரியுங்கள் தாங்கள் பார்க்கும் வேலையின் அளவு யாதென்பதை ஒருபோதும் அவை அறிந்துகொள்ளக்கூடாது
அவற்றின் இறுக்கமான வார்களை தளர்த்தி விடுங்கள் அவற்றை மகிழ்ச்சியாக உணரவிடுங்கள் அவை பெரிதாக வளர்ந்து வருகின்றன கரடுமுரடாக இருக்கும் வார்களின்மீது சிறிதளவு பழைய எண்ணெயை ஊற்றிவிடுங்கள் தங்களுக்கு அபிஷேகம் நடப்பதாக அவை எண்ணிக் கொள்ளட்டும்
தற்போது அவை உங்களின் கொழுத்த கால்களுக்காக கூடுதல் நேரமும் பணிபுரியத் தயாராயிருக்கும் அற்புதமான அடக்கஒடுக்கமான பணியாளர்கள்
*
ஒரு கோரிக்கை
புத்தர் கிறிஸ்து கிருஷ்ணர் மஹாவீர் முகம்மது மோசஸ் நானக் ராமர் ஜராதுஷ்ட்ரர்
நான் உங்களை வணங்குகிறேன் புதிய காற்றால் நிரம்பிய பச்சைவண்ண பலூன்களால் இம்முறை எங்களை ஆசிர்வதியுங்கள்
*
ஆந்தை
ஒரு கண்ணை மட்டுமே திறக்க நம்மால் ஆகாது ஆனால் ஒருகண்ணை மட்டும் மூடமுடியும் அந்த முதிய ஆந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும் – ஒரு நீதிக்கதையில் வரும் ஞானி ஒரு சிறிய பிரச்சனையோடு ஒரு முயல் அவரிடம் வரும்பொழுது அவர் ஒற்றைக்கண்ணை மட்டுமே திறக்கிறார் ஏனென்றால் அதைப் புரிந்துகொள்ள இரண்டு கண்கள் தேவையில்லை
ஆந்தை ஓர் எளிய தந்திரத்தை மெல்ல கிசுகிசுக்கிறது
குரூரமும் ஆற்றலும் நிறைந்த சிங்கத்தை
முயல் ஒரு கிணற்றுக்கு அழைத்துச்சென்று
அதற்குள் எட்டிப்பார்த்து குதிக்கச் சொல்கிறது
சிங்கத்துக்கோ படுபயங்கர அச்சம்
அது சொல்கிறது: என்னைக் காட்டிலும்
ஆற்றல்மிகுந்த இன்னொரு மிருகம் உள்ளே இருக்கிறது
அதுவும் என்னைப் பார்த்து கர்ஜிக்கிறது
முயல் சொல்கிறது: முட்டாள்
உன்னுடைய புலன்களை பயன்படுத்து
அந்த மற்றொரு மிருகம் உனது நிழல்தான்
அந்த கர்ஜனையும் கூட உனது குரலின் எதிரொலிதான்
ஆகவே சிங்கம் அதில் சமாதானமாகி
கிணறு பாதுகாப்பான இடம்தான் என்பதை ஏற்றுக்கொண்டு
உள்ளே குதிக்கிறது
நம்மால் வெளிச்சத்தை நோக்கி ஒற்றைக்கண்ணை மட்டும் திறக்கமுடியாது ஆனால் தகுந்த காரணத்தோடு ஒற்றைக்கண்ணை மூடிக்கொள்ளமுடியும்
அவளுடைய இறந்து-பிறந்த / இன்னும்-பிறக்காத குழந்தைகள்
தனது உணர்வுகளை அவள் எப்போதும் அவனிடம் சொன்னதில்லை ஒவ்வொரு இரவும் ஒரு மாத்திரையை விழுங்குவாள் அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
தனது உணர்வுகளை அவனும் கூட எப்போதும் அவளிடம் சொன்னதில்லை ஒவ்வொரு இரவும் ஒரு கேப்சூலை விழுங்குவான் அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஒருமுறை ஒரு மனநல ஆலோசகரை பார்ப்பதற்காக அவன் வெளியூர் சென்றிருந்தபோது அவள் மிகவும் தனிமையாகவும் நம்பிக்கையிழந்தவளாகவும் உணர்ந்தாள் அவனுடைய போத்தலில் இருந்த அத்தனை கேப்சூல்களையும் எடுத்து அவற்றின் உள்ளிருந்த மருந்துகளை வெளியே வீசியெறிந்தாள் அவள் பேசி விரும்பிய அனைத்தையும் பேசிவிட்டு கேப்சூல்களை அவை முன்பிருந்ததுபோலவே மூடி மீண்டும் போத்தலுக்குள் வைத்துவிட்டாள்
ஒரு மருந்துபோத்தலைப் போலவே அந்த போத்தல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது ஒரு பச்சநிற அடையாளச்சீட்டுடன் “ரீனோ-13 ஆண்மைக்கான மருந்து” ஆனால் உண்மையான மருந்தென்பது அந்த காலி கேப்சூல்கள்தான் மௌனத்தால் நிரப்பப்பட்ட கேப்சூல்கள் அவள் பேசிய வார்த்தைகளால் ஆன மௌனத்தால்.
*
எறும்பு
நீங்கள் முற்றிலும் அகந்தை பீடித்த ஒரு தலைமுறை உங்களுடைய எறும்பு-தின்னி நாவின் மூலம் பேசிக்கொண்டே போகிறீர்கள். கவனியுங்கள்: என்னுடைய வெண்ணை-கத்தியின் வெண்ணைக்குள் ஓர் எறும்பு சிக்கிக்கொண்டது, ஒரு தீக்குச்சியின் உதவியோடு அதை நான் மேலே தூக்கினேன். ஒரு சின்னஞ்சிறிய உயிருக்கு அதன் சின்னஞ்சிறிய வாழ்வை வாழ நான் ஒரு சின்னஞ்சிறிய உதவி செய்திருக்கிறேன்.
உங்களைக் காட்டிலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என்னைக் காட்டிலும் அந்த எறும்பு மகிழ்ச்சியாயிருக்கிறது.
தன்னுடைய வாயில் ஒரு சிறிய சர்க்கரைத்துளியை தூக்கிக்கொண்டு அந்த எறும்பு தனது எறும்புப்புற்றுக்குச் செல்கிறது. எறும்புகள் தங்களால் இயன்றளவுக்கு வேலைகளைச் செய்கின்றன. தங்களுக்குத் தேவையானதைப் பெறுகின்றன. ஆனால் மார்க்ஸ் யார் என்றோ அல்லது மாவோ யார் என்றோ அவற்றுக்குத் தெரியாது.
***
கோபால் ஹொன்னால்கெரே (1942-2003) கர்நாடகத்தைச் சேர்ந்த கவிஞர். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியவர். மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் நுண்கலைகள் பயின்றிருக்கிறார். இலக்கியத்தை உண்மையாக நம்பும் எல்லாக் கலைஞர்களையும் போலவே யதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிச் சீரழிந்தவர். மொத்தம் ஆறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வாழ்நாளில் அவை பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹொன்னால்கெரே இறந்தபிறகு அவருடைய மொத்தக் கவிதைகளையும் அவரின் நண்பர் ஜெயசீலன் தொகுத்து பொயட்ரிவாலா மூலம் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். சிறுபிள்ளை விளையாட்டு என்று கருதப்பட்ட முதல் தொகுப்பு மட்டும் முழுக்கவே இந்தத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஹொன்னால்கெரே பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் – அற்புதம்.
கார்த்திகைப் பாண்டியன் – 1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். அத்துடன் மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. – மின்னஞ்சல்: karthickpandian@gmail.com
எனக்கு நினைவு தெரிந்து, இயல்பிலேயே எனது தந்தை கருணை மிகுந்தவர். எப்போதும் மகிழ்வோடிருக்கும் மனநிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் என்றே நினைக்கிறேன். அவர் தன்னுடைய முப்பத்தி நான்கு வயது வரை ஓஹியோ மாநிலம் பிட்வெல் நகரத்தில் தாமஸ் பட்டர்வொர்த் என்கிற நிலக்கிழாரின் நிலத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். அவருக்கென்று சொந்தமாய் ஒரு குதிரையும் இருந்தது. சனிக்கிழமை மாலைகளில் நகரத்திற்குச் சென்று ஏனைய விவசாய ஊழியர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் அளவளாவி வருவதும் வழக்கம். அப்போதெல்லாம் கணக்கில்லாமல் பீர் குடிப்பதும் பென் ஹெட் சலூன் வாசலில் கூடுவதுமாக அந்த இடமே விவசாயிகளால் நிறைந்திருக்கும். மதுக்குவளைகளின் உரசலும் உரத்த பாடல்களுமென்று அந்த நேரங்களெல்லாம் அமர்க்களமானவை. இரவு பத்து மணிக்கு மேல் குதிரை வண்டியை அந்த ஆள் அரவமற்ற கிராமத்து சாலையில் தன்னந்தனியாய் குதிரையையும் தொந்தரவு செய்யாமல் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து, எப்போதும் போல் படுக்கைக்குச் செல்வார். அதுவே அப்போது அவருடைய என்றன்றைக்குமான வாழ்வு. அதற்கு மேல் பெரிய ஆசைகளெல்லாம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை.
அம்மாவை திருமணம் செய்த போது அவரது வயது முப்பதைந்து.. அப்போது அம்மா ஒரு கிராமப்பள்ளியின் ஆசிரியர். அதற்கடுத்த ஆண்டிலேயே இயற்கையின் சுழலில் இருந்து வெளிவந்த திருப்பமாய் எனது அழுகை சத்தமும். இருவருக்குமிடையே தருக்கங்கள் விவாதங்கள் என்று ஏதோ நடந்திருக்க வேண்டும். அவரவர் லட்சியங்களுக்கான பயணங்களைத் தொடர்ந்தார்கள். வெகுசீக்கிரத்தில் முன்னேற வேண்டும் என்கிற அமெரிக்கர்களின் வலுவான இயல்புகள் அவர்களையும் உள்வாங்கிக் கொண்டது.
அதற்கும் அம்மாவே பொறுப்பேற்றிருந்திருக்க வேண்டும். ஒரு பள்ளி ஆசிரியையாக புத்தகங்களும் செய்தித் தாள்களுமாக அம்மா ஒரு தீவிர வாசகி என்பதில் எந்த ஐயமும் இல்லை. கார்ஃபீல்ட், லிங்கன் போன்ற அமெரிக்கர்கள் தங்களுடைய வறுமை நிலையிலிருந்து மீண்டெழுந்து எப்படி புகழுக்கும் பிரநிதித்துவத்துக்கும் உயர்ந்தனர் என்பதை ஒரு கதை சொல்லியாக அவள் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பக்குவப்படுத்தியதையும்.. நானும் ஒரு நாள் அவ்வாறே ஒரு தலைவனாக இந்தச் சமூகத்திற்கு பொறுப்பேற்பேன்.. நகரங்களை ஆள்வேன் என்பதெல்லாம் அவளுடைய கனவாய் இருந்திருக்கும் என்று உணர்வேன். அப்பாவை ஒரு பண்ணைத் தொழிலாளி என்ற நிலையிலிருந்து எப்படியாவது விடுபடச் செய்து, அவர் தனது குதிரையை விற்றுவிட்டாவது சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்று ஊக்குவித்தாள். உயரமும் மிடுக்கான தோற்றமும் அமைதியான சுபாவமும் நீண்ட மூக்கும் பழுப்பு நிறக் கண்களுமாக அம்மா ஒரு பேரழகி. அவளுக்கென்று பிரத்தியேக விருப்பமானது என்று எதுவுமில்லை. வாழ்வின் தீராத இலக்குகள் கொண்டவள் அம்மா என்பதே எனக்கும் அப்பாவுக்குமான கருத்து.
இருவரும் துவங்கிய முதல் முயற்சி மோசமான தோல்வியிலேயே முடிந்தது. பிட்வெல்’லிருந்து எட்டு மைல் தொலைவில் க்ரிக் சாலையில் கல்லும் கரடுமாய் இருந்த நிலத்தை வாடகைக்கு எடுத்தனர். அதில் கோழி வளர்ப்பு தொடங்கியது. எனது பிள்ளைப் பருவமும் அங்கே தான் தொடங்கியது. அங்கேயிருந்து தான் வாழ்வின் தாக்கங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்திலிருந்தே அங்கே பேரழிவின் அச்சுகள் பதிந்து கிடந்தன. வாழ்வின் இருண்ட பகுதியைக் காணும் ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதனாக – அதுவே எனது முழுமுதல் கணங்களாக. எனக்கான மகிழ்ச்சியான நாட்களாக.. சிறு வயதின் இன்பங்களாக அந்த கோழிப்பண்ணையில் கழிந்த தருணங்களையே எல்லா நேரங்களிலும் எண்ணிப் பார்க்கிறேன்.
முன் பின் பழக்கமில்லாத இந்த மாதிரியான விசயங்களில் அனுபவமில்லாத ஒருவர் கோழி ஒன்றுக்கு ஏற்படக்கூடிய கொடிய பல துன்பங்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கோழிக் குஞ்சானது முட்டையிலிருந்து வருகிறது, நீங்கள் ஈஸ்டர் வாழ்த்து அட்டைகளில் காண்பது போல சின்னஞ்சிறு பஞ்சுப் பொதியாக சில வாரங்கள் இருக்கிறது. பிறகு முற்றிலும் அம்மணமாக. கண்கள் வெளிறி அப்பாவின் நெற்றி வியர்வை சிந்திக் கிடைத்த மக்காச்சோளத்தையும் மாவையும் உண்டு. பிப் மற்றும் காலரா என்று சொல்லப்படும் இன்ன பிற நோய்களையும் பெற்றுக் கொண்டு. சூரியனை வெறித்துப் பார்க்கும் மூர்ச்சையுற்ற கண்களோடு நோயுற்று இறந்து போய் விட, அவற்றிலிருந்து சில சேவல்களும் பெட்டைகளும் தப்பிப் பிழைத்து இயற்கையின் மர்ம நோக்கங்களுக்கான சேவைகளுக்காக அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை அடையப் போராடுகின்றன. கோழியிலிருந்து முட்டைகள்.. பின் அதிலிருந்து பிறக்கும் கோழிகள் என்று முழுமையான ஓர் அதிபயங்கரச் சுற்று. இவையெல்லாம் நம்பமுடியாத அளவுக்கு சிக்கலான கருத்துகள். பெரும்பாலான தத்துவஞானிகள் கோழிப் பண்ணைகளிலிருந்து தான் வெளிவந்திருப்பார்கள் போல. ஒருவர் ஒரு கோழியிடமிருந்து மிக அதிகமாய் எதிர்பார்க்கலாம், ஆனால் ஏமாற்றமடையும் அளவுக்கு மனமுடைந்து போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கோழிக்குஞ்சுகள் தங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும்போது மிகப் பிரகாசமாய் கவனத்தை ஈர்ப்பவைகளாய் இருக்கின்றன, ஆனால் அவை பயங்கர முட்டாள்கள். அவைகள் மனிதர்களைப் போலவே இருப்பதால், மற்றவரோடு ஒப்பிட்டு தங்களுடைய மதிப்பீடுகளை குழப்பிக் கொள்பவையாக இருக்கலாம். நோய் தாக்கி அவைகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லையென்றால், அவைகள் உங்களது எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி முழுமையாக செழித்து வளர்ந்து வாகனத்தில் ஏற்றப்படும். பின் தன்னை வளர்த்தவருக்காகவே நசுங்கி உயிரிழந்து தனது உரிமையாளரிடமே சென்று சேரவும் செய்யும்.
பூச்சிகள் அவற்றின் இளமையைத் திண்ணுகின்றன. அரித்துத் தீர்க்கின்றன. நலம் காக்கும் உணவுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். கோழிகள் வளர்ப்பதின் மூலம் பிறக்கின்ற அதிர்ஷ்டங்களால் தத்துவங்கள் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதையெல்லாம் என்னுடைய பின் நாட்களிலான வாழ்வின் போதே அறிந்து கொண்டேன். என்னுடைய விருப்பமென்பது, அறிவு மரத்தின் நல்லவை தீயவைகளை உண்டுவிட்ட கடவுள்கள் தான் அவற்றையெல்லாம் தயை கூர்ந்து படிக்க வேண்டும். குறைந்த அளவு எண்ணிக்கையிலான கோழிகள் வைத்திருக்கும் வெகு சாதாரண இலக்குகள் கொண்ட மனிதர்களுக்கு, அதுவொரு நம்பிக்கைக்குரிய இலக்கியம். அதனால் யாரும் வழிதவறிப் போகும் வாய்ப்புகளை கூடத் தவிர்க்கலாம். அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை. அலாஸ்காவின் உறைந்த மலைத் தொடர்களில் தங்க வேட்டைக்குச் சென்று பாருங்கள். ஓர் அரசியல்வாதியின் நேர்மைக்குள் உங்களது நம்பிக்கையை பொருத்திப் பாருங்கள். உலகம் ஒவ்வொரு நாளும் மேம்பாடு அடைந்து வருகிறது. தீமைகளைத் தாண்டியும் நன்மைகள் வெற்றி பெறும் என்று நீங்கள் நம்பவேண்டும். ஆனால், கோழிகளின் உலகைப் பற்றிய இலக்கியம் அது என்கிற எண்ணத்தோடு நம்பிக்கை வைத்து அதை நீங்கள் படிக்கக்கூடாது. அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை.
இருந்தாலும் நான் உங்களை திசை திருப்பவே செய்கிறேன். நான் சொல்கிற கதைக்கு கோழி என்பது ஒரு முதன்மைப் பொருளே அல்ல. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அது முட்டையை மையப்படுத்தியதாகும். பத்து வருடப் போராட்டத்திற்குப் பின்னர் எனது பெற்றோர் தங்களது கோழிப்பண்ணையை வைத்து பணம் ஈட்டினர். பெரும் போராட்டம். பின் அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு மற்றொன்றுக்குத் தயாராயினர். ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்துக்கு இடம் பெயர்ந்து உணவகம் ஒன்றைத் தொடங்கினர். குஞ்சாகப் பொரிந்து வெளிவராத இன்குபேட்டர் நிலையின் கவலையாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறியதாக. அவர்களின் இரசனைக்குத் தகுந்ததாக, அழகாக. அரை நிர்வாணத்தோடு பஞ்சுப் பொதிகளோடு இருந்த சின்னஞ்சிறிய பெட்டைக் குஞ்சுகள் அதன் தன்மையிலிருந்து நழுவி இறந்த நிலைக்குச் சென்றுவிட்டன. எல்லாவற்றையும் ஒரு பக்கமாகத் தூக்கியெறிந்துவிட்டு உடைமைகள் அனைத்தையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிரிக்ஸ் சாலையின் வழியாக பிட்வெல் நகரை நோக்கி நகர்ந்தோம். கடந்து போன நாட்களெல்லாம் தாண்டியதொரு நம்பிக்கையுடன் புதிய இடம் தரப்போகிற மேன்மையான, வளமான வாழ்க்கையை நோக்கியதொரு பயணம் அது.
சோகம் அப்பிய முகத்தோடு பயணப்படும் ஒரு குழுவாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. இல்லை.. அலங்காரத்தோடு சொல்லவேண்டுமென்றால், போர்க்களத்தில் இருந்து தப்பியோடும் அகதிகள் போல் அல்லாமல் என்று வைத்துக்கொள்ளலாம். அம்மாவும் நானுமாக சேர்ந்து சாலையில் நடைப் பயணம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஆல்பர்ட் கிரிக்ஸ்’இடமிருந்து கடனாகப் பெற்ற வாகனத்தில் எங்களது உடைமைகள் அனைத்தும் இருந்தன. பக்கவாட்டில் அரதப் பழசான நாற்காலிகளின் கால்கள் முட்டிக்கொண்டு நின்றன. பின்னால் இருக்கும் பக்கவாட்டில் மேசைகளும் கோழிக்குஞ்சுகளை அடைக்கப் பயன்படுத்திய பெட்டிகளில் இருக்கும் சமையல் பாத்திரங்களும். அதற்கும் மேலே நான் குழந்தையாய்த் தவழ்ந்த சக்கரம் வைத்த வண்டி. அந்த வண்டியைப் பற்றி, தூளியைப் பற்றிப் பேசி அதற்குள் நாம் ஏன் இப்போது சிக்கிக் கொள்கிறோமென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தடுத்த குழந்தைகள் பிறக்க, தவழ வாய்ப்புகள் இல்லாததாலோ என்னவோ, பயன்பாடின்றி சக்கரங்கள் உடைந்து போயிருந்தன. என்ன செய்வது மிகச் சிறிய அளவில் உடைமைகள் உள்ளவர்கள், அந்த சொற்ப சொத்துக்களில் ஒன்றிப் போய் விடுகிறார்கள். மீதமுள்ள வாழ்க்கையை மிகவும் சோர்வாக்குவதற்கு அதுவும் ஒரு காரணம், நிலைப்பாடு.
வண்டியின் மேல் தளத்திலிருந்து அப்பா வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வழுக்கைத் தலையோடு தனது நாற்பத்தைந்தாவது வயதில் இருந்தார், கொஞ்சம் சதைப்பற்றுடனும். அதுவும் ரொம்ப காலமாகவே இந்தக் கோழிகள் பராமரிப்பில் இருப்பதால் இயல்பான அமைதியுடனும் ஊக்கம் ஏதும் இல்லாமலும் இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக கோழிப்பண்ணைத் தொழிலிலும் அக்கம் பக்கத்துப் பண்ணைகளின் கூலித் தொழிலாளியுமாக இருந்ததில் சம்பாதித்த பெரும்பாலான தொகை கோழிகளை அதன் சீக்குகளில் இருந்து காப்பாற்றுவதிலும், அதற்கான மருந்துகள் வாங்கவும், அதாவது வில்மர்’இன் ஒயிட் காலரா க்யூர் அல்லது அம்மா அவ்வப்போது பார்த்து பரிந்துரைக்கும், பேராசிரியர் பிட்லோ’வின் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்கள் அடங்கிய கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளுக்காக செலவிட்டவை. அப்பாவின் காதுகளுக்கு மேலாக கொத்துக் கொத்தாய் சிறிய அளவிலான முடிக் கற்றைகள் இருக்கும். குளிர்காலத்தின் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் கணப்பு அடுப்புக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை சிறு குழந்தையாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் நினைவிருக்கிறது. அதெல்லாம் நான் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியிருந்த நேரம். எனக்கென்று கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்த நேரமும் கூட. அவருடைய வழுக்கைத் தலைக்கு மேலாக எப்படி முதிர்ச்சியான சிந்தனைகள் உருப்பெறுமோ அதைப் போன்ற கிளர்ந்தெழுகின்ற கற்பனைத் திறன், சீசர் எப்படி தனது படையணிகளை ரோமை விட்டு வெளிக்கிளம்பி திறந்த அகன்ற சாலைகளில் அதுவரை அவர்களுக்குத் தெரியாத உலக அதிசயங்களைக் காண்பிக்க வழி நடத்திச் சென்றானோ அது போன்றதொரு கிளர்ச்சி எனக்கு. அவருக்கோ காதுகளுக்கு மேலாக வளர்ந்திருந்த கொத்து மயிர்க் கற்றைகள் முன்பை விட அதிகமாக வளர்ந்து காடு போலிருப்பதாய் எனக்கு உணர்த்தியது. நான் அரை உறக்கத்தில் தளர்ந்த நடையில் கனவுக்குள் வீழ்கிறேன், நானொரு சிறு குழந்தையாய், சாலை வழியாக தொலை தூரத்தில் ஓர் அழகான இடம் நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே கோழிப்பண்ணைகள் இல்லை. முட்டைகளைப் பற்றிய தேடல்கள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிய பயணம்.
