கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட்
தமிழில் : அரவிந்த் வடசேரி
“நீ ரொம்ப நல்லா இருக்கே” என்று உற்சாகமாக கூவினார் முதியவர் திரு வுட்ஃபீல்ட். தனது நண்பர் ‘முதலாளி’யின் மேஜைக்கு எதிரில் இருந்த பச்சை நிற தோல் நாற்காலியில் தள்ளுவண்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் குழந்தையைப் போன்று எட்டிப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் பேசி முடிந்து கிளம்பும் தறுவாயில் இருந்தார். ஆனால் அவருக்கு கிளம்ப மனமில்லை. ஓய்வுபெற்று பக்கவாதம் வந்தபிறகு, மனைவியும் பெண்பிள்ளைகளும் அவரை வாரம் முழுவதும் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கின்றனர், செவ்வாய்க் கிழமைகள் தவிர. செவ்வாய்க் கிழமைகளில் சீவி சிங்காரித்து பகல் பொழுதில் கொஞ்சம் நேரம் நகரத்தில் கழிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் அங்கே என்ன செய்வார் என்பதை அவர்களால் கற்பனை செய்ய இயலவில்லை. அவருடைய நண்பர்களுக்கு தொல்லையாக இருப்பாராக இருக்கும் என எண்ணிக்கொண்டனர். எப்படியாகினும், மரம் தனது கடைசி இலைகளைப் பற்றிக்கொள்வதுபோன்று நாம் இறுதியாக அனுபவித்த இன்பங்களைப் பற்றிக்கொள்கிறோம். அப்படித்தான் பெரியவர் வுட்ஃபீல்ட் ஒரு சுருட்டைப் புகைத்தபடி ஏறக்குறைய பொறாமையுடன் அலுவலகத்தின் சக்கர நாற்காலியில் சுழன்று கொண்டிருக்கும், தடித்து சிவந்த, தன்னைவிட ஐந்து ஆண்டுகள் முதியவர் எனினும், இன்னமும் திடமாக, இன்னமும் அதிகாரமாக இருக்கும் முதலாளியை வெறித்துப் பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தார். அவரைக் காண அனைவருக்கும் நன்றாகத்தான் இருக்கும்.
ஏக்கம் தொனிக்க, ஆராதனைப் பொங்க அந்த முதிர்ந்த குரல் சொன்னது,”நிஜமாவே இங்கே நல்லாத்தான் இருக்கு.”
“ஆமா, இங்கே போதிய வசதி இருக்கு,” முதலாளி ஒப்புக்கொண்டார், அவர் ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையை தாள்கிழிக் கத்தி கொண்டு திருப்பிப் போட்டார். உண்மையில் அவர் அந்த அறை குறித்து பெருமிதம் கொண்டிருந்தார்; அதை பிறர் மெச்சுவதை பெரிதும் விரும்பினார், குறிப்பாக முதியவர் வுட்ஃபீல்ட். மஃப்ளர் அணிந்த அந்த நலிந்த கிழட்டு உருவத்தின் பார்வை முழுவதும் படும்படி அதன் மத்தியில் இருத்தப்பட்டிருப்பது அவருக்கு ஒரு ஆழ்ந்த திடமான மனநிறைவைத் தந்தது.
“சமீபத்திலதான் கொஞ்சம் சரி பண்ணினேன்,” என்று அவர் விளக்கினார், கடந்த – எவ்வளவு?- வாரங்களைப் போலவே. “புது தரைவிரிப்பு,” பெரிய வெண்ணிற வட்டங்கள் கொண்ட அடர் சிவப்பு நிறத் தரை விரிப்பினைக் கைகாட்டினார் அவர். “புதுசு,” பெரிய புத்தக அலமாரியும் முறுகிய சர்க்கரைப் பாகு போன்ற கால்களைக் கொண்ட மேஜையும் இருந்த பக்கம் தலை அசைத்தார். “மின்சார வெப்பமூட்டி!” சாய்ந்தவாக்கிலிருந்த செப்புத் தட்டில் மிக மென்மையாக தகதகத்துக் கொண்டிருந்த ஐந்து ஒளி ஊடுருவும் முத்துப் போன்ற பஜ்ஜிகளின் பக்கம் ஏறக்குறைய ஆரவாரமாக கை வீசினார்.
