Home Blog Page 98

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 3 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

0

வசந்த பெளர்ணமி
                 -துஃபு   (தமிழில் : செ.ச.செந்தில்நாதன்)

 
பாழ்பட்டிருக்கிறது நாடு
மாறமறுக்கின்றன மலைகள் ஆறுகள்
நகரத்தில் வசந்தம்; புல் புதல்கள் செறிவாய் படர்கின்றன
காலம் துயர்தர, பூக்கள் கண்ணீர் சிதற்றுகின்றன
பிரிதல் வெறுத்த பறவைகள்; படபடக்கிறது என் நெஞ்சம்
தீக்குண்டங்கள் மூன்று திங்கள்களைக் கண்டும் தொடர்கின்றன
வீட்டிலிருந்தோர் கடிதம், அது பதினாயிரம் பொன் பெறும்
நரையோடிய தலை, மயிர் உகுத்துக்கொண்டிருக்கிறது
மெலிந்து போனது அக்குடுமி, கட்டிச்செருகமுடியாமல்

 – துஃபு

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 2 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

0

நிலவிரவு
– துஃபு   ,   தமிழில்  செ.ச.செந்தில்நாதன்இன்றிரவு ஃபூஸோவின் மீது நிலவு.
மகளிர் அறையில் தனியாளாய்
அவள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பிரிந்து நான் சென்ற சாங்ஆனை அவள் நினைப்பதேனென
பாவம், எங்கோ உள்ள என் குழந்தைகளுக்கு புரியாது.

நறுமண மூடுபனியில்
அவள் மேகக்கூந்தல் நனைகிறது.
தெளிவான நிலவொளியில்
அவள் பளிங்குக் கரங்கள் நடுங்குகின்றன.

யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும்
நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம்,
மினுக்கும் கண்ணீர்த் தாரைகளை
நிலவொளியில் துடைத்தெறிந்து?
– துஃபு

(சீன மகாகவி து ஃபு வாழ்ந்த காலத்தின் மிகப்பெரிய நிகழ்வு ஆன லூஷான் கலகம். மாமன்னர் ஷுவான்ஸோங்க்கு எதிராக கிபி 755 இல் வெடித்த இந்தக் கலகத்தி்ன்போது சிறைபட்டார் து ஃபு. அப்போது அவர் தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்திருந்தார். அந்த தருணத்தில் எழுதிய கவிதை இது.
)
நிழற்படம்    : இணையம்  – allpoetry

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 01

0

 

தன்னந்தனியனாய்
-துஃபு       
தமிழில் -செ.ச.செந்தில்நாதன்

விண் முகட்டில் ஒரு வல்லூறு,
ஆற்றின் கரைகளுக்கிடையில்
சிறகடிக்கின்றன
ஒரு ஜோடி நாரைகள்.
பாய்ந்து கொத்திச்செல்வது எளிது,
அவை முன்பின்னோடுகையில்.

புல் மீது பனித்துளிப் படர்ச்சி.
விரிந்திருக்கிறது சிலந்தி வலை,
இறுக்கிமூட அணியமாக.
இயற்கையின் நிகழ்பாடுகள்,
மனிதர்களின் செயல்பாடுகளை அண்மிக்கின்றன.

தன்னந்தனியனாக நிற்கிறேன்,
பதினாயிரம் கவலைகளுடன்.

-துஃபு

(மூலம்: kōng wài yī zhì niǎo…) து ஃபு (Du Fu. கிபி 712–770). சீன மகாகவிகளில் பிரதானமானவர்.

 

 

 

(ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

கனவு மிருகம் -விமர்சனம்

0

கனவு மிருகம்

– விமர்சனம் – விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான உறவு நெடுங்காலமானது. கவிதையின் முக்கியக் கூறுகளான இருண்மையும் படிமமும் சிறுகதைகளில் பயன்படுத்தும்போது சிறுகதையின் நிறம் மாறுகிறது. பொதுவாக தமிழில் சிறுகதைகளின் போக்குகளை இரண்டாக பிரிக்கும் வழக்கமுண்டு. ஒன்று எளிய மனிதர்களின் வாழ்வியல் பாடுகளை பேசுபவை. மற்றொன்று எழுத்தாளர் தன் உள் மனத்தின் நெருக்கடிகளையும் அரிதினும் அரிதாக பரவசங்களையும் பகிர்வது.

இப்படி இரண்டாக பிரித்துப் பார்ப்பதிலும் உள்ளடங்கிய ஒரு விஷயம் இருக்கிறது. இரண்டு பிரிவுகளும் வாழ்வியலில் கூறுகளைச் சொல்வதுதாம். ஆனால் தன்னிலிருந்து பகிர்ந்து கொள்பவையில் தான் அக்மார்க் கலைத்தன்மை கொண்டதென்றும் மற்றவை பிரச்சாரத் தன்மையில் செகண்ட் கிரேடு கலைத்தன்மை கொண்டது என்றும் காலந்தோறும் விமர்சகர்கள் இலக்கிய வரலாறாக அடுத்த தலைமுறைக்கு தந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு வகையில் உயர் வர்க்கத்தில் பிறந்த ஆதிக்கசாதி மனநிலைதான் என்று தோன்றுகிறது. மொழியை பயன்படுத்துதலை மையப்படுத்தியே தரம் பிரிக்கப்படுகிறதோ எனும் சந்தேகத்தை எழுப்புகின்றன. சிறுகதைக்கும் கவிதைக்குமான தொடர்ப்பை, அநேகம் அதன் உள்ளடக்கத்தினை வைத்தே நிறைய பேசியிருக்கிறோம். சிறுகதையின் வடிவத்தை மாற்றி அமைத்த்திலும் கவிதைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

நாவலின் வடிவம் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மாற்றமடையும். சிறுகதையின் வடிவம் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றமடையும். கவிதையின் வடிவ மாற்றம் நாளுக்கு நாள் நிகழக் கூடியது எனும் கருத்து பலராலும் சொல்லப்படுவதுண்டு. கவிதையின் உள்ளடக்கத்தினைப்போலவே அதன் வடிவமாற்றத்தையும் சிறுகதைகளில் பயன் படுத்தும் முயற்சிகள் தமிழ்ச்சூழலில் கடந்த பத்தாண்டுகளாக பெருமளவில்  நிகந்துவருகின்றன.

பாலாவின் ’கனவுமிருகம்’ தொகுப்பில் அவ்விதமான வடிவ மீறல் அல்லது மாற்று வடிவ முயற்சி கதைகள் இருக்கின்றன. அவை கதையை வாசகனுக்கு இன்னும் நெருக்கமாக சொல்வதற்கு உதவுகின்றன. குறிப்பாக கொலையும் மூன்று உரையாடல்களும்.. பொதுவெளியில் நடந்த நிகழ்வு ஒன்றின் மீதான மூன்று விதமான கோணங்களை மூன்றுவிதமான நியாயங்களை மூன்றுவிதமான தப்பிதல்களை விரிக்கிறது இக்கதை. மூன்றில் எதன் ஒன்றிலாவது நாம் பொருந்திபோவோம். அல்லது எல்லாவற்றிலும் ஒரு கூறாக நாம் இருப்போம்.

அதேபோல காணாமல் போயிருந்தவனின் கதையும். சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போவது பற்றிய கனவில் இருப்பவனில் துவங்கி, அவனின் சின்ன குற்றச்செயலுக்கு தண்டனையாக ஒருநாள் வீட்டைபிரிபவனின் சூழலில் முடிகிறது. கதை சொல்லும்போது இடையிடையே அடைப்புகுறிக்குள் இருப்பவை தனிக்கதை. அல்லது அந்த அடைப்புகுறிக்குள் இருப்பவையே அக்கதைக்கான நினைவுகளை பத்திரப்படுத்தி வைத்திருப்பவை.

