Home Blog Page 19

இரவோடி – நிலம், மனிதர், நினைவின் பயணம்

0

கவின் செல்வகுமார்

ழுத்தாளர் என். ஸ்ரீராம் தமிழிலக்கியத்தில் பல வருடங்களாக சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதி வருகிறார். அவரது சிறுகதைகள், கொங்கு மண்ணில் உலாவும், வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மிக நுன்னிப்பாக, வியப்புத்தரும் கதாபாத்திரங்களை புனைவில் வடிவமைத்தவர். வழக்கமான சிறுகதை கோட்பாடுகளான கச்சிதமான நடை, மிகைகொள்ளாத அளவு, கூரிய திருப்பங்கள் என எந்த எல்லைக்குள்ளும் அடங்கிவிடாதது என்.ஸ்ரீராமின் சிறுகதைப் படைப்புகள். அக்கதைகள் வாசகருக்கு அளிக்கும் அனுபவமென்பது, காம்பஸ்ஸின் வாயில் பென்சிலை சொருகி, ஒரு முழுவட்டம் அடித்தபின் வரும் திருப்தியே. அத்திருப்திக்கான காரணம் சிறுகதையின் ஊடே ஒரு முழு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை வாசகருக்கு அளிக்கும் நுட்பமே காரணம் எனப்படுகிறது.

ஒரு சிறுகதை நிகழும் வெளி, ஒரு நாளாகவோ, ஓர் இரவாகவோ, அல்லது கதைமாந்தரின் ஒரு குறிப்பிட்ட வயதை ஒற்றி நிகழும் தருணங்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால், என்.ஸ்ரீராமின் படைப்புகள் கதைமாந்தரின் வாழ்க்கையை அவர்களது மன ஓட்டங்களின் விவரிப்பாக மட்டும் நிறுத்தாமல், அவர்கள் வாழும் நிலத்தின் மீதும் புனைவை செலுத்தி, ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான ஏற்ற இறக்கங்களையும், வாசகருக்கு தங்களது வாழ்வில் கவனிக்க தவறிய தருணங்களையும், மனிதர்களையும் புனைவின் மூலம் மீட்டு எடுக்கும் பாணியே அவருடைய கதைகள்.

இவ்வனுபவமே ‘இரவோடி’ நாவலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ‘இரவோடி’ என்.ஸ்ரீராமின் பெருநாவலுக்கான முதல் முயற்சி, 2024 சென்னை புத்தகக் கண்காட்சியில் பரிசல் பதிப்பகம் வெளியிட்டது.

இரவோடி (இரவில் போகிறவர்கள்). இரவையே வாழ்வாக மாற்றிக்கொண்டவர்கள் யார்? இரவை அவர்கள் விருப்பமானதாக தேர்ந்தெடுத்தனரா, அல்லது இரவு அம்மனிதர்களைப் பற்றிக்கொண்டதா? ஊரில் உள்ள மனிதர்கள் தங்கள் பாரங்களையும், கசப்புகளையும் இறக்கிவைத்து உறங்கும்போது, அவர்களின் எதிர்காலத்தை வாக்காகக் கூற, இரவில் தங்களது தெய்வமான ஜக்கம்மாவின் துணையோடு உலாவும் சாமக் கோடாங்கி (களின்) கதையே இரவோடி நாவல் (சாமக் கோடாங்கி – குடுகுடுப்புக்காரன்).

என்றோ மாயமான ‘வீரான்’ என்னும் சாமக் கோடாங்கியை அகில் என்னும் நவீனகாலத்து இளைஞன், மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாத்தாவிற்காக தேடி அலைகிறான். இந்த தேடலில் அகில் பல மனிதர்களை சந்திக்க நேரிடுகின்றது, அவர்களும் சாமக் கோடாங்கியைத் தேடிக் கொண்டிருப்பதை அறிகிறான். பின் பல முடிச்சுகளையும் அவிழ்த்து, வீரானை தேடிக்கொண்டே சுவாரசியமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கிறது நாவல். ஒரு இலக்கியப் படைப்பு, கதையைக் கடந்து, வாசகருக்கு அளிக்கும் புது அனுபவம் தரக்கூடிய பல கூறுகள் அடங்கியது ‘இரவோடி’ நாவல்.

பின் நவீனத்துவ நாவல்களில் கச்சிதமான மொழிநடை, தேவையானதை மட்டும் சொல்லும் பண்பு, எடிட்டிங்கில் கவனம், அவசரமாக கதை சொல்லி நகரும் பாணி என நாவலுக்கான கூறுகளுக்கு வித்திட்டது, க.நா.சு. மொழிபெயர்த்த ‘அன்பின் வழி (எ) பராபாஸ்’ நாவல் என எழுத்தாளரும் விமர்சகரும் ஆன ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நவீன வாசகன், தான் படித்த பெரும்பாலான கிளாசிக் நாவல்கள் மேற்கூறிய கூறுகள் கொண்டவையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். உடனே நினைவில் வருவது – அம்மா வந்தாள், ஒரு புளியமரத்தின் கதை, தோட்டியின் மகன் என பல… இப்படி அகத்தில் விளையும் எண்ணவோட்டங்களையும், சிக்கல்களையும் கதைமாந்தரின் மனதின் ஊடாக விரித்து எடுப்பது மட்டுமே நாவலின் களமாக இருக்கவேண்டுமா என்னும் எண்ணம் தலைதூக்குகிறது.

குழந்தை தனது டிராயிங் புத்தகத்தில் பென்சிலைக் கொண்டு கோட்டின் மேல் படம் வரைந்து ஒரு ஓவியத்தை முடிப்பது போல், வாசகன் அக்கதாபாத்திரத்தின் அகத்தினைத் தொடர்ந்து சென்று, கதையை முடிக்கும் போது தனித்து விடுபடுகிறான். ஒரு வாசகன், நாவலின் வாசிப்பில் திளைக்க, மன ஓட்டங்களைக் கடந்து, அவன் இதுவரை அனுபவித்திராத கதைக்களமும், புதிய நிலமும் தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் என்.ஸ்ரீராமின் “இரவோடி” நாவல் முற்றிலும் வேறாக, தீவிர புற சித்தரிப்புகளுடன், நிதானமான கதைசொல்லலுடன், தடையற்ற நீரூற்றினைப் போன்ற மொழிநடையுடன் உருவாகி வந்துள்ளது. இதுவரை எழுதப்பட்ட நவீன நாவல்களில், ஒரு சாமக் கோடாங்கியை மையக் கதாபாத்திரமாக வைத்து, ஒரு பெரும் புனைவு வந்தது இல்லை என்பதே இரவோடி நாவலின் இன்னொரு தனிச்சிறப்பு.

இரவோடியின் மூலமாக அமராவதி ஆற்றினை மையமாகக் கொண்ட நிலத்தினை புனைவின் களமாகப் பிண்ணி, நாவல் முழுக்க தொய்வில்லாமல் அதைப் பயணம் செய்யவிடுவது, ஒரு அபாரமான முயற்சி. நிலம் என்பது சமூகக் கட்டமைப்புகளை நிர்ணயித்தாலும், இடப்பெயர்வுகள் கொண்டதாக இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அந்த நிலத்தின் மேலேயே நிகழ்கிறது. அந்த நிலமே அவனது அன்றாட வாழ்வு. அதில் நிகழும் கூட்டு சம்பவங்களே தனிமனிதனின் வாழ்வினையும் தீர்மானிக்கின்றன.

ஒரு சாமக்கோடாங்கி நிலமற்றவனாக, அதிகாரமற்றவனாக இருந்தாலும், அவனது வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள் அந்நிலத்தின் வாயிலாகவே தீர்மானிக்கப்படுகின்றன. இரவோடி நாவல் முழுக்க நிலத்தின் சித்தரிப்புகள் புனைவின் சீத்தோஷணத்தை தீர்மானிக்கும் அளவிற்கு கவனம் செலுத்தியுள்ளார் என்.ஸ்ரீராம்.

முதல் அத்தியாயத்தில், வீரான் (சாமக் கோடாங்கி) இரவு ஊரில் குறி சொல்லி உலாவுவதற்கு ஜக்கம்மா வாக்கு கொடுக்க மறுக்கிறாள். பின் அனல் வளையங்கள் விட்டு, அவனைத் தொறத்தியடிக்கிறாள். “நாம் ஏன் சாமக்கோடங்கியாக வாழ்கிறோம்?” என்னும் குலக்கதையை தன் தந்தையிடம் கேட்கிறான். பின், தான் பள்ளிக்கூடம்தான் செல்ல வேண்டும் என அவன் முடிவு எடுப்பதில் இருந்து நாவல் விரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் தீவிர சித்தரிப்பும், கதையின் மையப்பொருளும், இந்நாவலுக்கான பெரும் களத்தை தொடங்கி வைக்கவே, வாசகராக மனம் நாவலில் வரப்போகும் பெரும்பயணத்திற்கு ஆர்வத்துடன் தொற்றிக்கொள்கிறது.

இந்நாவலில் கதை சொல்லும் பாணி, முதல் சில அத்தியாயங்களுக்கு வாசகருக்கு சவாலாக இருக்கலாம். ஆனால் கதையின் ஓட்டத்தில், அந்த சவாலே நாவலை நகர்த்துவதற்கான சுவாரசியக் காரணியாக மாறிவிடுகிறது. வாசகர் தனது வாசிப்பனுபவத்தை ஒரு கோட்பாட்டினுள் அடைக்க, ‘non-linear’ பாணி என வகுத்துவிட்டு நகர வாய்ப்பிருக்கிறது. இதைத் தாண்டி, இதில் உற்றுநோக்க வேறு கூறுகள் உள்ளது எனப்படுகிறது.

நாவலின் கதைக்களம் இரண்டாக விரிவடைகிறது: ஒன்று தொலைந்து போன வீரானின் பால்யம், மற்றொன்று நிகழ்காலத்தில் இளைஞன் ‘அகில்’ தொலைந்த வீரானை தேடும் அலைக்கழிப்பு. நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இருக்கும் வேறுபாடாக ‘வீரான்’ மட்டுமே இருக்கிறான்.

தொலைந்த வீரான் தன் பால்யத்தில் சுற்றி திரிந்த நிலமும், நிகழ்காலத்தில் இளைஞன் அகில் அலைக்கழிப்புடன் தேடலில் ஈடுபட்டிருக்கும் நிலமும் ஒன்றே. அந்நிலத்தில், அவரவர் வாழ்க்கையை அங்கேயே கொண்டிருக்கும் கதைமாந்தர்கள் கடந்தகாலத்தில் வீரானை சந்தித்து பழக நேரிடுகிறது. நிகழ்காலத்தில், அகில் வீரானை தேடும்போது, வீரானைப் பற்றிய நினைவுகளை நிலத்தின் மாந்தர்கள் அகிலுக்கு விவரிக்கின்றனர்.

இரு காலங்களையும் பிண்ணி, வீரானின் வாழ்க்கையை ஒரு நினைவோட்டமாக, சுழலினுள் சுழலும் சூழல் போல, ஒரு அத்தியாயத்தினுள் பல நினைவோடைகள் நிகழ்ந்து நிகழ்ந்து நாவல் விரிகிறது. வாசகரின் கவனத்தையும் விழிப்பையும் முழுதாக கோரும் நாவல். பல கதைமாந்தர்களின் நினைவின் வழியே பயணிப்பது, ஆனால் சென்று அடையும் இடமென்பது வீரான் என்னும் சாமக்கோடாங்கியின் துயரும் கணமும் அடங்கிய வாழ்வே.

வாழ்வினில் தோற்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஒருவனுக்கு ஒன்றுசேரும்போது, ஒரு தருணம் அதிலிருந்து மீள விதி வழிவகுக்கும். அதைப் பற்றிக்கொள்கையில் தடைகள் விலகி, தனது வம்ச சாபங்களையும் கடந்து, புது பாதை உருவாகிறது. அப்படியொரு நல்வாய்ப்பினை சாமக்கோடங்கியான வீரான் தன் பால்யத்தில் தவறவிடுகிறான். பின் அங்கிருந்து அவன் அலைக்கழிப்பில் வயதைக் கடந்த சிக்கல்களை சந்திக்கிறான். இந்த அலைக்கழிப்பு மிக உயிரோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது.

எம்.வி.வி தனது ‘காதுகள்’ நாவலில், கதைநாயகன் ‘மகாலிங்கம்’ தொழில் வீழ்ச்சி, வறுமை முதலியவற்றில் இருந்து மீள, சொந்தக்காரர் ஒருவர் புது தொழில் தொடங்கும் எண்ணத்துடன் மகாலிங்கத்தை அணுகுவார். வாழ்வை மீட்கும் வாய்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்வதை விடுத்து, வாய்ப்பை நிராகரித்து தவறைப் புரிவான். அதன்பின் துயரும் மீண்டும் துரத்தியடிக்கும். அதுபோல், வீரான் செய்யும் தவறு அவனை வாட்டுகிறது.

வீரான் வாழ்வு முழுக்க அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, கல்வியின் முக்கியத்துவமும், அதை முன்னெடுக்கும் ஆசிரியர்களுடைய பணியின் முக்கியத்துவத்தையும், எழுத்தின் ஊடாக என்.ஸ்ரீராம் முக்கியமான சமூகச் சிக்கலை நாவலின் பின்னூட்டமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். வீரானால் அவனது வாழ்வின் நிகழும் சம்பவங்களுக்கு அசை கொடுக்கும் துடுப்பாக மட்டுமே இருக்க முடிகிறது. அவன் வாழ்வின்மீது என்றுமே அவனுக்கு கட்டுப்பாடு இல்லை.

இந்நாவலில் அவனைச் சுற்றி அத்துனை மேன்மை பொருந்திய மனிதர்கள் இருந்தாலும், வீரான் என்னவாகிறான் என்பது ஆச்சரியமளிக்கிறது. அதுவே வாழ்வின் யதார்த்தமும் புதிரும். எதுவாயினும், மனிதகுலம் மேன்மையுள்ள மக்களால் என்றும் ஓங்கி நிற்கும், இருட்டுகளை விலக்கி வழி வகுக்கும் என்பதில் இந்நாவல் உறுதிகொண்டு, வீரானை அவனது அனைத்து வீழ்ச்சிகளிலும் மீட்டுகொண்டே இருக்கிறது.

இருண்மை எண்ணம் சூழும் இக்காலகட்டத்தில், வாழ்விற்கு ஒளி உள்ளதென நம்பி தனது புனைவை படைத்திருக்கும் என்.ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இதுவரை, நிலத்தை குறிப்பிட்டது நிலத்தின் தனித்தன்மை மட்டுமே அல்ல, அதில் வாழும் மனிதர்கள்தான் அதை வேறுபடுத்துகின்றனர் என்று கூறுவதே சரியாக இருக்கும். இரவோடியில் வரும் கொங்கு நிலத்தில் வாழும் மக்கள், ஏன் அவ்வாறு சிந்திக்கிறார்கள், ஏன் ஒரு முடிவை எடுக்கிறார்கள், அவர்களின் அன்றாடம் தாண்டிய நம்பிக்கை என்ன, தனிமனிதனைத் தாண்டிய சமூக விழிப்புணர்வு என்ன, ஒன்றுசேர்க்கும் அறம் என்ன – இதை ஒரு புனைவில் கொண்டுவர, பண்பாட்டின் மீதும் அதன் பின்புலத்தின் மீதும் அக்கறையும் ஆர்வமும் இருந்தாலொழிய, இரவோடி போன்ற தீவிர பண்பாட்டு தளத்தை வைத்து ஒரு படைப்பு நிகழ முடியாது.

உதாரணமாக, வீரான் தன் பால்யத்தில் எடுத்த ஒரு தவறான முடிவினால், ஒரு வயதான குடும்பத்தலைவி தோட்டத்தில் ஆள்க்காரனாக – எருமை மேய்க்கும் பையனாக அடைக்கலம் புகுகிறான். அங்கு அவன் படும் சிரமத்தை மட்டும் விவரித்து கதையின் அடுத்த களத்திற்கு செல்லாமல், கோவிலுக்காக பண்படுத்தி வளர்த்துவரும் எருது மாட்டினோடு வீரான் பல அத்தியாயங்கள் ஊர் விட்டு ஊர் பயணிக்கிறான். அதை ஒட்டியே பல சுவாரசிய நிகழ்வுகள் நடக்கின்றன.

அடுத்து, அமராவதியின் ஆற்றின் போக்கு அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே தீர்மானிக்கிறது. அவ்வாற்றில் ‘யானை மடுவு’ என்னும் பகுதி உள்ளது. வெள்ள சமயங்களில் அம்மடுவில் யானையே விழுந்தாலும் பிழைக்க வாய்ப்பில்லை. இம்மாதிரியான பிரத்தியேகமான காட்சிகள் நாவல் முழுக்க வருகின்றன.

பின்னொரு சமயத்தில், பஞ்சத்தை போக்க கொடும்பாவியை கிழ பிரமச்சாரி கொள்ளி இடும் சம்பிரதாயம் என மக்களின் நம்பிக்கைகளை சார்ந்து நாவலின் கதைக்களம் நகர்கிறது. நிகழ்காலத்தில், பெரிய ஊர் திருவிழாவில் இளைஞன் அகில் சாமக்கோடங்கி வீரானை தேடி அலைக்கையில், சொப்பன வித்தைகாரர்களின் மாயத்தில் மயங்குவது எல்லாம் வாசகருக்கு மிக புதியது. இப்படியாக, நாவலில் வரும் ஒவ்வொரு இடமாற்றமும் நின்று கவனிக்கத்தக்க புது அனுபவங்களாகின்றன.

இம்மாதிரியான பண்பாட்டு பின்புலம் கொண்ட நாவலில் இயற்கையின் புறவயச் சித்தரிப்புகளே எரிபொருள். அதை நாவலின் மொழிநடையில், வாசகரை உள்ளே இழுக்கவும், கதைக்களத்தின் சுற்றுச்சூழலை தீர்மானிக்கவும் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சித்தரிப்புகள் வாசிக்கும்போது பரவசத்தையும், பெரிய புனைவுலகினுள் பயணிக்கவும் சரியாக பொருந்தி வந்துள்ளது.

ஒரு கதைமாந்தர் எதோ ஒரு துயரத்தில் மனதில் பல எண்ணங்களுடன் சாலையில் நடக்கிறார் எனக் கற்பனை செய்துகொள்வோம். ஒருவேளை, கடும் மழை அப்போது பெய்துகொண்டிருந்தால், துக்கத்தின் இடையிலும் அக்கதைமாந்தர் சிந்திப்பதில் கவனம் செலுத்த முடியாது. வெயிலும் மழையும் அன்றி, நல்ல சீத்தோஷண வானிலை என்றால் துக்கத்தில் ஊறித் திளைக்க பொருத்தமான சூழ்நிலை அல்லவா? அது போல, நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையே அன்றாடத்தை கூட தீர்மானிக்கிறது. நாவலில் கதாபாத்திரங்களைச் சுற்றி விவரிக்கும் இயற்கைச் சித்தரிப்புகள், கதையுடன் பயணிக்க மிக மிக அவசியம் என இரவோடி போன்ற பெருநாவல் உணர்த்துகிறது.

நாவலில் மிகச் சுவாரசியமான பகுதியாக, கதைநாயகன் வீரான் ஊர் ஊராக நாடகம் போடும் சுலோசனாவைச் சந்திப்பது. அவள் நாடகக்குழு இராமாயண நாடகம் அரங்கேற்றுகிறது. அதில் தனது கணவன் இந்திரஜித்தை மீட்க இராமன், லட்சுமணன், அனுமாருடன் போர் புரிய வருகிறாள் – புராதன சுலோசனா. பின், நிகழ்காலத்து சுலோசனா வீரானைத் தேடி அலைகிறாள். பின், நாவல் முழுக்க இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது, அங்கு அங்கு ஒவ்வொரு தருணங்களாக. இப்படி இணையொத்த சம்பவங்கள் கதைசொல்லலில் புது ஆழம் அளிக்கிறது.

என்.ஸ்ரீராம் தனது மண்ணில் புனைவின் வழியாக மீட்டுகொண்டிருக்கும் மக்களும், பண்பாடும் என்றும் தீர்ந்துபோகாதவை. நாவலுக்கான பெரும் சித்தரிப்பையும், களத்தையும் ‘இரவோடி’ மூலம் அடைந்த என்.ஸ்ரீராம் அவர்களின் அடுத்த சிறந்த நாவலிற்கான எதிர்பார்ப்பு கூடுகிறது.

***

கவின் செல்வகுமார் – சொந்த ஊர் சேலம். சென்னையில் தனியார் தொழில்னுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து தன் வாசிப்பனுபவங்களை எழுதி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : kavin.selva@outlook.com

சாகிப்கிரான் கவிதைகள்

0

நற்செய்தி

முதலில்
தேவகுமாரனின்
வருகையை 
அந்த வால்நட்சத்திரம்
அறிவித்ததாக
பள்ளியில் சொன்னார்கள்

பிறகு
இது ஹாலி
எழுபத்தியாறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை வருமென்ற
கல்லூரியின் பேச்சிற்கிடையே
எனக்குப் பிடித்த
‘பிரிடேட்டர்’ கெவின் பீட்டருடன்
பெருந்திரள் மரணித்தது.

இன்று
இதோ
அந்த யுவதி
முன்னிரவின்
சந்தடி குறைந்த
இருண்ட பாதையில்
திறன்பேசியுடன்
தன் காதிற்கொரு
ஒளிநகைப் பொருத்திக்
கடக்கிறாள்

அலுவலகத்திலிருந்து
தினமும் பார்க்கும்
என்னையும்
ஓரக்கண்ணால்
பார்த்தபடி
அந்த இரவு
வெளிச்சமாகும்
பால்வீதியின்
பின்னிரவில்
எதையோ
மறந்துவிடுகிறேன்
என்பதையும்
மறந்துவிடுகிறேன்

இப்படி தினமும்
தூமக்கேது.

தேவனே!

*

இல்லம்

ஒரு நாவலுக்கான
கவிதை சாத்தியம்தானா?

அன்றிரவு
ஆமாம் என்றே பதில்
வந்தது

இறுதியான 
காமத்திற்கானது
மரணம்தான்
என்பது நீங்கள்
ஒரு பிரேதத்திலிருந்து
வெளியேறிய விந்திலிருந்து
தெரிந்து கொள்ள முடியாதுதான்.

இரண்டும் ஒன்றுதான்

புதுமைப்பித்தனும்
விபரீதமாக இதை
முயன்றுதான் பார்த்தான்

அதற்கான ஏற்பாடுகள்
சந்தர்ப்பவசமானதிலிருந்து
அதிக சாத்தியமாக்கியது
இந்தத் திறன்பேசிகள்தான்

நள்ளிரவு 
பாருங்கள்
வெந்து தணிகிறது
பரிணாமத்தின்
அற்புதமான விளைபொருள்

எனவே 
அந்தக் கவிதை
இப்படி முடிகிறது

இந்த யுகத்தில்
ஒவ்வொரு வீட்டின்
‘தனி’யறையும்
‘தூங்கும் அழகிகள் 
இல்லம்தான்’

முடியாது
தப்பித்துக் கொள்ள
மகாத்மாவின்
சத்திய சோதனைகளில்
ஒன்றுதானே
இதுவும்?

”வானத்திலிருந்து
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை”
என்பது உண்மையைப்போல
இருக்கலாம்.

(யசுனாரி கவாப்பட்டாவிற்கு)

*

பிரசங்கம்

கடவுள் இப்படி
ஓங்கிச் சொன்னார்.

இன்று எல்லாமே
மிகுந்துவிட்டது
அன்று 
திராட்சை ரசத்தையும்
அப்பத்தையும்
பெருக்கப் பண்ணியது
குமாரனின் மாபெரும் 
தவறு.

இதோ இந்த 
இரவையும்
பகலையும் பாருங்கள்
பன்னிரெண்டு மணிக்கொன்றுதான்

சூரிய கிரணமும்
சந்திர கிரணமும்
அபூர்வமாய்
இலக்கங்களைத்
தின்றே நிகழ்கிறது

அவ்வளவு ஏன்
இந்த பிரபஞ்சத்தில்
நீங்களறிய ஏதேனும்
வேறு பூமியுண்டா?

எனவே
நீங்கள் யாவரும்
சொற்பமாயிருங்கள்
யாவற்றிலும்

அப்போது
நீங்கள் ஒரேயொரு
கவிதையையே
எழுதியிருப்பீர்கள்
அதுவொரு
பூரண சூரிய கிரணத்தின்
வைர மோதிர தோற்றமாய்
ஜொலிக்கும்

அப்படியும்
வெளியே வராதவர்களைப்
பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்

அவர்கள்
உங்களைக் கண்டு 
அஞ்சுகின்றனர்
மேலும்
அவர்கள்
அனேகமாகவும்
இருக்கலாம்.

*

கருதத்தக்கது

இனிப்பு 
யாருக்குத்தான் பிடிக்காது?
ஹா! 

கொஞ்ச நாளாக
இனிப்புகளை நிறுத்திவிட்டேன்
ஏன்,
தேநீருக்கும்தான்.

இப்போதுதான் தெரிகிறது,
அரிசியில்
கோதுமையில் என்று
எல்லாவற்றிலும்
அந்த அதியற்புதம்
இருப்பதை மொட்டுகள்
கண்டு கொண்டன.

இப்போதும் பாருங்கள்
கொஞ்சம் என் நிலத்தின்
மண்ணையும் சோதித்துவிடலாம்.

நகரத்திலிருந்து
எங்கள் நீர்முள்ளிக்குட்டைக்கு
செல்லும் நினைவு
இந்திராவின் வீட்டு வேலி
பாகற்காயின் இனிப்பை
ஓர் இரவு
கனவின் நினைவு
கனவில் வந்ததின்
நினைவு 
அந்தக் கனவில்
தென்பட்டது
நினைவுப் பிழையில்லை

எல்லையில்லா 
பிரபஞ்சத்தின் பூமிபோல
அதுவொரு மீச்சிறு
இருப்பு.

***

சாகிப்கிரான் – 90′ களிலிருந்து தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதிவரும் சாகிப்கிரானின் கவிதைகள், ‘வண்ணச் சிதைவு’ (2009), ‘அரோரா’ (2020) என்ற தொகுப்புகளாக வந்துள்ளன. எழுத்துக் களம் ‘இலக்கிய ஆளுமை’ விருதும் (2020), கோவை விஜயா வாசகர் வட்ட ‘மீரா விருதை’  ‘அரோரா’வும் பெற்றது (2022). தமிழ் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி. மணியுடன் அவரது இறுதிக் காலம் வரை உடனிருந்தவர், சேலத்தில் கணினி வன்பொருள் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து கவிதை, திரைப்படம், சிறுகதை குறித்தக் கட்டுரைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: shahibkiran@gmail.com

ஜனநாயகம், சோஷலிஸம் மற்றும் காந்தி

0

க.நா. சுப்ரமணியம்

தமிழில் : அருந்தமிழ் யாழினி

(‘Democracy, Socialism and Gandhi’ என்ற தலைப்பில் ‘Gandhi Marg’ (ஜூலை 1973) இதழ் வெளியிட்ட விவாதத்தில் க.நா. சுப்ரமண்யம் உள்பட 18 பேர் பங்குபெற்றனர். அந்த விவாதத்தில் க.நா.சு. முன்வைத்த வாதத்தின் மொழிபெயர்ப்பு.)

