Home Blog Page 16

மாயக்குரல்

0

சுபி

1

ங்கள் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸில் இறங்கி அந்தக் கருத்த இரவின் நிசப்தத்தில் டார்ச் லைட்டை அடித்தவாறு பெரியசாமி அண்ணன் கடையில் மூன்று இட்டிலிகளைக் கட்டிக்கொண்டு கிராமத்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். பெரியசாமி அண்ணன் கடையும், இன்னொரு டீக்கடை மட்டுமே அந்த முடக்குச்சாலையில் பல வருடங்களாக இருந்தன. வீட்டில் இருந்து பார்த்தால் நீண்ட தார்ச்சாலை முடியும் இடத்தில் இரண்டு பரம்பரையாக எங்கள் வீட்டு நபர்களை வைத்த சுடுகாடு இருந்தது. அந்தச் சுடுகாடு இருந்த இடத்தில் எங்கள் வீட்டின் ஆட்கள் மட்டுமன்றி அப்பாவுடன் கூடப் பிறந்தவர்கள் அவர்கள் வாரிசுகள் என்று காலங்காலமாக அதே இடத்தில் சடங்குகளைச் செய்து கொண்டோம். நினைவு நாள், திவசம், பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் அவரவர் வீட்டுப்பிள்ளைகள் வந்து சூடம் ஏற்றி வழிபடுவதும் எங்கள் வழக்கமாக இருந்தது. குடும்பத்தில் யாராவது இறக்கும்போது வீட்டில் இருந்து பார்த்தால் அனல் மேலெழுந்து விண்ணோக்கி தகதகவென்று எரிவது நன்கு தெரியும். மறுநாள் காலை அங்கம்பறித்து காவிரி ஆற்றில் கொண்டுபோய்க் கரைத்துவிட்டு வரும்வரை மனம் சலனமற்று இருக்கும். இறந்தவர்கள் யாரோவல்ல, நேற்று மாலை வரை பேசிக்கொண்டிருந்த சித்தப்பா, பெரியப்பா, பாட்டா, அப்பா என எங்களோடு சிறுவயதில் இருந்தே ஒட்டி உறவாடியிருந்தவர்கள். தணல் எரிய எரிய அவர்கள் நினைவு ஒவ்வொன்றாக அந்தத் தணலில் இருந்து கிளம்பி வந்து அடையும். அதன் சூடு தாளாமல் நம்மை அது எரிக்க எரிக்க விடிவதற்குள் உடலானது அங்கே எரிந்து அடங்கியிருக்கும்.

ஒரு வகையில் எங்கள் வீட்டையொட்டிய காட்டில் அனைவரும் இருப்பது வணங்க சவுகரியமாக இருந்தாலும் நம் கண் முன்னே அவர்கள் எரிவது சொல்லிக் கொள்ள முடியாத துக்கமாக இருந்தது. பெரியசாமி அண்ணன் கடைக்கும், வீட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தில் அந்த முடக்குப் பகுதி அமைந்திருந்தது. யார் வீட்டுக்கு வந்தாலும், யார் வீட்டில் இருந்து வெளியே ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்த முடக்குப் பகுதியைத் தாண்டாமல் செல்ல முடியாது.

நாளை அப்பாவின் நினைவுநாள் என்பதால் அவருக்குப் பிடித்தத் திண்பண்டங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். வீட்டில் யாரும் இப்போது இல்லாததால் ஒட்டடைகள் தொங்கிக்கிடந்தன. அவற்றைக் கைகளால் பிடித்து விரல்களால் சுருட்டி மூலையில் வீசினேன். புழுதி படிந்து கால் தடங்கள் தெரிந்த மேல்திண்ணையினை ஒட்டியிருந்த இரண்டு அறைகளைத் திறந்து விளக்குகளை எரிய விட்டேன். மேல் திண்ணையில் இருந்து மூன்று படிகள் இறங்கினால் அகலமான பெரிய மண்வாசல் இருந்தது. அதில் இருந்த வெங்கச்சாங்கற்கள் ஆங்காங்கே முட்டி எழுந்து புடைத்துக் கிடந்தன. மேடு பள்ளமான வாசலில் கால் வைத்தால் கல் குத்தி தாவவிட்டது.

அந்தப்படிகளில் ஓரங்கள் முடியும் இடத்தில் சிமெண்ட்டால் ஆன சறுக்கல் இருக்கும். அந்தச் சறுக்கலில் விளையாடுவதுதான் எங்களுக்கு அன்று இருந்த ஒரே பொழுதுபோக்கு. பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பையை வீசிவிட்டு ஒருவர் சறுக்கி கீழே இறங்கி விட, ஒருவர் மேலிருந்து இறங்க ஆரம்பிக்க என்று தரை தேய்ந்து சூடாகும் வரை ஆடுவோம். ‘இருக்க ரெண்டு டவுசரையும் கிழிச்சுட்டா டவுசருக்கு எங்க போவீடா’ என அம்மா கத்துவாள். புது டவுசர் வாங்க வேண்டும் என்பதற்காகவே சூடு பறக்க வேகவேகமாக சறுக்கி டவுசரைக் கிழிக்க வைக்க முயற்சி செய்வேன். விளையாடி முடிந்தால் சந்தையில் வாங்கி வந்த பொரிப்பொட்டலத்தை உடைத்துப் பங்கிட்டு வைப்பாள். அதைச் சாப்பிட்டவுடன் நேராக ஆட்டுப்பட்டிக்குள் சென்று ஆடுகளை முடக்குச்சாலை வரை வீட்டில் இருந்து நீண்டு கிடந்த எங்கள் இடத்தில் ஓட்டிச்செல்ல வேண்டும். பொழுது சாய்வதற்குள் ஆடுகளை மேய்த்து விட்டு ரோட்டோரத்தில் கிடக்கும் புற்களைப் பிடுங்கிக்கட்டி எடுத்து வந்துவிட வேண்டும். வாசலுக்குப் பக்கவாட்டில் ஆடுகளைக் கட்டிவிட்டு வந்தால்தான் படிக்க முடியும். ஆளுக்கொரு ஆடு விட்டிருந்தாள் அம்மா. வருடம் முழுவதும் மேய்த்து அந்த ஆட்டை விற்று வரும் காசில் அடுத்த வருடத்திற்கான படிப்பு செலவுக்கு உபயோகப் படுத்திக்கொள்வோம்.

ஆட்டுவதற்கென ஆளுயர உரல் ஒன்று வாசல் ஓரத்தில் மழையிலும் வெயிலிலும் நனைந்து கிடந்தது. அதில் நாலுபடி அரிசியைப் போட்டுக்கொண்டு பார்வதி அத்தை ஆட்ட ஆட்ட நான் தள்ளிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் அரிசிச்சோறும் இட்டிலியும். அதனால் இட்டிலி என்பது எங்களுக்கு கொண்டாட்டமான உணவு. அதற்குச் சட்டினி என்றால் ஆட்டும் போதே நான் பாதியை சாப்பிட்டு விடுவேனென அம்மா சட்டினி ஆட்டவோ அதைத் தள்ளவோ விடமாட்டாள். அதை நினைத்தபடியே பெரியசாமி அண்ணன் கடையில் வாங்கி வந்த இட்டிலியைச் சாப்பிட்டு முடித்தேன்.

அறையின் மூலையில் இருந்த டிரங்குப்பெட்டிகளில் அம்மாவின் புடவைகள், அப்பாவின் துணிகள் இருந்தன. இரவென்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என அறையை மட்டும் படுக்கும் அளவிற்கு சுத்தம் செய்துவிட்டு மூலையில் கிடந்த பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். மூலையில் அடுக்கப்பட்டிருந்த பானைகளில் அம்மா மளிகை செலவு சாமான்களை பேளுக்குறிச்சி வருச சந்தையில் வாங்கிப் புடைத்து வைத்திருப்பாள். அந்தப்பானைகள்தான் அம்மாவின் பணம் சேமிக்கும் இடமும். ஐந்து பானைகள் இரண்டு மூலைகளில் கீழிருந்து மேலாக பெரியதில் இருந்து சிறியதாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

படுத்துச் சற்று நேரத்திற்கெல்லாம் களைப்பில் கண்கள் செருக உறங்கி விட்டேன். கொஞ்ச நேரத்தில் பானைகள் அடுக்கப்பட்ட மூலையில் இருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடன் மனம் கலவரமாக பாயில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். சத்தம் வந்த திசையை உற்றுப்பார்த்தேன். பல்லி, பூச்சிகள் ஏதும் உருட்டுகிற சத்தமாக இருக்கலாம் என்று தோன்றியது.

அமைதியாக சில நொடிகள் கவனித்தேன். சத்தம் வந்த சுவடே இல்லாதபடிக்கு அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது. மனதின் பிரமையோ என்று நினைத்துக்கொண்டே மீண்டும் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்தபோது சத்தம் வந்த நினைவின்றி வீட்டைச்சுத்தம் செய்து ஒட்டடை அடித்துக்கழுவி முடித்தேன். இன்னொரு அறையில் புழங்காத சாமான்களை அடுக்கி வைத்திருந்தோம். அதில் ஓரமாகக் கிடந்த திமுசுக்கட்டையை எடுத்து வந்து வாசலில் நீர் தெளித்து வாசலைச் சமன்படுத்தியபோது சூரியன் நடுவானத்திற்கு வந்திருந்தது.

அப்பாவிற்கெனப் புதிதாக வாங்கி வந்த வேட்டிசட்டை, வெள்ளைத்துண்டை எடுத்துக் கொண்டேன். டிரங்குப்பெட்டியில் இருந்தவற்றை எடுத்து உதறி, யாருக்காவது கொடுக்கலாம் என நினைத்து வெளியே எடுத்து வைத்தேன்.

பைகளில் இருந்த சூடம், பத்தி, சாம்பிராணி, அகல்விளக்கு, திண்பண்டங்கள், துணிகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு முடக்குச்சாலையில் இருந்த சுடுகாடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். சாலை வழியாக அல்லது வீட்டில் இருந்து ஆடு மேய்க்கும் காட்டின் வழியே உருவாக்கிய ஒற்றையடிப்பாதை வழியேவும் செல்ல முடியும். பாதை வழியே செல்லும் போது சாலையோரத்தில் சீத்தக்காடுகள் முளைத்துக் கிடந்தன. செருப்புகளை மீறி இரண்டொரு முட்கள் பாதங்களைப் பதம் பார்த்துவிட்டன. ஒற்றையடிப்பாதையின் இந்தப் புறத்திலும் வழியிலும் நெருஞ்சி முற்கள் அதன் செடியோடு பரவிக்கிடந்தன. மிகவும் கவனமாக நடந்து செல்ல வேண்டியிருந்தது. முனியப்பனை வரச்சொல்லி காட்டைச் சுத்தம் செய்து நிரவிவைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைத்து என்ன செய்வது? ஒவ்வொரு வருடமும் இப்படி நினைப்பதும் பின் வருவதற்குத் தோதில்லாமல் போவதும் அம்மா, அப்பாவை சாமி கும்பிட மட்டும் வருவதும் வழக்கமாகி இருந்தது.

உங்களை எல்லாம் ஒரே குழியிலா போடப்போவுது என்றால் ஆமாம், எங்கள் வீட்டு ஆட்களை எல்லாம் ஒரே குழியில்தான் போடுவோம் என்றாராம் ஒருமுறை எங்கள் பாட்டா. அதற்கு பின்னால் சூசகமாக ஒரு காரணம் இருந்திருக்கிறது. வாழையடி வாழையாக எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து முன்னோர்களையும் இங்கே வந்து சாமி கும்பிட வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.

சுடுகாட்டில் மூன்று அகல் விளக்குகள் வைக்கும் மண்மாடங்கள் மண்ணில் பாதி அளவு புதைந்து கிடந்தன. தாழக்குனிந்து அப்பாவை வைத்த இடத்தில் இருந்த மாடத்தை எடுத்துத் துடைத்து அதனுள் அகல் விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, பத்தி ஏற்றி சாம்பிராணி காண்பித்த பிறகு ஒரு ரூபாய் காசை வைத்து எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

நிமிர்ந்து மூன்று முறை சுற்றிவந்து வேண்டிக்கொண்டு கிளம்பியபோது கால்களை மண்தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அந்த இடத்திலும் நெருஞ்சி முட்கள் இருந்தபடியால், அதைக் கைகளால் பிடுங்கி விட்டுத்தானே விளக்கேற்றினோம் என நினைத்தேன். மழையும் இல்லை சேறும் இல்லை.. மழையின்றி வறண்டு கிடந்தது காடு. இடது காலை எடுத்து வைத்தால் அதுவும் நகரவில்லை.

எப்படியோ ஒரு வழியாக கால்களை அழுத்தமாக தரையை விட்டு நகர்த்தி  அருகில் கிடந்த செருப்பைப் போட்டபோது மீண்டும் விசும்பல் சத்தம் கேட்டது. அது இரவு வீட்டில் கேட்டிருந்த அதே விசும்பல் சத்தம்.

2

நேற்று விடியற்காலை ஐந்து மணியளவில் இப்போதிருக்கும் ராஜபுரம் வீட்டு வாசலில் உடுக்கடிக்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் கதவை மட்டும் திறந்து யாரென்று பார்த்தபோது சாமக்கோடாங்கி மூன்று முறை உடுக்கடித்தான்.

‘ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு.
நெனச்ச காரியம் நடக்காது.
வெச்ச காரியம் வெளங்காது.
வீட்டுல இருளண்டி கெடக்கு.
பூர்வீக எடத்துல அழுகுரலொண்ணு

கேட்டுக்கிட்டேருக்கு. ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. அழுகுரலு நின்னாத்தே நல்ல காலம்பொறக்கு நல்லகாலம் பொறக்கு…நாஞ்சொல்லுறது அந்த ஜக்கம்மா மேல சத்திய சத்திய சத்திய…அழுகொரலு நின்னாத்தே நல்ல காலம் பொறக்கு’ எனச் சொல்லியபடியே நகர்ந்து சென்றான்‌.

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடக்கும் சம்பவங்கள் என இதை நினைக்கவும் முடியவில்லை. நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மனம் அலைக்கழிப்பின் மடியில் புரண்டு தவழ்ந்தது. எதையெல்லாம் ஒரு காலத்தில் நம்பாமல் கேலி செய்தேனோ அதையெல்லாம் தானாகவே நம்பும்படி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. யாருக்கோ நடக்கையில் எங்கோ நடக்கையில் தர்க்க அறிவோடு பேசுகிற மனதிற்கு தனக்கு நடக்கும் போது ஏன் குழப்பம் நேரவேண்டும். இதைக்கண்டு மனம் ஏன் இவ்வளவு கலங்குகிறது. ரோட்டில் போகிற சாமக்கோடாங்கிக்கு எப்படி சொந்த ஊரில் கேட்ட அழுகுரல் தெரிந்தது.

அப்படியெனில் இவ்வளவு நாட்களும் இவர்கள்தான் என் வாழ்வைத் தீர்மானித்திருந்தார்களா? அந்த அழுகுரலுக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அந்த விசும்பல் சத்தம் கேட்டபோது ஏன் இதயம் அப்படிப் படபடவென துடித்தது? ஒருவேளை யாரும் புழங்காத வீடென்பதால் கோடாங்கி சொல்வது போல் ஏதேனும் பேய் பிசாசு இருக்குமா? ச்சே, இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத எனக்கு எப்படி இப்படி கிறுக்குத்தனமாக யோசிக்க முடிகிறது? சரி, ஒன்றுமே இல்லையெனில் கால்கள் ஏன் சமாதி இருந்த இடத்தில் எடுக்க முடியாது போனது. நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு உண்மையாகவே ஏதேனும் காரணம் இருக்கின்றதா? இல்லை, எல்லாவற்றையும் மிகச்சரியாக ஊசியில் பூ மொட்டுக்களை கோர்ப்பது போல நடந்தவற்றை அடுக்கடுக்காக நிறுத்தித் தானே கோர்த்துக் கொள்கிறதா மனம். 

நமக்கு அப்பாற்பட்டு சில விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் கடைசியில் புரிந்தது. நம்மால் உணரமுடிந்த கண்ணுக்கு புலப்படாத கண்டுணர முடியாத விஷயமாக அந்த அழுகுரல் இருந்ததால் அதன் மேல் ஓர் ஆர்வம் தானாகவே கிளம்பியது. ஆர்வம் மட்டுமல்லாமல் பயமும் கூட காரணமென வைத்துக் கொள்ளலாம். யாருக்கும் கேட்காத அந்த அழுகுரல் ஏன் எனக்கு மட்டும் கேட்டது.. அதன் பிண்ணனி என்ன? அதனால் எனக்குத் தீங்கு ஏதேனும் நேருமாயென புதுவித அச்சங்களைப் போர்த்தியது தொடர் எண்ணங்கள். 

இன்று காலை ஐந்து மணிக்கு சரியாக விழித்துக்கொண்டு மீண்டும் சாமக்கோடாங்கி வருவானோ என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் வருவானென உள்ளுணர்வு சொல்ல வீட்டின் கதவைத் திறந்து வெளியே திண்ணையில் வந்து அவனறியாமல் அமர்ந்து கொள்ள முடிவு செய்தேன். திண்ணையில் போட்டிருந்த திரைச்சீலைகளை விலக்காது ஓர் ஓரத்தில் போய் சேரைப் போட்டு உட்கார்ந்தேன். நினைத்தது போலவே இன்றும் சாமக்கோடாங்கி சரியாக வந்து நின்றான். அவன் என்ன சொல்வான் என்ற ஆவல் ஒருபுறமும் கலக்கம் ஒருபுறமும் மாறிமாறி மனதுக்குள் போராட்டம் நடத்த அவன் வந்து நின்றான். இரண்டு திரைச்சீலைகளின் இடுக்கில் அவன் உருவத்தைக் காண முடிந்தது.

தலையில் சும்மாடு போல சுற்றியிருந்தான். புருவ மத்தியில் இருந்து மேல்நெற்றிவரை திலகமாக நீண்ட குங்குமப்பொட்டின் நடுவில் பெரிய அளவில் வட்டமான மைப்பொட்டு வைத்திருந்தான். கழுத்தில் நிறைய துணிகள் கலர் கலராகத் தொங்கின.

கருப்பு நிற முழுச்சட்டை அணிந்து கொண்டு வெள்ளை வேட்டியை கொசுவமிட்டுப் பின்புறமாக சுற்றி இருந்தான். இரண்டு கைகளிலும் கருப்பு, பச்சை கற்கள் பதித்த வெள்ளி மோதிரங்கள் மின்னின.

ஒரு ஜோல்னாபை வலதுதோளோடு தொங்கியது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் அவன் பற்கள் வெற்றிலை போட்டு போட்டுக் காவி நிறத்தில் கிடந்தன. கழுத்தில் நிறைய வண்ணங்களில் கயிறுகள் தொங்கின. ஒரு கயிற்றில் மட்டும் சின்னஞ்சிறிய மண்டையோட்டு உருவம் தொங்கியது. இடக்கணுக்காலில் மட்டும் மந்திரித்து பின்னல் போல் முறுக்கிய கறுப்புக்கயிறு கட்டப்பட்டிருந்தது. உடுக்கையின் நுனியில் ஒரு கர்சீப் துணி போல கட்டி அரை அடிக்கு அது தொங்கியது. பித்தளை நிற உடுக்கையில் அடித்து அடித்து அதன் நடுப்பகுதியில் லேசாக கருப்பாக மாறியிருந்தது.

நின்றவன் ஒரு நொடி கண்களை மூடிவிட்டு நல்வாக்கு சொல்லு ஜக்கம்மா என்று உடுக்கையில் கைகளை வைத்து ‘டுடுடூங்டுடுங் டுடுடூங்டுடுங்’ என தாளத்தோடு சொல்ல ஆரம்பித்தான்.

‘ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு ,ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. அழுகுரலொண்ணு பூர்வீக பூமியில கேட்டுட்டு வந்ததுல இருந்து ஐயா, மனசு கலங்கிக்கெடக்கு. ஏனிந்தச் சோதனையென தவிச்சுக் கெடக்கு. எங்குறி தப்பாது. அழுகொரல நிப்பாட்ட வழி தெரியாம வீட்டுல ஐயாச்சாமி கொழப்பத்தில் கெடக்கு. சுடுகாட்டில் அழுகுரல் கேட்டதுக்குச் சுடுகாட்டில் இருந்து மந்திரிச்சு எடுத்தாந்த தாயத்திருக்கு. வீட்டில வச்சு பூசை செஞ்சா அழுகுரல் நின்னு போயிரும்ங்க. ஐயா வெளியே வாங்க. நல்ல வேட்டி இருந்தா இந்த ஏழைக்கு தானமாக்கொடுங்க. எல்லாஞ்செரியாப்போயிரும்.’ வேகவேகமாக உடுக்கடித்தான். ஜக்கம்மா தேவி ‘ஐயாவுக்கு நிம்மதி கொடு நிம்மதி கொடு’ என்று நிறுத்திவிட்டு வீட்டைக் கவனித்தான். எந்த அரவங்களும் வீட்டில் இருந்து எழாததால் நகர்ந்து செல்ல ஆரம்பித்தான். 

அவன் சென்றதை உறுதி செய்து கொண்டு வீட்டிற்குள் வந்து படுத்தேன். லேசாக வியர்த்தது. மின்விசிறி முழு வேகமாக ஓடியும் வியர்வை துளிர்த்தது நிற்கவில்லை. அருகில் இருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். சுடுகாட்டில் கேட்ட அழுகுரல் என்பதை எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறான்? தர்க்கமனம் கேள்விகளைத் தூண்டியது. நாம் தவிப்பது எப்படி இவனுக்கு தெரிந்தது. கோடாங்கிகள் ஏதேனும் மனதில் நினைப்பதைக் கண்டறிய கருவி எதுவும் வைத்துக்கொண்டு அலைகிறார்களா என யோசித்தேன். ஆனால் அவன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. என் மனம் இரண்டு நாட்களாக தவிப்பதும் அழுகுரல் கேட்டதும் அதை நிறுத்தும் வழி தெரியாமல் யோசித்தபடியே கிடப்பதும் உண்மைதானே.

தர்க்கக் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விட்டால் இந்த உலகம் மனித வசமாகிவிடுமே. புரிந்து கொள்ள முடியாத மர்மங்களை அடக்கிய இந்தப் பூமிக்குத்தான் எத்தனை வசீகரம். அம்மா இருந்தவரை இந்த மாதிரி விஷயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள். இந்த மாதிரியான குழப்பங்கள் நேர்கையில் எல்லாம் சித்துக்காளி அய்யாவை வீட்டுக்கு அழைத்து சோழி பார்த்து சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பாள்.

சித்துக்காளி அய்யா சொல்வதுதான் அம்மாவுக்கு வேதவாக்கு. நன்மையோ, தீமையோ என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லி விடுவார் என்று புளகாங்கிதம் அடைவாள் அம்மா. அவரை அழைத்தால் என்ன என்று தோன்றியது. அவரை அம்மாவிடம் எத்தனை முறை கேலி செய்திருப்போம் என நினைத்தவுடன் எப்படி அழைப்பது என்கிற தயக்கம் ஒருபுறம் உண்டானது. நன்றாக விடிந்ததவுடன் ஒரு விதமான இரட்டை மனநிலையுடன் அவருக்குப் போனடித்தேன்.

போனை எடுத்தவர் ‘அம்மா போனபொறவு என்ன மறந்துட்டீங்களாய்யா’ எனக்கேட்டவர் தொடர்ந்து நீங்க துடுக்குப்புள்ளனு அம்மா சொல்வாங்க தம்பி. அவனுக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்ல அய்யானு அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதனால்தான் நானும் வர்றதில்ல’ என்றார். எனக்குக் கஷ்டம் வைக்காமல் அவரே என்ன விசயம் தம்பி’ என்றார் 

“சும்மா ஓரெட்டு வந்துட்டுப் போங்களேன் வீட்டுக்கு” என்றேன்.

‘தம்பி சொல்லி வராமல் இருப்பனா? பத்து மணிக்கு வந்துடறேன் தம்பி’ எனச் சொன்னதுபோல் சரியாக பத்து மணிக்கு வந்து வாசல் காலிங்பெல்லை அழுத்தினார்.

3

இன்று காலை முதல் பஸ்ஸில் மீண்டும் பூர்வீக இடத்திற்கு வந்து இறங்கி வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக முடக்குச்சாலையின் மூலையில் இருக்கும் சுடுகாட்டுக்குச் சென்றேன். மூன்று மண்மாடங்களில் அப்பாவின் மண்மாடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்றிவைத்த சூடத்தின் கருப்பு அப்பிக்கிடந்தது. ஊதுபத்தி ஏற்றிய வாழைப்பழம் சுருங்கிக்கிடந்தது. ஊதுபத்தி எரிந்தது போக மிச்சமிருந்த குச்சிகள் வாழைப்பழத்தில் நட்டுவைத்தவாக்கில் அப்படியே இருந்தன. நடு மண்மாடத்தையொட்டி நின்று குனிந்து பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. கூம்பலாக குடிசை போல நின்ற அதனுள் சிறுசிறு புற்கள் முளைத்துக் கிடந்தன. ஆளுயரக் குழிகளாக நீளவாக்கில் பறிக்கப்பட்ட தடங்கள் இத்தனை வருடங்கள் கழிந்தும் கோடு போல் பதிந்து கிடந்தன. ஓரமான சுடுகாடு நிலத்தைத்தாண்டி புற்கள் முளைத்துக் கிடந்த இடத்தில் கைகளால் பிடுங்கி எறிந்துவிட்டு அதன்மேல் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டேன். சாலையோர சீத்தமர நிழல் நன்கு படர்ந்து நிழல்தர தூக்கம் கண்களை மூடச்சொல்லி இழுத்தது. 

உச்சி நெருங்கும் வேளையாகியிருந்தது. அந்த விசும்பல் சத்தம் அருகே கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வேகவேகமாக மண்மாடங்கள் இருந்த இடத்தில் போய் நின்று உற்றுக் கவனித்தேன். நின்றிருந்த விசும்பல் சத்தம் மீண்டும் சில நொடிகள் கழித்து வந்தது. எனக்குப் பதட்டமானது. விசும்பல் சத்தத்தின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி என்னை நெருங்கி வந்து எனது கால்களைக் கட்டிக் கொண்டது போலிருந்தது. அந்த ஒலி எங்கிருந்து வருகிறதென உற்றுக் கவனித்தேன். நடுமாடத்தின் மையத்தில் இருந்து அந்த ஒலி கிளம்பி வந்தது. கால்களை நகர்த்த முடியவில்லை. சற்று நேரத்தில் கால்கள் தளர்வுற்றது போல் இலகுவானது. மீண்டும் விசும்பல் சத்தம் நடு மாடத்தில் இருந்து கிளம்பி கால்கள் வழியே என்னுடலைத் தொட்டு நீவி மேலேறி என் தாடைகளை நெருங்கியது. எனக்கு கண்ணீர் கண்களில் இருந்து துளிர்த்து உடல் குலுங்க ஆரம்பித்தது. அந்தக்குரல் யாருடையதென்று புரிந்து விட்டது. எழுந்து நின்றேன். ‘ஏண்டா, தம்பி’ என்னைத்தெரியலியா கண்ணு’ என்றது. எனக்கு சப்தநாடிகளும் ஒடுங்கி நாவில் இருந்து சொற்கள் வராமல் பேசமுடியாது அன்னங்கள் ஒட்டிக்கொண்டன. உடலெங்கும் ஒரு மின்சாரம் போல் எல்லா இடங்களுக்கும் அந்த விசும்பல் ஓடியது. எந்த உருவமும் காணமுடியவில்லை. நல்ல வெயில் நேரமாக இருந்ததால் கானல் நீர் தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

நடுமண்மாடத்தின் முன் சம்மணமிட்டு அப்படியே உட்கார்ந்து கொண்டேன். உடலும் உள்ளமும் ஒரு சேர நடுக்கத்தை அனுபவித்தன.

