Homeஇதழ்கள்2026 இதழ்கள்மௌனச் சகோதரிகள்

மௌனச் சகோதரிகள்

இஸ்ரேல் ஸாங்வில்

தமிழில் : பாலா இளம்பிறை

சிறுவயதில் அவர்களுக்கிடையே ஒரு சச்சரவு வந்தது. ஒருவருக்கொருவர் இனிமேல் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை என்று அவர்கள் பரஸ்பரம் உறுதி பூண்டனர். அப்போதெல்லாம், பேசக்கூடியதான சூழல்களைத் தவிர்ப்பதற்காக ஜெபம் மாதிரியான ​​ஒரு பழைய சிறுவர் காலத்துச் சடங்குப் பாடலைப் பாடிக்கொண்டே தங்கள் ஆள்காட்டி விரல்களை நனைத்து உலர்த்தும் வழக்கத்தையும் அவர்கள் பின்பற்றினர். பெற்றோரின் கெஞ்சல்களும் சமாதானங்களும் கண்டிப்புகளும் தண்டனைகளும் ஒருபுறம் இருக்க, விதைப்பு-அறுவடை, வெயில்-நிழல், இன்பம்-துன்பம் என எல்லாப் பருவங்களும் காலநிலைகளும் மாறி மாறி வந்தபோதும், அன்றாட வாழ்வில் அவர்கள் தொடர்ந்து அருகருகேயே வாழ்ந்தபோதும், அந்தப் பிடிவாதமான கிராமத்து இயல்புக்கே உரிய உறுதியுடன் அவர்கள் தங்களது அந்த முட்டாள்தனமான சபதத்தைக் கடைப்பிடித்தனர். 

மரணம், நற்பேறு இன்மை என்று அவர்கள் வாழ்வில் மாறி மாறி நிகழ்ந்த எதுவும் அவர்களை ஒன்றிணைக்கவில்லை; தந்தை இறந்து, அவர்களின் அந்தப் பழைய பண்ணை விற்கப்பட்டபோதும், இரயிலில் ​​அதே மௌனத்துடன் அவர்கள் லண்டனுக்குப் பயணப்பட்டனர் — அதுவும் அதே மாதிரியான சூழல்களைத் தேடியே. அவர்களுக்கிடையேயான தூரம் மிகக் குறைவாகவே இருந்தபோதிலும், அவரவர்களுக்கான பணி அவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பிரித்து வைத்திருந்தது. தெருக்களில் அடிக்கடி ஒருவரையொருவர் எதேச்சையாக பார்த்துக்கொள்ள நேரிட்டாலும், முறைத்துக்கொள்வது அவர்கள் வழக்கமாய் இருந்தது. 