கோழிப்பண்ணையிலிருந்து நகரம் நோக்கி விரையும் எங்களைப் பற்றி யாரேனும் ஒரு கதை எழுதலாம். அம்மாவும் நானும் முழுவதுமாக எட்டு மைல்களை நடந்தே கடந்தோம். அவள் வண்டியிலிருந்து ஏதும் ஏடாகூடமாய் விழுந்து விடாதிருப்பதை உறுதி செய்துகொண்டே வந்தாள். நான் இந்த உலகத்தை பரவசத்தோடு பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்பாவின் அருகிலிருந்த இருக்கையில் அவருடைய விலைமதிக்க முடியாத பொக்கிசம் இருந்தது. அதைப்பற்றிச் சொல்கிறேன் உங்களுக்கு.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வரும் ஒரு கோழிப்பண்ணையில், அதிசயிக்கத்தக்க சம்பவங்களும் சில சமயங்களில் நடக்கும். மனிதப் பிறப்புகளில் சில கோரங்கள் நிகழ்வதைப் போல கோழிகளிலும் உண்டு. அம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்பவை அல்ல. ஆயிரத்தில் ஒன்று இருக்கலாம். உங்களுக்கே தெரியும் – ஒரு கோழி என்பது பிறக்கும் போது கூடவே நான்கு கால்கள், இரட்டை சோடி இறக்கைகள், இரண்டு தலைகள், அல்லது வேறென்ன இல்லை – எதுவும் நிகழலாம். அந்த ஜந்துக்கள் வாழ்வதில்லை. நடுங்கித் தொலைக்கும் அவை உடனடியாக உற்பத்தியாளரின் கைக்குச் சென்று விடும். அந்தக் கடைநிலை உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் சாத்தியமில்லையே என்கிற உண்மை அப்பாவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திவிடும். அவருக்கு வினோத எண்ணம் ஒன்று உண்டு – அதாவது ஐந்து கால்களோடு கூடிய சேவலோ அல்லது பெட்டைக் கோழியோ அல்லது இரண்டு தலை கொண்ட சேவலோ பிறந்து விட்டால், அதிர்ஷ்டம் கூடி செல்வம் பெருகும் என்பதான நம்பிக்கை அது. அந்த அதிசயத்தை அப்படியே அங்கிருக்கும் மற்றைய உற்பத்தியாளர்களிடமும் கொண்டு சென்று காட்சிப்படுத்தி அதன் மூலம் செல்வம் பெருகும் உத்தியைத் தெரிவிக்க வேண்டுமென்ற கனவும் உண்டு அவருக்கு.
கோரமான நிலையில் பிறந்தாலும் எங்களது கோழிப்பண்ணையில் கண் விழிக்கும் சின்னஞ்சிறிய உயிரினங்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவார் அப்பா. அவைகளுக்கு மதுவைக் கொடுத்துக் கூட தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து காப்பாற்றினார். இப்போது நகரத்தை நோக்கிய நமது பயணத்தில் அவர் கொண்டு வரும் கோழிகள் கூட பெட்டிகளில் அடுக்கப்பட்டு அவருடைய ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் சாட்டையைச் சொடுக்கி குதிரைகளை விரட்டிக்கொண்டே மற்றொரு கையால் அந்தப் பெட்டியையும் பிடித்துக் கொண்டிருக்கிறார். வரவேண்டிய இடம் வந்தவுடன் பெட்டிகள் கீழே இறக்கப்பட்டன. கண்ணாடி மூடிகள் பெட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் ஓர் உணவகத்தின் உரிமையாளராய் கழித்திருந்த இத்தனை நாட்களில், கோரமான உருவத்தோடு பிறந்த கோழிக்குஞ்சுகள் அனைத்தும் கண்ணாடிக் குடுவைகளில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு கடையின் வரவேற்பறைக்குப் பின்னால் இருந்த அலமாரி அறைகளில் வைக்கப்பட்டன. இந்தச் செயல்களை அம்மா அடிக்கடி எதிர்ப்பாள். ஆனாலும், தனது மதிப்பிற்குரிய பொருளின் மீதான நம்பிக்கையில் மிகுந்த உறுதிப்பாட்டோடு இருந்தார் அவர். அந்த உயிரினங்கள் ‘விலை மதிப்பில்லாதவை’ என்று அறிவிக்கவும் செய்தார். விநோதமானதும் அற்புதமானதுமான பொருட்களைப் பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு என்பார்.
ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் நாங்கள் உணவகத் தொழிலைத் துவக்கினோம் என்று சொன்னேனா? அது கொஞ்சம் மிகைப்படுத்தல் தான். அந்த நகரே கூட ஒரு குறுகிய மலையடிவாரத்தின் கீழ் சிறிய ஓர் ஆற்றின் கரையில் இருந்தது. இரயில் சாலை கூட அந்த நகரத்தின் வழியாகச் செல்லவில்லை. இரயில் நிலையமானது வடக்கே ஒரு மைல் தொலைவில் இருக்கும் பிகல்வில்லே என்ற இடத்தில் இருந்தது. அங்கே ஆப்பிள் சாறு நொதிக்கப்படும் ஒரு தொழிற்சாலையும் ஊறுகாய் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையும் ஏற்கனவே இருந்து. நாங்கள் வருவதற்கு முன்பே அவை வணிகத்தில் இருந்து விலகியும் விட்டன. பேருந்துகள் காலையிலும் மாலையிலும் உணவகம் இருக்கும் இடத்திலிருந்து டர்னர்ஸ் பீக் எனப்படும் சாலை வழியாக முதன்மைச் சாலையான பிட்வெல் நகருக்காக கீழே வந்து கொண்டிருந்தன. நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் இந்த மாதிரியான இடத்தில் உணவகம் துவக்குவது என்பது அம்மாவின் யோசனை. ஓர் ஆண்டாக இதைப் பற்றியே பேசி வந்த அம்மா ஒரு நாள் இரயில் நிலையத்துக்கு எதிரில் இருந்த ஒரு காலி கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்கள். உணவகம் இலாபம் நிறைந்த தொழில் என்பது அம்மாவின் கருத்து. பயணம் செய்ய வரும் மனிதர்கள் இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் எப்படியாவது வந்து காத்திருப்பார்கள்.. நகரத்து மக்களும் வருகின்ற இரயில்களுக்காக அங்கே வந்து காத்திருப்பார்கள். எப்படியும் அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் ஒரு காஃபி’க்காகவும் அங்கே வந்து தான் ஆகவேண்டும். நான் இப்போது வளர்ந்து விட்டேன் அல்லவா, ஆகவே சொல்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இந்தப் பயண நேரத்தில் அவளுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆம், என்னுடைய வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறாள் இப்போது. என்னை நகரத்து பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்து அந்த நகரத்து மனிதர்களில் ஒருவனாக நான் என்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே அவளது பேராவல்.
அப்பாவும் அம்மாவும் பிகல்வில்லே’வில் எப்போதும் போலவே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்தையே உணவகமாக உருமாற்றுவதற்கு மெனக்கெட்டோம். அதுவே ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டது. அப்பா அலமாரி ஒன்றைத் தயார் செய்து அதனுள் காய்கறிக் கூடைகளை அடுக்கினார். சிவப்பு மை கொண்டு தனது பெயரை பெரிதாக மேலே எழுதி வைத்தார். பெயருக்குக் கீழே ‘இங்கே சாப்பிடுங்கள்’ என்கிற கூர்மையான கட்டளையாக ஒரு வாசகம் – அந்த மாதிரியான நடைமுறைகள் அரிதாகவே அங்கே பேணப்படுவது. கண்ணாடிப்பெட்டி ஒன்றில் சிகரெட்டுகளும் புகையிலையும் அடுக்கப்பட்டது. சுவர்களையும் தரையையும் அம்மா தேய்த்துக் கழுவினாள். நகரத்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் தோல்வி முகத்தோடும் வருத்தத்தோடும் காட்சியளிக்கும் கோழிக்குஞ்சுகளை விட்டு கொஞ்சம் தள்ளியிருப்பது சற்றே மகிழ்ச்சியான விசயம் தான். இன்னமும் எனக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி இல்லை தான். மாலையில் டர்னர்’ஸ் பீக் வழியாக வீடு வரும்போது நகரத்துப் பள்ளி மைதானத்தில் அன்றைய நாள் குழந்தைகளோடு நான் விளையாடிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பெண் குழந்தைகள் குழு ஒன்று துள்ளிக் குதித்து பாடிக் கொண்டிருந்தது. நானும் அதை முயற்சித்தேன். பனி மூடி உறைந்திருந்த இறக்கமான சாலையில் ஒரு காலால் துள்ளித் துள்ளி அழுந்தக் குதித்துக் கொண்டே வந்தேன். ‘ஹிப்பிட்டி ஹாப் – டூ த பார்பர் ஷாப்’ என்று கூச்சத்தோடு பாடிக்கொண்டே வந்தேன். திடீரென்று பாட்டை நிறுத்தி சந்தேகத்தோடு சுற்றிலும் பார்த்தேன். எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியோடிருப்பது கொஞ்சம் பயமும் தந்தது. ஏதோ செய்யக்கூடாத ஒன்றை ஒருவர் செய்வதாக எனக்குத் தோன்றியிருக்க வேண்டும்.. அதுவும் தினசரி மரணத்தை விருந்தாளியாக வரவேற்றுக் கொண்டிருக்கும் ஒரு கோழிப்பண்ணையோடு வளர்ந்து வரும் எனக்கு அது பொருத்தமில்லாதது போலிருந்தது.
இரவு வரை உணவகம் திறந்திருக்க வேண்டுமென்று அம்மா முடிவு செய்தாள். ஒரு சரக்கு இரயிலைத் தொடர்ந்து பயணிகள் இரயில் ஒன்று இரவு பத்து மணிக்கு வடக்கு நோக்கிச் செல்லும். வேலை முடிந்து பிகல்வில்லே’வில் பணி மாற்றம் செய்து கொள்ளும் இரயில் தொழிலாளர்கள் சூடான காபிக்காகவும் உணவுக்காகவும் எங்கள் உணவகத்துக்கு வந்தார்கள். சில நேரங்களில் அவர்களில் யாரேனும் ஒருவர் முட்டை பொரியல் வேண்டுமென்பார்கள். அவர்களே அதிகாலை நான்கு மணிக்கு திரும்பவும் வடக்கேயிருந்தும் கடைக்கு வந்தனர். சிறிதளவாக வணிகம் வளரத் தொடங்கியது. அம்மா இரவு நேரத்தில் தூங்கி எழுந்து கடையைப் பார்க்கத் துவங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறத் தொடங்கியவுடன், அப்பா தூங்கச் சென்று விடுவார். அம்மா இரவில் தூங்கி எழுந்து விட்டு வந்த படுக்கையிலேயே அப்பா காலையில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விடுவார்.. நான் வழக்கம் போல் பிட்வெல் நகரப் பள்ளிக்குச் சென்று விடுவேன். அம்மாவும் நானும் இரவில் உறங்க ஆரம்பித்த பிறகு வெகு நேரம் விழித்திருந்து அடுத்த நாள் மதிய உணவு வாடிக்கையாளர்களுக்காக சாண்ட்விச்’சில் வைக்கத் தேவையான இறைச்சி உணவை தயாரிக்கத் தொடங்கி விடுவார் அப்பா. உலகத்தில் போராடி முன்னேற அடுத்ததாக இன்னொரு யோசனையும் அவருக்கு வந்தது. ஆனாலும் அமெரிக்க மனப்பான்மை அவரைக் கட்டுப்படுத்தியது. அவருடைய இலட்சியங்கள் இன்னும் வளர்ந்தன.
நீண்ட இரவுகளின் சிறிய ஆசுவாசத்தில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு அப்பாவுக்கு நேரம் வாய்க்கும். அதுதான் அவருக்கான வேலையில்லாத நேரம். கடந்த காலத்தில் ஒரு வெற்றியாளனாக இல்லாமல் எந்தவொரு மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் துன்பப்பட்ட அவர் எதிர்காலத்திலாவது ஒரு நல்ல நிலையை அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். வேலைகள் முடித்து அதிகாலையில் மாடிப்படியேறி வந்து படுக்கையில் அம்மாவுக்கு அருகில் படுப்பார். அம்மா எழுவாள். வழக்கம் போல் அவர்கள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி பேசத் தொடங்கி விடுவர். படுக்கையின் ஓரத்தில் இருக்கும் நான் அவர்களது உரையாடலை கவனிக்கத் தொடங்குவேன்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்கிற கருத்தானது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான பொதுவானதொரு யோசனையாக இருந்தது. அவருடைய சொற்களை இப்போது சரியாக என்னால் நினைவு கூற முடியவில்லை. தனது நிகழ்ச்சிகளின் மூலமாக பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்துபவர் என்று ஒருவரைப் பற்றிய பதிவை பொத்தாம் பொதுவாக சொல்லிச் சென்றவர், அவர். பிட்வெல் நகரத்தின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வெகு அரிதாக ஒன்று கூடி எங்களது கடைக்கு வரும்போது, மகிழ்ச்சியான பிரகாசமான உரையாடல்களைத் தொடர்வது வழக்கம். அப்பாவின் வார்த்தைகளில் இருந்து நான் தெரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் சொற்கள் அகமகிழ்ந்து வெளிப்பட வேண்டும். அதுதான் வாடிக்கையாளர்களை உள்ளிழுக்கும். அம்மாவுக்கு சந்தேகமாயிருக்கும். ஆனாலும் அவருடைய வார்த்தைகளால் யாரும் தளர்வடைவதில்லை. பிட்வெல் நகரத்தின் இளைஞர் கூட்டத்திற்கு அப்பாவும் அம்மாவும் பெற்றோர் மனப்பான்மையோடு பரிமாறுவது மிகுந்த உதவியாய், அனைவரையும் கவர்வதாய் இருக்கும் என்பது அப்பாவின் கருத்து. மாலை நேரத்தில் மகிழ்ச்சியான இளைஞர் குழுக்கள் டர்னர்’ஸ் பீக்’கில் ஒன்று சேர்ந்து பாடத் தொடங்க வேண்டும். அவர்கள் கூட்டமாய் சேர்ந்து எங்களுடைய இடத்தில் மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு சிரிக்க வேண்டும்.. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அங்கே பாடலும் விழாக் குதூகலமும் இருக்க வேண்டும். அப்பா இவற்றை விரிவாகச் சொன்னார் என்று நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அதிகமாய் பேசிப் பழக்கமில்லாதவர் தான். “அவர்கள் ஏதாவதொரு இடத்துக்கு போகணும்னு விரும்புறாங்க.. ஆமா.. அவங்க கண்டிப்பா அதைத்தான் விரும்புறாங்க” என்றார். அப்பா திரும்பத் திரும்ப இதைச் சொன்னார். அவருக்கு எவ்வளவு தெரியுமோ, அதைச் சொன்னார். என்னுடைய சொந்தக் கற்பனைகள் மிச்சத்தை நிரப்பிக் கொண்டன.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அப்பாவின் இந்தக் கருத்துக்கள், எங்கள் வீட்டிற்குள் அலைந்து திரிந்தன. வீட்டில் நாங்கள் அதிகமாக பேசிக் கொள்வதில்லை.. ஆனால் சோகமான பொழுதுகளை மீறி மகிழ்ச்சி எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்றே எண்ணினோம். அம்மா முடிந்த அளவுக்கு புன்முறுவலோடு சாப்பிட வருபவர்களைக் கவனித்தாள். அவர்கள் என்ன நானும் தான். ஆனால் அவர்களுடைய சம்பிரதாயமான புன்னகையை நான் கண்டு கொள்வேன். அப்பாவுக்குத் தான் வாடிக்கையாளர்களைப் புன்னகையோடு கவர்வதில் ஒருவிதக் கவலையும் நடுக்கமும் இருந்தது. சந்தேகமேயில்லை. அது அவருக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது. காட்சி வடிவமைப்பவரின் உள்ளில் இருந்து இயக்கும் ஒரு சக்தியைப் போல. இரவில் பணி முடித்துத் திரும்பி வரும் இரயில்வே பணியாளர்களிடம் அவர் தனது திறமையைக் காட்டி தனது ஆற்றலை வீணாக்கவில்லை. ஆனால், அவர் தனது திறமையைக் காண்பிக்க பிட்வெல்’இல் இருந்து வரும் ஓர் இளைஞன் அல்லது இளைஞிக்காக அன்றைய தினம் காத்திருப்பதாகத் தெரிந்தது. உணவகத்தின் கவுண்டர் முகப்பில் முட்டைகள் நிரம்பிய ஒரு வலைப்பின்னல் கூடை எப்போதும் இருக்கும். மூளைக்குள் ஒரு மின்னலாய் பொழுதுப்போக்கு யோசனை ஒன்று தோன்றியவுடன் அது முந்திக்கொண்டு அவரது கண்களில் வெளிப்பட்டுவிடும். முட்டைகள் எவ்வாறு வளர்சிதை மாற்றம் பெற்று குஞ்சுகளாய் மாறுகிற தொடர்ச்சியைப் போல் அவருடைய யோசனைகளும் அவ்வாறே நிசப்தமாய் உருக்கொண்டு விடுகின்றன. ஏதோவொரு சூழலில் முட்டை வீணாகி விடுவதைப் போல் அவருடைய வாழ்வின் மீதான ஈடுபாடும் ஈர்ப்பும் கூட ஒரு கட்டத்தில் அழியவே செய்தது. ஒரு நாள் பின்னிரவில் கோபத்தில் அப்பாவின் தொண்டையிலிருந்து வெளிப்படும் உறுமல் சத்தத்தில் நான் எழுந்து கொண்டேன். நானும் அம்மாவும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டோம். நடுங்கும் கைகளோடு தலைக்குப் பக்கத்தில் இருந்த விளக்கை ஏற்றினாள் அம்மா. கீழே உணவகத்தின் கதவு படாரென்று மூடப்பட்டு அப்பா வேகவேகமாக தடதடவென்று படிக்கட்டுகளை மிதித்துக்கொண்டு படியேறி வருகிறார். அவருடைய கையில் முட்டை ஒன்றை வைத்திருந்தார். ஏதோ குளிர்ச்சியான பொருள் ஒன்றை கையில் தாங்கியிருப்பது போன்று அவரது கை நடுங்கிற்று. பாதி மனம் பிறழ்ந்த ஒளி தெரிந்தது கண்களில். அவர் எங்களை வெறித்துப் பார்ப்பதிலிருந்து, அந்த முட்டையை அம்மாவின் மீதோ அல்லது என் மீதோ எறியப் போகிறார் என்று உறுதியாக நினைத்தேன். பின், மெதுவாக அந்த முட்டையை மேசை மீதிருந்த விளக்குக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அம்மாவின் படுக்கைக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்தார். உடனே ஒரு சிறுவனைப் போல் கதறி அழத் தொடங்கினார்.. அவருடைய துக்கத்தில் பங்கு கொள்வது போல் நானும் அழுதேன். நாங்கள் இருவரும் மேல் மாடியில் இருந்த அறையை எங்களது கதறலால் நிரப்பினோம். அது ஒரு வேடிக்கையான நிகழ்வே. ஆனால், அதிலிருந்து நான் நினைவில் கொள்வதெல்லாம் அன்று அம்மா அவரின் வழுக்கைத் தலையை தொடர்ந்து ஆதுரத்துடன் தடவிக் கொடுத்ததைத் தான். அம்மா அவரிடம் என்ன சொன்னாள், எதைச் சொல்லி அவரிடமிருந்து கீழே நடந்தவற்றைக் கேட்டறிந்தாள் என்பதெல்லாம் எனக்கு மறந்து விட்டது. அவருடைய விளக்கம் கூட என்னில் இருந்து மறைந்து விட்டது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம், அந்த விளக்கின் வெளிச்சத்தில் படுக்கை அருகே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பாவின் வழுக்கைத் தலைக்கு மேலே ஓடிய பளபளப்பான கோடுகள் தான்.
கீழே என்ன நடந்ததென்றால், எனக்குத் தெரிந்தும், நானும் அங்கே ஒரு சாட்சியாக இருந்ததுமாக என்னால் விவரிக்க முடியாத சில காரணங்களாக – நான் ஒரு பார்வையாளனாக என் கண் முன்னே அப்பா அவமானப்பட்ட தருணம் அது. காலத்தோடு ஒருவர் விவரிக்க முடியாத சம்பவங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவும் நேர்கிறது. தெற்கிலிருந்து கிளம்பி வரும் பத்து மணி இரயிலில் எதிர்பார்க்கப்பட்ட பிட்வெல் நகரத்து வியாபாரியின் மகனான இளைஞன் ஜோ கேன் அன்று மாலை பிகல்வில்லே’வுக்கு அப்பாவைச் சந்திப்பதற்காக வந்திருந்தான். மூன்று மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு எங்களைச் சந்திக்க எங்கள் இடத்திற்கு வந்த ஜோ தனது நேரத்தை தளர்வாய் செலவிடுவதற்கும் காத்திருப்பதற்கும் அந்தப் பயணம் அமைந்தது. அதற்குள் சரக்கு இரயிலும் வந்து விட்டது.. தொழிலாளர்கள் பயணிகள் என குழுவாக வந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு விட்டது. ஜோ அப்பாவுடன் உணவகத்தில் தனித்து விடப்பட்டான்.
எங்கள் இடத்துக்கு வந்து சேர்ந்த நேரம் முதலே அப்பாவுடன் இருந்த இளைஞன் ஜோ கேன் அப்பாவின் நடவடிக்கைகளால் நிச்சயம் குழப்பமடைந்திருக்க வேண்டும். அவனுடைய நோட்டங்கள் அவரைச் சுற்றிக் கொண்டேயிருந்ததால் அப்பாவும் கோபமடைந்திருக்க வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆம், நிச்சயமாய் உணவகத்தின் உரிமையாளர் திடமானதொரு மனக் குழப்பத்தில் இருப்பதை அவன் கண்டுகொண்டான். எனவே வெளியே செல்லத் திட்டமிட்டான். ஆனாலும் பெய்யத் தொடங்கிவிட்ட மழையின் ஊடாக நகரத்தை நோக்கிய ஒரு நீண்ட நடையோடும் பிறகு திரும்பவுதென்பதும் இசைவானதாகவும் இருக்கவில்லை. ஐந்து சென்ட் மதிப்புள்ள ஒரு சிகரெட்டை வாங்கி விட்டு ஒரு காஃபிக்காக ஆர்டர் செய்தான். அவனுடைய பாக்கெட்டில் இருந்த தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கினான். “சாயங்கால இரயிலுக்காக காத்திருந்தேன். தாமதமாயிடுச்சு,” இறைஞ்சிக்கொள்வது போல் சொன்னான்.
