Tuesday, May 5, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்மரபுக்கும் நவீனத்துக்கும் அப்பால்: அம்பேத்கரின் தலித் மெய்யியல் கட்டமைப்பு

மரபுக்கும் நவீனத்துக்கும் அப்பால்: அம்பேத்கரின் தலித் மெய்யியல் கட்டமைப்பு

இரா.முரளி

மௌனத்தை உடைத்த குரல்

2500 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலே நசுக்கப்பட்டு, அடிமைகளாய் தீண்டத்தகாதவர்களாய் இருந்த ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக் குரலை உலகின் காதுகளில் முதன் முதலில் ஒலிக்கச் செய்தவர்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ‘தலித்’ அடையாளம் என்பது சமூக ஒடுக்குதலின் சின்னமாக இருந்த இடத்தில், அதையே சுயமரியாதை மற்றும் அதிகாரமளித்தலின் அடையாளமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் மேற்கத்திய நவீனத்துவக் கருத்தாக்கங்களை இந்திய சூழலுக்கேற்ப மறுவிளக்கம் செய்து, சமூக மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான மெய்யியலை அவர் உருவாக்கினார் . மனித மாண்பைக் காப்பது, சாதிகள் ஒழிப்பு, சமூக நீதி, சமூக நீதிக்கானப் பகுத்தறிவு பெறுதல், சமத்துவத்தின் அடிப்படையில் திறன் வளர்த்தல், சமத்துவம், ஜனநாயகம் பேணுதல் போன்ற சமூக விழுமியங்களின் அடிப்படையில் அவருடைய மெய்யியல் கோட்பாடு உருவாக்கப்பட்டது.

பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை மெய்யியல் என்பது பேருண்மையை அறியும் வழிமுறையாகவே பல நூறு ஆண்டுகளாகக் கருதப்பட்டும், சொல்லப்பட்டும் வருகின்றது. மானுட விடுதலையின் தொடக்கம் மனதின் விடுதலை, அக விடுதலையில் இருப்பதாக இந்தியாவின் பெரும்பான்மையான மெய்யியல் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. இந்தப் பிரகடனத்தின் ஓங்கிய ஒலி, கணிசமான மக்களின் மனித மாண்பைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்பது அடிப்படை முரண் ஆகும். ஆன்மீக விடுதலையைப் பல்வித பனுவல்களிலும், பயிற்சிகளிலும் பேசியவர்கள் தீண்டாமை எனும் விலங்கு பூட்டப்பட்டு, நசுக்கப்பட்ட மண்ணின் பூர்வ குடிகளின் விடுதலைக்கான எந்த வழிகாட்டுதலையும் முன்வைக்கவில்லை என்பதைவிட அந்த விலங்கைப் பூட்டியவர்களே அவர்கள்தான் என்பதும் கொடுமையானது. மனு சாதிய கட்டமைப்பை இறுக்கமான புனிதமான இறைத்தன்மை கொண்டதாக ஆக்கினார். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக் குரலை, வெறும் முழக்கமாக ஒலிக்காமல், ஒரு மெய்யியல் கோட்பாட்டுடன் எழுப்பினார் அம்பேத்கர். 

அம்பேத்கரின் கோட்பாடு என்பது மேற்கத்திய சிந்தனைகளின் நேரடிப் பிரதி அல்ல; மாறாக, இந்திய சூழலின் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு ஆக்கப்பூர்வமான தொகுப்பாகும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஜான் டூயியின் மாணவராக இருந்த அவர், மார்க்ஸ், ரஸ்ஸல், நீட்சே போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களைத் தமது சொந்த அனுபவம் மற்றும் புத்த தத்துவத்துடன் இணைத்து ஒரு தனித்துவமான மெய்யியலை உருவாக்கினார்.

