Home Blog Page 32

இரா.கவியரசு கவிதைகள்

0

நைட்டியின் முத்தங்கள்

பறந்து வந்த நைட்டி
மழையீரத்துடன் அணைக்கிறது
ஆக்ஸிலேட்டர் திருகியபடி
அவசர ஸ்கூட்டியில்
கொதித்துக் கொண்டிருந்த
யூனிஃபார்ம் தங்கையை
யூனிஃபார்ம் அக்காவை
யூனிஃபார்ம் அம்மாவையும்

மொட்டை மாடியிலிருந்து
ஓடிவந்தவள்
மன்னிப்பு கேட்டுவிட்டு
ஒவ்வொருவர் கன்னங்களையும்
தட்டிக் கொஞ்சுகிறாள்
ஏற்கனவே
அந்த நைட்டி
குளிராக முத்தமிட்டதைப் போல.
*

மயிர் கூச்செறியும்

கூச்செறிந்து நின்றது மயிர்
ஆழத்திலிருந்து
ஒவ்வொரு முத்தாய்
திக்கித்திக்கி கோர்ப்பவன்
இல்லாத படிக்கட்டுகளில்
உருண்டு கொண்டிருந்தான்
ஆழத்தைக் காய்ச்சி
உச்சந்தலையில் கொதிக்க விட்டவள்
மொத்தமாகத் துப்பினாள்
தெறித்து அலறிய சிலம்பு
“மயிர் பிடுங்கி” என்றது
இன்னும் இன்னும்
கொதித்த குழம்பிலிருந்து
துள்ளிக் குதித்த
பரல்களெங்கும்
முன்னெப்போதும்
பிறந்திராத வார்த்தைகள்
கொதி பொறுக்காது
நெஞ்சழிந்த போது
அரற்றியது கவிதை
“மயிர் பிடுங்கி
மயிர் பிடுங்கி”.
*

சிரிப்பாக மாற முடியாதவன்

சிரிப்புக் கோட்டைக்குள்
புகவே முடியவில்லை
மோதி
முகம் உடைந்து
தோற்றுத் திரும்புகிறான்
சிரிப்பை அடுக்கி
சிரிப்பைப் பூசி
வானாதி மாடங்கள் எழும்பும் வண்ணம்
கட்டிக்கொண்டே வளருகிறார்கள்
புத்திளம் பெண்கள்
நின்றாடும்
சிரிப்பைப் பிடுங்கி
சரித்து விடுவதற்காக
அடிவாரத்தில் காத்திருக்கிறான்
கோட்டையின் உச்சியிலிருந்து
பறந்து செல்லும் சிரிப்பு
ஆதி சூரியனின் வாயில் அமர்ந்து
கொக்கரிக்கிறது.

***

இரா.கவியரசு – அரசுப்பணியில் இருக்கும் இவர். தற்போது திருத்தணியில் வசித்துவருகிறார். அண்மையில் நல்ல கவனம் பெற்ற இவரது கவிதைத்தொகுப்பு நாளை காணாமல் போகிறவர்கள். மின்னஞ்சல்: rajkaviyarasu@gmail.com

என் படைப்பில் என் நிலம் – பாலைவன லாந்தர்

0

பிறந்துவிட்டதால் மட்டுமே ஒரு நிலம் எனக்கானதாகிவிடுமா என்ன? அல்லது என்னைப்போன்றே சூழல் காரணமாக சென்னையில் வசிக்கும் எண்ணற்ற மக்களுக்கு எதுதான் நிலம் ஆகும்? காயல்பட்டினத்தின் அரசு மருத்துவமனையில் இன்றும் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தின் பாழும் வேரொன்றில் சர்வ நிச்சயமாக என்முதல் அழுகுரல் பதிவாகியிருக்கும். இந்த உலகத்தால் பெரிதாக வரவேற்கத்தயங்கியும் என் அன்னையின் பிடிவாதத்தாலும் நம்பிக்கையாலும் கிடைத்த பிறப்பு இது.

மூர்க்கத்தனமாக என் மண்ணை நான் முகர்ந்திருக்கிறேன் (அது சுவையான கதை ). மணலோடும் புழுதியோடும் விளையாடிய தலைமுறையில் இருந்திருக்கிறேன். மழைத்துளிர்த்த மண்ணை அள்ளித்தின்றுருக்கிறேன். பெயர்ந்த பானையோடுகளின் ருசி எந்த உணவிலும் இனம்காண இயலாதது. பால்யத்தின் முதல் படிப்பினையாக காலம் பிரிவைக்கற்றுத்தந்தது. பிரிவென்றால் எதுவும், யாரும் நிரந்தரமில்லை என்ற மந்திரத்தோடுக்கூடிய பிரிவு அது. சிறகு முளைக்காத பறவையின் தலையில் வைத்த பனங்காயைப்பொன்ற பாரத்தோடு வாழ்வு சென்னைக்குத் தாவியது. எந்த நிலம் என் மனதைப் பாறாங்கல்லாகக் கனக்கச்செய்ததோ அதையே உயரளவு நேசிப்பேனென நினைத்துப் பார்க்காத பருவம். நியாயமாக நான் சென்னையைப் பற்றித்தான் எழுதியிருக்க வேண்டும் ஆனால் நான் பிறந்ததுமான காயலைப்பற்றி பகிர்கிறேன்.

பூந்தளிர், இரத்தினமாலா, அம்புலிமாமா, சிறுவர்மலரில் தொடங்கிய வாசிப்பு. வெகு இயல்பாக ஆராய்ச்சிக்கட்டுரைகளில் கவனத்தைச் செலுத்த இந்த சமூகத்தின்மீது எனக்கிருந்த கேள்விகளே காரணமாக இருந்தது. கேள்விகளை என்னிலிருந்தே தொடங்கினேன். நான் யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? பிறகு எங்கே போகப்போகிறேன்? யாருக்கான வாழ்வு யாருக்கான பாதை இது? தோண்டத் தோண்டத் தீராக்கேள்விகள். கிணறு வெட்டக் கிளம்பிய பூதம் இன்னமும் என் பிடரியை விட்டு இரங்கியபாடில்லை.

காயல்பட்டின வாழ்வியல் பெரும்பாலும் மற்ற தளங்களின் வாழ்வியலிலிருந்து வேறுபட்டது. இஸ்லாமியக் கொள்கையைப்பின்பற்றும் மற்ற தென்மாவட்டங்களுக்கும் காயல்பட்டினத்திற்குமிடையே திருமணம், தொழில், கல்வி சார்ந்த பழக்கங்கள் வேறுபாடானதுதான். என் சிறுபிராயத்தில் காயலை ஒரு தனித்தீவென்றே கருதும் அளவிற்கு உணவு, வீடுகள், சாலைகளின் அமைப்பு, வட்டார மொழி இப்படி எல்லாவற்றிலும் காயலர்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கும். திரையரங்குகள், காவல் நிலையம் இல்லாத ஊரில் மாநகராட்சிகளுக்கு சற்றும் சளைத்திடாத பெண்களின் வாழ்வு, கல்வி, சுதந்திரத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.

இரசாயணக்கழிவுகளால் ஆண்டு தோறும் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் ஆரோக்கியக் குறைபாடும் சூழ்ந்திருக்கும் காயலுக்காக மட்டுமே குரல் கொடுப்பதை விடவும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் இயற்கை வளங்களைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்க ஆக்கிரமிப்புக்காக கொடுக்கப்படும் குரலாக எனது எழுத்துக்கள் பயன்பட வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்துகிறேன். காயல்பட்டினம் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக இருந்தது. பாண்டியர்களின் அரசவைப்புலவராக எங்கள் முப்பாட்டர் வரகவி காசிம்புலவர் இருந்தார். சரித்திரத்தின் மிக முக்கிய இடத்தைப்பெற்றுள்ள மண்ணில் பிறந்ததால் தமிழுக்கும் கவிதைக்கும் எனக்குமான உறவு விரிவுரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

நம்மைச்சுற்றிலும் நடக்கும் அரசியலுக்கு இன்றைய சூழலில் பன்முக அவதாரம். ஓரிரவில் வெற்றுக்காகிதங்களாகிய ரூபாய் நோட்டுக்களைப் போல நிரந்தரமற்ற சூழலில் ”நழிஜத்” என்னும் பெயரில் உண்டு, கேட்டு, கண்டு, உறங்கும் வாழ்வை மட்டுமே வாழ நான் தயாராகவில்லை. ”பாலைவன லாந்தர்” எழுதிவிட்டால் மட்டும் இவையெல்லாம் மாறிவிடுமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை தான். ஆனால் எண்ணற்ற லாந்தர்கள் இணையும் ஒரு புள்ளியில் விடிவுக்கான மைக்ரோ ஒளித்தோன்றினாலும் எனக்குத் திருப்தி கிடைத்துவிடும்.

பொதுவாக இஸ்லாமிய வாழ்வியலைக் கதைகளாக எழுதினாலும் திரைப்படமாக எடுத்தாலும் முழு முற்றிலுமாக உள்ளடுக்குகளைக் காட்டிவிட முடியாது. கருப்பு வெள்ளைக் காலந்தொட்டு இஸ்லாமியப் பெண்கள் என்றாலே புருவங்களை கறுப்பு மையால் சேர்த்துவிடுவதைப் பார்க்கும் போது சிரிப்பு வரும். பள்ளிக்காலத்தில் வடமாநில ஹிந்தி நண்பர் தெளிவாகத் தமிழ் பேசியதை ஆச்சரியமாகப்பார்த்து கேட்டேன் “ நீங்கள் ஹெய்ன் ஹெய்ன் என்று சொல்லவில்லையே” அவரும் சிரித்தபடியே “எல்லாம் சினிமாக்காரங்க செய்தது மற்றபடி நாங்கள் நிலாவே தமிழ் பேசுவோம்” என்றார். யாரோ ஒருசிலரின் தவறானப்புரிதலை “போலச்செய்யும்” மற்றவர்களும் பின்பற்றியதால் வந்த பிழைகள் இவை.

இலக்கியத்தில் மிகமுக்கிய எழுத்தாளரான ”இஸ்மத் சுக்தாய்” அவர்களின் கதைகளை வாசித்துவிட்டு இஸ்லாத்தில் அனைத்து பெண்களின் நிலையும் அவ்வாறுதான் இருக்குமெனப் பிறர் தீர்மானிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆயிரத்துத் தொள்ளாயிரங்களில் குடும்பங்களின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை வீட்டின் மூத்த பெண் உறுப்பினர்கள் எடுத்த வரலாற்றை நாம் அறியவேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிக்கொடுத்த பெண்களும், கலந்துகொண்ட பெண்களும் ஏராளம்.

வைக்கம் பஷீரின் நிலமும் தாமிராவின் நிலமும் அர்ஷியாவின் நிலமும் என் நிலமும் ஒன்றையொன்று தொடர்போடிருக்கும் வெவ்வேறு நிலங்கள். அரசியல் சுயலாபங்களுக்காகவும் சிறுபான்மை இனத்தின் மீதான வெறுப்பினாலும் இஸ்லாமிய பெண்களின் ஆடைகுறித்து கல்வியறிவைக்குறித்தும் தொடர்ந்து வைக்கப்படும் தெளிவற்ற விமர்சனங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறேன் காலம் அனுமதித்தால் இன்னமும் விரிவாக நிச்சயமாக எழுதுவேன்.

பாலைவன லாந்தர், பிறப்பு காயல்பட்டினத்தில், வளர்ந்தது சென்னையில். கவிஞர், ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. நான்காவது கவிதைத் தொகுதியும் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. தொடர்புக்கு palaivanam999@gmail.com

கடவுளா..! சாத்தானா..!

0

அக்னி பிரசாந்த் வீ

ம்மா பொண்ணு உனக்கு வயசு ஒரு முப்பது இருக்குமா‌‌.. ! எனப் பல ஆண்களின் கேள்விக்கு நான் ஆமோதிப்பேன்.

ஆனால் உண்மையாக என்னுடைய வயது நூற்றியம்பது அல்லது இருநூறு இருக்கலாம். எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல.. தலைவலியா இருக்குது.. பசி எடுக்குது.. இரத்தப்பசி‌‌.. இது ராத்திரி ஒரு மணிக்கு வர பிரச்சனதான். எப்பவுமே ஸ்டாக் வைச்சிருப்பேன். மூனு நாளா ஹாஸ்பிட்டல் பக்கமே போகல. டாக்டரையும் பார்க்கல

“ஹலோ டாக்டர்.. மனோ சித்திரன்”

75 வயதுடைய கிழவனின் குரல் மறுபக்கத்திலிருந்து “ஆமா.. சொல்லு..”

“இன்னிக்கு ராத்திரி வரேன் டாக்டர்.. என இடுப்புல கத்தி ஆழமா இறங்கிருக்கு. சில்வர்னு நினைக்கிறேன். உயிர் போற மாறி இருக்கு”

“……போய் தொலையட்டும்”

“டாக்டர்..?!”

போனை கட் செய்தார்.

சற்று நேரத்துக்கு முன்பு நடந்த கத்திக்குத்து. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் என் தினசரி வாழ்வில் சகஜம்தான். ஆனால் வெள்ளி உலோகம் கொண்ட கத்தி!.. ஐயோ நான் குழம்பிருக்கிறேன்.. அது என் உயிரைப் பறிக்கும் என்று கொல்ல வந்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஏவி விட்டவனுக்குத் தெரியும்.

யாரது!?..

நான்கு மாதங்களாக பலபேர் என்னை வேட்டையாட வருகிறார்கள். எங்கிருந்தாலும் மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். எல்லாருடைய கையிலும் வெள்ளிக்கத்தி.. மறைந்து மறைந்து தாக்காமல் ஓடுகிறேன். என் இரவுகள் இரத்தமும் சதையுமாய் போய்க்கொண்டு இருக்கிறது .

பலரும் என்னை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆமாம்..! வெட்டி வெட்டி ஞாபகம் வருகிறது.

“இப்ப வந்திருக்கறது நகை கட ராப்பரி கேஸூ… இவன் பேரு கூட…”

என்னை பழைய தார் டின் டப்பாவில் தூக்கி எறிந்தான். ஆறு அடி ஆஜானுபாகுவாய் இருக்கும் ஆள். அவன் கைகள் என் முகத்தை விட பெரிசாக இருந்தது. சரியாகப் பதம் பார்த்து மூக்கில் குத்தினான் .

“என்ன பாரு! இருபத்தி அஞ்சு வருஷம் பழி.. வெறி.. டீ.” எனக் குத்துவதை நிறுத்தி எழுந்து அங்கும் இங்கும் தான் கொண்டு வந்த சில்வர் கத்தியைத் தேடினான். கிடைக்கவில்லை

இவன் பேரு சரியா ஞாபகம் வரல.. ஆனா இந்த மூதேவி கொள்ளை அடிக்கப்போன இடத்துல ஒரு கிழவன கொல பண்ணிட்டான்.. இவனே மாட்டிருப்பான். அவ்வளவு மட்டமான ராப்பரி ப்ளான். இடையில நான் வந்துட்டேன்.. ஏன்னா அன்னிக்கு அந்த கிழவன நான் வேட்டையாடறதா இருந்தது..

அவன் மறுபடியும் வந்து, “உன்னால ஜெயிலுக்கு போயி… பொண்டாட்டி போயி… எல்லாம்” என மறுபடியும் குத்தினான். மீண்டும் அங்கும் இங்கும் திரும்ப சில்வர் கத்தி அவன் கண்களில் பட்டது. எழுந்து எடுக்கப் போனான்

இரத்தத்தைத் துப்பி.. “இந்த பரதேசி ஜெயிலுக்கு போனதுக்கு வேணா நான் காரணமா இருக்கலாம்.. அவன் பொண்டாட்டி எதுத்த வீட்டுக்காரனோட ஓடிப்போனதுக்கு நான் எப்படி காரணமா இருக்க முடியும் .. இவனுங்களுக்கெல்லாம்.. சு… (இரத்தை துப்பி‌)… புத்தியே இல்ல”

நெருங்கி வந்தவன் என் முகரையிலே விளாசினான். சுழன்று விழுந்தேன்.. என்னால் முடியாதது போல் படுத்துக் கிடந்தேன்.

ஆறடி ஆள்.. “வா.. எழுந்து வாடி… இன்னிக்கு.. பாத்துறுலாம்..”

நான் மெல்ல.. இல்லை என்பது போல நின்றேன்.

அவன் அலறியபடி ஓடி வந்தான். நான் எதுவும் செய்யாமல் அப்படியே நிற்க, வந்த வேகத்தில் என்னை இடித்தான். இருவரும் பில்டிங் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தோம்.

தரையை நெருங்கும் முன்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

“ஆ..! இவன் பேரு ‘மந்தபுத்தி’”. சொன்ன அடுத்த நொடி, சொத்தென இருவரும் தரையில் விழுந்தார்கள்.

என் விழி முழு பௌர்ணமி நிலவை நோக்கி இருந்தது. இடுப்பில் கத்தி சொருகி இருந்தது. மந்தபுத்தி இரத்தத்தைக் கக்கி துடித்துக்கொண்டு இருந்தான்.

மெல்ல எழுந்து கழுத்து நெட்டையை முறித்து அவனை இருளில் இழுத்துச் சென்றேன்.

மிருகம் தண்ணீரை வேகமாக நக்கி எடுப்பது போல் சத்தம்.

‘கொடக் கொடக் கொடக்..!!’.

எல்லாரும் என்னை பலவிதமா நம்புவார்கள். சூப்பர் ஹீரோ, சூனியகாரி, கடவுள், சாத்தான், காட்டேரி கில்லர். ஆனா சரித்திரத்துல எங்களுக்கு வைத்த பெயர் ‘vampire’ (வைம்பயர்). எங்க இனத்துல நான்தான் கடைசி.

இரத்த வேட்கை தணிந்த பிறகு தன் உதட்டில் ஒட்டிருக்கும் இரத்தத்தைத் துடைத்து, பின் தன் நீண்ட பற்களுக்கிடையில் மாட்டிருக்கும் சதையை தன் நகத்தால் எடுத்து, இருளில் மறைவது என்னுடைய சுபாவம்.

இருள் உனது பலம். இருளின் காற்றில் கரைந்து மின்னலாய் செல்பவள் நீ. இருட்டில் கூர்ந்த கண் பார்வையுடனும் ஓசைகளையும் பிரித்து கூர்ந்து கேட்கும் செவித்திறனும் உடையவள் நீ!

இருள்! இருள்! இருள்! என்று மட்டுமே உனது சுவாசம்.

பகலில் வெளியே வராதே, சூரிய வெளிச்சம் உன் உயிரை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கும். வெள்ளி உலோகம் அதுவும் உனக்கு சாத்தான். மகளே எப்படியாவது தப்பி ஓடு..! தப்பி ஓடு..! தப்பி ஓடு!. என ஊர் மக்கள் சூழ்ந்து வரும்போது, என் அப்பா சாவை நெருங்கும்போது சொன்ன வரிகள். இப்பொழுது உயிர்போகும் சமயத்தில் என் காதில் இரைந்து கொண்டே இருக்கிறது‌.

அவன் ஒரு முட்டாள்! நான் இத்தனை காலம் வாழ்ந்திருக்கக் கூடாது. என் பசிக்காக எத்தனை உயிர்கள். ஒவ்வொரு நாளும் என்னைக் கொல்லும் குற்றவுணர்வு. நான் இந்தக் கத்திக்குத்தோடு சாகத்தான் வேண்டும்.

இல்லை.. கடைசியாக ஒரே ஒரு உயிர் எடுக்க வேண்டும்… அந்த கர்ப்பிணிப் பெண்.. அவளைக் கொன்றுவிட்டால் போதும்.. நான் செத்து விடுவேன்.

ஆ..! கர்ப்பிணிப் பெண்.. கொடூரம்..!

நான் சாத்தான்..?!

இரவு ஒன்று .. பழைய பெண்டுல கடிகாரம் ஓசையை எழுப்பியது.

டாக்டர் மனோ சித்திரன் வயது முதிர்வால் இறப்பை எதிர்பார்த்துப் படுக்கையில் இருந்தார். அறை ஓரமாக இருண்ட இடத்தை நோக்கி..

“வா வெளியே!” என்றார்.

என்னை அவனால் மட்டுமே மோப்பம் பிடிக்க முடியும். மெல்ல இருளிலிருந்து விலகி வெளியே வந்தேன்.

டாக்டர் “உன்ன தவிர எனக்கு யாரு இருக்கா‌‌.. கரெக்ட்டான நேரத்துல கடவுள் சாத்தான அனுப்பி வைச்சிருக்கான்” எனச் சிரித்தார்.

கிட்ட நெருங்கி, “உனக்கு ஒன்னு ஆகாது..” எனத் தூக்க முற்பட்டேன்.

டாக்டர் இல்லை.. இல்லை என்பது போல நகராமல் இருந்தார். பின் படுத்தபடியே கைகள் நடுங்க என் இடுப்பில் கை வைத்து கத்தியை எடுக்க முயன்றார். முடியவில்லை.

“கத்திய வெளியெடுத்தா.. உன் உயிர் போயிரும்.. ஆனா மறுபடியும் உயிர்ப்பிக்கலாம்.. அதுக்கும் மாற்று மருந்து மனுச இரத்தம் தான்.. என்னைய எடுத்துக்கோ..” எனத் தலையைத் திருப்பிக் கழுத்தைக் காட்டினார்.

“டாக்டர்..!”

“அம்பது வருஷத்துக்கு முன்னாடி உனக்கு சத்தியம் பன்னினேன் உன்ன மனுசனா மாத்துறேன்னு. என் ஆராய்ச்சில எதுவும் பலன் அளிக்கல.. உனக்கு ஞாபக இருக்கான்னு தெரியல‌. உன்ன மனுஷனா மாத்துலன்னா என் உயிர் எடுத்துருன்னு சொன்னேன்”.

சற்றும் தாமதிக்காமல் “ஞாபகமிருக்கு..” எனச் சிவந்த கண்களுடன் பசியோடு சொன்னேன்.

டாக்டர் சிரித்தபடி.. பட்டென என் இடுப்பில் இருந்த கத்தியை உருவ, சற்றும் தாமதிக்காமல் கழுத்தைக் கடித்து அவர் இரத்ததை உறிஞ்ச ஆரம்பித்தேன்.

அன்று இரவு மழை பெய்யாத மின்னல் வெட்டில் டாக்டரின் உயிர் பிரிந்தது.

பசி அடங்கிய பின் எப்பொழுதும் போல் உடலை அடக்கம் செய்ய கடற்கரைக்கு டாக்டரை தூக்கிச் சென்றேன்.

பசி.. இரத்த ருசி எடுத்துவிட்டால் பித்தம் தலைக்கு ஏறிவிடும். அந்தச் சுவை வருடக்கணக்கான தண்ணீர் உதட்டில் படாத தாகத்தை உண்டாக்கும். நாக்கு தாண்டவமாடும் மடமடவென உறிய .. உறிஞ்சி எடுத்த பின் இனி வாழ்வதற்கான அர்த்தம் கிடைத்தது போல்.. அய்யோ..! அந்த சுகம் கிடைக்கும்.

இது உணர்வு மட்டுமல்ல, உயிருடன் இருப்பதற்கும் என் குறிக்கோள் அடைவதற்கும் இருக்கிற பசி. டாக்டர் மனோ சித்திரன் போல் என்மீது அன்பானவர்கள் என்னிடம் இறக்கத்தான் செய்கிறார்கள்‌. அவர்களை எல்லாம் நிலவொளியில் நடுக்கடலில் எடுத்துச்சென்று போட்டுவிடுவேன். என் துக்கம் போக நிலவை என் தோழியாக பாவித்துப் பாவ மன்னிப்பாய் பாட்டு பாடுவேன். கடலின் ஓசையும் காற்றும் கூட சேர்ந்துகொள்ளும்.

இதுவரைக்கும் எத்தனையோ பேர்.. நான் கணக்கு வைத்திருக்கவில்லை. இப்படி நான் ஒரு ஜந்துவாக பூமியில் இருக்கிறேனே.. மனிதர்களிடமிருந்து தப்பாமல் வாழ்ந்துவிட முடியுமா! நான் சக்தியை உபயோகிக்கும்போதோ, கொலை செய்யும் போதோ பார்த்தவர்கள் நிறைய பேர். அவர்களுக்கெல்லாம் நான் கடவுளாகவும் சாத்தானாகவும் இருந்திருக்கிறேன். பல பேருக்கு என்னுடைய இருப்பே மர்மம்தான். அப்படி அரசல் புரசலாகப் பரவின்னாலும் பேயையும் கடவுளையும் நம்பாதவர்க‌ள் அச்செய்தியை கேலிப்பேச்சாய் முடக்கி விடுவார்கள். என் காவல் தெய்வமே அவர்கள்தான்.

ஐம்பது வருடத்திற்கு முன்புதான் நகரத்தில் வசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பெல்லாம் காடுதான் வாழ்க்கை. வேட்டையாடுவதற்கு மட்டும் நகரத்திற்கு வருவேன். பின் காடு சலித்தது..! நகரம் பிடித்தது..!

நகரத்தில் மனிதனாக வாழ பணம் என்கிற காகிதம் வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். எனக்கு தெரிந்த வேலையெல்லாம் கொல்றதுதான். ஆதலால் கான்ட்ராக்ட் எடுத்தேன். இரத்தக் காட்டேரி என்பதை மறைத்து பெண்ணாகப் போனேன். அவர்களிடத்தில் எழுந்த ஏளனச் சிரிப்பால் வேலை வராமல் இருந்தது‌. அத்தருணத்தில் உதவியது டேவிட்.

டேவிடிற்கு என் ரகசியம் தெரியும். அவனிடம் மௌனமும் சமபந்தமில்லாத நேரத்தில் ஒரு அசட்டு சிரிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். அது எனக்கு எப்பவுமே பிடித்தமானது. அவனுடைய இருபது வயதில் எனக்கு கைகொடுத்தவன். இன்றும் அதே நம்பிக்கையோடு பல கான்ட்ராக்ட் கில்லிங் கொடுத்துக் கொண்டு இருக்கிறான். என்னை ஒரு ஜந்துவாக அவன் பார்க்கவில்லை சாத்தானாகப் பார்த்தான். அவனுக்கு சாத்தான்தான் கடவுள். ஆகவே நான் அவனுடைய கடவுள்.

ஆனால் நான் சகோதரன் பிள்ளை நண்பன் என எல்லாமுமாக அவனை அணுகுபவள். எனக்கு உறவு என அவன் மட்டும்தான்.

மனித வேலையாக கில்லிங் பண்ணுவது சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். நான் கொல்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்று தெரியாது‌. எப்படி செய்து முடிக்க வேண்டும் என்கிற பிளான் இருக்கிறதோ அதேபோல் செய்துவிடுவேன். சில நேரங்களில் டார்கெட்டின் புத்திசாலித்தனத்தால் நான் சொதப்பி விடுவேன். அந்நேரங்களில் சண்டையிடுவது போல் எதிர்கொள்ள வேண்டிருக்கும். காண்ட்ட்ராக்டில் இருக்கும் கட்டுப்பாடு என் இரத்தப் பசியையும் பலத்தையும் உபயோகிக்கக் கூடாது. சாதாரண மனிதனைப் போல் அவர்களைக் கொல்ல வேண்டும். ஆனால் இரத்த வேட்கையை பல சமயங்களில் என்னால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.

அப்படி ஒரு சொதப்பல் சம்பவத்தில் மற்றொருவன் எனக்கு அறிமுகம் ஆனான். என்னுடைய ரகசியத்தைத் தெரிந்த இரண்டாவது ஆள்.

அது ஒரு அமாவாசை இரவு. மழை பெய்யாத மின்னல் வெட்டு வானத்தில் மின்னியது.

டார்கெட்டை எதிர்கொள்வது கடினமாக இருந்தது.

இறுதியாகப் பிடியில் மாட்டினான். அவனை இரும்புக் கம்பியால் கொலை செய்வதற்கு முன் அவன் கண்களைப் பார்த்தேன்.

பொதுவாக கொலை செய்யப்படுபவர்களின் கண்களில் பயம் இல்லையென்றால் அவன் அதிர்ஷ்டத்திற்கு இரு வாய்ப்பாய் அவன் எதிர்பார்க்காத இரண்டு விஷயங்கள் அங்கே நடக்கும்.

ஒன்று என் முகத்தைக் காட்டினேன்.

“பொண்ணா!?” என்பது அவனுடைய அதிர்ச்சி.

மற்றொன்று “உன்னோட கடைசி ஆச என்ன?”

அவன் என்மேல் துப்பி.. “உன்ன கொல்லறது”

துப்பிய இரத்தம் என்னைக் கிறங்கடித்தது.. இரத்த வேட்கையைத் தூண்டியது. இருந்தாலும்..

அவனிடம் இரும்புக் கம்பியைக் கொடுத்து. “என்னை கொல்!” என்றேன்.

முடியாதவனாய் எழுந்தவன் என் பிடரிமயிரைப் பிடித்து பின்னிழுத்தபடி நிமிர்ந்தான்.

“என் கடைசி ஆச என்னன்னு கேட்க மாட்டாயா..?” என்றேன்.

அவன் “முட்டாளா.. நானு..” இரும்புக் கம்பியால் என் இடுப்பில் சொருகிய பின் “இப்ப சொல்லு.. உன் ஆச என்ன..”

முன்பு என் முகத்தைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு அடுத்து என் கூர்மையான கடைவாய் பற்களைக் காட்டினேன். அவனது பயம் கண்களில் தெரிந்தது..

அப்பொழுது “என் ஆசை.. உன் இரத்தம் தான்” என நொடி தாமதிக்காமல் கழுத்தைக் கடித்து உறிய ஆரம்பித்தேன்.

அந்த மின்னல் வெட்டில்‌ சன்னல் ஓட்டையின் வழியாய் என்னை எவனோ ஒருவன் கவனித்தது கூட தெரியாமல் இரத்ததைக் குடித்துக்கொண்டு இருந்தேன். ஆனால் சில நொடிகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட காரின் சத்தம் என் சந்தேகத்தைத் தூண்டியது‌.

அந்தக் காரை பின்தொடர்ந்து போய் அவன் இருப்பிடத்திற்கு நுழைந்து அவனைக் கொலை செய்வதற்காக உள்ளே பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் புகைப்படங்கள், வைம்பயர் பற்றின புத்தகங்கள், இரத்தம், பிணங்கள் இன்னும் பல எனக்குத் தெரியாத ஆராய்ச்சிப் பொருட்களெல்லாம் அந்த இடம் முழுவதும் நிறைந்திருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டு இருக்கையில் உள்ளே வந்தான். என் இருப்பை அவன் கவனிக்கவில்லயா இல்லை அவனது கவனமின்மை எனக்காக அவன் காத்துக்கொண்டு இருப்பதைக் குறிக்கிறதா?.

உள்ளே வந்தவன் மெல்ல என் முன்னே இருக்கும் பிரேதத்தை அறுக்கத் தொடங்கினான். நான் இருள் புகையாய் மின்னல் வேகத்தில் அவன் முன் நின்றேன்.

“என்னை பற்றி எப்படி உனக்கு தெரியும்?”

“நான் டாக்டர் மனோசித்திரன்” எனக் கை கொடுத்தான்.

நான் அவனைத் தூக்கியெறிந்தேன்.

அவன் முடியாதவனாக எழுந்து “பதினைஞ்சு வயசுல உன்ன முத தடவ பார்த்ததுல இருந்தே நான் பையத்தியக்கார பட்டத்தோட தான் சுத்திட்டு இருக்கேன்.. உன்ன தேடாத இடமில்ல, படிக்காத புத்தகமில்ல.. ஆஹா..! பசிக்கு மனித இரத்தம்.. மரணமில்லா வாழ்க்கை..! சாகாவரம்..” என மெய் மறந்தான்

நான் என் கூர்மையான பற்களைக் காட்டியபடி “சாகாவரம் ஒரு சாபம்..! மந்த புத்திக்காரனே!”

“அப்படினா அந்த சாபத்தை நான் உடைக்கிறேன்.”

“என்ன.. என்னை கொல்லறதுக்கு வழிய கண்டுபுடிக்க போறியா..?”

“இல்ல.. மனுசனா மாத்துறேன்.. இத்தன வருஷமா இரத்தத்த குடிக்கற சாத்தானா இருக்கற நீ.. மனுச வாழ்க்கையின் மேல ஆச இருக்காதா என்ன..”

“நீங்களெல்லாம் மந்த புத்தி பயலுங்க.. மந்த புத்தி பயலுங்க.. வாழ்வை அனுபவிக்க தெரியாதவனுங்க.”

“ஹா.. எல்லா வாழ்வும் ஒன்று தான்.. இக்கரைக்கு அக்கரைக்கு பச்சை.. ஆனா மாற்றம் எடுக்க ருசி வேட்கை இருக்குமே ”

“சரி.. அது எப்படி உன்னால் முடியும்”

“ஆராய்ச்சி செய்கிறேன். உன் இரத்தம் வேண்டும்”

“முடியாது.. என் இரத்தத்தால் இன்னொரு வைம்பயர் உன்னால் உருவாக்க முடியும். அப்படி செய்ஞ்சினா.. உன்னையும் அதையும் சேர்த்து கொல்வேன்”

“ஏன்?”

“என் அப்பன் சொன்னது இன்னும் காதுலே இருக்கு.. நான் வாழ வேண்டுமாம்.. முடிவே இல்லாமல் எடுக்கற பசிக்கு நான் கொல செய்து ஆகணும் … கெட்ட ஆன்மாவா இருந்துதான் ஆகணும்…”

மனோ சித்திரன், “அதனால என்ன?”

