Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்“மாபெரும் சகமனிதன்”

“மாபெரும் சகமனிதன்”

ம.கண்ணம்மாள்

ப்பெரும் பரப்பில் மிகப்பெரிய செயலொன்றினை காலம் நினைவு கூர்ந்தால், தவிர்க்கவே முடியாத பெயராக, டாக்டர் பாபாசாஹெப் என்ற பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உருவம்தான் கண்முன் தோன்றும். இவ்வுருவத்தின் வழி நிலைத்த பற்றுகொண்டு, முழுமையாக சரணடைந்து திருமணம் புரிந்து, அவரின் பணியின் பொருட்டு நிழல்போலத் தொடர்ந்து நடந்து வாழ்ந்த வெளிப்பாடுகளின் சுயசிந்தனை சவிதா அம்பேத்கர் எழுதிய ’பாபாசாஹெப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை’ (தமிழில் த. ராஜன்) எனும் இந்நூல்.

சவிதா அம்பேத்கரைப் பொறுத்தவரை, நிறைவென்பது, “உடல், பேச்சு, உள்ளம் எல்லாவற்றையும் ஒன்றாக்கி அவருக்கு சேவை புரிந்தேன். அவரை வழிபட்டேன். மகத்தான சகாப்தத்தை வரையறுக்கும், உலகின் மகிமையாக இருந்த இந்த மனிதருடன், என்னுடைய வாழ்க்கை நிரந்தரமாக பிணைக்கப்பட்டு விட்டது. இதைவிட நிறைவான வாழ்க்கை வேறு என்ன இருந்துவிட முடியும்?” என்ற வாக்கியங்களோடு சொற்களானது உள்ளிழுத்துக் கொள்கிறது. சக மனிதர்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய, பெருஞ்சிறப்புமிக்க செய்கைகளெல்லாம், பரந்து கிடக்கும் கட்டற்ற நிலப்பரப்பில், அவர் புகழ் பேசுகின்றது. இதற்கெல்லாம் காரணமாக அம்பேத்கரின் குரலையும் பேனாவையும் சொல்லலாம். சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளின் வழியாக, பௌத்தத்தைத் தழுவி ஒரு போதிசத்துவர் ஆனவர்.

மிக ஆழமான கடல் போன்ற அவர் வாழ்க்கையில், கடலின் மேலெழும் சிறு நீர்க்குமிழியான ஒரு பெண், நம்பகமும் நேர்மையுமாக தான் கடந்த வாழ்நாட்களைப் பொருத்தப்பாட்டுடன் விவரித்து செல்கின்றார். இரத்தினகிரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அம்பேத்கரும் சவிதாவும். அவர் தந்தை பணியின் தொடர்பாக பம்பாய்க்கு இடம் பெயர, உறவினர்களும் அங்கிருந்தபடியால், அங்குதான் ஷாரதா பிறக்கின்றார். அவர் பிறந்தபோது அவருக்கு ஷாரதா என்றே பெயரிட்டிருந்தனர். நல்ல பள்ளிக்கல்வியுடன், உயர்கல்வியும் முடித்து குடும்பத்தினர் விருப்பப்படி மருத்துவராக மாறும் சவிதாவின் செயற்பாட்டினால்தான், டாக்டர் அம்பேத்கர் தனக்கிருந்த உடற்பிணியோடு கொஞ்சம் அதிகமான காலம் உயிர்வாழ முடிந்தது. 

இவர் தங்கியிருந்த கிராண்ட் மருத்துவக் கல்லூரிக்கு எதிரில், மணிபவன் என்ற இடத்தில்தான் காந்தியடிகள் தங்கியதையும், அங்குச் சென்று அவரைச் சந்தித்த அம்பேத்கரின் நினைவுகள் பற்றியும், பின்னொரு நாளில் தன்னிடம் பாபாசாஹெப் பகிர்ந்ததாக மருத்துவரான சவிதா தொடர் நிலைகளின் வழி குறிக்கின்றார்.  இவ்வாறான சூழலில் சவிதா அம்பேத்கரை எப்பொழுது சந்தித்தார்? எனப் பக்கங்களைத் தாண்டும்போது தோன்றியது.

