Home Blog Page 34

காந்தியை அறிதல்

2

ப.சுடலைமணி

1

ராஜாமணி ராஜவல்லிபுரத்திலிருந்து ஜங்சன் செல்லும் கிருஷ்ணவேணி பஸ்ஸை எதிர்பார்த்து தாராபுரம் பஸ் ஸ்டாப்பில் காத்துநின்றான். பஸ் சரியான நேரத்திற்கு வந்துவிடும். ஆனால் இன்று நேரம் கடந்துகொண்டே இருந்தது. ராஜாமணியின் கண்களில் பஸ் தென்படவில்லை. அவனது கண்கள் வடக்கு நோக்கி அலைந்து கொண்டிருந்தன. ஊருக்கு வடக்கே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வாய்க்கால் பாலம். அதனை ஒட்டி நின்ற பனவடலிகள், மருதமரங்கள் அனைத்தும் பார்வையில் மாறிமாறி தென்பட்டன.

பஸ் வராததால் எரிச்சல் அடைந்த ராஜாமணி பார்வையை மேலப்பத்தை நோக்கி நகர்த்தினான். சீதாரு அலுமினியச் சட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு உசிலமர ஏற்றத்தில் கவனமாக ஏறிக்கொண்டிருந்தாள். வலது கையில் சிறிய மண்வெட்டி ஒன்றைத் தூக்கியபடி சென்றாள். பிறகு மந்திரமூர்த்தி கோயில் ஆலமரத்தைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அன்னிச்சை செயலாகப் பார்வை வடக்குப் பக்கமாகத் திரும்பியது. கிருஷ்ணவேணி பஸ் கண்களில் பட்டது. கரையிருப்பு தாண்டி விக்ரம் டயர் விளம்பர போர்டு பக்கமாக பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்ஸை நுட்பமாகப் பார்க்கத் தொடங்கினான். கொடிக்கம்பத் திண்டில் வைத்திருந்த புத்தகப்பையை வேகமாக எடுத்து முதுகில் மாட்டினான். பையை வேகமாக மாட்டும்போது சற்று மேல் ஏறிய சட்டையை வலது கையால் கீழே இழுத்துவிட்டான். மூக்குக் கண்ணாடியை ஆள் காட்டி விரலால் மேலே தூக்கிவிட்டான். பஸ் பாலத்தில் வரும்போது யாரோ ஒருவன் பைக்கில் வேகமாக முந்திக்கொண்டு முக்கரைச்சியின் தோட்டத்தைக் கடந்து வந்தான். ராஜாமணியின் கவனம் முழுவதும் பஸ்ஸின் மீது இருந்தது.

பைக்கில் வந்தவன் வேகமாக ராஜாமணியின் அருகில் நிறுத்தினான், ஏலேய்… கண்ணாடி… பைக்ல ஏறுல… டைம் ஆயிட்டு… முதல் பீரியடு கரீம் சார் கிளாஸ்… லேட்டா போனா ஏசுவாரு… ஏறு… ஏறு… என்று அவசரப்படுத்தினான். அவன் ஒன்றுமே பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்தான். யமஹா ஆர்எக்ஸ் 100 ஓர் உறுமு உறுமிக்கொண்டு வேகம் எடுத்தது.

பைக்கை தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் திருப்பாமல் நேராக ஓட்டிச்சென்றான். ஏலேய்… சம்முவம்… பைபாஸ்ல போடே… இங்க எங்கடே போற… அவரு எளவுல நிக்க முடியாதுடே… இப்படி போனா தச்சநல்லூர் ரயில்வே கேட்ல மாட்டிக்கிடுவோம்… என்றான் ராஜாமணி. சண்முகநாதன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பைக் சந்திமறிச்சம்மன் கோயில் வளைவில் திரும்பியது. பைக்கின் வேகத்தை திடீரென்று குறைத்தான். அன்னபாக்கியம் பழக்கடையின் முன்பாகப் பைக்கை நிறுத்தினான். ராஜாமணியைப் பைக்கிலிருந்து இறங்கச் செய்தான். பைக்கின் சைடு ஸ்டாண்டை போட்டுவிட்டு ஸ்டைலாக சண்முகநாதன் இறங்கினான். வலது கையை லேசாக ஆட்டி தங்க ப்ரேஸ்லெட்டைச் சரிபடுத்தினான். அவனது செயல் ராஜாமணியைக் கூடுதலாக எரிச்சல் அடைய செய்தது.

இதுனாலதாம்ல ஒங்கூட பைக்கில வரமாட்டேன்… இன்னைக்கு என்ன ஏமாத்தி பைக்குல கூட்டிட்டு வந்துட்ட… போலாம் கௌம்புடே… எங்கையா இப்ப புலவர் மளிகைக்கடைக்கு வருத நேரம்டே… கோழிங்களுக்கு கோதும தவுடு வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தாரு… என்ன இங்கனக்குள்ள பாத்தார்னா சங்க அறுத்து போடுவாரு… என்று ராஜாமணி புலம்பத் தொடங்கினான்.

ஏம்ல சலம்பிக்கிட்டு கெடக்க… வா… ஒரு பழ ஜூஸ் குடிக்கலாம்… நல்லா ஜில்லுன்னு இருக்கும்… இந்தக்கட யார் கடன்னு தெரியுமா? நம்மகூடு படிச்சாள்ள… அல்லோலியா லதாமேரி… அவா கடதான்… என்று சொல்லிக்கொண்டே இரண்டு பழ ஜூஸ்க்கு ஆர்டர் கொடுத்தான்.

சம்முவம் சொன்னா கேளுடே… எனக்கு ஜூஸ் எல்லாம் வேண்டாம்… இங்க இருந்து கௌம்பலாம்… நேரம் ஆகுத என்று பதற்றத்துடன் பரிதாபமாகப் பேசினான் ராஜாமணி.

எதையும் காதில் வாங்காமல் சண்முகநாதன் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் ஜில்லென்ற சிகப்புநிற பழ ஜூஸை வாங்கி வந்தான். வலது கையிலிருந்த கிளாஸை ராஜாமணியிடம் நீட்டினான். ராஜாமணி கிளாஸை வாங்க சற்று யோசித்தான். வேணும்னா குடி… பன ஏறுதவன் குண்டிய எட்டும் மட்டும்தான் தாங்க முடியும்… வேணுமா? வேண்டாமா? ரெண்டையும் நானே குடிச்சிடுதேன் என்றான் சண்முகநாதன். ராஜாமணி வெடுக்கென கிளாஸைப் பிடுங்கிக்கொண்டான். கிளாஸை உடனே வாயில் வைத்து உறிஞ்சினான். வாயில் அகப்பட்ட முழு கருப்புத் திராட்சையைக் கடித்து ருசித்தான். பாதி கிளாஸைக் காலி செய்திருந்தான். சண்முகநாதன் பைக்கில் ஏறி அமர்ந்து அவசரமாக ஸ்டார்ட் செய்தான். ஆக்ஸிலேட்டரை முறுக்கி அவசரப்படுத்தினான். அவனது முகம் மிகவும் பிரகாசமடைந்தது. யாரையோ பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் “சீக்கிரமா வண்டியில ஏறுல… போகலாம்” என்றான். வண்டி ஜங்சனை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.

2

சண்முகநாதனும் ராஜாமணியும் தாழையூத்து சங்கர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளிக்கூடத்தில் படியும் சிமெண்ட் புழுதிகளின் பெரும்பகுதியை இவர்கள் தங்கள்மீது ஒட்டவைத்துக் கொண்டவர்கள். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் சில்லறைச் சேட்டைகளின் பின்னால் கண்டிப்பாக இருவரும் இருப்பார்கள். பிளஸ் டூவில் சுமாரான மார்க் வாங்கி பாஸானார்கள். இருவரது வீட்டிலும் பாளயங்கோட்டை சேவியர் காலேஜ்க்கு அப்ளிகேஷன் போடச்சொல்லி நச்சரித்தார்கள். ஆனால் இருவரும் சேவியர் கல்லூரியில் சேரக்கூடாது என்பதிலும் ஃபாதர்கள் கையில் சிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தனர். வீட்டில் அழுது அடம்பிடித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சேர்ந்தார்கள்.

சண்முகநாதன் பெரும்பாலும் ராஜவல்லிபுரத்திலிருந்து கிருஷ்ணவேணி பஸ்ஸில்தான் ஜங்சன் பஸ் ஸ்டாண்டு வரை வருவான். அதே பஸ்ஸில் ராஜாமணியும் தாராபுரத்தில் ஏறிக்கொள்வான். கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்தில் சண்முகநாதனுக்குப் புதிய யமஹா பைக்கும் வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் தினமும் பைக்கில் காலேஜ் செல்வதற்கு அனுமதி கிடையாது. வாரத்திற்கு இரண்டு நாள் பைக்கில் வருவான். மற்ற நாட்களில் பஸ் பயணம்தான். சண்முகநாதன் பைக்கில் வரும் நாள்களில் ராஜாமணிக்குக் கொண்டாட்டம்தான். இருவரும் காலேஜுக்குப் போகாமல் ஊர் சுற்றுவார்கள். பெரும்பாலும் சினிமா பார்க்கச் செல்வார்கள். ஒருசில நாள்கள் தைரியமாகப் பைக்கில் கன்னியாகுமரி, குற்றாலம், பாபநாசம் வரையும்கூட சென்று வந்தனர். ராஜாமணியும் கஷ்டப்பட்டு யமஹா பைக் ஓட்டக் கற்றுக்கொண்டான். ஒருநாள் பைக்கில் கன்னியாகுமரிக்குச் சென்று திரும்பும்போது பொன்னாக்குடி அருகில் திருவள்ளுவர் பஸ்ஸை பைக்கில் முந்தினான் ராஜாமணி. அன்று இரவு முழுவதும் தன்னுடைய சாதனையை நினைத்து தூங்காமல் கிடந்தான்.

3

படிப்பில் இருவரும் மோசம் என்று கூறிவிட முடியாது. எப்படியோ அனைத்துப் பாடங்களிலும் பாஸ் ஆனார்கள். ஈகிள் புக் சென்டரில் கிடைக்கும் ஐம்பது ரூபாய் கைடுகள் இவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடும். கல்லூரியிலும் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. சில செமஸ்டர்களில் வருகைப் பதிவு குறையும்போது பேராசிரியர் ராமையா காப்பாற்றி விடுவார். அடிதடி, வம்பு, வழக்கு எதிலும் இருவரும் ஈடுபடுவதில்லை. பைக் கையில் கிடைத்துவிட்டால் இருவரும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

மாலை நேரம் திருநெல்வேலி ஜங்சன் பஸ் ஸ்டாண்ட் களைகட்டி இருக்கும். குறிப்பாக தச்சநல்லூர், தாழையூத்து வழியாகச் செல்லும் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் கேட்கவே வேண்டாம். கல்லூரி, பள்ளிக்கூட மாணவர்களால் நிரம்பி வழியும். பஸ்ஸில் அமர்ந்து செல்ல இடம் பிடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ராஜா பில்டிங் அருகில் வலதுபுறம் பஸ் திரும்பியதுமே கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடிவரத் தொடங்கும். பஸ்ஸை நிறுத்துவதற்கு டிரைவர்கள் தங்களுக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.

சண்முகநாதனும் ராஜாமணியும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸை எதிர்பார்த்து இசக்கி கடை போட்டிருக்கும் தூணின் அருகில் நின்றனர். சண்முகநாதனின் கண்களில் சிறிய பதற்றமும் மிரட்சியும் தெரிந்தது. ராஜாமணிக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கும் திறமை வாய்க்கவில்லை என்றே கூறலாம். அவன் சற்று வெகுளியான பையன். சலசலவென்று பேசிக்கொண்டிருப்பானே தவிர வேறு எதையும் நுட்பமாக அவதானிக்கும் ஆற்றல் இல்லாதவன்.

ஏலேய்… சம்முவம்… ஒனக்காக எங்கெல்லாம் அலையுதேன்… நீ கூப்பிட்ட ஒடனே ஒம் பின்னாடியே வந்துடுதேன்… ஆனா நான் கூப்பிட்டா நீ வரமாட்டேங்குற… வாடே… பஸ்சு நேத்து மாதிரி லேட்டாதான் வரும்… ரோடு முழுக்க அறுப்புக்களம் போட்டுருக்கானுவ… பஸ்ஸ வேகமா ஓட்ட முடியாது… மேம்பாலத்து அடி வரைக்கும் போயிட்டு வரலாம்… என் கேம்லின் பேனால நிப்பு கீறி போச்சி… பென் சென்டர் போன ஒடனே மாத்தி வாங்கிறலாம்… வாடே ஒடனே வந்திடலாம் என்றான் ராஜாமணி. சும்மா இருல… நாளைக்குப் பைக்க கொண்டாறேன்… போகலாம்… இன்னைக்கு எனக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு… கொஞ்ச நேரம் எங்கூட நில்லு… இல்லனா வா… ஆவின் கடையில சூடா ஒரு பால் குடிச்சிட்டு வரலாம் என்றான் சண்முகநாதன். பஸ் ஸ்டாண்டின் முதல் கடையாக இருந்த ஆவின் பாலகத்தை நோக்கி நடந்தான்.

ராஜாமணிக்கு வேறு வழியில்லை. அவனும் பால் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கடையைச் சுற்றி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு ரூபாய்க்குச் சூடான சுவையான ஆவின் பால் என்றால் சும்மா விடுவார்களா என்ன? கண்ணாடி கிளாஸ்களில் பாலை வாங்கியவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து நின்றுகொண்டனர். சண்முகநாதன் கூட்டத்தை விலக்கிவிட்டு இரண்டு கிளாஸ்களில் பாலுடன் வந்தான். ராஜாமணி ஒரு கிளாஸை வாங்கிக்கொண்டான். சூடா இருக்கு மாப்ள… பாலை லேசாக உறிஞ்சி சுவைத்துவிட்டு சீனியை நெறைய போட்டுருக்கானுவ… கூப்பயினி மாதிரி நல்லா இனிப்பா இருக்குடே என்றான் ராஜாமணி.

நீலநிற தாவணி அணிந்த மாணவிகளின் கூட்டம் வேகமாக ஆவின் பாலகத்தை நோக்கி வந்தது. சண்முகநாதன் ஊஷாரானான். அவனது முகத்தில் யாரும் கண்டறிய முடியாத மெல்லிய புன்னகை தவழ்ந்தது. மாப்ள… இந்தத் தாவணி எந்த ஸ்கூல்ல? தெரியாதது போல கேட்டான். ராஜாமணிக்கு இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவது மிகவும் பிடித்த காரியம். யோசிக்கவில்லை சட்டென்று கூறினான். டவுன் கல்லண ஸ்கூல் தாவணில… உனக்குத் தெரியாதாக்கும்?… இந்தப் பிள்ளைங்க எல்லாம் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் ஸ்டாப்புல காந்தி செல முன்னாடி எறங்குங்க… எறங்கி நைனார் கொளம் ரோட்டுல நடந்து போறத பாத்திருக்கேன்… அதுல புதுசா தாவணி போட்டுருக்கும் புள்ளைங்க எல்லாம் லெவன்த் படிக்குதுங்க… தாவணிய பாத்தாலே நான் கண்டுபிடிச்சுடுவேன் என்றான். அனைத்தையும் கேட்டவாறே சண்முகநாதன் பாலை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.

ராஜவல்லிபுரம் செல்லும் கிருஷ்ணவேணி பஸ் வேகமாக பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தது. பஸ்ஸில் “அழகிய லைலா… அவளது ஸ்டைலா…” பாடல் அதிர்வுடன் ஒலித்துக்கொண்டிருந்தது. டிரைவர் திடீரென பிரேக்கை மிதித்து பஸ்ஸை நிறுத்தினான். முன்னாடி செழியநல்லூர் பஸ் கூட்டத்தில் நிரம்பி வழிந்து மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கிருஷ்ணவேணி பஸ் டிரைவர் பஸ்ஸை வேறு வண்டிகள் முந்திச்செல்ல முடியாதபடி சற்றுக் கோணலாக நிறுத்தி வைத்தான். பஸ்ஸை நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக இறங்கினான். டிரைவரின் விரல், கழுத்தில் தென்பட்ட தங்கம் புதுமாப்பிள்ளையை நினைவுபடுத்தியது. சட்டையின் மேல் பட்டனை மாட்டாமல் விட்டிருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கிய வேகத்தில் பஸ் ஸ்டாண்டின் தூணைச் சுற்றிலும் கடை பரப்பியிருந்த இசக்கியிடம் ஏலேய்… மாப்ள… ஒரு சிகரெட்டு கொடுடே… என்றான். சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஆனந்தமாகப் புகையை உறிஞ்சி உள்ளிழுத்து ரசித்து வெளியேற்றினான்.

நண்பர்கள் இருவருக்கும் பஸ்ஸில் இடம் பிடிக்கும் வித்தை நன்றாகவே தெரியும். ராஜாமணி பஸ்ஸின் பின்வாசல் வழியாக ஏறி சற்று முன்னால் இருந்த சீட்டில் இடம் பிடித்தான். ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். இடது கையைப் பக்கத்து சீட்டில் வைத்துக்கொண்டு, ஏலேய்… சம்முவம் இங்க வாடே… முன்னால எடம் பிடிச்சிருக்கேன்… என்று கத்தினான். சண்முகநாதன் மாணவர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டான். ராஜாமணி இருக்கையைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தான். ராஜாமணியின் அருகில் வந்த மல்லிகா இவன் கையை எடுக்கச் சொன்னாள். ஏல… ராஜாமணி மைனிக்கு நிக்க முடியாதுடே… கொஞ்சம் எடம் கொடுப்பா… என்றாள். இங்கெல்லாம் எடம் இல்லை மைனி… என் பிரண்ட்டு சம்முவம்… வருவான்… அவனுக்குத்தான் எடம் போட்டு வச்சிருக்கேன்… என்றான். இதையும் மீறி மல்லிகா இருக்கையில் அமர வந்தாள். இங்க பாரு மைனி ஒன் வேலைய என்கிட்ட காட்டாத… ஒன் குண்டிய வேற சீட்டுல போயி வையி… என்று கூறிவிட்டு, இருக்கையின் இடதுபுறம் நகர்ந்து அமர்ந்துகொண்டான். கைகளை முன் இருக்கையின் கம்பியில் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். சண்முகநாதன் ஒருவழியாக இருக்கைக்கு அருகில் வந்தான். சற்று அயர்ச்சியுடன் சீட்டில் அமர்ந்தான். உடனே பேண்ட் பாக்கெட்டிலிருந்து அழகான கொம்பு சீப்பை உருவி எடுத்து கலைந்திருந்த தலைமுடியைச் சீவிவிட்டான். ராஜாமணி, என்னல சம்முவம்… பொண்ணால பாக்கபோற? தலைய இந்தச் சீவு சீவுத? என்று நக்கல் அடித்தான்.

பஸ்ஸில் வெக்கை அதிகமாக இருந்தது. டிரைவர் பஸ்ஸின் எஞ்சினை அனைத்து வைக்காமல் சென்றிருந்தான். பஸ்ஸில் ஒரு மென்மையான அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. பஸ்ஸில் மூச்சு விடமுடியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் அனைவரும் வியர்வையில் குளித்தவர்களாகக் காட்சியளித்தனர். பஸ் நகரும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ராஜாமணி ஜன்னல் ஓரமாகவும் சண்முகநாதன் உள் பக்கமாகவும் அமர்ந்து இருந்தனர். ராஜாமணி தன்னுடைய மூக்குக்கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான். கண்ணாடியை மாட்டிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான். மாப்ள… இவனுவ வண்டிய ஒடனே எடுக்க மாட்டானுவ… முன்ன பின்ன டர்ரு… டர்ருனு… இழுத்துக்கிட்டே நிப்பானுவ என்றான். இப்ப என்னல அவசரம்… வீட்டுக்குப் போயி என்ன செய்யப் போற?… அங்கன ஒனக்கு வெட்டி முறிக்கித வேலையா இருக்கு? என்று கேட்டான் சண்முகநாதன்.

கல்லணை ஸ்கூல் மாணவிகள் கூட்டம் பஸ்ஸில் நிரம்பியிருந்தது. தச்சநல்லூரில் இறங்கி விடுவதால் அவர்கள் இடம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று மாணவிகள் சண்முகநாதனின் அருகில் வந்து நின்றனர். சண்முகநாதனுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. முழுவதுமாகக் காற்று நிரப்பப்பட்ட பலூன் வானில் பறப்பது போன்று பறந்து கொண்டிருந்தான். ராஜாமணி பஸ்ஸின் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். தூங்குமூஞ்சி கண்டக்டர், இசக்கி கடையில் மாவா பாக்குத்தூள் வாங்கி வாயில் நிரப்பியதைப் பார்த்தான். கண்டக்டர் முதலில் ஊறிய எச்சிலைப் பஸ்ஸின் டயரை ஒட்டி துப்பினான். தோல் பைக்குள் கிடந்த விசிலைக் கையில் எடுத்தான்.

பஸ் மெதுவாகக் கிளம்பியது. இந்தியன் வங்கி வாசல் பக்கம் திரும்பும் இடத்தில் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும்போது கண்டக்டர் விசிலை அடித்து நிறுத்தினான். படியில் நின்றுகொண்டு உடையார்பட்டி, தச்சநல்லூர், தாராபுரம், கரையிருப்பு, கணபதி மில், தாழையூத்து… என்று கத்த ஆரம்பித்தான். பஸ்ஸில் இருந்தவர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். ராஜாமணிக்குப் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சோமுத்தேவர் போதையில் பேச ஆரம்பித்தார். நீங்க வெளங்க மாட்டேங்கடே… இவ்வளவு கூட்டம் ஒங்களுக்குப் போதாதா?… இன்னும் எவன ஏத்தப் போறீங்க… பஸ்ஸ எடுங்கடே என்றார்.

பயணிகளின் சத்தம் அதிகரிக்கவே பஸ் வேகமாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது. ஜானகிராம் ஹோட்டல் அருகே இரண்டு பெண்கள் கையை நீட்டி பஸ்ஸை மறித்தனர். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு பஸ் நகர்ந்தது. உடையார்பட்டி குளக்கரைக்கு வந்த போதுதான் பஸ்ஸிற்குள் ஓரளவு காற்று புகுந்தது. உடையார்பட்டி குளத்தில் மார்பளவு தண்ணீருக்குள் நின்றுகொண்டு மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கான வலைகளைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

உடையார்பட்டி ராமலெட்சுமி ஆஸ்பத்திரி கேட்டவங்க வாசல் பக்கம் வாங்க… ஒரு ரூபா சில்லறைய வச்சிக்கிட்டு வாசல் பக்கம் வாங்க… என்று கத்திக்கொண்டிருந்தான். உடையார்பட்டி முக்கில் பஸ் திரும்பி நின்றது. இனி எப்படியும் ஐந்து நிமிடங்கள் டிக்கெட் போடுவதற்காக நிறுத்தி வைத்துவிடுவார்கள். பயணிகளுக்குப் பழகிப்போன ஒன்றுதான். ராமலெட்சுமி ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருந்த வயல் காட்டை மண்ணைப் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வலதுபுறமாக அமர்ந்திருந்த ராஜாமணி பயணிகளுக்கு இடையே கிடைத்த இடைவெளி வழியாக அந்தப் பணிகளைக் கவனித்தான். சம்முவம் இந்த வயக்காட்ட ஏன்டே மண்ணப் போட்டு மேடாக்குதானுவோ… இங்கன நெல்லு வௌஞ்சிட்டுதானடே இருந்திச்சி… இதுல என்னதான் செய்யப் போறானுவ… கோட்டிக்காரப் பயலுவ என்று கேட்டான். சண்முகநாதனுக்குத் தெரியும் இங்க ஒரு சினிமா தியேட்டர் கட்டப்போகிறார்கள் என்பது, ஆனால் அவன் எதுவும் பேசவில்லை அவனது கவனம் முழுவதும் கல்லணை ஸ்கூல் மாணவிகளின் மேல் இருந்தது. குறிப்பாக அந்தச் சுருட்டை முடி கொண்ட கருத்த பெண்ணின் மேல் இருந்தது.

சுருட்டை முடிக்காரி ஓர் இருக்கைக்கு முன் நின்றாள். வரிசையாக அவளின் தோழிகள் நின்றனர். பள்ளிக்கூட கதைகளைப் பேசிக்கொண்டு நின்றனர். பள்ளிக்கூடத்தில் பேச முடியாததைப் பஸ்ஸில் பேசினார்கள். சண்முகநாதனுக்கு எப்படியோ தைரியம் வந்தது. அவனுக்கு மிகவும் அருகில் நின்ற முகப்பருக்களால் நிறைந்த முகம் கொண்ட மாணவியிடம், சுருட்டை முடிக்காரியைக் காட்டி அவபேரு என்ன?… சட்டென்று கேட்டான். முகப்பருக்காரி முகத்தில் தோன்றிய பயத்தை மறைத்துக்கொண்டு, அவ பேர என்ட கேட்டா எப்படித் தெரியும்… அவட்ட கேட்க வேண்டியதுதானே… என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ராஜாமணி சட்டென்று, அவா பேர அவாட்ட கேக்குறோம்… உம் பேரு என்னட்டி? என்றான். முகப்பருக்காரி கொஞ்சம் கூட யோசிக்காமல் திலகா என்று கூறிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்..

பஸ் கிளம்பியது. மிதமான வேகத்தில் சென்றது. வழக்கம் போலவே தச்சநல்லூர் ரயில்வே கேட் அடைத்திருந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் செல்லும் நேரம்… ராஜாமணி டென்சன் ஆனான். இன்னைக்கும் கெணத்துல குளிக்க முடியாது போல… சீக்கிரமா வீட்டுக்குப்போனா காக்காச்சிக் கெணத்துல குளிக்கப் போகலாம்னு இருந்தேன்… சோலிய முடிச்சிட்டானுவ… இனி போன மாதிரிதான்… பேசிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிவைத்துக் கொண்டான். சண்முகநாதன் சுருட்டை முடிக்காரியின் ஒவ்வொரு அசைவுகளையும், பேச்சுகளையும், சில்லறைச் சேட்டைகளையும் அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தான். அவளின் பெயரைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பெயரை அறிந்து கொள்ளும் வழிதான் தெரியவில்லை.

கேட் திறந்தவுடன் பஸ் வேகமெடுத்தது. பெருமாள் கோயில் ஸ்டாப்பில் ஓரிருவர் இறங்கினர். தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் ஸ்டாப்பில் பஸ்ஸில் நின்று கொண்டிருந்த கூட்டம் ஓரளவு இறங்கியது. சுருட்டை முடிக்காரியும் தன் தோழிகளுடன் இறங்கி தெற்கு நோக்கி நடந்தாள். கணேஷ் பீடிக்கம்பெனிக்குச் சென்று வந்த ஒரு சில பெண்கள் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் முழுவதும் பீடி இலை, பீடித்தூள் வாசனையால் நிரம்பியது. தாராபுரம் ஸ்டாப்பில் ராஜாமணி இறங்கிக் கொண்டான். சாலையைக் கடப்பதற்காக மேல வாய்க்கால் கரையில் நின்றான். கம்பதடியான் கோயிலின் மணியோசை கேட்டது. இருபுறமும் மாறிமாறி வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாமணியிடம், கொழுந்தப்பிள்ள… மைனிக்கு எடம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டயளே?… ஒங்க பக்கத்தில ஒக்காந்து வர எவ்வளவு ஆசபட்டேன்… இப்படி செஞ்சிட்டயளே?… என்றாள் மல்லிகா. அதனை ராஜாமணி பொருட்படுத்தவில்லை. வேகமாக ரோட்டைக் கடந்து உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் நுழைந்து நடந்தான்.

