Wednesday, May 13, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்காதலெனும் காதல் - ஓர் உளப்பகுப்பாய்வு வாசிப்பு

காதலெனும் காதல் – ஓர் உளப்பகுப்பாய்வு வாசிப்பு

தி கு இரவிச்சந்திரன்

காதல் என்றென்றும் காதல்தான். அது, பாலாகவோ தேனாகவோ அமுதமாகவோ அமைவது, ஒருவருக்கு வாய்க்கின்ற காதல் நபரைப் பொருத்தது. அது வெற்று நீரில்லை. ஆனால், இந்த நீரின்றி அந்த மூன்றுமில்லை.

I

காதல்: இது, கனவு போன்று காண வேண்டிய இருண்மை; இலக்கியம் போன்று வாசிக்க வேண்டிய பனுவல்; தொன்மம் போன்று அகழ்வாய்வு செய்ய வேண்டிய படிவம். இது, இயற்கை உணர்ச்சியா அல்லது செயற்கை உணர்ச்சியா? இது குறித்து உளவியலும் உளப்பகுப்பாய்வும் கூறுவதென்ன? இப்படியொரு விவாதம் இன்றைய சூழலில் தேவை. பொதுவாக, காதல் என்பது உள்ளம் சார்ந்த ஒன்று. இதற்கு உடல் ஒரு கருவி என்றாலும் உள்ளத்தில்தான் காதலின் இருப்பு உள்ளது. அதனால், உளவியல் பார்வையைச் சிறப்புக் கண்கொண்டு காண வேண்டியுள்ளது.  அதேவேளை, உள்ளம் அளவுக்கு உடலின் இயக்கங்கள் காதலில் பங்கு கொள்கின்றன. இவ்விரண்டையும் கடந்த நிலையில் ஆன்மாவின் பங்கும் காதலில் கவனிக்க வேண்டியதாகும். இந்தியவியல்படி, காதலில் ஆன்மாவின் பங்கும் கணிசமாக உள்ளது. எனவே, உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் வழியிலும் காதலைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. உடற்காதலை உடலியல் நோக்கிலும் உளக் காதலை உளவியல் ரீதியிலும் ஆன்மக் காதலை இந்தியவியல் பார்வையிலும் அணுகுவது சிறப்பு. அதைத்தான் இந்தக் கட்டுரையில் காண இருக்கிறோம்.  

காதலுக்கு மூலக்காரணம் உடல் என்கிறது உடற்கூற்றியல். இந்த அறிவியல்படி, உடலானது வேதிப்பொருள்களால் இயங்குவது. இந்த இயக்கம் ஒழுங்கமைவிலானது. இதைத்தான் சிஸ்டம் (system) என்பர். ஓர் உடல் என்பது நரம்பியல், எலும்பியல், செரிமானவியல், சிறுநீரகவியல், செந்நீரோட்டவியல் எனப்பல ஒழுங்கமைவுகள் அடங்கிய பேரொழுங்கமைவு. இதில் உள்ள நீர்மங்கள் (குருதி, சிறுநீர், நிணநீர், ஹார்மோன்..) யாவும் வேதிப் பொருள்கள் ஆகும். இவற்றில் ஹார்மோன் சுரப்பி காதலுடன் தொடர்புடையது. இதன் தாக்கம் இளமையில் அதிகம். பருவமடைவுக்குப் பிறகான உடலியல் மாற்றங்கள் இந்த ஹார்மோனால் விளைந்தது. இதுவே ஒருவரை இனக் கவர்ச்சியில் ஈடுபட வைக்கிறது. இந்த இனக்கவர்ச்சி இயற்கை வழிப்பட்ட உணர்வெழுச்சியாகும். அதுவும், உடலியல் சார்ந்த உணர்வாகும். இந்த இனக்கவர்ச்சியைக் காதலெனறும் கருதப்படுவதுண்டு. எழுத்தாளர் சுஜாதா கூறுவதுபோல், ‘காதல் என்பது ஹார்மோன்களின் அட்டகாசம்’ ஆகும். 

உண்மையில், ஹார்மோன் என்பது காதலுக்கு உரியதல்ல; இனக் கவர்ச்சிக்கானது. காரணம், இந்த ஹார்மோன் உடலியல் சார்ந்த வேதிப்பொருள். இதன் தூண்டுதலால் உடற்சார் இனக் கவர்ச்சியே மிஞ்சும். காதலுக்கும் ஹார்மோனுக்கும் 1:1 தொடர்பில்லை. பதின்பருவத்தில் ஏற்படுகின்ற உடற்சார் ஹார்மோன் மாறாட்டமே இனக் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. இதுவே காதலாகாது. உளவியல்படி, இந்த இனக் கவர்ச்சி இயற்கை வழிப்பட்டது. இதன் அடிநாதம் பாலின்பம். இதை இயற்கை வழங்கியிருப்பது இன்பத் துய்ப்புக்காக அல்ல; இனப் பெருக்கத்துக்காக. அதாவது, இனப்பெருக்கத்துக்காகத்தான் பாலியல் துய்ப்பை வழங்கியுள்ளது. இங்கே துய்ப்பு என்பது இரண்டாம் நிலை. 

இந்த இனக் கவர்ச்சியைக் காதலென்று பதின்பருவத்து இளமனம் நம்பிவிடுகின்றது. இந்த உடலியல் ஈர்ப்புக் காதலாகாது. அப்படியே இந்த ஈர்ப்பைக்  காதலென்று நம்பினால், அது நிலைக்காது; ஆழப்படாது. காரணம், இனக்கவர்ச்சிக்கான உடல் தன்மை நாளடைவில் மாறிவிடும். இதற்கேற்பக் காதல் தன்மையும் மாறிவிடும். மேலும், இந்த இனக்கவர்ச்சியில் பாலியல் நோக்கம் முதன்மையாக இருக்கும். ஒருவேளை அந்தக் காதல் நபர் கொஞ்சம் உளச் சார்புடன் இருப்பின், அதற்கேற்பக் காதலின் வீரியம் கொஞ்சம் கூடியிருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குச் சான்று பாரதியார் காதல். அவரின் ‘கனவு’ கவிதையில் இதை உணரலாம். (பார்க்க: எனது நூல் ‘கனவிலுங் கனவு: பாரதியார் சுயசரிதை உளப்பகுப்பாய்வு’, பரிசில் வெளியீடு). 

உடற்சார் அறிவியல்படி, காதல் என்பது டோபமைன், ஆக்சிடோசின் மற்றும் செரோடோனின் ஆகிய நரம்புசார் வேதிப்பொருட்களால் இயக்கப்படுகின்ற ஒரு சிக்கலான மூளைச் செயல்முறையின் விளைவாகும். இது, ஒருவர் மீதான பற்றையும் அது தொடர்பான இன்பத்தையும் உருவாக்க வல்லது. அந்தப் பற்றுடைய நபருடன் ஏற்படும் தொடக்க நிலை உறுவுகளால் இதயத்துடிப்பு அதிகரிப்பது மற்றும் கன்னங்கள் சிவப்பது போன்ற உடற்சார் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது. அதே சமயம், நீண்டகால உறவுகளில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது ஹார்மோன்கள் மற்றும் மூளைச் சுற்றுகளால் கட்டுப்படுத்தப்படும் தனித்துவமான அதேவேளை ஒன்றோடொன்று தொடர்புடைய நிலைகளான காமம், ஈர்ப்பு, பற்று ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், இது நடத்தை மற்றும் உள வாழ்வைப் பாதிக்கவும் செய்கிறது. இவற்றைப் பதின்பருவத்து முதற்காதலில் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கலாம். இந்தப் பருவத்தில் உடல் ஈர்ப்பே முதன்மையாக அமையப் பெரும்.     

உடல் முதன்மையாகவும் உள்ளம் இரண்டாம் நிலையாகவும் இருப்பின், அது முழுமையான காதல் என்றாகாது. மனித இனத்துக்கு அப்பாலான உயிரினங்களுக்கு இது பொருந்தலாம். மாறாக, மனிதனிடத்தில் உள்ளமே முதன்மை. ஏனென்றால், மனத்தால் வாழ்பவனே மனிதன். மனிதன் என்ற சொல் அப்படித்தான் வந்தது. இது பௌத்த வரையறை. ‘மானஸ்- மனஸ்- மனுஷன்- மனிதன்’. இந்த வரையறைப்படி, மனிதனுக்கு உடல் வாழ்வைவிட உள வாழ்வே முதன்மை. மனிதனின் உள வாழ்வை ஆராய்கின்ற துறை உளவியல். இந்தத் துறை தற்போது அறிவியலாக இருந்தாலும், தொடக்கத்தில் இது தத்துவமாகவே கருதப்பட்டு வந்தது. இதன்படி, உளவியலைத் தத்துவமுறை உளவியல் என்றும் அறிவியல்முறை உளவியல் என்றும் வரலாற்றுப் பார்வையில் பகுப்பர். அதனால், எந்தவொரு உளப் பாங்கையும் தத்துவப் பார்வையில் கூறியதை அறிந்த பிறகு அறிவியல் பார்வையில் காண்பது சிறப்பு. காரணம், தத்துவ உளவியலில் அனுபவமிருக்கும். மாறாக, அறிவியலில் நிருபணம் இருக்கும். முன்னதில் பட்டறிவு அனுபவமும் பின்னதில் சோதனை அனுபவமும் அடிப்படை. அந்த வகையில் ‘காதல்’ மனநிலைக் குறித்துத் தத்துவ வாதிகள் கூறுவதை முதலில் காணலாம்.  