“கெட்டவங்க முழு வாழ்க்கையும் அப்படியே இருக்கறவங்களுக்கு பிரச்சன இருக்காது.. எப்ப நல்லது பத்தி யோசிக்க ஆரம்பிக்கறமோ.. குற்றவுணர்வு உண்டாகும்.. மண்ட சூடு பிடித்து பித்தமாய்.. மேலும் மேலும் இரத்தம்.. கொலை.. கணக்கில்லை..! அதனால என் இரத்தத்தை கொடுக்க மாட்டேன்”

“என் மேல் நம்பிக்கை வை… கண்டிப்பாக இன்னொரு வைம்பயர் என் கையால் உருவாகாது. உன் இரத்ததை கொடு”

“கொடுக்கிறேன்.. இந்த முயற்சி சரியா வரல்லைன்னா..”

மனோ சித்திரன்.. “என் இரத்ததை எடுத்துக்கோ?..”

வெடித்துச் சிரித்தேன்.

இப்பொழுதும் சிரிக்கிறேன்.. அவனது நம்பிக்கை துரோகமா.. இல்லை நான் ஏமாளியா..!

புரியாமல் சிரிக்கிறேன்..! எங்கே அந்த கர்ப்பிணி பெண்.. ஆ..!

நான் கடவுள்…!

அவளைத் தேட டேவிட்தான் உதவியாக வேண்டும்.. அவனது டெய்லர் கடைக்கு போகவேண்டும். அது ஒரு சின்ன கடை…‌

டேவிட் வெளி உலகிற்கு அவன் தையல் வேலை பார்க்கிறான். ஆனால் கான்ட்ராக்ட்டில் வரும் பணத்தை என்ன செய்வான் என்று தெரியாது‌. அவனுக்கு குடும்பம் இருக்கிறாதா? அதுவும் தெரியாது.

வேலை முடிந்த இரவே அவன் வீட்டிற்குப் போவேன். கூலியாக பணமும் ஒரு டம்ளர் அளவு இரத்தமும் கொடுப்பான்.

அது என்னைக் கடவுளாய் பாவித்து காணிக்கையாகக் கொடுப்பதாக இருக்கும்.

எனக்கு அந்தச் செயல் முதலில் வித்தியாசமாகவும் சிரிப்பாகவும் இருக்க “பணத்தை எடுத்துக்குறேன்.. இரத்தம் யாருடையது..?”

“என்னோடயது கடவுளே!” என்று தலை குனிந்து கொடுத்தான். அவனிடமிருந்து இச்செயல் இரத்த தானம் அளிக்கும் போது மட்டுமே வரும்.

“கடவுளா..?!” எனக்கு மேலும் சிரிப்பு வந்தது.

அவன் மௌனமாகவே இருந்தான்.

பின் அதை அவன் பழக்கமாவே செய்ய ஆரம்பித்தான்.

பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இரத்ததை குடிக்காமல் போக.. நான் கடவுள் இல்லை சாத்தான்..

குடித்தேன்.. ஒவ்வொரு முறையும் ருசி அறிந்துக் குடித்தேன்‌..!

டேவிட்டைப் போல் என்னால் வாழ முடியாது. இரவில் பப்பிற்கு போவதற்கும் பகலில் சூரிய ஒளியில் படாமல் நான் பதுங்கியிருக்கும் வாடகை வீட்டுக்கும் பணத்தேவையாய் இருந்தது. பொதுவாக நான் பணத்தை மதிப்பவள் கிடையாது. ஆதலால் அதை லாக்கரில் பூட்டிவைப்பதோ பதுக்கி வைப்பதோ என் சுய புத்தியில் தோன்றியதில்லை. வீட்டுக்குள் குப்பையாய்தான் சிதறி கிடக்கும். ஒவ்வொரு இரவிலும் பணத்தைப் பொறுக்கி எடுத்து பப்பிற்குப் போவேன்.

எல்லா நேரமும் கொலை இல்லை. அமைதியான நாட்களும் வரும். அப்பொழுது நான் இந்த இரண்டு இடங்களில் இருப்பேன். பப் மற்றும் கடற்கரை.

மனிதர்கள் பப்பில்தான் தன்னிலை மறந்து குத்தாட்டம் போடுவார்கள். நானும் அவர்களுடன் நிலைமறந்து ஆடுவேன். பின் கடற்கரைக்குச் சென்று அமைதியான சூழலில் தன்னிலை உணருவேன்.

தன்னிலை மறப்பதற்கும்..! உணர்வதற்கும்..!

இனிப்புக்கு பின் காரமாய் இரவு நிலவைப் பார்த்தபடியே போகும்.

இரு இடங்களில் இருக்கும் பிரச்சினையே… என் புட்டத்தை தேய்க்கவும் மார்பைக் கசக்கவும் ஆண்கள் நெருங்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது.. அவர்களை இருட்டில் அழைத்துக் கொண்டு போய் குமுறுவேன். சில நேரங்களில் என் இரத்தப் பசிக்கும் அங்கே நேரம் ஒதுங்கும்.

அன்றொரு நாள் ஏனோ அவர்களின் ஆபத்தை எண்ணி கடற்கரையிலிருந்து ஓட்டம் பிடித்தேன். அப்பொழுதுதான் சிவன் எனக்கு அறிமுகம் ஆனான். என் கரங்களைப் பிடித்து மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றான்.

அன்றைக்கு என்னிடமிருந்து அந்தக் கூட்டம் தப்பித்தது..! ஆனால் சிவன் என் வலையில் விழுந்தான்…! இல்லை நான் அவனிடத்தில் விழுந்தேன்..!

என் வாழ்நாளில் எத்தனை காதலர்களைக் கடந்திருப்பேன். நான் எதுவும் கணக்கு வைத்திருக்கவில்லை. உண்மையாகத்தான் காதலிப்பேன். ஆனால் காதல் மலர்ந்து வரும்போது விலகிவிடுவேன். அவர்களிடத்தில் நான் வைக்கும் மிகப்பெரிய காதல் உணர்வு அதுதான். விலகுதல்.

சிவன் அவர்களிடமிருந்து எல்லா விஷயங்களிலும் தனிப்பட்டவனாகவே இருந்தான். அதனால் அவனிடத்தில் காதலும் எப்போதோ மலர்ந்து விட்டது..! பல இரவுகள் கடந்துவிட்டது‌..!

என்னால் அவனிடமிருந்து விலக முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் “நாளை வருவாயா!!” என்று ஏங்கும் கேள்வியாய் அவனைப் பார்ப்பேன்.

அவன் என் கால்களைப் பார்த்து, “நிச்சயமாக” என்பான். ஏன் கால்களை ரசிக்கிறான் என்று தெரியாது. அதைப்பற்றி அவனிடம் கேட்டால், “தெரியவில்லை.. உன் கால்கள் என்னை வசீகரிக்கிறது” என கவிதை போல் சொல்லி தொடையிலிருந்து குதிகால் வரை நீவி எடுப்பான். அய்யோ..! சுகம்..!

இரவு முழுவதும் அவன் கைகள் என் தொடையின் மேலேயே இருக்கும்.

என்னென்னமோ பேச்சு வரும்.. பேசியதைத்தான் பேசுவோம்.. பின்பு அதை அறிந்து சிரித்துக்கொள்வோம். இப்படிச் சலிக்காத நாட்களில் இன்பமாய் வாழ்ந்துகொண்டு இருந்தேன்..

ஒருநாள் இரவு அவனை என் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். இதுவரை யாரையும் அனுமதிக்காத என் வீடு. அன்று காதல் காம உணர்வோடு இருவரும் சுழன்றடித்து உள்ளே சென்றோம். படுக்கையை அடைந்தவுடன் முதல் பத்து நிமிடம் என் கால்களிலேயே படுத்துக் கிடந்தான். முத்த மழையாய் கால்களைப் ஸ்பரிசித்தான்.
நான் அவன் பிடரி மயிரைப் பிடித்து மேலே இழுத்தேன். என்மேல் இயங்க ஆரம்பித்தான். ஒவ்வொரு அசைவிலும் என் கூரான பற்களில் கூச்சம் அதிகரித்தது. கடிக்க வேண்டும்..! இரத்த ருசி வேண்டும்..!. கண்கள் மேலோங்க பட்டென அவன் தோள் பட்டையைக் கடித்தேன். ஆனால் இயங்குவதில் மாற்றம் இல்லை. என் நகங்கள் தலையணையும் படுக்கையும் பிரித்து எடுத்தது. சுற்றிலும் பஞ்சாய் பறக்க இரவும் நீண்டது‌.

என் சுயரூபம் தெரிந்து நடுவிலே எழுந்து ஓடிவிடுவான் என நினைத்தேன். ஆனால் முடிந்த பிறகும் என் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தான். அப்பொழுது அவன் சொன்ன மூன்று விஷயங்கள்

“உன்னை எனக்கு முன்னயே தெரியும்” என்றான்

அது என்னுடைய கூரான பற்களின் மேல் அவன் முத்தமிடும் போதே தெரிந்தது.

“உம்” என்றேன்

“என் பேரு சிவன் இல்ல”

“உம்” என்றேன்.

“எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆச்சு. ஆனா எனக்கு குழந்தை இல்லை” என்றான்.

நான் அவனிடம் திரும்பி ‘ஏன்?’ என்றேன்.

அவன் தோள்பட்டையில் இருக்கும் காயங்களை வருடியபடி, “அதுக்கு விடைக் கிடைச்சிருச்சு” என்றான்.

இருவரும் சிரித்து முத்தமிட்டுக் கொண்டோம். அவனுடைய தலை என் மார்பகங்கள் மேல் இருக்க வெகுநாள் கழித்து நிம்மதியான தூக்கம் பிடித்தேன்.

மறுநாள் விழிக்கும் போது சிவன் இல்லை‌. அன்றைய இரவு கடற்கரைக்கும் அவன் வரவில்லை. எப்பொழுதும் நான் விலகிப்போகும் காதல் அன்று என்னை விட்டு விலகியது.

நிலவு, காற்று, தனிமையென பின்வரும் எல்லா இரவிலும் தொடர்ந்தது.

நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிவன் இல்லாத இரவுகள் முன்பு சலித்த காடு வாழ்க்கை போல் ஆனது. பல இரவுகளில் வெளியே போகாமல் வீட்டிலே கிடந்தேன். அதுவும் அர்த்தமற்று போக ஊரைச் சுற்றி வந்தேன். அப்பொழுதுதான் பலபேர் என்னை வேட்டையாடவும் பழி தீர்க்கவும் வந்தார்கள்.

யாரெனத் தெரியாமல் தினம் தினம் பல கொலைகளைச் செய்து வந்தேன். ஆடு தானாக வந்து தலை கொடுத்தது போல் என் இரத்த வேட்கைக்கும் நிறைவு கிடைத்தது. இருந்தாலும் வந்தவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல் சில்வர் கத்தி வைத்திருப்பதுதான். இது முடியப்போவதில்லை என்று தோன்றியது. என்னைக் கொலை செய்ய ஏவியவன் யார் என்று தெரிய ஒருவனுக்கு மரணத்தை காட்டி கேள்வி எழுப்பினேன்‌. அவன் சொன்னதெல்லாம்.. கர்ப்பிணி பெண்..! அவளைப் பாதுகாக்க உன்னைக் கொல்ல வேண்டும்

அதற்கு என்னை ஏன் கொல்ல வேண்டும்..?

அவள் வயிற்றில் இருப்பது உன்னைப் போல் ஒரு குட்டி.

அவனிடம் அதற்கு மேல் எனக்குப் பேச்சில்லை. இனி என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமாகிறது. அது முழுமை பெற நான் அந்த கர்ப்பிணியைக் கொல்ல வேண்டும். என்னைப் போல் ஒரு சாத்தானைக் கொல்ல வேண்டும்.

இரண்டு மாதங்களாகத் தேடுகிறேன். என் அர்த்தமான வாழ்வு முழுமை பெறவே இல்லை. அப்பொழுது ஒருவன் என்னைத் தேடிவந்து டேவிட் இருப்பிடத்தில் அவள் இருப்பதாகச் சொன்னான். டேவிட்டிற்கு எதுவும் ஆகக்கூடாது என மின்னல் வேகத்தில் போனேன். எப்பொழுதும் நாங்கள் சந்திக்கும் இடம். அங்கே ஒரே இரத்த வாடை. சுற்றிலும் மெழுகி எடுத்தது போல் இருந்தது. அது டேவிட் உடையதுதான். என்ன ஆனான் அவன்…? எனத் திரும்புகையில் கர்ப்பிணிப் பெண் உள்ளே வந்தாள். அங்கிருக்கும் மர நாற்காலியில் முடியாதளாய் உட்கார்ந்தாள். பின் பெரும் மூச்சுக்குப் பிறகு,

“உன்னை பார்த்தா எனக்கு எப்பவுமே பொறாமை வரும்”

“யார் நீ..?”

“கெட்ட கடவுள் கிட்ட வேலை பார்க்குற நல்ல சாத்தானோட பிள்ளை..” என்றாள்.

“டேவிட் எங்க?”

“அந்த நல்ல சாத்தன் கூடத்தான் இரண்டு குட்டி சாத்தான் இருந்துச்சு..” என்னைப் பார்த்து மீண்டும் தொடர்ந்தாள், “ஒன்னு பிள்ள சாத்தான் இன்னொன்னு மருமகன் சாத்தான்… அந்த இரண்டு பேருக்குமே ரகசியமா கெட்ட கடவுள பார்க்கணும்னு ஆச எப்பவுமே இருக்கும். ஒரு சின்ன ஓட்ட அதுல கடவுளோட கால் மட்டுமே தெரிய.. இடிச்சுகிட்டு இரண்டும் பார்க்கும். அந்த ஆர்வம் மருமகன் சாத்தானுக்கு மோகமா மாறுச்சு. பிள்ளை சாத்தானுக்கு பொறாமையா மாறியிடுச்சு. இந்த விஷயம் நல்ல சாத்தானுக்கு தெரியவர இரும்பு கம்பிய பழுக்க காய்ச்சி சூடு போட்டான். நெஞ்சுல சூடு வாங்கியும் மறுபடியும் ஒளிஞ்சிருந்து பார்த்துச்சு அந்த மருமகன் சாத்தான். நாட்களும் அப்படியே போச்சு, வயசும் வந்துச்சு பிள்ள சாத்தானுக்கும் மருமக சாத்தானுக்கும் கல்யாணம் ஆச்சு. அஞ்சு வருஷம் ஆகியும் பிள்ள சாத்தானுக்கு குழந்தையே இல்ல. ஒருநாள் எங்கயோ பொழங்கிட்டு வந்த மருமக சாத்தான். என்மேல பொழங்குனான். அப்ப.. அப்ப பார்த்தேன் சாத்தான் கடவுளா மாறுனத.. என்ன கடிக்க வந்தப்போ எங்கிருந்து பலம் வந்ததுன்னே தெரியல.. தள்ளி விட்டேன். வெளியே போய் விழுந்து உருமாறுன கடவுளா கதவ இடிச்சு மல்லுகட்டுனா.. பிள்ளைய பெத்த நல்ல சாத்தான் எதுக்கோ வைச்சிருந்த கத்தியெடுத்து மருமகன தலைய வெட்டிட்டான்..” பெரும் மூச்சு விட்டு, “நான் வாழாவெட்டியா ஆயிட்டேன்.. ஆறு மாசும் ஆச்சு..” என வயிற்றை தடவினாள். “என் வயித்துல இருக்கறது.. கடவுளா..! சாத்தானா..! எனக்கு தெரியாது.. ஆனா இது என் பிள்ள” என முடியாதவளாய் எழுந்தாள்.

அப்பொழுது டேவிட் நீண்ட வெள்ளிக் கத்தியோடு உள்ளே நுழைந்தான்

“என்ன..?.. கொல்ல போறீயா..?” எனக் கேட்டேன்.

அவன் சற்று தாமதிக்காமல் சுவரில் இருக்கும் சுவிட்சை போட்டான். அடுத்த நொடி தலைக்கு மேல் டங்குன்னு கூண்டு வந்து விழுந்து என்னை அடைத்தது. அதில் ஆயிரம் நூல் கோர்க்கும் வெள்ளி ஊசிகள் என் உடம்பைத் துளைத்தது. என்னால் நகர முடியவில்லை. ரோமம் அதிர அவனிடம், “டேவிட்.. அவ வயித்துல இருக்கறது‌‌ சாத்தான்..” என்றேன்.

அப்பொழுது அவனுக்கே உரித்தான அசட்டுச் சிரிப்போடு கதவை அடைத்தான்.

சூரிய ஓளி மெதுவாக சன்னல் வழியாகப் படர்ந்து என்னைச் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகிறேன்.

பெருமூச்சாய் கண்களை மூடி யாரை நினைத்து கொள்வது என யோசித்தேன். உண்மையில் நான் நேசித்தவர்கள் யாரும் வரவில்லை..!

சூரியன் முழுவதுமாய் சுட்டெரித்தது.

சன்னல் வெளியே கரிய புகை சென்றது.

பத்து வருடங்கள் கழித்து டேவிட் படுத்த படுக்கையாய் இறப்பை எதிர்பார்த்துக் கிடந்தான். அது ஒரு மழை பெய்யாத மின்னல் வெட்டின் அமாவாசை இரவு.

டேவிட் அறையில் பத்து வயது குழந்தை நுழைந்தது. வெளியே அவளது அம்மா “மாயா.. மாயா..” எனக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள்

மாயா, “தாத்தா..?”

டேவிட், “வாடி.. உன்ன எதிர்பார்த்துட்டு இருந்தேன்‌. சாத்தானா பார்த்து கடவுள அனுப்பி வைச்சிருக்கான்.. அந்த டேபுள் பக்கத்துல இருக்கற ஊசி எடு..”

கையில் வாங்கியவன் ஊசியால் கழுத்தில் ஒரு கோடு போட்டான். இரத்தம் வழிய ஆரம்பித்தது.

“கடவுளே.. என்னை மன்னிப்பாயாக..!” எனக் கழுத்தைத் திருப்பினான்.

மாயா சற்றும் தாமதிக்காமல்.. தன் கூர் பற்களோடு…

கொடக்! கொடக்! கொடக்!

***

அக்னி பிரசாந்த் வீ – சொந்த ஊர் தஞ்சாவூர். தற்போது கோவையில் பணிபுரிகிறார். 2020 வாக்கில் எழுத ஆரம்பித்து தற்போது வரை பன்னிரண்டு சிறுகதைகள் எழுதி இருக்கிறார். முதல் கதையாக யாவரும் இதழில் வெளியாகிறது. மின்னஞ்சல்: agniprasanth1014@gmail.com

அகராதி கவிதைகள்

0

அகராதி கவிதைகள்

நிலவின் ஒளியில்
உஷ்ணமான
இலவம் பஞ்சு மெத்தையில்
நெளியும் அரவங்கள்

கரையில் துடிக்கும் மீன்
கடல் கொள்ளத் தவிப்பது இயல்பென
நா பிரிந்த அரவமொன்று
சொற்களை உதிர்க்கிறது

சொற்களுக்குள் முகம் புதைத்து
ஏக்கத்தின் வாசம்தனை
நுகரும் பொழுதில்
தலை பின்னிழுத்து
தள்ளிவிடும் இருளை
இரு கைகள் தாங்கி
ஊடுருவுகிறது விழி

ஊடுருவிய விழிக்கதிர்களில்
தோய்த்தெடுத்த விஷம் கொண்டு
நாணேற்றப்படுகிறது

விஷம் பாய்ந்த இருளுக்குள்
சரிகிறேன்

ஒழுகிக் கொண்டிருக்கும் மெளனம்
குறியை நனைக்கிறது

*

என் விருப்பமான குற்றம் நீ

கட்டிப் போட்டு வைத்த
கலவி
அலறுவதைச் சகியாது
நிலவு மலர் தூவி
மெளனிக்கப் பழக்குகிறது
உயிரணுக்கள்
ஒருங்கு சேர
உன் பெயர் ஓதுகின்றன
சாதக பாதகங்களை
இழை பிரித்து
பார்க்கையிலேயே
ஏற்க
இறைஞ்சுகிறது அன்பு
சுற்றம் சூழல்களை
நிறைய கண்களை
நிறைய நிறைய
காதுகளைக் கடந்து
இறுதி வரை இதயம் நிறை!

*

மூச்சுக்காற்று கலக்க
நிதானமாகப்
பரிமாறிய முத்தங்கள்
உடைந்த கண்ணாடித் துண்டுகளாகி
மூச்சுக்குழாய் தேடுகிறது

எப்படி மறைத்துக் கொள்வது
என்னை

எங்கு ஒளித்து வைப்பது
முத்தங்களை

நாளிரண்டையும் கூட
கடக்கவியலாமல் ஓடிவந்து
பூர்த்தி செய்யத் துடித்த
மிஸ் யூக்கள்
பல நாட்களாகியும்
சென்ட் ஆகாமல்
அலைபேசியில்
பிரமிடுகளாகி விட்டன என்று
இம்மனதிற்கு
ஃபார்வர்ட் செய்வதெப்படி

*

நுதல் முத்திடலுக்குள் மூழ்கி
பாதையும் நேரமும் முடிவிலி என்று ஆட்பட
சட்டென்று விடுபட்டுப் போகும்
சங்கிலியில் பிணைத்து வைத்திருந்தது
எழுதிவிட முடியாத சவ நிலையை
எப்படியோ சாத்தியப்பட்டு விடும்
உனக்குச் சாத்தியமே இல்லாத நிலைகள்
எள்ளலாக இருக்கலாம்

இயலாமையின்பாலோ இருப்பின் பொருட்டோ
எத்தனையோ ‘இருந்து விட்டுப் போகட்டும்’ இருக்கின்றன
இதுவுமதில் ஒன்றாகச் சேரட்டும்

தொடரும் விழித் திறந்த கனவின் காட்சிகளை
நீட்டித்துக் கொள்கிறேன்
வேறு வழியின்றி

*

ஒன் பிளஸ் ஒன் என்று
எண்களோடு புரையோடிப் போயிருக்கும் புத்தி
என்டர் தட்டி இறக்கி விடப்படும்
இலக்கங்களைப் போல்
முன்முடிவாக ஈக்வலிட்டு
எதுவொன்றையோ இட்டு நிரப்பி
டேலியென்று கூறுகிறது

எண்ணங்களோடு பொதித்த
உயிரையும் இறக்கி…

மார்ஜினுக்கு அந்தப்புறம்
அத்தனையும் மிச்சமாகி நிற்பதை
இருதயம் காணத் தயாராயில்லை!

ரிமைண்ட்?..?

*

அதிர்வு தாங்கவியலா உடலம் நடுங்கித் துடிக்க
விழிகளில் நீர்ப்படலம்

ஆயுளில் கேட்டறியும் வாய்பில்லா துர்சொல் ஏந்திய நா
விஷம் கக்கிச் செல்கிறது

மறுமொழி உமிழ்ந்து
உருக்குலைந்த
‘உள்’
நடுக்கம் கவனிக்கிறது

படரந்த நீர்படலத்தை நிறுத்தி நிமிர ஒலிக்கிறது
நேயப் பாயிரமென
பல்லாயிரக் குரல்கள்

மலையறியா மடத்திற்கு
விலையில்லா நேயம் தெரியாது
வானளந்த கைகளில் இடைதாங்கி
தாள் ஒட்டிய துகளுதறி
சிம்மாசனம் கொண்டு
வானேகிறது…

***
அகராதி – aharathi26@gmail.com

மந்திரமாவது

0

காளீஸ்வரன்

க்கா… அக்கோவ்”

சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெரிவது பூஜையறை. தலைவாசல் நெலவும் பூஜையறை நெலவும் கிட்டத்தட்ட ஒரே அகலம். வீட்டுக்குள் நுழையும்போதே பூஜையறையும் அதன் மையமாய் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனி முருகன் படமும் கூடவே குமரேசனின் குலதெய்வம் படமும் தென்படும். பூஜையறையை ஒட்டியபடி அகன்ற ஆசாரம். எப்போதுமே ஆசாரத்தில் படுப்பதுதான் குமரேசனின் விருப்பம்.

குமரேசன் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் பார்த்தான். சாமியறை முன்பாக அம்மிணியக்கா நின்று கொண்டிருந்தாள். இடுப்பில் அவளது மகள் வயிற்றுப்பேரன் சோர்வாய்க் கிடந்தான். “அப்பனிருந்தா கொஞ்சம் வரச்சொல்லு தங்கம். புள்ளக்கி ஒடம்பு சொகமில்ல” என்றாள் அம்மணியக்கா. .
“யக்கோ, ஊத்துக்குளிலதா ஆசுபத்திரி இருக்குதுல்ல. அங்க போவேண்டியதுதான. இந்தாளு என்ன டாக்டரா?” எனக் கேட்பதற்கும், குமரேசனின் அப்பா பாலன் வருவதற்கும் சரியாக இருந்தது. பழுப்பேறிய வேட்டி, மேல் துண்டு, சவரம் செய்யப்படாத முகம், எண்ணையோ சீப்போ தலைமுறைக்கும் காணாதது போன்ற தலைமுடி. முந்தைய இரவின் போதை எச்சத்தால் உண்டான லேசான தள்ளாட்டம். அரைகுறையாய் கழுவப்பட்ட முகத்தில் நிரந்தரமாய்க் குடியேறியிருக்கும் அலட்சியத்துடன் அம்மணியக்கா முன்வந்து “என்ன ?” என்பது போலப் பார்த்தார்.

“கொழந்தைக்கி ராத்திரி பூராவும் காச்சலு. மேலு சூடே நிக்கல” கெஞ்சும் தோரணையில் அம்மணியக்கா சொல்ல, இயந்திரகதியில் சாமியறையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த தட்டத்தில் இருந்து கொஞ்சம் திருநீறை வலக்கை சுண்டு விரல் தவிர்த்த நான்கு விரல்களால் கூட்டி எடுத்து தன் மூக்குக்கு நேரே வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை முணுமுணுக்கலானார் பாலன். இப்போது அவர் வாயிலிருந்து வரும் சொற்களை இன்னொரு முறை சொல்வது மற்றவர் எவராலும் முடியாது. ஏன் பாலனாலேயே முடியாத காரியம். அப்போதைக்கு நினைவில் வரும் சொற்களே அவருக்கு மந்திரம். ஓரிரு நிமிடங்கள் முணுமுணுத்தபின், அருள்வந்த பாவனையில் முன்னும் பின்னுமாக லேசாக ஆடிவிட்டு, கொஞ்சம் திருநீறை குழந்தையின் தலையில் போட்டுவிட்டு மீதியை நெற்றியில் பூசிவிட்டார் பாலன். அருகில் கசங்கிக் கிடந்த பழைய பேப்பரைக் கிழித்து கொஞ்சம் திருநீறை மடித்துக் கொடுத்தார். எதிர்ப்பார்ப்புடன் நீட்டப்பட்ட தட்டில் அழுக்கான ஒரு பத்து ரூபாய் தாள் விழுந்தது.

அம்மணியக்கா கிளம்பியதும் பொடக்காலிக்கு வந்து அப்பனை நினைத்தபடி காறித் துப்பிவிட்டு, முகம் கழுவினான் குமரேசன். அரைகுறையாய் சாமி நம்பிக்கை உண்டே தவிர, இந்த மந்திரிப்பது செரகடிப்பது இதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாதவன். பத்தும் பத்தாததுக்கு பாலனையும் நம்பி சிலர் மந்திரிக்க வருவதே, கொஞ்ச நஞ்சம் ஊசலாடும் நம்பிக்கைக்கு அணைபோடப் போதுமானதாக இருக்கிறது.

அன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாயும் வியாழனும்தான் உள்ளூர் மக்கள் இந்நேரத்தில் அவ்வீட்டைத் தேடிவருவது வழக்கம். பெரும்பாலான காய்ச்சல், மேல்வலி, வயித்துப்போக்கு நோய்கள் சுகப்பட அவனது அப்பா பாலனிடம் திருநீறு மந்தரித்து போவதற்கென வருவார்கள். அவர் அப்படியொன்றும் மந்திர தந்திரங்கள் அறிந்த வித்தைக்காரரில்லை. மந்திர தந்திரம் மட்டுமில்லை, உருப்படியாக ஒன்னுமே கத்துக்காதவர். அவர் மனைவி பூவாத்தாள் பாஷையில் சொல்வதானால், “அந்த வேள சோறிருந்தா போதும் அடுத்த வேளயப் பத்திக்கூட நெனக்காத சென்மம்”.

அது கிட்டத்தட்ட நூறு வீடுகள் கொண்ட காங்கயம்பாளையம் கிராமம். மூன்று கிலோமீட்டர் தொலைவில் செங்கப்பள்ளியிலும் ஊத்துக்குளியிலும் மருத்துவமனைகள் இருந்தபோதும் பாலனின் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கக் காரணம், அதுவாகவே சரியாகிவிடும் சில கோளாறுகள், இவர் மந்திரத்தால் சரியானதாக ஏற்பட்ட நம்பிக்கை. கூடவே, பாலனின் அப்பா கந்தசாமியின் பெருமையும்.

*

குமரேசனுக்கு தன் தாத்தாவின் நினைவு வந்தது.

கந்தசாமி இருக்கும்வரை உள்ளூர் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம், செரகடிக்கவும், திருநீறு மந்தரிக்கவும் ஆட்கள் வருவதுண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு சின்னத் திருவிழாக்கூட்டமே அத்தெருவில் கூடும். வயித்துப்பாட்டுக்கு தோட்டம் தொரவு இருந்தாலும், கந்தசாமி இந்த செரகடிக்கும் வேலையை மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்து செய்தார். திங்கள் மற்றும் புதன் இரவுகளில் சாமி அறைக்கு முன்பிருக்கும் திண்ணைப் பகுதியை அவரே கரைக்கட்டி சாணி போட்டு வழித்துவிட்டுப் படுத்தாரென்றால், அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு பூஜையில் அமர்வார். ஆறு மணியிலிருந்து மக்களின் வருகை துவங்கிவிடும். காலை ஒன்பது மணிவரைதான் மந்திரிப்பது. மாலையில் இதேபோல் ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை. மந்திரிக்கும் நாட்களில் ஒருவேளை உணவு மட்டும்தான் எடுத்துக்கொள்வார். அவ்விரு நாட்களும் பெருமளவு பேச்சும் குறைந்துவிடும். நெருங்கிய பங்காளி வீடுகளில் எழவு, எடஞ்சல் நிகழ்ந்திருந்தால் மட்டுமே இம்முறைமை தடைப்படும். மற்றபடி அவர் இருந்தவரையில் நிரல் மாறாமல் நிகழ்ந்துவந்த நிகழ்ச்சிதான் இது. அவரின் பக்தியும் கட்டுப்பாடுகளும் வெகு பிரசித்தம். அவரின் கைபட்ட துன்னூறு பூசினாலே ஆளானப்பட்ட வியாதியெல்லாம் பறந்துபோயிடும் என்பது சுத்துப்பட்டு மக்களின் பெரும் நம்பிக்கை.

அந்நாட்களிலெல்லாம், கந்தசாமியின் வேட்டி நுனியைப் பிடித்துக்கொண்டே திரிவான் குமரேசன். மற்ற நாட்களில் எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினாலும் மந்திரிக்கும் நாட்களிலெல்லாம் தாத்தாவுடனே எழுந்து குளித்துத் தயாராகி அவனும் பூஜை அறைக்குச் சென்றுவிடுவான். புத்தம் புதுத்துணி போல வெளுக்கப்பட்ட காவி வேட்டி, எண்ணை தேய்த்துப் படிய வாரிய தலை. குளித்த ஈரம் சரிவர உலராத நெற்றி. அதன் முழுவதும் பூசப்பட்டு நன்கு துலக்கமாகத் தெரியும் திருநீறு என அப்போதிருக்கும் தாத்தாவைப் பார்க்கப் பார்க்க குமரேசனுக்கு ஆசையாயிருக்கும். பக்தியுடன் கதர்கடை ஊதுபத்தி இரண்டைக் கொளுத்தி சுவரில் மாட்டப்பட்டிருக்கும் குலதெய்வத்தின் படத்துக்கும், பழனி முருகன் படத்துக்கும் முதலில் காட்டுவார். படங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் மரப்பெட்டிக்கும் அதே மரியாதை செய்யப்பட்ட பின்னர் பூஜையறையில் இருக்கும் அத்தனை சாமி படங்களுக்குமாக ஒட்டுமொத்தமாகக் காட்டிவிட்டு பழத்தில் ஊதுபத்தியைக் குத்திவைப்பார். கண்மூடி சிறிது நேரம் நின்ற பின்னர் மூன்றுமுறை அந்த மரப்பெட்டியைத் தொட்டு வணங்கி, அதை எடுத்துக்கொண்டு பூஜையறையின் முன்பாக வந்து அமர்வார். அந்த மரப்பெட்டி கந்தசாமியின் தாத்தா கருப்பணனுடையது. மேல் மூடி இழுக்கும் வண்ணம் செய்யப்பட்ட அப்பெட்டியில் சிறியதும் பெரியதுமாக இரண்டு அறைகளிருக்கும். பெரிய பாகத்தில் திருநீறும் அதற்கடுத்த சிறிய அறையில் நறுக்கப்பட்ட பனையோலைகளும் இருக்கும்.

