Home Blog Page 28

துணை

0

கிருஷ்ணமூர்த்தி

ஓவியம் : சீராளன் ஜெயந்தன்

ல்ல உறக்கத்துக்குப் பிறகு வரும் விடியற்காலைக் கனவுகள் நம்மை வேறு ஒரு மனநிலைக்கு இட்டுச்செல்வது போல உறக்கமற்ற இரவுகளுக்கு பிறகு வரும் விடிகாலை கனவுகள் பதட்டத்தின் பாதாளத்துக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.

பக்கத்து வீட்டு பேபியம்மா விடிகாலையில் ஆண்டாள் பாசுரத்தைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு இந்த எண்ணம் தோன்றும். தினமும் இல்லாமல் வாரத்தில் இரண்டு நாளோ அல்லது ஒரு நாளோ அகத்துக்குள் போகாத வார்த்தைகளாய் குழந்தைகள் மனப்பாடம் பன்னுவதுமாதிரி அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார். நான் அந்த நேரத்திலெல்லாம் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு கிளம்புவேன். எனக்குள்ளும் ஒருவரி கூட உள்ளே போகாது

காலைப் பாடல்கள் பாடுகிற நாட்களிலெல்லாம் பார்ப்பேன், அவள் வேறொரு ஆளாய் இருப்பாள். எல்லோரிடமும் எரிந்து விழுந்தபடி அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களைத் திட்டியபடியே அந்நாட்கள் நகரும்.

ஆனால் இப்பொழுது விடிகாலைப் பாடல்களும் அதிகமாகியிருக்கிறது அதேபோல் ஊர்க்காரர்கள் மீது வசைகளும் அதிகமாகியிருக்கிறது

அதற்கு காரணமாய் அவள் வேலை செய்துகொண்டிருந்த ஆயம்மா வேலையிலிருந்து ரிட்டையர் ஆகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிப்போனதுதான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பேபியம்மாவுக்கு வயதின் மூப்பு தெரியாத லட்சணமான முகம். ஆனால் உடல் மட்டும் மெலிந்து சொக்காழி போல இருப்பாள். குரலும் அவ்வளவு இனிமையாக இருக்கும். அவர்கள் சிரிக்கும்போது பார்க்கவேண்டும் அப்படியே ஆண்டாள் வந்து குடிகொண்டது போல் இருக்கும். இதுவெல்லாம் வானத்தில் மேகங்களற்ற நாட்களில் தெரியும் தூர நட்சத்திரத்தின் போலத்தான். என் நாற்பது வயதில் அவளை அப்படி பார்த்தது நான்கு முறையோ ஐந்து முறையோதான். அவர் மகன் சுந்தரத்துக்கும் எனக்கும் ஒரே வயதுதான். ஒன்றாகத்தான் படித்தோம்.

அவனுக்கு அம்மா மீது சிறு வயதிலிருந்து கசப்பான எண்ணங்கள் அதனால் குடி, சினிமா என சுற்ற ஆரம்பிக்க அதுவே அவங்கம்மாவுக்க அவனை திட்டுவதற்கு சாக்காக்கி போனது. அவனும் அவங்க அம்மாவும் இயல்பாக பேசி யாருமே பார்த்ததேயில்லை

ஒரே ஒரு மகனாக இருந்தும் தறுதலையாய் எனக்கு வந்து பொறந்துடுச்சே என்ற புலப்பாடுதான் எல்லோரிடமும் பெபியம்மாவுக்கு இருந்தது.

நிறைய நேரங்களில் அவனைப் பற்றிய குறைபாடுகள் கேட்கின்ற ஆளாய் தேமே என்று நான் நின்றிருப்பேன். நாம் ஏதாவது சொன்னால் அவ்வளவுதான் அதற்கு அப்புறம் எல்லோரிடமும் என்னைப் பற்றியும் சேர்த்து வசை கிழியும்.

ஒரு நாள் இருட்டு கவிழும் நேரமாகப் பார்த்து வெளியில் இருந்து பேபியம்மா கூப்பிடுவதைப் பார்த்து உள்ளே வரச்சொன்னதற்கு தயங்கித் தயங்கி உள்ளே வந்தார். அவர் அவ்வளவாக யார் வீட்டுக்கும் போவதில்லை.

உள்ளே வந்தவர் முகம் வாடிப்போய் நிலை குலைந்திருந்தார். “தம்பி எனக்கு ஒரு உதவி பன்றையா” என்று கேட்டபோது, நான் பதறிவிட்டேன்.

பேபியம்மாவுக்கு கல்யாணம் ஆகி சுந்தரம் வயிற்றில் ஏழு மாதமாக இருக்கும் போது அவர் கணவன் விபத்தில் இறந்து போனார். ஆறு ஆண் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து வசதியாக வாழ்ந்தவள் பேபியம்மா.

காலம் அவளுக்கு அளித்த அந்தக் கொடுமைக்கு அவள் அப்படியே உறைந்து போனாள். அவளுக்குள் எல்லாம் இந்தப் பையன் ஜனித்த நேரம் தான் என்ற எண்ணம் வர அவள் அவனைப் பால்குடி மறக்காமல் கூட அவனிடமிருந்து விலக ஆரம்பித்தாள். தாத்தா பாட்டியிடமே சுந்தரம் வளர்ந்தான். பேபியம்மாவுக்கு அவர் அப்பா யார் யாரையோ பிடித்து பள்ளிக்கூடத்தில் ஆயம்மா வேலை வாங்கித்தர அதையும் பெயருக்கெனச் செய்துக்கொண்டு சாயந்தரமானால் ஊரிலிருந்த கோயில்களுக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டார்.

காலம் நகர, நகர தம்பிமார்களுக்குக் கல்யாணம் ஆகி அவரவர்கள் தனியாகப் போக ஆரம்பித்தார்கள். பேபியம்மாவுடைய அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்துபோக அவள் இன்னும் தனிமையிலான பொழுதுதான் சுந்தரத்தின் மீது சின்னதாய் ஒரு பிடிப்பு வர ஆரம்பித்தது அவளுக்கு. பங்கு வந்த சொத்தை கொஞ்சம் விற்று அவனுக்காக வீடுகட்ட ஆரம்பித்தார்.

தாத்தா பாட்டியோடு வளர்ந்த சுந்தரத்துக்கு அவள் அம்மாவோடு அவ்வளவாக இணங்க முடியவில்லை. எப்பொழுதும் சண்டையும் சச்சரவும் வர அவள் இலங்கை அகதிகள் முகாமுக்குப் பக்கத்தில் இருந்த நந்திக்கோயிலில் பழக்கமான அம்பலத்தலம்மாவோடு இருக்க ஆரம்பித்தாள். அம்பலத்தாளுக்கும் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க அவளுக்குத் துணையாக அங்கேயே கிடந்தாள். வேலை அதை விட்டால் சாயந்திரம் நந்திக்கோயில் பூஜை அது முடிந்தால் இரவு அவர்களோடு போய் தங்கிக்கொள்வதெனக் காலத்தை நகர்த்திக்கொண்டிருந்தார். எப்பொழுதாவது வழியில் சந்தித்தால் பேச்சு வாக்கில் நான் சுந்தரத்துக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் ஒரு ஒட்டு கிடைக்கும் என்று சொல்வேன். அந்நேரத்தில் சின்னதாய் அவர் முகத்தில் அசையும் நம்பிக்கை துளிர்ப்பதைப் பார்க்க முடியும்.

சுந்தரத்துக்கு அங்கிருந்தே தன் தம்பிகளிடம் சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தார்.

“தம்பி கொஞ்சம் நான் எம்பிள்ளையோட தனியா பேசணும். நீ அவனுக்கு போன பண்ணி இங்க வரச்சொல்ல முடியுமா? என்று சொன்னபோது பேபியம்மாவின் முகம் நல்ல வெளிச்சத்தில் கூட சுருங்கிப்போய் இருந்தது.

நான் எதுவும் பேசாமல் பின்கட்டுக்குப் போய் சுந்தரத்துக்கு போன் பண்ணலாமா வேண்டாமா என்று யோசித்திருந்த நேரம் பின்கட்டு வாசலில் மா மரத்துக்கு அடியில் ஏற்றி வைத்திருந்த சிறு அகலிலிருந்து பரவிய வெளிச்சம் அந்த இடத்தையே நிரப்ப எனக்கு ஏனோ பழைய பேபியம்மாவின் முகத்தில் வரும் ஆண்டாளின் சிரிப்பு தோன்ற சட்டெனப் போனை எடுத்து சுந்தரத்துக்கு போட்டேன். அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. எடுக்கவில்லை. இரண்டு மூன்று முறை போட்ட பிறகும் அவன் எடுக்கவே இல்லை.

உள்ளே வந்த எனக்கு பேபியம்மா முகத்தை பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தது. அவர் என்னைப் பார்த்த கணமே ஏதோ புரிந்தவள் போல் எழுந்து வெளியே போக ஆரம்பித்தார். ஏனோ மனம் உந்த அவர் முன்னால் போய் தடுத்து நின்றேன்.

அவன் எங்கேயாவது வெளியே போயிருக்கலாம். எதுவாயிருந்தாலும் காத்தாலவர இங்கேயேத்தான் தங்கணும் என்று உரிமையாகச் சொல்லி முடித்த பிறகுதான் எனக்குள் எப்படி அந்த வார்த்தை வந்தது என்று பினாத்திக்கொண்டேன். அவர் சாவகாசமாக “தம்பி உங்க வீட்டுக்குள்ள வரும்பொழுதே என்னை பார்த்துட்டுத்தான் வீட்டுக்குள்ள உள்ளே போனான்” என்று சொல்லியபடியே தலையில் அடித்துக்கொண்டு, ”எல்லாம் எந்தப்புத்தான் அவன உட்டு நா விலகியிருக்க கூடாது” என்று கதறியபடி தரையில் புரண்டு அரற்றிக் கொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்ல முடியாமல் அவர் கையை மட்டும் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

மறுநாள் வீட்டில் பேபியம்மாவுடைய தம்பி, நான், பேபியம்மா என ஆளுக்கு ஒரு மூலையாக உட்கார்ந்திருந்தோம். பேபியம்மா முகத்தில் எந்தச் சுரமும் இல்லாமல் அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை முகாமில் பேபியம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அம்பலத்தம்மாள் இறந்ததற்கு மாலை வாங்கிக்கொண்டு நானும் சுந்தரமும்தான் போயிருந்தோம். பிணத்தைச் சுற்றி ஆறேழு பேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அங்கிருந்த யாரோ ஒருவர் பரபரப்பாக ஒரு டி.வியைப் பொருத்தி அதில் தன் செல்போனை இணைத்து அவர் மகன்களுக்கு காட்டிக்கொண்டிருந்தார். டி.வியின் அந்தப் பக்கம் அழுகுரல்கள் கேட்க, நாங்கள் மாலையைப் போட்டுவிட்டு வெளியே வந்தபோது பேபியம்மா தலைவாசல் பக்கத்தின் ஓரமாக சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதை சுந்தரம் ஒருகணம் நின்று பார்த்தான்.

வழக்கத்து மாறாகச் சுந்தரம் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தான்.

வெளியே வந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு ஒயின் ஷாப்ப்புக்கு விட்டு ஒரு ஃபுல் வாங்கிவந்து பெருமாள் கோயில் அருகில் இருக்கும் காலி கிரவுண்ட் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

ஏண்டா குடிக்கிறத விட்டுத்தான் ரெண்டு வருஷம் ஆச்சின்ன.? இப்ப இன்னடா இது புதுசா..” என்றதற்கு எதுவும் பேசாமல் தம்ளரில் தண்ணியை ஊற்றியபடி கிரவுண்டில் பெருமாள் கோயிலுக்கு நேந்துவிட்ட கழுதைகள் மேய்ந்துகொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

உனக்கு தெரியாது மச்சான், அவ சகுனத்தை தலையில கட்டிக்கிட்டு அலையிற பொணம். எதுக்கெடுத்தாலும் சகுனம். சாக்காடுன்னு எப்பயும் எல்லோரையும் சாபனை விட்டுக்கிட்டா இருப்பா. ஒரு நாய், பூனைய கூட கிட்டவர உடமாட்ட. அவ பக்கத்துல இருந்து இருந்து எனக்கும் ஒட்டிக்கும்னுதான் நான் விலகி விலகி போறேன். ஆனா காலம் என்ன அங்கதான் வந்து நிக்க வைக்குது. அம்பலத்தாம்மாவோடு இருக்கும்போது மட்டும் நல்லபடியா பேசறதா எனக்கு தோணுச்சி. அவங்களுக்குள்ள ஏதோ ஒட்டுறவு இருக்குன்னு நானும் கிட்ட போவாம இருந்திட்டேன்.

ஏனோ என்னையறியாம இனிமேல அவங்க எங்கடா இருக்கிறதுக்குன்னு சொன்னவுடன் வெறி பிடித்தவன் போல பாட்டில்களை எடுத்து தன் தலையிலேயே அடித்துக்கொண்டான். ரத்தம் வழிய துடைக்கவிடாமல் கூட மிச்சமிருந்த சரக்கை ராவாகக் குடித்து தூக்கிப் போட்டான்.

போதை தலைக்கேறி ரொம்ப நேரம் ஏதோதோ பினாத்திக் கொண்டிருந்தான்.

சூரியன் இறங்கிக்கொண்டிருந்த நேரம். மேய்ச்சலுக்கு வந்த கழுதைகளெல்லாம் கோயிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தலைக்கு மேல் மட்டும் வானம் இருண்டு லேசான தூரலைக் கொட்டிவிட்டுத் தள்ளிப்போனது. அந்நேரம் தூரத்தில் அம்பலத்தாமாளின் சவ ஊர்வலம் போகும் சத்தம் கேட்க, சுந்தரம் எழுந்து வந்து மரத்தடியில் உட்கார்ந்து, “சின்ன வயசுல எங்க பாட்டி சொல்லி கேட்டிருக்கேன் மச்சான், உங்கம்மா ஆண்டாளின் அம்சம்டா. நீ அவகிட்ட போ எல்லாம் சரியாயிடுவான்னு சொல்லுவாங்க. ஒரு தடவ திருக்கோயிலூர் ஜீயர் வீட்டுக்கு வந்தப்ப, எங்கம்மா பாடின பாசுரங்கள கேட்டு ஊர் கூடி நிற்க அப்படியே கண் கலங்கி அவ கால்ல நமஸ்காரம் வாங்கனார்னு சொல்லுவாங்க. ஆனா எங்க மாமாக்காரங்கத்தான் அவ படிச்சா நம்மள மதிக்க மாட்டான்னு அவள புடிச்சி ஒரு நாரபையனுக்கு கட்டிவச்சி இப்படி ஆக்கிட்டானுங்கன்னு சொல்லும்.”

ஓவியம் : சீராளன் ஜெயந்தன்

கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாசுரத்தை பாடறது புடிக்காம எங்கப்பா அடிப்பானாம்.புத்தகம் பக்கம் போனாவே அடிதான் விழுமாம். அடிக்கடி அடி தாங்காம தாய் ஊட்டுக்கு வந்துடுமாம். இப்பகூட வீட்டலமாரியில நூறு புஸ்தகம் கிடக்கு.
அதுக்கப்பறம் ஒருநாள் எதேச்சையாக இதோ இந்த பெருமாள் கோயிலுக்குள்ள போறேன் எங்கம்மா பாடிட்டிருக்கறதப் பார்த்து நா அப்படியே நின்னுட்டேன். அப்ப எங்கம்மா அம்லத்தம்மா பக்கத்துல உட்கார்ந்திருந்தாங்க. கண்மூடி ஒரு தியானியை போல. இரண்டு புள்ளைய போர்ல பலி கொடுத்த எந்த சுவடும் இல்லாம அவ்வளவு சாந்தமா அம்பலத்தம்மாவும் எங்கம்மா மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. அன்னிலேயிருந்து எங்கம்மா மேல ஒரு பாசம் வர ஆரம்பித்தது. ஆனா ஊர் சனமும் நானும் எங்கம்மா மேல ஏத்தி வச்ச வெறுப்பு இப்ப பொண்டாட்டி கிட்டேயும் புள்ளங்கிட்டேயும் கொதிப்பா இருக்கு .நான் என்ன செய்ய போறேன்னு தெரியல “ என்று சொல்லி முடித்த பிறகும் அவன் கண்ணிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. நான் எதுவும் சொல்லாமல் சாட்சியாய் நின்றிருகின்ற பெரு மலையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது வெளியே சுந்தரம் நின்றுக்கொண்டிருந்தான். உள்ளே வரச்சொன்னேன். மறுப்பு சொல்லாமல் உள்ளே வந்து அவனது அம்மாவின் எதிரே நின்றான்.

சுந்தரத்தின் மாமா சோபாவில் கால்மேல் கால்போட்டு பஞ்சாயத்து தோரணையோடு பேச வாய் எடுத்ததுமே, அவன் வாசல் பக்கம் போய்விட்டான். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கற்சிலை போல அங்கே உறைந்திருந்தோம். தலைவிரி கோலமாய் சுருண்டு கிடந்த பேபியம்மா எழுந்து தலைமுடியைப் பின்கொண்டை போட்டபடி நகர்ந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டார். இரவெல்லாம் அழுது தீர்த்த கண்கள் இப்பொழுது சலனம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன்.

உள்ளே வந்தவன் பேபியம்மா பக்கத்தில் வீட்டுச்சாவியை போட்டுவிட்டு, சரி நீயே இந்த வீட்டுல இரு நாங்க வேற வீட்டுக்கு போறோம் என்று சொல்லி சரசரவென வீட்டைவிட்டு வெளியேறினாள். ராத்திரியே தட்டுமுட்டுச் சாமான்களெல்லாம் ரெடி பண்ணி வண்டியில் கிளம்பத் தயாராக இருந்தது.

நான் சுந்தரம்ன்னு வாயெடுத்தும், “இல்லடா மச்சான், ஒண்ணா இருக்கறதலாம் சரிபட்டு வராது” என்று சொன்னபோது அவன் வாய் மட்டுமே அசைவதாக எனக்கு தோன்றியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்தச் சாவியை எடுத்து கையில் வைத்துகொண்டாள். நான் திரும்பிப் பார்த்தபோது அங்கு உட்கார்ந்திருப்பது உயிருள்ள ஒரு பிணம் போலவே பேபியம்மா எனக்குத் தெரிந்தாள்.

இரண்டு மூன்று நாட்களாக பேபியம்மா வீட்டில் எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்தது. போய் பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு வற்புறுத்தியும் சாப்பிடவோ,கோயிலுக்குப் போகவோ இல்லை. அவள் கையில் ஆண்டாள் பாசுரத்தை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள். அதனுடனே ஒன்றிரண்டு மாதம் நடமாடிக்கொண்டிருந்தாள்.
அதற்குப்பின் ஒரு மத்தியான நேரம், முன்வாசலில் இருக்கும் திண்ணையில் பேபியம்மா பாசுரப் புத்தகத்தை அணைத்தபடி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். ஏதோ சன்னதம் வந்தவள் போல எழுந்து உட்கார்ந்தவள் சுற்றும் முற்றும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை உச்சாடனம் செய்வது போலவே இருந்தது. தெருவில் இறங்கி ஓடியவள் நான்கு ஐந்து வீடுகள் தள்ளி இருந்த சந்தில் நுழைந்தாள். நான் பின்னாடியே ஓடினேன்.

ஒரு நாய் இரண்டு கண்களிலும் அடிப்பட்டு ரத்தம் வழியத் துடித்துக்கொண்டிருந்தது. “அம்பாலா அம்பாலா உனக்கு என்னாச்சு என்னாச்சு” என்று கதறியபடி அதை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, “நீ என்ன விட்டு போவமாட்டன்னு எனக்கு தெரியும் அம்பாலா” என்று தன சேலையால் ரத்தத்தைத் துடைத்துவிட்டு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

விடியற்காலை பேபியம்மா பாசுரம் எடுத்துப் பாடப்பாட பின்வாசலுக்குப் போய் பார்த்தேன். மூன்றாம் பிறை வானில் அவ்வளவு அழகாகச் சுடர்ந்துகொண்டிருந்தது. அதனைச் சுற்றி ஆரஞ்சு நிறத்தில் ஒளி வட்டம் தெரிய பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

என்னையறியாமல் தொலைந்து போய் கண்களில் நீர்ததும்பக் கைகூப்பி நின்றுக்கொண்டிருந்தேன். அன்று பெருமாள் கோயிலில் அம்பலத்தாம்ம்மா தியானித்து அமர்ந்திருக்கும் சித்திரம் மட்டுமே என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.

***

கிருஷ்ணமூர்த்தி – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயத் தொழிலுடன் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அங்கே எளியோர்களின் குழந்தைகளுக்கான மாலை நேரப் பள்ளியை நிறுவியிருக்கிறார். அவ்வப்போது அவரது கதைகள் இதழ்களில் வெளிவருகின்றன
மின்னஞ்சல்: krishik793@gmail.com

உலகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது?

0

பாரதீ


லகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது என்பது பற்றி இந்தியாவுக்குள் குறிப்பாக வாட்சப் பல்கலைக்கழகத்தில் பலவிதமான புல்லரிப்புக் கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. உலகமே நம்மைப் பார்த்து நடுங்குவதாகவும் உலகத் தலைவர்கள் எல்லோரும் நம் தலைவரைப் பார்த்து வியந்து போற்றுவதாகவும் வண்ண வண்ணக் கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு நேர்ந்த மிகப்பெரும் சாபக்கேடு இதுதான். மூடர்களால் மூடர்களுக்காக மூடர்களாலேயே நிகழ்த்தப்படும் சமூக ஊடகக் கோமாளித்தனங்கள் உலகத்துக்கே பெரும் சாபக்கேடாகி இருக்கின்றன என்றாலும் இந்தியாவுக்குக் கூடுதல் சாபக்கேடாக இருக்கின்றன. முன்பு மரபான ஊடகத்தினர் மட்டும் பொய் சொன்னார்கள். அரசாங்கம் கொடுக்கும் விளம்பர வருமானத்துக்காக அரசைக் கேள்வி கேட்பதற்கு அஞ்சினார்கள் – ஒத்து ஓதினார்கள். இப்போது ஊடகங்களுக்கு மாற்றாக வந்திருக்கும் சமூக ஊடகங்களும் அதே வேலையைத்தான் செய்கின்றன.

விளம்பர வருமானத்துக்காக என்றில்லாமல், முழு வருமானத்துக்கும் அரசையோ ஆளுங்கட்சியையோ நம்பி இருக்கும் சமூக ஊடகக் குழுக்கள் பெருகிவிட்டன. அவர்களுக்குப் போட்டியாக இப்போது மரபான ஊடகங்களுமே பல மடங்கு கூடுதலாக ஊழல் மயப்பட்டு இருக்கின்றன. முன்பு விளம்பர வருமானத்துக்காக மட்டும் மாரடித்தவர்கள் இப்போது தனிப்பட்ட முறையிலும் கொட்டிக் கொடுக்கப்படுவதால் குரலை உயர்த்தி அரசுக்கு விளம்பரம் செய்கிறார்கள். இல்லாதவற்றையெல்லாம் சொல்ல வைக்கப்படுகிறார்கள். நடந்ததைப் பல மடங்கு ஊதிப் பெரிதாக்கி மிகைப்படுத்திச் சொல்ல வைக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள விரும்பும் எளிய மனிதர்களுக்குத்தான் அது கிடைப்பதேயில்லை. எதுவுமே உண்மை இல்லை – எல்லாமே உண்மைதான் என்று எளிய மனிதர்களைக் குழப்பும் இந்தப் பின்-மெய்யுகத்தில் (post-truth era), இந்தியா எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தியாவில் நடக்கும் கொடுமைகளையும் கோமாளித்தனங்களையும் கண்டு உலகம் கொதிக்கிறதா கைகொட்டிச் சிரிக்கிறதா அல்லது நாம் வல்லரசாகிவிட்டதைக் கண்டு உண்மையிலேயே பொறாமையில் துடிக்கிறதா என்பதை அறிய முற்படும் மற்றுமோர் உண்மை முயற்சிதான் இந்தக் கட்டுரை.

உலகத் தலைவர்களுக்கு நடுவில் மன்மோகன் சிங்குக்கு இருந்த மரியாதை மோடிக்கு இருக்கிறதா? மன்மோகன் சிங்குக்கு மரியாதையே இருக்கவில்லை, அவர் ஓர் ஊழல் மலிந்த அரசாங்கத்தை நடத்திய பலவீனமான பிரதமர் என்று செய்யப்பட்ட பரப்புரை இந்தியாவுக்கு வெளியேயும் சென்றதா? 2014-இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, அதுவரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த நாம், திடீரென்று இலக்கு தென்பட்டுவிட்டது போலவும் அதை நோக்கிய பாதைக்குள் சரியாக வந்து இணைந்து விட்டது போலவும் இந்தியாவுக்குள் உணர்ந்தது உண்மைதான். அதை வெளிநாடுகளிலும் நம்பினார்கள் என்பதும் உண்மைதான். அந்த மரியாதை அதன் பிறகு கூடிக் கொண்டே வந்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா?

இதற்கு முன்பு எந்த அரசாங்கத்துக்கும் இருந்திராத ஒரு பெரும் பலம் இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி யாரேனும் பெருமையாகப் பேசினால், அந்த இடத்தில் நாமும் பெருமைப்பட்டுக் கொள்வதோடு, பெருமையை இன்னும் சிறிது கூட்டிக் கொள்வது போல நான்கு வார்த்தைகள் சொல்வோம். அவ்வளவுதான். இப்போது அப்படி இல்லை. இந்தியா உண்மையாகவே வல்லரசு ஆகிவிட்டது என்று நம்புகிற ஒரு கூட்டம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. அவர்களை, “அப்புறம் ஏன் இன்னொரு நாட்டில் போய் உங்கள் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதானே!” என்று கேட்டால் தலைதெறிக்கத் தப்பி ஓடிவிடுவார்கள் என்பது வேறொரு கதை. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று தனிப்பட்ட முறையில் தான் நம்பாவிட்டாலும் கூட, வேலையைப் போட்டுவிட்டு அப்படி ஒரு கருத்தைப் பரப்புவதையே தன் முழு நேர வேலையாகக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. நாடும் அரசும் ஆளுங்கட்சியும் ஒன்றுதான் என்று இந்தியாவில் நடக்கும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் வேலையைச் செய்கிறார்கள். என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்தான் தங்கள் தலைவர் என்று ஒரு தலைவனைக் கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றுகிற ஒரு கூட்டம் – அதுவும் படித்த கூட்டம் – கிடைப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? இது எப்படிச் சாத்தியப்பட்டது?

இன்னொரு நாட்டுக்குள் போய், தன் நாட்டிலிருந்து சென்று குடியேறிய மக்களை ஒன்று திரட்டி, ஓரிடத்தில் கூட்டி, அந்த நாட்டுத் தலைவனோடு ஒரே மேடையில் தோன்றி, கைகோத்து, அந்த நாட்டில் நடக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஒரு தலைவனை இதுவரை இந்தியாவும் கண்டதில்லை உலகமும் கண்டதில்லை. கண்டாலே மிரண்டு ஓடுகிற அளவுக்கு உலகத் தலைவர்களைக் கட்டிப்பிடித்துப் படம் எடுத்து வெளியிடுவதன் மூலம் அவர்களின் மரியாதையைப் பெற்று விட்டதாக வாட்சப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தன் பக்த கோடிகளை நம்ப வைக்கும் வேலையை வேறு எவர் செய்திருந்தாலும் இந்நேரம் கோமாளியாக்கப்பட்டிருப்பார்.

இப்போதைக்கு உலகம் இந்தியாவை விரும்புவதற்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வாழும் மேற்குலகத்தில் சீனா மீது – சீனர்கள் மீது பெரும் மரியாதை இல்லை. அதுவே இந்தியர்களுக்குப் பெரும் சாதகமாக இருக்கிறது. இது அடிமட்டத்தில். அரசுகள் அளவிலும் அதே கதைதான். சீனாவை எதிர்க்க இந்தியா வேண்டும். அதனால் இந்தியா நட்பு நாடு. அது போலவே இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பான உலகத்தில், முஸ்லிம் நாடுகள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் கூடி வந்தன. அதை இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாகப் பயன்படுத்தி இந்தியா மீதான உலகின் நல்லெண்ணத்தைக் கூட்டிக்கொண்டது. “நீங்கள் இப்போது படுவதைத்தான் நாங்கள் காலங்காலமாகப் பட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கள் புதிய எதிரி, எங்கள் பரம்பரை எதிரி” என்று சொல்லி, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல்படும் தோழனாக மேற்குலகோடு மேலும் நெருங்கிக்கொண்டது.

உலகமெங்கும் வலதுசாரி அரசியல் தலை தூக்கிய போது, அதன் தலைவர்கள் எல்லைகளைக் கடந்து தம் புகழைப் பரப்பிக் கொண்டார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளில் வலதுசாரி அரசியல் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இது இந்தியாவுக்கும் இந்தியாவில் நடக்கும் வலதுசாரி அரசியலுக்கும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சமீப காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகள் வெளிநாடுகளின் கண்களுக்கு நன்றாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் என்று அரசைக் கேள்வி கேட்கும் அனைவரின் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அரசை விமர்சிக்கும் ஒவ்வொரு பதிவையும் வேலையில்லாமல் உட்கார்ந்து தணிக்கை செய்து அதை நீக்குமாறு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் வணிக நோக்கில் இப்போதைக்கு இதைப் பெரிது படுத்தாமல் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் அது இந்த அரசாங்கத்துக்குச் சிக்கலாகத்தானே முடியும்?

ஸ்வீடன் நாட்டின் வீ-டெம் நிறுவனம் (V-Dem Institute) ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகளில் மக்களாட்சியின் நிலையை ஆராய்ந்து மக்களாட்சி அறிக்கை (Democracy Report) என்று ஒன்றை வெளியிடுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலகெங்கும் மக்களாட்சியில் நிகழ்த்தப்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளின் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன; 72% உலக மக்கள் தொகை வல்லாட்சி முறைக்கு அடியில் வாழ்கிறது; இதற்கு முக்கியப் பங்களிப்பாளர் இந்தியா என்கிறது. 44% உலக மக்கள் தொகை தேர்தல் வல்லாட்சியில் (Electoral Democracy) வாழ்வதாகச் சொல்கிறது. அதாவது தேர்தல் நடத்துவதால் மட்டுமே ஒரு நாடு மக்களாட்சி நாடு என்று ஆகிவிடாது. தேர்தல் மூலமாகவும் ஒரு வல்லாட்சியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதே அவர்கள் சொல்வது. இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படுகின்றன. சீனா, ஈரான், மியான்மர், வியட்நாம் போன்ற நாடுகள் மூடிய வல்லாட்சி (Closed Democracy) நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதிலிருந்துதானே அதற்குப் போக முடியும்! ஹிட்லர் அப்படியான ஒரு தலைவன்தானே! தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லாட்சியாளன். வாட்சப் பல்கலைக்கழகத்தில் போய்க் கேட்டால், இது இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத மேற்கு உலக நாடுகளின் சதி என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார்கள். உலகின் ஆகப் புகழ் பெற்ற தலைவர் நரேந்திர மோடி என்று ஓர் அறிக்கை சொல்கிறது என்றால் அந்த அறிக்கையை மட்டும் மேற்கு நாடுகளிடமிருந்து எந்த வெட்கமும் இல்லாமல் எடுத்துக் கொள்வார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களாட்சி நொறுங்கி விழுந்த ஏழு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சொல்லப்படுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இந்தியாவில் சமய உரிமை (Religious Freedom) நசுக்கப்படுவதாக இந்த அறிக்கை சொல்கிறது. தேர்தல் மக்களாட்சிக் குறியீட்டெண் (Electoral Democracy Index) என்ற தரவரிசையில் 179 நாடுகளில் 108-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

“ஒரு காலத்தில் இந்தியா செய்தியாளர்களின் கனவு பூமியாக இருக்கும். எங்கும் ஆணித்தரமான கருத்துக்களின் ஒலியும் ஆவேசமும் நிறைந்திருக்கும். இப்போது மோடி பற்றிக் கேட்டால் அஞ்சி ஒடுங்கி விடுகிறார்கள்” என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் நிக்கோலஸ் கிரிஸ்டாஃப் எனும் அமெரிக்க இதழியலாளர் ஒருவர் எழுதுகிறார். “வல்லாட்சியின் கீழ் இருக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதுண்டு. ஆனால் மதத்தீவிரவாதம் ஒரு நாட்டைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சீரழிக்காமல் விடவே விடாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான்” என்றும் அக்கட்டுரையில் கூறுகிறார். பாகிஸ்தான் வெறுப்பையே தன் எரிபொருளாகக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இன்னொரு பெரிய பாகிஸ்தானை உருவாக்கிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அவலம். விரும்புகிறவர்கள் எதை விரும்புகிறார்களோ அதுவாக மாறுவார்கள். வெறுப்பவர்கள் எதை வெறுக்கிறார்களோ அதுவாகவே மாறுகிறார்கள். எது நம் உள்ளத்தை நிரப்பி இருக்கிறதோ அதுவாக மாறுகிறோம்.

எல்லைகளிலாச் செய்தியாளர்கள் (Reporters Without Borders) எனும் நிறுவனம், இந்தியா இதழியல் உரிமையில் (Freedom of Press) 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இது பாகிஸ்தானை விட மோசமான நிலை. இதை இந்தியா எப்படிச் சரி செய்யப் போகிறது தெரியுமா? இது போன்ற தரவரிசைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் சூத்திரத்தை மாற்ற வேண்டும் என்று ஐ.நா. சபையில் முறையிடப் போகிறதாம்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் இந்தியர்களை ஒன்று திரட்டி, பேரணி நடத்தி, அவர்கள் முன் ஒரு பேருரை நிகழ்த்தி, தன்னை ஒரு பெரும் தலைவனாகக் காட்டிக் கொள்வது, பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவை எந்த அளவுக்கு வலுப்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனாலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் இந்தியர்களுக்கு நடுவில் தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும். அவர்களது நாடுகளில் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். இதை ஏன் இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் செய்யவில்லை? இனி வரும் தலைவர்களும் இதைச் செய்வார்களா? இதற்கு முன்பு இருந்தவர்கள் இது போன்ற செயல்பாடுகள் தன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை வெற்றிக்கு உதவும் என்று நம்பவில்லை. அதனால் செய்யவில்லை. இனி வருபவர்களும் அப்படியே நம்பாவிட்டால் இனியும் இதைச் செய்ய மாட்டார்கள். எந்த உலகத் தலைவருமே இதை ஒரு வேலையாகக் கொண்டு செய்வாரா என்று தெரியவில்லை. ஆனால் இவர் செய்கிறார். இதில் அவருக்குப் பெரும் வெற்றியும் கிடைக்கிறது. மற்றவர்கள் செய்ய விரும்பினாலும் இதைச் செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. ஏனென்றால் அதற்குப் பின் பெரிதும் பேசப்படாத பேருண்மை ஒன்று இருக்கிறது. முன்பு இருந்தவர்கள் வெளிநாடு சென்று வாழும் அளவிற்கு இருக்கிற இந்தியர்களின் மனதை வென்றவர்கள் அல்லர். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்; சிறுபான்மையினரை ஆதரிப்பவர்கள்; உயர் சாதி வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படாதவர்கள். இவரோ மதம் என்ற பதாகைக்குப் பின் ஒளிந்திருக்கும் உயர் சாதிக் கூட்டத்தின் நீண்ட நாள் கனவுகளுக்குத் தீனி போடுபவர்; என்றேனும் ஒரு நாள் இந்தியாவில் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லாமல் செய்வார் என்ற நம்பிக்கை கொடுப்பவர்; அவர்களைப் போலவே பிற மதத்தினரை – குறிப்பாக முஸ்லிம்களை – வெறுப்பவர் – அவர்களைத் துன்புறுத்துவதை விரும்பிச் செய்பவர்.

உலக அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace) எனும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அமெரிக்கா தன் கொள்கை முடிவுகளில் தாராளமாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிற தாராளவாதிகளாகவும், ஆனால் அதே போன்ற – அதற்கு இணையான பிரச்சனைகளில் இந்தியா தன் கொள்கை முடிவுகளில் பழமைவாத நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிற பழமைவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்கிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! என் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை நான் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவேன் – அப்படி நடத்துவதைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பேன் அல்லது கைதட்டிக் குதூகலிப்பேன். ஆனால் என்னை இந்த நாடு மண்ணின் மைந்தனைப் போல எல்லா உரிமைகளையும் கொடுத்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். என் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. அதை எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ அப்படிப் பேசி அவர்களின் உளவியலையே நொறுக்குவேன். ஆனால் அந்த நாட்டின் மேல் தட்டில் இருந்து வரும் எனக்கு இந்த நாடு இன அடிப்படையில் கொடுக்கும் இட ஒதுக்கீடு (Affirmative Action) வேண்டும். நாங்கள் ஏதோ தகிடுதத்தம் செய்து சட்டவிரோதமாக இந்த நாட்டுக்குள் குடியேறி வாழ்வோம்; எங்களை இந்நாடு இரு கரங்களாலும் வாரி அணைத்துக்கொண்டு தங்களில் ஒருவராக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில், பக்கத்து நாட்டவர்கள் பாதுகாப்புக்காகவோ மேம்பாட்ட வாழ்க்கைக்காகவோ அப்படிக் குடியேறி வருவதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் நாட்டில் பிறந்த மற்ற மதத்தவர்களைக் கூட மதத்தின் அடிப்படையில் பக்கத்து நாட்டுக்காரர் என்று முத்திரை குத்தி விரட்டி விடுவோம். அதற்கான சட்டம் இயற்றுவோம். வெள்ளையர் மேலாதிக்கம் அமெரிக்காவுக்குக் கேடு என்று வாதிடுவோம். ஆனால் இந்து தேசியமே இந்தியாவுக்கான பாதை என்றும் வாதிடுவோம். அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமக்களில் 80% பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்கிறார்கள். மேலே சொல்லப்பட்ட ஒவ்வோர் இரட்டை வேடத்தையும் அந்த அறிக்கை தோலுரித்துப் போடுகிறது.

இப்போதைக்கு இது பற்றி அமெரிக்கர்களோ மற்ற மேலை நாட்டினரோ பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. காரணம், அவர்களுக்கு இதை விட முக்கியமான – அவர்களை நேரடியாகப் பாதிக்கும் பிற பிரச்சனைகள் இருக்கின்றன. அது மட்டுமில்லை. வெளிநாடு சென்று வாழும் இந்தியர்கள் விவரமானவர்கள். எங்கே எதைப் பேச வேண்டும் – எப்போது எந்த வேடம் போட்டால் தன் பிழைப்புக்கு வசதியாக இருக்கும் என்று புரிந்து சுருதியைக் கூட்ட வேண்டிய இடத்தில் கூட்டி, குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்து, முன்னேறத் தெரிந்தவர்கள் – காரியமே கண்ணாய் இருப்பவர்கள். ஆனால் அது எப்போதும் அப்படியே இருந்து விடாது. முன்பு கண்ணை மூடிக்கொண்டு நாம் சொன்ன வளர்ச்சிக் கதைகளை நம்பியவர்கள், இப்போது வலதுசாரி வெறுப்பு அரசியலின் வளர்ச்சி பற்றியும் கேள்விப்படவும் கேள்வி கேட்கவும் தொடங்கி விட்டார்கள். அப்படி இந்த இரட்டை வேடங்களும் புரிந்துகொள்ளப்படும் வேளையில் நம்மவர்களுக்குச் சிக்கல் வரலாம். அதையுந்தான் பார்ப்போமே! அப்போது என்ன நிறத்துக்கு மாற வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள்தாமே நாம்!