இதற்கு முன் இந்த நபரைப் பார்த்ததே இல்லை என்கிற தோரணையில் நெடுநேரம் ஜோ கேன் பேசுவதை இமை கொட்டாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. பொதுவெளியில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒருவனைப் போல் சந்தேகத்திற்கு இடமின்றி அவன் உறைந்து போயிருந்தான். வழக்கம் போல் வாழ்க்கையின் போக்கில் நிகழும் எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்திருந்தாலும் அதற்கெல்லாம் மாறாக தற்போதைய நிகழ்வு ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது அப்பாவுக்கு.
எந்தத் திட்டமும் இல்லாமல் இருக்கும் கைகளால் அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாது போலிருந்தது. ஏதோ ஓர் உந்துதலில் கவுண்டரில் கையை விட்டு நடுக்கத்தோடு ஜோ கேன்’க்கு கை கொடுத்தார். ‘எப்டி.. எப்டி இருக்கீங்க,” என்றார். ஜோ கேன் தினசரியை கீழே வைத்துவிட்டு அவரை உற்றுப் பார்த்தான். கவுண்டரில் இருந்த முட்டைக் கூடையை கவனித்துக்கொண்டே அவனுடன் பேசத் தொடங்கினார். “நல்லது..” தயக்கத்தோடே இருந்தது தொடக்கம். “நல்லது.. நீங்க கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்க இல்லையா?” அவன் கோபத்தோடிருந்தது தெரிந்தது. “அந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு மோசடிப் பேர்வழி” அழுத்திச் சொன்னார். “அவன்தான் ஒரு முட்டை தன்னுடையதான நிலையில் இருப்பதைப் பற்றி சொன்னான்.. ஆம்.. அவன் பேசினான்.. செய்தான்.. ஆம்.. பிறகு அவனேதான் முட்டையின் இறுதிப்பகுதியை உடைக்கவும் செய்தான்.”
கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் இரட்டை நிலைப்பாடோடு அப்பா தன்னை நாடி வந்த விருந்தாளியின் முன்னால் நிற்பது போல் தோன்றியது. சபிப்பது போல் முணுமுணுத்தார். கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு சிறந்த மனிதன் என்று குழந்தைகளுக்குக் கற்பிப்பது கூட தவறு. ஓர் இக்கட்டான சூழலில் ஓர் ஏமாற்று வேலையையே செய்தார், என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். ஒரு முட்டையை தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிறுத்தி வைக்கமுடியும் என்று அவன் தான் பிதற்றினான். அது ஒரு தந்திரம். கொலம்பஸைப் பற்றிய குற்றச்சாட்டுகளுடனேயே கூடையில் இருந்த ஒரு முட்டையை கையில் எடுத்துக்கொண்டு இங்குமங்கும் நடந்தார். உள்ளங்கைகளில் முட்டையை சுழற்றிக் கொண்டேயிருந்தார். இணக்கமாகப் புன்னகைத்தார். மனித உடலில் உருப்பெறும் மின்விளைவானது கையிலிருக்கும் ஒரு முட்டையின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். அவர் ஒன்றை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார் – அதாவது முட்டையின் ஓட்டை உடைக்காமல் அதை இயல்பாய் சுழற்றிக் கொண்டிருக்கும் போதே அது தன்னிலையில் நின்று காட்டும். உடலின் வெப்பநிலையை சுமந்து கொண்டிருக்கும் தனது கையில் மெதுவாய் உருண்டு கொண்டிருக்கும் முட்டையானது ஒரு மைய ஈர்ப்பு விசையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் விவரித்துக் கொண்டிருந்ததை, ஜோ கேன் மெலிதான ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். “நான் இந்த மாதிரி ஆயிரக்கணக்கான முட்டைகளைக் கையாண்டிருக்கிறேன்” என்றார். “என் அளவுக்கு முட்டைகளைப் பற்றி வேறெவருக்கும் அதிகமாய்த் தெரியாது”
முட்டையை கவுண்டரில் நிறுத்தி வைக்க முயற்சித்தார். ஆனால் அது ஒரு பக்கமாய் சாய்ந்தது. அந்த தந்திரத்தை மீண்டும் மீண்டும் முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் உள்ளங்கைகளில் உருளும் அந்த முட்டை உருவாக்கும் மின் விளைவுகளையும் ஈர்ப்பு விதிகளின் மகத்துவங்களையும் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஓர் அரை மணி நேர முயற்சியாக ஒரு முட்டையை நிற்க வைக்க அவர் எடுத்துக்கொண்ட பாடுகளை அவரது வாடிக்கையாளர் ரொம்ப நேரமாக கண்டுகொள்ளவே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டார். தொடர்ந்த தனது முயற்சிகளின் வெற்றியாக நிற்க வைக்கப்பட்ட முட்டையைக் கொண்டு ஜோ கேன்’இன் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கையில் அந்த முட்டை உருண்டு போய் ஒருக்களித்துக் கொண்டது.
ஒரு வித்தைக்காரனின் பேரார்வத்தோடு இத்தனை நேரம் மேற்கொண்ட கடும் முயற்சியின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விட்டேத்தியாய் இருந்த அப்பா, இப்போது அலமாரி அறைகளில் இருந்த கோரமான இறைச்சி திணிக்கப்பட்ட குடுவைகளை எடுத்து வந்து வந்திருந்த விருந்தினருக்கு காட்டத் தொடங்கினார். தன்னுடைய மதிப்பு மிக்க பொக்கிசங்களை எடுத்துக் காட்டிக் கொண்டே, “எப்படி?!.. நீங்கள், ஏழு கால்கள் இரண்டு தலைகளைக் கொண்ட இவர்களைப் போல ஆக விரும்புகிறீர்களா?”. அவருடைய முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. கவுன்டர் அருகே செல்கையில் – சனிக்கிழமை தோறும் ஓர் இளம் வயது விவசாயியாக பேன் ஹெட் சலூனில் ஏற்கனவே பழக்கப்பட்ட மனிதர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் குதூகலமுமாய் எப்போதும் புழங்கும் மனிதர்களுள் ஒருவராக மிகவும் பழக்கப்பட்ட ஒருவனை அணுகுவது போல ஜோ கேன்’இன் முதுகில் செல்லமாகத் தட்ட முயற்சித்தார். கோரமான நிலையில் சிதைவுற்று குடுவைகளில் அடைக்கப்பெற்று சாராய திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட நிலையில் விருந்தினனானவன் மிகுந்த சங்கடத்துடன் எழுந்து கிளம்பத் தயாரானான். கவுண்டரிலிருந்து எழுந்து வந்த அப்பா, அந்த இளைஞனின் தோள்களைப் பற்றி திரும்பவும் அவனை அந்த இருக்கையிலேயே அமர வைத்தார். இளைஞன் சிறிதே கோபமுற்றாலும் வலுக்கட்டாயமாய் அவரைப் பார்த்து புன்னகைத்து வைத்தான். பின் குடுவைகள் அனைத்தையும் அலமாரி அறைகளில் வைத்தார் அப்பா. எந்தவித சிரத்தையுமில்லாமல் அவனை தன்னுடைய செலவில் ஒரு காஃபியையும் சிகரெட்டையும் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார். பிறகு, கவுண்டருக்குப் பின்னால் நகர்ந்து தவா ஒன்றை எடுத்து சிறிது வினிகர் ஊற்றி தனக்குள்ளாக ஓர் உறுதி எடுத்துக்கொண்டு புதிதாய் ஒரு அதிசயம் நிகழ்த்தத் தயாரானார். “வினிகர் இருக்கும் இந்த சட்டியில் நான் இப்போது இந்த முட்டையை வேக வைப்பேன். பிறகு அதை இந்த பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவேன்.. பாட்டிலின் உள்ளே சென்ற பிறகு அந்த முட்டை பிறகு அதன் முந்தைய தன்மைக்கு வந்துவிடும். முட்டை ஓடும் முன்னிருந்ததைப் போல் உறுதியாகிவிடும். அப்புறம் அந்த முட்டை உள்ள பாட்டிலை நான் உங்களுக்குத் தந்துவிடுவேன். அதை நீங்கள் எங்கே சென்றாலும் கூடவே எடுத்துச் செல்லலாம். பாட்டிலுக்குள் முட்டை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவங்களுக்கு சொல்லாதீங்க. அதையெல்லாம் அவங்க யூகத்துக்கு விட்டுடுங்க. அதுமாதிரி தான் இந்த விளையாட்டுத்தனமான தந்திரங்களைக் கையாளணும்’.
அப்பா அவனைப் பார்த்து கண்ணை சிமிட்டிச் சிரித்தார். ஜோ கேன் முடிவு செய்துவிட்டான். தன்னுடன் முரண்பட்ட இந்த மனிதன் கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்டவர் ஆனால் தொந்தரவானவர் இல்லை. ஜோ தனக்குத் தந்த காஃபியை பருகிவிட்டு திரும்பவும் தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கிவிட்டான். வினிகரில் சூடாக்கப்பட்ட முட்டையை அப்பா ஒரு சிறிய கரண்டியில் எடுத்துக்கொண்டு கவுன்டர் வரை வந்து பிறகு பின்னறைக்குச் சென்று காலி பாட்டிலை எடுத்தார். தேடினார். தான் செய்த தந்திரங்களை தன்னுடைய வாடிக்கையாளர் சரிவரப் பார்க்காததால் அப்பாவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் மகிழ்ச்சியோடு தன்னுடைய வேலைகளைச் செய்தார். முட்டையை பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவதற்கு வெகு நேரம் போராடினார். வினிகர் இருந்த சட்டியில் மீண்டும் முட்டையைப் போட்டு சூடு படுத்தத் தொடங்கி விரல்களை சுட்டுக் கொண்டார். இரண்டாவது முறையாக வினிகர் திரவத்தில் கிடந்த முட்டை கொஞ்சமாக மென்மை அடைந்ததேயொழிய இலக்கு நிறைவடையவில்லை. அவர் திரும்பத் திரும்ப அதற்காக உழைத்தார். ஆனால், தீர்மானிக்க முடியாத அவநம்பிக்கை ஒன்று அவரை ஆட்கொண்டுவிட்டது இப்போது. கடைசியாக தன்னுடைய முயற்சி நிறைவேறப்போகிறது என்று நினைக்கையில் தாமதமாய் வந்து கொண்டிருந்த அந்த இரயில் இப்போது நிலையத்துக்கு வந்துவிட ஜோ தன்னிச்சையாய் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். அப்பாவும் தன்னுடைய இக்கட்டான இறுதி முயற்சியாக முட்டையோடு போராடி வெற்றி பெற்றுவிட வேண்டும். அதன் மூலம் தன்னுடைய பாரம்பரியமான விருந்தினர்களை மகிழ்விக்கும் கலையில் தான் வல்லவன் என்கிற தன்னுடைய பெயரை நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். முட்டையை வலியிறுத்தினார், சங்கடத்தில் ஆழ்த்தினார். அதனாலெல்லாம் அது கசப்பான அனுபவமாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் அதில் உறுதியாய் இருந்தார். அதன் வெளிப்பாடாய் நெற்றி முழுவதும் வியர்வை படர்ந்தது. எதிர்பாராத விதமாய் அவர் கையிலிருந்த முட்டை உடைந்தது. உடைந்த முட்டையிலிருந்த திரவம் சிதறி அவருடைய சட்டை மீது தெரித்தபோது, கதவருகே நின்றிருந்த ஜோ திரும்பிப் பார்த்து சிரித்தான்.
கோபக்கனல் அப்பாவின் தொண்டையிலிருந்து பீறிட்டது. அலைவரிசையற்ற தெளிவற்ற சொற்கள் அவரது வாயில் நடனமாடின. ஆத்திரத்தில் கவுன்டரில் இருந்த கூடையில் இருந்து ஒரு முட்டையை எடுத்து கதவருகில் நின்றிருந்த இளைஞனை நோக்கி எறிய, அவன் தலையில் விழப்போனது தவறி வேறொரு பக்கம் விழுந்தது.
நானும் அம்மாவும் இருந்த மேல் மாடிக்கு அப்பா கையில் முட்டையோடு வந்தார். அவர் எந்த நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார் என்பதை நான் அறியேன். மெதுவாக அந்த முட்டையை மேசையின் மீது வைத்துவிட்டு, நான் முன்பே விவரித்தது போல் கட்டிலின் முன்னே வருத்தத்தோடு மண்டியிட்டு அமர்ந்தார். பின் உணவகத்தை மூடிவிட்டு மேலே ஏறி வந்த அப்பா உடனேயே படுக்கச் சென்றார். நீண்ட நேரம் அம்மாவோடு முணுமுணுப்போடு விவரித்துக் கொண்டேயிருந்தார். போதுமான அளவுக்கு உரையாடிய பின்னர் அப்பாவும் அம்மாவும் அப்படியே உறங்கிப் போயினர். நானும் இந்நேரத்துக்கு உறங்கியிருக்க வேண்டும். ஆனால், உறக்கம் கலைந்து போனது. விடியற்காலையில் எழுந்த நான் நீண்ட நேரமாக மேசையின் மீதே இன்னமும் இருந்த அந்த முட்டையைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏன் முட்டை வர வேண்டும் ? ஏன் அந்த முட்டை கோழியிலிருந்து வர வேண்டும்? பிறகு யார் அந்த முட்டையை அந்த கோழிக்குள் வைத்தார்கள்? கேள்விகள் என் இரத்த நாளங்களுக்குள் பாய்ந்து கொண்டிருந்தன. அவை அங்கேயே தங்கிவிட்டன. நான் கற்பனை செய்து பார்த்தேன்.. அதுவொரு சுழற்சியான கற்பனை.. ஏனெனில் அப்படிப்பட்டதொரு தகப்பனின் மகன் நான். எது எப்படியாயினும் பிரச்சினையானது தீர்க்கப்படாததாகவே என் மூளைக்குள் தங்கிவிட்டது. அதன் பின்னர் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால் குறைந்தபட்சம் என்னுடைய குடும்பத்தின் கருத்தோடு நான் ஒத்திசைந்து போனால், பிறிதொரு ஆதாரமாக முற்றும் முழுதுமான அந்த முட்டையின் வெற்றியாகவே இதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஷெர்வுட் ஆண்டர்சன் (1876–1941) : அமேரிக்க நாவல் மற்றும் சிறுகதையாசிரியர். யதார்த்தவாத கதைகளில் தனித்துவமான நடையால் கதைகளில் முத்திரை பதித்தவர்.
***
பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com
வெளியில் இரவு நேரம் குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. ’லபர்னம் வில்லா’ வின் வரவேற்பறையில் திரைச்சீலைகள் இறக்கிவிடப்பட்டு, கணப்புத் தீ பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தந்தையும் மகனும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் முதலாமவருக்கு, ஆட்டத்தைப் பற்றிய அடிப்படையான யோசனைகள் இருந்தும், தனது ராஜாவை தேவையற்ற அபாயத்திற்கு நகர்த்தியதில், கணப்பு நெருப்பின் பக்கமாக அமர்ந்து பின்னிக்கொண்டிருந்த நரைத்த தலைமுடியுடைய அந்த முதியவளுமேகூட அவரை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.
தான் செய்த அபாயகரமான தவறைத் தாமதமாக உணர்ந்த அவர், தன்னுடைய மகனை அதை கவனிக்கவிடாமல் செய்வதற்காக,”காற்றின் சத்தத்தைக் கவனி” என்று திரு.ஒயிட் கூறினார்.
”அவர் இன்றிரவு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை” சதுரங்கப் பலகையின்மீது அவருடைய கையை நிலைநிறுத்தியவராகக் கூறினார்.
”மேட்” என்றான் மகன்.
”இப்படி வெளியில் தொலைதூரமான இடத்தில் வாழ்வதில் இருக்கும் மோசமான நிலை இதுதான்” என்று திடீரென சத்தமாகக் கூறினார் திரு.ஒயிட்.”வாழத்தகுதியில்லாத, சேறும் சகதியுமாக இருக்கும் இடங்களிலேயே மோசமானதாக இதுதான் இருக்கும். வழியெங்கும் சேறாகவும், தெருவெல்லாம் வெள்ளப்பெருக்காகவும் இருக்கின்றது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தத் தெருவில் இரண்டு வீடுகளில் மட்டுமே குடித்தனங்கள் இருப்பதால், அதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள் போலும்”
”கவலைப்படாதீர்கள் செல்லம்” என்று அவர் மனைவி ஆறுதலாகக் கூறினார்.”அடுத்த ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”
திரு. ஒயிட் திடீரென ஒரு கணம், தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வுடனான பார்வைப் பரிமாற்றத்தில் தன் கவனத்தை செலுத்தினார். வார்த்தைகள் அவருடைய உதடுகளிலேயே மறைந்துபோக, அவருடைய சாம்பல்நிற தாடிக்குள், மெலிதாக அரும்பிய குற்றவுணர்வுடன் கூடிய ஒரு அசட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டார்.
வரவேற்கும் விதமான பதற்றத்தில் எழுந்துகொண்ட அந்த முதியவர், கதவைத் திறந்தபடி புதிதாக வந்தவரிடம் முகமன் தெரிவித்ததை கேட்க முடிந்தது. வந்திருந்த புதியவரும் முகமன் தெரிவித்ததைத் தொடர்ந்து, தன் கணவர் உயரமும் திடகாதிரமுமான, சிவப்பான முகத்தில் கூர்மையான கண்களைக் கொண்ட மனிதருடன் அறைக்குள் நுழைவதைக்கண்ட திருமதி வொயிட்,”லொக் லொக்” என்று இருமினார்.
”சார்ஜண்ட் மேஜர் மோரிஸ்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
சார்ஜண்ட் மேஜர் கைகளை விலக்கிக்கொண்டு, கணப்பு தீயருகே தனக்கு வழங்கப்பட்ட இருக்கையை ஏற்றபடி, தன்னுடைய வரவேற்பாளர், விஸ்கியையும் டம்ளரையும் எடுத்து வருவதையும், செம்பு கெட்டிலை நெருப்பின்மீது வைப்பதையும் நிறைவுடன் கவனித்தார்.
மூன்றாவது கோப்பையின் முடிவில் அவருடைய கண்கள் பிரகாசிக்க, பேசத்துவங்கினார். அந்த சிறிய குடும்பம், பல்வேறு நாடுகளில் பயணப்பட்டு வந்திருக்கும் அந்த விருந்தினர், தன் அகன்ற தோள்களை நாற்காலியில் சாய்த்துக்கொண்டு, பயங்கரமான காட்சிகள், வீரதீர செயல்கள், போர்கள், ப்ளேக் தொற்று போன்றவற்றைக் குறித்தும், விசித்திரமான மனிதர்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்ததை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
”இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று திரு. ஒயிட், தலையை ஆட்டியபடி தன் மனைவி மற்றும் மகனிடம் சொன்னார்.”அவர் அங்கிருந்து வெளியேறியபோது, கிட்டங்கியில் வேலைப் பார்க்கும் இளைஞனைப் போல இருந்தார். இப்பொழுது இவரைப் பார்”
பெரிதாக அவருக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என்று திருமதி. ஒயிட் பணிவுடன் கூறினார்.
”நானும் இந்தியாவிற்குப் போக விரும்புகிறேன்” என்றார் அந்த முதியவர்.”வெறுமனே சற்று சுற்றிப்பார்க்கலாம் என்பதற்காகத்தான்”
”நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது” என்று தன் தலையை ஆட்டியபடி சார்ஜண்ட் மேஜர் கூறினார். அவர் காலிக்கோப்பையை கீழே வைத்தார். மெல்லிய பெருமூச்சுடன் அதை எடுத்து மறுபடியும் கவிழ்த்தார்.
”அங்குள்ள பழமையான கோயில்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார் அந்த வயோதிகர்.”நீங்கள் அன்றைக்கு குரங்கின் பாதம் என்று எதைப்பற்றியோ சொல்லவந்தீர்களே மோரிஸ், அது என்ன?”
”ஒன்றுமில்லை” என பதற்றத்துடன் சொன்னார் அந்தப் படைவீரர்.”அப்படி கேட்பதற்கு அது ஒன்றும் அவ்வளவு மதிப்பானதல்ல”
”குரங்கின் பாதமா?” என்று திருமதி ஒயிட் ஆர்வமாகக் கேட்டார்.
”அது மாயாஜாலம் என்று சொல்வீர்களே அதுபோலான ஒன்றுதான்” என்று சார்ஜண்ட் மேஜர் வெடுக்கென உரைத்தார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேருமே ஆர்வமாக முன்னால் வந்தனர். வந்திருந்த விருந்தினர் கவனமின்றி காலியான கோப்பையை உதட்டருகே கொண்டு சென்றுவிட்டு, அதை மறுபடியும் கீழே வைத்தார். அவருக்கு விருந்தளிப்பவர் அந்தக் கோப்பையை மீண்டும் நிரப்பினார்.
”பார்ப்பதற்கு” கையை பாக்கெட்டில்விட்டு துழாவியபடியே,”இது ஒரு விலங்கின் சாதாரணமான உலர்ந்துபோன சிறிய பாதம்”
தன்னுடைய பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்துக் கொடுத்தார். திருமதி. ஒயிட் முகச்சுளிப்புடன் பின்வாங்கினார், ஆனால் அதை வாங்கிய அவர் மகன் ஆர்வத்துடன் ஆராய்ந்தான்.
”இதில் என்ன சிறப்பு இருக்கிறது?” என்று கேட்டவராக, தன் மகனிடமிருந்து வாங்கி, அதனை ஆய்வு செய்தபின் மேசைமேல் வைத்தார்.
”அது ஒரு வயதான துறவி மந்திரம் செய்திருப்பது” என்றார் சார்ஜண்ட் மேஜர்.”அவரை மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவர். விதிதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆள்கிறது, எவர் அதன் குறுக்கே வருகிறார்களோ அவர்கள் துயரத்தை அடைகிறார்கள்” என்பதை நிரூபிக்க விரும்பினார். அவர், மூன்று வெவ்வேறு நபர்கள் அதிலிருந்து மூன்று வரங்களை பெறமுடியும் வகையில் இதனை மந்திரித்து வைத்திருக்கிறார்” என்றார்.
அவர் சொன்னவிதம் கேட்டுக்கொண்டிருந்தவர்களை மிகவும் ஈர்க்கச் செய்வதாய் இருந்ததில், அதுவரையிலும் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது லேசாக புன்னகைப்பதுகூட பொருத்தமற்றது என்பதாக கருதினர்.
“நீங்கள் ஏன் உங்களுக்காக மூன்று வரங்களை கேட்கக்கூடாது?” என ஹெர்பர்ட் ஒயிட் சாதுர்யமாகக் கேட்டான்.
அந்த வீரர், நடுத்தர வயதினர் துடுக்குத்தனமான இளைஞர்களை எப்படியான பார்வைப் பார்ப்பார்களோ, அப்படிப் பார்த்தவராக,”நான் பயன்படுத்திவிட்டேன்” என்றபோது அவருடைய சிவந்த முகம் வெளிறிப்போயிருந்தது.
“உங்களுடைய அந்த மூன்று வரங்களும் பலித்ததா?” என திருமதி. ஒயிட் வினவினார்.
