Home Blog Page 33

என் படைப்பில் என் நிலம்

0

வைரவன்

ழுகினசேரி’ இந்தப்பெயர் இருந்ததால் ‘புறப்பாடு’ என்கிற புத்தகத்தை நான் கையில் எடுத்தேன். அதற்குமுன் இலக்கியம் பற்றிய பெரிய புரிதல் இல்லாதவன் நான். உண்மையில் சொல்லப்போனால் அங்கிருந்துதான் என்னுடைய இலக்கிய வாசிப்பும் ஆரம்பித்தது. அதை யார் எழுதியிருக்கிறார்? அவர் யார் என்பதும்கூட அப்போது எனக்குத் தெரியாது. சரஸ்வதி திரையரங்கும் ஒழுகினசேரியின் சிலப் பகுதிகளை பற்றியும் இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களில் எழுதியிருந்ததாலேயே அதனை வாசிக்க ஆரம்பித்தேன். அதுதான் என்னை எழுதுபவனாக மாற்றியிருக்கிறது.

எழுத ஆரம்பித்த புதிதிலும் சிறுகதைகள் ஒழுகினசேரியில் இருந்தே பிறந்தன. பால்யம், பதின்பருவம், அது ஒரு கனவுபோல எல்லா இரவுகளிலும் கண்ணை மூடியவுடன் தொடரவேண்டும். பெங்களூருவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டு நிலாவைப் பார்க்கும்போது தென்னை ஓலைகளின் இடைவெளிவழி தெரியும் நிலாவைப் பார்க்கத்தோன்றும். மழைப் பெய்யுந்தோறும், தாடகை மலையை, தோவாளை மலையை, வேளி மலையை அணைத்துச் செல்லும் கருமேகக் கூட்டங்கள் ஞாபகம் வரும். எந்தவொரு நடுத்தர உணவகத்தைக் கண்டாலும் கடைக்கு வெளியே புரோட்டா கல் கிடக்கிறதா என்று கவனிக்கத் தோன்றும். ராத்திரி கொத்து புரோட்டா அடிக்கும் ஓசை ஒழுகினசேரியின் ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு லயத்தில் ஒலிக்கும். என் கை புரோட்டா என்று எழுதும்போதே பாய் கடை சால்னா மணம் பெங்களூருவில் என் வீட்டில் மணக்கிறது, கூடவே மட்டன் (உண்மையில் பீப். நாகர்கோயில்காரனுக்கு அதுவும் மட்டன்தான்) ரோஸ்ட்டும் கொத்துக்கோழியும், தேங்காய் எண்ணெய்யில் பொரித்த சிக்கனும் உணவென்றால் எனக்கு எழுதுவதில் கட்டுப்பாடு கிடையாது. இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன். பால்யமும் பதின்பருவ நினைவுகளும்  இன்னும் ஒழுகினசேரியில் நான் விட்டுச்சென்ற இடத்திலேயே கிடக்கின்றன. கடந்துபோனவை மீண்டும் கிடைக்கப்போவதில்லை. அதனால்  திரும்பத்திரும்ப பால்ய பதின்பருவ நினைவுகளிலே முட்டிக்கொள்கிறேன். ஒழுகினசேரியும், எங்கோடி கண்ட சாஸ்தா கோயிலும், சந்திப்பில் நிற்கும் பெரியார் சிலையும், பழையாற்றின் படித்துறைகளும், சுடுகாடும், விடுமாடனும் மாடத்தியும், மயான சுடலையும், வள்ளியாமடத்து இசக்கியும், துர்க்கை அம்மனும், முண்டனும், கடைத்தெருவும், கலைவாணர் தெருவும் இன்னும் இன்னும்.. ஏன் மொத்த நிலமுமே அந்த மனிதர்களும் என்னுள்ளே இந்தப் பத்து வருடங்களாக நான் விட்டுச்சென்ற அதே ஒழுகினசேரியாக, மனிதர்களாக இருக்கிறார்கள். என் இருபத்து மூன்று வயது எப்படி ஒழுகினசேரி சென்றால் மட்டும் திரும்புகிறதோ! அதேபோல எனக்காக அதே பழைய ஒழுகினசேரி திரும்புமா? அதே மனிதர்களை மீண்டும் சந்திப்பேனா? ஒழுகினசேரியோ ஒரு கிழவியைப்போல நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறது. அதனால்தான் என்னவோ அந்தக் கதைகளிலும் ஊருக்குச் செல்பவனின் நினைவுகள் வழியே கதைகள் விரிகின்றன. அவன் ஊரின், மனிதர்களின் மாற்றத்தைக் கண்டு குழம்புகிறான். உறவுகளைச் சந்திப்பதில் தயக்கம்  கொள்கிறான். புதிய உறவுகளை அணுகத் தெரியாதவனாக இருக்கிறான். தன் பிள்ளைக்கு அவர்களை அறிமுகம் செய்யவோ உறவு முறைகளின் பெயர்கூட அவனுக்கே தெரிவதில்லை. பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்த சிறு, குறு நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்தவனே இக்கதைகளின் வருகிறான். அவன் இரு நிலங்களுக்கிடையே தன்னை, தன் அடையாளத்தை எங்கே பொருத்திக்கொள்ள வேண்டும் என அறியாதவானாய் முழிக்கிறான்.

விடுமாடன் கோயில் கொடை சிறுத்து விளக்குப்பொழிவாக மாறியிருந்த காலம்… மாடனை அசைவத்தில் இருந்து ஏகதேசம் சைவமாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வேண்டாம்! இதைச் சொல்ல ஆரம்பித்தால் இதுவே பெரிய கதையாகிவிடும். நான் சொல்ல வந்தது.. அப்போதெல்லாம் கும்பாட்டாம் ஆட நெல்லை மாவட்டத்தில் இருந்துதான் பெரும்பாலும் வருவார்கள். விடுமாடன் கோயிலில் முந்தின நாள் இரவே தங்கி, காலை கும்பாட்டக்காரியை யார் முதலில் பார்ப்போம் என்கிற ஒரு போட்டியே எங்கள் நண்பர்கள் குழுமத்தில் உண்டு. அப்போது பதிமூன்று பதினான்கு வயதுதான் இருக்கும். அந்த பதின்பருவமே என் முதல் சிறுகதையாகியது. அதுவே பதினாறு வயது ஆகும்போது கும்பாட்டக்காரிகளை பார்க்கத் தோன்றாது. கண்கள் எங்கள் வயதொத்த பெண்பிள்ளைகளின் பக்கம் திரும்பும். இரவு மாடன் வேட்டைக்குச் செல்லும்போது ஒழுகினசேரியின் சாலைகள் வெறிச்சோடிவிடும். அமைதியான உறக்கத்திலாழ ஆரம்பிக்கும். தப்புமேளம் அடிக்க மாடன் சாமிக்கொண்டாடியுடன் பிரமாணக்குடி படித்துறைக்கு செல்லும்போதுதான் நாங்கள் அறியாமல் ஒழுகினசேரியின் பொந்துகளில் வசிக்கும் அவயான் கூட்டங்களையும் இரவுகளில் எல்லைப் பிரிப்பு போராட்டம் நடத்தும் தெருநாய்களின் போர்க்குணத்தையும் பார்க்க முடியும். திருடர்களும் தன் உடலை விற்றுப் பிழைப்போரும் ஸ்தூலமாய் அழையும் நேரமது. அங்கிருந்துதான் கருளிடை பொழில் மருதுவும், பொந்துவும் எழுத வேண்டியதாயிற்று. 

சுடுகாடும், மயான சுடலையும், பாடையும், சவ ஊர்வலமும், சவக்குழியும் எனக்கு இந்த வாழ்க்கையில் எது நிரந்தரம்? எங்கிற வினாவை கேட்டுக்கொண்டே இருக்கும். மண்டையோட்டின் விழிக்கிடங்குகள்வழி புகையும் கங்கையை எத்தனையோ தடவை வெறித்திருக்கிறேன். இதுக்குதானே எல்லாமே? என்றும் தோன்றுவதுண்டு. இதில்தான் எவ்வளவு ஆட்டம் போடுகிறோம். மயான சுடலையும் எப்போது என்னை சுடுகாட்டில் கண்டாலும் புன்னகைக்க மறப்பதில்லை. அதனாலோ என்னவோ சாவும் துஷ்டி வீட்டையும் மீண்டும் மீண்டும் எழுதவேண்டி இருக்கிறது. 

நாகர்கோயிலுக்கும் நெல்லைக்கும் இடையே பெண் எடுத்தோர், கொடுத்தோர் எனும் பெரும் தொடர்புண்டு. அவ்வழியில் வந்தவன் ஆதலால் என் மொழியில் நாஞ்சிலோடு சேர்ந்து நெல்லைத்தமிழும் கலந்துவிடும். இந்த இரண்டு ஊர்களின் மொழியையும் மனிதர்களையும்தான் அதிகம் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் ஊருக்கு ரயிலிலோ, பேருந்திலோ வரும்போது நெல்லை வந்தாலே ஊரை அடைந்துவிட்ட ஒரு உணர்வே மேலோங்கும். நீர்மாலையின் லெட்சுமணன், வெள்ளையின்  தளவாய் அப்படிப்பட்டவர்கள்.

ஊருக்கு ஒரு குணம் உண்டு. ஒழுகினசேரியின் குணம் அங்கே வாழும் மனிதர்கள், அவ்வூரை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், ஆட்டோக்காரர்கள். அவர்கள் நளியடிப்பார்கள், நொர்நாட்டியம் காட்டுவார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள், பொறாமைப்படுவார்கள். குசும்பு பிடித்தவர்கள். சிலசமயம் குடித்துவிட்டு விடுமாடன் கோயில் நடையில் போதையில் மல்லாந்து தன்னை அறியாமல் ஒன்னுக்கு இருப்பார்கள், பொண்டாட்டியை அடிப்பார்கள், அடுத்தநாளே சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார்கள், ஊர்க்கொடையில் சண்டை போடுவார்கள், மனிதனின் எல்லாச் சிடுக்குகளையும் கொண்டவர்கள். குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு திசைக்கும் ஒரு இசக்கி இருப்பது போலவே ஒழுகினசேரியின் ஒவ்வொரு திசைக்கும் ஒரு டாஸ்மாக் இருக்கிறது. ஐந்திணைகளைப் போல, அங்கே குடியும் குடிசார்ந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். குமரி மாவட்டச் செய்தியிலே கஞ்சா விற்று பிடிப்பட்டவர் இல்லாத செய்தித்துணுக்கு இல்லாத தினசரி நாளிதழ் வருவதேயில்லை. இதில் சரியென்ன? தவறென்ன? என முடிவெடுப்பவன் நானில்லை. ஆனால் அவர்களின் பாவப்பட்ட அம்மைகளை, பொண்டாட்டிகளை நான் அறிவேன். அவர்களில் ஒருவனின், அவனுடைய மனைவியின், பிள்ளைகளின் கதைகளையும் எழுதுகிறேன்.

‘கோம்பை’, வேறு பெயரில் இன்னும் ஒழுகினசேரியில் சுற்றுகிறான். ஐம்பதை நெருங்கிவிட்ட வயது, முகம் கோணாமல் இன்றைக்கும் யார் சொன்னாலும் கடைகளுக்குப்போய் கொடுக்கிறான். ஆனால் இப்போதெல்லாம் மிக நிதானமாக ஒவ்வொன்றையும் செய்கிறான். நாடார் இன்னும் அப்படித்தான் இருக்கிறார், அதுதானே இயல்பே. அங்கே வெற்றிலை வாங்கவரும் எங்கோடியா பிள்ளைக்கோ ஒருபக்க காது கேக்காமல் ஆயாச்சு. இருந்தும் அவருக்காக பொன்னுருக்கு வீடும், கல்யாண வீடும், சாவு வீடும் காத்திருக்கிறது. அவருக்குப் பின்னால் அவரளவுக்குச் சடங்குகள் அறிந்த இன்னொருவர் இல்லை என்பதுதான் சரியாக இருக்கும். சடங்குகளும் அந்தந்த நிலத்திற்குரியவைதான்.

தற்சமயம் நான் பெங்களூருவில் வசிக்கிறேன், இந்த நிலம் இப்போதுதான் எனக்கு நெருக்கமாகிக்கொண்டிருக்கிறது. என்னைப் பெங்களூருவிற்கு இடம்மாற்றம் செய்ய என் மேலதிகாரி சொன்னது, “இந்த ஊரே ஏசில வச்ச மாதிரிதான்”. அவர் சொல்லியது உண்மைதான். ஒருவேளை சென்னையில் இருந்து இடம்மாறியதால்கூட இருக்கலாம். இந்த ஊர் பன்முகத்தன்மை கொண்டது,  இந்தியாவின் ஏகதேச மொழிகளைச் சாதாரணமாக சாலையில் நடக்கும்போது கேட்கலாம். இவ்வூரை மெதுவாக அவதானிக்க ஆரம்பித்து இருக்கிறேன். புறாக்கள் நிறைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு என்னுடையது. என் வீட்டில் பொரித்த புறாக்குஞ்சே சூலியானது. ராம மந்திரத்தின் ராமய்யாவை ஒருவேளை நான் சந்திக்கலாம். கோரமங்களாவிற்கும் எம்.ஜி ரோட்டுக்கும் வார இறுதியில் அடிக்கடி செல்லும் ஒருவனே, ‘அவன்’ கதையில் வரும் சூர்யா. நிதர்சனத்திற்கு மிக நெருக்கமான ஒருவன்.

மருத்துவாழ்மலைக்கும் இமயமலைக்கும் எழுத்தின் மூலம் பயணித்தால் அதுவே ஜின்னும் தாணுவும் சந்திக்கும் ‘விளிம்பானது’. தாழைக்கோழியைப் போல நடையால் மட்டும் வாழும் யோவானின் சடையன்குளம் இன்னும் தாமரையிலை நிறைத்து அவனுக்காகக் காத்திருக்கிறது. நான் எழுதி எழுதி உருவாக்கும் என் நிலம் ஒழுகினசேரி மட்டுமே அல்ல. இன்றைக்கு வெவ்வேறு  நிலங்களை நான் பார்க்கிறேன், எழுதுகிறேன், எழுதுவேன். எனக்கே எனக்கான ஒரு வெளியை மட்டும் உருவாக்கும் ஆசையும் இருக்கிறது. அங்கே மொழிகளால் உலாவ வேண்டும்.

***

வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

தூரம்

0

கவிதைக்காரன் இளங்கோ

காலை வேளை அமைதியாக இருந்தது. வலப்பக்க சுவரில் ஜன்னல் வழியே நுழைந்த வெயில் கம்பியின் நிழல்கோடுகளை அனுமதித்து பரவியிருந்தது. சிறிய வீடு. இரண்டே அறைகள். இளங்குமரனின் மாமா எதிர் சுவரில் முதுகு சாய்த்து தரையில் உட்கார்ந்திருந்தார். ஊரிலிருந்து வந்திருந்தார். ஒரு கோரிக்கை வைத்திருந்தார். சண்முகம் அவரையே பார்த்தபடி பக்கவாட்டு ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். மின்விசிறிய காற்றில் அவருடைய வெண்ணிறச் சட்டையின் கழுத்துப்பட்டை நுனி மென்மையாக ஆடிக்கொண்டிருந்தது.

சண்முகத்தின் மனைவி கிருஷ்ணவேணி கையில் காபி டம்ளரை டபராவில் ஆற்றியபடி சமையலறை வாசலில் நின்றிருந்தாள்.

அவ்வமைதியைச் சரசரக்கச் செய்யும்படி இளங்குமரன் தன்னுடைய பள்ளிக்கூட பைக்குள் திணித்து வைத்திருந்த புத்தகங்களை விரல்முனைகள் ஓட்டி கடைசியாக ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான். கைகளை நுழைத்து தோள்வழியே முதுகில் இடம்பிடித்து கொள்ளும் முதுகுப்பை அது. பள்ளிக்கூடத்திற்கு சுமையோடு நடையாகவே நடந்துபோக ஏதுவாக இருக்கும். எழுந்து நின்று அதை வாகாக மாட்டிக்கொண்டான். அவன் காலில் அணிந்திருந்த கருப்பு நிறத்திலான சீருடைக்காலணியின் முனை புடைத்துக்கொண்டு பளபளத்தது. முடிச்சிடப்பட்டு தொங்கிய கழுத்துப்பட்டியில் இளநீலநிற குறுக்குப்பட்டைகள் வசீகரமாக இருந்தன. அதன் மத்தியில் பள்ளிக்கூடத்தின் இலச்சினை பொறித்த உலோகத்தகடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.

“போயிட்டு வர்றேன் மாமா”

“சரிங்க மருமகனே..”

“வரேன்ப்பா..”

“ரோட்ட பார்த்து நடந்து போப்பா.. ரயில்வே கேட்டை கிராஸ் பண்றப்ப பத்திரம். சொன்னத ஞாபகத்துல வச்சுக்கோ”

அம்மாவிடம் இரண்டு ரூபாயை வாங்கி கால்சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான். பட்பட்டென்று படியிறங்கிப்போகும் காலடிச் சத்தம் தேய்ந்து விலகியது.

“எல்லாமே ஒரு நேரங்காலம்தான் மச்சான். பாம்பேல என்ன ஒரு வாழ்க்கை! எப்படி இருந்தீங்க? நெனைச்சு பாக்கவே முடியல பாருங்க. ஒங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா.. அந்தக் கஷ்டம் என் தங்கச்சிக்கும்தானே. புள்ளைங்க எதிர்காலம்தானே நமக்கு முக்கியம். எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க. கடைய திறந்து அரைமணி நேரம் ஆச்சு. நான் போயாகணும். தீபாவளி சீசன் வேற. கடையாளுங்க எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க குளிச்சிட்டு சாப்பிட்டு பேசிக்கிட்டு இருங்க. ரெஸ்ட் எடுங்க. நான் மத்தியானமா வர்றேன்.”

“சரிங்க மாப்பிள”

“அப்போ சாப்பாட்ட கடைக்கு கொண்டுவர வேண்டாமா?”

மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். ஆமாம் என்பதாகத் தலையசைத்தார். அலமாரியிலிருந்து கைகடிகாரத்தை எடுத்துக் கட்டிக்கொண்டார். அவருடைய மச்சான் பழனி மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார். சண்முகம் வாசலைத் தாண்டும்போது இருவரையும் பொதுவாகப் பார்த்து சொன்னார்.

“வந்து பேசிக்கலாம்”

*

கிருஷ்ணவேணியின் உடன் பிறந்த அண்ணன் பழனி. அவர் கல்யாணம் கட்டியிருப்பது சண்முகத்தின் உடன் பிறந்த தங்கையான சிவசுந்தரியை. இரண்டு குடும்பங்களும் நெருங்கிய ரத்த உறவு. பழனி பம்பாயில் ஒரு பெரிய நூற்பு ஆலையில் நூல் சுற்றுப்பகுதிப் பிரிவில் தலைமை மேற்பார்வையாளராக வேலை பார்த்தவர். அவருக்கு ஆண் ஒன்று பெண் ஒன்றாக இரண்டு குழந்தைகள். தென்தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து பெயர்ந்த அக்குடும்பம் பம்பாயிலேயே வேர்பிடித்து கொஞ்சங்கொஞ்சமாக அடுத்தக் கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருந்தபோது தொழிற்சங்கப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட காலவரையற்ற தொழிற்சாலை முடக்கத்தில் நிரந்தரமாக வேலை போயிற்று. அவருக்கு மட்டுமல்ல, அதனை நம்பி குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்களும் திக்கற்று திகைத்து நிற்கும்படி ஆயிற்று.

சில மாதங்கள் அங்கேயே இருந்து தாக்குப்பிடித்துப் பார்த்த பல குடும்பங்கள் கையிருப்பு குறையக்குறைய தங்களின் சொந்த நிலத்திற்கே திரும்பிவிட்டார்கள்.

அதேபோல பழனியும் தம் குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் போய் சேர்ந்துவிட்டார். அது குலதெய்வமான சுடலையாண்டி சாமியின் வாக்குத்தத்தம் என முடிவுக்கும் வந்துவிட்டார். கடைசி சேமிப்பு காசில் சொந்தமாக சிறுதுண்டு விளைநிலம் ஒன்றை வாங்கி தாமே விவசாயத்திலும் இறங்கிவிட்டார். அது அன்றைய சூழ்நிலையின் துணிச்சலான முதலீடு. அதிலிருந்து முதல் போகம் மகசூலும் கண்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து முதல் லாபத்தின் அடையாளமாக இரண்டு கறவை மாடுகளும் நான்கு வரையாடுகளும் நிற்கின்றன. ஏற்கனவே பூட்டிக்கிடந்த சொந்தவீட்டின் புறவாசலுக்கு அடுத்திருந்த அரைசெண்ட் கூடுதல் இடத்தையும் புதிதாக கிரயம் செய்து அதில் புழங்கிக்கொள்ள ஏதுவாய் அந்நிலைத்தைப் பண்படுத்தப்படுத்தி அவற்றில் சிறுசிறு காய்கறி செடி வகைகளும் அடுத்திருந்த வயலைப் பிரித்து காட்டும்விதமாக மேடேற்றிக் கிடந்த அகன்ற கரையில் ஊன்றி நின்றிருந்த வலுவான வேப்பமரமும் அதனையடுத்து அதே வரிசையில் அருகருகே தாமே முளைத்து கிளைவிரித்திருந்த ஒடைமரங்களுமாக நிழல்பாவிக் கிடந்தது.

ஒடைமரத்தின் காலடியில் அடித்திருக்கும் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும் மேய்ச்சல் ஆடுகள் பழுத்த ஒடங்காயை சாவதானமாக மென்றுகொண்டு பொழுதன்றும் அசமந்தமாக நின்றது நின்றபடி இருக்கும். நாட்டுக்கோழிகளும் சிவந்த கொண்டைச் சேவல்களும் இடப்பக்கம் ஒதுக்கில் சேகரமாகிக் கிடக்கும் குப்பைக்குழிக்குள் இறங்கி அவற்றைக் கிண்டிக்கிளறி இரை உண்டு அவ்வப்போது குரல் எழுப்பி தம் இருப்பையும் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளும்.

பக்கத்திலிருந்த மனைக்கும் பழனி வீட்டுமனைக்கும் இடைவெட்டில் அமைந்த பொதுவழிப் பாதையின் முடிவில் அதே புறவாசலின் பிரிவில் ஊராட்சி மன்றம் போட்டுக்கொடுத்த பொது குடிதண்ணீர் அடிகுழாய் ஒன்றும் உண்டு. வட்டவடிவில் அகலமான சிமிண்ட் திண்டு ஒன்று செம்மண் தரையிலிருந்து அரையடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு அதனுள்ளேதான் நடுநாயகமாக அந்த அடிகுழாய் உட்கார்ந்திருந்தது. இரண்டடிக்கு நீண்டு உயர்ந்த உலோக உடலும் அதன் தலைப்பகுதியில் சப்பையாக சேர்த்துவைத்து அறைந்தது போன்ற மண்டையுமாக.. அதன் பின்மண்டையிலிருந்து வெளியே நீண்டிருக்கும் மூன்றடி நீள கைப்பிடியும் பார்ப்பதற்கு வேற்றுகிரகப் பிராணி போல ஓர் அப்பிராணித் தோற்றத்தை ஏற்படுத்தியது.

இருபத்திநாலு மணிநேரமும் அதில் தண்ணீர் வரத்து இருந்தது. ஒரே அமுக்கில் குபுகுபுவென்று தண்ணீர் பொங்கிக்கொண்டு அதன் வாயிலிருந்து வழியும். அவ்விடம் சிறுவர்களின் விளையாட்டுத் தளமாகவும் அந்த அடிகுழாய் சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாகவும் ஆகிப்போனது. கடும் வெயிலுக்கு ஈடாக எப்போதும் அவ்விடம் ஒரு குளிர்ச்சியை தக்க வைத்திருந்தது. அதனால் அருகில் நிற்கின்ற வேம்புக்கும் ஒடை மரங்களுக்கும் சிறு செடிகளுக்கும் எப்போதும் நல்ல செழிப்புத்தான். எந்தக் கோடையிலும் அவற்றின் தாகம் தீர்ந்திடாத நீர்வளம் அச்செம்மண்ணில் இருந்தது.

விஷயம் இதுதான்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பியிருந்தாலும் பழனிக்கு பழைய செல்வாக்கு குறைந்தபாடில்லை. ஏற்கனவே நல்ல மனிதர் என்று பெயர்பெற்ற பொறுப்பான ஒரு சம்சாரி அவர். அன்றைய பி.யூ.ஸி முடித்தவர். பண்பான ஆள். அதுவும் இப்படி பம்பாயில் ஒரு வாழ்க்கை வாழ்ந்து திரும்பியிருப்பது வேறுவிதமான மரியாதையாகவும் உயர்ந்திருந்தது. அதற்கு காரணம் வந்த வேகத்தில் விளைநிலம் ஒன்றை வாங்கி தானே களம் இறங்கி விவசாயத்தைத் தொடங்கியதுதான். கூடவே சொந்த வீட்டை மேம்படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் வீட்டின் அளவைப் பெரிது பண்ணிக்கொண்டது. மதிப்பும் மதிப்பீடுகளும் பொருளாதாரம் சார்ந்தவை என்றாலும் கூட.. அவற்றுக்கு ஓர் அர்த்தம் கிடைப்பது எப்போதென்றால் நாம் செய்கின்ற செயல்களை வைத்துதான் என்பதை பழனி நன்கு அறிந்து வைத்திருந்தார். தொழில் நிமித்தம் குடும்பத்தையும் தம்மோடு இழுத்துக்கொண்டு அலைய நேருகின்ற ஊர்சுற்றிகளின் அனுபவம் அது. அந்த வகையில் மெட்ராஸில் இருக்கும் தன்னுடைய தங்கை மாப்பிள்ளையான சண்முகம் அவருக்கு ஆகச் சிறந்த ஒரு முன்னோடி.

அதனாலேயே பெரும்பட்டணத்தைப் பார்த்த அனுபவசாலி என்கிற கூடுதல் அபிப்பிராயமும் பழனிக்கு சேர்ந்துகொண்டது. பம்பாயில் வேலைசெய்த நூற்பாலையின் தொழிற்சங்கம் சார்ந்த சாகசக் கதைகளை மாலை வேளைகளில் கடைத்தெருவில் சிகரெட் பிடித்தபடி சகாக்களிடம் மையக்கருத்தாக்கி அதில் இருந்த தம் சொந்த அரசியல் பார்வையையும் முன்வைத்து பேசுவதுவரை அவருக்கு என்று ஒரு மாற்றத்தையும் பொலிவையும் அச்சூழல் தந்திருந்தது.

அச்சமயத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்றத்தில் சுழற்சி முறை தேர்தல் வரவிருந்தது. ஏற்கனவே இருந்த ஐந்தாண்டுகள் முடிந்து அடுத்த ஐந்தாண்டுக்கான ஊராட்சிமன்றத் தேர்தல் அது. அந்த ஊரைப் பொருத்தவரையில் இதுநாள்வரை ஊராட்சி மன்றத்தலைவரும் உறுப்பினர்களும் மட்டுமேயிருந்து வேலைகள் நடந்துவந்த நிலையில், பழனி ஊர் திரும்பிய ராசியோ என்னவோ புதிதாக துணைத்தலைவர் பதவியும் இம்முறை போட்டிக்காக இணைக்கப்பட்டுள்ளது. மன்றத்தேவையைக் கருதி அது போனவருடமே கோரிக்கையில் வைக்கப்பட்டிருந்த ஓர் அம்சம்தான். கடந்த ஐந்து வருடங்களில் ஒதுக்கப்பட்ட நிதிக்குள் ஊரின் முக்கியமான அத்தியாவசியங்கள் திறம்பட நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருந்த நிர்வாகத் திறனையும் ஒட்டி, கடந்த அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி நாளில் கூட்டப்பட்டிருந்த நான்காவது கூட்டத்தில் இக்கோரிக்கையும் மாவட்ட ஆய்வாளர் முன்பு மனுவாக இணைத்துச் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேவேளை மன்றத்தின் தேர்தலும் பதவி பொறுப்பும் அரசாங்கம் சம்பந்தப்பட்டது என்றாலும் அது கட்சி அரசியலுக்கு கீழ் நேரடியாக வருவதில்லை. ஆனால் பதவியில் இருப்பவர்கள்மீது எப்போதுமே கட்சிக்காரர்களின் ஒரு கண் இருந்துவரும். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரிதான் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரிதான். ஊர் சேவைகளுக்கு தோதான ஆளைப் பற்றிய தகவல்கள் மட்டும் எப்போதுமே மேலிடத்திற்கு சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்துவிடும்.

ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவர் பதவி என்பது மன்றத்துக்குள் கூடிக்கொண்டே போகிற வேலைப்பளுவை சற்றுக் குறைத்துக்கொண்டு பிரித்தாள அத்தியாவசியமானதும்தான் என்பதை மன்ற உறுப்பினர்களும் உணர்ந்திருந்த வேளை பழனியின் மறுவருகை காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயிற்று. பதவி, பொறுப்பு என்று வரும்போது அதுமட்டுமே போதாது அல்லவா? அவருடைய நாணயமான குணமும் ஊர் மக்களுக்கு மத்தியில் இருந்த நற்பெயரும் நல்லது கெட்டதுகளுக்கு தயங்காமல் முன்வந்து நிற்கும் துணிவும் கூடுதல் காரணமாயிற்று. அதனை அவர் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். அவரைப் பொருத்தவரை அதுமட்டுமே காரணம் அல்ல.

அதாவது வருடாவருடம் ஊரில் நடக்கும் கோயில் கொடையில் அக்குடும்பத்திற்கு என்று ஒரு முக்கியத்துவம் காலாகாலமாக உள்ளது. அது ஓர் எழுதிவைக்கப்படாத சட்டமும் கூட. சுடலையாண்டி சாமியின் கோயிலுக்கு என்று நேர்ந்துவிடப்படுகிற கருப்பு கிடாய் பழனியின் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட சிவசுந்தரியின் பிறந்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிற உரிமைகளில் ஒன்று. அப்படி.. சிவசுந்தரியின் உடன்பிறந்த சகோதரனான சண்முகம் குடும்பத்தின் பெயர் சொல்லும்படியாக அவர்கள் வீட்டுக் கருப்புக்கிடாதான் சாமிக்கு முன்னுள்ள பிரதான பீடத்தில் முதன்மையாக பலியிட உரிமை உள்ள ஊர் கிடா. அந்தக் கிடா வெட்டை சாமி ஏற்றுக்கொண்ட பிறகே அடுத்தடுத்த கிடாக்கள் அங்கங்கேயே அவரவர் வசதிக்கேற்ப பலியிடப்படும். அக்குடும்பத்தின் ரத்தப்பந்தங்கள் ஊரில் இல்லாவிட்டாலும் ஆண்டாண்டு காலமாக எத்தனை தலைமுறை மாறினாலும் இந்த வழக்கம் மட்டும் மாறுவதில்லை. அதற்கான பணத்தை அனுப்பிவைத்து சாமிக்கு கிடா வாங்கிவிடப்பட்டு கோயில் நிர்வாகிகளின் மேற்பார்வையில் சம்பளத்திற்கு ஓர் ஊழியன் அமர்த்தப்பட்டு அந்தச் சாமிக்கிடா கவனமாக பரமாரிக்கப்படும். இப்போது பழனியின் குடும்பம் ஊர்திரும்பிய நிலையில் சாமிக்கான கருப்பு கிடாக்குட்டி அவருடைய வீட்டில் எப்போதோ வளரத் தொடங்கிவிட்டது.

இந்தக் கோயில் கொடையும் குடும்ப உரிமையும் ஊராட்சி மன்ற பொறுப்புகளும் எந்தெந்த புள்ளிகளில் இணைகின்ற வாய்ப்பைக் கொண்டுள்ளன என்கிற ஒரு கணக்கு அவரிடம் இருந்தது. மனதுக்குள் ரொம்ப காலமாகக் கிடக்கும் அந்த முக்கியமான விஷயத்தை அவர் தம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார். ஆனால் முன்னதாக குடும்பத்திற்குள்ளேயே ஒரு ரகசிய வெள்ளோட்டம் விட்டுப்பார்ப்பது அவசியம் என்று அவருக்குப் பட்டது. எதையும் பரீட்சித்து சோதிக்காமல் முடிவுகள் எடுக்கத் தோதுபட்டு வராது என்பதில் எப்போதும் தீர்மானமாக இருந்தார் பழனி.

பழனியைப் பொருத்தவரையில் துணைத்தலைவராகத் தேர்வாகிவிட்டால் பதவியில் உட்கார்ந்த வேகத்தில் இறங்கிச் சில ஊர் வேலைகளை துணிந்து செய்துவிட வேண்டும். அதற்கு சொந்தப்பணம் கையிலிருந்தால்தான் சரிப்பட்டுவரும். அலுவல் சார்ந்த முறையான வைப்பு, பற்று கணக்கெல்லாம் பின்னர் அதில் சமன் ஆகிவிடும். அதனால் பொருளாதார வலு ஒன்று தனிச்சேமிப்பில் இருப்பது அவசியம் என்பதை அறிந்து வைத்திருந்தார். ஆனால் தற்சமயம் கையிருப்பு போதுமானதாக இல்லை. அதனாலும் பழனிக்கு தன் வீட்டில் பலமான எதிர்ப்பு இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சிவசுந்தரி கரித்துக்கொட்டத் தொடங்கிவிட்டாள்.

“அத்தாம் பெரிய பட்டணத்துல நெலைச்சு நிக்க வக்கில்ல. மொத்தமா மூட்டைய கட்டிக்கிட்டு வந்து நிக்கறது காணலயாக்கும். பொட்டப்புள்ள இப்பத்தான் யென் இடுப்ப வுட்டே எறங்கியிருக்கு. இந்தாங்கறதுக்குள்ள ஊரு பய வேலைய எல்லாம் தல மேல தூக்கி வச்சிக்கிட்டு காடு கம்மான்னு திரியறதுக்கு அய்யா பிளானு போட்டாச்சி.. பாம்பேலயும் இதே கததான்.. பதவி பவுசு இல்லாட்டி குண்டி ஓரெடத்துல ஒக்காறாதோ.. சும்மா வுடமாட்டன் பாத்துக்கங்க.. மெட்ராஸூல இருக்கற எங்கண்ணனுக்கு லெட்டரு எழுதி போட்டாதேன் நீங்க ஒழுங்குபட்டு வருவீங்க”

“ஏய் யெதுக்கு இப்ப ச்சலம்புத?”

