கே.ரவிஷங்கர்
இரவு மணி 10.30. தன்னுடைய சின்ன ஹவுஸிங் போர்ட் குடியிருப்பிலிருந்து அந்தப் புதிய நவீன பதினான்கு மாடிக் குடியிருப்பை அண்ணாந்துப் பார்த்தாள் எஸ்தர் பாக்கியம். பிளாட்டுகளில் அங்கங்கு சின்னச் சின்ன வெளிச்சங்களுடன் கம்பீரமாக நின்றிருந்தது. தினமும் இரவில் தூங்கப் போவதற்கு முன் அதைப் பார்ப்பாள். பார்த்தவுடன் சந்தோஷம் பரவும். அடுத்தக் கணம் அமானுஷ்யமாகத் தோன்றி பயமுறுத்தும்.
என் ஆண்டவர் பரிசுத்த ஏசுவே உன்னை ஜபிக்கிறேன். உமது பேரொளியின் அருட்சுடர் உன் மகன் டேவிட் மீது ரட்சையாகக் காக்கட்டும். ஆமென்…! சிலுவைக் குறிப்போட்டுக் கொண்டு உள்ளே சென்றாள். அதே சமயம் அடுக்ககத்தின் ஏழாவது மாடி வீட்டின் விளக்குகள் படக்கென்று அணைந்து இருட்டாகியது.
மறு நாள் காலை மணி ஏழு. ’அனுராகவர்ஷினி’ அடுக்ககம். ”படக்” ஏழாவது மாடி லிப்ட்டின் கதவு பலமாகச் சாத்தப்படும் சத்தமும் கூடவே ஏதோ பொத்தென்று தரையில் விழுந்துச் சிதறி உடையும் சத்தமும் கேட்டு ஓடி வந்தாள் திருமதி லலிதா ஹரன். 42ஆம் நம்பரில் குடியிருக்கும் பிளாட்வாசி.
பார்த்ததும் அதிர்ச்சியில் வாயைப் பொத்தியபடி வெடவெடத்துப் போனாள். மூடிய லிஃப்ட் கதவுக்கு வெளியே பிளாட் செக்யூரிட்டி இருபத்தி நான்கு வயது இளைஞன் டேவிட் குப்புற விழுந்து நினைவில்லாமல் கிடந்தான். மண்டையின் பின் பக்கம் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்திருந்தது. அருகே காரிடர் கைப்பிடிச் சுவரில் வைத்திருந்த பூந்தொட்டி உடைந்துக் காய்ந்த மண் துகள்கள் நாலாப் பக்கமும் சிதறி இருந்தது.
லலிதா தகவல் சொல்ல விரைவாக அங்கு வந்தார் வளாகச் செயலாளர். விஷயம் எல்லோருக்கும் தெரிந்துப் பரபரப்பு ஆகாமல் பார்த்துக் கொண்டார். சிசிடிவி இயங்காமை, லிஃப்ட் சர்வீஸ் இரண்டும் சில மாதங்கள் சரி பார்க்கப்படாமல் இருந்த காரணம். ஏழு அல்லது எட்டுப் பிளாட்வாசிகளே அங்கு வந்தார்கள். டேவிட்டின் தாயார் எஸ்தர் பாக்கியம் தகவல் அறிந்து ஓடோடி வந்து பார்த்துக் கதறி அழுதாள். அங்கு வீட்டு வேலை செய்பவர். இடது மார்பில் கை வைத்தபடி விழுந்திருக்கிறான். ஓ கர்த்தாவே! டேவிட்டை கைவிட்டு விட்டீர். அவனைப் பற்றிய தினக் கவலை நிஜமாகிவிட்டது.
அடுத்த அரைமணி நேரத்தில் ஆம்புலன்ஸ் டேவிட்டை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது. டேவிட் ஐசியூவில் நினைவு இல்லாமல் இருந்தான். மாலையில் போலீஸ்காரர் ஒருவர் வந்தார்.
“போலீஸா? கர்த்தரே!”, எஸ்தர் கவலையானாள்.
போலீஸ் சந்திரசாமி எஸ்தரிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டார். டேவிட்டுக்கு நினைவு வரும்போது அழைக்கச் சொன்னார். முதல் கட்ட போன் விசாரணையில் டேவிட்டை யாரோ பிடித்துத் தள்ளிய மாதிரி தெரிந்தது. கொலை முயற்சியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்திருக்கிறது. முக்கியமாகக் காலையில் எதற்கு டேவிட் ஏழாவது மாடிக்கு வந்தான் என்பது லலிதாவிற்குத் தெரியவில்லை. யாருக்குமே தெரியவில்லை. நேரில் போய்த் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று நேரம் குறித்துக் கொண்டார்.
