Home Blog Page 17

இது போன்ற விஷயங்கள் உன் போன்றவர்களுக்குப் பொதுவாக நடப்பதில்லை

0

ஜான் மெக்க்ரிகர்

தமிழில் : ராம்

(ஜான் மெக்க்ரிகர் (Jon McGregor) எழுதிய “We wave and call” என்ற ஆங்கிலச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு.)

சில சமயங்களில் இப்படி நடப்பதுண்டு: கடல் நடுவே ஒரு இளைஞன் கை கால்கள் தொங்கிய நிலையில் குப்புறப் படுத்திருக்கிறான்; தொலைவில் ஒரு விசைப்படகு சிறு முனகலுடன் ஊர்ந்து கொண்டிருக்கிறது; நடுக்கடலின் நீண்ட மெல்லலைகள் மிருதுவாகத் தீண்டுவதில் அவன் உடல் அசைந்துகொண்டிருக்கிறது; கரையிலிருந்து எழும் குரல்கள் தெளிவாகக் கேட்காத தொலைவில், அலைகள் பாறைகளின் மீது மோதும் சத்தத்திற்கும் கடல்பறவைகளின் குரல்களுக்கும் இடையே, கடலில் குப்புறக் கிடக்கும் அந்த இளைஞனின் உடல்‌, மூச்சற்று, அசைவற்று…

*

தண்ணீரின் வழியே ஊடுருவும் வெளிச்சத்திற்கு இமைகளைச் சிமிட்டியபடி நீ கண்களைத் திறக்கிறாய். தண்ணீரில் சுவாசிப்பதற்கு வாயில் பொருத்தியுள்ள குழாய் வழியே உன் மூச்சு உள்ளிழுத்து வெளியேறும் ஒலியைக் கேட்டவாறு கடல் தரையைப் பார்க்கிறாய். உடைந்த சிப்பிகளும், துருப்பிடித்த பீர் கேன்களும், பளபளக்கும் கண்ணாடிச் சில்லுகளும்… கருப்பு முட்களுடைய மூரைகள் பாறைகளின் மீது ஒட்டிக்கொண்டிருக்கின்றன. கடல் பாசிக்கு இடையே நீந்தும் சிறிய கருப்பு மீன்கள். ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் சுழலில் சிக்கி மிதந்து கொண்டிருக்கின்றன. உன் கைகளை முகத்திற்கு முன் கொண்டு வந்து பார்க்கிறாய். வெளுத்துப் போய் சற்றே சுருக்கங்கள் விழத் தொடங்கியுள்ளன. வீட்டில் குளியலுக்குப் பயன்படுத்தும் இளஞ்சூட்டில் இருக்கிறது கடல்நீர். அப்படியே தூக்கம் சொக்கும் நிலையில் இருக்கும்போது உன்னருகில் தண்ணீரில் தொப்பென்று ஏதோ ஒன்று விழுகின்ற சத்தம் கேட்கிறது.

நீ திரும்பிப் பார்க்கும்போது ஒரு சிறுவன் தன் முழங்கால்களை நெஞ்சோடு அணைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டு நீருக்குள் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கிறான். நீருக்கு மேலே, அந்தரத்தில், இன்னும் மூன்று சிறுவர்கள் ஒரு பாறை விளிம்பிலிருந்து கால்சராய்கள் இடுப்பைச் சுற்றி காற்றில் உப்பிய நிலையில், கேசம் பறக்க, திகில் கூச்சலில் பிளந்த வாய்களுடன் குதித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் விழும் வேகத்தைக் குறைப்பதற்காகத் தன் கைகளை ஆட்டிக்கொண்டே விழுகிறான். மற்ற இருவரும் காற்றிலேயே கைகளை நீட்டி ஒருவர் விரலை இன்னொருவர் தொட்டுக் கொள்கின்றனர். மூவருமே திகிலும் குதூகலமும் கலந்த முகங்களுடன் தங்களை நோக்கி விரையும் தண்ணீரைப் பார்க்கின்றனர்.

கரையிலிருந்து கடலைத் தொட்டவாறு போடப்பட்டிருக்கும் கான்கிரீட் தளத்தில் இளைப்பாறியபடி உன் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தன் ஈரக் கூந்தலைக் கோதிக்கொண்டே க்ளேர் திரும்பி உன்னைத் தேடிக் கையசைக்கிறாள். சன்ஸ்க்ரீனும் கடல் நீரும் சேர்ந்து அவள் நிறத்தை இன்னும் வெளுப்பாகக் காட்டுகின்றன.

“நாங்க கெளம்பப் போறோம்… நீ வர்றியா?”, அவள் குரல் கொடுக்கிறாள்.

மற்றவர்கள் ஏற்கனவே எழுந்து அவர்கள் மீது ஒட்டியிருக்கும் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டும் துண்டுகளை உதறிக்கொண்டும் நிற்கின்றனர். மூக்கின் மீது அணிந்திருக்கும் நீச்சல் முகமூடியையும் வாயில் அடக்கியிருக்கும் மூச்சுக் குழாயையும் கழற்றிவிட்டு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கப்போவதாகச் சொல்கிறாய். அவர்களுடன் சிறிது நேரத்தில் வந்து இணைவதாகச் சொல்கிறாய்.

சன்ஸ்க்ரீனையும், தண்ணீர் பாட்டில்களையும், கொண்டு வந்திருந்த கதைப் புத்தகங்களையும், சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் கூந்தலை அள்ளியெடுத்துப் பிழிந்து தங்கள் முதுகில் வழியவிடுகின்றனர். ஆன்டி தன் சட்டைப் பொத்தான்களை மாட்டிக்கொண்டே காலணிகளுக்குள் பாதங்களை நுழைக்கிறான்.

“நாங்க ஒனக்காகக் காத்திருக்கப் போறதில்ல”, க்ளேர் கூவுகிறாள். பரவாயில்லை என்பது போல் அவளுக்குக் கையசைக்கிறாய். எப்படியும் ஓரிரு நிமிடத்தில் வெளியேறி விடுவாய்.

நேற்றைக்கு முந்தைய நாள் இரவு, பழைய நகரத்தின் கஃபே ஒன்றின் வெளியே இடப்பட்டிருந்த மேசையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது உன் குழுவிலுள்ள பெண்கள் கழிவறைக்குச் செல்வதற்காகத் தங்கள் பீர் கிளாஸ்களை மேசையிலேயே விட்டுவிட்டு எழுந்து தங்கள் ஸ்கர்ட்களைச் சரிசெய்து கொண்டனர். ஆன்டி உன் கண்களைச் சந்தித்து தன் கிளாசை உயர்த்திக் காட்ட, நீங்கள் இருவரும் உங்கள் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டீர்கள். எதுவும் சொல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. மாதக்கணக்கில் நீளும் தேர்வுகளையும் பதற்றங்களையும் மேகமூட்டமான இங்கிலாந்திலேயே விட்டுவிட்டு சூரிய வெளிச்சமும், மலிவான பீரும், நீல வானமும், பிகினி-குட்டைப்பாவாடை அணியும் பெண்களும் உள்ள இந்த இடத்திற்குச் சட்டென்று வந்து இறங்கியிருந்தீர்கள். பல ஆண்டுகளாக அடையக் காத்துக்கொண்டிருந்த, பல காலமாக உங்களுடையது என்று உறுதியளிக்கப்பட்ட ஒன்று கிட்டியது போல இருந்தது… சிறுவர்களுக்கு வாலிபம் போல. இந்தப் பெண்கள் உணவகப் பணியாட்களையும் ஸ்கூட்டரில் விரையும் ஆண்களையும் கவனிப்பதன் வழியாக அவர்கள் உங்களை விட உள்ளூர்க்காரர்களையே விரும்புவதாக உங்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இருந்தாலும் உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வு. அதைப் பற்றி நினைப்பதில் ஒரு திருப்தி.

நீச்சல் முகமூடியைக் கண்களின் மீது கிடத்திவிட்டு சிறிது நேரம் மல்லாந்து படுத்து கடலை ஒட்டி நிற்கும் செங்குத்துப் பாறைகளைப் பார்த்தவாறே கால்களை அளைந்து கரைக்கு எதிர்திசையில் மெல்ல நீந்துகிறாய். கடலை விட்டு வெளியே போகவேண்டுமா என்று தோன்றுகிறது. உன் ஊரில் உன் வீட்டுக்கு மிக அருகிலேயே கடற்கரை இருக்கிறது; நீ அந்தக் கடற்கரையில் கால் நனைத்துதான் வளர்ந்தாய். ஆனால் அங்கே நீச்சலடிக்க முடிந்ததில்லை. அந்தக் குளிர்ந்த நீருக்குள் ஓடிவிட்டு குளிரின் தாக்கத்தில் கத்தியபடி போன வேகத்தில் திரும்ப ஓடி வருவாய். இங்கேயோ இந்தத் தெளிவான வெதுவெதுப்பான நீரின் மீது தூங்கலாம் போல இருக்கிறது. உன் சகாக்கள் தேவதாரு மரங்களுக்கும் அரளிப் புதர்களுக்கும் இடையே செல்லும் பாதையில் ஏறிப் போவதைப் பார்க்கிறாய். மலையின் உச்சியிலுள்ள சாலையில் ஒரு பேருந்து வந்து நின்று செல்வது அங்குள்ள இரும்புத் தடுப்புகளின் வழியே தெரிகிறது. ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இளம் தம்பதி அந்தப் பேருந்தை முந்திச் செல்கின்றனர். அந்த ஆண் சட்டையோ தலைக்கவசமோ அணிந்திருக்கவில்லை; அந்தப் பெண் முழங்கால் நீளக் குட்டைப்பாவாடையும் பிகினி மேலாடையும் அணிந்துகொண்டு விரித்துவிட்ட தலைமுடி காற்றில் பறக்கச் செல்கிறாள்.

மலைச்சரிவை வருடிச் செல்லும் இதமான வெப்பக் காற்றில் பறவைகள் மிதந்துகொண்டிருக்கின்றன. வெட்டுக்கிளிகளின் இடைவிடாத ரீங்காரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நொறுங்கிய தேவதாரு முட்களின் வாசமும் வெயிலில் வதங்கிய ரோஸ்மேரி பூக்களின் மணமும் காற்றில் நிறைந்துள்ளன. 

கரையின் இன்னொரு பகுதியில், பாறையிலேயே செதுக்கப்பட்ட செங்குத்துப் படிகள் முடியும் இடத்தில் இன்னொரு கான்கிரீட் அணைக்கரை உள்ளது. அதன் விளிம்பில், கருப்பு நீச்சலுடை அணிந்த பெண் ஒருத்தி தண்ணீரில் கால்களைத் தொங்கவிட்டபடி ஒரு வெள்ளைத் துண்டைத் தலையைச் சுற்றி அணிந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.

இன்னும் சற்று தூரம் தள்ளி கரை வளைந்து கடலுக்குள் துருத்திக்கொண்டிருக்கிறது. அங்கே அசிங்கமான கான்கிரீட் ஓட்டல் ஒன்று வெள்ளை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பெயருடன் நிற்கிறது. அதில் பாதி எழுத்துகள் இல்லை. நீ திரும்பிப் பார்க்கையில் அந்த ஓட்டல் கட்டிடமே பாழடைந்திருப்பதை உணர்கிறாய்… அதன் சன்னல்கள் துப்பாக்கிச் சூட்டில் சரிக்கப்பட்டு, சுவர்களில் பெரிய ஓட்டைகளுடன், தங்கநிற மணலில் சுருண்டு கிடக்கும் வேலிக்கம்பிகளுடன்… சன்னல்களிலும் பின்வாசல் கதவிலும் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் திரைச்சீலைகள் அவ்வப்போது வீசும் காற்றில் அசைகின்றன.

சில பெண்கள் கத்தும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்க்கிறாய்: அங்கே சில இளைஞர்கள் அந்தப் பெண்கள் மீது தண்ணீர் பாட்டில்களிலுள்ள தண்ணீரை வீசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க, அந்தப் பெண்கள் அவசர அவசரமாக எழுந்து அந்த இளைஞர்களை விளையாட்டாக அடிக்கின்றனர். அவர்களது சத்தங்கள் கடல்நீரின் மீது மெலிதாகத் தவழ்ந்துவந்து உன்னை அடைகிறது.

இன்று காலை நகரத்தின் எல்லைச்சுவர்களைத் தாண்டி உள்நுழைகையில் அங்கு குவியலான சிவப்புப் புள்ளிகளுடன் இருந்த நகரத்தின் வரைபடத்தைப் பார்த்திருந்தாய். அந்தச் சிவப்புப் புள்ளிகள் காட்டிய பகுதிகளில்தான் போரின்போது பீரங்கிக் குண்டுகள் விழுந்து, தீவிபத்துகள் நடந்து கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தனவாம். இந்நகரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கான ஒரே சாட்சியாக நீ கண்டது அது மட்டுமே. இந்த நகரத்தில் எல்லாமே சுத்தமாகவும் சாலைகள் பளபளப்பாகவும் பழைய கல்வேலைப்பாடுகள் கூட இந்த ஊர் சமீபத்தில் கண்ட சேதங்களிலிருந்து தப்பியவையாகவும் இருந்தன. ஆனால் கூர்ந்து பார்த்தபோது இந்நகரத்தின் புகழ்பெற்ற கைவினை ஓடுகளைக் காட்டிலும் அதிகமாக ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்திலான சீரான ஓடுகள் வேயப்பட்டிருப்பது தெரிந்தது. அதேபோல புராதன கல்வேலைப்பாடுகளின் சாம்பல் நிறத்துக்கு இடையே பல இடங்களில் ஏதோ புதிய கல்வேலையின் பளிச்சிடும் வெள்ளை தென்பட்டது. சில தெருக்கள் முழுவதும் இடிபாடுகள் குவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்திற்கு மூடி வைக்கப்பட்டிருந்தன. சில கட்டிடங்களின் முகப்புகள் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் அவை ஷட்டர்களுக்குப் பின்னால் சேதங்களைத் தாங்கியே நின்றிருந்தன. ஒரு சிறிய முற்றத்துப் பட்டறையில், ஒரு உயரமான எலுமிச்சை மரத்தின் நிழலில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த பருத்த தோள்கள் கொண்ட சிற்பி ஒருவனைக் கண்டாய். சிதைந்த புராதன கல்வேலைப்பாடுகள் அவன் முன் குவியலாக இருக்க, அதே போன்ற போலிகளை உருவாக்கிக்கொண்டிருந்த அவன், தான் செய்வதை யாரும் பார்த்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது போல அடிக்கடி தன் தோளுக்குப் பின் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வளவு மறுசீரமைப்பும் முடிய எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்று நீ சிந்தித்தாய். இன்னும் எவ்வளவு காலம் ஆகும் இந்தப் புதிய கற்கள் அந்தப் புராதன கற்களின் நிறத்தை அடைய!

உன் சகாக்கள் இப்போது தேவதாரு முட்கள் நிறைந்த பாதையில் நறுமணம் வீசும் புதர்களில் கைகள் உரச பாதி மலையை ஏறியிருக்கிறார்கள். அவ்வப்போது தண்ணீர் அருந்த நிற்கும்போது திரும்பி சலனமற்றிருக்கும் கடலைப் பார்க்கிறார்கள். நீ ஒரு நொடி அவர்களைப் பார்க்கிறாய்; கையசைக்கிறாய், ஆனால் ஒருவரும் அதைக் கவனிப்பதில்லை; கூப்பிட்டுப் பார்க்கிறாய். இப்போது கடலிலிருந்து வெளிவந்தால் அவர்கள் பேருந்து ஒன்றைப் பிடிக்கும் முன் அவர்களைப் பிடித்துவிடலாம். ஆனால் நீ அடுத்த பேருந்தைப் பிடித்தால் நீ போய்ச் சேரும்போது அவர்கள் உணவு ஏதாவது தயார் செய்துவிட்டு உனக்காகக் காத்திருப்பார்கள். மதிய உணவுக்கு முன்புதான் ஜோ சந்தைக்குச் சென்று உங்கள் அறையின் சிறிய சமயலறைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்தாள். நீ போகும்போது அனைவரும் மேசையில் உணவைத் தயாராக வைத்திருக்கும் காட்சி உன் கண் முன்னே விரிகிறது: ரொட்டி, பாலாடைக்கட்டிகள், ஆரஞ்சுகள், ஆலிவ்கள், ஊறுகாய், ஜாம் மற்றும் பேப்ரிக்கா தடவிய வறுவல்கள். ஒரு கேன் பீரைத் திறந்து அவர்களுடன் இணைந்து இரவு என்ன செய்யலாம் என்று திட்டமிடும் காட்சி உன் மனக்கண்ணில் தெரிகிறது.

கிளம்பும் முன் கடைசியாக ஒரு முறை கடல்நீருக்குள் மீண்டும் முகத்தைத் திருப்பி, வாயில் மூச்சுக்குழாயை வைத்துக்கொண்டு வெதுவெதுப்பான காற்றை உள்ளிழுக்கிறாய். இதுவரை நீ பார்த்ததை விட பெரிய மீன் ஒன்று திடீரென்று உன் கண்ணில் படுகிறது: பாறைகளுக்கு இடையே வெள்ளியும் நீலமும் கலந்த நிறத்தில், உன் கையைவிட இரண்டு மடங்கு நீளத்தில். வாலின் ஒரு சொடுக்கில் அது நீந்திப்போக, நீ தண்ணீர் தெறிக்காதவாறு கால்களை உந்தி அதைப் பின்தொடர்கிறாய். அந்த மீன் அதன் வேகத்தைச் சற்று குறைத்து கடல்பாசியின் நுனிகளில் எதையோ தின்றுவிட்டு மீண்டும் வால்சொடுக்குடன் நகர, நீ மேலிருந்து அதைப் பார்த்துக்கொண்டே வேகமாகக் கால்களை உந்தித் தொடர்கிறாய்.

நேற்று இரவின் நினைவு திடீரென்று வருகிறது. ஜோவுடன் நிகழ்ந்திருக்கக் கூடியவை பற்றிய எண்ணம் வருகிறது. கஃபேயிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் கூட்டமான சாலையில், பகலில் உள்வாங்கிய வெப்பத்தைக் கட்டிடங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்க, தலைக்கு மேலே சன்னல்களுக்கும் துணிக்கம்பிகளுக்கும் சாலையை வேடிக்கை பார்த்தபடி புகைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் மத்தியில் இருண்ட வானம் தென்பட, நீயும் ஜோவும் நடந்துகொண்டிருந்தீர்கள். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உன் பார்வையிலிருந்து மறைந்துவிட நீயும் ஜோவும் மட்டும் ஒரு நொடி அங்கு இருந்தீர்கள்; இரண்டு விரல்களை உன் மார்பின் மீது பதித்து, ஒரு விரல் உன் திறந்த சட்டைப் பொத்தானுக்கு மேல் தொட்டுக்கொண்டிருக்க ஜோ உன்னுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் என்ன சொன்னாள்? அதில் பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் மொத்த உரையாடலிலும் ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளது விரல்கள் உன் மார்பில்… புன்னகைத்துக்கொண்டே அவள் திரும்பினாள். நீங்கள் இருவரும் ஒதுங்கியிருக்கக் கூடிய சந்துகளையும் முற்றங்களையும் தாண்டி அவள் பின்னாலேயே சென்றாய். பேருந்து நிறுத்தத்தில் உங்கள் சகாக்களுடன் நீங்கள் போய் இணைந்தபின் அந்தத் தருணத்தைப் பற்றி எந்தப் பேச்சும் எழவில்லை.

அந்த மீன் உனக்கு அடியில் மீண்டும் தன் வாலைச் சொடுக்கிவிட்டு அவ்வப்போது கடல்பாசிக்கு நடுவே நின்றுவிட்டுச் செல்வதைப் பார்க்கிறாய். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க உடலைச் சுருக்கி நீந்துகிறாய். உன் முதுகு சூரியனின் வெப்பத்தை உணர்கிறது. சென்ற வருடம் தேர்வுகள் முடிந்த பின்னர் நடந்த பார்ட்டியில் அவளுடன் உனக்கு ஒரு தருணம் இருந்திருக்கிறது. வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் வீட்டுச் சுவரில் அவளைச் சாய்த்து ஒரு சில நிமிடங்களே நீடித்த அந்த முத்தத்தில் அவளது உதடுகளின் சுவையையும் அவளது கைகள் தீண்டும் இடங்களையும் உன் உடல் அவள் மீது பதிந்த இடங்களையும் தவிர வேறு எதுவும் உன் மனதில் பதியவில்லை. பின்பு அவள் திடீரென்று பின்வாங்கி, உன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் சென்றபின் அந்த நிகழ்வைப் பற்றிய பேச்சே இதுவரை எழுந்ததில்லை. அது ஒன்றுமில்லாத நிகழ்வாகக் கூட இருந்திருக்கலாம்.

அந்த மென்மையான ஈரமான உதடுகள், அவளது விரல்கள் வரைந்த கோலங்கள், உன் விரல்களில் பட்ட அவளது மெல்லிய ஸ்கர்ட் துணியின் உணர்வு, அவளது வெப்பத்தின் முழு எடையும் உன் மேல்… அவை அனைத்துமே ஒன்றுமில்லாதவையாக இருந்திருக்கலாம்.

நீ நீருக்கு மேல் வந்து அவள் மலையின் உச்சியை அடைந்துவிட்டாளா என்று பார்ப்பதற்காகத் திரும்புகிறாய். அவள் மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு உனக்காகக் காத்திருக்கக் கூடும். நீ நினைத்ததை விட கடலுக்குள் தூரமாகச் சென்றிருக்கிறாய். இப்போது திரும்பி நீந்திச் சென்று அந்த கான்கிரீட் அணைக்கரையில் ஏறி வெயிலில் உடலை உலர்த்தியபடி உன் உடைமைகளை எடுத்துக்கொண்டு பாதையைப் பிடித்து விரைந்தால்தான் அவர்களைப் பிடிக்க முடியும். உன் கைகளை நீருக்குள் அழுத்தி உன் தோள்பட்டையிலும் முதுகிலும் சதைகள் விரிவதை உணர்ந்தவாறே நீந்துகிறாய். பாதங்களும் கெண்டைக்காலும் தண்ணீரில் அறையும் வகையில் கால்களை உதைத்து உந்துகிறாய். இப்படி உருப்படியாக நல்ல தூரத்தைக் கடந்து எப்போது கடைசியாக நீந்தினாய் என்று சிந்தித்துக்கொண்டே உந்துகிறாய். இனிமேல் அடிக்கடி இதுபோல நீந்த வேண்டும் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய். வாயில் பொருத்தியுள்ள மூச்சுக்குழாயை எடுத்து நீச்சல் முகமூடியை நிலையாகப் பிடித்திருக்கும் ரப்பர் நாடாவில் சொருகும்பொழுது வாய்க்குள் கடல்நீர் புகுந்துவிட அதை அவசரமாகத் துப்புகிறாய். உன் உடல் தண்ணீரின் வழியே ஊடுருவிச் செல்லும் உணர்வையும், காற்றும் கடல்நீரும் உன் முதுகை உரசிச் செல்லும் விதத்தையும் ரசித்தவாறே மீண்டும் நீந்தத் துவங்குகிறாய். அந்தக் குழாய் நீ சொருகிய இடத்தில் இருந்து நழுவி உன் வாய்க்குள் கொஞ்சம் தண்ணீரை நிரப்புகிறது. இருமியவாறே தொண்டைக்குள் புகுந்துவிட்ட தண்ணீரைத் துப்புவதற்காக மீண்டும் நீந்துவதை நிறுத்துகிறாய்.

மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருப்பவர்களையும், சாலையில் கடந்து செல்லும் பேருந்து ஒன்றையும், மலைச்சரிவை வருடிச் செல்லும் இதமான வெப்பக் காற்றில் மிதந்துகொண்டிருப்பது போல பறந்துகொண்டிருக்கும் பறவைகளையும் பார்க்கிறாய்.

உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கழற்றுகிறாய். அவற்றை முகத்தில் பொருத்திக்கொள்ளாமல் இருந்தால் இன்னும் வேகமாகக் கரையை அடைய முடியும் என்று தோன்றுகிறது. ஒரு கையில் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீந்த முயல்கிறாய். ஆனால் அவை தண்ணீரில் சொத் சொத்தென்று அறைந்து உன்னைப் பின்னிழுக்கின்றன. இப்படியே போனால் எங்கும் போய்ச் சேர முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் நிறுத்திவிட்டு கால்களை மெதுவாக உந்தியவாறு மிதக்கிறாய். நீ நினைத்ததை விடவும் கடலுக்குள் தூரமாக இருக்கிறாய்.

மதிய வேளை மிகவும் அமைதியாக உள்ளது. அந்தப் பாறையின் மேலிருந்து கடந்த பல நிமிடங்களில் யாரும் குதித்ததாகத் தெரியவில்லை. தண்ணீர் பாட்டில்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு நீண்டு வளைந்து ஏறும் மலைப்பாதையை அடைந்திருக்கின்றனர். அந்த மற்றொரு கான்கிரீட் தளத்தில் அமர்ந்து தண்ணீரில் காலை விட்டுக்கொண்டு கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்த பெண்ணும் சென்றுவிட்டிருக்கிறாள். உன் பின்கழுத்து வெயிலில் எரியத் தொடங்குகிறது. உன் நண்பர்களுடன் சீக்கிரம் இணைந்து அவர்கள் ஏறும் பேருந்தையே பிடித்துவிடுவது நல்லது என்று படுகிறது இப்போது. உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் அப்படியே கடலில் போட்டுவிட்டு நீந்தலாமா என்று சிந்தித்துவிட்டு அது தேவையில்லாத, மேலதிகமான திட்டம் என்று எண்ணிக்கொள்கிறாய். அதுபோல் ஒன்றும் இங்கு நடக்கப்போவதில்லை. ஒரு பிரச்சனையும் இல்லை. கரையிலிருந்து 100 அல்லது 150 காதங்களுக்கு மேல் இருக்காது. இப்போது உன் கால்சராயின் நாடாவில் அவற்றைச் சொருகிக்கொண்டு நீந்தத் தொடங்குகிறாய்.

இன்று காலை, பழைய நகரத்தில், வெயிலுக்காக ஒரு கலைக்கூடத்திற்குள் நீ ஒதுங்கியபோது அங்கே இந்த நகரத்தின் வரைபடங்களில் இடம்பெறாத ஒரு போர் நினைவகத்தைக் கண்டாய். முதலில் அந்த கலைக்கூடத்தின் இன்னொரு அறை போலத் தோன்றியதால் அந்த வட்ட அறைக்குள் கோதுமை வயல்கள், காடுகள் மற்றும் ஏர் பிடித்து உழும் சாமானியர்கள் நிறைந்த வண்ணப் படங்களை எதிர்பார்த்து நீ நுழைந்தாய். ஆனால் அங்கு வண்ணப்படங்கள் ஏதும் இருக்கவில்லை. சுவர்களில் விட்டத்திலிருந்து தரை வரை கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் நிறைந்திருந்தன. வரிசை வரிசையாக இளம் முகங்கள்: அந்த காலத்து முடிவெட்டுகளும், மெலிதான மீசைகளும், தோல் ஜாக்கெட்டுகளும், கோடு போட்ட சட்டைகளும் தரித்தவர்கள். நிஜ அளவை விடப் பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படங்கள். சிலவற்றில் பாஸ்போர்ட்டில் இடப்பட்டிருக்கும் முத்திரையின் மை கூட தெரிந்தது. அவற்றில் பெயர்களும் தேதிகளும் வயதுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன: 22, 57, 15, 19, 31. அறையின் நடுவே இருந்த மேசையில் சில பொருத்தப்பட்ட மெழுகுவர்த்திகளும், ஒரு மலர்க்கொத்தும், ஒரு நைந்த கொடியும் இருந்தன. அந்தப் புகைப்படங்களில் இருந்த சில முகங்கள் சற்று நேரம் முன்பு இங்கு பாறையிலிருந்து குதித்த சிறுவர்களின் வயதில் இருந்தன. இப்போது அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் போரின்போது இருந்ததை விட இரு மடங்கு வயதாகியிருக்கும் அவர்களுக்கு. இங்கு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் எத்தனை பேர் தந்தைகளையோ மாமாக்களையோ அண்ணன்களையோ போரில் இழந்திருப்பார்கள் என்று சிந்திக்கிறாய். அதைப் பற்றி அவர்களுக்கு ஏதேனும் நினைவிருக்குமா என்று யோசிக்கிறாய். அவர்கள் அந்தப் போர் நினைவகத்திற்குள் அவ்வப்போது செல்வார்களோ என்ற கேள்வி உனக்குள் எழுகிறது. அல்லது இந்த வெதுவெதுப்பான கடல்நீருக்குள் பாறைகளிலிருந்து குதிப்பதையும், வெற்றுடம்போடு மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுவதையும், நறுமணம் தரும் வயதான மரங்களின் நிழல்களில் பெண்களுடன் இளைப்பாறுவதையும்தான் விரும்புவார்களோ?

நீ போகும்போது உன் சகாக்கள் எதற்காக உணவைத் தயாரித்து மேசையில் கிடத்தி உண்டுவிட்டு மீண்டும் மேசையைக் காலி செய்யவேண்டும் என்ற சலிப்பில் இருக்கலாம். நீங்கள் அனைவரும் மீண்டும் துறைமுகத்திற்கு அருகே உள்ள அந்த பிட்சா உணவகத்திற்குச் சென்று சாலையில் போடப்பட்டிருக்கும் மேசையில் அமர்ந்து பீர் பாட்டில்களின் மேல் ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை உரித்தவாறே படகுகளிலிருந்து புதிதாக வந்திறங்கும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிடங்களுக்கு வழி சொல்லும் கிழவிகளைப் பார்த்துக்கொண்டு உணவருந்த முடிவெடுக்கலாம். ஏன், ஜோ உன் கண்களைச் சந்தித்து, ஒரு உரையாடலில் இறங்கி, எல்லோரும் சென்றபின்னும் உன்னைப் பார்த்தவாறு அவளது நாற்காலியைத் திருப்பி அவளது கால் உன் காலை உரசுமாறு அமரலாம்.

நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கால்சராய்ப் பட்டியில் சொருகிக்கொண்டு நீந்துவது அவற்றைக் கையில் பிடித்துக்கொண்டு நீந்துவதை விட மோசமாக உள்ளது. உன் கால்களுக்கு நடுவே நங்கூரம் போல இழுத்துக்கொண்டு உன்னை முன்னேற விடாமல் தடுக்கின்றன. நீந்துவதை நிறுத்தி மூச்சிறைத்தபடி மீண்டும் கால்களை மெதுவாக உந்தி மிதக்கிறாய். அவற்றை மலிவான விலைக்கே வாங்கியிருந்தாய். இப்படியே கடலோடு விட்டுவிடலாம். உன் நண்பர்களிடம் அவற்றை மறந்துபோய் கரையில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளலாம். அந்த முடிச்சை அவிழ்த்து அவற்றைக் கடலில் விடுகிறாய். சில நொடிகள் விட்ட இடத்திலேயே மெல்லலையில் மிதக்கின்றன. பின்னர் அவை மூழ்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கடல் தரையே உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பது உறைக்கிறது.

அவர்கள் மலைப்பாதையின் உச்சியில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கான்கிரீட் தளத்தில் உன் உடைமைகள் குவியலாய் இருக்கும் இடத்தை எட்டிப் பார்க்கிறார்கள். நீ கையசைக்கிறாய். ஆனால் அவர்கள் அதற்குள் திரும்பி அங்கே இரும்புத் தடுப்புகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில் புகுந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மற்றவர்களுடன் இணையச் சென்றுவிடுகிறார்கள்.

நன்றாக மூச்சை இழுத்துக்கொண்டு தண்ணீரை மூர்க்கமாகத் தள்ளிக்கொண்டு கடல்நீரின் உப்பு கண்ணை உறுத்துவதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நீந்தத் தொடங்குகிறாய். கால் தசைகள் முழுவதுமாக இழுக்கப்படுவது போல வலித்தாலும் நீ நீந்திக்கொண்டே இருக்கிறாய்—இன்னும் சற்று நேரத்தில் அந்தத் தளத்தை அடைந்து, ஏறி, திடமான தரையில் கால் பதித்துவிடலாம் என்ற உறுதியில்; கடலலைகள் இவ்வளவு நேரமும் உன்னைக் கரையிலிருந்து எதிர்திசையில் தள்ளிக்கொண்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்; இது போன்ற விஷயங்கள் உன் போன்ற இளமையான, ஆரோக்கியமான, நன்கு நீச்சல் தெரிந்த ஆட்களுக்குப் பொதுவாக நடப்பதில்லை என்ற நம்பிக்கையில். பாறைகள் வெகு தொலைவில் இல்லை. அவற்றை அடைய வெகு நேரம் பிடிக்காது. மேலும் இப்போது நீந்துவதைத் தவிர உனக்குச் செய்வதற்கு வேறெதுவும் இல்லை. தலையில் சுத்தியலால் தட்டுவது போன்ற ஒரு உணர்வு எழுகிறது. கண்களுக்குள் ஒரு செந்நிறம் படர்கிறது. நுரையீரல்களின் மீது கடலின் மொத்த பளுவும் அழுத்துவது போன்ற ஒரு வலி மார்பில் தோன்றுகிறது. தேவையான அளவு மூச்சை இழுக்க இயலாமல் சற்றே மூச்சு வாங்கிக்கொள்வதற்காக மீண்டும் நீந்துவதை நிறுத்துகிறாய்.

