Home Blog Page 15

அவர்கள் அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்

0

(பாலஸ்தீனத்தின் அழிவுக்கெதிரான வரலாற்றுக் குரல்கள்) 

ஆர். பாலகிருஷ்ணன் 

டந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான பாலஸ்தீனத்தின் வரலாறு என்பது அதன் மீது ஏவி விடப்பட்ட இன அழிப்பின் வரலாறு மட்டுமே. பல்போர் பிரகடனம் செயல் படுத்தப்பட்ட நிலையில் (1917), குடியேற்றக் காலனியம் அங்கு துவங்கிய பின் தொடர்ச்சியான வன்முறைகள் பாலஸ்தீனர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ளன. கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் . ஊடகப் பணியாளர்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டுள்ளனர். சியோனிசப் பயங்கரவாதிகளால் பெரிய கட்டுமானங்கள் அவற்றுள் வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் பொது இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது குறித்து நன்கு அறிந்த அப்போதைய அரசியல் ஆளுமைகள், சிந்தனையாளர்கள், பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதில், மால்கம் எக்ஸ், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டோனி மாரிசன், நெல்சன் மண்டேலா, அருந்ததி ராய் இப்படிப்பட்ட ஆளுமைகளின் பட்டியல் மிக நீளம். இன்றைய மேற்கத்திய மற்றும் ஹாலிவுட் திரைப் படைப்பாளிகள், கலைஞர்களில் பெரும்பாலானோர் சேவியர் பர்த்தேம், ஜோகுயின் ஃபோனிக்ஸ், சூசன் சரண்டன், மார்க் டேவிஸ், மார்க் ரஃப்பாலோ, கேட் பிளான்செட், பென் ஆப்ஃலெக், கிலி மினாக் போல் பலர் பாலஸ்தீன ஆதரவுக் குரலை ஒலித்து வருபவர்களே. 

ஹிந்த் ரஜாப் என்ற பாலஸ்தீனச் சிறுமி ஐ டி எப் வீரர்களால் கொல்லப்பட்டதை விளக்கும் ஆவணப் படம் வெனிஸ் மற்றும் டொரோண்டோ திரைப்பட விழாக்களில் (2025)திரையிடப்பட்டது. இக்குரல்கள் மானுட அழிவை, இன அழிப்பை உடனடியாக நிறுத்தச் சொல்லும் அடிப்படை மனிதாபிமானம் சார்ந்தன என்றாலும் அரசியலுணர்வோடு எழுப்பப்பட்ட குரல்கள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலஸ்தீனச் சிறுமி ரஜாபை, அவர் தன்னுடைய பெற்றோருடன் அழிக்கப் பட்டத்தை ஆய்வு செய்து கடந்த வாரம் (September 2025) அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவக் குற்றவாளிகள் அம்பலப்பட்டுள்ளனர். 

மஹாத்மா காந்தியின், ’’எவ்வாறு பிரிட்டன் ஆங்கிலேயருக்குச் சொந்தமோ, பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமோ அவ்வாறு பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தம்’’என்ற கருத்து மிகவும் புகழ் வாய்ந்தது. 

போலவே, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பான பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது . இது ஜனவரி 31, 1970 தேதியிட்ட ஒரு கடித வடிவில் உள்ளது. மற்றும் ரஸ்ஸலின் மரணத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 3 அன்று கெய்ரோவில் நடந்த சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் அவருடைய இந்தக் கடிதம் வாசிக்கப்பட்டது. 

அதன் சாராம்சம்:

‘’மத்தியக் கிழக்கில் அறிவிக்கப்படாத ஒரு போர் நடந்து வருகிறது. அதன் இன்றைய நிலை வரலாற்றுத் தவறு ஒன்று நிகழ்ந்து வருவதற்கான உதாரணமாக உள்ளது. எகிப்து உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குண்டுவீச்சு மக்களின் உணர்வுகளைப் பயமுறுத்தி அடக்கிட இயலாது. மாறாக அவர்கள் வெகுண்டு ஆவேசமாக எதிர்ப்பார்கள். ஏற்கனவே வியட்நாமில் அமெரிக்காவுக்குக் கிடைத்த பாடம் இங்கும் கிடைக்கலாம். ’’ 

Bertrand Russel

ரஸ்ஸலின் சொற்களில் இவ்வாறாக இது உள்ளது:

”பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடுமையான குண்டுவீச்சைத் தாங்கிய வியட்நாமியர்கள் சரணடைவதன் மூலம் அல்ல, மாறாக அதிகமான எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதன் மூலம் பதிலளித்துள்ளனர். 1940 இல் எனது சொந்த நாட்டு மக்கள் ஹிட்லரின் குண்டுவீச்சுத் தாக்குதல்களை முன்னோடியில்லாத ஒற்றுமை மற்றும் உறுதியுடன் எதிர்த்தனர். இந்தக் காரணத்திற்காக, தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல்கள் அவற்றின் சரியான நோக்கத்தில் தோல்வியடையும், ஆனால் அதே நேரத்தில் அவை உலகம் முழுவதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ”

மேலும் கூறுகையில் அவர், இஸ்ரேல், மத்தியக் கிழக்கில் உருவாக்கி வரும் நெருக்கடியின் வளர்ச்சி ஆபத்தானது என்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் ஆயுத பலத்தால் விரிவடைந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இதற்கு ஏகாதிபத்தியங்களின் தூண்டுதல் காரணம் என்றும் அவர் உறுதி படக் கூறுகிறார். பேச்சு வார்த்தைகளில் இஸ்ரேல் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார். அடையும் வெற்றிகள், ஏகாதிபத்தியங்கள், அவற்றால் துணை நிற்கும் இஸ்ரேல் ஆகியவற்றை வலுப்படுத்துகின்றன. இதனால் பேச்சு வார்த்தையில் அவர்கள் மேலாதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டு அதிகார வரம்பை நீட்டிக்கின்றனர் . 

”இது முந்தைய ஆக்கிரமிப்பின் அநீதிகரமான செயலைப் புறக்கணிக்கிறது. இஸ்ரேல் செய்த ஆக்கிரமிப்பு கண்டிக்கப்பட வேண்டும், ஏனெனில் எந்தவொரு அரசுக்கும் அந்நிய நாட்டின் வெளியை இணைக்க உரிமை இல்லை, ஆனால் ஒவ்வொரு விரிவாக்கமும் உலகம் எவ்வளவு அதிகமாக ஆக்கிரமிப்பைப் பொறுத்துக்கொள்ளும் என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையாகும். ”

”பாலஸ்தீன மக்களின் சோகம் என்னவென்றால், அவர்களின் நாடு, ஒரு வெளிநாட்டு சக்தியால் (UK) முற்றிலும் மாறுபட்ட மக்களுக்கு ஒரு புதிய அரசை உருவாக்குவதற்காக ‘வழங்கப்பட்டது’(வாரிக் கொடுக்கப்பட்டது). இதன் விளைவாக, பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நிரந்தரமாக வீடற்றவர்களாக மாற்றப்பட்டனர்’’ என்று அவர் யதார்த்தமான நிலையைக் குறிப்பிடுகிறார். 

பாலஸ்தீனர்களின் தாயக ஏக்கம், அவர்கள் திரும்பி வரும் உரிமை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். நாசிகளால் இஸ்ரேலியர் துன்புறுத்தப் பட்டுள்ளனர். அது கவனத்துக்கு உரியது என்றாலும் அவர்கள் அதே அநீதியைப் பாலஸ்தீனர்களுக்கு இழைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார். கணிதம், தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றில் நுண் புலமையும் ஆதிக்கத்துக்கு எதிரான தன் குரலை எப்போதும் பதிவு செய்பவருமான ரஸ்ஸலின் இந்தக் கருத்து சிறப்பு வாய்ந்தது. இறுதியாக 1967 ஆம் ஆண்டு முன் மொழியப்பட்ட ஐ நா முன்னிலை பெற்ற அமைதித் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு அமைதி காண இஸ்ரேலை, ரஸ்ஸல் வலியுறுத்துகிறார். 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்த தனது இறுதி அறிக்கையை பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு பத்திரிகையிலோ அல்லது செய்தித்தாளிலோ எதிலும் வெளியிடவில்லை. அவர் இந்த உரையை ஜனவரி 31, 1970 அன்று, இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதினார், மேலும் அது பிப்ரவரி 3, 1970 அன்று கெய்ரோவில் நடந்த சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் வலுத்த குரலில் வாசிக்கப்பட்டது. 

”ஈஜிப்ஸியன் கெஜெட்” ஏட்டில் செப்டம்பர் 17, 1964 ஆம் ஆண்டு மால்கம் எக்ஸ் எழுதிய ஜியோனிஸம் பற்றிய கருத்து பெரிதும் வாசிக்கப் பட்ட ஒன்று. அவர் காசா பகுதிக்கு நேரில் சென்று வந்த பின்பு எழுதப்பட்ட இந்த உரை அவரது நேரடி அனுபவம். அது இஸ்ரேலிய ஜியோனிஸப் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இவ்வுரை நமக்கு 1964 ஆம் ஆண்டில் கான் யூனிஸ் அகதி முகாமுக்கு அவர் சென்று வந்த பின் எழுதப்பட்டது என்பதால் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இன்று பார்க்கும் போதும், குறிப்பாக 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அது காசாவைத் திறந்த வெளிச் சிறைச் சாலையாக ஆக்கி விட்ட பின்னும் மால்கம் எக்சின் சொற்கள் எவ்வளவு தொலை நோக்குக் கொண்டவை என்பதை விளக்குகின்றன . 

“இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் தங்கள் புதிய வகைக் காலனித்துவத்தை யாரும் அறியாமல் வெற்றிகரமாக மறைத்துவிட்டதாக உறுதியாக நம்புகிறார்கள் ; (இஸ்ரேல் அந்நாள்களில் சில மீட்பு நடவடிக்கைள் மேற்கொன்டு வந்தது. ஆனால் அவை நேர்மறையானவை அல்ல, என்று மால்கம் எக்ஸ் கருதுகிறார்). அவர்களின் காலனித்துவம் மிகவும் “கருணை மிக்கது”, என்று தோன்றுகிறது, இந்த வகையில் அவர்கள் தங்களால் இயன்ற அளவு, தங்கள் நட்புரீதியான பொருளாதார “உதவி” மற்றும் பிற கவர்ச்சிகரமான பரிசுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் ஆட்சி செய்ய விரும்புகிறார்கள், அவர்கள் புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளின் முன் தங்கள் பொது நல நடவடிக்கைளை அழகுபடுத்தித் தொங்க விடுகின்றனர். உண்மையில் அந்த நாடுகளின் பொருளாதாரம் கடினமான சூழ்நிலைகளை அனுபவிக்கின்றது. மேலும், இந்தப் புதிய வகை சியோனிச காலனித்துவம் வடிவம் மற்றும் முறையில் மட்டுமே வேறுபடுகிறது, ஆனால் ஒருபோதும் நோக்கத்திலோ அல்லது குறிக்கோளிலோ வேறுபடுவதில்லை. ”

Toni Morrison

டோனி மோரிசன், ஜிலாட் சாலிட் என்ற இஸ்ரேலிய வீரர் ஹமாஸால் கடத்தப் பட்டபோது (நான்காண்டுகள் வரை அவர் கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது)அதனைப் பெரிதுபடுத்தாமல் இஸ்ரேல் மேற்குக் கரையைக் கைப்பற்றி விரிவு படுத்திக் கொண்டிருந்ததையும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் வாடுவது பற்றியும் அவர் எழுதினார்—18 எழுத்தாளர்களுடன் இணைந்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெருசேலம் போஸ்ட் ஏட்டில் இது, இவர் ஒரு இனவாத ஆதரவாளர் என்று விமர்சிக்கப் பட்டது. அதாவது யூதர்களுக்கு எதிரான உரையாடலை இனவாத எதிர்ப்பாளரான மோரிசன் முன் வைக்கிறார் என்று!

ஜெருசலேம் போஸ்ட் ஏடு, மோரிசனின் இஸ்ரேல் மீதான விமர்சனத்தை ஒரு போலி, தலைகீழ் இனவெறியராகச் சித்தரிக்க அபத்தமாகப் பயன்படுத்திய அதே வேளையில், அவர்கள் அறியாமலேயே பாலஸ்தீனியக் கலைஞர்கள் மற்றும் கடிதங்களுடனான அவரது தொடர்பையும் சுட்டிக்காட்டினர் – “அங்கு எழுத்தாளர்கள் அடக்குமுறையால் தீர்மானிக்கப்பட்ட எதிர்காலத்திற்குப் பதிலாக போராட்டத்தால் அறிவிக்கப்பட்ட எதிர்காலத்திற்காக ஆக்கப்பூர்வமாக உழைக்கிறார்கள்.”

மோரிசன் ஒரு பாசிச எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒடுக்கப் பட்டவர்களின் மீதான தணிக்கை குறித்துப் பேசும் போது பாசிசம் பற்றி அவர் குறிப்பிடுகிறார். சக எழுத்தாளரான ஜூன் ஜோர்டான், லெபனான் மீதான இஸ்ரேலின் 1982 ஆம் ஆண்டுப் படையெடுப்பு, அமெரிக்க வரிப் பணத்தில் நிகழ்ந்தது என்று குறிப்பிடுகிறார். அமெரிக்கர்களால் கொடுக்கப் பட்ட வரிப்பணத்தைக் கொண்டு அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான தளவாட, தொழில் நுட்ப உதவிகள் வழங்குவதை அன்றே எதிர்த்தவர் மோரிசன் மற்றும் அவர் தோழி ஜோர்டான் ஆகியோர். 

பாலஸ்தீனத்தில் யூதர்கள் மகாத்மா காந்தி எழுதி ஹரிஜன் ஏட்டில் 26-11-1938. அன்று வெளியிடப்பட்டது (அறிமுகமும் மொழி பெயர்ப்பும். ஆர் . பாலகிருஷ்ணன்)

இறைவனால் கையளிக்கப் பட்ட புனித நிலம் என்று கூறப்படும் பாலஸ்தீனம்—அது இன்று போரால் சிதைந்துள்ளது. அந்நிலம் இவ்வாறாக நூறாண்டுகளாக இருந்து வருவது பூமியின் பெருந்துயராய் அறியப் படுகிறது. பாலஸ்தீனக் கவிஞர் தர்வீஷ் துயருறும் குரலில் சித்தரித்தது போல அப் ”பூமி அவர்களுக்குக் கதவை மூடி வருகிறது”. கிட்டத்தட்ட 1917 குப் பின் யூதர்கள் முதலாம் உலகப் போரால் துன்புறுத்தலுக்கு ஆளான பின் அவர்கள் பாலஸ்தீனத்தை நோக்கிப் புலம் பெயர்ந்து வந்தனர். பிரிட்டனின் ஒரு பிரகடனம் அவர்களுக்கான இந்நிலத்தை உரிமையாக்கியது. ஆனால் 1925 க்குப் பின் உள்நாட்டு மோதல்கள் ஆரம்பமான நிலையில் யூதர்களுக்கான நிலம் என்பதைப் பாலஸ்தீனத்தில் அவர்கள் ஒன்றாக இருந்து வாழ்வது தான் என மதச் சார்பற்ற பல தலைவர்கள் முன் மொழிந்து வந்தனர். புரட்சி முடிவுற்ற காலத்திற்குப் பின் இருந்த ரஷ்யா இதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பிரெஞ்சு, ஆங்கில அரசுகள் தம் கட்டுப் பாட்டில் இருந்த நிலங்களில் யூதர்கள் எப்படிக் குடியமர்த்தப் பட வேண்டும் என்று உரையாடி வந்தனர். இச்சூழலில் காந்தி அடிகள் தம் கருத்தை ஒரு மனிதாபிமான அடிப்படையில் வெளிப் படுத்துகிறார். அவரது இக்கட்டுரை மொழி பெயர்ப்பாகத் தரப் படுகிறது. 

காந்தியாரின் கட்டுரை

பாலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சினை மற்றும் ஜெர்மனியில் யூதர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எனது கருத்துக்களை வெளியிட வேண்டி எனக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன. இந்தக் கடினமான கேள்வியில் எனது கருத்துக்களைத் தெரிவிக்க நான் எவ்விதத் தயக்கமும் இன்றி இப்போது அதனை வெளியிடுகிறேன். 

எனது அனுதாபங்கள் அனைத்தும் யூதர்கள் மீதுதான். தென்னாப்பிரிக்காவில் நான் அவர்களை நெருக்கமாக அறிந்திருக்கிறேன். அவர்களில் சிலர் இப்போது எனக்கு நெருக்கமாக மாறிவிட்டனர். இந்த நண்பர்கள் மூலம் நான் அவர்களின் மீதான பல வருடத் துன்புறுத்தல்களைப் பற்றி அறிந்துகொண்டேன். அவர்கள் கிறித்துவத்தால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப் படுபவர்கள். கிறித்தவர்கள் அவர்களை நடத்துவதற்கும் இந்துக்கள் தீண்டத்தகாதவர்களை நடத்துவதற்கும் இடையிலான ஒற்றுமை மிக நெருக்கமானது. 

அவர்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தையை நியாயப்படுத்த இரண்டு நிகழ்வுகளிலும் மத அதிகாரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நட்பைத் தவிர, யூதர்கள் மீதான எனது அனுதாபத்திற்கு மிகவும் பொதுவான உலகளாவிய காரணம் கூட உள்ளது. ஆனால் எனது இத்தகைய அனுதாபம், வழங்கப் பட வேண்டிய நீதியின் தேவையின் பொருட்டு என்னைப் பார்வையற்றவனாக நிறுத்தவில்லை. யூதர்களுக்கான தேசியத் தாயகம் என்ற குரல் எனக்கு நீதியின் குரலாகப் படவில்லை. பாலஸ்தீனத்தில் இருந்து துண்டாக தங்கள் நாட்டை உருவாக்கும் அனுமதி பைபிளில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவ்வித முயற்சியில் பாலஸ்தீனத்துக்கு யூதர்கள் திரும்பியதும் அக்குரல் அழுத்தமாக, வலிய முயற்சியின் குரலாக ஒலிப்பதை நாம் அறிய முடிகிறது. 

பூமியின் மற்ற மக்களைப் போல, எவ்வாறு அவர்கள் தங்கள் பிறந்த நாட்டை அவர்கள் சொந்த நாடாகக் கணக்கில் கொண்டு அடிப்படைகளை உருவாக்கிக் கொள்கிறார்களோ அவ்வாறு ஏன் அவர்கள் உருவாக்கிக் கொள்ளக்கூடாது? இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானதோ அவ்வாறே பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானதோ – என்பது போலவே பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. யூதர்களை அரேபியர்கள் மீது திணிப்பது தவறானது மற்றும் மனிதாபிமானமற்றது. இன்று பாலஸ்தீனத்தில் நடப்பதை எந்த ஒழுக்க நெறிகளாலும் நியாயப்படுத்த முடியாது. கடைசியாக அங்கு நடந்த போர் தவிர இவ்வாறு ஒரு நாட்டை உருவாக்க எந்த அனுமதியும் அங்கு இல்லை. பாலஸ்தீனத்தை ஓரளவு அல்லது முழுமையாக யூதர்களுக்கு அவர்களின் தேசியத் தாயகமாக மீட்டெடுக்கும் வகையில் பெருமைமிக்க அரேபியர்களை அங்கிருந்து நீக்குவது,வாழ்விடத்தைச் சிறிதாக்குவது நிச்சயமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். யூதர்கள் எங்கு பிறந்து வளர்ந்தாலும் அவர்களை நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதே உன்னதமான போக்காகும். பிரான்சில் பிறந்த கிறிஸ்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்பது போலவே பிரான்சில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சுக்காரர்கள் தான் . 

யூதர்களுக்குப் பாலஸ்தீனத்தைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்றால், அவர்கள் ஏற்கனவே குடியேறிய உலகின் பிற பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவர்கள் விரும்புவார்களா? அல்லது அவர்கள் விருப்பப்படி இரட்டைத் தேசம் என்ற உரிமை –இத்தகு தேசிய இருப்பிடத்திற்கான இந்தக் கூக்குரல், யூதர்களை ஜெர்மனி வெளியேற்றியதற்கு ஒரு நிறப் பூச்சு கொண்ட (இனவெறிக்கான) நியாயத்தை அளிக்கவே செய்யும். ஆனால் யூதர்களை ஜெர்மன் துன்புறுத்துவதற்கு வரலாற்றில் எந்த ஈடு இணையும் இல்லை. ஹிட்லர் மேற்கொண்ட வெறித்தனம் போல் பழைய காலக் கொடுங்கோலர்கள் ஒருபோதும் வெறி கொண்டதில்லை. அவர் அதை மத ஆர்வத்துடன் செய்கிறார். ஏனென்றால், அவர் பிரத்தியேக மற்றும் போர்க்குணமிக்க தேசியவாதத்தின் ஒரு புதிய மதத்தை முன்வைக்கிறார், அதன் பெயரில் எந்தவொரு மனிதாபிமானமற்ற தன்மையும் மனிதகுலத்தின் செயலாக மாறும், இதன் மூலம் இங்கேயும், இனியும் அத்தகு நடவடிக்கைகள் இயல்பாக மாறும். . 

ஒரு பைத்தியக்காரத்தனமான ஆனால் துணிச்சலான இளைஞன் மேற்கொள்ளும் குற்றம் அவரது இனத்தின் முழுமையான அடையாளமாக நம்பமுடியாத மூர்க்கத்தனத்துடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மனிதகுலத்தின் பெயரிலும், மனிதகுலத்திற்காகவும் ஒரு நியாயமான போர் இருக்க முடியுமானால், ஒரு முழு இனத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப் படுகிற துன்புறுத்தலைத் தடுக்க ஜெர்மனிக்கு எதிரான போர் முற்றிலும் நியாயமானதாக இருக்கும். ஆனால் நான் எந்தப் போரையும் நம்பவில்லை. அத்தகைய போரின் நன்மை தீமைகள் பற்றிய விவாதம், எனது சிந்தனைகளின் எல்லைக்கோ அல்லது பெரும் பரப்பிற்கோ அப்பாற்பட்டது. 

ஆனால், யூதர்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்திற்குக் கூட, ஜெர்மனிக்கு எதிராக எந்தப் போரும் நடக்காவிட்டால் என்ன ஆகும்? நிச்சயமாக அதனை ஆதரிக்கும் அணியில் யாரும் இருக்க முடியாது. நீதி மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகக் கூறும் ஒரு தேசத்திற்கும், இரண்டிற்கும் அறிவிக்கப்பட்ட எதிரியான, ஒரு தேசத்திற்கும் இடையே எப்படி கூட்டணி இருக்க முடியும்? அல்லது இங்கிலாந்து ஆயுதமேந்திய சர்வாதிகாரத்தையும் அதன் அனைத்து வழிகளையும் நோக்கி நகர்கிறதா? (இங்கே காந்தியடிகள் எவ்வாறு இன ஒடுக்கத்தை ஜெர்மனி மேற்கொள்கிறதோ அதோ வகையில் பாலஸ்தீனத்துக்கு எதிரான செயல் மூலம் இங்கிலாந்தும் மேற்கொள்ளக் கூடாது என்கிறார்-மொழிபெயர்ப்பாளர்). 

மனிதாபிமானம் என்ற போர்வையில் எந்தப் போலித்தனமும் அல்லது பலவீனமும் அதனைத் தடுக்காத போது, வன்முறை எவ்வளவு திறமையாகச் செயல்பட முடியும்? என்பதை ஜெர்மனி உலகிற்குக் காட்டுகிறது. அதன் ஆடைகள் களையப்பட்டு, அது எவ்வளவு அருவருப்பானது, பயங்கரமானது மற்றும் திகிலூட்டும் என்பதையும் இது காட்டுகிறது. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெட்கமற்ற பிற இனத்தின் மீதான துன்புறுத்தலை யூதர்கள் எதிர்க்க முடியுமா? தங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்கவும், உதவியற்றவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், துக்கப்படுபவர்களாகவும் உணராமல் இருக்கவும் ஒரு வழி இருக்கிறதா? இருக்கிறது என்று நான் இங்கே உறுதியளிக்கிறேன் . உயிருள்ள, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட எவரும் உதவியற்றவர்களாகவோ அல்லது துக்கப்படுபவர்களாகவோ உணர வேண்டியதில்லை. யூதர்களின் யெகோவா என்பவர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது இந்துக்களின் கடவுளை விட மிகவும் அவர்களுக்கான கடவுள். இருப்பினும் உண்மையில், சாராம்சத்தில், அவர் அனைவருக்கும் பொதுவானவர், விவரிக்க முடியாதவர். ஆனால் யூதர்கள் கடவுளுக்கு ஆளுமையைக் கற்பித்து, அவர்களின் ஒவ்வொரு செயலையும் அவர் ஆள்கிறார் என்று நம்புவதால், அவர்கள் உதவியற்றவர்களாக உணரக்கூடாது. 

நான் ஒரு யூதனாக இருந்து ஜெர்மனியில் பிறந்து அங்கு என் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டால், மிக ஆற்றல் வாய்ந்த ஜெர்மானிய சக்தியாக இருந்தாலும், எவ்வளவு அரக்கத் தன்மை கொண்டதாக அது இருப்பினும், ஜெர்மனியை என் வீடாகக் கூறி, என்னைச் சுடவோ அல்லது இருட் சிறையில் தள்ளவோ முயன்றால் அதற்கு எதிராகச் ​​சவால் விடுவேன்; நான் வெளியேற்றப்படவோ அல்லது பாரபட்சமான சிகிச்சைக்கு ஆளாகவோ என்னைத் துன்புறுத்தினால், நான் அதனை மறுப்பேன். இதைச் செய்ததற்காக சக யூதர்கள் குடிமை நியாயங்களுக்கான எதிர்ப்பில் என்னுடன் சேர வேண்டும் என்று நான் காத்திருக்கக்கூடாது, ஆனால் இறுதியில் மீதமுள்ளவர்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை மிஞ்சி இருக்கும். 

ஆனால் பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களிடம் ஒரு வார்த்தை –அவர்கள் தவறான வழிகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பைபிள் கருத்தாக்கத்தின் பாலஸ்தீனம் ஒரு புவியியல் பாதை அல்ல. அது அவர்களின் இதயங்களில் உள்ளது. ஆனால், அவர்கள் பாலஸ்தீனத்தின் நில வரைபடத்தைத் தங்கள் தேசிய இருப்பிடமாகப் பார்க்க வேண்டும் என்றால், பிரிட்டிஷ் துப்பாக்கியின் நிழலின் கீழ் அதில் நுழைவது தவறு. ஒரு மதச் செயலைத் துப்பாக்கியின் கூர்முனை (பயோனெட்) அல்லது வெடிகுண்டின் உதவியுடன் செய்ய முடியாது. அரேபியர்களின் நல்லெண்ணத்தால் மட்டுமே அவர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற முடியும். அவர்கள் அரபு இதயத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். 

யூத இதயத்தை ஆளும் அதே கடவுள் அரபு இதயத்தையும் ஆளுகிறார்… அவர்கள் தங்கள் மதத்தின் மீதான அதி விருப்பத்தின் பேரில் உலகின் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் காண்பார்கள். பிரிட்டிஷ் துப்பாக்கியின் முனைகள் உருவாக்கும் அடிப்படைகளை விடுத்து வேறு வழிகளை நாடினால், அரேபியர்களுடன் இணங்க மற்றும் நியாயப்படுத்த நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. அது போலவே, தங்களுக்கு எந்தத் தவறும் செய்யாத மக்களைச் சிதைப்பதில் அவர்கள் பிரிட்டிஷாருடன் இணைப் பங்காளிகள் ஆகிவிடுவர். நான் அரேபிய அத்து மீறல்களை நியாயப் படுத்தவில்லை. தங்கள் நாட்டின் மீது நியாயமற்ற அத்துமீறல் என்று அவர்கள் சரியாகக் கருதியதை எதிர்ப்பதில் அவர்கள் அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் நான் அதனை விரும்புவேன். ஆனால் சரி, தவறு பற்றிய ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின்படி, பெரும் முரண்பாடுகளுக்கு மத்தியில் அரபு எதிர்ப்பை மீறி நான் எதுவும் கூற முடியாது. 

யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்றால் அவர்கள் வன்முறையைக் கைவிட்டு அஹிம்சையைப் பேண வேண்டும். தங்கள் நிலத்தின் மீதான உரிமையை அவ்வழி நாட வேண்டும். புவியின் மீதுள்ள ஒவ்வொரு நாடும் அவர்கள் அன்பின் அரவணைப்பில் அவர்கள் சொந்த நாடுகளே. வன்மத்தால் அல்ல. ஒரு யூத நண்பர் எனக்கு ஒரு நூல்—சிசில் ரோத் எழுதியதைப் பரிசளித்தார். அதில் யூதர்கள் எவ்வாறு கலை, இலக்கியம், இசை, நாடகம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றுக்குப் பங்களித்தவர்கள் என நாம் அறியலாம். ஆர்வம் இருந்தால், யூதர்கள் மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுவதையும், வெறுக்கப்படுவதையும் அல்லது ஆதரிக்கப்படுவதையும் அவர்களே நம்பிக்கையுடன் மறுக்க முடியும். கடவுளால் கைவிடப்பட்ட மிருகத்தனத்தில் மூழ்குவதற்குப் பதிலாக, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவரால் படைக்கப் பட்டவர்களாக இருப்பதன் மூலம் யூதர் உலகின் கவனத்தையும் மரியாதையையும் பெற முடியும். அவர்கள் உலகிற்கான தங்கள் பல பங்களிப்புகளில் அஹிம்சை என்ற ஒன்றை அவர்களின் சிறந்த பங்களிப்பாகச் சேர்க்கலாம். 

மேற்குறிப்பிட்ட ஆளுமைகள் யாவரும் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் ஏன் ஜியோனிசத்தைத் தெளிவாக, வல்லமையோடு எதிர்த்துள்ளார்கள் என்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. அவர்களின் பார்வையின் தொலைநோக்கு வியப்பை அளிக்கிறது—குறிப்பாக காசாவில் ஒவ்வொரு குழந்தையின் அழுகுரலும் அனாதைக் குரலாக ஒலிக்கும் போது. 

***

ஆர்.பாலகிருஷ்ணன் – தமிழில் முப்பது ஆண்டுகளாக எழுதி வரும் ஆர் .பாலகிருஷ்ணன் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். கோவையிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது வருகை தரு பேராசிரியராக, மொழிபெயர்ப்பாளர் ,விமர்சனக் கட்டுரை என ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதி வருகிறார். இதுவரை 20 க்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியாகி உள்ளன. ஆவணப் படங்கள், மலையாளத் திரைப்படங்களுக்கான திரைக்கதைகள் எழுதுவதையும் இப்போது கூடுதலாக மேற்கொண்டு வருகிறார். பன்னாட்டு ஏடுகளில் இவரது இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவற்றுள் ‘சேலஞ்சிங் ஆர்கனைசேஷன்ஸ்’ என்ற வியன்னாப் பல்கலைக்கழக ஏட்டில் இவர் எழுதி வெளிவந்த கட்டுரை முக்கியமானது. பாலஸ்தீனம் பற்றிய அக்கறை இவருக்கு 80 களின்  பிற்பகுதியில்–மாணவப் பருவத்தில்,  இங்கு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்த வீரர்கள் சிலரைச் சந்தித்து உரையாடிய போது நேர்ந்தது. தொடர்ந்து பாலஸ்தீன் பற்றிய வாசிப்பு ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு வரும் இவர் யமுனா ராஜேந்திரனுடன் இணைந்து மஹ்முத் தார்விஷ் கவிதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார். மின்னஞ்சல்: rdada2001@gmail.com

வரலாற்றின் புனைவும் புனைவின் வரலாறும்

0

தலையங்கம்

ரலாறும் புனைவும் ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. பொதுக்கூற்றில் நிறுவப்பட்ட வரலாறு யாரோ ஒருவரின் புனைவாகவும், புனைவு விடுபட்டவர்களின் வரலாறாகவும் அறிய நேர்கிறது. தனி மனிதனின், ஒரு குழுமத்தின் அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. மீண்டெழுந்த கதைகள் பேசப்படுகின்றன. அவற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலும், அவர்களின் வாழ்க்கையும் கைவிடப்படுகிறது. வாய்மொழிக் கதைகளும் அதன் வழியான வாழ்க்கையும் புனைவின் வழியாகவே வரலாற்றின் அங்கமாகின்றன. தொன்மங்கள், குலதெய்வங்களின் புராணக்கதைகள் வாழ்க்கை எனும் தராசில் அலசப்படும்போது அவை வரலாற்றின் சாயலை ஏற்கின்றன. இந்த ஒப்புமையில் வரலாற்றில் புனைவை அடையாளம் காணும்போது அவை பகடியின் சாயலைக் கொள்கின்றன. அதிகாரத்தின் நகாசு வேலைகள் அம்பலமாகின்றன. அதே நேரம் புனைவில் வரலாற்றின் புதிய குரல் அடையாளப்படுத்தும்போது வரலாறு பொதுவுடைமை குணத்தை அடைகின்றது.

சமகால இலக்கிய ஆக்கங்களில் வரலாறு பெரும் தாக்கத்தையும் பங்களிப்பையும் செய்கிறது. சமகால வாழ்வை பரிசீலிக்கவும், அதன் வரலாற்றுப் பிழைகளைப் பரிசீலிக்கவும் புனைவு நல்லதொரு ஆயுதமாகப் பங்காற்றுகிறது. சொல்லப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளைப் புனைவு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மீட்டுருவாக்கமாகத் தேங்காமல் புதிய அர்த்தங்களைப் பொழியும் நேரடி ஆக்கமாக அவை உருவாவதே வரலாற்றுடனான உறவிற்குப் புனைவின் அர்த்தமாகிறது. வரலாற்றின் பல பக்கங்கள் திறக்கப்படுவதற்கு புனைவின் உதவியைக் கோரி நிற்பதே இப்போதைக்கான சூழலாக அமைகிறது.

வரலாறுக்கும் புனைவிற்குமான உறவை இரண்டில் ஏதேனும் ஒரு பார்வையை முன்வைத்து சிறப்புப் பகுதியாக்க முயற்சித்தோம். உடல்நலமின்மைகளும் படைப்பாளர்களின் சில அசௌகரிய சூழல்களும் தடங்கல்களாக வந்தன. பல கட்டுரைகளின் வழியே எட்ட விழைந்த கருப்பொருளை நீளமான ஒற்றைக் கட்டுரையின் வழியே மீண்டெழவைத்தவர் நம்பிகிருஷ்ணன். நவீன இலக்கியவாதிகளின் வாழ்க்கையும், பண்பாடும், படைப்பாக்கமும் இணையும் புள்ளியை படைப்பில் தொடங்கி தன் சுய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு சிறப்பாக முன்வைப்பவை நம்பிகிருஷ்ணனின் இலக்கியக் கட்டுரைகள். அவ்வழியே அலேஹோ கார்ப்பெந்தியரின் இலக்கியப் பங்களிப்பையும் அதில் வரலாற்றின் அம்சத்தையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். வரலாற்றைப் புனைவில் எப்படிக் கையாளலாம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. ஸ்டாலின் சரவணன், கிருஷ்ணசந்தர் சிறுகதைகளை முன்வைத்து எழுதியிருக்கும் மதிப்புரை இந்த சிறப்புப்பகுதியை ஒட்டிய வண்ணமே அமைந்திருக்கிறது. சமகாலப் போர்ச்சூழலைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாலஸ்தீனப் போர் குறித்து வரலாற்றின் சுவடில் புனைவெழுத்தாளர்களும், அரசியல் ஆளுமைகளும் முன்வைத்திருக்கும் பார்வைகளை சிறப்பாக தொகுத்திருக்கும் ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை சிறப்புப் பகுதியின் சமகாலத் தன்மைக்கு சான்றாக அமைகின்றது.

நவீன வாழ்க்கைக்கான புதிய அர்த்தங்களைப் புனைவுகள் சுட்டுகின்றன. பழைய விஷயங்களைப், புராணங்களைக் கையாளும்போதும் அவை நவீனவாழ்வின் அலகுகளைக் கைக்கொள்கின்றன. இம்முறை வெளியாகும் சிறுகதைகளும் அவற்றிற்கான மற்றுமொரு நற்சான்று. மொழிபெயர்ப்பிலும் இத்தன்மைக்கு இணைவான படைப்புகள் வெளியாவது மின்னிதழின் நல்லூழ்.

சமகால எழுத்தாளுமைகளின் நேர்காணல்களை மேற்கொள்ள வேண்டும் எனும் எங்களின் செயல்பாட்டிலும் உடல்நலமின்மையின் தாக்கம் இடராக முளைத்தது. சமகால இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் வழியே நல்லதொரு தாக்கத்தை யதார்த்தவாத கதைப்புலத்தில் ஏற்படுத்தியவர் ரேமண்ட் கார்வர். அவருடைய நேர்காணலொன்று சுபஸ்ரீ முரளிதரனின் மொழிபெயர்ப்பில் வெளியாகிறது.

சிற்றிதழ் மரபில் வந்தவரும், தமிழின் தனித்துவமான கதைசொல்லிகளின் பட்டியலில் இடம்பெறுபவருமான டி.கண்ணனின் மறைவிற்கு யாவரும் மின்னிதழ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். அவருடனான உறவும், இலக்கிய பங்களிப்புகளின் மீதான பார்வையுமாக இவ்விதழில் வெளியாகியிருக்கும் எஸ்.சண்முகம் எழுதிய அஞ்சலிக்கட்டுரை அவரைத் தேடிச் சென்று வாசிக்கவும், வாசிப்பின் வழி அஞ்சலி செலுத்தவும் உதவியாய் இருக்கும்.

இதழுக்குப் பங்களித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் ’யாவரும்’ சார்பான அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

கெட்டிக்கார அத்தை

0

மன்னு பண்டாரி

ஆங்கிலம் வழி தமிழில் : பாலா இளம்பிறை

திகாரத்தின் மொத்த உருவமான அத்தையின் ஒழுக்கமான நடவடிக்கைகளின் தாக்கத்தால் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் கலக்க மயக்கத்தோடு இருப்பது போல் தோன்றியது. அந்த மொத்த வீடும் எந்த ஒழுங்கீனங்களும் இல்லாமல் நகரும் இயந்திரங்களைப்போல் துல்லியமான இயக்கத்துடன் இருந்தது. 

ஒவ்வொருவருக்குமான அன்றாடப் பணியாக – அதிகாலை ஐந்து மணிக்கு எழுதல், தோட்டத்தில் ஒரு மணி நேர நடை, பின்னர் அவரவருக்குத் தேவையான தேநீர் அல்லது பால் அருந்தினர். அதற்குப் பிறகு அன்னு தனது படிப்பைத் தொடர வேண்டும். வீட்டுப் பெரியவரும் அன்றைய தினசரி, அலுவலகக் கோப்புகள் மற்றுமிருக்கும் முக்கிய வேலைகளில் மும்முரமாய் இருப்பார். அடுத்து குளிப்பதற்கான நேரம் சரியாக ஒன்பது மணி. அத்தையின் விருப்பத் தேர்வோடு அனைவரும் உடுத்த வேண்டும், பிறகு சாப்பாட்டு மேசையில் அனைவரும் ஒன்று சேர அமர்ந்து உணவருந்தி விட்டு பின்னர் அவரவர் பணிகளைத் தொடர வேண்டும். 

கெட்டிக்கார அத்தை, (அவரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) என்பது அவளுடைய உண்மையான பெயர் அல்ல. அவளுடைய கெட்டிக்காரத் திறமையைக் கண்டு கொண்டவர்கள் அவளை அப்படியே அழைக்கத் தொடங்கினர்.. ஆனால் அப்படியொரு பெயரை அவளுக்கு வைத்தவர் மிகப்பெரிய அறிவாளி என்றுதான் நான் சொல்வேன். அவள் தனது குழந்தைப் பருவத்தில் கூட, அவள் சம்பந்தப்பட்ட விசயங்களில் நேரத்தைக் கடைபிடிப்பவள் மட்டுமல்ல. ஆனால் எல்லோரும் புருவம் உயர்த்தும்படியாக அவளுடைய செயல்கள் அனைத்தும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அத்தனை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அதுவே அனைவரது பாராட்டுக்கும் பிரமிப்பிற்கும் உள்ளாகும். வாங்கிய ஒரு பென்சிலானது குறுகி இனிமேல் விரல்களால் பிடிக்க முடியாது என்கிற வரைக்கும் அதைப் பயன்படுத்துவாள். ஆனால், அந்தப் பென்சிலின் ஈயக்-கரித்துண்டு மீண்டும் மீண்டும் உடைந்து தொலைந்து போவதோ அல்லது சரியான நேரத்தில் உதவாமல் கரைந்து தொலைந்து போவதோ அதன் சக்திக்கு அப்பாற்பட்டது அல்லவா. அவள் தனது நான்காம் வகுப்பில் வாங்கிய ரப்பர் அவளுடைய ஒன்பதாம் வகுப்பு வரை வந்ததாம். 

நாட்கள் செல்லச் செல்ல அவள் வளரும் தருவாயில், மிக இள வயதிலேயே மிகுந்த ஆற்றலையும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியையும் பெற்றிருந்தாள். ஒழுக்க சிந்தனையற்ற வாழ்க்கை என்பதை அவளால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. எங்களுக்கு அறிவுரை சொல்லும் தேவை வரும்போதெல்லாம் அப்பா, முன்மாதிரியாய் எங்கள் அத்தையையே சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார். பயந்து போன நாங்கள், அதனாலேயே அவள் தன்னுடைய மாமியார் வீட்டுடனேயே இருக்க வேண்டும், இங்கே தங்கிவிடக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். இல்லாவிட்டால் எங்களின் வாழ்வு நிச்சயமாக அதோ கதி தான். 

இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, இவ்வாறான சூழலில் என்னுடைய கல்வியின் எதிர்காலம் பொருட்டு அந்த கெட்டிக்கார அத்தையின் வீட்டுக்கு என்னை அனுப்பி வைக்க இவர்கள் முன்மொழியும் போது, எனக்கு ஏற்பட்ட மனக்கொந்தளிப்பு எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மேற்கொண்டு நான் படிக்கப்போவதில்லை என்று தடாலடியாய் மறுத்துவிட்டேன். ஆனால் அப்பா என்னுடைய மேற்படிப்பின் மீது மிகவும் பிடிவாதமாய் இருந்ததால், அவருடைய பேச்சை மீறமுடியவில்லை. அவர் என்னிடம் வலியுறுத்தினார். அன்போடும் கருணையோடும் விளங்க வைக்க முயற்சித்தார். திட்டினார். அவர் எடுத்த காரியம் நிறைவு பெறும் வரை கண்டிக்கவும் செய்தார். பிரியமான என் வீட்டிற்கு விடை கொடுத்து, குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே அத்தையின் வீட்டை வந்தடைந்தேன். 

அத்தை என்னை மிகுந்த அன்போடு வரவேற்றாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால், இத்தனை நாளாக அவளுடைய கெட்டிக்கார பிம்பத்தைக் கேட்டே வளர்ந்ததால் அவளுடைய பாசமும் கருணையும் மறைக்கப்பட்டு, அவளின் வரவேற்பு என்னுள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆனால், நாங்கள் பெரியவர் என்று அன்போடு அழைக்கும் அத்தையின் கணவர், நன்மதிப்புகள் கொண்ட மரியாதைக்குரிய மனிதர். ஆனால் மனதுக்கு நெருக்கமாக, அவர்கள் வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் ஐந்து வயது மகள் அன்னு. 

அந்த வீட்டில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அந்த சலிப்பான அன்றாட வாழ்க்கையோடு போராடிக் கொண்டு எவ்வளவு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதையெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே உணரமுடியும். தொடக்கத்திலிருந்தே அங்கே இதையெல்லாம் அனுபவிக்கும் அந்தச் சின்னஞ் சிறுமி அன்னுவை நினைத்தால் பரிதாபமாய் இருந்தது. வளரிளம் பருவத்து முதிர்ச்சி முன்னமேயே ஆட்கொண்டுவிட்டதால், அந்த ஐந்து வயது சிறுமியால் குழந்தைப் பருவத்திற்கான மகிழ்ச்சிகளை ஒருபோதும் அனுபவிக்க முடியவில்லை. அவள் ஓர் இனம்புரியாத அச்சத்தால் சூழப்பட்டிருப்பது போல் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களுக்குள், அந்த வீட்டின் அடக்குமுறைச் சூழல் என்னுடைய புன்னகை மற்றும் மகிழ்ச்சி அனைத்தையும் பறித்துக்கொண்டு போய் விட்டது. 

அத்தையின் திருமண வாழ்க்கை இருபத்தைந்து வருடங்களை நிறைவு செய்துவிட்டது, ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பார்க்கும்போது அவையனைத்தும் நேற்றுதான் வாங்கியவை போல் இருந்தன. அந்த வீடு கட்டப்பட்டபோது வாங்கப்பட்ட கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்கள் அனைத்தும் இந்தப் பதினைந்து ஆண்டுகள் அன்றாடப் பயன்பாட்டிற்குப் பிறகும், புத்தம் புதியதாய் மிளிர்ந்தன. அவையனைத்தையும் தூய்மையாய் வைத்திருக்கும் பொறுப்புகள் அனைத்தும் அத்தையுடையதே. எவரும் அதில் ஏதாவதொன்றை உடைக்கத் துணிந்ததில்லை இதுவரைக்கும். வீட்டு வேலைக்காரர் ஒருவர் தொட்டியொன்றை ஒருமுறை உடைத்துவிட்ட தவறுக்காக கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். மோசமாய் அடிகள் விழுந்தன. ஏதாவதொன்று உடைவதையும் அழிவதையும் அவள் வெறுத்தாள், அவையெல்லாம் அவளுடைய சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவை. தூய்மையான அவளது வீட்டைப் பற்றி அவளுக்கு எப்போதுமே பெருமை. அந்த வீட்டில் அவள் காலடி எடுத்து வைக்காமல் போயிருந்தால் அந்த ஏழை மனிதனுக்கு என்னவெல்லாம் நேர்ந்திருக்கும் என்று தனக்குப் புரியவில்லை, என்று அவள் அடிக்கடி மாமாவிடம் சொல்வதுண்டு. ‘நிலைமை என்னவாக இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களாகவேனும் இருந்திருப்போமே தவிர, வெறும் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் அல்ல நாம்’ என்று என் தலைக்குள் ஒரு முணுமுணுப்பு கேட்டது. 

சதா விழிப்புடன் இருக்கும் அத்தையின் கண்களையும், உணவின் மீதான அவளுடைய அக்கறை முறைகளையும் மீறி, அன்னுவுக்கு ஒருநாள் காய்ச்சல் கண்டது. எல்லா வகையான சிகிச்சைகளையும் தாண்டி, கிட்டத்தட்ட முழுவதுவுமாய் ஒரு மாதம் கடந்துவிட்டது, ஆனால் அவளுடைய காய்ச்சல் குறையவில்லை. அன்னுவின் உடம்பு வெளிறிப் போன பின்பு அத்தையின் பதட்டம் எல்லையில்லாமல் போனது. எந்த கிருமித் தொற்றும் அவளுக்கு இல்லையென்று அவளைப் பார்த்தபோது தெரிந்தது, ஆனாலும் தனது அம்மாவின் பயம் அவளைப் படிப்படியாக விழுங்கிக் கொண்டிருந்தது. அவற்றால் அவள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் பயத்தின் காரணமாக அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. நாளுக்கு நாள் அவள் இன்னமும் நோயின் பிடிக்குள் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தாள். 

தொடர்ந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தையை மலைப்பாங்கான நிலங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றும், அவள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா செயல்களும் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். குழந்தையின் விருப்பப்படி அனைத்தும் நடக்க வேண்டும். அதுவே அவள் நோயிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த அறியாக் குழந்தையின் மனதில் அவளது சொந்த விருப்பங்கள் என்று ஏதேனும் இருந்ததா? அத்தையின் முன்னால் இதெல்லாம் சாத்தியமில்லை என்ற நிலையிருந்ததால், மாமாவுக்கு இது அச்சத்தோடு கூடிய மிகப் பயங்கரமான சவால் தான். ஏனென்றால், தான் அறியாமல் கூட எவருடைய விருப்பங்களும் அவளை எதிர்த்து நிற்க முடியாது. மாமா ஒருவேளை இதைப்பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாய் சொல்லியிருந்திருக்கலாம், அதற்கேற்றார்போல் அவரும் மருத்துவரின் அறிவுரையைக் காரணம் காட்டி குழந்தையை அம்மாவிடமிருந்து தனிமைப்படுத்திருக்கலாம். அத்தைக்குத் தயக்கம் தான், ஆனாலும் மருத்துவரை எதிர்க்கத் துணிய மாட்டாள். இறுதியாக அந்த முடிவுக்கு அவள் ஒத்துக்கொண்டாள்.  

அன்னுவும் மாமாவும் மலைப் பிரதேசத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் தயாராகின. முதலில் இருவருக்குமான ஆடைகளின் பட்டியல், பின் காலணிகள், காலுறைகள், குளிரைத் தணிக்கும் உடுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பாத்திரங்கள். அனைத்தையும் பைகளில் பத்திரப்படுத்தும் போது அத்தை தன் கணவரை நோக்கி, ‘இதில் எந்தவொரு பொருளும் தொலைந்து போய்விடக் கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தினாள் – “இங்கே பாருங்க இந்த ஃப்ராக் தைக்கிறதுக்கு ஏழு ரூபா செலவு பண்ணிருக்கேன்.. இந்தக் கோப்பையெல்லாம் உடைச்சிடாதீங்க, ஐம்பது ரூபா நாசமாகிடும்.. அப்புறம், முக்கியத்துவமில்லாத கண்ணாடி தம்ளர்னு சிலதை நீங்க பொருட்டாவே எடுத்துக்கறதில்லனு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனா, இதையெல்லாம் நான் பதினைஞ்சு வருசமா ஒரு சின்ன கீறல் கூட இல்லாம பத்திரமா வெச்சிருக்கேன்.. ஒண்ணு சொல்லிக்கிறேன், இதுல எது ஒண்ணு உடைஞ்சாலும் நல்லதுக்கில்ல ஆமாம்.” 

கணவனை நோக்கி, பொருள்களைப் பற்றிய அவளது அனைத்து விதமான கருத்துக்களுக்குப் பிறகு, அன்னுவுக்கான முறை வந்தது. அன்னு – எந்த நாள், என்ன நேரத்தில் எதைச் சாப்பிடவேண்டும்.. எப்போது வெளியே சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்று அனைத்தும் திட்டமிடப்பட்டு முடிவெடுக்கப்பட்ட பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தாள் அத்தை. இப்படிப்பட்டதொரு அரச பரிபாலனத்தில், இவர்களின் தொலைதூர மலைப்பிரதேசப் பயணத்திற்கு அத்தை எவ்வாறு சம்மதித்தாள் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுடைய அறிவுறுத்தல்கள் நிறைவுற்றன என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அத்தை தனது கணவனிடம் மெல்லிய குரலில், “நீங்களும் உங்களை நல்லா கவனிச்சுக்கோங்க.. பால், பழமெல்லாம் சரியான நேரத்துக்கு சாப்பிடணும்” என்றாள். இவ்வளவு நீண்ட அறிவுறுத்தல்களுக்குப் பின்னும், அத்தையால் மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது, “நான் இல்லாம நீங்க எப்படி சமாளிக்கப் போறீங்களோ, எனக்குத் தெரியல,.. இந்த ஏற்பாடே முதல்ல எனக்குப் பிடிக்கல.. நல்லா கவனிங்க, தவறாம தெனமும் ஒரு தபால் போடணும்.”   

கடைசியாக, மாமா, அன்னு மற்றும் ஒரு வேலைக்காரன் அனைவரும் வீட்டை விட்டுக் கிளம்பும் நேரம் வந்தது. அத்தை, அன்னுவை மிகுந்த வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். அழவும் செய்தாள், இதெல்லாம் எனக்குப் புதிதாய் இருந்தது. இரும்பு போன்றதொரு கடுமையான வெளிப்புறத்தின் உள்ளே அவளது இளகிய மனம் ஒளிந்திருப்பதை அன்றுதான் உணர்ந்தேன். இரு சக்கர குதிரை வண்டி (டாங்கா) கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு சிறிது நேரம் அசையாமல் படுத்துக் கிடந்தாள்.. ஆனால் மறு நாளிலிருந்து அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. அன்னுவின் உடல்நிலை குறித்த கடிதம் ஒவ்வொரு நாளும் மாமாவிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அத்தையும் உடனுக்குடன் பதில் எழுதுவாள்.. தான் இத்தனை நாளும் வாய்மொழியாகச் சொல்லி வந்ததை கடிதத்தில் திரும்பவும் எழுதுகிறாள், அவ்வளவு தான். தேதிகளில் மட்டுமே மாற்றம். “அத்தை, ஏன் தினமும் மாமாவுக்குக் கடிதம் எழுதிக் கஷ்டப்படுறீங்க.. பேசாம மாமாவை ஒரு கடிதத்தை எழுதி அதை ஒரு பெரிய அட்டையில ஒட்டி உங்க படுக்கைக்கு முன்னால ஒட்டச் சொல்லிடலாம். தினமும் காலையில எழுந்ததும் நீங்க படிச்சுக்கலாம்”, அத்தையிடம் இப்படிச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு வெளிப்படையாய் அத்தையிடம் சொல்ல எனக்கு தைரியம் போதாது. 

ஒரு மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் மாமாவிடமிருந்து கடிதம் வருவது நின்றது. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. அத்தைக்குக் கவலை பற்றிக்கொண்டது. வீட்டு வேலைகள் எதிலும் மனம் ஒட்டவில்லை. வீட்டின் கடுமையான சட்ட திட்டங்கள் திடீரென்று சரியத் தொடங்கியது போல் தோன்றியது. மூன்றாவது நாளும் கடித வரத்து இல்லாமலேயே கழிந்தது. அத்தைக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அன்றைய இரவு என்னோடு தூங்கிக் கொள்வதற்கு என்னுடைய அறைக்கு வந்தாள். ஆனாலும் இரவு முழுவதையும் கனவுகளுடனோ அல்லது அழுகையோடோ கழித்தாள். பல ஆண்டுகளாய் அவளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்மை உருகி முழு பலத்துடன் வெளியேறுவது போல் இருந்தது. மாமா மட்டும் தனியாக வீடு திரும்புவதாகவும். அன்னு அவருடன் வரவில்லை என்ற பயத்தோடும் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அழுது அழுது கண்கள் சிவந்து போயின. பல்வேறு வழிகளில் அவளுக்கு உறுதியளிக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தேன். எதையும் அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அன்னுவின் பொருட்டு போராடிக் கொண்டிருக்கும் அத்தையின் மனநிலையைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. 

அப்படிபட்ட ஒரு சூழலில் ஒருநாள் அத்தைக்கென எழுதப்பட்ட மாமாவின் கடிதத்தோடு வேலையாள் வந்தான். நடுங்கும் கைகளோடு அந்தக் கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். நான் சப்த நாடியும் ஒடுங்கி அத்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனடியாக அந்தக் கடிதத்தை தூர எறிந்து விட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் அத்தை. எனக்கோ அதிர்ச்சி. அதற்கு மேற்கொண்டு என்னால் எதையும் யோசிக்கவும் முடியவில்லை. பச்சிளம் குழந்தை அன்னுவின் முகம் என் கண்களுக்கு முன்னால் சுழன்றது. ஆகையால். அன்னு தவறிவிட்டாள் என்பது உண்மையா? இதெல்லாம் எப்படி நடந்தது? அந்தக் கடிதத்தைக் கைப்பற்றும் துணிச்சல் இப்போது எனக்கு வந்தது – 

“என் அன்பான ஆளுமையே, 

இந்தக் கடிதத்தை உனக்கு எப்படி எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. அந்தத் துன்பகரமான நிகழ்வை எப்படி நான் எடுத்துரைப்பேன்?