இந்த சந்திப்பு குறித்து பலவகையான வதந்திகள், பல மனித உடல்களின் கட்டுக்கதைகளாகப் பரவிக் கடந்தது. அது சொல்பவரையும் கேட்பவரையும் பொறுத்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம். 1947 இன் தொடக்கத்தில், அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரியாத சவிதாவுக்கு, குடும்ப நண்பர் ராவ் என்ற மனிதரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பொதுவாக அறிவு மிக்க ஆணின் பேச்சு எதிர்பாலினத்தவரை சற்றே அசைக்கும். அது சவிதாவுக்கும் நடந்துள்ளது. டாக்டர் அம்பேத்கரின் புலமை, படிப்பு, முற்றிலும் மாறுபட்ட ஆளுமைத்தனம், அவரின் பெரிய நெற்றி, ஒளி கக்கும் கண்கள், அதிநவீன கச்சிதமான உடையோடு தோற்றமளித்த அவர், பெண்கள் முன்னேற்றம் பற்றி உரையாடத் தொடங்கியபோது அந்த உரையாடல் இவருக்குப் பற்பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஏதுவாகியிருந்திருக்கின்றது. முதல் சந்திப்பிலேயே, பௌத்தம் குறித்த சிந்தனைகள், அதன் தொடர்பான விவாதங்கள், அதற்கு எடுத்துவைக்கப்பட்ட தரவுகளென கூர்பகுப்பாய்வுக் களத்தில் இருவரும் நின்றுள்ளனர். அதன்பின் நடந்த சந்திப்புகள் அடிக்கடி தற்செயலாக நிகழ்ந்தன. அம்பேத்கரிடமிருந்த அறிவுப் பொக்கிஷம், சவிதாவினுள் சிறிதுசிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. இச்சமயத்தில் அவரின் உடல்நலம் பற்றி சவிதா பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நூலில் பெரும்பான்மையாக பாபாசாஹெபின் உடல்நலக் குறைவு, அதைப் பொருட்படுத்தாமல், மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டும் அக்கறை கொண்ட ஒருமனிதராக நடமாடுகிறார். 1947 இல் ஆகஸ்டு 15 இந்தியா சுதந்திரம் பெற்றதோடு நேரு தலைமையிலான அமைச்சர்கள் குழுவில், முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற பாபாசாஹெபின் தோள்கள், அவரின் இறுதிநாள் வரை சமத்துவத்தை நிலைநாட்ட இயக்கம் தொடங்கலும், அதன் தொடர்பான சிந்தனைகள், வாசிப்புகள், எழுத்துகள் என ஓய்வற்ற நிலையிலேயே நாட்கள் நகர்ந்துள்ளன.

சகமனிதர்களின் விழிப்புணர்வுக்காக, ”மூக் நாயக்” என்ற பத்திரிகையைத் தொடங்கியதும், அதில் எழுதப்பட்ட எழுத்துக்கள், பத்திரிகையில் பணிபுரிந்தவர்களோடு நடந்த கடிதப்போக்குகள், பதில்கள், உடல்நலம் பேணலில் பெரும் சிக்கல்கள், பிணியின் வீரியத்தால் ஏற்பட்ட மௌனங்களென கடிதங்கள் பெரும் பங்கு வகித்ததை புரிதலாக காட்டியுள்ள பாங்கு எண்ணத்தக்கது. அதில் ஒரு கடிதம் இப்படி செல்கின்றது. “என்னுடைய உடல் நலம் பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். என்னுடைய உடல்நலம் மீது நான் கவனக்குறைவாக இருக்கவில்லை. அதே நேரத்தில் என்னால் வேலையைவிட, உடல் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தர முடியாது”, என்பதாக சொல்லியிருப்பதை வாசிக்கும்போது இன்னும் கொஞ்ச நாட்கள் சாஹெப் வாழ்ந்திருந்தால், சகலருக்காகவும் பல அரியனவற்றை அசாதாரணமாக செய்திருப்பார். சொல்லப்போனால் சாஹெபின் வாழ்க்கையை பொதுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை எனப் பகுக்கலாம். இதனுள் பொதுவாழ்க்கையில்தான் பெருங்காலங்களை கழித்து சென்றிருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

