நூலாசிரியர் ரமேஷ் பிரேதன் எழுதிய எட்டாவது நாவல் “அவன் பெயர் சொல்”. இது 2014 இல் யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
நாவல் கட்டுமானத்தில் இன்னொரு பரிணாமமான பின் நவீனத்துவ பாணியில் வந்திருக்கும் படைப்பு. செழுமையான மொழிநடையில் வாசகனை உள்வாங்கும் படைப்பாக தெரிந்தாலும் புரிதலில் கூடுதல் கவனத்தை கோரும். அதீதமான பாலியல் குறிப்பிடல்கள், வன்முறைகள் வாசகனின் சமநிலையை குழப்பவல்லன.
“மெய்யுள்” என்ற கருதுகோளை முன்வைத்த மூத்த எழுத்தாளர் மு. தளையசிங்கம், “கற்பனைக் கோலங்கள் சகலதையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய உருவமாகும். அது தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக, மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்” என்கிறார்.
அதாவது ஏற்கனவே இருக்கும் இலக்கிய கட்டமைப்புகளான கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற வரையறைகள் தகர்ந்து இவை அனைத்தையும் உள்வாங்கிய பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பிரதியாக இந்த நாவலைப் பார்க்கலாம்.
எனது புரிதலில் இந்த நாவலில் பயணிக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் பல்வேறு சாத்தியக்கூறுகளை சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான்.
என்று பல்வேறு கோணங்களில் கேள்விகள் மற்றும் சாத்தியங்களை ஒருங்கே எழுப்பும்.
இந்த நாவலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் விக்கியில் “பின்நவீனத்துவ நாவல்கள் உருவாக்கும் அனைத்து அடிப்படைக்கூறுகளாலும் அமைந்த படைப்பு ’அவன் பெயர் சொல்’ என்றும் இந்நாவலை ஜே.ஜே.சில குறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என வகைப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜே ஜே சில குறிப்புகள் ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கத் தவறிய அங்கீகாரத்தின் அபத்த நாடகத்தை தோலுரித்து வெளிப்படுத்தும் கரு.
இங்கே உலகத்தில் என்று பொதுமைப்படுத்தாமல் புதுச்சேரியில் வாழும் ஒரு பாய் வியாபாரி தன்னிலையில் கடந்த காலத்தை மீட்கிறான். ஆவணப்படம் எடுக்கும் கலைஞனாகவும் கவிஞனாகவும் திகழ்கிறான். அவனின் அக விசாரம் வாழ்க்கையின் குறித்த நிகழ்வுகளை தனது மகளுக்கு எழுதும் கடிதங்களின் தொகுப்பு போல சம்பவங்கள் புனையப்பட்டிருந்தாலும் ஒருவகையில் நேர்கோட்டுத் தன்மை இந்த நாவலில் இருக்கிறது.
குறியீடுகளாக பல கூர்மையான சித்திரங்களை கொடுத்தாலும் அபத்தமான பொது மனத்துக்கு தொந்தரவு கொடுக்கும் காட்சிகளையும் உள்வாங்கியிருக்கிறது.
மனைவி அவனது பெண் குழந்தையுடன் பிரிந்து போவதும் குழந்தை வளர்ந்து பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் கல்வி கற்பதும் அவனின் வெறுமைக்கும் தனிமைக்கும் காரணமாக இருக்கிறது. அசாதாரணமான எண்ணங்களை நாவலின் பல பாகங்கள் உள்வாங்கி இருக்கின்றன.
சமூக அவலமாக சாராயக்கடையின் அருவருப்பான சித்திரம், சாதியம் சார்ந்த ஏற்றத்தாழ்வு, பெண்ணின் மேல் ஏற்படும் ஈர்ப்பும் விலக்கமும் சார்ந்த பித்துநிலை, காதல்-காமம் ஒப்பீடு, திருநங்கைகள் வாழ்க்கை என்று பல தளங்களில் விரிந்து செல்கிறது.
இலகுவில் மூளைச்சலவைக்கு ஆளாகும் ஒருவனாக மட்டுமில்லாமல் தான் மனநலம் சிதைந்தவன் என்பதை சமூகத்துடன் பொருத்தி நியாயப்படுத்த முயல்கிறான். மனிதர்கள் யாவரும் ஒருவகையில் மனப் பிறழ்வு உள்ளவர்கள் என்று பொதுமைப்படுத்துகிறான். சிக்மான் பிராய்ட் சொல்வது போல மனிதர்கள் அனைவரும் நோயாளிகளே. அது ஆழ்மன இயல்புகளால் வெளிப்படும் நோயையே அவர் கண்டடைந்தார். வர்க்க வேறுபாடுகளால் உழலும் மனிதரை மார்க்ஸ் நோயாளியாக வகைப்படுத்தினார். ஆகவே நோயைக் கண்டடையும் கருவியாக இலக்கியம் உருவாகும் போது அது தன்னளவில் கலையாக மட்டும் இருக்காது. பல்வேறு தளங்களையும் துறைசார் உள்ளீடுகளையும் இலக்கியம் தாங்கிவரும்.
கதைசொல்லி தனக்கு அணுக்கமானவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என்று பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி மகளுக்கு விளங்க வைப்பது அவனின் மனோநிலையைக் காட்டும் உத்தியாகவும் கொள்ளலாம்.
“மழை” ஒரு பெண்ணா குறியீடா என்று தடுமாற வைக்கும் ஆசிரியர் அவனது அகத்தின் மூர்க்கமான ஆசையைத் தீர்க்கும் வகையில் முடிக்கிறார். இறுதியில் இலங்கையில் இராணுவம் இறந்த பெண்களை புணர்ந்ததாக அறிந்ததை அடிமனதில் தேக்கிவைத்து அதுவாகவே மாறும் மனநோயாளியென்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் மகள்.
படைப்பு என்பது செயற்கையானது. அதை உருவாக்கும் மன அமைப்பும் உருவாக்கப்படுவதாக தன்னிலை விளக்கமளிக்கும் கதைசொல்லி யுத்தம் சார்ந்த கருதுகோள்களைக் கற்பனைக் கூறாக முன்வைக்காமல் பிரச்சாரம் செய்யும் பாணியில் முன்னகர்த்துகிறார்.
சார்புநிலையும் ஒற்றைத்தன்மையும்
பொதுமனம் என்ற கருதுகோள் அரசியல் சமூக சமய கட்டமைப்புகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியப் பொதுமனம், தமிழ்ப் பொதுமனம் என்று மனிதர்களின் பண்பை பொதுமைப்படுத்திப் பார்ப்பதும் பேசுவதும் இயல்பு. சில விதிவிலக்குகள் இருந்தாலும் பரந்துபட்ட பார்வையாக இதைத் தவிர்க்க முடியாது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் “ஓம் சாந்தி” என்று பேச்சை முடிக்கும்போதும், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாகிய போதும், சுந்தர் பிச்சை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டபோதும் காசாவில் முஸ்லீம்கள் பாதிக்கப்படும் போதும் பொதுமனம் இந்தியராக தமிழராக முஸ்லீமாக வினையாற்ற முற்படுவதை அவதானிக்கலாம். தன் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எழும் அறச் சீற்றம். தனது இன மத அடையாளத்துடன் ஒருவர் பெற்ற வெற்றியை தன்னுடையதாக சுவீகரிக்கும் மனநிலை. இதனை குழுவாதம் என்றும் சொல்லலாம்.
இது “பக்குவப்படாத மனநிலை” (emotionally immature) என்றுதான் கருதவேண்டும்.
ராம் என்ற ராமசாமி பத்துவயது சிறுவனாக இருக்கும் போது முஸ்லீமாக மதம் மாறுகிறான். அயல் நாடான இலங்கையில் யுத்தம் ஓய்ந்தது. விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் அவனின் ஆழ்மனதில் பெரும் ரணமாக பதிந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுகள் பெரும்பாலான அத்தியாயங்களில் வெளிப்படுத்துகிறான். அந்தப் பாத்திரம் தன்னை ஈழப் போராட்டத்தில் ஈடுபாடுள்ள ஒருவனாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான மனநிலையை இளமைக் காலத்தில் இருந்து வளர்ந்திருக்க வேண்டும் என்ற புரிதல் வருகிறது. அவனின் மனதில் அந்தப் போராட்டத்தை புரட்சியாகவும் பிரபாகரன் மீது மரியாதையும் அவரை மனதில் நாயக பிம்பமாகவும் உருவகித்து இருந்திருப்பதை காட்டுகிறது.
அறச்சீற்றம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின்பால் நியாயமாக வரவேண்டும். அரசியல் கட்சிகள் சார்ந்து செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கமைக்ககும் ஊடகங்கள் போல தனிமனிதர்கள் போல அவனும் இருக்கிறான். நாவலாசிரியரின் அரசியல் கருத்தாகக் கூட வெளிப்பட்டிருக்கலாம். இயக்க ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி எழுதும் சில ஈழ எழுத்தாளர்கள் போல இந்தப் பிரதி ஒற்றைப்படைத் தன்மையாக தனது கருத்துக்களை முன்வைக்கிறது. இலங்கையில் மட்டக்களப்பில் இருந்து வந்து இந்தியாவில் வாழும் ஜலீல் பாய் என்ற முஸ்லீம் நபரின் தற்கொலை போரில் இயக்கத்தின் தோல்வியை சகிக்கமுடியாமல் நிகழ்வதாக ஒரு அத்தியாயம் இருக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானதும் ஒற்றைப்படைத்தன்மைக்கும் உதாரணம். புனைவு என்ற சுதந்திரம் இருப்பதற்காக பொய்கள் கட்டமைக்கும் போது அந்தப் போர்ச் சூழலில் வாழ்ந்து வலிகளில் உழன்றவர்களுக்கு சினம் உண்டாவது தவிர்க்கமுடியாதது. இப்படியான பிரதிகள் வாசிக்கும் போது போலியான பிம்பத்தை எழுத்தாளன் மேல் ஏற்படுத்துவது மட்டுமல்ல பரிதாபப்படவும் தோன்றுகிறது.
***
ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com
(கேரள சாகித்ய அகாடெமி விருது வென்ற கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை)
அரிசி வாங்கிட வரிசையில் நெருக்கி நிற்கிறார் காந்தி; அருகே, பிரம்மாண்ட காரிலேறிப் போகின்றான் கோட்சே! மூட்டைக்கு ரூபாய் ஐம்பது இலாபத்தில், தன் கையிருப்பினை விற்றொழித்திருந்ததால், உலகம்தான் என்னே அழகு என்றெண்ணி, மதுவும் சீட்டாட்டமும் சினேகிதமும் தரும் கிளப்பினை, சீக்கிரம் எட்டிடவே விரையும் மதிப்பிற்குரிய வியாபாரி கோட்சே. அந்தியில் குடிசைக்கு எதை எப்படிச் சேர்ப்பது எனச் சிந்தனையில் நிற்கும் காந்தியைக் காண்கையில், எண்ணிக் கொண்டேன் “ ஐயகோ! இந்த ஏழையைக் கருதியா எண்ணி கைத்துப்பாக்கியில் நிறைத்தேன் விலைமிகும் குண்டுகளை? ஊதினாலே பறந்துவிடும் இந்நிழலின் பின்னாலா சூதாடிக் களிப்பதற்கான அந்தியில் பதுங்கினேன் நான் ?” வரிசையில் நிற்கையில் காரினுள் கோட்சேயைக் கண்டாரா காந்தி? வாயிலிருந்து ‘ஹே, ராம்!’ எனும் கீச்சொலி எழவில்லையே, ஏன்? நேற்று சாயந்திரம் காந்தியைக் கண்டேன் நான் : கிடக்கிறார் பார்க்கின் வாயிலில், நடைபாதை கான்கரீட்டில்! தொண்டையில் சிக்கிடும் மூச்சினால் நெஞ்சு விம்மித்துடித்திட , நீர் கோர்த்த கால்கள் மடங்கிக் கிடந்திட அனாதையாகச் சாகும் அப்பரிதாபத்தைப் பார்த்தபோது கிசுகிசுத்தான்:“பட்டினி!” வேகமெடுத்து நடந்தேன் வீடடைய. நிற்கவேண்டும் வேகமாய்ச் சென்று வரிசையில்; (மனையாளுக்கு மாதம் பத்தாகிவிட்டதிப்போ !) போடுவதென்ன இன்று கோதுமையா? கல்லா? பூசனமா! இன்று காலையில் கண்டேன் கோட்சேவை காந்தியின் பக்கத்தில் நிமிர்ந்த தலையில் வெண்குல்லா வெண் ஜிப்பாவோடு . “செத்த இந்துவை பண்பாட்டு முறைப்படி அடக்க ஆனதைத் தாருங்க”ளென உண்டியல் நீட்டினான் கோட்சே. (தெரியும் : அடுத்த தேர்தலில் வேட்பாளராவேன் என்பதால்தான் இந்தத் தீவிர மக்கள்சேவை விரதம்!) இட்டேன் கால் ரூபாய் அந்த நீட்டின உண்டியலில் நான் மதியம் குடிக்கத்தான் இருக்குமே குழாய்த் தண்ணீர். மாலையில் விருந்தினர் மாளிகையில் இறங்குகிறான் கோட்சே காரிலிருந்து: மந்திரியைக் காண, வந்து சேர்கின்றனர் பிரபலங்கள்; தொழிலதிபர்கள், தரகர்கள், ஓபந்ததாரர்கள், கட்சி பிரமுகர்களும் பின்னே கலெக்டரும். மதுவும் மற்றவைகளும் மரியாதையாய் கொணர்ந்து வைத்தனர் நன்றி மறவாத சுற்றுலா விடுதியினர்! மயக்கும் புன்னகையாள் வந்தாள் சமூக சேவகியும்! இரவின் சிறுபொழுதினை அரைத்தபடி இயங்கிற்று அதிக எடை கொண்ட அவ்வரசு இயந்திரம். அன்னநடையாள் அந்திமவிருந்தாளி கார் ஏறிச் செல்கையில் வழியனுப்பித் திரும்புகையில் வைகறை வெளிச்சத்தில் கேட் சாத்தக் காத்திருக்கும் காந்தியை அடையாளம் தெரிந்திருக்காது மாண்புமிகு கோட்சேவுக்கு. இருப்பினும் துக்கம் கவிந்த ‘ஹே ராம்’ கீச்சொலி காந்தியின் உள்ளம் தாண்டி லேசாக முழங்குகையில் திரும்பி, அதிர்ந்து, நிரந்தரப் பகை கண்டு அவசரமாய்த் திரும்பினான்; பிறகு, கோபத்தில் கத்தினான் கோட்சே: “வேலை வேண்டும் உனக்கெனில் வாய் மூடி இருந்துக்கொள்!” வைகறைக் குளிரினாலா நடுங்குகிறார் காந்தி! உங்களை நான் கொன்றதன் நினைவுதினம்: ‘ரகுபதி’ நல்லிசை குழைய மீண்டும் விடிகையில், ராஜகம்பீரம் மிளிர வருகிறேன் நான் ராஜ்காட்டிற்கு. கேமிரா மின்னல்கண்களைத் திறந்திட பியூன் தாங்கிட நான் வைக்கிறேன் மலர்வளையம் உங்கள் சமாதியில். எழுகிறதா ‘ஹே ராம் !‘ கீச்சொலி? சிலையிலிருந்துதிரும் மலர்களல்லவோ தேம்புகின்றன ‘ஹே, ராம்!’ என. கார் ஏறி நான் திரும்புகையில் வயலில் ஏரோட்டும் உழவனின் பாடல் ‘ஹே, ராம்! ஹே, ராம்’ என்றொலிப்பதுதான் ஏனோ? வேலையிழந்து மில்லின் பூட்டு விழுந்த கேட்டில் கூடி நிற்கும் மக்கள் கூச்சலிடுகின்றனர் ஏன் ‘ஹே, ராம்! ஹே, ராம்!’ என? கொஞ்சம் அரிசி வேண்டி வரிசையில் காத்திருக்கும் இப்பெண்கள் ‘ஹே ராம் ! ஹே ராம்’ என்றல்லவோ முணுமுணுக்கின்றனர்! சட்டைப் பையில் துழாவி எடுத்துத் திறக்கிறேன் துப்பாக்கியினை, ஆசுவாசம் கொள்கின்றேன் நிறைந்திருக்கும் தோட்டாக்களை எண்ணிப்பார்த்து. பிரார்த்தனைக்காக அன்று நான் செல்கையில் பைத்தியத்தின் சொரூபமாக வந்தாய் நீ என் முன்னே, மகனே! காலில் விழ அல்ல, துப்பாக்கியினை எடுக்கத்தான் குனிந்தாய் நீ: ஈய குண்டு மலர்களை பொழிந்தாய் நீ என் மார்பில் உன் உள்ளுறை பலவீனத்தின் குருட்டு ஆங்காரத்தில் துக்கம் கொண்டு இரக்கப்பட்டு ‘ஹே, ராம்’ எனக் கிரீச்சிட்டேன். இன்று நீ நான் அடைந்ததையெல்லாம் வேஷத்தால் உன்னுடையதாக்கி வெற்றிச்செருக்கு கொள்கின்றாய், யாரை முன்னேற்ற இறுதி வரை முனைந்தேனோ அந்த கிராமத்து இந்தியரை இடித்து அரைத்து அக்களிமண்ணால் பொய்யைப் புலமையாக்கி பேராசையைப் பேறெனப் பற்றும் மனிதப் பேய்களைப் படைக்கையில், நடுவே அற்பர்கள் ஆர்பாட்டமாய் வந்து மலர்கொண்டு ஈய நெருப்பின் குண்டுகளை என்மீது பாய்ச்சுகையில், கோபத்தை வென்ற என் ஆன்மாவின் சனாதன சீற்றம் வீறுகொண்டு ‘ஹே, ராம்!’ எனக் கரைமீறுகிறது, கொடியவனே!
***
என்.வி. கிருஷ்ண வாரியர் – கவிஞர், மொழி அறிஞர், பத்திரிக்கையாளர் என பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தவர் என் வி கிருஷ்ண வாரியர். மலையாள இலக்கிய விமர்சனத் துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். கவிதை, கட்டுரை, நாடகம், சிறார் இலக்கியம், விமர்சனம், பயண நூல், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளிலும் படைப்பாற்றல் கொண்டிருந்தார். கவிதை, இலக்கிய ஆய்வு, விமர்சனம் என மூன்று துறைகளில் கேரள சாகித்ய அகாடெமி விருது வென்றுள்ளார். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற மாத்ருபூமி குழுமத்தின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். கல்லூரி விரிவுரையாளர், கேரள மொழியியல் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். 1916 இல் திருச்சூரில் பிறந்த இவர் 1989 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அரவிந்த் வடசேரி – பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்த சிறுகதை ஒன்று மாத்ருபூமி பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆவநாழி எனும் இருமாத இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மின்னஞ்சல் முகவரி : v.aravi.cbe@gmail.com
(வி. அமலன் ஸ்டேன்லியின் வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் நாவல் குறித்த மதிப்புரை)
நம்முடைய அன்றாட வாழ்க்கை தட்டையானது. திரும்பத்திரும்ப நிகழும் சாதாரணமான சம்பவங்களால் ஆனது. அதேநேரத்தில் கற்பனைக்கு நிகரான நாடகீய உச்சங்களை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்வதின் சாத்தியத்தையும் முழுக்க மறுப்பதற்கில்லை. ஆனால் நம்முடைய நிகழ் வாழ்க்கையில் இந்த நாடகீய உச்சங்கள் குறைவாகவும் அரிதாகவும் நிகழ்கின்றன. புனைவோ எப்போதும் கூடுதலான நாடகீய உச்சங்களைக் கோருவதாக இருக்கிறது. பெருவிய நாவலாசிரியரான சாண்டியாகோ ரான்காக்லியோலோ தன்னுடைய ரெட் ஏப்ரல் என்னும் அரசியல் நாவலின் பின்னுரையில் “எல்லா நாவல்களையும் போலவே இந்தப் புத்தகமும் நடந்திருக்கக்கூடிய கதையை விவரிக்கிறது, ஆனால் இப்படித்தான் நடந்தது என்பதை இந்த ஆசிரியர் உறுதிப்படுத்தவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு இலக்கியப் பிரதியின் வடிவங்களும் வாசிப்பு முறைகளும் பன்மைத்துவம் அடைந்திருக்கின்றன. மாறுபடும் வாழ்க்கைப் போக்கை விவாதிக்க ஏற்கெனவே இருக்கின்ற வடிவம் போதாதபோது புதிய வடிவங்களையும் கூறுமுறையையும் நாடுவது இயல்பானதே. ஆனால் வெறுமனே வடிவ மோஸ்தரை மட்டும் நம்பி எழுதப்படும் படைப்புகள் வாழ்க்கையின் உயிர்ச் சாரமற்று வறட்சியான வாசிப்பனுபவத்தையே அளிக்கின்றன. வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் விஷயங்களை வாசகரின் மனதை நோக்கிப் பேசுவது இலக்கியத்தின் நோக்கங்களில் பிரதானமானது.
இந்தப் பின்புலத்தில் ஒரு தன்வரலாற்று நாவலை நாம் எப்படி அணுகுவது? தமிழிலும் பிறமொழியிலும் குறிப்பிடுமளவுக்கு ஏனைய சமூகத்தாரைவிட தலித் தன்வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பொறுத்தவரை வலியும் ஒடுக்குமுறையும் நிறைந்த வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கருவியாக இலக்கியம் இருக்கிறது. பொதுவான நோக்கில், புனைவிலிருந்து தன்வரலாற்று நாவல்களை வேறுபடுத்தும் புள்ளியாக ஆவணத் தன்மை இருக்கிறது. தன் வரலாற்று நாவலாக இருந்தாலும் இந்த ஆவணத் தன்மையைக் கடந்து புனைவின் அழகும் மர்மமும் கூடிய விரிந்த அனுபவத்தை தன் ஒட்டுமொத்தத்தில் அந்த நாவல் வழங்காவிட்டால் அது வெறும் தன்னனுபவ நாட்குறிப்பாகச் சுருங்கிவிடும் விபத்து ஆகிவிடும்.