“நிறைவேறியது” என்றார் சார்ஜண்ட். அதை சொன்னபோது அவர் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பை அவருடைய வலுவான பற்களில் மோதிக்கொண்டிருந்தது.
“வேறு யாராவது முயன்றார்களா?”, அந்த மூதாட்டி தொடர்ந்து கேட்டாள்.
“ஆம். முதலாமவனுக்கு மூன்று வரங்களும் நிறைவேறியது” என்பதே பதிலாக வந்தது.”அவன் கேட்ட முதல் இரண்டு வரங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது, ஆனால், மூன்றாவது வரம் மரணத்துக்கானது. அப்படித்தான் இந்த பாதம் என்னிடம் வந்து சேர்ந்தது” என்றார்.
அவருடைய குரலில் தெரிந்த அதிகப்படியான கவலை, அவர்களிடையே அமைதியை ஏற்படுத்தியது.
“உங்களுடைய மூன்று வரங்களும் கிடைத்து விட்டதால் இனிமேல் இது உங்களுக்கு பயனில்லாதுதானே மோரிஸ்” என அந்த முதியவர் கேட்டார்.”இதை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?”
அவர் தலையை ஆட்டினார்.”பகட்டிற்குத்தான் என்று நினைக்கிறேன்” என மெதுவாகக் கூறினார்.”எனக்கு இதை விற்றுவிடும் எண்ணம்தான் இருந்தது. ஆனால், நான் அதை விற்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே இது எனக்கு போதுமான அளவிற்கு துன்பத்தைத் தந்துவிட்டது. மேலும் இதை மக்கள் யாரும் வாங்க மாட்டார்கள். இதை ஒரு மாயாஜாலக் கதை என்றுதான் சிலர் கருதுகிறார்கள்; வாங்க நினைக்கும் வேறுசிலர், முதலில் இதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிறகுதான் பணம் தருவோம் என்கிறார்கள்”.
”உங்களுக்கு மேலும் மூன்று வரங்கள் கிடைக்குமென்றால்” என்று அந்த முதியவர் கூர்ந்து சார்ஜன்ட் மேஜரை நோக்கியவராக”நீங்கள் அதைப் பயன்படுத்துவீர்களா?” எனக் கேட்டார்.
“எனக்குத் தெரியாது” என்றார் அந்த சார்ஜண்ட்.”எனக்குத் தெரியாது”
அந்தப் பாதத்தை எடுத்து, அதை தன் ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் நடுவில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தவர், அதைத் திடீரென நெருப்பில் தூக்கிப் போட்டார். ஒரு சிறிய சத்தம் எழுப்பியவராக, வொயிட் குனிந்து அதைப் பறித்தார்.
“அது எரிந்துபோகட்டும் விடுங்கள். அதுதான் நல்லது” என்று தீவிரத்துடன் சொன்னார்.
“உங்களுக்குத் தேவையில்லையென்றால் மோரிஸ்” என்ற திரு ஒயிட், “அதை எனக்குத் தாருங்கள்” எனக் கேட்டார்.
“நான் தரமாட்டேன்” என்று அவரின் நண்பர் சிடுசிடுப்புடன் பதிலளித்தார். “நான் அதை நெருப்பில் போட்டுவிட்டேன். நீங்கள் அதை எடுத்து வைத்துக்கொண்டால் அதற்குப் பிறகு நடப்பவற்றுக்கு என்மேல் பழிபோடாதீர்கள். விவேகமுள்ளவராக நடந்துகொண்டு, அதை மீண்டும் நெருப்பிலேயே போட்டுவிடுங்கள்”
“ஒயிட் தன் தலையை அசைத்தவராக, அவர் கையிலிருந்ததை நெருக்கமாக வைத்து சோதித்தார். “இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?” என்று விசாரித்தார்.
“உங்கள் வலதுகையில் இதைப் பிடித்துக்கொண்டு, சத்தமாக நீங்கள் வேண்டுவதைக் கேளுங்கள்” என்றார் சார்ஜண்ட் மேஜர். “ஆனால், நான் அதன் விளைவுகள் குறித்து உங்களை எச்சரிக்கிறேன்”
“அரேபிய இரவுகள் கதைகள் போல இருக்கிறது” இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டே சொன்னார் திருமதி ஒயிட்.”எனக்கு நான்கு ஜோடிக் கைகள் வேண்டும் என்று கேட்டுவிட நினைப்பீர்கள்தானே?”
அவரது கணவர் அந்த தாயத்தை தன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவுடன், அந்த மூவரும் வெடித்து சிரிக்கையில், சார்ஜண்ட் மேஜர், முகத்தில் எச்சரிக்கை மின்னும் பார்வையுடன் அவரது கையைப் பற்றினார்.
”எதையாவது கேட்க விரும்பினால்” எனக் கடுமையான தொனியில், “விவேகத்துடன் கேளுங்கள்” என்றார்.
திரு ஒயிட், அதைத் தன் பாக்கெட்டில் போட்டபடியே, அமர்வதற்கான இருக்கைகளை போட்டவராக, தன் நண்பரை சாப்பாட்டு மேசைக்கு உண்பதற்கு வருமாறு அழைத்தார். இரவு உணவின் பரபரப்பில், அந்த தாயத்து சற்று மறக்கப்பட்டது என்பதுடன், அந்த மூவரும் வந்திருந்த ராணுவ வீரரின் இந்திய பயணத்தின் சாகசங்களை ஆர்வத்துடன் இரண்டாம் கட்டமாகக் கேட்கத்துவங்கினர்.
“அவர் நமக்கு சொன்ன கதைகளைவிட, இந்த குரங்கின் பாதம் பற்றியதில் அதிக உண்மை இல்லையென்றால்” விருந்தினர் கடைசி ரயிலைப் பிடிக்க வேண்டி கிளம்பவும், அவரை அனுப்பிவிட்டு கதவை சாத்தும்போது ஹெர்பர்ட், “அதனால் நமக்கு பெரிய லாபமில்லை” என்றான்.
“நீங்கள் இதற்காக அவருக்கு ஏதாவது கொடுத்தீர்களா?” என திருமதி ஒயிட் தன் கணவரிடம் நெருங்கி வந்து விசாரித்தார்.
“கொஞ்சமாக” என்று மெல்லிய வெட்கத்துடன் பதிலளித்தார். “அவர் அதை எதிர்பார்க்கவில்லை, நான்தான் அவரை வாங்கிக்கொள்ள வைத்தேன். அவர் அதை தூக்கியெறிந்துவிடும்படி மீண்டும் வற்புறுத்தினார்”.
“ஒருவேளை” என ஹெர்பெர்ட் பயந்தவனைப்போல நடித்தவனாக சொன்னான். “ஏன் நாம் ஒருவேளை பணக்காரர்களாகவும், புகழும் மகிழ்ச்சியும் உடையவர்களாகவும் ஆகிவிடலாம். முதலில் நீங்கள் பேரரசனாக ஆகிவிட வேண்டும் என்று கேளுங்கள், பிறகு அம்மாவால் உங்களை ஆட்டிப் படைக்க முடியாது”
அவன் மேசையைச் சுற்றி ஓடினான். திருமதி. ஒயிட் நாற்காலியின் உறையை கையில் எடுத்துக்கொண்டு அவனை தூற்றியபடியே துரத்தினார்.
திரு. ஒயிட் தன் பாக்கெட்டிலிருந்து அந்த குரங்கின் பாதத்தை வெளியில் எடுத்து, சந்தேகத்துடன் அதனைப் பார்த்தார். “எனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை என்பதுதான் நிஜம்” என்று மெதுவாகக் கூறினார். “எனக்கு வேண்டிய எல்லாமே என்னிடம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது”
“இந்த வீட்டின் கடன் மட்டும் முடிந்துவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்தானே?” என அவரின் தோள்மீது கையைப்போட்டிருந்தபடி கேட்டான் ஹெர்பர்ட். “அப்படியானால் இருநூறு பவுண்டுகள் கேளுங்கள். அது போதும்”
அவனுடைய தந்தை, தன் பேதமையை நினைத்து வெட்கியவராக, அந்த தாயத்தைக் கையிலெடுத்தார். அவருடைய மகன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, தன் தாயாரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, பியானோவில் சில பிரமாதமான இசைக்குறிப்புகளை வாசித்தான்.
”நான் இருநூறு பவுண்டுகளை வரமாக வேண்டுகிறேன்” என்று அந்த முதியவர் தெளிவாகக் கேட்டார்.
அவரது வார்த்தைகளைத் தொடர்ந்து பியானோவிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த சத்தத்தை, முதியவரிடமிருந்து வந்த விம்மல் சத்தம் இடைமறித்தது. அவருடைய மனைவியும் மகனும் அவரை நோக்கி ஓடினர்.
“அது அசைந்தது” கீழே கிடந்த அந்தப் பொருளை சற்று அருவருப்புடன் நோக்கியவராக கத்தினார். “நான் வரத்தை கேட்கவும், அது என்னுடைய கைகளில் பாம்பைப்போல முறுக்கிக்கொண்டது”
“அப்படியா, பணம் எதையும் காணோமே” என்றபடி அதைக் கையிலெடுத்து மேசைமீது வைத்தபடி, “அதை ஒருபோதும் நான் பார்க்கப் போவதில்லை என்று பந்தயம் கட்டுகிறேன்” என்றான்.
“அது உங்களுடைய கற்பனையாக இருக்கும்” என்று அவர் மனைவி பதற்றமாக சொன்னார்.
அவர் தன் தலையை குலுக்கினார். “போகட்டும் விடு. எந்தக் கெடுதலும் நடக்கவில்லை, ஆனால் இது எனக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது”
இரண்டு ஆண்களும் புகைப்பிடித்து முடித்திருக்க, அவர்கள் அனைவரும் மீண்டும் நெருப்பருகே சென்று அமர்ந்தனர். வெளியில் எப்பொழுதையும்விட பலமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, மாடியில் கதவுகள் அடித்துக் கொண்டதில் ஏற்பட்ட சத்தம் அந்த முதியவரை பதற்றமுற வைத்தது. வழக்கத்திற்கு மாறாக, மூவருக்குள்ளும் மனச்சோர்வுடன் கூடிய அமைதி நிலவியது. அது அந்த முதிய தம்பதியர் அன்றைய இரவுத் தூக்கத்திற்காக தங்கள் படுக்கைக்கு செல்ல எழுந்து கொள்ளும்வரை நீடித்தது.
“உங்கள் படுக்கையின் நடுவில், பணம் ஒரு பெரிய மூட்டையில் கட்டப்பட்டு கிடக்கப்போகிறது என்று நினைக்கிறேன்” என இரவு வணக்கம் தெரிவிக்க வந்த ஹெர்பர்ட் கூறியதோடு, “உங்கள் அலமாரியின் மீதிருந்து ஒரு பயங்கரமான உருவம் உங்களுடைய அந்த சட்டவிரோதமான பணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்” எனக் கிண்டலாகச் சொன்னான்.
அவன் தனியனாக இருளில் அமர்ந்தபடி, அணைந்து கொண்டிருந்த நெருப்பையும் அதில் தோன்றிய முகங்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கடைசியில் ஒரு மனிதக்குரங்கின் முகம் பயங்கரமாகத் தெரிவதை வியப்புடன் பார்த்தான். அது மிகவும் தெளிவாகத் தெரியத் துவங்கியதும், சற்றே அசௌகரியமான சிரிப்புடன், அதன்மீது தண்ணீர் ஊற்றிட நினைத்து, மேசையை நோக்கி தண்ணீர் நிரம்பியக் கோப்பையை எடுக்க வேண்டி, கையை நீட்டினான். அவனது கரங்கள் அந்த குரங்கின் பாதத்தைப் பற்றிக்கொண்டது. ஒரு சிறிய நடுக்கத்துடன் அவன் தன் கோட்டில் கையைத் துடைத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றான்.
பாகம் 2
அடுத்தநாள் காலை, கூதற்கால சூரியனின் கிரணங்கள் சாப்பாட்டு மேசையின்மீது படர்ந்தபோது, அவர் தான் பயந்ததை நினைத்து சிரித்துக்கொண்டார். அந்த அறையில் முந்தைய நாளில் இல்லாதவிதமாக இதமான காற்றும், சூழலும் நிலவியது. அந்த அழுக்கடைந்து சுருங்கிப்போன குரங்கின் பாதம், அதன் மகிமைகளின்மேல் எந்தவிதமான நம்பிக்கையின் அறிகுறியும் இல்லாததாய் அலட்சியமாக ஓரத்தில் கிடந்தது.
”எல்லா வயதான ராணுவத்தினரும் இதே மாதிரிதான் இருப்பார்கள்போல” என்றார் திருமதி. ஒயிட்.”நாமும் இப்படி அவர் அபத்தமானவைகளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோமே! இந்தக் காலத்தில் எப்படி வரங்களை பெறமுடியும்? அப்படியே இருந்தாலும், இருநூறு பவுண்டுகள் உங்களுக்கு என்ன கெடுதலை ஏற்படுத்திவிட முடியும்?”
”வானத்திலிருந்து அவர் தலைமீது விழுந்தால் கெடுதல் ஏற்படக்கூடும்” என்றான் ஹெர்பர்ட் விளையாட்டுத்தனமாக.
”மோரிஸ் எல்லாம் இயல்பாகத்தான் நடக்கும் என்று சொன்னார்” என்றார் அவனது தந்தை. “விரும்பினால் அதை நீங்கள் எதேச்சையாக நடந்தவற்றோடு பொருத்திக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.
”சரி. நான் வருவதற்குள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்” என சொல்லியவாறே மேசையிலிருந்து எழுந்தான். “அது உங்களை பேராசைகொண்ட அற்பனாக மாற்றிவிடக்கூடுமோ என பயமாக இருக்கிறது. பிறகு நாங்கள் உங்களை கைவிடவேண்டியிருக்கும்”
அவனது தாயார் சிரித்தபடியே அவனைk கதவுவரைக்கும் தொடர்ந்தவர், அவன் தெருவின் கோடிக்கு செல்லும்வரை கவனித்துக் கொண்டிருந்தார். பின்பு சாப்பாட்டுமேசைக்கு வந்தவர் தன் கணவரின் பேதமையை நினைத்து சிரித்தபடி இருந்தார். என்றாலும் தபால்காரர் வந்து கதவைத் தட்டியதும் விரைந்து கதவுப்பக்கம் போகத்தான் செய்தார். அவர் கொண்டு வந்தது ஒரு தையற்கடையின் கட்டண ரசீது என்பதைப் பார்த்துவிட்டு, ஓய்வுபெற்ற எல்லா சார்ஜண்ட் மேஜர்களையும் கடுமையான சொற்களால் குறிப்பிட்டார்.
”ஹெர்பர்ட் கலாய்த்து பேசுவதற்கு, அவன் வீடு வந்ததும் இன்னும் நிறைய இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்” என்று இரவு உணவிற்காக அவர்கள் இருவரும் அமர்ந்தபோது குறிப்பிட்டார்.
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றார் கோப்பையில் தனக்காக பியரை ஊற்றிக்கொண்டே, திரு ஒயிட். “ஆனால் அது என் கையில் அசைந்தது என்பது சத்தியமானது”
“அப்படி உங்களுக்குத் தோன்றுகிறது” என்றாள் அந்த மூதாட்டி ஆறுதலாக.
“நான் அது அசைந்தது என்கிறேன்” என்றார். “தோன்றவெல்லாம் இல்லை. நான் அதை… என்ன விஷயம்?”
அவர் மனைவி பதிலெதுவும் சொல்லவில்லை. அவர் வெளியில் ஒரு மர்மமான மனிதனின் நடமாட்டத்தையும், அவன் உள்ளே நுழைய தயக்கம் காட்டுவதாகத் தோன்றியதையும் கவனித்தவராக இருந்தார். அந்த இருநூறு பவுண்டுகள் பற்றிய நினைவுகள் மனதில் நின்றதில், அந்த அந்நியன் நன்றாக உடுத்தியிருப்பதையும், பளபளப்பான புதிய பட்டுத் தொப்பி அணிந்திருந்ததையும் கவனித்தார். அந்த மனிதர் மூன்றுமுறை கதவருகே சென்று ஒருகணம் நின்றுவிட்டு மீண்டும் வந்தார். நான்காவதுமுறை அதன்மீது கையை வைத்து, சடாரெனெ அதைத் திறந்துகொண்டு, பாதையில் நடக்கத் தொடங்கினார். அதேவேளை திருமதி. ஒயிட், தன் கைகளை பின்னால் கொண்டு சென்று, தான் அணிந்திருந்த ஏப்ரனின் கயிறுகளைத் தளர்த்திக்கொண்டு, அந்த முக்கியமான வஸ்துவை நாற்காலியின் மெத்தைகளுக்கு அடியில் தள்ளினார்.
சங்கடமாகத் தெரிந்த அந்த அந்நியனை அறைக்குள் அழைத்து வந்தார். அந்த அறையின் நிலைமைக்காகவும், தன் கணவர் தோட்டவேலைக்காக பயன்படுத்தும் அங்கிக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர் அந்த மூதாட்டியை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டிருந்தார். அவர், தான் வந்த விஷயத்தை சொல்வதற்காக ஒரு பெண் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமையோடு இருந்தார். வந்தவர் ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்தார். “என்னை அழைத்து பேசச் சொன்னார்கள்” என்று கடைசியாக சொல்லியபடி தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு பருத்தித் துண்டை எடுத்தார். “நான் மா அண்ட் மெகின்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்றார்.
அந்த மூதாட்டி திடுக்கிட்டவராக, “என்னவாயிற்று?” என மூச்சுத்திணறியபடி கேட்டார். “ஹெர்பர்டுக்கு ஏதாவது நடந்துவிட்டதா? என்னது அது? என்னவாயிற்று?”
அவருடைய கணவர் இடைமறித்தார். “இரு இரு அம்மாவே” என்றார் அவர் பதற்றத்துடன். “உட்கார்ந்துகொள், மோசமாக எதையும் நினைக்காதே. நீங்கள் ஏதும் மோசமான செய்தியைக் கொண்டுவரவில்லைதானே, நான் சரியாகத்தான் நினைக்கிறேன்” என்றபடி அவரை ஏக்கத்துடன் பார்த்தார்.
“என்னை மன்னிக்கவும் —-” என்று தொடங்கினார் வந்திருந்தவர்.
“அவனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா” எனத் தாயார் பதற்றமாக கேட்டார்.
“மிகவும் மோசமாக” என்று ஆமோதிப்பதாக தலை குனிந்தார். “ஆனால், அவருக்கு எந்த வலியும் இல்லை” என அமைதியாக சொன்னார்.
“ஓ, கடவுளுக்கு நன்றி” என்று தன் கைகளைக் கோர்த்தபடி, “அதற்காக கடவுளுக்கு நன்றி! நன்றி —–”
அந்த வார்த்தைகளில் இருந்த பயங்கரத்தின் அர்த்தம் அவரை மெல்லத் தாக்கியதில் அவர் உடைந்துபோனார். அதோடு, வந்திருந்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டதில் அவருடைய பயம் உறுதிப்பட்டது. அவர் தன்னுடைய மூச்சைப் பிடித்துக்கொண்டு, மெதுவாகப் புரிந்துகொள்ளும் அவருடைய கணவரின் கரங்களில் தனது நடுங்கும் கரங்களை வைத்தார். அங்கு நீண்டதொரு அமைதி நிலவியது.
“அவர் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்” எனக் கடைசியில் அந்த நபர் மெதுவாகக் கூறினார்.
அவர் ஜன்னல் வழியாக வெறித்துப்பார்த்தபடி, தன் மனைவியின் கரங்களை, தனது கரங்களுக்குள் அழுத்திக்கொண்டு நாற்பது ஆண்டுகளுக்குமுன், அவர் காதலித்தபோது செய்ததைப்போலவே அழுத்தமாக பற்றிக்கொண்டிருந்தார்.
“எங்களுக்கென இருந்தது அவன் மட்டும்தான்” என்று மெதுவாக வந்திருந்தவரைப் பார்த்து திரும்பியபடி சொன்னார்.
வந்திருந்தவர் இருமியபடி எழுந்து மெல்ல ஜன்னலருகே சென்றார். “உங்களது இந்த பெரிய இழப்பிற்கு நிறுவனம் வருத்தம் தெரிவிக்க சொல்லியிருக்கிறது” என்று பார்வையை எந்த பக்கமும் திருப்பாமல் தெரிவித்தார். “நான் நிறுவனத்தாரின் கட்டளைகளுக்கு அடிபணியும் பணியாளன் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”
எந்த பதிலும் வரவில்லை; அந்த மூதாட்டியின் முகம் வெளிறிப்போயிருந்தது, கண்கள் வெறித்தபடியிருக்க, அவரது மூச்சு சத்தமின்றி வந்துகொண்டிருந்தது: அவரது கணவரின் முகத்தில், அவர் சார்ஜண்ட் மேஜராக இருந்து, முதல்முறை போரை சந்தித்தபோது தோன்றிய அதே அதிர்ச்சி தெரிந்தது.
“மா அண்ட் மெக்கின்ஸ் எல்லாப் பொறுப்புகளையும் மறுத்திருக்கிறது” என்று தொடர்ந்தார் வந்திருந்தவர். “அவர்கள் எந்தவித பொறுப்பையும் ஏற்கவில்லை என்றாலும் உங்களுடைய மகனின் சேவையை மனதில் கொண்டு, உங்களுக்கு ஒரு தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்திருக்கிறது”
திரு ஒயிட் தன் மனைவியின் கைகளை விட்டுவிட்டு, எழுந்து நின்று பயம் கலந்த பார்வையுடன் வந்திருந்தவரைப் பார்த்தார். அவரது உலர்ந்த உதடுகள் வார்த்தைகளை கோர்த்தது. “எவ்வளவு?”
“இருநூறு பவுண்டுகள்” என்பதே பதிலாக வந்தது.
அவருடைய மனைவியின் அலறலைக்கூட அறியாதவராக, மயக்கத்துடன் புன்முறுவல் செய்தபடி, பார்வையற்றவரைப்போல கைகளை நீட்டிக்கொண்டு தரையில் நிலைகுலைந்து விழுந்தார்.
பாகம் 3
இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த புதிய கல்லறைத் தோட்டத்தில், அந்த முதிய தம்பதியர் தங்கள் மகனை அடக்கம் செய்துவிட்டு, நிழலும் அமைதியும் படர்ந்த தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். எல்லாம் விரைவாகவே முடிந்துவிட்டது. முதலில் அவர்களால் அதை உணர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை. ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்தனர். ஏதோ ஒன்று, அந்த முதியவர்களின் இதயங்களால் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பாரத்தை லேசாக்கும் வகையில் நடக்கப் போகிறதென்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.
ஆனால், நாள்கள் கடக்க ஆரம்பித்தன, எதிர்பார்ப்புகள் குறையத்தொடங்கி, நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வழிவகுத்தது. அந்த முதிய தம்பதியர் நம்பிக்கை இழந்துபோய் அதை ஏற்றுக்கொண்ட மனோபாவம், சிலசமயம் அது உணர்ச்சியற்ற மனநிலை எனத் தவறாக கருதப்பட்டது. இப்பொழுதெல்லாம் அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவுமே இல்லையென்பதால் அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை. அவர்களுடைய நாள்கள் நீண்டு சலிப்பானதாய் மாறிப்போயிருந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு தூக்கத்திலிருந்து திடீரென விழித்த அந்த முதியவர், கையை நீட்டியபோது, படுக்கையில் தான் மட்டும் தனியாகப் படுத்திருந்ததை கண்டார். அந்த அறை இருட்டாக இருந்தது, ஜன்னல் பக்கத்திலிருந்து மெலிதாக அழுகை சத்தம் கேட்டது. அவர் படுக்கையைவிட்டு எழுந்து அதனை செவிமடுத்தார்.