அவர்களுள் மூத்தவளான ஹானர் உள்ளூர் கைவினைஞர் ஒருவரை மணந்துகொண்டாள். அதற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, இளையவளான மெர்சி, ஹானர்’இன் கணவருடன் பணிபுரிந்த ஒருவரை மணந்துகொண்டாள். கணவர்கள் இருவரும் நண்பர்களாய் இருந்தனர். அழுக்கு நிறைந்த தெருவொன்றின் எதெரெதிராய் இருபுறமும் அமைந்திருந்த தங்கள் வீடுகளுக்கு அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் சந்திக்கச் சென்று வந்தனர். அவர்களின் மனைவிகளும் அவர்களை அன்புடன் வரவேற்றனர். ஹானரோ அல்லது மெர்சியோ, தங்களுக்குள் இருந்த மனத்தடை குறித்த எந்தவொரு குறிப்பையும் ஒருபோதும் தங்களை மீறி வெளிப்படுத்திவிடக் கூட அனுமதிக்கவில்லை. இருவரின் குடும்பங்களிலும் அவர்களின் அந்த மௌனத்தை மௌனத்துடனேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் புரிந்துகொள்ளப்பட்டது. குடும்பம் இப்போது பெரிதாகிவிட்டது. பழமைவாத கிறித்துவ மத இயக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்ததாலும் கருக்கலைப்பு சம்பந்தமான நடைமுறைகள் அவ்வியக்கத்தில் தடை செய்யப்பட்டிருந்ததாலும், அவ்விருவருக்கும் தலா ஒரு பெரிய அளவு எண்ணிக்கையிலான பிள்ளைகள் இருந்தனர். அந்தப் பிள்ளைகள் தெருக்களிலும் ஒருவருக்கொருவர் வீடுகளிலும் கூடி விளையாடியும் சண்டையிட்டும் திரிந்தனர். ஆனாலும், பிள்ளைகளுக்கிடையே நிகழ்கிற தெருச் சண்டைகளோ அல்லது அவர்களுக்குள் எழுகின்ற மனக்கசப்புகளோ கூட, அந்தத் தாய்மார்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளத் தூண்டவில்லை. ஆவேசக் கொந்தளிப்பால் சொற்கள் பொங்கி நுரைத்துக்கொண்டு வந்தாலும் அவற்றை அடக்கி வைத்த வேதனையில் வெடித்துச் சிதறும் நிலையில், இயலாமையுடன் கூடிய ஆத்திரத்தோடு தங்கள் வீட்டு வாசல்களில் நின்றிருப்பர். இருவரில் ஒருவரின் ஒரு குழந்தை இறந்தபோது கூட, மற்றவள் பேசும் திறனற்றவளைப் போல மௌனமாகத் தன் வீட்டின் சன்னல் வழியாக அந்தக் குழந்தையின் இறுதிச் சடங்கைப் பார்த்துக் கொண்டிருப்பாள். 

ஆண்டுகள் உருண்டோடின; ஆனாலும், அவர்களின் வாழ்வின் ஊடே மௌனமென்னும் ஆறு வற்றாமல் சலசலத்து ஓடிக்கொண்டேயிருந்தது. அவர்களின் வசீகரத் தோற்றம் மங்கிப்போனது. நெடிய வாழ்வு தந்த சுமையும் குழந்தைப்பேறு சார்ந்த பாரமும் அவர்களின் மீது அழுத்தமாய் அமர்ந்திருந்தன. அவர்களின் பழுப்பு நிறக் கூந்தலில் நரை முடிகள் படர்ந்துவிட்டன. பின், அந்த சாம்பல் நிற நரைத்த கூந்தலிலும் பழுப்பு மயிர்க் கற்றைகள் ஊடுருவி விட்டன. இளமையின் வசந்த காலத்து கன்னக் கதுப்புகள் கவர்ந்திழுக்கும் குழிகள் முதுமையின் சுருக்கங்களாய் இடமாற்றம் பெற்றுவிட்டன. ஆண்டுகள் உருண்டோடின; குடும்பங்களுக்கு இடையேயான முதிர்வின் மரணங்களும் தனது வேலைகளைத் தீவிரப்படுத்தின. ஹானர்’இன் கணவர் காலமானார். மெர்சி தனது மருமகள் இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு தனது மகனையும் இழந்தாள். பல சின்னஞ் சிறுசுகளை காலரா நோய் பலி வாங்கியது. ஆனால் சகோதரிகள், கடின உழைப்பால் கூன் விழுந்தும் அந்தத் தொடர் உழைப்பிலும் துயரத்திலும் உழன்றதன் விளைவாக வாடிய நிலையிலும் காலம் மேடுறுத்துகின்ற உறைபனியை மிஞ்சியும் அப்படியப்படியே வாழ்ந்து வந்தனர். 

மெர்சியும் ஒருநாள் மரணப்படுக்கையில் விழுந்து விட்டாள். நீண்ட காலமாய் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட உள்ளார்ந்த நோயொன்று, அடுத்த ஒரு வாரத்திற்குள் அவளது உயிரைப் பறித்துவிடும் என்பது கணிக்கப்பட்டது. அதையே மருத்துவரும் மெர்சியின் கணவனிடம் கூறினார். 