4

காலையில் கிருஷ்ணவேணி பஸ் சரியான நேரத்திற்குத் தாராபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றது. ராஜாமணி ஓடி போய் பஸ்ஸில் பின்வாசல் வழியாக ஏறினான். காட்டாம்புளி அம்பியிடம் விசாரித்து, சண்முகநாதன் பஸ்ஸில் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். சண்முகநாதன் ஜங்சன் பஸ் ஸ்டாண்டில் நிற்பான் என்று நினைத்துக்கொண்டான். பஸ் மெதுவாகச் சென்றது. கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த தாத்தா எழுந்தார். தன் காலுக்கடியில் வைத்திருந்த சிமெண்ட் சாக்கில் சுற்றிய கருவேப்பிலை கட்டை தூக்கிக்கொண்டு சந்திமறிச்சம்மன் ஸ்டாப்பில் இறங்கினார். ராஜாமணி அந்தச் சீட்டில் அமரச் சென்றான். சீட்டை அப்போதுதான் கவனித்தான். சற்று ஈரமாக இருந்தது. இருந்தாலும் சீட்டில் அமர்ந்து கொண்டான். பஸ் கிளம்பும் நேரத்தில் சண்முகநாதன் ஓடிவந்து ஏறினான். அவனது தலைமுடி லேசாக கலைந்திருந்தது… ராஜாமணி, “ஏலேய்… சம்முவம்… மாப்ள… இங்ஙன ஏம்ல பஸ்சுல ஏறுதா?… என்னாச்சி…” என்றான். சண்முகநாதன் சற்று சுதாரித்துக்கொண்டு சந்திமறிச்சம்மன் கோயிலுக்குப் போனேன்… என்றான். ராஜாமணியின் வெகுளித்தனம் இந்தப் பொய்யைக் கண்டுபிடிக்க முடியாமல் செய்தது. இங்க உக்காருதயா… என்றான். வேண்டாம்ல… நீயே இருந்துக்கோ… நான் கொஞ்சம் முன்னாடி போயி நின்னுக்குறேன்… என்று கூறிவிட்டு வேகமாக பஸ்ஸின் முன் பகுதியை நோக்கி நகர்ந்தான். பஸ்ஸில் காதலன் படத்தின் ”பேட்ட ராப்” பாடல் உச்ச ஸ்தாபியில் அலறிக்கொண்டிருந்தது.

ரயில்வே கேட்டில் மாட்டிக்கொள்ளாமல் பஸ் கடந்து சென்றது. பஸ்ஸை பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே ஓட்டிச்செல்லாமல், ராஜா பில்டிங் பாம்பே டையிங் ஜவுளிக்கடை ஓரமாக நிறுத்தி வைத்தனர். “ஜங்சன் போறவங்க எல்லாம் வேகமா எறங்குங்க… டவுனுக்குப் போறவங்க பஸ்சுலயே இருங்க… வண்டி டவுனுக்குப் போவுது” என்று கண்டக்டர் கத்தினான். பெரும்பாலும் அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர். கல்லணைப் பள்ளிக்கூட மாணவிகள் பஸ்ஸிலேயே இடம்பிடித்து அமர்ந்தனர்.

சண்முகநாதன் முன்வாசல் வழியாகச் சற்றுத் தாமதமாக இறங்கி ராஜாமணியை நோக்கி ஓடிவந்தான். மாப்ள… இன்னைக்கு நாம சினிமாவுக்குப் போகலாம்டே… இந்தப் பஸ்சுல ஏறி டவுன் போகலாம் என்றான். ஒனக்கு என்ன கோட்டி புடுச்சிருக்கால?… படம் 11.30-க்குதான் போடுவானுவ… இப்ப ஒன்பது மணிதான் ஆவுது… என்ன ஆச்சி ஒனக்கு… வா ஒழுங்கா காலேஜ் போகலாம்… கரீம் சார் நம்மல கொன்னு போடுவாரு… இன்னைக்குப் பிராக்டிக்கல் கிளாஸ் இருக்கு… லேப்ல முட்டை வைச்சிருக்கோம்… தெரியும்தான… இன்னைக்கு ‘சிக் எம்ரியோ‘ பிராக்டிக்கல் செய்யணும்… நான் வரல நீ வேணும்னா போடே… ரெண்டு மூணு வாரமா பிராக்டிக்கல் கிளாசுக்குப் போகல… போன தடவை நான் இன்குபேட்டர்ல வச்சிருந்த முட்ட குஞ்சு பொரிச்சிட்டுனு எல்லாவனும் சேந்து என்ன கிண்டல் பண்ணுதானுவ… நான் இன்னைக்குக் காலேஜ் போகணும் என்றான் ராஜாமணி. மாப்ள… இன்னக்கி ஒரு நாள்டே… ப்ளீஸ்… நாளைக்கு நான் பாலாமடையிலிருந்து ஒனக்கும் சேர்த்து நாட்டுக்கோழி முட்டய வாங்கியாறேன்… சம்சுதீன் அண்ணன்ட சொல்லி யாருக்கும் தெரியாம முட்டய இன்குபேட்டர்ல வைச்சிரலாம்… அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எப்படியோ ராஜாமணியை தாஜா செய்துவிட்டான். இருவரும் வந்த பஸ்ஸில் மீண்டும் ஏறினர்.

இருவரும் சுருட்டை முடிக்காரிக்குப் பின்சீட்டில் அமர்ந்துகொண்டனர். திலகா சுருட்டை முடிக்காரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ராஜாமணி மெதுவாக மாப்ள… ரெண்டு போ்ல எவளோ ஒருத்தி மைசூர் சேண்டல் சோப்பு போட்டு குளிச்சிட்டு வந்துருக்கா… வாசன தூக்குதுல… என்றான். மேலும் மெதுவாக, “ஏட்டி திலகா… கல்யாண வீட்டுக்காட்டி போற… மண்டைல இவ்வளவு பூவ வைச்சிருக்க” என்று கிண்டல் செய்தான். திலகா வெடுக்கென பின்னால் திரும்பி முறைத்தாள். “ஏட்டி… கன்னத்துல என்னட்டி இவ்வளவு பருவ வச்சிருக்க… டீவி வௌம்பரத்துல எத்தன களிம்ப காட்டுதானுவ… வாங்கி தடவ வேண்டியது தானே” என்றான். “திலகா, இங்கே பாரு ஓவரா போற… ஒன் சோலிய பாரு… எல்லாம் எனக்கு தெரியும்” என்றாள். சுருட்டை முடிக்காரி திரும்பி பார்க்கவே இல்லை. கையில் ஓர் உதிர்ந்த மல்லிகைப்பூவை எடுத்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். சண்முகநாதன் மெதுவாக அவளிடம், “ஒன் பேர தான கேட்டேன்… சொன்னா கொறஞ்சா போவ… ஒரே ஒருதடவ என்ட பேசு… பேர சொல்லனாலும் பரவாயில்ல… ஒரு வார்த்தையாவது என்ட பேசு… எத்தன நாள் உம் பின்னாடியே சுத்துதேன்… என்ன திரும்பியாவது பாரு… ஒருதடவ ஒன் மொகத்த காட்டு” என்று கெஞ்சினான். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவன் பேச்சைச் சட்டை செய்யவில்லை. கண்டக்டர் அருகில் வந்தான். சண்முகநாதன் அமைதியானான்.

பஸ் ஈரடுக்கு மேம்பாலத்தில் முக்கிமுனகி ஏறிக்கொண்டிருந்தது. ராஜாமணி சூழ்நிலையை மாற்ற முயற்சித்தான். சண்முகநாதனிடம் பாலஸ் டீ வேலஸ் தியேட்டரைக் காட்டி, “மாப்ள… இந்தத் தியேட்டர்ல படம் பாத்திருக்கியா?” என்றான். “பாக்கல… இது ரொம்ப நாளா மூடித்தான் கெடக்கு… முன்னாடி ஒருநாள் கையில அடி பட்டதுக்குப் பண்டாரவௌ நாடார்ட்ட கட்டுப்போட இங்க வந்துருக்கேன்… முட்ட பத்து போட்டு கட்டிவிட்டார்… ரெண்டு வாரத்தில் கை சரியாயிட்டு” என்றான். பண்டாரவௌ நாடாரு இங்கனதான் இருக்காரா என்றான் ராஜாமணி. தியேட்டர்லதான் கைகால் ஒடிஞ்சவங்களுக்கு அவரு ஆஸ்பத்திரி நடத்துராரு… எங்க ஐயா எம்-80 வண்டில கூட்டிட்டு வந்தாரு என்றான்.

கல்லணை ஸ்கூல் மாணவிகள் அனைவரும் வாகையடி முக்கு ஸ்டாப்பில் இறங்கி மேற்கு நோக்கி நடந்து சென்றனர். ராஜாமணியும் சண்முகநாதனும் இறங்கி கிழக்கு ரத வீதியில் ராயல் டாக்கீஸ் இருக்கும் வடக்கு திசையை நோக்கி நடந்தனர். மாப்ள… இன்னும் படம் போட நேரம் இருக்கு… என்ன பண்ணலாம் என்றான் ராஜாமணி. கொஞ்ச நேரம் நெல்லையப்பர் கோயிலுக்குள்ள போகலாம்… நல்லா குளுந்தாப்ல இருக்கும்… அப்படியே நெல்லையப்பரையும் காந்தமதியம்மனையும் பாத்துருவோம் என்றான் சண்முகநாதன். மாப்ள… ஆரெம்கேவி கடைக்கு எதுத்தாப்ல பழ ஜூஸ் கெடைக்கும் வாங்கித் தருவியா? என்றான் ராஜாமணி. போகலாம் வா… இந்த எச்சிகள புத்தி மட்டும் ஒன்னவிட்டுப் போகாது போல என்றான் சண்முகநாதன். எப்படில போகும்… பத்து வருஷமா நீ பழகி கொடுத்ததுதான்… இங்கையால ஆரம்பிச்சது… தாழையூத்து பஜார்ல டெய்லி நீ பழ ஜூஸ் வாங்கிக் கொடுத்துப் பழக்கிட்ட… பள்ளிகொடத்துல படிக்கிறப்ப பழகுனது…. தொட்டில் பழக்கம்… விட முடியுமா?… ஏலேய் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டேன்ல பேசாம வாடே என்றான் சண்முகநாதன். ஆண்டிநாடார் கடை முக்கில் திரும்பி வடக்கு ரத வீதியில் நடந்து சென்றனர்.

5

ராஜாமணி படிப்பில் சுமார்தான் என்றாலும் கல்லூரி செல்லும் நாள்களில் ஓரளவு பாடங்கள் குறித்து தெரிந்துகொள்வான். சண்முகநாதன் படிப்பில் இப்பொழுது அக்கறை காட்டுவதில்லை. சுருட்டை முடிக்காரியைப் பின்தொடரும் பயணத்தால் கொஞ்சநஞ்ச படிப்பும் கேள்விக்குறியானது. ராஜாமணிக்கு சண்முகநாதனின் விசயம் ஓரளவிற்கு அடைபட்டது. சண்முகநாதனை எச்சரித்தும் பார்த்தான். ஆனால் அவன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. வேறு வழியின்றி ராஜாமணியும் ஓரிரு நாள்கள் சண்முகநாதனுடன் சேர்ந்து ஊர் சுற்றினான்.

சுருட்டை முடிக்காரியின் நதிமூலம் ரிஷிமூலம் தேடியலைந்தனர். ஒருநாள் தைரியமாகச் சுருட்டை முடிக்காரியின் தெருவில் இறங்கி நடந்தனர். அவளைப் பின்தொடர்ந்து வீட்டையும் கண்டுபிடித்தனர். தச்சநல்லூரிலிருந்து டவுனுக்குச் செல்லும் வழியில் கணேஷ் பீடி கம்பெனிக்கு எதிர்த்த சந்து ஒன்றில் அவள் வீடு இருந்தது. ஓடு வேய்ந்த பழைய காலத்து வீடு, வீட்டின் சுவர்களில் சுண்ணாம்பு உதிர்ந்து எதையோ சொல்லாமல் அறிவித்தது. வீட்டின் முன்புறம் இரண்டு மெலிந்து போன பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் திண்ணையின் மூலையில் உடைந்த சட்டியொன்றில் கோழி ஒன்று அடை பம்மிக்கிடந்தது. பாரில் கறை படிந்த பழைய சைக்கிள் ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் சுவர் உயரம் குறைவாக இருந்தது. உடைந்த ஒருசில ஓடுகளை மாற்றியிருந்தனர். வீட்டின் முற்றத்தை அடைத்துக்கொண்டு பூவரச மரம் ஒன்று படர்ந்து கிடந்தது. வீட்டின் வலது புறத்தில் தென்னை ஓலைகளால் நிரசல் பிடித்திருந்தனர்.

ராஜாமணிக்கு உள்ளூர பயம் கொன்றுபோட்டது. இருந்தாலும் நடித்துக்கொண்டு சண்முகநாதனுடன் நடந்து சென்றான். அந்தத் தெருவிலிருந்து கிழக்கு நோக்கி நடந்து ஆறுமுகம் ரைஸ் மில்லைக் கடந்து, தேவி கல்யாண மண்டபத்தை ஒட்டிவந்து பஸ் ஸ்டாப்பை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிலநாள்கள் யமஹாவில் அந்தத் தெருவைச் சுற்றிவரத் தொடங்கினர். அவளிடம் பேசுவதற்கும் தயக்கம். பயம் வேறு… சண்முகநாதனுக்கு உலகமே சூன்யமாகத் தெரிந்தது.

ராஜாமணி இல்லாமல்கூட சண்முகநாதன் ஜங்சன். டவுன், தச்சநல்லுர் என்று சுற்ற ஆரம்பித்தான். அவனது மனம் நிலையற்றதாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. நண்பர்களிடம் பேசுவதற்குக்கூட தயங்கினான். நண்பர்களிடம் பேசுவதைத் தவிர்த்தான். ஒருசில நேரங்களில் அவனது யமஹா மேம்பாலத்திற்கு அடியிலிருக்கும் தளபதி ஒயின்ஸ்க்கும் சென்று வந்தது. கல்லூரிக்கு வருவது மிகவும் குறைந்தது. ராமையா சார் ஒருநாள் அவனைக் கல்லூரிக்கு அழைத்து தனியாகப் பேசிப்பார்த்தார். பயன் ஒன்றும் இல்லை. செமஸ்டர் தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் காலையில் சண்முகநாதன் ராஜாமணியைப் பஸ் ஸ்டாண்டில் சந்தித்துப் பேசினான். இருவரும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி விலக்கில் இருக்கும் டீ ஸ்டால் சந்தில் நின்று பேசினர். மாப்ள… அவ பேரக்கூட தெரிஞ்சிக்க முடியல… திலகாவும் பேச மாட்டேங்குறா… கிண்டல் பண்ணினாக்கூட கண்டுக்காம போயிடுதா… என்ன செய்யணு தெரியல… எங்கண்ணன்ட்ட வேற எவனோ இத பத்தவச்சிடானுவ… அவன் அடிக்கடி என்ன ஏசிக்கிட்டு இருக்கான். பைக்க எடுக்க விடமாட்டேங்குறான். போன வாரம் வண்ணாரப்பேட்டை சாலைத்தெருவுல இருக்க என் அக்கா வீட்டுக்குப் போனேன். அவளும் இதபேசி எச்சரிச்சி விட்டா… இப்ப அவ வீட்டுக்கும் போக முடியாம இருக்கேன்… எங்க ஐயாவுக்கு மட்டும் தெரிஞ்சுது நான் உயிரோடவே இருக்கமுடியாது… அவர பத்திதான் ஒனக்குத் தெரியுமே… பெல்ட்ட கழட்டி அடி பிச்சிடுவாரு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்.

மாப்ள… நீ காலேஜ் வந்துட்ட… அவ சின்ன பொண்ணுடே… இப்பதான் பிளஸ் ஒன் படிக்கிறா… கஷ்டப்பட்ட புள்ள… அவ அப்பா பால் விக்கிறார்… வீட்டுல பெருசா ஒன்னும் ஒர மோரு இல்ல… பயந்துட்டா… நீ வேற அடிக்கடி அவ வீடு வரைக்கும் போற வார… அவளாள என்ன செய்யமுடியும்… நீ கொஞ்சம் பொறுமையா இருல… இப்ப செமஸ்டர் எக்ஸாமுக்குப் படிக்கிற வேலயப் பாரு… இப்ப படிச்சாலும் பாஸ் பண்ணிடலாம்… கவலைப்படாதே நான் ஒனக்குச் சொல்லித் தாரேன்… என்றான் ராஜாமணி.

சண்முகநாதன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வேகமாக டீ ஸ்டால் கல்லாவிற்குச் சென்று, “யண்ணே… ஒரு பில்டர் கொடுங்க…” என்றான். வாங்கிய வேகத்தில் கயிற்றுக் கங்கில் பற்றவைத்து அவசரமாக இழுக்க ஆரம்பித்தான். சண்முகநாதனைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு 3-ஜி பஸ்ஸில் காலேஜுக்குச் சென்றான் ராஜாமணி. மூன்றாவது பாட வேளையில் பாலின் சுகந்தி மேடத்திடம் எதிர்த்துப் பேசிவிட்டு வகுப்பைவிட்டு வெளியேறிச் சென்றான் சண்முகநாதன். மதியம் சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியிலிருந்து மாயமாக மறைந்தும் போனான்.

6

ஒரு வாரம் கழித்து ஜங்சன் பஸ் ஸ்டாண்டுக்கு ராஜாமணியைத் தேடி வந்தான் சண்முகநாதன். மாப்ள… நான் எக்ஸாம் எழுதலாம்னு இருக்கேன்… தமிழ்க் கைடு வாங்கணும்… ஈகிள் புக் சென்டர் போகலாம் என்றான். ராஜாமணி, கைடு வேண்டாம்ல.. நான் ஒனக்குச் சொல்லித் தாரேன்… ஈஸியா தமிழ் பாஸ் பண்ணிடலாம் என்றான். இல்ல எனக்குக் கைடு மட்டும் வாங்கித்தா போதும்… மத்த புக்கு எல்லாம் வாங்கிட்டேன்… வா கடைக்குப் போகலாம் என்று ராஜா பில்டிங் வரிசையில் நடக்கத் தொடங்கினான். ராஜாமணியும் உடன் சென்றான். ஈகிள் புக் சென்டரில் தமிழ்க் கைடை வாங்கினான் சண்முகநாதன். கைடை வெளியே கொண்டுவந்து வரிசையில் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக்கின் சீட்டில் வைத்துப் பக்கத்தைத் திருப்பினான். முதல் பக்கத்தில் ஆர்.சண்முகநாதன் என்று அழகிய கையெழுத்தில் பெயரை எழுதினான். பெயரை எழுதிவிட்டு, ஏலேய்… கண்ணாடி… இந்தக் கைடை நீ வைச்சிரு… நான் நாளைக்கு ஒன் வீட்டுல வந்து வாங்கிக்கிறேன்… என்றான். இப்ப காலேஜ் வரலயா? என்றான் ராஜாமணி.

இல்ல மாப்ள… எனக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு… பைக்குலதான் வந்தேன்… பேட்ட எம்.டி.டி காலேஜ் வரைக்கும் போகணும் என்றான். எம்.டி.டி காலேஜுக்கு எதுக்குடே… அங்கன என்னல வேல இருக்கு என்றான் ராஜாமணி. காலேஜ் இல்ல… காலேஜ் பக்கம் போகணும்… சும்மா கேள்வி கேட்டு இம்ச பண்ணாத… நாளைக்கு உன்ன வந்து பாக்கேன் என்றான். தொடர்ந்து, “மாப்ள… பச்ச குத்துத கொரவனுவ பேட்டையிலதானல இருப்பானுவ?” என்று கேட்டான். பச்ச குத்துத எடத்துக்கு நீ ஏன்டே போற… கேட்டா சொல்லித் தொலைக்கவும் மாட்ட… என்னமும் பண்ணித் தொல… எனக்கென்ன… நான் காலேஜ் போறேன் என்றான். “மாப்ள… இன்னைக்கு ஒருநாள் காலேஜ் கட் அடிச்சிட்டு எங்கூட வாடே… இனி ஒன்ன எங்கயும் கூப்ட மாட்டேன்… பேட்டைக்குப் போயிட்டு ஒடனே வந்துரலாம்… பைக்கு இருக்குதுடே” என்றான். “இல்ல மாப்ள… நான் வரல… ஏற்கனவே லீவு அதிகமாயிட்டுது… ஒனக்கு என்டே… ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி… காண்டனேஷன் கட்டி பரிச்சய எழுதிடுவ… நான் காலேஜ் போறேன்” என்று ராஜாமணி கூறிக்கொண்டிருக்கும் போது 3-ஜி பஸ் ஈகிள் புக் சென்டர் வாசலுக்கு வந்தது. ராஜாமணி ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறிக்கொண்டான். கூட்டம் அதிகமாக இருந்தது. படியில் கஷ்டப்பட்டு தொங்கினான். ராஜாமணியின் இடுப்பில் கையைப் போட்டு கோட்டி ராஜா தாங்கிப் பிடித்து பஸ்ஸின் உள்ளே இழுத்துக்கொண்டான். பஸ் சற்று வேகம் பிடித்தது. சுலோச்சன முதலியார் பாலத்தில் சென்றது. ராஜாமணி தலையைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டு தாமிரபரணியைப் பார்த்தான்.

7

சனி, ஞாயிறு விடுமுறையில் சண்முகநாதன் ராஜாமணியின் வீட்டிற்கு வரவில்லை. ராஜாமணி சண்முகநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போல கிருஷ்ணவேணி பஸ்ஸில் ஏறியவுடன் சண்முகநாதன் குறித்து விசாரித்தான். சண்முகநாதனை ஊரில்கூட பார்க்கவில்லை என்ற பதில் நண்பர்களிடமிருந்து கிடைத்தது. பஸ் ஜங்சன் பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பஸ்ஸிலிருந்து ராஜாமணி வேகமாக இறங்கினான். 3-ஜி பஸ் வர குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். ராஜாமணி பிளாட்பாரத்தில் ஏறி விரைவாக இசக்கியின் கடைக்குச் சென்றான். இசக்கி பஸ் ஸ்டாண்டில் மாணவர்களுக்கு மிகச்சிறந்த தகவல் தொடர்பு பணியாளராகச் செயல்பட்டு வந்தான். எசக்கி… நம்ம சம்முவத்த பாத்தயாடே? என்றான். மணியண்ண… சம்முவம் அண்ணன நான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பாத்து ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது… போன வாரம் புது நூறு ரூபாய கொடுத்து ஒரு பில்டரு வாங்கிட்டு, பாக்கியகூட வாங்காம போனான்… எங்கப் போனான்… என்ன ஆனான்னு தெரியல என்றான் இசக்கி.

ராஜாமணி மெதுவாக நடந்து ஆவின் பாலகம் அருகே சென்றான். ஒரு கிளாஸ் பாலை வாங்கிக்கொண்டு ஒரு தூண் மறைவில் நின்றுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான். பால் அதிக சூடாக இருந்தது. மெதுவாக குடித்தான். அவனது பார்வை முழுவதும் பஸ் நிறுத்தி வைக்கும் பாந்தை நோக்கி இருந்தது. திடீரென ராசாமணி துணுக்குறும் விதமாக கல்லணை மாணவிகள் கும்பலாக வந்துகொண்டிருந்தனர். அந்தக் கும்பலின் தலைவி என்கிற தோரணையில் சுருட்டை முடிக்காரி நடந்து வந்தாள். ஒரு ஜடையைத் தூக்கி முன்பக்கமாகப் போட்டிருந்தாள். ஒரு கட்டிச் செம்பருத்திப் பூவை வலது புறமாகச் சூடியிருந்தாள். வேகமாக வந்த ஒரு ஆட்டோ அவளை இடிப்பதுபோல வந்தது. அவள் ஆட்டோவைக் கவனிக்கவில்லை. ஆட்டோவை திலகா கவனித்துவிட்டாள். ஏட்டி… காந்தி… பாத்து நடட்டீ… கண்ண பொடதியிலயா வைச்சிருக்க… ஓரமா போட்டீ… என்று கத்தினாள். ராஜாமணிக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. சுருட்டை முடிக்காரியின் பெயரைத் தெரிந்துகொண்டான். பஸ் ஸ்டாண்டில் குதியாட்டம் போடத்தோன்றியது. சண்முகநாதன் இந்த இடத்தில் இருந்திருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே உற்சாகமாக பஸ் ஸ்டாண்டு முழுவதும் ஒரு சுற்று சுற்றிவந்து சண்முகநாதனைத் தேடினான். அவனிடம் “காந்திமதி“ என்ற பெயரைக் கூறவேண்டும் என்று துடியாகத் துடித்தான். ஆனால் சண்முகநாதனைப் பார்க்க முடியவில்லை.

8

மறுநாள் காலை வழக்கம் போல ராஜாமணி கிருஷ்ணவேணி பஸ்ஸில் ஏறினான். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வருகைப்பதிவைப் போட்டான். நண்பர்களின் முகங்களில் ஓர் அமைதி காணப்பட்டது. யாரும் பேசவில்லை. என்னல… எல்லாரும் பனங்க மாதிரி முஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்கய…என்ன பிரச்சன என்று கேட்டான் ராஜாமணி.

ராஜேஷ் மெதுவாகப் பேசினான். ஏலேய்… ராஜாமணி… நம்ம சம்முவம் நேத்து நைட்டு குருண மருந்த தின்னுட்டான்டே… என்ன பிரச்சனன்னு தெரியல… நைட்டே ஜங்சன் கெட்வெல் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க… எங்களுக்கு விசயம் லேட்டாதான் தெரியும்… என்ன பண்ணனு தெரியல… ஆஸ்பத்திரி போனாதான் நெலம தெரியும்… நேத்து நம்ம செல்லதொர மட்டும் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். ஆனா சம்முவத்த பாக்கவிடலயாம் என்றான் உடனிருந்த அம்பி. ஜங்சன் வரை யாரும் யாருடனும் பேசவில்லை.

பஸ் ராஜா பில்டிங் முகப்பு அருகே வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து குதித்து கீழே இறங்கினான் ராஜாமணி. அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தனர். ராஜா பில்டிங் காம்பவுண்டு சுவர் ஓரத்தில் கரும்பு சக்கையை மெத்தையாக்கி படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட நிர்வாணப்பெண் இவர்களைப் பார்த்து மிரண்டு எழுந்து அமர்ந்தாள். குறுக்காக ஓடிவந்த மடியிறங்கிய செவலை நாய் ஒன்று வந்த வழியில் திரும்பி ஓடியது.

ராஜாமணி நேராக ஆஸ்பத்திரிக்குள் செல்லாமல், வாசலை ஒட்டியிருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குள் ஓடினான். அவசரமாக ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டான். சந்நியாசித்தெரு ஐயர் கொடுத்த செந்தூரத்தை அவசரமாக நெற்றியில் இட்டான். விரலில் ஒட்டியிருந்த செந்தூரத்தைப் பேண்ட் பாக்கெட்டின் உள் பக்கமாகத் துடைத்துக்கொண்டான்.

அனைவரும் சண்முகநாதனைப் பார்த்துவிடும் ஆவலில் முண்டியடித்தபடி அறையின் வாசலில் நின்றனர். சண்முகநாதனின் அண்ணன் அழுதபடியே அறையிலிருந்து வெளியேறினான். எதையும் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை. அவனது உடல்மொழி எதையோ உணர்த்தியது. அவனைத் தொடர்ந்து சண்முகநாதனின் அக்காவும் அழுதுக்கொண்டே வெளியேறினாள். கையில் ஒரு கசங்கிய தேங்காய்ப் பூத்துண்டை வைத்திருந்தாள். அவளது தலைமுடி முழுவதுமாகக் கலைந்திருந்தது. அவள் கண்கள் சிகப்பு ரேகையுடன் காட்சியளித்தன.

ராஜாமணிக்குப் பொறுமை இல்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது சண்முகநாதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், வெறி கொண்டவனைப்போல அறைக்குள் நுழைந்துவிட்டான். சண்முகநாதனின் கழுத்து வரையிலும் ஒரு வெள்ளை வேட்டியைக் கொண்டு மூடி இருந்தனர். சண்முகநாதனின் உடலை உன்னிப்பாகக் கவனித்தான். சண்முகநாதனின் உதடுகள் முழுமையாகக் கருத்திருந்தன. அவனது முகத்தில் மெல்லிய சோகம் இழையோடி இருந்ததுபோலத் தோன்றியது. ராஜாமணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. அப்படியே நின்றுவிட்டான். பயத்தால் கால்களில் மெல்லிய நடுக்கம் இருந்தது. அறை மின்சாரம் இன்றி சற்று இருட்டாக இருந்தது. அறையில் திடீரென்று கரெண்ட் வரவே மின்விசிறி சுழன்றது. ஒருகணத்தில் சண்முகநாதனை மூடி வைத்திருந்த வேட்டி பறந்து வயிற்றுப் பகுதிக்கு வந்தது. ராஜாமணியின் பார்வை மிகவும் கூர்மையடைந்தது. சண்முகநாதனின் உடலை உற்றுக் கவனித்தான். சண்முகநாதனின் இடது மார்பில் ரத்தக்கோரையாக “காந்திமதி“ என்று பச்சை குத்தியிருந்ததைக் கண்டு மிரண்டு போனான். ராஜாமணியின் உடல் புல்லரித்தது. அறையிலிருந்து வேகமாக வெளியேறியவன், நண்பர்களின் பேச்சைப் பொருட்படுத்தாமல் ஜங்சன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

***

ப.சுடலைமணி – இவர் கோவை மாவட்டத்தில் உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வெவ்வேறு இதழ்களில் இவரது கதைகள் அண்மையில் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: sudalaimani77@gmail.com

செப்-அக்டோபர் 2022 இதழ்

0

வணக்கம்,

எப்போதும் போல தாமதமாக இந்த இதழும். பொறுமையோடு காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு முதலில் எமது நன்றி.