போர் நினைவகப் புகைப்படம் ஒன்றில் இருந்த சிறுவனின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. கேமராவிலிருந்து வரும் மின்னொளி அவனைத் திடுக்கிடச் செய்தது போல. அவனை நோக்கி வரும் விதியை அவன் அறிந்திருந்தது போல. புகைப்படத்திற்குக் கீழே அவன் வயது 17 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று நீ யோசித்தாய். ஒருவேளை அவனை நோக்கி வரும் விதியை அவன் உண்மையிலேயே கண்டிருந்தானோ? இங்கே அருகிலிருக்கும் தீவில் உள்ள ஒரு பழைய கோட்டையின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாய். சுவர்களில் துப்பாக்கி குண்டுத் துளைகளுடன், வாயிலில் குண்டுகள் விழுந்து ஏற்படுத்திய குழிகளுடன்… அந்தச் சிறுவன் அந்தக் கோட்டையின் கூரையின் மீதோ அல்லது உள்ளே ஒரு அறைக்குள்ளோ நடுங்கும் கைகளில் ஒரு பழைய குழல்துப்பாக்கியைப் பற்றியபடி சுற்றியுள்ள மரங்கள் வழியாக வரும் எதிரிகள் மற்றும் அவர்களது வாகனங்களின் ஒலிகளைக் கேட்டுக்கொண்டே பதுங்கியிருப்பது போன்ற ஒரு காட்சியை நினைத்துப் பார்த்தாய். எதிரிகளின் கேலிப் பேச்சை அவன் கேட்டிருப்பான் என்று எண்ணினாய். கண்களில் வழியும் வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டு, தன்னோடு எஞ்சியிருக்கும் எவரின் கண்களையும் சந்திக்காமல், எப்படி இங்கு வந்து இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டோம் என்று வியந்தபடி, இனி என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல், எதுவும் செய்வதற்கில்லை என்று நன்கு அறிந்து…

மலை உச்சியிலுள்ள சாலையில் ஒரு பேருந்து வந்து நிற்கிறது. உன் சகாக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் சில்லறைகளைத் துழாவியபடி நீ இன்னும் எவ்வளவு நேரம் கழித்து வருவாய் என்று எண்ணிக்கொண்டே அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டிருப்பார்கள். நீ போகும்போது நீங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் மொட்டை மாடியில் மாலைப் பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் படகுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும் சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் சத்தங்களைக் கேட்டுக்கொண்டும் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். நீ குளிர்பதனப்பெட்டியிலிருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதை வெயிலில் சிவந்திருக்கும் உன் பின் கழுத்தில் அழுத்தியபடி அந்த பாட்டிலைத் திறக்கும் கருவி எங்கே என்று கேட்பாய். முதலில் எல்லோரும் தேடியும் அகப்படாது. பின்பு ஏதோ புத்தகத்திற்கு அடியிலோ சமையலறைத் தொட்டியில் கழுவப்படாத தட்டுகளுக்கு அடியிலோ அது கிடைக்கும். பீர் பாட்டிலைத் திறந்துகொண்டு அவர்கள் அருகில் சென்று அமர்வாய்.

இன்னும் கொஞ்சம் நீந்துகிறாய். கைகளிலும் கால்களிலும் உள்ள தசைகளை உரித்தெடுத்தது போல வலி பரவுகிறது. எலும்புகள் தண்ணீரில் வெகு நேரம் இருந்ததால் இளகிவிட்டது போலத் தோன்றுகிறது. முன்னோக்கி நீந்த வலு இல்லாததை உணர்கிறாய்.

சற்று நேரம் மல்லாந்து மிதக்கிறாய். உனக்குத் தேவை சிறிது ஓய்வு. இது போன்ற விசாலமான நீர்ப்பரப்பில் நீ நீந்தி கொஞ்ச காலம் ஆகிவிட்டது, அவ்வளவுதான். சிறிது ஓய்வுக்குப் பின் அந்தப் பாறைகளை நீந்தி அடைந்து, படிகளில் ஏறி வெளியேறிவிடலாம். விண்விண்ணென்று தெறிக்கும் தலைக்கு மேல் ஒரு துண்டைப் போர்த்திவிட்டு நிதானமாக மூச்சு வாங்கிவிட்டு, தண்ணீரும் வியர்வையும் வெயிலில் சுட்டிருக்கும் கான்கிரீட் தளத்தில் சிந்த நிற்கும்போது காலுக்கடியில் திடமான தரை இருப்பதன் சுகத்தை அனுபவிப்பாய். அப்படியே உன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பாதையில் ஏறும்போது சட்டையை உடுத்திக்கொள்ளலாம். நீ அந்த மலைப்பாதையில் ஏறும்பொழுது வெட்டுக்கிளிகள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். ரோஸ்மேரி மற்றும் தேவதாரு மரங்களின் நறுமணம் காற்றில் இருக்கும். நீ நடக்கையில் அந்தப் பாதையின் மணல்துகள்கள் உன் கணுக்கால் வரை ஒரு சிறு மேகமாக எழுந்து எழுந்து மடியும். நீ மலையுச்சியை அடையும்பொழுது உன் நீச்சல் உடைகள் காய்ந்திருக்கும். பேருந்துக்காக நீ வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்காது. அங்கிருந்து கீழே பார்த்தால் எப்போதும் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு, இன்னும் பல நிலங்களைத் தொட்டு, இன்னும் சில கடற்கரைகளைச் சந்தித்து, இன்னும் சில நீச்சல்காரர்கள் அதன் வெதுவெதுப்பான நீருக்குள் நுழைய, நீலமாக, அமைதியாக இருக்கும் இந்தக் கடல். 

நீ ஊருக்குச் சென்று சேர்ந்தபின் இது பகிர்ந்துகொள்ள சுவாரசியமான ஒரு கதையாக இருக்கும். கோல்ஃப் கிளப் மதுவிடுதியின் இதமான வெப்பத்தில், உள் முற்றத்தில் உன் நண்பர்களுடன் அமர்ந்துகொண்டு கடலை வேடிக்கை பார்த்தபடி ‘அது ஒரு நல்ல விடுமுறைதான், ஆனா நான் கிட்டத்தட்ட திரும்பி வராம போயிருப்பேன்’ என்று சொல்வாய். அல்லது, இன்று மாலையே கூட, நகரத்தின் சலசலப்பு மிகுந்த சதுக்கத்தின் சாலையோர கஃபே ஒன்றில் உயரமான கிளாஸ்களில் பீர் அருந்திக்கொண்டு நீ கடலுக்குள் வெகுதூரம் சென்றுவிட்ட கதையைச் சொல்வாய். உன் நீச்சல் முகமூடியையும் மூச்சுக்குழாயையும் கடலுக்குள் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் பற்றிக் கூறுவாய். ‘உயிர் போய் உயிர் வந்துச்சு’ என்று சொல்வாய். ‘நான் கூப்பிட்டுப் பார்த்தேன், ஆனா உங்களுக்குக் கேக்கல. யாருக்கும் கேக்கல’ என்பாய். ‘அடுத்த தடவ கவனமா இரு’ என்று யாராவது சொல்வார்கள். ‘தண்ணி வெதுவெதுப்பா அமைதியா இருந்தாலும் லேசான அலுங்கல் இருந்துட்டே இருக்கும். உங்க ஊர்ல இருக்கற மாதிரி ஜில்லுனு இல்லேங்கறதுக்காக அத நீச்சல்குளம்னு நெனச்சுக்கக் கூடாது’ என்பார்கள். நீ சிரித்துக்கொண்டே, ‘இப்போ தெரிஞ்சுருச்சு’ என்பாய். கஃபேயின் பணியாளிடம் நீங்கள் அடுத்த சுற்று மதுவிற்கு ஆர்டர் கொடுக்கும் வரை அனைவரும் சில நொடிகள் அமைதியாக அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்கள். மது வந்தவுடன் உங்கள் கிளாஸ்களை உயர்த்தி ‘அனைத்து நல்ல விஷயங்களும் நீடிக்க’ என்று கூறிவிட்டுக் குடிப்பீர்கள். வெயிலில் சிவந்திருக்கும் உன் பின்கழுத்தில் அந்த பீர் கிளாஸின் குளுமை; அவளது விரல்களின் மென்தொடுதல்; அவளது மென்மையான ஈரமான பற்கள் பதியும் உணர்வு; ஆரஞ்சு பழச்சாறு உன் உதட்டைத் தாண்டி தாடையில் வழியும் உணர்வு. இசை, நடனம், வெதுவெதுப்பான காற்றில் கலந்து வரும் கேளிக்கைக் குரல்கள்…

சிறிது நேரம் நீந்துகிறாய், சிறிது நேரம் ஓய்வெடுக்கிறாய். இன்னும் ரொம்ப தூரம் இல்லை. நிமிர்ந்து கரையையும் அது எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பதையும் பார்க்கிறாய். இன்னும் கொஞ்சம் நீந்திவிட்டு மீண்டும் ஓய்வெடுக்கிறாய். சில சமயங்களில் இப்படியும் நடப்பதுண்டு…

ஜான் மெக்க்ரிகர் : ஆங்கிலேய எழுத்தாளர். ஐந்து புதினங்களையும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலப் புனைவெழுத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டவர். சமகால பிரிட்டனின் வாழ்வியலையும் உளச்சிக்கல்களையும் உற்றுநோக்கும் இவரது எழுத்தில் யதார்த்தவாதமும் மாயாவாதமும் ஒருங்கே நிற்பதை உணரலாம். “This Isn’t the Sort of Thing That Happens to Someone Like You” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கதையின் தலைப்பு “We wave and call.” ஆனால் இக்கதையில் இடம்பெற்றுள்ள ஒரு வாக்கியமே இத்தொகுப்பின் தலைப்பாகியுள்ளது. இதனாலேயே இக்கதையின் மொழிபெயர்ப்பிற்கும் இத்தலைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

***

ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com

விரும்பப்படும் துயரம் ஒரு இனிய விருப்பமே!

0

ம.கண்ணம்மாள்

ன்னிலிருந்து தப்பித்தலென்பது யாவருக்கும் நடவாதது. ஏன் தப்பிக்க வேண்டும்? அது தேவையில்லை. இப்பரவெளியில் எல்லோரும் ஏதோவொரு சூழலில் உற்சாகமான மனநிலையில் உன்னிலிருந்திருப்பார்கள். இல்லையென்று சொல்வதற்கு எதுவுமில்லை. உன்னத கேள்விகளால் நிறைந்த இவ்வாழ்வினை துயரமாக மாற்ற எவரொருவரும் முனைவதில்லை. ஆனால், விரும்பப்படும் துயரமாக, மனித உடல்களின் வாழ்க்கையில் அமைந்து, அமைந்துக் கொண்டு அமைவதாகவுள்ளது. பெருமளவு நேசித்தலில் ஒரு மனித உடலும், துயரமும் பிரிக்க முடியாததாகின்றது. நேசித்தலென்பது இதமனைத்தும் பூரணமாக நிரம்பிய நறுமணம். மனதார அனுபவிக்குமொரு சுகந்தத்தில் சிற்சில நிகழா கூறுகள், கண்டறியா நேரங்கள், உரையில்லா வாய்மூடித்தனம் போன்றவை நிகழ்ந்திருக்கும். அந்நிகழ்தலும் கூட விருப்பத்தின் நேசித்தலின் பொருட்டுதானென்பதை மனித உடல்கள் கண்டறிய வேண்டும். மிக முக்கியமாக விருப்பமென்பதே மதிப்பது தான். மதிக்கக் கூடிய எதுவுமே விருப்பத்தினால் ஆட்படுத்தப்படுகின்றது. விருப்பத்தில் ஒருவரைப் பற்றிய தெளிவு வேண்டும். மதிப்பதால் மட்டுமே அதனை உணர முடியும்.

இவ்வாறான மதிப்பைப் பகிர்தலில் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பில் விருப்பத்தினை எவ்வாறு அணுகுகின்றார்கள்? ஏன் அதை இவ்வளவு தூக்கிச் சுமக்கின்றார்கள்? அல்லது நிகழாத ஒன்றிற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் ஏன்? என கேட்கத் தூண்டுகின்றது வாசிப்பின் போது.

இரு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் முதற்பகுப்பிற்கு அந்தரங்க நிலா எனப் பெயரிட்டுள்ளதில் சற்று ஏதுவாக எதைக் கொள்ளலாம் எனக் காரணத்தை வலுவாகக் காணும்போது, இங்கு ‘அந்தரங்கம்’ எனப் பூடமாகிச் சொல்ல யாதுமில்லை. அந்தரங்கமென்பது அவரவர்க்குரியது. மற்றபடி அச்சொல்லால் யாதுமில்லை. ஒரு ஆண் உடல், ஒரு பெண் உடல் மட்டுமே பிரதானம். கற்பனை, சுவை, பிரியம், குதூகலம், ஆவல், கிளர்ச்சி எல்லாமே அதனோடு தான். அப்படி என்ன உண்டு இந்த வாழ்க்கையில்? என ஆராய முற்படும் போது அந்தரங்கம் மிகச் சாதாரண விஷயமாகின்றது. அதனாலயே, ஒரு ஆண் பெண்ணை அருவியில் நனைப்பதையும், ஒரு பெண் ஆணை அருவியில் ஒரு போதும் நனையார் என நினைப்பதும், நினைவில் இறுதியில், இரு உடல்களும் நனைந்துக் கொண்டிருந்ததும் காட்சியாக விரிகின்றது. இது, அவரவர்க்கான மனநிலையாக அந்தரங்கம் அனுபவமாகின்றது.

‘ஆனந்திருத்திருந்த அருவி நனைத்துக் கொண்டிருந்தது உடலை / நுண்ணியர் எங் காதலவர் அருவியில் ஒரு போதும் நனையார்’ என்பதில் உணரலாம்.

ஒரு விருப்பத்தில் மாறுபட்ட தன்மையிருப்பின் அங்கு நல்ல சம்பவங்களுக்கு வழியில்லை.

இங்கு ஒரு நல்ல சம்பவம்.

‘வலி கொண்டு வெறி கொள்ளுமென் காதலன் / என்னுள் தான் இருக்கிறாள் / காய்ச்சிய பறையை அதிர அடித்துப்பாடுகிறேன் / செவிடாக நடிக்கும் தேசம் என்று அறிந்தும்’

ஊரார், உற்றார், மற்றோர் தூற்றிய போதும், அதிகாரத்திற்கு மேலாகப் பறந்து நின்ற ஒரு பெண் உடலின் விருப்பம் முன்னிலையாகின்றது. அதிகாரமானது மொழியின் வழியாக ஆளுமையாகி அதிர அடித்துப் பாடுகின்றது. இச்சம்பவத்தில் விருப்பமானது, இருவரின் உள்ளக்கிடக்கில் துரிதப்படுத்தப்படும் நோக்கமாகின்றது. அந்நோக்கமே, விதை கொண்டு பூத்து செடியாகி வளர்ந்த வலியாகின்றது. கெட்டித்துப் போன வலியை நீராகப் பெருகிய காமப்பிணியில் நீச்சலடித்து சோர்வுற்று கடலாகத் தத்தளிக்கும் ஒரு ஆண் உடல் காட்டும் சம்பவத்தில் இயற்கையான வாழ்க்கை முறை தான் தென்படுகின்றது. விருப்பத்தின் மீதாக திணிக்கப்படும் அளவுக்கதிகமான புனைவுகள் இதிலில்லை. மிக எளிதானதொன்று உணர்த்தப்படுகின்றது.

அவ்வடிகள்,

‘நீச்சல் பழக்கும் முயற்சியில் சோர்வு கொண்டான் / இறைக்க ஊறும் நீராகிப் பெருக்கெடுத்தது காமம் / கடலாகத் தத்தளித்த படி துடுப்பற்றுப் போனது தோணி’ எனவுள்ளது.

விருப்பத்தில் பிரிவு என்பது சாதாரணமானது. பெரிய கூச்சல்கள், இடர்ப்பாடுகள், ஓலங்கள் தேவையற்றவை. சில காலம் பிரிவென்பதே நல்ல புரிதலுக்கான மன ஊக்கி. சிதறுண்ட மனத்தை ஒருங்குப்படுத்தும் செயல் பிரிவுக்குண்டு. பிரிவு காலத்தின் மறதி எனக் கொள்ளலாம். ஏகப்பட்ட உண்மைகள், பொய்கள், நடந்தவை, நடக்கயிருப்பவை அனைத்தும் பிரிவில் காணாமல் போகும். ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பில் ‘பிரிவு’ என்பதை,

‘குறும்பிரிவு தான் பெண்ணே / கற்றாரோடு கூடிக்களித்து / நோய்மைத் தோல் அகற்றி / புதுப்பொலிவுடன் வந்திடுவேன்’

தன்னிச்சையான செயலிலுள்ள ஒரு ஆண் உடலின் வெளிப்பாடு மேலுள்ள அடிகள். அதையும் தாண்டிப் பார்த்தோமானால், ‘பிரிவு என்பது இயல்பானது’ அவ்வளவு தான்.

மிதமிஞ்சிய விருப்பத்தின் உச்சக்கட்டம் கொண்டாட்டம் என்பதை விட, பறவையாகி ஆண் உடல் மிதத்தலைவதை அழகாகக் காட்சிப்படுத்துதல் பெருங்குதூகலமெனலாம். அங்குக் கொண்டாட்டமென்பது போதவில்லை. அதை விட வானில் பறந்து பறந்து அலைய வேண்டும். இங்குச் சொற்கள் மிக அழகாகத் தன்னைத் தருவித்துக் கொள்கின்றது. அவ்வடிகளை வாசிக்கும் நம்மிலும் அம்மனோபாவம் விரிகின்றது.

‘மகிழ்வை விரிக்க மழையாகி / தடுப்பில்லாது கொண்டாட / மீனாகி நீந்தித் திரிந்தான் / கொண்டாட்டம் போதாமையோடிருக்க / பறவையாகி மிதந்தலைகிறான்/’

இதில் என்ன விதமான மலர்ச்சியை ஆண் உடல் உணர்ந்திருக்கின்றதென் படிமம் தான் காட்டப்பட்டுள்ளது.

இதேபோல பெண் உடலும் உணர்ந்த ஒரு காட்சியில், தன்னிலிருந்து தான் என்ற பிம்பம் விலகி, முற்றிலும் முற்றாக ஒரு மதிப்பைக் கோருகின்ற, அம்மதிப்பை அனுபவமாகக் காண்கின்ற ஒப்புதல் விளக்கம் கவிதையாக மாறுகின்றது.

‘பசலை பூக்கும் எனதுடல் / வெப்பத்தினால் வதங்கும் / அந்திப் பூவிதழ்களாக அடைந்திடும் மாற்றம் / அதற்குள் கொடியோனென /

‘சுடுசொல் விழுங்கு முன் / ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே / மரம் விலக்கும் இலையல்ல / மறைந்து தாங்கும் வேர்களவன்’ என மதித்தவர்களின் கோணம் காட்டப்படுகின்றது.

இம்மாதிரியான மதித்தலில் விருப்பமானது மலர்ந்து மகிழ்ச்சியுறும்.

எவ்வாறெனில்,

‘என்னுள்ளே இருப்பவளை / எதன் பொருட்டு வெளியில் தேடுகிறேன் / உள்ளிருப்பதை உணர்த்திடேன் நெஞ்சே /உயிர் பற்றி மலர்ந்திடுவேன்’

என விருப்பத்தை உயிராக்குகின்றது. சுய பாதிப்பற்ற எதிர் பாலினத்தோரை மதிக்கும் ஒரு விஷயமே இதில் உயிராக மலர்கின்றது. தானாக, மதித்து மலர்தலில் அனைத்துமே வசப்படும். அனைத்துமே அர்த்தமான பொருளாகும். அனைத்துமே திரண்ட மனநிலையைத் தரும். அவ்வளவு தான்.

அடுத்தப்பகுப்பாக அறிமுமாவது ‘தாபப் பித்து’ என்ற தலைப்பிலான கவிதைகளில் அதீத உணர்ச்சிகள் பொதிந்துள்ளன.

பித்துண்ட இரு உடல்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?

‘அவளின் புதுமுகமாகிய கணத்தில் / உலகம் சிறிதினும் சிறிதான வெல்லக்கட்டிகளாக / எறும்பொன்று பைத்தியமானது நிலவொளியில் /.’

என்று நிகழ்ந்த அனுபவமே இங்கு பரவெளி சிறிதான வெல்லக்கட்டிகளாகக் காணப்பட்டுள்ளது.

இப்படியாக செல்லும் கவிதைத் தொகுப்பில், அதி தீவிர பித்துக் கொண்ட ஆண் உடல், வதங்கிய பயிராக மேனி கறுத்து ஆனதைக் கண்ட பெண் உடல் மனம் பிதற்றி குளமிரங்கி நீரானாள். நீர்த்துளிகள் பறவைகளாகி வானமடைய கரையத் தொடங்கியதில் புதுப்பிறவிக் கொண்டு மழையில் நனைந்த உடல் ஆடத் தொடங்கி மகிழ்ந்து நின்றாள்.

“துளிகள் பறவைகளாகி / மேகத்தை அடைந்து கொண்டிருக்க / நெருக்குதல் தாளாது / கரையத் தொடங்கியது வானம் / நனைந்தான் / புதுப்பிறவி கொண்டு மெல்ல ஆடத் தொடங்கினான் / மகிழ்வு வலுத்தது”

இதில் உடல் / மனம் என்ற இரண்டும் ஒருங்கே உயிரை வலுப்பெறச் செய்கின்றது. உடலுக்கு உயிர் தேவை. அதனை வேட்கைக் கொண்ட மனம் தருவிக்கின்றது. பலவித நெருக்கடிச் சூழலில், தான் உணர்ந்த பித்தினை மனம் உணர்ந்து உயிர் உணரும் அபூர்வம் புலப்படுகின்றது. இப்பாடுபொருள் மிக துலக்கமானது.

இதிலிருந்து இன்னும் ஈர்ப்பாக,

பெண் உடலை நிலமாகக் காணுதல் பெரும் பித்தாக கவிதையில் வெளிப்பட்டுள்ளது.

“பெய்யும் இடம் மறைத்து / இறங்கும் மழையை / இல்லாமலாக்குகிறது / நிலத்தின் காமம் / எனதுடலை நிலமாகத் விரித்து காத்திருக்கிறேன் / வருபவளுக்காக’

விருப்பம் என்ற ஒரு சொல் எளிமையான தொன்றாக பார்க்கப்படும், சலிக்காத பித்தாக மாறுகின்றது. அவ்வுணர்வு சொல்லிச்சொல்லி தீராததாக, சொல்லிச்சொல்லி பூரிப்புக் கொள்வதாக கவிதையடிகள் மாறுமிடங்கள் நற்சுவை தரக்கூடியதொன்று. நிகழ்ந்ததின் உபரியாக, நிகழப்போவதின் மொத்தமுமாக அதீதப்பித்து அடர்வாக்கி மொழியிலமைகின்றது.

இதுபோல நகரும் கவிதைகளில் அடுத்து, 

சரணாகதி என்ற பித்து நிலை எங்குக் கொண்டு சேர்க்கும்? எதைக் கண்டடைய வைக்கும்? எனக் கேள்வி கேட்கக் கூடிய அடிகள் வருகின்றது. வாழ்க்கைச் சூழலில் உடலுக்கும், மனதுக்கும் இடைப்பட்டவொன்றாக வாழ்வினைத் தள்ள வேண்டியுள்ளது. ஒரு மதிப்பின் உச்சத்தில் காண்பது தான் சரணாகதி தோன்றும். வேறிரு உடல்கள் ஒத்திசைவது மட்டுமன்றி, மனமொத்து, புரிந்த, புரிதலற்ற தமக்குத் தானே சங்கடங்களைக் கண்டுணர்ந்து சரியாக்கி நிமிரும் சூழலில் தோன்றும் பரிபூரணம் ‘சரணாகதி’ என்ற தீவரம். இது,

‘அற்புதங்கள் / ஆசைக்கேற்ப நிகழாதெனும் / உண்மை சரணாகதியின் தித்திப்பில் /’ 

என்றவாறு சொல்லமுடிகின்றது.

இங்கு பரவளி என்பது பழமை அல்ல. நாட்தோறும் புதிதாகின்றது. காலம் தன்னைப் புதிதாகவே காட்டிக் கொள்கின்றது. பழமை, புதமை என மனமே எல்லாவற்றையும் அசைத்துப் பார்க்கின்றது. மனம் கண்டுணர்ந்தவை மட்டுமே இரகசியங்கள். அதனைத் தேடி காலத்தில் பயணம் செய்பவர்கள் சென்றுக் கொண்டேயுள்ளார்கள். பார்க்கப் போனால், இரகசியம் என்று ஒன்றுமே இல்லை. மனம் எதனை விரும்புகின்றதோ அதுவே இரகசியம். அதுவே வாழ்வு. அதுவே மதிப்பு.

விருப்பமென்பது ஒரு உடல் மற்றொரு உடலை மதிப்பது மட்டுமே. வேறு எள்ளளவும் யாதொன்றுமில்லை. அதனாலேயே, ‘எதையாவது சொல்லிக் கொண்டிரு’ எனக் கவிதையடிகளில் சொல்ல முடிந்தது.

நம்பத்தருந்ததோ / நம்பிக்கையற்றதோ / இருந்து விட்டுப் போகட்டுமே / எதையாவது சொல்லிக் கொண்டிரு / எனையது இலேசாக்குகிறது / தாங்கிடும் ஊஞ்சலாகிறது / தலைக்கோதும் விரல்களாகிறது / விடியலைக் காட்டும் தூக்கமாகவும் இருக்கிறது அன்பே /’

என்ற அடிகளில் திகைப்பன்றி எதார்த்தத்தைக் கைக்கொள்ளும் மனோநிலையை விருப்பமாக உணரமுடிகின்றது. மர்மமற்ற ஒரு வெளியைக் கண்ணகல பார்க்க வைப்பதில் கவிதையின் பங்கு அளப்பரியது.

அது தான் தேவையானதும் கூட.

***

ம. கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

நவீனத்தின் தவிப்பும் இருண்மையும்

0

ஆதவன் சரவணபவன்

தொழில் நிமிர்த்தம் ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளர் ரா.செந்தில்குமார் பல கதைகளில் தான் பணிபுரியும் நாட்டைக் களமாக வைத்துப்  புனைந்துள்ளார்.  பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பில் எட்டுக்கதைகள் ஜப்பானைக் களமாகக் கொண்டிருக்க மீதி நான்கும் இந்தியா, தமிழ்நாட்டுச் சூழலில் நிகழ்கின்றன. 

புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் தனிமை சில கதைகளில் மைய இழையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் நிகழும் இரண்டு கதைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் துயரச் சித்திரமாக இருக்கின்றன.  அலட்டலில்லாத மொழி என்பது கச்சிதமான விவரணைகளும் உவமைகளும் தான். தொகுப்பின் அனைத்துக் கதைகளும் வாசகனுக்குச் சோர்வைத்தராத வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. 

மலரிலும் மெல்லிது

குணாவின் இரட்டை முகங்களைக் காட்டும் முயற்சியில் கதை பொதுவான  மனிதனின் வெளிப்பாட்டுக்கும் உள்ளார்ந்த அகவுணர்ச்சிக்கும் உள்ள முரணைச் சொல்கிறது. அவன் ஷோபா என்ற பெண்ணை விரும்பியிருந்தான். இருவருக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் பரஸ்பரம் பிரிந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் வெறுக்கவில்லை என்பது சில நண்பர்களைத் தவிர மூன்றாவது மனிதருக்கு உணர்த்தும் செய்தி. குணா தன்னிலையில் வெளிப்படுத்திக் கொள்ளாத வெறுப்பும் மலினமான பழிவாங்கும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டவனாக இருக்கிறான். அவளின் மனதைப் பாதிக்கும் வகையில் என்னென்ன செய்யலாம் என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறான். வெளிப்படுத்தாத வெறுப்பு அவனுள் எரித்துக்கொண்டிருக்கிறது. குணாவின் பார்வையில் தன்னிலையில் கதை நகர்வதால் அவளின் எண்ணங்களை வாசகன் கதை சொல்லியின் மூலமே அறிகிறான்.  குணாவும் பழக்கடைக் குட்டியும் சைமன் என்ற இன்னொரு அறிமுகமில்லாத நபரைச் சந்திக்கிறார்கள். சைமன் போதையில் வந்திருக்கும் அவர்களின் வெருட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். தெரியாத மனிதனின் மேல் ஏன் பயம் ஏற்படவேண்டும் என்ற வார்த்தைகளால் தன்னை ஆசுவாசப்படுத்துகிறான். சைமன் தனது கடந்த காலத்தை விபரிக்கும் போது குணாவின் மனநிலையை வாசகனுக்கு உய்த்தறிய விடப்பட்டிருக்கிறது. மனைவியின் இன்னொருவர் மீதான ஈர்ப்பை இலகுவாக எடுத்துக்கொள்கிறான். சைமனின் பாத்திரம் மிகவும் வலிமையான மனநிலையுடையவனாகவும் நம்பமுடியாத அளவுக்கு நல்லவனாகவும் படைக்கப்பட்டிருப்பதை ஒருவிதமான சந்தேகத்துடன் பார்க்கமுடிகிறது. குணாவும் குட்டியும் அவன் சொல்வதை நம்பினார்களா இல்லையா என்று தெரியவில்லை. 

“தெரியாத மனிதன் என்ன பெரிய தீமையை செய்திட முடியும்” என்ற வசனத்தை இரண்டு முறை சைமன் சொல்கிறான். தெரிந்த மனிதர்களால் தாம் படும் வேதனையின் கனதியை விட குறைவாகவே இருக்கும் என்றும் கருத்தாக இன்னொரு பார்வையை இதன் மேல் வைக்கலாம்.  குணாவின் காதலின் இழப்பை திருமணமாகி குழந்தையுடன் மனைவியை இழக்கும் சைமனின் இழப்பை ஒப்பிடுகிறது. எல்லாமே இழப்பின் வடிவங்கள். இருவரின் எதிர்வினைகளில் தனிமனித புரிதல் வேறுபாடும் இடத்தை அதற்கான சூழலை கணிப்பிட முடிகிறது.  வாசிப்பில் அவதானித்த சில நெருடல்களாக, இங்கே இரண்டு பெண்களும் ஏமாற்றுபவர்களாக அல்லது கைவிட்டுப் விலகிச் செல்பவர்களாக இருக்கும் போது தொடர்புடைய இரண்டு ஆண்களும் நல்லவர்களாக, தியாகிகளாக,  பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கப்படுவது ஒரு பக்கப் பார்வையாகத் தோன்றுகிறது. காதலியுடனான  குணாவின் பிரிவுக்கான காரணத்தை கதையில் கண்டடைய முடியவில்லை. 

தானிவத்தாரி

ஜப்பானில் ஆண் உகியுசு குருவி தனது இணையை அழைக்கப்பாடும் பாடல் தானிவத்தாரி. இந்தவிபரத்தை அந்தநாட்டுப் பெண் கஷ்மி, தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலைபார்க்கும் பிரகாஷ்க்கு கூறுகிறாள். இருவரும் நெருக்கமான நண்பர்கள். திருமணம் கடந்த உறவு குறித்து எழும் உரையாடல் அவளின் கடந்த காலத்தை வெளிக் கொண்டு வருகிறது.

ஐந்து வயது மகனையும் கணவனையும் விட்டுப்பிரிந்து சிமுரா என்பவனுடன் பத்து நாட்கள் வாழ்கிறாள். தவறை உணர்ந்து மகனைத் தேடிவந்து விடுகிறாள். ஆனால் இன்னும் சிமுரா அவனின் இனிமையான பாடல்களின் வழி அவளுள் நிறைந்திருக்கிறான். குறியீட்டு உத்தியில் சிமுராவுக்கு ஆண் உகியுசு உருவகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிமுராவின் மனதை ஈர்த்த இசை இன்னும் அவளின் நினைவில் நிற்கிறது.   முடிவில் அவள் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்வதை தவித்திருக்கலாம். ஆனால் சிமுரா பாடுவான் என்பதே இறுதியில் அவள் மூலமாகத் திடீரென்று அறிவது எதிர்பார்க்காத திருப்பமாகத் தோன்றுகிறது.

சமூக ஒழுங்கு, புனிதம், பாசம் என்ற கருதுகோள்களைப் புறந்தள்ள முடியாமல் தனது ஆசையை தியாகம் செய்து திரும்பும் கஷ்மி சுற்றியிருப்பவர்களின் பார்வையில் மனம் திருந்தி வந்தவள். ஆனால் அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்திய சிமுராவின் பாடலை இன்னும் துறக்க முடியாது இருக்கிறாள்.

மனதின் நிலைகுலைவும் ஆழமான ஈர்ப்பும் ஏன் கவலையும் கூட இலகுவில் ஒதுக்கித்தள்ள முடியாத உணர்வுகள்.  

செர்ரி ஃப்பிளாசம்

வலிந்து திணிக்கப்படடத் தனிமையை அனுபவிக்கும் பெண் சம்யுக்தா. திருமணமாகி அமெரிக்காவில் IT துறையில் வேலை செய்யும் கணவன் வினோத்துடன் வாழ்கிறாள். சம்யுக்தாவுக்கு எதேச்சையாக ஜப்பான் என்ற நாட்டின் மீது ஈர்ப்பு இளமையில் ஏற்பட்டு வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கணவனுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குப் பயணப்படும் போது மூன்று நாட்கள் ஜப்பானில் தங்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

கணவன் வினோத் தனது குடிப் பழக்கத்தால் ஏற்பட்ட உடல்நிலைக் கோளாறை மறைத்ததால் அவள் உடைந்து போகும் நிலை ஜப்பானில் ஏற்படுகிறது.

எதிர்பாராத விளைவை விருப்பத்துடன் பார்த்து அனுபவிக்கக் சென்ற நாட்டில் ஏற்படுவது அவளை நிலைகுலையச் செய்கிறது. கதையின் இந்த எதிர்பார்க்காத திருப்பம் வாசகமனதில் அதிர்ச்சியைக் கொடுக்கும். தனிமை கொடுக்கும் உளவியல் பாதிப்பு ஒன்றில் அதீதமான ஆசையை அல்லது பற்றை வைத்திருக்கும் போது அது கைகளில் கிடைக்கையில் நிகழும் இன்னொரு பேரிழப்பு அதை இரசிக்க முடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்துகிறது. கிடைத்ததற்கும் இழந்ததற்கும் இடையில் ஏற்படும் சமநிலை வழுவல். 

