அ.முனவர் கான்
“நாகாலாந்து – வடகிழக்கின் அன்புக்குரியவள்”, என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது. வரலாற்று ரீதியாக, கலாச்சார ரீதியாக பல மாற்றங்கள் அங்கு ஏற்பட்டபோதிலும், நாகா மக்களின் இலக்கியப் படைப்புகள் அவர்களின் வாய்மொழிப் பாரம்பரியங்களையே மூலமாகக் கொண்டுள்ளன. இந்த வாய்மொழிப் பாரம்பரியங்களே அவர்களின் பழங்குடியின அறிவு, கலாச்சார அடையாளம், நம்பிக்கைகள், ஆசாரங்கள் மற்றும் திருவிழாக்களின் கருவூலமாக விளங்குகின்றன. நாகா பழங்குடியினர் பற்றிய மிகப் பழமையான இலக்கியங்களில் 1896-ஆம் ஆண்டு வெளிவந்த சர் ஜேம்ஸ் ஜான்ஸ்டோனின் “நாகா மலைகளும் மணிப்பூரும்” என்ற நூல் முக்கியமானது.
நாகா மக்களைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு மிகக் குறைவு. நாகாலாந்தின் முக்கியப் பழங்குடி இனங்களில் ஒன்றான ஆங்காமி (Angami) மக்கள், தங்களின் தனித்துவமான விவசாய முறைகள், இயற்கை, ஆன்மீகம்,விசித்திரமான சடங்குகளுக்காக உலகப் புகழ்பெற்றவர்கள். மலைப்பகுதிகளில் வாழும் இவர்கள் நிலத்தைச் செதுக்கி, படிக்கட்டுகள் போன்ற வயல்களை அமைத்து நெல் சாகுபடி செய்வதில் வல்லவர்கள். இயற்கையோடு இயைந்த இவர்களின் விவசாய முறை உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆங்காமி மக்களின் தாய்மொழி தென்யிடி (Tenyidie) ஆகும். எழுத்துவடிவம் இல்லாத காலத்திலும் இவர்களின் வரலாறு, வாய்மொழிப் பாடல்கள் மூலமும், தலைமுறை தலைமுறையாக பாட்டிமார்கள் கூறிய கதைகள் மூலமுமே கடத்தப்பட்டது. கிராமங்கள் பல குடும்பக் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவர்கள் வழிகாட்டுவர்.
பிப்ரவரி மாதத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ‘சேக்ரென்யி’ (Sekrenyi) என்பது தூய்மைப்படுத்தும் திருவிழாவாகும். கடந்த காலப் பாவங்களைக் கழுவி, உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் கிராமம் முழுவதும் ‘கென்னா-ஜென்னா’ எனப்படும் கட்டுப்பாட்டுக் காலம் விதிக்கப்படும். அந்நாட்களில் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது; கிராமத்தை விட்டு வெளியேறக் கூடாது; அந்நியர்கள் கிராமத்திற்குள் வரக் கூடாது.
பண்டைய காலத்தில் ‘தலை கொய்யும் மரபு’ நிலவியது. எதிரியின் தலையைக் கொய்வது வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது (இது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் நிறுத்தப்பட்டது). அடர்ந்த காடுகள், பாறைகள், ஆறுகள் மற்றும் பெரிய மரங்களில் சக்திவாய்ந்த ஆவிகள் வசிப்பதாக இவர்கள் கருதுகின்றனர். காட்டில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு முன்போ அல்லது வேட்டையாடும் முன்போ ஆவிகளிடம் அனுமதி கேட்கும் சடங்குகளைச் செய்கின்றனர். முன்னோர்களின் ஆன்மாக்கள் கிராமத்தையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்பதாக நம்பி, அறுவடை காலத்தில் அவர்களுக்கு உணவைப் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். நாகா கலாச்சாரத்தில் ஆவிகள் என்பவை வெறும் பயமுறுத்தும் உருவங்கள் அல்ல; அவை இயற்கையின் சமநிலையைப் பாதுகாக்கும் சக்திகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆங்காமி நாகா கலாச்சாரம் என்பது வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல, நவீன உலகிற்கு அவர்கள் கற்றுத் தரும் இயற்கையைப் பேணும் வாழியல் முறையுமாகும்.