னநாயகமும் சோசலிசமும் பொதுவாகப் புரிந்து கொண்டிருப்பதைப்போன்று  சரியாக வரையறுக்கப்படவில்லை என்றாலும் அவை எதிரெதிரான சித்தாந்தங்கள். ஒரு தனிநபரின் வேறுபட்ட, தனித்துவமான, சுதந்திரமான மற்றும் இணக்கமற்ற தேவையை ஜனநாயகம் நிறைவேற்றுகிறது. சோசலிசம் என்பது தனக்குத் தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்ததை வாங்குவது, தனக்கு திருப்தியைத் தருகிறதோ இல்லையோ அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வைத்திருப்பது  என தொழில்துறை சார்ந்த ஒரு மனிதனுடைய தேவையாகிறது. இந்த இரண்டு பொருத்தமற்ற கட்டுப்பாடுடைய ஒத்திசைவிற்கு  சாதாரண மனிதனின் கல்வி தேவையாகிறது , இதில் வருந்தத்தக்கவிதமாக சுதந்திரம் அடைந்து இருபத்தைந்து ஆண்டுகளாகியும் நாம் பின்தங்கியிருக்கிறோம். ஒரு சராசரி இந்தியனுக்கு கூட ஜனநாயகம் பற்றியோ அல்லது சோசலிசம் பற்றியோ சரியாகக் கற்பிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை  கருத்து வேறுபாடு கொள்ளவோ, ஒன்றிற்கு இணங்காமல் இருக்கவோ பயன்படுத்த முடியாது.  பல பொருட்களை முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பது ஒரு விதமான மாறிவரும் களமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. காந்தியில்லாத காங்கிரஸ் என்பது அக்கட்சியை  மற்றொரு கட்சி அதிகாரத்திலிருந்து தள்ளும் ஆபத்தின் நிலையில் இருந்தது. நிரந்தர அதிகாரத்தில் நிலைநிறுத்தும் ஆர்வத்திலிருந்த காங்கிரஸிற்கு, சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொள்வது எளிதாகியது. மார்க்ஸ் ஒரு வகையில் தீர்க்கதரிசியாக இருந்திருக்கலாம், ஆனால் அவரது தீர்க்கதரிசனம் யதார்த்தங்களுக்கு வெகு தொலைவில் இருந்தது. சமீபத்திய வரலாற்றில் ரஷ்யா மற்றும் சீனாவும் தீவிர சோசலிச அரசுகளின் எடுத்துக்காட்டுகள். அப்போது அவை எந்த வகையான சோசலிசத்தை அடைந்தாலும், தொழில்துறை ரீதியாக வளர்ச்சியடையாதவை, அப்போது ஆட்சியிலிருந்த கட்சி, தன்னை அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொண்டு, மக்களுக்கு அனைத்து வகையான பொருளாதர மற்றும் இதர வளத்தையும்  உறுதியளித்தது.

சித்தாந்தங்கள் அல்ல மாறாக, நிறுவனங்கள், மரபுரிமை மற்றும் கல்வியும் தான் குறிப்பிடும்படியானது என வரலாறு நிரூபிக்கிறது. மகாத்மா காந்தி இந்தியாவின் பாரம்பரியம் என்பதை உண்மை, வாழ்க்கை மற்றும் வாழ்வின் மீதான ஒரு தார்மீக அணுகுமுறை என்று சரியாகவோ அல்லது தவறாகவோ புரிந்து கொண்டார். இந்தியா ஒருவேளை வாழ்வியலின் தார்மீக மதிப்புகள் மாறக்கூடும் என்பதை உணர்ந்திருக்கும் பட்சத்திலும், ஒழுக்க நெறி பற்றிய உணர்வு இல்லாத நீதி என்பது ஒரு கற்பனாவாதம் என்பதை அறிந்திருந்தும் கூட, வாழ்க்கை நெறிமுறைகளை வளர்த்தெடுத்திருந்தால் இந்துக்கள் எதை  தர்மம் என்று அழைக்க விரும்பினரோ அவை நீண்ட காலத்திற்கு எளிதான ஒன்றாக இருந்திருக்கும்.

அதற்கு பதிலாக ஜவஹர்லால் நேருவும், பின்னர் திருமதி இந்திரா காந்தியும் ஒரு தேசம் மேலிருந்து கீழாக வளைந்து கொடுக்கக்கூடிய சித்தாந்தங்களை  வலியுறுத்த விரும்பினர். இதன் விளைவு , இந்தியாவின் விதி என்று மகாத்மா காந்தி வலியுறுத்திய எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த சிந்தனையிலும் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் எளிய வாழ்க்கைக்கும் எளிய சிந்தனைக்கும் கணிசமாகத் தள்ளப்பட்டுள்ளோம். இது மக்களின் மகிழ்ச்சிக்கோ, மக்களின் பொருளாதார வளத்திற்கோ பங்களிக்கவில்லை, இருப்பினும் ஆளும் சித்தாந்தவாதிகள் அந்த உண்மையை இன்னும் கண்டுணரவில்லை.

வாழ்க்கைகான அத்தியாவசியப் பொருட்களுக்கு பத்து மடங்கு அதிகமாக பணம் செலுத்துவதால் மட்டுமே நான் என் தாத்தாவை விட பணக்காரன். நான் அவரைப் போலவே அறியாமையில் இருப்பதாகக் கருதப்படுகிறேன் என்றாலும் நான் என் தாத்தாவை விட மகிழ்ச்சியானவன் இல்லை. மிக அருகாமையில் இருப்பதாக கூறப்படும் ஒரு சோசலிசத்தின் பெயரால் அதிக ஊழலை அதிக பாசாங்குத்தனத்தை, அதிக அநீதியை நான் பொறுத்துக்கொள்கிறேன்.

காந்தி ஒரு ஆர்வமற்ற சோஷலிஸ்டாகவும், அரை மனதுடைய ஜனநாயகவாதியாகவும் இருந்திருந்தாரெனில் அது அவர் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் அல்ல, மாறாக மனிதனின் வாழ்க்கை சித்தாந்தங்களுடன் ஆரம்பிப்பதோ முடிவடைவதுவோ இல்லை, அவை மேலிருந்து திணிக்கப்பட வேண்டும். வாழ்க்கையானது அதன் அனைத்து அம்சங்களிலும் ஒழுக்கநெறியுடைது என்பதை அவர் உள்ளுணர்வாக உணர்ந்ததால்தான். நமது  இருபத்தைந்து ஆண்டு சுதந்திரத்தில்  நாம் தவறாக வழிநடத்தப்பட்டது இந்த ஒழுக்க உணர்வைத் தான்.

துரதிர்ஷ்டவசமாக, ஒழுக்க வாழ்வு மத வாழ்வைச் சார்ந்தது என்ற உணர்வு உள்ளது. இதற்கு நேர்மாறாக, மதமானது ஒழுக்கநெறியைச் சார்ந்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வாழ்க்கையின்  ஒழுக்க நெறிகளை மீட்டெடுப்பதையே சார்ந்துள்ளதே தவிர ஜனநாயகம் அல்லது சோசலிசம் என்ற முழக்கங்களைச் சார்ந்தது அல்ல. ஆனால், ஒழுக்கம் என்பது ஆட்சியாளர்களின் சிந்தனையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வாழ்க்கையின் அடிப்படையாக ஒழுக்கத்தை அவர் வலியுறுத்துவதில்தான் காந்தி இன்னும் எல்லாரும் வியந்து பார்க்கும் ஒரு தலைவராக இருக்கிறார், மற்றவர்கள் இங்குதான் நம்மை மிகவும் மோசமாகத் தோற்கடித்துள்ளனர்.

கூடுதல் குறிப்பு (ஶ்ரீனிவாசன் கோபாலன்) – இந்திய தேசிய இயக்கத்தின் சுவடுகள் தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகளின் புனைவாக்கங்களில் அதிகம் படியவில்லை என்பது விமர்சகர்களின் அவதானிப்பு. ‘சுதந்திர தாகம்’, ‘இருபது வருஷங்கள்’, ‘மண்ணில் தெரியுது வானம்’ போன்றவை விதிவிலக்குகளாக அமைந்தவை. ஆனால், நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரும் காந்தியின் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் மதிப்பு கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரான க. நா. சுப்ரமண்யமும் தனது இளம் பருவத்திலேயே காந்தியின்பால் ஈடுபாடு கொண்டார். தமிழில் எழுத ஆரம்பிக்கும் முன்பே, 1930ஆம் ஆண்டளவில், காந்தியைப்பற்றி அமெரிக்க ஏட்டில் கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 18 தான். அந்தப் பருவத்திலேயே நாட்டுப்புறக் கதைகள் மீதும் ஆர்வம் உண்டானது. பின்னர் நாட்டுப்பாடல் வடிவில் எழுதப்பட்ட ‘காந்தி மகான் கதை’யைப் படித்திருக்கிறீர்களா என உசாவினார். உலக இலக்கியக் கட்டுரைகளை எழுதும்போது, டால்ஸ்டாய் பெயரைக் குறிப்பிடும் இடங்களில் காந்தியுடன் அவருக்குள்ள தொடர்பையும் சேர்த்துச் சொல்கிறார். ஓரிடத்தில் ‘காந்தி டால்ஸ்டாய்’ என்றே பெயரிடுகிறார். ஆல்பர்ட் ஷ்வைட்ஸரைப்பற்றி எழுதும்போது காந்தியையும் சேர்த்து ‘இரண்டு ஏசு பக்தர்கள்’ என்பார். ‘வால்டன்’ மொழிபெயர்ப்பின் முன்னுரையில், காந்தியிடம் செயல்பட்ட தோரோவின் செல்வாக்கைக் காட்டுவார். க.நா.சு. காந்தியின் எழுத்துகளை ஊன்றிப் படித்திருக்கிறார். தமிழில் காந்தி நூல் தொகுதிகள் வெளியீடு பற்றி எழுதியிருக்கிறார். காந்தியின் தன்வரலாற்றையும் காந்தியர்களின் தன்வரலாற்றையும் விரும்பி வாசித்தார். காந்தியைப்பற்றி சிறந்த கவிதையை எழுதியவர் மகாகவி பாரதி; சிறந்த கட்டுரை வரைந்தவர் நாமக்கல் கவிஞர் என்பது அவரது அபிப்பிராயம். க.நா.சு. காந்தியக் கருத்தரங்குகளிலும் பங்கெடுத்திருக்கிறார். காந்திய சிந்தனையின் தாக்கத்தை ஆராயும் நோக்கில், தானே ‘காந்தி வழி’ என்ற கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்தார். காந்தியைப்பற்றி தனி நூல் எழுதும் திட்டமும் க.நா.சு.வுக்கு இருந்திருக்கிறது. ‘சத்யாக்ரகி’ என்ற நாவலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. காந்தியை கதாநாயகனாக்கி எழுதிய சிறுகதையும் உண்டு. தமிழ் இலக்கியம் செழுமையுற ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்தவரென்றாலும் “நான் தியாகி இல்லை” என்று சொல்லும் உண்மை ஒளியும் அவரிடம் துலங்கிற்று.

***

முனைவர். அ. அருந்தமிழ் யாழினி , சென்னையிலுள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும்,  அகில இந்திய வானொலியின் RAINBOW FM 101.4 ல் பண்பலைத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். மின்னஞ்சல்: aruntamilyazhiniaravindan@gmail.com

சசி இனியன் கவிதைகள்

0

மிருகநயனி 

இந்த உலகம் எப்படியோ இருக்கிறது
நான் அதைப் பற்றிப் பேசவில்லை
அது பலவற்றைக் கொண்டிருக்கிறது
எனக்கு அதிலெல்லாம் சிக்கல் இல்லை.
ஆனாலும்
மெய்யும் பொய்யும்
எனக்கு மிகவும் சிக்கலானது.
இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது தான்
சலிப்பாக இருக்கிறது.
மெய் மிகச் சிறிய துகள்!
மெய்யை தேடிக்கொண்டிருக்கும்
போதே இருளில்
பொய்யின்
மிகையான வேடிக்கைகள் நிகழ்ந்துவிடுவதை
எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை
என்னாலும் முடிவதில்லை..
ஆனால்
இரவில் ஒளிரும்
மிருகநயனியைப் போல
எப்பொழுதாவது மெய் ஒளிரும்.
சில போது
அத்துகள்கள் ஒளியுற்று நம்மிடம் மிதந்து வருவதையும்
காணலாம்,
ஆனால் அவ்வளவு மெதுவாக
வந்து சேர்வதற்கு வெகுகாலமிருக்கிறது மானுடமே!
உள்ளே.

நூற்றாண்டுகளுக்கும் மேலான
வீடு அது
அதை
பாழ்வீடு என்று சொன்னாலும் மிகையில்லை.
அவ்வீட்டில்
மூன்று வெவ்வேறு விதமான சன்னல்கள் இருக்கின்றன
உள் அறையிலிருந்து வெளிப்புறமாக
பார்க்கக்கூடிய சன்னல்
சதுர வடிவமாகவும்,
மற்றது
நீள் செவ்வகத்திலும் இருக்கின்றன.
வடிவ ஒழுங்கிற்கு இலக்கணம் போல
அவை இன்னும் சாட்சியாய் இருக்கின்றன.
எல்லாம் ஒருவகையான காலக்கணக்கு போலும்
உண்மையில்
நாம் அறியாதது
யாராலும் புரிந்து கொள்ள முடியாதது.
வீட்டின் உள்ளே
ஓர் அழகான ஆலமரம் தழைத்து ஓங்கியிருந்தது!
கூடவே ஒரு வேப்பம்
அதன் வேர் பூமியெங்கும்
பற்றிப் படர்ந்திருக்கிறது!
எப்பொழுதாவது மாலையில் சிற்றகல்
ஒளிரும்
அதைத் தடவித் தடவி ஒளியேற்றுவாள்
பாட்டி.
அது முனுக் முனுக் என்று எரியும்.
ஒரே சௌகரியம்
அதை உள்ளிருந்தும் பார்க்கலாம்
வெளியிலிருந்தும் பார்க்கலாம்.

*

தெரிந்து கொள்ள வேண்டியது

நான் தெரிந்து கொள்ள வேண்டியது
இந்த உலகின் துன்பங்களைக் கையாள்வது
எப்படி என்பதுதான்.?
நீ தான்
உன் ஆசைகளாலும் அச்சங்களாலும்
இந்தத் துன்பமான உலகை உருவாக்கி வைத்திருக்கிறாய்
என்கிறார்கள் மகான்கள்!.
எனக்குக் குழப்பம் தீரவில்லை.
அங்கிருந்து வெளியேறி
வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.
மிகச் சிறிய இட்லிக்கடை அது
இட்லி ஊற்றுவதை முதியவர் ஒருவர்
ஆவெனப்
பார்த்துக் கொண்டே இருக்கிறார்..
அந்தப் பாத்திரத்திலிருந்து
ஆவி மெல்ல வெளியேறிக்கொண்டிருந்தது
அந்தப் பார்வையும்
அந்தப் பசியின் தகிப்பும்
எழுதுவதற்கு இல்லை.
இதை எப்படிப் புரிந்துக்கொள்வது ?
தீர்க்கவே முடியாது குழப்பம் இது.
ஆனாலும் மகான்கள்
பொய் சொல்வதில்லை. 
ஆனாலும் அவர்கள்
சொல்வதில் உண்மை இல்லாமலில்லை.

*

மிகச் சிறிய உடல் 

சற்றுத் தாமதமாகத் தான்
அந்த வீட்டிற்குச் சென்றேன்
துக்கத்தின் எல்லா ஆடம்பரங்களும் 
முடிந்துவிட்டிருந்தன.
உள் ஒளி அணைந்த வீட்டில் தான் 
மற்ற விளக்குகள் பிரகாசமாக சுடர்விடும் 
என்பது எனது எண்ணம்.
அந்த வீட்டிலும் அப்படியே இருந்தது. 
குறுகிய கால வாழ்வில்
இந்த உடலை எவ்வளவு துன்புறச் செய்ய முடியுமோ 
அந்த அளவுக்கு அவர் 
அவரது உடலுக்குத் துன்பத்தைக் கொடுத்திருந்தார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம்
யாரும் இறக்கவில்லை என்றால் 
இந்த உலகத்தில் இடமே இருக்காது இல்லையா?
என்பார்.
அவர் சொல்வதும் சரியே.
மிகச் சிறிய எடைக்கொண்ட 
உடல் தான்
நாம் எளிதில் கண்ணுற 
முடியாத மனம் தான்
நம்மைச் சடுதியில் தள்ளிவிடுகிறது.
ஆனாலும் இந்த மிகச் சிறிய உடல் அழிந்துப்போவதை
நாம் தான் மிகுந்த துயரமாக எண்ணிக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மரணத்தைப் பார்க்கிறபோது

நாம் அறியாத ஏதோ ஒன்று 
புதிதாக நிகழ்ந்துவிடுகிறது தான்,
ஆனாலும்
இந்த மிகச் சிறிய உடலை
அதற்குரிய மரணத்தை 
இவ்வளவு தீவிரமாக எங்கிருந்தோ
கண்காணிப்பது தான்
அதனிடம் பிடிக்காதது.

சசி இனியன்  இயற்பெயர் இரா.சசிகலாதேவி. சிதம்பரத்தை சேர்ந்தவர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுகூட நுட்புனர் ஆக பணி புரிகிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். நீலி வனம் அவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: sasiiniyan1978@gmail.com

கொஞ்சம் பிறப்பு / கொஞ்சம் வாழ்தல் / கொஞ்சம் இறத்தல்

2

ம. கண்ணம்மாள்

(கவிஞர் தேவசீமாவின் “போத்தலில் அடைபட்ட விடுதலை” கவிதை நூலை முன் வைத்து…)

கொஞ்சம் பிறப்பு 

கொஞ்சம் வாழ்தல் 

கொஞ்சம் இறத்தல்

இந்த மூன்றையும் கலந்து கலவையான ஒரு வாழ்க்கையில் கொஞ்சம் கவிதையை வாசித்தலுக்குமான ஒரு தேவையுமிருக்கின்றது. என்ற நிலையில் ‘போத்தலில் அடைபட்ட விடுதலையைக்’ கொள்ளலாம்.

“நீண்ட படிகள் மிக ஆழமாக உள்ளே இறங்கின. 70 அடி ஆழம் என்றார்கள். குகைக்குள் செல்வதைப் போன்ற உணர்வு. கால்கள் வலிக்கும் அளவுக்கு செங்குத்தான படிக்கட்டுகள். படிகள் முடிந்ததும் நாங்கள் பார்த்த காட்சியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அளவில் மனித எலும்புகள்”. (சாரு நிவேதிதா – 2018 ப.32)

இதனை, வாசிக்கும் போது, இந்த உடலின் கடைசி விடுதலை அது தானென்று நமக்குத் தோன்றும். ஒரு உயிர் பிறந்து வாழ்ந்து உலகை விட்டு நீங்கும் போது, அதனின் விடுதலை எலும்பாகத் தான் உள்ளது. என் அம்மை அதனாலயே எலும்பை மனமுவந்தாள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம், இங்கு விடுதலையென்பது பிடித்ததை நோக்கி நகர்தல். நிகழ்காலத்தில் வாழ்தல் என்று சொல்லாம். சளைக்காத ஒரு நடனம் போல. இந்த வாழ்வில், இயக்குதலுக்கான மிகப்பெரும் மூலதனம், அழுவதோ, சிரிப்பதோ இல்லை. நிலத்தில் அடையாளப்படுத்துதல் மட்டும் தான். அந்நொடி கிடைக்கக்கூடிய ஒரு காட்சி தான் நூற்றாண்டுகள் தாண்டிய விடுதலை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு உடற்சதையினை மிக நேர்த்தியாக நகர வைக்க வேண்டும்.

இதில், விடுதலை என்பது நிலம் வாழும் உயிரிகள் அனைவரும் விரும்பக்கூடியது. குறிப்பாக,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

(தொல்பொருள் -219)

குறைந்தபட்ச இன்பங்களை நுகர வேண்டும்மென்ற ஒரு கருதுகோள் இங்கு யாவர்க்குமானது.

இங்கு இன்பம் என்பது தானாக நிகழல் வேண்டும். நிகழ்த்தப்படுதல் என்பது ஒவ்வொருவருக்குமானது. வரலாற்றின் போக்கில் இத்தகைய நிறைய நிகழ்த்தப்படுதல் நடந்துக் கொண்டேதானுள்ளது. வெறும் உன்னதம், அழகியல், ஒளி, இதெல்லாம் ஒரு மாயையாகப் போர்த்தி வாசிப்பவர்களை ரசனையாக மட்டும் பார்க்கும் காலம் மாறி பெரும் அர்த்தப்பரப்பை வெளிப்படுத்தும் விதமாக சமகாலச் சூழல் கையிலெடுத்துக் கொண்டுள்ளது. அதில், இரு போக்குகளை கைக்கொள்ள முடிகின்றது.

  1. கற்பனை
  2. எதார்த்தம்

இந்த யதார்த்தத்தை அடியொட்டி நடப்பியல் கவிதையின் எல்லைகள் வானளவு நீண்டுள்ளன. இன்னும் கூட அதிகரிக்கும்.

அவ்வகைளில் கலையென்பதை ஒரு சமூக வயமான அனுபவநிலையெனப் பார்த்து, காலந்தாண்டி நகர்ந்து வருகின்றதாக உணரலாம்.

அதுபோல், கவிஞர் தேவசீமா, தன் கவிதைகளில் பின்-நவீன உத்திகளைப் பயன்படுத்தி கவிதையைக் காட்சிப்படுத்துவதாக ஆயத்தப்படுத்திக் கொள்வது போல்வனவாய் நீள்கின்றது. இத்தொகுப்பில் நிறைய நான், நீ என்ற தன்னிலை முன்னிலைக்கான கூறுகள், நான் என்பதின் தொடர்க்காட்சியாக, கருத்தாக்க படிமங்களாக, வாசிக்கும் போது தோன்றுகின்றது.

“எறும்பொன்று என்னை / சுருக் சுருக்கென்று கடித்துக் கொண்டிருக்கிறது / கடித்தெடுத்து துளித்துளியாய் / எங்கோ கொண்டு சேமித்து வைக்கிறது / அநேகமாக / அதன் புற்றுக்குள் இப்போது / என்னைப் போன்ற  நானிருக்கலாம்”

என்பதாக உள்ள கவிதையில், மூன்று விஷயம் பார்க்கலாம்.

  1. எறும்பென்பது நான்
  2. சுருக் சுருக்கென்று கடிக்கப்படுவது என் உழைப்பு அல்லது என் உடல்
  3. ஆனால், நான் காணாமல் போய்விடவில்லை.

எறும்புப் புற்றுக்குள் இப்போது என்னைப் போன்ற ‘நான்’ தான் உள்ளிருக்கிறேன்.

என்னவாகயிருந்தாலும், எது என்னை, அதிகாரவட்டமிட்டாலும் ‘நான்’ என்பது நான் மட்டுமே. வேறொன்றிற்கு இடமில்லையென்பதும் அதிகாரக் கட்டுப்படுத்துதல் கூட அளவுக்கு மீறி நடக்க முடியாததென்பது சொல்லப்பட்டுள்ளது. அவ்வதிகாரம் அளிக்கும் போதை கூட ஒரளவுக்குதான் உட்செலுத்த முடியுமென்பதும் பொருள் கொள்ளலாம்.

இங்கு வாழ்வென்பது, எல்லாவற்றையுமே மிடறு மிடறாக அருந்திக் கடந்து விடக் கூடியது தான். அதனாலயே,

“உன்னைக் குறித்து
உன்னைக் குறித்தல்லாமல்
உன்னைத் தவிர்த்து”

என்ற மூன்றையும் பேசுப்பொருள்களாக வைத்துள்ளது சிறப்பு. எதுவாக வேண்டுமானலும் இருந்துவிட்டு போகட்டும்.

ஆனால்,

“அர்த்த மற்ற / அர்த்த முள்ள / அந்தக் கடுத்தேநீரையும் / நட்பையும்
பதிலாய் மிடறு மிடறாய் / அருந்திக் கட”

என்பதில், மொழி தன்னைக் குறிக்கின்றது முதல் வினை. பின்பு, மற்றொரு வினைக்கு பிற மனித உடல்களுக்கும் உள்ளுறையாகக் கடத்தி குழூஉக்குறியாகி பின் பொதுச் சமூகத்திற்குமாக மாறுகின்றது. இதனை,

  1. என்னை நான் எப்படி பார்க்கிறேன் என்பதும்,
  2. சமூகத்திற்காக எப்படி மாறுகிறேன் என்பதுமென இரு செய்திகள் பொதிந்துள்ளது.

ஆனால், பொதுவாக, நாம் நிமிர்த்த முடியா ஒன்றின் வால் போலவே சுற்றி சுற்றி வருகின்றோம். ஒரு கல் எடுத்து அடிக்க எத்தனிக்கும் போது அந்த அன்பு ஓடிப்போய் ஒளிந்துக்கொள்கின்றது.

“அன்பிற்காய் ஏங்கும்
அபூர்வ உயிரி
என்னென்ன செய்யும்
பக்கத்தில் பக்கத்தில்
வந்து ஏக்கத்தோடு
கண்நோக்கும்
தன் விசுவாசத்திற்கு
வாலாட்டும்
சுற்றிச் சுற்றி வரும் 
ஒரு கோணல் சிரிப்புடன்
கல் எடுக்கப்படும் போதும்
வாலைக் குழைத்து
ஊ ஊ ஊ சொல்லும்
புறக்கணிப்பில் ஆனது
வலி, கல்லால் அல்ல
என்றுணரும் நொடியில்
தேட முடியா
திசையொன்றில்
காதெட்டும் தூரத்தில்
கச்சிதமாய்
ஒளிந்து கொள்ளும்.”

  1. அன்பிற்காக ஏங்கும் ஒரு உயிரி
  2. கோணல் சிரிப்புடன் மனித உடல்கள்
  3. அன்பு ஓடிப்போய் ஒளிந்துக்கொள்ளல்

இதில், மனித உயிரி ஓடிப்போய் ஒளியவில்லை. கவிதையின் ஆசுவாசமான இடம் கூட அதுதான். மிக இயல்பாக பொருள் கொள்ளத் தொடங்குகின்றது. சமகாலக் கவிதைகளின் வழியாக இஃதொரு நல்ல கட்டமைப்பு. அதன்பின், நாம் தான் மொழியின் அர்த்தமாகவும் மாறுகின்றோம்.

ஆனால், அதே அன்பு எரிச்சலாக மாறும் ஒரு இடமும் உண்டு.

“தூண்டிற் புழுக்களாய் சில சொற்களை எறிகிறாய் / பதிலாய் / உயிர் மூக்சுக்காற்றை / வளை முன்னில் மாட்டுகிறேன் / மசாலாவை கை எரிய எரிய / அம்மியிலிருந்து / வழித்தெடுக்கிறாள் / உன் காதலி”

அலாதியான அன்பினால், வேறெந்த அசௌகரியங்களும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இரக்கமற்றதாக அந்த அன்பு மாறும் போது, மீன் போல வளையில் சிக்கி, கை எரிய எரிய மசாலாவை அரைத்து தன்னையே வறுத்துக் கொள்ளக் கூடிய ஒரு காட்சி தெரிகின்றது.

