ஐ.கிருத்திகா
பூமி சுற்றுவதை உணர முடியும், அபூர்வமாய் சில தருணங்களில். உடலை நிதானித்து அமைதியாயிருக்கும் ஏதோ ஒரு நொடி அதை உணரலாம். பூமி அதற்கொரு வாய்ப்பை நமக்கு வழங்கும். அதுவாக வழங்காவிடில் நாமாகப் பெறமுடியாது. அனுபவங்கள் அப்படி வாய்ப்பவை. மலரும் கூட மணக்காது, பழமும் கூட ருசிக்காது, அவை தயை புரியாவிடில். அததற்கென்று தனித்தன்மை உண்டு. அதனாலேயே ஒவ்வொன்றும் சோபிக்கின்றன. அத்தனித்தன்மையே அவற்றின் பலம். ஒளி மிகுந்த தருணத்தில் அதனை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வாய்க்கும்.
‘மலர்கள் எப்போதும் மணக்கின்றனவே, பழங்கள் சதா ருசிக்கின்றனவே…..?’
‘அவை ஒளிமிகுந்த தருணங்களை வாழ்வாகக் கொண்டுள்ளன. அவை தயாபரிகள்…’
அவன் எழுந்தான். வேட்டியில் ஒட்டியிருந்த தூசு, தும்புகளைத் தட்டிவிட்டான். அது சாயரட்சை நேரம். மணி அடிக்கும் ஓசை கேட்டது. அவனைக் கடந்து சிலர் விரைந்தனர். சாயரட்சை மனிதர்கள் என்றே அவர்களை அடையாளமாய் மனதிற்குள் பதிந்து வைத்துள்ளான்.
தினமும் வருவார்கள். சாயங்காலமானா சாமியைப் பார்க்கணும் என்ற கொள்கையுடையவர்கள். ஈசன் முன் நின்று,
“நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க”என்றோ,
“பெற்ற தாய் தனை மக மறந்தாலும்….”என்றோ உருகுபவர்கள்.
“இன்னிக்காவது வீட்டுக்கு வாயேன்டா. உனக்குப் பிடிச்ச கொழுக்கட்டை செய்யறேன். “
எதிரே வந்த அம்மா பாவமாய் சொன்னாள். அவன் பேசாமலிருந்தான்.
“வரமாட்டியா……அந்த சிவனே கதின்னு இங்கயே கெடந்து ஒழல்றியே. உனக்கு சலிக்கலையா….?”
“தினமும் காலை விடிகிறது, அந்தி மறைகிறது, இருள் கவிழ்கிறது. அதற்காக நாளைக்காவது ஒரு பூகம்பம் வரணும் என்று யாராவது நினைப்பார்களா….”
அவன் மென்னகையோடு கடந்துவிட்டான். அம்மா வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
சாயரட்சை முடிந்து எல்லோரும் சென்றபின் அவன் ஈசன் முன் இருப்பான். கூட்டம் ஒவ்வாமை.
‘சுடரில்
ஒளிரும் திரிசடையனே…….’
அவன் அமைதியாக நின்றான். கைகள் கூப்பவில்லை. உள்ளே கடலலை ஆர்ப்பரிக்கவில்லை. லிங்கனைப் பார்த்த கண் இமைக்கவில்லை. ஒரு வஸ்திரம், முப்பட்டை, உச்சியில் ஒரு முழம் பூ……. எங்கும் நிறைந்திட்ட பரம்பொருள், அவனுள்ளும்…….. தன்னைத்தானே வணங்கிக்கொள்வதா என்றெண்ணிய நாளிலிருந்து கை கூப்புவதை விட்டுவிட்டான். சுந்தரேசனை, சொக்கனை, அண்ணாமலையானை, உமையொரு பாகனை அவன் எவ்விதம் நோக்குவான்.
சிரிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல் பரவசப்பட்டு, நெடுநாள் பிரிந்திருந்த காதலியைக் காண்பதுபோல் கசிந்துருகி, உதவி செய்த ஒருவனை நோக்குவதுபோல் நன்றியுடன்………
நின்ற இடம் மறந்துபோகும். பாதங்களுக்குக் கீழே கருங்கல் தரை குளிர்ந்து கனிந்து கதகதப்படையும். அரைமணியா, ஒருமணி நேரமா…. அளவு தெரியாது. காட்சிகள் எதுவும் கண்ணுக்குப் புலப்படாது. நிலைத்த கண்களுக்கு தீப்பிழம்பாய், தங்கத்தின் ஜொலிப்பாய் லிங்கசொரூபன் காட்சி தருவான்.
“தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லுடா, அதுபோதும்”என்பாள் அம்மா.
அவன் நெற்றி சுருங்க நிமிர்ந்து பார்ப்பான்.
“அது வாயில வரலன்னா நமசிவாய சொல்லு. அவ்ளோதான்…”
சில்லிடும் விரல்களால் பின்னந்தலை வருடுவாள்.
“நீ போறது பத்தாதுன்னு அவனையும் இழுத்துகிட்டுப் போறியே….இந்த வயசுல அவனுக்கு இதெல்லாம் தேவையா…?”
அப்பா ஒரேயொருமுறை சலித்துக்கொள்ள அம்மாவின் தலை தீர்மானமாய் அசைந்தது.
“கோயிலுக்குப் போனா மனசு ஒழுங்குப் பட்டுடும். தப்பு செய்ய அஞ்சும். அங்க, இங்க அலைஞ்சு திரியாது. அதை ஆரம்பத்துலேர்ந்தே கொண்டு வரணும். இப்ப விட்டுட்டு வளர்ந்த பிறகு பிடிச்சு இழுத்தாகூட வராது. எதிர்காத்து மாதிரி முட்டி, மோதி தள்ளி விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கும். “
அம்மாவுக்கு தன் அபிப்ராயத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை. அப்பா விட்டுவிட்டார். அவர் எப்போதுமே அப்படிதான். அலட்டிக்கொள்ள மாட்டார்.
சிறுவயதில் அம்மாவுடன் கோயிலுக்குப் போவது அவனுக்குப் பிடித்தமானதாகவே இருந்தது. சிலீரென்ற தரையில் கால் பதிய நடப்பான். வெயில் நேரத்தில் அம்மா தூக்கிக் கொள்வாள். வளர்ந்தபின் அவளை எதிர்பார்க்காமல் தானாகவே செல்ல ஆரம்பித்தான்.
“நானும் வர்றேன்டா….”
அம்மா பரபரப்பாள்.
“நீ வா, நான் முன்னாடி போறேன்.”
அவன் சைக்கிளில் பறந்துவிடுவான். பின் அம்மா போகாத நாட்களிலும் போக ஆரம்பித்தான்.
“ஒரு தப்பு தண்டாவுக்குப் போறதில்ல. படிச்சோமா, கோயிலுக்குப் போனோமான்னு இருப்பான்.”
அம்மா பெருமைப்படுவாள்.
அக்கம்பக்கத்திலும், உறவுகளிலும் கூட அவனுக்கு நல்ல பெயர். அந்தப் பெயர் அவனை அசைத்து விடவில்லை. மண்டைக்குள் ஏறவில்லை. பெருஞ்சுடரின் முழுஒளியாய் அவன் நிறைந்திருந்தான்.
“பற்றுக, பற்றற்று….“
யாரோ ஒரு சந்நியாசி சொல்லிக்கொண்டே அவனைக் கடந்து சென்றார். அப்போது அவன் அந்த நிலைக்கு வந்திருந்தான். மனசு ஒருமுகப்பட்டு படிந்திருந்தது.
உண்ணும் சோற்றில் லிங்கனைக் கண்டு நெகிழ்ந்த நேரமது. அவனுக்குள் அது எப்படி கலந்தது. மனம் திறந்தவெளியாய் கிடந்ததா…… அங்கே எதுவுமேயில்லையா…. அம்மாவின் சிறு விம்மலில் திரும்பியிருந்தால் திறந்தவெளி நிறைந்திருக்கும். அப்புறம் எங்கே பற்றுவது. ஆனால் அது சுத்தவெளியாயிருந்தது. சுத்தம்தானே சோறு போடும். சோறெல்லாம் சிவலிங்கன்…… அவனுக்கு சிலிர்த்துவிட்டது.
அவனுள் நிறைந்தது அதுவா…. அதுவே அவனா…. அவன் மட்டுமா… அம்மாவும், அப்பாவும்தான். ஆடும், மாடும்தான். வேரும், விருட்சமும்தான். ஒட்டுமொத்த பிரபஞ்சமும்தான். அவன் இளசிலேயே தெளிந்துவிட்டான்.
