பிரியா பாஸ்கரன்
எருசலேம் நகரின் அந்தப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு, நரைத்த கிழவனைப் போலக் கூன் விழுந்து நின்றிருந்தது. அதன் 404-வது ஃப்ளாட் ஒரு சாதாரண வீடல்ல. அது எஸ்தர் தனக்குத்தானே கட்டிக்கொண்ட ஒரு மௌனக் கோட்டை. வெளியே பெய்யும் பெருமழை, பழைய நகரத்தின் கற்கள் மீது மோதித் தெறிக்கும் சத்தம், ஏதோ ஒரு பெரும் அழிவுக்கான முன்னறிவிப்பைப் போலத் தொனித்தது.
ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் மழைத்துளிகள், ஏதோ ஒரு வினோதமான மொழியில் எஸ்தருக்குச் செய்தி சொல்ல முயன்றன. எஸ்தர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் எதையும் பார்க்கவில்லை, மாறாக எதையோ தேடிக்கொண்டிருந்தன. அவளது நீண்ட விரல்கள் மடியில் இருந்த பழைய பைபிளின் அட்டையை மெல்ல வருடிக்கொண்டிருந்தன. அந்தப் பைபிள் பல ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை, ஆனால் அதன் ஒவ்வொரு பக்கத்தின் துக்கமும் அவளுக்கு மனப்பாடம். அந்த அறையின் சுவர்களில் படிந்திருந்த கறை கூட அவளுக்கு கதையொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த அப்பார்ட்மெண்டில் எப்போதும் மெல்லியதொரு நறுமணம் வீசும். அது சாதாரண ஊதுபத்தியின் மணம் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, லெபனோன் மலைகளிலிருந்த கேதுரு (Cedar) மரங்களின் மணம். விவிலிய காலத்தில் சாலொமோன் மன்னன் தனது தேவாலயத்தைக் கட்டப் பயன்படுத்திய அதே புனிதமான மரத்தின் மணம் அது. எஸ்தரின் தந்தை ஒரு தொல்பொருள் ஆய்வாளர். அவர் லெபனோனின் கடவுளின் கேதுருக்கள் காட்டில் இருந்து கொண்டு வந்ததொரு சிறிய கேதுரு மரப் பெட்டியைத்தான் எஸ்தர் தனது உயிருக்கு மேலாகப் பாதுகாத்து வந்தாள். தாவீது, எஸ்தரின் கணவன் அடிக்கடி சொல்வான், “எஸ்தர், கேதுரு மரம் அழியாதது. காலவோட்டத்தில் எல்லாம் அழிந்தாலும், இந்த மரத்தின் மணம் துரோகத்தை அடையாளம் காட்டும்.”
தாவீது திடீரென காணாமல் போனது விபத்தல்ல. அது திட்டமிடப்பட்ட, மிகக் கொடூரமான சதி. தாவீது ஒரு மேதை, அவனது விரல்கள் வயலினில் விளையாடும்போது கல்வாரி மலையின் காற்று கூட அசைவற்று நிற்கும். ஆனால், அவனது இசைக்குப் பின்னால் ஓர் அபாயகரமான ரகசியம் இருந்தது.
உண்மையில், தாவீது அந்தச் சபையின் பழங்கால ஆவணக் காப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தான். விவிலிய காலத்துச் சுவடிகளை ஆய்வு செய்யவும், சிதைந்த இசைக் குறிப்புகளை மீட்டெடுக்கவும் அந்தச் சபை அவனது அறிவைப் பயன்படுத்திக் கொண்டது. அந்தப் புனிதமான ஆவணங்களுக்கு நடுவேதான், அதே சபை பல நூற்றாண்டுகளாக மறைத்து வந்த இருண்ட பக்கங்களை அவன் கண்டடைந்தான்.