“ஆமா.. மறுவாட்டியும் இங்கன வந்து சாணிய மொழுவ வுட்டுட்டு.. பேச்சுக்கு ஒன்னுங் கொறச்ச இல்ல.. மட்டுமதியா கஞ்சிய குடிச்சுபுட்டு வயலுக்கு ஓடுங்க.. கையோட கறவைய அவுத்துக்கிட்டு மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போங்க.. அந்தி சாய ஏரியில எறக்கி குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்க.. மூத்தவன ஸ்கூலு வுட்டு வந்ததும் கூடமாட ஒத்தாசைக்கி அனுப்பி வக்குதேன். அவனும் இப்பயே எல்லாம் பழகிறட்டும். பெறவு.. நாளும் கெழமையும் சீரழிஞ்சு போச்சுன்னா கஷ்ட நஷ்டத்துக்கு உருப்படறதுக்கு ஒருவழியாச்சும் கெடக்கும். கையேந்தி திரிய வேணாம்லா.. எம்புள்ளைகள அப்புடி காண எனக்கு ஏலாது.. கட் அண்டு ரைட்டா சொல்லிப்புட்டேன்”

“யேய்.. செவசு அவம் படிக்கட்டும்டி.. மாடு மசுருன்னு சும்மா நச்சி நச்சின்னுங்க?”

“ஓமா.. நச்சிக்கறாங்க.. அப்டியே வுட்டா பொலி காளையா காடு மேடுன்னு டவுசர கிழிச்சிக்கிட்டு லொம்பப்பட்டு அலையறதுக்கு.. பெறவு.. பஜாரு பக்கம் போயி பழகிட்டானா.. சேக்காளிங்க கூட்டுல கெட்டழிஞ்சு போவ நான் வுடமாட்டேன்.. கருவேப்புல கணக்கா ஒத்த புள்ள என் மவன்.. நீங்க என்னமும் பண்ணித்தொலைங்க.. சாயந்தரம் காட்டுலருந்து வாரப்ப.. புள்ளைய வூட்டுல வுட்டுட்டு.. பெறவு உங்க சிநேகிதக்காரங்கள போயி கொஞ்சிக்கிறலாம். இது சுடலயாண்டி மேல ஆண”

‘ச்சு.. சாமிய வேற இழுப்பா’

தனக்குள் முனகிக்கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு புறவாசலுக்குப் போய்விட்டார். கருப்பு நிறத்தில் பருத்துப்போய் நன்றாகக் கொழுத்துக் கிடந்த சாமி கிடா அடிகுழாய்க்கு அருகே மணலில் சரிந்து படுத்துக்கொண்டு இவரையே பார்த்துக்கொண்டு இருந்தது.

பழனிக்கு வேறு ஒரு யோசனை வந்துவிட்டிருந்தது.

*

அந்த வாரக்கடைசியில் மாலையில் நெல்லை விரைவு ரயிலில் மெட்ராஸூக்கு வண்டி ஏறிவிட்டார். எந்த விவகாரமும் நேரில் உட்கார்ந்து பேசுவதைப்போல வராது என்பது அவருடைய அபிப்பிராயம். ஆனால் அவர் போய்சேரும் முன்னே சிவசுந்தரியின் இன்லாண்ட் கடிதம் ஒன்று சண்முகத்தின் கடை முகவரிக்கு சனிக்கிழமை மதியமே போய் சேர்ந்துவிட்டது. உடன் பிறந்த அண்ணனுக்கு தன் மனக்கஷ்டத்தையும் புலம்பலையும் அங்கலாய்ப்பையும் நுணுக்கி நுணுக்கி எழுதி தீர்த்துவிட்டிருந்தாள்.

சண்முகத்திற்கோ மச்சானின்மீது நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. பம்பாயில் பழனி தம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சில முயற்சிகள் பாழ்பட்டுப்போன நிலையில் ஒரு மனிதன் என்னென்ன அவதிகளுக்கு ஆளாகிறான் என்பதை ஏற்கனவே அவர் நன்கு உணர்ந்திருந்தார். பொதுவாகவே அனைத்து நல்லது கெட்டதுகளுக்கும் யோசனைகளுக்கும் அவர்களிடையே சுமூகமான கடிதப்போக்குவரத்து உண்டு. உறவுகளை ரத்தப்பந்தங்களை ஊர் சொந்தங்களை இணைத்துக் கொள்ளும் பாலமாக அக்கடிதங்கள் மட்டுமே எப்போதும் இருந்து வந்தன.

இந்த விஷயத்திலோ இரண்டு பக்கமும் சொந்தம் என்பதால் சற்று கூடுதல் நிதானத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் சண்முகத்திற்கு இருந்தது. அதுவேதான் பழனிக்கும்.

இரு பெண்களின் மனமும் மௌனமும் உரிமை என்கிற அளவுகோலுக்குள் பாதரசம் போல அங்குமிங்கும் சப்தமின்றி உருண்டு கொண்டிருந்தன. அதனை சண்முகமும் பழனியும் அறியாமல் இல்லை.

சண்முகம் மதிய சாப்பாட்டிற்கு வரும்முன்பே ஒரு குட்டி தூக்கத்தைப் போட்டு விடுவது என நினைத்துக் கொண்டார் பழனி.

*

ரயில்பாதையின் தடுப்புவாயில் அடைப்பட்டிருந்தது. தடுப்புவாயிலுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் வாகனங்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிரம்பி வழிந்தன. இரும்புக் குழாய்களை பாரம் ஏற்றிக்கொண்ட மாட்டுவண்டிகள் ஒன்றிரண்டு காத்திருந்தன. அதனை ஓட்டி வந்தவர்கள் கதையளந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த வண்டிமாடுகள் வாயில் நுரைத்தள்ள தம்மை சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு வால் சுழற்றியபடி நின்றிருந்தன. அவர்களைத் தவிர்த்து மற்ற எல்லா மனித முகத்திலும் காலைநேர அலுவலகத் தாமதத்தின் எரிச்சல் ஒன்று கறுத்துப்போய் இருண்டு கிடந்தது. சரக்கு ரயில்வண்டி ஒன்று ரொம்ப நேரமாக பச்சை அனுமதி கிடைக்காமல் குறுக்கே நின்று கொண்டிருந்தது.

வழக்கத்தின் வழக்கமாக ரயில்பாதையின் தடுப்புவாயிலுக்கு பக்கவாட்டில் இருசக்கர மிதிவண்டிகள் நுழையும் அளவுக்கான குறுகல் வழிக்குள் நுழைந்துவிட்ட இளங்குமரன் அகன்ற தண்டவாளங்களைத் தாண்டிச்சென்று கூட்டத்தோடு கூட்டமாக அந்த ரயில்வண்டி முன்பு வந்து நின்றுகொண்டான். அது அவன் முன்னே சிகப்புநிறச் சுவர்போல உயர்ந்து பிரம்மாண்டமாக இருந்தது. அவனைப்போலவே வேறுசில பள்ளிக்கூடப் பையன்களும் நின்றிருந்தான்கள். வேலைக்குப் போகின்ற சிலர் சைக்கிளுடன் நின்றிருந்தனர். மூதாட்டி ஒருத்தியின் தலையில் சுமையாக உட்கார்ந்திருந்த அகன்ற மூங்கில் கூடையில் வேர்க்கடலைகள் நிரம்பியிருந்தன. வெயில் ஏகத்திற்கு கசகசத்தது. சரக்கு ரயில்வண்டி கிழக்கு மேற்காக இருபக்கமும் நீண்டிருந்தது. அதன் தலையையும் காணவில்லை. வாலையும் காணவில்லை. அதுவோர் உலோக மலைப்பாம்பு.

சிலர் பெட்டிகளின் இணைப்பு இடைவெளிக்குள் தாவி ஏறி மறுபுறம் குதித்து ஓடினார்கள். இளங்குமரனுக்கு அவர்கள் எப்போதுமே சாகசக்காரர்களாகத் தென்பட்டார்கள். இன்னும் சிலர் ரயில்பெட்டியின் அடிப்பாகத்தின் கீழ்வழியே குனிந்து தவழ்ந்து மறுபுறம் போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஓர் உச்ச சாதனையாளர்கள். நாமும் ஏறிக்குதிப்பதா? அடியில் நுழைந்து வெளியேறுவதா? என எப்போதுமே குழம்பி நிற்பான் அவன். ஒவ்வொருமுறையும் அதை யோசிப்பான். ஆனால் பெரிய பெரிய இரும்புச் சக்கரங்களைப் பார்க்கப்பார்க்க அச்சமாக இருக்கும். கூடவே சேர்ந்துகொண்டு அப்பாவின் எச்சரிக்கைக்குரலும் மனதுக்குள் வந்துவிடும்.

இளங்குமரன் யோசித்தான். கதை சுத்தமாகக் கெட்டது. பள்ளிக்கூடத்திற்கு தாமதமாகிவிடும். எப்படியும் பிரதான வாயிலில் கறாராக நிற்க வைத்துவிடுவார்கள். அங்கே போய்ச்சேர்ந்துவிட்டால் பின்வாங்கி வேறு எங்கும் போகவும் முடியாது. வாயிற் காவலாளிதான் அதற்கு பொறுப்பு. சிலசமயம் உடனடியாக பிரம்படி அனுமதியோடு உள்ளே வகுப்பறை நோக்கி ஓடவேண்டும். பல சமயங்களில் அந்தப் பிரம்படியை வாங்கக்கூட கால்கடுக்கக் காத்திருக்க வேண்டும். அந்தப் பிரம்படியை உடற்பயிற்சி வாத்தியார் இன்பசேகரன்தான் வழங்குவார். ஆறடி உயரமுள்ள திடகாத்திரமான மனிதர் அவர். அவரைப் பார்த்தாலே எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும். வீட்டிற்கும் திரும்பிப்போக முடியாது. பழனி மாமா வேறு ஊரிலிருந்து வந்திருக்கிறார். இளங்குமரனுக்கு இப்போதே லேசாக வயிறு கலங்கத் தொடங்கியது.

திடீரென ரயில்வண்டி சிறிய குலுக்கலுடன் முன்னகர்ந்து சில அடிகள் போய் நின்றுவிட்டது. அப்போது அத்தனைப் பெட்டிகளின் இணைப்புகளும் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் ஒரு கிடுகிடுக்கும் உலோக ஒலியை எழுப்பின. அவ்வொலி கண்ணுக்குத் தெரியாத ரயில்வண்டியின் வால்பகுதியில் தொடங்கி அப்படியே ஒவ்வொரு பெட்டியாக கடந்துவந்து முதன்மை எந்திரப்பெட்டியை நோக்கிப் போயிற்று.

ஒவ்வொரு முறையும் நெஞ்சு அதிரும் வேகத்தில் அவ்வொலி அப்படிக் கடந்துபோகும்போது பயங்கர திகிலாக இருக்கும். அப்போது ஓவென மனிதக் கூக்குரல்கள் ஒருமித்து அலையென எழும். அவ்வேளை யாராவது பெட்டி இணைப்பின் இடைவெளிக்குள் ஏறி நின்றிருந்தால் அவர்கள் உஷாராகிக்கொள்ள வேண்டும் என்பதற்கான சமிக்ஞை அது. அதிலேயே பயத்தில் மாட்டிக்கொண்டு அப்படியே பல்லி மாதிரி உயிரைக் கையில் பிடித்தபடி அங்கேயே வேறுவழியின்றி ஒட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தம்வரை பயணித்த தீரர்கள் எல்லாம் உண்டு. பொதுவாக, சரக்கு ரயில்வண்டிகளின் அடுத்த நிறுத்தம் எது என்பதை ஆண்டவன்தான் அறிவான். கும்மிடிபூண்டி வரை போய் அங்கிருந்து பேருந்து பிடித்து வந்துசேர்ந்தவர்கள் கதை எல்லாம் உண்டு. இதை எல்லாம் கேட்டு வளர்கிறவன்தான் இளங்குமரன்.

அன்றைய தினமும் அப்படி ஒருவர் மாட்டிக்கொண்டார். நண்பர்களிடம் சொல்லுவதற்கு ஒரு சம்பவம் கிடைத்ததே என்று இளங்குமரன் நினைத்துக்கொண்டான். அந்த அண்ணன் பேந்தபேந்த முழித்தபடி அச்சத்துடன் எட்டிப்பார்த்தது தெரிந்தது. குலுங்கி நகரத்தொடங்கிய ரயில்வண்டி நிற்கவேயில்லை. அது மெல்ல வேகமெடுத்துவிட்டது.

இளங்குமரன் தன் கண்முன்னே கடந்துபோகின்ற பெட்டிகளை எண்ணிக்கொண்டிருந்தான். அவன் எண்ணியவரை மட்டுமே இருபத்தி நாலு பெட்டிகள். துறைமுகத்தில் இருந்து நிலக்கரித்துண்டங்களையும் துகள்களையும் டன் கணக்கில் சுமந்துபோகிறது இந்த ரயில்வண்டி. அதன் கடைசி பெட்டி விலகியபோது அவனும் அவனைப்போன்ற பிற பள்ளிக்கூட மாணவர்களும் அதிலிருந்த வெள்ளுடை மனிதருக்கு உற்சாகமாக கைக்காட்டினார்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி கையசைத்தார். அவருடைய மறுகையில் சுருட்டி வைக்கப்பட்ட சிகப்பு மற்றும் பச்சைக்கொடி இருந்தது.

“ஸார்..! ஒருத்தன் நடுவுல மாட்டிக்கிட்டான் ஸார்…”

யாரோ கத்தினார்கள். அது அவருக்குக் கேட்டதா என்று தெரியவில்லை. அந்தக் கடைசிப்பெட்டி ஒரு சிறிய அறை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் இளங்குமரனுக்கு அதில் பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

ரயில்பாதையின் தடுப்புவாயில் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் அந்த ரயில்வண்டி கடந்துபோனதும், அதுவரை துடிப்புடன் இரண்டு பக்கமும் தயாராக நின்றிருந்தவர்கள் போர் வீரர்களைப்போல எதிர்கொண்டார்கள். இளங்குமரனும் மற்ற சிறுவர்களும் லாகவமாக ஓரம் ஒதுங்கி தண்டவாளங்களுக்கு நடுவே குதித்து இறங்கி ஏறி வளைந்துபோய் சிதறிய கூட்டத்தை ஊடுருவி மறுபக்கத்தினை அடைந்து தடுப்புவாயிலுக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய வழிக்குள் நுழைந்து வெளியேறினார்கள். எல்லாமே தள்ளுமுள்ளுதான்.

அப்படிப் போராடி நடைபாதையில் நடக்க நடக்க.. வலதுபக்கம் ஸ்டான்லி மருத்துவமனையும் இடதுபக்கம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் அரண் அமைத்து வந்தன. இரண்டு கட்டிடங்களுக்கும் நடுவே இப்படி ஓர் அகன்ற பாதையும் அதன் நீட்சியாக ஒரு ரயில்பாதைக்குரிய தடுப்புவாயிலும் இருக்கின்றன. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் இப்பாதைத்தான் தெற்குதிசையில் இருக்கின்ற மெட்ராஸின் பிரபலமான பிராட்வேயையும் ரயில்பாதையின் தடுப்புவாயிலைத் தாண்டி வடக்குத்திசையில் இருக்கின்ற பழைய வண்ணாரப்பேட்டையையும் இணைக்கின்றது.

மருத்துவக்கல்லூரியின் மதில் சுவர் முடியுமிடத்தில் சிறிய கும்பல் ஒன்று குறுக்கில் வெட்டின முட்டை வடிவில் நின்றபடி எதையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதனைச் சமீபித்தபோது ஆர்வத்தோடு இளங்குமரனும் அதனுள் எட்டிப்பார்த்தான். பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை விடப்போவதாக சொல்லிக்கொண்டு ஒரு மோடிமஸ்தான் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். பெரிய தலைப்பாகை கட்டியிருந்தான். அந்தத் தலைப்பாகைக்குள் அவனுடைய தலை புதைந்ததைப்போலக் காணப்பட்டது. தன் கண்களைச் சுற்றி அடர்ந்த கண் மை பூசியிருந்தான். இடது கையில் துண்டுத்துண்டாக நிறைய கருப்புநிறக் கயிறுகளையும் சிகப்புநிறக் கயிறுகளையும் தொங்கவிட்டிருந்தான். விதவிதமான சிறிய கண்ணாடிக்குடுவைகளில் என்னென்னவோ மருந்துவகைகள் இருந்தன. சிலதில் சிகப்பு, பச்சைநிற எண்ணெய்கள், சிலதில் வேர்கள் என்று கலவையாக ஒரு கடையையும் பரப்பி விரித்திருந்தான்.

அவனுக்கு முன்பாக சற்றுதள்ளி தட்டையாக தட்டுவடிவில் இருந்த ஓர் அகன்ற மூங்கில் கூடை மூடப்பட்டு இருந்தது. அதன் மூடி லேசாக அவ்வப்போது அசைந்தபடியும் இருந்தது. எல்லோரின் பார்வையும் அதில்தான் ஊன்றியிருந்தது. மோடிமஸ்தான் தன்னருகே தரையில் ஒரு மகுடியைக் கிடத்தி வைத்திருந்தான். கீரிப்பிள்ளையை சுவரோடு புதைந்திருந்த ஒரு இரும்புக்கம்பியில் கயிறுகொண்டு கட்டிவைத்திருந்தான். அதுவோ கயிறின் நீளத்திற்கேற்ப வகுக்கப்பட்ட எல்கைக்குள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. கூட்டத்தைப் பார்த்து பதற்றமாகவே இருந்தது. இளங்குமரனுக்கு இதில் ஆர்வம் அதிகமாயிற்று. அவ்வப்போது அவனுடைய பார்வை மகுடியின்மீது நிலைத்துவிட்டு மூங்கில் தட்டிற்குத் திரும்பியபடி இருந்தது.

ஏதேதோ பேசிக்கொண்டே இருந்த அந்த மோடிமஸ்தான் திடீரென தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு சுற்றிலும் நின்றிருந்த எல்லோரையும் ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்தான். கூட்டத்தில் இளங்குமரனின் வயதையொத்த வேறுசில சிறுவர்களும் அச்சத்துடன் கைக்கட்டிக்கொண்டு சிலை போல ஆடாமல் அசையாமல் நின்றிருந்தான்கள். மோடிமஸ்தானுடைய பார்வை கூர்மையாக இருந்தது. அவன் இளங்குமரனை சற்றுநேரம் உற்றுப் பார்த்தவன் மெல்ல அவனை நோக்கி கைநீட்டிச் சொன்னான்.

“தம்பி.. நீ கெளம்பு..”

சொல்லிவைத்தது மாதிரி மற்ற எல்லோரும் இளங்குமரனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஸ்கூலு லேட்டு ஆச்சுங்க.. எப்படியும் உள்ள வுட மாட்டாங்க. நான் பாம்பு சண்ட பாத்துட்டு போறேனே”

“அதில்ல தம்பி.. நீ நிக்கக்கூடாது.. பாம்பு பேஜார் ஆவுது. ஒனக்கு புரியாது. கெளம்பு.. ஜல்தி ஜாவ்”

அங்கிருந்து நகர்ந்து போக மனமே இல்லாமல் அந்தக் கீரிப்பிள்ளையைப் பார்த்தபடியே கூட்டத்தைவிட்டு விலகி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தான்.

‘என்னை மட்டும் ஏன் அந்த ஆளு அனுப்புச்சாரு? வேற சின்ன பசங்கலாம் இருந்தானுங்களே?’

அவன் நினைப்பில் இன்பசேகரன் வாத்தியார் கையில் பிரம்புடன் வந்து நின்றார்.

*

“தொழிற்சாலை லாக்அவுட் முடிஞ்சுதுனா.. திருப்பி பாம்பே போற ஐடியா சுத்தமா இல்லையா மச்சான்?”

“ஆமா மாப்பிள.. எப்பயும் அடுத்தவனுக்கே வேலப் பாத்து பாத்து மனசு அத்துட்டு.. இங்கனயே காலத்த ஓட்டுறது நல்லதுன்னு ஒரு தீர்மானத்த பண்ணிபுட்டேன்”

“அவசரப்பட்டுட்டீங்களோன்னு நெனைக்கிறேன்.. சிட்டி வாழ்க்கையில நாளைக்கு பிள்ளைங்க எதிர்காலம் நல்லா இருக்குமே. நல்ல படிப்பு, பழக்க வழக்கம்னு கொஞ்சம் மாறிக்குவாங்களே..”

“கடன் வாங்குற நெலம வாறதுக்கு முங்கூட்டி கெளம்பிறணும்னு இருந்துச்சி பாத்துக்கோங்க. அது நல்லதுலா?”

சொல்லிவிட்டு சிறுபுன்னகை புரிந்தார். கிருஷ்ணவேணி பழனியின் தட்டில் மேலும் ஓர் அவித்த முட்டையை வைத்துவிட்டு சண்முகத்தின் தட்டிலிருந்த சுடுசாதத்தில் ரசத்தை ஊற்றினாள். பிறகு இருவரின் பேச்சையும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தாள்.

“இங்க மெட்ராஸ்ல எதுவும் ட்ரை பண்ணனும்னு தோனலையா? நான் ஹெல்ப் பண்றேன்”

“ஊஹூம்.. அப்படியொன்னும் தோனல மாப்பிள”

மீண்டும் சிறு அமைதி.

“ம்ம்.. சரிதான். ஒங்களுக்கு தெரியாத விபரமும் இல்ல.. எப்படியும் விவசாயத்துக்குள்ள கால வச்சாச்சு.. அது ஓகே.. ஆனா.. இந்த அரசியல் வேணுமா? சிவசு லெட்டர் எழுதிட்டாங்கறதுக்காக கேக்கல.. நம்ம குடும்பத்துக்கு அது ஒத்துவரும்னு எனக்கும் படல..”

“நான்.. எந்தக்கட்சிய சார்ந்தும் வேலபாக்க மாட்டேன்.. எனக்கு அதுல சுத்தமா நாட்டமில்ல. ஆனா ஊரோட நல்ல காரியங்கள கொஞ்சம் முன்னே நின்னு பாத்துக்கிட்டா எதிர்காலத்துக்கு ஒதவும். அதயே ஒரு பதவிய ஏத்துக்கிட்டு செஞ்சோம்னா.. நல்ல மதிப்பு பாத்துக்கோங்க.. ஆல்ரெடி.. வருஷா வருஷம் கொடைக்கி சொந்த ஊருல இல்லையேன்னு ஒரு ஏக்கமும் இருந்துச்சி.. வந்து சேர்ந்துடுன்னு சுடலையாண்டியே கெனாவுல வந்து கட்டள போட்டிருச்சி.. தட்ட முடியல.. நெலமையும் அந்த போக்குலதான கொண்டாந்து நிப்பாட்டியிருக்கு..”

“ஏண்ணே.! இதோ நாங்க இங்கேயே இல்லையா? பாசம் விட்டுப்போச்சா? இல்ல சாமி மேல மதிப்பு மாறிப்போச்சா? எல்லாத்துக்கும் மனசுதான் கராணம். நம்ம புள்ளைங்க எதிர்காலத்த மனசுல வச்சிதான் அத்தான் பேசுறாங்க”

பேச்சுக்கு நடுவே புகுந்து தன்னுடைய அபிப்பிராயத்தையும் உள்ளது உள்ளபடியே தன் அண்ணனிடம் சொன்னாள் கிருஷ்ணவேணி.

“அதில்லம்மா.. ஒங்க கத வேற”

“என்ன கத? எல்லாம் ஒன்னுதாண்ணே”

“சாமி வாக்கும்மா.. அதுமட்டுமில்ல.. சொந்த நெலத்துல விவசாயம் பாக்குதேனே.. இப்ப எனக்கு ஒரு நிம்மதி இருக்குலா.. அதுதான முக்கியம்?”

இதற்கு சண்முகத்தாலும் எதிர் பதில் ஒப்ப முடியவில்லை. உரையாடல் பட்டென்று நின்றுவிட்டது போல இருந்தது. இருவருமே சாப்பாட்டில் மும்முரம் காட்டினார்கள். முடிந்ததும் எழுந்து கை கழுவிவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். உணவுப் பாத்திரங்கள் அத்தனையும் சமையல்கட்டிற்குள் திரும்பியது. கிருஷ்ணவேணி சமையல் உள்ளில் உட்கார்ந்து தன் உணவை அங்கேயே சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து மீண்டும் தொடங்கிவிட்ட பேச்சில் கலந்துகொண்டாள்.

“சரியான பண முடை மாப்பிள.. இப்ப தந்து ஒதவுங்க. அடுத்த அறுப்புல திருப்பிருவேன். ஒங்க தங்கச்சியோட பயம் ஞாயமானதுதேன். ஆனா அவளுக்கு சொல்லிப் புரிய வைக்கறதுக்குள்ள உசுரு போயி உசுரு வருது. அதேன்.. ஒங்கள நேருல கண்டுக்கிட்டு விஷயத்த வெலாவாரியா பேசிரலாம்ன்னு கெளம்பி வந்துட்டேன். இந்த வாய்ப்பு இப்ப போச்சின்னா போனதுதான். மறுவாட்டி எப்பயும் வரவே வராது. இப்ப யூஸ் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு ஆளா ஊருக்குள்ள ஆயிறலாம்”

“ம்ம்.. ஆனா கொடைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அத எப்படி இதுல முடிச்சி போடுறீங்கன்னு புரியல மச்சான்”

“நம்ம குடும்பத்துக்குத் தான முத கெடா வெட்டு உரிமை.. மால மரியாதை.. எல்லாம்? எங்கயோ கெடந்துகிட்டு கணக்கு பண்ணி பணத்த அனுப்பி வுட்டுட்டு அவங்களா ஒரு கெடாவ வாங்கி வளத்து அத சாமிக்கு பலி குடுத்து படையல் போடுறதுக்கும்.. நாமளே இருந்துருந்து செய்யிறதுக்கும் உள்ள வித்தியாசந்தேன். அதுமட்டுமில்ல..”

சற்று நிதானித்துவிட்டு தொடர்ந்தார். குரலில் தயக்கம் இருந்தது.

“ஒங்க சொந்த ரத்த வழியில ஆரம்பிச்சது இந்த முறைப்பாடு.. அதுவும் ஒங்க முப்பாட்டனாரு.. அவுரு கையிலதான் சாமி வாக்கு நின்னுச்சி. இது ஊரு முழுக்க தெரியும். சாமியும் ரொம்ப துடி பாத்துக்கோங்க.. இந்த சமயம் மட்டுமாச்சும் நீங்க குடும்பத்தோட வந்தாவணும். ஒங்க கொள்கைய நான் மதிக்கிறேன். நம்ம பெரியாரு.. இல்லன்னு சொல்லுற சாமி கணக்கு வேற மாப்பிள.. இது வேற..”

சண்முகம் உதடு பிரியாமல் சிரித்தார். பழனிக்கு சண்முகத்தைப்பற்றி நன்றாகத் தெரியும். அவரை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்திவிட முடியாது. ரொம்பவே அழுத்தமான ஆள்.

“என்னையவே அரசியல் பேச வைக்கறீங்களோ மச்சான்?”

“இல்ல. நான் வாதம் பண்ணல. குடும்பம் தழைச்சி வேர் புடிக்கணுமேன்னு ஒரு நெஞ்சு தவிப்பு.. அம்புட்டுதான். ஒருவாட்டியாவது நம்ம மொத்த குடும்பமும் கோயில் கொடையில தாத்தன் முன்னாடி கும்புட்டு எழுந்தா நல்லதுதான..? அதும் இப்ப வாங்கின கருப்பு கெடா.. சுடலையாண்டி சாமி எங்கெனாவுல வந்து தெசை சொல்லி.. நானாவே அந்த தெசைவழிக்கி போயி வாங்கிட்டு வந்தது. அட..! நான் எங்க வாங்குனேன்? அந்தக் குட்டியாவே என்னைய பாத்து தாவியோடி பக்கத்துல வந்து நின்னதுலா.. தூக்கி சோதிச்சு பாத்தேன்.. ஒத்த வெள்ள முடியில்ல பாத்துக்கோங்க மாப்பிள.. சாமி வாக்கு கணக்குல அது அதிசயந்தான். யாரு எந்த தெசையில நின்னாலும் அவரு பார்வையில இருந்து எதுவுமே தப்ப முடியாதுல்லா.. அந்தக் கெடா என்னா வேகமாட்டு வளருது! இப்பவே என் இடுப்பு உசரத்த தொட்டுருச்சே.. நாளு ஆக ஆக அதும் மொகம் பாக்கணுமே.. யய்யா.. கெடா மொகமாவே இல்ல.. படர்ந்து விரிஞ்சி தாடிலாம் காடா வளந்துபோயி மனுஷன் மொகம் கணக்காலா இருக்கு.. ஊரு வீதியெல்லாம் சுத்தி சுத்தி வந்துகிட்டு கெடக்கு.. எங்கன போனாலும் நல்ல தீனி போடுதாவ.. பச்ச எலதழையா கொட்டுது.. இன்னொன்னுஞ் சொல்லணும் ஒப்புக்குன்னா ஒடங்காயி.. ஒன்னு தொடலயே.. மேய்ச்சல் ஆடுகதான் அதையெல்லாம் அசைபோடுதுக.. இது சீண்ட கூட கெடையாது.. இந்த சாமி கெடா தூக்கிட்டு வந்த குட்டிலருந்தே என்னைய கட்டிப்போட வுடலயே.. கயித்த அத்துகிட்டு.. பாஞ்சிருச்சி.. ஒரே வீராப்புதான்.. அப்போவே புரிஞ்சு போச்சு.. இது வேற யாரோ நம்மகிட்ட திரும்பி வந்த கணக்கு.. செவசுவும் அதையே சொன்னா.. அந்த ஒரு விஷயத்துல எங்களுக்குள்ள அப்படியொரு ஒத்தும”

“அதையெல்லாம் முன்னையே எழுதி இருந்தீங்களே”

ஆமாம் என்பதாக தலையை ஆட்டிக்கொண்டார் பழனி. சண்முகம் மனைவியைப் பார்த்தார்.

“நீ என்னம்மா சொல்லுற?”

“கொடைக்கி தான? போயிட்டு வரணும்னுதான் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருக்கு. ஆனா நீங்களும் கூட நிக்கணும். எங்கள மட்டும் ரயிலு ஏத்தி அனுப்பறதா இருந்தா வேணாம்”

சண்முகம் தன் மோவாயைத் தடவிக்கொண்டார்.

“சரி.. அதுக்கு நாளு இருக்கு. பாத்துக்கலாம்”

இதைப் பொதுவாகச் சொன்னார். மேற்கொண்டு முக்கிய விவகாரத்தைப் பற்றி பழனியாகவே தொடரட்டும் எனக் காத்திருந்தார்.

“பாருங்க மாப்பிள.. நான் எம்மனசுல உள்ளத தெளிவாவே சொல்லிடுதேன். ஊருக்குள்ள சரள கல்லு பரப்பி சாலையை அகலப்படுத்தறது. புது பாதைய உருவாக்குறது. சின்னதா பஸ் ஸ்டாப்பு ஒன்னு கட்டிவுட்டு முறை பண்ணுறது. நீர் நிலைக்கு பாசனத்துக்கு ஏரி கம்மாவ தூர் எடுக்கறது. தனி கக்கூஸூ லைனு போடறதுக்கு கழிவுக்குழாய் பதிச்சு மொத்தமா ஒரு எடத்துல எறக்கிவுட்டு.. அதையே உரக்கம்பெனிக்கு திருப்பி வுடுறதுக்கு வண்டி ஏற்பாடு, ஆள் யோசனை போக்குவரத்துன்னு கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சம்னா.. ஒரு திருப்தி இருக்கும்.. இதக் கேளுங்க மொதல்ல.. சுடலையாண்டி கோயிலு தலமுறை தலமுறையா கூரை இல்லாம மொட்டையாவே கெடக்கு.. காலத்துக்கும் அந்த ஒத்த பனைதான் அடையாளம்னு இனியும் இருக்கக்கூடாதுலா? ஒரு கூரைய இழுத்து நீட்டி கட்டுறதுக்கு பணம் வசூல் பண்ணனும்.. அத நான் பாத்துக்கிடுவேன்.. எம்பொறுப்பு.. அறநிலையத்துக்குமே எழுதியும் கேக்கலாம். மொற இருக்கு.. அதுக்குன்னு செல வழிக.. நீக்குப்போக்கு எல்லாம் எனக்கு கொஞ்சம் தெரியும். இம்புட்டுக்கும் தொணைத் தலைவர் பதவி நல்ல ஒத்தாசையாட்டு இருக்கும். இல்லன்னா வெறும் தர்ம கணக்கு மட்டுந்தேன் மிஞ்சும்.. ஆல்ரெடி.. இருந்த செல்வாக்கும் அங்கனேயே இருக்குதுங்க மாப்பிள.. எனக்கே அது ஆச்சரியந்தேன் பாத்துக்கோங்க. அத வீணடிச்சுற வேணாம்னு மனசுல கெதி கெடக்கு. எல்லாஞ்சரியா வரும்ன்னும் ஒரு நம்பிக்கையும் இருக்கு”

“இதத்தான் மாற்றம்னு லெட்டர்ல எழுதி இருந்தீங்களா?”

“அத நான் அப்படித்தான் பாக்குதேன். காலையில ஒன்னு சொன்னீங்க பாருங்க.. எல்லாம் நேரங்காலந்தான்னு.. அத சரிங்குதேன்.. ஆனா.. செவசுக்கு அதெல்லாம் மனசுக்கு ஆவல.. அவளோட வெம்பாடு புரியது.. நெலமைய ஒத்துக்கிட்டு ஏத்துக்குற மனப்பக்குவம் இன்னும் வந்து சேரல..”

“ரொம்பவே பயப்படுறா.. அது நார்மல் தான மச்சான்?”

“சரி.. நீங்க என்ன சொல்லுதீங்க?”

சண்முகம் இன்னொருமுறை மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். பழனியிடம் திரும்பி தலையை மையமாக அசைத்துக்கொண்டார்.

“சரி.. ஒங்க விருப்பம். நான் பணத்த ஏற்பாடு பண்ணுறேன். பதவி, பொறுப்பு எல்லாம் ஓகேதான். கட்சி அரசியலுக்கு உள்ள மாட்டிக்காதீங்க. அது ஆள முழுங்கிடும். ஊருக்காக பண்ணுற காரியங்கள ரெண்டாவதா வச்சுக்கங்க. குடும்பத்த முக்கியமா பாருங்க. ஒன்னு தப்பினாலும் எல்லாமே தப்பாவும்.. எப்பவும் மாதிரி லெட்டர்ல அபிப்பிராயம் கேட்டுக்கங்க.. கலந்துக்கங்க.. அது மாறிடாம பாத்துக்கோங்க”

உற்சாகத்தில் எட்டி அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கினார் பழனி. அதில் வலுவும் ஆனந்தமும் ஒருசேர இருந்தது.

“செவசுகிட்ட நான் பேசுறேன். பதில் லெட்டர் எழுதி உங்க கையிலேயே குடுத்து வுடுறேன். கொஞ்சம் தாம்தூம்ன்னு சத்தம் போடத்தான் செய்வா.. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ஒங்கள நாங்க புரிஞ்சுக்கிட்டோம்”

பழனியின் முகத்தில் சிரிப்பு முழுமையாக மலர்ந்தது.

“அப்போ.. நான் இன்னைக்கே பொறப்படுதேன்..”

“இருந்து போவலாமே..?”

“இல்லல்ல.. ரொம்ப தாமசம் பண்ணிறக்கூடாதுலா..”

