கார்த்திக் பிரகாசம்
“பிறரை மலர்ந்த புன்னகையுடன் சந்திப்பதும் தர்மமேயாகும்”
– நபிகள் நாயகம்
அந்த முதியவர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கருதியிருக்கக் கூடும். பரவாயில்லை. அதற்காக அவரையொன்றும் குறை நினைக்கக் கூடாது. அதே வேளையில், இந்த பிரபஞ்சத்தின் அனைத்து மனித சரீரங்களுக்கும் சுய விருப்பத்தின் பொருட்டோ, முன் திட்டமிட்ட காரணத்தின், நம்பிக்கையின் பொருட்டோ அல்லது ஏதேனும் அடையாள வெளிப்பாட்டின் பொருட்டோ மண்ணில் தோன்றிய மறுகணத்திலேயே ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு அழைக்கும் வழமையின் மூலமாக அத்தசைப்பிண்டத்தை மட்டுமே “நான்” என்கிற உய்த்துணரப்பட்ட ஊகத்தின் நம்பிக்கை வெளிப்பாடாக முன்னிறுத்தும் பௌதீக கருதுகோளின்படி சொரூபமான இச்சரீரத்தின் புறவய தோற்றத்தை மட்டும் அந்த முதியவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அம்மாதிரியான எண்ணத்திற்குப் பொறுப்பாளியாக்கி விட்டு “நானான நான்” தப்பிக்க முடியாது.
எனக்கு நன்றாகத் தெரியும். தசைப்பிண்டத்தால் ஆன நான் வேறு. உடைந்து உடைந்து ஒன்றுசேரும் கடல் அலையைப் போன்று அதே தசைப் பிண்டத்துக்குள் ஓய்வொழிச்சலின்றி சதா விழிப்புற்றிருக்கும் உறக்கம் தொலைத்த நானான நான் என்பது வேறு. நான் என்பது ஒன்றாகவும், அதற்கு நேர்மாறானதாய் முற்றிலும் வேறொன்றாகவும் வாய்த்திருக்கிறது நானான நான். மற்றவர்களைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது. சுய அபிமானத்தைப் பொதுமைப்படுத்தவும் நான் விரும்பவில்லை. என்னளவில் மட்டும் இதனை நிச்சயமாகச் சொல்கிறேன். ஏனென்றால் புறத்தில் மிகத் தெளிந்த புத்தியுடையவன் போல் காட்சியளிக்கும் நானோ, மனக்கிடக்கைக்குள் இரைந்து கிடக்கும் சிதறல் மூட்டைகளின் அலங்கோலமான கூடாரம். சஞ்சலம் என்னும் பழம்பெரும் கோட்டையின் சிதைந்த மதிற்சுவர்களுக்குள் குடியிருக்கிறது எனக்கு வாய்த்த நாடோடி மனம். இத்தனை ஆண்டுகளில் – பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன – என்னைத் தவிர நானான நானை வேறாரும் கண்டதில்லை. பெற்றெடுத்தவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இல்லையென்றால் பாசம் என்கிற பெயரில் ஒட்டுதலற்ற வாழ்கையைப் பரிசாகத் திணித்ததோடு மட்டுமின்றி இப்படியொரு திருமணத்தையும் நடத்தி வைத்து வாழ்க்கையைப் பாழாக்கியிருக்க மாட்டார்கள். நானான நானைக் கண்ட சொற்பத்தின் சொற்பமான ஓரிருவரும் நேர்மையாக விலகிச் சென்றுவிட்டனர். இக்கணத்தில் அவர்களைப் பேரன்புடன் தழுவி முத்தமிட விரும்புகிறேன். மறுபக்கம், என்ன ஆறுதல் சொல்லிச் சமாளிக்க நினைத்தாலும், வாழ்வின் அந்தந்த பருவங்களில் தற்செயலாகச் சந்தித்து இயற்கையின் வசத்தால் சில பல காலம் ஒன்றாகப் பங்கீட்டுக் கொள்ள நேர்ந்த எவருக்குமே அது அவசியப்படவில்லையே என்கிற மனக்குறை அவ்வப்போது தோன்றும். ஆனால் அதற்குள் செல்ல வேண்டாம். இக்கதையின் சாராம்சத்திற்குச் சம்பந்தமில்லாத சமாச்சாரம் அது. நானுக்கும், நானான நானுக்கும் மத்தியில் கோரமாகச் சிதிலமடைந்து கிடக்கும் சீரான உடற்கட்டில் ஆங்காங்கே முளைத்திருக்கும் இலக்கற்ற முட்புதர்களைப் போன்ற ஆழமானதும், கூரானதுமான சிதறல்களின் கூடாரமே பகுமானமான இந்த தசைப்பிண்டம்.