தத்துவமென்றால் கிரேக்கம். இது தத்துவ மொழி. கிரேக்கத்தில் காதல் குறித்துக் கூறிய முன்னவர் ப்ளேட்டோ. இவர் பார்வையில் காதல் என்பது ஏற்கக்கூடியதோ விலக்கக்கூடியதோ அல்ல;  அழியக்கூடிய எல்லாவற்றாலும் அது பாதிக்கப்படாமல் இருக்கிறது. மேலும், இது புலன்களிலிருந்து நித்தியத்தை நோக்கியதாக இருந்தது. அது ஒருபக்கம் தாழ்ந்த ஆசைகளுக்கு வழிவகுக்கக்கூடியதாகவும் மறுபக்கம் ஆழமான தத்துவ ஞானத்திற்கும் இட்டுச் செல்லக்கூடிய ஒரு சக்தியாகவும் இருக்கிறது என்கிறார் ப்ளேட்டோ. ஒருகட்டத்தில் காதலை மனநோய் நிலை எனவும் கூறினார் இவர். ப்ளேட்டோவுக்குக் கவிதை மீது ஆர்வமில்லை. கவிஞர்களை அவர் அங்கீகரித்ததில்லை. இதனால், அவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும் விரும்பினார். காதல் என்பது கவிதை அளவுக்கு விழுமியம் கொண்டது. எனவே, கவிதையோடு காதலையும் ப்ளேட்டோ வெறுத்ததைக் காணமுடிகின்றது. ‘காதல் என்பது ஈர்ப்பு மற்றும் இன்ப உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த உணர்வுகள், அன்பான உறவுகளை விடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்பது ப்ளேட்டோவின் அவதானிப்பு. 

ப்ளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டிலும் காதல் குறித்துச் சிந்தித்துள்ளார்.  இன்ப உணர்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகள் பொதுவானவை என்றாலும், அவை நல்லெண்ணம் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகளை விட மனிதகுலத்திற்கு குறைவான நன்மை பயக்கும் என்று கூறினார். ஏனென்றால், உணர்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகள் யாவும் உணர்வுகள் நீடிக்கும் வரை மட்டுமே நீடிக்கும் என்று அரிஸ்டாட்டில் நினைத்தார். இந்த வகையில் காதல் உணர்வும் அடங்கும் என்பது இவரின் முடிபு.

இடைக்காலத் தத்துவவாதிகளான டெக்கார்ட், ஹும், காண்ட் முதலியோர் காதல் குறித்துச் சிந்தித்துள்ளனர். முதலில் டெக்கார்ட். இவர் சிற்றின்பக் காதல் குறித்துப் பேசுகிறார். ஒரு பொருளின் மதிப்புக் குறித்த ஆன்மாவின் தீர்ப்பை உடல் உணர்வுகளுடன் இணைக்கும் ஒரு பேரார்வமாக வரையறுக்கிறார். குறிப்பாகக் காதலை, ‘இதயத்தைச் சுற்றியுள்ள ஒரு மர்மமான வெப்பமாக’ காண்கிறார். மேலும், கூறும்போது, பெரும்பாலான வேளையில் ஏமாற்றக்கூடிய, உடலியல் சார்ந்த அல்லது  புலன்சார்ந்த பேரார்வமாகக் கருதுகிறார். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், காதலிக்கப்படுபவர் மீது அதீத பக்திக்கு வழிவகுக்கும் என்கிறார். மேலும், இதைப் பகுத்தறிவு சார்ந்த காதலிலிருந்து வேறுபடுத்துகிறார், மேலும், பகுத்தறிவின் மூலம் இந்த பேரார்வக் காதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அடுத்து, காதல் குறித்து டேவிட் ஹும் கூறும்போது,  இன்பம், உடல்,  வேட்கை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு சிக்கலான  உணர்ச்சி என்கிறார். இதை வெறும் அடிப்படை வேட்கையாகப் பார்க்காமல், ஆரோக்கியமான சக்தியாகக் காண்கிறார்.  இந்தக் காதலை முறையாகக் கையாளும்போது பண்பாட்டுச் செம்மைக்கு பங்களிக்கிறது என்கிறார். மேலும், பாலுணர்வு சார்ந்த காதலை ஒரு நேர்மறையான ‘ஈர்க்கும்’ சக்தியாகப் பார்க்கிறார். இது, தூய உடல் ஆசைக்கும், செம்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது என்கிறார். 

அடுத்து, இம்மானுவேல் காண்ட் பேசுகிறார். இவர் பார்வையில் காதல் ஒரு சக்திவாய்ந்த பசி.  இதில், தனிநபர்களை ‘இன்பத் துய்ப்புடைய ஆள்’ என்கிற நிலைக்குத் தாழ்த்தி விடுகின்ற ஆபத்துள்ளது. அதனால், மனித கண்ணியத்தைக் கேள்வியாக்குகின்றது என்பார். விபச்சாரம் அல்லது சாதாரண இனப்பெருக்கம் செய்யாத (பரஸ்பரம் இல்லாத பாலியல் செயல்பாடு) சுய-இழிவின் ஒரு வடிவமாகவும், மற்றவர்களைத் தங்களுக்குள் நோக்கமாகக் கருதும் தார்மீகக் கடமையை மீறுவதாகவும் கருதப்படுகிறது என்பார். 

கருத்துமுதல்வாதியான ஹெகல், சிற்றின்பக் காதலை ஓர் ஆழமான, தற்காலிகமான இயங்கியல் இணைப்பாகக் காண்கிறார். இதில் தனிநபர்கள் தங்கள் பிரிவினையைக் கடந்து, சுயத்தையும் மற்றவரையும் ஒன்றிணைத்து, ஒரு ‘உயிருள்ள முழுமைநிலையாக’ மாறுகிறார்கள். இது தனிநபர் சுதந்திரத்திற்கும் ஒற்றுமை ஆசைக்கும் இடையிலான முரண்பாட்டைச் சமரசம் செய்கின்ற அல்லது மேம்படுத்துகின்ற செயல்முறையாகும் என்கிறார். மேலும், இது பெரும்பாலும் காதலர்கள் ஒருவரையொருவர் தங்களுள் காண்பது போன்ற ஓர் அங்கீகார வடிவமாகக் கருதப்படுகிறது; இது வெறும் ஆசையைத் தாண்டிப் பகிர்வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது. இருப்பினும், ‘உயிரற்ற’ புறப் பொருட்கள் அல்லது சொத்துக்களுடன் மோதும்போது இது சிதைவடையும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து காதல் குறித்துப் பொருள் முதல்வாதியான கார்ல் மார்க்ஸ் கருதுவதைப் பார்க்கலாம். காதலை மார்க்ஸ் ஒரு தனியரின் உணர்ச்சியாக மட்டும் பார்க்காமல், ஆழமான மனிதருள் நடக்கின்ற சமூக மற்றும் அரசியல் செயல்முறைக்கு இணையாகக் கருதுகிறார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உண்மையான அன்புறவை, ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாகச் செயல்படுகின்ற ஒரு பிணைப்பாகப் பார்க்கிறார். உண்மையான காதலுக்குப் பரஸ்பர அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த அங்கீகாரம் மற்றவர் வழியில் தன்னை மனிதமயமாக்குகிறது. எனவே, உண்மைக் காதலை மார்க்ஸ் ஏற்கிறார். இவர் ஜென்னியைக் காதலித்து மணம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்ற நூற்றாண்டின் சிறந்த தத்துவவாதியான ஷோபன்ஹவர் கூறும்போது, காதலை ஓர் ஆபத்தான மாயை எனக் கருதினார். இது, ஒரு தனிப்பட்ட பிணைப்போ ஆன்மீக அல்லது காதல் ரீதியான பிணைப்போ அல்ல, மாறாக இனப்பெருக்கத்தை உறுதி செய்வதற்கான ‘தந்திரம்’ என்று அவர் வாதிட்டார். பாலியல் ஆசையால் உந்தப்படும் இந்த வகையான காதல், இனப்பெருக்கத்தின் நோக்கத்திற்கானது. இது பெரும்பாலும் தனிப்பட்ட துயரம், ஏமாற்றம் மற்றும் பகுத்தறிவு வாழ்வின் சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது. இந்தக் காதலால் இயற்கையின் உந்துதலுக்கு ஒருவர் அடிமையாகி விடுகின்றார். 