என் மகாராணியே! இந்த இழப்பை நீ பொறுமையுடன் தாங்கிக் கொள்வாய் என்று இன்னமும் நான் எதிர்பார்க்கிறேன். சில நேரங்களில், வாழ்வின் கடினமான தருணங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை நாம் துணிச்சலோடு எதிர்கொண்டு சகித்துக்கொள்வதில் தான் நமது மகத்துவம் இருக்கிறது. இந்த உலகம் அழியக் கூடியது. எவையெல்லாம் படைக்கப்பட்டனவோ, அவை பிறிதொரு நாள் மறைந்தே தீரும். அவ்வாறே, இந்த உண்மையை மனதில் கொண்டே, மாயையான இந்த உலகத்தின் மீதான மோகம் தான் வாழ்க்கையின் எல்லாவிதத் துன்பங்களுக்கும் காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உன்னுடைய கவனமான அறிவுறுத்தல்கள் மற்றும் என்னுடைய அயராத விழிப்புணர்வு ஆகியவை இருந்தபோதிலும், நமது பிரியமான பொருளை என்னால் காப்பாற்ற முடியவில்லை… அதை எனது துரதிர்ஷ்டம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்வேன்? அந்த இழப்பிற்கான மொத்த பொறுப்பையும் நான் ஒருவனே ஏற்கிறேன்…”  

கண்ணீர் திரையிட்ட எனது கண்களின் ஊடாக, எழுத்துக்கள் தெளிவின்றித் தெரிந்தன. என்னுடைய கைகள் நடுங்கின. ஒருவருடைய மரணத்தைப் பற்றி நான் கடிதம் மூலமாக படித்துத் தெரிந்து கொள்வது என்னுடைய வாழ்க்கையில் இதுவே முதல் முறை. சொற்கள் அனைத்தையும் கடந்து என் கண்கள் கடிதத்தின் கடைசிப் பத்திக்குச் சென்றன – “ ஆசுவாசம் கொள்.. என் அரசியே.. நடந்தவற்றை மறந்து என்னைப் பொறுத்துக்கொள். நேற்று மாலை நாலு மணிக்கு, ஐம்பது ரூபாய் மதிப்புள்ள செட்டில் இருந்த இரண்டு கோப்பைகள் என்னுடைய கையிலிருந்து நழுவி விழுந்து உடைந்து விட்டன. அன்னு நலமாகி தேறிக்கொண்டு வருகிறாள். விரைவில் நாங்கள் திரும்புவோம்.” 

ஒரு நிமிடம் நான் திகைத்துப் போய் நின்றேன். இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. நடந்ததை உணரத் தொடங்கியவுடனே வெடித்துச் சிரித்து விட்டேன். உண்மையை, நடைமுறையை எப்படி நான் அத்தைக்கு எடுத்துரைத்தேன், எப்படி அவளை சமாதானம் செய்தேன், எவ்வாறு முயற்சி செய்தாலும் என்னால் அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடியவில்லை. ஆனால், உண்மை நிலையைத் தெரிந்து கொண்ட பிறகு கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தாலும், அத்தையும் வெடித்துச் சிரித்தாள். ஐந்து அணா மதிப்புள்ள தொட்டியை உடைத்ததற்காக தன் வீட்டு வேலையாளை அடித்த அத்தை, ஐம்பது ரூபாய் செட்டில் இருந்த இரண்டு கோப்பைகள் உடைந்ததை அறிந்த பிறகும் இப்போது சிரிக்கிறாள். மேல் உலகத்தின் பொக்கிஷங்களைக் கண்டுவிட்டது போல் இதயத்தின் ஆழத்திலிருந்து அத்தை சிரிக்கிறாள். 

மன்னு பண்டாரி – இந்தி எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்தி இலக்கியத்தில் ‘புதிய அலை’ சிறுகதைகளின் முன்னத்தி ஏர். மத்தியத்தர வர்க்கத்து மனிதர்களின் அகச்சிக்கலை நுட்பமாக எழுதிய எழுத்தாளர். பாரதிய பாஷா பரிஷத் விருது வென்றிருக்கிறார்.

*

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும்.

மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்

0

தூயன்

(அறிவியல் புனைகதை)

மூன்று பள்ளித் தோழிகளும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிற அன்று, ஏலாம்பூரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு முதன் முதலாக ஒரே சமயத்தில் வந்து சேர்ந்த அனுபவத்தை, அவர்கள் அடிக்கடி அமர்கிற பன்னீர் மரத்தடிக்குக் கீழே நினைவுகூர்ந்தார்கள். பள்ளியின் வாயிலுக்கு வேறு வேறு இடங்களிலிருந்து அவசரமும் நிதானமும் தாமதமாகவுமாய் மூவரும் பத்து வருடங்களுக்கு முன்பு வந்து நின்றபோது சரியாக மணி ஒன்பது பதினைந்து. அந்தக் கணம் இத்தனை வருடத்தில் அவர்களுக்குள் காலப்பிரக்ஞையை அன்றாடத்திலிருந்து அழித்துவிட்டிருப்பது பிரமிப்பாக இருந்தது. தோழிகள் எப்போதெல்லாம் தங்கள் நட்பை நினைவுகூர்கிறார்களோ அப்போதெல்லாம் அந்த ஒன்பது பதினைந்து மணித் துளியில் நடந்த அற்புதம் அவர்களுக்கு ஞாபகத்தில் உதிக்கும். உனக்கு அந்த மஞ்சள் கவுன் பொருத்தமாகவே இல்ல என்றும் ஏன் நீ அன்றைக்கு அப்படி பச்சைக்குப் பச்சைனு வந்த என்றும் ஒருத்தரையொருத்தர் சீண்டிக்கொள்வது வழக்கம். அந்தச் சந்திப்பை நினைவுகூறும்போதெல்லாம் எப்போதுமே அது சண்டையில்தான் முடியும். ஆனால் அந்தச் சண்டைதான் ஒருத்தரையொருத்தர் அதிக அன்யோன்யத்திற்குள் ஈர்க்கிறது என்கிற உண்மையை ஒவ்வொரு முறை அந்த ஒன்பது பதினைந்தைப் பேசி முடிக்கிறபோது அவதானித்தார்கள். அந்த மணித்துளிபோல எத்தனையோ தருணங்களை வேறு வேறு சந்தரப்பங்கள் அமைத்துக்கொடுத்தாலும் அந்தக் கணத்தைப் போன்று எதுவும் மந்திரம்போல உள்ளுக்குள் உருளவில்லை. உண்மையில் சந்திக்கிற கணம் யாரோ உருட்டுகிற பகடையில் விழுகிற புள்ளிகள்தானெனத் தோன்றும். 

இப்போது மூவரையும் அதே போன்ற இன்னொரு கணம் தனித்தனியாக அவரவர் இடத்திற்கு அனுப்பத் தயாராக இருக்கிறது. பிரிவை எதிர்கொள்ள மூவருக்கும் தைரியம் போதவில்லை. நாளை, நாளை மறுநாள், அதற்கடுத்தநாள் என்று பள்ளிநாள் முடிந்ததிலிருந்து அந்தக் கணத்தைத் தள்ளிப் போட்டு வந்தார்கள். ஒருகட்டத்தில் இப்படி ஓடியொளிவது ஏமாற்றுத்தனம், இத்துடன் இதை நிறுத்திவிடலாமென முடிவெடுத்தார்கள். நாளைக் காலை ஒன்பது பதினைந்துக்கு மூவரும் கிளம்பலாம் என்று ஒருத்தி யோசனைச் சொன்னாள். அதை மற்றொருத்தி சம்மதித்தாள். ஆனால் இன்னொருத்தி வேண்டாம் அது நம்முடைய மந்திரக் கணமான பத்து வருடத்துக்கு முந்தைய ஒன்பது பதினைந்தை அழித்துவிடப் போகிறது, அதனால் வேறொரு நேரத்தைக் குறிக்கலாம் என்றாள். அதுவும் சரிதான். மூவரும் அன்று மாலை ஐந்து மணியை அதற்கான தருணமாகத் தேர்வு செய்தார்கள். 

நேரத்தை முடிவு செய்து அடுத்தக் கணத்திலிருந்து அது அதற்காகவே தயாராக இருப்பதுபோல பொழுது அவ்வளவு சீக்கிரம் ஓடத் தொடங்கியது. காலை விறுவிறுவென விடைப் பெற்றது. பின்மதியத்தில் அழகானத் தூறல் சற்று நிம்மதியளித்தது. இரவுக்காக பவளமல்லிகள் மொட்டவிழத் தயாராகின. இன்னும் சில கணங்களில் அவர்கள் விடைபெறப்போவது நிச்சயம். அதற்கான மணித்துளி அவர்களை நோக்கி ஓடி வருகிறது. அது மூவரையும் பிரித்துவிட்டுக் கண்ணிலிருந்து மறைந்துவிடும். அப்படி நினைக்கையில் மூவருக்கும் சட்டென கண்ணில் நீர் தட்டிற்று. பள்ளித் தோழிகள் இப்படி சவக்களையுடன் வளாகத்தில் திரிவதைக் காணச் சகிக்கவில்லை. ஒருத்தி இன்னொருத்தியை உப்பு மூட்டையாகச் சுமந்தாள். பிறகு மடியில் படுத்தவாறு ஆசிரியர்களைப் பற்றிய அந்தரங்கக் கதைகளை அளந்தாள். தாங்கள் நடத்த நினைத்தப் பாடப்பகுதிகளைச் சொல்லிச் சிரித்தார்கள். பிறகு எதுவும் பேச வேண்டாம் பேச்சும் சத்தமும் சீக்கிரமாக காலத்தைக் கடத்தும் மௌனமாக இருப்போம் என்றாள் ஒருத்தி. அப்போது ஒருத்தி கேட்டாள், எல்லோருக்கும் நடக்கிறதைப்போல இந்தப் பிரிவுக் கணம் காணாமல் போய் ஏங்குவதாக இருக்க வேண்டாம். மறுபடியும் நாம் ஒன்றாக இருக்க வழியைக் கண்டுபிடிக்கலாமா?”

”பிரிவைத் தவிர்க்க முடியாது. நம்முடைய புதிய வாழ்க்கைக்கு நுழையத்தான் வேண்டும். மூன்றுபேரும் வெவ்வேறு இடங்களுக்குப் போகப் போகிறோம், இவ்வளவு பெரிய நகரத்தின் ஜனநெருக்கடிக்குள் தொலைவது தவிர்க்க முடியாதது” என்றாள் ஒருத்தி. அதற்கு அவள், “நம்முடைய முதல் சந்திப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிர்பாராத திட்டமிடலுடன் நடந்ததோ, அதுபோல இன்னொரு தருணம் அமைகிறதா என்று பார்க்கலாமா?” அவள் அப்படிச் சொன்னதும் மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். 

”அதாவது, நம் சந்திப்பைக் காலத்திடம் கையளிக்கலாம். ஒப்பந்தம் ஒன்று போட்டுக்கலாம். எப்படியென்றால், மூவரும் மூன்று வெவ்வேறு இரயில்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். நகரத்தின் இந்த மத்தியப் பகுதிக்கு வருவதற்கு இரயிலை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் இல்லையா? மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறவள் பறக்கும் இரயிலிலும், இன்னொருத்தி நிலத்தில் ஓடும் மின்சார இரயிலும், நிலத்தடி நகரத்தைச் சேர்ந்த மூன்றாமவளான நான் ஹாலோ இரயிலிலும் புறப்படுவதுதான் அந்தத் திட்டம். எப்படி இருக்கிறது?” என்று மற்றவர்களைப் பார்த்து ஆர்வமாகக் கேட்டாள். இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. முகம் வேறு சோர்ந்துவிட்டது. புரிந்துகொள்கிற மனநிலையும் அப்போது இல்லை. திட்டத்தைச் சொன்னவள் தொடர்ந்தாள். ”மூன்று பேரும் ஒரு ஆல்ஃபா கடிகாரத்தை வாங்கிக்கொள்வோம். அதை எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். ஆல்ஃபாவின் இயக்கம் தெரியுமில்லையா. அது ஜிபிஎஸ் மாதிரி, எந்த இடத்தில் அதன் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்கள் முடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறதோ மறுபடியும் அதே இடத்துக்கு வரும்போதுதான் அது இயங்கும். அதாவது, அந்த மூன்று அணுக்களையும் மூன்று பேரும் அவரவர் கடிகாரங்களில் குலைக்கப் போகிறோம். செயற்கையானக் கதிரியக்கப் பிளவு மாதிரி. உன்னுடையதில் எலக்ட்ரானை நிறுத்தினால் அவளுடையதில் புரோட்டான் என்னுடையதில் நியூட்ரான் தடங்கள். என்ன சரியா?”. இருவரும் தெரியும் தெரியும் வகுப்பெடுக்காதே என அவளை நிறுத்தினார்கள். அவள் சிரித்தவாறே பேசத் தொடங்கினாள். ”நாம் மூவரும் கிளம்பும்போது கடிகாரத்திலுள்ள முடுக்கத்தை நிறுத்திவிடுவோம். அதற்கு அது ஒரு சமிக்ஞையை அறிவிக்கும். அதாவது கடிகாரம் ஓடாமல் நின்றுவிடும். பிறகு நம்முடைய இந்த மூன்று இரயில் பயணங்களும் எப்போது ஒரே சமயத்தில் ஒரே புள்ளியில் கடக்குதோ அதாவது நாம் நகரத்தின் இந்த மத்தியப் பகுதிக்கோ அல்லது நகரத்தின் வேறு எங்கு பயணிக்கும்போது ஆல்ஃபா கடிகாரம் மறுபடியும் இயங்கும். அப்போது அது நமக்கு மறுசமீக்ஞையை காட்டும். அந்தக் கணத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இரயிலை நிறுத்த வேண்டும். அந்த இடம்தான் காலம் நம் சந்திப்பைத் திருப்பியளிக்கிற சந்தர்ப்பம்.”

”இது எப்படி பத்து வருடங்களுக்கு முன்பு இயல்பாக அமைந்த நம்முடைய சந்திப்புத் தருணம் போல இருக்கும்?”

”நல்ல கேள்விதான். உண்மையில் பத்து வருடங்களுக்கு முன்பு நாம் இந்த பள்ளிக்கு வரும்போது யாரையோ சந்திக்கப் போகிறோம், அதாவது பள்ளி என்கிற அனுபவத்தைத் தொடப் போகிற எதிர்பார்ப்புடன்தானே வந்தோம். அப்போது நமக்கு இந்த நுழைவாயில் ஒரு கடிகாரத்தின் அலாரம் மாதிரி செயல்பட்டதை நாம்தான் கவனிக்கவில்லை. இந்த இடம் நமது தனித்தனிப் பயணத்தின் திட்டமிடப்படாத சென்றடைகிற இடமாக இருந்திருக்க வேண்டும். நாம்தான் காலத்தின் இயக்கத்தை அறிந்திருக்கவில்லை. அப்போது நமக்கு அதுபற்றிய அறிவும் இருந்திருக்காது”

நிலத்தடி நகரத்தைச் சேர்ந்தவள் கேட்டாள், ”அப்படியானால் இப்போது நீ சொன்ன திட்டப்படி, காலத்தை நாம் வளைக்கிறோமா?”. அதற்கு மலைவாசலைச் சேர்ந்தவள் சொன்னாள் “இல்லை. காலத்தைக் கவனிக்கப் போகிறோம்.”. மூன்றாமவள் இரண்டையும் மறுத்து, “இல்லை காலத்திடம்தான் நாம் கையளிக்கிறோம். அதாவது, கண்ணுக்குப் புலனாகாத அதன் இயக்க வரிசைக்குள் ஒரு சிறு பிழையை நாமாக ஏற்படுத்தி மறுபடியும் அது சரியாகிற சந்தர்ப்பத்திற்குத் திரும்புகிறோம். அதாவது, மின்னல் மோதி அது இன்னொரு பொருளைத் தாக்குவதற்குள் அந்தப் பொருள் இன்னொரு மின்னல் விசையால் தள்ளிப் போவது மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது சூத்திரம் மாதிரி. நாம ஏன் இந்தச் சூத்திர விளக்கத்துக்குள் போக வேண்டும்?. இப்படி சொல்லாமல் வேறுமாதிரி இதைப் புரிந்துகொள்ளலாம். தவறவிடக் கூடாத தருணம் ஒன்று நம் மூவருக்குமிடையே இருக்கும். அதைப் பிடித்துவிடுவதற்குத்தான் இந்த வழி.”

மூவரும் உடனே ஏலாம்பூரின் பழமையான அருங்காட்சியகத்திற்கருகே உள்ள பௌதிக ஆய்கவத்திற்குச் சென்றார்கள். ஆல்ஃபா இயக்கம் உள்ள கடிகாரம் மூன்றை வாங்கினார்கள். ஒருத்தி இன்னொருத்திக்குப் பிடித்த நிறத்தை அவளுக்காக வாங்க வேண்டும் (எல்லா சின்னஞ்சிறிய விசயங்களிலும் இதுபோல விளையாட்டு நடக்கும்). மஞ்சள், நீலப்பச்சை, வெள்ளை. ஒவ்வொருத்தியும் தங்களுக்குப் பிடித்த நிறத்தை மற்றவர்களுக்குள் மாற்றிக்கொண்டார்கள். மணி ஐந்து முப்பது ஆவதற்கு பதினைந்து நிமிடங்கள் எனக் காட்டியது. இப்போது மூவரும் அழவில்லை. பதற்றமும் பயமுமாக நின்றார்கள். இந்த உலகம் அவர்களைச் சுற்றி அவ்வளவு வேகமாகச் சுழல்கிறது. அதன் வேகத்துக்குள் எப்படியும் ஓர் இயக்கம் நிலைகுலைந்து அவர்களுக்கானதைக் காட்டும் என்று நம்பினார்கள். ஒருத்தரையொருத்தர் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக்கொண்டு ஆல்ஃபா கடிகாரத்தின் இயக்கத்தை நிறுத்தவிட்டு, ஏலாம்பூரின் இரயில் நிலையம் நோக்கி ஓடினார்கள். 

நகரத்தில் இதுபோன்று மூன்று திசைக்குரிய இரயில்களுக்கான நடைமேடைகள் ஏலாம்பூர் இரயில் நிலையத்தில் மட்டும் உண்டு. தனித்தனியான வரிசை மூன்று வழித்தடங்களுக்கு. மூவரும் மூன்று தடங்களுக்கான வரிசையில் போய் நின்றதும் ஒருத்தி மற்றொருத்தி தெரிகிறாளா என்று எக்கினார்கள். ஒருத்திக்கு இன்னொருத்தி தெரிகிறாள் இன்னொருத்தி மறைகிறாள். ஆனால் மூவரும் கனிணித் திரையில் நிற்பது தோன்றுகிறது. இந்த உலகமே நம்மளைத்தான் கவனிக்கிறதென்று ஓவெனக் கூச்சலிட்டார்கள். பயணச் சீட்டுடன் ஐந்து மணிக்கான தொடர் வண்டிக்குக் காத்திருந்த சமயம், சொல்லி வைத்தாற்போல மூன்று பேரும் புறப்படுவதற்கான இரயில்கள் வந்து நின்றன. நகரும் படிக்கட்டுகள் வழியாக ஒருத்தி மேலேயும் இரண்டாமவள் கீழேயும் மூன்றாமவள் நேராகவும் இரயிலை அடைந்தார்கள். இரயில் மூன்று வெவ்வேறு திசைகளில் கிளம்பிற்று. அடுத்த கணமே ஆல்ஃபா கடிகாரத்தின் முற்களைக் கவனித்தார்கள். அது முன்னமே அதன் இயக்கப் புள்ளியிலிருந்து விலகி மூன்று கோணங்களில் அதன் முற்களை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டிருந்தது. 

கல்லூரிப் படிப்பு நல்லபடியாக மூவருக்கும் முடிந்தது. அங்கு அவர்களுக்கு புதுப் புது நட்புகள் அமைந்தன. ஆனாலும் பழைய நட்பை எல்லோரையும் போலவே அவர்களால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. ஆல்ஃபா கடிகாரம் காலத்தின் சாட்சியாய் தங்களுக்காக ஓடக் காத்திருக்கிறதென புதியத் தோழிகளிடம் பரிமாறிக்கொண்டார்கள். படிப்பு முடிந்த கையோடு மூவரும் வேலைத் தேட ஆரம்பிக்கையில் இரண்டொரு முறை ஏலாம்பூர் மத்திய நிலையத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிட்டியது. எந்த வேலையாக இருந்தாலும் அது ஏலாம்பூரை நோக்கி இருக்க வேண்டுமென விரும்பினார்கள். நகரத்தின் சமதளத்தில் வசிக்கிறவளுக்கு மின்சார இரயிலில் வேலை கிடைத்தது. சமீப காலமாக அரசாங்கம் மின்சார சேவையை நிறுத்துகிற முடிவை எடுத்திருந்தது. ஆனால் நகரத்தின் புராதனப் பற்றாளர்கள் அதை நிறுத்த வேண்டாம் நினைவோடையில் அதன் ஓட்டம் நிற்பதாக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. தயவு செய்து அது ஓடட்டும் விடுங்கள் என்றதும் மீண்டும் அதன் சேவை ஜனக்கூட்டமில்லாமல் தொடர்கிறது. உண்மையில் அவளுக்கும் இதில் வேலை செய்வது பிடித்திருக்கிறது. எப்படியாவது மூவரும் சந்திக்கிற புள்ளியைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்பதற்காகவே என்றைக்காவது நிற்கப் போகிற வேலையைக் கேட்டு வாங்கினாள். 

ஆனால், மலைவாசல் தளத்தில் வசிக்கிறவளுக்கு சமதளத்திற்குத் திரும்புகிற சந்தர்ப்பங்கள் காலப்போக்கில் குறைய ஆரம்பித்தது. அதாவது, நகரத்தின் அத்தனை தேவைகளும் மலைவாசலுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. இன்னும் புதிய மலைவாசல்களை அரசு தயார் பண்ணிக்கொண்டிருக்கின்றது. செயற்கை நீரூற்றுகள், செல்லப்பிராணிகள், நைட்ரஜன் மழை என அதன் கட்டுமானத் திறனுக்கு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நிறைய சவால்கள் காத்திருந்தன. நகரத்தின் மத்தியிலோ அல்லது வேறு எங்கு குடியிருப்பவர்களும் தங்களுடைய வாரயிறுதிக்கான வீட்டை மலைவாசலில் வாங்கிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் மலைவாசலில் குடியிருப்பு நெருக்கடி அதிகமாகிற்று. நகரத்தின் நான்கு திசைகளிலும் அழகான மலைவாசல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. நகரத்தின் எந்த மூலையிருந்தாலும் மெட்ரோவின் வேகம் அவர்களை மலைவாசலுக்கு அரைமணிக்குள் கொண்டு போய்விடும் என்பதால் மலைவாசலைவிட்டு கிளம்ப ஒருத்தருக்கும் மனம் வரவில்லை. அங்குக் குடியேறுவதை லட்சியமாக வைத்திருந்தனர். மலைவாசல்காரிக்கு சமதளத்திற்குத் திரும்புவது அபூர்வமாக மாறிற்று.

மக்கள் எல்லோரும் எதிர்பார்த்தபடி ஏலாம்பூர் நகரத்தின் மத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடிக்கு ஏற்கெனவே புதையவாரம்பித்துவிட்டிருந்தது. வாகனங்களின் பெருக்கம் கரும்புகை மேகங்களும் ஏலாம்பூர் நகரத்தை அச்சுறுத்தியது. வடக்கிலிருந்து பிழைப்புக்காக இடம்பெயர்ந்தவர்கள் பணியாற்றிய மெட்ரோ நிலத்தடி முழுக்க ஒரு கோலமெனச் சிக்கலான தடங்களை வரைந்துவிட்டது. ஆனால் நகரத்தின் அத்தனை கூலியாட்களின் அன்றாடப்பாடுகள் ஏலாம்பூரை விலக்கவில்லை (அவர்களின் பூர்வக்குடிகளே ஏலாம்பூரை உருவாக்கியவர்கள்). ஏலாம்பூர் அப்பெருநகரத்தின் மத்தியம் என்பதால் உயர் தகவல்தொழில் நுட்பங்கள் ஏலாம்பூரைவிடாது பிடித்திருந்தன. ஆனால் அவர்கள் பாழ்பட்ட நகரத்திற்குப் பதிலாக அதை நகலெடுப்பதுபோன்று இன்னொன்றை நிலத்தடிக்குள் உருவாக்க விரும்பினர். ஏலாம்பூரின் தங்கையெனப் புதிய மத்திமம் நிலத்தடிக்குள் உண்டானது. வாகனத் தயாரிப்பு, தோல்த் தொழிச்சாலை, குடியிருப்பு, மென்பொருள் நிறுவனம் என எல்லாம் நிலத்தடி ஏலாம்பூருக்குள் போனதும் பழைய ஏலாம்பூர் இராணுவத் தளவாடத் தொழிற்சாலையாக மாறிற்று. பழையப் பூர்வ ஏலாம்பூரார்களுக்கு அங்கு நாள் முழுக்க வேலை இருந்தது. நகரைச் சேர்ந்தவள் புதிய ஏலாம்பூரிலேயே இருந்துவிட்டாள் அவள் பிறந்ததே நிலத்தடி நகரத்திற்குள்தான்).

காலம் மூன்று தோழிகளும் நினைத்ததுமாதிரி அவ்வளவு கருணையானது கிடையாது. அது நகர நகர பின்னாலேயே தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. கடந்தக் காலத்தின் அனுபவங்களை அது ஸ்தூலமாக இருக்க விடுவதில்லை. எஞ்சுவது இழந்த உணர்வு மட்டும்தான். மூவரும் தங்களுடையப் பள்ளி இன்னும் அதே தோற்றத்தில் இருக்குமாவெனப் பயந்தார்கள். ஒவ்வொரு நாளின் ஒன்பது பதினைந்தும் மாலை ஐந்து முப்பதும் அவர்களை இரண்டு வெவ்வேறு காலச்சம்பத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டு அனுப்புகிறது. மூன்றில் யாரேனும் ஒருவர் அந்நினைவின்போது கண்ணீர் உதிப்பது வழக்கம். அருகில் இருக்கிற கணவனோ குழந்தையோ நண்பர்களோ அலுவலகப்பணியாளரோ ஆறுதல் படுத்துவார்கள்.

எப்போதாவது பணி நிமித்தமாக மத்திய நகரத்திற்கு வந்து போகிற வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் ஆல்ஃபா கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். பயணத்திலிருப்பவர்களின் கடிகார முள் நடுக்கத்தைக் காட்டும். அது மற்ற இரு முட்களின் அருகாமைக்கு வந்து போகத் துடிக்கும். ஆனால் ஒருநாளும் மற்ற இரண்டையும் தொடவில்லை. மாதங்கள் வருடங்கள் என கடிகார முட்களின் நகர்வு அப்படியே இருந்துவிடும்போது கடிகாரம் வேலை செய்கிறதா பழுதாகிவிட்டதா என்றுகூடத் தோன்றியிருக்கிறது. சமயத்தில் திடீரென்று அது வேகமாகச் சுற்றி நிற்கும். அப்போது சுற்றாத மற்ற இருவரும் பயணத்தில் இருக்கும் மூன்றாமவளை நினைத்துக்கொள்வார்கள். 

மூவரும் தங்கள் குழந்தைகளிடம் கடிகாரத்தின் கதையைச் சொன்னார்கள். யாராவது கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு பயணித்தார்களென்றால் அவர்களிடம் விசாரிக்கச் சொல்வார்கள். கடிகாரம் அணிவதையே குழந்தைகள் அதுவரைப் பார்த்ததில்லை. தோழிகளுக்கு நகரத்திற்கு வருகிற சந்தர்ப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டன. ஆனால் கடிகாரம் இன்னும் கைகளில்தானிருக்கிறது. நகரத்தின் சமதளத்திலிருக்கிறவளின் முள் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். 

ஒவ்வொரு பத்தாண்டு முடியும்போதும் அவர்களது ஆசை பத்தில் ஒரு பங்காகக் குறைய ஆரம்பித்தது. மூவரும் பல நாட்கள் கடிகாரத்தைக் கவனிப்பதை நிறுத்தியதும் உண்டு. ஐந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டபோது ஒருசமயம் இரயில் பயணத்திலிருக்கையில் ஆல்ஃபா கடிகாரத்தின் முட்கள் துடிப்பதை மூவரும் கண்டனர். அது இயங்குவதற்குத் தயாரானதன் அறிகுறி. மூன்றுபேரும் தாங்கள் பயணத்திலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர். மூவருக்கும் இதயம் வேகமாக அடித்தது. முகங்களில் கட்டற்ற மகிழ்ச்சி. உடனே மூன்று இரயில்களும் நிறுத்தப்பட்டன. நகரத்தின் மத்தியிலுள்ள பட்டாம்பூச்சி மியூசியப் பூங்காவுக்கு அருகில் மூன்று இரயில்களும் ஒன்று நிலத்தடியிலும் இன்னொன்று பூங்கா வாசலிலும் மூன்றாவது பூங்காவுக்கு மேலேயுமாக நின்றன. மூன்று தோழிகளும் கடிகார முள்ளைப் பார்த்துக்கொண்டே அவசரவசரமாகப் பட்டாம்பூச்சிப் பூங்காவுக்கு வந்து சேர்ந்தனர். அதன் வாசலில் மூன்று தோழிகளும் வெவ்வேறு வயதில், தோற்றத்தில், உருவ வேறுபாட்டுடன் யாருக்கோ காத்திருப்பதுபோல மூன்று திசைகளை நோக்கி அமர்ந்திருந்தனர்.