ஈஸ்டரின் கைரே (Easterine Kire) சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு முக்கிய நாகாலாந்து எழுத்தாளர், கவிஞர் மற்றும் கதைசொல்லி ஆவார். வடகிழக்கு இந்தியாவின், குறிப்பாய் நாகாலாந்தின் வாய்மொழி மரபுகளையும், வரலாற்றையும், பண்பாட்டையும் ஆங்கில இலக்கிய உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றதில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு.
1959-இல் நாகாலாந்தின் கோஹிமாவில் ஆங்காமி நாகா பழங்குடி குடும்பத்தில் பிறந்தார். ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாகாலாந்தில் நிலவிய அரசியல் பதற்றங்கள் காரணமாக, பின்னர் நார்வே நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். 2003-இல் வெளியான இவரின் “A Naga Village Remembered” என்ற நாவலே, நாகாலாந்தைச் சேர்ந்த ஒருவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் நாவலாகும்.
2015-ஆம் ஆண்டு வெளியான இவரது புகழ்பெற்ற நாவலான “ஆறு உறங்கும்போது” (When the River Sleeps), மதிப்புமிக்க “The Hindu Literary Prize” விருதைப் பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் வடகிழக்கு இந்திய எழுத்தாளர் இவராவார். “The Spirit-Nights” நாவலுக்காக 2024-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இவரது “ஆறு உறங்கும்போது” நாவல் நாகாலாந்தின் ஆங்காமி மக்களின் மாயாஜாலத்தின் மீதான நம்பிக்கை பற்றியதும் ,விசித்திரமான விலங்குகளைப் பற்றியதுமாகும் . “Bitter Wormwood” – நாகாலாந்து சுதந்திரப் போராட்டத்தாலும் ,இன மோதல்களாலும் சாதாரண மக்கள் அடைந்த வடுக்களைப் பேசும் நாவல். “Don’t Run, My Love” – பழங்குடி நாட்டுப்புறக் கதைகளையும், ஆன்மீகச் சக்திகளையும் மையமாகக் கொண்ட மாயாஜால நாவல். “A Respectable Woman” – இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கோஹிமாவின் மறுசீரமைப்பு மற்றும் சமூக மாற்றங்களைப் பதிவு செய்யும் படைப்பு.
நாகா மக்களின் எழுதப்படாத வரலாற்றை, பாட்டிகள் கூறிய கதைகள் வழியே எழுத்துவடிவமாக மாற்றிப் பாதுகாத்துள்ளார் கைரே. காடுகள், மிருகங்கள், ஆவிகள் ,மனிதர்களுக்கு இடையேயான ஆழமான தொடர்பை தனது நாவல்களில் நுட்பமாக வெளிப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் எழுதினாலும், தன் தாய்மொழியான தென்யிடி சொற்களையும் மந்திர ஒலிகளையும் கவிதைகளிலும் கதைகளிலும் இயல்பாகப் பயன்படுத்துகிறார்.
நாகாலாந்தின் இயற்கை, மாயாஜாலம், ஆன்மீகம் ஆகியவற்றுடன் அங்குள்ள வாழவியலையும், கலாச்சாரத்தையும், அவர்களின் போராட்டங்களையும் உலகளவில் கொண்டு சேர்த்ததில் ஈஸ்டரின் கைரே மிக முக்கியமான பண்பாட்டுத் தூதுவராகக் கருதப்படுகிறார். கைரே நாவல்கள் மட்டுமின்றி, நாகாலாந்தின் நாட்டுப்புறக் கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பல சிறுவர் கதைகளையும் எழுதியுள்ளார்.
ஈஸ்டரின் கைரேவின் ஜாஸ் கவிதை (Jazz Poetry) என்பது ஒரு நாகா கதைசொல்லியின் அடையாளமும், மேற்கத்திய இசையின் தன்னிச்சையான ஆன்மாவும் ஒன்றிணையும் இடமாகும். இது வெறும் இசைக்கு பின்னால் கவிதை வாசிப்பது மட்டுமல்ல; ஒரு இசைக்குழுவில் பாடப்படும் கவிதை வரிகளும் மற்றுமொரு இசைக்கருவியாகவே செயல்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். 2013-இல் நார்வேயில் அவர் ‘ஜாஸ்-அண்ட்-ரெய்ன்’ (Jazzandrain) என்ற இசைக்குழுவை ஏற்படுத்தி, நாகா பழங்குடியினரின் தாய்மொழி தாளங்கள் மற்றும் வாய்மொழிக் கதைகளை மேலைநாட்டின் ஜாஸ் இசையோடு இணைத்து கவிதைகளாக வாசித்து வருகிறார். அவரது படைப்புகள் நாகா மக்களின் வாய்மொழி மரபுகளுக்கும், ஐரோப்பிய ஜாஸ் கிளப்புகளின் நவீன சூழலுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன.