‘ஏய்யா, கண்ணு! என்னப் பாக்க ஆருமில்லீயா சாமி. என்னக் கூட கூட்டிட்டு போ’ என்றது. பேச்சு வராததால் ‘ம்ம்ம்’ என்று தலையாட்டினேன். தலையை வாஞ்சையுடன் தடவி ‘நானுன்னத்தே எம்புள்ளயாட்ட நெனச்சிருந்தேனாயா.. புள்ள பெக்க வழியில்லாம மாண்டுபோனவனு என்னத்தள்ளிட்டியா’ என்றது. ‘ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்’ என வேகமாக அழுதபடியே தலையாட்டினேன். தன் தோளோடு சாய்த்துக்கொண்டு ‘நா ஒன்னோட வந்து இருந்துக்கறங்கண்ணு. ஒன்ன அப்பயாட்டவே நல்ல பாத்துக்குவே’ என்றாள் அத்தை. அய்யோ, அய்யோ! இவ்வளவு நேரம் நான் கேட்டுக்கொண்டிருந்தது அத்தையின் குரல். அத்தையின் விசும்பல். இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பாவுக்கு மட்டும் விளக்கேற்றி விட்டுப்போன நினைவு வந்தவுடன் ‘மன்னிச்சுரு அத்த மன்னிச்சுரு அத்த’ என தலைதலையாக அடித்துக் கொண்டேன். தலையில் இருந்து கைகளை விடுவித்தவள், ‘எஞ்சாமி நானிருக்கச்சொல்லோ அழுவலாமா’ என்று துடைத்துவிட்டாள்.

வறுமை பீடித்துத் தனது கோரமுகத்தை எங்கள் வீட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலம் அது. ஆயாவுக்கு அவளும், அம்மாவுக்கு நானும் கடைக்குட்டிகள். இப்போது போல நினைத்தபோதெல்லாம் உடுத்திக் கொள்ள துணிகள் எடுத்ததில்லை. அத்தை அன்பே உருவானவள் என்பதால் அம்மாவிடமும் பாசத்தோடு ஒட்டிக்கிடப்பாள். அம்மா ரொம்ப காலமாக ரவிக்கை போடாமல் இருந்தாள். அதற்கு காரணம் வறுமையும், அந்தச் செலவில் எங்கள் அனைவருக்கும் துணிகள் எடுக்க நினைத்ததும்தான். அம்மாவின் புடவைகளை இரண்டாகக் கிழித்து அத்தைக்குத் தருவாள். அத்தைக்கு அம்மாவின் சேலைகளே தாவணி ஆனது. தாவணியைக் கட்டிக் கொண்டு ஆடு மேய்க்கையில் அத்தை அந்தக் காலத்தில் படங்களில் வரும் கதாநாயகிகளைப்போல இருப்பாள். எந்தவித ஆடம்பரமும் இல்லாத மனதால் அன்போடு அனைவரையும் கட்டிப்போடுவதால் கிடைத்த அழகு அது. வயது வித்தியாசம் குறைவென்றாலும் என்னைக் குளிக்கவைத்து சாப்பாடு ஊட்டி பள்ளிக்கு அனுப்புவது அத்தைக்குப் பிடித்தமான வேலை. அவள் என்னைக் குளிக்க வைத்து என்னை மார்போடு அணைத்துத் துவட்டி விடும்போது அவள் உடலில் இருந்து மஞ்சள் மணம் வீசும். பள்ளிக்குப்போகாது மெத்தென்ற அவள் மடியில் படுத்து உறங்கி விடலாமென்று மனம் ஏங்கும். அத்தை மாநிறத்துக்குக் குறைவானவள் என்றாலும் வறுமையிலும் இளமையின் பூரிப்பில் அழகு மிளிர்ந்து அதிகாலையில் ஒரு பூ மலர்வது போல மலர்ந்து நிற்பாள். அவள் குளிக்க வைத்தால்தான் நான் அழகாக இருப்பேன் என்று அவளுக்கு ஒரு நம்பிக்கை. தலையை அழகாகப் படிய வாரிவிட்டு கன்னத்தைக் கிள்ளி நெட்டி முறித்து ‘எந்தங்கப்புள்ள நல்லா படிக்கோணும்’ என்பாள்.

ஆளுயர ஆட்டுக்கல்லில் அம்மா காட்டுக்கு சென்றுவிட்டால் நானும் அத்தையும் தான் ஆட்டவேண்டும். நான் சட்டினி கேட்டால் அலுங்காது எடுத்து வேறு யாரும் பார்க்காதபடி ஊட்டிவிடுவாள். சோளத்தை ஆட்டி அத்தை சுடும் பணியாரத்தை எல்லோருக்கும் தந்தது போக எனக்குத் தனியாக யாரும் அறியாமல் எடுத்து வைத்துத் தருவாள். நான் வீட்டின் கடைக்குட்டி என்பதால் அத்தை கூட கடைக்குச் செல்ல, காட்டுக்குச் செல்ல, புளியங்காய் அடிக்க‌ என எல்லாவற்றிலும் கூட்டுக் களவாணிகளாக இருந்தோம்.

அம்மாவின் தம்பி மாமாவுக்கே அவளைக் கொடுப்பதென முடிவு செய்து கல்யாணம் முடிந்து கிளம்பியபோது என்னைக் கட்டிக்கொண்டு அவ்வளவு அழுதாள். எம்புள்ளயாட்ட காலச் சுத்திக்கிட்டு கெடப்பானே அவன விட்டுட்டு எப்படிப்போவே எப்படிப் போவே என்று ஒப்பாரி போல பெருங்குரலெடுத்து அழுதாள். கணவன் வீடு சென்ற அன்றே அம்மைக்கண்டு கன்னிகழியாது ஒரு வாரத்தில் இறந்து போனாள். அத்தை வாழ்க்கையில் எதுவுமே நடக்காமல் இறந்து போனதால் எங்கள் வீட்டுப்பிள்ளையாகவே கருதி இங்கேயே வைத்துவிட்டோம். இத்தனை வருடங்கள் எப்படிப் புழுங்கிக்கிடந்தாளோ அத்தை என்றிருந்தது.

சித்துக்காளி அய்யாவுக்கு போனவுடன் நன்றி சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். நேற்று சித்துக்காளி அய்யா வந்தவுடன் என்ன விவரமென்றார். அப்பா நினைவுநாளன்று வந்த விசும்பல் சத்தம், கோடாங்கி குறி சொல்லியது, மனம் குழம்பி புரியாமல் நிற்பது வரை ஒன்றுவிடாமல் சொன்னேன்.

சேரில் இருந்து கீழிறங்கி தடுமாறி அமர்ந்தவர் நேராக நிமிர்ந்து வேண்டி சோழிகளை உருட்டினார்.

“பூர்வீக பூமியில ஒன் இடத்துல சுடுகாடு இருக்கா?”

எனக்குப் பகீரென்றது. “ஆமாங்க அய்யா. கடைசிப் பையங்கறதால எம்பங்கு மொடக்குச்சாலைகிட்டெ வருது. அங்கனக்குள்ளதே நம்ம பாட்டெ, அப்பமாருங்களெ வச்சிருக்கு.”

மீண்டும் சோழிகளை உருட்டிப்போட்டார். கையில் அவற்றை எடுத்தவர் “உங்க வீட்டுப்பொம்பளக யாரும் கன்னிகழியாம மாண்டு போனாங்களா?”

டங்கென்று மண்டையில் கோடாரியால் ஓங்கிச் சாத்தியதுபோல மின்னி மறைந்தது அத்தை இறந்து போன நிகழ்வு. “ஆமாங்க அய்யா, அத்தை கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் இறந்து போனாள் அவளையும் மொடக்குச்சாலையில்தான் எங்கள் வீட்டு ஆண்களோடு வைத்தோம்.”

“அந்தக் கன்னிப் பொண்ணுதான் அழுதுகிட்டே கெடக்கா. அவளுக்கு நீயின்னாப் பிரியமா தம்பி?.

‘ஆமாங்க அய்யா!.’

“அவ ஒங்கூட வந்து இருக்கணும்னு பிரியப்படறா தம்பி?”

“புரியலீங்களே. அதுவும் இத்தினி காலத்துக்குப் பொறவு!.”

“அததுக்கு ஒரு காலநேரமிருக்கு தம்பி. இத்தனை வருசமா உங்களுக்கு அவ அழுகுரல் கேக்கலனுதான் சத்தமா அழ ஆரம்பிச்சிட்டா. அவ எதுவுமே அனுபவிக்காம நிராசையா செத்துப்போனவ. அவளுக்குச் சீலை எடுத்துவச்சு சாமியா நெனச்சுக் கும்பிட்டு கூடவே வச்சிக்கச் சொல்றா”

எனக்கு மேலும் மேலும் குழப்பமானது. என்னதிது இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று.

“நாஞ்சொல்றதுல நம்பிக்கை வரலியா தம்பி?.”

“இல்லங்க அய்யா?” என இழுத்தேன்.

“வேணும்னா ஒண்ணு செய்யி. திரும்பி ஊருக்குப்போ. உன் இடத்தில் இருக்க சுடுகாட்டுக்குப்போ. எந்த அவசரமும் படாத. அவளா வந்து என்னைக் கூட்டிட்டுப்போனு அழுவறாளா இல்லையான்னு பாரு. இது நடக்கும்.”

“நடக்கலீன்னா?”

“நடக்கும் பாரு.”

“ஒருவேளை அப்படி எதுவும் நடக்கலீன்னா?”

“நான் இனிமேட்டு வாக்குச் சொல்றதையே உட்டுடறேன் போதுமா?”

“என்னங்கய்யா இப்படிச் சொல்றீங்க?”

“பின்ன, சாமி சொல்றதுன்னா சும்மா இல்ல தம்பி. எந்தத் தொழிலுன்னாலும் தெய்வமா நெனச்சாத்தான் நமக்குத் தொழில் வேலை செய்யும். எந்தக் குழப்பமும் இல்லாமல் போங்க. அவளக் கொண்டாடுங்க. அந்தக் கன்னித் தெய்வம் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது. கூடவே இருந்து காக்கும்.” தீர்மானமாகச்சொன்னார்.

இனியும் தாமதிக்காமல் அத்தையைக்கூட்டிச்செல்வது என முடிவு செய்தேன். பெரியசாமி அண்ணன் கடையில் ஓடி அப்பாவுக்கு வாங்கியது போலவே சூடம், பத்தி, சாம்பிராணி என வாங்கி வந்தேன். நடுமண்மாடத்தின் முன் பகுதியில் சுத்தம் செய்து சூடமேற்றி சாம்பிராணி போட்டு பத்தியை ஏற்றி வைத்தேன். எழுந்து நின்று நீளவாக்கில் அந்த இடத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்கிவிட்டுக்கிளம்ப ஆயத்தமானேன். நடந்ததெல்லாம் பிரமையா உண்மையா என்கிற குழப்பம் மட்டும் மீண்டும் தலைதூக்கியது. விசும்பல் சத்தத்தின் ஒலி எதுவும் கேட்கிறதா என ஒரு நிமிடம் நின்று பார்த்தேன்.

என் கரங்களை ஏதோ ஒரு கரம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது போலிருந்தது. குனிந்து எனது கரங்களைக் கவனித்தால் அதைக் காணவில்லை. எந்தச் சத்தமும், விசும்பலும், பேச்சும் எதுவுமேயில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன் வந்து பேசிய அத்தை இங்கே இருக்கிறாளா என்று தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தாற்போல எந்த அறிகுறியும் துளிகூட இல்லை. பற்றியிருந்த கரங்கள் மட்டும் என் கரங்களில் இருந்து விடுபடாமல் இருப்பதை உணரமுடிந்தது.

***

சுபி – கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதை, சிறுகதை, மதிப்புரை என்று எழுத்தில் தொடர்ச்சியாக பங்களித்துவருகிறார். க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதைப் பரிசு பெற்றுள்ளது. இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிவிருக்கிறது. மின்னஞ்சல்:subisenthur82@gmail.com

சுற்றுகளுக்கு இடையில்

0

ஓ ஹென்றி

தமிழில் : கயல்


மே மாதத்து நிலவு மிகச் சரியாகத் திருமதி மர்ஃபிக்குச் சொந்தமான தங்கும் விடுதியின் மேற்கூரைமீது பொலிந்துகொண்டிருந்தது. ஜோதிட நூலில், இனி கண்டுபிடிக்கப்படப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த பரந்த நிலப் பரப்பின்மீதும் நிலவின் கதிர்கள் பரவியிருந்தன. இப்போது  உச்சத்தில் இருக்கிற வசந்த காலத்தைப் பின்தொடர்ந்து பனிக் காலத்தில் ஏற்படும் ஒவ்வாமைகளும் வரும். மேற்குதிசையிலிருந்தும், கிழக்கில் இருந்தும் வணிகர்களும், பசுந் தளிர்களும் அங்கிருந்த பூங்காக்களை நிறைத்திருந்தன. மலர்களும் கோடைக் காலத் தங்கும் விடுதிகளின் முகவர்களும் வேகமாக அசைந்துகொண்டிருக்க, காற்றும் லாசனுக்குரிய பதில்களும் தேய்ந்தடி இருந்தன. ஃபிரெஞ்சு இயந்திரக் கருவியான உருளை வடிவ இசைக் கருவிகளும், நீரூற்றுகளும், சீட்டுக் கட்டு விளையாட்டின் ஓசையும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தன.  

திருமதி மர்ஃபிக்குச் சொந்தமான தங்கும் விடுதியின் ஜன்னல்கள் திறந்திருந்தன. அதன் உயரமான படிக்கட்டுகளின்மீது ஜெர்மன் பான்கேக்குகளைப் போல வட்டமாகவும் தட்டையாகவும் இருந்த பாய்களைப் போட்டு, விடுதியில் தங்கியிருந்த ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். 

இரண்டாவது மாடியின் முன்புற ஜன்னல்கள் ஒன்றின் அருகே திருமதி மெக்காஸ்கி, தன் கணவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த இரவு உணவு ஆறிக் கொண்டிருக்க, அதன் வெப்பம் திருமதி மெக்காஸ்கிக்குள் புகுந்தது.

தன்னுடைய மேல் அங்கியைக் கைகளிலும், சுருட்டைப் பற்களுக்கு இடையேயும் ஏந்தியபடி, இரவு ஒன்பது மணிக்கு அங்கு வந்து சேர்ந்த திரு மெக்காஸ்கி, படிகளில்  அமர்ந்திருந்தவர்களைத் தொந்தரவு செய்தமைக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபடி, ஒன்பதாம் எண் அளவும் டி அகலமும்கொண்ட தன் காலணிகளை வைத்து நடப்பதற்கு அவர்களுக்கிடையே காலியாக இருந்த ஒரு படிக்கட்டைத் தேர்வு செய்தார். 

தன்னுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், வியப்படைந்தார்.  தன்மீது எறியப்படும் தட்டுகளோ, உருளைக்கிழங்குகளை மசிக்கப் பயன்படுத்தும் கருவியோ  தாக்காமல், அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டு வழக்கமாக உள்ளே நுழைபவரை, வழக்கத்திற்கு மாறாக சொற்கள்மட்டுமே அன்று வரவேற்றன. 

இனிமையான மே மாத நிலவு தன்னுடைய மனைவியின் இதயத்தைக் கனிவாகிவிட்டதாக மெக்காஸ்கி நினைத்தார்.

சமையலறைப் பாத்திரங்களுக்கு பதிலாக இப்போது சொற்கள் வந்தன.

“நான் கேட்டுக்கொண்டு தானிருந்தேன். அவர்களுடைய ஃபிராக்கின் விளிம்பில் உன் விகாரமான பாதங்கள் பட்டுவிட்டதற்காக தெருக்களில் திரியும் ஒன்றுக்கும் உதவாதவர்களிடம் உன்னால் மன்னிப்புக் கேட்கமுடியும். ஆனால்,  துணி காயவைக்கும் கொடி நீளத்துக்கு உன் மனைவியின் கழுத்தின்மீதே நடந்து நீ காயப்படுத்துவாய். ஆனாலும்கூட, “என்னை முத்தமிடு” என்ற ஒற்றை வார்த்தையைக்கூட உன்னால் சொல்லமுடியாது. அந்தத் துணிக் கயிறு, ஜன்னலோடு ஒட்டி நின்றபடி நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேனே அதைவிட நீளமானது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். உன்னுடைய வாராந்திரக் கூலி முழுவதையும் கேலாகரின் சாராயக் கடையில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் குடிப்பதற்காக நீ எப்படி எந்த உணர்ச்சியும் இன்றிச் செலவு செய்கிறாயோ அதேபோல  இந்த இரவு உணவும் ஆறிவிட்டது. எரிவாயுக் கட்டணம் வசூலிப்பவர் தனக்கான பணத்தைக் கேட்டு இன்று இரண்டு முறை இங்கு வந்திருந்தார்”.

“ஏய்!” என்றபடி தன் அங்கியையும் தொப்பியையும் ஒரு நாற்காலிமீது வீசியெறிந்தவர், “உன் கூச்சல் என்னுடைய பசியை அவமதிக்கிறது. ஒருவர் தன்னுடைய நாகரிகமான பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டால் அது சமுதாயத்தின் அடித்தளக் கற்களின் இடையே உள்ள சிமெண்ட்டுப் பூச்சை அகற்றிவிடுவது போன்றது. பாதையை மறித்து அமர்ந்திருக்கிற பெண்களுக்கு இடையே நுழைந்து வெளியேறுவது குறித்து ஒரு கனவானாக நான் அவர்களிடம் கோபமாகப் பேசியதுதவிர அதில் வேறெதுவும் இல்லை. உன்னுடைய பன்றி முகத்தை ஜன்னலில் இருந்து நகர்த்தி, உணவைக் கொண்டு வரப் பார்க்கிறாயா?” என்றார்.

வேகமாக எழுந்த திருமதி மெக்காஸ்கி அடுப்பை நோக்கிச் சென்றாள். அவளுடைய நடவடிக்கையில் இருந்த ஏதோ ஒன்று மெக்காஸ்கியை எச்சரித்தது.  அவளுடைய உதடுகளின் விளிம்புகள் காற்றின் அழுத்தத்தை அளவிடும் கருவி போன்று திடீரெனத் தாழ்கிறதென்றால், அது சமையல் பாத்திரங்களும் தகரப் பொருட்களும் வீசப்படுவதற்கான வழக்கமான முன்னெச்சரிக்கையாகும்.

“ஓ! பன்றி மூஞ்சி! அப்படியா?” என்றவள் பன்றி இறைச்சியும் நூக்கலும் நிறைந்திருந்த வாணலியைத் தன் கணவன்மீது வீசி எறிந்தாள்.

பதிலடி கொடுப்பதில் மெக்காஸ்கி ஒன்றும் கற்றுக்குட்டி அல்லர். பந்தியில் முக்கிய உணவைத் தொடர்ந்து எந்தப் பதார்த்தம் பரிமாறப்படும் என்பது அவருக்குத் தெரியும். எலும்புகள் ஏதுமற்ற, சதைப் பிடிப்பான பன்றி இறைச்சி வறுக்கப்பட்டு, மணப் புல் வகையிலான இலைகளால் அலங்கரிக்கப்பட்டு,மேஜைமீது வைக்கப்பட்டிருந்தது. தன் மனைவிக்குச் சுடச்சுட பதில் தரும் விதத்தில், ஒரு மண் பாண்டத்தில் வைக்கப்பட்டிருந்த ப்ரெட்டால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டத்தை அவர் பொருத்தமாகத் திருப்பியடித்தார். அவர் துல்லியமாக எறிந்த ஒரு பெரிய பாலாடைக் கட்டித் துண்டுஅவளுடையகண்ணின் கீழே போய் அடித்தது. சூடான, கருத்த, பாதியளவு மணம் வீசிக்கொண்டிருந்த காபிக் குவளையைச் சரியாகக் குறி பார்த்து எறிந்து அவள் அதற்குப் பதில் சொன்னபோது, உணவு பரிமாறப்படும் வரிசையில் அடுத்ததாக வரவேண்டியது என்ற முறையில்,  இது அப்போதே முடிவுக்கு வந்திருக்கவேண்டியது.

ஆனால் திரு மெக்காஸ்கி ஐம்பது சதவிகிதத் தள்ளுபடி விலையில் தரப்படும் உணவு விடுதிகளின் வாடிக்கையாளர் கிடையாது. மலிவான ஆட்களான கலைஞர்கள் வேண்டுமானால், ஒருவேளை தாங்கள் நினைத்தால், காபியை உணவில் இறுதியாகப் பரிமாறக்கூடிய ஒன்றாகக் கருதலாம். 

அவர்கள் வேண்டுமானால் அந்த இழிவான செயலைச்செய்து கொள்ளட்டும். மெக்காஸ்கி அவர்களைவிட அதிக திறமையானவர். 

உணவு மேஜையிலேயே கைகளைக் தழுவிக் கொள்ளத் தரப்படும் சிறு கிண்ணங்கள் அவருடைய அனுபவத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. அவை இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்க வேண்டியவையும் அல்லதான்; ஆனால் அவற்றுக்கு இணையானவை அவருடைய கைவசம் இருந்தன. தன் திருமணத்தால் தனக்கு வாய்த்த இந்தப் பகையாளியின் தலையை நோக்கி வெற்றிப் பெரிமிதத்துடன்  கருங்கல்லால் ஆன கை கழுவும் தொட்டியை உடனே அனுப்பி வைத்தார். சரியான நேரத்தில் அதிலிருந்து லாவகமாகத் தப்பித்து, உளங்கனிந்த ஓர் செயல்போல இஸ்திரி பெட்டியை எட்டி எடுத்த திருமதி மெக்காஸ்கி,  உணவு சார்ந்த இந்தப் போர் இப்போது முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பினாள். ஆனால் கீழ்த் தளத்தில் இருந்து ஒலித்த அலறல் ஓசையால், திரு மெக்காஸ்கியோ திருமதி மெக்காஸ்கியோ, விரும்பாத, தன்னிச்சையான ஒரு  போர் நிறுத்த ஒப்பந்தம் அங்கு திடீரென ஏற்பட்டது.

அவர்களுடைய வீட்டினுடைய நடைபாதையின் மூலையில் காவலர் க்ளேரி தன்னுடைய ஒரு காதை மேல்நோக்கிச் சாய்த்து வைத்தபடி சமையலறைப் பாத்திரங்கள் மோதி விழும் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

“அட, இந்த மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும் மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள்” என்றபடி தியான மனநிலைக்குச் சென்றார் அந்தக் காவலர், “மேலே சென்று இந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமா என்று யோசிக்கிறேன். நான் போகமாட்டேன். அவர்கள் திருமணமானவர்கள், வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் மட்டுமே அவர்களுக்கு உள்ளன. இது வெகு காலம் நீடிக்காது. இதை மேலும் தொடரவேண்டும் எனில் அவர்கள் மேலும் சில பாத்திரங்களைக் கடனாகப் பெற வேண்டியிருக்கும்”.

அதே சமயத்தில் பெரும் அச்சத்துடனும் அவசரத்துடனும் ஒரு பெரிய கூச்சல் படிகளுக்குக் கீழ் இருந்து கேட்டது. 

“அது பூனையாகத்தான் இருக்கும்” என்ற காவலர் க்ளேரி அந்தத் திசையை நோக்கி வேகமாக நடந்தார். 

படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த விடுதியின் வாடிக்கையாளர்கள் படபடப்பு அடைந்தனர். பிறவிக் காப்பீட்டு ஆலோசகரும், தொழில்முறை துப்பறிவாளருமான திரு டூமி, அந்த அலறல் சத்தத்தைக் குறித்து ஆராய்வதற்காக உள்ளே சென்றவர், திருமதி மர்ஃபியின் மகன், சிறுவன் மைக் தொலைந்து போய்விட்ட செய்தியுடன் திரும்பினார்.

உண்மையிலேயே இது ஒரு சோகமான காட்சிதான்; ஆனால் திரு டூமி, பெண்கள் அணியும் தொப்பிகளை விற்பனை செய்யும் மிஸ் பர்டியின் அருகே சென்று அமர்ந்துகொண்டதும், அவர்கள் இருவரின் கைகளும் அனுதாபத்துடன் பிணைந்து கொண்டன. கூடத்தில் ஏற்படும் சத்தத்தைப் பற்றித் தினமும் புகார் கூறும் திருமண வயதைக் கடந்த முதிர்கன்னியான திருமதி வால்ஷ், கடிகாரத்திற்குப் பின்னால் யாராவது சிறுவனைத் தேடினார்களா என்று உடனே கேள்வி எழுப்பினாள்.

மேல் படிக்கட்டில், பருமனான தன் மனைவியின் பக்கத்தில்  அமர்ந்திருந்த மேஜர் க்ரிக், உடனே எழுந்து தன்னுடைய மேலங்கியின் பொத்தானைப்  பொருத்திக் கொண்டு, “அந்தச் சிறுவன் தொலைந்துபோய் விட்டானா?”  என்று ஆச்சரியத்துடன் கேட்டபடி, “நான் இந்த நகரத்தையே துருவித் தேடுகிறேன்” என்றார்.  இருட்டிய பிறகு எங்கும் வெளியே செல்ல அவருடைய மனைவி அவரை இதுவரை அனுமதித்ததே இல்லை. 

ஆனால் இப்போதோ கரகரப்பான ஆண் குரலில், “மாவீரரே, நீங்கள் கிளம்புங்கள்! ஒரு தாயின் துயரத்தைப் பார்த்தும் அவளுக்கு உதவி செய்யப் பொங்கி எழாதவர்களின் இதயம் கல்லால் ஆனது”  என்றாள்.

மேஜர், “எனக்கு முப்பது அல்லது அறுபது சென்ட்கள் தா அன்பே. தொலைந்து போகும் சிறுவர்கள் சில சமயம் வெகு தூரம் சென்று விடுவார்கள். பயணம் செய்ய எனக்குப் பணம் தேவை” என்றார்.

தங்கும் விடுதியின் நான்காவது மாடியின் பின்பக்கம் இருந்த சிறிய அறை ஒன்றில் வசித்த முதியவரான டென்னி, கடைசிப் படிக்கட்டில் அமர்ந்து தெருவிளக்கின் வெளிச்சத்தில் செய்தித்தாள் வாசிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். தச்சர்களின் வேலைநிறுத்தம் பற்றிய கட்டுரையை வாசிப்பதற்காகச் செய்தித்தாளைத் திருப்பினார். திருமதி மர்ஃபி நிலவைப் பார்த்து, “ஐயோ,  மைக்! கடவுளின் பெயரால் கேட்கிறேன் என்னுடைய குட்டிப் பையன் எங்கே?” என்று கிறீச்சிட்டாள்.

முதியவர் டென்னி தன்னுடைய ஒரு கண்ணைத் தச்சர்கள் குழுகுறித்த அறிக்கைமீது வைத்துக்கொண்டே, “நீங்கள் கடைசியாக அவனை எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டார். 

“அது…” என்று அலறிய திருமதி மர்ஃபி, “நேற்று பார்த்தேன். அல்லது ஒருவேளை அது நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய குட்டிப் பையன் மைக் தொலைந்து போய்விட்டான். அவன் கட்டிடத்தின் நடைபாதையில் இன்று காலையில்தான் விளையாடிக் கொண்டிருந்தான் அல்லது அது புதன்கிழமையா? நான் ஓய்வில்லாமல் வேலை செய்வதால் தேதிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினமான ஒன்று. ஆனால் ஒன்று மாடியில் இருந்து நிலவறை வரை, வீடு முழுக்க நான் தேடி விட்டேன் அவனைக் காணவில்லை. ஐயோ, இறைவா…”

நிசப்தமான, கடுகடுப்பான, பிரம்மாண்டமான அந்தப் பெரிய நகரம் தன்னை நிந்திப்பவர்களுக்கு எப்போதும் எதிராக நிற்கிறது. அது இரும்பைப் போல கடினமானது என்று அவர்கள் கூறுகின்றனர்; அதன் இதயத்தின் ஆழத்தில் கருணையின் துடிப்பில்லை என்கிறார்கள்; அதன் தெருக்களை அவர்கள் தனிமையான காடுகளோடும், பாலைவன எரிமலைக் குழம்போடும் ஒப்பிடுகின்றனர்.

ஆனால் நண்டின் கடினமான ஓட்டுக்கு அடியில் சுவையான உணவு உள்ளது. வேறு ஒரு உவமையைப் பயன்படுத்தி இருந்தால் ஒருவேளை அது புத்திசாலித்தனமான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும் இதற்காக யாரும் மனம் வருந்தத் தேவையில்லை. சிறந்த, போதுமான அளவுக்குக் கூரான நகங்கள் அற்ற யாரையும் நாங்கள் நண்டு என்று பெயரிட்டு அழைக்கமாட்டோம்.

ஒரு சின்னஞ் சிறு குழந்தை வழி தவறிப் போவதுபோல,  மனித நேயத்தின் பொதுவான இதயத்தைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய பேராபத்து வேறெதுவும் இல்லை. அந்தக் குழந்தைகளின் கால்கள் சிறிதும் உறுதியற்றவை, மென்மையானவை; ஆனால் பாதைகளோ கடினமானவையாக, முன்பின் அறிமுகம் அற்றவையாக உள்ளன. 