ஆனால் பேய் உலவும் புகைப்படக்காரர்களின் பூங்காவில், புகைப்படக்காரர்களின் புயல் மேகங்களைக் பின்னணியில் கொண்ட, கடுமையான முகத்தோற்றம் கொண்ட சீருடை அணிந்த ஒரு பையனின் புகைப்படத்தின்பால் முதியவர் வுட்ஃபீல்டின் கவனத்தை அவர் திருப்பவில்லை. அது புதியது அல்ல. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அது அங்கே இருக்கிறது.
“உன் கிட்டே ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்,” முதியவர் வுட்ஃபீல்ட் சொன்னார், அவரது கண்கள் நினைவுகூர்தலில் மங்கின. “என்ன அது..? காலையில் கிளம்பும்போது அது மனசில இருந்தது.” அவரது கைகள் நடுங்கத் தொடங்கின. அவரது தாடிக்கு மேல் சிவப்புத் திட்டுகள் தோன்றின.
பாவம் கிழட்டுப் பயல், இறுதிக்காலத்தில் இருக்கிறான் என்று முதலாளி நினைத்தார். கருணை பொங்க, அவர் முதியவரைப் பார்த்துக் கண்ணடித்து, விளையாட்டாகச் சொன்னார், “என்னண்ணு நான் சொல்றேன். நீ திரும்பி வெளியே மீண்டும் குளிருக்கு போகும்போது இதமாக இருக்கச் செய்யும் ஒன்றின் சில துளிகள் என் கிட்ட இருக்கு. அருமையான சரக்கு. குழந்தைக்கு கூட ஒண்ணும் பண்ணாது.” அவரது கடிகாரச் சங்கிலியிலிருந்து ஒரு சாவியை எடுத்து மேஜையின் அடியில் இருந்த ஒரு அடுக்கைத் திறந்து இருண்ட நிறம் கொண்ட குட்டையான குப்பி ஒன்றை இழுத்தெடுத்தார். “இதுதான் மருந்து,” அவர் சொன்னார். “இதை எனக்குத் தந்தவர் சத்தம் காட்டக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி இது விண்டோர் அரண்மனையின் நிலவறையிலிருந்து வந்ததுன்னு சொன்னார்.”
அதைக்கண்டு முதியவர் வுட்ஃபீல்ட் வாய் பிளந்தார். முதலாளி ஒரு முயலை எடுத்து காட்டியிருந்தால்கூட அவர் இவ்வளவு வியந்திருக்க மாட்டார்.
“விஸ்கி தானே அது?” என்று அவர் மிகவும் சன்னமாகக் கேட்டார்.
முதலாளி குப்பியைத் திருப்பி அன்பாக அதன் மீதிருந்த பெயரைக் காட்டினார். விஸ்கிதான் அது.
“உனக்குத் தெரியுமா,” அவர் சொன்னார், முதலாளியை மிகக் கூர்ந்து, அதிசயித்துப் பார்த்தபடி, “வீட்டில என்னை இதைத் தொடக்கூட விடமாட்டாங்க.”. அவர் அழ தொடங்கிவிடுவார் போலத் தெரிந்தது.
“அப்படியா! இது தான் நாம் பெண்களை விட கொஞ்சம் அதிகம் தெரிஞ்சவுங்கன்னு சொல்லறது,” மேஜையின் மீதிருந்த இரண்டு கிளாஸ்களையும் பாட்டில் தண்ணீரையும் பாய்ந்தெடுத்து தாராளமாக ஒரு விரக்கடை இரண்டிலும் ஊற்றினார். “சாப்பிடு, நல்லா இருக்கும். இதுலயெல்லாம் எப்பவும் தண்ணி சேக்கக் கூடாது, இந்த மாதிரி சரக்கை எல்லாம் கலப்படம் செய்யறது தெய்வகுத்தமாயிடும். ஆஹ்.”. அவர் தன்னுடைய கிளாஸை வாயில் கவிழ்த்து, அவசரமாக கர்சீப் எடுத்து மீசையைத் துடைத்த பிறகு தனது கிளாஸை தொடை மீது வைத்து தேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வுட்ஃபீல்டை ஆவலுடன் பார்த்தார்.