நாகா வாய்மொழி மரபும் ஜாஸ் இசையும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டிருப்பதாக கைரே நம்புகிறார். கிராமப்புறங்களில் ஒரு கதைசொல்லி, கேட்கும் மக்களின் எதிர்வினைக்கு ஏற்ப நாட்டுப்புறக் கதையைச் சற்றே மாற்றிச் சொல்வார். ஜாஸ் இசைக்கலைஞர் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப தனது இசையின் போக்கை மாற்றுவார். கைரே மேடையில் பாடும்போது, ஒரு சாக்ஸாஃபோன் சத்தத்திற்கோ, டபுள் பேஸ் கருவியின் தாளத்திற்கோ அல்லது கிதாரின் மீட்டலுக்கோ ஏற்ப தனது கவிதை வரிகளை மாற்றிக் கொள்வார். இது ஒரு பழங்குடி முதியவர் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நடனத்தைப் போன்றது.
ஆங்கிலத்தில் பாடினாலும், கைரே தனது தாய்மொழியின் இனிமையான தாளத்தை மாற்றிக்கொள்வதில்லை. அவர் அடிக்கடி தென்யிடி மொழி மந்திரங்கள் அல்லது ஒலிகளை ஜாஸ் இசையோடு இணைக்கிறார். இது பழங்காலத்து ஒலியும் நவீன இசையும் கலந்த ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.
அவரது ஜாஸ் கவிதைகள் வெறும் கற்பனையானவை அல்ல; அவை கதைகளைச் சொல்கின்றன. நாகாலாந்து மோதல்களில் சிந்தப்பட்ட இரத்தத்தைப் பற்றிய கதைகள், ஒரு சோகமான இசையோடு ஒலிக்கின்றன. காடுகளில் வசிக்கும் ஆவிகள் அல்லது “மனித சிங்கம்” / “மனிதப் புலி” பற்றிய கதைகள் ஓர் அமானுஷ்யமான சூழலை உருவாக்குகின்றன. நார்வேயின் குளிரில் வாடும்போது கோஹிமாவின் கதகதப்பைத் தேடும் ஒரு புலம்பெயர்ந்த கலாச்சாரவாதியின் ஏக்கங்களையும் இக்கதைகள் விவரிக்கின்றன.
ஜாஸ்-அண்ட்-ரெய்ன் குழுவில் இசையுடன் இந்த கதைகளை அவர் சொல்லும்போது, நாகா பழங்குடி முரசின் இதயத்துடிப்பு போன்ற தாளத்தை டபுள் பேஸ் உருவாக்குகிறது. மிருகத்தின் உறுமலாகவோ, காட்டின் சத்தமாகவோ அல்லது கைரே விவரிக்கும் ஆவிகளின் குரலாகவோ சாக்ஸாஃபோன் ஒலிக்கிறது. தாளத்தோடு பேசுவது, மந்திரங்களை உச்சரிப்பது, மெல்லிசையாகப் பாடுவது என கைரேவின் குரல் மாறிக்கொண்டே இருக்கும். தனது குரலை மென்மையான பேச்சிலிருந்து, ஆக்ரோஷமான உச்சரிப்புகளுக்கு மாற்றி, அந்த உருமாற்றத்தை நேயர்களின் கண்முன்னே கொண்டு வருகிறார்.
கைரேவுக்கு, ஜாஸ் கவிதை என்பது பழங்குடி வரலாற்றை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு வழியாகும். நாகா கதைகளை ஜாஸ் இசையோடு இணைப்பதன் மூலம், வடகிழக்கு இந்திய வரலாற்றைப் படிக்காதவர்களுக்கும் கொண்டு சேர்க்கிறார். இது ஒரு குறிப்பிட்ட மக்களின் துயரத்தை அனைவரும் உணரக்கூடிய ஒரு “ஆன்ம இசையாக” மாற்றுகிறது.