ஒரு சிறு மனித உடல் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து, பொதுவாழ்க்கைக்கு நகரக் காரணம் என்ன? எனக் கேட்டால், அதற்கான பதில் இந்நூலில் இருக்கின்றது. “தீண்டாமை என்ற கொடூரமான வழக்கம் உருவாக்கிய படுகாயங்களால், டாக்டர் சாஹெப் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே அவதிப்பட வேண்டியிருந்தது. அது அந்தக் குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றது. ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும்போதும், எதிரே தீண்டாமை வந்து நின்றது. அவர் தன்னுடைய பால்ய காலத்தையும், மாணவப் பருவத்தையும், பொல்லாத சூழ்நிலைகளில் கழிக்க வேண்டியிருந்தது. மிக இளம் வயதிலிருந்தே அவருடைய மனம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானது” என்பதை நோக்கும்போது மனிதர்களின் சமத்துவத்தை மேம்படுத்தவென்று, அவர் பல திட்டங்களை முன்கொணர்ந்தது நினைவில் வருகின்றது. அதையெல்லாம் செயலாற்றிய இடமாக திகழ்ந்த சாஹெபின் ”ராஜ் கிரஹா” என்றழைக்கப்பட்ட அவரது இல்லமும் தனிச்சிறப்புக் கொள்கின்றது. 

டாக்டர் அம்பேத்கரின் வாழ்நாள் தொகுப்பு முழுவதுமே, ஒட்டுமொத்த போராட்டம்தான். இளம் வயது மசூர் நிகழ்வு, பரோடா அத்தியாயம், சிடன் ஹாயில் நடந்த கசப்புகள், தந்தை மரணம், காலா ராம் கோயில் சத்யாகிரகம், வட்ட மேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம், இணையர் ரமாபாய் மரணம் போன்ற பல தளங்களில் நடந்தவைகள் பெரும் சவாலாக மாறி, அவரை அலைக்கழித்துள்ளன. தான் செல்லும் வழியின், ஒவ்வொரு அடியிலும் பற்பல கசப்புகளை விழுங்கி நடந்த அம்பேத்கருக்கு மஹத் சத்யாகிரகமும், மனு ஸ்மிருதி எரிப்பும், பொதுவெளியில் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனால், காலச்சூழல் அவருக்குத் துணிச்சலுடன் எதிர்கொள்ள வழிகாட்டியது. 

இதனிடையில், டாக்டர் அம்பேத்கருக்கு உடல்நலனில் ஏற்பட்ட பெரும் பின்னடைவினால் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறுமான இன்சுலின், தவறாத உடற்பயிற்சி, திட்டமிடப்பட்ட உணவு முறைகள் எனத் தகவல்களும் அறிவுறுத்தல்களுமாக மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினர். பார்க்கப்போனால் இந்நூல் தொகுப்பில் அம்பேத்கரின் உடல்நிலை, நமக்கு பெரும் அச்சுறுத்தலையும் பதைபதைப்பையும் ஏற்படுத்துகிறது. அளவே இல்லாத அறிவுத் திறனோடு பிறந்து, சமூகத்துக்காக பாடுபடும் ஒரு மனித உடலில், பிணி எடுத்த விஸ்வரூபங்கள் அடக்கமுடியாத அயர்ச்சியை தருகின்றது. அதே அயர்ச்சிதான், அம்பேத்கருக்கும் ஏற்பட்டு வினாவாக அவர்முன் உருமாறி நின்றது. “இதை நான் எவ்வாறு கையாளப்போகிறேன் என்பதே அது”. வீட்டில் உள்ளவர்களால் தன்னை நிர்வகிக்க முடியாத சூழல், செவிலியரை வைத்துக் கொள்ள இயலாத சூழல் இவைப்போன்றவற்றால், சவிதா கொடுத்த எந்த மருத்துவ ஆலோசனகளையும் அம்பேத்கர் ஏற்க இயலாத கையறுநிலை அவரை இறுக்கியது. தனியராகயிருந்த சாஹேப்பின் வீட்டிலேயே தங்கிக்கொண்டு சிகிச்சைத் தருகிறேன் என சவிதா சொல்வதற்கு, சாஹேபின் பதில், “பாருங்கள் டாக்டர், நான் தனியன். முற்றிலும் தனித்திருக்கிறேன். முற்றிலும் தனிமையில் வசிக்கிறேன். ஒண்டியான ஆள். இளமையும் அழகும் கொண்ட ஒரு மருத்துவர், என்னை கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஊருலகம் என்ன சொல்லும்? உங்கள் அக்கறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் சொல்வது சாத்தியமே இல்லை”, என்ற இம்மறுப்புக்குப் பின்னாலான காலங்களில், நடந்த இருவருக்கும் இடையிலான பெரும் பெரும் உரையாடல்கள், அர்ப்பணிப்பான பங்களிப்புகள், தன் மகன் யஷ்வந்த், அண்ணன் மகன் முகுந்த் ஆகியோரை வளர்க்கும் பொறுப்பு, தன்னை எந்நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு அன்புக்காக ஏங்கியபோது, சவிதாவிடம் அந்த திருமண விண்ணப்பத்தைக் கோருகின்றார். “டாக்டர் சாஹெப் ஒரு வார்த்தை சொன்னால் போதும், இலட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிப்பார்கள். ஆனால், அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் அவர் முற்றிலும் தனியர்தான்”, என்பதை இதன் வழியே திண்ணமாக அறியலாம். இதனை சவிதாவும் அறிந்திருந்ததால்தான் ’உங்களை கவனித்துக் கொள்ளக்கூடிய ஒருவர் நிச்சயம் தேவை’ என்று கூறியபோது, “எனக்கு உகந்த நபரை உங்களிடமிருந்து தொடங்குகிறேன்”, என்றதில் மிகமிக ஒரு மதித்தலுடனான அன்பு வெளிப்படுகின்றது. அதனாலேயே, அவ்வன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிதும் இசைவான மனநிலையினைத் தெரிவித்த விதம் வாசிப்போரும் மனநிறைவு கொள்ள வைக்கின்றது. “நான் டாக்டர் சாஹெபின் வாழ்க்கையுடன் ஒன்று கலந்து, அவருக்குள் என்னைக் கரைத்துக் கொள்வேன்”, என்பதில் மதிப்பும் மரியாதையும் திரும்பவும் சாஹெபுக்கு சவிதாவால் அளிக்கப்படுகின்றது.

