Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்பெயர் மாற்றப்பட்டுள்ளது

பெயர் மாற்றப்பட்டுள்ளது

ரமேஷ் ரக்சன்

பிறந்தநாள் கேக் வெட்டுறதுக்காக எல்லாரும் மேல வந்துட்டாங்க. நம்ம சிட்டுவ காணோமேன்னு கீழ தேடிட்டு வந்தேன். டெகரேட் பண்ணினது போக மீதி இருந்த பலூன் எல்லாத்தையும், ஈவன்ட் மேனேஜ்மெண்ட் பசங்க ஊதிஊதி தரையில கட்டிப் போட்டிருந்தாங்க. இவன் எப்படியும் பலூன் பொறுக்கத்தான் வந்திருப்பான்னு நினைச்சேன். அந்த F4 வீட்டுப் பையன் இருக்கான்ல, நம்ம சிட்டு முன்னாடி முட்டிபோட்டு நின்னு அவனோட பேண்ட்ட கழட்டிட்டு முகத்த கிட்டக்க வச்சிட்டு இருந்தான். நான் பார்த்துட்டேன். சட்டுன்னு இவனப் பிடிச்சி இழுத்தேன். இவன் ஜட்டி எலாஸ்டிக் மட்டும் ஒரு பக்கம் இறங்கியிருந்தது. அப்போதைக்கு, அவன்கிட்ட ‘மேலப்போடா’ன்னு மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன். மூணாவதோ நாலாவதோ படிக்கிறான்னு நெனைக்கிறேன். இவனே கீழ வந்தானா இல்ல, அவன் கூட்டிட்டு வந்தானானு தெரியல. எனக்கு ஒருமாதிரி நடுக்கமாகிடுச்சி. ஒருவாரமா சரியா தூங்க முடியல. நீ இத எப்படி எடுத்துப்ப? உனக்கு இது என்னவா புரியும்? நாம அந்தப் பையனோட அம்மா அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்கனுமா? என்ன பையன் வளர்க்குறீங்கன்னு சண்டை போடனுமா? அவன் இத எப்படி எங்க பார்த்திருப்பான்? இவனை எப்படி இதுக்கு அப்புறம் விளையாட அனுப்புறது. சிட்டுவுக்கு என்னவா அது பதிஞ்சிருக்கும்? இவனுக்கு, அவன் என்ன பண்ண முயற்சி பண்ணினான்னாவது புரிஞ்சிருக்குமா? ஆனா ஒரு விசயம் மட்டும் உறுதியா நம்பினேன். இது தான் முதல் தடவையா இருக்கும்.’.

*

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்த ரூபாலினியை அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு, ஏற்கனவே சாத்தியிருந்த அறையின் கதவை தாழ்ப்பாளிட்டான். அந்திவானம் காட்டும் சன்னலையும், சன்னலின் திரையையும் இழுத்து மூடிவிட்டு விளக்கை அணைத்தான். முகத்தின் பாவனைகளை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அறைக்குள் இருள் ஏறியிருந்தது. முயலின் காதினைப்பிடித்துத் தூக்குவதுபோல அவளின் கால் பெருவிரல்களைப் பிடித்துத் தூக்கி கீழ் நோக்கி இழுக்க முயற்சித்தான். என்னவென அவள் தலைதூக்கிக் கேட்கவும், கால்களை தரையில் தொங்கப்போட்டபடி அமரச்சொன்னான். ஐந்து நாட்களாக இருவருக்குள்ளும் தெரிந்தோ தெரியாமலோகூட உடலுரசல் இல்லை. இருவருக்கும் காரணம் தெரியுமென்பதால் எதிர்க்கும் குணம் தன் பிறப்பிலேயே இல்லாதவள் போல, அவன் இழுப்பிற்கு நகர்ந்தாள். என்ன முயற்சி செய்கிறான் என்ற குழப்பத்தினூடே, ’இந்த இருட்டையும் தாண்டி நான் கண்ண மூடனுமா’ என்றாள். 