பாலாவின் முதல் கதை தொகுப்பு இது. அநேக முதல் தொகுப்பு கதைகள் தன் பால்ய நினைவுகளும் பால்ய கனவுகளுமாக நிறைந்திருக்கும். தன் சிறுவயது அல்லது பதின்மவயதில் வியந்த மனிதர்கள், வியந்த உறவுகள், வியந்த அனுபவங்களை நினைவுப்படுத்தும் விதமான கதைகளும் இருக்கும். இந்தத் தொகுப்பின் நீச்சல், முள் உள்ளிட்ட  கதைகள் அவ்விதமான நினைவுக்கதைகளே.

இன்னும் ஒவ்வொரு கதை குறித்தும் பேச பல விஷயங்கள் இருந்தாலும் பாலாவின் கனவுமிருகம் தொகுப்பின் வழியே எனக்கு நான்கு சிறுமிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய உரையாடலாக இதை அமைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்.

முதல் சிறுமி… இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த  ஆப்பிள் கதையிலிருக்கும் ஆர்த்தி..  தன் மாமாவிற்கு சிறுமை நெடியேறிய ஆப்பிளைப் பரிசளிப்பவள். அந்தச் சிறுமைக்கு அவள் எந்த வித்ததிலும் காரணமில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சிறுமையை சராசரி மனிதனின் இயல்புகளில் ஒன்றுதான் என்று அவனுக்கு கற்றுக்கொடுத்து போகிறாள். மழையில் நனைந்துகொண்டிருக்கும் வாசற் கேட்டில் விளையாட அழைத்த ஆர்த்தியின் குரலுக்கும்; எனக்கு தெரியாமல் ஆப்பிள் தின்கிறியா எனும் ஆர்த்தியின் குரலுக்கும் எவ்வித மாற்றமில்லை. அதில் விளையாட்டுக்கான அழைப்பைபோல எனக்கு தெரியாமல் செய்கிறாய் எனும் புகார் இதில் இருக்கிறது. முன்,பின் திட்டங்கள் ஏதுமற்ற குரலில் வழியும் குழந்தைமைதான் அவனையும் அந்த ஆப்பிளை தின்னமுடியாமல் செய்கிறது.

இரண்டாவது சிறுமி… ’கிறுக்கல் சித்திரங்கள்’ கதையில் சுவரில் வரைந்துகொண்டேயிருக்கும் சுவேதா. சுவேதா புதிதாக ஏதும் செய்யவில்லை. குழந்தமைக்கேய உரிய ஓவியங்களை சுவரில் வரைந்து கொண்டிருக்கிறாள். சுவேதாவின் ஓவியங்களை ரசிக்கும் அவள் அப்பாவிற்கு அந்த ரசனையைத் தாண்டிய பயணம் கைக்கூடவே இல்லை. ஆனால் அதை திட்டிகொண்டிருந்தாலும் அவளின் அம்மா தனக்குள் வளர்த்தோ அல்லது வளர்ந்தோ வரும் இருண்மையை அடையாளம் காண்பதற்கும் அதை ஓவியங்கள் வழியே கலைப்பதற்கும் முடியுமென நம்புகிறாள். குழந்தை இல்லாத வீட்டின் உரிமையாளருக்கு சுவேதாவின் ஓவியங்கள் ஓயாமல் மூளையில் நெளிகின்றன. சுவேதா திட்டமிட்டு ஏதும் புதிதாக செய்யவில்லை. அவள் அவளின் இயல்புக்கு ஓவியங்கள் வரைந்துகொண்டிருக்கிறாள். ஆனால் அவ்வோவியங்கள் அவள் வீட்டின் இயக்கத்தையே மாற்றியமைக்கின்றன. தன் ஓவியங்களின் வழியே அச்சமுறும் வீட்டின் உரிமையாளரின் வீட்டிற்கும் தன் ஓவியங்களால் நட்சத்திர ஒளி தந்துவிட்டே செல்கிறாள். மனித அச்சமடைவதற்கும், வேறு திசையில் பயணிக்கவும் புரட்டி போடும் பெரும் சம்பவங்கள் தேவையில்லை. தான் நம்புவதை, நம்புவது போலவே செய்யும் ஒருவரின் எளிய செயல் போதும்.

மூன்றாவது சிறுமி… கனவில் யானை வரும்போது உடல் துள்ளிக்குதிக்கும் ரிதன்யா.. வாழ்வின் உயிர்ப்பானத் தருணங்களை எல்லாக் காலங்களிலும் குழந்தைகள்தான் பெரியவர்களுக்கு அடையாளம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். அந்தக் கணத்தில் வாழவும் அவர்களிடமிருந்தே பழகிகொள்ள வேண்டியிருக்கிறது. ரிதன்யாவின் கனவில் யானை புகாமலிருக்க சன்னலைச் சாத்தும் அவள் அப்பாவுக்கு தெரிவதில்லை அடுத்த நாள் மயில் வருமென்று. இக்குறுங்கதையில் வரும் கனவு கனவு மட்டுமல்ல. குழந்தைகளின் உலகம் நொடிக்களுக்குள் மாறக்கூடியது எனும் புரிதலை சொல்வதே முக்கியமானது. அந்தப் புரிதலில்தான் அவர்களுக்களுடன் உரையாடல் சாத்தியாகும். தன் குழந்தைகளிடன் உரையாடலை சாத்தியப்படுத்த தெரியாத எந்த மனிதருக்கும் வேறு எந்த மனிதரோடும் எந்த ஒன்றோடும் நிறைவான உரையாடல் சாத்தியமே இல்லை.

நான்காவதாக எப்போதும் பூக்கள் பூக்கிற பாவாடை அணிந்திருக்கும் சலவை தொழிலாளியின் மகள். மத்திய தர வர்க்க/வர்ண வீட்டின் தம்பதியினரில் ஒருவர் மட்டும் அனுமதிக்க அவ்வீட்டிற்குள் நுழையும் அந்த சிறுமியைப் பற்றிய கதை. கதையின் தலைப்பு மொழியறிவு..  இக்கதைக்கான தலைப்பு கதையை விட ஈர்த்தது. அந்த சில ஜாதிகள் அழுக்கோடவே பொறக்குது” என அவன் மனைவியின் மொழியறிவும்,, தேவியடியா ந்னு தன் அம்மாவை அப்பா அழைப்பதை புகாராகவோ, பதிவாகவோ பகிரும் அந்தச் சிறுமி. உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் நேரிடையான அர்த்தத்தில் புழங்குவன இல்லை. அது வலியில், இரக்கத்தில், தாழ்வுமனப்பாண்மையில் என பலவும் கலந்து உழல்கிறன. அவை அழுக்குச் சொற்கள்தான்.

தூய்மையிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது அழுக்குச் சொற்கள்தான். பள்ளிக்குச் செல்ல மறுக்க இந்தச் சிறுமி சொல்லும் காரணம் பெரிய புனைவுலகை நம் முன் விரிக்கிறது. சீரூடை என்பது ஏற்றத்தாழ்வை மறைக்க எனும் சொல்லப்படும் பொதுச்சிந்தனைக்கு மாறாக என் பூக்கள் பூக்கும் பாவாடையை இழந்துவிட செய்யும் என்பதால் பள்ளியை மறுப்பதாக சொல்கிறாள். நம்முள் இருக்கும் கலைஞன் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட நினைக்கையில், சமுக மனிதன் அவளின் சிந்தனையை கண்டு அச்சமுறுகிறான். குழந்தைமையை சிதைக்காத பள்ளிக்காக நாம் காத்திருப்போம்.