மின்னிதழ்களின் வசதியாக எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம், எத்தனை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் என்கிற அம்சங்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. மிகவும் நேர்த்தியாக சீரான இடைவெளிகளில் கடந்த பத்தாண்டுகளில் மின்னிதழ்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. வெகுஜன பரப்பில் இயங்கிடவும் நல்ல தரமான படைப்புகளோடு “கிழக்கு டுடே, மெட்ராஸ் பேப்பர்” ஆகிய இதழ்கள் வெளிவருகின்றன.

தேமே என்று நாமும் கொண்டு வருகிறோம் என்பது போல் இல்லாமல் இருக்கவே மெனக்கெடுகிறோம் என்றாலும். இந்த முறையும் google workspace காலாவதியானதை கவனிக்காமல் விட்டுவிட்டோம் editor@yaavarum.comற்கு வந்திருக்கும் பல மின்னஞ்சல்களை பார்க்கவே முடியவேயில்லை. இதனால் சில படைப்புகளின் தேர்வு நிலை குறித்து தெரிவிக்க முடியவில்லை என்பதால் தலையங்கமே மன்னிப்பு எடுக்கும் சங்கல்ப்பத்தோடு எழுத ஆரம்பித்தது தான்.

அதே நேரம், பிப்ரவரிக்கு பிறகு வரும் மின்னிதழ் சிறிய அளவேனும் கட்டணம் செலுத்தி வாசிக்கும் வகையில் தான் வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வகையில் வரும் வருமானம் எவ்வளவாக இருப்பினும் அதை படைப்பாளர்களுக்குள் பகிர்ந்து கொடுக்கவே விரும்புகிறோம். நல்லது நடந்தேறும்..

விருதுக் குழப்பங்களும் வீண் சச்சரவுகளும்

சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதும் நிறைய கூச்சல்களும் குழப்பங்களும் எழுந்தன. பொதுவாக ஒரு விருது அறிவிக்கப்படுகையில் அதற்கு எழும் எதிர்ப்புகளை இவ்வாறு தான் பார்க்க இயலும்.

விருது X விமர்சனம் (அரசியல்/இலக்கியத்தரம்/பகைமை/போட்டி)

மேற்சொன்ன ரீதியில் எழும் விமர்சனங்களே இதுவரை நிகழ்ந்தவை. ஆனால் அண்மையில் வழங்கப்பட்ட ப.காளிமுத்துவிற்கான விருதில் எழுந்த சர்ச்சை

விருது X ஜெயமோகன் பதிவு X (ஜெமோ எதிர்ப்பு + விருது ஆதரவு)

எல்லாவகையிலும் விமர்சனம் குறித்த எந்த சுவடும் பேசப்படாத வண்ணம் இருதரப்பிலும் கவனமாக கையாளப்பட்டது. இத்தகைய தீவிரத்தன்மை கொண்ட பலனற்ற வெற்று விவாதங்கள், விஷ்ணுபுரம் விருது அறிவித்தவுடன் எழுந்த கூச்சல்களைப் பார்க்கையில் ஆச்சரியம் அளித்தது.

விருது X (ஜெமோ எதிர்ப்பு + சாரு எதிர்ப்பு +/- ஜெமோ/சாரு ஆதரவு)

என்கிற வகையில் பொறுத்தமேயற்ற சச்சரவுகள் அரங்கேறின. எந்த வகையிலும் யாருக்கும் பலன் தராத விருது பிரச்சினைகளில் தலையிடுவதை விட நேர விரயம் செய்ய வேறு எந்த சிறந்த உபாயமும் இல்லை. 80-90களில் பிறந்த இன்றைய வாசகர்களுக்கு, தங்களது வெகுஜன ரசனை மீது கல்லெறிந்து காயப்படுத்தியவர்களில் சாருவுக்கு பிரதான இடம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. வெகுஜன ரசனையிலிருந்து இலக்கியம் எனும் அடுத்த மலைக்கு பாலம் சிருஷ்டித்து அழைத்துச் சென்ற படைப்பாளர்களும் உண்டு, பரிசலில் இழுத்துச் சென்ற படைப்பாளரும் உண்டு , சாரு மலையை இலக்காகக் காண்பித்து ‘அதை நோக்கி நீந்தி வந்தா வா இல்லை better you die’ என்று சொல்லிவிட்டு குறுக்கே ஓடும் நதியில் தள்ளிவிடுவார்.

குறிப்பு : கரைசேராதவர்களும் நிறைய உண்டு.

“யுவ புரஸ்கார் விருது பெற்ற ப.காளிமுத்து அவர்களுக்கு யாவரும் பப்ளிஷர்ஸ் சார்பாக வாழ்த்துகள்” இந்த அங்கீகாரம் இவரது கலைப் பயணத்தை செறிவாக்கவும், கூர் தீட்டவும் பயன்படுத்தட்டும்.

யாவரும் பப்ளிஷர்ஸ் நிலை

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீளாமல் அதே நேரம் சோர்வுறாமலும் சோர்வுற்றாலும் தெரியாமலும் தாக்குபிடித்து வருகிறோம். இதோ இப்போது கூட மதுரை புத்தகக்காட்சியில் பங்கேற்கிறோம். ஆரம்பத்தில் நாங்கள் தாங்கிப்பிடித்த எழுத்தாளர்கள் இப்போது எங்களைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். இது ஒருவகையான மலையேற்றம், உச்சியில்லாத பயணமாக இருத்தலிலும் ஒரு நல்லது இருக்கத்தானே செய்கிறது. இறக்கம் குறித்து அஞ்சத் தேவையில்லை. ஆனாலும் இந்த பத்தாண்டு பயணத்தில் ஒற்றை நூல் கூட தமிழ்க நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்படாத காலத்திலும் சிங்கை,இலங்கை, மலேசியா, அமெரிக்கா, யேர்மனி என நண்பர்களின் முயற்சியாலும் வியாபார ஒழுங்காலும் வெவ்வேறு தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நாங்கள் அரசாங்கத்தை நம்புவதை விட ஒரு வாசகரை நம்புவதில் பலனிருக்கிறது.

தற்போது கூட பெரியார் பல்கலைகழகத்திற்கு நூல்கள் கொடையளிக்கும் புரவலர்களை புத்தகக் கடைகள், பதிப்பகங்கள் வாயிலாக கொள்முதல் செய்துவரும் வாய்ப்பு இருக்கிறது. வாசகர்கள் விரும்பினால் யாவரும் பப்ளிஷர்ஸ் நூல்களை மொத்தமாக நூலகத்திற்கு கொடையளிக்கலாம் இது குறைந்தபட்ச கோரிக்கை தான். விருப்பம் உள்ள நண்பர்கள் 9042461472 என்கிற எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பலாம்.

யாவரும் பப்ளிஷர்ஸ் வரும் ஆண்டில் கூடுதலாக இரண்டு imprint brandகளைக் கொண்டுவருகிறது. அறிவிப்பதே உற்சாகம் தரக் கூடிய செய்தி என்றாலும் அது குறித்த செய்தி மிக விரைவில்.

இந்த இதழில் ஒரு கவிதை கூட இடம்பெறாமைக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறும் கூட. அதே சமயம் கணிசமான நல்ல கதைகள் அணிவகுத்திருக்கின்றன. மீண்டுமொருமுறை படைப்பாளர்களுக்கும் பங்களித்தவர்களுக்கும் எமது நன்றி.

இப்படிக்கு
ஜீவ கரிகாலன்
ஆசிரியர்

புத்தநிலையும் சில பட்டாம்பூச்சிகளும்

0

செந்தில்குமார் நடராஜன்

முதலில்
அண்ணன்கள் கைவிட்டார்கள்.
பிறகு
காதலிகள் கைவிட்டார்கள்.
முடிவில்
தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.
இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
இன்னும் தொடர்ந்தது
கைவிடல் படலம்.
இறுதியாக அவனை
அவனே கைவிட்டான்.
அதற்குப் பிறகுதான்
நிகழ்ந்தது அற்புதம்.

இது கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதை.

கவிஞன் தன்னையே கைவிடும் போதுதான் அற்புதங்கள் நிகழத் துவங்குகின்றன. நான் பெரிதும் நேசிக்கும் பிரான்சிஸ் கிருபாவிற்கும், யூமாவு வாசுகிக்கும், தேவதேவனுக்கும் இப்படித்தான் அற்புதங்கள் நிகழ்ந்ததென நம்புகிறேன்.

“தன்னை அறிந்துகொள்வது எப்படி?” என்று ஆயிரம் ஆயிரம் வருடங்களாகத் தேடியலைந்த நம் முன்னோர்கள், அந்தத் தேடலின் பயனாய் நமக்கு வழங்கிவிட்டு போன பெருங்கொடை, “உன்னைத் தேடு” எனும் சூத்திரத்தை மட்டும்தான். தேடல்தான் மனிதன் கண்டடைந்த மகத்துவமான கண்டுபிடிப்பு. அதன் நல்விளைவே “தன்னையே கைவிடல்” அல்லது “தொலைந்து போதல்” என்பவையெல்லாம்.

கவிஞன் தன் தேடலில் கண்டடையும் அற்புதங்களை வாசகனுக்குக் கடத்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். “தேவதைகள் தூவும் மழை”, “கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு”, “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரங்கள்” ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கு பிறகு, இன்று “குடைக்காளான் துளிர்க்கும் வீடு” எனும் தலைப்பில் தன் தேடல்களைத் தொகுத்து நம் கைகளில் அளித்திருக்கும் யாழிசை மணிவண்ணனுக்கு என் வாழ்த்துகள்.

யாழிசை மணிவண்ணனின் படைப்புலகத்தை அவர் கவிதைகளில் தென்படும் அடிப்படையான சில பண்புகளின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மென்மையான கவிதை மொழி, சுருங்கச் சொல்லும் செறிவான வடிவம், இயற்கையும் அகமன உணர்வுகளும் இயைந்து வெளிப்படும் களம் மற்றும் தன்னிலை மயங்கித் திரியும் அழகியல் சித்திரங்கள். இவையே யாழிசை மணிவண்ணன் கவிதைகளின் தனித்துவமான அடையாளங்கள். இது அவர் கவிதைகள் குறித்த ஓர் ஒட்டுமொத்தமான பார்வை. அதேவேளை அவருடைய கவிதைப் பயணத்தில் காலப்போக்கில் சில பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை அவருடைய ஒரு தொகுப்பிற்கும் அடுத்த தொகுப்பிற்கும் இடையில் நிகழ்ந்த மாற்றங்களின் அடிப்படையில் பகுத்துப் புரிந்துகொள்ளலாம்.

அவருடைய முதல் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. “முதல் தொகுப்பு” என்று ஒரு கவிஞனுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளுக்கும் உட்பட்ட தொகுப்பு. “மனதில் உருவாகும் கவித்துமான தெறிப்புகளை மொழி வடிவில் கொண்டு வருவதற்கான பிரயத்தனங்களின் தொகுப்பு” என்று அந்த தொகுப்பை வகைப்படுத்தலாம்.

யாழிசை மணிவண்ணன் தனக்கான தனித்துவங்களை தன்னுடைய இரண்டாவது தொகுப்பான “கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு” எனும் தொகுப்பிலிருந்தே தீவிரமாகக் கண்டடையத் துவங்குகிறார். முக்கியமாக அவர் கவிதைகள் மொழியாகவும், அகப்பொருளாகவும் செறிவான ஓர் இடத்தை நோக்கி நகரத்துவங்குவது அவரது இரண்டாவது தொகுப்பிலிருந்தே!

பிறந்த குழந்தைகளின்
மூடிய கைகளுக்குள்
பிடிபட்டிருக்கிறார் கடவுள்

அத்தொகுப்பில்தான் சொற்ப வரிகளில் அழகியல் சித்திரங்களைக் கட்டியெழுப்பும் சூட்சுமம் அவருக்குள் கனிந்துவரத் தொடங்குகிறது. முக்கியமாக கவிதைகளில் தவிர்க்க வேண்டியவை எவை என்பது குறித்த ஒரு தெளிவைக் கண்டடைகிறார். இந்தக் கண்டடைதலின் பெரும்பங்கு கவிஞர் வைகறைக்கும் உண்டு. அவர் யாழிசையின் இரண்டாம் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“கவிதைத் தொழில் நுட்பங்களையெல்லாம் உதறிவிட்டு உயிர் நுட்பத்தை மட்டும் நம்பி துணிச்சலோடு எழுதப்பட்டதால் நிரப்பப்படாத வெற்றிடங்கள் நோக்கி நகரும் ஜீவனுள்ள காற்றாக அமைந்திருக்கின்றன இவரது கவிதைகள்”
என்னளவில் இப்போது நம்முன் இருக்கும் “யாழிசை மணிவண்ணன்” எனும் அடையாளத்தை, அவருக்கு அவர் இரண்டாவது தொகுப்பே வழங்குகிறது.

தன் படைப்புலகில் இன்னும் இலகுவான, துலக்கமான, கூடுதல் செறிவான ஓர் இடத்தில் அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பான “பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்” தொகுப்பை வைக்கலாம். இப்படியான கவிதைகளை யாழிசை எழுதுவார் என்ற இடத்திலிருந்து இந்த கவிதைகளை யாழிசைதான் எழுதியிருப்பார் என்று இனங்காணக் கூடிய கவிதைகள் அவர் மூன்றாம் தொகுப்பிலேயே உள்ளன. நுட்பமான படிமங்கள், அவற்றில் மென்மையாய் இழையோடும் மானுட உணர்வுகள் என எழுதிய கவிதைகளே அவர் மூன்றாவது தொகுப்பின் அடையாளங்கள்.

புத்தநிலை கூடுதல் தூரம்
திரும்பிச் செல்லுங்கள்
பக்கத்தில்தான் குழந்தை நிலை

*

குறுக்காக வெட்டப்பட்ட ஆப்பிளில்
இரண்டு பட்டாம் பூச்சிகள்
நான் நியூட்டன் இல்லை

*

இப்படியாக கிட்டத்தட்ட அவர் தன் comfort zone-ல் star batsman-ஆக அடித்து விளையாடியுள்ள தொகுப்பு “பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்”.

“பஞ்சுமிட்டாய் பூக்கும் மரங்கள்” தொகுப்பின் நீட்சியாகவும், அவர் கவிதை மொழியில் அடைந்திருக்கும் அல்லது அடைய விரும்பும் மாற்றங்களின் தொடக்கமாகவும் “குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு” எனும் இந்தத் தொகுப்பை அடையாளப்படுத்தலாம்.

இத்தொகுப்பைப் பற்றிய அவதானங்களில் முதலாவதாக…

‘தன்னிலைகள் மயங்கித் திரியும் அழகியல் சித்திரங்களின் வழியே சாதாரணங்களை, அசாதாரணங்களாக்கி அவற்றை கவிதைக்குள் கொண்டுவரும் தீவிரத்தை தக்கவைத்துக் கொள்ளுதல்’ என்பதைச் சொல்லாம்.

முதல் சோழியை
கணிக்கும் முன்
மறு சோழியை
உருட்டிவிடுகிறது கடல்

என்ற கவிதையில் சஞ்சலங்களில் உழன்று அலைபாயும் வாசகனின் மனம் ஒரு சோழிக்கு முன்னால் ஸ்தம்பித்து நிற்கிறது.

பெருவிரலும் நடுவிரலும்
இணையும்போது பறக்கின்றன
சொடுக்கும் பறவைகள்

இது கவிதையாகும் கணம் எதுவென்று யோசிப்பதற்குள், விரலிடுகிலிருந்து ஒரு சிறு பறவை எழுந்து பறக்கத் தொடங்குகிறது.

இரண்டாவதாக, ‘அழகியல் சித்திரத் தெறிப்பிற்கு வெளியே கூடுதலாய் ஏதோ ஒன்றைக் கண்டடைய விரும்பும் தவிப்பு’ என்பதைச் சொல்லாம்.

இந்தத் தவிப்பே அவர் பயணத்தில் ஒரு சிறு திசைமாற்றத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது.

என்னளவில் நான் வாசித்த சிறந்த அழகியல் கவிதைகள் எதுவும் அழகியல் காட்சி சித்திரங்கள் என்ற குறுகிய எல்லைக்குள் மட்டுமே நின்று விடுவதில்லை.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

என்ற பிரமிளின் வரிகளுக்குப் பின்னால் மனம் அலைந்து திரிந்ததுண்டு. சொல்லப்பட்ட வரிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து விரியும் இக்கவிதையில் “மிதக்கும் சிறகு” எனும் சித்திரத் தெறிப்பு கவிதைக்குள் ஒரு பொறியாக இயங்குகிறது. அப்பொறி ஓர் உதிர்ந்த சிறகின் மீது அமர்ந்து நம்மை நம் வாழ்வின் தீராத பக்கங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. இங்கு பறவை அழ்மனதின் படிமமாகிறது. உதிரும் சிறகு ஒரு குறியீடாகிறது.

இப்படியான ஒரு தேடல் இந்த தொகுப்பிலும் தென்படுகின்றன.

உங்கள் வழிபாடு வீண்.
திருவிழாக் கூட்டத்திலிருந்து
குழந்தை பறக்கவிட்ட
பலூன் மட்டும்தான்
கடவுளை நோக்கிப் போகின்றது – என்று யாழிசை எழுதிப் பார்க்கிறார்.

யாழிசை மணிவண்ணன் இக்கவிதையின் வழியாக ஒரு காட்சியை நம்முன்னே வைப்பதோடு நின்றுவிடவில்லை. இங்கே ஆன்மீகத்தை தேடும் நம் மனதின் போதாமையை பறக்கும் ஒரு பலூனின் மீதேறிக் கலைத்து விளையாடுகிறார்.

எனக்கு இக்கவிதையின் மீது ஒரு சின்ன விமர்சனமும் உண்டு. யாழிசை மணிவண்ணன் தன் கவிதைகளில் வாசகனை நோக்கி தன் விரல்களை நீட்டுவதை பரிசீலிக்கலாம். இந்தக் கவிதையில் உட்பொருளாய் இயங்கும் ஒன்றையே அவர், “உங்கள் வழிபாடு வீண்” என்று விரலை நீட்டிச் சொல்கிறார். மேலும் இப்படிச் அறுதியிட்டு ஒன்றைச் கவிதைக்குள் சொல்வது, அதை வாசிக்கும் வாசகன் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் கவிதையின் கதவுகளை அடைத்துவிடுகிறது.

மூன்றாவதாக, “தனது comfort zone-லிருந்து வெளியேற எத்தனிப்பது” என்பதைச் சொல்லாம்.

இங்குதான் கதையாடல், காட்சிகளை தொகுத்தல் மற்றும் அதன் விளைபொருளாய் வாசகனுக்குள் கவிதையின் மைய உணர்வைக் கடத்துதல் போன்ற அம்சங்களோடு நெடுங்கவிதைகளின் பக்கமும் நகர்ந்திருக்கிறார்.

முன்னால் காதலென்பது
விபத்துக்குள்ளானவனின் கைத்தடியைப்போல
நிதானமாக அடியெடுத்து வையுங்கள்
முன்புபோல நடக்க முடியாதென
மனதிற்குள் ஒரு மருத்துவன்
எச்சரித்துக் கொண்டேயிருக்கிறான்.

(பக்கம்: 90)

எனத் தொடங்கும் கவிதை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாதையைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம்முன் வைக்கிறது. முக்கியமாக ஒரே ஒரு சித்திரத்தை மட்டுமே வைக்கிறது. பத்திக்குப் பத்தி புதிர்த்தன்மையையுடன் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட சித்திரங்களைத் திணித்து எழுதப்படும் கவிதைகள் போலல்லாமல் எளிதான வாசிப்பு அனுபவத்தை இக்கவிதை நமக்கு வழங்குகிறது.

வாதை கொண்ட மனதின் தடுமாற்றங்களைப் பேசும் இக்கவிதையை வாசிக்கும்போதே, வாதையைப் பரவசமாய் ஏந்திக்கொள்ளும் பிரான்சிஸ் கிருபாவின் இன்னொரு கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்

மனமெனும் ஒரு பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட அற்புதமான, மிகவும் எளிய, அதேவேளை தீவிரமான ஒரு சித்திரம் இக்கவிதை. இக்கவிதைக்கு கூடுதலாய் இன்னொரு எழுத்துகூட அவசியமில்லை.

மேலும், கவிதை வரிகளின் எண்ணிக்கையை கவிதையே தீர்மானிக்கிறது. இருப்பினும் இதுவரை பிறைகளையே பிரதானமாய் எழுதிக்கொண்டிருந்த யாழிசை பௌர்ணமிகளை நோக்கி நகர்வதில் மிக்க மகிழ்ச்சி.

இத்தொகுப்பின் மீது எனக்கு வேறுசில விமர்சனங்களும் உண்டு.

கவிஞர் யாழிசை மணிவண்ணனின் படைப்புலகம் தாளமுடியாத அளவிற்கு மென்மையானது. ஆனால் உண்மையில் இவ்வுலகம் அப்படியானதல்ல. அவரது பலமும் பலவீனமும் இந்த மென்மைதான்.

கவிஞர்களின் பொதுவான மனநிலை இப்படி மென்மையாகத்தான் இருக்குமோ என்ற கேள்வி எனக்கும் உண்டு.
கல்யாண்ஜி-யின் ஒரு கவிதை.
சுற்றுச் சுவர்களில்
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என.

ஒரு கவிஞனின் மனம் இப்படித்தான் இருக்கக்கூடும் என ஒரு எதிர்பார்ப்பு எனக்கும் உண்டு. ஆனால் லௌகீக வாழ்வில் எப்போதும் ஒருவர் மென்மையான மனதோடு இருப்பது சாத்தியம் அற்ற ஒன்றாகவே உள்ளது. மேலும் கவிஞனின் மனம் கூடுவிட்டு கூடு பாய்வது இயல்பு கொண்டது. தன் சமநிலையைக் குலைத்துக்கொள்ளும் தேவை கவிஞனுக்கு உண்டு. சிதைவுவுறாத மனம் வன்மையின் நேர்த்தியை துல்லியமாக எழுதிவிட முடியுமா? இதற்குப் பொருள் கவிஞன் கீழ்மையானவனாகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. தன் கனிந்த மனநிலையின் சாயல்களை மட்டுமே கவிதைகளின் மீது முற்றிலும் கவிழ்த்து விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் கவிஞனுடையதே!

“எடைக்கல்லுக்கு நிகராய்
மல்லிகை மொட்டுக்களை நிறுத்தல்
எத்தனை பெரிய வன்மம்.”

என எழுதும் யாழிசை மணிவண்ணனின் இந்த மென்மையான மனமே, அவரின் தீவிரமான சில கவிதை வரிகளின் மீதும் அதீத மென்மையை ஏற்றிவைத்து விடுகிறது.

“பீலிபெய் சாகாடும்…” என வள்ளுவன் சொல்வது இதைத்தான்.

அவர் கவிதைகளில் இழையோடும் மென்மையின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் சில நேரங்களில் அதே மென்மையின் நெஞ்சின் மீது ஏறிதான் அவர் கவிதைகளுக்குள் நுழையவே முடிகிறது.

மேலும் அழகியல்வாதத்துக்கும் மிகையுணர்வுவாதத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியை யாழிசை மணிவண்ணன் இன்னும் கூடுதல் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்று நினைக்கிறேன்.

சில கவிதைகள் வெறும் அழகியல் காட்சிச் சித்திரங்களாக மட்டுமே நின்றுவிடுகின்றன. அக்கவிதைகள் நீடித்த ஆயுளின்றி, வாசகனின் அந்த நொடிநேரச் சிலிர்ப்பாக மட்டுமே கடந்துவிடும் அபாயம் கொண்டவை.

துல்லியமான இடத்தில் ஒரு கவிதையைத் தொடங்குவது யாழிசை மணிவண்ணின் பலம் என்றால், துல்லியமாக கவிதையை அவரே முடித்துவைப்பதும் நிகழ்ந்து விடுகிறது. கவிதையின் பலம் வாசகனுக்குள் ஒன்றைத் தொடங்கி வைப்பதுதானே?

மற்றபடி, பசலையின் பாதிப்பு கூடுலாய் இத்தொகுப்பில் அவருக்கு கனிந்து வந்திருக்கிறது.

செந்தூர மாம்பழ நிறத்தில்
அவள் உடை அணிந்திருக்கிறாள்
நான் மாம்பழங்களை
தோலோடு சுவைப்பதில்லை

அநேகமாக, “யாழிசையின் படைப்புலகத்தில் முயங்கித் திளைக்கும் காதலும், காமமும்” என்ற தலைப்பில் சக காதல் கவிஞர் மதிக்குமார் தாயுமானவன் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுத வாய்ப்பிருக்கிறது.

கடைசியாக ஒரு கவிதை.

“கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்குள் செயலாற்றுகிறது
கவிதையெனும் நஞ்சு” என்கிறார் யாழிசை.

நீலம் பாரிக்கட்டும் தம்பி!

குடைக்காளான்கள் துளிர்க்கும் வீடு

யாழிசை மணிவண்ணன்

யாவரும் பப்ளிஷர்ஸ்

 

***

செந்தில்குமார் நடராஜன் – சிங்கப்பூரில் வசிக்கும் இவர் தற்பொழுது சிறுகதைகள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியத் திருவிழாவில் இவர் எழுதிய கதை முதல் பரிசு வென்றுள்ளது.

கர்ண நாதம்

0

கர்ண நாதம்
(ஸ்ரீதர் நாராயணன் எழுதிய அம்மாவின் பதில்கள் குறித்து அம்பை எழுதிய மதிப்புரை)

பெரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப் புரிந்துகொள்ள. அதில் இழைந்துவரும் ஒலிநயங்களை வேறுபடுத்திப் பொருள்கொள்ள. அப்படிச் செய்யாவிட்டால் அது வெறும் ஓசையாகவே நின்றுவிடும். ஸ்ரீதரின் கதைகளில் ஏகப்பட்ட ஓசை. விடாத பேச்சொலி. சொற்களின் பிரவாகம். நகர வாழ்க்கை மற்றும் புறநகர் வாழ்க்கையின் நடைமுறை ஓசைகள். விடாது ஒலித்து சேதிகள் வருவதைச் சொல்லும் கைபேசி; ஏழரையைக் கூட்டுபவர்கள் பேச்சொலி; சாபமிடும் பெண்களின் ஆங்கார ஒலி; ஒப்பாரி ஒலி; லாரியும் பேருந்துகளும் ஆட்டோக்களும் தடம் புரண்டு ஓடும் சத்தம்; சிகரெட் பற்றவைக்கும் மென்னொலி; தழுதழுத்துப் பேசும் ஒலி; கேவல் ஒலி; தெருவோரம் போய் பிளாட்பார க்ரில்லைப் பிடித்துக்கொண்டு ஓங்கரித்தபடி வரும் வாந்தி ஒலி; கல்யாணத்தில் எல்லோரும் பேசும் சளசளவென்ற பேச்சு; வாள்வாள் என்று அழும் பிறந்த குழந்தையின் அழுகையொலி; பூஜைச் சடங்கொலி; நெல்லைத் தமிழில் ஏச்சுப்பேச்சு; கண்ணாடித் தம்ளர்களில் ஃப்ரூட் மிக்சர் ஊற்றும் ஒலி; நார்மடி உடுத்தி வெடுக்வெடுக்கென்று பேசும் சரசம்மா பாட்டியின் பேச்சொலி; அவளைப் பற்றியே விடாமல் பேசும் அவள் வயதான மகனின் புலம்பலொலி; பலரால் சித்திரவதை செய்யப்படும் ஒருவனின் அலறல்கள்; இறந்த மகனின் சடலத்தைத் தேடிப்போய் அவன் சடலம் கிடைக்காதலால் எழும்பும் ஒரு தாயின் ஓங்கியெழும் அழுகையொலி. இப்படித் தொடர்ந்து வந்து தாக்கும் சத்தங்கள். சற்றுத் தடுமாறிப்போகும்போது பச்சைப்பசேல் என்ற புல்லில் மறைந்து கிடக்கும் பச்சைப் பாம்பு கண்ணில் படுவதுபோல் கதைகளினூடே ஓடும் மௌனத்தின் தடங்கள் கண்ணில் படுகின்றன. அந்தத் தடங்களில் நடக்கும்போது மெல்ல மெல்ல ஒவ்வொரு கதையும் விரிந்துகொண்டேபோய் எட்ட முடியாத வெளிகளுக்கு இட்டுச்செல்கிறது. எல்லா ஒலியையும் உள்ளடக்கிக்கொண்டு ஒலிக்காமல் கிடக்கும் வெளிகள். அந்த வெளிகளில் நின்றுகொண்டுதான் ஸ்ரீதர் கதை சொல்கிறார்.

