Home Blog Page 29

அனந்தபத்மன்

0

சார்பினோ டாலி

ரையில் கிடந்த கால்சராயை எடுத்து அணிந்து கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்த அனந்தன் சுவரில் பொருத்தியிருந்த நீர் வடிகட்டிக் கலனின் திறப்பைத் திறந்து போத்தலை நிரப்பினான். தண்ணீர் போத்தலின் கழுத்து முட்ட நிரம்பவே, அண்ணாந்து குடித்து மீண்டும் நிரப்பிக் கொண்டான்.

குளியல் அறையில் நீர்விழும் சலசலப்பு கேட்டபடி இருந்தது. அனு உள்ளிருந்தாள். வீட்டில் ஒரு துர்சம்பவம் நடந்திருக்க வேண்டியது, அனுவின் நல்ல நேரத்திற்கு இன்று தப்பிவிட்டாள். அலுவலக பரபரப்பிற்கிடையில் அவள் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்தியைத் திறந்ததும் உண்மையிலேயே மிரண்டு போய்விட்டான். ஆறடி நீளத்தில் தலை நசுங்கிக் கிடக்கும் பாம்பினுடைய புகைப்படம். கருநீலம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலின் குறுக்காக வெண்ணிறக் கோடுகளுடன் இருந்தது. எட்டடி விரியன்.

அனுவை அழைத்தான். “எத்தன வாட்டி சொன்னாலும் ஒனக்குப் புரியாது” என்று கத்தினான். திருமணம் முடிந்து வந்த நாளில் இருந்து அனந்தன் இவ்வளவு கோபப்பட்டு அனு பார்த்ததில்லை.

சிந்தும் பருக்கைகளைத் தேடி எலி வரும், அதன் பின்னாலேயே பாம்பு வரும் என்று ஓராயிரம் முறை சொல்லியிருப்பான். செவுட்டுப் பாம்பாட்டம் தலையைத் தலையை ஆட்டிவிட்டு இருந்து விட்டாள்.

“பத்மா வீட்டுல இல்லையா?” அனந்தனின் கோப உஷ்ணத்தில் ஃபோன் சூடாயிற்று.

“அக்கா இருக்காங்க..”

“என்ன சொன்னா?”

“நல்ல அழுதுட்டாங்க. எனக்கு என்னவோப் போல ஆயிட்டு. சாயுங்காலம் அவுங்க கூட நாகராஜா கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்.”

“சரி” என்று அழைப்பைத் துண்டித்தான். பத்மாக்கா என்று பேச்சில் காட்டும் மரியாதை இன்று கோபத்தில் விடுபட்டதை அனு குழப்பத்துடன் மனதில் குறித்துக் கொண்டாள்.

அவர்கள் வசிக்கும் வீட்டு உடைமையாளரின் தகப்பனார் காலத்தில் தென்னந்தோப்பாக இருந்த நிலத்தை திருத்தி, வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தோப்பிருந்த ஞாபகத்திற்காக மூன்று மரங்களை விட்டு வைத்திருக்கிறார். மேலும் கீழுமாக இரண்டு வீடுகள். மேல் தளத்தில் பத்மா, மங்கள நாதன் தம்பதியினர் இரு சிறு மகள்களுடன் வசிக்க அனுவும், அனந்த பத்பநாபனும் கீழ் வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதுமணத் தம்பதிகளாகக் குடி வந்தனர்.

தினமும் முதல் கரண்டி சோற்றினை புற வாசலின் பின் கட்டு மதில் மீது வைத்த பிறகே சோறு விளம்பவோ, உண்ணவோ செய்வாள் அனு. அவள் கையால் சாப்பிட்டுப் பழகிய காகங்களும் அணிலும் வெயில் உச்சிக்கு ஏறியதும் குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். அனுவிற்கு வீட்டில் ஆட்கள் இருக்க வேண்டுமென்று இல்லை. அவள் பாட்டிற்கு விருந்திற்கு வரும் பட்சிகளுடன் பேசியபடி இருப்பாள்.

இன்றும் அப்படித் தான் நடந்திருக்கிறது. க்கிக்..க்கிக்..க்கிக்.. என்று அணில்கள் வாய்விடாமல் சத்தம் எழுப்பிய படியிருக்க சமையல் அறையின் கண்ணாடி சன்னலில் கருப்பாக சிறிய உருவம் வந்து முட்டி விலகிய படி இருந்திருக்கிறது.

“பொறு.. அதுக்குள்ள பசிச்சுடுச்சா.. என்ன தனியா வந்துருக்க? எங்க? காக்க பட்டாளத்த ஒன்னும் காணோம்?” என்று பேச்சு கொடுத்தபடி, கரண்டிச் சோறெடுத்துச் சென்றவள் சன்னலில் இருந்து வழுக்கி விழுந்த பாம்பைக் கண்டு திகைத்துப் போனாள். ‘பிள்ளைக இருக்க இடம், வீட்டுக்குள்ள வந்துட்டா என்ன ஆகும்’ என்ற எண்ணம் தோன்றிய மறு கணம் அருகில் தென்னை மர வரப்பில் பதித்திருந்த செங்கல்லை எடுத்து எறிந்ததில் பாம்பின் தலை பெயர்ந்துவிட்டது.

இன்று வெள்ளிக்கிழமை. பத்மாவிற்கு விடுமுறை என்ற ஞாபகம் வரவே, “பத்மாக்கா.. ஏ பத்மாக்கா சீக்கிரம் கீழ இறங்கி வாங்க” என்று குரல் கொடுத்தாள்.

அனுவின் முன் உயிர் போகும் வேதனையில் புழுவென புரண்டு கொண்டிருந்த பாம்பினைக் கண்டு “ஆ… எனக்க அனந்தா” என்று உடல் நடுங்க ஓடி வந்த பத்மா மண்டியிட்டமர்ந்தாள்.

“என்ன காரியம் பண்ணிட்ட அனு” என்று கண்ணீர் வழிய கேட்ட பத்மாவிற்கு என்ன பதில் கூறுவது என்று அறியாமல், பதறினாள் அனு.

“இல்லக்கா, விஷப் பாம்பு மாதிரி இருக்கு. யாரையும் கடிச்சுடுச்சின்னா”

“நாகரோயில்ல யார பாம்பு கடிச்சுருக்கு?” என்றாள் மூக்கு விடைக்க.

அசைவு நின்ற பாம்பை குழந்தையென கைகளில் தூக்கி கால் படாத இடமாகப் பார்த்து அமர்ந்தாள்.

“வெள்ளிக் கிழமையதுவுமா வீடேறி வந்த ஐஸ்வர்யம் இப்புடி ஆகிட்டே. பத்மநாபா, ஏன் என்னப் போட்டு வதைக்கிற?” என்று புலம்பிக் கொண்டே குழிதோண்டத் தொடங்கினாள்.

அனுவிடம் “வீட்டுல பால் இருந்தா எடுத்துட்டு வா” என்றாள். அதட்டலாக.

‘நல்ல பாம்புக்குத் தான பால் ஊத்திப் புதைப்பாங்க’ என்ற நினைப்பு வந்தாலும் அனுவிற்கு கேட்கத் தோன்றவில்லை. எப்போதும் கனிவாகப் பேசும் பத்மாவின் கோபம் புதியதாக இருந்தது.

புதைத்த இடத்தில் சிறிது நேரத்திற்கு தொழுது நின்றவள் அனுவிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்குப் படியேறினாள்.

பத்மநாபா என்று தானே அழைத்தாள் பத்மாக்கா?

2

குடிவந்த சில நாட்களிலேயே கூட்டு, குழம்பு பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அனுவுடன் நெருக்கமானாள் பத்மா. வேலை விட்டு வந்ததும் அனுவிடம் அமர்ந்து மணிக்கூர் கணக்கில் ஊர்க்கதை பேசியபடி இருப்பாள். அனந்தன் வீட்டினுள் நுழைந்த பிறகுதான் குறுஞ்சிரிப்புடன் விடை பெறுவாள்.

வழி வழியாக நாகர் வழிபாட்டில் இருந்து வந்த குடும்பத்தினர் பஞ்சம் பிழைக்க வெவ்வேறு இடங்களில் சென்று குடியேறி பத்மாவின் தாத்தா காலத்தில் மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். பத்மாவிற்கு பத்து வயதிருக்கும் போது, ஊர்த் திருவிழாவன்று பத்மாவின் பாட்டியின் மீது நாகம்மாள் ஏறி ஆடியதில் மீண்டும் நாகர் வழிபாட்டிற்குத் திரும்பினார்களாம்.

ஒரு வெள்ளி விடாமல் நாகராஜா கோவிலுக்குச் சென்று விடுவாள். ஒன்றிரண்டு முறை அனுவையும் கூட்டிச் சென்றிருக்கிறாள். ஒரு நாள் கோவிலில் கிடைத்த ஓடவல்லிக் கொடி இலைகளைப் பார்த்து “உனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் பாரு” என்று ஆருடம் சொல்லி வெண்ணிற பிரசாத மண்ணை அனுவின் நெற்றியில் பூசிவிட்டாள்.

3

“அத்தே என்ன குழம்பு வைச்சீங்க?” என்று பத்மாவின் பிள்ளைகள் உரிமையுடன் கேட்டு சோற்றுத் தட்டுடன் வீட்டில் வந்து அமர்ந்து உண்ணும்.

“அத்தே சுருளப்பம் சுட்டுத் தருவீங்களா?”

“சுருளப்பம் எனக்கு சுடத் தெரியாதே. அம்மாட்ட கேட்க வேண்டியது தான?”

“போங்கத்த, எங்கம்மைக்கு எங்களப் பார்க்க எங்க நேரம். ஒன்னுல வேலைக்கு நேரமாச்சு இருக்கத சாப்பிடும்பா.. வேலைக்குப் போயிட்டு வந்தப்புறம் கேட்டா தலவலிக்குது தொல்ல பண்ணாதீங்கன்னு போய்ப் படுத்துருவா”

“அப்பாட்ட சொன்னா ‘குட்டிப் போட மட்டும் தான் தெரியும்.. ஒருமாதிரி நல்லப்பாம்பு சாதி ஒங்கம்ம’ன்னு ஏசிட்டு அவரும் பேசாம இருந்துருவாரு.”

“சரி, நான் யூ டூப்ல எப்படி பண்றாங்கன்னு பார்த்து செஞ்சுத்தாறேன்”

மணிமேடை துணிக் கடை ஒன்றில் கணக்கராக இருக்கிறாள் பத்மா.

“எப்படியோ உருட்டிப் பிரட்டி இருவது பவுனு சேத்துட்டேன். அப்டி இப்டின்னு இன்னும் ஒரு முப்பது பவுனு சேத்துட்டா எம்பிள்ளைகளுக்கு போதும்”

“குண்டுமணி தங்கத்துக்குப் போக்கில்லாம, கண்ட எறப்பாளிக கையில பிடிச்சுக் குடுக்க நிலைமைக்கு எம்பிள்ளேளத் தள்ள மாட்டேன்.”

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனக்கிருக்கும் சாமார்த்தியத்தை பேச்சு மிடுக்கில் உணர்த்தும் பத்மாவை ஆமோதிப்பது போன்று நகைத்துக் கடந்து விடுவாள் அனு.

மகப்பேறு பரிசோதனைக்காக கோபாலப் பிள்ளை மருத்துவமனைக்கு சென்று வந்த அன்று மாலை வேலை விட்டு வந்த பத்மா, “ரெண்டு பேரும் ஜோடியா டவுனுக்குள்ள சுத்துன மாதிரி இருந்துச்சு” என்று கேட்டாள்.

“சும்மா படம் பாக்கப் போயிருந்தோங்க்கா”

“நான் எதுவும் விஷேசம் போலன்னு நினைச்சேன்”

வழக்கம் போல சிரித்து சாமளித்தாள் அனு.

“எனக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே.. உடன தான், பச்சுன்னு ஒட்டிக்கிச்சு.. செப்டம்பர்ல கல்யாணம், ஜூன்ல மூத்தவா பொறந்தாச்சு” என்ற பத்மாவின் துள்ளலான பதில் அனுவிற்கு ரசிக்கவில்லை.

“எதுவா இருந்தாலும் நாகராஜாவுக்கு நேர்ந்துக்கோ. எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று இருக்கையில் இருந்து எழுந்தாள்.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் பத்மாவின் உடலில் வாளிப்பும் கட்டும் குலையாமல் இருப்பது முதன் முறையாக அனுவின் கண்களை உறுத்தத் தொடங்கியது.

4

ஒரு நாள், சுகக் கேடால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தன் இளைய மகளை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுமாறு வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து ஃபோன் செய்தாள் பத்மா.

நினைவிழந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த மகளைத் தூக்கி கிடத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார் மங்கள நாதன்.

“இந்த வீட்டுல வந்து பிறந்துட்டியே மக்ளே..” என்று தன் தலையில் அடித்தார். நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்த பிள்ளையின் நெற்றியில் பிரசாத மண் குறி இருந்தது.

அவ்வீட்டை அன்று தான் கவனித்தாள். பிள்ளைகள் சொன்ன வீட்டு விஷயங்கள் நினைவு வந்தது.

“எங்கம்மா எப்பவும் தனி ரூம்ல தான் படுப்பா. எங்களக் கூட உள்ள விடமாட்டா. நானும் அக்காவும் ஒரு ரூமுல படுத்துருப்போம். எங்க அப்பா வெளில ஹால்ல தான் படுப்பாரு. அப்பாட்ட எதுவும் பேசணும்னா கூட எங்க கிட்டத் தான் சொல்லுவா”

பத்மா ஒரு புதிராகப் படவே அவளுடனான பேச்சைக் குறைத்துக் கொண்டாள் அனு. இன்று பாம்பு வந்ததினால் அழைக்க வேண்டியதாகிவிட்டது.

மதிய உணவை முடித்துவிட்டு பாம்பு செத்த இடத்தில் அனு மண்ணெண்ணெய் தெளித்துக் கொண்டிருந்தாள்.

இறங்கி வந்த பத்மா, “எதுவும் நினைச்சுக்காத அனு… யேம் மனசுருகி வேண்டுன ஒன்னு நடக்கதா இருந்தா நான் நாகத்த பாத்துருப்பேன். அது எனக்குக் கண்ணுக்கு காட்ட வந்துரும். அத சாகப் பார்த்ததும், கோபப்பட்டுட்டேன். என்ன மன்னிச்சுடு” என்றாள்.

“ஸாரிக்கா… பதட்டத்துல தான் கல்லத் தூக்கிப் போட்டுட்டேன்… மனசே சரியில்ல.. இன்னைக்கு நீங்க கோவிலுக்குப் போறதா இருந்தா நானும் வாறேன்” என்றவள் கறவைப் பாலும், மஞ்சள் பொடியும் வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொண்டாள்.

5

வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் அனந்தனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமோ என்று பயந்திருந்த அனுவிடம், அவன் எதுவுமே கேட்கவில்லை. வேலை விட்டு வந்தவன் நேராகப் போய்க் குளித்து தயார் ஆகி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான்.

“கோவிலுக்குப் போயிட்டு வந்தப் பிறகு தான் ஒரு நிம்மதி” என்று இருவரும் பஸ் பிடித்துப் போய் வந்தக் கதையினைக் கூறிக்கொண்டே தோசை வார்த்து தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு வில்லைப் பிட்டு வாயில் இட்ட அனந்தனுக்கு உடல் சில்லிட்டு உள்ளுள் மெலிதாக உதறுவது போலிருந்தது. பற்கள் மெதுவாக அடித்துக் கொள்வது போலிருக்க நாவறண்டு தொண்டையில் எச்சில் பிரண்டு இறங்க மறுத்தது. நெஞ்சுக் கூட்டில் மென் நடுக்கம் எடுக்க, வயிற்றில் பிரளயம் கண்டது போன்றதொரு உணர்வு.

எழுந்து அடுப்படியில் அனு அருகில் சென்று சிரத்தையாக கதை கேட்கும் பாவனையில் நின்றவனின் கண்கள் ஒரு விதமாய் செருகி அனல் அடிப்பதைக் கண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

‘தோவாளைல இன்னிக்கு மல்லி விலை மலிவு போலிருக்கு’ என்று கொளத்து பஸ் ஸ்டாண்ட் பூக்கடையில் இருந்து, கூட ஒரு முழம் வாங்கி சூடிக் கொண்ட ஜாதி மல்லி வாசத்தின் விஷம் அனந்தனின் தலைக்கடித்து விட்டது.

6

தோசையிருந்த தட்டில் சட்டினி ஊற்றிக் கொண்டு அவளருகில் வந்தமர்ந்து ஊட்டிவிட்டு தானும் உண்ணத் தொடங்கினான்.

படுக்கை விரிப்பிற்குள் சுருண்டுக் கொண்டு வெட வெடத்தவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான்.

“நீங்க நாகராஜா கோவிலுக்குப் போயிருக்கீங்களா?”

“ஆமா, சின்ன வயசுல அம்மா கூட்டிப் போயிருக்கா. கை கால்கள்ள தோல் சுருங்கி வெடிச்சு பாளம் பாளமா இருந்த நோய் அங்கப் போய் தான் சரியாச்சு”

“இன்னைக்கு என்னா கூட்டம்னு நினைக்கறீங்க.. வரிசைல நின்னுதான் பால் ஊத்தினோம்”

“ம்”

“கருவறையை சுத்திட்டு இருக்கும் போது அதோட ஓலக் கூரைல இருந்து பொத்துனு ஒரு பாம்பு விழுந்து. அதுவும் என் கண்ணுல தான் பட்டிச்சு. அந்தக்காக்கு காணிச்சுக் குடுத்தேன். அனு நீ எவ்வுளோ குடுத்து வைச்சவன்னு தெரியுமான்னு கேட்டுட்டு அழுதுகிட்டே கொஞ்ச நேரம் கும்பிட்டு நின்னாங்க”

“ம்” அனந்தன் வேறெதோ யோசனையில் இருந்தான்.

“எல்லா வாரமும் கோவிலுக்கு வாறீங்களே, எதுவும் நேர்ச்சையாக்கானு கேட்டேன்”

“ம்” அவன் கண்கள் அனுவைக் கூர்ந்து கவனித்தன.

“பத்மாக்கா அவுங்க அம்மா வயித்துல இருக்கும் போது ஒரு பாம்பு ஏறிப் போச்சாம். அவுங்க வயசுக்கு வந்த மூணாவது வாரம் ஒரு வெள்ளிக் கிழமை ஒரு பெரிய பாம்பு அவுங்க உடம்பப் பின்னிக் கிடக்கிற மாதிரி கனவு கண்டு காச்சல்ல விழுந்துட்டாங்களாம். அப்புறம் நாகராஜா கோவிலுக்குப் போய் நாற்பது நாள் நெய் விளக்கு ஏத்தி தான் சரியாச்சாம்.”

“ம்” ஏற்கனவே தெரிந்த கதையைக் கேட்பவனைப் போல் சலிப்போடு பார்த்தான் அனந்தன். அவள் இன்னும் கூர்ந்து நோக்கியபடி தொடர்ந்தாள்.

“இப்போ திடீர்னு கொஞ்ச காலமா தொடர்ந்து அதே மாதிரி பாம்புக் கனவா வருதாம்”

இம்முறை சத்தம் வராமல் அனுவை நேரிட்டு பார்ப்பதைத் தவிர்த்து எழுவதற்கு அசைந்தான். அனு அமைதியாக அவனைப் பார்த்தபடி நின்றாள்.

இயல்பு நிலைக்குத் திரும்பியவனாக கடைசி தோசைத் துண்டினால் தட்டில் ஒட்டியிருந்த சட்டினியைத் துடைத்தெடுத்து அனுவிற்கு ஊட்டிவிட்டு அனந்தன் சமையல் கட்டிற்குச் செல்ல, கூகிள் தேடு தளத்தில் ‘ஏன் பாம்பு கனவு வருகிறது’ என்று தேடினாள் அனு.

மின் விசிறி தொங்கும் காண்கிரீட் கூரையின் மேல் தளத்தில், ஒருபுறம் ஒதுங்கி தனித்து உறங்கும் பத்மாவை நினைத்து ஒரு கணம் வருந்திய படி ஃபோனின் ஒளிர் திரையை மேல் தள்ளிக் கொண்டிருந்தாள். பத்மாவை நினைத்து தன் மனதில் தோன்றியது வருத்தமா, கோவமா இல்லை இரக்கமா என்று பல யோசனைகள்.

விளக்கணைத்து விட்டு அருகில் வந்து படுத்துக் கொண்ட அனந்தன் மூக்கினால் அவள் கன்னத்தில் கோலமிட்டபடி கால்களைப் பின்னிக் கொண்டான். அனுவிற்கு சட்டென அந்தப் பாம்பைத் தொட்டதைப் போலிருந்தது. ஒருவித சிலிர்ப்பும் அருவருப்பும். மறைத்துக் கொண்டாள்.

“இங்கப் பாருங்கத்தான், கனவுல பாம்பு வாரது அடக்கி வைச்சுருக்க தேக சுகத்துக்கான அறிகுறின்னு ஃபிராய்டுன்னு ஒரு ஃபிலாசபர் சொல்லிருக்கத.. இவளுக்கு அவ மாப்ள கூட இருந்தா என்னவாம்?”

அனந்தன் தன் முகத்தை விலக்கி நெற்றி, புருவம் நெறித்து அனுவைப் பார்த்தான். அவன் கண்கள் சீறுவதைப் போலிருந்தன.

“அமெரிக்கால கனவு ஆராய்ச்சி செய்ற ஒருத்தி சொல்றா கனவுல பாம்பு வந்துச்சுன்னா வேண்டாதவங்க யாரோ இடைஞ்சலா வாழ்க்கைல இருந்துட்டு இருக்காங்கனு அர்த்தமாம்.” அனு அவனது பதில் வந்தே தீர வேண்டும் என்பதைப் போல அவனைக் கூர்ந்து கவனித்தாள்.

அனந்தனின் கண்களில் செந்நரம்புகள் எழத் துவங்கி முகம் இறுகியது.

“தனியாப் படுக்குற அளவுக்கு மாப்ள பொண்டாட்டிக்க இடையில என்னவா இருக்கும்?” என்று கேட்கத் தொடங்கியவள் கைகளில் இருந்து போனைப் பிடுங்கி அணைத்து கட்டிலின் கீழ் தள்ளினான்.

அனு சட்டென எழுந்து உட்கார்ந்தாள். சற்று பயந்து கண் கலங்கியபடி இருந்தாள்.

“தூங்குற நேரம் பாம்பாராய்ச்சி இப்ப ரொம்ப முக்கியமா?” என்று பற்களைக் கடித்தான். விலகி, திரும்பி படுத்துக் கொண்டான். சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கி விட்டான். வழக்கம் போல நீண்ட குறட்டை.

நீண்ட நேரம் குழம்பியபடி யோசித்துக் கிடந்த அனு சோர்ந்து உறங்கிச் சரிந்தாள். பாம்புச் சுழல்களுக்குள் நுழைந்து முன் சென்று கொண்டிருக்கிறாள். எங்கும் இருளும் ஓலமும். இடையிடையே பாம்புச் சீறல்கள். தொலைவில் கலங்கிய பிம்பங்களாக நிர்வாண உடல்கள். தெளிந்து வந்த ஒரு வீட்டு முற்றம்.

ஈரத் துவாலையால் கொண்டை சுற்றிய பத்மா, முற்றத்தில் ஆயிரம் புள்ளி வைத்து காவல் இருக்க, காலருகே பூமித் துளைத்து வருகின்றன வெண் புழுக்கள் இரண்டு.

ஒன்றையொன்று பற்றிப் பின்னி வானெழும்பும் ஓருடல் புழுக்கள் திடீரென ஒரு ராஜ நாகமாயின.

அதன் அனல் மூச்சில் வான்மேகம் நஞ்சேறி கருக்க, அழுகலின் நிணம் சட சடவென பூமியில் விழுந்தது.

துளிகள் வெடித்து குட்டிகளாக விரிய, கொத்தாகப் பிடித்தள்ளி, புள்ளிகளின் மேல் உதறுகிறாள் பத்மா. நாககன்னியாக உருமாறி கைகளை நீட்டி வாவென அழைக்கிறாள்.

நெளியும் குட்டிகள் புள்ளிகளில் சேர்ந்து மலை போல் குவிந்து உயர்ந்து ஒற்றை சர்ப்பமாகி, பதறி விழுந்த அனுவின் உடலை நெறிக்கத் தொடங்கின. நாககன்னி தன் உடலைத் தன் கைகளால் தடவியபடி சீறிச் சிரிக்கிறாள். மூச்சு விடத் திணறி பயந்து அலறி விழித்தாள் அனு.

சற்றும் அசராமல் அனுவை இறுக அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான் அனந்த பத்மநாபன். சரியாக அந்நேரம் அவனது ஃபோனில் இருந்து டிங் என்று மணி சத்தம் கேட்க, கைநீட்டி எடுத்துப் பார்த்தாள். போனின் முகப்புப் படமாக ஒளிர்ந்தது நாகராஜா கோவில்.

***

சார்பினோ டாலி – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள் மீது பெருங்காதலுடன் எழுதிவருகிறார்.

 

சாட் ஜிபிடி

0

பாரதிராஜா

னக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

“இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்?

அதுதான் அடுத்து நடக்கப் போகிறது. இன்றும் நீங்கள் இதைச் செய்யலாம். இதே கேள்வியை, நீங்கள் இப்போது கூகுளிடம் கேட்டால், அதற்குப் பதிலாக அருகில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்தையும் பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களிடம் – அங்கு சென்ற நோயாளிகளிடம் பெற்ற மதிப்பீட்டை எத்தனை நட்சத்திரங்கள் என்பதோடு காட்டும். ஆனால் ஒரு மனிதர் உங்களிடம் பேசுவது போலக் கருத்துக்களைச் சொல்லாது. இது போல மருத்துவத்துறை என்றில்லை. எது பற்றி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் ஆயிரம் பேரிடம் கேட்டுப் பெறும் அறிவுரையை விட – அதுவும் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சொல்லப்படும் அறிவுரையை விட – தரவுகளின் அடிப்படையிலான குழப்பமற்ற – தெளிவான அறிவுரையை ஒரு இயந்திரத்திடமிருந்து பெறும் நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டோம். இப்போதைக்கு அது முற்றிலும் முதிர்ந்த நிலையை அடைந்துவிடவில்லை. ஆனால் அதற்கு நீண்ட காலமெல்லாம் ஆகப் போவதில்லை. இன்னும் சில ஆண்டுகள்தாம். சில மாதங்களிலேயே அதற்கான அறிகுறிகள் நன்றாகத் தென்படத் தொடங்கிவிடும்.

