Homeஇதழ்கள்2026 இதழ்கள்நினைவுகளின் நிழலில் ஒரு வாழ்வு

நினைவுகளின் நிழலில் ஒரு வாழ்வு

இப்ராஹிம்

இந்த வாழ்வில் இருக்கும் சில நினைவுகளை என்றைக்கும் நாம் நினைக்கவே கூடாது என்று விரும்புவோம். ஆனால், அது அப்படி நடப்பதில்லை. ஏதோ ஒரு விதத்தில் அந்த நினைவுகளின் தடங்கள் மீண்டும் நம்முன் உருவெடுத்து நிற்கத்தான் செய்கின்றன. எதுவும் நம்மைக் கடந்து சென்றுவிடப் போவதில்லை. ஆனால், அதை நாம் எப்படி உள்வாங்கிக்கொண்டு வாழத் தொடங்குகிறோம் என்பதுதான் முக்கியம். கிரிசாந் எழுதிய கல்விரல் நாவலை வாசித்து முடித்தபோது இந்த எண்ணம்தான் மீண்டும் மீண்டும் என்னுள் வந்துகொண்டிருந்தது.

ஒரு நிலத்தில் போர் என்பது எந்தப் பெரும் அறிவிப்புகளும் இல்லாமல் வெகு இயல்பாக உள்நுழைகிறது. அதுவரை அந்த நிலத்தில் பல ஆசாபாசங்களோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில், ஒரு நாள் எல்லாவற்றையும் மாற்றிவிடக்கூடிய ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது. அதற்கான பதிலை அவர்கள் தயார்படுத்துவதற்கு முன்னரே அவர்களின் அலைக்கழிப்புகள் துவங்கிவிடுகின்றன. ஒவ்வொன்றாக அவர்களிடமிருந்து பறிக்கப்படும்போது, அந்த வாழ்வின் மீதான பிடிப்பும் மெல்ல தளர்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் போர் அவர்களின் இயல்பில் ஒன்றாகிவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் முன்பு இருந்த அதே வாழ்வைத்தான் வாழ்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், காதலிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள், உறவுகளை உருவாக்குகிறார்கள். ஆனால், எதுவும் எப்போதும் நம்மைவிட்டு விலகிவிடலாம் என்ற மனநிலையோடு வாழ்கிறார்கள். இந்த மாற்றத்தைத்தான் நாவலின் மிக முக்கியமானப் பகுதியாக நான் பார்க்கிறேன்.

போரின் அழிவு என்பது மரணங்களின் எண்ணிக்கையால் மட்டும் அளக்க முடியாத ஒன்று. உயிருடன் இருப்பவர்களுக்குள் அது ஏற்படுத்தும் மாற்றம்தான் இன்னும் ஆழமானது. போரில் பார்த்த குருதியும் தசையும் எலும்பும் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் இயல்பான காட்சிகளாக மாறிவிடுகின்றன. ஆனால், அவர்களுடைய பழைய வாழ்வின் ஒரு மணம், ஒரு பொருள், ஓர் இடம் என்று ஏதாவது ஒன்று அவர்களுக்குள் அந்தப் பழைய மனிதனை மீண்டும் எழுப்பிவிடுகிறது. அப்போது அவர்கள் இழந்தது என்னவென்று அவர்களுக்கே மீண்டும் தெரியத் தொடங்குகிறது.

அதனால்தான் இந்த நாவலில் நினைவுகள் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. நினைவுகள் பெருவாரியாக வலிகளையே மனக்கண்முன் கொண்டுவருகின்றன. நல்ல நினைவுகளை நாம் பொறுக்கி எடுத்துத்தான் அதன் வழியாகச் சில இன்பங்களை அனுபவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாகப் போரில் இருந்தவர்களுக்கு, கடந்தகாலம் என்பது அழகான ஒரு வாழ்வு மட்டும் அல்ல; குருதியும் இழப்புகளும் நிறைந்த ஒரு காலமும் கூட. இருந்தாலும் அந்தச் சிறிய இனிமையான நினைவுகள்தான் அவர்களின் வாழ்வில் மீதமிருக்கும் உயிர்ப்பாக இருக்கின்றன.