விண்ணிலே விடியல் காண்பது பற்றியும், மண்ணிலே மனிதர் படும் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் கர்ம வினைப்பயன் என்றும், படும் துன்பங்கள் எல்லாம் மாயை என்றும் அறிவுறுத்துவதே பெரும்பாலான இந்திய மெய்யியல் கோட்பாடுகளின் அடிநாதமாக இருந்தது. இன்றும் இருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், இந்த மாயை மற்றும் கர்மா போன்றவை கூட தலித்துகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் மீட்சிக்கு அருகதையற்ற இனத்தவர்கள் என்று கருதப்பட்டதாகும். பிற்காலத்தில் ஒரு சில தலித்துகளை ஆன்மீக மீட்சிக்காக அங்கீகரிக்கும் தேவை ஏற்பட்டது என்பது விதிவிலக்காகும். இவற்றிலிருந்து சாருவாகமும், பெளத்தமும் விதிவிலக்கானவையாக இருப்பினும், சாருவாகம் மானுட விடுதலைக்கான கோட்பாடாக எழுச்சி பெற்றதாகத் தெரியவில்லை. எது சரியான அறிவு என்ற அளவிலேதான் அதன் தேடல் அமைந்துள்ளது. பெளத்தம் வேத மரபை நிராகரிப்பதின் மூலம் எல்லா மனிதர்களுக்கான மாண்பையும் மண்ணில் நிலை நிறுத்த முயன்றது எனலாம். அதற்கான அடிப்படை அம்சமாக ஆன்மா என்பதை அது நிராகரித்தது எனலாம். மனிதருக்குள்ளான ஏற்றத் தாழ்வுகளை அது எதிர்த்தது. ஆனாலும் வைதீக மரபின் எதிர்ப்பினாலும், சதியினாலும் அது உருமாறியும், துவண்டும் போனது. இந்த நிலையில் இந்தியாவில் தலித்துக்களின் விடுதலைக்கான மெய்யியல் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்தான் அண்ணல் அம்பேத்கர். அவர் துவண்டு போன பெளத்தத்தின் சாரத்தையே தலித் விடுதலைக்கான மெய்யியலின் மையமாகக் கண்டார். இந்தியவில் சாதியம் தனி நபர் மீட்சி சார்ந்ததே தவிர சமூக விடுதலை சார்ந்ததல்ல என்றார் அம்பேத்கர். அது தோழமை உணர்வை வலியுறுத்துவதும் அல்ல என்றார்.

அம்பேத்கரின் தத்துவத்தின் வடிவமைப்பு மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலும் அதற்கும் அப்பாற்பட்ட நிலையிலும் அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தில் சாதி அடிப்படையிலான அடிப்படை வாதத்தையும், பிளவுபட்ட அடையாளங்களையும் உருவாக்கிய மரபுகளை மீறி அவற்றைக் கடந்து செல்லும் ஒரு விமர்சன கோட்பாடாக அது விளங்குகிறது.அது நவீன காலத்தின் விழுமியங்களான பகுத்தறிவு (rationalism), மதச்சார்பின்மை (secularism), மற்றும் சமூக ஜனநாயகம் (social democracy) ஆகியவற்றின் துணையுடன் நடைபெறும் மாற்றத்துடனும் இணைந்துள்ளது. இந்த விழுமியங்கள் மேற்கத்திய நவீன பண்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருந்தாலும், இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான வேர்களை இழக்காமல் அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் அம்பேத்கரின் தத்துவம் அமைகிறது.