கந்தசாமி வந்து அமரும்போதே வாசலில் நாலைந்து பேர் காத்திருப்பார்கள். அவருக்கு முன்னால் தூபக்காலில் தீக்கங்குகள் தயார் நிலையில் இருக்கும். தூளாக்கப்பட்ட சாம்பிராணியை தீக்கங்குகள் மீது தூவி புகையில் மீண்டும் ஒருமுறை பெட்டியைக் காட்டிவிட்டு வந்தவர்களின் குறைகளைக் கேட்பார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, வயித்துப்போக்கு என்பதும் பெரியவர்களுக்கோ கைகால் வலி என்பதும்தான் பெரும்பாலும் பிரச்சனையாய் அமையும். கண்முடி விறைத்துக்கொண்டு நிற்பது, உதடுகளில் தென்படும் வறட்சி, தாண்டுக்குணம் என்றால் கால் வீக்கத்தில் தென்படும் மினுமினுப்பு என சில அறிகுறிகளை முதலில் கண்டு உறுதிப்படுத்திக் கொள்வார். அதற்குத்தக்கபடி திருநீறு மந்திரித்தோ, தாயத்தோ கொடுப்பார். புதிய ஆள் என்றால் வந்தவரின் குலதெய்வத்தின் பெயரைக் கேட்டுக்கொள்வார், உள்ளூர் மக்களின் குலதெய்வங்கள் அவருக்கே அத்துப்படி. மரப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் திருநீறு எடுத்து அதைக் காய்ந்த அரசிலையிலோ வாழையிலையிலோ போட்டுவிட்டு, வலதுகை ஆட்காட்டி விரலால் திருநீறை மெல்லத் தடவிக்கொடுப்பார். கூடவே, மந்திரங்களை ஓசையின்றி உச்சரிப்பார். எதிரில் அமர்ந்திருக்கும் குமரேசன் அவர் செய்கைகளைக் கூர்ந்து கவனிப்பான். விளைவாக, அவனாலும் அந்தச் சிறுவயதிலும் சில அறிகுறிகளை இனம் காண முடிந்தது. கூடவே, அவர் வாயசைவைத் தொடர்ந்து கவனித்தே முதல் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டான் குமரேசன். ”ஆத்தா, கரியகாளியம்மனே”. அது கந்தசாமியின் குலதெய்வம்.

*

பலமாகத் தட்டப்பட்டது பாத்ரூம் கதவு. குமரேசனின் நினைவுகளைக் கலைத்தது அப்பாவின் குரல். “டேய், மயிராண்டி. இன்னும் என்னடா பண்ணுற? பாத்ரூம்ல தூங்கீட்டையா? சீக்கிரமா வெளில வாடா வெண்ண” மந்தரிக்கும் நாட்களில் ஒருபோதும் தாத்தாவின் வாயிலிருந்து அவன் கேட்டறியாத சொற்கள், தொனி. கதவைத் திறந்து பாலன் முகத்தைப் பார்க்காமலே சென்றான் குமரேசன். “ஒரு நா வேலக்கி போனா ஒம்போது நா சும்மா சுத்துறான். சோத்துக்குக் கேடா திரியறான் தண்டத்துக்கு” முதுகுக்குப் பின்னால் பாலனின் குரல் கேட்டது. அவரையே சொல்லிக்கொள்கிறார் போல என எண்ணியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. உள்ளூர் தறி குடோனில்தான் குமரேசனுக்கு வேலை. நல்ல வேலைக்காரன்தான். இரு தினங்களாக பாவு வரத்து குறைவு என்பதால் பாதிப்பேருக்குத்தான் வேலை இருந்தது. இல்லாதப்பட்டவர்களுக்கு உதவட்டும் என குமரேசன் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறான்.

ஆசாரத்தில் உக்கார்ந்திருந்த குமரேசனை லட்சியம் செய்யாமல் நேராக சமையலறைக்கு சென்றார் பாலன். தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பழைய சோற்றுப் பானையில் கைவிட்டு நிறைய சோறும் கொஞ்சம் தண்ணியுமாக தட்டம் வழிய வழிய எடுத்து நின்றுகொண்டே சாப்பிட்டார். குறு ஏப்பத்துடன் தன்னைக் கடந்துபோகும் தகப்பனை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் குமரேசன்.

*

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் குமரேசன் வீட்டில் கறியெடுப்பது. அதுவும் உள்ளூரில் கூட்டுச் சேர்ந்து அறுக்கப்படும் ஆட்டின் கூறுக்கறி. ஆட்டின் எல்லாப் பாகங்களும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து கூறுகளாக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப ஒரு கூறோ இரு கூறுகளோ வாங்கிக்கொள்ளலாம். நான்கு பேர் இருக்கும் வீட்டுக்கு ஒரு கூறு சரியாக இருக்கும். கந்தசாமி எப்போதும் இரண்டு கூறுகள் எடுப்பார். “அந்த தாந்தின்னிப் பெயலுக்கே ஒரு கூறு பத்தாது” என்பது அவரது கணக்கு. என்னதான் மருமகள் கைப்பக்குவம் நல்லா இருந்தாலும் கறிக்கொழம்பு மட்டும் தான் வைத்தால்தான் கந்தசாமிக்குத் திருப்தி. குமரேசனுக்கு கறிக்கொழம்பு வாசம் கேட்டதுமே பசியெடுக்கும். கொதிக்கும் குழம்பில் வெந்தும் வேகாதுமாய் இருக்கும் கறித்துண்டுகளை எடுத்து வெந்திருக்கா பாரு சாமி என பேரனிடம் ஊதி ஊதிக் கொடுப்பார் கந்தசாமி. அந்த அரைகுறை வேக்காட்டு கறிக்காகவே சமையலறை முன்பு தவம் கிடப்பான் குமரேசன். கறி வெந்ததும் மறக்காமல் மருமகளுக்கென தனியாக கொஞ்சம் கறியை மறைத்துவைத்துவிட்டு, சுடுசோற்றில் குழம்பு கொஞ்சமாகவும் கறி நெறையாவும் போட்டுக்கொண்டு பேரனுடன் ஆசாரத்தில் அமர்ந்துகொள்வார். நன்கு வெந்த சதைத்துண்டுகளாக, ஈரலாக தேடி எடுத்து பேரனுக்கு ஊட்டுவார். எங்கிருந்தாலும் சரியாக அச்சமயத்துக்கு வந்து சேர்ந்துவிடும் பாலன் ஒரு குண்டாவில் சோறும் சோறளவுக்கே கறியும் எடுத்துக்கொண்டு அதே ஆசாரத்தின் மூலையில் அமர்வார். குனிந்த தலை நிமிராமல் தின்றுவிட்டுப் போகும் அப்பாவைப் பார்த்துக்கொண்டேயிருப்பான் குமரேசன். ”அவங்கெடக்கான் தாந்தின்னிப் பெய. நீ சாப்பிடு கண்ணு” சமாதானப்படுத்தும் குரலில் சொல்வார் கந்தசாமி. அந்நேரத்துக்கு யார் வந்தாலும் அரை வயித்துச் சோறாவது சாப்பிட வைத்தால்தான் கந்தசாமிக்குத் திருப்தி. அதுவும் குழந்தைகள் என்றால் அவரே ஊட்டியும் விடுவார். அப்போது தாத்தாவின் முகத்தில் தெரியும் மலர்ச்சியை குமரேசன் ஒருபோதும் மறந்ததேயில்லை.

*

பொழுது அணையும் நேரம்.

தோட்டத்திலிருந்து திரும்பி வந்த பாலனின் மனைவி பூவத்தாள், “அப்பனெங்கடா?” கேட்டவாறே நுழைந்தார்.
“என்னிய கேட்டா? காலைல வட்டலு ரொம்ப பழைய சோத்தை குடிச்சிட்டு தட்டத்துல இருந்த பத்து ரூபாயோட போனவெ தான். இன்னும் வரல”.
“செரகடிக்க வேற ஆராச்சும் வந்தாங்களா? ஆமா, ஆரு வருவாங்க இந்தாளு பவுசுக்கு. அதும் ஊத்துக்குளில கவர்மெண்டு ஆசுபத்திரி வந்ததும் தொட்ட தொண்ணூறுக்கும் அங்கியே போயி பழகிட்டாங்க. வார ஒன்னு ரெண்டு பேத்துக்கும், இந்தாளு பல்லுகூட வெளக்காம போடுற மந்திரம் பலிக்குமாங்கற சந்தேகம் வேற. சுத்த பத்தமா இருக்கோணும். சாமீ ரூம்முக்குள்ள போறதுக்கே, மனசு சுத்தமில்லாம பயந்துக்கற மனுசன், இவன நம்பியா வாறாங்க? எல்லாம் இந்த வூட்டு மேல இருக்குற நம்பிக்கைதா. சும்மா சுத்தறதுக்கு தோட்டத்துப் பக்கம் வந்தாலாவது கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். அதுக்கும் வக்கில்லை. எல்லாம் நான் வாங்கிவந்த வரம்” கேள்வியும் பதிலும் கலந்த புலம்பலுடன் சமையலறைக்கு செல்லும் அம்மா பாவமாகத் தெரிந்தாள். தாத்தா இருக்கும்வரை அவள் இவ்வளவு வெசனப்பட்டதில்லை. எப்போதாவது பாலனைப் பற்றி அவள் கூறும் முறையீடுகளுக்கும், தாத்தா “எந்தப்புத்தா தாயி. அம்மாவைத் தின்ன பய அப்படின்னு ரொம்ப செல்லங்கொடுத்து கெடுத்துப்புட்டேன். எனக்கோசரம் அனுசரிச்சுப்போ ஆத்தா” எனச் சொல்லும் சமாதானமே போதுமானதாக இருக்கும். ஆனால், எப்போதுமே தாத்தா மனசு விட்டுப் பேசியது தன்னிடம் மட்டும்தான் என்பது குமரேசனுக்குப் பெருமை.

அடுத்த நாள் புதன்கிழமை ராத்திரி. இப்போதெல்லாம் தனக்கு தாத்தாவின் நினைவும், அவர் செயல்களும் அடிக்கடி தோன்றுவதை எண்ணியபடியே படுத்துக்கொண்டிருந்த குமரேசனிடம் பூவாத்தாள் சொன்னாள் “நாளைக்கி சஷ்டி வெரதம். கயித்தமலை போகோணும் மறந்துறாத”. அவன் ஒருபோதும் மறந்திறாத அந்த நாள் மீண்டும் நினைவில் எழுந்தது.

*

குமரேசன் பெரும் பக்திமான் இல்லை. அவனாக விருப்பப்பட்டு சாமி கும்பிட்டதில்லை. அம்மாவுடனோ, தாத்தாவுடனோ போவதற்குச் சுணங்கியதுமில்லை. ஆனால் கந்தசாமி பெரும் பக்திமான். சஷ்டி விரதம் கடைப்பிடிப்பவர். மாதாமாதம் வருகின்ற வளர்பிறை சஷ்டிதிதியன்று மதியம் ஒருவேளை மட்டுமே உண்பார். அதுவும் காங்கயம்பாளையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கைத்தமலை முருகனை தரிசித்துவிட்டு வந்த பின்னர்தான். மூன்று வருடங்களுக்கு முந்தைய, அந்த நாள் வைகாசி வளர்பிறை சஷ்டி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு விடுமுறையில் இருந்த குமரேசனும் தாத்தாவுடன் கைத்தமலை சென்றான். காலை ஏழு மணி, வானம் மோடம் போட்டிருந்தது, தாத்தாவுடனான உரையாடலினால் அவருடன் நடப்பது எப்போதுமே அவனுக்குப் பிடிக்கும். வயதினாலோ, சகவாசத்தினாலோ குமரேசனுக்கு நிறையக் கேள்விகள் தோன்றிக்கொண்டிருந்த சமயம் அது. கடந்த சில வருடங்களாகவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்ட கேள்வியை அன்றும் கேட்டான். ஆனால் இம்முறை தாத்தா மழுப்பப் போவதில்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.

“இப்ப ஒனக்கென்ன, நா இந்த மந்திரிக்கற வேல செஞ்சு ஊர ஏமாத்துறனா இல்லீயான்னு தெரியணும். அவ்வளவுதான?” சிரித்தபடிதான் கேட்டார் தாத்தா.

“அப்பிடியில்ல. என்ன ஏதுன்னு வெகரம் தெரிஞ்சுக்கதான் தாத்தா”

“ம் ஆகட்டும்.”

கொஞ்ச நேரம் சிந்தனையுடன் அமைதியாக நடந்த தாத்தா, அவரே தொடர்ந்தார்.

“இப்ப மாதிரி ஊருக்கு ஊரு பஸ்ஸோ ஆசுபெத்திரியோ அப்ப ஏது? அப்புடியே இருந்தாலும் செலவு செய்ய காசு வேணும்ல. எந்தாத்தன் கருப்பணன் பெரிய வித்தைக்காரரு. பெரிய பெரிய ஆளுங்க செஞ்சு வெச்ச செய்வெனை எல்லாம், அப்புடிங்கறதுக்குள்ள முறிச்சுப் போடுவாரு. அவரு காலத்துக்கப்புறம் எங்கப்பா அப்படியொன்னும் பேரெடுக்கல, எனக்கொன்னும் கத்தும் தரல. எனக்கொரு பத்துப் பதினைஞ்சு வயசிருக்கும், தோட்டத்துக்கு போன அப்பா வரப்புல திடுதுப்புன்னு வுழுந்து செத்துப்போனாரு. பொறகென்ன, நாம்பாட்டுக்கு தோட்டந்தொரவுன்னு பொழப்ப பாத்துக்கிட்டிருந்தேன். அவிங்க ரெண்டு பேரு காலத்துக்கப்புறம், ஒடம்புக்கேதும் பிரச்சனைனா, என்ன ஏதுன்னு புரியாம அல்லாடுற, காசில்லா சனத்துக்கு ஆறுதலா இருக்கட்டும்னுதான், தேடி வாரவங்களுக்கு, எல்லாம் அவம் பாத்துக்குவான்னு மனசில நெனச்சு வேண்டிகிட்டு துன்னூறு கொடுக்க ஆரம்பிச்சேன்.”

பள்ளத்தோட்டம் முக்கு வந்தது. தாத்தா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். இதுவரை ஏகதேசம் அவன் கேள்விப்பட்ட கதைதான். முக்கு திரும்பியதும் தூரத்தில் தெரிந்த கைத்தமலை கோபுரத்துக்கு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்ட தாத்தா கொஞ்சம் முறுவலித்தார்.

“அப்பெல்லாம் என்னமோ ஊரு சனத்தபூரா நா ஏமாத்துற மாதிரி ஒரு நெனப்பு எனக்குள்ளெயே உறுத்தும். அதனாலயே துன்னூறு தாராதுக்கு ஆருகிட்டயும் கையேந்தி பைசா வாங்கினது கெடயாது. அவிங்களா கொண்டுவர பத்தி, கல்பூரம், காசு எதுன்னாலும் நேராக் கொண்டுவந்து இந்தக் கயித்தமலை ஆண்டவன் காலுல சேத்தாத்தான் நிம்மதியே. ஆனாலும், அப்பயுமே நா பத்துப்பேருக்குத் துன்னூறு தந்தா கண்டீசனா ஒம்போது பேரு அடுத்த நாளே ரெடியாயிடுவாங்க. யாராச்சிம் ஒருத்தர் ரெண்டு பேருதான் சரியாகலைன்னு அடுத்த தடவ வருவாங்க, இல்லீன்னா வைத்தியத்துக்குப் போவாங்க. நானும் ஒரு கூறில்லாம, யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் வெறுமனே வேண்டி துன்னூறு கொடுத்திட்டிருந்தேன். நம்மள மீறுன சக்தி, நம்ப கிட்ட சில விசயங்கள சொல்லிட்டேதான் இருக்கும். அத புரிஞ்சுக்கற அறிவு நம்மளுக்கு இருக்கோணும். அப்புடி நானும் புரிஞ்சுக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சுது”
கைத்தமலை அடிவாரம் நெருங்கியிருந்தது. தைப்பூசத்தின் போது தண்ணீர் பந்தல் போடுவதற்கென கடப்பட்டிருந்த திண்ணையில் “அப்பா, முருகா, ஞானபண்டிதா” என்றவாறே ஏறி அமர்ந்தார் தாத்தா. பக்கத்து ஆலமரத்தின் நிழலும் நடந்துவந்த களைப்பும் அவருக்கு ஓய்வெடுக்கத் தூண்ட தூணில் சாய்ந்து அமர்ந்தவாறு அமைதியாக மலை கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“அது ஒரு வெள்ளிக்கெழம, நம்ம தோட்டத்து வளவு பிரசிடெண்டு மாமன் இருக்காருல்ல.” பதிலை எதிர்பார்க்காமல், நான் ஒருவன் அங்கிருப்பதையே மறந்தவராக தொடர்ந்தார் தாத்தா.

“அவரோட அம்மா வெடியக்காத்தால செத்துப்போச்சு. ஒரு வாரமாவே, கைகால் கொடையுது தூக்கமில்லன்னு சொல்லிட்டிருந்தது. ரெண்டு நாள் முன்னாடி செவ்வாக்கெழம, என்கிட்டதான் துன்னூறு வாங்கிட்டுப் போச்சு. ராத்திரி படுத்த ஆயா, காலைய எந்திரிக்கல. பேரம்பேத்தி எடுத்து அவிங்க கலியாணத்தயும் பாத்தாச்சி. பாத்தா, நெறவான சாவு. ஆனா, மாமனால அப்புடி நெனக்க முடியல. பங்காளிக சொத்தப் புடுங்கிட்டு உட்ட பின்னாடி தனியொரு மனுசியா வம்பாடுபட்டு இவர கரயேத்துன சீவன். இருந்திருந்த மாதிரி செத்ததும் ஒடைஞ்சு போயிட்டாரு. பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சும் முடியாம சாயங்காலம் நம்மூட்டு வந்தவரு. சாமீ ரூம் முன்னால உக்காந்துட்டு எம்பட மூஞ்சியவே பாத்துட்டிருந்தாரு. சொல்லுங்க மாமா அப்புடின்னேன்”

“கந்தா, உங்கிட்ட ஒரு பழம கேக்கோணும். பத்து நாளா மனசுக்குள்ள ஒரே ரோசன, கேட்டா தப்பா கிப்பா நெனச்சுக்க மாட்டீல்ல.”

“பெரிய பேச்செல்லாம் எதுக்குங் மாமா. ஒங்களுக்கில்லாத உரிமையா. கேளுங்க”

“எங்கம்மா எறக்கறதுக்கு முந்துன செவ்வாக்கெழம உங்கிட்ட வந்து துன்னூறு வாங்கிட்டுப் போனாங்கள்ள, அப்ப நீ எதாச்சிம் சொன்னியா? இல்ல உனக்கெதாச்சும் தோனுச்சா?”

“இல்லீங் மாமா. அப்புடியொன்னும் இல்லீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு அப்புடியொன்னும் மந்திர தந்திரமெல்லாம் தெரியாதுங்க. வாராவங்க…”

“இரு இரு” தொடரவுடாமல் இடைமறித்தார் பிரசிடெண்டு மாமன் “உன்னிய பத்தி நானும் அப்புடித்தான் நெனச்சிட்டிருந்தேன். ஆனா, துன்னூறு வாங்கிட்டு வந்ததும் அம்மா ரொம்ப பொக்குன்னு ஆயிட்டாங்க. செரியா ஆருகூடயும் பேசுல. வெகரம் கேட்டப்ப சொன்னாங்க. துன்னூறு கொடுத்தப்ப ஒம் மூஞ்சில களையே இல்லையாம். துன்னூறு மந்திரிக்கறப்பக் கூட, ரெண்டு மூனு சளக்கா துன்னூற பொட்டில போட்டுட்டு மறுபடியும் எடுத்தியாமா. ஏன் அப்புடி ? ஒனக்கெதாச்சும் குறிப்பு கிறிப்பு காட்டுச்சா? தயங்காம சொல்லு”

“இல்லீங்களே மாமா. நீங்க கேட்கற அளவுக்கு விசியம் தெரிஞ்ச ஆளு நானில்லங்க”

“”இதப்பாரு கந்தா, எங்காத்தா ஆயுசு முடிஞ்சு போச்சு. நெறவா வாழ்ந்த மனுசி. தப்பில்லை. அவ ஒரு வார்த்த சொன்னா, அதுல சத்தியம் இருக்கும். நல்லா ரோசன பண்ணிப் பாரு ஏதாச்சிம் குறிப்பு காட்டிருக்கும் நீ வெளயாட்டுத்தனமா உட்டுருப்ப. அது என்னன்னு தெரிஞ்சுகிட்டீன்னாதான் மத்தவங்களுக்கு நல்லது. புரியுதா ? வாரன்” பதில எதிர்பாக்காம போயிட்டாரு மாமன்.

சின்ன இடைவெளி விட்டு, என்னைப் பார்த்தபடி தொடர்ந்தார் தாத்தா, “நாலஞ்சு நாளு பொட்டுத் தூக்கமில்ல. நாளு முச்சூடும் சாமி ரூமுக்குள்ளாறயே ஒக்காந்து ரோசன பண்ணிட்டே இருப்பேன். ரவக்கி, ஆசாரத்துல படுத்து விட்டதைப் பாத்தும் அதே ரோசனதான். அஞ்சாவது நாள் ராத்திரி, ஊட்ல எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. நானும் சித்த கண்ணசந்தேன். சித்தங்கூரந்தா தூங்கிருப்பேன். இருந்திருந்த மாதிரி, மேலெல்லாம் கொதி கொதிக்குது. செரியான காய்ச்சலு. மொணங்கிட்டே படுத்திருந்தேன். அப்பதான், எப்பயோ மந்திரிக்க வாரவங்ககிட்ட எந்தாத்தன் சொன்னது, வார்த்த பெசகாம நியாபகம் வந்துச்சு. அதும் அவரு பக்கத்துல இருந்து சொல்லுற மாதிரி.

“எப்பயுமே ஒன்னு நெனப்புல வச்சுக்க சூடு நல்லது. குளுந்து போனாத்தான் சிக்கல்”.

எனக்கு குப்புன்னு வேத்திருச்சி. சட்டுன்னு எழுந்துட்டேன். ஏன், நான் அன்னிக்கு, என்னையும் அறியாமா மறுக்கா மறுக்கா துன்னூற மாத்திட்டு இருந்தேன்னு அப்பத்தான் புரிஞ்சிது. எப்பயுமே துன்னூறு மந்திரிக்கறதுன்னா, வாராவங்க பிரச்சனய கேட்டுட்டு, அது செரியாக குலதெய்வத்துக்கிட்டயும் முருகங்கிட்டயும் வேண்டிக்குவேன். வேண்டும்போது, வரவங்களுக்கு ஒரு நம்பிக்க உண்டாகணும்னு, கொஞ்சம் துன்னூற எலைல போட்டு அதை நீவிக்கொடுத்துட்டே சாமி பேர சொல்லிட்டே இருப்பேன். நேரமெல்லாம் கணக்கில்ல, ஒரு கட்டத்துல, வேண்டுதல நிறுத்திட்டு துளி துன்னூற நெத்தில பூசிவுட்டுட்டு, மிச்சத்த அதே எலைல மடிச்சு கொடுத்துடுவேன். எப்பயுமே, நான் வேண்டுதல நிப்பாட்டுறது நீவிக்கொடுக்கற துன்னூறு கொஞ்சம்போல வெதுவெதுன்னு ஆனதுக்கப்புறம்தான், அது எனக்கே அதுவரைக்கும் தெரியல. அன்னிக்கு துன்னூறு சூடாகாமயோ குளுந்தோ கெடந்திருக்கு. அதான், எலய மாத்துறது துன்னூற மாத்துறதுன்னு எதையாச்சிம் செஞ்சிருக்கேன். இந்த சூட்சுமம் புரிஞ்சதுக்கப்புறம், மந்திரிக்கறதையே முழு மனசோட செய்ஞ்சிட்டிருந்தேன், பெரும்பாலும் நான் நெனச்ச மாதிரி துன்னூறு கொஞ்சம் போல சூடாகும். எப்பயாச்சிம் குளுந்தே கெடந்தா அவங்கள, ஆசுப்பத்திரிக்கோ இல்லாட்டி வைத்தியர்கிட்டயோ போகச்சொல்லிடுவேன் அவ்வளவுதான். இதுல யாரையும் நான் இதுநா வர ஏமாத்துனதில்ல. போதுமா?” கேட்டவாறே நடையைத் தொடர்ந்தார் தாத்தா.

மலைக்குச் செல்ல படிகள் இருந்தாலும், மரங்களினூடே அமைந்த மலைப்பாதையில்தான் எப்போதும் செல்வார்கள். குமரேசனுக்கு சமாதானமாகவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அரைகுறை நம்பிக்கையுடன் தாத்தாவிடம் கேட்டான் குமரேசன், “செரி தாத்தா. என்ன மந்திரம் ஓதுறீங்கன்னு சொல்லவேயில்லை”. ”அதெல்லாம் நேரம் வரும்போது சொல்லுறேன். ஒனக்கில்லாததா” திரும்பிப் பார்க்காமல் சென்ற தாத்தாவைத் தொடர்ந்தான் குமரேசன். அன்றிரவு எப்போதும் போல, ஆசாரத்தில் தாத்தாவின் வியர்வை நெடி எட்டும் தூரத்தில் தூங்கிக்கொண்டிருந்தான் குமரேசன். நள்ளிரவில் அவனை உசுப்பினார் கந்தசாமி. அரைகுறை தூக்கத்தில் விழித்த குமரேசன் காதில் “அடுத்தவன் கவலைய போக்கடிக்க, நாம எதச்சொல்லி ஆண்டவன்கிட்ட வேண்டுனாலும் அது மந்திரந்தான்” என்பதை மட்டும் சொல்லிவிட்டுப் படுத்தவர், மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை.

*

அதிசயமாய் அந்த வியாழன் அதிகாலையிலே முழிப்பு வந்துவிட்டது குமரேசனுக்கு. சஷ்டி என அம்மா சொன்னது நினைவுக்கு வந்ததும் எப்போதும்போல் கைத்தமலை செல்லும் திட்டத்தில் குளித்து முடித்தான். இது தாத்தாவுக்காக. சாமி ரூமில் தாத்தாவை எண்ணி கும்பிட்டுவிட்டு, சைக்கிளை எடுத்தவனை பூவாத்தாளின் குரல் மறித்தது. “அடேய், கொமரேசா, சித்த நில்லு”

“ஏம்மா? கோயிலுக்கு போயிட்டு வந்துடறேனே”

“அடேய், நம்ம தோட்டத்து வளவு மாரியம்மக்கா வந்திருக்காங்க. அவுக பேத்தி ராவு முச்சூடும் தூக்கலையாமா. விருக்கு விருக்குன்னு பயந்துட்டே இருந்தாளாமா. கூடவே காய்ச்சலும் இருக்காமா.”

“அதுக்கிப்ப என்னம்மா? அதான் ஊர ஏமாத்துறத்துக்குன்னே நம்மூட்ல உம்மட புருசன் இருக்காருல்ல. அப்புறமென்ன?”

“அந்த சொரண கெட்ட சென்மந்தா எங்க போயித்தொலைஞ்சதுன்னே தெரியலையே. வா கண்ணு தாத்தன நெனச்சுட்டு, நல்லா சாமி கும்பிட்டுட்டு கொஞ்சம் துன்னூறு எடுத்துக்கொடு சாமி” பூவாத்தாள் சொல்லி முடிக்கவும், மாரியம்மாக்கா குமரேசனை நெருக்கி வருவதற்க்கும் சரியாக இருந்தது.

“ஏக்கா, கொழந்தக்கி ஒடம்பு முடியலைன்னா ஒடனே ஊத்துக்குளி ஆசுப்பெத்திரிக்கு போகவேண்டியதுதான. இங்க யாருக்கு என்ன தெரியும்ன்னு இங்க வந்து நிக்கற?”

“இங்க பாரு கொமரேசா, நேத்தே போனேன். அங்க ஒருத்தருமில்ல. கண்ணன் டாக்டர்கிட்டயும் செரியான திருவிழாக் கூட்டம்ன்னு திரும்பி வந்துட்டேன். புள்ள ரவமுச்சூடும் கண்ணு மூடி தூங்கல. செத்தங்கூரங் கழிச்சு ஆசுப்பத்திரிக்கும் போறதுதான். அதுக்கு முன்னாடி கொஞ்சம் துன்னூறு வாங்கிட்டுப்போனா மனசுக்கு ஒரு தெம்பா இருக்கும்ன்னுதான் வந்தேன். சாமி மாதிரி உன் தாத்தன், அவருக்கொசரம்தான் இங்க வந்து நிக்குறதே. ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு ரொம்ப பிலுக்காதே. வா”.

குழந்தையின் வறண்ட உதடுகளையும், விறைத்து நிற்கும் இமைமுடிகளையும் பார்த்துக்கொண்டே இருந்த குமரேசன், மாரியம்மக்காவின் குரலில் தெரிந்த ஆணைக்குக் கட்டுப்பட்டவன் போல சாமி ரூமுக்குள் நுழைந்தான்.

“எங்கொல தெய்வம், வலுப்பூரம்மன். அவ பேர நல்லா நெனச்சி மந்திரிச்சு கொடு கண்ணு”

பூஜையறையில் காமாட்சி விளக்கை பற்ற வைத்தான். இருட்டிலிருந்து துளி வெளிச்சத்துக்கு மாறிய அக்கணத்தில் தாத்தா தன்முன் நிற்பதைக் கண்டான். சில நொடிகள்தான் அவ்வெண்ணம். சாமியறை கொடியில் எப்போதும் இருக்கும் காவி வேட்டியின் அசைவு அது என ஆசுவாசம் அடைந்தான் குமரேசன். கட்டளை இடப்பட்டது போல ஊதுபத்தியைப் பற்ற வைத்தான். சாமி படங்களுக்கும் பெட்டிக்கும் காட்டுகையில், தன் கை நடுங்குவதை அவனால் நிறுத்த முடியவில்லை. தான் யாராலோ இயக்கப்படுவது போன்ற குழப்பம் அவனுக்கிருந்தது. தாத்தாவின் ஸ்பரிசம், வியர்வை நெடி, பார்வை, பேச்சு எனத் தொடர்பில்லாமல் அவரின் நினைவுகள் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருந்தது. பத்தும் பத்தாததற்கு, எங்கோ ஒரு மூலையிலிருந்து தாத்தாவின் சிரிப்பு கொப்பளிக்கும் பார்வை தன்னை நோக்கிக்கொண்டிருப்பதான எண்ணம் எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்வதின் மேலிருந்த கவனம் குமரேசனை விட்டு அகன்றது.

அன்னிச்சைச் செயலாக, தன் குலதெய்வம் கரியகாளியம்மன் பெயரைச் சொல்லி, பின்னர் கைத்தமலை முருகனை வேண்டிக்கொண்டு, வலுப்பூரம்மன் பெயரை மனதில் நினைத்துக்கொண்டே திருநீறை ஆட்காட்டி விரலால் தடவிக்கொண்டே இருந்தான். ஓரிரு நிமிடங்களில் நிறுத்திவிட்டு, திருநீறில் கொஞ்சம் எடுத்து குழந்தையின் நெற்றியில் பூசிவிட்டு, மிச்சத்தை அதே பேப்பரில் மடித்து மாரியம்மக்காவிடம் தந்து. தன்னையுமறியாமல் சொன்னான் “ஆசுப்பத்திரியெல்லாம் வேண்டியதில்லக்கா, பொழுதுக்குள்ள புள்ள செரியாகிடுவா”.

***

காளீஸ்வரன் – kaleeswaran.tk@gmail.com

தடை

0

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

த்தனை ஆண்டுகளுக்குப் பின் நினைத்துப் பார்த்தாலும் வேலப்பன் எங்கள் வீட்டின் வாசலில் வந்து நின்ற அந்தக் காலைவேளை வெள்ளையடித்துவிட்ட பழைய தொலைக்காட்சிப் பெட்டியின் திரையைப் போன்று மங்கலாக என் நினைவில் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் காட்சி வடிவில் என் நினைவில் நிற்பது அது ஒன்றே என்றுகூட நான் சொல்லத் துணிவேன். எங்கள் வீட்டின் கேட்டை சற்று வேகமாகத் திறந்துவிட்டு உள்நுழைந்த வேலப்பன் எவ்வித தயக்கமுமின்றி வீட்டின் சிமெண்ட் முற்றத்தைத் தாண்டி வேகமாக முன்னேறி முன்வாசலைத் தாண்டி முன்னறைக்கு வந்து அங்கே சோபாவில் அமர்ந்திருந்த அப்பாவிடம் சொன்னான்.

“வோய் நேற்றைக்கு எனக்க பூமிய அளந்தாச்சி கேட்றா, பத்துரத்துல இருக்க கணக்குப்படி பாத்தா ஒரு அடியைக் காணல்ல, அது ஒம்ம அகர்த்திக்குள்ள தான் கெடக்கும். அதான் நீரு ஒம்ம மதில இடிச்சி ஒரு அடி கணக்கு பண்ணி தள்ளிக் கட்டித்தாரும் என”

“யாருல நீ வெங்கப்பயல, விடியுமுன்ன வீட்டுக்குள்ள ஏறி சில்லறை எடவாடு பேசுகா”

“வோய் அனாவசியமாட்டு வாய்ல வார்த்தையள விடப்புடாது கேட்றா, அடுத்தவனுக்கப் பூமியை அபகரிச்சு எங்கடே கொண்டுபோவப் போறிய”

“எவம்ல ஒனக்கப் பூமிய அடிச்சி மாற்றினது, ஒனக்க அம்மைக்க மாப்பிளைட்ட பேய் கேளுல, எவம்ல சர்வையரு மயிராண்டி, என்னத்த அளந்தான், தனக்க குஞ்சிக்க நீளம் அறியாதவனெல்லாம் சர்வைவரு, காலம் போற போக்கு”

வேலப்பன் கைகளை ஓங்கினான், பின் தாழ்த்திக்கொண்டான்.

“நான் எனக்க சொத்த விக்கப்போறேன், வாங்குயவன் இந்த வில்லங்கத்தை மாற்றிக் கேக்கான், அடுத்த வாரத்துக்குள்ள நீ மாத்தி தா, இல்லணா வேற மாரி ஆவும்”

“கைய ஓங்குயா என்ன சீக்குட்டிப் பயல, ஒரு மயிரும் இடிச்சி மாத்த முடியாது, ஒனக்க பூமியக் காணலணா, ஒனட்ட வித்தவனுட்டப் பேய் கேளுல, அல்லணா ஒனக்கு பங்கு வச்சி தந்த ஒனக்க அம்மைக்க மாப்பிளைட்ட கேளுல” என்றார் அப்பா.