மக்களாட்சியில் இருந்து வல்லாட்சிக்கு மாறுபவர்கள், மிக கவனமாகத்தான் மாற்றங்களைச் செய்வார்கள். முதலில் வளர்ச்சி பற்றிப் பேசுவார்கள். பின்னர் வளர்ச்சியின் பெயரைச் சொல்லி உரிமைகளைச் சிறிது சிறிதாகப் பறிப்பார்கள். எந்த இடத்தில் எதிர்ப்பு வலுக்கிறதோ அந்த இடத்தில் நிறுத்திக் கொள்வார்கள் அல்லது வேகத்தைக் குறைத்துக் கொள்வார்கள். அடுத்து தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக எவர் எவரின் உரிமைகளைப் பறிக்க வேண்டுமோ அவர்களின் உரிமைகளைச் சிறிது சிறிதாகப் பறிக்கத் தொடங்குவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்கும் வரை அல்லது அதற்குப் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடைக்கும் வரை பறித்தலின் வேகம் கூடிக் கொண்டே இருக்கும். எதிர்ப்பு வரும் போது – வலுக்கும் போது வேகம் குறைத்துக் கொள்ளப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும். இப்படித்தான் இந்தியா மக்களாட்சியிலிருந்து தேர்தல் வல்லாட்சிக்கு மாறியிருக்கிறது. பண மதிப்பிழப்பு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் ஊழல், ஊடகங்களின் பல்பிடுங்கல், நிறுவனங்களைச் சிதைத்தது, காஷ்மீரை உடைத்தது, குடியுரிமைச் சட்டம் ஆகிய ஒவ்வொன்றையும் இந்த ஆட்டநூலில் (playbook) பொருத்திப் பாருங்கள். அப்படியே பொருந்தும்.

இப்படி ஒவ்வொன்றாகக் கை வைத்த போது, உலக நாடுகள் கண்டுகொள்ளாமலேதானே இருந்தன. இப்போதென்ன திடீரென்று அக்கறை? அவர்களுக்கு எந்த வகையிலும் பிரச்சனையாகாது என்கிற விதமான உள்நாட்டுப் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அப்போதைக்கு அவற்றைக் கண்டுகொண்டால்தான் பிரச்சனை என்று கூட எண்ணியிருக்கக் கூடும். குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது முதன்முதலாக அவர்களுக்கு மணி அடித்தது. இது போகும் பாதையும் வேகமும் எங்கு போய் முடியப்போகிறதோ என்ற அச்சத்தை உண்டாக்கின. உள்நாட்டு ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்த போது கண்டுகொள்ளாதவர்கள், பிபிசியையே மிரட்டி உருட்டிய போது அச்சம் கொண்டார்கள். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் நுழையத் தடை விதித்த வேளையில் இது அங்குதான் போய் முடியும் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதுவும் எதற்காக? பல ஆண்டுகளுக்கு முன்பு இவரைத் ‘திருடன்’ என்று அழைத்ததற்காகத் தொடரப்பட்ட பழைய அவதூறு வழக்கில் தண்டனை கொடுத்து, அதன் அடிப்படையில் பதவி விலக்கம் செய்து… எவ்வளவு காலம் பதவி விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்? 2 ஆண்டுகள். அதாவது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை. இதைக் கண்டு முதலில் அதிர்ந்தவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள் அல்லர். அவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது! அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு எது முக்கியமோ அதுவே அவர்களுக்கும் முக்கியம். அப்படி இருக்கையில் இதற்காக முதலில் அவர்கள் பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்களின் கவனத்தைத் திருப்பும் வேலையைச் செய்பவர்கள் இரு குழுவினர். ஒன்று, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் – இதழியலாளர்கள். அவர்கள் தம் நாட்டு இதழ்களில் இதைப் பற்றிப் பெரிதாகப் பேசும் போது, அந்நாட்டுத் தலைவர்களின் கவனத்தை இது ஈர்க்கும். இன்னொன்று, பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள அரசியல் அறிவியல் பேராசிரியர்கள் – ஆய்வாளர்கள். இதில் இந்தியர்களும் நிறைய உண்டு. பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் அளவுக்குப் படித்த இந்தியக் குழந்தைகள் யாராக இருப்பார்கள்? சிறு வயது முதல் வீட்டிலேயே குலப்பெருமை கற்றுக்கொடுக்கப்பட்ட – இட ஒதுக்கீட்டை வெறுக்கிற – தம்மைத் தவிர எல்லோரும் இழி பிறவிகள் என்று எண்ணுகிற உயர்வகுப்பினரே அங்கும் இருப்பது. அவர்களிலும் நேர்மையானவர்கள் நிறைய இருப்பார்கள். குறைந்தபட்சம் உலகத்தின் கவனத்தைப் பெற்றுவிட்ட பிறகு நேர்மையான உரையாடலில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். இது போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டவுடன் இதழியலாளர்கள் முதலில் கருத்துக் கேட்க ஓடிச் செல்வது இவர்களிடம்தான். இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கேள்விகள் – வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாத கேள்விகள் எல்லாம் வெளியே வந்து விழும். அப்படித்தான் சமீப காலங்களில் உலகமெங்கும் இந்தியாவின் மக்களாட்சி முறை பேசுபொருளாகி இருக்கிறது.

லண்டன் கிங்’ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலட் சொல்கிறார்: “மனிஷ் சிசோடியா போன்ற ஒரு மாநிலத் தலைவரைக் குறி வைத்த போது, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இடத்தில் இருக்கும் ராகுல் காந்தி போன்ற ஒருவரைக் குறி வைக்கும் போது, நோக்கம் தெளிவாகி விடுகிறது. தன் இடத்துக்குப் போட்டி போடும் வாய்ப்பிருக்கிற ஒருவரைக் கட்டம் கட்டுவதன் மூலம், “இந்த இடம் எப்போதும் என்னுடையது. இதற்கு ஆசைப்படுபவர்கள் எவருக்கும் இதுதான் நேரும்” என்று தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. அங்குதான் மக்களாட்சிக்குப் பிரச்சனை தொடங்குகிறது. அந்த இடத்தில் மக்களாட்சி வல்லாட்சி ஆகிவிடுகிறது.”

அவர் இத்தோடு நிறுத்தவில்லை. “மோடியின் நிரந்தரப் பிரதமர் ஆசைக்கு இது மட்டும் போதாது. அரசியலமைப்பின் படி, இந்தியா மாநிலங்களுக்கு நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கும் கூட்டாட்சி நாடு. அவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்த்தால் ஒழிய அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் என்பதை மாநிலத் தலைவர்கள் எல்லோரும் பெரும்பாலும் உணர்ந்துவிட்டார்கள். அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கத்தான் செய்வார்கள். அடுத்து மோடியின் குறி அதையும் நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கும். அப்படியானால் மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் குறி வைக்கப் படுவார்கள். அதுதான் சமீப காலத்தில் இதே பாதையில் சென்ற துருக்கி, இஸ்ரேல், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடந்தது. அது இங்கேயும் நடக்கும்.”

அவர் மேலும் சில வலுவான கருத்துக்களை வைக்கிறார். ஒன்று, உலகின் மிகப் புகழ் பெற்ற தலைவர் மோடி என்பது ஒரு புறம் இருக்க, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்டவர்தான் மோடி என்பதையும் நினைவுபடுத்துகிறார். அதாவது, புகழ் என்பது வேறு, தேர்தல் வெற்றி என்பது வேறு. புகழை வளர்த்துக்கொள்வதற்காகவே கோடிகளைக் கொட்டும் ஒருவர் – அதுவும் வரலாற்றில் இதற்கு முன் எந்தத் தலைவரும் செய்யாத அளவுக்கு அதே வேலையாய் அலையும் ஒருவர் – இப்படியான புகழைப் பெற்றிருப்பது பெரிதில்லை என்கிறாரோ! அப்படிப் பார்த்தால், தேர்தல்களை – தேர்தல் முடிவுகளை எப்படித் தனக்கேற்றபடிப் பயன்படுத்திக்கொள்வது என்பதிலும் வரலாற்றில் இதற்கு முன் எந்தத் தலைவரும் இந்த அளவுக்குக் கைதேர்ந்தவர் இல்லை என்றே படுகிறது. அடுத்தது, பாஜக என்ற கட்சிக்கென்று இன்று இந்தியாவில் எதுவும் இல்லை. பாஜக என்பதே மோடி என்று ஆகிவிட்டது. மோடியை நம்பித்தான் மொத்த பாஜகவும். மோடிக்குப் பிந்தைய பாஜக பெரிதும் திணறும் என்கிறார்.

கடைசியாக, “அரசியலமைப்புக்கு ஒத்துவராத பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு மிதமிஞ்சிப் போய்விட்டது. இந்திய நீதித்துறையால் இதை முழுமையாக எதிர்த்து நிற்க முடியவில்லை. இதுவே பிரேசிலில் நடந்த போது, நீதித்துறை அதை அனுமதிக்கவே இல்லை. அந்த அளவுக்கு அந்த நாட்டின் நீதித்துறை வலுவாக இருந்தது. அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் இதைக் கடுமையாக எதிர்த்து வெற்றி கொண்டார். இது இஸ்ரேலில் நடந்த போது, அந்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடித் தடுத்தார்கள். அங்குள்ள மக்கள் அவ்வளவு அரசியல்படுத்தப்பட்டவர்கள். இந்த இரண்டுமே இந்தியாவில் நடக்காது. பிரேசிலில் இருப்பது போல, வலுவான நீதித்துறையோ தலைவர்களோ இல்லை. இஸ்ரேலில் இருப்பது போல, குடிமைச் சமூகமும் இல்லை. போலந்திலும் ஹங்கேரியிலும் நடந்தது போலத்தான் இந்தியாவிலும் நடக்கும். வல்லாட்சி வலுப்பெறும். மோடிக்குப் பின்தான் இந்தியா இதைவிட்டு வெளியேற முடியும்” என்கிறார். அதற்குள் மீள முடியாத தொலைவு பயணித்துவிட்டால் என்ன செய்வது!

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு இருக்கும் பிரச்சனை இதுதான். சீனா, ரஷ்யா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராகச் செய்யும் பரப்புரையில் அவர்கள் முன்னால் வைக்கும் பெரும் குற்றச்சாட்டே, அந்நாடுகளின் வல்லாட்சி முறைதான். இங்கெல்லாம் மக்களாட்சி இல்லாததால்தான் இவர்கள் மனித குலத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு எதிராக ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளை ஒன்றிணைக்கும் போது, தன்னுடன் இருக்கும் ஒரு நாடே வேகமாக மக்களாட்சியை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பது உலக அரங்கில் அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்கும். “எங்களோடு இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்லவும் வேண்டும். சொல்வதால் சங்கடங்கள் ஏற்பட்டுவிடவும் கூடாது. ‘நமக்கு அவர்கள் தேவைப்படுவது போலவே, அவர்களுக்கும் நாம் தேவைப்படுகிறோம்’ என்று நன்றாகப் புரிந்துவைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்கிறோம். இது இப்படியே தொடருமா – தொடர முடியுமா என்பதுதான் கேள்வி.

***

பாரதீ

அகராதி கவிதைகள்

0

1.
ழுகிக் கொண்டிருக்கும்
நேரத்தைக்
கடத்திவிட முடியாத இரவு
மேலிறங்கிக்
கனமாக அழுத்துகிறது

விசும்பின் நதியாய் தோன்றிவிட்ட முதல் முத்தம்
நம் இருதயங்கள்
சப்தித்ததை விடவும்
குறைந்த ஒலியில்
பிறப்பித்த ஆணைகளைச்
செவ்வனே செய்து கொண்டிருக்கிறது

கிடந்த கோலத்தில்
ஊற்றெடுத்த காதல்
கையாலாகாத இருளை
கண்டம் இறுக்கி அழித்துவிட முயற்சித்து முயற்சித்துத் துவள்கிறது

2
தற்கு முன்பும் உன்னைத் தெரியும்

அப்போது நாம்
இடத் தவறிய முத்துக்களின் கணக்கை நேர் செய்யும் பொருட்டு தற்போது சந்திக்கிறோம்

பகலும் இரவுமென
உயிர்கள் உழல
செவ்வனே
நட்சத்திரங்களின் நிழலில்
இணக்கம் கொண்டு
முயங்கியிருந்தோம்
விண்ணில்
பால்வெளி பளிச்சிட்டது
விண்மீன்களின் ஒளியினூடே நடனமாடும் நம்மைக் காண
காத்திருந்த இருளில்
அவர்கள் மிச்சத்தைப் பேச வேண்டும்

கோப்பை மது கொண்டு வா
அறியா இதழ்கள்
நன்னீர் ஆசியுடன்
ரேகைகள் சிவக்க
களித்துச் சுவைக்கட்டும்

*

3.
கடும் கோடையின்
பின்னிரவில்
விண்மீன்கள்
இருளுக்கு மகுடம் சூட்டி
மகிழ்ந்து கொண்டிருந்தன
முந்நூறு மைலுக்கு அப்பாலிருந்து
இரவின் வன்மையை அதிகப் படுத்தியிருந்தாய்
தரையில் படுத்திருந்தவளை
இருள் முழுதுமாய் கையகப்படுத்தியிருந்தது
தரை நழுவியிருந்தது
பின்னிரவின் குளிர்மை பரவத் தொடங்கியிருந்தது
பசுங்கொடியில்
விழித்துக் கொண்ட மலர்களை
என் செய்வது…
முந்நூறு மைலும் இருளை இறுக்கியது
சூரியன் எழுந்தது
மகுடம் தரையில் விழுந்து சிதறுகிறது

*
அகராதி
aharathi26@gmail.com

ஸ்ட்ராபெரி மூன் – ப்ளிப் 01

0

ஜீவ கரிகாலன்

ஓவியம் : சீராளன் ஜெயந்தன்

ன் கைகளைப் பிடித்து அந்த ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்றாள் அவள். கடற்கரையை ஒட்டியிருக்கின்ற ரிசார்ட் என்று அலைகளின் சப்தம் உணர்த்தியது. அலைகளைக் காட்டிலும் அங்கிருந்தோர் எழுப்பிய கூச்சல் பெரிதாய் இருந்தது. மீண்டும் அவள் என்னை அழைத்ததன் காரணத்தை நினைத்துப் பார்த்தேன், “இன்றைக்கு ஸ்ட்ராபெரி மூன்” ஈவெண்ட்.

ஸ்ட்ராபெரி மூன் ராக் பேண்ட் உலகப் பிரசித்தி பெற்று வரும் இசைக்குழு. ஒத்திகையின் போதே மைதானத்தை ஒட்டியிருக்கின்ற விடுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளேயும் அதிர்வுகள் வர ஆரம்பித்தன. ‘ஷோ ஆரம்பிக்கப் போறாங்க’ என்றபடி என் கைகளில் ஒரு டாக்-ஐ கட்டியபடி அழைத்துச் சென்றாள். குளித்து முடித்த ஈரத்தோடு வியர்வைச் சுரப்பிகளின் வாசனையும் ஷவர் ஜெல்லின் நறுமணமும் கேள்விகளற்ற பின்தொடர்தலை பணித்தன. யார்யாரோ அவளோடு பேசினார்கள், என்னிடம் ஹெல்லோ சொல்வதற்காக தயாராக கைகளை வைத்திருந்தேன். சிலரின் கைகுலுக்கல்கள் உண்மையானதாகவும் பலரின் கரங்கள் செத்த மீனைத் தடவியது போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அறிமுகமாக அவர்களுக்கு நான் இருப்பதை உணர்ந்தேன். தோரணமாக புல்வெளி முழுக்க அலங்கார விளக்குகள் தொங்க விட்டிருக்கலாம், புருவங்களைச் சுருக்குமளவிற்கான சூடு அதன் விளக்குகளில் இருந்து வந்திருக்கும் என உணர்ந்தால் சொல்கிறேன். அவ்வப்போது கைகளைப் பற்றியபடி ஆடிக்கொண்டிருந்தாள்.

நூதனமான சிறிய ஓசையையும் கவனித்துப்பழகி வாழ வேண்டிய நிர்பந்தமுள்ள எனக்கோ இந்த பாண்ட் வாசித்த ஹெவி மெட்டல் நரக வேதனையாக இருந்தது. யாழும் மின் கித்தாரும் ஒரே வகை மீட்டும் கருவிதான். ஏன் கார்லோஸ் ஸண்டானாவும் ஸ்ட்ராபெரி மூன் பேண்டிலும் ஒரே கருவிதான் மீட்டப்படுகிறது. ஏன் இந்த ஒவ்வாமை.

வழக்கம் போல என் கேள்விகளின் உலகில், என்னைப் போன்ற ஒருவன் அதற்கான பதிலையுமே இணைத்து அனுப்புவான். நான் இந்த இசையை எப்படிப் புரிந்துகொள்ள? இது இந்த யுகத்திற்கான இசை, இன்றைய இரைச்சல்களைக் கடந்துதான் ஆர்பரிக்க வேண்டும். எனது காலவரிசை இவர்களோடானது அல்ல. ஆனால் என் காலவரிசையில் ஒரு கிளை எழுப்பியவள் அவள். இசையாகவே எனக்கு புலப்படுபவள் அவள். அவள் அழைத்தால் யார் தடுக்க முடியும்?

அடுத்ததாக ஒரு பாடல் பற்றிய அறிவிப்பு வந்ததும் அங்கிருந்த நூறு நபர்களே ஆயிரமானது போன்ற ஆர்ப்பரிப்பு எழுந்தது. உயிர் பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன், அதுவரை நான் அறிந்திடாத பயத்தின் கீற்றாக சிறு சிறு வெளிச்சங்கள் வந்திறங்கின, என் கைகளை உதறி முன்னே ஓடிச் சென்றவளை கத்தி அழைக்க முடியாத நான். என்னைப் போன்ற பயம் கவ்விய பெருமூச்சு ஒன்றை கவனித்தேன். அது என்னை விட மிகவும் பயத்துடன் இருந்தது. புலம்பெயர்ந்து வந்த நாள்முதல் அது அனுபவித்திடாத பயமென பின்பு அறிந்து கொண்டேன். அதன் தவிப்பிற்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியாத போதும் அதைத் தேடினேன். நிறைய பேரை இடித்துக் கொண்டு போவது சற்றுக்கடினம் தான் என்றாலும், கூட்டத்தின் இறுதி வரை சென்று விட்டேன். ஆனாலும் ஒரு பெரிய மதில் சுவர் என்னைத் தடுத்தது. இன்னமும் அதன் பயத்தை என்னால் உணரமுடிந்தது சொல்லப்போனால், தாளமுடியாத உயிர்வலி அது. பாடல் முடிந்ததும் வான வேடிக்கைகள் சடங்கென அதிர்ந்தன. நான் அந்த மதில் சுவற்றில் தலையை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு அதன் ஈனக்கதறல்களை கவனித்துக் கொண்டிருந்தேன். அது விடுதலைக்காக யாரிடமோ இறைஞ்சியது.

என்னைத் தேடி கண்டுபிடித்த அவள், “இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்றாள். இது எந்த இடம் என்று அவளிடம் கேட்டதற்கு “அது க்ரொகடைல் பார்க்” என்றாள். அப்படியானால் அந்த ஈன ஸ்வரம் – மதில்சுவரில் மீண்டும் காதை வைத்துப் பார்த்தேன். நிசப்தமாய் இருந்தது. இன்னும் சூடு பாய்ச்சும் விளக்குகள் அணைத்துவைக்கப்படவில்லை.

கைகளைப் பிணைத்துக் கொண்டே படுக்கைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தவள், இந்த பிரமாதமான இரவு இன்னும் முடியப்போவதில்லை என என்னை முத்திட்டாள். பியரின் நறுமணத்தோடு, கூடுகையின் உறுதியும் அதிலிருந்தது. “யூ நோ வாட் இட்ஸ் அ ஃபுல் மூன் டே” என்றாள்.

கண்களைத் திறந்து வானத்தைப் பார்த்தேன். அது நான் சந்தித்திடாத புதிய இருள்.

***

jay kay oru lumban

நினைவில் காதலுள்ள மிருகம்

1

ஈரோடு கதிர்

ஓவியம் : சீராளன் ஜெயந்தன்

யாரோ தன்னை தட்டுவதாக உணர்ந்து பதட்டமாய் கண் விழித்தான் நந்தன்.

“சென்ட்ரல் வந்துடுச்சா!?” என எழ முயன்றவனை தடுத்தவாறு, “உங்களக் கூப்பிடுறாங்க பாருங்க” என அவர் சன்னல் வழியே கை நீட்டினார்.

கை நீட்டிய திசையில் எம்டிசி பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. பஸ் சன்னலில் அவளின் மலர்ந்த முகம். அன்று ரயிலில் அருண் குறித்துக் கேட்டவள். குப்பென மனமெங்கும் ஒரு அவஸ்தை பூத்தது. அவள்தானா….!? மூச்சு ஒரு கணம் அடைபட்டு வந்தது. கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான். நெஞ்சு லேசாய் படபடத்தது. நிஜமா கனவா என தலையை உதறிக் கொண்டான்.

சைகையால் ஏதோ கேட்டாள். பேசினால் கேட்காத தொலைவில் பஸ் நின்று கொண்டிருந்தது. “ட்ரெய்ன்க்கு சென்ட்ரல் போய்க்கிட்டிருக்கேன்” என சப்தமாகச் சொன்னான். கம்மிய குரலாய் இருந்தது, தொண்டையைச் செருமிக் கொண்டான். அவள் பேருந்து எதிர் திசையில் நகரத் தொடங்கியது. என்ன செய்வதெனப் புரியவில்லை. தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். மறைந்து போன பஸ்சுக்கு பின்னால் அடுத்தடுத்து வாகனங்கள் சாலையை நிரப்பிவிட்டிருந்தன.

குழப்பமாக இருந்தது. எப்போது தூங்கினேன் என யோசித்தான். வள்ளுவர் கோட்டம் நிறுத்தத்தில், தேர் எந்தப் பக்கம் இருக்கிறதென தேடியது நினைவிலிருந்தது. அதன்பின் எதுவும் நினைவில் இல்லை. இறங்கி ஓடிப்போய் அந்த பஸ்சில் ஏறியிருக்கலாமோ எனத் தோன்றியது. நினைப்பே பைத்தியக்காரத்தனமாய் இருந்தது. இடது பக்கத்தில் எதிர் திசையிலிருந்து மூன்று ரயில் எஞ்சின்கள் ஒன்றாய் நகர்ந்து கொண்டிருந்தன.

சென்னையின் மதியக் கசகசப்பை அப்பட்டமாய் உணர முடிந்தது. செல்போனை எடுத்து நேரம் பார்த்தான். இன்டர்சிட்டிக்கு முக்கால் மணி நேரம் இருந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. வாட்ச் ஒன்று வாங்க வேண்டுமென அவ்வப்போது நினைப்பதுண்டு. செல்போன் வந்த பிறகு வாட்ச் எதற்கு எனத் தோன்றும். ஆனாலும் வாட்ச் ஒரு கெத்து.

சன்னல் வழியே தலையை நீட்டி தேய்ந்து கொண்டிருந்த சாலையைப் பார்த்தான். அப்படி எட்டிப் பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகப்பட்டது. அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாய் இருந்தது. ஆனாலும் அந்தப் பைத்தியக்காரத்தனம் பிடித்திருந்தது. பிடித்தமான காரணம் இருந்தால் எந்தப் பைத்தியக்காரத்தனமும் நியாயமானதாகவே தோன்றும்.

நமக்கு வாய்த்திருக்கும் நட்பு அல்லது உறவுகளில், அரிதான தருணங்களில் யாரையாவது நாம் பெற்றெடுத்திருக்கலாமென்றோ அல்லது நாம் அவருக்குப் பிறந்திருக்கலாமென்றோ தோன்றும் தேவகணம் குறித்து எங்கோ படித்தது நினைவில் வந்தது. பேருந்தில் கடந்து போனவள் அப்படி ஒருத்தியாய் இருப்பாளோ என மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். ஆமென்று சொல்லவும், இல்லையென்று மறுக்கவும் தோன்றவில்லை.

முந்தைய வருடம் மே மாதம்தான் அவளை முதன்முதலாகச் சந்தித்தான்.

சித்தப்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தான் நந்தன். சனிக்கிழமை காலை நாமக்கல் திரும்பியாக வேண்டும். வேலை எப்போது முடியுமெனத் தெரியாததால் முன்னதாகவே டிக்கெட் எதும் போட்டிருக்கவில்லை. வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்தோ பெங்களூரிலிருந்தோ நாமக்கல் வருவது ஆகாத ஒன்று. வழக்கமான ரயிலில் தட்காலில் வாய்ப்புண்டா எனத் தேடியபோது, ஆச்சரியமாக சென்ட்ரலில் இருந்து பத்தரை மணிக்கு சேலம் வழியாக திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் இருந்தது. அதில் இடமும் இருந்தது. இருவருக்கும் டிக்கெட் போட்டாகிவிட்டது. ஆனாலும் வந்த வேலை முடியும் அறிகுறி தென்படவில்லை. சித்தப்பாவை விட்டுவிட்டு நந்தன் மட்டும் புறப்படுவதாக முடிவானது. தட்கால் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

சென்ட்ரலை அடைந்து பெட்டியைக் கண்டுபிடித்து ஏறியபோது பெயிண்ட் வாசனை வீசியது. பெட்டி பளிச்சென இருந்தது. சுத்தமாய் பளிச்சென இருக்கும் பெட்டி கண்டதும் மகிழ்வாய் இருந்தது. 67 மற்றும் 72ம் எண் படுக்கைகள். பெட்டியின் மறுமுனைக்கே வரவேண்டியதாக இருந்தது. 72 பக்கவாட்டில் மேல் படுக்கை. கீழ் படுக்கையின் இருக்கையில் ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொன்றும் மேல் வரிசை படுக்கைதான். இரண்டு கீழ்ப்பக்க படுக்கை முழுக்க வயதானவர்கள் பைகளை வைத்தபடி நிரம்பியிருந்தார்கள். கால் வைக்கும் இடமெங்கும் பைகள், பெட்டிகள். திருதிருவென விழித்தபடி சுற்றிலும் பார்த்தான். முதலில் அந்த ஆண் நிமிர்ந்து பார்க்க, அதைக் கவனித்த அந்தப் பெண்ணும் சாப்பிட்டவாறு நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைக் குனிந்தாள். குனிந்த வேகத்தில் நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில், அந்த முகத்தில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்தன. நொடிப்பொழுதிற்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை நந்தனுக்கு. ஏன் அந்தப் பெண் அப்படிப் பார்க்கிறாள் என யோசனையாக இருந்தது.

கையிலிருந்த பையை அவர்களின் தலைக்கு மேலிருந்த படுக்கையில் வைத்துவிட்டு வெளியே வந்தான். நேரத்தைப் பார்த்தான். இரயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நடைமேடையில் அங்குமிங்குமாய் ஓடும் மனிதர்களின் முகங்களை கவனிக்க ஆரம்பித்தான். விதவிதமான முகங்கள் சுமக்கும் உணர்வுகள்தான் எத்தனையெத்தனை. வழியனுப்பும் முகங்கள் ஒருவிதம், பயணிக்கும் முகங்கள் ஒருவிதம். ஒரு பயணம் எத்தனையோ உணர்வுகளைத் தந்து விடுகின்றது. யதேச்சையாக சன்னலைப் பார்த்தான். அவள் நந்தனையே பார்த்தபடியிருந்தாள். அவன் கவனிப்பதைப் பார்த்ததும் குனிந்து சாப்பிடத் துவங்கினாள்.

நகரும் மனிதர்கள் மேல் வலுக்கட்டாயமாக வைக்க முயன்றாலும் எதோ ஒன்று சொடுக்கியிழுத்துப் பெயர்த்தெடுத்து வந்து அவள்மீது குவித்தது. அப்படிப் பார்க்கும் எல்லாக் கணத்திலும் அவளும் பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஏன் அந்தப் பெண் அப்படிப் பார்க்கிறாள் எனப் புரியாதது சுவாரஸ்யத்தையும், மிரட்சியையும் தந்தது. முதன்முறை பார்த்துவிட்டு வேகமாகக் குனிந்து நிமிர்ந்தவளின் முகத்தில் இருந்த உணர்வுகளுக்கும், இப்போது முகத்தில் இருக்கும் உணர்வுக்கும் நிறைய வேறுபாடிருந்தது. இந்தப் பார்வையில் ஒரு சிநேகமிருந்தது. அந்த சிநேகம் ஏன் என்ற யோசனை மீண்டும் மீண்டும் அவன் பார்வையை அவளை நோக்கி குவிய வைத்தது. இப்படிப் பார்ப்பது அநாகரிகமாகப் படலாமோ என சில அடிகள் நடந்து பெட்டியை விட்டு மறைந்து போனான். சில நிமிடங்கள் கழித்து பழைய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்தான். பரபரப்பாய் ஓடும் மனித முகங்கள் புதிது புதிதான சுவாரஸ்யங்களைத் தந்தபடியே இருந்தன. எந்த முகத்தில் பார்வையைச் செலுத்தினாலும் மனசு தன்னாலேயே அந்தப் பெண்ணின் மீது இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படி துரத்தித் துரத்திப் பார்த்தேயாக வேண்டிய அழகொன்றுமில்லை. ஆனாலும் அவள் அடிக்கடி பார்ப்பதே மீண்டும் மீண்டும் பார்வையை அங்கேயே இழுத்துச் சென்றது.

ரயில் நகர்வதற்கான முனைப்பு தெரிந்தது. முன் பக்கம் பச்சை விளக்கு ஒளிரத் தொடங்கியது. கடைசிப் பெட்டியில் பச்சை விளக்கு மேலும் கீழும் அசைந்தது. பெட்டிக்கு அருகில் வந்து நின்று கொண்டான். வெடுக்கென விடுபட்டது ரயில், படியில் ஏற முற்படும்போது அந்த பெண்ணிற்கு எதிரில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண் இறங்கினான். எதற்கு இப்போது இறங்குகிறான் என யோசித்தபடியே படியில் ஏறி இரண்டு பக்கமும் கம்பியைப் பிடித்தவாறு அவனைப் பார்க்க, சன்னலருகே வந்து அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்லிவிட்டு கையசைத்தபடி பின்னோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நந்தன் தன் படுக்கைக்கு நேர் கீழே இருந்த இரண்டு பெருசுகளிடம் கொஞ்சம் நகருங்கள் என சைகை செய்தான். நுனியில் கொஞ்சம் இடம் விட்டார்கள். நடக்கும் பகுதியில் கால் வைத்தபடி பெருசுகளுக்கு முதுகு காட்டி அமர்ந்தான். நேரெதிரே அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். கூடுதல் சிநேகம் அவள் முகத்தில் கசிந்தபடியிருந்தது. தலையை தாழ்த்திக்கொண்டான்.

’யாரிது. ஏன் எப்பப் பார்த்தாலும் தன்னையே பார்க்கிறாள்’ என்ற சந்தேகம் நந்தனுக்குள் உழன்றது. செல்போனை எடுத்து தலையைக் குனிந்து கொண்டான். நிமிர்ந்த போதெல்லாம் அவள் அவன் முகத்தையே பார்ப்பதை உணர்ந்து சற்றே அசூசையாய் உணர்ந்தான். ஆனாலும் நெருடலோ சங்கடமோ உருவாகாத மென்மையான பார்வைதான்.

பெருசுகள் தங்கள் படுக்கைகளை விரிக்க முற்பட்டனர். எழுந்து மத்தியிலிருக்கும் படுக்கையைப் பொருத்த உதவினான். ரயிலில் ஏறியவுடன் படுக்கும் ஜென்மமல்ல நந்தன். உறக்கம் சூழும் வரை சன்னல் காற்று முகத்தில் மோத வேண்டும்.

எங்கே உட்கார்வதென்ற யோசனையோடு இருந்தவனுக்கு தன் படுக்கையில் இருந்த பையை எடுத்து மடிமீது வைத்துக்கொண்டு தன் எதிரில் உட்கார இடம் கொடுத்தாள். எதிரில் உட்கார்ந்தவன் முகத்தையே ஒரு மெல்லிய புன்னகையோடு விடாது பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தனுக்கு மெல்லக் கூசியது. இப்படி எப்போதும் இடைவிடாது ஒரு பார்வைக் கவனிப்புக்குள் இருப்பது நல்லதா கெட்டதா… ஏன் இவள் இப்படிப் பார்க்கிறாள். தலையை சன்னல் கம்பிகளில் முட்டி, காற்று வாங்க ஆரம்பித்தான். ரயில் பயணங்களில் நந்தனுக்கு உடனே தூக்கம் பிடிக்காது. இப்படி எத்தனை முறை காற்றைப் பருகினாலும் அவனின் இரவுப் பயணத்தின் சன்னல் தாகம் தீர்ந்ததேயில்லை. ஓரக்கண்ணால் அந்தப் பெண்ணை நோக்கினான். அவள் அதே புன்னகையோடு அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

தாங்க முடியாமால் அவளை நோக்கி மெல்ல புன்னகைத்தவாறு

“ஏன் என்னையே பார்த்துட்ருக்கீங்க!?”

“சும்மா”

“சும்மா… இல்ல… என்னவோ காரணம் இருக்கு. சொல்லுங்க!”

“ரொம்ப தெரிஞ்ச முகமா இருக்கீங்க”

ஏதேனும் மறுப்பை எதிர்பார்த்தவனுக்கு இந்த நேரிடை பதிலை எதிர்கொள்ளத் தெரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.

“நாமக்கல்லா நீங்க?”

“ம்ஹூம்… நேட்டிவ் தென்காசி. சென்னைல செட்டில்ட்”

“அப்ப என்னைப் பாத்திருக்க வாய்ப்பில்லையே”

“தெரியல… தெரிஞ்ச முகமா இருக்கீங்க”

வேறொன்றும் பேசத் தோன்றவில்லை. சக பயணியிடம், அதுவும் பெண்ணிடம் அதற்கு மேல் கேள்வி கேட்க மனம் ஒப்பவில்லை. ஆனால் அந்த பார்வையில் இருந்த சிநேகம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை நிரப்பி, அதனடியில் ஆச்சரியப் பூக்களை வைத்தது.

அவள் படுக்க விரும்பினால், மேல் படுக்கையை அளித்துவிட்டு கீழே சிறிது நேரம் அமர்ந்திருக்க விரும்பினான்.

“நீங்க தூங்கணுமா!?”

“இல்ல”

“நீங்க தூங்குறதா இருந்தா நா என்னோட பெர்த்துக்கு போய்டுறேன்”

“பரவால்ல உட்காருங்க”

“நீங்க தூங்கனும்னா அப்பர் பெர்த் எடுத்துக்குங்க. நான் கொஞ்சம் வேடிக்கை பார்க்கனும்”

”நீங்க இதுல தூங்கப்போறீங்ளா!?”

“சைடு பெர்த் கால் இடிக்கும், அந்த அப்பரும் என்னோடதுதான்”

“அப்ப நான் இங்க படுத்துக்குறேன்” என மேலே கையைக் காட்டினாள்.

ஆனாலும் நகரும்பாடில்லை. அதே புன்னகையோடு, அதே மென்மையோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியில், மொபைலில் பார்வையைச் செலுத்தினாலும், அவள் அவனையே பார்ப்பதுபோல் உணர்ந்து கொண்டேயிருப்பது சற்றே சங்கடமாய் இருந்தது. ஆனாலும் பிடித்திருந்தது. அவ்வப்போது தவிர்க்கவே இயலாமல் அவள் முகத்தைப் பார்த்தான். பார்க்கும் பொழுதெல்லாம் புன்னகை சற்றே வளர்ந்தொளிர்ந்தது. மையமாய் புன்னகைத்து வைத்தான். யார் இந்தப் பெண், ஏன் இப்படிப் பார்க்கிறாள்? மண்டைக்குள் குடைச்சலாய் இருந்தது.

அவள் படுப்பதாகத் தெரியவில்லை. விட்டுவிட்டு மோதும் பார்வையின் அர்த்தம் என்னவென்றே விளங்கவில்லை நந்தனுக்கு. தப்பான நோக்கம் கொண்ட பெண்ணாக இருப்பாளோ என நினைக்கவே தோன்றவில்லை. அவள் குறித்த நினைவிலிருந்து விலக முற்பட்டான். விலக முற்படும்போதே அவள் பார்க்கிறாளா எனப் பார்க்கத் தோன்றியது. அவள் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள்.

படுக்கைக்கு ஏறினான்.

“தூங்கப் போறீங்ளா!?”

சற்றே எரிச்சல் வந்தது. வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஆமா”

“குட் நைட்”

பெரிதாய் புன்னகை வந்தது நந்தனுக்கு..

“குட் நைட்… இனியாச்சும் என் முகத்தைப் பார்க்காம நிம்மதியா தூங்குங்க”

அவளும் பெரிதாய்ப் புன்னகைத்தாள்.

கதவு அருகில் எப்போதும் அணைக்கப்படாமல் இருக்கும் விளக்கின் வெளிச்சம் நந்தன் முகத்தில் அடித்தது. ரயிலில் இந்த மாதிரி படுக்கைகள் வாய்க்கும்போது இதுவொரு பெரு அவஸ்தைதான். அவளும் படுக்கைக்கு நகர்ந்தாள். அங்கிருந்து அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடிந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாசூக்காய் முதுகு காட்டிப் படுத்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு யதேச்சையாய் திரும்பிப் படுத்தான். அவள் விழிகள் அவனைத் துளைத்தபடியே இருந்தன.

ஒரு வழியாய் தூங்கிப்போனான். இடையில் இரண்டு மூன்று முறை விழிப்பு வந்தபோதும் அவள் தூங்காமல் இருப்பதை உணர்ந்தான்.

நாலே முக்கால் மணிக்கு நாமக்கல்லில் இறங்க வேண்டும் என்பதால் நாலரைக்கு அலாரம் வைத்திருந்தான். அலாரம் சப்தம் எழும்போது ரயில் ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தது. நாமக்கல்தானோ எனப் பதறி படுக்கையிலிருந்து கீழே இறங்கியபோது

“சேலம்” என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தான். களைத்த முகமாய் இருந்தாள்.

அவள் தூங்கவே இல்லையோ எனும் நினைப்போடு கதவருகே நின்று பார்த்தான். பெரிதாய் மக்கள் நடமாட்டமில்லை. ரயில் நகரத் துவங்கியது. கீழ்ப் படுக்கை காலியாகவே இருந்தது. அதில் அமர்ந்து கொண்டு கடக்கும் ஸ்டேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி தூக்கம் பிடிப்பது சிரமம். கால் நீட்டி சாய்ந்தவாறு கண் மூடி காலை நேர விசுவிசுப்பை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஒருமுறை மேலேயிருந்து அவள் எட்டிப் பார்ப்பதைக் கவனித்தான். நாமக்கல் ஸ்டேஷனுக்குள் ரயில் நுழைந்தது.