கணந்தோறும் மாற்றமடைந்துவரும் அறத்திற்கான விளக்கங்களை  இந்தச் சிறுமிகளின் வழியே பாலா முன்வைத்து உரையாடுகிறார். எவருக்கான அறம் எனும் துணைக்கேள்வி யிலிருந்தே அறத்திற்கான விளக்கங்கள் விரியவும் சுருங்கவும் செய்கின்றன.

பாலாவின் கதைகளில் நெருடலாக எனக்குத் தென்பட்டது அவரது கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள்தாம். குழந்தைகளை அதட்டும் அம்மா, ஓவியம் வரைய தடை சொல்லாத அப்பா, அழுக்கு சாதி என சலவைத் தொழிலாளி மகளை வீட்டிற்குள் அனுமதிக்காத அம்மா  அந்த பேதம் பார்க்காத ஒரு அப்பா, ஒரு இடதுசாரி உறவினர் இறந்த்தை நினைத்து துக்கப்பட்டு சாப்பிடாமல் தூங்கும் ஒருவன், அதே வீட்டில் அவர் இறந்ததை நினைத்து டிவி பார்த்துகொண்டிருக்கும் ஒரு பெண், (விதிவிலக்காக சந்தன எண்ணெய் பார்கவி பாத்திரம்).

குழந்தைமையை அனுமதிக்கிற, புத்தகம் படிக்கிற அறிவுத்துறை சார்ந்த, சாதிய அடுக்கு முறையை உதறித்தள்ளும் எனும் பெருங்குணங்கள் கொண்டவனாக ஆண் பாத்திரங்களும் அதற்கெதிரான நிலையில் பெண் பாத்திரங்களும் உலவுவது பொதுப்புத்தியில் ஊறிபோனதை இன்னும் கொஞ்சம் அழுத்தம் தந்திருக்கிறது என்பதாகவே பார்க்க முடிகிறது. தனது சிறந்த எழுத்துகள் மூலம் தன் அனுபவத்தை வாசகனுக்கு கட்த்த முடிகிற பாலாவால், இடதுசாரி த்த்துவத்தோடு தொடர்ந்து பயணிக்கிற பாலாவல் இந்த இடத்தை வெகுவாக கடந்துவிட முடியும் என்றே நம்புகிறேன்.

நன்றி

–  விஷ்ணுபுரம் சரவணன்

 

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – அறிமுகம் (சீனக் கவிதைகள்)

1

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் –

தமிழில் சீன செவ்வியல் கவிதைகள்,நேரடி மொழிபெயர்ப்பில்.

மொழிபெயர்ப்புகள்: செ.ச.செந்தில்நாதன் (ஆழி பதிப்பகம்)

அறிமுக உரை

வாசகர்களே,

சில ஆண்டுகளாக சீன மொழியைப் படிப்பதும் அதனூடாக சீனக் கவிதைகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதும் எனது அதிவிருப்ப செயல்பாடுகளில் ஒன்றாக இருந்துவருகின்றன. அவற்றை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற வேட்கை அதிகரித்திருக்கிறது. அதன் விளைவே இந்தத் தொடர்.

பேர்ரசிய சீன மரபில் தாங் வம்ச காலம் (கிபி 618-கிபி 907) சீன இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. நமக்கு சங்க காலம் போல. அந்த தருணத்தில் உருவான மகத்தான சீன கவிதை மரபின் பிதாமகர்களின் கவிதைகளை இந்தத் தொடரில் தமிழில் காணலாம்.      து ஃபு, லி பய், வாங் வய் உள்பட பல முக்கிய கவிஞர்களின் பசப்பும் எளிமை கொண்ட கவிதைகளை நேரடியாக சீன மூலத்திலிருந்து மொழிபெயர்க்க நான் எடுத்துக்கொண்ட தருணங்கள் அனைத்தும் கவிக்காம தருணங்களே.

ஒரு செவ்வியல் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது சுலபமல்ல. ஒவ்வொரு கவிதையையும் மொழிபெயர்க்கும் முன்பு அக்கவிதைகள் உருவான காலத்தின் சமூக, கலாச்சார, அரசியல், தத்துவ, கலை மரபுகளைப் பற்றிய புரிதல் வேண்டும். மகாகவிகளின் வார்த்தைகளுக்குப் பின்னுள்ள தத்துவங்களைத் தரிசிக்க நமக்கு இலக்கிய புலமை மட்டுமே போதாது. அக்கவிஞர்களின் வாழ்க்கையையும் படிக்கவேண்டும்.

இப்படித்தான் சில தாங் வம்ச காலம் குறித்து படித்தேன். இதைப்பற்றி சுருக்கமாக எனது டிராகன் என்கிற நூலில் முன்பு எழுதியிருந்தேன், தாங் வம்ச காலத்தின் முக்கியக்கவிதைகளின் ஆங்கில ஆக்கங்கள் பலவற்றையும படித்து முடிந்தவரை பரிச்சயப்படுத்திக்கொண்டேன். கவிஞர்கள் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் சிறப்புக்கூறுகளையும் உள்வாங்கி முதலில் ஒரு வாசகனாக அதற்குள் கரையவேண்டியிருந்தது. பின்பு நெடுங்காலம் அதில் ஊறி, கால தேச பயணங்களினூடாக மனத்துக்குள் அவர்களைத் தரிசிக்கவேண்டும். சம காலத்தில் சீன மொழியின் இலக்கிய, இலக்கணக்கூறுகளின் நுட்பங்களில் ஆழ்ந்துகிடக்கவேண்டும். எப்போது நாம் புத்தனாகமுடியும் என்று சொல்லவே முடியாது.

நல்லதோர் தருணத்தில் மனமும் கையும் பரபரபரக்க நான்கு வரிகளை மொழிபெயர்த்துப் பார்ப்போம். கூடி வராது. ஒரு மகாகவியை அவ்வளவு சுலபமாக சிக்கவைக்கமுடியுமா என்ன? தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிடவேண்டியதுதான். ஆனால் இது சுவையான ஆட்டம். அதற்குப்பின்பும் ஒருநாள் அதே கவிதையை நாம் வாசிப்போம். இப்போது அவற்றின் சித்திர எழுத்துகள் ஒரு ரகசியத்தை நமக்குச் சொல்லும். ஏதோ பிடிபட்டுவிட்டது போலிருக்கும். உடனே  அகராதிகளின் உதவியுடனும் இணையத்தின் உதவியுடனும் எழுத்தெழுத்தாக, சொல் சொல்லாக அநதக் கவிதையை அலசி ஆராய்ந்து பார்ப்பேன். இந்த கட்டத்தைத் தாண்டாமல் மொழிபெயர்ப்புச் சாத்தியமே இல்லை. எந்த செவ்விலக்கிய மொழிபெயர்ப்புக்கும் அம்மொழியின் எழுத்து. சொல், பொருள் புலப்பாடுகளினூடாக பயணம்செய்தே ஆகவேண்டும். சீன மொழியில் விசேஷம் அதன் பொருள் விளங்கும் சித்திர எழுத்துக்கள். இவ்வாறு கவிதையின் அருகே அமைந்திருக்கும் எல்லாக் காரணிகளையும் பிய்த்தெறிந்து ஒரு குரங்காக அதன் மீது ஆடினால்தான் சற்றே விளங்கிக் கொள்ளமுடியும். பிறகு கவிதையின் எல்லா இரைச்சல்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு,. அவற்றினூடாக காதை மேலும் கூர்மையாக ஆக்கி மனம் ஓர்மைப்படுத்தினால், கவிதை ஆத்மாவின் நுண்ணொலியை செவிமடுக்க நேரிடலாம். அந்த ஓர் கணத்தில், சில நிமிடங்களி்ல் மொழிபெயர்ப்புப் பணி முடிந்துபோய்விடும். முன்னாட்டமும் புணர்ச்சியும் போல.