நான் வேளச்சேரியில் வசித்து வருகிறேன். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பரபரப்பாய் பேசப்படும் ராம் நகரின் இரண்டாவது தெருவிலிருக்கும் குறுகலான அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது தளம். மொத்த வியாபாரம் செய்யும் மளிகைக் கடையொன்றில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோல்டு வின்னர் அட்டைப் பெட்டிகளைப் போன்ற குடியிருப்புகளில் காற்றும், வெயிலும் உட்புகுந்து செல்லும் ஆடம்பர வசதிகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பிரத்தியேக எண். அவரவர்களுக்கான எண்களுக்குள் ஒவ்வொருவரும் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏதாவதொரு எண்ணுக்குள் அடைந்து கிடப்பதுவே தன்னடையாளம் என்கிற காலனிய காலத்து குணாம்சத்திலிருந்து நாம் இன்னும் மீண்ட பாடில்லை. B27 என்னுடைய பெட்டியின் எண். பத்து கோழிக்குஞ்சுகளும், ஓர் ஒண்டிக்கட்டை ஆளும், விருந்தாளியாக அவ்வப்போது வந்து செல்லும் இரண்டு பூனைகளும் தாராளமாகத் தங்கக் கூடிய அளவிற்கு வசதி உடையது. என்னை இன்னமும் பணியில் அமர்த்தியிருக்கும் அந்த அலுவலகம் சிறுசேரியின் தென்கோடி மூலையில் அமைந்துள்ளது. வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நேராகச் சென்று பழைய மகாபலிபுரம் சாலையைப் பிடித்தால் ஒரே வழி. நூல் பிடித்தது போல் நேர் சாலை. ஒரு இடத்தில்கூட வளையவோ, திரும்பவோ வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் அந்தப் பக்கம் தலை வைக்கவே மாட்டேன். காரணம் என்ன பெரிய காரணம். ஆயிரமாயிரம் ஈ பண்ணைகளை ஒரே சமயத்தில் சாலையில் கொட்டி விட்டதைப் போன்று ஒட்டுமொத்த ஜனமும் சாலையில் மொய்த்துக் கொண்டிருக்கும். அவ்வளவு நெரிசல். அலுவலகத்தை அடைவதற்குள் ஒரு மணி பதினைந்து நிமிடங்களிருந்து ஒன்றரை மணி நேரம் வரை குடி முழுகிப் போகும். ஆதலால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். ஆனால், சில சமயங்களில் ஏதேனுமொரு காரணத்திற்காக – சில சமயங்களில் இன்ன காரணம் என்று பிடிபடாமல் – காரணமே இல்லாமலும் – சில வேளைகளில் வெறுமனே – சுயத்தை அற்பத்தனமாகத் தண்டித்து உய்ய வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் பீறிடும். அன்றைக்கு மட்டும் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அலுவலகத்திற்குச் செல்வேன். மற்ற நாட்களில் ஈச்சங்காடு சென்று அங்கிருந்து வெள்ளக்கல், மேடவாக்கம் வழியாக சித்தாலப்பாக்கத்தைப் பிடித்து காரணை, தாழம்பூர் வழியாகப் போய் விடுவேன். இந்தப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்குக் குறைச்சலாக இருக்கும். அதிலும் மேடவாக்கத்தைத் தாண்டிவிட்டால் போதும். அதன்பின் நிற்காமல் நகர்ந்தபடி இருக்கலாம். சிக்னல் அவஸ்தை என்ற ஒன்றே இருக்காது. நாற்பத்தைந்து நிமிடங்களில், அதிகபட்சம் ஐம்பது நிமிடங்களுக்குள் அலுவலகம் சென்று விடலாம்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்த வழியாகவே சென்று வருகிறேன். ஆனால் இத்தனை நாட்களாய் இல்லாமல் இன்றுதான் அந்த முதியவர் கண்ணில் பட்டார். முழுமையாக முடிக்கப் பெறாத மேடவாக்கம் மெட்ரோ மேம்பாலங்கள் ராட்சத பறவையாட்டம் கனத்து வானம் என்றவொன்று இருப்பதையே மறைத்துக் கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. சாலையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை, வெயிலில் துளிர்த்த பாலத்தின் மீப்பெரும் ஒற்றைத் துளி வியர்வையாய், ஒரு பிரம்மாண்டமான செயற்கை நிழலானது அதன் அறுபட்ட வடிவத்திலேயே ஈரமின்றி படர்ந்திருந்தது. அந்நிழல் விரிந்திருந்த பாதையிலிருந்து சற்றும் விலகாமல் அதனையே பின்தொடர்ந்த வாக்கில் தலையில் அவிழும் கணத்திலிருந்த உருமா கட்டுடன் பழைய சைக்கிளொன்றை உருட்டியபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். புதிதாய் எழுதப் பழகும் குழந்தையின் கிறுக்கலைப் போன்று ஒருவித அருவுருவ நிலையில் எழுதப்பட்டிருந்த “உடைந்த குடைகள் சரி செய்து தரப்படும்” என்கிற அட்டை சைக்கிளின் பின்புறத்தில் மாட்டியிருந்தது.