துளசி இந்த நாவலில் ஒரு தனிப்பட்ட கதாபாத்திரமாக மட்டும் தெரியவில்லை. ஒரு போர் மனிதனை எவ்வாறு வேறொரு மனிதனாக மாற்றுகிறது என்பதற்கான உருவமாகவே அவள் எனக்குத் தெரிகிறாள். இயக்கத்துக்குச் சென்று திரும்பி வரும் அவளுடைய உடல், நடை, பாவனை, இருப்பு என எல்லாவற்றிலும் அந்த மாற்றம் தெரிகிறது. ஒரு போர் மனிதனுடைய உடலை மட்டும் மாற்றுவதில்லை; அவன் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் அடையாளத்தையும் மாற்றிவிடுகிறது.

இயற்பெயர், இயக்கப்பெயர், பட்டப்பெயர் என்று வரும் பெயர்களும் சாதாரணமானப் பெயர்களாகத் தெரியவில்லை. ஒரு மனிதன் பிறக்கும்போது அவனுக்குக் கிடைக்கும் பெயருக்கும், அவன் வாழும் சூழல் அவனுக்குக் கொடுக்கும் பெயருக்கும் இடையில் இருக்கும் தூரம் இங்கே முக்கியமானதாகிறது. ஒரு கட்டத்தில் இயற்பெயரே மறந்து, பட்டப்பெயர் மட்டும் நிலைத்திருப்பது, மனிதனை அவனுடைய சொந்த அடையாளத்திலிருந்து வாழ்க்கை எவ்வளவு தூரம் நகர்த்துகிறது என்பதைக் காட்டுகிறது.

கல்விரல் என்ற பெயரே இதனோடு அழகாகப் பொருந்துகிறது. வீட்டின் பின்னால் தோண்டி எடுக்கப்படும் அந்தப் பெரிய பாறை ஒரு சிலையின் விரல். அது பின்னர் மனிதர்கள் கூடும் இடமாகவும், துளசிக்கும் அவளுடைய அம்மாவுக்கும் மனக்குமுறல்களைச் சொல்லித் தீர்க்கும் இடமாகவும் மாறுகிறது. ஒரு பொருள் எப்படி மனிதர்களின் நினைவுகளையும் துயரங்களையும் தாங்கிக்கொள்ளும் இடமாக மாறுகிறது என்பதற்கு அது ஒரு குறியீடாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அது அவர்களுக்குத் தெய்வமாகவும் மாறுகிறதோ என்ற எண்ணமும் எனக்கு எழாமல் இல்லை.

நிழல்கள் பற்றிய குறிப்புகளும் இதனோடு இணைந்துதான் வருகின்றன. அது நம்முடைய இருளா, பிரதிபிம்பத்தின் சாயலா என்று கேட்கத் தோன்றுகிறது. ஒருவகையில் அது நம்மை நமக்கே காண்பிக்கும் மறுஉருவாகவும் இருக்கிறது. போரின் நினைவுகளும் அப்படித்தான். நாம் கடந்து வந்துவிட்டோம் என்று நினைக்கும் ஒன்றின் நிழல் ஏதாவது ஒரு தருணத்தில் நம்முன் வந்து நிற்கிறது.

இந்த நாவலில் மற்றொரு சிறப்பம்சம், போரை வெற்றி–தோல்வி என்ற இருமைக்குள் மட்டும் வைத்துப் பார்க்காமல், அது ஒரு சமூகத்தின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்று பார்க்க முயற்சி செய்திருப்பது. பெண் சுதந்திரம், சாதி அடுக்குகள், உறவுகள், மனிதர்களுக்கிடையிலான பிணைப்பு முதலிய பலவற்றிலும் அந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக பெண்களைப் பற்றிய பகுதிகள் முக்கியமானதாகத் தோன்றின. இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை இருந்தாலும், பெண்களுக்குள் இருக்கும் காதல், பொறாமை, உடல்தேவை, குடும்ப உணர்வு போன்றவை அழிந்துவிடவில்லை. அவர்கள் தங்களுடைய உருவத்தையும் பாவனையையும் மாற்றிக்கொண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகள் அப்படியே இருக்கின்றன. மனிதனுடைய இயல்பை ஒரு கொள்கையால் முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.