*

எழும்பூர் ரயில் நிலையம். சண்முகம், பழனி இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். கிருஷ்ணவேணி வந்திருக்கவில்லை. இளங்குமரன் நிலையத்தைச் சுற்றி தன் பார்வையை விரட்டி அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி அருகில் நின்று கொண்டிருந்தான். அங்குமிங்கும் குடும்பம் குடும்பமாக ஆட்கள் சிதறலாக நின்றுகொண்டிருந்தார்கள். கனமான அகன்ற இரும்பு தள்ளுவண்டிகளில் சதுரவடிவில் இறுக்கிக்கட்டப்பட்ட மூட்டைகளாக ஏதேதோ சரக்குகள் போயின.. வந்தன. ஒலிபெருக்கியில் பயண நேர அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன. அவை உற்றுக்கேட்டால் மட்டுமே புரியும் வண்ணம் நிலையம் முழுவதும் பிரம்மாண்டமாக எதிரொலித்தன.

நடைபாதைகளில் சுமைக்கூலிகள் பரபரப்பாக இருந்தார்கள். பயணிகளின் பயணச்சுமைகளை ரயிலுக்குள் ஏற்றி உரிய இருக்கைகளில் இறக்கி வைத்துவிட்டு கூலியைப் பெற்றுக்கொண்டார்கள். சிலர் குரலை உயர்த்தி பேரம்பேசி அடம்பிடித்தார்கள். கசகசவென்று மனிதச் சந்தடி இருந்துகொண்டே இருக்கிற அவ்விடத்தில் ஓர் ஈரப்பதம் காற்றில் கனம் கூட்டியிருந்தது. அதற்கொரு மணம் இருந்தது. அதில் உழைப்பின் உப்புவியர்வை வீச்சம் கலந்திருந்தது.

உறவுகளை மட்டுமல்ல உணர்ச்சிகளையும் சுமந்து திரியும் இந்த ரயில்வண்டி அதிசயமான ஒரு கண்டுபிடிப்புதான் என்பதை இளங்குமரன் இன்னும் வளரவளரத் தெரிந்துகொள்வானாக இருக்கும்.

அவனைப் பொருத்தவரை பள்ளிக்கூடம் போகும்போது வழிமறித்து குறுக்கே நின்றுகொள்ளும் சரக்கு ரயில்வண்டிக்கும் இந்த ரயில்வண்டிக்குமான வித்தியாசம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினான். அப்பாவிடம் கேட்கலாம். அதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுப்பார். அது என்னவாக இருக்கும் என்றும் யோசித்தான்.

“அப்பா.. ஒன் பாத்ரூம் போவணும்”

“வாங்க மருமகனே..”

பழனி அவனை வண்டிக்குள் தூக்கிவிட்டார். பின்னாலேயே அவரும் ஏறிக்கொண்டார். அவன் குழப்பமாக அப்பாவைப் பார்த்தான். அவர் சிரித்தபடியே தலையை அசைத்தார். பழனி, பக்கவாட்டில் இருந்த கழிவறைக் கதவை அவனுக்குத் திறந்துவிட்டார். கதவு மூடிக்கொண்டது. அச்சத்துடனே சிறுநீர் கழித்தான். அங்கே இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒருமுறை தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். பள்ளிக்கூடத்தில் இருக்கும் குடிநீர் குழாயைப் போன்றே அங்கே ஒரு தண்ணீர் குழாய் இருந்தது. அந்தக்குழாய் அவனுடைய சிறிய விரல்களுக்கு பயன்படுத்த இறுக்கமாக இருந்தது. அதிலிருந்து வெளியேறிய தண்ணீர், நூலென மெலிந்துபோய் வடிந்தது. அப்போது திடீரென்று வண்டி அசைந்தது போல இருக்கவே.. பதற்றத்துடன் கதவைத் திறந்து வெளிப்பட்டான்.

மாமா தயாராக ஒரு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். அவனை வாசல்வரைக்கும் நடத்திப்போய் தூக்கி கீழே நடைமேடையில் மெதுவாக இறக்கிவிட்டார். வண்டி பலத்த ஒலி எழுப்பி ஜிவுக் என்று நகர்ந்தது. மிகச்சரியாக இருந்தது. அவனுடைய இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அச்சத்தோடு அப்பாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.

“நல்லா படிங்க மருமகனே.. ஊருக்கு போயி லெட்டர் போடுதேன்”

இளங்குமரன் கையை ஆட்டி டாட்டா காட்டக்காட்ட அவனுடைய மாமாவும் கையசைத்தபடியே புள்ளியாகி விலகிப்போனார். ரயில்வண்டியின் பின்பக்கத்தில் பெரிய அளவில் ஒரு பெருக்கல் குறி போடப்பட்டிருந்தது. ‘சரக்கு வண்டியில்’ இருப்பதைப் போல் கடைசியில் அறை உள்ள ஒரு பெட்டி இதில் இல்லாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“ஏன்ப்பா.. அந்த எக்ஸ் போட்டுருக்காங்க?”

“அதுதான் கடைசி.. அதுக்கப்புறம் வேற ரயில்பொட்டி இல்லைங்கறதுக்கான அடையாளம் அது”

அவனுடைய மனம் சமாதானம் ஆகவில்லை. அது அவனுடைய முகத்தில் தேங்கி இருந்தது.

சண்முகம் இளங்குமரனின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்து போகவேண்டிய இடத்தின் அடையாளம் சொல்லி ஒரு ஆட்டோ பிடித்தார். க்ளிங் என்ற சத்தத்துடன் கட்டணக் கருவியை மடக்கிவிட்டுக்கொண்டு போய்சேர வேண்டிய தூரக்கணக்கையும் பயணத்துக்குரிய கட்டணக் கணக்கையும் தொடங்கியபடி ஆட்டோ கிளம்பியது.

“மாமா காலையில ரொம்ப சோகமா இருந்தாரு. ஆனா.. இப்போ சந்தோஷமா போறாரு. என்னப்பா டிஃபரன்ஸூ?”

“காலையில நீ ஸ்கூலுக்கு போவும்போது ரொம்ப வெயிலா இருந்துச்சி. இப்ப ஸ்கூல்ல இருந்து திரும்பி வந்தப்ப வெயிலு போயிருச்சி.. ஆனா இன்னும் வெளிச்சம் போகலல்ல.. அந்த மாதிரி டிஃபரன்ஸ் தான் இதுவும்”

அந்த பதில் அவனுக்குப் புரிந்தது போலத்தான் இருந்தது. யோசிக்க அவகாசம் தேவைப்பட்டது. அவனை அவர் அப்படி பழக்கியிருந்தார். அவன் மௌனமாக வெளியே வேடிக்கைப் பார்த்தான். இடதுபக்கம் தண்டவாளங்களை பார்வையிலிருந்து கீழே தள்ளிவிட்டு மேலே மேம்பாலத்தில் ஆட்டோ ஏறிக்கொண்டிருந்தது. அவை ரயில்பெட்டிகள் இல்லாத காலியான தண்டவாளங்கள்.

“அப்பா.. லாஸ்ட் வீக் மாதிரியே இன்னைக்கும் ஸ்கூலுக்கு லேட் ஆயிருச்சி. இந்த மந்த்ல இது மூனாவது வாட்டிப்பா. இந்தவாட்டி பி.டி மாஸ்டர்கிட்ட பட்டக்ஸ்ல அடிவாங்குனேன். கூட்ஸ் ட்ரெயின் நடுவுல நின்னுருச்சி.. அதான் ரீசன். இத சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க”

“நீதான் ரிக்-ஷா வேண்டாம்னுட்ட.. அதுலனா.. ராயபுரம் ப்ரிட்ஜ் வழியா சீக்கிரமா டைமுக்கு போயிடுவ. சொன்னா கேக்க மாட்டேங்கற.. அடம் புடிக்குற”

“அப்டிலாம் இல்லப்பா..”

இளங்குமரன் அந்தப் பேச்சை மேற்கொண்டு வளர்க்காமல் சாதுர்யமாக துண்டித்துக்கொள்ள தெரிந்து வைத்திருந்தான்.

“அவ்ளோ தானா? வேற இருக்கா?”

“இன்னொன்னும் இருக்குப்பா..”

சண்முகம் அவனைத் திரும்பி பக்கவாட்டில் பார்த்தார். அதில் சொல்லு என்பதாக ஒரு பார்வை இருந்தது.

“ஸ்டான்லி ஹாஸ்பிடலுக்கு எதிரே ரோட்டோரமா பாம்புக்கும் கீரிப்புள்ளைக்கும் சண்டை விட்டுக்கிட்டு இருந்தாங்க. அங்க போயி எட்டிப்பாத்தேன்ப்பா. என்னைய மட்டும் போவச் சொல்லிட்டாரு அந்த ஆளு. அது ஏன்ப்பா?”

“அங்கெல்லாம் நின்னு வேடிக்கப் பாக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல குமரா? அப்படியெல்லாம் கூட்டமா வித்த காட்டுற எடத்துல நிக்கக்கூடாது”

“நான் பாம்பு சண்ட பாக்கணும்னு நெனைச்சேன்ப்பா..”

“இத நீ ஸ்கூல்லருந்து வந்தவுடனே சொல்லல? இப்ப எதுக்கு சொல்லுற?”

“மாமா இருக்கும்போது சொல்லுறதுக்கு பயமா இருந்துச்சிப்பா”

“உனக்குத்தான் உங்க மாமாவ புடிக்குமே.. அப்புறம் என்ன பயம்?”

“புடிக்கும். ஆனா வெக்கமா இருந்துச்சிப்பா”

“பயமா? வெக்கமா? கரெக்டா சொல்லு குமரா”

“தெரியலப்பா”

ஆட்டோக்காரர் திரும்பிப் பார்த்து இளங்குமரனிடம் கேட்டார்.

“இன்னா தம்பி படிக்குற?”

“சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்குறேன் ஆட்டோக்காரர்”

“ஸார்.. நீங்க இன்னா வேல ஸார் பாக்குறீங்கோ?”

“டைலரா இருக்கேன். கட வச்சிருக்கேன். எதுக்குப்பா கேக்குற?”

“ல்ல.. ஸார். எக்மோர்தான் எனக்கு சவாரி ஸ்டாண்டு.. வூடு எல்ஃபண்ட் கேட்ல தான் இருக்குது. எனக்கும் ஒரு பையன் கீறான் ஸார். செகண்ட் கிளாஸ் படிக்குறான். நான் எவ்ளோ சவாரி இட்னு போயிருக்கன் வந்துக்கறன்..! நீங்க.. யாரோ சொந்தக்காரங்கள ட்ரெயின் ஏத்தி வுட்டு வர்றீங்கன்னு தெரிது. ஆனா.. இவ்ளோ ஜாலியா ஃபிரண்டு மாரி பேசிக்குனு வர்ற அப்பா புள்ளய மொத தாட்டி பாக்குறன் ஸார்.. சின்ன பையன்னு நெனைக்காம… பொறுமையா அவனுக்கு ஒரு பதில் சொல்லிக்கினே வர்றீங்களே ஸார். இன்னிக்கு புதுசா ஒன்னு கத்துக்கிட்டேன் ஸார்..”

சண்முகம் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார்.

“ஒங்க கட எங்க ஸார் இருக்குது?”

“எங்கள டிராப் பண்ணப் போறல்ல.. அதே ஏரியாத்தான்.. சின்ன மார்க்கெட் ரோட்ல இருக்கு”

“கட பேரு ஸார்?”

சண்முகம் தன் கடையின் பெயரைச் சொன்னார்.

“எம்.ஸி ரோடுக்கா வரும்போது.. கட்டாயம் ஒங்க கடக்கி வந்துர்றேன் ஸார்”

“வாப்பா.. ஒன் பையனையும் கூட்டிக்கிட்டு வா”

“டாங்ஸ் ஸார்”

ஆட்டோ தங்கசாலை மணிக்கூண்டிலிருந்து வளைந்து இடப்பக்கம் மூலக்கொத்தளம் மேம்பாலத்தை நோக்கி முறுக்கிக்கொண்டு திரும்பி ஏறியது. இடப்பக்கம் இருந்த கிருஷ்ணா திரையரங்கத்தில் ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேரக்காட்சிக்காக சொற்ப ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். வலப்பக்கம் இருந்த வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் மக்களால் பரபரப்பாக இருந்தது. நிறைய பேருந்துகள் நின்றிருந்தன. அவற்றில் ஆட்கள் அடைப்பட்டிருந்தார்கள். வானம் தன் ஒய்யாரத்தை கொஞ்சங்கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தது. கடைகளில், தள்ளுவண்டி வியாபாரங்களில், சாலையில் ஓடும் வண்டி வாகனங்களில் என, யாவற்றிலும் முகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நகரத்தின் முகத்தில் ஜிகினா கூடிவிட்டிருந்தது.

மேம்பாலத்தின் உச்சியிலிருந்து ஆட்டோ இறங்குமுகமாக ‘பென்ஸில் ஃபேக்டரி’ பேருந்து நிறுத்தம் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தபோது சண்முகத்தின் பார்வைக்கு பாலத்தின் கீழே மேற்கு நோக்கி இரண்டிரண்டு ஆரஞ்சு நிறக்கோடுகளாக வானின் மிச்ச வெளிச்சம் ஒளிர நீளநீளமாகக் கிடக்கும் இரும்புத் தண்டவாளங்கள் புலப்பட்டன. அந்திவானில் இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தைக் கலந்து கரைத்து ஊற்றிவைத்தது போல இருந்தது. அதையேதான் இளங்குமரனும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தான்.

“அப்பா..!”

“நல்லாருக்குல்ல?”

“அதில்லப்பா.. இன்னொன்னு கேக்கணும்”

“இன்னும் எத்தன தான் வச்சிருக்க குமரா?”

“இந்த ஒன்னு மட்டும்தான்ப்பா”

அப்போது ஒரு மின்சார ரயில்வண்டி அப்பாதையில் சப்தமெழுப்பியபடி பாம்பைப்போல வளைந்து ஊர்ந்து போனது..

“இந்த ட்ரெயின் எங்கேப்பா போவும்?”

அதற்கு ஆட்டோக்காரர் பதில் சொன்னார்.

“இது திருவொத்தியூர் ரூட்ல அப்டியே கும்மிடிபூண்டிக்கே பூடும் தம்பி”

“ரொம்ப தூரமா ஆட்டோக்காரர்?”

“ஆமா.. தம்பி”

“தேங்ஸ்”

அவர் ஸ்டியரிங்கை உறுதியாக பற்றியபடி இறக்கம் நோக்கி விரையும் ஆட்டோவின் வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டார். அவரின் தலை இடவலமாக அசைந்துகொண்டதில் ஓர் உற்சாகம் தென்பட்டது.

“நீ கேக்க வந்தத கேளு குமரா”

“இன்னைக்கு கூட்ஸ் ட்ரெயின்ல.. பொட்டிக்கு நடுவுல ஏறி அந்தப்பக்கம் இறங்கறதுக்கு ஒரு அண்ணன் ட்ரை பண்ணப்போ.. திடீர்னு ட்ரெயின் கெளம்பிருச்சி.. அவரு அப்படியே அந்த ட்ரெயின்லயே போயிட்டாருப்பா.. அதுவும் கும்மிடிபூண்டி தான் போவும்னு பேசிக்கிட்டாங்க..”

“இதுக்குத்தான் அந்த மாதிரியெல்லாம் நீ ட்ரை பண்ணிடக்கூடாதுன்னு ஒன்கிட்ட ஒவ்வொருவாட்டியும் அப்பா சொல்லுறேன்.. உனக்கது புரியுதா?”

“புரியுதுப்பா.. எனக்கெல்லாம் பயம். நான் ட்ரை பண்ண மாட்டேன்”

சண்முகம் அவனுடைய தோளில் கைப்போட்டுக்கொண்டார். இளங்குமரன் தொடர்ந்தான்.

“இப்போ.. மாமாவ ட்ரெயின் ஏத்தி விட்டோம்லப்பா.. அவரு ஊருக்கு போறதுக்கும்.. அந்த அண்ணன் கூட்ஸ் வண்டிலயே மாட்டிக்கிட்டு ஒரு ஊருக்கு போறதுக்கும் என்னப்பா டிஃபரன்ஸூ? அந்த அண்ணாவ அவங்க வீட்டுல தேடுவாங்கல்லப்பா?”

ஆட்டோக்காரர் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த வட்டக் கண்ணாடியை லேசாகத் திருப்பி ஒழுங்கமைத்து அதன்வழியே இளங்குமரனைப் பார்த்து சிரித்தார். அதை அவன் கவனிக்கவில்லை. சண்முகம் சற்றுநேரம் தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தான். ஏதோ யோசனையோடு வெளியே பார்த்தபடியே அவனுக்குப் பதில் சொன்னார்.

“ஒரு அஞ்சு அடி தூரத்தை நின்னு தாண்டி போறதுக்கு பொறுமை இல்லாத அந்தப்பையன் எதோ ஒரு சரக்கு ட்ரெயின்ல மாட்டிக்கிட்டு எங்கயோ ஒரு ஊருக்கு ரொம்ப தூரம் போயிட்டான்.. அவன் கணக்கு தப்பாயிருச்சி. ஆனா அறுநூறு கிலோமீட்டரு தொலைவுல இருந்து ஒரு வேலையா வந்துட்டு திரும்பிபோற ஒன் மாமாவுக்கு.. இது எத்தன நாளு பயணம்? என்ன விஷயத்துக்கான பயணம்? அந்தப் பயணம் எவ்வளவு தூரம்? அதுக்கு எவ்வளவு நேரம்னு ஒரு கணக்கு இருக்குது குமரா.. ஆனா.. அது அவரோட கணக்கு.. அப்படிதான் பயணத்துக்கு ஏத்த மாதிரி.. பயணத்தோட அர்த்தமும் மாறிடும்.. இதுல அதான் டிஃபரன்ஸ்”

“ஓஹோ..! அப்போ அந்த அண்ணன்?”

“அது காலையில நடந்தது தான?”

“ஆமா”

“அவரோட வீட்டுக்கு அவரு எப்பயோ திரும்பி போயிருப்பாரு”

“அப்டீனா.. அடுத்தவாட்டி அவரு ஏறிக்குதிக்க மாட்டாருலப்பா?”

“அது தெரியல குமரா. மனுசங்க எப்போ என்ன யோசிப்பாங்க.. என்ன மாதிரி கணக்குப் போடுவாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது”

மேம்பாலத்தின் இறக்கத்தில் வலப்புறம் இருந்த வட்டவடிவ கருஞ்ஜல்லி நடைபாதைத் திடலை ஒட்டியணைத்தபடி சீரான ஒரு வேகத்தில் ஆட்டோ வளைந்து திரும்பியபோது வானம் சட்டென்று தன் வெளிச்சத்தை முழுமையாக இழந்துவிட்டு கருநீலத்தை பூசிக்கொண்டது.

***
கவிதைக்காரன் இளங்கோ – கணையாழியின் துணையாசிரியராகவும் யாவரும் பதிப்பகத்தில் Content Editor-ஆகவும் பணி புரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் என இரு சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி இரவு, கோமாளிகளின் நரகம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும் திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: elangomib@gmail.com

தடி

0

லட்சுமிஹர்

அத்தியாயம் ஒன்று: வலஞ்சுழல்

ப்படி நடந்தேறும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் இச்செயலை அவன் செய்திருப்பான் என்று ஒரு நொடியும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. வேண்டி உருகிநின்ற இடத்தில் தன்னை இழத்தல் எவ்வளவு பெரிய கொடுமை. அப்படி திசைகளை மறந்து பேதலித்து செய்திருப்பான் என்றும் தோன்றவில்லை. தனது சுய நினைவினால் மட்டுமே அதை செய்திருக்க முடியும். எண்ணற்ற நம்பிக்கைகள் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் போனதை பலிகொடுத்திருக்கிறான். அதில் தன்னையும் அவன் இழந்திருக்கிறான் என்பதே உண்மை.

எனக்கும் குலசேகருக்குமான அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவுபடுத்துகிறேன். எப்படி நான் அதை மறந்திருக்க முடியும். இன்று அவனை அந்த ரூபத்தில் பார்த்துவந்தது முதல் மனதிற்குள் அவனைப் பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தது. என்னை அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்றுகூடத் தெரியவில்லை. அவன் என்னை நினைவுகூர்ந்திருந்தால் நான் அவனைக் கண்டுகொண்டதையும் அறிந்திருப்பான். என்ன நடந்திருக்கும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படியா குலசேகரனைப் பார்க்க வேண்டும். அவன் என்ன நினைத்திருப்பான், ஒன்று நான் உண்மையை சொல்கிறேன் அவனென்று தெரிந்த பின்னரே அவனது பாதங்களில் விழுந்தேன். ஏனோ பழைய விசயங்களைப் பேச மனம் ஒத்துழைக்கவில்லை.

இரவு அனைத்தையும் விழுங்கிகொண்டிருந்த நேரம் வானில் ஒருவன் மட்டும் இவ்வுலகத்திற்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அந்த முழு நிலவு நாளில்தான் குலசேகரனை முதன்முதலில் பார்த்தது. அவன் என் வாழ்நாளில் நான் மறைமுகமாகத் தேர்ந்தெடுத்த குருவாக ஆவான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

குலசேகரனை கல்லூரி விடுதியில் வைத்துதான் பழக்கம். எங்கள் குழுவிலேயே அவனுக்குத்தான் பக்தி அதிகம். அதனாலேயே என்னவோ எல்லோரிடமிருந்தும் ஒருவித விலகுதல் குலசேகரனுக்கு இருந்தது. அந்த விலகுதல் பலவகையில் அவனை பற்றியான அக்கறையில் நேரத்தைச் செலவிட உதவியது. பெரும்பாலும் எங்களின் போதை என்கிற நித்திய நிலையிலிருந்து பெரும் விடுதலையையே கொடுத்தது. இந்த முறை அவனது குரல் கேட்கிறது. அதை தனது குரல்வளையிலிருந்து வெளியேற்றும் உருவத்தைத்தான் இப்போது தேடவேண்டியிருந்தது. நேற்றிரவு நடந்த பெரும் மது போதையிலிருந்து இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கும் என்னை பலமுறை அவனது குருவிடம் அறிமுகப்படுத்துகிறேன், அவர் உங்களுக்கு வேண்டியதை தங்களின் உடலை கெடுக்காத வண்ணமே கிடைக்க அவரின் எல்லையை ஒருமுறை மிதித்து பாருங்கள் என்று போனமுறை அவன் கூறியதை நினைவுபடுத்தாமலேயே என்னுள் சுழன்றுகொண்டிருந்தது. அவன் இதுவரை சொல்லிய விசயங்களுக்கு என்மூலம் நானே பலவாறு அவருக்கு உருவம் கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்தளவு குலசேகரன் சொல்லும் கதைகளை காதுகொடுத்துக் கேட்டிருக்கிறேன். மற்றவர்கள் இவன் பேச ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்து அலறி அடித்துக்கொண்டு அறையை காலிசெய்து ஓடிவிடுவார்கள். அதையெல்லாம் குலசேகரன் பொருட்படுத்தியது கிடையாது. அவனுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருந்தது.

பேசாத குழந்தையை அவரின் குரு பேச வைத்தது, நோயுடன் வந்தவர்களை பூரண குணமாக்கி அனுப்பியது, குழந்தைபேறு என இன்னும் இன்னும் அவனிடம் சொல்ல எக்கச்சக்கக் கதைகள் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எனக்கு குலசேகரனை சந்திப்பதற்கு முன்பு பெரும் நம்பிக்கைகள் எதன்மீதும் இருந்ததில்லை. இத்தனை வருட காலம் இந்த உலகம் என்னை எப்படி தள்ளிவிட்டதோ அந்த திசையில் தலை நிமிராமல் காதுகொடுத்து எதையும் கேட்காமல் ஓடிவந்திருந்தேன். குலசேகரனின் இப்படியான கதைகள் முதலில் ஈர்க்கவில்லை எனினும் போகப்போக இதன்மேல் அவனுக்கு இருந்த ஆர்வமும் நம்பிக்கையும் தான் என்னை காதுகொடுத்துக் கேட்க அமர்த்தியது.

கடைசியாக வெட்டுச்சாமி குடியிருந்த வீட்டின்முன் இருக்கும் ஆலமரம் தனது கிளைகளை பரப்பி கால்கடுக்க வேண்டுதல்களை ஏற்க நிற்கும் மரத்தினில் மனதிற்கு நினைத்ததை எழுதி அந்த வேர்களில் முடிந்தால் கண்டிப்பாக நிறைவேறும்.. அப்படி ஒருநாள் தனக்கு வேண்டியதை எழுதியிருக்கிறான்.. அது நடந்தேறிதான்… முழுவதுமாக அவனை ஈர்த்துள்ளது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அது அப்படியே நடந்தது.

“நீ அதற்கு நம்ப வேண்டும்..” என்றான் குலசேகரன்.

“எப்படி.. எதைக்கொண்டு.. எதனால்..” என்று கேட்டுகொண்டே சென்ற என்னிடம் குலசேகரன் எனக்கு எப்போதும் புன்னகையை மட்டுமே ஒரே பதிலாய் வைத்திருந்தான்.

குலசேகரன் எப்போதும் பௌர்ணமி அன்று தன்னுடைய குருவின் ஜீவசமாதி அடைந்திருக்கும் மான்வாடிக்குச் சென்றுவிடுவது வழக்கம். நள்ளிரவு பனிரெண்டு மணி பூஜையை அங்கிருந்து முடித்துவிட்டு தான் தங்கும் விடுதிக்கு வருவான்.

அவன் சொல்வான் இறந்த ஒருவரை தேடுவதைத் தவிர்த்து வாழும் ஒருவரைக்கூட குருவாய் தேர்ந்தெடுத்துக்கொள் என்று கூறும் அவனிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அப்படி நமக்கு ஒரு குரு கண்டிப்பாக தேவையா என்று மறந்திராமல் கேட்டும் இருக்கிறேன். அதற்கான பதிலையும் உன்னுடைய குருதான் சொல்ல வேண்டும் என்று சிரித்துக்கொண்டான்.

ஆறுவழிச் சாலைக்கு இடையூறாக நின்ற அந்த ஆலமரத்தை எடுக்க அரசாங்கம் முயன்றபோது அதற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு வந்த இரவில் அங்கு நடந்தவற்றைப் பற்றியே கூறிக்கொண்டிருந்தான. அந்த ஆலமரத்திற்குபின் இருக்கும் கதையை அங்கு வந்த முதியவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டதாக அதை என்னிடம் அப்படியே சொன்னான். சொன்னவருக்கு வயது சுமார் எழுபதிற்கு மேல் இருக்கும், வெட்டுச்சாமியை நேரில் பார்த்தவரும்கூட என்று சொன்னான். இப்படி அவன் அங்கு செல்லும்போதெலாம் ஒருவரைச் சந்தித்து அவரிடமிருந்து பழைய கதைகளைக் கேட்டுவருவதும் தொடர்ந்து நடந்துவந்தது. அவரிடமும் அன்றிரவு திருநீறு வாங்கிவிட்டு எனக்கும் கொண்டுவந்திருப்பதாக பையிலிருந்து எடுத்தவன் அதை தனக்கு கொடுப்பவராக ஒரு நிமிடம் மாறி எனக்குப் பூசிவிட்டான்.

இப்படி வெறும் ஆளாகச் சுற்றிகொண்டிருந்த என்னுள்ளும் குலசேகரனின் கதைகள் விருட்சம் கொள்ளத்தொடங்கியது. என் வீட்டிலும் என்னுடைய மாறுதல்களை கவனிக்காமல் இல்லை. சாமி கும்பிட கோவிலுக்கு வாடா என்றாலும் எட்டிப் பார்க்காதவன் இன்று அவர்களுக்கு யாரென்றே அறிமுகம் இல்லாத பச்சை வேட்டித்துண்டு போட்டிருந்த ஒருவரின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுவந்து வீட்டின் ஹாலில் மாட்டுகிறான் என்று முதலில் பயந்தவர்களுக்கு குலசேகரனை வீட்டிற்கு அறிமுகப்படுத்தினேன். அவனுடைய் பேச்சுக்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்திருந்தது. அவனை அமரவைத்து சாப்பாடும் பரிமாறினார் அம்மா. ‘இத்தனநாளு கூட்டிட்டு வந்ததுலையே இவன் மட்டும்தான் உருப்படுற மாதிரி தெரியிறான்..’ என்று அம்மா சொன்னாள்.

இனி என்ன, எல்லையை மிதிக்க வேண்டியதுதான் என்று அடுத்த பௌர்ணமிவரை காத்திருக்காமல் இன்றே போகலாம் என்று சொன்னேன். சரி என்று உடனே வண்டியில் இருவரும் கிளம்பிவிட்டோம். கரிசல்காடு வயல் நிலங்களுக்கு நடுவில் அந்த ஆலமரத்தை குலசேகரன் எனக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நான் கண்டுபிடித்துவிட்டேன். அதன் கிளைகள் யாவிலும் முடிந்திருந்த வேண்டுதல்கள் அவ்வளவு பெரிய மரத்தை மறைத்துக்கொண்டிருந்தது. இன்று கூட்டம் அவ்வளவு இல்லை. அங்கும் இங்கும் என சில தலைகள் நடமாடிக்கொண்டிருந்தது. அங்கு பேப்பர் விற்றுக்கொண்டிருந்தவரை தெரிந்தது போல கைகாட்டி அவரிடம் நலம் விசாரித்து அவரிடமிருந்து அவனுக்கும் எனக்குமாக இரண்டு பேப்பர்களை எழுத வாங்கிக்கொண்டு வந்தான். என்னிடம் ஒன்றை நீட்டி எழுது என்று கொடுத்துவிட்டு அவன் எழுதத் தொடங்கினான்.

எனக்கு பேப்பரை வாங்கியபின் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இவ்வளவு தூரம் இங்கு வந்துவிட்டு என்ன எழுதுவது என்று தெரியாது விழிக்கும் என்னை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. என்னளவில் எனக்கு எல்லாம் கிடைத்தது போலதான் இருந்தது, இதில் என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். குலசேகரன் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தான். நான் எழுதுவதை விடுத்து அவன் எழுதுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களைப் போலவே அங்கு பலர் தங்களின் வேண்டுதல்களை எழுதிக்கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுதல்களை அறிய ஏனோ மனம் ஆசைப்பட்டது. அதை அறிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம், இத்தனை இத்தனை வேண்டுதல்களுக்கு நடுவில் அமைதியாக எதையும் எழுதாமல் அமர்ந்திருந்தேன். அருகிலிருந்த குலசேகரன் எழுதிட்டியா என்று கேட்டவனிடம் எழுதிவிட்டேன் என்று எழுதாமல் இருந்த பேப்பரை மடித்து அவனிடம் நீட்டினேன். நீயே கட்டு என்று அவன் கிளையில் கட்டிக் காண்பித்தான். இருவரும் வெட்டுச்சாமி வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அவரின் ஜீவசமாதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அவன் வழிநெடுக இதற்குமுன் இங்கு வந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே வந்தான். ஜோசியம் பார்ப்பவர்கள், டீலக்ஸ் மிட்டாய் வண்டிகள், தண்ணீர் பாட்டில் விற்பவர்கள், முடி காணிக்கை செலுத்துபவர்கள், வெட்டுச்சாமியின் புகைப்படங்களை விற்பவர்கள், ஐம்பது ரூபாய் கொடுத்து மாடு, கன்றுக்கு புல் வாங்கிப்போடுபவர்கள் என ஆட்கள் தங்களின் அன்றாடத்தை செய்துகொண்டிருந்தனர். ஆலமரம் அருகில் வேண்டுதல்களை எழுத பேப்பர் கொடுப்பவர்கள் காசிற்கு விற்பவர்கள் கிடையாது அதுவும் ஒரு நேர்த்திக்கடன் என்று தெரிந்துகொண்டேன்.

ஒற்றையடிப் பாதையை விரிவுபடுத்தியது போன்ற மண் தரையில் நடந்துவந்து ஜீவசமாதியை அடைந்தோம். ஜீவசமாதிக்கு முன் பெரிய வரிசையிருந்தது. அந்த வரிசையில் போய் நின்றுகொண்டோம். எப்படியும் அருகில் செல்ல அரைமணிநேரம் எடுக்கும். குலசேகரன் சொன்ன கதைகளின் கதாபாத்திரங்கள் அங்கும் இங்கும் என அலைந்து திரிவதையும் என்னால் பார்க்க முடிந்தது. இதுவே முதல் முறை என்பதாலோ என்னவோ குலசேகரன் சொன்ன கதைகளில் வரும் கதாபாத்திர நித்தியை என்னால் அடைய முடியவில்லை. அங்கிருந்த ஒருவித அமைதி என்னுள் வந்தது. மனிதர்களும் காலமும் நின்று நிதானித்துச் சுழல்வதுபோலத் தெரிந்தது. கண்களை மூடி என்ன வேண்டுவது எனத் தெரியாமல் பெரிதாக மாட்டப்படிருந்த அவரின் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை முறை குலசேகரன் சொல்லும்போது இந்த முகத்தை கற்பனை செய்திருக்கிறேன். அந்த கற்பனைகளிலிருந்து துளியும் மாறுபடாது இருப்பது பெரும் ஆச்சரியத்தையே கொடுத்தது. அதே வடிவம்தான் நான் நினைத்த அதே மனித வடிவில்தான் அங்கு அவர் காட்சியளித்துக்கொண்டிருந்தார். அதை அவனிடம் பகிர்ந்துகொள்ள ஏனோ மனம் ஒப்பவில்லை. ஜீவசமாதியை ஒருமுறை சுற்றிவந்து அமர்ந்தோம். குலசேகரனை அடையாளம் கண்டுகொண்ட சாமியிடம் என்னையும் அழைத்துக்கொண்டு சென்றான். என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தான். என்னை நோக்கியவராய் ‘இனி உனக்கு நல்ல காலம்தான்’ என்று அவரின் கைகளை ஆசி வழங்குவதுபோல என் தலையில் வைத்தார் . குலசேகரனிடம் ‘இனி இவனுக்கு உன் தயவு தேவைப்படாது’ என்று சொல்லி அவனுக்கும் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டார். இப்படியாக எனக்கு முதல் அனுபவம் முடிந்தது என்று சொன்னால் அது பொய்தான் இனிமேல் நடந்ததுதான் அடுத்துவந்த காலங்களைத் தீர்மானிப்பதாய் அமைந்தது.