அவர் வழியாக அந்தச் செய்தியானது, அப்போது வரையிலும் ஹானருடன் வசித்து வந்த அவளது மூத்த மகனைச் சென்றடைந்தது. மாலைக்குள் அந்தச் செய்தி ஹானரையும் சென்றடைந்தது. 

மகன் வந்து அவளிடம் அதைச் சொன்ன மாத்திரத்தில், அவள் சட்டென்று மாடிக்குச் சென்றுவிட்டாள்; அவளது உணர்ச்சியற்ற முகபாவனையைப் பார்த்து அவன் திகைத்து நின்றான். கீழே வந்தபோது தலையில் ஸ்கார்ஃப்’ம் தோளில் சால்வையும் அணிந்திருந்தாள். அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து தெருவைக் கடந்து, தன் வாழ்நாளில் முதன்முறையாகத் தன் சகோதரி மெர்சியின் வீட்டு வாசலைக் கடந்து உள்ளே நுழைவதைக் கண்டு அவன் மகிழ்ச்சியும் வியப்பும் ஒருசேரக் கொண்டான். 

சுருங்கிய உதடுகளோடு ஹானர் நோயாளியின் அறைக்குள் நுழைந்தபோது, ​​மரணத் தறுவாயிலிருந்த அந்த உயிரின் மெலிந்து சுருங்கிப் போயிருந்த முகத்தில் ஓர் ஒளி மின்னல் வெட்டி மின்னியது. படுக்கையில் இருந்து அவள் சற்றே எழுந்து அமர்ந்தாள். அவளது உதடுகள் மெதுவாய்ப் பிரிந்தன. பின் இறுக்கமாக மூடிக்கொண்டன. முகம் இருண்டு போயிற்று. 

எதுவும் செய்யவியலாத நிலையில் திராணியற்று அங்கேயே நின்றுகொண்டிருந்த மெர்சியின் கணவனை நோக்கி, ஆத்திரத்துடன் திரும்பினாள் ஹானர். “அவளோட உடம்பு இவ்வளவு மோசமாகப் போற அளவுக்கு ஏன் விட்டீங்க?”, என்றாள். 

“எனக்குத் தெரியல”, என்று அந்த முதியவர் தத்தித் தத்திப் பேசினார். அவளது கேள்வியை விட, அங்கே அவளது வருகையே அவரை பெரிதும் திகைப்புக்குள்ளாக்கியிருந்தது. “அவ எப்பவும் எதையும் பேசாதவளாவே இருந்தா”. 

ஹானர் அத்தனைப் பொறுமையின்றி அவனைப் புறந்தள்ளிவிட்டு, படுக்கைக்கு அருகில் இருந்த மேசையின் மீதிருந்த மருந்து பாட்டிலை எடுத்துப் பரிசோதித்தாள். 

“மருத்துவர் சொன்ன மருந்து டோசேஜ் அளவை அவள் எடுத்துக்கிற நேரமில்லையா இது?” 

“ஆமா.. அப்படித்தான் நினைக்கிறேன்”. 

ஹானர் கோபத்தில் சீறினாள். “என்ன பயன் உங்களால?”. அவள் கவனமாக அந்த மருந்துத் திரவத்தை அளவோடு எடுத்துத் தனது சகோதரியின் உதடுகளில் வைத்தாள். அதை ஏற்றுக்கொள்வதற்காகத் திறந்த அந்த உதடுகள், பின் மீண்டும் இறுக்கமாக மூடிக்கொண்டன. 

“உங்க மனைவிக்கு இப்போ எப்படியிருக்கு?”, சற்று இடைவெளி விட்டு கேட்டாள் ஹானர். “இப்போ எப்படியிருக்கு மெர்சி”, பெரியவர் சங்கடத்துடன் மனைவியை பார்த்துக் கேட்டார். 

வயதானவள் தலையை ஆட்டினாள். “நான் வேகமா பயணப்பட்டுகிட்டு இருக்கேன், ஜிம்”, மிகப் பலவீனமாக அவள் முணுமுணுத்தாள். காகிதம் போல் உலர்ந்து போயிருந்த அவளது முகத்தின் மீது கழிவிரக்கத்தின் கண்ணீர்த் துளியொன்று வழிந்தோடியது. 