“ஜாஸ் இசை நாகா கவிதைகளுக்கு ஒரு சரியான ஊடகம், ஏனென்றால் அது சொற்களைச் சுவாசிக்க அனுமதிக்கிறது. அது கவிதையை ஒரு பக்கத்திற்குள் சிறைபிடிப்பதில்லை; அதை பறக்க விடுகிறது.”– என்கிறார் ஈஸ்டரின் கைரே.
ஈஸ்டரின் கைரேவின் படைப்புகளில் மிகவும் வசீகரிக்கும் அம்சம் மனிதன் சிங்கம் அல்லது புலியாக மாறும் கதைகள். இது வெறும் கற்பனையல்ல, நாகாலாந்தின் ஆங்காமி மற்றும் பிற பழங்குடி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும். “When the River Sleeps” , “The Spirit-Nights” போன்ற நாவல்களில் இந்த கருப்பொருள் விரிவாகக் கையாளப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் Werewolf (மனித ஓநாய்) இருப்பது போல, ஆங்காமி கலாச்சாரத்தில் மனிதர்களின் ஆன்மா புலி அல்லது சிங்கத்தின் உடலில் தற்காலிகமாக குடியேறும் என்ற நம்பிக்கை மிகவும் பிரபலமானது. காட்டில் உள்ள மிருகத்திற்கும், கிராமத்தில் வாழும் மனிதனுக்கும் இடையே மர்மமான ஆன்மீகப் பிணைப்பு இருப்பதாக ஆங்காமி மக்கள் நம்புகிறார்கள்.
இந்த மனிதர்கள் சாதாரணமாக கிராமத்தில் வாழ்வார்கள்; ஆனால் அவர்களின் ஆன்மா காட்டில் ஒரு மிருகமாக உலவும். காட்டில் இருக்கும் அந்த மிருகத்திற்கு அடிபட்டால், கிராமத்தில் இருக்கும் மனிதனுக்கும் அதே இடத்தில் காயம் ஏற்படும். அந்த மிருகம் இறந்தால், மனிதனும் இறந்துவிடுவான்.
கைரே, இந்த நாட்டுப்புற நம்பிக்கையை ஒரு மாயாஜால யதார்த்தவாத பாணிக் கதைகளாக மாற்றுகிறார். மனிதன் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதவன் என்பதையே இந்த மனிதச்சிங்கம், மனிதப் புலி கதைகள் உணர்த்துகின்றன. அவரது கதைகளில், இவ்வாறு உருமாறும் மனிதர்கள் பெரும்பாலும் காடுகளின் காவலர்களாகவும், தீய சக்திகளிடமிருந்து கிராமத்தைக் காப்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். ஒரு மனிதனாக இருப்பதற்கும், மிருகத்தின் ஆக்ரோஷமான உணர்வுகளைக் கையாளுவதற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கைரே மிக அழகாக விவரிக்கிறார். ஒரு முக்கிய உதாரணம் “Spirit-Nights”. இந்த நாவலில், ஒரு தாய் தனது மகனை ‘மனிதச்சிங்க’ சக்திகளிடமிருந்து காக்க முயற்சிப்பதையும், இறுதியில் அந்தச் சக்தியே எப்படி ஒரு பெரிய ஆபத்திலிருந்து கிராமத்தை மீட்கிறது என்பதையும் கைரே விளக்குகிறார்.
“மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான எல்லைக்கோடு காற்றில் கரையும்போது, உண்மை பிறக்கிறது.”– என்கிறார் கைரே.
நாகாலாந்தின் அடர்ந்த காடுகளையும், அங்குள்ள பழங்குடி மக்களின் மாயாஜாலத்தின் மீதான நம்பிக்கைகளையும் மையமாகக் கொண்ட ஒரு அற்புதமான பயணம்தான் “ஆறு உறங்கும்போது” நாவல்.