இருவரின் நல்ல மறுமொழிகளும், விரும்பத்தக்க பரிசோடு, அம்பேத்கரின் இருப்பின் முடிவை அடைவதாக, நிம்மதி, கௌரவம் தரும் நிலையாக மாறிப்போனது. இந்த நிலைப்பாட்டின் பெரும் பங்களிப்பு என்னவென்றால், இருவருக்குமிடையே நடந்த கடிதத்தொடர்பாகும். இப்படைப்பிலும் கடித்தத் தொடர்புகள், இருவருக்குமுள்ள தனிப்பட்ட உறவுகள், தேவைகள் மற்றும் அவசியங்களை சார்ந்து சென்றுள்ளது.

இக்கடிதங்களின் வெளிப்படைத் தன்மையினை, தனிப்பட்ட கடிதங்கள் எல்லாவற்றையும் அப்படியே பிரசுரிக்க வேண்டுமென, பன்னாட்களாக பலரும் வலியுறுத்தி வந்தனர். தெரிந்த, தெரிந்திராத பல விஷயங்களுக்கு வெளிச்சம் கிடைக்குமெனவும் நினைத்தனர். அவற்றைக்கடந்து, அம்பேத்கரைப் பற்றி புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடைபெறும் சூழலில் இவை தேவையானதும்கூட என்றுணர்ந்தாலும் சில அந்தரங்கமாக இருப்பவை. அவற்றை வெளியிட வேண்டுமா என்ற தயக்கமும் சவிதாவுக்கு ஏற்பட்டது. அன்பிற்காக ஏங்கிய அம்பேத்கர் பற்றிய நினைவுகளை சம்பந்தப்பட்ட இருவரும் தங்களின் கைகளால் எழுதிய எழுத்துக்கள் புலப்படுத்துகின்றன.