John Dewey

அம்பேத்கர் ஜன் டூயியின் மாணவர் என்பதால் அவரின் மெய்யியலை நடைமுறைத்துவம் (pragmatism) என்று சுருக்கிவிட முடியாது. அவரது அனைத்து எழுத்துக்களும் ஒரு தொகுதி நெறிமுறைக் கோட்பாடுகளைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வரலாற்று ரீதியாக அவரும் அவரது சமூகமும் சந்தித்தத் திரளான சமூக, பொருளாதார பாதிப்புக்களே அவரது நடைமுறைத்துவ அணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தன. அம்பேத்கரின் நவீனத்துவ மெய்யியல், மேற்கத்திய கருத்துக்களை இந்தியச் சூழலில் புகுத்திய ஒரு எளிய முயற்சி அல்ல. மாறாக, பகுத்தறிவு, சமத்துவம், சுதந்திரம் போன்ற உலகளாவிய மதிப்பீடுகளை இந்தியாவின் சிக்கலான சமூக அமைப்புகளுக்குள் பிரயோகித்து, ஒரு புதிய சமூக ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் உருவாக்கிய ஒரு ஆழமான மற்றும் தனித்துவமான சிந்தனைப் பள்ளி ஆகும். 
டூயியின் ‘ஜனநாயகம் மற்றும் கல்வி’ கொள்கைகளை தாழ்த்தப் பட்டோரின் விடுதலைக்கான கல்வியின் முக்கியத்துவமாக மாற்றினார். சாதி இல்லாத சமூகம் அமைக்க, டூயியின் கருத்துகளைப் பௌத்தத்துடன் இணைத்து தனது நவயான பௌத்தத்தை உருவாக்கினார் .
இந்தியாவில் ‘வர்க்கம்’ என்பது ‘சாதி’யின் வடிவத்தில் இருப்பதாக வாதிட்டார். சாதியை “உள்ளடங்கிய வர்க்கம்” (Enclosed Class) என்று அழைத்தார் . சாதியை ‘மேற்கட்டுமானம்’ என்று ஒதுக்கித் தள்ளிய அன்றைய இந்திய கம்யூனிஸ்டுகளை விட, சாதியையே இந்திய முதலாளித்துவத்தின் அடித்தளமாகக் கண்டார் . ஒரு சூத்திரரின் அந்நியப்படுதலையும் (alienation) ஒரு தொழிலாளி வர்க்க (proletariat) அந்நியப்படுதலாகக் குறைத்துப் பார்க்க முடியாது என்று அவர் விளக்கினார் . மார்க்ஸின் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ (dictatorship of the proletariat) கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக, அரசியலமைப்பு முறை மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் . அதே சமயம் சமூக ஜனநாயகத்தை இறுதி இலக்காகக் கருதினார். “அரசியல் ஜனநாயகத்தோடு மனநிறைவு அடைந்துவிடக்கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தைச் சமூக ஜனநாயகமாகவும் மாற்றிட வேண்டும். அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாது போனால் அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவமே வாழ்க்கையின் தலையாய கொள்கைகள் என்பதை அங்கீகரிக்கும் ஒருவித வாழ்க்கை முறையே சமூக ஜனநாயகம்” என்று அம்பேத்கர் விளக்கமளித்தார். வன்முறை வடிவிலான வலிமையைச் சார்ந்திருப்பது, வலிமை மூலம் ஒருவர் பாதுகாக்க நினைக்கும் இலக்குக்கே கேடாய் முடிந்துவிடும் என்று கூறி மார்க்ஸின் வன்முறைப் புரட்சி மற்றும் சர்வாதிகாரத்தை ஏற்காமல், அதே இலக்குகளை அமைதியான முறையில் அடைய பௌத்தமே வழி என்று தமது இறுதிக் கட்டத்தில் விளக்கினார் .இங்கு, அண்ணல் அம்பேத்கரின் கோட்பாடு, இத்தாலிய கம்யூனிஸ்ட் அண்டோனியோ கிராம்சியின் விளக்கங்களுடன் பொருந்தி வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. கிராம்சியும், அம்பேத்கரும் மார்க்சியத்தின் வர்க்கம் எனும் கோட்பாட்டிற்குள்ளாகவே சுழலாமல், அதைத்தாண்டி அவரவர் நாட்டிற்கான ஒடுக்கப்படும் சமூகத்தின் விடுதலைக்கான வழிகளைத் தேடினர். சமூகங்களின் அடி தட்டுக்களின் தன்மைகளை வெளிப்படுத்தினர். வெறும் பொருளாதார நெருக்கடியே புரட்சியைத் தீர்மானிக்கிறது என்னும் மார்க்ஸிய விளக்கத்திற்கு மாறாகப் பண்பாடு, கருத்துநிலை மேலாண்மை ஆகியனவும் புரட்சியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதான சிந்தனையை முன்வைத்தவா் அந்தோணியா கிராம்சியும் ஆவார். இருவருமே அடிப்படை பிரச்சினையை தீர்க்காமல் சமநீதிச் சமூகம் சாத்தியமில்லை என்றனர். அந்த வகையில் சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் சோசலிசம் கூட சாத்தியப்படாது என்ற அம்பேத்கரின் கருத்து கிராம்சியத்தின் தன்மை கொண்டது.

தாம் சொன்ன ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகிய கோட்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து கடன் வாங்கப்பட்டவை அல்ல என்றும், அவை தமது குருவான புத்தரின் போதனைகளில் இருந்து பெறப்பட்டவை என்றும் அம்பேத்கர் விளக்கினார் . புத்த சங்கங்களின் நடைமுறைகளில் நவீன பாராளுமன்ற முறைக்கான அடித்தளங்கள் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டி, ஜனநாயகம் என்பது மேற்கத்தியரின் பிரத்யேக கண்டுபிடிப்பு இல்லை எனவும் நிறுவினார் . அவருடைய அரசியல் விளக்கங்கள் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டன. எனவே இங்கு அவர் முன்வைத்த தலித்துகளின் மாண்பு என்பது எதன் அடிப்படையில் விளக்கப்படுகின்றது என்று காணலாம். 

மனிதர் என்பவர் யார்? 

அம்பேத்கரின் தத்துவம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு நடந்த ஒரு எளிய பயணம் அல்ல. டூயியின் நடைமுறையியல், மார்க்ஸின் வர்க்கப் பகுப்பாய்வு, ரஸ்ஸலின் தனிமனித விடுதலைக் கருத்துகள் ஆகியவை அவருக்குக் கருவிகளாக இருந்தன. ஆனால், இந்தக் கருவிகளைக் கொண்டு அவர் இந்தியாவின் சாதிப் பிரச்சினைக்குச் செய்த அறுவை சிகிச்சைதான் அவரை ஒரு மாபெரும் மெய்யியலாளராக உயர்த்துகிறது. பௌத்தத்தின் மறுவிளக்கம் மூலம் அவர் கண்டடைந்த ‘மனுஸ்கி’ (மனித நேயம்) மற்றும் சமத்துவத்திற்கான தேடலே அவரது மெய்யியலின் உயிர்நாடியாகும் .