நாவல், விலீ (Vilie) என்ற தனிமை விரும்பியான பாரம்பரிய வேட்டைக்காரனின் தேடலையும், அவனது பயணத்தையும் மையமாகக் கொண்டது. 18 வயதில் அவன் தீவிரமாகக் காதலித்த மெச்சுசேனோ என்ற பெண் விசித்திரமான காய்ச்சலால் மரணமடைந்தது அவனது தனிமை வாழ்க்கைக்குக் காரணமாக அமைகிறது. காட்டைத் தன் மனைவியாகக் கருதும் விலீ, தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிலிருந்து எடுத்துக் கொள்பவன். அவனுக்கு விசித்திரமான லட்சியம் ஒன்று உண்டு. நாகாலாந்தின் ஆழமான காடுகளுக்குள் எங்கோ ஓரிடத்தில் “உறங்கும் ஆறு” ஒன்று இருப்பதாக அவன் நம்புகிறான்.
அந்த ஆறு உறங்கும் அந்த ஒரு நொடியில், அதன் அடியாழத்தில் இருக்கும் ஒரு மந்திரக் கல்லை ஒருவன் எடுத்துவிட்டால், அவனுக்கு அளவற்ற சக்திகளும், நினைத்ததெல்லாம் நடக்கும் ஆற்றலும் கிடைக்கும் என்பது ஐதீகம். கல்லை வைத்திருப்பவருக்குப் போரில் வெற்றியையும், வேட்டையில் லாபத்தையும் தரும் தீராத அதிர்ஷ்டம் கிட்டும்; நோய்களைக் குணமாக்கும்; நீண்ட ஆயுளைத் தரும். விலங்குகளுடனும் காட்டின் ஆவிகளுடனும் பேசும் ஆற்றல் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
விலீ சுயநலத்திற்காக அந்த கல்லைத் தேடவில்லை. ஒரு வேட்டைக்காரனாக இயற்கையோடு ஒன்றி வாழும் அவன், அந்த ஆற்றின் ரகசியத்தைக் கண்டறியவே தனது ஆபத்தான பயணத்தைத் தொடங்குகிறான். 51 சிறு அத்தியாயங்களையும் கவித்துவமான தலைப்புகளையும் கொண்ட நாவல் இது. விலீயின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் முக்கியக் கதைப் படிநிலைகளாக நாவலைக் காணலாம்:
விலீ தனது கிராமத்தையும் பாதுகாப்பான சூழலையும் விட்டு ‘உறங்கும் ஆற்றை’ தேடி அடர்ந்த காட்டிற்குள் நுழையும் ஆரம்பக்கட்டம்.
காட்டின் ஆழத்தில் விலீ சந்திக்கும் இயற்கை ஆவிகள், தேவதைகள், ஆபத்தான மாயாஜால உயிரினங்களுடனான சந்திப்புகள்.
‘மந்திரக் கல்லை’ அபகரிக்க நினைக்கும் மனிதர்கள் ,தீய சக்திகளிடமிருந்து தப்பித்து, காட்டின் விதிகளுக்குக் கீழ்ப்படிய விலீ கற்றுக்கொள்ளும் தருணங்கள்.
பல மாதத் தேடலுக்குப் பின் அந்த மர்மமான ஆற்றைக் கண்டறிவது; நீர் உறைந்து நிற்கும் அந்த ஒற்றை நொடியில் ஆற்றின் அடியாழத்திலிருந்து மந்திரக் கல்லை எடுக்கும் பகுதி.
மந்திரக் கல்லைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தாமல், ஆதேவிடம் ஒப்படைத்து ஒரு வேட்டைக்காரனாகத் தன்னைத்தானே உணர்ந்து முழுமையான அமைதியுடன் விலீ வன குடிலுக்கு திரும்பும் இறுதிப்பகுதி.
காடு என்பது வெறும் மரம், செடிகள் அல்ல; அது ஆவிகள், தேவதைகள், ‘மனித சிங்கங்கள்’ மற்றும் ‘மனிதப் புலிகள்’ நிறைந்த ஒரு உலகம். விலீ தனது பயணத்தில் தீய சக்திகளையும், அவனிடமிருந்து மந்திரக் கல்லைப் பறிக்க நினைக்கும் மனிதர்களையும் எதிர்கொள்கிறான். இது வெறும் சாகசப் பயணம் மட்டுமல்ல, விலீயின் உள்மனப் பயணமும்கூட.
காடு அவனுக்குப் பொறுமையையும், இயற்கைக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொடுக்கிறது. காடு ஒரு உயிரற்ற இடமல்ல, அது விலீயுடன் பேசுகிறது. காட்டில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும், மரத்திற்கும் ஒரு ஆன்மா உண்டு என்பதை கைரே மிக அழகாக விவரிக்கிறார்.
