அருண் பிரகாஷ் ராஜ்
நவீன தமிழக வரலாற்றின் வெவ்வேறு கூறுகளைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு நாளேடுகளும், இதழ்களும் முக்கியமான சான்றுகளாக அமைகின்றன. குறிப்பாக, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய பல்வேறு சாதி மற்றும் மத சங்கங்கள், சீர்த்திருத்த அமைப்புகள், தேசிய, திராவிட மற்றும் இடதுசாரி அரசியல் இயக்கங்கள் முதலானவை குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு, அந்தந்த இயக்கங்களை சார்ந்தவர்கள் நடத்திய பத்திரிகைகளே பெரும் கருவூலமாக திகழ்கிறது. இதுவரை, நவீன தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை பற்றி வெளியான பெரும்பாலான முக்கியமான ஆய்வுகள் இயக்கங்களின் பிரச்சாரப் பத்திரிகைகளையே மூலச் சான்றாக (primary source) கையாண்டிருப்பதோடு, நவீன தமிழகத்தின் பிரதான ஆளுமைகளான பாரதி, பெரியார், அயோத்திதாசர், ஜீவானந்தம் போன்றவர்களின் எழுத்துக்களும், சிந்தனைகளும்கூட இதழ்களில் இருந்தே எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு, நவீன தமிழகம் பற்றியான வரலாற்றாய்வில் இதழ்களுக்கு இன்றியமையாத இடமிருந்தாலும், செறிவான ஆய்வு நோக்கில் தமிழ் இதழியல் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. எனினும், அத்தகைய தமிழ் இதழியல் வரலாற்றை எழுதுவதற்கு பெருந்துணை புரிந்திடும் வகையில், தமிழில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வெளியான ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் பற்றிய அடிப்படை விவரங்களை தொகுத்து, ஆவணப்படுத்துவதற்கு சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. அத்தகைய முயற்சியில், அ.மா.சாமி, மா.சு. சம்பந்தன், இ. சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது. இருபதாம் நூற்றாண்டில் வெளியான் இதழ்கள் குறித்து ரா.அ. பதமநாபன், கல்பனாதாசன் ஆகியோர் எழுதிய நூல்களும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இம்முன்னோடிகள் எழுதிய/தொகுத்த நூல்கள் தமிழ் இதழியலின் அனைத்துப் போக்குகளையும் முழுமையாக அடையாளம் காட்டவில்லை. குறிப்பாக தமிழ் சூழலில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, சமகாலம் வரை தலித்துகளால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் பற்றி மிக குறைவாகவே, நான் இங்கு குறிப்பிட்டுள்ள இதழியல் ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி, 1990களில் இருந்து, எழுச்சிப்பெற்ற ’தலித் இலக்கியம்’ எனும் வகைமை தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. சிறுகதை, நாவல், கவிதை போன்ற புனைவு வடிவங்களோடு, திறனாய்வு, தன்-வரலாறு, வரலாறு போன்ற அபுனைவு வடிவங்களையும் உள்ளடக்கியே இக்காலகட்டத்தில் தலித் இலக்கியம் வளர்ந்தது என கூறலாம். குறிப்பாக, சமகாலத்தில், சாதி ஒழிப்பில் திராவிட இயக்கங்களிடம் இருக்கும் போதாமைகளை உணர்ந்த தலித்துகள், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே, தமிழ் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கத்தை தலித்துகளே முன்னெடுத்தார்கள் எனும் வரலாற்றையும் நினைவுக்கூறத் தொடங்கினார்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில்தான், ’தமிழன்’ இதழ்களில் இருந்து அயோத்திதாசரின் எழுத்துக்களை தொகுத்து வெளியிட்டார் ஞான அலோசியஸ். அவ்வெளியீடு, தலித்துகளின் வரலாற்று ஓர்மையை இன்னும் கூர்மைபடுத்தியது. விளைவாக, ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராஜா, சகஜானந்தர், எல்.சி. குருசாமி போன்ற தலித் ஆளுமைகள் மறு-கண்டுபிடிப்பு செய்யப்பட்டு, அவர்களைப் பற்றிய தேடல்களும், ஆய்வுகளும் நடக்கத் தொங்கின.