அனுபவ பாத்தியம் 

ஆண்டாண்டு காலமாகப் பெரும் நிலப்பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் குடும்பம். நிகழ்காலத்தில் அவற்றை விற்று தமது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல நிலங்கள் பராமரிப்பவர்கள் வசம் சென்று விடுகின்றன. அவர்களும் குத்தகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். மறுபடியும் நிலங்களை கையகப்படுத்தும் எத்தனத்தில் உரிமையாளர்கள். மூன்று சகோதரர்களும் தமக்கான பங்கை எடுத்துக்கொள்ள தற்போதைய நிலங்களை வைத்திருப்போருடன் பேசிப்பார்க்கும் களம். கடந்தகாலத்தின் முன்னைய தலைமுறையின் செழுமையான பக்கங்களை மீட்பதுடன், நிகழ்காலத் துயரங்கள் கையாலாகாத்தனங்களையும் கதை வெளிப்படுத்துகிறது. பழைய பெருமைகளை நினைத்து ஏங்கும் சகோதரர்கள் அவற்றைப்பற்றி பெருமை பேசுவதை தவிர வேறொன்றும் ஆகப்போவதில்லை என்ற கட்டத்தில் இருக்கிறார்கள். இன்றைய தமிழர்களின் கடந்தகாலப் பெருமை பேசும் குணத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிஜத்தில் அவை ஆவணமாகலாமே தவிர பயனற்ற ஒன்று என்ற தெளிவைக் கொடுக்கும். இலக்கியம், கட்டுமானம், தொழில்நுட்பம், கலை, மொழி போல எந்தத் துறையிலும் புத்தாக்கம் இல்லாத மனிதர்கள், சமூகம் பின்னோக்கி நகர்கிறது. நவீன உலகில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கப் பழமையை பற்றிக்கொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை உதறியெறிய வேண்டியது காலத்தின் தேவை. நகரமயமாக்கலில் இழந்த இயற்கையோடிணைந்த வாழ்க்கையின் ஏக்கங்கள் அகலாமல் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தற்காலச் சூழல் இருத்தலின் தேவையை மறுதலிப்பதை அவ்வளவு இலகுவில் பொதுவான மனித மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இசுமியின் நறுமணம்

தொகுப்பின் தலைப்புக் கதை.  ஒரு இந்தியனுடன் சகஜமாக மது அருந்திக் கொண்டிருக்கும் ஜப்பானியர்களின் உரையாடல். அவனுடைய அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஜப்பானின் சில கலாச்சாரக் கூறுகள் வருகின்றன. சற்று விரசமான நகைச்சுவை உரையாடலாக ஆரம்பம் முதல் இறுதிவரை தொடரும். ஆண்களின் உலகில் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் தன்மையும் பெண்கள் பற்றிய தாம்பத்திய உறவு பற்றிய உரையாடல் கிளர்ச்சியூட்டுவதாக நிகழ்கிறது. 

அவர்களில் வயசான கோபயாஷி உரையாடலின் தொடக்கம் முதல் கலகலப்பாக இருந்தார். போதை அதிகமாக அவரின் ஆள் மனத்தில் இருந்து கேள்வியொன்றை எழுப்புகிறார். இசுமி என்ற கவர்ச்சியான பெண் அவர்களுடன் வேலை செய்பவள். அவளில் இருந்து வெளிவரும் நறுமணம் எப்படியானது என்று ஆராய முற்படுகிறார்.

தனது அனுபவத்தில் அந்த நறுமணம் வெளிப்படும் சந்தர்ப்பங்களை நினைவுபடுத்துகிறார். தன்னைக் கேலிசெய்யும் நண்பர்களை பொருட்படுத்தவில்லை. தாயின் அன்பையும் மகளின் மேலான பாசத்தையும் தந்த நறுமணம் என்று மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் இறுதிப் பந்தி உச்சத்தை தொடுகிறது. கதையோட்டம் அருமையாக இருந்தாலும் கதையில் ஆழமான பார்வையென்று ஒரு தரிசனத்தை எழுத்தாளர் காட்டவில்லையென்று தோன்றுகிறது. 

தங்களுடன் பணிபுரியும் இந்திய ஊழியருடன்  ஜப்பானியர் மிகவும் அன்னியோன்னியமாக இருப்பதாகக் காட்டுவது செயற்கையாக தெரிகிறது. பொதுவில் ஜப்பானியர்கள் பண்பாகப் பழகுவார்கள். ஆனால் விதிவிலக்குகள் இருக்கும். அதை வெளிப்படுத்தாத போது இயல்பாக ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டில் வேலை செய்பவர்கள் வெளிப்படையாக அந்த நாட்டில் தமக்கு நிகழும் விரும்பத்தகாத வெறுப்பை ஏற்படுத்தும் சம்பவங்களை பாதுகாப்பாக மறைத்துக் கொள்வது ஒரு உத்தியாக வைத்திருப்பார்கள். பொதுவாக இறுக்கமான சட்டங்கள் இருக்கும் நாட்டில் தொல்லைகளைத் தவிர்க்க இந்தவழி உதவலாம்.      

அன்பும் அறனும்  உடைத்தாயின்    

இது தொகுப்பில் உள்ள பக்க  அளவில் குறைவான கதை. எதேச்சையாகச் சந்தித்த சிவா  என்ற மனிதன் கதைசொல்லிக்கு நண்பனாகிறான். அந்தச் சந்திப்பு ஒரு தற்கொலையால் நிகழ்கிறது. தொடருந்துக்கு முன் பாய்ந்து ஒருவன் இறந்ததால் பயணம் தாமதமாகும் போது இருவரும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. 

வேலை நிமிர்த்தமான பிரச்சினைகள் மனவழுத்தத்தைக்  கூட்டியிருக்கலாம். ஆன்மீக நம்பிக்கை இந்த மாதிரி மனநிலையை குறைக்க உதவும். என்று நேர்மறையான கலந்துரையாடல் மூலம் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். இருந்தும் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி சிவாவுக்கு இருப்பதை அவனின் பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது. சிவாவின் முடிவுக்கான காரணம் என்னவென்று வெளிப்படுத்தாமல் வாசகத்திறப்புடன் முடிகிறது கதை. சில குறியீடுகள் அன்பின் ஏக்கத்தைக் காட்டுகின்றன. 

மனிதமனம் பணத்தை துரத்தும் நிலையிலும் அடிப்படையில் அன்பின் தவிப்பில், ஏக்கத்தில் இருக்கும். பிரிவுத்துயர் அவனாக ஏற்படுத்தியதே. அதைச்  சரிசெய்ய முடியாத கோழையா என்ற சந்தேகம் எழுகிறது.   நாகரீக உலகம் இன்னொரு நாட்டுக்குப் போய் வேலைசெய்து பிழைக்கும் கட்டாயத்தைத் திணித்திருக்கிறது. திருமணத்தை வெறுத்து தனக்கான வெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கதைசொல்லியின் முடிவை நியாயப்படுத்தும் பிரதியாக வாசிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் குடும்பமாக இருப்பவர்கள் எல்லோரும் அதை சுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தக் கோணத்தில் கதையின் முடிவில் வரும் வயோதிக இணையர்கள் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.       

கனவுகளில் தொடர்பவள் 

இசுமி என்ற பெண் அவளின் கோலே பிராண்ட் வாசம் இவை இரண்டையும் ஏற்கனவே இசுமியின் நறுமணம் என்ற தலைப்புக் கதையின் சாயலுடன் உள்வாங்கியிருந்த ஆசிரியர் இந்தக் கதையிலும் அதேபெயரில் ஒரு பெண் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.

அவளின் வாழ்க்கை விசித்திரமானதும் சீரற்றும் இருக்கிறது. அடுத்தடுத்து பல ஆண் நண்பர்களை காதலித்தும் பிரிந்தும் கலங்குபவள். அதற்கான காரணங்களை வைத்திருக்கிறாள். தனக்கான  சுதந்திரம் மறுக்கப்படும்போது அந்த உறவை உதறித் தள்ளிவிடும் ஒருத்தி. திகில் தன்மையை கதையில் புகுத்தி கடைசியில் எதிர்பார்க்காத திருப்பம் வருகிறது.  ஆவலுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் பின் மூன்று மாதங்கள் தொடர்பில்லாமல் இருக்கிறான் கதைசொல்லி. மது அருந்தும் பாரில் அவளின் துயரமான முடிவை அறிகிறான். கதைசொல்லியின் பார்வையில் அவளை சந்திக்கவேண்டும் என்ற ஏக்கத்தில் அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கொண்டு திரியும் சற்று பிறழ்வான மனநிலையை மறைமுகமாக உணர்த்த முனைகிறது. அவளைப்பற்றிய மர்மத்தை கதையில் வெளிப்படையாக சொல்லாமல் விட்டிருப்பது வாசகருக்கான இடைவெளியாகத் தெரிகிறது. 

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

அறமெனப்படுவது மாசில்லாத மனம் என்று திருக்குறள் வரையறுக்கிறது. இங்கே வாழ்ந்து கெட்ட நவநீதம்பிள்ளை குடும்பம் கடைசி ஆதாரமான பூர்வீக வீட்டை இழக்கிறது. தொடக்கத்தில் தருகின்ற சிதிலமான வீட்டின் விவரணை அதன் பழமையையும் செழிப்பான கடந்த காலத்தையும்  நினைவுபடுத்தத் தவறவில்லை. அவரது பணத்தை காரோட்டி திருடிவிடுகிறான். பணத்தை திருடிய சாமிநாதனை ஏன் நவநீதம் பிள்ளை சட்டத்தின் முன் நிறுத்த முனையவில்லை? அவருக்கு அதற்கான வலிமையில்லையா? திருடியதற்கான ஆதாரம் இல்லையா? என்ற கேள்விகள் பணத்தைக் கேட்டு சென்ற நவநீதம்பிள்ளை கலங்கிய போது ஏற்பட்டது.   அந்தப்பணத்தை வைத்து கடனை அடைக்க முடியும் என்று நம்பிய நவநீதம்பிள்ளை அது நிறைவேறாமல் இருப்பவற்றை இழக்க வேண்டிவருகிறது. பணிவான வேலைக்காரனாக இருந்த சாமிநாதன் குணம் மாறுகிறது. விரைவில் பெரும் பணக்காரனாக அந்த ஊரில் பல வீடுகளை வாங்கி விட்டான். வேலையாளிகளுக்கு முதலாளியின் மேல் இருக்கும் அன்பும் பணிவும் முற்றுமுழுதான இயல்பல்ல. சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருடவும் துணியும் பேராசைக்காரராக மாறுவது மனித இயல்பு. அறமின்றி சேர்த்த பொருளால் சாமிநாதன் குடும்பத்தில் நிகழும் இழப்புகள் அவனைப் படுக்கையில் போடுகிறது என்ற பார்வையில் கதை சென்று முடியும். இருந்தும் சாமிநாதன் மாறவில்லை. அவன் அறமற்றவன் என்ற தீர்க்கமான முடிவை ஆசிரியர் எடுத்திருக்கிறார். இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால் நவநீதம்பிள்ளையின் தந்தை நியாயமாக வாழ்ந்த மனிதர். அவர் அறவழியில் வாழ்ந்து சேர்த்த சொத்துக்களை மகன் ஊதாரித்தனமாக செலவு செய்து இழக்கிறான். கடைசியில் ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு அவனின் திட்டமிடல் இன்மையை சொல்வது ஒரு பார்வை. ஆனால் சாமிநாதனின் இழப்புகளுக்கு அவனின் அறமற்ற குணம் என்று சொல்வது இன்னொரு பார்வை. இங்கே இரட்டை நிலைப்பாட்டை வாசகன் புரிந்து கொள்ளும் போது குழப்பம் வருகிறது. அறமுடன் வாழ்ந்தாலும் இழப்பு வரும். அறமற்று வாழ்ந்தாலும் இழப்பு வரும் என்றால் எது உண்மை? நல்லவர்களைத்தான் இறைவன் சோதிப்பான் என்று எடுத்துக்கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. 

நவநீதம் பிள்ளையின் அறமற்ற வாழ்க்கையை கதை வெளிப்படுத்தத் தவறிவிட்டதோ என்ற சந்தேகம் பிரதிமீதான ஒற்றைப்படைத் தன்மையை ஏற்படுத்துகிறது.   

மயக்குறு மக்கள்

தொகுப்பிலுள்ள மற்ற இரண்டு தமிழ்நாட்டுக் களங்கள் போலவே வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மாந்தர்களின் கதை. ஆனால் இழந்தவைகளை விட்டு படித்து ஜப்பானில் வேலை பார்க்கும் ராஜா என்ற கதை சொல்லி தனது தாயைத் தேடுவதில் தொடங்குகிறது. தாய் ஊரிலிருந்து மூன்று மாதம் தற்காலிக விசாவில் அங்கே அவனுடன் தங்கியிருக்கிறார். அவரைத்தேடி காவல்துறைக்கும் தகவலைத் தெரிவித்து விடுகிறான். அடுத்த நாள் தாயார் தலைமைக் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. தாயை காவல் துறை கைது செய்ததற்கான காரணம் புரிந்து கொள்ளமுடியாதது. அது அவரை அறியாமல் செய்த தவறு. இயல்பாகவே தாயாருக்கு குழந்தைகள் மேல் இருக்கும் பிரியத்தின் வெளிப்பாடாக கதை முடிகிறது. கணவனைப் பிரிந்த இழப்பும் மகனின் விவாகரத்தும் வெகுவாகப் பாதித்தால் ஏற்படும் பிறழ்வில் தன்னை மறந்து ஆழ்மனத்தின் ஆசையை தீர்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் மேல் தாயின் அதீதமான அன்பை எடுத்துக்காட்டும் கதை. அடிக்கடி பூசையறையில் அமர்ந்து அழுது தன்னை ஆற்றுப்படுத்தும் தாயை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் மகன் இறுதியில் என்ன செய்யப்போகிறான் என்ற கேள்வியைத் கேட்க வைத்திருக்கிறது.

மடத்து வீடு

ஆற்றங் கரையோரம் அமைந்த பழைய காலத்து வீடு. அதன் சிதிலமான வடிவத்தை விவரித்துத் தொடங்கும் கதை தற்போது அங்கே வசிக்கும் சீனிவாசராவ் என்ற மனிதரையும் அவரின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் தெளிவாக்குகிறது. பரம்பரையாக வந்து இப்போது இருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் இந்த வீட்டை தர்மத்துக்கு எழுதிவைத்திருந்தாலும் தமது காரியதரிசியாக வேலை பார்த்த சீனிவாசராவுக்கு  அவரின் வறுமை கருதி குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.  

அவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. மனைவி இறந்து விட்டார். மூன்று மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கதைசொல்லி அந்த ஊரைச் சேர்ந்தவன். அந்த வீட்டுக்கு தனது நண்பன் அருணுடன் செல்கிறான். அருணின் நண்பனும் கூடச்சென்று சீனிவாசராவின் இளைய மகள்கள் இருவருடனும் பேசுவதாக வரும். பெண்களுடன் பேசும் இரட்டை அர்த்த வார்த்தைகளை அவர்களும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் தான் பெண்கள் அதை எவ்வாறான மனநிலையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற மர்மம் துலங்குகிறது. நடத்தையின் விளைவு யாரால் யாருக்கு நிகழ்கிறது என்பதைப் பொறுத்து நல்லதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் அமையும். பெண்கள் என்றாலே அலைபாயும் மனதுடன் தான் சராசரி ஆண்கள் இருப்பார்கள் என்று ஒருபார்வையை வைத்தாலும் சிலர் சுதாரித்துக் கொள்கிறார்கள். அலைபாயும் மனதுக்கு வயது வேறுபாடு கிடையாது. 

சிபுயா கிராஸிங்      

சிபுயா கிராஸிங் என்ற சந்தியில் தொடங்கும் கதையில் அடிக்கடி பூட்டிய கதவைச் சரிபார்க்கும் பெண்ணை ரிக்கு முன்வீட்டில் காண்கிறான். 

சிபுயா கிராஸிங் சந்தி ஜப்பானில் பிரபலமானது. நாளாந்தம் பல மனிதர்கள் அந்த வீதிக்கடவைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் பார்வை தன்மேல் படுவதாக கற்பனை செய்கிறான் ரிக்கு. மனிதர்கள் தம்மைச் சுற்றி வைத்திருக்கும் வட்டத்தைப் பார்த்ததும் வெறுப்பும் கவலையும் அவனை ஆட்கொள்கிறது. இன்னொரு புறம் யுகிகோ தனது அழகில் பெருமைப்பட்டாலும் சூழ்நிலை உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். அதுவே அவளின் அடையாளமாக மாறும் போது அவள் தனது உடலை மூடி மறைந்து வாழத் தலைப்பட்டாள். இரண்டு வெவ்வேறு மனவோட்டங்களும் சேவை என்ற புள்ளியில் சந்திக்கும் இடம் சுயத்தை விலக்கிய மனிதநேயத்தின் உன்னதத்தை அடைகிறது. தொகுப்பில் என்னை மிகவும் சிந்திக்கத்தூண்டிய கதை. பல குறியீடுகளாக வாசக அனுபவத்தை விசாலப்படுத்தும் நுட்பங்கள் நிறைந்த படைப்பு.  

நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்

சியாம் ரயில் பாதையில் இறந்த மனிதர்களை நினைவுபடுத்தும் பழைய கதை ஜீவனந்தத்தின் தந்தையுடையது. கதை சொல்லி ராம் இந்தப் பின்புலத்தை அறிவதுடன் ஜீவானந்தம் ஏன் கூட்டத்தில் சட்டென்று கோபமடைந்தார் என்ற காரணம் வெளிப்படையாகச் சொல்லவில்லை.    

உண்மையில் வெளிப்பார்வையில் அன்பான மனிதர்கள் என்றோ நிகழ்ந்த கொடுமையை நினைத்து வன்மத்தைக் காவுபவர்களாகவும் அவ்வப்போது அவர்களை அறியாமலே அது வெளிப்படும். இரண்டாம் உலகப்போர்க் காலத்துத் தகவல்கள் பலவற்றை தந்தையின் கடந்த காலத் துயர் நிறைந்த வாழ்க்கையினூடு சொல்கிறார் ஜீவானந்தம்.  

வாசிப்பில் சில மயக்கங்கள் எழுந்தன. ராமின் ஜப்பானிய அதிகாரி திக்குவாயாக பேசியது ஏன் ஜீவானந்தத்தின் தந்தையை அவருக்கு நினைவுபடுத்தியது என்ற காரணத்தை கண்டடைய முடியவில்லை. ஜப்பானியர்களின் மேலான வெறுப்பில் ஜீவானந்தம் அப்படி நடந்து கொண்டிருப்பதற்கான காரணமாக திக்கி பேசியது அமைந்தது என்ற முடிவு குழப்பத்தைத் தரலாம். ஜீவானந்தம் தந்தையின் மூலம் அவரின் வலியை உணர்ந்தது என்ற பகுதி ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக சொல்லியிருப்பது ஜீவானந்தத்தின் உணர்வுகளுடன் வாசகனை நெருக்கமாக அழைத்துச் செல்லவில்லை. 

***

ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

கௌரவம்

0

குர்ரத்துலைன் ஹைதர்

தமிழில் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

குளியலறை அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருகிற குகையைப் போல இருந்தது. இருட்டாக, ஈரமாக, குளிர்ச்சியாக பளபளக்கும் பெரிய பெரிய பொருட்கள் நிறைந்ததாக இருந்தது. சுடுநீர் நிறைக்கப்பட்ட தொட்டி, வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கை கழுவ உபயோகிக்கப்படும் தொட்டிகள், நீண்ட மூக்கு கொண்ட உயரமான பித்தளை கூஜாக்கள், ஆஜானுபாகுவான, மர்மமயமான திருடர்களைப் போலக் காட்சியளிக்கும் துணிகளை உலர்த்துவதற்கான சட்டங்கள், ஜன்னலை நெருங்கும் முன், பேகம் இவை அனைத்தையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. காதல் மன்னனான தன் வருங்கால கணவன் உள்ளிருந்து வெளியே வரும்போதெல்லாம் அவனை ரகசியமாகப் பார்த்து ரசிப்பதற்காக, ஜன்னற்கதவின் ஒரு பகுதியின் வண்ணத்தை பேகம் சுரண்டி வைத்திருந்தாள். 

ஜன்னல், பக்கத்து வீட்டைப் பார்த்தபடி அமைந்திருந்தது. உயரமான மதில் சுவர் எழுப்பப்பட்ட அந்த வீட்டின் முன்பக்கத் தோட்டத்தில் மல்லிக் கொடிகளும் மாதுளை மரங்களும் இருந்தன. நடுவில் ஒரு நீரூற்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் ஷம்ஷாத் பேகத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட அஜீஸ் கான் பெரும்பாலும் புழங்கும் இடம். இடையே, எப்போதாவது, பெண்கள் புழங்குகிற அறையின் வாசலுக்கு நிதானமாக நடந்து வந்து, அவளுக்கு மட்டுமே புரிகிற மாதிரி, “யாரேனும் சூடான தேநீரும் பக்கோடாக்களையும் அனுப்புகிறீர்களா” என்று உரக்கக் கேட்பான். அது போதும். ஷம்ஷாத் பெண்களுக்கான விஸ்தாரமான முற்றத்தைத் தாண்டி வெறுங்காலுடன் ஓடுவாள். அஜீஸ் கான் தனது புறாக்களையும் காகிதப் பட்டங்களையும் நண்பர்களையும் தேடி திரும்பி வருவான். பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன். ஷம்ஷாத் கண்மண் தெரியாமல் அவனை நேசித்தாள். 

அவர்கள் ஷாஜகான் பூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய முன்னோர்கள், மற்ற ரோஹில்லா பட்டான்களைப் போல, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள். அவர்களுடைய பெயரால் அப்பகுதி முழுவதுமே ரோஹில் கண்ட் என்று அழைக்கப்பட்டது. 

ஷம்ஷாத் பேகம், பழமை வாய்ந்த கூட்டு குடும்பம் ஒன்றில் வசித்து வந்தாள். அவளுடைய தகப்பனாரும் குடும்பத்தினரும் நிலச்சுவான்தார்கள். ரோஹில் கண்ட்டை சேர்ந்த பட்டான்கள் தங்களது ஆப்கானிஸ்தான பாரம்பரியத்தைக் குறித்து பெருமை கொண்டிருந்தார்கள். நல்ல ரோஜாப் பூ நிறமும், உடல் வலிமையும், அழகும் படைத்தவர்களாக விளங்கினார்கள். ஷம்ஷாத் பேகமும் நல்ல உயரமும் அழகும் வாய்க்கப் பெற்றவள். எந்நேரமும் பர்தாவிற்குள்ளேயே இருந்தவள். பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனாலும் அவளுக்கு வீட்டிலேயே உருது, அரபிக் மற்றும் பாரசி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவளும் பெற்றோருக்கு ஒரே குழந்தை.

திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பிறகு பேரிடர் நிகழ்ந்தது. ஷாஜஹான்பூர் முழுவதும் காலரா பரவியது. சில நாட்களுக்குள்ளேயே அடுத்தடுத்து அவளுடைய பெற்றோர் இறந்தனர். ஷம்ஷாத் பேரதிர்ச்சி அடைந்தாள். அவளுடைய வருங்கால மாமனார் மாமியார் அவளுக்கு ஆதரவளித்து தேற்றினார்கள். திருமணம் தள்ளிப் போடப்பட்டது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவள் மறுபடியும் பச்சை நிற ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினாள். 

ஒரு நாள் இரவு அஜீஸ் கானின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குள்ளேயே அவர் காலமானார். ஷம்ஷாத் தன்னை ‘துரதிஷ்டக் கட்டை’ என்று நினைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். சில நாட்கள் கழித்து அஜீஸ் அலகாபாதில் கோர்ட் கேஸ் இருப்பதாகவும், அதற்காக தான் போக வேண்டி இருப்பதாகவும் தன் தயாரிடம் சொன்னான். அவர்கள் வசதி படைத்த நிலைச்சுவான்தார்கள். ஷம்ஷாதுடைய அப்பாவும் சரி, மாமனாரும் சரி, ஏதாவது ஒரு வழக்கு வியாஜ்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அஜீஸ் அலகாபாதுக்கு சென்றான். இலையுதிர்கால மதியத்தில், ஆளரவற்ற பக்கத்து வீட்டு தோட்டத்தில் காற்று வீசிக் கொண்டிருந்தது. திடீரென எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். அப்பா… மாமனார்… அஜீஸ்… ஒரு வருடம் கடந்தது. அஜீஸ் திரும்பி வரவில்லை. ஷம்ஷாத் இருட்டு குளியலறைக்குள் ஒளிந்து கொண்டு அழுதாள். துணி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மிருதுவான மஸ்லின் துப்பட்டாவால் முகத்தை போர்த்திக்கொண்டு தன்னை அழுகையில் கரைத்துக் கொண்டாள். 

மிகவும் விசித்திரமான முறையில், மாமியார் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். நிமோனியா பாதிப்பு மட்டுமே காரணம் இல்லை, மனமும் உடைந்து போனதுதான் காரணம் என்று ஷம்ஷாதுக்கு தெரிந்திருந்தது.

அப்பாவின் மரணத்திற்கு பிறகு ஷம்ஷாத் பேகம் பெருஞ்சொத்திற்கு வாரிசுதாரர் ஆனாள். அஜீஸ் அவளுடைய சட்ட ரீதியான பாதுகாவலன் ஆனான். ஆனால், அவன் எங்கே? லக்னோ… கல்கத்தா… மசூரி… நைனித்தால்? அப்பா இறந்த பிறகு அவனுக்கு கிடைத்த சொத்தை அவன் வாரி இறைத்து வீணாக செலவழிப்பதாக வதந்திகள் வரத் தொடங்கின.

ஷம்ஷாத் பேகமோ ஒரு சிறுமி. அஜீஸும் அருகே இல்லாத நிலையில், அவளுடைய உறவினர்கள் அவளை ஏமாற்றினர். காலம் எதற்கும் நிற்காமல் பறந்தது. அவளுக்கு முப்பது வயதாகி விட்டிருந்தது. அவள் இன்னமும் அஜீஸ் கானுக்காக காத்திருந்தாள். இளம் வயதில் திமிர் பிடித்தவளாக இருந்த போதிலும், வயதும் அவள் சந்தித்த துயரங்களும் அவளை இளக்கி இருந்தன. ஆனால் அவள் குடும்ப கௌரவம் மிகவும் உள்ளவளாக விளங்கினாள். ரோஹில் கண்டின் பிரபு குடும்பத்து பெண்களைப் போல, தனது தந்தை விட்டு சென்றிருந்த வாழ்க்கையை காப்பாற்ற அவள் பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தாள். குடும்ப கௌரவத்தை காப்பாற்ற எஞ்சி இருந்த ஒரே நபர் அவள் தான்.

ஷம்ஷாதின் முடி நரைக்க ஆரம்பித்தது. வெளிமனிதர்களை சந்திப்பதை தவிர்த்து அவள் பங்களாவிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவள் ஆண்கள் புழங்கும் பகுதிக்குச் சென்று, அந்த இடத்தை சுத்தம் செய்து, ஜன்னல்களைத் திறந்து வைத்து அறைக்குள் காற்று வர செய்தாள். விக்டோரியா காலத்து மரச்சாமான்களை நகர்த்தி துடைத்து சுத்தம் செய்தாள். மரங்களுக்கும் பூச்செடிகளுக்கும் நீர் வார்த்து, பழுத்த இலைகள் அடைத்துக் கொண்டிருந்த நீரூற்றை சுத்தம் செய்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் – யாருக்குத் தெரியும்?

கோடைக்காலத்தில் நீண்ட மதியப் பொழுதுகளில், அவள் மரக்கட்டிலிலோ அல்லது பெண்கள் புழங்கும் முற்றத்தின் மீது கவிழ்ந்திருக்கும் புளிய மரத்தை வெறித்துக்கொண்டோ படுத்துக் கிடப்பாள். வயதான சமையல்காரம்மா சலாமத், புளிய மரத்தின் அடியில் கட்டிலில் அமர்ந்து கொண்டு வெற்றிலைப் பாக்கை அரைத்தபடி அடிக்கடி தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். “கடவுள் இரு முறை மட்டுமே சிரிப்பார் – ஒருவருக்கு அவர் அளித்த கௌரவத்தை அடுத்தவன் கெடுக்க நினைக்கும் போது, அடுத்தது அவர் உருவாக்கியதை மற்றவர் அழிக்க நினைக்கும் போது”.

“போதும் நிறுத்துங்கள் சலாமத் அத்தை ” என்பாள் ஷம்ஷாத் எரிச்சலுடன். ஆனால் கிழவிக்கோ காது கேட்காது. அவள் அபசகுனம் நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து முணுமுணுத்து அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள். 

அது ஒரு பனிப்படர்ந்த குளிர்கால காலை. ஷம்ஷாத் அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள். சலாமத்தின் பெண் அவசர அவசரமாக கதவைத் தட்டினாள்.

“அக்கா, சீக்கிரம் வெளியே வாங்க” என்று அவள் மேலும் கீழும் குதித்துக் கொண்டே கத்தினாள். 

ஈரத்தலையை துவாலையால் சுற்றிக்கொண்டு, “என்ன ஆச்சு பைத்தியமே?” என்று கேட்டபடியே ஷம்ஷாத் வெளியே வந்தாள். 

“அக்கா நான் சொல்வதை நம்புங்கள். முதலாளி வந்துவிட்டார். அவருக்கு சூடாகத் தேநீரும் பக்கோடாவும் வேண்டுமாம்.”

ஷம்ஷாத் பேகத்தால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. குளியலறையின் அரை இருட்டில் அவள் தட்டுத் தடுமாறி ஜன்னலை நெருங்கி, வெளியே எட்டிப் பார்த்தாள். முற்றங்கள் உயிர்த்தெழுந்திருந்தன. வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சூட்கேஸ்களும் ஹோல்டால்களும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. வாயிலில் யாரோ குதிரை வண்டிக்காரனோடு உரத்த குரலில் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கண்கள் ஒரு பெண்ணின் மீது பதிந்தன. கருத்த நிறமும் பருத்த முகமும் சிவப்பு நிற ஜார்ஜெட் புடவையும் அணிந்திருந்தாள் அந்தப் பெண். அடுத்த நொடியே அவன் வந்தான். வழக்கம் போலவே மிகவும் மிடுக்காக. அவன் அந்தப் பெண்ணுக்கருகே சென்று எதையோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள். 

அலிபாபாவின் குகை ஆழமான கிணறாக மாறி ஷம்ஷாத் அதில் தலை சுற்றி மூச்சுத் திணறி விழுந்தாள். கெட்ட கனவு ஒன்று கண்டவள் போல, அவள் தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள். 

இரவு அஜீஸ் தன் மனைவியை வீட்டிற்குள் அழைத்து வந்தான். சற்றே தயக்கத்துடன், முக்கிய வாயிலுக்கு அருகே வந்து தொண்டையை செருமிக் கொண்டு, ” ஷம்மி, உன் புது உறவினரை வந்து பார்” என்றான்.

வராண்டாவின் உட்புறம் நின்று கொண்டிருந்த ஷம்ஷாத் நடுங்கியபடியே குளியலறை நோக்கி மறுபடியும் ஓடினாள். தலை சுற்றியது. குளியலறையின் கதவை தாழிட்டுக் கொண்டாள். வராண்டாவில் தம்பதியர் சற்று நேரம் அசௌகரியமாக உணர்ந்தபடியே நின்று கொண்டிருந்துவிட்டு தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். 

ஷம்ஷாத் பேகம் அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொண்டதும் அதிர்ச்சி அடைந்தாள் – தன்னைக் கைவிட்டுவிட்டு அந்தப் பெண்ணை மணந்து கொண்டதற்காக அல்ல, மாறாக குடும்ப கௌரவத்தை சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு வேசியை மணந்து கொண்டதற்காக. 

அஜீஸின் மனைவி அவளை மறுபடியும் சந்திக்க முயற்சி செய்தாள். “லக்னோவை சேர்ந்த கல்லோ பாய் – கிராமஃபோன் மற்றும் ரேடியோ பாடகி” என்றும் அவள் அறியப்பட்டாள். அந்த குடும்பத்தின் மருமகளாக தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அவள் பெரிதும் பாடுபட்டாள். ஆனால் ஷம்ஷாதோ, வாயிற்காப்போன் தம்மு கானிடம், “நீ உண்மையிலேயே ஒரு பட்டானாக இருந்தால் – ஆணோ பெண்ணோ – அது யாராக இருந்தாலும் சரி, என் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் காலை உடைத்து விடு” என்று கட்டளையிட்டிருந்தாள். 

அவள் ஒரு விதவையைப் போல வெள்ளை உடை அணிய ஆரம்பித்தாள். கொஞ்சநஞ்சம் மீதமிருந்த சொத்துக்களை உறவினர்கள் களவாட அனுமதித்தாள். அஜீஸ் சூழ்நிலையை ஓரளவு புரிந்துகொண்டான். குற்ற உணர்ச்சியால் தவித்தான். அவள் சார்பாக உறவினர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்தான். உறவு பெண்மணி ஒருவரின் மூலம் அவளுக்கு பெருந்தொகையையும் அனுப்பி வைத்தான். ஷம்ஷாத் பேகம் கோபத்தில் கொந்தளித்தாள். வேகவேகமாக வீட்டு வாசல் வரை நடந்தாள். அங்கிருந்து அவள் பேசுவது ஆண்கள் புழங்கும் முற்றத்தில் எளிதாகக் கேட்கும். “தம்மு கான், ஜும்மன் கானின் மகளும் ஷப்பு கானின் மருமகளும் ஆன நான், விபச்சார விடுதியில் தங்கியிருந்தவர்களின் கைப்பட்ட பணத்தை பெற்று செலவழிப்பதை விட பட்டினி கிடந்து சாவேன்‌” என்று உரக்கக் கூறினாள். அந்தப் பெரிய வீட்டை கட்டித் தீனி போடவும் ஒன்றுக்கும் உதவாத உறவினர்களையும் வேலைக்காரர்களையும் வைத்து காப்பாற்றவும் அவளுக்கு தன் நகைகளை விற்க வேண்டி வந்தது. நகைகள் அனைத்தும் தீர்ந்தவுடன், அக்கம் பக்கத்து பெண் குழந்தைகளுக்காக அவள் ஒரு பள்ளியைத் தொடங்கினாள். தையல் வேலை செய்ய ஆரம்பித்தாள். அதுவரை தொத்திக் கொண்டிருந்தவர்கள் அவளை விட்டு விலகிப் போனார்கள். அவளுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான தம்மு காணும் சலாமத் அத்தை மட்டுமே அவளுடன் இருந்தார்கள். 

ஷம்ஷாத் பேகத்தின் உடல்நலம் குன்றியது. ஜுரம் தலைக்கேறி அவள் தன் நினைவின்றி புலம்ப ஆரம்பித்தாள். சலாமத் பயந்து போய், அஜீஸுக்கு சொல்லி அனுப்பி குடும்ப வைத்தியரை வரவழைத்தாள். கணவனும் மனைவியும் அவளுடைய கட்டிலுக்கு அருகே அமர்ந்து அவளை பராமரித்தனர். அவள் கண் திறந்தவுடன் தலை மாட்டருகே அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவள் கல்லோ பாயை வெறுப்புடன் பார்த்து கண்களை மூடிக்கொண்டாள். கல்லோ, தன் கணவரின் உறவினரான ஷம்ஷாதைப் பார்த்து பயந்தாள். சத்தம் இன்றி அவள் தன் வீட்டுக்கு திரும்பினாள்.

