Homeஇதழ்கள்2026 இதழ்கள்டபுள் ரோல் டகால்டி பல்லி

டபுள் ரோல் டகால்டி பல்லி

நிஜந்தன்

படு வேகமாக ஓடும் பல்லி அது. ஒரு இடத்தில் இருக்கும் என்று நினைக்கும்போது மறு இடத்தில் எப்படி ஓடியது என்று தெரியாமல் மறைந்துவிடும் திறன் அந்தப் பல்லிக்கு இருந்தது. என்னைவிட நடிப்புத் திறமை அதிகம் கொண்டது போல் இயங்கியது அந்தப் பல்லி.

எனக்குப் பல்லி பயம் அதிகம். பல்லி என்ற பெயர் சொன்னாலே நடுங்கும் வகையறா நான். 

அப்படிப்பட்ட ஒரு பயந்தாங்கொள்ளி, கழிவறையில் இருக்கும்போது கதவின் தாழ்ப்பாள் மீது இந்தப் பல்லி அமர்ந்திருந்தது. எப்படி வெளியே போவது என்ற கவலை அடைந்தேன் நான். என் உணர்வைப் புரிந்துகொண்டது போல் அது கொஞ்சம் நகர்ந்து சென்று வாஷ் பேசின் பின்னால் மறைந்துகொண்டது. நான் போவதற்கு வழி விடுகிறதாம். இப்படி எல்லாம் என்னிடம் நற்பெயர் எடுத்துவிட்டால் அதற்கு நான் நண்பன் ஆகிவிட மாட்டேன் என்பது அந்த முட்டாளுக்குத் தெரியவில்லை.

பகல் முழுக்க கழிவறைக்குள் நுழையாத அந்தப் பல்லி எப்படி இரவுக்குப் பிறகு கழிவறைக்குள் புகுந்துவிடுகிறது என்பதுதான் ஆச்சர்யம். கதவிடுக்கில் உள்ள சிறு இடைவெளி வழியாக அது உள்ளே சென்றிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதற்காக கதவிடுக்கில் பழைய துணி வைத்து மூடும் வழக்கம் கொண்டிருந்தேன்.

நான் நினைத்தால் அந்தப் பல்லியை ஒரே போடாகப் போட்டுவிடலாம். ஆனால் நான் சுத்த சைவம் அல்லவா. ஒரு சிறு பூச்சியைக்கூட நான் கொல்வதில்லை. பாம்பே வந்தாலும் அதை விரட்டிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பவன் நான். ஏதோ தொல்லைப் பிடித்த கொசுக்கள்தான் கையில் பட்டு இறந்துவிடுகின்றன. அப்படி இருக்கும் நான் அந்தப் பல்லியை எப்படிக் கொல்வது.

நான் பல்லிகளைக் கொல்லாமலே இருந்தவன் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு காலத்தில் நான் பல்லிகளை அடித்துக் கொன்றிருக்கிறேன். கழிவறையில் மெகா சைஸ் பல்லி ஒன்று வந்துவிட்டிருந்தது. அதைத் துரத்தவும் தெரியாமல் நடுங்கி நின்றிருந்த நாட்கள் பல. ஒரு நாள் அதிகாலை அந்தப் பல்லி கதவுக்கும் கதவின் நிலவுக்கும் இடையே சிக்கிக்கொண்டது. அப்படியே நான் விட்டுவிட்டேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தபோது அந்தப் பல்லி உயிரிழந்து கீழே விழுந்தது. எனக்கு நிம்மதியாக இருந்தது. அந்த நாள்தான் இயக்குனர் பி.சோமசந்தர் காலமானார். இரட்டை வேடங்கள் கொண்ட பாத்திரங்களை வடிப்பதில் அவர் மிகுந்த திறமையானவராக இருந்தார். கிராபிக் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவர் மிகுந்த நுட்பத்துடன் இரட்டை வேடங்கள் கொண்ட படங்கள் எடுத்து புகழ் பெற்றார். ஒரு படத்தில் கதாநாயகனும் இரட்டை வேடத்தில் நடித்தார். கதாநாயகியும் இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் இரண்டாம் நாயகன் பாத்திரத்திற்கும், முதல் நாயகி பாத்திரத்திற்கும் பல்லி என்றால் பெரும் பயம் இருந்தது. இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல் நாளில் அவர்கள் மீது பல்லி விழுந்துவிடுகிறது. பயத்தில் அவர்கள் கட்டிக்கொள்வது முதல் அவர்களின் காதல் பயணம் தொடங்குகிறது. படத்தின் இறுதி வரை பல்லியை ஒரு முக்கிய அம்சமாக பி.சோமசந்தர் கதையில் வடித்திருந்தார். அவர் இறந்த நாள் ஒரு பல்லியும் இறந்துபோனது எனக்கு மிகுந்த துயரம் தந்தது. 