சுதந்திரமான தாயின் பல பதில்களைத் தன்னுள் புதைத்துவைத்திருக்கும் மகன். எட்வர்ட் மூங்க்கின் ஒலியில்லாத ”ஓலம்” ஓவியத்தின் பௌதிக உண்மையாய் அவன் வாழ்வு. செயற்கை ஃபைபர் காலில் மறைந்துள்ள ஜன்மக் கணக்கு. தரகு பேசப்படும் தனத்தின் பேச்சு எழும்ப வகையில்லா மௌனம். உற்றுக் கேட்பவர்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும் உடைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் கலந்திருக்கும் பல ஓசைகள். பூவாசம் முகர முடியாத ஒருவனின் முரட்டுத்தனமும் அவன் மனைவியின் உடலில் உள்ள சிகரெட் சூட்டுத் தழும்புகளும் அழிக்கமுடியாதபடி அவளுள்ளே மறைந்திருக்கும் பேசப்படாத காதல். இருபதாண்டுகளுக்குப் பின் மொட்டாய்க் கிடக்கும் கனிவை யதார்த்த உலகின் நடவடிக்கைகளில் பூட்டி வைக்கும் மௌனம். பத்திரிகை திருடும் கள்ளம். பழங்கால வீட்டின் ஓர் உள் அறையின் மூலையில் பல ஆண்டுகளாக கடன் சிட்டையுடன் விழுந்து கிடக்கும் அடகு வைத்த சவரப் பெட்டி; அத்துடன் பேச்சற்றுப்போன ஒரு கிழவர். இழவு வீட்டில் பதினான்கு வயதில் விதவையான நார்மடி உடுத்திய பெயரற்றுப்போய் விட்ட சரசம்மா பாட்டியைப் பற்றிப் பலரும் பேசும்போது கொடுங்களூர் ரெவென்யூ ஆபீஸில் தாழம்பூவில் மல்லிகைச் சரம் கோர்த்துப் பூ தைத்த பின்னலுடன் இருக்கும் அவள் பதினான்கு வயது புகைப்படத்தைத் தன் பர்ஸில் எப்போதும் வைத்திருக்கும் ஒருவனின் அமுங்கிப்போன காதல். இத்தனை மௌனங்களையும் நத்தைக்குள் இருக்கும் முத்துபோல் சுமந்துகொண்டு கடலாழத்தில் வைக்கும் கதைகள்.

தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்

2

வேதநாயக்

முதல் நவீன கவிஞர்” என்றும் “நவீன விமர்சனத்தின் தந்தை” என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். உலகெங்கிலும் மிகவும் பரவலாகப் படிக்கப்படும் பிரெஞ்சுக் கவிஞராக அறியப்பட்ட இவரது படைப்புகள் மேற்கு நாடுகளில் செல்லம் கொஞ்சத் தடையென்று சொல்ல எதுவுமே இல்லை. ஆயினும்கூட நீண்ட காலமாக(அப்போதிலிருந்து இப்போது வரை) போத்லேரின் இலக்கிய உருவம் அவர் ஓர் அவதூறு மிகுந்த எழுத்தாளர் என்ற ‘நற்பெயரால்’ குறிப்பிடப்பட்டே வந்திருக்கிறது. அவரது சிற்றின்பம் சார் தீய எண்ணங்கள் மீதான வெளிப்படையான மோகம் ஒழுக்கவியல் சிந்தனையாளர்களைச் சீற்றப்படுத்தியது. 1857-ம் ஆண்டில் “பொது மற்றும் மத ஒழுக்கங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக” அவரும் குஸ்தவ் ஃப்ளூபெர்ட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் – மேடம் பவாரிக்காக ஃப்ளூபெர்ட்டும் அப்போது வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகத்திற்காக (Les Fleurs du mal) போத்லெரும்.

Charles Pierre Baudelaire (9 April 1821 – 31 August 1867) 

நியாயமான பொருளைத் தரும் என்று விரும்பியதாலோ என்னவோ Les Fleurs de Mal (தீமையின் மலர்கள்) என்று தனது தொகுப்புக்கு தலைப்பிட்டிருந்தார். மற்றவர்களை அதிர்ச்சியடைய வைக்க நினைத்து இக்கவிதைகளை எழுதியதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர் தனது தனிப்பட்ட ஆன்மிக, சிற்றின்ப வேதனையை வலிமிகுந்த தெளிவான காட்சிகளாய் இக்கவிதைகளில் நெடுகப் பார்க்கக் கிடைக்கிறது. மனித இயல்பு வீழ்ச்சியடைந்து, சிதைந்து விட்டதாக மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட பார்வையால் வேட்டையாடப்பட்ட அவர் தனது பலவீனங்களையும், சமூகத்தில் அவர் கண்டறிந்த பாசாங்குத்தனங்களையும் பாவங்களையும் தெளிவாகப் பகுப்பாய்வு செய்ததால் காமம், வெறுப்பு, சோம்பேறித்தனம், எல்லா உணர்ச்சிகளையும் ஆழக்காணுதலால் தோன்றும் சலசலக்கும் சுய-அறிவு, மரணத்துடன் கூடிய சிதைவின் திகில், இறுதியாக மற்ற எல்லா தீமைகளையும் விழுங்கும் அக்கறையின்மையுடன் இழந்துவிட்ட ஏதேன் பற்றியதான கனவுகளுடன் கசப்பாக மாற்றி இருந்ததை வெளிக்கொணர வைப்பதான சொற்சித்திரங்களாக இக்கவிதைகள் இருக்கிறது. அத்துடன் அல்லாமல் இக்கவிதைகளையும் தாண்டி பரிபூரணமானது தொலைதூரத்தில் இருப்பதாக மட்டுமே நினைத்திருந்தார்.

Les Fleurs Du Mal – Flower of evil தமிழில் வேதனையின் மலர்கள் என்று நாகரத்தினம் கிருஷ்ணா கூறுகிறார். துன்பத்தின் பூக்கள் என்கிறார் க.வாசுதேவன். இங்கே தமிழுக்கு வரும்போது ஐந்தாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்குமென்று படுகிறது எனவே துன்ப மலர்கள் எனவும் நாகார்ஜுனன் கூறுகிறார். இறுதியாக தமிழில் வந்த தொகுப்பின் பெயர் தீமையின் மலர்கள்(க்ரியா).

இக்கவிதைகளில் சிற்றின்பக் காதல், தொலைதூரப் பயணங்கள், கலை அழகு போன்றவைகளைப் பற்றிய காட்சிகளில் பெரும்பான்மை அவலட்சணமான தன்மையோடும் கசப்பான யதார்த்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உருவகமாகவும் மாறியுள்ளது. பெரிய குறியீட்டு எல்லைகளுக்குள் யதார்த்தமான விவரங்களை முன்வைக்கும் போத்லேயரின் திறன் அவரது கற்பனைக்கும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டு விகிதத்துக்குமான அவரது முழுமையான கைவினைத்திறனை புலப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளமை வியப்பிலாழ்த்தும் தன்மையினைக் கொண்டது. அத்துடன் அவ்வரிகளின் தீவிர இசைத்திறனே அவரை குறியீட்டின்(symbolism) முன்னோடியாக மாற்றி அமைத்தது. டி எஸ் எலியட்டின் வார்த்தைகளில் சொல்வதானால் “நவீனத்தில் மிகச்சிறந்த முன்மாதிரி“.

இக்காலகட்டத்தில் (19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட கலை மற்றும் இலக்கிய இயக்கமாக Deadent இயக்கம் இருந்தது. இதனைத் தழிழ்ப்படுத்தினால் நலிந்த, நலிவுற்ற என்ற பொருளை அளிக்கிறது. அதிகப்படியான மிகையைக் கொண்டிருத்தலும் செயற்கைத்தன்மையின் அழகியல் சித்தாந்தத்தைப் பின்பற்றியதுமான மூவ்மெண்டாக இது இருந்தது. காட்சிக் கலைஞர் ஃபெலிசியன் ரோப்ஸின் (Feliien Rops-Pornokrates) படைப்புகளும் ஜோரிஸ்-கார்ல் ஹூய்ஸ்மன்ஸின் எகெய்னஸ்ட் நேச்சர் (Joris Karl Huysmans- A rebours – Against Nature 1884) நாவலும் Deadent இயக்கத்தின் முதன்மையான எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. இவ்வியக்கம் முதலில் பிரான்ஸில் செழித்து பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியது. இந்த இயக்கம் சுய வெறுப்பு, நோய், சந்தேகம், வக்கிரத்தில் மகிழ்ச்சி அத்துடன் கொச்சைத்தனம் மிகு நகைச்சுவையுடனான தர்க்கம், இயற்கை, உலகத்தை விட மனித படைப்பாற்றலின் மேன்மையின் மீதான நம்பிக்கை ஆகியவற்றால் வறையறைப்படுத்தப்பட்டது.

Deadent இயக்கத்தின் மையமானது உயிரியல் இயல்பு, அதன் தரநிலை, இயற்கை, ஒழுக்கம், வீழ்ந்துபட்ட பாலியல் நடத்தை ஆகிய அனைத்திலும் கலை என்பது இயற்கையை முற்றிலும் எதிர்க்கும் தன்மையினை கொண்டது என்கிறது. இக்கால கட்டத்தில் லத்தீன் அறிஞர் Désiré Nisard பிரெஞ்சு இலக்கியத்தின் பக்கம் திரும்பியபோது அவர் விக்டர் ஹ்யூகோவையும் ரொமாண்டிசிஸத்தையும் பொதுவாக ரோமானியச் சீரழிவுடன் ஒப்பிட்டார். ஆண்கள் தங்கள் எழுத்து சார்ந்த கலைகளையும் கலாச்சார விழுமியங்களையும் இன்பத்திற்காக தியாகம் செய்தனர். விவரிப்பதில் ஆர்வம், இலக்கியம் கலையின் மரபு விதிகளைக் கடைப்பிடிக்காதது, ஊதாரித்தனமான அளவிற்கு மொழியின் மீதான காதல் போன்ற போக்குகளும் அவர் அடையாளம் கண்டுகொண்டது Deadent இயக்கத்தின் இயல்புகளாகக் கருதப்படுகிறது.

Deadent இயக்கம் பெரும்பாலும் ஒரு பிரெஞ்சு நிகழ்வாக இருந்தபோதிலும் அதன் தாக்கம் பரந்த அளவில் தன் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பொதுவாக இன்பத்தில் ஆர்வம், பரிசோதனைப் பாலுணர்வில் ஆர்வம், வினோதமானவற்றின் மீதான ஈர்ப்பு என வறையறுக்கப்பட்டாலும் இவை அனைத்தும் சற்றே அதிகாரத் தொனியிலான ஆன்மாவையும் பொருள் மிகுதியை மதிப்பிடும் அழகியலாலும் தொகுக்கப்பட்டுள்ளன. Deadent இயக்கம் கலையில் அதன் சொந்த நலனுக்கான அழகியல் முக்கியத்துவத்தைக் கொடுத்ததால் பலர் பாதிக்கப்பட்டனர்.

தூய கலைஞர்களான, உதாரணமாக ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தூய கலைஞன் ஒருபோதும் எதையும் வலியுறுத்தி சொல்வதில்லை. மாறாக Baudelaire-ஐப் பொறுத்தவரை அரிதாகவே சில விஷயங்களை வலியுறுத்துவதும் பரிந்துரைப்பதுமாய் இருப்பதும் புலனாகிறது. போத்லேர் தன்னிடம் எப்போதும் இருக்கும் சரியான, நேர்த்தியான, நேர்மையான மனிதனை அவரது கூரிய பார்வையால் வெளிக்கொணர்கிறார். அவர் மிக முக்கியமான எதையுமே இழக்கவில்லை என்றும் சொல்லலாம். அவரது நுட்பமான சலித்த உரைநடை(!) மூலம் சரியான மனிதனை சரியான வழியில் சித்தரிப்பதில் அரிதாகவே தோல்வியடந்தவராக அறியப்படுகிறார். தவறான மனிதனை – கலைஞனாக இல்லாத மனிதனை – முரண்பாடான கண்டனத்தின் வடிவங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்துகிறது அவரது கவிதைகள்.

ராபர்ட் பிரவுனிங் தனது முன்னுரைகளில் ஒன்றில் அவரது வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து அறிவித்தது போல், “வேண்டுமென்றே தெளிவற்ற, மனசாட்சியின்றி கவனக்குறைவாக அல்லது வக்கிரமாக, கடுமையான குற்றச்சாட்டுகளை” அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் கூறியது போல் போத்லேர் இதையும் கூறியிருக்கலாம்: “அப்போதும் அதற்குப் பிறகும் என்னால் முடிந்ததைச் செய்த எதையும் நான் குறை கூறவில்லை, குறைந்தது என்னையே” என்று.

“ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் மனிதர்கள் கலகக்கார தேவதைகளுக்கு(சாத்தான்களுக்கு) தம்மை தியாகம் செய்கிறார்கள்” என்கிறார் செயிண்ட் அகஸ்டின். எந்த ஒரு பிரபல எழுத்தாளரின் கவிதையையோ அல்லது உரைநடையையோ அணுகும்போது, அவருடைய ஆளுமையை நாம் அவசியம் அணுக வேண்டும்; அதைக் கண்டுகொள்வதால் நாம் அவரை அடைகிறோம், நிச்சயமாக அவரை நேசிக்காமல் நாம் அதை நேசிக்க முடியாது. போத்லேயரைப் பொறுத்தவரை, ஞானிகள் அல்லது ஞானமற்றவர்களின் தீர்ப்பின்படி ஒருவர் அந்த மனிதனை வெறுக்கலாம் அல்லது நேசிக்கலாம். வெறுக்கப்படுவதை விட அவர் மிகவும் அன்பானவனாகக் தெரிவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். “இனிமையான, அரிதான ஒன்றான இழந்த அப்பாவித்தனம், கண்களில் ஒளிர்கின்ற நேர்மை, குழந்தையைப் போன்ற மகிழ்ச்சியான ஆச்சரியம், பொறுமை. இவைகள் நம்மை ஒரு கணத்தில் பாதிக்கின்றன. மன்னிக்க முடியாத தவறுகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் படைத்த கடவுளோடும், நம்மைக் கண்டுபிடித்த மனிதனோடும்”.

போத்லர் ஏப்ரல் 9, 1821-ல் பாரிஸில் பிறந்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அவரது தந்தை இறக்கிறார். அவரது விதவைத் தாய் ஒரு வருடம் கழித்து கேப்டன் (பின்னர் ஜெனரல்) ஜாக் ஆபிக் என்பவரை மணந்து கொள்கிறார். 1832-ல் குடும்பம் லியோன்ஸுக்கு குடிபெயர்கிறது. இளம் சார்லஸ் பள்ளியில் சேர்க்கப்படுகிறார். 1836-ல் ஆபிக்கும் அவரது குடும்பத்தினரும் பாரிஸுக்கு குடிபெயர்கின்றனர். அவரது வாழ்நாள் முழுவதும் போத்லேர் தனது தாயுடனே இணைந்திருந்தார். இளம் வயதில் அவர் ஒரு கலகக்காரனாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக வாழ்ந்திருக்கிறார். வழக்கத்திற்கு மாறான நடத்தைகளும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் அவரது குடும்பத்தை தொடர்ந்து கவலையடையச் செய்தது. 1844-ம் ஆண்டில் குடும்பத்தினர் அவரது நிதிகளை மேற்பார்வையிட நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அன்றிலிருந்து கவிஞர் நோட்டரி வழங்கிய கொடுப்பனவுகளில் வாழ்ந்தார் என்று வாழ்க்கைக் குறிப்பு சொல்கிறது.

1845-க்கு பிறகான சில ஆண்டுகளுக்குப் பின் கப்பல் மூலமாக இந்தியா சென்றுவருமாறு (குறிப்பாக கல்கத்தா) அவரது தாயாரால் கேட்டுக்கொள்ளப்பட்டு, புறப்பட்டு, பாதிவழியிலேயே மொரீஸியசில் இறங்கி அங்கிருந்துவிட்டுத் திரும்பியதும் அவரது வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு முக்கிய நிகழ்வே. ஏனெனில் கீழைத்தேய மனநிலை அமைப்பு கொண்ட நித்ய, அநித்ய, மாயா, இருப்பு, தனித்த மனம், இருண்மை சார்ந்த கவிதைகள் படைத்த (அவரை மீறியே) அவர் இந்தியாவிற்கு வந்திருந்தால் எதையுமே எழுதாமல் கூட அமைதியாக இருந்திருக்கச் சாத்தியங்கள் உள்ளதல்லவா.

அதன் பின்னர் பாரிஸில் வசித்த அவர் மற்ற எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதில் பெரிதும் விருப்பத்துடனே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இயற்கையின் மீதான காதல், வனப்புமிகு காட்சிகளைக் கொண்ட ரொமாண்டிஸத்துக்கு நேர்மாறாக போத்லேர் நவீன நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு உற்சாகத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு நகரக் கவிஞராக இருந்தார். கலை மேலிருந்த பற்று காரணமாக ”Before everything else, before my hunger, before my pleasure, before my mother” என்கிறார். தன்மை முன்னிலையாக இருத்தல், சமூகப் பிணைப்புகளை விட்டு விலகியிருத்தல், குடும்பம், நாடு, நட்பு இவற்றிலிருந்து விலகி சுதந்திரமாயிருத்தல் போன்றவற்றின் விதிகளாயிருந்த Dandyism-த்தின் மேல் அப்போது பற்று கொண்டிருந்தார்.

கவிதைகளில் போதனைகள் அற்றுப்போக விரும்பினார் போத்லேர். அரசியல், பொருளாதாரம், மற்ற எல்லா துறைகளின் போதனைகளிலிருந்தும் கவிதையானது விடுபட வேண்டுமென்று நினைத்தார். வறியவர், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் போன்றோரின் கையறுநிலை, அவர்களின் தீப்பேறு ஆகியவைகளிலிருந்து அழகைப் பிரித்தெடுக்க முனைந்தார். இலட்சியங்களை உருவாக்குதல் பற்றிய நோக்கமே இல்லாமல் அசிங்கமானதை அதை அப்படியே சொல்வதிலும், நன்மையும் தீமையும் ஒன்றிணைந்து இசைவானதொரு முரண்பாட்டைக் கொண்டதே வாழ்வு என்பதை உணர்ந்தே தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். தன் அனுபவத்தை உருவகங்கள், குறியீடுகள் வழியே யதார்த்தத்தின்படி காட்ட முனைந்தார்.

எண்ணிக்கைகளில் நம்பிக்கை இல்லாத அவர் நிறைய எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. எதைச் செய்தாலும் அது ஒப்பற்ற ஒன்றாக இருக்கவே விருப்பப்பட்டார். Flower of Evil-ஐ 1950-ல் எழுதத் தொடங்கிய அவர் அதன் குறைகளைக் களைந்து பத்தாண்டுகள் திருத்தி எழுதி அதனைப் பொலிவுறச் செய்து 1961-ம் ஆண்டு இறுதி வரைவினை அடைந்திருக்கிறார்.

The first edition of Les Fleurs du mal with author’s notes

1857-ல் போத்லேரின் முக்கியப் படைப்பான தி ஃப்ளவர்ஸ் ஆஃப் ஈவில் வெளியானது. அந்நேரத்தில் குஸ்தவ் ஃப்ளூபெர்ட்டின் (மேடம் பவாரிக்காக) விடுதலையால் ஏற்கனவே கோபமடைந்திருந்த பிரெஞ்சு அதிகாரிகள் Flower of Evil புத்தகத்தை உடனடியாகக் கைப்பற்றினர். இரண்டு மாதங்களுக்குள் போத்லேரும் அவரது பதிப்பாளரும் அபராதம் செலுத்தவும் ஆறு கவிதைகளை நீக்கவும் கண்டிக்கப்பட்டனர். 1861-ல் அதிகமான கவிதைகளுடன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. மேலும் புதிய பாடல் வரிகள் பின்னர் அச்சிடப்பட்டதில் சேர்க்கப்பட்டன.

கவிதைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டார். எட்கர் ஆலன்போவை அவர் முதன்முறையாகப் படித்தபோது அவர்கள் இருவருக்குமான கருத்துகளின் ஒற்றுமையால் அவர் பாதிக்கப்பட்டார். அழகுக்கான எட்கர் ஆலன் போவின் அர்ப்பணிப்பு, வினோதமான படங்கள், மரணத்தின் மீதான அவரது ஈர்ப்பு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கைவினைத்திறனுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. 1856 முதல் 1865 வரை வெளியிடப்பட்ட ஐந்து தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட Poe, Baudelaire தொகுதிகளில் கான்சியா மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரபலமானவை. ஐரோப்பிய வாசகர்களுக்கு போத்லேரை நல்லவண்ணம் அறிமுகப்படுத்த அது உதவியது.

அதன்பிறகு சார்லஸ் ஒரு விமர்சகராகவும் அறியப்பட்டார். அவர் தனது கலை விமர்சனத்தில் நவீனத்துவத்தின் உணர்வை விளக்கி நிலைநிறுத்தினார். ஓவியர்களான யூஜின் டெலாக்ரோயிக்ஸ் மற்றும் கான்ஸ்டன்டின் கைஸ் ஆகியோரைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் அதில் அடக்கம்.

1860-களின் தொடக்கத்தில் உரைநடைக் கவிதைகளை வெளியிடத் தொடங்கினார். பிரான்சிலேயே கிட்டத்தட்ட அறியப்படாத ஒரு புதிய வடிவத்தைப் பரிசோதித்தார் எனலாம். அதில் அவர் – ‘கவிதையானது உரைநடையின் அதிசயத்தை தாளமோ ஒழுங்கோ இல்லாத இசையுடன் ஆன்மாவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்‘ என்று தான் நம்பியதைக் குறிப்பிடுகிறார்.

1862-ல் போத்லேர் துர்கனவுகளையும் மோசமான உடல்நிலையையும் அனுபவிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான விரிவுரைகளை வழங்குவதற்காக 1863-ல் பாரிஸை விட்டு பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார். தனது அழிவை நோக்கிச் செல்வது போன்ற தூண்டலில் ஒழுக்கமின்றி மிதமிஞ்சிய குடி, போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளல் போன்றவற்றால் உடல்நிலை சீர்கேடு அடைந்தது. நோயும் வறுமையும் பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயமும், தற்கொலை செய்துகொள்ளலாமா என எண்ணுதலுமான எண்ணங்களுக்கு இடையில் ஆதரவற்ற நிலையோடு அவர் பெயரே அவருக்கு நினைவில் இல்லாதது, அவரது முகத்தையே அவரால் கண்ணாடியில் அடையாளம் காண முடியாதது எல்லாம் அவருக்கு பெரும் துன்பமாக இருந்தது. அங்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக முடக்குவாதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 31, 1867-ல் தனது நாற்பத்தாறு வயதில் சார்லஸ் பாரிஸில் இறந்தார். அப்போது மருத்துவர்கள் மரணத்திற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், சிபிலிஸ் அவரது இறுதி மூச்சை நிறுத்தச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது வாசகர்கள் போத்லேயரின் மனதிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை. அவரது அதிர்ச்சியடையவும், திடுக்கிடவும், நேசத்துக்குரிய கருத்துக்களைச் சார்ந்த மதிப்புகளையும் கூட வாசகர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டினார். The Flowers of Evil, To the Reader என்ற நூலுக்கான முன்னுரையில் போத்லேர் தானும் வாசகனும் ஒரு பொதுவான குற்ற உணர்ச்சியில் சிக்கியிருப்பதை வலியுறுத்துவதன் மூலம் மனிதத் தீமைகளின் பட்டியலை வைக்கிறார்: “நீ நயவஞ்சக வாசகன்-என் இரட்டை-என் சகோதரன்!” என்ற கவிஞரின் வலியுறுத்தும் கருப்பொருள் புத்தகத்தின் முன்னுரையாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனச்சோர்வின் நிலைத்தன்மையே மனிதர்களை நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ செயல்படவிடாமல் தடுத்து, தேர்ந்தெடுக்கும் பகுதிக்கு வெளியே நிற்க வைக்கிறது. மனித குலத்திற்கு எதிரான சாத்தானின் மிகவும் பயங்கரமான ஆயுதம் மிகவும் வண்ணமயமாக விவரிக்கப்பட்டுள்ள பாவங்களின் வழிபாட்டு முறை அல்ல, மாறாக செயலின் சாத்தியத்தை குறைக்கும் திறன் என்று To the Reader(Au Leteur)-ல் போத்லேர் வாதிடுகிறார். தொகுப்பின் முடிவில் போத்லேயரால் வைக்கப்பட்டுள்ள பகுதியானது மனதின் மந்தநிலையின் எதிர்நிலையை விவரிக்கிறது. இலக்குகளுக்கான செயலில் தேடல் எப்போதும் அடைய முடியாதது என்றும் கூறுகிறது.

எட்டு பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு நீண்ட கவிதை கவிஞரின் கூற்றுப்படி, மனித முன்னேற்றத்தில் தற்போதைய நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில், The Voyage என்பது ஏமாற்றத்திலும் வெறுப்பிலும் முடிவடையும் தற்காலிக முன்னேற்றங்களின் தொடராக விவரிக்கிறது. இதனைப் போன்ற சிறிய சாதனைகள் – புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பது, புதிய ஆடம்பரங்களைக் கண்டுபிடிப்பது, புகழையும் செல்வத்தையும் பெறுவது, சோகம் மற்றும் சிற்றின்பத்தில் பரவசத்தைத் தேடுவது – இவை அனைத்தும் ஏமாற்றத்தில் கட்டுப்பட்டவை, ஏனென்றால் அவை ஒரு பெரிய முடிவில்லாத பயணத்தின் அடையாளங்களாக எல்லையற்ற தேடலில் மட்டுமே உள்ளது. மனிதர்களின் உள் மனம் எல்லையற்றவைகளால் ஆனதால் அவர்களால் எந்த வரம்புகளிலும் திருப்தி அடைய முடியாது, அத்துடன் அறியப்படாததையும் புதியதை நோக்கியும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறார். கடைசி வரி, “தெரியாத ஆழத்தில், புதியதைக் கண்டுபிடிப்போம்!”. இதுபோன்ற வரைபடம் ஆக்கப்படாத எல்லைகளை ஆராயும் சிந்தனைகள் புதிய புதிய நுண்ணறிவுகளைத் தேடும் தலைமுறைகளுக்கு அது கைமாறியது.

போத்லேர் மனச்சோர்வுக்கும் மகிழ்வின் தருணங்களுக்கும் இடையில் மாறி மாறி வாழ்நாள் முழுதும் இருந்திருக்கிறார். இங்கே கவிஞன் உணர்ச்சியில் தன்னைக் கைவிட்டு, இருளில் மூழ்குவது நடக்கத்தான் செய்கிறது. போத்லேரின் கவிதையானது அவரது சிக்கலான கற்பனைப் பிரபஞ்சத்தின் மூலப்பொருளுக்காக உலகில் எவ்வளவு தொலைவு சென்றாலும், வலுவான அகநிலைத் தூண்டுதல் மூலம் மேற்பார்வையிடுகிறது. “ஒவ்வொரு நல்ல கவிஞரும் எப்பொழுதும் ஒரு யதார்த்தவாதியாகவே இருந்திருக்கிறார்கள்” என்று போத்லேர் உறுதியாகவே நம்பினார்.