அவளின் புதிர் நிறைந்த மனநிலையும், அறைக்குள் பரவிக்கிடந்த வெப்பமும் அவன் காமத்தையும், கழிவிரக்கத்தையும் ஒன்றாகக் கையாண்டது. பதிலேதும் பேசாமல் தரையில் சம்மணமிட்டிருந்தான். அவளது கால்களை கொஞ்சம் தூக்கி தாங்கிப் பிடித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் கட்டிலோடு நெருங்கி வந்து, மடியில் போட்டுக்கொண்டான். உள்ளங்காலின் மிருதும், குதிகாலின் சொரசொரப்பும் அந்தச் சூழலை பிரதிபலித்தது. மனதின் இரைச்சலுக்கு நடுவே சொற்களற்று அமர்ந்திருந்தவனுக்கு அதைப் பகடியாகவோ, உரையாடலுக்கான வழியாகவோ மாற்றத்தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் கோர்வையாக சொல்லிப் பார்த்துகொண்ட ஒத்திகையும் கைகொடுக்கவில்லை. அல்லது வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை. அவனுக்கே இதில் எதை நம்புவதென்றும் தெரியவில்லை. பால்யத்தில் விழுந்த சிறு கீறல். 

*

அப்போது அவள் ஆறு அல்லது ஏழாவது படித்துக்கொண்டிருக்கலாம். மறுவீடு செல்வதற்கு வரிசையாக வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்த வேனிற்குள்ளிருந்து முதலில் அவன் இறங்கினான். அடுத்து அந்த சிறுமி இறங்கி தெருவைத்தாண்டிப் போனாள். பார்த்தவுடன் புரிந்தது. எவ்வளவு யோசித்தாலும், நான் என்ன கேள்வி கேட்டேனென்று ஞாபகமில்லை. கேள்வி கேட்டேனா என்றும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனோ சிரித்துக்கொண்டே ’வாய்ல கொடுத்தேன்’ என்று சொன்னது மட்டும் இப்போதும் குரல் மாறாமல் அப்படியே எனக்குள் பதிந்திருக்கிறது. நான் துணைபோகவும் இல்லை. உடந்தையாகவும் இல்லை. உள்ளே இருவர் போனதும் தெரியாது. தற்செயலாகத்தான் அங்கு சென்றேன். ஆனால் இறங்கிப்போகும்போது, அவன் பெருமையாக சொல்லிச்சென்றதும் ’நமக்கு தைரியமில்லை’ என்று நினைத்திருப்பேனோ என்றும் குழப்பமாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாகவே அது என்னை தூங்கவிடவில்லை. காலப்போக்கில் என்னை இப்படி நம்ப வைத்தது எது என்றும் தெரியவில்லை. 

சிட்டுவுக்கு அன்றைக்கு நடந்ததை வைத்து அவனை வீட்டிற்குள் அடைத்து வைக்காமல், அந்தச்சிறுவனின் சார்பாகவும் இதற்கு காரணமானவனை கண்டுபிடித்து காவல்நிலையம் வரை கொண்டுசென்று, அபார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றின உன் துணிச்சல் என்னை மேலும்மேலும் குற்றவுணர்வில் தள்ளுகிறது. ஆணின் தைரியமின்மையும், பெண்ணின் தன்னிச்சையான முடிவும் எதிரெதிர் முனை. ஆனால் ’வாய்ல கொடுத்தேன்’ என்ற கர்வத்தின் குரல் ஒருவாரமாகவே துரத்துகிறது. உன்னுடைய தெளிவான முகமோ உன்னை எதிர்கொள்ளவிடாமல் விரட்டுகிறது.

*

தன்னுடைய முகத்தை கற்பனை செய்துபார்த்தான். மிகவும் அசூயையாக இருந்தது. இத்தனை வருடத்தில் அவளாகவே உறவுக்கு அழைக்க நேர்ந்தது இதுவே முதல்முறை. கண்முன் படிந்திருந்த, சொல்ல முன்வந்து தோற்ற காட்சியை, அந்தப் புகைமண்டலத்தை ஊதித் தள்ளிவிட்டு உடலை வெல்ல முடிவெடுத்தான். 

இயங்குகையில் மூச்சுவிடும் தன்மை வைத்து அன்றைய அவனுக்குத் தான் யாராக இருக்கவேண்டுமெனப் புரிந்து வைத்திருப்பவளிடம், மனமும் உடலும் வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருப்பதை காட்டிக்கொள்ளாமலிருக்க விளக்கை அணைத்திருப்பதே மடத்தனம் என்பது உறைத்தது. 