“ட்டீட்ட்ட்ட்ட்டீ… ச்ச்சாயா” குரல்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டும்.

விளக்குகளைப் போடாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு கதவுப்பக்கம் நகரும்போது அவள் இறங்கி கீழ்ப் படுக்கையில் பையை வைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“என்ன நாமக்கல்ல இறங்கப் போறீங்ளா!?” என்றான் கிண்டலாக

மறுப்பாய் தலையசைத்தாள்

”நான் இறங்கிடுறேன்… இனியாச்சும் கொஞ்சம் தூங்குங்க” என்றான்.

“ம்ம்ம்”

நீண்ட நாள் பழகிய யாரையோ பிரிவதுபோல் தோன்றியது அவனுக்கு. ரயில் நின்றது.

“சார்”

அவள் குரல் சற்றே கம்மலாய் இருந்தது.

இறங்கும் முனைப்பில் இருந்தவன், என்ன என்பது போன்ற பாவனையில் அவளை ஏறிட்டான்.

“உங்களுக்கு ப்ரதர் இருந்தார்ல!?”

சட்டென அதிர்ந்தான்.

“ஆமா… ஏன் கேக்குறீங்க?”

“என்னவோ கேக்கணும்னு தோணுச்சு. ஸாரி” அவள் முகம் இருண்டு போயிருந்தது.

“உங்களுக்கு அருணைத் தெரியுமா!?”

ஒன்றுமே சொல்லாமல் மௌனமாக இருந்தாள். இரவில் பார்த்த முகத்தின் மலர்ச்சி எதுவும் இல்லை. தலை குனிந்தபடியே நின்றாள். அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவள் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. விசில் சத்தம் கேட்டது. சட்டென இறங்கினான். குலுங்கியபடி ரயில் புறப்பட்டது. பெட்டி அவனிடமிருந்து விலகியது. கதவருகே நின்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அருண் குறித்துக் கேட்டபோது, அவள் பதில் சொல்லாமல் இறுக்கமாய் தலை குனிந்திருந்தது நந்தனுக்கு என்னவோபோல் இருந்தது. அவள் யார் எனும் கேள்வி குடைந்தது. அருணுடன் படித்த அல்லது அவனுக்குத் தெரிந்த பெண்ணாய் இருந்திருப்பாளோ!?.

அருணின் சாவு நிமிடங்கள் வந்து மோதின. அருண்… அருண்… அருண் என மனதுக்குள் ஒரு பதற்றம் தொற்றியது. விபத்தும், மூன்று நாள் மருத்துவமனை தவமும், கடைசி கணத்தில் உடல் உதறியெழுந்து விழுந்து அடங்கியதும் நினைவில் சூழ்ந்து அவன் நடையைத் தளர்த்தின. அருண் பற்றி அவளிடம் வற்புறுத்திக் கேட்டிருக்கலாமோ. அட்லீஸ்ட் அவள் பெயரையாவது கேட்டிருக்கலாமோ? அந்த நாள் முழுதும் அவள் நினைவாகவே இருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் அவள் பார்வை எத்திசைகளிலிருந்தும் தன்னையே பார்ப்பதுபோல் ஒரு உணர்விருந்தது.

ரயில் கிளம்பியதும் எல்லாம் இருண்டுபோனதுபோல் இருந்தது பாரதிக்கு. அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. கழிவறைக்குச் சென்று முகத்தைக் கண்ணாடியில் பார்த்த நொடி ஓலமிட்டு அழத் துவங்கினாள். அவளின் ஓலம் அந்த இரும்புப் பெட்டியின் உரசல்களில் ஒன்றுமில்லாது போனது. படுக்கைக்குத் திரும்பியவள் நந்தன் தலை சாய்த்து அமர்ந்திருந்த அதே பாணியில் அமர்ந்துகொண்டு விடியற்காலைக் காற்றை முகத்தில் மோத விட்டாள். கண்களின் இரு புறமும் கண்ணீர் சுரப்பதும் உலர்வதுமாய் இருந்தன. பதினொரு வருட பாரம் மெல்லக் கரைவதுபோல் உணர்ந்தாள்

ஒரு தீபாவளிக்கு ஊருக்குப் புறப்படும்போதுதான் அருணை அவ்வளவு அருகில் பார்த்தாள் பாரதி. வேலை பார்த்துக்கொண்டு மாடி போர்சனில் ஒன்றாய்க் குடியிருக்கும் நான்கு பேரில் ஒருவன் அருண். பாரதி குடும்பம் கீழ் வீட்டில். அதுவரை அம்மாவிடமோ அப்பாவிடமோ தம்பியிடமோ ஓரிரு வார்த்தைகள் பேசும் அருணை எட்ட நின்று மட்டுமே கவனித்திருக்கிறாள். தீபாவளி வாழ்த்துச் சொல்லிவிட்டு, “ஊரிலிருந்து வரும்போது உங்க ஊரு தீவாளிப் பலகாரம் கொண்டு வாங்க” எனச் சொன்னபோதுதான் அருகில் பார்த்தாள்.

ஊர் திரும்பி ஸ்வீட் காரம் கொடுத்ததில் தொடங்கிய நட்பு, அடுத்தடுத்த நாட்களில் காதலானது. அருணோடு இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த காதல், பாரதி குடும்பத்திற்கு மெலிதாய் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும்போதுதான் அருண் ஊருக்குப் போனான். வீட்டில் கல்யாணப் பேச்சு எடுப்பதாகவும், பாரதி குறித்துப் பேசி நல்ல முடிவோடு திரும்புவதாகவும் போனவன் திரும்பவேயில்லை.

அருண் நண்பர்களுக்கே நான்கு நாட்கள் கழித்துதான் தகவல் தெரிந்தது. சபரியும், முரளியும் மட்டும் போய் வந்தனர். பாரதி உருக்குலைந்து போனாள். அவள் குடும்பம் அவளின் வலியைப் புரிந்துகொண்டு மௌனமாய் அரவணைத்தது. ஒரு வார்த்தை பேசாமல் அவளைத் தேற்றியது. அனுசரனையாய் அவளை நடத்தியது. ஒருபோதும் எவரும் எது குறித்தும் பேசவில்லை. அருணின் குடும்ப டூர் போட்டோ ஆல்பம் பாரதியிடம் இருந்தது. அருணின் அப்பா அம்மா தம்பி தங்கை ஆகியோரின் பெயர்களும் மனதில் தன் உறவுகளாய்ப் பதிந்து போயிருந்தனர்.

மூன்று வாரம் கழித்து அருணின் பொருட்கள் மற்றும் பைக் எடுத்துச் செல்ல அருணின் தம்பி நந்தன் வந்திருப்பதாக சபரி சொன்னான். நந்தன் அருணை உறித்து வைத்தார்போல் உருவத்தில் இருந்தான். எட்ட நின்று நந்தன் அங்கிருந்து கிளம்பும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

பதினொரு ஆண்டுகள் கழித்து நந்தனை ரயிலில் பார்த்த கணத்தில் உறைந்துபோனது, அடுத்த நொடியே அத்தனை வருடத் துக்கம் தீர்ந்ததுபோல் நந்தனை மிக நெருக்கமாக உணரத் துவங்கியது, அருண் குறித்துப் பேசிவிடலாமா என விடிய விடிய நினைத்து தோற்றுப்போய், இறுக்கமான புன்னகையோடு அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது எல்லாம் மனதிற்குள் சுழன்று சுழன்றோடியது. நந்தன் முகத்தில் அருணையும் அவன் குடும்பத்தையும் கண்டதுபோல் நிறைவாய் உணர்ந்தாள். நந்தன் குடும்பம் குறித்து, அப்பா அம்மா குறித்து, தங்கை சுகந்தி குறித்துக் கேட்க பல நூறு கேள்விகள் முளைத்தும் புன்னகையால் விழுங்கியது சரியா தவறா என்ற முடிவிற்கு அவளால் வரமுடியவில்லை. அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென இடைவிடாத பிரார்த்தனை மட்டும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கினாள் பாரதி. நந்தனை மீண்டுமொரு முறை, அதுவும் இப்படியான எதிரெதிர் பஸ்ஸில் பார்ப்போம் என நினைத்திருக்கவில்லை. உலகம் ஏன் இத்தனை சுருங்கிப்போனது எனும் கேள்வி எழுந்தது. உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாமல் விட்டிருக்கலாமோ எனத்தோன்றியது. எதுவும் தெரியாமல் அன்றும் இன்றும் அவனைக் குழப்பியதற்கு மானசீகமாக மன்னிப்பை வேண்டினாள்.

வீட்டிற்குள் நுழையும்போதே பிள்ளைகள் பாட்டியிடமிருந்து ஓடி வந்து கட்டிக்கொண்டன. இருவரையும் அள்ளி இறுக்கிக்கொண்டாள். எப்போதுமில்லாத அளவில் இருந்தது அந்த இறுக்கம். ஒருவழியாக ஆசுவாசம் அடைந்து, உள்ளே சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தாள். சாப்பிடுவதற்காக தட்டு எடுத்து வைத்தார் சிவலட்சுமி.

“என்ன பாரதி, ஒரு மாதிரியா இருக்கே!?”

“அருணோட தம்பி நந்தனை இன்னிக்கு ரெண்டாவது முறையா பஸ்ல பார்த்தேன்மா”

பனிரெண்டு வருடத்தில் பாரதி ‘அருண்’ எனச் சொல்வதை சிவலட்சுமி அப்போதுதான் முதன்முறையாகக் கேட்கிறார்.

***

ஈரோடு கதிர் – எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான அமைப்பையும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். சூழலியல், உடல்நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு, திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், நடப்பியல் பேசும் சமூகக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ஜிலேபி

0

சரவணன் சந்திரன்

சின்ன வயதில் இருந்தே ராகவனுக்கு ஜிலேபி என்றால் கொள்ளைப் பிரியம். மீசை அரும்பின காலத்தில் அவன் பார்த்தவொரு படத்தில் முதலிரவு காட்சியொன்றில் அவளுக்கு ஜிலேபியை நாயகன் ஊட்டி விடுகையில், அவள் நாணிச் சிரிப்பாள். ஜிலேபியைவிட குறிப்பாய் அந்த நாணம் ராகவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பில் சர்வே ஒன்று வந்திருந்தது. அதை ஆர்வமாக வாங்கிப் படித்தான் ராகவன். ஒருத்தனுக்கு எதனாலெல்லாம் எழுச்சி ஏற்படுகிறது எனக் கேள்வி கேட்டுப் பதிலை வாங்கிப் போட்டிருந்தார்கள். ஒருத்தன் பெண்களின் செருப்பைப் பார்த்தால், எழுச்சி வருகிறது என்று சொல்லி இருந்தான், மிகவித்தியாசமாக. இன்னொருத்தன் சமையல்கட்டு, அடுத்தவன் காரின் பின்புறம் என்றெல்லாம் வகை வகையாகச் சொல்லி இருந்தார்கள். அதனடிப்படையில் ஜிலேபியினுடைய நாணமொன்றும் தகாதது அல்ல என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்தான் ராகவன். தவிர அவனிடம் கேட்டிருந்தால்கூட, அதைத்தானே சொல்லி இருப்பான்?

குளியலறையில் புகுந்து கொண்டு, படத்தில் கண்ட காட்சியை மீளவும் எண்ணித் தனக்குத்தானே கைக்கிளர்ச்சியடைந்து கொண்டிருப்பான். அந்தக் காட்சி மட்டுமே பல வருடங்களாக அவனுக்குத் தேவையும் பட்டுக் கொண்டு தொடர்ந்தது. வெளியே இருந்து அவனுடைய அம்மா, “இதே ரோதனையா போச்சு இவனோட. பொம்பளைக குளிக்கிற மாதிரி இவ்வளவு நேரமாவா குளிப்ப” எனக் குரலெழுப்பிக் கதவைத் தட்டுவாள். வேண்டா வெறுப்போடு துண்டை வைத்துத் தலையைத் துவட்டியபடி வெளியே வரும் ராகவன், தனது அம்மாவின் கண்களை அந்த மாதிரியான சமயங்களில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்.

அவனுடைய அப்பா திருப்பூரில் ஒரு சாயப் பட்டறையில் வேலை பார்த்தார். நீண்ட காலமாக அங்கே வேலை பார்த்த காரணத்தினாலேயே, சீக்கு வந்து சீக்கிரமாகச் செத்தும் போனார். அவர் செத்தபோது பனிரெண்டாம் வகுப்பு கடைசிப் பரிட்சை எழுதினான். அதற்கடுத்து மேலே படிக்கப் போக முடியவில்லை. படிக்கிற காலத்திலேயே பக்கத்தில் இருந்த செல்போன் கடைக்குப் பகுதி நேரமாக வேலைக்குப் போனான். அம்மா திருப்பூர் நெடுஞ்சாலைகளில் பழ வியாபாரம் செய்தாள். அவனுடைய தயவில்லாமலேயே அவளால் வாழ்க்கைப்பாட்டிற்கான தொகையை, சாலையில் அமர்ந்தபடியே திரட்ட முடிந்தது. அக்கா ஒருத்தியை அப்பா சாவதற்கு முன்பே காங்கேயத்தில் கட்டிக் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

அக்கா வீட்டோடு அம்மா சாயம் மாதிரி ஒட்டிக் கொண்டாள். அடிக்கடி அவள் காங்கேயத்திற்குக் கிளம்பிப் போய்விடுவாள். திருப்பூரில் வீட்டில் இருக்கிற சமயங்களில் மட்டும் அவனுக்கு சமைத்துப் போடுவாள். தலைதடுமாற குடித்துவிட்டு வந்தாலும், கேட்பதற்கு நாதியில்லை வீட்டில். பெரும்பாலும் ராகவன் வீட்டுக்கு வெளியேதான் அதிகமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

செல்போன் கடையில் முழுநேரமாக வேலையில் சேர்ந்த பிறகுதான் ராஜலட்சுமியைப் பார்த்தான். நாள்முழுக்க கடையில் நின்று கொண்டிருக்கிறதனால் வரும் அயர்ச்சியைப் போக்க வழிதேடிக் கொண்டிருந்த காலமது. கொஞ்சம் கருத்திருந்தாலும், ஜிலேபி காட்சியில் நாணிய அந்நடிகையைப் போலவே ஒருசாயலில் ராஜலட்சுமி இருந்தாள். ராகவன் அவளோடு பேச்சுக் கொடுத்து அவளது எண்ணை வாங்கிக் கொண்டான்.

முதலில் தவறிய அழைப்பை விடுத்தது ராஜலட்சுமிதான். ”தெரியாம டச்ல கை பட்டிருச்சு” என்றாள் பேசும்போது. பாய்ந்து திருப்பி அழைத்தது ராகவன். முதல் பேச்சிலேயே முழுக் கதையையும் சொல்லிவிட்டாள் ராஜலட்சுமி. அவளுடைய கணவன் மேலுக்கு முடியாமல் இருக்கிறான். இவள்தான் சம்பாதித்து இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்தாலும் கையில் பணம் இருப்புக் கொள்ளவே மாட்டேன் என்கிறது. ஏதாவது புதிதாகத் தொழில் பண்ணலாமா என யோசிப்பதாகச் சொன்னாள். குறிப்பாய் அவனையும் ஒருஆளாக மதித்துப் பேசினாள்.

ராகவன் அவளுக்கு வியாபாரம் துவங்க யோசனைகள் சொல்வதாகச் சொன்னான். அவள் அரக்கு நிறச் சேலை கட்டி அவனைப் பார்க்க அடுத்தமுறை வந்தாள். தலையில் மல்லிகைப்பூச் சரத்தைப் பிளந்த வாக்கில் தொங்கப் போட்டிருந்தாள். ராகவன் அவள் மடியில் சொக்கிப் போய் அந்தக் கணத்தில் விழுந்தான். “ஒரு தம்பியோட அக்காவ லவ் பண்றோம். ஒரு அண்ணனோட தங்கச்சியை லவ் பண்றோம். ஒரு அப்பாவோட மகளை லவ் பண்றோம். ஏன் ஒரு புருஷனோட பொண்டாட்டிய லவ் பண்ணக் கூடாது?” என விபரீதமாக யோசித்தான். அவளை எப்படியாவது கரங்களுக்குள் கிடத்தி, ஜிலேபியை வாயில் திணித்து அந்த நாணத்தைப் பெற்று விடவேண்டுமெனத் திட்டமிட்டான் ராகவன்.

இவன் இந்த விபரீதத்தில் மூழ்கி இருந்த நிலையில், அவள் வேறொரு திட்டத்தில் இருந்தாள். ஊரில் ஒதுக்குப்புறமாக மசாஜ் பார்லர் ஆரம்பிக்கலாம் என்றாள். அவளது சிநேகிதி தன்யா அப்படித்தான் ஒன்றைத் துவக்கின அடுத்த மாதத்திலேயே ஸ்கூட்டி வாங்கி விட்டதாகச் சொன்னாள். உடனடியாகவே அந்த யோசனை ராகவனுக்குப் பிடித்து விட்டது. ஏனெனில் அவன் சில நேரங்களில் உடல் மதமதப்பிற்காக அங்கே போய் வந்திருக்கிறான்.

எப்படியாவது ஒரு ரெண்டாயிரம் ரூபாயைத் தேற்றிக் கொண்டு உள்ளே போய்விடுவான். கடைசியில் அவனுக்குக் கரத்தால் ஆலிங்கனம் செய்யும் போது அந்த நாணக் காட்சியைக் கற்பனையில் கொண்டு வருவான். ஆனால் பக்கத்தில் அதைச் செய்கிறவளின் மீது அவனது சுண்டுவிரல்கூடப் படாது. இதுகுறித்த தோராயமான அனுபவம் உண்டு என்பதால், அவளது திட்டம் அவனுக்கு உகந்ததாகவும் பட்டது. அவனது நண்பர்கள் சிலரே இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் என்பதால், அது நல்ல யோசனையாகவும் தெரிந்தது.

“என் புருஷனுக்கு துரோகம் பண்ணக் கூடாது. என்னால யாருக்கும் முந்தானையை விரிக்க முடியாது. சத்தியமா நெஞ்சில இருந்து சொல்றேன் இதை. மசாஜ்னா தொட்டுத் தடவுனா போதும். எல்லா சதையும் ஒண்ணுதானே? ஆனா மத்ததை என் வாழ்நாள்ள ஒரு போதும் பண்ண மாட்டேன். அதுக்குத்தான் இந்த தொழிலுங்கறேன். இல்லாட்டி அதுக்கே போயிருக்க மாட்டேனா? இதுல நல்ல காசும் கெடைக்குது” என்றாள் நீட்டி முழக்கி. அவள் சபதத்தையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்கிற இடத்தில் இருந்த ராகவன், மட்டன் திங்க மாட்டாள், ஆனால் குழம்பு மட்டும் ஊற்றிக் கொள்வாள், என எளிமையாக அதைப் புரிந்து கொண்டான்.
சொந்த ஊரில் செய்ய முடியாது என்பதால், தாராபுரத்தில் செய்யலாம் என முடிவு எடுத்தார்கள். ராகவனுக்குத் தெரிந்த நண்பன் ஒருத்தனின் வழியாக கட்டிக் கொண்டிருந்த கட்டுமானம் ஒன்றின் உச்சியில் உள்ள அறையை வைப்புத் தொகை செலுத்தி எடுத்தார்கள். ராஜலட்சுமி பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தை அவள் பங்காகப் போட்டாள். மிச்சம் ராகவனுடையது என்று முடிவானது.

அவர்கள் புழங்குகிற அறை நன்றாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. வெளிப்புறம் மட்டுமே பூசப்படவில்லை, ஆனாலும் செயல்பட ஒன்றும் பழுதில்லை. ராகவனின் நண்பன்தான் குறைந்த விலையில் படுக்கிற பழைய மசாஜ் மேசையை வாங்கிக் கொண்டு வந்தான். எண்ணையேறி வழுவழுவென இருந்தது, தயிரும் நெய்யும் உண்ட ஒரு உடலைப் போல. “பால் காய்ச்சணுமா” என ராஜலட்சுமி முகத்தில் கேள்விக்குறியோடு கேட்டதைக் காதில் வாங்காமல், செல்போனில் மசாஜிற்குத் தூண்டில் போட்டு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கினார்கள்.

ராகவனுக்கு இந்த தொழிலைப் பற்றி நன்றாகத் தெரியும். அதன் கிளுகிளுப்புக் கதைகள் பற்றி அதை நடத்துகிற நண்பர்களிடம் இருந்து ஏற்கனவே கேட்டுமிருக்கிறான். அந்தக் கதைகளைக் கேட்பதற்காகவே ஒருத்தனை அவன் தேடிப் போய்ச் சந்திக்கவும் செய்வான். பெரிய பெரிய ஹோட்டல்களில் இருக்கும் மசாஜ் மையங்களுக்கு எல்லாம் சிக்கல் இல்லை. விபச்சாரத்தைத் துணைக் கிளையாகக் கொண்டு இயங்கும் மையங்களுக்குத்தான் சிக்கல் எனக் கேள்விப்பட்டிருக்கிறான். அடிக்கடி காவல்துறையினர் வந்து கொத்தாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்பதும் ராகவனுக்குத் தெரியும்.

ஆனாலும் இந்த தொழில் அந்த மசாஜை போலவே வழுவழுப்பானது என்றுணர்ந்தான் அப்போது. நாற்பத்தி ஐந்து நிமிடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய். சும்மா ஏதாவது, வாசானதிபரிபூரண என்கிற மாதிரி பெயர் சொல்லி ஒரு எண்ணையை உடல் முழுக்கத் தேய்த்து கடைசியில், “ஹேப்பி எண்டிங்” எனக் கையால் மகிழ்ச்சி அளித்துத் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஒருநாளைக்கு எத்தனை நாற்பத்தைந்து நிமிடங்கள் எனக் கணக்குப் போட்டான் ராகவன்.

அவளுமே அடிக்கடி வந்து, முதுகிற்குப் பின்புறம் நின்று செல்போனை எட்டிப் பார்த்தாள். அவளது கண்களிலுமே புதிய தொழில் ஒன்றைத் துவக்குகிற ஆர்வம் எதற்கும் தயார் என எட்டிப் பார்த்தது. முதல்நாள் ஒருத்தர்கூட சீண்டவில்லை. இரண்டாம் நாள் மதியம் போல ஒருத்தன் அந்த எண்ணிற்கு அழைத்தான். தொழிலுக்குப் புதியவர்கள் என்பதால், ஏதோ ஹெராயின் கடத்துவதைப் போல ரகசியமாக அவனைப் பல இடங்களில் நிறுத்திச் சோதித்து அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் வந்தவனுக்கு இதெல்லாம் பழைய சமாச்சாரம் போல. “நல்லா பண்ணி விடச் சொன்னா தனியா டிப்ஸ அங்க தந்திடறேன். டச்சிங்குக்கும் சேத்து” என்றான். ராஜலட்சுமியோடு அவனை அறைக்குள் தள்ளும் போது மட்டும் ஒருசங்கடம் ராகவனின் நெஞ்சிற்குள் எழுந்தது. அந்த ஒருகணம்தான், சுதாரித்து மீண்டு குறுகுறுப்பான அந்த உலகத்தினுள் லயித்து விழுந்தான் ராகவன்.

முதல் தொழிலை முழுமுற்றாய்ச் செய்து முடித்து விட்டாள் ராஜலட்சுமி. வெளியே வந்தவன், “நாளைக்கும் வருவேன். நல்லா இருந்துச்சு” என்றான். ராகவன் அவளைத் திரும்பிப் பார்த்த போது, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு என்னவோ போல இருந்தது ராகவனுக்கு. அடுத்த நாளும் திரும்பி வந்தான் அவன்.

அந்த முறை அறைக்குள் இருந்து குரல் எடுத்துக் கத்தினாள் ராஜலட்சுமி. ராகவனும் அவனது நண்பனும் அறைக் கதவைத் தட்டி உடைத்து உள்ளே போனார்கள். இந்த மாதிரி மையங்களில் ஏன் உள்பூட்டே இருப்பதில்லை என்பது அப்போதுதான் அவர்களுக்கு உரைத்தது. வந்திருந்தவன் அவளைக் கட்டிலுக்குக் கீழே கிடத்தி கால்களை விரித்துச் சுவரோடு சாய்த்து வைத்திருந்தான், இவர்கள் போனபோது. ராஜலட்சுமி இடுப்பு வரை நிர்வாணமாக இருந்தாள். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அவசரமாகத் தரையில் கிடந்த துணியை எடுத்து மேலே போர்த்திக் கொண்டாள். அவனது முதுகில் ஒரு அடியைப் போட்டதும் வேக வேகமாக எழுந்து அவனும் உடைகளை அணிந்தான். வேகமாக எழுந்து போய் உள்ளே இருந்த கழிவறைக்குள் புகுந்து கொண்டாள் ராஜலட்சுமி.

வேறு எதுவும் சிக்கல் வரக்கூடாது என்பதால், அவனை அமைதியாகப் போவதற்கு அனுமதித்தார்கள். அவனுமே கொஞ்சம் அரண்டு போயிருந்தான். போவதற்கு முன்பு, “வலுக்கட்டாயமா காலை இப்படி விரிச்சு வைக்க முடியுமா” என்றான். அவன் போனதுமே ராகவன் அவளை அழைத்து, “அவன் சொன்னதுல கொஞ்சம் உண்மை இருக்கு. என்ன நடந்துச்சு?” என்றான்.

“கொஞ்சம் அசந்திட்டேன். நானும் மனுஷிதானே? அப்புறம் திடீர்னு வீட்டுக்காரர் நினைப்பு வந்திருச்சு. அதான் சத்தம் போட்டேன்” என்று சொல்லிவிட்டு, சடக்கென அழுதபடி ராகவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். திடுக்கிட்ட ராகவன் என்ன செய்வது என்று தெரியாமல், சினிமாவில் செய்வதைப் போலக் கைகள் இரண்டையும் காற்றில் வீசிப் பிறகு அவளது முதுகை அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்திலேயே வேகத்தோடு அவள் விலகியும் கொண்டாள்.

அவள் முகத்தையே குறுகுறுவென உற்றுப் பார்த்தான். அதற்கு முன் அவள் செய்த அத்தனையுமே உண்மையாகச் செய்ததைப் போலத் தோன்றியது அவனுக்கு. அந்த நேரத்தில் அவள் நாணிச் சிரித்தது ராகவனுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் தன்னிடமும் அசந்து போகத்தானே போகிறாள்? அப்போது வைத்துக் கொள்கிறேன் என எண்ணினான் ராகவன். அவளது நாணம் அவனுக்குள் தொடர்ந்தபடியே இருந்தது.

மூவரும் அமர்ந்து மதியம் பியர் குடித்தார்கள். அவனது நண்பனான மாதேஸ் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டான். “மசாஜ் பார்லர்ல நம்மாள ஜெயிக்க முடியாது. தொட்டுத் தடவிட்டு கடைசில முடியாதுன்னு சொன்னா மிருகமா சிலர் இந்த மாதிரி ஆகத்தான் செய்வாங்க. பாதுகாப்பான இடத்தில தொரத்தி விடலாம். ஆனா நாம இந்த இடத்தில பயந்து பயந்து செஞ்சுக்கிட்டு அதைச் செய்ய முடியாது. எதுக்கு இந்த சீப்பிடிச்ச வேலை. பேசாம நேரடியா படுக்கிற தொழிலயே இன்னும் கொஞ்சம் ஆட்களை சேத்து பெரிசா செஞ்சுட்டு போகலாம். என்ன சொல்ற ராஜலட்சுமி?” என்றான். எடுத்த எடுப்பிலேயே அவள் முடியவே முடியாது என மறுத்து விட்டாள். அந்த முடிவைப் பெருமையாக உணர்ந்தான் ராகவன்.

ஆனால் இருவரையும் இந்தத் தொழிலில் இறக்கி விட்ட வகையில், உடன் இருந்து உதவிகள் செய்வதற்கு ஒத்துழைப்பதாகச் சொன்னாள் ராஜலட்சுமி. ஏனெனில் ஏற்கனவே அந்த இடத்தை வாடகைக்கும் எடுத்தும் விட்டனர். இனி திரும்ப முடியாது இதிலிருந்து. மேல்வேலைகளுக்கு ராஜலட்சுமி உடன் இருப்பது, ஏற்கனவே இந்த தொழிலில் இருக்கும் விக்கியை கூடவே வைத்துக் கொள்வது, மேலும் இரண்டு பெண்களை அழைத்துக் கொள்வது என முடிவு எடுத்தார்கள்.

அதன்படி விக்கி உடனடியாகவே கிளம்பி வந்தான். “ஏன் இவளே நல்ல பீஸூதானே? ஏன் முடியாதாமாம்” என்றான் ராஜலட்சுமியை பார்த்து. “இந்த தொழிலுக்கு நான் பணம் போட்டிருக்கேன். மேலயும் போடப் போறேன். அதனால எவனும் என்னை போட வேண்டியதில்லை” என்றாள் மப்பாக. பக்கத்து காவல்நிலையத்தில் விக்கியுடைய உறவினர் ஒருத்தர் வேலை பார்ப்பதாகவும், அவர் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார் என்றும் மாதேஸ் சொன்னான். விக்கி அடிக்கடி ராஜலட்சுமியைக் குறுகுறுவெனப் பார்த்தவாறே தனது திட்டங்களை விவரித்துக் கொண்டிருந்தான்.

அவன் சொன்னது எல்லாமே வாயையும் பிளக்க வைக்கிற மாதிரிக் கதைகள். உண்மையில் அவனுடைய பெயர் ராஜதுரை. விக்கி எனப் பெயர் மாற்றத்தை அவனாகவே செய்து கொண்டானாம். கெஜட்டில் மாற்றி விட்டானா என்று தெரியவில்லை. “விக்கிங்கறது இந்த தொழிலோட அடையாளம். உங்களுக்கு தெரியுமா அவன் ஒரு சர்வதேச புரோக்கர். நாம இங்க அய்யக்கா பாளையத்தில இருந்தும் அம்மச்சி புரத்தில இருந்தும் வத்தலும் தொத்தலுமா ஆளைத் தேடிக்கிட்டு இருக்கோம். அவன் ரஷ்யா, அமெரிக்கான்னு உலகத்தில எல்லா மூலைகள்ள இருந்தும் ஆட்களை சென்னைக்கு கொண்டு வந்துடுவான். ஒருகோடி ரூபாய்க்கு கூட அவண்ட ஆள் இருக்கு. உலகத்தில இருக்க அபூர்வமான வைரத்தையும் வைடூரியத்தையும் கொண்டு வந்து படுக்கையில தள்ளிடுவான். உலக பேமஸூ அவன். தனி ப்ளைட்டே வச்சிருக்கானே பாறேன். ஒழுங்கான லிங்க் கிடைச்சா போதும் இந்த தொழில்ல உச்சத்தில போய் உக்காந்திரலாம். ஒண்ணேமுக்கால் இஞ்சுதான். ஆனா அது தங்கச் சுரங்கம்” என்று அவன் சொல்வதைத் துளி சங்கோஜம் இல்லாமல் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் ராஜலட்சுமி. வெறும் கதைதானே? அந்தப் பாவனையில் ராகவனுமே அவ்வாய் பிளத்தலை எடுத்துக் கொண்டான்.

சென்னையில் பெங்களூரில் ஹைதராபாத்தில் செயல்படுவதைப் போல நவீனமாக அந்த குட்டி ஊரில் செயல்பட வேண்டும் என்றான் விக்கி. அந்த அறைக்குப் பக்கத்தில் இன்னொரு அறையும் வேண்டும், ஒருமணி நேரத்திற்கு மூவாயிரம் ரூபாய், வெளியே போவது என்றால் பத்தாயிரம் ரூபாய், அதுவொரு ஐந்துமணி நேரக் கணக்கு, முழு இரவும் போன்ற வாய்ப்புகளைக் கடைசியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றான். விக்கியின் இன்னொரு நண்பன் வழியாக அடுத்த வாரம் இரண்டு பெண்கள் இறங்கி விடுவார்கள் என்றும் முடிவானது.

திட்டங்களெல்லாம் நடந்தேறுவதற்கு முன்பு விக்கி செய்த செயல்தான் குழுவில் முதல் குழப்பம் எழுவதற்குக் காரணமாக அமைந்தது. தன்னுடைய செல்போனில் விளம்பரங்களைக் கொடுத்த விக்கி, இணங்கி வருபவர்களுக்கு பொய்யான பெண்கள் இருவரின் படங்களை அனுப்பினான். அந்தப் படங்கள் எல்லாவற்றையும் அவன் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திருந்தான்.

அந்தப் படங்களைப் பார்த்து எச்சில் ஒழுகி முன்னேறி வருபவர்களை பேருந்து நிலையம், பஜார் என அலையவிட்டான். கடைசியில் எதிரே இருந்த வங்கியைக் காட்டி, “சார் நாங்க வெளீல இருந்து பேசறோம். எதிர்ல இருக்க வீட்டுக்குள்ள பொண்ணுங்க ரெண்டு பேரும் இருக்காங்க. நீங்க போய் சூஸ் பண்ணிக்கோங்க. நல்லா கோவாப்ரேட் பண்ணுவாங்க. இப்ப பேங்கில முதல்ல காசை போட்டு விடுங்க” என்றான். சிலர் சுதாரித்துக் கொண்டார்கள். சிலர் நப்பாசையில் அவன் சொன்ன வங்கிக் கணக்கில் போட்டார்கள். உடனடியாகத் தொலைபேசியை அணைத்து விட்டு, “லூஸானுக. எவ்வளவுதான் பெரிய ஆளா இருந்தாலும் இதுன்னு வந்துட்டாலே கண்ணை மறைச்சிருது பாறேன்” என்றான். இரண்டு மூன்று பேர் அப்படி ஒரேநாளில் மாட்டினார்கள். பெண்கள் வருகிறவரை அதை ஒரு விளையாட்டைப் போல ஆடினான் விக்கி.

ராகவனைத் தனியே அழைத்த ராஜலட்சுமி, “அவன் தப்பான ஆளு. ஆசை காட்டி மோசம் பண்றது தப்பு. அன்னைக்கு செஞ்சதுக்கே இன்னமும் நான் குறுகிக்கிட்டு இருக்கேன். இவன் சவகாசத்தை விட்டொழி” என்றாள். “எனக்கும் தெரியுது. கொஞ்சம் பொறுத்துக்கோ. நமக்குன்னு லிங்க் கிடைச்சதும் விலகிக்குவோம்” என்றான் ராகவன்.
ஆனாலும் ராஜலட்சுமியின் மனம், ராகவன் அவளிடமிருந்து விலகிப் போவதை அதன் ஆழத்தில் உணர்ந்தது. சிவகாசியில் இருந்து கிளம்பி வந்திருந்தனர் இரண்டு பெண்களும். புகைப்படத்தில் பார்த்ததைவிட மேலும் வயதானவர்களாகத் தெரிந்தார்கள். ராகவனுக்கு பிடிப்பில்லாமல் போனது அதைப் பார்த்து. “மொதல்ல சும்மா அனுப்பிச்சு பார்த்து ஆழம் பார்ப்பாங்க. அப்புறம் நல்ல பீஸா அனுப்புவாங்க” என்றான் விக்கி. ஆனால் அதற்குமே கல்லூரிப் பையன்கள் நிறையப் பேர் ஆவலாய் வந்து போனார்கள். ஒருதடவை அதில் ஒருத்தி வயிறு வலிக்கிறது என்று பொய் சொன்ன போதுகூட அவள்தான் வேண்டுமென அடம்பிடித்தான் அந்தக் கல்லூரிப் பையன். ”நல்லா வாசிச்சா எந்த பாம்புமே மகுடியே இல்லாட்டினாலும் நல்லா ஆடும்” என அதற்குக் காரணம் சொன்னாள் அவள். இருவரையும் பார்த்துவிட்டு சங்காத்தமே வேண்டாமெனத் திரும்பிப் போன கூட்டமும் உண்டு.

ஆள் வராத சமயங்களில் எல்லோரும் கூட்டாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அத்தனை பேருக்கும் சேர்த்து அந்தப் பெண்களே சமைத்தார்கள். “மொச்சை போட்டு புளிக் குழம்பு வச்சிருக்கேன். எங்க வீட்டில இதைத்தான் அடிக்கடி செய்வேன். மொளப்பாறி எடுக்கிற திருவிழாவுக்கு மட்டும் ரெண்டு பேரும் ஓடிப் போய்ட்டு ஓடி வந்திர்றோம். குழுவில அதுக்காக பணம் கட்டிருக்கேன். இங்கதான் ஆட்கள் கொஞ்சம் ஏறி வர்றாங்க. எங்கூர்ல எல்லாம் செல்லாக்காசு” என்று சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தாள் லாவண்யா.

ராகவன் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தான். ஒன்றுமே தனக்குள் நிகழவில்லை என்பதை உணர்ந்தான். அவர்கள் கோவில் திருவிழாவிற்குக் கிளம்பிப் போன போது, விக்கியின் தொடர்பில் இருந்தவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை அனுப்பினார்கள். பீகாரோ? சதீஸ்கரோ? இரண்டுமே இடுப்பு உயரத்திற்கு ஆள் குட்டையாக, ஆனால் நெஞ்சு விரிந்து இருந்தார்கள். பார்ப்பதற்குச் சின்னப் பெண் போலவே இருந்தாலும், முகத்தில் மட்டும் தடிப்பு தெரிந்தது.

“ஆள்க பாக்கிறதுக்கு இப்படி இருக்காங்க. அவளோட உண்மை வயசை கேளு முப்பதும்பா” என்றான் மாதேஸ். ராகவன் விசாரித்துப் பார்த்ததில் உண்மை என்று தெரிந்தது. அந்த நேரம்பார்த்து வழக்கமான வாடிக்கையாளப் பையன் வந்து நின்றான். பொதுவாக இந்தத் தொழிலில் புழங்குபவர்கள் எல்லோருமே புனைப் பெயர்களைத்தான் சொல்வார்கள் என்பதால், வருகிறவர்களை அவர்களது செய்கையைக் கொண்டு நினைவில் வைத்துக் கொள்வார்கள். “கீச்செயினை கைல வச்சு சுத்திக்கிட்டே இருப்பாரே” இந்த மாதிரி.

பதினைந்தாயிரம் பணம் கொடுத்து அவர்களுள் ஒருத்தியை இரவு முழுக்க வெளியில் அழைத்துச் செல்வது என முடிவெடுத்தான். ஆனால் அதற்கு ராஜலட்சுமி ஒத்துக் கொள்ளவே இல்லை. “அது ரெம்ப தப்பு. மொழி தெரியாத புள்ளை. அவளை எப்புடி நம்பி அனுப்ப முடியும்? நாமென்ன பலசாலியா? நாளைக்கு உசுருக்கு ஒண்ணுன்னா என்ன செய்றது?” என்றாள். அறைக்குள் விக்கி கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்கப் பாய்ந்தான்.

அவன் யாருடைய அனுமதியையும் கேட்காமல், அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றி அவனோடு அனுப்பி வைத்தான். அவளுமே தயங்கித் தயங்கித்தான் கிடைக்கப் போகும் மூவாயிரம் ரூபாய் பணத்திற்காக காரில் ஏறினாள். மறுநாள் காலையில் அவள் முகமெல்லாம் வீங்கிப் போய்த் திரும்பி வந்தாள். ஓடிப் போய் ராஜலட்சுமி அவளைக் கட்டிக் கொண்டாள். அவளுக்குத் தெரிந்த மொழியில் நடந்ததைச் சொன்னாள். “நோ செல்ப். நோ இஷ்டம். நூடுல்ஸ் மாதிரி இருந்துச்சு. கவர் போடாம புல்நைட் மவுத் பண்ணச் சொல்லி அடிச்சுது” என்றாள்.