நவீன தமிழகத்தில் தலித்துகளின் வரலாறு குறித்து நடந்துவரும் ஆய்வுகளில், ஜெ. பாலசுப்பிரமணியத்தின் ”சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை’ எனும் நூல் மிக முக்கியமானது. 1869ல் இருந்து 1943 வரை, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த தமிழ் தலித்துகளால் நடத்தப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை பற்றிய விவரங்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். தலித்துகளை பற்றி பொது சமூகம் கட்டமைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் கட்டுடைக்கும் வகையில், 19ம் நூற்றாண்டு தமிழகத்தில், நவீனத்துவம் முகிழ்ந்த தருணத்திலேயே தலித்துகளிடையே எவ்வாறு வளமானதொரு அறிவுச்சூழல் நிலவியது என்பதை இந்நூலினூடாக நிறுவியுள்ளார். மேலும், இந்நூலானது வெறும் இதழ்களை பற்றிய வரலாறாக மட்டும் நின்றுவிடாமல், அவ்விதழ்களை நடத்திய ஆளுமைகள் மற்றும் இயக்கங்களின் வரலாறாகவும் விரிவடைந்து, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில், தலித்துகளிடையே எவ்வாறு பலதரப்பட்ட சிந்தனைப் போக்குகளும், சமூக-அரசியல் பார்வைகளும் நிலவிவந்தன என்பதைக் கவனப்படுத்துகிறது.
’சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை’ நூலின் இரண்டாம் பாகம் என்றே, பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ நூலை குறிப்பிடலாம். இந்திய அரசியலில் அம்பேத்கரின் வருகைக்கு முன்னால், தலித் மற்றும் சாதி எதிர்ப்பு அரசியலானது பிராந்தியத்தன்மை கொண்டதாக இருந்தது. 1920களில் இருந்து தன்னுடைய பொது வாழ்க்கையைத் தொடங்கும் அம்பேத்கர், தான் உருவாக்கிய இயக்கங்களினூடாக, தலித்துகளுக்கான அரசியலை தேசிய அளவில் வளர்த்தெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். 1930களிலேயே தமிழகத்தில் உள்ள தலித் அமைப்புகளிடையேயும், ஏனைய சீர்த்திருத்த இயக்கங்களிடையேயும் அம்பேத்கர் பரீட்சையமானவராக இருந்திருக்கிறார். எனினும், அம்பேத்கர் அக்காலகட்டத்தில் ஏற்படுத்தியிருந்த ’சுதந்திர தொழிலாளர் கட்சி’ போன்ற அமைப்புகள் தமிழகத்தில் கிளைப் பரப்பியிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், 1942ல் அவர் உருவாக்கிய ’அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்,’ இங்குள்ள தலித்துகளிடையே குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று துணிந்து கூறலாம். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில், ஃபெடரேஷனின் கிளைகள் ஏற்படுத்தப்பட்டதோடு, தமிழ் நாட்டை சேர்ந்த என். சிவராஜ் போன்றவர்கள் ஃபெடரேஷனின் அகில இந்திய தலைவர்களாகவும் செயலாற்றியிருக்கிறார்கள். மேலும், அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார்கள்.