இது ஒரு மனக்கூறான வெளிப்பாடு

  1. தூண்டிற்புழுக்களாய் சில சொற்களை எரிகின்றாய் – ஆண் உடல்
  2. உயிர் மூச்சுக் காற்றை வளை முள்ளில் மாட்டுகின்றேன் – பெண் உடல்
  3. மசாலாவை கை எரிய எரிய வழித்தெடுத்தல் – எண்ணெய்யில் வறுபடத் தன்னைத் தயார் செய்துக் கொள்ளும் – ஒரு பெண் உடல்

இதில், ஒரு பெண்ணுடலும், இச்சமூகமும் இணைந்துள்ளது. ஒரு பெண் உடலை முற்றிலுமாக, கைக் கொள்ளுதல். காலங்காலமாக நடக்கின்றது. நிலமற்று கிடக்கும் ஒரு பெண் உடல், எதனைத் தன் இருப்பாகக் கைக் கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகின்றது. மிகத் தீவிரமான அகவுணர்வுக் கொண்டது தான் இக்கவிதையெனச் சொல்லலாம். உணர்வாக்கமும் கூட.

பொதுவாக,

“இங்கு அகப்பாடலின் முதல், கரு, உரி, மரபு அதாவது அகப்பாடலின் தன்னியல்பான உணர்வெழுச்சி (Spontancity) செயற்கையாக்கப்படுவதை அவதானிக்கலம்”

(கார்த்திகேசு சிவத்தம்பி – 2012 ப.19) 

இதுபோல அகண்ட ஒரு அகநிலைக்காட்சி, கவிதையில் அகண்ட பார்வை தந்துத் தன்னை நெகிழ்த்திக் கொள்கின்றது.

“ஆமென்றோ இல்லையென்றோ / சள சள வென்ற / தன் மொழியில் / நிற்காமல் ஓடிய படி நதி. 

அருவியின் பாறைகளுக்கு / ஒப்புக் கொடுத்த உடல் / “வலிக்கிறதா தங்க மயிலு” 

என்ற நதியடியின் கேள்விக்கு”

என்ன சொல்ல முடியும்?

இது மிகுந்த அகச்சார்ப்புள்ளது.

இவ்வாறு வாசித்துக் கடந்தோமென்றால், இந்த ‘நான்’ என்பது சுயமாக “தான் தோன்றி பாலையாக உருமாறும் இடம்” மிக அழகானது.

நெரித்த புருவங்களை / நீவி விட்டு / கேள்விகளைக் கழற்றிப் போட்டு / சாயத் தோள் தந்து / நெற்றி முத்தமிட்டு / நான் இருக்கிறேன் / நான் இருக்கிறேன் / எனச் சொல்ல / நீயுமில்லை… யாருமில்லை… / நானே சொல்லிக்கொள்வேன் / தேற்றியும் கொள்வேன் / என்ன, பாலையில் / பகல் நீளமானது / இரவோ, விசித்திரமான / குளிர் காய்ச்சி மரம்”

இங்கு பாலைத்திணை குறிஞ்சியும், முல்லையும் திரிதலினால் அல்ல. தானாக, தான் தோன்றி பாலையாக உருக்கொள்கின்றது.

“என்ன, பாலையில் (வெம்மை) / பகல் நீளமானது / இரவோ, விசித்திரமான (குளிர்) / குளிர் காய்ச்சி மரம்”

மிகச் சிறப்பான அடிகள் இது. தன்னை விட்டுக் கடந்த ஒரு ஆண் உடலைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த வேலைப் பார்ப்பது. வெம்மை கொண்ட பாலையில் பகல் நீளமாகி, இரவுப்பொழுது கம்மியாக்கிக் கொள்கின்றது. அதுவும் குளிருடன் அது தான் ரொம்ப முக்கியமான இடம். தமிழ் நிலம் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் வரலாறு முதலிய சூழல்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் தொல்காப்பியரின் திணைக் கோட்பாடுள்ளது.

இக்கவிதையின் இடம், அதுபோல மாறுகின்றது.

“தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு நிலம், காலம், சமூகம், வாழ்க்கை, மனித உணர்வு, (முதல், கரு, உரி) போன்றவை ஒன்றோடென்று இணைந்து கவிதையாக்கக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது. எந்த ஒரு படைப்பின் அடிப்படைக் கூறுகளும் இவையன்றி இருக்காது. அந்த வகையில் தமிழ்நிலம், தமிழ் வாழ்வியல் சார்ந்த கருத்தியல்களை உள்ளடக்கிய திணை இலக்கியக் கோட்பாட்டை உருவாக்குவதற்கான தேவைகள் உள்ளன.

(க.ஜவகர் – 2010 ப.20)

என்பது நினைக்கத்தக்கதாகவுள்ளது.

ஒரு மொழியைச் செம்மையுறச் செய்தல் என்னவென்றால், மௌனத்தினை மொழிபெயர்த்தல் தான்

“தலையினை இடது புறம் / சாய்த்து நீ ஆற்றிய / உரைகளை நானே கேட்டிருக்கேன் / மேலும் உனக்கு / எழுதவும் படிக்கவும் / தெரியும் / மௌனம் ஒரு செம்மொழி”

மௌனத்தை மொழிபெயர்க்க

மனநிலை சரியில்லாதவர்களாலே ஆகும்”

சில நேரங்களில் கவிதை அமைதியாகிவிடும். தன் ரகசிய மொழியினை மறைத்து விடும்.

“உண்மையில் கவிதைகள் எப்போதும் கவிதைகளாக மட்டுமே இருந்து விடுவதில்லை. கவிதைகள் பெண்களுக்கு இலட்சியம். இந்த இலட்சியங்களே அவர்களின் வாழ்தலுக்கான மிக எளியதொரு தீர்மானம்”

(ஆஃப்கான் பெண்களின் வாய் மொழிப்பாடல்களும், கவிதைகளும் – மொழியாக்கம் ச.விசயலட்சுமி – 2022 ப.6 )

அதே மௌனம் தான். மீச்சிறு, மீப்பெருவாகவும் மாறுகின்றது.

மௌனம் விலகல், வலி, புறக்கணிப்பு, பதில் வெற்றிடம், செவ்வியல், நிரப்பிக்கொள்ள வசதியான பீங்கான் ஜாடியாக மாறி, அதன் பின்பு,

“மௌனம் மொழியுறா மொழி” என வலுப்படுத்தும் இடம் அபரிதமானது.

இதையெல்லாம் கடப்பதற்கான வழியாக,

“எப்படி தன்னையறியாது / நிகழ்ந்ததோ / அப்படியே தன்னையறியாது

நிகழ்ந்ததும் / போகக் கடவது” 

எனும் சமாதானமாகுதலை மிகத் துல்லியமாகக் கொள்ளலாம். இதனை,கால ஒட்டத்தில்  ஒருவர் வளர்ந்து வருகையில் அவரது தனிப்பட்ட மொழியும் மாறமுடியும். மாற வேண்டும் எனப் பார்க்கலாம்.

கவிதை, எப்போதும் நாம் அறிந்த உலகை அறியாத உலகமாக்குகிறது. கூடவே, அறியாத உலகை நெருக்கமான அனுபவமாகவும் மாற்றுகிறது. கண் வழியே பதிவாகும் அனுபவங்ளை, சொற்களைக் கொண்டு சிதறடிக்கிறது.

மொழியைத் தன்வசமாக்குவதும், மொழிவழியாக அனுபவங்களைப் புத்துரவாக்கம் செய்வதும். கற்பனை நிஜம் என்ற பிரிவின் கோட்டை அழிப்பதுமே கவிஞனின் முன்னுள்ள சவால்கள்.

நவீனத் தழிழ்க் கவிதை அந்தச் சவாலைத் திறமையாக முன்னெடுக்கிறது. சென்ற தலைமுறைக் கவிஞர்கள் தொடாத, அறியாத விஷயங்களை இந்தத் தலைமுறை தன்னுடைய கவிதைகளில் பாடுகிறது. குறிப்பாக, தமிழ் மொழியின் புதுப் பாய்ச்சலைக் கவிதைகளில் அதிகம் காண முடிகிறது.

(எஸ்.ராமகிருஷ்ணன் – 2019 ப.19)

இதைக் கருத்தில் கொள்வது போல, ஒரு கவிதையில் ‘நம்புவதைக் காணுதல்’ என சொல்லும் இடம் அழகு.

“கானலின் கனவு”

“எழுதுவதெல்லாம் / உனக்கான ஒன்றல்ல / எழுதாத சொற்களில் / தான் / உன் என் களி கத களி”

இங்கேயும் ஒரு மௌனம் களி கொள்கின்றது. இதற்கான கருதுகோள் உண்மையா? பொய்யா? எனத் தெரியாது. ஆனால், இரு பிம்பங்கள் உள்ளன. 

இவ்வாறான, திரண்ட உள்ளடக்கங்களைக் கொண்டு நகரும் இக்கவிதைகளில் உயிர்ப்பான பொருண்மைகளும் வசமாக்கப்படுகின்றன.

அவ்வகையில் சிற்சில திறவுச்சொற்களையும், நாட்டார் வழக்காற்றியலையும் அறிய முடிகின்றது.

ஞானம் ஒரு டார்ச்லைட் / தான் தோன்றி பாலை / வடக்கி / தில்லையம்பலப் பேய் / செம்மைக் குருவி / முங்கு நீச்சல் / மஞ்சணத்தி / என் மணலேறி நான் / நெகிழியில்லா மஞ்சரி / பந்துகளின் தழல் / உழப்பல் போன்ற திறவுச்சொற்களையும்.

இரங்குமோர் ஊர்ச் சிறு தெய்வம் போல / உச்சிக்கு அநாயசமாய் நீந்துகிறாள் பேச்சி / காக்காய்களுக்கே அறுத்தெறிந்து இருக்கலாம் / இவர்களின் அம்மாத்தாக்களும் அப்பத்தாக்களும் / இலை உதிர்த்த வேம்பு / எரி கொற்றவைக்கு மலை தான் காலம் இப்போது / வேரிலிருந்து அள்ளி உண்கிறாள் நீலி போன்ற நாட்டார் வழக்காற்றியல் கூறுகளையும் உட்கொள்ளலாம்.

இவ்வாறாக இக்கவிதைகள் மொழியில் ஒரு செய்தியை,

அறிவிக்கும் படியும்
பங்கேற்கும் படியும்
இணைக்கும் படியுமாக

அமைவதற்கு, கவிஞர் தேவசீமா எவ்வித சமரசத்துக்கும் இடம் தரவில்லை. 

அதனாலயே,

தவளைக்கல்லாக
நீயே எறியப்பட்டாலும்
நீந்தா திருக்கட்டும்
மனக்குளம்”

என அவரால் சொல்ல முடிந்தது.

சான்றுகள் :

  1. இளம்பூரணர் உரை – தொல்பொருளியல் – நூ -219
  2. எஸ்.ராமகிருஷ்ணன் – 2019 – கவிதையின் கையசைப்பு – தேசாந்திரி பதிப்பகம் – சென்னை
  3. க.ஜவகர் – 2010 – திணைக்கோட்பாடும், கவிதையியலும் – காவ்யா வெளியீடு – சென்னை
  4. கார்த்திகேசு சிவத்தம்பி – 2012 – தொல்காப்பியமும் கவிதையும் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – சென்னை
  5. ச. விசயலட்சுமி – 2022 – லண்டாய் ஆஃப் கான் பெண்களின் பாடல்களும் கவிதைகளும் – எதிர் வெளியீடு – பொள்ளாச்சி
  6. சாரு நிவேதிதா – 2018 – மெதூஸாவின் மதுக்கோப்பை – எழுத்து பதிப்பகம் – சென்னை

***

ம. கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

நினைவுச் சுழல்

1

அரசன்

மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் ஆடு மாடுகள் ஒதுங்குமாறு, பெரிய ஹார்ன் சத்தத்தோடு மாரியம்மன் கோவில் வாசலில் வந்து நின்றது, ஊர் வழியாக வங்காரம் வரை செல்லும் அரசுப்பேருந்து. 

செந்துறை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பும் நான்கைந்து பிள்ளைகளோடு சேர்ந்து அவனும் இறங்கினான். தேகம் மெலிந்து, முகம் மறைக்கும் தாடியோடு, ஆள் பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தான். மேல்சட்டை சாயம் மங்கி, கசங்கியிருந்தது. போட்டிருந்த பேண்ட் உப்பு பூத்திருந்தது. பேருந்தை விட்டு இறங்கி சற்று நேரம் அப்படியே நின்றவன், சிறிது நேரம் கழித்து அருகிலிருக்கும் கைப்பம்பை நோக்கி மெல்ல தள்ளாடியபடி நடந்தான்.

“யோவ், அங்க பாருய்யா, அவனப் பாத்தா நம்ம சிங்காரம் மொவன் செல்வம் மாதிரி தெரியல?” என்று கோவில் படியில் அமர்ந்து கதைப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெரியவர் சொல்ல,

“இருக்காதுய்யா, அவன் எப்படியிருப்பான், கொம்பு சீவுன மயிலங்காள மாரி திம்முன்னு அம்சமா இருப்பான், இவன் என்னடான்னா கண்ணுக்குள்ள உசுர தேக்கி வச்சிக்கிட்டு நிக்குறான், இவனப் போயி செல்வமுன்னு சொல்ற” என்று அடுத்தவர் மறுத்துப் பேச,

“எனக்கென்னமோ மொக சாடைய பாத்தா அவன மாதிரித்தான் தெரியுது” என்று கையிலிருந்த சுருட்டைப் படிக்கல்லில் நசுக்கிக்கொண்டே சொன்னார். 

“பெத்த அப்பன், சாவுக்குக் கூட இந்தப்பக்கம் எட்டிப் பாக்காம கெடந்த பய, இப்பவா வந்திருக்க போறான்” 

“அந்த நேரத்துலதான் மெட்ராஸ் செயிலுல இருந்ததா சொன்னாங்களேய்யா”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, செயில்ல இருந்து வெளிய வந்து ரெண்டு வருசமாச்சாம், திருப்பூருல ஏதோ கம்பெனில வேல பாத்துக்கிட்டு இருந்தானாம்”

“நம்ம ஊரப் பத்திதான் ஒனக்குத் தெரியுமே, ஒண்ணுன்னா ஒம்போதுன்னு அள்ளிவுடுற ஊரு, அவன் என்ன நெலையில எப்படி இருந்தானோ?”

“இவ்வளவு வயசாயும் இன்னும் வெளுத்தது எல்லாம் பாலுன்னு நம்பிக்கிட்டு நோனாயம் பேசிக்கிட்டு இருக்குற. செத்த அசந்தா ஆளையே அடிச்சி திங்குற ஊருல எப்படித்தான் இத்தன வருசம் பொழப்ப ஓட்டினியோ?, சரி சரி … வூட்டுக்கு கெளம்புய்யா, எனக்கு வவுத்த கலக்குற மாதிரி இருக்கு, ஏரிக்கு போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து கோவணத்தை சரி செய்து, வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு வடக்கு பக்கம் நோக்கி நடந்தார் அந்த பெரியவர்.

அந்த வழியாக கடைக்குப்போன சின்னப்பையன் ஒருவனை அழைத்து பம்பில் தண்ணிர் அடித்துவிடச் சொல்லி, முகத்தைக் கழுவி, தண்ணீர் குடித்துவிட்டு வந்து கோவிலின் முன் வரிசையாக அடுக்கியிருக்கும் செம்பராங்கல்லில் அமர்ந்தான் செல்வம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடித்த பிறந்த மண்ணின் நீர் வயிரை குளிர்வித்தாலும், கூட்டைத் தொலைத்த பறவை போல் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. 

முதுகு உடைந்த ஒட்டகம் போல் சாய்ந்து நிற்கும் பெருமாள் கோவில் மந்தாரை மரம் பூத்துக் குலுங்குகிறது, இரண்டு ஆள் சேர்ந்து அணைத்தாலும், அணைக்க முடியாத மாரியம்மன் கோவில் வேம்பின் இலை கொட்டி மீண்டும் தளிர்விட்டுத் துளிர்த்திருக்கிறது. குழையக் குழையப் பூசிய எண்ணெயினால் வேம்பின் தெற்கு பக்கம் இருக்கும் காத்தவராயன் தன் துணையோடு பிசுபிசுத்து நிற்கிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த எல்லாமும் அப்படியே இருக்க, தான் மட்டும் புரையோடிய கள்ளி மரம் போல் தனித்து நிற்கிறோம் என்கிற அழுத்தம் உயிரைப் பிழியச் செய்தது. எல்லாமே நேற்று நடந்தது போலிருக்கிறது, கொஞ்சங்கூட அதன் தடம் மறையவே இல்லை, ஆனால் திருப்பிப் பிடிக்க முடியாத அளவிற்கு தனித்து விட்டிருக்கிறது காலமும், சூழலும். தூரத்து மின்மினியை நம்பி, வேரில் வட்டமடித்த வண்ணத்துப் பூச்சியைத் தொலைத்து விட்டதை எண்ணி, இனி வருத்தப்படுவதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என்றாலும் அந்த நினைவுச்சுழலில் முங்கிக் கிடக்கையில் தான் போன உயிர் வந்தது போல் இருக்கிறது.

நாற்பது வருடங்களுக்கு முன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிங்காரம் என்று கேட்டால் எல்லா கடை முதலாளிகளுக்கும் தெரியும் அவனை, அப்படியொரு குடிகாரன். காலையில் வரும் காய்கறி மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, மதியத்துக்கு மேல் குடிக்க ஆரம்பித்தால் நள்ளிரவு வரை நீளும் குடி. காட்டுத்தனமான குணம் கொண்டவன், வேலையிலும் அதே உக்கிரமான உழைப்பாளி. ஊரிலிருந்து திருச்சி வந்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தான் ஊருக்குச் சென்று வருவது வழக்கம். செல்வம் ஏழாவது படித்துக் கொண்டிருக்கையில், அவனது அம்மா, காமாலை நோய் முற்றி குணப்படுத்த முடியாமல் இறந்து போக, ஜெயங்கொண்டம் அருகிலிருக்கும் மகிமைபுரம் கிறித்துவ பள்ளியில் செல்வத்தை சேர்த்துவிட்டு வந்தான் சிங்காரம். தாய் அல்லது தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்குகிறது அந்த கிறித்துவ நிர்வாகம். நல்லமுறையில் தேறியவர்களுக்கு தங்களது இணைப்பிலிருக்கும் கல்லூரிகளுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பியும் வைக்கின்றனர். ஆகையால் படிப்புக்காக பணத்தேவை இருப்பதில்லை. அதனால் சிங்காரம் எப்போதாவது தோன்றினால் செல்வத்தின் பெயருக்கு பணம் அனுப்புவதோடு சரி, நேரில் சென்று பார்த்துவிட்டு வருவதெல்லாம் கிடையாது. நாளடைவில் அதுவும் நின்று போனது. கண்டிப்பான பள்ளி என்பதினால் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் கண்டிப்புக்கு பயந்து இரவோடு இரவாக பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டான் செல்வம். சிங்காரமும் அதே ஊரில் கணவனை இழந்த ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு செல்வத்தை கை கழுவிவிட்டான். அப்பன் மகன் என்கிற உறவில் பெரிய பிடிப்பில்லாமல் இருவரும் நேரில் கண்டால்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். 

ஊரிலேயே தங்கிய செல்வம், கொஞ்ச நாள் கூலி வேலைகளுக்குச் சென்று வந்தான். கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்ததும் யாரையோ பிடித்து அரியலூர் – திட்டக்குடி செல்லும் தனியார் பேருந்தில் உதவியாளனாக சில வருடங்கள் வேலை பார்த்து அதே பேருந்தில் நடத்துனராகவும் உயர்ந்தான். பிசிறு தட்டாத குரலும், ஓடியாடிச் செய்யும் வேலையும் தான் இந்த நிலைக்கு அவனை உயர்த்தியது. இன்னும் கொஞ்சம் படித்திருந்தால் லைசென்ஸ் போட்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று பிற்பாடுதான் அவனுக்குப் புத்தியில் உரைத்தது.

பேருந்தே கதியென்று கிடந்தவன், ஒருநாள் முதலாளியோடு ஏற்பட்ட சிறிய மன வருத்தத்தில் வேலையை உதறிவிட்டு, ஊருக்கே மீண்டும் திரும்பி வந்தான். சில மாதங்களிலே கையிருப்பும் கரைந்துவிட, மீண்டும் தெரிந்தவர்களைப் பிடித்து வேலை தேடினான். அப்போது தான் முன்பு வேலை பார்த்த பேருந்தின் ஓட்டுனர் முத்துசாமி, செந்துறை – பெண்ணாடம் செல்லும் மினி பேருந்தில் வேலை பார்ப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தான். முத்துசாமியும் முதலாளியிடம் சொல்லி இவனைச் சேர்த்துக் கொண்டார். 

உள்ளூர் வழியாக ஓடும் பேருந்து என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் வேலை செய்தான். மற்ற நடத்துனர்களைப் போல் பயணிகளிடம் சிடுசிடுவென விழாமல் பக்குவமாகப் பேசி எல்லோரிடமும் சீக்கிரத்தில் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். குடித்துவிட்டு வண்டியிலேறி சலம்பல் செய்பவர்களிடம் கூட நயந்து பேசி பிரச்சினையில்லாமல் செல்வதினால் ஓட்டுனர் முத்துசாமிக்கும் செல்வத்தின் மீது தனிப் பிரியம். 

செந்துறைக்கு தையல் கற்றுக்கொள்ள செல்வத்தின் பேருந்தில் தினமும் சென்று வந்து கொண்டிருந்தாள் மாலதி. அவளுக்கும் செல்வத்தின் ஊர் தான். பார்ப்பதற்கு சற்று கறுப்பாக இருந்தாலும், பார்த்தவுடனே சட்டென்று நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் அழகி. செல்வத்துக்கு ஒரு வகையில் முறைக்காரப் பெண். பேருந்தில் தினமும் சென்று வருகையில் தான் மாலதிக்கு, செல்வத்தை பிடித்துப்போனது, ஆனால் செல்வம் அவளைக் கண்டுகொள்ளாமல் மழுப்பலாகவே இருந்தான். இவளும், சாடை மாடையாக தனது விருப்பத்தை அவனிடம் உணர்த்திப் பார்த்தாலும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தான். ஒருநாள் வண்டி பஞ்சர் ஆகி நிற்கையில் டிரைவர் முத்துசாமியை தனியாக அழைத்து, துணிச்சலாக தனது மனதிலிருப்பதைக் கூறி, செல்வத்துக்கு புரிய வைக்குமாறு கூறினாள்.

இரண்டு நாட்கள் கழித்து, 

“ஏண்டா செல்வம், அந்தப் புள்ள மாலதிதான் இப்படி கெடந்து தவியா தவிக்குதே, ஒத்துக்கிட்டாத்தான் என்னடா?, பாக்குறதுக்கும் மூக்கும், முழியுமா லட்சணமாத்தான்டா இருக்கு, குடும்பங்கூட நல்ல குடும்பம் மாதிரித்தான் தெரியுது” என்று முத்துசாமி செல்வத்திடம் கூற,

இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று முதலில் அதிர்ச்சி அடைந்த செல்வம், பின்பு சுதாரித்துக்கொண்டு, 

“இல்லண்ணே, நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே” என்று சொன்னான்.

“ஏன்? எனக்குத் தெரியாம வேற எதுவும் தனியா ரூட்டு போவுதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் முத்துசாமி.

“ஒனக்கு தெரியாம எப்படிண்ணே… அந்தமாதிரில்லாம் எதுவுமில்லண்னே, அப்படியொரு எண்ணங்கூட இதுவரைக்கும் எம்மனசுல வந்தது இல்ல”

“இப்படி சொல்றவந்தாண்டா நாளைக்கே மாலையும் கழுத்துமா வந்து நிப்பான், இப்படி சொன்ன எத்தன பேத்த பாத்துருக்கேன் என் வயசுல”…

“அட நம்புங்கண்ணே… எனக்கு, ஒன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு, அப்படி ஏதாவது இருந்துச்சின்னா மொத ஆளா ஓங்கிட்டதான் வந்து சொல்லுவேன்” என்று சத்தியம் செய்யாத குறையாய் சொன்னான் செல்வம்.

“அதுக்கில்லடா, மாலதிய பாத்தா நல்ல புள்ள மாதிரி தான் தெரியுது, கட்டிக்கிட்டின்னா குடும்பம் குட்டின்னு நிம்மதியா வாழலாம், இல்லன்னா என்ன மாதிரி தனி மரமாத்தான் நிக்கணும். கை, காலுல தெம்பு இருக்குறப்பவே ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, கொஞ்சம் தெம்பு இத்து விழுந்தம்னா வச்சிக்க, செத்த நாய விட கேவலமா பாப்பானுங்க”…

“……………………………..”

“ஒங்கப்பன் பொழைக்கிற பொழப்ப பாத்துதான் ஒங்க ஊரே சிரிக்குதே, ஒங்கம்மா உசுரோட இருந்திருந்தா, ஓங்குடும்பத்த இப்படி அந்திலி சிந்திலி ஆவ வுட்டுருக்குமா?, நீயும் அந்த ஆளு மாதிரி கேவலப்பட்டு போயிடக்கூடதுன்னு தான் சொல்றேன்.”

“இந்த நேரத்துல அந்தாள பத்தி ஏண்ணே பேசுற, அவன்லாம் ஒரு ஆளுன்னு, அவனப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க”…

“அதுக்குத்தான் சொல்றேன், ஒழுங்கா, ஒனக்குன்னு ஒரு குடும்பத்த தேடிக்க, தேடி வரத வேணாமுன்னு எட்டி ஒதைக்காத, அப்புறம் அத நெனச்சி பின்னாடி வருத்தப்படுவ”…

“அப்படில்லாம் போயிற மாட்டேண்ணே, நமக்குன்னு ஒரு நேரம் வராமலா போயிற போவுது, அப்போ பாத்துக்கலாமண்ணே” என்று செல்வம் சொல்ல,

“உதாரணத்துக்கு வேற எங்கயும் போவ வேணாம், என்னைய எடுத்துக்க… எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியவன்… சுட்ட மண்ணு போல ஆயி போச்சி வாழ்க்க… இனிமே புடிச்சி வைக்க நெனச்சாலும் முடியாது”…

“இப்பமட்டும் ஒனக்கு என்னண்ணே கொறச்ச… போனத நெனச்சி கவலப்படாதண்ணே..” 

“அதுக்குத்தான் இம்புட்டு தூரம் எடுத்து சொல்றது… சொல்றத சொல்லிபுட்டேன், அப்புறம் ஒன்னோட விருப்பம், கையுல நாலு காசு இருக்குறவரைக்கும் தான், நம்ம பின்னாடி நாயா அலைவானுனோ, பைசா தீர்ந்துடிச்சின்னு தெரிஞ்சிதுன்னா ஒரு பய தல நிமுந்து பாக்க மாட்டான், எல்லாத்தையும் மனசுல நிறுத்தி ஒரு நல்ல முடிவா எடு” என்று சொன்ன முத்துசாமி சிகரெட் ஒன்றை பற்றவைத்து புகையை உள்ளுக்கு இழுத்து வெளியே விட்டபடி கண்ணை மூட பூங்கோதையின் நினைவு நிழலாடியது.