மேலைநாட்டுக் கவிஞர்களிலேயே மரணத்தைக் குறியீட்டுப் படிமமாக மட்டுமே விவரிக்காமல், முதன் முறையாக மரணத்தையே தன் கவிதைகளுக்குச் சாரமாக எடுத்துக்கொண்ட கவிஞர் போத்லெர் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது அருவமான, சூட்சுமமான கருத்தாக்கம் மட்டுமல்ல; அது எப்போதும் நம் கண்முன்னே ஒரு காட்சிப் பொருளாக இருந்துகொண்டு, மனிதனின் பிரக்ஞையின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. – குமரன் வளவன்-தீமையின் மலர்கள்(க்ரியா) குறிப்புரையிலிருந்து.

வழக்கமான யதார்த்தவாதத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளுக்குப் பயன்படுத்தப்படும் அசாதாரண விவரங்களில் தேர்ச்சி பெற்றவர் போத்லேர். “The Carcass“-ல் ஒரு இறந்த உடலின் மீது புழுக்கள் திரள்கின்றன. அழுகும் விலங்கு சடலத்தில் வெளிப்புறங்களில் மங்கலான, மிகைப்படுத்தப்பட்ட, சலசலக்கும், அதிர்வுறும் புதிய வாழ்க்கையின் தூண்டுதலில் ஒரு விசித்திரமான அழகைப் பற்றி கூர்மையாகச் சொல்கிறது. கவிதையின் வெளித்தோற்றமான கருப்பொருள், “நாளைக் கைப்பற்று” அல்லது “எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இப்போது என்னை நேசி” என்பதாகும். ஏனெனில் ஒரு கவிஞனால் மட்டுமே அழகைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக நம்பினார். சத்தமில்லாத மழை பொழிவுகள், கார்க் செய்யப்படாத வாசனை திரவிய பாட்டில்கள், மாங்கி பூனைகள், சீட்டுக்கட்டுகள், பழங்கால ஆடைகள், போன்ற சாதாரண பொருட்களை போத்லேர் தம் கவிதைகளுக்கிடை செருகி வைக்கிறார்.

இத்தகைய விவரங்கள் ஒரே நேரத்தில் புராணீக உருவகக் காட்சிகளுக்கும் பொருளைக் கொடுக்கின்றன. Spleen LXXVIII-ல் உள்ள தண்ணீரைப் பற்றிய முழுமையான நடைமுறைக் குறிப்புகளின் வரிசையிலிருந்து இறப்பு பற்றிய ஒரு குளிர்ச்சியான வெளிப்பாடு காட்சிப்படுகிறது, நகரத்தில் மழையானது மூடுபனியுடன் தொடங்குதல், பூனை ஒன்று சௌகரியமாக முறுக்கிக் கொண்டு திரும்புவது, மழைப்பொழிவின் சத்தம், ஈரமான மூச்சுத்திணறல், மரம், ஈரமான கடிகார ஊசல், இறந்த ஒரு வயதான பெண் விட்டுச் சென்ற சீட்டுக்கட்டு ஆகியவை காட்சிப்படுகிறது.

பாரிஸ் ப்ளீனில் சிறிய கவிதைகள் என வெளியிடப்பட்ட உரைநடைக் கவிதைகளிலும் இதே போன்ற கருப்பொருள்கள் காணப்படுகின்றன. இக்கவிதைகள் பொதுவாக உரைநடைக் கவிதையின் முதல் முக்கிய எடுத்துக்காட்டு என விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது, இருப்பினும் போத்லேயர் உண்மையில் திட்டமிட்டு ஒரு வகைமையைத் தோற்றுவிக்கவில்லை. ஆனாலும் கவிதையின் உரைநடை அதன் சொந்த வழியை ‘ரைம் இல்லாமல்’ இசையாகக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அவர் நன்கு அறிந்திருந்ததால் சரணங்கள் பத்திகளாகின்றன; வாக்கிய நீளம், தொடரியல் மற்றும் ஒலி வடிவங்களில் உள்ள மாறுபாடுகள் மூலமாகவும் காட்சிகள் மற்றும் டோன்களின் ஒத்திசைவு மூலமும் உருவாக்கப்பட்டிருப்பது புலனாகிறது. ரிதம் மறுக்கமுடியா அளவுக்கு தெளிவாக இருந்து சிறப்புத்தன்மையை தானே உருவாக்கிக் கொண்டிருப்பது புலனாகிறது. தீமையின் மலர்கள் பாடல் வரிகளில் பெரும்பாலும் புதைந்து கிடக்கும் எதார்த்தம் உரைநடைக் கவிதைகளில் மேலோட்டமாகத் தோன்றுகிறது. போத்லேர் தி வோயேஜின் புதிய அனுபவங்களுக்கான முடிவில்லாத தேடலை எனிவேர் அவுட் ஆஃப் தி வேர்ல்டில் ஒரு கற்பனை உரையாடலாக மாற்றி மறுபரிசீலனை செய்கிறார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் கலைஞன் தனிமையிலேயே இருக்கிறான். மண்ணீரலின்(Spleen) மனச்சோர்வை கலையின் கற்பனையில் மகிழ்ச்சியை ஊடுபாவாக்கி அனுபவிக்கிறார். அது அதன் சொந்த உலகத்தை உருவாக்கி பிரும்மாண்டப்படுத்துகிறது. கவிதையிலோ உரைநடையிலோ கனவுக்கும் நிஜத்திற்கும் இடையேயான மாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது.

போத்லேர் ஒரு சிக்கலான, முரண்பாடான கவிஞர். காதல் முரண்பாட்டின் வாரிசு. அவர் மனித இருப்புக்கு எதிரான அனைத்து எதிர்நிலைகளையும் தழுவ விரும்பினார். நன்மை-தீமை, அன்பு-வெறுப்பு, சுய-பிற, கனவு-யதார்த்தம், அவனுடைய உறவுகள், மனதின் எதிரொலிகள் இவற்றைப் பற்றியே திரும்பத் திரும்ப தம் கவிதைகளில் நகர்த்திச் செல்கிறார். Sonnet வடிவிலமைந்த Correspondances கவிதை இயற்கையின் அனைத்து மாய ஒற்றுமையின் பார்வையை விவரிக்கிறது. இஃது நமது ஐந்து புலன்களின் பரஸ்பரத்தன்மையால் நிரூபிக்கப்பட்டுள்ளதை ஒப்புநோக்கலாம். நிரந்தர ஒப்புமைகளின் அமைப்பில் ஒன்று எப்போதும் மற்றொன்றுடன்(இயற்பியல் பொருள்களுடன்) ஒத்துப்போவதைச் சொல்கிறது.

ஆன்மிக யதார்த்தத்திலிருந்து உடலுக்கான யதார்த்தம் வரை ஐந்து புலன்கள் (சுவை, வாசனை, தொடுதல், பார்வை மற்றும் செவிப்புலன்) ஆகியவை தங்களுக்குள் “கசப்பானவை”, “மென்மையான தோற்றம்” அல்லது “அதுபோன்ற கலவைகளை” உருவாக்குகின்றன. மனிதர்கள் பொதுவாக “உலகளாவிய ஒப்புமை” பற்றி அறிந்திருப்பதில்லை. பொது மனிதர்களான நம்மை அறியாமலேயே நம்மைப் பார்க்கிறது. ஆனால் ஒரு பார்வையாளராகவும் வழிகாட்டியாகவும் கவிஞன் இங்கே செயல்படுகிறான். இவை இரண்டும் இருக்கும் விழிப்புணர்வு நிலையை நோக்கி நம்மைத் தூண்டுகிறான். மனமும் புலன்களும் வேறொரு பரிமாணத்தில் இணைகின்றன. இது பரவசமான விழிப்புணர்வின் நிலையை விவரிக்கிறது என்றாலும், அது தர்க்க வாதத்தின் நிலைகளில் செயல்படுகிறது.

மனதின் நல்லிணக்கத்திற்கான போத்லேரின் ஏக்கம் உண்மையில் ஒரு தளத்தையோ அல்லது புத்திசாலித்தனத்தின் கடுமையான பயன்பாட்டையோ புறக்கணிக்கவில்லை. இலட்சியவாதப் பார்வை, யதார்த்த விவரம், கலை ஒழுக்கம் ஆகியவற்றின் கலவை அவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கவிஞராகவும் நவீன யுகத்தின் முதல் கவிஞராகவும் அறியப்படச் செய்தது. வெற்று பாவனைகளோ, நடிப்போ, பின்வாங்குதலோ இல்லாமல் தனக்கு நிகழ்ந்தவற்றை ஆழமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்ததன் வாயிலாக கவிதைக்கான நுணுக்கத்தை விட அது ஏற்படுத்திய மனப் பதிவுகளின் உறுதியே அவரது பெரும் பலமாகத் தெரிகிறது.

அவரது உரைநடைகள், உரைநடைக் கவிதைகள் பல்வேறு நவீன கவிஞர்களாலும் பெயர்ப்பாளர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரஞ்சு உரைகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த கூறுகளாக அடிக்குறிப்புகள் அவ்வப்போது சுட்டிக்காட்டுகின்றன.

Lois Boe Hyslop, Charles Baudelaire Revisited (1992), ஒரு பயனுள்ள அறிமுக ஆய்வு. Enid Starkie, Baudelaire (1953), ஆங்கிலத்தில் முழுமையான சுயசரிதை. Henri Peyre, ed., Baudelaire: A Collection of Critical Essays (1962), The Flowers of Evil பற்றிய பதினொரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது, இதில் ப்ரூஸ்ட் உட்பட முக்கிய எழுத்தாளர்களின் தேர்வுகள் அடங்கியவை. Harold Bloom, ed., Charles Baudelaire (1987), Boudelare-ன் கருப்பொருள்கள், இலக்கியம் மற்றும் கலை விமர்சனம், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், எட்கர் ஆலன் போ தொடர்பான பத்து சமகாலத்தவர்களை விமர்சிக்கிறார். Patricia Clements, Baudelaire and the English Tradition (1985) – ஸ்வின்பர்னிலிருந்து T. S. எலியட் வரையிலான ஆங்கில இலக்கியத்தில் Baudelare-ன் செல்வாக்கு மிக்க உயர்தரமான பகுப்பாய்வு (இது மறைக்கப்பட்ட குறியீட்டு பாரம்பரியத்துடனான ஒப்பீடுகளுடனான முரண்பாடுகளையும் உள்ளடக்கியது), Margery A. Evans, Baudelaire and Intertextuality: Poetry at the Crossroads (1993) – உரைநடைக் கவிதைகளில் கையாளப்பட்ட இலக்கிய மரபுகளை பகுப்பாய்வு செய்கிறது. Rosemary Lloyd’s Selected Letters of Charles Baudelaire: The Conquest of Solitude (1986) – இலக்கியக் கடிதங்களின் வரம்பைக் கொண்டது. லாரன்ஸ் எம். போர்ட்டர், தி க்ரைசிஸ் ஆஃப் பிரெஞ்ச் சிம்பாலிஸம் (1990), F. W. Leakey, Baudelaire, Les Fleurs du Mal (1992) – போத்லேரின் முக்கிய படைப்புகளுக்கான ஒரு சிறிய வழிகாட்டி.

1840-ம் ஆண்டு எட்கர் ஆலன் போவின் படைப்புகளை போத்லேர் காண நேர்கிறது. அமெரிக்க எழுத்தாளரின் சிந்தனைக்கும் மனோபாவத்திற்கும் அவரது சொந்த சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது வழக்கமான தொழிலைப் (வேறென்ன?.. கவிதை, கட்டுரைகள் உருவாக்குதல்தான்) பார்ப்பதற்கும் வருமானம் ஈட்டவும் அவர் மொழிபெயர்ப்பின் பணியைத் தொடங்கினார். எட்கர் ஆலன் போவின் Mesmeric Revelation-ன் போத்லேரின் மொழிபெயர்ப்பு ஜூலை 1848-ல் வெளிவந்தது, அதன்பின் மொழிபெயர்ப்புகள் Histoires extraordinaires (1856; “Extraordinary Tales”) and Nouvelles Histoires extraordinaires (1857; “New Extraordinary Tales”) புத்தக வடிவில் தொகுக்கப்படுவதற்கு முன்பு மதிப்புரைகளில் தொடர்ந்து வெளிவந்தன. ஒவ்வொன்றும் போத்லேயரின் முக்கியமான விமர்சன அறிமுகத்திற்கு உதவியது. இவற்றைத் தொடர்ந்து Les Aventures d’Arthur Gordon Pym (1857), Eurêka (1864) மற்றும் Histoires grotesques et sérieuses (1865; “Grotesque and Serious Tales”) மொழிபெயர்ப்பாக இப்படைப்புகள் பிரெஞ்சு உரைநடையின் உன்னதமான சிறந்த ஒன்றாக விளங்கியது அத்துடன் அல்லாமல் எட்கர் ஆலன்போவுக்காக எழுதப்பட்டபோதும் போத்லேருக்கு அவரது சொந்த அழகியல் கோட்பாடுகளுக்கும் கவிதையின் இலட்சியங்களில் அதிக நம்பிக்கையையும் அளித்த வகையில் இதை முக்கியமான நிகழ்வாகவே கருதிக் கொள்ளலாம். இவற்றைத் தொடர்ந்து Les Aventures d’Arthur Gordon Pym (1857), Eurêka (1864) மற்றும் Histoires grotesques et sérieuses (1865; “Grotesque and Serious Tales”). மொழிபெயர்ப்பாக இந்தப் படைப்புகளும் பிரெஞ்சு உரைநடையின் உன்னதமானவையாகக் கருதப்படுகிறது.

அதற்குப் பிறகு போத்லேர் பழமைவாத கோட்பாட்டாளர் ஜோசப் டி மேஸ்ட்ரேவின் பணிகளையும் படிக்கத் தொடங்கினார். அவர் போவுடன் சேர்ந்து இயற்கைக்கு எதிரான மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான திசையில் அவரது சிந்தனையைத் தூண்டினார். 1850-களின் நடுப்பகுதியில் இருந்து போத்லேர் தன்னை ஒரு ரோமன் கத்தோலிக்கராகக் கருதிக் கொண்டார். ஆனாலும்கூட நிஜமான பாவம், சாத்தானைப் பற்றியதும் கடவுளின் மன்னிப்பு – இவையெல்லாம் அன்பின் மீதான நம்பிக்கையால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இருந்தார்.

இதற்கிடையில் போவின் மொழிபெயர்ப்பாளராகவும் கலை விமர்சகராகவும் போத்லேர் நற்பெயர் பெற்றதன் மூலம் அவரது சில கவிதைகளை வெளியிட வாய்ப்பு அமைந்தது. ஜூன் 1855-ல் Revue des deux mondes அவரது 18 கவிதைகளின் வரிசையை Les Fleurs du mal என்ற பொதுத் தலைப்பின் கீழ் வெளியிட்டார். அசலான பாணி, திடுக்கிடும் கருப்பொருள்களுக்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அதற்கடுத்த ஆண்டு போத்லேர் அந்தத் தலைப்புடன் ஒரு முழுநீளக் கவிதைத் தொகுப்பிற்காக வெளியீட்டாளர் Poulet-Malassis உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Les Fleurs du mal-ன் முதல் பதிப்பு ஜூன் 1857-ல் வெளியிடப்பட்டபோது, அதனுள் இருந்த 100 கவிதைகளில் 13 கவிதைகள் மதத்திற்கும் பொது ஒழுக்கத்திற்கும் முரணாக உள்ளது என்ற குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது.

ஆகஸ்ட் 20, 1857-ல் ஒருநாள் விசாரணைக்குப் பிறகு, ஆறு கவிதைகளை ஆபாசத்தின் அடிப்படையில் புத்தகத்திலிருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆறு கவிதைகள் முதன்முதலில் பெல்ஜியத்தில் 1866 ஆம் ஆண்டு Les Épaves (“ரெக்கேஜ்”) தொகுப்பில் மீண்டும் வெளியிடப்பட்டன, மேலும் அவற்றின் மீதான அதிகாரப்பூர்வ தடை 1949 வரை திரும்பப் பெறப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளின் காரணமாக, Les Fleurs du mal என்பது சீரழிவுக்கான ஒரு சொல்லாக மாறியது. நோயுற்ற தன்மை, ஆபாசம், எதிர்ப்பாளர் அத்துடன் ஆபாசக் கவிஞராக போத்லேரைப் பற்றிய புராணக்கதைகள் உருவாகத் தொடங்கியது எனலாம்.

அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த Les Fleurs du mal-ன் தோல்வி, Badelaire-க்கு ஒரு கசப்பான அனுபவமாக மாறியிருந்தது. அத்துடன் அவரது சொந்த வாழ்க்கையில் வளர்ந்து வந்த தோல்விகள், ஏமாற்றம், விரக்தியின் உணர்வு போன்றவைகளால் அவரது மனம் இருண்டிருந்தது.

இந்த ஆண்டுகளில் போத்லேர் தனது சிறந்த படைப்புகளில் சிலவற்றை எழுதியிருந்தாலும் சிலதே புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. உரைநடைக் கவிதையில் தனது ஆரம்பகாலச் சோதனைகளை வெளியிட்ட பிறகு தீமையின் மலர்கள் இரண்டாவது பதிப்பைத் தயாரிக்கத் தொடங்கினார். 1859-ம் ஆண்டில் செயின் நதி முகத்துவாரத்தில் உள்ள ஹொன்ஃபிளூரில் தனது தாயுடன் வசித்து வந்தபோது, 1857 ஆம் ஆண்டில் ஆபிக் இறந்தபின் அவர் ஓய்வு பெற்றபோது, போத்லேர் ஜனவரியில் “லே வோயேஜ்” இல் தொடங்கி, பரந்த அளவில் உச்சக்கட்ட கவிதைத் தலைசிறந்த படைப்புகளைத் தொடர்ச்சியாக எழுதியிருந்தார். ‘தி ஸ்வான்’ அவரது சிறந்த தனிக் கவிதையாகக் கருதப்பட்டது.

அதே நேரத்தில் அவர் கலை விமர்சனத்தில் மிகவும் முக்கியமான இரண்டு கட்டுரைகளை எழுதினார். அதில் ஒரு கட்டுரை இம்ப்ரெஷனிஸ்ட் பார்வையையும் அப்பாணியின் முக்கிய கூறுகளின் தீர்க்கதரிசன அறிக்கையாகவும் பரவலாகப் கவனிக்கப்பட்டது. 1860-ம் ஆண்டு Les Paradis artificiels வெளியிடப்பட்டது. ஆங்கில கட்டுரையாளர் Thomas De Quincey-வின் Confessions of an English Opium-Eater-ன் பகுதிகளை Baudelare மொழிபெயர்த்தார்.

பிப்ரவரி 1861-ல் தீமையின் மலர்கள் மேலும் பெரிதாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அத்துடன் தியோஃபில் காட்டியர் (1859), ரிச்சர்ட் வாக்னர் (1861), விக்டர் ஹ்யூகோவையும் பிற சமகால கவிஞர்கள் (1862), மற்றும் டெலாக்ரோயிக்ஸ் (1863) பற்றிய முக்கியமான விமர்சனக் கட்டுரைகளையும் ஒரே நேரத்தில் போத்லேர் வெளியிட்டார்.

Me Spleen de Paris 1867-ல் வெளிவருகிறது. Spleen என்பதை போதலேர் melancolie (ஆங்கிலத்தில் melancholy) என்ற பொருளில் கையாள்கிறார் எனலாம். Spleen என்றால் மண்ணீரல் என்று இன்னொரு பொருளும் உண்டு. மேற்கத்திய மருத்துவ, ரசவாத மரபை எடுத்துக்கொண்டால், உடலின் உணர்வு-நிலைகளாக, ஐயங்களாக (humours) நான்கை ஏற்கிறார்கள். அவை melancholic, phlegmatic, choleric, and sanguine. முறையே black bile, phlegm, yellow bile, blood ஆகியவற்றால் ஏற்படும் ஐயங்கள் எனலாம். உதாரணமாக, பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இவற்றைக் குறிப்பதாக, ஜெர்மன் கலைஞர் ஆல்ப்ரெக்ஹ்ட் ட்யூரெர் (Albrecht Diürer) செதுக்கிய நான்கு சித்திரங்கள் உண்டு – Meloncholia என்கிற சித்திரம் உட்பட. இந்த உணர்வு-நிலைகள், இந்திய / தமிழ் மரபுகளில் பித்தம், கபம், வாதம் மற்றும் மூத்திரம் என்ற நான்காக இருக்கின்றன. ஆயுர்வேதமும் சரி, சித்த மருத்துவமும் சரி இவற்றை ஏற்கின்றன. இவற்றில், பித்த நீரும் அதையொட்டிய பித்த உணர்வும் சுரப்பது, மண்ணீரல் உள்ளிட்ட ஈரற்குலைப் பகுதியில்தான் என்பதால், melancolie என்ற ஒருவகைத் தனிமைவாச சோகம் நிரம்பிய உணர்வை, புதுமைப்பித்தமாக, கவிதை-உரைநடை இரண்டும் கலந்ததாக ஏற்கிறார் போதலேர். (உயிர் எழுத்து-May 2008 இதழில் நாகார்ஜுனன்)

இவை அனைத்தும் L’Art romantique-ல் அவரது மரணத்திற்குப் பிறகு சேகரிக்கப்பட்டன. Fusées (’ராக்கெட்ஸ்’) மற்றும் Mon coeur mis à nu (“My Heart Laid Bare”) என்ற தலைப்பிலான சுயசரிதைத் துண்டுகள் 1850-கள், 60-களின் முற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டும் சேர்க்கப்பட்டது.

தமிழில் தீமையின் மலர்கள் என்ற தலைப்பில் போத்லேரின் கவிதைகள் க்ரியா வெளியீடாக குமரன் வளவன் மொழிபெயர்ப்பில் வெ.ஸ்ரீராம் அவர்களின் ஆலோசனையின்படி மிக அழகிய முறையில் குறிப்புகளோடு வெளிவந்திருக்கிறது.

கீழே இரண்டு வெவ்வேறு மொழிபெயர்ப்புக் கவிதைகள்:

இலையுதிர்காலப் பாடல்

1
விரைவில் மூழ்குவோம்
குளிரின் பனிப்போர்வையில்.
சுருங்கிவிட்ட ஜூலையின்
ஜுவாலைகளுக்கு விடைதந்து.
அடுத்த வளாகத்தில்
வீழும் விறகு பலதின்
இறுதி ஊர்வலத்தை
இப்போதும் கேட்கிறேன்.

இன்னும் ஒருமுறை
குளிர்காலம் என்மீது உருளட்டும்.
வன்மம் வெறுப்பு
நடுங்கும் பதற்றம்
உழைப்பின் சபித்த பேராசை
மற்றும்
துருவமெனும்
தன் தூர நரகத்தின்
சூர்யனைப் போலாகட்டும்
என் இதயம்
செவ்வெரிப் பனிக்கட்டியாய்.

சப்தத்துடன்
வீழ இருக்கும் விற்கு
ஒவ்வொன்றுக்குமாய்
அதிர்ச்சியுடன்
காத்திருக்கிறேன்.
இப்படித்தான்
எழும் தூக்குக்கயிறு முன்
தலைகுனிவர் குற்றவாளிகள்.
ஓ, தகர்க்க மோதும் தூணே!
கொந்தளிக்கும் என் ஆன்மா

நடுங்கி வீழ அலையும்
நொறுங்கும் கோபுரமாய்.
பித்தமாய்
சவப்பெட்டி முடிக்கும்
சுத்தியலாய்
என் கனவுவரை
தாலாட்டும் எதிரொலி பல.
யாருக்காக?
நேற்றுத்தான் ஜுன்.
இன்றோ இலையுதிர்காலம்.
மர்ம ஒப்பாரியே,

இறந்ததும் யாரிங்கே?

2
தூக்கம் தழுவும் தீக்கொண்ட
உன் நீண்ட பைங்கண்ணை
நேசிக்கிறேன்.
இனியவளே, எல்லாமே கசக்கும் எனக்கு.
உன் அறையோ
அடுப்போ ஆசையோ
கடலில் தெறிக்கும்
சூர்ய ஒளிக்கு ஈடல்ல.

மெல்லிதயமே
என்னை நேசி.
நன்றியற்றவர் கொடியவர்
எவருக்கும்
தாய் காதலி சகோதரி நீ!
சிறிதே இலையுதிர்காலமாய்,
படுங்கதிராய்
இனிதாய் என்னை நேசி.

நேரம் அதிகமில்லை.
காத்திருப்பதோ
பசித்த கல்லறை.
என் நெற்றி சற்றே
தொடட்டும்
உன் முழங்காலை.

ஜூனின் வறண்ட சூட்டுக்கு
வருந்தும் நான்
சுவைக்கட்டும்
சட்டென மறையுமுன்
மெல்லிய
இந்த அக்டோபரை.

Charles Baudelaire, Chant d’Automne, Fears du Mal, Paris, 1857
-நாகார்ஜுனன் Aug 19- 2008

பிணைத்தொகை

தன்னுடைய பிணைத்தொகையைச் செலுத்த மனிதனிடம்
அக்கினிப் பாறைகள் நிறைந்த இரண்டு களங்கள் உண்டு;
அந்தப் பாழ்நிலங்களை அறிவின் கொழுவால்
அவன் உழுது சீராக்க வேண்டும்;

சிறிய ரோஜா மலர் கிடைக்க,
சில கதிர்களைப் பறிக்க,
அவன் சாம்பல் நிற நெற்றியின் உப்புக் கண்ணீரை
இடைவிடாது அங்கு பாய்ச்ச வேண்டும்.

ஒரு களம் கலை, இன்னொன்றோ காதல்.
கறாரான நீதி வழங்கப்படும்
அந்தப் பயங்கர நாளில்
நீதிபதியின் பரிவைத் தூண்ட,

அறுவடையால் நிரம்பிய களஞ்சியங்களையும்
தேவதைகளின் வாக்குகளை வெல்லக்கூடிய
வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களையும்
அவன்முன் வைக்க வேண்டும்.

La Rançon – குமரன் வளவன் – தீமையின் மலர்கள்(க்ரியா)

தீமை ஒரு பொது அர்த்தத்தில் அது எதுவல்ல என்பதன் மூலம் வரையறுக்கப்படுகிறது – நன்மையின் எதிர் அல்லது இல்லாமை. இக்கருத்து மிகவும் பரந்த அளவில் எல்லா இடங்களிலும் இருக்கலாம், இருப்பினும் அன்றாட பயன்பாட்டில் ஆழமான தீமையும் பொது நன்மைக்கு எதிராக பேசுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வார்த்தையுடன் தொடர்புடைய தனிப்பட்ட தார்மீக தீமை, ஆள்மாறான இயற்கை தீமை, மதம் சார்ந்த சிந்தனையில் சாத்தான் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட / நித்தியத்தின் வடிவம் போன்ற பல சாத்தியமான வடிவங்களை எடுப்பதாக இருக்கிறது. எல்லா மதங்களும் அதற்கென தனித்த கண்ணோட்டங்கள், தத்துவங்கள் “நன்மை-தீமை”கள் மீது கவனம் செலுத்துகின்றன. வேறு சில மதங்களோ தீய இருப்பையும் மக்களை விவரிப்பதிலான பயனையும் மறுக்கின்றன.

எல்லா நற்குணநலனும் பொருந்திவருவதில்லை தனிநபர்களுக்கு, ஆனாலும் தனித்தன்மையின் ஒருதுளியையேனும் ஒவ்வொருவரும் தமக்கானதாய் மாற்றியமைக்கின்றனர் சிலர். அவர்களில் போத்லேரும் ஒருவர். தம் வாழ்நாளில் மிகக்குறைவான படைப்புகளையே நல்கியிருப்பினும் அந்த மிகச் சிலதே தனி இயக்கமாக, நவீன கவிதையின் முகத்துவாரமாக, நவீன கலை விமர்சனத்தின் ஊற்றுவாயாக, நுண்மை வாசிப்பாக மாற்றிக் காட்டியதே இவரது பெரும் சாதனையெனக் கொள்ளலாம்.