அந்தச் சபை என்பது வெறும் ஆன்மீக இடமல்ல. அது உலக நாடுகளையே ஆட்டிப்படைக்கும் ஒரு நிழல் அரசு. அவர்கள் பழைய எருசலேமின் பூமிக்கு அடியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாலொமோன் மன்னனின் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திக் கொண்டிருந்தார்கள். புனிதமான அந்தப் பூமிக்கு அடியில் அவர்கள் தோண்டிய ஒவ்வொரு குழியும், பல மனிதர்களின் கல்லறைகளாக மாறின.
அவர்கள் அவனை ஒரு சாதாரண ஊழியனாகக் கருதித் தங்கள் ரகசியங்களுக்கு அருகில் அனுமதித்தார்கள். ஆனால், ஒற்றனாக மாறிய தாவீது அந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுத்த ரகசியச் சுருள்கள், சுரங்கங்களின் வரைபடம் மற்றும் பணப் பரிமாற்ற இரகசியங்களை தனது இசை மெட்டுகளின் அதிர்வெண்களுக்குள் குறியீடுகளாகப் பதித்து வைத்திருந்தான். தாவீதின் இசை என்பது ஒரு மொழியாக மாறியிருந்தது. அதை எஸ்தரால் மட்டுமே வாசிக்க முடியும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், அமைதியான பௌர்ணமி இரவில், தாவீது தனது கடைசி நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பினான். அன்று இரவு முழுவதும் அவன் வயலினை மீட்டவில்லை, மாறாக எஸ்தரின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். “எஸ்தர், இது நமக்கான கடைசி விருந்து. நாளை விடியும் போது நாம் இந்த நகரத்தில் இருக்க மாட்டோம்,” என்று சொன்னான்.
அவனது குரலில் ஒருவிதமான பயமும், அதேசமயம் ஒரு பெரும் விடுதலையின் நிம்மதியும் இருந்தது. ஆனால் அன்று இரவு, அவர்களது வீட்டின் கதவைச் சில முகமூடி மனிதர்கள் காலால் உதைத்துத் திறந்தார்கள். அவர்கள் அந்த அதிகாரச் சபையின் கூலிப்படையினர். தாவீது தப்பியோட முயலவில்லை.
அவன் எஸ்தரின் காதில் மட்டும் ஒன்று சொன்னான். “வாக்குத்தத்தம் உன் இதயத்தில் இருக்கிறது, அதை யாரிடமும் தந்துவிடாதே.” அவன் காரில் ஏற்றப்பட்டான். எஸ்தர் அந்தக் காரின் பின்னால் தெருக்களில் அலறிக்கொண்டு ஓடினாள், அவளது கால்கள் இரத்தமாகின. அன்றிலிருந்து இன்று வரை, அவன் மரித்த லாசரு போலத் திரும்பவே இல்லை.
எஸ்தர் ஏன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள்? ஐந்து ஆண்டுகளாக அவள் ஏன் அந்த 404-வது ஃப்ளாட்டை விட்டு வெளியே வரவில்லை? அது பயத்தினால் அல்ல, கண்ணுக்குத் தெரியாததொரு சிறையில் அவள் வைக்கப்பட்டிருந்தாள். தாவீது அந்த இரகசிய இசைக் குறிப்புகளை எஸ்தர் வைத்திருப்பதாக அந்தச் சபை நம்பியது. அவர்கள் அவளைக் கொல்லவில்லை, ஏனெனில் அந்த ஆதாரங்களை எங்கு எப்படி இரகசியமாக தாவீது வைத்துள்ளான் என அஞ்சினார்கள்.
அதற்குப் பதிலாக, அவளைச் சுற்றி வேவு பார்க்கும் வலையொன்றை உருவாக்கினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒவ்வொரு மனிதரும் அவளைக் கண்காணிக்க அந்தச் சபையால் ஊதியம் பெற்று நியமிக்கப்பட்ட ஓநாய்கள். அவளது பால்காரன் முதல் அந்த குடியிருப்பின் காவலாளி வரை அனைவருமே அந்தச் சபையின் ஒற்றர்கள்.