ஷம்ஷாத் பேகம் விரைவில் குணமடைந்தாள். 

1947 ஆம் ஆண்டின் கோடை காலம் அது. ஹிந்து முஸ்லிம் இனக் கலவரங்கள் மூண்டு கொண்டிருந்தன. ஜமீன்தாரி முறையை ஒழிக்கப்போகிறார்கள் என்ற பேச்சும் பரவலாக இருந்தது. கிடைத்த சொத்தில் ஏற்கெனவே பெருமளவை இழந்திருந்த அஜீஸ் வக்கீலை சந்திக்க தில்லிக்குச் சென்றான். அங்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அவன் கலவரத்தில் கொல்லப்பட்டான். 

அந்த செய்தி வந்த அன்று ஷம்ஷாத் பேகம் வராண்டாவில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். கல்லோ வேகமாக ஓடி வந்து மூடி இருந்த கதவை படபடவென தட்டினாள். “நடக்கக்கூடாதது நடந்து விட்டது நாம் அழிந்து விட்டோம்” என்று கதறினாள்.

ஷம்ஷாத் பேகம் அதிர்ந்து எழுந்தாள். முற்றம் வழக்கம் போல வெறிச்சோடிக் கிடந்தது. காற்றில் புளிய மரத்தின் கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. கல்லோவின் கூக்குரல் அவளைத் துளைத்து எழுப்பியது. ஷம்ஷாத் பேகம் எழுந்து பார்த்தாள். கல்லோ வாயிற் கதவை உலுக்கிக் கொண்டிருந்தாள். ஷம்ஷாத் பேகம் சுவற்றில் மாட்டி இருந்த சாவியை எடுத்துக் கொண்டு வாயிற்கதவை நோக்கி நடந்தாள். தனக்குத்தானே புலம்பிக்கொண்டு கதவை திறந்தாள். 

கல்லோ தலைவிரி கோலமாய் நின்று கொண்டிருந்தாள். கருப்பு பிசாசைப் போல நின்று கொண்டிருந்த அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவளுடைய முகம் சிதிலமடைந்து பார்க்க கோரமாக இருந்தது. கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை வாயிற் கதவின் மீது வேகமாக அடித்து உடைத்துக் கொள்கிற முயற்சியில் அவள் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருந்தது. சில நொடி நேரம் அவள் தன் கணவனின் கோபக்கார உறவுக்காரியை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் சில அடிகள் முன்வைத்து அவளை தழுவிக் கொள்ள முயற்சி செய்தாள். ஷம்ஷாத் பேகம் சடார் என்று பின் வாங்கினாள். கல்லோ பெரிதாக ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள். “அக்கா என் சாம்ராஜ்யம் தொலைந்து போனது. என் மணிமுடி புழுதியில் விழுந்துவிட்டது. நான் விதவையாகிப் போனேன். அவர் இறந்து விட்டார்.” 

ஷம்ஷாத் பேகத்தின் கண்களில் இன்னமும் தூக்கம் வழிந்து கொண்டிருந்தது. அவள் கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு எதிரில் நின்று புலம்பும் கல்லோவை பார்த்தாள். மெதுவாக அவள் உண்மையை புரிந்து கொண்டாள். வாயிற் படியிலேயே உட்கார்ந்து கொண்டு மெல்லிய மஸ்லின் துப்பட்டாவால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். அவளுடைய அழுகை கல்லோவின் வெறிபிடித்த புலம்பலோடு கலந்து கொண்டது. 

“அக்கா நான் விதவையாகி விட்டேன்” கல்லோ மறுபடியும் கூக்குரலிட்டு அழுதாள். 

ஷம்ஷாத் பேகம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, எப்போதும் போல எழுந்து நிமிர்ந்து நின்றாள். “பாதகத்தி, நீ இன்று விதவையாகி இருக்கிறாய். நான் எப்போதுமே விதவையாகத்தான் இருக்கிறேன். இங்கிருந்து போய் விடு. எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிப் போய்விடு” என்றாள். 

கதவை இழுத்து மூடி உட்பக்கம் தாழிட்டு விட்டு மறுபடியும் கட்டிலில் வந்து அமர்ந்தாள். 

சில நாட்கள் கழித்து அஜீஸின் விலை உயர்ந்த பொருட்களோடு கல்லோ காணாமல் போனாள்.

குளியலறை ஜன்னல் வழியாக கல்லோ விலை உயர்ந்த பொருட்களை வண்டியில் கட்டிக்கொண்டு செல்வதை ஷம்ஷாத் பேகம் பார்த்தாள்: தரை விரிப்புகள், ஓவியங்கள், வெள்ளிப் பொருட்கள். ஷம்ஷாத் பேகம் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் நடப்பதனைத்தையும் ஒரு காட்சியைப் போல வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள். 

அரசாங்கத்தின் சார்பாக அதிகாரிகள் பக்கத்து வீட்டை சீல் வைத்து அடைத்தார்கள். அஜீஸ் கான் இனக் கலவரத்தில் கொலை செய்யப்பட்டான் என்பதையோ, பாகிஸ்தானில் குடியேறவில்லை என்பதையோ ஷம்ஷாத் பேகத்தால் நிரூபிக்க முடியவில்லை. அந்த வீடு ‘நாடு விட்டு வெளியேறியவரின் சொத்தாக’ அறிவிக்கப்பட்டது. ஷம்ஷாத் பேகம் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. 

சில வாரங்களுக்கு பிறகு லண்டனில் இருந்து வெளியேறி அகதியாய் வந்த சீக்கிய மருத்துவர் ஒருவர் அஜீஸ் கானின் வீட்டில் குடியேறினார். அவருடைய மனைவி ஷம்ஷாத் பேகத்துடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தாள். வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தம்மு கான் இறந்து போனான். சலாமத் நடக்க முடியாமல் முடங்கியிருந்தாள். ஷம்ஷாத் பேகத்தின் பெரும்பாலான உறவினர்கள் பாகிஸ்தானுக்கு போய் விட்டிருந்தார்கள்.

அகதியாய் வந்த சீக்கிய மருத்துவரின் மகள் புது தில்லியில் பணி புரியும் கீழ்நிலை அரசு அதிகாரி ஒருவரை மணந்திருந்தாள். அவள் தன் பெற்றோரை சந்திக்க ஷாஜஹான்பூர் வந்த போது ஷம்ஷாத் பேகத்தையும் சந்தித்தாள். அவளுடைய கணவரின் முஸ்லிம் பாஸ் தன் குழந்தைகளுக்கு உருது கற்றுத் தருவதற்காக தகுந்த ஆசிரியர் ஒருவரை தேடிக் கொண்டிருப்பதாக அவள் தன் பெற்றோரிடம் கூறினாள். மருத்துவரின் மனைவி ஷம்ஷாத் பேகத்தை அந்த வேலையை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினாள். “சகோதரி எத்தனை நாட்கள் நீங்கள் இப்படி வருமானம் ஏதுமின்றி தனியாக இருக்க முடியும்? கௌரவம் பார்க்காதீர்கள். இந்த வேலையை ஒப்புக் கொள்ளுங்கள். பாடம் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் இழிவான வேலை இல்லை” என்றாள். 

ஷம்ஷாத் பேகம் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டாள். வயதாகி தான் இறக்க நேரிடும் போது தன் தலை அருகே நின்று குர்ஆன் படிக்கவும் இறுதிச் சடங்குகளை செய்யவும் எவரேனும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏனோ அவளுக்கு திடீரெனத் தோன்றியது. 

கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு புர்கா அணிந்து கொண்டு ஷம்ஷாத் பேகம் தன் வீட்டின் வாயிற்படியைக் கடந்தாள். அதை வீடு என்று சொல்வதை விட புராதனமான பழம்பெருமை வாய்ந்த இறந்த காலத்தின் எச்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஜமீன்தார் ஜும்மா கானின் மகள் வறுமையில் வாடும் ஒரு ஆசிரியையாக, முன்பின் தெரியாத வினோதமான உலகிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.

ஷம்ஷாத் பேகம் புது தில்லியில் பன்னிரண்டு வருடங்கள் ஷஹாபுதீன் குடும்பத்தினருடன் செலவழித்தாள். அவர்கள் அவளுடன் மிகவும் அன்பாக குடும்பத்தில் ஒருத்தியைப் போல நடத்தினார்கள். அவர்களுடைய குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஷஹாதீன் பதவி ஓய்வு பெற்று தன் சொந்த கிராமத்திற்கு திரும்ப முடிவு செய்தார். அவர்கள் ஷம்ஷாத் பேகத்தை அவர்களுடைய நண்பரான ரஷீதத் அலி குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்கள். அவர்களுடனும் ஷம்ஷாத் பேகம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருந்தாள். ரஷீத் அலி குடும்பத்தினரும் ஷம்சாத் பேகத்தை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அவளை ஷம்ஷாத் அத்தை என்றே அழைத்தார்கள்.

சிறிது காலம் கழித்து ரஷீது அலிக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வேலை மாற்றம் ஆனது. அவருக்கு ஷம்ஷாத் அத்தையை என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுபடியும் ஒருமுறை அவரைத் தனியாக விடுவதா? 

ஒரு நாள் திருமதி ரஷீத் ரோஷனரா கிளப்பில் நண்பர்கள் அளித்த பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே பழைய தில்லியில் இருந்த உறவினர்களை சந்திக்க சென்றாள். 

ஷம்ஷாத் பேகம் கிளப்பிற்கு வந்து புல்வெளியில் அவளுக்காக காத்திருந்தாள். எப்போதும் வெள்ளை நிற உடை அணியும் ஷம்ஷாத் பேகம் கண்ணியமான பெரிய வீட்டு பெண்மணியைப் போலத் தோற்றமளித்தாள். தன் எஜமானிககாக காத்திருந்து, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கையில், தோட்டத்து குடைக்கு கீழே இருந்து மிகவும் நாகரீகமான ஒரு பெண்மணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். அவளைப் போலவே நாகரீகமான ஆடை அணிந்த சில ஆண்களுடன் அவள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ஃபேஷன் பத்திரிகைகளில் வரும் பெண்களைப் போல அவள் மிகவும் அழகாகவும் நாகரீகமானவளாகவும் இருந்தாள். 17 வருடங்கள் தில்லியில் வசித்த பழக்கம் இருந்ததால் நவீன, வசதியான பெண்களை ஷம்ஷாத் பார்த்திருந்தாள். அந்தப் பெண்மணி அவளையே மறுபடியும் பார்ப்பதை ஷம்ஷாத் கவனித்தாள். சற்று நேரத்திலேயே, மேம் சாஹப் அவளுடன் பேச விரும்புவதாக கிளப்பில் பணி புரியும் சிப்பந்தி ஒருவன் அவளிடம் வந்து கூறினான்.

ஷம்ஷாத் பேகம் அவர்கள் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்த மேஜையை நெருங்கினாள். அவளிடம் பேச விருப்பம் தெரிவித்த பெண்மணி சிரித்துவிட்டு அவளுடன் பம்பாயில் கூடவே தங்கி வீட்டில் கவனித்துக் கொள்வதற்கு ஒரு கௌரவமான நபரைத் தேடிக் கொண்டிருப்பதாக கூறினாள். வீட்டில் வேலைக்காரர்கள் பல பேர் இருப்பதாகவும் உண்மையில் செய்வதற்கு வேலை என்று எதுவும் இல்லை என்றும் கூறினாள். வயதான தாய் போன்று பாதுகாப்பு தரக்கூடிய ஒரு நபரை தேடிக் கொண்டிருப்பதாகவும் ஷம்ஷாதுக்கு எவரையேனும் தெரியுமா என்றும் கேட்டாள். 

ஒரு கதவை மூடினால் மறு கதவைத் திறக்கிற கடவுளுக்கு ஷம்ஷாத் பேகம் மனதுக்குள் நன்றி கூறினாள். தற்போது ஷம்ஷாத் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கூடிய விரைவிலேயே முடிந்துவிடும் என்றும் அவளுடைய எஜமானியிடம் அந்த பெண்மணி பேச முடியுமா என்றும் பணிவோடு கேட்டாள். 

திருமதி ரஷீத் அலி திரும்பி வந்தார். அந்தப் பெண்மணி தன்னை மும்பையில் இருந்து ரஸியா பானு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஷம்ஷாத் பேகத்தை பற்றி விசாரித்தாள். தான் அடுத்த நாள் காலை மும்பைக்கு விமானத்தில் செல்ல இருப்பதாகவும் ஷம்ஷாத் பேகத்துக்கு விருப்பமிருந்தால், தனக்கு வசதியான நாளில் ரயிலில் மும்பைக்கு வந்து சேரலாம் என்றும் கூறினாள். 

திருமதி ரஷீத் அலி பெரும் கவலை தீர்ந்தது போல உணர்ந்தாலும், அக்கறையுடன் ஷம்ஷாதிடம், “அத்தை உங்களால் தனியாக மும்பைக்கு பயணம் செய்ய முடியுமா?” என்று கேட்டாள்.

ஷம்ஷாத் பேகம் தலையசைத்தாள். எவருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை என்று நினைத்தாள். தன்னுடைய சம்பளம் என்னவென்று கூட அவள் பேசி முடிவெடுக்கவில்லை. தனக்கு 40 ரூபாய் சம்பளம் போதும் என்று முடிவு செய்தாள். பணம், உறவுகள், அன்பு, பாசம் எல்லாம் பொருள் அற்றவை என்றும் கையில் பிடிபடாத நிழல் போல ஓடிக்கொண்டே இருப்பவை என்றும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். அல்லாஹ்வின் பெயர் மட்டுமே எப்போதும் நிலைத்திருப்பது என்று நம்பினாள்.

தன் பெரிய பையில் இருந்து ரஸியா பானு, 150 ரூபாய் பணமும் தன் முகவரி எழுதிய அட்டையையும் கொடுத்தாள். பம்பாய் வருவதற்கு ஆனா ரயில் சத்தத்துக்கும் மற்ற செலவுகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவள் சாதாரணமாக் கூறினாள். திருமதி ரஷீத் அலிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஷம்ஷாத் பேகம் எந்த பாதிப்பும் இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். மும்பை பெரிய பெரிய பணக்காரர்களின் நகரம் என்று அவளுக்கு தெரிந்திருந்தது. வாழ்க்கை எந்த விதத்திலும் அவளை ஆச்சரியப்படுத்தவில்லை. 

ஆனால் மும்பையை அடைந்ததும் மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ஷம்ஷாத் பேகம் சற்றே குழப்பம் அடைந்தாள். ஜனத்திரளை பார்த்து அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. வெற்றிலை பாக்குப் பையன் இறுக்க பிடித்தபடி ஒரு டாக்ஸியில் ஏறினாள். 

வார்டன் ரோட்டில் புத்தம் புதிதாக பளபளத்துக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு வண்டி நின்றது. ஷம்ஷாத் பேகம் வண்டியிலிருந்து இறங்கினாள். பருமனான குர்கா காவல்காரன் முக்காலியின் மீது அமர்ந்து கொண்டிருந்தான். அவள் வராண்டாவில் நடந்து செல்கையில் தானியங்கியை பார்த்து பதட்டம் அடைந்தாள். அவள் காவல்காரனை தயக்கத்துடன்,” மகனே, இது எப்படி இயங்குகிறது?” என்று கேட்டாள். தானியங்கியை இயக்குகிற இளைஞன் அவளை பதினோராம் மாடிக்குக் கொண்டு சேர்த்தான். அவளுடைய சாமானை வீட்டு வாயில் வரை கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான். அவள் அழைப்பு மணியை அழுத்தினாள். ஒரு கண் உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. கதவு திறந்தது. இன்னொரு கூர்கா வெளியே வந்து அவளை சந்தேகத்துடன் பார்த்தான். ஷம்ஷாதுக்கு மறுபடியும் பதட்டமாக இருந்தது. தான் ஒரு தைரியமான பட்டான் குலத்தில் பிறந்தவள் என்று தனக்குத்தானே ஞாபகப்படுத்திக் கொண்டாள். மிகுந்த பெருமிதத்துடன், “தில்லியில் இருந்து ஷம்ஷாத் பேகம் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றாள். 

” தெரியும். உள்ளே வாருங்கள்” என்று அவன்சிடுசிடுத்தபடி பதில் அளித்தான். அவளுடைய சிறிய பெட்டியையும் படுக்கையையும் அவன் தூக்கி கொண்டான். அவள் தன்னுடைய வெற்றிலை பெட்டியையும் விசிறியையும் இறுகப் பிடித்தபடியே அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவர்கள் ஒரு பெரிய ஹாலைக் கடந்து சென்றார்கள். அதன் ஒரு மூலையில் மதுபானங்கள் நிறைந்த மர அலமாரி வைக்கப்பட்டிருந்தது. சுவர் மீது சிறிய சினிமாத் திரையும் இருந்தது. பிறகு அவர்கள் ஒரு வராந்தாவைத் தாண்டி நடந்தார்கள். அதன் இரு புறமும் மூடிய கதவுகள் இருந்தன. கூர்கா சாமான்கள் ஏதுமற்று காலியாக இருந்த வேலைக்காரர்களுக்கான அறையை அடைந்து அவளுடைய பெட்டியையும் படுக்கையையும் கீழே வைத்தான்.

பேகம் சாஹிபா வீட்டில் இருக்கிறார்களா என்று ஷம்ஷாத் பணிவுடன் கேட்டாள். 

“ஆமாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.”

“சாஹேப்?”

கூர்க்கா பதில் ஏதும் கூறாமல் திரும்பி நடந்தான்.

அறை காலியாகவும் புழுக்கமாகவும் இருந்தது. மெத்தை எதுவும் இல்லாத வெறும் மரக்கட்டில் ஒன்று இருந்தது. இதில் படுத்தால் கண்டிப்பாக முதுகு வலி தான் வரும் என்று நினைத்துக் கொண்டே அவள் ஒரு ஜன்னலைத் திறந்தாள். பச்சசையும் நீலமும் கலந்த நிறத்தில் விரிந்து கிடந்த கடல் அவளை வரவேற்றது. இதற்கு முன் அவள் கடலைப் பார்த்ததில்லை. கடல் அவளை பரவசத்தில் ஆழ்த்தியது. திடீரென மெக்காவும் மதீனாவும் பளபளக்கும் நீருக்கப்பால் எங்கோ இருக்கின்றன என்கிற எண்ணம் அவளுக்கு தோன்றியது. கடவுள் தன் அபார கருணையாலும் கிருபையாலும் அவளை அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு பம்பாய்க்கு அழைத்து வந்திருப்பதாக அவளுக்கு தோன்றியது. விரைவிலேயே ஹஜ் புனித யாத்திரையிலும் கடவுள் தன்னை அழைத்துச் செல்வான் என்றும் அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் அவள் கண்களைக் கண்ணீரால் நிரப்பியது. அவள் ஜன்னலிலிருந்து நகர்ந்தாள்.

அந்த வீடு அமானுஷ்யமான முறையில் அமைதியாக இருந்தது. ஒருவேளை சாஹிப் அலுவலகத்திற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றிருக்கலாம் என அவள் நினைத்தாள். மதிய உறக்கத்திற்கு பின் பேகம் எழுந்து விட்டார்களா என்று பார்க்கலாமென அவள் எழுந்தாள். வராண்டாவில் நடந்து பாதி திறந்திருந்த ஒரு அறையை நோக்கிச் சென்று கதவைத் தட்டினாள். 

“உள்ளே வரலாம்”

அவள் மிகவும் வசதியான குளிரூட்டப்பட்ட படுக்கை அறைக்குள் நுழைந்தாள். ரஸியா பானு மிகப்பெரிய கட்டிலில் படுத்து கொண்டிருந்தாள். அவள் மெல்லிய இரவு உடை அணிந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற தொலைபேசியும் தங்க நிற டைரியும் போர்வையின் மீது கிடந்தன. 

“வந்து விட்டீர்களா அத்தை? உட்காருங்கள்” என்று தரையை நோக்கி ஜாடை காட்டினாள்.

ஷம்ஷாத் பேகம் அதிர்ச்சி அடைந்தாள். அவளை இதுவரை யாரும் அவளை “அத்தை” என்று அழைத்ததில்லை. அவளைத் தரையில் உட்காரச் சொன்னதும் இல்லை. அவள் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு சோபா முனையில் உட்கார்ந்தாள். அவளுக்குத் தேநீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. தன்னுடைய புதிய எஜமானியின் உடலைக் காட்டும் ஆடையும், அவள் சிகரெட் பிடிப்பதும் ஷம்ஷாத் பேகத்திற்குப் பிடிக்கவில்லை. “ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருக்கும். பம்பாயில் இதுதான் பழக்கம் போலிருக்கிறது” என்று அவள் தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.

ரஸியா பானு அவளை ஆச்சரியத்துடன் பார்த்து, “நீங்கள் இங்கு வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அத்தை. உங்களைப் போன்ற வெள்ளந்தியான, கண்ணியமான, கடவுள் பக்தி நிறைந்த ஒருவரைத் தான் நான் பல நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு தெரியுமா – என்னால் மனிதர்களை மிகச் சரியாக எடை போட முடியும். நீங்கள் மிகவும் மரியாதைக்குரிய பெண்மணி என்று நான் உங்களைப் பார்த்த உடனேயே கணித்து விட்டேன். நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். நீங்கள் இங்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் அறையில் இருந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் போதும். என்னுடன் எப்போதும் ஒரு வயதான பெண்மணி இருந்து காலையில் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். ஹைதராபாத்தைச் சேர்ந்த கடவுள் பக்தி நிறைந்த வயதான பெண்மணி ஒருவர் என்னோடு இங்கு இருந்து வந்தார். ஆனால் பாவம் அவர் போன வருடம் இறந்து விட்டார். எங்கள் துணிமணிகளை பராமரிக்க கோவாவை சேர்ந்த இரண்டு ஆயாக்கள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் எப்போதாவது முகலாய உணவு வகைகளை சமைத்துக் கொள்ளலாம். நேர்த்தியாக உடை அணிந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி அறைக்குள் நுழைந்தாள். ரஸியா பானு அவளிடம் ஆங்கிலத்தில் எதையோ சொன்னாள். அவள் உரக்க சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

“உங்கள் மகளா? மிகவும் அழகாக இருக்கிறாள். உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று ஷம்ஷாத் பேகம் ஆர்வத்துடன் கேட்டாள்.

“இவள் என் அண்ணன் மகள், எனக்கு குழந்தைகள் இல்லை” என்று பதில் வந்தது. 

“உங்கள் கணவர்? அவர் வியாபாரம் செய்கிறாரா?” பம்பாயில் வசிப்பவர்கள் எல்லோரும் வியாபாரம் செய்பவர்கள் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். 

என் கணவர் இறந்து விட்டார் என்று ரஸியா பானு சுருக்கமாக பதில் அளித்தாள். ” நான் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா… யாருடைய வீண் பேச்சையும் கேட்காதீர்கள். வேலைக்காரர்களோடு அதிகம் பழக வேண்டாம். பம்பாய் மிகவும் மோசமான ஊர். இவர்கள் எல்லோருமே பொல்லாதவர்கள். இங்கு எல்லா விதமான நிகழ்வுகளும் நடைபெறும். எதைக் குறித்தும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. என் அண்ணன் மகள்கள் எல்லோருமே இக்காலத்து நவீன யுவதிகள். அவர்களுடைய நண்பர்கள் பலர் அவர்களை பார்க்க வருவார்கள். புரிகிறதா?”

ஷம்ஷாதுக்கு ஒன்றும் புரியவில்லை. திருமதி ஷஹாபுதீனின் குழந்தைகளுக்கும் பள்ளியில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஷம்ஷாதுக்கு உடனடியாக ஒரு கோப்பை தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

“நான் பெரிய வியாபாரம் செய்கிறேன், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம்” ரஸியா பானு தொடர்ந்தாள். “பலவிதமான நபர்கள் வியாபாரம் தொடர்பாக என்னை சந்திக்க வருவார்கள். வெற்றிகரமாக வியாபாரம் செய்வதால் எனக்கு பல விரோதிகளும் இருக்கிறார்கள். அதனால்தான் நான் வெளியே ஒரு இரும்பு கதவை பொருத்தி இருக்கிறேன். போலீஸ்காரர்கள் இரண்டு முறை எங்களை திடீர் சோதனை செய்ய வந்தார்கள்.”

“போலீசா?” ஷம்ஷாத் பேகம் பயத்துடன் கேட்டாள்.

ரஸியா பானு சிரித்தாள். “பயப்பட வேண்டாம். போலீஸ் எங்களைப் போன்ற பெரிய வியாபாரிகளை அடிக்கடி தொந்தரவு செய்வது வழக்கம். அதனால்தான் யாராவது வாயில் மணியை அழுத்தினால், ஜாக்கிரதையாக இருக்கவும்”.

ஷம்ஷாத் பேகத்துக்கு மறுபடியும் கொட்டாவி வந்தது. 

“நான் வேலைக்காரனிடம் உங்களுக்கு தேநீர் தயாரித்து தரச் சொல்கிறேன்”

நன்றி கூறிவிட்டு ஷம்ஷாத் பேகம் எழுந்து தன் அறைக்குத் திரும்பினாள்.

அவள் தன் மதிய மற்றும் மாலை பிரார்த்தனைகளை முடித்தாள். மிகவும் களைப்பாக இருந்தது. செய்ய ஒரு வேலையும் இல்லை. வீடு மறுபடியும் அமைதியில் ஆழ்ந்தது. வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு அவள் தன் அறையை விட்டு நகர்ந்தாள். எஜமானி கொடுத்திருந்த அறிவுரைகளை மறந்து வேகமாக வரவேற்பறைக்குச் சென்று விரைவாக கதவை திறந்தாள். இரண்டு ஆண்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் பட்டுக் குர்த்தாவும் வேட்டியும் அணிந்திருந்தார். அவருடைய விரல்களில் வைரங்கள் ஜொலித்தன. அவர் மிகவும் பருமனாக இருந்தார். இன்னொரு நபர் சினிமா நடிகரைப் போல ஆடை அணிந்திருந்தார். அவர் ஒல்லியாக இருந்தார். முகத்தில் எண்ணெய் வழிந்தது. இருவரும் சோபா மீது விழுந்து கால்களை நீட்டி கொண்டார்கள். 

“பாய், மேடம் எங்கே?” வியாபாரி போல தோற்றமளித்தவர் கேட்டார். 

ஷம்ஷாத் பேகம் பயத்தில் நடுங்கினாள். இது என்ன மாதிரியான பாஷை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே,” பேகம் தன்னுடைய அறையில் இருக்கக்கூடும் .நீங்கள் யார் என நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

“எங்கள் பெயர்கள் இருக்கட்டும். குட்டிகளை கூப்பிடுங்கள்”

“குட்டிகள் எங்கே?” எண்ணை வழியும் முகத்துடன் இருந்தவன் கேட்டான். “எங்களை இந்த நேரத்தில்தான் வரச் சொன்னார்கள்”

பம்பாயில் மிக மோசமாக உருது பேசுவார்கள் என்று ஷம்ஷாத் பேகம் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. வார்த்தைகளை கவனமாகப் பேசுங்கள் என்று ஷம்ஷாத் பேகம் அவர்களை அதட்டுவதற்குள் ரஸியா பானு வேகமாக ஓடி வந்தாள். ஷம்ஷாத் பேகத்தை பார்த்து “அத்தை, தயவு செய்து உங்கள் அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள். 

“சரி நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஷம்ஷாத் பேகம் தன் அறையை நோக்கி திரும்பி நடந்தாள். 

சரியான பைத்தியம் என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டே ரஸியா பானு தன் விருந்தினர்களுடன் பேச ஆரம்பித்தாள்.

தன் அறையில் ஷம்ஷாத் பேகம் பாயை விரித்து மறுபடியும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். இரு முறை மட்டுமே சிரிக்கும் கடவுளுக்கு அவள் நன்றி கூறி, தன்னுடைய எல்லையற்ற கிருபையாலும் கருணையாலும், அவளுக்கு மறுபடியும் ஒரு முறை கௌரவமான வீட்டில் நேர்மையுடன் வாழ வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி செலுத்த ஆரம்பித்தாள்.

குர்ரத்துலைன் ஹைதர் – ஜனவரி 1 927 ல் ஒன்றுபட்ட இந்தியாவின்  அலிகரில் (உத்திரப் பிரதேசம்) பிறந்த குர்ரத்துலைன்,  பிரசித்தி பெற்ற உருது குறுநாவல் மற்றும் சிறுகதை ஆசிரியர் ஆவார். இவர் கல்வித் துறையிலும் பத்திரிக்கைத் துறையிலும் தன் முத்திரையை பதித்தார். தன்னுடைய முதல் கதையை பதினோராவது வயதில் சிறுவர்களுக்கான பத்திரிகையில் எழுதினார். 19வது வயதில் தன்னுடைய முதல் நாவலை எழுதினார். இவர் தில்லியிலும் லக்னோவில் கல்வி பெற்றார். 1967ல் தன்னுடைய  உருது சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1989 இல் இவரது படைப்பான ஆக்ரி ஷப் கே  ஹம்சஃபர் நாவலுக்காக ஞானபீட விருதும் பெற்றார். உருது இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய தொண்டுகள் இந்திய அரசு,  இவருக்கு 1984இல் பத்மஸ்ரீ விருதையும் 2005 ல் பத்மபூஷன் விருதையும் வழங்கி கௌரவித்தது. 2007இல் தில்லியை அடுத்த நொய்டாவில் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த பின் காலமானார்.

***

அனுராதா கிருஷ்ணஸ்வாமி – கோவையைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய மொழிப் புனைவுகளை தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வருகிறார்.ஒரு துளி வெளியில், கடவுளுக்கென ஒரு மூலை ஆகிய இரு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. கீதாஞ்சலிஶ்ரீயின் புகழ்பெற்ற “மணல் சமாதி” எனும் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அதே நாவலுக்காக அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் அளிக்கும் விருதினை வென்றிருக்கிறார்.

நகரத்தாரின் கடல் கடந்த கதை

0

குயிலிமுனுசாமி

(வையாசி – 19 செட்டிநாட்டு வழக்காறுகளை ஆய்வு செய்வோருக்கு கிடைத்த பொக்கிஷம்)

வையாசி -19 என்ற இந்த நாவல் 1910 முதல் 1945 முடிய உள்ள 35 ஆண்டுகாலத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரிலும் மலேசியாவில் உள்ள பொந்தியான் பகுதியிலும் நிகழும் நிகழ்வுகளை மையமாக கொண்டு புனையப்பட்டுள்ளது.

 நாவலின் நாயகியான கோட்டையூர் அடைக்கப்பன் மகள் மீனாவுக்கு வயது 13. அவள் அதே ஊரைச் சோ்ந்த அண்ணாமலையை நான்காம் தாரமாக மணக்கிறார். அண்ணாமலைக்கு வயது 26 தான். ஆனால் பால்ய வயது திருமணங்கள் நடந்து வந்த அக்காலத்தில் அவரது முதல் மனைவி எட்டு வயதில் அம்மை நோயால் இறந்து விடுகிறார். இரண்டாவது மனைவி, இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டு இரண்டாவது பிரசவத்தில் உயிரிழக்கிறார். மூன்றாவது மனைவி அண்ணாமலையுடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து விடுகிறார். அதனால் அண்ணாமலைக்கு நான்காவதாக திருமணம் நடக்கிறது. 

மீனாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். ஐந்தாவது குழந்தை இரண்டு மாதக் கருவாக இருக்கும் போது அண்ணாமலை அரவம் தீண்டி இறக்கிறார். 32 வயதில் விதவையான மீனா, கணவன் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அவன் வணிகம் செய்த மலேசியாவிற்கு செல்கிறார். 

 மலேசியாவில் மீனாவின் சித்தப்பா ராமையாயவும் அவரது வளா்ப்பு மகன் ரூபி போன்றோர் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். மலேசியாவில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் மீனா அவற்றை தைர்யமாக நின்று தீர்க்கிறார். 1944-ம் ஆண்டு மலேசியா மீது ஜப்பான் குண்டு வீசி தாக்கி மலேசியாவை ஜப்பான் கைப்பற்றியதும் மலேசியாவில் நிலைமை மாறுகிறது. இனி மலேசியாவில் இருக்க சாத்தியமில்லை என்று மீனா தனது சொந்த ஊரான கோட்டையூர் திரும்புகிறார். அத்துடன் 628 பக்கங்களை கொண்ட இந்த நாவல் முடிகிறது

 நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ் என்பது போல செட்டி நாட்டுப் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இன்றும் வழக்கத்தில் உள்ள பேச்சு மொழியில்தான் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டுள்ளது

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் மலேசியா, தென்னாப்பிரிக்கா. இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு தோட்டங்களில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.

 அது போல் வட்டித் தொழில் செய்ய தமிழகத்திலிருந்து கடல் கடந்து சென்றவர்களில் நாட்டுக் கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் மலேசியா, பர்மா சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வட்டித் தொழி்ல் செய்ய புலம் பெயர்ந்தார்கள். பின்னர் அங்கு ரப்பர் தோட்டங்கள், விவசாய நிலங்களை போன்றவற்றை வாங்கி பிற வணிகங்களிலும் இறங்கி பொருள் ஈட்டினர்.

நாவலில் குறிப்பிடப்படும் பொந்தியான் மலேசியாவின் தலைநகர் பினாங்கிலிருந்து 360 மைல் தொலைவில் ஊராகும். கதையின் நாயகி மீனாவின் தந்தை அடைக்கப்பனும், மீனாவின் கணவன் அண்ணாமலையும் அங்கு ரப்பர் தோட்டம், வட்டி வணிகம். விவசாயம் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இதனால். மாமனாரும் மாப்பிள்ளையும் மீனாவின் திருமணத்திற்கு முன்பே மலேசியாவில் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். அண்ணாமலையின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்ட அடைக்கப்பன் தன் மகளை அண்ணாமலைக்கு நான்காம் தாரமாக கொடுக்க சம்மதிக்கிறார். மீனாவின் பூரண சம்மதத்துடன் திருமணம் கோட்டையூரில் 1913ம் வருடம் வைகாசி மாதம் 19ம் தேதி நடக்கிறது. வையாசி -19 என்பது கதையின் நாயகி மீனாவின் திருமண நாள். அதுவே நாவலின் தலைப்பு.