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

கதாபாத்திரம்

0

ரமேஷ் ரக்சன்

நான்ஸி!

.

‘தவறுதலாக கை பட்டு வந்துவிட்டது. உடனே துண்டித்துவிட்டேனே அப்படியுமா உனக்கு அழைப்பு வந்ததென’ கேட்டுத் தப்பித்துக்கொள்ளும் வகையில் இருந்தது அந்த அழைப்பு. இந்தியாவிற்கு வருவதாக இருந்தாலும் நாட்கள் இருக்கிறதே! கேள்வியெழவும் திரும்ப அவளுக்கு அழைக்கும் முன், ’வாட்ஸப் பார்’ என்றது உள்ளுணர்வு.

”நான் உன்னோட நினைவுகளோட போராடுறனா இல்ல என்னோட காதலோட போராடுறனான்னு தெரியல”. – காதலில் திளைத்தகாலத்தில் ஆண் சுமக்கத் தகுதியான அனைத்து கிரீடங்களையும் விவேக்கிற்கு சூட்டியிருக்கிறாள். இது மிச்சவாழ்க்கைக்கும் போதுமான கர்வமாக இருந்தது. அதே நேரத்தில், அலட்சியமும் குடிபுகுந்தது. எதை நிராகரிக்கவேண்டுமென்ற தெளிவில்லாமல், வரவேற்பறையிலிருந்து எழுந்து வெளியே வந்தான். 

நானும் இந்தக் காதலை சுமக்கத் தெம்பில்லாமதான் வாழ்ந்துட்டு இருக்கேன் | ஊருக்கு வந்திருக்கியா | இத்தனை வருசமா என்னோட போராட்டமும் இதுதான் | நீ சொல்லிட்ட. எனக்கு இப்படி கனகச்சிதமா சொல்ல வரல | எனக்கு கண் நிறையுது | கடைசியா பேசி ஒன்பது மாதம் ஏழு நாள் ஆகுது | உன்னோட 8 வருட கல்யாண வாழ்க்கைல…

எதைச் சொல்லலாமென்று முடிவெடுப்பதற்குள் அனுப்பியிருந்த செய்தியை அவனுக்கும் சேர்த்து அழித்திருந்தாள்.

”ஒருவாரமாவே நாம பார்ப்போம்னு எனக்கு தோணிக்கிட்டே இருந்தது. ஆனா எந்த நாட்டில் இருக்க? இந்தியா வந்தா எந்த ஊர்ல இருப்ப? எத்தனை நாள் இருப்ப? இப்படி எந்தக் கேள்வியும் இதுக்கு முன்னாடியும் உங்கிட்ட கேட்டுக்கிட்டதில்ல. அதை நீ அனுமதிச்சதும் இல்ல. அதனால அந்த தோணலை நான் மதிக்காம விட்டுட்டேன்”. 

”மேடவாக்கம் வீட்ல வாடகைக்கு இருந்தவங்க குடும்பத்துல ஒரு சாவு. வீடு வாங்கினதுல இருந்தே ஒரே குடித்தனம். எல்லா பராமரிப்பும் அவங்களே பார்த்துக்கிட்டாங்க. எங்களுக்கு எந்த செலவும் வச்சதில்ல. இப்ப காலி பண்ணிட்டாங்க. அதான் வீட்டைப் புனரமைச்சி வாடகைக்கு ஆள் பார்த்து விட்டுட்டு போகலாம்னு வந்திருக்கேன். வேலை முடியுற வரைக்கும் இங்க இருப்பேன்”   

”பார்க்க வரவா?”

”வேணாம்”

அவளுக்கு அவன் அருகாமை தேவைப்பட்டது. ஒரு சின்ன மீறல். ஆனால் அது அவனது கேள்வியைப் பொருத்தே தீர்மானிக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.  கூடவே அவனைச் சந்திக்காமலே அவனது தத்தளிப்பை ரசிக்கவும் விரும்பினாள். ஆனால் அதைத் தீர்மானிக்கும் உரிமையை, அவனுக்குத் தெரியாமலே அவனிடம் கையளித்திருந்தாள்.

விவேக் தேர்ந்தெடுத்தது “வரவா” என்பதைத்தான்.

அவளுக்கு சிறு ஏமாற்றமும், கூடவே நிம்மதிப் பெருமூச்சும். இந்தத் தனிமையின் மீதெழும் காமத்திற்கு தீனிபோடும் நிர்பந்தம் மிச்சமிருக்கிற நாட்களுக்குள் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உறுதி பூண்டாள். அதனையொட்டி இன்னும் இரண்டு பதில்கள் அவனிடமிருந்து தேவைப்பட்டன. பெயிண்ட் வாளிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரவேற்பறையின் புகைப்படத்தை அனுப்பினாள். 

சுவற்றில் மாட்டியிருக்கும் புகைப்படங்கள், ஓரமாக இருக்கும் தொட்டிச்செடிகள், இருக்கைகள் இப்படி எதுவுமே தெரியாத வண்ணம் மேலிருந்து கீழ்நோக்கி நண்பர்கள் குழுமியிருந்து குடியும், சீட்டு விளையாட்டுமாக அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை அவன் எடுத்தான். 

தயக்கத்தோடு வரவா என்றானா..

சந்திக்க விருப்பமில்லாமல் வரவா என்றானா…

இருவருக்குமான உரிமையை இழந்தபிறகு மிச்சமிருக்கும் வேட்கையையும் நினைவுகளையும் வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் ஆடிவிட முடியும்? தாமதிக்காமல் அந்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தான். 

அவனிடமிருந்து அவனது அவஸ்தை நிறைந்த கதையொன்று அவளுக்குத் தேவைப்பட்டது. அதில், அவனுள் அவள் இன்னும் எவ்வளவு நிறைந்திருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள். அது போதுமா என்றால், நிறைவேறாக் காதலில் அதற்குமேல் எதிர்பார்ப்பது, ஆணிற்கு சாதகமாகவே முடியுமென்ற தீர்க்கத்தை எப்போதோ எட்டியிருந்தாள். உடல் பங்கீடு, பொருளாதார உதவி, அந்தரங்க உரையாடல்கள் இப்படி எதுவும் இல்லையென்றாலும் அனுகூலம் என்னவோ ஆணுக்குத்தான் என்கிற திண்ணம். விவேக் படிக்கும்வரை காத்திருந்து அழித்த அந்த செய்தியும் அதனுள் அடக்கம். 

அவனுக்குப்போட்ட தூண்டில்தானே ஒழிய, தன்னை இழந்துவிடவில்லையென நம்ப வைக்க முயன்றாள். ஆனால், அவனன்றி வேறேதோ அவளை வென்றுவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றிற்கு தீனி போட்டதற்காக, அல்லது என்னவென ஆராய விரும்பாமல், அவள் சார்ந்த நினைவுகளைப் பதிலீடாக தெரிந்துகொள்ள விரும்பினாள். 

”எனக்குத் தூங்கனும், அதே நேரத்துல உங்கிட்ட கதையும் கேட்கனும். நம்ம மெமரீஸ்ல இருந்து எதாவது சொல்லு” 

சென்னையில் மிச்சமிருக்கப்போகிற நாட்களுக்கு, இப்போது விவேக் சொல்லப்போவதுதான், தேநீர், உந்துவிசை, எரிபொருள். போலவே சந்திக்க முன்னெடுக்கும் தன் மனவோட்டத்திற்கான வேகத்தடையாகவும் அது அமையும் என்பதை அறிந்திருந்தாள். 

நம்ம காதலுக்குப் பிறகு, என் கல்யாண வாழ்க்கைக்கு நடுவுல ஒரு affair வந்து போனது. Affair-னு கூட சொல்லிட முடியாது. Flirt – அளவுல நிறுத்திட்டேன். அவகிட்ட கடைசியா சொன்னது “என்னோட காதலி ஞாபகம் வரமாதிரி நீ நடந்துக்ற”. 

எனக்கு துரோகம் பண்ற மாதிரி இருந்துச்சா இல்ல உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுற மாதிரி இருந்துச்சா? – அவளின் பதிலறிந்து அழித்தான். 

அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையில், கத்துவதோ, வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிடுவதோ ஓர் நல்ல ஆணிற்கு அழகில்லையெனக் கொள்கை கொண்டிருந்த என் அறைத்தோழன், பொறுமையிழந்து கிளை மேலாளரின் மூக்கை உடைத்து ஒருவாரம் ஆகியிருந்தது. மிக நெடிய மனப் போராட்டத்திற்குப்பிறகு அரசு வேலைக்குப் படிப்பதென தீர்மானம் எடுத்தான். அதற்குத் தேவையானவை என்னவென்று தெரிந்துகொண்டான், புதிய பாடநூல்கள் வாங்குவதற்கு ஆகும் செலவைத் தவிர்க்கப் பழைய புத்தகக்கடையை நாடுவெதென முடிவெடுத்து என்னையும் அழைத்துக்கொண்டு சென்றான். என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டுமென்ற குறிப்பு அவனிடமும், அதே குறிப்பு என்னிடம் புகைப்படமாகவும் இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கத்தை அவனுக்காக தியாகம் செய்தது, மழைக்கான புழுக்கம், மின்சார துண்டிப்பு, பழைய புத்தகங்களின் நெடி, அவனுக்காகப் புத்தகம் தேடுவதில் நாட்டமில்லாமல் ஆக்கியது. 

ஒரு ஆள் மட்டுமே போகமுடியும் அளவிற்கு நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரிக்குள் அலைபேசியில் உள்ள டார்ச்சை ஒளிரவிட்டு, ஒவ்வொரு வரிசையாக சென்று வந்தேன். மேலோட்டமாக பார்த்துச்சென்றதில் வேத நூல்களும், பழைய பைபிள்களும் நிரம்பிய அலமாரி கண்ணில்பட்டது. அங்கிருந்ததிலேயே ஆகத்தடிமனான பைபிளை எடுத்து முதல் பக்கத்தைப் புரட்டினேன். அதில் பென்சிலால் எழுதியிருந்த எண்களின் நளினம், தானொரு பெண் என்றது. பெயரிடப்படாத பைபிளின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். அச்சடிக்கப்பட்டிருந்த வருடம் 1991. நீ பிறந்த வருடம். 

இதுவரையில் அவன் தன்னிடம் சொல்லாத கதை. விபரீதம் உணர்ந்தவளாய் சுதாரித்தாள். தன்னை வீழ்த்துவதற்கான அத்தனை அஸ்திரங்களும் நிறைந்திருக்குமென பொறி தட்டியது. ஆனாலும் மனதிற்குள் மட்டுமே அவளால் போதுமென சொல்லமுடிந்தது, 

பைபிளின் முகப்பில் பென்சிலால் குறித்து வைக்கப்பட்டிருந்தது, தேர்வு எண். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களை விடுவித்ததில், அதே எண்கள் வட்டவட்டமாக வெட்டிய காகிதத்தில் பல்வேறு வண்ணங்களில் ஆங்காங்கே சொருகி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் புரட்டியதில், சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, பக்கத்தின் இடுக்குகளிலும் கொஞ்சம் சிதறியும் இருந்ததைப் பார்த்ததும், அந்தப்பக்கத்தை மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் புரட்டியதில் இன்னோர் பக்கத்தின் நடுவே ’மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க’ – என வரிக்கு மூன்று வீதம் நுணுக்கி நுணுக்கி எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். ஏனோ அதில் எழுதப்பட்டிருக்கும் அத்தனை தடவையும் மரியே வாழ்க என்று சொல்லத்தோன்றியது. கேட்கத்தவறிய மன்னிப்புகளும், பகிர்ந்துகொள்ளத் தவறிய செய்திகளும், மரியே வாழ்க மரியே வாழ்க என்றானது. காற்றின் அழுத்தம் அதிகமாகி வெடித்துவிடும் பலூனின் நிலையை எட்டியிருந்தது மனது. மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க. என்று வாய்விட்டுச் சொன்னேன். மறுபக்கத்தை திருப்பினேன். மரியே வாழ்க! முழுவதுமாக சொல்லி முடிக்கும்போது மனதிலேற்றியிருந்த பக்க எண் காணாமல் போயிருந்தது. 

*

’ஏதாவது சொல்’ எனக் கேட்டதும், ஞாபகத்திற்கு வந்த அந்தப்பெண்ணின் முகத்தை விவேக் நினைவு கூர்ந்தான். அந்த முகம் என்னவாக எஞ்சியிருக்கிறது? நான்ஸியைப் பழிவாங்கப் பயன்படும் அஸ்திரமா? குற்றவுணர்ச்சியா? தவறவிட்ட வாய்ப்பா? 

விவேக், அந்தக் காகிதக்குவியலைக் காண மீண்டும் முதலிலிருந்து பைபிளைப் புரட்டினான். எளிதாக அகப்பட்டது. பைபிளிலிருந்து வெளியிலெடுக்காமல் அதனுள்ளேயே காகிதத்துண்டுகளைப் பரப்பியதில் விடுபடலுக்கான மன்னிப்புக் கடிதம் என்பது புலப்பட்டது. ”Sorry, Please, Love, மன்னிச், உன்னால, எப்படி, இனி, எனக்கு, எல்லாம்” அதிலிருந்து பொறுக்கியெடுத்த சொற்கள். 

*

மீண்டும் பக்கத்தைப் பின்னிருந்து புரட்டியதில் காகிதக்குவியல் நிறைந்த பக்கம் கண்ணில் பட்டது. என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தும் தயக்கம் மேலோங்கியிருந்தது. எதிரிலிருக்கும் உன்னிடம் கையை நீட்டச்சொல்லி உள்ளங்கையை வருடுவது போல அந்தக் காகிதங்களை அப்போது வருடினேன். உன் அனுமதி இல்லாமலே உன்னைத் தொடுவது போலிருந்தது. இத்தனை வருடங்களாக உன்னிடம் சொல்லாமல் அடிக்கடி மனதிற்குள் ஓட்டிப்பார்த்த்தில் எது உண்மை எது கற்பனையென்று இப்போது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது மன்னிப்புக் கடிதம். நீ எழுதினது மாதிரியும் இருந்தது. அதே நேரத்தில் நான் எழுதினது மாதிரியும் இருந்தது. மரியே வாழ்க மட்டும் எப்படி அந்தப் பெண் எழுதியதாகத் தோன்றியதோ அப்படித்தானே இதுவும் அதே பெண் எழுதியதாகத் தோன்றியிருக்க வேண்டும்? இரண்டும் ஒரே கையெழுத்து. நான் எப்போதோ உனக்கு எழுதியிருக்கவேண்டியது. காகிதக்குவியலிடம் மன்னிப்புக்கேட்டேன். எல்லா வாசல்களும் திறந்திருந்தாலும் உள்ளே நுழைய மறுக்கும் அகந்தையை மண்டியிட வைத்து அந்தக் காகிதத்திடம் மன்னிப்புக் கேட்டேன். அந்தப் பக்கத்தில் வைத்திருப்பதற்கு, ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்குமாவென பைபிளின் அதிகாரத்தைப் பார்த்தேன். வசனங்களை வாசித்தேன். 

நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; 

பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டுமென்ற முடிவை இருவரும் எடுத்ததாக நினைவு.

நாம் இந்தப் போர்க்களத்தில் கண்டது வெற்றியா தோல்வியா? 

மூன்று அலைபேசிகள், ஒரு மடிக்கணினி மாற்றிய பின்னும், தன்வசம் வைத்திருந்த புகைப்படத்தை முதன்முறையாக அவளுக்கு அனுப்பினான். புகைப்படத்தை விரித்துக் குறுக்கினாள். ஏனோ அவள் மனம் அந்த காகிதத்துண்டுகளின்மேல் குவியாமல் புரண்டு படுத்தது. உடனடியாகப் புகைப்படத்தை அழித்தாள். 

தனக்குள் மேலெழும்பிய திசையற்ற எண்ணவோட்டங்களை, உணர்ச்சிப்பிழம்பை தவறவிட்ட கணங்களை நினைத்து வருந்துவதா, இல்லை இந்தச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொண்டதற்காக மூச்செறிவதாவென குழம்பினாள். விவேக் தன்மேல் கோபப்பட விரும்பினாள். கத்த வேண்டுமென்று விரும்பினாள். பழிச்சொல்லை, அவப்பெயரை தூற்றுவது போல நினைத்துப்பார்த்தாள். தன்னை மூர்க்கமாகப் புணர்ந்து அலைக்கழித்துப் போட்டுவிட்டு ஒழிந்தானெனில் இத்தோடு தலைமுழுகிவிடலாம்.

”நான் உன்னோட நினைவுகளோட போராடுறனா இல்லை என்னோட காதலோட போராடுறனான்னு தெரியல. ஒன்னுமட்டும் என்னால உறுதியா சொல்லமுடியும். என்னோட இந்தப் போராட்டத்துக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருக்கவே கூடாது. நீ இந்தக் காதலுக்கு தகுதியானவனே கிடையாது.” 

படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தவன், எழுந்து கழிப்பறைக்குள் நுழைந்து முகத்தைப் பார்த்தான். அவன்போலவே இருக்கும் இன்னொரு அவன். இருவருக்குமான வித்தியாசம் அவள் சொற்களில் இருந்தது. நீராவி படிந்துகிடந்த முகத்தை துடைத்தெடுத்தான். நான்ஸியின் உதாசீனச்சொற்கள், கிரீடத்தில் மின்னின. கண்ணிற்குப் புலப்படாத அவளின் கண்ணீரை தண்ணீர் கலக்காத விஸ்கியைப்போல பருகினான். தான் அவள் நினைவில் மடிந்துபோவதும் நான்ஸி பிழைத்துக் கிடப்பதும் தராசின் ஒரே பக்கத்திலிருப்பதை ஊர்ஜிதம் செய்தான். அதை சமன் செய்ய விரும்பினான்.

“நான் வேணும்னா ’live location’ அனுப்புடின்னு” கேட்டுவிடவா என்று எதிர்தட்டில் ஏறி அமர்ந்தான்.

நான்ஸி வெளியேறினாள்.

***

ரமேஷ் ரக்சன் : திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர். NBFC துறையில் பணி செய்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் வெளியாகியிருக்கின்றன. “16” சிறுகதைத் தொகுப்பிற்கு ’கலகம்’ விருதும், “ரகசியம் இருப்பதாய்” சிறுகதைத் தொகுப்பிற்கு ’ஜெயந்தன் விருது’ம் வென்றிருக்கிறார். மின்னஞ்சல் : rameshrackson@gmail.com

மையெருமை கண்டெத்திய இலக்கிய வெளி

0

சால்வாடி ஈஸ்வரன்

புதிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு நான் செய்யும் முதல் காரியம் புத்தகங்களை பிரித்து அந்த புதிய மணத்தை முகர்ந்து பார்ப்பது. அலையாத்தி செந்தில் எழுதி இருக்கும் மையெருமை புத்தகத்தை பிரித்து முகர்ந்து பார்த்ததில் வண்டல் மண்வாசனை அடித்தது! இழந்து கொண்டிருக்கும் கிராமத்து அழகியலை அந்தந்த மண்ணின் சொற்களால் தான் மீட்டெடுக்க முடியும் என்று உணர்ந்த தருணம் அது.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ஒரு குறிப்பிட்ட ஊருக்கு போகும் பேருந்து எங்கிருந்து கிளம்பும் என்று கேட்கிறார் அதற்கு நாம் பதில் சொல்லிவிட்டு உங்களுக்கு கோயம்புத்தூர் பக்கமா என்று கேட்க ஆச்சரியமாக ஆமாம் என்று சொல்ல எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டவரிடம் உங்க பேச்சிலேயே அது தெரியுது கொங்கு மணம் வீசுது என்று சொல்ல இருவரும் சிரித்து விட்டு விலகுவதற்கும் அவருடனே நாலு மணி நேரம் அதே வட்டார வழக்கில் பேச்சைக் கேட்டுக் கொண்டு பயணப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது மையெருமை இரண்டாம் ரகம்.

ஐந்து நிமிட உரையாடலில் கேட்கக் கிடைக்காத பல வட்டார வழக்கு வார்த்தைகள் நாலு மணிநேர பயணத்தின் போது காதில் விழுவதும் ஆச்சரியமும் அதே சமயம் இந்த சொல் நம் வட்டாரத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விசாரணையும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

பல பேச்சுப் பேசினாலும் ஏதோ ஒரு இடத்தில் இருவருக்கும் பொதுவான, இருவருக்கும் இணக்கமான ஒரு மையப் புள்ளி உரையாடலை நீளமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிவிடும். பெரும்பாலும் அப்படிப்பட்ட மையப்புள்ளி மனித இனத்திற்கு பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும். அரசியல், வாழ்வியல், விவசாயம் என்று ஏதோ ஒரு இடத்தில் இருவரும் இணைவோம்.

மையெருமை அப்படி ஒரு இயற்கையான இணைப்புப்புள்ளியை அலையாத்தி செந்திலுக்கும் நமக்கும் ஏற்படுத்திவிடுகிறது. “உழவுக்கு டிராக்டர் வேண்டாம் ஏனென்றால் டிராக்டர் சாணம் போடாது” என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் சாணம் என்பது இயற்கை உரம். உழவு செய்யும்போது மண்ணின் மேற்பரப்பு அடிமண் இரண்டும் புரட்டிப் போடப்படும்போது அதோடு சாணம் கலக்க வேண்டும். இது ஒருவித சுழற்சி. சாணம் போட மாடு வேணும், மட்டைக் காக்க உழவன் வேண்டும், உழவன் பயிர் செய்யும் பயிர்கள் சந்தைப்படுத்தப்பட்டு வரும் வருமானம் அவனுக்கு மட்டுமல்லாமல் அவனுடன் பணிபுரியும் மாட்டைக் காக்கவும் பயன்படும். இந்தச் சுழற்சியில் எந்தக் கண்ணி அறுபட்டுப் போனாலும் பாதிக்கப்பட போவது உழவன் மட்டுமல்ல எல்லோரும் தான். இப்படி உழவுக்கு ஆதாரமான ஒரு கண்ணி எருமை.

கதை ஆசிரியரின் தந்தையான திரு.வை.இராசரெத்தினம் அவர்கள் “கருப்பட்டியிலேயும் கல்லு இருக்கும் கவனமென” கூறியதை இப்பேருலகின் இனிப்பைக் கண்டு ஆர்ப்பரிக்காது நிதானிக்க எச்சரித்த என் அப்பாவுக்கு என்று அவருக்குக் காணிக்கையாக்கி நாவலை ஆரம்பித்து இருப்பது முயற்சியின் அழகு.

அலையாத்தி செந்தில் இந்தக் கதையை ஏன் எழுதி இருக்கக் கூடும் என்ற கேள்விக்கு புத்தகத்திலிருந்தே பதிலை எடுத்து விட வேண்டும் என்று தேடினேன். ஒரு இடம் சற்று உறுத்தலாக இருந்தது “காரித்தாய்ப் பிரசன்னம்” பகுதியில் வேங்கையனின் ரத்த ருசி பற்றிச் சொல்லும்போது அவன் தாயைப் பற்றி கூறுகிறார். அப்பன், அண்ணன், புருஷன், பெத்த பிள்ளை என்று வரிசையாக பலி கொடுக்கத் துணியும் தாயைப் பற்றிச் சொல்லிவிட்டு “ஆயாக்காரினா அவ ஆயாக்காரி இப்பயும்தா இருக்காளுவுளே பிள்ளைகள திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் கடல் கடந்து எங்கேயோ தீவு தேசத்துக்கும் வெம்பாலையா கிடக்கிற காஞ்சவனத்துக்கும் கிழக்கையும் மேற்குமா விரட்டி விரட்டிவிட்டு சம்பாரிச்சு வாக்கெட்ட போட்டுக்க நிற்கிறாளுவுளே” என்ற வரிகளில் தொணிக்கும் ஆதங்கம் சொந்த மண்ணில் விவசாயம் செய்து திளைத்துக் கிடப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டு மண்ணில் அவதிப்படும் எத்தனையோ விவசாய குடும்பத்து ஆண் பிள்ளைகளின் பிரதிநிதிக் குரலாக அலையாத்தி செந்தில் குரல் எழுப்பி இருந்தால், ஒருவேளை விவசாயத்தை எருமையாக ( metaphor) சித்தரித்து இருந்தால், சாதி மத வேறுபாடுகளைக் கடந்து போற்றப்பட வேண்டிய விவசாயத்தின் முக்கியத்துவத்தை தொலைத்து விட்டு தேடும் படலமாக மையெருமை உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது!

மையெருமை சமகால தமிழ் இலக்கியத்தில் விவசாயம், மண், மரபு, மனிதர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் ஒரு ஆழமான சிந்தனைக்கு. உள்ளாக்கும் நாவலாக விளங்குகிறது. இந்த நாவல் வெறும் ஒரு கதை அல்ல; அது நம் மண்ணின் நினைவுகளையும், இழந்தொழிந்த விவசாய மரபுகளையும், மனிதன் இயற்கையுடனான உறவையும் மீட்டெடுக்கும் ஒரு சமூக இலக்கியப் படைப்பாகும்.

விவசாயம்: தொழிலல்ல, ஒரு உயிர் உறவு

இன்றைய காலத்தில் விவசாயம் என்பது ஒரு “தொழில்” என்று கருதப்படுகிறது; ஆனால் நாவல் நம்மை அந்த எண்ணத்திலிருந்து விலக்கி, விவசாயம் ஒரு உயிர் உறவு என்று மீண்டும் நினைவூட்டுகிறது. டெல்டா பகுதியின் வளமான மண்ணில் உருவான கதாபாத்திரங்கள், தங்கள் நிலத்துடன் கொண்டுள்ள அந்த ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றனர்.

‘மையெருமை’ நாவல் விரியும் புவியியல் வட்டாரம் — வண்டல் மண் — வெறும் பின்னணியாக இல்லை, இந்த கதையின் ஆதாரம். இந்த நாவலில் காவிரி நதி ஒரு தெய்வம் போலவும், ஒரு உயிரோட்டம் போலவும் நடக்கிறது. அவள் பாயும் இடமெல்லாம் மனித உறவுகளின் முரண்பாடுகள், நம்பிக்கைகள், மாயைகள், துயரங்கள் எல்லாம் கலந்துகிடக்கின்றன. வண்டல் மண்ணில் வாழும் மக்களின் வறுமை, தங்கள் நிலத்தை இழந்து வெளிநாடுகளுக்கு போகும் அவசரம், இழந்த பண்பாடு — இவை அனைத்தும் ஒரு பெரும் தத்துவக் களத்தில் கலந்துவிடுகின்றன.

இக்கதை மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 

  • அரமங்காட்டு மந்த்ரமூர்த்தியூடு
  • அஞ்சன மைப் பிரசன்னம்
  • காரித்தாய்ப் பிரசன்னம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அவரது எழுத்து நடை வாசிப்பில் தொய்வை ஏற்படுத்தியது என்பது உண்மை. வாசிப்பில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. காரணம் அவரது வட்டார வழக்கு.

மூன்று மனிதர்கள் — மூன்று நிலங்கள்

கதை மூன்று முக்கியமான கதாபாத்திரங்களைச் சுற்றி விரிகிறது- சிவஞானத் தேவர், சந்தன கோனார், மருதய வேளாளர்.

இவர்கள் மூவரும் நிலத்தின் குழந்தைகள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சனைகள், தனித்தனி தேடல்கள். சிவஞானத் தேவர் தனது பங்குப் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். சந்தன கோனார் எருமையை இழந்து வாடுகிறார். மருதய வேளாளர் பங்காளிப் பிரச்சனையில் சிக்கி அவமானப்படுகிறார். இந்த மூவரின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை எல்லாம் மந்த்ரமூர்த்தியின் வீட்டில் ஒன்றாக இணைகின்றன — அதுவே நாவலின் மையப் புள்ளி.

மந்த்ரமூர்த்தி – நவீன புராண நாயகன்

மந்த்ரமூர்த்தி என்ற இந்தக் கதாபாத்திரம், நவீன தமிழ்ச் சமூகத்தில் மறைந்து போன “மனித மாயையின்” உருவமாக நிற்கின்றான். அவரது வாழ்க்கை துயரத்தின் அடிப்படையில் தொடங்குகிறது — சீட்டு கம்பெனியில் சரியான மேலாண்மை இல்லாமல் பணத்தை இழந்த தந்தை, தற்கொலை செய்த தாய். ஊரை விட்டு ஓடிப் போகும் மூர்த்தி, பல வருடங்கள் கழித்து சில சக்திகளைப் பெற்றுவிட்டு, மீண்டும் தாய்மண்ணில் திரும்பி, வெற்றிலைத் தடவி குறி சொல்லும் மந்த்ரவாதியாக மாறுகிறார் மந்த்ரமூர்த்தி.