நாகாலாந்து மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் சடங்குகள், உணவுப் பழக்கங்கள், விருந்தினர்களை உபசரிக்கும் முறை, அவர்கள் காட்டை மதிக்கும் விதம் ஆகியவற்றை இந்த நாவல் உலகிற்குப் பறைசாற்றுகிறது.
ஈஸ்டரின் கைரே இந்த நாவலில் “Indigenous Knowledge” எனப்படும் பழங்குடியின அறிவை மிக உயர்வாகப் போற்றுகிறார். நவீன உலகம் எதை ‘மூடநம்பிக்கை’ என்று சொல்கிறதோ, அதை ‘இயற்கையுடனான ஆழமான பிணைப்பு’ என்று கைரே காட்டுகிறார். இந்த நாவலைப் படிக்கும்போது, நாமே அந்த அடர்ந்த காடுகளுக்குள் விலீயுடன் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
‘மந்திரக் கல்’ நாவலின் ஆன்மாவாகும். இது வெறும் ஒரு மதிப்புமிக்க கல் மட்டுமல்ல, இயற்கையின் சக்தியையும் ஒரு மனிதனின் மன உறுதியையும் சோதிக்கும் கருவியாகும். இந்த கல்லை அடைவது அத்தனை எளிதல்ல. காட்டின் ஆழத்தில் இருக்கும் அந்த மர்மமான ஆறு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வினாடியில் அந்த ஆறு ‘உறங்கும்’. அதாவது, அதன் சலசலப்பு நின்று, நீர் அப்படியே சிலையாக உறைந்து நிற்கும். அந்த ஒரு நொடியில் ஆற்றுக்குள் கைவிட்டு, அதன் அடியாழத்தில் இருக்கும் கல்லை எடுக்க வேண்டும். ஒருவேளை ஆறு விழித்துக்கொண்டால் (நீர் மீண்டும் ஓடத் தொடங்கினால்), கல்லை எடுக்க முயல்பவர் அந்த ஆற்றோடு இழுத்துச் செல்லப்படுவார் அல்லது அங்கேயே மாயமாகிவிடுவார்.
நாவலில் கைரே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறார்: கல்லை எடுப்பவரின் நோக்கம் தூய்மையாக இருக்க வேண்டும். பேராசை கொண்ட ஒருவன் அந்தக் கல்லை எடுத்தால், அது அவனுக்கு அழிவைத் தரும். நாயகன் விலீ அந்தக் கல்லைத் தேடிச் செல்வது அதன் சக்திக்காக அல்ல; மாறாக, ஒரு வேட்டைக்காரனாகத் தன் கலாச்சாரத்தின் ரகசியத்தை நேரில் காண வேண்டும் என்ற உந்துதலால்தான்.
விலீ தனது பயணத்தின்போது, காட்டின் ஆழத்தில் ஒரு விசித்திரமான மனிதரைச் சந்திக்கிறார். அவர் பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரிடம் ஒரு மர்மமான சக்தி இருப்பதை விலீ உணர்கிறார். அந்த மனிதரின் ஆன்மா ஒரு புலியோடு பிணைக்கப்பட்டிருந்தது. விலீ அவரிடம் பேசும்போது, அந்த மனிதர் காட்டில் நடக்கும் அநீதிகளைப் பற்றியும், காடு எப்படித் தன்னைத் தானே தற்காத்துக் கொள்கிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறார். அவர் விலீக்கு ஒரு எச்சரிக்கையையும் தருகிறார்:
“காடு உனக்கு வேண்டியதைத் தரும், ஆனால் நீ எதை எடுக்கிறாயோ அதற்கு ஈடாக ஒன்றை நீ இழக்க நேரிடும்.” இது விலீயைத் தனது தேடலில் இன்னும் அதிக எச்சரிக்கையாக இருக்கச் செய்கிறது.