மேற்கின் புறக்கணிப்பு அரசியலின் மறுபக்கம்

0

-ரூபன் சிவராஜா

ண்மையான புறக்கணிப்பென்பது மனித உரிமையின் பொருட்டா? ஜனநாயகத்தின் பொருட்டா? அல்லது அப்பட்டமான அதிகார அரசியல், பொருளாதார நலன்களின் பொருட்டா என்றால் அதற்கான விடை மிக இலகுவானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் புறக்கணிப்பு என்பது அதிகார மற்றும் பொருளாதார அரசியலின் பாலானது. ஆனால் இம்முறை ரஸ்யா மீதான புறக்கணிப்புகளின் விளைவுகள் ஐரோப்பிய நாடுகளில் பல தளங்களில் விளைவுகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளன. எறிந்த பந்து சுவரிற்பட்டு எறிந்தவரின் முகத்திலேயே பட்டமை போன்றது ஐரோப்பா எறிந்த ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக்கணைகளின் விளைவு.

பலம்மிக்க அரசுகளின் பொருளாதாரப் புறக்கணிப்பு மற்றும் வணிக, ஏற்றுமதி, இறக்குமதி தடைகள் ஒரு நாட்டின் சர்வாதிகாரப் போக்கினையோ, அரசியலையோ, போர் முனைப்புகளையோ மாற்றியதான நிகழ்வுகளை வரலாற்றிற் காண்பது அரிது. பொருளாதார தடைகள் உகந்த விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அதாவது தடைவிதிப்போர் முன்வைக்கும் காரணங்களின் அடிப்படையில், தடைவிதிக்கப்படுவோர் மீது அவை தாக்கங்களை ஏற்படுத்துகின்றனவா என்றால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். அதுதவிர தடை கொண்டுவருவோர் முன்வைக்கும் காரணங்களின் அடிப்படைகளும் கேள்விக்குரியவை. குறிப்பிட்ட ஒரு நாடு மீதான பொருளாதாரப் புறக்கணிப்புகள், அந்நாட்டின் ஆட்சியாளர்களைவிட மக்களின் வாழ்வாதாரத்தையே அதிகமதிகம் சிதைக்கின்றன.

தலைகீழ் விளைவுகள்

பொருளாதாரப் புறக்கணிப்புகளுக்காகச் சொல்லப்படும் ‘அசலான’ நோக்கங்களுக்கு எதிரான விளைவுகளையே அவை ஏற்படுத்துகின்றன என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ரஸ்யா மீதான புறக்கணிப்புகள் அதற்கான சமகால எடுத்துக்காட்டு. ரஸ்யா மீதான அமெரிக்க – ஐரோப்பியக் கூட்டினது பொருளாதாரத் தடைகள் புதியவை அல்ல. அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. அதிலும் 2014இல் உக்ரைனின் ஆள்புலத்திற்கு உரித்துடையதாகவிருந்த கிரிமியா குடாவினைப் பலவந்தமாக ரஸ்யா தன்னுடன் இணைத்ததை (Annexation) அடுத்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஸ்யா மீது பல தடைகளைக் கொண்டு வந்தன. தடைகள் அவற்றின் நோக்கத்திற்கான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பின் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்காது.

2014இல் கொண்டுவரப்பட்ட தடைகள் உக்ரைன் தொடர்பான ரஸ்ய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக தீவிரப்படுத்தியுள்ளன. தற்போதைய தடைகள் ரஸ்யாவின் போர் முனைப்பினைத் தணிக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம். தடைகள் விளாதிமீர் பூதினைப் பலப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பூதினுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளன. தற்போதைய தடைகள், ஐரோப்பிய நாடுகளைப் பெரும் எண்ணெய், எரிசக்தி தட்டுப்பாட்டுக்குள்ளும், மின்சார விலையேற்றத்திற்குள்ளும் தள்ளியுள்ளன.

எதிர்ப்பு அரசியல்

புறக்கணிப்பு என்பது அடிப்படையில் ஒரு வகையான எதிர்ப்பு அரசியல் நடவடிக்கை. அது தார்மீக ரீதியில் சிக்கலானவற்றோடு உடன்பாடின்மையை வெளிப்படுத்துகின்றது. புறக்கணிப்பு என்பது ஒரு நிறுவனத்தின், ஒரு நாட்டின், ஒரு நிகழ்வின், அல்லது ஒரு உற்பத்திப் பொருள் மீதான எனப் பல்வகையினது. அதன் நோக்கம் தார்மீக ரீதியில் எதிர்ப்பவற்றின் மீது மாற்றத்திற்கான அழுத்தத்தினைப் பிரயோகித்தல், கோரிக்கையை முன்வைத்தல், பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல் மற்றும் உடன்பாடின்மை தொடர்பான தார்மீக இடைவெளியை அடையாளப்படுத்துதல் என்பதாகவும் அமைகின்றது. தார்மீகச் சீற்றத்தினை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவும் புறக்கணிப்பினைக் கொள்ளலாம். ஆகவே ஒரு எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக புறக்கணிப்பின் விளைவுகளுக்கு அப்பால், அதற்கு ஒரு பெறுமானம் உள்ளது. அதன் உள்ளார்ந்த அர்த்தம், இன்னொருவருக்கு அநீதியிழைப்பதன் மூலம் நன்மையடைவது தவறென்பதை உணர்த்துவது. இதுவே புறக்கணிப்பின் பின்னாலுள்ள நியாயப்பாடாகும்.

ஆனால் நவீன உலகின் பலமிக்க அரசு சார் தரப்புகளின் புறக்கணிப்புகள் அவற்றின் அரசியல்-பொருளாதார நலன்களின் பாற்பட்டவை. தார்மீக அடிப்படைகளின் பாற்பட்டவை அல்ல. ஜனநாயகம், மனித உரிமை, போருக்கெதிரான அழுத்தம் என்பதெல்லாம் முலாம் பூசப்பட்ட சொற்கள். அரசியல் நேர்மையுடனும் உண்மையான அர்த்தத்துடனும் முன்வைக்கப்படுபவை அல்ல. தமக்கு எதிரான தரப்புகளை அடிபணிய அல்லது வழிக்குக் கொண்டுவருவதே அமெரிக்க – ஐரோப்பிய புறக்கணிப்பு அரசியலின் நோக்கம். தம்மோடு ஒத்துப்போகின்ற சர்வாதிகாரிகள், மனித உரிமை மீறல்களை மேற்கொள்வோர், ஐனநானகத்தைப் பின்பற்றாதவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கு புறக்கணிப்பு அரசியலைப் பிரயோகிப்பதில்லை. தம்மோடு முரண்படுகின்ற, தமக்குச் சவாலான சக்திகளை நோக்கியே தமது பொருளாதாரத் தடைகள், புறக்கணிப்புகளை அவை நடைமுறைப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக பலஸ்தீனர்கள் மீது இன அழிப்பினையும் நிலப்பறிப்பினையும் எழுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கு எந்தவிதப் புறக்கணிப்புகளையும் இதுவரை செய்யவில்லை. செய்யப்போவதில்லை.

புறக்கணிப்பின் பாதிப்புகள்

ரஸ்யாவைப் பொருத்தவரை மொத்த தேசிய வருமானம், நாணயப் பெறுமதி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் எனப் பல தளங்களில் அதன் பொருளாதாரத்தின் மீது அமெரிக்க-ஐரோப்பியத் தடைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அத்தோடு சர்வதேச நிதிப்பரிமாற்றத்திற்கான பொறிமுறையிலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication -SWIFT) ரஸ்யாவை விலத்தியுள்ளமை சர்வதேசச் சந்தையிலிருந்தும் அதனை விலக்குகின்றது. அத்தோடு சாதாரண மக்களின் நாடுகடந்த நிதிப்பரிமாற்றத்தையும் தடுக்கின்றது. வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருட்களின் விலையேற்றம் என்பன மக்களின் நுகர்வுவலுவைச் சிதைக்கின்றன. சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வருமானத்தை இழக்கின்றன. சர்வதேச வான் எல்லைகளுக்குள் ரஸ்ய விமானங்கள் பறப்பதற்கான தடைகள் ரஸ்ய மக்களின் நாடுகடந்த பயணங்களையும் வெளியுலகுடனான உறவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது புறக்கணிப்பின் நோக்கம் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதாக முன்னிறுத்தப்பட்டாலும் அதனால் நடைமுறையில் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான்.

கட்டார் – உதைபந்தாட்ட உலகச் சுற்றுக்கிண்ணம் 2022

2022ஆம் ஆண்டு உதைபந்தாட்ட உலகச் சுற்றுக்கிண்ணம் கட்டாரில் இடம்பெற்றபோதான விமர்சனங்கள் கட்டாரின் மனித உரிமை, தொழிலாளர் உரிமை மீறல்கள் குறித்த கவனக்குவிப்பினை ஏற்படுத்தின. சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட இன்னபிற உரிமை அமைப்புகள் ஊழியர்களின் நிலைமைகளை ஆராய்ந்து இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் கட்டாரில் அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே உட்பட்ட பல்வேறு மேற்கு நாடுகளின் பெற்றோலிய மற்றும் ஏனைய உற்பத்தி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவற்றின் தொழிலாளர்களும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு உட்படுகின்றனர் என்பது இலகுவில் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு விடுகின்றது.

தங்குவிடுதி(Hotel) பெருநிறுவனங்களான Accor> Hilton மற்றும் கட்டடக்கட்டுமான நிறுவனமான Vinci ஆகியவை குடிபெயர் தொழிலாளர்களின் (Migrant workers) உழைப்பை துஷ்பிரயோகம் செய்த நிறுவனங்களின் வரிசையில் உள்ளடங்குகின்றன என நோர்வேயின் தேசியத் தொலைக்காட்சி (NRK) அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தது. நோர்வேயின் எண்ணெய் நிதியம் (Petroleum fund norway) இந்த நிறுவனங்களில் முதலீடு செய்கிறது என்பதையும் NRK வெளிப்படுத்தியது. ஆனால் Accor> Hilton மற்றும் Vinci ஆகியன பிரெஞ்சு மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிடப்படவில்லை.
கட்டார் நாட்டின் 2.6 மில்லியன் மக்கட்தொகையில் 90 வீதமானவர்கள் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு குடிபெயர் தொழிலாளர்கள். இவர்களிற் பெரும்பான்மையினர் வங்காளதேசம், பிலிப்பைன், இந்தியா, நேபால் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள். பல தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மிக மோசமான வாழ்விடச் சூழலில் அவர்கள் வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள், வேறு வேலைக்கு மாறவோ, நாட்டைவிட்டு வெளியேறவோ அனுமதிக்கப்படுவதில்லை. தொழிற்சங்க உறுப்பினர்களாக முடிவதில்லை, அதனால் ஒரு பொதுவான தொழிலுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க முடிவதில்லை. அத்தோடு மிக ஆபத்தான தொழிற்சூழலில் பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகின்றது. பாலைவனக் கொடுவெயிலில் பலர் இறந்துள்ளனர். அந்த சாவுகளுக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை போன்றனவே தொழிலாளர் உரிமை மீறல்கள் சார்ந்து கட்டார் மீதான சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட அமைப்புகளின் குற்றச்சாட்டுகள்.

கட்டார்: எண்ணெய், எரிவாயு வளம்

அரபு நாடுகளிலேயே வறுமை மிகுந்த நாடாகவிருந்த கட்டார், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் எண்ணெய் வள அடைவினாலும், 1971இல் சுதந்திரத்தைத் தொடர்ந்தும் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1970 களில் உட்கட்டுமானம், சேவைத்துறை மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் அங்கு நவீனமயமாக்கல் நிகழத்தொடங்கியது. முதன்மையாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் நாடு முன்னோக்கி நகர்ந்தது. ரஸ்யா மற்றும் ஈரானுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியைக் கட்டார் கொண்டுள்ளது.
கட்டார் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தவிர இயற்கை வளங்கள் எவற்றையும் கொண்டிராத பாலைவன நிலம். நாட்டின் பொருளாதார மேம்பாடானது, வெளிநாட்டு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. தற்போது தோராயமாக. வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 90 வீதமெனத் தரவுகள் கூறின. 2005 இல், எண்ணெய் மற்றும் எரிவாயு மொத்த தேசிய வருமானத்தில் 60 வீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 85 வீதம். கிட்டத்தட்ட முழு எண்ணெய் ஏற்றுமதியும் ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. விற்கப்படுகிறது, ஜப்பான் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது. எண்ணெய் மட்டுமல்ல, எரிவாயுக்கான முதன்மைச் சந்தையாகவும் ஆசியா உள்ளது. அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் கட்டாரின் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளம்

1991இல் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போரின் விளைவாக கட்டாருடனான அமெரிக்க உறவு வலுப்பெற்றது. அதுவொரு அரசியல், இராணுவ பொருளாதார உறவு. 1992இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, வளைகுடாவில் தனது முதன்மையான இராணுவ இருப்பினை அமெரிக்கா இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் கட்டாரில் கட்மைத்துக்கொண்டது. சவுதி அரேபியாவிற்குப் பின்னர் பிராந்தியத்தின் அடுத்த முக்கிய அமெரிக்க இராணுவக்கூட்டு கட்டார் ஆகும். கட்டாரில் அல்-உதீத் பிராந்தியத்தில் அமெரிக்கா பாரிய இராணுவத்தளத்தினைக் கொண்டுள்ளது. இது கட்டாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாயினும் அமெரிக்க விமானப்படையின் முன்னணித் தளமாகும். 2001 தொடக்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடாத்திய போரிலும், பின்னர் 2003இல் ஈராக்கிற்கு எதிரான அதன் போரிலும் இவ்விமானத்தளம் முக்கிய பங்காற்றியது.

கட்டாருடனான அமெரிக்க உறவு மேற்சொன்ன வகையில் இருக்க, ஐரோப்பிய நாடுகளும் அதனுடன் வணிக உறவினைக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக ரஸ்யாவிலிருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை வெகுவாகக் குறைத்துவரும் ஐரோப்பிய நாடுகள் கட்டாரிலிருந்து எரிவாயு இறக்குமதிக்கான உடன்படிக்கைகளைச் செய்துவருகின்றன. 2022இறுதியில் ஜேர்மன் அவ்வாறான உடன்படிக்கையினைச் செய்தது. ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன் திரவ இயற்கை எரிவாயுவை ((Liquefied natural gas – LNG) வழங்கும் ஒப்பந்தம் அதுவாகும். இது குறைந்தது பதினைந்து வருட தொடர் விநியோகத்திற்கான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் எரிசக்தி உறுதிப்பாட்டிற்குக் கட்டார பங்களிக்கும் என்று கட்டாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி தெரிவித்திருந்தார். கட்டார், நோர்வே உட்பட பிற நாடுகளிலிருந்து பெருமளவிலான எரிசக்தி இறக்குமதிக்குரிய ஒப்பந்தங்களை ஜேர்மனி செய்துவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிசக்தி விநியோகத்தினை அதிகரிக்கக் கோரிய பேச்சுவார்த்தைகளை 2022 ஜனவரி காலப்பகுதியிலிருந்தே அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் கட்டார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க – ஐரொப்பிய மனித உரிமை, ஜனநாயகப் போர்வை

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் உலகெங்கும் தமது கொலனித்துவ ஆக்கிரமிப்புகளின் மூலம் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பினர். மதமாற்றறப் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். அந்தத்த நாடுகளின் மக்கள் சமூகங்களை இன, மத, மொழி ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு, அரசியல், இன, மத முரண்பாடுகளுக்கு வித்திட்டனர் என்பது வரலாறு. ஆனால் இன்றைய மேற்கு நேரடியாக மதம், கடவுள், யேசு என்று உலக நாடுகளில் இறங்குவதில்லை. இப்பொழுது மனித உரிமை, ஜனநாயகம், பெண்ணுரிமை, LGTBQ உரிமைகள் என்பனவே பிற பிராந்திய நாடுகள் மீதான மேற்கின் தலையீடுகளுக்கான கருவிகள். வுடிவங்கள் மாறினாலும் பிற கீழைத்தேச நாடுகள் மீது தமது நம்பிக்கைகளைப் பிரயோகிப்பதிலிருந்து மேற்கு மாறவில்லை. தமது நம்பிக்கைகள், நலன்களுடன் உடன்படாத நாடுகள், தரப்புகள் மீது பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கின்ற அணுகுமுறையை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

அமெரிக்கப் பொருளாதாரத் தடை அணுகுமுறை சார்ந்து ரஸ்யாவிற்கு முந்தைய முக்கிய எடுத்துக்காட்டு கியூபா. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நடைமுறைப்படத்தி வருகின்றது. தான் மட்டுமல்லாமல் தனது நட்புநாடுகள் மற்றும் தான் வணிக உறவுகளைக் கொண்டிருக்கும் அனைத்துக் கட்டமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் நாடுகளையும் நிர்ப்பந்தித்து வந்துள்ளது. கியூபாவுடன் வணிக உடன்படிக்கைகளைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகக்கூட அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். இதன் விளைவாகவே கியூபா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றது. கட்டட உபகரணங்கள், கார்கள், மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், ஆடைகளை இறக்குமதி செய்வதிற்கூட கியூபா நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. அத்தோடு சர்வதேச நிதிப்பரிமாற்றம், அமேசோன், ஸ்கைப், சூம் போன்ற கொள்வனவு மற்றும் தொடர்பாடற் தொழில்நுட்ப இணையச் செயலிகளையும் கியூபா பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது.

கியூபா மீதான தடைகள்

1996இல் கியூபா இணைய இணைப்பினை நிறுவ முனைந்தபோது அது தடுக்கப்பட்டது. இணைய இணைப்புத் தொழில்நுட்பத்தினை ஏற்படுத்த முன்வந்த Grupo Demos என்ற மெற்சிக்கோ நாட்டு நிறுவனத்தின் மீது அமெரிக்கா அபராதம் விதித்ததையடுத்து அந்நிறுவனம் பின்வாங்கியது. கியூபாவிற்கு கணினித் தொழில்நுட்பக் கருவிகளை விற்பனை செய்த சுவீடனைச் சேர்ந்த எரிக்சூன் (Ericsson) நிறுவனத்திற்கும் 1.75 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்நிறுவனம் மன்னிப்புக்கோரி, விற்பனைக்குப் பொறுப்பான அதிகாரியைப் பதவியிலிருந்தும் நீக்கியது. 2011 வரை கியூபா செயற்கைக்கோள் மூலமான இணைய இணைப்பினையே கியூபா பொண்டிருந்தது. பின்னர் வெனிசுவோலாவினால் கடற்கீழ் கேபிள் மூலமான இணைய இணைப்பு உருவாக்கப்பட்டது.

இத்தனை தடைகளின் மத்தியிலும் மருத்துவத்துறையில் கியூபாவின் சாதனைகள் உலகறிந்தவை. சிறந்த விளைவுத் தாக்கம் மிக்க கொரோனாத் தடுப்பூசியை கியூபா உருவாக்கியிருக்கிறது. அதனை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்ளாததால், கியூபாவிற்கு தடுப்பூசி உற்பத்தியினாற் கிடைக்கக்கூடிய வருமானம் இல்லாமற் போயுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரபட்சமான தடுப்பூசிப் பங்கீட்டினையும் வறிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் பற்றாக்குறையும் தொடர்கின்றன.

இரட்டை அணுகுமுறை

உதைபந்தாட்ட உலகச்சுற்றுக் கிண்ணம் கட்டாரில் இடம்பெற்ற போது, பல உலக ஊடகங்களில் அதனைப் புறக்கணிப்பது தொடர்பான வாதங்கள் எழுந்தன. முதலில் அங்குள்ள குடிபெயர் தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றன. பின்னர் கட்டார் ஓரினப் பாலுறவாளர்களைச் சகிப்பதில்லை, பெண்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற நாடு என்பதான வாதங்கள் முன்னிடம் பெற்றன.

அடுத்த உதைபந்தாட்ட உலகச்சுற்றுக் கிண்ணப் போட்டிகள் அமெரிக்காவில் 2026 இடம்பெறவுள்ளன. அப்போது புறக்கணிப்புத் தொடர்பான கோரிக்கைகள் ஒலிக்கப்போவதில்லை. நவீன யுகத்தில் உலகின் பல பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையிலான போர்களைத் தொடங்கிய நாடு அமெரிக்கா. அணுவாயுதத்தைப் பொதுமக்கள் மீது பிரயோகித்த (1945இல் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் நாகசாக்கியிலும்) உலகின் ஒரேயொரு நாடு. சிறுவர் உரிமைகளுக்கான ஐ.நா உடன்படிக்கையிற் கையெழுத்திடாத ஒரே நாடு (18 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கக்கூடிய வசதிக்காக). எனவே மனித உரிமை, சிறுவர் உரிமை, கறுப்பின மக்கள் மீதான படுகொலைகள், உலகில் அதிக போர்களுக்குக் காரணம் என்ற காரணங்களின் பொருட்டு அமெரிக்காவை எந்த நாடும் புறக்கணிக்க முன்வரப் போவதில்லை. இதுதான் இன்றைய அரசுகளின் ஜனநாயக நடைமுறை.

அதிகார அரசியலும் பொருளாதார நலன்களும்

உண்மையான புறக்கணிப்பென்பது மனித உரிமையின் பொருட்டா? ஜனநாயகத்தின் பொருட்டா? அல்லது அப்பட்டமான அதிகார அரசியல், பொருளாதார நலன்களின் பொருட்டா என்றால் அதற்கான விடை மிக இலகுவானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் புறக்கணிப்பு என்பது அதிகார மற்றும் பொருளாதார அரசியலின் பாலானது. ஆனால் இம்முறை ரஸ்யா மீதான புறக்கணிப்புகளின் விளைவுகள் ஐரோப்பிய நாடுகளில் பல தளங்களில் விளைவுகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளன. எறிந்த பந்து சுவரிற்பட்டுத் எறிந்தவரின் முகத்திலேயே பட்டமை போன்றது ஐரோப்பா எறிந்த ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக் கணைகளின் விளைவு. பொருளாதாரத் தடைகள், புறக்கணிப்புகளை ஜனநாயகம், மனித உரிமைகள், போருக்கெதிரான உன்னத நோக்கங்களாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் பிரஸ்தாபித்து வருகின்றன. அதற்கு அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான ஊடகங்களும் துணைநிற்கின்றன. உன்னத நோக்கமாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் மக்களிடம் அதனை எளிதில் விற்றுவிட முடியாது என்பதால் ஏகாதிபத்திய இலட்சியங்கள் நவீனச் சொல்லாடல்களாலான மொழியை அணிந்து வலம் வருகின்றன.

***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்

நீர்ப்பறவை

0

சுஷில்குமார் பாரதி

மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டேயிருக்க முடியும். நீரில் நீராக, மீனாக, பற்றற்று மிதந்தலையும் பூஞ்சையாக, எங்கோ உடைத்தெறியப்பட்ட கட்டுமரத்தின் செல்லரித்த துண்டுப்பலகையாக. கடந்த பல மணி நேரங்களாக, பல நாட்களாகக் கூட இருக்கும், அடியில் இருந்து மேலெழுந்து என்னை மெல்லத் தீண்டிச் சென்ற பல்லுயிர்களும், மொத்த நிலப்பரப்பிலிருந்து விலகித் தனியுலகமாகக் கிடக்கும் இந்த மொத்த நீர்ப்பரப்பும், மேலிருந்து சாரலாகவும், ஊசி முனைக் காற்றெனவும் என்னைப் பரிசோதித்துப் பார்க்கும் இந்தப் பெரிய வான்வெளியும் என்னை முழுதாக ஏற்றுக்கொண்டு விட்டன. அதிலும் என் பாதங்களில் மணிக்கொரு முறை வந்து விளையாட்டாகக் கடித்து விளையாடும் அந்தச் சின்னஞ்சிறு மீன்கள், என்னை தங்கள் இரையென ஆக்கிக்கொள்ள விருப்பமின்றி பிழைத்துப் போக அனுமதித்திருக்கும் பெரும் சுறாக்கள், இந்த எளிமைக்கும் வலிமைக்கும் இடையே முதல் சில மணி நேரங்கள் போராடி, தத்தளித்து தான் கிடந்தேன். முடிந்த மட்டும் வேகமாக நீந்தி இவற்றிலிருந்து தப்பி விட முயன்றேன். கைகால்கள் வலியில் பிய்த்துக்கொண்டு போய்விடும் கணத்தில் மொத்த உடலும் நீண்ட பெருமூச்சு விட்டு ஓய்ந்து நின்றது. உள்ளிருந்து வெளிவந்த இதயத்துடிப்பின் கனத்த சத்தம் எனைச் சுற்றிய தண்ணீரில் வெளிநோக்கிய அலைகளை உருவாக்கியது. விரிந்து சென்ற அலைகளின் தூரத்து முடிவில் தெரிந்த ஒற்றைச் சிறு புள்ளி வெளிச்சம். அதைக் கண்ட நொடியில், எனக்கான முடிவு தெளிவாகத் தெரிந்தது. செய்வதற்கு ஒன்றுமில்லை. செய்வதற்கு ஒன்றுமேயில்லை. சற்று நேரம் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிணுங்கினேன், கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன், என்னை நானே அடித்துக் கொண்டேன், தலை முடியைப் பற்றி இழுத்தேன், மேலாடையைக் கிழித்து எறிந்தேன், முடிந்த மட்டும் ஓங்கிக் குரலெழுப்பி ‘கடவுளே’ எனக் கத்தினேன். அப்போது கழுத்தில் ஒட்டிக் கிடந்த சிலுவையை எதேச்சையாகப் பற்றினேன். சமீர் கொடுத்தது. சட்டென அவனது கைகளின் வெம்மை என் உடல் முழுதும் பரவியது. முதல் பறத்தலின் பயத்தினூடே என்னைப் பற்றிய அவன் கைகள் கொடுத்த வெம்மை. என்னையறியாமல் ஒரு மெல்லிய புன்னகை என் உடலெங்கும் பரவியது. நீர்ப்பரப்பு முழுவதும் நீல நிற ஒளிபெற்று மிளிர்ந்தது. உள்ளிருந்த ஜெல்லி மீன்களெல்லாம் என்னோடு சேர்ந்து மின்னின. மேலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவுக்கு அதுவொரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதன் உச்ச கணத்தில் என் இடப்புறமிருந்து பாய்ந்து மேலெழுந்த ஒரு பெரிய டால்பின் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டிப் பாடியபடி மறுபுறம் விழுந்தது. அடுத்த நொடி அத்தனை சொலிப்பும் அடங்கி நீர்ப்பரப்பு சலனமற்று உறைந்த பனித்தரையென ஆனது. என்னால் செய்யக்கூடியதெல்லாம் இதோடு ஒன்றிக் கிடப்பது மட்டும்தான். நீரோடு நீராக, மீனோடு மீனாக, என்னால் எதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதைச் செய்வது தான். அந்த கணத்திலிருந்து இதோ இப்போது வரை துளியும் வலியின்றி சிறு முயற்சியுமின்றி மிதந்து கொண்டிருக்கிறேன். மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டேயிருக்க முடியும்.
சமீரை சந்தித்ததைப் பற்றி சொல்ல வேண்டும்தான். ஆனால், அதைப் பிறகு சொன்னால்தான் சரியாக இருக்கும். இப்போது நம் உரையாடலில் ஒரு புரிதல் உருவாகுவது அவசியம். என்னால் எதெல்லாம் சாத்தியம் என்பதைப் போகிறபோக்கில் மிகைப்படுத்தி விடவும் கூடாது. இன்னும் எவ்வளவு நேரம் என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் முக்கியம். Bygones are bygone. சரியான சொற்கள்தானா என்றும் யோசிக்கிறேன்.