பாவாடைக்குள் கை நுழைத்து, கால்களின்மேலே குழந்தையைக் கிடத்தி குளிப்பாட்டுவதுபோல அவ்வளவு பதமாக அவளின் ஆடுதசையை வருடினான். மேலிருந்து கை கீழ்நோக்கி வரும்பொழுது தன்னை இழப்பவளாகவும் கீழ் இருந்து மேல்நோக்கிப் போகையில், அவனது பீடிகை என்னவாக இருக்குமென யோசனையிலும் வீழ்ந்தாள். இதை மிகச்சரியாக கணித்தவன்போல, கணுக்காலை நெருங்கியதும், மீண்டும் மேலிருந்தே தொடங்கினான். தோற்க மனமின்றி நிழலாடிக்கொண்டிருந்த மெளனத்தைக் கலைத்தாள்.  

’மிஸ்டர் புல்-அவுட்.. ரெண்டாவது குழந்தைக்கு எதும் அடிபோடுறியா? இல்லையே, காண்டம் பாக்ஸ பவ்யமா கொண்டுபோய் சேலைக்கு நடுவுல சொருகி வச்சத கவனிச்சேனே’ 

அவளின் இந்த சீண்டலோடு இணங்கிவிடுவதா, உண்மையிலே இலகுவாகத்தான் இருக்கிறாளா? அல்லது இத்தனை வருடமாக சுமந்து வரும் குற்றவுணர்ச்சியை இறக்கி வைத்துவிடுவதா என்ற தெளிவின்மையோடு அவளின் பாதமேட்டில் உதட்டை ஒத்தியெடுத்தான். ஒருவாரமாக தனக்குள் குமையும் கழிவிரக்கத்தை அப்படியே சொல்லிவிட்டால் இருவருமாக வந்து சேர்ந்திருக்கும் இந்த இணக்கம் குறைந்து உறவுக்குள் விரிசல் விழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் திலீபனோ கடந்த ஐந்து நாட்களாக இதை எப்படி அவளிடம் சொல்லி வெளியேறுவது என்று யோசித்தானே தவிர, சொல்லாமல் கடந்து போவதைப்பற்றி ஒருநொடி கூட யோசிக்கவே இல்லை. சொல்லிவிடுவதன் மூலம் ’சிட்டு’வுக்கு நடந்ததை சொன்னபொழுது தான் ஏன் அப்படிச்சொன்னேன் என்பதற்கான பதிலீடாக இருக்குமென நம்பினான். 

அவள் தன்னை தண்டிக்க வேண்டுமென்று விரும்புகிறாளா என்றும் இவனுக்குத் தெரியாது. இந்த உண்மையை யாரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால்  தானே ரகசியமானது? இப்போது ஏன் அதை உடைக்க வேண்டும். தனக்குள் நிகழும் இந்த தர்க்கத்தை வெல்லும்முன், காலைக் கட்டிக்கிடந்தவனின் தலையை, தன் மடியில் சாய்த்தாள். அவ்வளவு தான். பிரக்ஞையற்று அவள்மேல் படர்ந்தான். ’டேய் புல்அவுட் மரியாதையா எடுத்துட்டு வா’வென்று மொத்த பலம் கொண்டு உந்தித்தள்ளினாள். இல்லை இல்லை இது சொல்வதற்கான விசயமே இல்லை. குடும்பம் பாழாகிவிடும். அவள் போக்கிலேயே போவதென தீர்மானித்தான். மனம் உண்மையோடும், உடல் காமத்தோடும் கூடி அடங்கியதும், நிதானமானான்.

அவளுக்கும் சேர்த்து காபி எடுத்து வந்தான். காபிக் கோப்பையை வாங்கிய கையோடு அலைபேசியில் மணியைப் பார்த்தாள். உன் பையன் வர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகுமென்றாள்.  

‘விளையாடப் போறான்னு தான சொன்ன?’

‘குட்டிஸ் எல்லாருமா மேல்வீட்ல ’லயன் கிங்’ படம் பார்க்க போறாங்களாம்’ 

‘எத்தனையாவது தடவ?’ 

‘படத்துக்கு நடுவுல ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுக்குறாங்களாம். கொஞ்சி கொஞ்சி ஐஸ் வச்சிட்டு மறுபடி மேல போயிருக்கான்’

பையன் வர இன்னும் தாமதம் ஆகுமென்ற அநாவசிய தகவல், அவனை மீண்டும் தயார் செய்தது. ரூபாலினியும் இன்னொருமுறை முயங்கிச்சரிய விரும்பினாள். கூடவே குரோதத்தின் விளைச்சலை, காமத்தில் அறுவடை செய்யவும் மனம் ஒப்பாமல் இருந்தது. புல்-அவுட் பெயர் காரணத்தைச்சொல்லி, அந்த மனநிலையின் ஆயுளை சோதிக்க விரும்பினாள்.