கருணையே இல்லாமல் விக்கி அதைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ராஜலட்சுமி, தனது பயணப் பையை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். அந்த நேரம் பார்த்து மெடிக்கலுக்குப் போயிருந்தான் ராகவன். வந்து பார்த்தபோது ராஜலட்சுமி கிளம்பிப் போன விஷயத்தைச் சொல்லிவிட்டு, “பிடிக்காததை இடுப்பில சொருகிட்டு அலைய முடியாது. நீ தொழில் பார்க்க வந்தீயா? இல்லை அவளைத் தொழில் பார்க்க வந்தீயா? எழுதி வச்சுக்கோ. அவ உன்னையும் ஒருநாள் ஏச்சிருவா” என்றான் மாதேஸ். ராஜலட்சுமியின் எண்ணிற்கு ராகவன் அழைத்துப் பார்த்தபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாகத் தானும் போய்விடலாமா என யோசித்தான் ராகவன். ஆனால் வந்திருந்த பெண்களில் ஒருத்தியின் மீது அவனுக்கு கிளர்ச்சி உருவாகத் துவங்கி இருப்பதை உணர்ந்ததால், தன் எண்ணத்தைச் சன்னல் வழியே தூக்கி எறிந்தான்.

அதன்பிறகு அதற்குள்ளாகவே கால்போன போக்கில் உழலத் துவங்கினான், ராஜலட்சுமியை மறந்து. அவளுமே போனபின்னே அவனுக்கு ஒரு அழைப்பைக்கூட விடுக்கவில்லை என்பதில் அவனுக்கு கோபமும் இருந்தது.

என்னதான் தொழிலுக்கு வந்த பெண்கள் என்றாலும், இங்கே கிட்டே வா என்ற சொல் ஒருபோதும் ராகவன் வாயிலிருந்து வராது என அவனுக்கே தெரியும். அது மலரைப் போல மலர்ந்து தன்னை நோக்கி வந்து ஜிலேபியை வாயில் கவ்வி நாண வேண்டும் என எதிர்பார்த்தான் ராகவன். அந்தச் சூழலை உருவாக்க தன்னால் ஆனமட்டுக்கும் முயற்சி செய்தபடியே இருந்தான். “எதுக்கு அந்த அண்ணா இப்படி தயங்குது. ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல முடியிற மேட்டர்” என்றாள் அவள் இன்னொருத்தியிடம்.

ஆனாலும் ராகவனுக்கு அதுதான் வேண்டும் போல இருந்தது. அந்தப் பெண்கள் போய் இன்னும் புதிதாக, தரத்தில் கூடினவை என்று சொல்லப்பட்ட, மூன்று வட இந்திய பெண்கள் வந்தார்கள். ஆனால் மற்றவர்களைப் போல இல்லாமல், நிறைய விதிகளைப் போட்டார்கள். “நோ மவுத் கிஸ்ஸிங். நோ பூப் பைட்டிங். ஸ்ட்ரீக்டா கவர்” என்றார்கள். ஆனால் வந்து நிற்கிறவர்கள் எல்லாம் அந்த விதிகளுக்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள். “ஏங்க மூணாவது கூட பரவாயில்லை. நம்ம பாதுகாப்புக்குத்தான். ஆனா மொத ரெண்டும் இல்லாம என்னால பண்ணவே முடியாதுங்க” என்றார் ஒருத்தர்.

வழக்கமாக வரும் வயதான விருந்தாளி, “சர்க்கரை வியாதிக்காரங்க எங்க நிலையையும் யோசிச்சு பார்க்கணும். கவர் மாட்டுறதுக்குல்ல நாக்கு தொங்கிருமே எங்களுக்கு. ஏன் நாங்க சுத்த பத்தமா இல்லையா? எவ்வளவுனாலும் தர்றேன். அந்த கவர் சனியனை விட்டு முடுக்குங்க. இல்லாட்டி வேற பக்கம் போகவேண்டி இருக்கும். ரெகுலர் கஸ்டமரை இழக்காதீங்க. எக்ச்சா கூட காசு தர்றேன்” என்றார். இப்படி விநோதமான பல பிரச்சினைகளும் அதுசார்ந்த கோரிக்கைகளும் எழுந்தபடியே இருந்தன. இது ஒன்றும் எளிதாகச் சம்பாதிக்கிற வேலை கிடையாது, வெளியில்தான் அப்படி நினைத்துக் கொள்கிறார்கள் என்பது அப்போதுதான் ராகவனுக்குப் புரிந்தது.

ராகவனுக்கு ராஜலட்சுமிக்கு அடுத்தபடியாக இரண்டு மூன்று பெண்கள்மீது கிளர்ச்சி எழுந்தது. ஆனால் இவன் மெதுவாக முன்னேறுவதற்குள் அவர்கள் போய் வேறு பெண்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் சுட்டுப் போட்டாலும், அவனால் மெதுவாக மட்டுமே முன்னேற முடிந்தது.

இரண்டு தடவை வெவ்வேறு பெண்களிடம் அதிகாரத் தோரணையில் போய்க் கட்டிலில் படுத்தான். ஆனால் அவனால் செயல்படுவது குறித்த சிந்தனைக்கே வர முடியவில்லை. காய்ந்த வாழைப்பழத் தோலைப் போலக் கட்டிலில் கிடந்துவிட்டுத்தான் வர முடிந்தது. அவன் எதிர்பார்த்தது எல்லாம் ஜிலேபியைக் கடிக்கிற நாணம். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறானதாக இருந்தது அவனதுடல் சூழல்.

எல்லாவற்றையுமே உடைத்துப் பேசுகிற உலகமாக அதுவிருந்தது. அதுவரை வெளியில் இருந்து பார்த்ததால் அதன் ஆழ அகலம் ராகவனுக்குச் சரியாகத் தட்டுப்படவில்லை. ஆனால் உள்ளுக்குள் நுழைந்த பிறகே முட்டுச் சந்துகள் எல்லாமும் பிடிபடத் துவங்கின. ”சட்டுனு முடிக்காம உள்ள வந்து படுத்துக்கிட்டு அனத்திக்கிட்டே இருக்கான். நான் என்ன அவம் பொண்டாட்டியா உக்காந்து கதை பேச” என ஒருத்தி சொன்னபோது அதைக் கூர்ந்து கவனித்தான் ராகவன்.

இயல்பான உணர்வை உள்ளாடையைப் போலக் கழற்றி வைத்துவிட முடியும் என்பதே அப்போதுதான் ராகவனுக்கு உறைத்தது. “படுக்கையில வப்பாட்டின்னாலும் அங்கயும் ஒரு பொண்டாட்டியை தேடுவான் ஆம்பளை” என இந்த தொழிலில் இருந்த மூத்தவள் ஒருத்தி எப்போதோ சொன்னது ராகவனுக்கு நினைவில் வந்தது. தான் எதைத் தேடுகிறோம் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. இவ்வாறான சிந்தனைகள் அவ்வப்போது வரும் ராகவனுக்கு.

விக்கி முன்னெடுத்த அந்தப் பாய்ச்சலில், சார்ந்திருந்த எல்லோருக்குமே கையில் பணம் புரளத் துவங்கியது. ராகவன் வலியுறுத்தி ராஜலட்சுமியின் வங்கிக் கணக்கில் அவளுக்கும் கொஞ்சம் கௌரவமான பணத்தைப் போட்டு விட்டனர். ஒரு தொலைபேசி செய்து அவளிடம் பேசி இருக்கலாமோ என ராகவனுக்கும் தோன்றியது. அதேசமயம் அவள் ஏதாவது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிச் சொன்னால், மனசு கேட்காமல் கிளம்பிப் போய்விடுவதற்கான அபாயமும் இருந்தது என்பதையும் ராகவன் அறிவான்.

இடையில் அவன் அக்காவின் மகளுக்குக் காதுகுத்திய விழாவிற்குப் போன போது அள்ளி இறைத்தான் பணத்தை. சொந்தக்காரர்கள் ஒட்டி உறவாடிய வகையிலும் ராகவனுக்குத் திருப்தியாக இருந்தது. மற்ற சுகத்தை விட்டு விடலாம், பணம் தருகிற சுகத்தில் கிறங்கி இருந்தான் ராகவன். அவனுடைய அத்தான் அவனுக்கு மரியாதை கொடுத்துப் பேசியதையும் ரசித்தான். “பணம் வர்றது ஒரு அமைப்பு. அந்த நேரத்தில வதங்கி போய் உக்காந்திரக்கூடாது. ஓடுங்க மாப்பிள்ளை. நாளைப் பின்னே பணம் வந்திருச்சுன்னா ஊரு நம்மோடதுதான்” என்றார் அனுசரணையாக. ஆனால் அந்த தொழில் பார்க்கிறான் என்று தெரிந்தால், கெடா வெட்ட வைத்திருந்த அரிவாள் ராகவன் மேலே பாய்ந்திருக்கும். திருப்பூரில் பைனான்ஸ் தொழிலில் நண்பனுக்கு ஒத்தாசையாக இருப்பதாகச் சொல்லி இருந்தான்.

ராகவனுக்கு பணம் வந்துவிட்ட பிறகு திடீரென குடும்பத்தின் மீது பிடிப்பு வந்துவிட்டது. அடிக்கடி அக்கா குழந்தைகளிடம் தொலைபேசியில் பேசுவான். அவர்கள் கேட்கிற பொருளை இங்கிருந்தே வாங்கி அனுப்புவான். அந்தமாதிரியான நேரங்களில் இதிலிருந்து விலகி விடலாமா என்றும் தோன்றி இருக்கிறது. அவனது நேரத்தின் பெரும்பகுதியை அக்கா குடும்பம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவனுடைய அம்மா அவனை அழைத்து, “சம்பந்தகாரவுங்ககூட ரெம்ப நெருங்கக் கூடாது. தள்ளியே இருந்தாதான் பயமும் கௌரவமும் இருக்கும். டெய்லி அங்க கூப்டாத. ஏதாச்சும் பங்ஷன் வச்சா மட்டும் வந்துட்டு போ. உனக்குன்னு புள்ளைக வந்த பெறகு அதை கொஞ்சிக்கோ. இல்லாட்டி மொட்டைப் பையன்னு நினைச்சிடுவாங்க” என்றாள்.

அப்படி ஒரு காரணம் வருவதற்குக் காத்திருந்தானோ என்னவோ? அதற்கடுத்து அக்கா குடும்பத்துச் சிந்தனைகளில் இருந்து இயல்பாகவே தன்னை விடுவித்துக் கொண்டான் ராகவன். மடையிலிருந்து நீரை வெட்டி விட்டால் என்ன செய்யும்? கிடைக்கிற பள்ளம் நோக்கிப் பாயத்தானே செய்யும்? ராகவன் மறுபடி கிளர்ச்சியை வேண்டி, வரும் பெண்களின் மீது கண்களைப் பாய்ச்சத் துவங்கினான். கட்டுப்படுத்த இயலாதளவிற்கு மண்டைச்சூடு அவனுக்குள் பரவத் துவங்கியது.

மதுரையில் இருந்து வந்திருந்தாள் அந்தப் பெண். லோகிதா என வித்தியாசமான பெயரைச் சொன்னாள். பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன் என்றாள். வட இந்தியாவில் ஏதோ பெரிய விழா என மற்ற பெண்கள் கிளம்பிப் போயிருந்தனர். வந்தததில் இருந்து சளசளவென அவள் பேசிக் கொண்டிருப்பதை ராகவன் பார்த்தான்.
மாதேஸூம் விக்கியும் இல்லாத நேரத்தில் அறைக்குள் நுழைந்த அவனைச் சாதாரணமாகப் பார்த்தாள் லோகிதா. கட்டிலில் அமர்ந்துவிட்டு அவளையும் அமரச் சொன்ன பிறகே அவளுக்கு வந்த நோக்கம் புரிந்தது. அவளது கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட ராகவன் அவளிடம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசத் துவங்கினான். அவளது தலையை இழுத்து நெஞ்சில் சாய்த்து, “ஏதாச்சும் பேசு” என்றான். அவளுமே ஊர்க்கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எதுவுமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறவில்லை என்றாலும் அவள் பேசிக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மெதுவாக அவனது கால்சட்டையை மேயத் துவங்கிய போதும் கிளர்ச்சியடையாததைக் கவனித்தாள் லோகிதா. அவளது உதட்டை இறுக்கக் கையால் கவ்வி, “ஒதட்டை சுழிச்சு வெட்கப்பட மாட்டீயா” என்றான் ராகவன்.

நீண்ட நேரமாகியும் எதுவும் நடக்காததால் எழுந்து அமர்ந்த அவள், “அண்ணே நீங்க இல்லாத ஒண்ணை காத்தில தேடிக்கிட்டு இருக்கீங்க. இதுல சிக்கிக்காதீங்க. கிளம்பிடுங்க. நீங்க இதுக்கு ஒட்டலை. இதுக்கு மேலன்னா கண்டவங்ககிட்டயும் அசிங்கப்படுவீங்க” என்றாள் லோகிதா. எழுந்தமர்ந்த அவனுக்குமே அவள் சொல்வதில் உள்ள சூட்சுமங்கள் மெதுவாகப் புரிபடத் துவங்கின.

லோகிதா போனபிறகு ரேஸ்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளிடமும் இதையே செய்து பார்த்தான் ராகவன். சுவற்றில் அடித்த பந்தைப் போல அந்தக் கிளர்ச்சி அவனிடமே திரும்ப வந்து மோதிப் பதுங்கிக் கொண்டது. எழுந்த அவள், “உனக்கு ஏதோ பிரச்சினை போல இருக்கு. டாக்டர்கிட்ட போனா சரி ஆயிடும்” என்றபோது சுருக்கென்று இருந்தது ராகவனுக்கு.

அதற்கடுத்து அவன் பெண்கள் பக்கம் போகாமல் இருந்தாலும், தேடுவதை அவனால் நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. “வந்து தொலைச்சிட்டு போயிடலாம். எதுக்கு இப்படி அறுத்து திங்கற மாதிரி வெறிச்சுப் பார்த்துக்கிட்டு திரியறான்னு தெரியலை” என ஒருத்தி சொன்னதாக வந்து மாதேஸ் சொல்லிவிட்டு, “ராகவா நாம ஸ்வீட்டு கடை போட்டாலும் அதில இருந்து எடுத்து சாப்பிட முடியாத அளவுக்கு திகட்டல் வந்திரும்” என்றான்.

அவன் எப்படிக் கூர்மையாக அறிந்தான் அதை என ராகவனுக்குள் வழக்கமான திடுக்கிடல் வந்தது. “இல்லைடா சும்மா சதைதானே அது? ஒவ்வொண்ணுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்குன்னு உத்துப் பாத்தேன்” என்றான் மாதேஸிடம் ஒரு தத்துவவாதியைப் போல. ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனான் மாதேஸ்.

ஆனால் ராகவனுக்கு அதற்குப் பிறகு மாதேஸை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எல்லோரிடம் இருந்துமே நாணல்புல் அளவிற்கு விலகிப் போனான் ராகவன். இரவுகளில் தூக்கமின்மை நோய் அவனைப் பசலையைப் போலப் பற்றியது. அந்த நேரங்களில் ராஜலட்சுமியை நினைத்துக் கொள்வான். அவள் கடைசியாய் கிறங்கிச் சிரித்த காட்சி என்றும் கலையாத காட்சியாக அவனுள் தங்கி இருந்தது. எல்லா பழங்களுமே ஒருநாள் முற்றிப் பழுக்கத்தானே செய்யும்? ராகவன் கண்களுக்குக் கீழே கருப்புவளையம் விழுந்து ஏதோ யோசனையின் வால் பிடித்து அலைகிறவனாகவே மற்றவர்களுக்குத் தட்டுப்படத் துவங்கினான். கருமை ஒளிவட்டமாய் அவனது முகத்திற்குப் பின் நின்றது.

“எந்நேரமும் இப்பிடி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டே இருந்தா தொழில் உருப்படுமா? வர்றவங்க போறவங்ககிட்ட நாலு வார்த்தை சிரிச்சு பேசணும்” என்றான் மாதேஸ் எரிச்சலாக. அப்போது இன்னொரு பெண் கூர்மையாக விக்கியிடம் ஒன்றைச் சொன்னாள். கண்களை விரித்து உதட்டைக் கடித்து மடித்து அதைக் கேட்டான் விக்கி.

“என்னதான் இருந்தாலும் இது பூக்கிற தொழிலு. இங்க பூக்காத ஆளை வச்சுக்கிட்டு மாரடிக்க கூடாது. நம்ம உற்சாகம்தான் வர்றவங்களையும் தொத்திக்கும். அந்த ஆளால மத்தவங்க முன்னாடி எங்களை செல்லம் கொஞ்சி பேசக்கூட முடியலை. அவரு வாடி செல்லம்னு சொன்னாதானே வர்றவனும் வாடி ராசாத்திம்பான். இவரே வெறுப்போட பார்த்தா வர்றவனுக்கும் உள்ள வந்தா எழுச்சி இல்லாமத்தான் போகும்” என்று அவள் சொன்னதை எல்லோரும் அப்போது கடைசி விதியான, கவரை போலக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.

ராகவனின் இருப்பு சங்கடமாக அங்கே உணரப்பட்டது. மாதேஸ் வழியாகச் சொல்லி அவனை வெட்டிவிடலாம் எனத் திட்டமிட்டு சமயத்திற்காகக் காத்திருந்தனர். அதை ராகவனே வலியப் போய் வழங்கினான். குடித்துவிட்டு சித்தம் கலங்கியவனைப் போல ஹைதரபாத்காரியின் அறைக்குள் நுழைந்து விட்டான். அவள்மீது விழுந்து புரண்டு பைத்தியம் போலப் பிதற்றும் போது விக்கி வந்து, ராகவனை அடித்து வெளியே துரத்தினான்.

குடிபோதை தெளிந்தபிறகு நிதானம் தட்டிப் பார்த்தது ராகவனை. செய்தது தவறுதான் என உடன் இருந்த மாதேஸிடம் ஒத்துக் கொண்டான். “ராகவா உன்னை எதுவோ வேற பக்கம் இழுக்குது. இனிமே நீங்க இங்க இருந்தா செட் ஆக மாட்ட. ஒழுங்கா கிளம்பி வீட்டோட போயிரு. ப்ரெண்ட்ஸ்கிட்ட அசிங்கப்படாத” என்றான். அசிங்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எழுந்து நடந்தான் ராகவன். அவனைக் காப்பாற்றிக் கொள்ள வங்கிக் கணக்கில் நல்ல பணம் இருப்பதை மாதேஸூம் அறிவான் என்பதால், விரட்டித் தடுக்கவில்லை. என்றாவது ஒருநாள் போட்டியாளராக ராகவனைக் களத்தில் சந்திப்போம் எனத்தான் அப்போது நினைத்தான் மாதேஸ். வழமையாக அதுதான் நடக்கும் அத்தொழிலில்.

அங்கிருந்து கிளம்பிய ராகவனுக்கு உடனடியாக ராஜலட்சுமியைப் போய்ப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவளுமே இவனது மீள்வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்திருப்பாள் போல. மதியப் பொழுது ஆகையால், அவளது வீட்டிலுமே யாரும் இல்லை.

அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்த ராகவனின் பக்கத்தில், சேலையால் கையைத் துடைத்தபடி வந்து அமர்ந்தாள். அவளது தோள்பட்டை அவனது தோளில் இடிப்பதை உணர்ந்தான். அவனுக்குள் மெல்ல அது புறப்பட்டு வந்த போது, அழுகையும் சேர்ந்து வந்தது. அவனை அள்ளியெடுத்து மார்பில் போட்டுக் கொண்டாள் ராஜலட்சுமி. சிறுகுழந்தையைப் போல கேவிக் கேவி அழுதபடி, தனது பையில் இருந்து ஜிலேபியை எடுத்துக் கொடுத்தான் அவளுக்கு, நெஞ்சில் சாய்ந்து படுத்த வாக்கிலேயே.

அவளுக்குமே அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது. “சின்னப் புள்ளைகளுக்கு தின்னக் கொடுக்கிற மாதிரி கொண்டு வந்திருக்க. ஆமா நானும் சின்னப் பொண்ணுதான்” எனச் சொல்லியபடி அதைக் கடித்துத் தின்றபடி அவனைப் பார்த்து நாணிச் சிரித்தாள், குழந்தையைப் போல. அவளது கரங்கள் அசந்தவாக்கில் ராகவனின் இடுப்பை வருடிய போது, தலையை நிமிர்த்திப் பார்த்த ராகவன், அவளது உடல் தொடுகையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு, அவசர அவசரமாக எழுந்து நின்றான். அசந்து போகிற சமயம் என்ற அந்த ஒன்று கையைவிட்டு நழுவுகிறது என்பதை இருவருமே உணர்ந்தார்கள் அப்போது.

வீட்டை விட்டு அவசரமாக அவன் வெளியேறியதை அனுமதித்தாள் ராஜலட்சுமி. நதி தனக்குத் தோதான கடலை நோக்கிப் போய்த்தானே ஆகவேண்டும்? பிறகு ராகவனுக்கு அவன் அக்காவே பெண் பார்த்துக் கட்டி வைத்தாள். புதுசாய் தம்பதிகள் இருந்த, வாசலை மறித்து சாமியானா போட்டிருந்த கல்யாண வீட்டிற்கு ராஜலட்சுமியும் போயிருந்தாள். தட்டில் ஜிலேபியை தவிர எல்லா பண்டங்களும் இருக்கக் கண்டாள் அங்கே. அதைப் பற்றிச் சாடையாய்க் கேட்டதற்கு, “மாப்பிள்ளை ஜிலேபி மட்டும் இந்தப் பக்கம் வரவே கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிட்டார். ஏதோ அலர்ஜியாம்” என மாமனார்க்காரர் சத்தமாகச் சொன்னபோது, ராஜலட்சுமி நிமிர்ந்து புதுமாப்பிள்ளையின் முகத்தை, உதட்டை மடித்துக் கடித்துப் பின்விடுவித்துச் சிரித்துப் பார்த்தாள். ராகவன் சிரிப்பில் இருந்ததற்குப் பெயரும் நாணம்தான். நாணல் புல்லைப் போல வளைந்து நெளிந்தது அது.

***

சரவணன் சந்திரன் – தமிழ் நவீனக் கதையுலகில் தனக்கேயான வித்தியாசமான கதைக்களங்களுடன், வெவ்வேறு துறை சார்ந்த கதைகளைச் சொல்லி வரும் சரவணன் சந்திரன். இவரது படைப்புலகத்தின் பரப்பளவு சற்று விசாலமானது, தொடர்ச்சியாக இவரை வாசிப்பவர்களுக்கு இவர் கடத்தும் அனுபவங்களும் அவ்வாறே.. பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் – ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா, பார்பி, லகுடு, சுபிட்ச முருகன், அத்தாரோ அசோகர் போன்ற நாவல்களுடன், மூன்று கட்டுரைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவர் கோயில்பட்டியைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது பணி நிமித்தம் பழனி (விவசாயப் பணி) மற்றும் சென்னை(மீன்கள் விற்பனை நிலையம்) ஆகிய இரு ஊர்களிலும் மாற்றி மாற்றி வசிக்கிறார். இவர் இதழியல் பணியுடன் தொலைக்காட்சி ஊடகத்திலும் சில காலம் பணிபுரிந்து உள்ளார். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

என் படைப்பில் என் நிலம்

0

கலைச்செல்வி

னது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில் வேலைநிமித்தமோ வேறு எந்த நிமித்தமோ குடியேறி கொள்ளும் இடத்தையா? திருமணமாகி சென்று சேரும் ஊரையா? அவரவர் வாங்கும் திறனுக்கேற்ப கிடைக்கும் யாரோ ஒருவரின் முன்னாள் வயற்காடு அல்லது ஏதோ ஒரு ஊரின் முன்னாள் சுடுகாடு அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நீர்நிலை அல்லது ஏமாற்றி தலையில் சுமத்தப்பட்ட அரசாங்க புறம்போக்கு என்றிருக்கும் பூமியில் வீடு கட்டிக்கொண்டு காலம் முழுதும் கடனை சுமக்க வைக்கும் தற்போதைய வாழ்விடத்தையா? எதை நமது நிலமென்பது? உடைமை கொண்டதெல்லாம் பிடித்தமானதாகி விடப்போவதில்லை. உரிமை இல்லாததன் மீது பிரியம் வராது என்பதை சொல்வதற்குமில்லை.

எனக்குமே இந்த பிரச்சனை இருப்பதுண்டு. என் தந்தையார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரின் பிறப்பு வளர்ப்பு படிப்பு எல்லாமே மலேசியா நாட்டில்தான். திருமணம், வேலை என்றளவில் இந்தியாவுக்கு வந்து விடுகிறார். அவருக்குமே இந்தியா புதிதுதான். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணி. அங்கேயே டவுன்ஷிப் அரசு குடியிருப்பில் தங்கல். திருச்சியை பூர்விகமாக கொண்ட மனைவி (என் அம்மா). மெல்ல அவருக்கு இந்தியா பழகிப்போக, குருவிக் குஞ்சுகளாக நாங்கள். எனது இளமைப்பருவம் டவுன்ஷிப் குடியிருப்பில். எங்கோ தொடங்கி நீண்டு கிடக்கும் இரட்டை தார்ச்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட வரிசை வீடுகளில் ஒன்று எங்களுடையது. தாவரங்களுக்கு நடுவே காங்கிரீட் கட்டடம் முளைத்தது போன்ற வீடுகள் ஒவ்வொன்றும் அடுத்த வீட்டிலிருந்து (பக்கத்து வீடு என்று சொல்ல முடியாதளவுக்கு) கணிசமான தொலைவிலிருக்கும். பெரிய முன்புற வாசல், பிறகு கேட், பாலக்கட்டை என்று அழைக்கப்படும் Slab, அதை தாண்டி சிறு மண் பரப்பு, பிறகே தெரு ஆரம்பிக்கும். நெய்வேலியில் மிதிவண்டி இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். ஓட்டத் தெரியாதவர்கள் கிண்டலுக்குட்பட்டவர்கள். அலுமினியப் பெட்டிக்குள்ளிருக்கும் பென்சில் பாக்ஸில் (பேனா, பிளேடால் குறுக்காக வெட்டி தரப்படும் அரைத்துண்டு ரப்பர், காந்தி பென்சில், ரீஃபில் (மட்டும்) என்று அவற்றுள் மற்றெல்லாமும் இருந்தாலும் அதன் பெயர் பென்சில் பாக்ஸ்தான்) எட்டணா (50 பைசா) வைத்து அனுப்புவார்கள். சைக்கிள் டயரில் காற்று இறங்கிப் போனால் அடிப்பதற்கு. குறுக்கும் நெடுக்குமாக ஓடி நகரை இணைத்தும் பிரித்தும் கொண்டிருக்கும் தார்ச்சாலைகள் பல நேரங்களில் முடிவதேயில்லை. அதற்கு அதன் நீளங்களை தாண்டி அங்கு ஆளரவமற்று இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒழுங்கு… ஒழுங்கு… வீட்டிலும் வெளியிலும் எல்லாமே ஒழுங்குதான். பள்ளி நாட்களில் மாலை நாலரையிலிருந்து ஆறு மணி வரையிலும் விடுமுறை தினங்களில் (மாலை நேரத்தை தவிர்த்து) நேர வரையறையின்றியும் கிடைக்கும் புத்தக வாசிப்புக்கான அனுமதி எனக்கு மிகவும் பிடித்தமானது. நிலத்தை விட புத்தகங்களே அதிகம் கவர்ந்தன என்னை.

திருமணமானதும் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஊர் ஒன்றில் தனிக் குடித்தனம். அது மனதில் ஒட்டுவதற்குள் சென்னையில் அரசுப்பணி மற்றும் தங்கல். கருநிழலென மேலே கவிழ்ந்து கிடந்த நாட்களை முழு விசையோடு தள்ளி விட்டபோது நிறைய மாதங்கள் கடந்திருந்தன. எப்படியோ மாற்றல் பெற்று திருச்சி மாவட்டத்துக்கு திரும்பிய சிறிது காலத்திற்கு மாநில அரசு குடியிருப்பில் தங்கல். பிறகு அதே திருச்சியில் சொந்த வீடு. இவை காலம் என்னை நகர்த்திக் கொண்டு சென்றவை. விருப்போ வெறுப்போ இன்றி நகர்ந்தவை.

எனக்கான நிறைவை நான் இலக்கியத்தின் வழியே பெற்றுக் கொள்ள முடியும் என்று கண்டடைந்தபோதுதான் நிலம் என்பது விருப்பதற்குரியதாகவும் இருக்க முடியும் என புரியத் தொடங்கியது. நான் எழுத தொடங்கிய ஆரம்ப காலத்தில் எனது சிறுகதைகள் நிலமற்றும் அதே சமயம் நகர வாழ்க்கை சூழலிலும் அமைந்திருந்தன. (கிராமப்புற வாழ்க்கை எனக்கு இன்னமுமே பரிச்சயமாகாததொன்றுதான்). சிறுகதைகள் எழுத தொடங்கியபோதே நாவல் எழுதும் ஆசையும் மேலோங்கியது. ‘சக்கை’ எனது முதல் நாவல். அந்நாவலில் நிலமானது என்னையுமறியாமல் பெரிய கதாபாத்திரமாக வந்தமர்ந்திருந்ததை பின்னரே உணர்ந்து கொண்டேன். கல்லுடைக்கும் தொழிலாளிகளை பற்றிய அந்நாவல் வறண்ட நிலத்தின் மீது எழுந்திருந்தது. வானம் பார்த்த பூமியில் விவசாயத்தின் மீது நம்பிக்கையிழந்த இராமநாதபுரம் மாவட்டத்து மக்கள் தமிழ்நாடெங்கும் பரவலாக வாழத் தலைப்படுகின்றனர். அப்படியான ஒரு குழு மலைகள் மிகுந்த பெரம்பலுார் மாவட்டத்திற்கு கல்லுடைக்கும் தொழிலுக்கு வந்து சேர்கிறது. தலைமுறைகள் தாண்டுகின்றன. நாடும் வளர்கிறது. தொழில்கள் இயந்திரமயமாகின்றன. கல்லுடைக்கும் இயந்திரங்கள் புழக்கத்திற்கு வரும்போது தொழிலாளிகள் வேலையிழக்கின்றனர். அந்நாவலின் ஆரம்பமே இப்படித்தான் அமைந்திருக்கும்…

‘உள்ளேன் அய்யா…’ என்று பூமி மட்டத்தின் மேல் ஆங்காங்கே கை உயர்த்தி நிற்கும் உயர உயரமான மலைகள். ‘நாங்களெல்லாம் முன்னாள் மலைகளாக்கும்’ பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் பெரும் பாறைகள். குறுக்காக உடைந்து ஏகதேசம் செங்குத்தாக நிற்கும் பாதி பாதி மலைகள். இது மண் மலையல்ல… கல் மலைதான் என்பதை பறைசாற்றிக் கொண்டு அதன் மேல் முளைத்திருக்கும் மரமாக முடியாத செடிகள்… முடிந்தளவுக்கு அந்த மலையிலேறி அங்கிருக்கும் செடிகளை உணவாக்கிக் கொண்டிருந்த ஆடு மாடுகள், அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்ட தெம்போடு ஆங்காங்கே அடர்வற்று இருக்கும் மரங்களின் நிழற்சிதறல்களில் வம்பு பேசிக் கொண்டிருக்கும் கிராமத்து மக்கள்… துாக்குச்சட்டியுடன் கண்ணயர்ந்த பெரிசுகளை துாங்க வைத்து துாங்க வைத்து எழுப்பிக் கொண்டிருந்த மண் பறக்கும் காற்று… மரமட்டை அதிகமில்லாத பூமியில் என்னால் இவ்வளவு மண்ணைதான் பறக்காமல் தடுக்க முடியும் என்று காற்றுக்கு காதோரம் சேதி சொல்லிக் கொண்டிருக்கும் கருவேலஞ்செடிகள் என அன்றைய காலை நேரம் வெகு ஜோராக களைகட்டிக் கொண்டிருந்தது.

இம்மண்ணும் தொழிலும் என் வாழ்க்கையோடு பழகி விட்ட ஒன்று என்றாலும் அதன் மீது பெரிதாக லயிப்பு ஏதும் ஏற்பட்டதில்லை எனக்கு. ‘புனிதம்’ என்ற எனது அடுத்த நாவலின் கதை சென்னையிலிருந்து அப்படியே மேலேறி டெல்லிக்கு சென்று விடுகிறது.

முகலாயர் காலத்து வீடுகளும் ஆங்காங்கே சில மனிதர்களும் இன்னமும் மிச்சமிருந்து வரலாறை நிதர்சனமாக்கிக் கொண்டிருந்தனர். பான் பீடாவை வாயில் அதக்கியபடி முஜ்ராக்களுக்கு செல்லும் பழக்கவாதிகள் பழங்காலத்தை முதுகில் சுமந்து திரிந்தனர். லௌகீகத்தின் முடிவில் தோன்றும் மெய்ஞானத்தின் தொடக்கமாய்.. ஒளி பொருந்திய ஒலியாய்.. ‘அல்லாஹு அக்பர்’ காற்றில் புனிதத்தை நிரப்பி உடலையும் உள்ளத்தையும் ஒருசேர சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. தொழுகையின்போது நிலவும் அமைதிக்குள் இறைதத்துவம் இறைந்தாற்போலிருந்தது. சிறிதுசிறிதான சந்துகள் ஒன்றாகி ஒரு ஒழுங்கமைந்த பாதையை உருவாக்கிக் கொண்டன. மொகலாய பராம்பரியத்தில் எழுந்து நின்ற பெரிய வீடுகள் சட்டென்று மனதை இறுக்கி பிடித்தது. ஏதாவது ஒரு வீட்டிலிருந்து பாபரோ அக்பரோ தனது பரிவாரங்களோடு வந்து விடுவார்களோ என்று கூட தோன்றியது.

மேலுள்ளவை பெருநகர வாழ்வை தொட்டுச் செல்லும் அந்நாவலின் சில வரிகள். நான் அந்நகரங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை படைப்பில் கொண்டு வந்திருந்தேன். உடலின் இரத்தநாளங்களை போல டெல்டா பகுதியில் ஓடும் ஏ,பி,சி,டி வாய்க்கால்களை போல சாந்தினிசௌக்கின் நெருக்கமான வீதிகள் அப்போது பிரமிப்பை உருவாக்கியிருந்தன.

‘அற்றைத்திங்கள்’ எனது நாவல் அனுபவத்தில் மூன்றாவது படைப்பு. பரணி என்ற பெண்ணின் பயணங்களின் ஊடாக கட்டமைக்கப்பட்ட அந்நாவல் தன் துழாவலை காடுகளில் அமைத்துக் கொண்டது. புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் செய்யப்படும் காடழிப்பு, பழங்குடிகளின் வாழ்வுரிமை பறிப்பு போன்றவற்றை அந்நாவல் பேசுகிறது. நாவல் காட்டுக்குள் நுழைகிறது.

பாதை மடிந்து திரும்பியது. பசுமைக் குகைக்குள்ளிருந்து வருவது போல அடர்மரங்களுக்குள் புகுந்து வெளி வந்தபோது ஓடையின் அகலம் கூடியிருந்தது. கோரைகள், கரையில் ஆளுயுரத்திற்கு உயர்ந்திருந்தன. ஓடைக்கு குடை பிடிப்பது போல தாழ்ந்து படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க, அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும் மரங்களுக்குமிடையே பாலம் போல தொங்கின. அதன் குதியாட்டத்தில் சருகு இலைகள் ஓடைக்குள் உதிர்ந்தன. புத்தம்புதிய சருகு ஒன்று பழுதின்றி விழ அதன் பின்னோடு என் கண்களை நகர்த்தினேன். நல்ல அகலமான சருகு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மரத்தில் தாக்கு பிடித்திருக்கலாம். நீரின் போக்குக்கு அனுசரித்து நகர்ந்து நகர்ந்து சிறு பாறையொன்றில் தேங்கி பிறகு அதனை விடுத்து நழுவி நீருக்குள் தன் ஓட்டத்தை அதிகப்படுத்தி என் கண்களிலிருந்து மறைந்து போனது.

நான் காடுகளில் ஆர்வமாகப் பயணிக்கத் தொடங்கினேன்.

அக்குடிசையின் நீண்டிருந்த முன்பாகத்தில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டேன். வெகு மிதமான மழைதான். மெதுமெதுவான மரங்களை நனைத்தது. தண்டுகளை ஈரமாக்கியது. இலைத் துளிர்களை நீவி விட்டது. பழுத்த இலைகளுக்கு விமோசனம் அளித்தது. கைகளை விரித்து மழையை உள்வாங்கி.. பின் வெளியேற்றி என மரங்களும் கிறங்கித்தான் கிடந்தன. மழையோசை இசையாய் ஊடுருவி காட்டின் வாசனையை கிளர்ந்தெழுப்ப அது போதையாய் என்னுள் இறங்கியது. இரவா.. பகலா என கணிக்கவியலாத வெளிச்சம் காட்டை நிரப்பியது. சலனமற்றுப் போனது என் மனம். ஆர்ப்பரிப்பற்ற அமைதிக்குள் தொடர்ந்து என்னை இருத்திக் கொள்ள வேண்டுமென தோன்றியது. மழை நின்றிருந்தது. இது காட்டின் இயல்பு என்றார் அங்கிள். சிறு பறவைகளின் ஒலி சூழலின் ரம்மியத்தை கூட்டியது. எழுந்து நடந்தேன். கால்களில் ஒட்டிக் கொண்ட சேறு, உயிர் கரைந்து ஓடுவது போல மழை நீரில் தன் பிடிமானத்தை இழந்து வழிந்தோடியது. இந்நேரம் வரையாடு உடலை சிலிர்த்துக் கொண்டு தன் உடல் ஈரத்தை துறந்திருக்கும். செந்நிற மொந்தை வால் அணில்கள் மரங்களில் தாவியோடத் தொடங்கியிருக்கும்.

காடுகளில் இலயித்துப் போனேன்.

மனித நிழல்படாத பூமி பசுமையானது.. பச்சை நிறமானது.. இயற்கையானது.. அகத்திற்குள் விரிந்து விரிந்து வியாபிக்கும் தன்மை இந்த நிறத்திற்குண்டு. கவிழ்ந்திருந்த வானத்தின் நீட்சியாக இடைவெளியின்றி பசுமையை போர்த்தி கிடக்கும் புல்வெளியில் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். பிரபஞ்சவெளியெங்கும் அகமாக மாறி போக உடலென்ற வடிவு நீர்த்து விட்டது போலிருந்தது. அன்பை வரைய வரைய அது பச்சையாக மாறிக் கொண்டே இருந்தது. எனக்கு குணாவின் மீதும் செரா அங்கிளின் மீதும் பேரன்பு பொங்கியது.