இவ்வாறு அன்று முதல் இன்று வரை காதல் குறித்துத் தத்துவவாதிகள் சிந்தித்து வந்ததைக் காண முடிகிறது. இதே அளவில் தமிழிலும் காதல் சிந்தனைகள் உள்ளன. திருவள்ளுவர் முதல் பாரதி வரை ஆழமான கருத்துகள் காதல் பற்றிப் பேசப்பட்டுள்ளது. சங்க காலத்தில் ‘காமம்’ சொல் காதலைக் குறிக்கும். காமத்துப் பால் என்பது காதல் ஒழுக்கத்தைப் பேசுகின்ற பகுதி. இதன் உள்ளும் வெளியும் காதல் குறித்து வள்ளுவர் பல உரைக்கிறார். ‘மலரினும் மெலியது காமம்’ என்று அதன் மென்மையை/ மேன்மையைப் போற்றுகின்றார். இன்னொரு இடத்தில் காதலை நட்பு உறவாகக் காட்டுகின்றார்:

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள்: 1122) 

இந்த நட்பை ‘இடுக்கண் களைவது’ என்கிறார். இதுபோன்றுதான் காதல் என்பது வள்ளுவர் கருத்து. அடுத்து, இலக்கணவியலர் தொல்காப்பியர் இலக்கியங்களுக்கு வழங்கிய கோட்பாடுகளுக்குள் காதல் கருத்தாக்கங்களையும் முன் வைக்கிறார். இவை இலக்கியங்கள் வழியில் பெறப்பட்ட கருத்துகள் மூலம் சொல்லப்பட்டவை. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’  (தொல்.பொருள்.56) என்பது அகப்பொருள் பாடல்கள் அமைய வேண்டிய இலக்கணத்தைக் குறிக்கிறது. கற்பனை, மெய்ம்மை, புலமை ஆகிய மூன்றும் கலந்த கருத்தாக்கங்களை அகப் பொருள் மரபாகத் தொல்காப்பியர் முன் வைக்கிறார்.

ஒன்றே வேறே என்று இரு பால்வயின் 
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப,
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே.
(தொல். பொருள்:90)

இந்த நூற்பாவில் இருவகைப்பட்ட ஊழ்வினைப் பயன்களில் நல்வினைப் பயனால், ஒருவருக்கொருவர் எல்லா வகையிலும் பொருந்திய காதலனும் காதலியும் ஒருவரையொருவர் கண்டுகொள்வார்கள் என்கிறார். (தீவினைப்படி, நல்ல காதல் அமையாது என்பது இதன் மறைபொருள்). காதலுக்குப் பின்புலமாக ஊழ் இருக்கின்றது என்பது தொல்காப்பியர் கருத்து. மேலும் இவர் காதலில் பத்துப் படிகள் இருப்பதைப் பட்டியலிடுகிறார் அவர்.   

வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்,
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்,
நோக்குவ எல்லாம் அவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்காடு, என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப
(தொல். பொருள்:97)

காதல் வேட்கை, ஒருதலையாகக் காதலித்தல், அதனால் உடல் மெலிதல், காதல் ஈடேறத் தமக்குத்தாமே நல்ல வார்த்தைகளைக் கூறிக் கொள்ளுதல், இயல்பாக நாண வேண்டியச் செயல்களைச் செய்தல், எதைப் பார்த்தாலும் காதல் நபரையேக் காணல், தன்னை மறத்தல், சிந்தை மயக்கம், காதல் போயின் சாதல் எனக் கூறுதல் ஆகியவை காதலின் படிநிலைகள் என்பார் தொல்காப்பியர். இவை இலக்கியங்கள் வழி தொல்காப்பியர் கண்டவை. இந்தக் குறிப்புகள் இயல்பான வாழ்க்கை வழியில் புலவர்கள் செய்யுளில் பொருத்தியவை. தொல்காப்பியர் காலத்துக் காதலைத் தனி ஆய்வுக்கு உட்படுத்தி, அகத்திணையையும் அது சார்ந்த சங்க இலக்கியங்களையும் கொண்டு ‘தமிழ்க் காதல்’ எனும் நூலில் பல செய்திகளை வ. சுப. மாணிக்கனார் பதிவிடுகிறார். சங்க இலக்கியத்தின் செம்புலப் பெயனீரார் வரிகள் உண்மைக் காதலின் சிறப்பு. 

II

இனி, உளவியலுக்கு வருவோம். காதல் குறித்து அறிவியல்முறை உளவியல் என்ன கூறுகிறது? உண்மையில், காதல் என்பது உடலியல் கடந்த உளவியலுக்கு உட்பட்ட ஒன்று. இதற்கு லைலா கதை சான்று. ‘அசிங்கமான லைலாவைப் பித்துப்பிடித்தவன் போல் ஏன் காதலிக்கின்றாய்’ என்று நண்பர்கள் கேட்டபோது, ‘லைலாவைக் கயஸ் கண்ணில் பார்’ என்றான் கயஸ். இதில் இரண்டு உளக் குறிப்புகள் உள்ளன. ஒன்று, காதல் என்பது தனியர் நிலைக்கு உட்பட்ட ஒன்று. இதைப் பொதுமைபடுத்தக் கூடாது. இரண்டு, காதல் என்பது உளம் சார்ந்தது. புறத் தோற்றத்துக்கும் காதல் உணர்வுக்கும் தொடர்பில்லை. புறத் தோற்றம் தாண்டி ஏதோவோர் ஈர்ப்பு இருப்பதால் உண்மைக் காதல் உந்தும். அந்த ஈர்ப்பை ஒருவர் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். இதனால்தான், காதலில் உளவியல் முக்கியத்துவம் பெறுகிறது. இது, இனக் கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று.    

உளவியல்படி, காதலில் பல பிரிகைகள் உள்ளன. இதில் நெருக்கம் (intimacy) உணர்வெழுநிலை (passion) கடப்பாடு (commitment) ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் உள்ளன. காதலின் முதல்நிலை ‘விருப்பம்’ (liking) ஆகும். இதில் நெருக்கம் மட்டும் இருக்கும். கிட்டத்தட்ட ஆழமான நட்புப் போன்றது. ஆனால், இதில் காமம் போன்ற உணர்வெழுநிலையோ அர்ப்பணிப்புப் போன்ற கடப்பாடோ இருக்காது. 

அடுத்து, இனக்கவர்ச்சி (infatuation) உள்ளது. இது, காம இச்சை மட்டும் கொண்டது. தீவிரமான உடல் ஈர்ப்பு மற்றும் அதனாலான உணர்வுக் கிளர்ச்சியால் ஏற்படக்கூடியது. இவ்வகைக் காதல் பெரும்பாலும் பதின்பருவத்தில் தோன்றும். ‘கண்டதும் காதல்’ இதன் சிறப்பம்சம். ஆனால், உள நெருக்கமோ அர்ப்பணிப்போ இருக்காது. மூன்றாவதாக, வருவது வெற்றுக் காதல் (empty love) ஆகும். இதில் கடப்பாடு அல்லது அர்ப்பணிப்பு மட்டும் செயல்படும். அதாவது, ஒருவரையொருவர் சார்ந்து, சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். இதனால், நெருக்கமும் காமமும் மங்கிக் கிடக்கும். அல்லது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். ஏற்பாட்டுத் திருமணங்கள் இதில் அடங்கும். நான்காவது நிலையில் இருப்பது, நடைமுறையில் சொல்லப்படுகின்ற காதல் ஆகும். இதைத்தான் ரொமாண்டிக் என்பர். இதில், உள மற்றும் உடல் நெருக்கமும் மோகமும் இணைந்திருக்கும். திருமணம் போன்ற கடப்பாடு இருக்காது. இணைந்து வாழ்தல் (living together) இதன் வடிவம். கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்கின்ற வரை இருந்து, பிறகு காணாமல் போவதுண்டு. அடுத்த வடிவம் தோழமைக் காதல் (Companionate Love) உள்ளது. இதில்  நெருக்கமும் கடப்பாடும் சேர்ந்திருக்கும். காமம் இருப்பதில்லை. நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற ஆழ்நிலைப் பாசம் இதில் அடங்கும். 

அடுத்து, மடமைக் காதல் (Fatuous Love) வருகிறது. இதைக் காமமும் அர்ப்பணிப்பும் இணைந்து வழி நடத்தும். ஆழத்து உணர்வெழுச்சி இதில் இருக்காது. திருமணத்துக்கு அப்பாலான காதல் இதன் அம்சமாகும். இங்கே, காதலும் திருமண பந்தமும் சுழன்று இயங்குவதைக் காணலாம். அதேவேளை, ஆழத்து உணர்வெழுச்சி இதில் இருக்காது.  முழுமையான காதலில் மட்டும் ஆழம் இருக்கும். அந்தக் காதல் முழுநிலைக் காதல் (Consummate Love) ஆகும். இதில் உள/ உடல் நெருக்கம், காமம், அர்ப்பணிப்பு ஆகிய மூன்றும் கலந்திருக்கும். இதுவே காதலின் சிறந்த வடிவமாகக் கருதப்படுகிறது. காரணம், இதில் ஈகோ இருக்காது, சமூக நிர்பந்தம் கலக்காது. இதுவே தொல்காப்பியர் கூறும் இயற்கைப் புணர்ச்சி.

காதல் குறித்த இந்த உளவியல் பார்வைகளுக்கு அப்பால் இன்னொரு பார்வை உள்ளது. அதுதான், உணர்வெழுச்சிப் பார்வை. இதைக் கண்டவர் பால் எக்மன். இந்தப் பார்வையானது உளவியலின் ஒரு பகுதி. உணர்வெழுச்சி உளவியல் (emotion psychology) பிரிவுக்கு உட்பட்டது.  அடிப்படையில் எக்மன் ஓர் அமெரிக்க மானிடவியலர். உளவியலில் இவரின் பங்கு சிறப்பிற்குரியது. மானிடவியலையும் உளவியலையும் இணைத்து 1960களில் ஒரு புதிய கருத்தாக்கத்தை முன் வைத்தார். இவரின் ஆய்வுக்களம் மானிடவியல் சார்ந்த உணர்வெழுச்சி. உணர்வு வெளிப்பாடுகளில் பழங்குடி மனிதருக்கும்  நவீன மனிதருக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய 1966 இல் நியு குனியா என்கிற தீவுக்குச்  சென்று களஆய்வு மேற்கொண்டார். சில நிழற் படங்களைக் காட்டி, அந்தப் பழங்குடி மனிதர்களின் முக பாவங்களைப் பதிவு செய்து கொண்டார். அதே படங்களை நவீன மனிதரிடையே காட்டி இவர்களின் முக பாவங்களைப் பதிவு செய்து கொண்டார்.  வியத்தகு வகையில் இரண்டிலும் சில  பாவனைகள் ஒரே மாதிரியாக இருந்தன. சில வேறுபட்டு இருந்தன. 