விடுதியின் மூலையை நோக்கி வேகமாக ஓடி, மரங்கள் அடர்ந்த சாலையைக் கடந்து பில்லியின் இடத்தைச் சென்றடைந்த மேஜர் க்ரிக்ஸ், “எனக்கு ஒரு விஸ்கி தா” என்று பணியாளரிடம் கூறிவிட்டு, “வளைந்த முழங்கால்களும், அழுக்கடைந்த முகமுமாக, குட்டிச்சாத்தான்களுக்கே உரிய ஆறு வயது நிரம்பிய ஒரு சிறுவன் உன் கண்களில் தட்டுப்படாமல் எங்கும் போயிருக்கமுடியாது. நீ அவனைப் பார்த்தாய்தானே?” என்று கேட்டார்.

பர்டியின் கையைப் பிடித்தபடியே திரு ரூமி படிகளில் இப்போதும் அமர்ந்திருந்தார். 

“அந்தச் செல்லக்குட்டியை நினைத்துப் பாருங்கள். தன்னுடைய அம்மாவிடம் இருந்து பிரிந்துபோன அந்தக் குழந்தை பாய்ந்தோடும் குதிரைகளின் இரும்புபோன்ற குளம்புகளுக்குக் கீழே இப்போதேகூட ஒருவேளை விழுந்துவிட்டிருக்கக்கூடும். ஐயோ அது எவ்வளவு பயங்கரமானது!” என்றாள்.

“ஆம். அது சரிதான்!” என்று அவள் கூறியதை ஏற்றுக்கொண்ட திரு டூமி பர்டியின் கையை அழுத்தியபடி , “இங்கிருந்து கிளம்பிப் போய் அவனைத் தேடுவதற்கு நான் உதவினால் என்ன?” என்று கேட்டார். 

“செய்யலாம்தான்,” என்ற பர்டி, “நீங்கள் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் ஐயோ!  திரு ரூமி, நீங்கள் மிகுந்த உடல் உரத்தோடும், ஆபத்தான விளைவுகளைப் பற்றி நினைக்காமல் அதிக துணிச்சல் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்! உங்களுக்கு இருக்கும் இந்த உற்சாகத்தில் எதிர்பாராதவிதமாக உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால், அதன் பிறகு என்ன….?” என்றாள்.

முதியவர் டென்னி, தன்னுடைய ஒற்றை விரலைச் செய்தித்தாளின் வரிகளின் மீது வைத்தபடி சமரச ஒப்பந்தம் பற்றிய செய்தியைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். 

இரண்டாவது மாடியில் இருந்த திரு மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும் களைப்படைந்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டே காற்று வாங்க தங்களுடைய ஜன்னலுக்கு அருகே வந்து நின்றனர். திரு மெக்காஸ்கி தன் சட்டையின் உட்புறத்தில் இருந்த கிழங்கை வளைந்திருந்த தன் சுட்டுவிரலால் தேடி எடுத்தார். அவருடைய மனைவி வறுத்த பன்றிக்கறியின் மீது தடவப்பட்டிருந்த உப்பு பட்டு எரிச்சலுற்ற தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கீழிருந்து எழுந்த கூச்சல்களைக் கேட்டதும் அவர்கள் இருவரும் தங்களுடைய தலைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தனர்.

“அந்தக் குட்டிப் பையன் மைக் தொலைந்து போய்விட்டான்” என்று ரகசியமான குரலில் சொன்ன திருமதி மெக்காஸ்கி,‌”அழகான, குட்டியான, தொல்லை தரும் சிறு வேலைக்காரப் பயல்” என்றாள்.

ஜன்னலின்மீது சாய்ந்து வெளியே எட்டிப் பார்த்தபடி “அந்த சிறுவன் தொலைந்து போய் விட்டானா?” என்று திரு மெக்காஸ்கி கேட்டார்.

“அடடா! இது உண்மையிலேயே மிகவும் மோசமானதுதான். குழந்தைகள் விஷயமே வேறு மாதிரியானது. இதுவே ஒரு பெண் என்றால், நான் அது எனக்குச் சம்மதமே. அவர்கள் ஓர் இடத்தை விட்டு விலகிய பிறகே அங்கு அமைதி நிலவும்” என்றார். 

இந்தக் கிண்டலைக் கண்டுகொள்ளாத திருமதி மெக்காஸ்கி தன்னுடைய கணவனின் கையைப் பற்றினாள்.

“அன்பே” என்று உணர்ச்சிவசப்பட்டு அவரை அழைத்தவள், “மர்ஃபியின் சிறு குழந்தை காணாமல் போய்விட்டது. சிறு குழந்தைகள் எளிதில் காணாமல் போகும் அளவுக்கு இது ஒரு பெரிய நகரம். அவனுக்கு ஆறு வயது தான் ஆகிறது. அன்பே, ஆறு வருடங்களுக்கு முன்பு நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தால் அந்தக் குழந்தைக்கும் இப்போது ஆறு வயதுதான் ஆகியிருக்கும்” என்றாள்.

“நாம் தான் குழந்தை பெறவே இல்லையே” என்று கூறிய திரு மெக்காஸ்கி, அது குறித்துத் தீவிரமாக யோசித்தார். 

“ஆனால், ஒருவேளை நமக்கு அந்த குழந்தை இருந்திருந்து, நம் குட்டிப் பையன் ஃபெலன் ஓடிப்போய் எங்கோ கண்காணாத இடத்தில் யாரோ அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டிருந்தால்,  இன்று இரவு நம் இதயங்கள் எத்தகைய வேதனையில் நிரம்பியிருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்” 

“ஏய்! முட்டாள்தனமாகப் பேசாதே. ஆண்ட்ரிமில் இருக்கும் என் அப்பாவின் நினைவாக அவனுக்கு பாட் என்றுதான் நான் பெயரிடுவேன்” என்றார் மெக்காஸ்கி.

” நீங்கள் சும்மா சொல்கிறீர்கள்” கோபமற்ற குரலில் கூறிய திருமதி மெக்காஸ்கி, “என் அண்ணன் ஒரு டஜன் மெக்காஸ்கிகளைவிட உயர்ந்தவர். அவருடைய பெயரைத் தான் குழந்தைக்கு சூட்டவேண்டும்” என்றவள் பலகணியின் மீது சாய்ந்தபடி கீழ்த்தளத்தில் நடந்துகொண்டிருந்த களேபரத்தைப் பார்த்தாள்.

“அன்பே”  என்று மென்மையான குரலில் அழைத்த  திருமதி மெக்காஸ்கி, “நான் அவசரப்பட்டுப் பேசியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றாள்.

“நீ சொல்வதுபோல் உன் கோபம் அதிவிரைவாகச் செய்யப்பட்ட இனிப்புப் பண்டம் மாதிரிதான். விரைவாக வேக வைத்த கிழங்குகள், வேகமாகத்  தயாரித்த காபி, நாம் வேகமாகத் தயாரிக்கப்பட்ட மதிய உணவு என்று அழைப்போமே அதுபோல. சரியா, அத்துடன் நீ பொய் சொல்லாதே” 

திருமதி மெக்காஸ்கி,  தன் கணவரின் கைகளுக்குள் தன் கைகளை நுழைத்து, அவனுடைய முரட்டுத்தனமான கைகளைத் தொட்டாள்.

“திருமதி மர்ஃபியின் அழுகுரலைக் கேளுங்கள். இந்த மிகப்பெரிய நகரத்தில் ஒரு சிறு குழந்தை காணாமல் போவது என்பது மிக மோசமான ஒரு விஷயம். அதுமட்டும் நம்முடைய குட்டிப் பையன் ஃபெலான்  ஆக இருந்திருந்தால், ஐயோ  அன்பே,  அது என்னுடைய இதயத்தையே நொறுக்கிவிட்டிருக்கும்”  என்றாள்.

சட்டெனத் தன்னுடைய கைகளை அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டாலும் திரு. மெக்காஸ்கி, தன்னுடைய மனைவியின் தோள்களின்மீது அவற்றைப் படரவிட்டார்.

“இது நிச்சயமாக முட்டாள்தனம்தான்” என்று முரட்டுத்தனமாகக் கூறியவர்,

“நம் குழந்தை பாட் ஒருவேளை கடத்தப்பட்டிருந்தாலோ வேறு ஏதாவது நடந்திருந்தாலோ நானும் பெரும் துயரத்தை அடைந்திருப்பேன். ஆனால் நமக்கு இதுவரை குழந்தையே பிறக்கவில்லை.  சில சமயங்களில் நான் உன்னிடம் மோசமாகவும் கடுமையாகவும் நடந்து கொண்டிருக்கிறேன் ஜூடி.  அதை மறந்துவிடு”

அவர்கள் இருவரும் ஜன்னலின்மீது ஒன்றாகச் சாய்ந்தபடி கீழ்த்தளத்தில் நடந்துகொண்டிருந்த இதயத்தை உருக்கும் நாடகத்தை எட்டிப் பார்த்தனர்.

வெகு நேரம் அவர்கள் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.  நடைபாதையில் மக்கள் கூட்டம் பெருகியது. அந்த இடமே கேள்விகள்,  வதந்திகள், யூகங்களால்  நிறைந்தது. திருமதி மர்ஃபி, இடைவிடாது கொட்டும் நீர்வீழ்ச்சிபோலக் கண்ணீர் சிந்தியபடியே ஓர் மென் மலை தரையிறங்கி வந்ததுபோல முன்னும் பின்னுமாக ஆட்களுக்கு இடையே நடந்துகொண்டிருந்தாள். தகவல் பரிமாறுபவர்கள் வந்து சென்றபடி இருந்தனர்.

விடுதியின் முன்பக்கத்தில் இப்போது பெரும் சத்தமும் புதிதாக ஒரு கூச்சலும் எழுந்தன. 

திரு மெக்காஸ்கி, “இப்போது என்ன ஆயிற்று ஜூடி?” என்று கேட்டார்.

அந்தக் குரலைத் தீவிரமாக ஆராய்ந்த திருமதி மெக்காஸ்கி, “அது திருமதி மர்ஃபியின் குரல்” என்றாள். “தன்னுடைய  படுக்கையறையில், கட்டிலுக்குக் கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய தரை விரிப்பின் பின்பக்கமாக, குட்டி மைக் உறங்கிக்கொண்டிருந்ததை இப்போதுதான் அவள் கண்டுபிடித்தாளாம்” 

திரு மெக்காஸ்கி சத்தமாகச் சிரித்தார். 

“அதுதான் உன் ஃபெலான்” என்று கிண்டலாக கூச்சலிட்டார். “இதுபோன்ற வேலையெல்லாம் பாட் ஒருபோதும் செய்திருக்கமாட்டான். நமக்குப் பிறக்காத நம்முடைய குழந்தை தொலைந்துபோய், யாராவது அவனைத் திருடிக்கொண்டு போய் விட்டால்,  உன்னுடைய திறமையைப் பயன்படுத்தி அவனை நீ ஃபெலான் என்று கூப்பிடு. அவன்தான் கட்டிலுக்குக் கீழ் ஒரு நாய்க்குட்டி போல ஒளிந்துகொண்டிருப்பான்.”

வேகமாக எழுந்த திருமதி மெக்காஸ்கி, தன்னுடைய வாய்ப்பகுதியின் ஓரங்களைத் தொங்கப்போட்டபடி, பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரியை நோக்கி நடந்தாள்.

கூட்டம் கலையத் தொடங்கவும், காவலர் க்ளேரி விடுதியின் மூலையை வந்தடைந்தார். மெக்காஸ்கியுடைய வீட்டின் மேற்புறமாக அவர் தன்னுடைய காதை வைத்தபோது, இரும்புப் பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் வீசி எறியப்பட்டு உடைந்து நொறுங்கும் ஓசை முன்போலவே பெரும் இரைச்சலுடன் இப்போதும் கேட்டதும், தன்னுடைய கடிகாரத்தை வெளியே எடுத்தார். 

“அடக் கடவுளே! மெக்காஸ்கியும் அவருடைய மனைவியும்  ஒரு மணி நேரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவனுடைய மனைவி அவனைவிட நாற்பது பவுண்டு  அதிக எடை கொண்டவள். கடவுள் அவனுடைய கைகளுக்கு வலிமையை அளிக்கட்டும்”

காவலர் க்ளேரி விடுதியின் மூலையைச் சுற்றி வந்து பைய நடைபோட்டுத் திரும்பிச் சென்றார்.

திருமதி மர்ஃபி, கதவுகளைப் பூட்டத் தொடங்கிய அதே நேரத்தில் முதியவர் டென்னி தன்னுடைய செய்தித்தாளை மடித்து வைத்துக்கொண்டு விரைந்து படிகளில் ஏறினார். 

ஓ. ஹென்றி – இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் (1862 – 1910), அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் ஆவார். கவிதைகள் புனைவிலக்கியம் ஆகியவற்றுக்கும் இவர் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ஓ.ஹென்றியின் கதைகள், இயற்கை மீதான அவருடைய நுட்பமான பார்வை, நகைச்சுவையான விவரிப்புகள், வியப்பளிக்கும் முடிவுகளுக்குப் புகழ் பெற்றவையாகும்.

***

கயல் – வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகத் தற்போது பணியாற்றுகிறார். இவர் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்லூஞ்சல் (2015), மழைக்குருவி (2016), ஆரண்யம் (2018),ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய கவிதை நூல்களும், கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள் (2022), பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும், சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள் (2022), போரொழிந்த வாழ்வு (நாவல்) (2024), இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள் (நாவல்) (2025) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் : dr.kayalvizhi2023@gmail.com

மதுஷன் சிவன் கவிதைகள்

1

இருத்தலின் மீதம்

ஒரு அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைவதை
எந்த வகையில் தெரிவு செய்வது;
பேராசைகளின் நிமித்தம் பதற்றமடைகின்றேன்
ஏதொரு சம்பாசனைகளுமற்ற வெறுமையில்
காலிடறி விழுவதில் விழுந்த உடனே எழுவதில்:
வெடித்த பட்டாசைப்போல சில்லுசில்லாக சிதறுண்டு தரையில் ஒரு மீதப்பொருளாகிப்போக;
ஏதேன்னை கட்டுகிறது;ஏதென்னை விடுவிக்கிறது
ஏதேன்னை நடத்துவிக்கிறது,
ஒரு நீச்சல் தடாகம் அல்லது ஆழ்கடல் ஏதுவாகினும்
தொப்பெனக்குதித்ததும் என்னை ஒரு மீனைப்போல மாற்றி விடுமா?
இல்லாது போனால் நீராகவேனும் மாற்றி விடுமா?
கோடை முடிந்து கொண்டிருக்கிறது 
அதி பலமான காற்று உதிரும் இலைகள்,உதிர்ந்த இலைகள் பாதை வெளியை கடக்க 
இலைகளின் மேல் நடக்கிறேன்.

2

ராச்சத எண்ணங்களின் அலைக்கழிவுகளில்
இருந்து தப்பிக்க நான்
என்னில் இருந்து என்னை ஒதுக்கி விடுவது எப்படி?
பனிக்காலத் தொடக்கம்;
சூரியன்;இருளை விலக்கி கவிந்த மஞ்சள் நிற வெளிச்சப்பரப்பு தளத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளியைப் போல படர விடுகிறது,
கோடை காலங்களில் இப்படியாக இல்லை
ஒரு இளம் மஞ்சலின் சாயல்
கட்டற்ற மாயச்சுழல்,வெறுமை வெளியில்
உருண்டை உருண்டையாக
மாயச்சகதிகளை,உருள விடுகிறது
கூச்சலிட்டபடியே போய் மோதுகிறேன்
கண்களை திறந்தபடியே போய் மோதுகிறேன்
என்னை திட்டியபடியே போய் மோதுகிறேன்
உருக்குலைந்து,உருக்குலைந்து,உருவமற்று,
இப்பொழுதில் நான் ஒரு மாயச்சுழல்
என்னுள்ளும் இருப்பது ஒரு மாயச் சரடு
தெரியும் வண்ணம்,பிரம்மத்துவத்தை கண்டடைவதில்;
பனிக்குளிர் நாளில் தேநீரை அருந்தியபடி
புகைத்தபடி நடக்கும் அந்த ஒருத்தியின்
விடிகாலைப் போல,மதியம் போல, இரவினைப் போல
வார இறுதி இரவுகளைப் போல,
வருடக்கடைசி நாட்களைப்போல
அவள் கடக்கும் வருடங்களைப்போல;

3

தெய்வாம்சக் குறியீடுகளை கொண்டிருக்கிறாய்
என்கிறார்கள்
தெய்வத்தை போன்றதுன் கண்கள்,
கருணை ததும்பி வழியும் பார்வை,
மானிறத்தேகத்தில் சந்தன வாசம்,
பறவைகளும் விலங்குகளும் இன்ன பிற சிற்றுயிரிகளும் உன்னை ஆராதிக்கத் தலைப்படுகின்றன
நீயேன் மௌனமாக இருக்கிறாய்
ஏதை சேபிக்கிறாய்,
பரமபிதாவுடன் உரையாடுகிறாயா?
பரமபிதாவிடம் என்ன பேசினாய்?
எங்களுக்காகவும் மன்றாடினாயா?
பரமபிதா என்ன சொல்லி இருந்தார்?
எங்கள் பிணி தீரும் என்றாரா?
எங்கள் வாதை கழியும் என்றாரா?
கண்களை விழிக்கிறேன்
காற்று மண்டலம் பிரார்த்தனைகளாலும் 
கேள்விகளாலும் மாசுற்று இருக்கிறது
வெள்ளைச் சாம்பல் மூட்டங்கள் பரந்த வெளிகளில்
வேண்டிக்கொள்பவர்களின் ஒலத்தில்;
நான் துஷ்டனாக்கப்பட்டேன்
யாராவது இருந்தால் ஒரு பாடகனை அழைத்து வாருங்கள் என்றேன்
துஷ்டனை புகழ்ந்து பாடச்சொல்லுங்கள்
இந்த ரோகியை புகழ்ந்து பாடச்சொல்லுங்கள்
உங்கள் உங்கள் கழுத்துக்கு என் கத்தி வரும்முன்
பாடகனை பாடச்சொல்லுங்கள்.

*

உறை வெளி

பரந்த வெளிச்சம் மற்றும் பரந்த இருள்
துண்டுகளாக்கப்பட்டது
கோடை நாள்களில் சூரியனை வெளிர் மஞ்சள் வர்ணத்துடன் தழுவிக்கொள்கிறேன்
பிரதியுபகாரம் கோராமல் இருள் சுருங்கத்தொடங்குகிறது
பரந்த வெள்ளை அறையின் மௌனத்தின் நிமித்தம்
காற்றில் அலைக்கழியும் நெகிழிப்பையினைப்போல்
பறக்கிறேன், இருக்கிறேன், தவழுகிறேன், உருளுகிறேன்,புரண்டு வெண்ணிறத்தின் ஸ்பரிசத்தின் கதகதப்பில் நிறங்களற்று கரைந்து போகிறேன்
குறு மனதின் சஞ்சாரம்; கோடி ஆண்டுகள் பழையது
உயிர் உறைந்த சதையில் பூரித்திருக்கும் கேசங்களின் தோற்றுவாய் வழி
ஒன்று, இன்னொன்று, மேலும் ஒன்று என 
மேலும் மேலும் அடுக்குளில் நினைவுத்தளங்கள் வரிசைப்படுத்தபட்டிருக்கிறது; யாரென்னை அழைப்பது
உங்கள் முகம் என்னிடம் இல்லை, 
உங்கள் குரல் என்னிடமில்லை,
புதிதாய் செழித்த மரங்களில் பூ உதிரும் சப்தம்;
அசௌகரியத்தின்பால் காதுகளை மூடிக்கொள்கிறேன்

காலம் இரத்தாகும்

வெலவெலத்துப்போயிருந்த சமாதானம் 
இரவுகளை சிறுமைப்படுத்த தொடங்கியது
ஒரிரு கைகளில் ஆயுதங்கள் வந்து விட்டன
கடல் அங்குமிங்குமென நிலையில்லாத பூதத்தின் கைகளைப்போல அசைந்த படி இருக்கிறது
அந்தரத்தின் பேரிரைச்சல்
அமைதியின் சலசலப்பையும் மீறி 
ஒழிந்து கொள்ளுவதற்கான ஆகுதியுடன் இறுதியாக அண்ணார்ந்து பார்த்து ஆழத்தொலைந்து போகிறது
பின்னர் காற்றை வலித்து
மின்சார வடங்களை சில பறவைகள் ஆட்கொள்ளுகின்றன
*
பரவும் வெளிச்சம்

எல்லா இடங்களிலும் வெளிச்சம் மெல்ல துளிர்விடுகிறது
ஒரு பறவையைப்போல வெளி எங்கும் பறக்கிறேன்
பசிக்கு இரையாக்க பறவை ஒன்றைத் தேடி அலைகிறீர்களா
நான் குறித்துச் சொல்லியிருந்த பறவை
உங்கள் கண்களுக்கு தெரிகிறதா
மெல்லிய நுண்ணதிர்வுகளை உணர்ந்து 
தாழப்பறக்கும் அதன் அதிர்வலைகள் உங்கள் செவிமடல்களை வந்தடைந்திருக்க வேண்டுமே
பறவை அங்குமிங்குமென வானத்தை அளந்து மேலெழுகிறது, பின் எங்கு போனது
சமையலறையின் ஓரமாயிருக்கும் நீர்குழாயில் 
துளித்துளியாய் கொட்டும் நீர் துளிகளின் சப்தம்
கோடையின் இரவுகளை பறவை தன் கூரிய அலகுகளால் கொத்துவதை போல;
ஆழ் தூக்கத்திலிருந்து 
மேலெழுகிறேன்
வெள்ளை முகில்களிடை புரண்டு தவழ்ந்து
அப்படியே நிராதரவாய் வெளியினிடை வந்து கொண்டிருக்கிறேன்
வந்து கொண்டிருந்தவன் மழையாக்க கரைந்து
நீர் குழாய் வழியே சிந்துகிறேன்
இப்பொழுது பறவை கொத்துவதை போன்ற 
சப்தம் இல்லை;
மறுபடியும் ஆழ் நிலை தூக்கத்திற்கு போய்கொண்டிருக்கிறேன்

*

தேக தானம்

ஆதிக்கற் காலத்தில் இருந்து கொழுந்து விட்டு எரிந்தபடி இருக்கிறாய்;உன் திருப்தியின்மையை
வெளிக்காட்ட சில நாழிகை தூரமாக ஒளிந்து கொள்கிறாய், பின் வெட்கமே இல்லாது சிரித்தபடி வந்து நிற்கிறாய் ;அவள் எல்லா நதிக்கரைகளிலும் 
கூழாங்கற்களாய் உருமாறி நீரில் நீராடியபடி இருக்கிறாள், பேரன்புத்துணிக்கைகள் அவள் மடியில் வீழ்ந்து சிறு பிஞ்சென உருமாறுவதை 
உணர்ந்த பொழுதில் பூரித்திருந்தாள்;
மௌனத்தை கலைத்து விட்டு யன்னலை திறந்து வெளிச்சத்தைப்பார்; தெருக்களில்பரபரத்து நகரும்
கண்களைப்பார்;வானம் மங்கி மறைந்து மின்னும் நட்சத்திரங்கள்,ஒளி மிகும் முழுநிலா எல்லாமும்;
எல்லாச்சதைகளிலும் காமம் ஊற்றெடுக்கும்
திருமேனியேன்றுந்தன்;
மின் ஒளிரும் தேகத்துள் அங்குமிங்கும் என காமம்
அலைந்து உருக்குலைந்து பின் உருவெடுக்க ஓலம் வைக்கும்
மலைகளை அவள் படைத்தாள்,நதிகள் ஊற்றெடுத்தன ,மலைகள் உடைந்து சிதறி கூழாங்கற்களாகி கூழாங்கற்கள் நதியில் நீராடி
பின் மலைகளை தம் வயிற்றில் சுமக்கும்
மலையின் இடைவெளிகளில் வெளிச்சத்தைப்பரப்பி
சூரியன் வந்தடையும், வருவதற்கும் முன் எங்கு;
மலையின் தாழ்வாரத்தில் எவரின் கலவியை சிறப்பிக்க ஒளிந்திருந்தாய்;

*

பரிபூரணபாவி

பற்களில் அமிர்தம் கசியும் பாம்பின் தலை
வெளிப்பட்டதும்,வெளிப்பட்டது;
ஊன் உடம்பின் ஒவ்வொரு பாகங்களும்
அதற்கென குறிக்கப்பட்ட பெயர்களும்
அதீத தித்திப்புடையது அந்த அமிர்தம்;
விசம் அமிர்தமாக உருமாறிக் கொண்டதாக 
கொள்ள வேண்டாம்,
அமிர்தமாகவே உருவானது
அமிர்தமாகவே திரண்டது
அமிர்தமாகவே உருண்டு, நகர்ந்து
பாம்பின் பற்கள் வழி கசிகிறது
அமிர்தம் தான், விசத்தை ஒத்த அமிர்தம்
பற்கள் பதிந்ததும், ஊன் உடம்பில் விசம்
கணத்தில் பரவி விடும்
பெயர் கொண்ட பாகங்களில் எல்லாம் தேடித் தேடிப் பரவிவிடும்

இந்த அமிர்தம் விசத்தின் சாயலில் இருப்பதால்
பரவியதும்,பரவிய கணத்தில் மரிக்கச் செய்துவிடும்
விசத்தின் சாயலில் இருந்தாலும் அது அமிர்தமில்லையா?
மரித்ததை,மரித்த கணத்தில் உயிர்க்கவும் செய்துவிடும்.

*

கூடு விட்டது

நான் அனாதரவாய் விடப்பட்டேன்
பேரவலமோ, பேரமைதியோ பெரும் உண்மைகளை 
கண்கள் வழி மறைத்து காதுகள் வழி செலுத்தி
அழைத்துச்செல்லப்பட்டேன்
இடிகளும் மின்னலும்,வானத்தாழ்பாள் திறந்து
மழையை விசிறியபடி இருக்கும் பகலில் பின் இரவில்
பாடல்கள் ஒலித்தபடி நகரும் நொடிகளின் இரைச்சலில் பறவைகள் திசைமறந்து 
அங்கும் இங்கும், இங்கும் அங்கும் என சிறகுகள் பரிதவிக்க ஒற்றை மேகம் கீழிறங்கி வருவதை கண்டு
மரத்தின் கிளைகளென ஒரே தாவாய் தாவி அமர முற்பட்ட பொழுதில்;
ஒரு போதும் கண்களை திறந்து விடமாட்டீர்களா,
ஒரு போதும் வழிகளின் குறிப்புகளை சொல்லிவிடமாட்டீர்களா,
நான் இப்பொழுதே இங்கேயே கரைந்து போகப்போகிறேன்
என் பின்னங்கால்கள் இடறுகின்றன;
கடல்காற்றின் ஸ்பரிசத்தை உணருகிறேன்
அலைகள் முன்வந்து பின்போகும் வாதையினை உணருகிறேன்
செழும் மீன்களின் பாடல்களை உணருகிறேன்
கடலை அண்மித்து விட்டேனா,
இல்லையா,
நான் இருக்கும் இடத்துக்கெப்படி கடல் வந்தது;

***

மதுஷன் சிவன் – (1990 ஜீலை 25) கவிஞர் மற்றும் ஓவியர். 2003ம் ஆண்டில் இருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை ஆறு கவிதை தொகுதிகள் எழுதியுள்ளார், 2025 இல் பரியலம் என்ற தொகுதி வெளி வந்தது. மின்னஞ்சல்:mathusansivam@gmail.com

புதுக்காசு

0

மஞ்சுநாத்

எம்.எம்.டி.ஏ காலனி மாரியம்மன் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் மூன்றாவது குறுக்கு சந்து, வண்ணம்பூசி பத்தாண்டுகளான பழைய வீட்டின் வலப்புறத்தில் குறுகலாக மேலேறும் மாடிப்படிகள் முடியுமிடத்தில் படுச்சிக்கனமாக கட்டப்பட்டிருக்கும் இருளடர்ந்த கழிப்பறை + குளியலறையில் சிதம்பரம் கண்ணுக்குத் தெரியாத தன்னுடைய உடல் முழுவதையும் தொட்டுப் பார்த்துக்கொண்டான். 