காடுகள், மலைகள், உறங்கும் ஆறு ஆகியவை சுய உணர்வும் ஆற்றலும் கொண்டவையாகச் செயல்படுகின்றன. அமைதியற்ற தேஹூமியாக்கள் (இயற்கை ஆவிகள்), காட்டு அரக்கர்கள், விதவை ஆவிகள், இருளின் ஆவிகள், மனிதப் புலிகள் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், இயற்கையை விலீ எந்தளவுக்கு மதிக்கிறான் என்பதைச் சோதித்தறிந்து அவனை வழிநடத்திச் செல்கின்றன. குறிப்பாய், ‘ஜாப்ஸுவோ’ எனப்படும் ஆன்மீக ஆற்றல் கொண்ட பழங்குடிப் பெண்களும், அங்கமி மக்களின் முதன்மை தெய்வமான கெப்பனுவப்ஃபுவும், மீனவரான கனியும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
விலீ இறுதியாக அந்த உறங்கும் ஆற்றைக் கண்டுபிடிக்கிறார். எல்லையற்ற அமைதி நிலவும் அந்த நொடிக் கணத்தில், மிகக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு, ஆற்றின் அடியாழத்திலிருந்து அந்த மந்திரக் கல்லை அவர் கையில் எடுக்கிறார். கல் கையில் கிடைத்ததும் விலீக்கு அளவற்ற சக்தி கிடைக்கிறது. ஆனால், அவர் அந்தக் கல்லின் சக்தியைத் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்த மறுக்கிறார்.
கிராமத்திற்குத் திரும்பும் வழியில் எதிர்பாராமல் சந்திக்க நேரிடும் பல இடர்பாடுகளையும் மூத்தவர்கள் கூறிய அறிவுரைகளின்படி நடந்து மீள்கிறார் . நச்சுத்தன்மை வாய்ந்த மாயாஜால சக்திகள் கொண்டவர்கள் என்பதால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட கிர்ஹுப்ஃபுமியா சமூகத்தின் ஜோதே, ஆதே சகோதரிகளைச் வழிகிராமம் ஒன்றில் சந்திக்கிறார் . அந்த சந்திப்பு ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி வகுக்கிறது . ஜோதே அகால மரணமடைய ஆதரவற்றுப் போன சிறு பெண்ணான ஆதேவை தன் மகளைப் போல் நேசிக்கிறார்; ஆபத்துக் காலங்களில் காப்பாற்றுகிறார். பல சிரமங்களுக்கு இடையே ஆதேவுடன் தனது கிராமத்திற்குத் திரும்பும் விலீ, அந்தக் கல்லை ஆதேவிடமே ஒப்படைக்கிறார்.
ஒரு உண்மையான வேட்டைக்காரன் இயற்கையை ஆள நினைக்கக் கூடாது, அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அவர் நிரூபிக்கிறார். அவர் மீண்டும் தனது வன குடிலுக்குத் திரும்பும்போது கையில் மந்திரக் கல் இல்லை; ஆனால், அவர் ஒரு புதிய மனிதராக, மிகுந்த மன அமைதியுடனும் ஞானத்துடனும் திரும்புகிறார். ஆனால், மந்திரக் கல்லை திருடிச் செல்ல வரும் வஞ்சகனால் கொல்லப்படுகிறார். பெரும்துயர் கொள்ளும் ஆதே, மந்திரக் கல்லை வன குடிலுக்குள் புதைத்துவிடுகிறாள். விலீ நன்மை செய்யும் அரூப உருவமாக மாறிவிட்டாரா என்ற கேள்வியுடன் நிறைவு பெறுகிறது நாவல்.
ஈஸ்டரின் கைரே, ஆங்காமி நாகா பழங்குடி நாட்டுப்புறக் கதைகளையும் வாய்மொழி மரபுகளையும் கதையின் அமைப்போடு நேரடியாகப் பின்னுகிறார். இதன் மூலம் மாயாஜாலமும் இயற்கையும் தடையின்றி ஒன்றிணைந்து வாழும் “சுற்றுச்சூழல் நாட்டுப்புறவியலை” (Ecofolklore) உருவாக்குகிறார்.
நாகாலாந்தின் ஆங்காமி பழங்குடியின சமூகத்தின் பண்பாடு, தாய்வழிப் பாசம், இயற்கையோடு இயைந்த பெண் ஆற்றல் ஆகியவற்றை இந்நாவல் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. ஆபத்தான தூங்கும் நதியை நோக்கி விலீ செல்லும் பயணத்தில், நாகா கிராமங்களின் கடுமையான விருந்தோம்பல் நெறிமுறைகளே அவனுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன. பயணிகள் மற்றும் உபசரிப்பாளர்களின் பரஸ்பர அன்பு, கூட்டுப் பொறுப்பு இல்லையெனில் தனி மனித வாழ்வு சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது.