அதற்குப் பிறகு நான் வேறு காரணங்களுக்காக சுத்த சைவம் ஆகிவிட்டதால் எந்த உயிரையும் கொல்வதில்லை. 

சமீப காலங்களில் கழிவறையில் புகுந்துகொள்ளும் இந்தப் பல்லியை என்ன செய்வது என்றே தெரியவில்லை. கதவிடுக்கின் இடைவெளி அடைத்த பின்னாலும் அது உள்ளே எப்போது வருகிறது என்பதை ஆராயவே ஒரு நாளின் பெரும் பகுதியைக் கழிக்க வேண்டியிருந்தது. கழிவறை கதவைத் திறந்து நான் உள்ளே நுழைந்ததும் சொல்லி வைத்தது போல நேராகக் கதவை நோக்கிப் பாய்ந்து அது வெளியேறியும் விடுகிறது. இந்த அளவுக்கு உதவிகரமான அந்தப் பல்லி எதற்காக இரவுகளில் கழிவறைகளில் நுழைந்து உள்ளே செல்லும் எனக்கு பேரதிர்ச்சி தர வேண்டும். அது என்ன பெரிய அறிவாளியா. ஏதோ ஒரு பதற்ற கணத்தில் மேலே விழுந்து தொலைத்தால் கழிவறையில் நான் வழுக்கி விழுந்துவிடுவேனே. கை கால் பிசகிவிட்டால் படப்பிடிப்பிற்கும் போக முடியாமல் நான் அவதிப்பட வேண்டும்.

ஒரு நாள் அதிகாலை நான் சீக்கிரம் எழுந்துவிட்டேன். அன்று எனக்கு ஒரு திரைப்படப் படப்பிடிப்பு இருந்தது. அந்தப் படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். கழிவறை சென்றேன். பல்லி அமர்ந்திருந்தது. அன்று அதன் அறிவு கொஞ்சம் குறைவாக இருந்தது. கதவு திறந்ததும் அது ஓடாமல் இருந்தது. ஒரு விளக்குமாறை அதன் மீது வைத்து நான் மெதுவாக நகர்த்தினேன். அதைக் கொன்றுவிடக் கூடாது என்று நான் மிகவும் கவனமாக இருந்தேன். என் உணர்வு புரிந்து அது விளக்குமாறின் முனைப் பகுதியையேப் பிடித்துக்கொண்டு நகர்ந்து வந்தது. தண்ணீர் படிந்த ஒரு இடத்தில் அது அப்படியே மயங்கி நின்றுவிட்டது. அந்தப் பல்லியைக் கொன்றுவிட்டேன் என்றே நினைத்துவிட்டேன். கவலை அடைந்துவிட்டேன். ஒரு கணம்தான். அந்தப் பல்லியைக் காணவில்லை. அத்தனை வேகத்தில் அது எங்கேயோ போய்விட்டது. இனி வராது என்று நினைத்தேன். மிகுந்த மன சுமையோடுதான் நான் அன்று படப்பிடிப்பிற்குச் சென்றேன். என்னை வைத்து இரட்டை வேடங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தார் இயக்குனர். நான் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடிக்க வேண்டியிருந்தது. என் சிகை அலங்காரத்தில், முகத்தில் தாடி, மீசையில் என் முரட்டுப் பாத்திரம் வேறுபட்டதாகத் தெரிந்தது. ஷாட்களின் இடையில் நான் செல்பேசி பார்த்தேன். வீட்டில் சட்டென்று மறைந்து காணாமல் போன பல்லியை நினைத்தபடியே இருந்தேன். 

