இயேசு கிறிஸ்துவும் அவருடைய போதனைகளும் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்குப் பிரபலமானவை, அவரைப் பற்றிய கதைகளும் அவரைச் சுற்றி உலவும் கான்ஸ்பிரசி தியரிக்களும். என்னுடைய பத்தாவது வயதில் ஒரு தமிழ் நியூஸ் சேனலில் அப்போது வெளியீட்டிற்குத் தயாராக இருந்த “டாவின்சி கோட்” திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியைப் பார்த்ததிலிருந்தே அந்தத் திரைப்படம் பார்ப்பதற்கான எனக்குள்ளிருந்த ஆவலும் அதிகரித்திருந்தது. ஆனாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு கல்லூரி படிப்பில் சேர்ந்த பிறகுதான் அந்தத் திரைப்படம் பார்ப்பதற்கான சூழல் அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தொடங்கி சிலுவையில் அறையப்பட்டது வரையிலான அவர் வாழ்வைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான அனுமானங்களைப் பற்றி அந்தத் திரைப்படம் பேசியிருந்தது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய காதலி என்று சொல்லப்பட்ட மேரி மெக்டலினுக்கும் குழந்தை பிறந்ததாக உலா வந்த கான்ஸ்பிரசி தியரியும் அதில் அடக்கம்.
இதுபோன்ற திரைப்படங்கள் பேசும் கான்ஸ்பிரசிகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தாண்டி அதிலிருக்கும் சுவாரஸ்யம் மக்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கும். கருப்பின மக்களின் விடுதலைக்கு அதிகம் பங்காற்றிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனை ரத்த காட்டேரிகளை வேட்டையாடும் சாகசக்காரராகச் சித்தரித்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆபிரகாம் லிங்கன்: வேம்பயர் ஹண்டர்” என்ற திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூல் செய்ததற்குப் பின்னாலிருந்த காரணமும் அதுதான்.
“டாவின்சி கோட்” நாவலை எழுதிய டான் பிரவுனின் மற்ற நாவல்களும் இதுபோன்ற தியரிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவைதான். இப்படியாக உலகம் முழுவதும் இயேசுவைப் பற்றி உலா வரும் மற்றுமொரு கான்ஸ்பிரசி தியரியை மையப்படுத்தி அதில் கற்பனைக் கலந்து உருவாக்கப்பட்டதுதான் “தேவ ரகசியம் தேடலுக்கல்ல” என்கிற கிராபிக் நாவல். பாவ்லோ கிர்லாவின் ஓவியத்துடன் ராபர்ட் டு டெலிபோவின் கற்பனையில் பிரெஞ்சு மொழியில் “le manuscrit interdit”(The Forbidden Manuscript) என்ற பெயரில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக் கிராபிக் நாவல் ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் கதாசிரியர் மற்றும் ஓவியர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
1951 ஆம் ஆண்டு சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தின் ஒரு புத்த மடாலயத்தில் கதை தொடங்குகிறது. லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ப்ரொபஸர் ஈகோன் பையர் அந்த மடாலயத்தில் இருக்கும் துறவிகளுடன் தங்கி சில வரலாற்று ஆவணங்களைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அங்கே தடாலடியாக நுழையும் சீன ராணுவம் துறவிகளைக் கொன்று குவித்து அந்த மடாலயத்தைத் தீக்கிரையாக்க, அவருடைய ஆவணங்கள் அனைத்தும் அழிந்து போகின்றன. பற்றி எரிந்துகொண்டிருக்கும் அந்த மடாலயத்திலிருந்து ப்ரொபஸர் தன்னுடைய உயிரைத் தற்காத்துக்கொள்ளத் தப்பிக்க முயல்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது. மறுமுனையில் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கும் கதை ப்ரொபஸரின் மகளான ஹெலன் தொலைந்து போன தனது தந்தையின் ஆய்வைப் பற்றியும் தரவுகளைப் பற்றியும் தேடுவதாய் தொடங்குகிறது.