துப்பாக்கிகளுடன் விலீயைப் பின்தொடரும் வேட்டைக்காரர்கள், இயற்கை வளங்களின் வணிகமயமாக்கலையும் வன்முறையையும் குறிக்கின்றனர். நவீன சமூக மாற்றங்களுக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக விலீ வாழும் தனிமை வாழ்க்கை, பாரம்பரிய மதிப்புகளின் அழிவுக்கு எதிரான ஒரு அமைதியான எதிர்ப்பைக் குறிக்கிறது. அவனது பயணம், வெளிப்புற அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளுக்கு எதிராகத் தங்கள் சுயாட்சியைப் பாதுகாக்கப் போராடும் பூர்வீக சமூகங்களின் பிரதிபலிப்பாகச் செயல்படுகிறது.
விலீயின் உலகில் கிர்ஹுப்ஃபுமியா, மனிதப்புலிகள், காட்டு அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் மரங்களைப் போலவே உண்மையானவை. இது இயற்கையின் ஒவ்வொரு கூறுகளிலும் ஓர் ஆவி இருக்கிறது என்ற ஆன்மிச (Animism) உலகப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. நாவல் பழங்குடி சடங்குகள், விலக்கப்பட்ட மரபுகள் (Taboos) மற்றும் மூதாதையர் அறிவின் களஞ்சியமாகச் செயல்படும் அதேவேளையில், பாரம்பரிய வாழ்க்கை முறைக்கும் நவீன சமூக மாற்றங்களின் ஊடுருவலுக்கும் இடையிலான கடுமையான முரண்பாட்டைச் சித்தரிக்கிறது.
நாவலின் மாயாஜால யதார்த்தவாத சூழலில், உறங்கும் ஆற்றை நோக்கி விலீ செல்லும் ஆபத்தான பயணத்தில் அவனைச் சோதிக்கும் மற்றும் வழிகாட்டும் இயற்கை சார்ந்த பெண் அருவங்கள் / தேஹூமியாக்கள் / பெண் தேவதைகள் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. நாவல் ஒரு மாயாஜாலக் கதை போலத் தெரிந்தாலும், அது நம் வாழ்வின் எதார்த்தத்தைப் பேசுகிறது. நவீன மனிதனின் பேராசையால் அழியும் காடுகள், நிலங்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் படைப்பாகும்.
நாவலில் வரும் ‘மந்திரக் கல்’ உலகியல் சக்தியையும் இன்பத்தையும் குறிப்பதாகும். ஆனால், கதையின் கவனம் அந்தச் ஆற்றலிருந்து மாறி, அதை அடைய ஒருவன் தகுதியானவனா என்பதை நோக்கிச் செல்கிறது. இலக்கிய ரீதியாக, இந்த ‘மந்திரக் கல்’ என்பது மனிதனின் தேடலைக் குறிக்கிறது. “ஆறு உறங்குவது” என்பது ஒரு குறியீடு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘உறங்கும் ஆறு’ (அமைதியான மனம்) இருக்கிறது. நம் வாழ்வின் இரைச்சல்களுக்கு நடுவே, ஒரு நிமிடம் அமைதி நிலவும் போதுதான் – அந்த அமைதியைக் கண்டடையும் போதுதான் – உண்மையான ‘ஞானம்’ எனும் மந்திரக் கல் நமக்குக் கிடைக்கும் என்பதுதான் அது. உண்மையான வெற்றி என்பது பொருளை அடைவதல்ல; இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்து நம்மை நாமே கண்டடைவதும், ஆன்மீக விழிப்புணர்வு கொள்வதும்தான் முக்கியம் என்பதை இந்நாவலின் மூலம் ஈஸ்டரின் கைரே நமக்கு உணர்த்துகிறார்.
@ WHEN THE RIVER SLEEPS- Easterine Kire (Zubaan Books-2014)
சான்றாதார நூல்கள் :
* The Angami Nagas (By J.H. Hutton – Classic Ethnographic Book)
* Naga Folktales Retold (By Easterine Kire)
* The Nagas in the 21st Century (Dr. Visier Meyütsü & Others)
***
அ.முனவர் கான் – தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com