கருமை என்பது புலப்படாதது. அண்டம் போல தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் ஆற்றல் உடையது. அக்கருமையை ஊடுருவி அறிந்து கொள்ள முயல்வதும் அதன் மூலம் இந்நிலத்தின் வரலாற்றைக் கூறுவதும் நல்ல முயற்சி. ஆண் வெற்றிலையை மந்த்ரமூர்த்தி எடுத்து, அதில் அஞ்சன மையை நடுவிரலால் தொட்டு வழிச்சி வெத்தல நடுவ இடவலமா வட்டமா தடவி எதிர்ல்ல பச்சரிசி நெரவி இருந்த தாம்பலத்துல நடுச்சமதில வச்சி கண்ண மூடி கும்புட்டுக்கிட்டான். அந்த அஞ்சன மையில காளியோட கண் வந்து குடிபுகும். பின்னர் எல்லாவற்றையும் அந்த மையினூடாகப் பார்க்க முடியும்.

மாயம் – யதார்த்தம்: எது உண்மை?

இந்த நாவலின் மிகப் பெரும் வலிமை ஒரு குழப்பம்தான். நாம் படித்துக் கொண்டிருப்பது மாய யதார்த்தமா அல்லது எதார்த்தத்தில் இதெல்லாம் மாயமா என்பதுதான். உதாரணமாக,

  • எருமைகளும் வரிக்குதிரைகளும் ஒன்றாக ஆற்றைக் கடப்பது, ஆற்றில் முதலை துரத்துவது
  • தொலைந்த எருமையை இயேசு, அல்லா, கிருஷ்ணர் ஆகிய தெய்வங்கள் தத்துவங்களில் தேடுவது
  • புதிதாகக் குடியேறும் இனக் குழுவில் தேடுவது
  • நீலகிரியில் தேயிலைத் தோட்டம் அமைக்க வந்த ஆங்கிலேயர்கள் நூற்றுக்கணக்கான எருமைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது —
    இவை அனைத்தும் நிஜமும் மாயையும் கலந்த காட்சிகள்.

இதில் ஒரு பக்கம் வரலாறு, மற்றொரு பக்கம் அதற்குள் உறைந்த புராணம். இதுதான் அலையாத்தி செந்திலின் தனித்துவம் — மாயயதார்த்தம் (Magical Realism) என்பதைக் கிராமிய மொழியில் உயிரோட்டமாக்குவது.

மந்த்ரமூர்த்தி சொல்லும் கதை இயேசுவைப் பற்றியதாக இருக்கிறது. நல்லா உசந்த ஆளுப்பா. கையில ஒத்தக் கம்ப ஊனி ஒரு கல்லு திட்டுல உக்காந்து இருக்கானப்பா. வயசு எப்படியும் ஒரு முப்பது இருக்கும். மடியில ஒரு ஆட்டுக்குட்டி. மேய்ச்சல்ல ஆடுகள் நிக்கிறது தெரியுதப்பா ஆட்டுக்குட்டி பயந்து போய் படபடப்பாக மடியில அமர்ந்து இருக்க இயேசுவை சிலுவையைச் சுமக்க வைத்து மலை உச்சிக்குச் சென்று சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்து சிலுவை ஏற்றிய காட்சியை விவரித்துள்ளார். முழுக் காட்சியையும் விவரிக்கும் போது அவரது குரல் தழுதழுத்தது. தேவரும் கோனாரும் தம் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்தாமல் உட்கார்ந்து இருந்தனர். இதில் உள்ள சிறப்பு யாதெனில் அவர் இயேசு என்ற பெயரைக் குறிப்பிடவே இல்லை. நமக்கு வரலாறு தெரிந்தபடியினால் இயேசுவை குறிப்பிடுகிறார் என்பதனை உணர முடிகிறது.

மந்த்ரமூர்த்தி எங்கோ உள்ள காட்டுக்குள் ஆற்றங்கரையில் உள்ள எருமையை கண்டு அதைப்பற்றி சொல்கிறார் உடனே கோனார் தன் பக்கத்திலிருந்த தேவரைப் பார்த்து இவர் சொல்கிற அடையாளம் தன் எருமை இல்லை என்பதைப் போல் சைகை செய்கிறார். அதைக் கேட்ட தேவர் சரி மூர்த்தி செத்த அங்கிருந்து சனி மூலப் பக்கமா தேடி பாருப்பா இது என்னமோ நம்ம கோனார் எருமை மாதிரி தெரியல என்றபோது ரவி மெல்லிதாகச் சிரித்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த அவன் மனைவி சுதா அவன் காலைக் கிள்ளினாள். சுதாவின் நகை களவு போகிறது. அதனைக் கண்டுபிடிக்க சுதா இங்கு வந்திருந்தாள். ரவிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை. அவன் ஒரு வெட்னரி டாக்டர். போலீசுக்குப் போகலாம் என்றான். அவள் பிடிவாதமாக அவனை இங்கே கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். திருமணம் முடித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன இவர்களுக்குக் குழந்தை இல்லை ( பின்னால் பேயின் ஒரு சூழ்ச்சிக்கு இது பயன்படுகிறது).

அடுத்ததாக முகமது நபியின் வரலாற்றை தனக்கே உரிய வட்டார மொழியில் கதையாக கூறுகிறார் மந்த்ரமூர்த்தி. முகமது நபியின் பெயரும் இவரால் சுட்டப்படவில்லை. அடுத்ததாக சிந்துவெளி கால மக்களது வாழ்க்கை முறை, கட்டிட அமைப்பு, நிர்வாக ஒழுங்கு, பண்பாடு,கலாசாரம், பசுபதி வழிபாடு போன்ற வரலாற்றைக் கதையாகச் சொல்கிறார். அதுமட்டுமின்றி அங்கு எருமை நிற்பதையும் கூறுகிறார். 

எருமையின் அடையாளங்களைக் கூறும் போது அதன் கொம்புகள் சுருட்டியுட்ட மாதிரி கொம்பு. நெத்தியில வெள்ளப் பொட்டு, நெத்திப்பொட்டு கழுவி மூக்கு வர ஒழுவிருக்கு. இப்படிச் சொல்லிக் கொண்டு போகும் போது கோனாரு முகம் வாடிக் குறுக்கிட்டு, “நெத்திப் பொட்டா…..நம்ம எருமைக்கு நெத்திப்பொட்டெல்லாம் இல்லைங்களே சாமி, நீங்க கண்டது எருமை தானா” என்ற அவர் கேள்வியில் மைப் பார்வையில் இருந்து வெளியேறினார் மந்த்ரமூர்த்தி. சிந்துவெளி என்ற பெயரையும் இவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இப்ப அவர் புல்லாங்குழலுடன் இருக்கும் கண்ணனை பற்றிச் சொல்கிறார். மாடு மேய்க்கும் கண்ணன், புல்லாங்குழல் இசைக்கும் கண்ணன், பாதத்தில் அம்புபட்ட கண்ணன் என அத்தனையும் சொல்கிறார். பங்காளிச் சண்டைய இவர் தீக்குறதுக்குள்ள பட்ட பாடு பற்றியெல்லாம் சொன்னார். இடையில் குறுக்கிட்டு இங்கன எங்கேயாவது நம்ம எரும நிக்குதான்னு பாருப்பா என்ற போது வெளி உலகத்திற்கு வந்தார் மந்த்ரமூர்த்தி. கண்ணன் பெயரை இவர் குறிப்பிடவில்லை. 

இந்த முறை கண்களை மூடி முணுமுணுத்து திறந்த போது அஞ்சன மையில் பெரும் காட்சியாக பிரசன்னமானது. இந்த முறை காட்சி தெரிய ஆரம்பிக்கும் போது அதுல நடக்கிற உரையாடல்களையும் மூர்த்தியால கேட்க முடிந்தது. கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியக்கூட்டம் பற்றிய விபரணம். அவர்களது உருவம் கூட விவரிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கூட்டம் வரும்போது உள்ளூர்காரன் ஒருத்தன் எதிர்ல ஒரு எருமையை ஓட்டிக்கிட்டு வாரான், பெரிய மந்தையும் பின்னாடி குதிரையில ஆளுகளும் வர்றதைப் பார்த்துட்டு எருமைய புடிச்சிட்டு ஒதுங்கி நிக்கிறான். 

வந்த மாட்டுக்கூட்டம் இங்க பச்சைய கண்டதும் ஓடி செதறுது. கழுத்துல தாடி இடவலமா ஆட மடி குலுங்க ஓடிவந்து பரந்து பரவி பரபரப்பா மேய ஆரம்பிக்குது. குதிரை மேல இருக்கிறவங்க இந்த எருமையையும் இவனையும் ரொம்ப அருவருப்பா பாக்குறாங்க. அவங்க கிட்ட வந்து இந்த உள்ளூர்காரன் “யாருப்பா நீங்க எல்லாம்?” அப்படி என்று கேட்கிறான்.

உடனே அவர்கள் “தள்ளிப் போய் பேசு, தொட்டுப்படாத” அப்படின்னு சொல்றான். கிட்ட வந்தது என்னமோ அவனுக நம்மள தூர போனு சொல்றானுங்க என யோசித்துக்கொண்டே எருமய பிடிச்சு இழுத்துக்கிட்டு நிக்கிறான் உள்ளூர்காரன்.

கையில் என்ன கருமத்தை புடிச்சிட்டு நிக்கிற அதுவும் நீயும் தூரமா போ என்றான் குதிரையில் வந்தவன். அப்படி என்னப்பா ஒம் மாடு ஒசந்த மாடு. மூத்திரம் போகிற இடத்தில் பால் கறக்குமா? கோவத்துல கேட்டுட்டான் உள்ளூர்காரன் 

உடனே குதிரை மேல இருந்த செம்பட்டை தல முடிக்காரன் தல முடிய கோதிக்கொண்டே சொல்றான் எங்க மாட்டு மூத்திரம் பால விட மேலடா. 

இந்த நாட்டுல இருக்க 18 வகை சாதித்தீட்டுக்கும் எழவு, கருமாதி புள்ள பெத்தது, பொண்ணு சமஞ்சு குத்த வச்சு உட்கார்ந்திட்டு வர 46 ரக தீட்டையும் எப்படி கழிப்பே? எங்க மாட்டு மூத்திரத்தில் ஒரு சொம்பு பிடிச்சு மாவிலையை தொட்டு நாங்க வந்து நாலு வார்த்தை சொல்லி தெளிச்சுட்டா தீட்டு அது தீர்வாகும் .

உடனே உள்ளூர் காரன் எங்க ஊர்ல அப்படி ஒரு நடைமுறையே இல்லையே தீட்டா அப்டின்னா என்ன என கேட்கிறான்.

இப்ப தானே இங்க வந்திருக்கம். இனி கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு விளங்க வைப்போம்.

பின்னால் மாட்டைக் கொன்று தின்னும் காட்சி அதனை மற்ற மாடுகள் கண்டும் காணாதது மாதிரி இருக்கும் போக்கு ரொம்ப கொடுமையாக இருக்கிறது. எங்கிருந்தோ வந்து நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஆரியர் என்ற பெயரை மந்த்ரமூர்த்தி சொல்லவே இல்லை. நான் யூகிக்கிறேன்.

அங்கும் வேறொரு எருமையை பற்றி கூறிய போது இது இல்லங்க என் எருமை என்ற குரலுக்கு கண்ணை விழித்தார் மந்த்ரமூர்த்தி.

மறுபடியும் அவர் கண்ணை மூடுவதற்குள் வெட்னரி டாக்டர் ரவி எல்லோரையும் பார்த்தபடி மந்த்ரமூர்த்தியிடம் ஐயா நீங்க இப்ப கடைசியா சொன்ன ரெண்டு எருமை பத்தி சொல்லணும். முதல்ல திருவிழா நடந்த ஊருக்கு பக்கத்தில் பார்த்ததா சொன்னீங்களே நெத்தி பொட்டோட அது ““நீலிராவி” ரகம் ராவி ரிவர் பக்கம் உள்ள எருமை. இப்ப பார்த்தது “முர்ரா” ரகம். இந்த எருமைங்க எல்லாம் நார்த் இந்தியாவுல இருக்கு. ரொம்ப வடக்க இருக்கு. நாம ரொம்ப ரொம்ப தெக்க இருக்கிறம்.”

மீண்டும் மையில் தன் பார்வையைச் செலுத்தினார் மந்த்ரமூர்த்தி. 

இப்போது அடேங்கப்பா இது என்ன எருமை நடு முதுகு வர கொம்பு வளர்ந்திருக்குப்பான்னு வாய்விட்டு சொல்ல உடனே ரவி அது “பத்திராபுரி” ரக எருமைங்க பார்க்க வேடிக்கையா இருக்கும் என்று சொல்லி நம்மூரு இன்னும் தெக்கால இருக்கு அப்படின்னு சொல்றான்.

இப்படியே பல ஒரு எருமைகள் மையில் தெரிய ஒவ்வொரு எருமையின் பெயராக ரவி சொல்லி வருகிறான்.

கடைசியில தெற்கு நீலகிரி தோடர் எருமைங்க தெரிஞ்ச போது அப்படியே நிதானமாக பார்க்கிறார் மூர்த்தி. ஏன்னா அப்படி ஒரு ரம்யமான காட்சியா விரியுது. ரயிலு வண்டி வர்றது தெரியுது. ரயில் வண்டியில இருந்து துப்பாக்கியால தோட்டத்துல மேஞ்சிட்டு இருக்கிற அத்தனை எருமைகளையும் சுட்டு கொல்ற வெள்ளைக்காரனை தெரியுது . மலையில எருமைக செத்து கிடக்கிறது பார்த்து அந்த மக்கள் பதறி அழுகிறது தெரியுது . மலையிலிருந்து எருமக உருண்டு உருண்டு கீழே விழுகிறது தழுதழுத்தக் குரலில் மூர்த்தி சொல்லச் சொல்ல மருதையா வேளாளருக்கு அழுக அழுகையா வருது.

காளித்தாய் பிரசன்னம் – தத்துவத்தின் உச்சி

நாவலின் அடுத்த பகுதியில் வரும் காளித்தாய் பிரசன்னம், ஒரு தத்துவக் களஞ்சியமாக விளங்குகிறது. அது மனிதனின் உள்ளார்ந்த பயங்களையும், புனிதத்தின் மீதான நம்பிக்கையையும் இணைக்கிறது. “உறையூர் சண்டையில் கடைசி தலைமுறை சோழர்கள் அழிக்கப்படுவது”, “செத்த பிணங்களை சாப்பிடும் பிசாசு” போன்ற காட்சிகள் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியை நினைவூட்டுகின்றன.

மூன்றாவது அத்தியாயத்தைப்போன்று ரசித்து வாசித்த பகுதி வேறில்லை. ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. “எத்தனை வருஷம் ஆச்சு சுடச்சுட நான் மனுச ரத்தம் குடிச்சு..”

அதெல்லாம் ஒரு காலம் 10 வயசு பாலகன் வேங்கையன் ரத்த ருசிக்கு ஈடாவுமா?…ஆயாக்காரின்னா அவ ஆயாக்காரி…முதல் நாளே அப்பனப் பலி கொடுத்து அடுத்த நாள் அண்ணனப் பலி கொடுத்து மறுநாள் கட்டின புருஷன பலிகொடுத்து பெறவு பெத்த புள்ளைய கூப்பிட்டு கைல வேலை கொடுத்து அனுப்புவா பாரு அதுவும் குத்துப்பட்டா மார்ல வாங்கணும்னு சொல்லி அனுப்பிச்சு வச்சாளே, ஆயக்காரின்னா அவ ஆயக்காரி. இது புறநானூறு!

வேங்கையன் ரத்தத்தை குடிச்சு பச்ச பிணத்தை தின்னு எதுக்களிச்சு சலிச்சு போயிருந்த எனக்கு தஞ்சாவூரையும் உறையுரையும் கொளுத்தி சுட்ட பிணம் கிடைத்தது…..ஆண் பிணம், பெண் பிணம் என்ன பலதரப்பட்ட பிணங்கள்.

என் தம்பி சுடலை மாயாண்டி கூடவே 21 மாடம்மாரையும் 61 சேனையையும் பேய் பிசாசையும் கூட்டிட்டு பெரும் கூட்டமாக வருவான். அவங்களுக்கு பச்சை பிணம் ஆகாது அவிச்ச பிணம் வேணும் அதுக்கு ராத்திரி தான் வரணும். என் சின்ன தங்கச்சி அங்காளி ஆத்தக்காரி பெரியாச்சி பெரிய பொண்ணு பிடாரி இவங்க எல்லாம் பச்சப் பிண வாசத்துக்கு எங்கன்னு இருப்பாளுக. ஆத்தா பேய் புலம்புவது வரலாற்றில் நடந்த பாண்டிய சோழ போர் அதன் மூலம் விழுந்த போர் வீரர்கள் அவர்கள் மனைவிகள் அந்தப்புரத்தில் கருவை சுமந்து இருந்த பெண்டிர் பற்றியெல்லாம் சிலாகித்து பேசினாள்.

திடீர்னு சலித்த குரலில் என் புள்ள தான் இது மீசை தாடி எல்லாம் வல்லிசா வழிச்சு மழுங்க செறச்சு தலைய நடுவெடுக்காம அப்படியே நேரா மேலாக்க ஏத்திச் சீவி தோள்ல ரெண்டு பக்கமும் சுருண்டு பொரடிய மறச்சு அழகா கிடக்கு முடி. என தன் மகன் சைவம் என்பதை சலிப்புடன் சொல்லும் அம்மாப்பேயின் அழகு. இவன் மாமன்காரன் சாப்பிடும் பிணங்கள் பற்றியும் இவன் தகப்பன் உண்ணும் எலும்பு சதை சுட்டப்பிணம் பற்றியும் கூறி இவன் அவர்கள் ரத்தம் தானா என புலம்புவது நன்றாக இருக்கிறது. 

மந்த்ரமூர்த்தியிடம் தீர்வுக்காக வந்த மக்களுக்கு தீர்வு கிடைத்தது. கோனார் மாடு எங்கே சிக்கி இருக்கிறது என்பது தெரிந்து விடுகிறது. நம் வரலாற்றின் இருண்ட பக்கங்களை இருட்டில் துலாவி தன் மொழி நடையில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஆதிமனிதனில் தொடங்கி சமகாலம் வரை வந்து முடித்துள்ளார்.

பூசாரியின் பாடல்கள், மக்கள் நம்பிக்கைகள், காடு, நதி, எருமைகள் — அனைத்தும் நாவலின் ஒலி வடிவங்களாக நிற்கின்றன. நாவல் முழுவதும் மொழியின் மணம் வீசுகிறது. உதாரணமாக, “ஆத்து தண்ணி மெதுவாக போகுது” என்பதை, “எறைய முழுங்கின பாம்பு கணக்கா மெதுவாகத்தான் எழையும்” என்று செந்தில் சொல்வது, அந்த மண்ணின் சொற்களால் தான் சாத்தியமாகிறது. 

இது வெறும் மொழி அல்ல, அது மண்ணின் உயிர் மொழி. இழந்த கிராமத்து அழகியலை அதன் சொந்த சொற்களால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதையே எழுத்தாளர் நேரடியாக நிகழ்த்தியுள்ளார்.

‘மையெருமை’ நாவல் நம்மை நான்கு திசைகளிலும் இழுத்துச் செல்கிறது:

  • நிலம் – உயிரின் ஆதாரம்
  • சூழல் – சமூகத்தின் முகம்
  • மொழி – உணர்வின் வாசல்
  • மனிதர் – அந்த மொழியின் வடிவம்

இந்த நான்கு கூறுகளும் ஒன்றை ஒன்று தாங்கிக்கொண்டு நாவலின் நிதானமான நடையை உருவாக்குகின்றன. இது நம்மை நம்முடைய காலத்தில் இருந்து ஒரு படி விலக்கி, நிஜத்திலிருந்து மாயத்திற்கும் மீண்டும் நிதர்சனத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

“நாம் நம்முடைய மண்ணையும், மாயையையும், மாந்தர் மரபையும் எங்கே இழந்தோம்?” என்ற கேள்வியை நம்முள் எழச்செய்து அதன் காரணங்களை மனதிற்குள் விசாரிக்க செய்கிறது மையெருமை.

மையெருமை என்பது ஒரு மாய யதார்த்த நாவல் என்றாலும், அதின் அடிப்படையில் ஒரு கடும் சமூகச் சிந்தனை பதிந்துள்ளது. நவீனமயமாக்கப்பட்ட உலகம் இயற்கையையும் விவசாயத்தையும் புறக்கணித்து முன்னேறும்போது, இந்த நாவல் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இது ஒரு கதையல்ல, ஒரு அழைப்பு — மண்ணுடன் மீண்டும் இணைவதற்கான அழைப்பு. விவசாயம் மீண்டும் ஒரு தொழிலாக அல்ல, ஒரு உயிரின் வழிபாடாக மாறவேண்டும் என்பதையே “மையெருமை” நாவல் சொல்லுகிறது. 

அனுபவித்து வாசித்தால் தான் வாசிப்பு அனுபவம் கை கூடும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளது இந்நாவல்! இதுவே இந்நாவல் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான நாவலாக அமைவதும், மொழி பயன்பாட்டை ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முயற்சியாகவும் அமைவதும் சிறப்பு. அலையாத்தி செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

***

சால்வாடி ஈஸ்வரன் கவிராயர் – திருக்குற்றாாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்பக் கவிராாயரின் மரபுத் தொடர்ச்சியில் வந்தவர். நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப் பட்டமும் உயிரின அறிவியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் உளவியல் ஆலோசனை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டமும், மேலாண்மை மேம்பாாட்டுத் திட்டம் துறையில் பட்டயமும் பெற்றவர். அமெரிக்காவின் ஐஜிஐ க்ளோபல் பப்ளிஷிங் மற்றும் அணி சேரா இயக்கம் வாயிலாக ஆங்கிலத்திலும், பாவை மதி வெளியீடு வாயிலாக ”தளம்” (கவிதைத் தொகுப்பு) ”எட்டிய பத்து எட்டாத பத்து” (கட்டுரைத் தொகுப்பு) முகிலன் பதிப்பகம் வாயிலாக ”நிறமற்ற நிஜங்கள்” (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் மெய்நிழல் பதிப்பகம் வாயிலாக “சுவர்” (சிறுகதைத் தொகுப்பு) என்று தமிழ் எழுத்துலகிலும் இயங்கி வருகிறாார். மின்னஞ்சல் : salavadieaswaran@gmail.com

கல்குதிரை

0

முகம்மது றியாஸ்

[1]

வுக்கடி தெருவில் எல்லோரது வீட்டு வாசலில் இரண்டு கல்குதிரைகள் உண்டு. அதில் ஒன்றில் அமர்ந்திருந்த சேபக்கருக்கு தன் உடன் பிறந்த றாத்தாவிடம் சமாதானத்திற்கு போய் வந்த மவுமுதாவின் சொற்கள் மனதை போட்டு அறுத்துக்கொண்டிருந்தன. மவுமுதா சேபக்கருக்கு ஒருவகையில் தங்கை முறை என்றாலும் இரண்டு வீட்டுக்கும் அவள் பொதுவானவள் என்பதால் சேபக்கர் இவ்விஷயத்தில் மவுமுதா தயவை நாடியிருந்ததில் பெரிய ஆச்சரியமில்லை தான். இடுப்பு எக்கில் இருந்த ஒரு வெளிநாட்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அவர் நினைத்திருந்தால் தான் செய்த அத்தனையும் சொல்லிக்காட்டி விடமுடியும் தான். 

   ‘. என்ன காரணம்னு அவ சொல்லல. அவளப் பத்தி தான் உனக்கு தெரியுமே காக்கா. ஆனாலும் இதுக்கு பொறவு இந்த சம்மந்தம் ஒத்துவரும்னு ஏன் மனசுக்கு தோணல… என்ன மன்னிச்சிக்க … ‘

  சுலையம்மா உள்ளே அடுப்பாங்கரையில் ஏதோ சட்டியைப் போட்டு உருட்டிக்கொண்டிருந்தாள்.

  சேபக்கர் எட்டு வயதிலேயே மளிகைக் கடைப் பட்டறை ஏறியவர் என்றாலும் உழைக்கும் கரங்கள். தொடாத வேலை இல்லை. மளிகைக் கடைப் பொட்டலங்கள், வெல்ல மூட்டை சிப்பம், அரிசி சிப்பம் எல்லாவற்றையும் தூக்கி சுமந்த உழைப்பாளியின் முதுகு அது. கிடைக்கும் ஊதியத்தை அப்படியே றாத்தாவிடம் கொண்டுபோய் சேர்த்து விடுவார். தாயில்லாத சேபக்கருக்கு றாத்தா மதீனா மற்றும் அவள் பெற்ற பிள்ளைகள் என்றால் பெரும் உலகம்.இதெல்லாம் அவரது திருமணத்திற்கு முன்பு இருந்த கதை.

 மதீனாவுக்கு தம்பி பொண்டாட்டியாக சுலையம்மா வந்தாள். எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த நேரத்தில் இனி சேபக்கர் வரும்படி இரண்டான போது மதீனாவுக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும் யார் கேட்டாலும் அதை வெளியில் காட்டாதபடி ’என் தம்பி நல்லா இருந்தா போதும் எனக்கு …’ 

ஆனால் சேபக்கர் ஒரு கண்ணில் நெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஆளில்லை. ஒரு பூனம் சேலை என்றாலும் ஒரே மாதிரியாக இரண்டு சேலைகளை எங்காவது புடித்துக்கொண்டு வந்து வெற்றி பெறக்கூடியவர் தான் என்றாலும் மதீனாவுக்கு சுலையம்மா எடுத்த சேலை பூ மீது கண். சுலையம்மாவும் எத்தனை முறை தன் நாத்துனாருக்காக விட்டுக்கொடுப்பாள்? இரண்டு பக்கம் முறுக்கினாலும் சேபக்கர் எப்போதும் தன் றாத்தா பக்கம் போய் நிற்பது வாடிக்கை. 

 எப்போது சபரிலிருந்து சேபக்கர் வந்தாலும் றாத்தா தான் வெளிநாடு பொட்டியை பிரிக்க வேண்டும் என கண்டிஷனாக சுலையம்மாவிடம் சொல்லிவிடுவார். றாத்தா மீது அவ்வளவு வாஞ்சை. 

 ‘அவ்வளவு உகப்புனா நேரா ஏர்போட்லேந்து பொட்டியை றாத்தா வீட்டுக்கே இறக்கியிருக்க வேண்டியதுதானே…. ‘ இரவு படுக்கையில் சேபக்கர் மீது ஒரு துல்லிய தாக்குதலை அவ்வப்போது சுலையம்மா நிகழ்த்துவாள். அதையெல்லாம் பெரிதாக அலட்டாமல் போய் கல்குதிரையில் அமர்ந்துக்கொள்வார். 

 தன் அன்புக்குரிய றாத்தா இராவைக்கு அழைத்து வீட்டு வாசலை பூட்டிக்கொண்டு உள்ளே வெளிநாட்டு பொட்டியை “பிஸ்மி.” சொல்லி பிரித்து தனக்கு வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வாள். அவளுக்கு பிரியமான லக்ஸ் சோப்பு, கோடாலி தைலம், மொட்டக்கொட்டை மருந்து, கடல் பாசி, பிறை மேத்துண்டு கையில் கிடைத்ததை அப்படியே சுருட்டிக்கொள்ளும் பழக்கம். குளத்தாங்கரையில் யாரும் வெளிநாட்டு சவக்காரம் தேய்த்து குளிக்கும் அவளைக் கேட்டால் கூட,

‘எந்தம்பி சம்பாதிச்சி நான் சவக்காரத்த தேய்ச்சி கரைக்கலனா. வேற யார் கரைப்பயாம்…’ குளத்துப்படிக்கட்டில் அந்த பக்கம் உட்கார்ந்து துணி துவைக்கும் சுலையம்மா காதில் விழும் படி சொல்வாள்.

 அப்படியொரு கொள்ளை. எல்லாம் றாத்தா மீது சேபக்கரின் பாசம். அவருக்கு இருக்கலாம் அதற்காக சுலையம்மாவுக்கு இருக்குமா ? அவளுக்கு வாங்கி வந்த சிங்கப்பூர் கம்பி சேலையில் ஒன்னை மதீனா லவட்டிக்கொண்டு போக சபர் வந்த நைட்டே சுலையம்மா சேபக்கரை கல்குதிரையில் உட்கார வைத்து விடுவாள். 