மாணவராயிருந்தபோதே அம்பேத்கருக்கு உறவினரான ரமாபாயோடு திருமணம் நடைபெற்று, தந்தையை இழந்ததோடு குடும்பப் பொறுப்புகளுடனே தன் கல்விக்கான பொறுப்பு முழுவதையும் அவர் ஏற்க வேண்டிய நிலை வந்தது. பின் உயர்கல்விக்காக இங்கிலாந்து, அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழல், வேலைப் பார்த்த பரோடா அரசுடன் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்களென பம்பாய் திரும்பினார். 1920 – 1923 வரை எம்.எஸ்.சி, டி.எஸ்சி, பார்-அட்-லா படிப்பை முடிப்பதற்காக, அவர் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் சென்றார். 1924 ஆம் ஆண்டிலிருந்து, பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மஹத்தின் சாவ்தார் ஏரி சத்யாகிரகம், நாசிக்கின் காலா ராம் கோயில் நுழைவு சத்யாகிரகம், வட்ட மேஜை மாநாடுகள் மூன்று, பூனா ஒப்பந்தம் போல்வன, அடுத்தடுத்து நடந்தன. வழக்கறிஞர் தொழில், வாசிப்பு, எழுத்து, சந்திப்புகள், மாநாடுகள், சுற்றுப்பயணங்கள் என நேரம் செலவழிந்தது. அம்பேத்கர் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பரேலிலுள்ள ’தாமோதர் ஹால்’ அலுவலகத்தில்தான் கழித்தார். நேரம் வாய்க்கும் போது, இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்துள்ளார். 1935 இல் ரமாபாய் காலமானார். குழந்தைகளின் அன்பும் பூரணமாகக் கிடைக்கப்பெறவில்லை. யஷ்வந்த் 1912 டிசம்பரில் பிறந்து, உடல்நிலை சரியிலாமல் வளர்ந்ததும், பின் பிறந்த குழந்தைகள் உயிர் மறைந்து போனதும், அம்பேத்கரின் வாழ்வில் சோகமான நேரமாகும். மனைவி, அக்கா, அண்ணன் என்ற தொடர் மரணங்களால் துவண்டிருந்த அவரை பலர் வற்புறுத்தியபோதும், அவரால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்க முடியவில்லை. அச்சூழலில் சவிதாவின் சந்திப்பும், மருத்துவ அறிவுரையும், இணையான சமூக உரையாடலும், கல்வி பற்றிய விவாதங்களும் நிகழ்ந்து மற்றொரு அன்பிற்கு ஆட்பட்டார். 

அம்பேத்கரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஏப்ரல் 14க்குப் பின், ஏப்ரல் 15 திருமண நாளாக நிச்சயிக்கப்பட்டது. அதற்கிடையில் அவர்களுக்குள் தொலைபேசி பேச்சுகள், கடிதங்கள், இதையுந்தாண்டி லெட்டர் பேட் வழி எழுதப்பட்ட கடிதங்களென நாள்கள் நீண்டன. 1948 ஏப்ரல் 15 வியாழனன்று, நெருக்கமான நண்பர்கள், உறவுகள் சூழ அம்பேத்கர் சவிதா இணையர்களின் திருமணம் நிகழ்ந்தது. துணை பிரதமர், நண்பர் நவல் பத்தேனா, வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகள், போன்ற வாழ்த்துகளோடு நன்றாக வாழத்தொடங்கிய பொழுதுகள் இருவருக்குமே மிக அழகானவை. அம்பேத்கருக்குப் பிடித்த உணவு வகைகள் பரிமாறுதல், முழுவதுமாக அவரை அருகிலிருந்து கவனித்தல், இடையில் அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையிலிருக்க நேரிடுதலென நாட்கள் கழிந்தன. இப்படியாகத் தொடர்ந்த நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களிடையே, கல்வியைப் பிரபலப் படுத்துவதன் வழியாகவும், பரப்புவதன் மூலமாகவும் மட்டுமே, அவர்களுடைய முன்னேற்றம் சாத்தியப்படும் என்பதை டாக்டர் சாஹெப் மிகத் தெளிவாக உணர்ந்து, 1928 இல் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்காக கல்வி சங்கத்தை நிறுவி, இரண்டு விடுதிகளையும் தொடங்கியுள்ளார். அதேபோல பம்பாயில் சித்தார்த் கல்லூரியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, மராத்வாடாவை மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதி, அங்கும் ஒரு கல்வி நிறுவனத்தை அம்பேத்கர் நிறுவ விரும்பினார் என்பதை சவிதா பதிவு செய்துள்ளார். 