வி.அமலன் ஸ்டான்லி எழுதி தமிழினி பதிப்பகத்தால் விரிவாக்கிய இரண்டாம் பதிப்பாக இரண்டாயிரத்து இருபத்தி இரண்டாம் ஆண்டு வெளியான “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்” நாவல் தன்வரலாற்று மெய்யியல் நாவலாகச் சுட்டப்படுகிறது. ஐநூறு சொச்சம் பக்கங்களில் சலனங்களற்ற நிதானமான கூறுமுறையில் ஆங்காங்கே தன்னுணர்வு தோய்ந்த கவித்துவத்தோடு அசைவற்றுத் தெரியும் தூரத்து ஆறு போல ஒரு வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாவலின் கூறுமுறையைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு பின்புலத்தில் துலங்கும் வாழ்க்கைச் சம்பவங்களை மட்டும் பார்க்கையில் அவை நிச்சயம் நாடகீய உச்சங்களாகவோ அல்லது அவ்வாறு விரிவாக்கும் சாத்தியத்தைக் கொண்டவையாகவே இருந்தாலும் நாடகீயம் தவிர்க்கப்பட்டு உரையாடல்களே இல்லாத ஒற்றைக்குரலில் மட்டும் நாவல் விவரிக்கப்பட்டிருப்பது ஆசிரியரின் பிரக்ஞைப்பூர்வமான தெரிவுபோலத் தெரிகிறது.
நாவலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அன்றாட வாழ்க்கையின் சாதாரண அனுபவங்களாலும் இளம்பருவத்துக் குடும்பம், நண்பர்கள், வாழ்விடம், பயணங்கள், கல்லூரி, பணியிடம் போன்ற சூழல்களில் கதைநாயகனான ஜெரிக்கு ஏற்படும் அனுபவங்களின் விவரணைகளால் நிறைந்திருக்கும் முற்பகுதி, மற்ற வாழ்க்கைகளிலிருந்து எந்தவிதத்தில் இந்தக் கதை வேறுபட்டிருக்கிறது, இதை ஏன் ஒரு வாசகர் வாசிக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. நாவலின் கூறுமுறை கேள்வியை இன்னும் உரத்துக் கேட்கச்சொல்லித் தூண்டுகிறது. மாறாக மெய்யியல் தேடலோடு கவித்துவமான உள்முகப் பயணமாக விரியும் பிற்பகுதி வாசகருக்கு மன வெளிச்சத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஜெரி தன்னளவில் ஒழுக்கவாதியாகவும் (puritan) இளம்பருவத்தில் பாவக்கோட்பாட்டில் நம்பிக்கையுடையவனாகவும் இருந்தாலும் எதற்கும் அச்சப்படாத முரட்டுத்தனம் கலந்த அறிவாளியாகவும் இருக்கிறான். திராவிட நாத்திகரான ஆளுமைமிக்க தந்தை, காதலித்துக் கலப்புத் திருமணம் புரிந்து கணவரின் கொள்கைகளை ஏற்று பிறகு சூழலின் காரணமாக கிறித்துவத்துக்குத் திரும்பும் ஜெரியின் தாய் ஆசிரியை மேரி, ஜெரிக்கு இன்னொரு தாயாக இருந்த மூத்த சகோதரி சாந்தா, இளம் வயதிலேயே தந்தையோடு முரண்பட்டு சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகரும் மூத்த சகோதரர்கள், நிறைய நண்பர்கள் என்று சற்று இறுக்கம் குறைவான அமைப்பாகவே ஜெரியின் குடும்பம் இருக்கிறது. புற்றுநோயின் காரணமாக மறையும் மூத்த சகோதரி சாந்தாவின் மரணம் ஜெரியின் மெய்யியல் தேடலுக்கான முக்கியமான காரணமாக மாறுகிறது.
ஜெரியின் தேடல் உள்முகமானது மட்டுமல்ல, தேவையுள்ளோருக்கு சேவைபுரியும் சமூக மனப்பாங்கும் ஆறுதலைத் தேடும் மனங்களுக்கு ஆதுரமாகத் தன்னை அளிப்பதும் அவனுடைய இயல்பான குணவார்ப்புகளாக இருக்கின்றன. ஜெரியின் கனிவு மனிதர்களிடம் மட்டுமில்லாமல் பறவைகள், விலங்குகள் என்று பிற உயிர்களிடத்தும் சூழியல் சார்ந்த அக்கறையாகவும் விரிகிறது. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்தாலும் தன்னுள் இருக்கும் தேடலையும் கனிவையும் கைவிடாததாக இருக்கிறது ஜெரியின் வாழ்க்கைப் பயணம்.
மூத்த சகோதரியின் மரணம், காதல் தோல்வி, தாயின் நோய்மை, தந்தையின் துர்மரணம், தோல்வியடைந்த முதல் திருமணம் என்று ஜெரியின் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நிறைய இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் ஜெரி அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதில்லை. பிரச்சனைகளிலிருந்து தப்பி ஓடுவதில்லை மெய்யியல் தேடலில் ஜெரியின் அனுபவங்கள் விரிந்து முதிர்ச்சியடைகிற தருணத்தில் மனிதர்களைவிட காகங்கள், மீன்கள் போன்ற ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையான உயிர்களுடன் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் நற்பேறு ஜெரிக்கு வாய்க்கிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நட்பில் இதமானவனாக இருக்கும் ஜெரி நண்பர்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவனாக இருக்கிறான். நண்பர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று துயரங்களாலும் சிக்கல்களாலும் அவர்கள் சிதைவடையும்போது மீட்டெடுக்கும் முயற்சிகளைச் செய்கிறவனாகவும் இருக்கிறான். அதே வேளையில் ஜெரியின் இரட்டைபோல சித்தரிக்கப்படும் நண்பனான சேவியர் கதாப்பாத்திரம் தனித்த குணவார்ப்பு இல்லாமல் ஜெரியின் நீட்சியாகவே இருக்கிறது. இன்னொரு கண்களின் வழியே ஜெரியின் வாழ்க்கையைச் சொல்வதற்கு மட்டுமே இந்தப் பாத்திரம் பயன்பட்டிருக்கிறது.
தன்னளவில் புனிதவாதியாக இருந்தாலும் சுற்றியுள்ள மனிதர்களிடம் சரி தவறு என்பதைத் தாண்டி இயல்பான கரிசனை கொண்டவனாகவே ஜெரி இருக்கிறான். நாவலில் துணைக்கதைகளாக அமைந்துள்ளவற்றில் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பிரதானமாக இருக்கின்றன. இந்த உறவுகளில் சில சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை, சில ஒழுக்கக் குறைவானது என்று நிர்ணயிக்கப்பட்டவை. சிக்கலுக்குள் அகப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிறவனாகவும் மனப்பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பின் மீது அக்கறையுடையவனாக இருக்கிறான். தன் பெற்றோர்களுக்கு இடையில் நிலவும் நீக்குப் போக்கான உறவைப் புரிந்தவனாக இருக்கிற ஜெரிக்கு அதே உறவுச்சிக்கல் தன் முதல் திருமண வாழ்க்கையில் நேரிடும்போது பக்குவத்தைக் கைவிடாதவனாகவும் இருக்கிறான். தான் வேறுபடுகிற இடங்களில் விலகிவிடுகிறவனாக ஜெரி இருந்தாலும் அந்த வேறுபாட்டின் பொருட்டு எவரையும் வெறுப்பவனாக இருப்பதில்லை.
நகர நிலவெளியின் பின்புலத்தில் தமிழ் நாவல்கள் எழுதப்படுவது குறைவு. அவற்றிலும் நிலவெளியில் தோய்தல் என்ற பண்பு மிகக்குறைவு. இதற்கு மாறாக ஜெரியின் இளம்பருவத்து வாழ்க்கை கழியும் பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் சுற்றம், மேட்டுத்தெரு, அயனாவரம் போன்ற பிரதேசங்களும், மத நல்லிணக்கம் நிரம்பிய பண்டிகைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள், ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கைமுறைகள் என்று சென்னையின் ஒருபகுதிச் சித்திரம் உயிரோட்டத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஜெரியின் வாழ்க்கையினூடே உலகமயமாக்கலினால் சென்னை அடையும் உருமாற்றமும் சொல்லப்படுகிறது. சூழியல் குறித்தும் இந்திய மற்றும் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட சூழியல் விழிப்புணர்வு சார்ந்த முயற்சிகளையும் நச்சுயியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கும் விதங்களையும் அறிகிறோம்.
இந்த நாவலிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் இன்னொரு முக்கியமான கருதுகோள் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய அல்லது மதம் கடந்த மெய்யியல் தேடல். தன்னையறியும் இத்தேடலில் ஜெரிக்கு பெளத்தமும் விபாஸனா தியானமும் இணக்கமான மார்க்கமாகவும் வழிமுறையாகவும் அமைகின்றன. மெய்யியல் தேடலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்று பகுத்தறிவு சார்ந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறையை கொண்டிருந்ததின் நீட்சியாகவே ஜெரியின் மெய்யியல் பயணமும் அமைகிறது. தியானத்தை பூடகப்படுத்தாமல் அந்த அனுபவத்தின்போது உடலில் நிகழும் மாற்றத்தை அறிவியல்பூர்வமாக விவரிப்பது ஜெரியின் அணுகுமுறைக்கு முக்கியமான சாட்சி.
நாவலுக்குள் ஆங்காங்கே வருகின்ற ஜெரியின் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. கவிதையில் மெளனவாசிப்பு என்ற ஒன்று இருப்பதைப்போல கவனமான வாசிப்பையும் பொறுமையான அசைவாங்குதலையும் இந்த நாவல் கோருகிறது. வாழ்க்கை அனுபவங்கள் விவரணைகளாகவும் தன்னுணர்வு மிக்க மெய்யியல் அனுபவங்கள் தரிசனங்களாகவும் நாவலில் வெளிப்பட்டிருக்கின்றன. சிரத்தையான நெடிய விவரணைகளினால் யாவும் விரித்துச் சொல்லப்படுவதால் வாசகப் பங்கேற்புக்கான இடைவெளிகளும் குறைவாகவே இருக்கின்றன. ஒரு இலக்கிய அனுபவம் என்பதைவிட “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்” நாவலை தன்னையறிதலை நோக்கிய உள்முகப் பயணத்தின் கதையாகக் கொள்ளலாம்.
***
குணா கந்தசாமி – எழுத்தாளர் மற்றும் கவிஞர். சென்னையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணுபுரிகிறார். சமகாலத்தில் பல்வேறு மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை (சிறுகதை), புலியின் கோடுகள் (கட்டுரை), உலகில் ஒருவன் (நாவல்), டாங்கோ (நாவல்), மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் (கவிதை) ஆகிய நூல்களின் ஆசிரியர். மின்னஞ்சல் : gunakandasamy79@gmail.com
சிங்கப்பூரில் நல்ல சிறுகதைகள் எழுதப்படுகின்றன, கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆனால் நல்ல நாவல்கள் எழுதப்படுகின்றவா என்ற கேள்வி சிங்கப்பூருக்கு வெளியேயுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் சமீபகாலமாகவே எதிரொலித்து வந்தது. அதற்கு பதில் சொல்லும் வகையில் எழுதப்பட்ட மிகச்சில நாவல்களில் ஒன்று, சித்துராஜின் “மரயானை”.
தற்போதைய நவீன இலக்கிய நாவல்கள் சிக்கலான வடிவங்களையும், அதனினும் சிக்கலான மொழியமைப்பையும் விடுத்து நேரடியான வடிவத்தையும், மொழியையும் கைக்கொள்ளத் துவங்கியிருக்கின்றன. அதேசமயம் இலக்கியப் படைப்புக்கு உரிய கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துவதிலும், வாழ்வு சார்ந்த ஆழமான கேள்விகளை எழுப்பிக் கொள்வதிலும் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கின்றன. இவ்வகையான நாவல்களில் சமீபத்தைய வரவு சித்துராஜின் இந்த நாவல்.
நவீன நாவல்கள், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை விரிவாகச் சொல்வதன் மூலமாகவும், அதன் விஸ்தாரமான வடிவம் மூலமாகவும், தொகுப்புத் தன்மை மூலமாகவும் விரிவடைந்து கொண்டே இருப்பது என்ற பொதுவான புரிதலையும் இந்த நாவல் மூலம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் சித்துராஜ். ஒற்றை வாழ்க்கையை மட்டுமே சொல்லிச் செல்லும் நாவல்களின் காலம் இன்னும் முடிவடையவில்லை. ஒரு வாழ்க்கையைச் சொல்கிறோமா அல்லது பல வாழ்க்கைகளைச் சொல்கிறோமா என்பதைக் காட்டிலும், வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆழத்தையும் செவ்விய மொழியின் மூலமாகவும் கற்பனையின் மூலமாகவும் உயிரோட்டமாகப் படைத்தாலே போதும், அது இலக்கியத்தில் என்றும் நிலைகொள்ளும் என்ற புரிதலை இந்த நாவலை வாசிப்பதனூடாக அடைய முடிகிறது.
ஒரே கதைக்குள் எழக்கூடிய பல கோணங்களையும் கேள்விகளையும் நாவல் முன்வைக்கிறது. இந்நாவல், சுகவனம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூரின் “புக்கிட் பஞ்சாங்” என்ற நிலப்பரப்பின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூர் மக்களின் கதையாகவும் இருக்கிறது. சிங்கப்பூரின் ஆதி தொன்மங்களை உரசிச் செல்லும் கதையாகவும் இருக்கிறது. முடிவில், மரயானையின் கதையாகவும் இருக்கிறது. இப்படி ஒரே கதைக்குள் பலவிதமான உட்குறிப்புகளையும், கதை மாந்தரின் கிளைக் கதைகளையும் ஊடாட விடுவதன் மூலமாக, வலிமையான ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் சித்துராஜ்.
ஒரு மனிதனின் எளிய ஆசையை ஏன் அவனது ரத்த உறவுகளால் நிறைவேற்ற முடியவில்லை? அவனது ஆசையை அடைய அவனுக்கு எது தடையாக இருக்கிறது, முதுமையா? பிள்ளைகளா? சமூகமா? அல்லது அவனது ஆழ்மனமா? என்னும் கேள்விகளுக்குள் பயணப்பட்டிருக்கிறார் ஆசிரியர்.
இறந்து போன மனைவியின் இறுதிச் சடங்கைச் செய்ய ராமேஸ்வரத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறார் சுகவனம். இந்த எளிய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவருக்கு ஏற்படும் தடைகள், அதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதனூடாக அவர் தனது கடந்த காலத்தை நினைவிலோட்டி ஆராய்வது, முடிவில் அவருக்கு ஏற்படும் மனமாற்றம், இப்படியாக ஒரு அடுக்கை இந்த நாவல் முன்வைத்தாலும் அதனடியில் பல அடுக்குகளையும் முன்வைக்கிறது.
சுகவனத்துக்கு இணையானதொரு பிரதான கதாபாத்திரம் அவரது மனைவியான ஜெயக்கொடி. நிஜத்தின் ஊடாகவும் நினைவினூடாகவும் அவள் நாவலில் வளர்ந்து கொண்டே வருகிறாள். ஜெயக்கொடி, சுகவனத்தின் வாழ்வுக்கு ஒளியேற்றி, குடும்பத்தை உருவாக்கி, நல்ல வீட்டை அமைத்து, பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு மணமுடித்து வைத்து, குடும்பத்துக்கே அடிநாதமாக இருக்கிறாள். ஆனால், அவளது எளிய ஆசைகளை சுகவனம் ஒருபோதும் நிறைவேற்றவே இல்லை. ஆணுக்கே உரிய மேலாதிக்க மனப்பான்மை, அதுமட்டுமில்லாமல், தான் ஒரு தலைமை ஆசிரியர், மனைவியோ தமிழாசிரியர் என்று தொழில் ரீதியாக அவளைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் பார்வை என சம்பிரதாயமான செல்லரித்துப் போன கண்ணோட்டத்தோடு ஜெயக்கொடியுடனான மணவாழ்வை வாழ்ந்து முடித்து விட்டிருக்கிறார் சுகவனம். அப்படிப்பட்ட மனிதரையும் அனுசரித்து, நல்லதொரு குடும்பத்தையும் உருவாக்கியளிக்கிறாள் ஜெயக்கொடி. ஆனால், அவர்களுக்கிடையேயான உரையாடல், அன்பு இவையாவும் மெல்ல மெல்ல மறைந்து காணாமல் ஆகிறது.
சுயநலமே உருவான அடுத்த தலைமுறை அவருக்கு மேலும் துன்பங்களை அளிக்கிறது. தன்னுடைய நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் அவரது பிள்ளைகள், அதற்காக ஒரு கட்டத்தில் அவரை சுரண்டி எடுக்கிறார்கள். அவர்களை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியாத சூழலில், சுகவனம் தன் இறந்து போன மனைவியையும் அவளுடனான தனது வாழ்வையும், நினைவில் மீட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். சிறுமையால் நிறைந்த தனது பிள்ளைகளை மீறி அவரால் அவரது ராமேஸ்வரம் கனவை நிறைவேற்ற முடிந்ததா என்பதையே நாவல் பிரதானமான பேசுபொருளாகக் கொள்கிறது.
சுகவனம் வாழ்வு முழுக்க ஒரு இறுக்கமான ஆளுமையாகவே இருந்து விட்டார். அவரது தலைமை ஆசிரியர் பணி அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே அவரது சுபாவமாகவும் மாறிவிட்டது. அதனோடு சேர்ந்து ஆண்மகன் என்ற ஈகோவும் சேர்ந்து, அவரை, மனைவி ஜெயக்கொடியை மதிக்கவே முடியாதவராக மாற்றி விடுகிறது. அவளது இறுதி ஆசையைக் கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு அலைய முடியாத முதுமையின் சங்கடத்தில் அவளது சிகிச்சையை நிறுத்திவிடக் கோரும் மருத்துவர்களிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்து விடுகிறார். ஆனால், இரு முனையும் கூர் கொண்ட கத்தி போல, அதே இறுக்கமும் அன்பின்மையும்தான் அவருக்கு அவரது பிள்ளைகளிடமிருந்து கிடைக்கிறது. ஒருவேளை சற்று நெகிழ்வானவராக அவர் இருந்திருந்தால் அவரது வாழ்வு மேலும் மலர்ச்சியாக இருந்திருக்கக்கூடும். அவரது இக்குணத்துக்கு காலமே அவரைத் தண்டிப்பதைப் போல ரவுடி இளைஞர்களால் அடிபடுகிறார்.
உச்சகட்டமாக, ஒரு பூனையை வளர்க்க முடிவெடுக்கும்போது சுகவனம் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி நெகிழ்வானவராக மாறுகிறார். அவருக்குள் இருக்கும் ஈரம் அன்பின் சுனையாக உருமாறி பூனையிடம் செல்வதை உணர முடிகிறது. சுகவனத்தின் ஆளுமை உடையும் இந்த இடத்தை ஆசிரியர் நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.
*
சுகவனத்தின் கதைக்கு இணையாக, சிங்கப்பூரின் புக்கிட் பங்சாங் வட்டாரத்தின் கதையும் சொல்லப்படுகிறது. புக்கிட் பஞ்சாங்கின் படிப்படியான வளர்ச்சி , அதன் ஆதி தொன்மம், சமகால யதார்த்தம், அதன் மாந்தர்கள், கடைகள், கோயில், சாலை என புக்கிட் பஞ்சாங் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இந்த நாவலில் நிறைந்திருக்கின்றன. அது மட்டுமன்றி, கம்பங்களில் இருந்து அடுக்கு மாடி வீடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது, அதனைத் தொடர்ந்து விளையும் ஆரம்பச் சங்கடங்கள் யாவும் நாவலில் பதிவாகியுள்ளன.
சிங்கப்பூர் ஐந்து விதமான கடல் நாகங்களால் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற சுவாரஸ்யமான தொன்மம் நாவலில் இடம்பெறுகிறது. தீவின் மேற்குப் பகுதியை இரும்பு நாகமும், புக்கிட் பஞ்சாங் பகுதியை பூமி நாகமும், தெற்குப் பகுதியை தீ நிற நாகமும், கிழக்குப் பகுதியை விறகு நாகமும், வடக்குப் பகுதியை நீர் நாகமும் சுமக்கின்றன. இந்தக் கடல் நாகங்கள் அனைத்தும் அமைதியானவை. வரப்பிரசாதிகள். இவை இடம்பெயராமல் இருப்பதால்தான் பூகோள ரீதியான இயற்கைச் சீற்றங்கள் சிங்கப்பூரில் இல்லை என்ற நம்பிக்கையை நாவலில் முன்வைக்கிறார் ஆசிரியர்.
கூடவே பலவிதமான பண்பாட்டுச் செய்திகளும், அரசியல் செய்திகளும் நாவலில் வாசிக்கக் கிடைக்கிறது. சிங்கப்பூர் சாலைகளில் ஒருகாலத்தில் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இணையாக தீபாவளித் தாத்தா என்றொருவர் சில காலம் இருந்திருக்கிறார். Krishna our guide என்றொரு இயக்கம் சார்பாக இதனைச் செய்திருக்கிறார்கள். கூடவே, ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளைகளுக்கு பகவத் கீதை வகுப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.
மலைப்பாம்புகள் மீது சீனர்களுக்கு இருக்கும் பிரியம் வியப்பூட்டுவது. நாலு நம்பர் சீட்டுகளை மலைப்பாம்புகளின் முன்வைத்து தேர்ந்து எடுத்திருக்கின்றனர். பரிசுப் பணம் விழுந்தால், அவற்றுக்கு எலிகளைப் படைத்திருக்கிறார்கள். மேலும் சிலர் மலைப்பாம்புக்குத் தங்கக் கீரீடம் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற தமிழரல்லாத பிற இனத்தினரின் பண்பாட்டுச் செய்திகள் நாவலில் பல இடங்களில் இடம்பெறுகின்றன.
“வெறுமை என்பது பொருட்கள் இல்லாதது அல்ல, நிகழ்ச்சிகள் இல்லாமல் இருப்பதே உண்மையில் வெறுமையானது”, “பரிச்சயமே இல்லாதவையாக இருந்தாலும் கூட நன்கு பரிச்சயமானவைகளைப் போல் தோன்றும் விஷயங்கள் மற்றும் என்றும் அறிந்து கொள்ள முடியாத அன்றாட பரிச்சயங்கள் என்ற இந்த இருவேறு உந்து சக்திகளின் நடுவில் தோன்றும் வெறுமையில்தான் மனித வாழ்க்கை முழுவதும் நகர்ந்து செல்கிறது” போன்ற வரிகளில் இருந்து நாவலை நுட்பமாகப் புரிந்து கொள்ள இயலும்.
