Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஸ்காச்சில் கரையும் ஐஸ் க்யூப்ஸ்

ஸ்காச்சில் கரையும் ஐஸ் க்யூப்ஸ்

சாருக் செல்வராஜ்

வன் இப்படித்தான் கூறினான்: “மரணத்திற்கு நான் தான் காரணம்.”

நகரத்தின் மத்தியில் வளர்ந்து வரும் கட்டிடங்களுக்கு முன்னதாக பெரும் கட்டடமாக அந்த அலுவலகம் இருக்கும். நான் எப்போதும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அலுவலகம் செல்வேன். வீட்டில் இருந்து அதிகபட்சம் முப்பது நிமிடங்கள் ஆகும். ஆனாலும், “சக பணியாளர்கள்” என சொல்லப்படும் யாருக்கும் என் வீடு எங்கு இருக்குமெனத் தெரியாது.

வீட்டை விட்டு வெளியேறி துல்லியமாக இன்றோடு பதினேழு வருடங்கள் ஆகின்றன. ஒன்பது வருடங்கள் தனியே வசித்தேன். பின் மீண்டும் நான்கு வருடங்களாக தனியாகவே வசித்து வருகிறேன். நிறைய சலிப்பூட்டிய வாழ்க்கையை நிறைய கேள்விகளுக்குள் வைத்ததில் எதுவும் மீதமில்லை. இப்படித்தான் பெரும்பாலான கேள்விகள் பதிலின்றி அர்த்தமற்ற சுழலில் இருக்கின்றன. நகரத்தின் இடுக்குகளிலும் சுழலும் சக்கரங்களிலும் சிக்கி அவை மறுகணமே காணாமல் போகின்றன. சில நேரங்களில் நான் ஏன் வெளியேறினேன் என்பதும் கூட மறந்துவிட்ட நாட்கள் உண்டு.

எனது அலுவலகத்தில் எப்போதும் வலது பக்கம் இருக்கும் லிப்ட் இல்லாததால், இதுவரை செல்லாத இடது பக்க லிப்டில் செல்ல முடிவு செய்தேன். பதினோறாவது தளத்தில் எனது அலுவலகம். லிப்ட் நேராக நான் அழுத்திய பதினோறாவது தளத்தை விட்டு, நான் கவனிக்காத நேரத்தில் மொட்டை மாடியில் நின்றது. இந்த நான்கு வருடங்களில் அன்றுதான் மொட்டை மாடிக்கு முதல் முறை சென்றேன். எந்த ஒரு ரம்மியமும் இன்றி காணப்பட்டது. அலுவலத்தில் உடன் பணியுரியும் சிலர் இளைப்பாருவதாக அடிக்கடி மாடிக்கு செல்வார்கள். என்னை வற்புறுத்துவதும் உண்டு. சிகரெட் பிடிக்க அதிகமாக எல்லோரும் இங்குதான் கூடுவார்கள். மீண்டும் பதினோராவது தளத்திற்கு செல்ல பொத்தானை அழுத்தினேன். அலுவலகத்திற்கு சென்று இருக்கைக்கு விரைந்தேன்.

உடைந்த கட்டிடங்கள், நிலைகுலைந்து போன நகரம், அலைக்கழியும் மக்கள், இரத்தம் படிந்த சுவர்கள், சிதறிக்கிடந்த உடல்கள், தண்ணீருக்கும் உணவுக்கும் செத்து மடிந்த குழந்தைகள் என இவற்றையே அன்று அரை நாள் முழுவதும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எங்களின் துரதிஷ்டம் அன்று இங்கு ஒரு உயிர் பலி கூட நடக்கவில்லை. காலையில் இருந்து அலுவலகம் மந்தமாக இருந்தது. எல்லோரும் சோர்ந்து காணப்பட்டனர். பரபரப்பாக இருக்கும் அலுவலகம் அன்று மகிழ்ச்சி இல்லாது இருந்தது. 

ஃபீல்டில் இருக்கும் ஒவ்வொருவருக்காக அழைப்பு சென்றன. 

எல்லோரும் ஒரே பதில், “எந்த நாயும் சாகல சார், என்ன பண்ண?” 

“ஸ்டோரி கிடைச்சா உடனே அடிக்கிறேன்”, என எல்லோரும் சொல்லி வைத்தற்போல் பேசினார்கள்.