ஔரங்காபாதின் மிலிந்த் அறிவியல் கல்லூரி விடுதி, கலை அறிவியல் கல்லூரி விடுதி, மிலிந்த் உயர்நிலைப்பள்ளி போன்றவற்றின் கட்டடங்களுக்கான திட்டங்களை அம்பேத்கர் தயாரித்துள்ளார் எனவும் அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம்விட, அம்பேத்கர் தன் விருப்பமாகப் பகிர்ந்ததை இப்படைப்பில், “அவர் ஆதரவற்றோருக்கான சேவையில் மிகுந்த மனநிறைவைப் பெறக்கூடியவர்” அவர் எப்போதும் சொல்வார், “ஆதரவற்றோரையும், ஏழைகளையும், மணமாகாத தாய்மார்களால் கைவிடப்பட்ட சிசுக்களையும், இல்லத்தில் வைத்துப் பராமரித்து அவர்களுக்கு சேவை புரிய வேண்டும் என்பது என்னுடைய ஆழமான விருப்பம்” என்ற கூற்றின் முலமாக உணரலாம். 

இதனைத் தொடர்ந்து டாக்டர் சாஹெப் இந்து சட்டத்தொகுப்பு மசோதாவைக் கையிலெடுத்தார். இந்துக்களுக்காக டாக்டர் சாஹெப் ஆற்றிய பணிகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்ததைவிட அதிகம். அரசமைப்பு எனும் மிகப்பெரும் பணி முடித்த பின்னரும், தன்னுடைய சட்ட அமைச்சர் பணியைத் தவறாமல் தொடர்ந்து வந்தார். 

“இந்திய அரசமைப்பின் சிற்பி” என்று அவர் இந்தியாமுழுவதும் போற்றிப் புகழப்பட்டது அவரின் கடும்முயற்சியால் மட்டுமே நடந்ததெனலாம். ’பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (எஸ்.சி.எல்.ஃப்) என்பதும் டாக்டரின் பெரும் உருவாக்கமாயிற்று. அரசமைப்பு அவையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1948 நவம்பர் 4 அன்று அரசமைப்பு வரைவினை ஆலோசனைகளுக்காக முன்வைத்தார். இத்தொடர் பணிகளால் பாபாசாஹெபின் உடல் மீண்டும் நலிவுற்றது. சிறிது தேறி வந்ததும், பௌத்தம் தழுவுவதென முடிவெடுத்ததை,  “பௌத்தம் தழுவுவதென நாங்கள் முடிவெடுத்தோம். எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை பௌத்தர்களாகக் கழிக்க வேண்டும் என்பதே எங்கள் தீர்மானம்” என சவிதா கூறியுள்ளார்.

இதற்கிடையில், டாக்டர் அம்பேத்கர் தலேகான், ஹைதராபாத், ஓக்லா, பௌத்தம், கொழும்பு மாநாடு என ஒரு பயணப் பட்டியல் நீண்டது. தன் வேலையினூடாக சிலை வடிக்கவும் கற்றுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் மாணவராகயிருந்து ஏதோவொன்றினை டாக்டர் சாஹெப் கற்றுக்கொண்டேயிருந்தார். சிலை வடித்தலும் அதனுள் அடக்கம்.

இவ்வாறான நாட்களை நாம் நகர்த்தி நகர்த்திப் பார்க்கும்போது, இந்துச் சட்டத் தொகுப்பு மசோதா பிப்ரவரி 5 அன்று தாக்கல் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதாக அறியலாம். மிக நெருக்கடியான சூழ்நிலையில் டாக்டர் சாஹெப் பிப்ரவரி 5 1951 இல், இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவைத் தாக்கல் செய்தார். ஆனால், மக்களவையில் மசோதா ஒத்திவைக்கப்பட்டதும், அமைச்சரவையில் தொடர அம்பேத்கருக்கு ஆர்வமில்லை. 

இத்தகையதான அம்பேத்கரின் வாழ்நாள் நகர்வில், தொடர்ந்து சவிதாவால் பதிவிடப்படும் செய்திகள் வாசிக்கும் நமக்கு முக்கியமானதாகவேயுள்ளது. பம்பாய் மாகாண எஸ் சி ஃப் நடத்திய பாராட்டுவிழா, 1952 முதல் பொதுத்தேர்தல், அரசமைப்பை உருவாக்கியவரின் தோல்வி, மராத்வாடாவுக்கான வளர்ச்சித் திட்டம், கொலம்பியா பல்கலைக்கழக அங்கீகாரம், பூனா சட்ட நூலகத்தில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பாராட்டு, பம்பாயில் புத்த ஜெயந்தி என்றவாறு நிகழ்வுகள் கடந்து செல்ல, புத்தர், கபீர், பூலே மூவரையும் தன் ஆசான்களாக கருதியதையும் தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றும், அம்பேத்கர், உலகம் முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக புத்த மிஷன் நிறுவப்பட வேண்டுமென்று பரிந்துரைத்ததையும், அதற்கான இலக்குகள் வரையறுத்ததையும் அறியமுடிகின்றது.