இப்படித்தான் சீன செவ்வியற் கவிதைகளை நான் அனுபவித்து வருகிறேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

 

– செ.ச.செந்தில்நாதன்

(அடுத்த பகுதியில் இருந்து கவிதைகள், இனி ஒவ்வொரு வாரமும்)

கனவு மிருகம் – விமர்சனம் – வேல்கண்ணன்

0

கனவு மிருகம் – சிறுகதைத் தொகுப்பு

முன்பெல்லாம் நண்பர் கரிகாலன் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் 2 நிமிடங்கள் கண்டிப்பாக பாலசுப்ரமணியத்தின்  எழுத்துகளை பற்றி பேசிவிடுவார். ஒரு சந்தர்ப்பத்தில் நானும் சதுக்கத்தில் சற்று இளைப்பாற வேண்டி இருந்தது. அத்தனை நாள் நண்பனின் பேச்சு கேளாமைக்கு வருந்தினேன். அதில் முதலில் நெருக்கமாக உணர்ந்த எழுத்து எழுத்தாளர் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவலுக்கு எழுதுப்பட்ட கட்டுரை. (http://www.sadhukkam.blogspot.in/)

இரண்டாவது : நள்ளிரவுக் கோரிக்கை. அதில் சில வரிகள் :
“இசையும் ஓர் உடல்
நீதி செய்வதே இன்னொரு உடலுக்கு மற்றொரு உடலின் சடங்கு
பொங்கவே செய்யும் நீரற்ற ஊற்றுகளும்
கேட்டறிய முடியா நாசித்துவாரங்களின் மூச்சொலியென
கோடை ஓர் உடல்”

“பருவம் தப்பி இடம்பெயர்ந்த பறவை
நீரற்ற நிலைகளில் புழுக்களுமில்லாத வெடிப்புகளைக்
கண்டு மலைத்து
விண் அகல் ஒவ்வொன்றிடமும் வேண்டிநின்றது”
இப்படியாகத்தான் நவம்பர் 2 2012 ல் இருந்து பாலா விற்கும் எனக்குமான பாலம் தொடங்கியது.

னவு மிருகம் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த, பல நிகழ்வுகளை நினைவு படுத்திய, தொடர்பு படுத்திய கதை “இருள் திரவம்” என்னும் சிறுகதை தான். பாலா எழுதத் தொடங்கிய பின்னாட்களில் அதாவது இறுதியாக எழுதிய கதைகளில் ஒன்றாக இருக்ககூடும் என்று எண்ணுகிறேன்.

இந்நாட்களில் எத்தனை பேருக்கு தனிமை- கவிதையால், ஓவியத்தால், இசையால், இலக்கியத்தால் நிரப்பபடுகிறது என்று தெரியவில்லை. உலகின் மகா உன்னதமான இலக்கியம் உருவாகுவதின் பின்னணியில் ஒரு தனிமையும்  இருப்பதை நாம் அறிவோம். அப்படியான தனிமை இன்றைய சூழலில் இருக்கிறதா? இந்த கதையில் வரும் ரகுநந்தனின் தனிமைப்படுத்தலுக்கான (கவனிக்கவும், தனிமை அல்ல-தனிமைப்படுத்தல்) காரணம் நகர சந்தையின் கூறுகள் தான் என்றாலும்  அது மிகையாகாது. இன்றையப் பெருநகரங்களில்  பல இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ இன்று இருக்கும் நிலைமைதான். இவர்களின் தனிமையை முழுதாக ஆக்கிரமித்து கொள்வதும்  தட்டிப்பறிப்பதுமாக பின்னணியில் செயல்படுவது தகவல் தொழில் நுட்பம் தான் என்பது இந்த கதையில் சொல்லப்படுவதாக  நான் பார்க்கிறேன்.

ஒன்றுக்கு ஒன்று முரணா தகவல்களை அளிப்பதில் தனியார் தொலைக்காட்சிக்கு சளைத்தவை அல்ல இணையமும். MASS Media எனப்படுவது ஒரு கற்பனைக்கு எட்டாத Global நெட்வொர்க். அந்த நெட்வொர்கில் சிக்கத் தவறியவர்கள் குறைவே. தனிமனித கோபமும் சிந்தனையும்  தானே விடுதலைக்கான வழி. ஒரு இளைஞனின் தனிமை தன்னை தன் சமூகத்தின்அவலங்களை உணரவைத்துவிடுமோ என்கிற அச்சத்தில் அத்தனிமையை உடைக்கப் பாடுபடுவதில் எல்லா தேசங்களுக்குள்ளும் உலா வரும் ஒற்றுமையை இணையத்தில் காணலாம். தனிமனிதனேயே இல்லாமல் செய்துவிடுவதும் இதனுடைய குறிக்கோள்  ஆகும். கதை சொல்லும் நேரத்தை மாற்றி மாற்றி ரகுனந்தனின் மன நிலைக்கு ஒத்து சொன்னவிதம் சிறப்பு என்றாலும், இன்னும் கூட தெளிவாக குழப்பியிருக்காலம். கதையில் Lift ஐ சவப்பெட்டியாக நினைத்து பார்ப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை வெறும் குறியீடு மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது.

அடுத்தது எனக்கு பிடித்த கதை :
சந்தன எண்ணை –   இந்த கதையில்  4, 5 வது பகுதி படிக்கும் போது
பாலகுமாரன் நினைவிற்கு  வரத்தொடங்கிவிட்டார். நல்லவேளையாக அந்த விபத்து தொடரவில்லை 6 வது பகுதியுடன் முடித்திருக்கிற வேண்டிய சிறுகதை இது. அப்படி முடித்து இருந்தாலும், “பார்கவியின் மேல் வேணு கோபாலுக்கு என்ன மாதிரியான அக்கறை பாரு” என்று யாரேனும் “கரை அப்பி” விடும் அபயாம் இருப்பதை உணர்ந்த  பாலா 7 வது பகுதியில் பார்கவியின் முடிவைத் தெளிவாக சொல்ல வேண்டி இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் 7வது பகுதியில் வரும் சில  வரிகளில்  ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். இதை நீங்களும் இந்த நெருக்கத்தை உணர்விர்கள் என்று நம்புகிறேன். அந்த வரிகள். “விதியை குறுஞ்செய்திகள் முடித்து வைக்கும் காலம்.” இங்கே பலரின் விதியை ஆரம்பித்து வைப்பதும் அதே குறுஞ்செய்திகள் தான்.

எதிர்பாராதது நடப்பது தான் வாழ்வின் இயல்பு என்றாலும் ஒரு விபத்தில் தீடிரென்று வீட்டின் ஆண்களை இழக்க நேரிடும் பெண்களின் நிலைமை சொல்லும் முள் என்ற சிறுகதையில் போகிற போக்கில் இப்படி சொல்லி செல்கிறார். “எதிர்வீட்டின் வாசற்படியில் தெரிந்த இரு கண்கள் இனி எப்போதும் அந்த வாசலில் நேரும் அசைவுகளைப் பார்த்தபடி வீட்டிற்கு வெளியே நீதிமன்றங்களின் சாட்சியாய் இருக்கும்” அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கூட இப்படி போகிற போக்கில் சில விஷயங்களை ‘பஞ்ச்’ வைத்து விட்டு செல்வார்.