“என்ன அபத்தமான பேச்சு இது!” ஹானர் கடுகடுத்தாள். “தையல்கடையில நிக்கிற பொம்மை மாதிரி ஏன் நிக்கிறீங்க? உற்சாகமா இருன்னு நீங்க ஏன் அவளுக்கு சொல்லக் கூடாது?” 

“தெம்பா சந்தோசமா இரு, மெர்சி”, முதியவர் கரகரப்பான குரலில் நடுங்கிக்கொண்டே கூறினார். 

ஆனால் அதையெல்லாம் கேட்பதற்குப் பதிலாக மெர்சி முனகினாள். பதட்டத்துடனும் அதிருப்தியுடனும் மறுபக்கமாய் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டாள். 

“எனக்கு ரொம்ப வயசாயிட்டுது.. ரொம்பவும் வயசாயிட்டுது,” “நேரம் வந்திடுச்சு”, அவள் புலம்பினாள். 

மெர்சியின் தலையணையை சரி செய்தவாறே ஜிம்’மைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் ஹானர், “அவ இப்படிப் பேசி எப்போவாவது கேள்விப்பட்டிருக்கீங்களா?”. “அவ எப்போதும் தன் வயதைப் பற்றிப் பெருமை பேசிக்கிட்டிருப்பா. அவ எப்போவுமே தன்னைவிட வயசுல மூத்தவங்களுக்குச் சமமா தன்னையும் நெனைச்சிட்டே இருப்பா. அவளை விட மூத்தவ – அவளுக்கு ரெண்டு வயசும் எனக்கு அஞ்சு வயசும் இருந்தப்போ, அவளை என் கைகள்ல தூக்கிச் சுமந்த நான், இப்பவும் நல்லா ஆரோக்கியமா தெம்பா இருக்கேன். இன்னும் ரொம்ப காலத்துக்கு மண்ணுக்குள்ள போற எண்ணமே எனக்கு இல்லை. ஒரு நேரத்துல அவளைவிட ஏறக்குறைய மூணு மடங்கு வயசு மூத்தவளா அவ கண்ணுக்கு முன்னால இருந்தவ நான்; அப்படிப்பட்ட என்னையும் மீறி, எனக்கு முன்னாடியே சாகுறதப் பத்திப் பேசுற துணிச்சல் அவளுக்கு வந்திருக்கு பாருங்க.” 

அவள் தன் தொப்பியையும் சால்வையையும் கழற்றினாள். “பிள்ளைங்க யாரையாவது அனுப்புங்க, என் பையனுக்கு சொல்லியனுப்பணும், இன்னைக்கி நான் இங்கேயே தங்கிக்கிறேன்னு. அப்புறம் அவங்க எல்லாரையும் தூங்க போகச் சொல்லுங்க. எதுக்கு கசகச’ன்னு ஒரே இரைச்சல் இங்கே”. 

மரணம் நெருங்கிக்கொண்டிருந்த அந்த முதியவளின் கைவிடப்பட்ட பேரக்குழந்தைகள் அனைவரும் உறங்க அனுப்பப்பட்டனர். அதன்பின், ஜிம்மும் மறுநாள் வேலைகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதற்காக சென்றுவிட்டார். ஏனென்றால், அந்த ஏழை முதியவர் அந்தத் தருணத்திலும் தனது தள்ளாடும் நிலையிலும் கூடப் பட்டறையில் உழன்று கொண்டிருந்தார். 

நோயாளியின் அறையைச் சூழ்ந்திருந்த அமைதியானது, வீடு முழுவதிலும் பரவியது. சுமார் பத்து மணியளவில் மருத்துவர் மீண்டும் வந்தார். நோயாளியின் இறுதித் தருணங்களை எளிதாக்குவது எப்படியென்பது குறித்து ஹானருக்கு அறிவுறுத்தினார். மரணப் படுக்கையிலிருந்த தன் சகோதரியின் ஒவ்வொரு விருப்பத்தையும் எதிர்பார்த்து அவற்றை நிறைவேற்றுவதற்காக இரவு முழுவதும் கையும் கண்ணும் விழிப்புடன் இருக்க, அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எந்தவொரு சொல்லாலும் அந்தப் பயங்கரமான அமைதியைக் குலைக்க முடியவில்லை. 