அம்பேத்கர் மனிதர்களை பகுத்தறிவு மற்றும் நெறிமுறை உணர்வு (reason and moral sensibility) கொண்டவர்களாகப் பார்க்கிறார். இந்த இரண்டு பண்புகளுமே ஒரு மனிதனுக்குத் தனித்துவமான கண்ணியத்தை (unique dignity) அளிக்கின்றன. ஒருவரது மனசாட்சி (conscience) சரி தவறைப் பகுத்தறியும் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. ஆனால், இந்தப் பண்புகள் எங்கிருந்தோ வந்த அருவமானவை அல்ல; அவை சமூகத்தில் ஒருவர் பெறும் அனுபவங்கள், கல்வி மற்றும் பகுத்தறிவு மூலம் வளர்க்கப் படுபவை என்கின்றார் அவர்.

‘ஆன்மீக’ தன்னுணர்வை நிராகரித்தல்

வைதீக கோட்பாடுகளின் விளைச்சலான மேல்சாதிகளின் ஆணிவேர் என்பது ஆன்மா என்ற ஒரு கருத்தாக்கமே என்று அம்பேத்கர் கருதினார். மேல்சாதி கட்டமைப்பான நான் எனும் சுயம் ஆன்மா எனும் தகுதியைக் கொண்டது. தலித்துகளின் சுயம் என்பது வெறும் “அதுவாக”க் கருதப்பட்டது. அது ஒரு அஃறினைதான். அதற்கு முக்திக்கு வாய்ப்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பெரும்பாலும் “அது”, “அதுங்க” என்று உச்சநிலை உயர்சாதியினர் அழைப்பதை நான் கண்டிருக்கின்றேன்.(ஆதிக்கசாதியினர் கூட அவன், அவங்க என்றுதான் அழைப்பார்கள்.) ஏனெனில் அவர்கள் நிரந்தரமாக மாசு பட்டவர்கள் என்பது மனுவின் கோட்பாடாகும். இந்த மாசு என்பது இறைச்சி வகை உண்பதை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்டது என்கின்றார். இதை மறுத்து, தலித்துகளின் சுயம் என்பதும் மாண்புக்குரியது என்பதை உலகறியச் செய்ய ஒரு சரியான மெய்யியல் அடிப்படை தேவை என்பதும், அது பெளத்தம்தான் என்றும் அம்பேத்கர் கண்டார். ஆனால் மீண்டும் வேதாந்தக் கருத்துக்களுக்கான தர்க்க எதிர்வாதத்தை முன்வைப்பது என்பதை விட அவர் சமூக சூழலைக் கருத்தில் கொள்ளும் ஒரு தலித்திய அறிவுக் கோட்பாட்டை(Dalit Epistemology) முன்வைத்தார். இந்த அறிவுக் கோட்பாடு மரபுக்கும், நவீனத்துவத்திற்கும் இடைப்பட்ட ஒரு கோட்பாடு. 

தன் கோட்பாட்டில் அம்பேத்கர் கடவுள் மற்றும் ஆன்மா (soul) மீதான நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை . மனித முழுமை அடைதல் (human perfectibility) என்பது இந்த உலகிலேயே, இந்த வாழ்க்கையிலேயே சாத்தியமான ஒன்று என்று அவர் நம்பினார். ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடுவதே மேல் என்று கூறினார். தன்னை ஒரு கடவுளின் அவதாரமாக (avatar) சிலர் போற்றியபோது, அது வெறும் “இறையியல் முனைப்புகள்” (theological preoccupations) என்றும், இப்படிப்பட்ட சிந்தனைகள்தான் பிராமணியம் “இந்திய மனதைக் கெடுத்தது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார் .

தன்னுணர்வு 

இந்திய ஆன்மீகத்தில் தன்னுணர்வு என்பதே அடிப்படையாகும். இதை அறிவது உணர்வது, இதன் பிரபஞ்ச நீட்சியை உணர்வது, அந்த உணர்வின் உச்சத்தில் பிரபஞ்சத்துடன் ஐக்கியமாதல் போன்ற விளக்கங்கள் அதன் பிரதான கருத்தியல் ஆகும். இதிலிருந்துதான் தலித் சுயம் மறுக்கப்படுவதாக அம்பேத்கர் கருதியிருக்கக் கூடும். எனவே பெளத்தத்தின் அடிப்படையான ஆன்ம மறுப்பை இங்கு கையாள்கின்றார். அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதும் அது இந்த ‘தன்னுணர்வு’ பற்றிய அவரது புரிதலுக்கு ஒரு தெளிவான மெய்யியல் அடித்தளத்தை அளித்தது. பௌத்தத்தில், தன்னுணர்வு என்பது பகுத்தறிவு, ஒழுக்கம் (ethics) மற்றும் சமூக நீதி ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கருத்தாகும் . பௌத்தம் அவருக்கு ஒரு புதிய ஆன்மீக அடையாளத்தை (spiritual identity) அளித்தது, ஆனால் அது மாய உலகத்தை நோக்கியதல்ல, மாறாக இந்த சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை நோக்கியதாக இருந்தது.