மின்தூக்கி மேலே வரும் சத்தம் கேட்டது. அது முதியவர் ஒருவரின் முனகலைப் போலக் கரகரப்பாக இருந்தது. கதவு மெல்லத் திறந்தது. அந்தோணி உள்ளே வந்தான். அவன் வெறும் காவலாளி அல்ல, அந்தச் சபையின் சுத்திகரிப்பாளன். பல கொலைகளையும், இரகசியப் புதைப்புகளையும் அடையாளம் தெரியாமல் அழித்தவன் அவன். அவனது கையில் இருந்த சாவிக்கொத்து, மரண தண்டனையொன்றின் தீர்ப்பைப் போலச் சத்தமிட்டது. “அம்மா, இன்று இரவு காற்று பலமாக இருக்கிறது. ஜன்னல்களைச் சாத்தி வையுங்கள். சில பழைய ஆவிகள் உள்ளே வரப் பார்க்கின்றன,” என்றான் அவன் ஏளனமாக.
பெண்களின் கழுத்துக்கு கீழே குறுகுறுவென பார்க்கும் அவனது கண்கள், எஸ்தரின் கழுத்தில் லாவகமாக அந்த லாக்கெட் படிந்திருக்கும் மார்பகங்களை கழுகைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த லாக்கெட் அவளுக்கு தாவீது கடைசியாகக் கொடுத்த பரிசு, அதில் அவன் ஒரு மைக்ரோசிப்பை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தான் என்பது எஸ்தருக்கே தெரியாது.
அவனுக்குப் பின்னால் சாமுவேல் நுழைந்தார். அவர் அந்த ஊழல் சபையின் ப்ரெயின், அந்தத் தொல்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன். அவர் தனது விலையுயர்ந்த கருப்பு கோட்டை உதறிக் கொண்டே எஸ்தரின் முன் அமர்ந்தார்.
“எஸ்தர், இன்னும் எத்தனை காலம் இந்த வனாந்தரத்தில் கழிக்கப் போகிறாய்? உனது இளமை இந்த நான்கு சுவர்களுக்குள் வீணாகிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் செய்த தவறுகளை நீயும் தாவீதும் சாட்சியங்களாக மாற்றி வைத்திருக்கிறீர்கள். அந்த ஆதாரங்கள் அடங்கிய அத்தனை இரகசியங்களையும் கொடுத்துவிடு. அதற்கு பதிலாக உனக்கு புதியதொரு வானத்தையும் புதியதொரு பூமியையும் நான் காட்டுவேன். நீ விரும்பும் உலகத்தை நான் உன் காலடியில் வைப்பேன்,” என்றார் அவர்.
எஸ்தர் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்கள் உலர்ந்து போயிருந்தன. “சாமுவேல், நீங்கள் தேடும் இரகசியங்கள் என்னிடம் இல்லை. நீங்கள் என்னைச் சுற்றிலும் காவல் வைக்கலாம், ஆனால் என் நினைவுகளை உங்களால் சிறைபிடிக்க முடியாது. இந்த நரகமே எனக்குப் போதும்,” என்றாள் உறுதியாக.
மூன்றாவதாக மரியா வந்தாள். அவள் எஸ்தரின் தோழியாக நடித்த ஒரு யூதாஸ். எஸ்தரின் மௌனங்களைக் கேட்டு, அவளது கண்ணீரைத் துடைப்பது போல நடித்து, அவளது ஒவ்வொரு அசைவையும் சாமுவேலுக்குத் தெரிவிப்பதே அவளது வேலை. ஆனால் இன்று மரியாவின் முகம் வெளிறிப் போய் இருந்தது. அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. “எஸ்தர்… கீழே… கீழே ஏதோ நடக்கிறது. காவலாளிகள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் கழுத்துகள் மெல்லியதொரு வயலின் நரம்பால் அறுக்கப்பட்டிருக்கின்றன. இது மனித வேலை போலத் தெரியவில்லை,” என்று அவள் அலறினாள்.