வெளிச்சத்திற்கான ஜன்னலோ, மின்விளக்கோ இல்லாததும் வசதிதான். தாழ்பாள் இல்லாதக் கதவை யாரேனும் திடீரென்று நெட்டித் திறந்தாலும் பயமில்லை. உள்ளே இருப்பவர்கள் குரல் எழுப்பினாலொழிய ஆள் இருப்பது தெரியாது. சிதம்பரம் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறும்போது அறை நண்பர்களுடன் தலையோடு தலையாக பலமுறை மோதிக்கொண்டதும் உண்டு. ஒவ்வொருமுறையும் அவனே குற்றவாளி. கழிவறைக்குள் புகுந்ததும் புகைக்கும் பழக்கமுள்ள நண்பர்களுக்கு மத்தியில் சிதம்பரம் எப்படி நிரபராதியாவான். சிதம்பரத்திற்கு பழிகள் ஏற்பதெல்லாம் பழக்கமானதுதான். 

அவனது முழங்கால்கள் நடுங்கின. மார்பின் இடது பக்கம் வேகமாக துடித்தது. இனி அதிக நேரம் தாங்க முடியாது. அவ்வளவுதான்… இறுதியில் அவனுடைய கையை அருவருப்பான சபிக்கப்பட்ட அங்கமாக நினைத்து பல தடவை உதறினான். எதிரில் இருந்த கதவின் மீது நடுவிரல் முனைப்பட்டதும் வலியில் முகம் சுளித்தான். மென்றுத்திண்ணும் உடல் உணர்ச்சியைக் கட்டாயப்படுத்தி வெளியே துப்பியதும், நரம்புகள் தளர்ந்து மயக்கமடையச் செய்துவிட்டன. வழக்கமாக இந்த அவஸ்தைக்குப் பிறகு ஜுரம் விட்டதுபோல் வியர்த்து மண்டைக்குள் விர்விர்ரென்று சப்தம் தணிந்து ஒரு இனிமையான களைப்பை உடல் முழுக்கப் பரப்பி நிம்மதியை உருவாக்கும். இன்றைக்கு சிந்தனையின் சுழல்நதி ஒடுங்குவதற்கு பதில் ஆர்பரித்து சிரிக்கிறது. 

பாசியில் கால் வைத்தால் வழுக்கிவிட வேண்டும், மணல் போல் இறுக்கிப் பிடித்து விழாமல் நிற்க வைக்கும் இந்த புத்தியை …? சிதம்பரம் அலுத்துப் போனான். அர்த்தமில்லாதக் கூச்சலைக் கேட்டபடி அசையாமல் நின்றான்.

இன்னும் எத்தனை நாளைக்கு? 

எது?

எல்லாம்தான்?

உடலுக்கு கிடைக்கும் களைப்பை ஓய்வாக மாற்றிக்கொண்டு முடங்கிவிடும் மனம் இன்றைக்கு ஏன் வீம்பு காட்டுகிறது…?

தலையைப் பிய்த்துக்கொண்டு வாய்விட்டுக் கதறி அழத்தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் வேலைமுடிந்து அறை நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கி விடுவார்கள். கேள்விகளுக்கும், கேலிகளுக்கும் முறிந்து விழுந்த மரம் போல் கூனிக் குறுகி அமர்ந்திருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. இது தேவையில்லாத பாசாங்கு. காலம் கடந்து விட்டதால் உணர்வுகள் கெட்டிப்பட்டு அருவருப்பான துர்நாற்றத்தை கசிய விடுகிறதா? இருட்டில் அழுத்தமாகத் தெரியும் உடலைப் பார்க்கும் மனதின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் வரை நடந்து போய் வரலாமா? சிந்தனைகள் மட்டுப்படும். சொந்த ஊரின் பெயர்ப்பலகை மாட்டிய பேருந்துகளைப் பார்த்தாலேனும் மனம் சற்று சமாதனமடையலாம். 

வெளியே முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்ட கார் பின்னால் நகர்ந்தபடி பாடல் ஒன்றின் இசையை அலறவிட்டுக் கொண்டிருந்தது. சிதம்பரம் வாளியைத் தூக்கி தண்ணீர் முழுவதையும் தன் தலையில் கவிழ்த்தான். கதவின் மேலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்து ஜன்னலைத் திறந்தான். கண்ணுக்குத் தெரியாத காரோட்டியை வாய்க்கு வந்தபடி திட்டினான். சிதம்பரத்தின் அர்ச்சனைகள் அவனுக்கு கேட்டிருக்காது, அவன் வாகனத்தை நேர்செய்வதில் மும்முரமாக இருந்தான். தலையை நீட்டி கொத்தாகக் காறி உமிழ்ந்து முட்டுச்சந்தினை சபித்தான். நூறடிச் சாலை பக்கம் திரும்பினான்.

ஈரமான துண்டை ஒரமாக எறிந்துவிட்டு முழுஉருவத்தையும் காட்டாத கையளவு கண்ணாடியை அப்படி இப்படி நகர்த்தி சிதம்பரம் அவனுடைய அம்மணமான உடம்பை முழுமையாகப் பார்க்க முயற்சித்தான். அது முடியாமல் போகவே மீண்டும் கோபமடைந்தான். முகத்தை கண்ணாடிக்கு அருகில் கொண்டுச்சென்று ஒடுங்கிய குழிக்குள் பிரகாசிக்கும் கண்களை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தது “வாழ்வை அச்சுறுத்தும் சிந்தனைகள் அகலட்டும்” மந்திரம் போல் மூன்று தடவைக் கூறி முடித்ததும் சிரிப்பு பொங்கியது. “என்ன செய்யலாம்?” என்று அவனையே கேட்டுக் கொண்டான். தனக்கு அடைக்கலம் தந்திருக்கும் அறையைச்சுற்றி நோட்டமிட்டான். கொடிக்கயிற்றில் தொங்கும் துணிகள், கிழிந்தப் பாய்கள், அழுக்கடைந்தத் தலையணைகள், வாங்கியது முதல் துவைக்காதப் போர்வைகள், தரையில் சிதறிக் கிடக்கும் பத்திரிகைகள், சிகரெட் துண்டுகள், சாம்பல் எச்சங்கள்…

“என்ன சிதம்பரம், நாம பொழங்கற இடமில்லையா இது, குப்பை மாதிரி கெடக்கு… இப்படியா வச்சிக்கறது? அவுனோவதான் சின்னப்பயலுவ… பெரிய மனுசன் உனக்கு தெரியவேணாம்…” என்றேனும் ஒருநாள் சுத்தம் செய்யாமல் விட்டால் அந்தோணி பொறிந்து தள்ளிவிடுவான். மிகவும் மரியாதையாக அதேசமயம் இயலாமைகளையெல்லாம் சுட்டிக்காட்டியபடி. வேண்டாம் அதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. 

பத்திரிகைகள் அடுக்கி படுக்கைகளை ஒழுங்குப்படுத்தி குப்பைகளை பெருக்கி அறையை பூட்டி கழிவறை + குளியலறை கதவுக்கு பின்னால் இருக்கும் ஆணியில் சாவியை மாட்டினான். பழைய நினைவுகள் பலத்துடன் பின்தொடர்ந்தன. 

தீவிரமாக சிந்திப்பவன் போல தலையைக் குனிந்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். இங்கு எல்லோருக்குமே பிரச்சனை இருக்கிறது, இருந்தாலும் சிதம்பரம் கைவீசி நடப்பதை ஒரு நொடி திரும்பிப் பார்க்காமலா இருப்பார்கள்? பார்க்கலாம், பார்க்கலாமென்ன? பார்ப்பார்கள். அதுவும் பலவித எண்ணங்களுடன்… உண்மையோ பொய்யோ இந்த நினைப்புதான் இயல்புக்கு விரோதமாக இயக்குகிறது. 

கண் தெரியாத பிச்சைக்காரன் நகைக்கடை வாசலில் “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக…” பாடிக்கொண்டு வெகுநேரம் நின்றான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பவள் மனைவியாக இருக்கலாம். அவளுக்கும் கண் தெரியவில்லை. நகைக் கடைக்கு அருகில் செருப்பு தைத்துக் கொண்டிருந்தவன் எழுந்து வந்து சில சில்லரைகள் கொடுத்து நகர்ந்து போகச் சொன்னான். பள்ளிச் சீருடையில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழும் சிறுவனைத் திட்டிக்கொண்டு இழுத்துச்செல்லும் பெண்மணி சிதம்பரம் தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கவனித்ததும் கூச்சமடைந்து வேகம்கூட்டி நடந்தாள்.

“எந்நேரமும் அப்படியென்ன யோசனை? உலகத்துப் பிரச்சனையெல்லாம் சிதம்பரங்கிட்ட ஒப்படைச்சிட்டங்களா? ஹா…ஹா… சீரியஸா எடுத்துக்காத, சும்மா தமாசுக்கு சொன்னேன்… உனக்கு கோவமும் வரமாட்டேங்குது சிரிப்பும் வரமாட்டேங்குது. இப்படி பொணம்மாதிரி நடந்து போய்க்கிணு இருந்தா எவ உன்னைத் திரும்பிப் பாப்பா சொல்லு?”

அந்தோணி எதுவும் கேட்கலாம். அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஒரு வருடமாக அறைக்கான வாடகைப் பங்கை கேட்காதவனுக்கு உரிமை இல்லாமலா?

“வச்சிகிணு இல்லைன்னா சொல்லுவானா இருந்தால் தரப்போகிறான். நாற்பத்தாறு வயசாச்சு, கல்யாணம் காட்சி பாக்காத ஜென்மம், பாவம் சாப்பாட்டுக்கே தரிகிட தத்தோம்… என்ன சிதம்பரம் காசில்லையா வயித்த இறுக்கி பிடிச்சிட்டு கெடக்கத? ஏங்கிட்ட கேட்க உனக்கென்ன கூச்சம்? இந்தா ஏதாவது வாங்கி சாப்பிடு.” 

சிதம்பரம் தன்னைக் கடந்துச் செல்லும் கிழவரைப் பார்த்து “நீ கேளு அந்து… எதுவேணாலும் கேட்கலாம். தப்பில்ல, உனக்கு எல்லா உரிமையும் இருக்குது. ஆனா மத்தவங்க…” என்றான். 

கிழவர் ஒன்றும் புரியாமல் “என்ன? ஆள் யாருன்னு தெரியலேயே…?” என்றார். 

அவரைக் கண்டுக்கொள்ளாமல் கோயம்பேடு பேருந்துநிலையம் செல்லும் நூறடிச் சாலை அருகே வந்தான். வாயில் வழிந்த எச்சிலை புறங்கையால் துடைத்தவன் சிலநிமிடம் யோசித்துவிட்டு நூலகத்திற்கு செல்ல முடிவெடுத்து வந்தவழியில் திரும்பினான். நூலகம் பூட்டியிருந்தது. எம்.எம்.டி.ஏ காலனி பேருந்து நிலையத்திற்குள் சென்று மதில் சுவற்றின் மீதேறி அமர்ந்துக்கொண்டான்.

எல்லோரும் பாவம் பார்த்து வாழும் இந்த வாழ்க்கை மானக்கேடானது. அறை நண்பர்கள் அந்தோணியிடம் குறையாக ஏதேனும் பேசினால்; ”பாவம் விடு… அவனே மொட்டப்பையன்!” என்பான்.

“சலுகை அதிகமில்லாத கம்பெனி சிம்கார்டு, கூவி கூவி வித்தாலும் ஒருத்தனும் வாங்கல… வாங்க மாட்டான். சிதம்பரந்தான் என்ன செய்வான்? வருமானம் தேடித்தராம எந்த முதலாளி மாசம் பொறந்ததும் சம்பளம் போடுவான். பிரமாதமா இங்கிலீஷ் பேசுறது ஒன்னுதான் சிதம்பரத்தோடு பலம். மாசம் சம்பளம் கிடையாதுன்னாலும் எப்பவாது ஐநூறு, ஆயிரம்னு கொடுத்து வேலையிலிருந்து தொரத்தாம வைச்சிருக்காரு. நல்ல மனுஷன்… அவன் முதலாளி எனக்கு தெரிஞ்சவருதான். ஓய்ஞ்சு உக்கார்ற வயசுல புதுவேலைத் தேடிப்போக இவனால முடியுமா? வேறா யாருக்காவது முடியலாம்… ஆனா சிதம்பரத்தால முடியாது. “

அந்தோணியே தொடர்ந்து பேசினான். “டேய் அவன் ஒரு மொட்டப்பையன்டா… பச்சையா சொல்லுணும்னா இதுவரைக்கும் ஒரு பொம்பளயைக் கூட அவன் அவுத்து பாத்ததில்ல.”

அறை நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிரித்தார்கள். ஒருவன் அந்தோனியின் காதில் ரகசியம்போல் பேசினான். அந்தோனி அவன் முதுகில் அடித்தான். “ கூமுட்டை… தொறந்து பாத்தா தானே மத்ததெல்லாம்… இப்ப என்னையே எடுத்துக்க… எனக்கும் கல்யாணம் ஆகல முப்பது வயசுதான், ஆனா இதுவரைக்கும் நான்…”

பாலியல் சாகசங்கள் பேசும் ஆர்வத்தில் சிதம்பரம் கூனிகுறுகி எழுந்துச் செல்வதைக்கூட யாரும் கவனிக்கவில்லை. அன்றைக்கு எங்கெங்கோ சுற்றித்திரிந்துவிட்டு இந்த மதில் சுவர்மீது அமர்ந்துக்கொண்டதும் மனம் அமைதியடைந்தது. 

வானம் நீலம் குறைந்து நைந்துப்போன சேலையைப்போல் வெளுத்திருந்தது. நகரத்தின் ரகசியங்கள் வெளிச்சத்துடன் போராடிக் கொண்டிருந்தன. பேருந்துகள் வந்து செல்லும் சத்தம், ஆட்டோக்களின் ஓலம், வியாபாரிகளின் கூப்பாடு, மனிதர்களின் அரட்டைப் பேச்சு, மதிலுக்கு அப்பால் குடியிருப்புகளில் இருந்து தவழ்ந்து வரும் பண்பலை சங்கீதக் கதம்பம் எல்லாம் அங்கு ஒலித்தன. மாலை வேளையில் திறந்தவெளியில் இப்படி உட்கார்ந்திருப்பதில் இதமாக இருந்தது. அசையாமல் கண்சிமிட்டாமல் நடுநிசி வரையில் அமர்ந்திருந்தால் என்ன? யார் என்ன சொல்ல போகிறார்கள்…

பக்கத்தில் உரக்கப் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கையசைத்து ஒருவருக்கொருவர் விடைபெற்றுச் சென்றதும் அவ்விடம் மதிய சூன்யத்திற்கு நகர்ந்து சென்றது போலிருந்தது. பேருந்து ஒன்று இரைச்சலாய் ஒலியெழுப்பிக்கொண்டு நிலையத்திற்குள் நுழைந்ததும் பழையபடி மாலை ஆரவாரத்திற்குள் மூழ்கியது. பேருந்திலிருந்து இறங்கிய ஆட்களின் முகங்கள் களைப்படைந்திருந்தன. இவர்கள் பொழுதும் இருண்டு துயருற்று இருக்கிறதா? இல்லை இது தற்காலிகமானது, வீட்டிற்கு போனதும் பரபரப்பாகி விடுவார்கள். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை. ஆனால் நான் இவர்களோடு கலக்காதவன். நீங்காத கிரகணத்தில் வாழும் அதிர்ஷ்டசாலி. பேருந்திலிருந்து இறுதியாக இறங்கியவன் அந்தோணியா? சிதம்பரம் பதட்டமடைந்தான்.

“சிதம்பரம் என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்க… உலகத்துல எந்தவொரு பிரச்சனையும் இல்லாத ஒரே மனுசன் நீ மட்டுந்தான்யா. ஒரு கவலையும் கிடையாது… கொடுத்து வச்சப்பொறப்பு. என்ன பேச்சே காணோம்? இங்க உட்காந்து இப்படி வர்றவ போறவளையெல்லாம் முறைச்சு பார்த்தா… அய்யோ பாவம்னு வந்துடுவாங்களா? கஷ்டந்தான்… எனக்கு புரியுது. சரி விடு, உனக்கொரு நேரங்காலம் வராமயா போய்டும். எழுந்து வா ஆளுக்கு ரெண்டு பரோட்டா சாப்பிட்டுட்டு ரூமுக்கு போலாம்…”

“போடாங் மயிரு… அப்படியே ஓடிடு. என்னைய என்ன வக்கத்த எச்சக்கல நாயின்னு நினைச்சிட்டியா… கேட்க நாதியில்லாம போயிட்டேனா? என் வயசின்னா? உன் வயசின்னா? அன்னிக்கு தம்துண்டு பொடுசுங்கள வைச்சிகிட்டு எம்முன்னாடியே என்னைய மொட்டப்பையன்னு கேவலப்படுத்துற… நான் என்ன…”, மேற்கொண்டு பேசமுடியாமல் அழுகை முட்டியது. மூளைக் கோளாறு வந்தவன்போல் கை முஷ்டியல் மதிற்சுவர் மேல் குத்தினான். யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டான். சிந்தனைகள் வேகமெடுத்தன.

வேண்டாம்… வேண்டாம்… வேண்டவே வேண்டாம்… கற்பனைகள் நிஜமாக வேண்டாம். அப்படியே அவன் வந்தாலும் கேட்டாலும் எதிர்வினை “சரி வா எனக்கும் பசிக்குது…” என்று அவன் பின்னால் செல்லும் மானக்கேட்டைத் தவிர ஒன்றும் நேர்ந்திருக்காது. நிதர்சனம் தரும் வலியைவிட வாழ்க்கைக்கான போராட்டம் கொடுமை. சமரசம் சாஸ்வதம்… 

சிதம்பரம் தன்னுடைய கால்களை மதிலுக்கு பின்னால் தூக்கிப்போட்டு பேருந்து நிலையத்திற்கு முதுகைக்காட்டி அமர்ந்தான். இதற்கொரு முடிவுக் காண முடியாதா? பல்லைக் கடித்துக்கொண்டு “என்ன செய்யலாம்?” என்று சிந்தனையை உலுக்கி உலுக்கி யோசித்ததில் வழக்கம்போல் பதிலில்லை. அவனுடைய கால்களை பல தடவை மதில் மீது மோதி வலியேற்படுத்திக் கொண்டான். எதற்கும் பதிலில்லாமல் கேள்விகளை தேனீக்களாக சிருஷ்டித்து குடைச்சல் தரும் கேடுக்கெட்ட மனம். 

எதிரில் ஒரேமாதிரி வரிசையாக இருந்த வீடுகளில் விளக்குகள் ஒவ்வொன்றாக எரியத் துவங்கின. முகம் உயர்த்தி பார்த்தான். தலை கனத்தது. சுற்றியும் இருள் அதிகரிக்க அதிகரிக்க வீடுகள் பிரகாசமாயின. கதவும் ஜன்னலும் திறந்திருத்த மாடி வீட்டு முற்றத்தில் பெண்ணொருத்தி உலாத்திக் கொண்டிந்தாள். இரவு உடையில் இருந்த அந்த பெண்ணின் கவர்ச்சி வெகுவாக ஈர்த்தது. இதுநாள் வரை இதையெல்லாம் கவனிக்கவில்லையே? சிதம்பரம் யோசனைக்குள் மூழ்கினான். அவள் வீட்டிற்குள் செல்வது யாராக இருக்கும்? அவன் கையிலிருக்கும் பையை வாங்கி வைக்கிறாள். கணவனாக இருக்குமோ? இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? சிறிது நேரத்தில் வேறு ஆடைகள் அணிந்துக்கொண்டு முன்கூடத்தில் பிரம்பு ஊஞ்சலில் வந்தமர்ந்தவனை வாசலுக்கு நேராக கிடக்கும் ஸோபாவிற்கு இழுத்துச் செல்கிறாள். அவனுடைய மடியில் அமர்ந்துக்கொண்டு அவன் கன்னத்தைப் பிடித்துக்கிள்ளுகிறாள். வேகமாக எழுந்துபோய் எதோவொன்றை எடுத்துவந்து அவன் வாயில் வைக்கிறாள், சடாரென அவன் தன் முகத்தை பின்னுகிழுத்துக் கொள்கிறான். அவள் விடுவதாகயில்லை. அவன் கழுத்தைப் பிடித்திழுத்து உதட்டில் முத்துகிறாள். பின்பு கையில் இருப்பதை மீண்டும் வாயில் கொண்டு போய் வைக்கிறாள். அவன் இம்முறை நகர்ந்துக் கொள்ளாமல் முகத்தை அவள் பக்கம் நகர்த்துகிறான். சிதம்பரம் முகத்தை திருப்பிக் கொண்டான். இது தவறல்லவா? இதில் என்ன தவறு? நான் இருளில் அமர்ந்திருப்பது அவர்களுக்கு தெரியாது. சரி அதனால்… 

இந்த மாதிரி சின்ன விஷயத்திற்கெல்லம் மூளையுருக சிந்திப்பதால்தான் பிரத்தியார் பாவம் பார்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டாய்.. உனக்கு நாற்பத்தியாறு வயதாகிவிட்டது… சரிதான் மீண்டும் பைத்தியகார யோசனையில் சிக்க வேண்டாம். ஒருவழியாக தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு மீண்டும் அந்த வீட்டை பார்க்கிறான். 

மாற்றமில்லாதக் காட்சி. வாயில் ஊட்டிவிட்டு முத்தமிட்டு அதை மீண்டும் எடுத்துக்கொள்கிறாள். என்னவாக இருக்கும்… என்ன அது? எதை ஊட்டுகிறாள்? சிதம்பரம் தன்னுடைய கண்களை இடுக்கிக்கொண்டு ஒருவழியாக அதைக் கண்டறிந்து விட்டான். மனம் குளிர்ந்தது. தலையில் மொய்த்துக் கொண்டிருந்த தேனீக்கள் எதிர்பாராமல் எங்கிருந்தோ வீசியக் காற்றில் கலைந்து சென்றன. மெதுவாக கீழே இறங்கினான். பகலில் சூடேறிப்போன மதிற்சுவரின் வெப்பம் ஒட்டிக்கொண்ட பின்புறத்தை துடைத்துக்கொண்டான். அவன் சட்டை பாக்கெட்டில் கடைசியாக மீதமிருந்த பத்து ரூபாய் நாணயத்தை வெளியில் எடுத்து சுண்டினான்.

சைக்கிளில் ஐஸ்பெட்டி வைத்து காற்றொலிப்பானை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தவன் சிதம்பரம் அருகில் நெருங்கி வருவதைக் கண்டதும் நிறுத்தினான்.

“என்ன சார் வேணும்?”

“இந்தா… ஒரு சாக்கோபார் ஐஸ்?”

“சார் சாக்கோபார் இருவதுருவா”

சிதம்பரம் யோசித்தான். அவன் வாழ்கை ராஜாங்கத்தில் சமரசமெல்லாம் பெரிய விஷயமா? “ஓ சரி சரி… விலை ஏறிடுச்சுல்ல? பரவாயில்லை. பத்துரூபா ஐஸ் இருந்தா குடு…”

“இருக்கு சார். ஆரஞ்சு ஐஸ் பத்து ரூவாதான்… ஆனா வேற பத்துரூவா வேணும். தாளா இருந்தாக் கொடுங்க…“

“ஏன் இதுக்கென்ன பத்துரூபா புதுக்காசு…! “

“சர்தான் சார்… யாரு இத்த வாங்கறாங்க? மதிப்பிருந்தாலும் செல்லாதுன்னு திருப்பியில்ல தர்றாங்க. நோட்டா இருந்தா குடுங்க…”

“நீ சிட்டிக்கு புதுசா? இந்தக் கதையெல்லாம் கிராமத்துல நடக்கும்… இங்கயேயுமா ஆரம்பிச்சிட்டீங்க?”

ஐஸ்காரன் வேறொரு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். ஐம்பது ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு இரண்டு சாக்கோபார் ஐஸ்களோடு மீதி சில்லரையைக் கொடுத்துவிட்டு காற்றொலிப்பானை அழுத்தினான். 

கணவன் மனைவி இருவரும் தாங்கள் வாங்கிய ஐஸ் கரைவதற்குள் அதை ருசிப் பார்க்கத் தயாரானார்கள். சிதம்பரம் ஒதுங்கி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*

மஞ்சுநாத் – புதுச்சேரியை சேர்ந்தவர். விமர்சகர், பயணி, வரலாற்று ஆய்வாளர். தற்போது புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணியாற்றுகிறார். குதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘அப்பன் திருவடி’ நாவல் தமிழ் இலக்கியத்தில் இமயமலையின் பேரழிவு குறித்து முதல் முதலாக பேசி புதியதொரு களத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் : manjunath.author@gmail.com

நெடுநாள் படு பாணம்

1

சுதா ஶ்ரீநிவாஸன்

மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன், அவன் கமலக் கண்களால்!

“அன்னையே, ஏன் வாட்டமுற்றிருக்கிறீர்கள்?”

அன்னையா? யார் இவர்கள்? இது என்ன இடம்? இனிய சோலையின் நடுவே குடில்கள்-ஏதோ முனிவரின் தவச்சாலை போல் தோன்றுகிறதே! 

மெதுமெதுவே நிலை மீண்டேன். இந்த நிலையழிவு சில காலமாக நிகழ்ந்தவாறு இருக்கிறது.

“நீங்கள் இன்று வேள்விப் பொருட்கள் கொணர செல்லவில்லையா? முனிவரின் கட்டளை யாது?”

“குருவின் ஆணைப்படி காட்டினுள் செல்லத்தான் கிளம்பினோம். தங்களிடம் சொல்லிச்செல்லவே வந்தோம்.”

“தங்களுக்கு என்னவாயிற்று, அன்னையே? சில நாட்களாகவே தாங்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து காணப்படுகிறீர்கள்!”

“ஒன்றுமில்லை, குழந்தைகளே! நீங்கள் சென்று வாருங்கள். குருவைக் காக்க வைப்பது பெரும்பாவம்.”

லவகுசர்கள் செல்லும் பாதையைப் பார்த்தவாறிருந்தேன்.

இதே பாதையில் தானே அன்றொரு நாள் நான் வந்தேன்! அயோத்தியின் நகர நெரிசலில் இருந்து விலகி வரும்பொழுதும், மரங்களும் சுனைகளும் நிறைந்த வால்மீகி முனிவரின் தவச்சாலையில் நுழையும்பொழுதும் எவ்வளவு மகிழ்ந்திருந்தேன்!

கரு தரித்திருந்ததன் சோர்வு. அத்துடன் அரண்மனையின் பொறுப்புகளும் முறைமைகளும் தரும் நிலையழிவு. ஆகையால் வனத்திற்கு செல்லச் சொன்னபொழுது மிகுந்த உற்சாகம் அடைந்தேன். ராமன் உடன் வராததோ, லக்ஷ்மணன் அழைத்து வந்ததோ எனக்கு பொருளாகவில்லை.

நகரை விட்டு வெளிவந்த உடனேயே பிணையுண்ட சங்கிலியிலிருந்து விடுபட்ட உணர்வை அடைந்தேன். ஆங்காங்கே தேரை நிறுத்தச் சொல்லி செடிகொடிகளை தழுவி மகிழ்ந்தேன். மலர்களை சூடிக்கொண்டேன். சுனைகளில் துள்ளும் மீன்களுடன் சேர்ந்து துள்ளினேன்.

ராமன் உடன் வந்திருக்கலாம்! அரசப் பணிகள் ஓய்வதேயில்லை. அதனால் வரும் சோர்வும் கூட. நான் கிளம்பும்பொழுது வழியனுப்பக்கூட வரமுடியவில்லை. பாவம்!  வனவாசத்தில் எவ்வளவு மலர்ந்திருந்தார்! அவர் பறித்தளித்த மலர்களுக்கும் அவர் முகத்திற்கும் வேறுபாடு கண்டேனில்லை! தாமரை போன்றிருந்தது அவர் முகம்.

ராமனைப் பற்றிய நினைவுகளில் தேர் தவச்சாலையை அடைந்துவிட்டதை நான் உணரவில்லை. “அரசி!” லக்ஷ்மணனின் குரல். 

தேரினை எதிர்நோக்கியிருந்த வால்மீகி முனிவரின் திருவடிகளை வணங்கினேன்.

“இங்கு நீ நிறைவுறுக!” என்று அவர் வாழ்த்த, குழப்பத்துடன் நிமிர்ந்து நோக்கினேன். லக்ஷ்மணனின் சொல்லற்ற பயணமும் நிலம் தாழ்ந்த நோக்கும் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

அவனை நோக்கி “என்னை திரும்ப அழைத்துச்செல்ல அவர் என்று வருவார்?” என்றவளுக்கு மௌனமே பதிலாயிற்று.

