Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்சதுப்பு நிலங்களின் அசௌகரியக் குரல்

சதுப்பு நிலங்களின் அசௌகரியக் குரல்

சுப்ரபாரதி மணியன்

முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகளை அடைந்தபோது அதன் முகப்பிலேயே முகத்தைச் சுளிக்க வைக்கிற அளவுக்கு ஏதோ துர்நாற்றம் கிளம்பியது. அது என்ன துர்நாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

முன்னதாக முத்துப்பேட்டை தெருக்களில் நடந்த போது அங்கு கிடந்த கழிவுகள் சங்கடப்படுத்தின. கோழிக் கழிவுகள் பல இடங்களில் கொட்டிக் கிடந்தன.

அவற்றுக்கு மேலாக பருந்துகள் பறந்து கொண்டு இருந்தன. அவை நம் தலையில் வந்து எப்போது உட்காரும், பிறாண்டும் என்று பயமாக இருந்தது. ஏதாவது பறவை நம் மீது வந்து உட்கார்ந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் பருந்து என்றால் பயம்தானே. முத்துப்பேட்டை பகுதியில் இருக்கும் இறால் பண்ணைகள் காரணமாக அந்தப் பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பலன் இல்லாமல் போய்விட்டது. பல பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் செல்வம் கொழிக்கும் இடமாகிவிட்டது. 

முத்துப்பேட்டை நகரத்தின் வீதிகளில் காணப்படும் கடைகள், அங்கு கொட்டிக்கிடக்கிற வெளிநாட்டுப் பொருட்களைக் கண்டுகொள்ள முடிந்தது. அதிலும் வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சில பிரத்யேகக்கடைகளின் முகப்புகள் அதிர வைத்தன. ஓரிரு கடைகளுக்கு சென்று பார்த்தபோது வழக்கமான வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் என்பது தெரிந்து கொண்டேன். அத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் குவிந்து கிடந்தன. அந்தக் கடைக்காரர் என்ன வேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டார். நான் லுங்கி இருக்குமா, வெளிநாட்டு லுங்கி என்றேன். எதிரில் புடவைகள் உட்பட முஸ்லிம் பெண்களுக்கான பிரத்தியே கோஷா உடைகள் உட்பட பல இருந்தன. சாக்லேட் முதல் மின்சாதன பொருட்கள் வரை நிறைய இருந்தன. அவர் வர்ண லுங்கி மட்டும் இல்லை என்றார். இன்னொரு நாள் வாருங்கள் என்றார். கடையை விட்டு வெளியே வந்த பிறகு நகர வீதிகளைச் சுற்றிய போது இன்னும் ஒரு முறை இங்கு வர வேண்டுமா என்ற கேள்வி வந்தது முத்துப்பேட்டை என்றால் இப்படி வெளிநாட்டு பொருட்கள் சாதாரணமாக விற்கிற கடைகள் இருக்கின்றன. வெளிநாட்டுக்காரர்கள் வந்து இங்கே இறால் பண்ணை முதல்  பிற கடைகள் வரைக்கும் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். சிங்கப்பூர் முஸ்தபா ஞாபகம் வந்தார். அவர் சிங்கப்பூரில் நடத்திய புத்தக கடைக்குப் போயிருக்கிறேன். பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன் ஆனால் அவருடைய ஞாபகத்தில் எனது பெயர் நிற்கவில்லை என்பதை ஒவ்வொரு முறையும் நான் சந்திக்கிற போது பெயரை சொல்லுகிற போது தெரிந்து கொண்டேன். அவர் முத்துப்பேட்டையில் ஒரு பெண்கள் பள்ளி நடத்துகிறார். அந்தப் பள்ளியின் கல்வி சாதனைகள் பற்றிய பல விளம்பரங்களை முத்துப்பேட்டையில் கண்டேன். பல சமயங்களில் செய்தித்தாள்களில் அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்திருக்கிறேன். முஸ்தபா அவர்கள் நடத்தும் பள்ளியின் சாதனைகளாக அவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் நடத்தும் பள்ளியில் ஆண்கள் சாதாரணமாக நுழைய முடியாது என்ற சொல்வார்கள். ஒரு முறை ஒரு விழாவின் போது ஆண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அழைப்பிதழிலேயே அறிவித்து இருந்தார்கள். அந்த விழாவில் முக்கிய விருந்தினராக பரீட்சை ஞாநி போன்றவர்கள் இருந்தார்கள். அப்போது அது முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது.

