(1)
ஒரு குழந்தையை
கையளித்துச் செல்வது போல
அவள்
உன்னை என்னிடம் விட்டுச்செல்கிறாள்.
இக்கணத்தில்
நீ எனக்கு தேவதை.
அவள் என் தெய்வம்.
நானோ ஓர் எளிய மானுடன்.
உன்னைக் கையில் ஏந்தி நிற்கையில்
என் கண்களில் பூத்து
உன் தாள்மீது உதிர்கின்றன
தூய கண்ணீர்த்துளிகள்.
(2)
இந்த மொத்த உலகும்
உன் ஒரேஒரு
உள்ளங்கையில் அடங்கும்.
அதில் முத்தமிடுகையில்,
ஊற்றெடுக்கும் கண்ணீரில்
இந்த மொத்த உலகும் நனையும்.
(3)
ஒரு இலை உதிரும்போது
ஒரு இதயமே உதிர்கிறது.
ஒவ்வொரு இலையாக
உதிர்ந்து உதிர்ந்து
இந்த அரசமரத்தடியில்
பரவிக்கிடக்கின்றன
எடையற்ற இதயச்சருகுகள்.
காற்றின் ஸ்பரிசத்தில் மெல்ல
புரண்டு புரண்டு
மண் மீது உறங்குகின்றன
மரம் கிளை வான் என
ஒவ்வொன்றாய் நீங்கிய உயிர்கள்.
(4)
இந்த இரவில் ஏன்
மண் மீது உதிர்கிறாய் மரமல்லியே?
உலராத கண்ணீர்துளிகளென
உனைக்கண்டு திக்கென்கிறது என் மனம்.
உன்னைத்தொட்டெடுக்கையில் நடுங்குகின்றன
என் விரல்கள்.
உன்னில் எஞ்சியிருக்கும் வாசம்
என்னிடம் சொல்வதுதான் என்ன?
மண்மீது வாழ்ந்து வீழ்ந்து
மரித்துப் போதல் சுகந்தமென்றா?
(5)
சார் ஜீரோ பாருங்க!
எத்தனை எத்தனையோ முறை
எனக்கு இதைச்
சுட்டிக்காட்டி இருக்கிறாய்
என் நண்பா!
மறுபடியும் மறுபடியும்
பூஜ்யத்தில் இருந்து தொடங்குதல்
உன் விரல் நுனிச் சொடுக்கல் போல்
அவ்வளவு எளிதானதா?
(6)
’உப்பு தேவையான அளவு’ என்று
எளிதில் ஒரு சமையல் குறிப்பை
சொல்லி முடித்துச் செல்கிறாய் நீ.
அந்த தேவையான அளவிலிருந்து
ஒரு சமையலை
செய்யத் தொடங்குகிறேன் நான்.
***
வேணு வேட்ராயன் – நவீன தமிழ் கவிஞர். கவிதைகளும், கவிதைகள் குறித்து கட்டுரை, விமர்சனம் எழுதி வருகிறார். சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறார். “அலகில் அலகு” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல்: venuvetrayan.dr@gmail.com