ஆயிற்று! பன்னிரண்டு ஆண்டுகள்! இலங்கையில் பத்து மாதங்கள் பத்து யுகங்களென நீண்டன. ஆனால், இங்கு? விதேஹ நாட்டில் இருப்பது போன்றே அல்லவா நான் உணர்கிறேன்? வால்மீகி முனிவரின் பரிவா, என் மைந்தர்களைப் பேணும் பொறுப்பா எது இந்த பன்னிரண்டு வருடங்களை மிகக் குறுகியதாக ஆக்கியது என்று தெரியவில்லை.

ஆனால் சில காலமாக இந்த நிலையழிவு அவ்வப்பொழுது ஏற்படுகிறது. இப்பிறப்பின் மாயத்தையே மறக்கும்படியான பெரு மயக்க நிலை! மண்நீங்கும் காலம் அருகிவிட்டது என்று உணர்கிறேன். ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அதைத் தடுப்பது போன்றும் உள்ளது.

யாரிடமேனும் தரவோ பெறவோ ஏதும் எஞ்சியுள்ளதா? நினைவுகளை திசைகளின் எல்லை வரை நீட்டியும் ஒன்றும் தெளிவுறவில்லை. ஏதோ ஒன்று நிழல்போல் உறுவதும் கலைவதுமாக இருக்கிறது.

எண்ணிச் சலித்து எப்பொழுதும்போல அச்சிந்தனையை விலக்கிவிட்டு நான் குடிலுக்குள் புக முற்படுகையில் அவளைக் கண்டேன். சூர்ப்பணகை!

ஆம்! இதுதான், இவள்தான்!

நிலவற்ற கடல் போல் என் மனம் அலை அடங்கத் தொடங்கியது.

அவளும் என்னைக் கண்டுவிட்டாள். ஒரு கணம் தயங்கியவள் வேகம் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். பற்கள் கடிபட, விழிமணிகள் தெறிக்க, நரம்புகள் புடைக்க என் கழுத்தை நெரிப்பதுபோல் பிடித்தாள். எனக்கே ஆச்சரியம் தந்த என் அச்சமற்ற அசைவின்மையை அவளும் உணர்ந்தாள் போலும். பிடியை விட்டுவிட்டு குரலெடுத்து நகைத்தாள்.

“அஞ்சிக் கூவ மாட்டாயா? ஓ! இங்கே உன் கூக்குரலுக்கு ஓடிவந்து காப்பாற்றும் வீரர்கள் இல்லையல்லவா? ஐயோ பாவம்!”

என் மனம் முற்றடங்கியது.

அவளை உள்ளே வரும்படி கைகாட்டிவிட்டு குடிலுக்குள் சென்றேன்.

வந்தவள் சுற்றிலும் பார்வை சுழல நான் இட்ட ஆசனத்தில் அமர்ந்தாள்.

“எங்கே உன் மைந்தர்கள்? இரட்டையர் அல்லவா?”

தலையசைத்தேன்.

“அவர்கள் தந்தையிடம் செல்ல விழையவில்லையா? ஒருவேளை அவர்களையும் அவன்…”

“என் மைந்தரிடம் அவர்கள் தந்தை சக்ரவர்த்தியென்று கூறவில்லை.”

இவளிடம் நான் ஏன் காரணங்கள் கூறிக்கொண்டிருக்கிறேன்?

இந்த எண்ணம் என்னில் ஏதேனும் அசைவாக வெளிப்பட்டதா? அவள் என் முகத்தையே கூர்ந்து நோக்கியவாறிருந்தாள்.

“நீ எப்படி… எதன் பொருட்டு இங்கு வந்தாய்?”

“உன்னைக் காணவே வந்தேன்.”

“என்னையா? எதன் பொருட்டு? நான் இங்கு இருப்பது முன்னரே தெரியுமா?”

அவள் உதடுகள் அசைய ஏதோ கூற முயன்றாள். சொல் திரளாமல் மௌனித்தாள். தனக்குத்தானே எதையோ மறுப்பவள்போல கையசைத்தாள். எட்டி அவள் கையைப் பற்றினேன். அத்தொடுகையில் அவள் உடல் குதிரைபோல் சிலிர்ப்பு கொண்டது.

“சொல், சூர்ப்பணகா. எதன் பொருட்டு வந்தாய்?”

அவள் முகத்தில் அந்திநேர வானின் வண்ணம்போல உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன.

எண்ணியிராமல் “அவனது பிரிவு உன்னை வருத்தவில்லையா?” என்றாள்.

இதற்கு என்ன பதில் கூற? ஆமென்றோ இல்லையென்றோ உரைக்கக் கூடுமா? வருத்தமும் கசப்பும் தாண்டிய என் நிலை இவளுக்கு புரியுமா? இலங்கையில் தீக்குளித்த அன்றே என்னில் தோன்றிய எண்ணத்தை நானே இங்கு வந்தபின்தானே தெளிவுற உணர்ந்தேன். அதை சொற்களில் வடிக்க முடியுமா? சொல்லி என்ன ஆகப்போகிறது?

“சொல், சீதா. நீ வருந்தவில்லையா?”

தலையுயர்த்தி அவளை நேராக நோக்கினேன்.

“இதை அறியவா என்னைத் தேடி வந்தாய்?”

“அது… நான்…”

அவள் மீண்டும் வார்த்தையின்றி வாயையும் கையையும் அசைக்கலானாள். மூச்செறிந்தாள். செல்பவள்போல் எழலுற்றாள். மீண்டும் அமர்ந்தாள். பின் சிந்தனைக் கலைந்தாள்.

“போர் முடிந்த பின்னர் நான் எதிர்பார்த்தபடி விபீஷணன் என்னைப் பழிக்கவில்லை. ஆகவே சில நாட்களிலேயே நான் எந்த குற்றவுணர்வும் இல்லாமலானேன். என் உள்ளத்தில் தைத்த காம பாணம் வருடங்கள் கடந்தும் என் உயிரைக் கடைந்து கொண்டிருந்தது. நான் அயோத்திக்குச் சென்றேன்.”

என் கண்கள் வியப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

“உன்னால் நம்பமுடியவில்லையல்லவா? என்னாலும் முடியவில்லை. நானறியா விசை ஒன்றால் செலுத்தப்பட்டவள் போல் அங்கு சென்றிருந்தேன். அதன் பின்னரே நீ அங்கு இல்லை என்று அறிந்தேன்.”

நான் கூறாத பதிலைத் தானாக தேடுபவள்போல அவள் என் முகத்தை உற்று நோக்கினாள்.

“நீ நாடுவிட்டு சென்றதன் காரணத்தை அறிந்தபோது பரவசமானேன். உன்னை விழைந்ததனால் உயிரிழந்த என் தமையன் நிறைவுறுவான் என்று மகிழ்ந்தேன். என் விருப்பம் நிறைவேற இனி தடையில்லை என்று என் மனத்தினுள் ஒரு குரல் ஒலித்தது.”

சூரியஒளி பட்டு அவள் முகம் ஒளிர்ந்தது.

“மறைந்திருந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அவன் வேறு மணம்புரிந்திருப்பானோ என்று ஐயுற்றேன். உனக்கு அந்த ஐயம் ஏற்படவில்லையா?”

நான் தலையசைத்தேன்.

“ஏன்? உனக்கு வாக்களித்ததனாலா? அதை நீ நம்புகிறாயா?”

இவள் நோக்கம் என்ன? என்னில் பொறாமையைத் தூண்டுவதா?

“அவன் அஸ்வமேத யாகம் இயற்றவிருக்கிறான், அறிவாயல்லவா?”

“ஓ!”

“மனைவி உடன் இல்லாது யாகம் இயற்றமுடியாதே! அதை உணர்ந்தவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைவிட அதை நீ எப்படி எதிர்கொள்வாய் என காண விரும்பினேன்.”

என் புன்னகை அவளை சீற்றம்கொள்ளச் செய்தது.

“உன் உள்ளத்துடிப்பை புன்னகையால் மறைக்க முயல்கிறாய்.”

“இல்லை…”

“நடிக்காதே! உன் துயரம் கண்டு நான் மகிழக்கூடாது என்று மறைக்கிறாய்! நான் அறிவேன்.”

பாவம்! பேதை!

“சிரிக்காதே! உன்னை…”

என் கழுத்தை நோக்கி நீட்டிய கை அந்தரத்தில் நின்றது.

“இல்லை, நீ அறிந்திருக்கிறாய்! அதனால்தான் பதற்றம் கொள்ளவில்லை.”

“சூர்பணகா! உண்மையில் நான் அங்கு நடப்பது ஏதும் அறியேன். நான் அறிய விழையவுமில்லை.”

சீற்றமும் வியப்பும் துயரும் அவளில் ஒருங்கே தோன்றின. இவள் என்னிடம் என்னதான் எதிர்பார்க்கிறாள்?

அவள் விழிகள் மெதுவே வெறிப்புற்றன. தனக்குத்தானே என “நான் கொண்ட ஏமாற்றத்தை தணிக்க உன்னை எரியச்செய்யலாம் என வந்தேன். ஆனால்…” என்றாள்.

அவள் சொற்கள் பொருள்படாத தூரத்திற்கு என் சிந்தனை அகன்று கொண்டிருந்தது.

“அவன் மீண்டும் மணம்கொள்ளவில்லை. உன்னைப்போல் பொற்பதுமை உருவாக்கியிருக்கிறான். யாகத்தில் அது அவனருகில் வீற்றிருக்கிறது. இரவில் யாருமற்ற சமயத்தில் நான் அச்சிலையை அணுகினேன். எதற்கென்று நானே அறியவில்லை. அருகணைந்த பொழுது அவனைக் கண்டேன். அச்சிலையின் முன் மண்டியிட்டிருந்தான். கொண்டல் பொழி மாரியென கண்களில் நீர்ப்பெருக்கு. சீதா, அக்கணம் நான்…”

அவள் என்னை உலுக்கினாள். “சீதா!”

“யார்? ஓ! சொல்.”

“நான் சொன்னவற்றை நீ செவியுற்றாயா? அல்லது…”

நான் வெறுமனே தலையசைத்தேன்.

“அவன் யாகத்தில் தன்னருகே அமர்த்த உனது பதுமையை வடித்திருக்கிறான், தனிமையில் அதன் முன் கண்ணீர் வடிக்கிறான் என்று சொன்னேன்…”

“ஓ!”

“உனக்கு கொடுத்த வாக்கை அவன் மீறவில்லை என்பதில் உனக்கு மகிழ்வில்லையா?”

“…”

“சரி, விடு. இன்று அவ்வாக்கினால் உனக்கு என்ன பயன்?”

மீண்டும் அவள் முகத்தில் அகத்தின் கொந்தளிப்பு.

“ஆனால்… எரி புகுந்து மீண்ட பின்னும் உன்னை இவ்வாறு அனுப்பியதை நீ ஏன் ஏற்றாய்?”

“நான் என்ன செய்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறாய்?”

“நீதி கேட்டிருக்க வேண்டும். அரசியாக அல்ல, ஒரு பெண்ணாக. நீ மௌனமாக இதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பெண்களை தங்கள் எண்ணம்போல் சிறுமைப்படுத்தும் ஒரு சமூகம் உருவாகும் அல்லவா?”

“நான் இங்கு வந்த சில நாட்களில் அன்னை அகலிகை என்னைக் காண வந்தார். ‘ராமனை கண்டு அவன் கௌதமரிடம் சொன்ன வார்த்தைகளனைத்தும் வெறும் வேஷம்தானா என்று கேட்கப்போகிறேன்’ என்றார். நான் ஒப்பவில்லை.”

“ஏன்? நீதான் எதிர்க்கவில்லை, அவர் கேட்பதில் உனக்கு என்ன தடை?”

“அதனால் என்ன நன்மை விளையும்? மக்கள் பேசுவது நிற்குமா? ராமனுக்கு ஒரு சாராரும் எனக்கு ஒரு சாராரும் பரிந்து பேசுவார்கள். எந்த விழுமியங்களின் வடிவாக ராமனைப் பார்க்கிறார்களோ அவை அனைத்தும் புறந்தள்ளப்படும். நான் ராமனை எதிர்த்தது நிலைகொள்ளும்.”

“நீ மௌனமாக விலகியதனால் மட்டும் மக்கள் பேச்சு மாறிவிடுமா? உன் உயர்வை உணர்ந்து உன் காலடியில் விழுந்து உன்னை திரும்ப அழைத்துச்செல்வார்கள் என்று காத்திருக்கிறாயா? பைத்தியக்காரி!”

“இல்லை, நான் யார் வரவையும் எதிர்நோக்கவில்லை. ஆனால், ஒன்றுண்டு. ராமன் தன் மேல் வந்த முதல் பழிக்கு அஞ்சி என்னை விலக்கினார். ஆம், முதல் பழிக்கு அஞ்சாதவர்கள் பின்னர் எப்பழிக்கும் அஞ்சாதவர்களாய் மாறிவிடுவார்கள்.”

“இது உனக்கு நீயே கூறிக்கொள்ளும் சமாதானம்; வெற்றுச் சொற்கள். காமன் வில்லின் பாணம் என்னைச் சுட்டதினும் கொடிதாய் ராமன் சொல்லின் பாணம் உன்னைச் சுடவில்லையா?”

அது என்றோ வடுவாகிவிட்டது.

“மற்றொன்றும் நீ யோசித்துப்பார்! அறத்தின் மூர்த்தி என்று புகழ்கொண்டவனுக்கு இச்செயல் புகழ் சேர்க்குமா? அதை மறுப்பின்றி ஏற்ற நீ அவனினும் அதிகமாக பெண்ணினத்தை இழிவு செய்திருக்கிறாய்! ஒரு பெண்ணை எவரும் எதுவும் சொல்லலாம் என்ற நிலைக்கு இது கொண்டுசெல்லுமல்லவா?”

“அல்ல. இச்செயல் நிச்சயமாக ஒரு அதிர்வை ஏற்படுத்தும். மக்களை சிந்திக்கத்தூண்டும். ஒரு அரசனாக ராமன் செய்தது சரியென்றாலும், ஒரு கணவனாக இவ்வாறு செய்யலாமா, குற்றமற்றவள் தன் மனைவியென்று கணவன் அறிந்திருந்தாலும் அதில் பிறர் மாற்று சொல்வது முறையா என்பதான கேள்விகள் அவரவர் மனதில் தோன்றும். அக்கேள்விகள் காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும். என்றென்றும் மக்களின் மனசாட்சியிடம் உரையாடும். சொல்லற்ற சொல்லே மேலும் கூர்கொள்ளும்.”

அவள் முற்றிலும் குழப்பமுற்றவளாக தோன்றினாள்.   

“சூர்ப்பணகா, உன் வரவின் காரணம் நானறியேன். ஆனால் உன்னைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன் என்று உணர்கிறேன்.”

“என்னையா?, நீயா?”

“ஆம், உன்னைத்தான்.”

“எதற்காக?”

“என் பொருட்டு நீ அடைந்த துன்பத்திற்கு நான் வருந்துகிறேன் என்று சொல்வதற்காக.”

அவள் குழப்பம் மேலும் அதிகரித்தது.

“தண்டகாரண்யத்தில் நீ என்னை பற்றியபொழுது நான் அவ்வாறு கூச்சலிடாமல் இருந்திருந்தால் உனக்கு உடற்குறை ஏற்பட்டிருக்காதல்லவா? அகழ்வாரையும் தாங்குபவள் என் அன்னை. அவளது பொறை எனக்கு ஏன் இல்லாமலானது என்று வருந்துகிறேன்.”

ஏதோ சொல்ல முனைந்தவள் அதை விடுத்து என்னை வணங்கி வந்ததுபோலவே சுவடின்றி மறைந்துபோனாள்.

***

சுதா ஶ்ரீநிவாஸன் – மதுரையை சேர்ந்தவர். காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று கோவையில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : sudha1066@gmail.com

திணைகளினூடே ஒரு பயணம்

0

கணேஷ் பாபு

கரங்களில் வாழும் மனிதர்கள், இந்த நவீன காலத்தில், அவரவர்களுக்கேயுரிய வாழ்வின் துயரங்களுடனும், அலைக்கழிப்புகளுடனும் தனித்தனி தீவுகளாக, திணைகளாக மிதந்தலைகிறார்கள். துயரங்களுக்குத் தீர்வு காண முயலுந்தோறும் அவை தீர்ந்தபாடில்லை, மாறாக பெருகியபடிதான் இருக்கிறது. சலித்துப் போய் யாவரும் அவரவர் திசையில் தனித்தனித் தீவுகளாகச் சுருங்கிப் போய் நின்றுவிடுகிறார்கள். இந்த மாறாத துயரத்தையும் தனிமையையும் ஆற்றுப்பட ஏதுமில்லாத விரக்தியும் மனிதர்களைத் துரத்தியபடியிருப்பதன் கதையைச் சொல்வதே ஜெயந்தி சங்கரின் இந்த “திரிந்தலையும் திணைகள்” நாவல். 

இந்த நாவல் ஒன்றுக்கும் மேற்பட்ட பல கதாபாத்திரங்களின் கதையைச் சொன்னாலும், பிரதானமாக, பத்மா மற்றும் ரேணு இருவரின் கதையை விரிவாகச் சொல்கிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் புது மணப்பெண்ணாக பத்மா வருகிறாள். புதிய குடும்பம், புதிய நாடு, புதிய சூழல், புதிய மனிதர்கள் என எல்லாம் புதியதாக இருக்கும் சிங்கப்பூரில் பத்மா தன்னை மெதுவாகப் பொருத்திக் கொள்கிறாள். கால மாற்றத்தில் அவள் வாழ்க்கை மாறுவதையும், சிங்கப்பூர் என்ற இந்த நிலம் கொள்ளும் மாறுதலையும் காட்சிப்படுத்துகிறது ஒரு சரடு. மற்றொரு சரடு, அவளது தோழியான ரேணுவின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. தைரியமான ஆளுமையான ரேணுவின் வாழ்வில் ஏற்படும் துயரங்கள் வழியே அவளது வாழ்வும் அவளைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்களையும் சொல்லிச் செல்கிறது. அதன்பின் துணைப் பாத்திரங்களான கவிதா, பாலா, கதிர், செந்தில், தர்ஷினி ஆகியவர்களின் கதையையும் சொல்கிறது இந்த நாவல். இதில் பத்மாவின் வாழ்வு மட்டும் அதிகம் துயரத்தில் சிக்கவில்லை. மற்ற எல்லா மனிதர்களையும் துயர் ஆட்டுவிக்கிறது. அதில் சிக்கி, திசைக்கொருவராக யாவரும் சிதறிப்போய் இறுதியில் ஏதோ ஒரு இடத்தில் தகைவு கொள்கிறார்கள். தனித்தனித் திணைகளாக திரிந்து அலைகிறார்கள். 

நாவல் காட்டும் காலம் என்பது தொண்ணூறுகளின் துவக்கம் துவங்கி 2010 வரையிலானது என்று தோராயமாகச் சொல்லலாம். சிங்கப்பூரில் பேருந்துகளில் சில்லறைப் போட்டு உள்நுழையும் காலத்தில் துவங்கி மின் அட்டைகளை மெஷினில் காட்டி உள்நுழையும் காலம் வரை. அல்லது சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாய் 9 ரூபாய்களாக இருந்த காலத்தில் இருந்து 39 ரூபாய் வரை மாறியிருந்த காலம் வரை. பேஜர் வைத்திருந்த காலத்தில் இருந்து செல்போன் வந்த காலம் வரை. சிங்கப்பூரில் ஓர் இருபதாண்டு காலமாற்றத்தை, மாறி வரும் மனிதர்களின் வாழ்வினூடாக யதார்த்தமாகக் காட்டிச் செல்கிறது இந்த நாவல். 

பத்மாவின் மணவாழ்வு மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. அவளது கணவன் சரவணன் அவளை நேசித்தும், புரிந்துகொண்டும், அவளுக்கான வெளியை அளிப்பதுமான அன்பான கணவன். அவளது மாமனார் சுப்பையாவும் அவளைத் தன் மகள் போல நடத்துகிறார். சரவணின் சித்தி திலகா, அவளது மகள் தீபா, சரவணனின் அத்தை மகளான கவிதா, அண்டை வீட்டுக்காரரான லீலிங், பணிப்பெண்ணாக வேலை செய்யும் தர்ஷினி ஆகியவர்களின் கதைகள் சிங்கப்பூர் பின்புலத்தில் சொல்லப்படுகின்றன. அதற்கிணையாக, ரேணுவின் கதை இந்தியப் பின்புலத்தில் வைத்துச் சொல்லப்படுகிறது.  இவை யாவும் மாறிமாறி அடுக்கடுக்காக வாசகன் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன. 

ரேணுவின் வாழ்வோ அவலம் நிறைந்ததாக இருக்கிறது. மிகத் துணிவான ஆளுமையாக அறிமுகமாகும் அவள், திருமணத்திற்குப் பின் தோல்விகளையே சந்திக்கிறாள். வக்கிரம் பிடித்த மனநோயாளிக் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுத் தப்புகிறாள். மகன் நவீனை நல்ல முறையில் வளர்ப்பதே அவளது வாழ்வின் குறிக்கோளாகிறது. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் அவளது வாழ்வில் இன்னொரு ஆண் நுழைகிறான். மருத்துவர் மாதவன் அவளைக் காதலிக்கிறான். அவளது குடும்பத்தினரிடம் நெருங்கிப் பழகுகிறான். ரேணுவின் மகன் நவீனிடமும் நெருங்கிப் பழகுகிறான். முடிவில், ரேணுவையும் திருமணத்திற்கு சம்மதிக்கவைக்கிறான். இந்த இரண்டாவது திருமண வாழ்வில் தயக்கத்துடன் நுழைகிறாள் ரேணு. ஆனால், இந்த வாழ்வு துவக்கத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்தாலும், ஒருகட்டத்தில், இதுவும் பிரிவில் முடிகிறது. துயரின் உச்சகட்டமாக, மகன் நவீனும் அவளிடம் இருந்து பிரிந்து, தவறான பாதையில் செல்லத் துவங்குகிறான். 

பணிப்பெண் தர்ஷினியோ இலங்கையில் உள்ள மகனின் செயல்பாடுகளால் துயருறுகிறாள். முடிவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறாள். தன் மகனது நண்பனை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் லீலிங், முடிவில் அவனாலேயே கொல்லப்படுகிறாள். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அழிந்துபோயின என்ற தகவலால் அதிர்ச்சியடையும் கவிதா மனநோயாளியாக மாறுகிறாள். அவளை மணக்கும் பாலாவும் தனது மகிழ்ச்சியைப் பலிகொடுக்கிறான்.

பத்மாவின் தம்பி கதிரை மணக்கும் மீனா, திருமணத்திற்கு முன்பு அவள் காதலித்தவனின் வக்கிரத்தனமான மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறாள். 

இந்த வெவ்வேறு மனிதர்களின் கதைகளால் பின்னப்பட்டிருக்கும் நாவலை வாசிக்கையில் வாசகன் வாழ்வின் துயரங்களையும் அலைக்கழிப்புகளையும் விந்தையான கதிமாற்றங்களையும் தானும் அனுபவிக்கிறான். அந்த வகையில், யதார்த்தவாத நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தனது நோக்கத்தைப் பூர்த்திசெய்கிறது.

மனிதர்களின் கதைக்கு இணையாகவே நிலத்தின் கதையும் இந்த நாவலில் பேசப்படுகிறது. காலமாற்றத்தில் சிங்கப்பூர் படிப்படியாக மாறுவதன் சித்திரம் இந்த நாவலில் உள்ளது. குறிப்பாக, பத்மா வாழும் யிசூன் பகுதி அடைந்து வந்த மாற்றங்களை நாவலில் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. புனித மரம் சுப்பிரமணியர் கோயில் ஒரு கதாபாத்திரமாகவே இந்த நாவலில் மாறி நிற்பதை அறியலாம். அந்தக் கோயில் உருவான வரலாற்றையும், கேன்பரா ரோட்டில் இருந்து, யிஷூன் விரைவுரயில் நிலையம் கட்டுவதற்காக அந்தக் கோயில் யிஷூன் தொழிற்பேட்டைக்கு மாறியதுவரையிலான கோயிலின் வரலாற்றையும், அதன் கட்டுமானம் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் என கோயில் முழுக்க இந்த நாவலில் பதிவாகியிருக்கிறது. 

இந்த நாவலில் விநோதமான மனிதர்களாக மாதவன், கவிதா மற்றும் மீனா ஆகியோரைச் சொல்லலாம். தனக்கான வாரிசை பெற்றுக்கொடுக்க மறுக்கும் அல்லது தயங்கும் ரேணுவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகும் மாதவனின் நடவடிக்கைகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. பிறகு ஏன் அவன் ரேணுவை விரட்டி விரட்டி காதலிக்கத் துவங்கினான்? காதலனின் மிரட்டலால் மீனா ஏன் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குச் செல்கிறாள். அவளது கணவன் கதிர் ஏன் அவளைத் தனிமையில் விட்டுச் சென்றான். மும்பையில் வீடு கிடைக்காததால் மனைவியைத் தனியே விட்டுச் சென்றான் என்பது நம்பும்படியாக இல்லை. தன்னுடைய  திருமணப் புகைப்படங்கள் அழிந்துபோனதால் மனநோயாளியாக மாறும் கவிதாவின் கதாபாத்திரமும் குழப்பம் தருவதாக இருக்கிறது. கல்யாணப் புகைப்படங்கள் கிடைக்காதலால் எவராவது மனநோயாளி ஆவாரா? ஆம். ஆகக்கூடும். வாழ்வு விந்தையானது. 

ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வை பல்வேறு சரடுகளிலாகச் சொன்ன விதத்தில் நாவலின் வடிவம் முழுமையடைந்திருக்கிறது. விவாத அம்சமோ, வாழ்வின் மீது நாவல் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளின் விரிவாக்கமோ இடம்பெறாமல், கதைகளைச் சொல்வது என்ற அளவில் மட்டும் நின்றுவிடுகிறது இந்நாவல். நாவல் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளான தனிமை, பிரிவு, மன அழுத்தம், சிக்கல்கள் என இவையாவற்றையும் அந்தந்த கதாபாத்திரங்களை முன்வைத்து தீவிரமான தளத்தில் கேள்விகளை எழுப்பிக்கொள்ளாமல், கதாபாத்திரங்களின் சிக்கல்களை மட்டும் சொல்லி நின்றுவிட்டது நாவல். மேலும், பல இடங்களில், நாவலாசிரியர் நிகழ்வுகளை விரிவாக்கிக் காட்டாமல், அவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். விளைவாக, வாசகனால் கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்குள் கற்பனை மூலம் நுழைய முடியவில்லை. அதனுள் வாழ முடியவில்லை. மாறாக, ஒரு கதைசொல்லியிடம் அமர்ந்து அவர் சொன்ன கதையைக் கேட்ட அனுபவம் மட்டுமே வாய்க்கிறது. மேலும், சில கதாபாத்திரங்களின் (மீனா, லீலிங், சரவணனின் உண்மையான தந்தையாகச் சொல்லப்படும் அந்த தாடிக்காரர்) நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டப்படவில்லை. தத்தமது வாழ்க்கைப்பாடுகளைப் பற்றி அவர்கள் என்ன எண்ணினார்கள், அவர்களின் அகப் போராட்டம் என்ன என்பதையெல்லாம் மேலும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். சில இடங்களில் காலக்குழப்பத்தினைக் காண முடிகிறது. ஒரு அத்தியாயத்தில், சரவணனும், பத்மாவும் வருஷம் 16 திரைப்படத்தைப் பார்த்து வருகிறார்கள். ஆனால், அதே அத்தியாயத்தில் சரவணனின் இடுப்பு வாரில் இருந்து செல்பேசி கனமாக இருந்தது என்று வருகிறது, வருஷம் 16 திரைப்படம் வெளியான காலகட்டத்தில் செல்பேசி கண்டுபிடிக்கப்படவேயில்லை. 