 ஒருவருக்கு நாலாந்தரமாக திருமணம் செய்தால் அந்த திருமண வாழ்வும் நிலைக்காது என்பதால் ஜோசியரின் யோசனைப்படி மாப்பிள்ளை வீட்டில் ஒரு வாழை மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி பின்னர் அதனை வேலையாளை விட்டு வெட்டிச் சாய்த்த பிறகு அண்ணாமலை மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி ஒரு சடங்கு அக்காலத்தில் இருந்துள்ளது. இப்போதும் சில பகுதிகளில் இரண்டாம்தாரமாக செய்யப்படும் இடங்களில் இந்த வாழைமரச் சடங்கு உள்ளது

 இந்நாவலில், மீனாவின் மங்கல நீராட்டு விழாவில் தொடங்கி அவளின் திருமணச் சடங்குகள், குழந்தைப் பேறு, கணவன் இறந்த பிறகு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் என ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு காணொளி போல நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இதல்லாமல் பல்வேறு தகவல்களைத் தரும் தகவல் களஞ்சியமாகவும் இந்நாவல் உள்ளது

அவ்வை நோன்பு நகரத்தார் பெண்கள் ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒரு நோன்பு கொண்டாடுவார்கள். அதற்கு “ஒரு சந்தி” என்று பெயர். இதற்கு ஒரு கதை இந்நாவலில் கூறப்படுகிறது 

 ஒரு வீட்டுக்கு பிச்சைக் கேட்டு வந்த அவ்வையாருக்கு கொடுக்க ஏதுமில்லாததால் வீட்டிலிருந்த பெண் தயங்கி நிற்க, அதைக்கண்ட அவ்வையார், அந்தப் பெண்ணிடம், “தப்பினது தை, மறந்தது மாசி, அசந்தது ஆடி மூணு மாசமும் அள்ளு படி எடுத்து முள்ளு புடி எடுத்து முஞ்சாங்கெடுத்து பிஞ்சரங்கொடுத்து ஏறு பொழுதில குத்தி இறங்கு பொழுதில காயப்போட்டு ஊரு உறங்கி ஒரு சாமஞ்சென்டு என்னய நினைச்சு கும்பிடு அமோகமா இருப்பே” என்றாராம். இப்படி அவ்வை நோன்பிற்கான கதையை விவரிக்கிறது நாவல். 

 இது போல் பல வழக்காற்று கதைகள், செட்டி நாட்டுப் பகுதியில் வழங்கப்படும் தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த போது புழக்கத்தில் இருந்த காசுக் கணக்குகள், நடப்பில் இருந்த நிறுத்தல் அளவை கணக்குகள் என வட்டார வழக்காறுகளை ஆய்வு செய்வோருக்கு வேண்டிய ஏராளமான தரவுகள் நாவலில் உள்ளன 

 அரண்மனை போன்ற வீடுகள் கட்டப்பட்ட விதம் இன்றைக்கு பல திரைப்படங்களிலும் தொடர் நாடகங்களிலும் இடம் பெறும் காரைக்குடி பகுதியில் உள்ள நகரத்தாரின் அரண்மனை போன்ற வீடுகள் எப்படிக் கட்டப்பட்டன என்ற தகவலையும் இந்நாவல் நமக்கு கூறுகிறது. குறிப்பாக இவ்வீடுகளின் சுவர்கள் பளபளப்பான பூச்சுகளுடன் காணப்படும். இந்த பூச்சை எப்படி செய்வது? நூலாசிரியர் விவரிக்கிறார் 

 “நல்ல சுண்ணாம்புக் கட்டி வாங்கியாந்து, கடுக்கா தண்ணி ஊத்தி, முட்டையோட வெள்ளக் கருவ மஞ்சத்தாது கலக்காம, அடிச்சுக் கலக்கி சேத்து கருப்பஞ்சாறு கலந்து செக்குல போட்டு, மாட்ட பூட்டி ஓட்டுனா சும்மா வெண்ணயா தெரண்டு வரும் கலவையை கொத்துக் கரண்டி வச்சு பூசுனா செவரு சும்மா வெள்ளக்காரக மார்பில் கல்லு போல வழுக்கும்

  இப்படி கட்டிய வீடுகள்தான் நுாற்றாண்டு கடந்தும் இன்றைக்கும் கம்பீரமான நிற்கின்றன. 

 குழந்தை திருமணங்கள் நகரத்தார் சமுதாயத்தில் அக்காலத்தில் பால்ய திருமணங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. அதிலும் பெண்கள் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்து விடுவதே சிறந்தது என்றும் வயதுக்கு வந்த பிறகு திருமணம் என்பது சிரமம் என்ற நிலை காணப்பட்டுள்ளது 

 நாவலில் இரண்டு பகுதிகள் அடு்த்தடுத்து கையாளப்படுகின்றன. ஒன்று கோட்டையூரில் நடக்கும் நிகழ்வுகள். இன்னொன்று மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகள். இதில் கோட்டையூரில் நடக்கும் நிகழ்வுகள் வழக்காற்று கதைகள், சடங்குகள், கோயில் விழாக்கள். சந்திப்புகள் என போகிறது. இவற்றுள் பெரும்பகுதி சாதாரண சந்திப்பு உரையாடல்களாக இருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகள் விறுவிறுப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன 

 கப்பல் பிரயாணம் நாகப்பட்டிணத்திலிருந்து பினாங்கிற்கு அந்தக் காலத்தில் ஐந்து நாள் கப்பல் பிரயாணம் இருந்திருக்கிறது. கப்பல் பிரயாணத்தின் போது கப்பலில் கொடுக்கப்படும் உணவுகள் ஒத்துக் கொள்ளாததால் வேங்கரிசி மாவு, தேன்குழல் அதிரசம் போன்ற எளிதில் கெடாத பதார்த்தங்களை கட்டுச் சோறு போல் எடுத்துச் சென்று கப்பல் பிரயாணத்தின் போது சாப்பிட்டுள்ளனர் என்பதையும் இந்நாவல் விவரிக்கிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிறந்த கதை இன்றைக்கு ஆயிரக்கணக்கான கிளைகளுடன் உலகம் முழுவதும் பரவி உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிறந்த வரலாறும் இந்நாவலில் உண்டு. உலகின் பல நாடுகளில் வணிகம் செய்த நகரத்தார்கள் தங்கள் சம்பாத்யத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் வழி தெரியாமல் அங்கேயே ரப்பர் தோட்டங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வந்துள்ளனர். இவற்றில் கிடைக்கும் வருமானத்தை ஊருக்கு வருபவர்களிடம் காசுப்பை எனப்படும் பணப்பையில் கொடுத்து வரும் வழக்கம் இருந்துள்ளது. 

இந்தக் காசுப்பையில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வங்கி பரிமாற்றத்தை ஏற்படுத்துவது என்று முடிவு செய்து எம்.சிடி.எம் சிதம்பரம் செட்டியார் என்பவரின் முன்னெடுப்பால் 1937ம் ஆண்டு ரங்கூன், பினாங்க், சிங்கப்பூர், சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் IOB திறக்கப்பட்டு்ள்ளது. இந்தக் கிளைகளில் போடப்படும் பணம் காரைக்குடிக்கு வந்து சேர நான்கு வாரங்களாகியுள்ளது என்ற செய்தியையும் இந்நாவல் தெரிவிக்கிறது.

மலேயா மனைவிகள்  கடல்கடந்து மலேசியாவுக்கு வணிகம் செய்யப் போன சில செட்டியார்கள் சொந்த ஊரில் மனைவியுடன் பிணக்கு ஏற்பட்டால் மலேயாவிலேயே சீனப் பெண்களையாவது மலாயா பெண்களையாவது சேர்த்து வைத்துக்கொண்டு செட்டில் ஆகி விடுவதுண்டு ஆனால் சொந்த ஊரிலிருக்கும் கட்டிய மனைவியைக் கைவிடாமல் காசுப்பையை மட்டும் கடமை தவறாமல் கொடுத்து விடும் நிகழ்வுகளும் நாவலில் சுட்டிக்காட்டப்டுகிறது செட்டியார்கள் மட்டுமன்றி தோட்ட வேலைக்கு போகும் ஆட்களும் கூட இது போல் அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு செட்டில் ஆவதுண்டு. 

இப்படி புருவாஸ் என்ற இடத்தில் தோட்ட வேலைக்கு போன புதுக்கோட்டையை சோ்ந்த ராஜேந்திரன், சீனப் பெண் கிம்மை சோ்த்துக்கொண்டு பாண்டியன், லீ என்ற இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிறகு கிம்மை விட்டு விட்டு தாய் நாட்டுக்கு வந்து விடுகிறார். கிம்மின் முதல் கணவன் மூலம் பிறநத ரூபி, வீட்டை விட்டு வெளியேறி பொந்தியானில் மீனாவின் சித்தபபா ராமையாவை சென்றடைகிறான். கோட்டையூரில் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த ஊருக்கே போகாமல் இருக்கும் ராமையா, வழி தவறி வந்த ரூபியை எடுத்து தன் மகனைப் போல வளா்த்து வருகிறார்.

 புருவாஸில் தோட்ட வேலை பார்ப்பவர்களை வெள்ளைக்காரர்கள் பாலம் கட்டவும் ரோடு போடவும் பிடித்துக் கொண்டு போகிறார்கள் என்பதால் பயந்து போன தோட்டத் தொழிலாளர்கள் புருவாஸை விட்டு குடும்பம் குடும்பமாக தப்பி ஓடுகின்றனர். அவா்களுடன் கிம்மும் தனது இரண்டு மகன்களுடன் தப்பிக்கிறாள். ஆனால் வழியில் மூவரும் பிரிந்து விடுகின்றனர். இதில் கிம், தனது மூத்த மகன் ரூபி வசிக்கும் பொந்தியான் பகுதியில் மயங்கி விழுகிறாள். அவளை கண்டெடுக்கும் மகன் ரூபி தனது அம்மாவை ராமையாவின் அனுமதியுடன் தன்னுடன் வைத்துக் கொள்கிறான். தாயை பிரிந்த பாண்டியன், லீ ஆகிய இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியாமலேயே நாவல் முடிகிறது 

மலேசியாவிற்கு வந்த மீனாள் இங்கு தன் கணவன் வாங்கிய சொத்தை சேது என்ற அவளது உறவினர் ஒருவர் மோசடியாக விற்றுள்ளதை அறிந்து நீதி மன்றம் போகிறாள். இது தொடர்பாக சேது மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறாள். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸை சந்தித்து பேசும் போது நீங்கள் என் மகன் மாதிரி. தயவு செய்து உதவுங்கள் என்று கேட்கிறாள். இதைக் கேட்ட தாயை இழந்த வில்லியம்ஸ் தன் வயதை ஒத்த பெண் தன்னை மகன் என்கிறாளே என்று உருகி மீனாவை தன் தாயாகவே எண்ணி உதவிகள் செய்கிறார். ஒரு விபத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸை மீனாவின் குடும்பமே கவனித்து குணமடைய வைக்கிறது. இதனால் வில்லியம்ஸ் மீனாவின் குடும்ப நண்பராகிறார். மீனா நீதிமன்றத்தில் நேரடியாக தனது தரப்பினை எடுத்துச் சொல்லி வழக்கில் வெற்றி பெறுகிறார். இருந்தாலும் மீனாவின் இடத்தை வாங்கிய அஜ்மல் குடும்பத்தினருக்கு கோர்ட் சொல்லாமலேயே மீனா இடத்தை வாங்கிய விலையை விட கூடுதலாக கொடுத்து உதவி செய்கிறார். இதனால் அஜ்மல் குடும்பம் மீனாவுடன் நட்புறவாகி விடுகிறது. இப்படி விறுவிறுப்பான சம்பவங்கள் நாவலில் அழகாக சித்தரிக்கப்பட்டு்ள்ளன

மலேசியாவின் தலைநகரான பினாங்கு துறைமுகம்தான் கப்பல் ஏறவும் இறங்கவும் உள்ள இடமாக இருந்துள்ளது. இதனால் நகரத்தார்கள் அந்தக் காலத்திலேயே பினாங்கில் நகரத்தார் விடுதி ஒன்றையும் கட்டியுள்ளனர் என்பதையும் இந்நாவலிலிருந்து அறியமுடிகிறது

 நகரத்தார் ஆண்கள் ஊரில் தங்கள் உறவுகளை பிரிந்து கடல் கடந்து போய் வருடக் கணக்கில் அங்கேயே இருந்து பொருள் ஈட்டி திரும்பும் நிகழ்வை குறிப்பிடும் இடத்தில் ஆசிரியர், இளமையும் ஆண்மையும் கட்டப்பட்டு. பெண்மையச் சுருக்கி அரண்மனை போல கட்டுன வீடுக. அந்தக் கண்ணீர் எப்பவும் பேசும் வறண்டு போன கண்ணால என்கிறார். 

 ஆனால் இன்றைக்குமே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சொந்த ஊரில் வீடுகளை கட்டியவர்கள் அதில் இருந்து அனுபவிக்க முடியாமல் ஓராண்டு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறைதான் ஒரு மாத விடுப்பில் ஊர் திரும்பி பின்னர் பயணிக்கிறார்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் நகரத்தார்கள் கடல் கடந்து போன காலத்தில் இப்போதுள்ளது போல் தகவல் தொடர்புகள் இல்லை. அதனால் பிரிவாற்றாமை அதிகமாகத்தான் இருந்திருக்கும் என்பது உண்மையே.

இந்த நாவலின் நாயகியாக மீனா இருந்தாலும் அடுத்தடுத்த அத்தியாயங்கள் நகரும் போது மலேயாவில் உள்ள மீனாவின் சித்தப்பா ராமையா, சீனப் பெண் கிம்மின் மகன் ரூபி. மலேசியா போலீஸ் அதிகாரி வில்லியம்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் படிப்பவர்களின் மனதில் முக்கிய இடத்தை பெற்றுவிடுகின்றனர். 

மீனா மலாயாவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு மலேயாவில் உள்ள ராமையா செட்டியார், ரூபி, வில்லியம்ஸ், ஆகியோர் அதற்கப்புறம் என்னவானார்கள் என்ற கவலையும் ஆவலும் படிப்பவர்களுக்கு ஏற்படுகிறது என்பதே, அவர்களின் பாத்திரங்கள் எந்த அளவுக்கு வாசகர்களின் மனதில் ஊடுருவிவிடுகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. இப்படி முக்கிய கேரக்டர்கள் நாவலில் காணாமல் போனதை வைத்து பார்க்கும் போது இந்த நாவலில் இரண்டாம் பாகம் எழுதும் போது அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆசிரியர் நினைத்திருப்பாரோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது

 இந்த நாவலில் கோட்டையூர் மற்றும் மலேயாவில் உள்ள பொந்தியான் நகரமும் முக்கியமாக இடம் பெற்றாலும் அந்த ஊர்களின் அமைப்பு கலாசாரம் ஆகியவற்றை நாவலாசிரியர் முன்னிறுத்த்த தவறி விட்டார். உதாரணமாக அரண்மனை போன்ற வீடுகள் எழும்புவதற்கு முன் கோட்டையூர் எப்படி இருந்தது, இன்ஜினியர் இ்ல்லாத காலத்தில் இப்படி ஒரு அருமையான கட்டடிடக் கலையை கொண்டு வருவதற்கு அடிப்படையான அறிவு எங்கிருந்து கிடைத்தது ?, மலேசியாவிற்கு வட்டித் தொழில் செய்யச் சென்றவர்கள் தங்களது தொழில் சம்பந்தமாக எதிர்கொண்ட பிரச்னைகள் போன்றவற்றை இந்நாவலாசிரியா் ஏனோ கூறத்தவறி விட்டார். கதாபாத்திரங்களின் உரையாடல்களே நாவலை வெகுவாக ஆக்ரமி்த்திருக்கின்றன. இந்த உரையாடல்கள் படிப்பதற்கு பலநேரங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறன்றன. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்திருந்தால் நாவலில் வாசிப்பின் வேகம் கூடியிருக்கும்..

நாவலாசிரியர் இன்பா சுப்பிரமணியன் தனது முன்னுரையில், “அதிகம் வாசித்தோ எழுதிடாத நான்“ என்று தன்னடக்கத்துடன் இந்த நாவல் எழுத முற்பட்ட நிகழ்வை கூறுகிறார்.

கற்பனைக் கதைகளை எழுதுவதை விட வரலாற்று நிகழ்வுகளை, தகவல்களைத் திரட்டி தடம் மாறாமல் இணைத்து எழுதுவது கடினமான காரியம்தான். அந்தக் கடினமான காரியத்தில் இன்பா சுப்பிரமணியன் வெற்றி கண்டிருக்கிறார். 

வட்டார வழக்காறுகளையும் வட்டார மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி எழுதப்பட்ட இந்த நாவல் மிகப் பெரிய பொக்கிஷம்.

***

குயிலிமுனுசாமி – இயற்பெயர் முனுசாமி. தினமலரில் பத்திரிகையாளராக திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, மதுரை, கோயமுத்துார் ஆகிய நகரங்களில் பணியாற்றியவர். கலைஞர், எம்.ஜி.ஆா் போன்றோருடன் பலமுறை நேர்காணல் செய்துள்ளார். கதை, கவிதை, அரசியல், ஆன்மீகம், விவசாயம், வரலாற்று நிகழ்வுகள் என பல தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்படாதவை இந்த நாற்பதாண்டுகளில் தினமலரில் வெளிவந்துள்ளன. “இந்து தமிழ் திசை“யில் வணிகம் சம்பந்தமான கட்டுரைகள். “இந்திய தென்னை இதழு“க்கு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் மூன்றாண்டுகள். கூட்டுறவுத்துறையில் துறையலுவலாராகப் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது புதுக்கோட்டையில் வசிக்கிறார். தொடர்புக்கு kuyeli@ymail.com

உலகப்புகழ்பெற்ற மேஜிக்

0

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

நிஷாராதா ஈத்தாமொழி சந்திப்பில் வந்து கல்லூரிக்கு பேருந்து ஏற நின்றுகொண்டிருந்த பொழுது கணபதிபுரத்திலிருந்து வந்த 38B சரியாக அவள் முன்னால் வந்து நின்றது.

அவள் படிக்கட்டில் கால்வைத்து ஏறவும் பின்னிருந்து தாழ்ந்த குரலில் “சாயுங்காலம் நாலு மணிக்கு கீழ ரோட்டுல அந்த முக்குல நிப்பேன், இந்த மஞ்சக் கலர் சுடிதார் அடிபொழியாட்டு இருக்குவு என” என்று சொல்லிச் சென்றான் ரெஜின்.

அவள் திரும்பிப் பார்க்காமல் சிரித்தபடியே பேருந்தில் ஏறி தள்ளி நின்ற அவனை ஒருநொடிப் பார்த்துவிட்டு கண்களை விலக்கிக்கொண்டாள்.ரெஜின் வேகமாக நடந்து வண்டாவிளை செல்லும் சாலையில் மறைவதைப் பார்த்தபடியே பேருந்தின் முன் வாசலை ஒட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.பேருந்து கல்லூரியை அடையும்வரை அவன் கல்லூரியின் கீழச்சாலை முக்கில் நின்றுகொண்டிருப்பதை விதவிதமாக அவளின் மனம் நினைத்துக்கொண்டது. அங்கே பேருந்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிறு நிகழ்வுகளில் வலுக்கட்டாயமாகத் தன்னைப் பொருத்திக்கொள்ள முயன்றாள் என்றாலும், அவன் உருவம் ஒரு பச்சை நிற சட்டை அணிந்தவாறு அந்த முக்கில் நிற்பதே மீண்டும் மீண்டும் மனதில் வந்துகொண்டிருந்தது.

கல்லூரியில் இறங்கியதும் எதிரே பள்ளத்தில் செல்லும் கீழரோட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டபொழுது, தான் தேவையில்லாமல் சிரித்துக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றவே தன் உதடுகளை கையைக்கொண்டு ஒரு முறை அழுத்தி சரிசெய்துகொண்டாள்.

அவள் வகுப்பில் அன்று வழக்கத்தைவிட சற்றே உற்சாகம் பெருகிக்கொண்டிருப்பதைப் அப்பொழுதுதான் கவனித்தாள்.

சற்றுமுன்பு வந்து அவள் அருகே அமர்ந்திருந்த அவள் தோழி சஜினியிடம் “ஏளா, ஏம்ட்டி எல்லாம் கெடந்து கலைவு இண்ணைக்கு” எனக்கேட்டாள்.

“அது ஒண்ணுமில்ல மக்கா, இண்ணைக்கு மத்தியானத்துக்கு பொறவு மேஜிக் ஷோ இருக்குவுல்லா அதான் எல்லானுவளும் கலஞ்சிட்டு கெடக்கானுவ”.

“ஓ, இப்பமே மேஜிக் மூடுக்கு பேயிற்றானுவளோ”.

“ஆமா, இண்ணைக்கு மொத்தம் ரெண்டு பீரியட்தான, அயுக்கம்பொறவு சும்மா கொஞ்ச நேரம் கெறங்கிட்டு அந்தால இரண்டு மணிக்கு பேய் ஆடிற்றோரியத்துல பட்டறைய போட்டுறவேண்டியதுதான்”.

அவள் திரும்பி ஆண்கள் பகுதியைப் பார்த்தாள். பத்துபேர் சுத்தியிருக்க நடுவில் ஒருவன் தனது கைக்குட்டையைக் கொண்டு தன் கைகளை மூடியவாறு ஏதோ செய்துகொண்டிருந்தான். அவன் அதைத்திறந்து உள்ளே ஒன்றுமே இல்லையென்று கைகளை விரித்துக் காட்டினான்.

“வித்த தெரியணும் கேட்டியா” என்றான்.

அருகேயிருந்த ஒருவன் “லே, என்னல வித்த, நீ மூடும்போதும் ஒண்ணுமில்ல, தொறக்கும் போதும் ஒண்ணமில்ல, இதுக்க பேருதான் வித்தையா” என்றவாறு அவன் கைகளில் குத்தினான்.

அன்று இரண்டாம் பாடவேளை முடிந்தவுடன் எல்லாரும் வகுப்பறையிலிருந்து வெளியேறிவிட நிஷாராதாவும் அவள் தோழிகளும் வகுப்பறையிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவளுக்கு காலையில் ரெஜின் தன் காதருகே வந்து சொன்னது மீண்டும் மீண்டும் ஒலித்தது போலிருந்தது. தன்னையறியாமல் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். சஜினி “அங்க எவம்ட்டி இருக்காம்ணி திரும்பி பாத்துட்டு கெடக்கா” என்றதும் சற்றே கூச்சத்துடன் அவளை அடித்தவாறு சிரித்துக்கொண்டாள்.

“ரெஜின் இண்ணைக்கு வாறேணி சொன்னான் பாத்துக்க” என்றாள்.

“ஓ, அதான் பிள்ளை காலையில இருந்து ஒரே கொணட்டாட்டு இருக்குவோ”.

“போட்டி அந்தால”.

“வந்தாம்ணா ஒழுங்கா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரச்சொல்லு, இல்லணா ஒங்க விசியத்தை ஒனக்க அப்பாய்ட்ட சொல்லி குடுத்திருவேன் பாத்துக்க”.

“சரிட்டி சொல்லுகேன்”.

“கழிஞ்ச தடவை வந்தால இப்படிதான் சொன்னா, கடைசில ஆளக்காணல, போட்டோல ஆளு கொள்ளாம், அதான் நான் நேர்ல பாக்கலாம்ணி வந்தா எஸ் ஆயிற்றான், இந்த தடவை தப்பமுடியாது பாத்துக்க”. 

“சரிட்டி இண்ணைக்கு சாயுங்காலம் நம்ம பாக்கலாம்”.

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்துவிட்டது. மொத்தம் நாற்பது வரிசை இருக்கைகளிருந்த அரங்கத்தில் நிஷாராதாவும் சஜினியும் சென்று மேடையிலிருந்து இருபதாவது வரிசையில் அமர்ந்துகொண்டார்கள். இரண்டரை மணிக்கெல்லாம் மேஜிசியன் முழுவதும் கருப்பு நிறமான உடையில் கழுத்தில் ஒரு அடர் சிகப்பு நிறத்துணியைச் சுற்றிவிட்டபடி மேடைக்கு வந்துவிட்டார். தன்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை மேடையின் நுனியில் நின்று பார்வையாளர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்க அவரின் உதவியாளர் பெண்மணி பின்னால் மேடையில் பொருட்களை அடுக்கினார். “இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மேஜிக் ஷோ தொடங்குகிறது” என்ற அறிவிப்போடு ஒரு சிறிய அட்டைப்பெட்டியைப் பார்வையாளர்களை நோக்கிக் காட்டி அதில் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார். பார்வையாளர்களில் சில மாணவ மாணவிகள் “இல்லை இல்லை” என்று கத்தினர். பின் அவர் அட்டைப் பெட்டியை அவர் முன்னிருந்த மேஜையில் வைத்து ஒரு கருப்புத்துணியால் மூடினார். எலும்புகளே இல்லாதது போன்று தோன்றிய அவர் கைவிரல்களை அந்தக் கருப்புத் துணியின் மேலே வருடினார். சட்டென கருப்புத்துணியை இரு விரல்கள் கொண்டு தூக்கி உதறி பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு கீழே போட்டபின் அட்டைப்பெட்டியைத் தூக்கி தன் வலதுகையை அதனுள்ளே விட்டு புறா ஒன்றை எடுத்துக் காட்டினார். ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டியது. சஜினி தன்னை மறந்து கைதட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏளா, போதும்ட்டி” என்றாள் நிஷாராதா.

ஒன்றரை மணி நேரமாக அவர் விதவிதமான மாயங்களை மேடையில் நிகழ்த்தினார். கடைசியாக “இதோ இங்கே இப்பொழுது உங்கள் முன்னே உலகப்புகழ் பெற்ற மேஜிக்கை நிகழ்த்தப்போகிறேன், அமெரிக்கா முதல் ஜப்பான் வரை ஆர்ட்டிக் முதல் அன்டார்டிக் வரை உலகம் முழுவதும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட புகழ்பெற்ற மேஜிக் இந்தியாவில், தமிழ்நாட்டில், நாகர்கோவிலில் உங்களுக்காக” என்றவாறு ஒரு நூறு ருபாய் தாளை எடுத்தார். அதை சுருட்டியும் விரித்தும் பார்வையாளர்களிடம் காண்பித்தார்.

பின், முதல் வரிசையை நோக்கி “பச்சைக் கட்டம் போட்ட சட்டைப் போட்டத் தம்பி மேடைக்கு வரமுடியுமா” என்று கேட்டார். அந்த இளநிலை மாணவன் அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாகிவிட்டதனால் வந்த பெருமையினால் தன் முகத்தில் பொங்கும் சிரிப்போடு மேடையில் ஏறினான். அவர் அவனிடம் அந்த நூறு ருபாய் தாளைக் கொடுத்து அதை நன்றாகப் பார்த்துவிட்டு தருமாறு கேட்டார். அவன் பார்த்துவிட்டுக் கொடுத்தப்பின்பு அதைக் கையில் பிடித்தவாறு அவனிடம் ஒரு பேனாவைக் கொடுத்து அந்தத் தாளிலிருந்த எண்ணை அவன் கைகளில் குறித்துக்கொள்ளச் சொன்னார். அதை எழுதியெடுத்தப்பின்பு அவனை இருக்கைக்கு அனுப்பிவிட்டு அந்தத்தாளை தன் இடது கையில் வைத்து கருப்புத்துணிகொண்டு மூடினார்.பின் தன் எலும்பில்லாத விரல்களைக்கொண்டு அந்தத்துணியை வருடினார். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக்” என்றவாறு துணியை எடுத்தார். அவர் கைகளிலிருந்த நூறு ருபாய் தாள் மறைந்திருந்தது. அங்கே நிறைந்திருந்த அரங்கில் முழு அமைதி நிலவியது. அவர் தன் எலும்பற்ற விரல்களை ஒன்றுமில்லை என்பதுபோல் கூட்டத்தின் முன் விரித்துக்காட்டி, பின் கூட்டத்தை நோக்கி கை நீட்டி சரியாக இருபதாவது வரிசையைில் கொண்டு வந்து தன் கைகளை நிறுத்தி “அந்த மஞ்சச் சுடிதார் போட்ட பிள்ளை எழும்பமுடியுமா” என்று கேட்டார். குழப்பத்தில் பின்னால் திரும்பிப்பார்த்த நிஷாராதாவை கையைப்பிடித்து “ஏளா எழும்புளா” என்று தூக்கிவிட்டாள் சஜினி. 

“உங்கள் பெயர் என்ன ?” என்றார்.

“நிஷாராதா”.

நிஷாராதாவை நோக்கி அவர் தன் விரல்ளை சுழற்றியபின் “நிஷாராதா உங்கள் பையைத்திறந்து பார்க்கமுடியுமா” என்றார். அவள் அதிர்ச்சியும் குழப்பமும் நிறைந்தவளாகத் திரும்பி சஜினியைப் பார்த்தாள்.

“என்ன யாம்ளா பாக்கா, பேக்க தொறந்து பாரு”.

அவள் குழம்பிய முகத்தோடு பையைத்திறந்து துளாவினாள்.இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருந்தன. 

“நல்லா தேடுட்டி” என்ற சஜினியை முறைத்துவிட்டு மீண்டும் கைவிட்டு தேடியவளின் கைகளில் சுருட்டிவைக்கப்பட்ட நூறு ருபாய் தாள் அகப்பட்டது. அவள் கைகளிலிருந்து அதைப்பறித்த சஜினி துள்ளியவாறு அதை விரித்துக் கூட்டத்தினிரிடம் காட்டினாள். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக் உங்கள் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றவாறு முதலில் வந்த மாணவனை அழைத்து ஒலிவாங்கியில் அவன் கைகளில் குறித்திருந்த எண்ணைப் படிக்கச்சொன்னார். அவன் ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல சஜினி அது சரிதான் என்று கூட்டத்தினருக்குத் தெரிவிக்கும் பொருட்டு தன் மடக்கியக் கையை வானத்தை நோக்கிக்குத்தினாள். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக்” என்றவாறு அவர் பார்வையாளர்கள் முன் பணிந்தார். அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

கூட்டம் கலைந்து வெளியேறிக்கொண்டிருக்க சஜினி நிஷாராதாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள். 

“ஏட்டி ஒனக்க பைக்க எப்படியாங்கம் அந்த ருவா வந்து”.

“அதாம்ளா எனக்கம் தெரியமாட்டேங்குவு”.

“ஒரு வேளை நேரத்தே வந்து வச்சிட்டு பேயிருப்பாரோ”.

“அது எப்படிட்டி எனக்க பைல வைக்க முடியும்”.

“அப்பம் நீ காலேஜிக்கி வாறக்கு முன்னுக்கே அவருட்ட வாங்கி வச்சிருப்பா”.

“ஆமா அவரு எங்க மாமா தான நான் வாங்கி வைக்கியதுக்கு”.

“அப்பம் எப்படிட்டி வந்து”.

“எனக்கெப்படிட்டி தெரியும்”.

“ஒரு வேள இந்த பயக்க யாரம் வச்சிருப்பானுவளோ”.

“நான் வரும்போது கிளாஸ்ல எல்லானுவளும் இருந்தானுவ, நான் பைய கிளாஸ்ல வச்சிட்டு எங்கையும் போவலல்லா, பொறவு எப்படியாங்கம் அவனுவ வைப்பானுவ”.

“ஏட்டி நீ கள்ளப்பொய் சொல்லாத என, ஒனக்கு தெரியாம எப்படிட்டி ருவா பைக்க வரம்”.

“நம்புளா, சத்தியாமாட்டு எனக்கு தெரியாது”.

“அந்தாளுக்க வீடு எங்க”.

“யான், அவரு சொன்னாருல்லா, மேக்க காப்பிகாடு பக்கம்ணி, யான் என்னத்துக்கு கேக்கா”.

“இல்ல அவருக்கு ஈத்தாமொழி பக்கம் எங்கயும் ஊராணி தெரிஞ்சிகிடுயதுக்குத்தான்”.

“லேட்டி, அப்பம் நீ என்ன நம்பமாட்டங்கா என”.

“நம்புயது மாதிரியாட்டி இருக்கவு, அவருக்க கையில அங்க மேடையில இருந்த ருவா ஒனக்க பைக்க எப்படிட்டி வரம்”.

“அதாம்ட்டி எனக்கு தெரியலணி சொல்லுகேன், சரி அப்பம் ஒண்ணு செய்வமா, இது கள்ளநோட்டாணி பாப்போம், கீழ ரோட்டுல மற்ற கம்புக் கண்ணன் கடையில என்னதாம் வாங்குவம்ட்டி”.

“நான் வரல்ல, அவன் பத்து ருவா தாள குடுத்தாலே நல்ல நோட்டாணி பாக்க கண்ணு கம்புபோல நீண்டு ருவாய்க்கு அந்த கரைக்கும் இந்த கரைக்கும் போவும், இத பாத்து நல்ல நோட்டு இல்லணி அறிஞ்சாம்ணா அவ்வளவுதான், போலீஸ்ல புடிச்சி குடுத்திருவான்”.

“ஒரு மயிரும் ஆவாது நீ வா, நம்ம போவோம்”.

கம்புக்கண்ணன் கடைக்குச் சென்று “எண்ணே ரெண்டு சர்பத்” என்றவாறு நிஷாராதா நூறு ருபாயை நீட்டினாள்.

“சில்லறை இல்லியா பிள்ளே” என்றவாறு சலித்துக் கொண்டே அவர் ருபாயை ஒரு கைகளால் பிடித்து மறு கை விரல்களால் சுண்டினார். பின் அதைப் பல்வேறு முறைகளில் திருப்பி பார்த்துவிட்டு கல்லாப்பெட்டியில் போட்டார்.

அவர்கள் சர்பத்தைக் குடித்துவிட்டு சில்லறையை வாங்கிவிட்டு வெளியே வந்தனர்.

“ஏட்டி, உண்மையிலேயே ருவாதாம்ட்டி, அதம் கம்புக்கண்ணன் அப்ரூவ் பண்ணிட்டாம்ணா அது கள்ளநோட்டாட்டு இருக்க வாய்ப்பேயில்ல கேட்டியா, ஏம்ணா அவன் ரிசிர்வ் பேங்குக்கம் மேலலா” என்றாள் சஜினி.

“ஏட்டி எனக்கு பயமாட்டு இருக்கவு கேட்டியா, எதுக்கும் அந்தாளுட்ட கேப்பமா”.

“போட்டி அந்தால, அவரு எப்படிட்டி மேஜிக் ரகசியத்த சொல்லுவாரு”.

“எனக்கு ஒரு மாரி கை காலெல்லாம் நடுங்குவு கேட்டியா” என்றவாறு நடந்தவளின் தோளில் ஒரு விரல் பட்டது.