முத்துசாமிக்கு சொந்த ஊர் பெண்ணாடம். சிறு வயதிலே தந்தை இறந்து போக, தாயின் கவனிப்பில் வளர்ந்து வந்தான். திறமையான படிப்பாளி. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அரியலூர் அரசினர் கல்லூரியில் சேர்ந்தான். முதல் இரண்டு வருடங்களும் தினமும் ரயிலில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தவன், தினமும் சென்று வர கடினமாக இருப்பதாகக் கூறி மூன்றாமாண்டில் அரியலூரிலையே, நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கினான், அன்று அவன் வாழ்வில் தொடங்கிய புயல் பதிமூன்று வருடம் கழித்து அவனுடைய தாயின் இறப்பில் வந்து நிலை கொண்டது. வாரம் ஒரு தடவை ஊருக்கு வந்து தாயைப் பார்த்துவிட்டு, அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று கூறி பணத்தினை வாங்கிக் கொண்டு சென்று நண்பர்களோடு இணைந்து குடித்தும், சீட்டாடியும் அழித்தான். பின்பு மாதத்திற்கு ஒரு தடவை தான் வீட்டிற்கு போய் வந்தான். முத்துசாமியின் அம்மாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி அழுதுப் புலம்பி பார்த்தும் கேட்பதாக இல்லை. அவளும் ஒரு நிலையில் ஓய்ந்து போனாள். 

“அந்தாளு போனதுக்கப்புறம், ஒத்தப் புள்ளையின்னு எம்புட்டு பாடுபட்டு வளத்துருப்பேன், எவ்வளவு கனவு கண்டுருப்பேன், எல்லாத்துலையும் மண்ணள்ளி போட்டுட்டு இப்படி காலியா சுத்துறானே, அவன வேலைக்கா போவ சொல்லுறேன், பொங்கி போடுறத தின்னுக்கிட்டு வூட்டுல கெடந்தா போதுமுன்னு தானே சொல்றேன், அதுக்கு வலிக்குதுங்குறான்.. எத சொன்னாலும் எதிரிய பாக்குற மாதிரி பாக்குறான்… இவனுக்கு சின்னவன்லாம் சிமெண்ட் கம்பேனில சேந்து நாலு ரூவா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டுனானுவோ, அவனுவோல பாத்தாவது இவனுக்கு புத்தி வரக்கூடாது… ஊருக்குள்ள நாலு பேத்துக் கூட பேசுனாலாவது நல்ல புத்தி வரும், யாரு கூடவும் அண்டாம கொள்ளாம, எல்லாம் வெளியூரு பயலுவோ தான் பூரா சகவாசம்… ஒருத்தன் கூட நல்லப் பய மாதிரி தெரியல, பூரா கந்த சாக்கு மாதிரித்தான் இருக்கானுவோ… அவனுவோல நம்பிக்கிட்டு இவனும் திரியா திரியுறான், ஓஞ்சி ஆஞ்சி ஒரு நாளைக்கு வரும்போது தான் தெரியும், பெத்தவளோட அரும… அத பாக்க நான் இருக்கேனோ இல்லையோ?…. வேண்டாத சாமியில்ல, போவாத கோயிலுமில்ல…. எந்த சாமியும் கண்ணெடுத்து பாத்து என் கண்ணீர தொடைக்க ஒரு வழிய காட்ட மாட்டேங்குது… நான் வாங்கி வந்த வரம் அப்பிடி போல” என்று வேலைக்குப் போன இடத்தில் கூட்டுக்காரியிடம் பொறுமிவிட்டு வீட்டுக்கு நடந்தாள் முத்துசாமியின் தாய்.

முத்துசாமியின் நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஆடியாடி ஓய்ந்து வீட்டில் பார்த்து வைத்தவர்களை திருமணம் செய்து கொண்டு அடங்கி விட, முத்துசாமியின் கால்கள் ஓய்ந்ததாக இல்லை. அப்போது தான் பூங்கோதையோடு பழக்கம் உண்டானது. அவளுக்கு சொந்த ஊர் ஓட்டக்கோவில். திருமணம் செய்த நான்கு மாதத்தில் பூங்கோதையை அரியலூரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துவிட்டு அவளின் கணவன் மீண்டும் வெளிநாடு சென்று விட, அதே தெருவில் தங்கியிருந்த முத்துசாமிக்கும் இவளுக்கும் பழக்கமானது. 

பகலில் எங்கு அலைந்து திரிந்தாலும், இரவில் பூங்கோதையின் மடியில் முத்துசாமியின் உறக்கம் என்றானது அந்தப் பழக்கம். அவ்வப்போது தேவைப்படும் பணத் தேவைக்கும், எப்போதும் தேடும் உடல் தேவைக்கும் பூங்கோதை தயாராக இருந்தாள். மூன்று வருடம் கழித்து விடுமுறையில் வந்த கணவனுக்கு, இவர்களின் பழக்கம் தெரிந்து பூங்கோதையிடம் மென்மையாக எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றவனுக்கு தோல்வியே மிஞ்சியது. முத்துசாமி மீது அடக்க முடியாத கோபம் பொங்கினாலும் அவனோடு சண்டை போட்டு ஜெயிக்க தெம்பில்லாத காரணத்தாலும், நான்கு பேருக்கு தெரிந்து அசிங்கப் பட நேரிடும் என்கிற காரணத்தாலும் முத்துசாமியை சந்தித்து,

“இத்தன வருசம் வெளிநாட்டுல கெடந்து கஷ்டப்பட்டது எல்லாம் நானும் எம் பொண்டாட்டியும் சந்தோசமா இருக்கணும்ன்னு தான், இப்ப அதுக்கு தடையா நீ வந்து நிக்குற… ஓங்கூட மல்லுக்கட்ட எனக்கு விருப்பமில்ல, தெம்புமில்ல… இப்படியே வெலகிப் போயிட்டியன்னா ஒனக்கு புண்ணியமா போவும்… அவள எப்படியாவது நான் சரிக்கட்டி வாழ்ந்துடுறேன்”….

“………………………………”

“பணங்காசு எதுன்னாலும் கேளு… கொடுத்துடுறேன்.. மறுபடியும் என்னோட வாழ்க்கையில குறுக்க வந்துடாத.. வேற எவனா இருந்தாலும் வெட்டுறேன் குத்துறேன்னு துள்ளுவான்… இல்ல ஆளுங்கள செட் பண்ணி போட்டுத்தள்ள பாப்பான், எனக்கு அந்த அளவுக்கு பண்ணல்லாம் மனசுல தெம்பில்ல… நரவைய மிதிச்சுட்டதா நெனச்சி கால கழுவிக்கிறேன்.. என்ன நிம்மதியா குடும்பத்தோட வாழ விடு … மீறி தொடர்ந்தியன்னா நான் என்னைய மாச்சுக்குவேன், அந்தப் பாவம் ஒன்ன எத்தன ஜென்மம் எடுத்தாலும் சும்மா வுடாது” என்று கண்ணீர் ததும்ப சொன்னவன் முத்துசாமியின் முகத்தைக் கூட பார்க்காமல் கிளம்பினான்.

இதுநாள் வரை தினவெடுத்து திரிந்த முத்துசாமி, தாயின் கண்ணீருக்கு கூட கரையாதவன், ஒரு ஆணின் கண்ணீரில் உருகி உறைந்து போனான். குற்ற உணர்வில் உடலெல்லாம் கூசியது. தன்னுடைய உடம்பை தானே வெட்டி கூறு போட்டுக்கொள்ள வேண்டுமென்று மனது துடியாய் துடித்தது. ஆசையாக அள்ளி அணைத்த பூங்கோதையின் உடம்பை நினைத்தால் நெருப்புக் குமிழில் வீழ்ந்துவிட்டது போன்று உடம்பு கொதித்து அடங்குகிறது. மன்னிக்க முடியாத குற்றத்தை அவனுக்கு செய்திருந்தாலும், அவனின் சாந்தமான வேண்டுதலும், என்னை மாய்த்துக் கொள்வேன் என்கிற சொல்லும் சூறாவளியாய் போன்று சுழன்றடித்து முத்துசாமியை பந்தாடியது. புறவெளி எங்கும் அவனின் கண்ணீரால் நிரம்பி அதில் தான் மூழ்கி மூழ்கி மூர்ச்சையாவது போல உணர்ந்தான். ஒரு பெண்ணின் கண்ணீரை விட வயது வந்த ஆணின் கண்ணீர் கனத்தை அவனால் சுமக்கமுடியவில்லை. 

கண்கள் சொக்கும் வரை குடித்தும் பொட்டு தூக்கம் வராமல் விழித்தே கிடந்தான் முத்துசாமி. யாருமற்ற மணற்வெளியில் தான் மட்டும் தனித்திருப்பதாக தவியாய் தவித்தான். பசி உணர்வென்பதே இல்லாமல் பூங்கோதையின் கணவனின் கண்ணீர் சொற்களில் தான் கரைந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கிடந்தான். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு திசையிலிருந்து வரும் அந்த சொற்களினால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டான். 

அரியலூரிலிருந்து வெளியேறி ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு கோயிலாக நுழைந்து வெளியேறியும் பூங்கோதையின் நினைவும், அவள் கணவனின் கண்ணீரும் அவனைப் பருந்துபோல் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. எங்கு இருக்கிறோம், என்ன உண்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்கிற சிந்தனையின்றி நாட்களை செலுத்திக் கொண்டிருந்த வேளையில், தலை விரி கோலத்துடன் அழுது அழுது வீங்கிய முகத்துடன் தனது தாயின் உருவம் கனவில் தோன்றி மறைய, ஊருக்கு புறப்பட்டான். ஊரைச் சேர்ந்ததும் தான் தெரிந்தது, அவள் இறந்து இருபது நாள் ஆகிவிட்டது என்று. ஏற்கனவே இருக்கும் பாரத்தோடு தாயின் சாவு பாரமும் ஏறிக்கொள்ள செய்வதறியாமல் பித்துப் பிடித்துக் கிடந்தான். பின்னர் ஒரு வழியாக சித்தம் தெளிந்து லாரியில் கிளினராக ஓடி, பின் டிரைவராகி அதற்கப்புறம் தான் பேருந்துக்கு வந்தது எல்லாம் நிகழ்ந்தது. 

===========

இரண்டு நாள் கழித்து மாலதியைப் பார்க்கையில், “பயக்கிட்ட பேசியிருக்கேம்மா, எங்கிட்டையும் புடி கொடுக்காமத்தான் பேசுனான், கொஞ்சம் பதமா எடுத்துச் சொல்லியிருக்கேன், பாப்போம் என்ன சொல்றான்னு, இல்லைன்னா திரும்பவும் ஒருதடவ பேசிப் பாக்குறேன்” என்று தெம்பூட்டினார் முத்துசாமி.

“இப்பவே நாலஞ்சி பேரு பொண்ணு கேட்டு வந்துட்டாங்கண்ணே, எதெதையோ காரணம் சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரிய வைங்கண்ணே” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

இது முடிந்த ஒருவாரம் கழித்து ஒருநாள், சொல்லாமல் கொள்ளாமல் செல்வம் வேலைக்கு வராமல் போக, ‘சொல்லாம இப்படி லீவ் போட மாட்டானே, ஒடம்புக்கு ஏதும் முடியாம போயிருக்கும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு, இன்னொரு பையனை வைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு ரூட்டுக்கு கிளம்பினார் முத்துசாமி.

பேருந்து, நத்தகுழியை நெருங்கியதும், ஒரு கும்பல் முத்துசாமியை கீழ இறக்கி அடித்து வெளுக்க, இன்னொரு கும்பல் பேருந்தின் கண்ணாடிகளை நொறுக்கினர்.

“எங்கடா அனுப்பி வைச்ச, எங்கடா அனுப்பி வைச்ச?”, என்று கேட்டு ஆளுக்கு ஒரு அடியாய் அடிக்க முத்துசாமியின் சட்டையெல்லாம் கிழிந்து வாயிலிருந்து இரத்தம் சொட்டியது.

கொஞ்ச நேரம் கழித்து தான், நத்தகுழி வேலாயுதம் மனைவி பங்கஜத்தை இழுத்துக்கொண்டு செல்வம் ஓடிப்போன செய்தி தெரிய வந்தது முத்துசாமிக்கு.

“இப்படி பண்ணுவான்னு கொஞ்சம் கூட நெனக்கலங்க, சாமி சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது” என்று முத்துசாமி எடுத்து சொல்லியும், ஆத்திரத்தில் இருந்த எவரும் கேட்பதாக இல்லை.

“ஒனக்கு தெரியாம எப்படிடா இதெல்லாம் நடந்துருக்கும், நீ தான் அவங்களை அனுப்பி வைச்சிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருக்க, ஒழுங்கா சொல்ல போறியா இல்ல இங்கயே ஒன்ன வெட்டி பொதைக்கட்டுமா?” என்று பங்கஜத்தின் கணவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

“நீங்க வெட்டுனாலும் சரி, குத்துனாலும் சரி, எனக்கு எதுவும் தெரியாது” என்று வாயிலிருந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே சொன்னான் முத்துசாமி.

“நீ அனுப்பி வைச்ச அந்த ரெண்டு நாயுங்களும் இங்க வர வரைக்கும், பஸ்ஸ எடுக்க விட மாட்டோம், அதுவரைக்கும் பஸ் இங்க தான் நிக்கும்” என்று கனத்த குரலில் சொன்னான் கூட்டத்தில் இருந்த பெருத்த உடம்புக்காரன்.

செய்தி தெரிந்து பேருந்து முதலாளி ரத்தினம் வந்து, உடைப்பட்டும், அடிப்பட்டும் நிற்கும் பேருந்தையும், டிரைவரையும் பார்த்த ரத்தினம்,

“ஓடிப்போனவன வுட்டுட்டு இவன ஏண்டா அடிச்சிங்க, என் பஸ்ஸ வேற அடிச்சி நொறுக்கியிருக்கீங்க, என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க” என்று சத்தமாய் கேட்க,

“சும்மா சத்தம் போடுற வேல வச்சிக்காதீங்க, ஒங்க பஸ்சுல ஓடுன கண்டக்டர் தான் எங்க வூட்டு பொம்பளைய இழுத்துக்கிட்டு போயிருக்கான், அதான் கேட்டுக்கிட்டு இருக்கோம்” என்று வேலாயுதம் சொல்ல,

“இதுதான் நீங்க கேக்குற லட்சனமாடா, எவன் இழுத்துக்கிட்டு ஓடுனானோ அவன கூட்டியாந்து வெட்டுங்க, கொளுத்துங்க எவன் கேட்டா ஒங்கள…. அதுக்காக எம் பஸ்ஸ இப்படித்தான் அடிச்சி நொறுக்குவிங்களா?”

“இழுத்துக்கிட்டு போனது ஒங்க கண்டக்டர் தானே, சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று கூட்டத்தில் நின்ற ஒருத்தன் சொல்ல,

“எவன்டா அது பேசுறது, ஓடுன நாயையும், இழுத்துக்கிட்டு போனவனையும் ஒன்னும் பண்ண முடியல, ஒங்களுக்கு என்னோட பஸ் தான் கெடச்சுதா புடிச்சிக்கிட்டு ஆட்ட, ஒரே ஒரு தகவல் சொல்லிவிட்டா போதும் என்னோட மொத்த ஊரும் இங்க வந்து நிக்கும், இருக்குற எடம் தெரியாம கொளுத்திபுட்டு போயிருவோம், சொம்ப பயன்னு நெனச்சிகிட்டு கைய வச்சிங்களா,” என்று காட்டுக் கத்தலாக இரத்தினம் சலம்ப,

‘தப்ப நம்ம மேல வச்சிக்கிட்டு அந்தாளு வண்டி மேல கை வச்சது தப்புதான்னு’ மனதில் நினைத்துக்கொண்டு ஒருத்தனும் மறு வார்த்தை பேசாமல் கலைந்து போனார்கள். 

செல்வத்தை விட பங்கஜத்திற்கு ஐந்து வயது கூடுதல். நான்கு வயதில் பெண் பிள்ளையும், ஏழு வயதில் ஆண் பிள்ளை ஒன்றும் இருக்க இவனோடு ஓடிப் போயிருக்கிறாள். இருவருக்கும் எப்படி பழக்கமானது என்று யாருக்கும் தெரியவில்லை. 

சிலர் திருப்பூரிலும், சிலர் சென்னையிலும், இருவரும் இருப்பதாக சொன்னாலும் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. எவ்வளவோ தேடிப்பார்த்தும் சிக்கவில்லை. ‘எப்படியும் என்னைக்காவது ஒரு நாள் இந்த ஊருக்கு வந்து தானே ஆகணும், அன்னைக்கி ரெண்டு பேத்தையும் வெட்டிக் கொளுத்தல, என்னோட அப்பனுக்கு நான் பொறக்கல’ என்று அருவாளும் கையுமாக சுத்திக் கொண்டிருந்தான் வேலாயுதம். 

சில மாதங்கள் கழித்து மாலதியைப் பேருந்து நிலையத்தில் வைத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேச முடியாமல் விலகிப் போன முத்துசாமியை மறித்து, 

“என்னண்ணே இப்படி பண்ணிட்டான், எங்கூட வாழலைன்னாலும் பரவாயில்ல, வேற எங்கையாவது ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி குடும்பமா வாழ்ந்திருந்தா அதப் பாத்தாவது சந்தோசப்பட்டிருப்பேன், போயும் போயி இப்படி கேவலமான ஒரு காரியத்த பண்ணிட்டு போயிட்டானேங்குறதை நெனச்சி தான் மனசு ஆற மாட்டேங்குதுண்ணே” என்று பொறுமியவளை ஆறுதல் படுத்தத் தெரியாமல், 

“விடும்மா அந்த நாயி இப்படி பண்ணும்னு நான் நெனச்சிக்கூட பாக்கலம்மா, அப்பன் புத்தி அப்படியே அவனுக்கும் இருந்திருக்கு, அத மாத்த யாரால முடியும்”…

“அந்த சேதி கேட்டப்ப எப்படி தெரியுமா துடிச்சிப் போனேன், இப்ப நெனச்சாலும் தூக்கம் வரமாட்டேங்குதுண்ணா”

“அந்த நாயிக்கு ஓங்கூட வாழ கொடுத்து வைக்கல, தான் தலையில தானே மண்ணள்ளி கொட்டிக்கிச்சி, ஒம்மனசுக்கு நல்ல எடமா அமையும், நல்ல புடியா குடும்பத்த பாத்துக்கம்மா” என்று சொன்ன முத்துசாமி நிற்காமல் நடையை கட்டினான்.

முத்துசாமி போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாலதி வெறுமையோடு தையல் கடையை நோக்கி நடந்தாள். 

எட்டுமாதம் கழித்து ஒரு நாள், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன் கைது என்று செல்வத்தின் போட்டோவோடு சேர்த்து கழுத்தறுப்பட்ட நிலையில் பங்கஜத்தின் போட்டோவையும் பார்த்துவிட்டு இத்தனை நாளா கோயம்புத்தூர்ல தான் இருந்துருக்காங்க என்று தெரிந்து கொண்டனர் ஊர் மக்கள்.

பன்னிரண்டு வருடம் கழித்து இப்போது தான் ஊருக்கு வந்திருக்கான் செல்வம். கோயில் முன் குந்தியிருந்தவனை பழகியவர்களும், பார்த்தவர்களும் கண்டு கொள்ளாமல் கடந்து போயினர். இதுதான் நடக்கும் என்று தெரிந்தே தான் வந்திருந்தான். வெறிப் பிடித்தவன் போல எழுந்து தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான். தன்னை விட சிதிலமடைந்து கிடக்கும் வீட்டைப் பார்த்தவன் புன்னகைத்துக் கொண்டே திரும்பி நத்தகுழியை நோக்கி நடந்தான். எப்போதோ இவன் நட்டுவைத்திருந்த வாசப்படலின் பூவரச மரத்தில் மஞ்சள் மலர்களாக மலர்ந்திருந்தன. 

***

அரசன் – இயற்பெயர் ராஜா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணரின் தனிச்செயலராக பணி புரிந்து வருகிறார். ‘இண்ட முள்ளு’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இணைய இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : rajaunk@gmail.com

மீறல்கள்

0

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

     ரவு படுக்கும்போதே அந்த நெருடல் இன்னும் கொஞ்சம் பெரிதானது போல  உறுததிக்கொண்டே இருந்தது. விஷயம் உண்மையாகவே வெளிப்பட்டிருக்குமா? கையில் உயிர்ப்புடன் அலைபேசி இருந்தும் இணையவெளியில் மனம் ஒன்ற முடியாமல் வெறுமனே பார்வையை அலையவிட்டார். யாருக்குமே தெரியாத சங்கதி யார் மூலமாக எப்படி வெளிப்பட்டிருக்கும்? இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் யூடியூப் சத்தம் கசிந்து அலைந்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் தூக்கமே வராமல் புரண்டு கொண்டே கிடந்தார் ரபீக். யூடியூப்பில் ரீல்ஸ் காமெடியை லயித்துப் பார்த்துக்கொண்டு இடதுபுறம் திரும்பிப் படுத்திருந்த ஜீனத் மெல்ல சிரித்துக்கொண்டு கிடந்ததால் கணவன் புரண்டு கொண்டே கிடந்ததை அவளால் உணரமுடியவில்லை. 

     எவ்வளவு நேரம்தான் தூக்கம் வராமல் இப்படி புரண்டு கொண்டே அல்லாடிக்கொண்டிருப்பது என  சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நிஜாமுதீனுக்கு போன் போட்டார் ரபீக். நேரில் சொல்ல முடியாத சங்கதிகளையும் மற்றவர்களைப் பற்றியும் இல்லாததையும் பொல்லாததையும் நிஜாம் போனில் கக்கிவிடுவார். ஜமாஅத்துக்கு ஏற்ற நல்ல மேனேஜர்.

       ரிங் போனதுமே அலைபேசியை எடுத்த நிஜாம், “அஸ்ஸலாமு அலைக்கும். சொல்லுங்க தலைவரே” என்றார்.

“நம்ம ஜமாத்தப்பத்தி வெளில கண்டதையும் பேசுறாங்கணு எனக்கு ஒரு தகவல் வந்துச்சு. அதான் என்ன ஏதுணு உங்ககிட்ட கேக்குறன். நம்ம ஜமாத்தப் பத்தி வெளில யாரு பேசுறாங்க? நா ஊர்ல இல்லாதப்ப எதும் பிரச்சனையா?” மெல்ல தூண்டில் போட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல தலைவரே. பிரச்சனயில்லாத நம்ம ஜமாத்தப்பத்தி என்ன பேசுறாங்கலாமாம்? ஒரு ஜமாத்து நல்லா இருந்தா புடிக்காதே. பொறாமைக்கு உங்ககிட்ட சும்மா சொல்லியிருப்பாங்க . என்ன ஏதுணு யாருனு விசாரிக்கலாம் தலைவரே.”

“அதான் நானும் யோசிச்சன். வேற ஒன்னும் இல்லயே. நம்மாளுங்க வெட்டி நாயமா கண்டதயும் பேசுறாங்களோ?”

“அப்பிடியெல்லாம் இல்லை தலைவரே. இருந்தா நா உங்ககிட்ட சொல்லியிருப்பனே”

“சரி காலைல பாப்போம் நிஜாம். அஸ்ஸலாமு அலைக்கும் “

“வாலைக்கும் சலாம்”

     இதென்ன நிஜாம் இப்படிச் சொல்கிறார். அரசல் புரசலாக எதுவும் யாரும் பேசலை என்கிறாரே..! தன்னைப் பற்றி மொஹல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும்  ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என சில நாட்களாகவே அவருக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொஹல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்கு தெரியும். பேசவும் மாட்டார்கள். அவரிடம் இருக்கும் பணமும் அந்தஸ்தும் பேச விடாது. தாங்கள் பேசியது அவரது காதுக்கு சென்றால் தங்களுக்கு ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது. 

    இன்று அதிகாலையில் சுபுஹு தொழுகைக்கு எழுந்து இருள் போர்த்திய மெல்லிய பனியில் பள்ளிவாசலை நோக்கி நடந்து செல்லும்போது மீண்டும் அந்த எண்ணம் அவருக்குள் ஓடியது. ‘ச்சே! இதென்ன காலங்காத்தால இறைவனை வணங்கப் போகும் போது இப்பிடியொரு எண்ணம்.’ எரிச்சலுடன் அடம் பிடித்து அலையும் மனதை அடக்க முயன்றார். அப்போது கொஞ்சம் அடங்கியது போல இருந்தது தொழுகையின் போது கெக்கலி போட்டு சிரித்தவாறு குறளி வித்தைக் காட்டியது. 

      சில வாரங்களுக்கு முன் பள்ளிவாசல் வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சிலர் மும்முரமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.    இவர் வருவதைக் கண்டவுடன் யாரோ ”தலைவர் வர்றாரு” என்றது ரபீக்பாய் காதில் விழுந்தது. சட்டென்று பேச்சு நின்றது. எல்லோரும் பவ்வியமாக சலாம் சொன்னார்கள். அதில் சுக்கூர் ராவுத்தரும் இருந்ததைக் கவனித்த ரபீக்பாய் அங்கு நிற்காமல் பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டார். அப்போதிருந்தே அவருக்குள் தன்னைப்பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சந்தேகமும் கலக்கமும் கொஞ்சம் கோபமும் ஏற்பட்டுவிட்டது.

    அன்று முதல் அவருக்குள் ஒரு குறுகுறுப்பு ஓடிக்கொண்டே இருந்தது. ‘என்னங்க என்னப்பத்தி ஏதோ பேசிட்டிருந்தீங்க போல ?’ என்றோ மற்ற நிர்வாகிகளிடம் ‘என்னங்க என்னப்பத்தி கசமுசானு ஏதோ பேசிக்கிறாங்க போல?’ என்றோ இதைப் பற்றி யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரே வலியப்போய் மாட்டிக்கொண்டதாகிவிடும். இது பெரிய அசிங்கமாவிடும். அதுமட்டுமல்ல, அவரின் அந்தஸ்துக்கு அது ஒரு கௌரவக் குறைச்சலான செயலாகிவிடும்.

      எனவே எதுவும் தெரியாதது போலவே இருந்து கொண்டார். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. தப்பு செய்தவனுக்குத்தானே இப்படியான எண்ணங்களும் உறுத்தலும் ஏற்படும் இது மனித இயல்பு. எந்த ஒரு மனிதனும் அவனுடைய மனசாட்சிக்கு பயந்துதானே ஆகணும். 

      இன்றும் சிலர் மக்ரிப் தொழுகை முடிந்த கையோடு வெளியே வந்து இளம் இருட்டு படர்ந்திருந்த பள்ளியின் வெளிப்பிரகார திண்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். தலைவரும், செகரட்டரியும் வெளியே வருவதைப் பார்த்ததும் பேச்சும் சிரிப்பும் சட்டென்று நின்றது. ரபீக் பாய் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. அவர்களைக் கண்டுகொள்ளாததைப்போல இருவரும் பள்ளிக்கு வெளியே வந்தார்கள். ரபீக் பாய்க்கு உறுத்தல் அதிகமானது. தன்னைக் குறித்துதான் எதோ பேசுகிறார்கள் என்பது அவருக்கு உறுதியானது.

    மொஹல்லாவுக்குள்ளும் சரி ஜமாஅத்துக்குள்ளும் சரி எந்த கிசுகிசு செய்தியாக இருந்தாலும்  மற்றவர்களை வேவு பார்க்க எந்நேரமும் கூர்மையுடன் விரிந்து கிடக்கும் நிஜாமின் காதுக்கு வந்துவிடும். ஆனால் நிஜாம் எதுவும் இல்லை என்கிறாரே. தூங்க முடியாமல் நினைவுகள் அலைக்கழித்தன.