மொத்தத்தில், வடிவ ரீதியில் நவீன நாவலின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கும் இந்த நாவல், அதன் உள்ளடக்கத்திலும் நவீன மனம் எதிர்கொள்ளும் அகநெருக்கடிகளைப் பதிவு செய்வதிலும் கணிசமான வெற்றியை அடைந்திருக்கிறது எனலாம். நாவல் வெளியான காலகட்டத்தை வைத்துப் பார்க்கையில், இந்த நாவல் சிங்கப்பூரின் நவீன நாவல்களின் பாதையை துவக்கிவைத்த நாவல் எனலாம். சிங்கையில் அதுவரை மரபான கதைசொல்லல் முறையிலும், பத்திரிகை தொடர்கதை வடிவத்திலும் எழுதப்பட்ட நாவல்களுக்கு மாற்றாக, ஒரு நவீன நாவல் எப்படியிருக்க வேண்டும் என்று காட்டும் விதத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இதன் கலைக்குறைப்பாடுகள் ஒருபக்கத்தில் இருந்தாலும், நாம் கவனிக்க வேண்டியது, இந்த அம்சத்தையே என்பேன். 

***

கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

கதைகள் மெல்லிய காற்றிலிருந்து தோன்றுவதில்லை

0

ரேமண்ட் கார்வர் – க்ளாட் க்ரிமால்

தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன்

ரேமண்ட் கார்வர் (1938–1988) ஒரு அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் தனது எளிமையான பாணிக்கும் (minimalist style) மற்றும் தொழிலாளர் வர்க்க வாழ்க்கையின் யதார்த்தமான சித்தரிப்புகளுக்காகவும் கொண்டாடப்பட்டார். அவரது கதைகள் பெரும்பாலும் அன்பு, இழப்பு, போதை மற்றும் மனிதத் தொடர்பு போன்ற கருப்பொருள்களை ஆராய்கின்றன, அவை எளிய, ஆனால் உணர்ச்சிபூர்வமான சக்திவாய்ந்த மொழியில் சொல்லப்படுகின்றன. க்ளாட் க்ரிமால் பாரிஸ் XIII பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராக பணிபுரிபவர். பாரிஸில் வெளியாகும் “L’Histoire ne descend pas des nuages” எனும் இதழில் ரேமண்ட் கார்வரை நேர்காணல் செய்திருந்தார். ஆங்கிலத்தில் வில்லியம் எல். ஸ்டல் மொழிபெயர்த்த நேர்காணல் தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது.

க்ளாட் க்ரிமால் : நீங்கள் ஏன் நாவலைவிட சிறுகதைகள் எழுதுவதை தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: வாழ்க்கை சூழல்களால்தான். நான் மிகவும் இளையவனாக இருந்தேன். எனது பதினெட்டாவது வயதில் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவிக்கு வயது பதினேழு. அவள் அப்பொழுது கருவுற்றிருந்தாள். என்னிடம் பணமிருக்கவில்லை. எங்கள் இரண்டு பிள்ளைகளை வளர்க்கவேண்டி நாங்கள் எல்லா நேரங்களிலும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. அதோடு, நான் எப்படி எழுதவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக கல்லூரிக்கும் செல்லவேண்டிய தேவை இருந்தது. இரண்டு மூன்று ஆண்டுகள் எடுத்து நான் செய்யவேண்டியதை அவ்வளவு எளிதாக தொடங்கிவிட இயலாத நிலை. அதனாலேயே நான் என்னை சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதவதில் ஈடுபடுத்திக்கொண்டேன். ஒரு டேபிளில் அமர்ந்து ஒரே மூச்சில் தொடங்கி முடித்துவிடவும் முடியும். 

க்ளாட் க்ரிமால்: நீங்கள் உங்களை நல்ல கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் கருதுகிறீர்களா? அதேவேளை உங்கள் கவிதைகளுக்கும் உரைநடைகளுக்கும் என்னவிதமான தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? 

ரேமண்ட் கார்வர்: எனது கதைகள் நன்றாக அறியப்பட்டவைகள் என்றாலும் எனது கவிதைகளே என்னுடைய விருப்பத்துக்குரியன. தொடர்பா? எனது கவிதைகள் மற்றும் கதைகள் இரண்டுமே சிறியவைகள்.(சிரிக்கிறார்). அவற்றை நான் ஒரே வகையிலேயே எழுதுகிறேன் என்பதாலேயே அவை ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பேன். அதில் நாவலுக்குள் இல்லாத வகையில் மொழி மற்றும் உணர்வுகளின் சாரங்கள் அடங்கியிருக்கின்றன. நான் அடிக்கடி குறிப்பிடுவதுபோல கவிதைக்கும் சிறுகதைகளுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் சிறுகதைகளுக்கும் நாவலுக்கு இடையில் இருப்பதில்லை.

க்ளாட் க்ரிமால்: நீங்கள் படிமத்தின் சிக்கல்களை ஒரே வகையிலேயே அணுகுகிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: ஓ.. படிமம். நான் என் கவிதைகளையும் கதைகளையும் படிமத்தை மையப்படுத்தி எழுதுவதாக என்னிடம் யாரோ கூறினார்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. படிமம் என்பது கதையிலிருந்துதான் உருவாகிறது மாறாக அல்ல. நான் எழுதும்போது படிமங்களைப்பற்றியெல்லாம் நினைப்பதில்லை.

க்ளாட் க்ரிமால்: எந்த கவிதை வழிமுறையைப் பின்பற்றுபவராக உங்களை நீங்கள் கருதுகிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: இப்படி வைத்துக்கொள்ளலாம். எனக்கு வாலஸ் ஸ்டீவன்சைப்பற்றி அக்கறை இல்லை. எனக்கு ராபர்ட் ஃப்ரோஸ்ட் மற்றும் சமகால கவிஞர்கள் பலரைப் பிடிக்கும். கால்வே கின்னல், W S மெர்வின், டெட் ஹுக்ஸ், C K வில்லியம்ஸ், ராபர்ட் ஹாஸ் போன்ற பலரைப் பிடிக்கும். ஐக்கிய அமெரிக்க நாட்டில் தற்பொழுது கவிதையில் உண்மையான மறுமலர்ச்சி நிலவிவருகிறது. உரைநடையிலும் கூட. குறிப்பாக சிறுகதை எழுத்தாளர்கள் மத்தியில் எனலாம்.

க்ளாட் க்ரிமால்: உதாரணத்திற்கு..

ரேமண்ட் கார்வர்: அமெரிக்காவில் இப்பொழுது பல நல்ல படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இது எழுத்தாளர்களுக்கான நல்ல காலம். சிறுகதைகள் நன்றாக விற்பனையாகின்றன. ஏராளமான திறமைமிக்க இளம் தலைமுறையினர் இருக்கிறார்கள். நான் ஒரு தொகுப்பை சரிபார்க்கும் வேலையை செய்தேன். ‘தி பெஸ்ட் அமெரிக்கன் ஷார்ட் ஸ்டோரிஸ் 1986’ எழுதியவர் பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. அனைத்து கதைகளும் நன்றாக இருந்தது. சமகால எழுத்தாளர்களில் ரிச்சர்ட் ஃபோர்ட், டோபியாஸ் உல்ஃப் ஆகியவர்கள் முதல்தரமான எழுத்தாளர்கள் என்பதோடு ஜேன் ஆன் ஃபிலிப்ஸின் சில கதைகளுக்காக அவரையும், ஆன் பீட்டி, பேரி ஹனா, க்ரேஸ் பாலே, ஹரால்ட் ப்ராட்கி, ஜான் உப்டிக் மற்றும் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ் ஆகியோரின் சில கதைகளுக்காவும் அவர்களைக் கண்டு நான் வியந்து பாராட்டுகிறேன். ஆங்கிலேயரான இயான் மேக்வானையும் குறிப்பிடவேண்டும். ஏமி ஹேம்பெல் என்ற மிக இளம்வயது எழுத்தாளர், அதோடு ஐம்பதுகளில் ஃப்ரான்சில் வாழ்ந்த ரிச்சர்ட் யேட்ஸ் இவர்களின் சில கதைகள் எனக்குப் பிடிக்கும். 

க்ளாட் க்ரிமால்: உங்களுக்கு நாவல் எழுதுவதைப் பற்றிய யோசனை இருக்கிறதா?

ரேமண்ட் கார்வர்: இப்பொழுது நான் விரும்புவதை என்னால் எழுத முடியும், அது கதைகள் என்று இல்லை எதையும் எழுதலாம் என்பதனால் ஒருவேளை எழுதலாம். நான் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை முடித்துத்தர வேண்டிய ஒப்பந்தத்தில் இருக்கிறேன். பெரும்பாலானவைகளை முடித்துவிட்டேன் என்பதால் ஜனவரி மாதம் வெளிவரும். அதற்குப் பிறகு பார்க்கலாம். என்னுடைய முதல் தொகுப்பிற்குப்பின் நான் நாவல் எழுதவேண்டும் என்று பலர் விரும்பினர். நிறைய அழுத்தங்களும் இருந்தது. சொல்லப்போனால் நான் அதற்காக முன்பணம்கூட வாங்கியிருந்தேன். ஆனாலும் அதற்கு பதிலாக சிறுகதைகளையே எழுதினேன். எப்படியும் நான் ஒரு நெடிய கதையை யோசித்து வருகிறேன். எனக்கே அதைப்பற்றி தெரியவில்லை.

ஒருவேளை அது நாவலாகவும் மாறலாம். ஆனால் நாவல் எழுதிவிடவேண்டும் என்று எந்த கட்டாயமும் என்னிடம் இல்லை. நான் எதை எழுத விரும்புகிறேனோ அதை எழுதலாம். அதற்கான சுதந்திரம் இப்போது எனக்கு இருக்கிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இதுவரை எனது ஆசிரியரான ஜான் கார்டனர் பற்றி, என்னுடைய தகப்பனார் பற்றி, எனக்கிருந்த மதுப்பழக்கத்தையும் அதன் பிரச்சனைகள் அதிலிருந்து நான் 1977ல் வெளியானதைப்பற்றி என பலவற்றை கவிதைகள் கட்டுரைகள் சுயசரிதை என எழுதியிருக்கிறேன். இப்பொழுதைக்கு என்னுடைய பதிப்பாளர் நிறைவாக உணர்கிறார். என்னுடைய கதைகள் நன்றாக விற்பனையாகின்றன. எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது.

க்ளாட் க்ரிமால்: ஃப்ரான்சில் உங்களுடைய பிந்தைய தொகுப்புகள் முதல் தொகுப்பிற்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்படுவதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: ’வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ வால் ஈர்க்கப்படாத பலர் ‘கதீட்ரல்’ கதைகள் மேம்பட்டதாக இருப்பதாக உணர்கிறார்கள் போலும்..கடைசியில் எது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியானாலும் பதிப்பாளர் நல்ல முடிவையே எடுத்திருக்கிறார்.

க்ளாட் க்ரிமால்: ஆக உங்களுடைய முதல் படைப்பிற்கும் சமீபத்திய படைப்பிற்கும் இடையில் உங்களுடைய எழுத்து நடையில் மாற்றங்கள் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? 

ரேமண்ட் கார்வர்: ஆம். நிறையவே… என்னுடைய பாணி முழுமையடைந்திருக்கிறது. பரந்துபட்டதாக ஆகியிருக்கிறது. என்னுடைய இரண்டாவது புத்தகமான ‘ வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் துண்டானவைகளாகவும், மிகவும் சிறியதாகவும், சுருக்கமானதாகவும் பெரிய அளவில் உணர்ச்சிகள் அற்றதாகவும் இருந்தன. அண்மையில் வெளியான ‘கதீட்ரல்’ தொகுப்பில் கதைகள் பரந்துபட்டவைகளாக இருக்கின்றன. அவை முழுமையானதாக, வீரியம் மிக்கவைகளாக, மேம்பட்டவைகளாக இருப்பதோடு நம்பிக்கையளிப்பவையாகவும் இருக்கின்றன.

க்ளாட் க்ரிமால்: இவை நீங்கள் வேண்டுமென்றே செய்தவையா?

ரேமண்ட் கார்வர்: இல்லை. அவற்றை வேண்டுமென்றே செய்யவில்லை. எனக்கு எந்த திட்டங்களும் இல்லை. என்னுடைய வாழ்கை சூழல் மாறியிருக்கிறது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டதால் அதிக நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு எழுத்தாளனுக்குள் மாற்றங்கள் நிகழவேண்டும். அவை எதார்த்தமானதாக இருக்கவேண்டும். முடிவெடுத்து செய்தவையாக இருக்கக்கூடாது. அதனாலேயே நான் ஒரு புத்தகத்தை முடித்தபின் ஆறு மாதங்களுக்கு சிறு கவிதைகள் கட்டுரைகள் என்பதைத் தாண்டி எதையும் எழுதுவதில்லை. 

க்ளாட் க்ரிமால்: நீங்கள் கதைகளை எழுதும்போதே அவற்றை தொகுப்பிற்காக என்று எண்ணி எழுதுவீர்களா அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டவைகளாக கருதியே எழுதுகிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: நான் அவற்றை ஒரு தொகுப்பாகவே எண்ணி எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அவை முழுமைபெற்று வடிவம் பெறுகின்றன.

க்ளாட் க்ரிமால்: உங்களின் தொகுப்பிற்கான தலைப்பினை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: பொதுவாக சிறந்த ஒரு கதையின் தலைப்பாக இருக்கும். ஆனால் அது கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். “வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்” என்பது தவிர்க்க முடியாத ஒரு தலைப்பு.

க்ளாட் க்ரிமால்: உங்களுக்குப் பிடித்தமான கதைகள் எவை?

ரேமண்ட் கார்வர்: ‘கதீட்ரல்’, ‘எ ஸ்மால் குட் திங்’. எனக்குப் பிடிக்காமல் போன நிறைய கதைகளும் இருக்கிறன, ஆனால் நான் அவற்றை உங்களிடம் சொல்லமாட்டேன். நான் என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகளை பிரசுரிக்க விரும்புகிறேன். நிச்சயமாக என்னுடைய எல்லா கதைகளையும் அல்ல.

க்ளாட் க்ரிமால்: ‘எ ஸ்மால் குட் திங்’ என்பது ‘ வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற ‘தி பாத்’ என்ற கதையை திருத்தி எழுதியதில் உருவானதுதானே?

ரேமண்ட் கார்வர்: ஆமாம். ‘தி பாத்’ ஒரு பத்திரிகையில் இடம்பெற்று எனக்கு என்ன பரிசு கிடைத்தது என்பதே மறந்துபோன ஒரு பரிசைப் பெற்றிருந்தது. ஆனால், அந்த கதை என்னை பாதித்தது. அது முழுமைப் பெற்றுவிட்டதாகத் தோன்றவில்லை. சொல்வதற்கு இன்னும் விஷயங்கள் இருப்பதாகத் தோன்றியது. நான் ‘தி கதீட்ரல்’ எழுதிக்கொண்டிருக்கும்போது (அதைவிட விரைவாக நான் வேறு எதையும் எழுதியதில்லை. அதற்கு எனக்கு பதினெட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே தேவைப்பட்டது) அப்படித் தோன்றியது. ‘தி கதீட்ரல்’ என்ற கதை நான் எழுதிய முந்தைய எல்லாக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது நான் பெருந்தன்மைமிக்கவனாக இருந்த காலகட்டம். “தி பாத்’ கதையை பார்த்தபோது அது முழுமையடையாத ஒரு ஒவியத்தைப்போலத் தோன்றியது. அதனாலேயே அதை மீண்டும் திருத்தி எழுதினேன். அது இப்பொழுது மேன்மையடைந்திருக்கிறது. ஹாலிவுட்டிலிருந்து ஒருவர் அதைத் திரைப்படமாகக்கூட எடுத்திருக்கிறார். ஆஸ்த்திரேலியர்கள் கூட “ஃபேதர்ஸ்’ என்ற கதையை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நான் முதலாவது படத்தைப் பார்த்தேன். அது இரண்டாவதைப்போலவே நன்றாக இருந்தது. அதில் மயிலையும், பல் செட்டையும் போட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளின் முடிவைப்பற்றி பேசமுடியுமா? உதாரணத்திற்கு “தி கதீட்ரல்” கதையை எடுத்துக்கொள்வோம்.

ரேமண்ட் கார்வர்: அந்த கதாப்பாத்திரம் பார்வையற்றவர்கள்மீது தவறான எண்ணம் கொண்டது. அவன் மாறுகிறான். ஏற்றம் பெறுகிறான். அப்படியான ஒரு கதையை முன்னெப்போதும் நான் எழுதியதில்லை. ’வாட் வீ டாக் அபவுட் வென் வீ டாக் அபவுட் லவ்’ எழுதிமுடித்து ஆறு மாதங்களுக்குப்பின் நான் எழுதிய முதல் கதை. பிறகு அந்த கதையை நான் எழுதி முடித்தபின் அதை மெய்யாகவே முற்றிலும் வித்தியாசமானதாக உணர்ந்தேன். அது எனக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. அப்படி எல்லா கதைகளுக்கும் நிகழ்ந்து விடாது. ஆனால் நான் ஏதோவொன்றை அடைந்ததாக உணர்ந்தேன். அது எனக்கு உற்சாகத்தை அளித்தது. பார்வையுள்ளவன் மாறுகிறான். அவன் தன்னை பார்வையற்றவனின் இடத்தில் பொருத்திப் பார்க்கிறான். அந்தக் கதை ஏதோ ஒன்றை வலியுறுத்துகிறது. அது ஒரு நேர்மறையான கதை. அதனாலேயே அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மக்கள் அதை வேறேதோவொன்றின் படிமமாகப் பார்க்கிறார்கள். கலையின் அம்சமாக, ஏதோ செய்வதற்கான என்ற வகையில். ஆனால் நான் அந்த மனிதன் பார்வையற்றவனின் கைகள்மீது தன் கைகளை வைத்துப்பார்க்கும் தொடுஉணர்வைத்தான் நினைத்துப்பார்த்தேன். அவை முற்றிலும் கற்பனையானதுதான். ஒருபோதும் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. அது ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பு. அப்படியான ஒன்றுதான் ‘எ ஸ்மால் குட் திங்’ கிலும் நடந்தது. அந்த பெற்றோர் ரொட்டி சுடுபவனோடு இருக்கிறார்கள். நான் அதை ஏதோ ஆன்மாவைத்தட்டி எழுப்பும் ஒரு செயலாக சொல்லவரவில்லை என்றாலும் அது ஒரு வகையில் நேர்மறையான முடிவாக அமைந்துவிடுகிறது. அந்த இருவரும் தங்களுடைய குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வருகிறார்கள். அது நேர்மறையான ஒன்று. இரண்டிற்கும் ஒரு வகையான ஒற்றுமை உண்டு. இரண்டு கதைகளுமே நேர்மறை முடிவைக் கொண்டிருக்கின்றன என்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இரு கதைகளும் நிலைத்து நின்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.

க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் தன்வரலாற்று குறிப்புகள் அவசியமென்று கருதுகிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: மாப்பசான், செகாவ் போன்ற நான் விரும்பும் எழுத்தாளர்களுக்கு அது அவசியமானதாக இருக்கிறது. கதைகள் எங்கிருந்தாவது வரவேண்டும். எப்படியானாலும் எனக்கும் அது விருப்பமானதாகவே இருக்கிறது. மெய்யுலகத்திலிருந்து சில மேற்கோள்கள் இடம்பெறுவது அவசியமாகிறது.

க்ளாட் க்ரிமால்: அது நீங்கள் எழுதும்போது என்றால் சரி. உங்கள் வாழ்க்கைக் குறிப்புகள் வாசகனுக்கு உதவும் என்று கருதுகிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: இல்லை. இல்லவேயில்லை. ஏதோ ஒரு பிம்பம், நான் கேட்ட வரிகள், நான் பார்த்த காட்சி, நான் செய்தது, என்று ஏதோ ஒன்றை வேறொன்றாக மாற்றியமைக்கப் பார்க்கிறேன். ஆமாம். சிறிதளவு தன்வரலாறும் பெருமளவு கற்பனைகள் இருக்கும் என்பதாக நம்புகிறேன்.

என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களான ஃபிலிப் ராத், டால்ஸ்டாய், மாப்பசான் போன்றவர்களுக்கு ஏதோவொரு அம்சம் பொறியை ஏற்படுத்துவதாக கருதுகிறேன். கதைகள் மெல்லிய காற்றிலிருந்து உருவாவதில்லை. அதற்கு ஒரு பொறி தேவைப்படுகிறது. அந்த வகையிலான கதைகளே என்னை ஈர்ப்பவை. உதாரணத்திற்கு, ’ஃபாட்’ டிற்கு உணவு விடுதியொன்றில் பணியாற்றிய என் மனைவி, என்னுடைய முதல் மனைவி ஒரு நாள் இரவு வீட்டிற்கு வந்தவுடன் அவள் விடுதிக்கு தன்னை பன்மையில் குறிப்பிட்டுக்கொண்ட ஒரு வாடிக்கையாளன் வந்திருந்ததாகவும், ’எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ரொட்டி வேண்டும்’, ‘நாங்கள் இன்று சிறப்பானதொரு இனிப்பை சாப்பிடப்போகிறோம்’ என்று சொன்னதாகக் கூறினாள். அது என்னைத் தாக்கியது. அதை நான் அசாதாரணமானதாகக் கருதினேன். அதுதான் ஒரு கதைக்கான பொறியாக அமைந்தது. அதை நான் பலவருடங்கள் கழித்து எழுதினேன் என்றாலும் என் மனைவி என்னிடம் சொன்னதை நான் ஒருபோதும் மறந்துவிடவில்லை. நெடுநாளைக்குப் பிறகு நான் எழுத உட்கார்ந்தபோது இதை சிறப்பாக எப்படி எழுதலாம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அது நான் விழிப்புணர்வுடனே எடுத்த முடிவு. அதை ஒரு உணவு விடுதியில் பணியாற்றும் ஒரு பணிப்பெண்ணின் பார்வையிலேயே எழுத முடிவெடுத்தேன். என் மனைவியின் பார்வை என்றில்லாமல் ஒரு பணிப்பெண்ணின் பார்வையில்.

க்ளாட் க்ரிமால்: கதையின் முடிவில் அந்தப் பெண் தன் வாழ்க்கை மாறிவிடப்போவதாக சொல்வார், அதை நீங்கள் எப்படி விளக்கப்போகிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: நான் அதை விளக்கவில்லை. அதிலும் ஒரு நேர்மறையானதையே இடம்பெற செய்தேன் என்பதாகக் கொள்ளலாம்.

க்ளாட் க்ரிமால்: அது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு கதை.

ரேமண்ட் கார்வர்: ஆம். அதுதான் அதற்கான சரியான காலமென்று கருதினேன். தி நியூயார்கரில் வெளியிட்ட நான்கைந்து கதைகளுமே கூட நிகழ்காலத்தில் நடப்பதாகவே இருந்தது. எதனால் என்று எனக்குத் தெரியாது. அது ஏன் என்று தெரியாமலே நான் எடுக்கும் முடிவு. சில முடிவுகள் அதுவாகவே அமைந்துவிடுவதுண்டு அதை நான் ஏதோ அமானுஷ்யம் என்பதாக உங்களை எண்ண வைத்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம். அது அப்படித்தான்.

க்ளாட் க்ரிமால்: உங்கள் எழுத்தில் அமெரிக்க மரபு சொற்றொடர்களை சேர்க்க முயல்கிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: நிச்சயமாக. நான் நன்றாக பேச்சை கவனிப்பவன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன். நான் எழுதும் வகையிலேயே மக்கள் பேசுவதாக நான் நினைக்கவில்லை. ஹெமிங்வேயைப்போல என்று சொல்லவேண்டும். அவருக்கும் பேச்சைக் கவனிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் அவர் தானாக உருவாக்கியவை. மக்கள் அவ்வாறெல்லாம் பேசுவதில்லை. அது ஒருவித தாளலயத்துடனானது.

க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் இடம்பெரும் வசனங்களுக்கு எப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: அது முக்கியமானதுதான். அது கதையினை முன்னகர்த்த, கதாபாத்திரத்தை ஜொலிக்க வைக்க போன்றவற்றை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. காரணமில்லாமல் மக்கள் பேசிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை ஆனால், ஒருவர் பேசுவதை மற்றொருவர் கவனிக்காமல் பேசிக்கொண்டிருக்கும் வகையான வசனங்கள் எனக்குப் பிடிக்கும்.

க்ளாட் க்ரிமால்: உங்களுடைய கருப்பொருளைப் பற்றி பேசலாமா?

ரேமண்ட் கார்வர்: ஒரு எழுத்தாளன் அவனுக்கு முக்கியமானதாக இருப்பனவற்றைப் பற்றிப் பேசியாக வேண்டும். நான் பதினைந்து ஆண்டுகள் பல்கலைக்கழகங்களில் வேலைப் பார்த்திருக்கிறேன். அங்கு வேறு வேலைகள் செய்வதற்குமான நேரம் இருந்தும், அது என் வாழ்க்கையில் உணர்வுரீதியாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதாலேயே நான் அந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையைப் பற்றி ஒரு கதைகூட எழுதியதில்லை. என் இளம் பிராயம், எனக்கு நன்றாகத் தெரிந்த மனிதர்கள் என்மீது ஏற்படுத்திய உணர்வுரீதியான தாக்கங்கள் என என் வாழ்க்கையில் பின்னோக்கி பயணித்துப் பார்ப்பேன்… சமீபத்திய என்னுடைய கதைகள் அலுவலர்களைப் பற்றி பேசுகிறது. ( உதாரணத்திற்கு தி நியூயார்கரில் இதழில் “ஹூஎவர் வாஸ் யூசிங் திஸ் பெட்” இல், என்னுடைய முந்தைய கதைகளின் கதாபாத்திரங்கள் ஒருபொழுதுமே பேசிக்கொள்ளாதவைகள் இடம்பெற்றிருந்தன) அவர் ஒரு தொழிலதிபர் போன்றவைகளைக் கூறலாம். பெரும்பாலும் என் கதைமாந்தர்கள் ஏழைகளாகவும் கைவிடப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பொருளாதாரம் முக்கியமானதுதான். நான் அரசியல் பேசும் எழுத்தாளன் அல்ல என்றாலுமே USA வை நல்ல விதமாக சித்தரிக்கவில்லை, நம்பிக்கையுடனான அணுகுமுறையற்றவன், வெற்றிபெற முடியாதவர்களைப் பற்றி எழுதுகிறேன் என்பதால் வலதுசாரியினரால் தாக்கப்பட்டேன். ஆனால், இவர்களது வாழ்வுமே செயல்வீரர்களுக்கு இணையானதுதான். ஆம். வாழ்க்கையில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், பணப்பிரச்சனை, மணவாழ்க்கை பிரச்சனை இவற்றை எடுத்துக்கொள்கிறேன். மக்கள் வீட்டுவாடகை, குழந்தைகள், வீட்டு பிரச்சனைகள் போன்ற அடிப்படை தேவைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அப்படியாகத்தான் 80 -90 சதவீதத்தினர் வாழ்கிறார்கள். அதற்கும்மேல் எத்தனைபேர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். தங்களுக்காக பேச யாரும் இல்லாத நசுக்கப்பட்ட மக்களின் கதைகளைத்தான் நான் எழுதுகிறேன். நானே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்த வாழ்க்கை அது, நான் அதற்கான சாட்சியைப் போன்றவன். நான் அவர்களுக்காக பேசுபவனாக கருதிக்கொள்ளாமல், அந்த வாழ்க்கையை கண்ணுற்றவனாகவே எண்ணிக்கொள்கிறேன். நான் ஒரு எழுத்தாளன். 

(தமிழில் கார்வரின் சிறுகதைகள்)

க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளை எப்படி எழுதுகிறீர்கள் அதன் முடிவை எப்படி கொண்டுவருகிறீர்கள்?

ரேமண்ட் கார்வர்: கதையின் முடிவை எழுதுவதற்கு எழுத்தாளனுக்குள் நாடகத்தனத்திற்கான உணர்வு இருக்க வேண்டும். ஒரு முடிவு என்பது அதிசயமாக வந்துவிடாது. அந்தக் கதையை திருப்பிப் பார்க்கும்போதுதான் கிடைக்கும். நான் பதினைந்து இருபது முறை திருப்பிப் பார்ப்பேன். கதையின் பல பதிப்புகளை என்னிடம் வைத்துக்கொள்வேன். முன்பெல்லாம் அப்படியில்லை இப்பொழுதெல்லாம் புத்தகம் சேகரிப்பு செய்பவர்களுக்காக அப்படி செய்கிறேன். எனக்கு கைகளால் எழுதுவதில் இருக்கும் வலி பிடிக்கும். என்னிடம் செயலி (வர்ட் ப்ராசசர்) எதுவும் இல்லை, ஆனால் தட்டச்சுசெய்து தருபவர் பிழைகளைத் திருத்தி சரியாக்கி தருவதற்கென்று இருக்கிறார். அவர் தருவதை நான் மீண்டும் திருத்திக்கொண்டிருப்பேன். டால்ஸ் டாய் ‘ வார் அண்ட் பீஸ்’ ஐ ஏழுமுறை திருத்தியபின்னும் அச்சுக்கு செல்லும் கடைசி நேரம் வரை திருத்திக்கொண்டிருந்தார். பிழைதிருத்தம் செய்யப்பட்டதின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். நல்லவிதமாக செய்துமுடிக்கப்பட்ட அந்த வேலையின் மீதான அக்கறையை நான் விரும்புகிறேன். 