அங்கு கைகலப்பு நிகழுமென்றும் அவ்வாறு நிகழ்ந்தால் நான் என்ன செய்யவேண்டுமென்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் வேலப்பன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சட்டென்று இறங்கிப் போய்விட்டான். சற்றே நடுங்கிக்கொண்டிருந்த அம்மா முன் அறைக்கு வந்து நாமும் ஒரு சர்வையரை வைத்து அளந்து பார்த்தால் என்ன கேட்டாள்.

“ஒவ்வொருத்தனும் பூமியக் காணலண்ணி சொன்னா அளந்து பிச்சிக் குடுக்குயதுக்கு நான் பஞ்சிமுட்டாய் யாவாரமா பாக்கேன்” என்றார்.

இரண்டு மாதங்களாக எவ்விதச் சலனமுமின்றிக் கழிந்தது. வேலப்பனை நான் அவ்வப்போது பார்ப்பதுண்டு ஆனால் அவன் என் முகத்தைப் பார்க்காமல் ஒருவித ஏமாற்ற முகத்தை வைத்துக்கொண்டு செல்வான். பின் ஒருநாள் நான் முக்கு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் பொழுது தரகன் ராமச்சந்திரன் வேலப்பன் தனது பூமியை விற்பதற்கு ஆள் பார்த்துவிட்டானென்றும் இன்னும் ஒரு மாதத்தில் எடவாடு முடிந்துவிடுமென்றும் அருகிலிருந்த கிழவரிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அப்பாவிடம் சொன்னேன். அப்பா பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “ஓத்திரமில்லை எவனுக்காம் வித்துட்டுப்போறான், நம்மகிட்ட வராம இருந்தா சரி” என்றார்.

ஆனால் அது அவ்வாறு முடியாமல் அப்பா பேச்சுவாக்கில் சொன்னது போல எங்களிடமே மீண்டும் வந்து நின்றது. ஒரு திங்கட்கிழமை அப்பா அலுவலகத்திற்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது வீட்டின் வெளியே ஒரு வெள்ளைநிற டொயோட்டா பார்ச்சூயுனர் கார் வந்து நின்றது. அப்பா இடுப்பில் கட்டிக்கொண்டிருந்த தன் பெல்ட்டை பாதியிலேயே தொங்கவிட்டுக்கொண்டு வாசலில் சென்று பார்த்தார். காரிலிருந்து தன் தாடியைத் தேய்த்தபடியே இறங்கினான் செல்வம்.

மிகத்தூய்மையான வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, வயிறு பெருத்து அவன் வயதிற்கு தொடர்பற்ற உடலமைப்புடன் இருந்தான். மாநிற முகத்தில் நன்றாக அமைப்புடன் வெட்டி அழகுபடுத்தப்பட்டிருந்த தாடி வைத்திருந்தான். சற்றே குள்ளமானவன். இளம்பச்சை நிற சட்டையொன்றை அணிந்திருந்தான். இரண்டு கைகளிலும் எல்லா விரல்களிலும் விதவிதமான நிறங்களில் மோதிரங்கள் அணிந்திருந்தான்.

செல்வத்திற்கு ஒரு முப்பத்திரண்டு வயதிற்குள்தான் இருக்கும். ஆனால் மிகச்சமீபமாக அரசியல் செல்வாக்கு பெற்றவன். அவன் சார்ந்த கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவராக வர வாய்ப்பிருக்கும் ஒருவனாக அறியப்படுபவன். அவனை அங்கு அப்பா எதிர்பார்க்கவில்லை என்பது அப்பாவின் உடலசைவுகளை வைத்தே தெரிந்தது.

அப்பாவின் கண்கள் மிரண்டு உடலில் லேசான குலுக்கம் வர, பெல்ட்டை போட முயன்றுகொண்டிருந்த கைகள் அதை விடுவித்துவிட அசையாமல் நின்றார்.

செல்வம் வேகமாக உள்ளே வந்தான்.

குமரி மேற்கு மொழியின் ராகத்தில் “தொரணி சொல்லகூடியது நீங்களா” என்றான்.

அப்பா “ஆமா நாந்தான் தொரை” என்றார்.

“எனக்கு கட்சியில அடுத்த மாசம் பதவி தருவினும், அதாக்கும் நான் இங்கின நார்ல ஒரு வீடு கட்டியதுக்கு எடம் பாக்கியன், வேலப்பன்ட்ட பேசி எடவாடு முடியப்போவுவு, பின்ன அவன் ஒங்களுக்கு கூட உள்ள வில்லங்கத்த சென்னாய்ன், அதான் நான் பேசி பாக்கியம்ணு அவன்ட்ட சொன்னைய்ன், நீங்க அத ஒன்னு இடிச்சி மாற்றி தருவியளா, இப்பம் வேண்டாய்ன் , ஒரு ரெண்டு மாசம் கழிஞ்சி பாத்தா போரும் கேட்டியளா” இவ்வளவையும் அவன் எவ்வித ஏற்றமிறக்கமின்றி ஒரே சீராகச் சொல்லி முடித்தான்.

அம்மா காப்பி கொண்டுவந்தாள்.

“நான் வரச்சில காப்பி குடிச்சிண்டுதான் வாறைய்ன். நீங்க ஒன்னு இடிச்சி மாற்றுங்க தாருங்க என்ன” என்றான். அம்மா மீண்டும் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.

அப்பா பதிலெதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். அவன் என்னை நோக்கி, “பிள்ள ஒனக்க அம்மைட்ட சொல்லணும் அவியளுக்க கெட்டுனவன் உயிரோடி வேணும்மெங்கி பெகளம் உண்டாக்காம செவுர இடிங்க” என்றபடி மிகமிகத் தாழ்ந்த குரலில் என்னை நோக்கிச் சொல்லிவிட்டு வெளியேறிப் போய்விட்டான். அப்பா கண்களைச் சுருக்கி அவன் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்கு மேல் எங்களுக்கு செய்வதற்கு இந்தப் பிரச்சனையில் எதுவுமில்லை என்பதுபோல் நிகழ்வுகள் உருண்டன. எங்கள் தலை மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருப்பதை எவ்வித பங்குமின்றி ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தோம். செல்வம் எங்கள் மதில் சுவரை ஒட்டி அவனின் மிகப்பிரமாண்டமான ஒரு வீட்டைக் கட்டத் துவங்கினான். அதைக் கட்டவந்த ஒப்பந்ததாரர் ஆசிர்வாதம் எங்கள் வீட்டு மதிலுக்கும் அவன் புதிதாய் கட்டும் வீட்டிற்கும் ஒரு அடி இடம் விடலாம் என்று அறிவுறுத்திய பொழுது, “அந்தக் கரைக்கு நம்ம பூமி ஒரு அடி கெடக்கு நீங்க எது செய்தாலும் அத கணக்காக்கிக்கிடுங்க என” என்றான். ஆசிர்வாதம் பரிதாபமான ஒரு பார்வையை மதிலுக்கு இந்தப்புறம் நின்று கொண்டிருந்த அப்பாவிற்குத் தந்தார். செல்வம் அந்த வீட்டின் ஒவ்வொரு இடுக்கையும் பார்த்துப் பார்த்து செதுக்கினான். அவனுக்கு கட்சியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வந்திருக்கிறதென்று அந்தப்பகுதியில் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு முன் இந்தப்பகுதிக்கு சற்றும் அறிமுகமில்லாதவனாக இருந்தவன் இப்பொழுது அனைவருக்கும் தெரிந்தவன் ஆகிவிட்டிருந்தான்.

வீடு பாதிக்கும் மேல் வளர்ந்துவிட்டது. செல்வம் வீட்டின் கட்டிடப் பணிகளை கவனிக்க தினமும் வரத்துவங்கினான். காலையிலிருந்து மாலைவரை அவனின் கார் எங்கள் வீட்டின் எதிர்புறம் நின்றுகொண்டிருக்கும். அதைப் பார்ப்பதற்கு அஞ்சியே நாங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவது குறைந்துபோய் முடங்கிவிட்டோம். எங்கள் வீட்டின் முன்வாசற் கதவு எப்பொழுதும் பூட்டிக் கிடந்தது. ஆனால் இதில் எங்களைக் குழப்பிய விஷயம் என்னவென்றால் அன்று ஒருநாள் வந்து பேசிய பிறகு அவன் மீண்டும் எங்களிடம் வரவேயில்லை.

ஆனால் எங்கள் மதில் சுவரினுள் இருக்கும் ஒரு அடி இடத்தை அவனுடைய இடம் போல் நினைத்து அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டிருப்பான். அப்பா அலுவலகத்தில் தனக்கு தெரிந்த எல்லாரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டார். அனைவரும் சட்டரீதியாக அணுகச் சொன்னார்கள். கூடவே அவ்வாறு செய்தால் நாங்கள் செல்வத்தின் கையில் எவ்வாறு துன்புறுவோம் என்பதையும் அவர்களின் கற்பனையில் ஓட்டிப்பார்த்துச் சொன்னார்கள். அப்பா சலித்து உடல் இளைத்துவிட்டார். காலையில் அவன் கார் வருவதற்கு முன் அலுவலகம் சென்றுவிடுபவர் அவன் கார் எங்கள் வீட்டின் முன்னிருந்து புறப்படும் வரை வீட்டிற்கு வருவதில்லை. ஒரு பேரலை போல அந்த வீடு எங்கள் முன் எழுந்து வந்துகொண்டிருந்தது.

அந்த வீடு பேருருவாகிக்கொண்டிருந்த வேளையில் அப்பாவின் நடமாட்டம் எங்கள் வீட்டினுள் குறைந்துகொண்டேயிருந்தது. அடுக்களைக்குள் வருவதை நிறுத்தியவர், முன்னறை, படுக்கயறை என மெல்ல மெல்ல விட்டு கடைசியில் நாங்கள் அரங்குவீடாகப் பயன்படுத்திய ஒரு அறையினுள் முழு நேரமும் முடங்கத் தொடங்கினார். அரங்கு வீட்டினுள் மாமா பயிர்தோறும் கொடுத்துவிடும் நெல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். விடுமுறை நாட்களில் அந்த நெடியினுள் எவ்வாறு நாள் முழுக்க அமர்ந்திருக்கிறார் என்பது என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

ஆனால் அவர் அவ்வறையினுள் தன் நேரப்போக்கிற்காக விதவிதமான செயல்களைச் செய்தபடியிருந்தார். ஆசாரியின் கருவிகளை வாங்கிவந்து ஒரு நாற்காலி கூட்டினார்.

எங்கள் வீட்டின் பின்புறம் கிடந்த உரல் ஒன்றை அவ்வறையினுள் தூக்கிச்சென்று கைக்குத்தல் நெல் செய்தார். எல்லா செயல்களின் மீதும் சலிப்பு உண்டான ஒருநாளில்தான் அந்த அறையில் அவர் சிறுவயதில் பங்கேற்ற போட்டிகளில் பரிசாகக் கிடைத்து இதுவரை பிரித்துப் படிக்காமல் போன புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.

அந்தப் புத்தகம் கனகாம்பர நிற முன் அட்டையும் வெள்ளை நிற பின் அட்டையும் வெறும் நாற்பது பக்கமும் கொண்டது. முன் அட்டையில் வெள்ளை நிற கோட்டோவியத்தில் சிறு செடியொன்று வரையப்பட்டிருந்தது. ஆசிரியர் பெயர்களாக மோனிகா மற்றும் உமையம்மை என்று இருந்தது. அதன் ஆசிரியர் மோனிகா என்பவர் இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து குமரிமாவட்டத்திற்கு வந்து நாகர்கோயிலில் தங்கியிருக்கிறார். நாகர்கோயில் பள்ளிவிளை அருகே வயற்காட்டில் மயங்கிக் கிடந்த உமையம்மையைக் காப்பாற்றியிருக்கிறார். அப்பகுதியில் சற்றே பித்து கொண்டவராக அறியப்பட்ட உமையம்மை தன்னை காப்பாற்றிய மோனிகாவின் மேல் விலங்குகள் காட்டும் நன்றியுணர்வைப் போன்று மோனிகா இறப்பது வரை தோழியாக, ஏவல் வேலை செய்பவராக வழிகாட்டியாக அவருடனே வாழ்ந்திருக்கிறார். ஆசிரியர்கள் பற்றிய இந்தத் தகவல்கள் எல்லாம் புத்தகத்தின் பதிப்பாளர் அப்பகுதி மக்களின் வாய்வழிச் செய்தியில் இருந்து சேகரித்திருக்கிறார். புத்தகத்தின் உள்ளே இருந்த தகவல்கள் கூட மோனிகாவின் சேகரிப்பில் இருந்து கிடைத்த குறிப்புகளின் நேரடித் தொகுப்புதான். மோனிகாவும் உமையம்மையும் குமரியின் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்து பெற்ற அனுபவங்களை மோனிகா எழுதிவைத்துள்ளார்.

குமரியின் கடற்கரைப் பகுதியில் மட்டுமே விளைந்த ஒருவிதக் கிழங்கை அதன் அபூர்வ ருசியின் காரணமாக உமையம்மையும் மோனிகாவும் அவர்கள் அப்பொழுது வசித்த மலையடிவாரப் பகுதியான பள்ளிவிளையில் விளைவிக்க முயன்றிருக்கின்றனர். அதனை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை பட்டியலிடுகிறது முதலாவது குறிப்பு.

அந்தச் செடி பள்ளிவிளையில் வளரவேயில்லை. அதன் வேரும் தண்டும் தொடர்பற்றது போன்ற ஒரு அமைப்பை அடைந்து பின் பட்டுவிடுகிறது. எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடியவே கடைசியில் அந்தக் கிழங்கு இயற்கையாகவே கிடைக்கும் கடற்கரைப் பகுதியில் ஒரு நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே பயிர் செழித்து வளர்ந்திருக்கிறது. அவை அனைத்தையும் அறுவடை செய்யும் நாளில்தான் மோனிகா ஒன்றை கவனித்திருக்கிறார். எல்லா பயிர்களின் வேரும் கடலின் எதிர்திசையில் வடக்கு நோக்கிச் சென்றிருந்தது. அதற்கேற்றாற்போல் அவற்றின் தண்டுகள் தெற்கு நோக்கி வளைந்திருந்திருக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு தான் கவனித்து உள்வாங்கியவற்றை பரிசோதிக்க எண்ணிய மோனிகா பள்ளிவிளை மலையடிவாரத்தில் உமையம்மையிடம் தோட்டத்தில் பெரிய குழியொன்றை வெட்டச் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களில் உமையம்மை நான்கடி ஆழமான மிக அகலமான குழியொன்றை வெட்டி முடித்துவிட்ட பின்பு குழியில் நீர் ஊற விட்டிருக்கின்றனர். பின் கிழங்கு கன்றுகளை அந்தக் குழியின் வடக்கு பகுதியில் நட்டிருக்கின்றனர். மோனிகா எதிர்பார்த்தது போலவே பயிர் அனைத்தும் பட்டுவிட்டிருக்கிறது. உமையம்மையை அழைத்த மோனிகா பெரிய இறைவெட்டி போன்ற கருவி இரண்டை செய்யச் சொல்லியிருக்கிறார். உமையம்மை தெங்கம்பாளை கொண்டு மோனிகா கேட்டதைப் போன்ற கருவியை செய்திருக்கிறார். அதோடு சேர்த்து சில கமுகு இலைகளும் கொண்டு வரப்பட்டு இருவரும் அக்குழியின் அருகில் அமர்ந்து காலை இரவு என என்னேரமும் நீரை அளைந்து கடல் அலைகளின் ஓசையைப் போலி செய்திருக்கிறார்கள். தன் இயல்பான பித்தால் உமையம்மை வெகு இயல்பாக, மிகத் துல்லியமாக அலைகளின் ஓசையை குழிநீரில் கொண்டு வந்திருக்கிறாள்.

இம்முறை அவர்கள் நட்ட கிழங்குப் பயிர் அபாரமாக வளர்ந்திருக்கிறது. அவற்றின் வேர்கள் குழியின் எதிர்திசையில் வடக்கை நோக்கி வளைந்திருந்திருக்கிறது. கிழங்கு அற்புதமான ருசியையும் நல்ல நெருக்கமான சதையமைப்பையும் கொண்டிருந்திருக்கிறது.

“அது செழித்து வளருமாறு கிழங்கிற்கு நாங்களிட்ட கட்டளை, அதை அந்தப் பயிர் நிறைவேற்றியது, அது இயற்கையின் கட்டளை, அதை ஒருக்காலும் அது மீற முடியாது” என்று குறிப்பின் கடைசியில் எழுதியுள்ளார் மோனிகா.

அப்பா புத்தகத்தை படித்துவிட்டு வந்து என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

“சவுண்டுக்கு சக்தி உண்டும், கேட்டியா மக்ளே”.

செல்வத்தின் வீட்டு வேலைகள் பெரும்பாலும் முடிந்து பால் காய்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பகல் வேளையில் நான் வெயிலில் அலைந்துகொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். செல்வத்தின் கார் எங்கள் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. நான் அதன்மீது இயலாமையும் கசப்பும் கலந்த ஒரு அலட்சியப் பார்வை ஒன்றை வீசிவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். எல்லாக் கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்ததால் வீடு ஒருவித விநோத அமைதியையும் இருளையும் கொண்டிருந்தது. அம்மா முன் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள். நான் செல்வத்தின் வீட்டை ஒட்டியிருக்கும் எங்கள் வீட்டின் படுக்கையறையை லேசாகத் திறந்து பார்த்தேன்.

அந்த இருளுக்குள் நீண்ட ஒளியொன்று ஊடுருவி லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னலின் வழியாக வந்துகொண்டிருந்தது. அப்பா அந்த ஜன்னல் திறப்பின் இடுக்கின் வழியாக தன் கண்களை கூர்மையாக செல்வத்தின் வீட்டின் மேல் தவழவிட்டு ஒரு பல்லியைப்போல சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவர் தன்வாயின் மேல் விரலை வைத்து சிறுபிள்ளைகளை மிரட்டும் தொனியில் அங்கிருந்து நகரச் சொன்னார். அச்சமும் குழப்பமும் நிறைந்தவனாக நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அரை மணிநேரத்திற்குப் பின் அப்பா நடு அறைக்கு வந்தார். என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளாமல் வெளியே கிளம்பிச் சென்றார். அப்பாவின் மாற்றங்கள் அந்தப் பகலிலிருந்துதான் தொடங்கியது என என்னால் உறுதியாகக் கூற முடியும். அன்றிரவு வெகுநேரம் கழித்து திரும்பி வந்தவர் அம்மா உறங்கிவிட்டதைப் பார்த்துவிட்டு தானே சோறு போட்டு உண்டுவிட்டு நடு அறையில் நான் அமர்ந்திருந்த சோபாவின் எதிர்புறம் கிடந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். நான் வெகுநேரத் தயக்கத்திற்குப் பின் மத்தியானம் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன்.

“ஒன்னுமில்ல நீ கவலப்படாத நான் சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன்” என்றார்.ஆனால் அதன் பின் மிகக்கூர்மையான மாற்றங்கள் அவர் நடவடிக்கைகளில் ஏற்பட்டன.

அவர் பல்லிகளை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினார். பல்லிகள் வீட்டிற்குள் வராமலிருப்பதற்காக எங்கள் வீட்டின் காற்றுப்பாந்துகளில் அமைக்கப்பட்டிருந்த அடைப்புகளை நீக்கினார். அதன் பின்னர் பல்லிகள் மிகச்சாதாரணமாக எங்கள் வீட்டினுள் நடமாடத் தொடங்கின. அவற்றின் ஒவ்வொரு அசைவையும் அவர் கவனித்தார். அவை சுவரில் ஊர்வதையும் அவற்றிற்கிடையேயான உறவுகள் என அனைத்தையும் கவனித்தார். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்காமல் விருப்பஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பின் வீட்டிலிருந்தபடியே அந்த ஜன்னல் இடுக்கையும் பல்லிகளையும் முழுநேரமாக கவனிக்கத் தொடங்கினார்.

இரண்டு மாதங்களில் செல்வத்தின் புதிய வீட்டில் மீதமிருந்த வேலைகள் எல்லாம் முற்றாக முடிந்துவிட்டது.

“பணத்த கட்டி வச்சிருந்தா ஒரு நாளையிலேயே வீடு கட்டலாம்” என்றார் அப்பா. அதற்கு அடுத்த மாதம் செல்வம் வீடு பால்காய்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்தன. நாள் நெருங்க நெருங்க எங்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவர்களாகவும் இருளினுள் அமர்ந்திருப்பவர்களாகவும் ஆனோம். அப்பா இரவில் வீட்டிற்குள் விளக்கு போடுவதைத் தவிர்த்தார். சுவரில் அலையும் பல்லிகளை மிகச்சிறிய எல்.ஈ.டி டார்ச் லைட் அடித்து பார்ப்பார். அவை உடலுறவு கொள்ளும் வேளையில் தொடுதலுக்கு முன் வெகுநேரம் தயங்கியபடியே பார்த்துக்கொண்டிருப்பது முதல் அவற்றின் எச்சம் கருப்பும் வெள்ளையுமாக அடுக்கிச் செய்யப்பட்டிருப்பது வரை எல்லாவற்றையும் அறிந்து கொண்டேயிருந்தார். ஆனால் செல்வம் எங்களை ஒரு பொருட்டாக மதித்ததாகத் தெரியவில்லை.

அவன் எங்கள் வீட்டை ஒருநாளும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. மீண்டும் ஒருமுறையேனும் கூட எங்களிடம் வந்து மதிலை இடிக்கும்படி சொல்லவில்லை.

அவனைப் பொறுத்தவரை அவனுக்கு தேவைப்படும் நேரம் எங்கள் மதிலை இடித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணம்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அம்மா மிகக்குழம்பிப் போனாள்.அப்பாவின் நடவடிக்கை வேறு அவளை துன்புறுத்தியது. அவள் மதிலை இடித்துவிடுமாறு அப்பாவிடம் வற்புறுத்திக்கொண்டேயிருந்தாள்.

அப்பா இடிப்பதைப் பற்றி துளிகூட எண்ணமற்றவராகத் தெரிந்தார். அம்மா சொல்வதை அவர் கேட்கிறாரா என்றே அம்மாவிற்கு சந்தேகம் வந்திருந்தது.

ஆனால் எல்லாம் ஒருங்கே கூடி தெளிவாகும் நாளொன்று வந்தது. செல்வத்தின் வீடு பால்காய்ப்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அவன் வீட்டு மொட்டை மாடி வேலை முடிந்து, மொட்டை மாடியிலிருந்து வழியும் தண்ணீர் கீழே விழுவதற்கான குழாய் எங்கள் மதில் சுவரைத் தாண்டி எங்கள் அகர்த்திக்குள் நீட்டப்பட்டது. மொட்டை மாடி கழுவிவிட்ட சிமெண்ட் கலந்த அழுக்குத் தண்ணீர் எங்கள் வீட்டின் பின்வாசலில் சரியாக வந்து வழிந்தது. அது எங்களுக்கு செல்வம் விடுத்த கடைசி அபாயச்சங்கு.

அம்மா மிகவும் பயந்துவிட்டாள். அப்பாவிடம் வந்து மீண்டும் மன்றாடினாள். அந்தச் சுவரை இடித்து ஒரு அடி தள்ளி கட்டிக்கொள்ளலாம் என்றாள்.

அப்பா அவளை அமைதிப்படுத்தினார், “கவலைப்படாத” என்றார். “அது நம்ம பூமி” என்றார். பிரமாணத்தில் தான் பலமுறைப் படித்துவிட்டேனென்றும் தவறொன்றும் நம்பேரில் இல்லையென்றும் சொன்னார். நாங்கள் பின் வாசலை நிரந்தரமாக மூடிக்கொண்டோம். அழுக்கு நீர் கதவினை அறையும் ஒலி கேட்கும் பொழுதெல்லாம் அம்மா அச்சம் கொண்டு கட்டிலில் சுருண்டு கொள்வாள். அப்பா எந்தவித சலனமுமின்றி சுவரைக் கவனித்தவாறிருப்பார்.

செல்வத்தின் வீடு பால்காய்ப்பிற்கு முந்தைய நாளன்று காலை முதலே அப்பாவின் மிகமிக விசித்திர நடவடிக்கையின் காரணமாக நான் அப்பாவை வீட்டிற்குள் இருந்தபடியே என் கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தேன். மாலை வந்ததும் அப்பா ஒருவித தத்தளிப்பும் நிலையழிதலும் கொண்டிருந்தார். முன்னிரவில் தச்சு கழிப்பதற்காக ஆட்கள் வந்தனர்.

கொத்தனார் ஒருவரின் கையில் செவலை நிறச் சேவலொன்று இருந்தது. தச்சு கழிக்கும் சமயத்திற்கே உண்டான ஒரு ரகசிய அமைதியும் மனிதர்களின் தாழ்ந்த குரல் பேச்சும் கேட்டுக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விளக்கு அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்த எங்கள் முற்றத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த நான் வீட்டினுள்ளே ஓடிச்சென்று அப்பாவைத் தேடினேன். நான் விரும்பியிராவிட்டாலும் உள்ளூர கணித்திருந்தபடியே அப்பா படுக்கை அறையினுள் சென்று ஜன்னலின் பக்கம் நின்றுகொண்டிருந்தார். செல்வத்தின் வீட்டினுள் கேட்கும் மெல்லிய மனிதக்குரல்களைத் தவிர வேறு எவ்வித ஓசையுமின்றி சூழல் பேரமைதியில் மூழ்கியிருந்தது. தாத்தா கொத்தனார் என்பதால் தச்சு கழிக்கும் நிகழ்வை அப்பா துல்லியமாக அறிந்திருந்தார். எல்லாவற்றையும் தன் கூரிய பார்வையாலும் உடலின் கணக்காலும் அறிந்துகொண்டேயிருந்தவர் சரியாக உள்ளே கோழி அறுக்கப்படும் சமயம் தன் வாயைத் திறந்து நுனிநாக்கை கீழ்வரிசைப் பற்களுக்கு அடியில் வைத்துக்கொண்டு நடுநாக்கால் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் என்று பல்லியைப் போல தடை அடித்தார்.
என் இதயம் வேகமாகத் துடித்தது. ரத்தம் சட்டென முடுக்கத்துடன் பாய்ந்து உடல் முழுவதும் நிறைந்தது. சற்றே மயக்கமும் நிலைகுலைவும் ஏற்பட வாசல் நிலையை நன்றாகப் பிடித்துக்கொண்டேன். இரண்டு நொடிகளுக்குப் பிறகு கண்கள் லேசான தெளிவை அடைந்த பிறகு நான் ஒரு கையால் நிலையைப் பிடித்தப்படி இன்னொரு கையால் என் கண்களைக் கசக்கிவிட்டு பார்த்தபொழுது குழப்பமும் அப்பாவின் மீது அருவருப்பும் அடைந்தேன். ஆனால் அப்பா வேட்டைக்குத் தயராகும் ஒரு விலங்கின் கூரிய கவனத்தோடும் எச்சரிக்கையுணர்வோடும் ஜன்னல் இடுக்கைப் பார்த்தபடி தொடர்ந்து தன் நாக்கால் தடை அடித்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செல்வத்தின் வீட்டிற்குள் சலசலப்புகள் கேட்கத் தொடங்கின. அதெல்லாம் ஒண்ணுமில்லணே என்று ஒரு கனத்த ஆண் குரல் கேட்டது. சலசலப்பு மெல்ல அடங்கி கரு அமைதி நிலவியது. அப்பா அவரின் முகத்தின் சதை மட்டுமே அறியுமளவு மெல்லிய அலட்சியச் சிரிப்பொன்றைச் சிரித்தபடியே வந்து, வாசலில் நின்ற என்னைக் கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார். நான் அருவருப்புடன் கூடிய அலட்சியப் பார்வையைப் பார்த்தபடி அவர் படுத்திருந்த கட்டிலின் அருகில் நின்றுகொண்டிருந்தேன். தன் கைகள் இரண்டையும் மடித்து தலையின் மீது வைத்து கண்களை மூடிப் படுத்திருந்தவர் சில நிமிடங்களுக்குப் பிறகு தன் கைகளை விலக்கி என்னைப் பார்த்தார்.

“யாம்ல அப்படி நிக்கா, பேய் படு”

“எப்பா, நமக்கு என்னத்துக்குப்பா இதெல்லாம்”

“போல, ஒனக்க வயசுல நான் இருந்தம்ணா அவன வெட்டி பூத்திருப்பேன், ஒனக்கு பீ பலம் இல்ல, போல, பேய் படுல”.

கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்ட நங்கூரம் போல் பாய்ந்து வந்த சொற்கள் என் இயலாமையைக் கொழுகி தற்கொலை எண்ணத்தை ஒரு நொடி எழச் செய்தது. நான் என்மேல் அருவருப்பும் அசிங்க உணர்வும் அடைந்தேன். அங்கிருந்து உடனே விலகி என் கட்டிலுக்கு வந்து படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் விடியற்காலையில் செல்வத்தின் வீட்டில் “விநாயகனே வினை தீர்பவனே” பாடலின் ஒலியில் நான் விழித்துகொண்டேன். பத்து நிமிடங்கள் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தேன். பின் பாடலின் ஒலியும் பால்காய்ப்பிற்காகக் கட்டப்பட்டிருந்த குழல் விளக்குகளின் ஒளியும் சேர்ந்து என் தூக்கத்தை தொந்தரவு செய்யவே எழுந்து வெளியில் வந்தேன். முற்றத்தில் வந்து பார்த்தபொழுது செல்வத்தின் வீட்டுவாசலில் வாழை மரமும் உலத்தி குலையும் அலங்கரித்திருந்தது. வீட்டிற்குள் திரும்பி வந்த நான் இரவு படுத்திருந்த முன் அறைக் கட்டிலில் அப்பா இல்லாததைக் கண்டு திகைத்து படுக்கையறைக் கட்டிலைப் பார்ப்பதற்காக கதவைத் திறக்க எத்தனித்தேன். முந்தைய நாள் நடந்த நிகழ்வு என்னுள்ளே சட்டென்று ஒரு மின்னலைப் போல வந்துபோனது. என் கை மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு படுக்கையறைக் கதவைத் திறந்தது. அப்பா ஜன்னலின் அருகில் ஒட்டியபடி நின்றிருந்தார். செல்வத்தின் வீட்டு வெளிச்சம் நீண்ட ஒரு குழல் விளக்கைப்போல படுக்கையறை ஜன்னலின்வழி வந்துகொண்டிருந்தது. என் இதயம் ஒருநொடி நின்றுவிட்டது. ஒரு பல்லியைப் போல கைகள் இரண்டையும் சுவரில் அழுத்தி வைத்தபடி தலையை ஜன்னலில் பதித்து, காதுகளைத் லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னல் இடுக்கிற்கு கொடுத்தபடி, இடது கால்முட்டியை தூக்கி கட்டிலின் மேல் வைத்தபடி, ஒற்றைக் காலில் நின்றார்.

என்னைத் திரும்பிப் பார்த்தவர் கைவிரலை வாயில் வைத்து பின் “போ” என்றவாறு சைகை செய்தார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அப்பா ஒரு மணிநேரம் அசையாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். நேரம் வெளுக்கத் தொடங்கியது. செல்வத்தின் வீட்டிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. பால் பொங்கியதற்கான அறிகுறியாகக் குலவைச் சத்தம் கேட்டது. அப்பாவின் உடலில் மெல்லிய நடுக்கமும் அபாரமானதொரு கவனமும் தோன்றியது. குலவை ஒலிகளின் நடுவே மிகச்சரியாக நிகழ்ந்த ஒரு நொடி அமைதியில் அப்பா நாக்கைச் சுழற்றினார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

குலவை ஒலி நின்று விட்டது. நான் சட்டென்று வெளியேறி செல்வம் கவனிக்கின்றானா எனப் பார்ப்பதற்காக முன்வாசலுக்கு வந்து வாசலைப் பெருக்குவது போல நடித்தவாறு வந்து குறைகண் போட்டு அவனைப் பார்த்தேன். அவன் வெளியே வந்து வீட்டின் சுவரைச் சுற்றிப் பார்த்தான். அவன் பின்னால் அவன் தாயார் வந்து, “அது ஒன்னுமில்ல மக்களே, நல்லதுதான் கேட்டியா, நீ அகத்தே பேயி வந்திருக்கியவளுக்கு பாலூற்றி குடு” என்றாள்.

செல்வம் வீட்டிற்குள் சென்றவுடன் அவள் வானத்தை நோக்கி கும்பிட்டவாறு வீட்டிற்குள் போனாள்.

அதன்பின் செல்வத்தின் வீட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் அப்பா ஊடுருவினார். அவன் எங்கிருந்தோ அதிகாரத்தின்வழி அடித்துப் பிடுங்கிக் கொண்டுவந்த பெண்ணைத் திருமணம் செய்து வீட்டிற்கு வந்த அந்த பின்மத்தியான வேளையில், அந்தப் பெண் வீட்டிற்குள் கால் வைக்கும் நேரத்தில் அப்பா ஜன்னலோரமாக நின்றிருந்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செவ்வம் அன்றுதான் வாய் திறந்து கத்தினான்.

“தள்ளைய ஓழிக்கது” என்றான்.