சதுப்பு நிலக்காடுகளின் முகப்பில் தென்பட்ட துர்நாற்றம் அந்த ஊரில் கழிவுகள் அங்கு வந்து சேர்வதால் உண்டான இடைஞ்சல் என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார். கோழிக் கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் இறால் கழிவுகளும் என்று எங்கிருந்தோ வந்து இங்கு அடைக்கலம் ஆகி விடுகின்றன. இதற்குள்ளே மக்கள் வாழப் பழகிக் கொண்டார்கள் என்றார். நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். நான் திருப்பூர் என்றேன் திருப்பூர் என்றால் சாயக் கழிவுகள், சாயப்பட்டறைகள். நதியில் சாயக் கழிவுகள் ஓடுவது சாதாரணம்தானே. அதற்கு மத்தியில் நீங்கள் இருக்க, வாழப் பழகிக் கொண்டீர்கள். அதுபோலத்தான் நாங்களும் இந்த கழிவுகளின் மத்தியில் வாழப் பழகிக் கொண்டோம். எந்த ஆட்சி வந்தாலும் எந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்தாலும் எந்த மாறுதலும் இல்லை ஏன் அவர்களெல்லாம் இதையெல்லாம் கண்டு கொள்ள மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினராக நான்கு முறை பொதுவுடைமைக் கட்சியின் செல்வராஜ் அவர்கள் இருந்திருக்கிறார். அவருடைய பார்வையில் படாத விஷயம் இல்லை. ஆனால் எந்த விஷயமும் இங்கே மாறவில்லை என்றார். அலையாத்தி காடுகள் எங்களுடைய காவல் தெய்வம். பல சமயங்களில் எங்களை அழிவில் இருந்தும் பெரும் புயலில் இருந்தும் காப்பாற்றி இருக்கின்றன. கடலில் வேர்கள், மழைக்காடுகள், அலையாத்தி காடுகள், தில்லைவனம் சுரபுனைக் காடுகள் என்று பல பெயர்கள் இருந்தாலும் காவல் தெய்வம் என்ற ஒரு பெயர் அவர்களுக்கெல்லாம் பிடித்து போய் இருக்கிறது. மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து இது காப்பாற்றுவதால் காவல் தெய்வம்தான். முத்துப்பேட்டையில் இருக்கும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரியது. 120 கி மீ பரப்பு கொண்டது. வெப்பமண்டல கடலோர பகுதியில் காணப்படும். கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் பாதுகாப்பாக உள்ள கடலோர பகுதிகளிலும் வளரும் தாவரங்கள் இங்கேயும் காணப்படும். நிலையற்ற அடித்தளம் அதிகமான உற்பத்தித்தன்மை போன்றவை இந்த அலையாத்தி காடுகளில் இருக்கின்றன. நிலத்தில் மட்டும் இல்லாமல் நீரிலும் இந்தத் தாவரங்கள் மரங்களின் பங்கு முக்கியமானது என்பதை இவை உணர்த்துகின்றன. ஆழிப் பேரழிவைத் தடுத்து அந்தப் பகுதி நாசமாகாமல் காக்கிறது. அலையாத்திகாட்டு மரங்களின் முட்டு வேர்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வைக்கின்றன. அலையாத்தி மரங்களின் கிளைகள் மற்றும் தண்டுகளில் இருந்து வளரும் வேர்கள் அவை. அவை தான் முதலில் பார்வையில் படுகின்றன கடினமான சதைப்பற்றான விதைகளை அவை கொண்டிருக்கின்றன. நீர் தேங்கி நிற்கும் கழிவின் முகத்துவார இடங்களில் வாயு பரிமாற்றம் நடைபெறுவதில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை எதிர்கொள்ளும் வகையில் மரங்கள் மண்ணின் மேல் நோக்கி வளரும். பவளப்பாறைகளுக்கு அடுத்த படியாக பூமியில் அதிக உற்பத்தி திறன் கொண்ட சூழலமைப்பு அலையாத்தி காடுகளின் சூழமைப்புதான். மனிதர்களின் குறுகிய கால வணிக வளர்ச்சி, பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளின் உப்புத்தன்மை மிக்க இறால் பண்ணைகளின் கழிவுகள் ஆகியவை இங்கு எப்படியோ வந்து சேர்ந்து விடுகின்றன. இவை அலையாத்தி காடுகளுக்கு சவாலாக அமைந்திருக்கின்றன. இயற்கை தரும் பெரும் சிரமங்களுக்கு