காலை 11 மணி போல் ஒரு அழைப்பு.

“சார் ஸ்கூல் வேன் ஆக்சிடென்ட். ஆனா ஸ்பாட் டெத் இல்ல. 3 குழந்தைங்க போக வாய்ப்பு உண்டு. இப்போதைக்கு ட்ரைவர் காலு மட்டும் போனதால அதையும் குழந்தைங்க வீடியோவும் அனுப்புறேன். ‘உடனே ஏர்ல விடுங்க ரத்தம் வலிய வலிய இருக்கும்’ என சொல்லி விட்டு கட் செய்தார் அந்த ரிப்போர்டர். அவர் இந்த சேனலுக்காக வேலை செய்பவர் அல்ல. சொல்ல போனால் இந்த சேனலுக்கென ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. மத்த நிறுவனங்களின் ரிப்போர்டர்கள் எங்களுக்கே செய்தி அனுப்புவார்கள். கொலை, கொள்ளை, வெட்டு, விபத்துக்கென மட்டும் உலகில் தனித்துவமாக செயல்படும் நிறுவனம் எங்களுடையது. எங்களுக்கு யார் வேண்டுமெனாலும் செய்தி அளிக்களாம். செய்தியின் தன்மையைப் பொறுத்து பணம். உலகத்தில் எப்படி எங்கு சாவு வந்தாலும் அது எங்களுக்கான செய்தி. உடனடியாக அவர் அளித்த செய்தியை ப்ரேக்கிங் என ஒளிப்பரப்பானது. அனைவர் கண்களிலும் அன்றைய நாள் அப்போதுதான் புதிதாக தொடங்கிய மகிழ்ச்சி. அன்றைய நாள் தொடங்கியதென நிம்மதியுடன் அந்த செய்தியை ஒன்றன் பின் ஒன்றாக அப்டேட் செய்தபடியே இருந்தனர். அப்போதுதான் டீம் ஹெட் அலுவலத்தில் நுழைந்தார்.

 “எத்தன பேரு அவுட்?”

“இப்பவரைக்கும் யாருமே இல்ல.”

“சீரியஸ் கேஸ்ல மூனு குழந்தைங்க இருக்காங்க. போறதுக்கான வாய்ப்பு இருக்கு. டிரைவருக்கு மட்டும் இப்போதைக்கு கால் போயிட்டு, எல்லாம் லைவ் ரன் ஆகிட்டு இருக்கு எதும் மிஸ் ஆகல.” 

“குட் ஃபாலோ அப்” என சொல்லி விட்டு அவருடைய கேபின் சென்றார். 

வீட்டை விட்டு வெளியேறிய இத்தனை ஆண்டுகளில் இது எனக்கு ஐந்தாவது நகரம். ஒவ்வொன்றிலும் காலம் வேகமாகச் சுழல்வதை கவனிக்கத் தவறியதில்லை. இப்போது வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் முகம் கூட மறந்துவிட்டது. மாதாமாதம் அக்கவுண்டில் இருந்து பணம் அவருக்கு சென்று விடும் என்பதால், ஒன்று இரண்டு முறைக்கு மேல் அவரிடம் இருந்து அழைப்புகள் வந்ததில்லை. இரண்டு பெட்ரூம் கொண்ட நல்ல விசாலமான வீடு. தனியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தும் கொண்டிருந்தது. வீட்டில் இருந்து முப்பது நிமிடம் நடந்தால் ஒரு உணவகம். அங்கு உணவருந்த தினமும் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து சென்று வருகிறேன். குளிர்ந்த காலத்தில் அவ்வழியே சரியான நடைபயிற்சி கொள்ளும் இடமாக இருக்கும். வழியில் எப்போதும் பூத்திடாத ஒரு மரம். அதன் கீழ் ஒரு இருக்கையும் இருக்கும். யாரும் அமரமாட்டார்கள் என்பதால், அது பெரும்பாலும் என்னைப்போலவே இருக்கும். கடந்து செல்லும் போது என்னை நானே வேடிக்கை பார்ப்பதாக உணர்வேன். எப்போதாவது சாலைகளில் பூக்கள் படிந்த காரினை பார்ப்பதுண்டு. மிகவும் அரிதாக, தாமாக உதிர்ந்த பூக்கள் இரவின் குளுமையில் காரின் மீது படிந்திருக்கும். அப்போதெல்லாம் நான் இந்த பூக்காத மரத்தையும், இருக்கையையும் நினைத்துக்கொள்வேன். அந்த வீதியில் பெரும்பாலான வீடுகள் விளக்கு எரிந்து மட்டுமே கண்டிருக்கிறேன். அங்கிருந்து மனித நடமாட்டம், அதன் அசைவுகள் என எதும் இருக்காது. அதிகம் அமைதியுடன் இருக்கும் வீதி வருடத்திற்கு ஒரு முறை மக்கள் கூட்டத்தில் வழியும். வீடுகள் சிதலமடையாது இருக்க காரணம் அதுதானே என நினைத்துக்கொள்வேன். கொஞ்சம் தூரம் செல்ல வீதியின் முடிவில் இரண்டு பெண்கள் ஒருவருவருக்கொருவர் தழுவிக்கொண்டிருந்தனர். சத்தங்கள் எழவில்லை. 