மேற்கண்ட எனது பார்வையில் பாலசுப்ரமணியத்தின் சிறுகதை குறித்து மட்டும் எனது பார்வை வைத்தது எனது குறைபாடாகவே/போதமையாகவே நான் கருதுகிறேன். இதற்கும்  மேலாக பாலா மொழி, இசை, ஓவியம், சிற்பம், பொருளாதாரம், தேசியம் அரசியல், உளவியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்து இயங்கும் தளம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பெரியது. அதனை அதன்  போக்கை இங்கே குறித்த நேரத்தில் வடித்து விட முடியாது. பாலாவின் கவிதை வரிகள் இங்கே நினைவிற்கு வருகிறது.

//அது ஒரு கோப்பை
நிரம்பவே நிரம்பாத கோப்பை//
இது போல் தான் பாலசுப்ரமணியத்தின் படைப்புகள் பற்றி பேசுதலும் நிரம்பவே நிரம்பாத கோப்பை.
நன்றி

கனவு மிருகம்
ஆசிரியர்: பாலசுப்ரமணியம்
வெளியீடு : பாதரசம் பதிப்பகம்

 வேல்கண்ணன்

 

“என்று தானே சொன்னார்கள்”- வாசகப் பார்வை

0

வலிகளின் வழி பயணம் – மகிழ்ச்சி

அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணமும் வலியோடு தான். வலை போல் நம்மைச் சுற்றிப் பின்னி பிணைந்துள்ளது. அந்த உணரப்பட்ட வலிகளை தான் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் சாம்ராஜ். ஒரு கால்பந்தின் முழுமை என்கிற கவிதை -‘குப்பை பொறுக்கும் சிறுவர்களின் / வசவுகளுக்கும் தொடுதல்களுக்கும் ஏங்குவதுண்டு’, படிக்கும் பொழுது, பந்துக்கும் உயிர் கொடுக்கும் கற்பனை -அழகு. முதல் கவிதை, கால்பந்து பற்றி சொன்னாலும் , நமக்கு என்னவோ வாழ்ந்து கெட்ட ஒரு மாமனிதன் பற்றி சொல்வது போல் உள்ளது. ஏக்கமுடன் வாழும் அவனுக்கு தென்றல் போல் யாராவது வந்து நம்முடன் உரையாட வர மாட்டார்களா? என்ற ஏக்கம் உள்ளதாகவே படுகின்றது.

சாம்பல் வடிவில் உள்ள பிதுர்க்கள் கரைய, நீர் பகுதிகளோ அன்றாட வாழ்வின் நவீன மோஸ்தர்களில் வாழ்ந்து கொண்டு உள்ளது. நாயும் மனிதனும் இணைந்து, காலை நடை பயிற்சி மேற்கொள்வது தினசரி காலை நாட்காட்டி கிழிப்பது போல்தான், நாயோ மனிதனோ யார் குணங்களை யார் கொண்டு வாழ்கின்றனர் என்பது புதிர். இதை நன்றாகவே பகடி செய்து உள்ளார். போலி பொதுவுடமைவாதிகள் பற்றி தோழர் தயாளன் வழியாக தெளிவு படுதிகின்றார். உலகமயமாக்கல் விதிகள் எப்படி நம்மை சிதைகின்றது என்பது பற்றி, ‘மேற்கின்..’என்று ஆரம்பிக்கும் கவிதையும், ‘சங்கறுப் …’ என்று ஆரம்பிக்கும் கவிதையும் அப்பட்டமாக சொல்கின்றது.

பெண்களின் அவல நிலை பற்றி, ‘கறை, ‘சித்ரா..’, ‘அவள் நைட்டி..’ போன்ற கவிதைகள் செப்பும் பொழுது நம் மனமும் சேர்ந்து வலிக்கின்றது. ஆண் பூனைகள் கவிதை தீவிரவாதிகளின் சோகத்தை சொல்கின்றது. அதே சமயம் ஜனநாயக வழியாக இயங்கினால் இத்தொல்லை இருக்காதே என்ற சிந்தனையும் எழுகின்றது. நாதள்ள தொங்கும் புளியமரங்கள், ‘இப்பொழுது தங்கநாற்கரசாலை.. / தூத்துக்குடி வழி கொழும்பிற்கு’ என வாசிக்கும் பொழுது உலகமயமாக்கல்.  சரித்திர து(தூ)க்கத்துடன் கட்டபொம்மனின் தூக்கு கொழும்புடன் உள்ள வியாபார தொடர்பு என நம் பார்வைகள் சுதேசி உலகில் இருந்து விலகி செல்லும் நடைமுறை பாதை,  மனதில் வலியை அன்றைய கட்டபொம்மன் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தூக்கில் இடப்பட்டான். ஆனால் இன்று அவன் நினைவிடமோ பாலத்துக்கு கீழ். மேலே, ஆங்கில எழுத்துகளுடன் கன்டைனர்கள் விரைகின்றன. பாவம் கட்டபொம்மன்”, “நாதள்ளத்…” என்ற கவிதை இக்காட்சியை படம் பிடிகின்றது. அனைத்தையும் தீர்மானித்த கீதாசாரமும் உலகமயமாக்கலும்,  மனிதனின் மதியத்தை எப்படி கடப்பது என்பதை தீர்மானிக்க இயலவில்லை. மூட்டுவலிக்கு ஆறுதலாக இருக்கும் பீங்கான் காளான்கள் வழியாக சங்கறுபவர்கள் அருகிவருகிறார்கள். இவர் கவிதை வரிகள் நமக்கு மேலே கூறிய கருத்தை தெளிவாகவே காட்டுகின்றது. அனந்தசயனபுரியும் மன்னருக்கு குறி காட்டுபவர்களும் கவிதைகள் அன்றைய நிலையையும் இன்றைய நிலைமையும் சித்திரமாக சொல்கின்றது.

குறுக்கு வழியில் கடப்பவர்களால் நதிபுராணம்,  தண்ணீர் வற்றியதை சொல்கின்றது. நம் மனமும் கண்ணீரால் கரைகின்றது. நியூட்டனின் மூன்றாவது விதி, வரவேற்பறையில் மார்க்ஸ்சிய../பூஜை…என்று படிக்கும் பொழுது இன்றைய நவ பொது உடமை தோழர்களின் குழப்பம். இருப்பினும், பொதுவுடைமை நோக்கி நகர்தல் என்பது சரிதான். பின் மெல்ல, மெல்ல வாழ்வின் ஒவ்வொரு கணமும் துயரப்படும்போது மகிழ்ச்சி எப்படி? துயரத்தின் காரணத்தை சிந்தித்தால் மகிழ்ச்சியின் வெளிச்ச கீற்று நம்மை வருட ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் வாழ்க்கை துயரம் “என்று தானே சொன்னார்கள்” ஆனால் சாம்ராஜின் கவிதைகள் நமக்கு வாழ்க்கை என்ற பாடத்தை மகிழ்ச்சிக்கு அல்லவா இட்டு செல்கிறது .

புத்தகத்தின் தலைப்பு : என்றுதானே சொன்னார்கள்
எழுதியவர் : கவிஞர் சாம்ராஜ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : ரூபாய் நாற்பது

 

—பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்

அமெரிக்க கனவு

0

அமெரிக்க கனவு

 – பாலசுப்ரமணியன்.
Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு
2. Wikileaksல் வெளியான அமெரிக்க தகவல் இரகசியங்கள்
3. அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார மந்த நிலைஇதன் மூலம் சோவியத் ரஷ்யாவிற்குப்  பின் உலகை ஒற்றைக் குடைக்குக் கீழ் கொண்டுவரும் அமெரிக்க கனவு பெரும் பின்னடைவை சந்தித்தது.  ஆனாலும் இன்றும் அமெரிக்காவும் அதன் நகரங்களின் பெயர்களும் அந்நாட்டிற்கான விசாவும் இந்தியா போன்ற நாடுகளில் ஈர்ப்பு மிக்கதாக இருக்கக் காரணம் இந்நாடுகள் அமெரிக்காவை நகல் செய்து அதற்கொரு அசல்தன்மையை(Originality) உருவாக்குகின்றன.  அமெரிக்க வழிதான் செழிப்பிற்கான பாதை என்கிற தோற்றத்தை இந்த நகலாக்கம் ஒரு நம்பிக்கையாக மாற்றிவிட்டது.

ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் சமூக ஜனநாயக கொள்கைகளின் மாதிரிகளைக் கூட பின்பற்ற முயலாத வண்ணம் ஐரோப்பிய அரசுகளே அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் 3.0 இந்தியா மற்றும் சீனாவில் நம்பிக்கையையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிர்வையும் உருவாக்கி இன்று வரையிலும் மீட்பின்றி சந்தையெனும் கர்த்தாவின் இன்னொரு அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம் 3.0 முக்கிய குணாம்சங்களில் ஒன்றான நிச்சயமற்ற நிலைமை  தனிமனித வாழ்வு மட்டுமின்றி, பொருட்களின் வாழ்வு மற்றும் நிறுவனங்களின் வாழ்வையுமே அன்றாட சவாலாக மாற்றியது.  இம்மூன்றின் பெருக்க வடிவமான நாடுகளின் அரசுகள் கூட இந்நிலைமைக்கு எதிர்வினையாக குடிமக்களின், சுற்றுச் சூழலின் அடிப்படை கட்டமைப்புகளைக் குலைத்து வெளிப்படுத்துகின்றன.  மத்திய தர வர்க்கத்தின் பொருளீட்டு சக்தியை அதன் சொத்து மதிப்புகளை உயர்த்துவதற்கான விதிகளைத் தவிர  எதன் பொருட்டும் சிந்திக்கத் தயராகாத மூளையாக, நலத்திட்டங்களை ஒரு சுமையாகவும் அத்திட்டங்களால் பயன் பெறும் குடிமக்கள் தொகுதியினை முன்னேற்றத்திற்கு தடையாகவும் கட்டமைக்கின்றன.

இந்தியா எப்போதுமே நெருக்கடியில் வாழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பல தேசங்கள், வர்க்கங்கள் உண்டு. ஆகையால் அமெரிக்காவை நகல் செய்யும் இந்தியாவின் நெருக்கடிக்கு ஏனைய இந்தியா கொடுக்கும் விலை மிக அதிகம்.

பூர்வ குடிகளை ஒழித்து ஐரோப்பிய உபரிகள் ஒரு அமெரிக்காவை உருவாக்கினர் என்றால் இந்தியா அதன் பூர்வ குடிகளையே (பழங்குடிகள், வறிய தொழிலாளர்கள், விவசாயிகள்) ஒழித்து உருவாக்கும் அமெரிக்க நகல் அதன் குறியீட்டு வீழ்ச்சிக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.

 

பாலசுப்ரமணியன்

http://sadhukkam.blogspot.in/

நறுமுகை தேவி கவிதைகள்

2

1.

 

 

 

 

 

 

மாநகரும் 4ரூபாய் நாணயங்களும்

 
மாதக் கடைசி இன்னும் சம்பளம் ஆகவில்லை
அலுவலகம் சென்றேயாக வேண்டும்.
கையில் இருப்பதோ 4 ரூபாய் நாணயங்கள்
புறப்பட்டு வெளியே வருகையில்,
பிசுபிசுப்பாய் உணர்ந்தேன்.
அவசரமாய் நாப்கின் தேடுகையில்,
தீர்ந்து போயிருந்தது.
அவசரத்திற்கு பழைய துணியைத் தேடிக்
கிழித்தேன்.

லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில்,
நின்றிருந்த போது பழக்கமில்லாததால்
உள்ளே நழுவுவது போல சிக்கலாயிற்று.
எதிரேயும்
ஒரு வாலிபன் என்னை சைட் அடித்துக்
கொண்டிருந்ததைப் பொருட்படுத்தக் கூடவில்லை.

வந்த பேருந்தெல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகள்.
4ரூபாய்க்கும் அதிகக் கட்டணம்,
சொகுசுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.
வேண்டுமென்றே அவற்றைத் தவற விட்டேன்
அருகில் நின்றிருந்தவர்கள் விசித்திரமாகப் பார்க்கத் துவங்கினர்

உள்ளில் நழுவல் அதிகரித்ததை பீதியுடன் சமாளித்தேன்
அனத்தியபடி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி விட்டேன்.
அத்திப்பாளையம் பிரிவுக்குப் பயணச்சீட்டு எடுத்துக்
கிடைத்த இருக்கையில் அமர்ந்தாயிற்று.
செல்ல வேண்டிய பாதையில் இருந்து
சின்னவேடம்பட்டிச் சாலையில் வண்டி திரும்பியது.
அதிர்ந்தேன்..நடத்துனரை அழைத்து
அத்திப்பாளையம் என்று பயணச்சீட்டெடுக்கையில்
அந்த வழியில் போகாதென
ஏன் சொல்லவில்லை? என்று சீறினேன்
அவரோ பேந்தப்பேந்த விழித்தார்
வண்டியில் இருந்து இறங்கி நின்றேன்

கையில் காசில்லை
உள்ளே வைத்திருந்த கந்தலோ
படக்கென கழன்று விழுந்தது
என் தன்னம்பிக்கையும் கூட…..

——————————————————————————————–
2.

 

 

 

 

 

 

 

திரும்புதல் இல்லாத ’திருப்புதல்

———————————————————-

உங்களுக்கும் எனக்குமிடையே தான் எத்துனை
திருப்புதல் தேர்வுகள்?
முதலாம் திருப்புதல் தேர்வில்,
எனக்குப் பாடங்கள் புரியவில்லை,
அடிக்கடி கதவோரமாய் நிறுத்தி
சோதனைகளுக்குட்படுத்தப்பட்டேன்.
இறுதியில்,
விசும்புதல்களுக்கு
மதிப்பெண் இல்லையென்று
நான் தோற்கடிக்கப்பட்டேன்.

இரண்டாம் திருப்புதல் தேர்வில்
உங்கள் பச்சை நிறப் பொத்தான்
கண்டுகொள்ளப்படாமல்
காயடிக்கப் பட்டதில்
நீங்களாக உங்களை என்னிடம்
ஒப்புக் கொடுத்தீர்கள்.

இது மூன்றாம் திருப்புதல் தேர்வு.
மறைக்கப்பட்ட பாடங்களில் இருந்தும்,
வழங்கப்படாத விடைகளிலிருந்தும்,
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்….
இப்போது என்னிடம்
கேள்வித் தாள்கள் மட்டுமே இருக்கின்றன.
விடைத் தாள்கள் வழங்கப்படவில்லை,
நீங்களோ எனக்கு மதிப்பெண் வழங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.

கடைசியில்,
சிவப்பு நிற மையில் அடர்த்தியாய்
எழுதுகிறீர்கள் ”அனைத்துப் பாடங்களிலும் கவனம் தேவை” என்று….
இது திருப்புதல் தேர்வா?
திரும்புதல் தேர்வா?