எதிராக நிற்கும் அலையாத்தி காடுகள் இந்த வகை கழிவு சவால்களையும் எதிர்த்து இயங்க வேண்டியிருக்கிறது. முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கிற திணை மயக்கமாகச் சிகப்பு சதுப்பு நிலக்காடுகளை இருக்கின்றன. இந்தியாவின் கங்கை ஆற்றங்கரையில் சுந்தரவனக்காடுகள், மிகப்பெரிய அலையாத்தி காடாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலான பிச்சாவரம் பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காடு இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளாகும். இந்தக் கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் முக்கியமானவை. குஜராத் ஆந்திர மாநிலங்களிலும் கடற்கரை பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் பல இடங்களில் உள்ளன. இலங்கையில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பு அலையாத்தி காடுகள் உள்ளன. அவை பல சமயங்களில் இயற்கையின் பேரழிவிலிருந்து நிலப்பகுதியைக் காப்பாற்றுகின்றன. ஆனால் இந்தச் சதுப்பு நிலக்காடுகளின் இன்றைய நிலைமை பல நுண்ணுயிர்கள் சாவதற்கு ஏதுவாகக் கழிவுகள் கலக்கின்றன. பல வகையான மீன்கள் இல்லாமல் போவதற்காக இந்தக் கழிவுகள் விஷமாக அமைந்து விடுகின்றன. எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை என்பது போல் இருந்தாலும் இந்த மக்களை இயற்கையின் பேரழிவுகளில் இருந்து காப்பதற்கான காவல் தெய்வமாக முத்துப்பேட்டையின் அலையாத்திக் காடுகளைக் கண்டேன். அந்தப் பகுதி மக்களும் அப்படியேத்தான் நினைக்கிறார்கள். பிச்சாவரம் காடுகளில் படகுளில் அலைந்த போது அதன் உள் பகுதிகளைக் காண முடியும். ஆனால் உள் பகுதிகளுக்கு இந்த மின்சாரப் படகுகள் செல்வதில்லை. தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் என்று சில இடங்கள் உள்ளன. திகில் மாளிகை போல அவை காட்சியளிக்கின்றன. அலையாத்தி காடுகளைப் பற்றி நினைக்கிற போது இந்த திகில் மாளிகை என்ற வார்த்தையும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது. பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு போன்றவைகளால் சதுப்பு நிலங்களில் சேமிக்கப்படும் கார்பனை இழக்கும் சூழல். வெப்பமண்டலக்காடுகளால் சேமிக்கப்படும் கார்பனின் அளவினை விட மூன்று மடங்கு அதிகம் இது. நல்ல வண்டல் மண்ணைப்பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்களை உள்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் . அப்போதுதான் கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க முடியும். 

பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் சதுப்பு நிலக்காடுகள் பாதிக்கப்படும் சூழல்கள் அதிகரித்துள்ளன. திகில் மாளிகை பிம்பத்தை உடைத்து அலையாத்தி காடுகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

***

சுப்ரபாரதி மணியன் : தொடர்ச்சியாக இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் மூத்த எழுத்தாளர்களுள் முதன்மையானவர். 27 நாவல்கள் உட்பட 100 நூல்கள் எழுதியிருக்கிறார். இந்திய ஜனாதிபதியின் கதா விருது, தமிழ்ச்செம்மல் விருது, தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருது முதலிய பல முக்கிய விருதுகளை வென்றிருக்கிறார். இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாடநூலிலும் இடம்பெற்றிருக்கின்றன. மின்னஞ்சல் : subrabharathi@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here