இந்த ஆய்வில் எக்மன் கண்ட முடிவு உளவியல் துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இவரின் ஆய்வுப்படி, மனிதரிடையே இருவகை உணர்வெழுச்சிகள் உள்ளன. ஒன்று, அடிப்படை உணர்வெழுச்சிகள் (basic emotions) மற்றொன்று, உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் (higer cognitive emotions) என்கிறார் எக்மன். அடிப்படை உணர்வெழுச்சிகள் என்பவை பிறப்பிலேயே இயற்கை வழியில் அகிலத்துக்கும் பொதுவாக அமைந்திருப்பவை. உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் என்பவை பிறந்த பிறகு, சமூகத்தின் வழியில் பெறப்படுபவை. இவை அகிலப் பொதுவானவையல்ல. பண்பாட்டு நிலைக்கேற்ப மாறி அமைபவை. எக்மன் வகைப்பாட்டுப்படி, ஆனந்தம், வருத்தம்,கோபம், அச்சம், வியப்பு, அருவருப்பு ஆகியவை அடிப்படை உணர்வெழுச்சிகள். காதல், குற்றவுணர்வு, அவமானம், சங்கடம், கெளரவம், ஏக்கம், பொறாமை ஆகியவை உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள். இவற்றில் காதல் என்பது சமூகம் தயாரித்த உணர்வெழுச்சி என்கிற முடிவுக்கு வருகிறார் எக்மன். காதலை ஏற்காத சமூகப் பண்பாட்டுத் தளங்கள் உலகில் உள்ளன. உளவியல் பார்வையில் காதல் என்பது மனித வரலாற்றின் இடையில் உருவானது. இயற்கை உணர்வல்ல. முன்பே கூறியபடி, இனக்கவர்ச்சிதான் இயற்கை. இதன் நோக்கம் இனப் பெருக்கம். இதைக் காதல் என்று தவறாகக் புரிந்துகொள்ளப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். 

உணர்வெழுச்சி உளவியல் கூறுவதுபோல், காதல் உணர்வு இயற்கையல்ல என்றால் பறவைகளுக்குள் நடக்கின்ற காதல் பொய்யா? லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் பறவையினமே உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்தப் பெயரை மனிதன்தான் வைத்தான். தங்களுக்குள் இருப்பது காதல் என்று அந்தப் பறவைகள் அறியாது. காரணம், பறவைகளின் நெருக்கம் பொதுப்புத்தியில் கருதுவதுபோல் ‘காதல்’ என்று சொல்வதற்கில்லை. இந்த நெருக்கம் தற்காப்பு உணர்ச்சியின்  வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது வேறு சார்பொழுக்கமாக இருக்கலாம். அப்படியே இதைக் காதல் எனக் கொண்டாலும் இந்தப் பறவைக்  காதலிலிருந்து மனிதக் காதல் வேறுபட்டது. காரணம், மனிதனில் நனவிலி மனம் உள்ளது. அதுதான் காதலைத் தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ளது. அதனால், மனிதக் காதல் நனவுக் காதலல்ல; நனவிலிக் காதல். இந்தக் காதலைப் புரிந்துகொள்ள உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. 

நனவிலி மனம் என்பது மனிதனுக்கே உரிய சிறப்பு உளத் தளம். இதை ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகிய மூவர் ஆழமாக ஆராய்ந்துள்ளனர். இந்த நனவிலியானது, ஃப்ராய்ட்  பார்வையில் உள்ளத்தின் பிளவால் தோன்றுகின்ற பகுதி. யூங் கோணத்தில், ஆதி மனிதரிடம் இருந்து பதிவாகி, வம்ச வழியில் கடத்தப்பட்டு வருகின்ற மறைமனம். லக்கான் நோக்கில்,  மொழிக்குள் மனிதன் நுழையும்போது தோன்றுகின்ற உளப்பகுதி. இவர்கள் கோணங்களில் காதல் எப்படிப்பட்டது என்பதைத்தான் இனி நாம் காண இருக்கிறோம். 

III

 முதலில், ஃப்ராய்ட். மறதி முதல் நிர்வாண நிலை வரை உளப்பகுப்பு விளக்கங்கள் கொடுத்தவர் இவர். ‘அமுக்கப்பட்ட வேட்கைகளின் புனைவேட வெளிப்பாடே காதல்’. இது ஃப்ராய்ட் கண்ட தெளிவு. காதல் குறித்துத் தொடக்க காலத்திலிருந்தே (1895) பேசி வந்தவர் ஃப்ராய்ட். ஃப்ராய்டியத்தின் அடி நாதமான ‘லிபிடோ’ (பாலூக்க சக்தி) எனும் கருத்தாக்கம், குழந்தைப் பாலியலை மையம் கொண்டிருப்பதாகும். காதல் உணர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது இந்த லிபிடோ. எனவே, லிபிடோவின் ஒருவித வெளிப்பாடே காதல். குறிப்பாக, அமுக்கப்பட்ட லிபிடோ வேட்கைகளின் மாற்றுருவாக்கம் காதல் என்றாகிறது. 

இந்தக் காதல் குறித்துப் பல கருத்துகளை ஆங்காங்கே ஃப்ராய்ட் கூறியிருப்பது அந்தக் காதலை இன்னும் புரிந்து கொள்ள வகை செய்கிறது. காதலில் ‘காதலிப்பது’, ‘காதலிக்கப்படுவது’ ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இவற்றில், ‘பிறரால் காதலிக்கப்படுதல்’ எனும் நிலையே மூத்தது. காரணம், இது குழந்தைப் பருவத்தில் இயல்பாக நடக்கின்ற ஒன்று. படுவினையில் (passive) குழந்தை கிடக்க, அதை பிறர் தூக்கிக் கொஞ்சுவதன் வழியில் ‘தாம் காதலிக்கப் படுகிறோம்’ என்பதைக் குழந்தை உணர்கிறது. இதன்மூலம், தாம் காதலிப்பதாகக் கற்பிதம் செய்துகொள்கிறது.  குறிப்பாகத் தாய் வழியில் இது நடக்கிறது. குழந்தைக்குத் தாய்தான் உலகம். பிறர் தூக்கிக் கொஞ்சுவதைவிடத் தாயின் அரவணைப்பையே குழந்தை நாடும். இந்த ஒரு வயதிலேயே காதல் உணர்வைக் குழந்தை அனுபவிக்க வந்துவிடுகின்றது. பிற்காலத்தில் காதல் என்கிற சொல்லைக் கேட்டவுடன் அந்தச் சொல்லானது குழந்தைப் பருவத்து அனுபவங்களை மீண்டும் செயல்படத் தூண்டிவிடுகின்றது. இதனால், அந்தச் சொல் புதிய காதல் நோக்கி ஈகோவை நாடச் செய்கிறது. இதன் வழியே புதிய அனுபவத்தை மனம் பெறுகிறது. ஆள் வேறு; உணர்வு ஒன்றே. ஃப்ராய்ட் ஆய்வுப்படி, தாயின் மார்பகமே குழந்தையின் முதல் காதற்பொருள். இந்த மார்பகத்துடனான உறவுமுறைகள் காதலின் அம்சங்களாகின்றன. ‘மனிதக் காதலின் வித்து மார்பகக் காதல்’ என்பது ஃப்ராய்டின் முடிபு. 

இந்த முடிபோடு ஃப்ராய்டின் ஆய்வு முடிந்துவிடவில்லை. காதலை இவர் இரண்டாகப் பகுக்கிறார். ஒன்று, தன்மோகக் காதல் (nacissistic love) மற்றொன்று, ஒட்டுறவுக் காதல் (anaclitic love) ஆகியவை ஆகும். இவ்விரண்டும் காதல் நபரைத் தேர்ந்தெடுப்பதில் வேறுபடுகின்றன. தன்மோகக் காதலில் தன்னைப் போன்ற அல்லது தனது பண்பு ஒத்த நபரை விரும்பி ஏற்பதைக் குறிக்கும். குறிப்பாக, தனது நிறம் அல்லது உயரம் போன்ற எதிர்ப்பாலினர் மீது வரும் ஈர்ப்பு இதற்குச் சான்றாகும். ஒரே துறையில் பயணிக்கும் நபர், இணையான சாதியினர், மதத்தினர் ஆகியோர் மீதான காதல் இதனுள் அடங்கும். ஆண், பெண் கவிஞர்களுள் அல்லது கலைஞர்களுள் ஏற்படும் காதல் எல்லாம் தன்மோகக் காதலாகும். ஆண், பெண் இருவருக்கும் ஒரே குறிக்கோள் இருந்து, அதனால் ஈர்ப்புக் கொண்டால், அதுவும் இந்த வகையில் அடங்கும். 