இதுதான் நான்.. இதைதான் தேடுகிறேன். என் மனம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உண்மையாக அப்போதிலிருந்துதான் நான் நிலங்களை மிக அதிகமாக காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். பித்துக் கொண்டாற்போல சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் நிலங்களை வாசிக்கவும் தேடவும் தொடங்கினேன். (இக்காலக்கட்டத்தில் என்னுடைய சிறுகதைகள் அனைத்தும் காடுகளை மையப்படுத்தியே அமைந்திருந்தன). சங்க இலக்கியம் என்னை அப்படியே துாக்கி ‘ஆலகாலத்தில்’ இறக்கி வைத்தது. அது எனது மற்றுமொரு நாவல்.

‘ஆலகாலம்’ ஐந்து பகுதிகளை கொண்டது. ஐந்தும் வெவ்வேறு காலங்களையும் பல்வேறு நிலங்களையும் உள்ளடக்கியது. அதன் முதலாவது பகுதியான சங்க இலக்கிய காலம் பாணன் ஒருவனின் மூலம் ஐவகை நிலங்களிலும் பயணிக்கிறது.

மேலிருந்து பார்வைக்கு பெருமலைத்தொடர் பசும் அடுக்குகளாக விரிந்திருந்தன. இசைவாணன் பெரிய வாயை உடைய தண்ணுமையை முழங்குவது போன்று பெருத்த ஓசையுடன் அருவி காட்டாற்றில் விழ, காட்டாறு பொங்கி ஓடிக் கொண்டிருந்தது. கவிகையின் பரப்புக்குள் ஊடுருவும் அந்தி நேரத்து சூரியனையும் வெள்ளி வழிந்து ஓடுவதைப் போன்ற அருவிகளையும் காணும் ஆவலில் நானும் குழலியும் அங்கேயே நின்று விட, பெரும்பாணர் எங்களை உரத்த குரலில் அழைத்தார். உண்ணுவதற்காகதானிருக்கும் என்றாள் குழலி. ஏனெனில் அங்கு நிலம் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமின்றி அமர்ந்துண்ண ஏதுவாக இருந்தது. “நல்ல பசி“ என்றாள். நெய்யூற்றி வாட்டப்பட்ட செழிப்பான கொழுப்பு பொருந்திய பன்றியின் தொடைகள் கூடப் பசியை துாண்டி விட்டிருக்கலாம் என்றேன் நான்.

கற்பாறைகளை உயர உயர அடுக்கியது போன்றிருந்த மலைகள் எங்களுக்கு பிரமிப்பை உண்டாக்கியது. அருவி வெண்ணுரைகளாக காற்றில் பரவி முகத்தில் சாரலாக தெறிக்க, அதை கண்களை மூடி அனுபவித்தோம். தன்னிடம் அடைக்கலமென்று வருவோருக்கு வரையறையற்று வழங்கும் மன்னரின் கொடைத்தன்மையை போற்றி இன்னிசையோடு நாங்கள் இசைக்கும் பண்ணை போல, இயற்கை தம் அழகை தாமே அங்கீகரித்து நீர்மழையாக பொழிந்துக் கொள்வதுதான் அருவியோ? என்றாள் குழலி.

நாங்கள் ஆற்றின் கரையோரமாக நடந்துக் கொண்டிருந்தோம். குழலி மெல்லிய குரலில் கானமிசைக்க, கழுநீர்ப்பூக்கள் இளங்கள்ளை சொறிந்தன. கள் மணத்தில் தேனீக்கள் கிறங்கின. ஆற்றின் கரையோர மரங்களிலிருந்து உதிர்ந்த கடம்ப மலர்கள் நீரின் நெளிவிற்கேற்ப நடனம் புரிந்தப்படியே நழுவியோட, கடம்பமரங்களோ, பாணக்குடிகளின் பண்ணுக்கும் இசைக்கும் மயங்கி பரிசில்களை வாரி வழங்கும் தலைவனைப் போல மேலும் மேலும் மலர்களை உதிர்த்துக் கொண்டேயிருந்தன. நாங்கள் கரையோரமாக உருண்டுக் கிடந்த கற்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கால்களை வைத்து நடந்தோம். கானகப்பெண்கள் ஆடை நெகிழ்த்தி நீராடிக் கொண்டிருந்தனர். குழலி அப்பெண்களுடன் இணைந்துக் கொள்வதாக கூறினாள். நான் இளங்காலையை அனுபவித்தப்படியே நடக்கத் தொடங்கினேன். காஞ்சிமரம் நீர்புறமாக கிளைகளை விரித்து பரவியிருக்க அதில், சிரல்கள் மீன்களுக்காக காத்துக் கிடந்தன. இரையை கண்டுக் கொண்ட வேகத்தோடு சிரல் ஒன்று நீரில் பாய, அதன் கால் நகம் பட்டு தாமரை இலை கிழிந்தது. கவ்விய மீனோடு அச்சிரல் தாமரை மலரின் மீது அமர, கிரகணநாளில் நிலவை பாம்பு மறைப்பதுபோல தாமரையை சிரல் மறைக்க, செங்குவளையும் நீலமலர்களும் குளத்தை வண்ணங்களால் மூடிக் கொண்டன. துாண்டிலில் செருகப்பட்ட பச்சை இறைச்சியின் வாசத்துக்கு முந்தி வரும் வாளைமீன், அதனுள் மறைக்கப்பட்டிருக்கும் துாண்டிலைக் கண்டு தப்பி சதுப்பான பிரம்பு புதருக்கருகே ஓட, அங்கே படிந்திருக்கும் பிரம்பின் நிழலை துாண்டிலின் கோலாக எண்ணி தவளைகள் கால்களை அகலவிரித்துக் கொண்டு ஓடின.

பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு வாழ்க்கை என்பது விதிக்கப்பட்டதொன்று. பயணியோ பல வாழ்க்கைகளை ஒரே வாழ்க்கைக்குள் வாழ்ந்து விடலாம். வெவ்வேறு நிலங்கள், அவை உருவாக்கும் மனநிலை, அங்கிருக்கும் மக்கள், உணவு, கலாச்சார பின்னணி எல்லாமே நம்மை புத்துணர்வு கொள்ள வைக்கிறது. வாழ்க்கை விரிந்து கொண்டே செல்கிறது.

இருள் தன் ராட்சஷக்கரங்களை பெருக்கிக் கொண்டேயிருந்தது. மரங்களும், அருவிகளும் விலங்குகளும் பதிகளும் அதன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டே வந்தன. குடிசையை நோக்கி அதன் கைகள் எப்போது வேண்டுமானாலும் நீளத் தொடங்கலாம். இப்போது வீசியக்காற்றில் கொம்பனின் வீச்சமும் கலந்திருந்தது. அன்று அது மணிராசன் அடித்திருந்த குண்டுகளோடு ஆங்காரமாக பிளிறிக் கொண்டே ஓடியது. அந்த ஒலியைக் கொண்டே கொம்பன் அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்றான் மணிராசன். உண்மைதான். நாலைந்து சரிவுகளைக் கடந்து பெருமலையை போல சரிந்துக் கிடந்தது. கொம்பனின் கொம்புகள் விலையுயர்ந்தவை. தந்தத்தாலான யானைபொம்மையை முதலாளி வீட்டு வரவேற்பறையில் கண்டிருக்கிறேன். இது அசல். அசலுக்கான மதிப்பு மிக அதிகம். உற்சாகம் பீறிட வெற்றிக் கூச்சலிட்டோம். பீனாச்சியை ஒலிக்க செய்து தப்பையில் தாளமிட்டோம். கஞ்சா புகை பனியோடு சேர்ந்து படலமாக மேலெழும்ப உற்சாகத்தோடு விடிய விடிய ஆடிக் கொண்டேயிருந்தோம்.

மேற்சொன்ன இருள், அரசாங்கத்தின் நாடகங்கள் அரங்கேறும்போது பழங்குடிகள் மீது கவிழும் இருள். அச்சிறுகதையின் பெயரே கூட ‘இருள்’ தான். எனக்கு அந்த பயணத்திலிருந்து, அந்த இருளிலிருந்து வெளி வர கால அவகாசம் தேவைப்பட்டது.

அவளுடைய வீடு அதன் அடிவாரத்தில் இருந்தது. நேரங்களை கூட மலைகளில் சூரியன் எழுப்பும் ஜாலங்களின் வழியே அவர்களால் அறிந்துக் கொள்ள முடியும். ஒரு பக்கத்து சூரியன் மறுபக்கத்து மலைச்சிகரத்தை செவ்வொளியால் நிறைக்கும்போது கோதுமை வயல்கள் விவசாய ஆட்களால் நிரம்பி விடும். மலைச்சரிவுகளின் விளிம்புகளை கதிரவன் தன்னொளிக் கொண்டு கூர் தீட்டும்போது குதிரைகள் உற்சாகமாய் கனைக்கத் தொடங்கும். ஆனால் பின்னாட்களில் அவை கனைப்பதை விட பயந்து தெறித்து வால்களை துாக்கி ஓட்டம் பிடிப்பதுதான் அதிகமாக இருந்தது. காட்டாறுகள் வேகமிழக்கும்போது அவை அள்ளிக் கொண்டு வரும் வண்டல் படிவதால் உருவான சமவெளியில் இயற்கையாக முளைத்த புற்களின் ஆரோக்கியம் தங்கிய மினுமினுப்பான அவற்றினுடல் மிரட்சியில் துள்ளின. கம்பளி ஆடுகள் வழிவகை தெரியாது அலறின. அவர்களின் வரவை தெரிவிக்கும் கட்டியங்கள் என அப்போது அவர்களால் அறிய முடியவில்லை. அரசியல் நிலைப்பாடு கொள்ளுமளவுக்கோ பிரிவினைவாத வெறுப்பரசியலுக்கு செல்லுமளவுக்கோ உணரவில்லை அவர்கள்.
அந்த இளைஞன் அவளுக்காக ஆப்பிள் பழச்சாறை கண்ணாடி டம்ளரில் நிறைத்து வைத்து நீட்டிக் கொண்டிருந்தான்.

“என் பெயர் மஞ்சோன்…” என்றான் அவள் கேட்காமலேயே.

காஷ்மீரத்து மஞ்சோனுடன் சிறிது காலம் வாழத் தோன்றுகிறது.

“அண்ணா காகேசம் பக்கம் போயிருக்கப்போவுது” மூத்த சகோதரனை கேலி செய்தாள் பார்வதி. கோமதிக்கு நகைச்சுவையோ கிண்டல் கேலியோ வராது. இழப்பு அவளை மாற்றி விட்டதா அல்லது இயல்பே அதுதானா என்றறியவியலாத இளமையிலேயே அவள் வாழ்க்கை தொலைந்திருந்தது. ஆறும் கடலும் சேரும் கழிமுகமென்பதால் மழைக்காலங்களில் நிலத்தையும் நீரையும் பிரித்தறிய முடியாத சாம்பல் வண்ண வெளிக்குள் கிராமமே ஆழ்ந்து போகும். கடல் பேரோசை கொண்டு எழும்பும். காற்றும் மழையும் ஒன்றையொன்று விஞ்சும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே நதி கடலாக மாறி விடும். காலளவு நீர் இடுப்பளவில் உயர்ந்து மார்பு, கழுத்து என ஏறிக் கொண்டே வரும். நீந்தினாலும் கரையேறுவதற்கு துறை புலப்படாது. அது வெகுதுாரத்திலிருந்து உருட்டிக்கொண்டு வரும் வளங்கள் மண்ணை செழிப்பாக்கும். வயல்கள் முத்துமுத்தான தானியங்களை பெற்றெடுக்கும். பள்ளங்கள் மேடாகும். படுவூர், காகேசம் போன்ற கிராமங்கள் கூட முகத்துவார வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய மண் திட்டு என்பார்கள். இன்று உயிர்கள் பெருகி அங்கு ஜீவக்களை மிளிர்கிறது. முகத்துவாரங்களால் பள்ளத்தை மேடாக்கவும் மேட்டை ஓடையாக்கவும் முடியும். சில சமயங்களில் மேடுகள் தாவரங்களோடு அடித்துக் கொண்டுபோய் கடலில் விழுந்து மாளும். ஏரிகளாக மாறி விடும் வயல்களில் நீர் வற்றி விளைச்சல் பெருக வேண்டுமென இராமாயண பாகவதப்பிரசங்களின்போது பெண்கள் மனதார வேண்டிக் கொள்வர். ஊரே பக்திப்பரவசத்தில் மூழ்கியிருக்கும். பிரசங்கிகளுக்கு தட்சணைக்கு பஞ்சமில்லாததால் அடுத்த ஆண்டுக்கான வருகையை சம்பிரதாயமாக நிச்சயித்து விட்டு கிளம்புவார்கள்.

நிலங்கள்… நிலங்கள்.. நம்மை சுற்றிலும் எத்தனை விதமான நிலங்கள். முகத்துவாரத்தில் நான் கண்டவற்றை கதையாக்கி விடும்போது வாழ்க்கைக்குள் வசந்தம் நுழைந்து விடுகிறது. இலக்கிய உலகில் அடிக்கடி சொல்லப்படும் Pleasure என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் போலும்.
ஆலகாலத்து பாலை நிலம் கூட என்னை கவரவே செய்தது.

பொழுது மங்கி வரும் வேளையில் நாங்கள் மணலில் கால்களை புதைத்து புதைத்து நடக்கத் தொடங்கினோம். கடலலைகள், கரை மணலை தொட்டு வணங்கி பின்வாங்கி மீண்டும் முன் வருவதை பெருந்தவம்போல செய்துக் கொண்டிருந்தன. ஆனால் குழலியோ, பொன்னையள்ளிக் கொட்டியது போன்றிருக்கும் செருந்திப்பூக்களின் அழகைக்காணவே அவை வந்து போகின்றன என்றாள். எப்படியாக இருப்பினும் அவற்றை கண்ணிமைக்காது உற்று நோக்கினால் பாலைநிலத்தில் ஒட்டகம் உறங்கி எழுவது போன்றிருக்கும். அதை அவளிடம் கூறியபோது, “இதோ இங்கு பூத்திருக்கும் முண்டகப்பூக்களை உன் ஒட்டகங்கள் என்னவாக கருதிக் கொள்ளும்?” என்றாள். நான் வாளாவிருந்தபோது, “கடலலைகள் அவற்றை கதிர்மணிகள் என்றெண்ணிக் கொண்டு கழுவியும் நழுவியும் செல்கிறது” என்றாள்.

கடலில் நீர் பெருகிக் கிடந்தாலும் பருக நீரற்று எங்களின் நா வறண்டிருந்தது. கடற்காற்று வேறு உடலில் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு உப்பாக உடலை தழுவிக் கொண்டிருந்தது. தாகத்தால் வறண்டிருந்த உதடுகளை நாக்கை சுழற்றி ஈரமாக்கிக் கொண்டோம். வரிவரியாக ஓடிக் கிடந்த மணற்பாளங்களில் நடப்பதற்கஞ்சி பிள்ளைகள் அழத் தொடங்கினர். நாயின் நாக்கை போன்று வளைந்திருக்கும் பெண்டிரின் பாதங்களை நீரற்ற ஆற்றில் இறைந்துக் கிடக்கும் பருக்கைக்கற்கள் குத்தி கிழித்தன.

மழை தன் தொழிலை மறந்து நீலவானத்தை விரும்புவதால் நிலங்கள் மனமுடைந்து பாளம்பாளமாக பிளந்திருந்தன. கிளைகளில் ஒட்டியிருக்கும் துளியளவு பசுமைக்காக யானைகள் மரத்தையே பிடுங்கி எறிந்து விடுவதால் ஒதுங்குவதற்கும் நிழலற்று போய் விட்டது. பரல் கற்களுக்கிடையே ஊறிய நீருக்காக யானையும் புலியும் போட்டியிட்டு எழுப்பும் உறுமலால் பாதையே அதிர்ந்துப்போனது. இரைக்காக சிதல் புற்றைக் கிளறும் கரடி அங்கு பாம்பு சீறுவதைக் கண்டு அதிர்ந்து ஓடின. இலைகளே அற்றுப்போன மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் வரிப்புறாக்கள் வறட்சியால் புலம்பி தவித்தன. நீரற்றுபோன பூமியை களிறு விரக்தியோட தட்ட, நிலமே புழுதிக்காடாக மாறிப் போனது.

நாவலின் இரண்டாவது பகுதி மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத்தை செதுக்கிய தலைமைச்சிற்பியின் நினைவுகளாக எழுவது. பல்லவர் காலத்தியது. போர்களால் உறவுகளை இழந்திருந்த அவன் இமயம் நோக்கி பயணிக்கிறான். அது இப்போதிருக்கும் நகர்கள் சூழ்ந்த வணிக மயமாக்கப்பட்ட இமயம் அல்ல.

இமயத்தின் மடிப்பும் ஆழமும் விண்ணை தொட்டு விடுவது போன்ற அதன் உயரமும் திடீரென்று ஏதொன்றும் இல்லாததாகவும், உடனே எல்லாமானதாகவும் மாறிக் கொண்டேயிருந்தது. எல்லாமானதாகவும் எனில், தாயாகவும் தந்தையாகவும் இளவல்களாகவும் ஊராகவும் பேராகவும் எல்லாமானதாகவும்தான். பின் அவை ஏதுமற்று பனியால் மூடிய மண் குவியற்போலாகியது. இம்மண்குவியல்களே விண்ணை மண்ணுடன் இணைக்கின்றன. வளைந்த வான் விருப்பத்தோடு மலையுச்சியை தழுவிக் கொள்கிறது. மலைச்சிகரத்தின் விளிம்புகளை ஒளியால் வரைந்திருந்த சூரியன், குளிரால் நடுங்கும் உடலை தன் வெப்பக்கரங்கள் கொண்டு அணைத்துக் கொள்ள, அது கருவறையின் கதகதப்பு போல உடலில் வெம்மையை ஏற்றியது. மலைச்சரிவுகள் வரிவரிகளாக வெவ்வேறு வடிவம் காட்டின. சில புத்தரின் முகங்கள் போன்ற நீண்டு வழிந்தன. புத்தரின் முகம் அறிவும் அமைதியும் நிறைந்தது. சைத்தியங்களிலும் விஹாரைகளிலும் அவற்றுக்கு தீபதுாப ஆராதனைகள் நடைபெறும். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அகில்களின் மணத்திலும் அகல்களின் ஒளியிலும், ஒளிரும் புத்தரின் முகங்களில் சிரிப்பு துலங்குவதோடு கனிவும் முகிழ்ந்திருக்கும்.

காற்று சுழன்று வீசியது. அங்கிருந்த பாறையில் அமர்ந்துக் கொள்ள வேண்டுமாய் தோன்றியது. ஆனாலும் உடலை இம்மியளவும் அசைக்க விருப்பமின்றி நின்றிருந்தான். மலையிடுக்குகள் இருளாலானவை. இடுக்குகள் அழுக்குகளால் நிறைந்தவை. அழுக்குகள்தான் அழுக்காறுகள். அதனுள் நுழைந்து விடும் எண்ணங்கொண்டு காலையும் மதியமும் மாலையுமென சூரியன் தொடர்ந்து படையெடுக்க, சூரியனின் ஒளிக்கொண்டு உடலை வளர்க்கும் மலைகளோ, இடுக்குகளை சாதுர்யமாக தம் நிழல் கொண்டு மறைத்திருந்தன. அந்நிழல்கள் சில சமயம் குட்டையாகவும், சில சமயம் நீண்டுமிருந்தன. தன் முயற்சியின் பலிதமின்மையால் கோபம் கொள்ளும் சூரியன் இடுக்குகளுக்கான ஒளியை விண்ணை தொடும் உச்சத்தில் நின்ற பெரிய பனிமலையின் மீது சிந்தி கண்களை கூச செய்தான். மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் கிளைக்குகிளை தாவி கொண்டே சென்றன. ஒரு கிளையிலிருந்து நீங்க வேண்டுமாயின் மற்றொரு கிளைக்குதான் தாவ வேண்டும். பிரிதொன்று இல்லையேல் குரங்குகளால் அக்கிளையிலிருந்து நீங்கி விட முடியாது.

ஏதொன்றுமில்லாதவற்றையும், எதனுள்ளாவது அடக்கி விட வேண்டும் என்றெழும் எண்ணத்தையும் விட்டொழிக்கும் எண்ணம் மேலோங்க, விறுவிறுப்பாக நடந்தான். அதுவே உடலை களைக்க செய்து வீழ்த்த போதுமானது. உறக்கம் என்பதே மரணத்திற்கான ஒத்திகைதான். உறக்கத்திற்கென, உடல் எடுத்துக்கொள்ளும் நிலம் மட்டுமே தனக்கானதென்பதை உணராதவர்களே, மாபெரும் சைனியத்தோடு நாடு பிடிக்க கிளம்பி விடுகின்றனர்.

அவன் தான் கண்டதை கற்பனையோடு கலக்கிறான். விரல்களும் உளிகளும் பாறையை இமயமாக்குகிறது. நாவலை எழுதி முடித்த பிறகு “அர்ச்சுனன் தபசு” எனக்கு வேறு வடிவம் காட்டியது. என்னால் அவனுடைய விரல்களை தொட முடிந்தது. அச்சிற்பம் என்னுடையதே என்பது போல உணர்ந்தேன். ஏனெனில் அதை செதுக்கியது என்னுடைய சிற்பி அல்லவா?

ஓங்கியுயர்ந்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டதும் பலா, ஞெமை, நமேரு போன்ற மரங்களும் சிங்கங்கள், யாளிகள், மலையாடுகள், பன்றிகள், மான்கள், குரங்குகள், முயல், உடும்பு, ஆமை முதலிய எண்ணற்ற உயிர்கள் வாழ்வதும் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுவதும் நர நாரயணனாக எழுந்தருளி தன்னை வெளிப்படுத்தியதுடன் தவமியற்றும் யோகியருக்கு வீடுபேறு நல்கும் திருமால் உறையும் பதரியாசிரமம் திகழ்வதும், மகேசுவரர் அர்ச்சுனருக்கு பாசுபதம் வழங்கியதும், சிரஞ்சீவியான பரசுராமர் தன் வாழிடமாக கொண்டதும், கின்னரர்களும் சித்தர்களும் தேவக்கன்னிகையரும் கந்தர்வரும் கிம்புருடர்களும் நாகர்களும் தத்தம் துணைகளோடு வந்து இன்புறுவதும் மலை மாந்தர்கள் வாழ்வதும் மனிதக்குலத்தை பிறப்பறச் செய்யும் புனித கங்கையாறு பாய்வதுமான இமயம், இமயமென எழுந்து நின்றது. புதுக்கருக்கு கலையாத அச்சிற்பங்கள் நிலைத்துப் போன காலங்களாக முடிவிலாத்தன்மையுடன் விரிந்து நிற்க, மன்னர் அதன் முன் நின்றிருந்தார்.

பல்லவர் நிலம் என் கண்முன்னே விரிந்தது. அக்காலத்திலிருந்து எப்போது நான் நிகழ்கணத்துக்கு மீள்வது?
துறைமுகத்தில் ஏற்றியவற்றை இறக்கவும், இறக்கியவற்றை ஏற்றவுமாக கடற்கரை நாவாய்களால் சூழப்பட்டிருந்தது. இறக்கப்பட்ட பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டும், அடுக்கி வைக்கப்பட்ட பண்டங்கள் பண்டகச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதுமாக இருந்தன. வானளாவிய விளக்குகள் கடலில் செல்லும் நாவாய்களுக்கு கரையை அறிவித்து அழைப்பு விடுத்தன. தெருக்களில் பரதவர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் வீட்டு மாடங்களில் ஏற்றி வைத்த விளக்குகள் பொன்னாய் ஒளிவீச, அவ்வொளியில் அங்கிருந்த பரதவபெண்கள் பந்தடித்து விளையாடுவதும் மாடங்களில் நின்றபடி கடலழகை ரசிப்பதுமாக பொழுதை இனிமையாக கழித்தனர். சாருதேவிக்கு அவற்றை தாண்டியும் ரசனையிருந்தது. கனவிருந்தது. அது அவனுக்கு இருப்பதை போன்றதொரு கனவு. வடதிசை பயணத்திலிருந்து மீள திரும்பிய அவனுக்கு அவளிடம் நட்புக் கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. அவர்களை விடவும் பிரம்மாண்டமான கனவு மன்னர் நரசிம்மருக்கிருந்தது. அது கற்பாறைகளுக்கு உயிருண்டாக்கும் கனவு. கனவுகளை ஒற்றைப்புள்ளியில் இணைக்கும் சாதுர்யமும் அவருக்கிருந்தது. அதுவே மனித வரையறைகளை மீறும் சாத்தியப்பாடுகளை உருவாக்கியிருந்தது.

என் நாவலின் கற்பனை பயணம் சோழநிலத்தில் என்றானபோது நான் சோழநிலத்தினுாடே அடிக்கடி பயணம் மேற் கொண்டேன். இது நாவலின் மூன்றாவது பகுதி.

மடைகளின் வழியாக வரும் நீரை தத்தம் வயல்களுக்கு பாய்ச்சுவதில் ஆண்கள் மும்முரமாக இருந்தனர். மோர்ப்பானைகளோடு பெண்கள் குழாம் ஒன்று அவனை கடந்து சென்றது. ஏதோ பேசியபடி வந்த அவர்கள் அவனை கண்டதும் சற்று நிறுத்திவிட்டு பிறகு தொடர்ந்தனர். வயல்களில் நெற்பயிர்கள் கரும்புகள் போன்றும், கரும்புப் பயிர்கள் பாக்கு மரம் போலவும் உயர்ந்திருக்க, அவற்றுக்கிடையே ஊர்கள் இருந்தன. தானியக்கதிர்களை உண்ண வரும் பட்சிகள் நிலத்தில் தாழப் பறந்தன. கரையோர மரங்களிலிருந்த கூடுகள் காற்றுக்கேற்ப நடனமாடின. மணிமங்கலத்தில் இருப்பதைபோல இங்கும் வீடுகள் வரிசையாகவும் நெருக்கமாகவுமிருந்தன. மாடுகள் பால் கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவை போல கனத்தமடியும் இளம்கன்றுகளுமாக பட்டிகளிலிருந்து குரல் கொடுத்தன. வீதிகள் நீளமாக இல்லாமல் பாம்பு போல நெளிந்தோடி வீடு்களின் முன்பு சரணமிட்டு நின்றன. தன்னை தவிர்த்து அனைவரும் பரபரப்புடன் இயங்கும் காலை நேரத்தை பரபரப்பின்றி கவனிக்கத் தோன்றியது அவனுக்கு. வரப்புமேட்டின் மீது கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொண்டான். வயல்களில் சீரான வரிசைகளில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள், பந்தலிட்டது போல இலைகளை பரப்ப, அதன் கிழிசல்களுக்குள் சூரியன் நுழைந்தபடி நிலத்தை பார்வையிட்டது.

இஞ்சியும் மஞ்சள் கொல்லைகளும் செழித்திருந்த வழிகளில் செந்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் பார்வைக்கு இதமளித்தன. நதியின் பசிய கரையோரங்கள் வழிபாடுகளால் நிறைந்திருந்தன. காஞ்சியைப் போன்று செல்வச்செழிப்பு இங்கில்லை. போலவே, இங்கிருப்பதை போன்று அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் அங்கில்லை. கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் கையில் ஊதுகுழலோடு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். பொன்னி நதியின் கரையில் உடலை துாய்மைப்படுத்திக் கொண்டிருந்த சிவனடியார்கள் டங்.. டங்.. என்று ஒற்றையொற்றையாய் ஒலித்த கோவிலின் ஒவ்வொரு மணியோசைக்கும் நமச்சிவாய.. நமச்சிவாய.. என்று முணுமுணுத்துக் கொண்டனர். பல்லவநாட்டில் தென்படுவதுபோல சமணர்களும் பௌத்தர்களும் இங்கு அதிகம் தென்படவில்லை.

என்னுடைய நான்காவது பாகத்தின் நாயகன் வங்க நிலத்துக்குள் நுழைந்து விடுகிறான். என்னுடைய நாவல் ஏன் இத்தனை நிலங்களுடே பயணிக்கிறது? அதுதான் நானா?

வசிட்டா ஏரியில் நீர் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈர நைப்பான நிலங்கள்தான் கிராமங்கள் என்றாகின போலும். அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடுகிழித்தாற்போலெல்லாம் அமைந்திருக்கவில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதானசாலையின் அருகாமையில் இருந்தது பேலாட் கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளை தவிர்த்து சிறு மண்பரப்புகளை கூட தாவரங்கள் தவற விடவில்லை.

காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. பாதை விரிந்தும் குறுகியும் வளைந்தும் நெளிந்தும் படுகையும் சேறும் நிலமும் நீருமாக இருந்தது. மழையும் வெயிலுமற்ற இதமான பருவநிலை உடல் களைப்பை ஏற்படுத்தாது. தொலைவில் தெரிந்த பிரம்பப்புதர்களில் எழுந்த பச்சை வாசனை அவனுக்குப் பிடித்தமானது. வானம் அரை வெளுப்பாக கவிழ்ந்திருந்தது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் கருநிறம் சூழ்ந்து மழை வீசி விடும். மண் ஏற்கனவே சதுப்பாக இருந்தது. மழை வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வழுக்கி விட்டு விடும். ஆனாலும் கால்கள் மேலும் நடக்க சொல்லித் துாண்டின.

அவன் கங்கையின் கரையோரமாக பயணிக்கிறான்.

சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயண மூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் துளசியும் கலந்தோடும் எழிலான அலக்நந்தா சூரிய ஒளியில் தகதகக்க, தூரத்தில் அடம்பலான புகையாடை உடுத்தி நெளிந்தாடியபடி வந்தாள் பாகீரதி. கண்களை மூடி கைகளை தொழுது கல்லின் முன் நிற்கும்போது அது கடவுளா கல்லா என்றெல்லாம் ஆராயத் தோன்றாது. ஹே கங்கேமாதா ஸ்ரீ கங்கேமாதா என்று உருகும் உள்ளங்களும் இடைவிடாது ஒலிக்கும் மந்திர முழக்கங்களும் ஆலய மணியோசையும் கங்கையை நதியென்றே உணர விடவில்லை. தனக்குள்ளிருக்கும் தெய்வத்துக்குள் கரைந்து விட விக்கிரகம் ஒரு கருவி. கங்காமாதாவும் ஒரு கருவியே. கசிந்து ததும்பும் நீரில் அகல்களும் மலர்களும் மிதந்து ஜொலித்தன. நட்சத்திரங்கள் நிரம்பிய நிறைவானம் போல நதி நிறைந்து வழிந்தது. காற்று குளிரை பரப்பிக் கொண்டிருக்க, நிலவு தன் இளஞ்சூட்டில் அதை உருவிக் கொண்டிருந்தது. கரையோர கட்டடங்களின் ஒளிபிம்பங்களை கங்கை தன்னுள்ளிருந்து எழுந்தனவாக பிரதிபலித்துக் காட்டியது. நிரம்ப ஏதுமில்லாதது போல மனங்கள் பொங்கி வழிந்தன. ஒருவேளை இவ்வுலகில் நிலையின்மையென நிறைந்துள்ளவை அனைத்தையும் நிலைத்தவையாக்க முயலும் மானுட அச்சம்தான் பக்தியென உருமாற்றம் கொள்கிறதா?

இமயத்தின் கரடுமுரடான பாதைகள் அவனை இன்னும்… இன்னும் என்று அழைக்கின்றன.

எதிரெதிரே பார்த்துக் கொண்ட இமயத்தின் பனிச்சிகரங்கள் ஒன்றின் மீதொன்று நிழலை கிடத்தியிருந்தன. ஓடையாய் நகரும் கங்கையின் இருமருங்கிலும் முதிராத இமயம் கற்களாக கரையொதுங்கி கிடந்தன. மரங்களை தலையில் வைத்துக் கொண்டாடும் சிகரங்களின் நடுவே வெண்மேகங்கள் தோன்றுவதும் நகர்வதும் மறைவதுமாக இருந்தன. இடைவிடாது பெய்யும் மழையிலும் நகர்ந்தப்படியிருக்கும் மூடுபனிக்கும் மத்தியில் ஓடைகள் தோன்றி தோன்றி மறைந்தன. பாகீரதியின் கட்டவிழ்ந்த ஆட்டத்திற்கு மலைத்தொடர்கள் மௌன அங்கீகாரமளிக்க, கண்ணீரும் கதறலுமான நின்றது மக்கள் கூட்டம். எதன் பொருட்டு இந்த கண்ணீர். இதுதான் ஆன்மீகமா..? இதுதான் பக்தியா..? பக்தி என்பது தீவிரத்தன்மையின் உச்சத்தில் நிகழும் இயல்பா? பக்தியின்பால் இத்தனை உருக்கமென்றால் பக்தியற்றவையின் மீது அதேயளவு மூர்க்கமும் ஏற்படுமல்லவா? ஒன்றின் மீது கொள்ளும் பக்தி அந்த ஒன்றை எல்லாமுமாக ஆக்கி விடுமா? இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் இதே தீவிரத்தில் கரைந்து கிடக்கும் மனம் வாய்க்குமா? அதற்காக இமயமும் கங்கையும் பக்தர்கள் செல்லுமிடமெங்கும் தன்னை நீட்டித்துக் கொள்ளதான் முடியும்?

தெரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. நிலங்கள் மனதை இத்தனை துாரம் ஆக்கிரமித்து விடுமா என்ன? கண்களை மூடிக் கொண்டபோதும், நீர் நுங்கும்நுரையுமாக பெருகியது. அலை போல எழுந்தது. சுழல்களை உருவாக்கியது. அதன் தெளிந்தத் தடத்தில் மீன்கள் நீந்தி விளையாடின. காற்று மலைகளின் மூச்சைப் போல ஒரே சீராக வீசியது. மனமெங்கும் பிரவகிக்கும் கங்கை உடலுக்குள் நுழைந்துக் கொள்ளும் ஆனந்தத்திற்கு மூச்சைதான் தட்சணையாக்க வேண்டும். அது விடுதலைக்கான தேடலும் கூட. ஆனால் விடுதலை என்பது எதிலிருந்து? அப்படியாயின் சிறையிலிருந்ததென்பது முடிவாகிறது. வதை தான் வாழ்க்கையா? பனிப்பாறைகள் உருகி நீராக வழிந்து நதியாக ஓடுகிறது. மந்தாகினியாக நடை போடுகிறது.

ருத்ரபிரயாகையில் ரௌத்திர நடனமிடுகிறது. காதுகளை உடைக்கும் பேரோசைக் கொள்கிறது. ரிஷிகேஷில் தவழ்ந்து காசியில் சகல பாவங்களையும் தன் மீது ஏற்றி கரைந்து கல்கத்தாவில் அகன்று விரிந்து கப்பல்களை தன் மீது சுமந்து கடலோடு கலந்து… இதில் எது கங்கையின் முகம்? அமைதியா? பொறுமையா? ரௌத்ரமா? சலங்கையிட்டு ஆடும் நடன மங்கையா? யாரிவள்? அனைத்துமா? அல்லது தனியளா? விடுதலையை தேடிய பயணமா? அவளுக்கு எது விடுதலை? கடலோடு கலந்து தன் சுயத்தை தொலைத்து விடுவதா? இதில் புனிதம் என்பது வெறும் கற்பிதமா? கண்டவர் யாருண்டு? கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

நிலங்களின் விரிவுக்கு எல்லையென்று ஏதுமில்லை. மனதிற்கும்தான். அது இப்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹானஸ்பர்க் நகரத்திற்கு சென்றிருந்தது.

நகரில் வர்த்தகம் தன்னளவில் செழித்திருந்தாலும் இங்கிலாந்திலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் வந்து குவிந்த நிதியாளர்கள் பணப்புழக்கத்தை மேலும் பெருக வைத்துக் கொண்டிருந்தனர். வந்தேறிகள் என்றாலும் தங்களை தாங்களே முதன்மைப்படுத்திக்கொண்ட ஐரோப்பியர்களின் வீடுகளும் தெருக்களும் கூட அவர்களை போன்றே ஆசைகளாலும் அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன. அவை பெரும்பாலும் ஸ்காட்லாந்திலிருந்து வந்த பொறியாளர்களாலும் கைவினைக் கலைஞர்களாலும் உருவாக்கப்பட்டவை. இருபதாம் நுாற்றாண்டு தொடங்கி நான்கைந்து வருடங்கள் கடந்திருந்த அக்காலக்கட்டத்தில் உருவாகிக் கொண்டிருந்த ஜோஹானஸ்பர்க் நகரின் எண்ணற்ற கட்டடங்கள் அக்கலைஞர்களின் தொழிற்மேன்மையை காட்டின. மொசாம்பிக்கிலும் கார்ன்வாலிருந்தும் தங்கச்சுரங்களில் பணியாற்ற வந்திருந்த தொழிலாளர்கள் நகருக்குள் இப்படியான இடங்கள் இருப்பதை அறியாதவர்களாக இருளுக்குள் அமிழ்ந்து ஒளிரும் பொன்னை கண்டெடுத்துக் கொண்டிருந்தனர். சூரியன் தீண்டாவிட்டாலும் சுரங்கப்பணியாளர்கள் அந்தி மயங்கும் இந்நேரத்தில் உடல் களைப்பை உணர்ந்திருப்பர். கடை வைத்திருந்தாலும் கப்பல் வைத்திருந்தாலும் அங்கு வாழும் ஆசியர்களை ஐரோப்பியர்கள் கூலிகள் என்றே அடையாளம் சொல்லிக் கொண்டனர்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சத்தியாகிரக ஆசிரமம் கோச்ராப் பங்களாவிலிருந்து சபர்மதி நதியின் கரையோர சதுப்புக்கு இடம் மாறியிருந்தது. அகமதாபாத் ஜவுளி ஆலைகளுக்கும் சபர்மதி சிறைச்சாலைக்கும் அருகாமையில் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த ஆசிரமத்தில் தங்குவதற்கேற்ப சிறு குடிசைகள் எழுப்பப்பட்டிருந்தன. காந்தியின் அறை சிறியதாக இருந்தது. காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்குமென அதில் இரும்புக்கம்பி போடப்பட்ட சிறு சன்னல் இருந்தது. ஆண், பெண் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது பேர் தங்கியிருந்த அந்த ஆசிரமத்தில் சமையலுக்கென சிறு தகரக் கொட்டகை போடப்பட்டது. ஆசிரமவாசிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத்தரவும், விவசாயத்தில் ஈடுபடவுமாக பொருளாதார தன்னிறைவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. நதியின் உயரமான கரையோரத்தில் தினந்தோறும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் பிரார்த்தனை மையத்தை அடைந்திருந்தார்கள். அணியணியாய் ஆசிரமவாசிகள் வந்து அமரத் தொடங்கியதுமே அவ்விடம் புனித ஸ்தலம் போலாகி விட அதன் மீது மங்கிய மாலைப் பொழுதின் மெல்லொளி மெருகேற்றாத தங்கமென படரத் தொடங்கியது. அதனை பிரார்த்தனை மேடையில் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அகல் தன்னொளி கொண்டு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் நாயகனென காந்தி அமர்ந்திருந்தார். வழிப்பாட்டுப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இருள் ஒளியை வென்று கொண்டிருந்தது. அவ்வொளி அவரை கோட்டோவியமாய் காட்டியது. அவர் வலுவான மெல்லிய கால்களை ஒன்றின் மீது ஒன்றடுக்கி அமர்ந்திருந்தார். தான் உணர்ந்தவைகளை அவர் உரையென ஆற்றியபோது ஈரசந்தி வேளை முடிந்து பொழுது இரவுக்குள் நுழைந்தது.