  ஒரு சபராளிக்கு பல வருடங்கள் கழித்து ஊர் வந்த முதல்நாளே “கபி கபி” இல்லையென்றால் எவ்வளவு துயர துன்பவியல் ? 

  எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார் எதற்காக ? எல்லாம் தன் ஆசை மகள் பஞ்சும்மாவுக்காக. இனி அடுத்த சபர் எப்படி இருக்கும் தெரியாது, இனி போனால் ரிட்டன் எத்தனை வருடங்கள் ஆகும் அதுவும் தெரியாது, வாசலில் இருக்கும் சவுக்கடி தெரு கல்குதிரைகளுக்கு தெரியும். அதற்கு தோதுவாக தனது அருமை மகள் பஞ்சும்மா வாப்பாவுக்கு தேயிலை ஊற்றிக்கொண்டு வந்தாள். 

   மவுமுதா வந்து சொல்லி விட்டு போன பின்பு சேபக்கர் யாரிடமும் பேசாமல் வீட்டுக்கு வெளியே இருந்த கல்குதிரையில் அமர்ந்திருந்தார். வெளிநாட்டு சபரிலிருந்து அவர் திரும்பிய நாற்பது நாட்களில் இன்னும் ஒரு வாரம் தான் விடுமுறை பாக்கியிருந்தது. சவுதியா ஏர்லைன் றிட்டன் டிக்கட் கன்பார்ம் அடிக்க வேண்டும் என ட்ராவல்ஸ் நிஜாம் நேத்து தான் அவரின் பாஸ்போர்ட்டை வாங்கிப்போயிருந்தான். அதற்குள் சின்னவனுக்கு சுன்னத் கலியாணம் செஞ்சி பாத்துவிட்டு விமான ஏறிவிடவேண்டும். ஆசை மகனுக்கு சீதேவி வாப்பா சுன்னத் செய்து கட்டு பிரித்து குளிப்பதற்கும் வாப்பா கிளம்புவதற்கும் ஏழு நாட்கள் போதுமானது என அவருக்குள் ஒரு மனக்கணக்கு. இருக்கும் கொஞ்ச நாளுக்குள் சின்னவனுக்கு தடபுடலாக சுன்னத் கல்யாணம் செய்து பாத்துவிட வேண்டும், மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஆலங்குடி ராவுத்தரின் நாட்டிய குதிரை, இன்னிசை பாடல்களுக்கு அதிராம்பட்டினம் தீன் பைத்து சபாவுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாகி விட்டது.

  தொண்டியிலிருந்து கலியாண தொப்பி, சபாரி சூட், சுன்னத்துக்கு பொறவு மகன் உடுத்த தங்க ஜரிகை போட்ட கைலி, அக்காவுக்கும் சுலையம்மாவுக்கும் ஒரே கலரில் புடவை -பஞ்சும்மாவுக்கு பாவடை தாவணி என ஏகத் தடபுடலான ஏற்பாடுகள் எல்லாம் ரெடி. இதற்கு நடுவில் றாத்தா ஏன் கோவித்துக்கொண்டாள் என ஒரு காரணமும் சேபக்கருக்கு புடிப்படவில்லை. 

[2]

 ‘இந்தா பஞ்சும்மா…’ எனக் கல்குதிரையிலிருந்து மஞ்சப்பையை நீட்டினார். உள்ளே றஸ்தாளி சீப்பு வாழைப்பழங்கள்.

 ‘நீயும் தம்பியும் சாப்பிடுங்க…உள்ள போங்க…’ என்று மகளை அனுப்பிவைத்து சேபக்கர் கல்குதிரையில் யோசனையில் ஆழ்ந்தார். 

    பஞ்சும்மாவுக்கு வயது பதினைந்து என்றாலும் பார்க்க திருமணம் முடிக்க தோதுவான பதுமை அவள். வில் வளைவு புருவங்களும் கிழங்கு போன்ற தேகமும் சுருள் சுருளான முடியையும் யாரும் அவள் அதிகாலையில் நீராடும் பளியாக்குளத்தில் பார்த்தால் சகபாடி பெண்களுக்கே ஏற்படும் பொறாமை நூறு ஆயத்து குர்சி ஓதினாலும் கண்ணேறு இறங்காத அப்படியொரு அழகுப் பதுமை.

  வாப்பா அவளது பெருமை மிகு பளியாக்குள் நீராடலின் செம்மேனிக்கு கட்டி கட்டியாக றாணி சோப்பு அனுப்பிவைத்தார்-அனுப்புவார் -இனி யார் வந்தாலும் அனுப்பிவைப்பார். முக்காலத்தில் எக்காலத்திலும் பஞ்சும்மாவுக்கு பிடித்த எது இருக்கோ இல்லையோ வாப்பா வெளிநாட்டு பொட்டியில் அவளுக்காக றாணி சவக்கார கட்டிகள் இருக்கும். அவள் குளித்து விட்டு திரும்பினால் சவுக்கடி தெருவில் அப்படியொரு மணம், மேனிக்கொரு றாணி மணம். தானொரு றாணியை போல் அவள் உணர்வதெல்லாம் அந்த றாணி சவக்கார கட்டியில் மயங்கியபடி தான். அப்படி அவளுக்கே அவளுக்காக வாங்கி வந்த சோப்புகளில் இரண்டு டஜனை மதீனா மாமி பொட்டி பிரிக்கும் படலத்தில் லவட்டியதில் சுலையம்மா-பஞ்சும்மாவுக்கு ஏக வேதனை. வழமையாக உம்மாவும் மகளுமாக சேபக்கர் மீது தாக்குதல் நிகழ்ந்தினர். அசறுவாரா மனுஷன் ? சதாம் உசேன் – குவைத் வளைகுடா போரிலேயே தப்பிப் பிழைத்தவர் ? சவுக்கடி தெரு போருக்கா அசறுவது ?

 ‘நீலாம் ஒரு ஆம்பிளையா…’ சுலையம்மாவின் ட்ரோன் தாக்குதல் தான். எப்போதும் போல சத்தமில்லாமல் வெளியில் போய் கல்குதிரையில் அமர்ந்துக்கொண்டார். அடுத்த நாள் பட்டுக்கோட்டை போய் ஏதோ ஒரு வெளிநாட்டு சாமான்கள் விற்கும் கடையில் பஞ்சும்மாவுக்கு றாணி சவக்காரம் வாங்கி வந்து வீட்டுக்குழி அலமாரியில் அடுக்கி வைத்தார். 

  பஞ்சும்மா எட்டாவது படிக்க பள்ளிகூடம் போகும் வழியில் அருகில் இருந்த ஆலமரத்தில் வயிற்றை பிடித்துக்கொண்டு அமர்ந்த செய்தி வளைகுடாவில் இருந்த சேபக்கருக்கு என்றாலும் இனி மகளுக்கு நாலு நகை தட்டு முட்டு ஆபரணங்களை ரியாத் பத்தா மார்க்கெட்டில் புடித்தால் தான் ஏதாவது பிடிமானத்தோடு மதீனா றாத்தாவிடம் பேசமுடியும். வாப்பா உடன் பிறந்தவள் தான் என்றாலும் ஊர் நடைமுறை என ஒண்ணு இருக்கிறது அல்லவா. அது போக அவளது ஒரே மகன் முஜிபை தன் மகளுக்கு புடிக்க வேண்டுமென்றால் சும்மாவா ? மார்டின் கம்சு சட்டை, சார்லி செண்ட், குறோக்கோடைல் ஜட்டி என மருமகனை அசத்தும் நோக்கில் வெளிநாட்டு சாமான்களை இம்முறை சேபக்கர் இறக்கியிருந்தார். போதாக்குறைக்கு முஜிபு கொறடாசேரியில் வைத்த புது மளிகைக் கடை ஏக ஓட்டம். வியாபாரம் சூடு பிடிக்க முஜிபுக்கும் ஊருக்குள் ஏக கிராக்கி. 

 மதீனா றாத்தா சேபக்கர் மனசுக்குள் மிதக்கும் பஞ்சும்மா – முஜிபு வள்ளத்தை ஒரு ஆட்டு ஆட்டிப்பார்த்தாள்.

 ‘சவக்கரு..அதை போடுறோம் இதை போடுறோம்னு வீசை வீடு பேயாடி வீட்டு பொண்ணு எல்லாம் வந்தப்ப எல்லாம் என் தம்பி வீட்ல தான் முடிப்பேன் கட் அண்ட் றேட்டா சொல்லிட்டேன்…’ என மதீனா சொன்னது அவருக்கு உள்ளூர மகிழ்ச்சி தான் என்றாலும் ஊர் நடைமுறை உறுத்திக்கொண்டே இருந்தது. செய்முறையை சரியா செஞ்சிடனுமா இல்லையா ?

 பஞ்சும்மாவுக்கும் முஜிபு மச்சான் மீது ஒரு மாதிரியான விருப்பம் தான். அவன் கொஞ்சம் கருப்பு என்றாலும் பாக்க திருமூர்த்தி படத்தில் வார விஜயகாந்த் மாதிரி நெட்டுவாங்கு எடுத்து சீவி இருப்பான் என நீராடலுக்கு போகும் போது பஞ்சும்மாவிடம் தோழி ஒருத்தி கொளுத்தி போட – ஊரில் எங்கு செங்குருவி செங்குருவி பாடல் ஓடினாலும் பஞ்சும்மா அப்படியே ஸ்தம்பித்து விடுவாள். அவளுக்கும் றாணி சோப்பு நுரையளவு மச்சான் மீது ஒரு மயக்கம் தான்.

  எல்லாம் ஒரு மய்யதுணாண்டாவ அப்பா மாத வளர்பிறையில் முஜிபுக்கு பஞ்சும்மாவை “இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை.’ என் பேசிமுடித்துவிடும் திட்டத்தோடு ! இருவருக்கும் பொதுவாக சின்ன வாப்பா முறையில் வரும் யாசியப்பாவை வாப்பா மதீனா வீட்டுக்கு அனுப்பிவைத்தார் சேவக்கர். எல்லாம் வெற்றி தான். 

 பொண்ணு மாப்பிள்ளை முடிவானதும் முதல் வேலையாக தன் றாத்தா மிகவும் உகக்கும் பண்டம் கருப்பட்டி தொதல் சாமான் பதினேழு கிலோ அனுப்பி வைத்தார் சேபக்கர். ஒற்றைப்படையில் எதையும் அனுப்பிவைத்தால் பறக்கத்தானது என்பது சவுக்கடி தெரு வாடிக்கை தான். சும்மா தொதல் சாமான் என்னாத்துக்கு ? றாத்தா நினைத்தாலும் நினைத்துவிடுவாள் என இணைப்பு பண்டமாக நூற்றி பதினோரு சீப்பணியாரமும் – சீனி பதினோறு கிலோவும் வாங்கி சந்தோசஷமாக சீர்வரிசையை யாசியப்பா தலைமையில் அனுப்பிவைத்தார். எல்லாம் இனிப்பா அமையனும் மய்யதுணாண்டவ அப்பா !! சீர் ஓலைக்குட்டானை வேண்டியபடியே பக்கத்து தெரு மதீனா றாத்தா வீட்டுக்கு புறப்பட்டது.

 பதிலுக்கு மதீனாகுடும்பத்தோடு அதிகாரபூர்வ சம்மந்தி விஜயமாக சேபக்கர் வீட்டுக்கு வந்த போது றாத்தாவை வெறும் கையாக அனுப்பக்கூடதென மணாக்குடி பேக்கரியில் கூடை கேக் வாங்கி அனுப்பிவைத்தார். இப்பவும் டிவியில் வரும் ஜுவல்லரி கடை ஓனர் போல் சேவக்கர் சிரித்த முகத்துடன் அக்காவை வழியனுப்பி வைத்தார் தான். 

 ‘மவுமுதா என்னவாம் சொன்னவா….’ சுலையம்மா அடுப்பங்கரையிலிருந்து கல்குதிரைக்கு வந்திருந்தாள். 

 ‘…ம்ம்ம்…. பேசிப்பாப்பம்டா….’ என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார். 

  அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. றாத்தா கதை தெரியும் தானே. மறுபக்கம் இவள் என்ன சொல்லபோகிறாள் என ஒரு பயம் வேறு சேவக்கருக்கு. ஒரு மாதிரியாக கல்குதிரையைக் கெட்டியாக புடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்க்க சுலையம்மாவுக்கு ஒரு மாதிரியாக, பாவமாக இருந்தது. எப்படியும் அடுத்த சபரில் இருவருக்கும் கல்யாணம் முடிச்சிபுடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இப்படியொரு மனக்கசப்பு. 

 ‘சிலயம்மா. நேரா நானே போயி றாத்தாட்ட பேசியாந்துறேன்.’ செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார், 

’எங்க போறீங்க.இங்கினே இருங்க.’ போனவரை பிடிச்சி உட்கார வைத்துவிட்டார். அவளுக்குப் பெருத்த யோசனை என்றாலும் தன் நாத்துனா எப்படியெல்லாம் நடந்துப்பா என எல்லாமும் சுலையம்மா கண் முன்னே வந்து போனது. எல்லாவற்றுக்கும் தன் நாத்துனாவிடம் ஒரு விலை உண்டு அல்லவா ? அதனை சேவக்கரை விட அவள் நன்கு அறிந்தவள்.

‘என்ன நடந்தாயெண்டு ஒன்னும் வெளங்கல. எப்படியும் நாளை பொன்னலாவூருக்கு உங்க றாத்தவையும் அழச்ச தானே. வந்தாலெண்டா பாப்பம். இல்லைனா நாம பேசலாம்…. இப்ப போயி நிம்மதியா போய் தூங்குங்க…‘

 ‘இது மத்த விஷயம் போலல்ல. பொண்ணு விஷயம் கொஞ்சம் பொறுப்பமே..’ என்ற சுலையம்மா யோசனையும் சேபக்கருக்கு சரியாதான்பட்டது.

 வாசலுக்கு மறுபக்கம் இருந்த இன்னொறு குதிரையில் சுன்னத் கல்யாண மாப்பிள்ளை சின்னவன் குதித்து விளையாடிக்கொண்டிருந்தான் 

 ‘பாத்து வெளயாடு வாப்பா. நல்ல நாள் பெரிய நாள் அதுவுமா படாத எடத்துல படப்போகுது.’ சேபக்கர் வாஞ்சையோடு தன் மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

’ எதுவா இருந்தாலும் காலையிலே தெரியும் …. நீ காலையிலே பொன்னலாவூருக்கு போக வேண்டிய ஏற்பாட செய்…’ சேவக்கர் குதிரையிலிருந்து குதித்தார். இருவரும் என்னப் பேசிக்கொள்கிறார்கள் எனத் தூணுக்கு பின்னால் பஞ்சும்மா ஒட்டுகேட்டுக்கொண்டிருந்தாள்.

 ‘உள்ள போயி படும்மா. எல்லாம் நல்லபடியா முடியும் ….’ தன் மகளை அப்படி பார்க்க சேவக்கருக்கு முடியவில்லை.

  பொன்னலாவூர் கலந்தரப்பா தர்கா நேர்ச்சைக்கு சந்தையில் வாங்கிய சேவல் வீட்டு முற்றத்தில் விடிய விடிய கூவிக்கொண்டிருந்தது. நல்ல சகுணம் தான் மலக்குமாருவ வீட்டுக்கு வந்து போறாங்க போல என சேவக்கர் நினைத்துக்கொண்டார். சேவல் வாங்கும் போது மதீனா வீட்டுக்கு கொடுத்து விட சேர்த்து வாங்கிய இரண்டு வெடைக் கோழி குஞ்சு கத்திக்கொண்டிருந்தது. 

  மதீனா கோவித்துக்கொண்டிருப்பதாக அரசல் புரசலாக அவர் காதுக்கு தாக்கல் வந்த போதே இது சின்ன பிரச்சனை தான் சரியாகி விடும் என நினைத்திருந்தார். அது இந்தளவுக்கு பெரிய பூதகரமாக வெடிக்கும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. உண்மையில் றாத்தா ஏன் தன்னோடு வருத்தமாக இருக்கிறாள் ? தினசரி ஒரு முறையாவது வந்து பார்த்துவிடுபவர் ஏன் சீர் போன அடுத்த நாளிலிருந்து வரவே இல்லை ? அவருக்கு காரணம் புடிப்படவே இல்லை. 

  எல்லாம் விடிந்தால் சரியாகி விடும். கண்ணேறு தான் !!! சேபக்கர் தடபுடலாக பொண்ணு மாப்பிள்ளை ஏற்பாடு செஞ்சதில் மக்களுக்கு பொறாமை தான். எல்லா கஷ்ட துஷ்டங்களும் பொன்னாலாவூர் போவதில் அடியோடு போய்விடட்டும் யா அல்லாஹ் !! கையை வான் நோக்கி விரித்தபடி உறங்குவதற்காக முற்றத்தில் கயித்து கட்டிலை விரித்தார் சேபக்கர்.

[3]

 சேவக்கர் வீட்டிலிருந்து மதீனா றாத்தா வீட்டுக்கு ஓலைக்குட்டானில் ஒன்று யாசீயப்பா வீட்டில் இருந்தது. 

‘… இப்படி 111 சீப்பணியாம்ல 55 சுருள யாருக்கு தெரியாம இங்கன எடுத்து வந்துட்டீங்களே … பொண்ணு பேசினா மாப்ள வீட்டுக்கு கொடுத்து வுடுற ஊர் முறை 111 தெரியும் தானே. சேவக்கர் சரியா சீர் அனுப்பலயெண்டு அங்க மதீனா வீட்ல கடும் வருத்தமா அரச புரசல தாக்கல் அடிபடுது …நீங்க என்ன சின்ன வாப்பா தானே. சம்மந்தம் நிண்டு போக போவயாம்…’

’ சின்ன வாப்பா. பொல்லாத சின்ன வாப்பா. சின்ன வாப்பானு அவன் நாலு சுருள் தந்தா என்னவாம் ? எல்லாத்தையும் அவண்ட றாத்தாவுக்கு அனுப்புறான் ? மசிறாண்டி … எனக்கு வாயில்ல.’

’அதுக்கு இப்படியா ? இது ஒங்கட குடும்பத்து எரப்புன்னி புத்தி.’

 ’.அப்படியொரு பணியாம்டீ. சும்மா மொறு மொறுனு சிவப்பும் நெய் தேங்கா மணமும். யாருக்கு தான் கொடுக்க மனசு வரும்டீ?. சேவக்கரு வீட்டு சீப்பணியாம நான் திங்காம வேற யார் திங்கயாம். நான் அவண்ட சின்னவாப்பா எனக்கு உருத்து இருக்கு.’

 சுருளை உடைத்த யாசியப்பா ‘ இந்தா திண்டுப்பாரு …’ செவத்தம்மா வாயில் ஒரு துண்டை போட்டுவிட்டார். 

‘ம்ம்ம்ம்ம்ம்…’ செவத்தம்மா உச்சிகொட்டி நா எச்சில் நீர் வழிந்தது.

***

  சேவக்கர் தனக்கு தானே எப்படியும் காலையில் றாத்தா வந்து விடுவார் பேசிக்கொண்டது அருகில் படுத்துகிடந்த சுலையம்மாவுக்கு தன்னட சபுராளி மாப்பிள்ளைய அப்படி பாக்க மனசில்லை. இரவு மட்டும் எப்படியும் ஏழு முறையாவது சேவக்கர் எழுந்திருத்திருப்பார். விடிந்தால் எல்லாம் சரியாகிவிடவேண்டும் என நொந்துக்கொண்டார். சுலையம்மாவுக்கு இதை எப்படியவது தட்டி நேராக்கிடனும் இல்லனா இந்தாளு நெலமை கஷ்டம் !! என ஏதோ உதிப்பு தட்ட நள்ளிரவில் எழுந்து வெளிநாட்டு சாமான்கள் இருக்கும் வீட்டுக்குழிக்குள் போனாள். அலமாரியை திறந்தது குப்பென “றாணி சவக்கார வாசனை.” எல்லாம் அருமை மகள் பஞ்சும்மாவுக்கு வாப்பா வாங்கி வைத்தது. ஒரு பைக்குள் இரண்டு டஜனை உள்ளே தள்ளினாள். 

 அடுத்தநாள் காலை சேவக்கர் சுபுஹ் தொழுது விட்டு விடு திரும்பும் போது வீட்டு வாசலில் பொன்னலாவூர் யாத்திரைக்கு செல்ல அம்பாசிடர் கார் நின்றது. சேவல், கம்பு பை, கந்திரி சோறு பேக் டிக்கியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. முன் இருக்கையில் சுன்னத் கல்யாண மாப்பிள்ளை சின்னவன் தான் ஜம்மென உக்கார்ந்திருந்தான்.

 ‘ வாப்பாய்…’

 ‘ ஓ அய்யா… ‘ 

 ‘அங்க பாரு யாரெண்டு. மதீனா மாமி வந்திருக்கா….’ 

 கல்குதிரையில் மதீனா றாத்தா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு பின்னால் வெள்ளை துப்பட்டியோடு சுலையம்மா. அவரால் நம்பவே முடியல..அதற்கு பின்னால் வெட்கமும் சிரிப்பும் கலந்தபடி பஞ்சும்மா.

மூன்று பெண்களும் ஒத்துமையா நிப்பதை பாத்து சேவக்கர் அவரே அறியாம சொன்னார் “ எல்லாம் பொன்னலாவூர் கலந்தரப்பா கராமத்து …. ‘ – மூவர் அருகே போய் நின்றார். குப்பென றாணி சோப்பு வாசம்.

***

முகம்மது றியாஸ் – புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சொந்த ஊர். சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றுகிறார். அத்தர், சிக்ரிமார்க்கம் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவருடைய சிறுகதைகளில் ஒன்றான முளரி மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவரின் நேர்காணலுடன் மாத்ருபூமி இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.  மின்னஞ்சல்: ping.riyas@gmail.com

வரலாற்றின் தராசில் பெருமிதங்களுக்கு ஈடாக நிதர்சனங்களை கிருஷ்ணசந்தர், கதைகளில் வைக்கும்போது லைலா அடுப்பூதுகிறாள்……ரோமியோவின் குறட்டையில் இரண்டாயிரம் குதிரைகள் கத்துகின்றன !

0

ஸ்டாலின் சரவணன்

கிருஷ்ணசந்தர் ராஜஸ்தானில் பிறந்து ஜம்மு-காஷ்மீரில் வளர்ந்தவர். உருது மற்றும் இந்தியில் எழுதியவர். இவருடைய 14 கதைகள் அடங்கிய தொகுப்பை எழுத்தாளர் ராணி திலக், எழுத்து பிரசுரத்தில் “கிருஷ்ண சந்தர் கதைகள்” என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். சக்தி, தீபம், நம்பிக்கை நட்சத்திரம் (கதைத் தொகுதி), உர்தூக் கதைகள் (கதைத்தொகுதி) ஆகிய சிற்றிதழ்கள், தொகுப்புகளிலிருந்து இந்தக் கதைகளை ராணிதிலக் தொகுத்துள்ளார். 

இத்தொகுப்பு அச்சில் வருவதற்கு முன்பே கிருஷ்ண சந்தர் கதைகள் குறித்து ராணிதிலக் என்னிடம் பகிர்ந்திருந்தார். அந்த ஆர்வத்தில் முதல் கதையாக “புதுச்சட்டை” என்ற கதையை வாசிக்கத் தொடங்கினேன். பனிப்படலமிக்க ஒரு நிலக்காட்சியை அறிமுகம் செய்து கதை தொடங்கும். பேகமாவின் பால்ய தோழன் குல்ஹமிதுதான் கணவன். மலையடிவாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் அவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவள் காதல் மிகுந்து சட்டென அவனைப் பார்க்கக் கிளம்பிவிடுவாள். குன்றின் மேல் இருந்து அவனைச்   சந்திக்க அடிவாரத்து வயலுக்குச் செல்லும் பயணத்தில் கதை நகர்ந்து,  சந்திந்தபின் அவர்களின் காதல் விளையாட்டோடு கதை சென்று கொண்டிருக்கும். அப்போது அங்கு வரும் தையல்காரர் கொண்டு வரும் பேகத்தின் புதுச்சட்டை அணிவதில் கதை வந்து நிற்கும்.  துள்ளலும் காதலும் திகட்டாமல் நிரம்பி வழியும் கதை முடியும்போது மனம் அதிர்ந்துவிடும். அதை வாசித்துப் பல நாட்களான  பின்பும் அக்கதையில் இருந்து வெளியேற முடியவில்லை. 

கிருஷ்ணசந்தர் ஒரு முற்போக்கு எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பு உருவாக்கக்  காரணமாக இருந்து,  இயங்கி உள்ளார். அவரின் இடதுசாரி மனநிலை “அணைந்த சுவாலை” கதையில் உள்ளார்ந்து வெளிப்பட்டு இருக்கும். தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க முதலாளி செய்யும் கொலைகளுக்குக்  கையாளாக இயங்கும் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கும். கொலைகள் புரிய புரிய அவனுக்குள் நிகழும் மாற்றங்களுக்குட்பட்டு உண்மையை நோக்கி அவன் நகருவான்.   தான் முதலாளியின் பழைய அடிமைதான். ஆனால் காலமாற்றத்தில் தொழிலாளிகள் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். நவீனப் பாட்டாளியின் முகத்தை அவர்களிடம் தான் காண்பதாக முதலாளியிடம் கதையில் அடியாள் கூறுவான். முதலாளியிடம் காலத்தை உணர்த்த அவனது அடியாளையே கிருஷ்ண சந்தர் தேர்வு செய்ததும் கூட தெளிவான அரசியல் பார்வைதான்.   கதையில்    ஒரு இடத்தில் படம் வரைந்து கொண்டிருக்கும் தோன்டு மேஸ்திரியின் மகனிடம் அடியாள் கேட்பான், இப்படத்தில் சன்னல் இருக்கிறது. வீடு இல்லையே என்று. வீடும் நிர்மாணிக்கப்பட்டுவிடும் என்று அவன் பதில் கூறுவான். பாட்டாளிகளுக்கான குரலை நவீன மொழிக்குச் சமரசம் இல்லாமல் பேசுவதுதான் கிருஷ்ண சந்தரின் தனித்துவம். 

காதல், வாழ்வின் மீதான தத்துவ விசாரணை, மனிதன் மீது உளவியலாகத் தொடுக்கும் பசியின்  பாதிப்புகள், நோய்மையைக் கண்டு மனிதன் ஓடி ஒளியாமல் அதனை ஏற்றுக் கொள்ள பணிப்பது எனக் கதைகள் பலவற்றையும் பேசுகிறது. வாழ்வை எள்ளலோடு சொல்வதும் சிறப்பாக அமைந்துள்ளது. புதிய சிந்தனைகளும், புத்துணர்ச்சியும் கதைகள்தோறும் உள்ளன. அவரின் எழுத்து நடை ஆற்றொழுக்குடன் கூடிய வேகம் கொண்டிருக்கின்றன. வாசிக்கும்போது  அதன் அலைகளுக்குள் ஆட்பட்டு அலைதல் சுகத்தைத் தருகிறது. 

“நாற்சந்தி கிணறு” என்ற கதையைக் கட்டமைத்து இருப்பதே புதிதாக இருக்கும். நோய்வாய்பட்ட குழந்தையை உயிர்பிக்க வழிதேடி செல்லும் ஒருவன் சந்திக்கும் அனுபவங்கள் அலாதியானவை. கிணற்றுக்குள் விழுந்த பழைய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து  உரியவர்களைக் கேட்டு ஒப்படைக்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை வரும். ஒரு பொருள் காதலைக்  கொண்டு சகதிக்குள் அத்தனை ஆண்டுகள் கிடந்திருக்கும். இன்னுமொரு பொருள் பழிவாங்கிய களைப்பில் சாட்சியின்றி ஒளிந்திருக்கும். ஒரு பொருள் சுமந்த துயரத்தை ஊரே மறக்க இயலாத ஒன்றாக இருக்கும். 