அடுத்த நாள் அதிகாலையிலேயே, முதல் நிகழ்வாக லண்டனில் வசிக்கும் மெர்சியின் ஒரே பெண்ணான திருமணமான அவளது மகள் தனது தாயைப் பராமரிக்கும் பொருட்டு அங்கே வந்து சேர்ந்தாள். ஆனால், ஹானர் தன்னுடைய தற்போதைய உடைமையான அந்த இருப்பிடத்தை விட்டுக்கொடுக்க ஆவேசத்துடன் மறுத்துவிட்டாள். 

“நீயொரு அருமையான மகள்,” என்றாள். பின், “உன்னோட மோசமான இந்த முகத்தைக் காட்டாமக் கூட, உன் அம்மாவை ஒரு பகலும் ஒரு ராத்திரியுமா இப்படியே படுக்கப்போட்டு வைக்கிறதா?” 

“நான் என்ன பண்றது.. அந்த நல்ல மனுசனையும், சின்னஞ் சிறு பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது”, என்று மெர்சியின் மகள் மன்றாடினாள். 

“அப்படின்னா, இப்போ அவங்களைக் கைவிடுறதாகச் சொல்றது மூலமா நீ என்ன சொல்ல வர்றே?” மூப்பின் உச்சத்திலிருந்த ஹானர் கோபத்துடன் திருப்பிக் கேட்டாள். “முதல்ல நீ உன் தாயைக் கைவிடுற, அப்புறம் உன் வீட்டுக்காரரையும்.. குழந்தைங்களையும். ஆமா, உன்னோட பராமரிப்பு அவங்களுக்கு எப்போதும் தேவை இல்லையா?!.. அதுக்காக நீ கண்டிப்பா திரும்பிப் போகணும். நீ பிறக்குறதுக்கு முன்னாடியே உன் அம்மாவை நான் என் கைகள்ல ஏந்திப் பராமரிச்சிருக்கேன். இப்போ அவ சொல்லட்டும் – ‘என்னை கவனிச்சுக்க வேற யாராவது வேணும்னு’ அவள் விருப்பப்பட்டு சொல்லட்டும் நான் உடனே இங்கேருந்து கிளம்பிடுவேன்”. 

மஞ்சள் நிறத்தில் வெளுத்து.. உலர்ந்து போய் படுக்கையில் கிடக்கும் அந்த உயிரினத்தை அவள் சவாலான பார்வையுடன் பார்த்தாள். வற்றிப் போயிருந்த மெர்சியின் உதடுகள் துடித்தன, ஆனால் எந்தச் சத்தமும் எழவில்லை. சூழலால் பதற்றமடைந்திருந்த ஜிம், பேசத் தொடங்கினார். “நீங்க இங்கே இருக்கிறதால மட்டும் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போறதில்லைன்னு மருத்துவர் சொல்றார். நான் கடைக்குப் போக வேண்டியிருக்கு.. நீங்க ஒரு ஒரு மணி நேரம் ஓய்வா இருந்தா, கீழே இருக்கிற குழந்தைங்களை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா?” என்றவர், “ஏதாவது மாற்றம் தெரிஞ்சா நான் உனக்குத் தந்தி அனுப்புறேன்,” என்று தன் மகளிடம் மெல்லிய குரலில் கூறினார். தனது அன்றாட நிகழ்வுகளுக்குத் திரும்புவதை நோக்கிய முழுமையான அதிருப்தி ஏதுமின்றி, அவள் தனது தாயை முத்தமிட்டாள். சற்று நேரம் தவிப்புடன் அங்கேயே நின்றாள். பின், மெல்ல அங்கிருந்து நழுவிச் சென்றாள். 