“ரெஜினு”.

“யாம் ஒரு மாரி இருக்கா”.

அவள் அனைத்தையும் ஒப்பித்தாள். அவன் “நீ யான் அதுக்கு பயப்படுதா அது எதாம் ட்ரிக் இருக்கம். ஒனக்க கிளாஸ்லதான் எவனாம் கொண்டு வந்து ஒனக்கு தெரியாம வச்சிருப்பான்”.

“சரி அது எந்தாலையும் போட்டு, இவளாங்கம் சஜினி, நான் சொல்லிருக்கம்லா”.

அவன் “நல்லாயிருக்கியல்லா” என்றான்.

“அவா ஐஸ்கிரீம் கேக்கா” என்றாள்.

“போட்டி” என்றவாறு நிஷாராதாவின் கைகளில் குத்தினாள்.

“அதுக்கென்ன பேயிரலாம்” என்றான்.

“பெரிய கடைக்குதான் போணுமாம்” என்றாள் நிஷாராதா.

“அவா சும்மா சொல்லுகா” என்றவாறு மீண்டும் அவள் கையில் குத்தினாள் சஜினி.

நாகர்கோயில் குளத்து பஸ்ஸ்டாண்டிற்கு வந்து சஜினி தக்கலை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுவிட இவர்கள் இருவரும் 38L பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். நேரம் இருட்டிவிட்டிருந்தது. பேருந்து ஈத்தாமொழி வந்ததும் இருவரும் இறங்கிக்கொண்டார்கள். அவன் அவளிடம் கண் காணித்துவிட்டு விலகிச்சென்றான். அவள் வீட்டிற்குச் சென்று வீட்டின் நான்கு பாழிக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே செல்லவும் இருளுக்குள்ளிருந்து அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

அவள் தடுமாறி வாசலிலேயே விழுந்தாள். வலது உதடு கிழிந்து ரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த மஞ்சள் சுடிதாரெல்லாம் ரத்தக்கறையாகியது.

விளக்கை போட்டுவிட்டு வெளிச்சத்தில் அவளைப் பார்த்து முறைத்தபடியே பல்லைக் கடித்துக்கொண்டு கையைப்பிடித்து வீட்டிற்குள் இழுத்தார் அவளின் அப்பா திரவியம். 

“கையைப் கண்டியாட்டி, மரம் யாறி காய்ப்பு பிடிச்சிருக்கு, ஒரோரு பைசாயாட்டாங்கம் சேத்து ஒன்னை காலேஜிக்கு அனுப்புயது, நீ என்னடாண்ணா அங்க ஒரு பயலுக்க கூட கெறங்கிட்டு வாறா என. அப்படி என்னட்டி ஒனக்கு நாக்குல நொடி, கெடக்காதாட்டி நாக்கி, ஐஸ்கிரீம் அவளுக்கு, அடுத்தவன்ட்ட இப்படி யாணாகுடிச்சி வாங்கி தின்னுட்டு கெடக்கியதுக்கு தெக்க வெளைக்க பேய் கொஞ்சோல பீ அள்ளி தின்னலாம்ட்டி. நீ கேக்கியதெல்லாம் வாங்கித் தந்துதான வளத்திருக்கு, பொறவு யாம்ட்டி இந்த அலப்பு”.

“சைசு சைசாட்டு வாங்கி குடுத்திருப்பான், அதான் கூடால பேயிருப்பா” என்றாள் அம்மா தங்கக்கனி.

“அப்படி அலந்து திரியாட்டு தான் என்னணி”.

அவள் எல்லாம் தன் வீட்டிற்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்து எதுவும் சொல்லாமல் , வழிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

“எந்தாலையும் போங்க, நான் அடுத்த செமஸ்ட்டருக்கு பீஸு கெட்டமாட்டேன், நீ படிச்சா படி இல்லணா எங்கயாம் வீட்டு வேலைக்கு போ” என்றவாறு வீட்டைவிட்டு வெளியேறினார்.

“அவா யான் பாத்திரம் பூச போவப்போறா, அதான் ஊரு ஊரா மாப்பிளை பிடிச்சிக்கிட்டு திரியாலா, எவன் கூடயாம் போவா” என்றாள் தங்கக்கனி.

நிஷாராதா தன் சுரிதார் துப்பட்டாவால் உதடை அழுத்திப்பிடித்துக் கொண்டிருந்தாள். அதை விலக்கியபோது அது முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது.தங்கக்கனி ஓடிச்சென்று “இங்கேருங்க ரத்தம் நிக்கமாட்டேங்கவு, இந்த ஆஸ்பத்திக்கு கூட்டிட்டுப் போங்க” என்றபடி திரவியத்தின் கையைப்பிடித்தாள்.

“அந்தால கெடந்து சாவட்டு” என்று படலையைத் திறந்தவர் திரும்பி வந்து “வாட்டி ஆஸ்பத்திரிக்குப் போவம்” என்றார்.

மூன்று தையல்கள் போடப்பட்டு ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு வந்தார்கள். திரவியம் நிஷாராதாவிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.

தையல் பிரிப்பதற்காக மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றவர் திரும்பக் கொண்டுவந்து வீட்டில் விட்டபொழுது “சரிதான் சுண்டு கிழிஞ்சி கோரையாயிற்றுல்லா எனி பொறத்தால வரமாண்டான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். தங்கக்கனிதான் எப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தாள்.

“தவப்பன் பிச்சக்காரம்லா, எதாம் கொத்தனுக்கு கெட்டி குடுத்துப்புடுவாணிட்டு இவா மாப்பிளை பிடிக்க பேயிருக்கா, அதான் நல்லா சொளயா பைசா உள்ளவன பாத்து பிடிச்சிருக்கா, அவன் இந்த வண்டாவிளை வெறவு யாவாரிக்க மொவனாம்லா” என்றாள் ஒரு நாள்.

“நம்மக்கிட்ட இருக்கப் பணத்துக்கு நம்ம எதாம் கொரங்கு மூஞ்சிக்காரனுக்கு கெட்டி வச்சிருவம்லா, அதாம் ஸ்டைலா அவளாட்டு ஆளு புடிச்சிருக்கா, நல்லா செவப்பா முடியக் கோரி எளச்சிட்டு வந்தவொடன மயங்கிட்டா” சாப்பிட்டத்தட்டை எடுத்தப்படியே சொன்னாள் ஒருநாள்.

நிஷாராதா குளித்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நாள் “நம்ம கூடிப்போனா ஒரு இருவது பவுனு உருப்படி போட்டுகிடுவமா, அது எப்படியாங்கம் நெஞ்சு நெறையும், அதான் வெறவு யாவாரிக்க மொவம்லா, வாங்கி கழுத்துல இருந்து கொப்புளு வர அடுக்கலாம்லா” என்றாள் தங்கக்கனி.

தங்கக்கனி சொல்வதெல்லாம் புதுமையாக இருந்தது நிஷாராதாவிற்கு. அவள் ரெஜினை சந்தித்ததை அவனோடு காதலில் விழுந்ததை அசை போட்டபடியே நாட்களைப் போக்கிக்கொண்டிருந்தாள்.அவள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுதுதான் ரெஜினை சந்தித்தாள். அவன் தான் வந்து காதலைச் சொன்னான். கல்லூரி கீழ் ரோட்டில் அவள் ஜெராக்ஸ் எடுக்கத் தனியாக நிற்கும் பொழுதுதான் அவன் அருகில் வந்து பேசினான், அவளைக் காதலிப்பதாக சொல்லிவிட்டு அவள் பதிலென்ன என்று இரண்டு நாட்களில் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ஒரு நொடித் திகைத்தவள் அவன் யாரென்பதை நினைவுபடுத்திப் பார்த்தாள். அவனை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை என்பது அச்சத்தை உண்டாக்கியது. அன்று பேருந்தில் வீடு செல்லும் வரை அவனுக்கான பதிலையும் அவன் யாரென்பதையும் மனதில் நினைத்தபடியே  அமர்ந்திருந்தாள். மெல்ல அவனின் முகம் துலங்கியது. அவனை அவள் கவனித்ததில்லை என்றாலும் அவன் முகம் சற்றுப் பரிச்சியமானது போலத் தோன்றியது. அவன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கல்லூரிப் பேருந்து நிலையத்தில் நின்றது அவளுக்கு நனைவிற்கு வந்தது. ஆனால் அவள் நினைவில் அன்றும் அவன் இன்று அணிந்திருந்த அதே சட்டையைத் தான் அணிந்திருந்தான். சற்றே யோசித்துப் பார்த்தால் அவளின் நினைவில் அவள் பல இடங்களில் அவனைப் பார்த்திருப்பதாகத் தோன்றினாலும் அத்தனை இடங்களிலும் அவன் அதே சட்டையை அணிந்தபடி நின்றதுதான் அவளுக்கு குழப்பமாக இருந்தது. அன்று ஈத்தாமொழியில் பேருந்திலிருந்து இறங்கியபொழுது அவளுக்கு அவள் அப்பாவின் நினைவுத் தட்ட ரெஜினிடம் “இல்லை நான் உன்னை விரும்பவில்லை” என்று சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டாள்.

சொல்லியதுபோல அடுத்து இரண்டு நாட்களும் அவனிடம் சொல்லப்போகும் “இல்லை” என்கிற பதிலை வெவ்வேறு வகைகளில் கற்பனை செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு பதிலுக்கும் அவன் வெவ்வேறு வகைகளில் அவளின் கற்பனையில் சொல்லாகவோ அல்லது உடலாலோ பதில்சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து சாயுங்காலம் அவள் கல்லூரியைவிட்டு வெளியே வரும்பொழுது அவன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் அருகில் வந்து “யோசிச்சாச்சா” என்றான். அவள் அஞ்சி விலகி சாக்கடையின் அருகில் சென்றான். “கடக்காலுக்க வுழுந்துராத” என்றான். “உண்டா இல்லையாணி சொல்லு” என்றான். அவள் மனதில் நினைத்து வைத்திருந்த பதில்களைத்தும் ஒரு நொடியில் காணாமல் போயிருந்தது. அவள் மனம் அந்த நொடியில் மீண்டும் பதில்களைத் தேடியது. அவன் சற்றே அவளை நெருங்க அவள் “உண்டு” எனச் சொல்லிவிட்டாள்.

நிஷாராதா வீட்டின் சூழ்நிலையை அவள் தோழியின் வழியாகத்தான் ரெஜினுக்குச் சொல்லி அனுப்பினாள். ரெஜின் தோழி மூலமாக அனுப்பிய தகவலின்படி ஒரு அமாவாசை இரவு பதினோரு மணிக்கு வீட்டின் நான்கு பாழிப் பின்கதவைத் திறந்து மேல் பாழிகளைப்பூட்டாமல் வெளியே இருந்த கழிவறைக்கு அருகில் சென்றாள். கழிவறையின் பின்னால் வந்து ஒழித்திருந்த ரெஜின் அவள் வலது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான். இரண்டு தென்னந்தோப்புகள் தாண்டியபின் அவள் திரும்பி தன் வீட்டைப்பார்த்தாள். இருளினூடாக மேல்பாழிகள் திறந்திருந்தக் கதவின் வழியாகத் தெரிந்த உள்ளறையின் ஒளி தொலைவானின் வெள்ளி போல புள்ளியாகத் தெரிந்தது. ரெஜின் அவளை அணைத்துக்கொண்டான். அவள் இதுவரை தன் வாழ்வில் கண்டிராத ஈத்தாமொழியின் தென்னங்காடுகளினூடாக அழைத்துச் சென்றான். 

தலைக்குமேல உயர்ந்திருந்த ஒரு வரப்பின் மேல நெடுநின்ற தென்னைகளைக் கண்டு திகைத்து நின்றுவிட்டாள். அவன் வரப்பின் மீது தாவி ஏறினான். சற்றுத் தள்ளி நடந்து சென்று பள்ளத்தில் வைக்கப்பட்டு தளிர்த்து நின்ற தென்னங்கன்றின் ஓலையைப்பிடித்தபடியே அவளுக்கு கையை நீட்டினான். தான் எங்கிருக்கிறோம் என்ற போதம் சற்று பிசகிவிட தன் தலையை ஆட்டிக்கொண்டு தன்னிலையை மீட்க முயன்றாள். ஆனால் அவன் கையும் அதன் பின்னே தெரிந்த ஓங்கிய தென்னைகளையும் தவிர வெறெதையும் அவள் கண்களும் மனமும் காணவில்லை. அவள் அறியுமுன்பே அவன் அவளைத் தூக்கினான். அந்த மேல்தோப்பின் மறு எல்லையில் தார் சாலையும் அதில் நிற்கும் இரண்டொரு தெருவிளக்கையும் பார்த்ததும் அவள் நினைவு சட்டென்று மீண்டது. அவர்கள் அந்த தார்சாலையை அடைந்ததும் சரியாக நாகர்கோயில் செல்லும் கடைசிப் பேருந்து தொலைவில் வருவதைப் பார்த்தார்கள். கைக்காட்டி அதை நிறுத்தி அங்கிருந்து நாகர்கோயில் சென்றார்கள். 

ஜிவிஷா “அம்மா நீ கூப்பிட வருவியா, மத்தியானம்” என்று கேட்டபொழுது நிஷாராதா ரெஜினைப் பார்த்தாள்.”பேயிட்டு வாயாம், யான் என்ன பாக்குயா” என்றான்.

அன்று ஜிவிஷாவின் கல்லூரி நூற்றாண்டு விழா. நிஷாராதாதான் தன் மகளைப் புறப்பட்டு விட்டாள். அவள் அந்நிகழ்விற்காகவே வாங்கிய புத்தம் புதிய கிளிப்புகள், பொட்டு மற்றும் மஞ்சள் நிறச் சுரிதார் ஆகியவற்றை அணிந்து கொண்டு புறப்பட்டபொழுது நிஷாராதா ஜிவிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பிவிட்டாள்.

அன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கல்லூரி வாசலில் தனது ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷாராதா. உள்ளே தொலைவில் கல்லூரி அரங்கத்தினுள் நிகழும் நிகழ்வின் ஒலி மெல்லிசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் வீசிய காற்றில் உள்ளிருந்து வந்த ஒலியின் வேகம் கூட உற்சாகம் பொங்க ஒரு வயதான ஆணிண் குரல் துல்லியமாகக் கேட்டது.

“இதோ உங்கள் முன்னே இப்பொழுது உலகின் மிகப்புகழ் பெற்ற மேஜிக், அட்லாண்டிக் முதல் ஆர்டிக் வரை, அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை, டேவிட் காப்பர்ஃபீல்ட் அஞ்சிய மேஜிக், இன்று இந்த நாகர் மாநகரிலே, திருவாங்கூரின் புகழ்பெற்ற கல்லூரியிலே வந்துவிட்டது. அதோ தொலைவில் அமர்ந்திருக்கும் மஞ்ச சுரிதார் அணிந்த பெண்

உங்கள் கைப்பையை கொஞ்சம் பார்வையாளர்களுக்கு திறந்து காட்ட முடியுமா”.

நிஷாராதா தன்னை அறியாமல் கல்லூரியினுள் ஓடினாள். ஓடிச்சென்று நிகழ்வு நடந்து கொண்டிருந்த மாபெரும் அரங்கிற்குள் கூட்டத்தினுள் புகுந்து அங்கு பார்வையாளர்களின் ஆரவாரத்தின் நடுவே தனது கைப்பயை விரித்து காட்டிக்கொண்டிருந்த ஜிவிஷா-வை கையைப்பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தாள். தன்னிடம் சண்டையிட்டமகளிடம் “ஒனக்கு ஒண்ணம் தெரியாது நீ சின்னப்பிள்ளை” என்று காரினுள் அமர வைத்துவிட்டு அரங்கத்தை நோக்கி ஓடினாள். அங்கே மேஜிக் நிகழ்ந்து முடிந்திருந்தது.

இளமையின் துடிப்புக் கொப்பளிக்கும் முகத்துடன் ஒரு பெண் தன் கையில் ஐநூறு ருபாய் நோட்டை பார்த்தபடியே அரங்கத்தின் நடுவில் அனைவரின் கண்களும் அவள் மீதிருக்கத் திகைப்புடன் நின்றுகொண்டிருந்தாள். நிஷாராதா அரங்கத்தின் பின்புறம் ஓடிச்சென்று அதன் பின்னிருந்த ஒப்பனை அறையின் வாசலில் நின்றுகொண்டாள். ஐந்து நிமிடத்தில் தனது கருத்த உடையையும் சிகப்பு நிற உடையையும் கழற்றிவிட்டு சாதாரண உடை அணிந்தபடியே வெளியே வந்த அந்தக்கிழவரை நிஷாராதா வழிமறித்தாள்.

“அந்த ருபாய்த்தாள் எப்படியாங்கம் பைக்குள்ள போவுவு” என்று கேட்டாள். அவளை வியப்புடன் கண்களைச் சுருக்கியபடியே பார்த்த அந்த வயதான மனிதனிடம் மீண்டும் மண்டியிடும் தொனியில் கேட்டாள், “தயவு செய்து சொல்லுங்க, அது எப்படி அங்க போச்சி”.

புன்னகையுடன் அந்த வயதான மனிதன் சொன்னான், “அது வெறும் கண்கட்டி வித்தை, மனசனுக்கு மனசிலாவக்கூடிய காரியமில்ல, அது உண்மையில்ல” என்று. சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றான். நிஷாராதா தன் வலது உதட்டை தடவிப்பார்த்தாள். அவள் உதட்டில் போடப்பட்ட தையலின் காரணமாக வந்த தழும்பு அப்படியே அங்கேயே இருந்தது.

***

ஜெயன் கோபாலகிருஷ்ணன்: குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர் தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார். யாவரும் வெளியீடாக ‘நின்றெரியும் சுடர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com

வெம்மையும் தணிவும்

0

ஆர்த்தி முருகேசன்

ஜி. கார்ல் மார்க்ஸ் தமிழில் கதைகள் மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது புனைவுக் கதைகள் மத்திய மண்டலமான டெல்டா பகுதிகளைக் கதைக்களமாக்குகிறது. கதைகளில் வாழ்வின் பகுதிகளை நுண்ணியமாய் சித்தரிக்கும் முறை கொண்டவர். “வருவதற்கு முன்பிருந்த வெயில்” ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 10 சிறுகதைகளை உள்ளடக்கியது. எதிர் வெளியீடு பதிப்பகம் இப்புத்தகத்தை பதிப்பித்துள்ளனர். 

“வருவதற்கு முன்பிருந்த வெயில்” எனும் தலைப்புக் கதை மொத்தத்திற்குமான உருவகத்தை கொண்டிருக்கிறது. வெயில் என்பது வெம்மையையும் வெளிச்சத்தையும் தருபவை. வருவதற்கு முன்பு என்றால் வெயிலின் தன்மையில் எதைக் கூறுகிறது எனும் சுவாரசியத்தைத் தூண்டுகிறது. 10 சிறுகதைகளில் இதே தலைப்பில் ஒரு கதையும் உள்ளது. 

புத்தகத்தின் என்னுரையும் முகப்புரையும் வாசிக்கையில் ஆசிரியர் பற்றியவை ஊர், படிப்பு, வேலை, குடும்பம், வாசிப்பு பழக்கம் பற்றி அறிய நேர்ந்தது. எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் முகப்புரை வாசிப்புக்கு வேகப்படுத்தியது.

ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும், கதை மாந்தார்கள் இவ்வாறு நடக்க வேண்டும், கதையின் போக்கு இந்த கோட்டில் செல்ல வேண்டும் என முன் தீர்மானங்களோடு இலக்கியத்தை அணுகக்கூடாது எனும் பொதுமைப் பண்பு கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் சிறுகதைத் தொகுப்பை திறந்த மனமாக வாசிக்க வேண்டும். கதையின் போக்கில் எங்கு பரிமாணம் திசை மாறும் என்றே கூறமுடியாது. இதுவே நாவலுக்கும் சிறுகதைக்கும் இடையே உள்ள வித்தியாசம். நாவலில் திசைமாற்றத்தின் செயல்முறை மெதுவாக நிகழும். சிறுகதையில் வேகமாக நிகழும்.

வாசகர்கள் கொண்டுள்ள பிம்பங்களையும் முன் அனுமானங்களையும் எந்த கதை உடைத்து தன்மை மீறி செல்கிறதோ, அதுவே தரம் வாய்ந்தது. மனதில் நிற்பது. அவ்வகையில், “வருவதற்கு முன்பிருந்த வெயில்” தரம் பெற்றிருக்கிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் Fast Reading வகையை சார்ந்து, வாசிப்பிற்கு எளிதாக அமைந்திருக்கிறது. இயல்பான மொழி வடிவம், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, நிகழ்வு விவரணை, நுணுக்கமான உரையாடல்கள், விவரிக்க படும் உணர்வுகள் யாவும் கிராமத்து பின்னணியில் அமைந்து நம்முன் கதையைக் காட்சி படுத்துகிறது. இக்கதைகளை இரு கூறுகளுக்குள் பொருத்தி பார்க்கலாம். ஒன்று கிராமத்தினுள் இழையோடி இருக்கும் பண்பாட்டின் வெளிப்பாடுகள் மற்றொன்று மனித உணர்வுப் பரிணாமங்களின் வெவ்வேறு உருவங்கள்.

சிறுகதைகளின் போக்கு, முடிவு ஆகிய இரண்டும் எந்தப் பக்கச்சார்புமின்றி நடுநிலையாக நிலைத்திருக்கும் தன்மையைப் பெற்றிருப்பது, கதையை மீறிய ஒரு இயல்புதன்மையை வெளி கொணர்கிறது. கதையை ஒரு மையக்கருவை நோக்கி நகர்த்தாமல் கதாபாத்திரங்களின் இயங்குதல் மூலம் கதை எழுப்பப்படும்போது, கதாபத்திரங்களின் தன்மை இன்னும் ஆழமாக விரிவடைந்து கதைக்கு வலு சேர்க்கின்றன. திறந்த நிலையுடைய இடத்தை நோக்கி கதாப்பாத்திரங்களை நெறியாளும் எழுத்தாளரின் நடை, இவரது மற்ற படைப்புகள் நோக்கியும் எதிர்ப்பார்ப்பு தூண்டுபவை.

எழுத்தாளர் கதையின் கருவை நேரடியாகக் கூறாமல் காட்சிகளை முன்வைத்து கடத்துகிறார். எடுத்துக்காட்டாக, செவப்பு ஓணான் கதையில், மகனை அவனுடைய கல்வி செலவிற்கு பணம் வாங்க சித்தப்பா வீட்டிற்கு அனுப்பும் பெற்றோர். சித்தப்பா வீட்டிற்கு சென்று வரும் மகனை அழைத்துக்கொண்டு அப்பா ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வருவார். இக்கதையில் அப்பா மகன் காட்சி அமைதியாக ஆரம்பித்து மனதை சுணங்க வைத்து இறுதியில் மகிழ்ச்சியாக முடித்திருப்பார். இதில் மகனிற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையை புரிய வைப்பதே கதைக்கரு. புரியவைப்பதைவிட அவன் மனதில் பதிய வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. 

இவரது கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அமைதியும் ஏற்றுக்கொள்ளுதல் பண்பும் கொண்டவர்களாக தென்படுகின்றனர். அது கதையோடு பயணிக்கையில் நிறைவாக பிரதிப்பலிக்கிறது.

‘வார்த்தைகளின் மீது படரும் பனி’ கதையில் ஒரே பெண்ணிடம் இரு நண்பர்கள் கொண்டுள்ள வெவ்வேறு உணர்வுகள், அவை குவியும் இடத்தில் முரண்பாடான ஏற்றுக்கொள்ளுதலும் கதை முடியும் இடத்தில் அசாத்தியமான அமைதியும் நிகழ்கிறது.

‘ஆட்டம்’ கதையில் கணவனின் இறப்பில் கருவுற்றிருக்கும் இளம் இரண்டாவது மனைவியின் அமைதியான செயல் அவளின் பக்குவத்தைக் காட்டுகிறது. கிராமங்களில் ‘துக்க வீடு’ எவ்வாறு இயங்கும், எப்படி அதன் அடையாளங்களைப் பெறும், மக்களின் சிந்தனை யாவும் கூறியிருப்பார்.

முன்பு குறிப்பிட்ட ‘செவப்பு ஓணான்’ கதையில் சிறுவனின் விளையாட்டு காட்சி தொடங்கி மகனை கடன் வாங்க அனுப்பும் அப்பா நடந்துகொள்ளும் விதம், கடைசியில் வரும் அம்மாவின் செயல் அனைத்தும் தினசரி கிராமத்து வீடுகளில் அன்றாடம் நடப்பவற்றைத் தொகுத்து கூறுகிறது.

‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ கதையில் காதலிக்கும் மகள் வீட்டிற்கு தெரிந்த பின் அப்பாவின் கோர முகத்தை கண்டு தயங்கும்போது அம்மாவின் வெகுளியான தைரியத்தைக் காண்பாள். அங்கு ஒரு ஆணாக அப்பாவின் கோபம் அர்த்தமற்றதாக போய்விடும். அங்கு காலம் காலமாக அப்பாவின் கோபம் அம்மாவின் தாங்குதலில் உள்ளது எனத் தெரிகிறது. கோபத்திற்கு இல்லாமல் அப்பாவின் முட்டாள்தனத்திற்கு யோசித்து மகள் முடிவெடுப்பது கட்டுடைத்த மீறல் ஆகிறது.

இதே போல் ‘அப்போது அது வேறாக இருந்தது’ கதையில் அப்பா மகள் உறவின் தொடரை வேறொரு பாணியில் காட்டி, அவர் உதிர்த்த தவறின் வீரியத்தை கண்டுகொள்ள செய்வார். மனைவியின் இறப்பிற்கு பின்னால் மச்சான் மற்றும் மாமியாரின் உறவு குறித்து வரும் காட்சிகள் அத்தனை வாஞ்சையாக உள்ளது.

நான்கு கதைகள் ஆண் பெண் இடையே உள்ள முரண்களை காட்டும் கரு கொண்டிருக்கிறது. ‘காட்டாமணக்கு’ கதையில் ஆண் தன் எதிர் பாலினம் மீது எவ்வாறு தன் தாழ்வு மனப்பான்மையை செயல்கள் மூலம் காட்டுகிறான் என கூறியிருப்பார். தவறின் பொழுதுகளில் குற்றவுணர்ச்சி எவ்வாறு தன் பங்கு செய்கிறது என்பதை மறைமுகமாகக் கூறுகிறது.

மற்றொரு கதையான ‘மகிழம்பூ’ கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிந்துணர்வு, தன் இணை தன்னை மீறி போனாலும் எவ்வாறு செயல்படுகிறது எனக் காட்டுகிறது. இதில் ஒரு பக்கம் துரோகம் மறு பக்கம் தியாகம் எனத் தென்பட்டாலும் இக்கதையின் பிரதானம் இருவரின் புரிந்துணர்வைக் காட்டுகிறது.

‘டிராகன் டாட்டூ’ கதையில் ஆண் ஒருவன் விலைமகளுடன் இருக்கும் கதையில் பெண்ணிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான்? என்ன அவனுக்குள் ஓடுகிறது? அவளை எவ்வாறு நடத்துகிறான்? கடைசியாக அவளிடம் என்ன கேட்பான்? எனும் கேள்விகளுக்கு வெளிப்படையாக இல்லாமல் உள் அடுக்குகள் மூலமே அமைந்த எழுத்து ஆண்களின் மறைக்கப்பட்ட முகமாககிறது.

‘கட்டுதரை’ எனும் கதை முழுதும் கிராமத்து மக்களிடம் பழக்கப்பட்ட அன்பு எவ்வாறு நெகிழ வைக்கும் என்பதன் எளிமையான எடுத்துக்காட்டு. வசதியான வீட்டுபையன் தன் வீட்டு கால்நடைக்கு மருத்துவம் பார்த்த தாத்தா மீது கரிசனை காட்டுகிறான். அந்த கரிசனை எப்படி தனிமனிதனின் சுயமரியாதையைத் தாக்குகிறது என காட்டும் கதை.

திடமான சுதந்திர போக்கு உடைய பெண் கதாப்பாத்திரங்கள் கதைகளில் பரவலாக வருகின்றனர். எடுத்துக்காட்டாக ‘உப்புசுவை’ கதையில் திருமணத்திற்கு பிறகு காதலித்தவனை காணச் சென்று வரும் கதையின் நாயகி ‘சிறப்பான ஒன்று’. அடுத்து என்ன என்பதில் தெளிவுள்ள இருவரும் அக்கணத்தில் காதலில் எவ்வளவு வெளிப்படையாக உள்ளனர் எனக் காட்டும் கதை. அதேபோல், முதல் கதையில் அப்பாவின் இரண்டாம் திருமணத்தை ஆதரித்து மகள் முத்தம் கொடுக்கும் இடம், முழு நெகிழ்வு! அம்முத்தம் ஒரு வகையான காப்பாற்றுதல் வழி.

கதைகளில் இடம்பெறும் கிராமத்து பாங்கான காட்சிகள் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிறது. டெல்டா பகுதிகளில் இறப்பு எவ்வாறு கொண்டாடப்படும்? அந்த தெருவின் மக்களின் அந்நாளை எவ்வாறு பாதிக்கிறது? கரகாட்டகாரர் மீதுள்ள மக்களின் எண்ணம் என்ன? என்பதில் ஆரம்பித்து கிராமங்களில் பெரிய வீடு எவ்வாறு இருக்கும்? வீட்டின் அமைப்பு, கொள்ளைப் புறத்தின் அமைப்பு, மாடு கொட்டகை, வைக்கோல் போர், கவணை, படல், துணி வைக்கும் இடம் பற்றி கதைப்போக்கில் குறிப்பிடிருந்தது, அம்மக்களின் வாழ்க்கைத் தன்மையை கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைகிறது. 

கிராமங்களில் உள்ள பெரிய வீட்டிற்கும் ஏனைய மக்களுக்கும் உள்ள அன்றாடத் தொடர்பு என்ன, அது மக்களின் பழக்கவழக்கங்களில் எவ்வளவு தொடர்புடையது என்பதும் கதையின் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கதையின் சொற்றோடர்களில் இடம்பெற்ற கிராமத்து வார்த்தைகள் கதையின் முழுமை உணர்வை வாசகர்கள் மத்தியில் கடத்துகிறது. 

மொத்தத்தில், நல் வாசிப்புக்கு உகந்த சிறுகதை தொகுப்பு. இத்தொகுப்பிற்கு உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து “சிறுகதைக்கான சுஜாதா விருது” வழங்கியது குறிப்பிடத்தக்கது.

***

ஆர்த்தி முருகேசன் – திருவாரூர் மாவட்டத்தில் இடையூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் சமூகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். நல்ல எழுத்துகளை தேடி வாசிக்கும் இவர் எழுதுவதிலும் ஆர்வம் உடையவர். மின்னஞ்சல் : aarthimurugesan82737@gmail.com

தமிழர், இந்தியர், உலகப் பிரஜை – ஒரு எழுத்தாளராக நாம் யாராக இருக்கிறோம்?

0

ஆர். அபிலாஷ்

டந்த 75 ஆண்டுகளில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இயங்கிய நாவலாசிரியர்களின் வரலாற்றை, வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொறாமையாக உள்ளது – இலக்கிய படைப்பாளியாக இருந்தாலும் குறைந்தபட்ச விற்பனை, உலகளவிலான கவனம், பரிசுகள், விருதுகள், கல்விப்புலப் பணி, ஓரளவுக்குப் புகழ்பெற்ற நாவலெனில் அதற்கு திரைப்பட ஒப்பந்தம் என முற்றுமுழுமையானதொரு வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது. அவர்களுக்கு அதிகாரத்தை நெருங்கிச் செல்ல எதாவதொரு கட்சியின் மறைமுக ஆதரவாளராக மாறி ஜால்ரா அடிக்கும் அவசியமும் இல்லை (அதெல்லாம் இங்கிலாந்தில் கூட விக்டோரிய மகராணியுடன் முடிந்துபோகிறது). 16-17ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் படைப்பாளர்கள் தோன்றிய போதிருந்த நிலையுடன் வேண்டுமானாலும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் நிலையை ஒப்பிடலாம். இந்தியாவை எல்லாம் இந்த வட்டத்துக்குள்ளே கொண்டு வர முடியாது. ஒருசில மாநில மொழிகளை (குறிப்பாக தென்பகுதியையும் வங்காளத்தையும்) விடுத்தால் இந்திய இலக்கியத்திற்கு தத்தமது மாநில மொழிகளில் எந்த இடமும் உள்ளதாகத் தோன்றவில்லை. பல மாநிலங்களில் உயிர்த்தரித்தலை, நுகர்வைத் தாண்டி ஒரு வாழ்க்கை மக்களுக்கு இல்லை. 

தமிழ்நாட்டில் எழுத்தாளராக இருப்பதன் ஒரு முக்கியமான சிக்கல் நமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது என்பது. மிகமிக அரிதாகத்தான் மொழிபெயர்ப்பு வழியாக அது சாத்தியப்படும். அப்போதும் தமிழ் அடையாளத்துக்காக அல்ல, இந்திய அடையாளத்துக்காகவே. இது படைப்பாளியின் ஆகிருதியை முழுமையாக வெளிப்படுத்த உதவாது. இதற்கு நாம் இந்திய ஒன்றியத்தின் பகுதியாக இருப்பதே காரணம். சுதந்திரப் போராடத்தின் பின்பு, நாம் தனியாகப் பிரிந்து சென்றிருந்தால் தமிழ்நாட்டு அரசே எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய இடத்தை அளிக்கிற நிலை வந்திருக்கும். சர்வதேச வாசகர்களும் நமது தேசியத்தை, அரசியலை, நிலையைப் புரிந்துகொள்ள நம் படைப்புகளை வாசிக்க முன்வருவார்கள். இப்போது நாம் இந்திய தேசியத்தின் மணற்பரப்பில் ஒரு ஊசியாக மறைந்து போகிறோம். எந்த  குறிப்பிடத்தக்க ஜி.டி.பியும் மக்கள் தொகையும் இல்லாத எறும்பளவு தேசங்களுக்கு உள்ள முக்கியத்துவம் அவற்றின் தேசியத்தாலே வருகிறது. ஈழப்படைப்பாளிகளுக்கும் அவர்களது ஐரோப்பிய புலம்பெயர்வினாலும் உள்நாட்டு யுத்தத்தாலுமே ஒரு தற்காலிக தேசிய அடையாளம் கிடைத்து, அவர்களது எழுத்துக்குச் சர்வதேச அங்கீகாரம் வாய்த்தது (இது இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஈழப் படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் நம் ஒன்றியம் அவர்களை சரியாக அங்கீகரிக்கவில்லை.) நம்முடைய போதாமை தேசியத்தின் போதாமைதான். நமக்கென ஒரு தேசியம் இருந்து அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தமிழில் உள்ள திறமைக்கு மிகப்பெரிய இடம் நம் படைப்பாளிகளுக்கு கிடைத்திருக்கும் – முக்கியமான காரணம் நமக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாக வரும் என்பது.

