Homeஇதழ்கள்2026 இதழ்கள்மதார் கவிதைகள்

மதார் கவிதைகள்

புழுகு மூட்டை

புழுகு மூட்டை
ஒன்றைப் பார்த்தேன்
நன்கு இறுக்கி முடிச்சிடப்பட்டிருந்தது
பிரயத்தனப்பட்டு அவிழ்த்தேன்
கழுத்து இறுகியதால்
அது செத்திருக்கும் போல
உள்ளே கைவிட்டு எடுத்துப் போட்டேன்
செயலிழந்த உள்ளுறுப்புகளென
இயக்கமற்றுக் கிடந்தன


உச்சி மலையேறி
கைவிரித்து நின்றேன்

அந்தச் சிலுவையில்
அறையப்பட்டிருந்தது வெயில்

அது
தன் பிதாவிடம்
முறையிட்டு
அழுதது

மாலை
எப்போது வரும்
எனப் பிதாவும்
காத்துக்கொண்டிருந்தார்


நீளமான கவிதையும் அகலமான கதையும்

என் அப்பா
அவரது
தாத்தாவின் தாத்தா பெயரை
எழுதிவைத்துவிட்டுச் செத்துப் போயிருக்கலாம்

என் தாத்தா
அவரது தாத்தாவின் தாத்தா பெயரை
எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கலாம்

கதைகளுக்கு வாய்ப்பில்லாமல் போன
இந்தக் குடும்பத்தில்
கவிதைகளை எழுதிக்கொண்டு
இருக்கிறேன்

கவிதையால் எவ்வளவு தூரம் பின்னுக்குச் செல்ல முடியும் என கயறு விட்டுப் பார்த்தேன்

அது
உலகின் முதல் மனிதன் வரை சென்றுவிட்டது

ஆனால்
என் மூதாதையர்
ஏறிவரத் தோதான
கதைகள் இல்லை


முன்புவரை
கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர்
தன் ஜாலப்பையிலிருந்து
சாக்லேட்டை எடுத்து
குழந்தைக்குக் கொடுப்பவராகத்தான் இருந்தார்

நேற்று ஒளிந்திருந்து பார்த்தேன்
அவர்
ஜாலமுடிச்சில்
ஒரு துப்பாக்கி

குறிபார்த்தவர்
குறியிலேயே சுட்டார்

சாக்லேட்டுகளைப் பிரித்தவர்
உண்டார்
பசிதீரும்மட்டும்

***

மதார் – கவிஞர். வெயில் பறந்தது, மாயப்பாறை ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது, கோவை விஜயா வாசகர் வட்டத்தின் மீரா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். kavithaigal.in இணைய இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : matharmohideen24@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here