Generated image thumbnail

ஆண்டின் முடிவில் புத்தாண்டு ஆடை உடுத்தும் நகரம் இந்த வருடமும் அதற்குத் தயாராகியது. அந்த நாட்களில் வீதியெங்கும் விழாக்கோலம் நிறையும். வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட உடல்கள், ஆடைகள். அங்கு கிடைக்கும் புகழ்பெற்ற பியர் அருந்தக் கூட்டம் கூட்டமாக கூடுவதை நான்கு முறையும் பிரம்மிப்புடன் கண்டிருக்கிறேன். இந்த வருடம் அத்தனை பேர் கூடி ஒன்றாக பாட்டில் திறக்கும் ஓசை கேட்க ஆவலாக காத்திருந்தேன். அப்போதும் அந்த பூக்காத மரத்தின் இருக்கையில் என்னைத் தவிர யாரும் அமரப் போவதில்லை. நான் இந்த இரவு முழுவதும் அனைவரையும் வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருப்பேன். மனித உடல்களால் கட்டடங்கள் முளைத்து, அதில் இருந்து வெளியேற விரும்பத் தெரியாதவனாக நான் இருப்பேன். கொஞ்சம் பியர்கள் என் மீது தெளிக்கும். சில உடல்கள் கட்டியணைத்துவிட்டு செல்லும். ஏழு நாட்களுக்கு முன்னதாக விழா தொடங்கி விடும் என்பதால் நாளுக்கு நாள் அங்கு புதிய முகங்கள் தோன்றும். நான் அதன் தொடக்க புள்ளியில் இருந்து முற்று பெற்று காற்றில் கரையும் வரை பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் அலுவலத்தில் தொடர் விடுமுறை எடுத்துவிடுவேன்.

ஒவ்வொரு இரவிலும் தேர்ச்சி பெற்றவன் போல் உறங்கி, மற்றொரு இரவில் தோல்வியுற்றவனாகப் படுக்கையில் உடலை கிடத்துகிறேன். முன் எப்போதும் இல்லாத தேவைகள் என்னை இந்த அறையின் இரவுகளை விடாப்படியாக கழிக்க வைக்கின்றன. வரும் வழியில் தழுவும் உடல்கள் இல்லை. அடர்ந்த பனி, உடலை இறுக்கியது. வீட்டை அடைந்து நட்சத்திரங்களை எண்ணுவதற்காக அறையின் ஜன்னல்களை திறந்தபடியே வைத்து உறங்குவேன். பின் அதிகாலை எழுந்து மூடிவிட்டு மீண்டும் படுக்கைக்கு சென்றுவிடுவேன். இதற்கிடையில் எப்போதும் வந்து போகும் ஒரு வயது முதிர்ந்த பூனை.