எங்கள் பயணம் மிக மகிழ்ச்சியாக ஆரம்பித்தது. ஒரு வாரம் முன்பு. சமீரைச் சந்தித்து இரண்டு மாதங்களில் மேற்குக் கடற்கரையோர கப்பல் பயண நிலையத்தை வந்தடைந்தோம். உடன் வந்தவர் யார் யார் என்பதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்கிறேன். அதி நவீன மீன்பிடிக் கப்பல். ஏறிய சில மணி நேரங்களில் மொத்தக் கப்பலின் செயல்பாடுகளை விளக்கி, துடிக்கத் துடிக்க ஒரு செந்நிற மீனைப் பிடித்து என் கைகளில் கொடுத்தார் ஒருவர். பிடித்தால் விலைக்குக் கூட கொடுக்காமல் தங்கள் வீடுகளில் மட்டுமே சமைக்கும் உலகின் உச்சகட்ட சுவையுடைய மீன் என்றார். எனக்காக அங்கேயே அப்போதே அதை சமைக்கவும் ஆரம்பித்தார். இரண்டு இரவுகள் அந்தக் கப்பலில் பயணம் செய்வது திட்டம். இலக்கற்ற பயணமாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் இந்தக் கடல் பகுதியில் எழுந்து மூழ்கிக் கிடப்பதாக நம்பப்படும் நல்லதிருஷ்டம் கொடுக்கும் பவளத்தீவுகளில் ஒன்றையாயினும் பார்த்துவிட வேண்டும் என்றும் சிறு ஆசை. அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே எல்லாரும் சொன்னார்கள். ஆனால், நான் அத்தீவுகளில் ஒன்றில் இறங்கி நிற்பதை தேஜாவு போலக் கண்டிருந்தேன். சரி, பார்க்கலாம் என்கிற முடிவு. சமீர் சொன்னதைப் போல நடப்பது நடந்தே தீரும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அரை நாள் பயணத்தில் கடலும் கடல் காற்றும் பழகிப் போன மாதிரியிருந்தது. உடன் வந்தவர்களில் சிலர் குமட்டிக்கொண்டு தங்கள் அறைகளுக்குள் ஓய்ந்துவிட, நான் மட்டும் அக்கப்பலின் முனையில் நின்று என் முன் விரிந்து விரிந்து சென்ற நீலப் பெருவெளியில் கைவிரித்து முடிந்த மட்டும் அதைப் பருகிக் கொண்டிருந்தேன்.

“இந்தப் பகுதியில் உங்களுக்கு ஒன்றை காட்டித் தருகிறேன் மேடம். நீங்கள் அதை வேறெங்கும் பார்க்கவே முடியாது.”

“அப்படியா? அப்படியென்ன அதிசயம் வைத்திருக்கிறீர்கள்? கடல் கன்னியா? நீரில் நடக்கும் முனிவரா? இல்லை, மிதக்கும் நிலாத் துண்டா?”

“கொஞ்சம் பொறுங்கள். அதையெல்லாம் விட உங்களுக்குப் பிடித்ததாகப் போகும் ஒன்று. அது வருவதற்கான அறிகுறி தெரிகிறது. நீங்கள் அதிருஷ்டசாலிதான்.”

ஆர்வம் மேலிட கைகாட்டிய திசையில் வானை வெறித்திருந்தேன். கப்பலின் இயந்திரத்தை நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு அமைதியாக நின்றார். சற்று நேரத்தில் சிறு சத்தமுமின்றி அசைவின்றி மொத்தக் கப்பலும் உறைந்து நின்றது. மிக மெதுவாகத் தன் கைகளை நீட்டினார் அவர். பச்சைப் பசேலென்ற சிறு பூஞ்சையை கைவிரல்களில் பிடித்தபடியிருந்தார். குழப்பமாகப் பார்த்ததும் கண்ணிமை அசைத்துப் பொறுமையாக இருக்கச் சொன்னார். விரிந்த கடலையும் பொதிந்த வானையும் நோக்கிப் பெருமூச்சுகளின் இடையே ஏதேதோ யோசித்தபடி நின்றேன். சமீர், அவன் கைகளின் வெம்மை. அந்தப் பறத்தலின் அழுத்தம். என் அப்போதைய இதயத் துடிப்பு, முடித்துவிட நினைத்திருந்த என்னென்னவோ, சமீரின் அன்றைய வார்த்தைகள்.

அருகே அசைந்து நின்ற அவரின் கை மெல்ல நளினமாக கொடி போல அசைந்தது. அவர் முகம் சட்டெனப் பிரகாசம் கொண்டது. ஒரு நொடியில் அத்தனை அழகான ஓர் ஆணாக மாறி நின்றார். என் எண்ணத்தைத் திசை திருப்பி அவர் கையைக் கூர்ந்து கவனித்தேன். பிடித்திருந்த பூஞ்சை மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்க, கண்களால் கை முனையைச் சுட்டிக் காட்டினார். அப்பூஞ்சையின் இடையிலிருந்து மெல்லிய கீச்சுச் சத்தம் வந்ததை அப்போதுதான் கவனித்தேன். கூர்ந்து பார்த்தபோது உடல் புல்லரித்துப் போனது. என்னையறியாமல் கண்கள் கண்ணீர் விட்டன. பச்சைப் பூஞ்சையின் நடுவே ஒற்றை அலகொன்று அதைக் கொத்திக் கொத்தி தின்று கொண்டிருந்தது. அலகு மட்டுமேயான அந்தச் சின்னஞ்சிறு பறவை. நம்ப முடியாமல் கை நீட்டி அதைத் தொட்டு விட நினைத்தேன். தலையாட்டி வேண்டாமென்றார். அப்போது அது தன் மெல்லிய இறகுகளை அசைத்தது. அந்தச் சத்தம் எனக்கு நிச்சயம் கேட்டது. வெறும் அலகாலான அந்தப் பறவையின் சிறகெங்கே எனக் கூர்ந்த போது, அதுவரை கவனிக்காமல் விட்ட அதன் நிறமற்ற ஒளி ஊடுருவும் சிறகுகள் எனக்குப் புலப்பட்டன. அந்த ஒரு நொடியில் அப்பறவையைப் போலவே நானும் ஆகிவிட்டேன். சுற்றியிருந்த வெளியும், காற்றும், நிறமும் எல்லாமும் அப்பறவையின் உடலில் நுழைந்து வெளியேறியது. அந்த அலகுகள் பூஞ்சையோடு விளையாடிக் கொத்தித் தின்பதை மட்டுமே மொத்த வாழ்வின் செயலெனச் செய்தன. எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என நினைவில்லை. மீண்டபோது செந்நிற மீன் குழம்பும் சுடு சோறும் எனக்காகக் காத்திருந்தன.

நான் மிதந்து கொண்டிருக்கும் பகுதி அதிருஷ்ட பவளத் தீவுகளின் அருகே இருக்கலாம், அதற்குச் சாத்தியமே இல்லாமலும் இருக்கலாம். ஆனால், என் உடல் நினைவிற்கு வரும்போதெல்லாம் அந்த நிறமற்ற பறவையும் கண்முன்னால் வந்துவிடுகிறது. மிச்சமிருக்கும் அத்தனை காலமும் என்னால் இப்படி மிதந்து கொண்டிருக்க முடியும். என்னால் இப்படிப் பறந்து கொண்டிருக்க முடியும். அந்த நிறமற்ற பறவை ஒருவேளை சமீர்தானோ?
அப்படியொரு புயலும் மழையும் வருவதற்கான சாத்தியமே இல்லாத காலம் தான். ஆனாலும் அப்படியொரு புயலும் மழையும் வந்தது. கப்பலிலிருந்த ஒருவர் முகத்திலும் திரும்பிச் செல்வதற்கான நம்பிக்கை தெரியவில்லை. ஒவ்வொரு அலையிலும் வானில் பாய்ந்து மீண்டும் நீரைத் தொடுவதற்குள் அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது. பலர் தங்கள் கடைசி ஜெபத்திற்குள் மூழ்கிவிட்டிருந்தனர். அதுதான் சரியான காரியமாக இருந்தது. அது மட்டுந்தான் செய்யக்கூடிய காரியமாகவும் இருந்தது. ஆனால், என் மனம் முழுக்க சமீரும் அந்த நிறமற்ற பறவையும் தான். ஆச்சரியம், பவளத்தீவுகளைப் பற்றி நான் சிறிதும் நினைக்கவில்லை. நீண்ட நெடும் அலைகளின் ஒரு கணத்தில் எங்கள் கப்பல் ஒரு பெரிய பாறையில் மோதியது. அது பாறை மாத்திரமா என்ன? ஒரு பெரும் மலையின் கண்ணுக்குத் தெரியும் வெறும் முனைதானே ஒட்டு மொத்த வேறுலகின் துவக்கமாக இருக்கும். அந்த முனை எங்கள் கப்பலைச் சிதைத்தெறிந்தது. ஜெபங்களை மறந்து தெறித்த ஓலங்களைக் கேட்பதற்கு எவருக்கும் நேரமில்லை. அடுத்த சில மணி நேரங்கள் மூழ்குவதும் மிதப்பதுமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்தேன். சமீரின் சொற்கள் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தன. நிறமற்ற பறவை கீச்சுக் குரலில், ‘சமீர் சொல்வதைக் கேள், அதுதான் சரி’ என்றது. அதன் நிறமற்ற சிறகுகள் சிறிது சிறிதாக விரிந்து பெரியதாகி என்னைத் தாங்குவதை உணர்ந்தேன். சற்று நேரத்தில் என்னை மொத்தமாகச் சூழ்ந்து ஒற்றைப் பந்தென ஆகி மிதக்கச் செய்தது. கைகளும் கால்களும் கரைந்து இல்லாமலாகி அப்பறவையின் சிறகென மாறின. நானே அப்பறவையென ஆனேன். உடல் முழுதும் உப்புநீர் நிறைந்து, உள்ளே கொள்ளமுடியா கணத்தில் வெடித்துச் சிதறினேன். நீண்ட உறக்கத்திற்குப் பிறகு சூரியனின் சுட்டெரித்த ஒளியில் கண்விழித்த போது இதோ இப்போது மிதப்பதைப் போல மிதந்து கொண்டிருந்தேன்.

அதென்ன? மீண்டும் ஒரு பாறையின் உச்சியா? பச்சையாகத் தெரிகிறதே! சற்று நீந்தினால் அடைந்து விடலாம். இல்லை, வெறும் கானல் நீரா? நீரின் மேல் கானல் நீர் தோன்றுமா என்ன? ஒருவேளை தொலை தூர நாடொன்றின் கரையாக இருக்குமோ? நீந்தித்தான் பார்ப்போமே என்று கைகளை நீட்டி அசைத்த நொடியில் பின்னிருந்து ஒரு விசித்திர சத்தம். உறுமல் போன்ற சத்தம். மீன்கள் உறுமுமா என்ன? ஒருவேளை ஏதும் ஆட்கொல்லி மீனாக இருக்குமோ? எத்தனையோ சுறாக்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்ட பிறகு இதென்ன புதிதாக? பயப்படுகிறேனா? சமீரும் நிறமற்ற பறவையும் இந்த உறுமலில் காணாமல் போய்விட்டார்களா என்ன? உறுமல் இன்னும் இன்னுமென நெருங்கி வந்தது. இந்த உடலின் மாமிச வாடையென்ன அதை அப்படி இழுக்கிறதா? என்னைத் தின்று அதன் பசி எவ்வளவுதான் அடங்கி விட முடியும்? ஏன் இப்படி நடுங்குகிறேன்? கைகளையும் கால்களையும் அதிகபட்ச உழைப்பில் அடுத்த சில நிமிடங்கள் வைத்திருந்தால் ஒருவேளை பிழைத்து மிதப்பேன். அல்லது விட்டுவிடவா? சமீர் அதை ஒத்துக் கொள்ளவே மாட்டானே!

எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த அந்த நாள் என்னை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். என்னை நானே அழித்துக் கொள்ள என்னவெல்லாம் வழிகள் என்று ஆராய்ந்து அறிந்தேன். அம்முடிவின் விளிம்பில் சட்டெனக் கிளம்பி எங்கென்றில்லாமல் எங்கேயோ சென்றேன். ஏதோ ஒரு இரயில். பின், ஏதோ ஒரு பேருந்து. எங்கோ உண்டு எங்கோ படுத்துறங்கி மூன்று நாட்களுக்குப் பிறகு கண் விழித்த போது அந்தச் சிறிய குன்றின் உச்சியிலிருந்த ஒரு நாடோடியின் குடிலில் கிடந்தேன். அவ்விடம் வயநாடு என்றார்கள். அவர்கள் உச்சரித்த மலையாளம் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. பலர் கன்னடா பேசினார்கள், பலர் தமிழர்கள். அந்த நாடோடி அவசர அவசரமாக ஓடி வந்து வெளியே அழைத்தான். முடித்துக் கொள்ளலாம் என்பதே எண்ணமாகக் கொண்டு கடைசி இரவைக் கழித்திருந்த நான் அவன் அழைத்ததில் ஆர்வமாகி துள்ளிக் குதித்து வெளியே சென்றேன். காற்றைக் கிழித்தபடி எங்கள் தலைக்கு மேல் விர்ரென்று பறந்தது ஒரு சிறிய விமானம். இவ்வளவு சிறிய விமானமா என்று வியந்து பார்த்தபோது, அது ஒரு மனித விமானம் என்றான் அந்த நாடோடி. பின், கூர்ந்து கவனித்தபோது தான் அது ஒரு கிளைடர் வகை விமானம் என்று கண்டேன். இரண்டாம் கிளைடர் வந்தபோது ஊ, ஊ-வென அலறியபடி பறந்தாள் ஒரு பெண்மணி. அவளோடு சேர்த்துக் கட்டப்பட்டு கிளைடரைச் செலுத்தினான் ஓர் இளைஞன்.

“என்ன, உனக்கும் இப்படிப் பறக்க வேண்டுமா?”
வெகு சீக்கிரம் மொத்தமாகப் பறக்கத்தானே போகிறேன் என்று தோன்ற சிரித்தபடி, “ஆமாம், நீயும் வருகிறாயா?” என்று கேட்டேன்.
“நான் தினமும் பறக்கிறேனே. சரி, உனக்காக வருகிறேன், வா, அதோ அந்த குன்றின் உச்சிக்கு நடக்க வேண்டும், முடியுமா? மேலே தூக்கிச் செல்ல கிளைடரெல்லாம் வராது..” என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.
உச்சியை அடைந்ததும், ‘நான் எப்படிப் பறக்கிறேன் பார்’ என்று விறுவிறுவென்று அங்கிருந்த கிளைடரில் தன்னைப் பொருத்திக்கொண்டு நின்றான்.
“அய்யோ, நான் என்ன செய்வது?”
“உனக்கு ஒரு நிபுணன் இருக்கிறான். அதோ, அவனிடம் சொல்லி விட்டேன். அவன் உனக்கு வேறொரு உலகத்தைக் காட்டுவான்,” என்றபடி பறந்து போனான்.

உறுமிய மிருகம் என் கால் பாதங்களை பற்களாலோ நகங்களாலோ இறுகப் பிடித்தது. அது ஒரு கூரிய ஊசியைப் போல துளைத்து உள்ளே செல்ல மிதந்தபடி சில நொடிகள் ஒன்றும் செய்யாமல் கிடந்தேன். சமீர் என் இடுப்பைச் சுற்றிலும் பாதுகாப்பிற்கான பட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தான். கால் பாதங்களை அசைக்க முடியவில்லையே. கால்களுக்கும் பட்டைகள் வேண்டுமா? பறக்கும் போது கால்களும் இறக்கைகளாகி விடுமா? மிதந்து மிதந்து மூச்சையடக்கினால் இம்மிருகம் என்னை விட்டுவிடுமா? அந்த மூச்சற்ற நொடிகளைக் கடந்த போது தரையிலிருந்து பல அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தேன். அதுவரை கண்களை இறுக்கமாக மூடியிருந்த என்னைப் பார்த்து சிரித்தபடி, “பறவைகளின் உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்,” என்றான் சமீர். தனது எல்லைக்குள் வந்து மாட்டிக் கொண்ட இந்தச் சிறு இரையோடு சில கணங்கள் விளையாடிப் பார்ப்பதாய் என் கால்களை விடுத்து என்னைச் சுற்றிலும் வட்டமிட்டது அம்மிருகம். திடீரென என் நிர்வாண மேலுடல் நினைவில் வர கைகளைக் கொண்டு மூடிக் கொண்டேன். எதற்காக அப்படிச் செய்தேன் என்று யோசித்து மீண்டும் கைகளை விரித்து மிதக்க ஆரம்பித்தேன். முகத்திலிருந்த வெட்கம் மெல்லக் கீழிறங்கி உடலில் ஒவ்வொரு பாகமாய் சென்று கரைந்தது. மாற்றி மாற்றிக் கூறினால் உங்களுக்குக் குழப்பமாகக் கூட இருக்கலாம். சரி.

சமீர் கேட்டான்,“என்ன நீங்களும் ஒரு நாடோடிதானா?”

“ம்‌ம்.. அப்படியும் சொல்லலாம். ஆனால் இன்னும் மிகக் குறுகிய காலத்திற்குத்தான்..”

“ஓ, அவ்வளவு தெளிவாகத் தெரியுமா என்ன?”

சட்டெனத் திரும்பி அவன் கண்களைப் பார்க்க முயன்றேன். வேண்டுமென்றே தலையைத் திருப்பி கிளைடரை வெடுக்கென திருப்பினான்.

“நீங்கள் இந்த ஊரைச் சார்ந்தவர் போல் இல்லையே? இங்கே எப்படி?”

சமீர் இப்போது சத்தமாகச் சிரித்தான். என் முகம் ஏனோ சற்று கருத்தது.

“ஏன் அப்படிச் சிரிக்கிறீர்கள்?”

“காற்றிருக்கும் இடமெல்லாம் என் ஊர் தான். அப்பா எனக்குச் சொன்ன இரகசியம் அது. அதனால் தான் எனக்குத் தென்றல் என்று பெயர் வைத்திருக்கிறார். சொல்லமுடியாது, அவரும் இங்கு எங்கோ பறந்து கொண்டிருப்பாரோ என்னவோ!”

“என்ன? உங்கள் பெயர் தென்றலா? அப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள்?”
“அதைப் பிறகு சொல்கிறேன். நான் நீண்ட காலம் நேபாளத்தில் இருந்தேன். அங்கே எனக்கு பறக்கக் கற்றுக் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து ஊர் விட்டு ஊர் பறந்து இதோ இன்று உங்களுக்காகப் பறந்து கொண்டிருக்கிறேன்.”
“குடும்பம்?”

“அதெல்லாம் இல்லாமலா? நான் என்ன துறவியா? பறப்பதைக் கூட துறக்க முடியாமல் அலைகிறேன். அப்படி வேண்டுமானால் சொல்லலாம்.”

“நன்றாகக் குழப்புகிறீர்கள்? ஆமாம், எத்தனை வருடமாக இப்படிப் பறக்கிறீர்கள்?”
“பத்தாம் வகுப்பிலிருந்து ஓடி வந்ததிலிருந்து…”

“ஹாஹாஹா, அது சரி. அதனால்தான் தத்துவமெல்லாம் வருகிறதா? ஆமாம், தொடர்ந்து இதையே செய்வதற்கு சோர்வாக இல்லையா?”

“ஏன் சோர்வாகப் போகிறேன்!”

“என்ன தான் பறப்பதென்றாலும் இதுவும் ஒரு வேலைதானே?”

அவன் அமைதியாக இருந்தான். பறப்பதில் கூர்ந்து கவனம் செலுத்துகிறானோ என நினைத்தேன். மீண்டும் கேட்கலாமா? கேட்டதில் ஏதும் தவறாக நினைத்து விட்டானோ? சற்று நேரத்தில் கிளைடரை வேகம் குறைத்து நிலையாக ஓரிடத்தில் மிதக்கச் செய்தான்.

தயங்கியபடி, “நான் கேட்டது…” என்று ஆரம்பிக்கவும், “அங்கே, அதோ அங்கே.. அங்கே பாருங்கள்…” என்று என் காதுகளுக்குள் சொல்லியபடி ஒரு திசையில் சுட்டிக் காட்டினான்.
அவன் சுட்டிக் காட்டிய திசையில் பெரியதொரு வெண்மேகத்தின் மத்தியில் கரும்புள்ளியொன்று தெரிந்தது.
“அது ஏதோ பறவை தானே?”

“அதை கவனித்துப் பாருங்கள்.”

“அதில் என்ன கவனிக்க இருக்கிறது, இன்னும் கொஞ்சம் அருகே போகலாமா?”

“ஒவ்வொரு நொடியும் அதை நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்தப் பறவை என்ன செய்கிறது பாருங்கள்.”

சொல்லிவிட்டு தனக்குள் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தான். ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தான். ஒரு கழுகு பறந்து கொண்டிருப்பது தெளிந்து வந்தது. இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்ற எச்சரிக்கை உணர்வு. அதை இன்னும் கூர்ந்து கவனித்தேன்.

“என்ன? என்ன பார்க்கிறீர்கள்?”

“ஒரு கழுகு பறக்கிறது. ஏதும் இரை தேடிப் பறக்கிறது போல.”

திடீரென தன் கைகளைத் தாறுமாறாக ஆட்டினான். கிளைடர் காற்றில் நிலையற்று பறந்தது. எந்த நொடி வேண்டுமானாலும் என்னை விட்டுப் பறந்து விடுவான் போல. நான் அலறியே விட்டேன். மீண்டும் வேகமாக மேலெழுந்தான். கீழே சென்றான். சட்டென மொத்தமாகச் சுழற்றியடித்து ஒரு கரணம் போட்டான். நான் அலறி ஓய்ந்து அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன். கிளைடர் அமைதியடைந்தது.

“அந்தக் கழுகு நம்மைப் போல இல்லை, இல்லையா?” என்று சிரித்தான்.

ற்றும் எதிர்பாராத கணத்தில், என்னைச் சுற்றிக்கொண்டிருந்த அம்மிருகம் நீருக்குள் ஆழ்ந்து சென்று மறைந்தது. நான் கைகளை மெல்ல அசைத்து அப்பவளத் தீவை நோக்கி நகர ஆரம்பித்தேன். இன்னும் சில அடிகள் தான். ஒதுங்கி விடுவேன். என்ன, இந்த மிருகத்தின் இரையாகி விடாமல் இன்னும் நீட்டித்துக் கிடக்கப் போகிறேன். ஆனாலும், இந்த ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் என்ன? மேலிருந்து இப்போது என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கழுகிற்கு அல்லது கிறிஸ்துவுக்கு நான் என்னவாகத் தெரிவேன்? அந்த நிறமற்ற பறவை தாவரங்களை மட்டுமே உண்ணுமா, இல்லை நானும் அதற்கு உணவாகக் கூடுமா? கீழே சென்ற மிருகம் விருந்திற்காக தன் குடும்பத்தை அழைத்து வரச் சென்றிருக்குமோ? சமீர் என்னிடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பான்?

அப்போது என்னைச் சுற்றிலுமிருந்த நீரில் மெல்லத் தொடங்கிய சலசலப்பு எனக்குள் பயத்தின் அதிர்வைக் கடத்தியது. கால்கள் விரைந்து அடித்தன, கைகள் பதறி சீரற்று ஏதேதோ செய்தன. இன்னும் சில அடிகளில் கரை சேர்ந்து விடுவேன். கப்பலில் இருந்தவர்கள் இப்போது என்ன ஆகியிருப்பார்கள்! செந்நிற மீனை எனக்காக சமைத்துக் கொடுத்தவர்…என்ன ஒரு ருசி.. அற்புதம்…

பலத்த உறுமலோடு கீழிருந்து என்னைத் தூக்கியடித்து அகன்ற வாயைத் திறந்தது அம்மிருகம். நான் ஒரு நொடி பறந்து கீழிறங்கிக் கொண்டிருந்தேன். இதயம் நின்றே விட்டது. சமீர். சமீர்….