    கேரளா பெண் விஷயம் வெளிப்பட்டு விட்டதோ என அப்போதே அவருக்குள் கருக்கென்று பட்டது. சகலை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பணம் கொடுத்து உதவி செய்தமைக்கு நம்ம ரபீக் பாய்க்கு கொளுந்தியா மீது பாசம் ரொம்ப அதிகமல்ல என்று சிலர் மொஹல்லாவுக்குள் பேசிச் சிரித்த விஷயம் அவர் காதுக்கும் வந்தது. ஜமாஅத் விஷயம் என்றால் இப்படி ரகசியம் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். பேசினாலும் காதுக்கு வந்துவிடும். தனிப்பட்ட சங்கதிதான் அவ்வளவு சீக்கிரம் வெளியே கசியாது. ரகசியமாகவே காற்றில் அலைந்தபடி சுற்றிக் கொண்டிருக்கும். கசிந்தாலும் என்ன ஏது என்று சம்பந்தப்பட்டவர்கள் காதுக்கு வராது. வந்தாலும் ‘அது ஒன்னுமில்லைங்காணும் அந்தாளப்பத்தி வேற விஷயமாக்குமே’ என்று மடைமாற்றிவிடுவார்கள். பெரிய இடத்து பொல்லாப்பு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

     அந்தப் பொண்ணை இஸ்லாத்துக்கு கொண்டு வந்து ஊரறிய நிக்காஹ் செய்து கொள்ளலாமா என அப்போதே யோசித்தார். தன்னுடைய இமேஜுக்கு பாதிப்பு வருமோ எனத் தயக்கம் ஏற்பட்டது. அதைவிட குடும்பத்தில் வரும் பிர்ச்சனைகளும் கண் முன் எழுந்தது. 

     அவருடைய மனைவி ஜீனத்துக்கு இந்த விஷயம் அரசல் புரசலாகத் தெரிய வந்தது. அப்போது அவர் கண்டு கொள்ளவில்லை. கணவரின் நடத்தையின் மூலமும் சில சந்தேகங்கள் தெரியவந்தும் கண்டு கொள்ளாமலேயே இருந்தார். வசதி படைத்த பெரிய வீட்டுப்பெண்கள் பெரும்பாலும் கணவர் விஷயத்தில் பட்டும் படாமலும்தான் இருக்கிறார்கள். தவறு செய்தது அல்லது செய்வது தெரிய வந்தாலும் கண்டும் காணாதது போலவே இருந்து விடுகிறார்கள். பிரச்சனை பெரியதாகும்போது குய்யோமுய்யோனு கிடந்து அடித்துக்கொள்வார்கள். சிலர் அதுவும் கூட செய்வதில்லை. இவர்கள் மூலம் குடும்ப மானம் வெளியே போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

    ரபீக் தன் மனைவிக்கு எதுவும் தெரியாது என்றேதான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் விஷயம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கேரளா ஒத்தப்பாலம் சென்று மரியா வீட்டில் தங்கி வருவார். 

     அவளைத் தேடி ரபீக் வரும்போதெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள மன்றாடிக்கொண்டேதான் இருக்கிறாள் மரியா. 

    ‘‘நம்பிக்கையில்லாமலா நான் உனக்கு இவ்வளவு வசதியாக வீடு பார்த்து தங்க வச்சிருக்கேன். கொஞ்சம் பொறுமையாக இரு. இப்ப  விஷயம் ஜமாத்துல தெரிஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும் அதான் யோசிக்கிறேன்” என்று சொல்லி சமாளித்துக்கொண்டே இருக்கிறார் ரபீக். இப்போது ஜமாஅத் ஆட்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என்ற அச்சம் அவருக்குள் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இது எப்படியும் மெல்ல வெளிப்பட்டுவிடும்.

    மரியாவை கல்யாணம் செய்து கொண்டால் குடும்பத்திலும் ஜமாஅத்திலும் மட்டுமல்ல, மொஹல்லாவுக்குள்ளும் தன் கௌரவத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடும் என்ற அச்சம் அவருக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சின்னவீடு அல்லது இல்லீகள் தொடர்புகள் வைத்துக்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் அந்த தொடர்புக்குப் பின்புதான் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது என ஒரு பயம் வந்து இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமோ எனத் தப்பிக்கும் வழியைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.  காமம் கண்ணை மட்டுமல்ல எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடுகிறது. பிற்பாடு பிரச்சினை வரும்போதுதான் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

    ‘திருமணமாகாத ஒரு ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடி கொடுக்க வேண்டும். திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்’ 

     ‘விபச்சாரமும் கற்பு நிலை தவறுதலும் பெரும்பாவம்’ 

திருமறை வலியுறுத்தும் இந்தக் கூற்றெல்லாம் ரபீக் பாய்க்கு தெரியாமல் இல்லை. யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்யலாம் தப்பில்லை என்பதே மனித மனங்களின் விசித்திரம். இந்த விஷயத்தில் இறை நம்பிக்கை உள்ளவனும் இறை மறுப்பாளனும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். தெரிந்தே தப்பு செய்கிறோமே என அவருக்கு மனம் அவ்வப்போது கொஞ்சம் ஊசலாடும். ஆனாலும் மரியா ஞாபகம் வந்துவிட்டால் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். 

    ஜமாஅத் பிரச்சனைகளில் அதுவும் பெண்கள் தொடர்பாக கணவன் மனைவி பிரச்சனைகள், தலாக் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் தீர்ப்பு சொல்லும்போது அவருக்குள் ஒரு நெருடலும் மனப்போராட்டமும் எழும். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கு ஆளாக நேரிடும். வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், ‘’இவன் பெரிய யோக்கியன். தீர்ப்பு சொல்றான் பாரு” என்று பேசுவார்கள். மொஹல்லா சிரிப்பாய் சிரிக்குமே. இந்த எண்ணமே ரபீக்பாயை சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

     என்ன பண்ணுவது என்று வழி ஏதும் தெரியாமல் பெரும் அவதிற்குட்பட்டவராக ரபீக்பாய் திணறிக்கொண்டிருக்கும் போதுதான்  இருக்கும் பிரச்சனைகள் போதாது என்பது போல மொஹல்லாவில் புதுசாக ஒரு பிரச்சனை வெடித்திருந்தது.

    அரசல் புரசலாக சிலர் அங்கும் இங்குமாக பேசிக்கொண்டிருந்தது இப்போது ஊர்ஜிதமாக வெளிப்பட்டிருக்க இதை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எதிர்கொள்வர்களோ என்றும் பிரச்சனை ஜமாஅத்துக்கு வருமா என்றெல்லாம் சிலர் கவலையுடனும் குதர்க்கமாகவும் அலசிக்கொண்டிருக்க பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கவலையுமில்லாமல் தேமே என்றிருந்ததுதான் ஆச்சிரியமாக இருந்தது. 

     காலனியின் கடைசிப்பகுதியில் குடியிருக்கும் மைதீனின் இரண்டாவது மகன் யூசுப் அவனுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஒரு இந்துப் பெண்ணை விரும்புவதாகவும், அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்து பிரச்சனை பண்ணுவதாகவும் அக்கம் பக்கத்தினர் மூலமாக மெல்லக் கசிந்து இப்போது மொஹல்லா முழுக்கக் காற்றில் அலைந்தவாறு முக்குக்கு முக்கு பேசு பொருளாகியிருந்தது. 

    ‘எம் மருமகனுக்கு இன்னொரு பொண்ணுடன் தொடுப்பு இருக்கு. எம் பொண்ணோட வாழ்க்கைக்கு எதுவும் ஆகாம ஜமாத்துதா பிரச்சனைய தீர்த்து வைக்கணும்’ என்று ஜமாஅத்துக்கு ஒரு முறை புகார் வந்தபோது இதே தவிப்பு அப்போதும் ரபீக் பாய்க்கு ஏற்பட்டது. சமயோசிதமாக பிஸ்னஸ் விஷயமா பெங்களூர் போவதாகச் சொல்லி துணைத்தலைவரிடமும் முத்தவல்லியிடமும் தகுந்த தீர்ப்புச் சொல்லிவிடுமாறு கழன்று கொண்டார். இப்போது வேறு ரூபத்தில்.

    மொஹல்லாவுக்கு வெளியே கறிக்கடை வைத்திருக்கும் மைதீனின் மூத்த மகன் ஷாஜகானுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. இரண்டாவது மகன் சுல்தான் ஒப்புக்கு ஒரு டிகிரி முடித்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் இப்போதுதான் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான். காலேஜ் படிக்கும்போது உடன் படித்த ஹேமாவதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு விஷயம் வீட்டுக்குத் தெரிய வந்த போது ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்று அத்தாவிடம் சுல்தான் மறுத்து வந்தான். சில சமயம் வாக்குவாதம் முற்றும்.  

    இந்தக் காலத்து இளைஞர்கள் பெற்றோர் சொல் பேச்சைக் கேட்காத தலைமுறைகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த நல்லது கெட்டதையும் காதில் வாங்குவதே இல்லை. எந்நேரமும் செல்போனும் கையுமாகவே அலைகிறார்கள். அவர்களுக்கு எது தோன்றுகிறதோ உடனே அதை செய்தாக வேண்டும். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. அவர்கள் கேட்கும்போதெல்லாம் பெற்றோர்கள் பணம் கொடுத்தாக வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். இதற்கு பயந்தே பையன்கள் கேட்கும்போதெல்லாம் எப்படியாவது பணம் புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள்.    

    ஹேமாவதியுடன் சுல்தான் அடிக்கடி வெளியே சுற்றுவது எப்படியும் தெரிந்தவர்கள் யாரோ ஒருவர் கண்ணுக்கு சிக்கிவிடும். உடனே மைதீன் காதுக்கு தகவல் வந்துவிடும். இதனால் அவ்வப்போது வீட்டில் பிரச்சனை எழுந்து கொண்டே இருந்தது. மைதீனும் மகனை எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். அவன் கேட்டால்தானே. “இவன காலேஜ்க்கு அனுப்பினதே தப்பா போச்சே’ என்று மனைவியிடம் புலம்புவதைத் தவிர மைதீனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ‘எப்படா காலேஜ் படிப்பு முடியும்’ என்று ஆகிவிட்டது அவருக்கு. காலேஜ் போறது நின்றுவிட்டால் இந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் மைதீன். 

    ஒருவழியாக காலேஜ் படிப்பு முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் மீண்டும் அந்தக் காதல் பிரச்சனை வெடித்தது. சுல்தானுக்கு கல்யாணம் செய்வது குறித்து எந்தவித பேச்சும் எடுக்காத நிலையில் அவன் உம்மாவிடம் “நா கல்யாணம் பண்றதா இருந்தா ஹேமாவதியைத்தா பண்ணுவேன்ம்மா.” என்று திடுமென ஒருநாள் காதில் போட்டு வைக்க, “என்னடா, மொனே சொல்றே ?” என்று உம்மா அதிர்ந்து போனாள்.

     காலேஜ் படிப்பு முடிந்து விட்டால், அதன் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள் – சந்தித்துக்கொள்ளவும் முடியாது என எண்ணியதற்கு மாறாக அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று சுல்தான் சொன்னதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

   “நம்ம பொண்ணாயிரிந்தாக்கூட சரின்னுட்டு போயி பேசிப் பாத்து நிக்காஹ் பண்ணி வைக்கலாம். இப்பிடி ஒரு அந்நிய பொண்ணப்போயி” பேச முடியாமல் உம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.      

     மகன் இல்லாத நேரத்தில் மனைவியிடம் கிடந்து குதிகுதியென குதித்தார் மைதீன் “ஒங்க பையன ஒதுக்க முடியல. கண்டிச்சி வளக்க முடியல. எங்கிட்ட வந்து ஏங்க சாடுறீங்க.?” கணவனைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டாள் பாத்திமுத்து. வாப்பா பேச்சையே கேட்காதவன் அண்ணன் பேச்சைக் கேட்பானா என்று ஆரம்பத்திலிருந்தே அண்ணன் ஷாஜகான் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தான். 

    “எல்லாம் நீ குடுக்கிற எளக்காரம்தா. பையன வளத்தியிரிக்கிற லச்சனத்தப் பாரு.”

    “பையன கண்டிச்சி வளக்கத் துப்பில்ல. நா வளத்தனாமா. பேச்சுல மட்டும் குறச்சல் இல்ல” 

     கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது.

     “இப்ப நீங்க ஏம்மா சண்ட போடுறீங்க? ஆரம்பத்துலயே அவன் இந்த மாதிரி தப்பான வழில போறான்னு தெரிஞ்சதுமே தடுத்திருக்கணும். தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு . இப்ப கெடந்து நீதா காரணம்னு நீதா காரணம்னு ரெண்டு பேரும் சண்ட போடுறீங்க?” உம்மாவையும் வாப்பாவையும் பார்த்து கோபத்துடன் கத்தினான் ஷாஜகான்.

    “நீ ஒரு அண்ணக்காரந்தானே ஒனக்கும் இந்த விசயம் தெரியும்தானே? என்னிக்காச்சும் உந்தம்பிய கண்டிச்சி பேசிரிக்கியாக்கும்? பெருசா பேசுறே?” பாத்திமுத்து தன் கோபத்தை மூத்தவன் மீது பாய்ச்சினாள்.

    “ஆமாம்மா, வாப்பா பேச்சையே கேக்காதவன் எம் பேச்சத்தா கேப்பான். நா ஏதாச்சும் பேசியிருந்தா போடா உன் வேலையப் பாத்துட்டுனு எடுத்தெறிஞ்சு பேசியிரிப்பான்.”

     அதன் பிறகு எப்படியெல்லாமோ இந்த காதல் விவகாரத்தைத் தடுக்கப்பார்த்தார்கள். சுல்தான் அந்த பெண்ணுடன் ஓடிப்போய்விடும் ஒரு ஆபத்து இருப்பதை அறிந்து குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டி வேறு வழி ஏதும் தெரியாத நிலையில் பேசாமல் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள். 

     ஆனால் விசயம் மொஹல்லாவுக்குள் வெளிப்பட்டு, இப்பிடியொரு காரியத்துக்கு குடும்பமே சம்மதிச்சு கமுக்குனு இருப்பதாக கண்டதையும் பேச ஆரம்பித்துவிட்டது.   

    “ஏற்கனவே லவ் ஜிகாத் அது இதுனு காரணம் சொல்லிக்கிட்டு மதப்பிரச்சனைக அங்கயும் இங்கயுமா பெரிய பிரச்சனையா வெடிச்சுட்டிருக்குது. இத வச்சுக்கிட்டு கலவரம் பண்ணலாம்னு காத்திட்டிரிக்காணுங்க இப்பப்பாத்து அந்த கெரகத்த நம்ம மொஹல்லாக்குள்ளயும் கொண்டு வந்திருக்கானே ஒருத்தன். இதுக்கு அவனோட வாப்பாவும் உம்மாவும் எப்பிடி சம்மதிச்சாங்களோ. அந்த றப்புக்கே வெளிச்சம்”

    “காலம் கெடக்கிற கெடப்புல அந்த பொண்ணோட வூட்டுலருந்து கும்பலா இங்க வந்து எதுனாச்சும் பிரச்சன பண்ணுனா என்ன பண்றது? அது ஜமாத்துலயல்ல வந்து விடியும். ஏன் இவுனுங்களுக்கு இஸ்லாத்துல பொண்ணே கெடைக்காமையா இப்பிடி காபிர் பொண்ணுங்கள தேடிட்டுப் போறாணுங்க? ச்சை ! என்ன காலமோ. துனியா அழியிறதுக்காக்குமே இந்த அக்குரமம் எல்லாம் நடக்குது கிட்டியா.“ 

    கடைசியில் பிரச்சனை ஜமாஅத்துக்கு வருவதற்கு முன்பாக தலைவர் காதுக்கு கொண்டு வந்தார்கள். இருதலைக்கொள்ளியாக தவித்தார் ரபீக். இப்ப இத எதுக்கு எங்கிட்ட கொண்டு வாராங்க. இந்தப் பிரச்சினை ஜமாஅத்துக்கு வந்தால் நமக்கும் பெரிய சிக்கல் ஆகிவிடும். கொஞ்சம் யோசித்த ரபீக் பாய், “இந்தப் பிரச்சனைய ஜமாத்துக்கு கொண்டு வராம பாத்துக்கிருங்க. இதுல நாம ஏன் வீணா தலையிடணும் ? நமக்கு இது தேவையில்லாத பிரச்சனயாயிரும். ஜமாத்துக்கு பெரிய தலைவலி வந்துரும். நாம எந்தப் பக்கமும் தீர்ப்பு சொல்லமுடியாது. அந்தப் பொண்ணோட சைடுலருந்து ஜமாத்துக்குத்தா பிரச்சன வரும். ஏற்கனவே நாட்டுல நம்ம நிலமை சரியில்ல. அதனால இதுல ஜமாத்தார் யாரும் தலையிடண்டாம். அவுங்க குடும்பப் பிரச்சனய அவுங்களே தீர்த்துக்கட்டும். முடியாட்டினா போலீஸ் ஸ்டேஷனுக்கு போட்டும் என்ன நாஞ்சொல்றது சரிதானே ?” என்று ஒரு உபதேசம் நிகழ்த்திவிட்டு கெத்தாக ஒரு பார்வை பார்த்தார்.  

ஜமாஅத்தார்கள் யாரும் மறுபேச்சு பேசவில்லை.

***

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் – இயற்பெயர் . H. நஸீர். கோவையை சேர்ந்தவர்.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். வார , மாத இதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும் 120 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், எட்டு குறுநாவல்களும், மூன்று நாவல்களும், சில கவிதைகளும் , இஸ்லாமிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும்  எழுதியுள்ளார். இஸ்லாமிய இலக்கிய கல்லூரி – திருவிதாங்கூர் விருது, இஸ்லாமிய இலக்கிய கழக விருது, படைப்பிலக்கியத்திற்காக தமுஎக சங்க விருது முதலியன இவர் பெற்றுள்ள விருதுகளுள் சில. மின்னஞ்சல்: firthouserajakumaaren@gmail.com

மகிழ்ச்சியின் ஆயுள்

1

எஃபுவா ட்ராஓரே

தமிழில் : லதா அருணாச்சலம்

பாஸ்டர் ஜஸ்டிஸ் எப்போதும்  கொஞ்சம் எரிச்சலூட்டுவார், ஆனால் அவர் கடவுள் போன்ற மனிதர் என்பதால் அவரை நான் மன்னித்து விடுவேன். உதாரணமாக,  நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று நான் சர்ச்சுக்குச் சென்றேன். ஏனென்றால் கடவுளைச் சரணடைவதுதான் ஒரே வழி என்று மம்மா சொல்லி விட்டார். ’ம்ம், உண்மையாகச் சொல்லப் போனால் அங்கு சென்றதற்கு அது மட்டும் காரணமல்ல, அம்மா தலையில் அடித்த அடியில் மின் கட்டணம் கட்டத் தவறி எட்டு மாதங்களாக வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையிலும் என்னைச் சுற்றிப் பிரகாசமான வெளிச்சப் பொறிகள் பறந்தன. என்னை சர்ச்சில் பார்க்காவிட்டால் என்னுள் இருக்கும் சாத்தான் இறங்கி ஓடும் வரை நீண்ட கோபோகோ * கழியால் என் பின்பக்கத்தை வெளுத்து விடுவதாகவும் கூறியிருந்தார். இந்தப் பதின்மூன்று வருடங்களாக மம்மாவை நான் நன்றாக அறிவேன். அவர் ஏதாவது சொன்னால் அதை நிறைவேற்றி விடுவார். அதனால் மறக்காமல் சர்ச்சுக்குப் போய்விட்டேன்.

நான் சொன்னபடியே பாஸ்டர் ஜஸ்டிஸ் எனக்கு எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்தார். உண்மையான மகிழ்ச்சி என்பது உடலில் இல்லை ஆன்மாவினுள்ளே  உள்ளது  என்றார். ஏனென்றால் நாம் நல்ல விஷயங்களைச் செய்யும் போதெல்லாம்  மகிழ்ச்சி பெறுவோம், அதனால் சொர்க்கத்துக்குப் போவோமென்று நாம் அறிந்து கொள்வோம் என்றெல்லாம் கூறினார்.

என்னால் அவரை நம்ப முடியவில்லை. என்னுடைய சரீரம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் என்னுடைய ஆன்மா எப்படி மகிழ்ந்திருக்கும்?

என் உடல் பட்டினியில் சுருண்டு கிடக்கையில் அது எப்படி சாத்தியம்? என்னுடைய உண்மையான மகிழ்ச்சி எதுவென்று பாஸ்டருக்குச் சொல்லும் பொருட்டு எப்படியோ என்  கையை உயர்த்தி விட்டேன். கடந்த வாரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓடும் துர்நாற்றம் வீசியவாறு ஓடிக் கொண்டிருக்கும் பச்சை வண்ணச் சாக்கடை நீரில் ஐநூறு நைராத் தாளொன்று கிடந்தது. அப்படியே! இலவசமாகக் கிடைத்தது. அந்த அருவருப்பான  சாக்கடை முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்பது போல அந்த நோட்டு எப்படி மிதந்து கொண்டிருந்தது என்பதைப் பார்த்திருக்க வேண்டும்.

அதனால்தான் என்னுடைய உண்மையான மகிழ்ச்சியை பாஸ்டரிடம் சொல்வதற்காகக் கையை உயர்த்தி விட்டேன். ஆனால் அவர் என்னைப் பார்ப்பதற்கு முன்பாக அம்மா என் பின்னந்தலையில் குட்டியதில் பெத்லஹேமின் நட்சத்திரங்களை நான்  சர்ச்சுக்குள்ளேயே கண்டேன்.

அந்த பச்சை வண்ணச் சாக்கடைச் சேற்றுக்குள்ளிருந்து நூறு செத்த எலிகளின் நாற்றத்தோடு  நான் வெளிவந்தாலும் என் முகம் மட்டும் உண்மையான மகிழ்ச்சியில் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்ததை பாஸ்டரிடம் விவரிக்க மிக ஆசைப்பட்டேன். அன்று என் உடல் மட்டுமல்ல,என் ஆன்மாவும் கூட உண்மையான மகிழ்ச்சியில் திளைத்தது.

 நான் நிச்சயமாக முட்டாள் இல்லை. இந்த வகை மகிழ்ச்சி பாஸ்டர் சொல்லும் மகிழ்ச்சியைப் போல எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது இல்லை. அந்த ஐநூறு நைரா வெகு சீக்கிரம் தீர்ந்து விட்டது. இரண்டு அகிகி ரொட்டிகளும் ஒரு பொறித்த கோழியும் எங்கள் வீட்டில் அதிக நேரத்துக்கு நிலைத்திருக்காது. ஆனால் நாங்கள் எல்லோரும் அன்று மாலை வயிறார உண்டோம். மம்மா, என்னை அதாவது அவரது மூத்த மகனைப் பெரிய மனிதன் போலப் பெருமை பொங்கப் பார்த்தார், பெருமிதத்தில் என் நெஞ்சு நிமிர்ந்திருந்தது.

அதனால், சர்ச்சிலிருந்து வந்த பின் அன்று நாள் முழுவதும் இந்த உண்மையான மகிழ்ச்சியைப் பற்றி மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

 அக்காரா பருப்பு வடையைப் பொறித்துக் கொண்டிருந்த மம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.’மம்மா,பாஸ்டர் ஜஸ்டிஸ் சொல்வதெல்லாம் சரியென்று நினைக்கிறீர்களா? ஆத்மா மட்டும்தான் உண்மையான மகிழ்ச்சியை உணருமா? நாம் நல்லது செய்தால் மட்டுமே அந்த மகிழ்ச்சியை அடைய முடியுமா?’

‘இங்கே வா,’ மம்மா அழைத்தார்.தன்னுடைய வெம்மையான, வியர்வை நிறைந்த கைகளை என் தோள்களைச் சுற்றிப் போட்டார். அவர் கைகளிலிருந்து பனை எண்ணெய் வாசமும் கெரோசின் வாசமும் வீசியது. அதை நான் பொருட்படுத்தவில்லை.

‘கடவுளின் குழந்தையாக இருப்பதுதான் எல்லாவற்றையும் விடப் பேரானந்தம்’ என்று கூறிய போது அவரது குரல் பாஸ்டரின் குரலை வெகுவாக ஒத்திருந்தது. ’நம் வயிற்றில் இருக்கும் இந்த உணவும் , சட்டைப் பையில் இருக்கும் பணமும் ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு அருகில் நெருங்கவே முடியாது’ . ‘ஆனாலும்…நான் மம்மாவுடன் வாதாட நினைத்தேன். அவர் இடைமறித்தார்.

‘உன்னையே பார் மகனே, நீ எனக்காக எப்போது கடைசியாகச் சிரித்தாய்? கடைசியாக எப்போது மகிழ்ச்சியாக இருந்தாய்? அவர் என் கன்னத்தைக் கிள்ளிக் கேட்ட போது நான் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வெளியேற்றினேன்.

‘நீ உன்னுடைய உதவாக்கரை நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு செய்யக் கூடாத கெட்ட செயல்களைச் செய்து கொண்டிருக்கிறாய்’  மம்மா சொன்னார்.

 ஆங்ங்..மம்மா, என்று என்னால் வாய் குழறத்தான் முடிந்தது

சமையலறையிலிருந்து உடனே ஓடி விட வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஏனென்றால் இப்போது மம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு எரிச்சலூட்ட ஆரம்பித்து விட்டார்.

மம்மாவோ தொடர்ந்தார். ’நீ செய்யும் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைக்காதே, ஆனால் உனக்குள் ஒரு ஒரு நல்ல பையன் இருக்கிறான்’என்னுடைய நெஞ்சைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். ‘அதனால்தான் இந்த நாட்டுடைய அத்தனை துயரங்களையும் உன் தோள்களில் தூக்கிச் சுமப்பவன் போல நடமாடிக் கொண்டு எகுன்குன்* ஆவி போல முகத்தைச் சுருக்கிக் கொண்டு அலைகிறாய். முகத்தைச் சுருக்கிக்  கோணிக் கொண்டு என்னைக் கேலி செய்தார்.

நாங்கள் சிரித்துக் கொண்டோம். விரிசல் விட்டிருந்த பிளாஸ்டிக் தட்டுகளை மேசையில் வைப்பதற்கு  மம்மாவுக்கு உதவி செய்தேன். அனைவரும் நெருக்கமாகவும் , முகத்தைக் குனிந்து கொண்டும் முன்னால் அமர்ந்தோம். அப்போதுதான் மேசை நடுவில் இருந்த கெரோசின் விளக்கின் வெளிச்சம் எங்கள் தட்டின் முன் விழுவது தெரியும். இரவு உணவில் அவித்த பருப்பு வடைகளை உண்டு கொண்டிருக்கையில் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டவாறு இனிமேல் ஆத்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று உறுதி பூண்டேன். இனிமேல் நான் கடவுளின் குழந்தையாக இருக்க வேண்டுமென்றும் நல்ல விஷயங்களையே செய்யப் போவதென்றும் முடிவு செய்தேன்.

அப்போது திடீரென்று கதவைத் திறந்து அப்பா உள்ளே நுழைந்தார். மூன்று மாதங்களாக வீட்டுப் பக்கம் வராமலிருந்தவர் இப்போது வந்து அமர்ந்ததும் எனது மகிழ்ச்சியெல்லாம் உடனடியாக விடை பெற்றுச் சென்று விட்டது. அவரைப் பார்த்துப் புன்னகை செய்த மம்மா தனது சாயம் போன மேலாடையைச் சரி செய்து கொண்டார்.

எனக்கு மிக வெறுப்பாக இருந்தது. வந்தவருக்கு முகமன் கூடச் சொல்லவில்லை.எனது தட்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டேன்.