அந்த நாளில் குலசேகரன் அங்கு யாரென்று தெரியாத ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் போய் முடிந்தது. அவன் அவரை நன்றாகத் தாக்கினான். அந்த முதியவருக்கு கண்டிப்பாக எண்பது வயதிற்கு மேல்தான் இருக்கும். இதுவரை நான் குலசேகரனை அப்படி பார்த்ததே கிடையாது. அவன் அன்று மூர்க்கத்தின் உச்சகட்டத்தில் யாரின் தயவுமின்றி நடந்துகொண்டது போல இருந்தது. அவன் அடிக்கும் அந்த முதியவர் இவனை தடுக்கக்கூட இல்லை. எதையோ முனகிக்கொண்டேதான் இருந்தார். அவர் என்ன முனகினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக குலசேகரனுக்கு அது கேட்டிருக்கும் என்றுதான் தெரிகிறது. எதனால் அப்படி நடந்து கொண்டான் என்று அவனிடம் கேட்கவேண்டும் போலிருந்தது. எதனால் அப்படி நடந்துக்கொண்டாய் என்றும் அவனிடம் கடைசிவரை கேட்கவில்லை. அங்கிருந்து விடைபெற்று வந்தது முதல் குலசேகரனின் முகம் வாடிப்போய் இருந்தது. விடுதி வரும்வரை என்னிடம் அவன் பேசவில்லை. சாமி சொன்னது என் மண்டையில் மட்டுமில்லாமல் அவனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதானே இருக்கும் என்று யோசித்து கொண்டதால் இதைப்பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவனும் அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை. அதற்கு பிறகு அவரவர் பாதையில் எனக்கும் குலசேகரனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்தச் சாமியார் சொன்னது போலவே இந்த நாட்களில் குலசேகரனின் தயவு இல்லாமல் வெட்டுச்சாமி சமாதி என்னை இழுத்தது. முதலில் பௌர்ணமி அன்று வந்துகொண்டிருந்த நான் வாரம் இருமுறை வர நேர்ந்தது.. இப்போதெல்லாம் அவரின் அனுமதியோடுதான் எந்தக் காரியங்களையும் தொடங்குகிறேன்.. அவரின் நித்தியத்தை அறிந்தவனாய் உணரும் நோக்கோடு வாழ்வு முன்னேறத் தொடங்கியது. இது என்னுடைய ஒருபக்கம்தான். குலசேகரனின் மௌனத்திற்கு என்ன காரணம் என்று என்னால் சொல்ல முடியவில்லை .

அத்தியாயம் இரண்டு: இடஞ்சுழல்

ப்படி என்னதான் எழுதுனான் அவனுக்கு இவ்வளவு கொடுக்குற’ என்று கத்தி கூப்பாடு போட்டேன் அந்த ஆலமரத்தின் அடியில் நின்றுக்கொண்டு. எப்படி இது நிகழ்தேறியது. இன்றுவரை சிவ..சிவா என்று சுற்றித் திரிந்துகொண்டிருந்த என்னை ஒருபொழுதும் கவனித்திராது நான் எழுதியது அனைத்தையும் உதாசீனப்படுதினாய். இப்படி அலைவதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று எப்படி உன்னால் சொல்ல முடியும்.. எப்படி சொல்ல முடியும் என்று கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த என்னைச்சுற்றி திரிபவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா? அதையும் நான் உனக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்படி எப்போதும் கத்தி திரியும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் தோற்றத்தை பார்த்து ‘சாமி ஏன் இப்படி கத்துது’ என்று கவனித்தும் நிராகரித்து சென்றனர்.

‘ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி’ என்று அருகில் வருபவர்களுக்கு என் கையில் வைத்திருக்கும் தடியால் அடி கொடுத்தேன். இப்போதெல்லாம் இப்படி வந்துகேட்டு என்னிடம் அடிவாங்கும் எண்ணிக்கைகள் கூடிவிட்டன. என்னிடம் அடிவாங்கினால் யோகம் என்றும் புலம்புகிறார்கள் பைத்தியங்கள்.

நான் சிவனே என்று சுற்றித் திரிவதுகூட இவர்களுக்குப் பிடிக்கவில்லை போலும். காலில் பல நாட்களாக இருந்த ஆணி இப்போது நடையை முடக்கி இருந்தது. பாதத்தில் சீழ் வேறு எந்நேரமும் வழிந்துகொண்டிருந்தது. எப்போதும் இந்நேரத்திற்கு சாப்பாடு வந்திருக்கும். இன்று ஏனோ இவ்வளவு நேரம் ஆகியும் சாப்பாடை கொண்டுவந்து கொடுக்காமல் எங்குபோய் தொலைந்தானோ இந்த குள்ளன், வந்துவிடுவான் என்று மனம் வயிற்றை சமாதானப்படுத்திகொண்டிருந்தது.

இன்று பௌர்ணமி. வெட்டுச்சாமி சமாதியில் கூட்டம் அலைமோதியது. சீழ் வலியைத் தாங்கிக்கொண்டு இவ்வளவு நேரம் பிச்சையில்தான் பொழுது போனது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கை நிரம்பிக்கொண்டுதான் இருந்தது. சிலர் என்னிடம் அதிகம் பேசி அடி பெற்ற மகிழ்ச்சியில் சமாதியை நோக்கி வழிபடச் சென்றுகொண்டிருந்தனர்..

நான் ஆலமர நிழலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு ஓடிவந்தவன் சாப்பாடை என்னிடம் கொடுத்துவிட்டு எப்போதும்போல அருகில் உட்கார்ந்துகொண்டு பேசத்தொடங்கினான்..

“இன்னைக்கு என்ன ரொம்ப டயர்டா இருக்கிங்க சாமி”

“நீ ஏன்டா இவ்வளவு நேரம் வரல…”

“கோச்சுகாதீங்க சாமி… வேல ரொம்ப அதிகம்.. பௌர்ணமி கூட்டம் வேற.. இந்த கூட்டத்துல இருந்து தப்பிச்சு சாப்பாட போட்டு வரதுக்குள்ள லேட்டு ஆகிடுச்சு..”

“ரொம்ப நடிக்காதடா..” என்று சொல்லிக்கொண்டே பொட்டலத்தைப் பிரித்தேன்.

“சாமி.. இன்னைக்கு சாப்பாடு எப்படி இருக்குதுன்னு பாருங்க” என்றான் சிரித்துக்கொண்டே..

“என்னடா எப்பயும் போல தான..”

“இல்ல.. சாமி இன்னைக்கு ஸ்பெஷலு..”

“என்னடா ஸ்பெஷல்…”

“இன்னைக்கு அன்னதானம் ஃபுல்லா ஒரே ஆளு தான் கொடுக்குறாரு.. பல்க்கான பார்ட்டி போல… அன்னதானம் சாப்பாடு கடமைக்கேன்னு கொடுக்காம.. நல்லா செலவழிச்சு டேஸ்ட்டா பண்ணிருக்காங்க” என்றான் குள்ளன்.

சாப்பாடு குள்ளன் சொன்னது போல பிரம்மாதமாகத்தான் இருந்தது. சுவைக்கச் சுவைக்க இந்த சாப்பாட்டை எங்கோ சாப்பிட்டது போன்ற உணர்வு எழுந்தது. ஆனால் சரியாக கணிக்க முடியவில்லை. கண்டிப்பாக இந்த சாப்பாட்டை எங்கோ சுவைத்த நாக்கு மூளைக்கு அதை ஞாபகப்படுத்திப் பார் என்று சொல்லிக்கொண்டேயிருந்தது..

“அவரு இதுக்கு முன்னாடி நெறைய தடவ வந்துருக்காரு… நீங்க பாத்துருப்பீங்க..” என்றான் குள்ளன்.

“பாத்துருக்கலாம்..” என்று முடித்துக்கொண்டேன்.

“இன்னைக்கு அவரால எல்லாத்துக்கும் நல்ல சாப்பாடு…”

அதற்கு தலையாட்டாமல் இருந்த என்னை கவனித்தவனாய், “சாமி ..உங்களுக்கும் தான்..” என்றான்.

நான் தடியை எடுத்து ஒருமுறை கீழே அவனை நோக்கிக் காண்பித்து வைத்துவிட்டேன்.

“சாமி எடுத்துட்டு அடிக்காம வச்சா புண்ணியம் இல்ல..” என்று தடியில் அடிங்க என்று முதுகைக் காண்பித்தான் சிரித்துக்கொண்டே. பேச்சை நிறுத்தாதவனாய் “இன்னைக்கு அவர ஒங்க கிட்ட கூட்டி வரவா..”

“கூட்டி வந்து என்ன பண்ணப் போற”

“சாமிய பாக்குறது கூட புண்ணியம்தான…”

“இருக்கட்டும்…”

“அப்போ நான் கூட்டிட்டு வந்தறேன்..நீங்க எங்கயும் போய்ராதீங்க..”

குள்ளனை நேர்கொண்டு பார்த்தேன்.

“முடிஞ்சா கூட்டி வரேன் நீங்க ஒடனே கோச்சுகாதீங்க… கால் வலி பரவால்லையா..?”

“இருக்குது …..”

“ரொம்ப நடக்காதீங்க…..” என்று அக்கறை தொனியில் சொல்லிவிட்டு அருகில் இருந்தவன் நான் சாப்பிட்டு முடித்திருந்த இலையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெட்டுச்சாமியின் ஜீவசமாதி இருக்கும் இடத்திற்குச் செல்லத்தொடங்கினான் .

வெயிலேறி இருந்தது… காலில் கட்டியிருந்த துணியை சீழிலிருந்து ஒழுகிய தண்ணீர் நனைத்திருந்தது. சிவ..சிவா என்று மரத்தின் அடிப்பகுதியில் தலைமுட்டப் படுத்துக்கொண்டேன். நேரெதிர் கண்களில் வெட்டுச்சாமியின் இல்லம் இருந்தது. கண்களை அதை நோக்கி இருந்தவாறே தூக்கம் என்னை ஆட்கொண்டது. இருண்ட வெளிக்குள்ளிருந்து தன்னை எழுப்பிடும் குரலாய் குள்ளன் இருந்தான். இந்த வருடங்களில் தொடர்ச்சியாக என் காதுகளில் ஒலிக்கும் அந்தக் குரலை தெரிந்து எழுந்துகொண்டேன். குள்ளனுடன் சேர்த்து ஒரு குடும்பம் நின்றிருந்தது. கணவன், மனைவி, ஒரு குழந்தை, அதில் ஒருவரின் தாய் என்றிருந்த குடும்பத்தை குள்ளன் இப்படி அறிமுகப்படுத்தினான், “சாமி.. இவங்க தான் இன்னைக்கு அன்னதானம் பண்ணவங்க..” என்று சொல்வதற்குள் அவன் அருகில் நின்றிருந்த வயதான அம்மா என் கால்களில் விழ, அதைத் தொடர்ந்து அந்தக் குடும்பமே என்னுடைய காலில் விழுந்தது. இப்போது என் மூளை அந்தச் சாப்பாடை எங்கு சாப்பிட்டோம் என்று சரியாக நினைவு கூர்ந்தது. அவனேதான்.. நான் கூட்டிவந்தவன்தான்.. என்னுடைய நண்பனேதான் அவன். எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது கண்கள் சொருகி பார்வையில் நண்பனின் முகத்தை அடையாளப்படுத்திக்கொண்டே சரிந்து விழுந்தேன். சாமி என்ற குள்ளனின் குரல்தான் நினைவு இருந்தது.

எவ்வளவு நேரம் மயங்கியே இருந்தேன் என்று தெரியவில்லை. கண்களைத் திறக்கும்போது நண்பனின் குடும்பம் என் பக்கத்திலேயேதான் இருந்தது. ‘ஒன்னும் இல்லையே சாமி’ என்று என் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் குள்ளன். ஒன்னுமில்லை என்று அவனை விலக்கி அதிர்ச்சியிலிருந்த குடும்பத்தை பார்த்தேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு நினைவுகூர்வார்கள் என்று ஆசையாக எண்ணிய மனதில் சங்கடம் குடிகொண்டு கண்டுபிடித்துவிடக் கூடாது என்று மாறியது. இறுதியில் நண்பனாவது கண்டுபிடிப்பான் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவனோ ‘ஆசிவாங்கிட்டு போலாம்னு.. வந்தோம் சாமி..’ என்று முடித்துக்கொண்டு நகர்ந்துவிட்டான் . அவனுக்கு கண்டிப்பாக நான் யார் என்று தெரிந்திருக்கும். குள்ளன் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் சென்றான் .

அவனை இந்த இடத்திற்கு கூட்டி வந்தபோது அந்தச் சாமி சொன்னார் இனிமேல் என் தயவு அவனுக்கு தேவைப்படாது என்று அப்படிதான் நடந்தது. நாங்கள் நண்பர்களாக இருந்தது முதல் இப்போதுவரை சுழன்ற காலகட்டங்கள் எப்படி நிறுத்தியிருக்கிறது என்று மனம் பித்தாகிற்று. அன்று வெட்டுச்சாமியின் ஜீவசமாதியில் அவரின் நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுநாள் வரை உயர்வாய் எண்ணியிருந்த மனிதரை தன் குருவை எள்ளி நகையாடினார் வெட்டுச்சாமியின் நண்பர்.. அவரைப் பொறுத்துக்கொள்ளாது மனம் அந்த இடத்திலேயே அவரை அடித்தது. வயதில் மூத்தவர் என்றுகூட பார்க்காது அடித்தேன். ‘இவன பத்தி என்னைக்காச்சும் ஒருநாள் புரியும்டா’ என்று சாபம்விட்டுப் போனார். அந்நாள் முதல் வாழ்வில் நான் அதிகமாகப் பயன்படுத்திய வார்த்தை ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்றுதான். எனக்கு தலை சுற்றியது.. நான் இப்போது எங்கு இருக்கிறேன் என்று தோன்றிய கணம் என்னுள் சுழன்றோடிய கோபத்தை எப்படிக் காட்டுவது.. யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறேன்.

“சாமி ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று அருகில் வந்தவர்களை வெறிகொண்டு கையில் வைத்திருந்த குச்சியால் அடித்தேன்.

“நான் தோத்தவன் டா… நான் தோத்தவான் டா” என்று சுற்றியிருப்பவர்களை அடித்துக்கொண்டே ஜீவசமாதியைச் சுற்றி ஓடினேன். தறிகெட்டு ஓடிய கால்களை ஆலமரத்தின் வேர்கள் நிறுத்தியது. நிமிர்ந்து அந்த ஆலமரத்தைப் பார்த்தேன்.

கத்திச் சொன்னேன், “அப்படி என்னதான் எழுதுனான்.. அவனுக்கு இவ்வளவு கொடுத்துருக்க..” என்று கூறி சுற்றி இருந்தவர்களை கையில் வைத்திருந்த குச்சியால் விலக்கி அதில் கட்டி தொங்கவிட்டிருந்த வேண்டுதல் பேப்பர்களைக் கிழிக்கத் தொடங்கினேன்..

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த குள்ளன் “பௌர்ணமி அன்னைக்கு தடி சாமியார் இப்படிதான்.. நல்லா வேண்டிக்கோங்க.. அருள் கொடுக்கும்” என்று சொன்னவனை நோக்கி தடியை எறிந்தேன்.

***

லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com

முடிவிலா உருள்

0

பாரதிராஜா

முடிவிலா உருள்’ (Infinite Scroll) கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம்?

இல்லை?

அது என்ன தெரியுமா?

உங்களுக்குத் தெரியும். ஒன்று உங்களுக்கு அதைப்பற்றி நன்றாகத் தெரியும், அல்லது அது என்னவென்று தெரியும், ஆனால் அதைப்பற்றி ஒருபோதும் உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லது அதன்மீது கவனம் செலுத்தியிருக்க மாட்டீர்கள்.

ஆம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற உங்களுக்குப் பிடித்த அனைத்துச் சமூக ஊடகத்தளங்களிலும் உங்களை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்க வைப்பது எது தெரியுமா? அது ஒரு பெரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. வலைப்பக்கங்கள் உருவாக்கும் மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வடிவமைப்பு நுட்பம் (design technique).

நீங்கள் சமூக ஊடகங்களுக்கு முந்தைய காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தியவர் என்றால், அந்த நாட்களில் வலைத்தளங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள், அந்த வேறுபாடு உங்களுக்கே புரியும். அப்போது இணையத்தில் வலைத்தளங்கள் இருந்தன, அத்தகைய ஒவ்வொரு தளத்திற்குள்ளும் வலைப்பக்கங்கள் இருந்தன. முதல் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க, பக்கத்தின் கீழே உள்ள ‘அடுத்து’ என்னும் இணைப்பைச் சொடுக்குவீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளடக்கம் அதிகமாக இருந்தால், முழுப்பக்கத்தையும் படித்துவிட்டு அப்படியே அடுத்ததைச் சொடுக்கி அடுத்ததைச் சொடுக்கிப் போனால், கூடிய விரைவில் சோர்ந்து போய்விடுவீர்கள். வெறும் படங்களாகவோ சிறிது லேசான உள்ளடக்கமாகவோ இருந்தால் அல்லது வேகவேகமாக நுனிப்புல் மேய்ந்து சென்றால், இன்னும் கொஞ்சம் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் அளவுக்குத் தெம்பு இருக்கும். அதிலும்கூட அடுத்தடுத்து ‘அடுத்து’ பொத்தானைச் சொடுக்குவதிலேயே சற்று சோர்ந்துபோவீர்கள். அதை அப்படியே இன்றுள்ள நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை முறை ‘அடுத்து’ பொத்தானைத்தட்ட வேண்டியுள்ளது? நீங்கள் பயன்படுத்தும் தளங்களில் ‘அடுத்து’ என்னும் பொத்தானே இருப்பதில்லை. இல்லையா? ஆயிரக்கணக்கான கதைகள், படங்கள், பொருட்களைப் பார்த்துக்கொண்டே, விரல்களால் உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். பதிவுகளும் படங்களும் முடிவில்லாமல் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் சோர்வே அடைவதில்லை. இல்லையா?

அப்படியே நேரடியாக இதுவும் அதுவும் ஒன்றென ஒப்பிட முடியாது. ஆனாலும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. இதை அப்படியே தொலைக்காட்சியின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒருகாலத்தில் ஒவ்வொரு முறையும் அலைத்தடத்தை (சேனல்) மாற்றுவதற்கு நீங்கள் எழுந்து தொலைக்காட்சியை நோக்கி நடந்துசெல்ல வேண்டியிருந்தது அல்லவா? அதனாலேயே நீங்கள் அலைத்தடங்களை அதிகமாக மாற்றவும் இல்லை. அதனால் மொத்தத்தில் அலைத்தடங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. பின்னர் தொலைவியக்கி (ரிமோட் கண்ட்ரோல்) வந்ததும் அலைத்தடங்களை மாற்றுவது மிகவும் எளிதானது. இப்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் சிறைப்பட்ட ஒரு பெரும் கூட்டம் உருவானது. அலைத்தடங்களை மாற்றுவதற்கு, தொலைவியக்கியைக்கூடத் தேடவேண்டியதிராத – அதிலிருக்கும் பொத்தான்களை அழுத்த வேண்டியிராத – இதைவிட வசதியான இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். அதுதான் இப்போது இணைய உலகில் நடந்துள்ளது. முடிவிலா உருள் என்னும் வடிவில். அதன் புண்ணியத்தில்தான் நாமெல்லாம் மீளவே முடியாத புதைகுழியில் விழுந்ததுபோல மாட்டிக்கொண்டுவிட்டோம்.

இது எப்போது தொடங்கியது தெரியுமா?

நீண்ட காலமெல்லாம் இல்லை. அசா ரஸ்கின் என்ற ஒருவர் 2006-ஆம் ஆண்டுதான் இந்த வலைத்தள வடிவமைப்பு முறையைக் கண்டுபிடித்தார். ஆம், சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். 2006-க்கு முன் இணையத்தில் முடிவிலா உருள் என்ற இந்த நுட்பம் இருக்கவே இல்லை.

அதைவிட முக்கியமாக, அசா ரஸ்கின் தனது கண்டுபிடிப்பைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

“என்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு ஒரு நாளைக்கு சுமார் 2,00,000 மனித ஆயுட்காலங்களை வீணடிக்கக்கூடியது”. ஆம், திரும்பவும் படியுங்கள். 2,00,000 (இரண்டு இலட்சம்) ஆயுட்காலங்கள். மணிகள் அல்ல. நிமிடங்கள் அல்ல. 2,00,000 ஆயுட்காலங்கள் – அதுவும் ஒருநாளில்.

முடிவிலா உருள் எனும் இந்தக் கண்டுபிடிப்பு கணினிகளில் மட்டும் என்று இருந்திருந்தால் அது வேறுகதையாக இருந்திருக்கும். சொடுக்கி (மவுஸ்) அல்லது தொடுதளத்தைப் (டச்பேடு) பயன்படுத்தி உருட்டிக்கொண்டே இருப்பதில்கூட  நீங்கள் சோர்வடையத்தான் செய்வீர்கள். ஆனால் உங்கள் பெருவிரல் சாதாரணப்பட்டதில்லை. பேனா வாளைவிட வலிமையானது என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். இப்போது உங்கள் பெருவிரல் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது என்கிறார்கள். சிலருடைய – எல்லோருடையவும் அல்ல – விரல்கள்தாம் அவ்வளவு வலிமையுடையனவாக இருக்கின்றன. மற்றவர்கள் அவர்களின் வலிமைமிக்க படைப்புகளுக்கு அடிமைகளாகத்தான் இருக்கிறோம். வலிமைமிக்க படைப்புகளுக்கு அடிமைகளாக இருந்தால்கூடப் பரவாயில்லை. எந்தப் பயனுமில்லாமல் வந்து குவியும் குப்பைகளுக்கு அடிமைகளாக இருப்பவர்கள்தாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். குப்பைகளை உருவாக்கிக் கொட்டுபவர்கள்தாம் வலிமையான விரல்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு 2006-இல் நிகழ்கிறது. உடனடியாக இணையம் பயன்படுத்தும் எல்லோரையும் ஆட்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப்பின் இந்தச் சுழலில் சிக்கிக்கொண்டு சீரழியும் பேரழிவாளர்களுக்கு மெக்காஃபி (McAfee) நிறுவனம் புதியதொரு பெயரிடுகிறது. நடைபிண உருட்டிகள் (zombie scrollers). ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலே முடிவில்லாமல் உணர்வில்லாமல் உங்கள் விரல்களை உருட்டத் தொடங்கும் வேளையில் நீங்களும் நடைபிண உருட்டி ஆகிவிடுகிறீர்கள்.

நீங்கள் நடைபிண உருட்டியா?

ஆம்?

இல்லை?

நிச்சயமாக?

உறுதியாகத் தெரியவில்லையா?

“நான் ஒரு நடைபிண உருட்டியாகவே இருந்தாலும், அதில் என்ன தவறு? அதனால் சமுதாயத்திற்கு என்ன கேடு செய்துவிட்டேன்?”

பொதுவாகவே தகவல் புரட்சிக்குப் (information revolution) பிந்தைய இக்காலத்தில் தகவல் மீச்சுமை (information overload) என்பது மனிதகுலத்துக்கே ஒரு பெரும் சாபக்கேடாக உள்ளது. இந்தக்கேடு முடிவிலா உருள் மூலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருத்தரை ஒரு செம்புத்தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம் என்கிற சூழலில், கடலளவு உப்புநீரைக் காட்டிக் குழப்பும் வேலையைத்தான் தகவல் மீச்சுமை செய்கிறது.

“எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எக்கச்சக்கமாகப் படிப்பார். அதுவும் தகவல் மீச்சுமைதானே? அப்படியெல்லாம் மிதமிஞ்சிப் படிக்கும்போது அவருக்கும் தகவல் மீச்சுமையால் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுந்தானே?”

அவர் நிறையப் படிக்கும்போது நிறையக் கற்றுக்கொள்கிறார். அதுவே தகவல் மீச்சுமை ஆகுமா என்றால், இல்லை.

எப்படி?

கிட்டத்தட்ட ஆரோக்கியமான உணவை நிறைய உண்பதற்கும் நொறுக்குத் தீனிகளை நிறைய உண்பதற்குமான வேறுபாடு போலத்தான் இது. ஒருவர் நிறையப் படிக்கும்போது, ​​பெரும்பாலான நேரங்களில் அவர் என்ன படிக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார், அவர் அதை ஒரு நோக்கத்துடன் செய்கிறார். அந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பாக ஓர் ஒழுங்கோடு அறிவை உட்கொள்கிறார். அதே வேளையில், நாம் ஒரு சமூக ஊடகத்தளத்தில் முடிவில்லாமல் உருட்டும்போது, நம் மூளையின் அனுமதியின்றியே அக்கு அக்காகத் தொடர்பில்லாத தேவையில்லாத தகவல்களை ஓர் இயந்திரத்தைப்போலச் சேகரிக்கிறோம். நம்மிடம் அளவில்லாத தகவல்கள் உள்ளன. ஆனால் அவை கந்தல் கந்தலாக இறைந்து கிடக்கின்றன. அவை அனைத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும் நமக்குத் தெரிந்து தொலைய மாட்டேன் என்கிறது. அது மட்டுமில்லை. அவற்றை எதற்கேனும் பயன்படும் வகையில் ஒழுங்காக அடுக்கி வைக்கவும்கூட நமக்கு நேரம் இல்லை. உருட்டுவதில் அவ்வளவு மும்முரமாக இருக்கிறோம்.

ஓர் ஆர்வமுள்ள வாசகர் அவர் விரும்புவதைச் சேகரிக்கிறார். தங்கத்தைத் தேடினால் தங்கம் சேகரிக்கிறார், கற்களைத் தேடினால் கற்கள் சேர்க்கிறார், குப்பையைத் தேடினால் குப்பைகளை அடைகிறார். ஆனால் சமூக ஊடகங்களில் முடிவில்லாமல் உருட்டும் நாம் என்ன செய்கிறோம் பாருங்கள். நமக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. தங்கம், கல், குப்பை என்று கைக்குக் கிடைப்பதை எல்லாம் அள்ளிக்கொள்கிறோம். அவற்றோடு சேர்த்து நமக்குத் தேவையே இல்லாத என்னென்னவோவும் வந்து சேர்ந்துவிடுகிறது. இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறோம்? நம்மிடம் இருக்கும் இடத்தையெல்லாம் தேவையானவற்றோடு சேர்த்து தேவையில்லாதவற்றையும் இரண்டறக் கலந்து அடைத்துவைத்து வீணாக்கியிருக்கிறோம். அதுதான் வேறுபாடு.

தகவல் மீச்சுமை மனித மூளைக்கு என்ன கேடு செய்கிறது? அமிர்தம் எப்படி நஞ்சாகிறது?

கணினியில் இருப்பதைப் போலவே மனித மூளைக்கும் தற்காலிக நினைவகம் (working memory) ஒன்று உள்ளது. இது தகவல்களைப் பயன்படுத்தி ஏதேனும் சமைத்துக்கொண்டே இருக்கும் இடம். அதைத் தரவுகளால் நிறைக்கும்போது, அதன் ​​செயலாக்கத்திறன் படுத்துவிடும். சமையல் அறையில் எல்லாச் சாமான்களையும் கொட்டினால் அது சரக்கு அறை ஆகிவிடும். அப்புறம் சமையல் எப்படிச் செய்வது? இன்னும் துல்லியமாகச் சொல்வதாக இருந்தால், அஞ்சறைப்பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு அதைக் குப்பைத்தொட்டி ஆக்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஆகிவிடுகிறது.

தகவல் மீச்சுமை நம் முடிவெடுக்கும் திறனை நம்மிடம் இருந்து பறித்து  முடக்குகிறது. முடிவெடுக்க உதவும் ‘தகவலை’ விடக் குழப்பத்தைக் கூட்டும்  ‘தரவு’களைக் கண்ணில் காட்டி நம்மைக் குருடாக்கி முடிவெடுக்க விடாமல் செய்கிறது அல்லது எடுக்கும் முடிவு சரியானதாக இல்லாமல் செய்துவிடுகிறது. இதனால் தனிமனிதர்கள் குழப்பம், விரக்தி, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சமூகங்கள், தகவற்கொழுமை (infobesity), தகவற்பித்தம் (infoxication), தகவலுளைச்சல் (information anxiety) போன்ற சொல்லாடல்களை உருவாக்குகின்றன. தொலைநோக்கில் பார்த்தால் இது ‘தரத்தை’ (quality) விட ‘அளவு’க்கு (quantity) முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாட்டை நோக்கி மனிதர்களை நகர்த்துகிறது. மனித மூளையை மாற்றியமைக்கிறது. பயனற்ற குப்பைத் ‘தரவு’களுடன் வருபவர்கள், பொன்னான ‘தகவல்’களைக்கொண்டு வருபவரைவிட அதிகம் போற்றப்படுவார்கள். ஆம், இது எதில்போய் முடியும் என்று உணராமலேயே தகவலைக் காட்டிலும் தரவை அதிகம் மதித்து, மனித இனத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம்.

தகவல் மீச்சுமை மட்டுமல்ல. முடிவிலா உருள் என்னும் இந்த நுட்பம் இன்னும் பல பிரச்சனைகளையும் இறக்கிவிட்டுள்ளது. முடிவிலா உருள் என்பது ஒரே நேரத்தில் பல்பணிசெய்தல் (multi tasking) போன்றது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என்று தொடர்பில்லாத இடம் – பொருளுக்குச் சூழல் மாற்றம் (context switching) செய்துகொண்டே இருப்பது. எழுத்திலிருந்து ஒலிக்கு, ஒலியிலிருந்து காணொளிக்கு, காணொளியிலிருந்து படங்களுக்கு என்று நொடிக்கு நொடிக்கு மாறிக்கொண்டே இருக்கச்செய்வது. அழுகையையும் அச்சத்தையும் சிரிப்பையும் சினத்தையும் அடுத்தடுத்த நொடிகளில் வரவைப்பது. ஓடுபொறியில் (treadmill) ஓடிக்கொண்டே, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, இசை கேட்டுக்கொண்டே, புத்தகம் படித்தால் எப்படி இருக்கும்! அப்படியான வேலை. ஒரே நேரத்தில் பல்பணி செய்தல் உற்பத்தித்திறனைக் கொல்லும் உத்தி என்று ஏற்கனவே பல ஆய்வாளர்கள் நிறுவிவிட்டார்கள். அப்படியானால், முடிவிலா உருளும் அதையேதானே செய்யும்! அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. எதிலும் ஆழ்ந்த அறிவில்லாமல், எந்த வேலையைச் செய்வதிலும் ஆர்வமில்லாமல் – ஆற்றல் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகள் இதன் பாதிப்பை உணரும்போது அது சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகத்தாமதமாகி இருக்கும்.

முடிவிலா உருள் நமக்கு வழங்கிக்கொண்டே இருப்பவற்றை உட்கொள்வதில் நாம் மும்முரமாக இருக்கும் வேளையில், அது நம்மை உட்கொண்டுவிடுகிறது. நமது முக்கியமான பணிகளிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் நம்மை விலக்கி வைத்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் எதிர்மறையான கருத்துகளைக் காட்டி நம்மை எதிர்மறையான மனிதர்களாக ஆக்கிவிடுகிறது. இதற்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். கேடுருள் (doom scrolling). கெட்ட செய்திகளைத் தேடித்தேடி உருட்டிக்கொண்டிருப்பது. இதற்குச் சமீபத்திய உதாரணங்களில் ஒன்று கோவிட்-19 செய்திகள். உண்மையான பெருந்தொற்று ஒருபக்கம் உலகைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேளையில் கேடுருள் அதைவிடப் பெருந்தொற்றாக இறங்கி ஆடிக்கொண்டிருந்தது. எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும் அதைக் கேட்டுக்கொண்டு அதற்கடுத்த அதைவிடப் பெரிய கெட்ட செய்தியை எதிர்பார்த்து உருட்டிக்கொண்டே போவது. உளவியல் உலகில் அதிகரித்துவரும் மன அழுத்தம், பதட்டம், தற்கொலை உட்பட்ட அனைத்துவிதமான தற்கொடுமை நடத்தைகளுக்கும் முடிவிலா உருளுக்கும் இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எந்நேரமும் கெட்ட செய்தி தேடி உருட்டுவதால் மட்டுமல்ல அதன் பெயர் கேடுருள். உருட்டியே கெட்டழிவோம் என்பதற்காகவுந்தான் அப்பெயர்.

இது எப்படி நடக்கிறது?

இவை அனைத்துக்கும் டோபமைன் (dopamine) என்ற ஹார்மோன் காரணமாக இருக்கிறது. இன்பத்தை அனுபவிக்கும்போது டோபமைன் அளவு அதிகமாகவும், இன்பம் குறைவாக இருப்பதாக உணரும்போது குறைவாகவும் இருக்கும். நாம் முடிவிலா உருளில் இறங்கியதும் நமக்கு மகிழ்ச்சி தரும் பதிவுகளைப் பார்க்கும்போது டோபமைன் அளவு எகிறுகிறது. மேலும் மேலும் அதுபோலப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். கிடைக்கும் என்றும் நம்புகிறோம். ஆனால் ஒவ்வொரு பதிவும் நாம் விரும்புவது போல் மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது சாத்தியமும் இல்லை. நம் உருட்டு நம்பிக்கையோடு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உருட்டுவதுதான் இப்போது சிரமமாகவும் இல்லையே! மனம் மேலும் மேலும் மேலும் எதிர்பார்க்கிறது. உருட்டுவதை நிறுத்தியவுடன் டோபமைன் அளவு குறைகிறது. மீண்டும் கைபேசியைக் கையில் எடுக்கிறோம். இந்த வட்டம் அப்படியே தொடர்கிறது. இது டோபமைன் கண்ணி (டோபமைன் லூப்) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்ணியை உடைக்க நாம் முழு உள்ளத்தெளிவோடு ஏதாவது செய்யவேண்டும். அப்படி எளிதாக உடைத்துவிட முடியாத மாதிரியான வடிவமைப்பே முடிவிலா உருள்.

சரி இவ்வளவு மோசமான இந்த வடிவமைப்பு நுட்பத்தை ஏன் சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்றுகின்றன? விடை மிக எளியது. இது நமக்குத்தான் மோசமானது. அந்த நிறுவனங்களுக்கு அல்ல. அவர்களின் ஒரே குறிக்கோள் அவர்களின் தளத்தில் நம் செயல்பாட்டை அதிகரிப்பது. அப்படி நாம் அங்கேயே கிடந்து மாரடிக்கும் போது அவர்களின் சில விளம்பரங்களைச் சொடுக்குவோம். அதன்  மூலம் அவர்கள் உங்களிடம் ஏதாவது விற்றுவிடுவார்கள். அதுதான் அவர்களின் வெற்றி.

“நான் அப்படி எதையும் வாங்குவதில்லை. இணையத்தை என் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன்” என்பீர்கள்.

மகிழ்ச்சி. அப்படியானால் உங்களைத் தங்கள் தளத்தில் செயல்பட வைப்பதன் மூலம் அந்த நிறுவனம் எதையும் பெறவில்லை, ஆனால் அவர்களின் பதிவுகளைப்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மட்டும் நிறையப் பயன்பெறுகிறீர்கள். அதானே?

நீங்கள் ஒன்றுமே வாங்கவேண்டாம். அவர்களின் தளத்தில் உள்ள விளம்பரங்களைப் பார்த்தாலே போதும், விளம்பரங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை. நம்மைப் போன்றவர்களின் இந்தச் செயல்பாட்டுப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் அதிகமான விளம்பரதாரர்களைத் தங்கள் தளத்தை நோக்கி ஈர்ப்பார்கள்.