மலைக்கன்னி, பெளர்ணமி நிலவிலே, திலீப்குமாரின் நாவிதன், குப்பை சாமியார் போன்ற கதைகள் உணர்வின் எல்லைக்குள் நின்று செழுமையான மொழியோடு புதிய களங்களோடு உள்ள கதைகள். பெளர்ணமி நிலவிலே கதையில் வரும் நிலமும் காட்சியும், அமைதியான தொனியில் அணுகும் வாழ்வின் சூட்சமங்களும் புதிதினும் புதிது. சந்தரிடம் இருக்கும் எள்ளல்மொழி திலீப்குமாரின்  நாவிதன் கதையில் வசனமும் பொருத்தமான காட்சியோடு வெளிப்பட்டபிருக்கும். குப்பைச் சாமியார் கதை,  நோயின் குறுக்கீட்டால் அலைவுறும் ஒருவனைப் பற்றிப்  பேசுகிறது.   இக்கதையில் வரும் துலாரி என்னும் மனைவி பாத்திரம் எடுக்கும் முடிவைக்  கையாண்டிருப்பதும் அவர் பக்க நியாயத்தைக் கணவன் ஏற்றுக் கொள்வதும் கதையில் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஒருவன் வாழ்வதற்கு அர்த்தமுள்ள பிடிப்புக்காகக் காத்திருக்கிறான். இதுபோல் பலதரப்பட்ட மனிதர்களை முன்வைத்து கதைகள் வாழ்வை விசாரிக்கின்றன. 

இப்பொதுவானவைகளைத் தாண்டி கிருஷ்ண சந்தர் அரசியல் சம்பவங்கள், தலைவர்கள், இதிகாசப் பாத்திரங்களை உடைத்து காலத்திற்கேற்ப சில மீட்டுருவாக்கங்களை   நவீன வாழ்வோடு பொருத்தி எழுதியுள்ளார். 

சிலை விழிக்கிறது, பாலகங்காதிர திலகர்,  தாதாபாய் நெளரோஜி, கோகலே சிலைகளோடு சுதந்திரப் போராட்டத்தில், தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு இழப்புகளைச் சந்தித்து வரலாற்றில் அறியப்படாத மனிதர்களின் அரூபங்கள் உரையாடுவது போல் அமைந்த கதை. தலைவர்கள் மட்டுமல்ல,   எண்ணற்றோர் செய்து பெற்றதே இச்சுதந்திரம் என்று சுதந்திர தின விழா மேடைகளில் நாம் பேசியிருப்போம். அந்த எண்ணற்றவர்களில் இருந்து உயிர்பெற்று வரும் கேள்விகள் எளிய மக்கள் எல்லோருக்குமானதே. அவர்களின் இழப்புக்குக் கணக்கு தீர்க்கப்படாமலே காலத்தில் உள்ளது. தலைவர்களின் சிலைகள் இந்த எளிய மனித மீட்டுருவாக்கங்களின் கேள்விகளைக் கண்டு பதட்டமடைகின்றன. கோபம் கொள்கின்றன. பதிலற்றபோது வரும் ஆத்திரங்கள் இவை. சுதந்திரத்திற்கு முன்பும் சரி,  பின்பும் சரி,  நாடும் தலைவர்களும் முதலாளிகளின் கைப்பாவைகளே என்பதைதான் கதை,  காலத்தால் உறுதிபடுத்துகிறது. 1953 இல் எழுதப்பட்ட இக்கதையின் அரசியல் கூறுமிக்க நாட்டு நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை. அந்தக் கேள்விகள் இன்னும் உயிர்ப்போடு உள்ளன என்பதும் கடந்து போகும் ஒன்றல்ல. 

நாட்டின் அரசியல் சூழலை ஒரு கதையில் அசாத்தியமான கற்பனையால் தலைவர்களின் சிலைகளின் வழி கேள்விக்குட்படுத்துகிறார். மனிதனின் மகத்தான காதல் உணர்ச்சியால் ஷேக்ஸ்பியர் உருவாக்கிய பாத்திரங்களான ரோமியோ-ஜூலியட், காலத்தால் வாழும் லைலா-மஜ்னு, ஹீர்-ரான்சா ஆகிய புனித பிம்பங்களை உடைக்கிறார்.    அலைகள் ஓய்வதில்லை படம் வந்த போது,  கடைசி காட்சியில் கார்த்திக்-ராதா ஜோடி பூணூலையும், சிலுவையையும் அறுத்து   எறிந்துவிட்டு ஓடுவது போல் பாரதிராஜா வைத்திருப்பார். பார்வையாளர்கள் இதனை விளையாட்டாகக் கேலி செய்வார்கள், அதன் பிறகு வாழ்க்கை தரும் நெருக்கடியில் காதலர்கள் என்னாவார்கள் என்று இயக்குநர் காட்டவில்லை என்று. 

அதே போல் நாம் காதலின் உன்னத உதாரணங்களாகக் குறிப்பிடும் மூன்று ஜோடிகளின் பிறகான வாழ்வைக் கற்பனையால் “காதலுக்குப் பிறகு” கதையில் மிகுந்த எள்ளலோடு கிருஷ்ண சந்தர் எழுதியிருப்பார். 

லைலாவும் மஜ்னுவும் வறுமைக்கு ஆட்பட்டு,  சாதாரண வாழ்க்கைக்குக் கடன்பட்டு அல்லலுறும்போது காதல் காணாது போய் இருக்கும். மாமியார்-மருமகள் சண்டை வரும். ஒரு மூலையில் லைலா அடுப்பில் ஈரமான விறகுகளை எரிக்க முயற்சிக்கும் காட்சி வரும். வேலை கிடைக்காத கோபத்தில் மஜ்னு லைலாவோடு கத்தி சண்டையிடுவான். இன்னொரு பக்கம் ரோமியோ-ஜூலியட் ஜோடிக்குள் வரும் விலக்கத்தையும் கதை நாடக வடிவில் பேசி இருக்கும். விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடுவார்கள். மது அருந்திவிட்டு இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வரும் ரோமியோ விடும் குறட்டையில் இரண்டாயிரம் குதிரைகள் ஒன்றாகக்  கத்துவது போல் இருப்பதாக லைலா புகார் தெரிவிப்பாள்.  வில்லியம் ஷேக்ஸ்பியர் அமரத்துவமடைய செய்த காதல் ஜோடியை நிதர்சன வாழ்வுக்குள் தள்ளிக் காதலின் பெயரால் கட்டப்பட்ட புனிதத்தைப் புனைவால் உடைத்திருப்பார் கிருஷ்ண சந்தர். ரோமியோ கொடுத்த விஷத்தில் போலியாக்கி, ஜூலியட் பாய்ச்சிக்கொண்ட கத்தியை இதயத்தில் இருந்து விலக்கி விலா எழும்புக்குள் பாய வைத்து உயிர்ப்பித்துச் சந்தர் இக்கதையை எழுதியிருப்பதை வாசிப்பது தனி அனுபவம். எழுத்தாளனுக்கு இருக்கும் சுதந்திரத்தை இக்கதை உறுதிபடுத்துகிறது. வரலாற்றின் பாதையில் அடி ஒற்றி நடக்க வேண்டிய அவசியம் புனைவு எழுத்தாளனுக்கு இல்லை. அவன் நினைக்கும் பாதைகளில் வரலாற்றுப் பாத்திரங்களை அழைத்துச் செல்லும் துணிச்சலை இதுபோன்ற கதைகள் வழிகாட்டுகின்றன. 

பெஷாவர் எக்ஸ்பிரஸ் கதை மிக முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டி எழுதியிருப்பார். ரயில் உயிரோடு கவனித்து எழுதியது போல் அமைந்திருக்கும். ரயிலின் பார்வையில் இந்து-இஸ்லாமியர் என்பதை தாண்டி மனிதனாக அவர்களின் குரூரங்களைக் கதை வெளிப்படுத்தி இருக்கும். பாகிஸ்தானில் உயிருக்குப் பயந்து வன்முறைகளைச் சந்தித்து வெளியேறும் இந்துக்கள், இந்திய எல்லைக்குள் வந்ததும் இஸ்லாமியர்களுக்குத் தரும் பதில் வன்முறைகளை அப்படியே எந்த மனச்சாய்வுமின்றித் தந்திருப்பார். ரயிலுக்குள் குடித்துவிட்டு மகாத்மாகாந்தியைப் புகழ்ந்து கோஷம் இடுவார்கள். ‘மரத்தால் செய்த ரயில் வண்டிதான் நான். ஆனால் வெறுப்புணர்ச்சியை விரும்பவில்லை’, என்று ரயில் ஒரு இடத்தில் குறிப்பிடும். ஒரு முஸ்லிம் துணைக்  காவல் அதிகாரியைக் குடும்பத்தோடு எரிப்பார்கள். அதில் இளம்பெண்ணொருத்தி இருப்பாள். அவள் அறிவாளியாக,  நாட்டுக்குச் சேவை செய்பவளாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் அவள் கொல்லப்படுவாள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இந்து குடும்பங்களும் கொல்லப்படுவார்கள். இக்கதையை அவர் அந்நிலத்தில் இருந்து சந்தர் எழுதி இருப்பார். 

கிருஷ்ண சந்தர் வரலாற்றைப் புனைவாகமாற்றும்போது, அரசியல் சரிநிலையோடு இருந்துள்ளார் என்பதைப் பல கதைகள் உணர்த்துகின்றன. பெஷாவர் எக்ஸ்பிரஸ் கதையை முடிக்கும்போது, ‘மனிதர்களாக இவர்கள் மதம் கடந்து இணைய வேண்டும்’  என்பதோடு விவசாயிகளாக, தொழிலாளர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்று அவர்களையும் சேர்த்துக்  குறிப்பிடுகிறார். விவசாயிகளாக, தொழிலாளர்கள் என்பவர்கள் மதம் போன்ற வேற்றுமைகள் கடந்தவர்கள். அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து நிற்பது காலத்தின் தேவை. 

1950 களில் எழுதப்பட தொடங்கிய இக்கதைகள் இப்போதும் புத்துணர்வு இழக்காமல் உள்ளன. இக்கதைகளின் உண்மைக்கு நெருக்கமான பண்புகள் முக்கியமானவை. வரலாற்றைச்  சேர்த்து எழுதியபோது உள்ள சமூக, அரசியல் சிக்கல்கள் இப்போதுவரை நீடித்து வருவது காலத்தின் சாபம். இப்போது தலை தூக்கி ஆண்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான புள்ளிகளை இக்கதைகள் சமரசமின்றித்  தொட்டுப் பேசி உள்ளன. 

சமகால அரசியலைக்  கதைகள் பேசுவதன் அவசியத்தைச் சந்தர் கதைகள் வலியுறுத்துகின்றன. கலைத்தூய்மையை மட்டுமே பேசுவோம் என்று சத்தியம் செய்து விட்டவர்கள், அதனைப் பரிசீலனை செய்யலாம். சந்தரின் அரசியல் கதைகள் இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளன. புனிதம் என்று அவர் எதனையும் கண்டு மருளவில்லை. மொழியின் துணைகொண்டு அவற்றைக் கேள்விகேட்டு உள்ளார். 

இந்தியக்  கதை மரபில் கிருஷ்ண சந்தர் தவிர்க்க இயலாத ஆளுமை. அவரைத் தேடி வாசிப்பது அவசியம். உணர்வின் கதகதப்பு குறையாமல் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் தரும் வாசிப்பனுபவமும் உள்ளத்து நெருக்கடியும் விவரிக்க இயலாதது. மண்டோவின் காலத்தில் இஸ்மத் சுக்தாய் போன்றோரோடு இயங்கியவரின் கதைகளை கவனப்படுத்திய ராணிதிலக்கும், எழுத்துப் பிரசுரத்திற்கும் பாரட்டுக்குரியவர்கள். சிற்றிதழ்களில் சந்தரின் கதைகளை மொழிபெயர்த்த அசோகன், முக்தார், ரா. வீழிநாதன் போன்றோரையும் சிறுபத்திரிக்கை மரபையும் நன்றியோடு நினைவில் கொள்ள வேண்டும். 

கலையையும் சமகால அரசியலையும் நேர்த்தியான மொழியோடு கைகொண்ட கிருஷ்ண சந்தர், எழுத்தில் தனித்துவதையும் பொறுப்புணர்வையும் விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமானவர். 

***

ஸ்டாலின் சரவணன் : தமிழ்க்கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கியச் செயற்பாட்டாளர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “2000 க்குப் பிறகான இந்திய சினிமாவில் பெண்களின் வாழ்வியல்” என்ற தலைப்பில் பாரதிதாசன்‌ பல்கலைக்கழகம் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். தேவதைகளின் வீடு, ஆரஞ்சு மணக்கும் பசி, ரொட்டிகளை விளைவிப்பவன் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : stalinsaravanan@gmail.com

கசபத் தரும் வாழ்வியல் பாடம்

0

இப்ராஹிம்

வாழ்வு எந்த இலக்கை நோக்கி செல்கிறது என்று எந்தக் கவலையும் பேதமும் இல்லாத பருவம் தான் பதின் பருவம். அந்தப் பருவத்தைக் கடந்ததும் மனிதன் எதிர்பார்க்காத வகையில் அவனைச் சுற்றி எழும் கேள்விகளும், குழப்பங்களும் அவனுக்கு அந்த வாழ்வியல் சார்ந்த ஒரு புதிய பார்வைக் கோணத்தை காண்பிக்கிறது. பொறுப்புகள் ஒவ்வொன்றாக அவனின் மேல் செலுத்தப்படுகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தச் சுமையை சுமக்கத்தான் வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதற்குப் பின்னால் இருப்பது எல்லாம் இந்த சமூகத்தால் கட்டமைத்த விடயங்கள் தான். அதில் மய்யமாக பணம் தான் வாழ்வின் ஆதார இன்பம் என திரும்பத்திரும்ப கற்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனின் தேவை இருக்கிறது தான் ஆனால் அது தான் வாழ்வின் ஆதர்சம் என்று கூறுவது தான் ஏற்புடையதாக இல்லை. அப்படி இந்த வாழ்வின் இன்பம் பணம் தாண்டி பல விடயங்கள் இருக்கிறது என்று புத்தகங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அப்படி புத்தகங்களின் மூலமாக உலகை அறிந்து கொண்டு வாழும் அபூ என்ற இருபது வயது இஸ்லாமிய இளைஞனின் வாழ்வுப் பயணம் தான் இந்த நாவல் அல்லது குறுநாவல் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

தமிழில் இஸ்லாமியர்களின் வாழ்வுப் பற்றி எழுதும் பலர், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு எண்ணம் உண்டு. இஸ்லாமிய மதம் மீறி செய்யும் விடயங்களாக உறவு பிறழ்வு, சுதந்திரம் என்று அவர்களே கற்பிதம் செய்து கொள்ளும் விடயங்கள், தர்கா வழிபாடு சார்ந்த விடையங்கள் அல்லது மந்தரித்து ஓதும் நபர்கள், காதல்கள், கலவரங்கள் என்று ஒரே குட்டையில் தான் உழல்கிறது. ஏன் ஒரு முஸ்லிமுடைய மனதைப் பிரதிபலிக்கும் அளவு எழுதப்படவில்லை என்ற குறை எனக்கு இருந்திருக்கிறது. அந்தக் குறையை இந்த நாவல் ஓரளவுக்கு நிவர்த்தி செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

காயபட்டினத்தில் வாழும் வாழ்வு எப்படியான வாழ்வு, அந்த நிலத்தில் இருக்கும் ஆண்கள் பெரும்பான்மையினர் செய்யும் வேலைகளாக இருப்பது ஒன்று சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்வது அல்லது  வெளிநாடு/வெளியூர் சென்று சம்பாதித்தல். இதில் இரண்டாம் நிலைதான் அதிகபடியான முஸ்லிம்களின் நிலைமை. இது தான் பல முஸ்லிம்களின் முந்திய தலைமுறைகளின் நிலைமை கூட. தன்னுடைய வாழ்நாளின் முப்பது ஆண்டு காலம் அந்நிய நாட்டில் உழைத்து உழைத்து முதுமையில் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது அப்போது அவர்களின் வாழ்வில் பயன் என்ன என்றே தெரியாமல் தான் இருக்கிறார்கள். இந்த சமூகத்தில் நன்மதிப்பு புகழோடு வாழவேண்டும் என்ற ஒற்றை விடயம் தான் அவர்களுக்கான அப்போதைய ஆறுதல்.  இது மட்டுமே ஒருவனுக்குப் போதுமானதாக இருந்து விட முடியுமா, அது என்ன பெரிய இன்பத்தை தந்துவிடப் போகிறது. நம்மிடத்தில் உதவி என்று வந்து கேட்கும்போது நம்முடைய மனம் பணம் சார்ந்த கணக்கு போடுகிறது என்றால் நாம் எப்படி வாழ்கிறோம் என்று சுய பரிசோதனை செய்து பார்த்து கொள்ள வேண்டும் என இந்த நாவலில் பல இடங்களில் வரும் கதாபாத்திரங்கள் இந்தக் கேள்விகளைத் திரும்பத்திரும்ப வாசகனிடத்தில் கேட்கிறது.  

இந்த நாவலின் மய்யப் புள்ளியாக இருக்கும் இருபது வயதுடைய ‘அபூ’ விற்கு பலர் வாழும் வாழ்வான பிறந்தோம் உழைத்தோம் இறந்தோம் என்ற சுழற்சி வாழ்வை வாழ்வே கூடாது என்ற இறுக்கமான பிடிப்பு இருக்கிறது. அப்பா உழைத்துக் கொண்டிருந்தவரை அவர் எதுவும் கூறாமல் இருந்தார், ஆனால் அவரின் வீழ்ச்சி இவனுக்கு அழுத்தம் தரத் துவங்குகிறது, அதுவெல்லாம் இயல்பு தானே, அது பொறுப்புகள் தானே, பிறகு ஏன் இவன் இப்படி பொறுப்பற்றவனாக வாழ வேண்டும் என்று நமக்கு தோன்றும். அதுவெல்லாம் இந்த பொதுபுத்தி உருவாக்கியவை தான், ஏன் இப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வியை நாமும் கேட்கப்போவதில்லை அப்படி கேட்போரையும் ஒரு விரோதம் நிறைந்த மனதோடு தான் பார்க்கிறோம், நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் பார்த்தேன் ஆனால் இந்த மனப்போக்கை உருவாக்கியது இந்த சமூகம் தான் என்று உணரும்போது அதை மறுபரிசீலனை செய்து அபூவின் செயல்கள் மீதும் ஓர் அறம் இருக்கிறது என்று தான் ஒப்புக்கொள்கிறேன். 

எந்த மதமாக இருந்தாலும் அந்த மதம் சார்ந்த மரபு என்பது ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்றார் போல அது ஒரு வடிவத்தில் நிலைகொள்கிறது, இதை அந்தந்த மதங்களின் செயல்பாடுகளை வைத்து பிரித்து உணர்ந்து கொள்ளலாம். அந்தந்த நிலம் சார்ந்து இஸ்லாமிய மதத்திற்க்கும் சில மரபுகள் இருக்கிறது – ஆனால் இஸ்லாம் அப்படி கூறுவது கிடையாது – அந்த நிலமரபின் தொடர்ச்சியை ஓர் இஸ்லாமியன் பின்பற்றுகிறானோ இல்லையோ அது சார்ந்த கேள்விகளை மட்டும் எழுப்பக்கூடாது என்று இருக்கிறது. அப்படி கேள்விகள் எழுப்பும்போது அது சார்ந்த தர்க்கங்கள் நடக்காமல் அந்த ஜமாத்(ஒவ்வொரு ஊருக்குள் இருக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பு) அதைக் கண்டிக்கிறது, அவனை வெளியேற்றுகிறது, அவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கிறது, தோளுக்கு தோழனாக இருந்தவர்கள் அந்நியர்களாக மாற்றம் கொள்கிறார்கள். அப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் ஓர் உரையாடல்தான், அதற்கு கூட இடம் தர மறுக்கிறார்கள். அப்படித்தான் அபூவின் வாழ்வில் அவன் வெறும் ஜே. பி யின் கேசெட்டை வைத்திருந்தான், இஸ்லாமிய மார்கம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பும் உரைகள் தான் அவை. அது அவன் மட்டும் கேட்டு அறிந்து கொள்ளும் விடயங்கள் தான் எனினும் அந்த ஜமாத் அவனின் பெற்றோருக்கு நெருக்கடியை உருவாக்கி அவனை அந்த நிலத்திலிருந்தே வெளியேற்றுகிறது, இம்மாதிரியான சந்தர்ப்பமே போதும் அவர்களுக்கு அவனை ஒரு வேலையில் கட்டிப் போட்டு விடலாம் என்ற நம்பிக்கையை நிலைநிறுதுவதற்கு, அப்படித்தான் அபூவின் வாழ்வு புதிய நிலத்தை நோக்கி நகரத்துவங்கியது. 

அல்லாஹ்விடத்தில் மட்டுமே தன்னுடைய அடிபணிதல் என்று வாழும் அபூவுக்கு சென்னையின் நூல் மொத்த வியாபாரக்கடையில் இருப்பு கொள்ளவில்லை, கண்கள் காணும் அநியாயம் ஒரு புறம் இருக்க அந்தக் கடை முதலாளிகள் மனிதநேயம் அற்று செய்யும் செயல்களை இவனால் சகித்துக் கொண்டு வாழமுடியாமல் மீண்டும் ஊருக்கே திரும்பியதும், அங்கிருந்து வேறொரு நிலத்துக்கு நகர்கிறான். அது அவனுக்கு பல புதிய திறப்புகளைத் தருகிறது, இந்த திறப்புகளின் ஊடாக அவன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாற்றம் கொள்கிறான். அவனை சுற்றி நடக்கும் அரசியல் புரிதல் கிடைக்கிறது, களத்தில் அவன் இறங்கி செய்யும் செயல்பாடுகளால் அவனுக்கு பல இடையூறுகள் முளைக்கத் துவங்குகின்றன. அதிலிருந்து தப்பிக்க ஊர் ஊராக அவனின் வாழ்வு ஒரு நாடோடியைப் போல பயணம் கொள்கிறது. இதற்கு எல்லாம் முடிவாக அவனின் வாழ்வில் வரும் ஓர் பேரிழப்பு அவனின் மேல் பொறுப்புகளை சுமக்கத் துவங்குகிறது. இந்தப் பொறுப்புகள் அவனின் விருப்பமாக மாறுதல் அடைதல் தான் அவன் கண்ட வாழ்வின் பொருளாகிறது. 

இந்த நாவலின் தலைப்பான கசபத் என்ற அரபி சொல்லின் பொருளாக சம்பாதித்தது, பெற்றது என்று வருகிறது. எல்லோருடைய வாழ்விலும் அவரவருக்கு என்று இருக்கும் கசபத் என்பது அவர்களின் வாழ்வை எந்தளவுக்கு இன்பத்தில் வைத்திருக்கிறது, அதுவெல்லாம் அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டது என்றாலும் அவர்களுக்கு மட்டுமே உரியதா? அதனால் அவர்கள் பெற்றவை எவை, இழந்தவை எவை? என்று அவரவர்கள் கேள்வியை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நாவலின் கடைசி அத்தியாயத்தில் அபூ அவனின் வாழ்வில் பெற்ற கசபத் என்னவென்று அவனின் நண்பர்களுக்கு எடுத்துரைக்கும்போது அவர்கள் உணர்வது என்ன? நாம் உணர்வது என்ன? என்று சில முக்கிய கேள்விகளை எழுப்ப முடியும். இது தான் இந்த நாவல் தரும் மய்ய சாரம்.  

வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்தக் நாவலை(குறுநாவல்) சாளை பஷீர் எவ்வாறு கையாண்டு இருக்கிறார் என்று பார்க்கும்போது எந்த பெரும் குழப்பங்களையும் வாசகனுக்குத் தராமல் நேர்கோடு தன்மையியே நகர்த்துவதும், தன்னிலையில் இந்தக் கதையைக் கூறவது ஒரு விதமான சுயசரிதைத் தன்மையை தருகிறது என்றாலும் அவர் கையாண்டிருக்கும் மொழியும் ஆங்காங்கே வரும் படிமங்களின் விவரணையும் இருள் சார்ந்த பார்வைகளும் வாசகனின் வாசிப்பின்பதிற்கு தீனிபோடும் பல விடயங்கள் இருந்தது. பல இன்பங்கள் இருந்தாலும் சில நெருடல்கள் இருக்கத்தானே செய்யும். எனக்கு சில நெருடல்களாக இருந்தது இதில் தெளிவாக குறிப்பிடப்படாத காலம் தான். ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு இது எப்போது நடக்கிறது என்று யூகித்துக் கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆனால் அது நேரம் எடுத்துக் கொள்ளும்போது இடையில் வரும் ஒரு கதாபாத்திரமான “இஸ்மாயில் காக்கா” வின் விவரணை இந்த காலம் என்ற குழப்பத்தை தருவதுதான் எனக்கு நெருடலாக இருந்தது, மற்றொன்றாக நான் பார்ப்பது இன்னும் அபூவின் வாழ்வை எழுதி இருக்கலாமே, இடையில் விடப்பட்ட ஒரு நீண்ட காலம் பற்றி ஓரிரு வரிகளில் கடந்து எனக்கு உவப்பாக படவில்லை, விடுபட்ட கால வாழ்வு வேறொரு நூலாக வரலாம் என்றும் உள்ளுக்குள் தோன்றினாலும் இங்கு அதனின் தேவை இருக்கிறதோ என்று தான் மனதில் உறுத்தலாக இருக்கிறது. சாளை பஷீர் அவர்கள் மென்மேலும் எழுத வாழ்த்துகள்.  

***

முகமது இப்ராஹிம் அலி – சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்‌. ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com

கலை | காதல் | அறிவு | விடுதலை | அழகியல்

0

ரூபன் சிவராஜா

(ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு | தொடர் 14)

தார்த்தத்தை அதன் ஒற்றைக் கண்ணோட்டத்திலிருந்து மீள்தேடலுக்கு ஊடாக மீள்கண்டடைகின்றது கலை. தனித்துவமான கலைஞன் உண்மைகளுடனான தனது உறவின் மூலமும் தனக்கே உரித்தான பார்வை மற்றும் உணர்வுகள் மூலமும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கம் செய்கின்றான். 

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல் எனும் அம்சத்தை – ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கிலிருந்து பிரிக்கமுடியாத அங்கமாகக் கருதுகின்றார் Boal. மிக இன்றியமையாத அம்சமாகவும் முன்வைக்கின்றார். அந்த அழகியல் ஒரு புதிய புரிதலை உருவாக்குகின்றது, குறித்த பேசுபொருளை உள்ளுணரச் செய்ய உதவுகிறது. அது மூளையின் நுண்ணறிவு மூலமாக மட்டுமல்லாமல், புலன்களின் நுண்ணுணர்தல் மூலமாகவும் சமூக யதார்த்தத்தை புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் அழகியல் ஒற்றைப் பரிமாணமுடையது அல்ல. அது முழுமையான அறிவுச் செயற்பாட்டினைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதோடு அதற்கான தார்மீக நெறிமுறை சார் முடிவுகளையும் கலைஞனுக்கு முன்னால் வைக்கிறது. இது உணர்வுபூர்வமானதும் நுண்ணறிவுசார் தூண்டுதல்களையும் உருவாக்குகின்றது. வார்த்தையின் குறியீட்டு மொழியையும் புலன்களின் சமிக்ஞை மொழியையும் இணைக்கிறது.

‘ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ தொடரின் இந்தப் பகுதி, Boalஇன் அழகியற் கோட்பாடு, சொற்கள், உணர்வுகள், வெளிப்பாட்டு வடிவங்கள், பிரதிபலிப்புகள் முதல் அழகியல் செயல்முறையிலிருந்து கலைத்துவப் பொருளை அடைதல் வரையான பேசுபொருட்களை மேற்கோள்களுடன் முன்வைக்கின்றது. கலை, மொழி, உணர்வுகள் மற்றும் அறிவு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பினை விவரிக்கின்றது. கலையும் காதலும், கலையும் அறிவும், அழகியலும் நரம்பணுக்களும், மாறுபொருளுணர்த்தலாக அல்லது மொழிபெயர்ப்பாக உருவகம் போன்ற துணைத் தலைப்புளைக் கொண்டிருக்கின்றது. கலையின் அழகியல் எவ்வாறு விடுதலைக்கானதும் சமூக மாற்றத்திற்கானதும் கருவியாக இருக்க முடியும் என்பதை விளக்குகின்றது. கோட்பாடும் நடைமுறையும் சார்ந்த மேற்கோள்களைக் கொண்டு விவரிக்கின்றது.