அவன் மனைவி வெகு விரைவிலேயே குழந்தை உண்டானாள். மெல்ல மெல்ல வளர்ந்துவிட்ட அந்த வயிற்றைத் தள்ளிக்கொண்டு அவள் வீட்டு வாசலில் நிற்பதைக் கவனித்தவாறு அப்பா இரவும் பகலும் அந்த ஜன்னலின் ஓரம் நின்றிருப்பார். அம்மா எத்தனைக் கெஞ்சியும் அப்பா அதைவிட மறுத்துவிட்டார். அப்பாவின் மீது எனக்கும் அம்மாவிற்கும் ஒருவித ஒவ்வாமை உருவாகி அது அருவருப்பாக மாறி அவருடனான பேச்சு முற்றிலும் நின்று விட்டது. அவர் பல்லிகளை கவனிப்பதையும் ஜன்னலோரம் நிற்பதையும் தவிர வேறு எந்த வேலைகளையும் செய்யாமலானார்.

ஒரு வெள்ளிக்கிழமை அப்பா என்னிடம் வந்து அந்த ஞாயிற்றுக்கிழமை நாகரம்மன் கோயிலுக்குப் போகலாமென்றார். அம்மா சந்தோஷமாகி விட்டாள்.

“ஏ நாரம்மோ உப்பும் மஞ்சளும் கொண்டு வாறேன், எனக்க கஷ்டத்த மாற்றித்தா” என வேண்டிக் கொண்டாள்.

அன்று மதியம் உடனடியாக அரிசி மாவு வறுத்து அச்சு முறுக்கு செய்தாள். நாங்கள் அந்த இரண்டு நாட்கள் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டோம். அம்மா அப்பாவிடம் சனிக்கிழமை இரவு சாப்பிட்டு முடித்தவுடன், “ஒளிஞ்சு போவுவு ஒரு அடி” என்றாள். “அவன் இது வர எடுக்க வரலலா, நம்ம சும்மா இருப்போம், எடுத்தாம்ணா எடுத்திட்டுப் போறான்” என்றாள்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் நாகரம்மன் கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயிலில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபொழுது அந்தத் திடலில் சிறிய அரசியல் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. நாங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அப்பா எங்களை வலுக்கட்டாயமாக அந்தக் கூட்டத்தின் அருகில் அழைத்துச் சென்றார்.

அங்கே செல்வம் ஒரு நான்கு பெஞ்சுகளைக் கூட்டி செய்யப்பட்டிருந்த மேடையில் பேசி்க்கொண்டிருந்தான். நானும் அம்மாவும் அங்கிருந்து விலக முயன்றோம். அப்பா அம்மாவின் கைகளைப் பிடித்து நிறுத்தினார். நாங்கள் மூவரும் அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் வெளியே நின்றுகொண்டோம்.

செல்வம் பேசிகொண்டிருந்தான். அவன் வழக்கமாகப் பேசும் குமரி மேற்குத் தமிழின் சாயல் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தான்.

“இப்பொழுது நம் நாட்டிலே சூழியலாளர்கள் பகுத்தறிவாளர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது மிகப்பெரிய ஒரு முரணான விஷயமாகும். காரணமென்னவென்றால், எடுத்துக்காட்டாக பல்லி தடையடித்தால் அந்த செயல் நன்றாக அமையாது என்பது ஒருவித மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்கள். ஆனால் ஒரு சூழியலாளன் அது இயற்கையுடன் மனிதன் கொள்ளும் மாபெரும் தொடர்பு என்றே விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இயற்கை நம்முடன் அவ்வாறு பேசும் நிகழ்வுகள் இல்லையென்றால் இயற்கைக்கும் நமக்குமானத் தொடர்பு அறுந்துவிடும். ஆனால் பகுத்தறிவுப் பார்வையில் இது முற்றான ஒரு மூடநம்பிக்கையாகும். ஆகவே பகுத்தறிவாளர்கள் ஒருபொழுதும் சூழியலாளர்கள் ஆகமுடியாது. எதிர் கட்சியினரின் இந்த இரட்டை வேடத்தைத்தான் நாங்கள் தோலுரிக்கிறோம்” என்றான்.

அப்பா சிரித்துக்கொண்டார். அவனின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் தான் வெற்றிகரமாக ஊடுருவி விட்டதை நினைத்து அவர் முகம் ஒருவித நழிச் சிரிப்பை வெளிப்படுத்தியது.

எங்களைக் கூட்டிக்கொண்டு நாகர்கோயில் குளத்து பஸ் ஸ்டாண்டிற்கு மணிமேடை சந்திப்பு வழியாக நடந்து வந்தார். குளச்சல் செல்லும் பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொண்டார்.

அவர் முகம் புன்னகையில் மிளிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தவர் என்னைப் பார்த்து “அவெனக் கண்டியா பல்லி இல்லாம ஒரு மேடையிலக் கூடப் பேசமுடியல”. பின் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். நான் என் உடல் அவரை ஒட்டாத வண்ணம் தள்ளி அமர்ந்து கொண்டேன். அவர் இப்பொழுது அணியும் ஒருவித வெளிறிய பிஸ்கட் நிறம் அல்லது சிறிய பூக்கள் போட்ட சாம்பல் நிறச் சட்டைகள் எனக்கு பல்லியை நினைவுப்படுத்துவதனால் அவர் உடலைத் தொடுவதை நான் தவிர்த்துவிடுவேன். எப்பொழுதும் சிறிய கோடுகள் கொண்ட சட்டையை மட்டுமே அணியும் பழக்கமுள்ளவர் இந்த விசித்திர சட்டைகளை எங்கோ கண்டெடுத்து வாங்கி வந்திருந்தார். பேருந்து புறப்பட்டு கோட்டார் தாண்டிய பொழுது அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.

“மக்ளே நம்ம எதிரியத் தோக்கடிக்கணும்ணா அவனுக்க பலவீனத்த கண்டுபுடிக்கணும்ணி பொதுவாட்டு சொல்லுவாவ கேட்டியா, ஆனா அது சரி கெடையாது பாத்துக்க, அவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு ஒற்றுமைப் புள்ளியக் கண்டுபிடிக்கணும், அதாக்கும் முக்கியம், அந்தப் புள்ளிய கண்டுற்றம்ணா அயிக்கும் பொறவு அவன் செய்யதெல்லாம் நமக்கு தெளிவாட்டு தெரிஞ்சிரும், ஏம்ணா அவன் நம்ம என்னச் செய்வமோ அததான் செய்வான். நம்ம நம்மள எப்படித் தோக்கடிக்கணும்ணி அறிஞ்சா போதும்”.

அந்த மகிழ்வான நாள் மேலும் நீடிக்க போவதில்லை என்று நான் அப்பொழுதே ஊகித்துக்கொண்டேன்.

அப்பா செல்வத்தை ஒவ்வொரு அடியாகச் சரித்தார்.

“நம்ம பூமில ஒரு அடி அவனுக்கணி சொன்னாம்லா, அவனுக்க பூமிய ஒவ்வொரு அடியாட்டு சாய்க்கணும்”.

செல்வத்தின் மனைவி குழந்தை பெற்று அவள் அம்மா வீட்டில் இருந்தாள். செல்வம் அவள் வீட்டில் நடந்த சட்டிப்பானைத் தொடும் நிகழ்ச்சிக்கு செல்லும் நாள் படியில் இறங்கியபொழுது அப்பா சரியாக ஜன்னலின் பின்னால் நின்று தடையடித்தார்.

“ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப் ற்டப்”

செல்வத்தின் உடல் திடுக்கிட்டது. அவன் அம்மா தேற்றினாள்.

“மக்ளே நல்லதாக்கும் கேட்டியா”.

ஆனால் செல்வத்தின் மனைவி இரண்டே மாதத்தில் இறந்து போனாள். பேற்று வலி வந்து துடித்தபொழுது உற்றார், உறவினர்கள் எல்லாம் எதிர்த்தபொழுதும் அவ்வெதிர்ப்புகளையெல்லாம் தாண்டி அவன் சுகப்பிரசவத்திற்காகக் காத்திருக்க சொன்னான். மருத்துவர்கள் அவனை எத்தனை எச்சரித்தும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். மருத்துவர்கள் வரும் ஆபத்தை அறிந்தபொழுதும் அவனின் அரசியல் செல்வாக்கைக் கருதி அவன் பிடிவாதத்திற்கு எதிராக எதுவும் செய்யமுடியாமல் செயலற்றிருந்தனர். அவன் மனைவி வலியில் துடித்து அழுது கெஞ்சியும் அவன் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்காமல் கடைசியில் பிரசவத்தில் சிக்கல் வந்து குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. செல்வம் குழந்தையைப் புதைத்துவிட்டு மொட்டைத் தலையுடன் மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் வாசலில் கிடையாகக் கிடந்தான். ஒருவாரத்தில் அவசரச் சிகிச்சை அறையிலிருந்து பொது அறைக்கு வந்திருந்த அவன் மனைவி இரவு பன்னிரண்டு மணிக்கு செல்வத்தை எழுப்ப முயன்று தோற்று உயிர்விட்டாள். அவள் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு தரையில் படுத்திருந்த செல்வத்தை எழுப்புவதற்காக கட்டிலின் ஓரத்தில் ஒருக்களித்து வந்தவள் கீழே இறங்க முடியாமல் செல்வத்தின் மேல் சிறுநீர் கழித்திருந்தாள். அலைச்சலில் அசந்து உறங்கிக்கொண்டிருந்த செல்வம் சிறுநீர் பட்டுதான் எழுந்தான். அவன் செவிலியரை அழைத்து வருவதற்குள் அவள் இறந்துவிட்டாள். மனைவியைப் புதைத்துவிட்டு வந்த செல்வம் மனைவி இறந்த அன்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்ட அவன் தாயை அடித்தான். மகன் அடித்ததைத் தாங்க முடியாத அவன் தாய் ஒரு வாரம் கழித்து வீட்டின் உள்மாடிப்படி கைப்பிடியில் தூக்கில் தொங்கினாள். அவளைப் புதைத்துவிட்டு வந்து தனிமையில் அந்த வீட்டில் இருந்தவன் ஏதோ ஒரு நினைப்பில் மனைவி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களைத் தாக்கினான். மனைவி இறந்த ஆத்திரத்தில் மருத்துவர்களைத் தாக்கினான் என்பது பெரிய புகாராகி, கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தினான் என்று கட்சி மேலிடத்தில் இருந்து உட்கட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அப்படியாக அவன் மனைவி இறந்த இரண்டு மாதத்தில் கட்சிப்பதவி பறிபோனது. கட்சிப்பதவி பறிபோனவுடன் உள்ளூர் எதிர்கட்சி ஆள் ஒருவர் அவனுக்கு கொடுத்திருந்த கடனுக்கு மாற்றாக அந்த வீட்டை எழுதித்தர அவனை நெருக்கினார்.

அன்று நான் தேனீர் கடையில் நின்றுகொண்டிருந்த பொழுது தரகன் ராமச்சந்திரன், செல்வம் அந்த வீட்டை விற்க ஆள் பார்க்கிறான் என்றான். மிகக் குறைந்த விலைக்கு விற்பதால் இடவாடு வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றான். நான் தேநீரை விரைவாகக் குடித்துவிட்டு ஓடிச்சென்று அப்பாவிடம் சொன்னேன். அப்பா சிரித்துக்கொண்டார். செல்வம் அந்த வீட்டில் வாழ்வதற்கான அனக்கம் இல்லாமல் ஆகியது. எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கடலில் விலகிச்சென்ற அலை திரும்பி வருவதைப்போல் வெள்ளமெனத் தழுவியது. அப்பா எடுத்திருந்த பல்லிநிறத் துணிகளை தூர எறிந்தார். செல்வத்தின் வீட்டை ஒட்டியிருந்த ஜன்னல் நிரந்தரமாக பூட்டப்பட்டது. வீட்டின் காற்றுப்பாந்துகள் அடைக்கப்பட்டன. பின்கதவு திறக்கப்பட்டது. பின்கதவை ஒட்டி அழுக்குத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்த குழாயை அப்பா ஒரு கம்பைக் கொண்டு அடித்து உடைத்தார். எனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது.

சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு லாரி வந்து செல்வத்தின் வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தவாறு அதைக் கவனித்துக்கொண்டிருந்தோம். லாரி சென்று சற்று நேரத்தில் செல்வத்தின் கார் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்றது. அதில் இருந்து உடல் இளைத்திருந்த செல்வம் இறங்கினான்.

அவன் பக்கத்து வீட்டிற்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக எங்கள் வீட்டினுள் நுழைந்தான். எவ்வித ஆக்ரோஷமுமின்றி எங்கள் நடு அறையில் நுழைந்து சட்டென்று அப்பாவின் கழுத்தைப்பிடித்து சுவரில் தூக்கிப் பிடித்தான். இம்முறை எவ்வித தயக்கமோ சிந்தனையோயின்றி நான் அடுக்களைக்குள் ஓடிச்சென்று வெட்டுக்கத்தியை எடுத்து வந்தேன்.

அப்பா சுவரில் தொங்கியவாறு ஒன்றும் செய்யாதே என்று என்னைப் பார்த்து கை காண்பித்தார்.

இரண்டு முறை பெருமூச்சு விட்ட செல்வம் சொன்னான்.

“தள்ளயஓழி நீதாம்ணி தெரியும்ல, ஆனா அந்த தத்ரூபம் இருக்குவுல்லா”.

அப்பாவை இறக்கிவிட்டு செல்வம் வெளியேறினான்.

***

ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர்
தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார்.மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com

ம.கண்ணம்மாள் கவிதைகள்

1

முன்னிரவு பேச்சு……

01

ஒரு உடல் முழித்துக்கிடந்தது
அது தன்னை மகிழ்ச்சியான உடலாகக்காட்ட
பன்னூறு நம்பிக்கைகளை
என் கைகளை அழுந்தப்பிடித்து ஒப்பித்தது
எனக்கு ஒருபோதும் அதனுடன் உடனில்லை
சற்றே, தலை திருப்பி
மெல்லிய குரலில்
என் பித்து மொழியினைத்துணைக்கழைத்தேன்.

02

உடல் என்பது ஒரு ஊற்றுக்குழி
அது தன்னில் நிறைய ஊற்றெடுத்தல்கொண்டது
பெருகும் நீர்ப்பரப்பில்
தொலைந்து போதலும், ஒன்றாதலும்,காத்திருத்தலும் இருக்கும்.
ஆனால்,
ஆழம் என்பது
நான் நிர்ணயிப்பது தான்.

03

உடல் என்பது ஒரு
பண்படுத்தப்பட்ட ஆதிக்கம்
விருப்பப்பட்ட,மறைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட
வண்ணத்திரைகள் தொங்கும் தளம்
ஆயிரமாயிரம் நகர்வுக்குப் பின்னாலும்
மனதைக் கட்டும் நினைவுப்பொதி
சுமப்பதும்,தள்ளுவதும்
என்னின் முடிபு.

04

உடல் என்பது ஒரு களி கூர்தல்
சதா உன்மத்தமாகி மதர்த்துக்கிடத்தல்
பறத்தலும்,பிழிதலுமாகிய உயிர்ப்பிறப்பு
என் அம்மையே!
எதன் பொருட்டு
நீ எலும்பினை மோகம் கொண்டாய்
பார் அம்மையே!
இந்த உபரிச்சதைகள்
விளைந்து நிற்கிறது
வளர்ப்பதும்,அழிப்பதும்
எம்மைச் சார்ந்தது

05

உடல் என்பது ஒரு நிலம்.
குழுவாக,தனியாக
கொத்து, கொத்தாக
நிரம்பி வழிகிறது
அதனுள்
எத்தனையெத்தனை
அளவில்லா வேட்கை
திரண்டு நோகிறது
சேறுள்ள மண்ணைத் தொட்டுப்பூசுவதும்,தொடாமலிருப்பதும்
என் விருப்பு.

06

உடல் என்பது ஒரு கழுக்களம்
முதலில் எதனை பலி தருவது?
பேரிடர் துயரத்தில் சேதமுற்ற பாலத்தில்
ஊசலாடும் குதலைப்பேச்சாய்
கழுத்தை இறுக்குகிறது
விலக்குவதும்,காட்டுவதும்
என்பாடு

07

உடல் என்பது ஒரு கள்ளச்சொல்
பெருங்காற்று வீசலில்
ஓலைக்காற்றாடியை
கற கற வென ஒடிக்கத்தூண்டும்
களேவரக்கூச்சல்
பேசுவதும்,மௌனிப்பதும்
என் தேர்வு

08

உடல் என்பது ஒரு குளறுகை
சிறு துவக்கால் சல்லியாக்கப்படும் போது
மறைந்துக்கொள்ளும்
பித்து
இருளில் ஒளி தேடுதலென்பது
ஆன்மாவிற்குள் உட்புகல்
ஆரவாரிப்பதும்,வருந்துவதும்
என்னிலானது.

09

உடல் என்பது ஒரு தழல்
செந்தீ பூசிப்பூசி சுரங்காய்ந்துள்ள
கொடிக்கால்
கொதிப்பு ஆற்றுவதும்,குளிர்வதும்
கணப்பொழுது மிதத்தலை ஒத்தது
கடந்தோடும் மனதை
கட்டலும்,நீக்கலும்
என் முடிபு.

10

உடல் என்பது ஒரு
அதீத அன்பு
கைப்புகும்
நல் பருவநிலை மாற்றம்
நீர் மின்னும் கண்களில்
அற்புதமாக அமர்ந்திருக்கும் கொடைப்பொருள்
பற்றலும்,விலக்கலும்
என்னுள்ளானது.

சற்றே தலை திருப்புகிறேன்

உடலின் முகத்தில்
கோபச்சிவப்புத் தெரிந்தது
காண் உடலே!
இங்கு “உடலென்பது
ஒரு வெற்றுக்காகிதம்.
அதில் நிரம்பிய
ஞானம்
கால்களென்பேன்”
என்றேன்.

அவ்வளவே……

இப்பொழுது
உடல் கண்களை மூடிக்கொண்டது.

***
கண்ணம்மாள் – kannamano07@gmail.com

தஸ் ஸ்பேக்…

0

சுஷில் குமார்

“இதுவரை எழுதப்பட்ட எல்லாவற்றிலும், ஒருவன் தன் இரத்தத்தில் எழுதியதையே நான் விரும்புகிறேன். இரத்தத்தில் எழுதுங்கள், இரத்தம்தான் ஆன்மா என்பதைக் கண்டடைவீர்கள்”

  • ஜரதுஷ்ட்ரா

    ன் அப்பா என் வயிற்றில் கைவைத்துத் தடவியது ஏனென எனக்கு முதலில் விளங்கவில்லை. ஆனால், என் சடங்கு முடிந்த, என் தோழிகள் என்னைப் பற்றிப் பலவும் சொல்லிச் சிரித்த நாட்களில் என் அப்பாவிடமிருந்து நான் விலக ஆரம்பித்தேன். அவர் வீட்டில் நுழைந்த நொடியில் நான் அரங்கிற்குள் சென்று ஒளிந்துகொள்வேன். சித்தியிடம் பேசுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. சிலமாதங்கள் சமாளித்திருந்தாலும் என்னை மறந்து உறங்கிய இரவுகளில் என்ன நடந்திருக்கும் என்று அடுத்த பகல்களில் யோசித்தபடி இருப்பேன். ஏனென்று அக்கறையுடன் கேட்பதற்கு ஆளில்லாததால் என்னால் எளிதாக அங்கிருந்து தப்பி தொலைதூரத்து மலைப்பிரதேசத்தின் உண்டு, உறைவிடப் பள்ளியில் தஞ்சமடைய முடிந்தது. எவரையும் ஏறிட்டுப் பார்த்துப் பேசக்கூட எனக்கு பயமாகத்தான் இருக்கும். குறிப்பாக ஆண்களிடம். அவர்கள் ஆசிரியர்களோ, வகுப்பு நண்பர்களோ, யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு இயல்பாக பேசிப் பழகினாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் குமுறல்களை வேறுதிசையில் திருப்பிவிட கடவுளின்மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும், நாள் தவறாத வேண்டுதலும் உதவியது. ஆண்டவரைத் தவிர மற்றெல்லா ஆண்களும் குறுகிய பார்வை கொண்டவர்கள்தான் என்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவரைப்போல அப்பழுக்கற்று இருப்பது எவருக்குமே சாத்தியமில்லை. அவர் அழுக்குப் படிந்த இந்த மனங்களையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல்தான் சிலுவையை வேண்டி ஏற்றுக்கொண்டார். ஆண்டவரின் கால்களை இறுக்கப் பிடித்திருந்த என் கைகளை மெல்லத்தொட்டு, கோர்த்து நடந்து, என் முகத்தை மெல்ல நிமிரச்செய்து, என் முன்னிருந்த உலகைப் பார்க்கச் செய்தவர் மதர். மதர் அவராகவே என்னைத் தேடிவந்து அறிமுகம் செய்த அந்த நாளில் பாரபாஸின் கதைப் புத்தகத்தைக் கொடுத்து படித்துவிட்டு வரச்சொன்னார். அப்புத்தகத்தை அழகிய வண்ணக் காகிதத்தில் அட்டையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதன் ஓரங்கள் சிறிதும் உடைந்திருக்கவில்லை. அதன் பக்கங்களில் நறுமணம் வீசியது. அடுத்த சிலநாட்களில் அக்கதையினூடே வாழ்ந்திருந்தேன். பாரபாஸின் குற்றவுணர்ச்சியும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவனது நீண்ட வாழ்வின் முயற்சிகளும் எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. எல்லா கேள்விகளையும் மதரிடம் விட்டுவிடுவேன். ஒவ்வொரு கேள்விக்கும் அடுத்த புத்தகத்தில் பதில் கிடைக்கும் என்பார் மதர். ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று. இப்படித் தொடர்ந்த அச்சங்கிலியில் எனக்குள்ளிருந்த பயத்தையும் நடுக்கத்தையும் கட்டிப்போட்டு விட்டு மெல்லமெல்ல நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மதரும் புத்தகங்களும் எங்கள் விவாதங்களுமென அந்த நாட்களில் என் சிறகுகளை உணர்ந்துகொண்டேன்.

ஒரு கிறிஸ்துமஸ் நாளில் அவன் வந்தான். ஆண்டவரை ஆழ்ந்து வேண்டி முடித்து எழுந்தவன் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனை ஒரு சிறு நடுக்கமுமின்றி என்னால் நேரிட்டுப் பார்க்க முடிந்தது. அவன் என் கண்களைப் பார்த்து ஊடுருவிப் பேசினான்.

அவனே தான் நேற்றிரவு கேட்கச் சகிக்காத வார்த்தைகளை திரும்பத்திரும்ப, நூறு முறை என் முகத்தில் காரித் துப்பியபடி கத்திக்கொண்டேயிருந்தான்.

“வாசிக்கிறேன் எழுதுறேன்னு சொல்லிட்டு நீ தனியா இருந்து என்ன பண்ணுறன்னு எனக்குத் தெரியாதா? பொண்டாட்டியா மாப்ளய கவனிக்க வக்கில்ல, வீட்டப் பாக்க நேரமில்ல, எப்பப் பாத்தாலும் கைல புக்கு. என்ன மயித்துக்கு பொறவு எம்பின்னால ஓடி வந்த? இதுல பெரிய கவர்ன்மென்டு வேல இருக்குனு தலக்கனம் வேற? சோத்துக்கு வழியில்லாம இருந்தப்போ எவன் வந்து நின்னான்னு நெனப்பு வேணும். கையப் புடிச்சிட்டு ரோடு ரோடா சுத்துனப்போ என்ன நெலம இருந்துன்னு மறந்துராத. ஒலகமே நீதான், ஒனக்காக என்ன வேணா செய்வேன்னு.. சீ நாயே. என் குடும்பத்த மீறி ஒன்னக் கட்டுனேன்லா, அதுக்கு நல்லா செய்றம்மா.. நல்லா செய்ற.”

“இங்கப் பாரு. ஒனக்கு பிரச்சின என்னன்னு மொதல்ல தெளிவா சொல்லு. எதையாம் எதுகூடயாம் சேத்து வச்சி பேசாத. ஒனக்கு என்மேல இன்டரஸ்ட் இல்ல, ஃபிசிக்கலா எதுவும் தோணலன்னு சொல்லுற. அதான பிரச்சின? அதுக்கு என்ன பண்ணணும்னு யோசிக்காம சும்மா என்ன நோண்டிக்கிட்டே இருந்தா எப்படி? இப்ப எதுவும் இன்டரஸ்ட் இல்லன்னு சொல்ற, ஆனா, டிகிரி படிச்சப்போ நான் எவ்ளோ அழுதும் கேக்காம என்ன எவ்ளோ கட்டாயப்படுத்தி என்னெல்லாம் பண்ணுன? ஒன்னால மதர் மூஞ்சில கூட முழிக்க முடியாம ஆயிட்டு. எவ்ளோ கெஞ்சிக் கேட்டாங்க தெரியுமா? திமிரா வெட்டிக்கிட்டு வந்தேன். அந்த வயசுல அபார்ஷன், அந்தக் கொடுமையெல்லாம் தாண்டியும் ஒன் பின்னாடி வந்தேன்னா ஏன்னு யோசிக்கணும். எனக்குக் கெடைக்காத அப்பாவா இருப்பேன்னு சொன்னியே, இப்ப என்ன மாதிரி கேள்வியெல்லாம் கேக்குற நீ?”

“ஏதோ நா ஒன்ன ஏமாத்திக் கூட்டிட்டு வந்த மாதில்லா பேசுக? ஒனக்கும் எல்லாம் தேவையாதான இருந்து? ஒனக்கு என்ன தெரியும் அப்போ? நா இல்லாட்டி நீ என்னவா ஆயிருப்ப? எல்லாத்தயும் நெனச்சு பாக்கணும் மேடம்.”

“நீ பேச்ச மாத்தாத. எனக்கு வாசிக்க புடிச்சிருக்கு, எழுத்து அதுவா வருது. ஒனக்கு இதுலெல்லாம் இன்டரஸ்ட் இல்லன்னா நானும் பண்ணக்கூடாதா? என்ன நியாயம் இது? சரி, மொத மொதல்ல எனக்கு என்ன கிஃப்ட் வாங்கி குடுத்தன்னு ஞாபகம் இருக்கா ஒனக்கு? எங்க, யோசிச்சாவது சொல்லு பாப்போம்? ஒனக்கு அதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கும்? Thus spake Zarathusthra-ன்னு ஒரு புக்கு. நான் அத எப்படா வாங்கலாம்னு ஏங்கிட்டு இருந்த சமயம் என்னையே ஆச்சரியப்படுத்துற மாதிரி அத வாங்கிட்டு வந்து நின்ன. இப்ப அந்த புக் எங்க இருக்குன்னாது ஒனக்குத் தெரியுமா? லவ்ல மொதல்ல இருக்க வேண்டியது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங். அப்போ மட்டும் எனக்குப் பிடிச்சத மாங்கு மாங்குன்னு செஞ்சிட்டு இப்போ வந்து நான் ஆம்பள ஆம்பளன்னு காட்டுற! அப்போ நான் பாத்த எல்லா ஆம்பளைங்களுக்கும் ஒனக்கும் என்ன வித்தியாசம்? எனக்குப் பிடிச்சத செய்ய கூடாதுன்னு இவ்ளோ கொதிக்கிற, எங்க போச்சு ஒன்னோட லவ்?”

“நீ ஏன் பேசமாட்ட? சம்பாதிக்கிற திமிரு. இதுலகூட ஒரு கூட்டம். இவனுகளுக்கெல்லாம் வேற சோலி மயிரே கெடயாதா? எவன் பொழப்பு எப்படிப் போனா இவனுகளுக்கு என்ன? கத, மயிருன்னு வந்துருவானுக. எனக்குத் தெரியாத கதையா, எவவன் எவவள வச்சிருக்கான், யாருக்கு யாரு அப்பன், ஊருல எல்லாவனும் எப்படி ஏமாத்திட்டு சுத்துரானுகோ, இதத்தான ஒங்காளுக சுத்திச்சுத்தி எழுதுரானுக. கல்யாணம் பண்ணமா, குடும்பமா சீரா இருந்தமான்னு இருக்கணும். ஒங்க ஸ்கூல்ல ஒன்ன கன்னியாஸ்திரி ஆக்கிருப்பாளுக. அந்த மதர மாதியே நாலு பிள்ளைங்கள பிரெயின் வாஷ் பண்ணிட்டு இருந்திருப்ப. சனியன் எப்பிடியாம் போகட்டும்னு விட்டுருக்கணும். அத விட்டுட்டு ஒன்ன எப்பிடியெல்லாம் தாங்கினேன்? ஒனக்கு எல்லாம் சலிச்சி போய்ட்டு. அதான் புதுசு புதுசா கதையும், ஆளுகளும் கேக்குது. ஒரு பொண்டாட்டியா இங்க நீ என்ன செஞ்சிருக்க சொல்லு பாப்போம்?”

“நீ கேக்குறது ஒனக்கே சிரிப்பா வரல? நா என்ன பொழைக்க வழி இல்லாம பிச்ச எடுத்துட்டா திரிஞ்சேன். என் ஸ்கூல்ல எப்பவுமே நான்தான் ஃபர்ஸ்ட்டு. காலேஜ்ல டாப்பர் தெரியும்லா? அதவிடு, நீ அசால்ட்டா அபார்ஷன் பண்ணுன்னு சொன்னியே, அப்போ நா ஒரு டீம் லீடர், என் சம்பளம் அம்பதாயிரம். ஞாபகம் இருக்குல்ல? அதெல்லாம் சேத்து சேத்து வச்சேன், எதுக்குன்னு சொல்லு பாப்போம். ஒனக்காக, எனக்கிருந்த ஒரே உயிருக்காக. ஒருத்தன் கொற சொல்ற மாதிரி ஒன் கல்யாணம் ஆயிடக்கூடாதுன்னு எத்தன பவுனு சேத்தேன் தெரியுமா? இதெல்லாம் நீதான செஞ்சிருக்கணும்? யார் சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டாலும் ஊரறிய கல்யாணம் பண்ணணும்னு எவ்ளோ ஆச எனக்கு! நீ என்ன பண்ண? ஒரு இடிஞ்சு போன ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல நாலுபேரக் கூட்டிட்டு வந்து ஏதோ பண்ண. அதையும் ஏத்துக்கிட்டேன். கவர்ன்மென்ட் வேல பாருன்னு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக பிடிச்ச வேலய விட்டுட்டு எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன். இன்னிக்கி இந்த வேலைல வந்து இருக்கேன்னா எதுக்காக? ஒனக்காக மட்டும்தான? ஆனா, நீ என்ன வேல பாக்குற? வேலன்னு ஒன்னு இருக்கா, இல்லையா? ஏதாவது என்கிட்ட தெளிவா சொல்லுறியா? ரியல் எஸ்டேட்டுன்னு சொல்ற, ஃபைனான்ஸ்ன்னு சொல்ற? ஒனக்கு வருமானம்னு ஒன்னு இருக்கா மொதல்ல? எத்தன வாட்டி கேட்டிருப்பேன், அத சொல்லக்கூட ஒனக்கு ஈகோ எடம் குடுக்கல்ல. ஒடனே எதையாம் சொல்லிட்டு, எதையாம் தூக்கிப்போட்டு ஒடச்சிட்டு வெளில போயிர வேண்டியது. சரி, அத விடு? என்னோட ஏ.டி.எம் கார்ட எதார்த்தமா வாங்குன மாதிரி வாங்குன. ரெண்டு வருசமாச்சு. நான் ஒரு வார்த்த கேட்டிருப்பனா? நீயே வச்சி செலவு பண்ணுறதுல எனக்கு அப்பிடி ஒரு சந்தோஷம். ஆனா, நீ நடந்துக்கற விதத்த பாத்தா என்ன நல்லா யூஸ் பண்ணுற மாதிரி தோனுது. இதுல பொண்டாட்டியா என்ன பண்ணேன்னு வேற கேக்குற? ஒனக்கு சமச்சிப்போட்டு, ஒனக்கான எல்லா தேவையும் கவனிச்ச பிறகு வேலைக்கும் போய்ட்டு வரேன். இதவிட என்ன வேணும் ஒனக்கு? நீ என்ன பண்ணுற? காலைல பஸ் ஸ்டாப்ல கொண்டு விடுற, சாய்ங்காலம் திரும்ப கூட்டிட்டு வர்ற, ஒருமணி நேரம் அப்பிடியே டீவி, ஃபோனுன்னு நோண்டிட்டு இருப்ப, பொறவு கெளம்பி போயிருவ, எங்க போற, என்ன பண்ணுற? ஏதாவது என்கிட்ட சொல்லிருக்கியா? ராத்திரி நான் தூங்குனப்புறம்தான் வர்ற, தனியாதான் தூங்குற, கேட்டா, எனக்கு எதுவும் தோனலன்னு சொல்லுற. சரி, எதாம் டாக்டர்கிட்ட போலாம்னு நானும் பல வருஷமா கூப்பிடுறேன். அதுக்கும் வரமாட்டேன்கிற. இதுக்கு மேல நான் என்னதான் பண்ண முடியும்? தனியா இருக்கும்போதும் எனக்குப் பிடிச்சத நான் செய்யக்கூடாதுன்னு சொல்ற, என்ன மாதிரி எண்ணம் இது? என் கதையப் படிச்சிட்டு யார் யாரெல்லாமோ ஃபோன் பண்ணி பேசுறாங்க, ஓங்கிட்ட வந்து மொத கதை வந்திருக்குன்னு சொன்னப்போ நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா? என்ன பேர்ல போட்டிருக்க? எம்பேரையும் சேத்தா போட்டிருக்க? ஊர்ல போறவன் வாரவன்லாம் என்னப் பாத்து கேவலமா சிரிக்கதுக்கான்னு கேட்ட. ரொம்ப நெறஞ்சுப் போச்சு சார். சூப்பர்.”

“நிறுத்துடி, பேசத்தெரியும்னு ரொம்ப வாயடிக்காத. வாய அடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க.”