சுகவனத்தின் நிகழ்கால வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ஒரு தளத்திலும், பின்னோக்கு உத்தியின் மூலம் அவர் தன் நினைவுகளினூடாக கடந்த காலத்து நிகழ்ச்சிகளை மீட்டிப் பார்ப்பது ஒரு தளத்திலும், புக்கிட் பாஞ்சாங்-இன் நில வரலாறு, தொன்மம், மாறிக்கொண்டேயிருக்கும் அதன் நிலக்காட்சிகள் போன்றவற்றைப் பதிவு செய்வது வேறொரு தளத்திலுமாக, பல்வேறு தளங்களில் கதை வளர்ந்து செல்கிறது.
துவங்கிய இடத்திலேயே நாவலை முடிப்பது, சுவாரஸ்யமான வரலாற்றுப் பண்பாட்டு செய்திகள், இவற்றோடு மனிதர்களின் பல்வேறு உணர்வுக் குவியலையும், சம்பவங்களையும் தனக்கேயுரிய மொழியில் சொல்லிச் செல்கிறார் சித்துராஜ். இது போன்ற நாவல்கள் வெளிவர வேண்டியது சிங்கப்பூர் இலக்கியத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கும்.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com
இணையம் எழுத்தை வெளிக்கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. சமூக வலைதளம், தனியே இணையதளம் என்று நமக்கான, நமது எழுத்திற்கான தனி அடையாளத்தை, அரங்கை எளிமையாக ஏற்படுத்திக்கொள்ளமுடியும். இதனிடையே மின்னிதழ்களின் தேவையை அவதானிக்க முயற்சிக்கிறேன். இலக்கியத்தின் எந்த வடிவமெனினும் கூட்டுச் செயல்பாடாக மாறும் களமாக பத்திரிக்கைகளே அமைகின்றன. ஒரே தடத்தில் வெளியாகும் பலதரப்பட்ட படைப்புகள் சமகாலத்தின் முகமாக பரிணமிக்கின்றன. தனித்த அதிகாரத்திலிருந்து களைந்து கூட்டு இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பைப் பத்திரிக்கைகள் அளிக்கின்றன. மின்னிதழ்கள் அச்சுப் பத்திரிக்கைகளுடைய பக்க அளவின் கட்டுபாடுகளுக்கு மருந்தாக அமைகின்றன. முரண்களும் விமர்சனங்களும் இருப்பினும் அவை சமகாலத்தில் ஒரு களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
யாவரும் இணைய இதழின் மீள்வருகை முன்கூறியவற்றின் மற்றொரு மாதிரி. சமகாலத்தில் வெளியாகும் நேரடிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்புரைகளும், ஈராயிரத்திற்கு பின்னான காலத்தில் எழுத வந்த எழுத்தாளர்களின் எழுத்துப்புலத்தை அறியும் விதத்தில் மேற்கொள்ளப்படும் நேர்காணலுமே முதன்மை நோக்கம். படைப்புகளின் எண்ணிக்கையை கட்டுக்கோப்பாக வைக்கவில்லை. இயன்றவரை அனைவரையும் ஒன்றிணைக்கும் களமாக யாவரும் மின்னிதழ் அமைய வேண்டும் என்பதே நீண்ட கால இலக்கு.
*
சிறப்பு பகுதிக்காக காந்தியை முடிவு செய்து யாரிடமெல்லாம் எந்தெந்த வகைமையில் படைப்புகளைக் கேட்கலாம் என்று ஆலோசனைகளைக் மேற்கொண்டோம். சித்ரா பாலசுப்ரமணியன், காலச்சுவடு அரவிந்தன் ஆகியோர் சிலரைப் பரிந்துரைத்தனர். மறுப்பின்றி காந்தி குறித்து எழுத ஒப்புக்கொண்டு சிறப்பாக கட்டுரைகளை நல்கிய அனைத்து படைப்பாளர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். அரவிந்த் வடசேரி மலையாளத்திலிருந்து கவிதையொன்றையும், ஶ்ரீநிவாஸ் தெப்பல தெலுங்கிலிருந்து சிறுகதை ஒன்றையும் காந்தி மையப்படுத்தியதாக தேர்வு செய்து மொழிபெயர்த்து சிறப்பிதழுக்காக அளித்திருப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. அவர்களுக்கும் எங்களின் அன்பும் நன்றியும். தமிழ் இலக்கியத்தில் காந்தியின் பங்கு குறித்து சிந்தித்தபோது ஶ்ரீனிவாச கோபாலன் க.நா.சுவின் இரண்டு கட்டுரைகளை அடையாளம் காட்டினார். எழுதித் தீராத மையப்பொருள் காந்தி எனில் அவற்றை இயன்றவரை மின்னிதழின் சிறப்பு பகுதியில் உள்ளடக்க வேண்டும் என்று ஆசை பெருகியது. கடைசி தருணத்தில் கால நெருக்கடியை மனதில் கொள்ளாமல் க.நா.சு ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து கொடுத்த பாலா இளம்பிறை மற்றும் அருந்தமிழ் யாழினி ஆகியோருக்கும் ஶ்ரீனிவாச கோபாலனுக்கு யாவரும் மின்னிதழ் அன்பால் கடன்பட்டிருக்கிறது.
இலக்கியப்பகுதியில் பரிசோதனை முயற்சிகளும், இயல்பான படைப்புகளும் ஒருங்கே அமைந்திருப்பது கூட்டுச் செயல்பாட்டின் முகமாக அமைந்திருக்கிறது. ஆரோக்கியமான இலக்கியச் சூழலின் எடுத்துக்காட்டாக மதிப்புரைகளும் புனைவுகளும் அமைந்திருக்கின்றன. முதல் இதழுக்கான திட்டமிடலின் போது லட்சுமிஹர்-க்கான யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இதழில் அவருடைய நேர்காணலை முடிவு செய்தோம். படைப்புகளை மையபடுத்தி தொடங்கிய உரையாடல் பல திறப்புகளையும், தர்க்கங்களையும் எழுப்ப வல்லதாய் அமைந்திருப்பது நல்லூழ். பல திருத்தங்களுக்கு பொறுமையாய் நேரம் கொடுத்த லட்சுமிஹர்-க்கு தனிப்பட்ட நன்றியை பகிர்ந்துகொள்கிறேன். இறுதி நொடி வரை திட்டமிடல்களும் பேராசைகளும் நிரம்பி, இயன்றவரை இதழாக முடிவுசெய்திருக்கிறோம். ஒவ்வொரு படைப்பாளிக்கும் யாவரும் மின்னிதழ் சார்பாக அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
*
ஆகஸ்டு-செப்டம்பர் மின்னிதழை மையப்படுத்தி எளிய போட்டி ஒன்றை சமூக வலைதளத்தில் மேற்கொண்டோம். வாசிப்பை பரந்துபட்டதாக்கவும், குறிப்பிட்ட வகைமைக்குள் சிக்காமல் வாசிக்கும் வகையில் விதிமுறைகளை வைத்தோம். அதைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செய்து படைப்புகளைப் பலருக்கும் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்ற ஹரிகிருஷ்ணன், இப்ராஹிம், அப்பு சிவா, ஆர்த்தி, கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்தையும் நன்றியையும் பகிர்கிறோம்.
*
பின் நவீனத்துவ எழுத்தின் தன்னிகரற்ற அடையாளமான ரமேஷ் பிரேதனின் மறைவு இலக்கியத்திற்கான இழப்பாகிறது. அவரை இழந்து வாடும் நலம் விரும்பிகளுக்கும், வாசகர்களுக்கும் யாவரும் மின்னிதழ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.
*
இலக்கியமும் காந்தியும் ஒன்றை மேவி ஒன்று வளரும் தன்மைகொண்டது. இந்த இதழ் அதற்கு சான்றாக அமையும் என்று நம்புகிறோம்.
(தமிழில் காந்திய இலக்கியம் பற்றி க.நா.சு.வின் மதிப்பீட்டைப் புலப்படுத்தும் இந்தக் கட்டுரை ‘Tamil Literature After Gandhi’ என்ற தலைப்புடன் ‘Gandhi Marg’ (அக்டோபர் 1958) இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை Andal என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். அவர் தரித்துக்கொண்ட நாமங்களில் இதுவும் ஒன்று. – ஶ்ரீனிவாச கோபாலன்)
நடைமுறையில் இந்த மாதிரியானதொரு கருத்தியலைக் கையாளுவதென்பது எனக்கு முற்றிலும் புத்தம் புதிய முயற்சி. இந்த நாடு இன்னமும் வரைபட ஆக்கத்துக்குள் கொண்டுவரப்படவில்லை, கடல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை, உயரங்கலும் ஆழங்களும் குறிக்கப்படவில்லை அல்லது அளக்கப்படவில்லை. என்னை நான் வழி நடத்திச் செல்லும் வழக்கமான அடையாளங்கள் எதுவும் எனக்குத் தென்படவில்லை. எனது மதிப்பீடுகள் அனைத்தும் அகம் சார்ந்ததாகவே இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன், மேலும் அப்படிபட்ட அகம் சார்ந்த மதிப்பீடுகள், அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் இலக்கியத்தில் உள்ளோடியிருப்பதும் தவிர்க்க முடியாததே. இத்துடன் மற்றுமொரு உண்மையையும் பொருத்திப் பார்க்கும் போது, இலக்கியம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மிக அருகாமையில் ஒன்றை வைத்துப் பார்க்கும் போது, மிகைப்படுத்தப்படுகிற சில திரிபுகள் ஏறக்குறைய தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன.
தமிழ் இலக்கிய வெளி பற்றிய பொதுவான சில அவதானிப்புகள் ஒரு வசதியான தொடக்கமாக இருக்கும். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, அதாவது பதினாறில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கிய வெளியானது இலக்கணக் குறைபாடற்றவர்களாகவும் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட மேதைமையைப் போற்றி அதில் நாளும் தொலைந்து போனவர்களாகவும் இருந்த ஆசிரியர்களாலும், பாடகர்ளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தகைய போக்கின் விளைவாக, தமிழ் இலக்கியத்தின் இடைக்கால, நடுத்தரம் மற்றும் கல்வியியல் சார்ந்த ஆளுமை மிக்க மதிப்பீடுகளுக்கு ஊடே இலக்கியமானது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வந்தது.
சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் சென்னையில் நிறுவப்பட்ட ஆங்கிலக் கல்விச் சங்கத்தாலும் (The English Education Society), பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் முன்னோடியாய் தமிழார்வம் காட்டிய கிறித்துவ மிஷனரிகளின் முன்னெடுப்புகளாலும் தமிழுக்கு முதன் முதலாக நவீன தமிழ் அகராதிகள், அகரவரிசைச் சொற்குறிப்புகள், இலக்கண விளக்கங்கள் மற்றும் ஏறக்குறைய முதல்-உரைநடை நூல்களும் வெளிவந்தன. சீர்திருத்தங்கள் வேண்டிய உணர்வு பரவலாகிக் கொண்டிருந்த நேரத்தில், இராம் மோகன் ராய் மற்றும் பல சீர்திருத்தவாதிகளால் பகிரப்பட்ட சமூக சிந்தனைக் கருத்துக்கள் களத்தில் இருந்தபோது, அதேநேரத்தில் மெல்லிய முன்னெடுப்புகளாக அவை உணர்வுபூர்வமானவையாக தமிழ்நாட்டையும் வந்தடைந்து கொண்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் மத மற்றும் சமூகக் கட்டமைப்புகளை எதிர்த்து நின்று உத்வேகம் அளித்துக் கொண்டிருந்த செறிவான எழுத்துக்களும், தமிழ் நிலத்தில் நிலை கொண்டிருந்த தற்போதைய போதாமை உணர்வும் கிளர்ந்தெழுந்து கொள்ள கல்விச் சூழலற்ற மந்தநிலையை மாற்றுவதற்கான உத்தியில் அவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின, வெகு முக்கியமாக அது உரைநடை எழுத்துத் துறையை ஆட்கொண்டது.
நவீனத் தேவைகளுக்கேற்ப தங்களது மொழியை மாற்றுவதற்கான போராட்டத்தில் இறங்கிய போது, தமிழ்ச் சமூகமானது சில நூற்றாண்டுகள் மறதிக்குப் பின், பெருமைகள் வாய்ந்த தங்களது கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வையும் பெற்றது. கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பேச்சு வழக்கில் தெளிவற்ற முறையில் இருந்த பண்டைய தமிழ் நூல்களுக்கான தேடல் அப்போதே தொடங்கியது. முனைவர் சாமிநாத ஐயர் மற்றும் எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை போன்றவர்களின் முயற்சியால் அதுவரை கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள் கொண்ட மற்றும் அறிவார்ந்தவர்களால் தொகுக்கப்பெற்ற தமிழ்ச் செவ்வியல் நூல்கள் தமிழார்வலர்களுக்குக் கிடைக்கப் பெற்றன. சிறந்த எழுத்தாளர் ஒருவரால் ‘பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள்’ (The Tamils Eighteen Hundred Years Ago) என்கிற தலைப்பில் கொண்டு வரப்பட்ட ஒரு சிற்றேட்டின் தொகுப்புகள் மூலமாக, மொழியின் மீதான பற்றும் நாட்டுப்பற்றும் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது உச்சத்தை அடைந்தது.
கடந்த காலப் பெருமைகளை நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது, அது எவ்வளவு திருப்திகரமானதாக இருந்த போதிலும், வளர்ந்து வரும் சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாய் இல்லை, முற்றிலுமாய் பூர்த்தி செய்யவும் முடியாத நிலை. காந்தி இந்திய அரசியல் அரங்கில் நுழைந்து புரட்சிகரமான, ஆனால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் அத்தியாவசியமான இந்திய விழுமியங்களை மீண்டும் வலியுறுத்தி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சித்த போது, ஏற்கனவே கிளர்ந்தெழுந்திருந்த மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தப் போக்குகள் தங்களை தமிழ் நிலத்தில் நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருந்தன. அப்போது இந்தியாவில் இருந்த பிற மொழியியல் சார்ந்த குழுக்களைப் போலவே தமிழர்களும், இந்தக் காந்திய அணுகுமுறையின் வாரிசுகளாக மாறினார், மேலும் விரைவிலேயே தமிழ் எழுத்தாளர்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் காந்திய முறையில் ஒரு சக்திவாய்ந்த முறையில் இணைத்துப் பேசத் தொடங்கி விட்டனர்.
வேறெங்கிலும் தவிர்த்து, மிகக் குறுகிய காலமே வாழ்ந்த தமிழ்நாட்டின் தேசியக்கவியான திரு சுப்ரமணிய பாரதியின் (1889-1921) எழுத்துக்களின் தொகுப்புகளில் மட்டுமே அது வெளிப்படையாய் காணக் கிடைக்கிறது. பாரம்பரிய ஏற்றுக்கொள்ளலுக்கும் புரட்சிகர ஆர்வங்களுக்கும் இடையே நைந்து ஊசலாடிக் கொண்டிருந்த தற்போதைய அதிருப்திகளுக்கு சற்றும் குறையாமல், கடந்த கால மீட்டுருவாக்கங்களின் வாரிசான சுப்ரமணிய பாரதி, காந்தியின் வருகையை வெறுமனே மெலிதானதொரு பார்வையோடு கடந்து விடுகிறார். அதற்கு மேல் எதுவுமில்லை. ஆனால், கவிதை நுண்ணறிவின் வேரினைப் பற்றிக்கொண்டு, வெளிநாட்டவரிடமிருந்து மட்டுமல்லாமல், தனது சமூகத்தில் காலங்காலமாய் நீடித்துக் கொண்டிருக்கும் தீமைகளில் இருந்தும் இந்தியாவை விடுவிக்கும் முயற்சிகளில் இருந்ததால் அவர் போற்றுதலுக்குரியவராகிறார்.
பாரதியும் கூட 1906 –லிருந்து வங்காளப் புரட்சியாளர்களுடனும், பிபின் சந்தர பால் மற்றும் துடிப்பு மிக்க திலகருடனும் ஒத்த மனநிலையோடே இருந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி அல்லாத வேறொரு ஆளுகையின் கீழ் அரவிந்தர் பாண்டிச்சேரி வந்தடைந்து அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோது அவரால் ஈர்க்கப்பட்டவராகவும், கிட்டத்தட்ட அரவிந்தருக்கு முன்னமேயே தன்னை அங்கே நிறுவிக் கொள்ளவும் செய்தார். காந்தியின் சென்னை வருகையின் போது, அவருடனான பாரதியின் ஒரேயொரு புயல் மாதிரியான சந்திப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாரதியின் எழுத்துக்களில் காந்தியின் தாக்கம் மிகச் சொற்பமாகவே காணக் கிடைக்கிறது. காந்தியைப் பற்றிய உற்சாகமான ஐந்து பாராக்கள் கொண்ட ஒரேயொரு கவிதையை மட்டுமே அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
பாரதியின் நட்பு வளையத்தில் இருந்த எழுத்தாளர் வி. இராமசாமி ஐயங்கார் நாற்பதுகள் வரை வாழ்ந்தவர். பாரதி குரல் கொடுத்த சமூகப் போராட்ட வழிமுறைகள் அனைத்திற்கும் அவர் வாரிசு நிலையில் இருந்தார், காந்தி அவர்களின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது, ஆனாலும் வன்முறை சார்ந்த போராட்டங்களில் அவர் அதீத நம்பிக்கைக் கொண்டிருந்தார். வெகுவான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்திருந்த, வலிமையும் முக்கியத்துவமும் வாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தவர் வ. ரா. என்று அழைக்கப்படும் இராமசாமி ஐயங்கார். காந்திக்கும் சுப்ரமணிய பாரதிக்கும் இடையிலான சந்திப்பின் சூழல்களை, அவர் தன்னுடைய ‘சுப்ரமணிய பாரதியின் முழுமுதல் சுயசரிதை’ நூலில் பதிவு செய்திருக்கிறார். வாசலில் இருந்த பாதுகாவலர்களைக் கூட சட்டை செய்யாமல், அறைக்குள் அமர்ந்து இராஜாஜியுடனும் மற்றைய தலைவர்களுடன் காந்தி பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழையும் பாரதி, காந்தியின் அருகே அமர்கிறார், மாலையில் கடற்கரையில் தான் உரையாற்றவிருக்கும் கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா என்று கோரிக்கை வைக்கிறார். மகாதேவ் தேசாயுடன் கலந்தாலோசிக்கும் காந்தி, மாலையில் தனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் இருக்கின்றன என்று சொல்கிறார். ‘அதற்கு நானெதுவும் செய்ய முடியாது’ எனும் பாரதி அங்கிருந்து உடனடியாய் வெளியேறுகிறார். அங்கிருந்து அவர் கிளம்பியதும், காந்தி இராஜாஜியைப் பார்த்து ‘யார் இவர்’ என்று கேட்க, அதற்கு இராஜாஜி, ‘இவர் நமது தேசிய தமிழ்க் கவி’; என்றதாகவும் கூறப்படுகிறது. அடுத்து உடனடியாகப் பேசிய காந்தி, ‘ஓ.. புனித எண்ணங்கள் கொண்டவர். அவர் பாதுக்காக்கப்பட வேண்டிய நமது பொக்கிஷம்’ என்கிறார். உறுதியானதோ அல்லது உறுதித்தன்மை அற்றதோ, இந்த அத்தியாயம் பாரதியின் மீதும் காந்தியின் மீதும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்காகவே.
இருபதுகளில் காந்தியின் தாக்கத்தை உள்வாங்கி தமிழர்களுக்கு அதைத் தங்கள் எழுத்துகள் மூலம் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள் (இங்கே எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளுமைகள் என்று அழைக்கப்படக் கூடியவர்களாக என்னளவில் தெரிந்த சிலரைப் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்) என்று மூன்று முக்கியமான ஆளுமைகளை இங்கே குறிப்பிட வேண்டுமானால் அவர்கள், சி. இராஜகோபாலாச்சாரி, திரு. வி. கல்யாணசுந்தரனார் மற்றும் பி. வரதராஜுலு நாயுடு. இருபதுகளில் காந்தியத் தாக்கத்தில் இருந்து விலகாத நான்காவது நபராக இன்னொருவரை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால், அவர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர். எழுத்துலகில் ஏதும் பெரிய அளவிலான பங்களிப்பு இல்லையென்றாலும் சமகாலத் தமிழ் எழுத்துக்களில் முக்கியமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஆனால் சீக்கிரமாகவே காந்தியக் கொள்கைகளில் இருந்து வெளியேறி பெரும்பாலோர் ஏற்கத் தயங்கும் தனது கொள்கைகளாலும் பழமைவாத உணர்வுகளுக்கு மாறான கோட்பாடுகளுடனும் கிளர்ந்தெழுந்து, கனவுலகத் திராவிட நிலத்தின் கனவுலகத் தந்தையானார். அவரைப் பற்றி இங்கே நாம் பேசவரவில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவைப் (சமீபத்தில் ஐம்பதுகளில் காலம் சென்ற) பற்றியும் நாம் இங்கே பேச வேண்டியதில்லை, அவரும் கூட ஒரு காந்தியவாதியாகவோ அல்லது ஓர் எழுத்தாளராகவோ அதிக காலம் நீடிக்கவில்லை.
இன்னொரு புறம் திரு. வி. கல்யாணசுந்தரனார், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காந்தியவாதியாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர். அவர் ஒரு சீர்திருத்தவாதி, சோசலிஸ்ட், மத மறுமலர்ச்சிக்காகப் போராடியவர், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க தலைவராக செயல்பட்டவர், ஆனாலும் அவரது சிந்தனையானது எப்போதும் காந்திய சித்தாந்தங்களால் செழித்து, தனக்குப் பின்னால் வந்த பெரும்பாலான இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய புத்தமிழில் எழுதியவர். இன்னொரு வகையில் அவருடைய காந்தியப் புரிதல் என்பது உணர்வு பூர்வமான அறம் சார்ந்தது, மேலும் அறிவு சார்ந்த ஆழம் ஏதுமில்லாமல் உணர்வுகளின் அடிப்படையில் பெரிய எண்ணிக்கையிலான பொதுப்படையான எல்லா மதம் சார்ந்த நல்லிணக்கங்களையும் உள்வாங்கியதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளோடு திகழ்ந்தது. காந்தியத்தைப் பற்றிய தனது உள்ளுணர்வை, வாசிப்பை அவர் தனது பெரும்பாலான தளங்களிலும் எழுத்துக்களிலும் பயன்படுத்தினார். அவருடைய எழுத்துக்களில் இருந்து காந்தியைப் பற்றிய ஒரு முழு ஆய்வறிக்கையைக் கூட எழுத முடியும் – தன்னுடைய தூய்மை மற்றும் எளிமை ஆகியவற்றிலிருந்து சமயங்களில் காந்தி கூடத் தவறியிருக்கலாம், ஆனால் திரு.வி.க. தன்னுடைய அனைத்து பொதுவாழ்வு நோக்கங்களிலும் பெரும் விளைவை ஏற்படுத்திய ஒரு சிக்கலான, உணர்வுபூர்வமான தமிழகக் காந்திய அடையாளமாக வாழ்ந்தார். அதிக அளவு கவிதைதன்மை கொண்டதாக அல்லாத தன்னுடைய நீண்ட கவிதைகளில் காந்தியைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பரப்பினார், அதன் மூலம் ஈர்க்கப்பட்ட பெரும்பாலான அவரது வாசகர்களையும் காந்தியை சுவீகரிக்கச் செய்தார்.