அந்த முதிய பெண்மணிகள் இருவரும் அன்றைய நாள் முழுவதையும் ஆழ்ந்த அமைதியுடன் ஒன்றாகவே கழித்தனர். மருத்துவரின் வருகை மட்டும் அவர்களுக்கிடையே நிலவிய அமைதியைக் கலைத்தது. இன்னும் இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம் என்று மெர்சியின் நிலைமையைப் பற்றி தகவல் தந்தார் மருத்துவர். மாலை நேரத்தில், கட்டாயத்தின் பேரில் உறங்கிக்கொண்டிருந்த தன் கொழுந்தியாளுக்கு ஓய்வளிப்பதற்காக, மெர்சியைப் பராமரிக்கும் பொறுப்பை ஜிம் ஏற்றுக்கொண்டார். நடு இரவில் மீண்டும் வந்த ஹானர், ஜிம்’மை உறங்குவதற்கு அனுப்பினாள். துன்பத்தில் உழலும் மெர்சி, அமைதியின்றி புரண்டு படுத்துக் கோண்டிருந்தாள். நள்ளிரவு இரண்டரை மணியிருக்கும்.. மெர்சி விழித்துக் கொண்டாள். ஒரு குழந்தைக்கு சோறூட்டுவது போல் ஹானர், அவளுக்கு கரண்டியால் சூப்’பை ஊட்டி விட்டாள். உண்மையில் அப்போது பார்ப்பதற்கு, மெர்சி ஒரு பச்சிளம் குழந்தையை விடப் பெரியவளாகத் தோன்றவில்லை. ஆடைக்கு மேல் ஆடை என்று பல அடுக்குகளாக அணிந்திருந்ததால் தான், ஹானர் சற்றே குண்டாகத் தெரிந்தாள். தொலைவிலிருந்த தேவாலயத்தின் மணி மூன்று முறை அடித்தது. அதன்பின் அந்த மௌனமானது இன்னும் ஆழமாகியது. கண்காணித்துக் கொண்டிருந்தவள், உறங்கத் தொடங்கினாள்.. விளக்கு மினுக்கியது.. அவளும் கூட காய்ச்சலால் அங்குமிங்கும் புரள்வது போல அவளது நிழல் சுவர்களில் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறமாய் அலைந்தது. சுவரை மறைத்துக் கொண்டிருக்கும் பலகைகளின் இடுக்குகள் வழியே ஒரு விசித்திரமான ‘டிக்-டிக்’ ஒலி கேட்டது. மெர்சி பயங்கரமாக அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். “ஜிம்!”… “ஜிம்!”… என்று உரக்கக் கத்தினாள். 

ஹானர் திடுக்கிட்டு எழுந்து, “ஷ்!” என்று உரத்துச் சொல்வதற்காக வாயைத் திறந்தாள். ஆனால் சட்டென்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, அப்படியே உறைந்துபோனாள். 

மரணத் தறுவாயிலிருந்த மெர்சி கூவினாள், “ஜிம்,” “இங்கே பாருங்க!.. அது என்ன காவு கேட்கிற சிலந்தி தானே?” 

அதைக் காதால் கேட்ட போது, ஹானருக்கு அவளது இரத்தம் உறைந்துபோனது. பின், கதவிருக்கும் திசை நோக்கிச் சென்று அதைத் திறந்தாள். படிக்கட்டுத் தளத்தைப் பார்த்துக்கொண்டே ஜிம்’மைப் பார்த்துச் சொன்னாள், “ஜிம், அவ கிட்ட சொல்லுங்க.. அது ஒண்ணுமில்லை.. அது வெறும் சின்ன எலி தான்னு.. அவகிட்ட சொல்லுங்க.. அவ எப்பவுமே பதட்டத்தோடவே இருக்கிற ஒரு சின்னக் குழந்தை.” மெதுவாகக் கதவை மூடிவிட்டு, உடல் நடுங்க உட்கார்ந்த நிலையிலிருந்த தனது சகோதரியை மெதுவாய்த் தலையணையில் சாய்த்து, போர்வையைக் கொண்டு அவளை இதமாகப் போர்த்திவிட்டாள். 