கண்ட மாத்திரத்தில் மனதிற்குள் பொங்கியெழுந்த ஆச்சரிய உணர்வைக் கருவிழிகளின் உறைவிலே உணர முடிந்தது. அவ்வுணர்வின் துல்லியத்தன்மை தணிந்த சில நொடிகளில் சிரிப்பாக இருந்தது. ஆனால், சிரிப்பு ஒரு எண்ணமாக மனதில் உதித்ததே தவிர இதழ்களில் அரும்பவில்லை. “பாவம்…! உலகம் சுழன்றிடும் வேகம் அறியாத அந்தக் காலத்து மனிதராக இருக்கிறார்”. மனதாழத்தில் சதா உடைபடக் காத்திருக்கும் பரிதாப உணர்வுக்குமிழி தன்னிச்சையாக உள்ளத்தின் மேற்பரப்பில் மிதந்து வந்தது. பின்னே, உடைந்தவற்றை ஒட்ட வைக்கும் பழக்கம் மனிதர்களிடம் இன்னமும் இருக்கிறதா.? இதோ இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கால் பகுதியில் நுகர்விய பண்பாட்டைப் பிரதானமாகச் செரித்து விழுங்கியிருக்கும் நவீன மனிதக் குலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்தவொன்றும் பழுதாகிப் போகும் பட்சத்தில் மறுயோசனையே இன்றி தூக்கி கிடாசிவிட்டு புதிதாய் வாங்குவது தானே வழக்கம்.! அதற்குத் தானே அப்பியாச படுத்தப்பட்டிருக்கிறது! அதுமட்டுமில்லாமல் மாடர்ன் மெட்ரோ வர்க்கத்துக்கு உடைந்ததை ஒட்ட வைக்கும் காரியம் என்பது வீணாக நேரத்தை விரயமாக்கும் பிற்போக்குத்தனத்தில் சேர்த்தியாகும் சங்கதியல்லவா! ஒருவேளை அப்படியே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அளவில் சிறியதான, பண மதிப்பிலும் குறைச்சலான, எளிதில் வாங்க முடிந்த சல்லிசான குடையைப் போய் ரிப்பேர் செய்வதற்காக வாசலில் நின்று யார் காத்திருக்கப் போகிறார்கள். தொடர்ச்சியாக உற்பத்தியான கேள்விகளை அசைபோட்டவாறே நூறு மீட்டர் வரை தன்னியல்பாகக் கடந்துவிட்டேன். சக்கரத்தில் கல் இடறியது போலச் சட்டென மனதில் ஏதோவொன்று உறுத்த வண்டியை நிறுத்தித் திரும்பி பார்த்தேன். நான் கடக்கும் போது இருந்த அதே இடத்தில் நின்ற வாக்கிலேயே நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். உள்ளுக்குள்ளிருந்து நானான நானின் மௌனக் குரல், “செயற்கையானது, நிலையற்றது எனத் தெளிவாக அறிந்திருந்த போதிலும் அது தோற்றுவிக்கும் தற்கண ஆசுவாசத்தின் பொருட்டான உள சாந்திக்காகச் சற்றிற்கேனும் அவசியப்படுகிறது”.