மற்றொரு காந்தியவாதியான சி. இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி என்று பொதுவில் அறியப்படுபவர்) இன்றும் நம்மோடு நலமுடன் மகிழ்வோடிருக்கிறார். காந்தியைப் பற்றிய அவரது அணுகுமுறையானது (திரு.வி.க. –வைப் போல் அல்லாமல்) அறிவு பூர்வமானதாகவும், மேலும் ஓர் அரசியல்வாதியாகவும், தீவிர எழுத்தாளராகவும் (மிகைப்படுத்தப்பட்ட?) காந்திய அணுகுமுறைகள் பற்றிய புரிதலை தமிழ் நிலத்திற்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது ; அவர் ஒரு நுட்பமான தந்திரங்கள் அறிந்த தர்க்கவாதி, கொள்கைப்பிடிப்புள்ளவர், பகுத்தறிவாளர், ஐரோப்பிய அறிவுலகத்தோடு கூடிய அறிவுஜீவி. அவரது தோற்றத்தில் கூட ஈ.வெ.ரா.’வினுடைய தாக்கம் சிலது இருக்கிறது, ஆனால் காந்தியினுடைய கடுந்தவ வாழ்க்கையை.. துறவறத்தை அவர் நம்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. காந்தியைப் பற்றிய இராஜாஜியின் கருத்துகள் ஒன்று கருத்தாக்கமாகும் அல்லது எதிர்வினை ஆற்றும், மேலும் அவர் மகாபாரதம் அல்லது இராமாயணம், கீத கோவிந்தம் அல்லது திருக்குறள் பற்றி எழுதினாலும், அதனுள் காந்திய சிந்தனையின் வெளிப்பாடு இருப்பதை நாம் ஆராய்ந்தறிந்து காணலாம்.
காந்திக்கும் ராஜாஜிக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகளை நான் இங்கே விளக்கப் போவதில்லை – ஏனென்றால் அவை மிகப் பிரபலமானவை. ஆனால், இராஜாஜி தன்னுடைய நெடிய சுறுசுறுப்பான வாழ்வு முழுவதும், தமிழர்களுக்கான காந்தியக் கண்ணாடியாக – தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், அணுகுமுறைகளால் எவ்வளவு குறுகியதாக இருந்தாலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காந்தியத்தைத் தூக்கிப் பிடிப்பதில் சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது அணுகுமுறையில் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருப்பது உண்மையே, ஆனால் தமிழ்நாட்டில் காந்தியத்தின் அறிவுசார் உள்ளடக்கத்தை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காந்தியைப் பற்றிய தன்னுடைய எழுத்துக்களில் ஏறக்குறைய காந்தியைப் பற்றி திறம்படவே அவர் எழுதியுள்ளார்.
காந்தியின் மீதான தமிழ் எழுத்தாளர்களின் தாக்கத்தை, மற்றவர்களைப் போலவே மூன்று பெரிய நிலைகளில், வகைமைகளில் பொருத்தலாம். முதலாவதாக வெளிப்படையான, எழுச்சியூட்டுகிற மற்றும் தட்டையானதாக என்று கொள்ளலாம். இரண்டாவதானது – இடைப்பட்ட நிலை, சிரமத்தோடு காணும் நிலை – அதாவது தட்டையான எழுத்துக்களை விட சற்றே ஆழமானது. மூன்றாவது – மிக முக்கியமானதும் நுட்பமானதும், மிக ஆழமானதுமாக காந்தியத்தைப் பற்றிய உணர்வு ரீதியான மற்றும் சொல்லும் பொருள் வகையின் தீவிரத்தை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
முதலாதவதாக மொழிபெயர்ப்பு பரப்பு – இங்கே காந்தியால் ஆன படைப்புகளும், அவரை அறிந்தவர்களால் ஆன காந்தியைப் பற்றிய படைப்புகளும், தமிழ் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்களாகவே கிடைக்கின்றன. இரண்டாவது பத்திரிகை நிலை என்று கொள்ளலாம் – காந்தியச் சிந்தனையின் தாக்கங்கள் அனைத்தும் பத்திரிகை வாசகர் நிலையிலேயே பிரதிபலிக்கப்பட்டு, மற்றபடி பெரிய அளவில் எப்போதுமாக இலக்கிய அரங்கில் அலசப்படும் நிலை இல்லை என்றும் கொள்ளலாம். எனக்குக் கிடைத்த தமிழ்ப் படைப்புகளின் வெளிச்ச அதிர்வுகளைக் கொண்டு இந்த மூன்று நிலைகளையும் காந்தியின் தாக்கத்தை கருத்தில் கொள்வேன்.
முப்பதுகளின் வாக்கில், அனைவரது எழுத்திலும் காந்தியின் தாக்கமென்பது தவிர்க்க முடியாததாக இருந்தது, இவற்றையெல்லாம் தாண்டி ஒருவர் அதிலிருந்து தப்பிக்க முயன்றாலும் கூட (முழுமையானதொரு நம்பிக்கையாக அது இருந்திருக்கலாம், கிட்டத்தட்ட யாரும் அதிலிருந்து விடுபடவும் விரும்பவில்லை) முடியாதது. காந்தியின் பெரும்பாலான எழுத்துக்கள், அவரது சொந்த பத்திரிகையான ஹரிஜனுடையதும் சேர்த்து, முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அதைத் திறம்பட செய்த சங்கு கணேசனின் பங்களிப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று. இந்திய தேசிய காங்கிரஸை ஆதரித்து காலணா நாளிதழ் ஒன்றை நடத்தியோடு, காந்தியக் கருத்துக்களின் மொழிபெயர்ப்பையும் தொடராக வெளியிட்டார். அவை தமிழில் இன்றளவும் கிடைக்கக்கூடிய ஆகச் சிறந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும். திரு.வி.க. –வின் துணை ஆசிரியர்களில் ஒருவராகவும், இராஜாஜியின் ஆசிரம நாட்களில் அவருக்கு வலதுகரமாகவும் இருந்த கல்கி (மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி), இருபதுகளின் முற்பகுதியில் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார், தற்போது சங்கு கணேசனுக்காக காந்தியின் சுயசரிதை மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். இந்தியாவின் ஏனைய மொழிகளில் காந்தியின் தன்வரலாறு மொழிபெயர்ப்பு எந்த அளவில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் தமிழில் கல்கியின் மொழிபெயர்ப்பு மிகச் சிறந்த ஒன்றாக, நிகரற்றதாக இருந்தது. பின்னால், சத்தியாகிரத்தின் மொழிபெயர்ப்பு தென்னாப்பிரிக்காவில் அவிநாசிலிங்கம் செட்டியாரால் மேற்கொள்ளப்பட்டது, அவருடைய நடையில் அது திருப்திகரமான ஒன்றே.
காந்தியின் பிற படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் அதைத் தொடர்ந்து வர ஆரம்பித்தன, ஆனாலும் அவ்வளவு விரைவாக இல்லையென்றாலும், உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் அளவுக்கு விரைந்து செய்யப்பட்டன. தமிழ் நாளிதழ்கள் மற்றும் காந்தியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட குழுக்கள் – அவர்களில் மிக முக்கியமாக சிலரை நாம் குறிப்பிட வேண்டுமென்றால், சங்கு சுப்பிரமணியம், ராய. சொக்கலிங்கம், பி. வரதராஜுலு நாயுடு, பாரதி நாராயணசாமி செட்டி, வா. இராமசாமி ஐயங்கார், நா. சோமாயாஜுலு, பாவலர் கிருஷ்ணசாமி, ஆர். எஸ். ஸ்ரீகந்தன், ஜே. எஸ். கண்ணப்பர், ஆர். நாராயண ஐயங்கார், டி. எஸ். சொக்கலிங்கம், கல்கி ஆகிய மற்றும் பலர் எழுத்தறிவு பெற்ற மக்களிடையே காந்தியச் சிந்தனைகளையும் இலட்சியங்களையும் பிரபலப்படுத்தினர். அத்தகையவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படியாக முத்திரை பதித்தவர்களில் ஒருவராக எஸ். சத்தியமூர்த்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். சுதந்திரப் போராட்டமானது இளைய தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று அதிக எண்ணிக்கையிலானவர்களை ஈர்த்தது. காந்தியக் கருத்துக்கள் மற்றும் காந்தியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், எப்போதும் போல் திருப்திகரமாக இல்லாவிட்டாலும், அல்லது நன்றாக எழுதப்பட்டிருந்தாலும், உணர்ச்சி மேலீட்டில் தவறான தகவல்களைக் கொண்டிருந்தாலும், அவையனைத்தும் பொதுவெளியில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடின. அப்படியான புத்தகங்கள் பற்றிய பட்டியல் தான் கிடைக்கவில்லையே தவிர, ஆனால் என்னுடைய அளவீட்டின்படி, 1940 -க்கு முன்பு, சுமார் பத்து ஆண்டுகளில், காந்தி மற்றும் காந்தியச் சிந்தனைகள் குறித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நினைவுகூர வேண்டிய ஒன்று யாதெனில், புத்தக வெளியீட்டிற்காக அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த காலம் அது. புத்தக விற்பனை என்பது சரியாக முறைப்படுத்தப்படவில்லை. அரசாங்கமானது, தேசியவாதக் கருத்துக்கள் அடங்கிய புத்தக வெளியீட்டாளர்கள் மீது கடுமையான போக்கைக் கடைப்பிடித்த காலம். இன்றைக்கிருப்பதைப் போல, பெரிய அளவிலான நூலக இயக்கங்களும் அப்போது இல்லை. எழுத்தாளர்கள் (பெரும்பாலும் அவர்களின் புத்தகங்களுக்கு அவர்களே வெளியீட்டாளர்கள்) தங்களது பணத்தையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பணயம் வைத்தே அவ்வகையான அதி அற்புதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், அவையனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் முன்பாக இலக்கிய வடிவில் காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்க உதவின.
தேசியக் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் அணுக்கமான சீடரான, வ.ரா.வின் தலைமையில், தீவிர எழுத்துச் சிந்தனையை உள்வாங்கிய இளைஞர் பட்டாளம் ஒன்று எழுத்தாளர்களாகப் பரிணமித்து, அதுவே பின்னாட்களில் மணிக்கொடி தலைமுறை என்றாகி வெகுவான இளைய தலைமுறை எழுத்தாளர்களை ஈர்த்து ஊக்குவித்தது, பெரும்பாலும் உணர்வு பூர்வமாகவும், சிற்சில சந்தர்ப்பங்களில் இயற்கையாக உந்தப்பட்டவர்களாகவும், ஆனால் எப்போதும் காந்தியக் கண்ணோட்டம் பற்றிய புரிதலுடனும் இருந்தனர், அந்தப் புரிதல் அவர்களின் காலத்திற்கு முந்தையதாகவும், அரசியல் காட்சிகளில் இருந்து வெகு தொலைவிலிருப்பதாகவும் காட்சியளித்தது. இத்தகைய எழுத்தாளர் குழுவிலிருந்து தான் காந்தியச் சிந்தனையின் மீதான நுட்பமான செல்வாக்கை நாம் தேடவேண்டும். காந்திய வழியிலான சமூக சீர்திருத்தம் என்பதே வ.ரா.வின் எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
அரசியல் பத்திரிகையாளராக வலம் வந்த டி. எஸ். சொக்கலிங்கம் முப்பது மற்றும் நாற்பதுகளில் காந்தியச் சிந்தனைகளான அகிம்சை மற்றும் உண்மை பற்றியும் அன்றைய காலகட்டத்தைய தகிக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய வீராவேசப் பேச்சுக்கள் மூலம் பெருவாரியான கூட்டத்தை தன்பக்கம் ஈர்த்தார். கலைக்களஞ்சியகள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள் அடங்கிய உரைகளையும் ஆராய்ந்து காந்தியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான புத்தகங்களை சாமிநாத சர்மா எழுதினார், அவற்றிற்கு காந்தியச் சிந்தனையோடு எவ்விதத் தொடர்பும் இல்லையென்றாலும், அவை கார்ல் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் சமூக ஒப்புறவுகள் குறித்து அக்கறை கொண்டிருந்தன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்களைக் கவர்ந்த காந்திய இசத்தின் மிகப்பெரிய உரைநடைப் பாடகரான கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, எளிமையான நடையில் நேரடியாகக் கருத்துக்களைப் புகுத்தி தன்னுடைய எளிய பாடல்களால் படிப்பறிவற்ற மற்றும் மதிநுட்பம் அல்லாத பலரையும் ஊக்கப்படுத்தினார். காந்தியைப் பற்றிய அவரது புரிதலோடு கூடிய கவிதைகள் அனைத்தும் உணர்வுபூர்வமானவை, மேலும் அவர் சமீபத்தில் தமிழ் கலைக்களஞ்சியத்திற்காக வழங்கிய காந்தியைப் பற்றிய உன்னதமான கட்டுரை, காந்தியைப் பற்றிய நுட்பங்கள் இல்லாத அறிக்கூர்மை இல்லாத அணுகுமுறைகள் நிலவும் தமிழ் இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அடிப்படையாகக் கொள்ளலாம். மதராஸ் அரசாங்கம் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததைக் கொண்டே நாம் இதனைப் புரிந்து கொள்ளலாம் – ஏனென்றால் அரசியல், தத்துவ மற்றும் பிற தாக்கங்களைத் தவிர்த்து மனித நேயத்துக்கு அருகில் மட்டுமே நின்று கவனம் செலுத்தி, தமிழர்களுக்கு காந்தியைப் பற்றி, காந்தியச் சிந்தனைகள் பற்றி இவ்வளவு எளிமையான வார்த்தைகளில் யாரும் இதுவரை கூறியதில்லை.
கிட்டத்தட்ட அவர் அளவுக்கு தாக்கங்கள் கொண்டவராக இல்லாவிட்டாலும் கூட கவிஞர் இராமலிங்கம் பிள்ளையுடன் சேர்த்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்றொரு கவிஞரும் இருக்கிறார், அவர் பீர். முகம்மது பாவலர்., அவர் தன்னுடைய கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் காந்தியச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் கொண்டு சேர்த்து பிரபலப்படுத்தினார். இந்தச் சூழலில் சங்கரதாஸ் சுவாமிகளின் மேடைப் பாடல்களையும் முக்கியமாக குறிப்பிட்டேயாக வேண்டும், அது போலவே காந்தியச் சிந்தனைகளை நாடக மேடைகளில் பிரபலடுத்திய எஸ். எஸ். விசுவநாத தாஸ், நடராஜ பிள்ளை, கே. எஸ். அனந்தநாராயணன், கே.பி. சுந்தராம்பாள், மன்னார்குடி கே. பி. நடராஜ பிள்ளை, கே. பி. ஜானகி (அவர் இப்போது ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி) போன்ற பிரபலமான நடிகர் நடிகையர்களையும் குறிப்பிட்டுச் சொல்வது முக்கியமானது, அவர்கள் சுதந்திர தேசியச் சிந்தனைகளை நடைமுறைத் தமிழில் உணர்ச்சி பொங்கக் கூறி, காந்தியம் எனும் சுடரை திரளான பொதுமக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாசிப்புகள் தவிர்த்து, முதன்முறையாக வை. மு. கோதைநாயகி அம்மாளின் பிரபலப் படைப்பொன்று என்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது எப்போது என்பதை நான் அறியேன் (இருபதுகளின் முற்பகுதியிலிருந்து முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் என்பது தமிழில் பிற்காலத்தில் கூட நிகழ வாய்ப்பில்லாதது என்று நினைக்கிறேன் – மேலும் இன்னும் மகிழ்வோடு அந்த எண்ணிக்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்!) முழு நம்பிக்கையுடனும் உணர்வுப் பெருக்குடனும் ஒரு காந்தியவாதியான அவரின் கதைகள் அனைத்திலும் காந்தியச் சிந்தனைகள் எங்கெங்கிலும் விரவிக் கிடக்கின்றன. ஒரு கல்வியாளராக, காந்தியத் தாக்கம் என்பது அவரது நாவல்களில் எப்போதிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய அவரது நாவல்களைப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும் – அது முழு தமிழ்நாட்டிற்கும் ஒரு வகையான அளவீடாக இருக்குமென்றும் உறுதியாகச் சொல்வேன். உணர்வுகளை நுண்ணியமாகக் கடத்துமொரு எழுத்தாளர் அவர், கடந்து செல்லும் ஆண்டுகளைக் கூட ஏறக்குறைய நம்பகத்தன்மையுடன் கூடிய யதார்த்ததுடன் பதிவு செய்துள்ளார், அப்படி இல்லையென்று நீங்கள் கூறுவீர்களென்றால் (சிலரின் கூற்றுப்படி) வேறெந்தக் கலையோடும் ஒத்துப் போகும்படி செய்துவிடுவார். தமிழ்நாட்டுப் பெண்களிடம் இருந்த காந்தியத் தாக்கத்தை வேறெந்தக் கலை வடிவ ஆதாரங்களை விட கோதைநாயகியின் நாவல்களிலிருந்து வெற்றிகரமாக அளவிட முடியும். இருபதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கி இன்று வரையிலும் அவருடைய நாவல்களின் வெளியீடு ஏறக்குறைய மாறாத அடிப்படை வடிவம் மற்றும் உணர்வுபூர்வ படிமங்களோடு, தத்துவ விசாரங்களைத் தாங்கி நிற்காமல் எப்போதும் மனித நேயத்தை உள்ளடக்கியதாகவே நிலைத்திருக்கிறது.
முப்பதுகளின் முற்பகுதியிலிருந்து ஐம்பதுகளின் மையப்பகுதி வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தமிழில், பத்திரிகைத் துறையில் ஆதிக்கம் செலுத்திய கல்கி என்று அழைக்கப்படும் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க விடம் தனது இலக்கியப் பயிற்சியையும், இராஜாஜியிடம் தனது அரசியல் பயிற்சியையும் தொடங்கினார். காந்தியின் மொழிபெயர்ப்பாளராக அவர் ஆரம்ப நிலையிலேயே தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார். தமிழ் வார இதழான ஆனந்த விகடனின் பொறுப்பு ஆசிரியராகவும், பின்னர் அவரது சொந்த பத்திரிகையான கல்கியின் ஆசிரியராகவும், அவருடைய தயாரிப்பான எல்லாவற்றிலும் காந்தியின் தாக்கத்தை, செல்வாக்கை சிறிதளவேனும் வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை. சமகால நாவல்கள், சிறுகுறு புனைவுகள், சிறுகதைகள், பயணக் குறிப்புகள் மற்றும் ஓவியங்கள் ஆகிய எல்லாவற்றிலும் வெளிப்படுத்தியதோடு நிற்காமல், விழிப்போடு துருதுருவென்றிருக்கும் ஓர் அரசியல் பத்திரிகையாளராக, விவாதங்கள் மற்றும் பிற படைப்புகளில், காந்தியைப் பற்றிய தனது புரிதலையும், மற்றும் தனக்குப் புரிந்த மக்களின் மீதான காந்தியத் தாக்கத்தையும், எந்தவொரு சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். காந்தியின் மீதான பொதுஜன அபிப்பிராயமாக அறிவு சார்ந்த உணர்வுபூர்வமான மதிப்பீட்டிற்கு மாறாக அவற்றை பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்வுகளுடன் இணைத்ததன் அடிப்படையில், காந்தியின் பிரபலமான மதிப்பீட்டை பொதுமைப்படுத்தும் முயற்சியில் நடை போட்டார். அவரது குரலானது எப்போதும் ஓர் உறுதியான நிலைப்பாட்டோடும், வெகுவான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்த குரலாகவும் இருந்தது. தியாகபூமி (1939) தொடங்கி, அவருடைய மறைவுக்குப் பின் சாகித்திய அகாடமியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அலை ஓசை வரை பல பிரபலமான புனைக்கதை நாடகங்களின் வாயிலாகவும், காந்தியைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் உணர்வுபூர்வமாக தனது பங்களிப்பைச் செய்தார். காந்தியின் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி, அதன் தாக்கத்தை தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டியுள்ளார், எழுதியுள்ளார். இவையனைத்திலும் அவர் தன்னுடைய அணுகுமுறையை பகுத்தறிவோடு, பிரபலமானதாக மற்றும் தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்தாத முறையில், உணர்வுபூர்வமான அணுகுமுறையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் வாசகர்களுக்கு காந்திய சிந்தனையை சுவையோடு கொண்டு சேர்த்தார்.