“திரும்பி வா” மென்மையாக அழைத்தார். “உனக்கு குளிராக இருக்கும்”
“என் மகனுக்கு இன்னும் அதிகமாக குளிரும்” என்ற அந்த மூதாட்டி மீண்டும் அழத்தொடங்கினாள்.
அந்த அழுகை அவருடைய காதுகளை எட்டாமல் போனது. அவருடைய படுக்கை வெம்மையாகவும், அவரது கண்களில் தூக்கம் அழுத்தவும் செய்தது. அவர் அவ்வப்போது விழித்தபடி தூங்கிக் கொண்டிருந்தவர், அவரது மனைவியின் பெரிய அழுகை சத்தத்தில் முற்றிலுமாக விழித்துக்கொண்டார்.
“பாதம்” என்றபடி பெரிதாக அழத்தொடங்கினார் அந்த அம்மையார். “அந்த குரங்கின் பாதம்!”
அவர் பதற்றமாக எழுந்தார். “எங்கே? எங்கே அது? என்னவாயிற்று?”
அவருடைய மனைவி அறையில் அவரை நோக்கி தட்டுத்தடுமாறியபடி வந்தார். “எனக்கு அது வேண்டும்” அமைதியாக கேட்டார். “நீங்கள் அதை அழித்துவிடவில்லையே?”
“அது வரவேற்பரையில், மேல் பலகையில் இருக்கிறது” என்று வியப்பு மேலிட பதிலளித்தார். “ஏன்?”
அவர் அழுவதையும் சிரிப்பதையும் ஒன்றாகச் செய்தார், குனிந்து அவர் கன்னங்களில் முத்தமிட்டார்.
“அதைப் பற்றிய நினைவு வந்தது. எனக்கு ஏன் முன்பே நினைவுக்கு வரவில்லை? நான் ஏன் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை?” என்று வெறிகொண்டவராகப் பேசினார்.
“எதைப் பற்றி நினைக்கவில்லை?” என திரு. ஒயிட் வினவினார்.
“மற்ற இரண்டு வரங்களை” என்று உடனேயே பதிலளித்தார் அவர் மனைவி. “நாம் ஒன்றைத்தான் பயன்படுத்தினோம்”
“அது போதாதா?” அவர் கடுமையாகக் கேட்டார்.
“இல்லை” அவர் ஒருவிதமான களிப்புடன் கத்தினார். “நமக்கு இன்னும் ஒரு வரம் மிச்சமிருக்கிறது. சீக்கிரம் கீழே சென்று அதை எடுத்து வந்து நம் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும் என்ற வரத்தை கேளுங்கள்”
அந்த மனிதர் கட்டிலில் அமர்ந்து, நடுங்கும் தன் கால்களிலிருந்து போர்வையை விலக்கினார். “கடவுளே! நீ பைத்தியமாகிவிட்டாய்” எனத் திகிலடைந்தவராய் கத்தினார்.
“அதைக் கொண்டு வாருங்கள்” அவருக்கு இரைத்தது. “அதை சீக்கிரமாக எடுத்து வாருங்கள், வரத்தை கேளுங்கள் ——- என் மகன், என் மகன்”
அவருடைய கணவர் தீக்குச்சியை உரசி மெழுகுவர்த்தியை ஏற்றினார். “படுக்கைக்கு திரும்பி வா” தளர்ந்துபோனவராக அழைத்தார். “நீ சொல்வது என்னவென்று உனக்குத் தெரியவில்லை”
“நாம் கேட்ட முதல் வரம் கிடைத்ததுதானே” என அவசர அவசரமாகக் கேட்டார். அந்த மூதாட்டி. “அப்படியானால் ஏன் இரண்டாவது கூடாது?”
“அது எதேச்சையாக நடந்தது” அந்த முதியவர் திணறினார்.
“போய் எடுத்து வாருங்கள், வந்து வரத்தைக் கேளுங்கள்” அவர் மனைவி உற்சாகத்தில் நடுங்கியபடி கத்தினார்.
அந்த முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார், அவர் குரல் நடுங்கியது. “அவன் இறந்து பத்து நாள்கள் ஆகிவிட்டது, மேலும் — இதை நான் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, அவனை அவனுடைய உடையைக் கொண்டுதான் அடையாளம் காணமுடிந்தது. அப்போதே உன்னால் அவனைப் பார்க்க முடியவில்லை எனும்போது இப்பொழுது எப்படி?”
“அவனைத் திரும்பக் கொண்டுவாருங்கள்” அந்த மூதாட்டி கரைந்தபடி அவரைக் கதவுப்புறமாக இழுத்துச் சென்றார். “நான் பாலூட்டி வளர்த்த என் மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா?”
அவர் இருட்டில் கீழிறங்கி வரவேற்பறைக்குச் சென்றார். அங்கிருந்த கணப்பு அடுப்பின் மேல்பக்கமிருந்த அலமாரியை அடைந்தார். அந்த தாயத்து அதன் இடத்திலேயே இருந்தது. அவர் கேட்பதற்குள்ளாகவே, அது சிதைந்துபோன அவரின் மகனை அவர் அறையைவிட்டு வெளியேறுவதற்குள்ளாகவே கொண்டுவந்து நிறுத்திவிடுமோ என்ற பயங்கரமான அச்சம் அவருக்கு ஏற்பட்டதில், அவருக்கு மூச்சடைத்து விட்டது. அறையைவிட்டு வெளியேறும் வழிகூட தெரியாமல் போனது. நெற்றி, வியர்வையில் குளிர்ந்திருக்க, மேசையை சுற்றிக்கொண்டு, சுவரைப் பிடித்தபடியே குறுகலான நடைபாதையில் அந்த அருவருப்பான பொருளைப் பிடித்தபடி நின்றார்.
அவர் அறைக்குள் நுழைந்தபோது, அவருடைய மனைவியின் முகமுமே மாறிவிட்டிருந்ததாகத் தோன்றியது. அது வெளிறிப்போய் எதிர்பார்ப்பு நிரம்பியதாய் காணப்பட்டது. அச்சத்தில் இருந்த அவருடைய கண்களுக்கு அது இயற்கைக்கு மாறாக இருப்பதாகத் தெரிந்தது. அவர் தன் மனைவியைப் பார்த்து பயந்தார்.
“வரத்தை கேளுங்கள்” அவருடைய மனைவியின் குரல் அழுத்தமாக வந்தது.
“இது முட்டாள்தனமும், மோசமானதும்” என்று கூறிய அவர் தளர்ச்சியடைந்தார்.
“கேளுங்கள்” அவருடைய மனைவி மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் தன் கையை உயர்த்தி, “என் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும்” என்றார்.
அந்த தாயத்து தரையில் விழுந்தது, அவர் அதை அச்சத்துடன் பார்த்தார். பிறகு நடுங்கியபடி நாற்காலியில் புதைந்து கொண்டார். அந்த மூதாட்டி எரிச்சலெடுக்கும் கண்களுடன், ஜன்னலை நோக்கி நடந்து சென்று அதன் திரையை விலக்கினார்.
அந்த முதியவள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது கவனித்தபடி, அவர் உடல் குளிர்ந்துபோகும்வரை அங்கேயே அமர்ந்திருந்தார். சீன மெழுகுவர்த்தித்தாங்கியின் விளிம்புவரை எரிந்து முடிந்திருந்த மெழுகுவர்த்தியிலிருந்து எழுந்த ஜுவாலை, அது முற்றிலும் அணைந்து போவதற்குமுன் சுவரிலும் விட்டத்திலும் அசையும் நிழல் பிம்பங்களை பிரதிபலித்தது. அந்த முதியவர், அந்த தாயத்து தன் வேலையை செய்யவில்லை என்பதில் ஏற்பட்ட சொல்லமுடியாத ஒருவித நிம்மதி உணர்வுடன், தன் படுக்கையை நோக்கி நகர்ந்தார். ஒரு நிமிடம் கழித்து, அந்த மூதாட்டி மௌனமாகவும் உணர்ச்சியற்றவளாகவும் படுக்கைக்குத் திரும்பி வந்தார்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல், கடிகாரம் துடிப்பதைக் கேட்டபடி அமர்ந்திருந்தனர். படிக்கட்டில் ஏதோ சத்தம் கேட்டது. கீச்சென ஒலியெழுப்பியபடி சுவர் பக்கமாக ஒரு எலி ஓடியது. அங்கு நிலவிய இருள் கொடுமையானதாகத் தோன்றியது. சற்றுநேரம் படுத்தபடி கிடந்தவர், தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பற்ற வைத்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெழுகுவர்த்தியை எடுத்துவர கீழே சென்றார்.
அவர் கடைசி படிக்கட்டை அடைந்தபோது தீக்குச்சி அணைந்துபோய்விட்டது. மற்றொன்றை பற்றவைக்க நிதானித்தார். அதேநேரம் மிகவும் மென்மையாக, கிட்டத்தட்ட கேட்கமுடியாத அளவிற்கான ஒலியில் முன்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
அவர் கையிலிருந்து தீக்குச்சிகள் நடைபாதையெங்கும் விழுந்து சிதறின. அவர் அசைவற்று நின்றார், அடுத்த சத்தம் கேட்கும்வரை அவருடைய மூச்சே நின்றுபோனதுபோல் இருந்தது. அவர் திரும்பி சட்டென தன்னுடைய அறைக்குள் நுழைந்து, தன் பின்னாலிருந்த கதவை சாத்திவிட்டார். மூன்றாவது முறையாக வந்த சத்தம் வீடு முழுவதிலும் கேட்டது.
“என்னதது?” என அந்த மூதாட்டி கேட்கத் தொடங்கினாள்.
“ஒரு எலி” குரல் நடுக்கமெடுக்க அந்த முதியவர் பதிலளித்தார். “ஒரு எலி படிக்கட்டில் என்னைக் கடந்து சென்றது”
அவரது மனைவி அதைக் கேட்டுக்கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ஒரு பலமான சத்தம் வீடெங்கிலும் எதிரொலித்தது.
“அது ஹெர்பர்ட்”
அவர் மனைவி கதவை நோக்கி ஓடினார். ஆனால் அவருடைய கணவர் அவருக்கு முன்னால் தன் மனைவியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார்.
“நீ என்ன செய்யப் போகிறாய்?” கரகரப்பான குரலில் கிசுகிசுத்தார்.
“அது என் மகன், அது ஹெர்பர்ட்!” இயந்திரத்தனமாக தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபடி கத்திக்கொண்டிருந்தார். “அவன் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டேன். நீங்கள் எதற்காக என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் போகவிடுங்கள் நான் கதவைத் திறக்க வேண்டும்”
“ஐயோ கடவுளே, அதை உள்ளே விடாதே” அந்த முதியவர் நடுங்கியபடி கரைந்தார்.
“உங்கள் சொந்த மகனைப் பார்த்து பயப்படுகிறீர்கள்” சிரமத்துடன் கத்திக்கொண்டே, “என்னைப் போகவிடுங்கள். நான் வருகிறேன் ஹெர்பர்ட், நான் வந்துகொண்டிருக்கிறேன்”
இன்னொருமுறை கதவுத் தட்டப்பட்டது, மற்றுமொருமுறை. அந்த மூதாட்டி சடாரென தன்னை விடுவித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார். அவருடைய கணவர் அவரைப் பின்தொடர்ந்து, மாடிப்படி சந்திப்பில் நின்றபடி, கீழே இறங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவியிடம் மன்றாடினார். அவருக்கு சங்கிலி அசைந்தாடும் சத்தமும் அதைத் தொடர்ந்து தாழ்ப்பாள் நிதானமாகவும் உறுதியுடனும் விலக்கப்படும் சத்தமும் கேட்டது. பின்னர் அந்த மூதாட்டியின் குரல் மூச்சுத் திணறலுடன் வெளிப்பட்டது.
“இந்த தாழ்ப்பாள்” சத்தமாக அழைத்தார். “எனக்கு எட்டவில்லை. கீழே வாருங்கள்”
ஆனால், அவருடைய கணவர் தரையில் முழங்காலிட்டு ஆவேசமாக அந்த பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். வெளியிலிருக்கும் அது உள்ளே வருவதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும். வீடெங்கும் துல்லியமான தட்டல் சத்தம் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி நாற்காலியை கதவுப் பக்கமாக இருந்த நடைபாதையில் இழுத்துச் செல்லும் சத்தம் கேட்டது. அதே சமயம் தாழ்ப்பாள் மெதுவாக இறங்கும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்த அதே கணத்தில் அவர் அந்தக் குரங்கின் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டார் என்றதோடு, மூச்சிரைக்க பதட்டமாக மூன்றாவது வரத்தையும் கேட்டே விட்டார்.
சடாரென தட்டல் சத்தம் நின்று போனது. அதன் எதிரொலி வீட்டிற்குள் இன்னமும் இருந்துகொண்டிருந்தது. அவருக்கு நாற்காலி பின்னால் இழுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது. வெளியிலிருந்து குளிர்ந்த காற்று படிக்கட்டுகளில் மோதி மேலெழுந்தது. ஏமாற்றமும் துயரமும் கலந்த அவருடைய மனைவியின் ஓலம் அவரைத் தன் மனைவியை நெருங்கவும், அவரைக் கடந்து கதவுவரை செல்வதற்குமான தைரியத்தையும் கொடுத்தது. எதிரில் மினுங்கிக் கொண்டிருந்த தெருவிளக்கு அமைதியாக வெறிச்சோடிக்கிடந்த தெருவின்மீது ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது.
டபிள்யு. டபிள்யு. ஜேக்கப்ஸ் (1863-1943)- இங்கிலாந்தை சேர்ந்த சிறுகதையாசிரியர் மற்றும் நாடகாசிரியர். நகைமுரண்களான விஷயங்களையும் பகடிகளையும் திறம்பட கதைகளில் கையாள்பபவர். இவருடைய ஆகச் சிறந்த சிறுகதை “Monkey’s Paw” அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.
***
சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com
தன் கணவனுடைய நண்பரான கவர்னேயில் இரண்டு நாளோ அல்லது ஒரு வாரமோ அவர்களுடைய தோட்டத்தில் தங்கப்போகும் செய்தியறிந்ததிலிருந்து திருமதி பரோடா கொஞ்சம் கோபத்தோடு இருந்தார்.
குளிர்காலம் முழுவதும் விருந்தோம்பலிலும் பெரும்பாலான நேரம் நியூ ஆர்லீனிலும் கழிந்திருந்த காரணத்தால் இப்போது எந்த இடையூறும் இல்லாமல் தன் கணவனுடன் ஓய்வு நேரத்தை கழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கணவருடைய நண்பர் கவர்னேயில் இங்கு ஒரு வாரம் தங்கபோவதாய் சொன்னது அவருக்கு கோபத்தை வரவழைத்தது.
அந்த நண்பரைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறாளே தவிர அவரைப் பார்த்ததில்லை. அந்த நண்பர் கணவருடைய கல்லூரித் தோழன். இப்போது பத்திரிகையாளராக இருக்கிறார். நகரவாசியும் கூட. அந்த காரணத்தினாலே அவரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. ஆனால் திருமதி பரோடா அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை தன்னுடைய ஆழ்மனதில் வரைந்து வைத்திருந்தாள். ஒல்லியாக, உயரமாக நம்பிக்கையற்ற கண் கண்ணாடியை போட்டுக்கொண்டு பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்யும் போதே அவரை இவளுக்கு பிடிக்கவே இல்லை. கவர்னெயில் கொஞ்சம் ஒல்லி தான் ஆனால் உயரமாகவோ நம்பிக்கையற்றவராகவோ இல்லை. கண்களில் மூக்கு கண்ணாடியோ பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளோ கூட வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால் முதலில் அவரைப் பார்க்கும்போது இவளுக்கு பிடித்திருந்தது.
அவரை எதனால் இவளுக்கு பிடித்திருந்தது என அறிய முற்படுகையில் கூட அவளால் அது சரியாக சொல்ல முடியவில்லை. அவளது கணவன் கேஸ்டன் சொல்லி இருந்ததைப் போன்ற அறிவாளித்தனமான நம்பிக்கைக்குறிய பண்புகள் எதுவும் அவரிடம் அவளால் கண்டறிய முடியவில்லை. மாறாக அவரை வீட்டில் இருப்பது போல் சௌகரியமாக உணர வைக்கும் வகையில் அவள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பேச்சிற்க்கும் இசைந்து கொடுத்தவராக கேஸ்டனுடைய வெளிப்படையான விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வது போன்று அமைதியாக இருந்தார். எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கும் அத்தனை குணநலங்களோடு அவர் இருந்தார். ஆனால் அவர் வெளிப்படையாக அவளுடைய அனுமதிக்காகவோ மதிப்பு பெற வேண்டும் என்பதற்காகவோ எதையும் செய்யவில்லை.
அந்த நிலத்தில் குடியேறிய பிறகு, அங்கிருக்கும் விரிந்த வராண்டாவில் எழுப்பப்பட்டிருக்கும் கொரிந்திய தூண்களுடைய நிழல்களின் கீழ் அலாதியாக அமர்ந்துக்கொண்டு கேஸ்டனினுடைய கரும்பு விவசாயம் பற்றிய அனுபவங்களை சிகரெட் பிடித்துக் கொண்டு கேட்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பெரிய கரும்பு தோட்டத்தின் வழியாக கதகதப்பான வாசனை மிக்க வெல்வட்டின் மிருதுவான தொடுதலை போன்று வரும் காற்றை அனுபவித்த வாரே “ இதுவல்லவோ வாழ்க்கை” என்று ஆழமான திருப்தியுடன் கூறினார். மேலும் அவரையே சுற்றி சுற்றி வந்த பெரிய நாய்களுடன் பழகுவது மகிழ்ச்சி தந்தது. அவை அன்பாக அவரின் கால்களை உரசிக்கொள்ளும். இப்போது அவருக்கு மீன் பிடிப்பதில் விருப்பமில்லை. கிரோஸ்பெக் பறவைகளை வேட்டையாட கேஸ்டன் அவரை அழைத்தப்போதும் அதில் பெரிய ஆர்வத்தையும் அவர் காட்டவில்லை.
திருமதி பரோடாவிற்கு கவர்னெயிலுடைய குணாதிசயம் விடுகதையாகவே இருந்தது. ஆனால் அவளுக்கு அவரைப் பிடித்திருந்தது. அவர் உண்மையாகவே அன்பானவராகவும் தீங்கற்றவராகவும் இருந்தார். அத்தனை நாளை அவள் அவரோடு சேர்ந்து கழித்தப் பிறகும் கூட முன்பு அவரைப் புரிந்து கொள்ள முடியாததை போலவே இப்போதும் இருந்தது. எனவே அவள் குழப்பம் அடைவதை விட்டுவிட்டு கோபத்தோடு இருந்தாள். இந்த மனநிலைக்காகவே அவளின் கணவனையும் வந்திருந்த விருந்தினரையும் தனியாகவே விட்டாள்.
தன்னுடைய எந்த செயல்களையும் கவர்னேயில் பெரிதாக ஈடுபாட்டு காட்ட வில்லை என்று அறிந்ததும் அவள் சில விஷயங்களை செய்யத் துவங்கினாள். அவரோடு சோம்பேறித்தனமாக ஆலைக்கு செல்வதும் நதிக்கரையோரமாக நடப்பதுமாக செய்து கொண்டிருந்தாள். அவரை அறியாமலேயே அவர் தன்னை சுற்றி உருவாக்கிக் கொண்டிருந்த கண்டு கொள்ளப்படாத அந்த மனநிலைக்குள் அவள் நுழைய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
உங்களுடைய நண்பர் எப்போது கிளம்புகிறார்? என அவளின் கணவரிடம் கேட்டாள். “என்னுடைய பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அவர் என்னை மிகவும் வெறுப்படைய செய்கிறார்”.
“அன்பே எனக்கு புரியவில்லை, அவன் வந்து ஒரு வாரம் தானே ஆகிறது. அவர் உனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை தானே?”
“இல்லை.. மற்றவர்களைப் போல அவர் அப்படி இருந்திருந்தால் எனக்கு அவரைப் பிடித்திருக்கும். அவருக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்திருக்க முடியும்.”
காஸ்டன் தன்னுடைய அழகான மனைவினுடைய முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு கவலை நிறைந்த அவளுடைய கண்களை கனிவோடு உற்று நோக்கினான். அவர்கள் மிக இயல்பாக திருமதி பரோடாவினுடைய அறையில் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
“நீ எப்போதும் ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறாய் என் அழகே. என்று அவன் அவளிடம் கூறினான்.
நீ எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்வாய் என்பதை என்னால் சில நேரம் கணிக்கவே முடியாது”, என அவளை முத்தமிட்டு கண்ணாடி முன் நின்று தனது கழுத்துப்பட்டையை சரி செய்ய திரும்பினார்.
“இங்கே பார் என் அன்பே”, என்று அவன் தொடர்ந்து கூறலானான். “நீ கவர்னெயில் பற்றி தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். அவன் பெரிதாக எதையும் எதிர்பார்க்கும் ஆளில்லை”.
“அவன் அப்படித்தான். நிறைய வேலை செய்து நொடிந்து போயிருக்கிறான் அதனால் தான் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக இங்கே வரச் சொன்னேன்.”
“அவர் நன்கு சிந்திக்க கூடிய மனிதர் என்று தானே சொன்னீர்கள் குறைந்தபட்சம் கொஞ்சமாவது சுவாரசியமானவராக இருப்பார் என்று எதிர்பார்த்தேன்”, என்று கவலை தோய்ந்த சமாதானமடையாதவளாய் கூறினாள்.
“சரி நாளை காலை நான் நகரத்துக்கு சென்று எனது வசந்தகால உடைகளை சரி செய்யப்போகிறேன். கவர்னேயில் இங்கிருந்து கிளம்பி விட்டால் எனக்கு தகவல் சொல்லுங்கள். நான் அத்தை ஆக்டேவின் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்”.
அன்று இரவு அவள் தனியாக நடந்து சென்று ஓக் மரத்தின் கீழ இருக்கக்கூடிய ஒரு நாற்காலியின் மீது அமர்ந்தாள். அவளுடைய நோக்கங்களும் எண்ணங்களும் இந்த அளவு குழப்பமாக இருக்கும் என அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அவற்றிலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்றாலும் அப்போது அவளுக்கு புரிந்த ஒரே விஷயம் காலையில் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான்.