“அந்தக் கழுகு பெரும்பாலும் அசைவதேயில்லை… வெறும் வேலை இல்லை, இல்லையா?” என்று மீண்டும் சிரித்தான் சமீர்.

“அட, ஆமாம்,” என்று வியந்து அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடியபடி பறந்தான். என்னோடென்றில்லாமல் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப் போல பேசினான்.

“பறத்தல் அதன் இயல்பு. பறத்தலே அதன் மொத்த வாழ்வு. பறத்தலே அதற்கான தியானம். பறப்பதற்காகவே இப்பூமியில் வந்ததுதான் அது.”
எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. பெரிய தத்துவவாதி. கீழே விழுந்து நொறுங்கினால் தெரியும்.
“பறத்தல் நீங்கிய கணம் அது விழும். விழவேண்டும் இல்லையா? இறகுகள் நிலைத்த இந்தப் பறத்தல் நீங்கிய கணங்களில் அது விழாமல் மிதக்கிறதே! எப்படி?”

‘அறிவியல் முட்டாள், அறிவியல், பத்தாம் வகுப்பிலிருந்து ஓடி வந்தவன் தானே.’ என்று நினைத்துக் கொண்டேன்.

“அதன் பறத்தல் அதன் செயல் மட்டுமேவா என்ன?” என்று மெல்லக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். அப்போது அவன் கண்களில் நீர் வழிந்தது. அவன் காணாத எதையோ கண்டவனாக மிளிர்ந்தான். முகமெங்கும் புன்னகை. நீங்கா புன்னகை.

“இந்தக் காற்றிற்கும் கழுகிற்கும் என்ன உறவு! அது தானே இப்போது நமக்கும்?” என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தவன் சட்டென கிளைடரைத் திருப்பி கீழிறக்கினான். கிளைடர் வேகம் கொள்ள எனக்கு அடிவயிறு சில்லிட்டது. கால்களை அசைக்க முடியவில்லை. கைகள் அவன் கட்டுப்பாட்டில். அவன் கேட்டது எனக்குள் திரும்பத்திரும்ப வந்து கொண்டேயிருந்தது. ‘காற்றிற்கும் கழுகிற்கும் என்ன! நமக்கும்…’

கீழிறங்கியதும் யாரோ ஒருவன் போல என்னிடம் கைகுலுக்கி அடுத்த வாடிக்கையாளரிடம் சென்றான்.
“ஒரு நிமிடம்..”

“என்ன? நேபாளத்திற்கு வரப் போகிறீர்களா? முகவரி வேண்டுமா? நான் தான் திருமணம் செய்துகொள்ள முடியாதே!” என்று சிரித்தான்.

“எனக்கு இதை மட்டும் சொல்லுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் உங்களை ஒரு கழுகென நினைத்துக் கொள்வீர்களா?”

“ஓ, சரியான கேள்விக்கு வந்து விட்டீர்களா?”

“பதில் சொல்லுங்கள்..”

“கழுகு நானல்ல, என் கிளைடர் தான்,” என்று கைகளை விரித்தான்.

“அப்படியென்றால், நீங்கள்?”

“நானா? நான்… ஓர் இயந்திரம்… சரிதானே? இயந்திரமற்ற அந்த கிளைடரின் இயந்திரம்…” என்றான்.
ஒரு சில அடிகள் சென்றவன் நின்று திரும்பிப் பார்த்து,“நான் என் கிளைடரின் இதயம்…அந்தக் கழுகின் இதயம்…வெறும் வேலைதான், என்ன?” என்று கத்திக்கொண்டே ஓடினான்.

..
அன்றிலிருந்து சில நாட்கள் அக்காட்டில் சுற்றியலைந்தேன். ஒவ்வொரு மரமும் செடியும் குரலும் அறிந்துகொள்ளும் வரை சுற்றினேன். பின், ஊர் ஊராகத் திரிந்தேன். என் முடிவு அதுவாகவே நீங்கிச் சென்றுகொண்டிருந்தது. என்னைப் பற்றியிருந்த ஒவ்வொன்றாய் விலக்கினேன். ஒவ்வொரு கணமும் சமீரின் பறத்தல் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இந்த மொத்த வாழ்வும் ஒற்றைப் பறத்தல்தான், என்ன?

அம்மிருகத்தின் வாய்க்குள் தான் நான் சென்று விழுந்தேன். அப்போது என்னைச் சுற்றியிருந்த மொத்த வானும் அலையடித்ததைப் போல சுழன்றது. ஒன்று, இரண்டு, மூன்று.. பல பல சுற்றுக்கள். நான் அந்தரத்தில் கரணமடித்துக் கொண்டிருந்தேன். நீரும் வானும் காற்றும் மாறி மாறி என் உட்சென்று வெளிவந்தன. சமீர். நிறமற்ற பறவை. கழுகு….

நான் எங்கிருக்கிறேன், என்ன வெம்மை இது? ஒருவேளை சுனாமிக்குள் மாட்டிக் கொண்டேனோ? இல்லை, சுனாமியால் தப்பித்து விட்டேனா? இதென்ன பச்சை வாசம். மெல்லிய குளிர் தென்றல்.. நன்றாகப் பசிக்கிறது. கைகால்களை மெல்ல அசைத்துப் பார்த்தேன். இன்னும் இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லையே. கூச்சம். மெல்லக் கைகளைத் தேய்த்து கண்கள் சூடாக, இமைகளைத் திறந்தேன். சுட்டெரிக்கும் வானம். கைகளை ஊன்றி எழுந்து நின்றேன். அப்பவளத் தீவின் பாறையொன்றில் பச்சைப் பூஞ்சைகளின் நடுவே நின்று கொண்டிருந்தேன். அப்பூஞ்சைகளில் சலசலக்கும் கீச்சுச் சத்தத்துடன் பல அலகுகள் வந்து இறங்கின. நிறமற்ற இறகுகளின் படபடப்பு. என் தலைக்கு மேல் வெகு உயரத்தில் ஓர் ஒற்றைக் கரும்புள்ளி மிதந்து கொண்டிருந்தது. சமீர்…

நான் ஓடிச் சென்று கடலில் குதித்தேன். மீண்டும் மிதக்க ஆரம்பித்தேன்.

***

சுஷில்குமார் பாரதி – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நாஞ்சில் நாட்டை கதைகளமாகக் கொண்டு அதன் மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள், தொன்மங்கள் பற்றிய சிறுகதைகளை எழுதி வருகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், கல்வித்துறை சார்ந்து நிகழும் நுட்பமான கூறுகளைச் சார்ந்தும் கதைகளை எழுதுகிறார்.

சுஷில்குமாரின் முதல் சிறுகதைத்தொகுப்பு “மூங்கில்” ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “சப்தாவர்ணம்” 2021 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இவருடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தமிழினி, யாவரும், கனலி, வனம், பதாகை போன்ற தமிழ் மின்னிதழ்களில் வெளிவந்துள்ளது. ராகுல் ஆல்வரிஸின் “Free From school” புத்தகத்தை தமிழில் “தெருக்களே பள்ளிக்கூடம்” என்ற பெயரில் தன்னறம் பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார்

கலை எனும் நல்லூழ்

0

ஜீவ கரிகாலன்

*
விஜய் பிச்சுமணியின் ஒவ்வொரு வருட கண்காட்சியையும் தவறாமல் பார்த்து வருகிறேன், முடிந்த மட்டும் பதிவு செய்திருக்கிறேன். இப்போது அவர் எனது நண்பராகவும் இருக்கின்றார். எப்போதும் ஒளி மிகுந்த கண்களைக் கொண்டவர், கலை குறித்த அவரது பார்வை, தேடல், பயணம் என நிறையவே பகிர்ந்து இருக்கிறார்.

அவரது அண்மைக் கண்காட்சி தற்பொழுது ஆர்ட் ஹவுஸ் கண்காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பாட்கள் வரைந்து கொண்டிருக்கும் காலத்தில், கலை சந்தைக்கு அந்நிய நிலத்தில் நின்று கொண்டு ஒருவன் ஒவ்வொரு ஆண்டும் தன்னை புதுப்பிப்பது என்பது சாதாரணம் இல்லை. விஜய் பிச்சுமணி தன்னை முழுவதுமாக அவ்வப்போது புதுப்பிக்கும் தன்மை உடையவர். ஒரு கண்காட்சி முடித்ததும் லார்வாவாக மறுவுரு கொள்ளும் நிதானம் கொண்டவர். அதைப் பயணங்களாலே பருவம் கூட்டி மீண்டும் படைப்பூக்கமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுபவர். ஆழமான தத்துவங்களை எளிய காட்சிகளுக்கும், எளிய தத்துவங்களைக் கொண்டு அசாத்தியமான உயரங்களை படைப்பில் தொடும் விஜய் பிச்சுமணி, இதையும் தன் பயணத்தில் ஒரு அங்கமாக பாவிப்பவர்.


ஒரு வணிக வளாகத்தில் பிரம்மாண்டமாக நிறுவியிருக்கும் தகர எண்ணெய் புட்டிகளால் உருவாக்கப்பட்ட மனிதனை, வளாகத்தின் குளுமையில் ஒரு அசுர வடிவத்தில் பார்ப்பதிலேயோ, புகைப்படம் எடுத்துக்கொள்வதிலேயோ தவறில்லை தான். ஆனால் அதை வடிவமைத்திருக்கும் கலைஞன் யாரோ ஒரு சிறிய குழுவிற்கு எண்ணெய்க்காக, நீருக்காக சண்டைபோட்டு அழியும் ஒரு dystopian உலகையும் சேர்த்து உணர்த்தினாலே அது வெற்றி தான். படைப்பு ஒரு பெரு நகரத்தின் வணிக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வெற்றியைக் காட்டிலும், அந்த படைப்பாளன் யாரோ சிலரை இந்த படைப்பை உக்ரைன் போரோடு கூட சம்பந்தப்படுத்திப் பார்க்கும் வேலையைச் செய்கிறது. படைப்பாளனின் வெற்றி முழுமை அடையும் இடம் இது.

இந்த வகையில் ஒவ்வொரு கண்காட்சியிலும், ஏதோ ஒரு விதத்தில் தன்னை, தனது ஆக்கங்களை பலருக்கும் நெருக்கமான உணர்வுகளாகத் தரும் உழைப்பைத் தருபவர் விஜய் பிச்சுமணி. ஒரு அசல் யானைக்கு நிகரான யானையைப் படைக்கும் போதும், வனத்தின் ஓசையை, அவலச் சுவை கொண்ட மழைப்பாடலாக பிரம்மாண்ட மழைத்துளிகள் என முற்றிலுமாக வெவ்வேறு களங்களை தனது வலிமையான கலை மொழியில் படைத்து வருகிறார்.

தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்வது ஒரு நிலை, தான் அறியாமலே ஒன்றைப் படைத்துவிடுவது ஒரு நிலை. மேற்சொன்னவற்றைப் படிநிலை என்று எடுத்துக்கொண்டால், அது தட்டையானப் புரிதல். ஞானம் * அறிவு ஒரு தந்திக்கம்பியைப் போன்ற நேரடியான இருமுனைகள் அல்ல. விஜய் பிச்சுமணியின் ஆக்கங்களை அவரது விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட பல் அடுக்குகளில் உள்வாங்க முடியும். மிகக் கடுமையான கலை வேலைப்பாடுகளைக் கொண்டு பொருள்களுக்கு அப்பாற்பட்ட வெளிச்சங்களை உருவாக்கும் படைப்புகள் படைப்பாளனின் அர்த்தங்களோடு இயல்பாகத் தெரியவும் தவறுவதில்லை. “யார் நீ?” என்று கேட்கப்படுவதற்கு சொல்லப்படும் உடனடி பதிலின் திசையும் “நான் யார்?” என்று நமக்குள்ளே கேட்டுக்கொள்ளும் கேள்வியின் திசையும் எதிரெதிர்.

*
யார் நீ – என்று முதன்முதலில் கேட்கப்படுவதால் நான்/நாம் யார் என்று உணர்ந்துவிடுவோமா?

பாப்பா.. பாப்பா சொல்லு என்று மற்றொருவரின் சுட்டுதலில் இருந்து தானே நாம் நம்மை அறிகிறோம். ஆனால் இந்த வாழ்க்கையில் எல்லோருக்குமே நமக்கே நமக்காக நம்மிடம் இருந்து “நான் யார் ”என்று கேள்வி பிறப்பதில்லை. அப்படி எழும் கேள்வி என்பது பல திறப்புகளுக்கான முதல் படியாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ‘படைப்பின் கர்த்தா- எனும் தலைப்பில் நண்பர் கணபதி சுப்ரமணியத்தோடு ஒரு கலைஞன் முழுமையாகத் தன்னை எப்போது உணர்கிறான் என்று பேசிய உரையாடலும், பாஸ் என்கிற பாலசுப்ரமணியத்துடன் நடத்திய படைப்பு மனநிலை உரையாடலும் என்னை வெவ்வேறு தளத்தில் அலைவுறுத்திக் கொண்டே இருக்கின்றன. ரமணரின் கேள்வியும் நிஷர்ஹதத்தவின் பதிலிலும் ஆறுதல் அடைந்திருக்கிறேன்.

ஆனால் ஒவ்வொருவரின் தேடலும், கண்டடைதலும் அவரவர்களுக்கேயானது, தனித்துவமானது.

***

நான் யார் என்று இப்போது தன்னைத் தானே கேட்டுக்கொண்ட விஜய், தனது படைப்புகளை தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நினைவிலிருந்தும் கற்றதிலிருந்துமென வெவ்வேறாக நான்கு திசைகளில் இருந்து வரும் தனது கேள்விக்கு தனது படைப்புகளையே பதில்களாக தந்துள்ளார்.

தனது நினைவுகளில் உள்ள தந்தையிடமிருந்து பெற்ற தன் படைப்புலகின் மாந்தர்களும், நிலமும், தான் கற்றதிலிருந்து பெறப்பட்ட பாண்டித்தியமும், பாண்டித்தியத்திலிருந்து தன்னைப் போலவே பிறரும் யாரென்று பார்த்ததும், தனது பயணத்தில் கண்டவர்களைக் கடக்க முடியாமல் போக, தனது பயணத்தில் தான் கண்ட மாந்தர்களின் உணர்வுகளை உள்ளிருந்து வடித்துமென நான்கே நான்கு படைப்புகள். பிரம்மாண்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தருவதில் இவர் தேர்ச்சி பெற்றவர் என்பதால் அதைக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியமில்லை. அன்பில் திளைத்த மனத்தோடு தன் அப்பாவின் இயல்பான வாழ்க்கைமுறை என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது, எனக்கு எல்லாம் தந்தது என்று ஒப்புக்கொண்ட கலைஞன் தன்னை அறிந்த கொண்ட விதம், அற்புதமான நல்லூழ்.

ஆம் அவருக்கு வாய்த்திருக்கிறது.

….

ஜீவ கரிகாலன்
பதிப்பாளர் & எழுத்தாளர்.
இவரது படைப்புகளை வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்

கோல்ட்

0

ராஜேஷ் வைரபாண்டியன்

1

ங்கதுரையின் வாழ்வில் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது. அவனது அண்ணன் பைக் விபத்தில் இறந்துபோனான். சிறு வயதிலேயே தகப்பனை இழந்த தங்கதுரைக்கு எல்லாமுமாக இருந்த அண்ணனின் மறைவு அவனை சிதைத்துப் போட்டது. இளஞ்சாவு தருகின்ற வலிகள் தன் வானில் சுதந்திரமாக பறந்து திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளை வெட்டி புழுதியில் தள்ளுவதற்கு ஒப்பானவை. விளையாட்டுத்தனமாய் திரிந்த தங்கதுரைக்கு குடும்பத்தின் சுமைகள் பெரும் பாரமாய் அவனது தோள்களில் ஏறிக்கொண்டன. பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டவன் பலசரக்கு கடையில் கடைப்பையனாக வேலைக்கு சேர்ந்தான்.

வருடங்கள் ஓடியதில் தங்கதுரை சென்னையில் பலசரக்கு கடைக்கு முதலாளியாகியிருந்தான். தன் கடும் உழைப்பால் முன்னேறியவனுக்கு பணவரவு அதிகமாக இருந்தது. மேடவாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூர் செல்லும் வழியில் மனை வாங்கியவன் தனிவீடு கட்டி குடியேறினான். அவனது சொந்தத்திலேயே பெண் பார்த்து கட்டி வைத்தனர். வீடும் கடையுமே அவனது வாழ்வாகிப்போனது. ஊரிலிருக்கும் வீட்டிலேயே இருந்து கொண்டாள் அம்மா. அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு சென்னைக்கு வருவதற்கு அவள் பிரியப்படவில்லை. பலமுறை கூப்பிட்டுப்பார்த்த தங்கதுரை ஒரு கட்டத்தில் கூப்பிடுவதை நிறுத்திவிட்டு மாதமிருமுறை ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்து வருவான். கல்லாவிலேயே அதிக நேரம் உட்கார்ந்து இருந்ததன் காரணமாக இளவயதிலேயே தொப்பையும் வந்து சேர்ந்தது. தன் பருத்த உடலுடன் அந்தக் கல்லாவிலேயே அவனது காலம் நகர்ந்து கொண்டிருந்தது.

அவனது வீட்டின் அருகேயிருந்த இடத்தில் முட்புதர்கள் மண்டிக்கிடந்தன. யாரோ ஒரு என் ஆர் ஐயின் இடம் எனப் பேசிக்கொண்டார்கள். தெருவில் சுற்றும் நாய்களுக்கான இடமாகவும், பின்னிரவில் குடித்துவிட்டு பாட்டில்களை விட்டுச்செல்லும் குடிமகன்களுக்குமான இடமாகவும் அது இருந்தது. கவனிப்பாரற்று கிடந்த அந்த இடத்திற்கு முன் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய முன்வழுக்கைக்காரர் இடத்திற்கு முன் நின்று பார்த்துவிட்டு முகத்தை சுழித்துவிட்டு கிளம்பிச்சென்ற மறுநாளில் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேலையாட்கள் வந்து இறங்கினர். இரண்டே நாட்களில் இடம் சுத்தமானது. ஒரு லாரியில் ஜல்லியும் மணலையும் கொண்டு வந்து ஒரு ஓரத்தில் கொட்டிச் சென்றனர். தன் வீட்டு மொட்டைமாடியிலிருந்து இடத்தைப் பார்த்த தங்கதுரை “அடேயப்பா இவ்வளவு பெரிய இடமா இருக்கே கவனிக்காம கெடந்தப்ப இடம் சிறுசா இருந்தமாதிரில்லா இருந்துச்சு” என்று நினைத்துக்கொண்டான்.

விரைவில் அந்த இடத்தில் ஏதோ கட்டிடம் வரப்போகிறது என்றே அக்கம்பக்கத்தினர் நினைத்திருந்தனர். இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் எவ்வித கட்டிட வேலையும் அங்கே ஆரம்பிக்கப்படவில்லை. அப்போதுதான் அந்த இடத்திற்கு நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் பேட்டும் பந்துடனும் களம் இறங்கினர். அவர்கள் விளையாட ஆரம்பித்த ஒரே வாரத்தில் சிறு சிறு அணிகளாக நிறைய சிறுவர்கள் விளையாட ஆரம்பித்தனர். வார இறுதி நாட்களில் துவங்கிய கிரிக்கெட் போட்டிகள், வார நாட்களின் மாலைவேளையையும் ஆக்கிரமித்தன.

முதலில் அவர்கள் விளையாடுவதை ரசித்தபோதும் நாளடைவில் ஒரு நாளில் இரண்டு முறையாவது தன் வீட்டிற்குள் வந்துவிழும் பந்துகளால் எரிச்சலடைய ஆரம்பித்திருந்தான் தங்கதுரை . அவனை விடவும் அவனது மனைவிக்கு கோபம் உச்சத்தில் ஏறியது.

“நெதமும் பந்து உழுந்துருச்சுக்கா எடுத்துக்கிடுதம்னுட்டு வாரானுவ, போவும் போதும் சும்மா போறானுவளா, நேத்து இரண்டு பட்டர்ரோஸை காங்கல எவன் பறிச்சுட்டுப்போனான்னுட்டு தெரியல. இன்னிக்கி குரோட்டன்ஸ் செடி வச்சிருக்கற தொட்டி ஒடஞ்சு கெடக்கு. பொடிசுகளா இல்ல வானரக்கூட்டமான்னு தெரியமாட்டிக்கி…வூட்டுல ஆம்பளயாளு இருந்து என்ன புண்ணியம்” என்று அடிக்கடி புலம்ப ஆரம்பித்ததும் தங்கதுரைக்கு தலைவலியாகிப் போனது.

அந்த இடத்தின் ஓனர் நம்பரை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு கேட்டபோது முதலில் வீடு கட்டப்போவதாக நினைத்திருந்ததாகவும் பின் வேறு சில காரணங்களால் கட்ட முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். விரைவில் காம்பவுண்ட் சுவரைக் கட்டி ஒரு கேட்டைப் போட்டு பூட்டிவிடுவதாகவும் சொன்னார். அவரிடம் பேசி நான்கு வாரங்கள் ஆகியும் காம்பவுண்ட் சுவர் எழுவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.

தங்கதுரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இனி ஓனரை நம்பி புண்ணியமில்லை என்று நினைத்தவன் தன் கடையில் வேலை செய்யும் இளவட்டங்கள் நால்வரை அழைத்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமை காலையில் அந்த இடத்திற்கு வந்தான். அவனது மனைவி துணி காயப்போடுவதற்காக மொட்டைமாடிக்குச் சென்றவள் தங்கதுரையின் கார் பக்கத்து இடத்தில் நுழைவதைப் பார்த்ததும் துணிகளை வைத்துவிட்டு மொட்டைமாடிச் சுவர் அருகே நின்று பக்கத்து நிலத்தைப் பார்த்தாள். வழக்கம் போலவே சிறு அணிகளாக பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தங்கதுரை கண்ணைக் காண்பித்ததும் அவனுடன் வந்திருந்தவர்கள் ஓடிச்சென்று கிரிக்கெட் ஸ்ட்ம்புகளை பிடுங்கி எறிந்தனர். சிறுவர்கள் எவ்வளவு மன்றாடியும் கேளாதவர்கள் போல அனைத்து ஸ்டெம்ப்புகளையும் அகற்றிவிட்டதுடன் இரண்டு சிறுவர்களிடமிருந்து பேட்டையும் பந்தையும் எடுத்துக்கொண்டு தங்கதுரை அருகே வந்து நின்றனர்.

தங்கதுரை தன் மீசையை முறுக்கிக் கொண்டு விடைப்பாக நின்று கொண்டிருந்தான். அவனது உருவமும் வேஷ்டியும் வலது கையிலிருக்கும் கனத்த தங்க ப்ரேஸ்லட்டையும் கண்ட சிறுவர்களுக்கு பயத்தில் வார்த்தை எழவில்லை. ஒன்றிரண்டு சிறுவர்கள் “அண்ணே பேட்டை மட்டுமாவது குடுத்துருண்ணே” என்று அழுதபடி நின்றிருந்தனர்.

“இனி ஒரு பயலும் இங்க வெளயாட வரக்கூடாது, வந்தியன்னா பொறவு எல்லா பேட்டையும் புடுங்கிட்டு ஓடுங்கலேன்னு வெரட்டிப்புடுவேன், புரியுதால?” கர்ஜித்த தங்கதுரையின் முன் சரியென்று தலையசைத்து மெளனித்து நின்றனர் சிறுவர்கள்.

பேட்டையும் பந்தையும் திருப்பிக்கொடுத்துவிட்டு அனைவரையும் அந்த இடத்திலிருந்து கிளம்பச் சொன்னான் தங்கதுரை. ஒவ்வொருவராக வெளியேறும் போது அந்தக் கூட்டத்திலிருந்து ஓர் குரல் சற்று உயர்ந்து வந்து விழுந்தது.

“கிரிக்கெட்னா என்னன்னு தெரியாத மடக்கூ… எல்லாம் வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்துடறானுங்க”

தங்கதுரைக்கு சுருக்கென்றது.

2

இரண்டு தவளைகள் எதிரெதிரே குதிக்கின்றன. குதிக்கும் போது எழுகின்ற ஒலிகள் ஒரே மாதிரி இல்லை. இரண்டும் குதித்த குட்டை ஒன்றுதான் ஆனால் இடம் வேறு. முதலாவது தவளை குதித்தவுடன் எழுபத்தி ஆறு துளிகள் தெறித்தன. இரண்டாவது தவளையால் ஐம்பத்தி ஏழு துளிகளை மட்டுமே சிதறடிக்கத் தெரிந்திருக்கிறது. தவளைகள் மீண்டும் குதிக்கின்றன. மீண்டும் தெறிக்கின்றன எண்ணிலடங்கா துளிகள். குட்டைக்குள் தான் எறிந்த தவளைக்கல்லொன்று தாவித் தாவிச் செல்வதை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் தங்கதுரை. குட்டைக்குள் அந்தக் கல் மூழ்கியதும் மீண்டும் குதிக்கின்றன தவளைகள். அப்போது அவனது மனதெங்கும் படர்ந்திருந்த தன் பால்யத்தின் நினைவுகள் ஒவ்வொன்றும் தவளையின் உருவம் பெற்று அந்தக் குட்டைக்குள் குதித்து அதை நிரப்புகின்றன. சிறிதும் பெரிதுமாய் ஆயிரமாயிரம் தவளைகளை தன்னில் பெற்ற குட்டை ஒரே கணத்தில் வறண்டு மடிவது போலிருந்தது.