மொழியின் பயன்பாடு தொடர்புகொள்ளலைத் தாண்டியும் சிலவற்றை முன்னணிப்படுத்தியும் புனைவின் வழி இன்னொரு தளத்தினைச் சுட்டியும் ஏற்கனவே இருந்த கவிதைக்கூறுகளை விளக்கியுமே எழுதப்பட்டுவந்த காலத்திலேயே, அறியப்படாத மன இருட்டுகளின் மூலைகளில் வெளிச்சத் தீப்பந்தத்தினை உயர்த்திப் பிடித்த கரங்கள் போத்லேருடையது. வானில் நச்சும் குப்பைகளும் ஒவ்வாத துர்மணக் கசிவுகளும் பெருகிக் கிடக்கையில் ஒளிர்வது போலே இலக்கிய உலகத்தில் பழையது கூறல், மிகையாகக் கூறல், அழகியலோடு மட்டுமே கூறுதலால் ஆன குப்பைகளை எரிக்கவென்றே தோன்றிய தூமகேது தான் போத்லேரும் அவரது ஆக்கங்களும். இதனை தீமையின் சுடராக ஒப்பு நோக்காமல் பழையதை எரிக்க முனைவதற்கு இணையாகப் பொருத்திக் கொள்ளலாம். எல்லா விதத்திலும் யாருடையது போலவும் அன்றி, எதைப் போலவும் இல்லாமல், யாராலும் பிரதி எடுக்கவே முடியாத அழுத்தமான தைலவண்ண ஓவியங்கள் அவருடைய படைப்புகள்.

***

வேதநாயக்

தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: editorialmagazines@gmail.com

மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி

1

தமயந்தி

ங்க பேரு?

“காத்ரீன் மேக்னா தமிழ்ச்செல்வி”

அந்தப் பெண் ஒரு நிமிடம் ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்து புருவங்களுக்கு மத்தியில் சுருக்கி ஒரு கணம் பார்த்து “ மூனு பேரா?” என்றாள். இதற்கு பதில் சொல்ல வேண்டுமா என ஒரு கணம் இவள் யோசித்தாள். அது மரணத்தைப் பதிவு செய்யும் அலுவலகம். இங்கு பெயர் காரணங்கள் பெரிதாகத் தேவையே இல்லை.

அப்பா இறந்து போனதை பதிவுசெய்ய வேண்டி வந்து இங்கிருக்கும் ஆணி நீட்டிய மர பெஞ்சுக்களில் ஒரு வாரமாய் உட்கார்ந்தாகி விட்டது. இதே பெண் விடுமுறையில் இருப்பதாக சொல்லியே தினம் வரவைத்து திருப்பி அனுப்பினார்கள்.

“ஒரு வாரத்துல தபால்ல அக்னாலெட்ஜ்மெண்ட் வந்துரும் – ஃபார்முக்கு மட்டும் காசு கொடுத்துட்டு போங்க” என்றவள் நாக்கை இடது பக்கமாய் ஒதுக்கிச் சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கீறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா”

இவள் அப்படிக் கேட்பாள் என்று அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. சட்டென அவள் முகம் மாறியது.

“அடுத்தது யாருங்க?”

கோபத்தை மறைத்துக் கொண்டு அவள் கேட்டது புரிந்தும் தமிழ்ச்செல்வி நகராமல் அவளையே உற்றுப்பார்த்து “எங்கப்பா செத்ததுக்கு சிரிக்குற மாரில்ல இருக்கு..” என்றாள் பல்லைக் கடித்தபடி மெதுவாக –

“இங்க பாருங்க… வழி விடுங்க”

“சாரி கேளுங்க”

“என்ன மயித்துக்கு… இடத்த காலி பண்ணும்மா”

“மயிரா… என்ன பேசுறீங்க மிஸ் மயிராண்டி?”

சத்தம் வலுக்க, இவள் கேட்க, எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். ஒரு நிமிடம் பக்கத்து கவுண்டர் ஆள் ஓடிவந்து “ஏம்மா… சும்மாருக்க மாட்டியா? தெனக்கும் வந்து அப்பன் சாவ பதிவு பண்ணனும்னு உயிரெடுத்த… ஒம்மாள… இப்ப என்ன சண்டய இழுக்க?”

திருநெல்வேலிக்கார மனசு சட்டென கை நீட்டியது. அந்த ஆள் மடங்கி சேரில் விழுந்து பின் எழுந்து அடிக்க வர, பின்னால் இருந்த ஆள் அவனை நெட்டித்தள்ள, சேர் சரிந்து அவன் விழுந்தான்

“நீ போ தாயீ… பொட்டப் புள்ளன்னா இம்புட்டு பேச்சு ஆஹ்? நானும் பாத்துட்டே இருக்கேன்… பேரு கேட்டதுலருந்து அந்த பொம்பள நக்கல் சிரிப்பு சிரிச்சிட்டே வேற இருக்கு” என்றவர் கீழே விழுந்தவனுக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டு – “இவுக யாருன்னு டிவில பாக்கல? துப்பாக்கி குண்டுக்கு அப்பன பறி கொடுத்துட்டு அலையுற புள்ளன்னு கூடவா தெரில?” என்றார்.

ஒரு நிமிடம் ஆபீஸே தமிழ்செல்வியைத் திரும்பிப் பார்த்தது. ஒரு நிமிடம் அப்பாவை நோக்கி பாய்ந்த குண்டு நிறைந்த சத்தத்துடன் வெடித்து போலிருந்ததது இவளுக்கு. கை நரம்புகளின் மையத்தில் சிறு குமிழ்கள் தோன்றி கரைந்தோடியது போலிருந்தது. தமிழ்செல்விக்கு ஒரு கணம் உடல் இறுகி பின் மெல்ல இறகு போல உதிர்வது போலிருந்தது.

பார்வைகள் ஒரு குவியமாய் வந்து இவள் மேல் விழ இவள் வேகமாக நடந்தாள். அப்பாவை ஒரு பிணமாக பெட்டியில் மட்டுமே காட்டினார்கள். மதவாதிகள் ஒரு தலைவரைக் கொல்ல வந்தபோது அவரைக் காப்பாற்ற அப்பா அந்தக் குண்டை ஏற்றுக் கொண்டார். தாழ்வாரத்தில் உறக்கம் வராத இரவுகளில் உட்கார்ந்து மேலே ஊர்ந்துபோகும் நிலாவைப் பார்க்கும் போது மனசில் ஒருவிதமான அசூயை நீந்தும். அந்தத் தலைவர் ஒருகோடி ரூபாய் நஷ்ட இழப்பீட்டு தொகை கொடுப்பதாக அறிவித்தார். ஆனால் அமலி அதை ஏற்கவில்லை. ஓயாமல் கலைந்து கிடந்த முடிக்கற்றைகளுக்கு நடுவே “ஏமாத்துதானுக தமிழ்… வாங்கிறாத” என்றாள். மன அயர்ச்சிக்குட்பட்டவள் எப்படி இவ்வளவு தெளிவாகப் பேசினாள் என்று எனக்குப் புரியவில்லை.. அம்மா இறந்த பிறகு அப்பா அமலியையும் தமிழையும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார். அப்போது அப்பாவுக்கு விருதுநகரில் போஸ்டிங். அம்மா பெற்ற அப்பா. பாட்டி அன்பாக பார்த்துக் கொள்வாள். ஆனால் மாமாவைக் கட்டிய அத்தை எல்லா வேலைகளையும் அமலியையே செய்யச் சொல்வாள். அதில் அமலிக்கு மிகுந்த அயர்ச்சி வரும். முதன்முறை மாதவிடாய் ஆனபோது அத்தையிடம் சொன்னபோது கூட “முதல்ல தண்ணி எடுத்து தொட்டிய நிரப்பு மக்களே…. அப்றம் பாத்துக்குவோம்” என்று விட்டாள். பிசுபிசுக்கும் தொடையோடு அமலி தொட்டியை நிரப்பும் போதுதான் பாட்டி ரத்தம் மினுங்கும் அவள் ஸ்கர்ட்டைப் பார்த்து “ஐயே ராசாத்தி… இங்க வாடி” என்று கூட்டிவந்து அழுது முத்தமிட்டு அப்புறம் அப்பாவுக்கு ஃபோன் செய்தாள்.

அப்பா வந்த பிறகான நாட்களை இப்போதும் நினைத்துப் பார்க்கவே முடியாது.. அமலி அப்பாவுடனே போகவேண்டும் என்று தேம்பித் தேம்பி அழுதாள். பாட்டிக்கு கோபம் வந்தது. வெண்டைக்காய் வெட்டிக் கொண்டிருந்தவள் வேகவேகமாக அதன் தலையையும் வாலையும் கொய்து கீழே தூக்கி எறிந்தாள். அமலியின் தலையில் நங்கென்று கொட்டினாள்,

“இதுக்குத்தான் நீ ஒரு கண்ணாலத்த கட்டிருன்னு சொன்னேன்” என்றாள். அப்பா காப்பி குடித்தபடி அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, தாத்தாவுக்கு முகம் இறுக்கமாக்க மாறியது.

“இதுகளை நல்லா படிக்க வச்சாலே செத்து போனாளே… அவ மனசு ஆறிறும்… இதுக்கு மேல இன்னொருத்திய கட்டிட்டு நா அவஸ்தப்படணுமா? இல்ல… அவளதான் அவஸ்தபட வைக்கணுமா? ”

அப்பா சொல்லி முடித்ததும் தாத்தா சட்டென அவர் கையை இழுத்துப் பிடித்து “புள்ளங்கதான் எங்க ஆறுதலாருக்கு சாமி.. அவுகள கூட்டிட்டு போயிறாத” என்று கண் கலங்கினார். அன்று சீறிக்கொண்டு பெய்த மழைக்கு அமலியின் மனவலி தெரிந்திருக்க கூடும் போல. சாய்ந்து கொண்டு பெருஞ்சத்தத்துடன் மண்ணில் சிறுதுளைகளை ஈட்டியின் கூர்முனை கொண்டு வேய்ந்தது போலே பெய்தது. பின்னாட்களில் அவள் யாருடனும் பேசாமல் ஒற்றை திசையையே வெறித்துக் கொண்டிருந்ததை பார்த்து முதலில் பேய் ஓட்டினார்கள். அப்புறம் மாந்தீரிகம், பில்லி சூன்யமெல்லாம் பார்த்து அவள் உள்ளங்கையில் சூடு வைத்தப் பிறகு களிம்பு போடும்போது வலியில் அமலி, “தாத்தா எங்கிட்ட தப்பு பண்றார் தமிழ்” என்று சொல்ல ஆரம்பித்து, பின் வார்த்தைகளில் வலி கீறி அது மெல்லத் துருபிடித்த இரும்புத்தகடு போல உதிர, பெருங்குரலெடுத்து அழுதாள். பின் சட்டென மெளனமானாள்.

தமிழ்செல்வி திரும்பிப் பார்க்க கதவு நிலையோரமாய் பாட்டியின் நிழல் தெரிந்தது. அன்றிரவு சுமார் எழுபத்தியிரண்டு வயதில் பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். அதற்கு பிறகு ஊர் “கெழவிக்கு அவ பேத்திமார பத்திதான் கவல… மூத்த பேத்தி லூசாயிட்டாளாமே” என்று ஆயிரம் காரணம் சொல்ல, அமலி அதற்கு பிறகு பேசவே இல்லை. பாட்டியின் பிணம் முன்னால் சற்றும் கலங்காத கண்களோடு வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

அப்பா அதற்குபின் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். தாத்தாவை எவ்வளவு கூப்பிட்டும் அவர் வரவில்லை. தாத்தா அதற்கடுத்த வருடம் இறந்துபோன போதும் அமலி அப்பாவுடன் வரமறுத்தாள். சமீப காலங்களில் அவள் கிழித்து ஊக்கு குத்திய நோட்டு தாள்களில் முனை மடிந்த ஒரு பால்பாயிண்ட் பேனாவை வைத்து ஏதோ எழுதியபடி இருந்தாள். அவள் பாத்ரூம் போகும்போது அதை தலையணைக்கடியில் அவள் எடுத்து வைத்துவிட்டுப் போவாள். அவளைப் பொறுத்தவரை தலையணை என்பது பாதுகாப்பு என்று தோன்றும். ஒரு தடவை இவள் அமலி பாத்ரூமிலிருந்து வருவதற்குள் அதை வாசித்தாள்.

“விரல். எல்லாமே விரலும் உடம்பும் தான். வாணிஸ்ரீ விரலால் வீணையை மீட்டி மீட்டிப் பாடுவாள், எம்ஜிஆர் விரலை சுழற்றி பாடுவார், ரஜினி விரலை நீட்டி சபதம் செய்வார். கமல் விரலை மடித்து பரதம் ஆடுவார். எனக்கு விரலை நீட்ட பிடிக்கவில்லை. என் விரல்களை அறுக்க வேண்டும். வேண்டாம். தாத்தாவின் விரல்களை அறுக்க வேண்டும். என்றைக்காவது நீள்காய்களை விரல்போல நீட்டும் மரக்கிளைகளை நறுக்க வேண்டும். இந்த எழவெடுத்த முருங்கைக்காய் கூட விரல் போலதான் இருக்கிறது. அப்பாவின் மரணத்துக்கு அவர் உயரதிகாரி போட்ட மாலையில் ஒரு சங்குப்பூ விரல் போலிருந்தது. எனக்கு விரல்கள் வேண்டாம்”

அமலி உள்ளே ப்ளஷ் செய்யும் சத்தம் கேட்ட து. இவள் சட்டென நகர்ந்து உட்கார்ந்து கொள்ள அமலி வெளியே வந்தவள், இவளைப் பார்த்து மருண்டு பக்கத்தில் உட்கார்ந்து கண்ணை உற்றுப் பார்த்தாள். பின் சரசரவென பாம்பு அதன் புற்றுக்குள் நுழைவது போல கையைத் தலையணைக்கடியில் விட்டு தாள்களைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். இவள் அவளின் கைகளையே பார்த்தாள். கூர்மையான நகங்கள் துளியும் சிதையாமல் இருந்தன. சட்டென இவள் விரல்களைப் பற்றி தீராமல் முத்தமிட்டாள்.

“ஒனக்கு தெரியுமா… பொம்பளப் புள்ளங்களயும் சுன்னத் பண்றாங்க..”

“யாரு சொன்னா?”

“யாரு சொல்லணும்? நான் கண்டேன்… நாம ஸ்கூல் படிக்கறப்ப வீட்ல இழுத்து வச்சி தூக்க மருந்து கொடுத்து.. அதும் கேக்காம…”

“இப்ப எதுக்கு அத பேசுற”

“கனவுல வந்திச்சு..” என்றவள் ஜன்னலைப் பார்த்து, திரும்பி நின்று “திரும்ப..” என்றாள். “வெட்னா சுத்தம்னு எதுக்கு அவ்ளோ கொடூரமா.. ஆஹ்.. என்ன பாக்குற.. பைத்தியமாட்டம் பேசுறன்னா.. வளந்தப்புறம் அவுகளுக்கு புடிச்சா வெட்டிக்கலாம் தான..”

“இப்ப எதுக்கு இதல்லாம் பேசுற”

“கொல்லணும் இல்ல… அப்ப அங்க தொடுறவன் மட்டும் யோக்கியனாருப்பான்ம்ப?”

“அப்டில்லாம் ஒன்னுமில்ல… எத ஆச்சும் நினைக்காத”

“இருக்கு இருக்கு இருக்கு”

அமலி தொடர்ச்சியாய் அரற்றிக்கொண்டு வெறித்தபடி இருக்க, அந்த அரசியல்வாதி வாசலில் வந்து நின்றான். அப்பாவின் படத்துக்கு பெரிய சிகப்பு ரோஜா மாலை போட்டு பத்து லட்சம் இழப்பீட்டுத் தொகையை காசோலையாக கொடுக்க தமிழ்செல்வி கொஞ்சம் இறுக்கமாய் நின்றிருந்தாள். மெளனம் ஒரு பறவை போல படபடத்து அந்த அறையைச் சுற்றி பறந்து பின் கால்களை மடித்து தரையிலிறங்கி அறையின் மத்தியிலுறைந்து உட்கார்ந்தது.

“நன்றிங்கிற ஒத்த வார்த்தைக்கு பத்து லட்சம் கம்மிதான்ங்க.. ஆனா உங்கட அப்பா எங்கட உயிருக்கு செஞ்சத கொஞ்சமும் மறக்க முடில… அப்றம் நீங்க ஏதோ ஒரு தனியார் அலுவலகத்துல சொச்ச சம்பளத்துல இருக்கீங்கன்னாங்க.. முதல்வர்ட்ட சொல்லி வேல போட்டு தர சொல்லிருக்கேன்”

“நீங்க தமிழ்ல மட்டும் தான் பேசுவீகளா?”

அவன் தலையசைக்க அமலியின் குரல் சன்னமாய் கேட்டது.

“வாங்கிடாத… வாங்கிடாத தமிழ்”

அவள் விரல்களை வேகவேகமாக கோர்த்து கோர்த்து பிரித்தபடி இருந்தாள். அரசியல்வாதி அமலியை வித்தியாசமாகப் பார்த்து “இவுகட கூட நாம சிகிச்சை கொடுத்து சரியாக்கிறலாம்” என்றான்.

“என்ன சிகிச்ச கொடுப்பீக?”

“எடக்கு மடக்கா பேசப்படாது.. முதல்வர்ட்ட சொல்லி…”

“முதல்வர் போன வாரமே பேசிட்டார்… கவலப்படாதீக” தமிழ் தெளிவாய் சொல்ல, அவன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கவிந்த முகத்தோடு “எப்ப… எங்கிட்ட சொல்லலயே.. காலைல… ஆமாங்க… இன்னிக்கு காலைல கூட செயலாளர்ட்ட பேசினேன்ங்க.. அந்த ஸ்கூல்ல வாத்தியார் கைதானார் இல்ல… அதுக்கு எதிரா போராட்டம் நடத்த போறோம்ங்க.. அத சொல்ல பேசினேன்.. உங்கட்ட பேசனதா சொல்லலயேங்க..”

“ஸ்கூல்னா இங்க்லீஷ் இல்ல… பள்ளிக்கூடம் இல்லயா தமிழ்ல?”

”ஆமாங்க… பதட்டத்துல பேசிட்டேன்.. கரெக்டா… ச்ச.. சரியா சொல்லிட்டீங்க… இத வாங்கிக்கோங்க”

“இல்ல வேணாம்…”

தமிழ்செல்வி கையை நெஞ்சுக்கு குறுக்காய் கட்டிக்கொள்ள அமலி எழுந்துவந்து இவளுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அரூபமான ஒரு குரலில் அவனைக் கையை வைத்து விரட்டுவது போல செய்துகொண்டே இருந்தாள். அவன் ஒரு நிமிஷம் ஏதோ சொல்ல வந்து, பின் வெளியேற நினைத்து அதையும் செய்யாமல் வேஷ்டியிலிருந்து விபூதி எடுத்து நீட்டினான்.

“இல்ல…நம்பிக்கை இல்ல”

“உங்கம்மா கிறிஸ்ட்டின் இல்ல”

“வேதங்காரங்கங்கிறது தான தமிழ்ல”

அவன் விரைந்து வெளியே போனான்.

போய் நேராக முதல்வரின் செயலாளருக்கு ஃபோன் செய்வான்.. தமிழ்செல்வி பருப்பைக் களைந்து குக்கரில் போட்டபடி சிரித்தாள். பின்னால் அவளையே வெறித்த அமலியைப் பார்த்து “செயலாளர் முதல்வர் பேசவே இல்லன்னு சொல்வாரு.. பேசினாரா… இல்லயா… இல்ல… அரசியல் சூழ்ச்சியான்னு நெனச்சி நெனச்சே நிம்மதி போயிரும்… அடுத்து எவன் சுட வருவான்.. எப்ப சுட வருவான்ன்னு உயிர் பயம் தொண்ட நரம்புல துடிச்சிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் சாவு மணி அடிச்சிட்டு திரியும்…”

அமலி ஒன்றும் பேசவில்லை. தமிழ் அவளையே பார்த்தபடி பக்கத்தில் போய் “நகம் வெட்டிக்கலாமா”? என்றாள். அமலி வேகமாக மறுத்து கையை பின்னால் இழுக்க இவளை வாழ்நாள் முழுவதும் நகம் வெட்டச் சொல்லக் கூடாது என்று தோன்றிற்று இவளுக்கு. அவள் தூங்கியபின் தொலைக்காட்சியை ஆன் செய்தாள். ஒரு மாணவி தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்த ஆசிரியரிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருக்கும் பதிவை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த மாணவியின் குரல் அமலி அப்பாவிடம் கூட்டிப்போகச் சொன்ன குரலை ஒத்திருந்தது.

சட்டென எழுந்து அப்பாவின் படத்தில் தொங்கிய சிகப்பு ரோஜா மாலையைக் கழற்றி வீசினாள். இரவு ஒரு கொடிய விலங்கு இரையைப் புசிப்பது போல அதன் இருட்டுக்குள் அந்த மாலையைக் காணாமல் செய்தது. எழுந்துபோய் இருட்டினில் நின்றாள். எங்கோ ஒரு பெண்ணின் அபாயக் குரல் கேட்டது. இருளும் குரலுமாய் இவளில் அது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. உள்ளே தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு தடவை எடுக்காமல் போக மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. அமலி எடுத்துக்கொண்டு வந்து நீட்டிவிட்டு உள்ளேபோக, அரசியல்வாதியின் மொண்ணைக் குரல் ஹீனமாய்,

“என்ன பேரு சொன்ன? ஆஹ்?”

“என்ன இருந்தா என்ன.. சொல்லுங்க சார்”

“ரொம்ப பிசியாம்மா? கோவப்பட்டு வந்துட்டேன்… மனசு கேக்கல… யார் இருக்கா உனக்கு.. சொல்லு… நாளைக்கு கட்சி ஆள்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா வாரேன்..”

“வந்து..”

அவன் குடித்திருந்தான் போலும்.. குளறியபடி, “வந்து… வந்து” என்று மிகக் கேவலமாக அவன் சிரிக்க – “நாளைக்கு ஏன் சார்…” என்றபடி வாட்ஸ் அப் வீடியோ கால் போட, அவன் எடுக்கிறான். சட்டென மார்பு சேலையை தமிழ் நகர்ந்த, அமலி உள்ளிருந்து ஓடி வருகிறாள்.

அரசியல்வாதி முகம் ஒரு நிமிடம் வெளிற, அமலி ஃபோனை எறிகிறாள்.

“வெறும் ஒடம்பு.. ஒரு பாவிக்கும் தெரில” அவள் உதடுகள் முணுமுணுக்க, ஃபோன் உடைந்து கிடக்கிறது. தமிழ்செல்வி அப்படியே சரிந்து உட்கார, அமலி வீட்டு வாசல்நடையில் சாய்ந்து உட்கார்ந்து தன் விரல்களை ஒன்றோடு ஒன்றாக அதுவரை வாழ்நாளெல்லாம் பற்றிக்கொள்ள முடியாத அழுத்தத்தோடு பற்றிக்கொள்கிறாள். வாழ்வில் முதன்முறையாக வலது கையைக் குவித்து உதட்டில் முத்தி அதை விடாமல் நீண்ட நேரத்திற்கு கன்னத்தில் ஒத்திக்கொண்டே இருந்தாள் அமலி.


தமயந்தி – திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் திரைப்படம் சார்ந்து இயங்கும் இவர் ஒரு ஆவணப்பட இயக்குநரும் ஊடகவியலாளரும் ஆவார். இவரது முதல் நூல் 1989-ல் வெளிவந்தது. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்புகளும் ஒரு கவிதை தொகுப்பும் நேர்காணல் தொகுப்பு ஒன்றும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ஒரு நாவலும் வெளிவந்திருக்கிறது. அண்மையில் மலையாளத்தில் ‘நிழலிரவு’ நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன்

0

வைரவன்

ருட்டில் ஒளிந்துக் கொண்டிருந்த என்னை நிச்சயமாக அந்த வீரன் கவனிக்கவில்லை. குளிரில் உறைந்து போய்விட்ட என் கால்களை கைவிரல்கள் தொடும்போது எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இன்னொருவன் உடையதாய் கிழிந்த காலுறையில் வெளிபிதுங்கி நின்ற பெருவிரல் பல்லிளித்தது. காட்டின் இருளில் பசுமை மறைந்து போன வெளிகளில் நிலவொளி மரத்தின் இடைவழி மின்ன, என் கண்கள் கூசியது. அவனது ஆங்காரமான கைகள் கீழே நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையை உருவும் போது அவளின் கதறல்களை நான் கேட்டேன். அவளின் நாக்கு பூரணமான வார்த்தைகளை அவிழ்த்து விட்டது. அவையெல்லாம் இறைவனை நோக்கிய வேதனை கொப்பளிக்க பிறந்த சொற்கள். அவை மேல்நோக்கி வட்டமிட்டுச் செல்வதை கண்கள் கவனித்தன.

ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் ஒட்டியபடியே மிதப்பதை நான் பார்த்தேன். அவற்றின் வடிவு என்னை ஆச்சர்யப்படுத்தியது. எப்படி இவள் மிருகத்தின் காலடியில் மிதிப்பட்டு இருக்கும் போதும் நேர்த்தியான வார்த்தைகள் மூலம் இறைவனை அலங்கரிக்கின்றாள், அவ்வளவு மேன்மைப் பொருந்தியவனா அவன். அருந்திய மதுவின் வேலையென, எனக்குள் ஒருவன் தலையைத் தட்டி அதையெல்லாம் கவனிக்காதே அவையெல்லாம் வீண்வேலை என்றான். இருந்தாலும் என் கண்கள் வான் நோக்கின. ஆயுதம் ஏந்திய ஒருத்தன் இறங்கி வருவான் என்பதை என் மனம் நம்பியதை வேறொருவனுக்குச் சொல்லி என்ன பயன் என்பது போல, இதயத்தில் கடைசி இருந்த குழியில் போட்டு மண் நிரப்பினேன்.

மீண்டும் அவன் தலையில் தட்டி ‘ஏய் உனக்குள்தானே நானிருக்கிறேன், நீ ஒரு அடிமுட்டாள் என்பதை நிரூபிப்பதில் ஏன் அத்துணை மகிழ்வுறுகிறாய்’ என்றான். நான் உடனே உனக்கு ஒரு பெயர் சூட்டிக்கொள்கிறேன் அப்போதுதான் நினைத்தவுடன் உன்னை நான் அழைக்க முடியும் என்றேன். அதற்குள் ‘உனக்கு நான் ஏற்கனவே பெயர் சூட்டிவிட்டேன். உன் பெயர் முட்டாள்’ என்றான். அவனது சொற்கள் எனக்குள் இருந்த அகங்காரத்தைத் தூண்ட நானும் சிரித்துக் கொண்டே ‘அட அற்ப பயலே. என்னுடலில் பாதியாய் இருந்து என்னையே இழிவு செய்கிறாயா. பார் உனக்கு நான் இப்போதே இறைவனின் நாமத்தால் பெயர் சூட்டுகிறேன். உன் பெயர் முட்டாள்’ என்றேன். ‘உனக்கென்று சுய அறிவு கூட இல்லையே. நான் சூட்டிய பெயரையே நீயும் உபயோகிக்கிறாய் ‘, ‘ஏன் உலகமே முட்டாள்களால் இயக்கப்படும் நிலையில் இரண்டு முட்டாள்கள் அருகருகே இருப்பதில் பிழையில்லையே’ – நான் சொல்லிவிட்டு அமைதியாகி, தூரமாய் நடக்கும் காட்சிகளை உள்வாங்கினேன். அவனிடம் இருந்து மேலெழும்பாத கேள்விகளே மாள முடியாத மகிழ்ச்சியில் என் உள்ளம் திளைத்து முகம் சிவக்க வைத்தது.