அந்த முதியவர் அதை முழுங்கினார், ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு சன்னமாகச் சொன்னார், ”வித்தியாசமா இருக்கு!”
ஆனால் அது அவரை சூடேற்றியது; அவருடைய உறைந்த முதிர்ந்த மூளைக்குள் ஊர்ந்து சென்றது – அவருக்கு நினைவிற்கு வந்தது.
“ஆ, இதுதான், உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.” அவர் சொன்னார், இருக்கையிலிருந்து சற்றே மேலெழும்பியபடி. “எங்க வீட்டுப் பெண்கள் போன வாரம் பாவம் ரெக்கியோட கல்லறையைப் பாக்க பெல்ஜியம் போயிருந்தாங்க, எதேச்சையா உன் பையனோடதையும் பாத்தாங்களாம். ரெண்டும் ரொம்ப பக்கம் பக்கம் இருக்கும்போல.”
முதியவர் வுட்ஃபீல்ட் கொஞ்சம் நிறுத்தினார், ஆனால் முதலாளி பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அவருடைய இமையிதழ்கள் லேசாகத் துடித்தது அவர் சொன்னதைக் கேட்டார் என்பதற்கு சான்றாக இருந்தது.
“அந்த இடத்தை வெச்சிருக்கறது பத்தி பெண்களுக்கு ரொம்பவுமே சந்தோஷம்”, அந்த முதிய குரல் உற்சாகமாகச் சொன்னது. “அழகா பாத்துக்கறாங்க. வீட்டில இருந்தாக் கூட இவ்வளவு நல்லா இருக்காதாம். நீ போனதில்லை இல்லையா, போயிருக்கியா?”.
“இல்லை, இல்லை!” பல காரணங்களால் முதலாளி அங்கே சென்றதில்லை.
“அது இருக்குமாம் பல மைல் தூரத்துக்கு,” முதியவர் வுட்ஃபீல்டின் குரல் நடுங்கியது, “ஒரு பூங்கா மாதிரி சுத்தமா இருக்காம். எல்லா கல்லறையிலும் பூச்செடி வளக்கிறாங்களாம். நல்ல அகலமான பாதைகள்.” நேர்த்தியான அகலமான பாதைகளை அவர் எவ்வளவு விரும்பினார் என்பது அவரது குரலில் தெளிவாகத் தெரிந்தது.
அந்த இடைவெளி மீண்டும் வந்தது. பிறகு அந்த முதியவர் வியப்பூட்டும்படி மிகுந்த உற்சாகம் கொண்டார்.
“தெரியுமா? ஹோட்டல்லே கொஞ்சம் ஜாம் கேட்டதுக்கு பில் போட்டுட்டாங்களாம். “ அவர் கூவினார். “பத்து பிராங்க்! கொள்ளைன்னு நான் சொல்லுவேன். ஒரு சின்னக் கிண்ணம், ஜெர்ட்ரூட் சொல்லுவா ஒரு அரை கிரவுன் துட்டு அளவுதான்னு. அதிலயும் ஒரே ஒரு ஸ்பூன் அளவு கூட எடுக்காததுக்கு பத்து பிராங்க். அவுங்களுக்கு ஒரு படிப்பினையா இருக்கட்டும்னு ஜெர்ட்ரூட் அந்தக் கிண்ணத்தை எடுத்துட்டு வந்துட்டா. அதுவும் ரொம்ப சரிதான்; அவுங்க நம்ம உணர்வுகளை இல்லை காசாக்குறாங்க. அங்கே சுத்திப்பாக்க போனதினால நாம எவ்வளவு வேணும்னாலும் பணம் கொடுப்போம்னு நினைக்கிறாங்க போல.”. அவர் கதவு பக்கம் பார்வையைத் திருப்பினார்.