அது மட்டுமில்லை, இப்படியும் இருக்கலாம். நீங்கள் என்னவெல்லாம் வாங்குகிறீர்கள் என்பதைக்கூட உணராமல் வாங்கிக் குவித்துக்கொண்டு இருப்பவராகவும் இருக்கலாம்.

அப்போதே வாங்க வைத்துவிட வேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கம் இல்லை. என்றோ ஒருநாள் வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு உங்கள் மனக்கூடையில் எடுத்துப்போட வைத்துவிட்டால்கூட அது அவர்களுக்கு வெற்றிதான். இன்று எதையும் வாங்கவில்லை என்றால் ஒருபோதும் வாங்க மாட்டீர்கள் என்று பொருள் இல்லையே! நம்மை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்கவைப்பதன் மூலம் இன்றைக்கு வாங்குபவர்களை அடையாளம் கொள்ளவும் செய்கிறார்கள். நம்மை நாளைக்கு வாங்குபவராக மாற்றுவதற்கான விதையையும் விதைக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?

நிறுவனங்கள், ‘பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு’ (Corporate Social Responsibility) பற்றிப் பெரிதுபெரிதாகப் பேசுகின்றன. இந்தச் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் பெருநிறுவனச் சமூகப்பொறுப்பாக எதைக் கூறுகின்றன? தம் பல்லாயிரங்கோடி இலாபத்தில் ஒரு சிறுதுளியை சில தொண்டுப் பணிகளுக்காகப் பகிர்ந்துகொள்வதையா? அது போதாது. அதைவிடப் பலமடங்கு பொறுப்பாகச் செயல்பட முடியும். முடிவிலா உருளுக்குப் பதிலாக அதற்கு முந்தைய தொழில்நுட்பமான பக்கப்படுத்தல் (pagination) என்ற வடிவமைப்பு முறையைப் பயன்படுத்தினால், பல்லாயிரங்கோடி மனித மூளை விரயமாவது தடுக்கப்படும். அதெல்லாம் ஆகும் வேலையா என்றால் இரண்டுக்கும் நடுவில் ஓர் ஊடுபாதையும் இருக்கிறது. முடிவிலா உருளிலேயே ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை, “ஏய், பிழைப்பற்றவனே! உன் வாழ்வின் மதிப்புமிக்க இன்னும் 15 நிமிடங்களை வீணாக்கிவிட்டாய்!” என்று நினைவூட்டலாம்.

“அதில் அவர்களுக்கு என்ன இலாபம்?” என்பீர்கள்.

சரிதான். அதெல்லாம் செய்தால்தான் அதற்குப் பெயர் பெருநிறுவனச் சமூகப்பொறுப்பு. சிகரெட் பெட்டிகளிலும் மதுப்புட்டிகளிலும் போட முடிகிறதே! அதைவிடப் பலமடங்கு கொடூரமான இந்தப் போதைக்கும் அதைச்செய்ய முடியாதா என்ன?

***

பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

என் எழுத்தில் என் நிலம்…

0

கார்த்திக் புகழேந்தி

றிஞர் தொ.ப தனது நேர்காணல் ஒன்றில் பண்பாடு குறித்த கேள்வியில், “பண்பாடு என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி, அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்களின் பல்வேறு வகையான கருவிகள், புழங்குப் பொருட்கள், இசை-கலை-இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு. அது நிலம் சார்ந்துதான் பிறக்க இயலும்.” என்று குறிப்பிட்டிருப்பார்.

நான் எனது எழுத்தில் என் நிலத்தைக் கையாள்வது என்பது எனது பண்பாட்டை கையாள்வதுதான். அடிப்படையில் அது சொந்த ஊர் சார்ந்த பெருமிதமாகப் புரிந்து கொள்ளப்படுவது ஒரு சிறு வாதைதான். அதுவும் திருநெல்வேலிக்காரன் பிரச்சனைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒருவகையில் முன்னோடிகள் நிறையபேரால் உண்டாக்கப்பட்ட, பழகிய தடத்தில் நடந்து வருகிறவன் என்ற ‘சேர்ப்பு’ ஒருவகையில் துலக்கம் என்றாலும் பலவகையில் துக்ககரமானது.

‘திருநெல்வேலிக்காரர்கள் இன்னும் எதை எழுதாமல் மிச்சம் வைத்திருக்கிறீர்கள்’ என்பது போன்ற ஒரு தொனியை நான் எழுதவந்த ஆரம்பத்திலேயே காதால் கேட்டுவிட்டேன். அப்போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். “எழுதி முடிக்கப்பட்ட நிலம் என்று இங்கு எதுவுமே இல்லை.”

தொ.ப குறிப்பிடுகிற பண்பாட்டின் அசைவு நிலம் சார்ந்து, அங்கு வாழும் மக்கள், மொழி, கலை, கருவிகள், பொருட்கள் என்கிற தொடர்ந்த வரிசைகளில் வெளிப்படுகிறபோதும், அவை யாருடைய வாய்மொழியாக, எவர் வாழ்வில் இருந்து, எந்தத் தரப்பின் கதையாடலாக உருமாற்றம் கொள்கிறது என்பதும் இங்கே பெறுமதி வாய்ந்தது. பண்பாடு என்பது மேலோட்டமான, பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை கொண்டதாகச் சுருங்கிவிடுமா என்ன? நிலக்கிழாரின் கதையும், நிலமற்ற, நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனின் கதையும் பண்பாட்டின் அசைவுக்குள் ஒன்றாகப் புழங்கிக்கொண்டு விட்டதா என்ன?

என் எழுத்தின் ஊற்று என் முந்தைய கதைசொல்லிகளிடமிருந்து துவங்குகிறது. அலைகுடி வாழ்வின் வேர்தொடர்ச்சியை மிச்சம் வைத்திருக்கும் கதைசொல்லி மரபில் உற்பத்தி ஆனதால், நிலத்தைத் தள்ளியிருந்து எழுதிப் பார்க்கிறேன். அகலாது அணுகாது தீக்காய்வார் போல, தள்ளி நின்று பார்க்கும்போது, ஊரின் அம்சம் சிலசமயம் வியப்பூட்டுகிறது. சிலசமயம் அச்சமூட்டுகிறது. அங்கிருந்தே நான் ஊரின் பெருமிதங்களை வாகைப்பூக்களாகச் சூடிக்கொள்வதில் இருந்து வெளியேறுகிறேன். கசடுகளை உள்ளபடி முன்வைக்கத் தொடங்குகிறேன்.

இது நாட்டாரியல் தந்த அனுபவம். கழனியூரன் சொல்லித்தந்த ‘பாடம்’. “மீனை வாங்க எதற்கு சந்தைக்குப் போகிறாய், தண்ணீருக்குள் இறங்கு” என்று என்னை இந்தப் பெருவெளிக்குள் தள்ளிவிட்டுப் போனவர் அவர். எனது சொந்த நிலம் சார்ந்து, காலந்தோறும் மாறிவரும் பண்பாட்டுக் கூறுகளையும் சமூக வரலாற்றையும் அறியவும், ஆராயவும், உருவாக்கவும், மீட்டுருவாக்கம் பண்ணவும் ’நாட்டாரியல்’ பண்பு தருகிற சுதந்திரத்தை வேறு எங்கும் நான் கண்டடையவில்லை. அதனால்தான் என்னால் ஒரே சமயத்தில் தொ.ப-வுக்கு மாணவனாகவும் கழனியூரனுக்கு ‘சிஷ்யப்புள்ள’யாகவும் இருக்க முடிந்தது.

இந்த மனோபாவம் நிலவெளியின் எல்லைகளைக் கடக்கச் செய்தது. ஊரை எழுதுவது என்பது பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, மூளிகுளம், புதுப்பேட்டை, தயாபரன் தெருக்கள் மட்டுமா? மேற்கு மலங்காட்டில் மேய்ச்சல் மாட்டைத் தொலைத்துவிட்டு, அதைத்தேடி அலையும் மோதலில் மக்களின் தெய்வமாகிப்போன “வெட்டும்பெருமாள்” எந்தப் படித்துறையில் முங்கிக் குளித்தான்? சிலோன் கொச்சிக்கடை சந்தைக்குத் தூத்துக்குடி வழியாக கருவாடு ஏற்றி அனுப்பி, வணிகம் பண்ணிய மைதீன் முதலாளியின் “வள்ளம்” எந்தக் கரையில் மூழ்கியது.

ஆரம்ப எழுத்துக்களில் நிலம் என்பது ஒரு மதிப்பீடாக எனக்குள் எழவில்லை. அதிதீவிரமாக நான் பிறந்து, வாழ்ந்த வட்டாரத்தில் புழங்கும் மொழியின் மீதே என் ‘ஆவலாதி’ சுழன்றது. அதை நானறிந்த மனிதர்கள் மேலான வாஞ்சை என்றே கற்பனை பண்ணிக்கொண்டேன். அவர்கள் வாய்மொழிச் சொற்களுக்குத் தரும் அதீத கவனம் என்றுகூடப் புரிந்துகொண்டேன். பிறகு சொற்களின் இடத்தைப் பொருட்களும் பொருள்களின் இடத்தை அனுபவங்களும் சூழ்ந்துகொண்டன. வெகுபிந்தியே இவை அனைத்தையும் அடக்கிய வாழ்வும் அதில் இடைப்படும் சிடுக்குகளும், வாய்க்கால் கரைக்கு இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் உள்ள நிலமும் வாழ்வும் மொழியும் வெவ்வேறானது என்னும் தெளிவையும் வெளிப்படுத்த முனைந்தேன்.

நான் இருகரைகளிலும் முங்கிக் குளித்த கதைசொல்லி. இப்போது என் எழுத்தில் நான் கையாள்கிற ‘நிலம்’ அந்த இரு கரைகளுக்குமான உரையாடலாக மாறியிருக்கிறது அல்லது உரையாடலுக்கு முன்பான மழையின் அறிகுறியாகவேணும் சூல் பிடித்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்த உருவகத்தை எனக்குள் நான் ஏற்படுத்திக்கொள்ள முன்னோடிகள், சகபாடிகள் பலர் எழுத்து, கலை, இலக்கியத்துறையின் வழி பங்களித்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில்தான் ஒரு சொல்லை-பொருளை-கேள்விகளை-மனநிலையை-வரலாற்றின் சம்பவங்களை-புனைவாகவும் அல்புனைவாகவும் நிலத்தின் ஊடாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுத்து மட்டுமல்ல எனது வாசிப்புமே கூட இப்போது இந்த ரீதியிலே திரும்பி இருக்கிறது. காலில் சேறும் புழுதியும் ஒட்டாத, நிலமில்லாத எந்த சொல்லும் எனக்கு ஈர்ப்பைத் தருவதில்லை. வற்றா நதி என்கிற முதல் தொகுப்பு எழுதிவந்த காலத்தில் எனக்குள் இருந்த நிலம் வெள்ளந்தியானது. ‘வெஞ்சினம்’ தொகுப்பில் அது கேள்விகளால் ஆனது. இந்த நிலத்தில்தான் கொன்றவனும் கொல்லப்பட்டவனும் தெய்வங்களாகிறார்கள். இந்த நிலத்திலே குடிப்பெருமைக்காகக் கொலையுண்டோர் தெய்வங்களாகி குலங்காக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்!

மூப்பு பழுக்கும் கிழவியால் தன் சொந்த குடிக்குள்ளேயும் அழித்தொழிப்பை நிகழ்த்த முடிகிறது. வாழ்க்கை சுடர்விடும் முன்னே அழிந்துபோனவள் தீப்பாய்ந்த அம்மனாக அருள் பாலிக்கிறாள். ‘பண்பாட்டு இழிவு’ எனக்கொள்ளப்பட வேண்டிய இந்த இறுக்கமான, பழங் கட்டுமானங்கள் கீழே தாழ்ந்து, ‘முன்னோர் மகத்துவமானவர்கள்’ எனும் அரசியலற்ற பார்வை நிலைபெறுவதும், வஞ்சிக்கப்பட்ட உயிர்களும் தெய்வங்களும் இன்று வேறொரு புறம் அரசியல் உள்நோக்கத்தோடு ‘காவி’ மயமாக்கப்படுவதும் கண்முன்னே என் நிலத்தில் நிகழ்கிற கூற்று. கூற்றே என்னுள் கதையாகிறது. என் நிலம் கதைகள் மலிந்த பாறைக்கொத்தளம். கொந்திப் புரட்டினால் பாம்பும் நெளிகிறது; ஊற்றும் சுரக்கிறது. இரண்டையும்தான் எதிர்கொள்ளணும்.

***

கார்த்திக் புகழேந்தி – எழுத்தாளர், கதை சொல்லி , நாட்டாரியல் ஆய்வாளர். பிறந்தது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “வெஞ்சினம்” வெளியாகியுள்ளது. தொடர்புக்கு: writerpugal@gmail.com

குணங்கெட்ட வியாதி

0

அகராதி

ங்கரி கடைவீதியின் சந்துபொந்துகளில் நடந்துகொண்டிருந்தாள். நடையில் அவசரத்தன்மை அதீதமாகத் தெரிந்தது. இதன் விளைவாக பாத்திரக்கடைச் சந்தில் இரண்டாவது முறையும் நடந்தாள். வியர்த்த முகமும் கடல் போன்று விரிந்த விழிகளின் நிதானமின்மையும் பாத்திரக்கடைக்காரர் தசரதன் கவனத்தில் விழுந்துவிட, தினேஷின் நண்பர் என்னும் உரிமையும் இணைந்து கொண்டது.

‘’மேடம் ஏதும் தொலைச்சுட்டிங்களா?’’

மறுப்பின் மொழியாக இடமும் வலமும் வேகவேகமாகத் தலையை அசைத்தவாறு நடந்து கடந்தாள். பெரிய கண்கள் கடலின் அலைகள் இப்படியும் அப்படியும் நகர்ந்து உள்வாங்குவதைப்போல அலைந்து உள்வாங்கின. வியர்வையில் அக்குள் மற்றும் முதுகுப்பக்கம் ஈரமாகிவிட்டிருந்த ஜாக்கெட்டைப் பார்த்து, பாத்திரக்கடையில் விலை பேசிக்கொண்டிருந்த அம்மா ஒருவர் ‘’சில்லுனு ஊதக்காத்து வீசுது இப்படி வேர்த்துருக்கு இவங்களுக்கு!!’ என பக்கத்தில் இருந்த பூ போட்ட சுடிதாரிடம் சொன்னார். சுடிதார் பெண் கழுத்தை வளைத்துத் திரும்பி தலையைச் சாய்த்து சங்கரியின் நனைந்த ஜாக்கெட்டைப் பார்த்து ‘ஏன்னு தெரியலையே’ என்பதாகக் கீழ் உதட்டை வெளித்தள்ளியது.

சங்கரி எதுவும் கவனிக்காமல் கடைவீதியை விட்டு வெளியேவந்து சிவன் கோவிலின் திட்டில் உட்கார்ந்த கொண்டாள். சற்றுத்தள்ளி தெப்பக்குளம் பார்வையில் தெரிந்தது. கல்லூரி மாணவிகள் இருவர் மீன்களுக்கு இரையை கைகள் தூக்கி அரைவட்டமாகத் தண்ணீருக்குள் இறைத்துக்கொண்டிருந்தனர். தண்ணீரைப் பிளந்துகொண்டு தலை தூக்குவதும் உணவை உண்டபின் உடலை ஆட்டி விசுக்கென்று உள்ளே நுழைந்து காணாமல் போவதுமாய் இருந்த மீன்கள் சங்கரியின் பதற்றத்தைச் சற்றுக் கலைத்தன. அரைவட்டம் தோன்றித்தோன்றி மறைந்துகொண்டிருந்தது.

மீன்களுக்கு இப்படிப் பிரச்சினைகள் இருக்காதுதானே? அப்படியே இருந்தாலும்தான் என்ன யார் என்ன சொல்வார்களோ என்று பயந்து சாக வேண்டியிருக்காதில்லையா? அதனதன் போக்கில் வாழ்ந்து, கழித்து, செத்துப்போகும் பாக்கியம் பெற்றவைகள்! மனிதர்களுக்கு மட்டும் அப்படி எந்த வாய்ப்பும் இருக்காது. அப்படி வாய்ப்புகள் இருந்தாலும்கூட பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் விடப்போவதில்லை. வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளுவதும் கடினம். மீன்களைப் பார்த்துக்கொண்டே சிந்தனைவயப்பட்டவளுக்குச் சட்டெனச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. சத்தம் கேட்டு தாத்தாவின் கைப்பிடித்துச் சென்றுகொண்டிருந்த எட்டு வயது மதிக்கத்தக்க குட்டிப் பாப்பா திரும்பிப் பார்த்துச் சிரித்தது. இனி அறிமுகம் இல்வாதவர்களைப் பார்த்து முகம் மலரும் குழந்தைத்தனம் மெல்லமெல்லத் தொலையும். பக்கத்தில் இருக்கும் மனிதர்கள்தானே நம் நாட்களை ஆட்டுவிப்பது, நமக்குள் அஸ்திவாரமிட்டுக் குடியிருப்பது. அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்து, நினைத்துச் செயல்பட வைப்பது அப்போ நாம் நாமே இல்லையா?

நான் என்பது யார் யாரோ!! யார் யாரோ நான்!

சிரிப்பை மறைத்துக்கொண்டு எழுந்து கோவில் உள்ளேபோய் கருவறையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினாள். புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருந்த உருவங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். எத்தனை உழைப்பு, நுணுக்கம், கவனக்குவிப்பு, ஈடுபாடு, ரசனை, அர்ப்பணிப்பு!! வடிவமாகச் செதுக்கும்போது சிற்பி வியர்த்திருப்பானா, தடுமாறியிருப்பானா அல்லது தடுமாறியதால்தான் நுணுக்கங்களை வடித்தெடுக்க முடிந்ததா?? எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பான். சங்கரியின் பிரச்சினை பார்க்கும் எல்லோரையும் எல்லாவற்றையும் பிரச்சினை கண்கொண்டு பார்க்க வைத்தது. மீன்கள் நினைவிற்கு வந்தன. யார் யாரோ நான், மீண்டும் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

கோபுரத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். எதிர்வீட்டில் இருக்கும் அம்ரிதா பைக்கில் கோவிலைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தவள் இவளைப் பார்த்து வண்டியைத் திருப்பிவந்து கால்களை ஊன்றி நின்றாள். கண்களின் சிரிப்பு குளிர் கண்ணாடியைத் தாண்டியது.

“மார்க்கெட் சுத்தி முடிச்சுட்டு சிவா தரிசனமா, என்ன சிரிப்புக் கொஞ்சுது கண்ணகி முகத்துல! வீட்டுக்குத்தானே?’’

‘’ஆமா அம்ரி’ என்றவாறு பில்லியனில் அமர்ந்துகொண்டாள். அம்ரிதாவின் சில கேள்விகளுக்கு பதில் கூறினாள். தொடர்ந்து வந்துகொண்டிருந்த காற்றின் வேகத்தில் கேட்கவில்லையென தவிர்த்து மறுபடியும் சிந்தனைவயப்பட்டாள். ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் அமர்ந்திருப்பவரின் எண்ணங்களை மேலெழும்பச் செய்துவிடுகிறது.

அவளுக்கு அப்படி ஒரு நோய் இருப்பதையே தாமதமாகத்தான் உணர்ந்திருந்தாள். வெளியில் சொல்லவும் முடியாத சிகிச்சையும் சட்டென எடுக்க முடியாத குணங்கெட்ட வியாதி!

உள்ளூர் டாக்டர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்ததில் இப்படி தனி குண வியாதிகள் பல உண்டு. உள்மனம் சார்ந்த பிரச்சினை. சைகலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும் என்றார். பெண்ணாக இருந்துகொண்டு இப்படியெல்லாமா என வாய்ப்பிளந்தாள் தோழி ஒருத்தி. அதிலிருந்து யாரிடமும் சொல்லக்கூடாதென நினைத்தாள். அவளுக்கும் இது நினைக்கும்போது ஒவ்வாமையாகத்தான் இருந்தது. எந்த வகையில் என்றால் வெளியில் முந்திரிக்கொட்டைத்தனமாகச் செயல்பாடு ஏதும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பய நடுக்கம்தான் முதலில் தோன்றியது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடந்துவிடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என ஒரு குரல் உள்ளே ஒலித்தபடி இருந்தது.

இன்று காலையில் நிகழ்ந்த தர்மசங்கடம் சங்கரியின் நினைவிற்கு வந்தது. தினேஷின் நண்பர் வந்திருந்தார். இவளை அழைத்து தினேஷ் அவரை அறிமுகம் செய்துவைத்தார். அந்த மனிதர் சிரித்தபடி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கையில், அவ்வளவுதான்.. பத்து விரல்களையும் அதனதன் கைக்குள் உள் இழுத்துக்கொள்ளும் பகீரத முயற்சி போல் மடக்கி இறுக்கிக்கொண்டாள். பிறகு இனி இங்கு நிற்கவே கூடாது என முடிவெடுத்து சங்கரி உள்ளே ஓடிப்போய்விட்டாள். தினேஷ் இதைச் சிறிதும் விரும்பவில்லை. வந்திருந்தவரும் அதிர்ந்து முகம் மாறியவராய் எதுவோ காரணம் உருவாக்கி உடனடியாகச் சென்றுவிட்டார். தினேஷை சமாதானப்படுத்துவது எப்படி என்று சங்கரி திணறினாள். அவளால் உண்மையைக் கூறவே முடியாது. அதுவும் தினேஷின் குணாதிசயங்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னால் அவர் பைத்தியமாகவே மாறி விடுவார். எப்படியேனும் தானேதான் சரிபண்ண வேண்டும், வேறு வழியில்லை என்று நினைத்தாள்.
நேற்று சாப்பிட்ட பர்கர் ஒத்துக்கொள்ளவில்லை. இரவிலிருந்தே உடம்பு சரியில்லை. வாமிட் இரண்டுமுறை எடுத்துவிட்டேன், மேலும் இப்போது வாமிட்டிங் சென்ஸினால்தான் ஓடிவிட்டேனென்று தினேஷை சமாதானப்படுத்தினாள். உர்ரென்று ஆஃபிஸ் கிளம்பினார்.

முதன்முதலில் எப்போது ஆரம்பித்தது என்பதே தெரியவில்லை. ஆனால் அவள் அதனை நன்றாக உணர்ந்தது ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேருந்தில் வருகையில்தான். வலதுபுற பெண்கள் இருக்கையில் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள். ஒருமணிநேரப் பயணம். நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் பயணிகள் பேருந்தை நிரப்பியிருந்தனர். அவள் அருகில் லைட் கிரே கலர் பேண்ட், பிளாக் செக்டு கலர் ஷர்ட் காம்பினேஷனில் பியூர் கோல்ட் மணக்க ஒருவன் நின்றிருந்தான். ஏறி வரும்போதே பார்த்திருந்தாள். அருகில் வந்துநின்றான். அருகில் என்றால், அவள் முதுகு அருகில் இருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டான். அவள் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கும் முந்தைய நிறுத்தத்தில் அவன் இறங்குவதற்காகப் மணிக்கட்டை நோக்கி நடக்கையில்தான் தெரிந்தது. அவ்வளவு நேரமும் அவனது காலில் அவள் சாய்ந்து உட்கார்ந்து இருந்திருக்கிறாள். இரண்டாம் படியருகில் நின்று திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு இறங்கினான். கண்களில் மீனொன்று சர்ரென மேலெழுந்தது பயந்தா வியந்தா என்று தெரியவில்லை. சரி ஏதோ பயண மனநிலையில் கூட்டத்தில் கவனிக்கவில்லை என்று அவளே சுய சமாதானம் செய்துகொண்டாள்

சித்தி வீட்டு கிரகப்பிரவேசத்திற்குச் சென்றபோது நன்றாகவே தெரிந்தது. சித்தப்பாவின் நண்பர்கள் குழுவில் ஒருவன் சங்கரிக்கு மிக அருகில் நின்று பேசுகையில் சமாளிக்க முடியாத அளவிற்கு உடல் செயல்பாடு ஆரம்பித்தது. விளைவுகளை இன்று யோசித்தாலும் ‘திக் ‘ என்று இருந்தது. அவசரமாக பாத்ரூம் செல்வதுபோல அந்த இடம்விட்டு விலகி வந்துவிட்டாள் .

நிலைமை இதுதான், உயரமான ஆண்கள் யாரைப் பார்த்தாலும் ஆங்காங்கே வியர்க்க ஆரம்பிக்கிறது. கட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் மேலும் என்னென்னவோ தோன்றுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியான செயல்புரிய எண்ணம் தலைத்தூக்கும். இதை எப்படி வெளியில் சொல்ல முடியும்!?? இத்தனைக்கும் ஆண்களுடன் அவ்வளவாக நட்போ பழக்கமோ சிறு வயதிலிருந்தே இருந்ததில்லை. இன்று மார்க்கெட்டில் இவள் காய்கறி வாங்கிக்கொண்டிருக்கும் போது அதே கடைக்கு வந்த புளு டீஷர்ட் போட்ட இளைஞன் மிக யதார்த்தமாக காய்கறிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு அருகில் நின்றுகொண்டான். பக்கத்தில் குரல் கேட்டுத்தான் திரும்பிப் பார்த்தாள் அந்த உயரம். .. இவ்வளவு அருகில் வேறு நிற்கிறானே! எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறத் தொடங்கினாள். பார்க்காமல் கீழே குனிய அருகில் வெண்டைக்காய் நோக்கி நீண்ட அவனது முடிகள் கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு தலையைத் தூக்கிக் கண்களால் அழைப்பவனைப் போல் சாய்ந்து படிந்த இடது கை.. ஓ காட்! பரபரவென்று மயிர்க்கால்கள் சிலிர்க்கத் தொடங்கின. தவிப்பு கூடிக்கொண்டே இருந்தது. அந்தக் கையை எடுத்துத் தன் தோள்மேல் இட்டு அணைக்கச் செய்யவேண்டும். கையைப் பார்த்தவாறு நிமிர்ந்து திரும்பினால் மாஸ்க் அணிந்திருந்த அவன் முகத்தில் தெரிந்த ஆழமான கண்கள் நினைத்ததைத் தொடரு எனக்கேட்டன. கைவிரல்கள் காய்கறிகளைப் பொறுக்கிய பிளாஸ்டிக் கூடையைப் பற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறியது. அப்படியே போட்டுவிட்டுக் கையில் இருந்த அவளது பையை இறுகப் பிடித்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். அவன் திரும்பிப் பார்க்க, கடைக்காரர் முழித்துக்கொண்டிருந்தார். அந்தப் பதட்டத்தில்தான் பாத்திரக்கடைச் சந்தில் இரண்டாவது முறையும் நடந்தாள்.

கூடவே இருக்கும் தாத்தா, மாமா, மச்சினன் உறவுகளில் இருப்பவரிடம் எந்த எண்ணமும் தோன்றுவதில்லை. அன்று பக்கத்து வீட்டுத் திருமணத்தில் நிலைமை மிக உச்சம். மாப்பிள்ளையின் நண்பன் சங்கரிக்குப் பக்கத்தில் எதிராக நின்று பேசப்பேச அவனது நெஞ்சமும் கைவிரல்களும் மட்டுமே அவள் கண்ணிற்கு பூதாகரமாய்த் தெரிந்தது. சாய்ந்து கட்டிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியதைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் அந்த இடம்விட்டு நகர்ந்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்று யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டாள். பின்பு வருத்தம்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மென்சஸ் தலைவலி அதுதான் விழாவிலிருந்து பாதியில் வந்துவிட்டதாகச் சொல்லிச் சமாளித்திருந்தாள்.

போதாக்குறைக்கு பாத்திரக்கடைக்காரர் தசரதன் வழியில் தினேஷைப் பார்த்து, “மேடமுக்கு உடம்பு சரியில்லையா” எனக் கேட்டு வைத்திருந்தார். தினேஷ் வந்து விசாரித்தார். சமாளித்து ஏதோ பதில் சொல்லிவிட்டாள். ஒருமுறை பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் போய்விட்டு வரும்போது இதுபற்றி யோசித்துக்கொண்டே ஊருக்கு வடக்கே இருக்கும் கல்குவாரி வரைக்கும் ஸ்கூட்டியில் சென்றுவிட்டாள். இதுபற்றிய சிந்தனையில் படுக்கையில் தலைகூட சீவாமல் கலைந்து அப்படியே கிடப்பாள், வழக்கமான வேலைகள் நின்றுபோகும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று யூடியூப் வீடியோக்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கையில்தான் க்ளிக் ஆனது. எஸ் இதுதான் சரி. அகண்ட கண்கள் வழி கிடைத்ததாய் ஒருமுறை மூடித் திறந்தன.

உடனடியாக அம்ரிதாவை அழைத்து எண்ணியிருந்ததைக் கூறினாள். காரணம் இதுதான் எனக் கூறாமல் கண்ட நினைவுகள் வருவதாக, சரியானத் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகக் கூறி அமிர்தாவுடன் அந்த ஊரிலேயே உள்ள யோகா மையத்திற்குச் சென்றாள். மாலை வேளையில் போய் வருவதாக ஏற்பாடாயிற்று. கூடவே இருவேளை லலிதா சகஸ்ர நாமம் சிரத்தையுடன் சொல்லிக்கொள்ள முடிவுசெய்தாள். இந்தச் சங்கடத்தை அம்ரிதாவிடம் சொல்லவில்லை. எப்படி எடுத்துக் கொள்வாளோ, அவளுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் எல்லோரிடமும் சேதி பரவினால் தனது நிலை என்னவாகும் என யோசித்து மனது சரியில்லை. பதட்டமாக இருக்கிறது என்னக் காரணம் என்றே தெரியவில்லையென்று கூறிதான் யோகா மையத்திற்கு வந்திருந்தாள்.

எப்படியும் யோகா கிளாஸ் மாற்றி விடுமென நம்பினாள். அங்குதான் சென்னையிலிருந்து சிறப்பு வகுப்பிற்காக வந்திருந்த யோகா ஆசிரியர் கோபால் அறிமுகமானார். கோபால் அறிமுகமானதிலோ, யோகா ஆசிரியராக இருப்பதிலோ ஒன்றும் பிரச்சினையில்லை.. அமைதியானக் குரலில் நிதானமாகப் பேசி குறிப்புகள் கொடுக்கும் கோபால் ஒரு உயரமான ஆண்!!

யோகா மையத்தை விட்டு நின்றால் அம்ரிதா ஏன் என்னவென்று துளைத்தெடுப்பாள். தினேஷ் சேரும்போதே தொடர்ந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும். அரைகுறையாகப் பாதியில் விட்டு வரக்கூடாது, யோகா ஒரு வரம், அற்புதமானக் கலை என்றெல்லாம் வகுப்பு எடுத்திருந்தான். அவ்வப்போது சரியாகப் பயிற்சிகளைத் தொடர்கிறாளா என்ற கேள்வியும் உண்டு. குறைந்தது ஆறுமாதமாவது தொடர்ந்து போகவேண்டும் என்று அம்ரிதா, தினேஷ் இருவரும் சொல்லியிருந்தனர். விதியோ கோபால் ரூபத்தில் வந்து நின்றது.

யோகா கிளாஸில் சங்கரியின் பக்கத்தில் இருந்த அம்ரிதாவிற்கு கழுத்து, கைகள் என அடிக்கடி வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் சங்கரியைப் பார்த்துக் குழப்பம். ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும் பெண் சிலநேரம் மட்டும் இப்படித் திருதிருவென முழித்துக்கொண்டு, எச்சில் முழுங்கிக்கொண்டு, வியர்த்துப் போவதேன்! பயிற்சி சொல்லிக் கொடுப்பவரைப் பார்க்காமல் தலையைத் திருப்பி பராக்கு பாத்துக்கொண்டிருக்கிறாளே. ஏதாவது பிரச்சினை என்றால் நம்மிடம் சொல்லலாமே எப்படிக் கேட்பது?? யோசிக்க யோசிக்க அம்ரிதாவின் குழப்பம் கூடியது. இந்த நிலையே தொடர்ந்துகொண்டிருக்கவும்,
இன்று பேசிவிடுவதென அவளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றாள்.

சங்கரி அவ்வளவு எளிதில் வாய் திறக்கவில்லை. அவள் மறைக்க மறைக்க அம்ரிதாவின் பிடிவாதம் ஆர்வத்துடன் அதிகரித்தது. சுத்தமாக இருபது நிமிடங்கள் பேசிய பிறகுதான் பேச்சை வாங்க முடிந்தது. ஒருமாறியாயிருந்தது அம்ரிதாவிற்கு,, சிறிது நேரம் அதுபற்றியே மனதிற்குள் ஓட, தனக்கு. அசூயைக்குப் பதில் ஏன் இத்தனை ஆர்வம் வருகிறது என்று தனக்குத்தானே வியந்துகொண்டாள்!!?!

என்னென்ன தோன்றும் என்று தோண்டித் துருவிக் கேட்டாள். சங்கரிக்கும் உள்ளுக்குள்ளேயே மருண்டு மருண்டு மனது வெளிறிக் கிடந்தது. பேசினால் தேவலாம் என்ற நிலை வந்திருந்தது. பேருந்து பயணத்திலிருந்து கோபால்வரை ஒன்று விடாமல் சொன்னாள். அவள் சொல்லும் ஓட்டம் தடைபடாமல் இடையிடையே அம்ரிதா கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள். இறுதியாகவும் ஒரு கேள்வியிருந்தது அம்ரிதாவிடம் …

‘’நீ ஏன் சைக்ரியாடிஸ்ட் கிட்ட போகல?’’

‘’அதுலாம் வேணாம்’’ என்னும் சங்கரியின் கடல் போன்ற கண்களில் பதட்டமான சோகத்தினூடாக ரகசியமாய் வண்ண மீனொன்று பளீரென்று துள்ளிக் குதித்து மறைந்துகொண்டது.

*
அகராதி – aharathi26@gmail.com

நல்ல பாம்பு

1

இளங்கோவன் முத்தையா

கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய வாசலில் வந்துநின்ற மதுரை செல்லும் பேருந்தில் முதல் ஆளாக ஏறி இடம் தேடிய பிரபாவுக்கு பேருந்தின் நடுப்பகுதில் உட்கார இடம் கிடைத்தது. மூன்று பேர் உட்காரும் இருக்கையின் ஓரத்திலிருந்தவர் பிரபாவை நடுவில் உட்காரச் சொல்லும்விதமாக லேசாக அசைந்து கொடுத்தார். அமர்ந்தவுடன் சட்டையின் இரு பட்டன்களைத் திறந்து, காலரை பின்பக்கம் இழுத்துவிட்டு, வெக்கையின் கசகசப்பு போவதற்காக காற்று தன் உடலைத் தழுவ அனுமதித்தான்.