இன்னொரு சிக்கல் – யாரைக் குறித்து, எதைக் குறித்து எழுதுவது எனும் சிக்கல் நம்மை ஆக்கிரமிக்கிறது. எண்பதுகள் வரைக்கும் நாம் சர்வதேச மனநிலையை நோக்கி எழுதினோம். அது ஒரு கற்பிதமான கருத்துருவாக, உணர்வு நிலையாக வைத்து என்றென்றைக்குமான எல்லாருக்குமான கதைகளை, கவிதைகளை எழுதப்பார்த்தோம். தொண்ணூறுகளில் ஆரம்பித்து (பின்நவீனத்துவ, இனவரைவியல் தாக்கத்தினால்) நாம் உள்ளூர் நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறு, இனவரைவியல், தன்கதைகள் என உள்-நகர்ந்தோம். ஆனால் அதன் ஒரு சிக்கல் நம்மால் நம்மை அதிகமாக பாதிக்கும் தேசிய அளவிலான பிரச்சினைகளைப் பேச முடியவில்லை என்பது. நம்மால் நம் மாநில அரசியலையும் காத்திரமாகப் பேச இயலாது – ஏனென்றால் அது ஒன்றிய அரசியலுடன் பிணைந்துள்ளது. நம்மால் இந்து மதத்தை விடுத்து சாதியத்தைப் பற்றியும் பேச முடியாது. ஏனென்றால் இந்து மதம் ஒன்றியத்துடன் பிணைந்த ஒன்று. நமக்கென்று தனித்ததாக உள்ள அனுபவங்களுக்கும், தரவுகளுக்கும் என்ன முக்கியத்துவம் உண்டு என்றும் நமக்குத் தெரியவில்லை. பின்காலனிய உலகில் நாம் ஒரு உப-பின்காலனிய மக்கள் திரளாக உள்ளோம்.

ஒரு பெரிய தேசத்தின் பகுதியாக உள்ளது பேசிப்பேசித் தீராத பெருஞ்சிக்கல். அது படைப்பாளிகளையும் சிந்தனையாளர்களையுமே அதிகமாக பாதிக்கிறது. ஒரு உதாரணத்துக்கு காப்காவை எடுத்துக் கொள்வோம். அவர் ஆஸ்திரிய-ஹங்கேரிய தேசத்தின் பகுதியான பிராகில் பிறந்தார். அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே (1924) செக்கஸ்லோவோகியா  தோன்றுகிறது. அவர் செக் தேசப் பிரஜையாக இறந்தாலும் அவர் அப்படித்தான் தன்னைக் கண்டார் என்று சொல்வதற்கு இல்லை. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதால் அவரை ஜெர்மானிய படைப்பாளி எனக் கருதுவோரும், தேசிய அடையாளத்தின்படி செக் தேசத்தவர் எனக் கொண்டாடுவோரும் உண்டு. இவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதால் அவரை ஐரோப்பிய மக்கள் சுலபத்தில் ஏற்றுக்கொண்டனர் (செக்கில் எழுதியிருந்தாலும் பின்னர் அது நடந்திருக்கும்). செக் மொழி அவருக்கு இரண்டாம் மொழி. அவர் படித்ததும் இலக்கிய உலகில் புழங்கியதும் ஜெர்மானிய மொழியைக் கொண்டே. அவரது செக் மொழி கடிதங்களில் இலக்கணக் குழப்பங்கள் உள்ளதாகவும் கருதுகிறார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இதற்கு ஒப்பாக நம் நாட்டில் உள்ளது ஆங்கிலம் மட்டுமே. முழுமையாக ஆங்கிலத்தில் படித்தும் பேசியும் எழுதியும் வருவோர் படைப்பாளிகளாகும்போது அவர்கள் இந்திய வாழ்க்கையில் இருந்து விலகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் பணவசதிகளும் கிடைக்கின்றன. சொந்த மொழியில் பேசினாலோ எழுதினாலோ ஒன்றுமே கிடைப்பதில்லை. கேரளாவிலும் கர்நாடகாவிலும் இந்தியில் பேசும் பூர்வ மாநிலத்தார் உண்டு. ஆனால் அவர்களில் இருந்து ஒரு இந்தி எழுத்தாளர் தோன்றியதில்லை. காப்கா ஜெர்மனில் எழுதினாலும் அவர் செக்கஸ்லாவகிய பண்பாட்டில் இருந்து, வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டு எலீட் மனநிலைக்குப் போகவில்லை (அருந்ததி ராய், ஷஷி தரூரைப் போல). 

நம்முடைய மொழிப் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகளாகவும் உள்ளன. நம்மால் எழுத முடிகிற மொழிகளை நம் தேசியப் பண்பாடு ஏற்பதில்லை. நம் தேசியப் பண்பாட்டு அடையாளமான இந்திக்கு உலகளவில் இலக்கிய மதிப்பில்லை. இதற்கு நமது காலனிய வரலாறும் நம் ஒன்றிய அரசுகள் ஆங்கிலேய அரசின் காலடியை ஒட்டி தம் அரசியலமைப்பு, நிர்வாகம், பண்பாட்டு நடவடிக்கைகள், பொதுமக்களை அந்நியர்களாக அச்சத்துடன் நோக்கும் போக்கை வரித்துக் கொண்டதும், மக்களின் மொழிக்கோ பண்பாட்டுக்கோ உரிய முக்கியத்துவம் கொடுக்காததும் காரணங்கள். மாநில மக்கள் மொழிகளுக்கு இடமளிக்கும்போது மக்களின் சிந்தனைக்கு, முகமைக்கு, நுண்ணுணர்வுக்கு இடம் அளிக்கிறோம். இந்தியையும் கூட இந்திய ஒன்றியம் போதுமான அளவுக்கு வளர்த்தெடுக்கவில்லை என்பது அவர்கள் பெரும்பகுதி மக்களின் மொழியையும் கூட ஊமையாக்கவே விழைந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆங்கிலம் நம் சுதந்திரத்துக்குப் பின்பான நிர்வாகத்தின், கல்வியின், கார்ப்பரேட் வேலைகளின் மொழி. மக்கள் இதற்காகவே மொழியைக் கற்றுக் கொண்டனர் எனும்போது நாம் பெயரளவுக்கே சுதந்திரம் பெற்றோர், கறுப்புத் தோல் வெள்ளையர்களே நம்மை இன்று ஆளுகின்றனர், அவர்கள் மக்கள் சிந்திப்பதையோ, பேசுவதையோ எழுதுவதையோ விரும்பவில்லை என்பது புலப்படுகிறது. 

இந்த வினோதமான சூழலை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம் – நம்மை இப்போதும் வெள்ளையர்களின் ஆவியே ஆள்கிறது. ஆகையால் நாம் அவர்களின்  கண்வழியே நம் மொழியையும் பண்பாட்டையும் தன்னிலையையும் காண்கிறோம். ஆகையால் நம துண்டுப்பட்டுப் போகிறோம். நகுலனின் நிழலைப் போல நம்மையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோம். அந்த பதற்றம் நம்மைச் சதா ஆட்கொள்கிறது. நம்மை நாம் மிகுந்த கழிவிரக்கத்துடன் நோக்குகிறோம். இந்த தாழ்வுணர்வும் ஆளும் வர்க்கத்தின் திரள் மீதான அச்சமும் விலக்கமும் சேர்ந்து நம்மை ஊமைகளாக்குகின்றன. காலனிய ஆதிக்கத்தால் நம்மைப் போல நூற்றாண்டுகளாக பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகளின் மக்களுக்கு இப்பிரச்சினைகள் இல்லை. அவர்கள் பேசும், எழுதும் மொழிக்கு இயல்பாகவே ஒரு தேசிய அங்கீகாரம் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஏற்பட்டுவிடுகிறது. மனதளவிலும் தேசிய அளவிலும் நாம் ‘அடிமைகள்’, அவர்களோ ‘சுதந்திரமானவர்கள்’. அவர்களது ஆன்மீக உடைதலும் கூட தனிமனிதனுக்கும் தன் இருப்புக்குமான பிரச்சினையாகவே தோன்றுகிறது (இருத்தலியம்). ஆனால் நம்முடையதோ தேசிய அடையாளத்துக்குள் வர முடியாத, அரசியல் பிரஜை அடையாளம் கிடைக்காத ஏக்கத்தில் இருந்து தோன்றுகிறது (காலனியம் – பின்காலனியம்). அவர்களுக்கு கிடைத்துள்ள முகமையை நம் அரசுகள் நமக்கு பல நூற்றாண்டுகளாகவே தரவில்லை. 

இதன் விளைவாக நம் இலக்கியத்துக்கு என்று சந்தையோ, அங்கீகாரமோ சர்வதேச கவனமோ விருதுகளோ கிடைப்பதில்லை. இலக்கியவாதிகள் நம் நாட்டில் இலக்கியவாதியாகவே வாழ முடியாது. ஏனென்றால் பிரஜையாகவே நாம் இந்த தேசத்தில் முழுமையான முகமையையும் சுதந்திரத்தையும் உணர்வதில்லை (ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில்). இந்திய இலக்கியத்தைப் பரவலாகப் பார்கையில் அது இந்திய பிரஜை என்றால் யார், இந்தியத் தன்னிலை என்பது யாரெனும் கேள்விகளுக்கு சுதந்திரத்துக்குப் பிறகு வலுவாக எழுப்பவில்லை என்பதைக் கவனிக்கலாம். நம் வரலாற்றின் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் எதிர்கொள்ளும் ஆன்மீக நெருக்கடிகளை, நம்மைப் புரட்டிப் போடும் பொருண்மையான, தொழில்நுட்ப மாற்றங்களை நாம் நம் எழுத்தில் எதிர்கொள்வதில்லை. அமெரிக்க, இங்கிலாந்து இலக்கியத்தில் இது எளிதாக நடக்கிறது. நமக்கும் நம் வாழ்க்கைக்குமான மிகப்பெரிய இடைவெளியே நம் இலக்கியத்துக்கும் நம் தேசத்துக்கும், இங்குள்ள வாழ்க்கைக்கும் இடையே உள்ளது. அதனால் சமகால இந்திய இலக்கியத்தை மொழிபெயர்ப்பில் படிக்கும் ஒருவரால் இங்கு கடந்த கால்நூற்றாண்டில் நடந்த பாரித்த மாற்றங்களை, அவற்றின் மீதான விமர்சனங்களைப் புரிந்துகொள்ள இயலாது. 9/11 தாக்குதல்களைப் பற்றியே பல அமெரிக்க நாவல்களில் விமர்சனங்களும் குறுக்குவெட்டுச் சித்திரங்களும் வருகின்றன. ஆனால் இங்கு நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மக்கள் மனத்தை உலுக்கினாலும், வெள்ளம், இடப்பெயர்வு, இயற்கைப் பேரழிவுகள் நம்மை அசைத்தாலும் நம் இலக்கியத்தில் அவை பரவலாக உருவகமாவதில்லை. ஏனெனில், ஒரு பிரஜையாக, தனிமனிதராக நாம் ஒரு கண்ணாடிச் சிறைக்குள்ளே நீண்ட காலமாக வாழ்கிறோம். நமது அன்றாட உலகம், நம் வேலையிடம், குடும்பம், சாதி வரலாற்றைத் தாண்டி நம்மால் இந்த தேசம், அதன் அடையாளம், அதன் தத்துவச் சிக்கலைப் பற்றிப் பேச முடிவதில்லை (மலினமான தொன்ம மிகுபுனைவுகள் எழுதுவதைத் தவிர). 

இந்த பின்நவீனச் சிக்கலில் இருந்து நாம் ஒருநாள் மீண்டு வரும்போது நம் அரசியலிலும் இலக்கியத்திலும் நமக்கென்று ஒரு இடம், நம் ஆன்மாவில் நாம் வாழ்வதற்கென நமக்கென்று சொந்தமான ‘வீடு’ உருவாகும் என கனவு காண்கிறேன். 

***

ஆர். அபிலாஷ்: 1980இல் பத்மநாபபுரத்தில் பிறந்தார். ஸ்காட் கிறுத்துவக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முறையே இளங்கலை, முதுகலை பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றார். அனைத்து முன்னணி இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இதுவரை நான்கு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்புகள், வாழ்க்கை சரிதை, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கத் தொகுப்பு உள்ளிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் 40 நூல்களுக்கு மேல் பிரசுரித்திருக்கிறார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014இல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.  2016இல் பாஷா பரிஷத் விருதும் இவரது இலக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் Plop: Notes on Heidegger எனும் அபுனைவு நூலும், சில ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். மின்னஞ்சல்:abilashchandran70@gmail.com

கவிஞரும் ராட்டையும்

0

மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி

தமிழில்: சுபஶ்ரீ முரளீதரன்

சில நாட்களுக்குமுன் சர் ரவீந்த்ரநாத் தாகூரின் ராட்டைப் பற்றிய விமர்சனம் வெளியான பொழுதே அதற்கு என்னை பதிலளித்துவிடும்படி பல நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்பொழுது வேலை நிமித்தமாக மிகவும் பரபரப்புடன் இருந்ததால் என்னால் அதை முழுமையாக படிக்க முடியவில்லை. ஆனால், அதன் போக்கு எத்தகையது என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு படித்திருந்தேன். அதற்கு உடனடியாக பதிலளிக்கும் அவசரம் எனக்கிருக்கவில்லை. ஒருவேளை எனக்கு நேரமிருந்து, அதற்கு நான் பதிலளித்திருந்தாலும் அதை கவனத்தில் கொள்ளுமளவுக்கோ, பொருட்படுத்தவோ முடியாத நிலையில் அதை படித்திருந்தவர்கள் கிளர்ச்சியுடன் இருந்தனர். ஆகவே கவிஞரின் ராட்டை பற்றிய விமர்சனத்திற்கு உணர்ச்சிபூர்வமானதாக அல்லாமல் நிதானத்துடன் அணுகி பதிலளிக்க வேண்டிய நேரமாக இதைத்தான் நினைக்கிறேன்.

ஆச்சார்யா ரே அவர்கள், கவிஞர் மற்றும் ஆச்சார்யா சீலே அவர்களின் ராட்டைப் பற்றிய நிலைப்பாட்டிற்கான விஷயத்தில் கடைபிடித்த பொறுமையின்மைக்கும், எனது அதீதமான மற்றும் தனித்துவமான ராட்டை மீதான அன்பிற்கும் விடுத்த மென்மையான கண்டனமாகவே கவிஞரின் விமர்சனத்தைக் கொள்ளவேண்டும். கவிஞர் அவர்கள் ராட்டை மீதான பொருளாதார மதிப்பை மறுக்கவில்லை என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதோடு அவர் இந்த விமர்சனத்தை எழுதிய பிறகுதான், அகில இந்திய தேசபந்து நினைவுச் சின்னம் எழுப்புவதற்கான வேண்டுகோள் குறித்தான முழுமையான விவரங்களைப் படித்துப்பார்த்த பின்னர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார். அதே வேளையில் எனக்கு உவப்பை ஏற்படுத்தாது என்ற வகையில் அவர் ராட்டைப் பற்றிய தன் கருத்தை வெளியிட்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். அதனால் என்ன வெளிவரவிருக்கிறது என்பது எனக்கு முன்பே தெரியும். அதற்காக நான் வருந்தவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பதாலேயே ஏன் வருத்தப்படவேண்டும்? ஒவ்வொரு கருத்துவேறுபாடும் வருத்தத்தையே அளிக்குமென்றால், எந்த ஒருவரும் மற்றவருடன் எல்லாக் கருத்துக்களிலும் ஒத்துப்போவதென்பது இயலாதபோது வாழ்க்கையே வெறுப்பு நிறைந்ததொரு பொதியாகி, தொல்லைமிக்கதாக ஆகிவிடும். மாறாக நேர்மையான விமர்சனங்கள் எனக்கு உவப்பையே தரும். நண்பர்களுக்குள் கருத்துவேற்றுமைகள் கடந்தும் செழுமையான நட்பு அமைய முடியும். நண்பர்களுக்குள் ஏற்படும் கருத்துவேற்றுமைகளுக்காக தண்டனைகள் எதுவும் தேவையில்லை. மாறாக அத்தகைய கருத்துவேற்றுமைகள் காயப்படுத்துவதாகவோ கசப்புணர்வை ஏற்படுத்துவதாகவோ இருந்துவிடக்கூடாது. கவிஞரது விமர்சனங்களின்மீது எனக்கு அப்படியான எந்தவித கசப்புணர்வும் இல்லை என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 நான் இந்த குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தவேண்டிய கட்டாயாத்தில் இருக்கிறேன். ஏனெனில் இத்தகைய விமர்சனத்திற்கு காரணம் பொறாமைதான் என்ற வகையான வெற்று வதந்திகள் பரவியதனாலேயே. ஆதாரமற்ற இந்தவகையான சந்தேகங்கள் பலவீனத்தையும் சகிப்புத்தன்மை இல்லாமையையுமே வெளிக்காட்டுகின்றன. இத்தகைய ஒரு கொடிய குற்றச்சாட்டின்மீது சற்று கூர்ந்து கவனித்தால் அதன் அடிப்படையையே இல்லாமல் செய்துவிட முடியும். 

கவிஞர் என்மீது எதன் பொருட்டு பொறாமை கொள்ள வேண்டும்? பொறாமை என்பது பகைமை உருவாவதற்கான வழியை வகுத்துவிடுகிறது. நான் என் வாழ்வில் இதுவரை ஒரு கவிதையையும் எழுத முயற்சித்து அதில் வெற்றி பெற்றதில்லை. கவிஞனுக்கான எந்த தகுதியும் என்னிடம் இல்லை. என்னால் அவரது உயரத்தை அடையமுடியாது. அவர் மறுக்கமுடியாத ஒரு அறிஞராக விளங்குகிறார். இன்றைய காலகட்டத்தில் அவருக்கு இணையான ஒரு கவிஞன் இந்த உலகத்தில் இல்லை. என்னுடைய ”மகாத்மா” பட்டத்திற்கும் கவிஞரின் அசைக்கமுடியாத இடத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்களது களங்கள் வெவ்வேறானவை, அவை ஒருபோதும் ஒன்றிணையும் வாய்ப்புகளற்றவை என்பதனையும் சொல்லியாக வேண்டிய தருணமிது. கவிஞர் தான் உருவாக்கிய பிரம்மாண்டமான உலகத்தில் அவரது எண்ணங்களோடு வாழ்பவர். நானோ வேறெவரோ உருவாக்கிய ராட்டையின் அடிமையாக இருக்கிறேன். கவிஞர் தன்னுடைய புல்லாங்குழலிசைக்கு கோபியரை ஆடவைக்கிறார். நானோ என்னுடைய சீதாவை, ராட்டையை,தேடியபடி அவளை பத்துத்தலை கொண்ட அரக்கனாம் ஜப்பான், மான்செஸ்டர், பாரிஸ் இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கவேண்டி அலைந்து கொண்டிருக்கிறேன். கவிஞர் ஒரு படைப்பாளர், ஒன்றை உருவாக்கி, அழித்து, மீண்டும் உருவாக்கக்கூடியவர். நானோ உலாவுபவன், ஒன்றை கண்டுபிடித்து அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே பயணிக்க வேண்டியவன். கவிஞர் உலகிற்கு தினம்தினம் புதியவைகள் மற்றும் கவர்ச்சியானவைகளை வழங்கிக்கொண்டிருப்பவர். என்னால் வெறும் பழைய மற்றும் இற்றுப்போனவைகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே காட்ட முடியும். புதியதாயும் ஜொலிக்கக்கூடியதானவைகளையும் உருவாக்கும் ஒரு மந்திரவாதிக்கு உலகம் ஒரு அற்புதமான மரியாதைக்குரிய இடத்தை கொடுக்கிறது. நான் எனது இற்றுப்போன பொருட்களை வைப்பதற்கானதொரு மூலையை கடினமான உழைப்பின் மூலமாக தேடவேண்டியிருக்கிறது. அதனாலேயே எங்களுக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை. ஆனால், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம் என்பதனை இந்த இடத்தில் பணிவாகவே கூறிக்கொள்கிறேன். 

சொல்லப்போனால் கவிஞரின் விமர்சனம் என்பது அவருக்கு இருக்கும் கவிதை சுதந்திரத்தை குறிக்கிறது. அதை எவரேனும் நேரடியாக அர்த்தப்படுத்திக்கொள்வதாக இருந்தால் அது அவரை ஓரந்தள்ளிவிடக்கூடிய அபாயம் கொண்டது. கவிஞர் பாஸ் தன்னுடைய ஒரு படைப்பில் , சாலமன் தனது முழுமையான மகத்துவங்களிலும் முன்னிலைபடுத்தியவைகள் எதுவுமே தோட்டத்தில் பூத்திருக்கும் ஒரு அல்லிப்பூவின் அழகிற்கு ஒப்பானதல்ல என்று குறிப்பிட்டிருப்பார். அதில் அவர் தெளிவாக குறிப்பிடுவது தோட்டத்து அல்லியின் இயல்பான அழகையும் அதன் கபடமற்ற தன்மையையும். சாலமனுடைய செயற்கையான அணிவகுப்பு என்பது அவனது பாவங்கள் அவனது பல்வேறு நற்செயல்களையும் கடந்து எப்படி விளங்கியது என்பதை ஒப்புமைப்படுத்தி காட்டுவதேயாகும். 

ஒரு பணக்காரன் சொர்க்கபுரிக்குள் நுழைவது என்பது ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது போல சுலபமானதல்ல. இந்த கவிதையில் இருக்கும் கவிதை சுதந்திரத்தை கவனியுங்கள். நமக்கு நன்றாகவே தெரியும் எந்த ஒட்டகமும் ஊசியின் காதுக்குள் நுழைந்ததில்லை என்பதும், பெரும் செல்வந்தனான ஜனகன் சொர்க்கம் சென்றான் என்பதையும். அதேபோல பற்களுக்கு ஒப்பாக மாதுளை முத்துக்கள் சொல்லப்பட்டதையும் நினைத்துப்பாருங்கள். இந்த கவிதை வரிகளை உண்மையென்றெண்ணிவிடும் முட்டாள் பெண்கள் தங்கள் பற்களை கெடுத்துக்கொள்வதோடு முகத்தையும் சிதைத்துக்கொள்வார்கள். ஓவியரும் கவிஞர்களும் தங்கள் படைப்புகளை சற்று மிகைப்படுத்துவது என்பது அவர்களின் படைப்பை முதன்மைபடுத்துவதற்காக மட்டுமே. அந்த வகையில் கவிஞரின் ராட்டைப் பற்றிய கண்டனத்தை அப்படியே புரிந்து கொள்பவர்கள் கவிஞருக்கு அநீதி இழைப்பவர்களாகவும் தங்களுக்கு தாங்களே தீங்கு ஏற்படுத்திக் கொள்பவராகவும் ஆவார்கள்.

கவிஞருக்கு யங் இந்தியாவை படிக்க வேண்டிய தேவையோ அவசியமோ நிர்பந்தமோ கிடையாது. அவருடைய ராட்டையைப் பற்றிய தகவல் என்பது அவருக்கு தேநீர் மேசையிலிருந்து கிடைத்தவைகளேயாகும். அதைக் கொண்டு ராட்டை குறித்தும் அதன் தீவிரத்தன்மையையும் தன் கற்பனையின் அடிப்படையில் அதீதமானது என்றெண்ணியதையும் கண்டனம் செய்திருக்கிறார். 

உதாரணத்திற்கு நான் எல்லாரையும், அதாவது ஆண் பெண் என இருபாலரையும் மற்ற எல்லா வேலைகளையும் தவிர்த்து எல்லா நேரமும் ராட்டையை சுற்ற சொல்வதாக எண்ணியிருந்தால் கவிஞர் தன் கவிதைக்கலையை, விவசாயி தனது கலப்பையை, வக்கீல் தனது அங்கியையும் மருத்துவர் தனது ஆயுதத்தையும் கைவிடச் சொல்வதாக எண்ணியிருந்தால் அது உண்மைக்கு புறம்பானது. நான் யாரையும் எதையும் கைவிடச் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் நாட்டிற்கு செய்யும் தியாகமாக தங்களது நேரத்தில் ஒரு முப்பது நிமிடத்தை ராட்டையைச் சுற்ற பயன்படுத்துமாறு மட்டுமே கேட்டுக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், பட்டினியால் வாடிக்கொண்டு இருக்கும் ஆணையும் பெண்ணையும் எந்த வேலையும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், ஏதாவது வேலை தேவைப்பட்டால், அரை பட்டினியில் வாடும் விவசாயியின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்களது ஓய்வு நேரத்தில் நூற்கச் சொன்னேன். கவிஞரும் ஒரு அரைமணி நேரம் நூற்றாரென்றால் அவரது கவிதைகளும் செழுமையடையும். அது ஏழைகளின் கவலைகளையும் வலிகளையும் இன்னும் வீரியமான வகையில் பிரதிபலிப்பதாக அமைந்துவிடும். 

கவிஞர் ராட்டை நூற்கும் விஷயத்தை தேசம் முழுவதிலும் மரணத்துக்கு இணையானதொரு சம நிலையை உருவாக்கும் பொருட்டு கணக்கிடப்படுவதாகவே எண்ணிக்கொண்டு, அதனாலேயே இந்தியாவிலுள்ள எண்ணற்ற மக்கள், தங்களின் தனித்தன்மையுடன் வாழவேண்டியதின் அவசியத்தை உணரவைக்க  முற்படுகிறார். பிரம்மாண்டமானதும் கழுகுப்பார்வையுடன் கூடியதுமான ஒன்றிற்குப் பின்னால், இயற்கையில் ஒற்றுமையின் அவசியத்தையும், அதன் வடிவமைப்பு மற்றும் தன்மை ஆகியவற்றை தவறாக எண்ணமுடியாதவகையில் ஒருவர் புரிந்துகொள்கிறார். இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. ஏன் இரட்டையர்களாகவே இருந்தாலும் கூட, தவிர்க்கமுடியாத வகையில் மனித இனத்தில் பொதுவானவைகளாக பல விஷயங்கள் இருக்கின்றன. இத்தகைய பொதுத்தன்மைக்குப் பின்னால் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையே எங்கும் வியாபித்திருக்கிறது.

மாற்றமில்லாத தன்மை அல்லது தனித்தன்மை என்ற யோசனையை, சங்கரர் அதன் உச்சபட்சமாக தர்க்கரீதியாகவும் இயற்கை வரம்பிலுமாக ஒரேயொரு உண்மை மட்டுமே இருப்பதாக அறுதியிட்டு கூறினார். இதில் பெயர் தோற்றம் என்பதெல்லாம் மாயை அல்லது மருட்சி என்றதோடு அது நிலையற்றது என்றார். நாம் காணக்கூடியவைகள் போலியானதா என்பது குறித்து வாதிடவேண்டாம். அந்த போலிக்கு பின்னால் இருக்கும் உண்மையை நாம் பார்ப்பதில்லை. நீங்கள் விரும்பும் பட்சத்தில் அவை இரண்டுமே உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். நான் சொல்வதெல்லாம், பல்வகை மற்றும் பல்வேறு என்பதற்குப் பின்னால் மாற்றமில்லாமை அடையாளம் மற்றும் தனித்தன்மை என்றவைகள் இருக்கின்றன என்பதே. பல்வேறு தொழில்களுக்குப் பின்னால் தொழிலின் தவிர்க்க முடியாத ஒற்றுமையும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். விவசாயம் பெரும்பான்மையான மனிதகுலத்திற்கு பொதுவானதல்லவா? அப்படியாகவே நூற்பது என்பதும்கூட மனிதகுலத்தின் பொதுவான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இளவரசன், விவசாயி என்ற இருவருமே உண்பதையும் உடை உடுத்துவது என்ற செயலையும் செய்தாக வேண்டும். இந்த முதன்மையான தேவைக்காக இந்த இரண்டு வேலைகளையும் செய்தாக வேண்டும். இளவரசன், தனக்கும் தனது மக்களுக்கும் உண்மையானவனாக இருந்திடும் பட்சத்தில் தவிர்க்கமுடியாதவகையில் இதனைத் தியாகம் மற்றும் அன்பு என்பதன் மூலமாக செய்துவிடமுடியும். 

ஐரோப்பா இதன் அத்தியாவசியத் தேவையை இந்த தருணத்தில் உணர்ந்திடாது. ஏனெனில், அது ஐரோப்பியரல்லாத சமூகத்தை சுரண்டுவதை ஒரு மார்க்கமாகவே கருதுகிறது. அந்த மார்க்கம் தவறானது என்பதாலேயே விரைவில் அழிந்துபோகக்கூடியது. ஐரோப்பியரல்லாத சமூகம் எப்பொழுதுமே தாங்கள் சுரண்டப்படுவதை அனுமதித்துக்கொண்டிருக்காது. நான் ஒரு அமைதியானதும், மனிதத்தன்மையுடன் கூடியதும் அதனாலேயே அது ஒரு உன்னதமானதாக திகழக்கூடிய ஒரு வழியைக் காட்ட பெருமுயற்சியை செய்துவருகிறேன். இது நிராகரிப்பிற்கு உள்ளாகலாம். இதற்கு மாற்று என்பது ஒருவரையொருவர் வீழ்த்திக்கொள்ளும் இழுபறி விளையாட்டு. பிறகு ஐரோப்பியரல்லாதோர் ஐரோப்பியர்களை சுரண்ட முற்படும்போது ராட்டையின் உண்மைத்தன்மை உணரப்படவேண்டும். நாம் உயிர்வாழ எப்படி இங்கிலாந்திலிருந்து காற்றை இறக்குமதி செய்ய மாட்டோமோ, உணவை இறக்குமதி செய்யமாட்டோமோ அவ்வாறாகவே இங்கிலாந்தில் நெய்யப்பட்ட உடைகளையும் இறக்குமதி செய்யக்கூடாது. கோட்பாட்டை அதன் தர்க்கரீதியான எல்லைக்கு கொண்டு செல்ல நான் தயங்கவில்லை, மேலும் வங்காளம் பம்பாயிலிருந்து அல்லது பங்கா லட்சுமியிலிருந்து கூட தனது துணியை இறக்குமதி செய்யத் துணியாது என்று கூறுகிறேன். இந்தியாவின் மற்ற பகுதிகளையோ அல்லது வெளி உலகத்தையோ சுரண்டாமல் வங்காளத்திற்கு இயற்கையான மற்றும் சுதந்திரமான வாழ்க்கை இந்தியாவின் வேறு பகுதிகளையோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியையும் சுரண்டாமல் வாழவழி கிடைக்க வேண்டுமானால், தனக்கான சோளத்தை விளைவித்துக்கொள்வதைப்போலவே துணியையும் தயாரித்துக்கொள்ள வேண்டும். இயந்திரங்களுக்கு இடம் உண்டு. அவை இங்கு நிலைத்திருக்கவே வந்திருக்கின்றன. ஆனால் அவை தேவையான மனித உழைப்பை விலக்கிவிட அனுமதிக்கக்கூடாது. மேம்பட்ட கலப்பை என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு வேளை ஒரு மனிதன் தன்னுடைய இயந்திர கண்டுபிடிப்பின்மூலம் இந்தியாவின் எல்லா நிலத்தையும் உழுது வேளாண்மையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதனால் பல லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமலாகுமானால் அவர்கள் பட்டினி கிடந்து, சோம்பலுடன் இருந்து ஏற்கனவே இருக்கும் மூடர்களோடு மூடராகிவிடுவார்கள்.  சில மணி நேரங்களிலேயே எண்ணற்றவர்கள் அந்த அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். குடிசைத் தொழிலில் உருவாகும் எந்த முன்னேற்றத்தையும் நான் வரவேற்கிற அதே நேரம் லட்சக்கணக்கானவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இயந்திரத்தின் மூலம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது குற்றம் என்பதையும் நான் அறிவேன்.   

ஐரிஷ் மேற்கோள்கள் நம்மை வெகுதூரத்திற்கு இட்டுச்செல்லவில்லை. பொருளாதார ஒத்துழைப்பின் அவசியத்தை நாம் உணரச்செய்யும் அளவிற்கு அது சரியானது. இந்திய சூழ்நிலைகள் வேறுபட்டவைகள் என்பதாலேயே ஒத்துழைப்பை செயல்படுத்துவதிலும் வேறுபட்ட வகையிலேயே செயல்படவேண்டும். வேதனையில் வாடும் 1,900 மைல்கள் நீளமும் 1,500 அகலமும் கொண்ட இந்த பரந்த இந்திய தீபகற்பத்தின் பெரும்பான்மையான மக்களுக்குப் பொருந்தக்கூடிய வகையில் எடுக்கக்கூடிய ஒத்துழைப்பின் மீதான செயல்பாடுகள் ராட்டையை மையமாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.

சர் கங்கா ராம் என்ற ஒருவர் நமக்காக ஒரு மாதிரிப் பண்ணையை வழங்கலாம், ஆனால் அது வெறும் இரண்டு முதல் மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும் ஒரு ஏழை இந்திய விவசாயிக்கு அதுவுமேகூட சுருங்கிகொண்டிருக்கும்போது அவனுக்கு ஏற்றதான ஒரு மாதிரியாக இருக்க முடியாது. 

ராட்டையைச் சுற்றி, அதாவது தங்கள் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு, ஒத்துழைப்பின் மதிப்பைப் புரிந்துகொண்ட மக்களுக்கு மத்தியில், ஒரு தேசிய ஊழியர் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம், மேம்பட்ட சுகாதாரம், கிராம தகராறுகளைத் தீர்ப்பது, கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் போன்றவற்றோடு நூற்றுக்கணக்கான பிற நன்மை பயக்கும் செயல்பாடுகளுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவார்.

எங்கெல்லாம் ராட்டை நூற்றல் வேலைகள் நியாயமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளும் கிராமவாசிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ப நடக்கின்றன.