ஆறு மாதங்களாகத் தன்னுடைய தந்தையைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காமல் தவித்துப்போகிறாள். அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தால் அது பல்வேறு அமைப்புகளுக்கு பாதகமாக அமையும் என்று அறியும் ஹெலன் டிடெக்டிவ் கெவின் மேக்பிரேடன்னுடன் தந்தையைத் தேடி லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து திபெத்துக்குப் புறப்படுகிறாள். மறுப்புறம் சீன ராணுவம் ப்ரொபஸரைத் தேடுவதற்காக ஒரு ஸ்பெஷல் ஏஜெண்டை நியமிக்கிறது. ப்ரொபஸர் தேடிய உண்மை என்ன? அவருடைய ஆய்வுக் கட்டுரை எதைப் பற்றியது? அது வெளியே வருவதால் ஏற்படும் ஆபத்து என்ன? ப்ரொபஸர் உயிரோடு இருக்கிறாரா? ஹெலன் ப்ரொபஸரைக் கண்டுபிடித்தாளா? என்ற பல்வேறு கேள்விகளுக்குப் பரபரப்பான கதையோட்டத்துடன் விடை சொல்கிறது இந்தக் கிராபிக் நாவல்.
தந்தையைத் தேடி உலக உருண்டையின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குப் பயணிக்கும் ஹெலனின் தவிப்புகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சூழல்கள் எதுவும் தனக்குச் சாதகமாக இல்லாதபோதும் வற்றாத நம்பிக்கையோடு தன் தந்தையைத் தேடுகிறாள். கதாநாயகனாக வரும் டிடெக்டிவ் கெவினின் அலட்டலில்லாத நடவடிக்கைகளும் அவன் செய்யும் சாகசங்களும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. அவனுடைய உருவத்தையும் தலையில் இருக்கும் தொப்பியையும் அவன் அணிந்திருக்கும் கோட்டையும் பார்க்கும்போது இண்டியானா ஜோன்ஸ் வரிசைத் திரைப்படங்களில் வரும் ஹாரிசன் போர்டு நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஹெலன் கெவினோடு திபெத்திற்கு வந்துசேர்ந்தவுடன் சூடு பிடிக்கும் கதை அதற்குப் பிறகு தீப்பிடித்த ரயிலைப் போல பயணிக்கிறது.
தன் உயிருக்கு ஆபத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆய்வில் முழுமூச்சாக பயணிக்கும் ப்ரொபஸரின் தைரியம் நம்மைப் பல இடங்களில் ஆச்சரியப்படுகிறது. “யூஸ் அசாப்” என்ற பெயரில் அறியப்பட்ட இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அங்கிருந்து தப்பி தன்னுடைய தாயான மேரி மாதா மற்றும் தாமஸோடு பாலஸ்தீனத்திலிருந்து பயணித்து பாகிஸ்தானின் ராவல் பிண்டியைக் கடந்து தற்போதைய இந்தியாவின் ஸ்ரீநகருக்கு வந்துசேர்ந்திருந்ததாக ப்ரொபஸர் சொல்லும்போது நம்முள் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது.
மேலோட்டமான தியரிக்களாக இல்லாமல் அந்தத் தகவல்களைப் பற்றிய தரவுகளையும் முடிவில் இணைத்திருப்பது கதையின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கிறது. ரோசாபால் என்ற பெயரில் இன்றளவும் ஸ்ரீ நகரில் அறியப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் அமைந்திருக்கும் இரண்டு சமாதிகளில் ஒன்று மிர்சா செய்யது நசுருதீனுடையது என்றும் மற்றொன்று “யூஸ் அசாப்”என்ற பெயரில் அறியப்பட்ட இயேசு கிறிஸ்துவுடையது என்றும் பரவலாக அறியப்படும் தகவலைப் பற்றியும் இந்த நூல் அலசி ஆராய்கிறது.
கி.பி 1899 ஆம் ஆண்டிற்கு பிறகு ரோசாபால் புனித ஸ்தலத்தில் மிர்சா சையது நசுருதீனோடு துயிலும் மற்றொரு கல்லறை இயேசு கிறிஸ்துவுடையது என்ற செய்தி வலுவடைந்ததாகவும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அஹ்மதியா இயக்கத்தைத் தோற்றுவித்த மிர்சா குலாம் அஹமத் இயேசு கிறிஸ்து ஸ்ரீநகரில் புதைக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தபோது உள்ளூர் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழக்கவில்லை என்ற வாதத்தை வலுவாக முன்வைத்தார்.

சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் அவர் இந்தியாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கி ஸ்ரீநகரில் வாழ்ந்து தனது 120வது வயதில் ஜீவனைத் துறந்து ரோசா பால் என்கிற அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் புதைக்கப்பட்டதாக ஒரு கருத்தை வெளியிட்டார். 120வது வயது வரை இந்தியாவில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு இந்து கோவில்களிலும் பிரசங்கம் செய்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. உபரி தகவலாக இயேசு கிறிஸ்துவை ஸ்ரீநகருக்கு அழைத்துவரும் வழியில் பாகிஸ்தானின் ராவல் பிண்டி அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் ஜீவனைத் துறந்த மேரியின் நினைவாக அங்கிருக்கும் ஒரு வளாகத்திற்கு இன்றளவும் “அன்னை மேரி துயிலும் இடம்” என்ற பொருள்படக் கூடிய வகையில் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
இன்றுவரை அனைத்து மத மக்களும் வழிபடும் இடமாக அது இருந்து வருகின்றதாம். இந்தக் கிராபிக் நாவலின் ஓவியமும் கதையோட்டமும் அதிலிருக்கும் சுவாரஸ்யமும் அதைத் தாங்கி நிற்கும் தரவுகளையும் தாண்டி 1951 ஆம் ஆண்டு உலகில் பரவலாக நிலவிய அரசியல் சூழல்களை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.
திபெத்தில் நிலவிய சீன ஆக்கிரமிப்பு, புத்த மடாலயங்கள் மேல் சீனர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவில் நிலவிய கம்யூனிஸ எதிர்ப்பு சித்தாந்தம் போன்ற பல்வேறு அரசியல் சூழல்களை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.
உலக வல்லரசான அமெரிக்காவில் செயல்பட்டு வந்த இன்றும் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் வெள்ளை மேலாதிக்கப் பயங்கரவாத குழுவான “கு க்ளாக்ஸ் கிளான்”பற்றியும் இந்தக் கிராபிக் நாவல் விவாதிக்கிறது. அடிப்படைவாதத்தில் ஊறிப்போன இக்குழுவினர் புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எதிர்த்து நடத்திய செயல்பாடுகளைப் பற்றியும் மேலோட்டமாக விவரித்துச் செல்கிறது.
காமிக்ஸ் என்கிற பெயரில் வெகுஜன வாசகர்களால் பரவலாக அறியப்படும் கிராபிக் நாவல்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமே என்ற பொதுவான கருத்தைத் தவிடுபொடியாக்குகிறது இந்தக் கிராபிக் நாவலின் கதையோட்டமும் அது பேசியிருக்கும் உலக அரசியல் சூழல்களும்.
திபெத்தில் தொடங்கி பின் அமெரிக்காவைத் தொட்டு மீண்டும் திபெத்தை அடைந்து அங்கிருந்து இந்தியாவின் ஸ்ரீநகரை நோக்கிப் பயணப்படும் கதைக்களம் நமக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கொடுக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பையும் சூழலையும் நமக்குள் எளிமையாகக் கடத்துகின்றன தத்ரூபமான ஓவியங்கள். தொடக்கத்தில் சொன்னது போல இந்தக் கிராபிக் நாவல் விவாதித்திருக்கும் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளில் இருக்கும் உண்மைத்தன்மையை தாண்டி அதிலிருக்கும் சுவாரஸ்யம் நம்மை நிச்சயம் பரவசப்படுத்தும்.
***
ரூ என்ற பெயரில் எழுதிவரும் இவரது இயற்பெயர் அசாருதீன். தந்தை பெயர் சான்லால், தாயார் கௌஹர் காந்தி, மதுரை இவரது சொந்த ஊர். இவரது சிறுகதைகள் நீலம் மாத இதழிலும் சில இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. முதல் நாவல் ‘லவ்டேல்’. மின்னஞ்சல்: azarrudheenrafeeq@gmail.com தொடர்புக்கு: 8610346140