அன்றைய இரவு நான் வழக்கம் போல் கழிவறை இடைவெளியில் சிறு துணி வைத்து அடைத்துவிட்டு உறங்கப் போனேன். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அந்தப் பல்லி இருந்தது. அப்பாடா. அது சாகாமல் பிழைத்திருந்தது திருப்தி தந்தது. எப்படி வந்தது என்று சிந்திக்கையில் வெளி ஜன்னலில் இருந்த சிறு துவாரம் வழியே அது வந்துவிட்டிருந்தது என்று புரிந்தது. அது வீட்டைச் சுற்றி நடந்து வந்து கழிவறையின் ஜன்னலில் புகுந்து கழிவறைக்கு வந்துவிட்டிருந்தது. இந்த அளவுக்கு ஒரு பெரு முயற்சியை அது ஏன் எடுத்ததோ என்றுதான் கவலையாக இருந்தது. அன்று இரவு முதல் நான் கதவிடுக்கிலும், ஜன்னலின் இடுக்குகளிலும் துணி வைத்து மூடி வைத்துவிட்டு உறங்கப் போனேன். சில நாட்கள் பல்லியின் நடமாட்டத்தைக் காணவில்லை. 

அது ஒரு குளிர்கால நள்ளிரவு. நான் கழிவறைக்குச் சென்றேன். உள்ளே விளக்குப் போட்டதும் அந்தப் பல்லி கதவின் பின்னால் இருந்ததைப் பார்த்துவிட்டேன். மெதுவாக அசைந்தேன். மிகவும் நல்ல பிள்ளையாக அது கதவுக்கு வெளியே சென்று மறைந்துவிட்டது. அப்பாடா என்று இருந்தது. கதவு அடைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திவிட்டுப் பார்க்கிறேன். வாஷ் பேசின் அடியில் பல்லி இருந்தது. கொஞ்ச நேரம் முன்னால்தான் பல்லியை நான் துரத்தியிருந்தேன். அப்படி இருக்க பல்லி எப்படி உள்ளே வந்தது. அது ஒரு மாயப் பல்லியாக இருந்திருக்க வேண்டும். அதைத் துரத்திவிட்டு நான் படுக்கையில் வந்து விழுந்தேன். மனதில் பதற்றமாகவே இருந்தது. துரத்திய பல்லி மீண்டும் வந்தது எப்படி?

அடுத்த நாள் இரவும் நள்ளிரவு எழுந்தேன். கழிவறை சென்றேன். அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே தோற்றத்தில் இரண்டு பல்லிகள் இருந்தன. இரண்டு பல்லிகளா? ஒன்று மற்றொன்றின் தோழியோ, தோழனோ! ஒரு பல்லிதான் இரண்டு வேடங்களில் வந்தது என்று நான் நினைத்தது பொய்யாகிவிட்டது. இந்த டகால்டி பல்லி டபுள் ரோல் போடுகிறது என்று நினைத்து நான் இருந்துவிட்டேனே! இந்தப் பல்லிகள் இப்படி ஒரு கபட நாடகம் போடும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லையே!

கழிவறைக்குள் நான் நுழைந்தவுடன் ஒரு பல்லி வேகமாக வெளியேறிவிட்டது. ஓ, இதுதான் இங்கிருந்த பழைய பல்லி என்று புரிந்தது. புதுப் பல்லிக்கு எப்படிப் போவது, எங்கு போவது என்ற பழக்கம் இருக்கவில்லை. சரியாகத் துரத்திய பின்னால் அதுவும் கதவு வழியாக வெளியேறியது. அப்பாடா. இரண்டு பல்லிகள். ஒரு பல்லிக்கே ஆடிப் போகும் ஆள் நான். இரண்டு பல்லிகள் என்றால் உடம்பெல்லாம் புல்லரித்தது. பயத்தில் உள்ளுக்குள் உதறியது. பெரிய பிரச்சனை ஆகிவிட்டதே இந்த வாழ்க்கை! 

ஆனால் எப்படி இந்தப் பல்லிகள் உள்ளே வந்தன? எனக்குப் புரிந்தது. கதவிடுக்கிலும், ஜன்னல் இடுக்குகளிலும் துணி வைத்து மூடினாலும், இவை எல்லாம் வைக்கப்படும் முன்னாலேயே இந்தப் பல்லிகள் கழிவறைக்குள் சென்றுவிடுகின்றன என்று புரிந்தது. இனி இரவில் மட்டும் அல்லாது, எப்போதும் கதவிடுக்கையும், ஜன்னல் இடுக்குகளையும் மூடி வைத்துவிட வேண்டும். அப்போது இந்தப் பல்லிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். 

ஒரே போடு. ஒரே போடு போட்டுவிட்டால் இரண்டு பல்லிகளும் காலம் ஆகிவிடும். அவற்றை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதி ஆகிவிடலாம். இரண்டு நாட்கள் இந்தப் பல்லிகளைக் கொன்றுவிட்ட குற்றவுணர்வு அல்லது ஒரு உயிருக்கு தீங்கு இழைத்துவிட்டோமே என்ற கனிவு உணர்வு வந்துகொண்டே இருக்கும். காலப்போக்கில் எல்லாம் சரி ஆகிவிடும். 