காந்தியச் சிந்தனையின் தாக்கத்தை உண்மையாகவும், தங்களின் சொந்த ஆற்றலுக்கேற்றவாறும் பதிவு செய்த மற்றைய தமிழ் எழுத்தாளர்களில், முதன்மையாக நாம் காலம் சென்ற கே. எஸ். வெங்கடரமணியைக் குறிப்புட்டுச் சொல்லவேண்டும் – தென்னிந்தியாவின் காந்தியச் சிந்தனைவாதிகளில் அவருக்கும் சிறப்பான ஓர் இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார், பின்னர் தமிழுக்குத் திரும்பி, தனது சொந்த நாவல்கள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்தும், ஒரு தமிழ் மாத இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார். காந்தியைப் போலவே பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு போன்ற சிந்தனைகளில் அவர் அதிகளவு ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் அடிப்படைக் கல்வியானது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு மோகமாகவும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாகவும் மாறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அடிப்படைக் கல்வி குறித்த சோதனை முயற்சிகளில் தனிப்பட்ட முறையில் அவர் ஈடுபட்டார். அவரது முக்கிய நாவல்களான ‘முருகன் தி டில்லர்’ (1927) மற்றும் ‘கந்தன் தி பேட்ரியாட்’ (1931) ஆகிய இரண்டும் ஸ்வராஜ்யா இதழில் தொடராக வெளியிடப்பட்டு 1932 –இல் புத்தகமாக வெளிவந்தன. இரண்டிலும் காந்தியச் சிந்தனைகளே உள்ளோடிக் கிடந்தன. என்னுடைய கருத்தின்படி, காந்தியச் சிந்தனைகளை சிறப்பாக உள்வாங்கிய படைப்புகளாக அவரது நாவல்கள் இன்றைக்கும் இருக்கின்றன, அவை வெகுஜன பத்திரிகை மற்றும் மேலோட்டமான கருத்துக்களோடு கூடிய வேறெந்த தொடர் படைப்புகள் போல் அல்லாமல், வெகு நுட்பமாக ஆன்மீகச் செறிவோடு கலை நிலைத்தன்மை பெற்று விளங்குகின்றன. தொடர்ந்த செயல்பாடுகளாக – கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் கதைகளில், காந்தியைப் பற்றிய தனது கருத்துக்களை அவர் அழகாகக் கோடிட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்.
இதே போன்ற பரிமாணங்களைக் கொண்ட இன்னொரு எழுத்தாளர் காலம் சென்ற எஸ்.வி.வி. காந்தியச் சிந்தனைகளின் மீதான பச்சாதாபம் அவருக்கு இல்லாவிட்டாலும், அவரது எழுத்துக்களில் சமகாலச் சூழலின் காந்திய சிந்தனைத் தாக்கத்தைத் தவிர்க்கவும் முடியவில்லை. நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும், பழைய மரபுகளைச் சார்ந்து வாழும் ஓர் ஒழுக்கவாதியாகவும் இருந்து கொண்டு, பழமைகளை புதுமைகளாய் வேறுபடுத்திக் காட்டுவதில் ஆர்வமுடன் இருந்தார். புதிய தலைமுறையைப் பற்றிய அவரது சித்தரிப்புகள் நேர்மையற்றதாக இருக்கலாம், ஒருவேளை மாறிக்கொண்டு வரும் புதியவற்றின் பெரிய அளவிலான தாக்கங்களை அவர் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால், கலை நுணுக்கத்தோடும் படைப்பாற்றல் மூலமாகவும் புதியனவற்றை பழையவைகளோடு அவரால் இணைத்து உருவாக்க முடிந்தது. எஸ்.வி.வியின் பல மீட்டுருவாக்கங்களில் காந்தியின் தாக்கத்தை நாம் சந்திக்கவே செய்கிறோம்.
நாற்பதுகளின் பெரும்பாலான தமிழ் நாவல்களில், காந்திய சிந்தனைத் தாக்கத்தின் தெளிவான அறிகுறிகளையும் அதன் விளக்கங்களும் காணக் கிடைக்கின்றன. இந்தியில் ப்ரேம் சந்த், மராத்தியில் காண்டேகர், குஜராத்தியில் இருந்து சோபன் அல்லது வங்காளத்தின் தாகூர் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு எழுதிய சில எழுத்தாளர்கள் பல்வேறு வழிகளில் காந்தியக் கருத்துக்களின் செல்வாக்கோடு இருந்தனர். பி.எஸ். இராமையா மற்றும் பி.எம். கண்ணன் போன்ற நாவலாசிரியர்கள் முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் காந்தியப் பின்னணியை ஏறக்குறைய ஒரு மெல்லிய நாடகத்தன்மையோடு வெளிப்படுத்தினர். அந்தப் பத்தாண்டுகளில் எழுதிய ஒவ்வொரு நாவலாசிரியரும், வேறெந்த வழியிலும் இல்லாவிட்டாலும், தங்களுடைய படைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு பகுதியில், குறைந்தபட்சம் 1946 –இல் எழுதப்பட்ட பி.எம். கண்ணனின் நெடீய நாவலைப் போல வியக்கத்தக்க வகையில் உச்சபட்ச நிலையில் காந்திய உலகம் பற்றிய தங்களின் பார்வைகளைப் பகிர்ந்துள்ளனர். சிறிதான புனைகதைகளிலும் சிறுகதைகளிலும் அதன் தாக்கம் சமமாக, தெளிவாக காணக் கிடைக்கிறது. சி.சு. செல்லப்பா போன்ற பல எழுத்தாளர்கள் தங்களது கதைகளின் கட்டமைப்பில் காந்தியக் கருத்துக்களை அழகாகப் புகுத்தியுள்ளனர்.
கொத்தமங்கலம் சுப்பு நாட்டுப்புறப் பாடல் மொழியில் எழுதிய மகாத்மா காந்தியின் சுயசரிதை, தமிழ் மக்களிடையே பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபலமாக இருக்கிறது. சுப்புவே அதைப் பல தளங்களில் (ஹரிகதை கதாகாலட்சேபம் போல) நிகழ்த்திக் கொண்டுள்ளார். உணர்ச்சிமயமான இந்த நாட்டுப்பாடல் முறை மூலம் காந்தியின் சுயசரிதையால் ராஜ்காட் முதல் கன்னியாகுமாரி வரை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை அவர் சென்றடைந்திருக்கிறார்.
காந்தியின் வருகையோடு தமிழ் இலக்கியமானது தன்னை புதுப்பித்துக்கொண்டு சமகாலத்தன்மையோடும் உயிர்ப்பித்துக்கொண்டது என்று சொல்லலாம். புதிய மற்றும் பழைய, புரட்சிகரமான மற்றும் பாரம்பரியமான கருத்தாக்கத்தின் தொகுப்புகள், மேலும் பாரதத்தின் மற்றும் காந்தி வலியுறுத்திய அறம் சார்ந்த விழுமியங்களின் ஏற்றுக்கொள்ளல், என்று இந்திய மொழிகள் ஒரு நவீன மற்றும் சமகால மொழியியல் மற்றும் இலக்கியத்தன்மை கொண்ட கண்ணோட்டம் உருவாகிப் பெருகுவதை சாத்தியமாக்கியது.
சந்தேகத்திற்கு இடமின்றி, காந்தி உருவாக்கிய இந்த ஒருமித்த உணர்வுபூர்வமான இயக்கமானது, திசைகள் எங்கிலும் கடந்த மூன்று தசாப்தங்களாக அனைத்து பரிமாணங்களிலும் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ் எழுத்துச் சமூகம் தாங்கள் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று திகைத்து நின்றிருந்த நேரத்தில், அந்தத் திசையை அவரே அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணர்வுபூர்வமாகவும், அறியாமல் சிலவற்றிலும், சிலரின் விசயத்தில் ஒருவேளை விருப்பமில்லாமலும் கூட அவர் சுட்டிக்காட்டிய பொதுவான திசையை கையாண்டுள்ளனர். அவ்வாறு குழு மனப்பான்மையோடு வழிநடத்தும் மனநிலை இப்போது இல்லவே இல்லை, ஆனாலும் அந்த ஒருமித்த வழிகாட்டுதல் சார்ந்த எழுத்து என்பது இன்றைய அனைத்து தமிழ் எழுத்துக்களிலும் உள்ளார்ந்து கிடக்கிறது.
இறுதியாக, எல்லோரும் கேட்கும் ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். காந்தியின் வாழ்க்கை அல்லது இறப்பு என்கிற நான்கு தசாப்த கால காந்தியத் தாக்கம் தமிழ்ப் பரப்பில் அவரைப் பற்றிய ஒரேயொரு சிறந்த புத்தகையாவது உருவாக்கியுள்ளதா? இதற்கு நான் எதிர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்படியொரு நூல் தமிழில் வந்திருக்குமானால், அதை நான் படிக்கவில்லை. ஆனால், இதில் வருத்தப்பட வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில், புதிய உருவாக்கங்கள் அனைத்தும் அவற்றின் சொந்த சட்ட திட்டங்களுக்குட்பட்டவை, அவை தங்களுடைய திட்டப்படி சமரசங்கள் ஏதுமின்றி தமக்கான வெளியை உருவாக்கிக் கொள்ளும்.
***
பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் மத்திய அரசுப் பணியில் உள்ளார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com
மரத்தின் மீதோ மொட்டை மாடியிலோ ஏறி நான் தப்பிப்பேன் பலசமயம் ஏதோவொரு வீட்டிற்குள் ஓடிப் புகுந்து கொள்வேன்
சிறிய வாசலினுள் நுழைய முடியாமல் ஒற்றைக்கண் காட்டி அங்கேயே அசைந்தபடி காத்திருக்கும் யானை
நான் விழித்து தப்பி வெளியே வந்துவிட்டாலும் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது எப்போதும் எனக்குள்ளென இருக்கும் அந்த யானை
கனவில் மட்டும்தான் வந்து போகிறதெனில் ஒரு யானை வந்துபோகிற அளவு வாசல் எனக்குள் இருக்கிறது தானே
*
உடலின் கடல்
ஒரு துளி நீந்திக்கடந்திடாத உடலின் கடல்
மீண்டும் மீண்டும் உருதிரளாத மொழியின் அலை
விழியொளி மயங்கச் சரியும் அந்தி
விரல்களின் மென்காற்றில் கவிழும் பகல்
இரவின் மயிற்கூட்டம் சுழற்றிக் கலைக்கும் அழிவின் தவம்
கூடல் தழல் வியர்வை மழை ஆழிச்சுழி அர்த்தப்பிழை
ஆழக்கருவழியில் திறக்க மறந்த துளியின் சிப்பி வெடித்துச் சிதறும் உவர்ப்பின் தசை விண்ணேறும் ஆயிரம் சூரியத் தரளம் கோடி விடியல் குருதிக்கடல்
சப்தம் மௌனம் சாக்கடை தீ வண்ணம் தாளம் பசி பாதாளம் உயிர் காலம் நிணம் மணல் வேர் வழி பாறை குயில் கதிர் முகில் எடை முலை சுனை இமை மலர் சதை மயிர் வலி மலம் கனி மரம் நதி வெயில் குளிர் நிழல் கொடுந்தழல் நிகர்த்த ஓர் இருள் இருள் இருள் மீண்டும் பகல் பகல் பகல்
அலை அலை அலை மீண்டும் உடல் உடல் உடல்
உடலின் கடல் கடல் கடல்
ஒரு துளி நான் கரை சேர விரும்பா கடல் கடல் கடல் உடலின் கடல் கடல் கடல்
*
நதியின் மத்தியில் ஒரு மணற்குன்று
சிறிய காடு
இல்லாத இரு பறவைகளின் ஓசை கேட்கிறது பாடலின் வசந்தம் வாசத்தை திரிக்கிறது வாசம் ஒரு மலரை கண்டடைகிறது மலர் ஒளியைத் திறக்க ஒளி இருளை அழைக்க இருள் மழையை நிகழ்த்துகிறது இல்லாத இடத்தில் இறுவேறு உடல்கள் எப்படித் திளைக்கும்? ஒன்றென
நதியின் மத்தியில் மணற்குன்றில் இல்லாத பறவைகளின் சிரிப்பொலியில் மலர் மாற்றுகிறது மழையை மீண்டும் ஒரு சிறு நதியென
***
ஆனந்த் குமார் – நவீன கவிஞர்களில் ஒருவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார் இவரது இரண்டாவது தொகுப்பான ‘ப்ளம் கேக்’ சமீபத்தில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: ananskumar@gmail.com
ஈராண்டுகளாக காசாவில் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றுவருகிறது. இது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இசுரேல் மீது ஹமாசு அமைப்பினர் தொடுத்த தாக்குதலுக்கு எதிர்வினை என்பது ஒரு குறைபட்ட புரிதல். அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படுகொலையை நோக்கிப் பாலசுத்தீனம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தியப் பிரிவினையின்போதான மதக்கலவரங்களுக்கும் படுகொலைகளுக்கும் எப்படி அதற்கு முன்பு பிரித்தானியக் காலனியாதிக்கம் நூறாண்டு காலமாக வித்திட்டதோ, அதுபோலவே பிரித்தானியர்களாலும் பிற ஐரோப்பியர்களாலும் இடப்பட்ட வித்துதான் இன்று நச்சு மரமாகப் பழுத்து நின்று பல்லாயிரம் குழந்கதைகளின் அழிவுக்குக் காரணமாக இருந்துள்ளது.
வன்முறை என்பது ஒரு சுழல். ஒரு வன்முறைச் செயல் இன்னொன்றுக்கு இட்டுச் செல்கிறது. ஐரோப்பாவில் யூதர்கள் மீது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாடுகளும் செலுத்தப்பட்ட அடக்குமுறையும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சசயனியக் கருத்தாக்கத்தின் தோற்றம், சயனிய ஆதரவு பால்ஃபோர் அறிவிப்பு, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் பாலசுத்தீனம் வந்தது, இசுரேல் என்ற நாட்டை அமைப்பதற்காக பாலசுத்தீனர்கள் மீது சயனிய யூதர்கள் தொடுத்த தாக்குதல்கள், ஐ.நா.அவையில் பாலசுத்தீனத்தைப் பிரிப்பதற்கான திட்டம் நிறைவேறியது, நக்பா என்ற மானுடப் பேரழிவின்போது 7.5 லட்சம் பாலசுத்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டும் ஊர்களைவிட்டும் விரட்டப்பட்டது, இசுரேல் மீது அரபு நாடுகளின் தாக்குதல், இசுரேல் பெற்ற போர் வெற்றிகள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களின் உதவியுடன் அதன் படைபலம் பன்மடங்கு பெருக்கப்பட்டது, பாலசுத்தீனர்களின் விடுதலைப் போர், மேலும் பல பாலசுத்தீனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டது, மொசாத் உளவு நிறுவனம் தீவிரவாத அமைப்பாகச் செயல்படுவது, காசாவின் மீது இடப்பட்ட பதினைந்து ஆண்டுகால முற்றுகை, ஹமாசு இசுரேல் மீது நடத்திய எதிர்த்தாக்குதல், இசுரேல் காசாவில் கட்டவிழ்த்துள்ள இனப்படுகொலையும் காசாவின் அழிப்பும் என்ற தீராப் பெருஞ்சுழற்சியை வன்முறை விளைவித்துள்ளது.
இத்தகையதொரு சூழலில் அகிம்சையின் இடம் என்ன என்ற வினா எழுகிறது. குழந்தைகளின் சிதறிய உடல்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கே மானுடத்தின் மீது கடுமையான நம்பிக்கையிழப்பு ஏற்படும்போது அதை நேரடியாக அன்றாடம் அனுபவித்து வருவோர்க்கு அகிம்சை வழியை அறிவுறுத்த இயலுமா என்ற ஐயம் தொடர்ந்து எழத்தான் செய்கிறது. அகிம்சையின் எல்லைகள் என்ன? நாஃசி செருமணி, இன்றைய இசுரேல் போன்ற கொடூரமான ஆட்சியமைப்புகளின் கீழ் அகிம்சை வழி எடுபடுமா முதலான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.
குறிப்பாக, பாலசுத்தீன விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக நடந்த அமைதிவழி எதிர்ப்புகள் மிகக் கடுமையாக நசுக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சான்றாக, காசாவில் 2018-19ஆம் ஆண்டுகளில் வெள்ளிதோறும் நடந்த இல்லந்திரும்பும் பெருநடைப் போராட்டத்தின் போது 223 பாலசுத்தீனர்களை இசுரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். படகுகளில் காசா மக்களுக்கு உணவளிக்க உலகெங்கிலும் இருந்து செயல்பாட்டாளர்கள் வரும்போது, அப்படகுகள் மீது இசுரேல் குண்டுகள் வீசித் தாக்கியுள்ளது. கிரேட்டா துன்பர்க், தியாகோ அவிலா போன்ற அமைதிவழிப் போராளிகளைச் சிறைப்படுத்திக் கொடுமைகள் பல இழைத்து வெளியேற்றினர். போர்ப்பகுதியில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊடகர்களும் மருத்துவர்களும் செவிலியரும் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். பாலசுத்தீனத்தில் மிகுதியான மக்களாதரவு பெற்ற மிதவாதத் தலைவரான மர்வான் பர்கௌட்டி 23 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுள்ளார். இசுரேலுடைய நோக்கம் பாலசுத்தீனர்களை முழுமையாக அழித்தும் வெளியேற்றியும் காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பாலசுதீனப் பகுதிகளில் யூதர்களைக் குடியேற்றுவது என்பதைப் பல இசுரேலிய அமைச்சர்களே வெளிப்படையாகப் பேசிவருகின்றனர்.
இக்கொடுஞச்செயல்களுக்கு இசுரேலிய மக்களில் பெரும்பாலானோர் ஆதரவு நல்கத்தான் செய்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இசுரேலுக்குப் பக்கபலமாக இருந்து பணமும் ஆயுதங்களும் வாரிவழங்கும் அமெரிக்காவிலும் வலுவான ஆதரவு உளநிலையே நீடிக்கிறது. இந்நிலையில் அகிம்சைப் போராட்டம் எப்படிச் சாத்தியம் என்ற வினா வலுவாகவே எழுகிறது.
அகிம்சையின் எல்லைகள் குறித்த ஐயங்களை அணுக காந்தியிடமே விடைதேடலாம். இசுரேல்-பாலசுத்தீனப் பிரச்சனை குறித்தும், நாஃசிக்களின் கீழ் யூதர்களின் நிலை குறித்தும் காந்தி கொண்டிருந்த கருத்துகளின் வாயிலாக அணுகலாம்.
(2)
1921ஆம் ஆண்டு சேவார்(ஸ்) ஒப்பந்தத்தின்படி பாலசுத்தீனம் துருக்கியர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்தானியர்கள் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட போதே காந்தி அதை வன்மையாகக் கண்டித்தார். துருக்கியர்களே ஏற்றுக்கொண்டாலும், பாலசுத்தீனம் உள்ளிட்ட பகுதிகளின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பை இந்திய இசுலாமியர்கள் ஏற்றக்கொள்ள இயலாது என்றார். ‘இசுலாத்தின் புனிதத் தலங்களின் மீது (பிரிட்டன்-பிரான்சு) நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்துவதை இந்திய இசுலாமியர்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது. எனவே, பாலசுத்தீனமும் இசுலாமியர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தாகவேண்டும். நானறிந்தவரை, யூதர்களும் கிறித்தவர்களும் பாலசுத்தீனம் சென்று தங்கள் சமயச் சடங்குகளைப் புரிவதற்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. எந்த மறைநூலும் அறநெறியும் போர்நெறியும் நேசநாடுகள் பாலசுத்தீனத்தை யூதர்களுக்குக் கொடையாக வழங்குவதை நியாயப்படுத்த இயலாது. இது குறிப்பாக இந்திய இசுலாமியர்களும் பொதுவாக இந்தியர்கள் அனைவரும் கொண்டிருந்த நம்பிக்கையை மீறுவதாகும். இத்தகைய நிலப்பறிப்பைப் பற்றிய சாத்தியத்தை பிரிட்டன் போருக்கு முன்பே அறிவித்திருந்தால், ஒரு இந்தியப் படைவீரன்கூட போருக்குச் சென்றிருக்க மாட்டான். எதிர்காலத்தில், பிரித்தானியப் பேரரசிலன்றி, பிரித்தானியப் பொதுநலவாரியத்தில் சுதந்திரக் கூட்டாளியாக இந்தியா நீடிக்கவேண்டுமானால், துருக்கியின் அரசியல் தலைவர்களிடம் கிலாபத் குறித்த உடன்படிக்கையை எட்டாமல், இசுலாமிய சமயத் தலைவர்களிடம் உடன்பாடு காணவேண்டும்.’ (The Bombay Chronicle, 17-3-1921)
மாற்றுதேசத்து ஆதிக்கத்கில் இருந்த நாட்டின் தலைவரொருவர் பாலத்தீனப் பிரச்சனை முளைவிடும்போதே அதற்கெதிராகக் குரலுயர்த்தியிருக்கிறார். இக்காலக்கட்டத்தில் எல்லையற்ற படைப்பூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் செயல்பட்டிருக்கிறார்.
கிலாபத் இயக்கத்தின் விளைவாக பாலசுத்தீனத்தையும் வென்றெடுக்க முடியும் என்று கூறினார். ‘துறவிகளாக உங்களை மாற்றிக்கொண்டு அமைதிவழியில் நிலைத்திருந்தால், உறுதியாக பாலசுத்தீனத்தைக்கூட வெல்வோம். மற்றவர்களைத் துறவுபூணச் சொல்லி வற்புறுத்துவதன் மூலம் வெல்லமுடியாது. யார் சிறைக்குச் சென்றுவிட்டாலும், நாம் அமைதிவழியில் இருக்கவேண்டும். அவர்கள் சிறை செல்லட்டும். நீங்களும் சிறைசெல்ல அணியமாகுங்கள். ஆனால் வன்முறைச் செயல்களுக்காக நீங்கள் சிறைப்படக்கூடாது. உண்மையான பணிக்காகச் சிறைப்படுங்கள். அத்தகைய பணிக்காக அரசாங்கம் உங்களைச் சிறையில் தள்ளுமேல், அன்றைய நாளே நமக்கு வெற்றித்திருநாள். இவ்வகையில் ஆட்சிசெய்ய முயன்றால், அரசு உலர்ந்த இலை போல வீழும். எவரேனும் சிறைப்படும்போது கலவரம் விளைவித்தல் பலவீனத்தின் வெளிப்பாடு. அச்சத்தின் வெளிப்பாடு.’ (Navajivan,3-4-1921)
யூதர்கள் மீது கிறித்தவத்தின் பெயரால் செலுத்தப்படும் ஒடுக்குமுறையைச் சுட்டிக்காட்டி, கிறித்தவர்கள், யூதர்கள் இருதரப்பினரும் தம்மிடமுள்ள குறைகளைக் களைய வேண்டும் என்றார். யூதவெறுப்பு காட்டுமிராண்டித்தனத்தின் எச்சம் என்றும் இந்த யூதவெறுப்பைத் தன்னால் புரிந்துகொள்ளவே இயலவில்லை என்றும் கூறினார். எனினும் சயனியத்தை மறுத்துப் புதிய பொருளும் புகட்டினார்.