க்ளாட் க்ரிமால்: அப்படியானால் ‘ஆன் த ரோட்’ ஐ ஒரே மூச்சில் தட்டச்சு இயந்திரத்தை கொண்டு ஒரு பெரிய பேப்பர் சுருளில் படைத்ததாக சொல்லும் கெரோவாக்கை பிடிக்காதுதானே?

ரேமண்ட் கார்வர்: ஆமாம். ‘ஆன் த ரோட்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்றாலுமே அவருடைய மற்றவைகளைப் பிடிக்கவில்லை. அவை படிக்கமுடியாதவை. மிகவும் பழையனதாகிவிட்டன.

க்ளாட் க்ரிமால்: கெரோவாக் பொய் சொல்கிறார் போலும்.

ரேமண்ட் கார்வர்: ஆம். எழுத்தாளர்கள் பொய் சொல்பவர்கள்.( சிரிக்கிறார்)

க்ளாட் க்ரிமால்: உங்களையும் சேர்த்தே சொல்கிறீர்களா?

ரேமண்ட் கார்வர்: (சிரிக்கிறார்) இல்லை. நான் இல்லை. நான் மட்டும் விதிவிலக்கானவன்.

க்ளாட் க்ரிமால்: எந்த வகையான எழுத்தாளர்கள் உங்களை ஈர்க்கிறார்கள்?

ரேமண்ட் கார்வர்: நான் ஆசிரியராக இருந்தபொழுது இளம் எழுத்தாளராக எனக்கு பயனுள்ள வகையில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து வந்தேன். ஃப்ளாபர்ட் அவர்களின் கதைகள் மற்றும் கடிதங்கள், மாவ்பசன்ட் (இவரைப் பற்றி நான் கவிதை ‘ஆஸ்க் ஹிம்’ எழுதியிருக்கிறேன்), செகாவ், ஃப்ளானரி ஓ கனோர், வில்லியம் காஸின் ஒரு நாவல், யுடோரா வெல்டி…

க்ளாட் க்ரிமால்: அதோடு நீங்கள் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசப்படும் ஹெமிங் வே

ரேமண்ட் கார்வர்: நான் அவருடைய படைப்புகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். 

நான் 19 அல்லது 20 வயதில் படித்தவற்றில் ஹெமிங் வேயும் அடங்கும். உதாரணமாக அதே சமயத்தில் நான் வாசித்த ஃபால்க்னரை விடவுமே ஹெமிங் வேயால் வெகுவாக கவரப்பட்டேன். ஹெமிங் வே அவர்களிடமிருந்து அவரின் ஆரம்பகால எழுத்துகள் வழியாக நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவருடன் ஒப்பிடப்பட்டால் அது எனக்கான கவுரவமாகக் கருதுவேன். என்னைப் பொறுத்தவரையில் அவரது வாக்கியங்கள் கவித்துவமானவை. அதில் தாளலயமும் ஏற்ற இறக்கங்களும் இருக்கும். அவரின் ஆரம்பகாலக் கதைகளை நான் மீள்வாசிப்பு செய்து அவை என்றைக்குமே சிறப்பானவைகள் என்று சொல்லமுடியும். அவை எனக்குள் எப்பொழுதுமே ஒரு பொறியை ஏற்படுத்தும். அவருடைய எழுத்து அற்புதமானது. அவர் உரையாடலைக் கட்டிடக்கலை என்றதோடு பராக் (17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஒரு கலைப்பாணி) காலம் முடிந்துவிட்டது என்றார். அதில் நானும் உடன்படுகிறேன். சொற்கள் என்பது கற்களைப்போன்றது என்றும் ஒருவர் அதைக்கொண்டு சுவர் எழுப்ப முடியும் என்பதாக ஃப்ளாபர்ட் இதேபோல ஒன்றைக் கூறினார். வழுக்கிச் செல்லும்படியான பிடிப்பற்ற வார்த்தைகளைக்கொண்டு எழுதக்கூடிய எழுத்தாளர்களை எனக்கு பிடிப்பதில்லை.

க்ளாட் க்ரிமால்: ஆனால் நீங்கள், ரகசியங்களைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள் அவை என்ன என்பதை ஒருபோதும் சொல்வதில்லை. இந்த திடீர்த்தன்மை, இப்படி சொல்லலாம், உங்கள் கதையின் முடிவுகளில் இருக்கக்கூடிய தொடர்பின்மை உங்கள் வாசகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் வாசகர்களை வெறுப்பேற்றுகிறீர்கள்.

ரேமண்ட் கார்வர்: எனக்கு எப்படிக் கதைகளை எழுதவேண்டும் என்று தெரியுமா என்றே தெரியவில்லை. நான் எழுதுகிறேன். எனக்கு திட்டம் எதுவும் இல்லை. கதை முன்னேற வேண்டும், உச்சநிலை அடைய வேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. என்னால் சிறப்பாக எழுத முடிந்த கதையை எழுதுகிறேன். கதை எதையாவது வெளிப்படுத்த வேண்டும் ஆனால் எல்லாவற்றையும் அல்ல. கதையில் சற்று மர்மம் இருக்க வேண்டும். நான் வாசகனை வெறுப்பேற்ற விரும்பவில்லை. வாசகனுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதைப் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடுகிறேன் என்பது உண்மை.

க்ளாட் க்ரிமால்: உங்களுடைய கதைகளில் பார்வையில் உவத்தல்/ நோக்குக் காமம் இருப்பதாக நினைக்கிறீர்களா? எப்பொழுதும் ஒருவரை ஒருவர் வேவுபார்க்கும் மனிதர்கள், அண்டை வீட்டாரின் வாழ்க்கையால் கவரப்படுபவர்கள் இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

ரேமண்ட் கார்வர்: அது உண்மைதான். எல்லா புனைவுகளுமே அப்படித்தான். இயல்பாக மக்களிடம் சொல்லாத ஒன்றை சொல்வதுதான் எழுத்து. (சிரிக்கிறார்) ’நைபர்ஸ்’ ல் நோக்குக் காமம் இருக்கிறது,’தி ஐடியா’ விலும் வயதான ஜோடியிடம் தோன்றும் காமக் கிளர்ச்சி. உண்மைதான். ’ நைபர்ஸ்’ ல் அடுத்த வீட்டைப் பார்த்த அந்த ஜோடி கிளர்ச்சியடைவது வருகிறது. 

 க்ளாட் க்ரிமால்: உங்கள் கதைகளில் இடம்பெறும் காமம் சலிப்பானதாக அல்லது அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப் பார்த்து கிளர்ச்சியுறுவதாக அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ‘ஃபெதர்ஸ்’ , ‘ நைபர்ஸ்’…

ரேமண்ட் கார்வர்: ஆனால் என்னுடைய கதைகளில் அதிக அளவில் காமம் இல்லை. கதைகள் நிதானமானவை, காமமும் அப்படியானதே. என் கதைகளில் இடம்பெறும் காமம் திரைமறைவாகவும் இயந்திரத்தனமாகாவும் நிகழ்பவையாக இடம்பெறுவது உண்மைதான். எனக்கே தெரியவில்லை.

 க்ளாட் க்ரிமால்: ’தி ஐடியா’ வில் அண்டை வீட்டை வேவு பார்க்கும் ஜோடியையும் அடுக்களை மடுவினடியில் இருக்கும் எறும்புகள் இப்படி இணைப்பேயில்லாததாகத் தோன்றும் இரண்டை இணைத்து வைக்கிறீர்கள். தொடர்பே இல்லாதவற்றை தொடர்பு படுத்துகிறீர்கள்.

ரேமண்ட் கார்வர்: ஆம். இணைப்புகள் சாத்தியமற்றவைகளாக மட்டும் தோன்றாமல் தவிர்க்கமுடியாததாகவும் இருக்கின்றன. எனக்கு அவற்றை விவரிக்கத் தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் இந்தக் கதைகளை எழுதும்போது என்னிடம் எந்த திட்டமும் இல்லை. கதையில் எறும்புகளை புகுத்தப்போகிறேன் என்பது தெரியாமலேதான் தொடங்கினேன். தொடங்கும்போது எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இதேவகையில் எழுதுபவர்களை எடுத்துக்காட்டாக சொல்ல எனக்கு முன்னொடிகள் இருக்கிறார்கள். ஒரு முறை ஹெமிங் வேயிடம் அவர் தொடங்கும்போது இதை எப்படி முடிக்கப்போகிறீர்கள் என்று தெரியுமா என்று கேட்டபோது,” இல்லை எனக்குத் தெரியாது‘ என்றார். ஃப்ளனரி ஓ கானரும் கூட எழுத்து என்பது ஒரு கண்டுபிடிப்பு என்று கூறினார். ஒரு வரியிலிருந்து அடுத்த வரிக்குள் என்ன நடக்கும் என்பதே தெரியாது என்றார். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல அதிசயமாகவெல்லாம் முடிவுகள் தோன்றிவிடாது. உங்களுக்குள் ஒரு நாடகத்தனம் இருக்க வேண்டும் அப்போதுதான் எழுதிக்கொண்டிருக்கும்போதோ அல்லது திருத்தி எழுதும்போதோ, நான் திருத்தி எழுதுவதில் நம்பிக்கையுள்ளவனாதலால் முடிவு தோன்றும். திருத்தி எழுதும்போது கதையின் கரு, அப்படி சொல்வது எனக்கு சற்று அசௌகரியமாகத் தோன்றுவதால் கதையின் உணர்வில் ஒவ்வொரு முறையும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

க்ளாட் க்ரிமால்: தற்பொழுது ஃப்ரான்சில் எந்தவிதமாக எழுதப்படுகிறது என்று அறிவீர்களா?

ரேமண்ட் கார்வர்: ம்ம்ம்…இல்லை. ’ தி நியூ’ நாவலுக்குப் பிறகு தெரியாது. ( அது நல்லதுதான் இல்லையா) ஃப்ரான்சில் சிறுகதைகள் பிரபலமாகவில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு வெறும் பத்து புத்தகங்கள் மட்டுமே வெளியானதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மாப்பசான் போன்ற முன்னோர்கள் இருந்த இடத்தில் என்ன நடக்கிறது!

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

டைகர்

1

வசந்த் முருகன்

நிசப்தமான அதிகாலைப் பொழுதின் அமைதியைக் கடப்பாரை, மண்வெட்டியின் சத்தம் கெடுத்தது. குழி ஆழமாக வெட்டப்பட்டிருப்பதை பார்த்து கண்களில் நீர் வைத்துக்கொண்டான் லோகு. குழிக்கு அருகேயிருந்த கோணிப்பை சாக்கில் சில ஈக்கள் மொய்ப்பதை பார்த்து கோபமானான் மாரி. 

“அயிதது போதும் பைய தள்ளுடா ஈ முக்கிது பாரு”

அழுதுகொண்டே கோணிப்பையைக் குழிக்குள் தள்ளினான் லோகு. அது புரண்டு உள்ளே விழ, கிழிந்துப் போன பையின் இடுக்குகளில் கூர்மையான நகங்கள் கொண்ட கரும் பாதங்கள் வெளிப்பட்டன.

“இந்தா புடி”

ஒரு கைப்பிடி மண்ணை வாரிக் கொடுத்தான்.

“பெ…பெ”என்று அழுதுக்கொண்டே மண்ணைக் குழியில் போட்டான். 

வெட்டிய குழி மூடப்பட்டதும் அதன் மேல் ஒரு முருங்கை மரக் கிளை நடப்பட்டது.

லோகுவின் அழுகை நின்றபாடில்லை. தன் ஆசை நாய் டைகர் இறந்ததை எண்ணி மீண்டும் அழுத்தொடங்கினான். தன் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லும் திறனற்ற அவன் தனக்குள்ளேயே வைத்து அழுகைகளால் மட்டும் அதை வெளிப்படுத்தினான். 

“எதுக்கு டா ஊமையா இன்னும் அழுவுற, உன் டைகர் செத்தாலும், வளந்து முருங்க மரமா நிக்கும், வா தண்ணி ஊத்து”

மரம் நடப்பட்டு மூடப்பட்ட குழியின் மீதும் சிறிது தண்ணீர் தெளித்தார்கள்.

பலமுறை டைகர் தன் தீராத பாசத்தால் நக்கிய இந்த கரங்களால் அதற்கு குழி வெட்டப்பட்டதை எண்ணி மாரியும் வருத்தப்படத்தான் செய்தான். ஆனால் அதனால் எப்பலனுமில்லை என்பதையும் அறிந்திருந்தான்.

கழனியைக் காவல் காக்கும் நாய்களுக்கு பல எதிரிகள் எளிதில் உருவாவது வழக்கம்தான். சில சமயம் இது போல நாய்களைக் கொன்றுவிடும் அளவிற்கு பகை முற்றிவிடும். டைகரை கொன்றவர்களைப் பற்றி மாரிக்கு எண்ணமில்லை. அது யாராக இருந்தாலும் அவர்கள் வளர்க்கும் நாய் இப்படியானால்தான் வலியை உணர முடியுமே தவிர அவர்களை கடிந்து ஒன்றுமாகப்போவதில்லை. இருந்தாலும் யார் என்று தெரிந்துகொள்வதில் அவனுக்கு சிறிய எண்ணம் ஏற்பட்டிருந்தது.

ஒரு விதத்தில் இப்படி மனிதர்கள் தங்கள் நாய்களை மாறி மாறி கொன்று போடுவது சொல்லப்படாத போட்டியாகவும் இருந்தது. பல நாய்கள் கொல்லப்பட்டாலும் டைகரின் மரணம் மர்மமாயிருந்தது. அவனுக்கு பல விரோதிகள் இருந்தாலும் பக்கத்துக்கு கழினி சாமியாரும், ஆடு மேய்க்க வரும் ரேவதியும்தான், 

“என்னிக்கினா ஒரு நாள் இத சாவடிக்கிறேன் பாரு”

என்று அடிக்கடி சொல்வார்கள்.

டைகர் நேற்று இறந்தபோது மாரி கழனியில் இல்லை. நேற்று முழுவதும் லோகுவும், மாரியின் தம்பி ஆறுமுகமும் மட்டுமே கழினிக்கு காவலாக இருந்தார்கள். 

விடியற்காலை கழனிக்கு வந்ததும் லோகு கோணிப் பையோடு அழுது கொண்டிருந்தது மட்டும் நினைவில் இருந்தது. நேற்று காலை வரை அவன் டைகரை இத்தனை தூரம் நேசிக்கவில்லை. இன்று அவன் அழுவதை பார்த்து மாரிக்கு அதிர்ச்சியில் ஒரு ஆச்சர்யம் இருந்தது. எத்தனை முறை லோகுவிடம் கேட்டாலும் அவன் தன் வழக்கமான செய்கையில் பன்றிகளுக்காக இடப்பட்டு கழனியை சுற்றியிருந்த கரண்ட்டு வேலியைக் கை காண்பித்து அழுதான்.

அவன் கரண்ட் வேலிகளுக்கு செல்லும் லைனை பல நாட்களுக்கு முன்னரே தடுத்துவிட்டான். ஒருவேளை பக்கத்து கழனி சாமியார் போட்டு வைத்திருந்த கரண்ட் வேலியில் கூட மாட்டியிருக்கவோ வேண்டுமென்றே மாட்ட வைத்திருக்கவோ வாய்ப்புள்ளதை எண்ணி சந்தேகித்தான்.

சாமியார் இரவு நேரங்களில் மாரியின் கழினியில் இறங்கி மலம் கழிப்பது வழக்கம். அன்றும் அதே போல யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு டெஸ்டர் ஒன்றை எடுத்து வேலியில் மின்சாரம் பாயவில்லை என்பதையும் உறுதி செய்தார். தன் லுங்கியை தூக்கி பிடித்து வேலியை தாண்டி குதித்தார்.

அந்த அமைதியான இரவின் அழகில் தன் கழிவை நீக்கிக்கொண்டிருந்த சாமியாருக்கு யாரோ உறும்பும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதை அலட்சியம் செய்துவிட்டு ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்தார். இரு முறை நெருப்பு பெட்டியை கிழிக்க மூன்றாவது முறை பற்றி எரிந்தது. உறும்பும் சத்தம் இன்னும் அதிகமாய் கேட்டது.

அந்த ஒளியில் தன் முகத்திற்கு முன்னே சற்று தூரம் தள்ளி உள்ள அந்தக் கொடிய உருவத்தை திடுக்கிட்டு பார்த்தார். ஒரு நாய் இத்தனை கொடூரமாக இருப்பதை அதுவரை அவர் பார்த்ததில்லை.

அதன் இரண்டு காதுகளும் அறுக்கப்பட்டு ஒரு கரடி போல் இருக்க, அதன் நாக்கு மட்டும் கழுத்து வரை நீண்டிருந்தது. அவர் மீது பாயத் தன் கால்களை எத்தனிக்க உடனே சாமியார் தெறித்து ஓடினார். சகதி மலம் என இரண்டிலும் புரண்டு வேலியைத் தாண்டி குதித்தார். அந்த நாயின் ஓலம் மட்டும் கழனி முழுக்க பரவி இரவின் தன்னியல்பை உருக்குலைத்தது. 

மாரி வைக்கோல் போரின் ஒரு பக்கம் உட்கார்ந்தவாறு கட்டளையிட்டு கொண்டே வைக்கோலுக்கு தண்ணீர் தெளித்து கோர்த்துவிட மறுபக்கம் லோகு ஒரு மூங்கில் கொம்பில் வைக்கோலை திரித்து கயிறாக்கிக் கொண்டிருந்தான். திடீரென அந்த நாய் குலைக்க அவன் பதட்டத்தில் திரித்துக் கொண்டிருந்த கயிறைக் கைவிட்டான்.

“பெ..பெ”

“தெ ஊமையா இன்னாடா வேல பாக்கற? நாய் கொலச்சா பயப்புடுவியா”

“பையன ஏன் பா திட்ற ? இந்த நாய பார்த்தா யாருக்குதான் பயம் வராது”

புதிதாய் ஒரு குரல் கேட்க மாரி திரும்பிப் பார்த்தான்.

“வா சாமியாரே”

சாமியார் மெல்ல வந்து போரின் சில வைக்கோலை இருக்கைக்கு ஏற்றுவாறு தயார் செய்து அமர்ந்தார்.

“வரம் பா…யாரு ஊட்டு நாய் இது”

“ஓ டைகர கேக்குறியா”

“இதுக்கு பேரு டைகரா”

என்று அந்த நாயை மீண்டும் ஒரு முறை பார்த்தார். இரவு பார்த்ததை விட சற்று கொடூரம் குறைந்திருந்தாலும் அதன் வால் கூட ஓட்ட நறுக்க பட்டிருப்பதை பார்த்தார். காதுகள் அறுக்க பட்டு, வாலும் வெட்டபட்டு இப்படி ஒரு நாயை மாரி ஏன் வைத்திருக்கிறான் என்பது புரியாமல் இருந்தார்.

“எங்க இருந்து பா புடிச்சாந்த”

“ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம ஆட்டுக்கார கண்ணன் மாமா கழினிக்கு வந்தாரு. அவரு ஆடு எல்லாத்தையும் வித்துடதா பொலம்பிகினு இருந்தாரு. அவருகூடதான் இந்த நாயும் வந்துச்சி. பாத்த ஒடனே நானே பயந்துட்டேன். என் மவன் ஊட்டுக்கு உள்ளயே ஓடி புட்டான்”

“அன்னிக்கு ஊட்ல பன்னி கறி கொஞ்சம் இருந்துச்சினு போட்டேன் பாரு ஆள உட்டுட்டு தூரவே நவுர்லயே துன்னுட்டு என் காலையே சுத்திகினு இருந்துச்சி அப்புறம் அவருகிட்ட இந்த நாயப்பத்தி கேட்டப்போதான் சொன்னாரு ஆடுங்க இருந்தப்போ அதுங்களுக்கு காவலா இந்த நாய்தான் இருந்துச்சாம். காட்ல இருந்து குள்ளநரி எதனா ஆடுங்கள கடிக்க வந்தாக்கூட அதையே கடிச்சி புடுமாம்.”

“சரின்னு அவரு கெளம்புனாறு நாய கூப்டு கூப்டு பாத்தாரு போவேயில்ல. அதான் ஆடுங்களாம் வித்து ஆய்டுச்சே இனிமே இதுக்கு எங்கிருந்து
தண்டத்துக்கு தீனி போட்றதுனு இங்கயே உட்டுட்டு போய்டாரு. அப்பயிருந்து கழினிய உட்டு நவுரவேயில்ல. எனக்கு இத பாத்ததும் என் பழய நாய் டைகர் நியாபகம் வந்துச்சி”

“அதான் காட்ல மலையாளத்தானுங்க யாரோ போறத பாத்து கொளச்சதுனு சுட்டுடானுங்ளே அதான” என்றார் சாமியார்.

“அதே நாய்தான் சாமியாரே! அதான் இதுக்கும் டைகர்னே பேரு வச்சிட்டேன்”

“இதான் இனிமே கழினிக்கு காவலா”

“ஆமா, கரண்ட்டு கம்பி போட்டா ரீடிங் அதிகமா ஆவுதுன்னு ஒரு வாரமா லைனே கொடுக்கறது இல்ல. இதான் நைட்டு காவலுக்கு இருக்குது”

“எதுக்கு மாரி இதெல்லாம், யாரு தீனி போடறது”

“அட நீ வேற வாரம் ஒரு முற பன்னி கறி போட்டா போதும். ஆனா தாராளமா அதுக்கு போடலாம் சாமியாரே. முன்னாடிலாம் கழினில அவன் அவன் இஷ்டத்துக்கு மாட்ட மேய உட்றதும் ஆட்ட மேய உட்றதும்னு இருப்பான் இப்போ ஒருத்தனையும் கழினில எறங்க உட்றதுயில்லையே ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஆடு மேய்க்கிற ரேவதி இருக்காளே வழக்கம்போல ஆடு நம்ம கழினில எறங்கி மேயுறத பாக்காம பெராக்கு பாத்துனு இருந்தா. நம்ம டைகர் இன்னா பண்ணுச்சி தெரியுமா?”

சாமியாரின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தன.

”ஓடி போய் பயிறு மேஞ்சிகுனு இருந்த குட்டிய ஒரே கவ்வு கவ்வுசி பாரு, அன்னிக்கு சாயுங்காலம் அந்த ஆட்ட, மூட்ட கட்டிதான் எடுத்துனு போனா. போறப்போ, என்னிகினா ஒரு நாள் இத சாவடிக்கிறேன் பாருனு பொலம்பிகினே போனா.”

சாமியார் இதைக் கேட்டவுடன் டைகரை மீண்டும் ஒரு முறை பார்த்தார்.
அது நாக்கை தொங்க போட்டவாறு அவரையே பார்த்துகொண்டிருந்தது.

“எதுக்கு பா ரெண்டு காதையும் அறத்து வெச்சிகீறாங்க?”

“கேட்டேன் சாமியாரே, இதுக்கு தொங்கு காதாம் யார்னா கூப்டா கூட திரும்பாதாம் இத எப்டி காவலுக்கு வைக்கிறது. அதான் ரெண்டு காதையும் அறுத்து போட்டாங்களாம். யார்னா பாத்தா சும்மா சும்மா வால ஆட்டுதுன்னு வாலையும் ஒட்ட வெட்டி உட்டாங்க அதான் பாக்க பேய் மாதிரி கீது” 

“சரிதான் நேத்து இந்த பேயி என்னையே கடிக்க வந்திருக்கும் பா”
என்றார் சாமியார்.

“இல்லையே கழினில எறங்கனா மட்டும்தான கடிக்கும்”

அவர் சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தார். லோகு சாமியாரை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

சாமியார் சிறிது கோபமாகி,

“இன்னாவோ பா என்னிகினா என்ன கடிக்க போவுது அன்னிக்கு இத சாவடிச்சி பூட்றேன் பாரு”

என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிவிட்டார். டைகர் சிறிது தூரம் அவரை துரத்திக்கொண்டு சென்றது.

டைகரை சாகடிப்பதாக சொன்னவர்களை சந்தேகித்தவாறு அவனைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட முருங்கை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தான் மாரி. அவன் சிந்தனையை சீண்டும் விதமாக ஆடுகள் கூட்டம் தங்கள் கழுத்தில் கட்டப்பட்ட மணிக் கூண்டுகளை ஆட்டியபடி சத்தமிட்டுக் கொண்டே வந்தது.

ரேவதி தன் ஆடுகளை வரிசைப்படுத்தி மேய்த்துக்கொண்டு வந்தாள்.

மாரி தனியாக இருப்பதை பார்த்து,

“இன்னாச்சி ண்ணா தனியா எதையோ மொறச்சி பாத்துக்குனு கீற”

என்றும் இல்லாத அளவிற்கு ரேவதியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து சந்தேகமடைந்தான் மாரி.

“டைகர் செத்துபோச்சி ரேவதி”

“இன்னா சொல்ற எப்டி ஆச்சி”

“தெரில லோகுகிட்ட கேட்டா அழுதுகுனே கீறான்”

“இன்னாவோ போண்ணா. நேத்து என்ன பொண்ணு பாக்கவந்தாங்க, ஆசையா உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன் இப்டி ஆய்போச்சி”
மாரி அவளை எண்ணி மகிழ்ந்தான்.

“பரவால்ல மா நம்ம கையில என்ன இருக்குது…அத உடு இனிமே எங்கிருந்து ஆடு மேய்கிறதுக்கு வரபோற, புருஷன மேய்க்கவே உனக்கு சரியா இருக்கும்”

ரேவதி வெட்கமடைந்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கழனியைப் பார்த்தாள். ஒரு ஆடு நெற்பயிரை மேய்வதை கண்டு,

“சாவடிச்சிறேன் பாரு உன்ன” என்று அதை துரத்திக்கொண்டு ஓடினாள். நிச்சயம் ரேவதி அதை செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவாறு சாமியாரின் கழனியை நோக்கி நடந்தான் மாரி.

பொழுது விடிய சிறிது நேரம் இருக்கும் தருணத்தில் டைகரோடு தயங்கித் தயங்கி விளையாடிக் கொண்டிருந்தான் லோகு. அவனிடம் விளையாடும் விதமாக டைகர் அவனைத் துரத்த பலமுறை பயந்து போய் கல்லை எடுத்து டைகரை அடித்துவிடுவான். அது கத்திக்கொண்டே ஓடும் ஆனால் இரவு சாப்பாட்டிற்கு மீண்டும் வந்துவிடும். இப்படி விளையாடிக்கொண்டு இருக்கையில் திடீரென இருட்டில் யாரோ வருவதைப் பார்த்து அவன் குலைக்கத் தொடங்கினான்.

“யாருனு பார்றா லோகு”என்றான் மாரி.

ஆறுமுகம் சிரித்துக்கொண்டே வந்தான்.

“அண்ணா நான்தான்….நாயப் புடிடா லோகு கடிச்சிற போது”

“அதெல்லாம் ஒன்னும் பண்ணாது வாடா…ராத்திரி டவுனுக்கு போவனும்னு சொன்ன, விடிஞ்சதுக்கு அப்றம் வர”

“ராத்திரி நம்ம ராமஜெயம் கழினில ஒரு பன்னி மாட்டிகிச்சினா அதான் போய் எடைக்கு எடை போட்டு வந்தேன்…நம்ம லைன்ல எதனா மாட்டுச்சா னா”

“லைன்லாம் போடறதில்ல டா”

“ஏன்னா”

“நம்ம டைகரே நைட்டு நல்ல காவலுக்கு இருக்குது. எதனா பன்னி வந்தா கூட தொரதிக்குனு ஓடுது அப்றம் எதுக்கு லைன் போட்டுக்குனு”

“இன்னானா பேசற ? தொர்த்தனா ஆச்சா ஊர்ல இன்னா ரேட்டு போவுது தெரியுமா கறி”

“எப்டினா போவட்டும். நைட்டு இங்கயே படுத்துக்க நான் வர நாளைக்கு காலம ஆய்டும்”

அன்று முழுக்க ஆறுமுகம்,லோகு மற்றும் டைகர் மட்டுமே இருந்தார்கள். 