டாக்டர் அம்பேத்கரின் ‘தன்னுணர்வு’ (consciousness) பற்றிய விளக்கம், ஆன்மீக அருவ வடிவிலான (பொதுவாக ஆத்மா அல்லது பிரம்மம் சார்ந்த) கருத்துமுதல் வாதத்திலிருந்து (idealism) முற்றிலும் மாறுபட்டது. அவர் இதை ஒரு பௌதிக மற்றும் சமூகவியல் நிலைப்பாட்டில் (materialist and sociological standpoint) இருந்து அணுகுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஆன்மா என்பது பஞ்ச பூதங்களின் சுழற்சியால் உருவாவது ஆகும்.இறப்பிற்குப் பின்னால், ஒருவரது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்கள் (காற்று, நீர், பூமி, நெருப்பு, ஆகாயம்) பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகின்றன எனபதாகும். எனவே தனியாக ஆன்மா என்ற ஒன்று இல்லை. மேட்சமும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது மனிதர் இந்த உலகிலே உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கைதான் என்றார்.

அம்பேத்கரின் கூற்றுப்படி, தன்னுணர்வு என்பது ஒரு மனிதனின் வெறும் ‘ஆத்மா’வின் பிரதிபலிப்பு அல்ல; மாறாக, அது ஒரு சமூகக் கட்டுமானமும் (social construct) நெறிமுறை இலக்கும் (ethical goal) ஆகும். அவருடைய தத்துவத்தின் பின்னணியில் அதைப் புரிந்துகொள்ளலாம்:

அவர் தன்னுணர்வு (consciousness) என்பது சமூக ரீதியாக உருவாகும் ஒரு மனநிலை என்று வரையறுத்தார். அம்பேத்கரின் தத்துவத்தில், தன்னுணர்வின் மிக முக்கியமான வெளிப்பாடு ‘சுயமரியாதை’ (self-respect) ஆகும். இதிலிருந்து அவர் தலித் சுயம் என்பதை விளக்குகின்றார். தலித் சுயத்தின் (Dalit self) வளர்ச்சி, சமூகத்தில் நிலவும் சுரண்டல் மற்றும் இழிவுபடுத்தல்களுடன் (exploitation and humiliation) தொடர்ந்து கொள்ளும் போராட்டத்தின் மூலமே உருவாகிறது என்றார். இந்த விளக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் மீதான மதிப்பை உணர்த்தி, ஒரு புதிய சுய உணர்வை (new Dalit consciousness) உருவாக்கியது எனலாம் .

ஒரு துளி தண்ணீர் கடலில் கலந்து தன் அடையாளத்தை இழப்பது போல் அல்லாமல், “மனிதன் சமூகத்தில் தன் இருப்பை இழக்காமல், தன் சுயத்தின் வளர்ச்சிக்காக (development of his self) பிறக்கிறான்” என்று அம்பேத்கர் விளக்கினார். சமூகம் மற்றும் தனிமனிதன் இருவரின் வளர்ச்சிக்குமான உறவை இது சுட்டிக்காட்டுகிறது.

அம்பேத்கரைப் பொறுத்தவரை, தன்னுணர்வு (consciousness) என்பது ஒரு மாய அனுபவமோ அல்லது கருத்துமுதல் வாதத்தின் பகுதியோ அல்ல. அது, பகுத்தறிவு, சமூக அனுபவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் ஒரு நெறிமுறை மற்றும் சமூக உணர்வு ஆகும். ஒரு மனிதன் தன்னை ஒரு கண்ணியமான, சுதந்திரமான ஆளாக உணர்வதே உண்மையான தன்னுணர்வின் தொடக்கமும், முடிவுமாகும். அம்பேத்கரின் இந்த பகுத்தறிவு சார்ந்த நிலைப்பாடு, அவரை பாரம்பரிய இந்திய மெய்யியலாளர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. 

மனம்

இதைப் போன்றே மனம் என்பதும் இந்திய மெய்யியலில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இது பற்றி அம்பேத்கர் தனியாக நூல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை எனினும், தன்னுடைய பெளத்த நிலைப்பாடிலிருந்து அவர் மனம் என்பது பற்றி விளக்கியுள்ளார். அதையும் தலித்திய மெய்யியலுக்கான ஒரு கூறாகவே விளக்குகின்றார். 

அவரின் கடைசிக் கால நூலான “புத்தர் மற்றும் அவரின் தம்மம்” (The Buddha and His Dhamma) என்பதில், புத்தருடைய போதனையின் முதன்மையான சிறப்பியல்பாக “மனமே அனைத்திற்கும் மையம்” (Mind is the centre of everything) என்பதையே குறிப்பிடுகிறார் . அம்பேத்கரைப் பொறுத்தவரை, மனம் என்பது ஒரு உறுப்பு மட்டுமல்ல; அது தனிமனித விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்குமான அடித்தளமாகும். தனிமனிதனின் சிந்தனை, உணர்வு, மற்றும் செயல்பாடு அனைத்திற்கும் மையமாக விளங்குவது மனமே ஆகும்.