*

மனிதனாக உருமாறும் பூச்சியையும் பூனையையும் கொன்று தின்று வாழும், சூனியம் நிறைந்த கண்களை வாழ்வில் அப்போதுதான் பார்த்தேன். கூட்டத்தின் அத்தனைக் கண்களிலும் அவள் உருவம் பச்சைக்குத்தியது போலப் படிந்திருந்தது. அனைவரின் கண்களிலும் அவள் அவர்களின் ரசனையில் உறைந்திருந்தாள். அவள் அங்கு எல்லோரையும் வசீகரித்து வைத்திருந்தவள் போல இருந்தாள். அவள் கையில் இருந்த குடுவையில் ஒவ்வொருவராக சென்று விழுந்தனர். ஒரு ஒரு மிடறாக அவளை விழுங்குவதுபோல எல்லோரின் குரல் வளையமும் ஏறி இறங்கியது. அவளின் உடலின் உஷ்ணம் என்னை நெருங்குவதை நான் சிறிது நேரத்தில் தெரிந்துக்கொண்டேன். தூரத்தில் இருந்தவள் காற்றில் மிதந்து வந்து என் மடியில் படிய படரவேண்டும் என எண்ணினேன். பின்னால் இருந்து ரிக்கி என்னை உலுக்கினான். அவன் எவ்வளவு குடித்தாலும், போதை கண்களிலும் பேச்சிலும் தெரியாதது போல சமாளிக்கத் தெரிந்தவன். நிதானத்தில் இருக்கக் கூடிவன். நான் ஒன்னுமில்லை என்பதை போல தோள்களை சிமிட்டினேன். அவனிடமிருந்து கண்கள் அவளையே நோட்டமிட்டபடி இருந்தது. என் உடல் மேசை மீதிருந்த அவளின் குவளையில் ஏறி குதிப்பதை கண்டேன். கண்கள் உஷ்ணத்தில் உறுத்தியது. என் பள்ளித் தோழி என்று சொன்னது எனக்கு முதலில் விளங்காததால் ரிக்கியை பார்த்து என்ன என்று கேட்டேன்.

மதுமிதா என அவளைக் காட்டி என் பள்ளித் தோழி என கூறினான். அவனாக நம்பரை எனக்கு வாட்ஸ்அப் செய்தான். இத்தனை ஆண்டுகளில் அவனுக்கு இப்படியொரு தோழி இருப்பது தெரியாது. எங்கள் மேசையில் இருந்த இன்னோரு காலி இருக்கையில் அப்போது அவளாக வந்து அமர்ந்தாள். என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். மென்மை நிறைந்த கை அவளுடையது. அவள் பாதமும் கூட. என் உலகில் நானாக ஒருவரை அத்துமீறி நுழையும் வழிகளை அப்போதுதான் முதல் முறையாக ஏற்படுத்தினேன். அவளுக்காக சிவப்பு கம்பளம் விரிக்கவும் தயாராகிவிட்டேன் என அவள் உணர்ந்தது போல மெல்ல சிரித்து பேசத் தொடங்கினாள். அவள் முகம் என்னை வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. நான் குடிப்பதைத் தவிர என்னை எப்படி மறைத்துக்கொள்வதென தெரியவில்லை. 

இரண்டு மாதங்கள் கழித்து அவனிடம் நான் கூறிய போது அவன் கேட்டான்: “இப்படியான ஒரு முட்டாள்தனத்தை யாரும் செய்யமாட்டார்கள், உனக்கு எப்படி இவ்வளவு துணிவு?” என் கண்களில் அவள் நிறைந்திருப்பதாக தெரிவித்தான். நான் சிரித்துக்கொண்டேன். உண்மையில் அவள் எல்லோர் கண்களிலும் நிறைந்திருக்க கூடியவள். 

விடுதிப் பணியாளரிடம் “ஒன் மோர் ஸ்காட்ச்”, என்றான். “முடிவு செய்துவிட்டாயா? அப்படித்தானே?”, என மீண்டும் கேள்வி எழுப்பி என் கண்களைப் பார்த்தான். நம்பர் கொடுத்தற்கு வருத்தப்படுவதா இல்லை சந்தோசப்படுவதா எனத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவன் கொடுக்காவிட்டாலும் அன்று நானாக அவளிடம் கேட்டு பெற்றிருப்பேன். அல்லது அதற்கான வழியைக் கண்டிபிடித்து அதில் சென்றிருப்பேன். 

பிறகு அனைத்திற்கும் பணம் செலுத்தி விட்டு வெளியேறும் போது, இறுதியாக அணைத்துகொண்டவன் திரும்பிப் பார்க்காமல் சென்றான். நான் என் அக உலகத்தில் முதல் முறையாக அனுமதித்தது அவனை மட்டும் தான்.