“சதாசர்வ காலமும் கோயிலே கதின்னு கெடந்தா நல்லவாயிருக்கு. வயசுப்புள்ள ஆட்டம், பாட்டம்னு இருக்க வேணாமா…”
எல்லோரும் மாற்றி பேசினார்கள். அம்மா அழுதாள். அப்போதும் அப்பா வாய் திறக்கவில்லை. எது நடக்கணுமோ, அது நடக்கும். இதுதான் அவர் நினைப்பு. அசையாத மனம். அவனுக்கு அவரிடமிருந்துதான் வந்திருக்கும். பழுதற்ற வித்தின் இளங்குருத்து. அது தெளிவாயிருப்பது அதனியல்பு.
அறை குளிர்ச்சியாயிருந்தது. அவன் மனதைப்போல, அடர் வனத்தின் நடுவே குளிர்ந்த தடாகம் போல. வாடகையும் குறைவு. நகர்ப்புறத்திலிருந்து தள்ளியிருந்ததில் அப்படி. ஒருவேளை எளிமையான உணவிற்கும், அறை வாடகைக்கும் அவன் பார்க்கும் வேலை போதுமானதாக இருந்தது.
பெரிய மளிகைக்கடை அது. அதில் பில் கவுண்டரில் அவன் இருப்பான். கைசுத்தம், வாய்க்கு வேலையே இல்லை. மௌனி…… சலசலப்பற்ற அமைதி. சும்மா இருக்கும் நேரங்களில் கண்கள் மூடி அமர்ந்திருப்பான். முதலாளி தொந்தரவு செய்யமாட்டார். எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவருக்கு அவனைத் தெரியும். அவரே நொடிக்கு நூறுமுறை நமச்சிவாய சொல்பவர்.
”ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கான். மேல படிச்சிட்டு பெரிய வேலைக்குப் போயிருக்கலாம். எப்படி, எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இந்தமாதிரி ஆகியிருக்கவேணாம். “
அம்மாவின் புலம்பல் ஓயவில்லை. அவன் இப்போதிருக்கும் நிலையே அவனது விதி என்று அப்பா புரிந்துகொண்டார். அதனால் நடப்பவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். அவளிடம் சொல்லி விளங்கவைக்க முடியாது. அம்மாக்கள் அப்படியானவர்கள். தன் சூலில் வளர்ந்ததை தன்னுயிராய் கொள்பவர்கள்.
“குடி, பொம்பளைங்க சகவாசம்னு இல்லாம நல்ல வழியிலதானே போயிருக்கான். அந்த மட்டுமாவது திருப்தி பட்டுக்கம்மா…”
ஒரேயொருமுறை பொறுக்காமல் சொன்னார். அப்படியாவது சற்று தணிவாள் என்ற எண்ணம். அம்மாவின் அழுகையை அவனும் அறிவான். ஆடுபவள் அவளென்றால் ஆட்டுவிப்பவன் எவனென்று அவனுக்குத் தெரியும். இனி தெளிந்தது தெளிந்ததுதான்.
அன்று பிரதோஷம். கோயிலில் கூட்டம் அள்ளியது. அவன் ஒரு தூணோரம் ஒதுங்கி நின்றிருந்தான். ஒன்பதிலிருந்து ஐந்துவரை கடையில் வேலை. அப்படி பேசித்தான் வேலைக்குச் சேர்ந்தான். ஐந்துக்குப் பிறகு ஆலயம். காலையிலும் எட்டேமுக்கால் வரை இருப்பு இங்குதான்.
நைவேத்யத்தில் ஒரு கரண்டி தொன்னையிலிருக்கும் அவனுக்காக. ஒருவேளை உணவு முடிந்தது. இன்னொரு வேளைக்கு இருக்கவே இருக்கிறது பாட்டி மெஸ். ஆக இரண்டு வேளைகள் என்பதே அவனுக்கு எதேஷ்டம். அவனுடைய மெலிந்த உடல் கண்டு அம்மா கண்ணீர் விட்டாள்.
“சரியா சாப்பிடாம எப்படி இளைச்சு போயிருக்கான் பாருங்க…….”
அப்பாவிடம் தேம்பினாள். அவன் உடல் தேயவில்லை. சிலை போல பொலிந்திருந்தான்.