அம்பேத்கரின் மிகவும் புகழ்பெற்ற கருத்துக்களில் ஒன்று, “ஆரோக்கியமான மனதினை உருவாக்குவதே மனித இருப்பின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்” (Cultivation of mind should be the ultimate aim of human existence) என்பதாகும். பகுத்தறிவு சார்ந்த உருவாக்கமாகவே அதை அவர் காண்கின்றார். குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களையோ, மூடநம்பிக்கைகளையோ கேள்வி கேட்கக் கற்றுக்கொள்வது, எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரங்களுடன் ஆராய்ந்து, உண்மையைக் கண்டடையும் திறனை வளர்த்துக்கொள்வது, சுயமரியாதையையும், நெறிமுறைத் தீர்ப்புகளை வழங்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வது போன்ற தன்மைகளையே மனதைச் செழுமையாக்கும் செயலாகக் கருதுகின்றார்.

மனமும் சமூக மாற்றமும்

அம்பேத்கரைப் பொறுத்தவரை, மனதின் வளர்ச்சி என்பது தனிமனிதனுக்கு மட்டும் உரியது அல்ல; அது ஒரு அரசியல் மற்றும் சமூகத் தேவையாகும். இப்படிப்பட்ட மனதை வளர்ச்சியுற வைப்பது என்பது கல்வியினால்தான் இயலும் என்பதை அவர் வலியுறுத்துகின்றார். கல்வியும் அறிவும் தான் ஒரு மனிதன் தனது உரிமைகளைக் கோரவும், சுரண்டலை எதிர்க்கவும் தேவையான ஆற்றலை அளிக்கும் என்ற அம்பேத்கர் இம்மாதிரி மனமே குடிமக்கள் பகுத்தறிவுடன் சிந்திக்கவும், தங்கள் தலைவர்களைக் கண்காணிக்கவும், ஜனநாயக நிறுவனங்களை வடிவமைக்கவும் உதவுகிறது என்றார். ஒரு வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டும் போதாது; சமூக மற்றும் அரசியல் உரிமைக்கான நீதியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆழமான மற்றும் முழுமையான நம்பிக்கை தேவை என்று அம்பேத்கர் வலியுறுத்தினார் . இந்த நம்பிக்கையை உருவாக்குவதும் மனமே.

இறந்துபோன சாத்திரங்களின் சொற்களை (Dead Letters) விட உயிருள்ள சிந்தனைக்கு (Living Word) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். மனித மனம் தொடர்ந்து வளரவும், மாறிவரும் காலத்திற்கேற்ப புதிய விளக்கங்களைத் தரவும் வேண்டும். பாரம்பரியம் என்பது குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்கானது அல்ல, விமர்சன ரீதியாக ஆராய்வதற்கானது என்பது அவரது நிலைப்பாடு. அவரைப் பொறுத்தவரை, மனிதன் மனதை செழுமையாக ஆக்கிக்கொள்ளும் போதுதான் உண்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் அடைய முடியும். அதனால்தான் அவர் “மாற்றத்திற்காக சிந்தியுங்கள்” (Think to Change) என்ற வாசகத்தையும் முன்னிறுத்தினார்.

சாதி உணர்வு என்பது கூட ஒரு மனநிலை (state of the mind). அதாவது, ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் கொண்டுள்ள உணர்வே அவனது சாதி அடையாளமாக மாறிவிடுகிறது என்கின்றார். எனவே, சாதியை ஒழிக்க வேண்டுமானால், மனிதர்களின் இந்த மனநிலையையும், தன்னைப் பற்றிய உணர்வையும் மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை ஒரு ‘சாதி மனிதராக’ (caste person) அல்ல, ஒரு தனித்துவமான மனிதராக (unique individual) உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் .

இப்படி மனதை விளக்குவதின் மூலம் அவர் புற உலக அருவமான, தனியான இருப்பு கொண்ட ஆன்மீக மனதை விலக்கி மூளையின் செழுமையான கூர்மையான, நுணுக்கமான பகுத்தறிவான செயல்பாட்டை முன்னிறுத்துகின்றார். இது இந்திய நாத்திக மெய்யியல் மரபின் அடிப்படையாகும்.

கர்மவினை (Karma) பற்றிய சமூக விளக்கம்

கர்மா பற்றிய அம்பேத்கரின் விளக்கம், அவரது மெய்யியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். பாரம்பரியமாக கர்மா என்பது தனி மனிதனின் செயல்களுக்கான பலனை விளக்கப் பயன்பட்டது. ஆனால் அம்பேத்கர் அதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகினார்.

அம்பேத்கர் கர்மா என்பது ஒரு தனி மனிதனின் செயல்களுக்கு மட்டும் பலன் தருவதாக நம்பவில்லை. மாறாக, கர்மா என்பது சமூகத்தின் செயல்களிலும் (universal social actions) தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கருதினார்.