 பாஸ்டர் ஜஸ்டிஸ் சொல்லும் மற்றொரு விஷயமான, உனது தாய் தந்தையை மதிக்க வேண்டும் என்னும் கருத்தும் என்னை வெறுப்பேற்றும். ‘அம்மாவை மதிக்க வேண்டும்’ அவர் சொல்வது வேண்டுமானால் இது சரி. காலையிலிருந்து இரவு வரை மற்றவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து விட்டு முதுகு வலியுடன் குனிந்து வளைந்து தளர்ந்த நடையில் வீடு வந்து சேர்வார். தன்னந்தனியாக ஐந்து குழந்தைகளைப் பராமரிப்பதும் எங்களுக்கு உணவு தருவதும் அந்த உணவு எப்போதும் பற்றாக்குறையாக இருந்த போதிலும் மம்மா மீது எனக்கு மரியாதை உண்டு.

ஆனால்,’உன் தந்தையை மதிக்க வேண்டும்’ இதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால்  என்னுடைய அப்பா போன்ற ஆட்களைப் பற்றித் தெரியாமல் பாஸ்டர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் வெறுப்பாகத்தான் இருக்கும். எப்போது வர விரும்புகிறாரோ அப்போதுதான் வருவார் அப்பா. இங்கு அடிக்கடி வர விருப்பமில்லாததால் பெரும்பாலும் வருவதுமில்லை. அவர் வரும் போதெல்லாம் மதுவின் வாடை வீசும். அந்த வாடை என்னைத் தொந்தரவு செய்து வயிற்றைத் தலைகீழாகப் பிரட்டிப் போடும். அழும் குழந்தையின் கண்களைப் போல அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும். எப்போது வந்தாலும் காலியான சட்டைப்பையுடனும், தனது வெறுங்கைகளை வீசிக் கொண்டும் வருவார், ஆனால் சீக்கிரமே வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்கையில் சட்டைப் பையை நிறைத்துக் கொண்டு முட்டியை இறுக்கியபடி நடந்து செல்வார். அவர் வரும்போதெல்லாம் கடவுளின் தொலைந்த ஆட்டுக் குட்டி மனந்திருந்தி வீடு வருவதைப் பார்க்கும் ஆடு போல அம்மா புன்னகையுடன் அவரை எதிர்கொள்வார். அழுதழுது கண்களும் உதடுகளும் வீங்கியிருக்க அப்பா மீண்டும் அம்மாவை விட்டுப் போகும் வரைதான் அந்தப் புன்னகை நிலைக்கும்.

 பியர் வாடை அடிக்கும்  அப்பாவையும், அவரைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் காண எரிச்சலாக இருந்ததால் அங்கிருந்து அகன்று விட எண்ணி  எழுந்தேன்.என்னுடைய கடைசித் துண்டு பருப்பு வடையைக் கூட நான் முடிக்கவில்லை.என் தங்கை அதா தன் ஒரு கண்ணால் கேள்விக்குறியுடன் என்னைப் பார்க்க, அவளுடைய மறுகண் என் தட்டிலிருந்த அக்காரா வடை மீதிருந்தது. நான் தலையாட்டியதும் , மற்றவர்கள் அவளை ஏதும் கேட்டு விடும் முன் பருப்பு வடையை எடுத்து தன் வாயில் போட்டு ஒரே விழுங்கில் உண்டு முடித்து விட்டாள். எப்போதும் போல அப்பா என்னைப் பொருட்படுத்தவில்லை. அம்மாவும் நான் எழுந்து செல்வதைப் பார்க்கவேயில்லை என்பது போலப் பாவனை செய்தார். எனக்குள் நிரம்பியிருந்த எரிச்சல் இப்போது அதிகமாகி என் மகிழ்ச்சியனைத்தும் காவல்காரரைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும் திருடனைப் போல மறைந்து விட்டது.எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சல் மண்டிக் கிடக்கும். உண்மையைச் சொல்லப் போனால் சில வேளைகளில் வயிற்று வலி வருவது பசியாலா அல்லது இந்த எரிச்சலாலா என்பதே எனக்குத் தெரியாது.

நான் வீட்டை விட்டு வெளியேறி என் நண்பன் ஒலுவுடன் கடைவீதியில் சுற்றித் திரிந்தேன். ஒரு உடைந்த கைவிடப் பட்ட மோலுவா* பேருந்தில் அமர்ந்து கொண்டு சிகரெட்டும் பியரும் விற்றுக் கொண்டிருந்த நடைபாதை விற்பனையாளர்களையும், கஞ்சி போட்டு விறைப்பாக இருக்கும் அக்பாடா* அணிந்து , விலையுயர்ந்த கார்களில் வரும் ஆண்களுக்காகத் தங்கள் மெல்லிய இடையை அசைத்தபடி காத்திருந்த அழகழகான விலைமாதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒலுவிடம் நல்ல  ஈக்போ போதை சிகரெட் இருந்தது. நன்றாக மயங்கி மேகங்களைத் தொடுமளவு புகை இழுத்தோம்.

‘உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன?’

நான் ஒலுவைக் கேட்டேன். என்னை முட்டாள் போலப் பார்த்தவன்,’ இந்த ஈக்போ உனக்கு ஏக போதையாக இருக்கிறதா ’என்று கேட்டான்.

நான் சிரித்துக் கொண்டே இல்லை, நான் நிஜமாகவே கேட்கிறேன் என்றேன்.

 ஐந்து நிமிடங்களுக்கு மூளையைக் கசக்கியவன் பின் கண்ணடித்துக் கொண்டே குறும்பாகச் சொன்னான்.’ உண்மையான மகிழ்ச்சி எப்போதும் ஜோடியாக வரும். இரண்டு பெரிய முலைகள், இரண்டு பெரிய புட்டங்கள்.’ என்னை நோக்கி அவன் முட்டியை நீட்ட அதில் என் முட்டியை மோதினேன். நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே இருந்தோம். என்னைப் போலவே ஒலுவும் இதுவரை எந்தப் பெண்ணின் முலைககளையும் தொட்டுப் பார்த்தவனில்லை. ஆனால் எப்போதெல்லாம் ஊர் சுற்றுவோமோ அல்லது ஈக்போ புகைப்போமோ அப்போதெல்லாம் இதைப் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசுவதை யாராவது கேட்டால் முலைகளைத் தொடுவதே மனிதனின் ஆன்மாவைக் கரையேற்றும்  என்று நினைத்துக் கொள்வார்கள்.

அன்றிரவு நான் வீட்டை அடைந்த போது அப்பா அங்கிருந்து ஏற்கெனவே கிளம்பிப் போயிருந்தார். அம்மா அவருடைய அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எனக்கு அது எந்த வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. முன்னறையில் விரித்திருந்த இரண்டு மெத்தைகளின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த என் உடன்பிறப்புகளுடன் இணைந்து கொண்டேன்.

காதுகளைப் பொத்திக் கொண்டு உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அது கிட்டவில்லை.

விடியற்காலை நேரம்..இந்தக் காலை நேரம் எப்போதும் எனக்கு நிரம்ப எரிச்சலைத் தரும். நான் பேருந்து நிலையத்துக்குச் சென்று ஓட்டுனர்களுக்குப் பேருந்துகளைக் கழுவுவதிலும் நடத்துடனர்களுக்குப் பயணிகளைக் கூவி அழைப்பதிலும் உதவி செய்வேன். காலை நேரத்தில் எது அதிக வெறுப்பேற்றுமென்றால், என்னைப் போன்ற சிறுவர்கள் சீருடையும், பள பளக்கும் பாட்டா சப்பாத்துக்களும் தூய வெண்ணிறக் காலுறைகளும்  அணிந்து கொண்டு அவர்களைப் பார்த்தாலே தனித்துவமான உணர்வு கொண்டவர்கள் போலப் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பார்கள்.  அவர்களுடைய மூக்கை நிமிர்த்திக் கொண்டு வருவார்கள். சில வேளைகளில் பேருந்தில் ஏறும்போது  ஏறத்தாழ அதன்  கதவின் மீது இடித்துக் கொள்வது போல இருக்கும். இருக்கையில் அமரும் முன்பு தூசி தட்டி விட்டு அமர்வார்கள். ஏதோ அவர்கள்  சீனத் தயாரிப்பு ஆடையை அணியாமல் பகட்டான அஸோ-ஓக் * ஆடையை அணிந்திருப்பது போல நடந்து கொள்வார்கள். அதன்பின் புத்தகங்களை வெளியே எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். தங்களுக்குப் படிக்கத் தெரியும் என்பதை மற்றவர்களுக்குக்  காட்டிக் கொள்வதில் உறுதியாக இருப்பார்கள்.

எனக்கும் படிக்க வரும், அவ்வளவு வேகமாக அல்ல, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி மெதுவாக வாசிக்க வரும். ஆட்குறைப்பினால் அப்பா பணி இழந்து, அதன் காரணமாக அவர் பியர் அருந்தத் தொடங்கும் முன்பு வரை நானும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆனால் பேருந்துக்குள் தினமும் புத்தகமும் கையுமாக அமர்ந்து என்னால் படிக்க  முடியும் பார் என்று மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ள மாட்டேன். ம்ம், எப்படியோ போகட்டும் ,நான் இப்போது பெரிய பையன். பதின்மூன்று வயதாகி விட்டது.பள்ளிக்குச் செல்வதுமில்லை, எனக்கு அது தேவையுமில்லை. எனக்கு வேலை கிடைக்கிறது.

இன்று ஏனோ தலை கடுமையாக  வலித்தது. அந்த “மகிழ்ச்சி” என்ற சொல் இரவு முழுவதும் தலைக்குள் சுழன்று கொண்டேயிருந்ததால் உறங்கவே இல்லை.

அது இப்படி வந்து வந்து விரைவில் மறைந்து விடுவது எனக்குப் பிடிக்கவில்லை. முடிவே இல்லாமல் எப்போதும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சிதான் எனக்குத் தேவையாக இருந்தது. பாஸ்டர் சொல்வது போல் அதற்கு உடலோடும், பணத்தோடும், பசியோடும் தொடர்பில்லையென்றால் நான் அதை அடைய ஏன் முயற்சி செய்யக் கூடாது? அதன் பின் ஒரு வேளை என்னுள் நிரம்பியிருக்கும் எரிச்சல், வயிறு உபாதை, மண்டை பிளக்கும் வலி மற்றும் வேதனை யாவும் ஒரு திருடனைப் போலச் சுவடின்றி இந்த இரவில் மறைந்து விடக் கூடும்.

அதன் காரணமாகப் பேருந்தில் ஏறும் ஒவ்வொருவருக்கும் உதவிசெய்ய ஆரம்பித்தேன். முதியவர்கள், இளையவர்கள், குண்டானவர்கள், ஒல்லியாக இருப்பவர்கள், வியர்வையில் கசங்கியவர்கள், அழகானவர்கள், அவலட்சணமானவர்கள் என நீக்கமற அனைவருக்கும் சேவைகள் தொடர்ந்தன. அவர்கள் சுமையை ஏற்ற உதவி புரிந்தேன். புன்னகைத்துக்கொண்டே வந்தனம் கூறினேன். யாரையும் வசை சொற்களால் ஏசவில்லை, கத்தவுமில்லை. ஆடையிலேயே மலம் கழித்து, நாற்றமடித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை அதன் அம்மா துடைத்துச் சுத்தம் செய்கையில் அந்தக் குழந்தையைக் கையில் ஏந்திப் பிடித்தபடி உதவி செய்து கொண்டிருந்தேன்.

இன்று என்னைப் பார்ப்பவர்கள் அனைவரும் ‘கடவுளின் குழந்தை‘ இங்கு தோன்றி அனைவருக்கும் உதவி செய்கிறது எனக் கூறுவார்கள். அனைவரும் எனக்கு நன்றி சொல்லி ஆசிர்வாதம் செய்தார்கள். ஒரு பெண்மணியோ அவரிடம் நான் காட்டிய இங்கிதத்துக்குப் பரிசாக கொஞ்சம் சில்லறைப் பணம் தந்தார். நானோ ஏற்கெனவே ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அந்த உணர்வு காலை முதல் மதியம் வரை நீண்டு கொண்டே இருந்தது.

ஆனால் மாலை நேரமாகையில் நான் மிகக் களைத்து விட்டேன். என்னுடைய பணி நேரம் ஏறத்தாழ முடிவடையும் தருவாயில் எனக்குள்ளிருந்த சாத்தான் சட்டென்று வெளியே குதித்து வந்து எனது மகிழ்ச்சியையெல்லாம் குலைத்துப் போட்டது. ஒரு முதிய பெண்மணி தனது கைப்பையைச் சரியாகக் கையாளாமல் தூக்கிக் கொண்டு வர, அதனுள்ளிருந்த பணப்பை வெளியே எட்டிப் பார்த்து என்னை வரவேற்றது. என்ன நடக்கிறது என்று நான் அறிந்து கொள்ளும் முன்பே, போர் வீரனின் துப்பாக்கியிலிருந்து சீறிப் பாயும் தோட்டா போல எனது கை நீண்டு சென்று அந்தப் பணப் பையைத் திருடியிருந்தது.

ச்சே! இந்த நீண்ட நாள் பழக்கம் என்னை ஆட்கொண்டு எப்படிக் கட்டுப்பாடிழந்து விட்டேன்! அந்தப் பெண்மணியைக் கூட எனக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால் அவர் தினமும் இந்தப் பேருந்தில் பயணம் செய்பவர். வீட்டுக்கு நடந்து செல்லும் வழியெல்லாம் சட்டைக்குள்ளிருந்த அந்தப் பணப்பை கனத்தது. அதன் கனம் என்னை வீழ்த்தியது. அந்தப் பணப்பைக்குள் என்ன இருக்கிறதென்று திறந்து பார்த்த போது எனது விழி பிதுங்கி வெளியே விழுந்து விட்டது. கார்களைக் கழுவுவது மற்றும் பயணிகளைக் கூவி அழைக்கும் பணிகளின் ஒரு வார கால வருமானத்தைச் சேர்த்தால் கூட அதனுள்ளிருக்கும் பாதித் தொகைக்கு ஈடாகாது. அந்தப் பெண்மணியின் அடையாள அட்டை பைக்குள்ளிருந்ததைப் பார்த்தேன். அவர் பெயர் தையோ ஓகுன்யெமி. பிறந்த வருடம். 1962. அடையாள அட்டைக்குள்ளிருந்து அவர் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குள் அவமானம் பரவியது. எனது ஆன்மா உறுத்தியது. அதன்பின் அடுத்த நாளே அந்தப் பணப்பையை திருமதி தையோ ஓகுன்யெமிக்குத் திருப்பித் தந்து விட முடிவெடுத்தேன். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியை உணர ஆரம்பித்தேன்.

ஆனால் வீட்டை அடைந்த பின் உள்ளே நுழைவதற்கு முன்பே அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தைக் கேட்க முடிந்தது. வீட்டு உரிமையாளரிடம் மம்மா கெஞ்சிக் கொண்டிருந்தது அந்தப் பழைய கட்டிடத்தின் உளுத்துப் போயிருந்த கதவுக்கு வெளியே நிற்கையில் உள்ளிருந்து தெளிவாகக் கேட்டது.

தயவு பண்ணுங்கள்! ஒரு வாரம் மட்டும் தள்ளிப் போடுங்கள் ஐயா! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார் மம்மா. அவரது குரல் நடுங்கி கொண்டிருக்க, அழுது கொண்டிருக்கிறார் என நன்றாகப் புரிந்தது. நேற்று வந்திருந்த அப்பா அத்தனை பணத்தையும் துடைத்து எடுத்துச் சென்றிருந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கிடையில் ஊசலாடியபடி என்ன செய்ய வேண்டுமென்று என் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன்.

அது அவ்வளவு சுலபமாக இல்லை. பள்ளியில் எழுதும் மிகக் கடினமான தேர்வு போல இருந்தது.

நான் உள்ளே போய் பணப்பையிலிருக்கும் தொகையை எடுத்துக் கொடுத்தால் அம்மாவும் வீட்டு உரிமையாளரும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்றால் நான் திருடனாகி விடுவேன், திருமதி ஓகுன்யெமி துக்கமடைவார். இந்தப் பணத்தை நாளை நான் கொண்டு போய் கொடுத்தால்தான் ஓகுன்யெமி மகிழ்ச்சியடைவார். ஆனால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதைத் திருப்பித் தந்து விட்டால் எனக்கு மகிழ்ச்சி கிட்டாது. இன்றிரவுக்குள் வாடகை கட்டாமல் விட்டால் நான் எப்படி மகிழ்ந்திருக்க முடியும் ?

வழக்கத்தை விட என் வயிறு அதிகமாக வலித்தது.,இந்த மகிழ்ச்சி என்னும் விஷயமெல்லாம் என்னுடைய நிலைமைக்குக் கொஞ்சம் அதிகம்தான். ஒரு நாளிலேயே அந்த மகிழ்ச்சியில் நான் களைப்படைந்து விட்டேன். வீட்டு உரிமையாளர் அம்மாவை மேலும் மேலும் இகழ்ந்து பேசியதுடன் எங்கள் பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறுமாறு கத்திக் கொண்டிருந்தார்.

அப்போது நான் உடனடியாக ஒரு முடிவெடுத்தேன்.

திருமதி.தையோ ஓகுன்யெமியின் பணத்தை எடுத்து அம்மாவின் கைகளில் ஒப்படைக்கையில் நான் இன்னும் உண்மையான மகிழ்ச்சிக்குத் தயாராகவில்லை என்னும் முடிவை எட்டியிருந்தேன்.

 *

*எகுன்குன்- யொரோபா மூதாதையர்களின் ஆவி

*மோலுவா – சிறு பேருந்து 

*அக்பாடா- நைஜீரியா பருத்தித் துணி 

*அஸோ – ஓக்- யொரொபா இன மக்களின் பின்னல் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை

 ***

எஃபுவா ட்ராஓரே (Efua Traoré) : ஒரு நைஜீரிய -ஜெர்மன் எழுத்தாளர். நைஜீரியாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். மற்றும் அவர் பிரான்ஸ், ஜெர்மனியில் வாழ்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அவரது இந்தச் சிறுகதையான True Happiness  ஆப்பிரிக்கப் பிராந்திய காமன்வெல்த் சிறுகதைப் பரிசை வென்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு “Children of Quick Sands” என்னும் அவரது முதல் நாவல் “the Children/Chicken house Children’s Fiction Competition பரிசை வென்றது. இந்த நாவல் 2022 ஆம் ஆண்டில் குறும் பட்டியலில் இடம் பிடித்தது. இவருடைய ஜெர்மன் நாவலான Die Huter des schlafes (The Guardian Sleep)  க்கு 2019 ஆம் ஆண்டின் மியூனிக் Literatureferet YA இலக்கிய உதவித் தொகையைப் பெற்றார்.The House of Shells, One Chance Dance ஆகியவை இவரது மற்ற படைப்புகள். 

லதா அருணாச்சலம் – ஆங்கில முதுகலையையும் ஆசிரியப் பட்டப் படிப்பையும் முடித்தவர். பதினான்கு வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வசித்த லதா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நைஜீரிய எழுத்தாளர் அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimsons Blossoms  என்னும் நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் ( எழுத்து பிரசுரம்), டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் எழுதிய Problemski Hotel என்னும் நாவல் பிராப்ளம்ஸ்கி விடுதி (காலச்சுவடு பதிப்பகம்) என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ‘ஆக்டோபஸின் பேத்தி ‘(நூல்வனம் பதிப்பகம்), உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘ஆயிரத்தொரு கத்திகள் ‘என்னும் தொகுப்பும் வெளியாகி உள்ளன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா எழுதிய Paradise என்னும் நாவலின் தமிழாக்கம் “சொர்க்கத்தின் பறவைகள்” இவரது  மூன்றாவது மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் ஐந்தாவது மொழிபெயர்ப்புப் படைப்பு. மின்னஞ்சல் முகவரி : lathaarun1989@gmail.com. 

முதல் தகவல் அறிக்கை

4

நாராயணி கண்ணகி

(ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவரும் ‘தப்பு’ நாவலின் பகுதி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது)

டுத்தர வயதைக் கொண்ட அந்த ஆணும் பெண்ணும் மகளிர் காவல் நிலையத்திற்குள் தயக்கத்துடன் பயந்து பயந்து நுழைந்தார்கள். கணவன் மனைவி போலிருந்தார்கள். வந்த இடம் சரிதானா? என்கிற சந்தேகமும் அவர்களிடம் இருந்தது. ஒரு முறை ஒருவருக்கொருவர் முகம் பார்த்தார்கள். அழுது கொண்டே பெண்மணி முன்னே நடந்தார், அவர் பின்தொடர்ந்தார். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தாலும் இந்த இடத்தில் பெண் முன்னால் போக வேண்டும், ஆண் பின்னால் போக வேண்டும் என்கிற உளவியல் விவரங்களைப் புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மீது பசுந்தழைகளின் மணமும், ஆட்டுப் புளுக்கைகளின் மணமும், ஏரிக் களிமண்ணின் மணமும் கலந்து வீசியது. காட்டுக்குள்ளிருக்கும் குக்கிராமம் ஒன்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. அவரின் வேட்டியும், சட்டையும், அந்தம்மாவின் புடவையும் ரவிக்கையும் மறைக்க வேண்டும் என்பதற்காக சுற்றிக் கொண்டிருந்தார்கள். உடை அணிந்ததில் கட்டுமான நேர்த்தி இல்லை. உழைப்பின் புழுதிகள் ஆடைகளின் வண்ணமாகியிருந்தது. அவரணிந்திருந்த நிறம் தெரியாத சட்டையின் பொத்தான்களின் துளைகளை மேலும் கீழும் மாற்றிப் பூட்டிக்கொண்டிருந்தார். வேட்டியும் அதுபோலவே ஏற்ற இறக்கமாக கட்டியிருந்தார். அந்தம்மாவும் உள்ளாடை இல்லாமல் ரவிக்கை அணிந்திருந்தாள். உள்ளாடை இல்லாமல் ரவிக்கை அணியலாம், பாவாடை இல்லாமல் புடவைச் சுற்றிக் கொண்டிருந்தாள். காவல் நிலையத்திற்குள்ளிருந்து பெண் காவலர்கள் பார்க்கும் போது தொடைகள் தெரிந்தன. 

மகளிர் காவல் நிலையத்தின் காலைப்பொழுது என்பதால் பொதுவான காவல் நிலையத்தில் நிகழும் எவ்விதமான பரபரப்பு காட்சிகளையும் இங்கு பார்க்க முடியவில்லை. பிடிபட்டு நொறுங்கிய வாகனங்கள் இல்லை. நிறையக் காவலர்கள் இல்லை, துப்பாக்கி பிடித்த வாயில் காவலர் இல்லை. சட்டைக் கையில் இரண்டு கோடுகள் போட்ட இரண்டு பெண் காவலர்களும், காக்கிப்புடவைக் கட்டிய சுமார் ஏழு மாத கர்ப்பமான வயிற்றுடன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த துணைக் காவல் ஆய்வாளரும் மட்டுமே இருந்தார்கள். இது தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடம் என்பதால் காவல் நிலையம் போல் தெரியவில்லை. ஆண்கள் மட்டுமே தங்கி இருக்கும் வாடகை வீட்டைப்போல் காணப்பட்டது. படித்தவர்கள் படித்து அறிய ‘மகளிர் காவல் நிலையம்’ என்கிற தகட்டில் எழுதிய மூன்றிற்கு நான்கு அளவிலான அடையாளப் பலகை வாசற்படிக்கு மேலே நிறுத்தப் பட்டிருந்தது. 

சீருடையுடன் மகளிர் காவலர்களைப் பார்த்ததும் சரியான இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்கிற புரிதலும், தெளிவும் ஏற்பட்டது. அழுகையைப் பெரிதாக்கிக் கொண்டாள். அழுகை காவலர்களின் கவனத்தை வளைத்தது. அழுகை எப்போதுமே முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்து விடக் கூடிய சக்தியைக் கொண்டது. சில காரியங்களைத் தொடங்குவதற்கு வெறும் காகிதங்கள் போதாது, கண்ணீரும் வேண்டும். அந்தக் கண்ணீர் உண்மையாக இருந்தால், வலிமை அதிகம். 

“டவுனு பூரா சுத்தனோங்க, பொம்பள போலீபஸ் டேசன் எங்க இக்குதுன்னு கேட்டா இக்கற எடம் யாருக்கும் வெளங்கல…” என்றார். அலைந்ததை முதலில் சொல்லி விடவே முனைந்தார்.

அந்தம்மாவின் அழுகைப் பெரிதானது. செயற்கையாக வரவைக்கபட்ட அழுகையல்ல என்பது புரிந்தது. ஆனால் காவல்துறையினர் எதற்கும் மயங்கி விடக்கூடாது. 

“அழாதீங்க… என்ன விசயம் சொல்லுங்க…?” ஒரு பெண் காவலர் கேட்டார்.

அவளின் அழுகை பெரிதானது, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஒரு விதமாக முறுவலித்தாள். கிராமத்தில் சாமியாடுபவர்கள் உடலை இப்படித்தான் முறுக்குவார்கள். பிறகு கைகளால் தலையில் அடித்துக் கொண்டாள். அதனோடு நெஞ்சில் அடித்தாள். இந்த அழுகை புது விதமாக கலவரம் காட்டியது.

“அழாத, அழாதன்ன சொன்னாதான் அழுவாசி ஜாஸ்தி ஆயிருது… வாயைத் தொறந்து என்னாச்சுன்னு சொன்னாதான் தெரியும்… நீ அழுதா எதுக்கு அழறன்னு எங்களுக்குத் தெரியாது… புரிதா?”

அழுகை நிற்கிற மாதிரி தெரியவில்லை. பெண் காவலர் “அய்யா! நீங்களாச்சும் என்ன விசயம்னு சொல்லுங்க… ஆடு,மாடு திருடு போச்சுன்னா இங்க கேசு எடுக்க மாட்டோம்… சந்தைக்குப் பக்கத்துல இருக்குதே பெரிய ஸ்டேசன் அங்க போயிடுங்க… யாராவது சண்டைப் போட்டு அடிதடின்னாலும் இங்க கேஸ் எடுக்க மாட்டோம். அங்கதான் போவணும்… சொத்துப் பிரச்சனன்னா வக்கீல பாருங்க, இல்லன்னா கலெக்டர பாருங்க…” என்றார். இவர்களின் வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்குச் சம்பந்தம் இருக்காது என்று கருதினார். சம்பந்தம் இருக்கக் கூடாது என்றும் கருதினார்.

அவர் வராத கண்ணீரைத் துடைத்தார். ஆனால் அழுது இருப்பாரென்று தெரிந்தது. 

“அய்யா! நீங்களாச்சும் சொல்லுங்க…” 

(முன்பெல்லாம் அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை ஐயா என்று அழைக்க மாட்டார்கள். காவல் நிலையம் வந்தால் நீ, வா, போ, யோவ், ஏய் மட்டுமின்றி வாடா, போடா, வாடி, போடி என்பதுதான் நடைமுறையாக இருந்தது. தற்போது கொஞ்சம் மாறிவிட்டது. போகட்டும் என்று மரியாதையும் கொடுக்கிறார்கள். யாரும் பெரிய குற்றங்களில் மாட்டிக் கொள்வதில்லை, சின்னஞ் சிறு தவறுகளுக்கும் காவல் நிலையத்தில் புகார்களைக் கொண்டு வருகிறார்கள். அதனால் எல்லோரிடமும் மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பது இன்ஸ்பெக்டர் மனோன்மணி உத்தரவு! மனோன்மணி அநியாயத்திற்கு இளகிய மனம் கொண்டவர். நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம், மஞ்சனம், மஞ்சள், மை என்று கோயிலில் தரும் எல்லா வண்ண பிரசாதங்களையும் அணிபவர். ஏதேனும் ஆஸ்ரமத்தில் இருக்க வேண்டியவர் தவறி இன்ஸ்பெக்டராகி விட்டார். அவர் கட்டாயமாக்கிய மரியாதையை அவர் காவல் நிலையத்தில் இல்லையென்றாலும் கடைப் பிடிக்கிறார்கள்.)