“ஆமாமா!” என்று முதலாளி உரத்து சொன்னார். இருப்பினும் எது குறித்து அப்படிச் சொன்னார் எனும் எந்த எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. அவர் மேஜையை சுற்றி வந்து தடுமாறும் காலடிகளைப் பின்தொடர்ந்து அந்த மனிதரை வழியனுப்பினார். வுட்ஃபீல்ட் கிளம்பிவிட்டார்.
நெடுநேரம் முதலாளி அப்படியே சூனியத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார், தலை நரைத்த அலுவலகப் பணியாளர் அவரைப் பார்த்துக் கொண்டு, நடக்க கூட்டிச் செல்வதை எதிர்பார்க்கும் நாயைப்போல அவரது கவனத்தைக் கலைக்காமல் அந்தப் புறாக்கூண்டு அறையின் உள்ளே புகுவதும் வெளியேறுவதுமாக இருந்தார். பிறகு, “மாசே, அரைமணி நேரத்துக்கு நான் யாரையும் சந்திக்க மாட்டேன், யாரையுமே, புரிஞ்சுதா?” என்று முதலாளி கூறினார்.
“ரொம்ப நல்லதுங்க ஐயா.”
கதவு மூடப்பட்டு, உறுதியான எடைமிகுந்த காலடிகள் வைத்து அந்தப் பொலிவான தரைவிரிப்பினைத் திரும்பிக் கடந்து, அந்த தடித்த உடல் ஸ்பரிங்க் பொருத்திய இருக்கையில் சரிந்து முன்னால் நகர்ந்து கைகளால் முகத்தை மூடினார் முதலாளி. அவருக்கு அழவேண்டும் போல இருந்தது, அபபடித்தான் முடிவு செய்திருந்தார், அதற்காக தயாரானார்.
முதியவர் வுட்ஃபீல்ட் எதிர்பாராமல் பையனின் கல்லறையைக் குறிப்பிட்டது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. நிலம் திறந்து அந்தப் பையன் படுத்திருப்பதையும் வுட்ஃபீல்டின் வீட்டுப் பெண்கள் குனிந்து அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதையும் அவர் நிஜமாகவே கண்டதைப்போல இருந்தது அவருக்கு. அது இயல்புக்கு மாறானதாக இருந்தது. ஆறு வருடங்களுக்கு மேல் கடந்திருந்தபோதும் இப்போதும் எந்த மாற்றமுமின்றி அவனுடைய சீருடையில் மாசுமருவற்று என்றென்றைக்குமாக உறங்கிக்கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றாக முதலாளி அவனைப் பற்றி எண்ணியதே இல்லை. “என் மகனே!” முதலாளி வேதனையில் முனகினார். இருப்பினும் கண்ணீர் எதுவும் வந்திருக்கவில்லை. கடந்த காலத்தில், பையனின் மரணத்தின் பிறகான ஆரம்பத்தில், சில மாதங்கள், ஏன், சில ஆண்டுகள் வரைக்கும் கூட இந்தச் சொற்களை உச்சரிப்பதே மூர்க்கமான, அடக்கமுடியாமல் தேம்பித்தேம்பி அழுவதைத் தவிர வேறு எதுவும் ஆற்றுப்படுத்த முடியாத, ஒரு துயரத்தால் அவர் ஆட்கொள்ளப்பட போதுமானதாக இருந்தது. காலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அப்போது அவர் அனைவரிடமும் தீர்மானமாக சொல்லிக்கொண்டிருந்தார். பிற மனிதர்கள் வேண்டுமானால் மீண்டு வந்து அவர்களின் இழப்பை வாழ்ந்து மறக்கலாம், ஆனால் அவர் அப்படியில்லை. இது எப்படிச் சாத்தியம்? அவரது மகன் அவருக்கு ஒரே பிள்ளை. அவன் பிறந்ததில் இருந்தே அவனுக்காகத்தான் அவர் இந்தத் தொழிலைக் கட்டமைத்து வந்தார். அந்தப் பையனுக்காக இல்லையெனில் இதற்கு வேறு எந்தப் பயனும் இல்லை. மொத்த வாழ்க்கையுமே வேறு எந்த நோக்கமும் அற்றதாக மாறியிருந்தது. தான் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய காலடித்தடத்தை முன்னெடுத்து அந்தப் பையன் செல்வான் எனும் நம்பிக்கை எப்பொழுதும் கண்முன் தெரியாவிடில், எப்படி அவரால் தன்னைத்தானே அடிமைப்படுத்தி, சுயத்தை நிராகரித்து, இவ்வளவு ஆண்டுகள் இந்த பூமியில் தொடர்ந்திருக்க முடியும்?