பிரதோஷம் முடிந்து கூட்டம் கருவறைநாதனை வணங்கி சென்றபின் உள்ளே போக அவன் காத்திருந்தான். அப்பா எதிரே வந்து நின்றார்.
“மேல அவ்ளோ பெரிய ரூம் இருக்கு. வந்து தங்கிக்கயேன்டா. நாங்க உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்.”
அம்மா தூது அனுப்பியிருக்கிறாள். தனக்காக இல்லாவிட்டாலும் அங்கு துடிப்பவளுக்காக இங்கு வந்து அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இது அவ்வபோது நடப்பதுதான்.
“வேணாம்…….”
நூலறுந்த பட்டம் மீண்டும் கைச் சிறைக்குள் அகப்பட எத்தனிக்குமா……………… காற்றுவெளியில் பறக்க விரும்புமா……
எண்ணெயில் வழிந்த ஈசனவன் தீப ஒளியில் மினுங்கினான்.
“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுருவானாய் போற்றி!”
பின்னாலிருந்து ஸ்பஷ்டமாய் ஒலிக்க அவன் அனிச்சையாக திரும்பிப் பார்த்தான். தொண்டைக்குள்ளிருந்து அபூர்வமாய் வெளிவரும் குரல்தான் அப்படி புடம் போட்டது போல் ஒலிக்கும். அவனைப் பார்த்தவர் தலையசைத்தார். காவி வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சுத்த நரை முகத்தை அலங்கரித்தது. ஒட்டிய உடலில் கண்கள் மிகுஒளியுடன் பளிச்சிட்டன. அவர் செல்ல அவன் பின்தொடர்ந்தான்.
வெளிப்பிரகாரத்து தூண் ஒன்றில் அவர் சாய்ந்தமர்ந்தார். தூணின் நாட்டியமங்கை தன் பதம் தவறும் பட்சத்தில் அவர் தலை தட்டுப்படுமே என்றஞ்சி ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி பதட்டத்தோடு நின்றிருந்தாள்.
அவரெதிரே அவன். சிறிதுநேரம் அவனை உன்னித்தவர்,
“யார் நீ…..?”என்றார்.
“என்னுள் அது, அதுவே நான்…..”
இரண்டு மாத்திரையளவில் நீ ஒலிக்கவில்லை. அதற்குள்ளே கேள்விக்கு விடை வந்துவிட்டது.
“இருவத்தஞ்சு இருக்குமா….?”
“ம்……”
“எதுக்கு இப்படி……?”
“இதுதான் சாசுவதம்…….”
அதன்பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கும் ஒன்றும் பேசத் தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் மௌனவெளியில் உயிருறைந்த இருபுள்ளிகளாய் அவர்கள் அவ்விடம் உறைந்திருந்தனர்.
நேரம் கரைந்தது. கணீரென்ற மணியோசையில் புள்ளிகள் மானுட உருக்கொண்டன. அவர், அவனை ஊடுருவிப் பார்த்தார். அவன் சிற்பமாய் சமைந்திருந்தான். சில மணித்துளிகளில் புரிந்து கொண்டு விட்டாற்போல் எழுந்தவர் நடந்தபடியே சொன்னார்.
“கோடியில ஒருத்தர் இப்படி பிறக்கிறதுண்டு. “
உதிர்ந்த வார்த்தைகள் காற்றில் விரைந்து கலந்தன.
“ஒத்தப் புள்ளைய பெத்து சதா கோயிலுக்கு இழுத்துக்கிட்டுப் போன. இப்ப கோயிலுக்கே குடுத்துட்ட. இத அந்த சாமி சகிக்குதே. அத சொல்லணும். “
பாட்டி புலம்பித் தள்ளிவிட்டாள்.
“முன்னாடியெல்லாம் இங்கேருந்து போவான், திரும்பி வந்துடுவான். இப்ப அங்கயே இருந்துட்டான். ஊர் ஒதுக்குப்புறமா ஒரு ரூம் புடிச்சு வச்சிருக்கான். தங்குறது, தூங்குறது எல்லாம் அங்கதான்.”
அம்மா அழுதாற்றங்கரையேறி இப்போது கோபாற்றங்கரையில் ஸ்திரமாய் நின்றுவிட்டாள். அவனைப் பற்றி பேசும்போதெல்லாம் குரலில் கடுமை மிகுந்திருந்தது.