சரியாக நள்ளிரவு 12 மணி. மழையின் வேகம் ஒரு நிமிடம் நின்றது, பின் மீண்டும் ஒரு பெரும் இடியுடன் பெய்யத் தொடங்கியது. 404-வது ஃப்ளாட்டின் கதவு தானாகவே பெரும் சத்தத்துடன் திறந்தது. உருவமொன்று உள்ளே நுழைந்தது. அவன் நனைந்திருந்தான். அவனது கையில் ஒரு பழைய வயலின் இருந்தது. அந்த உருவம் மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது. அவன் முகம் மனித முகமாகவே இல்லை. பெரும் தீ விபத்தொன்றில் சிதைந்து, தசைகள் உருகிப் போயிருந்தன. அவனது கண்கள் மட்டும் எரியும் இரண்டு கரிக்கட்டைகளைப் போலச் சிவப்பாக மின்னின. சாமுவேல் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்தான், ஆனால் அவனது கைகள் நடுங்கின. “நீ… நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்? அந்தச் சுரங்கத்தில் கந்தகத்தை ஊற்றி உன்னை எரித்ததை நானே என் கண்ணால் பார்த்தேனே. கந்தக நெருப்பில் இருந்து யாரும் தப்ப முடியாதே!” என்று கத்தினான்.
தாவீது ஒரு அடி முன்னே வந்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் தரையில் கருகிய தடம் விழுந்தது. அவன் பேசத் தொடங்கினான். அவனது குரல் ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து வருவது போலக் கரகரப்பாக இருந்தது. “சாமுவேல்… அந்தச் சுரங்கத்தில் நீங்கள் புதைத்தது என்னை அல்ல, என் அடையாளத்தை. நீங்கள் எரித்த கந்தகக் குழியில் நான் சாகவில்லை, மாறாக அந்த நெருப்பிலேயே நான் வாழ்ந்தேன். அந்தச் சபை திருடிய பொக்கிஷங்களுக்கு நடுவிலேயே நான் ஐந்து ஆண்டுகள் பிணமாகக் கிடந்தேன். நீங்கள் எதை எடுக்க வந்தாலும், அதை நான் தடுத்தேன். அந்த இருட்டில், எலிகளையும் பூச்சிகளையும் தின்று, என் ஈரலில் பழிவாங்கலை மட்டும் வளர்த்துக் கொண்டு காத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த நெருப்பு என்னைச் சுட்டபோது, நான் எஸ்தரின் பெயரை மட்டுமே முணுமுணுத்தேன். இன்று அந்தச் சுரங்கம் முழுவதையும் வெடிவைத்துத் தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன். உங்கள் சபை இப்போது ஒரு சாம்பல் குவியல்.”
தாவீது தனது வயலினைத் தாடையில் வைத்தான். அது மரத்தால் ஆனது அல்ல, கருகிய மனித எலும்புகளால் செய்யப்பட்டது போலத் தெரிந்தது. அவன் வயலினை மீட்டத் தொடங்கினான். அந்த இசை கூர்மையானதொரு கத்தியைப் போல அறையிலிருந்தவர்களின் காதுகளைக் கிழித்தது. அது இசையல்ல, அது ஒரு நியாயத்தீர்ப்பு. “எஸ்தர்… சாவியைக் கொடு,” என்றான் தாவீது.
எஸ்தர் நடுங்கும் கைகளால் தன் கழுத்தில் இருந்த லாக்கெட்டைப் பிடுங்கி எறிந்தாள். அதற்குள் இருந்த அந்த மைக்ரோசிப்பில், அந்தச் சபை செய்த அத்தனை கொலைகளும், அவர்கள் கடத்திய சிலைகளும், அவர்கள் புதைத்த பிணங்களின் இடங்களும் வீடியோ ஆதாரங்களாக இருந்தன. “தாவீது… இதற்காகவா இத்தனை காலம் என்னைத் தனியே தவிக்கவிட்டாய்? இந்தத் தனிமை என்னை ஒவ்வொரு நாளும் கொன்றதே” என்று எஸ்தர் கண்ணீர் விட்டாள்.