சாலையின் இடது ஓரத்தில் உறைந்து கிடந்த ஒரு மங்கலான கணத்தின் நுட்பம் தளர்ந்த சமயத்தில் வண்டியைத் திருப்பினேன். அதே சமயம் அவரும் மெதுவாக முன்னோக்கி நகர ஆரம்பித்தார். ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஒருவித பதற்றத்துடன் அவரருகில் சென்றேன். உண்மையில் நான் மட்டுமே அவர் முன் நின்று கொண்டிருந்தேன். கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக நான் புழங்கிக் கொண்டிருக்கும் மொழி, அடர் இருள் திரண்டிருக்கும் பாதாள கிணற்றில் தனியாளாக மாட்டிக் கொண்டு வீடு சேரும் விதி அறியாமல் அல்லலுறும் அபலையையொத்த நிலையில் எங்கேயோ சிக்கிக் கொண்டுவிட்டது. வார்த்தையே வரவில்லை. என்னவோ புதிதாக மொழி பழகும் மழலையைப் போல் நா குழறியது. வறண்ட நிலத்தில் விரவும் விரிசலைப் போன்று அவரது முகத்தில் குழப்பம் நீண்டு வளர்ந்தது. என்ன நினைத்தாரோ சட்டென இரு கரங்களையும் பற்றிக் கொண்டு “உடம்பு சரியில்லையா மகனே” என்றார். திடுக்குற்ற உடல் ஒருகணம் அதிர்ந்தடங்கியது. மகனே எனக் கேட்டதும் அப்பாவின் ஞாபகம் மின்னலிட்டது. ஒருமுறைகூட அவர் என்னைக் கட்டியணைத்தது கிடையாது. என் தோள்களை, கரங்களை ஒருமுறையேனும் ஆதுரமாகப் பற்றி இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பா என்கிற உணர்வின் தொடுகையையே உணராதவனாகத்தான் இத்தனை வருடம் வளர்ந்து தொலைத்திருக்கிறேன். அவரின் எந்தவொரு இயல்பையும் பிரதியெடுத்தவனாக இருக்கவில்லை. ஒருபோதும் அப்படி இருக்க விரும்பவில்லை என்பதே நானும் நானான நானும் சங்கமிக்கும் முக்கியமான புள்ளி. கடைசி வரைக்கும் அவர் அப்பாவாக இருந்தார். நான் வெறுமனே மகனாக மட்டும் இருந்தேன். எல்லாமே இயந்திரத்தனமான சங்கதிகள். ஆனால், இந்த முதிய முகம் அறிமுகமில்லாத புதியவன் என்கிற தயக்கமோ, பதற்றத்தின் சலசலப்போ ஏதுமின்றி ஒரு மகோன்னத புன்னகையைப் பரிசாகத் தந்தது. இதுநாள் வரையில் கண்டிராத மிகவும் அபூர்வமான புன்னகை அது. மெய்சிலிர்த்து நின்றேன். ஒட்டு மொத்த கசடுகளும் ஒரு புண்ணியத் துளியில் அகன்றதைப் போன்று இயல்புக்கு மாறாய் லேசாகி மருவியது அகம். அத்தருணத்தில் மானுடத்தின் அத்துணைச் சங்கடங்களையும், அசுத்தங்களையும் தீர்க்கும் வல்லமை நிறைந்த ஓர் ஆன்மாவின் ஒளிக் கீற்றாக அந்தப் புன்னகை வெளிப்பட்டது.
முதுகில் மாட்டியிருக்கும் பையை ஒருமுறை நோட்டமிட்டார். பின்பு பேச்சற்று ஸ்தம்பித்துப் போய் நிற்கும் என்னைக் கனிவாகப் பார்த்தார். அந்த பார்வையின் மொழி, “உடைந்த குடை எங்கே? கொடு? சரிசெய்து தருகிறேன்” என்கிற அர்த்தம் பொதிந்த தொனியில் ஒளிர்ந்தது.
மோவாயை வெளியே தள்ளி உடலிலிருந்து முகத்தை மட்டும் தனியாக முன்னே நீட்டினேன்.
அதிர்ச்சியில் திகைத்த முதியவரின் கருவிழிகளில் குழப்பம் உருண்டது.