“வம்சவிருத்தியாவ வேணாமா…… இப்படியே வுட்டுட்டா புள்ள போயிருவான். புடிச்சு வச்சு ஒரு கல்யாணத்தப் பண்ணுங்க. தெளிஞ்சிருவான்” என்று பெரியப்பா சொன்னார். குழம்பியதுதானே தெளியும். கண்ணாடியாய் தெளிந்தது இனி ஆவதற்கு என்ன இருக்கிறது.
கோயிலுக்கு அடிக்கடி வரும் அனைவருக்கும் அவனைத் தெரியும். பார்த்ததும் சிவசிவ…. என்பார்கள். பதிலுக்கு அவனும் சொல்வான். கோயிலின் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடிவிட்டானானால் சுற்றிலும் நடப்பது தெரியாது. நிர்மலமான மனதில் சுடர்விடும் பொட்டொளி அகன்ற ஜோதியாய் விரிந்து அவனை உள்ளிழுத்துக் கொள்ளும். அவனுள் உருவாகி, அதனுள் அவன் நிறைந்து பாலிலிட்ட சர்க்கரையாக கலந்து ஒன்றுமற்று போய்விடுவான்.
அம்மா இழுத்து வந்தாளா அல்லது அதுவே ஈர்த்ததா…… அம்மா அவளாக இழுத்து வரவில்லை. அவள் கருவி…… கருவிகள் தன்னாலியங்கா….. இயக்க ஒரு விசை வேண்டும். அவ்விசை ஆட்டுவிக்க அவள் ஆடினாள். ஆக அதுவேதான் ஈர்த்தது. வளர்ந்த பாதங்கள் பிரகாரத்தரையில் பதிய, பதிய ஆண்மையும், அமைதியும் அவனுள் நிறைந்தன. நிறைகுடம் போல் அவன் தளும்பாதிருந்தான்.
கீழ் வீட்டுப்பெண் கல்லூரி மாணவி. பக்கவாட்டுப் பகுதியிலிருக்கும் கொடியில் துணி உலர்த்த வருவாள். உலர்த்தியபடியே படியிறங்கும் அவனை குறுகுறுவென்று ஈர உடுப்புக்குப் பின்னாலிருந்து பார்ப்பாள். தூயபொன்னாய் மிளிரும் முகத்தைப் பார்க்க சட்டென சிலிர்த்துப் போகும்.
‘பெண்மையை கிளர்ந்தெழ செய்யும் இந்த மனிதனுக்கு ஆன்மீகம் தேவையா……’என்று அவள் எண்ணிக் கொண்டாள்.
ஒருமுறை அவனும் எதேச்சையாக பார்க்க அவளுக்கு விதிர்விதிர்த்து விட்டது. அவன் இயல்பாக புன்னகைத்து நகர்ந்தான். அதனை எடுத்துச் செல்லவில்லை. புன்னகைக்க அவனுக்குப் பிடித்திருந்தது. உணர்வுகளிலே அது நல்லுணர்வு. அவ்வுணர்வை வெளிப்படுத்தும் போது ஆன்மா புத்துணர்ச்சி அடைவதாக அவன் நம்பினான். அதற்காக கண்டதற்கெல்லாம் புன்னகைக்கவில்லை. மனமிளகும் சமயம் அது வாய்த்து விடுகிறது. இப்போது அப்படித்தான் நிகழ்ந்தது. அவளின் மருட்சி குழந்தைத்தனமாய் இருந்ததில் மனம் இளகிவிட்டது. அவளோ நின்ற இடத்தில் கனவுகண்டு கொண்டிருந்தாள்.
மழை வரும் போலிருந்தது. சாயரட்சை முடிந்ததும் எல்லோரும் அவசரமாய் கோயிலை விட்டு வெளியேறுவதில் முனைப்புடன் இருந்தனர். அவன் தெற்கு கோபுர வாசலோரமிருந்த மண்டபத்தில் அமர்ந்து அடுத்த நொடி ஆனந்தத்தை உள்வாங்கக் காத்திருந்தான்.
“மழை வர்றாப்ல இருக்கே. கெளம்பலையா……?”
ஒருவர் போகிறபோக்கில் கேட்டுவிட்டு எட்டி நடையைப் போட்டார்.