ரிக்கியை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். முற்றிலும் எல்லாவற்றிலும் தொடர்பறுந்து நிற்கிறேன். நான் அவள் வீட்டுக்கு இடம்பெயர்ந்த நாள் முதல் மூவரும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவோம். ரிக்கிக்கு அப்போது வெளிநாட்டில் இருந்து சில வாய்ப்புகள் தேடி வந்தன. எங்களை அதிகம் நேசித்தான். அவள் பிரிந்த பிறகு என்னுடனேயே தங்கினான். 

*

மணி 6 இருக்கும் அந்த நேரத்தில் நடுவே வெளிறியிருந்தது வானம். அவசரமாக எல்லோரும் கூடினார்கள். அன்று நகரம் முழுவதும் அதுவே முக்கிய செய்தி.

பூட்டிய வீட்டில் இருந்த சடலம் மூளை முழுவதும் அழுகியிருந்தது.

வாடகை செலுத்தாததால் வந்த வக்கீல் நோட்டீஸ், வீட்டின் வெளியே அதற்கென இருந்த பெட்டியில் மூன்று மாதங்களாக கிடந்தது. அதன் பின்னும் வாடகை போய் சேரவில்லை. எனது எண்ணிற்கு அழைத்தும் பயனில்லாததால், முதலில் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்தனர். அவர்கள் யாருக்கும் அவ்வளவாக என்னைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனக்கும் அவர்கள் அப்படித்தான். பின் நேராக என் அலுவலகத்திற்குச் சென்றபோது, நான் வேலைக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாக ஆவதாக தெரிவித்துவிட்டனர்.

இறுதியாக வீட்டின் கதவு போலீஸாரால் உடைக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் அவ்வளவு தூரமில்லை. ஆனாலும் கெட்ட வாசனையோ அல்லது வேறு எந்த அடையாளங்களும் யாருக்கும் தெரிவிக்காததால், ஒருவருடத்திற்கு மேலாக உடல் அழுகி உள்ளே புழுக்களுக்கு இறையாகியுள்ளது. இத்தனை வருடங்கள் சம்பாதித்த பணம் அக்கவுண்டில் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் தாமதமாக முடிவு எடுத்தார். அலுவலகத்தில் “Abscond” என மார்க் செய்திருக்கலாம்.

*

“அவள் சென்ற பிறகு தனிமைக்கு அஞ்சவில்லை. சில ஆண்டுகள் நெடிய உறக்கத்தில் இருந்ததாக அவன் எனக்குச் சொன்னான்.”

அப்போது கண்களில் அவள் நிறைந்திருப்பதை கண்டேன். குளிர்ந்த நீரில் முகம் கழுவியது போல, அவன் உடல் குளுமையாகக் காதலை உணர்த்தியிருந்தது. அதிகம் வெளி உலகத்தை தனது அருகில் அனுமதிக்காத ஒருவனால் உலகைக் கட்சிதமாக முடித்துக்கொள்ள முடியும் என சொல்வான்.

“விடுதலை” என்ற சொல்லுக்கு அர்த்தமற்ற உலகில் மனித உடல் பின்னப்பட்டு இருப்பதாக சொன்னவன், இறுதியாக இப்படித்தான் கூறினான் 

“என் மரணத்திற்கு நான் தான் காரணம்.”

நான் இருவருக்கும் சேர்த்து இரண்டு ஸ்காட்ச் சொன்னேன்’’. 

*

நாங்கள் எங்களுக்குள்ளாக பேசிக்கொள்வோம். இந்த விடியலுக்கு முன்னான வானத்தில் ஒரு உடல்மேல் இன்னொரு உடல் பரவிருக்கும். அதற்கு கடவுள் என பெயர் சூட்டும் முன் ஒருவரை ஒருவர் கொல்லத்துணிய வேண்டும் என. கண்களை மூடிக்கொண்டு என் மேல் இயங்கும் உடலை எனது புலன் உணர்வால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு விடியலுக்கு முன்னாலும் ஜன்னலை அடைக்க அவள் போகும் போது உடலால் வானம் நிறைந்து இருக்கும்.

***

சாருக் செல்வராஜ்: பணி நிமித்தமாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். முன்னதாக யாவரும் பதிப்பகத்தில் பணிபுரிந்தார். யாவரும், உயிர்மை மின்னிதழ்களில் கவிதை வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: sharukhraj1999@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. நல்லா இருக்கு. ஒரு தனித்து விடப்பட்டவனின் உள்ளார்ந்த கதை… அருமை சாருக்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here