அடுத்த நாள் காலை, ஜிம் அந்த அறையில் இருந்தபோது மெர்சி, தனது பேரக்குழந்தை ஒன்று அன்றைக்குப் பகலிலும் இரவிலுமாக தன்னோடு அறையில் இருக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். “திரும்பவும் என்னைத் தனியே விட்டுட்டுப் போயிடாதே,” மெர்சி நடுங்கினாள். “பேசுறதுக்கு ஒருத்தர் கூட இல்லாம என்னைத் தனியே விட்டுட்டுப் போயிடாதீங்க.” இதையெல்லாம் கேட்டு, ஹானர் முகம் சுளித்தாள். ஆனால், எதுவும் சொல்லவில்லை. 

பள்ளி செல்லத் தேவையில்லாத அந்தக் குடும்பத்தின் மிக இளைய குழந்தையும் அங்கே அழைத்து வரப்பட்டான். பழுப்பு நிறச் சுருள் முடிகளோடு அழகாய் இருந்தான் சிறுவன். சன்னல் கண்ணாடிகள் வழியாக விழுந்த கதிரவனின் ஒளியானது அவனது தலைமயிர்க் கற்றையை பொன்னிறமாக மாற்றியிருந்தது. அன்றைய காலைப்பொழுது மெதுவாகக் கழிந்தது. நண்பகல் வேளையில் மெர்சி அந்தக் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு, அவனது சுருள் முடிகளை வருடிவிட்டாள். 

“எங்க அக்கா ஹானருக்கு இது மாதிரி தான் தகதகன்னு தங்கம் மாதிரி முடி இருந்திச்சு”, மெர்சி குழந்தையிடம் கிசுகிசுத்தாள். 

“அதெல்லாம் நம்ம பாரம்பரியம், பாபி” ஹானர் பதில் சொன்னாள். “உன்னோட பாட்டி சின்னவளா இருந்தப்போ, அவங்களுக்கும் இப்படித்தான் இருந்திச்சாம்.” 

ஒரு நீண்ட மௌனம் நிலவியது அங்கே. மெர்சியின் கண்கள் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தன. ஆனாலும், அவளது பார்வை இப்போது உள்நோக்கியதாக இருந்தது. 

“தோட்டங்கள்ல மிஞ்ஞோனெட் பூக்கள் பூக்க ஆரம்பிச்சிருக்கும், பாபி,” என்று மெல்லிய குரலில் கூறினாள். 

“ஆமாம், பாபி, மனசுல நிம்மதியும் சேர்ந்தே”, – ஹானர் மென்மையாகச் சொன்னாள். “நாம கிராமத்துல வாழ்ந்தோம், உனக்குத் தெரியுமில்லையா, பாபி.” 

“கிராமம் முழுக்கவே பூக்கள் தான்,” அவள் குறிப்பிட்டுச் சொன்னாள். குரலில் தீவிரம் தெரிந்தது. 

“ஆமா செடிகளும்.. பூக்களும்.. மரங்களும்”, என்றாள் ஹானர். “ஆப்பிள்களைத் திருடினதுக்காக நாம அடி வாங்கினது உன் பாட்டிக்கு நினைவிருக்கோ என்னவோ எனக்குத் தெரியல.” 

“ஆமாம், பாபி.. நான் அதைத் தான் செய்றேன் இப்போ.. ஹேய்… ஹா..” என்று மரணத்தின் பிடியிலிருந்த அந்த உயிரினம் அதிக உற்சாகத்துடன் கரகரத்த குரலில் கூறியது. நாம ரெண்டு பேரும் ரெண்டு ஆம்பளைப் பசங்களைப் போல ஒண்ணா சேர்ந்து துடுக்குத்தனமா சுத்திக்கிட்டு திரிஞ்சோம். அந்த விவசாயி ‘ஏய்! ஏய்!’னு கத்திகிட்டே நம்ம பின்னாடி ஓடி வந்தார். ஆனா நாம எதுக்கும் கவலைப்படலை.. ஹா… ஹா.. ஹா!” 