சன்னத்தூறல்கள் பெருகி பெருந்தூறல்களாய் விழுந்ததை அவன் ஆச்சரியம் தேங்கிய விழிகளோடு பார்க்கத் தொடங்கினான். இயற்கையை ரசிக்க மிகவும் இஷ்டம்.
அறை ஜன்னல் வழியாக அந்தப்புறம் பார்த்தால் பச்சைப்பசேலென்ற வயல்வெளி பட்டுப்பாய் விரித்தது போல மின்னும். அதன் அழகில் லயித்துப் போய்விடுபவன் சிலசமயம் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பான். கண்கள் பார்த்தபடி இருக்க சிந்தனை ஒருமுகப்பட்டு போகும். சிந்தாமல், சிதறாமல் குவியும் மனதுக்கு வயல் வெளி ஒரு தூண்டுகோல். ரசிக்கும் நிலையிலிருந்து அவன் மேலே, அதற்கு அப்பாலே போயிருப்பான்.
“அதெப்படி உட்கார்ந்தவுடனே மனசு குவிஞ்சிடுமா…… நம்பற மாதிரி இல்லையே. நானும் தியான வகுப்புக்குப் போயிருக்கேன். கண்ணை மூடின உடனே நினைப்பு எங்கெல்லாமோ சுத்தும். பத்து நிமிஷம் கூட தாக்குப்புடிக்க முடியாது. பயிற்சி பண்ணினாலொழிய வராதுங்கறாங்க. உனக்கெப்படி வந்துச்சு. அப்படியே சிலையாட்டம் உட்கார்ந்திருக்க….”
அம்மா அவனை நோகடிக்கும் நோக்கத்தில் ஒருமுறை குத்தலாக கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாதபோது தர்க்கத்துக்கு இடம் கொடுப்பானேன். தவிர பார்க்கும் மனிதரெல்லாம் பரம்பொருள் அவனுக்கு. வினா தொடுக்கவும், விளையாட்டு காட்டவும் அவனை அசைப்பதற்குதான். அவனா அசைவான். கோடியில் ஒருத்தனாயிற்றே.
மணி அடித்தது. உள்ளே சென்றபோது அம்மா பெயர், நட்சத்திரத்தை அர்ச்சகரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று அவனுக்குப் பிறந்தநாள். வருடம் தவறாமல் அவன் பெயரில் அர்ச்சனை செய்து விடுவாள்.
கண்டதும் மெலிதாய் புன்னகைத்தாள். அவன் கண்களை மூடிக் கொண்டான். சற்றைக்கெல்லாம் குளிர்ந்த விரல் நெற்றியில் பட உடல் சிலிர்த்தது. அக்குளிர்ச்சி ஆன்மாவைத் தொட்டது. கண்கள் தானாக விரிந்தன. எதிரே நின்றிருந்தவள் கனிவுடன் நோக்கினாள் .
“இருவத்தஞ்சு நெறைஞ்சிடுச்சு.”
பின்னந்தலையை வருடினாள். அவன் இமைக்காமல் பார்த்தான். அன்றைக்கு அம்மா அவ்வளவு துலக்கமாய் மின்னியது கண்களை கூசச் செய்தது. பழமாய் கனிந்த மனதின் வார்த்தைகள் மிகுந்த பலம் வாய்ந்தவை. கணக்கான வார்த்தைகளானாலும் இதயத்தை துளைத்து விடுபவை.
“நீ ஜெயிச்சிட்டடா…… எப்பவும் இப்படியே நெறைஞ்சிரு……”
அழுத்தமாய் சொன்னவள் கண்கள் கலங்கவில்லை. நல்ல மணமான மல்லிகைப்பூ சூடி பூப்போலிருந்தவள் சற்றுநேரம் அவனையே உன்னித்துவிட்டு திரும்பி நடந்தாள். அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். தூரத்தில் நெல்மணியளவு சுடராய் அம்மா அசைந்து செல்வது தெரிந்தது. ஒளி மிகுந்த தருணங்களை தனதாக்கிக் கொண்டவள்……..தயாபரி…….
***
ஐ.கிருத்திகா – திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது கோவையில் வசிக்கிறார். 1998 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. நாய்சார் சிறுகதைத்தொகுப்பு வாசகசாலையின் சிறந்த சிறுகதைத்தொகுப்பு பரிசு பெற்றது. மின்னஞ்சல்: kiruthigaiyyappan@gmail.com