இந்தக் காதலில் நடக்கும் உறவானது, தன்னைத்தானே காதலிக்கின்ற தற்காதல் உணர்வின் வெளிபாடாகிறது. இதன்படி, தன்னிலைக் காதல், புறநிலைக் காதல் என இரண்டு போக்குகள் உளப்பூர்வக் காதல் உறவுகளில் உள்ளன எனத் தெளியலாம். தன்னைத்தானே காதலிப்பது ஒரு வடிவம். புறநபரைக் காதலிப்பது இன்னொரு வடிவம். ஒரு மனிதரிடையே இரண்டும் இருக்கும். இவற்றில் ஒன்று கூடுதலாக இருக்கும். அதுவே அன்னாரின் காதல் அம்சம். அவர் தன்னிலைக் காதலராக இருப்பின் அவரே தன்மோகக் காதலரும் ஆவார். 

அடுத்து, ஒட்டுறவுக் காதல். இது, புறநிலைக் காதல் வழிப்பட்டது. பார்க்கின்ற புறநபர் மீதெல்லாம் காதல் ஏற்படாது. நனவிலிக்கு நெருக்கமான யாரேனும் ஓர் ஆள் இருந்து, இனம்புரியாத ஈர்ப்பை ஏற்படுத்த, நனவறியாமல் காதல் தோன்றும். இதில், நனவிலியின் பங்கு அதிகமாக இருக்கும். ‘கண்டதும் காதல்’ இவ்வகைப்பட்டதே ஆகும். அந்தக் காதல் நபர் நனவிலியில் பதிந்துள்ள பழைய ஆளின் தோற்றம் அல்லது பண்பு ஒத்தமைந்தவராக இருப்பார். இதைத்தான் ஃப்ராய்ட் இடிபஸ் காதல் என்கிறார். அதாவது, ஆண் குழைந்தைக்குத் தாயும், பெண் குழந்தைக்குத் தந்தையும் புறநிலைக் காதலின் முன் மாதிரியாக இருப்பர். இதை அந்தக் காதலர் அறிந்திலர். தாயும் தந்தையும் குழந்தைப் பருவத்தில் தரும் அன்பு, அரவணைப்பினால் அவர்கள் குழந்தை நனவிலியில் வார்ப்புருவாக (imago) அமைந்து விடுகின்றனர். அந்த வார்ப்புருவின் புறத் தோற்றமே ஒட்டுறவுக் காதல் நபர். இது முழுமைக்கும்   நனவிலிக்குள்ளேயே நடக்கின்ற நாடகமாகும். காரணம், அந்த வார்ப்புருக்களின் புனைவேடமாக இந்தக் காதல் நபர்கள் வருகின்றனர். சுருங்கச் சொல்லின், பெற்றோர் போன்ற தோற்றம், அவர்களின் அன்பு, அக்கறை, அரவணைப்பு எல்லாம் கலந்த ஆள் ஒட்டுறவுக் காதல் நபராகின்றனர். பெற்றோரிடமிருந்து போதுமான அன்பும் அரவணைப்பும் தொடராமல் இடைவெளி ஏற்படுமானால், அந்த ஏமாற்றம்கூட இத்தகுக் காதல் நபரை நாடச் செய்வதுண்டு. எனவே, பெற்றோர் காதலே ஒட்டுறவுக் காதலாக மலர்கிறது. அம்மாவைப் போன்ற பெண் வேண்டுகின்ற விநாயகர் நிலை இவ்வகைப்பட்டதே ஆகும். தனது தந்தையான பிரம்மாவை மணந்த சரஸ்வதி கதையை நாம் அறிவோம். 

சிலரிடம் குடும்ப அங்கத்தினர் போன்ற நபரால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. இது இடிபஸ் காதலின் நீட்சி ஆகும். பெரும்பாலும் இது தகாப்புணர்ச்சித் தடையால் ஏற்படுகின்ற மாற்றுருவாக்கம் ஆகும். ஃப்ராய்டின் முடிபுபடி, பெண்களிடம் தன்மோகமும் ஆண்களிடம் புறநிலை மோகமும் அதிகளவில் உள்ளது. காதல் ஒரு கனவு. இதனுள் கனவுத் தொழில்கள் நடக்கின்றன. காரணம், அந்தக் காதல் நபர் யாரோ ஒருவரின் குறியீடாக இருக்கலாம். பல உருக்களின் கலவையாக இருக்கலாம். பழைய ஆளின் மாற்றாக இருக்கலாம். இந்தக் குறியீடும் கலவையும் மாற்றும் கனவின் வினைப் பண்புகளாகும். இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னோர் இடத்தில் ஃப்ராய்ட் கூறும்போது, இந்தக் காதல் நிலை நோயாகவும் அந்த நோய்க்கான மருத்துவமாகவும் இருப்பதாகக் கூறுகிறார். இது தொடர்பான சிந்தனைகளை அவரின் பிற்கால எழுத்துகளில் காணலாம்.  

காதல் தொடர்பாக இன்னொரு கருத்தையும் ஃப்ராய்ட் முன்னெடுக்கிறார். அதுதான் ‘காதல்- வெறுப்பு’ என்கிற பொருமுக உணர்வு நிலை (ambivalent feelings) ஆகும். இது, எதிரும் புதிருமான உணர்வுகள் இணைந்தே செயல்படுவதைக் குறிக்கின்ற உள இயக்கமாகும். இதன்படி, ஒருவர் மீதுள்ள காதல் அளவுக்கு வெறுப்பும் தன்னகத்தே கொண்டிருக்கும். இதன் பொருள், காதல் நபர் மீது வெறுப்பும் இருக்கும். அது காதலுக்கு அடியில் மறைந்து கிடக்கும். சமயம் வரும்போது இந்த வெறுப்பு வெளிப்படும். அவ்வேளை, காதல் மட்டுப்படும். இந்த மாறாட்டத்தைக் (disorder) கண்கூடாக நடப்பில் காணலாம். இவ்வாறு பல நிலைகளைக் காதல் குறித்து ஃப்ராய்டியம் வழியாக விளங்கிக் கொள்ளலாம்.  

IV

அடுத்து, யூங்கியப் பார்வையில் காதலைக் காண்போம். ஃப்ராய்டின் சீடரான யூங், கருத்து வேறுபாடுகள் காரணமாகப் புதிய உளவியலை உருவாக்கியவர். இதனால், உளப்பகுப்பாய்வில் அரசியல் ஏற்பட்டது. இருப்பினும், ஃப்ராய்ட் அளவுக்கு யூங் பரவலாகவில்லை. என்றாலும், இவரின் எழுத்துகளில் ஆழம் இருப்பதைக் காண முடிகிறது. ஃப்ராய்டின் சிந்தனைக்குப் பின்புலமாகக் கிரேக்க, ஐரோப்பியத் தத்துவங்கள்மிகுதியாக இருந்தன. இந்தியத் தத்துவத்தில் புத்தரின் நிர்வாணக் கொள்கையும் இருந்தது. யூங்கின் சிந்தனைச் செயல்பாட்டில் மேலைத் தத்துவத்துக்கு நிகராக இந்தியத் தத்துவங்கள் இருந்தன. இந்தியத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் யூங்கியத்தை மேலைச் சிந்தனையாளர்கள் கவனஞ்செலுத்தவில்லை. ‘ஃப்ராய்டைப் படித்தப் பிறகு விமர்ச்சித்தனர். என்னைப் படிக்காமலேயே விமர்ச்சிக்கின்றனர்’ என்று ஓரிடத்தில் ஆதங்கப் பட்டார் யூங். 

இவர் கண்ட ‘பகுப்பாய்வு உளவியல்’ வழியில் பிறப்பு முதல் மறுபிறவி வரை நடக்கின்ற உள நிகழ்வுகளை விவரித்துள்ளார். அவற்றுள் காதலும் ஒன்று. காதலை யூங் உள்ளுணர்ச்சியாக (instinct) மட்டும் பார்க்கவில்லை. மாறாக, நனவிலி மற்றும் ஆன்மச் சக்தியாகவும் பார்க்கிறார். இவரின் காதல் பார்வைக்குச் சீனத் தத்துவமும் இந்தியத் தத்துவமும் இருகண்கள். காதலுக்கு அடிப்படை உள ஆற்றல் (psychical energy) எனப்படுகின்ற லிபிடோ. இது இரண்டாகப் பகுந்துள்ளது. இதுதான் ‘ஆண்மை- பெண்மை’ ஆற்றல்களாக பிரிந்தமைகிறது. இவை உளச் செயற்பாடுகளில் பங்குகொள்கின்றன. சீனத் தத்துவ வழக்கில்  ‘யின்- யாங்’ என்று கூறுவார். இதை ‘அனிமா- அனிமஸ்’ என்று தகவமைத்துக் கொள்கிறார் யூங். Anima- Animus ஆகியவை இலத்தினச் சொற்கள். இந்தச் சொற்களுக்கு அங்கே ‘ஆன்மா- மனம்’ என்று பொருள். இவற்றை ‘ஆண்மை- பெண்மை’ என்று தனது உளவியலில் தகவமைத்துக் கொள்கிறார்.  இவ்விரண்டின் கலவையே மனித மனம் என்பது யூங்கின் முடிபு. இதன்படி, மனிதர் யாவரும் இரட்டைப் பால்நிலையைக் (bisexual) கொண்டவர்கள் என்கிறார் யூங். இது ஃப்ராய்டியக் கருத்தாக்கம். இதற்கு மறுவடிவம் தருகிறார் யூங். இங்கிருந்து காதல் குறித்த யூங்கியப் பார்வையைக் காண்போம். 