“பன்னெடுங்காலத்திற்கு முன்னர் உடைந்து போன எனக்குச் சொந்தமான சிரிப்பொன்று முகத்தில் சிதறிக் கிடக்கிறது. சரி செய்து கொடுங்கள்.” இதுதான் சந்தர்ப்பமெனப் பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்கும் சிசுவைப் போல உள்ளுக்குள்ளிருக்கும் நானான நான் சமயோசிதமாக “நானை”க் கருவியாக்கிக் கொண்டது.
“பன்னெடுங் காலமா?” புருவத்தை உயர்த்தினார்.
“ஆமாம்” தயக்கமின்றி சொன்னேன்.
முதியவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆதலால் சிறிது நேரம் கழித்து நானே தொடர்ந்தேன். “சரி விடுங்கள். என்னைக் காலங்களுக்கு அப்பாற்பட்டவனாகப் பாவித்து கொள்வது எனது தனிப்பட்ட சுபாவம். இல்லை. மனோவியாதி. ஆனால் அந்தச் சிரிப்பு எனக்குச் சொந்தமானது. அதிலொன்றும் மாற்றமில்லை. உங்களால் நம்ப முடியாவிட்டாலும் கூட.” என சொல்லிக் கொண்டிருக்கும் போது நானான நான் கவனித்தேன். அம்முதிய முகத்தில் அந்த புன்னகை துளியும் மறையவில்லை. வற்றாத கருணை நதியைப் போலப் பாய்ந்தோடியது.
“உனக்குச் சொந்தமானது என்று எப்படிச் சொல்கிறாய்” வாழ்ந்து தீர்த்த மகோன்னத நிதானம். குழப்பம் உண்டாக்கியிருந்த ஓரிரு சலன ரேகைகள் தற்சமயம் அவரது முகத்திலிருந்து அகன்றிருந்தன. தடுமாற்றமின்றி கேட்டார். அக்குரலின் தன்மையானது குடையை விரிக்கும் கணத்தில் ஒரு சில நொடிகள் உரசி முத்தமிட்டுக் கொள்ளும் ஆரக்கால் கம்பிகளின் மென்மையான கீறலோசையை ஒத்திருந்தது.
“இழந்தவனுக்குத் தெரியாதா தனது உடைமை எதுவென்று?” சீண்டப்பட்ட கோப ஆவேசத்தில் சட்டென கேட்டுவிட்டு நானான நான் தொடர்ந்தேன், “சுய புராணம் பாடுகிறேன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு நம்பகதன்மை ஏற்பட வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். முன்பொரு காலத்தில் நான் மகிழ்ச்சியை உற்பத்திச் செய்பவனாக இருந்தேன். அன்று என்னுடன் இருந்த பல முகங்களும் என் இதழ்களில் மிளிர்ந்த புன்னகையைத்தான் பிரதியெடுத்து மற்றவர்களுக்குப் பரிசளித்து திரிந்தன ”.
“சரிதான்… ஆனால் நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் வெறுமனே உடைந்த குடைகளைச் சரி செய்யும் சாதாரணமானவன். இந்த உடைந்த புன்னகையைச் சரி செய்திடும் வித்தைகளில் எனக்கு அனுபவம் கிடையாது. அதுமட்டுமின்றி நானொன்றும் மெத்தப் படித்தவனும் அல்ல.” அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாக இந்தமுறை “நான்” முந்திக் கொண்டேன். “நானே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். இந்தக் காலத்தில் உடைந்த குடைகளை யார் மெனக்கெட்டு பத்திரப்படுத்தி அதைச் சரிசெய்ய வேறு காத்திருக்கப் போகிறார்கள்”.
எங்கே அவரின் தொழிலையும், நம்பிக்கையையும் இழிவுச் செய்வதாக நினைத்து விடுவாரோ என்கிற கடுமையில் “நானான நான்” உலைவுற்றேன். நான் மீது பயங்கரமான வெறுப்பு பீறிட்டது. ஆனால் அவரோ இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் சஞ்சலம் அடையும் பலவீனமான மனிதராக இருக்கவில்லை.
எந்தப் புள்ளியில் நடக்க ஆரம்பித்தோம் என்பது ஓர்மையில் பதியவில்லை. பேசிக் கொண்டே சித்தாலப்பாக்கம் பிரிவு சாலைக்கு வந்திருந்தோம்.