தன் பத்தாவது வயதில்தான் முதல் முதலாக அந்த விளையாட்டைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டான் தங்கதுரை. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்த ஊரில் அவன் கண்டிருந்தது சில்லாங்குச்சியும், பம்பரமும் மட்டும்தான். ஆறாம் வகுப்புக்கு அருகிலிருக்கும் டவுன் பள்ளியில் சேர்ந்தபோதுதான் கிரிக்கெட்டின் மீது அவனுக்கு கவனம் அதிகமாகியது. அவனது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி முடிந்தபின் குவிந்துவிடும் மாணவர்கள் சிறு சிறு அணிகளாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவனுக்கும் விளையாடும் ஆசை தோன்ற, ஏதாவது ஓர் அணியில் தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் மைதானத்திற்குள் வெளியே இருக்கும் புங்கை மரத்தடியில் காத்திருப்பான். அந்த மரத்தடியில்தான் அடுத்து களமிறங்கும் மாணவர்கள் காத்திருப்பார்கள். பிட்ச்சிலிருந்து அவுட் ஆனவுடன் புங்கை மரத்தடிக்கு வரும் மாணவர்களிடமிருக்கும் பேட்டை வாங்கிக்கொண்டு பிட்ச் நோக்கி ஓடுவார்கள் காத்திருந்தவர்கள். எப்படியாவது அந்த பேட்டை வாங்கிக்கொண்டு தானும் களமிறங்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தன் உடல் பருமனால் தன்னை ஒதுக்கும் அணியினரின் கிண்டல் முள்ளாய் அவனுக்குள் இறங்கி உயிர் கிழிக்கும்.

“யோல ஒன்னால ஒரு ரன்னு ஓடி எடுக்க முடியுமால…போயி கோலிக்காய் வெளயாடுல” எனக் கிண்டலடித்து ஒன்றுகூடி சிரிப்பார்கள். அது அவனுக்குள் ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மையால் மைதானத்திற்கு போவதை நிறுத்திவிட்டு பள்ளி முடிந்ததும் தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் தேரிக்காட்டிற்குள் போய்விடுவான். தேரி செம்மண் பூமி. அங்கே மணல் குவியல் அதிகம் என்றாலும் சிறியதொரு மைதானமும் இருந்தது. அதில் ரவுண்ட் ரேஸ் விளையாடுவார்கள் சிறுவர்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பிவிடுவான். அப்போது தூர்தர்ஷனில் இந்திய அணி ஆடும் போட்டிகளை ஒளிபரப்புவார்கள். முதல் ஆளாய் அந்தப் போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்க்க ஆரம்பித்தான். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவனது அண்ணனுக்கே வியப்பாக இருக்கும். இந்த வயதிலேயே கிரிக்கெட் பார்க்கிறானே என்று. கிரிக்கெட்டின் புள்ளிவிவரங்களை அவன் பேச ஆரம்பித்தபோதுதான் கிரிக்கெட் மீதான அவனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அண்ணன் உள்ளூர் தச்சு ஆசாரியிடம் சொல்லி ஒரு கிரிக்கெட் பேட்டை செய்து தன் தம்பிக்கு பரிசளித்தான்.

அன்று தங்கதுரை அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நேராக தேரிக்காட்டிற்கு ஓடியவன் அங்கிருந்த சிறுவர்களுடன் தன் புதிய மட்டையால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். தினமும் தவறாமல் பள்ளி முடிந்தவுடன் கிரிக்கெட் விளையாட போய்விடுவான். மற்றவர்களைப் போல பந்தைத் தட்டிவிட்டு ஒரு ரன் எடுப்பது அவனுக்கு மனத்தடையாக இருந்தது. ஒரு ரன்னுக்காக ஓடும் போது தன் பருத்த உடலைக் கண்டு ஏளனம் செய்வார்களே என்கிற எண்ணம் அவனுக்குள் எப்போதும் இருந்தது. அதன் காரணமாக எதிர்கொள்ளும் பந்தை எல்லாம் பவுண்டரியாக மாற்றிவிடும் நுணுக்கங்களை விரைவாக கற்றுக்கொண்டான். அவனது தேரிக்காட்டு ஆட்டம் பற்றி பள்ளிக்கூடத்தில் பேச ஆரம்பித்தார்கள். ஆறாம் வகுப்பு சி பிரிவு அணியில் உடனே இடம் கிடைத்தது. அன்றைய முதல் போட்டியில் அந்த மைதானத்தின் அனைத்து திசைகளிலும் தங்கதுரை அடித்த சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை பரவி அவனது ஆட்டத்திற்கென தனியொரு ரசிகர் கூட்டமே உருவாகியது.

அதற்கடுத்த நான்கு ஆண்டுகள் அந்த டவுனில் தங்கதுரை விளையாடாத மைதானமே இல்லை என்றானது. எதிர் அணியினர் தங்கதுரையை அவுட் ஆக்கிவிட்டால் கோல்டு அவுட் இனி வென்று விடலாம் என நினைக்கும் அளவிற்கு எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகிப்போனான் கோல்ட். பள்ளிகளில் விளையாடுவதோடு நின்றுவிடாமல் பக்கத்து ஊர்களில் நடக்கும் போட்டிகள் எல்லாம் கெஸ்ட் ப்ளேயராக களம் இறங்கி சூறாவளி ஆட்டம் ஆடினான். அந்த மாவட்டம் முழுவதுமே அவனது பெயரை விட கோல்ட் எனும் பெயரே எல்லோர் மனதிலும் நிலைத்து நின்றது. கோல்ட் ஆட்டத்தைக் காண வெளியூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.

பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த முதல் நாளில் தங்கதுரையின் அண்ணன் சென்னையிலிருந்து எஸ்.எஸ் பேட் ஒன்றை வாங்கி வந்திருந்தான். எஸ்.எஸ் பேட்டைக் கண்டதும் தங்கதுரையை கையில் பிடிக்க முடியவில்லை. சைக்கிள் கேரியரில் பேட்டைச் சொருகிக் கொண்டு ஊர் முழுவதும் திரிந்தான். எதிர்படும் நண்பர்களிடமெல்லாம் பேட்டைக் காண்பித்து சந்தோசப்பட்டான்.

3

தொடர் மழையால் தங்கதுரையின் வீட்டின் அருகேயிருந்த இடத்தில் குட்டை போல தேங்கி நின்றது மழைத்தண்ணீர். குட்டையில் கிடந்த தவளைகள் போடும் சப்தம் இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தினம் தினம் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுமிடமாக இருந்த இடம் இப்போது எவ்வளவு மாறிவிட்டது என்று நினைத்தபடியே கல்லொன்றை குட்டைக்குள் எறிந்தான் தங்கதுரை. அது ஏற்படுத்திய சிற்றலையை பார்த்துக்கொண்டே கடைசியாக அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடப்பட்ட நாளை நினைத்துப் பார்த்தான்.

“ஏ எவம்ல கூட்டத்துல இருந்து குரலு கொடுக்குறது, வக்காலி ஆறு பந்துல ஆறு சிக்ஸர் அடிக்கேன், தைரியம் இருந்தா பவுலிங் போடுல…இந்த கோல்டு யாருன்னு காட்டுதேன்” என்று குரலை உயர்த்தி சத்தமிட்டான் தங்கதுரை.

அவனது குரல் கேட்டதைவிடவும் அவன் சிக்ஸர்கள் பற்றி சொன்னதை கேட்டவுடன் வெளியேறிக்கொண்டிருந்த சிறுவர் கூட்டம் திரும்பி வந்தது. “அண்ணே அவந்தான் சொன்னான்ணே” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சுட்டிக்கொண்டிருந்தனர்.

“சொன்னவன் எவனாவும் இருக்கட்டும்ல, எவன் எனக்கு பவுலிங் போடப்போறான்னுட்டு முடிவு செஞ்சுட்டு உள்ள இறங்கு. ஒரு சிக்ஸர் கொறஞ்சாலும் வந்த வழில நா போயிடுதேன். ஆறு சிக்ஸர் அடிச்சேன்னு வெய்யி ஒரு பய இந்தப் பக்கம் தல வச்சிப் படுக்கக்கூடாது சொல்லிப்புட்டன்” என்றவாறு வேகமாக தன் வீட்டிற்குள் நுழைந்தவன் டிசர்ட்டும், ட்ராக் பேண்டும், ஷூவுமாய் திரும்பி வந்தான். அவன் கையிலிருந்த எஸ்.எஸ் பேட்டைப் பார்த்ததும் சிறுவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

மீசை முளைக்கத் துவங்கியிருந்த பதின்ம வயது சிறுவனொருவன் பவுலிங் போடுவதற்கென முன் வந்தான்.

ஆட்டம் ஆரம்பமானது. தங்கதுரையின் மனைவி ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஓடிவந்து முதல் பந்தை அந்தச் சிறுவன் வீசியதும் தங்கதுரை வேகமாக பேட்டை சுழற்றியதும் கண நேரத்தில் நிகழ்ந்தன.

4

மறுநாள் பத்திரிக்கை செய்தியானது அன்று சிறுவர்களுக்கும் தங்கதுரைக்கும் இடையேயான போட்டி.

“கிரிக்கெட் போட்டியின் போது ஹாண்டிலை விட்டு உருவிய பேட் பறந்து சென்று விழுந்ததில் மண்டை உடைந்த சிறுவன் உயிருக்குப் போராட்டம்”

தவளைகள் குட்டையிலிருந்து வெளிக்குதித்து தன்னை நோக்கி வருவது போலிருந்தது தங்கதுரைக்கு. “வரட்டும் வரட்டும் வீட்டு வாசலுக்குள்ள நுழைஞ்சு பாக்கட்டும்… இந்த கோல்டு யாருன்னு காட்டுதேன்” என்றபடி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றான் தங்கதுரை.

“எது ஆறு பந்துல ஆறு சிக்ஸரு அடிக்கிற கோல்டா” என்றவாறு வீட்டின் கேட்டை இறுக மூடிவிட்டு வீட்டிற்குள் போனாள் தங்கதுரையின் மனைவி.

***
ராஜேஷ் வைரபாண்டியன் – தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் வைரபாண்டியன். நிலாரசிகன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பணி நிமித்தம் இருந்த இடைவெளிக்குப் பின்னர், அண்மையில் இவரது முதல் நாவல் “தேறி” வெளியாகி இருக்கிறது. இவரது முயற்சியில் “உதிரிகள்” எனும் சிற்றிதழும் வெளியாகியுள்ளது.

இருவர்

0

ஸ்ரீதர் நாராயணன்

ரிஹர சங்கரன். இந்தப் பெயரை ஹரியின் தந்தைவழி பாட்டனார்தான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தார்.

“பையன் பிறந்தா ரெண்டு சைட் தாத்தா பேரையும் சேர்த்து ஹரிஹர சங்கரன்னு வச்சிடலாம்”. குட் ஷெட் தெருவின் பின்புறம் சிறிய சந்தின் கோடியில் கனகவல்லி டாக்டர் மகப்பேறு மருத்துவமனை இருந்தது. சிறிய க்ளினிக். நடுவாந்திர அகலத்துடன் அறைகள். பின்புறத்தில் முற்றம் போன்றொரு சிறிய திறப்பு இருந்தது. அதற்குப் பின்னால் ஒரு சிமிண்ட் நடைபாதை. அதன் முனையில் லேபர் வார்ட் வரும். தாத்தா இங்கேயே கையில் பேப்பரும் பேனாவுமாக நின்று கொண்டிருந்தார். பிள்ளை பிறக்கப் போகும் நேரத்தை துல்லியமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டுமென.

“பையன். டைம் 10:41. நல்ல பெரிய தலை. அதான் அம்மாவுக்கு அவ்வளவு வலி படவா” என்று டாக்டரம்மாள் சொல்ல, தாத்தா வேக வேகமாக பேப்பரில் குறித்துக் கொண்டார். செல்ஃபோன் இல்லாத, பொது தொலைபேசிகளும் அதிகம் புழக்கத்தில் வராத காலம் என்பதால், சேதுபதி ஸ்கூல் பக்கம் ஜெனரல் போஸ்ட் ஆபிஸிற்குப் போய் ஃபோன் போட்டு பிள்ளையிடம் சொல்லலாம் எனக் கிளம்பினார். எதற்கும் நர்ஸ் கோகிலத்தம்மாள் வெளியில் வந்தால் ஒரு முறை மருமகளைப் பற்றியும் கேட்டுவிட்டுச் செல்லலாம் என்று சில நிமிடங்கள் தாமதிக்க, உள்ளேயிருந்து டாக்டரின் குரல் மீண்டும் ஒலித்தது.

“பையன். டைம் 10:46. அப்படியே அழகு சுந்தரம்தான். அண்ணனுக்கு பின்னாடியே வழுக்கிட்டு சுருக்க பொறந்திட்டான்” என்றாள்.

லெஃப்ட்டு ரைட்டு

2

ஈரோடு கதிர்

டியிறங்கும்போது ஆறுமுகம் சார் என் கையைப் பற்றிக்கொண்டார். நான் தடுமாறுவேன் எனத் தாங்கிப்பிடிக்கிறாரோ? அப்படியெல்லாம் பிடிக்காதவர். என் கால் குறித்து ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதுவே எனக்குப் பிடிக்கும். இப்போது மட்டும் ஏன் பிடிக்கிறார். இனி இப்படி பிடிக்க ஆரம்பித்துவிடுவாரோ. இதை வளரவிடக்கூடாதே.

“சார் பரவாயில்ல விடுங்க, அதெல்லாம் நான் ஜம்னு எறங்கிடுவேன்”

”உங்களப் புடிக்கல? நா வுழுந்துடாம இருக்கப் புடிச்சுக்கிட்டேன்”

“ரிலாக்ஸ் சார்?”

“இன்னமும் அந்தப் பதட்டம் அடங்கல சார்”

“நான்தான் சமாளிச்சிட்டனே. இதெல்லாம் இன்னிக்கு நேத்தா பார்க்கிறோம். நிதானமா இறங்குங்க” அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

”நம்ம வேலைய மட்டும் செய்றத விட்டுட்டு, யாரோ செய்ய வேண்டிய வேலைக்கு வந்தா இப்படித்தான் ஆவும்” ஆற்றாமையால் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்.

எந்த சமாதானமும் இப்போது அவருக்கு அமைதி தராது, ஒன்று அவராகத் தெளிய வேண்டும் அல்லது பேசி ஓய்ந்து போகவேண்டும். டீ சாப்பிடலாம் என்றேன்.

நான் இந்த ஐடிஐ-க்கு மாற்றலாகி வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இட மாறுதல் வந்தபோதே தண்ணியில்லாக் காடு என மிரட்டினார்கள். தண்ணியில்லாக் காடு என்றால் எளிதில் எட்ட முடியாத, அடிப்படை வசதிகள் அற்ற ஊர். எனக்குப் புதிய இடங்களைத் தேடுவதில் ஆர்வம் இருப்பது போலவே, வழங்கப்படுவது எதுவாயினும் புகார் சொல்லாமல் ஏற்கும் மனநிலையும் எப்போதோ வாய்த்துவிட்டது. எப்போதோ என்பது என் இடது கால் மற்றவர்களுடையதுபோல் இல்லை என்பது புரிந்த காலம். அப்பொழுதே மனதில் பதிய வைத்துக் கொண்டது, எல்லோரும் செய்வதை நான் செய்ய ஆசைப்படக்கூடாது, ஆனால் எனக்கு எதெல்லாம் வருமோ அதைச் செய்யாமல் விடக்கூடாது. மூன்று மணி நேரப் பயணம் என்பதால், இங்கேயே தங்கிக் கொள்வது என முடிவெடுத்தேன்.

அரசு கல்வி நிறுவன அமைப்பின் கடைசிப் படிநிலை அமைப்புதான் நாங்கள். கடைசிப்படி என்பது எது? முதல் படியா, உச்சியில் இருக்கும் படியா? உச்சிதான் உன்னதமென, எங்களை முதற்படியாக்கினால், எங்கள் மீது கால் வைக்காமல் உச்சிக்குச் செல்வது எப்படி? எங்கள் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பதில் இறுமாப்புண்டு. அந்த இறுமாப்பு எங்களுக்கு மட்டும்தான். வேறு யாரும் மதிப்பதில்லை. உச்சிப்படி நிலையில் படித்து ராக்கெட்கூட விடலாம். ஆனால் ராக்கெட் கூடத்தில் ஒரு ஸ்விட்ச், பல்பு பொருத்த வேண்டுமென்றால் ஏதோவொரு ஐடிஐயில்தான் படித்தவர்தான் செய்ய முடியும்.

நான் மாற்றலாகி வந்தபோது, இந்தப் பொறுப்பு முதல்வர் தொலைவில் இருந்து வருவதால், வரும்போதே களைத்துப் போனவராக வருவார். மதியத்திலிருந்து எப்போது கிளம்புவோமென இருக்கை நுனியிலேயே அமர்ந்திருப்பார். அடுத்த கல்வியாண்டில் புது முதல்வர் வருவார் என்று எதிர்பார்த்தோம். மாவட்டத் தலைநகரில் இருக்கும் ஐடிஐயிலிருந்து இதையும் இணைந்து பார்க்கும் முதல்வராகவே அகிலா மேடம் வந்தார்.

பொதுவாக வாரத்தில் ஒரு நாள், அரிதாக இரண்டு நாட்கள் வருவார். அப்படி வருவதும் சில மணி நேரங்கள்தான். அவரும் அறுபது கிமீ வர வேண்டும் என்பதால் அந்தச் சிரமம் புரிந்தது. இங்கு ஆசிரியர்களுக்கெல்லாம் பெரிய மரியாதை கிடையாது. முதல்வர் என்றால் மட்டுமே கொஞ்ச பயம் இருக்கும். தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதல்வர் பொறுப்பில் நிலையானவர், திடமானவர் இல்லாததால், மாணவர்கள் கட்டுப்பாட்டில்தான் நாங்கள் இருந்தோம். எல்லோரும் சோர்ந்து போயிருந்தோம். இந்த நிலையில்தான் விரிந்து கிடக்கும் வளாகத்தின் சீமைக் கருவேலம் முளைத்த பகுதிகளுக்கு மாணவர்கள் செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் செல்லும் போதெல்லாம் சிகரெட் வாசம் வீசத் தொடங்கியது. திரும்பி வரும்போது காலரை தூக்கி நெஞ்சை நிமிர்த்தியபடி வரத்துவங்கினார்கள். ஒருநாள் எல்லோரையும் திரட்டி இனி போகக்கூடாது என்று அகிலா மேடம் சொன்னார்.

கும்பலில் இருந்து ”இங்க கக்கூஸ் இருக்கிற லட்சணத்துக்கு, வேறெங்க போறதாம்” எனும் குரல் வந்தது. அகிலா மேடம் எங்களைப் பார்த்தார். நாங்கள் எதுவும் பேசாமல் நின்றோம். எங்களுக்கான கழிவறைப்பகுதி ஓரளவு பரவாயில்லை. மாணவர்களுக்கானதை கட்டிடமாகவே கருதத் தோன்றாது. எப்போது கட்டப்பட்டது எனத் தெரியவில்லை, அத்தனை சிதிலமடைந்திருந்தது.

அகிலா மேடத்தை அங்கே அழைச்சிட்டுப் போறது சரியாப் படல, நாங்க நாலு பேரு போய் பார்த்தோம். என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஏன் இத்தனை நாட்கள் உள்ளே வந்து பார்க்கவில்லை எனும் உறுத்தல் வந்தது.

உடன் வந்த சுகுமார் சார் ”இவனுங்களுக்கு இது போதாதா? வூட்ல எல்லாம் லெட்டின் வச்சுக்கிட்டா கழுவுறாங்க. இதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்?” என்றார்.

முதல்வர் அறைக்கு வந்ததும், ”அது எப்பவும் இருக்கிற மாதிரிதான் இருக்குங்க. எல்லாத்துக்கும் இவனுங்கதான் காரணம். முன்னப்பின்ன யூஸ் பண்ணியிருந்தாதானே பத்திரமா வச்சுக்கத் தெரியும். ரெடி பண்ணிக் கொடுத்தாலும் இதே மாதிரி ஒடைச்சுத்தான் வைப்பானுங்க” என்றனர் சுகுமாரும், மாரியப்பனும். ஆறுமுகம் மட்டும் அமைதி காத்தார்.

அகிலா மேடம் என்னை நிமிர்ந்து பார்த்தார், “மேடம்… நம்மாளலெல்லாம் அதுக்குள்ளவே போகமுடியாது. பயன்படுத்துற கன்டிஷன்ல இல்ல. காலே வைக்க முடியல. மேல பார்த்தா எப்ப இடிஞ்சு விழுந்துடுமோனு இருக்கு. எதுக்கும் கதவு இல்ல. யூரினல் திண்டும் இடிஞ்சு கெடக்கு” என்றேன்.

”என்ன சார் நீங்க பேசாம இருக்கீங்க?” என ஆறுமுகத்தைப் பார்த்தார்.

“சம்பத் சார் சொல்றது சரிதான். அந்தப் பக்கமே போக முடியல மேடம்!”

“பாருங்க நான் வெறும் இன்சார்ஜ்தான். என்னோட இன்ஸ்டிட்யூட்டயே பாக்க முடியல. அத்தன வேல அங்கே கெடக்குது. நா எப்ப வேணா போய்டுவேன், எப்பவும் இருக்கப் போறவங்க நீங்கதான். ஒண்ணு பசங்க தப்பு பண்ணாம பாத்துக்குங்க. இல்லனா எதாச்சும் பண்ணி அவனுங்களுக்கு டாய்லெட் சரி பண்ணிக் கொடுக்கப் பாருங்க!”

“நாங்க எப்படி மேடம்!?”

“நானும் உங்கள மாதிரிதான சார். மேல இருந்து எதுவும் பண்ணுவாங்களானு தெரியாது. எங்களுதுக்கே ரெண்டு வருசம் முன்ன எம்எல்ஏ ஃபண்ட் கிடைச்சுது. இங்க எம்எல்ஏ, எம்பி ஃபண்ட் எதும் கிடைக்குமானு பாருங்க அல்லது நானும் மேல கேட்டுச் சொல்றேன். முக்கியமா சொல்றது நீங்க முயற்சி எடுத்துதான் ஆகனும்”

ஆறுமுகம் சார் முகம் மலர்ந்தது “எம்எல்ஏகிட்ட ட்ரை பண்ணிப் பார்க்கலாம் மேடம். நல்ல மனுசன். ஈஸியா அப்பாயின்மெண்ட் வாங்கிக்கலாம். நீங்க சரினு சொன்னா நானும் சம்பத் சாரும் ஒரு விசிட் பார்த்துடுறோம். தேவைப்பட்டா நீங்க ஒருமுறை வந்து பாருங்க”

“சார்… என்னால முடியுமானு தெரியல. ஆனா நீங்க பார்த்துப் பேசுங்க. நல்லது நடந்தா சரி”

அன்று எளிதான காரியம் என்று சொல்லிவிட்டார், ஆனால், ஒரு வாரம் கழித்துத்தான் தேதியே வாங்க முடிந்தது. குறிப்பிட்ட தேதியில் குறித்த நேரத்திற்குச் சென்றபோதும் எம்எல்ஏவை சந்திக்க முடியவில்லை. ”நீங்க வருவீங்கனு அய்யா சொன்னாங்க. ரொம்ப முக்கியமான வேலைல இருக்காங்க.. வர்ற புதன்கிழமை காலைல 11 மணிக்கு வரச் சொல்லியிருக்காங்க வந்து பார்த்துடுங்க” என்று உதவியாளர் சொன்னார்.

அவசரம் என்றாலும் இத்தனை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் என்பது நிம்மதியளித்தது. குறித்த புதன்கிழமை காலை சென்றோம். முன்பு இருந்த உதவியாளர் இல்லை. இன்னொருவர் இருந்தார். முகம் கொடுத்தே பேசவில்லை. உள்ளே கேட்டுட்டு சொல்றேன் என்றவர் நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ”அப்படி அப்பாயின்மெண்ட் எதுமே இல்லீங்ளே. அய்யாவும் வெளியில ஒரு வேலையாப் போயிருக்கார். ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணுங்க” என எங்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். பலரும் வருவதும் போவதுமாக இருந்தனர். எனக்கென்னவோ எம்எல்ஏ வீட்டில் இருக்கிறார் எனத்தோன்றியது. தமக்கும் அந்த சந்தேகம் இருந்ததுபோலவே காட்டிக் கொள்ளாமல், எங்களை திருப்பி அனுப்பிய உதவியாளரை ஆறுமுகம் சார் திட்டிக் கொண்டேயிருந்தார். இப்படியெல்லாம் ஆள் வச்சிருந்தா எம்எல்ஏ பேருதான் கெட்டுப்போகும் என்பதை ஏழாவது முறையாக என்னிடம் சொன்னார். நாங்கள் ஒருமாதிரியாக விரட்டப்பட்டது குறித்து அவர் எதுவுமே பேசவில்லை என்பது ஆச்சரியமாகவே இருந்தது. இடையில் இரண்டுமுறை வந்த அகிலா மேடம் எதுவுமே கேட்கவில்லை. ஆறுமுகம் சார்தான் ”எம்எல்ஏவை ட்ரை பண்ணிட்டிருக்கோம்னு சொல்லிடலாமா?” எனக் கேட்டுக் கொண்டேயிருந்தார். நான் பிடி கொடுக்கவில்லை. பசங்க நிலை தொடர்ந்து கொண்டேயிருந்தது

அங்கும் இங்கும் பேசி இன்றைய தினத்திற்கு அப்பாயின்மெண்ட் வாங்கி வைத்திருந்தார். காலை பதினொரு மணிக்கு வரச் சொன்னாதாகக் கூறினார். பத்தே முக்கால் மணிக்கெல்லாம் வந்துவிட்டோம். சிலர் காத்திருந்தனர். முதன்முறை பார்த்த உதவியாளர் இருந்தார். இணக்கமாகவெல்லாம் பேசவில்லை. முன்பு வந்ததையே நினைவில் இல்லாததுபோல் நடந்துகொண்டார். பலர் வந்து போனார்கள். நாங்கள் உள்ளே அழைக்கப்படவேயில்லை. இரண்டு மணியாகியும் சந்திக்க முடியவில்லை. சட்டென பரபரப்பானது, எம்எல்ஏ வெளியில் வந்தார், ஆறுமுகம் சடாரென நெருங்கி எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னார்.