ஆனால் அதைச் செய்ய முடியாதே. உயிர்களைக் கொல்வதில்லை என்ற நிலையைத்தானே இந்தப் பல்லி – பல்லியா, பல்லிகளா? – சாதகமாகப் பயன்படுத்துகிறது – அல்லது பயன்படுத்துகின்றன. உண்மையில் இந்தப் பல்லி ஒன்றா, இரண்டா? இரண்டு போல் தெரிவது என் பிரம்மையா? என்னிடம் இரட்டை என்ற பிரம்மையை ஏற்படுத்திவிட்டு என் மனதில் அடங்காத அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த டகால்டி டபுள் ரோல் பல்லியின் நோக்கமாக இருக்குமோ. ஒரு மன நோயாளி போல என்னைச் சித்தரித்துக்கொள்ளும் அளவுக்கு இந்த டபுள் ரோல் டகால்டி பல்லி அப்படி என்ன ஒரு பெரிய அப்பாடக்கரா?

அடுத்த நாளிலிருந்து கழிவறை கதவிடுக்குகளையும், ஜன்னல் இடுக்குகளையும் நான் அடைத்துவிட்டேன். அதனால் கழிவறையில் கொஞ்சம் இறுக்கம் வந்தது. சுடுநீர் குளியல் மூலம் வரும் வெப்பம், கழிவறை பயன்படுத்துவதால் ஏற்படும் துர்நாற்றம் போன்றவை ஜன்னல்கள் அடைக்கப்படுவதால் கொஞ்சம் அதிகமாக இருந்தது. வாழ்வில் ஏதோ ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல எழுத்தாளர்களும் தத்துவவாதிகளும் கூறியிருப்பதால் அதையே நான் ஏற்றுக்கொண்டு வாழ்வது என்று முடிவெடுத்தேன். 

என் படப்பிடிப்பில் என் பாத்திரத்தில் நிறைய மாற்றங்களைச் செய்துவிட்டார் இயக்குனர். ஒருவனிடமிருந்து மற்றவன் வேறுபட்டவனாக இருக்கக்கூடாது என்று கதை ஓட்டத்தில் இரண்டு தோற்றங்களையும் ஒன்றாகவே அவர் ஆக்கிவிட்டார். அதனால் நான் என் தலைமுடி, மீசை வடிவம், உடை அணியும் வகை என்று எதையும் வேறுபடுத்திக்கொண்டிருக்கவில்லை. காட்சிக்கு காட்சி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை. அவ்வப்போது உடைகள் மாற்ற வேண்டியிருந்தது. அதுவும் இரண்டு பாத்திரங்களும் ஒரே காட்சியில் தோன்றும்போது ஆடையில் வேறுபாடு காட்ட வேண்டியிருந்தது. அதுவும் வேறுபாடு வந்துவிடக் கூடாது என்ற ரகசியப் பதற்றம் திணிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பாத்திரங்களுக்கும் ஒரே உடை பல காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது. அதனால் நான் ஒரே உடையில், ஒரே தோற்றத்தில் இரண்டு வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன். இது ஒரு த்ரில்லர், கொலைகாரன் கதை என்றெல்லாம்தான் என்னை இந்தப் படத்தில் இயக்குனர் ஒப்பந்தம் செய்திருந்தார். கொலைக் காட்சிகள் எல்லாம் இறுதியில் இருக்கும் என்று எனக்கு இயக்குனர் சொல்லியபடி இருந்தார். அந்தக் காட்சிகள்தான் படத்தில் உச்சமாக இருக்கும் என்றும், பார்வையாளர்களை இருக்கைகளின் முனைக்கே கொண்டுவிடும் அளவுக்கு அவை ஆற்றல் மிக்கதாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்தக் காட்சிகளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். 

அன்று முழுவதும் இயக்குனர் வேறு காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார். செல்பேசியில் நான் நேரம் செலவழித்தேன். பல்லிகளைப் பற்றி நான் தேடித் தேடி அறிந்துகொண்டேன். பல்லிகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றில் பல்வேறு இனங்கள் உள்ளன. ஒரே தோற்றத்தில் இருக்கும் பல்லிகள் அபூர்வம். அப்படி இருப்பவை ஒரே மாதிரியான இயக்கங்கள் கொண்டவை. இரட்டைப் பல்லிகளைக் கண்டால் கவனமாக இருக்க வேண்டும். அவற்றின் அறியாமை காரணமாக அவை பதறி கீழே விழுந்து சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அப்பாடா என்று இருந்தது எனக்கு. 