சாதி பற்றிய பகுதிகள் முக்கியமானதாகத் தோன்றின. விலங்குகளை ஏற்றுக்கொள்ள முடிகிற மனிதர்களால், மனிதர்களையே சாதியின் பெயரால் ஒதுக்கிவைக்க முடிகிறது. ஒரு குழந்தையை ஒரு கோவில் நிகழ்வில் ஓரமாகத் தள்ளிவைப்பது போன்ற சிறிய சம்பவத்தின் வழியாக இந்த முரண் வெளிப்படுகிறது. போர் ஒரு சமூகத்தை மாற்றியிருந்தாலும், எல்லா பழைய சுவர்களும் இடிந்துவிடவில்லை.

அதேபோல கொள்கைக்கும் தனிப்பட்ட வாழ்வுக்கும் இடையில் இருக்கும் முரணையும் நாவல் முன்வைக்கிறது. வெளியில் சமத்துவம், போராட்டம், கொள்கை என்று பேசுகிற ஒருவர் வீட்டுக்குள் வேறொரு மனிதராக இருப்பது புதிதான ஒன்றல்ல. ஒரு மனிதன் தன்னுடைய கொள்கையை முழுமையாகத் தனிப்பட்ட வாழ்வுக்குள் கொண்டுவர முடியாத இடங்களில் உருவாகும் இந்த முரண், மனிதனின் பலவீனத்தையும் காட்டுகிறது. கொள்கைகளைவிட மனிதர்கள் சிக்கலானவர்கள் என்பதை இந்தப் பகுதிகள் உணர்த்துகின்றன.

உடல்பசி பற்றிய பகுதிகளும் இதனோடு இணைந்துதான் வருகின்றன. போர் நடந்துகொண்டிருக்கும் காலத்திலும் குழந்தைகள் பிறக்கிறார்கள். காதல் இருக்கிறது. உடல்தேவை இருக்கிறது. மனிதனின் அடிப்படை உணர்வுகள் எதுவும் போரால் முற்றிலுமாக நின்றுவிடுவதில்லை. மாறாக, அந்தச் சூழலுக்குள் அவை இன்னும் சிக்கலான வடிவத்தை எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக ஒரு பெண்ணின் உடல் தேவையை அவளுடைய விருப்பத்தோடு பார்க்காமல், ஆணின் இச்சை மட்டும் முன்னுக்கு வரும்போது அதிலிருந்து உருவாகும் வலி, காமமும் வலியும் எப்படி ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

போராளிகளுக்குள் உருவாகும் உறவுகளும் குறிப்பிடத்தக்கவை. அக்கா, தங்கை, அண்ணன், ஆச்சி என்று இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குடும்பம் உருவாகிறது. அதனால் ஒருவர் இறந்துபோகும்போது அது வெறும் போராளியின் மரணமாக இருப்பதில்லை. ஒரு உறவு அறுந்துபோகிறது. துளசி இழந்தவர்களை நினைத்துக்கொண்டு விளக்கேற்றும் காட்சி எனக்கு இந்த உறவுகளின் ஆழத்தை உணர்த்தியது. அவர்கள் உடல்களாக இல்லை என்றாலும், நினைவுகளுக்குள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாவல் முழுவதும் ஒரே அளவில் என்னை ஈர்க்கவில்லை. குறிப்பாக பொற்புதிர்–துளசி உரையாடல் வரும் இடங்களில் சில இடங்கள் எனக்கு சற்று விலகி நின்றன. துளசி தன்னுடைய அனுபவத்தின் வழியாகப் பேசும்போது அது இயல்பாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில் கருத்தியல் சற்று தூக்கலாக வந்து நிற்பதுபோலத் தோன்றியது. அது கதாபாத்திரத்தின் அனுபவத்திலிருந்து வருகிறதா அல்லது ஆசிரியரின் கருத்து அதன் வழியாகப் பேசுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