நள்ளி தாண்டியபிறகே வந்த நடத்துனரிடம் “மாட்டுத்தாவணி ஒண்ணு” என்று சொல்லி பயணச்சீட்டை வாங்கியவுடன், மொபைலில் ரேணுகா அத்தையை அழைத்து, “பஸ் ஏறிட்டேன் அத்த, மதுரைல எறங்கிட்டு கூப்பிடறேன்” என்றான். சில மணிநேர இடைவெளிகளில் அவனது இருப்பை போன் செய்து அறிவித்தபடியே இருக்கவேண்டும் என்ற அத்தையின் பிடிவாதத்திற்கு கடந்த மூன்று வருடங்களாகப் பழகியிருந்தான்.

அவனிடமிருந்து அழைப்பு வராவிட்டால், அத்தையிடமிருந்து வந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். சற்று நேரத்தில் நான்குவழிச்சாலையின் வெப்பக்காற்று ஜன்னல் வழியாக உள்நுழைந்து இமைகளை அழுத்தியதில் லேசாகக் கண்ணயர்ந்தவன் சாத்தூர் ரிங் ரோட்டில் ஏறியிறங்கிய பயணிகளின் சத்தத்தில் கண் விழித்தான்.

பேருந்தில் வரிசையிலேறி, இடம் தேடியவர்களில் ஒருவனது முகத்தைப் பார்த்ததும் பிரபாவுக்குச் சுரீரென்றது. சட்டென்று முன்னிருக்கையின் முதுகில் தலையைச் சாய்த்து முகத்தை மறைத்துக்கொண்டான். மூன்று வருடங்களில் உதடு, முகமெல்லாம் கறுத்து, கண்கள் பஞ்சடைத்து, ஆளே வற்றிப் போயிருந்தாலும், அவனைப் பார்த்த நொடியில் அவன் சவுந்தர்தான் என பிரபாவால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது.

தலையைக் குனிந்திருந்தவன் சட்டென்று ஏதோ தோன்றியவனாக தனது பேண்ட் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் மாட்டிக்கொண்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தான். தீப்பெட்டி ஆபிஸில் முதலாளியின் ஏசி அறைக்குள் நுழையும்போது மட்டுமே பயன்படுத்துவதற்காக எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கொரோனா மாஸ்க் இப்போது அவனை மறைத்துக்கொள்ளப் பயன்பட்டது. எதிர் வரிசையில் இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் ஜன்னலுக்கு அடுத்த சீட்டில் அமரப்போகும்முன் பேருந்தின் பின் வரிசையிலிருந்த யாரையோ பார்த்து கையசைத்தான் சவுந்தர். அவனும் தன்னைப் பார்த்திருப்பானோ என்று யோசித்து பதற்றமான பிரபாவின் மூளை உடனடியாகப் பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தது. முதலில் தன் கைவசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்றுதான் யோசித்தான். ஒருவேளை வெளியூர்களில் தங்க நேர்ந்தால் அதற்குப் பணம் தேவைப்படும் என்பதுதான் அவனது முதல் எண்ணமாக இருந்தது. மீண்டுமொரு தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியதிருக்குமோ என்பதை யோசிக்கும்போதே பிரபாவுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது. எப்போதும்போல கைச்செலவுக்கு மட்டும் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கிளம்பியது தவறோ என்று யோசித்தான்.

பிரபா நேற்றைக்கே மதுரைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நேற்று அதிகாலை எழுந்ததிலிருந்து ரேணுகா அத்தை பேயடித்தது போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. சாமி படங்கள் வைக்கும் அலமாரியிலிருந்து திருச்செந்தூர் முருகன் படம் கீழே விழுந்து கண்ணாடி உடைந்து நொறுங்கியிருந்ததுதான் அதற்குக் காரணம். “சவுனமே சரியில்லையேய்யா…” என்று அத்தை நிறுத்தாமல் புலம்பிக்கொண்டிருந்தது. ‘சமயலறைச் சன்னலின் கொக்கியைச் சரிசெய்யாததால் அதன் வழியே இரவுகளில் மனம்போல உள்ளே நுழைந்து பாத்திரங்களை உருட்டும் கறுப்புப் பூனையின் வேலை அது’ என்று அத்தையிடம் சொல்ல நினைத்து பிறகு ‘கறுப்பு பூனை வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டுக்கு ஆகாது’ என்று புதிதாக ஒரு ஒப்பாரி வைக்கும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டான்.

முருகன் படம் உடைந்ததால் அத்தை நேற்று அவனை மதுரைக்குப் போக அனுமதிக்கவேயில்லை. ஒருமுறை இதேபோல ஏற்றிவைத்த தீபம் தொடர்ந்து அணைந்துபோகிறது என்று அழுது பிரபாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப மாட்டேன் என்று சின்னக் குழந்தைபோல அடம்பிடித்தது. தீப்பெட்டி ஆஃபிஸுக்குப் போயே ஆகவேண்டும் என்று அத்தையைப் புறந்தள்ளிவிட்டுப் போன பிரபா மாதாகோயில் இறக்கத்தில் வேகமாக வந்த பைக் மோதியதில், கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு திரும்பினான். அதிலிருந்து பிரபாவுக்கும் அத்தையின் சகுனத்தடைகளை எதிர்த்துப் பேசும் மனமிருப்பதில்லை. இன்று காலை மதுரைக்குக் கிளம்பும்போது வழக்கம்போல இந்த முறையும் அத்தை சேலை முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதது. “உனக்கு ஒண்ணும் ஆகாதுய்யா” என்று மந்திரம்போலச் சொல்லியபடியே மாடத்தில் விளக்கேற்றி, திருநூறு பூசி அனுப்பி வைத்தது. அது அவனுக்குச் சொல்லப்படும் வார்த்தைகளில்லை, அத்தை தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொள்வது என்று பிரபாவுக்கு புரியாமலில்லை. ஆனாலும் “போய்ட்டு பத்திரமா வந்திருய்யா” என்று அத்தை அழுதபோது பிரபாவுக்கும் லேசாகக் கண் கலங்கத்தான் செய்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகராட்சியின் ஒரு சின்ன வார்டில் குடியிருந்த மக்கள், அப்போது நடந்த கவுன்சிலர் தேர்தலில் நடந்த சின்னப் பிரச்சனை அரசியல் லாபங்களுக்காக ஊதிப் பெருக்கப்பட்டு, சாதிக்கலவரமாகி, இரு சாதி மக்கள் இரு தரப்பாகப் பிரிந்து வெட்டிக்கொண்டதில் சிறுசும், பெருசுமாகப் பதினோரு பேர் செத்துப்போனார்கள். அதில் பிரபாவின் வீட்டில் தங்கி, பிரபா படித்த அதே இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில், விளையாட்டாகப் பிரச்சார வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருந்த ரேணுகா அத்தையின் மகனும் ஒருவன். இரவு பத்து மணிக்கு மேல் ஊருக்குள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு இருட்டுக்குள் யார், யாரை வெட்டியது என்று புரியாமல் நடந்த கலவரத்தில் அவன் யாரால் கொல்லப்பட்டான் என்பதுகூட பிரபா தரப்புக்கு இன்றுவரை தெரியாமலிருந்தது. அந்தக் கொலைகளில் தொடர்புடைய பலர், இந்த இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஊர்களில் கொல்லப்பட்ட பழிவாங்கும் படலத்தின் ஓலங்கள் அத்தையின் காதுகள் வரை பரவியிருந்தது. பிரபா அவன் முதுகில் ஆழமாக விழுந்த ஒற்றை வெட்டோடு தப்பிப் பிழைத்திருந்தான். அதனாலேயே அவன் வெளியூர் கிளம்புகிறான், அதிலும் மதுரைக்குப் போகிறான் என்றாலே, அத்தை அவனை விட அதீத பதற்றத்திற்குள்ளாகி, அவன் திரும்பி வரும் வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே பெயர் தெரியாத நோய்க்கு கணவனையும், பிறகு வாலிப வயதிலிருந்த ஒற்றை மகனையும் பறிகொடுத்திருந்தாள் அத்தை. அதனால்தான் ‘மதுரையில் இருப்பது எக்காலத்திலும் பாதுகாப்பில்லை’ என்று தன் அண்ணன் செல்வம் தனது மகன் பிரபாவைக்கொண்டுவந்து கோவில்பட்டியில் தனது பொறுப்பில் விட்டபோது, கொஞ்சம் கூடத் தயங்காமல் செத்துப்போன தன் மகனுக்குப் பதிலீடாக பிரபாவைச் சுவீகரித்துக்கொண்டது ரேணுகா அத்தை.

‘சாமிப்படம் கீழே விழுந்து உடைந்தது உண்மையிலேயே கெட்ட சகுனம்தானோ’ என்று யோசித்த பிரபா “ஆண்டவா காப்பாத்து” என்று வாய்க்குள்ளேவே முனகவும் செய்தான்.

முதலில் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று பிரபாவுக்குத் தோன்றியது. ‘முன் வாசல் வழியாக இறங்கினால் சவுந்தரைக் கடந்துதான் போகவேண்டும். எப்படியும் அவன் பார்வையில் பட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால், அடுத்த நிறுத்தத்தில் பின் வாசல் வழியாக இறங்கிவிடலாமா?’ என்று யோசித்தான். நடத்துனர் சவுந்தரிடம் வந்து நின்றபோது அவன் பேருந்தின் பின் பக்கம் திரும்பிப் பார்த்தான். பிரபாவும் தன்னை மறைந்த்துக்கொண்டு பின்னால் திரும்பினான். பின் பக்கம் நான்கைந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு ஆள் தனது கைகளை உயர்த்தி “மாப்ள நான் டிக்கெட் எடுக்கறேன்” என்றார்.

அவர் சவுந்தரின் மாமாவும், தயாநிதியின் அப்பாவுமான வைரவேல்தான் என்ற தகவலை அவன் மூளை அவனுக்குத் தெரிவிப்பதற்கு முன்னதாகவே தலையிலிருந்து கால் வரை நடுக்கம் பரவி, கைகள் உதறலெடுக்க ஆரம்பித்தன. மாஸ்க்கை கண்களின் கீழ் இமைகள் வரை இழுத்துவிட்டுக்கொண்டான். மனம் வேகவேகமாக வெவ்வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்தது. கோவில்பட்டி ரேணுகா அத்தை வீட்டுக்கு வந்த புதிதில் பக்கத்திலிருக்கும் கடைக்குப் போவதாக இருந்தால் கூட, பாதுகாப்புக்காக இடுப்பில் ஒரு கத்தியைச் செருகி வைத்துக்கொண்டு போகும் பழக்கமிருந்தது. சில நேரங்களில் அதை அத்தையே எடுத்துக்கொடுக்கும். பின்னர் போகப்போக அதற்கான தேவை இல்லாமல் போனதால் கடந்த ஒரு வருடமாக அதைத் தொடுவதே இல்லை. அது அத்தை வீட்டுப் பரணில் வைத்த அவனது தோள்பையில் கிடக்கிறது. மதுரைக்குப் போகும்போதாவது அதை எடுத்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி முன் சீட்டில் நெற்றியை முட்டிக்கொண்டான்.

“ரொம்பக் கோவக்காரன்யா அவன், மகன வெட்டுனது நீதான்னு அவனுக்குத் தெரியாமலா இருக்கும், பழி வாங்கற வரைக்கும் அவன் தூங்கவே மாட்டான், என் பயமே அவங்கண்ணுல நீ பட்றக்கூடாதுங்கறதுதான்” என்ற வைரவேலைப் பற்றிய அத்தையின் குரல் காதுகளில் ஒலிப்பது போல இருந்தது. இத்தனைக்கும் சின்ன வயதில் வைரவேலில் பெரிய மீசையையும், அவரது ஓங்குதாங்கான உருவத்தையும், கணீரென்ற குரலையும் பார்த்து, அவர் தூரத்தில் வரும்போதே பயந்து ஓடும்போது இதே அத்தை மட்டும் வைரவேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே கிண்டல் பேசும். பரம்பரையாய் ஊருக்குள் பெரியதொரு ஆட்டுத்தொட்டியும், சில கறிக்கடைகளும், பரம்பரைச் சொத்துகளும், ஊர்ப்பிரச்சனைகள் வரும்போது பஞ்சாயத்து பேசி முடிக்கும் அளவுக்கு செல்வாக்கும் கொண்ட வைரவேல் அத்தையின் கிண்டல்களுக்கு மட்டும் சிரித்தபடியே இருப்பார். “என்னத்தா எப்ப வந்த?” என்பதைத் தாண்டி வேறு வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வராது.

கோவில்பட்டி ரிங் ரோட்டில் பேருந்துக்காக நிற்கும்போது தன்னை யாராவது வேவு பார்த்து வைரவேலிடம் சொல்லியிருப்பார்களோ என்று யோசித்து, தன்னுடன் பேருந்துக்காகக் காத்திருந்தவர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டுவரப் பார்த்தான். எதுவும் புரிபடவில்லை.

பேருந்து ஆர்.ஆர்.நகர் சிமிண்ட் ஃபேக்டரி தாண்டி விருதுநகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பிரபா தலையைக் குனிந்தபடியே அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் யாரைச் சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தானோ அவர் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். யாரைச் சந்திக்கப் பயந்தானோ அவன் முன்னால் உட்கார்ந்திருந்தான். பேருந்து வழக்கத்துக்கு மாறாக மிக மெதுவாக ஓடுவது போலத் தோன்றியது பிரபாவுக்கு.

கண்களை இறுக மூடியவுடன் தயாநிதியின் இடது தோள் பட்டைக்குக் கீழே பிரபா முழு வேகத்தில் இறக்கியிருந்த அரிவாள், தயாநிதியின் இடது கையின் முக்கால் பாகத்தில் எலும்பை வெட்டி இறங்கியதில், வெறும் தோலில் ஒட்டியபடி அவனது கை தொங்கிக்கொண்டிருந்த காட்சியும், அந்த வலி, வேதனையோடு அவன் வலது கையில் பிடித்திருந்த கறி வெட்டும் கத்தியை பிரபாவை நோக்கி வீச நகர்ந்த போது அவனுக்குப் பின்னாலிருந்த யாரோ தயாநிதியின் தலையும், கழுத்தும் சேருமிடத்தில் இறக்கிய கதிரரிவாள் அவனது பாதிக்கழுத்து வரை பாய்ந்த நொடியில் அவன் மயங்கிச் சரிந்ததும், தன்னை நான்கைந்து கரங்கள் கொத்தாக அள்ளித் தூக்கி ஒரு ஆம்னி வேனுக்குள் திணித்து நகர்ந்ததும், தயாநிதியின் விறைத்த கண்கள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததும் பிரபாவுக்கு நினைவுக்கு வந்தது. கடந்த நான்கு வருடங்களாக அவனது கனவிலும், நினைவிலும் அவனால் மறக்க முடியாத, அவனது நிம்மதியைக் காவு வாங்கிய காட்சிகள் அவை. தன் தலையை நிமிர்த்தாமலேயே பயணத்தைத் தொடர்ந்தான் பிரபா.

“விருதுநகர் கலெக்டர் ஆஃபிஸ் எறங்குங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டவுடன் தலையைத் தூக்கிய பிரபா, சவுந்தரையும், பின்னால் திரும்பி வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருந்த தயாநிதியின் அப்பா வைரவேலையும் பார்த்தான். சட்டென்று எழுந்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரை நகரச் சொல்லி பின் பக்கமாக இறங்குவதற்காக நகர்ந்தான். அதே நேரத்தில் வைரவேலும் சட்டென்று எழுந்து நின்றார். பிரபா முகத்தைத் திருப்பியபோது சவுந்தரும் எழுந்து நின்று வைரவேலைப் பார்த்தான். இருவரும் ஒரு சேர பிரபாவையே பார்ப்பது போலிருந்தது. பிரபா மாஸ்க்குக்கு மேலே தன் உள்ளங்கைகளை வைத்து தன் முகத்தை மேலும் மறைக்க முயற்சித்தான். பிரபாவின் தலைக்குள் ரத்தம் அதன் முழுவேகத்தில் பாய்ந்தது.

வைரவேல் பிரபாவின் முகத்தையே பார்த்தபடி முன்னகர்ந்து வந்தார். பேருந்து மெல்லத் தன் வேகத்தைக் குறைத்து நின்றது. அவர் பிரபாவைக் கடந்து போகும்போது அவன் முகத்தை ஒரு தடவை நின்று நிதானமாகப் பார்த்தார். அவர் பிரபாவை விடவும் உயரமாக இருந்ததை அவன் உணர்ந்தான். “ஏய்யா, செல்வம் மவன் பிரபாகரன்தான நீ, இங்கயா இறங்கப் போற?” என்றார். அவரது குரலிலொரு ஆச்சரியத்தொனி இருந்தது.
பிரபாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எதையோ யோசித்த வைரவேல் பிரபாவின் முதுகில் தனது பரந்த உள்ளங்கையை வைத்து லேசாகத் தள்ளி “சரி வா எறங்கு” என்றார். பிரபாவின் கழுத்து சில்லிட ஆரம்பித்தது. பிரபா முன்னால் பார்த்தான். சவுந்தர் முதலில் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தான். பிரபாவுக்கு தான் வகையாகச் சிக்கிக் கொண்டது தெரிந்தது. கீழே இறங்கியவுடன் இருவரது கையிலும் சிக்காமல் தலைதெறிக்க ஓடிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவன் பேருந்துக்கு வெளியே குனிந்து பார்த்து சூழ்நிலையைக் கணிக்க முயன்றான்.

படிக்கட்டில் இறங்கும்போது வைரவேல் தனது கையிலிருந்த ஒரு பையை பிரபாவின் கையில் கொடுத்து “இத வச்சுக்கய்யா, கீழ இறங்கிட்டு வாங்கிக்கறேன்” என்றார். பிரபா அவர் முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் எந்த உணர்ச்சிகளும் வெளிப்படாதது அவனுக்குள்ளிருந்த படபடப்பை மேலும் அதிகமாக்கியது, ஆனாலும் அவர் பையை நீட்டிக்கொண்டே இருந்ததாலும், அவருக்குப் பின்னாலிருந்தவர்கள் அவரை நெருக்கி இறங்க முயன்றதாலும், அவர் கொடுத்த பையை வாங்கிக்கொள்வதைத் தவிர பிரபாவுக்கு வேறு வழி தெரியவில்லை. முதலில் பிரபா இறங்க, படிக்கட்டின் பக்கவாட்டில் இருந்த கைப்பிடிக் கம்பியை இரு கைகளாலும் பிடித்து, ஒவ்வொரு படியாக மெல்ல இறங்கினார் வைரவேல். இறங்கியவுடன் சட்டையை மேலேற்றிவிட்டு வேட்டியை அவிழ்த்து உதறி இறுகக் கட்டினார்.

அவர் கொடுத்த பையைக் கீழே போட்டுவிட்டு ஓடுவதற்காகப் பிரபா தயாரான நொடியில் “உங்க ரேணுகா அத்த வீட்லதான் இருக்கியாம்லய்யா, ஏதோ தீப்பெட்டி ஆஃபிஸ்ல வேல பாக்கறியாமே, நல்லாப் படிக்கற பய, இஞ்சினியரிங்க முடிச்சிருந்தீன்னா இன்னேரம் நல்ல வேலைக்குப் போயிருந்திருக்கலாம், உன் தலையெழுத்து” என்றார்.

பிரபாவையே பார்த்துக்கொண்டிருந்த சவுந்தரின் முகத்திலும் எந்த உணர்வுகளும் வெளிப்படவில்லை. பிரபா தயாநிதியின் தோள்பட்டையில் அரிவாளை இறக்கியபோது பிரபாவை நோக்கி ஒரு பெரிய கட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தவன்தான் சவுந்தர். சேகரண்ணன் மட்டும் அவனை மறித்து அவன் காலில் ஒரு இரும்புக்கம்பியால் அடிக்காமலிருந்திருந்தால் நிச்சயமாகப் பிரபாவின் தலை அன்று இரண்டாகப் பிளந்திருக்கும்.
“ஒரு டீ சாப்பிடுவோமாய்யா?” என்றார் வைரவேல்.

“இல்ல, எனக்கு ஒரு வேலை இருக்கு, அவசரமா போகணும், நான் கிளம்பறேன்” என்றபடியே தன் கையிலிருந்த வைரவேலின் பையை அவரை நோக்கி நீட்டினான் பிரபா.

“அட… பயப்படாதய்யா” என்றார்.

“பயப்படவெல்லாம் இல்ல, வேலையிருக்கு” என்றான் பிரபா. ஆனால் உண்மையில் வெகுவாகப் பயந்திருந்தான்.
“அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் அவருக்குள்ளாகவே மெல்லச் சிரித்தார். பிறகு “சரித்தேன்… உனக்குப் பயமில்லதான், பயமில்லாதவன்தான் மதுரைக்கு டிக்கெட் எடுத்துட்டு, விருதுநகர்ல மொகத்த மறைச்சுக்கிட்டு எறங்குனியோ… வா, வந்து ஒரு டீய சாப்பிடு” என்றார். பிரபா அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான்.

“மாட்டுத்தாவணிக்குதான டிக்கெட் எடுத்த, நீ கோவில்பட்டில பஸ்ஸேறுனப்பவே நான் உன்னைப் பார்த்துட்டேன். நான் திர்னவேலிலருந்து வாறேன்” என்று மெலிதாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிரபாவிடமிருந்து பையை வாங்கிக்கொள்ளாமலேயே பேருந்து நிறுத்தத்துக்கு பக்கவாட்டிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்து போய், அதன் வாசலில் போட்டிருந்த கடப்பா கல் பலகையின் மீது அமர்ந்தார். சவுந்தர் அவர் பின்னாலேயே நடந்து, அவரைக் கடந்து கடைக்குள் போய் நின்றுகொண்டான். பிரபா அவரெதிரில் போய் நின்று பையை அவரது முகத்துக்கு நேரே நீட்டினான்.

“உங்க ரேணுகா அத்தை எப்படி இருக்கா?” என்றார் வைரவேல்.

பிரபா பதிலேதும் சொல்லவில்லை.

“அவ, இவன்னு உங்கத்தைய மரியாதை இல்லாம பேசறேன்னு நெனைக்காத, என்கூடப் படிச்சவ அவ, நாங்க ரெண்டுபேரும் ஒரே வயசுக்காரய்ங்க”

“தெரியும், சொல்லியிருக்காங்க”

“சொல்லியிருக்காளா, வேறென்ன சொல்லியிருக்கா” என்றவர் “சொல்லிக்கற மாதிரியாயா நம்ம பொழப்பு இருக்கு, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்த ஊர்ல நல்லா வந்துச்சுய்யா கவுன்சிலர் எலக்சன்னு ஒரு சனியன், சாதாரண பிரச்சாரம், போஸ்டருக்காக வாய்த்தகராறுல ஆரம்பிச்சு, சாதித்தகராறா மாறி, வெட்டு குத்துன்னு, எத்தன உசுரு போச்சு, போன உசுரு போனதுதான், திரும்பி வரவா போகுது. ஆனா ஒண்ணுய்யா, அன்னைக்கு வெட்டுப்பட்டு செத்தவன் நெலம கூடப் பரவால்ல, உசுரோட தப்பிச்சவனுக நெலமைய யோசிச்சுப்பாரு, நாலு வருசமாச்சு, நெதம் செத்துச் செத்துப் பொழைக்க வேண்டியதிருக்கு, மிஞ்சுனவன்ல எளந்தாரிகள்லாம் உசுருக்கு பயந்து ஊர விட்டு ஓடிப்போய்ட்டான், என்னைய மாதிரி வாழவும் வழியில்லாம, சாவும் வராம கெழடு கட்டைக கொஞ்ச பேரு கோர்ட்டு, கேஸுன்னு கெடந்து அல்லாடுறோம், உங்க அப்பா பேர்லையும் கேஸு இருக்குல்ல” என்றார்.

“ஆமா” என்றபடி தலைகுனிந்து நின்றான்.

“யோசிச்சுப் பாரு, நடந்த கொலைகளுக்கும் உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம், ஒரு ஈயெரும்புக்குக்கு கூட கஷ்டம் வரக்கூடாதுன்னு நெனைக்கற ஆளு அவரு, என்னைய விட நாலு வயசு மூத்தவரு, உம்பேர்ல கேஸு வரக்கூடாதுங்கறதுக்காக தப்பே பண்ணாம கேஸ அவரு ஏத்துக்கிட்டு அலையறாரு. நீ என்னடான்னா இஞ்சினியர் படிப்ப நிறுத்திப்புட்டு தீப்பெட்டி ஆபிஸ்ல வேல பாத்துக்கிட்டு திரியற, இந்தா இருக்கானே சவுந்தரு, இவனும் காலேஜ பாதில விட்டுட்டு திருப்பூர்ல வேலை பார்த்துக்கிட்டுதான் இருக்கான், என் மவன்…” என்றவர் பேச்சை நிறுத்திவிட்டு மூக்கைச் சிந்தினார், தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடியே “தலையில்லாத முண்டமா சாகணும்னு அவன் தலைல எழுதியிருந்திருக்கு” என்றார்.

சவுந்தர் கடைக்குள்ளிருந்து வேகமாக வெளியே வந்து “மாமா, இவன்லாம் ஒரு ஆளுன்னு இப்ப எதுக்கு இவன இங்க நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க, லேய் பிரபா, நீ கத கேட்டது போதும், மூடீட்டு கெளம்பு” என்றான்.
பிரபாவுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து போல இருந்தது. தயாநிதியைத் தான் அவனது கையில் வெட்டிய காட்சி மீண்டுமொருமுறை கண் முன்னால் வந்து போனது.

“தயாவ நான்…” என்று இழுத்த அவனது முகத்தை வைரவேல் ஏறிட்டுப் பார்த்ததும் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்திக்கொண்டான்.

“ம்ம்ம்… என்றபடி அவனது கண்களை உற்றுப் பார்த்தார் வைரவேல். அவன் அமைதியாக இருந்ததும் “பரவால்ல, பயப்படாம சொல்லு” என்றார். பிரபா எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். சற்று நேரம் அவன் பேச நேரம் கொடுத்துப் பொறுமை காத்த வைரவேல், அது நடக்காது என்பதை உணர்ந்தவராக முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு “அத விடு, பிரபா நீ எனக்கொரு உதவி செய்யணும்” என்றார்.

“சொல்லுங்க” என்றான் பிரபா.

“உனக்குத் தெரியுமா, தெரியாதான்னு தெரியல, உங்க ரேணுகா அத்த மவன் நம்ம ஊர்ல நடந்த பிரச்சனைல வெட்டுப்பட்டு செத்தான்ல”

“ஆமா…?”

பிரபாவின் தோளில் கைவைத்தவர் ஒருமுறை செருமி சளியைத் துப்பினார். பிறகு “இது ரொம்ப நாள் உறுத்தல், நீ, ரேணுகா மவன், எம்மவன் தயா எல்லாரும் கூட்டாளிகன்னு எனக்குத் தெரியும், ஒண்ணுமண்ணா சுத்திக்கிட்டு இருந்தவய்ங்க தான, நீங்க ரெண்டு பேரும் படிச்சு இஞ்சினியரிங் காலேஜு வரைக்கும் போனீங்க, ஆனா தயா கொஞ்சம் மொரட்டுப் பய, உங்க அளவுக்குப் படிப்பும் வரல, அரசியல் அது இதுன்னு சுத்திக்கிட்டு இருந்தான். நடந்த பிரச்சனையை ஊதிப் பெருசாக்கி, வெட்டு குத்து வரைக்கும் போனதுல தயாவுக்கும் பங்கிருக்கு, அவனோட ஆளுகதான் மொதல்ல அருவாளத் தூக்குனாய்ங்கன்னும் எனக்குத் தெரியும்” என்றார்.

“நீங்க சும்மா இருங்க மாமா, இவன்ட்ட போய் தேவையில்லாததையெல்லாம் பேசிக்கிட்டு” என்றபடி இருவரது பேச்சுக்கும் இடையே வந்தான் சவுந்தர்.

வைரவேல் சட்டெனத் தன் குரலை உயர்த்தி “நான் பேசி முடிக்கற வரைக்கும் வாய மூடீட்டு இரு மாப்ள” என்றார்.

பிறகு பிரபாவின் பக்கம் திரும்பி “எம்மவன் தயாதான் ரேணுகா மவன வெட்டுனது” என்றார் பளிச்சென்று.
பிரபா அதை நம்ப முடியாதவனாக தலையை இடவலமாக அசைத்தான். பிறகு சட்டென்று சவுந்தரின் பக்கம் திரும்பி “உண்மையாகவா?” என்ற கேள்வியை விழிகளில் தேக்கி அவன் முகத்தையே பார்த்தான். சவுந்தர் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு “உங்களுக்கு லூசு பிடிச்சிருச்சா மாமா” என்று கத்தியபடியே முன்னகர்ந்து வந்தான். அவனைத் திருப்பிப் பார்த்த வைரவேலின் கண்களில் தெரிந்த நெருப்பைப் பார்த்தவுடன் தலையைக் குனிந்து கொண்டான்.

பிரபா வைரவேலைப் பார்த்து “தயா அப்படிச் செஞ்சிருக்க வாய்ப்பில்ல, எங்கத்த பையன் எங்கூட சுத்தறத காட்டிலும் தயா கூடதான் சுத்திக்கிட்டு இருப்பான். என்னையவிட அவன்தான் தயாவுக்கு ரொம்ப ஃபிரண்டு” என்றான்.

“இல்லப்பா, நான் சொல்றதுதான் உண்மை, எம்மவனும் வெட்டுப்பட்டு செத்தாங்கறதுக்காக அவன் ரேணுகாவோட ஒத்தப் புள்ளைய, அதுவும் அவன் ஃபிரண்ட வெட்டனாங்கறது பொய்யாயிராது, எம் மவன் பண்ணுன காரியத்துக்கு நான் என்னைக்கோ உங்க அத்த கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ருக்கணும், ஆனா ரேணுகா மொகத்துல முழிக்கற தைரியம் எனக்கு எந்தக்காலத்துலையுமே இல்ல…” என்றவர் பிறகு “ரேணுகா காலா நெனைச்சுக்கறேன்” என்றபடியே சட்டென்று மண் தரையில் மண்டியிட்டு அமர்ந்து பின் பிரபாவின் கால்களைத் தன் இரு கைகளாலும் பற்றினார்.

பிரபா துள்ளிப்பாய்ந்து இரண்டடி பின்னால் நகர்ந்துகொண்டான். பேருந்து நிறுத்தத்திலும் டீக்கடையிலுமிருந்த மொத்த சனமும் வயதில் மூத்த பெரியவரொருவர் ஒரு இளைஞனின் காலில் விழுவதையும், அவன் பதறி நகர்வதையும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

“எந்திரிங்க, எந்திரிங்க” பதறியபடி பிரபாவும், சவுந்தரும் ஒரு சேர வைரவேலைத் தூக்கி நிறுத்தி, அவரது சட்டை வேட்டியிலிருந்த மண்ணைத் தட்டினார்கள். தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் கடப்பாக் கல்லில் தலைகவிழ்ந்து அமர்ந்தார் வைரவேல். அவரது உடல் மட்டும் சிறிது நேரம் குலுங்கியபடி இருந்து பின் மெதுவாகச் சமநிலைக்கு வந்தது. பிறகு பிரபாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து விட்டேத்தியாகச் சிரித்தார்.

அவரது முகத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பிரபா. பிறகு எதையோ பேச ஆரம்பித்து பேச்சைத் தொடர நினைத்தவனின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. எதையோ சொல்ல ஆரம்பித்து அது முடியாமல் அவன் தவிப்பதை வைரவேல் உணர்ந்து விட்டிருந்தார். அவன் கண்களையே கூர்ந்து கவனித்தபடி அவனது கைகளைப் பிடித்து தனக்கருகில் அமர வைத்துக்கொண்டார்.

“நான் தயாவோட கைலதாம்ப்பா வெட்டுனேன்” என்று மெல்லிய குரலில் சொன்னபடி பேச்சைத் தொடர நினைத்தவனிடமிருந்து ஒரு கேவல் ஒலி மட்டுமே வெளியானது.

வைரவேல் பிரபாவின் தோள்தொட்டு அணைத்துக்கொண்டார். “தெரியும்யா, தெரியும்யா… எதையும் மனசுல போட்டுக்காதய்ய, நீ அவன வெட்டுனதும் தெரியும், அதுக்கும் முன்னாடி அவந்தான் உன்ன மொதல்ல வெட்டுனான்னும் தெரியும், ஆனா நீ தயாவைப் பாத்து ‘வெட்டாத மாப்ள, வெட்டாத மாப்ள’ன்னு சொல்லிக்கிட்டேதான் அருவாள வீசுனியாமே, அது நீ உன்னைக் காப்பாத்திக்கறதுக்காக செஞ்சது, எல்லா உசுருக்கும் தன் உசுரக் காப்பாத்திக்கற உரிமை இருக்கற மாதிரி உனக்கும் இருக்கு, அவனோட மொரட்டுத்தனம்தான் எல்லாருக்கும் தெரியுமே, நீ அவன பதிலுக்கு வெட்டலைன்னா, அவன் யோசிக்காம உன்ன வெட்டீருப்பான்னும் எனக்குத் தெரியும், அப்படி நடந்திருந்தா இன்னைக்கு உன் இடத்துல தயா நின்னுக்கிட்டு இருந்திருப்பான், என் இடத்துல உங்கப்பா நின்னுக்கிட்டிருந்திருப்பாரு, எனக்காவது மூணு பசங்க, உங்கப்பாவுக்கு நீ ஒத்தப் பிள்ளைல, செத்தே போயிருப்பாரு அந்த மனுசன், நடந்தது நடந்து போச்சு, இதையெல்லாம் தூக்கிச் சொமக்காக இத்தோட விடுங்கய்யா, இனிமேலாவது இந்தப் பழிவாங்கற பாவத்துல இருந்து வெளிய வந்து நிம்மதியா வாழ வழி பாருங்கய்யா” என்றார்.

பிரபா அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றான்.

“நடந்த எதையும் மாத்தவோ மறைக்கவோ முடியாதுய்யா, நீ தயாவ வெட்டுனதும் பொய்யில்ல, தயா உன்ன வெட்டுனதும் பொய்யில்ல, உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேங்கறதுக்காக தயாவோ, ரேணுகா மகனோ திரும்பி வரவும்போறதில்ல, ஆனா என் மனசுக்குள்ள இருந்த உறுத்தல இன்னைக்கு கொஞ்சம் கொறைச்சுக்கிட்டேன், அவ்வளவுதான்” என்றபடி “சவுந்தரு, மூணு டீய வாங்கு, குடிச்சுட்டு கெளம்புவோம், எனக்கு இங்க விருதுநகர்ல வேலையிருக்கு, எப்பா பிரபா நீ அடுத்து வர்ற மதுர வண்டில ஏறிப் போ” என்றார்.
பிரபா “சரி” என்பது போலத் தலையசைத்தான். இருவரும் சிறிது நேரம் நான்குவழிச் சாலையில் விரைந்துகொண்டிருந்த வாகனங்களை வெறித்த கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சவுந்தர் இரண்டு பேருக்கும் டீ க்ளாஸ்களை கொண்டுவந்து கொடுத்தான். இருவரும் தங்கள் மௌனத்தைக் கலைக்காமலேயே டீயைக் குடித்து முடித்தார்கள்.