அடுத்த நாள் படப்பிடிப்பிற்குச் சென்றபோது எனக்கு பல்லிகளின் நினைவாகவே இருந்தது. என் இரட்டை வேடம்கூட இந்தப் பல்லிகளைப் போலத்தான் என்று நினைத்து நான் உள்ளூரச் சிரித்துக்கொண்டேன். அதை இயக்குனரிடம் சொல்லி அவருடைய மனதைக் கெடுக்க நான் விரும்பவில்லை. அவருக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். அவருக்கு என் வீட்டுப் பல்லிகளைப் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால் அதைப் பற்றித் தெரிந்தவர் போல அவர் இயங்கினார். ஒரு முறை யாரையோ அவர் பல்லி என்று அழைப்பது போல் இருந்தது. ஏன் அவ்வாறு அழைத்தார் என்று நான் பல முறை சிந்தித்தேன். அவர் எங்காவது பல்லியைப் பார்த்திருக்கலாம். அல்லது ஒரு பல்லி போன்ற ஒரு பாத்திரம் இந்தப் படத்தில் வரலாம். எதைப் பற்றியும் விசாரிக்கும் நிலையில் நான் இல்லை. ஒரு படத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று நான் இயக்குனர்களிடம் கேட்பது இல்லை. 

அன்று இரவு சோர்வாக வீடு திரும்பினேன். நள்ளிரவில் கழிவறை சென்றேன். இரண்டு பல்லிகள் விளையாடிக்கொண்டிருந்தன. எப்போது வந்திருக்கும் என்று தெரியவில்லை. கதவிடுக்கிலும், ஜன்னல் இடுக்குகளிலும் துணி வைத்து அடைத்தும் அவை எப்படி உள்ளே நுழைந்தன என்று தெரியவில்லை. வேறு ஏதாவது துளை இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. ஆராய்வதற்கு நேரம் இருக்கவில்லை. மீண்டும் உறங்கிவிட்டு, சீக்கிரமாய் எழுந்து தயார் ஆகி படப்பிடிப்பிற்குச் செல்லத் தயார் ஆகிவிட்டேன். சற்றுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு பல்லி முதுகில் காயத்துடன் ஓடிப் போனது போல இருந்தது. அதே பல்லிதானா என்று சந்தேகமாக இருந்தது. எங்காவது சிக்கிக் காயம் அடைந்துவிட்டதோ என்று கவலையாகவும் இருந்தது. 

படபிடிப்பிற்குச் சென்றும் பல்லியின் நினைவாகவே இருந்தது. காட்சியில் ஒன்றிய பிறகு அந்தப் பல்லிகளின் நினைவு மறந்துபோனது. அடுத்தக் காட்சியில்தான் மிகுந்த சிரமம் இருந்தது. இயக்குனர் காட்சியை விளக்கிக்கொண்டே இருந்தார். அது மிகவும் சிக்கலான காட்சி என்று உதவி இயக்குனர் கூறினார். இரட்டைப் பாத்திரம் கொண்ட என்னுடைய ஒரு பாத்திரம் தீயில் சிக்கிக்கொள்வது போன்ற காட்சி அது என்று உதவி இயக்குனர் கூறினார். நானும் சரி என்று காத்திருந்தேன். நான் கீழே விழ வேண்டும். அப்போது என் மீது தாக்குதல் நடத்தப்படும். நான் இறந்துபோய்விட்டேனா என்று தாக்கியவர்கள் சோதித்துப் பார்ப்பார்கள். நான் சாகவில்லை என்று புரிந்து என் மீது பெட்ரோல் ஊற்றி அவர்கள் எரிக்கப் பார்ப்பார்கள். பாதி எரிந்த நிலையில் நான் இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் என்னை விட்டுப் போய்விடுவார்கள். இது தான் காட்சி என்று உதவி இயக்குனர் கூறினார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். இது போன்ற சிக்கலான காட்சிகளில் தேர்ந்த சண்டைப் பயிற்சி நடிகர்கள்தான் நடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அந்த அனுமதி வழங்கப்படும் என்று நினைத்தேன். என் நினைவைப் புரிந்துகொண்ட இயக்குனர் இந்தக் காட்சியில் என் மீது எந்தப் பாதிப்பும் வராதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் இந்தக் காட்சி க்ரீன் மேட்டில் எடுக்கப்படும் என்றும், கிராபிக்கில் தீப் பிழம்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நான் சரி என்று கூறிவிட்டேன். எனக்குக் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று என்னைவிட அவர்களுக்குத்தான் அக்கறை அதிகம் இருக்கும். ஏனென்றால் அடுத்த நாட்களில் நான் எந்தப் பாதிப்பும் இன்றி படப்பிடிப்பிற்கு வர வேண்டும் என்ற கவலை அவர்களுக்கு நிறைய இருக்கும்.