“நான் குடைகளை நேசிக்கிறேன். தினமும் ஒரு குடை என் பசியை போக்கிவிடுகிறது. என் பசியையறிந்த குடை எனக்காக நித்தமும் எங்கோ காத்திருப்பதாக நம்புகிறேன். அது என்னை நோக்கி அழைக்கிறது. அசரிரீயின் குரலைப் பின்தொடர்வது போல தன்போக்கில் செல்கிறேன். ஒருநாளும் நான் பட்டினியில் காய்ந்த வயிற்றோடு வீடு திரும்பியதில்லை. மேலும், எனக்காகக் காத்திருக்கும் அந்தக் குடைகளைத் தேடியலைந்து கண்டுபிடிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது வெறுமனே வருமானமும், பசியும் சம்பந்தப்பட்ட காரியம் மட்டுமன்று.”
“ஒருவரின் பசிக்குப் போதும். உங்கள் குடும்பத்தினரின் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள். இந்த வருமானம் எப்படிக் கட்டுப்படியாகும்” சராசரியான நானின் சராசரியான கேள்விக்கு மந்தகாசமாகப் புன்னகைத்தார். தலையைக் குனிந்து கொண்டேன்.
சிறு மௌனத்திற்குப் பின் கூறினார்.
“எனக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். சரியான வயது நினைவில் இல்லை. இருப்பினும் குடைகளைப் பற்றிய எல்லா சமாச்சாரங்களும் விரல் நுனியில் அத்துப்படியாக உள்ளது. எந்தவிதமான குடையாக இருந்தாலும் அதன் முறிவுகளை என்னால் ஆற்றுப்படுத்திவிட முடியும். ஆனால் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மழையோ, வெயிலோ குடைக்கு ஒரே நிறம். ஆனால், மனிதர்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. ஆதலால், இப்போதெல்லாம் மனிதர்களைப் புரிந்து கொள்ள நான் முயல்வதே இல்லை”
சற்று இடைவெளிவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தெறிந்தபடி, “சக துணையின் சிறு சிறு குறைபாடுகளையும் பூதாகரமாய் பொருட்படுத்தி, அதனைத் தம் கண்முன்னமே நேர் செய்து முடிக்க உள்ளூர விரும்பும் எந்தவொரு உறவும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது.” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் கூறினார்.
சுய பிரக்ஞை பாதி அறுந்த நிலையில் தன்னிச்சையாக நானான நான் சொன்னேன்.
“குடையைச் சரி செய்வது போல அத்துணைச் சுலபமானதுமல்ல அது.”
ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.
சட்டென இருவருக்குமிடையே ஒரு கனத்த சூழல் அரங்கேறியது. மணி பன்னிரண்டை நெருங்கியிருந்தது. அலுவலகத்திலிருந்து மேலாளர் போன் செய்தார். ‘தவிர்க்க முடியாத சூழல் தாமதமாக வருவேன்’ என்று குறுஞ்செய்தி தட்டிவிட்டு போனைக் கட் செய்தேன். பிப்ரவரியின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. சூழலை இலகுவாக்குவதற்கு என்றில்லாமல் அந்நேரத்திற்குப் பட்டென மனதில் தோன்றியதை முணுமுணுத்தேன். அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை போலும். என்னவென்றார்,
“சுமை குறைவாக இருந்ததால்தான் போகும் பயணம் சுலபமாக இருக்கும்”.
இந்த முறை சத்தமாகவே சொன்னேன்.
உருட்டிக் கொண்டிருந்த சைக்கிளைத் திடுக்கிட்டு நிறுத்தி என்னையே உற்று நோக்கினார்.
“என்ன” என்பது போல் புருவத்தை உயர்த்தினேன்.
“ஒன்றுமில்லை” என்று அவரும் அதைப் போலவே உதடுகளைப் பிதுக்கி தலையை ஆட்டினார்.
சில மீட்டர் தூரத்திற்கு எதுவும் பேசாமல் நடந்தோம். வியர்வையில் வெயிலின் உக்கிரமான மொழி உரைத்தது. காரணைச் செல்லும் மாநகர பேருந்தொன்று ஆயில் மில் வளைவில் பெருங்கூட்டத்தோடு நின்றிருந்தது. பயணச் சீட்டு வாங்கச் சொல்லி நடத்துநர் கத்தியது வெளியில் கேட்டது.