அவளின் மார்புக் கச்சையை பிய்த்தெறியும் போது கண்கள் அவளின் முலைகளையே நோக்கின. தளர்ந்து தொங்கிய முலைகள். முட்டாள் சொன்னான் ‘வயதான பெண்ணிடம் வீரத்தைக் காட்டுகிறான். பார்க்கலாம் அவனின் அதிவீரத்தை. நானும் இளையவள் ஒருத்தியை தூக்கிக்கொண்டு புணர முயற்சிக்கிறான் என்றே நினைத்தேன்’, நானும் பதிலுக்கு நெஞ்சில் பலமாய் தட்டியபடி, ‘என் இளையப் பெண்கள் அவனை தூக்கி எறிந்து, காலால் மிதித்து, கைகளாலே மார்பை பிளந்து அதன் வழியே பீச்சி அடிக்கும் ரத்தத்தை குடிப்பார்கள். இன்றைக்கு அவனுக்கு அதிர்ஷ்டம்தான் என்பேன். கிராமத்தில் சென்று ஒரு வயதான பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறான். நிச்சயமாக கோழையைப் போல தெரிகிறான். அவனின் வேகத்தைப் பார்த்தாயா ஒரு பொலிக் குதிரையை போல. பெண்ணுடலை மேயப் பார்க்கிறான்’.

‘நீயும் ஒரு புரட்சிகரக் குழுவில் இருந்தவன்தானே. ஏன் அமைதியாய் வேடிக்கை பார்க்கிறாய். போய் ஒரு எத்து விடக்கூடாதா’ முட்டாள் மீண்டும் சொன்னான். ‘அங்கே அவனுள் எழும் வேகத்தைப் பார்க்கிறேன். நானும் மனைவியை, குழந்தையை விட்டு வெவ்வேறு சூழலில் ஓடினேன். நெடுநாட்கள் காட்டின் சகல காலநிலையிலும் உடல்கள் மரத்து போயிருக்கும். ஆனால் விரகதாபங்கள் மட்டுமே எரியும். உணர்ச்சிகள் அவர்களுக்குள் எரியும் வேளையில் ஆண்கள் பெண்களுடனும், ஏன் ஆண்கள் ஆண்களுடனும், பெண்கள் பெண்களுடனும் புணர்வதை நான் கண்டிருக்கிறேன். அங்கே இருசாராரும் தன்னைத் தொலைத்து மீண்டும் தன்னைக் கண்டடைவதில் எவ்வித கேடும் இருப்பதாய் தோன்றியதில்லை. அவரவர் பாடு இல்லையா. எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.

மொத்த உணர்ச்சியையும் தினம் தினம் என் மண்டைக்குள் அடைத்து கூடு கட்டுவேன். அவை ஒரு ஆலமரம் போல விழுதுகளை விரித்து நிற்கும். அது சரிய ஆரம்பிக்கும் சமயம் அரசின் பாதுகாப்பு படைக்குத் தெரியாமல் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் முதலில் கண்கள் மனைவியை மட்டுமே தேடும். குழந்தைகள் என் காலண்டையில் நின்று என்னைப் பிடித்து ‘அப்பா, அப்பா’ என்று கத்தினாலும் அவைகளை கைகள் அகற்றி அந்த அழகி வந்ததும் அப்படியே அள்ளித் தூக்கும். பின் என் அறைக்குள் செல்வேன். உனக்கு தெரியுமா என்னுடைய மோசமான உறுப்பைப் பற்றி? அது என் மூக்கு. அறைக்குள் நுழைந்ததும் வேறு ஆண்களின் மணத்தை அவை மோப்பம் பிடிக்கும். அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவளின் அத்துணை சதை துணுக்குகளையும் நாவால் நக்கி ஆண்மை பெருக புணருவேன். மொத்தப் பலமும் இழந்தவுடனும் ஆடைகளை உடுத்தி வெளியே வருவேன். பிள்ளைகள் அறையின் கதவருகே நிற்பார்கள்.

ஒருநாள் என் மூத்த பிள்ளை மெதுவாக அழைத்து காதில் ரகசியம் என எண்ணி குரலைத் தாழ்த்தாமல் “அப்பா, நீங்கள்தான் உண்மையிலே எங்கள் அப்பாவா? அம்மா சிலவேளை ஒரு தாடிக்காரக் குண்டனையும், ஒல்லியான தையல் வேலை செய்யும் கருமியையும் அப்பா என்று அழைக்கச் சொல்கிறாள். உங்களுக்கே தெரியுமே! நான்தான் வளர்ந்து விட்டேன். என்னுடைய மூக்கும் மோவாயும் தங்களுடையதைப் போலவே இருக்கின்றன. ஆனால் தம்பி தங்கைகளின் முகச்சாயல் அப்படியில்லையே. நான் மட்டும்தான் உங்கள் பிள்ளை அல்லவா! உங்களோடு என்னை அழைத்துச் செல்லுங்கள். நானும் சண்டை புரிய தயார் ஆகிவிட்டேன். அன்றைக்கு காட்டில் ஒரு நரியை ஒற்றையாக கொன்றேன். சரி சரி அந்தப் பொம்பளை பார்க்கிறாள்” சொல்லிவிட்டு அமைதியாக மனைவியின் அருகே சென்றான். அவள் என்னை நோக்கி புன்முறுவல் செய்தாள், நானும் பதிலுக்குச் சிரிக்க வேண்டியதாய் ஆச்சு’. அருகில் இருந்தவன் கோபத்தோடு என் தலையில் தட்டி ‘உன் கதையை யார் கேட்டார். நான் அறியாததா? அந்தப் பெண் இன்னும் அவனின் வலுவான பிடிகளுக்குள் மாட்டிக்கொண்டு தன்னை விடுவிக்க போராடுகிறாள். நீயேன் உதவக் கூடாது’ கூறிவிட்டு அமைதியானான்.

‘அவள் உதவிக்கு இன்னும் மேன்மைப் பொருந்திய இறைவனையே அழைக்கிறாள். மனிதனை ஏன் அழைக்க மறுக்கிறாள். மனிதர்கள் மேலே அவ்வளவு நம்பிக்கையின்மையா? என் உளம் அவளின் பிரார்த்தனைகளிலே சுழல்கிறது. ஒரு பெண்ணின் குரலுக்கு இறைவன் ஒருவன் இருந்தால் இறங்கி இந்நேரம் வந்திருக்க வேண்டும். ஆனாலும் ஜனங்கள் இறைவனையே கைகூப்பி அழைக்கிறோம். இந்த வயதான பெண்ணும் அதிலொருத்தி’ சொல்லிக்கொண்டே இருக்கும் போதே இடைவாரில் இருந்த துப்பாகியை விரல்கள் வருடின. துருவில் ஊறி நெடுநாளாய் என் இடையில் இருக்கிறது. வெவ்வேறு காலநிலையிலும் உளநிலையிலும் என்னிடம் பயணிக்கும் ஒரே நண்பன். ‘ஏய், இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கிறதா? இதனை நீ விட்டெறிந்தால் குழந்தைகள் கூட இதைத் தொடாது’ அவனின் குரல் மீண்டும் எரிச்சலை உண்டாக்கியதை வெளிக்காட்டாமல் இருந்தேன்.

‘உனக்கும் மனசாட்சி இருக்கிறது போல. ஏன் உனது அருமைத் துப்பாக்கியை தொடுகிறாய். சுட்டு வீழ்த்து அவனை. ஒரே தோட்டா. முடிந்தது கதை’ அவன் என் உணர்ச்சியைச் சீண்டினான். ‘நீ செவிடாகி விட்டாய் போல’ மீண்டும் கேள்விகளை அவிழ்த்துவிட்டான். ஒரு தோட்டா இருக்கிறது, அதுவும் எனக்காக நெடுநாளாக காத்திருக்கிறது, அதன் துடிநாவிற்கு என் குருதி வேண்டும்.

‘இல்லை.. இல்லை.. பொறு, வயதான பெண் அவளின் காலால் அவனை மிதிக்க ஆரம்பிக்கிறாள். பார்த்தாயா பிரார்த்தனைகள் உதட்டில் வடியவில்லை. அப்பப்பா என்ன மிதி. அவள் தன்னை நம்ப ஆரம்பிக்கிறாள். நிச்சயமாக இனி வீரனின் விரல்கள் அவளின் அங்கங்கள் மேலே படுவதை விரும்ப மாட்டாள். அந்த தொடுதல்களே அருவருப்பை கொடுக்கும். அவை மேலேழும்பி பெண்ணின் மெல்லிய ஆத்துமாவின் மேற்படலம் மேலே முதலில் தன்மையாய் மோதும் ஒரு தென்றலைப் போல. அப்போது அவள் சிறுத்துப் போவாள். பின் அதுவே ஒரு ஊழிக்காற்றை போல அதே படலத்தின் மேலே வேகமாய் மோதும் அப்போதுதான் ஆன்மபலம் வெளிவரும். அந்நிலைக்கு அவள் வந்துவிட்டாள். அவனின் கதி இன்றோடு முடிந்தது.’ ஆனந்தமாய் உணர்ந்தேன்.

வயதானப் பெண்ணின் மொத்த உடலுமே வீரனின் அத்துமீறல்களுக்கு எதிர்வினையாற்றியது. வீரனின் உடல் நடுங்கியது. சகாக்களின் பெயர் சொல்லி கத்த ஆரம்பித்தான். இரண்டு பேர் ஓடி வந்தனர். அவர்கள் அவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர் ‘உன் அம்மாவின் வயது இருக்கும். அவளை அடக்க தெரியவில்லையே. நீயே உன் இடைவாரில் இருக்கும் துப்பாக்கியால் சுட்டுக்கொள்’ சத்தமாய் சிரிக்கவும் ஆரம்பித்தனர்.

சகாக்களின் ஏளனம் அவனின் செய்கைகளின் வேகத்தைக் கூட்டியது. பலமாய் பெண்ணின் முகத்தில் காறி உமிழ்ந்தான். கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். போதமில்லாமல் சரிந்தாள். என் தொடையிலே வேகமாய் குத்தினேன். ‘முட்டாளே.. உன் வீரத்தை அவர்கள் மேல் கொஞ்சமேனும் காட்டேன். வீணாக ஏன் உட்கார்ந்து இருக்கிறாய்’ மண்டைக்குள் அதையே சொல்லிக் கொண்டிருந்தான்.

‘கொஞ்சம் பொறேன். அவளால் அவர்களை எதிர்கொள்ள முடியும். பெண்ணின் மனபலத்தின் முன்னே நான் எப்போதும் மண்டியிடுவேன்’ அமைதியானேன். ‘நீ ஏன் போராளிக் குழுவில் இருந்து பிரிந்து நாடோடியாய் வாழ்கிறாய்’ அவன் கேட்கிறானா? இருக்கட்டும்.. என்னை வதைப்பதில் களிவுறுகிறான்.

‘நான் முன்பிருந்த குழுவில் போராளி ஒருவன் இருந்தான். டிசம்பர் மாதத்தின் நள்ளிரவு வேளையில் நாங்கள் நகரத்தில் இருக்கும் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்தோம். அவர்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதே நோக்கம். அவனுக்கு சொல்லிக்கொள்ளும் பெரிய வயதெல்லாம் இல்லை. அந்தப் பயல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து திரும்பும் வேளையில் வயதான அதிகாரியின் இளம்மனைவியின் வார்ப்பில் ஈர்க்கப்பட்டு அவளைப் புணர முடிவு செய்தான். அதற்காக அதிகாரியின் கழுத்தை கத்தியால் அறுத்து இரத்தம் ஓடும் அவர்களின் படுக்கையிலே அவளையும் புணர்ந்துக் கொன்றுவிட்டான். இதைக் கேள்விப்பட்ட தலைவர் அவனைத் திட்டாமல் ‘பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம்’ என உரக்கக் கத்தினார்.

அன்றிரவே அந்தக் குழுவின் சகலப் பந்தங்களையும் அறுத்துவிட்டு நாடோடி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டேன். கொஞ்சம் நகைப்பாகச் சொன்னால் அவர்களும் என்னைத் துரோகி எனும் அடைமொழியோடு கொல்லத் துடிக்கிறார்கள். யாரால் முடியும்’ நான் என்னையறியாமல் கத்திச் சிரித்துவிட்டேன், தவறுதான் என்ன செய்ய! அந்த வீரர்கள் காதுக்கு எட்டிவிட்டது.

“யார் அங்கே. ஏன் இருட்டில் மறைந்து கொண்டு சிரிக்கிறாய். வெளியே வாயேன். அந்த மூஞ்சை நாங்களும் பார்க்கிறோம்” மூவரில் நெட்டையான தடியன் கத்தினான். நான் அமைதியாய் ஒளிந்துப் புதர்களில் மறைந்துக் கொண்டேன். இதற்கு முன் அமர்ந்திருந்த இருப்பிடத்தில் அவர்கள் விளக்கடித்து பார்த்தார்கள். ஒரு நொடியில் சுதாகரித்து வேறொரு புதரில் ஒளிந்தது நல்லதாய் பட்டது.

வயதானப் பெண் தன் ஆடைகளைச் சரிப்படுத்தி எழுந்து நின்றாள், தன் முகத்தில் இருந்த எச்சிலைத் துடைத்து இறைவனுக்கு நன்றி கூறினாள். புரியாமல் விழித்தபடி பார்த்தேன். வீரர்களில் ஒருவன் “ச்சீ, படுடி. வேசியே. உடைகளை நீயே அவிழ்க்கிறாயா? இல்லை உதவிக்கு நான் வரட்டுமா” என்றான்.

“குழந்தைகளே, என் மகனின் வயதுதான் உங்களுக்கு இருக்கும். அப்படியானால் நான் உங்கள் அன்னையைப் போன்றவள். நாய்கள்தான் உறவைப் பார்க்காது. மனிதர்கள் நீங்களுமா!”, “யார் சொன்னார்கள் நாங்கள் மனிதர்கள் என்று. நாங்கள் வெறி பிடித்த நாய்கள். உங்களின் நிலம் முதல் வேட்டை. பின் அழகான பெண்களின் உடல். நீ அப்படியொன்றும் வயதானாவளாய் தெரியவில்லை. உன் அங்கங்கள் என்ன வனப்பு. நீயே ஆடைகளை அவிழ்த்து எறி. நிலவொளியில் உன் வளமைகளை காணத் துடிக்கிறேன்”.

“இப்படி பேசாதே தம்பி. நீ கேட்டாய் அல்லவா. அந்த புன்னகையை. இறைவன் வந்துவிட்டான். என் பிரார்த்தனைகள் வீண்போகவில்லை. என்னை விட்டுவிடு. இல்லையேல் இறைவன் பார்த்துக் கொள்வான்” அவளின் நம்பிக்கையான வார்த்தைகள் என்னை மீண்டும் கத்திச் சிரிக்க வைத்தது. தடியன் மீண்டும் உரக்கச் சொன்னான் “ஏய்.. நாடோடியோ, காட்டுவாசியோ ஓடிப் போய்விடு. இல்லை துப்பாக்கி குண்டுக்கு பலியாவாய்”, “எனக்கும் கொஞ்சம் அவர்களுடன் விளையாட வேண்டும் எனத் தோனிச்சு” “உனக்கு துப்பாக்கி குண்டுகளை கொடுத்தவனே நான்தான். ஏன் துப்பாக்கியே என்னுடையதுதான். எங்கே குறி வைத்து சுடு” காட்டிற்குள் அலைந்து யார் கண்ணிலும் படமால் சுற்றி, எளிதாக எவ்வித சப்தமும் இல்லாமல் என்னால் இடம்விட்டு இடம் நகர முடியும்.

குரல் வந்தவிடத்தில் சுட்டான், நான் “அய்யோ பரிதாபம். ஒரு குண்டு வீணாகி விட்டதே” மீண்டும் உரக்கச் சிரித்தேன். வந்தவர்களில் ஒருவன் தலை தெறிக்க ஓடி மறைந்தான். இப்போது இரண்டு வீரர்கள் மட்டுமே. முதல் வீரன் எதையோ உணர்ந்தவன் போல, “இது காட்டுவாசிதான். வனத்தில் நிறைய பேர் அலைகிறார்கள். அவர்களுக்கு மந்திர வித்தைகளும் தெரியும். வா நாம் போய்விடலாம்” தடியனை உடன் அழைத்தான்.

“அயோக்கியப் பயலே. நீ இறைவனா. ஒளிந்து மறையாதே. முன்னால் வந்து நிற்க திராணியற்றவன் பேசாதே” தடியன் மூச்சிறைக்கப் பேசினான். “உன் முன்னால் இருந்தபடியே பேசும் என்னை காண எது தடுக்கிறது” – பதிலுக்கு அவனை வெறுப்பூட்டினேன்.

“அங்கே நிற்கும் பெண்ணை தொடுபவர் உங்களில் முதலில் பலியாவார்” மீண்டும் சொன்னேன், நல்ல விளையாட்டுதான். பிடித்திருக்கிறது. தடியன் அவளின் கேசத்தைப் பிடித்து தரையில் தள்ளினான். என்னிடம் உதவ என்ன இருக்கிறது. வலுவிழந்த கைகளும் தளர்ந்து போன கால்களும் அவர்கள் அருகே செல்ல விடாமல் தடுத்தன. ஒருவேளை அவர்கள் முன்னே நான் நின்றாலும், அந்தோ.. பரிதாபமான தோற்றம் அவர்களை எள்ளி நகையாட வைக்கும். முட்டாள் என்னை மீறி எனது கையாலே இடைவாரை அவிழ்க்க முயற்சித்தான்.

கோபத்தில் ‘முட்டாளே விட்டுப் போ’ என்று கத்த, தடியன் அவனைச் சொல்கிறேன் என்பது போல வெறிகொண்டு பெண்ணின் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் மிதிக்க, யோனியில் இருந்து சொட்டிய ரத்தம் நிலத்தில் பட்டது என் கண்களில் விழவும், அவளும் ‘இறைவா’ எனும் அழுகுரலில் கூப்பாடிட்டாள். உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆங்காரமாய் அலறினேன். இரவில் துயில் கொண்ட புள்ளினங்கள் கத்தியபடி சிதறிப் பறந்தன.

ஒரே தோட்டா, எனக்கான தோட்டா, சீறிக்கொண்டு அவனது வலது கையைத் துளைத்தது. வலியால் அவன் துடித்தான். முதல் வீரன் ஓட, தடியன் வலியால் துடித்தபடி அவன் பின்னாலேயே ஓடினான். வயதானப் பெண் மண்டியிட்,டு “மேன்மைப் பொருந்திய இறைவனே உனக்கு நன்றி” எனக் கண்ணீர் வடியக் கத்தினாள். முட்டாள் என் மண்டையைத் தட்டி “அவள் உன்னைத்தான் வணங்குகிறாள்” என்றான். நான் பலவீனமான குரலில் சொன்னேன், “நான் இங்கிருந்து நகர்ந்தவுடன் மீண்டும் அவர்கள் நிறைய பேராய் இங்கே வருவார்கள். அவள் மீண்டும் அந்த மேன்மைப் பொருந்திய இறைவனையே வேண்டுவாள். அப்போதாவது அவன் இறங்கி வருவானா? தூரத்தில் இருந்து கவனிக்க வேண்டும்”.

***

வைரவன்

சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது.

மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தல்

ரூபன் சிவராஜா

தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) நெருக்கடிகால மீட்புப்பொதி ஒன்றினைப் பெறுவதற்காக அதனிடம் இலங்கை அரசு கையேந்தி நிற்கிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிதிநிறுவனங்கள் மீது அமெரிக்கா செலுத்துகின்ற செல்வாக்கு பெரியது. எனவே மீட்புப்பொதிக்கான நிபந்தனையாக சீனாவுக்கு எதிரான மூலோபாய நகர்வில் இலங்கையை இணைப்பதற்குரிய அழுத்தத்தினைப் பிரயோகிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அரசக் கருவூலம் வெறுமையின் விளிம்பில் நிற்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலை. எண்ணெய், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குச் செலுத்துவதற்குரிய நிதிவளம் தீர்ந்துவிட்டது. பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2020-இல் கொரோனாப் பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து தீவின் முக்கிய வருமானங்களில் ஒன்றான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணத்துறை மிக மோசமான வீழ்ச்சியைக் காணத் தொடங்கியது. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையுயர்வு, தட்டுப்பாடு, நாளின் பெரும்பகுதி மின்சார வெட்டு, போக்குவரத்துப் பாதிப்பு, வேலைவாய்ப்பு இழப்பு என்பதாகப் பொருளாதார நெருக்கடி நாட்டுமக்களின் நாளாந்த வாழ்வைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டுக் கடன்கள் மூலம் அந்நியச் செலாவணி தக்கவைக்கப்பட்டதே தவிர, நாட்டின் ஏற்றுமதி வருமானத்திலோ அன்றி சேவை விநியோகங்களின் மூலமோ அல்ல. விலைவாசி அதிகரிப்பிற்கு இட்டுச்சென்றமைக்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று அரச நிதியிருப்பும், அந்நியச் செலவாணிக் கையிருப்பும் இல்லாமற் போனமை, மற்றையது பணவீக்கம் உச்சமடைந்தமை. வெளிநாடுகளுக்கான கடனைச் செலுத்துவதற்கு இலங்கை தனது அந்நியச் செலாவணியின் கையிருப்பில் கைவைக்க வேண்டியிருந்தது, இதனால் 2018-இல் 6.9 பில்லியன் டொலராக இருந்த கையிருப்பு இந்த ஆண்டு 2.2 பில்லியனாகச் சுருங்கியிருக்கிறது.

நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 10 வீதம் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்படுகின்றது. தவிர சுற்றுலாத்துறை வீழ்ச்சியினால் அத்துறை சார்ந்த இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாகவும் உலக பயண மற்றும் சுற்றுலா பேரவை (World travel and tourism council) தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியும் அந்நியச்செலாவணி இழப்பிற்குரிய காரணிகளில் ஒன்று.

இரசாயன உரப்பாவனை மீதான திடீர் தடை விவசாயிகள் மத்தியில் பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருந்தது. உணவு உற்பத்தியிலும் பயிர் விளைச்சலிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு கட்டாயப்படுத்தும் சட்டத்தினை 2021 மே மாதம் திடீர் அமுலுக்குக் கொண்டுவந்தது ராஜபக்சே அரசாங்கம். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு திடீரென்று பயிர்களைச் செழிக்க வைக்கவும், களைகள் மற்றும் பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமற் போயின. இழப்புக்கு அஞ்சிய பலர் எதையும் விதைப்பதில்லை என்று முடிவு செய்தனர். இது உற்பத்தி வீழ்ச்சிக்கும் உணவுப் பற்றாக்குறைக்கு மேலும் வழிகோலியது. உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சி, இறக்குமதிக்குரிய நிதிவளமின்மை என்பன நாட்டின் உணவுப் பாதுகாப்பினைச் சவாலுக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் போது, அது பெரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லக் கூடிய அபாயம் உள்ளது.

ஏப்ரல் 3-ம் திகதி அரசாங்கம் பெயரளவிலும் செயலளவில் கலைந்தது. ஜனாதிபதியும் பிரதமரும் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். நடைமுறையில் அரசாங்கம் அற்ற நாடாகவே இலங்கைத்தீவு உள்ளது. ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து, புதிய கூட்டு அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ச சகோதரர்கள் அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை.

2019 ஈஸ்ரர் குண்டுவெடிப்பினை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு ராஜபக்சேக்களால் தான் முடியுமென்ற சிங்களப் பொதுப்புத்தி அவர்களின் மீள் வெற்றிக்கு வழிகோலியது. ஈழப்போரின் இறுதிக்காலங்களிலும் அது முடிவுக்கு வந்த 2009-லும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் கோத்தபாய. போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் சர்வதேச மட்டத்தில் அறியப்பட்டவை. அப்படியிருந்த போதும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவை வெற்றியீட்டச் செய்தார்கள் சிங்கள வாக்காளர்கள்.

இலங்கையை அதிகம் அழுத்துகின்ற பிரச்சனை வெளிநாட்டுக் கடன். அதிலும் குறிப்பாக சீனாவிற்குச் செலுத்த வேண்டிய மொத்தத்கடன் 5 பில்லியன் டொலர். கடந்த ஆண்டு மட்டும் சீனாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது இலங்கை.

தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) நெருக்கடிகால மீட்புப்பொதி ஒன்றினைப் பெறுவதற்காக அதனிடம் இலங்கை அரசு கையேந்தி நிற்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சமூக பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கும் தற்போதைய நெருக்கடியின் போது வறிய மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் சிறிலங்கா “நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை” நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 500 மில்லியன் டொலர்களை நெருக்கடி கால உதவியாக வழங்க ஆலோசித்து வருவதாகச் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்த வாரம் அவர் வோசிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கியிடம் நெருக்கடிகால உதவிகளுக்கான சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார். மருந்துப் பொருட்கள், வறிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உணவு போன்ற செலவுகளுக்காக 10 மில்லியன் டொலர்களை நெருக்கடி கால உதவியாக வழங்குவதற்கு உலக வங்கி தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுடனும் உதவிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது.

கடன் மற்றும் நிதியுதவிகளுக்கான சர்வதே நாணய நிதியத்தின் முதன்மை நிபந்தனை உதவிகோரும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவேண்டுமென்பதாகும். இலங்கையின் தற்போதைய கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாதது.  நெருக்கடி காலப் பொதியினை வழங்குதவற்கு அடிப்படையாக அக்கடன்கள் தொடர்பான மறுவரைபு / மீள்நிர்யணம் அவசியமென IMF  வலியுறுத்தியுள்ளது. மறுவரைபு நோக்கிய நகர்வு நீண்ட செயல்முறையைக் கோருகின்ற அம்சம். அதிக கடனை வழங்கியிருக்கும் சீனா மற்றும் ஏனைய சர்வதேச நிதிவழங்குனர்களுடன் கோத்தபாய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்தியே அத்தகைய கடன் மறுவரைபை அடைய முடியும்.

பெயரளவில் என்றாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த தரநிர்ணயங்களையும் வலியுறுத்தல்களையும் கடனுதவிகளுக்கான முன்நிபந்தனைகளாக மேற்கு கொண்டுள்ளது. சீனா அத்தகைய நிபந்தனைகள் ஏதுமற்று கடன்களை வழங்கி வருகின்ற நாடு. தான் கடன் வழங்குகின்ற நாடுகளின் வளங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தித்திட்டங்களைத் தன்வசப்படுத்திக் கொள்வது சீனாவின் வழக்கம். வறிய மற்றும் வளர்முக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி எனும் பேரில் சீனா இதனைத்தான் செய்துவருகின்றது.

ராஜபக்சே அரசாங்கங்கள் நாட்டின் உட்கட்டுமானத் திட்டங்களையும் ஹம்பாந்தோட்ட உட்பட்ட முக்கிய துறைமுகங்களையும் சீனாவுக்குத் தாரைவார்த்தமை குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் தரவின்படி, 2019-ல் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 17, 2 வீதம் சீனாவிடமிருந்து பெற்ற கடனாகும். தற்போதைய சூழலில் கடன் விகிதம் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, ஆட்சியாளர்களுக்கெதிராக மக்கள் தெருவில் இறங்கியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிதி நிறுவனங்கள் மீது அமெரிக்கா செலுத்துகின்ற செல்வாக்கு பெரியது. எனவே மீட்புப்பொதிக்கான நிபந்தனையாக சீனாவுக்கு எதிரான மூலோபாய நகர்வில் இலங்கையை இணைப்பதற்குரிய அழுத்தத்தினைப் பிரயோகிக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.


ரூபன் சிவராஜா

நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.

மின்னஞ்சல்: svrooban@gmail.com

அம்மை

0

சுஷில் குமார்

ள்ளிப் போங்கல, பெரிய மத்தவனுவோ மாதி நிக்கானுவோ, குண்டியச் சொறிஞ்சிட்டு. விடியாண்டாம், முழுங்கதுக்கு வந்துட்டானுவோ” என்று எல்லோருக்கும் கேட்கும்படி முனகியபடி தன் லோடு-சைக்கிளை உருட்டியபடி வந்து நின்றாள் மாவிசக்கி அக்கா. அவள் குரல் கேட்டதும் அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒருநொடி அதுவரை பேசிக்கொண்டிருந்ததை மறந்தபடி தங்கள் இடத்திலிருந்து அசைந்து முன்னோ, பின்னோ விலகி அவளுக்கு ஒதுங்கி நின்றனர். நான் அருகிருந்த வேப்பமூட்டில் உறக்கக் கலக்கம் தீராமல் கொட்டாவி விட்டபடி உட்கார்ந்திருந்தேன். சுற்றிலும் பீடியும் சிகரட்டும் கலந்த புகை நாற்றம்.