“அய்யா வாங்க… முன்னமே வந்தீங்கனு சொன்னாங்க. விரதம் இன்னிக்கு. காலைல இருந்து பச்சத் தண்ணி பல்லுல படல. ஒரு பத்து நிமிசம் இருங்க… இந்தா சாப்பிட்டு வந்துடுறேன். நீங்களும் சாப்பிட்டு வந்துருங்க!” என்றபடி காரை நோக்கிச் சென்றார். ஆறுமுகம் சார் உற்சாகமாகப் பேசுவதுபோல் பாவனை செய்தாலும் உள்ளுக்குள் கடும் ஏமாற்றம். அருகில் சென்று கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு வந்து தொடர்ந்து காத்திருக்க ஆரம்பித்தோம். அவருடைய விரதம் குறித்து மனம் அசை போட்டது. அங்கிருந்தவரிடம் அவர் விரம் குறித்து பேச்சு வாக்கில் தெரிந்து கொண்டேன்.

பத்து நிமிடத்தில் வருகிறேன் என்பதை நான் நம்பவில்லை என்றாலும் பத்து மடங்கு நேரம் கழித்தும் வராதது அயர்ச்சியாக இருந்தது. அந்த உதவியாளர் ”இருங்க, இன்னிக்கு உங்களைப் பார்த்துடுவார். இன்னிக்கு பார்க்காம போயிட்டா திரும்ப எப்பனு நான் எதும் சொல்ல முடியாது” என்றார்.

பொறுமை இழந்து இறுக்கம் கூடியிருக்க, நாலரை மணிக்கு பவுடர் பூசிய முகத்துடன் வந்தார். ஆறுமுகம் சார் பவ்யமாகக் குனிந்து வணக்கம் வைத்தார். அன்றைக்கு ஏன் அகிலா மேடத்திடம் எம்எல்ஏவை பார்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டோம் எனும் அயர்ச்சியே அவரை அப்படிப் பவ்யம் காட்டவைத்திருக்கும். நானும் எழுந்து வணக்கம் வைத்தேன்.

எங்களைப் பொருட்படுத்தாதவர்போல் வந்தவர், எங்களைக் கடக்கும்போது உதவியாளரிடம் “சார்களுக்கெல்லாம் இப்பத்தான் வழி தெரிஞ்சதுபோல!” எனச் சொல்ல உதவியாளர் எங்களை மேலும் கீழும் பார்த்தார். மேலும் பத்து நிமிட காத்திருப்புக்கு பின் உள்ளே அழைக்கப்பட்டோம். ஆறுமுகம் சார் முற்றிலும் களைத்துப் போயிருந்தார்.

“யாரு சார் நீங்க!?” என்றார் எங்களைப் பார்த்ததும். ஆறுமுகம் சார் எதோ தடுமாற்றத்தோடு சொல்ல முற்பட, நான் உரத்த குரலில் எங்கிருந்து வருகிறோம் எனச் சொன்னேன்.

“அது தெரியுது. ஒரு மக்கள் பிரதிநிதியை வந்து பார்க்க உங்களுக்கு இத்தனை நாள் ஆச்சா!?” என்றார் சப்தமாக.

”அய்யா… ஏற்கனவே ரெண்டு தடவை நாங்க வந்துட்டுப் போனோம்ங்க”

”நான் எம்எல்ஏ ஆகி எவ்ளோ நாளாச்சுனு தெரியுமா!?” இப்பவும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை

“அய்யா… ஒரு வருசத்துக்கும் மேல….”

“அதான் கேக்குறேன். உங்களுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதியை வந்து பார்க்க ஏன் இத்தன மாசம் ஆச்சு?”

லேசாக நடுங்கும் குரலில் ஆறுமுகம் சார் “அய்யா… இப்பத்தான் இந்தப் பசங்க இப்படிப் பண்றாங்கனு ப்ரின்சிபல்கிட்ட சொன்னோம். மேடம்தான் உங்களைப் பார்த்து எம்எல்ஏ நிதியில்…”

“காரியம் ஆகனும்னாதான் எங்களைத் தெரியுமா? மக்களுக்காக பாடுபட வந்த எங்களுக்கு மரியாதை குடுக்கனும்னு தெரியாது உங்களுக்கு. அதும் நீங்க ரெண்டு பேரும்தான் நடையா நடக்குறீங்க. எல்லாம் பார்த்துட்டுத்தானே இருந்தேன். இப்பவும்கூட அந்தப் பொம்பள வரலைல்ல!”

ஆறுமுகம் சார் பவ்யமாய் தணிந்த குரல் “அய்யா யாரைச் சொல்றீங்கனு…” என இழுத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் அமர வைக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டபடியே இருந்தோம்.

”இந்தப் பொம்பளைங்க மட்டும் பதவிக்கு வந்துட்டா ஒருத்தரையும் மதிக்கத் மாட்டாளுவ. ஊருக்கு மத்தியில எவ்ளோ பெரிய எடம் இது. அதில் ஏனோதானோனு நீங்க நடத்திட்டு இருக்கீங்க. நான் வந்தப்பவே கரட்டுக்கு அந்தப்பக்கம் உங்க எல்லாத்தையும் ஓட்டியுட்டுட்டு, பஸ் ஸ்டேண்டை இங்க மாத்திக்க ஒரு ப்ளான் இருந்துச்சு. நான்தான் நிறுத்தி வச்சிருக்கேன். என்னடான்ன அந்தப் பொம்பள என்னவோ சினிமா நடிகை மாதிரி வர்றதும் போறதுமா இருக்கா, ஒரு மரியாதைக்கு இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கல. மத்த ஆபீஸரு எப்ப எங்க எதுக்குனு கூப்பிட்டாலும் மினுக்கிட்டுப் போய் நிக்கத் தெரியுது. மக்களுக்காக உழைக்க வந்த மக்கள் பிரதிநிதிகிட்ட மினுக்கிட்டா நிக்கச் சொல்றோம். ஒரு மரியாதைக்கு வந்து பார்க்காம, என்னத்த நிர்வாகம் பண்ணி பாடம் சொல்லிக் கொடுத்து பாழாப்போறதுனு கேக்குறேன்”

எனக்குள் மின்னல் வெட்டியது. இத்தனை நாள் காத்திருப்பு மற்றும் அலைச்சலுக்கான காரணம் புரிந்தது. உண்மையில் நிலைகுலைய வைக்கும் இந்த உளவியல் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. எங்கோ ஏதோ பிசகியிருக்கின்றது. அவர் அகிலா மேடத்தைத்தான் எதற்கோ குறி வைக்கிறார் என்று புரிந்தது.

“அய்யா… நீங்க எலெக்ட் ஆனதிலிருந்து மேடம் அய்யாவ பார்த்து மரியாதை செய்துடனும்னு சொல்லிட்டே இருந்தாங்க!”

”சொல்லிட்டே இருந்தாப் போதுமா!?”

“அய்யா… மேடம்தான் இந்த முறை அய்யாவைப் பார்க்க வர்றதா இருந்துச்சு. வரவேண்டியது இன்னிக்கு மேடமும் அய்யா மாதிரியே நாள் முழுக்க சாப்பிடாம விரதம் இருக்கிறதால அவங்க இன்ஸ்டியூட்லயே இருந்துட்டாங்க.”

“ஓ… அந்தப்…… அந்தம்மாவுக்கு விரதமெல்லாம் உண்டா!?”. ’அந்தப் பொம்பள’ என்று சொல்லியிருக்க வேண்டியது, அந்தம்மா என மாறி வந்தது. எனக்குப் பிடி கிடைத்துவிட்டதாகச் சற்று நம்பிக்கை வந்தது

”ஆமாங்யா… அவங்களும் இருப்பாங்கதான். ஆனா அய்யா அளவுக்கு தீவிரமா யாரும் இருக்க முடியாதுனு கேள்விப்பட்டிருக்கேன். பொதுவா இப்படி விரதம் இருக்கிறவங்க முகத்துல ஒரு தேஜஸ் வந்துடும்னு சொல்வாங்க. உங்களைப் பார்த்ததும்தான் அது எவ்ளோ பெரிய உண்மைனு புரியுதுங்ய்யா. நானும்கூட இனிமே விரதம் இருக்கனும்னு நினைக்கிறேன்” இது அவரைச் சரிக்கும் எனத் தெரியும்.

”முன்ன மாதிரியெல்லாம் இப்ப விரதம் இருக்க முடியறதில்ல!” எனக்கூறிக்கொண்டே எங்களை அமரச் சொன்னார். ஆறுமுகம் சார் தடுமாறியபடி அமர்ந்தார். உள்ளிருந்து யாரோ தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். ஆறுமுகம் சார் பதட்டமாக எடுத்து பருக ஆரம்பித்தார். தம் விரதம் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். நான் அத்தனைக்கும் தலையசைத்து ஈடு கொடுத்தேன். இடையிடையே அவரை குதூகலப்படுத்த தவறவில்லை. அவருக்கே அவர் பேசியது சலித்திருக்க வேண்டும்.

“நானே பேசிட்டிருக்கேன். வந்த விசயத்த சொல்லுங்க சார்” இந்த ’சார்’ ஆறுமுகம் சாரை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கும்.

“அய்யா நம்ம ஐடிஐ-ல ஒரு முப்பெரும் விழா நடத்துற திட்டம் இருக்குங்க. அய்யா கலந்துக்கணும்னு மேடம் விரும்பினாங்க. உங்க தேதி வசதி எல்லாம் கேட்டுட்டு அதுக்கேற்ப மேடம் உங்களை சந்திக்கிறதா இருந்தாங்க. அதுக்காகத்தான் நாங்க திரும்பத் திரும்ப வந்தும் இன்னிக்குத்தான் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதும் விரத நாள்ல சந்திச்சதே கடவுள் கிருபைதான். அய்யா வரணும். என்ன தேதி அய்யாக்கு இருக்குனு தெரிஞ்சா, மேடமே நேர்ல வந்து அழைக்கிறதா இருக்காங்க” சில நிமிடங்கள் பேசிவிட்டு, விடைபெற்று வெளியே வந்தோம்.

படியிறங்கும்போது ஆறுமுகம் சார் என் கையைப் பற்றிக்கொண்டார். நான் தடுமாறுவேன் எனத் தாங்கிப்பிடிக்கிறாரோ என நினைத்தேன். வெளியில் வந்து டீ சாப்பிடும்போது “ஒரு நிமிசம் ஆடிப்போய்ட்டேன். வந்த கோபத்துக்கு அளவே இல்ல. என்ன இருந்தாலும் பொம்பளைனா இப்படியா பேசுறது? அந்தம்மாவும் சும்மா இந்த இடத்துக்கு வரல, கொஞ்சநஞ்சப் படிப்பா கொஞ்சநஞ்ச அறிவா? எப்படி சார் இத்தனை நிதானமாவும் பொறுமையாவும் சமாளிச்சீங்க?” என்றாலும் ஆறுமுகம் சாருக்கு பதட்டம் குறையவில்லை.

”எல்லார் மாதிரியும் கண்டபடி மனசாலயும் ஓடக்கூடாதுனுதான் சார், கடவுள் என்னோட காலை இப்படி மாத்திட்டான் போல!” என்றபடி இடது காலைத் தட்டினேன்.

*

சோமு சார் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் எங்களுக்கு அன்றே டிசி கொடுத்திருப்பார்கள். எனக்கு இடது கால் சூம்பிப் இருந்தது என்றால், அத்தை பையன் கணேசனுக்கு வலது கால். என்னைவிட ஒரு வயது சின்னவன். என்னோட அக்கா, தம்பி, அவனோட ரெண்டு அண்ணன் எல்லாம் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். நான் ஒரு வருடம் ஃபெயில் அவனோடு இணைந்து மூணு வருசம் ஆகியிருந்தது.

அன்று மழை பெய்திருந்தது. பள்ளிக்கூடம் போகும் குண்டும் குழியுமான மண் தடத்தில் பெரும்பாலும் தண்ணீர் தேங்கியிருந்தது. நானும் கணேசனும் பள்ளிக்கூடத்தை அடையும்போது, ப்ரேயர் முடியும் தருணத்தில் இருந்தது. சீக்கிரம் கிளம்பியிருக்க வேண்டும். நல்ல நாளிலேயே தூக்கம் தெளியாது. மழை பெய்த விடியல் நேரத்தைச் சொல்ல வேண்டுமா என்ன. வழக்கமாகவே மற்றவர்களைவிட எங்க வேகம் குறைவுதான். குண்டும் குழியுமான தடத்தில் மழைத் தண்ணியில் நனையாமல் வளைந்து வளைந்து வந்து சேர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. எது தவறுகிறதோ இல்லையோ, ப்ரேயர் தொடங்கியதும் கேட் மூடுவது மட்டும் தவறுவதே இல்லை. காம்பவுண்ட் பிளவில் நுழைந்து ஓவிய அறை சந்து வழியே நகர்ந்து, க்ளாஸ்க்கு ஓடலாமா இல்லை ப்ரேயர் கூட்டத்தோடு சேரலாமா என இருவரும் குழம்பியிருந்த நேரம் தங்கவேல் ஆசிரியர் பார்த்துவிட்டார்.

”வாங்கடா…. லெஃப்ட் ரைட்டு… மாப்ளைக உங்களுக்கு மட்டும் பொழுதே விடியாதா. வர்றப்ப லெஃப்ட் ரைட்னு ஜோடி போடத் தெரியுது, ப்ரேயருக்கு வர்றதுக்கு நோகுதோ!?” என்றபடி பிரம்பை உருட்டியபடி நெருங்க, சட்டெனக் குனிந்த கணேசன் கீழே கிடந்த கல்லை எடுத்து தங்கவேல் சாரைப் பார்த்து ஓங்கி அடிக்க, அவரின் வகிடு துவங்கும் இடத்தில் இரத்தம் கொப்பளிக்கத் தொடங்கியது, அவர் பிரம்பைப் போட்டுவிட்டு கைகளால் தலையைப் பிடித்தபடி மண்டியிட்டு அமர்ந்தார்.

”டேய் கணேசா…!” என நான் திரும்பியபோது, வெறி நாயொன்று மூச்சிரைப்பதுபோல் சீற்றத்தோடு கணேசன் அவரையே கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்

தங்கவேல் சார் முகம், கைகளில் வழிந்த ரத்தத்தில் சட்டை நனைந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியும் குழப்பமுமாக “சார்” என்றபடியே பயத்தோடு அவரை நெருங்க… “மொண்டி நாய்களா லேட்டானு கேட்டதுக்கு கல்லெடுத்தா அடிக்கிறீங்க, உங்கள என்ன பண்றன் பாருங்கடா!” என்றபடி ”சார் யாராச்சும் இங்க வாங்க” என்று ப்ரேயரை நோக்கி சப்தமிட்டார். யார்யாரோ ஓடி வந்தார்கள். கூடவே ட்ரில் மாஸ்டரும் ஓடிவந்தார். என்னாச்சு என யாரோ கேட்க “ஏன் டா லேட்டா வர்றீங்கனு கேட்டதுக்கு கல்லெடுத்து அடிச்சிட்டானுங்க” என தங்கவேல் சார் சொல்ல, எதுவுமே கேட்காமல் ட்ரில் மாஸ்டர் கழுத்தில் இருந்த விசில் கயிற்றைக் கழற்றி விளாசத் தொடங்கினார். கணேசன் அசையாமல் நின்றான், நான் மட்டும்தான் கதறினேன். அந்தக் கதறலுக்குப் பின்னே “நான் எதுவுமே செய்யலையே!” எனும் ஆதங்கம் நிரம்பியிருந்தது.

அடித்து துவைக்கப்பட்டு எச்எம் ரூமில் நிறுத்தப்பட்டிருந்தோம். அடுத்தடுத்த ப்ரீயட்கள் முடிந்து கொண்டிருந்தன. கேட் திறக்கப்படுவது தெரிந்தது. தங்கவேல் சாரும் ப்யூன் அண்ணனும் வந்தார்கள். தலையைச் சுற்றி கட்டுப் போட்டிருந்தார் தங்கவேல் சார். பூபதி சாருடன் படியேறிக் கொண்டிருந்த எச்எம் சோமு சார், “ஏப்பா மாது. தங்கவேல் சார டீச்சர்ஸ் ரூம்ல படுக்க வை, நான் இப்ப வர்றேன்” என்றபடி உள்ளே நுழைந்தார்.

பூபதி சாரை அமரச் சொல்லிவிட்டு எங்களிடம் வந்தவர், எங்கள் கண்களை மாற்றி மாற்றிப் பார்த்தார். கணேசன் அதே சீற்றத்தோடுதான் உறுதியாக நின்றிருந்தான். நான் நம்பிக்கையற்று நின்று கொண்டிருந்தேன். இருவரையும் பெயர் கேட்டார், நான் சம்பத், இவன் கணேசன் என நான் பதிலளித்தேன்.

“சொல்லு கணேசா… என்ன நடந்துச்சு!?”

அவன் பதிலளிக்காமல் இறுக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய்… எட்மாஸ்டர் சார் கேக்குறார்ல…. சொல்றா” என எழுந்தார் பூபதி சார்.

“சார்… நீங்க இருங்க… நா பார்த்துக்குறேன்” என்றபடியே என்னைப் பார்த்து சொல் என்பதுபோல், தலையை ஆட்டினார்.

“சார்… நாங்கதான் சார் அடிச்சோம்… தப்புதான் சார்!”

“நாங்க இல்ல… நான்தான் அடிச்சேன்” என்றான் கணேசன் உறுதியான குரலில்

“அவன் நாங்கனு சொல்றான்… நீ நான்னு சொல்றே!?”

“நான் மட்டும் மாட்டிக்கக்கூடாதுனு, அவனையும் சேர்த்து சொல்றான் சார். ஆனா நான்தான் அடிச்சேன்”

“எதுக்கு அடிச்சே!?”

“லேட்டா வந்தா திட்டட்டும், அடிக்கட்டும், ஸ்கூல விட்டுக்கூட தொறத்தட்டும் சார். எதுக்கு சார்… எங்க ரெண்டு பேரையும் லெஃப்ட் ரைட்னு எங்க காலை வச்சு அவமானப்படுத்துறது. நாங்களா வேண்டிக்கிட்டோம் எங்களுக்கு காலு இப்படி வேணும்னு…” முடிக்காமல் அழத் தொடங்கினான் கணேசன்.

“ஏன்டா லெஃப்ட் ரைட்னு சொன்னதுக்கு மண்டைய ஒடைப்பியா நீ” என எழுந்தார் பூபதி சார்.

“சார்… நீங்க அமைதியா இருங்க…!” என்ற எச்எம் என்னைப் பார்த்து, “அவன் சொல்றது உண்மைதானா!?” என்றார்.

கணேசனின் அழுகை எனக்கும் தொற்றியது. ஆமாம் என தலையசைத்தேன்.

உள்ளே நுழைந்த மாதுவிடம் “மாது, தங்கவேல் சார் எப்படி இருக்கார். பேசுற நிலையில இருக்காரா!?”

“அதெல்லாம் நல்லாப் பேசுவார் சார். சும்மா படுத்திருக்காரு!?”

எங்களை நோக்கி “உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு லீவு தர்றேன். நாளைக்கு வரும்போது உங்க அப்பா இல்லனா அம்மாவ கூட்டிட்டு வரனும். வந்ததும் போய்டலாம்னு சொல்லி கூட்டிட்டு வா. நாளைக்கு நீங்க க்ளாஸ்க்கு போலாம். இப்ப என்கூட வாங்க… தங்கவேல் சார்கிட்ட… அடிச்சதுக்கு ஒரு மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்குப் போய்ட்டு நாளைக்கு பெல் அடிக்கிறதுக்கு முன்ன வந்துடனும். இன்னொன்னு இனிமே இப்படி எப்பவும் கோவப்படக்கூடாது. இனிமே உங்களை யாரும் இந்த ஸ்கூல்ல இப்படிக் கூப்பிட மாட்டாங்க.!”

டீச்சர்ஸ் ரூமுக்கு சென்றோம். தங்கவேல் சார் எழுந்து உட்கார்ந்தார் “சார்… இவனுங்க…”

“சார்கிட்ட ரெண்டு பேரும் மன்னிப்பு கேளுங்க!”

“சாரி சார்” என்றான் கணேசன். நான்தான் ”இனிமே லேட்டா வரமாட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க சார்” என்றேன். எச்எம் எங்களைப் பார்த்து “போயிட்டு நாளைக்கு வாங்க!” என்றார்.

அதிர்ச்சியில் தங்கவேல் சார் “சார்… என்ன இப்படியே அனுப்புறீங்க. இவனுங்களையெல்லாம்….” என்றபோது, நாங்கள் வெளியேறிக் கொண்டிருந்தோம். கதவைத் தாண்டும்போது கணேசன் என் கையைப் பிடித்து இழுத்து சுவரோரமாக நிறுத்தினான்.

“தங்கவேல் சார்… நாம டீச்சர் சார்… மாதா பிதா குரு…னு நமக்கு தெய்வத்துக்கு முன்னால இடம் கொடுத்திருக்காங்க. அப்பா அம்மாக்கு அடுத்த இடத்தில் இருக்கிற நாம, நம்ம பசங்களோட ஊனத்த லெஃப்ட் ரைட்னு சொல்லலாமா? அந்த கால் அப்படி ஆனதுக்கு அவனுங்க என்ன தப்பு செஞ்சாங்க.. லேட்டா வந்ததுக்கு என்ன வேணா திட்டுங்க, அடிங்க. ஆனா ஊனத்தைச் சொல்லக்கூடாதுல்ல. இனி நம்ம ஸ்கூல்ல யாரும் எங்கும் எப்பவும் எதுக்கும் உடல் குறையைச் சொல்லி காயப்படுத்தக்கூடாது. இத இத்தோட விட்டுடுவோம், இல்ல அந்தப் பையன் செஞ்சதுக்கு தண்டனை கொடுத்தே ஆகனும்னு நீங்க உறுதியா இருந்தா, நீங்க சொன்னதுக்கான நடவடிக்கையும் ஒரு ஹெட்மாஸ்டரா நா எடுக்கிறதுதான் நியாயம். ஈவினிங் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்குனு சர்க்குலர் போட்டு நா எல்லா டீச்சர்ஸ்கிட்டயும் பேசிடுறேன். நியாயப்படி பார்த்தா அந்தப் பசங்க மன்னிப்பு கேட்ட மாதிரியே, நீங்களும் மன்னிப்பு கேட்டிருக்கனும். அது உங்களுக்கு சங்கடம் தரும்னுதான் விட்டுட்டேன். உங்கள எந்தவிதத்திலும் தாழ்த்துறதாவோ விட்டுக்கொடுக்கிறதாவோ நினைச்சுக்காதீங்க. நம்ம குழந்தை எதையோ எடுத்து அடிச்சிட்ட மாதிரி அந்தப் பசங்கள மன்னிச்சு மறந்துடுங்க”

எனக்கு கண்களில் நீர் முட்டியது. வாடா என கணேசனை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டேன். ஆயா மட்டும்தான் வீட்டில். பதறியடித்துக்கொண்டு ”ஏம்பசங்களா வந்துட்டீங்க?” என்றது. “இனிமே பள்ளிக்கூடம் போகல” என்றான் கணேசன். நடந்ததைச் சொன்னேன். ”ஆத்தா கொண்டத்து பத்ரகாளி… இந்தப் பசங்கள இன்னும் எத்தனதான் சோதிப்பே!” என அழத்தொடங்கியது. எங்கள் இருவர் மீதும் தனித்த இரக்கம் உண்டு ஆயாவுக்கு. எங்கள் கால்களுக்காகவே நாங்கள்தான் செல்லம். ”வூட்ல யாருகிட்டேயும் சொல்லவேண்டாம், நானே ரெண்டு பேருக்கும் நாளைக்கு பள்ளிக்கோடத்துக்கு வந்து பேசிக்கிறேன்!” என்றது. ராத்திரி ஆயா தூங்காது. காலையில் எங்களைப் பார்த்ததும் “சாமிகளா ராத்திரி முச்சூடும் தூக்கமே வரல… சீக்கிரம் கெளம்புங்க. ஓரெட்டு வந்துட்டு வந்துறேன்” என்றது.

ப்ரேயர் முடிந்ததும் எங்களை அழைத்த எச்எம் ”அப்பா அம்மா வரலையா? என்றார்.

”அய்யா… சாமி… எம்பட மவனோட புள்ள இவன், மவளோட புள்ள இவன். அவிங்க எல்லாம் கூட்டு வேலைக்கு போயிட்டாங்க. நான்தான் இவியளுக்கு எல்லாமே. அந்த ஆண்டவனே கொறை வச்சுட்டான். நீங்க என்ன சொல்றீங்களோ கேட்டுக்கிறேன். இவனுக நல்லாப்படிச்சு மேல வந்துட்டாப் போதும்”

“பசங்கள பார்த்துக்குங்க. நல்லாப் படிக்கச் சொல்லுங்க. என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லச் சொல்லுங்க. அவன் கோவப்பட்டதில் தப்பு இல்ல. ஆனா எல்லா இடத்திலும் கோவப்பட்டுடக்கூடாதுன்னு மட்டும் நல்ல புத்தி சொல்லுங்க போதும். போய்ட்டு வாங்க. நான் பாத்துக்குறேன் இவனுங்கள”

ஆயா பயந்திருந்த எதுவும் நடக்கவில்லை. தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிட்டது. நாங்கள் வகுப்புக்கு சென்றோம். அன்றே மூன்று கி.மீ தொலைவில் இருக்கும் தங்கவேல் சார் வீட்டுக்கும் ஆயா சென்று அழுது மன்னிப்பு கேட்டிருக்கிறது. ஆயா அழுததைப் பார்த்து தங்கவேல் சார் மனைவியும் அழுததாக ஆயா சொன்னது.

இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் தங்கவேல் சாரை எதிரில் பார்த்தோம். ”அடேய் வாங்கடா!” என அழைத்தார். பயத்தோடு சென்றவர்களிடம் “அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க. நான் சொன்னதும் தப்புத்தான் இவன் அடிச்சதும் தப்புத்தான். எல்லா இடத்திலும் இப்படி இருக்காதீங்க. கோவத்தக் குறைச்சுக்க, பொறுமையா இரு. நல்லாப் படிங்க… செரியா!” என்றார்.

அதை எல்லோருமே சீக்கிரம் மறந்திருந்தார்கள். இனிமே யாரும் கால் குறைபாட்டைக் கிண்டல் செய்யமாட்டார்கள் என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. அங்கு மட்டும்தான் அந்த ஆறுதல் கிட்டியது. காரணம் சோமு சார். இப்போது நினைத்தாலும் அவருடைய பக்குவம் சிலிர்க்க வைக்கும்.

கணேசனுக்கு எப்படியோ சோமு சார் புகட்டியது தவறுதலாகப் பதிந்தது. கோபம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் எல்லா இடங்களிலும் சோமு சார் எப்படி இருக்க முடியும். சோமு சாரால் தொடர்ந்து இருக்க முடியாததுபோலவே, கணேசனால் தொடர்ந்து எதிலும் பயணிக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் இரு துருவங்களுக்கு நகர்ந்தோம். அவ்விதமே வாழ்வு அமைந்தது. அதன்பிறகு பல இடங்களில் பல்வேறு விதமான சீண்டல்கள். கல்லூரி காலத்தில் காலிபர் ஷூ கிடைத்தது. அதே கால்தான் இந்த வேலை கிடைக்கவும் ஒரு காரணமாக இருந்தது. அப்படிக் கிடைத்ததாலோ என்னவோ ஆரம்ப காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாவும் சீண்டல்கள் இருந்துகொண்டேதான் இருந்தன. ஒருகட்டத்திற்கு மேல் என் கால் எங்கும் தெரியக்கூடாது, என் செயல்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதில் உறுதி பூண்டேன். அவ்வண்ணமே செயல், நிதானம், தெளிவு, திடம் என்பதே என் அடையாளம் என்றானது.

*

அடுத்த நாள் அகிலா மேடம் வந்தார். எம்எல்ஏ சந்திப்பு என்னவானது எனக் கேட்டார். நான் சுருக்கமாக அவரோட நிதி கிடைக்க வாய்ப்பு குறைவு, வேற எதாச்சும் யோசிக்கலாம் என்றேன். ஆறுமுகம் சார் அவரைச் சந்திக்க அலைந்து திரிந்த நிகழ்வுகளை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

படபடவென அவர் கொட்டித் தீர்த்ததைப் பொருட்படுத்தாதவராக அகிலா மேடம் “எங்க ஆளுக அப்படித்தான் இருப்பாங்க!?” என்றார்

எனக்குப் புரிந்தது. ஆறுமுகம் சார் ”புரியல மேடம்!” என்றார்

”எம்எல்ஏ எங்க கேஸ்ட் சார். எங்காளுங்கனா அப்புறம் இப்படித்தானே இருப்பாங்க!” அகிலா மேடத்தின் இல்லை அந்தப் பெண்ணின் முகத்தில் பெருமை ஏறிக்கொண்டிருந்தது. மேற்கொண்டு முகத்தைப் பார்க்க முடியவில்லை. அறை முழுக்க புழு நெளிவதுபோல் அசூசையாக இருந்தது.

“நான் போறேன், எனக்கு வேலை இருக்கு” என்றபடி இருவர் முகத்தையும் பார்க்காமல் வெளியேறினேன். கதவைத் தாண்டும்போது அந்தப் பெண் சிரிக்கும் ஓசை கேட்டது. மண்டைக்குள் யாரோ ‘லெஃப்ட் ரைட்டு’ எனக் கூச்சலிடுவதுபோல் இருந்தது.

படியில் கால் வைக்கும்போது, யாராவது என் கை பிடித்துக்கொள்ள மாட்டார்களா என முதன்முறையாக மனம் ஏங்கியது.

***

ஈரோடு கதிர் – எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான அமைப்பையும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். சூழலியல், உடல்நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு, திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், நடப்பியல் பேசும் சமூகக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

வெட்டுக்கூலி

0

அபுல் கலாம் ஆசாத்

அங்காடியில் மீன் வெட்டும் பெரியவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இடது காலை விந்தி விந்தி நடந்துவருவார். தன்னுடைய பழைய சைக்கிளை ஓட்டும்போது ஒருபக்கமாக சரிந்தபடிக்கு வலது காலால் அழுந்த மிதித்து இடது காலை பெடலின் மீது பெயருக்காக அழுத்தி ஓட்டுவார்.

நந்தவனபுரம் மீன் அங்காடியில் ஒரு கிலோ மீன் வெட்டினால் பெரியவருக்கு இருபது ரூபாய் கூலி கிடைக்கும், இறால் உறிப்பதற்கு முப்பது ரூபாய். நந்தவனபுரம் புறநகர் குடியிருப்புப் பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் போராடிப் பெற்ற மீன் அங்காடி அது. அந்த அங்காடி திறந்த நாளிலிருந்து பெரியவர் அங்கு கூலிக்கு மீன் வெட்ட வருகிறார். ‘ப’ வடிவில் இருக்கும் மீன் கடையின் நடுவில் மேடை போட்டு வெட்டுவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். பெரியவருக்கு தன்னுடைய வெட்டு மரத்தை வைக்க ஒரு மேடை கிடைத்தது.

பெரியவரிடம் இருக்கும் வெட்டு மரம், நன்றாக வளர்ந்த வாகை மரத்தின் தண்டுப் பகுதியில் செய்யப்பட்டது. அது பெரியவர் காசு கொடுத்து வாங்கியது அல்ல, காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு அவருக்கு இப்போது வசதி கிடையாது. நல்லக்குப்பத்திலிருந்த அவருடைய கூட்டாளி தான் இறப்பதற்கு முன் அவருக்குக் கொடுத்தது. புறநகரில் இருந்து ஓட்டை சைக்கிளை நல்லக்குப்பம் வரை அழுத்திச் சென்று வெட்டு மரத்தையும் பட்டாக்கத்தியையும் சிறிய கத்தியையும் சைக்கிளில் வைத்துக் கட்டி எடுத்து வந்தார். சாணை பிடிக்க வருபவரிடம் சொல்லிவைத்து இத்துப்போன பழைய கத்தரிக்கோலை வாங்கி மண்ணெண்ணெயில் ஊறவைத்து துரு நீக்கிக் கழுவி, ரிவெட்டுகளைத் தட்டி சரி செய்து மீண்டும் சாணை பிடிக்க வருபவரிடம் கொடுத்து சாணை பிடித்து வைத்தார்.

பழைய சைக்கிள், வெட்டுமரம், பட்டாக்கத்தி, சிறிய கத்தி, உப்புக்கரை படிந்த பிளாஸ்டிக் வாளி, உடைந்த பிளாஸ்டிக் குவளை, இரண்டு சிகரெட் பெட்டிகளை இணைத்த நீட்டலளவுக்கு சாணைக்கல் இவைதான் பெரியவருடைய சொத்து.

முன்பு நந்தவனபுரத்துக் குடியிருப்புப் பகுதி மக்கள் மீன் வாங்கவேண்டுமென்றால் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மார்க்கெட்டுக்குச் செல்லவேண்டும் அல்லது ‘மீனு மீனோய்’ என ஒலிபெருக்கிக்கொண்டே வீதிவீதியாக வரும் டிவியெஸ் வண்டிக்காரரிடம் வாங்கவேண்டும். இருசக்கர வண்டி வைத்திருப்பவர்கள் பைபாஸ் அருகில் சென்று வாங்குவார்கள், இன்னும் சிலர் வானகரம் வரையில்கூடச் சென்று மீன் வாங்குவார்கள். இவை எல்லாமும் இருந்தாலும் நந்தவனபுரத்துக்கெனத் தனியாக மீன் கடை வேண்டும் எனப் பஞ்சாயத்துத் தலைவரின் தொடர் வேண்டுகோளுக்கு ஊராட்சி செவி சாய்த்து, மீன் அங்காடிக்கு இடம் ஒதுக்கியது.

அந்த மீன் அங்காடி வருவதற்கு முன்பு பெரியவர் காலையில் பைபாஸ் சாலை அருகில் போடப்படும் மீன் அங்காடிக்குச் செல்வதை வழமையாக வைத்திருந்தார். அங்கு கிடைக்கும் இடத்தில் வெட்டு மரத்தை வைத்து, வாளியில் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்குக் காத்திருப்பார். தோற்றத்தைப் பார்த்து சிலரும், தொழில் சுத்தத்தைப் பார்த்து சிலரும், ஒன்றரை கிலோ மீனை ஒரு கிலோவாகச் சொல்லி காசைக் குறைத்துக்கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் குணத்துக்கு சிலருமாக வாடிக்கையாளர்கள் அவருக்கு உண்டு.

சில கடைகளில் கடைக்காரர்களே வாடிக்கையாளர்கள் சேவையாக வெட்டித் தரத் துவங்கியதும், பெரியவருக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தனர். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாள்களில் காகிதக் கோப்பையில் கிடைக்கும் இரண்டு கோப்பைத் தேநீர், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு தட்டில் வைத்து விற்பனைப் பையன் எடுத்து வரும் நான்கு இட்லிகளுக்கும் தந்தது போக மதியச் சாப்பாட்டுக்கு முப்பது ரூபாய்கூட தேறுவதில்லை. முப்பது ரூபாய் தேறினாலும் தட்டுக்கடைகளில் ஏதாவது ‘வெரைட்டி ரைஸ்’ தின்று மதியப் பொழுதைக் கழிக்கலாம். தட்டுக்கடையில் சோறு சாம்பார் அப்பளம் பொறியல் மோர் சாப்பிட்டால் முப்பது ரூபாயை முழுதாகக் கொடுக்கவேண்டியிருக்கும். அது அவருக்குக் கட்டுப்படியாகாது. ‘வெரைட்டி ரைஸ்’ பதினைந்து ரூபாயுடன் முடிந்துவிடும். அதில் சுவையைக் கூட்ட, தட்டுக்கடை அம்மாள் முறைக்க முறைக்க ஊறுகாயை இரண்டு சொட்டு கூடுதலாக வைக்கச் சொல்வார்.

“பாஞ்சு ரூவாக்கி சோத்த வாங்கினு பத்து ரூவாக்கி ஊறுகா துண்ட்டுப் போறியப்பா யெப்போவ்” – தட்டுக்கடை அம்மாள் முறைத்தாலும் சத்தம் போடாலும் பெரிவருக்கு இரண்டு சொட்டு கூடுதலாக ஊறுகாயை வைக்கத் தவறுவதில்லை. கடைசிக் கவளத்தை உறுகாயில் பிசைந்து சாப்பிடுவார்.

பைபாஸ் சாலைக்கு அருகில் வாடிக்கையாளர் குறைந்ததால், அதிகாலையில் வானகரம் மீன் அங்காடி வரையில் சைக்கிளை மிதித்துச் சென்று வெட்டுக்கடை போட்டார். அங்கும் இடம் கிடைப்பதற்கு எல்லா சண்டைகளையும் போட்டு, இருசக்கர நிறுத்த ஒப்பந்ததாரரிடம் வேலை பார்க்கும் ஒருவர் சிபாரிசில் மூன்றடிக்கு மூன்றடி இடம் கிடைத்தது. அதற்கு பெரியவருக்கு கூடுதல் தளவாடச் சாமானாக மூன்றடிக்கு மூன்றடி தார்ப்பாலின் தேவைப்பட்டது. அதை விரித்து அதில் வெட்டுவதற்கு வரும் மீன்களை வரிசைப்படி போட்டுவைத்து ஒவ்வொன்றாக எடுத்து வெட்டுகிறார்கள். சிலரிடம் கருப்பு பிளாஸ்டிக் பைகளும் கூடுதலாக இருக்கின்றன. மீனின் வாயில் காய்ந்த வாழை நாரை நுழைத்துக் கட்டாகக் கட்டித் தூக்கி வந்து போடும் வாடிக்கையாளர்களுக்கு வெட்டப்பட்ட துண்டுகளை, கருப்பு பிளாஸ்டிக் பையில் இட்டுத் தந்தார்கள்.

இந்தத் தொழில் அணுகுமுறைக்குக் கூடுதல் முதலீடு தேவைப்பட்டது. தார்ப்பாலினை வாங்கிவிட்டார். நந்தவனபுரத்தில் சாலையோரக் கடையாக இருக்கும் பழைய இரும்புச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப் பெட்டிகள் வாங்கி விற்கும் காயலான் கடையில் பேரம் பேசி பழைய அழுக்கு தார்ப்பாலினை வாங்கி மூன்றைக்கு மூன்றடி வெட்டச் சொல்லி, ஊராட்சிக் குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றிக் கழுவினார். ஒருவேளை ‘வெரைட்டி ரைஸ்’ சாப்பிடாமல் கருப்பு பிளாஸ்டில் பைகளை வாங்கினார். அடுத்த நாள் எல்லோரையும் போல வானகரத்தில் வெட்டுக்கடை போட்டார். பார்ப்பதற்கு திறந்தவெளித் திடலில் வெற்றாகத் தோன்றும் வெட்டுக்கடைக்குள் அத்தனை தளவாடச் சாமான்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.

பெரியவருக்கு புதிய இடத்தின் வழிமுறைகள் முதலில் பிடிபடவில்லை. வெட்டுக்கூலி கிடைத்தாலும் கிடைக்காவிடாலும் சந்தா கட்டச் சொன்னார்கள். தேநீருக்கும் காலைச் சிற்றுண்டிக்கும் அதிகம் செலவானது. வானகரம் வரையில் சைக்கிள் மிதிப்பது அவருடைய உடல் சக்திக்கும் அப்பாற்பட்டதாகத் தோன்றியது. இடையில் ஓய்வெடுத்தால்தான் வானகரம் வந்து வேலையில் இறங்க முடிகிறது. நிற்காமல் வந்தால், கடையில் அசதியாக இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வருமானம் வந்தது.

இறால் உறிப்பதற்கு யாரையாவது நந்தவனபுரத்திலிருந்து கூட்டி வர நினைத்தார். காலைச் சிற்றுண்டியும் இரண்டு தேநீரும் இறால் உறிக்கும் கூலியில் பாதியும் கொடுத்தாலும் அவர்களுக்கு அது பெரிய வருமானம். நந்தவனபுரத்திலிருந்து ஆளைக்கூட்டி வராமல் வானகரத்தில் மீன் அங்காடி சுற்று வட்டாரத்தில் தன்னைப்போல் ஆதரவில்லாத ஆள்களைத் தேடினார். கிடைத்த ஒரு ஆளும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறால் உறிக்கும் கூலி முழுவதையும் தான் எடுத்துக்கொண்டு பெரியவருக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாய்கள் மட்டும் தருவதாகச் சொன்னார். சந்தா, தளவாடச் சாமான்கள் எதுவும் இல்லாமல் கையை வீசிக்கொண்டு வந்து உட்கார்ந்து இறால் உறித்துக்கொடுத்து காசை எண்ணிப் பைக்குள் வைக்கும் ஆளை பெரியவர் வியப்புடன் பார்த்தார்.

வானகரத்திலும் பெரியவரை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
கடைகளுக்குச் சந்தா வசூலிப்பவர் திடீரென ஒருநாள் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாகவும் அதற்கு விண்ணப்பம் தரவேண்டுமென்றும் சொன்னார். முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் செலவுக்குப் பணம் ஏற்பாடு செய்யச்சொன்னார். பெரியவர் தனக்கு உதவித் தொகை வேண்டாமென மறுத்துவிட்டார். விடாப்பிடியாக மற்றவர் தொடர பெரியவருக்குக் கோபம் வந்தது. இனியும் தன்னை நச்சரிக்கவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சரியம். வாசலுக்கு வந்து விண்ணப்பம் வாங்கிச் செல்பவருக்கு ‘கமிஷன்’ கொடுக்க பெரியவருக்கு விருப்பம் இல்லையெனப் பேசிக்கொண்டார்கள்.

வெட்டுக்கடை சந்தா செலுத்துபவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டையின் நகலையோ ஆதார் அட்டையின் நகலையோ கண்டிப்பாகத் தரவேண்டுமெனக் கேட்டார்கள். பெரியவர் சாக்கு சொல்லி நாளைக் கடத்தினார். அவருடைய பேச்சுத் தமிழில் சென்னை மீனவப் பகுதிகளின் சாயல் இருக்கும். மீன் பெயர்களைச் சொல்லுவதெல்லாம் அரசக் குப்பம், நல்லக் குப்பம், சீனிவாசபுரத்தில் சொல்லும் பாணியில்தான் சொல்வார். வவ்வாலு, நெத்திலி, நகரெ, பாரெ, கெளுத்தியிலெல்லாம் ஒலிக்கும் சென்னைத் தமிழின் தனித்தன்மை வாழையின் ‘ழ’கரத்தை மட்டும் சிதைக்காது. தெள்ளத் தெளிவாக வா’ழ’மீன் என்றே ஒலிக்கும். இந்த ‘ழ’கர சுத்தம் பெரிவரிடமும் இருக்கும். பேச்சிலிருந்து அவரை மீனவப் பகுதி வாழ் சென்னையரெனக் கண்டுகொள்வதைத் தவிர வேறு எந்த விவரமும் யாருக்கும் கிட்டவில்லை.

சில நாள்களில் இருசக்கர வாகன நிறுத்தத்தின் ஒப்பந்ததாரர் மாறினார். வேலைக்குப் பழைய ஆள்களே இருந்தார்கள். மாறிய சில நாள்களில் பெரியவரை ஒப்பந்ததாரர் அழைப்பதாக வேலையாள் வந்து சொன்னார். தொழில் நடக்கையில் விட்டுவிட்டு வர முடியாதெனப் பெரியவர் மறுத்தார். கடையை மூடிவிட்டுப் போகும்போது வரச் சொன்னார்கள். கடை என்ன பெரிய கடை, மூன்றடிக்கு மூன்றடி சதுர நிலம் அவ்வளவுதான். தளவாடச் சாமான்களைக் குப்பையில் வீசினாலும் யாரும் எடுத்துச் செல்லமாட்டார்கள். பெரியவரின் சைக்கிள் மட்டும் பழைய இரும்புக் கடையில் விலை போகலாம்.

இருசக்கர நிறுத்தத்தின் ஒப்பந்ததாரரைப் பார்க்கச் சென்ற நாளுக்கு அடுத்த நாள் முதல் பெரியவர் வெட்டுக்கடை போடவில்லை. எங்கே போனார்? என்ன ஆனார்? யாருக்கும் தெரியவில்லை. சில நாள்களுக்கு பெரியவர் யார் கண்களிலும் படவில்லை.

நந்தவனபுரம் மீன் அங்காடி திறக்கப்பட்டபோது அங்கு வந்தார். ‘ப’ வடிவில் அமைந்திருந்த மேடைகளில் எண்கள் இட்டுப் பகுதிப் பகுதியாகப் பிரித்துக் கடைகளைக் குத்தைக்குவிட்டார்கள். பதினாறு கடைகள் வந்தன.

ஒட்டுமொத்த சென்னை மக்களும் சென்னையின் புறநகர் மக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சியோ மீனோ இல்லாமல் உண்ணமாட்டார்கள் போலிருக்கிறது. விடியற்காலையில் நகர்வலமோ புறநகர்வலமோ எது வந்தாலும் எல்லா இறைச்சிக்கடைகளிலும் வழக்கத்தைவிடவும் அதிகமாக இறைச்சி தொங்குகிறது. கோழிக்கடைகளில் ஐந்தாறு கூண்டுகள் அதிகமாக இறங்குகின்றன. ஆறு மணிக்கும் முன்பாகவே வாடிக்கையாளர் வரிசை துவங்குகிறது.

நந்தவனபுரத்து மீன் அங்காடியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்காடியைத் திறந்த நாள் முதல் ஞாயிற்றுக்கிழமை பதினாறு கடைகளிலும் கூட்டம் நிறைந்தது. கெளுத்தி, கெண்டை, சுறா, பால் சுறா, வஞ்சிரம், கோலா, சுதிம்பு, நெத்திலி, பன்னா, செங்கரா, கானாங்கெளுத்தி, காரப்பொடி, வெள்ளை வௌவ்வால், கருப்பு வௌவ்வால், ஊலா, மத்தி, பாறை, வாழை, விலாங்கு, கொடுவா, காலா, கிழங்கான், நகரை, இறால், நண்டு, கணவாய், எல்லாமும் தெர்மோகோல் பனிக்கட்டிப் பெட்டிகளில் வந்து இறங்கின. காசிமேட்டுச் சரக்கு மட்டுமல்லாமல் நேற்று நாகர்கோயிலில் பிடிக்கப்பட்டு இன்று சென்னை வந்த சரக்குகளும் இறங்கின. பதினாறு கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு நந்தவனபுரத்து மீன் அங்காடி, மார்க்கெட் மீன் அங்காடிக்கு இணையான வியாபாரத்தை முதல் ஞாயிறில் கண்டது.

பைபாஸ் சாலை, வானகரம் இரண்டையும் பார்த்த பெரியவர் நந்தவனபுரத்தில் முதல் நாளிலிருந்தே மீன் வெட்டினார். அதே பழைய வாகை மரத்துண்டு வெட்டுமரம், பட்டாக்கத்தி, கத்தி, கத்தரிக்கோல், சாணைக்கல். பெரியவர் உட்பட வெட்டுக்கடைக்காரர்கள் அனைவரும் திணறினார்கள். பல வாடிக்கையாளர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களாக்வே வெட்டிக்கொள்வதாகச் சொல்லி மீன்களை எடுத்துச் சென்றார்கள்.

அப்பொழுதும் பெரியவரிடம் யாரும் எந்த விவரங்களையும் கேட்கவில்லை. திறந்த முதல் வாரத்து வியாபாரச் சூடு தணிந்ததும் பெரிவரிடம் மற்றவர்கள் பேச்சுக்கொடுத்தார்கள்.

“இன்னா பெர்சு, எங்கேர்ந்து வர நீ? தலைவர் ஆளா? யாரு சொல்லிவுட்டா இங்க கட வருதுன்னு. சோக்கா எல்லா ஐட்டமும் எட்தாந்துக்குற. கட்ட இன்னா, கத்தி இன்னா, கத்திரி இன்னா. சொல்லு பெர்சு” – ஏழுமலை, கடை எண் ஐந்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன் வம்பு வளர்த்தான்.

“பழமொழி தெர்மா ஏழுமல” சென்னைத் தமிழிலும் மாறாத ‘ழ’கரத்துடன் பெரியவர் கேட்டார்.

“பெர்சு சொன்னா தெர்ஞ்சுக்ரேன்”

“ரிஷி மூலம் நதி மூலம் பாக்கக்கூடாது”

“அப்டீன்னா?”

“நா யாரானா இருந்துட்டுப் போறன், என்னை அப்டியே வுடு”

“தோடா, பெர்சுக்கு இன்னொரு பேருக்குதா? பாஷா! பாஷா! பாஷா! போ பெர்சு போ. நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வோணுமென்னு கேட்டேன். சொல்லியானா போ, நாளிக்கு தலைவர் வந்து கேட்டா அவராண்டையும் பழமொழி சொல்லி கலாய் இன்னா”

பெரியவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. வெட்டுமரத்தை மட்டும் கடையிலேயே வைப்பதற்கு அனுமதி கேட்டார். அங்க்கேயே இருக்கட்டும் என்றார்கள்.

எதிர்பார்த்தபடி அங்காடியில் கடை போடுபவர்களை முறைமைப்படுத்தும் வகையில் பெரியவரிடம் வாக்காளர் அட்டையின் நகலைக் கேட்டார்கள். அனைத்தையும் விசாரித்தார்கள். சந்தா, வெட்டுக்கூலியில் பங்கு எல்லாமும் எல்லா இடத்திலும் இருப்பவை, பெரியவருக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை காட்டுவதில்தான் அவருக்குக் குழப்பம் இருந்தது. வானகரத்தில் செய்தது போலவே நாள்களைக் கடத்தினார், ஒரு எல்லைக்கு மேல் வார்டு உறுப்பினராலும் தாங்க முடியவில்லை, அங்காடியில் வைத்தே பெரியவரை சத்தம் போட்டார். அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொண்டார்கள்.

“வோட்டர் ஐடி காட்றதுக்கு பெர்சுக்கு இன்னா தவ்லத்து’பா? ரொம்பதான் சத்தாய்க்குது”

பெரியவர் அடுத்த நாள் தனது வாக்காளர் அட்டையின் நகலைத் தயங்கித் தயங்கி வார்டு உறுப்பினரின் அலுவலகத்தில் கொடுத்தார். அதில் அரசக்குப்பத்தின் முகவரி இருந்தது. அரசக்குப்பத்திலிருந்து இங்கு வந்து புறநகரில் இருப்பதன் காரணத்தை பெரியவரால் சரியாக விளக்க முடியவில்லை. அரசக்குப்பத்தில் அவருக்காக யாரும் இல்லை, அதனால் இங்கு புறநகரில் வந்து சாலையோரக் குடிசையில் காலத்தை ஓட்டுகிறார். யாரிடம் இந்தக் கதையைச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். ஆனால், பெரியவர் அதுதான் உண்மை என சாதித்தார்.