டேவிட் சர்ச் ஊழியம் தவறாமல் செய்யும் அப்பாவி ஆச்சே. இவனைக் கொலைச் செய்யும் அளவுக்கு எனக்குத் தெரியாமல் யாரிடம் பகை? சமீபமாக வீடு பிடித்துக் கொடுக்கும் வேலைப் பார்ப்பதாக அரசல்புரசலாகத் தெரிய வந்தது. கர்த்தரின் கிருபையில் கண் முழித்தவுடன் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைத் தேடச் சொல்ல வேண்டும். கொலை முயற்சி என்பதால் டேவிட் பற்றிய முக்கியமான விஷயத்தைப் போலீசிடம் சொல்லவில்லை.
மறு நாள் நினைவு வந்த போது வாய்க் குழறிப் பேசியபடி இருந்தான். சந்திரசாமி கவனமாக துப்பு துலக்கம் செய்ததில் முக்கியமாகக் கவனத்தை ஈர்த்தது ‘உடைக்க ராடு, மேடம் வெயிட்டிங், ஒகேன்னா ஜிபே, மேல அனுப்பனும் லூர்து,மம்மிக்கு பிடிக்கல’ ஆகிய சொற்கள்.
எதாலும் தாக்கப்பட்டு விழுவில்லை என்று மருத்துவ அறிக்கைத் தெளிவாகச் சொல்லியது. தள்ளிவிடப்பட்டிருக்கிறானா? லூர்து இங்கு இன்னொரு செக்யூரிட்டி. எத உடைக்கனும்? யார மேல அனுப்பனும்? அதுக்கு லூர்தா? எது மம்மிக்கு பிடிக்கல? எஸ்தரிடம் தீவிர விசாரணை நடத்தினார். எஸ்தரும் பீதியாகி கொலை முயற்சி விஷயத்தை மெதுவாக நம்ப ஆரம்பித்தார். டேவிட் விஷயம் பின்னுக்குப் போயிற்று.
அன்று ஏன் ஏழாவது மாடிக்கு டேவிட் போனான்?
லூர்தும் தெரியாது என்றான். அன்று லலிதாவின் புகை மூட்ட ஞாபகத்தின்படி சம்பவம் நடந்த அடுத்தத் தருணத்தில் லிஃப்ட் கீழ் தளத்திற்குப் போய் இருக்கிறது. இன்னொரு சாட்சியத்தின்படி மற்றொரு செக்யூரிட்டி லூர்து இரண்டில் ஏறி பத்திற்குப் போய்ப் பிளாட்வாசிகளின் குசுகுசுப் பேச்சுச் சத்தம் கேட்டு மீண்டும் ஏழுக்கு வந்திருக்கிறான். அன்றைக்கு அவனுக்கு டூட்டி கிடையாது. ஏதோ மர்மம் இருக்கிறது. சீனியர் சிட்டிசன் பிளாட்வாசி “லிஃப்ட்னா மேலேயும் கீழேயும் போயிட்டுதான் வரும்”, சிரித்தப்படி சொன்னார்.
ஒரு வார விசாரணை மற்றும் துப்பு துலக்கியதில் எவ்வளவு முயன்றும் விடை கிடைக்கவில்லை. துண்டுத்துண்டாக விஷயங்கள் இணைக்க முடியாமல் இருந்தது. லூர்தையும் இணைக்க முடியவில்லை. முக்கியமானது எதற்கு ஏழாவது மாடிக்கு டேவிட் வந்தான். அவனுக்குக் காலையில் முக்கியமான தண்ணீர் மோட்டர் டூட்டி உண்டு.
இரண்டு நாள் கழித்து மீண்டும் ராகவர்ஷினி வளாகத்திற்கு வந்தார் சந்திரசாமி. லூர்துப் பற்றிய சின்ன விஷயம் கிடைத்தது. இன்னொரு பிளாட்வாசியிடம் மீண்டும் தீவிர விசாரணை ஆரம்பித்தார். அதே தளத்தில் இருப்பவர்.
“லூர்து எதுக்கு வந்தான்?”
“நான்தான் வரச் சொன்னேன். அவனுக்குப் பிளம்பிங் & எலெக்ட்ரிகல் வேலைத் தெரியும். பிரைவேட்டா பண்ணா அசோசியேஷன் பர்மிஷன் வாங்கனும். அதனால பர்மிஷன் வாங்கிட்டுச் சாயந்திரம்தான் வரேன்னு சொன்னான். மார்னிங்கல நிறைய வேல இருக்கும் செய்ய முடியாது”
“வீடு பிடிச்சுக் கொடுக்கப் புரோக்கர் வேல செய்வாங்களா ரெண்டு பேரும்?”