இந்த தலைப்பை சற்றே மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியேயும் இருக்கலாம். ‘என் படைப்பில் என் நிலம்’ என்பதும் ‘என் நிலத்தில் என் படைப்பு’ என்பதும் ஒன்றுதானே? நான் வேறு… என் படைப்புகள் வேறா? நான் படைத்தவற்றுள் எது என்னுடையது? என் படைப்புகளில் வரும் எல்லாமே நான் தானா? அப்படியாயின், என்னுடைய நிலத்தில்தான் நான் படைப்புகளை விதைத்திருக்கின்றேனா? எது, எதுவாக இருப்பினும் நான் முன்பிருந்ததைப் போல இப்போது குழப்பிக் கொள்வதில்லை.

***
கலைச்செல்வி (பிறப்பு: 1972) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அவரது கதைகள் பரவலாகக் கவனிக்கப்பட்டன. அறம் சார்ந்த படைப்புகளை நோக்கமாகக் கொண்டு அதை வரலாற்று உணர்வோடும், கலை படைப்பாகவும் வளர்த்தெடுப்பதில் சமகாலத்தின் முக்கியமான படைப்பாளியாக தம்மை நிலை நிறுத்தியுள்ளார்
• வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி & கூடு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்
• சக்கை, புனிதம், அற்றைத்திங்கள், ஆலகாலம், ஹரிலால், தேய்புரி பழங்கயிறு ஆகிய நாவல்கள் எழுதியுள்ளார்.

தொடர்புக்கு – kalaiselvi312try@gmail.com இவரது நூல்களைப் பெற இங்கே சொடுக்கவும்

சுருள்

2

வைரவன் லெ.ரா

வீட்டிலுள்ள எல்லோருமே எதிர்பார்த்திருக்கும் இறுதியான நாள் இன்றாகவும் இருக்கலாம். சென்னைக்கும் நாகர்கோயிலுக்குமிடையே கடந்த ஒரு வருடத்தில் தான் எத்தனை ஓட்டங்கள். உடல் பருத்து, முகம் நிறைத்து தாடியும், அசுவாரசியமான உள்ளக்கிடங்கும் சேர வெறுமனே அமர்ந்திருந்தேன். வரவேற்பறையில் அம்மா தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்திருந்தாள். திரையில் ஓடும் காட்சிகளில் எளிதாக தன்னைத் தொலைக்கிறாள். பலர் இரண்டு நாட்களாக பேசுகிறார்கள், அழுகிறார்கள், அவ்வப்போது சிரிக்கிறார்கள். அம்மாவும் அதே காட்சிகளை எப்படி மீண்டும் மீண்டும் முகம் சுழிக்காமல் பார்க்கிறாள். “அம்மா, கடுந்தேயில போட்டு தாரியா. மண்டக்கனக்கு”. நான் சொல்லியது காதில் விழவில்லையோ! அசையாமல் இருந்தாள். மெதுவாக எழுந்து அவளைத் தொட்டேன், “என்ன மக்ளே நேரம் ஆயிட்டோ.. அப்பாக்கு இப்போதான ஜூஸ் கொடுத்தேன். கஞ்சி வைக்கணும். விஜிய எங்க” . அம்மை பதற்றத்தோடு பேசினாள். அப்பா அவரின் அறையோடு ஒதுங்கிய பிறகு உருவான பதற்றம். ஒன்றரை வருடங்களாக அழுதவள், இப்போது எல்லாவற்றையும் எளிதாக எடுக்க ஆரம்பித்துவிட்டாள். அவளின் கண்கள் ஆழத்தில் கிடந்தன. எவ்வளவு ஒல்லியாகி விட்டாள். ஒழுங்காய் சாப்பிடுகிறாளா? என்றைக்காவது நான் கேட்டிருக்கேனா? எங்கோ போய், எப்படியோ குழம்புகிறேன். “விஜி சாதனம் வாங்க போய் இருக்கா. நான்தான் கடுந்தேயில போட்டு கேட்டேன்,” என்றேன். “பாலு ஊத்தி டீ போட்டு தாரேன்.” அம்மை அடுக்களைக்குள் நுழையும் முன்னே சொன்னாள். “அம்மா, நீதான் பால் இல்லன்னு சொன்ன. அவ கடைக்கு போயிட்டு வரும் போது பாலும் வாங்கிட்டு வருவா.”

அப்பாவழி ஆச்சி நான் பிறந்து மொட்டை போடப் போகும்போது சொல்லியது வரை ஓர்மை இருக்கும் அம்மை எப்படி ஆகிவிட்டாள். கட்டிலில் சாய்ந்து படுத்தேன். என் மகனோ வலப்பக்கமிருந்த இருண்ட அறையின் வாசலில் நின்றபடி உள்ளே செல்ல நான் அனுமதிப்பேனா? என்பது போல பரிதாபமாகப் பார்த்தான். மேலே சுழலும் மின்விசிறியை நோக்கினேன், ஐந்தில் சுற்றினாலும் காற்றே வரவில்லை. தூசி படிந்து அலங்கோலமாக சுழல்கிறது. ‘மாசத்துல ஒரு ஞாயிறாச்சும் ஃபேன தொடைக்கனும். அப்பா இருக்கது வீட்டுல ஒரு நாளு. அன்னைக்காச்சும் வேல இல்லாத நாள் இருக்கா. ஒனக்க கப், போட்டோ வைக்க செல்ப் கேட்டேலா. அதையாச்சும் ஒழுங்கா தொடைக்கியால, லேய் காதுல விழுகா.தோளுக்க ஒசரம் வந்தா போதாது? ஆம்பளக் கணக்கா நிக்கணும். பாரு கூனு உழுந்த கெழடு மாறி நடக்கத. கைய நீட்டணுமா சொல்லுல,’ அப்பா சொல்லும்போதே கையில் கிடைத்த துணியால் செல்ஃப்பை துடைக்க ஆரம்பித்துவிடுவேன். “அப்பா, தாத்தா ரூமுக்கு போட்டா,”என் காதருகே வந்து மெதுவாகக் கேட்டான். “அங்க இருக்க எதையும் தொடக் கூடாது. தாத்தா ஒறங்கிட்டு இருந்தா அவர எழுப்பக் கூடாது. இரி நானும் வாறேன்,”. நானும் அவனோடு அப்பாவின் அறைக்குச் சென்றேன்.

‘சைக்கிளு ஓட்டும்போ கீழ விழத்தான் செய்வ, சின்ன பொலயாடிமவன கேளு, கைல காலுல அடிபடத்தான் செய்யும். அதுக்கா இப்புடி அழுவா. ஆம்பளப் பய அழுவியால. அழுதைன்னா காலுக்கு கீழ இழுத்துருவேன்’

‘பத்தாம்ப்பு கணக்கு பாடத்துல நூத்துக்கு அறுவது மார்க் எடுத்தா இப்போ என்னாடே. மயிரபுடுங்கி பாஸ் ஆயிட்டலா. எனக்க பிரண்ட் ஒருத்தன் சொன்னான், டிவிடி பள்ளியோடத்துல இடிஎ ன்னு ஒரு படித்தம் இருக்காம். ஈஸியா மார்க் எடுக்கலாம். இதுக்குன்னு அம்மைக்க அண்டைல கெடந்து அழுவியால. எந்தில கண்ணத் தொட. கையக் காட்டு, ஒரு படம் பாத்துட்டு, வரப்ப புரோட்டா தின்னுட்டு வா’

‘பிரசவ வலி எடுக்க பொம்பளயே உள்ள தைரியமா போய் இருக்கா. நீ எதுக்கு மயிரேபோச்சுன்னு அழுக. கெதியா இருல முட்டாப் பயல’.

அப்பாவின் முன்னால் நான் அழமுடியாது. அவருக்கு அழுவது பிடிக்காது. அப்பா கோபமாகவோ அல்லது வேறு வார்த்தைகளின் மூலமாகவோ அழுவதை தவிர்க்கச் சொல்வார். ஆச்சியும் தாத்தாவும் இறந்தபோதும் அப்பா அழவில்லை. என் நினைவுமுடிச்சுகளில் இருந்து அவர் அழுத ஏதோவொரு தருணத்தை ஓர்மையில் கொண்டுவர முயற்சி செய்தேன். என் பால்ய பதின்பருவங்களில் அப்படியொரு தருணம் நிகழவேயில்லை. அப்பா பெயிண்டராக வேலைபார்த்து பின் கான்டிரக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தவர். ஞாயிறு மட்டுமே வீட்டில் இருப்பார், அன்றைக்கும் ஏதாவதொரு வேலையைச் செய்வார். செய்தித்தாள் தினமும் வாங்கும் பழக்கமுள்ளவர், காலையில் வெளிநடையில் இருந்து பொறுமையாகப் படிப்பார். வாரம் ஒருமுறை மொத்தமாகக் கட்டி வைப்பார். வீட்டிற்கு வெளியே நிற்கும் சங்குபுஷ்ப செடியின் கொப்புகளை வெட்டிவிடுவார். பழைய நாற்காலி, மின்விசிறிக்கு வர்ணம் பூசுவார். ஞாயிறு மதியம் கண்டிப்பாக வெளியே சென்று நான்கு காலில் திரும்பி வருவார். அப்போதெல்லாம் கூட அப்பா சாதாரணமாகத்தான் இருப்பார். ஆனால் அந்தவொரு சமயம் மட்டும் என்னை விரட்டிவிட்டு உதடுகளின் அடியே போயிலையை சொருகிவைப்பார். அவர் பேசும்போதும் வாய் நாறும், அந்நேரங்களில் அவரும் என்னை அருகில் சேர்த்துக் கொள்ளமாட்டார். நானும் செல்லமாட்டேன்.

“மக்ளே, அப்பாட்ட ஃபோன கொடுக்கேன் பேசு”

“என்..னா எப்..புடி இருக்..கீரு”

“ஏம்ப்பா, விட்டு விட்டு கேக்கு. என்னாச்சு”

“வாயிபு..ண்ணுடே. வெண்ண தடவியிருக்கேன்.. சரியா.. யிடும்…”

“அப்பா. லைன்ல இருக்கீங்கலா”

“மக்கா. அப்பாக்கு பேசமுடியல. ஆசுவத்திரி வாங்கன்னாலும் வரமாட்டுக்காரு. வாயி புண்ணு, இப்போவும் மத்தத வாயில உருட்டி வச்சுட்டு தான் இருக்காரு. நீ ரெண்டு ஏச்சு கொடு..”

“அவன்ட்ட என்ன பேசன்னு தெரியாது. சரி சரி ஆசுவத்திரி போறேன்டே”

இரண்டு மாத காலம் மாறி மாறி மருத்துவமனைகளை மாற்றினாலும் வாய்ப்புண் குணமாகவில்லை. பிறகு நான்தான் வில்லியத்திடம் போகச் சொன்னேன்.

“இது வேற மாறி இருக்கு. பயப்படாண்டாம். ஒன்னியும் இருக்காது. சாம்பிள் எடுத்து திருவந்திரம் அனுப்பியிருக்கேன், “வில்லியம் அன்றிரவே அழைத்துச் சொன்னான். நான் உடனே அம்மாவை அழைத்தேன்.

“அம்மா, எத்தன நாளா இருக்கு இது. முன்னாடியே சொல்லலாம்லா”

“அவரு எங்க உட்டாரு.. நீங்க தீவாளிக்க வந்தப்போவே சொல்லச் சொன்னேன். இப்போ கழுத்துக்க கிட்ட கட்டி மாறி இருக்கு மக்ளே. எதையும் முழுங்க முடியல. நீராகாரம் தான் கொடுக்கேன்”

“அப்பாக்கு பேச முடியுமா”

“இப்போதான் மாத்திர போட்டுட்டு படுத்து இருக்காரு. எழுப்பவா”

“வேண்டாம்மா ஒறங்கட்டும். நாளைக்கு கூப்டுகேன்,”எனக்கு தவறாகப் பட்டது. கைப்பேசியில் வாய் புற்றுநோய் பற்றி அதிகம் ஆராய ஆரம்பித்தேன். அப்பாவின் போயிலை பழக்கம் என்னுடைய சந்தேகத்தை வலுப்படுத்தியது. என் மனைவி வரவும், எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன்.

“ஒன்னும் பயப்படாதீங்க. அதுலாம் மாமாக்கு ஒன்னும் ஆகாது. சூட்டுக்கு வருமாயிருக்கும்.” என் அருகே வந்தமர்ந்தாள்.

“பய தூங்கிட்டானா?” ஆமாம் எனத் தலையை அசைத்தாள். விளக்கை அணைத்தேன்.

காலை நேரமாகவே எந்திரித்தேன். அவள் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். எனக்கு மதியம்தான் வேலைக்குச் செல்லவேண்டும். போகும் போது சைல்ட் கேரில் மகனை விட்டுச் செல்வேன். மாலை, அவள் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வாள். காலை, மதியம் இரண்டு நேர உணவும் அடுக்களையில் இருந்தது. நான் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்தேன். வேலைக்குச் செல்லும் முன், என்னைத் திட்டாமல் சென்ற நாளேயில்லை. செல்ஃப்பில் இருந்த பிள்ளையார் படத்தின் முன்னே விளக்கேற்றியபடியே, “ஒன்னும் குழப்பிக்காதீங்க.கேன்சர்லாம் இருக்காது. அவன் தோச கேட்டா மாவு பிரிட்ஜ்ல இருக்கு. இட்லி ஹாட்பாக்ஸ்ல இருக்கு,”சொல்லிக் கொண்டே அருகில் வந்து, என் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றாள்.

அவள் செல்லவும் மகன் விழித்து அழும் ஓசை கேட்டது. ஓடி அறைக்குச் சென்று அவனைத் தூக்கி வெளியே வந்தேன். சாதாரண நாளுக்குரிய எல்லாவற்றையும் முடித்தேன். அப்பாவின் முகமே என்னை ஆக்கிரமித்திருந்தது. காலை நான் விழிக்கும் முன்னே எழுந்து குளித்து முடித்து, நெற்றி நிறைத்து திருநீறும் நடுப்பொட்டில் மஞ்சணையும் பூசி வெளிநடையில் அமர்ந்திருப்பார். என்னைப் பார்த்து முறைக்கவும், குடுகுடுவென பல் தேய்க்க ஓடுவேன். சேர்ந்து காலையில் உண்ண வேண்டும். இட்லியோ, ஆப்பமோ, தோசையோ என் தட்டில் மிச்சம் இருந்தால், தலையில் குட்டு விழும். வலித்தாலும் அழக்கூடாது. என் மடியில் இருந்தவன் மிச்சம் வைத்த இட்லியை எடுத்து குப்பையில் போட்டேன். மகனுக்கு தொலைக் காட்சிப் பெட்டியில் சூச்சூ டிவியை ஓடவிட்டு, கைப்பேசியில் வில்லியத்தின் எண்ணை விரல்களால் தொட்டபடி இருந்தேன். அவன் என் மடியில் வந்தமர்ந்தான்.

“தாத்தாக்கி காச்சலா. அதான் நேத்துக்கு நீயும் அம்மாவும் பேச இருந்தீய”

“ஆமா மக்கா. தாத்தாக்கு காச்சலு. ஒன்னும் ஆகாதுலா, நீ சொல்லு”

“காச்சல் சரி ஆடும். ஸ்டாபரி மருந்த குடிக்க சொல்லு”

“சரி மக்ளே”,அவனை இறுக அணைத்தேன்.

வில்லியம் என்னை அழைத்ததும், அப்பாவிற்கு செய்ய வேண்டிய மருத்துவம் பற்றி நேரடியாக உரையாட ஆரம்பித்துவிட்டான். அவன் சொல்லிமுடிக்கும் வரையிலும் அமைதியாக இருந்தேன், உண்மையில் என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. எப்படி அந்த உரையாடல் முடிந்தது எனவும் நினைவில்லை. விஜியை உடனே அழைத்தேன். முகம் வியர்த்தது, பெரும்மூச்சை இழுத்தேன். விக்கலும் கூடவே வந்தது. இடுப்பை சின்ன கைகள் அணைத்து இழுத்தது, முட்டிப் போட்டு அவன் அருகே அமர்ந்தேன். “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல,”சொல்லிக் கொண்டே கன்னத்தில் முத்தமிட்டான். ‘இல்ல இருக்காது. நேரா ஊருக்கு போய் நானே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். பொய்யா இருக்கும்,’ புலம்பினேன்.

மூன்று மாதம் ஒருவரின் உடலையும் மனதையும் இப்படியொரு மாற்றத்திற்கு கொண்டு போய் நிறுத்துமா? அப்பா பாதியாக இருந்தார். உதடுகள் பழுத்தும், கழுத்து வீங்கியும் இருந்தது. வீட்டிற்கு வரும்வரையிலும் இருவரிடமும் எதுவும் சொல்லாமல் வந்திருந்தேன். ஊருக்கு கிளம்பும் வரையிலும் இதுவெல்லாம் பொய் என்று நம்பிக் கொண்டிருந்த நான், நேரில் அப்பாவைப் பார்த்ததும், சரி அடுத்து என்ன? என்பது போல யோசிக்க ஆரம்பித்தேன். வில்லியம் அவனுக்குத் தெரிந்தவர்களிடம் பேசி அடையார் இன்ஸ்டிடியூட்டுக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்தான். வீட்டில் ஒருநாள் தான் இருந்தேன். இருவருக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மாலையே சென்னை கிளம்ப முடிவுசெய்தேன். வழக்கமாக என்னைக் கண்டால் கொஞ்சமாவது பேசும் அப்பா, அன்றைக்கு வீட்டில் இருந்தவரை என் கண்களில் படுவதைத் தவிர்த்தார். தலையை தாழ்த்தியே நடந்தார். நான் ஏதாவது பேச முயற்சித்தால் இரண்டு வார்த்தைகளில் அதுவும் உக்கிரமூர்த்தியாக முடித்துவிடுவார். அவரின் அறையிலேயே இருந்தார். எப்போதும் ஒழுங்கோடும் சுத்தமாகவும் இருக்கும் அறை, வலை பிடித்தும் தூசிகள் நிறைந்தும் காணப்பட்டது. “அம்மா, அப்பா ரூம ஏன் இப்புடி போட்டு வச்சுருக்க,”கேட்டேன்.

“என்ன உள்ள விட்டாதானே. என்ன ரகசியம் இருக்கோ,” அடுக்களையில் இருந்து குரல் கேட்டது. அப்பாவின் அறையில் எந்தச் சத்தமும் இல்லை. அவர் உறங்கியிருப்பார் என்றெண்ணி மெதுவாக அறைக்குள் நுழைந்தேன். அப்பா கட்டிலில் வாயை இறுக்க பொத்தி குனிந்து இருந்தார். அவரின் உடல் துடித்தது. கால்களை தரையில் அழுந்தப் பதித்திருந்தார். அவரின் தலை உதறல் எடுத்தது. உள்ளே என் இருப்பை அறிந்தவர், “வெளிய போல தாயோளி,”என்றார். சிறுவயதில் என்னைத் திட்டிய வார்த்தைகள் தான், ஆனாலும் முதல்முறையாக வாய் திறந்தேன். “வாயி மயிர வச்சு பேசாம இருந்திருக்கணும், நல்ல உருட்டி உருட்டி வச்சீங்களா. இன்னைக்கு யார் பாடப் போறா? நாங்கதான்.”

அமர்ந்திருந்த அப்பாவின் உடல் நடுங்கியதை உணர்ந்தேன். எதிரே நிற்கும் என்னை பாதம் முதல் தலைவரையிலும் மெதுவாக நோட்டமிட்டபடியே வலதுகையால் புடைத்து வெளித்தெரிந்த நெஞ்செலும்பை வருடினார். கண்களில் ஆத்திரம் பொங்க என்னையே வெறித்தவர், என் கண்களை நோக்கவும், காரி உமிழ்ந்தார்.

“இப்படி வீட்டுக்குள்ள துப்புனா, மத்தவங்களுக்கும் சோக்கேடுதான் வரும்,” எனக்கு அவரைப் பார்த்தபோது உருவான பரிதாபம் மெல்லமெல்ல கோபத்தை நோக்கி கூட்டிச் சென்றது.

சட்டென்று எழுந்தவர் என்னை அடிக்க வலதுகையை நீட்டவும், இடதுகையால் அதைத் தடுத்தேன். கண்கள் சிவக்க, “வெளிய போல புண்டாமவன,” நெஞ்சைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அறைக் கதவை சடாரென்று சாத்தினார். ஆத்திரம் அடங்காமல் அடுக்களைக்குள் சென்றால், அம்மா சேலையால் கண்களை துடைக்கிறாள். எத்தனை நாளாக இது தொடர்கிறது.

மாலை அவரை சென்னை அழைத்துச் செல்ல பெரும்பாடு ஆனது.

“இந்த சின்ன கூதிமவன் வீட்டுல போய் இருந்தா பட்டிய விட மோசம். நான் வரல்ல. இங்கய சாவேன். கொள்ளி போடக் கூட இவன் வேண்டாம்.”

“ஒமக்கு இருக்க எழவு சோக்கேடுக்கு இங்கேய இருந்தா சாவத்தான் செய்யணும். சென்னைல போய் நா எதுவும் பேசமாட்டேன். கெளம்பும்.”

“எனக்க வீட்டுல நின்னுட்டு. எம்முன்னால வாயிபுண்டைய தொறக்கயோ,”அவரின் வாயில் பழுப்பும் ரத்தமும் வடிய ஆரம்பிக்கவும், எனக்கு பதற்றமானது.

“சரிப்பா. அம்மா தொடைக்க துணிய எடும்மா. இப்போ என்ன ஒடனே சாவணும்மா” அம்மாவை பார்த்து கத்தினேன். உள்ளறையிலிருந்து துவர்த்தை எடுத்து வந்தவள், அப்பாவின் அருகில் செல்ல தயங்கி நின்றாள்.

“வெளிய போல புண்டாமவன. சாவு எனக்க குன்ன,”அடிப்பட்ட மிருகத்தின் கண்கள் தோன்றி மறைந்தன.

இருவரும் சென்னையில் பேசிக் கொள்ளவேண்டாம் என முடிவெடுத்தவுடன்தான் கிளம்பி வந்தார். விஜி நான் நினைத்ததிற்கு எதிர்மாறாக நடந்தாள். வீட்டிற்கு இருவரும் வந்த நாள் முதல் முகம் கோணாமல் நடந்தாள். ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தாள். வீட்டில் அதிகமாய் கோபப்படுபவள், எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கிறாளோ! நடிக்கிறாள் எனும் சந்தேகமே வலுத்தது. ஒ1ரு நாள் என் கை தவறி ரிமோட் விழுந்து உடையவும், “ஒழுங்கா ஒர்க் ஆகல, நானே புதுசு வாங்கணும்ன்னு நெனச்சேன். நல்லவேள நீயே ஒடச்சுட்ட,” புன்முறுவலோடு சொன்னாள். வீடும் எல்லாவற்றுக்கும் பழகியது. அப்பா படுக்கையை விட்டு எப்போதாவது எழுவார், அறைக்குள்ளேயே நடப்பார். நாங்கள் இருவரும் முடிந்தவரை ஒருவருக்கொருவர் முகம் சந்திக்காமல் தவிர்த்தோம். அப்பாவின் அறையைத் தட்டாமல் யாரும் உள்ளே செல்லக் கூடாது என எல்லோருக்கும் சொல்லியிருந்தேன். முதல் அறுவைசிகிச்சையில் கீழ்தாடையில் உதட்டிற்கும் ஈறுகளுக்கும் இடையே கொஞ்சம் சதைகளை எடுத்தார்கள். அதே நேரம் புற்று பரவாமல் இருக்க கீமோதெரபியையும் முயற்சித்தோம். அப்பாவின் உடல் திடீரென்று நீர் பிடிக்கும், பின் மெலிவார். நீராகாரம் மட்டுமே உண்ணமுடியும். என் மகனையும் அம்மாவே பார்த்துக் கொண்டாள். அவனுடைய தமிழ் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக வருகிறதாம், விஜி சொன்னாள்.

அடையாறு இன்ஸ்டிடியூட்டில் அப்பாவோடு எத்தனை இரவுகள் தனியே இருந்திருக்கிறேன். விஜியும் பாவம் தான், அம்மாவையும் அழைத்துக்கொண்டு தேவையானவற்றை தினமும் காலை எடுத்து வருவாள். அம்மாவோ இரவில் மருத்துவமனையில் தங்க மறுத்தாள். இரவுகளில் பாடும் ராப்பறவைகளின் அழிச்சாட்டியம் எனக்கு உறக்கம் இல்லாத நீண்ட இரவுகளையே அளித்தன. அப்பாவின் முன்னே போய் நிற்பேன். உறங்கிக் கொண்டிருப்பார். உடல் மெலிந்து, தலைமுடி உதிர்ந்து, கண்கள் வெளுத்து, காணும் போதெல்லாம் என் தொண்டை கனத்து, கண்ணீர் முட்டும். கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் மருத்துவமனையில் கொட்டினாலும், ஏதாவது மாறப் போகிறதா?இளவயதில் என் உடம்பு அவருடையதில் பாதியாவது இருந்ததா! அப்பாவின் முகமா இது? சிறுபிள்ளை கிறுக்கியது போல இரத்தச் சிவப்பான கோடுகள். வாய் சிறுத்து உதடுகள் ஒட்டும் முனைகளில் எப்போதும் ஒழுகும் பழுப்பு. முன்னே கிடப்பவரை பார்த்து கேட்கவேண்டும் போலத் தோன்றியது. எல்லாம் எங்கே போயிற்று? இது நீங்களா? எதுவும் முடியாதா? ‘நீங்களே வருத்திக்கிட்டு வச்ச எழவுதான’. அரை லட்சம் தாண்டியாச்சு, இன்னும் இரண்டுக்கு மேலோ, அதற்கும் மேலாகவோ ஆகலாம். தலைசுத்த ஆரம்பிக்கும், சட்டென்று அவரே என்னை நிறுத்தி, ‘இப்படித்தான் நடக்கணும்ன்னா அத மாத்த முடியாதுல தாயோளி,’ என்பார்.

மருத்துவம், சிலசமயம் மந்திர மாயாஜாலங்கள் நிறைந்தவை போலத் தோன்றும். சென்னை வந்த ஆறு மாதம் கழித்து அப்பா கொஞ்சம் பேச ஆரம்பித்தார். இட்லி கேட்டார், மெதுவாக சவைத்து உண்ண ஆரம்பித்தார். விஜி வழக்கம் போல கோபப்பட ஆரம்பித்தாள். அம்மாவிற்கும் அவளுக்கும் அடுக்களையில் முட்டல் வரும். ஆறு மாதமாக அடையாருக்கும் ஆதம்பாக்கத்திற்கும் வாரம் ஒருமுறை அலைந்து, அலுவலகத்தைச் சமாளித்து, வார இறுதியிலும் வீட்டில் யாரும் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசிக் கொள்ளாமல், அப்பா எனக்காக சேர்த்து வைத்திருந்த பணம் போக, மாதம் சம்பாதிப்பதில் பாதி மருந்துக்கும் போக்குவரத்து செலவுக்கும் போக, ஒவ்வொரு நாளையும் முட்டி முட்டி தள்ளிக்கொண்டிருந்தேன் எதிலும் ஈடுபாடு இல்லாதவனாய், இரவுகளில் தனியே படுத்து, ஃபோர்னோகிராபி படங்களைப் பார்த்தால் கூட எடுக்காதவனாய் இருந்திருக்கிறேன். மூச்சை இழுத்து யாரும் எதுவும் என்னை அழுத்தவில்லை என்பது போல மெதுவாக விட ஆரம்பித்திருந்தேன். நடுநிசியில் எல்லோரும் உறங்கியவுடன் அப்பாவின் அறையை சிலசமயம் எட்டிப் பார்ப்பேன். ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருப்பார். முகத்தை விரல்களால் தொட்டுப் பார்ப்பார். முதல் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தார்.

“கண்ணாடி முன்ன பொம்பளக் கூட இத்தற மணிக்கூறு நிக்க மாட்டா. ஒமக்கு எதுக்கு இவ்வளவு அலங்காரம்.”

“யாமுட்டி. நாப்பது வயசு மாரியா இருக்கேன். மீச, தாடிய சரியா ஒதுக்கி விடணும். சுண்டுக்கு கீழ நீண்டு மீச வளர உடக் கூடாது. ஒனக்கு கடுப்பு, நீ அரக்கெழவி ஆயிட்டளா”
நானோ நாற்காலியில் முகம் நிறைத்து பவுடரும், பணித்து வாரிய தலையோடும் அமர்ந்திருப்பேன்.

இரண்டு மாதம் கழித்து மீண்டும் வாயில் புண் வர ஆரம்பித்தது. அறுவைச் சிகிச்சை செய்த இடம் தவிர மற்ற இடங்களில் புற்று வளர ஆரம்பித்தது. விடுமுறை நாட்கள் போல இரண்டு மாதம் கடக்க, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தோம். இம்முறை மருத்துவர் சொல்லியவை நம்பிக்கையற்ற வார்த்தைகள். வில்லியமையும் சென்னைக்கு அழைத்தேன். வலி குறைய வேண்டுமென்றால் வாயின் மற்ற இடங்களுக்கும், தொண்டைக்கும் பரவாமல் இருக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அப்பா ஒரு சராசரி மனிதனுக்குரிய எதையும் அனுபவிக்க இயலாதவராகி விடுவார் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து அறிந்தேன். அம்மாவின் கண்கள் அப்பாவின் முன் எப்போதும் நிறைந்தே இருக்கும். அறுவைசிகிச்சை முடிந்ததும் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்தை தொடர வேண்டும். சென்னை எதற்கு? ஒழுகினசேரி போகச் சொல்லி அம்மா சண்டை போட ஆரம்பித்தாள். அவள் நினைத்ததே நடந்தது.

“தெய்வத்த நம்பனும்ன்னு சொல்லது இப்போ வெறும் வார்த்ததான், ஆசுவாசப்பட்டுக்கலாம் . எனக்க பிரண்ட்டு நீ, இனி காசு எவ்வளவு செலவு பண்ணாலும் மாமா பழைய ஆளாட்டு வரமுடியாது கேட்டியா. இருக்க வர அவர சந்தோசமா வைக்கப் பாரு. சாவ முன்னாடியே செத்த வீடு கணக்கா இருக்காண்டாம். ஒனக்க சக்திக்கு நீயும் அடையாரு இன்ஸ்டிடியூட் எல்லாம் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்ட. ஒங்க அப்பாக்க சேப்டர் முடிய போகு. எனக்க எக்ஸ்பீரியன்ஸ்ல சொன்னா இன்னியும் ரெண்டு மூணுநாளு. மெட்ராஸ் போகவேண்டாம்ன்னு சொல்றேன். ஐடி தான ஒர்க் பிரம் ஹோம் கேட்டுப்பாரு,”வில்லியம் சொல்லும் போதே என் கால்கள் நடுங்கின. நாற்காலியில் இருந்து எழுந்தேன். நெஞ்சு பலமாக விம்மியது. கண்கள் நிறையவும் உடனே கைகளால் துடைத்தேன்.

வில்லியம் என் கைகளைத் தடவிக் கொடுத்தான், “முத்தி போயிதான் கவனிச்சு இருக்கோம். தொண்ட வர பரவி பாதி எடுத்தாச்சு. குழாய் மாட்டிதான் ஆகாரம் போறதுலாம் துக்கம்டே. ஸ்டிச்சிங் போட்ட இடத்துல சீழ் கட்டிருக்கு. மாமா அனுபவிக்க வலி ஒனக்குத் தெரியாது. ஆனா ஒன்னுடே.. இன்னும் அந்த மனுஷன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரல. என்ன வீம்புள்ள மனுஷன்டே. கர்த்தாவே இந்த சங்கடம் தீர ஒரு வழியச் சொல்லும்,” அப்பாவின் அறையில் நாங்கள் இருந்தோம். அரைத் தூக்கத்தில் இருந்தார். அப்பாவின் ஏறியிறங்கும் நெஞ்சும், விசில் போல ஒலிக்கும் மூக்கில் இருந்து குவியும் காற்றும் என்னுள் மெல்ல பயத்தை விதைத்தது. அப்பாவின் முகஜாடையில் நானும் கண்ணாடியில் தெரிய ஆரம்பித்தேன்.

நாங்கள் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களும் விஜியும் அம்மாவும் பல கதைகளை பேசினார்கள். விஜி கடைக்குப் போய் வருவாள், பக்கத்து வீடுகளுக்கு கருக்கல் நேரம் சென்று இரவு வரையிலும் கதையடிப்பாள். அம்மையோ என் மகனைத் தூக்கிக் கொண்டு வெளிநடையில் போய் அமருவாள். நான் மட்டும்தான் வீட்டினுள் அப்பாவைப் பற்றிய சிந்தனைகளோடு இருக்கிறேன் என நினைத்தேன். விஜி இரவு வீட்டிற்கு வந்ததும், “ஏங்க வடசேரில ஆர்.வி ன்னு ஒரு கட இருக்காம். புரோட்டாவும் மட்டனும் நல்லா இருக்குமாம். வாங்கிட்டு வாரீங்களா,” கேட்கவும், அம்மை என்ன நினைப்பாளோ என்பது போல அவளைப் பார்த்தேன். “எனக்கு புரோட்டா வேண்டாம் மக்ளே. தோச இல்ல சப்பாத்தி வாங்கிட்டு வா. அப்பாக்கு நைட் பால்கஞ்சி கொடுக்கலாம்,” என்றாள்.

எப்போதும் பத்து மணிக்கு மேல் எங்கள் அறைக்கதவைத் தட்டாத அம்மை அவசரமாக எழுப்பினாள், “ஒங்க அப்பாக்க மேலெல்லாம் தணுத்திருக்கு. உசுரு நாடில ஏறி நிக்கி. வில்லியத்துக்க நம்பர் எனக்ககிட்ட இல்ல, அவனக் கூப்டணுமா. மக்ளே நீ வேணும்னா கூப்புட்டு வரச் சொல்லு. எதுக்கும் அவன் ஒருவாட்டி பாக்கட்டுமே,”அம்மை ஆர்வமாக சொல்லவும் குழம்பிப் போனேன். “அவன் வந்தா மட்டும். முடிஞ்சா சொல்லிக்கலாம்,”கூறிவிட்டு திரும்பி விஜியைப் பார்த்தேன். அவளுடைய உதடுகள் மெல்லியதாக விரிந்து மூடின.

அறைக்குள் செல்லும்போது ஆடைகளின் புழுங்கல்வாடை வந்தது. அப்பாவின் உடல் ஜில்லென்று இருந்தது. அம்மை மடியில் பேரனை அமர்த்தியபடி கையில் பால்கிண்ணத்தோடு வந்தாள். எனக்கு காரணம் புரியவும், “நாமளும் பண்ண வேண்டியத பண்ணி பாப்போம். மேலாங்கோட்டுகாரி ஒருமுடிவச் சொல்லு,” அரைகுறை உறக்கத்தில் இருந்தவன் கையில் கரண்டியைக் கொடுத்து அவளே தொண்டையில் மாட்டியிருந்த குழாயில் இரண்டுதுளி பாலை ஊற்றினாள். பிறகு, புலம்பிக்கொண்டே வாயில் இருந்த தழும்பில் இரண்டுதுளியை ஊற்றினாள். விஜியும் அதைத் தொடர்ந்தாள். அம்மை என்னைப்பார்த்து கண்ணை அசைக்கவும் நானும் பால் ஊற்றினேன். ஒருமணிநேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அங்கேயே இருந்தோம். “உறக்கம் வருகு, நாளைக்கு காலைல பாப்போம். மனுஷன் விடக்கூடிய ஆளா?” சொல்லியபடியே மடியில் உறங்கிக்கொண்டிருந்த பேரனை தோளில் மாற்றி உறக்காட்டியபடி வெளியே சென்றாள். விஜியும் நானும் கூடவே சென்றோம்.

காலை எழுந்ததுமே வில்லியம் சொன்ன மூன்றாம் நாள் இதுதான் என்பது ஞாபகம் வந்தது. அப்பாவின் அறைக்கு எழுந்ததுமே சென்றேன், நாடி மட்டும் ஏறி இறங்கியது. பக்கத்தில் அப்பாக்கு கொடுத்ததற்கு அடையாளமாக ஜூஸ் டம்ளர்,பாதி மிச்சமிருந்தது. விஜி வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்க வெளியே செல்லவும், அம்மை அவளை அழைத்து பாலும் இல்லையென அதையும் வாங்கி வரச் சொன்னாள். நான் கட்டிலில் அமர்ந்திருந்தேன். என் மகனோ அப்பாவின் அறைக்குக் கூட்டிச் செல்ல நச்சரிக்க நானும் கூடவே சென்றேன். அப்பாவின் கண்கள் பாதி திறந்திருந்தன. பேரனைப் பார்க்கவும் கண்கள் முழுவதும் விரிந்தன. விரல்கள் அசைந்தன. நாடி வேகமாக ஏறி இறங்கியது. காவிச் சாரம் மட்டும் கட்டி சட்டையில்லாமல் கிடந்தார். வயிறு ஒட்டி, நெஞ்செலும்புகள் எல்லாமே அச்சுப் போலத் தெரிந்தன. ஒடுங்கிய முகத்தில் கண்ணும் மூக்கும் சிறுத்து, தையல் தழும்புகளால் சுருங்கிய வாயும், தொடர்ந்து அவரைப் பார்க்கபார்க்க என்னை அறியாமல் கண்கள் கலங்கவும், அப்பாவின் உடல் உதற ஆரம்பித்தது. கை கால்கள் இழுத்து பிடித்தன.

நான் ‘அம்மா’ என்று கத்தினேன். அம்மை உள்ளே ஓடிவந்தாள். அப்பாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவர் படுத்திருந்த கட்டிலில் நீர் நிறைந்து அருவி போலக் கொட்ட ஆரம்பித்து, அறையை நிறைக்க ஆரம்பித்தது. நான் மகனை தோளில் தூக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். அவரின் உடலில் இருந்து ஏதோவொன்று பிய்த்துக் கொண்டு வெளியேற முயற்சிப்பது போலவும், அதன் நுனிக்கயிற்றை விரலிடுக்கில் பிடித்து இழுப்பவர் போலவும் அப்பா தோன்ற, “விட்டு தொலையும்வே. செத்து போவும். தாயோளி மவன். நீயும் தான் என்ன பாடுபடுத்துக,” கத்தியபடியே அம்மாவைப் பார்த்தேன். பூர்ணமான புன்னகை நிரம்பிய முகம். அவள் பின்னாலே விஜியும் அதே சாயலில் நின்றாள். கையில் இருந்தவன் அழ ஆரம்பிக்க, கண்களை உருட்டி, நாக்கை பல்லிடுக்கில் கடித்தபடி அவனை வெறிக்கவும் அமைதியானான். அந்த இருண்ட அறையே வெண்மை பரவ சிரித்துக் கொண்டிருந்தது. அவரின் உடல் பந்தைப் போலத் துள்ளி மீண்டும் கட்டிலில் விழுந்தது. அவரின் கண்கள் திறந்தபடி கிடக்க, முகம் அசைந்தது. மகனைக் கீழே இறக்கிவிட்டு, முகத்திற்கருகே சென்றேன், கண்கள் நிறைய குபீரென்று சிரிப்பு வந்தது.