பாரம்பரிய இந்து மதத்தில் கர்மா என்பது ஒருவரின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அதாவது, “முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தாய்” என்ற விளக்கம் நிலவியது. அம்பேத்கர் இதைக் கடுமையாக எதிர்த்தார். அவரைப் பொறுத்தவரை, கர்மா என்பது விதி (fate) அல்ல; அது ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய செயல் (action). எனவே, ஒவ்வொருவரும் தங்கள் செயல்களால் சமூகத்தை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். அம்பேத்கரின் பௌத்த நவீனத்துவம் (Buddhist modernism), கர்மாவை ஒரு மாய அல்லது உளவியல் நிலையாகப் பார்க்காமல், நெறிமுறை (ethics) மற்றும் நீதி (justice) சார்ந்த வாசிப்பாக மாற்றியது.

கர்மா, தன்னுணர்வு மற்றும் மனம் இவையே இந்திய ஆன்மீக தத்துவங்களின் அடிப்படை. பிறகுதான் பிரபஞ்ச ஆற்றல் என்பது வருகின்றது. அம்பேத்கர் சமூக மாற்றங்களுக்கான தடையாக இருந்த இந்த அடிப்படைகளையே தகர்த்துவிட்டார் எனலாம்.

டாக்டர் அம்பேத்கரின் கருத்துப்படி, கடவுள், ஆன்மா, மறு ஜென்மம் மற்றும் கர்மா போன்ற கருத்துகள் வெறும் மாயை அல்லது தத்துவ விசாரணைக்குரியவை மட்டுமல்ல; அவை சமூக அமைப்பின் அடித்தளத்தையே நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த கருத்துகள் ஆகும். இவற்றைப் பற்றிய அவரது நிலைப்பாடு பாரம்பரிய இந்து மெய்யியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் இவற்றை பௌத்த தத்துவத்தின் வழியாக மறுவிளக்கம் செய்து, தனது சமூக நீதிக் கொள்கைகளுடன் இணைத்துப் பார்க்கிறார். இதன் அடிப்படையில் ஒரு தலித் ஆளுமை அல்லது சுயம் என்பதை அவர் கட்டமைத்தார்.

நவயானம் உருவாக்கம் : ஒரு புதிய தலித் சுயத்தின் தோற்றம் 

அம்பேத்கரின் தலித் சுய உணர்வு என்பது அவர் உருவாக்கிய கருத்தியல், அரசியல், சமூக மற்றும் ஆன்மீகப் போராட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய உணர்வுகளை ஊட்டி, அவர்களை வரலாற்றின் செயல்பாட்டாளர்களாக (agents of history) மாற்றிய ஒரு புரட்சிகரமான மறுவடிவமைப்பு ஆகும். ஆக மண்ணின் மீது ஆழமாக தன் மெய்யியலுக்கான கூறுகளை ஊன்றிய பின்தான் அவர் சமூக மாற்றத்திற்கான கூறுகளை செயல் திட்டங்களாக முன்வைத்தார். அதுமட்டுமல்ல, தத்துவத்திற்கும் சமூக செயல்பாடுகளுக்கும் உள்ள இணைப்பை வலுவாக்கினார். இதைப் பேசும்போது கம்யூனிசத்தை அவர் ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழும். ‘புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்’ (Buddha or Karl Marx) என்ற தனது நூலில் இந்த இரண்டு பாதைகளையும் ஒப்பிட்டு, இறுதியில் புத்தரின் பாதையே சிறந்தது எனும் முடிவுக்கு வந்தார்.

மார்க்ஸியம் முன்வைத்த பொருளாதார விடுதலை மட்டுமல்லாது, மனித சுயத்தின் ஆழமான விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஒருங்கே வழங்கக்கூடிய ஒரு முழுமையான மாற்று மெய்யியலாக பௌத்தத்தை அவர் முன்மொழிந்தார். 

அம்பேத்கர் பாரம்பரிய பௌத்தத்தை மறுவிளக்கம் செய்து ‘நவயானம்’ (Navayana) அல்லது ‘புதிய வாகனம்’ ஒன்றை உருவாக்கினார். புத்தரின் மதத்தில் உள்ள ‘கர்மா’, ‘மறுபிறப்பு’ மற்றும் ‘நான்கு உன்னத உண்மைகள்’ போன்ற கருத்துகளை வலியுறுத்தாமல், ‘தம்மம்’ என்பதை சமூக ஒழுக்கம் மற்றும் போராட்டத்தின் நெறிமுறையாக வலியுறுத்தினார் . அம்பேத்கரின் மிக ஆழமான பங்களிப்பு, தலித் சுய உணர்வுக்கு ஒரு புதிய ஆன்மீகத் திசையை வழங்கியதாகும். இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு வெளியேறி, சமத்துவம், கருணை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பௌத்தத்தைத் தழுவுவதை அவர் விடுதலையின் பாதையாக முன்வைத்தார். 1956 இல் நடந்த “புத்தம் சரணம் கச்சாமி” என்பது ஒரு சமூகத்தின் கூட்டு விடுதலைக்கான (collective emancipation) ஒரு வரலாற்று அடையாளச் செயலாக மாறியது .