“அதான, அடுத்தது அதான? வேற என்ன பண்ண முடியும்? நீ ஒன்னு பண்ணு, ஒரேயடியா அடிச்சிக் கொன்னுரு, கேக்கதுக்கும் யாரும் இல்ல. ஒனக்கு எங்கூட ஒழுங்கா இருக்க முடியல, அதுதான் ப்ராப்ளம்னு ஒத்துக்கோ மொதல்ல, அத விட்டுட்டு நான் வாசிக்கிறேன், எழுதுறேன்னு சில்லியா கொற சொல்லாத. பொண்டாட்டி படிக்கிறா, எழுதுறா, நாலுபேரு புகழ்ந்து பேசுறாங்கன்னு நீ பெருமல்லா படணும்? ஆனா, நீ எரிச்சல்தான் ஆகுற. ஏதாவது சண்டைல ஆரம்பிப்ப, கடைசில புக்கு, எழுத்துன்னு வந்து நிப்ப. நான் தலைய மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கணும், என்ன? நீதான என்ன பேசவே வச்ச? ஒலகத்தையே காட்டுன? இப்ப எல்லாம் சரியில்லன்னு சொன்னா? நா எதாவது கேள்வி கேட்டா மட்டும் பதில்பேச முடியாது, ஒடனே வாய அடிச்சி ஒடச்சிரணும். நீ அடிக்கிற வலியெல்லாம் பெரிய வலியா?”

“நிறுத்து டி. இங்க இருக்கணும்னா நான் சொல்ற மாதிரிதான் இருக்கணும். அவ்ளோதான். இல்லாட்டி வெளிய போ மொதல்ல.”

“ஆமா, இப்போ இதுவும் சேந்திருக்குல்லா? வெளிய போயிரு, வெளிய போயிரு. நான் நேராவே கேக்குறேன். நீ டைவர்ஸ் வாங்குற ஐடியால இருக்கியா? அப்படின்னா ஓபனா சொல்லிரு. சும்மா சும்மா வெளிய போன்னு சொன்னா… ஒரு நாதியும் இல்லாம இருக்கான்னு தெரிஞ்சுதான அப்பிடி சொல்லத் தோனுது. நல்ல லவ். ஆனா, எப்போவும் ஒரே மாதிரி இருக்காது, பாத்துக்கோ.”

“ஆமா, அப்பிடிதான். ஒழுங்கா இருக்க முடியாட்டி வெளிய போடி.”

“கடைசில அப்பிடிதான் ஆகும்னு நெனைக்கேன். ஆனா, சீரழிஞ்சு போயிருவேன்னு மட்டும் நெனைக்காத. என்கிட்ட வேல இருக்கு, தைரியம் இருக்கு, எல்லாத்துக்கும் மேல என்கிட்ட எழுத்து இருக்கு. ட்ரான்ஸ்வர் கேக்கும்போதே நீ என்ன சொன்ன? எங்கயாம் தூரத்து எடமா பாத்து போ, தனியா இருந்தாகூட பரவால்ல, இங்க லோக்கல்ல வேண்டாம்னு. என்ன மாதிரி ஆளுயா நீ? பொண்டாட்டியோட காசு வேணும், பொசிஷன் வேணும். ஆனா அவள தூரமா போகச்சொல்ற. என்ன லாஜிக் இது? நான் நம்மூர் பக்கம் போஸ்டிங் வாங்குனதே ஒன்கூட இருந்து ஒன்னப் பாத்துக்கணும்னுதான். நீ என்ன தூரமா போங்கிற. ஆமா, ஒனக்கென்ன வேற யார் கூடயாம் தொடுப்பு இருக்கா? அதயாவது சொல்லு. எதுக்கு பின்ன என் லைஃப்ல வந்த? எதுக்கு என்ன வெளிய கூட்டிட்டு வந்த? நான் இருந்த ஒலகமே கதின்னு ஆண்டவருக்கிட்டயாவது இருந்திருப்பேன்லா? நான் பாத்த ஒரே ஆம்பளன்னு ஒன்ன பெருமையா வச்சிருந்தேன்லா? எல்லாத்தயும் இப்பிடி… நீயெல்லாம் என்ன……?”

“இத்தோட நிறுத்திக்கோ. ஒரு வார்த்த பேசின…”

அவ்வளவுதான்… கையில் கிடைத்த எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு உடைத்தான். வழக்கம்போல கதவை ஓங்கிச் சாத்திவிட்டுக் கிளம்பிவிட்டான். மிக கவனமாக ஏ.டி.எம் கார்டை எடுத்துதான் சென்றிருப்பான்.

‘நீ கடவுளின் குழந்தை. யாருமற்ற ஒவ்வொருவருக்கும் நானிருக்கிறேன் என்று உறுதியளித்தவர் ஆண்டவர். அவரது சொல்லே உனக்கான மந்திரம். அவரது வியர்வையே உனக்கான உத்வேகம். அவரது இரத்தமே உனக்கான முக்தி. நீ அவரது குழந்தையேதான். இதை முழுமையாக நம்பு. உன்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்து பார். நன்றாகப் படி. தினமும் ஆண்டவரை நினைத்து உருகி வேண்டு. நீ நினைப்பதெல்லாம் நடக்கும். ஆண்டவரின் பாதையில் உனக்கான ஒரு சிறு வழித்தடம் இருக்கும். அதைக் கண்டுகொள்ள உன்னை நீயே தயார்படுத்திக்கொள். சபலங்களிலிருந்து விலகியிரு. மனித உணர்ச்சிகளை வெறும் காட்சிகளாகப் பார்க்கக் கற்றுக்கொள். எல்லோரையும் போல உன் உணர்ச்சிகளை வீணடிக்காதே. அந்த சக்தியை சேமித்து வை. பின்னால், ஆண்டவரின் வழியில் நீ பல மடங்கு பெரும் புகழ் பெறுவாய். நீ கடவுளின் குழந்தை.’

மதர் கூறிய இவ்வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் என் மனதில் வராமலில்லை. மதர் மட்டும் என் கை பிடித்து உடன் நின்று வழி காட்டியிருக்காவிட்டால் நான் எப்போதோ என்னை மாய்த்துக்கொண்டிருப்பேன். யாரிடமும் சொல்ல முடியா விசயங்களை அவர்மீது சாய்ந்து சொல்லி அழுவேன். எல்லாவற்றையும் கேட்டு முடித்து அறிவுரை எதுவும் சொல்லமாட்டார். தன் புத்தக அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து வருவார். என்னை முகம் கழுவிவந்து உட்காரச்சொல்வார். என் கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்க, அந்தப் புத்தகத்தைப் பிரித்துச் சத்தமாக வாசிப்பார். அவரது குரலில், அப்புத்தகங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு என் முன்னால் காட்சியாக விரியும். சற்று நேரத்தில் என் கண்ணீர் நின்று அந்த வாழ்வில் நானும் ஓர் அங்கமாக உருகிப் போவேன். மதரும் நானும் சேர்ந்து வாசித்த புத்தகங்கள் ஒவ்வொன்றும், அவற்றின் அட்டைப்படங்களும், அந்த கதாப்பாத்திரங்களும், அவர்களின் மீள முடியாத சூழ்நிலைகளும், மீண்டு வந்த சூழ்நிலைகளும் என்னை வேறு ஒருத்தியாக மாற்றிக்கொண்டிருந்தன.

ஆனாலும், ஓர் இளம் தென்றல், மென்மணம், கலங்கமற்ற புன்னகை, நீடித்த தியானம், கடற்கரை நடை, கை கோர்ப்பின் வெதுவெதுப்பு, உள்ளன்போடு ஊட்டும் கை விரல்கள், தலை கோதும் அரவணைப்பு, இன்னும் பலவாக என்னை ஆண்டவரின் ஆட்சியிலிருந்து, மதரின் அரவணைப்பிலிருந்து பறித்துப் பிடுங்கி எங்கெங்கோ கொண்டுசென்று இன்று இப்படி நிற்க வைத்திருக்கிறான். நின்று யோசித்துப் பார்க்கையில் அவன் ஒன்றும் எனக்கான வாழ்வைத் தந்திருப்பதாகத் தோன்றவில்லை, அவனுக்கான ஒரு நல்வாழ்வைத்தான் நான் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அவன் அதில் சுகமாக திளைத்திருந்திருக்கிறான். நானும் வாசிப்பும் எழுத்துமாக இதைப் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கிறேன். வஞ்சகம் எவ்வளவுதான் போலியுடை தரித்திருந்தாலும் ஒருநாள் தன் உருவத்தைக் காட்டித்தானே தீரும். ஆனால், எப்படி தொடர்ந்து பாசம் இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்க முடியும்? உள்ளன்போடு எப்படி ஒரு பிடி சோற்றை ஊட்டிவிட முடியும்?

ஒருநாள் தன் நண்பர் ஒருவரிடம் பேசுமாறு போனைக் கொடுத்தான். அவர் ஏதோ பெரிய பண்ணையார். அவருக்கு ஏற்றபடி, சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கையெழுத்து போட வேண்டுமாம். என் கணவனுக்கு என்ன வேண்டுமென்றாலும் அவர் பார்த்துக்கொள்வாராம். போனில் எதுவும் சொல்லாமல் அவனை தீர்க்கமாக உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ‘சரி சொல்லு, சரி சொல்லு’ என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். நான் என்ன பொம்மையா? அப்போது அவன் சிரித்த ஒரு கேவலமான சிரிப்பு. அன்றைக்கே நான் வெளியேறியிருக்க வேண்டும்.

“என்னடி, அவரு எவ்ளோ பெரிய ஆளு? ஒரு மரியாத கெடயாதா? பெரிய இவ மாதிரி பேசாம இருக்க? இந்த மாதிரி நாலு பேரு இல்லன்னா ஒன்னுமே நடக்காது, பாத்துக்கோ.”

“நீ எல்லாம் தெரிஞ்சேதான் என்கிட்ட பேசச்சொன்னியா?”

“என்ன எல்லாம் தெரிஞ்சு? ஒரு உதவி கேட்டா, செஞ்சிக் குடுக்கணும். நீ என்ன பெரிய அரிச்சந்திரன் பரம்பரையா? ஒங்கப்பன் அம்மைல்லாம் செஞ்ச காரியத்தவிட இதெல்லாம் ஒன்னும் பெருசுல்ல, பாத்துக்கோ. நாயக் குளுப்பாட்டி நடு வீட்ல வச்சா இப்டிதான்..”

‘எனக்கு நேர்மையை விட விலைமதிப்பற்றதும் அரிதானதும் எதுவுமேயில்லை’ என்கிறான் ஜரதுஸ்த்ரா. அச்சொற்கள் திரும்பத்திரும்ப எனக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. நான் வாசித்த கதாபாத்திரங்கள் என்னைச் சுற்றிநின்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. கூர் நாக்குகளை தன் கொடும் பார்வையால் எரித்த ஒருத்தி, இரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த ஒருத்தி, சோர்பாவுக்காக காத்துக் கிடந்த ஒருத்தி, யுகம்யுகமாக பழிவாங்கத் துடித்துக கொண்டிருந்த ஒருத்தி, மொத்த உலகையும் தன் உடலால் தொட்டு உணர்ந்துவிடத் துடித்த ஒருத்தி, விபச்சாரி என்றழைத்தவனுக்கு அம்மையாக நின்ற ஒருத்தி, கொண்ட செயலை கடிவாளமாக இறுக்கிக்கொண்ட ஒருத்தி, பாரபாஸ் பெயர் சொல்லி அழுது நின்ற ஒருத்தி…. நான் என்ன செய்யப்போகிறேன் என ஒவ்வொரு முகத்திலும் எதிர்பார்ப்பு. கெஞ்சல். கட்டளை. சரிதான் என்கிற தைரியமூட்டல்.

“லிசன், திஸ் இஸ் த லிமிட். ஒன்னோட நிஜ முகத்த கொஞ்சம் கொஞ்சமா காட்டி நீ கீழ போய்க்கிட்டே இருக்க பாரு. பொண்டாட்டி கிட்ட வந்து நேர்மையா இருக்காத, லஞ்சம் வாங்குன்னு சொல்லுற. எங்கப்பன் கிட்ட, என் மொத்த குடும்பத்து கிட்ட பாக்காத ஒரு ஆம்பளய ஒன்கிட்ட பாத்துதான ஒன் கைய பிடிச்சேன். நீ என்ன என்ன பண்ண சொல்ற, புரிஞ்சுதான் செய்றியா? இத செய்யச் சொல்றவன் வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லுவியோ? என்ன ஆம்பள நீ? இதுக்கு தான் என் ஆசையெல்லாம் விட்டுட்டு இந்த கவர்ன்மென்ட் வேலக்கி வந்தனா? நீ என்ன ப்ரோக்கரா? கொஞ்சம் கூட கூசலயா ஒனக்கு?”

“முட்டாள் மாதிரி பேசாத. நா ஒன்னும் எவங்கிட்டயும் புடுங்கி சாப்பிட சொல்லலயே. இருக்கவன் அள்ளிக் கொடுக்கான். அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாங்கிக்கோ. யாருக்கு என்ன ஆகப்போகுது? அவவன் பொண்டாட்டிய…..”

‘ஆண்டவர் தன்னிடமிருந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் மக்களுக்கு உணவளித்தார். அவர் கொடுத்த உணவில் ஒவ்வொருவரும் நிறைவடைந்தனர். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சுகம் கொடுத்தார். பார்வையில் கசடுகளை நீக்கினார். அவர் பாதம் பட்ட மண்ணை மிதித்தவர்கள் நிமிர்ந்து நடந்தனர். நேர்கொண்ட பார்வை கிடைக்கப்பெற்றனர். அவர்களுக்கு நேர்மையான வாழ்வும் ஆண்டவரின் கருணையும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஜீவன்களாக வாழ்ந்து நிறைந்தனர்.’

சற்று நேரத்திற்கு நான் அங்கே இல்லாமல் ஆகிவிட்டேன். மதரின் கைகளுக்குள்ளேயே, அந்த வெதுவெதுப்பிலேயே… அவர் கொடுத்ததை மட்டுமே வாங்கிக்கொண்டு, அறிவின் பாதையில், ஆண்டவரின் பாதையில்..

“ஒன்ட்ட தான் பேசிட்டுருக்கேன். முடியுமா முடியாதா சொல்லு?”

“முடியவே முடியாது. என்ன வச்சி இப்படி சம்பாதிக்கிற எண்ணத்த இன்னையோட மாத்திக்கோ. நா உன்ட்ட இதெல்லாம் எதிர்பார்க்கல. இன்னும் என்னெல்லாம் வச்சிருக்கியோ பாக்கலாம். அதையும் மீறி ஒனக்கு பணம்தான் வேணும்னா, உழைக்கணும், என்ன?”

முகத்தில் அறைந்தான், அறைந்துகொண்டேயிருந்தான். தையல் போட்டு வந்தபோது சொன்னான், “நீ இருக்க வேலைக்குதான் இந்த ஊர்ல ஒனக்கு மரியாத பாத்துக்கோ. இவன் பொண்டாட்டி இவன்னுதான் ஊர்ல எவனும் சொல்லணும். இவ மாப்ள இவன்னு எவனாம் சொன்னான்னு வையி. அன்னிக்கி இருக்கு ஒனக்கு. பெரிய எழுத்தாளராகி, இந்த கவர்ன்மென்டு ஒனக்கு அவார்டு குடுத்து தலமேல தூக்கிவச்சி கொண்டாடும்னு நெனச்சிட்டு சுத்தாத. பிச்ச எடுக்க விட்டுருவானுகோ பாத்துக்கோ நாய…”

அன்று இன்னொரு விஷயம் தெளிவாகியது. நான் அவனுடன் இருப்பதால் அவனுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது. அதை என்ன ஆனாலும் அவன் விட்டுக்கொடுக்க மாட்டான். என் சம்பளம் ஒரு பக்கம். இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் பெண் அவனது பொண்டாட்டியாக இருப்பது அவனுக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது. அதை சற்று உடைத்துப் போட்டால்தான் என்ன? அதன் பிறகு சிறிதேனும் ஆணாக எஞ்சி நிற்கிறானா பார்க்கலாம்.

‘உன்னுடைய சுயம் என்று ஒன்று இருப்பதைக் கண்டுகொள்ளும் வரை இந்த அலைக்கழிப்புகளும் சோர்வுகளும் துரத்திக்கொண்டுதான் இருக்கும். கண்டுகொண்ட அந்த சுயத்தை ஆண்டவரின் இருப்பில் நீட்டித்து வைப்பதொன்றே இனிமைக்கான வழி. அவரது சொற்களும் அவர் சுட்டிக்காட்டிய வழியும் மாத்திரமே நமக்கானவை.’ ஆனால், இவனுடனான இத்தனை வருடங்களில் என் அசலை இழந்து நான் வேறு ஏதோவாக இருந்திருக்கிறேன். இந்த உடலோ, மனமோ நானில்லை என்னும் அளவிற்கு. இதை முழுக்க உதறித்தள்ளும் அளவிற்கு ஓர் அருவருப்பு. என்னைத் தூக்கி எறியும் அப்படியான ஒரு ஸ்லிங் ஷாட் வருவதற்காக காத்துக்கொண்டு இருந்திருக்கிறேன் போல. எழுத்து எனக்கான தினசரி உயிர்த்தெழுதலைப் போல இருந்திருக்கிறது. என் புத்தகங்களின் வெம்மையில் ஆண்டவரின் சொல் பிடித்து மதரின் குரல்கேட்டு என்னை நான் நீடித்து வைத்திருப்பதன் காரணம் ஒன்று கண்டிப்பாக இருக்கும் என்று நம்பினேன். அது இன்று தெரிந்தது.

இன்று காலை எழுந்ததும் நேராக என்னிடம் வந்து, “நீ வேலைக்குப் போகாண்டாம்.” என்றான்.

“என்ன? எதுக்கு?”

“இனி நீ வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னேன். மாப்பிளயா நான் என்ன சம்பாதிக்கேனோ அத வச்சி நீ வாழ்ந்தா போதும்.”

“ஓ, ஏன் போகக் கூடாது?”

“நீ வேலைக்கிப் போயி நான் ஒக்காந்து சாப்பிடுறேன்னு சொன்னேல்லா? அந்தத் திமிரு.. திமிருலதான நீ ஆட்டம் போடுற.”

“இங்கப் பாரு. வேற எதுவும் கெடைக்கலன்னு நீ இப்போ இதத் தூக்கிட்டு வந்திருக்கியா? இதென்ன லஞ்சம் கொடுத்து வாங்குன வேலையா? இதுக்காக எப்படி படிச்சேன்னு ஒனக்குத் தெரியுமா? இந்த பொசிஷனோட பவர் என்னன்னு தெரியுமா? ஒனக்கு என்ன தான் பிரச்சின? சேர்ந்து வாழற ஐடியா இருக்கா இல்லையா? இல்லைன்னா இல்லைன்னு சொல்லித் தொலையேன். நான் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கேன்.”

“அப்பிடி வா டி. ஓஹோ.. நீ எல்லாத்துக்கும் ரெடியாதான் இருப்ப? எனக்கு நல்லாவே தெரியும்.. அப்போ வேற எவன்கூடயாம்….”

“ஸ்டாப் இட். இதுக்கும் கீழ போகாத. ஒம்மேல இருந்த… ஒம்மேல இருக்க கொஞ்சம் பாசமும்….”

“நீ நிறுத்து டி தேவிடியா.. படிச்ச திமிரு. எல்லாம் தெரியுமுங்குற தலக்கனம். ஒன்ன….”

நான் உறைந்து நிற்க, என் புத்தக அலமாரியைத் திறந்து புத்தகங்களை எடுத்து வீசியெறிந்தான். எனக்குப் பிடித்த புத்தகங்களை சரியாகக் கண்டுகொண்டு அவற்றை எடுத்துக் கிழித்து என் கால்மாட்டில் எறிந்தான். அடுக்களைக்குள் ஓடிச்சென்றான். தேடியது கிடைக்காமல் உறுமியபடி வந்தவன், புத்தக அலமாரியைப் பிடித்துக் கீழே தள்ளினான். எங்கள் இருவருக்கும் இடையில் வந்து விழுந்தது Thus spake Zarathusthra. நான் அதை உற்றுப்பார்த்து கண்கலங்கியபடி பதறி நின்றேன். அதை கவனித்த அவன் வெறி பிடித்தபடி சிரித்தான். அந்த புத்தகத்தின் முன்வந்து நின்றான். அதன்மீது ஓங்கி ஓங்கி மிதித்தான். நான் கதறி அழுவது அவனுக்குப் போதுமானதாக இல்லை. அதன் பக்கங்களைக் கிழிக்கப் போனவன் ஒரு நொடி அதன் முதல் பக்கத்தைத் திறந்தான்.

“என் செல்ல ராசாத்திக்கு…” என எழுதியிருந்தான்.

அதை மீண்டும் கீழே போட்டு என்னை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை என் அப்பாவின் முகத்தைச் சட்டெனக் காட்டியது. தனக்குத்தானே ஏதோ முனகியபடி, மிக நிதானமாக அந்தப் புத்தகத்தின் மீது சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். ‘என்னுடைய ராஜ்ஜியத்தில் எவருக்கும் துன்பம் வந்து சேராது, எனது குகை ஒரு நல்ல புகலிடம். துன்பப்படும் ஒவ்வொரு உயிரையும் மீண்டும் நான் உறுதியான ஒரு நிலத்தில் உறுதியான கால்களுடன் நிற்க வைப்பேன்’ என்கிற ஜரதுஸ்த்ராவின் வார்த்தைகள் மெல்ல அப்புத்தகத்திலிருந்து வடிந்து வெளியேறி என் காலடியைச் சேர்ந்தன.

நான் அந்த நொடியில் வெளியேறினேன்.

இப்போது இந்தப் பேருந்து ஏதோ ஓர் ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அவனிடமிருந்து எத்தனையோ கிலோ மீட்டர்கள் விலகி வந்துவிட்டேன். என் கையில் காசேதும் இல்லை. நன்றாகப் பசிக்கவும் செய்கிறது. பசி, பசி… பாரபாஸ் கடைசியில் என்ன ஆனான்? மதர் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? எல்லாம் தெரிந்தும் எதற்காக ஜரதுஸ்த்ரா தன் மலையிலிருந்து இறங்கினான்? அதுசரி, நிழல் துரத்தும் ஒருத்தியின் கதையை எழுதிப் பாதியிலேயே விட்டிருந்தேனே, அதை எப்படி முடிக்கலாம்?

***

சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பாக “சப்தாவர்ணம்” நூலும் அண்மையில் வெளியானது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”… மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com

தலைமுறை

0

கார்த்திக் புகழேந்தி

துரை மாவட்டத்திலே, கம்பம் பள்ளத்தாக்கிலே, குமுளிப் பெரும் பாதையில் அப்போது மொத்தமே ஐந்து லட்சம் வரவு செலவுகொண்ட பஞ்சாயத்தான சின்னமனூரில் இருந்துதான் சிவகாமி ஆச்சியைக் கட்டிக்கொண்டு வந்தார் ஞானதிரவியம் பாட்டையா.

பாட்டையா ஞானதிரவியம் கணக்கஸ்தர். எதையும் இருப்பு, எண்ணிக்கை, விலாவரிகளோடுதான் சொல்லுவார். சின்னமனூரைப் பற்றி அவரிடம் யாராவது வாயாடினால், என்ன பெரிய ஊர், மொத்தமே ஐயாயிரம் வீடுகள், வீட்டுக்கு நாலுபேரென்று இருபதாயிரம் ஜனங்கள், கும்பிட மூணு கோயில், குடிக்க இருபது கிணறு, குந்திப் படிக்க பத்துப் பள்ளிக்கூடங்கள், நானூறு தெருவிளக்கு, அதுக்குக் கீழே உக்கார்ந்து படிப்பு சொல்லிக் கொடுக்கத் தெரிந்தது பதிமூணு வாத்திமார்கள். அதிலே, நம்மாளுக ஒருத்தர் மகதான் சிவகாமி. என்னைக் கட்டிக்கிடுறியான்னு அவுங்க ஐயன் கேட்டப்போ, பேதிலபோவா என்ன எளவுன்னே புரியாம ஆட்டும்னு தலையாட்டிருக்கா. இன்னியவரை அதுமட்டும் மாறல. “என்னட்டி நா சொல்லுதது சரிதான… ஏட்டி சின்னமனூர்காரி..”

”என் சீவன எடுக்காம உடமாட்டீரா.. வெறுவளாங் கெட்ட மனுசா” சிவகாமி ஆச்சி உள்ளறையில் இருந்து எதித்துக் குரல் கொடுப்பாள். வெளியாள் யாராவது பார்த்தால் பாட்டையாவுக்கும் ஆச்சிக்கும் எல்லாத்திலயும் ஏழாம் பொருத்தம் என்றுதான் தோணும். ஆனால், விசயம் அப்படியல்ல. இன்றைக்கும் பொழுது சாய்ந்தால், ரெண்டுபேரும் கழுத்தாமட்டையைக் கட்டிக்கொண்டு, தம் பேரன், பேத்திகள் முன்னால் கூச்சநாச்சம் இல்லாமல் அப்பியாசம் பேசுகிறவர்கள்தான். சிவகாமி ஆச்சி வெகுளியாய் சிரிப்பாள். பாட்டையா முள்ளிங்கியாய் கிணுகிணுப்பார். ரெண்டு பேருக்கும் அப்படியொரு ரசபாவம்.

ஆண், பெண்ணென்று வரிசைக்கிரமம் பெற்றெடுத்த மகன் மகளுக்கெல்லாம் நல்லபடி சம்பாதித்துப்போட்டு, படிக்க வைத்து, கல்யாணம் கட்டிக்கொடுத்து, வெளியூர், வெளிநாடு என்று அனுப்பி வைத்துவிட்டவர்களுக்கு, இப்போதைக்கு முடித்துக் கட்டவேண்டிய பெரும்பாடுகள் என்று ஏதும் இல்லை. அதனாலேயே, பழனி மலை அடிவாரத்தில் ஏர் பத்தாயிரம் என்று எப்போதோ வாங்கிப்போட்ட தோப்புக்குக் கீழ்புறத்தில் வீடு எடுத்துக் கட்டிக்கொண்டார் பாட்டையா. எல்லாம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், போடி என்று அலைந்து திரிந்துசெய்த தென்னை யாவாரத்தில் சேர்த்த காசு. நூதனமாய் சிக்கனம் பிடித்துப் போட்ட சீரெல்லாம் சிவகாமி ஆச்சிக்குத்தான் சேரும். 

அன்றைக்கு, பொழுதாண்ட நேரத்தில் பாட்டையா தோப்புக்குக் வடபுறம் செழித்தோடிய தண்ணீர் பாத்தியை மேல்புறம் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். இருட்டு மெல்ல கவ்விக்கொண்டு வந்ததும், பாத்தியிலே கைகால்களைக் கழுவிக்கொண்டு, கரையேறப் போனார். வீட்டு வாசல் நடையில் நின்று, சிவகாமி ஆச்சி, சிலுவர் போணியில் காப்பியை ஆத்திக்கொண்டிருந்தாள். “இன்னும் என்ன அங்க” என்று இருட்டுக்குள் குரலைத் தூது அனுப்பினாள். அவள் பேச்சுக்குக் கூட ஒரு பேச்சாக நாயும் இரண்டு முறை குலைத்து வாலாட்டியது.

“அதுக்குள்ளவாடி ஒனக்கு விளக்க அணைக்கணும், செத்த இரு வாரேன்” என்று காத்துக்குக் கேட்காமல் முணகினார். கழுத்தில் போட்டிருந்த பச்சைத் துண்டை உதறி, ஈரத்தைத் துவட்டிக்கொண்டார். முகவாயில் ஷேவிங் செய்த வெள்ளைத் தாடி, முள் முள்ளாய் நீட்டியிருந்தது. போன வாரம்தான், பெரிய பேரனுக்குப் மகள்வழிப் பேத்தியை முடித்து வைக்கலாம் என்று தன் மாப்பிள்ளையிடம் பேசிவிட்டு வந்திருந்தார்.

கேணியின் அடியாழத்தில் மோட்டார் கிண்’ணென்று இரைந்துகொண்டிருந்தது. இருட்டுக்குள் பூச்சிபொட்டு எதுவும் அங்குமிங்கும் தாவுகிறதா என்று டார்ச் லைட்டைப் பற்றவைத்து, பார்த்தபடியே மோட்டார் ரூமை நோக்கி நடந்தார் பாட்டையா. ஸ்விட்சை நெருங்கி அணைக்கப் போகிற நேரமும் மொத்த ஊருக்கும் மின்சாரம் போகவும் சரியாக இருந்தது.

*

”ஏங்க அப்பாவும் அம்மாவுக்கும் என்னமோ ஆகிடுச்சாம். பழனி தோட்டத்துக்கு ஆம்புலன்சு போலீஸெல்லாம் வந்திருக்காங்களாம். எனக்கு இப்பவே பதறுதுங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.”

கூச்சல் கூப்பாட்டுக்கு மத்தியில் புருஷன் ஜெயராஜிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தாள் தங்கக்கனி. காலையில் அவளுக்குத்தான் முதல் போன் வந்தது.  “தோட்ட வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான். ஆச்சியையும் பாட்டையாவையும் அடித்துப்போட்டு, களவாண்டு போயிருக்கிறான். அப்புவையும் ஆச்சியையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. ஆள் யாரையும் உள்ள விடல” என்று பக்கத்துக் காட்டுக்காரர் மகன் சங்கர்தான் அவளுக்குப் போனடித்துச் சொன்னான்.

ஜெயராஜ் பழனிக்குப் பக்கத்திலே சினிமா கொட்டகை வைத்திருந்தான். ப்ளஸர் காரில் அடித்துப் பிடித்து வீடுவந்து சேர்ந்தவன் பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு, முதலில் தோட்ட வீட்டுக்கு விரைந்தான். அவர்களுக்கு முன்பாகவே, தங்கக்கனியின் தம்பி சேர்மக்கனி தோட்டத்துக்கு வந்துசேர்ந்திருந்தான். மூணு போலீஸ் ஜீப், மோப்பநாய் வண்டி, ஏழெட்டு பைக்குகள், கும்பலாய் ஊராட்கள் வாசல் கேட்டைச் சூழ்ந்து நின்றுகொண்டிந்தார்கள்.

”எம்மா எம்மா.. எப்பா எப்பா” என்ற அழுகைக் கச்சேரியோடு கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு, பிள்ளைகளைச் சேர்த்தணைத்து, தோட்டத்துக்குள் நுழையப் பார்த்தாள் தங்கக்கனி. பெரியவளை வீட்டில் விட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட பிள்ளைகளை மட்டும் அரை யூனிபார்மில் அவளோடு கூடச் சேர்ந்து இழுத்து வந்திருந்தார். அதுகள் என்ன விபரம் என்று பிடிபடாமல் நடந்த களேபரத்தைப் பார்த்து, தாத்தா, பாட்டி என்று அரற்ற ஆரம்பித்திருந்தார்கள்.

காவலர் பழனியாண்டி ஜெயராஜையும் தங்கக்கனியையும் உள்ளே விடச் சொல்லி, அவர்களிடம் விவரம் விசாரிக்க ஆரம்பித்தார். சேர்மக்கனி ஒரே கத்தலாக அவள் கிட்டேவந்து, “எக்கா, அப்பாவயும் அம்மாவயும் கொன்னு போட்டானுங்கக்கா” என்று கதறினான்.

தங்கக்கனி மூச்சு நின்றுபோவதைப்போல, “சேர்மா, என்ன சொல்த, என்ன சொல்த” என்றபடி அவன் நெஞ்சுச் சட்டையைப் பற்றி இழுத்து மூர்ச்சை ஆனாள். ஜெயராஜ் முன்வந்து அவளைத் தாங்கிப்பிடித்து, வரப்புத் தரையில் உட்கார வைத்தான். பிள்ளைகள் இப்போது அம்மா அம்மா என்றார்கள். “ஏப்பா ஆள் யாராச்சும் தண்ணி கொண்டாங்க, பொம்பளையாள் மயங்கிவுழுந்துட்டா” என்று கூட்டத்துக்குள் சொல் பறந்தது. வேடிக்கை பார்க்க வந்தவர்களில் கூலிக்குப் போய்க்கொண்டிருந்த பெண் ஒருத்தி, தன்னிடமிருந்த பழைய கோலா பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.  

*

செல்வேந்திரன் மும்பையில் இருந்து புறப்பட்டிருந்தான். பாட்டையாவின் மூத்த மகன்வழிப் பெயரன். வேலையிலிருந்த நிறுவனத்தின் மீட்டிங்கைப் பாதியிலே முடித்துவிட்டு, கோயமுத்தூர் ப்ளைட் பிடித்து, அங்கிருந்து காரில் பழனிக்குப் புறப்பட்டபோது, பொழுது மசங்கியிருந்தது. சித்தப்பாக்கள், அத்தைகள், தம்பித் தங்கைகள், அவரவர் பிள்ளைகள் என்று எல்லாபேரும் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்டு முற்றத்தில் அவன் வருகைக்குக் காத்திருந்தார்கள்.  

“போஸ்ட்மார்டம் முடிஞ்சதும் நாளைக்கு உடலைத் தந்திடுவாங்க. புதைக்கிற முறை தானே. காட்டுக்குள்ள முதல்ல முடியாதின்னாங்க. பிறகு போலீஸ்ட்ட பேசி இடம் ஒதுக்கியாச்சு. மத்தமாதிரி விஷயத்துக்குல்லாம் ஆள் சொல்லியாச்சு. ஒங்க ஜெயராஜ் மாமா முன்ன நிக்காங்க. வீட்டாளுங்க எல்லாம் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்ல இருக்காங்க. அவங்களுக்கு முழுவெவரம் கொஞ்சம் முன்னதான் சொன்னோம். தோட்டத்துக்குள்ள காவலுக்கு போலீசும் நிக்காங்க. சந்தேகப்பட்ற மாதிரியான எல்லார்த்தையும் புடிச்சு விசாரிச்சுட்டு இருக்காங்களாம். பம்புசெட் ரூமுக்கிட்ட வச்சுதான் பாட்டையாவ…”

“சொல்லு..”