“ஆமாங்க செய்வாங்க. ஆனா டீடெயிலா தெரியாது”
“டேவிட் ஏன் இவ்வளவு காலைல இந்த ஃபுளோருக்கு வந்தான்னு சொல்ல முடியுமா?”
“தெரியல சார். கார்த்தால எல்லோரும் பிசியா இருப்பாங்க. பனிக்காலம் வேற”
“லூர்துவும் டேவிட்டும் கத்தி சண்டைப் போட்ட சத்தம் கேட்டுதா? லிஃப்ட் சாத்தின அடுத்த நிமிஷம் யாரோ தடதடன்னு ஓடறச் சத்தம் கேட்டுதா? அய்யோ அம்மா குரல்? ”
“இல்லைங்க. ஏதோ பொத்துனு ஏதோ விழறச் சத்தம் கேட்டது. பெரிசா கேர் பண்ல”
“எதிர் வீடு ஏன் பூட்டி இருக்கு. அன்னிக்கு இருந்தாங்களே”
“ஊருக்குப் போய் இருக்காங்க”
“ஏன் இந்த ப்ளோர்ல நாலு வீடு காலியா இருக்கு. எப்பக் காலியாச்சு”
“இப்பதான் 10-15 நாள்ல நடந்த விஷயம். அவங்க ஓன் ரீசன் சார்”
“டேவிட் ….லூர்து யாரவது இவங்க ஷிப்டிங்க்கு ஹெல்ப் பண்ணினானா?”
“ரெண்டுப் பேரும் பண்ணாங்க”
“ரெசிடென்ஸ் கூடச் சண்டைப் போட்டாங்களா?”
“அப்படி ஒன்னும் இல்ல சார். டீசண்டான ரெஸிடெண்ட்ஸ்”
விசாரணை முடிந்தது. உள்ளுணர்வில் இது கொலை இல்லை என்று தெரிந்து கொண்டார். டேவிட் ஏன் காலையில் ஏழாவது மாடிக்கு போனான்? யாருமே நேரடியாகப் பார்க்கவில்லை. லிஃப்டில் டேவிட் கூட யாரும் பிரயாணம் செய்த மாதிரித் தெரியவில்லை. பிளாட்வாசிகளின் உலகமே அலாதியானது. கதவை மூடிக் கொண்டால் வெளி உலகமே தெரியாது. சிசிடிவியும் வேலைச் செய்யவில்லை.
டேவிட் அடிப்பட்ட மூன்றாவது நாள் இறந்து போனான். கேஸ் விஷயத்தில் எதுவும் துப்புக் கிடைக்காமல் நொந்துப்போய் ஃபைலை எப்போது மூடலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் குழறியது எல்லாம் நினைவுப் பிழறலில் என்று தெரிய வந்தது. லூர்திற்கு இம்மியும் தொடர்பு இல்லை என்று தெரிந்தது.
ஏழாவது தளத்தில் இறங்கிக் கதவை அழுத்திச் சாத்தும் போது லேசாகப் படப்படப்பு வந்து மாரைப் பிடித்துக் கொண்டு விழுந்துவிட்டான் என்று பொது அறிவில் முடிக்கப்பட்டது. எஸ்தர் உடைந்துப் போனாள். தினக் கவலை நிஜத்தில் நடந்துவிட்டது. ஏன் ஏழாவது மாடிக்குப் போனான்? பாதுகாப்பாக இருப்பானே? கர்த்தர் அவனை அங்கு அழைத்திருக்கிறார். எஸ்தர் லேசாக விசும்பினாள்.
டேவிட் மரணம் நிகழ்ந்து ஒரு மாதம் ஓடிப் போய் ஒரு நாள் காலை ஆறு மணி. 9வது மாடி 51ஆம் வீட்டின் காலிங் பெல்லை அடித்தாள் எஸ்தர். கதவைத் திறந்தாள் விஜயலஷ்மி.
”இந்த வீட்ல ஒல்ட் ஏஜ்டு லேடிக்கு நர்சிங் கம் ஹெல்பர் வேணும்னு சொல்லி இருந்தீங்களாம். லூர்து சொன்னான். அதான்”
“ நா யாருன்னு ……?”