அந்த நம்பிக்கை நிறைவேற்றப்படுவது அவ்வளவு நெருங்கியிருந்தது! அந்தப் பையன் போருக்கு முன்னான ஒரு வருடம் அவரது அலுவலக்கத்தில்தான் வித்தைகளை கற்றுக்கொண்டு இருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் புறப்பட்டு வந்துக்கொண்டிருந்தனர். ஒரே இரயிலில்தான் இருவரும் திரும்பிச் சென்றனர். அந்தப் பையனின் தந்தை என்பதற்காக எவ்வளவு பாராட்டுகளை அவர் பெற்றார்! அதிசயிக்கும் வகையில் அவன் அவ்வளவு அழகாக அனைத்தையும் கையாண்டான். பணியாளர்களிடம் அவனுக்கிருந்த நன்மதிப்பு, கிழவன் மாசே உட்பட ஒவ்வொரு பெயர் தெரியாத பணியாளருக்கும்கூட அவனுடன் இருப்பது போதுமானதாக இருக்கவில்லை. அவனைக் கொஞ்சமும் செல்லம் கொஞ்சவில்லை. இல்லை, அவன் இயல்பாகவே திறமையானவனாக, ஒவ்வொருவருக்கும் தேர்ந்த ஒரு சொல் கொண்டவனாக, சிறுவனின் சாயல் கொண்டவனாக, அனைத்திற்கும் “ஆஹா, அற்புதம்” எனச் சொல்பவனாக இருந்தான்.
அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்பதுபோல முற்றாக முடிந்துவிட்டிருந்தது எல்லாம். மாசே அவரிடம் கையளித்த தந்தியினால் உலகமே இடிந்து அவரது தலையில் விழுந்தபோது அந்த நாள் வந்தது. “இந்தச் செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் ஆழ்ந்த வருத்தமடைகிறோம்..” வாழ்க்கையே நாசமான, சிதறுண்ட ஒரு மனிதனாக அவர் அலுவலகத்திலிருந்து திரும்பினார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறு ஆண்டுகள்.. எவ்வளவு வேகமாக காலம் கடந்து சென்றது! அது நேற்று நிகழ்ந்தது போல உள்ளது. முதலாளி முகத்திலிருந்து கையை எடுத்தார். அவருக்கு வியப்பாக இருந்தது. அவருக்கு தவறாக ஏதோ நிகழ்ந்துவிட்டது போலத் தெரிகிறது. அவர் எப்படி உணர வேண்டும் என நினைக்கிறாரோ அப்படி அவர் உணரவில்லை. அவர் எழுந்து பையனின் புகைப்படத்தை ஒரு முறை பார்க்க முடிவு செய்தார். ஆனால் அது அவருக்கு பிடித்தமான அவனுடைய புகைப்படம் அல்ல; அதன் முகத்தோற்றம் இயல்பாக இல்லை. அது உணர்ச்சிகளற்று, சொல்லப்போனால் கடுமையான தோற்றம் கொண்டிருந்தது. அந்தப் பையன் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை.