காட்சி தயார் ஆனது. பின்னணியில் பச்சைத் துணி பரவியிருந்தது. கொஞ்சம் தீப்பிழம்புகள் மட்டும் எனக்கு அருகில் இருந்தன. என்னை நான்கு பேர் தாக்கினர். நான் மயங்கி கீழே விழுவது போல் கீழே சாய்ந்தேன். அப்போது சிலர் என் முதுகில் தீயை வைத்தனர். நான் வலி தாங்காமல் அலறினேன். அலறியது போல் நடித்தேன். எனக்கு உண்மையாகவே எரிந்தது. அது நடிப்புதான் என்று பலரும் நினைத்துவிட்டார்கள். நன்றாக நடிப்பதாக கூறிவிட்டார்கள். எனக்கு எந்தக் காயமும் இன்றி நான் நடித்துவிட்டதாக இயக்குனர் என்னைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார். நானும் அதில் மகிழ்ந்துபோனேன். ஆனால் எனக்கு முதுகில் கைகளில் காயம் ஏற்பட்டது போலவே இருந்தது. எனக்கு வலித்தது. எரிந்தது. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றே என்னைச் சமாதானப்படுத்தி திரைப்படக் குழுவினர் என்னை அனுப்பி வைத்தார்கள். என் வாகனம் புறப்படும்போது ஒரு சண்டைப் பயிற்சி இயக்குனர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் என் காயம் பற்றிய ஒரு தகவல் இருந்தது. நான்தான் அதிகம் கற்பனை செய்துகொள்கிறேனோ என்ற எண்ணமும் என்னுள் வந்து போனது.

வீடு வந்தேன். என் உடல் எரிந்துகொண்டே இருந்தது. குளித்தேன். என் முதுகில் காயம் இருப்பது போலவே இருந்தது. கண்ணாடியில் பின்புறம் பார்த்துக்கொண்டேன். ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை. உள்ளூர எரிவதை என்னால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடிந்தது. 

நள்ளிரவு வந்தது. கழிவறை சென்றேன். பல்லிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். பல்லிகள் இருந்தன. ஒரு பல்லி வேகமாக கதவு வழியாக ஓடிப் போனது. இன்னொரு பல்லி இங்கும் அங்கும் பதற்றமாக அலைந்தது. ஒரு உயிருக்கு எத்தனை பயம் இருக்கும் என்பதை அது காட்டியது. எங்கிருந்தோ வெளியே சென்ற பல்லி உள்ளே வந்தது. அதன் முதுகில் தீப்பிழம்புகள் தகித்தன. சின்னதாய் தீ ஜ்வாலை கொளுந்துவிட்டு எரிந்தது. அதன் வேதனை தாங்காமல் அது துடித்தது. துடிப்பின் அதிர்வாய் அது கழிவறைக்குள் நுழைவதும், பிறகு வெளியேறுவதுமாய் இருந்தது. எனக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முறை உள்ளே நுழைந்த அந்தப் பல்லி வேகமாய் இரண்டு வட்டமடித்துச் சுழன்று மயங்கி விழுந்தது. அதன் முதுகில் தீக்காயம் ஏற்பட்டு கருகிக் கிடந்தது. அது செத்துவிட்டது புரிந்தது. அதன் அருகில் இருந்த மற்றொரு பல்லி மிகவும் மெதுவாக கதவு வழியாக வெளியேறியது. பேரதிர்ச்சியிலிருந்து நான் மீளாமல் நின்றேன்.

கழிவறையில் இருந்த கண்ணாடி முன் நின்று திரும்பி என் முதுகினைப் பார்த்தேன். முதுகில் தீக்காயம் கருகிக் கிடந்தது. என் உயிர் பற்றி எனக்கு மிகுந்த கிலேசமாக இருந்தது.

***

நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மின்னஞ்சல்: knijanthan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here