அதேபோல, கம்யூனிஸ்ட்கள் பற்றிய சில விமர்சனங்களும், யாழ்ப்பாண மக்கள் போரில் பங்கு பெறவில்லை என்பது போன்ற பொதுப்படுத்தல்களும் எனக்கு முழுமையாக ஒட்டவில்லை. அவை கதாபாத்திரத்தின் பார்வையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அந்த இடங்களில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

அதே நேரத்தில், பிரபாகரனை அந்த நிலத்தின் மக்கள் வெவ்வேறு உறவுநிலைகளில் எப்படிப் பார்த்தார்கள் என்பதை எழுதியிருந்த பகுதிகள் செறிவாக இருந்தன. தலைவர், அண்ணன், கடவுள் என்று மாறுபட்ட பார்வைகளை முன்வைத்திருந்தது அந்தக் காலத்தின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவியது.

போரின் முடிவும் இங்கே ஒரு முடிவாகத் தெரியவில்லை. வீடு திரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற வீடு இல்லை. உடன் இருந்தவர்கள் இல்லை. முன்பு இருந்த உடலும் மனமும் இல்லை. இருந்தாலும் வாழ வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த நாவலில் என்னை அதிகமாகத் தொந்தரவு செய்யும் உண்மை. எல்லாவற்றையும் இழந்த பிறகும் மனிதன் வாழ்வைத் தொடர்ந்து நகர்த்த வேண்டியிருக்கிறது.

அந்த வாழ்வின் மீது பிடிப்பு இல்லாமல் வாழ்வதும் ஒரு விதமான வாழ்வுதான். எப்போது எது விலகும் என்று தெரியாமல் வாழ்வது, இழப்பை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டு வாழ்வது போல. ஆனால், அதற்கிடையிலும் ஒரு புன்னகை வருகிறது. ஒரு உறவு உருவாகிறது. ஒரு பழைய நினைவு மீண்டும் மலர்கிறது. ஒருவர் இன்னொருவரை “அக்கா” என்று அழைக்கிறார். இப்படியான மிகச் சிறிய தருணங்கள்தான் அந்த வாழ்வுக்குள் மீண்டும் மனிதத்தன்மையை கொண்டு வருகின்றன.

இறுதியில் கல்விரல் எனக்கு போரின் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றிய நாவலாகத் தெரியவில்லை. போர் முடிந்ததா, முடியவில்லையா என்பதையும் தாண்டி, அது மனிதர்களுக்குள் விட்டுச் சென்றதைப் பற்றிய நாவலாகத்தான் தெரிகிறது. உடலில் அது விட்டுச் சென்ற தடம், நினைவில் விட்டுச் சென்ற நிழல், உறவுகளில் ஏற்படுத்திய வெற்றிடம், காதலில் ஏற்படுத்திய மாற்றம், பெண்ணின் இருப்பில் உருவாக்கிய புதிய உணர்வு என்று அதன் விளைவுகள் பல திசைகளில் விரிகின்றன.

எதுவும் நம்மைக் கடந்து சென்றுவிடப் போவதில்லை. சில மனிதர்கள் நம்மோடு இல்லை என்றாலும் அவர்களின் நினைவுகள் நம்மோடு இருக்கின்றன. சில காயங்கள் ஆறிவிட்டதாகத் தோன்றினாலும் அவற்றின் தடங்கள் அழிவதில்லை. சில இடங்கள் வெறும் இடங்களாக இருப்பதில்லை. சில கற்கள் வெறும் கற்களாக இருப்பதில்லை. அவற்றுக்குள் மனிதர்கள் தங்களுடைய இழப்புகளையும் நினைவுகளையும் வைத்து வாழத் தொடங்குகிறார்கள்.

அந்த வகையில் கல்விரல் ஒரு போரின் கதை என்பதைவிட, போர் முடிந்த பிறகும் நினைவுகளின் நிழலில் தொடர்ந்து வாழ வேண்டிய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய நாவலாகவே தெரிகிறது.

***

இப்ராஹிம் – முழுப்பெயர் முகமது இப்ராஹிம் அலி. சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்‌. ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here