இம்மாதிரியான போக்கில், சவிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கரு ஒன்று உருவாகி, முழுமைப் பெறாமல் போன துயரமும் அவருக்கு ஏற்பட்டதை வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். அம்பேத்கருக்கு பல இன்னல்கள் தொடர்ந்து ஏற்பட்ட நிலையில், அரசியலில் தோல்வி அடைந்து ஆர்வம் குறைந்தது. அதே நேரத்தில், ஒடுக்கப்பட்டோருக்காக அரசியலில் நீடிப்பது முக்கியமானதாக இருந்த போது, சவிதா சில வற்புறுத்தல்களை மேற்கொண்டு, தொடர் சொல்லாகி தன் இணையரிடம் தெரிவித்துள்ளார். அது “அரசியல் பணிகளில் ஈடுபடாமல் சமூகப்பணிகளை மட்டும் மேற்கொள்வோம். நீங்கள் அறிவித்துள்ளபடி பௌத்தப்பணியைக் கையில் எடுப்போம்” என்பதுதான். 

தொடர்ந்து கழிந்த நாட்களில் டாக்டர் சாஹெபின் உடல்நிலை பெரிதும் நலிவுற்றது. அவரின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும், எப்பொழுதும் மக்கள் நலனுக்காகவேயிருந்தன. டாக்டர் அம்பேத்கர் உலகின் ஆறு அறிவு ஜீவிகளில் ஒருவராகக் கருதப்படுவது மிகவும் இங்கு எண்ணத்தக்கது.

ரங்கூன் பௌத்த மாநாடு, அம்பேத்கர், நவினா மதமாற்றம், மத பணியில் ஈடுபடுதல் என்றெல்லாம், சுழன்ற நிலையில் அம்பேத்கரின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்விடத்தில் ஆக்சிஜன் எடுத்துக் கொண்டதையும், மதுவுக்கு அடிபணியாததையும் சவிதா நினைவுக் கொள்கின்றார். இச்சூழலிலும் கல்விப் பணி தொடர்பான செயல்பாடுகள், தூய்மையான தன்னலமற்ற பொதுகுணத்தோடு, பம்பாயில் கடைசி கூட்டத்தில் பங்கேற்றதையும் செய்தியாக நமக்குத் தருகின்றார்.

இவையெல்லாந்தாண்டி, தலித்துகளின் முன்னேற்றத்துக்கான பணி, அரசியல் தாண்டி சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான பணி, நாட்டில் ஆற்றிய பற்பல பணிகள் என பல தளங்களின் பொறுப்புகளைக் கொண்டாலும், வெளியிட்ட மற்றும் வெளியிடப்படாத நூல்கள் வழியாக, இச்சமூகத்திற்கு மிகப்பெரும் பொக்கிஷத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக சவிதா மிகப் பெருமையாக அடையாளப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையினைத் தாண்டி, அம்பேத்கர் காத்மாண்டுப் பயணம், பௌத்த யாத்திரைத் தலங்களில் சுற்றுலா என தன் இறுதி நாட்களைக் கழித்த அப்பெருமகன், 1956 டிசம்பர் 5 அன்று. ”புத்தரும் அவர் தம்மமும்” நூலின் முன்னுரையில் சில திருத்தங்கள் செய்து, சில கடிதங்களை பார்வையிட்டு, வழமையாக இல்லாமல், அன்றிரவு சீக்கிரமே உறங்கச் சென்றார். அவ்விரவு அம்பேத்கரின் கடைசி இரவாக இச்சமூகத்தில் வாழ்வோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நூலின் வழியே, நிறைவாக சவிதா அம்பேத்கர் சொல்லிக்கொள்வது, 

“என் வாழ்வின் ஒவ்வொரு சொல்லையும், என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், உறுதிபடுத்தப்பட்ட சான்றுகளுடனும், சாத்தியமான இடங்களில் இயன்றவரை டாக்டர் சாஹெபின் வார்த்தைகளை முன்வைத்தும், இந்தப் புத்தகத்தில் நேர்மையான, உளமார்ந்த முயற்சியை நான் மேற்கொண்டிருக்கிறேன்”, என்பதுதான். 

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here