பெரியவரின் பொய் ஒருவாரம்தான் நின்றது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டிலிருந்து வந்த மீன் வண்டியின் ஓட்டுநர் அரசக்குப்பத்து ஆள், பெரியவரைப் பார்த்ததும் பம்மினார். பெரியவருக்குப் பின்னால் நின்றுகொண்டு மீன் கடைக்காரர்களைப் பார்த்து சைகையில் இவர் இங்கு என்ன செய்கிறார் எனக் கேட்டார். அவர்களும் வெட்டுக்கூலி என சைகையில் பதில் சொன்னார்கள். ஒரு மீன் கடைக்காரரைத் தனியாக அழைத்துச் சென்று ஓட்டுநர் பேசினார். அவர் பேசிவிட்டு வந்ததும், ஆளாளுக்கு கைப்பேசியை எடுத்துத் தகவல் பரிமாறிக்கொண்டார்கள்.

பெரியவர் வெட்டு மரத்தில் நீரை ஊற்றி வெட்டுக்கத்தியால் சீவி மீன் துணுக்குகளை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்தார். ஏழுமலை அவரிடம் சென்று தன்னுடைய வழமையான எள்ளலுடன்,

“பெர்சே, இன்னா நீ சொல்லேன்னா எங்களுக்குத் தெரியாதா? யாரையோ போட்டியாமெ? யாரைப் போட்ட? பொருளு தூக்குனதுக்கு எத்தினி வருஷம் புட்சு போட்டானுங்கோ? உன் இஸ்ட்ரி இப்ப எல்லாருக்கும் தெர்ஞ்ச்சுட்சு பெர்சு. நீ உன் வயசு காலத்துல பெரீ ஆளா பெருசு. எப்படிப் போட்ட? தோ மீனு வெட்டப் புடிக்கிறியே இதே கணக்குதானா? அத்தொட்டு உன்னை யாரும் தள்ளி வெக்கப் போறதில்ல. நீ பொத்திப்பொத்தி வெச்சது, வெளில வந்துட்சுன்றேன், அவ்ல்தான்.” – பெரியவர் முதன் முறையாக அதிகாரமான குரலில் பேசினார்.

“ஏழுமல, டீ சொல்லு மொதுல்லொ. இன்னா தெரியும் உனுக்கு இப்பொ? டிரைவர் சொன்னானா? நானு பொருளு தூக்கி யாரைப் போட்டனாம்? வெட்டு வாங்குனவன் பூட்டானா? கீரானா? டிரைவர் பார்த்தானாமா? குர்ரா டீயை. டேய் ஞாயித்திக் கெழமை வியாபாரம் முஞ்சுதா வூட்டுக்குப் போடா. என்னிய ஆராய வண்ட்டானுங்க, ஜேம்சுபாண்டுங்கொ”

சத்தமாகப் பேசிவிட்டுத் தன் தளவாடச் சாமான்களை, வெட்டுமரம் உட்பட, சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெரியவர் புறப்பட்டார். முதலில் வெட்டுமரத்தை அங்காடிக்குள் கடையிலேயே வைக்க அனுமதி கேட்டவர் வெட்டுமரத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டது அவர் நாளை முதல் நந்தவனபுரத்து அங்காடிக்கு வரப்போவதில்லை என்பதைக் காட்டியது. அதன்படிக்கே அவர் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை.

ஏழுமலை, யார் யாரிடமோ கேட்டு பெரியவரின் குடிசையைச் சென்று பார்த்தான். அது குடிசை இல்லை, கோணிப்பை மூடிய கூண்டுதான். சாலைத் தொழிலாளர்கள், கூலியாள்கள், தற்காலிகமாகத் தங்குவதற்காகப் போட்டுக்கொள்ளும் மறைப்புதான். அதில் ஒரு மறைப்புக்குள் பெரியவர் இருந்திருக்கிறார்.

பெரியவரைப் பற்றி ஏழுமலையோ, காசிமேட்டு ஓட்டுநரோ, வானகர மீன் அங்காடியின் இருசக்கர வாகன நிறுத்த உரிமையாளரோ யாருக்கும் தெரியாத ரகசியங்களை ரகசியமாகவே வைத்துவிட்டுப் பெரியவர் மீண்டும் மாயமாகிவிட்டார்.

சென்னையில் கடற்கரையோரத்தில் மீனவர்களின் மீன்பிடிப்புப் பகுதியை மாற்றுவதை எதிர்த்து அந்நாள்களில் நடந்த போராட்டத்தில் துடிப்புள்ள இளைஞராகக் கலந்துகொண்ட அவரைக் குறிவைத்துக் கைக்கூலிகள் பாய்ந்ததும், அவர் திருப்பித் தாக்கியதும், அதைத் தற்காப்பு என நிரூபித்து வாதாடிய வழக்கறிஞர்களின் வாதம் எடுபடாமல், அவர் சிறை சென்றதும், யாருக்கும் தெரியாது.

இடது காலை விந்தி விந்தி நடந்து நந்தவனபுரத்துப் புறநகரில் வாழ்ந்தது போல, இப்போது வேறு எங்கேனும் அவர் மீன் வாசனையை சுவாசித்து வெட்டுக்கூலியில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்.

***
அபுல் கலாம் ஆசாத் – பணி நிமித்தம் மேற்கொண்ட இவரது அமீரக புலம் பெயர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதைகள் வழி இவரது படைப்புலகம் வெளியே கவனிக்கப்பட்டது என்றாலும், கஸல் குறித்த இவரது கட்டுரைகள் நன்கு பேசப்பட்டத் தொகுப்புகளில் ஒன்று. ஜீரோ டிகிரி நடத்திய நாவல் மற்றும் குறுநாவல் போட்டிகளில் இரண்டு முறை விருதுகள் வென்றிருக்கிறார். சுவாரஸ்யமாகவும், புதிய களங்களிலும், கூர்மையான கதையாடலும் கொண்ட படைப்புகள் இவருடையவை. இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஊடக அதிகாரம்! நிகழ்ச்சி நிரல்களின் தீர்மான சக்தி!!

0

ரூபன் சிவராஜா

ற்போது செய்திகள், தகவல்களை வெளியிடுவதற்கானதும், பெறுவதற்குமானதுமான ஊடகத்தளங்களும் அவற்றின் பரிமாணங்களும் மாறிவிட்டன. இணைய தளங்கள், இணைய தொலைக்காட்சிகள், யூரியூப் தளங்கள், பேஸ்புக், ரிவிற்றர் எனப் புதிய டிஜிற்றல் தளங்கள் உச்சமான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனாலும் பாரம்பரிய தொலைக்காட்சி சேவைகள் என்று சொல்லக்கூடிய சி.என்.என், பி.பி.சி உட்பட்ட இன்னும் பல சர்வதேச தொலைக்காட்சிகள் சமகாலத்திலும் செய்தி மற்றும் தகவற்பரம்பலுக்கான முக்கிய சர்வதேச ஊடகங்களாக உள்ளன.

இன்று நாம் தகவற் தொழில்நுட்பத்தின் உச்ச வளர்ச்சிக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். கருத்துருவாக்கங்கள் ஊடகங்கள் வாயிலாகவே அதிகமதிகம் நிகழ்கின்றன. இன்றைய உலகின் அரசியல்-சமூக-பொருளாதார நிகழ்ச்சிநிரலை தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் திகழ்கின்றன. குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கின்ற அபார வலிமை ஊடகங்களுக்குண்டு.

சி.என்.என் விளைவு (CNN effect)

ஊடக அதிகாரம் பற்றிப் பேசும் போது, சி.என்.என் விளைவு (CNN effect) குறித்துப் பேசுவது பொருத்தமான ஒன்று. சி.என்.என் விளைவு அல்லது தாக்கம் என்ற சொல்லாடல் உலகளாவிய ரீதியில் சமூகவியல், அரசறிவியல் மற்றும் ஊடகவியல் சார்ந்த கற்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருளாக உள்ளது. உலகில் முதன்முதலில் உருவான இந்த 24 மணிநேர தொலைக்காட்சி செய்திச்சேவையை அமெரிக்கா தனது அரசியல் மூலோபாய நலன்களுக்குச் சாதகமான கருவியாக கையாண்டது, கையாண்டு வருகின்றது. குறிப்பாக பனிப்போருக்குப் பிற்பட்ட காலங்களில் நாடுகள் மீதான ஆதிக்கம் செலுத்தலென்ற இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்கு ‘CNN effect’ அதிகமதிகம் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும்.

சி.என்.என் (CNN – Cable News Network) 1980இல் தொடங்கப்பட்ட 24 மணிநேர செய்திச் சேவை. அமெரிக்காவில் தேசிய அளவில் நேயர்களைக் கொண்டுள்ளதோடு உலக நாடுகளிலும் பரந்த பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறாகவே சி.என்.என் இன் உலகளாவிய முக்கியத்தும் கணிக்கப்படுகின்றது. 1990களில், குறிப்பாக வளைகுடா யுத்தத்தின் போது, 24 மணிநேர செய்திச் சேவையூடாக அது புதிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து தொடர்ச்சியாக அமெரிக்காவின் பல்வேறு சர்வதேச அணுகுமுறைகளை சி.என்.என் விளைவின் பின்னணியில் நோக்க முடியும்.

உதாரணங்கள்

1992 இல் சோமாலியாவிற்குள் அமெரிக்கப்படைகளை இறக்குவதற்கான பரப்புரைகளுக்கு சோமாலிய அகதிகளின் பட்டினிச்சாவுகளும் மனித அவலங்களும் ஊடகக் காட்சிப் பொருட்களாக்கப்பட்டன. அதேவேளை கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரன் ஒருவனின் உடல் கட்டப்பட்டு மொகடிசு (Mogadishu) வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகளே அடுத்த ஒரு அண்டுக்குள் (1993) அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா மீள அழைப்பதற்கும் வழிகோலியது.

1999 காலப்பகுதியில் கொசோவோவிற்குள் நேட்டோ (NATO) படைகள் இறக்கப்பட்ட போது கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மூலோபாய நகர்வுக்கு ஊடகபலம் கைக்கொள்ளப்பட்டது. பின்னர் ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களை நியாயப்படுத்தவும் உலக நாடுகளை அணிசேர்க்கவும் ”செப்ரெம்பர் 11” காட்சிகள் எத்துணை கச்சிதமாய் கைக்கொள்ளப்பட்டன என்பதை விளக்கிக்கூறத் தேவையில்லை.

வியட்னாம் போரில் அமெரிக்கா ஆதரவிழந்து தோல்வி கண்டு வெளியேறிய பின்னணியிலும் ஊடகத்தின் பங்கு குறிப்பிடும்படியாய் இருந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தினரின் பிடியிலிருந்து உயிர் பிழைப்பதற்காக வியட்னாமி வீதியொன்றில் மரண பீதியுடன் சிறுவர்கள் ஓடுகின்ற காட்சியின் ஒளிப்படத்தில், குறிப்பாக அதில் 9 அகவையுடைய புக் பான் தி (Phuc Phan Thi) என்ற வியட்ளனமியச் சிறுமி உடைகளில் தீ பற்றியதால்/பற்றவைக்கப்பட்டதால் வெறும்மேனியுடன் ஓடும் காட்சி அமெரிக்கப் படைகள் வியட்னாமிய மக்களுக்கு ஏற்படுத்திய அவலங்களின் குறியீடாக பார்க்கப்பட்டது. அந்த ஒளிப்படம் அசோசியட்ரெட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் Nick Ut இனால் எடுக்கப்பட்டதாகும்.

இவ்வாறாக அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தீர்மானிக்கும் சக்தி ஊடகங்களுக்கு உண்டென்பதற்கு உலக வரலாற்றிலிருந்து பல்வேறு எடுத்துக்காட்டுக்களைப் பட்டியலிட முடியும்.

விரைவான புள்ளிவிபரங்கள் – கறுப்பு வெள்ளைப் பார்வை

இன்னொரு வகையில் சி.என்.என் விளைவினை உலக மக்கள், சமூகம் மீதும் மற்றும் அரசியல் மட்டத்திலும் கருத்தியல் சார்ந்து ஊடகங்கள் கொண்டிருக்கும் அதிகாரம் என்பதை விவரிக்கும் சொல்லாகவும் புரிந்துகொள்ளலாம். தொடர்ச்சியாகவும் விரைவாகவும் இடைவெளியின்றிச் செய்திகளையும் தகவல்களையும் ஒளிபரப்புவது அதன் இயங்குமுறை. இன்னும் எளிமையாகச் சொல்வதானால் மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் ஒரே விடயத்தை அல்லது தாம் கடத்த, பரப்ப விரும்பும் செய்தியை, நிகழ்வைப் புள்ளிவிபரங்களோடு தொடர்ச்சியாக ஒளிபரப்புவதாகும். கொரோனா காலத்திற்கூட சி.என்.என் விளைவின் மீள் தோற்றத்தைக் காணமுடிந்தது. இறப்பு எண்ணிக்கை, தொற்று எண்ணிக்கை, கொரோனா பரிசோதித்தோர் தொகை, தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை என ஊடகங்கள் உலக ரீதியாக, நாடுகள் ரீதியாக, மாநிலங்கள், நகரங்கள், மாவட்டங்கள் ரீதியான தகவல் அட்டவணைகளைப் பதிவேற்றி வந்தன. இது சி.என்.என் விளைவின் மூலத்தை நினைவூட்டக்கூடிய நிகழ்வு.

உலகளாவிய ரீதியிலும் நாடுகள் மட்டத்திலும் சமூகப் பரப்புகளிலும் பலமுனைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை வெறும் புள்ளிவிபரங்களாக மட்டும் முன்வைக்கப்படும் போது, அச்சூழ்நிலையின் யதார்த்தபூர்வமான விளைவுகளை உரிய முறையிற் கிரகித்துக்கொள்வது பொதுமக்களுக்கு சிரமமான காரியமாகிவிடுகிறது. தருணங்களில் இத்தகைய சித்தரிப்புகள் ஒரு கறுப்பு வெள்ளைப் புரிதலுக்கும் இட்டுச் செல்லக்கூடியது. அதாவது ஒன்றில் போர்கள், பெருந்தொற்றுக்கள் உள்ளிட்ட இடர்களின் விளைவுகளை மீளமுடியாத பேராபத்துகளாக உணர்த்துவது அல்லது அவை பொருட்படுத்த தேவையற்ற விவகாரங்கள் என்ற பார்வையை உருவாக்குவதற்கும் இட்டுச்செல்கின்றது. அவற்றின் பன்முகப்பட்ட பாதிப்புகளையும் விளைவுகளையும் கிரகித்துணர முடியாத நிலைக்குப் பொதுமக்களை தள்ளுகின்றது. அன்றேல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பெருநிகழ்வு மீது அதீத கவனத்தைக் குவிப்பதும், பின்னர் இன்னொரு நிகழ்வு மீது முழுக்கவனத்தினையும் மடைமாற்றித் திருப்புவது என்பதாகவும் பேரூடகங்களின் அணுகுமுறை அமைகின்றது.

கவனக்குவிப்புகளும் திசைதிருப்பல்களும்

கொரோனாப் பெருந்தொற்று மீதான கவனக்குவிப்பு திடீரென நிறுத்தப்பட்டு, உக்ரைன் மீதான ரஸ்யப் போரின் மீது கடந்த ஓராண்டுக்கு மேலான ஊடகக் கவனக்குவிப்புத் திசைதிருப்பப் பட்டுள்ளமையை சமகால எடுத்துக்காட்டாக முன்வைக்க முடியும். ரஸ்ய – உக்ரைன் போர் மீதான கவனக்குவிப்பு குறைக்கப்பட்டு இன்னொரு பிரச்சினை மீது கவனம் குவிக்கப்படுவதும் அடுத்து நிகழப்போகின்ற ஒன்றுதான். ரஸ்ய – உக்ரைன் நிலைமைகள் உரிய முறையில் நிலைகொள் தீர்வினை எட்டப்பட முன்னர் அத்தகைய கவனத்திசைதிருப்பல் நிகழப்போகின்றது. உக்ரைனின் அழிவுகளும் மக்களின் இழப்புகளும் மறக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டுவிடும். இவை சமகால உதாரணங்கள் மட்டுமே. அண்மைய வரலாற்றிலும் அதற்கு முன்னரும் பல்வேறு நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்.

பெரிய ஊடகங்கள் மற்றும் செய்திநிறுவனங்கள் மேற்குலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. அவை வெளிப்படுத்தும் பார்வைகளும்; தகவல்களும் மேற்குச் சார்பு நிலையுடையவை என்ற விமர்சனங்கள் பல மட்டங்களில் நிலவிவருகின்றன. மேற்கு அல்லாத உலகின் ஏனைய பிராந்திய மக்களின் பார்வைகளையும் கருத்துகளையும் கவனக்குவிப்புடன் மேற்கின் ஊடகங்கள் பிரதிபலிப்பது அரிது. ஆனால் மேற்கின் ஊடகங்கள் உலகளாவிய நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பதில் பெரும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றன.

போரின் முதற்பலி உண்மை’

‘போரின் முதற்பலி உண்மை’ என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு கூற்று. உலகின் கூர்மையான முரண்பாடுகள், போர்கள் சார்ந்து சுயாதீனமான தகவல்கள், செய்திகள் வெளிவருவதும் அரிது. பெரிய சர்வதேச ஊடகங்கள் உட்பட்ட பெரும்பாலான ஊடகங்கள் உத்தியோகபூர்வ ஊடக மாநாடுகளில் அதிகாரம்மிக்க அரசியல், அரசாங்க, இராணுவத்தரப்புகள் வெளியிடும் தகவல்கள், அறிக்கைகளை விமர்சனமின்றி வெளியிடுகின்றன என்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. உலகச் செய்திகளின் பெரும்பகுதிக்கான மூலாதாரமாக இன்னமும் AFP, Associated Press மற்றும் Reuters போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களே உள்ளன. பல ஊடகங்கள் ஒரே செய்தி நிறுவனத்திடம் இருந்து செய்திகளைக் கட்டணம் செலுத்தி வாங்குகின்றன. சி.என்.என் மற்றும் பிபிசியின் உலகளாவிய ஒளிபரப்புகளையே பெரும்பாலான அரசியல் தலைவர்களும் நாடுகளின் தலைவர்களும் தகவல் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அல் ஜசீரா தொலைக்காட்சி கணிசமான முக்கியத்தினைப் பெற்றுள்ளது. கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அல் ஜசீரா, அரேபிய நிலைப்பாட்டிலும் பார்வையிலுமிருந்து செய்திகளை வெளியிட்டுவருகின்றது. மேற்கிற்கு மாற்றான ஊடகப்பார்வையாக இது வளர்ந்து வருகின்றது.

புதிய தகவல் யுகம்

ஊடகத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. இணையமும் சமூக ஊடகங்களும் கோலோச்சும் காலத்தில் வாழ்கின்றோம். கூகுள், அப்பிள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை பாரிய இலாபமீட்டும் நிறுவனங்கள். இணையம் மற்றும் ஸ்மாட் தொலைபேசிகளை மையமாகக் கொண்ட புதிய ஊடகப் புரட்சியின் ஒரு பகுதியாக அவை வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. இவை தனிநபர் சுயவிபரங்கள் உட்பட்ட தகவல்களைக் கண்காணிக்கின்றதும் கட்டுப்படுத்துகின்றதுமான நிலையில் உள்ளன.

ஊடகங்களில் தமது நாடு மற்றும் ஆட்சியைப் பற்றிய நற்பெயருடனான பிம்பத்தினை உருவாக்குவதற்குப் பல நாடுகள் பெருந்தொகை நிதியைச் செலவுசெய்கின்றன. அரபு நாடுகளிற் தம்மைப் பற்றிய விளம்பரம் மற்றும் தகவற் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மக்கள்தொடர்பு நிறுவனங்களுடன் (PR Agencies) ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கின்றது. முன்னர் பனிப்போர்க் காலத்தில், கொம்யூனிச நாடுகளை நோக்கியதாக, அமெரிக்க அரசு அமெரிக்காவின் குரல் (Voice of America) வானொலி ஒலிபரப்பினை இயக்கியதான தகவல்கள் உள்ளன. தற்போது அரபு நாடுகளில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு ரேடியோ சாவா(Radio Sawa) என்ற வானொலிச் சேவையை முன்னெடுத்து வருகின்றது.

பின்-சி.என்.என் – Post-CNN – சமூக ஊடகங்கள்

‘பின்-சி.என்.என் – Post-CNN’ ஊடகச் சூழலில், தகவற்பரம்பலின் தொழில்நுட்ப மையச்சாதனமாக சமூக ஊடகங்கள் ஆகியிருக்கின்றன. தனிமனிதர்கள் தமது உணர்வுகளையும் மனப்பதிவுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான தளமாக அவை விளங்குகின்றன. மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் தகவல்களை அணுகுகின்ற மற்றும் பெறுகின்ற முறைகளிலும் சமூக ஊடகங்கள் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. இது அடிப்படையில் ஒரு புதிய திறவுகோல்.

பேஸ்புக், ரிவிற்றர் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் சார்ந்து மக்கள் திரளை ஒன்றுதிரட்டுகின்ற கருவிகளாகவும் பயன்படத் தொடங்கியுள்ளன. அதன் தொடக்கமாக அரபு வசந்தம் கணிப்பிடப்படுகின்றது. நிகழ்நேர வலையமைப்புத் தகவல்தொடர்பு மூலம் (Real-time Networked Communication) சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த முடுக்கியாகச் செயல்பட்டன. சர்வாதிகார ஆட்சிபீடங்களுக்கு எதிரான போராட்டங்களில் மக்களைத் திரட்டுவதற்கான தீர்க்கமான தகவற்பரம்பல்களுக்கு சமூக ஊடகங்கள் துணை புரியத் தொடங்கியுள்ளன. எதிர்ப்பரசியல், ஜனநாயக மக்கள் போராட்டங்களில் மக்களை ஒன்றுதிரட்டவும் ஒருங்கிணைக்கவும் பயன்படத்தொடங்கியுள்ளன. ஆனால் மக்கள் போராட்டங்களை ஒடுக்குகின்ற ஆட்சிபீடங்கள் இணைய இணைப்புகளையும் சமூக ஊடக இணைப்புகளையும் துண்டித்து போராட்டக்காரர்களின் தொடர்பாடல்களை முடக்குகின்ற நிலைமைகளும் உள்ளன.

மாறிவிட்ட ஊடகத்தளங்களும் பரிமாணங்களும்

தற்போது செய்திகள், தகவல்களை; வெளியிடுவதற்கானதும், பெறுவதற்குமானதுமான ஊடகத்தளங்களும் அவற்றின் பரிமாணங்களும் மாறிவிட்டன. இணையதளங்கள், இணைய தொலைக்காட்சிகள், யூரியூப் தளங்கள், பேஸ்புக், ரிவிற்றர் எனப் புதிய டிஜிற்றல் தளங்கள் உச்சமான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனாலும் பாரம்பரிய தொலைக்காட்சிச் சேவைகள் என்று சொல்லக்கூடிய சி.என்.என், பி.பி.சி உட்பட்ட இன்னும் பல சர்வதேச தொலைக்காட்சிகள் சமகாலத்திலும் செய்தி மற்றும் தகவற்பரம்பலுக்கான முக்கிய சர்வதேச ஊடகங்களாக உள்ளன. சர்வதேச விவகாரங்களில், முரண்பாடுகளில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது சமூக ஆய்வாளர்களின் பார்வை. முரண்பாடுகளையும் மோதல்களையும் கூர்மைப்படுத்துகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு கருத்துக்கு அல்லது அறிக்கைக்கு வேகமாக எதிர்வினை ஆற்றப்படுவதற்கு ஊடகங்கள் தூண்டுகின்றன. மௌனம் காப்பதை ஊடகங்கள் தொடர்புபட்ட தரப்புகளின் பலவீனம், செயல்வலுவின்மை என்பதாகச் சித்தரிக்கும் போக்கினைக் கொண்டுள்ளன. ரஸ்ய – உக்ரைன் போருக்கான புறத்தூண்டுதல்களை ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன, கையாண்டு வருகின்றன என்பது ஊடகங்களின் போக்கிற்கான அண்மைய உதாரணம். கருத்துக்கு எதிர்க்கருத்து, வாதத்திற்கு எதிர்வாதம், அறிக்கைக்கு எதிரறிக்கை எனவாக முரண்பாடுகள் வளர்க்கப்படத் தூண்டுதலாகவும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை நலிவடையச் செய்கின்ற அணுகுமுறையும் ஊடகங்கள் மட்டத்தில் நிலவிவருகின்றன.

அதிகாரத்தின் மூலசக்தி

அதிகாரத்தின் மூல சக்தியாக தகவல் உள்ளது. யார் அல்லது எந்த தரப்பு தகவல்களைக் கொண்டிருக்கின்றதோ அல்லது அவற்றைப் பரப்புவதற்குரிய ஊடகங்களைக் தம்வசம் வைத்திருக்கின்றதோ அதுவே அதிகாரமுடைய சக்தி. அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்களை நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவருகின்றதும் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கின்றதுமான சக்தி அது. இன்றைய தகவற்தொழில்நுட்ப யதார்த்தமென்பது, தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, அவற்றைக் கட்டுப்படுத்துவதையும் குறிக்கின்றது. வணிக ஆதாயத்தின் பொருட்டு தகவல்கள், தொழில்நுட்பப் பெருநிறுவனங்களாற் கையாளப்படுகின்றன.

அமெரிக்காவும் அதன் சார்பு நிலையுடைய மேற்குமே ஊடகபலம் மிக்க சக்திகளாக விளங்குகின்றன. உலக அரசியலை, பொருளாதாரத்தை, போர்களை, முரண்பாடுகளை நிர்ணயிக்கின்ற சக்திகளும் அவையே. உதாரணமாக அவர்கள் நடாத்துகின்ற போர்கள் சார்ந்து (அண்மைய உதாரணங்கள்: ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ரஸ்யா – உக்ரைன்) தமக்குச் சாதகமான கருத்துநிலைகள் மேலோங்கவும், பரவவும், நிலைபெறவும் ஏற்ற வகையில் தமது ஊடகங்களைக் கையாள்கின்றன. தவிர உலக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கவும், மாற்றவும், நிலைபெறச்செய்யவும் ஊடகங்கள் முதன்மை வகிபாகத்தைக் கொண்டுள்ளன.

***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.மின்னஞ்சல் – svrooban@gmail.com இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்.