தன் தோளில் கிடந்த துண்டை உதறி, முகம் துடைத்து, மீண்டும் தோளில் போட்டுகொண்ட வைரவேல் மெதுவாக எழுந்தார். பிரபாவும் எழுந்தான். அவனிடம் விடைபெறுவதுபோலத் தலையசைத்துவிட்டு விலகி நடந்தவர் திடீரென்று திரும்பி பிரபாவின் அருகில் நெருங்கி வந்து “ஒரு நிமிசம்” என்றார்.

பிரபா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“தயாவ மடில அள்ளிப் போட்டுக்கிட்டு ‘கண்ண முழிச்சுப் பாருடா’ ன்னு நீ அழுதியாமே, நெசந்தானா?” என்றார்.

பிரபா பதிலேதும் சொல்லவில்லை.

“அவன் உன் மடிலதான் செத்துப்போனான்னு சொன்னாங்க, அவன் சாகறதுக்கு முன்னாடி கடைசியா உங்கிட்ட எதாவது சொன்னானாய்யா?” என்று கேட்டார். பிரபாவின் கண்களை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவரது கண்களிரண்டும் எதையோ எதிர்பார்த்து அலைபாய்ந்தபடியிருந்தன.

“இல்ல, அவன் கழுத்துல பாதி வரைக்கும்…” என்று ஆரம்பித்த பிரபா திடீரெனத் தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். அவனை நெருங்கி, அவன் கைகளைப் பற்றிக்கொண்ட வைரவேல், அவனைத் தன் தோளின்மீது சாய்த்து “சரி, சரி… வேண்டாம், வேண்டாம்” என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்லியபடி அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார்.

சில நொடிகள் அமைதியாக இருந்த சவுந்தர் மெல்ல நகர்ந்து வந்து பிரபாவின் தோள்களில் கைவைத்து “சரி, சரி விடு பிரபா, அழாத” என்றான்.

`*****
இளங்கோவன் முத்தையா, இவர் மதுரையில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். மின்னிதழ்களில் அவரது கதைகள் அவ்வப்போது வெளிவருகின்றன. சமூக ஊடகங்களில் இவரது கட்டுரைகளுக்கு மிகப்பெரிய கவனம் இருக்கிறது. விரைவில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும்.

கதைசொல்லிகளுக்கு உதவாத ஒற்றைக் கதை

0

ஜீவ கரிகாலன்

ளியாண்டு வேகத்தில் பயணித்து எட்டிப்பிடித்த படங்களில் தெரியாத நிகழ்காலத் துகளொன்று, ஊடுருவல் பாதையைத் தெரிந்து குதித்துப் பார்த்தது.. பயணத்தின் மறுமுனையைக் கவ்வுகையில் இடறிச் சிதறிவிழ ஆரம்பித்த இடங்களில்..

  • எத்தனை இறைஞ்சிக் கேட்டும் உணவளிக்க மறந்தவனைப் பழிவாங்கச்சொன்ன தனது மரபணுவின் ஆணையை நிறைவேற்ற அவனது சேகரத்தில் இருந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளைப் புரட்டிப் பார்த்த அந்த பூனை சன்னலின் வெளியே தெரியும் பச்சை நிற ஒளிக்குமிழைப் பார்த்தது.
  • முன்னர் அரச மாளிகையாக இருந்த நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஆனால் அதற்கு இணையான அறை வாடகை கொண்ட ஒரு ஹெரிட்டேஜ் விடுதியில் நானூற்றைம்பது ஆண்டுகளுக்குப் முன்னால் தான் கொலைசெய்யப்பட்ட மாளிகைக்கு அவள் தன் ஆண் நண்பரோடு வருகையில் அவளுக்கு எந்த ஞாபகமும் இல்லை.. பால் கொட்டியது போல கவிழ்ந்திருந்த மேகமூட்டத்திற்கு மேல், ஊதிவிட்ட பாலாடை போலத் தெரியும் ஓசோன் படலத்தைக் கிழித்துக்கொண்டு கடற்கரையோரம் இறங்கியது சோப்புக்குமிழ் போன்ற ஒன்று அவள் அதைப் பார்க்கையில்.
  • சாமத்தில் யாரும் வெளியே போகக்கூடாது என்கிற மலையுச்சி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டை தன் வயிற்றுப்போக்கை காரணம் காட்டி விலக்கம் பெற்றான். நூறடிக்குள் பேண்டு விடுமாறு சொன்ன காவல்காரத் துறவியை பெயரளவில் ஆமோதித்தாலும், சாணிக்காகித எழுத்தையே வாசிக்குமளவு இருக்கும் நிலவொளியில்கூட நான்கெட்டுகள் போனால் என்னவென்று கடந்துசென்று குத்த வைத்தான். முறுக்கி வைக்கும் ஈயத்தட்டுகள் போல திண்ணமாய் ஒலிக்கும் பாறைகள் மேல் பட்டுத்தெறிக்கும் ஓடையில் கால் நனைத்தால் என்ன என்று கைகளில் கொண்டு சென்ற ஃபேண்டா பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு குளிர் எனும் ஆயுதத்தை உணராத அவன், கால் நனைக்கும்போது கத்தியிருக்க வேண்டும். திடீரென தன் சப்தங்களை நிறுத்திக்கொண்ட ஆந்தைகளால் நிசப்தமாகிப்போன காட்டில் மின்மினிப்பூச்சிகளை எதனையோ சுற்றி வட்டமடித்தபடி மேலிருந்து கீழிறங்கியது.
  • அகண்ட டயர்களைக் கொண்ட சொகுசு வாகனத்தை ஒரு பாலைவனத்தின் சாலை ஓரத்தில் ஓரங்கட்டிவிட்டு, புதிதாகச் சுற்றிப்பார்க்க வந்திருக்கும் அந்நண்பர்களுக்கு குன்று போன்ற மணல்மேடுகளைக் காண்பித்தான். பருமன் மிக்க அவனை மணல்மேல் ஏற முடியாது என பரிகாசம் செய்ய, ஒன்பதாம் வகுப்பு ஓவிய வாத்தியாரை நினைத்தபடி பற்களைக் கடித்தபடி அங்கிருக்கும் உயரமான மணல்மேட்டில் விருட்டென்று ஏறினான். யாரும் எதிர்பாரா வண்ணம் மணல்மேட்டின் உச்சியை அடைந்ததும், கொண்டாடத் தெம்பில்லாதவன் மூச்சுவாங்கியபடி கைகளை அசைக்க, கீழிருந்த நண்பர்கள் “குதி குதி.. சீக்கிரம் இறங்கு” என்று கத்தினார்கள். அவர்கள் நினைத்த மணற்புயல் போல் இல்லையென்றாலும் விசித்திரமான மணல்களால் மூடிய ராட்சத வெங்காயம் போன்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது
  • மேலும்மேலும் கடல்நீர் நகரத்தில் புகுந்துகொண்டிருக்கிறது என்கிற செய்தியைக்கூடப் பேசாத பாடல்களை மட்டுமே கடமையென ஒலிபரப்பும் ரேடியோவை ஒலிக்க விட்டபடி மொட்டைமாடியில் காத்திருந்தது வீண் போகவில்லை. தாழப்பறந்து வந்த ஹெலிகாப்டரொன்று மனித நடமாட்டம் தெரியும் ஒவ்வொரு வீட்டின் மாடிகளிலும் அரச அதிகாரத்தின் ஸ்டிக்கர் ஒட்டிய உணவுப்பொட்டலங்களை போட்டுக்கொண்டிருந்தது. கூடவே பிஸ்கட், பால்பவுடர், கசாயப் பவுடர், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் க்ரீம் கொண்ட பார்சல் என. சிதறவிடாமல் பிடித்துக்கொண்டவர் சாப்பிடும் முன்னர் அதைப்பற்றிய காணொளிப் பதிவை பதிவிட்டால் லைக்ஸ் அள்ளுமென உற்சாகமானார். கேமிராவைப் பொருத்திவிட்டு உணவுப்பொட்டலத்தைத் திறக்கையில் பொட்டலத்தில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு இங்க் ஃபில்லர் துளிக்கு இணையான அடர்பச்சை வண்ணக்குமிழ் ஒன்று கண்ணுக்கு நேரே வந்தது.
  • எதிர்த்து ஓட்டுபோட இருந்த மக்களில் எழுபத்தைந்து சதவீதம் வரை கொன்றுவிட்ட வெற்றிக்கு அடுத்தபடியாக, மீதமிருந்த மக்களால் தடுக்கமுடியாத ஜனநாயகத்தின் சக்தியால் தேர்தலில் வெற்றி பெற்றான் அவன். வெற்றிச் செய்தியோடு சந்திக்க ஓடியது தமது ஆன்மிக குருவும் பயலாஜிகல் தந்தையுமான நாட்டின் மூத்த துறவியின் மாளிகைக்கு. நாட்டின் அதிபரையே தடுக்கும் வல்லமை படைத்த துறவின் நம்பிக்கைக்குரிய காவலாளி தடுத்துவைக்கையிலே சற்று கண் சிமிட்டவும் செய்தான். அவன் ராஜ விசுவாசியும் ஒளிந்துகொண்ட இருபத்தைந்து சதவீதத்தினனும் கூட. அவனது சமிக்ஞைக்கு என்ன அர்த்தம் என்று சாளரம் வழியே அண்ணாந்து பார்த்தபடி இருந்தவனுக்கு உள்ளிருந்து கேட்ட பரிச்சயமிக்க மாற்றுப்பாலினத்தின் குரல் நினைவூட்டிய ரௌத்திரத்தை சட்டென மறக்க வைத்தது உயரமான ஓக் மரத்தின் இலையோடு உதிர்ந்து வந்த மஞ்சள் நிற குமிழின் ஒளி.
  • விசாலமான எழுதும் மேசையில் அரதப்பழசான டெம்ப்ளேட் ஸ்க்ரீன் சேவர் ஓடிக்கொண்டிருக்க, எப்படியாவது ஒரு நல்ல கதையை எழுதி சான்றோர்களிடம் பெயர்வாங்கிடத் துடிக்கும் ஒரு புனைப்பெயரற்ற எழுத்தாளனின் குறட்டைக்குத் திறக்கும் வாயில் தலைவெட்டித் தாத்தா பூ அளவிற்கே உள்ள ஒரு ஒளிச்சிதறலொன்று உள்ளே போக…  அவனது ஒளிமிகுந்த பிரகாசமான முகத்தில் கதையை வெற்றிகரமாகப் பிடித்துவிட்டதாகத் தெரிந்தது. எழுதத் தொடங்கினான்.

கொடுக்க வேண்டிய லஞ்சங்களை உபரித்தொகையோடு கட்டியதாலும், மாசு அளக்கும் இயந்திரத்தை காற்றின் எதிர்திசைக்கு பொருத்தாமல் மாற்றி அமைத்ததாலும், உயரம் குறைந்த சிம்னியில் வெளியேற்றும் மிகக்குறைந்த அளவே ஆர்ஸனிக் கலந்த மாசு கடல் காற்றில் பறந்துவந்து நகரத்தின் பொலிவைக் குறைக்கவே ஆர்பரிக்கும். அவ்விதமே அந்த டெலஸ்கோப்பில் அப்பிய துகள்களையெல்லாம் கிரகங்களென்றும் விண்வெளிப் படலங்களென்றும் வல்லமை பொருந்திய வல்லாதிக்க நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு செய்திகளாக்க ஆணையிட்ட அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்தே ஆகவேண்டுமெனக் காத்திருந்த துணை வேந்தர் தன் அழகிய மீன்தொட்டியின் மீன்களை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பங்களாவின் பூர்வ ஜென்மத்தின் ராணி தனது வைராக்கியத்தைத் தீர்க்கும் பொருட்டு சிப்பந்தியிடம் ஆணையிட்டுப் பெறப்பட்ட பழம் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனது ஆண் நண்பனை நோக்கி நடந்தாள். குளிர்ந்த நீர்பட்டு வயிற்றுப்போக்கு நீங்கிவிடுமென நினைத்தவனின் குதத்திலே சொருகப்பட்ட அந்தக் கூரான கத்தியின் பொருட்டு ஓலமிட்ட அவனது வாயில் மணலை அள்ளிப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தது கருஞ்சிவப்பிலும் இளஞ்சிவப்பிலும் வட்டவட்டமாக தோல்கொண்ட  அழகிய அப்பூனை. மெல்ல மெல்ல அவன் சாவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பூனை, மின்மினிப்பூச்சி, பூர்வஜென்ம நினைவுகளை மீட்ட கம்பீரமான அந்தப்பெண் வரலாற்றில் மறையாத பெரும் வெற்றிகொண்ட அந்த அதிபர், அதிகம் கடன் வாங்கியிருந்த  அவனது நண்பர்கள் மற்றும் லட்சியமற்ற எழுத்துகளே தனக்கு எதிரிகளை சம்பாதிக்காது என்று உறுதியோடு விருதுக்கு காத்திருக்கும் எழுத்தாளன் மற்றும் அவனது ப்ரூஃப் ரீடர்.

*

“வந்த வழியே ஏன் இவ்ளோ சீக்கிரமா திரும்புன?” என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தது எனக்குப் புரியாத ஒரு அயல்கிரகத்து பாஷை என்றாலும் அது இப்படித்தான் இருக்க முடியும்.

சுபம்

***

ஜீவ கரிகாலன்டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: kaalidossan@gmail.com

கறுப்பு

0

பாலைவன லாந்தர்

               கறுப்பு 

”எட்டடி குச்சிக்குள்ளே எட்டய்யா.. எத்தினி நாளிருப்பே..
எட்டடி குச்சிக்குள்ளே எட்டய்யா.. எத்தினி நாளிருப்பே..”

“ஐயே அதுக்குத்தான் மலயேறலன்னு தெரியுதுல்ல? சும்மா எம்மாந்நேரம் அத்தயே கூவிக்கினிருப்பே? அட்த்தசாமிய இட்டுக்கினு வர்லாமுல்ல.. டைம் போயிக்கின்னே இருக்குல்ல சாமி”

கெஜலட்சுமி சத்தமாகச் சொன்னவுடன் பூசாரி சற்று முறைப்பும் அச்சமும் கலந்தவாறு கூட்டத்தைப் பார்வையிட்டார். அனைவரின் முகத்திலும் சற்றேனும் எடைக்கூடி ஏறிய கலவரமாக இருந்தது. சாமிக்குத்தம் வந்துடக்கூடாதுன்னு பார்த்துப்பார்த்து செய்த காரியங்கள் கண்முன் நிழலாடின. ஒவ்வொரு வருடமும் எப்படியாவது ஒரு குத்தம் கைகால் முளைத்து எதிரே நின்றுவிடுகிறது. இந்தக் குற்றத்திற்காகவே அடுத்த வருடம்வரை நிகழும் விபத்துகள், நோய்கள், ஆபத்துகள், சண்டைகள், மரணங்களென அடுக்கிக்கொண்டே போகும் கற்பனைக் குதிரையை அந்தக் கூட்டத்திற்கு நடுவே கட்டிவைக்க இயலவில்லை. 

தெருவின் இறுதிவரை சாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். கன்னிச்சாமிகளுக்குத் துணையாக அவர்களின் உறவினர்கள் அருகிலேயே நின்று கற்பூரம் காட்டி கால்களில் மஞ்சத்தண்ணி ஊற்றிக்கொண்டிருக்க, குருசாமிகள் பொறுப்புணர்வுடன் கூட்டத்தை நிர்வகித்தும் அடுத்தடுத்த காரியங்களுக்கு வழிவிடுவதுமாக இருந்தனர். தெரு முழுக்க புகையால் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் சன்னல் கதவுகளின் வழியாக தலைகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்து அடுத்த தெரு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல, சாமிகளின் உப வேலைகளுக்கென இளவட்டங்களின் படை ஒன்று மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. 

“இந்த வாட்டி கன்னிசாமிங்க லிஸ்ட் ரொம்ப அதிகமாக்கிது இன்னாவாம் எதுனா மேட்டர் நட்ந்துகிச்சா இன்னா” 

“ஏய்ய் அடிங்க.. சாமி மேட்டர்ல ரவுசு பேசாதன்னு எத்தினி தபா உன்னாண்ட சொல்லிக்கினேன், எத்தயும் நல்லா மாரியே எட்த்துக்க மாட்டியா நீயி, நாடுநல்லாருக்கனும் நாமநல்லாருக்கனும் நம்மாண்டையும் நாலுகாசு பொழங்கிக்கனும் நம்மாளுங்களும் சோக்கா சட்டயத்தூக்கிவிட்டுக்கினு திரியனுன்னு புள்ளைங்கோ நேந்துக்கினு மாலபோட்டிருக்குங்க நீ என்னாடான்னா சந்துல டபாய்ச்சி வுடுறே போடா பொறம்போக்கு பையா”

கூட்டம் நான்கு திசையிலும்  நான்குவிதமாகப் பேசித்திரிந்தது.

விடியற்காலையில் தொடங்கிய பூசைக்குப் பிறகு வரிசையாக நிற்கவைக்கப்பட்ட சாமிகள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கொட்டுகள் அதிர உடுக்கைகள் பிளக்க உக்கிரமாக மலை ஏறியவுடன் பெண்கள் கூட்டம் நாக்குகளைச் சுழற்றி குலவையிட, நீளமான வேல் ஒன்றின் கூர்மையான முனையில் விபூதியைத் தடவி கன்னங்களின் ஒருமருங்கின் வழியே நுழைத்து மறுவழியே எடுப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். இவ்வாறாக வேல் குத்தப்பட்ட சாமிகள் ஒருபுறமும் வேல் குத்துவதற்காக நிற்கப்படும் சாமிகள் மறுபுறமுமாக மதியவேளையைத் தாண்டிவிடும். கன்னி சாமிகளுக்கு சிறிய வேல்களும் அனுபவ மூத்த சாமிகளுக்கு நீண்ட வேல்களுமாக தெரு முழுக்க பக்திப் பரவசமாக காட்சி தரும். வேல்களின் கூர்முனையில் எலுமிச்சை செருகப்பட்டு இருப்பதை குழந்தைகள் வேடிக்கையாகப் பார்த்து தொட முயற்சிப்பார்கள்.

கெஜலட்சுமிக்கு சாமி நம்பிக்கை இல்லையென்றாலும் ஊரோடு ஒத்துப்போக இந்த மாதிரியான நாட்களில் மட்டும் நெற்றியில் நீளமாக விபூதியைப் பூசிக்கொள்வாள். கணவனும் மகனும் ஒரே விபத்தில் இறந்துப்போனவுடன் நாதியற்று அக்கம்பக்க மக்களையே சார்ந்து பூ விற்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்தாள். தொடக்கத்தில் இவள் கையால் பூ வாங்கத் தயங்கியவர்கள் சர்க்கரைத் தடவிய பேச்சுக்களால் கவரப்பட்டு நெருக்கமாகத் தொடுக்கும் அடர் மல்லிச்சரத்துக்கும் பிச்சிப்பூ சரத்துக்கும் வாடிக்கையாளர்களாக மாறிப்போனார்கள். தன்னையும் மீறி தனக்கு நடந்த அநியாயங்களை நினைத்து எப்போதாவது சட்டென வார்த்தைகளை உருட்டி விடுவாள்.

“சாமியாவது பூதமாவது, மனுசனுக்கு மனுசன்தான் சாமி பேயி எல்லாமே. ஒழைக்காம தின்னா காக்காசு வய்த்துல நிக்குமா சொல்லு.. தூக்கிட்டு வந்துட்டானுங்க உண்டியல” அவள் நிலையை நினைத்து மற்றவர்களும் புன்னகைத்து கடந்துவிடுவார்கள்.

“ஏண்ணே.. எம்மாந்தேரம் ஒனக்குப் பூசபோட்டும் கல்லுபோல ஜம்முன்னு நின்னுக்கிட்டுருந்தே.. என்னா கேடு ஒனக்கு.. எத்தயாவது குடிச்சு தொலச்சுட்டியா.. இல்லாங்காட்டி சரசா ஊட்டாண்ட..” 

”இந்தா.. மருவாத கெட்டுப்போயிரும் பாத்துக்கோ.. மால போட்டதால எதும் பண்ணமாட்டேன்னு நெனப்பா? கோழியாட்டம் அறுத்து தூக்கி போட்டுருவேன்” என்றான் கோபாலு.

“ஐயே.. இப்ப இன்னாத்துக்கு துள்ளுறே.. நா மட்டுமா பேசறேன்… ஏரியா பூரா ஒம்பேச்சுத்தான் கவனி.. பூசாரி முச்சூடும் ஒன்னையே மொறச்சுக்கினு கெடந்தாரு.. அல்லாத்துக்கும் மெர்சலாக்கீது ஆனா எனக்கு அப்டிலாமில்ல மன்சுல பட்டத பட்டுன்னு கேட்டுக்குவென் ஆங்“

கோபாலு தலையை திருப்பிக்கொண்டான். ஆளாளுக்கு இவனையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. காதுபட சிறுசுபெருசு எல்லாரும் கலாய்க்கத் தொடங்கி இருந்தனர். இத்தனை நாட்களாக சுத்தபத்தமாக விரதமிருந்ததைப் பற்றி யாருக்கும் தான் சொல்லப்போவதுமில்லை யாரைப் பற்றியும் கவலைப்படப் போவதுமில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தான். பொதுவாக இந்த விரதம் பிடிக்கும் நாட்களில் இவர்களைப் போன்ற மக்களுக்கு பெரிதும் சவாலாக இருப்பது அடிக்கடி வாயில் வரும் ***** ****** கெட்ட வார்த்தைகள் தான் “****** சாப்ட்டியா, ***** டீ அடிக்கலாமா” என சரமாறியாகப் புரளும் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து “வா சாமி.. போ சாமி” எனப் பேசுவது கடினம்தான்.

அதையும் சரிவரச் செய்திருந்தான் கோபாலு. வருடத்தின் அத்தனை இரவுகளுக்கும் குத்தகை கொடுத்திருக்கும் சாராயக்கடை மரப் பெஞ்சிலிருந்தும் தள்ளாட்டத்தோடு விழுந்துக் கிடக்கும் வீதிகளிடமிருந்தும் இந்த விரத நாட்கள் மட்டுமே விலக்காக இருந்தது. மாங்கு மாங்கென சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் கோபாலுவைக் குடிக்காதே என்று யாரும் சொல்வதில்லை. ரிக்‌ஷா இழுக்கும் பணியோடு சமயங்களில் கொத்தனாராகவும் வேலைக்குச் செல்லும் கோபாலு தனது உடல் வலியைப் போக்கிக்கொள்ளும் மருந்தாக சாராயத்தை மட்டுமே நம்பி இருக்கிறான். ஒரு குவார்ட்டர் போதும் அன்றைய இரவை தூங்க வைப்பதற்கு. 

சமயங்களில் செல்வியும் ஒரு டம்ளரோடு ஜோதியில் இணைந்துகொள்வாள். பத்து மணிக்கு மேலாக பாதி அடங்கிய சாலையில் மீன்பாடி வண்டி ஒன்றில் இருவரும் அமர்ந்து கொள்வார்கள். அது ஒரு அலுவலக கட்டிடத்தின் முற்புர தெருவாசல். அதன் குடௌன் ஷட்டருக்கு வெளியே நீண்ட திண்ணையோடு எப்போதும் திறக்காத கதவு ஒன்றின் வெளிப்புறத்தில் மரப்பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அதில் துணிமணிகள், பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்களை அடுக்கி வைத்திருப்பார்கள். 

அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு மாட்டுக்கொட்டகையாக இருந்ததிலிருந்தே பலகாலமாக இதுதான் அவர்களின் வீடு. அந்த ஏரியா முழுக்க இதுபோன்ற தெருவோர மக்களால் சூழப்பட்டிருந்தது. இரண்டு மூன்று கட்டிடங்களுக்கு இடைவெளியில் இன்னொரு குடும்பம் இருக்கும். அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடியும் இடம் ஒரு குட்டிச்சுவர் கூட இல்லாத வெட்டவெளித் தெரு மட்டுமே. தெருக்குழாயில் வரும் அடிபம்பில் வரிசையாக நின்றுநிரப்பி அடுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடங்களால் குட்டியாக ஒரு கோட்டைச்சுவர் இரவு உருவாக்கப்பட்டு காலையில் கலைக்கப்படும் அது ஒரு எல்லைக்கோடு.

கோபாலுக்கும் செல்விக்கும் ராமு, சேகர் என்று இரண்டு ஆண் மகன்களும் கனியம்மாள் என்ற பெண் பிள்ளையும் இருந்தார்கள். இதைத்தவிர இவர்களில் குடும்பத்தில் ஒருவராக இருந்தது “கறுப்பு”. 

தெருநாய் என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாத வனப்பில் இருந்தது கறுப்பு. வளழவளழப்பாக மேல்நாட்டு வனப்புடன் பழைய அரசுமருத்துவமனைக்கு பின்புறமுள்ள குப்பைமேட்டில் பிறந்து சிலமணித்துளிகளே ஆகியிருந்த கறுப்பை சிறுநீர் கழிக்க ஒதுங்கிய ராமு தூக்கிக்கொண்டு ஓடிவந்தான்.
 
“நைனா நைனா.. இந்தாரேன் நாக்குட்டி நைனா.. எம்மாம் பொடிசா கீதுன்னு பாரு.. கண்ணப்பாரேன் தொறக்க கூட இல்ல.. ஐஐஐ.. நக்குது நைனா.. யம்மா யம்மா இத்த நாம்பளே வளப்போம்மா.. என்னாண்டயே கெடக்கட்டும்மா.. நைனா வோனான்னு சொல்லிராதேப்பா“

சேகருக்கும் கனியம்மாளுக்கும் கூட கறுப்பை பிடித்துப்போனது. பால் புட்டியில் உறிஞ்சிக்கொண்டே ராமுவின் மடியில் தஞ்சம் அடைந்து கிடந்தது. பிள்ளையைப் போல வளர்ப்பதற்கும் பிள்ளையாகவே வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கோபாலு பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டான். ராமு பிள்ளையாகவே வளர்த்தான். முதலில் கறுப்புவுக்கு சிவப்புநிறக் கயிறு கழுத்தில் அணிவிக்கப்பட்டு தெரு முழுக்க ஓடவைத்து அழகு பார்த்தான் ராமு. பகல் பொழுதுகளில் நெருக்கமான போக்குவரத்தில் ஓடுவதற்கு கறுப்பு மிகவும் திணறியது. ராமு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கீழே இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்வான். சட்டென கடக்கும் ஆட்டோ, கார், சரக்குகள் ஏற்றிவரும் மாட்டு வண்டிகள், லாரிகளை மிரட்சியுடன் கறுப்பு பார்ப்பதை ராமு கவனித்துக்கொண்டான். அதனாலேயே மடியைவிட்டு இறக்கிவிடாமல் கவ்விக்கொண்டு அலைந்தான்.

ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. கறுப்பு ஒரு ஹீரோவைப்போல ஏரியா முழுக்க வட்டமிடத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய் என்று ஏரியா முழுக்கப் பேசத்தொடங்கி பத்தாயிரம் பதினைந்தாயிரம் தருகிறேன், கறுப்பைக் கொடுங்கள் என்று அடுக்குமாடிவாசிகள் அலுவலகப் பணியாளர்கள் வந்துக்கேட்டும் கொடுக்க மறுத்து மொத்த குடும்பமும் உயிராக வளர்த்தது. 

கனியம்மாள் குளிக்கும்போதும் இயற்கை உபாதையால் ஒதுங்கும் போதும் கறுப்பு காவலுக்கு நின்றுக்கொள்ளும். எதேச்சையாக யாரேனும் அவ்வழியில் கடந்தால் கூட பவ்பவ்பவ் எனக் குரைத்து விரட்டிவிடும்.

சரியாக இரண்டு வாரங்களுக்கு முந்தைய சனிக்கிழமை ஒன்றில் பக்கத்து ஏரியாவில் நடந்த விசேஷத்திற்கு எடுபிடி வேலைக்குச் சென்ற கனியம்மாளுடன் துணைக்குச்சென்ற கறுப்பு திரும்பவில்லை. கணநேரத்தில் ஏரியா முழுக்க இரண்டாக்கி விட்டார்கள். கனியம்மாள் வேலை மும்முரத்தில் கறுப்பைக் கவனிக்கத் தவறியிருந்தாள். ஆளாளுக்கு ஒவ்வொரு புறமாக தேடித்திரிந்தார்கள். ராமு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன்போலச் சுற்றிச்சுற்றித் தேடினான். பள்ளிக்கூடம் ஆஸ்பத்திரி, ரேசன்கடை, கிருஷ்ணன் கோவில், இரும்பு க்டௌன் என இவர்கள் போகும் அனைத்து இடங்களுக்கு பதைபதைப்போடு ஓடினார்கள். 

“கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு” கறுப்பு வரவே இல்லை.
  
“ந்தா.. ஏய் எம்மாந்தேரம் கூவுறேன்.. இன்னா நெனப்பு ஒனக்கு.. அப்டியே குந்திக்கினுக்கீரே”

செல்வி தோள்களைப் பிடித்து உலுக்கினாள். நினைவுகளிலிருந்து மீண்டவன் கறுப்பும் கறுப்புசாமியும் தன்னை கைவிட்டதற்கான காரணத்தை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“இல்லம்மே மன்சே சரியில்லமே இந்த சாமிக்கு இன்னாக்கேடு வந்திச்சு எம்மேல ஏற.. இன்னா ப்ரச்சன நாயென்ன அவ்ளோ ஆகாம போய்ட்டேனா என்னா.. எம்மாந்தேரம் பூசாரி விபூதி போடறாரு அப்டியே கிங்காங்கணக்கா நிக்குறேன்.. ஒருப்பொட்டு ஏறலேன்னா என்னா அர்த்தம் கேக்கறனுல்ல.. இன்னா அர்த்தம்.. டேய் கய்த கோவாலு.. ஒனக்கு இன்னா மய்த்துக்கு சாமின்னுதானே எங்கைல சொல்லிக்குது“

“ஐயே மஸ்த்து சும்மா வாயவச்சுக்கினு கம்முன்னு கெடம்மே.. நீ இன்னியும் மாலய கலட்டிக்கல கவ்னம் வச்சுக்கோ வாயுல எதுனா கெட்ட வாத்த வச்சுக்காத புர்ஞ்சுதா..” செல்வி கடிந்துக்கொண்டாள்.

இரவு.. ஏரியா முழுவதும் நாற்புறச்சந்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வெள்ளைத்திரையில் ப்ரொஜக்டர் உதவியுடன் திருவிளையாடல் படம் பார்த்துக்கொண்டிருந்தது. பெட்சீட், பாய், தலகாணி, சொம்பில் தண்ணீர், நொறுக்குத்தீனி ஆகியவற்றுடன் பெண்கள் கூட்டமாக அமர்ந்திருக்க வேல்கம்பி குத்தியதுளை கன்னத்தில் மூடுவதற்கு முன்னமாக பலநாட்கள் விரதத்தை முடித்த உற்சாகத்தில் நேற்றைய சாமிகள் சாராயக்கடையை ஒட்டுமொத்தமாக காலிசெய்து மிதந்துகொண்டிருந்தது. உடல்வலித்தீர நிறைபோதையுடன் மல்லாக்கக் கிடந்து வெள்ளைத்திரையில் சிவாஜிகணேசன் சாவித்திரியின் நடிப்பை உச்சுக்கொட்டி ரசித்தார்கள்.

கோரைப்பாயின் மத்தியில் மல்லாந்தபடி வானத்தை வெறித்துக்கொண்டே “யம்மா கறுப்பு.. நைட்டுக்கு நாஸ்தா துன்னிருக்குமா.. எம்மூஞ்ச தேடித்தேடி எம்மாந்தூரம் அலயுதோ என்னமோ.. எனக்கு வாழவே புடிக்கலம்மா நாவேனா செத்துப்போயிடவாம்மா” என்றான் ராமு.

“**** இன்னாடா சொல்லிக்குனே நீய்யி எடுபட்டப்பயலே.. அதுக்காடா ஒன்னய பெத்துக்குனேன் கய்த கஸ்மாலம்.. ஒன்னய வாரி கொட்த்துட்டு நாம்மட்டும் உயிரோட கெடப்பேன்னு நெனச்சுக்கினியா.. இன்னொரு தபா இதுமேரி சொன்னே.. மவனே நானே ஒன்னய கொன்னுட்டு தண்ணி லாரி மின்னாடி பாஞ்சுடுவேன் பாத்துக்கோ”

கோபாலு முழு போதையில் கைலி மேலேறியது தெரியாமல் புரண்டு படுத்தான். சேகர் ஆழந்த உறக்கத்தில் கிடக்க கனியம்மாள் மட்டும் படத்தையும் இவர்களையும் கவனித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தாள். திரையில் சிவாஜிகணேசன் கண்களை அகலத்திறந்து நாகேசிடம் “குற்றமா.. என் பாட்டிலா.. எவன் சொன்னான்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

“டேய் அழுவாதடா.. நம்ம கறுப்பு அறிவுள்ள கொய்ந்துடா.. அது எம்மாந்தூரம் போனாலும் பொழச்சுக்கும்.. அதுக்கு இப்ப நம்ம ஒதவிலாம் இல்லாமலயே தின்னத்தூங்க தெரியுண்டா.. நீ கவலப்படாம கெட. என்னிக்காச்சும் உன்னியத்தேடி வரும்பாரு” செல்வி ராமுவை ஆற்றுப்படுத்தினாள்.

பனி பொழியத் தொடங்கியது.

“இந்தாப்பா கோவாலு.. சாருதான் நமக்கு இனி புதுமொதலாளி.. என்னபாக்கறே.. சார் வீட்டுக்குத்தான் அடுத்தமாசம் முழுக்க வேல பாக்கப்போறோம். சுமார் ஐம்பது வருசப் பழைய வீடு பாத்துக்கோ.. அத்த அப்படியே அஞ்சடிலேந்து எட்டடி வரைக்கும் மேல தூக்கணும் ரெண்டு மாசங்கூட வேல இழுத்துக்கும்னு நெனக்கிறேன்.. காண்ட்ராக்ட நம்ம இஞ்சினியர் கிட்டத்தான் கொடுத்திருக்காரு.. நீயும் உன் எரியா டீமும் ரெண்டுநாள்ள வந்திடுங்க வெள்ளிக்கெழம காலைல ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடணும். நல்லநேரம் தாண்டகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்ட்டாங்க. கரெக்டா வந்துடுங்க.. பத்துபேர இட்டுட்டு வந்துடு பொறவு தேவப்பட்டா கூட்டிக்குவோம்.. நாலு பொம்பளைங்களும் மீதி ஆம்பளைகளா இருக்கட்டும்.. சரியா மேட்டர காதுல வாங்கிக்கிட்டியா… இல்ல மறுவடி சொல்லணுமா”

“வோணாம் மேஸ்திரி.. கரிட்டா வாங்க்கிக்கினேன்.. இன்னிக்கு தேதிக்கு ஊட்ட தூக்குறதுல்லாம் மேட்டரே இல்ல.. அல்லாமே சுலூவா முடிஞ்சுடும் பாத்துக்கலாம்”

“அப்ப சரி. அட்வான்ஸ் எதும் வேணுமா என்னா”

“ஆமாங்க.. அஞ்சாய்ரம் ரூவா கொடுங்க பசங்களுக்கு தரணும். மத்தத கணக்கு பாத்துக்குவோம்” பெற்றுக்கொண்டு நகர்ந்தான்.