“தனிமைதான் உன்னை உயிரோடு வைத்திருந்தது எஸ்தர். நான் உன்னிடம் வந்திருந்தால் அவர்களோடு சேர்ந்து உன்னையும் எரித்திருப்பார்கள். நான் ஒரு சாட்சியாக மாறிக் கொண்டிருந்தேன். இதோ பாரு, இந்த ஓநாய்களின் ஆட்டம் முடிந்தது,” என்று சொல்லிவிட்டு இசையின் வேகத்தைக் கூட்டினான். அந்த இசையின் அதிர்வில் அறையில் இருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. அந்தோணி தனது காதுகளைப் பொத்திக்கொண்டு தரையில் விழுந்து துடித்தார். சாமுவேல் தப்பியோட முயன்றான், ஆனால் அந்த இசையின் ஒவ்வொரு நரம்பும் அவனை ஒரு சிலந்தியின் வலையைப் போலக் கட்டிப்போட்டன. அந்த இசையின் வேகத்தில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்களில் இருந்த பூச்சுகள் உதிர்ந்து, அதற்குப் பின்னால் இருந்த பழைய எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்தன. அவையெல்லாம் அந்தச் சபையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.
திடீரென்று பெரும் மின்னல் ஒன்று அறைக்குள் பாய்ந்தது. முழு அறையும் வெள்ளை நிற வெளிச்சத்தில் மூழ்கியது. ஒரு கணம் அந்த வெளிச்சத்தில் தாவீதின் உருவம் சிதைந்து, ஆவியாகக் கரைவது போலத் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் எஸ்தர் சிரிப்பதைக் காண முடிந்தது. அது ஒரு விடுதலையின் சிரிப்பு.
மறுநாள் காலை. 404-வது ஃப்ளாட்டின் கதவு பாதி திறந்த நிலையில் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. காவல்துறையினர் உள்ளே நுழைந்தபோது அங்கே யாருமே இல்லை. சாமுவேல், அந்தோணி, மரியா என எவருடைய தடயமும் அங்கில்லை. ஆனால் தரையில் ரத்தத்தால் ஆன கறை படிந்த கால்தடங்கள் ஜன்னலை நோக்கிச் சென்று மறைந்திருந்தன. மேசையின் மீது அந்த வெள்ளி லாக்கெட் திறந்தே கிடந்தது. ஆனால், அதற்குள் இருந்த மைக்ரோசிப் எரிக்கப்பட்டுச் சாம்பலாகக் கிடந்தது. தாவீது கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட அந்த ஆதாரங்கள் இப்போது ஒரு சாம்பல் குவியல் மட்டுமே.
காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு எஸ்தரின் அறைக்கதவு தானாகவே திறப்பதும், எஸ்தர் யாரிடமோ பேசுவது போலக் கைகளை அசைப்பதும் பதிவாகியிருந்தது. ஆனால் கேமராவில் தாவீதோ, சாமுவேலோ, அந்தோணியோ தெரியவில்லை. எஸ்தர் ஒருத்தி மட்டுமே அந்த அறையில் இருந்திருக்கிறாள். அவள் யாரிடமோ லாக்கெட்டைத் தூக்கி எறிவதும், பின் காற்றில் கை கோர்த்து ஜன்னல் வழியாக வெளியே குதிப்பதும் பதிவாகியிருந்தது. அவள் குதித்த அந்த நான்காவது மாடிக்குக் கீழே தேடியபோது அவளது உடல் கிடைக்கவில்லை. அங்கே ஒரு பழைய வயலின் வில் மட்டும் பாதியாக உடைந்த நிலையில் கிடந்தது.