‘யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களா என்ற கேள்விக்கு, ஒருவகையில், ஆம், என்பேன். ஆனால் எல்லாச் சமய மக்களுமே தங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றே கருதுகின்றனர். சயனியம் ஆன்மீக நோக்கில் ஓர் உயர்ந்த விழைவுதான். ஆன்மீக நோக்கு என்பதை அவர்கள் அகத்திலுள்ள செருசேலத்தை உணர்வதையே விழைய வேண்டும் என்ற பொருள்படச் சொல்கிறேன். பாலசுத்தீனத்னை மீண்டும் ஆக்கிரமிப்பது என்ற பொருள்படும் சயனியம் என்னை எவ்வகையிலும் ஈர்க்கவில்லை. பாலசுத்தீனத்துக்கு ஒரு யூதன் திரும்ப வேண்டும் என்று எண்ணுவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்; தனதோ பிரித்தானியர்களுடையதோ, துப்பாக்கியின் துணையின்றிப் போகலாம், அராபியர்களுடன் தூய நட்போடு போகலாம். நான் பொருளளித்துள்ள உண்மையான சயனியம் அடைய முயல்வதற்கும், விழைவதற்கும், அதன்பொருட்டு இறப்பதற்கும் ஏற்ற ஒன்று. சயனியம் நெஞ்சகத்தில் உள்ளது. அதுவே இறைவனின் கோயில். ஆன்மீக செருசேலமே உண்மையான செருசேலம். யூதன் உலகின் எந்த மூலையிலிருந்தும் சயனியத்தை அடையலாம்.’ (The Jewish Chronicle, 2-10-1931) /
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் மிக நெருங்கிய நண்பர்களில் பல யூதர்கள் இருந்தனர். காலன்பாக், போலக், சோஞ்சா கிளெசின் போன்றவர்கள் காந்தியின் குடும்பத்தினராகவே இருந்தனர். எனினும் அவர்களுடனான நட்பு யூதர்கள் குறித்த கருத்துத்தெளிவை எட்டுவதற்கத் தடையாக இருக்கவில்லை. யூதர்களின் நிலையை இந்தியாவில் தீண்டப்படாதாரின் நிலைக்கு இணைவைத்தும் பார்த்தார். இதுவும் அறம் சார்ந்த அவரது நிலைப்பாட்டைக் குலைக்கவில்லை.
/‘யூதர்கள் மீதான என் இரக்கம், அறத்தின் தேவைகளுக்கு என்னைக் குருடாக்கவில்லை. யூதர்களுக்கு தேசம் வேண்டும் என்ற கோரிக்கை என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதற்கான நியாயம் விவிலயத்திலும் பாலசுத்தீனம் திரும்புவதில் அவர்கள் காட்டும் உறுதியிலும் இருப்பதாகக் காட்டி ஏற்பைக் கோருகின்றனர். ஏன் அவர்களும் பிற நாட்டு மக்களைப் போலவே, தாங்கள் பிறந்து பொருள் ஈட்டி வாழும் நாட்டினைத் தங்கள் நாடாகக் கொள்ளக்கூடாது.
இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு எப்படிச் சொந்தமோ, பிரான்சு எப்படி பிரெஞ்சு மக்களுக்குச் சொந்தமோ அதுபோலவே பாலசுத்தீனம் அராபியர்களுக்குச் சொந்தம். பாலசுத்தீனத்தில் இன்று நடைபெறுவதை எந்த அறநெறியின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஆணைகளுக்கு உலகப் போர் அளித்த உரிமமன்றி வேறில்லை. பாலசுத்தீனத்தைப் பகுதியாகவோ முழுமையாக யூதர்களின் தாய்நாடாக மீளவும் அளித்துப் பெருமைமிக்க அராபியர்களைக் குறைப்பதென்பது உறுதியாக மானுடத்துக்கு எதிரான குற்றம். யூதர்கள் எங்கு பிறந்து வளர்ந்தார்களோ அங்கேயே அவர்களை நியாயமாக நடத்துவதற்கான அழுத்தம் தருவதே மேன்மையான வழி. பிரான்சில் பிறந்த கிறித்தவர்கள் எவ்வாறு பிரெஞ்சுக்காரர்களோ, அவ்வாறே பிரான்சில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சு மக்களே. பாலசுத்தீனம் தவிர வேறு நாடு வேண்டாமெனில், யூதர்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதை விரும்புவார்களா? அல்லது, அவர்களுக்கு விருப்பம்போலத் தங்க இரண்டு நாடுகள் வேண்டுமென்கிறார்களா? யூதர்களின் நாடு என்ற கோரிக்கை செருமாணியர்கள் யூதர்களை வெளியேற்றுவதற்கு வண்ணமயமான ஒரு நியாயத்தை வழங்குகிறது.
ஆனால் யூதர்கள் மீதான செருமாணிய ஒடுக்குமுறைக்கு இணையான செயல் வரலாற்றில் வேறில்லை. பழங்காலக் கொடுங்கோலர்கள் எவரும் இட்லர் அளவுக்கு வெறிபிடித்துப் போனதில்லை. இதை அவர் ஒரு மதவெறியுடன் செய்கிறார். பிறரை விலக்கும் தீவிர தேசியவாதம் என்ற ஒரு புதிய மதத்தையே உருவாக்குகிறார். அதன் பெயரால் மனிதத்தன்மையற்ற எச்செயலும் இம்மையிலும் இனிமேலும் பலன்தரக்கூடிய மானுடச் செயலாகிறது. அச்சமற்ற வெறிபிடித்த ஓர் இளைஞனின் குற்றச்செயல் மொத்த இனத்தின் மீது நம்பவியலாத கொடூரத்துடன் பாய்கிறது. மானுடத்தின் பெயரால், மானுடத்திற்காக ஒரு நியாயமான போர் இருக்கமுடியுமானால் ஒரு மொத்த இனத்தின் அழிவைத் தடுப்பதற்காக செருமணிக்கு எதிரான போராகவே அது இருக்கும். ஆனால் எந்தப் போரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய நோக்குக்கும் எனது இயங்குதளத்துக்கும் வெளியேதான் அத்தகைய போரின் நன்மை தீமைகள் குறித்த உரையாடல் உள்ளது. /
மேலும் கடவுள் நம்பிக்கையுள்ள எவரும் உதவியற்றவர்களாகவும் கைவிடப்ட்டவர்களாகவும் உணரக்கூடாது என்றும், யூதர்களின் யெகோவா பிற மதக்கடவுள்களைவிடவும் அந்தரங்கமான கடவுள் என்றும் சொல்கிறார். ‘நான் யூதனாக இருந்திருந்து செருமணியில் பிறந்து பொருளீட்டி வாழ்ந்திருந்தால், எந்த உயர்ந்த செருமாணியனையும் போலவே நானும் அதை என்னுடைய நாடு என்று உரிமைகோரி, என்னைச் சிறையில் அடைக்கும்படியோ சுட்டுத்தள்ளும்படியோ சவால் விட்டிருப்பேன். வெளியேற்றப்படவும் எந்தப் பாகுபாட்டுக்கு உடன்படவும் மறுத்துவிடுவேன். இந்தச் சட்டமறுப்பு எதிர்ப்பைக் காட்டுவதில் பிற யூதர்கள் என்னோடு இணைய வேண்டும் என்று காத்திருக்க மாட்டேன். இறுதியில் எனது உதாரணத்தை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவேன். ஒரு யூதரோ எல்லாருமோ நான் அளிக்கும் தீர்வை ஏற்றுக்கொள்வார்களேயெனில், அவர்கள் இப்போதுள்ளதைவிடத் தாழ்ந்துவிடமாட்டார்கள். தாமாக முன்வந்து ஏற்ற மெய்வருத்தம் அகவலிமையையும் உவகையையும் கொணரும். எத்தனை தீர்மானங்கள் செருமணிக்கு வெளியே நிறைவேற்றப்பட்டாலும் அவற்றுக்கு ஈடாகா. இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் செருமணிக்கு எதிராகப் போர்தொடுத்தால்கூட இத்தகைய அகமகிழ்வையும் அகவுறுதியையும் கொண்டுவர முடியாது. இத்தகைய போர்களுக்கு எதிர்வினையாக இட்லர் யூதர்களைப் படுகொலை செய்வதையே முதல் பதிலாகத் தரவும்கூடும்.’
பாலசுத்தீனத்திலுள்ள யூதர்களுக்கும் அகிம்சையையே பரிந்துரைக்கிறார். பாலசுத்தீனத்தில் இடம் வேண்டுமெனில் அராபியர்களின் மனங்களை வெல்லவேண்டும். பிரித்தானியர்களின் துப்பாக்கிகளின் துணையோடு பறிக்கக்கூடாது என்கிறார். அவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அராபியர்களும் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்திருந்தால் நல்லதுதான். எனினும் உலக வழக்கின்படி, வெல்லும் வாய்ப்புகளற்ற சூழலில் அராபியர்கள் வன்முறையைப் பின்பற்றுவதைக் குறைகூற முடியாது என்றும் சொல்கிறார். (Harijan, 26-11-1938)
காந்தியின் இக்கருத்துகளுக்குப் பல தரப்புகளிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. காந்தியைச் சயனிசத்திற்கு ஆதரவானவராக மாற்ற இந்தியா வந்த காலன்பாக் முயன்றார். முடியவில்லை.
Jewish Frontier என்ற இதழில் வந்த எதிர்வினைக்கு காந்தி ஒரு நீண்ட கட்டுரையை மறுமொழியாக எழுதினார்.
/இந்தக் கட்டுரையை நான் ஒரு விமர்சகனாக எழுதவில்லை. யூத நண்பர்களின் வலியுறுத்தலின் பொருட்டு எழுதினேன். நான் எழுத முடிவுசெய்ததும் வேறெப்படியும் எழுதமுடியவில்லை. நான் அதை எழுதியதுமே யூதர்கள் எனது கருத்தை ஏற்று மாறிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒற்றை யூதர் இதையேற்று மாறியிருந்தால்கூட நிறைவடைந்திருப்பேன். இக்கட்டுரையை நிகழ்காலத்துக்காக மட்டுமே எழுதவுமில்லை. எனது எழுத்துகள் என் காலத்தைத் தாண்டி நிற்கும் என்றும், எதற்காக எழுதப்பட்டனவோ அந்த நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக அமையும் என்றும் நம்புகிறேன். எனக்குத் தெரிந்து, நான் எழுதியது ஒரு யூதரைக்கூட மாற்றவில்லை என்பது ஏமாற்றமளிக்கவில்லை.
இந்த எதிர்வினையைப் பலமுறை படித்தபின்பும், எனது கருத்தை மாற்ற வேண்டியதற்கான காரணம் எதுவும் தட்டுப்படவில்லை. இக்கட்டுரையாளர் சொல்வது போல, “செருமணியில் ஒரு யூத காந்தி தோன்றினால், ஐந்து நிமிடங்களே செயல்பட முடியலாம். உடனே அவர் கில்லட்டினுக்கு இழுத்துச் செல்லப்படுவார்,” என்பது நடக்கவே சாத்தியம் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அது எனது வாதத்தைப் பொய்யாக்கவும் செய்யாது அகிம்சையின் திறன்மீது எனக்குள்ள நம்பிக்கையை அசைக்கவும் செய்யாது. ஆயிரங்களில் இல்லாவிடினும் நூற்றுக்கணக்கோர் எரியூட்டப்பட்டுத்தான் அகிம்சையில் நம்பிக்கையற்ற கொடுங்கோலர்களின் பசி அடங்கக்கூடும். உண்மையில், மாபெரும் இம்சையின் முன்னர்தான் அகிம்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் பொதுவான விதி. அதன் தரம் அத்தகைய நேரங்களில்தான் சோதிக்கப்படுகிறது. துன்பத்தை ஏற்பவர்கள் தங்களது வாழ்நாளில் அதன் பலன்களை அனுபவிக்க வேண்டியதில்லை. தங்களது கொள்கையினர் பிழைத்தால், நல்விளைவு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை வேண்டும். வன்முறை வழிகள் அகிம்சையைவிடக் கூடுதல் பயனளிக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூறமுடியாது. பன்மடங்கு குறைந்த பயனையே அளிக்கும். அகிம்சையாளருக்கு உள்ள நம்பிக்கை அவர்களிடம் இராது. (….)
இது இவ்விதழின் ஆசிரியருக்கோ, என் யூத நண்பர்களுக்கோ நிறைவளிக்காது என்பதை வருத்தத்துடன் அறிவேன். செருமணியில் யூதர்கள் மீதான அடக்குமுறை முடிவுக்கு வரும் என்றும், பாலசுத்தீனப் பிரச்சனை தொடர்புடைய அனைவருக்கும் நிறைவுதரும் வகையில் தீர்க்கப்படும் என்றும் உளப்பூர்வமாக விரும்புகிறேன். ‘ / (Harijan, 27-5-1939)
காந்திக்கு அகிம்சையின் மீதிருந்த முழுமையான நம்பிக்கைக்குச் சான்றாக அமைந்து இட்லருக்கு அவர் எழுதிய கடிதம்.
/23 ஜூலை 1939
அன்புள்ள நண்பரே,
மானுடத்தின் பொருட்டு எனது நண்பர்கள் உங்களுக்கு என்னை எழுதச்சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்று எழுதுவது அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றுமோ என்றெண்ணி நான் தயங்கிவந்தேன். ஆனால் தேவையற்ற கணக்குகள் போடாமல், என் கோரிக்கைக்கு என்ன மதிப்பிருந்தாலும் அதை முன்வைக்க வேண்டும் என்று ஏதோ உள்ளுணர்வு சொல்கிறது.
உலகத்தை நாகரிகமழிந்த நிலைக்குத் தள்ளக்கூடிய போரைத் தடுக்கக்கூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கு எவ்வளவு உயர்ந்ததாகத் தெரியினும் அச்செயலுக்கு இவ்வளவு பெரும் விலை தர வேண்டுமா? ஆயுதப்போரினை ஓரளவு வெற்றியுடன், முற்றிலும் ஒதுக்கிவிட்ட ஒருவனின் சொல்லுக்குச் செவிசாய்ப்பீர்களா?
உங்கள் உண்மையான நண்பன்
மோ.க.காந்தி. /
(Harijan, 9 September, 1939)
காந்தியின் கடிதம் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. பிரித்தானிய அரசால் தடுக்கப்பட்டது. அதனால் உடனடி மாற்றம் வந்திருக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆயினும், அகிம்சையின் மீது காந்திக்கிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை இக்கடிதம் வெளிப்படுத்தியது. இறைநம்பிக்கையை ஒத்த இத்தகைய பிடிவாதமான நம்பிக்கை அகிம்சைப் போராளிகளுக்குத் தேவை என்றே காந்தி கருதினார்.
பிறகு இரண்டாம் உலகப்போரின் முடிவிலும் பாலசுத்தீனம் குறித்த தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.
/’பாலசுத்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?
இது கிட்டத்தட்ட தீர்க்கவே இயலாத சிக்கலாகியுள்ளது. நான் யூதனாக இருந்தால், இதையே அவர்களுக்குச் சொல்வேன்: ’தீவிரவாதத்தில் ஈடுபடுமளவு முட்டாள்தனமாக இருக்கவேண்டாம். உங்களுடைய நல்லதொரு வழக்கை நீங்களே வலுவிழக்கச் செய்கிறீர்கள்.’ இது வெறும் அரசியல் நாட்டம் எனில், அதில் எந்த மதிப்பையும் நான் காணவில்லை. எதற்காக அவர்கள் பாலசுத்தீனத்தை விழைய வேண்டும்? யூதர்கள் மாபெரும் இனத்தினர். பல அரிய திறன்களைக் கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவி்ல் யூதர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். இது சமய விழைவு எனில் அதில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை. அராபியர்களைச் சந்தித்து நண்பர்களாக்க வேண்டும். பிரித்தானிய உதவியையோ அமேரிக்க உதவியையோ சார்ந்திருக்கலாகாது. யெகோவாவிடமிருந்து கிட்டும் உதவி மட்மே போதுமானது.
(Harijan, 18-5-1947, and The Hindu, 6-5-1947)/
பாலசுத்தீனச் சிக்கலுக்கு மிகவும் ஏற்புடைய தீர்வு என்று எதை உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யூதர்கள் தீவிரவாதத்தையும் பிற எல்லா வகை வன்முறையையும் விடுப்பதே என்று விடையளித்தார். (The Bombay Chronicle, 2-6-1947)/
இசுரேல் குறித்த காந்தியின் அத்தனை கூற்றுகளும் இன்று மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. வன்முறையால் எழுப்பப்பட்ட நாடு வன்முறையால் மட்டுமே நிலைத்திருக்க முடிகிறது.
“சயனிய நாட்டின் இப்போதைய பதிப்பு கொலை இயந்திரமாகச் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மீண்டும் சொல்கிறேன் – நீடித்திருப்பதற்கு மட்டுமேகூட அது ஒரு கொலை இயந்திரமாக இருந்தாக வேண்டும்,” என்கிறார் நசீம் நிக்கோலசு தாலேப்.
(3)
அகிம்சைப் போராட்டம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒற்றை நிகழ்வுகளைக் கொண்ட ஒன்றன்று. திடீரென்று எழும் பேரெழுச்சியும் அன்று. அது ஒரு தொடர் செயல்பாடு. நாஃசி செருமணி, சயனிய இசுரேல் போன்ற கொடிய ஆதிக்க ஆட்சிகளுக்குக் கீழ் அகிம்சைப் போராட்டங்கள் வெல்லமுடியாது என்பது வலுவான வாதம் போலத் தோன்றினாலும் அதற்கு எதிரான வலுவான வாதங்களையும் வைக்க முடியும். அதையே காந்தி செய்திருக்கிறார்.
கொடிய ஆட்சிகளுக்கு எதிரான எந்தப் போராட்டமும் கடுமையாக நசுக்கப்படவே செய்யும். இத்தகைய சூழலில் எந்தவொரு போராட்டமும் பேரிழப்புகளைச் சந்தித்தே தீரும். வன்முறைப் போராட்டமாயினும் அகிம்சைப் போராட்டமாயினும் இரத்தமின்றி வெற்றிகள் கிட்டப்போவதில்லை. எவ்வகைப் போராட்டமும் வெற்றி பெறுவது கடினம் என்கிற சூழலில் மக்கள் மந்தமான எதிர்ப்பறு நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆதிக்க ஆட்சியோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதுதான் செருமணியில் நடந்தது. யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு மிக மிக வலுவற்றதாகவே இருந்தது. வதை முகாம்களில் அடைபடுவதற்கும் அவற்றை நடத்துவதற்குமேகூட அவர்கள் பெருமளவு ஒத்துழைக்கவே செய்தனர். மிக அரிதாகவே தோன்றிய எதிர்ப்பு கதைகளிலும் திரைப்படங்களிலும் விதந்தோதப்பட்டதால், பெரும் எதிர்ப்பு இருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது என்கிறார் கிழக்கு செருமாணிய யூத எழுத்தாளர் ஜூரெக் பெக்கர். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் இன்றைய பாலசுத்தீனத்தின் மேற்குக்கரையில் நிலவுகிறது. மேற்குக்கரையில் உள்ள பாலசுத்தீன அரசு பெருமளவு இசுரேலோடு ஒத்துழைக்கிறது. தொடரும் ஆக்கிரமிப்பகளைத் தடுக்கும் வலுவும் முனைப்பும் அற்றுள்ளது.
இந்தச் செயலறு நிலைக்கு மாற்றாகத்தான் காந்தி அகிம்சையை முன்மொழிகிறார். காந்தியின் அகிம்சை வெறும் போராட்ட முறை அன்று. அதுவொரு வாழ்க்கை முறை. அதுவொரு நம்பிக்கை. இறைநம்பிக்கை அளவு வலுவான நம்பிக்கை உண்மையின் மீதும் அகிம்சையின் மீது வைத்திருக்கும்போது போராட்டக் களத்தில் அதுவே பெரும் வலிமையாக உருவெடுக்கிறது.
அகிம்சைப் போராட்ட முயற்சிகளில் ஒன்றோ சிலவோ தோல்வியுற்றால் உடனே கைவிட வேண்டியதில்லை. அதையே காந்தி கூறுகிறார். தனது வாழ்நாள் தாண்டியும் போராட்டம் நீடிக்கும் என்கிற திடமும் ஒரு அகிம்சைப் போராளிக்கு இன்றியமையாதது.
ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வேலைநிறுத்தம் போன்றவை மட்டுமே ஓர் அகிம்சை வழி இயக்கத்தின் போர்முறைகளல்ல. தொடர்ச்சியான ஆக்கப் (நிர்மாண) பணிகளைச் செய்து வரவேண்டும். ஆக்கப்பணிகள் மூலமாகவே ஓர் அகிம்சைப் படை கட்டியெழுப்பப்படுகிறது. போராட்டங்களுக்குத் தேவையான உள்ள உறுதியும் உடலுறுதியும் அஞ்சாமையும் திட்டமிடலும் அமைதிக் காலங்களில் நடக்கும் ஆக்கப்பணிகளின் மூலமாகவே வளர்க்கப்படுகின்றன.
தியாகோ அவிலா
இசுரேலிய உணவு முற்றுகையை உடைக்க வந்த மேட்லீன் கப்பலில் இருந்தபோது, பிரேசிலியச் செயல்பாட்பாளர், தியாகோ அவிலா கூறினார், “இந்திய விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்காவில் இனவெறியெதிர்ப்புப் போராட்டம், அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் நடந்த குடிமையுரிமைப் போராட்டம் ஆகியவற்றைப் பார்க்கும்போது வெறுப்பையும் கொடூரத்தையும் அகிம்சை வெல்கிறது என்பதைக் காண்கிறோம். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து முன்செல்கிறோம். காசாவுக்குச் செல்கிறோம். நாங்கள் ஒன்றாக உள்ளோம். இந்த உலகை மாற்றுவோம்” என்றுரைப்பதற்கான தெளிவையும் திட்பத்தையும் அகிம்சை கொடுத்துள்ளது. குண்டுமழையைப் பொருடப்படுத்தாது மீண்டும் மீண்டும் காசா நோக்கிக் கப்பல்களில் சென்ற வண்ணம் உள்ளனர்.