அந்த நேரம் ஒரு ஈ அவரது அகன்ற மைச் சட்டியில் விழுந்ததைப் பார்த்தார்; அது பலவீனமாக எனினும் வெறிகொண்டு தட்டுத்தடுமாறி வெளியேற முயன்றுக்கொண்டிருந்தது. உதவி! உதவி! என போராடும் அந்தக் கால்கள் சொல்லின. மைச்சட்டியின் உட்புறம் ஈரமும் வழுக்கலும் கொண்டதாக இருந்தது; அது மீண்டும் மீண்டும் உள்ளே விழுந்து நீந்தத் தொடங்கியது. முதலாளி ஒரு பேனாவை எடுத்து அந்த ஈயை மசியிலிருந்து வெளியே எடுத்தார். அதை ஒரு உறிஞ்சு காகிதத்தின் மீது உதறினார். ஒரு கணம் அது அதைச் சுற்றிப் பரவிய இருண்ட திட்டின் மீது அசைவின்றிக் கிடந்தது. பிறகு முன்னங்கால்கள் அலைந்தன, பிடி கிடைத்து, அதன் நனைந்த உடலை மேலே இழுத்து எடுத்து, இறக்கைகளின் மீது படிந்திருந்த மசியினை சுத்தம் செய்யும் பெரும்பணியினைத் தொடங்கியது. இறக்கையின் மேலேயும் அடியிலும், மேலேயும் அடியிலும் என ஒரு கால் மாறிமாறிச் சென்றது. செதுக்கருவாளின் மேலும் கீழும் ஒரு கல் செல்வதைப் போன்று. பிறகு ஒரு சிறு அமைதி, அப்பொழுது அந்த ஈ கால்களின் நுனியில் ஊன்றி நிற்பது போலத் தெரிந்தது. அது ஒரு இறக்கையை விரிக்க முயன்றது, பிறகு மற்றதையும். இறுதியில் அது வெற்றிபெற்றதும் அமர்ந்து நுணுக்கமான ஒரு பூனையைப் போல அதன் முகத்தை சுத்தம் செய்யத் தொடங்கியது. இப்போது அது களிப்புடன் முன்னங்கால்களை தட்டித் துடைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. கொடுமையான ஆபத்து நீங்கியது. அது தப்பித்துக் கொண்டது. அது மீண்டும் வாழத் தயாரானது.
ஆனால் அந்தக் கணம் முதலாளிக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அவர் சட்டென பேனாவை மசியில் தோய்த்து, அவரது தடித்த கையினை உறிஞ்சு காகிதத்தின்பால் சாய்க்க, தன்னுடைய இறக்கைகளை சோதித்துக் கொண்டிருந்த ஈயின் மீது ஒரு எடைமிகுந்த கறை விழுந்தது. அதைப் பற்றி என்ன நினைத்ததுவோ என்னமோ? என்ன நினைக்க! அடுத்து என்ன நிகழுமோ என முற்றிலும் மிரண்டு, திகைத்து, பயந்து அசையவும் திராணியற்று நின்றது அந்த அற்பப் பதர். ஆனால், பிறகு, வேதனையில் என்பதுபோல, உடலை முன்னோக்கிச் இழுத்துச் செல்ல முற்பட்டது. முன்னங்கால்கள் அலைபாய்ந்து பிடிமானம் பெற்று, இம்முறை மிகவும் மெதுவாக, முதலிலிருந்து பணியினைத் தொடங்கியது.