கவிஞரின் அனைத்து வாதங்களையும் விரிவாக மறுதலிப்பது என் குறிக்கோள் அல்ல. எங்களுக்கிடையிலான வேறுபாடுகள் அடிப்படைகளெதுவும் இல்லாதவை. கவிஞரின் கூற்றை மறுதலிக்கவில்லை என்றாலும் ராட்டைப் பற்றிய எனது நிலைப்பாட்டை என்னால் தக்கவைத்துக்கொள்ள முடியும். அவர் கேலி செய்திருக்கக்கூடிய பல விஷயங்கள் நான் சொல்லாதவைகள்.கவிஞரின் தாக்குதல் எனது ராட்டைப்பற்றிய நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒரு விஷயம் ஒரே ஒரு விஷயம் என்னை காயப்படுத்தியிருக்கிறது. கவிஞர் தான் தனது வட்டத்திலிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் நான் ராம் மோஹன் ராய் அவர்களை ஒரு சாமானியன் என்ற வகையில் பார்ப்பதாக குறிப்பிட்டிருந்ததுதான். நான் எங்கும் ஒருபோதும் அந்த மிகச்சிறந்த சீர்திருத்தவாதியை அப்படி குறிப்பிட்டதில்லை. கவிஞருக்கு அவர் எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவிற்கு எனக்கும்கூட முக்கியமானவர். நான் ராம் மோஹன் ராய் அவர்களின் பெயரை ஒரு முறை அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டாக் மண்ணில் உச்சரித்ததைத் தவிர வேறெப்போதும் பயன்படுத்தியதாக நினைவில் இல்லை. அதுவும்கூட மேற்கத்திய கல்வி இல்லாமலேயேகூட உயர்ந்த கலாச்சாரத்தை அடைய முடியும் என்று நான் கூறியதாக நினைவில் உள்ளது. யாரோ ஒருவர் ராம் மோஹன் ராயின் பெயரை குறிப்பிட்டபோது அறியப்படாத ஆசிரியர்களுள், எடுத்துக்காட்டாக, உபநிடதங்களுடன் ஒப்பிடும்போது அவர் ஒரு சாமானியன் என்று நான் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இது ராம் மோஹன் ராயை சாமானியனாக பார்க்கிறேன் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மில்டன் அல்லது ஷேக்ஸ்பியருக்கு முன்னால் டென்னிசன் ஒரு சாமானியன் என்று நான் சொன்னால், நான் அவரைப் பற்றி மோசமாக நினைக்கிறேன் என்பதாகாது. இருவரின் மகத்துவத்தையும் நான் மேம்படுத்தியே சொல்வதாகத்தான் கொள்ளவேண்டும். எங்கள் இருவருக்குமிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நான் கவிஞரை மதிக்கிறேன் என்பது அவருக்குமே தெரியும். வங்காளத்தின் மாபெரும் சீர்திருத்த இயக்கத்தை சாத்தியமாக்கியதில் முழு  பங்களிப்பும் அவரையே சேரும் என்ற விதத்தில் அந்த மனிதரின் மகத்துவத்தை நான் சிறுமைப்படுத்துவதற்கான வாய்ப்பேயில்லை. 

-யங் இந்தியா (5-11-1925)

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவரா காந்தி?

0

ஆசை

மீபத்தில் நடைபெற்ற திருநெல்வேலி ஆணவக் கொலையைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இது? இப்போது காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அப்போது எனக்கு இயல்பாகவே தோன்றிய பதில்: காந்தி திருநெல்வேலிக்கு வந்து கவின் வீட்டாருடன் இருந்திருப்பார்; ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியிருப்பார்; அல்லது ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றும்படி உண்ணாவிரதம் இருந்திருப்பார்.

காந்தி தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர். மதநல்லிணக்கத்துக்காக அவர் போராடியதற்குச் சற்றும் குறைவானதல்ல தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டம். இருப்பினும் தற்காலத்தில் காந்தியை தலித் மக்களுக்கு எதிரானவராகவும் சாதியவாதியாகவும் தலித் மக்கள் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது. எந்தத் தரப்புக்காகப் பலமுறை தன் உயிரையும் காந்தி பணயம் வைத்தாரோ அந்தத் தரப்பு இன்று அவரைத் தங்கள் எதிரியாகப் பார்க்கிறது. 1990-வரை இந்த நிலை இல்லை. 1991-இல் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து இந்த நிலை முற்றிலும் மாறுகிறது. தங்களுக்கென்று ஒரு நாயகரை தலித் மக்கள் வரித்துக்கொண்டபோது இயல்பாகவே அங்கே ஒரு எதிர்நாயகர் அல்லது எதிரி உருவாகிறார். துரதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் காந்தி இருந்துவிட்டார். காந்தியைத் தனது எதிரியாக டாக்டர் அம்பேத்கர் பார்த்தார் என்பது உண்மைதான். ஆனால், அதே பார்வையை தலித் மக்களும் வரித்துக்கொள்ளும் அவசியமில்லை. 

சிறுவயது காந்தியின் கேள்விகள்

தீண்டாமைக்கு எதிரான காந்தியின் உணர்வுகள், எண்ணங்கள், போராட்டங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. தீண்டாமைக்கு எதிராக காந்தி சிறுவயதிலேயே பேச ஆரம்பித்துவிட்டார். காந்தியின் சிறுவயதில் அவர்கள் வீட்டுக்கு வரும் துப்புரவுத் தொழிலாளியின் மகன் உக்கா என்ற சிறுவன் வருவான். அந்தச் சிறுவனுடன் காந்தி விளையாடுவது வழக்கம். அதைப் பார்த்த காந்தியின் அன்னை புத்லிபாய், உக்காவைத் தொடக் கூடாது என்று காந்தியை கண்டித்திருக்கிறார். தீண்டாமையை மதம் அனுமதிக்கவில்லை என்று அந்தச் சிறு வயதிலேயே காந்தி கருதினார். “ஏனென்றால் தற்போது தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்த ஒரு படகோட்டிதானே ராமாயணத்தில் ராமன் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தார்? என்று தன் தாயிடம் சிறுவர் காந்தி கேட்டிருக்கிறார். “கடவுள் எல்லோருக்குள்ளும் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று சொல்லப்படும்போது உக்காவை மட்டும் தொடக்கூடாது என்கிறார்களே” என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்திருக்கிறது. தன் தாயிடம் கேட்ட கேள்விதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நோக்கி காந்தி எடுத்து வைத்த முதல் அடி.  

தென்னாப்பிரிக்க அனுபவங்கள் 

தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் குடியிருப்பு, டால்ஸ்டாய் பண்ணை என்று இரண்டு ஆசிரமங்களைக் கண்டவர் காந்தி. அந்த இரண்டு பண்ணைகளிலும் தீண்டாமைக்கு இடமில்லை. அந்தப் பண்ணைகளில் தலித் மக்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட்டனர். எல்லோரும் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும், கழிப்பறை சுத்தம் செய்வது உட்பட. சாதி பிரித்து இந்த வேலைகள் பார்க்கப்படுவது அங்கே கிடையாது. குறிப்பிட்ட சாதியினர்தான் துப்புரவுத் தொழிலாளர்களாகவும் மலம் அள்ளுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் நிலவும் இக்காலத்திலிருந்து சுமார் நூற்றாண்டுகளுக்கு முன்பே அதனை உடைத்து சமத்துவம் கண்டவர் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் கிறித்தவர் வின்சென்ட் லாரன்ஸ். ஒருநாள் அவரது மூத்திரச் சட்டியை (chamber pot) அவர் சுத்தம் செய்ய மறந்துவிட்டார். அதனை எடுத்துச் சுத்தம் செய்யும்படி காந்தி தன் மனைவி கஸ்தூர்பாவிடம் கூறினார். படிப்பறிவில்லாதவரும் ஆச்சாரமானவருமான கஸ்தூர்பா அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அதனால் கோபம் அடைந்த காந்தி, கஸ்தூர்பாவைத் தரதரவென்று இழுத்துச்சென்று தெருவில் விட்டார். அடித்தும்விட்டார். காந்தி, கஸ்தூர்பாவிடம் மூர்க்கமாக நடந்துகொண்ட வெகுசில தருணங்களில் அதுவும் ஒன்று. இந்நிகழ்வைப் பற்றித் தனது ‘சத்திய சோதனை’ சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

காந்தி நடத்திய தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டம்தான் இந்தியர்கள் சாதி, மத, மொழி வேறுபாடின்றி கலந்துகொண்ட முதல் போராட்டம். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 90% பேர் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள். இப்படியாக இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலை நோக்கிக் கொண்டுவந்த பெருமை காந்தியையே சாரும். இதேபோல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போதும் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். 

காந்தியின் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த தலித்தான தரங்கம்பாடி செல்வம் தென்னாப்பிரிக்கப் போராட்டத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இந்தப் போராட்டத்துக்காக 1914-இல் வெளியான நினைவுமலரில் தரங்கம்பாடி செல்வத்தின் புகைப்படமும் பெயரும் இடம்பெற்றிருந்தன. அடுத்த ஆண்டு, காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு தொடங்கிய கோச்ரப் ஆசிரமத்துக்கு தரங்கம்பாடி செல்வத்தின் மகனை அழைத்துவந்து இரண்டு ஆண்டுகள் தன்னுடன் தங்க வைத்திருந்தார்.

தூதாபாய் குடும்பத்தினர்

தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு தென்னாப்பிரிக்க அனுபவத்தில் இந்தியாவிலும் ஒரு ஆசிரமம் நிறுவ முடிவெடுத்தார். அவர் நினைத்த அளவுக்குப் பெரிய இடம் கிடைக்காததால் அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கோச்ரப் என்ற இடத்தில் ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு 1915 ஜூலை 20-இல் ஆசிரமத்தை நிறுவினார். அந்த ஆசிரமம் சபர்மதிக்கு மாறும்வரை சத்தியாகிரக ஆசிரமம் என்ற பெயரில் அறியப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டபோது அந்த ஆசிரமத்தில் 25 பேர் இருந்தார்கள். அதில் 13 பேர் தமிழர்கள்.

உண்மை பேசுவது, அகிம்சையைப் பின்பற்றுவது, பிரம்மச்சரியம், திருடாமை, பொருள்சேர்க்காமை, உணவின் மீது அளவற்ற நாட்டம் கொள்ளாமை, கைத்தறித் துணிகளை அணிவது, தாய்மொழியில் கல்வி கற்பது, மிக முக்கியமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பது என ஆசிரமத்துக்குச் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளில் பலவும், தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பது உட்பட, தென்னாப்பிரிக்கப் பண்ணைகளில் காந்தி பின்பற்றியதுதான். 

கோச்ரப் ஆசிரமத்துக்கு ஒரு ஆண்டுக்கு அப்போதைய மதிப்பில் ரூ. 6,000 செலவு பிடிக்கும் காந்தியின் மீது நன்மதிப்பு கொண்ட மங்கள்தாஸ் கிரிதர்தாஸ் என்ற ஆலை முதலாளிதான் அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். ஆசிரமம் தொடங்கிய புதிதில் அதில் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்று விரும்புவதாக காந்தியின் நண்பரும் சமூக சேவகருமான ஏ.வி.தக்கர் பாபா காந்திக்கு கடிதம் எழுதினார். தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், அவர்களின் குழந்தை லட்சுமி ஆகியோர்தான் அந்தக் குடும்பத்தினர்.

தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களை காந்தி தனது ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வதற்கு ஆசிரமத்தினரிடமிருந்து, குறிப்பாக கஸ்தூர்பாவிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி காந்தி அவர்களைச் சேர்த்துக்கொள்கிறார். ஆனால், அவர்கள் அங்குள்ள பொதுக்கிணற்றில் நீர் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் தனக்கும் தண்ணீர் வேண்டாம் என்கிறார் காந்தி. அவருடைய மருமகன் முறையில் இருந்த மகன்லாலும் மகன்லாலின் மனைவியும் தூதாபாய் குடும்பத்தைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். காந்தி பதில் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆன்மீகக் காரணங்களுக்கு அல்லாமல் ஒரு பொதுக் காரியத்துக்காக காந்தி இருந்த முதல் உண்ணாவிரதம் தீண்டாமைக்கு எதிரானதுதான். இந்தச் சூழலில்தான் ‘நாம் நண்பர்களாகவே பிரிந்துவிடுவோம்’ என்று கஸ்தூர்பாவை மிரட்டி அவரைப் பணிய வைக்கிறார் காந்தி. கோச்ரப் ஆசிரமத்தில் தூதாபாய் குடும்பத்தினர் சேர்ந்த அன்று அவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. அவர்கள் உண்டுமுடிந்தவுடன் அவர்களது தட்டுகளை ஒரு சிறுவன் எடுத்துச்சென்று கழுவிவைக்கிறான். அந்தச் சிறுவன் யாரென்று தூதாபாய் அங்கிருந்தவர்களைக் கேட்கிறார். அது காந்தியின் மகன் ராமதாஸ் காந்தி என்கிறார்கள். தூதாபாய் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார். இப்படியாக, தீண்டாமைக்கு எதிரான மனோபாவத்தைத் தன் பிள்ளைகளிடமும் ஆழமாக விதைத்தவர் காந்தி.

கோச்ரப் ஆசிரமப் பிரச்சினை அத்துடன் முடியவில்லை. தூதாபாய் குடும்பத்தினர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் புரவலர் மங்கள்தாஸ் காசோலை அனுப்புவதை மூன்றாம் மாதத்திலேயே நிறுத்திவிட ஆசிரமம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அப்போது ஒருநாள் சத்தியாகிரக ஆசிரமத்துக்கு வெளியே ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் இருந்த இளைஞர் ஒருவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையொன்றைக் கூப்பிட்டு காந்தியை வெளியே அழைத்துவரச் சொல்கிறார். காந்தியிடம் “இந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இதை நடத்துவதற்கு நீங்கள் மிகவும் சிரமப்படுவதையும் கேள்விப்பட்டேன். இதற்கு ஏதாவது உதவ விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். மறுநாள் அந்த கார் வருகிறது. காரில் இருந்தபடியே காந்தியிடம் 13 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறார். தற்போதைய மதிப்பில் பல லட்சங்களைத் தொடும். அந்த இளம் புரவலரின் பெயர் அம்பாலால் சாராபாய். இத்தனைக்கும் அவர் ஆசிரமத்தின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை.

அகமணத் திருமணத்துக்கு எதிராக காந்தி

ஒரே சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி எடுத்த முடிவு, அம்பேத்கரால் இந்து மதம் அழிந்துவிடாமல் தடுப்பதற்கான தந்திரம்தான் என்று சமீபத்தில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதியிருக்கிறார். இது காந்தி குறித்த வரலாற்றுப் புரிதலின்மை, காந்தி கெட்ட நோக்கம் கொண்டவர்தான் என்ற மனச்சாய்வு போன்றவற்றின் விளைவு. பூனா ஒப்பந்தத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே தன் ஆசிரமத்தினருக்கு காந்தி விதித்த புதிய விதிமுறை என்ன தெரியுமா? “ஒரே சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது” என்பதுதான். போகப் போக இந்த விதிமுறையை மேலும் கூர்தீட்டிக்கொண்டே வந்து, “மணமகள் ஆதிக்க சாதியாகவும் மணமகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அத்தகைய திருமணங்களுக்குத்தான் நான் செல்வேன். அத்தகைய திருமணங்களுக்குத்தான் என் ஆசிர்வாதம் கிடைக்கும்” என்றார். இதெல்லாம் தந்திரமா? அவர் கூறியபடியே நடந்துகொள்ளவும் செய்தார். அவர் ஆசிரமத்தில் வளர்ந்த தூதாபாயின் பெண் லெட்சுமிக்கும் மாருதி ஷர்மா என்ற ஆந்திர காந்திய பிராமணருக்கும் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொண்டு காந்தி ஆசிர்வாதம் செய்தார். இவ்வளவு ஏன், அந்த முடிவு எடுத்தபின் தன் சொந்த மகன் தேவதாஸ் காந்தியின் திருமணத்துக்குக் கூட காந்தி செல்லவில்லை. தேவதாஸ் பனியா இனத்தவராகவும் அவரது மனைவியான ராஜாஜியின் மகள் பிராமண இனத்தவராகவும் அது ஒரு சாதி மீறிய கல்யாணம்தான் என்றாலும் இரண்டு பேருமே ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தி அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. காந்தியின் அழைப்பை ஏற்று இப்படிச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் குறிப்பிட வேண்டுமென்றால் டி.வி.எஸ். ஐயங்காரின் மகள் சௌந்திரம். இவர் கேரளத்தின் ஜி.ராமச்சந்திரன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திருமணம் செய்துகொண்டார். சௌந்திரம் ராமச்சந்திரன்தான் காந்தி கிராமத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

அம்பேத்கருக்கும் முன்பே…

டாக்டர் அம்பேத்கரை எதிர்கொண்ட பிறகுதான் காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார் என்றொரு கருதுகோள் பரவலாக முன்வைக்கப்படுகிறது. பூனா ஒப்பந்தம் செய்துகொண்ட ஆண்டு 1932 என்றால் வைக்கம் போராட்டம் நடந்தது 1924-இல். இந்தப் போராட்டத்தில் காந்தியின் பங்கு சாதாரணமானதல்ல. ஆனால், வைக்கம் போராட்டத்தைப் பெரியாரியர்கள் சொந்தம் கொண்டாடுவதுபோல் இன்று காந்தியர்களோ காங்கிரஸோ சொந்தம் கொண்டாடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. வைக்கம் போராட்டத்தில் காந்தியின் பங்கைப் பற்றித் தெரிந்துகொள்ள வரலாற்று ஆய்வாளர் பழ. அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ (2020, காலச்சுவடு பதிப்பகம்) என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

மகத் சத்தியாகிரகத்துக்கு ஆதரவு

பூனா ஒப்பந்தத்துக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் மகத் சத்தியாகிரகம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் பெயரிலேயே சத்தியாகிரகம் இருப்பதை கவனியுங்கள். காந்தியிடமிருந்து தான் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கூறினாலும் அவர் நடத்திய போராட்டத்தை அவர் சத்தியாகிரகம் என்று அழைத்தார் என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மகத் சத்தியாகிரகப் போராட்டப் பந்தலில் இடம்பெற்ற ஒரே படம் காந்தியுடையது. அந்த சத்தியாகிரகம் நடைபெற்றபோது காந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது அவர் தென்னிந்தியப் பயணத்தில் இருந்ததால் அவரை கர்நாடகத்தின் நந்திதுர்கம் வாசஸ்தலத்தில் ஓய்வெடுக்கும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தினார். அப்போது மகத் சத்தியாகிரகம் பற்றி காந்தியின் நண்பர் அவருக்குக் கடிதம் எழுதுகிறார். மகத் நகராட்சியில் உள்ள பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தண்ணீர் குடிக்க விடாமல் அங்குள்ள ஆதிக்க சாதியினர் தடுத்துக்கொண்டிருந்த சூழலில், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் நீர் அருந்துவதற்காக நடந்த போராட்டம் அது.

மகத் சத்தியாகிரகம் பற்றி காந்தி தனது யங் இந்தியா இதழில் இப்படி எழுதினார்: “டாக்டர் அம்பேத்கர், மகத் நகராட்சியில் உள்ளா குளத்தில் தண்ணீர் குடித்துத் தாகம் தீர்த்துக்கொள்ளும்படி ஒடுக்கப்பட்ட மக்களை அறிவுறுத்தியது முழுக்க முழுக்க நியாயமானதே… தீண்டாமைக்குப் பின்னால், எந்த நியாயமான காரணமும் இருக்கவே முடியாது. மனிதத்தன்மையற்ற அமைப்புதான் அது. தடுமாறிக்கொண்டிருக்கும் அந்த அமைப்பு, தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வைதீகத்தின் மூர்க்கமான சக்தியின் ஆதரவைத் தேடுகிறது” என்றார்.

இந்து மதம் மறைந்துபோக வேண்டும்

காந்தி தனது பயணங்களின்போது அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் பேசத் தவறியதே இல்லை. அவர் மேற்கொண்ட தென்னிந்தியப் பயணத்தில் தீண்டாமைக்கு எதிராக இன்னும் காட்டமாகப் பேசுகிறார். பேசுவது மட்டுமல்லாமல், அவரது கூட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்தால் மற்ற எல்லோரும் அவர்களுடன் கலந்து உட்கார்ந்தால்தான் மேற்கொண்டு நான் பேசுவேன் என்பார் காந்தி.

நாகர்கோவில் கூட்டத்தில் காந்தி இப்படிப் பேசுகிறார்: “சம்ஸ்கிருதத்தில் எழுதியிருக்கும் எல்லாமே நமது சமூக நடத்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை அறத்துக்கு எதிரானது எதுவோ நமது பகுத்தறிவுக்குப் புறம்பானது எதுவோ அது எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சாஸ்திரங்கள் என்ற பெயரில் தம்மை நிறுவிக்கொள்ள முடியாது” என்று விளாசியிருக்கிறார். கொல்லத்தில் இன்னும் காட்டமாக உரையாற்றுகிறார்: “தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் கொந்தளிப்பில் ஒன்று தீண்டாமை ஒழிந்துபோக வேண்டும் இல்லையேல் இந்து மதம் மறைந்துபோக வேண்டும்” என்கிறார். இதேபோல் முப்பதுகளின் இறுதியில் “சாதி ஒழிந்தாக வேண்டும்” என்கிறார் காந்தி. பேரா. டி. தர்மராஜ் சொல்வதுபோல் காந்தி தந்திரமானவராக இருந்திருந்தால் இந்து மதத்தின் அடிப்படையான சாதியை ஒழிந்துபோக வேண்டுமென்று கூறியிருப்பாரா?

காந்தியின் ஐந்து விரல்கள்

தன் பேச்சின் பாணியை இடத்துக்குத் தகுந்த மாதிரியோ சூழலுக்குத் தகுந்த மாதிரியோ பேசுவது காந்தியின் வழக்கம். சில இடங்களில் தன் கையை உயர்த்தி, ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டுவார். முதல் விரலை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு “இதுதான் தாழ்த்தப்பட்டோருக்கான சமஉரிமை” என்பார். இரண்டாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இதுதான் கைராட்டையால் நூல்நூற்பது” என்பார். மூன்றாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது மது உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொள்ளாமை” என்பார். நான்காவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது இந்து-முஸ்லீம் நல்லுறவு” என்பார். ஐந்தாவது விரலைப் பிடித்துக்கொண்டு “இது பெண்களுக்கான சம உரிமை” என்பார். மேலும், “கையானது மணிக்கட்டால் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மணிக்கட்டுதான் அகிம்சை” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திவிடுவார். மக்கள் கூட்டமும் நீண்ட பேச்சொன்றைக் கேட்டது போன்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும்.

ஆலயங்களும் காந்தியும் 

பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தி முழுமூச்சாகத் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக இந்தியர்களின் மனதில் தீண்டாமை ஒரு பாவம் என்ற உணர்வை அவர் ஆழமாக விதைக்கிறார். தீண்டாமை ஒழிப்பு நடைப்பயணங்கள், ஆலயப் பிரவேசம் என்று காந்தி இந்து மதத்தின் சனாதனத்தின் மீது பெரும் தாக்குதல் நிகழ்த்துகிறார். எந்தக் கடவுளர்களின் பெயரால் சமூகத்தின் குறிப்பிட்ட சாரார் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றனரோ அந்தக் கடவுளரின் ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் காந்தியர்கள் நுழைந்தனர். இது புரட்சி அல்லாமல் வேறு என்ன? சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று அறிவித்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் இன்றைக்கு இருப்பதைவிட பிற்போக்காகவும் கண்மூடித்தனமாகவும் மக்கள் இருந்த அந்நாட்களில் ஆலயப் பிரவேசம் என்பது பெரும் சாதனை அல்லாமல் வேறு என்ன?

ஒருமுறை காந்தி, ஒடிஷாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிந்துவுடன் அவரும் உள்ளே செல்லவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படாத எந்தக் கோயிலுக்குள்ளும் நான் செல்ல மாட்டேன் என்று அவர் முடிவெடுத்தார். இந்த முடிவு எல்லாருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும் கஸ்தூர்பா 1938-இல் மகாதேவ் தேசாயுடன் காந்திக்குத் தெரியாமல் பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கே சென்றதும் மகாதேவ் தேசாயின் மகனும் சிறுவனுமான நாராயண் தேசாய் கோயிலுக்குச் செல்லக் கூடாது, இது பாபுவுக்கு (காந்திக்கு) பிடிக்காது என்று தடுத்திருக்கிறார். அப்படியும் கேளாமல் அவர்கள் கோயிலுக்குள் சென்றுவிட்டார்கள். ஆசிரமத்துக்குத் திரும்பியவுடன் இதனை நாராயண தேசாய் காந்தியிடம் சொல்லிவிட்டான். இதனைக் கேள்விப்பட்ட காந்தி மிகுந்த வேதனையும் கோபமும் கொண்டார். கஸ்தூர்பாவின் செயலைக் கடுமையாக விமர்சித்து ‘ஹரிஜன்’ இதழில் எழுதினார். அதேபோல் குற்றாலத்துக்கு காந்தி 1934-இல் வந்தபோது அங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று அருவியில் குளிக்காமல் வந்துவிட்டார்.

காந்தி ஆலயப் பிரவேசத்தை முடுக்கிவிட்டதும் இந்தியா முழுவதும் உள்ள சனாதனிகள் கடும் கோபம் கொண்டனர். காந்திக்கெதிராகப் போராட்டங்கள் நடத்துவது, காந்தி வரும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டுவது என்று கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். தமிழ்நாட்டிலும் சனாதனிகள் காந்தி மேல் வெறுப்பையும் எதிர்ப்பையும் கொட்டினார்கள். காந்திக்கெதிராக ‘வருணாசிரம சபை’ என்றொரு சபை நிறுவப்பட்டது. இந்தச் சபையினரின் புரவலர் காஞ்சி சங்கர மடம். ஆலயப் பிரவேசம், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை இந்து மதத்துக்கு எதிரான பாவச் செயல் சென்று சங்கராச்சாரியார் கருதினார். காந்தியிடமே அவர் தீண்டாமைக்கு ஆதரவாக வாதிட்டார். தமிழ்நாட்டில் காந்தி வரும்போது அவரது ஆலயப் பிரவேச நடவடிக்கைகளுக்கு எதிராக சனாதனிகள் நடத்திய போராட்டத்துக்கு உறுதுணையாகவும் சங்கர மடம் இருந்திருக்கிறது. 

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்விதான் விடுதலை கொடுக்கும் என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால், அக்காலகட்டம் என்பது சமூகத்தின் எல்லா நுழைவாயில்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய விடாமல் அடைபட்டிருந்ததைப் போல கல்விக்கான நுழைவாயில்களும் அடைபட்டிருந்தன. காந்தி தொடங்கிய பள்ளிகளிலும் காந்தியைப் பின்பற்றி காந்தியர்கள் தொடங்கிய பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்களில் பெருந்திரளானவர்கள் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்வது அப்போது நிகழ்ந்தது. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு காந்திதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எல்லாவற்றிலும் முட்டுக்கட்டை போட்டார் என்பது அபாண்டம்.

காந்தியின் அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கான பிராமணர்கள் தீண்டாமை ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். இவர்களின் முக்கியமானவர் சுவாமி ஆனந்த தீர்த்தர். இவர் கக்கனின் ஊரான தும்பைப்பட்டியில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசியும் நடவடிக்கைகள் எடுத்தும் வந்தபோது அந்த ஊரின் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டார். தன்னுடைய தொண்டர்களாக இருக்கும் பிராமணர்கள் ஒவ்வொரு ஒரு தாழ்த்தப்பட்டவரின் குடும்பத்துக்குச் சென்று அங்கு இருந்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் வேண்டுகோளை ஏற்று ஆனந்த தீர்த்தர் மதுரைக்கு அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் தங்கியிருக்கிறார். (ஆனந்த தீர்த்தரைப் பற்றி பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையின் லிங்க்: https://tinyurl.com/48zzrnf8) இதுபோல் தங்கள் குடும்பத்திலும் ஒரு பிராமணம் வந்து தங்கியதாக கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி மீது கொலை முயற்சி

காந்தி மீது மொத்தம் ஏழு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழாவது கொலை முயற்சி வெற்றிகரமாக காந்தி படுகொலையாய் நிறைவடைந்தது. அவர்மீது முதல் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா?

ஆண்டு 1934. அதாவது, காந்தி கொல்லப்படுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முந்தி. அவரது ‘ஹரிஜன் யாத்திரை’ உச்சக்கட்டத்தை எட்டியிருந்த தருணம். அப்போது ஜூன் வாக்கில் பூனாவுக்கு காந்தி வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே இந்து சனாதனிகளிடமிருந்து தீவிர எதிர்ப்பு புறப்பட்டது. நூற்றுக்கணக்கான இந்து சனாதனிகள் திரண்டு, முன்னே ஒருவர் கறுப்பு ஆடையணிந்து கறுப்புக் குதிரையில் காந்திக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள் என்று ராமச்சந்திர குஹா தனது சமீபத்திய நூலில் தெரிவிக்கிறார். ‘ஆலய பிரவேச சட்டத்தை எதிர்ப்போம்’, ‘இந்து மத அழிப்பாளரான காந்திக்கு வரவேற்பு கொடுக்காதீர்’ என்றெல்லாம் பதாகைகள் ஏந்திச் சென்றார்கள் என்று குஹா குறிப்பிடுகிறார். 

ஜூன் 25, 1934 அன்று மாலை பூனாவில் உள்ள முனிசிபாலிட்டி அரங்கில் காந்தி பேசுவதாக இருந்தது. அங்கு பெருங்கூட்டம் திரண்டு காந்தியை வரவேற்று அவரது உரையைக் கேட்கக் காத்திருந்தது. 7.30 மணியளவில் கார் ஒன்று அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்தது. அது காந்தி வரும் கார் என்று நினைத்து சாரண மாணவர்கள் வரவேற்பு இசையை முழங்கத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் மேலிருந்து ஒரு வெடிகுண்டு காரை நோக்கி எறியப்பட்டது. அந்தக் குண்டு குறிதவறிக் கீழே விழுந்து வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

பிராமணப் பையனும் மலம் அள்ளுதலும்

காந்தியின் பண்ணைகளிலும் ஆசிரமங்களிலும் எல்லோரும் எல்லா வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதில் கழிப்பறையைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல் எல்லாமே அடங்கும். கழிப்பறையைச் சுத்தம் செய்வது முறைவைத்து நடக்கும். ஒரு தடவை கழிப்பறையை அந்த வாரம் யார் சுத்தம் செய்ய வேண்டுமோ அவர் வரவில்லை. அதனால் அந்தப் பணியை பிராமணரான வினோபா பாவேவும் அவரது தம்பியும் செய்தனர். அதைப் பார்த்துப் பதறிப்போன கஸ்தூர்பா காந்தியிடம் போய் முறையிட்டார். அதைக் கேட்ட காந்தி, “பிராமணர்கள் செய்வதற்கு மலம் அள்ளுவதைவிட சிறந்த பணி வேறு என்ன?” என்றிருக்கிறார். 

1934-இல் காந்தி எரவாடா சிறையில் இருக்கிறார். அப்போது ரத்னகிரி சிறையில் அப்பாசாஹேப் பட்வர்தன் என்ற பிராமணர், காந்தியர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்குகிறார். எதற்காகத் தெரியுமா? அந்தச் சிறையில் கழிப்பறைச் சுத்தம் செய்யும், மலம் அள்ளும் பணியை தாழ்த்தப்பட்ட கைதிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் (இன்றுவரை நிலவும் அவலம்தான் இது). அந்தப் பணியைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் அந்த உண்ணாவிரதம். இதற்காக காந்தியின் ஆசிர்வாதம் வேண்டி ரத்னகிரி சிறையில் இருந்து அப்பாசாஹேப் காந்திக்குக் கடிதம் எழுதுகிறார். காந்தி அதற்குத் தன் பூரண ஆசிர்வாதம் உண்டு என்று பதில் அனுப்புவதுடன், அப்பாசாஹேப் கழிப்பறை சுத்தம்செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றால் தானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று தனது சிறை வார்டனை மிரட்டுகிறார்.

காந்தி மலம் அள்ளுதலை, கழிப்பறை சுத்தப்படுத்துவதை ஏன் எல்லோருக்கும் பொதுவாக்கினார் என்பதை நினைத்துப் பார்க்க வியப்பு ஏற்படுகிறது. இந்தத் தொழிலை இவர்தான் செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து சாதி இழிவு பிறப்பதைக் கழித்துக் கட்டத்தான் அவர் அப்படிச் செய்தார். மேலும், 1938-இல் மதராஸ் மாகாண முதல்வராக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட சிறைக் கைதிகளை மட்டும் சிறையில் கழிப்பறை சுத்தம் செய்யும் நடைமுறையைத் தடுக்கும் சட்டம் கொண்டுவந்தார் என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும். 

டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே பெரும் பிளவு பூனா ஒப்பந்தத்தில்தான் ஏற்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியை டாக்டர் அம்பேத்கர் புகழவே செய்திருக்கிறார். முழுமையான விலகல் முப்பதுகளின் இறுதியில்தான் ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் கருதியதுபோல் காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி அல்ல; உற்ற துணைவர். இருவரும் தீண்டாமையை ஒழிப்பதில் வேறுவேறு கோணங்கள் வைத்திருந்தனர்; ஆனால், இறுதி இலக்கு ஒன்றுதான். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இருவரும் எதிரிகளாக வைக்கப்பட்டிருக்கலாம். இன்றும் அப்படிப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. சமத்துவப் போராட்டத்தில் இருவரையும் தோழர்களாகவே இனிவரும் தலைமுறையினர் பார்க்க வேண்டும்; முக்கியமாக, தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பினர்.

***

ஆசை – இயற்பெயர் தே. ஆசைத்தம்பி. மன்னார்குடியை சேர்ந்தவர். ஆங்கில இலக்கியம் பயின்றவர். கவிஞர், புனைகதை எழுத்தாளர், அகராதியியலர், பிரதிசெம்மையாக்குநர் (எடிட்டர்), பத்திரிகையாளர், சிறார் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். கவிதை, காவியம், சிறுகதைத் தொகுப்பு, பொதுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று இவருடைய ஆக்கங்கள் வெளியாகியிருக்கின்றன. பபாசி வழங்கிய ‘கலைஞர் பொற்கிழி விருது’-2022 (கவிதைக்காக), சென்னை லிட்டரெரி ஃபெஸ்டிவல் 2014ன் ‘எமெர்ஜிங் லிட்டரெரி ஐகான்-2014, சமயபுரம் எஸ்.ஆர்.வி. வழங்கிய ‘படைப்பூக்க விருது’-2023 ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: asaidp@gmail.com