ஒருவரின் காதல் நபர் எப்படிப்பட்டவராக இருப்பார்? ஓர் ஆணுக்கு அனைத்துப் பெண்களும் காதலியாக ஈர்க்க மாட்டார்கள். அதேபோல், ஒரு பெண்ணுக்கு அனைத்து ஆண்களும் காதலனாகக் கவர வாய்ப்பில்லை. ஒருவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் நபர் இன்னொருவருக்கு அந்நியமாகத் தெரிவதைப் பார்க்கலாம். மற்றவர் கண்களுக்கு லைலா அசிங்கம். கயஸ் கண்களுக்கு அவள் தேவதை. இதற்குக் காரணம் மூலப்படிவம் (archetype) ஆகும். மூலப்படிவங்கள் என்பவை அகிலப் பொதுமையாக, மனித இனத்துக்கே உரிய உளப்படிவங்களைக் குறிக்கும். இவை, தனியர் நனவிலிக்கு அடியில் இருக்கின்ற உளத்தளத்தின் அடங்கல்களாகும். அந்தத் தளத்தைக் ‘கூட்டு நனவிலி’ என்கிறார் யூங். ஃப்ராய்டை ‘நனவிலிக் கண்டறிஞர்’ என்றும் யூங்கைக் ‘கூட்டு நனவிலிக் கண்டறிஞர்’ என்றும் சுட்டுவர்.  

யூங் கூறும் கூட்டு நனவிலி மனித இனத்தின் கூட்டுப் படைப்பாகும். ஆதிக் காலத்திலிருந்து இதன் கட்டுமானம் நடந்து வருகிறது. ஃப்ராய்டின் நனவிலிக்குத் தனியரின் குழந்தைப் பருவம் ஆதாரமென்றால், யூங்கின் கூட்டு நனவிலிக்கு மனித இனத்தின் குழந்தைப் பருவமான ஆதிக் காலத்து அனுபவங்கள் ஆதாரமாகும். இன்றைய நவீன மனிதரின் செயல்பாடுகள் ஆதி மனிதர் அனுபவத்தின் எதிரொலிகளாகும். சான்றாக, ஆதிக் காலத்துக் குகையின் மாற்று வடிவம்தான் அறை அல்லது இல்லம். இலை தழைகள்தான் இன்றைய உடைக் கலாச்சாரம். ஆதி மனிதனின் வேட்டையே இன்றைய பண வேட்டை. எதுவும் புதிதில்லை. யூங் கூற்றுப்படி, நவீன மனிதனைக் காட்டிலும் ஆதி மனிதனிடம் அறிவுச் செயல் திறன் அதிகம். அவன் செய்தவை எல்லாம் புதியவை. அவற்றின் நீட்சியாகத்தான் நவீன மனிதனின் செயல் திறன்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று காதல் என்கிறார் யூங். 

காதலுக்கு ‘அனிமா- அனிமஸ்’ மூலப்படிவங்கள் ஆதாரம். இவற்றில் அனிமா என்பது ஆணுரு. அனிமஸ் என்பது பெண்ணுரு. இவற்றில் ஒன்று நனவு என்றால் இன்னொன்று நனவிலி. வேறொரு கோணத்தில், ஒன்று புறத் தோற்றம் (persona) என்றால் இன்னொன்று அகத்தோற்றம் (shadow) ஆகும். இதன்படி, ஆண்மை, பெண்மை இரண்டும் கலந்த பால்நிலையில் (bisexual) மனிதரின் இருப்பு உள்ளது. ஆணிடம் அவனே அனிமஸ்; காதலியே அனிமா. பெண்ணிடம் அவளே அனிமா; காதலனே அனிமஸ். காதல் உறவு என்பது அனிமாவுக்கும் அனிமஸுக்கும் இடையில் அகத்துள் நடக்கின்ற அகமன உறவு (intrapsychic) ஆகும். இதன் புறத்தெறிவே வெளியே நடக்கின்ற காதல் உறவாகும். இது, இடைமன உறவு (interpsychic) ஆகும். 

இந்த அனிமாவும் அனிமஸும் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யூங் கூற்றுப்படி, ஆணினுள் இருக்கின்ற கற்பனையுரு அனிமா, பெண்ணுள் இருக்கின்ற கற்பனையுரு அனிமஸ். இந்தக் கற்பனையுரு என்பது அனுபவ ரீதியாகக் குழந்தைப் பருவத்தில் உருவாகின்ற உளப்படிமம். இதைப் புரிந்துகொள்ள குழந்தைப் பருவத்து உளவியலைப் பார்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் தன்னைச் சுற்றி இருக்கின்ற உறவினர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கங்களால் இந்த உருக்கள் தோன்றுகின்றன. ஆண்கள் அனைவரும் ஆணுரு உருவாக்கத்தில் அமைய, பெண்கள் அனைவரும் பெண்ணுரு உருவாக்கத்தில் அமையப் பெறுகின்றனர். பெரும்பாலும், பெற்றோரே அமைகின்றனர். இதில், ஓர் உளத் தர்க்கம் என்னவென்றால், ஆணுக்குத் தானே அனிமஸ். பெண்ணுக்குத் தானே அனிமா. எனில், ஆணின் அனிமாவும் பெண்ணின் அனிமஸும் புறத்தில் உள்ளன. இதன்படி, ஆண் மகனின் ஈகோ தமது பெண்ணுருக்கு ஏற்றப் பெண்ணையும்  பெண் மகளின் ஈகோ தமது ஆணுருக்கு ஏற்ற ஆணையும்  புறத்தில் தேடுகின்றனர். 

ஆணிடம் தனது அனிமாவுக்கு ஏற்புடைய பெண்ணைக் ‘கண்டதும் காதல்’ வந்துவிடுகின்றது. அதேபோல், பெண்ணிடம் தனது அனிமஸுக்கு ஒப்பான ஆணைக் ‘கண்டதும் காதல்’ வந்துவிடுகின்றது. இதுதான் காதல் தோற்றம் குறித்த யூங்கியப் பார்வை. இதிலிருந்து இன்னும் ஆழமாகக் காதலைக் காணலாம். இந்த உருக்களுடன் அவர்களின் ஈகோ வைத்துள்ள உறவு அல்லது நெருக்கமே காதலாகிறது. இந்தக் காதல் நிறைவான ஒன்று என்று சொல்வதற்கில்லை. சான்றாக, ஆணின் அனிமாவுக்கு ஒத்தமைந்த பெண் ஒருத்தி இருந்தாலும் அவள் முழுமையாக அமையப் பெற வாய்ப்பில்லை. ஒரு முப்பது விழுக்காடு அமையப் பெற்ற பெண் மீது காதல் கொள்ளலாம். இன்னொரு கட்டத்தில் நாற்பது விழுக்காடு ஒத்தமைந்த பெண்ணைக் கண்டுவிட்டால், காதல் உணர்வு இடம் மாறிவிடும். இவளுக்கும் கூடுதலான ஒப்புமையுடன் வேறொரு பெண் வந்துவிடின், அந்த ஆணின் ஈகோ மீண்டும் தாவிவிடும். இந்தத் தாவல் அனிமாவுக்கு ஏற்ற நூறு விழுக்காடுப் பெண் அமையும் வரைத் தொடரும். இதே தாவல் பெண்ணுள்ளும் நடந்துகொண்டிருக்கும். அதனால்தான், காதல் உணர்வு ஒரு கட்டத்தில் சலிப்படைந்து விடுகின்றது. முழுமையான காதல் என்பது அனிமாவுக்கு அனிமஸும் அனிமஸுக்கு அனிமாவும் நூறு விழுக்காடு அமையப் பெற வேண்டும். அதுதான், ஆண் பாதி பெண் பாதி அர்த்தநாரீஸ்வரம். இப்படியான காதல் அமைவது அரிதினும் அரிது. ஆன்மக் காதலில் மட்டுமே சாத்தியம். 

அது என்ன ஆன்மக் காதல்? உடல் சார்ந்த காதல் இனக்கவர்ச்சி. உள்ளம் சார்ந்த காதல் உள்ளப் புணர்ச்சி. இதுவரைதான் மேலை  உளவியல் கண்டது. இவற்றைத் தாண்டி ஆன்ம நிலையில் காதல் உள்ளது என்பதை இந்தியத் தத்துவமே கண்டது. அதற்குப் பெயர் தாந்ரீகம். இதன்படி, ஆன்ம நிலையில் ஒருவரையொருவர் ஈர்த்துக் கலப்பது ஆன்மக் காதல் ஆகும். இதில்தான் ‘வைப்ரேஷன்’ வினைப் புரிகிறது. இந்தக் காதல் எப்போதாவது யாருக்கோ நிகழும். அதற்கு இருவரும் ஆன்ம நிலைக்கு சென்றிருக்க வேண்டும். உடல் கடந்து உள்ளம் கடந்து ஆன்ம நிலைக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இருவரும் அந்த நிலை அடைவது முயற்கொம்பே. இது, இராமகிருஷ்ண பரமஹம்சர்- சாரதா இடையே நடந்தது. ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் திருமணம் செய்து வைக்கச் சீடர்கள் விரும்பினர். அதைப் பரமஹம்சர் மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில் சீடர்களின் தொடர் வலியுறுத்தலால் சம்மதித்தார். பெண்ணையும் சுட்டிக் காட்டிவிட்டார். சாரதா பெயரைச் சொல்லி, ‘அந்த ஊரில் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளை அழைத்து வாருங்கள்’ என்று வரவழைத்து மணம் புரிந்துகொண்டார். இது, உடற் காதலல்ல. எனவே, பாலுறவு இல்லை. உள்ளக் காதலுமல்ல. களிப்பு நிகழ்வுகளில்லை. வெறும் ஆன்ம நெருக்கமே இருந்தது. அதற்கான ஆதாரமே அந்த டெலிபதி. அரவிந்தர்- மதர் இடையே ஆன்ம நெருக்கம் இருந்திருக்கக் கூடும்.   