*

திருமணமான முதல் மாதத்திலேயே மாதாந்திர சுழற்சி தள்ளிப்போனது. கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள். அவனிடம் கடிந்து கொள்ளாமல், முகத்திலும் வெளிப்படுத்தாமல், எப்படியெல்லாமோ  போராடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை உண்டாகியிருந்தால்? அதென்ன குற்றத்தின் கீழா வரும்? அதன் பொருட்டே எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. உண்டாவதை ஆறு மாதமாவது தள்ளிப்போட திட்டமிட்டு வைத்திருந்ததை கெடுத்துவிட்டானே பாவி! என்ற பொருமலைத் தவிர ஒன்றுமில்லை. 49வது நாள் காலையில் திலீபன் அந்தப் பாவத்திலிருந்து  விடுதலையானான். 

’ஏண்டா அதிகபட்சம் 30 நொடி பிடிச்சிட்டு நிப்பியா? அதுவரைக்கும் பொறுமை இல்லாம ஃபோன கையில எடுத்துட்ட?’ – சீனியர் அப்படிச்சொன்னது தாம்பத்திய வாழ்வையே நக்கலடிப்பது போலப் பட்டது. இருந்தும் காட்டிக்கொள்ளாமல், notification bar-ஐ கீழே இழுத்து, செய்தி என்னவென்று மட்டும் பார்த்தான்.

’மிஸ்டர் புல்-அவுட் நீ ஜெயிச்சிட்ட’

மீட்டிங் அறைக்குள் வந்து வீடியோகாலில் அழைத்து, புல்-அவுட் பெருமையை ரூபாலினி வெறுப்பாகும் அளவிற்குப் பேசிவிட்டு, கேபினுக்குச் செல்வதாகச் சொல்லி அழைப்பைத் தூண்டித்தான். ’மிஸ்டர் புல்-அவுட் நீ ஜெயிச்சிட்ட’ செய்தியை இடமிருந்து வலமிழுத்து உணவு இடைவேளையின்போது வாங்கி வந்திருந்த ’ஆணுறை’ டப்பாவை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தான். 

‘கேடி நாயே! நீயும் உயிர கையில பிடிச்சிட்டு தான் இருந்திருக்க. அப்டித் தான?’

‘உயிர கையில பிடிச்சிட்டு இருந்தேனான்னு தெரியாது. ஆனா..’ 

’த்த்தூ’

*

சுடிதாரை குறுக்கே மாராப்பாக்கி அக்குளுக்குள் வைத்துப் பிடித்திருந்தவள், ஒரு மிடறு பருகியபடி கேட்டாள். “சரி சொல்லு… வந்ததும் கவனிச்சேன். இருட்டுக்குள்ளயும் அப்பட்டமா தெரிஞ்சது. இன்னும் ஏன் என்னவோ மாதிரி இருக்க?” 

ரகசியத்தை சொல்லியே தீரவேண்டுமென்ற அவசரகதியிலிருந்து வெளியேறியிருந்தாலும், மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்சியைத் தாண்டி திலீபனால் அவளோடு உரையாடலில் ஒன்றமுடியவில்லை. அவளிடம் சொல்வது போல நினைத்துக்கொண்ட தோற்றுப்போன பாவனையும் அதிலிருந்தது. 

‘அந்த அவன் நீ தான்’ என்றது ஒரு குரல். 

‘என்ன சொன்ன?’

‘நான் உன்ன ’சொல்லச் சொல்லி’ கேட்டுட்டு இருக்கேன்’ என்றாள்.

“நீ எப்படி இவ்வளவு வேகமாக வெளில வந்த? எங்கிட்டயும் சொல்லல. அந்த வாரம் முழுக்கவே சிட்டுவ குளிக்கக்கூட வைக்கல. நான்தான் ரெடி பண்ணினேன். ருசியா சமைச்சிப்போட பிறந்தவ மாதிரியே வகை வகையா எனக்கு சமைச்சி கொடுத்த! அந்த அளவுக்கு நீ கிச்சன விட்டு வெளில வராம ஒடுங்கியிருந்த. அப்புறம் திடீர்னு ஒருநாள், தம்பி, அப்பா காபி குடிச்சதும் மாடியில இருக்கிற எல்லா செடிக்கும் தண்ணி ஊத்திட்டு, நீ விளையாடி முடிச்சதும் கீழ வருவோமா’ன்னு கூட்டிட்டுப் போய் நடந்தத எல்லாம் சொல்ல ஆரம்பிச்ச… அப்றம் இப்ப இவ்வளவு தெளிவா இருக்க!.”