தன்னுடைய, ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ நூலில், ஃபெடரேஷனுக்கு ஆதரவாக தமிழில் வெளியான சமத்துவம், உதயசூரியன், சமத்துவ சங்கு, உரிமை, தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலசுப்பிரமணியம். இந்நூலில் இறுதியாக குறிப்பிடப்பட்டிருக்கும், ‘மதுரகவிஞன்’ எனும் பத்திரிகை மட்டும், செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் மறைந்து பல ஆண்டுகள் கழித்து (1972ல்) முருகேச பாகவதாரால் தொடங்கப்பட்ட அம்பேத்கரிய இதழாக இருக்கிறது. இவ்விதழ்களை நடத்தியவர்களின் பின்புலத்தையும், இதழ்களின் உள்ளடக்கத்தையும் விரிவாக பதிவு செய்வதனூடாக, தலித் வரலாற்றில் மட்டுமின்றி, நவீன தமிழக வரலாற்றிலும் அதிகம் பேசப்படாத கீழ்காணும் விசயங்களை இந்நூலினூடாக பாலசுப்பிரணியம் கவனப்படுத்தியிருக்கிறார் :
- தேசிய அரசியலில் அம்பேதகாரின் இடம் என்னவாக இருந்தது எனும் விவாதத்தில், ஒரு சாரார் அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாளில் பிராந்திய அளவிலான தலித் தலைவராக (அதிலும் குறிப்பாக அவர் பிறந்த மகத் சாதியின் தலைவராக) மட்டுமே இருந்தார் எனவும், அவரது மரணத்திற்கு பிறகுதான் தேசிய அளவிலான தலித் எழுச்சிக்கு அம்பேத்கரது பிம்பம் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறுவதுண்டு. அத்தகைய வாதத்தை மறுதளிக்கும் வகையில், எவ்வாறு அம்பேத்கரும், அவரது அகில இந்திய செடியூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த தலித்துகளிடையே பெரும் தாக்கத்தை 1940களிலும், 1950களிலும் ஏற்படுத்தியிருந்தனர் என்பதை இந்நூல் ஆதாரப்பூர்வமாக நிறுவியிருக்கிறது. உதாரணமாக, ஃபெடரேஷனின் மாநில தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீராசாமியின் தொண்டு இதழானாது, அம்பேத்கரை ’பாபாசாஹிப்’ என அழைக்க வேண்டும் என்றும், கடிதம் எழுதுகையில் ‘ஜெய் பீம்’ என தொடங்கி முடிக்க வேண்டும் என்றும் தனது வாசகர்களை வலியுறுத்தியிருப்பதும்; அம்பேத்கரின் மறைவையொட்டி பல்வேறு தமிழ் தலித் இதழ்கள் வெளியிட்டிருக்கும் உணர்ச்சிகரமான இரங்கல் குறிப்புகளும் அம்பேத்கர் மீது பெரும்மதிப்பும், பக்தியும், பற்றும் கொண்டவர்கள் அவரது வாழ்நாளிலேயே தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
- ஃபெடரேஷன் இயங்கிய காலகட்டத்தில் (1942 – 1957), பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை, பாகிஸ்தான் பிரிவினை, அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம், இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் தனது அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தது போன்ற தேசிய அளவில் முக்கியத்துவமுடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பாலசுப்பிரமணியத்தின் நூலானாது, தமிழகத்தை சேர்ந்த தலித்துகள் அத்தகைய தேசிய நிகழ்வுகளை பற்றி எத்தகைய பார்வையினைக் கொண்டிருந்தார்கள் என்பதையும், அந்நிகழ்வுகளுக்கு தங்களது பத்திரிகைகளினூடாக எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.
- இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழ்கள், செடியூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனின் பிராந்தியத் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் தொடங்கப்பட்டிருந்தாலும், அவை யாவும் ஒரே தன்மையோடு விளங்கவில்லை. மாறாக, இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியரின் பின்னணி, பத்திரிகை வெளியான ஊர் மற்றும் காலக்கட்டம் போன்ற அம்சங்களும் இவ்விதழ்களின் தன்மையைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இதை விளக்க ’உதயசூரியன்’ பத்திரிகையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ’வட-ஆற்காடு தோல் பதனிடும் தொழிற் சங்கம்’ எனும் அமைப்பின் சார்பாக 1939ல் தொடங்கப்பட்ட உதயசூரியன், 1948 வரை வெளியானது. அரசியல் ரீதியாக உதயசூரியனின் ஆசிரியர் ஜெ.