நறுமுகை தேவி

“அந்தர மீன்” – விமர்சனம்

0

தேவேந்திர பூபதியின் “அந்தர மீன்” – விமர்சனம்

 (யாவரும்.காம் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் வாசித்த ஜீவ கரிகாலனின் கட்டுரை)

 

இத்தொகுப்பினை வாசிக்கையில் எந்தப் பள்ளத்தாக்கிலும் வீழ்ந்துவிடாமல் பயணம் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தாலும், நான் கடல் மட்டத்தின் கீழே இருக்கும் உலகில் தான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்பதை தாமதமாகத் தான் உணர்ந்தேன், இப்போது எனக்கு மேலே தான் அந்த அந்தர மீன் தெரிகிறது. மெதுவாய் கவிஞரின் இத்தொகுப்பில் பிரதானமாக நான் காண்பதெல்லாம் ஒரு தனிமைத் துயரின் அகயிருப்பும், அறிவிற்கும் புறத்தே அல்லது கடந்திருக்கும் தீராத தேடல்களுமாக இரு கோடுகளாய் ஒரு தண்டவாளம் செல்கிறது. இவற்றை இணைக்கும் கற்களாக காதல் நினைவுகள், முத்த உஷ்னங்கள், பார்த்துச் சிலிர்க்கும் பயணங்கள், இயற்கையில் மயங்கும் புவியீர்ப்பு, கடந்தேயாக வேண்டிய புறவாழ்வின் துன்பங்கள் என ஒரு நெடிய பயணத்தை ஒரு வாசகனுக்கு தருகின்றன. ஆனால் இந்த பயணம் சலனமற்று இருக்கிறது.

புவியின் வெற்றிடம் புயலால் நிரம்ப,
அகத்தின் வெற்றிடம் கலையால்.

சலனமற்று இருப்பதால் அந்த நிசப்தம் புலன்களைச் சேராமல் போய் விடுமா என்ன? , முதல் கவிதையில் வரும் ஜன்னலின் சலனங்கள் அப்படித்தான் இருக்கிறது ! அவர் தன் வீட்டு வாசலில் நின்று யாரையும் வரவேற்க காத்திருந்தாலும், அவரின் சன்னல்கள் தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன, அதில் சில பலத்த தட்டல்கள், சில கீறல் சப்தம், சில சின்ன சுண்டிவிடும் ஒலிகள் கூட அவருக்கு பேரிரைச்சலாக இருக்கின்றது, அவர் தனிமையை முன்னிருத்துகிறது. தனிமை இருந்துவிட்டால் அப்படித் தான் நிசப்தமே காதை பிளக்கும் வாதையாக இருக்கும். ஒரு கதவைத் திறந்தும், மறு கதவையும் மூடியும் நீள்கிறது அந்த இரவு.

கவிஞரின் காதல் சில நேரம் அவருக்குப் பேருவகையாக இருக்கிறது, அது பழம்பெரும் பாடல்களையெல்லாம் கொண்டு வருகிறது, பின்னர் துரோகத்தின் நினைவாக அவளை மறக்கத் துடிக்கிறது, அது தோல்வியின் தழும்பாக மாறும் முன்னே முதலில் விருந்தளிக்கிறது பின்னர் அவரை கவிதை எழுதச் சொல்கிறது வார்த்தைகளை விரவி தேவையான சொற்களை மட்டும் பொறுக்க சொல்கிறது, சிலவற்றை ரகசிய கேப்சூல்களாக மாற்றிவிட்டு கவிகளில் இருந்து மறைத்துவிடுகிறது.

உனக்குப் பதில் ஒரு புறாவைக்
 காதலித்திருக்கலாம்
 துரோகம் என்றே வைத்துக்கொள்
 நீ கூட ஒரு மன்னாந்தையைக் கொஞ்சலாம்
 என்று புழுங்கிடும் ஒரு காதலனாகவும்

 “ காதலின் பெரும் பாடலொன்றில்
  கவிந்திருக்கும் என் மோனம்
  பிறிதொரு சமயம்
  இடமாற்றம் கேட்டு என் முன்
  நிற்கும் சிப்பந்தியிடம் சொல்கிறேன்
  உன்னை இழப்பது எவ்வளவு துக்ககரமானது” என்று காதலில் உள்ள உறவு எனும் புதிரில் விடை தெரியாத நிலையில் நம் நினைவுகளையும் தட்டி எழுப்புகிறார்.
மற்றொரு கவிதையில் உலகயியக்கங்களில் தன் அகத்தொடர்பை அறுத்துவிட்ட ஒருவனாய் சில பெண்களை பார்க்கிறார், அவர்கள் அன்பற்றவர்களாகவும், பல ஆண்களைக் கடந்து வந்தவர்கள் போலவும் இயங்கினார்கள்.“சில அடிகளுக்குப் பின்னால் தொடர்ந்தவன்
 நிலவொளியில் மிக மெதுவாக
 ‘கராமி’ என்று அழைக்கிறான்
இந்த அழகுக் கவிதையில் இந்த வரிக்கு பின் அவள் என்னவெல்லாம் செய்திருப்பாள் என்று எண்ணிப் பார்த்தால்?? !!
*அதற்குப் பின்னால் அவள் வேறெங்கோ செல்வதும்,
*அவன் அழைப்பதை கவனித்து அவன் அருகில் வந்திருக்கலாம்,
*இல்லை அவள் வேரொருத்தியாய் இருந்திடும் சம்பவம் கூட வந்துவிடலாம்.  ஆனால் “கராமி என்று அழைத்ததிலேயே கவிதை முற்றிற்று,

உலகிலுள்ள ஒரே ஒரு சுதந்திரம் காதல்தான். ஏனென்றால்சமுதாய சட்டங்களையும்இயற்கையின் விதிகளையும் மீறச் செய்து உயிரை மேலுயர்த்துவது அது ஒன்றுதான்” என்று சொன்ன கலீல் கிப்ரானாக இந்த கவிதையில் அவர் தன்னை பாவித்ததை இப்போது உணர்கிறேன். ஒருவேளை அவளும் கிப்ரானை அறிந்திருந்தால்??(ஒரு நல்ல காதல் நாவலுக்கான தங்க முடிச்சு இங்கே சுருண்டுக் கிடக்கின்றது). பின்னொரு கவியில் தன்னைக் களைந்த காதல் விளையாட்டில் தோற்றுப்போனது தான் மட்டும் அல்ல என்பதை, அவள் தன் சீட்டாட்டத்தில் கைவிட்டுப் போன ரம்மியை இழந்துவிட்டதைக் கொண்டு தன்னை இழந்தது போலச் செய்கிறார் கவிஞர் .

காதல் – நிலம் தவிர்த்த மற்ற கவிதைகளில் இந்த கவிஞரின் மொழி சிக்கலற்ற சிக்கலைக் கொண்டுவருகிறது. ஆம், எளிய வார்த்தைகளில் சொல்லிப் போகும் அநேகக் கவிதையில் மந்திர வார்த்தைக்கான தவமோ, பிரயர்த்தனமோ இல்லை, ஆனால் அதன் பௌதிக இயல்பின் பின்னால் மறைந்திருக்கும் உளவியல் பிம்பங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கவிதைகளில் வரும் மீனும், கனவும் நவீன ஓவியங்களின் வண்ணங்கள் போல் இருக்கிறது, ஆம் சில ஓவியங்களில் வலி, காமம், பசி போன்ற உணர்வுகள் வெறும் வண்ணமாக ஊற்றியிருப்பது போல் மீன் என்ற பதம் அந்தரத்தில் தொங்குவதாய் சொல்லும் இடத்தில் (பக்கம் 20) இங்கே அந்தர மீனாக மனிதனின் தவிப்பை உணர்கிறேன், அந்த தவிப்பு துள்ளிக் குதித்தலில் முடிந்து விடத் தான் வேண்டும், அப்படித் தான் முடிந்தும் விடுகிறது. ஆனால் துள்ளிக் குதித்து விழுந்த பின்னும் தவிப்பு மட்டும் அந்தரத்திலேயே இருக்கிறது. அது மறுபடியும் எம்பிக் குதிக்கச் செய்யும்…. தொடர்ந்து கொண்டே இருக்கும்.
காதல் என்ற வெளியைக் காண துள்ளிக் குதித்து விழுந்தது மீன்,
வானம் பார்த்த மீன் கீழே விழுந்தது- அதன்
தவிப்பு மட்டும் காதல் வெளியில் உறைந்தது,
மீன் வேறு மீனின் தவிப்பு வேறு அல்ல,
என் காதல் தான் “அந்தர மீன்”…. என்று அந்தர மீனாய் அந்தரங்கமாக சிலாகிக்கவும் வேண்டியிருக்கிறது.