அந்த கற்கள் நிறைந்த நடை பாதையில் யாரோ நெருங்கி வரும் காலடித்தட சத்தம் திருமதி பரோடாவிற்கு கேட்டது. அந்த இருட்டில் யார் என்று சரியாக கணிக்க முடியவில்லை சிகரெடினுடைய சிவப்பு கங்கு மட்டுமே தெரிந்தது. அது கவர்னேயில் என்று அவளுக்கு தெரிந்தது. ஏனென்றால் அவளது கணவன் சிகரெட் பிடிக்க மாட்டான். அவள் அங்கிருப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுடைய வெள்ளை உடை அவளது இருப்பை காட்டிக் கொடுத்தது. அவர் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு அவளது அருகில் உட்கார்ந்தார், அவளுக்கு அங்கு உட்காருவது பிடிக்குமா பிடிக்காதா என்கிற உணர்வு கூட இல்லாமல் .
உங்களது கணவர் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் திருமதி பரோடா என்று கூறி அவள் தலையையும் தோள்களையும் மூடிக்கொள்ள பயன்படுத்தும் மெல்லிய வெள்ளை துண்டை அவளிடம் கொடுத்தான். அவள் அதை முறுமுறுத்தவாறு நன்றி எனச் சொல்லி வாங்கி தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள்.
அந்த கால நிலையில் வீசும் இரவு காற்றின் அசாதாரணமானத் தன்மையை பற்றி தனது தெரிந்த விஷயத்தை அவன் கூறினான். கூறியவாறு அவனுடைய பார்வை இருளை நோக்கி சென்ற போது தனக்குத் தானே பேசிக் கொள்வது போல மெதுவாகப் பேசினான்.
“தெற்கில் வீசும் காற்றின் இரவு .. சில பெரிய நட்சத்திரங்களின் இரவு .. இன்னும் அசைந்தாடும் இரவு…”
இந்த இரவைப் பற்றிய அவனுடைய குறிப்புகளுக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. சொல்லப்போனால் அது அவளுக்காக சொல்லப்பட்டதும் இல்லை.
கவர்னெயில் நம்பிக்கை அற்ற மனிதரோ தன்னுணர்வுள்ள மனிதரோ அல்ல. அமைதி அவருடைய இயல்பு அல்ல. சூழ்நிலையின் மற்றும் மனநிலையின் வெளிப்பாடு. திருமதி பரோடாவிற்கு அருகில் அமர்ந்த தருணத்தில் அவருடைய அமைதி மெல்லக் கரைந்து போனது. அவர் சுதந்திரமாகவும் ஆழமாகவும் பேசினார். தயக்கம் நிறைந்த மதுவான அவருடைய குரல் கேட்க அவ்வளவு இனிமையற்றதாக இல்லை. அவர் காஸ்டனுடன் நெருங்கி பழகிய கல்லூரி நாட்களை பற்றி பேசினார். தீவிரமான தெளிவற்ற லட்சியங்களும் நோக்கங்களும் நிரம்பிய நாட்களைப் பற்றி பேசினார். இப்போது இந்த வாழ்க்கையினுடைய ஒழுங்கு அமர்வுகளை தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை மட்டுமே எஞ்சியிருந்தது. வெறுமனே வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற ஆசை அதற்கிடையில் இப்பொழுது அவர் சுவாசித்துக் கொண்டிருக்கும் இவ்வாழ்வின் சுவை அவ்வப்போது கிடைத்தால் போதும் என்கிற மனநிலை.
அவர் கூறுவதை அவளது மனம் தெளிவற்றதாகவே உணர்ந்து கொண்டிருந்தது. அந்த கணத்தில் அவரின் மனதை விட அவளின் உடல் உணர்ச்சிகளே மேலோங்கி இருந்தது. அவன் கூறிய வார்த்தைகளைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. அவரின் குரல் ஒலிகளை மட்டுமே அவள் பருகிக் கொண்டிருந்தாள். அந்த இருளில் தன் விரல்களை நீட்டி மெல்லிய தொடுதலால் அவரது முகத்தையோ உதடுகளையோ தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. அவனுக்கு நெருக்கமாக சென்று அவனுடைய கன்னத்தையொட்டி ஏதாவது கிசுகிசுக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால், அவள் ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இல்லையெனில் அவள் அதை செய்திருப்பாள்.
அவரிடம் நெருங்க வேண்டும் என்கிற உணர்வு அதிகரிக்கும்போது அவரிடமிருந்து இன்னும் தூர விலகினாள். மரியாதைக் குறைவாக தோன்றாத அளவிற்கு அங்கிருந்து எழுந்து அவரை அங்கே தனியாக விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அவள் வீட்டை அடைவதற்கு முன்பாகவே கவர்னேயில் இன்னொரு சிகரட்டைப் பற்ற வைத்து இரவைப் பற்றிய அவனது குறிப்பை முடித்திருந்தான்.
திருமதி பரோடாவிற்கு அந்த இரவு அவளை ஆட்கொண்ட அந்த முட்டாள்தனத்தை குறித்து தன்னுடைய கணவரிடம் கூற வேண்டும் என்கிற ஆசை மேலெழுந்தது. அவளுடைய கணவன் சிறந்த நண்பன் என்றாலும் கூட அந்த ஆசைக்கு அவள் செவிமடுக்கவில்லை. மரியாதைக்குரிய பெண் என்பதை தாண்டி விவேகம் உள்ள பெண்ணும் கூட. வாழ்க்கையில் நிகழும் சில போராட்டங்களை மனிதர்கள் தனியாக தான் சந்திக்க வேண்டும் என்கிற தெளிவு அவளுக்கு இருந்தது.
கேஸ்டன் காலையில் எழுந்திருக்கும் போது அவனுடைய மனைவி ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டிருந்தாள். நகரத்திற்கு செல்லும் அதிகாலை தொடர் வண்டியில் ஏறியிருந்தாள். கவர்னேயில் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை அவள் அந்த வீட்டிற்கு வரவே இல்லை.
அடுத்த கோடை விடுமுறைக்கு கவர்னேயிலை திரும்ப அழைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. கேஸ்டனுக்கு அவரை அழைப்பதில் விருப்பமும் இருந்தது. ஆனால் அவனது மனைவியினுடைய எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது. எப்படியோ அந்த ஆண்டு முடிவதற்கு முன்பாகவே கவர்னேயிலை திரும்ப அழைக்கலாம் என்று முழு மனதாக அவள் சொல்லியதைக் கேட்க கேஸ்டனுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“அவர் மீது இருந்த வெறுப்பை நீ மாற்றிக் கொண்டதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனது அன்பே.. அவன் உண்மையில் அதற்கு தகுதியானவன் அல்ல”, என்று கேஸ்டன் கூறினார்.
ஆஹா என்று மகிழ்ந்தவாறு அவனது உதட்டில் நீண்ட முத்தத்தை பதித்துவிட்டு “நான் எல்லாவற்றையும் கடந்துவிட்டேன் நீங்கள் அதை பார்ப்பீர்கள். இந்த முறை நான் அவரிடம் நன்றாக நடந்து கொள்வேன்”.
கேட் சோப்பின் (Kate Chopin) (1850–1904) – அமேரிக்க சிறுகதையாசிரியர். பெண்ணியச் சிறுகதைகள்ளின் முன்னோடியாக கருதப்படுபவர்.
***
அ. அருந்தமிழ் யாழினி – சென்னையிலுள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், அகில இந்திய வானொலியின் RAINBOW FM 101.4 ல் பண்பலைத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். மொழியாக்க முயற்சிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். மின்னஞ்சல்: aruntamilyazhiniaravindan@gmail.com
கணபதி நவராத்திரி மூன்றாவது நாள் இரவு.கோதாவரி நதியின் வசிஷ்டா கிளையாற்று பகுதிக்கு அடிவாரத்தில் இருக்கும் மணல் திட்டு. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை குதூகலத்துடன் சாக்குப் பைகளையும், முக்காலிகளையும் எடுத்துக்கொண்டு ‘காக்கிநாடா கங்காதர் மியூசிக்கல் நைட்டை பார்ப்பதற்கு நீர்த்துறைக்கு அருகிலுள்ள சென்டருக்கு வந்தனர். வேலைகளுக்குச் சென்ற சில ஆண்கள் சாராயக்கடையில் ஒரு மூன்று அவுன்ஸ்களை குடித்துவிட்டு, பெட்டிக் கடையில் முறுக்கை வாங்கிச் சாப்பிட்டு கொண்டு, சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு அதன் மீது அமர்ந்தனர். தாவணி அணிந்த இளம் பெண்களை, கைலிகள் அணிந்த இளசுகள் பின் தொடர்கையில், ஊராட்சித் தலைவரின் வீட்டில் விருந்தை முடித்துவிட்டு ஆர்கெஸ்ட்ராகாரர்கள் மேடைக்கு வந்தனர்.
ஆர்கெஸ்ட்ரா கண்டசாலாவின் பாட்டுடன் தொடங்கியது. அனைவரின் மத்தியிலும் கட்டுக்கடங்காத உற்சாகம் பொங்கி வழிந்தது, பாட்டுகளுக்கு விசில்கள், கூச்சல்கள் இணைந்ததால் நீர்த்துறை முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது.
சௌதாமினி முக்காலியைக் கொண்டு வந்து ஜெயாவின் அருகில் அமர்ந்தாள்.
“மருமகள கண்ணுக்குள்ள வச்சி பாத்துபான்னு எல்லாரும் சொல்லிப்பாங்க இல்ல. போதாதக்கு களைப் பறிக்கக் கூட அனுப்ப மாட்டா, அப்படிப்பட்டவ குவைத்து அனுப்புறாளா! பணம் நிறையக் கிடைக்கும் போலடீ. நம்ம கூடப் போகலாம்டீ, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே? ஒரு வாரம் கூலி செஞ்சா திங்கட்கிழமை சந்தைக்கே சரியா இருக்கு.”
“என்னது, குழந்தைகளையும், புருசனையும் விட்டுபுட்டு, ஊர் பெயர் தெரியாத, மொழி தெரியாத நாட்டுல இருக்கணும்னா என்னால முடியாதுடி சௌதா. ஆனாலும் உங்க அண்ணன பிரிஞ்சு என்னால தனியா இருக்க முடியாதுடி” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே ஜெயா.
“ஆனாலும் போகல! சேட்டுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிங்க, ஒரு பத்து பிள்ளைங்க இருப்பாங்களாம். அவங்களுக்கு எல்லா வெட்டி வேலையும் செய்யணுமாம், நம்ப வேலை பிடிக்கலைன்னா பாலைவனத்துல ஒட்டக சாணம் அள்ளவுடுவாங்கலாம், தெரியுமா ஒனக்கு?” என்றாள் ஜெயா.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்டீ?”
“எங்க ஊர்ல ஒருத்தி அப்படித்தான் போயிட்டு வந்தா. கொஞ்ச நாளைக்கி நோய் வாய்ப்பட்டு இறந்து போயிட்டா” என்றாள் ஜெயா.
“அப்படி எதுக்கு நினைக்கணும். ஒரு வேலை நம்மளுக்கு எல்லாம் நல்லபடியா நடந்து, பணத்தை நல்லா சம்பாதிக்கலாமோ, என்னமோ”
“அடி சக்காளத்திங்களா! பாட்டக் கேட்க விடுங்கடி” எனப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவி இருவரையும் நோக்கி, வாயில் சுருட்டை பற்ற வைத்தவாறு, மறுபடியும் அந்தப் பக்கம் திரும்பினாள்.
சிரஞ்சீவி பாட்டிற்கு யாரோ பத்து ரூபாய் மொய் கொடுத்தனர். ஒரு ஜோடியின் நிழல் படகுகளின் துறைமுகத்து அருகிலுள்ள ஒரு குடிசைக்குள் நுழைந்தது.
அன்றிரவு வீட்டுக்குச் சென்றபின், அப்புலு மடக்குக் கட்டிலில் படுக்கையில், பிள்ளைகள் தூங்கி விட்டார்களா, இல்லையாயெனப் பார்த்துவிட்டு, மண்ணெண்ணெய் விளக்குத் திரியைக் குறைத்து, படுக்கையில் அப்புலுவின் பக்கத்தில் வந்து சேர்ந்தாள் சௌதாமினி. கோழிக்குஞ்சை பாம்பு கவ்வுவது போல் இறுக்கமாகக் கட்டி அணைத்தான் அப்புலு.
“பொறு முதல்ல, அதுக்காக வரல. உன் கூட ஒரு விஷயத்த சொல்லனும்” என்றாள் மோவாய் அருகில் தலையை வைத்தவாறு.
“என்ன?” என்றான் தோளின் மீது ரவிக்கையை வருடியவாறு.
“அது வந்து, சொன்னதுக்கு அப்புறம் திட்டக் கூடாது” என முணுமுணுத்தாள்.
“அடை காக்குற கோழியைப் போல என்னடி அந்தக் கூவல் சத்தம்? விஷயம் என்னனு சொல்லு?” என்றான் கழுத்தில் தடவியவாறு.
“குவைத்துப் போனா எப்படி இருக்குமானு. பிள்ளைகள நல்லபடியா படிக்க வைக்கலாம், ஒரு அஞ்சு குழி இடத்தை வாங்கி வீடு கட்டிக்கலாம்…”
“நிப்பாற்றியா, உன் நச்சரிப்பே! இந்த யோசனைய ஒனக்கு யாருடி ஏத்தி விட்டா? எட்டி ஒதச்சனா குப்பையில போய் விழுவ. வாய மூடிக்கிட்டு தூங்கு” எனத் திரும்பிப் படுத்தான்.
“ஆ…தூங்கலெனா கோதாவரி ஆத்துல குதிப்பேன்னு நெனக்கிறியா? கொஞ்சம் மூளையோட யோசிச்சுப் பாரு, ஒரு ரெண்டு வருஷம் எப்படியாச்சும் பொறுத்துக்கிட்டோம்னா வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்கச் சொல்லுறேன். ஏன் நான் ஒருத்தி மட்டுமா நல்லா இருப்பேன்? நம்ம பிள்ளைகளுக்காகத் தான இந்த ஏக்கம் எல்லாம்” எனச் சௌதாமினி கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.
அப்புலு எதுவும் பேசவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே சௌதா எப்போதும் திருப்பிப் பேசமாட்டாள்.
சௌதாமினிக்கு வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். மாநிறம், வட்டமான முகம். வெளிர் மஞ்சள் நிறp புடவையைக் கட்டி, கண்ணுக்கு மைத்தீட்டி, தலையில் கனகாம்பரத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தால், அப்புலுவுடன் சேர்ந்து, பல இளவட்டத்திற்கு அன்னிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஊரில் பல பேர் கண்கள் சௌதாவின் மீது விழுகுதெனக் கல்யாணமான ஆரம்பத்திலேயே அப்புலுவுக்குப் புரிந்து விட்டது. அதனால் தான் ரசிக்கும் சீமான்களின் வீட்டிற்கும், பெரிய மைனர்களின் வயல்களுக்கும் எப்போதும் வேலைக்கு அனுப்பியதில்லை. அதற்கான காரணம் என்னவென்று சௌதாவிற்கும் தெரியும், அந்த ஊர்காரர்களுக்கும் தெரியும்.
அப்புலு செய்யாத வேலை இல்லை. தேங்காய் இறக்கவும், உரிக்கவும், வயல் வேலைகளுக்கும் செல்வான். அப்பா காலமானார். அப்புலுவின் அம்மாவும், தங்கையும் இரண்டு தெரு தள்ளி இருக்கிற வீட்டில் வசிக்கிறார்கள். புது குடியிருப்பில் இடத்தை எழுதிக் கொடுத்ததில் அப்புலு, செங்கல் வீடு கட்டிக்கொண்டு அதில் குடியேறி குடித்தனம் நடத்துகிறான்.
அன்று வாரச் சந்தை, இருவரின் மத்தியிலும் ஒரு வாரமாகப் பேச்சுவார்த்தைக் கிடையாது என்பதை நினைவு படுத்தினாள்.
இரண்டு மடவை மீன்களும், குழந்தைகளுக்கு மிக்சர் பொட்டலங்களும், சௌதாவிற்கு பிடிக்குமென இஞ்சி பக்கோடாவையும் கட்டிக்கொண்டு சாயங்காலத்திற்கு வீட்டுக்கு வந்தான் அப்புலு. சௌதா அடுப்பு அருகில் வடித்த சாதத்தை எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் மண்ணெண்ணெய் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பேப்பரில் சினிமா படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மிக்சர் பொட்டலங்களைக் கொடுத்தான்.
சௌதாவை நோக்கிப் பார்த்தான். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு இருந்தாள். தனது அரை டவுசரிலிருந்து இஞ்சி பக்கோடா பொட்டலத்தை வெளியே எடுத்து, அடுப்பு அருகில் அமர்ந்திருந்த சௌதாவை நோக்கி வீசினான். சௌதா எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அப்படியே வாசலில் உட்கார்ந்தான். ஆனாலும் அவள் பேசவில்லை. வெறுப்பு அடைந்து சாராயக் கடைக்குச் சென்றான்.
வீட்டுக்குத் திரும்பி வருகையில், பிள்ளைகள் சாப்பிட்டுத் தூங்கியிருந்தார்கள். சௌதா ஒருத்தி மட்டும் வீட்டு அருகிலுள்ள கொய்யா மரத்தின் அருகில் அமர்ந்தாள்.
“சோறு சாப்டியா?” எனக் கேட்டான். சௌதாமினி எதுவும் பேசவில்லை.
“ஒன்னத்தான், இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அலட்டிக்கிற. சரி எப்படியோ நீ நினைச்சதே செய். ஆனா ஒன்னு என்கூட பேசாம மட்டும் இருந்திடாத. உயிர் துடி துடிச்சு போயிடும்.”
சௌதா அந்த வார்த்தைக்கு நெருங்கி வந்தாள். அப்புலு தோளில் இருந்த துண்டை எடுத்து “கால கழுவிக்கோ, சாப்பாடு சாப்பிடலாம்” என்றாள். இருவரும் அன்று மீன் குழம்பை மிச்சம் வைக்காமல் காலி செய்துவிட்டு, அன்றிரவு முழுக்க கண்விழித்து இருந்தனர். விடிவதற்குள் சௌதாமினி நினைத்ததை சாதித்து விட்டாள்.
“முதல்ல பாஸ்போர்ட் ரெடி செய்யணும். மெடிக்கல் டெஸ்ட் செய்றதுக்கு பம்பாய்க்கு அழைச்சுட்டு போகனும். அதுக்கப்புறம் விசா. எல்லாம் சேத்து ஒரு பதினஞ்சு ஆயிரம் வரை செலவாகும் சரியா?” என்றான் ராஜோலுவிலிருந்து வந்த ஏஜென்ட் தாத்தாராவ்.
அப்புலு பதினைந்து ஆயிரம் கிட்டயே நின்று விட்டான்.
“சம்பளம் எவ்வளவு வருங்க?” எனக் கேட்டான் அப்புலு.
“அது இப்போ தெரியாது அப்புலு, போற வீட்டைப் பொறுத்து, எஜமானப் பொறுத்து இருக்கும். ஒங்க பொண்டாட்டியோட வேலையைப் பொறுத்தும் இருக்கும்” என்றான் சௌதாமினியை ஒரு மாதிரியாகப் பார்த்து.
சட்டெனச் சௌதாமினி தோளில் முந்தானையை சரி செய்து கொண்டாள்.
அன்று பணத்தைப் பற்றி ரொம்பவே யோசித்தார்கள் இரண்டு பேரும்.
“எங்க அண்ணன் கிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறன். அப்புறம் கொடுத்துக்கலாம்” என்றாள்.
“இந்தக் குழந்தைகள என்ன செய்ய? துடி துடுச்சுப் போயிடு வாங்க போல” என்றான்.
“நீ அப்படி முன்னாடியே பதட்டப்படாத. பெரியவனுக்குப் பத்து வயசு ஆகுது. அவன் ஏங்கமாட்டான். ஒங்க அம்மா கிட்ட அவனக்கு நல்லாவே பழக்கம். லோவதல்லிய மட்டும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும். அது வயசுக்குவர இன்னொரு நாலு வருஷம் ஆகும். உங்க தங்கச்சி இருக்கா இல்ல, அவ ஒத்தாசைக்கு இருப்பா. கண்ண மூடித் திறக்கறதுக்குள்ள நாலு வருஷம் கடந்துடும். ஏக்கம் எல்லாம் ஒங்களுக்கு மட்டும் தானா? எனக்கு இருக்காதா பின்ன? நான் என்ன பொறந்ததுலிருந்து ஊர் ஊரா திரிஞ்சவளா? நீங்க இங்க எப்படி இருக்கீங்களோன்னு எனக்கு மட்டும் இருக்காதா?” எனப் புடவைத் தலைப்பை வாய்க்குக் குறுக்காக வைத்துக் கொண்டு அழுதாள்.
ஏஜென்ட் தாத்தாராவ் வாரத்துக்கு ஒரு முறை வந்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு போகிறான். கடனை வாங்கி, பணத்தைக் கட்டி, ஆகமொத்தம் எப்படியோ சௌதாமினி குவைத்துக்குக் கிளம்பும் நாள் வந்தது.
“அப்புலு, முதல்ல பம்பாய்க்குப் போயி மெடிக்கல் டெஸ்ட் செய்யணும். ஒரு ரெண்டு நாள் கழிச்சு விமானத்த ஏத்திட்டு நான் திரும்பி வருவேன். ஒங்க முதலாளி வீட்டு நம்பர் கொடுத்திருக்கெல்ல, அதுக்கு போன் செய்றேன். நீ பதட்டப்படத் தேவையில்லை. இந்தக் கையால எத்தனை பேர் அனுப்பி இருப்பேன். யம்மா சௌதாமினி, சீக்கிரம் கிளம்பு” என்றான் டீ அருந்தியவாறு.
சௌதாமினி அழுதவாறே கிளம்பினாள். பிள்ளைகள் இருவரும் தாயைக் கட்டி அணைத்து அழுகையில் அங்கு இருக்கும் அனைவரின் கண்களும் கசிந்தன.
“ஒங்க அம்மா உங்களுக்கு நிறைய துணிமணிங்க, பொம்மைங்க வாங்கிட்டு வருவா, அழுவாதீங்க” என அவர்களின் பாட்டி, அத்தை, சுற்றி இருக்கும் சொந்தக்காரர்களென அனைவரும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். நல்லது கெட்டது பகிர்ந்து கொள்ளும் தோழி ஜெயா வாசலில் நின்று கண்ணீர் மல்க அழுதாள்.
அப்புலு மட்டும் தென்னை மரத்தில் சாய்ந்து மும்மிடிவரத்து பாலயோகியைப் போல் அமைதியாக வெறித்தபடி சௌதாமினியை நோக்கினான்.
ஊர் சென்டருக்கு அருகில் ஒரு பத்து பேர் கூட்டம் கூடினர். பேருந்து வந்தது. பிள்ளைகளின் கதறல் சத்தம் மேலும் கூடியது. அப்புலு வேறேதும் பேசவில்லை. சௌதாமினி பேருந்தில் ஏறிக் கிளம்பினாள். அன்று முதல் அப்புலு அந்த மணல் திட்டுப் பகுதியில் ‘குவைத்து அப்புலு’ ஆகிவிட்டான்.
சௌதா சென்றபிறகு, அப்புலுக்கு காலையில் அடுப்பங்கரையில் காணும் சௌதா இனி இல்லை. பண்டிகைக்கு வீட்டைச் சாணி பூசூம் சௌதா இனி இல்லை. ராமலா மீன் (ஆந்திராவில், ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் கிடைக்கும் அரியவகை மீன்) குழம்பு சமைக்கும் சௌதா இனி இல்லை. இருட்டியதும், இதயத்துடிப்பைப் பகிர்ந்து கொள்ளும் சௌதா இனி இல்லை. பித்து பிடித்துப் போனான். ஆனால், பிள்ளைகளைக் கண்டு ஆறுதல் கொள்வான்.