ஜெ. தாஸ் ஃபெடரேஷனை ஆதரித்தாலும், தொழிற்சங்கத்தின் சார்பாக வெளியாகும் இதழ் என்பதால், சாதியை எதிர்த்த அளவிற்கு வர்க்க பேதத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது உதயசூரியன். தோல் பதனிடும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மட்டுமின்றி, பீடி சுற்றுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களின் மீதும் அக்கறை கொண்டிருந்தது. மேலும், கம்யூனிச அரசியலின் மீதான தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் காரல் மார்க்ஸ், லெனின் போன்ற உலகலாவிய இடதுசாரி ஆளுமைகள் பற்றி கட்டுரைகள் வெளியிட்டதோடு, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளாரான் மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை தமிழில் மொழிப்பெயர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது உதயசூரியன். மேலும், லெனினையும் அம்பேத்கரையும் ஒப்பீடு செய்யும் கட்டுரையொன்றையும் இவ்விதழ் வெளியிட்டிருந்தது. இத்தகைய இடதுசாரி சார்பானது தமிழகத்தின் வெளியான மற்ற ஃபெடரேஷன் ஆதரவு பத்திரிகைகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கருமேகூட கம்யூனிசம் மீது எதிர்மறையான பார்வையைதான் கொண்டிருந்தார் என்பது அவரின் Buddha or Karl Marx எனும் நூலை வாசித்தவர்களுக்குத் தெரியும். எனவே, தமிழக அம்பேத்கரியர்களிடையே எத்தகைய மாறுபட்ட சிந்தனை போக்குகள் இருந்திருந்தன என்பதை பாலசுப்பிரமணியத்தின் நூல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
- தலித்துகளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான உறவு குறித்தான விவாதத்தில் சில புதிய தரவுகளையும், பார்வைகளையும் வழங்கியிருப்பதை இந்நூலினுடைய மற்றொரு முக்கிய பங்களிப்பாக கருதலாம். தலித்துகளுக்கும், திராவிட இயக்கத்திற்குமான உறவு சற்று சிக்கலானது. பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் நீதி கட்சியானது பார்ப்பனரல்லாத அனைத்து சாதிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தது. ஆரம்பத்தில் எம்.சி. ராஜா போன்ற தலித் தலைவர்கள் நீதி கட்சியில் இணைந்தாலும், விரைவில் அக்கட்சியானது பிராமணரல்லாத சாதி இந்துக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதை உணர்ந்து, அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். தலித் விசயத்தில், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் நிலைப்பாடு நீதி கட்சியை காட்டிலும் மாறுபட்டதாக இருந்ததது. சாதி ஒழிப்பிலும், தீண்டாமை ஒழிப்பிலும் பெரியார் அதிக அக்கறை காட்டினார். 1930களில், அம்பேத்கர் வலியுறுத்திய இரட்டை வாக்குரிமையை தீவிரமாக ஆதரித்த சுயமரியாதை இயக்கம், பூனா ஒப்பந்தத்தின் போது காந்தியை கடுமையாக எதிர்த்தது. மேலும், அம்பேத்கரின் மரணம் வரை, அவருக்கும், பெரியாருக்கும் பரஸ்பர மரியாதையும், நல்ல நட்பும் தொடர்ந்திருக்கிறது.
பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கடைசி வரை சீரான உறவு தொடர்ந்தாலும், தமிழகத்தை சேர்ந்த அம்பேத்கரியர்களுக்கும், பெரியாருக்கும் சிக்கலற்ற உறவு நீடித்ததாக தெரியவில்லை. மெட்ராஸ் மாகாண செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனின் காரியதரிசிகளில் ஒருவரான வி.