“தெரியும்… தெரியும்”
“ரொம்ப அன்பார்சுனேட் இன்ஸிடெண்ட்ம்மா. ஏதோ ஹார்ட் பிராப்ளம்னு சொன்னாங்க. எங்களுக்கே ஒரு வாரம் கழிச்சுதான் தெரியும்”
“ஆமாங்க. அதனாலேயே லிஃப்ட்லதான் போவான். முதல் மாடி ஈபி ஆபீசுக்குக் கூட லிஃப்ட்லதான் போவான். ஹார்ட் பிராப்ளம்னா எங்கேயும் வேலக் கொடுக்க மாட்டாங்க. உண்மையா நடத்துச்சி. இங்கதான் சொல்லாமா சேர்ந்தான். நானும் சொல்லல. கர்த்தர் கிருபை எப்போதும் உண்டு”
“என்ன பண்றது விதி எஸ்தர்?”
“நல்லா இருந்தாங்களே இவங்க. காலங்காத்தால வாக்கிங்லாம் தனியாப் போவாங்களே”
“85 வயசாகுது. ஒரு மாசமா வாக்கிங் போகல. எப்பவும் ஆக்டிவ்தான். இப்போதான் டேவிட் விழுந்த தை வெள்ளிக்கிழமை மத்தியானம்தான் எங்க அக்கா வீட்டுக்குப் போனாங்க. டிமென்ஷியா பிராப்ளம் ஆரம்பிச்சுருக்கு. என்னையே ஞாபகம் இல்லாம முழிக்கிறாங்க. ஆனா வாக்கிங் போனம்னுத் துடிக்கிறாங்க. தனியா அனுப்ப முடியாது”
ஜானகி எஸ்தரைப் பார்த்து வாஞ்சையாகப் புன்னகைத்தாள்.
“இன்னிக்கே ஜாயின் பண்ணிடறேன். தோ… இப்பவே கூட்டிட்டுப் போறேன்.”
ஜானகியும் ரெடியாக இருக்க இருவரும் வாக்கிங் கிளம்பினார்கள். அடுத்தப் பத்து நிமிடத்தில் வாக்கிங் போகாமல் பிளாட்டிற்குத் திரும்பினார்கள்.
“வாக்கிங் போகலயா?”, விஜயலஷ்மி கவலையுடன் கேட்டாள்.
“போலம்மா. லிஃப்ட் கிட்ட நிற்கும் போதும் போகும் போதும் வரும் போதும் ஏதோ யோசிச்சு யோசிச்சு என் கிட்ட திரும்பத் திரும்ப ஏதோ கேட்டாங்க. எனக்குப் புரியல. கடைசில வாக்கிங் வேணாம்டாங்க”
“என்ன கேட்டாங்க?”
“மேல போனானே மூடிட்டான…! தை வெள்ளிக் கிழமை வேல இருக்கு. அப்பறம் சத்தம் கேட்குது…வரான் மூடிட்டான்… மூடல. நடுவுல லிஃப்ட் ஏறின ஒரு பையனுக்குத் தேங்கஸ்னாங்க”
“ஆமா எஸ்தர். ஹாஸ்பிடல் லிஃப்ட்லயும் இதேதான் கேட்டாங்க”
“லிஃப்ட்ல மாட்டி இருக்காங்களா. முன்ன தனியா வாக்கிங் போவங்க இல்ல”
“ஆமாம் போவாங்க. கஸ்ட்டுங்க….குடித்தன பிளாட்காரங்க சில பேர் லிஃப்ட் கதவத் தொறந்துவுட்டுட்டுப் போய்டுவாங்க. கீழ இருக்கறவங்க டென்ஷனாகிக் கத்துவாங்க. யாரு முச்சிரைக்க மேல போய் சாத்தறது. டேவிட்டோ இல்ல லூர்துவோ படி ஏறி மேல போய் மூடி சரி பண்ணுவாங்க. ஏழாவது மாடிக்காரங்க இம்சையானவங்க ”
“ஓ….. ஜீசஸ்” ஜானகியைப் பார்த்துச் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள் எஸ்தர். கண்களில் நீர் பனிக்க மெலிதாக விசும்பினாள். பார்த்ததும் ஜானகி முகம் சுருங்கிச் சற்று சோகமாகி “கவலைப்படாத மூடிட்டு வந்துருவான்”, எஸ்தர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
***
கே.ரவிஷங்கர் – சென்னையில் வசிக்கிறார். அச்சு ஊடகங்களிலும், இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக கதைகள் எழுதி வருகிறார். “பார்க்காமலே” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு சென்ற ஆண்டு வெளியானது. மின்னஞ்சல்: http://ravishankark57@gmail.com