இட்லரின் மனத்தை மாற்ற இயலாவிட்டாலும் நீடித்த அகிம்சைப் போராட்டத்தால், தியாகத்தால், செருமாணியப் பொது மக்களின் மனங்களை மாற்ற முடியும் என்று காந்தி கருதினார். அத்தகைய மனமாற்றம் நிகழச் சில ஆண்டுகள் ஆகலாம். பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால் அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே அந்த மனமாற்றத்தை ஏற்படுத்திக் காட்ட முடியும். இன்றும் இசுரேலிலும் அமெரிக்காவிலும் இந்த மனமாற்றம் சிறுகச்சிறுக நிகழ்வதைக் காணலாம். பல இசைக் கலைஞர்களும், திரைக் கலைஞர்களும். விளையாட்டு வீரர்களும் தங்களது குரல்களை பாலசுத்தீனர்களுக்காக ஒலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பிறநாட்டு இராணுவத் தலையீட்டின் மூலம் கிடைக்கும் வெற்றிகள் பிறவகையான அழிவுகளை ஏற்படுத்தவே செய்திருக்கின்றன. முதலாம் உலகப் போரில் செருமணி தோற்கடிக்கப்பட்டாலும், அதுவே இட்லர் உருவாவதற்கு வழிவகுத்தது என்பதைச் சுட்டுகிறார் காந்தி. இரண்டாம் உலகப் போரிலிருந்து நாஃசிகளின் தோல்வியின் மீது எழும்பி வந்தது அவர்களுக்கிணையான சயனிய அமைப்பு. வன்முறைச் சுழல் ஒடுக்கப்பட்டவர்களையே ஒடுக்குபவர்களாக்கியது. எகிப்து, ஈராக், ஆப்கானிசுதான், லிபியா, சிரியா, உக்ரைன் என்று அண்மைக்காலத்திலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
அகிம்சையின் எல்லைகள் என்று நாம் அஞ்சுவது போராட்டத்தின் எல்லைகளைத்தான். காந்தியப் போராட்டத்துக்கு எல்லைகள் கிடையாது. வெளிநாட்டுத் தாக்குதலையும் அகிம்சை முறையில் எதிர்க்க முடியும் என்று காட்டியது. மக்கள் கலவரங்களையும் அகிம்சை முறையில் கட்டுப்படுத்த இயலும் என்று காட்டியது.
“மக்களிடம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் கூறவேண்டும். அவர்களது திறனுக்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். அவர்களது திறன் என்ன என்பதை நாம் கணிக்கத் தொடங்கி, அதையொட்டி வழிகாட்டுதல் வழங்கத்தொடங்கினால், நம் வழிகாட்டல்கள் தயக்கமானவையாகவும் சமரசம் செய்துகொள்பவையாகவும் இருக்கும் – அவ்வாறு ஒருபோதும் நிகழக்கூடாது,” என்று மீராபென்னுக்குக் கடிதம் எழுதினார். அவ்வேளையில் (31-மே-1942) மீராபென் ஒரிசாவில் சப்பானியத் தாக்குதலை அகிம்சை வழியில் எதிர்கொள்ள மக்களை அணிதிரட்டி அணியமாக்கி காந்தி பாபா படையை அமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அது பெரிய அளவில் நிகழவில்லை. பின்னர் காந்தியே காசுமீரத்தின் மீதான அப்ரிதி இனக்குழுத் தாக்குதலின் போது தற்காப்புக்கு இந்தியப் படை அனுப்பப்பட்டபோது அதை மறைமுகமாக ஆதரித்தார். சீனப் படையெடுப்பின் போது நாராயண் தேசாய் போன்றவர்கள் தங்கள் சாந்தி சேனையுடன் சீனர்களைச் சந்திக்க முன்வந்தபோது நேரு அனுமதி மறுத்தார்.
வெளிநாட்டுத் தாக்குதலுக்கு எதிராக அமைதி வழியில் எதிர்ப்பும் ஒருநாள் சாத்தியப்படலாம். அப்போதும் அகிம்சையின் எல்லைகள் மேலும் விரிவடைந்திருக்கும்.
இன்று வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றும் பாலசுத்தீனத்திலிருந்து இனவெறி சயனிய ஆட்சியை அகற்றுவதற்கு நீடித்த, சமரசமற்ற அகிம்சைப் போராட்டம் அளிக்கும் சாத்தியங்களை நான் மேலும் பேசவேண்டியுள்ளது.
*
உதவிய நூல்கள்:
1. The Collected Works of Mahatma Gandhi
2. Mohandas – Rajmohan Gandhi
3. My Life is My Message – Narayan Desai
***
த. கண்ணன் – பொள்ளாச்சி அருகில் சேர்வைகாரன்பாளையம் கிராமத்தில வேளாண்மை செய்துகொண்டு கிராமக் குழந்தைகளுக்கான பயிலகம் நடத்தி வருகிறார். காந்திய காலத்துக்கொரு பாலம், ஒளிர்மண மலர்கள், போரும் அகிம்சையும் – காஷ்மீர் குறித்து காந்தி, From Reality to Truth முதலிய நூல்களை எழுதியுள்ளார். Mahatma Gandhi in Tamil Literature தொகுப்பு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல்: tkan75@gmail.com
புனைவு வாசிப்புச் செயல்பாட்டில் வாசகர் எதிர்கொள்ளும் சில பொருட்படுத்தத்தக்க சிக்கல்கள் இருக்கின்றன. நம்மால் புரிந்துகொள்ள முடியாத அல்லது புரிந்துகொள்ள முடிந்தும் ஏற்றுக்கொள்ள இயலாத கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் நம்மைத் தொந்தரவு செய்யும் அகச்சிக்கல்கள் அவை. புனைவின் யதார்த்தமும் வாசகரின் நடப்பு பற்றிய புரிதலுக்கும் இடையே நடக்கும் இடையறாத முரணியக்கம் உண்டாக்கும் தொந்தரவு அது. ஒரு தரமான இலக்கியப் படைப்புக்கு மிக அவசியமான கூறாகவும் இதைப் பார்க்கலாம்.
பொதுவாக நாவலின் முன்னுரையைத் தவிர்ப்பவர்களாக இருந்தால் இந்நாவலுக்குள் நுழையும் முன்பு முன்னுரையைப் படித்துவிடுவதே உகந்தது. கதை சித்தரிக்கப்படும் காலகட்டத்தைய வரலாற்றுப் பின்னணி ஓரளவுக்குத் தெரிந்தாலொழிய கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் நேர்வதை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த வரலாற்றுப் பின்னணியின் தாக்கம் நாவலுக்குள் ஆங்காங்கே வெகு சில தருணங்களில் மட்டுமே வெளிப்படையாகத் துலங்குகிறதே அன்றி நாவலின் பிரதானச் சூழலாக பெரிதாக எங்கும் சித்தரிக்கப்பட்டிருப்பதில்லை.
ஒரு துர்க்கற்பனை (Dystopian) நாவலைப் படிக்கும் உணர்வே இந்நாவலை வாசிக்கையில் ஏற்படுகிறது. ஆனால் வழக்கமான துர்க்கற்பனை வகைமையிலான நாவல்களைப் போல கதைக்களத்தின் புறச்சூழல் பற்றிய விவரிப்புகள் இந்நாவலுக்குள் பெரிதாக இருப்பதில்லை. கதையில் நாம் காண்பது பாதிப்பின் விளைவுகளை மட்டுமே; காரணங்களை அல்ல. புறச்சூழல் பின்னணிக் காரணங்களை நாவலில் எங்குமே ஆசிரியர் முன்னிலைப் படுத்தியிருக்கவில்லை. அது இந்நாவலின் தனித்துவமான குரலுக்கு எந்த அளவுக்கு வலுசேர்த்திருக்கிறது என்பதும் நாவலின் பாதியில் தான் விளங்குகிறது.
நாவலின் அகக்குரலை புறக்காரணிகளின் சாயமேற்றாமல் கதைக்களத்தின் இயல்பிலேயே வெளிப்பட அனுமதிக்கிறார் ஆசிரியர். அவசியமான இடமிருந்தும் ஆசிரியரின் குரல் நாவலில் எங்கும் உரத்து ஒலிப்பதில்லை. நிலைகுலைய வைக்கும் தருணங்கள் கூட அடங்கிய தொனியில் சொல்லப்படுகின்றன. எதிர்வினையாற்ற முடியாத மௌனங்களையும் அடுத்து என்ன அசம்பாவிதம் நிகழுமோ என்ற பதட்டத்தையும் நாவல் நெடுகிலும் பிரக்ஞையில் நினைவுறுத்தியவாறே இருக்கிறது கதைசொல்லலின் தொனி.
இதுதான் கதை என்று புறவயமான பார்வையில் இந்நூலை அணுகுவது இங்கு அபத்தமாக இருக்கும். மேலே சொன்னது போல ஒரு டிஸ்டோபியன் நாவலை வாசிக்கும் உணர்வைத் தரக் காரணம் இது கொண்டிருக்கும் புகார்களற்ற மௌனம்!. ஆதரவைப் கேட்டுப் பெறவோ கரிசனத்துக்கு இறைஞ்சவோ முனையாத நிர்க்கதியான மௌனம். சரி தவறுகளைத் தீர்மானிக்கும் அறத்தின் அளவுகோல் இங்கு செல்லுபடியாகாது. இப்படியான சூழலுக்குத் தள்ளப்படும் வாழ்க்கை முறை இவ்வாறாகத்தான் இருக்கும்.
1980களில் ஸ்காட்லாந்தின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அரசாங்கத்தால் மூடப்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதன் தொடர் விளைவாக இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிக்கிறது. வாரம் ஒரு முறை கிடைத்து வரும் சொற்பமான அரசு மானியத்தை குடும்பப் பெண்கள் ஒரேநாளில் குடித்தே தீர்க்கிறார்கள். ஆண்கள் கவலைகளின்றி சுய மோகத்தில் தறிகெட்டுத் திரிகிறார்கள். பரிதாபமான வாழ்க்கைச் சூழல் இன்னும் பலவிதமான சீர்கேடுகளுக்கு உள்ளாகிறது.
நாவலில் பக்கம் பக்கமாக விவரித்துச் செல்லத் தக்க உணர்ச்சிகரமான தருணங்கள் பல இருக்கின்றன. அப்படியான இடங்களும் குறைவான சொற்களில் நீடித்த மௌனத்தில் ஆழ்த்தி விடுகிறது. எந்நேரமும் துர்ச்சம்பவத்தை எதிர்பார்க்க வைத்திருக்கும் தொனியும் ஆர்ப்பாட்டமில்லாத உயிரோட்டமான மொழியும் இதை சாத்தியமாக்குகிறது.
ஜி.குப்புசாமி அவர்களின் மொழியாக்கம் மீது எப்போதும் கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு உண்டு. அது இந்த நாவலில் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. வெளிப்படையாக விவரிக்கப்படாத மௌன ஆழங்கள் நிறைந்த பிரதி இது. சொல்லப்படுவதை மொழிபெயர்ப்பது சவால் என்றால் இங்கே பிரதி பேணும் ஆழமான ‘மௌன’த்தை பிசகாமல் தமிழிலும் கடத்துவது இன்னும் கூடுதலான சவால்.
ஒரு உதாரண நிகழ்வை மட்டும் குறிப்பிடுகிறேன். ஆரம்பம் முதலே கண்ணியமான குடும்பத் தலைவராக ஆக்னெஸின் தந்தை சித்தரிக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்று தாயகம் திரும்பியவர். ஊதாரித்தனமான ஆடவர்களைப் போலல்லாது இளமை இருக்கும் போதே குடும்பத்துக்காக கடினமாக உழைத்து இல்வாழ்க்கையை குறைவின்றி நடத்தியவர். அப்பழுக்கற்ற கௌரவமான சமூக அந்தஸ்தைப் பேணி வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் மரணப்படுக்கையில் இருக்கும் தருணத்தில் குற்றவுணர்ச்சி நெஞ்சை அழுத்த கண்ணீரோடு அருகில் அமர்ந்திருக்கும் ஆக்னெஸிடம் அவளது தந்தையின் இதுவரை சொல்லப்படாத அதிர்ச்சியூட்டும் கடந்த கால ரகசியம் ஒன்றை தாய் லிஸ்ஸி மனம் திறக்கிறார்!, அதன் முடிவாக வருவது “குழந்தையா? எந்தக் குழந்தை?” என்ற மூன்றே வார்த்தைகள் தான். ஆனால் அது உண்டாக்கிய அதிர்வு நாவல் முடிந்த பிறகும் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக அங்கிருந்து நிதானமாக வாசிப்பைத் தொடரும் முன்பு ஒரு பேரமைதி தேவைப்பட்டது!.
அதேபோல ஆக்னெஸ் ஒரு மனஸ்தாபத்தைத் தொடர்ந்து அவளது தாயுடன் சமரசமாக முயற்சிக்கும் பகுதி, காணாமல் போன ஆக்னெஸைத் தேடி செய்வதறியாமல் சிறுவன் ஷகி தனியாக மதுவிடுதிகளுக்கு அலையும் பகுதி, நாவலின் இறுதியில் தனிமையின் மொத்த பாரமும் அழுத்த ஷகி பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தவாறு கிளாஸ்கோ நகரின் வெளியே தெரியும் காட்சிகளை அவதானித்தபடியே நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் பகுதி என சித்திரத்தைப் போல மனதில் பதிந்த ஏராளமான தருணங்கள் நூலில் இருக்கின்றன. தீவிர உணர்ச்சிகளை வண்ணங்களாகக் குழைத்து வரையப்பட்ட ஓவியத்தை அவதானிப்பது போன்றே இப்பகுதிகள் மனதில் பதிகின்றன. வாசிப்புக்குப் பிறகு காலங்கள் கடந்தாலும் மனதை விட்டு அகலாத சம்பவங்களில் இப்படியான ஓவியத்தன்மை பொதிந்திருக்கும்.
கதையில் இடம்பெறும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் சாதாரண பாமரக் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். உலக நடப்பு பற்றியோ தங்களுடைய அவலமான நிலைக்குக் காரணமான அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வையோ அவர்களின் சிந்தனையிலும் பேச்சிலும் வெளிப்படுவதில்லை. அன்றாட இயல்பு வாழ்க்கையின் மீது மட்டுமே அவர்கள் பற்று கொண்டவர்கள். எந்நேரமும் உடைந்துவிடக்கூடிய நீர்க்குமிழி போன்றே அவர்களின் சொற்பமான சந்தோஷங்களும் நீடிக்கின்றன. அவர்களின் உளவியல் தன்மை அவர்களுக்கு விதிக்கப்பட்ட சூழலையேப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பெரும்பாலும் அவர்களிடம் எதிர்காலம் குறித்த எந்தவிதக் கனவுகளும் ஆசைகளும் இருப்பதில்லை (ஷகியின் அண்ணன் லீக் போன்ற ஒருசிலர் மட்டும் விதிவிலக்கு). தங்களைச் சூழ்ந்த சகிக்க முடியாத வட்டத்துக்குள் தங்களைப் பொருத்தக் கற்றுக்கொண்டவர்கள். அதிலேயே வெந்து தணிபவர்கள். கட்டுப்பாடில்லாத போதைப் பழக்கமும், தறிகெட்ட உறவுப் பிணைப்புகளும் சர்வ சாதாரணமாக அவர்களுக்குள் மலிந்திருக்கின்றன. தங்களின் அலங்கோலமான வாழ்க்கையை மூர்க்கத்தனமாக சபித்துக்கொண்டே அதை யதார்த்தமாகவும் ஏற்று வாழப் பழகியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களின் வீழ்ச்சியை எங்குமே நியாயப்படுத்தாமல் அதேசமயம் சூழலின் மீதான விமர்சனப் பார்வையையும் மறைபொருளாக உணர்த்துவதைச் சாத்தியமாக்கிய விதத்தில் தான் இந்நாவலுக்குக் கிடைத்துள்ள உயரிய இலக்கிய அந்தஸ்துக்கான வெகுமதி அடங்கியிருக்கிறது.
ஷகியுடன் ஒரு அண்ணன் ஒரு அக்காவைச் சேர்த்து ஆக்னெஸிற்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். ஒட்டுமொத்த உறவுகளும் ஒவ்வொரு கட்டத்தில் ஆக்னெஸை விட்டுப் பிரிகிறார்கள். அவளின் கடைசி மூச்சு வரை ஷகி மட்டுமே அவளுடன் இருக்கிறான். தந்தை தாய் மகன் மகள் காதலர்கள் என பலராலும் ஒவ்வொரு கட்டத்தில் முழுமையாக வெறுத்து ஒதுக்கப்படுகிறாள் ஆக்னெஸ். எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும் அதற்கு எந்த வகையிலும் ஆக்னெஸ் பொறுப்பல்ல என்று அவள் மீது பச்சாதாப உணர்வை நாவல் எங்குமே தோற்றுவிப்பதில்லை.
சூழல் காரணத்தை ஒருவகையில் ஆக்னெஸ் தனது சொந்த சந்தோஷங்களுக்கு இரையாகவேப் பயன்படுத்துகிறாள். திருமணம் செய்து கொண்டவனைக் காரணமின்றி பிரிந்து உல்லாசப் போக்கிரி ஒருவனிடம் காதலில் விழுகிறாள். அதுவும் நரகமாக மாறுகிறது. ஏமாற்றம் தலைக்கேறுவதை விரட்ட எந்நேரமும் தொடரும் மதுப்பழக்கம் அவளது சிந்தனைகளையும் உணர்வுகளையும் மரத்துப்போகச் செய்கிறது. அவ்வப்போது அவளுக்குள் தலைதூக்கும் நல்லுணர்வுகளும் சடுதியில் படுமோசமான விளைவுகளில் முடியும் படியான நிச்சயமின்மையால் திரிபடைகின்றன.. பல உல்லாசக் கொண்டாட்டங்களில் தன்னிலை மறந்து திரிகிறாள். எதிலும் நீடித்த நாட்டமில்லாத அல்லாட்டத்தில் வெகு விரைவிலேயே அலுப்பும் சோர்வும் மட்டுமே மண்டிய வாழ்வின் கடைசிக் கட்டத்தை அடைகிறாள்.
நாவலில் எங்கும் ஆக்னெஸின் அழகு பற்றிய வர்ணனை வருவதில்லை. அவள் ஒரு பேரழகி என்பது அவளுடன் தொடர்புடைய ஏனைய கதாபாத்திரங்களின் பார்வைகளின் வழியாக அவதானிக்கிறோம். ஆக்னெஸ் என்ற ஆளுமைக்கு நாவலுக்குள்ளேயே பல பரிமாணங்கள் இருக்கின்றன. போரில் இருந்து திரும்பிய தந்தைக்கு அப்போது சிறுமியாக இருக்கும் தன் மகள் ஒரு பரிசுத்தமான தேவதை. பின்னாளில் அறிமுகமாகும் இளமையும் துடிப்பும் கொண்ட காதலனுக்கு அவள் ஒரு வசீகரமான அடங்காப்பிடாரி. சுற்றத்தாருக்கு அவள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமைசாலியான ஒரு வேசை. ஆனால் ஷகியின் பார்வையில் அவள் அம்மா ஒரு மகத்தான பெண்.
உலகமே கைவிட்டாலும் ஷகி தன் அம்மாவை விட்டு அகலாமல் கண்பார்வையில் வைத்து பார்த்துக்கொள்கிறான். மகனுக்கு அம்மாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய அரவணைப்பும் வாஞ்சையும் பாதுகாப்பும் தலைமாற்றாக மகனிடம் இருந்து அம்மாவுக்கு கிடைக்கிறது. அவளுக்காக அவமானங்களைப் பொறுத்துக் கொள்கிறான், பசியைப் பொறுத்துக் கொள்கிறான், இரவுகளில் அம்மாவைத் தேடி நகரத்து மதுவிடுதிகளாக அலைகிறான், படிப்பைத் தொடர முடியாமல் போகிறது, சிறுவர்களின் ஏளனங்களுக்கு ஆளாகிறான். இத்தனை இருந்தும் அவனுக்குத் தன் அம்மாவின் மீது சிறு புகாரும் இருப்பதில்லை.
ஒரு அதிர்ச்சியூட்டும் தருணத்தில் நினைவிழந்து போன ஆக்னெஸின் ஆடைகளை நேர்த்தியாக அணிவித்து அவளுக்குப் பிடித்தமான ஒப்பனைகளை செய்வித்து அவளின் தோற்றத்தில் கௌரவத்தை மீட்டுத் தக்கவைக்க ஷகி முயற்சிக்கும் பகுதி ஒன்று நாவலில் இருக்கிறது. உலக இலக்கியங்கள் அனைத்திலும் மீண்டும் மீண்டும் விவாதங்களிலும் உரையாடல்களிலும் நினைவுகூறப்படும் மிக அரிதான ஒப்பற்ற தருணங்கள் என சில இருக்கும். ஒட்டுமொத்த நாவலின் உச்சமாக அப்பகுதி இருக்கும். இந்நாவலில் வரும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதி அப்படியான ஒரு உதாரண நிகழ்வு! ஷகிக்கும் ஆக்னெஸுக்கும் இடையேயான இணக்கத்துக்கு நிகரான தாய் மகன் உறவு வேறொரு படைப்பில் இலக்கியத்தில் பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஷகியைப் பிரதானப்படுத்துவதாக தலைப்பிடப்பட்ட இந்நாவலின் பெரும்பகுதி உண்மையில் அவனது தாய் ஆக்னெஸின் அழைக்கழிப்புகளாகவே நிறைந்திருக்கிறது. பிரதான கதாப்பாத்திரத்துக்கு நாவலில் இடப்பட்ட மௌனம் எதற்காக? ஏனெனில் அது தான் ஷகி பெய்னின் குரல்! ஒருவகையில் இந்நாவல் ஷகியின் வெளிப்படுத்தாத உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட சமர்ப்பணம் என்றும் புரிந்துகொள்ளலாம்.
***
ந. ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com
புனைவுகளைப் பரந்த அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். சுய அனுபவத்தின் அடிப்படையில் உருவானவை; புற வழிகளிலிருந்து கிடைக்கும் அனுபவப் பதிவுகள், தகவல்களிலிருந்து உருவானவை. சுயஅனுபவம் சார்ந்த புனைவுகளிலும் புறவழித் தரவுகள் கலந்திருக்கும்; புறவழித் தரவுகள் சார்ந்த புனைவுகளிலும் சுய அனுபவம் கலந்திருக்கும். என்றாலும் இரண்டில் எது தூக்கலாக இருக்கிறது என்பதை வைத்து வகைப்படுத்தலாம். இருவகைப் புனைவுகளிலும் தவிர்க்க முடியாமல் கலந்திருப்பது கற்பனையின் வீச்சு என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மிகுதியும் கவிஞராகவே அறியப்படும் சுகுமாரன் குறிப்பிடத்தக்க புனைவுகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களும் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் படைப்பு வீரியத்தில் மிகவும் வலுவானவை.