இந்த ஆன்மக் காதல்தான் காதலில் உச்சம். என்றாலும், இதிலும் இருவரின் ஆன்ம நிலைகளும் முழுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இதிலும் பிரிவு ஏற்படக் கூடும். இராமகிருஷ்ண பரமஹம்சர்- சாரதா இடையே முழுமையில்லை அதனால்தான், சாரதாவை விட்டுப் பரமஹம்சர் மறைந்தார்முழுமையான ஆன்மக்காதல் என்பது மூலாதாரத்திலிருந்து இருவரும் பிணைந்து  முக்தி வரை அகப்பயணம் செய்வதைக் குறிக்கும். இது அரிதினும் அரிது. இந்த அகப்பயணத்தை யூங் கூறும் தனியராக்கம் (individuation) என்கிற உளச் செயலோடு ஒப்பிடலாம். தனியராக்கம் என்பது கூட்டு நனவிலியில் உள்ள சுயம் (self) நோக்கி ஈகோ பயணிப்பதைக் குறிக்கும். இது அகப் பயணம்; ஆன்ம பயணம். 

இந்தச் சுயம் இருக்கின்ற தளத்தில்தான் முக்தி நிலை உள்ளது என்பது யூங்கின் முடிபு. இதுதான் உள வளர்ச்சியின் எல்லை. இந்த சுயத்தை ஈகோ அடைந்து விட்டால், உள்ளம் முழுநிலை அடையும் என்கிறார் அவர். தவம் அதற்கான வழி. ஆன்மக் காதலும் அதற்கு வழியாக அமையும். ஒருவிதத்தில், ஆன்மக் காதல் என்பதும் தவமே ஆகும். இதில் ஆன்மப் புணர்ச்சியே நடக்கும். இவ்வாறு, இரண்டு ஆன்மாக்கள் இணையாக அகப்பயணம் செய்து முழுநிலை (முக்தி) அடைவதன் பெயர்தான் ‘தந்ரா’ என்கிற ஆன்மீகப் பாலுணர்வு.  எனவே, ஆன்மக் காதல் என்பது தாந்ரீகம் ஆகும். இதை அனுபவப் பூர்வமாகக் கண்டவர்கள் பதிவு செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால்தான், இதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், ‘தந்ரா’ தத்துவார்த்தமாக உள்ளது. இதை யூங் கவனித்துள்ளார். குண்டலினி யோகத்தில் காண்கிறார். இந்த யோகத்தை, தனிமனித ‘முழுமை அடைதல்’ செயல்முறையாகக் காண்கிறார். அதாவது, தனியராக்கப் படிமுறையாகக் காண்கிறார். தனியராக்கத்தில் முரண்பாடுகளின் இணைவு இருக்கும். ஆண், பெண் எனும் அனிமா- அனிமஸ் முரண்பாடே பெரியது. இதன் இணைவு முழுமை நிலை என்றாகிறது. தந்ரா அந்தப் பணியைச் செய்கிறது. குண்டலினி யோகத்தில் வரும் இரண்டு பாம்புகள் அனிமாx அனிமஸ் குறியீடுகளாகும். இதில் உள்ள சக்கரங்கள் அனிமா- அனிமஸ் பிணைப்புகளாகும். இந்தத் தந்ராவை யூங் ஆன்மக் காதலாகப் பாராமல் ஆழ் மனத்தின் காதலாகப் பார்த்தார். காரணம், ஆன்ம நிலையை அவரால் உணர முடியவில்லை. சுயத்தை நோக்கிய ஈகோவின் பயணத்தைக்கூட ஆன்மப் பயணமாகக் கொள்ளாமல் உளப் பயணமாகவே பார்த்தார். இருப்பினும், இறுதிக் கட்டத்தில் ஆன்மா, கர்மா, மறுபிறவி ஆகிய இந்தியவியல் கூறுகளைக் கருத்தியல் ரீதியில் ஏற்றுக் கொண்டார். இதன் காரணமாகத்தான் மேலை நாடுகளில்  யூங் புறக்கணிக்கப்பட்டார். 

V

இறுதியாக, லக்கான் பார்வைக்கு வருவோம். ‘உன்னிடம் எது இல்லையோ அதைப் பிடித்தமானவருக்குக் கொடுப்பதுதான் காதல்’ என்று தனது இருண்மை பாணியில் சொன்னவர் லக்கான். பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளரான லக்கான், ஃப்ராய்டின் வழி வந்தவர். என்றாலும், ஃப்ராய்டியத்தை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியவர். அதாவது, ஃப்ராய்ட் சொன்ன கருத்தாக்கங்களுக்குப் புதிய விளக்கங்களை வழங்கியவர். இதன் விளைவாக, இடிபஸ் சிக்கல், காயடிப்புச் சிக்கல், வேட்கை, நோய்க்குறி, கனவு முதலியவற்றுக்கு மொழியியல் ரீதியில் மறுவிளக்கம் கொடுத்தார். அந்த வரிசையில் காதலும் அடங்கும். 

லக்கான் பார்வையில், காதல் என்பது ‘உங்களிடம் இல்லாததைக் கொடுப்பது’. அதாவது, நமது குறையை (லேக்) நாம் விரும்பியவருக்குக் கொடுப்பது. இதன்படி, இருவரின் குறைகளுள் ஏற்படுகின்ற உறவே காதலுக்கு அடிப்படை. இங்கே, காதலரை நேசிக்கவில்லை; அவரின் குறையை நேசிக்கின்றீர்கள். அதுவும் நீங்கள் நேசிக்கவில்லை. உங்கள் குறைதான் நேசிக்கின்றது. நனவிலியில் உள்ள ஏதோவொரு குறை உங்களைக் காதலிக்க வைக்கின்றது. இந்தக் காதல் மூலம் ஒருவரின் குறையை இன்னொருவரின் குறை அங்கீகரிக்கின்றது. இந்த அங்கீகாரம்தான் காதலுக்கான அடையாளம். அதனால், குறையைக் கொண்டு நிறைவு காண மனம் முயல்கிறது. இது என்றென்றும் எவ்விதத்திலும் நிறைவடையாது எனத் தெரிந்தும் காதல் நாட்டம் கொள்வது மொழி மனிதரின் இயல்பு என்பார். இதன்படி, ஒருவருக்கொருவர் நோயாளியாக இருக்கின்றனர். அதுவும் இசிப்புநோயாளியாக இருக்கின்றனர். ஹிஸ்டீரியா எனும் இசிப்பு நோய்க் குறித்து லக்கான் பேசும்போது, மற்றவரின் குறையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம், வேட்கையை நிறைவு செய்யாமல் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் நோய் நிலை என்கிறார். இது காதலில் புலப்படுகின்றது. 

லக்கான் பார்வையில் காதல் என்பது சிக்கலான உள நிகழ்வு. இதன் அடிப்படையாக நார்சிசம் எனப்படுகின்ற தன்மோகம்/ தற்காதல் உள்ளது. அவனின் குறையும் அவளின் குறையும் கண்ணாடிப் பிம்பம் போன்று உறவாடுவதால், இது நார்சிச அமைப்பிலான உறவை உறுதி செய்கிறது. உங்களை நீங்களே நேசிப்பது காதலாகும். அதாவது, மற்றவர் வழியில் உங்களை நீங்களே நேசிக்கின்றீர்கள். இந்த இடத்தில் காதல் நபர் ஒரு கண்ணாடிப் போன்றவர். அந்தக் கண்ணாடி மங்கும் வரை காதல் நடக்கும். கண்ணாடி மங்கத் தொடங்கினால் காதலும் மங்கத் தொடங்கிவிடும். அப்போதுதான் காதல் சிக்கலாகி விடுகின்றது. 