“அய்யா, அய்யா! என்ன விசயம் சொல்லுங்க…?” கொஞ்சம் அதட்டுகிற குரலில் கேட்டார்.

“என்னாத்த சொல்லுவோம் தாயி., நீங்களும் நாங்க பெத்தத் தாயிங்களாட்டும் இக்கறீங்க… தவப்பன் தாயிங்க கிட்ட சொல்ற வெசயமா தாயி?”

“அதுக்குன்னு வந்துட்டீங்க… வந்துட்டு யோசிச்சா நாங்க எதுவும் பண்ண முடியாது.” புடவையில் உட்கார்ந்திருந்த உதவி காவல் ஆய்வாளர் சொன்னார். 

அவர் அவரின் மனைவியைப் பார்த்தார். (மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.) “எஞ் செத்த வாயால நான் சொல்லலமே… நீயே வாயத் தொறந்துடு…” என்றார்.

“நாஞ் சொன்னா எவ்வாயி அவியாதா?” அந்தப் பெண்மணி தன் வாயை ஓங்கி அடித்துக் கொண்டார். அது சும்மா அடித்துக் கொண்ட அடி அல்ல, தன்னைத் தானே ஓங்கி, வலிக்க அடித்துக் கொள்வது என்பது தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளவும் உண்டாகும் துணிவுக்கு ஆதாரம். கொதிக்கும் ஆத்திரத்தின் சூடு! அந்தம்மாவின் முகம் கிராமத்து வேப்பமரத்தடி சூலத்தைப் போல் தெரிந்தது.

உட்கார்ந்திருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு விதமான அதிர்ச்சி தாக்க எழுந்து நின்றார். ஏதோ தவிர்க்க முடியாத பிரச்சினை என்பது புரிந்து கொண்டார்.

“அம்மா! நீங்க ஏதோ பிரச்சினைல இருக்கீங்க… சொல்லுங்க…”

அந்தம்மாள் கண்களை மிகப் பெரிதாக விரித்து பார்த்தார். “தாயி! இந்த வவுத்தல மலய சொமந்த மாரி சொமந்து பெத்த புள்ளய சண்டாளமூட்டு பாவிக வெள்ள மூத்தரம் பேஞ்சி நாசம் பண்ணி பூட்டானுங்க…” வயிற்றை ஓங்கி அறைந்து கொண்டார். அந்தம்மாள் தாங்க முடியாத துக்கத்தை, பேரிடியாய் விழுந்த துயரத்தை காவலர்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும் என்கிற பிரயத்தனம் காட்டினாள்.

“வெள்ள மூத்தரமா?” கேட்ட காவலரின் முகம் மாறியது.

இன்னொரு தலைமைக் காவலர் புரிந்து கொண்டார். “ஐ பி சி த்ரீ செவன்ட்டி சிக்ஸ்!” என்றார்.

ஒரு அதிர்வு உண்டான மாதிரி இருந்தது. செவ்வக இரும்பு மேசையைச் சுற்றி வந்தார் புடவையிலிருந்தக் காவலர் அந்தம்மாவைப் பிடித்துக் கொண்டார். “கொஞ்சம் உக்காருங்க… தண்ணிக் குடிக்கிறீங்களா?” என்றார். தள்ளி நின்றிருந்த மற்ற இரண்டு காவலர்களும் அருகில் வந்தார்கள். அந்தம்மாவுக்குத் துக்கம் அதிகரித்தது. இருவருமே உட்காராமல் நின்றே இருந்தார்கள்.

“நாங் ரொம்ப கோவக்காரங் தாயி, தொரட்டில ஒவ்வொருத்தங் தொண்டகோக்கைங்களயும் இழுத்து இழுத்து போட்ருவங்… பண்டிக அன்னிக்கி மாரியாத்தாக்கு ஆடுங்கள பலி போட்ட மாரி போட்ருவங் ரத்த ஆத்த காட்றுவன்… உள்ள கொதிப்படங்கல தாயி…” அந்தய்யாவின் உதடுகள் துடித்தது. கடுக்கன் போடவில்லை என்றாலும், காதுகளில் பெரியதாக துளைகள் இருந்தன. துளைகளுடன் தொங்கிய காதுகள் ஆடியது. அடர்ந்த, வெளுத்த மீசைகளுக்கு மத்தியில் உதடுகளை அவர் கடித்துக் கொண்ட விதம், பயோட்டின் எலுமிச்சை பழத்தை கடித்துக் கொள்வதைப் போலிருந்தது.

மூன்று காவலர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பார்வையில் பதட்டம் அதிகரித்தது. கண்களாலேயே பேசிக் கொண்டனர். 

“பத்து நிமிசம் உக்காருங்க… இன்ஸ்பெக்டர் மேடம் வந்துடுவாங்க… அவங்க கிட்ட சொல்வீங்க… பதட்டபடாதீங்க, சட்டபடி நடவடிக்க எடுப்பாங்க, தைரியமா இருங்க…”

“ஆளுங்க யார் யாருன்னு தெரியுமா?” என்று கேட்ட காவலரை துணைக் காவல் ஆய்வாளர் தடுத்தார்.

“சைலன்ட்டா இருந்துடு ப்ரியா, மேடம் வந்து விசாரிப்பாங்க… நாம இதுல மூக்க நுழைக்கக் கூடாது” என்றார். புகார் கொடுக்க வந்த இருவரையும் பார்த்து “இன்ஸ்பெக்டரம்மா வந்துடுவாங்க… எல்லாத்தையும் அவங்க கிட்டயே சொல்லுங்க, எங்க கிட்ட ஒரு தபா சொல்லிட்டு மேடம் கேக்கறப்போ இன்னொரு தபா சொல்வீங்களா? கொஞ்ச நேரம் உக்காருங்கம்மா, ஐயா உக்காருங்க.” என்றார்.

“இன்ஸ்பெக்டரம்மா கிட்ட சொல்றப்போ உண்ம என்னாவோ அத மட்டும் சொல்லணும் புரிதா? நீங்க ஆத்திரப் பட்டு வெட்றன், குத்தறன்னு போக வேணாம். தப்பு பண்ணவங்கள போலீஸ் வுடாது, தண்டன வாங்கித் தந்துடுவோம்… சரியா?”

“அதுக்குதாங் தாயி இந்தக் கோயிலுக்கு வந்தோம். உங்கள சாமியா நெனச்சி வந்தோம். சண்டாளமூட்டு பாவிகங்கள தூக்குல மாட்டணும்…”

துணைக் காவல் ஆய்வாளர் அவருடைய போனிலிருந்து ஆய்வாளரிடம் பேசினார். “அம்மா! த்ரீ செவன்ட்டி சிக்ஸ் ஐ பீ சி! அப்பா, அம்மா ரெண்டு பேர் வந்திருக்காங்க… நாங்க ஏதும் என்கொயரி பண்ணல… நீங்க வரணும்னு சொல்லிட்டோம்.”

“ஓ காட்! கடவுள் ஏன் என்ன இப்படி சோதனப் பண்றாரு… இங்க வந்து மூணு வருசத்துக்குக் கிட்ட ஆச்சு… த்ரீ செவன்ட்டி சிக்ஸ் வரவே இல்லை. நல்ல விதமா போயிடணும்னு நெனச்சேன்… அவங்கள உள்ள மறவா உக்கார வெச்சிடுங்க… நெஞ்சு படபடன்னுது… ரெண்டு வாய் இட்லி எடுத்துட்டு, மாத்தர போட்டுனு வந்துடறன்… வர வழில கோயிலுக்குப் போயிட்டு வர்றன்… ஜீப்ப பன்னெண்டு மணிக்கு வரச் சொன்னேன், இம்ரானுக்குப் போனடிச்சி பத்து நிமிசத்துல கெளம்பிட சொல்லு.. படபடங்கது… டிஎஸ்பி சார் கிட்ட சொல்லிடறதா என்னன்னு தெரில… விசாரிக்காம சொன்னா தப்பாயிரும்… யார்னா ரிப்போட்டருங்க வந்தா பேச வுடாதீங்க… இன்னிக்கு செவ்வாதான…? ராவுகாலம் மூனுநால்ர, குளிக பன்னண்டு ஒன்ர, எமகண்டம் ஒம்பதோட முடிஞ்சிருச்சி… சர்ருன்னு வந்துடறன்…” என்றார் இன்ஸ்பெக்டர் அம்மா. அவரின் பயம் படபடப்பான பேச்சில் தெரிந்தது. “வயசு கேட்டியா?”

“இல்லைங்க அம்மா! நீங்கதான் கரெக்ட்டா கேப்பீங்கன்னு.. அவங்கள எதுவும் கேக்கல..”

“சரி, வந்துடறன்”

போனை வைத்து விட்டு அந்தத் தம்பதிகளிடம் “நீங்க உள்ள உக்காருங்கம்மா… பெஞ்சில உக்காருங்க…” என்று அவர்களிடம் சொல்லி விட்டு “சற்குணம்! இவங்களுக்கு டீயானா, காப்பியானா சொல்லேன்… ஏம்மா எதனா சாப்ட்டீங்களா?”

“எங் கொழந்த நாசமாயிட்டா, தொண்டயில பசத்தண்ணி, நீசத்தண்ணி எறங்குமா?”

“சாப்புடாம கெடந்தா ஒடம்புல வலுவு இருக்குமா? உங்ககிட்ட யார்னா பிரச்சனை பண்ணா எதுத்து பேசறதுக்கானா வலுவு வேணும்… சற்குணம்! இட்லி கெடைச்சா வாங்கினு வாயேன்…”

“காலி ஆயிட்டிருக்கும் கெடைக்காது, சாப்பிட நேரம் கிடைக்காது.. மேடம் வந்தா நிக்க மாட்டாங்க… அவசரமா விசாரிக்க போவாங்க…”

“காபி சொல்லிடு!”

காவலர் சற்குணம், அவரின் காலுடைப் பையிலிருந்து கைப்பேசி எடுத்து இரண்டு காபி சொல்லி விட்டு, இன்னும் நிலையத்திற்கு வராத காவலர்களை அழைத்து “மேடம் ஒரு கேஸ் விசயமா வந்துனு இருக்காங்க, அதுக்குள்ள வந்து சேருங்க.. பேசப் போறாங்க..” என்றார்.

அறைக்குள்ளிருந்து அந்தம்மா சத்தமாகவே அழுதார்.

“அழாதீங்க…”

“எங்களுக்கு யாரும் தொண இல்ல சாமிங்களா.. உங்க காலப் புடிச்சசக்கிறோம்… நீங்கதான் எங்களக் காப்பாத்தணும்..”

“கால, கையப் புடிக்கிற சமாச்சாரம் வேணாம், எங்க கடமய நாங்க செய்வோம் அழாம இருங்க… அதுக்குதான் கவர்மென்ட் எங்களுக்குச் சம்பளம் தருது.. நகந்து உக்காருங்க.. அக்யூஸ்ட்ட புடிக்கிற வரைக்கும் நீங்க சேப்பா இருக்கணும்…”

இருவரும் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். சுவற்றில் மாட்டி வைத்திருந்த சாமிப்படத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். மூன்று மதங்களுக்கும் பொதுவான சாமிப்படம் அது. மத்தியில் ஒரு இந்து கோயிலின் கோபுரம், அதன் இடது பக்கத்தில் இஸ்லாமியரின் மசூதியும், பிறையும் நட்சத்திரமும், வலது பக்கத்தில் சர்சும் சிலுவையும் வரையப்பட்டிருந்தது. பொதுவாக மத்தியில் காக்கனா மல்லிகைப்பூவின் சரம் அரைமுழத்தை மடித்து தொங்கவிட்டிருந்தார்கள். அந்தப் பூச்சரம் இலவசமாக கொடுக்கப்பட்டதாக இருக்கும். பொதுவாக கொஞ்ச நேரத்திற்கு முன்பு கொளுத்தி வைத்த ஊதுபத்தி கால் பாகம் கரைந்திருந்தது. புகைப்படத்தைப் பார்த்து அப்பெண்மணி கும்பிட்டுக் கொண்டே இருந்தாள். 

சாலையில் வாகனங்கள் போகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு ஆம்புலன்சின் சைரன் இயல்பாக பயம் காட்டி விட்டு போனது. எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். அவ்வளவு வாகனங்களின் ஒலிகளில் காவல் ஆய்வாளர் ஜீப்பின் ஒலி கேட்கவே இல்லை. கறுப்பு நிற புல்லட்டில ஒரு பெண் காவலர் வந்தார். ஒரு காவலரை ஸ்கூட்டியில் ஒருவர் இறக்கி விட்டார். அவர் லுங்கியில் இருந்தார். ஷேவ் பண்ணாத கன்னங்கள் மட்டும் வெள்ளையாக இருந்தது. “போன் பண்ணு வர்றன்” என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியை வளைத்துக் கொண்டு போனார்.

மஞ்சள் பூசி பூ வைத்துக்கொண்டு ஒல்லியாக இருந்த ஒரு பெண் காபி கொண்டு வந்தாள். இப்போது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிக்காமல் வாங்கிக் குடித்தார்கள்.

அரை மணிநேரம் கழித்து ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கினதும் வானத்தில் தெரிந்த சூரியனைப் பார்த்து கும்பிட்ட பின் உள்ளே நுழைந்தார் காவல் ஆய்வாளர் மனோன்மணியம். காக்கி உடை அவரை கச்சிதமாக காட்டவில்லை. தும்பிக்கை இல்லாத பெண் பிள்ளையாராய்த் தெரிந்தார். நடக்கும் போதே மூட்டுவலிக்கு இரவில் வலி நிவாரணி போட்டுக் கொள்ளும் இனம் என்பது தெரிந்தது.

எல்லோரும் பரபரப்பாக நின்று சல்யூட் அடித்தார்கள். அவருக்குப் பின்னால் ஜீப் ஓட்டி வந்த காவலர் ஒரு தோல் பையைத் தூக்கிக் கொண்டு வந்தார். அது காவல் ஆய்வாளரின் பை.

மனோன்மணியம் அவருடைய அறைக்குள் நுழைந்தார். பீரோவைத் திறந்தார். பீரோவுக்குள் ஒட்டி இருந்த ராகவேந்திரா, ரமணர், ஷீரடி சாய்பாபா, பாபா படங்களை வணங்கினார். சில ஆண்டுகளாகவே இப்படித்தான் வணங்குகிறார். ஒரு ஜோதிடன் சொன்னது. ‘உங்க ராசிக்கு ஜீவ சமாதியான மகான்களை கும்பிடுங்க… முடிஞ்சா ஒருமுறை சீரடி போய் வாங்க..’ என்று. அதைக் கடைப் பிடிக்கிறார். அதுவும் வெளியே சுவர்களில் புகைப்படங்களை மாட்டாமல், பீரோவுக்குள்ளோ, பெட்டிக்குள்ளோ வைத்து வணங்க வேண்டும் என்று ஜோதிடன் சொல்லி இருந்தான். ஜோதிடர்கள் அவர்களின் பசிக்கான சோறு பொங்க அரிசி வாங்குவதற்குப் புதியது புதியதாக நம்பிக்கைகளை யோசிக்கிறார்கள். அதைக் கொஞ்சமும் யோசிக்காமல் நம்பி விடுகிறார்கள் மனோன்மணியம் போன்றவர்கள்.

பீரோவை மூடிவிட்டு மேசைக்குப் பின்புறமிருந்த பிளாஸ்டிக் ஒயர் கோர்த்த தேக்கு நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்சம் மூச்சுகளை இழுத்து விட்டு “அவங்கள கூட்னு வாங்க” என்றார்.

உள்ளறையிலிருந்து இருவரையும் அழைத்து வந்தார்கள். அதற்காகவே காத்திருந்தவர்கள் மீண்டும் அழுகையுடன் நின்றார்கள்.

“அழாம சொல்லுங்க… மேடத்து கிட்ட அழாம சொல்லுங்க…” உதவி காவல் ஆய்வாளர் மெதுவான குரலில், அழுத்தமான உச்சரிப்பில் சொன்னார்.

“மொபைல்ல வீடியோ ஆன் பண்ணிடு பிரீத்தி” என்றார் ஆய்வாளர்.

“என் போன்லயா மேம்”

“பரவால்ல எடு”

உதவி ஆய்வாளர் இடுப்பில் சொருகி வைத்திருந்த போனை எடுத்து வீடியோவை ஓட வைத்தார்.

“அதெல்லாம் வேணாங்க..” என்றார் அந்த ஆசாமி பதட்டமான கைகளைக் குறுக்கே நீட்டினார்.

“ஏன் வேணாங்கறீங்க.. என்ன நடந்ததுன்னு நீங்க சொல்றத வெச்சிதான் நடவடிக்கை எடுக்க முடியும். உண்மையை தைரியமா சொல்லுங்க..”

“இல்லம்மா… அது டிவில வந்துடும்.. எல்லாரும் பாப்பாங்க…”

அவர்கள் விவரமாக இருப்பதை கவனித்தார்.

“வராது. போலீஸ் கிட்ட உசாரா இருப்பீங்க.. அப்புறம் டிவி காரங்க கிட்ட விதவிதமா சொல்வீங்க.. புதுசாவா பாக்கறேன்”

“யாருக்கும் தெரிய வேணாம்மா…”

அந்தம்மா அதைச் சொல்வதற்கும் அழுதாள்.

“அழாத, தப்பு பண்ணவங்கள புடிக்கிற வரைக்கும் எதுவும் வெளியே போகாது”

“இல்லம்மா..”

அவர்களைப் பேச விடாமல் “பாருங்க கேஸ் கொடுக்கதானே வந்தீங்க… அப்புறம் எதுக்கு தடுக்கறீங்க.. பர்ஸ்ட்டு என்னை நம்புங்க… யாருக்கு என்ன ஆச்சு?”

புகார் கொடுக்க வருபவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவதை நிறையப் பேரிடம் கண்டிருக்கிறார். அதனாலேயே சில பிரச்சினையான புகார்களுக்குச் சும்மாவாகிலும் ஒரு வீடியோ எடுத்து வைத்துக் கொள்வார். புருசன் வரதட்சணைக் கேட்டு அடித்ததாக புகார் சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து ‘அவர் அடிக்கலைங்க நான்தான் கதவுக்கு இடிச்சுக் கிட்டேன்’ என்று சொல்பவர்கள் அதிகம்.

“படம் புடிக்க வேணாம் சாமி, நாங் கன்றாவியாக் கெடக்கோம்…” அந்தம்மாள் தலையைக் கவிழ்ந்து கொண்டே சொன்னார்.

இதை அப்பாவித்தனம் என்று சொல்வதா? எல்லோருக்கும் இருக்கும் பொதுவகையான வெளிப்பாடு என்பதா என்பது தெரியாமல், கொஞ்சம் குழப்பமான ஆய்வாளர் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு “பாத் ரூம்ல சோப்பு போட்டு மூஞ்ச கழுவினு பவுடர் பூசிக்கிறியா?” என்று முகத்தைச் சலனமற்று வைத்துக் கொண்டு கேட்டார்.

அந்தம்மாள் தலையைக் கவிழ்ந்துக் கொண்டே வேண்டாம் என்று அசைத்தாள்.

“எங்கிருந்து வர்றீங்க..?”

“ஏரி பொதுரும்மா..”

தலைமைக் காவலரம்மாள் “ஏரி புதூர் வில்லேஜ் மேடம், அதத்தான் ஏரி பொதுருன்னு சொல்றாரு…” விளக்கம் கொடுத்தார்.

“இல்ல சாமி! நாங் பொறந்து வளந்த மண்ணு எனக்குத் தெரியாதா? பொதுரு! பொதுராத்தான் இந்துச்சி… மூங்க பொதரு கரையை ஒட்னாப்புல இந்துச்சி, பனமரத்தக் காட்டிலும் ஒசந்து நின்னுச்சி, மூங்க பொதுர ஒட்னாப்புல சீங்க பொதுரு, சீங்க பொதுர தாண்டனா பனந்தோப்பு, தோப்புல நொழஞ்சி போனா ஏரிபூராவும் கருவேலங்காடு ரொம்பினு இந்துச்சி… எல்லாத்தியும் நாசமா பண்ணிருச்சி வேலிமுள்ளு மரங்க… பொதுரா இந்தததான் இப்பத்தி ஆளுங்க புதூருன்னு மாத்திப்புட்டாங்க…” அவர் சொல்லும் போது கைகள் அசைந்து அசைந்து காட்சிகளாகக் காட்டியது. அந்த புதர்களின் மேல் அவருக்கு இருந்த அக்கறையும் சேர்ந்து தெரிந்தது.

“நீங்க பொறந்து வளந்த ஊரப் பத்தி உங்களுக்குதான் தெரியும். சரி, வந்த விசயத்த சொல்லுங்க…”

மறுபடியும் அழ ஆரம்பித்தார்கள். அந்தம்மாள் சத்தமாக அழுதார். அவர் தோளிலிருந்த துண்டை எடுத்து வாய்க்குப் பொத்திக் கொண்டு விம்மினார்.

“அழாதீங்க.. சொன்னாதான் கேஸ் எழுத முடியும்”

அவர் வாயிலிருந்து துண்டை எடுத்தார். தொண்டையைத் துண்டால் தடவிக் கொண்டார். “தகுப்பன் வாயால எப்படி சொல்லுவங்கம்மா.. சண்டாளமூட்டு பாவிங்க… எம் புள்ள வவுத்துல வெள்ள மூத்தரம் பேஞ்சிருக்காங்கம்மா… எங் வாயால சொன்னா நாக்கு இழுக்குது” 

அழுக்குத் துண்டினால் அவர் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்க்க பகீரென்றது.

“ஆளுங்க யாருன்னு தெரியுமா?”

“தெரியுங்கம்மா.. பெருமாளப்பங்கறவரு, அப்புறம் மனோங்கரங் பையங்”

“பெருமாளப்பன் ஒருத்தன் இன்னொருத்தன் மனோகரனோட பையனா அவன் பேரு?”

“அவங் பேருதாம்மா மனோகரங்!”

“ரெண்டு பேரு! பெருமாளப்பன், மனோகரன் ரெண்டு பேரு, ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் பண்ணி இருக்காங்க… அப்படித்தான?”

“என்னம்மா?”

“உங்க பொண்ண ரெண்டு பையனுங்க சேந்து கெடுத்திருக்காங்கன்னு சொல்றீங்களா…?”

“இல்லம்மா… ஒருத்தங்கதான் பையங்.. இன்னொருத்தங் கெழட்டாளு, பெருமாளப்பனுக்குப் பேரங்களும், பேத்திங்களும் இருக்காங்க.. எழுபது வயசு!”

“என்ன சொல்றீங்க… எழுபது வயசு கெழவனா?” ஆய்வாளரின் கண்களுக்குள் எழுபது வயது பெரியவர் எப்படி இருப்பாரென்று ஒரு ஓட்டம் போய் வந்தது. ஆய்வாளரின் அப்பாவிற்கும் எழுபது வயது. “எழுபது வயசு கெழவனா? உண்மையைதான் சொல்றீங்களா?”

“சாமி மேல சத்தியம்மா.. எங் புள்ளய வெசாரிச்சோம், வெலாவரியா சொல்லிப்புடுச்சு, அதுக்கு பொய் வராதும்மா, பொய்ச் சொல்லிக்கவே தெரியாது. பெருமாளப்பங் தாயோலி கெழவங்கம்மா, மனோகரங் பையங், கொழந்த பையங்…”

“என்னது கொழந்த பையனா?”

“ஆமாங்மா..” மனைவி பக்கம் திரும்பினார். “மனோங்கரங் வயசு எவ்ளோ இக்கும் அம்மாகிட்ட சொல்லு”

“எனக்கு என்னாயா தெரியும்? பன்னாடமூஞ்சன நானா பெத்தன்? மொளச்சி மூனு எல வுடல…? இன்னும் மீசக் கூட மொளைக்கல, பாய்ல மூத்தரம் பேய்ற வயசுல, பொண்ணு மேல பேஞ்சி வுட்ருச்சி…”

ஆய்வாளர் உட்பட காவலர்கள் அனைவருக்குமே புதிராக இருந்தது. வழக்குகள் என்பது இப்படியானதுதான், ஆண்டுக்கு ஒரு வழக்காவது விசித்திரமானதாக வந்து விடும், இந்த வழக்கு வெறும் விசித்திரம் அல்ல என்பதை மனோன்மணியத்திற்குள் நெருடல் உண்டானது. இருபத்தைந்து ஆண்டுகள் காவல்துறையில் அனுபவம் இருக்கிறது. எத்தனையோ நெருக்கடிகள் தரும் வழக்குகள் வந்திருகிறது. என்றாலும் அனுபவத்தைத் தாண்டி நடுக்கம் உண்டானது.

***

நாராயணி கண்ணகி – நாராயணி கண்ணகி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நகைப்பட்டறை வைத்திருக்கிறார். நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். வெகுஜன பத்திரிகை, சிறுபத்திரிகை இரண்டிலும் எழுதி வந்தவர், தற்போது இலக்கியப் படைப்பாக்காங்களை மட்டும் எழுதி வருகிறார். வெகுஜன படைப்பாளிகள் தவிர்த்து இலக்கியப் படைப்பாக நாராயணி கண்ணகி முன் வைப்பது இரண்டு குறுநாவல்கள் (பிராந்தியம், மென்முறை), மூன்று நாவல்கள் (வாதி, அலர், கருந்தீ), ஒரு சிறுகதைத் தொகுப்பு (சீதேவி பேசரி) மின்னஞ்சல் : narayanikannagi@gmail.com

காந்தியின் பயணத்தடம்

0

சித்ரா பாலசுப்ரமணியன்

காத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான யாத்திரையை 1933 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி வார்தாவில் தொடங்கி 1934 ஆம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி வாரணாசியில் நிறைவு செய்தார். இந்த நீண்ட பயணம் குறித்த உடனுக்குடனான அறிக்கைகளை, அப்போது காந்தியின் செயலரைப் போலப் பயணித்த சந்திர சங்கர சுக்லா எழுத அவை ஹரிஜன் இதழில் வெளியாகின. (காந்தியின் அணுக்கச் செயலர் மகாதேவ் தேசாய் அப்போது சிறையில் இருந்தார்)

காந்தியின் தீண்டாமை யாத்திரையில் அவருடன் பலர் பயணித்தனர், குறிப்பாகச் சிலர் அவரது பயணம் குறித்த விவரங்களைத் தொகுப்பதற்காகவே உடன் சென்றனர் .எனினும் பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் அவரவர் செலவுகளை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும். காந்தி, காந்தி குழுவினருக்கான செலவினங்களில் அவை அடங்காது. எவரேனும் அதற்குப் பொருளுதவி செய்தாலொழிய இத்தகைய நீண்ட பயணத்தில் உடன் செல்வது இயலாத காரியமாகவே இருந்திருக்கும். பத்திரிக்கையாளரான எஸ்.மகாதேவனின் பயணத்திற்கு நாகேஸ்வர்ராவ் பந்துலு பொருளுதவி செய்திருக்கிறார். காந்தியுடன் பயணித்த மகாதேவன் தன்னுடைய அனுபவங்களையும் தான் கண்டவற்றையும் மக்கள் மகாத்மாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றையும் உடனுக்குடன் பதிவு செய்ய அவை ‘ஆந்திர பத்திரிக்கா’ இதழில் வெளியாகின. எனினும் ஒன்பது மாதங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நீடித்த இந்த நீண்ட பயணத்தில் மகாதேவன், மத்திய மாகாணங்கள், ஆந்திரா, மலபார் பகுதிகள், தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே உடன் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சுவைபடவும் நிரல்படவும் தொகுத்து Mahatma Gandhi warnings and flashes on Harijan tour என்ற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார். 1936 இல் The Journalist Publishing House என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்று அதன் விலை ஒரு ரூபாய் நான்கு அணா.