“வெளிய போல புண்டாமவன. சாவு எனக்க குன்ன.”

***

வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில்.
பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் ’பட்டர் பீ & பிற கதைகள்’ராம மந்திரம்’ இவரது நூல்கள். இவரது நூல்களை வாங்க இங்கே சொடுக்கவும்

மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

பின்மதிய நேரச் சிற்பங்களின் ஒளி

0

வேதநாயக்

பகுதி – 1

க்‌ஷிணஷேத்ரா முகப்பினுள் நுழைகையில் சித்திரை மாதத்தின் முன்காலத்தின் வெம்மையே தெரியவில்லை. அங்கு அவ்வளவு குளிர்ச்சி. கேலரியின் நுழைவாயிலில் நின்றிருந்த சிற்பம் ஒன்று இன்கா பழங்குடியினரின் சிலையென்றே தோற்றம் தந்தது எனக்கு முதலில். அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஓவியங்களும் சிற்பங்களும் குறைந்தபட்சம் முக்கால் மணிநேரத்தை எடுத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சிற்பமும் ஓவியமும் தனக்கான நேரத்தை  சுவீகரித்துக்கொண்டது. இரண்டு தலைகள் கொண்ட மீனிலிருந்து புத்தர் சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் பிரமிப்பைத் தந்தன.

ஓவியனது பார்வையிலிருந்து ஒரு ஓவியத்தைப் புரிந்து கொள்ளுவதற்கும் பார்வையாளனிலிருந்து ஓவியத்தைப் பார்ப்பதற்குமான இடைவெளி என்பது நின்று பார்ப்பதற்கான தூரமும் உள்ளுக்குள் அதுகுறித்த ஏற்கனவே நம் மனதில் கொண்டிருக்கும் பல்வேறு வகையான எண்ணங்கள் குறித்த பரிசீலனைகளும் முன்முடிவுகளையும் சார்ந்தும் அதை முற்றிலும் விடுத்தும் கொள்கின்ற பரஸ்பர உறவு நெருக்கத்தினைக் கைக்கொள்கிறது.

அதேபோல் தான் இவரது சிற்பங்களும் கூட எனக்குப் பார்க்கக் கிடைத்தது. ஓவியரும் சிற்பியுமான பி.எஸ்.நந்தன் (புல்லரம்பாக்கம் சுந்தரராஜன் நந்தன்) (பிறப்பு-1940) சோழமண்டலத்தைச் சேர்ந்த கலைஞர். மெட்ராஸ் ஆர்ட் இயக்கத்தின் பாரம்பரியத்தில் அவருடைய படைப்புகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஒரு ஓவியராகப் பயிற்சி பெற்ற அவர், 1970களில் இருந்து சிற்பக்கலையில் பணிபுரியத் தொடங்கினார். ஊடகத்தின் அதிகபட்ச மேன்மையான தொட்டுணரக்கூடிய சாத்தியக்கூறுகளாக வடிவம், தொகுதி, டோனல் முரண்பாடுகளுடன் கையாளும் திறன் ஆகியவை சிற்ப முஆரைமையில் பணியாற்ற அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. சிறுவயதிலிருந்தே அவருக்கு நன்கு தெரிந்த பொருளான களிமண் மற்றும் செழுமையான டோனல் மாறுபாடுகளைக் கொண்ட கிரானைட் ஆகியவை அவருக்கு விருப்பமான சிற்ப உருவாக்கலுக்கு துணை புரிந்தன.

இவற்றைப் பயன்படுத்தி புத்தர், விநாயகர், மனிதர்கள், உயிரினங்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்களை நந்தன் உருவாக்குகினார். மெட்ராஸ் ஆர்ட் இயக்கத்தின் பல கலைஞர்களைப் போலவே அவரது படைப்புகளும் பூர்வீகப் பாரம்பரியத்தை அறிந்தவை. அவரது சில படைப்புகளில் நாட்டுப்புற தெய்வங்கள், கோயில் சிற்பங்களின் தோற்றங்களுக்கு ஈடு செய்ய முனைவது போல் அமைந்தவை. குறிப்பாக ஒரு கோயில் கோபுரத்தில் இரண்டு சிற்பங்களுக்கு இடையில் தோன்றும் நிழல்கள். நந்தன் முதன்மையாக ஒரு சிற்பி என்று அறியப்பட்டாலும் ஓவியங்களும் சித்திரங்களும் அவரது வாழநாளில் சரிசமமானப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகள் தொடர்ந்து சிற்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும்போதும் இடையிடையே ஓவியங்கள் வரைவதை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. பெரும்பாலும் கருங்கல்லில் சிற்பங்களைச் செய்கிறார். அதற்கான காரணம் கல்லில்தான் பலவிதமான வித்தியாசங்களும் பலவண்ண வேறுபாடுகளையும் உணர முடிகிறது என்றும் ஓவியத்திற்கான தன்மையை அது கொண்டிருப்பதாகவும் கருதிதினார். நந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் சென்னை கலை இயக்கம் (Madras Art Movement) தொடங்கி இருந்தது. அந்தக் கலை இயக்கத்திற்கு பெயரளித்தது பணிக்கரின் மகன் நந்தகோபால். ஆனால் நந்தனது கல்லூரிக் காலங்களில் அதற்கு சென்னை கலை இயக்கம் என்ற பெயர் இருக்கவில்லை. பணிக்கரைப் பின்பற்றியவர்கள் பிறகு சென்னை கலை இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார்கள். அந்தக் கலை இயக்கத்தின் அடிப்படையே கோடுதான். கோயில் சிற்பத்தில் உள்ள கோடுகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்தார்கள். கலைக்காக மட்டும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால் நல்ல படைப்புகளைக் கண்டிப்பாகச் செய்யலாம் ஆனால் 10 வருடம் இருக்க வேண்டிய கலைஞன் 5 வருடங்களிலேயே இறந்து விடுவான். அதனால் பிழைப்பிற்காக கைவினைப் பொருளை செய், அதை வாங்குவதற்கு மக்கள் இருப்பார்கள் என்ற பணிக்கர் வாக்கினுக்கேற்ப கலைப் பயணத்தில் பிழைப்பிற்காக செய்த வேலையும் கலை ஆர்வத்தினால் செய்த வேலையுமாக கைவினைப்பொருட்களைச் செய்தததைக் குறிப்பிடுகிறார் நந்தன். மேலும் அவரைப் பொறுத்தவரை கைவினைப் பொருள் தற்காலத்திற்காக எனவும் கலை என்பது வருங்காலத்திற்காகவும் என அவர் அதனைப் பகுத்துக்கொள்கிறார்.

ஒரு கலைஞனின் படைப்பில் 20% கைவினைப்பொருள் பணத்திற்க்காக இருக்கலாம். அதற்குமேல் பணத்திற்காக செய்தால் அவனுடைய கலை அழிந்துவிடும். அப்படி உண்மையாக வேலை செய்து கொண்டிருந்தால் பாணி என்பது தானாகவே உருவாகிவிடும். இப்பொழுது சோழமண்டலத்திற்கென ஒரு பாணி உள்ளது. அது மிகவும் அவசியம். இப்பொழுது நாம் சோழர் அல்லது பாண்டியர் காலச் சிற்ப பாணி என்றல்லவா சொல்கிறோம். அத்தகைய பாணி அல்லது சாயல் மிகவும் அவசியம். அது இருந்தால்தான் கலை என்கிறார். கலைப் பயணத்தின் ஆரம்பமாக நந்தன் குழந்தையாக இருந்தபொழுது அவரது பாட்டி விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் உருவத்தை செய்வார் என்றும் பின்னர் வரலஷ்மி நோன்பின் பொழுது அம்மியைக் கொண்டும், தீபாவளியின் பொழுது குடத்தைக் கொண்டும் அம்மன் உருவத்தைச் செய்திருக்கிறார். பாட்டியின் காலத்திற்கு பிறகு நந்தனது அம்மா அவற்றைச் செய்திருக்கிறார். நந்தன் ஏழாம் ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவரது அம்மா அந்த வேலையை ஒப்படைத்திருக்கிறார்.

அடுத்தபடியாக குயவர்கள் செய்வதைக் கண்டு, அந்தப் பழக்கத்தினால் சிற்பம் செய்வதை களிமண் உருவங்களுடன் துவங்கி இருக்கிறார். முதலில் தட்டைச் சிற்பங்களைச் செய்து, பின்னர் முப்பரிமாண உருவங்கள் செய்யத் துவங்கினார். நந்தன் 1978-ல் முகமூடிகள் தயாரிக்க ஆரம்பித்தார். 1975-ல் திருமணம் ஆன சமயத்தில் வீட்டில் திருட்டு நடந்து, பல பொருட்கள் திருடப்பட்டன. வேலைக்கு தேவையான பொருட்கள் வாங்க பணம் இல்லை. அதனால் கிராமத்தில் இருந்து ஒரு மூட்டை களிமண் கொண்டுவந்து, 2000க்கும் மேற்பட்ட முகங்களைச் செய்தபின் அவர் நிம்மதியடைந்திருக்கிறார்.

அவர் முகமூடிகளை உருவாக்கி விற்க ஆரம்பித்த போது அவர் வீட்டிற்குள் புகுந்த திருடன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது ஆவல் நீர்த்துப் போய்விட்டது. அவர் ஒரு நிம்மதியை அனுபவித்தார். இந்த முகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதால், குறைந்த விலைக்கு கொடுத்ததனால் மக்கள் உடனடியாக வாங்கிச் சென்றனர். இந்த முகங்கள், தகடுகள், கைவினைப்பொருட்கள் ஓவியங்களை விட மிகவும் பிரபலமாக இருந்தன. நந்தன் செய்துகொண்டிருந்த கலைப்படைப்புகளைப் பார்த்துவிட்டு அவரது ஓவியரான மாமா மெட்ரிக் முடித்தவுடன் கலைக்கல்லூரியில் சேர்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

நந்தனது தந்தையும் மற்றவர்களுக்காக வேலை செய்வதைவிட சுயமாக வேலை செய்வதே உசிதம் என்று நினைத்திருக்கிறார். பின்னர் 1961 ல் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்து பெரும்பாலும் Realistic பாணியில் படைப்புகளைச் செய்துகொண்டிருந்திருக்கிறார். அதற்கான காரணமாக கலைக்கான அடிப்படையே அதுதான் என்றும் அவற்றில் ஒரு தனித்தன்மை இருக்கும் என்றும் கூறினார். இப்படியாக நுண்கலையின் மேல் ஆர்வம் வந்ததாக நந்தன் கருதுகிறார். நந்தனது தந்தை ஆரம்பத்தில் லாகூரில் பணி புரிந்ந்தவர். பிரிவினையின் போது லாகூரிலிருந்து வெளியேறி ஒரு முஸ்லீம் நண்பரின் உதவியுடன் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு ரயிலில் மெட்ராஸ் வந்து அவரது அப்பா வேலை பார்த்த அதே கம்பெனியில் வேலை செய்தார். பின்னர் பணி நிமித்தமாகச் டெல்லி சென்றார். அதன்பின் கான்பூர், கோவை, பம்பாய் போன்ற இடங்களில் பணி புரிந்தார். அவருடன் சேர்ந்து பயணித்து பல பள்ளிகளில் படித்து, இறுதியாக சென்ன்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து சேர்கிறார். அங்கே அவரது வீட்டுக்கு அருகில் சில குயவர்கள் குடியிருந்தார்கள். அவர்களின் பணி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவரது மாமா ஒருவர் ஓவியராக இருந்தார். சென்னையில் உள்ள கலைக் கல்லூரியில் ஓராண்டு படித்துவிட்டு, 1958-ல் கால்நடை பராமரிப்புத் துறையில் கலைஞரானார். நந்தனது கலைப்படைப்புகளைப் பார்த்துவிட்டு, மெட்ரிகுலேஷன் முடித்துவிட்டு சென்னை கலைக் கல்லூரியில் சேரச்சொன்னார். மற்றவர்களுக்கு வேலை செய்வதை விட நான் எனக்காக உழைத்தால் நல்லது என்று அவரது தந்தையும் நினைத்தார். அப்படித்தான் 1961-ல் சென்னை கலைக் கல்லூரியில் நந்தன் சேர்ந்தார். உண்மையில், 1960ல் கல்லூரியில் சேர வேண்டும் என்பது நந்தனது எண்ணமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை, கே.சி.எஸ்.பணிக்கர் அவரைச் சிற்ப மாடலிங்கில் சேரச் சொன்னார். ஆனால், அவருக்கு ஓவியம் வரைவதில் மட்டுமே ஆர்வம் இருந்தது. அதனால், அடுத்த வருடமே ஓவியத்தில் சேர்ந்தார். வெங்கடபதி, பரமசிவம், வாசுதேவ் நந்தனுடன் படித்தவர்கள், ஜெயபால் பணிக்கர், சிவக்குமார், செல்வராஜ் ஆகியோர் சீனியர்களாக இருந்தனர்.

அவரது தந்தை 1964ல் இறந்தார். பணத் தட்டுப்பாடு காரணமாக வீடு திரும்பி, இரண்டு மூன்று மாதங்கள் அங்கேயே இருந்தபோது அவரது நண்பர் ஃபிரடெரிக் செல்லப்பா நெசவாளர் சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தவருக்கு ஒரு கடிதம் எழுதுகையில் கலைஞர்கள் சமூகத்திற்காக பணிக்கர் ஏதோ திட்டமிட்டிருப்பதாக நந்தனுக்கு் தெரிவிக்கிறார். அதனால், திரும்பிவரச் செய்து அப்போது பணிக்கர் கைவினைப் பொருட்கள் செய்து வருமானம் ஈட்டும் திட்டத்தைப் பற்றி கூறுகிறார். வெங்கடபதியும் நந்தனும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க ஒவ்வொருவரும் ரூ.500 செலுத்த வேண்டும். நந்தன் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது குடும்பத்தினர் விதை வாங்குவதற்காக ஒதுக்கியிருந்த பணத்தை எடுத்து நந்தனிடம் கொடுக்கின்றனர். பணிக்கர் முதலில் கைவினைப்பொருட்கள் செய்ய மெட்ராஸில் இடம் ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கே பாடிக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து, அமோக வரவேற்பு கிடைத்து அனைத்தும் விற்றுத் தீர்ந்த அந்தப் பணத்தில் நிலம் வாங்க மகாபலிபுரம் நல்ல இடம் சுட்டிக்காட்டப்பட்டு அதனால், நிலம் வாங்கப்பட்டது. நிலம் முதலில் கலைஞர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சுல்தான் அலி போன்ற சில கலைஞர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்து, தங்கள் வீடுகளை கட்டுவதற்காக தங்கள் சேமிப்பை முதலீடு செய்தனர். இறுதியாக, கலைஞர்கள் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நந்தன் பங்களித்ததால் ரூ.500 அதன்படி அவருக்கு நிலம் வழங்கப்பட்டது.

பின்னர், பணப் பற்றாக்குறை ஏற்பட்டது மற்றும் கலைஞர்கள் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்று கண்டறிந்தனர், எனவே சில கலைஞர்கள் ஆசிரியர்களாகவும் வடிவமைப்பாளர்களாகவும் வேலை தேடுவதற்காக சோழமண்டலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் செலுத்திய பணம் அவர்களிடமே திரும்பக் கொடுக்கப்பட்டு, நிலம் சங்கத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இந்த நிலத்தில் சிலவற்றை வாங்குமாறு பணிக்கர் பரிந்துரைக்கிறார். நந்தனிடம் பணம் இல்லாததால் அதற்கு வரவில்லை. அவர் வற்புறுத்துகிறார், அதை மெதுவாக செலுத்த முடியும் என்று கூறுகிறார். சோழமண்டலத்தில் சேர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் கல்லூரியைத் தொடங்கினார் நந்தன். ஓவியராக வேண்டும் என்பது அவரது தந்தையின் கனவு. இயல்பிலேயே மிகவும் கூச்ச சுபாவமுள்ளவராக நந்தன் இருந்தார். என் தந்தை என்னை தன்னம்பிக்கையுள்ளவனாக மாற்ற வேண்டும் என்று நினைத்து கலைக் கல்லூரியில் சேர்த்தார். 

பகுதி 2 – உரையாடல்

நந்தன்

இப்போதெல்லாம் கலைஞர்கள் தாராளமாகப் பாராட்டப்படுகிறார்கள் அல்லது அவர்கள் கவனிக்கப்படவே இல்லை. ஒரு காலத்தில், கலை விமர்சகர்கள் ஒரு கலைப் படைப்பில் உள்ள குறைகளை அச்சமின்றி எழுதுவார்கள். இப்போது நல்ல கலை விமர்சகர்கள் இல்லை என்பதே அதற்குக் காரணம். கலைஞரைத் திருப்திப்படுத்தவே எழுதியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் எழுத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். நேர்மையான விமர்சனத்தின் மூலமே ஒரு கலைஞன் வளர முடியும். அந்தக் காலத்தில், கலைஞர்கள் கலை விமர்சகர்களைக் கண்டு பயப்படுவார்கள், சிலர் கலைஞர்கள் கூட உணராத அளவுக்கு நுட்பமான முறையில் விமர்சிப்பார்கள். ஆனால் இன்றைய விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். மேலும், அவர்களுக்கே அதிகம் தெரியாது. அவர்கள் நிறைய படிக்க வேண்டும் மற்றும் நிறைய கலைப்படைப்புகளைப் பார்க்க வேண்டும். பணிக்கர் அதிகமாக வாசிப்பார். எந்தக் கலைஞர் எந்தப் படைப்பை எப்போது செய்தார் என்பதை அவரால் துல்லியமாகச் சொல்ல முடிந்தது. அவர் எங்களுக்கு கலை விமர்சகர். அவர் “சுனந்தா” என்ற பெயரில் படைப்புகளை மதிப்பாய்வு செய்தார். அவரை எதிர்த்து யாரும் வாதிட்டு வெற்றிபெற முடியாது. அவர் தகுதியானதாகக் கருதும் ஒரு கலைப் படைப்பு விலக்கப்பட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் வாதிடுவார். அவர் படைப்பில் இல்லாத விஷயங்களைப் புனைய மாட்டார், அந்த படைப்பின் உள்ளடக்கத்தை மட்டுமே அவர் தனது கருத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பார். . தன் மாணவர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தவர் பணிக்கர். டி.பி.ராய் சௌத்ரியின் காலத்தின்போது படிவங்களை யதார்த்தமாகப் படம்பிடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. படைப்பாற்றலை வளாகத்திற்கு கொண்டு வந்தவர் பணிக்கர்.

சந்தானராஜ், முனுசாமி போன்ற ஓவியர்கள் மிகுந்த சுதந்திரத்துடன் வேலை செய்து கொண்டிருந்தனர். சந்தானராஜ் நந்தனுக்கு ஆசிரியராகவும் இருந்தார். வேலை செய்யும்போது எதையும் முன்கூட்டியே திட்டமிட மாட்டார். சுற்றியிருப்பவர்களைக் கவனிப்பார். அவர் மணிக்கணக்கில் அழுக்குச் சுவரைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பார். அதில் பல விஷயங்களைக் கண்டார். கடுமையாக உழைப்பார். அவருடைய ஓவியங்களை உன்னிப்பாகப் பார்த்தால், வண்ணங்கள் மட்டுமே தெரியும். நவீன ஓவியங்கள் பற்றி அவரிடம் இருந்து நந்தன் நன்கு கற்றுக்கொண்டார். நந்தனுக்கு தனபாலும் ஆசிரியர்தான். அவரது சிற்பங்கள் கோயில் சிற்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக, கோவில் சிற்பத்தில் உள்ள யாளி உருவத்தை எடுத்துக் கொண்டால், யாளி முதலில் சிங்கமாக தோன்றும். ஒருமுறை சிங்கத்தின் வாயை செதுக்கும் போது, சிற்பி தவறு செய்து, உள்பகுதியை தனியாக செதுக்கியுள்ளார். அவன் பற்களை செதுக்கியதால், உள்ளே இருந்த கல் உருண்டையாக மாறியதைப் பார்த்த சிற்பி அதே மாதிரி மற்ற சிற்பங்களையும் செய்தார். நந்தனது கல்லூரி நாட்களில் “மெட்ராஸ் கலை இயக்கம்” என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு அந்தப் பெயரை வைத்தவர் பணிக்கரின் மகன் எஸ்.நந்தகோபால். பணிக்கரின் கூட்டாளிகள் பின்னர் கலை இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். அந்தக் கலை இயக்கத்தின் அடிப்படையே கோடு. கோவில் சிற்பத்தில் காணப்படும் கோடுகளின் அடிப்படையில் அவர்கள் அவர்களது வேலையைச் செய்தனர். 

உங்கள் படைப்பின் பொருள் என்ன?

என் படைப்புகளுக்கு இயற்கையே அடிப்படை. தென்னிந்தியச் சிற்பங்களில் உள்ள வரிகளை கூர்ந்து கவனிப்பேன். வடிவங்களை விட வரிகள் எனக்கு முக்கியம். கோவில் கோபுரத்தில் இரண்டு சிற்பங்களுக்கு இடையே காணப்படும் நிழலை நான் குறிப்பாக கவனிக்கிறேன். இதை அடிப்படையாக வைத்து எனது புத்தர் சிற்பத்தை செய்துள்ளேன். எனது படைப்புகள் இந்தியக் கலையில் இருந்து எடுக்கப்பட்டவை. வடிவம் நவீனமாக இருக்கலாம், ஆனால் வரிப் பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

உங்கள் சிற்பங்கள் மென்மையான மற்றும் கடினமான மேற்பரப்புகளை இணைக்கின்றன..

ஆம், அதற்குக் காரணம் நான் ஒரு ஓவியராகத்தான் ஆரம்பித்தேன். ஓவியம் தீட்டும்போது இரண்டு அல்லது மூன்று வண்ணங்களைப் பயன்படுத்துகிறோம். ஓவியம் வரைவதில் வல்லவராக இருந்தால்தான் சிற்பம் செதுக்க முடியும். அவ்வாறு செய்யும்போது, ஓவியத்தின் தாக்கம் சிற்பத்திலும் கசியும். என் சிற்பங்கள் தோற்றத்தை முன்வைக்கின்றன ஓவியங்கள். எனது சிற்பத்தில் பல்வேறு வகையான மெருகூட்டல்களைப் பயன்படுத்துகிறேன். இது ஓவியத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறது. சிற்பம் மட்டுமே செய்யும் நபர்களின் படைப்புகளுக்கு வடிவம் மட்டுமே இருக்கும். ஆனால் ஓவியம் வரையக்கூடிய சிற்பிகள் மட்டுமே கோடு மற்றும் வண்ணம் இரண்டையும் வைத்து விளையாடுவார்கள். நான் 1976ல் சிற்பம் செய்ய ஆரம்பித்தேன். நந்தகோபால் ஓவியராகவும் தொடங்கினார்.

உங்கள் ஓவியத்திற்கும் சிற்பத்திற்கும் என்ன வகையான தொடர்பு உள்ளது?

இரண்டும் ஒரே வரித்தரத்தைக் கொண்டிருந்தன, ஆனால் அதற்குமேல் எதுவும் இல்லை. நிறைய சிற்பிகள் முதலில் ஒரு ஓவியத்தை வரைந்து பின்னர் அதை சிற்பமாக மாற்றுகிறார்கள், ஆனால் நான் அப்போது கிடைக்கும் கூறுகளின் அடிப்படையில் செதுக்குகிறேன். ஒரு கலைஞனுக்கு செறிவு மிக முக்கியமான குணம். சிற்பம் செய்யும் செயல்முறையிலிருந்து வெளிப்படும் ஒலி ஒரு வகையான தியானத்தைத் தூண்டுகிறது. மனச்செறிவு இருந்தால்தான் நல்ல ஓவியம், சிற்பம் அல்லது நடனம் வெளிப்படும். குறுகிய பாதையில் செல்லும் போது மனதளவில் கவனம் செலுத்தினால் விரைவாக நடக்கலாம். எல்லாக் கேள்விகளுக்கும் நமக்குள் பதில் இருக்கிறது. இதை நாம் உணர வேண்டிய கருவி செறிவு. கலைக்கு கடின உழைப்பு தேவை. குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், குழந்தை பிறந்தவுடன் அதெல்லாம் மறந்துவிடும். இயற்கையைப் போலவே, கலையிலும். வேலை செய்து படத்தை உருவாக்கும் போது எல்லாம் மறந்துவிடும். உங்கள் படைப்புகள் தன்னிச்சையாக வெளிப்படும் எண்ணங்களால் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் உதவியாளர்களுடன் பணிபுரியும் போது இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது?

இது கடினம் அல்ல, ஏனென்றால் அவை என் சிந்தனையின்படி செயல்படுகின்றன, அவை தேவையற்ற பகுதிகளை வெட்டிவிடுகின்றன. நான் செதுக்கியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வயதாகும்போது கண்பார்வை மங்கினால் ஓவியம் வரைய முடியாது ஆனால் சிற்பம் செய்யலாம். ஒரு பார்வையற்றவர் பேருந்தில் இருந்து இறங்குவதைப் பார்த்தபோது தொடுதலின் சக்தியைப் பற்றி நான் அறிந்தேன். அவர் இறங்கியவுடன், அவர் தனது குச்சியை கீழே வைத்து, நடைபாதையைத் தேடத் தொடங்கினார். நடைபாதையைக் கண்டவுடன் ஏறி நடக்க ஆரம்பித்தார். இது நடந்தது 1976-77ல். அப்போதுதான் நான் முதலில் கண்ணாடி அணிய ஆரம்பித்தேன். இது என் பார்வைக்கு பயத்தை ஏற்படுத்தியது. 1980 வரை நான் ஓவியம் வரைந்தேன்.

மெட்ராஸ் ஆர்ட் இயக்கத்தில் உள்ள சிற்பிகளின் படைப்புகள் “முன்மாதிரிச் சிற்பம்” என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் உங்களின் சிற்பங்கள் முப்பரிமாண…

ஆம், ஜானகிராம் மற்றும் வித்யா சங்கர் ஸ்தபதி போன்ற சிற்பிகள் கோயில் சிற்பங்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களை, குறிப்பாக கவசங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். நானும் இந்த முறையைப் பயன்படுத்தினேன். ஆனால் கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் கூட பின்பகுதியைக் கொண்டுள்ளன. அவை முற்றிலும் தட்டையானவை அல்ல. அதை மனதில் வைத்து நானும் சிலை வடிக்க ஆரம்பித்தேன்.

உங்களின் பெரும்பாலான சிற்பங்களுக்கு முகங்கள் இல்லை…

ஆம். நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதிலிருந்து என்ன வடிவம் வெளிப்படும் என்பது யாருக்கும் தெரியாது. எதிர்பார்ப்பு இல்லாமல் வேலை செய்யுங்கள். கடவுள் கூட உங்கள் கர்மாவைச் செய்யுங்கள் என்று கூறுகிறார்.

உங்கள் கைவினைப் பயிற்சி உங்கள் வேலையை எவ்வாறு பாதித்தது? 

கைவினை கலையின் அடிப்படை. ஒரு காரியத்தை சிறிய அளவில் செய்தால், அது கைவினைப் பொருளாகிவிடும். பெரிய அளவில் செய்தால் அது கலையாகிவிடும். மேலும் கைவினைத் துறையில், அவர்கள் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார்கள். ஆனால் கலையில் ஒரு சித்திரம் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. சோழமண்டலத்தில் உள்ள புத்தர் சிலைக்கு இணையான சிலையை உருவாக்க முடியுமா என்று ஒருவர் கேட்டதற்கு, நான் மறுத்துவிட்டேன்.

நீங்கள் ஓவியன் வரையவோ, சிற்பம் செதுக்கவோ அதற்கென திட்டமிட்டுள்ளீர்களா?

இல்லை. அந்த நேரத்தில் என்ன செய்ய நினைக்கிறேனோ அதை செய்கிறேன். நான் மக்களைச் சந்திக்கும்போதோ அல்லது விஷயங்களைப் பார்க்கும்போதோ ஏதோ ஒன்று என்னைத் தாக்கக்கூடும். அது ஒரு வித்தியாசமான வடிவ மரக்கிளையாகவோ, வண்டிச் சக்கரத்தின் பதிவாகவோ அல்லது ஒரு சிறிய கல்லாகவோ இருக்கலாம். இவற்றை நான் நன்றாகக் கவனிப்பேன்.

இந்தச் சித்திரங்களை உங்கள் வேலையில் பதிவு செய்கிறீர்களா?

இல்லை. நான் அதை உணர்வுபூர்வமாக பதிவு செய்ய மாட்டேன். ஆனால் அது எப்படியோ என் மனதில் பதிவாகிவிடும். நான் வேலை செய்யும் போது, என் சொந்த விழிப்புணர்வு இல்லாமல் என் வேலையில் ஓவியங்கள் ஊடுருவுகின்றன. எனது மனநிலையைப் பொறுத்து, 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் நான் சில வடிவங்களை உணர முடியும்.பாரம்பரியச் சிற்பிகள் கல்லை மேலிருந்து கீழாக செதுக்குகிறார்கள். ஆனால் 1 முதலில் பீடத்தை செதுக்கும். அது முடிந்த பிறகு, நான் மேலே உள்ள உருவங்களை செதுக்குவேன். நான் இந்த முறையைப் பின்பற்றும்போது தவறில்லை. நான் இப்படி செதுக்க ஒரு காரணம் இருக்கிறது. மரத்தின் விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அது முதலில் பூமிக்கு அடியில் வேரூன்றிவிடும். பின்னர் அது கீழே இருந்து மேலே வளரும். இயற்கையே அப்படியென்றால், சிற்பத்தின் செயல்முறை ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்? முதலில் மேலிருந்து கீழாக செதுக்கிக் கொண்டிருந்தேன். நான் பிழைகளைக் கவனிக்கத் தொடங்கியபோது எனது முறையை மாற்றினேன். ஆனால் படிவத்தை சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கும்.

கீழிருந்து மேல் வரை சிற்பம் செய்யும் போது?

இல்லை. பீடத்தை உருவாக்கும் போது அதன் நடுப்பகுதியை நான் காண்கிறேன். அதிலிருந்து மேல்நோக்கி ஒரு கோடு வரைந்து அதன் இருபுறமும் என்ன வடிவங்கள் வைக்க வேண்டும் என்று பார்ப்பேன். சிற்பத்தின் இருபுறமும் நிற வேறுபாடுகள் உள்ளதா மற்றும் வெற்று இடங்கள் சமநிலையில் உள்ளதா என்பதை நான் சரிபார்க்கிறேன். அது ஓவியம் அல்லது சிற்பம், சமநிலை மிகவும் உள்ளது முக்கியமான. நாம் செதுக்கும்போது, எப்படி சமநிலைப்படுத்துவது என்பதை நாம் புரிந்துகொள்வோம். ஆரம்பத்தில், நான் செதுக்கும்போது, முதலில் ஒரு கோடு வரைவேன். இப்போது அந்த வரி இயல்பாகிவிட்டது. கோடு போட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சில சமயம் குழப்பம் வரும்போது ஒரு கோடு போடுவேன். எதுவாக இருந்தாலும், சமநிலையை அடைந்தவுடன், சிற்பம் நன்றாக இருக்கிறது. நான் மற்றவர்களின் படைப்புகளைப் பார்க்கும்போது, அதில் எந்த அளவு உள்வாங்குகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது படைப்புகளை நான் உன்னிப்பாக அவதானிப்பதால் எனது கலைப்படைப்பில் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதில்லை. ஒரு கலைஞரின் படைப்பில் 5 முதல் 10 சதவிகிதம் வரை திரும்பத் திரும்ப இருக்கலாம் ஆனால் 90 சதவிகிதப் பொருள் ஒரே மாதிரியாக இருந்தால் அது சரியில்லை. பல கலைஞர்கள் அதையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். இதற்குக் காரணம், ஒரு கலைப் படைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றால், கலைஞர்கள் அதை மீண்டும் செய்யத் தொடங்குகிறார்கள். என்னுடைய ஒவ்வொரு படைப்பும் தனித்துவமாக இருக்கும். இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருக்கும் ஆனால் இரண்டு நபர்களும் சரியாக ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். என்னையே திரும்பத் திரும்பச் சொல்ல நான் பயப்படுவதால், என்னுடைய ஒவ்வொரு சிற்பமும் வித்தியாசமானது. 

நீங்கள் இப்போது கூட டெரகோட்டா வேலை செய்கிறீர்களா?

சில நேரங்களில் நான் சோர்வாக இருக்கும்போது, களிமண்ணில் உருவங்களை உருவாக்குவேன். 1972-ல் ஜப்பானியர் ஒருவர் என்னை அணுகி புத்தர் சிலை செய்யச் சொன்னார். குலதெய்வச் சிற்பம் செய்யும்போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற கவலையில் அதைச் செய்யவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, ஒருநாள் நான் ஒரு களிமண் சிற்பம் செய்ய உட்கார்ந்தேன். போதுமான களிமண் இல்லாததால், அமர்ந்த நிலையில் சிலை செய்ய ஆரம்பித்தேன். பாதி வேலையை முடித்துவிட்டு, டீ குடிக்க ஸ்டுடியோவை விட்டு வெளியேறினேன். அப்போது படத்திற்கான கைகள் முழுமையடையவில்லை. மேலும், முகம் முடிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, ஒரு களிமண் பந்து மட்டுமே இருந்தது, அதனால் நான் ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போது, சிற்பத்தின் உடற்பகுதியில் என் கையில் இருந்த களிமண்ணை தடவிவைத்தேன். தேநீர் அருந்திவிட்டு திரும்பி வந்து மாலை வெளிச்சத்தில் சிற்பத்தைப் பார்த்தபோது, அமர்ந்திருந்த புத்தர் போலத் தெரிந்தது. பிறகு ஞாபகம் வந்தது ஜப்பானியர் என்ன கேட்டார். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. விடிந்தவுடன் படத்தை முடித்தேன். மாலையில் முகத்தில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினேன். படத்தில் உள்ள அனைத்து வரிகளும் தெரிந்தன. அதன் பிறகுதான் கல்லில் புத்தர் உருவங்களைச் செய்ய ஆரம்பித்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, இந்த சிற்பத்திற்கான தலைப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது மாலை சூரியன் சிற்பத்தின் மீது நிழல் படர்ந்தது. அதன்படி “நிழல்” என்று தலைப்பு வைத்தேன். நாம் யாரும் புத்தரைப் பார்த்ததில்லை அதனால் அவருடைய உருவத்தை நிழலாக மட்டுமே பார்க்க முடியும். அங்கிருந்துதான் “நிழல்” என்ற தலைப்பில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். 2000ம் ஆண்டிலிருந்து இதை செய்து வருகிறேன். பறவை என்ற தலைப்பில் சிற்பங்களையும் செய்துள்ளேன்

உங்கள் அய்யனார் சிற்பங்கள் பற்றி…

எனது கிராமத்திற்குச் சென்றபோது பல அய்யனார் சிற்பங்களைக் கண்டேன். பணிக்கர் காலத்தில், தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் “புக்வாஷ்” என்ற கண்காட்சி நடத்தப்பட்டது. அங்கே நான் ஒரு குதிரை சவாரி செய்தேன்.

“ஹார்பிங்கர்” போன்ற படைப்புகளில் நாட்டுப்புறச் சிற்பத்தின் தாக்கம் பற்றி…

கிராமத்தில் இருந்ததால் என் கலையில் கிராமிய உணர்வு வந்தது. “ஹார்பிங்கர்” என்ற என் சிற்பத்திற்கு உத்வேகம் அளித்த காவல் தெய்வம் அய்யனார். அய்யனார் கிராமத்தை தீங்கு விளைவிக்காமல் காப்பது போல, ஹார்பிங்கர் சிற்பம் (சோழமண்டலத்தில் வைக்கப்பட்டுள்ளது) சோழமண்டலத்தைத் தாக்க வரும் தீமையை முன்னறிவிக்கிறது. இந்தக் காலத்தில் தீமை என்றால் என்ன? இது தூசி மற்றும் மாசு போன்ற கூறுகள். அதைத் தடுக்க இயற்கையை நாம் வளர்க்க வேண்டும். அதுதான் என் கருத்து.

நீங்கள் கிரானைட்டில் வேலை செய்வதற்கு என்ன காரணம்?

இந்தக் கல்லிலேயே பல மாறுபாடுகளைக் காணலாம். பளிங்குக் கல் முழுவதும் வெண்மையானது. ஆனால் கிரானைட்டில் பலநிற வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு ஓவியத்தின் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. நாம் சிற்பிகள் வேலை செய்யும் கிரானைட், பழைய மற்றும் கடினமான கட்டிட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கிரானைட்டை விட சற்று மென்மையானது. ஆனால் அப்போதும், கிரானைட் சிற்பங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் உளி 20 நிமிடங்களில் மழுங்கிவிடும்.

பாரம்பரிய சிற்பிகள் கற்களை ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தி அதற்கேற்ப பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்

அதைத்தான் செய்கிறார்கள் ஆனால் நான் கல்லின் சத்தத்தின் அடிப்படையில் செதுக்குகிறேன். பாரம்பரிய சிற்பிகள் அனைத்து உருவங்களுக்கும் அளவு மற்றும் வடிவத்தின் கொள்கைகளைக் கொண்டுள்ளனர். ஆனால் எங்களைப் போன்ற சமகாலக் கலைஞர்கள் அப்படிச் செய்வதில்லை. அழகை எப்படி ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவர முடியும்? அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளின் படைப்பில் பெரும் மாறுபாடுகள் உள்ளன, எனவே மனிதன் சிற்பம் செய்யும் போது ஒரு உருவத்தை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது எப்படி? படைப்பைப் பற்றி கடவுளை விட உங்களுக்கு அதிகம் தெரியுமா? அழகு பன்மடங்கு.

ஒரு சமூகத்தில் கலையின் முக்கியத்துவம் என்ன?

எல்லாவற்றையும் நாம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. கலை அவற்றை மறைமுகமாக உணர்த்தும். ஆனால் கலைஞர் சொல்வதை மக்கள் உடனே புரிந்துகொள்ள முடியாது. இப்போது மேலோட்டமாக ஒருவர் அதைப் புரிந்துகொண்டாலும், மக்கள் உண்மையில் பாதிப்பை உணர ஓரிரு நூற்றாண்டுகள் ஆகும். இப்போதைக்கு எனது கலையை நான் உருவாக்கவில்லை. நான் அதை எதிர்காலத்திற்காக உருவாக்குகிறேன். லிங்கத்தை உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில், இது ஒரு மானுடவியல் படமாக உருவாக்கப்பட்டது. பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தார்கள். சிலவற்றை உள்ளுணர்வின் அடிப்படையில் செதுக்குகிறோம். ஒரு சிற்பத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்பது முழுமையான பிறகுதான் நமக்குப் புரியும். சிற்பத்தில் சமநிலை இருக்கிறதா, எந்த மாதிரியான உருவம் உள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம். சமநிலை இல்லாமல் எந்த ஓவியமும் சிற்பமும் செய்ய முடியாது. இந்த உலகம் சமநிலையின் கொள்கையில் உள்ளது.

சமகாலச் சிந்தனையின் அடிப்படையில் பல கலைஞர்கள் ஒரு கலைப்படைப்பில் சமநிலை அவசியமில்லை என்று கூறுகிறார்கள். அது பற்றி?