இந்தக் காதலை ஒரு சொல்லாடலாகப் பார்க்கிறார் லக்கான். இவர் கண்ட நான்கு அடிப்படைச் சொல்லாடல்களில் இசிப்புச் சொல்லாடல் வகைக்குட்பட்டது காதல். லக்கானியத்தில் சொல்லாடல்கள் சிறப்பிற்குரியது. லக்கானைப் பொறுத்தவரை, சொல்லாடல் என்பது இரண்டு அகநிலைகளைப் பிணைக்கின்ற இணைப்பானாகும். அனைத்துச் சொல்லாடல்களுக்கும் மொழியே ஆதாரம். காரணம், மொழிதான் சமூக மனிதரைப் பிணைத்துச் செயல்பட வைக்கின்றது. லக்கான் பார்வையில் மொழிக்கு முன்பு காதல் கிடையாது. ஏனென்றால், மொழிக்குப் பிறகுதான் சமூகம் தோன்றியது. இந்தச் சமூகமே காதலைக் கற்பித்தது. அதனால், சமூகத்தையும் காதலையும் மொழியமைப்பில் புரிந்துகொள்ள வேண்டியதாகிறது. எனவே, இந்தக் காதலை லக்கானியச் சொல்லாடல் அமைப்பைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்: 

இதுதான் மொழிக்கான அடிப்படை அமைப்பு. இதுவே சொல்லாடலின் ஆதி அமைப்பு. இதிலுள்ள குறிகள் சொல்லாடலின் நிலைகள் ஆகும். இவை மனிதனின் மனத்தையும் சமூக உறவுகளையும் தீர்மானிக்கின்ற நிலைகள். இந்த அமைப்பில் S1   என்பது ‘தன்மை’ எனப்படுகின்ற பேசுவோரைக் குறிக்கும். S2  என்பது ‘முன்னிலை’ எனப்படுகின்ற கேட்போரைக் குறிக்கும். $ என்பது தன்மை மனத்தில் உள்ள ‘குறை’. a என்பது தன்மையின் பேச்சால் விளைகின்ற ‘விளைவு’. சுருங்கச் சொல்லின், இடப்பக்கம் தன்மையையும் வலப்பக்கம் முன்னிலையையும் குறிக்கும். இந்த அமைப்பின்படியே மனித உறவுகள் மொழியால் நடந்து வருகின்றன. அவற்றில் காதல் உறவும் ஒன்று. இதே பாணியிலான அமைப்பு இந்தக் காதலுக்கும் உள்ளது. அது இசிப்புச் சொல்லாடலாகும்: 

இது, காதல் உறவுக்கான அமைப்பு.  இதற்கான விளக்கம் கீழ்க் கண்டவாறு அமையும்: 

இதில் இடதுபக்கம் காதலரும் வலது பக்கம் காதலிக்கப் படுபவரும் இருக்கின்றனர். இதன்படி, ‘தன்மை’ இடத்தில் காதலிப்பவர் இருக்கின்றார். இவரிடம் குறை உள்ளது. அதன் குறியீடுதான் $. இதன் பொருள், குறையுடைய அகநிலை அல்லது மனம். முன்னிலை இடத்தில் காதலிக்கப் படுகின்றவர் இருக்கின்றார். தன்மையின் குறையை அல்லது விருப்பத்தைக் கேட்கின்றவர் இவர். S2 என்பது அன்னவரைக் குறிக்கும். இது மொழி சார்ந்த குறியீடு. (S1 மற்றும் S2 மொழியாலானது). காதலுறவில் $ மற்றும் S2 ஆகிய இரண்டு அகநிலைகள். இவர்களின் மறைபொருளாக முறையே S1 மற்றும் a உள்ளன. 

S1 என்பது குறிப்பான் அல்லது வேட்கை. அதுவும் மொழி வடிவிலான வேட்கை. இதனால், அந்த நபரின் மனம் பிளவுண்டதாகிறது. இந்த வேட்கை உள்ளத்தில் குறையை உண்டாக்கிவிடுகின்றது. அதனால்தான், S எனும் அகநிலை திரிந்து $ ஆகிறது. இதில் உள்ள பிரிகோடு அகநிலையில் (மனத்தின்) பிளவைக் குறிக்கும். இந்த $ என்கிற காதலரை S1 பேச வைக்கிறது. இங்கே, S1 என்பது மொழியைக் குறிக்கும். மொழியின்றிக் காதலில்லை. சொன்னால்தான் காதல். அது, குறியீட்டு மொழியாகவும் இருக்கலாம். இங்கே ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று ‘நான்’ எனும் காதலர் சொல்ல வேண்டும். இந்தச் சொல்லாடல் காதலிக்கப் படுகின்ற நபரை நோக்கியது. (படுகோட்டு அம்பு குறியைப் பார்க்கவும்). இவர் கூறும் வார்த்தைகளைக் காதலிக்கப் படுகின்ற நபரான S2 கேட்கிறார். அங்கீகாரம் செய்துவிட்டால் அவருள் விளைவை ஏற்படுத்திவிடும். அதாவது, அவருள் மறைந்து கிடக்கின்ற a எனும் ‘காதல்’ செயல்பட வந்துவிடும். இந்தக் காதல் என்றும் ‘நான்’ நோக்கியதாக இருக்கும். (a 🡪$ அம்புக் குறியைப் பார்க்கவும்). இந்த ‘நான்’ ($) காதலுறவின் தன்மையே அன்றி முன்னிலையைக் குறிக்காது. இந்த ‘நான்’ வார்த்தைகள் முன்னிலை நோக்கியது (S1🡪S2 அம்புக்குறி இதைக் காட்டும்).    ‘நான்’ இடத்தில் தொடங்கி ‘நான்’ இடத்தில் முடிவுக்கு வந்தால், காதல் நிறைவேறிவிட்டதாகப் பொருள்படும். இந்த ‘நான்’ ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். என்றாலும், உறவின் அமைப்பு மாறாது. $ என்பது குறையுடைய அகநிலை என்பதால் இதை நிறைவு செய்யும் பொருட்டு முன்னிலையின் பங்கு தேவைப்படுகின்றது. இதில் நிறைவு கிடைக்காது என்பதால் சுழற்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும். மொழிதலும் இப்படிப்பட்டதே ஆகும். காரணம், மொழியும் காதலும் முன்னிலை நோக்கியவையாகும். இந்த முன்னிலையின்  அங்கீகாரம் கட்டாயம். அதனால்தான், காதல் என்பது மொழி அமைப்பிலானது என்கிறார் லக்கான். குறைதான் மொழியை ஏற்படுத்தியது. அழுத குழந்தைக்குத்தான் பால். அழுகை என்பது மொழி.  

VI

உளப்பகுப்பாய்வு என்றால் ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகிய மூவரும் தனித்த சிந்தனைப் புலத்தை உருவாக்கியவர்கள். இவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிற உளப்பகுப்பாய்வாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதனால், இம்மூவரின் பார்வையில் இங்கே காதல் குறித்து விவாதித்தோம். இந்தக் கட்டுரை அறிமுக நிலையிலானது. காதல் குறித்துத் தனித்த நூல் எழுதும் அளவுக்கு உளப்பகுப்பாய்வில் பல செய்திகள் உள்ளன. அதேபோல், காதலில் பல நிலைகள் உள்ளன. தற்காதல், புறக் காதல், ஒருதலைக் காதல், ஓரினக் காதல், கள்ளக் காதல், விலங்கு மீதானக் காதல், முதியோர் மீதானக் காதல் என எண்ணிலடங்கா. மேலும், பார்வைக் காதல், புன்னகைக் காதல், பேச்சுக் காதல், தீண்டல் காதல் என ஆன்ம காதல் வரை காதலில் பல நிலைகள் உள்ளன. அறிந்தோர் அல்லது அறியாதோர் இடையே வெறும் பார்வையால் காதலிப்பது பார்வைக் காதல், புன்னைகையால் மட்டும் காதலிப்பது புன்னகைக் காதல், ஒருவருக்கொருவர் அக்கறை வழியில் காதலிப்பது அக்கறைக் காதல். இப்படிப்பட்ட கோணங்களிலும் காதலைக் காண வேண்டியுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்த உளவியல் பின்னணி கொண்டது. 

இந்தக் கட்டுரையில் வெற்றிக் காதலை மட்டும் பார்த்திருக்கிறோம். இந்தக் காதல் உறவானது ஃப்ராய்டிய நோக்கில் நனவிலி நோயாகவும் யூங்கிய நோக்கில் ‘அனிமா- அனிமஸ்’ உறவாகவும் லக்கான் நோக்கில் இசிப்புச் சொல்லாடலாகவும் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வின் வழியில் அறியலாம். இறுதியாக, திருமணம் என்பதும் ஒருவிதப் போலிக் காதல். இது குறித்தும் பேச நிறைய உள்ளன. திருமணத்தின் பின்னணியாகப் பண்பாடு மட்டுமின்றி உளவியலும் உள்ளது. இது கட்டாயக் காதல்;  சமூக நிர்பந்தக் காதல். ஆணினத்தைவிடப் பெண்ணினத்துக்குப் பாதிப்பு மிகுதி. இதற்குத் தனித்த ஆய்வு தேவை. 

***

தி கு இரவிச்சந்திரன்: ஃப்ராய்ட், யூங், லக்கான் சிந்தனைப் புலங்களில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருபவர். ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்- உளப்பகுப்பாய்வு அறிவியல்’ நூல் மூலம் ஃப்ராய்டையும் ‘ழாக் லக்கான்- குறியியல் உளப்பகுப்பாய்வுக்கு ஓர் அறிமுகம்’ நூல் மூலம் லக்கானையும் தமிழில் விரிவாக  அறிமுகப் படுத்தியவர். இதுவரை உளப்பகுப்பாய்வு தொடர்பாகப் பதினாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தொல்காப்பியமும் ஃ ப்ராய்டியமும், தீண்டாமை நனவிலி, எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, அம்மா வந்தாள்- உளப்பகுப்பாய்வு, ஃப்ராய்ட் யூங் லக்கான்- அறிமுகமும் அதற்கு அப்பாலும்  ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சிக்மண்ட் ஃப்ராய்ட் நூலுக்காகச் சிறந்த நூலாசிரியர் விருதை நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியிலும் (2007), காப்பிய உளப்பகுப்பாய்வு நூலூக்காகச் சிறந்த திறனாய்வாளர் விருதான பஞ்சு பரிசிலைப் புதுவையிலும் (2019) பெற்றுள்ளார்.  திருப்பத்தூரைச் சார்ந்த இவர், தற்போது புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல்:  tkravichandranphd@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here