சௌதா, கிழிந்த ரவிக்கைகளைத் துணி கொடியிலிருந்து அகற்றினான். வீட்டில் கட்டில் அருகில் இருந்த இரண்டு வாயில் புடவைகளை எடுத்து ட்ரங்க் பெட்டியில் வைத்தான். அடுப்பின் அருகில் சௌதா காட்டன் சேலை துண்டு அழுக்குத் துணியாக இருந்ததை எடுத்துத் தோட்டத்தில் தூக்கி எறிந்தான். சௌதாவிற்கு சம்பந்தப்பட்ட பொருட்களை அனைத்தும் கண்ணில் படாமல் செய்தாலுமே, கூரை விளிம்பில் ரயில் வண்டு பூச்சியைப் போல் துயரம் வட்டமாகச் சுழற்றிக்கொண்டு மேலும் இறுக்கமானது.
சில நாட்களிலேயே சாதத்தை வடிப்பதில் தேர்ச்சி பெற்றான். குழம்புகளைப் பதமாகக் கொதிக்க வைக்கிறான். குழந்தைகள் துயரப்பட்டு சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அது இதுயென கதைகள் சொல்லி அவர்களைக் கொஞ்சிக் குலவுகிறான். அப்புலுவின் அம்மா, தங்கச்சி, எல்லாரும் வீட்டுலயே இருந்து நல்லது கெட்டது பார்த்துக் கொண்டனர். இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் போன் வரவில்லை. இருட்டும் வரை எஜமானின் வீட்டிலேயே இருந்து விட்டு வருகிறான். ‘போன் வந்தா உனக்குத் தாக்கல் சொல்லுறன்’ என்றாலும் காதில் வாங்காமல் அங்கேயே காவல் காக்கிறான்.
ஒரு வாரம் கழிந்தது. போன் வரவில்லை. ஊரில் எல்லோரும் என்ன ஆனதெனக் குவைத்து அப்புலுவைக் கேட்கத் தொடங்கினர்.
ஒரு வாரம் ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை.
அப்புலு குட்டிப் போட்ட பூனையைப் போல் திரிந்தான். மனம் ஏனோ துடிடித்துப் போனது.
எப்படியோ ஏஜென்ட் தாத்தாராவ் முகவரியைக் கண்டுபிடித்து ராஜோலு சென்று விசாரித்தால் ‘பம்பாய் போயிருக்கான், இன்னும் வரல’ எனச் சொன்னார்கள்.
சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பினான்.
பிள்ளைகள் கேட்டால் ‘உங்க அம்மா நல்லாதான் இருக்காளாம். உங்கள விசாரிச்சாளாம். உங்கள நல்லா சாப்புட்டு, நல்லபடியா பள்ளிக்கூடத்துக்குப் போயி படிக்கச் சொல்லி இருக்காம்’ எனச் சொல்லிக்கொண்டு கண் கலங்கினான். அதைக் கண்டு பிள்ளைகளும் அழுதார்கள். அப்புலுவின் தாய் வந்து “டேய், அப்புலு அப்படி அழுகாதடா. பிள்ளைங்கள பாரு எப்படி இருக்காங்கன்னு, இப்ப என்னாச்சு, போன் பண்ணுவா விடு. பாவம் புள்ள அங்க என்னென்ன பாடு படுதோ என்னவோ?” என்று அறைக்கு அழைத்துச் சென்றாள்.
ஒரு வருடம் ஆனது, ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை. எல்லோரும் குவைத்து அப்புலுவைப் பார்த்து இரக்கப்பட்டனர்.
இறந்துவிட்டதாகச் சில பேர், அந்தத் தாத்தாராவுடன் ஓடி விட்டதாகப் பலரும் கிசுகிசுத்தனர். அந்தப் பேச்சுகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, குவைத்து அப்புலுவின் காதில் ஒலித்தன. குவைத்து அப்புலு அன்று முதல் குடிக்கு ஆளானான்.
***
ஒருநாள் அப்புலு மகள் லோவதல்லிக்கு பெரும் காய்ச்சல் வந்தது. அப்புலு வேலைக்குச் சென்றான். மகன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் எல்லோரும் அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.
லோவதல்லி கட்டிலில் படுத்துக்கொண்டு, துணிக் கொடியில் இருந்த இரண்டு துண்டுகளை இழுத்துக் கொண்டு கால்களின் இடுக்கில் வைத்துக்கொண்டு அழுகிறாள். இருட்டுகையில் வீடு திரும்பினான் அப்புலு.
“இருட்டுடிச்சு, இன்னும் விளக்கேத்தி வெக்காம என்னமா இன்னும் படுத்துகிட்டு இருக்க, தம்பி எங்க?” என்று லோவதல்லி பக்கம் வந்து பார்த்தான். பிள்ளை முனகலிட்டபடி இருந்தாள். தலையில் கையை வைத்து பார்த்தான், உடல் தீயாகக் கொதித்தது.
“ஜுரமா? பாட்டி இன்னும் வீட்டுக்கு வரலயா? இரு, ஆர்.எம்.பி. டாக்டரை அழைச்சிட்டு வரேன்” என விளக்கு புட்டியை ஏற்றினான்.
வெளிச்சத்தில் மகளின் கால் அருகில் துணி துண்டுகள் நனைந்தபடி அகப்பட்டன.
அப்புலுவின் மகன் வந்தான்.
“டேய், நீ போய்ப் பாட்டிய அழைச்சுட்டு வா” என்றான் பதற்றத்துடன்.
அக்காவின் அருகில், குருதி கசிந்த துணிகளைக் கண்டு,
“பாட்டி” என அழுது கொண்டே ஓடினான். அப்புலுவின் அம்மா வந்தாள்.
“லோவதல்லி வயசுக்குவர நாலு வருஷம் ஆகும்” எனச் சொன்ன சௌதாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன அப்புலுக்கு.
அத்தை வந்து “இரு நான் புட்டு சமைச்சு எடுத்துட்டு வரேன்” எனக் கிளம்பினாள்.
சௌதாவின் தோழி ஜெயா வந்து துணிகளை மாற்றி, அடுப்பைப் பற்ற வைத்து, சோறு சமைத்து வடித்தாள்.
அப்புலு, ஊருக்குள் சென்று எள்ளு பொடி, மரச்செக்கு எண்ணெய் எடுத்து வந்து வீட்டில் வைத்தான். மகள் ஒருத்தியே பாயில் உட்காருகையில், தடுக்குகளின் இடுக்குகளிலிருந்து பார்த்து மகிழ்வான்.
இருட்டியபின் அப்புலு வாசலில் தண்ணீர் தெளித்து, கோலமில்லாத வாசலில், தென்னை மரத்தில் சாய்ந்து, யார் கண்ணிலும் படாமல் கதறிக் கதறி அழுவான்.
ஏழாவது நாள் அன்று, ஊரில் மணல் திட்டுப் பகுதியில் வசிக்கின்ற எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தான்.
அன்று முதல் குடிப்பதை நிறுத்திக் கொண்டான். ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டான். தனக்காகத் தான் வாழ்வதையும் நிறுத்திக் கொண்டான்.
சௌதாமினி என்ன ஆனாளோ யாருக்கும் தெரியவில்லை.
அந்தத் தாத்தாராவையும் அந்த ராஜோலில் மறுபடியும் பார்க்கவில்லை.
சௌதாமினியின் அண்ணனும், சில ஊர்ப் பெரியவர்களும், போலீஸ் கேசைப் பதிவு செய்தனர். ஆனாலும், எந்தப் பலனும் இல்லை. அப்புலு முழுமையாக மாறிவிட்டான். எவ்வளவோ உஷாராக நாள் முழுக்க வேலை செய்து, பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மா இல்லாத குறையை இல்லாமல் வளர்ப்பதைக் கண்டு அந்தத் தீடையில் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் கூட குவைத்து அப்புலுவின் பெயர் சனங்களுக்குத் தெரிந்து விட்டது.
அதன்பின் பிள்ளைகளுக்கு, அவர்களின் அம்மா நினைவுக்கு வருவில்லை. அப்புலு மகனுக்கும், மகளுக்கும் ‘அம்மா இனி வராது, நம்ம தான் இருக்கணும்’ என அவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தினமும் கூறுவான். வந்தால் நமது அதிர்ஷ்டம் என நினைப்பான் மனதில். சுற்று வட்டாரத்து ஊர்களில் யாராவது குவைத்து சென்று வந்தால் விசாரிப்பான். இரண்டு மூன்று முறை யாருக்கும் தெரியாமல் ராஜோலு சென்று வந்தான். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை, இருவரும் என்ன ஆனார்களென நினைக்கையில், சிலமுறை பித்துப் பிடிப்பது போல் இருக்கும். ஓடிவிட்டாளென நினைக்காமல் இறந்து விட்டாளெனச் சமாதானப்படுத்திக் கொள்வதில் தான் சற்று மனதுக்கு லேசாகவும், இதமாகவும் இருக்கும்.
காலம் குவைத்து அப்புலு சந்தோஷமாக இருந்த நொடிகளின் மத்தியில் நிற்கவில்லை, அப்படியென நெஞ்சை நொறுக்கிய கணங்களிலும் நிற்கவில்லை.
குவைத்து அப்புலுவை மறுபடியும் திருமணம் செய்யச் சொல்லிப் பலரும் ஆலோசனை கூறினார்கள். தீடையிலிருந்து இரண்டு மூணு சம்பந்தம் கூட வந்தது. ஆனால், நங்கூரம் போட்ட கப்பலைப் போலப் பிள்ளைகளுக்காகத் துடிப்பாக இருந்து விட்டான்.
“அப்புலு! மவ வளர்ந்துட்டாடா. இனி மாப்புளய பார்க்க தொடங்கிடு சரியா?” என்றால் வரன் பார்க்கத் திரிகிறான். மகன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின், பாலிடெக்னிக் பரீட்சையை எழுத வைத்து, காக்கிநாடா அரசு கல்லூரியில் சேர்த்தான். லோவதல்லிக்கு எந்த வேலையும் சொல்லாமல் அனைத்துமே அப்புலுவே பார்த்துக் கொள்கிறான். குவைத்துப் போகச் செய்த கடன்கள் எல்லாவற்றையும் தீர்த்தான்.
கொஞ்ச நாளைக்கு அப்புலுவின் அம்மாவும் இறந்து விட்டாள். தங்கைக்கு அருகிலுள்ள தீடையில் மாப்பிளை கொண்டு வந்து கல்யாணம் கட்டியபின் அவளும் சென்று விட்டாள்.
தினமும் மகளுக்குத் துறைமுகத்திலிருந்து சிற்றுண்டிகள் பொட்டலங்களைக் கொண்டு வந்து, குழம்பை சமைத்து மகளுக்கு ஊட்டி, அவனும் சாப்பிட்டுப் படுப்பான். தினமும் படுத்தபின் ஒரு மணி நேரம் சௌதாவைப் பற்றிச் சிந்திப்பான்.
தூக்கத்திலேயே அழுவான்.
தூக்கத்திலேயே துயரப்படுவான்.
அதே தூக்கத்தில் மறந்து, மல்லி பூபோல் காலையில் சிரித்து வேலைக்குச் செல்வான்.
அப்படியொரு பத்து வருடங்கள் கழிந்த பின், ஒரு அடை மழையின் பொழுது, எந்த வித ஆள் அரவமும் இல்லை. வீடுகளிலிருந்து எழுந்து வரும் மூடு பனியில் எதுவும் தெரியவில்லை. கோதாவரி கொந்தளித்தபடி இருந்தது. கோதாவரி பாலத்தில் எந்தவித ஆள் அரவமும் இல்லை. துறைமுகத்தில் மட்டும் இரண்டு மூன்று மீனவர்கள் வலையை விரிக்கின்றனர்.
“ஆத்தா! அப்படி சென்டர் வரைக்கும் போயிட்டு வரேன்” என மகளிடம் சொல்லி அப்புலு வெளியே வந்தான். சென்டரில் சோடா கடை அருகில் உட்கார்ந்து, கடைக்காரனிடம் பேசுகையில் யாரோ வந்து “டேய்! குவைத்து அப்புலு! சௌதாமினி வந்திருக்காடா” என்றார்கள்.
அப்புலு பதறி, கோதாவரியை காட்டிலும் கொந்தளித்தான். ஒரு நிமிஷம். துண்டைத் தலையிலிருந்து எடுத்து, கழுத்தில் போட்டுக்கொண்டு அதுவரைக்கும் குடிக்கத் தவறிய புகையிலை சுருட்டை பற்றவைத்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வீட்டுக்கு நகர்ந்தான். வீடு உடனே வந்து விடும் என்ற பயம் மேலும் அதிகரித்தது. முதல்முறையாக வீடு இன்னும் கொஞ்ச தூரம் இருந்தா நல்லா இருக்கும் என நினைத்தான். என்னையும், என் பிள்ளைகளையும் விட்டு எங்கேயோ போயிட்டா. இறந்து போயிட்டா என்ற யோசனையோடு சமாதானப்படுத்திக் கொண்டு, அதை நம்பி அந்தக் கற்பனையிலேயே இத்தனை நாளும் வாழ்ந்ததினால், அந்தச் சிந்தனை கொடுத்த ஆனந்தம் சௌதாமினியைப் பார்க்க வேண்டுமென்ற வேட்கையைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டது. அதனால் தான் வீடு தூரமாக இருந்தால் நல்லா இருக்குமென நினைத்தான். பலமாகக் குணமடைந்த சிராய்ப்புகளின் மீது, புதிதாக அமைத்துக் கொண்ட வாழ்க்கையின் வேட்கைகளின் மீதும் இப்படி சில பலவீனமான நொடிகள் மீண்டும் காயம் செய்வதை அப்புலுவினால் தாள முடியவில்லை.
அதனால்தான் வீடு இன்னும் சற்றுத் தொலைவில் இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான். சௌதாமினி எப்படி வருவாளெனக் கற்பனை செய்ய முடிந்தது. அந்தக் கற்பனையைத் தாங்கிக் கொள்ளும் துணிவு இல்லாததினால், இறந்து விட்டாள் என்ற பொய்யை அதிகமாக நேசிக்கிறான்.
உண்மையில், சௌதாமினி பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே மேலோட்டமாக அப்புலுவிற்குத் தெரியும். கணக்கிட்டுப் பார்க்கவும், வருத்தப்படவும் எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை, ஒரு நொடி முன்பு வரை.
காலடிகள் நின்று விட்டன.
அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் சௌதாமினியைக் காண கூட்டம் கூடினர். வீடு காலியாக இல்லை. அப்புலுவைக் கண்டு யாரும் பேசவில்லை. வெளியே நிற்கிறான். வாசலில் இரும்பு செயரின் மீது வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான்.
அப்புலுவிற்கு அந்த ஏஜென்ட் முகம் நன்றாகவே தெரியும். அவனைக் கண்டான். அவனும், இவனைக் கண்டான். அவ்வளவுதான், எந்தவித வார்த்தைகளும் இல்லை. உள்ளே சென்றான். சௌதாமினி மகளைப் பற்றிக்கொண்டாள். மிகவும் மெலிந்து இருந்தாள். நகங்களுக்கு வண்ணம் தீட்டினாள். கழுத்தில் இரண்டு வடம் சேயினை அணிந்திருந்தாள். ஜிகினா சேலையைக் கட்டி, முகத்திற்குப் பௌடரை அப்பியிருந்தாள். வீடு முழுக்க சென்ட்டின் வாசம்.
அப்புலுவைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அப்புலுவும் எதுவும் பேசவில்லை.
வீட்டிலிருந்து வெளியேறி, அப்படியே கோதாவரி ஆற்றங்கரைக்குக் கிளம்பினான்.
சௌதாமினி மகளுக்குச் செயின் தந்து, பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வைத்து “ஜாக்கிரதை!” என முத்தமிட்டு அழுது கொண்டே கிளம்பினாள். அவளின் அம்மா திரும்பி வந்தாளென மகனுக்குத் தெரிந்தது. ஆனாலும் பொருட்படுத்தவில்லை.
இத்தனை வருடங்களாகச் சௌதாமினி என்ன ஆனாளெனத் தெரியாதவர்களுக்கு ஒரு விடை கிடைத்தது.
அவ்வப்போது வந்து பிள்ளைகளைப் பார்த்துச் சென்று விடுவாள். பிள்ளைகளும் ஏதோ விருந்தாளியைப் போலப் பார்ப்பார்கள். ‘குவைத்’ என்ற ஊரின் பெயர், தனது பெயரின் முன்பு அடைமொழியாக வந்து சேர்ந்தது தவிர, குவைத்து அப்புலு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. சௌதாமினி ஏன் இப்படிச் செய்தாளென இன்றுவரை அவளைத் தவிர, மூன்றாவது நபருக்குத் தெரியாது.
நாகேந்திர காசி – 1983 இல், ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவில் பிறந்தார். விண்வெளி பொறியாளராகப் பணிபுரிந்து, தற்போது தெலுங்கு திரைத் துறையில் முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நல்ல வந்தெனா’ நான்கு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றது. இதுவரை புஷ்பா 2, ஹாய் நன்னா, கொட்டபொம்மலி (நாயட்டு ரீமேக்), ஸ்ரீதேவி சோடா சென்டர், பலாசா ஆகிய படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதியிருக்கிறார்.
ஸ்ரீநிவாஸ் தெப்பல – 1989 இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதுலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணி புரிந்து வருகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’ ‘கரடி’ என்னும் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார். Contact : 9363580434 Email : srinivasprasthanam@gmail.com
எட்டாம் நூற்றாண்டின் சூஃபி ஞானி ராபிஆ அல்-அதவியாவையும், இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கவிஞர் ஃபோரூக் ஃபாரோக்சாத்தையும் ஒப்பிடுவது ஒரு சுவாரஸ்யமான ஆன்மீக மற்றும் இலக்கியப் பயணமாகும். காலத்தால் ஆயிரம் ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், இருவருமே பாரசீக நிலப்பரப்பின் மிகச்சிறந்த பெண் குரல்களாகத் திகழ்கின்றனர்.
மௌனத்தையும், இறைவனிடம் முன்வைக்கும் நேரடி வினாக்களையும் கொண்டது ராபிஆவின் மொழி; அது அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் “ஆன்மீகத் துணிச்சல்”. நவீன பாரசீகக் கவிதையில் ஒரு மைல்கல்லாக விளங்குவது ஃபோரூக்கின் மொழி; அது மரபுசார்ந்த யாப்பிலக்கணங்களை உடைத்து, ஒரு பெண்ணின் அந்தரங்க உணர்வுகளைப் பொதுவெளியில் பேசிய முதல் துணிச்சலான குரல்.
ராபிஆ அல்-அதவியா (கி.பி. 714–801) ஈராக்கின் பஸ்ராவில் வாழ்ந்த புகழ்பெற்ற சூஃபி ஞானி ஆவார். இஸ்லாமிய சூஃபித்துவ வரலாற்றில், இறைவனைத் தூய அன்பால் நேசித்த மிக முக்கியமான பெண் துறவியாக இவர் போற்றப்படுகிறார். உலகியல் பற்றுகளைத் துறந்து, இறைவனின் நினைவிலேயே வாழ்ந்த இவரது வாழ்க்கை, இன்றும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாக உள்ளது.
ஆன்மீகத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல், தூய அன்பின் வெளிப்பாடாகப் பார்ப்பதே ராபிஆவின் தத்துவத்தின் அடிப்படையாகும். “இறைவனை நரகத்தின் பயத்தினாலோ அல்லது சொர்க்கத்தின் ஆசையினாலோ வழிபடக்கூடாது; இறைவனை அவன் என்பதற்காக மட்டுமே நேசிக்க வேண்டும்” என்பதே இவரது போதனையின் சாராம்சம்.
இறைவனை அடைவதற்கு எவ்வித நிபந்தனைகளும் இருக்கக்கூடாது என்பது அவர் கருத்து. சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற பேராசையோ அல்லது தண்டனைக்கு அஞ்சும் நிலையோ ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் தடைகளாகும். தன்னலத்தை முழுமையாக அழித்து, இறைவனின் விருப்பமே தனது விருப்பமாக மாறும் நிலையை அடைவதே உண்மையான பக்தி. இதயம் என்பது இறைவனின் இருப்பிடம்; உலகியல் ஆசைகள், வஞ்சகம் மற்றும் சுயநல எண்ணங்களால் நிறைந்த இதயத்தில் இறை அன்பு தங்குவதில்லை. எனவே, இதயத்தை அனைத்துப் பற்றுகளிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராபிஆ, மிகவும் எளிமையான துறவற வாழ்க்கையைக் கடைபிடித்தார். உலகியல் இன்பங்களை விட இறைவனின் நினைவே மேலானது என்பதைத் தனது அன்றாட வாழ்வின் மூலம் அவர் தெளிவுபடுத்தினார்.
இன்றும் சூஃபித்துவத்தில், அன்பு மற்றும் பக்தி மார்க்கத்திற்கு ராபிஆவின் போதனைகளே மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவர் மனித குலத்திற்கு விட்டுச் சென்ற மிக முக்கியமான செய்தி: “அன்பே இறைவனின் வழி.”
ஃபோரூக் ஃபாரோக்சாத் (1935–1967) நவீன பாரசீகக் கவிதையுலகின் மிக முக்கியமான, துணிச்சலான பெண் கவிஞர். ஈரானிய இலக்கிய வரலாற்றில் பெண்களின் குரலை, உணர்வுகளை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான புரட்சிகரமான கருத்துகளைப் பதிவு செய்த முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
பாரம்பரிய கவிதை வடிவங்களிலிருந்து விலகி, ‘வசன கவிதை’ முறையில் எழுதிய இவரது கவிதைகள் பெண்களின் காதல், ஏக்கம், தனிமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படையாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசின. ஈரானின் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண்ணின் அக உணர்வுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்தது அக்காலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் வாழ்வின் அனுபவங்களையே அவர் கவிதைகளாகப் படைத்தார்.
“மற்றொரு பிறப்பு” (Another Birth – Tavallodi Digar): இது இவரது மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்று.”குளிர்ந்த காலத்தின் தொடக்கத்தை நம்புவோம்” (Let Us Believe in the Beginning of the Cold Season): இவரது மறைவுக்குப் பின் வெளியான இத்தொகுப்பு, அவரது முதிர்ச்சியான கவிதை ஆளுமையைக் காட்டுகிறது. “பாவம்” (The Sin / Persian: Gonāh): பாரசீக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இக்கவிதை மிகுந்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
ஒரு பெண் தனது விருப்பத்தை, உணர்வுகளை, உடல் சார்ந்த இன்பத்தை வெளிப்படையாகப் பாடுவது எப்படிச் சமூகத்தால் “பாவம்” என்று முத்திரை குத்தப்படுகிறது என்பதை “பாவம்” கவிதை விவரிக்கிறது.