“கருக்கல்ல மோட்டார அணைக்கப் போன நேரமாப் பாத்து கரண்டு போயிருக்கு. பம்புசெட் உள்ள யாரோ ஒளிஞ்சி கிடந்திருக்கானுங்க. எப்படியும் ரெண்டு மூணு பேர் இருக்கணுமாம். சேத்துல காலடி கிடக்கு. அவருபோட்ட சத்தம் கேட்டு ஆச்சி ஓடி வந்திருக்காங்க. அவங்கள வீட்டு நடைலயே வச்சி வெட்டிருக்கானுங்க. வாசல் நடையெல்லாம் ஒரே ரெத்தம். வேலக்காரப் பிள்ள அவங்க ஊர்ல எதோ அக்கா பொண்ணுக்கு விசேஷம்னுட்டு போயிருந்திருக்கா போல. ஒரு நாளுதானன்னு தாத்தாவே செலவுக்குக் காசுங் கொடுத்து அனுப்பினாராம். அவள இப்போ ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க… கண்ணுங் காதுமிருந்தும் ஊராந்தரத்துல இப்படி நடந்துபோச்சு செல்வா.”

கோவையிலிருந்து பழனிக்கு வரும் வழியிலே, அட்வகேட் நண்பன் ராம்குமார், விசயங்களைச் செல்வேந்திரனுக்குச் சொல்லிக்கொண்டே வந்தான். வழியில் வண்டி எங்கும் நிற்கவில்லை. ஆய்ச்சல் பாய்ச்சலாக செல்வேந்திரனின் கார் பழனித் தோட்டத்தை அடைந்தபோது, கண்ணே மூச்சே என்றபடி அங்கு நின்றுகொண்டிருந்த சித்தப்பா ராஜ அலங்காரம் செல்வேந்திரனை ஓடிவந்து கட்டிக்கொண்டார்.

“ஒன்னய கண்ல காங்கணும்னு என்கிட்டேச் சொல்லிட்டே இருப்பாங்களே செல்வம். ஒங்கல்யாணத்த நல்லமுறையில நடத்திப் பாக்கணும்னு துடிச்சாங்களே. இப்படி ஈரக்கொலைய அறுத்துப்போட்ட மாதிரி ரெண்டு கெழங்க உசிரையும் சாச்சிட்டானுங்களே. கற்குளத்து ஐயனாரு கண்ணயும் காதையும் பொத்திக்கிட்டாரே, எஞ்செல்வம் நா என்ன செய்வேன்… நா என்ன செய்வேன்” என்று அரற்றினார். சுற்றி இருந்தவர்கள் யார் யாரைச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கூடச் சேர்ந்து குமைந்தார்கள்.  

*

“வழக்கமா கொலை பண்ணிட்டு, கொள்ளையடிச்சுட்டுப் போற ஆளுங்க மாதிரி தெரியலை. ஒருமாதிரி அமெச்சூர் அட்டாக். ரொம்ப நேரம் க்ரைம் ஸீன்ல நடமாடியிருக்காங்க. ஃபுட் ப்ரிண்ட் கன்னாபின்னான்னு கிடக்குது. நாயை சாக்குல சுத்தி, அதுமேல கல்லப்போட்டுக் கொன்னுருக்காங்க. மோட்டார் ரூம்க்கு அந்தப் பக்கம் வேலி எதுவும் இல்லாததால அந்தப் பக்கமா தப்பிச்சுப் போயிருக்கானுங்க. பெரியவருக்கு தலையில வலதுபக்கம் சரியான அடி. மண்வெட்டியை யூஸ் பண்ணி இருக்கானுங்க. கைலயும் தோள் பட்டையிலயும் வெட்டுக்காயங்கள் இருக்கு. பாட்டியை கத்தில குத்திருக்காங்க. அவங்க பிழைச்சிடக் கூடாதுன்னு குத்தின இடத்தில, மண்ணைப் போட்டிருக்கானுங்க. அவங்க போட்டிருந்த நகைகள், பீரோல இருந்து பணமும், செல்போனும் மிஸ் ஆகியிருக்கு. உங்க வீட்டு ஆட்கள்கிட்ட கேட்டு லிஸ்ட் பண்ணியிருக்கோம். இதுல சிலது வெளில கசியாம பார்த்துக்கணும். இருந்தாலும் சொல்றேன். சேறு சகதியில கிடைச்ச ஃபுட் ப்ரிண்ட்ஸ்  வச்சுப் பார்த்தா இளவயசுப் பசங்களோடது மாதிரி தெரியுது. அக்கம் பக்கத்துல விசாரிச்சுட்டு இருக்கோம். உங்களுக்கு அப்படி யார் மேலயாச்சும் சந்தேகம் வர்ற மாதிரி இருந்தா கை காட்டி விடுங்க.”

பைபாஸ் சாலையில் விளக்கொளி மின்னிக்கொண்டிருந்த ஐயங்கார் பேக்கரி வாசலில், ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தனசிங், நடந்த விஷயங்களை வக்கீல் ராம்குமார், ஜெயராஜ், செல்வேந்திரன் மூவரிடமும் பக்குவமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சேர்மக்கனி காருக்குள்ளே அமர்ந்து ஆள் மாற்றி ஆள் அவன் போனுக்கு அழைத்தபோதெல்லாம் கம்மிய குரலில் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நம்ம வக்கீல் சார் உங்க கூடவே இருக்காரு. மேற்கொண்டு என்ன பண்ணனும்னு அவரே உங்களுக்குச் சொல்லிடப் போறாரு. நிறைய பேரை விசாரிச்சுட்டு இருக்கோம். ஸ்டேஷன் தரப்புல உங்களுக்கு என்னென்ன உதவி செஞ்சுத் தர முடியுமோ அத்தனையும் செஞ்சுத்தர்றோம். இன்னும் ரெண்டு மூணு நாள்ல எஃப்.ஐ.ஆர் காப்பி நானே கொடுத்து அனுப்பச் சொல்றேன். எதுக்கும் சிரமப்பட வேண்டாம். என்ன வக்கீல் சார் போதுமா?”

“டாக் ஸ்குவாடு என்ன சார் சொல்றாங்க?”

“அவங்க என்ன சொல்றது. நான் சொன்னதையே அவங்க ஒரு தனி பாஷைல எழுதித் தரப்போறாங்க. உள்ளூருக்குள்ளே சுத்தி சுத்தி வந்துட்டு, டீசல் பேட்டா வாங்கிட்டுப் போய்டுவாங்க. நீங்க நடக்க வேண்டியதை பாருங்க சார். அக்யூஸ்ட்டைப் புடிக்க வேண்டியது எங்க பொறுப்பு.”

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுமுடித்த செல்வேந்திரன் மனதுக்குள் பொங்கி எழுந்த குமுறலை அடக்கிக்கொண்டு, அங்கிருந்து புறப்படத் தயார் ஆனான். வழியிலே ராம்குமாரும் ஜெயராஜும் ஆஸ்பத்திரியில் இறங்கிக் கொண்டார்கள். வீட்டில் இருப்பவர்களுக்குச் சாப்பாடு பார்சலில் வாங்கிக் கொண்டு, சேர்மக்கனியும் செல்வேந்திரனும் பக்கத்துக் காட்டுக்காரர் வீட்டு முற்றத்தை அடைந்தபோது, பிள்ளைகள் கூட உறங்காமல் கொட்டக் கொட்ட முளித்துக் கிடந்ததுகள்.

“எப்பா போலீசுல என்ன சொல்றாங்க, உடம்புகள எப்பத் தருவாங்களாம். முகத்தைக் கூடப் பாக்க முடியலையேன்னு உங்கத்தைங்க ஒவ்வொருத்தியும் கூப்பாடுபோட்டு அழுவுறாளுங்க. நான் ஒருத்தன் என்னன்னு பதில் சொல்லிட்டுக் கெடக்க முடியும். பெரியவங்க முகத்தையாச்சும் பார்த்தியா.”

“எல்லாம் பேசிட்டோம் சித்தப்பா. நாளைக்குப் பகல்ல தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. நீங்க தைரியமா இருங்க. நம்மளல்லாம் விட்டுட்டு அவங்க எப்படித் தனியா போவாங்க….” சொற்களும் வாக்கியமும் குழற செல்வேந்திரன் ஓ’வென்று அழத் தொடங்கினான். மொத்தக் குடும்பமும் அவனோடு சேர்ந்து மீண்டும் அழுதது. சந்திரா, முருகம்மாள், தங்கக்கனி என்று மூன்று பெண் மக்களும், மருமகள்களும் அவரவர்கள் பெற்ற பிள்ளைகளும் எழுப்பிய ஓலத்தில் அடிவாரக் காடே மனங்கலங்கி கம்மியது.

*

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தேர்ப்பாடைக்குச் சொல்லியிருந்தார்கள். பிறகு, யாரோ அது வேண்டாம் என்று மறுத்தார்கள். வெட்டுபட்ட உடம்புகளை அப்படி ஊர் காணிக்கக் கொண்டுபோகக் கூடாது, அது பொல்லாப்பு என்றார்கள். பெட்டியில் வைத்துக் கொண்டு போறதுதான் சரி. அதுவும் ஆம்புலன்ஸில் இருந்து நேரே பெட்டிக்கு மாத்தி வைப்போம் என்றார்கள். மக்கமார்கள் முகம் பார்க்க வேண்டாமா, அம்மை அப்பன் உடம்பைத் தொட்டு அரற்றவேண்டாமா, என்னென்னவோ கேள்விகள் குழப்பங்கள்…

கடைசியில், தாத்தா பாட்டி உடம்பைக் கொண்டுபோக, மாட்டுவண்டி ரதம் வந்து சேர்ந்தது. உறவின்முறை சங்கத்தில் இருந்து ஏற்பாடு பண்ணிய ரதம். ஊர் முழுக்க கருப்பு வெள்ளை வால்போஸ்டில் ஆச்சியும் பாட்டையாவும் அழகாகச் சிரித்தார்கள். ‘அகால மரணம் அடைந்தார்கள்’ என்றது போஸ்டர் குறிப்பு. அவர்களின் நல்லடக்கம் கொலை நடந்த தோட்டத்தின் தெற்கு மூலையில் ஏற்பாடானது. அதிகம் பேரை உள்ளே விடமுடியாது என்பதால், ஊர்க் கச்சேரிக்குப் பக்கமுள்ள சாலைமேட்டில் வைத்தே மாலை மரியாதைக்கு ஏற்பாடானது. வணிகச் சங்கத் தலைவர்கள், விவசாயிகள் நலச்சங்கம், கட்சிக்காரர்கள் சிலபேர், அங்காளி பங்காளிகள், சின்னமனூரைச் சேர்ந்த ஆச்சி வகையறா உறவுகள், உள்ளூர் ஆட்கள் என்று திமுதிமு கூட்டம்.

மகன்மார் பேரன்மார்கள் நீர்மாலை எடுத்துவரும்போது, குடிமகன் ஆட்கள் ‘மாத்து’ விரிக்க முன்வர, ராஜ அலங்காரம் ஓடிவந்து தடுத்துவிட்டார். “எங்கய்யா பெரியார் கட்சியில இருந்தவரு. அவருக்கு இதெல்லாம் புடிக்காது, விட்டுருங்க” என்றார். மற்றவர்கள் அவர்கள் பாட்டுக்கு மற்றச் சடங்குகள் சரிவர நடக்கிறதா என்று பராமரிப்பு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேட்டும் பட்டாசும் இடி இடியென மேலேபோய் வெடித்துக்கொண்டிருந்தன.

மருமகன் ஜெயராஜ் குடும்பம் ரெண்டாவது தலைமுறையாக வேதத்துக்கு மதம் மாறியிருந்ததால், சில சடங்குகளின்போது பின்வாங்கிக் கொண்டார். ஆனாலும்,  தன் ஆண் பிள்ளைகள் தலை மழிக்க வேண்டும் என்று தங்கக்கனி பிடிவாதமாக இருந்தாள். அக்காள் தங்கச்சிகள் ஒவ்வொருத்தரும் தங்கள் வீட்டுக்காரர்களை இழுத்துப் பிடித்து முறைகளைச் செய்ய வைத்தார்கள்.

ஆச்சிக்கு முகம் மூளியாய் இருந்ததைப் பார்த்து, முருகம்மாள் தன் புருசனிடம் சொல்லி, அசப்பில் வைர மூக்குத்தி போல இருக்கும் ஒரு ஜதை கவரிங் மூக்குத்தி வாங்கிக் கொண்டுவந்து போட்டுவிடச் செய்தாள்.  சந்திரா தன் பங்குக்கு மகள் கழுத்தில் கிடந்த நகையை எடுத்து ஆச்சி கழுத்தில் மாட்டிவிடச் சொன்னாள். ராஜ அலங்காரம், ‘அதெல்லாம் வேண்டாம் விடு தாயி!’ என்றதும்  சற்றுத் தடுமாறியவளாக அமைதியானாள்.

”எப்பா செல்வேந்திரா, ஆட்கள் வந்துகிட்டேதான் இருப்பாங்க. வெயில் கீழ இறங்கும் முன்ன உடம்புகள எடுத்தாதான் காரியம் ஒழுங்கா நடக்கும். என் பேச்சு உனக்குப் புரியும்னு நினைக்கேன்” ஊர் பெரியவர் ஒருத்தர் கிட்டே வந்து சொன்னபோது, சாராய நெடி குப்பென்று அவன் நாசியில் ஏறியது.

செல்வேந்திரனுக்கு அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது. தன் அப்பா போத்திலிங்கம் உடல்நலிந்து மறைந்தபோது, இதே வார்த்தையைத்தான் தன் சித்தப்பாவிடம் சொன்னதும், சாதிச் சங்கத்தவர்களில் இவரும் ஏதோ முக்கியப் பொறுப்பில் இருப்பவர் என்பதும், தங்கள் வகையறாவில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதிலும் இவர் தலை தென்படுவது வரை அவன் நினைவில் இருந்தார் பெரியவர். 

*

வேட்டுச் சத்தம் செவுளைப் பிளந்துகொண்டிருக்கும்போதே, வெட்டிய குழிக்குள் இறக்கப்பட்டார்கள் ஆச்சியும் பாட்டையாவும். முதலில் ஆச்சியை இறக்கலாம். அப்போதான் சுமங்கலியாய்ப் போய்ச் சேர்ந்ததாகக் கணக்காகும் என்றார் குடிமகன். எல்லோரும் அதை ஆமோதிப்பதுபோல உச்சுக்கொட்டினார்கள். பெத்தவர், பேரன்கள், அங்காளி பங்காளிகள் என்று ஒவ்வொருத்தராக வந்து குழிக்குள் கைமண் அள்ளிப் போட்டார்கள். ஆச்சி மண்ணால் நிறைந்து, மங்கலமான முகத்தை ஒளித்துக் கொண்டாள். அவள் முகத்தின் பொலிவை மண் தன்மேல் அப்பிக் கொண்டதாக நினைத்துக் கொண்டான் செல்வேந்திரன்.

“உன்னைப் போய் வெட்டிக் கொல்ல ஒருத்தனுக்கு எப்படி மனசு வந்தது” என்று நினைத்து அழுதான். “என் செலுவப்பா அழக்கூடாது வா வா ஆச்சிகிட்ட” என்று அவள் கைநீட்டிக் கூப்பிடுவதுபோல கற்பனை பண்ணிக்கொண்டான். ‘அண்ணா, அண்ணா’ என்று அவன் காலைத் தழுவிக் கொண்டு நின்ற சித்தப்பா மகனைத் தூக்கி, ஆச்சியின் உடலைக் காட்டினான். ஆச்சி குழிக்குள் சகல பக்கங்களிலும் இடம் விட்டு, எப்போதும் தன் கட்டில் முனையில் உறங்குவது போலப் படுத்துக்கிடந்தாள்.

தாத்தாவை அடுத்ததாக குழிக்குள் இறக்கும்போது, மகன்மார்களுக்குச் சிரசு முடி மழிக்கப்பட்டிருந்தது. பெரிய பேரன்களுக்குப் புறங்கை மயிரை மழித்து விட்டாலும் போதுமென்றார்கள் முதலில். அதற்குள் சேர்மக்கனிக்கு யாரிடம் இருந்து போன் வந்ததோ, பேரன்மார்களுக்கும் தலைமுடி எடுக்கனும் என்று நிலையாய் நின்றான். அவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். மற்றவர்கள் எல்லாருமே கணிசமாக ஆண் ஒன்று பெண் ஒன்று வைத்திருந்தார்கள். அவரவர் மனத்துக்குள் எதேதோ கணக்குகள். தாத்தா வெள்ளைத் துணி சுற்றி இறுக்கிய  பொட்டலமாகக் குழிக்குள் அமிழ்ந்தார்.

*

சிவகாமி ஆச்சி அன்றைக்கு சுடுசோறும் தட்டாம்பயிறு போட்ட புளிக்குழம்பும், தொட்டுக்க பொன்னாங்கன்னிக் கீரையும் வதக்கி வைத்திருந்தாள். எடுபுடி வேலைக்குக் கூட்டிவந்து கூடே வைத்திருந்த மணிமேகலை, மத்தியான பஸ்சுக்கே தன் அக்காள் செவ்வந்திக்கு வளைகாப்பு என்று கன்னிவாடிக்குக் கிளம்பிப் போயிருந்தாள். கூலி ஆட்களுக்கும் பெருசாக வேலை இருக்கவில்லை அன்று. அப்படியே இருந்தாலும் பழனிச்சாமி வந்து காய்ந்த விறகை முறித்துப் போடவும், தொட்டித் தண்ணியை திறந்துவிட்டு, பாத்தியை மண்வெட்டியால் கொத்திவிட்டு, தனி ஆளாக மொத்த காரியத்தையும் முடித்துவிட்டு, ராவில் அங்கேயே காவலுக்குத் தங்கிவிட்டுப் போவான்.

ஊர்புறத்தடியில் ஒண்ணுக்கு ரெண்டாக குடியாண்டிகள் கூடாரம் வந்துவிட்ட பிறகு, எல்லாபேரையும்போல அவனும் குடிமட்டையாகிவிட்ட பிறகு, “நீ பகலிலே தெளிஞ்சி கிடக்கும்போது மட்டும் இங்கன வந்தா போதும்போ” என்று துரத்தி விட்டு விட்டாள் ஆச்சி. ஆக, தோட்டத்தில் எவரும் இல்லாத பொழுது அடிக்கடி வாய்க்கிற ஒன்றுதான். எப்போதும் நாய், கோழி, குருவி, குளவி என்று ஏதாவது ஒரு உயிர் நடமாட்டம் இருக்கிற இடத்தில் இது அவ்வளவு ஒன்றும் அந்நியமான விஷயமும் இல்லை.

பொழுது மசங்கி வந்தபோது, பாத்தியில் நின்ற பாட்டையாவுக்குக் குரல் கொடுத்துவிட்டு, நாயை அவிழ்த்துவிட்டாள் ஆச்சி. “இந்த நாய விட்டாதான் அந்த நாய் வரும்” என்று மெல்லமாக அவளும் முணகிக்கொண்டாள். கையில் இருந்த காப்பி போணியை சூடு ஆறாமல் இருக்க தம்ளர் போட்டு மூடி வைக்கும் போதுதான், கரண்டுபோனது, கூடவே பாட்டையாவின் அலறல் சத்தமும் கேட்டது.

முதலில் பக்கத்துக்காட்டில் குடித்துவிட்டு யாரும் அடித்துக் கொள்கிறார்களோ என்று நினைத்து, ஒருகணம் தாமதித்தவள், ‘சிவாமீ’ என்ற குரலைக் கேட்டதும் அடித்துப் பிடித்து ஓடிவந்தாள். அதற்குள் அவளைத் திண்ணைப் படிக்குக் கீழே இருந்து பாய்ந்த உருவம் ஒன்று அவளைத் தரையில் தள்ளிவிட்டு மேலே விழுந்து அமுக்கியது. அதன் கைகள், ஆச்சியின் புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை இறுக்கி மூடிக் கட்டியது. பிறகு வயிற்றில் சுருக்கென்று என்னம்மோ ஆழமாய் இறங்குவது போலவும், அடிமடியில் ஈரம் சூடாகப் பொங்கிக் கசிந்து நுரைத்துக் கொண்டிருப்பதும் கடைசியாக நினைவாக இருந்தது ஆச்சிக்கு.

பாட்டையா உண்ணி உண்ணி நகரப் பார்த்தார். அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அவர் உடம்பில் வெட்டு விழுந்தது. வாழைத் தாரை சீவுவதுபோல உடம்பில் அரிந்துகொண்டே இருந்தவன் முகத்தை பாதி மயக்கத்தில் பார்த்தார். இரண்டு பேர் அவரை இழுத்துக் கொண்டு போய் மோட்டர் ரூம் வாசலில் போட்டார்கள். ரத்தமும் சேறுமாக சுவரில்போய் விழுந்தார். இழுத்துக் கொண்டுவந்து போட்ட ரெண்டு பேரும் இளவட்டம்தான் என்பது அவர்கள் பிடியிலேயே தெரிந்தது. பாட்டையா மயங்கத்திலும் தளர்ச்சியிலும் குடல் சரிந்து கிடந்தார்.

அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“டேய் சங்கரு நீயாடா… நீயாடா இப்படிப் பண்ண..”

*

“இங்கப் பாருப்பா செல்வேந்திரா, ஒங்க பாட்டையா காடும், அவுங்க காடும் அக்கம் பக்கம் இருக்கு. ஒரே சாதி சனத்துல இப்படி பெரிய தப்பு நடந்துபோச்சு. போன உசுரு ரெண்டும் சாதாரண உசிரில்ல. ஒங்களுக்குப் பெரிய இழப்புதான். ஆனா, செஞ்ச பயலுங்க யாருன்னு போலீசு காதுக்குவரைக்கும் வந்துருச்சு. உங்களுக்கும் விஷயம் என்னன்னு சொல்லிருப்பாங்க. நான் பேரச் சொல்ல விரும்பல்ல. அதை வெளியில கொண்டுபோய் அந்தப் பயலைப் புடிச்சு உள்ளற போட்டு, நாளைக்கு அதுவே பெரும் பகமையா வளரக்கூடாது பாரு.”

சாதிச் சங்கப் பெரியவரும் அவர் கூடே வந்திருந்த வெள்ளை வேட்டிகள் சிலரும் ஜெயராஜின் சினிமா கொட்டகை மாடியில் அரைவட்டமாக அமர்ந்திருந்தார்கள். எதிர்ப்பக்கம் செல்வேந்திரனும், சித்தப்பா ராஜஅலங்காரமும் ஜெயராஜும் அமர்ந்திருந்தார்கள். பெரியவர் சொன்னதுகேட்டு ராஜஅலங்காரம்தான் முதலில் துள்ளினார்.

”பகைமையா, என்ன பேசுறீங்க. ரெண்டு உசிரத் துள்ளத் துடிக்கக் கொடுத்துருக்கோம். விரல் சூப்புற பயலுவ தெரியாம செஞ்சிட்டானுவன்னு பேசுறியளே, மனசாட்சி இருக்காவே ஒங்களுக்கு”

 “ஏ அலங்காரம் பொறப்பா! அதான் பேசணும்னு வந்தாச்சில்லா. பொறுத்து நின்னு கேளு. வார்த்தைக்கு வார்த்தை அலை அடிக்கக்கூடாது.”

”மச்சான் கொஞ்சம் இருங்க அவங்க பேசட்டும்.” 

”எப்பா, தம்புள்ள செஞ்ச தப்புக்குத் தண்டமா, அவங்கப்பன் பக்கத்தால உள்ள மொத்தக் காட்டையும் எழுதி கொடுத்துட்டு, களவெடுத்த நகைநட்டையும் மேக்கொண்டு பத்து லச்சம் பணமும் ஈடாத் தர்றேம், எம்மவன் பேரை நீக்கிக் கொடுங்கன்னு கேக்கான். அவனுக்கு எதோ பெத்த பாசம்னு மட்டும் நினைக்க வேண்டாம். சாதியில அவனும் முக்கியமானவன். இந்தக் கெட்டபேரு அவனால அழிக்க முடியாது. நம்மாளயும் அழிக்கமுடியாது. இதே வேற சாதி சனத்தான்னா சங்கம் உங்கூடல்லா கண்ண மூடிட்டு நின்னிருக்கும். இப்பயும் உங்கூடதான் நிக்குது. போலீசும் மனசு வைக்குது. நீங்க கேக்காட்டி போனா எங்களுக்கு ஒண்ணுமில்ல. என்ன நம்ம மகமை பேருகெட்டு நாறிப் போவும். கண்டவன் பல்லுப் போட்டுப் பேசுவான். நம்ம புத்தி நாறப்புத்தின்னு சொல்லிக் காட்டி ஏசுவான். இனி நீங்க சொல்றதுதான் முடிவு. எப்பா அலங்காரம் உனக்கும் சேர்த்துதான் சொல்லுதேன்.”

“நா என்னத்தப் பேச, எந்தாயத் தள்ளிப்போட்டுக் குத்திக் கொன்னுருக்கானுவ. எந்தகப்பன வங்கொலையா வெட்டிப் போட்டிருக்கானுவ. இதச் செஞ்சவனுங்க சங்க கடிச்சிக் கொல்லனும்னு ஆத்தாமைல தான் துடிக்கேன். ஆனா கையக் கட்டிப் போட்டுல்ல உக்கார வச்சிட்டு நாம்பொறந்த கேடுகெட்டச் சாதியும் சங்கமும்.”

”இவன் ஆவமாட்டான், ஏப்பா ஜெயராஜு உம்பெரிய மச்சானக் கொஞ்சம் கையடக்கிவிடு. இது வெட்டு குத்துன்னு முடியணும்னு அலைஞ்சா நாமல்லாம் ஊரான ஊருக்குள்ள நல்லா இருக்குறதா வேண்டாமா. முதல்ல நீயும் உம் மாப்பிளையும் நாஞ்சொல்றதக் கொஞ்சம் நிதானிச்சுக் கேளுங்க.  இந்தக் கேஸ நடத்தி, தலைக்குத் தல முட்டிட்டு கிடந்தா யாருக்குப் புண்ணியம். பெரிய உசுருங்க போயிருச்சுங்க. ஊரும் சாதிசனமும் அவங்களுக்கு என்னமா மரியாதை காட்டுச்சுங்க. அதைக் கெடுத்துச் சீரழிக்கப் போறியளா. நாளைக்கு ஒங்களுக்கும் அந்த மரியாதை வேண்டாமா? நீங்களும் பெரிய ஆளு, எதுக்க நிப்பவரும் பெரிய ஆளு. அவன் புள்ளை புத்திகெட்டுப் போய் கூட்டாளிகளோடச் சேர்ந்து ஒரு வேலக்காரப் புள்ளையச் சீரழிக்கப் பார்த்ததும், அதப் பெரியவரு கண்டிச்சு அனுப்புனதுக்கு அவனுங்க இந்தப் பாதகத்தப் பண்ணுவானுங்கன்னு யாருதான் நினைப்போம். மேப்பேச்சு வேண்டாமப்பா. பயலக் காப்பாத்திக் கொடுங்கன்னு அவரு நிக்காரு. அதுக்கு இன்னின்னது ஈடு செய்தன்னு சொல்லுறாரு. மத்தது ஒங்க முடிவு. சங்கம் எல்லாருக்கும் பொது. ஒருபக்கம் சாஞ்சி நிக்காது. அதமட்டும் மனசுல வச்சிக்கிடுங்க.”

*

சினிமா கொட்டகை வாசலில் வெவ்வேறு நிற கார்கள் காத்துக் கிடந்தன. அதன்தன் டிரைவர்கள் கேண்டீன் கடை வாசலில் கூடி, தங்களுக்குள் தர்க்க ஞாயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சேர்மக்கனி குடி கூட்டத்துக்குத் தேவையானதை எல்லாம் வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தான்.

ஜெயராஜ் தங்கக்கனிக்குப் போன்போட்டு, “இந்தா மருமவன் இருக்காரு பேசு” என்றான்.

லவுட் ஸ்பீக்கரின் கரகரத்தக் குரலில் அவள் அழுகையும் ஆவலாதியுமாக என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இது ஒப்பேறாது’ என்று ஜெயராஜ் போனைக் கட் செய்துவிட்டு, “மாப்ள உங்க அத்தக்காரிய நான் வழிக்குக் கொண்டு வந்துருவேன். நீ என்ன சொல்ற” என்றான்.

செல்வேந்திரன் பதில் பேசாமல் சற்றுதள்ளி கூட்டத்தோடு நின்றுகொண்டிருந்த சித்தப்பா ராஜ அலங்காரத்தைப் பார்த்தான். அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினார்.

சபை திரும்பக் கூடியது.

“காட்டை எங்க பேருக்கு எழுதிக் கொடுக்கறதா இருக்க வேண்டாம். எங்க மாமா அத்தை பேருல ஃபவுண்டேஷன் ஒண்ணு ஆரம்பிக்குறோம். அது பேருக்கு சொத்தா எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க. இப்போதைக்கு வக்கீல வச்சி அத்தாட்சி போட்டுக்கலாம். பெறவு, திருடுபோன பொருள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். அது எங்க ரத்த உறவுகள நாங்க வித்துத் தின்னதா ஆகிப்புடும். அதுக்கு ஈடா பணமாவோ, வேற காடு இருந்தாலோ கொடுக்கச் சொல்லுங்க. போலீஸ் கேஸ்ல நாங்க தலையிட மாட்டோம். ஆனா, கூடசேர்ந்து செஞ்ச மத்த பயலுங்க மாத்தி தலையாட்டிட்டா நாங்க பொறுப்பில்ல. அதையும் அவங்களே சரிகட்டிக்கட்டும். மத்தபடி சங்கத்துச் சொல்லுக்குக் கட்டுப்படுறோம். வேற என்ன மருமகனே மாமா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன், நீங்க என்னங்கிறீங்க…”

செல்வேந்திரன் அத்தனையையும் ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினான்.

***

கார்த்திக் புகழேந்தி

நடையொரு…

0

வைரவன் லெ.ரா

ஞ்சப்பயலாக்கும். அவனும், பீநாறிக்க நடையும். பஸ்ஸும் வேண்டாம், சைக்கிளும் வேண்டாம். எல்லா எடத்துக்கும் நடந்துதான் வாரான், போரான். இப்போ டிவிலையும் வந்துட்டான். கேமராக்க முன்ன இளிப்பும் பவுசும், தள்ளக்க நடையும்,” வெற்றிலைப் பாக்குக் கடையில், பாக்குவெட்டியில் கோரைப்பாக்கை இரண்டு மூன்று துண்டாய் வசம்போல் நறுக்கிக்கொண்டே ஆசீர்வாதம் தாத்தா பேசினார். வெற்றிலையை வாயில் குதப்பியவாறே அனந்த கிருஷ்ணன் வாயில் எச்சில் தெறிக்க, “இவன்லா ஒரு ஆளுன்னு டிவில பிடிக்க ஆளு வந்திருக்கு பாத்தீலா, கன்னியாரி ஜில்லாவ தமிழ்நாட்டு கூட சேக்கும் போது எங்க அப்பனும் நேசமணி கூட நின்னான். எங்க அப்பாவ யாருக்குத் தெரியும், அத படம் பிடிச்சு போடுங்கன்னு எத்தற வாட்டி லெட்டர் போட்டேன். ம்ஹும்” என்று சொன்னான்.

“லேய் அனந்தா, ஒங்க அப்பனுக்க கதைய வேற எவன்கிட்டயும் சொல்லு பிள்ளே. அவனுக்கு திருவாங்கூர் கூட இருக்கத்தான் ஆச கேட்டியா. என்னைக்கோ நாரோயிலுக்கு நேசமணி வந்த அன்னைக்கு கூட நின்னு போட்டோ பிடிச்சு வச்சிருந்தா உங்க அப்பன் தியாகி ஆய்டுவானா? வீட்டுக்க உத்திரத்துல இன்னும் சங்கு சின்னம் இருக்கது யாரும் அறியாதுன்னு பேசாதல. வாயி இல்லைன்னா உன்ன நாயி கூட மதிக்காது,” ஆசிர்வாதம் தாத்தா பேசிக்கொண்டிருக்கும் போதே, அனந்த கிருஷ்ணன் முகத்தை வலிச்சம் காட்டினான். ஏற்கனவே வெற்றிலை குதப்பிக்கொண்டிருந்த முகத்தில் வலிச்சமும் சேர, சர்வ லட்சணம் பொருந்த அனந்த கிருஷ்ணன் காட்சியளித்தான்.

கிராமத்தின் சகல வம்புகளும் நிகழும் ஸ்தலம் ஆசீர்வாதம் தாத்தாவின் வெற்றிலைப் பாக்குக் கடை. ஆலமர மூட்டில் சவுக்குக் கம்பில் தென்னையோலையைக் கொண்டு, பத்துக்கு எட்டு அடி கொண்டு எழுப்பப்பட்ட தொழில் ஸ்தாபனம். இடுப்பில் சாரம் மட்டும் கட்டியிருப்பார், சட்டை போடப் பிடிக்காது, கருத்த கனத்த உடம்பில், நரைத்த நெஞ்சுமுடி அவரைப் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். வெற்றிலையும் பாக்கும் தவிர ஆரஞ்சு மிட்டாயும், தேன் மிட்டாயும், இஞ்சி கலரும் கிடைக்கும், கூட எந்நேரமும் மண்ணெண்ணெய் அடுப்பிலே கொதிக்கும் தேயிலையுமுண்டு. அனந்த கிருஷ்ணன் பிறகு எதுவுமே பேசவில்லை. அவனது வன்மம், மென்ற வெற்றிலையை காறித் துப்பும்போது மட்டும் அதிகம் வெளிப்பட்டது. “பிள்ளே, ரொம்ப காறாதே. கொடலும் துப்பினில வந்துரும்,” ஆசீர்வாதம் தாத்தா சொல்லிவிட்டுக் கோரைப் பாக்கு போட்டிருந்த அரிவட்டியைத் தன்பக்கம் இழுத்தார்.

