Homeஇதழ்கள்2026 இதழ்கள்வி சங்கர் கவிதைகள்

வி சங்கர் கவிதைகள்

1

கருப்பு க்ரையானும்
வெள்ளை க்ரையானும்
மல்லுக் கட்டிக் கொண்டன

எதிராளியின் குருதி
தன் நிறத்தில் வழிவது கண்டு
மேலும் மேலும் குத்திக் கிளறின

எதிராளியின் குருதியில்
தம் உடலை முழுக்காட்டினதும்
இரு வேறிடத்தில் ஓய்த்து அமர்ந்தன

இப்போது யாரில் யார் உள்ளதென்பதே
யாரிடமாவது
வெற்றியை கொண்டு வரும்
வழி என்றாயிற்று

2

மலர்களை போல் அல்ல
தோட்டத்தில் உள்ள புதினா இலைகள்

தண்டுகளை ஒடிக்காமல்
அவற்றைக்
கிள்ளி எடுப்பது எளிதல்ல

எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கும்
பொறுப்பான கைகளுக்கே
அது சாத்தியம்

3

நான் புகைவதன் நறுமணம்
உன்னை
அமைதியில் ஆழ்த்துக.

நான் எரிவதன் நறுமணம்
உன்னை
உறங்க வைப்பதாகுக.

கானகத்தின் கற்துண்டு
நான்
காணாமலாவதன் கற்பூரம்
உன்னை
கண்டு கொள்வதாக.

4

எழுதிப் பழகிய எழுத்து
அச்சில் வரும் போது
அடையாளம் காண முடிவதில்லை

அதன்மேல்
யாருடைய கையெழுத்தும் இல்லை

எழுதியவனின் தடுமாற்றம்
அவற்றிற்கு இல்லை

தனக்கு அடுத்திருப்பவரை
தனக்காக பேச நம்பியிருக்கும்
வாழக்கை அதற்கு.

5

பத்து மதிப்பெண் கேள்வியில்
விடைக்கு
ஒரு மதிப்பெண் மட்டுமே.

விடையும்
அதற்குரிய வழியும் அறிந்தவர்
முழு மதிப்பெண் பெற்றனர்.

அவ்வழியில் இறுதிவரை முயன்று
விடை கிடைக்காதோர்
ஒரு மதிப்பெண் குறைவாய் பெற்றனர்.

தவறான வழிகளில் சென்றவர்
குறுக்கு வழிகளில் வந்தவர்
சூத்திரங்களை மட்டும் தெரிந்தவர்
அனைவரும்
அவர்களுக்குரியதை பெற்றனர்.

வழியறியாதவர்
கேள்வியின் உட்குறிப்புகளை எழுதி
ஒரு மதிப்பெண் பெற்றனர்.

எல்லோருக்கும் கடைசியாக
எதுவும் எழுதாத ஒருவன் தாளில்
அவன் கையெழுத்தில்
தன் கணக்கை எழுதிப் பார்த்தார் டீச்சர்.

6

வழியிலுள்ள ஊர்கள்
அனைத்திற்கும் வர
செலவு செய்திருப்பது தெரியாமல்
உறங்கிவிடுகிறார்கள்.

இறங்க வேண்டிய இடத்தில்
விழித்தெழுகிறார்கள்.

***

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here