“நான் தெளிவா இருக்கேனா? அன்னைக்கு நீ என்ன பதில் சொன்னன்னு ஞாபகம் இருக்கா? – தொடர்ந்தாள். “அட பைத்தியமே, உனக்கென்ன இப்பவும் வியர்க்குது? இவனுக்குதான பண்ணப்போனான்? இவனை பண்ண வைக்கலேல்ல? அந்தப் பையனைத்தான் யாரோ இதுக்கு முன்ன இப்படி பண்ண வச்சிருக்காங்க. அதுவும் வாய் வைக்கிறதுக்கு முன்னாடி பார்த்துட்ட. அதனால தனக்கு என்ன நடக்குதுன்னு கூட சிட்டுவுக்கு தெரிஞ்சிருக்காது. இதப்போட்டு தேவையில்லாம குழப்பிக்காத. நம்ம பையனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியத நாம சொல்லிக் குடுத்தாபோதும்.” 

“நடந்தது child abuse. அத நீ எப்படி ரிசீவ் பண்ணிண பாரு? – இந்த ஜென்மத்துக்கு போதும்ங்ற அளவுக்கு மானங்கெட்டத்தனமா உன்ன கேட்டுட்டமேன்னு ஒருவாரமா எனக்குள்ள போராடி இன்னைக்கு இறங்கி வந்திருக்கேன். அது உனக்காகவோ, எனக்காகவோ, ஏன் நம்ம பையனுக்காகவோ இல்ல. ”

அப்படியெனில் மூவரைத்தாண்டி யாருமில்லா நம் உலகில் யாருக்காக இந்த இரக்கம்? இந்த கருணை!

கருணையின்பால் பகிரப்பட்ட காமம் கசந்தது. அதைக்கூட அறியாமல், பணிந்த தன்னுடலை வெறுத்தான். இச்சை ஓர் உருவமாகப் பிடிபட்டால் அதை நிச்சயமாக கொன்றுவிடலாம் என நினைத்தான். சந்தேகமும் அகங்காரமும் தனக்குள் சல்லாபிப்பதை நிறுத்தமுடியாமல் அல்லலுற்றான். இரண்டுமே அவனாக இருப்பது போய், அவனையும் மீறி அதில் ரூபாலினி பங்கெடுப்பதை வெறுத்தான். ஆட்டத்தைக் கலைக்க நினைத்தான். இருளுக்குள் என்னவென கேட்டதற்கும் இப்போது என்னவென கேட்பதற்கும் உள்ள அர்த்தம் பிடிபட்டது. தன்னை ஆற்றுப்படுத்த சொற்ப நொடிகளேனும் அவளின் அவமானகரமான முகம் தேவைப்பட்டது. உடலுக்குள் முடுக்கி விடப்பட்டிருந்த இரத்த நாளங்கள் வன்முறையைக் கேவியது. வெடுக்கென சுடிதாரைப்பிடித்து இழுத்தான். அனிச்சையிலிருந்து எப்போதோ விடுபட்டிருந்தவள் குழந்தையை எடுப்பது போல அவனை நோக்கி இரு கைகளை நீட்டினாள். அந்த வெளியில் முலைமேடு மறைந்து, முலை வட்டம் மறைந்து, முலைக்காம்பு மறைந்து அவனது பற்தடங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. ஒருவேளை தன்னை அறியாமலே எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமோ என்று பயந்தான். வேகவேகமாக தலையணையெடுத்து முலைகளை மூடினான். அவனுக்கு அது அவளது முகமாகவும் தெரிந்தது.

***

ரமேஷ் ரக்சன் : திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர். NBFC துறையில் பணி செய்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் வெளியாகியிருக்கின்றன. “16” சிறுகதைத் தொகுப்பிற்கு ’கலகம்’ விருதும், “ரகசியம் இருப்பதாய்” சிறுகதைத் தொகுப்பிற்கு ’ஜெயந்தன் விருது’ம் வென்றிருக்கிறார். மின்னஞ்சல் : rameshrackson@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here