வெல்லிங்டன் என்னும் நாவல் மிகுதியும் சுய அனுபவம் சார்ந்தது. பெருவலி பெரிதும் புறவழித் தகவல்கள் சார்ந்தது. புறவழித் தகவல்களின் மீது கற்பனை ஆடிய நர்த்தனத்தின் விளைவே பெருவலி. வரலாற்றுப் பின்புலம் கொண்ட இந்தக் கதையில் உண்மை-கற்பனை ஆகியவற்றின் விகிதாச்சாரத்தைக் கண்டுபிடிக்கும் வேலையை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விட்டுவிட்டு நாம் புனைகதை வாசகராக நாவலுக்குள் நுழையலாம்.
மாற்றாந்தாய் நூர் மஹலின் சூழ்ச்சியைத் தோற்கடித்து ஷாஜஹான் அரியணை ஏறுவதில் தொடங்கும் நாவல் ஷாஜஹானை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு அவர் மகன் அவுரங்கசீப் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்வதோடு முடிகிறது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த எவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய இந்தத் தகவலை வைத்துக்கொண்டு ஒரு நாவலைக் கட்டி எழுப்புகிறார் சுகுமாரன். ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய பாத்திரங்கள் முக்கியப் பங்கு வகித்தாலும் சுகுமாரன் இவர்களை மையமாகக் கொண்டு நாவலைக் கட்டமைக்கவில்லை. இவர்கள் பார்வையிலும் அன்றைய நிகழ்வுகளை அணுகவில்லை. நாவலின் மையமாகவும் நாவலின் கோணத்தைத் தீர்மானிக்கும் கண்ணாகவும் விளங்குபவள் ஷாஜஹானின் செல்ல மகள் ஜஹனாரா. பேரழகியும் சிறந்த அறிவாளியுமான ஜஹனாராவும் அவளுக்கு நெருக்கமான பானிபட் என்னும் நபும்சகறும் மாறி மாறிச் சொல்லும் வகையில் அமைந்துள்ள கதையாடல் பேரரசுகளில் நடக்கும் அதிகாரப் போட்டிகளில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் பலவிதமான செயல்பாடுகளைச் சித்தரிக்கிறது.
கதை என்று பார்த்தால் அரியணையின் வாரிசாகக் கருதப்படும் மூத்த மகன் தாரா ஷுகோவை ஓரங்கட்டிவிட்டு அவுரங்கசீப் முடிசூட்டிக்கொள்வதுதான் கதை. தாரா ஷுகோ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ளவன். பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று நினைப்பவன். நவீன சிந்தனைகள் கொண்டவன். அவுரங்கசீப் அவனுக்கு நேரெதிரான நம்பிக்கைகளைக் கொண்டவன். தீவிரமான மதப் பற்றாளன். தன் மதம் மட்டுமே சரியானது என்று நம்புபவன். சூழ்ச்சித் திறன் மிகுந்தவன். சரியான நேரத்தில் சரியான விதத்தில் காய் நகர்த்தி அரியணையைக் கைப்பற்றும் சூட்சுமம் அறிந்தவன். ஷாஜகானுக்குப் பிறகு அவுரங்கசீப்தான் முகலாயப் பேரரசின் மன்னனானான் என்பதை நன்கு அறிந்திருந்தாலும் தாராவுக்கும் அவுரங்கசீபுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தாரா வென்றுவிடக் கூடாதா என்று வாசகரை ஒரு கணமேனும் ஏங்கவைப்பது நாவலின் வெற்றி.
இந்திய நிலப்பரப்பே பெரும் ரணகளமாக இருந்த அன்றைய காலகட்டத்தைப் பற்றிய இந்த நாவலில் போர்களும் சூழ்ச்சிகளும் அதிகாரப் போட்டிகளும் இடம் பெறுவது இயல்பானது. ஆனால் நாவலின் கதையாடலில் இவை அழுத்தம் பெறவில்லை. வரலாற்று ஏடுகளில் வெறும் அடிக்குறிப்பாகத் தங்கிவிட்ட ஜஹனாராவின் ஆளுமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் முன்னிலைப் பெறுகின்றன. ஒரு கதையை யாருடைய பார்வையின் வழியாகச் சொல்ல வேண்டும் என்பது படைப்பாளியின் அணுகுமுறையைக் காட்டுகிறது. தாராவையும் அவுரங்கசீபையும் வைத்து ‘பாகுபலி’ போன்ற படங்களில் வரும் இரட்டை நாயகர்களின் கதையாகவும் இதை வளர்த்தெடுத்திருக்க முடியும். ஆண்களே ஆதிக்கம் செலுத்திவந்த பேரரசின் அதிகாரச் சூழலில் குரல் எழுப்பும் உரிமையற்ற ஒரு பெண்ணின் பார்வையில் இந்தக் கதையைச் சொல்ல சுகுமாரன் முடிவு செய்தது அவருடைய இலக்கியப் பார்வையைக் காட்டுகிறது. கவனம் பெறாதவர்கள்மீது கவனம் குவிப்பதும் ஓரங்கட்டப்பட்டவர்களின் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதும் இலக்கியப் பிரக்ஞையின் முக்கியமான பண்புக் கூறுகள். அனைவரும் அறிந்த மனிதர்களைப் பற்றியே மீண்டும் எழுதுவதைத் தவிர்த்துவிட்டு அதிகம் அறியவராதவர்களின் வாழ்வைச் சொல்ல முற்படுவது நுட்பமான இலக்கியப் பண்பு. அவர்கள் வாழ்வைச் சொல்வதோடு நில்லாமல் அவர்கள் கோணத்திலிருந்தே அதிகாரப் பீடத்தையும் அதைச் சுற்றி நடக்கும் வெறித்தனமான போட்டிகளையும் சித்தரிப்பது நிலைபெற்ற மையங்களிலிருந்து வாசகரின் பார்வையைத் திருப்பக்கூடிய செயல்முறை. கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சத்திலிருந்து விலகி, நிழல்களின் திரை விலக்கிப் பார்க்கும் சுகுமாரன் அதன் மூலம் இதுவரை நாம் அதிகம் அறிந்திராத ஓர் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அறிந்த உலகின் அறியாத பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கோணமே இந்த நாவலை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.
ஜஹனாராவின் பார்வைக் கோணம் நமக்கு எதைச் சொல்கிறது? அது வரலாற்றை மாற்றி எழுதவில்லை. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் பதிவாகாமல்போகும் உண்மைகளை அது நமக்குச் சொல்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி தாராவுக்கும் அவுரங்கசீபுக்கும் இடையில்தான் நடக்கிறது. அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஜஹனாராவுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவள் பெண். அதிகாரப் போட்டி ஆண்களுக்கு இடையே மட்டுமே நடக்கிறது. எவ்வளவு தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஜஹனாராக்களுக்கு அங்கே இடம் இல்லை. அவர்கள் பின்னணியில் இருந்துகொண்டு செயல்படலாம், நூர் மஹலைப்போல. பெண்கள் எவ்வளவு திறமை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னணிக்கு வர முடியாது. எதிர்மறையான பண்புகள் கொண்ட நூர் மஹல் ஜஹாங்கீரை முன்வைத்தே இயங்க முடியும். நேர்மறையான இயல்பு கொண்ட ஜஹனாரா தாராவை முன்னிறுத்தியே செயல்பட முடியும். அதிகாரப் பீடத்தில் அவர்களுக்கு நேரடியான பங்கேற்புக்கான உரிமை இல்லை. அன்றைய இந்தியாவைப் பல்வேறு சமய நம்பிக்கைகளும் பரஸ்பர இணக்கத்துடன் புழங்கக்கூடிய சமூகமாகக் கண்ட ஜஹனாராவால் தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள நேரடியாக அரசியலில் இறங்க முடியாது. தன்னைப் போலவே முற்போக்கான, தாராளவாதச் சிந்தனை கொண்ட தன் சகோதரன் அவ்வாறு இல்லாத இன்னொரு சகோதரனால் தோற்கடிக்கப்படுவதைச் சாட்சியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். சர்வ வல்லமை படைத்த ஜஹாங்கீரையே பின்னணியிலிருந்து ஆட்டிப் படைத்த நூர் மஹல், ஜஹாங்கிரின் மகன் அரியணையைக் கைப்பற்றியதும் வீட்டுக்காவலில்தான் முடங்கியிருக்க வேண்டும். அரசியல் ஆண்களின் களம். அங்கே பெண்களின் நேரடிச் செயல்பாட்டிற்கு வாய்ப்பில்லை.
ஜஹனாராவும் பானிபட்டும் சொல்லும் கதை மைய நீரோட்டப் பார்வையில் அமைந்த வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாத கதை. ஜஹனாராக்களுக்கு அதிகாரத்தில் மட்டும் உரிமை மறுக்கப்படவில்லை. மிக இயல்பான, அடிப்படையான மானுட உணர்வுகளான காதலும் காமமும்கூட அவளுக்கு மறுக்கப்படுகின்றன. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வாரிசுகள் அரச குடும்பத்து ஆண்களுக்குப் போட்டியாக உருவெடுக்கக் கூடும் என்பதால் அந்தப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்னும் தடையை விதித்தவர் அக்பர் என்று போற்றப்படும் பேரரசர்தான். பேரரசரின் ஆண் வாரிசுகள் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அரியணைக்கும் அதிகாரத்திற்கும் உரிமை கொண்டவர்கள். பெண் வாரிசுகள் யாரைத் திருமணம் செய்துகொண்டாலும் அந்த உரிமை அற்றவர்கள். மனைவியின் மீதான பெருங்காதலால் அவளுக்காக அழியாத நினைவுச் சின்னம் கட்டிய, மகள்மீது பேரன்பைப் பொழிகின்ற ஷாஜஹானுடைய அணுகுமுறையும் இதுவேதான். பெண்கள்மீதான அன்புக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதிகாரத்தில் அவர்களுக்கு இடம் தர வழியில்லை. அதிகாரப் பீடத்தைத் தன் வசம் வைத்திருக்கும் ஆண்களின் சிந்தனை. இதை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் அரசர்கள் தங்கள் மகள்களின், சகோதரிகளின் உடல்சார்ந்த இயல்பான உணர்ச்சிகளைப் பற்றிய பரிவுணர்ச்சி சிறிதும் அற்றவர்களாக இருப்பதற்குக் காரணம் ஆண்களை மையமாகக் கொண்ட அதிகார அமைப்பு.
பெருவலி நாவல் இவை எதையும் நேரடியாகச் சொல்வதில்லை. பானிபட்டும் ஜஹனாராவும் தரும் சித்திரங்களின் வழியே இந்த உண்மைகள் துலங்குகின்றன. வரலாற்றின் இருள் படர்ந்த மூலைகளில் இவர்களுடைய பார்வை வெளிச்சம் பாய்ச்சுகிறது. வரலாற்று ஏடுகளின் அதிகாரப்பூர்வமான பதிவுகளுக்கு இணையான வரலாற்றின் வேறு சில பக்கங்களை இவர்கள் மூலம் நாம் காண்கிறோம். சுகுமாரனின் கவித்துவம் ததும்பும் கம்பீரமான தமிழில் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் உயிர்பெறுகின்றன. தேர்ந்த சிற்பியின் உளி இயங்கும் லாவகத்துடன் செயல்படும் சுகுமாரனின் மொழியில் வரலாற்றின் மறைபொருள்கள் உருப்பெறுகின்றன.
இது வெறும் வரலாற்றுக் கதைதானா என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வரலாற்றை மையமாகக் கொண்ட கற்பனாவாத நாவல்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் மொழியில் வந்திருக்கும் இன்னொரு வரலாற்று நாவல் தானா இது? வரலாற்றைத் தன் விருப்பம் சார்ந்து திரிக்காமல், வேளிக்கைக்காகச் சரடு விடாமல் அணுகும் முறையில் இது நவீன இலக்கிய அணுகுமுறை கொண்ட தீவிரமான சபைப் படைப்பாக உருக்கொண்டிருக்கிறது. நவீனத் தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சுகுமாரனிடமிருந்து வேறு வகையான வரலாற்று நாவலை எதிர்பார்க்க முடியாது என்பதால் இது வரலாற்றைக் கோரிக்கை நோக்குடனோ, பிரமிப்புடனோ அணுகும் வெகுஜன அணுகுமுறையைத் தவிர்த்த தீவிரமான கலைப்படைப்பாக உருப்பெற்றிருப்பதில் வியப்பொன்றுமில்லை. எனினும் வரலாற்றைச் சொல்வது மட்டுமே வரலாற்று நாவலின் பணியாக இருக்க முடியாது. நவீனத்துவக் கலை நோக்கு வரலாற்றை வெறும் வரலாறாக மட்டும் காண்பதில்லை. சம காலத்தின் பின்புலத்தில் வரலாற்றையோ அல்லது வரலாற்றின் பின்புலத்தில் சம காலத்தையோ பார்ப்பதற்கான வாய்ப்பை அது அளிக்கும். சுகுமாரன் தன் பின்னுரையில் இதைத் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். இது வரலாற்று நாவலாகக் கருதப்படுமானால் அது தற்செயல் மட்டுமே என்கிறார். தன்னுடைய நோக்கம் அதுவல்ல என்று தெளிவுபடுத்துகிறார். “சமகால நிகழ்வுகள் சிலவற்றைப் பற்றி அப்பட்டமாகச் சொல்ல இயலாது என்ற தயக்கமே வரலாற்றில் தஞ்சமடையக் காரணம். கடந்த கால நடப்புகள் இன்றைய வரலாறாக ஆகம்போது இன்றைய நிகழ்வுகளையும் வரலாற்றில் பார்க்க முடியும் என்பது என் எண்ணம். இன்று அரசியலில் விவாதிக்கப்படும் குடும்ப அரசியலையும் வாரிசு அதிகாரத்தையும் அன்றைய வரலாற்றில் பார்க்க முடியாதா? இந்தக் கேள்வியின் விளைவே இந்தப் புனைகதை”. இவ்வாறு தன் பின்னுரையில் தன்னுடைய நோக்கத்தைத் தெளிவாகக் கூறிவிடுகிறார் சுகுமாரன். இந்தக் கூற்றை இந்த நாவலின் பின்புலத்தில் இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று கருத்தளவிலானது. இன்னொன்று கலையின் கோணம். கருத்தளவில் பார்க்கையில் வரலாற்றின் நீட்சியாகச் சமகாலம் இருப்பதையும் எவ்வளவோ மாற்றங்களுக்குப் பிறகும் பெண் ஒடுக்குமுறை மாறாதிருப்பதையும் உணர்த்தும் நாவலாக இதைக் கொள்ளலாம். சொத்துரிமை உட்படப் பல்வேறு உரிமைகளும் வாய்ப்புகளும் சட்டப்பூர்வமாகவே பெண்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட இன்றைய ஜனநாயக யுகத்திலும் அதிகாரப் போட்டியில் பெண்களால் பங்குபெற இயலவில்லை. வாரிசுரிமை என்பதே ஜனநாயகக் கோட்பாட்டிற்கு முரனான கருத்து என்றாலும் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் நமது ஜனநாயகக் காவல்கள் அதன் உடன்பிறந்த பெண் ஒடுக்குமுறையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசுரிமை சார்ந்தோ சாராமலோ ஒரு பெண் அதிகார அரங்கில் தனது தகுதிக்குரிய இடத்தைப் பெறுவது அல்லது அடைவது இன்றளவிலும் விதிவிலக்காகவே உள்ளது. ஜஹனாராக்கள் வரலாற்றின் இடியாடுகளிலிருந்து வெளிப்பட்டு வந்து எங்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்வியை நேரடியாக எழுப்பும் வாய்ப்பும் துணிவும் அற்றவர்களாகவே இன்றைய ஜஹனாராக்கள் இருக்கிறார்கள். ஜஹனாராவின் இடத்தில் பல்வேறு சமகாலப் பெண்களை நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். ஜஹனாராவின் சதிதான் அவர்களுக்கும். அவர்கள் அன்பு செலுத்தலாம், அன்பைப் பெறலாம், அறிவைச் சேகரித்துக் கொள்ளலாம், அந்த அறிவால் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டலாம். ஆனால் அதிகாரத்தின் முகமாக அவர்கள் மாற முடியாது. தகுதியிலும் திறமையிலும் தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆண் வாரிசுகளின் நிழலில்தான் அவர்கள் தஞ்சமடைய வேண்டும். இந்த ஒப்பீட்டை நிகழ்த்தவில்லை. அது வரலாற்றின் அரங்கிற்குள் இம்மியளவுப் பிசகாமல் இயங்குகிறது. ஆனால் நாவலின் கதையாடல் வாசக மனங்களில் இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியாமல் நிகழ்த்துகிறது.
சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்த நாவல், கலைப் படைப்புகளுக்கே உரிய விதத்தில் கதாசிரியரின் நோக்கத்தைத் தாண்டி மேலெழுகிறது. நாவலில் உருப்பெறும் பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் சமகால ஆளுமைகள் பலவீனமான கோமாளிகளாகத் தெரிகிறார்கள். குறிப்பாக நாவலில் துலங்கும் ஜஹனாராவின் சித்திரம் ஒப்பிட யாரும் இல்லாத அளவுக்கு மகத்தான உருவம் எடுக்கிறது. நாவலாசிரியரின் மனதில் இருந்திருக்கக்கூடிய சமகால ஆளுமை யாரைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த ஆளுமையாக ஜஹனாரா ஜொலிக்கிறார். சுகுமாரனின் உத்தேசம் அதுவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டத்தை மீறி அவரது கலையின் துணையுடன் ஜஹனாரா அவரது நோக்கத்தைத் தாண்டிச் சென்று இந்த நாவலின் கலைத்தன்மைக்குச் சான்றாக நிற்கிறாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இளமையிலேயே மடிந்துபோன, வரலாற்றில் மறக்கப்பட்ட அந்தப் பெண் சுகுமாரனின் கலை என்னும் மந்திர ஸ்பரிசம் பட்டு அமரத்துவம் கொண்ட நாயகியாக உயிர்பெறுகிறாள். தமிழின் நவீன நாவல் பரப்பில் மறக்க முடியாத பெண்களில் ஒருத்தியாக மிளிர்கிறாள்.
சுகுமாரன் இந்த நாவலை எழுத சமகாலத்திலிருந்து வரலாற்றுக்குச் சென்றாரா அல்லது வரலாற்றிலிருந்து சமகாலத்திற்கு வந்தாரா என்னும் கேள்வியும் எழுகிறது. இன்று நடக்கும் நிகழ்வுகளின் நிழல்களை வரலாற்றில் தேடினாரா அல்லது வரலாற்றில் கண்டெடுத்த ஒரு தவலில் சமகாலத்தைக் கண்டாரா? அனேகமாக இரண்டாவதாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம். தில்லிக்குப் பயணம் சென்றபோது ஜஹனராவின் சமாதியைப் பார்த்தபோது அவளைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவள் தன் மனதுள் புகுந்தாள் என்று எழுதுகிறார் சுகுமாரன். மேற்கொண்டு அவளை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகிறார். அவளைப் பற்றி அறிய அறிய அவள் இன்னும் சாகவில்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கக்கூடும். அவளுடைய இன்றைய பிரதிபிம்பங்கள் அவர் மனதில் தட்டுப்பட்டிருக்கக்கூடும். அவளைப் பற்றி எழுதுவதன் மூலம் இவர்களைப் பற்றிப் பேச அவர் நினைத்திருக்கலாம். அந்த நோக்கம் அவரது திட்டங்களைத் தாண்டிப் பல்வேறு கிளைகளாக விரிந்து அதிகாரப் பீடங்களின் இயங்குமுறைகளையும் ஆண் பெண் சமன்பாடுகளின் சிக்கல்களையும் மதச் சச்சரவுகளையும் அதிகார வேட்கையின் பன்முகங்களையும் தழுவியபடி படர்ந்து செல்கிறது. வரலாற்றின் பின்புலத்தில் சமகாலத்தையும் சமகால வெளிச்சத்தில் வரலாற்றையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு காட்சி, மனதில் அது உருவாக்கும் மின்னல் வெட்டு, சில தகவல்கள், அவை அளிக்கும் சிந்தனைகள் ஆகயிவை படிக்கப் படிக்கச் சலிக்காத கலைப் படைப்பாக உருப்பெறும் ரசவாதத்தை இந்த நாவலில் காணலாம்.
ஒருவகையில் ஜஹனாரா சுகுமாரனின் முன்னோடி அதிகாரம் சார்ந்த ஒற்றுமை எதுவும் அவர்களுக்குள் இல்லை. சுகுமாரனைப் போலவே அவளும் எழுத்தாளர். தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை, தன் எண்ணங்களை அவள் நாட்குறிப்பில் பதிவு செய்து வந்திருக்கிறாள். அந்தப் பதிவுகள் அவளைப் பற்றியும் அவள் வாழ்ந்த காலம் பற்றியும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாத கதைகளை நமக்குச் சொல்கின்றன. அந்தப் பதிவுகளே பெருவலி நாவலாக உருப்பெற்று தமிழ்ப் புனைவுகளின் பெருமையைக் கூட்டியிருக்கின்றன. ஜஹனாராவைப் பற்றி சுகுமாரன் தீட்டியிருக்கும் இந்த அழியாச் சித்திரம் ஒருவகையில் அவர் அவளுக்குச் செலுத்தியிருக்கும் நன்றிக்கடன் என்றும் சொல்லலாம். கல்லறைக்குள் உறங்கும் ஜஹனாரா இந்த நாவலைப் படிக்க நேர்ந்தால் அவள் முகத்தில் காதலன் சத்ரசாலைக் கண்டபோது தோன்றிய புன்னகை மீண்டும் ஒருமுறை தோன்றும் என்பதில் ஐயமில்லை.
***
அரவிந்தன் – எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். புனைவு, இலக்கிய விமர்சனம், சமூக அரசியல் விமர்சனம், திரைப்பட அலசல்கள் என பல்வேறு வகைகளில் எழுதி வருகிறார். புனைவுகள், அல்புனைவுகள், மொழிபெயர்ப்பு என இதுவரை 28 நூல்கள் வெளியாகி உள்ளன. தற்போது காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிவருகிறார். மின்னஞ்சல்:aravindan@kalachuvadu.com.