சாமியார் அப்போதுதான் தன் வயல்களில் சுற்றுயிருந்த மின்சாரக் கம்பியை எடுத்து கையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.

“இன்னா சாமியாரே எல்லாத்தையும் சுத்திக்கிட்டு இருக்க”

“வா மாரி, நேத்து எங்க மாமா ராத்திரி சொல்லாம கொள்ளாம கழினில எறங்கிட்டாரு பா, செத்த நேரத்துல பயந்தே புட்டேன்”

“டக்குனு ஆப் பண்றதான”

“எங்க பண்றது போன வாரம் என்து புயுஸ் கட்டைய புடுங்கிட்டு போய்டானுங்க. சரி னு ராத்திரி ஆறுமுகம் கிட்ட கேட்டுகுனு உங்க மோட்டர் ரூம்ல இருந்துதான் லைன் கொடுத்தேன்”

“இன்னாச்சி அப்புறம்”

“அப்றம் கத்தி கத்தி கூப்டு பாத்தேன் எங்க மாமனுக்கு காதே கேக்கல நல்ல வேல அந்த நேரம் பாத்து உங்க லைன்ல எர்த் அடிச்சி ப்யூஸ் போயிடுச்சி, எங்க மாமன் தப்பிச்சான்”

“அதுக்கு ஏன் சாமியாரே லைன் எடுக்கிற”

“நம்ம லைன் போட்றதே கழினில பன்னிங்க எறங்கி பயிர நாசம் பண்ணிட கூடாதுனுதான். இதுல மனுசாலோ மத்த ஜீவனுங்களோ மாட்டி செத்தா நல்லாவா இருக்கும்”

“அதுவும் சரிதான்”

“சரி இன்னா பா காலைலே இந்த பக்கம்?”

“ஒண்ணுல சாமியாரே ப்யுஸ் போச்சில அதான் உனக்கு எதனா
தெரியுமானு கேக்க வந்தேன்…சரி நான் வரேன்” 

இரவு ப்யுஸ் போனதை பற்றி கூட சொல்லாமல் ஆறுமுகம் நடையைக் கட்டியதை எண்ணி கோபமடைந்து தன் கழனியை நோக்கி நடந்தான். சாமியார் மேல் இருந்த சந்தேகம் முழுவதுமாய் நீங்கிவிட்டது.

கழனியை நெருங்கியதும் லோகு சிரிக்கும் சத்தம் கேட்டு ஆச்சர்யப்பட்டான். அங்கே ஆறுமுகம் ஒரு அழகிய நாய்குட்டியை கையில் ஏந்தியவாறு லோகுவிற்கு காண்பித்தான். அதை அவன் ஆசையோடு வாங்கி அணைத்துக்கொண்டான்.

“பெ…பெ”

மாரி கோவத்துடன் ஆறுமுகத்தைப் பார்த்தான்.

“ப்யூஸ் போனத கூட சொல்லாம கெளம்புற அளவுக்கு தொரைக்கு இன்னா ஆட்ற வேல?”

“இல்ல ண்ணா”

“இன்னா டா இல்ல நொள்ளனு டைகர் செத்துபோச்சினாவது சொல்டு போனியா டா…கோணி பைல போட்டு இறுக்க கட்டி குடுத்துட்டு மயிராச்சேனு போய்ட”

“அப்டிலாம் ஒண்ணுல னா “

“டைகர் வந்ததுல இருந்து லைன் போடறது இல்ல அதனால உனக்கு பன்னி கெடைக்கறது இல்ல. அதனால அத சாவடிச்சிட்டா லைன் போட்டுதான ஆவனும்னு நீயே கொன்னுட்ட, இப்போ புது நாய் குட்டிய எடுத்துனு வந்து நாடகம் போடுறியா? ”

மாரி கோபமாகி அருகே இருந்த கட்டையை எடுத்து அவனை அடிக்க சென்றான்.

“மன்னிச்சிக்கண்ணா சொல்லாம போனது என் தப்புதான். ஆனா சத்தியமா நான் டைகர சாவடிக்கிலண்ணா. ராத்திரி சாமியார் வந்து லைன் போட்டுகட்டுமானு கேட்டாரு, சரி போட்டுக்கனு சொன்ன. அந்த ஆளு லைன் போட்டு பன்னி மாட்டுச்சினா எப்டியும் கொடுக்க மாட்டான் சரி இன்னிக்கு ராத்திரி மட்டும் நம்ம கழினில போடுவோமேனு வேலிக்கு லைன் போட்டு உட்டுட்டு, வேக்காடா கீதேனு கெணத்துல எறங்கி குளிச்சேன்.
குளிச்சிட்டு சட்டைய மட்டும் தொவச்சி காய போட எடம் இல்லன்னு நம்ம கெனத்துக்கு போற லைன்ல சட்டைய காய போடப் போனேன் பின்னாடியே டைகர் வந்து கொலச்சது, சரி புது ஆளா இருக்கவே காலைல இருந்து நம்மள பாத்து கொலைக்குதுனு விட்டுடேன் கொஞ்ச நேரத்துல மேலப் பாய வந்துசினு நவுந்தேன் போய் சட்ட காய போட போன கம்பில வாய் வெச்சிச்சு”

ஆறுமுகம் சிறிது எச்சிலை முழுங்கினான்.

“கம்பிய கடிச்சதும் அப்டியே சுருண்டு விழுந்துச்சிண்ணா, அப்றம்தான் தெரிஞ்சிது அந்த கம்பி பூரா கரண்ட் பாஸாயி கீதுனு. அப்டியே கரண்ட் ஆப் ஆகி ப்யுஸ் போய்டுச்சிண்ணா”

மாரி அவனைத் தொட்டு அணைத்தான்.

“உனக்கு ஒன்னும் ஆவல இல்ல”

“எனக்கு ஒன்னும் இல்லண்ணா, லோகுதான் அழுதுனே இருந்தான்.
எனக்கு மனசே கேக்கல, இன்னடா இது போற அப்போ கூட நம்ம உசுரக் காப்பாத்திட்டு போய்டுச்சேனு, அதான் லோகுக்கு ஒரு நாய் குட்டி புடிச்சார்லாம்னு காலையிலே சொல்லாம கெளம்பி போய்டேன்ண்ணா” 

“பரவால்ல உட்றா”

அங்கே லோகு அந்த நாய்க்குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

“ஊமையா இதுக்கு இன்னாடா பேரு வைக்கிலாம்”

அவன் சிரித்துக்கொண்டே தன் இரு கைகளையும் சுருக்கி காண்பித்து உறுமினான்! 

***

வசந்த் முருகன் – திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருகிறார். திரைத்துறையில் பணிபுரிகிறார். சைக்கிள் மூர்த்தி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் : vasanthmurugan1973@gmail.com

சச்சின் கவிதைகள்

0

பதின்மூன்றாம் காதல் தோல்வி

என்னை நேசி என்று சொல்ல அவ்வளவு ஆயாசமாக இருக்கிறது
அவள் நேசிக்கவில்லை என்று உள்ளுணர்வுக்குத் தெரியும்
ஆனாலும் உள்ளம் விடுவதாய்த் தெரியவில்லை
மசமசவெனப் பெய்யும் இந்த மழையிரவில் எதுவும் அத்தனை அமைதியாக இல்லை
முன்னால் முந்திச் செல்லும் எண்ணங்களை முடிந்தவரை பிடித்திழுக்கிறது விழிப்பு
பின்னால் செல்வதையோ தானென்று அறியா மாயக் கணமொன்றில்  தவறவிட்டும் விடுகிறது
அவளும் அப்படித்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் என்னைக் கைவிட்டுக் கைவிட்டு குறிப்புணர்த்துணர்த்துகிறாள்
தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்பமுடியுமோ
அவள்
அவ்வளவு சந்திரோதயமா என்றால் இல்லை
அவ்வளவு மாந்தளிர்க்கொழுந்தா என்றால் இல்லை
அவ்வளவு குணச்சித்திரமா என்றால் இல்லை
அவ்வளவு தாழம்பூச்சுகந்தமா என்றால் இல்லை
அப்படியோர் கோமேதகக்கல்லா என்றால் இல்லை
அவ்வளவு கணக்கச்சிதமா என்றால்  இல்லவே இல்லை
ஏதோ
ஏதோவொரு சுழிப்புதான் இப்படி மாமாங்கமாய் அலைக்கழிக்கிறது
அது எந்த கணத்தில் தோன்றி எந்த கணத்தில் மறைந்ததென்று சற்றும் நினைவில்லில்லாத  ஒரு  நட்சத்திரப் பொன்கீற்று
ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது
எந்தத்தடயமும் இல்லாமல் இப்படித்தான் தோன்றி மறைகிறதோ அவ்- இறையம்சம். 

*

பதினான்காம் காதல் தோல்வி 

நண்பனின் காதலுக்கு துரோகம் செய்வது புவியில் ஒன்றும் புதிதில்லைதான்
அதற்கு அம்மங்கையும்தானே உடந்தை
உங்களிடம் பிடித்ததே உங்கள் நகைச்சுவை உணர்வுதான் என்று அவள் சொன்னபோது எனக்குப் புரியவில்லை
ஆனாலும் உள்ளார்ந்து ஒரு நப்பாசை இருந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஒரு உணர்ச்சியற்ற கவிதையைப் பகிர்ந்தபோது அதற்கு முத்தக்குறியிட்ட ஸ்மைலி அனுப்பிவிட்டு நான் பார்க்கும்வகையில் போதிய அவகாசம் அளித்து பின் அவள் அதை அழித்தபோதுதான் அது உறுதியானது
கதகதப்பான வெயிலில் துரோகத்தின் நிழல் நெஞ்சில் படர ஆரம்பித்தது
இனங்கான முடியாத நெஞ்சுக்குழித்துடிப்பு (அதற்கு தேவையற்ற அமிலச்சுரப்பே காரணம் என்ற திருநின்றவூர் ஹோமியோபதி மருத்துவரின் கூற்றால் தற்காலிக நிம்மதி)
இப்படியாக வளர்ந்து வளர்ந்து காதல் மிகைக்கற்பனைக்குச் செல்லும் வழியில் ஒரு சிறிய வேகத்தடை
அவளுக்கு ஏன் குற்ற உணர்வே இல்லை என்ற ஆதாரமற்ற கேள்வி
(இந்தக் கேள்வி கடைசிவரை அடங்கவே இல்லை)
உங்கள் காதலில் நிலை என்ன என நண்பனிடம் வினவினேன் 
உயிருள்ளவரை உஷா என்றானவன்
ஏசு உயித்தெழுந்த மூன்றாம் நாள் அவள் நாக்கைப் பிடுங்கியெறியும்படி நானூறு கேள்விகள் கேட்டாள்(அத்தனையும் நியாயம்)
மண்ணை முட்டி ஆதவனைப் பார்க்க மெல்ல எழுந்த ஒரு நிலக்கடலைக் கொழுந்தை முளையிலேயே கிள்ளி எறிந்தேன்
இப்படியாக ஒரு கார்த்திகைத்திங்கள் மதியம் இளவெயிலில் ஒரு முக்கோணக்காதல் வேர் தூராகிப்போனது.

*

பதினான்காம் காதல் தோல்வி – 2

உங்களைப் பார்த்தால் ஒரு ப்ரதர் ஃபீலிங் வருது என்றாள் அவள்
அப்போது அவள் என் நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள்
எனக்கும் சிஸ்டர் ஃபீலிங் வர்ற மாதிரிதான் இருக்கு 
பற்கள் தெரியாமல் சிரித்தபடி வயிறெரிந்து சொன்னேன்
எங்க ஆஃபீஸ் பாஸ் உங்கள மாதிரியேதான் இருப்பாரு அவர்ட்டயும் இதேதான் சொல்வேன் என்று சொன்னாள்
அவர் நேம் என்ன
குசால்தாஸ்
”ஓ”  
நண்பனின் நற்குணங்களை நான் நன்றாக அறிவேனென்பதால்
பழம் நழுவி தயிரில் விழும் நாளுக்காகக் காத்திருந்தேன்
மாறாக 
தயிர் திரிந்தது
பழம் நழுவியது 
ஏசு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள்
நானும் நண்பனும் அதிர்ச்சியடையும் வகையில் 
மேரீட் டூ குசால்தாஸ் என்று ஸ்டேடசை மாற்றி வைத்தாள். 

*
கடைசிக்கு முந்தைய காதல் தோல்வி

எஸ்விசி னாக்கூட என்னவென்று தெரியாதா ஜி எனக்கேட்டுவிட்டு  சிரித்தாள்
அவள் மனம்விட்டு சிரிப்பது மொபைலில்  தெரிந்தது
தெரியாதே என்று முயற்சிகளற்று புன்னகைத்தபடி சொன்னேன்
எஸ்விசினா சுங்குவார் சத்திரம் அங்கிருந்துதான் பேசுறேன் ஜி என்று சொல்லி விட்டு மீண்டும் பலமாக சிரித்தாள் (இதைக் கேட்டது ஒரு ஆணாக இருந்தால் செருப்பைக்கழற்றி அடித்திருப்பேன்)
சிரித்து முடித்துவிட்டு என் நம்பர் எப்படிக்கிடைத்தது உண்மைய சொல்லுங்க ஜி என்று கேட்டாள்
கடைசி ஒருநம்பர் தப்பா போட்டுட்டேன் சாரி இனி பேச மாட்டேன் என்றேன்
உங்க வாய்ஸ் ரொம்ப மேன்லியா இருக்கு ஜி 
நீங்க எந்த ஊர் ஜி 
சுங்குவார்சத்திரம் சென்னைலேர்ந்து பக்கம்தானே ஜி 
உங்களப்பார்க்கணும்போல இருக்கு ஜி
எப்போ வர்றீங்க ஜி 
ஐப்பசி மாத மந்தாரமான காலநிலையை மாற்றி அமைத்தாள்
நான்கு இரவுப்பொழுதுகளும் நான்கு பகல்பொழுதுகளும் காலத்தில் உறைந்தது 
அவளைசென்று நேரில் பார்த்துவிடுவது என்ற தீர்க்கமான எண்ணம் எழுந்தது
அடுத்த அழைப்பில் உங்களுக்கு எத்தன வயசு ஜி என்றாள்
முப்பத்து நாளு என்றேன்
பெண்கள்ட்ட வயசு கேட்ககூடாது என்று நான் தயக்கத்திலும் மயக்கத்திலும் உளறிக்கொண்டிருக்கும்போது சட்டென்று எனக்கு ஃபோர்டீன் ஜி வயசுக்குக்கூட வந்துட்டேன் என்றாள்
பதட்டத்தில் மொபைலை ஆஃப் செய்தேன். 

வீட்டிற்கு வெளியே வந்து நிதானமாக நின்றேன்
மயக்கத்திலிருந்து மூளை விழித்தது
மழை. 
மழையுடன் மழையாகக் கரைந்தேன் 
மெல்ல எனக்குள் குளிர் பரவியது.  
நனைந்து நனைந்து சமநிலையை அடைந்தேன்
முற்றத்தில் கட்டியிருந்த தேன்குழவிகள் என்னைத்துரத்த ஆரம்பித்தன.
குற்றவுணர்வின் கொடுக்களால் நிறைந்தேன் நான். 

***  

சச்சின் – புதுக்கோட்டையை சேர்ந்தவர். திரைத்துறையில் பணியாற்றுகிறார். சென்னையில் வசிக்கிறார். கவிதைகள், சிறுகதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார் எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் : sivamegalaivan@gmail.com

க.நா.சு. தியாகியா?

0

ஶ்ரீநிவாச கோபாலன்

ணிக்கொடி’ என்ற ‘அல்பாயுசுப் பத்திரிகை’யில் அமர இலக்கியம் படைத்த தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் பலருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பெரிய அளவுக்கு ஈடுபாடு இல்லை, அவர்களது எழுத்திலும் அந்தக் காலத்துப் போராட்டங்களின் சுவடுகள் தென்படுவதில்லை என்று சொல்வதுண்டு. இதுபற்றி க.நா.சு.விடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

‘மணிக்கொடி’ சுதந்திரப் போராட்டம் உக்கிரமான நிலையிலிருந்தபோது வெளிவந்திருக்கிறது. ஆனால் அரசியல் கலக்காத, சுதந்திரப் போராட்டம் பற்றிய பிரக்ஞை இல்லாத கதைகள் நிறைய வந்ததற்குக் காரணம்…’

இக்கேள்விக்குக் க.நா.சு. அளித்த பதில்:

‘மணிக்கொடி’யில் எழுதியவர்களிடம் ஒரு மனப்பான்மை இருந்தது. அதாவது மாறக்கூடிய சங்கதிகளை எழுதாமல், மாறாத அம்சங்களைக் கதைப் பொருளாக்குவது என்பது அது. இந்த அடிப்படையில்தான் சுதந்திரப் போராட்டம்கூட கருப்பொருளாகாமல் போய்விட்டது.’

எழுத்தில் சுதந்திரப் போராட்டத்தின் சுவடுகள் தென்படவில்லை என்றாலும், ‘மணிக்கொடி’யைத் தோற்றுவித்த மூம்மூர்த்திகள் டி. எஸ். சொக்கலிங்கம், வ. ராமசாமி, கு. சீனிவாசன் ஒவ்வொருவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றினர்; சிறைக்கும் சென்றனர். டி. எஸ். சொக்கலிங்கம் சட்டமறுப்பு இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம் முதலிய போராட்டங்களில் இணைந்ததன் மூலமும் ‘காந்தி’ பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளுக்காகவும் சிறை சென்றிருக்கிறார். வ.ரா.வும் வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உவக்காத காங்கிரஸ் இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் கட்டுரைகளை எழுதியதற்காக கு. சீனிவாசனும் சிறைவாசம் அனுபவித்தார்.

சிறுகதை ‘மணிக்கொடி’யை நடத்திய பி. எஸ். ராமையாவும் அவரது ஆராதகரான சி. சு. செல்லப்பாவும் சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டவர்கள். ராமையா வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் படையில் இணைந்து சிறைவாசியானார். சிறைநீங்கிய பிறகும் சுதேசி இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். சி. சு. செல்லப்பா கல்லூரி மாணவராக இருந்தபோது உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்து சிறை சென்றதால், படிப்பைத் தொடரமுடியாமல் போனது. ந. சிதம்பரசுப்பிரமணியன் தாய் சொல்லைத் தட்டாமல் இருப்பதற்காக, சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ளும் ஆசையைத் தொலைத்தார். ஆனால், ‘மண்ணில் தெரியுது வானம்’ நாவலில் காந்திய யுகத்தில் தான் அனுபவித்ததையும் கண்டதையும் காட்ட முயன்றிருக்கிறார்.

‘மணிக்கொடி’ கோஷ்டியின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டைப் பற்றி விளக்கம் சொன்ன க.நா.சு., தானும் சுதந்திரப் ‘போராட்டத்தில் ஈடுபடாமல்’ சிறை சென்ற சங்கதியைச் சொல்கிறார்.

‘எங்களில் யாருக்கும் தீவிர அரசியல் ஈடுபாடு கிடையாது. பி. எஸ். ராமையா ஒருத்தர்தான் காங்கிரஸ் கட்சியில் மெம்பர். ஆனால் எல்லோரும் காந்தி கட்சிதான்.

பி. எஸ். ராமையா சிறைக்குப் போனவர். சி. சு. செல்லப்பாவும் இரண்டு தடவை சிறை சென்றவர்தான். நான்கூட சிறைக்குப் போனவன்தான். ஆனால் போராட்டத்தில் ஈடுபடாமல் போனேன்.’

போராட்டத்தில் ஈடுபடாமல் சிறை சென்றது எப்படி? 1942ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லும் போராட்டம் தலையெடுத்தபோது, அதனுடன் ஏற்பட்ட தொடர்புதான் க.நா.சு. சிறை செல்லக் காரணம்.

‘1942ல் Quit India movement பிரசுரம் டைப் செய்து தரும்படி எனக்கு ஒரு கடிதம் ‘தினமணி’யிலிருந்து வந்தது. அப்பொழுது ‘தினமணி’யில் எழுதிக்கொண்டிருந்தேன். நண்பரின் வேண்டுகோளுக்காக டைப் செய்து கொடுத்தேன். பிரசுரம் கைப்பற்றப்பட்டபோது என்னுடைய விலாசமும் அகப்படவே என்னையும் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’

டி. எஸ். சொக்கலிங்கம் ‘தினசரி’ ஆசிரியராக இருந்தபோது 1932-ல் சட்டமறுப்பு இயக்க அறிக்கையை வெளியிட்டு, அதற்காக சிறை சென்றவர். 1942-ல் ‘தினமணி’ ஆசிரியராக இருந்தவரும் டி. எஸ். சொக்கலிங்கம்தான். க.நா.சு.விடம் துண்டுபிரசுரம் தயாரித்துத் தரும்படி கேட்டு கடிதம் எழுதியது அவராக இருக்கலாம்.

க.நா.சு.வின் இந்தச் சிறைவாசத்தைப் பற்றி க.நா.சு.வின் துணைவியார் ராஜி சுப்ரமணியமும் குறிப்பிட்டிருக்கிறார்.

…காங்கிரஸ் கட்சியில் இவர் சார்பாளர் என்று 1943-களின் கடைசியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ரகசியப் போலீஸ் வந்து வீட்டில் புத்தகங்களைக் குடைந்து இவரை அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்தபோது, “தியாகி அல்ல நான்” என்று மறுத்து ஒதுங்கி, ஜாமீன் கொடுத்து வெளியே வந்து விலகியது,…

தஞ்சை ப்ரகாஷுக்கு அளித்த நேர்காணலில் ராஜி சுப்ரமணியம் இவ்வாறு கூறுகிறார். இதில், ‘1943-களின் கடைசியில்’ என்பது ‘1942-ன் கடைசியில்’ என்று இருந்திருக்க வேண்டும். 1942ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி க.நா.சு. கைதுசெய்யப்பட்டார். இதனை அறிவிக்கும் செய்தித் துணுக்கு ஒன்று அன்றைய நாளேட்டில் வெளியாகியுள்ளது.

CHIDAMRABAM, Jan. 4.

The local Sub-Divisional Magistrate framed charges today under Sections 39 (1) B read with 39 (b) of the Defence Rules against Mr. K. N. Subramaniam, journalist, who was arrested on December 13 for alleged possession of objectionable literature. The accused pleaded not guilty. The case is posted to January 11 for further hearing.

– The Indian Express, 5 Jan 1943, pp. 2

க.நா.சு.வின் சிறைவாசம் எத்தனை காலம் நீடித்தது என்று தெரியவில்லை. க.நா.சு. அதைக் குறிப்பிடவில்லை. பிணையில் வெளிவந்துவிட்டதாக ராஜி சுப்ரமணியத்தின் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. துண்டுபிரசுரத்துக்காகக் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, வேறு காரணங்களுக்காக காவல்துறை க.நா.சு.வின் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறது.

1942-இல் ‘கல்கி’ பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு க.நா.சு. நடுவராக இருந்தார். இந்தப் போட்டிக்கு ஏராளமான கதைகள் வந்து ‘கல்கி’ காரியாலயத்தில் குவிந்தன. அவை பெரிய மூட்டையாக க.நா.சு.வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மூட்டையைச் சுமந்துகொண்டு, மெட்ராசிலிருந்து ரயிலில் புறப்பட்டார் கல்கியின் தூதர் பகீரதன். நடுநிசியில் சிதம்பரத்துக்கு வந்தவர் க.நா.சு. வீட்டுக் கதவைத் தட்டி, கொண்டுவந்த கதை மூட்டையைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த காகித மூட்டையின் போக்குவரத்தை சிதம்பரத்துக் காவலர்கள் வேவுபார்த்து வந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏதோ சதித்திட்டம் தீட்டப்படுகிறது எனச் சந்தேகித்து, க.நா.சு.வின் வீட்டை மீண்டும் சோதனையிட வந்துதார்கள். க.நா.சு. அவர்களிடம் மூட்டையைப் பிரித்துக் காட்ட, வந்தவர்கள் ஏமாந்து திரும்பினார்கள்.

இதைப் போன்ற போலீஸ் சோதனை பற்றி தனது ‘சோதனை’ என்ற சிறுகதையில் க.நா.சு. எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இரண்டு நண்பர்கள் தாங்கள் பார்த்த போலீஸ் சோதனைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கதையில் வரும் சம்பவமும் 1942 கடைசியில் ஒரு நள்ளிரவு நேரத்தில் நடக்கிறது. போலீஸ் சோதனையிட்டபோது சில புத்தகங்கள் அகப்படுகின்றன. அவை ‘காதற்கதை – இத்தாலி’, ‘காளி – ஜெர்மனி’ எனக் கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள். ஜெர்மனி, இத்தாலி என்று பெயர் போட்ட புத்தகங்களைப் பார்த்த போலீஸ்காரர்கள், இதில் என்னென்ன இருக்கும் என்று மணிக்கணக்காக விவாதிக்கிறார்கள். ‘மூன்று மணி சுமாருக்கு அந்தப் புஸ்தகங்களில் ரகசிய பாஷை, சங்கேதங்கள், விரோதி தேசங்களுக்குச் சாதகமான தகவல்கள், காங்கிரஸ் அநுதாப இலக்கியம்- எதுவும் இல்லை’ என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

கதையில் இந்தச் சம்பவத்தை விவரிப்பவர் க.நா.சு.தான். ‘காதற்கதை’, ‘காளி’ இரண்டும் க.நா.சு. மொழிபெயர்த்த நூல்கள். அ. கி. ஜயராமனின் ஜோதி நிலையம் வெளியிட்ட ‘சர்வதேசக் கதை மலர்’ வரிசையில் 1944ஆம் ஆண்டு வெளியானவை.

இந்தப் போலீஸ் சோதனைக் கதை இடம்பெறும் ‘ஆடரங்கு’ (1955) என்ற சிறுகதைத் தொகுப்பை கதைகளில் வருகிற தன் நண்பர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். கதைகளில் வரும் உண்மை மனிதர்களுடன் தானும் கலந்து இந்தக் கதையைக் கூறியிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாத க.நா.சு., போராட்ட எழுச்சியைப் பரப்புவதற்கு துண்டுப்பிரசுரம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். காலத்தினால் செய்த இவ்வுதவிக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைச் சிறையில் வைத்துள்ளது.

கைதாகி சிறையில் வைக்கப்பட்டபோது, “தியாகி அல்ல நான்” என்று மறுத்துக் கூறினார் என்ற செய்தி முக்கியமானது. சிறிய உதவியைச் செய்து சிறை சென்றது பற்றி க.நா.சு. வருத்தமோ பெருமிதமோ கொள்ளவில்லை. தன்னையும் ‘தியாகி’ என்று சொல்லி ஆதாயம் தேடவும் முயலவில்லை.

போலீஸ் சோதனையும் குறுகியகால சிறைவாசமும் க.நா.சு.வின் வாழ்க்கையில் சுவையான பகுதிகளில் ஒன்றை நமக்குக் காட்டுகின்றன. அவர் எழுதி அச்சேறாத சுயசரிதையில் இதைப்போல இன்னும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கக்கூடும்.

*

பயன்பட்ட நூல்கள் / இதழ்கள்:

The Indian Express, 5 Jan 1943, pp. 2

ஆடரங்கு, க. நா. சுப்ரமண்யம், கலைமகள் காரியாலயம், மே 1955

‘அன்னம் விடு தூது’வில் ‘கிரியேடிவ்’வாக எதுவும் இல்லை’, க.நா.சு நேர்காணல், அன்னம் விடு தூது, மே-ஜூன்-ஜூலை 1985, பக். 18-21

இலக்கியச் சாதனையாளர்கள், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர் 1985

ராஜி சுப்ரமணியம் நேர்காணல், புதிய பார்வை 1995 (?)

***

ஸ்ரீநிவாச கோபாலன்:1994இல் பிறந்தார். திருநெல்வேலியில் வசிக்கிறார். பதிப்பாளர், பத்திரிகையாளர். க.நா.சு.வின் நூல்வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நாரத ராமாயணம்’ (2021), ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ (2022), ‘The Birth of a Poet’ (2024), ‘The Fall’ (2024), ‘சிரமமான காரியம்’ (2024), ‘என்ன ஆனந்தம்’ (2025), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (2025) முதலிய நூல்களின் தொகுப்பாசிரியர் / பதிப்பாசிரியர். ‘புதுதில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987’ (2025) என்ற குறுநூலையும் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : sharetosrini@gmail.com