அது ஒரு பிரசித்திப்பெற்ற தெருவின் மத்தியில் அமைந்திருக்கும் பழையவீடு. இடமும் வலமும் எதிர்ப்புறமும் வீடுகளால் மட்டுமே சூழப்பட்டிருந்தது. தொண்ணூறு சதவீத வீடுகள் நவநாகரிக அமைப்பிற்கு மாறியிருந்தன. கண்ணாடி பால்கனிகள், ஆளுயர இரும்புகேட், தேக்குமரகேட் என வகையாகப் போடப்பட்டு தெருவின் கால்வாசிவரை கார்கள் இறங்க பார்க்கிங் தரையை இழுத்துப் போடப்பட்டிருந்தது. வேப்ப மரங்களும் சரக்கொன்றை மரங்களும் தெருக்களில் அடுக்காக நிற்க, வீடுகளுக்குள் பெயர்தெரியாத அயல் தேசத்துமரங்கள் காற்றுக்கும் உதவாமல் இலைக்கும் உதவாமல் தேமே என்று நின்றிருந்தன.

மொதலாளி என்று அழைக்கப்படும் முருகானந்தத்தின் வீடு முற்றிலும் பழைமையில் மூழ்கி இருந்தது. சுமார் நான்காயிரம் சதுர அடிகள் இருக்கும் அவ்வீட்டில் வெளிப்புறத் திண்ணையைத் தவிர்த்து உள்ளே தூண்களும் தடித்த சுவர்களும் பிரமாண்டமான அறைகளும், பெரிய அடுக்களையுமாக கம்பீரமாக இருந்தது. இன்றைய தேதியில் உடைத்துக் கட்டினால் அவ்வளவு ஜோராக அடுக்குமாடி குடியிருப்பைக்கூடக் கட்டலாம். அத்தனை பிஸியான சாலை இது. இந்த வீட்டினை மராமத்து செய்ய என்ன இருக்கிறது என அக்கம்பக்கத்தில் புரசலாகப் பேசிக்கொண்டனர்.

கோபாலு தனது சக கொத்தனார்களுடன் நான்கு பெண் உதவியாளர்களுடன் ஷேர் ஆட்டோவில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து இறங்கிவிட்டான். அந்த வீட்டின் வாசலில் பூஜை செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்துகொண்டிருந்தார்கள். முருகானந்தத்தின் பேரன் செல்வம் அங்கேயும் இங்கேயும் ஓடி பூஜைப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தான். இரண்டு ஐயர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கி தயாராக இருந்த பலகையில் அமர்ந்து வேலைகளைத் தொடங்கினார்கள். பூஜை முடியும்வரை தெருவிலுள்ள திண்ணையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த கோபாலுவின் குழு பூஜை முடிந்தவுடன் தங்களின் பணியைத் தொடங்கச் சித்தமானார்கள்.

“மொதலாளி அப்டியே எங்களுக்கும் வேலயத் தொடங்க மின்னாடி சின்ன பூச போடணும். கோழி ஒன்னு வாங்கியாந்து பலிபோட்டு ரத்தத்த தெளிச்சுவுட்டோமுன்னா சுலூவா இஸ்டாட் பண்ணிடலாஞ்சார்”

கோபாலு சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து அலறிக்கொண்டு ஒரு பெண் ஓடிவந்து பூஜைக்காகப் போட்டிருந்த சுடுமண்ணை அள்ளி வீசினாள்.

“நாசமாப்போறவனுகளா.. நாசமாய்ப் போயிடுவேடா நாசமா.. நானு இங்கன இருக்குற வரையும் யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்ல அனுமதிக்க மாட்டேன்.. போங்கடா வெளில.. இது என் தங்கத்தோட வீடு. இங்க யாருக்கும் அனுமதி இல்ல. போங்கன்னு சொல்லுறேனில்ல.. போங்கோ”

கோபாலு வெலவெலத்துப் போய்விட்டான். என்ன நடந்ததென அணுமானிக்கும் முன்னம் முருகானந்தம் தனது பேரனுக்கு கண்ணைக்காட்ட செல்வம் அந்தப் பெண்ணை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். 

இஞ்சினியர் தடதடவென ஓடிவந்து, “ஏய் பொறம்போக்குப் பயலே அறிவிருக்கா ஒனக்கு. எங்க எதக்கேட்கணும்னு கொஞ்சமாச்சும் வெவஸ்தையே கெடயாதா மயிரு“

“ஸாரி சார்.. எதுனா மிஸ்டேக்கா கேட்டுக்கிட்டனா என்ன? மேட்டர் என்னான்னா நம்ம சனங்க பூரா கட்டட வேலக்கில்லாம போயி பெருசா பயக்கமில்ல. இப்பத்தான் அஞ்சுபத்து வருஷமா போறோம். பயபுள்ளைக நம்மல நம்பி பொழப்புக்கு வருதுக. வந்த இடத்துல கல்லுமண்ணு இடிச்சி வாரும்போது எதுனா ராங்கா நட்ந்துகிச்சுன்னா அவ்ளோதான். ஏரியால கால் வெக்கமுடியாது. ஒன்னாக்கூடி எனக்கு நலங்கு வச்சிடுவானுங்க.. அதான் முன்சாக்கிரதையா சொன்னேன்”

இஞ்சினியர் குமார் சற்று நிதானத்துடன் கோபாலுவை தோளைத்தொட்டு அழைத்துக்கொண்டு தெருவோர தேநீர்க்கடைக்கு சென்றார். அவர்களைத் தொடர்ந்து மாரி, சங்கர், ராஜா, வெங்கட் ஆகியோரும் வந்தார்கள். ஆளாளுக்கு பீடி சிகரட்டைப் பற்றவைத்து இழுத்துக்கொண்டே

“இந்தாப் பாருப்பா.. இந்த வீட்டப் பொருத்தவரைக்கும் உங்களுக்கு மூனு கண்டிஷனுங்க. நல்லா தெளிவா கேட்டுக்கங்க.. அதுக்கு ஒத்துகிட்டா வேலையப் பாப்போம். இல்லன்னா நா வடநாட்டு ஆளுங்கள வேலைக்கு இறக்கிடறேன். நீங்க போய்கிட்டே இருக்கலாம்” 

“என்னாசாமி ரொம்பசுத்துறே மொதல்ல மேட்டரசொல்லு ஒத்து வந்தா பாப்போம் இல்லாங்காட்டி நீ என்ன சொல்றது.. நாங்களே போய்க்கின்னே இருப்போம்.. ஆங்”

“இங்க பாருப்பா இது ஒன்னும் சாதாரண விஷயமில்ல. நீங்க பாட்டுக்கு கவனமில்லாம இருந்துடக் கூடாது. இந்த வீட்ட நாம முழுசா இடிக்கப் போறதில்ல. ரொம்ப பாரம்பரியமான வீடு. கொஞ்சமா ஆல்டர். அதான் மராமத்துப் பண்ணப்போறோம். முன்னாடி இருக்குற திண்ணைய இடிச்சுட்டு கார் பார்கிங் போடணும், அப்புறம் வீட்டுக்குள்ள மொத மாடிய கை வைக்காம ஜாக்கி போட்டு நிறுத்திட்டு கீழத்தரையை இடிச்சுட்டு கொத்திப்பூசி கிரானைட் போடணும். வீட்ட சுத்தி பார்டர் போல இடிச்சுத்தள்ளிட்டு புதுடிசைன்ல எலவேசன் வைக்கணும், நடுப்பகுதி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அதத்தான் ஜாக்கி போட்டுத் தூக்கப் போறோம். அப்புறம் கொஞ்சமா இண்டீரியர் வேலைகளும் இருக்கும். அதுக்கெல்லாம் மொறப்படி படிச்ச டிசைனர்களை வச்சு செஞ்சுடுவேன். நீங்க கொத்தனார் வேலையையும் ஏத்தி இறக்குற வேலைகளை மட்டும் பாத்தா போதும். ஐயோ சொல்ல மறந்துட்டேனே.. அந்த மூனு கண்டிசன் என்னான்னா.. நீங்க யாரும் வேலைபாக்குற வீட்டுக்கு உள்ளாற என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கவனிக்க கூடாது. அவங்ககிட்ட போயி ஏன் என்னான்னு பேசக்கூடாது. முக்கியமா அதப்பத்தி வெளில யாருகிட்டயும் போயி எதுவும் சொல்லவும் கூடாது கேக்கவும் கூடாது. மத்த வீடுங்கள்ள வேலை பாத்தா மாதிரி உரிமையெடுத்துகிட்டு பேசி சிரிக்கலாம்னு நினச்சுக்கூட பாக்காதிங்க. இதுக்குலாம் ஓகேன்னா கடப்பாரய மண்வெட்டிய எடுத்துக்கிட்டு உள்ளார போங்க இல்லன்னா”

“ஐயே இம்புட்டுத்தானே, இத்த சொல்ல இம்மாம் பெரிய பில்டப்பு வேற! அடப்போசாமி.. யாரு இன்னா பண்ணுனா எங்களுக்கென்னா? எங்க வேலய நாங்க பாக்கறோம். கையில துட்டு வாயில தோச. அம்மாந்தேன் சர்தானே மச்சி” கூட்டத்தோடு சிரித்தார்கள்.

முதலில் திண்ணையை இடிக்கத் தொடங்கினார்கள். பாறாங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட திண்ணை. கடப்பாரை இறங்கவே திணறியது. வந்ததில் இளசான முறுக்குடனிருந்த மாரி வேகமாக கடப்பாரையை இறக்க கைவழுக்கி மடித்துக்கட்டியிருந்த லுங்கியைத்துளைத்து தொடையில் பாய்ந்து இறங்கியது. ஆவென அலறித்துடித்தவனை எல்லாரும் சேர்ந்து அள்ளி ஆட்டோவில் போட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

நல்லவேளையாக பெரிய பாதிப்பில்லாமல் எட்டுத்தையலோடு தப்பினான். திரும்பவும் மாரியை ஏரியாவுக்கு அனுப்பிவிட்டு மற்றவர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். வரும்வழியிலேயே கோபாலு ஆட்டோவை கோழி மார்க்கெட்டுக்குத் திருப்பி நல்ல கொழுத்த வெடைக்கோழி ஒன்றை வாங்கி ஏரியா பூசாரியிடம் கொடுத்து அவசரகதிப்பூசைப் போடச்சொல்லி கண்களை மூடி எல்லோரையும் வேண்டச்சொல்லி கேட்டுக்கொண்டு கழுத்தைத்திருகி போட்டுவிட்டு வந்தான். 

திண்ணையை முழுவதுமாக இடித்து கார் பார்கிங் அமைக்கத் தோதாக இடத்தை ஒதுக்கிவிட, வீட்டின் உள்பக்க வேலைகளும் ஜரூராகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு பழைய வீட்டின் அடையாளத்தைத் திறந்து நாகரிக மாற்றத்தை அணிவிக்க இஞ்சினியர் தலைமையில் போராடிக் கொண்டிருந்தனர். புதிதாக வீட்டைக் கட்டுவதற்கும் மராமத்து செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இவர்கள் வேலை செய்வதற்கு இடையூறு இல்லாமல் முருகானந்தத்தின் குடும்பம் எதிரே காலியாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளத்தில் தற்காலிகமாகக் குடிபெயர்ந்திருந்தது. செல்வமும் அவனது தங்கை அனிதாவும் அடிக்கடி வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள். காபி டீ குடித்துக்கொண்டே அரட்டையாகப் பேசி அனைவரிடமும் பழகியும் விட்டார்கள். வீடு முழுக்க ஊன்றப்பட்ட ஜாக்கி ஒரு மில்லிமீட்டர் கூட அளவில் வேறுபாடு இருந்து விடக்கூடாதென்பதில் இஞ்சினியர் கராராக இருந்தார். ஜாக்கியை மேஜிக் பூதமென்றே பெயர்வைத்து அவர்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர். 
 
”இந்தாருடா பெரிய்ய அல்லாவுத்தீன் பூதம் வூட்ட அப்டியே மேலாக்க தூக்கி நிறுத்துது பாரு. இத்தனூண்டு கம்பி. கொஞ்சூண்டு ஸ்க்ரூ டூல்ஸ். இம்மாம் பெரிய ஊட்ட பள்ளத்துலேந்து மேட்டுக்கு இட்டாந்துதுடுது. படா ஜோராக்கீதுப்பா”

“இத்தெல்லாம் அவ்ளோ பெரிய்ய மேட்டரெல்லாம் கெடயாது கேட்டுக்கினியா.. பெல்ட் காங்கிரிட்டிடுன்னு வச்சுக்கோயேன் ஒன்னியும் பண்ணிக்க மிடியாது. அப்போதைக்கு மேஸ்திரி கட்டுக்கல்லு வச்சு அடுக்கி் கட்னதால ஈஸியா தூக்கிடறாங்க”
“அதான.. ஒன்னியுமே இல்லாத காலத்துலயே அனுமாரு சாமி பரங்கி மலையப் பேத்து மருந்துக்கோசரம் பறந்துப்போயி சரியான நேரத்துக்கு சேக்கலையா என்னா”

“ஆமா அவரு பரங்கிமலையப் பேத்தாரு நீயி எமய மலையப் பேத்தே.. போடா கிறுக்குப்பயலே”

“என்ன எப்பா பாரு ஒரே பேச்சுத்தானா வேலையப் பாருங்கப்பா.. இதுக்குத்தான் ஹரியானா குஜராத்துலேந்து பசங்கள வரவழைக்கலாம்னு ஓனர்ட்ட சொன்னேன். வேணாம் நமக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு செய்யுன்னு பிடிவாதமா மறுத்துட்டாரு. இன்னிக்கு தேதிக்கு ஜாக்கி போட்டு வீட்டதூக்க எங்க கம்பெனிய விட்டா இந்த ஏரியலேயே ஆளு கெடயாது பாத்துக்கங்க. அம்பது லட்சத்துக்கு கட்ட வெண்டிய வீட்ட பத்து லட்சத்துக்கு தூக்கி நிறுத்திட்டா போதும். பதினஞ்சு இருவது வருஷத்துக்கு சும்மா ஜம்முன்னு வாழலாம்.. யப்பா  கோபாலு ஒன்னோட பொறுப்புலத்தான் எல்லாரும் வந்திருக்காங்க அப்பப்ப எடுத்துச்சொல்லி ஏவனுமுல்ல எழவு ஊட்டுல கவுந்து கெடக்குற மாதிரி இடிஞ்சுபோயி வேலப்பாத்தா என்னா பண்றது” என்றார் எஞ்சினியர்.

கோபாலு இத்தனையும் காதில் வாங்கிக்கொண்டும் ஒரு ஜாக்கியின் மீது அடுக்கியுள்ள மரச்சட்டத்தை கட்டிடத்தின் அடியில் முறுக்கேற்றி டைட் செய்துக்கொண்டிருந்தான். தன்னைச்சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மீதும் பற்றிருந்தும் இல்லாமலுமாக இரண்டுங்கெட்ட மனநிலையில் இருந்தான். ஒவ்வொரு இரவும் சாராயக்கடையில் முழு போதையில், “எனக்கேண்டா சாமி வரல”

“கறுப்பு எங்கடா போச்சு”

வீடு ஓரளவு முடிந்திருந்தபோது முருகானந்தம் தனது மனைவி, மகன், பேரனோடு கொஞ்சம் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே வந்திருந்தார். மாடியில் இருந்தபடியே கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தார். வெளியே போகவர புறக்கடைப் படிகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒருவார காலத்தில் வீடு குடியேற தயாராகிக்கொண்டிருந்தது.

முருகானந்தத்தின் மனைவியின் செயல்பாடுகள் அனைவரையும் கலவரப்படுத்தியது. கைகளின் மணிக்கட்டுகளில், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு காய்த்திருந்த புண்களின் முற்றிலும் ஆறாதவடு தெரிந்தது. தொடக்கத்திலேயே மண்ணை அள்ளிவீசி சாபமிட்டுச் சென்றவள் இப்போது வரை அதன் குணம் மாறாமல் இவர்களை முறைத்துக்கொண்டே தான் இருக்கிறாள். புறவாசல் வழியாக இறங்கும் படிக்கட்டுகளுக்கு கீழாக இருக்கும் இடைவெளியில் பழைய துணிகள் மரச்சக்கைகள் ப்ளாஸ்டிக் பொருட்களை தற்காலிகமாகப் போட்டு வைத்திருந்தார்கள். அதன் மத்தியில் சுருண்டுக்கிடந்து நாளெல்லாம் கண் இமைக்காமல் கொல்லையில் மூடப்பட்டு புழங்காமல் கிடந்த கிணற்றையே வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தாள். மனநிலைப் பிறழ்ந்தவளென ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு சர்வ அமைதியுடனும் சிவப்பேறி வெறிக்கும் கண்களைத் தவிர எந்த மாற்றமுமில்லாத முதியவளாகவே தெரிந்தாள். ஆனால் யாராவது அந்தக் கிணற்றின் மூடப்பட்ட இரும்புத்தகரம் தெரியாத அளவிற்கு பூசப்பட்டிருந்த திண்டின்மீது அமர்ந்தாலோ நடந்தாலோ சட்டென வெகுண்டு கத்தத்தொடங்கி விடுவாள். 

“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத ஸார்.. ஒம்பொஞ்சாதிக்கு என்னா நோவு.. எதுனா பேயி பிசாசு புடிச்சுக்கிட்டிருக்கா சொல்லுபா எனக்கு தெரிஞ்ச பெரிய சாமியாரு ஒருத்தரு தாம்பரத்துல இருக்குறாரு. மந்திரிச்சு விபூதி போட்டாருன்னா குட்டிச்சாத்தான்லேந்து ரத்தக்காட்டேரி வரைக்கும் தெறிச்சு ஓடிப்போயிடும்.. யாருக்கும் தெரியாம காதுங்காதும் வச்சாமாரி இட்டுக்கினு வரவா? சொல்லு”

கோபாலு பேசிக்கொண்டிருக்கும் போதே கீழே கிடந்த செங்கல் ஒன்றை எடுத்து கோபாலுவின் மண்டையின் மீது எறிந்தார் முருகானந்தம்

“எச்சல நாயி வெளக்கம் கேக்குதுப்பாரு சனியனே, கொஞ்சம் சிரிச்சு பேசுனா சரிக்கு சமானம் ஆகிடுவியோ.. ஈத்தரநாயே, நான் யாரு என்ன ஆளுன்னு தெரியாம எங்குடும்ப விஷயத்த அத்தனை பேரும் பார்க்கிறமாதிரி சத்தமா பேசுதுப்பாரு. பொறம்போக்கு நாயி.. நாயி.. நாயி.. இனிமே உன் மொகத்த இங்கன பாக்கவே கூடாது காசத்தூக்கி எறியுறேன். எலும்பக் கவ்வுற மாதிரி கவ்விக்கிட்டு போடா நாயே.. நாயே.. நாய்க்கு பொறந்த நாயே”

கிட்டத்தட்ட அவருடைய வெந்தாடி தோள்பட்டை வயிறு தொடைகள் எனச் சர்வமும் அதிரக் கத்தினார். கோபாலுவும் அவனுடன் வந்த அத்தனைப்பேரும் பேயறைந்ததுப் போல உறைந்து நின்றார்கள். சில நொடிகள் கடந்தே கோபாலுவுக்கு ஒவ்வொரு வார்த்தையாக மீள்பிறழ் ஆனது. ஒவ்வொரு வார்த்தைக்கும் கோபப்பட்டான். கடப்பாறை அல்லது ஜாக்கியால் முருகானந்தின் மண்டயைப் பிளந்துவிடத் தேடினான். அவனது உடல் மொழியைப் புரிந்து கொண்ட வெங்கட், சங்கர் கோபாலுவை இழுத்துக்கொண்டு வெளியேறி தெருவில் வந்த ஒரு ஆட்டோவில் அழுத்தி போகச்செய்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தீர்ந்து போயிருந்தன. கோபாலு ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். கறுப்பிற்கு பகரமாக மைக் டைசன் என்று பெயரிடப்பட்ட நாயொன்றை வளர்க்கத் தொடங்கியிருந்த மகனிடம், “அத்த கறுப்புன்னே இஸ்த்தாதான் இன்னாவாம்.. என்ன இருந்தாலும் எங்கறுப்பு மாதி வருமாடா” என்றான். செம்பட்டை நிறத்தினாலான மைக்டைசன் அவனுடைய கால்களை நக்கியது. உற்றுப்பார்த்து சிரித்துக்கொண்டான். 

முருகானந்தத்தின் மனைவி மரகதம் இறந்த செய்தியை இரங்கல் நோட்டிஸ் ஒட்டப்பட்ட சுவரில் சிறுநீர் கழிக்கையில் கவனித்த கோபாலு மரணவீட்டிற்குச் சென்றான். மிகப்பெரிய கூட்டத்தில் அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை. தன்னுடைய கைகளால் தூக்கி நிறுத்தப்பட்ட வீட்டினுள் நுழைவதை சற்று மிதப்பாக உணர்ந்தான். முருகானந்தத்தின் மூத்த மகள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். அவளுடைய இரட்டை மகள்கள் ஆங்கிலப் படங்களில் வரும் வெள்ளை கொழுகொழு சிறுமிகளைப் போல் வீடுமுழுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனுக்கு பிறந்த மகள்களென ஊரார் புறம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

நடுஹாலில் மரகதம் கிடத்தப்பட்டிருந்தாள். அவளின் கால் புறத்தில் ஈஸிசேர் ஒன்றில் முருகானந்தம் அழுவதைப்போல் பாசாங்கு செய்து கண்களில் தீர்க்கமான நிம்மதியும் கடைவாயில் புன்னகையும் வழிவதை மறைக்க போராடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோபாலுவின் காதுகளில் தெளிவாக மிகத்தெளிவாகக் கேட்டது.

“அடப்பாவிகளா.. கொலைகாரப்பாவிகளா… எங்கம்மாவையும் கொன்னுட்டிங்களேடா.. உங்க சங்காத்தமே வேணான்னு தானே தொலதூரமா தொலஞ்சுப் போனேன் இப்படி தலையில இடியத்தூக்கி போட்டுடிங்களே.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருக ஜென்மங்கள் நீங்கதாண்டா.. டேய்.. மகாப்பாவி.. நீயெல்லாம் எங்கூடப் பொறந்தவனா!?.. ச்சீய், நீயும் அந்தாளும் சேர்ந்து செஞ்ச அநியாயங்களுக்கெல்லாம் உங்களுக்கு நல்ல சாவே வராதுடா. ஓடுற லாரில அடிபட்டு நடுரோட்டுல நசுங்கித்தான் போவிங்க.. ஐயோ.. அம்மா என்னப்பெத்தவளே.. நீ மட்டுந்தானே எனக்குன்னு இருந்து இவனுங்களோட போராடிக்கிட்டுக் கெடந்தே.. இப்ப நீயும் போயிட்டியே.. சரிம்மா.. சரிம்மா.. நீ நிம்மதியா தூங்கும்மா என் செல்லமே”

மரகதத்தின் தலையை தடவியபடியே..
“அம்மா.. ம்மா.. அன்னிக்கு நடுராத்திரி இந்தக் கொலகாரப்பாவிங்க எம்பச்சக்கொழந்தய கதறக்கதற உயிரோட கிணத்துல தூக்கிப்போட்டானுங்களே.. அன்னிக்கே நானும் செத்துப்போயிருக்குணும்.. நீதான் தடுத்துட்டே.. ஈரக்குல கருகி பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியஎரிய உனக்காக மட்டுந்தான் உயிரோட இருந்தேன்.. என்னிக்காவது நானும் கெணத்துல விழுந்துடுவனோன்னு கெணத்த மூடிப்போட்டானே ஒம்புருசன்.. அவன மட்டும் எப்பயுமே மன்னிக்க மாட்டேம்மா.. எங்கூடப்பொறந்த பரதேசிப்பய இந்த வீட்ட விக்கணுன்னு கையெழுத்துப் போடச்சொல்லி கெஞ்சினாம்மா.. நா போடலம்மா.. இவனுங்க புழுபுழுத்துப் போனாலும் இந்த வீட்ட விக்க விடமாட்டேம்மா.. எம்புள்ள கெணத்துக்குள்ள நிம்மதியா தூங்கணுன்னா இவனுங்களோட உயிர எங்கையாள எடுக்கணும் பாவிமனசு கேக்கமாட்டேங்குது.. இவனுங்கள மீறிப்போயி அப்துல்லாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு லாரிய ஏத்திக்கொன்னுப் போட்டானுங்க. அப்பயும் வெறி அடங்காம அப்துல்லாட புள்ளைய உயிரோட கெணத்துல போட்டு சாவடிச்சானுங்க.. இப்ப ஆண்ட்டனியோட புள்ளைகள பெத்துட்டு வந்திருக்கேன். இப்ப என்ன பண்ணுவானுங்களாம்.. மூஞ்சிமேல மீசைவச்ச ஆம்பளைங்கற நினைப்பு இருந்தா இந்தப்புள்ளைங்க மேல கையவைக்கச் சொல்லும்மா.. டேய் ஈத்தரப்பயலே.. இப்ப வையுடா கைய.. ஆண்டனியோட துப்பாக்கிலேந்து குண்டு வெடிச்சு நீயும் உங்கப்பனும் சாகறத பாத்துட்டு நிம்மதியா எங்கம்மா போகட்டுண்டா”

கோபாலு விக்கித்து நின்றான். அத்தனை உண்மைகளும் கட்டவிழ்ந்த தருணம். ஆம்.. அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்த அற்புத தருணம்.. நூறு சாமிகள் தனக்குள் புகுந்து அருளேறியவனாக சிலிர்க்கத் தொடங்கினான். அன்றைக்கு வரமறுத்த அருள் இப்போது தெள்ளத்தெளிவாக ஏறியிருந்ததை உணர்ந்தான். வேட்டைக்குப் போகும் கறுப்பும் அவனையே சுற்றிவந்த கறுப்பனும் அவனுக்குள் இறங்கி உறுமத் தொடங்க கைப்பேசியை எடுத்தான்.

“ராபட்டு ஒரு சம்பவம் செய்யணும்.. இனிமேட்டிக்கு எந்தப் புடுங்கியும் எந்தப் பொறம்போக்கும் பொறப்ப வச்சு உசுரப் புடுங்காத மாரிக்கி காவு வாங்கணும்டா.. கறுப்பனுக்கு பசிக்கு ராபர்ட்டு.. ரத்தம் பாக்க நேரம் வந்திடுச்சு ஆமா.. ப்ரேக்குப் புடிக்காத தண்ணி லாரி வேணும். எங்கறுப்பன் செத்த அதே சனிக்கெழமக்கி தான்”.

****

பாலைவன லாந்தர் 
Palaivanam999@gmail.com

****

பாலைவன லாந்தர் 
Palaivanam999@gmail.com

சென்னையில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

என் படைப்பில் என் நிலம்

0

வேல் கண்ணன்

ப்பளங்கள் கரிக்கும் நிலத்தில் நின்றபடியே ஆன்லைன் ஆர்டர் கொடுத்த பெப்பரோனி பீட்சா(pepperoni pizza)வைச் சவச்சப்படியும் வெப்பக்காற்று எரிக்கும் நிலத்தில் ‘சில் பீர்’ சீப்பியபடியுமான, திணைகள் மருவிய, பிறழ்ந்த, கலங்கிய காலகட்டத்தில் “என் நிலம்” என்பது எங்கே? எப்போது? என்னும் கேள்வியை எழுப்புகிறது.

“என் படைப்புகளில் என் நிலம்” என்பதைவிட என் படைப்புகளில் நான் வாழ்ந்த, வாழும் நிலம் என்று பொருத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் படைப்புகளில் பெருங்கனவு நிலம் ஒன்று உலவுகிறது. இந்த நிலம் வருவதற்கு காரணமாக, நாம் சார்ந்த நிலத்தின் செழுமை, வளமை, இயல்புக்கு மேலதிகமாகச் சுரண்டப்பட்டு, “நிலம் சார்ந்த மனிதர்கள்” என்ற நிலைமாறி “மனிதர்கள் பிடித்து வைத்திருக்கும் மிச்ச நிலமாக” மாறியது காரணம் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்தியல் ஒப்புக்கொண்டதின் வெளிப்பாடே, என் கவிதையான ‘என் நிலம் சார்ந்து பாட என் நிலத்தில் என்ன இருக்கிறது’, ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’. இது என்னுடைய இரண்டாம் தொகுப்பில் இடம் பெற்றது.

என்னுடைய இலக்கற்ற தீவிர வாசிப்பு தொடங்கிய காலம் குறைந்த கார்காலமும் அதிக பனிக்காலமும் அதைவிட அதிகமான வேனிற் காலமும் தன்னகத்தே கொண்ட திருவண்ணாமலையில் வாழும்போது நிகழ்ந்தது. இந்த வாசிப்பும் தேடுதலும் இவ்வுலகை, பொதுப் புத்தியில் இருந்து முற்றிலும் விலக்கிய பார்வை தந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு நிகழ்வு, ஒரு சினிமா, கதை, கவிதை, அரசியல் மாற்றம், மனிதர்களின் சல்லித்தனம், மகோன்னதம், சமூக அமைப்பு குறித்து ஓரளவிற்கு புரிதலும் பார்வையையும் மாற்றியது.

என்னுடைய முதல் தொகுப்பில் (இசைக்காத இசைக்குறிப்பு) இந்தப் புரிதலுடன் என் படைப்புகள் இருந்ததா? நிச்சயமாக இல்லை. ஆனால் நான் வாழ்ந்த மலை சார்ந்த நிலத்தில் அழுத்தமாக கால் ஊன்றி நின்று, அண்ணாந்து பார்த்தும் சுற்றும் முற்றும் பார்த்தும் வியப்புற்றும் ஆற்றாமையுடனும் குறிப்பாக ஈழத்தில் நடந்தேறிய இன அழிப்பு பெருங்கொடுமை கண்டும் எழுதியது என்று சொல்லலாம்.

முதல் தொகுப்பில் வரும் மலை, மரங்கள், இளமஞ்சள் வெயிலும் நான் வாழ்ந்த நிலத்தின் பகுதிகள். குறிப்பாக மரம். திருவண்ணாமலையில் நான் வசித்த வீட்டில் அசோக மரங்கள் இருந்ததால், ‘அசோக மரத்து வீடு’ என்பார்கள். அதே தெருவில் இருக்கும் எனது பள்ளி நண்பர் அண்ணாமலை வீட்டில் தெரு நண்பர்கள் அதிகம் புழங்கவும் விளையாடவும் செய்வோம். அந்த வீட்டிற்கு ‘வேப்ப மரத்து வீடு’ என்பார்கள். நான் அதிகம் இந்த மரங்களின் மடியில் ஒட்டியபடியே கிடப்பேன். அண்ணனின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில்(அடையாறு) ஒரு வேப்பமரம் இருந்தது. சிலவேளைகளில் நானோ, அவரோ சாய்ந்தபடி நின்று பேசிக்கொண்டிருப்போம். அவரின் இழப்பை “பச்சையம்” என்ற கவிதையை இந்த மரங்களுடன் எழுதியிருந்தேன். அதேபோல், எழுதத் தொடங்கிய நாட்களில் நான் வாழ்ந்த ஊர், மலைகள் சூழ இருந்த “சைலம்” என்ற சேலம். அந்தச் சமயத்தில் பொழுது கழிந்தது எல்லாம் சுற்றி இருக்கும் ஏதாவதொரு மலையின் அடிவாரத்தில்தான். இதுவே இன்றுவரை என்னையுமறியாமல் மலைகளும் மரங்களும் வெளிப்படுகின்றன. இந்த நிலத்து சூழலின் தன்மையில் மனித இயல்புகளும் இழப்புகளும் காதலையும் காமத்தையும் ஏமாற்றங்களையும் கொண்டாட்டங்களையும் வலிகளையும் எழுதிவருகிறேன் என்று நம்புகிறேன்.

இரண்டாம் தொகுப்பான ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’ வெளிவர ஐந்து வருடமானது. இந்த இடைவெளியில் கவிதையின் வீரியத்தை, தேவையை, சமகால நீட்சியை, சூழல் சார்ந்து இயங்கும் நிலத்தின் இயல்பை, காலத்தின் அவசியத்தை, இன்னும் இணக்கமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிகம் எழுதவில்லை என்றாலும் கவிதை சார்ந்து நிறைய பயணப்பட்டேன்.
முன்பே படித்த பல ஆளுமைகளின் கவிதைகள், படைப்புகளை மறுவாசிப்பு செய்தேன். அதில் இயங்கும் நிலம், காலம் குறித்த அவதானிப்பு முற்றிலும் வேறு கோணத்தில் தென்படத் தொடங்கியது. இரண்டாம் தொகுப்பை ஓரளவிற்கு இவ்வகையான புரிதலுடன் செய்தேன்.

தற்போது, பத்து வருடத்திற்கு மேலாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெருநகரமான சென்னையின் தன்மையை “நகரப் பெருவாழ்வு தனை”, “நேற்று இன்று நாளை”, “வழிகளை மாற்றிக்கொள்பவன்” போன்ற பல கவிதைகளில் வெளிப்படுத்தினேன்.

முன்பெல்லாம் திருவண்ணாமலையில் ஓரிரு நாட்கள் பெய்யும் கோடை மழையானது கடந்த இரண்டு வருடமாக, நெடுநாட்கள் நீடித்து பொழிந்து, வெக்கையின் அளவைக் குறைத்திருக்கிறது. மார்கழியில் கொட்டும் கடும் பனி, கார்த்திகை மாதத்திலேயே கவிழ்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்தை நேரடியாக உணர முடிகிறது. ஒருபக்கம் மகிழ்வாக இருந்தாலும் ஒருவித சந்தேகமும் எதிர்காலம் குறித்த கலக்கமும் இல்லாமல் இல்லை. இதன் வெளிப்பாடாகவும் நிலம் என்பதை இடப்பெயர் கொண்டு நேரடியாகச் சொல்லாமல், அதன் சூழல், தகவமைப்பு, காலம் அது தரும் உள் உணர்வுகளை முடிந்தவரைக்கும் இப்போது எழுதிவரும் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறேன்.

ஐந்திணைகளைக் கொண்டாடிய தமிழ் நிலத்தின் இழந்த வளமைகளை, என் கவிதையில் வரும் கனவுக்குள்ளும் மாயத் தன்மைக்குள்ளும் பொதித்து எழுதுகிறேன்.

மாயக்கனவுகள் தொன்மங்களை மீட்டெடுக்கும் ஒரு வழி என்பதறிவோம்.

***

வேல் கண்ணன் – திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.
இசைக்காத இசை குறிப்புகள், பாம்புகள் மேயும் கனவு நிலம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: velkannanr@gmail.com