நயினான் என்பவர் தான் எழுதிய ‘தீப்பொறி’ எனும் நூலில், பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது தலித்துகளுக்கு அணுக்கமானதாக இருந்தது எனவும், நீதி கட்சிக்கு அவர் தலைவரானதை தொடர்ந்து தலித் பிரச்சனைகளுக்கு போதுமான அக்கறை செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட, இதே கருத்தை தமிழ்நாடு ஃபெடரேஷனின் தலைவராகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஆ. இரத்தினம் என்பவர் நடத்திய ‘உரிமை’ இதழும் வெளியிட்டிருக்கிறது. உரிமையில் வெளியான கட்டுரையொன்று, சுயமரியாதை இயக்கமானது தலித்துகளின் உழைப்பினால் வளர்ச்சியடைந்தது என்றும், 1944ல் அது திராவிடர் கழகமாக பரிணமித்த பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வசம் அவ்வியக்கம் சென்றுவிட்டதாகவும் விமர்சித்ததோடு, தலித்துகள் தங்களது ஆதரவை இனி திராவிடர் கழகத்திற்கு வழங்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. இதே போல, 1940களில் வெளியான உதயசூரியன் போன்ற பிற அம்பேத்கரிய இதழ்களும் திராவிட இயக்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருப்பதை பாலசுப்பிரமணியம் கவனப்படுத்துகிறார். அவற்றில், திராவிட இயக்க இதழ்களை தலித்துகள் ஆதரிப்பதை போல, திராவிட இயக்கத்தவர்கள் தலித்துகள் நடத்தும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து, அவர்களது கருத்தை புரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு திராவிடர் இயக்கம் தலித்துகளின் மீது சாதி இந்துக்கள் நிகழ்த்திடும் வன்முறையை எதிர்ப்பதில்லை ஆகிய விமர்சனங்கள் இன்றளவும் பொருந்துவதாக இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மீது எல்லா அம்பேத்கரிய இதழ்களுக்கும் ஒரே மாதிரியான பார்வை இருக்கவில்லை என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் பாலசுப்பிரமணியம். 1956ல், திருச்சியில் இருந்து எம். சிங்காரம் என்பவரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை முரசு’ எனும் ஃபெடரேஷன் சார்பு இதழ், பெரியார் பிறந்தநாள் சிறப்பிதழை வெளியிட்டு, அவரை போற்றும் விதமான கட்டுரைகளையும் அதில் பிரசுரித்திருக்கிறது.
- 1940களுக்கு பிறகான திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும், பிராமண எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தனி நாடு கோரிக்கை, மாநில உரிமை, தமிழர் பெருமிதம் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டிருந்தன. இதன் காரணமாகவே, தலித்துகள் திராவிட இயக்கத்தின் தன்மை சுயமரியாதை இயக்கத்திற்கு பிறகான காலகட்டத்தில் மாறிவிட்டதாக விமர்சித்தனர். இந்தி எதிர்ப்பு போரை நடத்திய திராவிட இயக்கம், ஏன் தீண்டாமைக்கு எதிரான போரை நடத்தவில்லை என்று முறையிட்டனர். சாதி எதிர்ப்பு மீதான கவனமும், அக்கறையும் திராவிட இயக்கத்திற்கு குறையத் தொடங்கியதன் விளைவாக திராவிட இயக்க இதழ்களும்கூட அன்றாட சாதியப் பிரச்சனைகளை, குறிப்பாக தலித்துகளின் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறைகள் பற்றிய செய்திகள் வெளியிடுவதை குறைத்துக் கொண்டது. திமுகவின் முதல் இருபது ஆண்டுகளில், அக்கட்சியை ஆதரித்து ஏறக்குறைய நூறு பத்திரிகைகள் வெளியானாலும், அவை எதார்த்ததில் நிகழும் சாதிய அடுக்குமுறைகள் குறித்து எவ்வித விவாதத்தையும் முன்னெடுக்கவில்லை. எனவே, செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனை சார்ந்தவர்கள் நடத்திய இதழ்களே தமிழ்நாட்டில் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகள் குறித்தும், அவர்களது சமூக – பொருளாதார சூழ்நிலை குறித்தும் அக்கறையோடு பதிவு செய்ததாக எழுதுகிறார் பாலசுப்பிரமணியம்.
இவ்வாறு, நவீன தமிழக வரலாற்றில் நாம் அதிக கவனித்திடாத விசயங்களை, தமிழ் அம்பேத்கரிய இதழ்களை அறிமுகம் செய்வதனினூடாக நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் பாலசுப்பிரமணியம். முற்றிலும், வேறொரு கோணத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டு தமிழக வரலாற்றை வாசிப்பதற்கான சாத்தியங்களை இந்நூல் வழங்குகிறது. தவிர, இனிவரும் காலங்களிலும், தமிழ் இதழியல் வரலாற்றை முழுமையாக எழுதிட முயற்சிப்பவர்களுக்கு, தலித் இதழியல் பற்றிய ஜெ. பாலசுப்பிரமணியத்தின் நூல்கள் இன்றியமையாததாக இருக்கும்.
***
அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை இதழ்களிலும், வாசகர்சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com