காதலும் இன்பமும் கலந்த ஒரு தருணத்தை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவர் வர்ணிக்கிறார். அந்த உணர்வு அவருக்கு ஒரு புதிய சுதந்திரத்தையும், அதே நேரத்தில் சமூகக் கட்டுப்பாடுகளால் உருவான ஒருவித குற்ற உணர்ச்சியையும் அளிக்கிறது.
1950-களின் ஈரானிய ஆணாதிக்க சமூகத்தில், ஒரு பெண் தனது பாலியல் விருப்பங்களைப் பற்றி இவ்வளவு துணிச்சலாகப் பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அக்கால இலக்கியவாதிகளும் சமூகமும் இதை ஒரு “தவறான செயலாக” பார்த்தனர்; ஆனால் ஃபோரூக் அதை ஒரு கவிதையாகப் படைத்து, பெண்ணின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். பல நூற்றாண்டுகளாகத் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்த பெண்ணின் உணர்ச்சிகளை, உலகிற்கு உரக்கச் சொன்ன முதல் கவிதைகளில் இதுவும் ஒன்று.
பாரசீகக் கவிதைகளில் வழக்கமாகப் பெண்கள் காதலிக்கப்படுபவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். ஆனால், ஃபோரூக் தான் காதலிப்பவராகவும், தனது இன்பத்தை அனுபவிப்பவராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். இது இலக்கிய ரீதியாக மட்டுமின்றி, கலாச்சார ரீதியிலும் ஒரு பெரிய புரட்சியாகக் கருதப்பட்டது.
“Sin” (Gonāh) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஃபோரூக் ஃபாரோக்சாத் என்ற பெண்ணின் தைரியமான அறிக்கை. சமூகத்தின் பார்வையில் அது “பாவமாக” தெரிந்தாலும், ஃபோரூக்கின் பார்வையில் அது ஒரு பெண்ணின் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடாகவும், தன்னைத் தானே கண்டறியும் பயணமாகவும் இருந்தது.
கவிஞர் மட்டுமல்லாது, இவர் ஒரு திறமையான திரைப்பட இயக்குநரும் கூட. தொழுநோயாளிகள் பற்றிய இவரது ஆவணப்படமான “தி ஹவுஸ் ஈஸ் பிளாக்” (The House is Black), ஈரானியத் திரையுலகின் மிகச்சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தனது 32-வது வயதிலேயே ஒரு கார் விபத்தில் இவர் காலமானார். ஃபோரூக் வெறும் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஈரானியப் பெண்களின் சுதந்திரக் குரலின் அடையாளம். இன்றும் நவீன பாரசீகக் கவிதையை வாசிக்கும் எவருக்கும் இவரது கவிதைகள் ஒரு தவிர்க்க முடியாத அனுபவத்தைத் தரும்.
தடையற்ற சுதந்திரம், ‘காதல்’ எனும் புரட்சிகர ஆயுதம், இருத்தலியல் தாகம், படிமங்களின் வலிமை போன்றவற்றை ராபிஆ மற்றும் ஃபோரூக் ஆகிய இருவரின் கவிதைகளிலும் தென்படும் பொதுவான இழைகள் எனலாம்.
சமூகக் கட்டுப்பாடுகள், திருமண பந்தம், மத நிறுவனங்களின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இறைவனுடனான நேரடித் தொடர்பை ராபிஆ தேர்ந்தெடுத்தார். அவருக்கு “சுதந்திரம்” என்பது ஆன்மீக விடுதலையாக இருந்தது. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் மீது சுமத்தியிருந்த விலங்குகளைத் தனது கவிதைகளால் ஃபோரூக் உடைத்தெரிந்தார். “பாவம்” போன்ற கவிதைகளில் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பதிவு செய்ததன் மூலம் தனிமனித சுதந்திரத்தை அவர் முன்னிறுத்தினார்.
ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைக் கடந்தது. “நரகத்தை எரிக்கவும், சொர்க்கத்தை அழிக்கவும் விரும்புகிறேன்” என்ற அவரின் கூற்று, காதலை ஒரு தூய்மையான, கணக்கற்ற உணர்வாக மாற்றியது. காதலை அதன் உடல் மற்றும் மன ரீதியான அனைத்துப் பரிமாணங்களிலும் கொண்டாடிய ஃபோரூக், “மீண்டும் பிறப்பு” கவிதையில் காதல் ஒரு பெண்ணை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கிறது என்பதைப் பாடினார். இருவருமே காதலை ஒரு கலகமாகவே பார்த்தனர்.
ராபிஆவின் ‘இஷ்க்’ சமூகத்தின் போலித்தனமான மதச்சடங்குகளுக்கு எதிரான கலகம். “கடவுளை நரகத்திற்கு அஞ்சி நேசிப்பவன் வியாபாரி” என்று அவர் சாடியது அக்கால ஆணாதிக்க மத போதகர்களை உலுக்கியது. ஃபோரூக்கின் காதல், உடலைச் சிறைபிடித்த சமூக விழுமியங்களுக்கு எதிரான கலகம். “நான் பாவம் செய்தேன், இன்பம் நிறைந்த பாவம்” என்று அவர் எழுதியபோது, அது ஈரானியச் சமூகத்தில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
“என்னுள் இருப்பவன் நீயே” என்று இறைவனுடன் ஒன்றிணைவதைத் தேடி, புற உலகைப் புறக்கணித்து அகத்தின் ஆழத்திற்குச் சென்றார் ராபிஆ. “ஜன்னல்” கவிதையில் சொல்வது போல, உலகைப் பார்ப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஒரு திறப்புக்காக ஏங்கினார் ஃபோரூக். ராபிஆ இறைவனைத் தேடிய அதே தீவிரத்தோடு, ஃபோரூக் வாழ்வின் அர்த்தத்தைத் தேடினார்.
நெருப்பு, தண்ணீர், ஒளி போன்ற இயற்கைப் படிமங்களை ஆன்மீக நிலைகளை விளக்க ராபிஆ பயன்படுத்தினார்; மண், செடி, பறவை, இருள் போன்ற படிமங்களைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் விரக்தியையும் நம்பிக்கையையும் ஃபோரூக் படம்பிடித்தார்.
ராபிஆ அல்-அதவியாவின் “நிபந்தனையற்ற காதல்” மற்றும் ஃபோரூக் ஃபாரோக்சாத்தின் “மீண்டும் பிறப்பு” ஆகிய இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், “தன்முனைப்பு அழிந்து, ஒரு புதிய அடையாளத்தைக் கண்டடைதல்” என்ற புள்ளியில் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றிணைகின்றன.
இறைக்காதலில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்ட ராபிஆ, “நான்” என்ற அகந்தை அழியும் போதுதான் உண்மையான இறைத்தன்மை வெளிப்படும் என்றார். உலகியல் ஆசைகளைத் துறப்பது அவருக்கு ஒரு வகையில் மரணம், பிறிதொரு வகையில் மறுபிறப்பு. சூஃபித்துவத்தில் மரணம் என்பது ‘அல்-லிகா’ (Al-Liqa) – அதாவது காதலன் (இறைவன்) தனது காதலியைச் சந்திக்கும் ஒரு திருமண விழா போன்றது. ராபிஆவிற்கு மரணம் என்பது ஒரு பயங்கரமான நிகழ்வு அல்ல; அது உலகியல் திரைகளை விலக்கிவிட்டுப் பேரொளியைக் காணும் ஒரு வாசல். தனது இறுதி நாட்களில், “எனது மரணம் என்பது எனது உண்மையான வாழ்வின் தொடக்கம்” என்று அவர் நம்பினார். அவர் உலகைத் துறந்தது ஒருவகையான ‘இறப்பிற்கு முன் மரணித்தல்’ (Moutu Qabla an Tamoutu) ஆகும்.
அதே சமயம், தனது “மீண்டும் பிறப்பு” கவிதையில், “எனது முழு இருத்தலும் ஒரு இருண்ட மந்திரம்” என்று தொடங்குகிறார் ஃபோரூக். ஃபோரூக்கிற்கு மரணம் என்பது ஒரு நிழலைப் போன்றது; அது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தொடர்கிறது. ஆனால், அவர் மரணத்தை ஒரு தோல்வியாகப் பார்க்கவில்லை. மாறாக, பழைய சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்த ஒரு பெண் இறந்து, கவிதை மற்றும் காதலின் வழியே ஒரு புதிய மனுஷியாக உருவெடுப்பதையே இக்கவிதை பறைசாற்றுகிறது. “பறவை இறக்கக்கூடும், ஆனால் பறத்தலை நினைவில் கொள்” என்ற அவரது வரி, உடல் அழிந்தாலும் ஒருவரின் ஆக்கப்பூர்வமான செயல் மரணத்திற்குப் பின்னும் வாழும் என்ற ‘இருத்தலியல் நம்பிக்கையை’ காட்டுகிறது.
ராபிஆவிற்கு நேற்று, இன்று, நாளை என்ற காலக் கணக்குகள் கிடையாது; இறைவனுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் நித்தியமானது. “நேரம் கடந்துவிட்டது, கடிகாரம் அடித்துவிட்டது” என்று பாடும் ஃபோரூக், ஒரு மலர் விரிவதைப் போல அல்லது ஒரு கவிதை பிறப்பதைப் போல, காலத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு நித்தியமான கணத்தில் வாழ்வதைப் பற்றிப் பேசுகிறார்.
நரகத்தின் நெருப்புக்கோ, சொர்க்கத்தின் நிழலுக்கோ அஞ்சாத ஒரு காதல் மற்றும் எவ்வித நிபந்தனையுமற்ற அர்ப்பணிப்புதான் ராபிஆவை ஒரு ஞானியாக்கியது. ஃபோரூக்கோ தனது உணர்வுகளைச் சமூகத்திற்கு ஒளிக்காமல், அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காதலை ஒரு புனிதமான செயலாக முன்வைத்தார். “வாழ்க்கை என்பது ஒரு நீண்ட தெரு, அங்கே ஒரு பெண் தினமும் தன் பையோடு கடந்து செல்கிறாள்” என்ற வரிகள், வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.
ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருமே சமூகத்தின் இரைச்சல்களிலிருந்து விலகி, ஒரு ‘ஆக்கப்பூர்வமான தனிமையை’ தங்களுக்குள் வரித்துக்கொண்டவர்கள். ஆனால், அந்தத் தனிமையின் தன்மையும் அதன் இலக்கும் மாறுபட்டவை.
அவர்களின் ‘தனிமை’ குறித்த பார்வையை இப்படிக் கூறலாம் ராபிஆவிற்குத் தனிமை ஒரு தவம். அவர் உலகத்தை வெறுக்கவில்லை, மாறாக இறைவனை முழுமையாக நேசிக்கத் தனிமை தேவை என்று கருதினார். ராபிஆவின் தனிமையில் இறைவன் மட்டுமே உரையாடுகிறான். “எனது தோழன் எப்போதும் என்னுடனேயே இருக்கிறான்” என்பது அவரது நிலைப்பாடு. இது ஒருபோதும் ‘தனிமை உணர்வு’ அல்ல; இது ஒரு துளி கூட வருத்தமோ அல்லது ஏமாற்றமோ இல்லாத ‘ஏகாந்தம்’. ராபிஆவின் தனிமை ஒரு பூட்டிய அறை போன்றது; அதன் கதவுகள் உலகிற்கு மூடப்பட்டிருக்கும், ஆனால் அதன் கூரை இறைவனின் வானத்திற்குத் திறந்திருக்கும்.
ஃபோரூக்கின் தனிமை ஒரு கலகம். ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணின் மீது திணிக்கும் போலித்தனமான உறவுகளிலிருந்து தப்பிக்கும் இடமாக அவர் தனிமையைப் பார்த்தார். ஃபோரூக்கின் தனிமையில் ஏக்கமும், வலியும், சமூகத்தின் மீதான விமர்சனமும் கலந்திருக்கும். “தனிமை என்பது ஒரு கறுப்புச் சுவர்” என்று அவர் பாடினாலும், அந்தச் சுவருக்குப் பின்னால்தான் உண்மையான ‘தான்’ இருப்பதை உணர்ந்தார். “மீண்டும் பிறப்பு” கவிதையில் அவர் சொல்வது போல, ஒரு ஜன்னலோரம் அமர்ந்து உலகை அதன் நிஜத் தன்மையோடு பார்ப்பதற்கான அவகாசமே அவரது தனிமை. ஃபோரூக்கின் தனிமை ஒரு ஜன்னல் போன்றது; அதன் வழியே அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறார், அதே சமயம் வெளியுலகின் அநீதிகளையும் அவதானிக்கிறார்.
“இறைவா, என் அறைக்குள் நீ இருக்கும்போது எனக்கு உலகம் எதற்கு?” என ராபிஆ கேட்கையில், “தனிமையே, நீதான் என் உடலின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே கண்ணாடி” என்கிறார் ஃபோரூக். ராபிஆவின் தனிமை ‘கடவுளைக் காணும் ஒரு வழி’ என்றால், ஃபோரூக்கின் தனிமை ‘தன்னைக் கண்டடையும் ஒரு வெளி’. ஃபோரூக்கின் “மீண்டும் பிறப்பு” கவிதையில்
“நான் ஒரு சிறிய ஜன்னலை அறிவேன், அங்கே காதலும், அமைதியும், மண்ணின் ஈரமும் கலந்திருக்கின்றன. அந்த ஜன்னல் வழியே, நான் மீண்டும் பிறக்கிறேன்…” -என்று அந்த ஜன்னலை “கவிதை மற்றும் சுதந்திரம்” எனக் கூறுகையில், ராபிஆ அந்த ஜன்னலை “இறைவனின் திருமுகம்” என்கிறார்.
ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருக்குமே ‘உடல்’ என்பது வெறும் சதைப்பிண்டம் அல்ல; அது ஒரு தளம். ஆனால், அந்தத் தளத்தை அவர்கள் கையாண்ட விதம் நேர் எதிர்மறையானது.
ராபிஆவின் சூஃபித்துவப் பார்வையில், உடல் என்பது ஆன்மா தங்கியிருக்கும் ஒரு தற்காலிகக் கூண்டு. இறைவனுடனான ஒன்றிணைப்பிற்கு (Fana) உடல் சார்ந்த இச்சைகளும், லௌகீகத் தேவைகளும் பெரும் தடைகளாக அவர் கருதினார். பசி, உறக்கம், வலி போன்ற உடலின் மொழிகளை மௌனிக்கச் செய்வதன் மூலம் ஆன்மாவின் மொழியைப் பெருக்க முடியும் என்பது ராபிஆவின் வழி.
“நான் ஒரு பெண்” என்ற உடல் சார்ந்த அடையாளத்தையே அவர் கடந்தார். சூஃபி மரபில் “ஆணாக மாறிய பெண்” என்று ராபிஆ போற்றப்படுவது, அவர் தனது பாலின அடையாளத்தைத் துறந்து ‘தூய ஆன்மாவாக’ நிலைபெற்றதைக் குறிக்கிறது. அவருக்கு விடுதலை என்பது உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை.
ஃபோரூக்கிற்கு உடல் என்பது ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு நிலப்பரப்பு. நூற்றாண்டுகளாக ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் உடலை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது மூடி மறைக்கப்பட வேண்டிய ‘பாவத்தின் ஊற்றாகவோ’ பார்த்தது. ஃபோரூக் அதைத் தலைகீழாக மாற்றினார்.
உடலின் இச்சைகளை, ஸ்பரிசத்தை, வேட்கையை அவர் பாடியபோது, அது ஆபாசமாக அல்லாமல் ஒரு ‘இருத்தலியல் உண்மையின்’ வெளிப்பாடாக இருந்தது. “நான் ஒரு பெண், எனக்கு உடல் இருக்கிறது, அதற்கு உணர்வுகள் உண்டு” என்று பிரகடனப்படுத்தியதன் மூலம், மறைக்கப்பட்ட பெண்மையின் குரலுக்கு அவர் வடிவம் கொடுத்தார். அவருக்கு விடுதலை என்பது உடலின் வழியே அடையும் விடுதலை.
ராபிஆ ‘உடலைத் துறப்பதன்’ மூலம் அன்றைய மத நிறுவனங்கள் விதித்த சட்டங்களை உடைத்தார். ஃபோரூக் ‘உடலைக் கொண்டாடுவதன்’ மூலம் சமூகம் விதித்த தார்மீகச் சங்கிலிகளை உடைத்தார். இருவரும் தங்களைச் சுற்றியிருந்த அதிகார அமைப்புகளை நிராகரித்தனர். ராபிஆ உலகை நிராகரித்தார்; ஃபோரூக் உலக நியதிகளை நிராகரித்தார். ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைப் பொருட்படுத்தவில்லை; ஃபோரூக்கின் ‘பாவம்’ சமூகத்தின் பழிச்சொல்லைப் பொருட்படுத்தவில்லை. இருவருமே அச்சமற்ற நிலை என்ற புள்ளியில் சந்திக்கிறார்கள். இந்த அச்சமின்மையே உண்மையான விடுதலை.
எனது வாழ்வின் ரகசியம் – ராபிஆ அல்-அதவியா
ஓ இறைவா! எனது வாழ்வின் இரகசியமும் என் இதயத்தின் அழியாத இன்பமும் நீயே. என் ஆழத்தின் வேட்கையும் நீதான்; என் அகத்தின் தாகம் தீர்க்கும் அருவியும் நீயே. உலகில் உள்ள சகலப் பொருட்களையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்; ஆனால், நீயோ— அனைத்திற்கும் மேலான உன்னதப் பரிசு. என் தனிமையின் இனிமையே! நான் எங்குச் சென்றாலும் உனது பேரொளி எனக்குத் துணையாக இருக்கிறது. உன் நினைவுகள் மட்டுமே என் இதயத்தில் இடைவிடாத நடனத்தை நிகழ்த்துகின்றன. உன்னை நேசிப்பதை விட, உன்னை அறிவதை விட, எனக்கு வேறு என்ன பேரின்பம் இருந்துவிடப் போகிறது? இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உன் அருகாமையை உணர்வதே என் இருப்பின் ஆகச்சிறந்த இரகசியம். ஜன்னல் – ஃபோரூக் ஃபாரோக்சாத் எனக்கு ஒரு ஜன்னல் போதும்— ஒரு ஜன்னல் மட்டுமே போதும்; அதன் வழியே நான் உலகைப் பார்க்கிறேன், உலகம் என்னைப் பார்க்கிறது. அந்த ஜன்னல் ஒரு திறப்பு; வார்த்தைகள் வந்து விழும் ஒரு வெளி. அங்கே சூரியன் தன் கரங்களை நீட்டி என் அறையின் இருளைக் கலைக்கிறான். பறவைகள் பாடும்போது, அந்த ஜன்னல் ஒரு இசைக் கருவியாகிறது. மழை பெய்யும்போது, அது என் கண்ணீரின் சாட்சியாகிறது. வாழ்க்கை என்பது— இந்தச் சிறிய ஜன்னலோரம் அமர்ந்து காலத்தின் நதியைக் காண்பதுதான். இங்கேதான் நான் மீண்டும் பிறக்கிறேன்; இங்கேதான் என் இருப்பு ஆகாயத்தின் நீலத்தோடு கலக்கிறது.
(நீள் கவிதையான ஜன்னல் கவிதையிலிருந்து சில வரிகள்)
பழைய அடையாளங்கள் அழிந்து, ஒரு புதிய கவித்துவ ஆளுமையாகப் பிறப்பது என்பது ஒருவகையான ஆன்மீக ரசவாதம்தான். ராபிஆ மற்றும் ஃபோரூக் – காலம், மதம், வாழ்வியல் சூழல் என இவர்களுக்கிடையே பல நூற்றாண்டுகளும், முற்றிலும் மாறுபட்ட உலகங்களும் குறுக்கிடுகின்றன. ஒருவர் பாலைவனத்தில் இறைவனைத் தேடித் தவம் புரிந்தார்; மற்றொருவர் நவீன நகரின் இரைச்சலில் தன் அடையாளத்தைத் தேடிப் போராடினார். ஆனால், இவர்களுடைய ஆன்மாவின் வேட்கை ‘சுதந்திரம்’ என்ற ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது.
ராபிஆ இறைவனை “நீயே என் இதயத்தின் ரகசியம்” என்று அழைத்த அதே தீவிரத்தோடு, ஃபோரூக் தனது காதலையும் வாழ்வையும் அணுகுகிறார். ராபிஆவின் ‘இஷ்க்’ எனும் தத்துவத்தை ஃபோரூக் லௌகீக உலகிற்கு இடமாற்றம் செய்கிறார். ராபிஆவின் தீவிரமான மொழிநடை, ஃபோரூக்கின் கவிதைகளில் ஒரு நவீன ஆன்மீகத் தன்மையைத் தோற்றுவிக்கிறது.
ராபிஆவின் வாழ்க்கை அன்றைய ஆணாதிக்க மத போதகர்களுக்கு எதிரான ஒரு கலகம். ஃபோரூக்கின் கவிதைகளில் இருக்கும் ‘துணிச்சல்’, ராபிஆ போன்ற பெண் ஞானிகள் ஏற்படுத்தி வைத்த ‘பாரசீகப் பெண் கலக மரபின்’ தொடர்ச்சிதான். ராபிஆ எப்படி “சொர்க்கத்தின் மீதான ஆசை வியாபாரம்” என்று சாடினாரோ, அதே தொனியில் ஃபோரூக் சமூகத்தின் போலி அறங்களை எள்ளி நகையாடுகிறார். நிறுவனமயப்பட்ட அமைப்புகளை ஒரு பெண் கேள்வி கேட்கும் அந்த ‘ஆன்மீகத் துணிச்சல்’ ராபிஆவிடமிருந்து ஃபோரூக்கிற்குத் தடையின்றி கடத்தப்பட்டிருக்கிறது.
ராபிஆவின் கவிதைகளில் வரும் ‘ஒளி’ (Nur), ஃபோரூக்கின் கவிதைகளில் ‘ஜன்னல் வழியே வரும் சூரியனாக’ உருமாற்றம் பெறுகிறது. இருவருமே அறியாமை அல்லது சமூக ஒடுக்குமுறை என்னும் இருளுக்குள் ஒரு திறப்பைத் தேடுகிறார்கள். ராபிஆவின் ஆன்மீக ரசவாதம் (Alchemy), ஃபோரூக்கின் கவிதைகளில் மானுட உணர்வுகளின் ரசவாதமாகத் திரட்சியடைந்துள்ளது.
இறுதியில், இந்த இரு பெண் ஆளுமைகளும் உலகுக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: “சமூகமோ, மதமோ அல்லது சம்பிரதாயங்களோ உங்களைச் சிறைபிடிக்க முயன்றால், உங்களது அகத்திற்குள் ஒரு ஜன்னலைத் திறந்து கொள்ளுங்கள்.”
ராபிஆ அந்த ஜன்னல் வழியே இறைவனின் பேரொளியைக் காண்கிறார்; ஃபோரூக் அதே ஜன்னல் வழியே தன் கவிதைகளுக்கான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறார். ராபிஆ ஒரு ஆதி-புள்ளி என்றால், ஃபோரூக் அதன் விரிவு. இருவரும் பார்த்தது ஒரே ஒளியைத்தான். அவர்கள் காட்டிய அந்த விளக்கு, இன்றும் சுதந்திரத்தைத் தேடும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அ.முனவர் கான் – தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com