காவல்துறை அதிகாரி அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் நின்றிருந்தார். வெளியே இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. அவரது கையில் இருந்த அந்த உடைந்த வயலின் வில்லின் ஒரு பகுதியில் மட்டும் கருகிய வாசனை அடித்தது.
கண்காணிப்பு கேமராவின் பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தார். எஸ்தர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தபோது, அவளது முகம் பயத்தில் இருக்கவில்லை. மாறாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் துணையின் கைகளைப் பற்றிக் கொண்ட ஒரு குழந்தையின் பரவசத்தோடு இருந்தது. அவள் குதித்த அந்த நான்காவது மாடியின் கீழே எவ்வித அடையாளமும் இல்லை. உடல் இல்லை, ரத்தக்கறை இல்லை, அந்த உடைந்த வில்லைத் தவிர வேறெதுவுமே இல்லை.
அதிகாரி தனது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார். மழையில் நனைந்த அந்தப் பழைய கட்டிடத்தின் சுவர்களில் விசித்திரமானதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவர் கவனித்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு செங்கல்லிலும் ஒரு மெல்லிய இசைக் குறிப்பு செதுக்கப்பட்டிருந்தது போலத் தெரிந்தது.
திடீரென, அந்த அதிகாரியின் காதுகளுக்குப் பின்னால் மெல்லிய மூச்சுக் காற்று பட்டது. அத்தோடு அந்த லெபனோன் கேதுரு மரங்களின் நறுமணம் அறையை நிறைத்தது. யாரோ ஒருவன் வயலினை மீட்டத் தொடங்கும் அந்த ஆரம்ப அதிர்வு காற்றில் பரவியது. பயத்துடன் அவர் திரும்பிப் பார்த்தார். அறை காலியாக இருந்தது.
ஆனால், அந்த அறையின் சுவரில் படிந்திருந்த கறை இப்போது ஒரு செய்தியாக மாறியிருந்தது. அதில் ரத்தத்தால் அல்ல, வெறும் ஈரத்தால் ஒரு வரி எழுதப்பட்டிருந்தது.
“அன்பு எதையும் உடைமையாக்குவதில்லை, அது தன்னைத் தவிர வேறெதையும் தருவதுமில்லை.”
அடுத்த நொடி, அந்த 404-வது ஃப்ளாட்டின் விளக்குகள் ஒரே நேரத்தில் அணைந்தன. சத்தமாக நீண்ட வயலின் இசை ஒலிக்கத் தொடங்கியது. காவல் அதிகாரி வெகு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியே வந்தார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அந்த அதிகாரச் சபை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகரத்தின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து துடைத்தெறிந்தது. ஆனால், எருசலேமின் காற்றிலிருந்து அந்தப் பழங்காலத்து மணத்தை மட்டும் யாராலும் அழிக்க முடியவில்லை.
இன்றும் எருசலேம் நகரின் அந்தப் பழைய குடியிருப்பில் மழை பெய்யும் போது, 404-வது ஃப்ளாட்டிலிருந்து வயலின் இசை மெல்லியதாகக் கேட்கிறது. அந்த இசையில் ஒரு ஆணின் குரலும், ஒரு பெண்ணின் சிரிப்பும் கலந்திருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த அறைக்குள் நுழைய யாருக்கும் துணிவில்லை.
அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பார்த்தால், இன்றும் மழைத்துளிகள் அந்தப் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. நீதியின் வாக்குத்தத்தம் நிறைவேறியதா என்பது அந்த மழையைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
***
பிரியா பாஸ்கரன் – இயற்பெயர் பத்மப்ரியா பாஸ்கரன். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக வடஅமேரிக்காவில் வசித்து வருகிறார். மரபிலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையிலான பல்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கி வருகிறார். முன்னணி பத்திரிக்கைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தமிழ் களத்தின் தங்கமங்கை விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, வல்லினச் சிறகுகளின் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை 80 விருது, இலங்கை மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலண்டிதழின் பிரமிள் விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தேசிய விநாயகம் விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: priya@baskarans.com