இத்தகைய அறிக்கைகள் இருந்தபோதிலும், சமநிலை அவசியம் என்பது ஒரு உண்மை. ஒரு மேற்பரப்பில் கோடு வரையப்பட்டவுடன், அது அதன் சொந்த சமநிலை உணர்வைப் பெறுகிறது. கலை உலகை மாற்ற முடியுமா? ஒரு யோசனை தன்னிச்சையாக கலைப்படைப்பில் வெளிப்பட்டால், அதுசரி. ஆனால் நாம் ஒரு கருத்தை கலையில் திணிக்கக்கூடாது. ஒரு எண்ணம் உண்மையில் நம் மனதில் இருந்தால், அது எப்படியாவது வேலையில் வெளிப்படும். காலப்போக்கில், கலை ஆர்வலர்கள் அதை புரிந்துகொள்வார்கள். இத்தகைய

கலை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் தற்போதைய காலத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

இப்போது இல்லை காலப்போக்கில் இப்படிப்பட்டவர்கள் உருவாகுவார்கள். ஒரு கலைஞரின் படைப்புகள் அவர்களின் காலத்திற்குப் பிறகுதான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். கலைஞனுக்கு அறிவு இருக்க வேண்டும். அவர்கள் இசை, நடனம் என அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அதன் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஒருவர் பார்ப்பது அல்லது கேட்பது நல்லதா இல்லையா என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு கலைஞனின் படைப்பு காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன??

அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்? இயற்கையின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை எப்படியோ அதன் பெற்றோரின் உருவத்தைப் பெறுகிறது. இது ஏன் என்று நாம் கேட்க முடியாது. கலை விஷயமும் அப்படித்தான். கலைஞரின் அடையாளம் எப்படியோ நிலைத்திருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. அந்த தனித்துவமான அம்சம் இருந்தால் மட்டுமே, அவர்கள் ஒரு ஓவியர் அல்லது சிற்பி.

ஆனால் சில கலைஞர்கள் தங்களை நகலெடுக்கிறனரே..

நாம் ஒருமித்து வேலை செய்யும்போது கலை வளரும். வேலை நகலெடுக்கப்படாது. ஒரு கலைப் படைப்பைப் பார்க்கும்போது அது யாருடைய படைப்பு என்று தெரிந்துகொள்ள வேண்டும். 100 வருடங்கள் கழித்து பார்க்கும் போது நந்தனின் வேலை என்று தெரிந்துகொள்ள வேண்டும். பிரதிபலிப்பு அம்சம் இல்லாத ஒரு கலைஞரின் படைப்பு ஒரு பாணி. சில கலைஞர்கள் தங்கள் பாணியை மாற்றக் காரணம், அவர்களின் படைப்புகள் சரியான வரவேற்பைப் பெறாததுதான். அனைத்து கலைஞர்களும் தங்கள் உயிர்வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அதை தவிர்க்க முடியாது. ஆனால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியாவிட்டால், பாத்திரங்கள் செய்து கூட வாழலாம். எனவே, கலையின் தரத்தை ஏன் குறைக்க வேண்டும்? பிழைப்பு பற்றிய கேள்வியை சமாளிக்க நீங்கள் கைவினைப்பொருள் போன்றவற்றைச் செய்யலாம். பணிக்கர் இதைப் புரிந்து கொண்டார். கலைக்காக கலை நல்ல படைப்புகளை உருவாக்கும். ஆனால் நடைமுறையில் பேசினால், ஒரு கலைஞனுக்கு உயிர்வாழ வழியே இருக்காது. எனவே, மக்கள் வாங்கும் பிழைப்புக்கான கைவினைப்பொருட்கள் செய்வோம் என்றார். கைவினை நிகழ்காலத்திற்கானது, ஆனால் கலை எதிர்காலத்திற்கானது. ஒரு கலைஞரின் படைப்புகளில் 20% கைவினைப்பொருளாக இருக்கலாம். அதற்கு மேல் பணத்துக்காகச் செய்தால் அவர்களின் கலை அழிந்துவிடும். கைவினை நாள் குறைக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள். ஒரு சிற்பம் செய்தாலும் அதில் ஆன்மீக திருப்தி இருக்க வேண்டும். பணிக்கர் தனது கலை ஆர்வத்தால் கிறிஸ்துவின் சிற்பத்தையும் செய்தார். அவர் வாழ்க்கைக்காக சிற்பம் செய்யவில்லை. நீங்கள் நேர்மையுடன் பணிபுரிந்தால், ஸ்டைல் தானாகவே வளரும். இப்போது சோழமண்டலம் தனக்கென ஒரு பாணியைக் கொண்டுள்ளது. அத்தகைய பாணி அவசியம். அப்படி இருந்தால்தான் கலை. 

கோவிட் தொற்றுநோய் உங்கள் வேலையை எவ்வாறு பாதித்தது?

நானும் என் மனைவியும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நான் குணமடைந்தபோது, என் உடல்நிலை குறித்து எனக்கு நிறைய பயம் தொடர்ந்தது. நீண்ட காலமாக, எனக்கு கலை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை, நான் எப்போதாவது கற்களில் வேலை செய்ய முடியுமா என்று யோசித்தேன். அங்கு வீட்டில் நான் சிறிய ஓவியங்கள் மற்றும் ஓவியங்களில் வேலை செய்ய ஆரம்பித்தாலும், எப்படி தொடர்வது என்று தெரியாமல் இருந்தேன். எனவே, நான் காகிதத்தில் வண்ணப் பக்கங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். மறுநாள் நான் அவைகளைப் பார்க்கும்போது, அவற்றில் உள்ள வடிவங்களையும் உருவங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. இவற்றை படிப்படியாக வளர்க்க ஆரம்பித்தேன். சிறிய ஓவியங்களைத் தவிர, மூன்று மாதங்கள், 100 அடி வரை ஓவியம் வரைந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளில், நான் மொத்தம் 27 சிற்பங்களை உருவாக்கும் சிறிய சிற்பங்களில் பணியாற்றினேன். நான் 100 சிற்பங்களை உருவாக்க விரும்பினேன். ஆனால் என் உடல்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. படிப்படியாக, சித்திரங்களில் வேலை செய்வதன் மூலம், நான் இயல்பான உணர்வைப் பெற முடிந்தது. இப்போது நான் சிறிய கல் சிற்பங்களில் வேலை செய்கிறேன். ஒரு கலைஞன் பெரிய வேலையைச் செய்தாலும், சிறிய வேலையைச் செய்தாலும், படைப்பாற்றல்தான் முக்கியம் என்று பணிக்கர் அடிக்கடி சொல்வார். ஒரு பெரிய சிற்பம் சிறப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிக விலைக்கு விற்கலாம். சிறிய சிற்பம் செய்தாலும் சரி, பெரிய சிற்பம் செய்தாலும் சரி, அதே மாதிரியான ஆக்கப்பூர்வ திருப்தி எனக்கு கிடைக்கும். 

உங்களது சிற்பங்களில் ஆழமான ஏதோ ஒன்று இருப்பதாய் புலப்படுகிறது. உண்மைதானா?

அது சரி. மறைக்கப்பட்ட எண்ணங்களை முதலில் வெளிப்படுத்துபவர்கள் கலைஞர்கள். ஒருவர் ஓவியராக இருந்தால், அது ஓவியத்தின் வடிவம் எடுக்கும். நான் ஒரு கல்லைப் பார்க்கும்போது, அதில் உள்ள வடிவத்தைத் தேடுகிறேன். சுற்றியுள்ள சூழலில் இருந்து வரும் காட்சிகள் மற்றும் ஒலிகளை செதுக்கும்போது, வெளிவரும் பிம்பம் உருவாகிக்கொண்டே இருக்கிறது, மேலும் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். சிற்பத்தை ஓரளவு முடித்தவுடன், நான் எந்த வடிவத்தில் செதுக்கிறேன் என்பது தெளிவாகத் தெரியும்.

எனது கேள்வி சிற்பம் மற்றும் ஓவியம் இரண்டையும் சார்ந்தது.

ஓவியம் என்பது படத்தை மட்டும் குறிக்கக் கூடாது. நாம் அதை முப்பரிமாணமாக அணுக வேண்டும். வரையப்பட்ட படத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பினேன். அந்த எண்ணம் வந்ததும் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு சிற்பம் செதுக்க ஆரம்பித்தேன். டெரகோட்டா சிற்பம் செய்வது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. மற்றவர்களைப் போல, எனக்கு ஓவியம் பிடிக்காத காரணத்தினாலோ அல்லது என் ஓவியம் விற்பனையாகாததாலோ நான் சிற்பம் செய்யத் தொடங்கவில்லை. வர்ணம் பூசப்பட்ட உருவத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் சிற்பம் செய்ய ஆரம்பித்தேன். இந்த புள்ளி புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானது. ஒரு சுருக்க வடிவத்தை வரையும்போது கூட, மறுபுறம் அது எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பினேன். ஓவியம் வரைய மட்டுமே தெரிந்தவர்கள் இந்த அம்சங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு படத்தின் முன்பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு கலைஞன் என்பது முழுக்க முழுக்க அறிவு உள்ளவனாக இருக்க வேண்டும். ஓவியம் வரைபவரை “ஓவியர்” என்றும், சிற்பம் மட்டும் செய்பவரை “சிற்பி” என்றும் அழைப்பர். நான் ஓவியம் மற்றும் சிற்பம் செய்ய முடியும். எனவே, நான் ஒரு கலைஞன். ஒரு கலைஞருக்கு, விற்பனையை விட பாராட்டு முக்கியம். கலைஞரிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. என் சிற்பத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள் காலப்போக்கில் தங்களை வெளிப்படுத்தும் என்று நான் பதிலளிக்கிறேன். நான் இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் இறந்த பிறகு மக்கள் என்னைப் பற்றி பேச வேண்டும். ஏப்ரல் 1-லிருந்து 31 மே 2023 வரை தக்ஷிணஷேத்ரா கலைக்கல்லூரியில் Varija Art Gallery-ல் நடைபெற்றுவரும் நந்தனது படைப்புகளை விருப்பப்படுவோர் கண்டு களிக்கலாம். *** நன்றிகள்: ஓவியரும் சிற்பியுமான நந்தன் அவர்களை நேர்காணல் செய்த வைஷ்ணவி ராமநாதன் குறிப்புதவிகளுக்கு இன்முகம் தந்து அனுமதியளித்த நூலகர் இந்துமதி.

கடந்த பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட நந்தனின் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் சித்திரங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி, கலை மீது ஆர்வம் கொண்ட யாரும் தவற விடக்கூடாத ஒன்றாக இருக்கும்.

வேதநாயக்
கவிஞர், எழுத்தாளர். “தேவதா உன் கோப்பை வழிகிறது” கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
இவரது படைப்புகளை வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்
யாவரும் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர். ஓவியங்கள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
தொடர்புக்கு :editorialmagazines@gmail.com

வனமே தந்தனை

1

நாச்சியாள் சுகந்தி

ருத மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாள் பூங்குழலி. கையில் அப்போதுதான் குளத்திலிருந்து பறித்து வந்த தாமரைப்பூ இருந்தது. முற்றிலுமாக மலராத, மொக்காகவும் இல்லாத பூ. பூங்குழலி அதன் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே மேயவிட்ட ஆடுகளை நோட்டமிட்டாள். அவை கண்ணுக்கெட்டும் தூரத்தில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. புதுமழைக்கு முளைத்த பசும்புற்களை சாப்பிடுவதில் பூங்குழலியின் ஆடுகளுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சிதான். அதில் பிரச்சனை என்னவென்றால் பொழுது சாய்ந்ததும் ஆடுகளைப் பட்டிக்கு அழைத்துச்செல்ல பூங்குழலி ஆடுகளிடம் மன்றாட வேண்டும். அவை அத்துனை சீக்கிரம் பச்சைப்புல்லின் வாசனை கிறக்கத்திலிருந்து வராது. அதற்காகவே பூங்குழலி சில பாடல்களைப் பாடுவாள். அந்த பாடல்கள் குதூகலமான தாளக்கட்டில் இருக்கும். அந்த தாளக்கட்டுக்கோ அல்லது பூங்குழலியின் குரலுக்கோ மயங்கி அவை நடையைக் கட்ட ஆரம்பிக்கும்.

அந்த வனாந்தரத்தில் இப்படி பூங்குழலி ஒரு பின்மதிய வேளையில் பாடிக்கொண்டிருந்தபோதுதான் அரும்பொறையன் தன்னையும் மறந்து அவள் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். பாடலை பாடி முடித்து எதேச்சையாக பூங்குழலி திரும்புகையில் கண்களை மூடிய நிலையிலேயே அமர்ந்திருந்தான். திடுக்கிட்ட பூங்குழலி சட்டென அந்த இடத்திலிருந்து நகர்ந்து தள்ளிப் போனாள். அவளது காலடி சத்தம் கேட்டு விழித்த அரும்பொறையன் பூங்குழலியின் மருண்ட கண்களைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவாறே,’’உங்கள் பாட்டும் குரலும் தேனில் ஊறவைத்த கனியைப் போல இருந்தது’’ என்றான். முன்பின் தெரியாதவன் தன்னை பாராட்டுவது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அதை அவள் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

‘’நீங்கள் யார், எங்கள் அகரம்புதூருக்கு புதியவராக இருக்கிறீர்கள்? ஊர்த்தலைவருக்கு உங்கள் வருகை தெரியுமா?’’ என முகத்தைக் கடினமாக வைத்துக்கொண்டு கேட்டாள். அவனும் அதே முகபாவத்துடன்,’’உங்கள் ஊரின் தெற்கில் அரசர் ஆணைப்படி புதிய கோவிலை கட்டுகிறார்கள் தெரியுமா… அந்த கோவில் பணிக்கு வந்திருக்கும் நாற்பது சிற்பிகளில் நானும் ஒருவன். அரும்பொறையன் என் பெயர்’’ என்று சொன்னவன் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, முகத்தின் கடினத்தை அந்த நொடிகளில் மாற்றி பூங்குழலியின் கண்களை உற்றுநோக்கி ’’நீங்கள் இனிமையாகப் பாடுகிறீர்கள். உங்கள் குரலில் யாரையும் மயக்கும் ஒரு சக்தி இருக்கிறது’’ என்று ஒரு பாடலைப் போலவே சொல்லிவிட்டு அவள் பதிலுக்கும் எதிர்வினைக்கும் காத்திராமல் நடந்தான்.

பத்து எட்டு நடந்தவன் திரும்பிப் பார்த்தான்; பூங்குழலி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உயரமாக, நீண்ட கூந்தலைப் பின்னி அதில் சிவப்பு நிற மலரொன்றை சூடியிருந்தான். இடுப்பில் கட்டியிருந்த அரையுடுப்புத் துணி அவனது வலுவான கால்களையும் தொடையையும் காண்பித்தது. அவை கரும்பாறையில் வரைந்து செதுக்கியது போல இருந்தன. தோள்களிரண்டும் பாறையின் சிறுபகுதியை வெட்டி ஒட்டி வைத்த சிறுகுன்றென இருந்தன. அவனது கண்களின் ஒளி யாரையும் சட்டென தடுமாற வைக்கக் கூடிய சக்தியுடையதாக இருந்தது. அவன் போன பின்பும் ,’’உங்கள் குரல் தேனில் ஊறவைத்த கனியென இருக்கிறது’’ என்ற குரல் அவளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.

எங்கிருந்தோ வந்த நீர் நாய்கள் ஆடுகளைத் துரத்த அவற்றின் அலறல் பூங்குழலியை உலகத்துக்குக் கொண்டு வந்தது. ஆடுகளின் அலறலில் அனிச்சையாக எழுந்து ஓடினாள். புயலென ஓடிவரும் மனித உருவைக் கண்டதும் நீர்நாய்கள் திசைக்கொன்றாக ஓடின.
“என்னைக் காண வருவது குறித்து உன் தோழிகள் எதுவும் கேட்பதில்லையா பூங்குழலி”

“அவர்கள் ஏன் கேட்கப்போகிறார்கள். அவர்களுக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கிறதல்லவா”
“அப்படி என்ன இதைவிட முக்கியமான வேலை”

“ம்ம்ம்… உங்களுக்கு ஆணவம் தான். அவளவள் நாற்றுநட ஓடிக்கொண்டிருக்கிறாள். இப்போது நட்டால் தானே ஆறு திங்கள் கழித்து அறுவடை நடக்கும். ஊரே பட்டினி இல்லாமல் பசியாறலாம்.”

“அப்படியென்றால் நீ ஏன் போகவில்லை”

“என்ன செய்வது, உங்கள் மீதிருக்கும் பித்து தெளிந்திருந்தால் நானும் கருக்கலிலேயே போயிருப்பேன். பல பௌர்ணமிகள் ஓடிவிட்டன. ஆனால் உங்கள் மீதான பித்து தெளிந்தபாடில்லை”

“சரி…இந்த பித்து தெளிய நான் என்ன உதவி செய்ய வேண்டும் சொல்; செய்கிறேன்”

“என் மண்டையின் கனம் ஏறி போதையில் குதிக்காமல் இருக்கும் வகையில் பேசாதிருங்கள். உங்கள் கண்களின் ஒளியை என் நெஞ்சுக் கூட்டுக்குள் பாய்ச்சாதிருங்கள். என் விலா எலும்புகள் நொறுங்கிப்போவது போல் என்னை அணைக்காமல் இருங்கள். மிகக் குறிப்பாக என் தலையைத் தடவி உங்கள் மடியில் வாகாக சாய்த்து முன் நெற்றியில் முத்தமிடாதிருங்கள். பூனையைப் போல் நடந்துவந்து என்னைப் பின்னால் இருந்து இறுக்காதீர்கள். எங்கிருந்தோ கொண்டு வரும் வாசனை திரவியத்தை என் மார்மீது பூசாதிருங்கள். நான் எதோ ஒரு துன்பத்தை சொல்லி அழும்போது என் கைகளை அழுந்தப்பற்றி நெருக்கமாக உட்கார்ந்து உங்கள் உடல் வெம்மையை ஆறுதலாகத் தராதீர்கள்”

“சரி…அப்படியே ஆகட்டும். இப்போது கால்களில் மட்டும் முத்தமிட்டுக்கொள்ளட்டுமா”

*

பூங்குழலிலுக்கு உடல் சூடு ஏறிக்கொண்டே இருந்தது. அந்த சூட்டைத் தாங்க முடியாமல் அரற்றினாள். அவளுடைய அரற்றல் பூங்குழலியின் தகப்பன் நெல்மணியான் வயிற்றில் நெருப்பைக் கூட்டியது. இப்படித்தான் போன மார்கழியில் மகனுக்கு உடல் சூடேறியது. ஏழு நாட்கள் ஆகியும் அந்த சூடு குறையவே இல்லை. ஊரின் நாவிதர் என்னென்னமோ மருந்து அரைத்துக்கொடுத்தார். ஆனால் எந்த மருந்துக்கும் அவன் உடல் சூடு அடங்காமல் பின்னிரவில் உயிரை விட்டான். அதேபோல் பூங்குழலிக்கும் ஆகிவிடுமோ என பயந்தான் நெல்மணியான். இருட்டில் கையில் மூங்கில் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு ஊர் நாவிதர் வீட்டுக்குப் போய் நிலமையை சொல்லியழுது சூரணத்தை வாங்கி வந்து தேனில் குழைத்து அவள் உள்நாக்கில் தடவிவிட்டார்.

மகளின் அருகிலேயே அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். சூரியன் வீட்டு முற்றத்துக்கே வந்த போது தான் விடிந்தது தெரிந்தது பூழங்குழலிக்கு. அவள் அப்பா, அவள் கைகளைப் பிடித்தவாறே மருதமர தூணில் சாய்ந்து இருந்ததைக் கண்டதும் பயந்து போனாள். கைகளை அப்பாவிடமிருந்து மெதுவாக விடுவித்து, இடதுகையை ஊன்றி எழுந்து உட்கார்ந்து அப்பாவையே உற்றுப்பார்த்தாள். அப்பனின் கன்னங்களிரண்டிலும் கண்ணீர் தாரையின் தடம் காயாமல் இருந்தது. அந்தக் கன்னங்களைத் தடவியவள் அவன் மடியிலேயே சாய்ந்துகொண்டாள். யாரோ வரும் அரவம் கேட்க கழுத்தை மெதுவாகத் திருப்பிப் பார்த்தாள். அறவல்லி சிறு மண் கலயத்தில் எதோ கொண்டு வந்துகொண்டிருந்தாள். அந்தக் கலயத்திலிருந்து ஆவி பறந்து வந்தது; அது மார்கழிப் பனியை மீறியும் தெரிந்தது.

*

“என்னைப் பார்த்து பத்து, பதினைந்து திங்கள் ஆகியிருக்குமல்லவா…இன்னும் நீ ஏன் என்னைப் பற்றி எதையும் கேட்கவில்லை பூ”

“உங்களுக்கே சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் வரும் நாள் வரும் என காத்திருந்தேன்”

ஒருவேளை நாளைக்கே கோவில் பணிகள் அனைத்தும் முடிந்து நான் என் ஊர் நோக்கி சென்றுவிட்டால் என்ன செய்வாய் பூ”

“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்”

“நான் திரும்பி வருவேன் என்று எந்த அடிப்படையில் நம்புகிறாய் பூ. நான் ஊர் ஊராக சுற்றும் ஒரு சாதாரண சிற்பி. என் பயணத்தில் எத்தனையோ பெண்கள். காலநீரோட்டத்தில் என்னுடன் சக பயணியாக உன்னைப் போல் வருவார்கள். பயணம் முடிந்துவிடும். பிறகு வேறொரு பயணம். வேறொரு பயணி”

அறவல்லி, பூங்குழலியின் அருகில் வந்தமர்ந்து அவள் உடலைத் தொட்டுப் பார்த்தாள். நேற்று இரவு இருந்த அளவுக்கு உடல் சூடு இல்லை. கையில் வைத்திருந்த கலயத்தில் இருந்த மருந்து நீரை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றிக்கொடுத்தாள். பூங்குழலி மெதுவாக எழுந்துபோய் பானையில் இருந்த நீரெடுத்து வாய் கொப்பளித்தாள். முகம் கழுவினாள். சைகையில் ’இங்கு வா’ என்பது போல அழைத்தாள். மார்கழியின் அதிகாலை பனிக்கு, உடலுக்கு வெம்மை வேண்டும் போலிருந்ததால் செம்மண்ணால் குழைத்துப் பூசப்பட்டிருந்த மண் மேட்டின் மீது இருவரும் அமர்ந்தார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி முக்கல் அடுப்பு இருந்தது. மண் சட்டியில் நெல் சோறு இருந்தது.

அறவல்லிக்கு காய்ச்சலில் வாடிய பூங்குழலியின் முகத்தைப் பார்க்க அழுகை வந்தது. தன் உடன் பிறந்தவர்களில் உயிரோடு இருக்கும் ஒரேயொரு மரிக்கொழுந்து தான் பூங்குழலி. ஐம்பது பௌர்ணமிக்கு முன்பு வந்த காட்டு வெள்ளத்தில் சிக்கி அம்மாவும் இறந்து போனாள். ’இவளாவது உயிருடன் இருக்கிறாளே’ என்கிற நிம்மதியில் தான் அறவல்லி நாட்களைக் கடத்துகிறாள். அந்த பதைபதைப்பில், ’’பூ நீ இன்னும் அந்த சிற்பியை நம்பி உயிரைக் கெடுத்துக்கொண்டிருக்காதே. அவன் நம் ஊரை விட்டுப் போய் ஏழு பௌர்ணமிகள் போய்விட்டன. அவன் நினைவில் நீ இருக்கிறாயோ என்னவோ? எந்த ஊரில் எந்த அரண்மனையில் அல்லது கோவிலில் உட்கார்ந்து கொண்டு கிடைத்த நெல் சோற்றுக்கும் வெள்ளிக் காசுக்கும் யானையையோ, பெண்ணையோ சிலைவடித்துக் கொண்டிருக்கிறானோ…தெரியாது. உண்மையில் அவனுக்கு உன் மேல் ஆசையும் அன்பும் இருந்திருந்தால் அவன் நம் ஊரை விட்டுப் போகும்போது உன்னையும் கையோடு சேர்த்துக் கூட்டிக்கொண்டு போயிருப்பான். அல்லது உன்னோடு இங்கேயே தங்கியிருப்பான். கொஞ்சமாவது உண்மையை புரிந்துகொள் பூ. பிழைப்புக்காக அலைகிற நாடோடி, வெள்ளாண்மையை செய்பவனைப் போல குடும்பம் வைத்துக்கொள்ள மாட்டான். புரிந்துகொள். நம் நெல் வயலை பார்த்துக்கொள்ள, ஆடு மாடுகளைப் பார்த்துக்கொள்ள என்னோடு வந்துவிடு. அடுத்த பௌர்ணமியில் நீ மாமாவையே கட்டிக்கொள். நாம் எல்லாரும் ஒன்றாக இருக்கலாம். அப்பன் இன்னும் எத்தனை பௌர்ணமிக்கு இருப்பான்…புரிந்துகொள் பூ’’ அறவல்லி மூச்சு விடாமல் பேசினாள்.

கண்கள் மூடி அறவல்லி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பூங்குழலி அறவல்லியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

*

“பூ… என்னிடம் உனக்கு அப்படி என்னதான் பிடித்திருக்கிறது”

“எல்லாம் தான்”

“இப்படி சொன்னால் எப்படி…. குறிப்பிட்டு சொல்லேன்”

“உன்னிடம் இருக்கும் உண்மை. ஆமாம்…. உண்மை. உன் முன்னாள் காதலிகளைப் பற்றி சொல்லும்போது கூட அவர்களை எத்துனை மரியாதையாகக் குறிப்பிடுகிறாய். அவர்கள் செய்த சின்ன சின்ன காரியங்களைக் கூட மறக்காமல் வைத்திருக்கிறாய்”

” ஐயோ…. நான் கள் அருந்தியிருந்தபோது உளறிவிட்டேனா”
” இல்லை… நல்நினைவுடன் இருக்கும்போதும் சொல்லியிருக்கிறீர்கள். ஆற்றில் ஒருத்தி உங்கள் கூந்தலை வாசனைப்பொருட்கள் போட்டு அலசி விட்டு, கூந்தலை அழகுபடுத்திய நிகழ்வை எத்தனை முறை சிலாகித்து உங்களுக்கே தெரியாமல் சொல்லியிருக்கிறீர்கள் தெரியுமா…அப்போதெல்லாம் உங்கள் கண்களில் எதோவொரு புதுவொளி வீசும்; முகம் பூக்கும்; மனதிலிருக்கும் இன்பம் வார்த்தைகளில் வழிந்தொழுகும்’’

“உனக்கு பொறாமையாக இருக்காதா பூ”

“அட…நான் ஏன் பொறாமைப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் நீ யார் என்று கூட தெரியாது. நான் அந்த பெண்ணை முன்பின் பார்த்தது கூட இல்லை. யார் என தெரியாதவள் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்?”

“வேறென்ன என்னிடம் பிடிக்கும் பூ”

“குறைவாகப் பேசுகிறாய். அந்தப் பேச்சில் எந்த அலங்காரங்களும் இல்லை. எப்போதும் இயல்பாக இருக்கிறாய். சில நேரம் ஒரு ஞானியைப் போல நடந்துகொள்கிறாய். கோவிலுக்கு யானை சிலையையும் யாளி சிலையையும் தனி ஒருவனாக நீ வடித்தாய் என உன் தலைமைச் சிற்பி பாராட்டியபோது உன் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை; கர்வமும் இல்லை. அந்த ஞானித்தன்மை இந்த வயதில் சாத்தியமான விஷயம் இல்லை அல்லவா. அது எனக்கு எப்போதும் ஆச்சர்யமூட்டும் விஷயம். ம்ம்ம்…. எனக்கு காலில் அடிபட்டு நான் வலியில் துடித்த அந்த மூன்று நாட்களும் நீயும் என் அப்பனைப் போலவே என் அருகேயே இருந்தாய். என் அம்மாவைப் போலவே உணவூட்டி, நீர் அருந்த வைத்து, என் உடலை முழுதும் நீரால் கழுவி….. அந்த மூன்று நாட்களும் நீ எனக்கு ஒரு தாயாக மாறியிருந்தாய் அல்லவா. அந்த மனம் இந்த உலகில் அரிதான மனம்”

“ம்ம்ம்…. ஒரு முறை நீ கள் அருந்தியிருந்தாய். அன்று மூன்றாம் பிறை என்று நினைக்கிறேன். குளத்தருகில் வட்டப்பாறையில் தனியாக அமர்ந்திருந்தாய். நான் உனக்கு உணவெடுத்து வந்தேன். அருகில் வந்து பார்த்தபோது உன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. எனைப் பார்த்ததும் நீ அழுகையை நிறுத்தவில்லை. ‘அவள் என்னைக் கள்ளன் என்பாள்….உன் கள்ளத்தனம் அத்தனையும் அறிந்தவள் நான் என்பாள்’ என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாய். அந்த கண்ணீரில் உன் காதலின் உன்னதத்தைப் பார்த்தேன். உன்னால் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. தீங்கிழைப்பவனால் இத்தனை உணர்வுப்பூர்வமாகவும் எந்த பாசாங்கில்லாமலும் அழ முடியாது”

*

“அறவல்லி ஒரு யோசனை சொன்னாளாம். நீ பதிலொன்றும் சொல்லவில்லையாமே குழலி. அப்பன் இன்னும் எத்தனை பௌர்ணமிக்கு இருப்பேன் என்று நினைக்கிறாய் குழலி’’ நெல்மணியான் கெஞ்சும் குரலில் கொஞ்சும் தொனியில் கேட்டான். பூங்குழலி சலனமில்லாமல் இருந்தாள்.
கொஞ்சநேரம் இருவருக்குமிடையில் அமைதி நிலவியது. மீண்டும் நெல்மணியானே ஆரம்பித்தான். ‘’குழலி, அப்பன் சொல்வதைக் கேள். நீ காத்திருக்கலாம் மகளே. காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. காலம் தப்பி எடுக்கிற முடிவால் யாருக்கும் ஒரு நன்மையும் இல்லை’’ என்பதை நிறுத்தி நிதானமாகச் சொல்லிவிட்டு மெதுவாக அங்கிருந்து நடந்தபோது பருவமழையில் நெகிழ்ந்திருந்த மண்ணில் நெல்மணியான் பாதங்கள் அச்சுப்போல் பதிந்தன. காஞ்சி மரத்தில் அதுவரை உட்கார்ந்திருந்த மஞ்சள் நிற பறவைகள் பறந்தோடின. பறந்தோடும் அந்தப் பறவைகளையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அறவல்லி மேலாடை துணியில் எதையோ முடிந்துகொண்டு வந்தாள். பூங்குழலியின் கோலத்தைப் பார்த்து புரிந்துகொண்டவளாக, சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று சத்தத்தைக் கூட்டினாள். அவள் சத்தத்தைக் கேட்டு காஞ்சி மரத்திலிருந்த ஒற்றை மஞ்சள் பறவையும் பறந்துபோனது. பின் மதியம் என்பதால் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் தங்கள் கிடைகளுடன் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நீலவானத்தில் நிறம் மங்கி அவ்விடத்தில் கருமையேறிக்கொண்டிருந்தது.

அந்தக் கருமையை அந்த நிமிடம் பூங்குழலி மனம் விரும்பியது. இந்தக் கருமையெல்லாம் நீங்கி என் வாழ்விலும் பௌர்ணமி வரும் என்று முதன்முறையாக தன் மனதிலிருந்த நம்பிக்கையை அதே மனத்துள் புகுத்தினாள். இதையெல்லாம் அறிந்தவள் போல,’’பூ உனக்கு பிடிக்குமென இந்த பழங்களை எடுத்து வந்தேன். பொழுதுக்குள் தின்றுவிடு. விடிந்தால் கனிந்துவிடும்’’ என்றாள். பூங்குழலியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அறவல்லி பழங்களை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினாள். கிளம்பும் முன்,’’பூ என்ன நம்பிக்கையில் நீ இத்துனை தூரம் உறுதியாக இருக்கிறாய் என்று தெரியவில்லை என்று சொன்னவள் பூங்குழலியின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

அக்காவின் கைகளை உதறிவிட்டு, ’’அவன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன். புது உலகத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறோம். அதில் நாங்கள் வாழ்க்கையின் அத்துனை மகிழ்ச்சியையும் கண்டுகொண்டோம். அந்த உலகத்திலிருந்து அவனாலும் விலக முடியாது. என்னாலும் விலக முடியாது. அவன் வருவான். அவனால் நான் இல்லாத ஒரு இரவையோ, பகலையோ சகித்துக்கொள்ள முடியாது. சகித்துக்கொள்ளவே முடியாது. அவனுடைய ஒவ்வொரு நினைவிலும் செயலிலும் நான் இருப்பேன். அந்த நினைவின் கனம் தாங்காது அவன் வருவான். என் பெயரை எங்கேனும் கேட்க நேரிட்டால் அவன் முகம், மனம் பூக்கும். அவை பூக்கும் அந்த நொடியில் என் முகம் பார்க்க வருவான். ஆமாம்….அவன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன். புதிய உலகத்தைக் காட்டியிருக்கிறேன்’’ என்று உரக்கச் சொல்லி ஊருக்கே கேட்கும்படி சொல்ல வேண்டும் என நினைத்தவள் சட்டென அமைதியானாள். அறவல்லியின் கைகளை தோளிலிருந்து மெதுவாகத் தட்டிவிட்டாள். அவள் கண்களை உற்றுப் பார்த்தாள். அறவல்லி சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்லி விட்டு வேகமாக போனாள்.

*

“இன்று உன்னை மிகவும் சிரமப்படுத்திவிட்டேனோ பூ”

“இல்லையே….ஏன் அப்படி கேட்கிறாய்”

“இல்லை, வழக்கமாக நீ ஒருமுறைக்கே தளர்ந்துவிடுவாய். இன்று ஏதோ ஒரு மகிழ்ச்சியில் இரண்டு முறை கூடிவிட்டோம். உன்னை சிரமப்படுத்திவிட்டேன் என்று குற்றவுணர்ச்சியாக உள்ளது”

“ஆகா…. அது கூடும்போது தெரியவில்லையா. எல்லாம் முடிந்ததும் கேட்கிறாய். உண்மையைச் சொன்னால் இன்று தான் நான் பூரண மகிழ்ச்சியில் இருக்கிறேன். கர்வமாக இருக்கிறேன்”

“அப்படியா… பூ இப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் உன்னிடம் சொல்லவே ஆசைப்படுகிறேன். அதற்காகவே உனக்காக காத்திருக்கிறேன். நான் நல்ல சிற்பியாக இருக்கலாம். ஆனால் என் வேலையில் கவனத்தை ஊன்றி செய்வதற்கு காரணம் நீதான். என்னை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாய். மிக முக்கியமாக என்னை மதிக்கிறாய். என் பயணம் எப்போதும் உன்னோடு இருக்கவே விரும்புகிறேன். இதை நான் கள் அருத்திவிட்டு சொல்லவில்லை. சுய நினைவுடன் தான் சொல்கிறேன் பூ”

“அரும்பொறையன் காலில் கருங்கல் விழுந்துவிட்டது. ரத்தம் கொப்பளிக்கிறதே” பதற்றத்துடன் கத்தினாள். சிற்பிகளுக்கு உணவு கொடுக்கும் பணிப்பெண்.

அவள் குரலைக் கேட்டு ஓடிவந்த தலைமைச் சிற்பி அரும்பொறையன் காலைப் பார்த்தான். காலில் கல் இல்லை; உளி இருந்தது. கூர்மையான அந்த உளி தான் அரும்பொறையன் கால்களை பதம் பார்த்திருந்தது. ரத்தம் வழியுமிடத்தில் சோறு கொடுக்கும் பணிப்பெண் எதோ தழையை கைகளாலேயே கசக்கி சாற்றை விட்டாள். ரத்தம் வெளியேறுவது கொஞ்சமாக நின்றது. அரும்பொறையன் கண்கள் நிறைந்து வழியக் காத்திருக்கும் குளம்போல இருந்தது.

தலைமைச் சிற்பி, ஒரு தந்தையின் தாய்மையையுடன் அரும்பொறையன் தலையைத் தடவி,’’இப்படி ஒருமுறை கூட நிகழ்ந்தது இல்லையே. மனம் உன்னிடம் இல்லை. மனம் உன்னிடம் இருந்தால் மட்டுமே கவனம் இருக்கும். கவனம் இருக்கும் இடத்தில் தானே கலை உயிரோடு இருக்கும் என்று தெரியாதா?’’ என கேட்டபோது, அரும்பொறையன் கண்களின் குளம் உடைந்து வழிந்தது.

தலைமைச் சிற்பியிடம் உள்ள பக்தியில் அதிகம் பேசவே பேசாத அரும்பொறையன்,’’நான் அகரம்புதூர் செல்ல வேண்டும். என் கவனத்தை , அங்கேயே விட்டுவிட்டேனோ என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. முதன்முறையாக உளி என் கை நழுவியிருக்கிறது. சிந்தை முழுதும் வேறேதோ இருக்கிறது. அது இயல்பாக இயங்க விட மறுக்கிறது. மனமும் உடலும் புத்தியும் எதையோ தேடுகிறது. இது என் வாழ்நாளில் இதுவரை ஏற்படாத அனுபவமாக இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு மனம், உடல், புத்தி இது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டுமல்லவா. எனக்கு இப்போது அப்படி இல்லை. என்னை ஏதோ துயர் சூழ்ந்திருக்கிறது.

முதன்முறையாக தனிமையின் கனம் தாளமுடியவில்லை. வெடித்து அழ வேண்டும் போலிருக்கிறது. நான் அகரம்புதூர் செல்ல வேண்டும்” சொல்லிக்கொண்டே தலைமைச் சிற்பியின் தோள் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதான். தலைமைச் சிற்பிக்கும் அந்த அழுகையின் கனம் தாங்காமல் அழுகை வந்தது.

“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்” – மயங்கிய கண்களும் மிகத் தீர்க்கமான குரலிலும் பூங்குழலி சொன்ன வார்த்தைகள் உயிர்பெற்றுக்கொண்டிருந்தன.

“திரும்பி வரும் வரை இதே ஊரில் இருப்பேன்”

“நான் சிற்பி. என் கலையை தவிர எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு அழகான வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை பூ. எப்போதும் நீ வேண்டும் எனக்கு…நிரந்தரமாக.”

“புரிகிறது…உனக்கு நான் வேண்டும் என்பது புரிகிறது. கூடலின் மகிழ்ச்சி உச்சத்தில் இப்போதெல்லாம் என் பெயரை நீ உச்சரிக்கிறாய். உன் பழைய ரணங்களை நான் ஆற்றியிருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வமே. காதலென்பது பழைய காயங்களை ஆற்றுவதும் புதுக்காயங்களை உருவாக்காமல் இருப்பதும் தான்”

முதன்முறையாக பூங்குழலி மனதில் தோன்றியதை அப்படியே சொல்லாமல் வெறும் சிரிப்புடன் அவன் தலைகோதி முத்தமிட்டாள்.

***

நாச்சியாள் சுகந்தி -இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அரசியல், சினிமா, இதழியல் என இவர் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார். இவரது படைப்புகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்