யோவான் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. அவனின் இடுப்புக்குக் கீழே நீளம் அதிகம், குச்சி போன்ற கால்கள் ஒவ்வொரு எட்டையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அதிகமாக நீட்டி வைக்க ஏதுவாக இருக்கும். அது தாமரைக்குளத்தில் இலைகளினூடே எட்டி எட்டிப் போகும் தாழைக் கோழியைப் போலவிருக்கும். ஆசீர்வாதம் தாத்தாவின் கடை முன்னே விரிந்து கிடக்கும் தாமரைக் குளத்தில் வட்டை மிதக்க, தாமரையிலை எடுக்கும் வேலை யோவானுடையது.

“பாட்டா, மழைக்க லேக தெரியே, கொளத்துல எறங்கவா?” யோவான் ஆசீர்வாதம் தாத்தாவைப் பார்த்துக் கேட்டான். “லேய், காத்து இன்னா பாரு, என்ன திசைல வீசுகு? எத்தற மட்டம் சொல்லிக் கொடுத்திருப்பேன். மண்டைல நிக்காதே. கோம்பப்பய. ஒரு மயிரும் இன்னைக்கு மழ அடிக்காது. வட்டைய கொண்டு எறங்கு. சம்பாதிப்பு பூரா உனக்க பாக்கேட்டுல தான வருகு? பாட்டத்துக்கு எடுத்தவன் வாழதுக்கு நீ ஏமுல கெடந்து துடிக்க? சொன்னா கேக்கப் போறியா? சரி போற முன்னாடி ஒரு டீ குடிச்சுட்டுப் போயாம்டே.”

“வீட்லயே குடிச்சுட்டு வந்துட்டேன் பாட்டா. வட்டையக் கொண்டாரும். ஓணம் சீசன்ல்லா, தோவாளல மலயாளி முழுக்க நிக்கான். நம்ம சடயங்கொளம் தாமரயில போகாண்டாமா?.”

“லேய் சின்னப் பொலயாடி மவனே, டீ குடிக்க மடின்னு சொல்லு. அதுக்குன்னு உனக்க கதப்புண்டலாம் தாத்தாட்ட வேண்டாம் கேட்டியா,” ஆசீர்வாதம் தாத்தா சொல்லிவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தார், யோவானும் பதிலுக்குத் தலையை ஆட்டிக்கொண்டே பீடியைப் பற்றவைத்தான்.

*

யோவான் அவன் நினைவு தெரிந்து முதல்முறையாக அதிக தூரம் நடந்தது சவேரியார் கோயில் திருவிழாவிற்குச் செல்கையில்தான். மேலே பார்க்கும்போதெல்லாம் இருண்ட வானில் நட்சத்திரங்கள் மின்னின. செல்லும் வழியில் இருகரையெங்கும் வயலும், தாமரைக்குளமும், சிலவிடங்களில் வாழைத் தோப்பும், தென்னந்தோப்பும். அவையே சாலையில் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டிருந்தன. அவனின் கால்கள் வலியை உணரவில்லை. தனியனாய் நடப்பதில் உள்ளூற மகிழ்ந்தான். அங்கே அவனைச்சுற்றி நளியடித்துச் சிரிக்க யாருமில்லை. அவனைத் தலையில் தட்டி அவன் அழுவதை ரசிக்கும் யாருமில்லை. மூன்று வயதைக் கடக்கும் வரையிலும் அம்மையின் இடுப்பிலே காலம் தள்ளினான். ஊரார், “எட்டி, காலு தரைல தட்டுகு. பிள்ளைய இன்னும் இடுப்புலயே வச்சு சுத்துக. எறக்கி விடேட்டி. பருந்து தூக்கிட்டா போய்டும்?” ஏச ஆரம்பித்தவுடன்தான் பிள்ளையைக் கீழே இறக்கிவிட்டாள். பிறகுதான் யோவான் நடக்க ஆரம்பித்தான். அவனது தலை உடல் வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாமல் சிறியதாக நீண்டு இருக்கும். இடுப்பிற்கு மேலேயும் கழுத்துக்குக் கீழேயும் சம்பந்தமில்லாமல் நடுப்பகுதி தனித்து விடப்பட்டிருக்கும். அதுபோக, கால்களின் அதீத நீளம், பாதங்களைத் தரையில் உன்னி நடக்கும்போது குதித்துக் குதித்துப் போவதைப் போலவிருக்கும். இதுவே அவனை ஒத்த வயதுடையவர்களின் நையாண்டிக்கு ஆளாக்கியது.

“அந்தோணியாரே உமக்க மகனுக்க காலு எட்டு ஒன்னுக்கு ஒன்னு, அடிக்கி அடி நீண்டுட்டே போகே. கொஞ்சம் பையப் போச் சொல்லு,” ஆசிர்வாதம் அந்தோணியைப் பார்த்துச் சொன்னார். யோவான் மட்டும் தனியே கூட்டத்தைவிட்டு முன்னே நடந்துகொண்டிருந்தான். “எழவுப் பய இவங்க அம்மைக்கு வயித்துல கெடக்கும் போதே குறுக்கயும் மறுக்கயும் நடந்துட்டே இருப்பான். பாவம் சூலிப் பொம்பள ராத்திரி முழுக்க வயிறே கெடந்து திரும்புகேன்னு பெகளம் வைப்பா கேட்டீரா மாமா? மக்கா யோவானு, பைய நட சரியா? பின்னால கெழடு தட்டுன ஆட்களுலாம் வராங்கல்லா? அவாளுக்கு தெவக்கம் வந்து போற வழியிலே மண்டயப்போட்டானின்னு வையி, பிள்ளையல்லா கொறச் சொல்லுவா? கிறுக்குப் பய. மெதுவா நடல. சவேரியார் கோயிலுக்கு எனக்கக் கூட அனுப்பாதன்னு அவளுட்ட சொல்லியும் கேக்காம அனுப்பியிருக்கா. இவனுக்கத் தம்பியும் தங்கச்சியும் வீட்டுல தானே இருக்கு? எதுக்கு வம்பா போகுன்னு நடந்து வரணும்?” சொல்லிக்கொண்டே ஓடிப்போய் யோவானை நிறுத்தித் தலையில் குட்டினான். அந்தோணி குடிக்கக்கூடாது என நினைத்தே புஷ்பம் மகனை அவனோடு அனுப்பி வைத்தாள். கிளம்பியதில் இருந்தே எப்படியாவது யோவானைத் திட்டி வீட்டிற்கு அனுப்பிவிடுவதைப் பற்றியே அந்தோணி சிந்தித்துக் கொண்டிருந்தான். “அந்தோணிக்கும் கொக்குக்கும் ஏதோ பழக்கம் இருக்கு போல. புஷ்பத்துக்கும் உனக்கும் பொறந்த பிள்ள தானா? யோவானு. நீ சொல்லு இவன்தான் ஒனக்க அப்பனா?” குருசுமணி சொல்லிவிட்டு அவனே கத்திச்சிரிக்க, கூடச்சேர்ந்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

சவேரியார் கோயில் இசைக் கச்சேரியைப் பார்க்கத்தான் சடையன்குளத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார்கள். யோவானுக்கு அன்றைய நடை, வழக்கத்தை மீறிய உற்சாகத்தைக் கொடுத்தது. வீட்டைவிட்டு நூறு மீட்டர் தூரமிருக்கும் பலசரக்குக் கடையில் வெஞ்சன சாமானம் வாங்கவும், ஊரின் நடுவிலே இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு நடப்பதும்தான் நீண்ட நடை. இதுபோக ஊரைச் சுற்றியிருக்கும் குளக்கரைகளில் திரிவான். வீட்டில் இருந்தாலும் வெளியே முற்றத்தில் நடந்துகொண்டே இருப்பான். அம்மையோ அப்பனோ திட்டினால் கொஞ்சநேரம் அவர்கள் கண்பார்வை படும்வரையிலும் குண்டி தரையில் இருக்கும், பிறகென்ன, அதே நடைதான். “இவனுக்கு என்ன சோக்கேடோ! ஆசுவத்திரி கூட்டிட்டுப் போய் காட்டலாம்ல்லா? மூனுல இவனாக்கும் மூத்தவன். டெய்லி ராத்திரி குடிக்கேருல்லா? ஒரு இருவது ரூவா சக்கரம் ஆகுமா ஆசுவத்திரி போய்ட்டு வர? இவனும் நம்ம பிள்ளதான், மனசுல இருக்கணும். ராஜாவூரு ராயப்பரே, பிள்ளைக்கு கருண காட்டும்,” லேசாக விசும்பினாள்.

“ஆமா, நல்ல மொவன். என்ன நேரத்துல பெத்தியோ! இவன் பொறந்ததுக்கு அப்புறம் வேலையும் ஒழுங்கா இல்ல, இருந்ததையும் அழிச்சாச்சு. அது திமிருலயாக்கும் நடக்கு, இவனால கண்டவனும் என்ன கிண்டுகான். என்ன ஜென்மத்துல பண்ண பாவமோ, இப்படி பொறந்துருக்கான்,” யோவான் காதுபடவே அந்தோணி பேசினான்.

நடந்தவர்கள் சாலையில் இருந்த நாவல் மரத்தடியில் ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். யோவான் உட்காரப் பிடிக்காமல் அங்கேயும் இங்கேயுமாய் நடந்தபடி இருந்தான். நடந்து வந்தவர்கள் இருட்டிலும் நாவல் பழம் பொறுக்கிக் கொண்டிருந்தனர். யாரும் அவனைக் கவனிக்காத வேளையில், இருளில் வடக்கே போன வயற்காட்டில் கால் போன போக்கிலே நடந்தான். அந்தோணிக்கு இருந்த ஒரே எண்ணம் யோவானை வீட்டிற்கு விரட்டிவிட வேண்டும். அப்போதுதான் போகும் வழியில் மாம்பட்டை இஷ்டம் போல குடிக்கலாம். கொஞ்ச நேரத்திலேயே யோவான் அங்கிருந்து நகர்ந்ததை அந்தோணி அறிந்தவுடன் அவன் பத்திரமாக வீட்டிற்கு போய் சேரவேண்டும் என்று சவேரியாரிடம் விசேஷ பிரார்த்தனை செய்தான்.

வயற்காட்டில் நடக்க ஆரம்பித்தவன் சாலையை அடைந்து அங்கிருந்து மேற்கே செல்கையில் வழியில் ஒரு கோயில் தெப்பக்குளத்தைக் கண்டதும் அதன் அருகே சென்றான். பச்சையம் பிடித்த நீர் நிலவொளியில் ஜொலித்தது. வெறுமையான நீர் மட்டுமே எங்கும், அது அவனுக்கு ஓங்கரித்தது. எதுவுமே இல்லாமல் நீர் மட்டும் நிறைந்து, அரவம் இல்லாமல் பிணம் போல கிடப்பதை அவன் வெறுத்தான். அங்கிருந்து ஓட்டம் பிடித்தவன் நேரே சடையன்குளம் குளக்கரைக்குச் சென்றான். குளம் நிறைத்து தாமரையும் ஆங்காங்கே அல்லியும் நிலவொளியில் தெரிந்தன. இரவிலும் குளக்கரையைச் சுற்றிச்சுற்றி நடந்தான். தேரைகள் பாடிக்கொண்டிருந்தன. கொக்குகளும் நாரைகளும் கரையில் இருந்த ஆலமரங்களில் கூடடைந்து கொக்கரித்தன. தண்ணீர் பாம்புகள் சில பொந்தில் இருந்து தலையை நீட்டிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் அங்கேயே இருந்தவன் காலை விடிந்ததும் வீட்டிற்குச் சென்றான்.

*

பள்ளிக்கூட ஏச்சுக்கும் பேச்சுக்கும் மடித்து அங்கும் செல்லவில்லை. ஊரைச்சுற்றி நாலாபுறமும் தாமரைக்குளம்தான். குளக்கரையில் நிற்கும் வாகை மரத்தடியில் எந்நேரமும் கிடப்பான். தாமரையிலை மேலே எட்டிப் போகும் தாழையும், குருட்டுக் கொக்கும், நீருலவியும் சிநேகிதர்கள் ஆயினர். குளத்தில் தாமரையிலை பறிக்க வரும் மந்திரம் இவனையும் கூடச் சேர்த்துக்கொண்டான். எவ்வளவு வேலை பார்த்தாலும் கொடுப்பதை வாங்கிக்கொள்வான்.

நாளைடைவில் நடை ஒரு பழக்கம் போல ஆனது. அதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் காலை விடிந்ததும் நாலுமுக்கிலும் இருக்கும் தாமரைக்குளத்திற்கும் சென்று வட்டமிட்டு வருவான். பிறகு வட்டையெடுத்து தாமரையிலை பறிப்பான். ஆட்டோ வந்ததும் இலையை ஏற்றி தோவாளைக்கு அனுப்புவான். சிலநேரம் அப்படியே நடந்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வான். அப்போதெல்லாம் அவனைத் தவிர வேறொரு எண்ணமும் இருக்காது. எங்கு வேண்டுமோ அவனைக் கொண்டுசெல்ல கால்கள் இருக்கின்றன. இப்போது அவையும் இறுகி பனைமரத்தடி போல ஆகிவிட்டன. வீட்டிலும் அவனை கண்டுகொள்வதில்லை. புஷ்பம் மட்டும் பேசுவாள். அங்கேயே இருந்தால் சிலமணி நேரத்தில் மகனை நினைத்து அழ ஆரம்பித்துவிடுவாள். ஆக, வீட்டிலும் யோவானுக்கு அதிக போக்கிடம் கிடையாது. கிடைக்கும் பணத்தை அம்மையிடம் கொடுத்துவிடுவான். தேவைக்கு மட்டும் அவளிடம் வாங்கிக்கொள்வான். அந்தோணிக்கும் யோவானுக்கும் இடையே பெரிய விரிசல் இருந்தாலும், யோவான் அவனுக்கு குவாட்டர் வாங்கினால், அப்பனுக்கும் மறக்காமல் வாங்குவான். அவனை அடுத்துள்ள ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று, இப்போது கல்லூரிப் படிப்பையும் முடித்தார்கள்.

பெண்பிள்ளைக்கு கல்யாணம் நல்லபடியாக நடந்தது. அவர்களால் முடிந்தது இருபது பவுனும் ஒரு லட்சம் கையிலும் கொடுத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிறகென்ன, யோவானுக்கு சுற்றியுள்ள ஊர்களில் பெண் பார்த்தாலும் ஊரார் வாயை மூட முடியவில்லை. எப்படியோ வரன் தட்டித்தட்டிப் போகும். அந்தோணி முழுநேர குடிகாரன் ஆகிவிட்டான். புஷ்பம் விசுவாச ஜெபத்திற்கே அதிக நேரத்தைக் கொடுத்தாள். யோவான் தாமரையிலை பறிக்கும் நேரம் தவிர்த்து பக்கத்தில் கிடந்த வயல்களில் காணிக்காரனாய் வேலையும் பார்த்தான். தம்பி எப்படியோ சென்னை சென்று ஒரு நிலையான வேலைக்குச் சென்றுவிட்டான் என அறிந்ததும், அம்மைக்கும் அப்பனுக்கும் யோவானால் மட்டுமே மனக்கடி இருந்தது. எப்படியோ வேளாங்கன்னி செல்கிறோம் என வேனில் சென்ற குடும்பம், யோவானுக்கு மேரியைத் திருமணம் முடித்து அழைத்து வந்ததும் ஊரார் வாயை மீண்டும் மூடமுடியவில்லை. ஆசீர்வாதம் மட்டும் வீட்டிற்கு வந்து மணமக்களை ஆசீர்வதித்தார். தாமரைக் குளத்தை பாட்டத்திற்கு எடுத்த மாணிக்கமும், மந்திரமும் வீட்டிற்கு வந்து சென்றனர். மேரிக்கு ரோஸ்மியாபுரம். வெக்கையிலே கிடந்தவளுக்கு சடையன்குளம் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. யோவான் கட்டியநாள் முதற்கொண்டு அவளிடம் எதுவுமே பேசவில்லை. எப்படியோ எல்லாம் சரியாகும் என நினைத்தவள் அடுத்த நாள் தண்ணீர் எடுக்க குளத்திற்கு வந்ததுமே யோவானின் புராணத்தை யாரோ வத்தி வைத்தனர். வீட்டிற்கு வந்தவள் யோவானைத் தனியே அழைத்துப் பேசினாள். யோவான் என்ன பேசினானோ! உடனே ரோஸ்மியாபுரம் சென்றவள், பிறகு சடையன்குளம் வரவேயில்லை. யோவான் முதலும் கடைசியுமாய் வண்டியில் சென்றது திருமணத்திற்காகத்தான்.

அதன் பிறகுதான் யோவான் இரவுகளில் படுக்கையில் கிடக்கப் பிடிக்காமல் எழுந்து வெளியே சென்றுவிடுவான். அவனின் கால்கள் வெறுமனே இருப்பது குண்டூசியைக்கொண்டு பாதங்களை குத்துவதுப் போல வலிக்க ஆரம்பிக்கும், பிறகு தாமரைக் குளக்கரையைச் சுற்றி போதும் எனத் தோன்றும் வரையிலும் நடப்பான். அவனின் கால்கள் ஒருபோதும் வலியை உணர்ந்ததில்லை, உறக்கம் வந்தாலொழிய அது தொடரும். அவன் நடக்கும்போது கூடவே சேர்ந்து நடக்கும் நாமக்கோழி ஒன்றுண்டு. அது அவன் வரும்வரையிலும் காத்திருக்கும், அவன் நடக்கும் எல்லா சுற்றிலும் கூடவே நடக்கும். அவனின் சிந்தனைகளும் சுழல ஆரம்பிக்கும். ஊருக்குள் அவன் நடந்தாலே கிண்டல்களும், நளியும் தொடரும். ஆசீர்வாதம் தாத்தா மட்டும் கொஞ்சம் தன்மையாய் பேசுவார். மந்திரம் ஆரம்பத்தில் இணக்கமாக இருந்தாலும், யோவானின் விசுவாசம் மாணிக்கம் முதலாளியோடு நெருக்கத்தை அதிகப்படுத்திவிட்டது. அதனால் மந்திரத்திற்குள்ளும் சிறிய புகைச்சல் உண்டு. தம்பியும் தங்கையும் வீட்டிற்கு வந்தாலும் முகம் பார்த்து பேசமாட்டார்கள். அம்மையிடம் மட்டும் அதே அந்நியோன்யம் இருக்கிறது. இப்போதெல்லாம் அந்தோணி எப்போதாவது பேசுவான், அதில் பழைய ஏச்சுக்கள் இருக்காது. “யோவானு, மக்ளே, பிள்ளைக்கு இவனுக இடைல வாழ யோக்கித கெடையாது கேட்டியா? இவனுகலாம் கள்ளப் புண்டாமக்க. நீ பவித்திரம் டே. எதையும் யோசிக்காத. ஆமா, நீ எதுக்குப்போ இப்படி நடக்க? ஒனக்கு தெவங்காதோ?.”

“நடந்தாதான் கொஞ்சம் கெதியா இருக்கும்” சொல்லிக்கொண்டே யோவான் ஒரு சிறிய சிரிப்புடன் அதைக் கடந்து விடுவான்.

*

யோவானின் தம்பி சென்னையில் வேலை கிடைத்ததும் அப்பாவையும் அம்மையையும் சென்னை வந்துபோகச் சொல்லி பலநாட்களாகக் கேட்டு, ஒருவழியாக அவர்கள் செல்ல சம்மதித்தார்கள். அம்மைதான் ஒருவேளை சென்னை வந்தால் யோவான் மாறக்கூடும் என்றெண்ணி தம்பியை யோவானையும் சென்னை வரச்சொல்லி கேட்குமாறு கெஞ்சினாள். அவனும் வேண்டாவெறுப்பாக அழைக்கச் சம்மதித்தான். ஆனால் அவனோ இரயிலில் வரமறுத்து சென்னைக்கும் நடந்தே வருகிறேன் என்றான். அம்மைக்கோ யோவான் ஊரைவிட்டுக் கொஞ்சநாள் தள்ளி இருந்தாலே மாறிவிடுவான் எனும் நம்பிக்கை இருந்தது. யோவான் நடந்தே சென்னை செல்கிறான் எனும் விஷயம் தெரிந்து ஊரார் ஊருக்குள் பரப்ப, தம்பியோ அந்தச் சம்பவத்தை முகநூலில் போட்டான்.

சென்னைக்கே நடக்கிறான் என அறிந்ததும் ஒரே நாளில் யோவான் ஊருக்குள் ஸ்டார் ஆனான். சென்னைக்கு ஐந்து நாளில் தம்பி சொன்ன விலாசத்தில் போய் நின்றான். தம்பிக்கோ சென்னை போய்வர ஒரு டிக்கெட் குறைந்ததால் மிச்சம் கிடைக்கும் பணத்தை எண்ணி கொஞ்சம் மகிழ்ச்சிதான். இரண்டு நாள் அவர்களோடு வீட்டிலே தங்கியவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எங்குமே தாழைக்கோழியும், குருட்டுக் கொக்கும் இல்லை, தாமரைக் குளமும் இல்லை. இருந்த இரண்டு நாட்களில் வெளியே நடந்து சுற்றியவன் வாகனங்களோடு நடக்க பயந்தான். அங்கே இரவில்கூட பூச்சிகளின் சங்கீதம் இல்லை. பொறுத்துப் போனவன் உடனே சடையன்குளம் கிளம்பவேண்டும் என்றான். அதுவும் நடந்தே ஊருக்குச் செல்கிறான் எனத்தெரிந்ததும், முன்னர் தம்பி போட்ட பதிவிற்குக் கிடைத்த லைக்கும் கமெண்டும் இதையும் முகநூலில் போட ஆசை காட்டியது. அந்த பதிவைப் பார்த்ததும் யோவானுடைய தம்பியின் நண்பனும் அதே ஊர்க்காரனும், தமிழ்நாட்டில் இருபத்து நான்கு மணிநேரமும் செய்தி ஒளிபரப்பும் பலநூறு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரிந்தவன், செய்தி கிடைக்காமல் அவன் நடக்கத் தொடங்கியதில் இருந்து ஊருக்கு வருவதுவரை ஆங்காங்கே படம் பிடித்து அதை சரியான ஒலிக்கோர்வையுடன் சேர்த்து ஒளிபரப்பி யோவானை மாநிலம் முழுக்க பிரபலம் ஆக்கிவிட்டான். அவனை யோவானுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவனும் ஏதோ செய்கிறான் என்றெண்ணி அவனை ஏசவில்லை. அந்த வீடியோவும் முகநூலிலே இரண்டு நாள் பேசுபொருளாக இருந்தது, அதிலும் பின்னூட்டங்கள் எப்படி இருந்தன தெரியுமா?. ‘கண்டிப்பாக அவர் ஒரு சித்தராக இருக்க வேண்டும்’, ‘வாழ்த்துகள் தோழர்’, ‘அவனே பஸ்ஸுக்கு காசு இல்லாம நடக்கான். யாராவது உதவி பண்ணிருக்கலாம்’, ‘ஊருல ஆயிரம் பிரச்சனை இருக்கு இவனுக வேற’.

சில நாட்களுக்குப் பின் யோவான் ஊருக்கு வந்ததும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மேரி யோவானைப் பார்க்க வந்தாள். அவளுக்கும் இன்னொரு திருமணம் நடக்கவில்லை, இருந்தும் யோவான் திருப்பி அனுப்பிவிட்டான். புஷ்பம் அதற்காக வருத்தப்பட்டாலும், அந்தோணி மட்டும் “அந்தோணிக்க மவன்னு காமிச்சுட்ட மக்ளே. ஒன்னிய விட்டுட்டு போயிட்டு இப்போ டீவி பெட்டில நீ வந்ததுக்கு அப்புறம் திரும்பி வந்திருக்கா. கண்ணு அவிஞ்சு கெடந்தாளா இத்தர நாளா? ம்மக்கா டவுனுக்குப் போனா ஒன்மேன் ஆர்மி ஹாஃப் வாங்கிட்டு வாடே. ட்ரெயின்ல வந்தது மேலு வலிக்கு,” தலையைச் சொரிந்துகொண்டே கேட்டான்.

எல்லாம் இயல்பான பிறகு யோவானைத்தேடி முக்கிய பத்திரிகையின் மூத்த ஆசிரியர் சடையன்குளம் வந்திருந்தார். அவர் யோவானைச் சந்திப்பதற்கு முந்தைய நாளே உள்ளூரில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பத்திரிகை ஊழியர் ஒருவர் மூலமாக சடையன்குளம் சென்று யோவானைப் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை தயார்செய்ய வைத்தார். வசதியாய் ஆசீர்வாதம் தாத்தா அதற்காக இயைந்து கொடுத்தார். யோவானின் வரலாறு, அந்தோணியின் வரலாறு, யோவானின் வடிவு, சிறுவயதில் இருந்தே யோவான் எப்படி நடப்பான், அவனின் கால்கள் எப்படி தரையில் பதியும், அவனின் மோசமான திருமண வாழ்க்கை, தாமரையிலை எடுக்கும் வேலை பல முக்கியமான தகவல்களைக் கொடுத்தார். அதற்காக ஆசீர்வாதம் தாத்தாவின் புகைப்படம் யோவான் பற்றிய செய்தித்தொகுப்பில் எங்கோ ஒரு மூலையில் வரவைக்குமாறு நிபந்தனையும் விதித்தார்.

*

தாமரைக்குளம் பின்னால் தெரியுமாறு கேமராவைப் பொருத்தி அவர்கள் படித்துறையில் அமர்ந்துகொண்டனர். யோவானை வரவைக்க அவர்கள் அந்தோணிக்கு ராயல் சேலஞ்ச் ஃபுல் பாட்டில் வாங்கிக் கொடுத்தனர். முதல் கேள்வியாக “எதுக்காக நடக்க ஆரம்பிச்சீங்க?” மூத்த ஆசிரியர் ஆரம்பித்தார்.

“நடக்காம என்னால இருக்க ஒக்காது. காலு சும்மா இருந்தா ஒளைய ஆரம்பிக்கும். மண்டக்கடி ஆரம்பிக்கும். எந்திச்சு நடக்க ஆரம்பிச்சிருவேன்,” யோவான் பேசிக்கொண்டிருக்கும் போதே தாழைக்கோழி, நாமக்கோழி, தண்ணீர் பாம்புகள் சில அந்த இடத்தில் வெளிவரத் தொடங்கின.

“எப்போ இருந்து நடக்க ஆரம்பிச்சீங்க?” கேள்வியைக் கேட்டுக்கொண்டே அவற்றை விரட்டியடிக்குமாறு ஆசிரியர் கண்ணைக் காட்டினார்.

“சின்னதுல எனக்க உருவத்த வச்சி கிண்டுவானுக. பள்ளிக்கூடத்துல வாத்தியாரும் இதச் சொல்லியே அடிப்பாரு. அப்போ இருந்து நடக்க ஆரம்பிச்சேன்,” யோவான் பார்க்கும்போதே சிலர் அவற்றைக் கல்லைக் கொண்டெறிந்து விரட்ட ஆரம்பித்தனர்.

“எதுனால நடக்கணும்?” ஆசிரியர் உன்னிப்பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“அது என்னைய தனியா வச்சுருக்கும். யாரும் எனக்க வேகத்துக்கு நடக்க முடியாது. ஒரு புண்டாமவனால முடியுமா? நா மட்டும் இருக்கிற இடம் நடக்கும் போது மட்டும் தான். அங்க வேற யாரும் வரமுடியாது. தேவிடியாப் பயக்க. ங்கொம்மால அதான் நடக்கேன். வேற ஒன்னும் இல்ல,” சொல்லிவிட்டுச் சிரித்தான்.

“ஷிட். பேட் வேர்ட்ஸ் வேண்டாம் யோவான். பேஸ்ட்டர்ட், சொல்லி கூட்டி வரலையா?” மூத்த ஆசிரியர் கெட்டவார்த்தையைக் கேட்டதும் பதட்டமானார். அவரை இயல்பாக்க பகார்டி லெமன் தேவைப்பட்டது, இதற்காக யோவானும் அங்கே அரைமணி நேரம் உட்கார்ந்திருக்க நேரிட்டது.

மீண்டும், “இது ஒரு நோய்ன்னு உங்களுக்குத் தெரியலயா? நீங்க நல்ல மனநிலை டாக்டரப் போய் பாத்துருக்கணும்,” இயல்பாகிக் கேட்டார்.

“சோக்கேடோ என்ன எழவோ? நம்மள நிம்மதியாட்டு வச்சுறக்க ஐட்டத்த யாராச்சும் வேண்டானின்னு சொல்லுவாளா?” யோவான் வெறுப்புடன் சொன்னான்.

“உங்க மனைவி இதுனாலதான விட்டுட்டுப் போனாங்க?” மீண்டும் முக்கியமான கேள்வி என்பதுபோல ஆசிரியர் அவனை முறைத்தபடி கேட்டார். ஆசிரியர்களோடு வந்தவர்கள் தாழைக்கோழியை, நாமக்கோழியை விரட்டிய பின்னும் அதே உற்சாகத்தில் அருகே இருந்த மரத்தில் இருந்த கொக்கு கூட்டத்தை நோக்கியும், குளத்தில் தூரமாய் நீந்திக்கொண்டிருந்த நீர்கோழியின் மீதும் கல்லெறிந்து கூச்சலிட்டனர், குதூகலித்தனர்.

“அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது,” யோவான் சொல்லி முடிக்கும் முன்னே எழுந்தான். கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. யோவானால் உட்கார்ந்தே இருக்க முடியவில்லை, அங்கிருந்து முனகியபடியே நடக்க ஆரம்பித்தான். பிறகு ஆசிரியர் இருக்கும் இடத்திற்கு வரவேயில்லை. அவர்கள் இரண்டு மணிநேரம் அவனுக்காகக் காத்திருந்தார்கள். அதற்காகப் பல பகார்டி லெமன்கள் தேவைப்பட்டன. இது நிகழ்ந்து ஒருமாதத்தில் யோவான் நடக்கும் புகைப்படம் அட்டைப்படத்தை அலங்கரிக்க, ‘நடை.. தியானம்.. நோய்.. தவம்..’ எனும் பெயரில் நான்கு பக்க நேர்காணலும் கட்டுரையும் வந்திருந்தது. அதில் ஒரு மூலையில் ஆசீர்வாதம் தாத்தா வெற்றிலை பாக்குக் கடையின் கல்பெஞ்சில் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கும் புகைப்படமும் இருந்தது.

செய்தித் தொகுப்பு வந்திருந்த பத்திரிகையை அனந்த கிருஷ்ணன் நகரத்திற்குச் சென்றபோது மறக்காமல் வாங்கி வந்தான். ஆலமூட்டில் இருந்த ஆசீர்வாதம் தாத்தா கடையின் முன்னே ஊரார் அமர்ந்திருக்க, யோவானும் ஓரமாய் நின்றுகொண்டிருந்தான்.

முதல் பத்தியே இப்படி ஆரம்பித்தது ‘நடை எனக்கொரு தியானம். அது ஒரு தவம். அங்கே என்னை மட்டுமே நான் உணர்கிறேன். நீங்கள் அதை ஒரு நோய் என்று கருதுகிறீர்கள். ஆனால் அது அப்படியல்ல. என்னை எங்கு வேண்டுமோ அங்கு கொண்டு நிறுத்த எதுவும் தேவையில்லை, என் நடை மட்டுமே போதும். அது ஒரு நிறைவைத் தருகிறது. கால்களை அதிகம் நான் உணர்கிறேன். அது நிலத்தினுடன் ஏற்படுத்தும் வாஞ்சையான தொடர்பை நான் உணர்கிறேன். அது எப்போதும் எனக்கு வேண்டும். ஆக, நடக்கிறேன். நடை எனக்கொரு தியானம், அது ஒரு தவம்’ முதல் பத்தி முடிந்ததும் ஆசீர்வாதம் தாத்தாவின் நேர்காணல் இருந்தது. அதற்குப் பிறகே யோவானின் நேர்காணல். அதெல்லாம் ஊராருக்குத் தெரிந்த விஷயம்தான். இருந்தும், அனந்த கிருஷ்ணன் முழுவதுமாக வாசித்து முடிக்கவும் யோவானைப் பார்த்தான். யோவானின் முகம் எரிச்சலில் இருந்தது. ஏனோ நடக்க ஆரம்பித்தவன் கத்தவும் ஆரம்பித்தான்.

“நட ஒரு ஓப்பு. நட ஒரு கைல பிடிக்கது. நட ஒரு ஊம்பது. நட ஒரு தேவிடியா. நட ஒரு கண்டாரவோழி. நட ஒரு அப்பனுக்கும் அம்மைக்கும் பொறக்கல்ல..” அவன் தூரமாய் நடந்தபடியே வார்த்தைகளை இன்னும் வெறிகொண்டு வீசினான். அவன் நடக்க ஆரம்பிக்கவும், ஆலமூட்டில் இருந்த கொக்கும் நாரையும், தாமரைக்குளத்தில் இருந்து தாழைக்கோழியும், நாமக்கோழியும், தண்ணீர் பாம்பு இரண்டும் அவனோடு நடக்க ஆரம்பித்தன. தூரமாய் நடக்க நடக்க, அவனது வார்த்தைகள் தெளிவாக ஊராரின் காதில் விழவில்லை. இருந்தும் கேட்ட வார்த்தைகளால் அவர்கள் கத்திச் சிரித்தனர்.

***

வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com