இவரது பயணங்களாக வெறும் கவிதைகளை நான் சிலாகிக்க ஒரு காரணம், தமது பணி, கிடைத்திருக்கும் வாய்ப்புகள் வாயிலாக தன் கவிதைகளில் ஒரு சிங்கப்பூர் மது விடுதியையோ, இல்லை ஏதாவது அரசு விடுதிகளில் கிடைத்த ஓய்வையோ, அல்லது தம் நெடிய பயனத்தில் பார்த்திருக்க வாய்ப்பிருந்த காஷ்மீர் ஆப்பிளையோ இல்லை அதை விற்கும் பெண்களையோ தம் கவிகளில் பதிந்திடாமல், தமது சக்கரத்தில் சுருண்டு கொண்டிருக்கும் பயணத்தை எல்லாம் நகரத்தை தொலைக்கவே விரும்புகிறார் அவர் பதிவதும் கூட கண் திறக்காத வாத்துக் குஞ்சையும், தென்னையில் பூத்திருக்கும் கொக்கையும், காரின் கதவுகளை முட்டுவதாய் தோன்றும் கடந்து வந்த ஆடுகளையும், உடன் பயணிக்க வேண்டிய பெண்ணின் வெற்றிடத்தையும் தான்.

 “ திரும்புவதெனில்
   போய்ச் சேரும் இடமா
   வந்து சேரும் இடமா?
   பூமி சுற்றும் போது
   சாலை எந்தத் திசையில் நகரும் ?அவரது பயனத்தில் அடுத்த தலைமுறையின் வாழ்வு இந்தக் கோடையில் எப்படியிருக்கும் என்று தான் சேமித்து வைத்த தண்ணீர் குடுவை வழியாக வாழ்வைப் பார்த்து கொண்டே வலம் வருகிறார். சோற்றுக்காக தன் இடத்தை மாற்றிக் கொண்ட சிங்கமும், அதன் எஜமானனும் சேர்ந்து எழுப்பிய கரகோஷம் நேஷனல் சர்கஸில் கேட்கின்றது, வாழ்வின் மிகப்பெரிய பலவீனம் பசியா? காமமா? 

அவரது பணிச் சூழலோடு வரும் கவிதைகளிலும் முதலில் பாதிப்பது அவர் காதலே, இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் பணி என்பது கூடுதல் வலியாகிறது, தன் சிப்பந்தியுடனே தன் காதலைப் பற்றி பேசுகிறார். அவளை சந்திக்கும் எத்தனிப்புகளில் எல்லாம் அலுவலக தணிக்கை நேரங்கள் வந்து விடுகின்றன. ஆளுக்கு ஒரு சொல் வைத்திருக்கும் உலகில் தம்து சொற்கள் எங்கேயே மறைந்து கிடைப்பதாய்ச் சொல்கிறார். தமது அலுவல்களில் மறைந்துவிடும் சொற்களை, தம் கவிதைகளுக்கு கொண்டுவராமலும் பார்த்துக் கொள்கிறார். அவர் வீடுகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன, சதா இடமாற்றமாகிக் கொண்டிருப்பதால் எல்லாமுமே தற்காலிகமான முகவரி ஆகின்றன என்றாலும் தம்மை யாவரும் இந்த நகரத்தில் எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கவே செய்கிறது என்று எண்ணினாலும்,

 “எப்படி நகர்ந்தாலும் ஏதேனும் ஒன்று,
  மையத்தில் நிற்கும்போது நிகழ்வதுதானே
  தற்காலிகமாகிறது?? பதிகிறார். இடம் மாறும் பறவைகளில் தனது தவிர்க்க முடியாத இழப்புகளை சொல்கிறார் அதில் வலி கனத்திருக்கிறது.

கவிதைகளை நுகர்வு மட்டும் செய்யும் வாசகனின் பண்பு ரசனையைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? படிமங்கள், குறுக்குவெட்டுத் தோற்றம், நவீனத்துவம், காட்சி சித்தரிப்புகள் போன்ற எதனையும் விட ஒரு வாசகனுக்குப் பிரதானம் ரசனை தானே!! ரசனை ஒன்று தானே எல்லா இயங்களையும் தாண்டி பல்லயிரம் ஆண்டுகளாக கலையின் மாறாத எதிர்வினை.

இத்தொகுப்பில் சில கவிகளில் வரும் காட்சிகள் கண்ணில் வந்து ஒட்டிக் கொள்கின்றன, அல்லது நம் பார்வையாக இருக்கும் கோணத்தில் சில காட்சிகள் வருவது. கடைசிக் கவிதையான மாடு மேயும் பரப்பில் வரும் வட்டங்கள், கயிற்றில் கட்டிய பசுவிற்கு அனுமதிக்கப் பட்ட வட்டம், அதனுள் தன்னால் வாழ முடிகின்ற வட்டம் அதாவது அதன் மையம் விலகாத தன்மை, பசுமாட்டின் பார்வையில் இருக்கும் வட்டம், அதன் வால் சுழித்துக் கொண்டிருப்பதால் அமைந்த வட்டம் என மையம் குறித்துப் பதிவிடுகிறார். “செயல் மையமாகின்றபோது எல்லாம் நடக்கிறது அதுவே கவிதையை ஆகச் சிறந்ததாகிறது, ஒவ்வொரு வட்டமுமே தத்துவமாகிறது.

அத்துவான வெளி எனும் கவிதையில் வரும் கிராமங்களில் இருக்கும் மனிதர்களின் துயர வாழ்வோடு சம்பந்தமிருக்கின்ற சிறுதெய்வங்களின் இன்றைய நிலையை சொல்கிறார் எந்த ஒரு வருமையிலும் மாடன் பெரும்பசியாற்றிவிடுகிறான், நல்ல தங்காள் இன்னும் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொண்டே இருக்கிறாள், சாமியாடும் மாரியாத்தக்களுக்கு டைம் கீப்பரா??? மறுபடியும் கிராமம் சென்று அதைப் பார்க்க வேண்டும்.

வாழ்வுதனில் எல்லொருக்குமே இருக்கும் ஒரு நிலையாமை நம்பிக்கையாகவும், அவநம்பிக்கையாகவும் மாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த நிலை/அநிலை எனும் கவிதையில் மனதுடன் உருவகப் படும் குரங்கும், அதன் சொற்களும் மாறி வந்து ஊஞ்சலாடிக் கொண்டே நிலைத் தன்மையின், நிலையாமையைச் சுட்டிக் காட்டுகிறது. என் மனமோ குரங்கின் பிம்பமாய் பிம்பமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கவியாக “காட்டிக் கொடுத்தல் வருகிறது, அதனை வாசித்தலை விட வேறு என்ன சொல்வது ? (பக்கம் :32).  ஒரு மனிதனாக நாம் எப்போழுதும் பூமிக்கு நம்மால் முடிந்த ஊறுகளைத் தான் விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கவிதையில் உணர்ந்தாலும், அதை உணர்ந்தும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை.

 

ஜீவ.கரிகாலன்