அது ஒரு மனம் தளராத குட்டிப் பிசாசு, முதலாளி நினைத்துக் கொண்டார், அந்த ஈயின் துணிவின்பால் அவருக்கு ஒரு உண்மையான நன்மதிப்பு ஏற்பட்டது. இப்படித்தான் அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும்; அதுதான் சரியான மனப்பாங்கு. முடிந்தது என ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. எல்லாவற்றிற்கும் ஒரு.. ஆனால் அந்த ஈ மீண்டும் தனது கடுமையான பணியினை முடித்திருந்தது. பேனாவை மேலும் ஒருமுறை நிரப்பி புதிதாக சுத்தப்படுத்திய அந்த உடலின் மீது சரியாக குறிபார்த்து மீண்டும் ஒரு இருண்ட துளியினை உதறுவதற்கு போதுமான நேரம்தான் முதலாளிக்கு இருந்தது. வலிமிகுந்த தவிப்பான ஒரு கணம். இருங்கள், அந்த முன்னங்கால்கள் மீண்டும் அலைகின்றன; முதலாளிக்கு அது பேராறுதலாக இருந்தது. அவர் குனிந்து ஈயிடம் கனிவாகச் சொன்னார், “நீ ஒரு தந்திரமிக்க –மகன்.” எளிதில் உலர அதன் மீது ஊதும் மகத்தான எண்ணமும் அவருக்குத் தோன்றியது. அதே நேரம் அதன் முயற்சிகளில் ஏதோ ஒரு அச்சமும் வலுவின்மையும் இருப்பதாகத் தெரிந்ததால் இதுவே கடைசி முறை என முதலாளி உறுதி பூண்டு பேனாவினை மசிப் பாத்திரத்தின் ஆழத்துக்குள் அமிழ்த்தினார்.
அப்படித்தான் ஆயிற்று. கடைசிக் கறை ஊறிய உறிஞ்சு காகிதத்தில் வீழ்ந்தபோது, நனைந்து அடித்துச் செல்லப்பட்டுக் கிடந்த ஈ அசையவேயில்லை. அதன் பின்னங்கால்கள் உடம்போடு ஒட்டியிருக்க முன்னங்கால்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.
“எழுந்திரு,” முதலாளி சொன்னார், “நல்லாப் பாரு!” அவர் அதை பேனாவைக் கொண்டு நகர்த்தினார் – பயனில்லை . எதுவும் நடக்கவோ நடக்கும் வாய்ப்பிருப்பதாகவோ இல்லை. அந்த ஈ செத்துவிட்டது.
முதலாளி அந்தச் சடலத்தை தாள்கிழிக் கத்தியின் நுனிகொண்டு எடுத்து குப்பைக் கூடைக்குள் எறிந்தார். இருப்பினும் மனதைப் பிசையும் ஒரு பரிதாப உணர்வு அவரை ஆட்கொண்டு நிஜமாகவே அச்சம் கொள்ளச் செய்தது. அவர் இருக்கையில் முன்நகர்ந்து மாசேவுக்கான அழைப்புமணியை அழுத்தினார்.
“கொஞ்சம் புது உறிஞ்சு காகிதத்தைக் கொண்டு வாரும்,” அவர் அழுத்திச் சொன்னார், “நல்லா பாத்து எடுத்து வாங்க.” அந்த கிழட்டு நாய் அரவமின்றி நகர்ந்து சென்றபோது இதற்கு முன்னராக தான் எதைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்தோம் என வியந்துக் கொண்டிருந்தார். அது என்னவாக இருந்தது? அது.. அவர் கைக்குட்டையை எடுத்து சட்டைக் காலருக்கு உள்பக்கம் போட்டுக்கொண்டார். உயிரைக்கொடுத்து யோசித்தும் அது என்னவென நினைவிற்கு வரவில்லை.
கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட் – நியுஸிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர். புகழ்பெற்ற டி.எச்.லாரன்ஸ், விர்ஜினியா வுல்ஃப் ஆகியோரின் சமகாலத்தவர். உளவியல் கூறுகள் நிரம்பிய நவீன சிறுகதைகளை எழுதியவர். 34 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
அரவிந்த் வடசேரி – பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்த சிறுகதை ஒன்று மாத்ருபூமி பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆவநாழி எனும் இருமாத இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மின்னஞ்சல் முகவரி : v.aravi.cbe@gmail.com


மனதை உறுக்கும் கதை ,அடுத்த மறை நல்ல சந்தோஷ கதையாக மொழி பெயர்க்கவும்