“இந்தப் பக்கம் ஏற்கனவே வந்திருக்கிறீர்களா.?”
“இல்லை. இதுதான் முதல் முறை.” என்றார்.
சற்று சந்தேகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் பொய் சொல்லவில்லை என்று நிச்சயமாகத் தோன்றியது. ஏனென்றால் இந்த வழியாகத்தான் இத்தனை வருடமாக அலுவலகத்திற்குப் போய் வருகிறேன். நானுமே இன்றுதானே இவரைப் பார்க்கிறேன். ஆகையால் அவர் சொல்வது கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும்.
“இன்று இந்தப் பக்கம் வர வேண்டுமென்று ஏன் முடிவு செய்தீர்கள்?”
நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
பதிமூன்று வருட அலுவலக பணியில் மொத்தமாகச் சேர்த்தாலும் இத்தனை கேள்விகளை எவர் ஒருத்தரிடமும் கேட்டதில்லை. அலுவல் சார்ந்து மட்டும்தான் என்று கிடையாது. பொதுவாகவே யாரிடமும் அதுவும் புதிதாய் சந்திக்க நேர்ந்த முன்பின் அறிமுகமில்லாத எந்தவொரு அந்நிய நபரிடமும் வழக்கமான அந்த சம்பிரதாய வார்த்தைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் பேசவோ ஓர் உரையாடலை முன்னெடுக்கவோ என்னால் முடியவே முடியாது. அப்படித்தான் ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் போகிற வழியில் தெரிந்த முகங்கள் ஏதேனும் தென்பட்டால் கூட கண்டுக்காதது போல் கடந்துவிட்டு மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்லும் அளவிற்குக் கூச்ச சுபாவமுடையவன். ஆனால் இவரிடம் ஏதோ பலவருடங்கள் நெருங்கிப் பழகிய பால்யகால நண்பனிடம் பேசுவது போலச் சகஜமாக எப்படி உரையாடுகிறேன் என்று எனக்கே வியப்பாக இருந்தது.
அதே சமயம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு நச்சரித்து இந்த மனுசனை எரிச்சல் ஆக்குகிறோம் என்று சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தேன். நற்பலனாக அவ்வெண்ணத்தை அவர் நெடுநேரம் நீடிக்க விடவில்லை.
“உண்மையில் ஒரு கேள்வியிலிருந்து இன்னொரு கேள்வியே பிறக்கிறது. பதில் பிறப்பதில்லை.. காரணம் என்ன தெரியுமா? ஒரு கேள்விக்குக் குறைந்தபட்சம் பத்துப் பதில்கள் உண்டு. எந்தவொரு பதிலையும் இதுதான் திட்டவட்டமானது எனத் தீர்மானித்துச் சொல்லும் சக்தி மனிதனுக்குக் கிடையாது.”
குழப்பமாக இருந்தது.
“மனிதனுக்குக் கிடையாதென்றால் பின்னே யாருக்கு உள்ளது?” என்றேன். தாடையில் சுருண்டிருக்கும் வெண் தாடியைத் தடவியபடி சொன்னார்,
“சூழ்நிலைக்கு….
எந்தவொரு கேள்வியும் அக்கணத்தின் பொருட்டு தனக்கு வேண்டிய தோதான பதிலைத் தானே கிரகித்துக் கொள்கிறது. சூழ்நிலை மாறினால் அந்தக் கேள்விக்கான பதிலும் மாறும். உன்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்று இந்தப் பக்கம் வந்திருக்கிறேன் என்பதே தற்போதைய சூழ்நிலை நமக்குத் தந்திடும் பதில்.”
எனது மறுத்துப் போன முகத்தில் அப்போது தோன்றியது புன்னகையே தானா..?
சித்தாலப்பாக்கம் கணேஷ் நகரில் மாலை நடைபெறவிருக்கும் அரசியல் கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. குடிநீர் பந்தலில் நின்று தண்ணீர் குடித்தோம். இருவருக்குமே நல்ல தாகம். “மக்கள் நல அரசின் நவீன திட்டங்கள்” என அருகே அமைக்கப்பட்டிருந்த பதாகையில் ஆளுங்கட்சியின் சாதனைகள் குறித்த பெரும் பட்டியலுடன் முதலமைச்சரின் சிரித்த முகம் காணப்பட்டது.