தீண்டாமை யாத்திரை குறித்த தொடர் பதிவுகளை எழுதுகையில் நல்லூழாக இந்தப் புத்தகத்தைக் கண்டறிந்தேன். 192 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் எட்டு தலைப்புகளைக் கொண்டது. கூடவே, இருபத்தோரு அருமையான, இந்த யாத்திரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. எளிய இனிய நடையில் வாசிப்போர் மனம் கவரும் படி மகாதேவன் பதிவு செய்துள்ளார். புத்தகத்தை வாசித்து முடிக்கையில் காந்தி, நம் முன் இன்னும் பேருரு கொண்டிருப்பார். மிகக் கடுமையான இந்த நீண்ட பயணத்தைக் காந்தி, மக்கள் மேல் கொண்டிருந்த அன்பினாலும் தீண்டாமையை வேரோடு நீக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டோடும் பற்பல சிரமங்களையும் அயர்ச்சியையும் மீறி நடத்திய விதத்தை, மகாதேவன் எடுத்துக் காட்டும் பலவேறு நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.

காந்தியின் நாள் அதிகாலைக்கும் முன்னதாகவே தொடங்கிவிடுவது. இரவு படுக்கப் போகும் நேரமும் ஒரே நிலையானது அன்று. ஒரு நாளின் நீண்ட மணி நேரங்கள் காந்தி எந்த சுணக்கமும் இன்றி பணி செய்ததைக் காண முடிகிறது. தூக்கம் மிகக் குறைவு. நீண்ட பயணங்களிலும் இடையிடையே, பயணிக்கும் வாகனத்தை நிறுத்தி வழியில் எதிர்ப்படும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் மிகக் குறைந்த நேரமே தூக்கத்திற்கு என்றானது. சங்கரன் நாயர் என்பவர் இந்தக் காலக் கட்டத்தில் தட்டச்சு உதவியாளராக இருந்திருக்கிறார். (பெரும்பாலும் தென்னிந்தியர்களே காந்தியின் தட்டச்சு உதவியாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.) ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்குத் தம்மை எழுப்பும்படி சொல்லிவிட்டு காந்தி உறங்கச் செல்கிறார். இரண்டு ஐம்பதுக்கு எழுந்து பார்க்கும் சங்கரன், காந்தி எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். தட்டச்சு செய்யத் தயாராகும் அவரிடம் காந்தி, உங்கள் பணி நேரம் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே என்கிறார். காந்தியிடம் பணியாற்றுவது சாமானியப் பணி அன்று.

பெரும்பாலும் ஒரு கையில் தன் உணவுக் கோப்பையை வைத்துக் கொண்டு எழுத முயல்வதும் உண்டு. இரயில் ஏறியதும் அடுத்த நிறுத்ததிற்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து உடனே எழுத்துப் பணியில் இறங்கி விடுவார். எழுத வேண்டிய கடிதங்கள், பதிலுரைக்க வேண்டியவை, ஹரிஜன் இதழுக்கு எழுத வேண்டிய பத்திகள், பத்திரிக்கைகளுக்கான அறிக்கைகள் என அனைத்தும் இரயில் பயணங்களில் எழுதப்பட்டுவிடும். ஓடும் இரயிலில் அனாயாசமாக எழுதும் கலையைக் காந்தி கற்றிருந்தார்.

பேரார் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளுக்குக் காந்தி சென்றார். அதில் ஒரு குடியிருப்புக்கு சொன்ன நேரத்தை விடச் சற்று முன்னதாகவே சென்று விட்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் தயாராகவில்லை. வேப்ப மரத்தடியில் இரண்டு ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. காத்திருந்து நேரத்தை வீண்டிப்பானேன், காந்தி நேரே சென்று ஜமக்காளத்தில் அமர்ந்து பேசத் தொடங்கி விடுகிறார். சுற்றியிருந்த மக்களுக்கு ஒரே வியப்பு. சில நிமிடங்கள் உரையாற்றியபின் அவர்கள் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்கின்றனர். மலர்ந்த புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த இடத்திற்குக் கிளம்புகிறார். பொருட்களாக ஏதேனும் கையளிக்கப்பட்டிருந்தால், அதனை, அடுத்து வரும் பொதுக்கூட்டத்தில் காந்தி ஏலம் விடும் அழகையும் மகாதேவன் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய ஒரு காட்சியை விரிவாகப் பதிவும் செய்துள்ளார். முந்தையக் கூட்டம் ஒன்றில் குழந்தைகள் இணைந்து ஒரு சிறிய பெட்டியை அன்பளிப்பாக தந்திருந்தனர். அடுத்தக் கூட்டத்தில் காந்தி அதை ஏலம் விட்டார். வாய் நிறைய புன்னகையுடன், அதிக விலைக்குக் கேளுங்கள், இந்த நிதி ஹரிஜன சேவைக்கானது என நினைவில் கொள்ளுங்கள் என்றபடியே, தொழில்முறை ஏலம் நடத்துபவரைப் போல, தொகையைச் சொல்லி ஒரு தரம் இரண்டு தரம் எனச் சொல்லுவார். வேறு எவராவது இன்னும் சற்றுக் கூடுதல் தொகை கேட்டு விட்டால் அவரது புன்னகை இன்னும் விரியும். ஒரு ஐரோப்பியர் இரண்டு முறை ஏலம் எடுக்க முனைந்தும் இயலவில்லை. வேறு வழியின்றி காந்தியின் கையெழுத்தையாவது பெற வேண்டும் எனக் கோரி நிற்கும் போது, மகாதேவன் தன் நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுத்து, காந்தியிடமிருந்து கையெழுத்தையும் பெற்றுத் தருகிறார். அந்த ஐரோப்பியர் இருபத்தைந்து ரூபாய் நன்கொடை அளிக்கிறார். Volkart Bros என்ற புகழ்பெற்ற வணிக நிறுவனத்தைச் சேர்ந்த பெர்க்டன் தான் அவர் என மகாதேவன் குறிப்பிடுகிறார்.

காந்தி, அகோலா என்ற இடத்தைச் சென்றடைந்த போது, அம்பேத்கரின் ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்தனர். சில கேள்விகள் கேட்க வேண்டும், வருத்தமோ கோபமோ படக்கூடாது என்ற முன்னறிவிப்புடன் தொடங்கினர். காந்தி புன்னகைத்தபடியே எதுவேண்டுமாயினும் தயங்காமல் கேளுங்கள் என்றார். ‘வட்டமேஜை மாநாட்டில் உங்களை எதிர்த்ததன் மூலம், அம்பேத்கர் நாட்டிற்கு நியாயம் செய்தாரா, இல்லையா?’ எனக் கேட்டதற்குக், காந்தி நியாயம் செய்ததாக அவர் கருதுகிறார், ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் மிக தைரியமானவர். தைரியமானவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பதில்லையே என்றார் காந்தி.

ஏன் திடீரென்று தீண்டாமை ஒழிப்பில் இறங்கிவிட்டீர்கள் என்ற வினாவிற்கு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போதே தான் இப்பணியில் இறங்கிவிட்டதாகவும் காங்கிரஸின் செயல்திட்டங்களில் தீண்டாரமை ஒழிப்பைக் கொண்டு வந்ததையும் சுட்டிக்காட்டினார். ‘இதுவரை, இப்போது வசூலிக்கும் தொகையில்லாமல் முன்பு ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக நீங்கள் செலவழித்ததுண்டா?’ என்ற வினாவிற்கு, இதுவரை இருபது லட்ச ரூபாய் செலவழித்ததில் ஐந்து லட்சம் தம் சொந்தப் பணம் எனக் காந்தி கூறினார். அம்பேத்கரை நான்கு கைகள் கொண்டவராகச் சித்திரித்து தாங்கள் வழிபடுவதாகவும் அது குறித்து காந்திக்கு ஆட்சேபணை உண்டா என வந்தவர் வினவியபோது, காந்தி நிச்சயம் இல்லை என்றவர், சிறையில் தானும் வல்லப்பாயும் பேசும் போதெல்லாம் அம்பேத்கர் குறித்து உயர்வாக வியந்து பேசியதைச் சுட்டிக்காட்டி அவரை மகிழ்ச்சிப்படுத்தவே தாம் விரும்புவதாகவும் கூறினார். வந்தவர், ஹரிஜன் சேவக் சங் அமைப்பினைப் பற்றி குறை கூறியபோது, இதையல்லவா நீங்கள் என்னிடம் விவரமாகப் பேசவேண்டும் என ஊக்கப்படுத்தினார். தனக்கு இது குறித்து விரிவாகத் தொடர்ந்து கடிதங்கள் எழுதுமாறும், தபால் செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் காந்தி உறுதியளித்தார். வந்தவர்கள் காந்திக்கு மாலையணிவித்து விடைபெற்றுக் கொண்டனர். இந்த யாத்திரை முழுக்க பல்வேறு சமயங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், இவ்வாறு பல்வேறு வினாக்களைத் தொடுத்ததை மகாதேவன் பதிவு செய்துள்ளார்.

காசியின் மடம் ஒன்றைச் சேர்ந்த பண்டிட் லால்நாத் என்ற சனாதனியும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து வந்து காந்தியின் கூட்டங்களிலும் அவர் தங்குமிடங்களிலும் பிரச்சினை புரிந்தவாறே இருந்தனர். தாம் உரையாற்றும் மேடைகளிலேயே காந்தி, பண்டிட் லால்நாத்திற்கும் வாய்ப்பளித்தார். மக்கள் கேரோ செய்தபோது, அவர் பேசுவதையும் கேட்போம் என மக்களை அமைதிப்படுத்தினார். ஆனால், பண்டிட் லால்நாத் பேசி முடித்ததும் மக்கள் மகாத்மா காந்திக்கு ஜே என உரக்கக் குரலெழுப்பியதை மகாதேவன் உற்சாகத்தோடு குறிப்பிடுகிறார்.

சத்தீஷ்கரில், பிலாஸ்பூர் செல்லும் வழியில் சிவ்நாத் ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள், காந்தி அந்த வழியாக வருவார் என்ற செய்தி தெரிந்து முந்தைய நாள் மாலையே அங்கு வந்து தங்கி சமைத்து உண்டனர். ஒவ்வொரு இடத்திலும் இதுபோல் ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடுத்து ஒரு நொடியாவது அவரைப் பார்க்க வேண்டும் எனத் தொலைதூரத்திலிருந்தெல்லாம் பயணித்து வந்தனர். இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் சொல்லி மாளாதது. ஒரு சில நிமிடங்களே காண முடியும் என்றாலும் நீண்ட தூர கிராமங்களிலிருந்தெல்லாம் பயணித்து, நெடுநேரம் காத்திருக்க அவர்கள் தயங்கவில்லை. காந்தி பயணித்த இரயில், நடைமேடையை நெருங்கும் முன்பே மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷம் வானை முட்டியது. பிலாஸ்பூரில் காந்தி தங்கியிருந்த வீட்டின் வாயிலிலும் மக்கள் திரண்டபடியே இருந்தனர். காந்தி, வீட்டின் பலகணிக்கு அடிக்கடி வந்து நின்று கையசைத்துவிட்டுச் செல்லும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருந்தது என நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் மகாதேவன்.

கட்னி(katni) என்ற இடத்தில் இன்னுமொரு நெகிழ்வான நிகழ்ச்சி. அங்கு ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பை ஒட்டியிருந்த திலகர் வித்யாலாயா என்ற இடத்தில் காந்தி குழுவினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தன் காலை நடையினை, காந்தி ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பிலேயே மேற்கொண்டார். அந்த வீதி சுத்தமாக வைக்கப்படிருந்ததைக் குறிப்பிட்டு பாராட்டினார். குடியிருப்பின் எல்லையில் வேப்ப மரத்தடியில் காந்தியின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதை ஒட்டியிருந்த மேடையில் அவர் அமர்ந்து கொண்டார். சிறு பெண் குழந்தை மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவரை வாழ்த்தியது. காந்தி, அக்குழந்தையின் தலையை வருடி, அருகிலிருந்த அதன் தந்தையிடம் ஏன் தலையில் எண்ணெய் வைத்து வாராமல் இப்படிச் சிடுக்காக வைத்திருக்கிறாய் என்றதோடு அக்குழந்தையின் பிஞ்சு விரல்களை நீவியபடி, நகங்களில் அழுக்கு படிய விடாதே என்றும் அறிவுறுத்தினார். கூடவே, பெரியவர்களுக்கும் இறந்த மாட்டு இறைச்சியை உண்ணாதீர்கள்; குடிப்பழக்கத்தைக் கைவிடுங்கள்; சூதாட்டம் போன்றவற்றிலிருந்து விலகியிருங்கள் எனப் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஏறக்குறைய பலப்பல ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மோர்ஸி என்ற இடத்தில் மக்களிடையே பிராமணர், பிராமணர் அல்லாதார் இடையே இருந்த பிரிவினை உணர்வினைக் கேட்டுத் தெரிந்து கொண்ட காந்தி, எந்த வகையிலும் எவருக்கும் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை; நம் சாத்திரங்கள் அந்த வேறுபாட்டைச் சொல்லவில்லை என வலியுறுத்திக் கூறினார்.

ராஜ்குமார் கல்லூரி அவருக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பி வரவேற்றிருந்தது. பெயருக்கு ஏற்றாற்போல், மேல்தட்டு செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே அங்கு கல்வி பயின்றனர். அவர்களிடையே காந்தி நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். இங்கு பயில்வதாலேயே எந்தவகையிலும் நீங்கள் மற்றவர்களை விட உயர்வானர்கள் எனப் பொருள் அன்று; வாய்ப்பு வழங்கப்பட்டால் எவரும் உயர்நிலையை அடைய முடியும் ; நாளை சமூகத்தில் பணி செய்யும் போது அத்தகைய வாய்ப்பை அனைவருக்கும் வழங்க வேண்டும்; அதுவே உண்மையான கல்வியின் அடையாளம் என உரைத்தார்.

சோஹாஹ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த நெகிழ்வான நிகழ்வுகள் சிலவற்றை மகாதேவன் குறிப்பிட்டு எழுதியுள்ளார். கூட்டத்தின் மேடையருகே ஒரு பார்வையற்றவர், காந்தியைப் பார்க்க வேண்டும் என நின்றிருந்தார்.அருகே அழைத்து வரப்பட்டவுடன் காந்தியிடம் தங்களது பாதங்களைத் தொட வேண்டும் என வேண்டினார். காந்தி, தன் கையை நீட்டினார். பார்வையற்றவர் இல்லையில்லை உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்கவே நான் விரும்புகிறேன் என்றதும் தட்ட வழியின்றி காந்தி அனுமதித்தார். எண்பது வயதுள்ள மூதாட்டி, காந்தியின் அருகில் வந்து அவரது முகத்தையே பார்த்தபடி இருந்தார். காந்தி அவரிடம், என்னை உங்கள் மகனாகத் தத்தெடுத்துக் கொள்கிறீர்களா எனப் பரிகாசத்தோடு கேட்டார். கூடவே, நிதி தாருங்கள் என உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு இருந்தன. எதைச் சொல்வது எதை விடுவது என்று மகாதேவனுக்கு இனிய குழப்பம் இருந்திருக்கும்.

குவாலியர் இரயில் நிலையத்திற்குக் காந்தி பயணித்த இரயில் நடுஇரவில் வந்தது. அந்த நடுங்கும் குளிரிலும் கம்பளியைப் போர்த்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் நடைமேடையில் காத்திருந்தது ஆச்சரியமளித்தது. டெல்லியில் ஹரிஜன சேவக் சங் அமைப்பின் உறுப்பினர்கள், சேவகர்கள் கூட்டம் நடைபெற்றது. இப்பணியில் தாங்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை அவர்கள் எடுத்துரைத்தனர். அதற்குப் பதிலுரைத்த காந்தி, எல்லா இடங்களிலும் இதுபோன்ற நிலையே நிலவுவதை எடுத்துக் காட்டி அவர்களுக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

போபாலில் வரவேற்புப் பாடலைப் பாடிய பெண் குழந்தைத் தன் மோதிரத்தைத் தர விரும்பியது. கழற்றிப் பார்த்தும் எடுக்க முடியவில்லை. சரி பரவாயில்லை, உன்னிடமே இருக்கட்டும் எனக் காந்தி கூறிவிட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகம் வாடி விட்டது. பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அதில் கையை வைத்து, மோதிரத்தை எடுத்தவுடன் அந்தப் பெண் குழந்தை மகிழ்வோடு அதைக் காந்தியிடம் தந்தது.

மலபாரிலும் இதையொத்த நிகழ்வு நடந்ததைக் கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். கௌமுதி என்ற இளம்பெண், தன் நகைகள் அத்தனையையும் காந்தியிடம் வழங்க முன்வந்தாள். காந்தி, இதற்குப் பதிலாக வேறு நகையை மீண்டும் அணியக் கூடாது என்ற நிபந்தனை தெரியுமா எனக் கேட்டார். அதற்கு அப்பெண் தெரியும், இனி நகைகளே அணியமாட்டேன் என்றாள். நீ இளம் பெண், நாளை திருமணமாகும் போது உன் கணவன் அவற்றை அணியச் சொன்னால் எனக் கேட்டதற்கு,அப்படி கேட்காத ஒருவனையே தான் மணம் செய்து கொள்ளப் போவதாக அந்தப் பெண் கூறியதைக் கேட்டு காந்தி மகிழ்ந்தார்.

ஆந்திராவில்:

ஆந்திரா மிகச் சிறப்பான வரவேற்பைக் காந்திக்கு அளித்தது. இங்கு குக்கிராமங்களிலெல்லாம் காந்தி பயணித்தார்.

காந்திக்கு தங்க மோதிரம் ஓரிடத்தில் நிதியாக வழங்கப்பட்டது. காந்தி, இதை நான் அணிய முடியாது; அணிந்தால் மறுபடியும் திருமணம் செய்ய வேண்டும். எரவாடா ஜெயிலில் இருக்கும் அந்தக் கிழவி என்ன நினைப்பாள் எனக் கூறி, அதை ஏலத்தில் விட்டு நிதியைச் சேர்த்துக்கொண்டார். காந்தியின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. பல இடங்களில் வெடிச் சிரிப்புடன் அவர் சொல்லும் வார்த்தைகள் சுற்றியிருப்பவர்களை வாய்விட்டு மகிழ்வோடு சிரிக்க வைக்கும். அயர்ச்சி அளிக்கக் கூடிய இந்த நீண்ட பயணத்திலும் காந்தி தன் நகைச்சுவையோடு மிளிர்ந்ததை மகாதேவன் எடுத்துக்காட்ட தவறவில்லை.

காந்தி அபாரமான நகைச்சுவை உணர்வு உடையவர். அந்த உணர்வு தான் தன்னைப் பல நேரங்களில் காப்பாற்றியது எனக் காந்தியே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாக்பூரிலிருந்து பெஸவாடாவிற்கான இரயில் ஏறும் முன், காந்தியுடன் பயணித்த அபயங்கர் என்பவர், இரண்டு ஆங்கிலேயர்களைக் காந்திக்கு அறிமுகம் செய்கிறார். முதலில் ஒருவரைக் காட்டி, இவர் தான் முன்பு நம்மைச் சிறையில் அடைத்தவர், அடுத்தவர் கிரிக்ஸன், இணை ஆணையர் அடுத்தமுறை நம்மைச் சிறையிலிடப் போகிறவர் என அறிமுகப்படுத்த, சிரித்துக் கொண்டே அவர்களிடம் அளவளாவிய காந்தி, இங்கு சி.ஐ.டி எவரும் இல்லையே எனக் கூறிச் சிரிக்கிறார்.

இது போன்ற ஏராளமான சம்பவங்களை மகாதேவன் போகிறபோக்கில் குறிப்பிட்டபடியே செல்கிறார்.

ஆந்திராவில் காந்தியின் பயணத்தை ஒருங்கு செய்தவர் சிறந்த காந்தியத் தொண்டரான புலுசு சாம்பமூர்த்தி. அவருடனான அழகான உரையாடல்களையும் மகாதேவன் குறிப்பிடத் தவறவில்லை. ஆந்திராவில், கோதாவரி நதியில் பிரபாகரம் என்ற படகில் காந்தி பயணித்தார். இந்தப் படகு, காந்தியின் வருகையைக் கொண்டாடும் விதமாக மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்படகு கரையை நெருங்க நெருங்க, ஆற்றின் கரையில் கூடியிருந்த மக்கள் திரளின் மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷம் அளவின்றி எழுந்தது. காந்தியின் பயணம் முழுக்க இத்தகைய காட்சிகள் பலநூறு காணக் கிடைக்கின்றன. மலபாரிலும் இதே போன்றதொரு படகுக் காட்சியை மகாதேவன் பதிவு செய்துள்ளார். ஆலப்புழாவிலிருந்து கோட்டயத்துக்குக் காந்தி, ஸ்டீமரில் பயணித்தார். அவரது படகை ஒட்டி சிறு சிறு படகுகளில் மக்கள் அவரை வாழ்த்தியபடியே பயணித்து வந்தனர்.

இன்னொரு பாம்பு வடிவிலான நீண்ட படகில் ஓடப்பாடல்களை இசைத்தவண்ணம் மற்றொரு குழுவினர் ஏறக்குறைய படகுப் போட்டி போல துடுப்பு போட்டவாறு வந்தனர். இவற்றைக் காந்தி மகிழ்வுடன் கவனித்து மகிழ்ந்தார்.

ஆந்திராவிலும் தீண்டாமை யாத்திரையின், பல அம்சங்களான ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் செல்லுதல், பொதுக்கூட்டம், பெண்களுக்கான பிரத்யேகக் கூட்டங்கள், நிதி வசூல், தீண்டாமையைத் தவிர்க்குமாறு வலியுறுத்தும் காந்தியின் உரை என அனைத்து அம்சங்களும் இருந்தன.

அடுத்து பயணித்த மைசூர், காந்தியை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. செல்லுமிடமெங்கும் பெருந்திரளான மக்கள் காந்தியை வரவேற்கத் தவறவில்லை.

காந்திக்கான எதிர்ப்புகளையும் மகாதேவன் பதிவு செய்துள்ளார். மசூலிப்பட்டின சாலைகளில் காந்தியின் கார் இடையூறின்றி பயணித்தது எனக் குறிப்பட்டதன் மூலம், காந்தியின் வரவை அவ்வூர் பெரிதாகக் கொண்டாடவில்லை எனத் தெரிகிறது.

தமிழகம் காந்தியின் மனதுக்குகந்த இடம். தமிழகமும் அவ்வாறே அவரைக் கொண்டாடியது. எனினும், சுயமரியாதைக் கட்சியினரும் கம்யூனிஸ்டுகளும் சனாதனிகளும் ஆங்காங்கே தங்களது எதிர்ப்பைச் சிறிய அளவில் காட்டினர். கும்பகோணத்தில், பத்திருபது இளைஞர்கள் கறுப்புக் கொடி காட்டியபடி காந்தியே திரும்பிப் போ எனச் சில நிமிடங்கள் கோஷம் எழுப்பினர். ஆயினும் சச்ச்ரவுகள் ஏதும் இல்லை. ஶ்ரீரங்கத்திலும் கறுப்பு கொடியுடன் கடவுளை நம்பாதே என்ற போஸ்டரும் இருந்தது. காந்திக்காக வந்தவர்கள், கடவுளை நம்புங்கள் காந்தியுடன் நில்லுங்கள் (Believe in God; Stand with Gandhi) என்ற பதாகைகளைச் சுமந்து வந்தனர். கறுப்புக் கொடி காட்டிய இளைஞர்கள், காந்தி வரவேற்புக் குழுவினரோடு சிரித்துப் பேசியபடி வந்ததைக் காந்தி மகிழ்வுடன் தன் உரையில் குறிப்பிட மறக்கவில்லை.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் பிரிவு, சனாதனிகள், சுயமரியாதைக் குழுவினர் அனைவருடனும் காந்தி பேச்சுகள் நடத்தியதைச் சுருக்கமாக மகாதேவன் பதிவு செய்துள்ளார்.
அந்தந்த வாரப் பத்திரிக்கைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்பதால் வாசக நோக்கில் சுவாரஸ்யமானவற்றையே மகாதேவன் பதிவு செய்துள்ளார். காந்தி நடத்திய விரிவான உரைகளையும் பேச்சுவார்த்தைகளையும் பதிவதற்கான இடம் அதில் இல்லை. அதைச் சந்திர சங்கர சுக்லா, ஹரிஜன் இதழில் செய்திருக்கிறார்.

புதுவருடப் பிறப்பை ஒட்டி(1934) இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலுமிருந்து புத்தாண்டு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஜெனோவாலிருந்து ஒருவர் தன் புகைப்படத்தை அனுப்பி, தான் காந்தி போலவே இருப்பதைச் சுட்டிக் காட்டி தன் வாழ்வையும் காந்தியக் கொள்கைகளோடே நடத்தப்போவதாக உறுதியளித்திருந்தார்.

லண்டன், கிங்ஸ்லி ஹாலைச் சேர்ந்த முரியல் லிஸ்டர் (காந்தி இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்றபோது இவரது எளிய குடியிருப்பில் தான் தங்கியிருந்தார்)அவரதுஉறவினர் பெண் திருமதி.ஹாஹ் என்பவரோடு காந்தியின் இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் கலந்து கொண்டார். தான் சென்ற பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அம்மக்கள் தம்மிடம் குறிப்பாகச் சொல்லியனுப்பியதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். மகாதேவன் அவரோடு இந்த இயக்கம் குறித்து நேர்காணல் நடத்தி பதிவு செய்து கொண்டார்.இந்த இயக்கம் மகத்தானது எனக் குறிப்பிட்ட முரியல், காந்தி இதில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டினார். கூடவே, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலெல்லாம் தாம் நிகழ்த்திய உரைகளின் நிறைவில் மக்கள், காந்தியைப் பற்றிக் கூறுங்கள் எனத் தன்னைத் துளைத்தெடுத்ததை மகிழ்வோடு குறிப்பிட்டார்.

காந்தியின தீண்டாமை யாத்திரை குறித்துத் தனியே குறிப்பிட்டு எழுதிய புத்தகங்கள் அதிகம் இல்லை. இப்பயணம் தனியே தொகுக்கப்பட வேண்டியது. அந்த வரிசையில் இப்புத்தகம் முக்கிய இடம் பெறுகிறது.

***

சித்ரா பாலசுப்ரமணியன் – சென்னையில் வசிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளராகவும் பணி செய்துள்ளார். காந்தி 150 இற்காக காந்தியர்களை நேர்காணல் செய்திருந்தது அவருடைய அரும்பணி. தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். மண்ணில் உப்பானவர்கள், செயலறம் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். தன்னார்வமாக சங்க இலக்கிய வகுப்புகளையும் எடுத்துவருகிறார். மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com