அந்தச் சிரிப்பைப் பார்த்து ஹானர் கண்ணீர் விட்டாள். அரை நூற்றாண்டாய் கேட்கப்படாமல் இருந்த அந்த மண்ணின் மரபுத் தொடர்ச்சியானது கண்ணீருக்கு இடையிலும் அவளது முகத்தை ஒளிரச் செய்தது. “பாபி, உன் பாட்டியை ரொம்ப அளவுக்கு அதிகமாக உற்சாகமடைய வைக்காதே. அவளுக்குக் குடிக்கிறதுக்கு ஏதும் கொடுங்க.” சிறுவனை தனது பக்கத்தில் ஓரமாக நகர்த்தி இருக்க வைத்தாள். திரவத்தை அருந்துவதற்காக மெர்சியின் உதடுகள் தானாகவே திறந்தன. 

“டாம் எங்களோட தான் இருந்தான், பாபி”, உடல் அதிர்ந்து குலுங்க சிரித்துக்கொண்டே சொன்னாள், “அவன் தான்.. அந்த ஹீதர் செடிகளுக்கு நடுவுல தடுமாறி விழுந்தவன். ஹா.. ஹா!..” 

“டாம் செத்துப்போய் நாற்பது வருசமாச்சு, பாபி” ,சிறுவனிடம் ஹானர் கிசுகிசுத்தாள். 

மெர்சியின் தலை பின்னோக்கிச் சரிந்தது. முகத்தில் அளவு கடந்து சோர்வு வெளிப்பட்டது. அரை மணி நேரம் கடந்தது. இரவு உணவுக்காக பாபியை கீழேயிருந்து அழைக்கும் குரல் வெளிப்பட்டது. மருத்துவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டது. மௌனச் சகோதரிகள் இருவரும் தனியே இருந்தனர். திடீரென மெர்சி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். 

“இருட்டத் தொடங்கிடிச்சு டாம்,” கரகரத்த குரலில் கூறினாள் மெர்சி. வயல்ல இருந்து மாடுகளையெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற நேரமாச்சு.. இல்லையா?” 

“அவ மறுபடியும் உளர்றா”, என்றாள் கரகரத்த குரலில் ஹானரும். “அவ லண்டன்ல இருக்கா’ன்னு அவ கிட்ட சொல்லு, பாபி” 

வெளிறிக் கிடந்த அந்த முகத்தின் மீது ஒரு புத்திசாலித்தனத்தின் அலை நெளி நெளியாய் கடந்து சென்றது. நிமிர்ந்து அமர்ந்திருந்த நிலையில் அப்படியே மெர்சி படுக்கையின் ஓரத்தை நோக்கிக் குனிந்தாள். “ஹானர் இன்னும் அங்கே தான் இருக்காளா.. எனக்கு ஒரு முத்தம் குடு, பாபி.” அவளது கைகள் அங்கிருந்தவர்களைத் தேடி தடுமாறித் தடவின. ஹானர் குனிந்தாள். அந்த முதிய பெண்களின் வறிய உதடுகள் ஒன்றையொன்று உயிர்ப்புடன் தொட்டுக்கொண்டன. 

அந்த முத்தத்தின் வழியே மெர்சி ஆழ்ந்த அமைதிக்குள் மறைந்து போனாள்.

***

இஸ்ரேல் ஸாங்வில்(Israel Zangwill)(1864-1926) – இங்கிலாந்தை சேர்ந்தவர். நாவல், நாடகம், சிறுகதைகள் என்று பங்காற்றியிருக்கிறார். யூதர்களுக்கான தனித் தேச போராட்டத்தில் பங்கெடுத்தவர். தன் புனைவுகளின் வழியே யூத வாழ்வை பதிவு செய்ய முனைந்தவர்.

*

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மெஸ்யூர் வான்கா  நாவலுக்கான நல்லி திசை எட்டும் விருது வென்றிருக்கிறார். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.comச்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here