தான்தோன்றித்தனமான போக்கில் கூறினேன்,
“மனிதனைச் சுற்றியுள்ள அனைத்தும் நவீனமடைந்து வருகிறது.”
சொல்லி முடிப்பதற்குள்,
“மனிதன் அப்படியொன்றும் நவீனமடையவில்லை” என்றார்.
நான் திடுக்கிட்டு அதே இடத்தில் நின்றேன்.
ஓரிரு அடிகள் முன்னின்றிருந்த அவர் திரும்பிப் பார்த்து, “உண்மையில் மனிதனொன்றும் நவீனமடையவில்லை. மாறாகத் தனது கட்டுக்கோப்பான முலாம் பூசிய சமயத்திற்கு உகுந்த நடிப்பின் மூலம் தானும் நவீனமானது போல் நிறுவிக் கொள்ளப் பிரயத்தனப்படுகிறான். மேலும் அப்படி நடிப்பதுவே அவனுக்குப் போதுமானதாகவும் உள்ளது.”
நான், நானான நான் மௌனமாகப் பின்தொடர்ந்தேன்.
“உங்களுக்கு இன்னொரு சங்கதி சொல்லவா?” என் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. “மனிதனால் ஒருபோதும் நவீனன் ஆகவே முடியாது. ஏனென்றால் புதிய பாதையிலும் அவன் பழகிய பாதையின் சாயல்களையே வேறு வேறு ரூபத்தில் காணத் துடிக்கிறான். திரும்பத் திரும்பத் தேடுகிறான். நேர்ந்த எதையும் அவன் விட்டொழிக்கத் தயாராய் இல்லை. சுயத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்காகத் தன்னையே நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கொள்ளத் தயாராய் இருக்கும் தங்கத்தின் துணிவு மனிதனுக்கு ஒருபோதும் வாய்க்காது. நினைவுகளின் கௌரவச் சுகத்தில் வீழ்ந்து கிடக்கும் அவனின் அந்த மனமும், அதன் சிதறல்களும்தான் பழமைவாதத்தின் ஆகச் சிறந்த அத்தாச்சி.”
செயலற்றுப் போன சிந்தனைகளுடன் பிரக்ஞையின்றி பின்னால் நடந்தேன்.
வயிறு முட்டத் தண்ணீர் குடித்ததானாலோ என்னவோ இருவருக்குமே மூச்சு வாங்கியது. உருமா கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். சுற்றிலும் இளைப்பாறுவதற்குப் பொட்டு நிழல் இல்லை. காரணைப் பேருந்து கடந்து சென்றது. அது கிளப்பிச் சென்ற மணற் புழுதியில் முளைத்தெழுந்தது போல் “தாத்தா… தாத்தா” என்று கத்திக் கொண்டே ஓடி வந்த சிறுவனின் குரல் கேட்டது.
ஒரே சமயத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தோம்.
“கொடை ரிப்பேர் பண்ணனும்… எங்க அம்மா உங்களைய கூப்ட்டாங்க.” சாலைக்கு அந்தப்பக்கம் இருந்த இளநீர் கடைக்கு நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய குடையைச் சுட்டிக் காட்டி சொன்னான். அங்கிருந்தே அந்தச் சிறுவனின் அம்மா எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
மலர்ந்த பரவசத்துடன் முதியவர் என்னைக் கண்டார்.
சுருக்கங்கள் விழுந்த அம்முகத்தில் உடைந்த போன என்னுடைய புன்னகையின் துளிகள் மீட்சி கண்டன. எனது முதிய முகத்தைக் கண்ட திகைப்பில் வெலவெலத்து நின்றேன்.
***
கார்த்திக் பிரகாசம் – கல்குதிரை, தமிழ்வெளி, உதிரிகள், அகழ், நகர்வு, கலகம், வாசகசாலை முதலிய அச்சு, இணைய இதழ்களில் சிறுகதைகளும் மற்றும் கணையாழி, பேசும் புதிய சக்தி, சொல்வனம், நுட்பம் இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது “மீச்சிறு இருள்” என்ற சிறுகதைத் தொகுப்பை தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி : karthiksona91@gmail.com