கருத்தியலை நடைமுறைச் செயல்பாடுகளுடன் இணைத்தார்.

நேரடிப் போராட்டங்கள்: மகத் சத்தியாகிரகம் (1927) பொதுக் கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான உரிமைக்காகவும், கலாராம் கோயில் சத்தியாகிரகம் (1930) கோயில் நுழைவுக்காகவும் நடத்தப்பட்டன. இவை வெறும் உரிமைப் போராட்டங்களாக மட்டுமின்றி, சுயமரியாதைக்கான அடையாளப் போராட்டங்களாகவும் (symbolic struggles) அமைந்தன .

அரசியலமைப்பு உத்தரவாதம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்பதால், சமத்துவம், வாய்ப்புச் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை சட்டப்பூர்வமாக உறுதி செய்தார். இது தலித் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் (empowerment) ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமைந்தது .

இந்த அனைத்து முயற்சிகளின் ஒருங்கிணைந்த விளைவாக, நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த அவமானம் மற்றும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலித் சுய உணர்வு உருவானது. 

சுயமரியாதை உணர்வு: தன்னைப் பற்றிய உணர்வு என்பது சமூக அனுபவங்களால் கட்டமைக்கப்படும் ஒன்று என்பதை அம்பேத்கர் உணர்த்தினார். அவரது தலைமையின் கீழ், தலித் மக்கள் தங்களை ‘பலவீனமானவர்கள்’ அல்லது ‘இரக்கம் பெற வேண்டியவர்கள்’ என்று பார்ப்பதை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளைக் கோரும் சக்தி வாய்ந்த அரசியல் ஆளுமைகளாக (powerful political subjects) தங்களை மறுவரையறை செய்துகொள்ளத் தொடங்கினர் . கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மூலம், தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயிக்கும் ஒரு புதிய நம்பிக்கை உருவானது. ஒருவன் தன்னை ஒரு கண்ணியமான மனிதனாக உணர்வதே ஆன்மீகத்தின் தொடக்கம். தன்னை அவமானப்படுத்தும் எந்த ஒரு மதமோ, தத்துவமோ, அமைப்போ ஆன்மீகமானது அல்ல என்று அவர் முழங்கினார்.

தமிழ்நாட்டில் அயோத்திதாசர் அம்பேத்கருக்கு முன்பே தமிழ் பெளத்தம் என்பது பற்றி ஒடுக்கப்பட்டவர்களின் பூர்வீக மதமாக விளக்கியிருந்தார். அம்பேத்கர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். ஆனால் அவர் அயோத்திதாசர் குறித்து எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நவயான பெளத்ததிற்கு முன்பே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை பேசிய பெளத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

அம்பேத்கரின் மெய்யியல் வெறும் கல்வி சார்ந்த புலமை அல்ல; அது மண்ணின் மீது ஆழமாகப் பதிந்த, மானுட ரத்தத்துடன் ஒட்டிய தத்துவம். பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது சிந்தனைப் பள்ளி, பாரம்பரிய இந்திய மெய்யியலின் ஆன்மீக நிலைப்படுகளுக்கும், மேற்கத்திய நவீனத்துவத்தின் பொருள்முதல் வாதத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக விளங்குகிறது. மாய உலகில் விடுதலை தேடுவதையோ, வெறும் பொருளாதாரத்தில் மட்டும் நின்றுவிடுவதையோ அவர் ஏற்கவில்லை. மாறாக, மனிதனின் இந்த உலக வாழ்விலேயே கண்ணியத்தையும், சமத்துவத்தையும், விடுதலையையும் அடைவதையே தனது புனித இலக்காகக் கொண்ட ஒரு ‘சமூக ஆன்மீகத்தை’ உருவாக்கினார். ஆகவே, அண்ணல் அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, இந்திய நவீனத்துவ மெய்யியலை உலகிற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் ஆவார்.

***

இரா.முரளி – மேனாள் முதல்வராக மதுரைக் கல்லூரியில் பணியாற்றினார். இருத்தலியம், ஹேபர்மாஸ், அடர் னோ, நீலகேசி ஆகிய நூல்களின் ஆசிரியர். தொடர்ச்சியாக தத்துவ கட்டுரைகளை எழுதிவருகிறார். சாக்ரட்டீஸ் ஸ்டூடியோ எனும் யூடுயூப் சேனல் மூலம் தத்துவங்கள் சார்ந்த காணொளியை வழங்கி வருபவர். மக்கள் சிவில் உரிமைக்  கழகத்தின் (PUCL) மாநிலத் தலைவர் மற்றும் மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். மின்னஞ்சல்: royammurali@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here