பொருள் மாறும் சொற்கள் 

மனிதர்களிடையே பரிமாற்றம் மற்றும் உரையாடற் செயல்முறை சாத்தியமாக இருப்பதற்குச் சொற்கள் அடிநாதமாக உள்ளன. இன்னும் குறிப்பாகப் பெயர்கள் (பெயர்ச்சொற்கள்) இன்றியமையாதவை. ஆனால் சொற்கள் பல்பொருட் குறிப்பான்களுமாகும் (Polysemic signifiers). அதாவது சொற்கள் (தகவல்கள், செய்திகள்) ஒவ்வொரு தடவையும் புதிய புதிய பெறுநர்களால் பொருளுணரப்படும்போது, பெரும்பகுதி அர்த்தங்களை இழக்கின்றன. ஒவ்வொரு பெறுநரிடமும் அவை புதிய அர்த்தங்களோடு சென்றுசேர்கின்றன.

அனுப்புநரால் உச்சரிக்கப்படும் போது, அந்தச் சொற்கள் குறித்த அந்த அனுப்புநரின் அனுபவங்கள், நினைவுகள், எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் கற்பனை ஆகியவற்றின் அடையாளங்கள் நிறைந்தவையாகத் தோற்றம்பெறுகின்றன. இன்னொருவருக்குக் (பெறுநருக்கு) கடத்தப்படும் போது, அந்தக் குறிப்பான்கள் (Signifiers) தமது அடையாளங்களை மாற்றுகின்றன. கடத்தப்பட்ட சொற்களுக்குள் அதனைப் பெறுபவரின் அனுபவங்கள் உள்ளேற்றப்படுகின்றன.

மொழி என்பது கடத்துகையின் வழிமுறை (கருவி). பேருந்துகள் மற்றும் பாரவுந்துகளைப் போல வார்த்தைகளும் ஒரு போக்குவரத்து சாதனம். பேருந்துகள் மக்களை ஏற்றிச் செல்வது போலவும் பாரவுந்துகள் பொருட்களை ஏற்றிச் செல்வது போலவும், சொற்கள் நம் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடத்துகின்றன. சொற்றொடரை எழுதும்போது, வாக்கிய அமைப்புத் தொடரியல் மூலமாக வெளிப்படுத்தும் அர்த்தத்தினைப் பிரதிபலிக்கமுடியும். சொற்றொடரைப் பேசும்போது, குரல்மொழி மூலம் – அதாவது தொனி, உச்சரிப்பு, ஒலிப்பு, ஒலியளவு, சொற்களுக்கிடயிலான இடைநிறுத்தம் ஆகியவை மூலம் அகராதி வரையறுக்கும் அர்த்தத்திற்கு நேர்மாறான பொருளுணத்தும் வகையிலும் நாம் சொற்களைப் பிரயோகிக்க முடியும்.

சொற்கள் அதிகம் துல்லியமானதும் குறைந்தளவு (Abstract) அருவத்தன்மையுடைய பொருளைக் கொடுப்பதற்கு அவற்றுக்கு ஆடையணிவிப்பது இன்றியமையாததாகும். கிரேக்க அவல நாடகங்களில் முகமூடி, மேலங்கி போல – கோவில்களில் வழிபாட்டு முறைகள் போல – இராணுவத்தில் படிமுறை ஒழுக்கம் போல – திரையில் ஒளியமைப்பு, கேமராக் கோணம், காட்சிச் சட்டகங்கள் போல மெருகூட்டல் அவசியப்படுகின்றது. எமது நாளாந்தம் உடைகள், பண்பாட்டு அடையாளங்கள், பேச்சின் தாளகதிக்கேற்ற ஒலிப்புமுறை, உடலமைப்பு ஆகிய ஆடைகளை உடுத்திக்கொள்கின்றன.

மனிதர்களாகிய நாம் பகுத்தறிவைத் தாண்டி உணர்வுபூர்வமான தொடர்பாடல் வெளிகளைத் தேடவேண்டும். அதாவது பகுத்தறிவின் அடிப்படையில் மட்டுமல்லாது, உணர்வுசார், அழகியல்சார் செயற்பாடுகளுக்குரிய தொடர்பாடல் வடிவங்களையும் தேடவேண்டும். பகுத்தறிவிற்கு அப்பாலான இவ்வகை அழகியல் மீறல் நாடகத்திற்கும் அனைத்துக் கலைகளுக்கும் அடிப்படையானதாகும். நாம் பகுத்தறிவு, சிந்தனை, உணர்வு, வடிவம் ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாது. அவை ஒன்றோடொன்று முரண்பட்டாலும், குறுக்குவெட்டாகச் சந்தித்துக் கொண்டாலும் அவை நிலைகொள் இணைகள்.

சொற்கள் புரியும் தீமை (The evil that words do)

சொற்கள் வலிமையானவை. அவற்றை நாம் உரையாடும் போதோ அல்லது செவிமடுக்கும் போதோ, சில தருணங்களில் எமது சொந்த உணர்தலில் அவை மேலாதிக்கம் செலுத்திவிடக்கூடும். அங்கு சொற்களின் தலையீடு இல்லாமல் நாம் உலகின் சமிக்ஞைகளை மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. சொற்களைப் புரிந்துகொள்ளுகின்ற எமது செயன்முறை தாமதமானது, ஏனெனில் சொற்களின் அர்த்தத்தினை உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வுகளுக்கு மாறாக நாம் நமது மூளைக்குள் மொழிபெயர்க்க (Decode)வேண்டும். இதுவே குறியீட்டு மொழிக்கும் குறியீட்டுக்கும் சமிக்ஞைக்கும் இடையிலான வேறுபாடாகும். இதனைப் பிரெஞ்சு மொழியில் ‘சிக்னலடிக்’ (Signaletique) என்று கூறுகின்றனர். நாம் ஒரு வார்த்தையைக் கேட்டால், அது எதுவாக இருந்தாலும், அதன் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்துகொள்ள எமக்குச் சிறிது நேரம் தேவை. ஆனால் நாம் எமது விரலை காப்பிடப்படாத மின்சாரக் கம்பியில் வைத்தால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிறப்பு மொழிபெயர்ப்பு எதுவும் தேவையில்லை. நாம் கத்துகிறோம் அல்லது அலறுகிறோம்.

அழகியல் செயல்முறையிலிருந்து கலைத்துவப் பொருளை அடைதல் (From Aesthetic process to artistic product)

கலைஞன் என்பவன் ஒப்புமைகள் (Analogies) மற்றும் நிரப்பிகள் (Complementarities) மூலம் ஒரே மாதிரியாக இல்லாதவற்றையும் ஒன்றிணைக்கும் தொகுப்புகளைக் (Sets) காணும் திறன் கொண்டவன். கலைஞர்கள் வழக்கமான ஒன்றிணைந்த பார்வையில் (மொழி, குறியீடுகள் வழியாக) யதார்த்தத்தைப் புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தங்காமல், தனது கலைச்செயல் மற்றும் தனது படைப்பாக்கத்தின் மூலம் கலைஞன் அதைக்கடந்து செல்கிறான். அங்கு சொற்கள் நிரப்பிகளைப் பிரதிபலிக்கும் குறியீடுகளாக உள்ளன. 

கலைஞர்கள் தமது அழகியல் வழிமுறையில் விடயங்களை முன்னெடுப்பதிலும் (ஆய்வு, செயல், படைப்பாக்கப் பரிட்சார்த்த முன்னெடுப்புகள், தோல்வி) அவர்களின் கலை உருவாக்கத்திலும்; (முடிக்கப்பட்ட கலைப் படைப்பு) ‘கவசங்கள் பூசப்பட்ட யதார்த்தத்தின்’ உணர்தல்கள் – தனித்துவமான அம்சங்களில் யதார்த்தபூர்வமாகவும் – வெளிப்பாட்டுத்திறனுடனும் முன்னேறுகின்றனர். ஒரு கலைஞன் அவற்றைப் பெயரிடும் மொழியை எளிமைப்படுத்துவதன் மூலம் மறைந்திருக்கும் ஒற்றுமைகளை உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

கலைஞன் தன் முழுமையைத் தேடுவது போலவோ, அல்லது தன்னைத் தானே தேடுவது போலவோ, தன் அடையாளத்தைத் தேடுவது போலவோ, உயிரினத்தின் ஒற்றுமையை ஊடுருவிச் செல்கிறான். இந்த ஆற்றல்மிக்க உணர்வு ஒருபோதும் நிறுத்தப்படுவதில்லை, மாறாக தீவிரமாக அதிகரிக்கிறது அல்லது குறைகிறது, கலைஞரைப் பொறுத்தவரை எப்போதும் இவ்வுணர்வு மிதந்துகொண்டிருக்கும்.

சில மனிதர்கள் மட்டுமே கலைஞர்களாக அடையாளம் பெறுகின்றனர். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் ஒரு கலைஞன்தான். கலையை உருவாக்குவதன் மூலமோ அல்லது காதல் செய்வதன் மூலமோ ஏதோவொரு திறனை ஏதோவொரு அளவில் ஒவ்வொரு மனிதரும் கொண்டிருக்கின்றனர். உருவாக்கம், அதாவது அழகியல் செயல்முறை மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட பொருள் அல்லது கலைப் படைப்பு ஆகியவற்றுக்கு இடையே Boal முக்கியமான ஒரு வேறுபாட்டினைக் கவனிக்கக் கோருகின்றார். செயல்முறை மற்றும் உருவாக்கப்பட்ட பொருள் (படைப்பு) இரண்டும் சார்ந்து சிந்திக்கும் போது படைப்பினை அடைவதற்குரிய செயல்முறை அவசியம். அழகியல் செயல்முறையானது ஒரு கலைப் படைப்பினை உருவாக்குவதை எல்லா நேரமும் பெறுபேறாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் – அது குறித்த பெறுபேற்றிற்கு இட்டுச்செல்லாமற்கூட விடலாம். இருப்பினும், அதுவே எமது குறிக்கோளாக இருந்துகொண்டிருக்கின்றது என்கிறார் Boal.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் அழகியலைப் பொறுத்தவரை, மிக முக்கியமான விஷயம் அழகியல் செயல்முறையாகும் (Aesthetic process). பயிற்சிகளின் போது அச்செயல்முறை நபரின் உணர்தலை(புரிதலை) வளர்க்கிறது. இருப்பினும் அது ஒரு கலைப்பொருளாக (முடிக்கப்பட்ட கலைப்படைப்பாக) வலிமைமிக்க சமூகத்திற்கான சக்தியாக உருவாகுவது விரும்பத்தக்கதாகும். கலைப் படைப்பாகப் பரிமாணமடைகின்ற அந்த இலக்கு ஊக்கமளிக்கக்கூடியது. இது கனவுக்கான தேடலைப் போல, சொர்க்கத்திற்கான தேடலைப் போல செயல்படுகிறது. அச் செயல்முறை இவ்வாறாக உச்சக்கட்டத்தை அடையும் போது, அதன் படைப்பாளர்கள் ஏனையவர்களின்; அங்கீகாரத்தின் அநுகூலங்களைப் பெறுகிறார்கள். இது மேலும் முயற்சிகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறது. 

அழகியற் செயல்முறையானது மனிதர்கள் பொதுவான வாழ்க்கைச் சூழலில் மறுக்கப்படும் செயல்களிற் தங்களை ஈடுபடுத்தத் தூண்டுகின்றது-அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் வெளிப்படுத்தல் மற்றும் புலனுணர்வுச் சாத்தியங்கள் விரிவடைகின்றன. 

மனிதச் செயற்பாட்டின் ஒரு பகுதியுடன் தொடர்புடைய பெருமூளை மூளையின் அருகிலுள்ள அல்லது தொடர்புடைய பகுதிகளைத் தூண்டுகிறது: மூளை ஒரு சூழலியல் அமைப்பு. அது கணினியின் வன்தட்டு நினைவகம் அல்ல. இதன் பொருட்டு அழகியற் செயல்முறை தனக்குத்தானே பயனுள்ளதாக இருக்கும், அத்தோடு பிற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கலைப்பொருளை(கலைப்படைப்பு) உருவாக்கம் செய்யும் போது அது மேலும்; பயனுள்ளதாக ஆகுகின்றது.

கலைப்பொருள் விழிப்புணர்வுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். ஒரு கலைஞனை படைப்புருவாக்கத்திற்கு இட்டுச் சென்ற கருத்துக்கள், உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அழகியல் செயற்பாட்டில் பங்கேற்காதவர்களிடமும் கூட, அக்கலைப்படைப்பு தாக்கத்தினை ஏற்படுத்தவல்லதாக இருக்க வேண்டும். அழகியற் செயல்முறையின் முக்கியத்துவமும் மதிப்பும் அதன் தூண்டுதல் மற்றும் புலனுணர்வு, படைப்பாற்றல் திறன்களின் வளர்ச்சியில் தங்கியிருக்கிறது. ஒவ்வொரு அநுபவமும் யதார்த்தத்தை உருவகப்படுத்துகிறது. நாம் அனைவரும் கலைஞர்கள், ஆனால் எம்மிற் சிலரே எமது அழகியற் திறன்களைப் பயன்படுத்துகின்றோம் என்கிறார் Boal.

கலையும் காதலும் (Art and Love)

கலை என்பது காதல். காதலர்களுக்குப் பரஸ்பரம் தாம் காதலிக்கும் – தம்மைக் காதலிக்கும் நபர் மட்டுமே கண்களுக்குத் தெரியும். காதலிப்பவரை ஈடுசெய்யமுடியாதவராகவும் மீளுருவாக்கமுடியாதவராகவும் நாம் பார்க்கின்றோம். நாம் காதலிக்கும் போது, ஒரு சிக்கலான தனிநபர் பிரபஞ்சத்தின் (One-person universe), நிலையான இயக்கத்திற்குட் பிரவேசிக்கின்றோம். இந்த இயக்கம் நிலையானது. காதல் அப்படியல்ல. அதனால்தான், இப்போது மறந்துவிட்ட தனது முன்னாள் காதலை மீண்டும் சந்திக்கும் போது ஒருவரால் அவளை-அவனை அந்நியமாகவும் உணர முடிகிறது, நினைவுகளை மட்டுமே மீட்க முடிகிறது. ஆனால், ஒரு காலத்தில் அவர்கள்; ஒருவரையொருவர் நேசித்தவர்களாக, ஒன்றாக இருந்தவர்கள். காதல் நிலைத்தன்மை அற்றது. அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. கலைப் படைப்புருவாக்கத்திற்காக அதன் மீது காதலுடன் எம்மை நாம் அர்ப்பணிப்பது போல, காதலை வளர்ப்பதும் ஒரு கலைதான் என்கிறார்.

காதல் நிலைத்தன்மைக்குரிய எவ்வித உத்தரவாதத்தையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் நாம் கலையைக் காதலுடன் வளர்த்தெடுப்பதுபோல, காதலை வளர்த்தெடுப்பதும் ஒரு கலையே என்ற Boalஇன் காதலினதும் கலையினதும் அழகியலை கவித்துவமாக வெளிப்படுத்துகின்றது.

காதல் என்பது ஒரு அழகியல் அனுபவம் என நடைமுறையில் நிறுவப்பட்டாலும், அது கற்பனையின் ஒரு வெளிப்பாடு அல்லது தூண்டுதல்: காதலில்; நாம் காதலிக்கும் நபரை மட்டுமல்ல, அவர் தொடர்பாக நாம் செய்யும் கணிப்புகளையும் விரும்புகிறோம். அவை எமது உருவாக்கங்களாகவும் எம்மில் ஒரு பகுதியாகவும் உள்ளன. 

எமது கற்பனையானது காதலிப்பவர் மீது அவர் கொண்டிராத தீய மற்றும் நற்பண்புகள் தொடர்பான மதிப்பீடுகளை உருவாக்குகின்றது. ஆனால் அவை எமது விருப்பங்கள் அல்லது பயங்களினால் உருவாக்கப்படுகின்றன. காதலிக்கப்படுவதற்கு ஏன் பலர் பயப்படுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது: காதல் என்பது தம்மீது உருவாக்கப்படும் மதிப்பீடு என்று எண்ணுவதோடு, அது அவர்களைக் கட்டிப்போடுவதாகவும் அந்த மதிப்பீட்டிற்குள் அவர்களைத் தத்தெடுத்துக் கொள்வதாகவும் அவர்கள் கருதுகின்றார்கள்.

மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி (Michelangelo Antonioni) தனது L’Avventura திரைப்படத்தில், ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக உணரும் ஒவ்வொரு முறையும் ஓடிப்போகும் ஒரு மனிதனைக் காட்டுகிறார். இது அவனால் தாங்கிக் கொள்ள முடியாதது. அப்பெண் அவனைப் பற்றித் தான் கட்டமைத்த நிலையான உருவகத்தை விரும்புகிறாள். அடிப்படையில் எந்தவொரு மனிதரிடமும் ஒரு தொடர்ச்சியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும். அத்திரைப்படத்தில் அந்நாயகன் ஒரு பாலியல் தொழில் புரியும் பெண்ணுடன் உறவு கொள்கிறான். அவளுக்குப் பணம் செலுத்தி ஒரு வாடிக்கையாளனாகவும் ஆகுகின்றான்.

காதலிப்பதென்பது ஒரு கலை, கலை என்பது காதல். இந்த இரண்டு செயல்முறைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. காதலிதத்தல், மற்றும் உயிருள்ள எவற்றினதும் அல்லது பொருளாக இருந்தாலும் அவற்றின் அழகியலை உணர்ந்துகொள்வது முற்றிலும் ஒரே மாதிரியானவை. காதல் என்பது மின்மாற்றுசக்தியின் ஓட்டத்தை நிகர்த்ததும்; கடல் போன்றதுமாகும். நிலையான அல்லது கணிக்கக்கூடிய தாளங்களுக்கு அங்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் – ஒருபோதும் ஒரே மாதிரியாக இல்லாமல் – எப்போதும் தொடர்ச்சியான மாறுதல்களோடு அவை இயங்குகின்றன. 

நித்தியக் காதல்கள் உள்ளன – அவை குறிப்பாக அதீத அவலத்தில் முடிவடையும் வகையைச் சேர்ந்தவை. அது வற்றாத கலைப்படைப்புகளைச் செய்கிறது. ஆனால் நேசித்த நபரோ அல்லது போற்றப்படும் வேலையோ, ஒரு நிலையான தீவிரத்துடன் நேசிக்கப்படுவதில்லை அல்லது போற்றப்படுவதில்லை. அதே காரணங்களுக்காக எந்த நேரத்திலும், காதலிலும் கலையிலும் நிலையின்மை என்பது மட்டுமே நிலையானது. காதல் ஒரு சந்திப்பு அல்ல. அது ஒரு நாட்டம்! எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நபர், தன்னைப் போன்றே இல்லாத மற்றொரு நபரைத் தொடர்கிறார். காதல் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆகையால் காதலுடன் கலையை வளர்க்க வேண்டும், காதலை வளர்ப்பதும் ஒரு கலை.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல் அதன் செயல்முறையில் (Process) அதனை முன்னெடுப்பவரின் பார்வை, புலனுணர்தலை வளர்த்துச் செல்லக்கூடியது. அது ஒரு கலைப் படைப்புருவாக்கத்தின் உச்சம் பெறுதலை-அடைதலை இலக்காகக் கொண்டிருந்தாலும், சமாந்தரமாக சமூகவலுவினைப் பெருக்குகின்றது. 

கலையும் அறிவும் (Art and Knowledge)

கலைஞர்களைப் பொறுத்தவரை புலனணர்தலுடன் தொடர்புடைய அழகியற் செயற்பாடுகள் தனித்துவமான யதார்த்தங்களை அறிய உதவுகின்றன. அழகியற் செயல்முறையிலும் கலைத்துவச் செயலிலும் ஒரு எழுதிமுடிக்கப்பட்ட கட்டுரைபோன்று – கலைப் படைப்பானது மனிதமனதில் யதார்த்தத்துடனான தொடர்பை உணரவைக்கின்றது. 

இந்த வகையில் கலை அறிவுக்கான ஒரு சிறந்த வடிவமாகவும் ஆகுகின்றது. விஞ்ஞானபூர்வமானதாக அல்லாமல், அகநிலை, உணர்வுநிலை சார்ந்த அறிவாக ஆகுகின்றது. அதற்காக வேறு அறிவுசார் வடிவங்களைவிட கலைசார் அறிவு மேலானது என்பதல்ல. ஆனால் தனித்துவமானது. படைப்பாக்கத்தின் போது கலைஞன் யதார்த்தத்தின் சாரத்தினைத் தொகுத்து, புதிய நிரப்புத்தொகுதிகளை உருவாக்குகின்றான். 

‘நான்’ என்பது ‘நாம்’ எனவாக மாறுகின்றது. அது அசாதாரணமான பாய்ச்சல். இந்த ‘நாம்’இலும் ஒவ்வொரு ‘நான்’ இலும் கலைஞன் உருவாக்கிய அடைவுகளைப் பார்வையாளர்கள் கண்டடைகின்றனர். ‘நாம்’ பற்றிக் கதைக்க முடிகின்ற பொழுதுகளில் நாம் எமது எல்லா உறவுகளினதும் கூட்டுத்தொகையாக ஆகுகின்றோம். 

யதார்த்தத்தை அதன் ஒற்றைக் கண்ணோட்டத்திலிருந்து மீள்தேடலுக்கு ஊடாக மீள்கண்டடைகின்றது கலை. தனித்துவமான கலைஞன் உண்மைகளுடனான தனது உறவின் மூலமும் தனக்கே உரித்தான பார்வை மற்றும் உணர்வுகள் மூலமும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கம் செய்கின்றான். 

‘அறிவியல்’ என்பது அடிப்படையில் ஒரு கலை. ஆனால் கலை என்பது அறிவியல் அல்ல. கலை உண்மையானதும் யதார்த்தமானதுமான அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் கருவியுமல்ல. ஆனால் அது அசலான யதார்த்தம். 

அழகியலும் நரம்பணுக்களும் (Aesthetic and Neurons)

ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் ஓர் அறிவியல் உண்மையை-தரவினை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு மனிதனுக்குள்ளும் அவனது நுண்ணுணர்வு-கலங்கள்-நரம்பணு அமைப்பியல் செயற்படும்போது படைப்பாற்றலைக் கண்டடைவதற்கான கற்பனை தூண்டப்படுகின்றது. கற்பனை என்பது ஆசைகள், விருப்பங்களாற் தூண்டப்படுகின்ற நினைவுகளாகும். அநுதாபம் இலத்தீன் மொழியில் Empatheia எனப்படுகின்றது. இதன் பொருள் தற்காலிக இட்டுநிரப்பல் உணர்வு அல்லது அநுபவம். சகமனிதர்கள் பற்றி இன்னொரு மனிதனின் உணர்வு மற்றும் எண்ணங்களில் தொற்றவைக்கப்படுகின்ற-உள்ளுணர்த்தப்படுகின்ற ஒரு தற்காலிக இட்டுநிரப்பல் உணர்வினை அது குறிக்கின்றது. இந்த இட்டுநிரப்பல் நிகழ்த்துகலைகளில் (Performaning art) அதிகம் சாத்தியப்படுவன. அரங்கக் கலைப் படைப்புகளின் பாத்திரங்களாக இருக்கலாம். ஆல்லது நாளாந்த வாழ்விற் சந்திக்கின்ற ஒரு சக மனிதராக இருக்கலாம். குறிப்பாக ஒரு துன்பியல் நாடகத்தின் முதன்மைப் பாத்திரத்தினைப் பார்வையாளர் மனங்களுக்கு இலகுவிற் கடத்துவதும் அழுத்தமாய்ப் பதியவைப்பதும் இந்த அநுதாபமேயாகும்.

மாறுபொருளுணர்த்தலாக அல்லது மொழிபெயர்ப்பாக உருவகம் (Metaphor as translation Or Trans-substantiation) 

பரந்த அர்த்தத்தில் உருவகத்தின் மொழிபெயர்ப்பு எல்லா வகையான குறியீட்டு மொழிகளையும் உள்ளடக்கியதாகும். சொல்லாடல்களை உள்ளடக்கிய கதையாடல்கள் மற்றும் உருவகக் கதைகள், நீதிக் கதைகள் என்பன இத்தகைய தன்மையுடையவை. யதார்த்தத்தை மறுவுருவாக்கம் செய்வதைத் தவிர, அனைத்துக் கதைகளும் இந்த வகைக்குள் உள்ளடங்கக்கூடியவையே.

காண்பியற் கலையில் (Visual art) கோடுகள், நிறங்கள், வடிவங்கள் (Line, colour, Volume) கையாளப்படுகின்றன. இசையில் ஒலியும் நிசப்தமும் பயன்படுத்தப்படுகின்றன. நடனத்தில் இசைக்கு இசைகின்ற உடலசைவு பயன்படுத்தப்படுகின்றது. கோடுகள், நிறங்கள், வடிவங்கள் காண்பியற் கலையின் கட்டுமானத் தொகுதிகள். அழகியல் நரம்பணு இந்தச் செயல்முறையின் கூட்டியக்கத் தூண்டுதல். 

எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், புறச்சூழற் தாக்கங்கள், கற்பனைகளின் கூட்டியக்க விளைவாகப் படைப்பூக்கம் நிகழ்கின்றது. 

இந்த நரம்பணுக்கள் புதிய தூண்டுதல்களாற் செயற்படுத்தப்படும் போது, உருவகங்கள் உருவாக்கப்படுகின்றன, படைப்பாக்கம் நிகழ்த்தப்படுகின்றது. அனைத்து உருவகங்களும் மொழிபெயர்ப்புகள் அல்லது மாறுபொருளாக்கம் Translation or trans-substantiation), அதாவது புதிய யதார்த்தங்களைப் படைப்பது என்ற பொருளை இது உணர்த்துகின்றது. 

உருவகங்களைப் படைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. மனிதனுள் எவ்வளவு அதிகம் உருவகப்படுத்தல்கள் நிகழ்கின்றனவோ அவ்வளவு அதிகம் மனிதம் மேம்படுகிறது. அனைத்துக் கலைகளும் உருவகப்படுத்தல்களே. மனிதர்கள் மட்டுமே கலைஞர்கள் என்ற கருத்தினை Boal வலியுறுத்துகின்றார்.

ஒரு குறித்த விடயத்தில் அறிவியலுக்கும் திட்டவட்டமானதோ அல்லது கேள்விக்கிடமற்றதானதோ விளக்கம் (அறிவார்ந்த பதில்) இல்லை. ஆயினும் அங்கு கவித்துவ வியாக்கியானத்திற்கான (Poetic interpretation) வெளி உருவாகுகின்றது. அழகியல் நரம்பணு பலதரப்பட்ட செயற்பாடுகளைக் குவிமையப்படுத்தும் தன்மையுடையது. மேலும் ஆழ் மன உணர்வுகள், சிக்கலான எண்ணங்கள், சொற்கள், குறியீடுகள், உடலினூடாகக் கடத்தவும் உள்வாங்கவுமான திறன் கொண்டவை அழகியல் நரம்பணுக்கள். 

எவ்வளவு அதிகம் அறிகின்றோமோ அறிதற்திறன் மேலும் வளர்கிறது. ஓவியத்தில் அதிகம் ஈடுபடும் ஒருவர், தூரிகையையும் நிறங்களையும் கையாளும் திறனை நுணுக்கமாகக் கண்டடைகின்றார். பாடகர் தொடர்ச்சியான பயிற்சி, பாடுதல் அநுபவங்கள் மூலம் தனது குரலின் உச்சத்தை, தன்னால் எட்டக்கூடிய உச்சஸ்தாயியை (Voice range) அறிந்துகொள்கின்றார். கவிஞனின் உதட்டிலும் தாள்களிலும் எவ்வளவுக்கெவ்வளவு சொற்களும் படிமங்களும் நடனமிடுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு கவிதைகள் மீதான நேசிப்பும் பரிச்சயமும் அதிகரிக்கின்றது. அறிதல் என்பது எமது திறனை அடையாளம் காணவும் கண்டடையவும் கற்றுக்கொள்ளவும் அடிப்படையான அம்சம். அநுபவங்களும் பரிசோதனை முயற்சிகளும்கூட அறிதலின் அம்சங்களே. அவை எமது தேடல்களுக்கும் அப்பால் நாம் தேடாதவற்றோடும் எம்மை முகத்துக்கு நேரே சந்திக்கவைக்கின்றது. 

பொதுவாக மனிதர்கள் தாம் தேடுவதைக் கண்டடைவதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும், ஒப்புக்கொடுக்க வேண்டும். அர்ப்பணிப்பு என்பது நேரச்செலவு, உழைப்பு, ஈடுபாடு என்பவற்றைக் குறிக்கின்றது. எதைக் கேட்க முனைகின்றோமே அதற்காகச் செவிகொடுக்க வேண்டும். தொடுகின்றவற்றை உணரவும், எண்ணங்களை எழுதுவதற்கும் எம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

(தொடரும்)

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com