வேப்ப மரத்தின் அருகே வந்து நின்றவள், “தள்ளிப் போல மயிராண்டி, மத்ததப் பாக்கணுமோ?” என்றாள். எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. சட்டென எழுந்து தள்ளி நின்றேன். அவள் தனது சைக்கிளை வேப்பமூட்டோடு சாய்த்து வைத்தாள். சிவப்புநிறச் சேலை கசங்கியும் சுருங்கியும் அவளைச் சுற்றியிருந்தது. அக்கா எப்போதுமே தன் ஆடையைப் பற்றிய கவனமில்லாததைப் போலவே இருப்பாள். மேலுடம்பில் அந்தச் சேலை மறைத்தும் மறைக்காமலும் ஆடிக்கொண்டிருக்கும். வேலை நேரத்தில் அதைச் சுருட்டி ஒரு கயிற்றைப் போல மார்பின் குறுக்காகக் கட்டியிருப்பாள். இருபுறமும் திமிறிக் கொண்டிருக்கும் அவளது நெஞ்சைப் பார்த்து, அவள் நிமிரும் போது முகத்தை வேறெங்கோ திருப்பியபடி நிற்பவர்கள் தான் பெரும்பாலானவர்கள். எனக்கு அவளை அப்படிப் பார்க்கும் போதெல்லாம் வெட்டிசக்கி அம்மன் நினைவுதான் வரும். அகண்ட கண்களில் நிலை குத்திய பார்வை, வாயோரச் சிங்கப் பற்களுக்கிடையில் கடிபடும் பிண்டத்தின் ரத்தம் முலைகளில் வழிந்தபடியிருக்க, ஒரு கையில் முலை சப்பிக் கொண்டிருக்கும் பிள்ளையும் மறுகையில் தீச்சட்டியும் ஏந்தி நிற்பாள் வெட்டிசக்கி. அக்கா முகமும் கழுத்தும் வயிறும் கைகளும் என, இரத்தமும் தெறித்த சதைத் துணுக்குகளும் கொழுப்புத் திரிகளுமாக நிற்பாள். அவள் பின்னால் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வந்து அமைதியாக அவள் சொல்லாமலேயே விளக்குமாற்றை எடுத்துக் கடைக்கூரையின் உள்ளே தூத்துப் பெருக்க ஆரம்பித்து விடுவாள் தெய்வகன்னி. அக்காவின் பெண்பிள்ளை. என்னை விட ஒருசில வயது சிறியவளாக இருப்பாள். அவள் என் பள்ளிக்கூடத்தில் தான் படித்தாள். எல்லோரையும் நடத்துவது போலவொன்றும் அவளை யாரும் நடத்தவில்லை. அவளைச் சீண்டுவதும், கையைப் பிடித்து இழுப்பதும், அவள் திமிறிக்கொண்டு ஓடும்போது அக்காவின் பெயரை கெட்ட வார்த்தைகளோடு சேர்த்து விளிப்பதும். எல்லாம் பெரிய ஆண்மைக்காரர்கள்தான். ஆனால் அக்காவின் கடைமுன் வந்து நிற்கும்போது மட்டும் ஒருத்தனுக்கும் குரலிருக்காது.

“அரக்கிலோ, ஒரு கிலோ. ஒன்னரை,” அவ்வளவுதான் அங்கிருக்கும் பேச்சொலி. தெய்வகன்னி தூத்துப் பெருக்கி கடையின் முன் முற்றம் தெளித்து ஒரு சிறு கோலம் போட்ட பிறகு, வேம்போடு நின்று வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும் அக்கா மெல்ல நகருவாள். வெற்றிலைச் சாற்றை அங்குமிங்கும் காறித் துப்பியபடி சைக்கிளின் பின்னால் கட்டி வைத்திருக்கும் சாக்குச்சுருளைப் அவிழ்த்தெடுப்பாள். அவளது கத்திகளின் சத்தம் பற்களைக் கூசச் செய்யும். கையிடுக்கில் அச்சாக்குச் சுருளைச் சொருகியபடி வேண்டுமென்றே கால்களை அகலமாக எட்டெடுத்து வைத்துக் கடையை நோக்கி வருவாள்.

“கூய்வுள்ளயோ. அவனுக அம்மைக்க… தள்ளிப் போங்கல பொலாடிமவனுவளா.”
கடையின் பின்புறமாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் செல்லும் அக்கா சற்று நேரத்தில் அன்றைக்கான மாட்டை இழுத்துக்கொண்டு வந்து கடைக்கூரையின் உள்ளே செல்வாள். அம்மாட்டுடன் மிகப் பாசமாகப் பேசுவதுபோல ஏதோ முனகிக் கொண்டிருப்பாள். அக்காவின் கையசைவைக் கூர்ந்து கவனித்தபடி அசையாது நிற்பாள் தெய்வகன்னி. அக்காவின் கைவிரல் அசைவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தமிருக்கும் போல. அவற்றிற்கேற்றபடி அடுத்தடுத்த காரியங்களைச் செய்துமுடித்து தன் இடத்தில் போய் நிற்பாள் தெய்வகன்னி.

மாட்டின் நெற்றியில் தடவிக் கொடுத்தபடி பேசிக்கொண்டிருக்கும் அக்கா சரியாக ஐந்தரை மணியாகும் போது ஒற்றையடியில் அம்மாட்டைச் சரித்துக் கீழே வீழ்த்தி அதன் கழுத்தில் தன் ஒரு காலால் அழுத்தி நிற்பாள். மாட்டின் மூச்சுச் சத்தம் கிரீச்சிட்டபடி காற்றும் சீழுமாகத் தெறிக்கும். தன் இடுப்பைச் சுற்றியிருக்கும் இறுகிப்போய் இரும்பான கனத்த கொச்சங்கயிற்றை உருவி மாட்டின் முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டுவாள். மாடு அசைவற்று அவள் சொல்கேட்டுப் படுத்துக் கிடக்கும். பின்னிறங்கி பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டுவாள்.

தெய்வகன்னி அக்காவின் சாக்கை விரித்து வைப்பாள். எழுந்து வெடுவெடுவென தன் கசாப்புக் கத்தியை எடுத்து வெட்டுமரத்தின் கீழாகக் கிடக்கும் சாணைக்கல்லில் அழுத்தித் தீட்டுவாள் அக்கா. அதன் பொறி பறக்க, சுற்றியிருக்கும் அத்தனைக் கண்களும் மாட்டையும் அக்காவையும் மாறிமாறிப் பார்த்து நிற்கும். சில ஆண்கள் அங்கிருக்கப் பிடிக்காமல் விலகிச் செல்வதையும் கவனிக்க முடியும்.

அதன் பிறகு நடக்கும் காட்சிகள் அடிக்கடி என் கனவில் வந்து நான் மிரண்டு விழித்தெழுந்திருக்கிறேன். கசாப்புக் கத்தியை வெட்டுமரத்தின் மீது வைத்துவிட்டுத் தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கூரான ஒல்லிக் கத்தியை உருவுவாள் மாவிசக்கி அக்கா. அவளது முனகல் மீண்டும் ஆரம்பிக்கும். “தள்ளையோளி, அவனுக்க….” என்று கேட்கும் சத்தத்தோடு அக்கூரான கத்தி மயங்கிக் கிடக்கும் மாட்டின் குரல்வளையைக் கிழித்துச் சீறும் சத்தம் ஒன்று சேரும்போது எல்லோரும் முகங்களைத் திருப்பிக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்காவின் முகத்தில் அந்த கணத்தில் மாத்திரம் அப்படியொரு வெளிச்சம் வந்து மின்னும். பிறகு மிக நுணுக்கமாக, ஒரு கைக்குழந்தையை குளிப்பாட்ட முழங்காலில் படுக்கப்போடுவதைப் போல அம்மாட்டின் உடலைத் தன் கால்களின் இடையே கிடத்துவாள். தனக்குத்தானே புன்னகைத்தபடி வசைச் சொற்களைத் தெறிக்க விட்டபடி அதன் தோலுரித்து, பகுதி பகுதியாக வெட்டியெடுத்து கூரைக் கம்பில் தொங்கும் இரும்புக் கொக்கிகளில் தூக்கிச் சொருகுவாள். கடையைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் ஈக்களுக்கும் ஆட்களுக்கும் மத்தியில் யாருமற்றதைப் போல் நின்று கையசைத்து எவ்வளவு எனக் கேட்பாள். ஒவ்வொருவரும் தங்கள் கணக்குகளைச் சொல்ல, தெய்வகன்னி அதைத் திருப்பிச் சொல்ல, வெட்டுமரத்தின் மீது அவள் கைகள் நளினமாக இயங்கும். ஒவ்வொரு வெட்டின் போதும் தவறாமல், “தள்ளையோளி, அவனுக்க..” என்கிற சத்தம் கேட்கும்.

“இந்தாங்க அரக்கிலோ, இந்தாங்க ஒன்னரக் கிலோ,” என்று பயந்தபடிக் கூறுவாள் தெய்வகன்னி. தாமரை இலையில் பொதிந்த இறைச்சியை வாங்கியபடி மாவிசக்கி அக்காவைப் பார்த்து நிற்கும் ஆண்களின் முகம் பார்க்காது கை விரல்களைக் காட்டி விலை சொல்வாள் அக்கா.

ஒருநாள் வேறேதோ கடையில் இறைச்சி வாங்கி வந்தார் அப்பா. அதைக் கழுவக் கொண்டுபோன அம்மா எரிச்சலோடு திரும்பி வந்து, “மாவிசக்கி கட தொறக்கல்லியாப்பா? எதுக்கு வேறெங்கியாம் வாங்குகியோ? பேசாம வர வேண்டியதான? மனுசன் திங்காண்டாமா?” என்றாள்.

“கொஞ்சம் லேட்டா போய்ட்டேன்டீ. எல்லாத்தையும் வழிச்சிட்டு போய்ட்டானுவோ. இனி ராவே போயி கெடக்க வேண்டியதாம் போல!”

நான் இடையில் புகுந்து, “ஏம்மா, வேற கடைல வாங்குனா என்ன? எல்லாம் ஒரே எறச்சி தான?” என்று கேட்டேன்.

வேறேதோ சிந்தனையில் மூழ்கிப் போன அம்மா மீண்டு வந்து தனக்குத்தானே சொல்வதைப் போல, “தெக்க சன் செட் பாத்துட்டு நாட்டாமை கடைல ஏறுக வட நாட்டான்லாம் மட்டன், மட்டன்னு பிளேட்டு பிளேட்டா உள்ளத் தள்ளுகதெல்லாம் அவ கைபட்ட மாடாக்கும். எறச்சின்னா சும்மா இல்ல, அது ஒரு இது… பிச்சிப்பூ தோத்துப் போவும். அதுலயும் எளம் காளைய மட்டுந்தான் அவ வெட்டுவா. பின்ன, என்னெல்லாமோ கத உண்டுல்லா? அப்பிடி ஒருத்தியும் வேணும்.. ஆமா, ஆமா…” என்றவாறு மனமின்றி அந்த இறைச்சியை எடுத்துச் சென்றாள்.

மாவிசக்கி அக்கா கடையில் மட்டும்தான் பெண்கள் வந்து இறைச்சி வாங்குவதைப் பார்க்க முடியும். ஞாயிறு காலை பூசை முடிந்து போகும் வேதக்கார பெண்கள், சுகக்கேடான வீட்டு ஆண்களுக்கு சூப் வைக்க மாட்டு வால் வேண்டி நிற்கும் பெண்கள். அவர்களுக்குப் போடும்போது மட்டும் அள்ளியள்ளிப் போட்டு முகம்பார்த்துக் கொடுப்பாள் அக்கா.

கடை முடிந்ததும் சாக்கின் மீது குவியும் பணத்தைச் சுருட்டி எடுத்துத் தன் சைக்கிளின் பின்னால் கட்டிச்சொருகி, தெய்வகன்னியைத் தூக்கி அதன்மேல் இருத்திச் செல்வாள் மாவிசக்கி அக்கா.

அக்காவிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என ஏனென்று சொல்ல முடியாத ஆசை எனக்கு.

*

சித்திரை மாதக் கடைசிச் செவ்வாய். பத்து நாள் கொடைத் திருவிழாவின் உச்சம். உச்சி வெயிலேயே வந்து ஆலமரத்து மூட்டு ஆதிக்கோயிலைச் சுற்றிப் போர்வைகளையும் சாக்குகளையும் சேலைகளையும் விரித்து இடம்பிடித்துக் காவலுக்கு ஆள்மாற்றி ஆளிருக்கக் செய்து குடும்பம் குடும்பமாய் வந்தபடியிருக்கும். கல்லுப்பட்டி ராசாத்தியின் வில்லுப்பாட்டிலும், மேலாவூர் கணியான் ஆட்டக்காரக் குழுவின் அனல் பறக்கும் ஆட்டத்திலும் ஆதிக்கோவில் முதல் திருவாங்கூர் ராஜா கட்டியெழுப்பிய புதுக்கோவில் வரைக்கும் அதிர்ந்திருக்கும். மாலைக் கருக்கலில் வண்டி வண்டியாக வந்து குவியும் துளசியையும், பச்சையையும், பல வகைப் பூக்களையும் இடம் மாற்றி ஆதிக்கோவிலின் கருவறையின் முன் பத்தடி தூரத்தில் கம்பு கட்டிப் பிரித்து வைத்திருக்கும் குழியில் போட்டு நிறைப்பார்கள். இரவு எழும் நேரத்தில் அக்குழி நிறைந்து குன்றென எழும். ஒருபுறம் இருப்பவர்கள் மறுபுறம் பார்க்க முடியாமல் எழுந்து உயரும் அக்குன்று நள்ளிரவை நெருங்கும் நேரம் ஆதிக்கோவில் ஆலமரத்தின் முன்பகுதியில் நீண்டு செல்லும் பெருங்கிளையை உரசி நிற்கும்.

ஆலமரத்துக் கிளையெங்கும் நிறைவேறிய வேண்டுதல்களுக்காகக் கட்டித் தொங்கவிடப்பட்ட தொட்டில்கள், கண்ணாடி வளையல்கள், காகிதச் சுருள்கள்.

“எப்பிடிப்பா இவ்ளோ கூட்டம் வருகு?”

“அம்மைக்க சக்தி அப்பிடில்லா மக்ளே. துடி உள்ளவளாக்கும். சனங்கோ அம்மைக்கிட்ட உரிமையோட கேக்கும். அவ கண்டிப்பா தருவா, அதுக்கப் பொறவுதான் வந்து தொட்டிலும், பொம்மையும், வளையலும் எல்லாம் கட்டி விடுகது பாத்துக்கோ. இங்க மட்டுந்தான் கேட்டது கெடச்சப் பொறவு வந்து வேண்டுதல செய்யது. பின்ன, ஏதும் பஞ்சாயத்துன்னு வையி, அம்மைக்க முன்னாடி கூட்டிட்டு வந்து சத்தியம் பண்ணச் சொன்னாத் தீந்து. எப்பேர்ப்பட்ட எமகாதகனும் அம்மைக்க கால்ல விழுந்துதான் ஆகணும். ஒனக்க கால் முறிஞ்சி கெடந்தப்போ ஒரு வைத்தியம்மாரும் செரியாக்க முடியலல்லா? ஒங்கம்மக்காரி இங்க வந்து வெட்டிசக்கியம்மைக்கு நேந்து வெரதம் இருந்தா. நாப்பத்தியோரு நாளாக்கும். திடீர் திடீர்னு ஆட்டம் வந்து ஆடிருவா. நம்ம வீட்ல எல்லாருக்கும் பயம்தான். ஆனா, அம்மைக்குன்னு வரும்போ ஒரு சொல்லும் சொல்ல முடியாதுல்லா. அம்ம தான் ஒனக்கக் கால செரியாக்கி விட்டா. அவளுக்கத் திருநீறப் பூசிப் பூசித்தான் நீ எந்திச்சி நடந்த மக்ளே.”

“அம்மயும் சொல்லிருக்கா. பொறவு, இங்க போற வார வண்டியெல்லாம் கவுந்திரும்னு சொல்லுகால்லா? உண்மையாவா?”

“இவனுகளுக்கு வேற வேலயும் சோலியும் இல்ல, சலம்பிப் பயக்கோ. பின்ன, தப்புப் பண்ணவன் வாங்கித்தான ஆகணும் மக்ளே. சொல்லிச் சொல்லி என்ன கதயெல்லாமோ வந்துட்டு. பின்ன, ஊருக்குள்ள பயலுவளுக்க ஆட்டம் கண்ணு மண்ணு தெரியாம போகும்போல்லாம் ‘லேய், நான் இங்க தாம்ல இருக்கேன்னு’ ஒன்னு நடக்கும், அதுதான் கணக்கு. வலிலதான அம்மைக்க ஓர்ம வரும்.”

“அப்போ ஆலமரத்துலருந்து ரத்தம் வந்துன்னு சொன்னாங்கல்லா, அது?”

“ஆமா மக்களு. நூறு வருஷம் முன்னாடியா இருக்கும். நம்ம என்ன கண்டமாக்கும்? எனக்க அப்பா காலத்துலன்னு வையி. அப்போ வெள்ளக்காரனுவல்லா இருந்தானுவோ. இங்கன உள்ள ராசாவ திருவாங்கூர் ராசான்னு சொல்லுவோம். அவரும் ஒரு வெள்ளக்காரத் தொரையுமா சேந்து புத்தனாத்துக் கால்வாய பெருசாக்கி நீட்டலாம்னு பேசிருக்காங்கோ. செரி, மக்களுக்கு வெவசாயம் வேற செத்துக்கெடக்குன்னு எல்லாரும் சேந்து ஊரூரா வெட்டி மாத்திக் கால்வாய் நீண்டு வந்துருக்கு. இங்கன தாலியறுத்தான் சந்தைக்கப் பின்ன வந்து முட்டி நின்னிருக்கு. அப்போ நம்மூருக்கப் பேரு கள்ளிக்காடாக்கும். எங்கப் பாத்தாலும் கள்ளிச்செடியாத்தான் இருக்குமாம். மக்கள்லாம் கஞ்சிக்கு வழியில்லாம செத்துக்கிட்டிருக்காம். சந்தயத் தாண்டிப் போனா கள்ளிக்காட்டுக்குள போக ஒரே வழி ஆலமரத்துப் பாததான். ஆலமரத்த எடுக்காம எப்பிடிக் கால்வாய நீட்டதுன்னு நம்மூரு நாலு வீட்டுக்காராள கூப்பிட்டு பேசிருக்காரு ராசா. ஆனா, அவங்க எப்படி விடுவாங்க? அதுலயும் ஒரு மூத்த கெழவி இருந்தாளாம். அதான் நம்ம எறச்சிக்கட மாவிசக்கி இருக்கால்லா? அவளுக்க ஆச்சியோ, அவளுக்க அம்மையோ. அவளுக்க பேச்ச மீறி ஒன்னும் நடக்காதாம். ‘ராசா எவம்ல ராசா? எனக்க அம்மைக்க கால்ல வந்து விழச் சொல்லுங்கல, தண்ணி தானா வரும்னு’ சொல்லி விட்டாளாம்.”

“ஏம்பா, கால்வாய் வெட்டாம எப்பிடித் தண்ணி வரும்?”

“அது அப்பிடிதான் மக்ளே. அம்மைல்லா இருக்கா. நாலு வீட்டுக்காராளுக்க தெய்வமாட்டு தன்ன வந்து அறிவிச்ச சாமியாக்கும் வெட்டிசக்கியம்ம”

“அப்பிடின்னா?”

“நாலு வீட்டுக்காரா இந்த ஊருக்கு வந்த கதையெல்லாம் யாருக்குமே தெரியாது. என்னெல்லாமோ பேச்சு உண்டு. ஆனா, எசக்கியம்மய கும்புடுக மக்களாம். நம்ம ஆலமரத்தச் சுத்திதான அவுங்க இருந்தது. இப்பல்லா பெரிய பெரிய வீடெல்லாம் வந்தது. அப்போ ஒருநாளு சொல்லிவச்ச மாதி நாலு வீட்டுப் பொம்பளைக கனவுலயும் வந்து, அம்ம வந்துருக்கேம்மா, ஆலமரத்துக்குள்ள இருக்கேன்னு செவப்புச்சேல உடுத்தி கையில கைப்பிள்ளய வச்சிட்டு ஒரு உருவம் சொல்லிருக்கு. என்ன வந்து பாரு, தாகமா இருக்கு, தண்ணி கொண்டா, எனக்குப் படையல் வச்சி பூச பண்ணுன்னு கேட்டுருக்கு. ஓராளு ரெண்டு வேரு கனவுன்னா யோசிக்க மாட்டோம். நாலு வேருக்கு ஒரே மாதி கனவுன்னா சும்மாவா? ஆலமரத்தச் சுத்தி வந்து விழுந்து கும்புட்டு எசக்கியம்மய இருத்தி தேவயான பூசயெல்லாம் நடந்திருக்கு. அந்த மூத்த கெழவி ஆலமரத்த விட்டு நகரவே இல்லையாம். சித்திரச் செவ்வாய் பெரும் கொடை குடுத்தப் பொறவுதான் அவ வீட்டுக்கே போனாளாம். அம்மையே அவளுக்குள்ள ஏறங்கி இருந்துன்னு சொல்லுவாங்கோ.”

“அப்போ, ரத்தம் வந்தது?”

“ம்‌ம். ராசா கேக்க, இவுங்க, இல்ல ராசா, ஆல மூட்டுல இருக்கது எசக்கியாக்கும். மரத்தத் தொட முடியாதுன்னு சொல்லிருக்காங்கோ. ராசா மாந்த்ரீகம் போட ஆளுவள கூட்டிட்டு வந்து என்னான்னு பாக்கச் சொல்லிருக்காரு. ஒரு மூத்த மந்திரக்காரன், ‘ஏய் எசக்கி, இருக்கேன்னா சத்தங்காட்டு, இருக்கேன்னா சத்தங்காட்டு’ன்னு ஆலமரத்தச் சுத்தி கத்தியிருக்கான். அப்போ மரத்துக்கக் கெழக்கயிருந்து, ‘இருக்கேம் மக்களு, இருக்கேம் மக்களு, இருக்கேம் மக்களு’ன்னு மூனு தடவ சத்தம் வந்ததாட்டு கத. அப்போ, தொரமாருக்க ஆளுங்க எசக்கி இருக்கது கெழக்கதான், மரத்த வெட்டுங்கன்னு சிப்பாய்மாரு கிட்ட சொல்ல, அவனுவோ மரத்த வெட்ட ஆரம்பிச்சானுவளாம். ரெண்டு எறங்கு தான். மரத்துக்குள்ளருந்து செக்கச் செவேல்னு இரத்தமா வடிஞ்சாம் பாத்துக்கோ. நாலு வீட்டுக்காரால்லாம் தரையோடத் தரையா மயங்கிச் சரிஞ்சாங்களாம். கண்ணத் தொறந்து பாத்தா, மூத்த கெழவி மட்டும் மரத்து மூட்டுல அசையாம நின்னிருக்கா, மரத்து மேல கைய வச்ச சிப்பாயிமாரு கையும் காலும் வெட்டிவெட்டி இழுத்து இரத்தம் கக்கிச் சரிஞ்சு விழுந்து செத்துருக்கானுவோ. பொறவு ராசாவே நேரா வந்து அம்மைக்கி பெரிய கோயிலாக் கட்டித் தாரேம்னு வாக்குக் குடுத்தாராம். ராசா கெழவிக்கக் காலத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனதாவும் அதுக்கப் பொறவு ஜேஜேன்னு இருந்ததாவும் சொல்லுவா. பின்ன, புதுக்கோயில ரொம்ப வருஷம் கழிச்சிதான் கெட்டிருக்கானுவோ. பொறவு ஊரூரா கதை கதையா சொல்லிச் சொல்லி ஒரே மக்க கூட்டம் தான். செவ்வாயும் வெள்ளியும் அம்மையப் பாக்காம ஒரு சோலியும் நடக்காது, சுத்தி உள்ள எல்லா ஊருக்கும் அதுதான்.”

“அப்போ கால்வாய் என்னாச்சிப்பா?”

“அதா? இப்போ நம்ம சந்தைக்க பின்னாடியோடி நரிக்குளம் தாண்டிப் போகுல்லா? அந்தச் சானலுதான் அது. எசக்கியோடைன்னுதான் அப்போல்லாம் சொல்லது. ஆனா, அம்மைக்க அதிசயத்துக்குப் பொறவு கள்ளிக்காட்டுல எல்லாக் கள்ளியும் ஒன்னொன்னா கரிஞ்சி விழுந்தாம் பாத்துக்கோ. மழையும் ஊத்துமா ஊரெல்லாம் பச்சப்பசேல்னு ஆயிட்டாம். இன்னைக்கி வரைக்கும் ஊருக்குள்ள தண்ணிக்கி ஒரு சிக்கல் இல்லல்லா? பத்தடிக்கிப் போர் போட்டாலே தண்ணி வந்திரும்லா மக்களு. எல்லாம் அம்மைக்க காரியந்தான் பாத்துக்கோ.”

*

நாலு வீட்டுக்கார வம்சத்தில் பிறந்தவள் மாவிசக்கி. அழகில் தேவலோகப் பிறவி. பேச்சிலும் குணத்திலும் பாட்டியும் அம்மையும் சேர்ந்தவள். பருவமெய்தி பெருகி நின்ற மாவிசக்கியைப் போகும் வழியெல்லாம் மறித்து நின்றான் கொச்சங்காடன். வேட்டையாடுவதும் ஆடுமாடு வெட்டிப் பங்கு வைத்து விற்றுப் பிழைப்பதுமான குடும்ப வழி. அப்பாமாருக்குத் தெரிந்தால் குழி தோண்டிப் புதைத்து விடுவார்களென பயந்து அவன் பிழைத்துப் போகட்டுமென சமாளித்து வெட்டிசக்கியம்மையை நினைத்துக் கடந்து வந்தாள் மாவிசக்கி. நாட்களும் எண்ணமும் செல்லச்செல்ல பிஞ்சு நெஞ்சம் முரட்டுக்கைகளின் இறுக்கத்தில் இளகிப் போயிருக்கிறது. அவன் அதற்குத் தகுந்த பெரும் ஆணாக, வீரனாகத்தான் இருந்தான். நாலுவீட்டு அடுப்பங்கரைக்குள் உனக்கென்ன வேலை? உன்னைக் குதிரைமீது கூட்டிச் செல்கிறேன், என் வம்சத்துக்கு ராணியாக வாவென அழைத்திருக்கிறான். உன் வெட்டிசக்கி மேல் ஆணை. கண்ணுக்குள் ராசாத்தியாக வைத்துக் காப்பாற்றுவேன் வாவென்று கைபிடித்துக் கூப்பிட்டிருக்கிறான்.

விசயம் தெரிந்த அம்மாமாரெல்லாம் ஒற்றன்மாரை வைத்து மிரட்டியும், விரட்டியும் பார்த்திருக்கிறார்கள். தங்கள் பெண் மனம் என்ன நினைக்கிறதோவென பயந்து சோழி போட்டுப் பார்த்ததில் கொடுந்தீங்கு வரப்போவதாகத் தெரிய என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்திருந்திருக்கிறார்கள். விசாரித்ததில் வந்த சேதிகள் ஒன்றும் சரியில்லை. கொச்சங்காடன் பல பெண்களைப் பார்த்தவன். குடும்ப வழக்கமே அதுதான். நினைத்த ஊரில் சென்று மயக்கிக்கொண்டு வந்து தோப்பிலும் தொழுவங்களிலும் அடைத்து வைப்பான். மீறி எதிர்க்கும் பலதும் உரமாகிக் கிடக்கும். எதிர்க்கவும் ஆளில்லை. சிலர் பொன்னும் பொருளும் கொடுத்து மீட்டுக்கொண்டு கண்காணா தேசத்தில் மாற்றி விடுவதும் உண்டு.

ஆலமரத்துக் கரும்பல்லி மூன்று முறை கவுளியடித்த இரவில், நாலுவீட்டு ஆண்களுக்கு விசயம் தெரிய வருவதற்குள், கொச்சங்காடன் குதிரையேறிக் கிளம்பிவிட்டாள் மாவிசக்கி. ஓருயிராக இல்லாது மற்றோருயிர் தாங்கிச் சென்றாள். கொச்சங்காடன் திமிராகச் சிரித்தபடி ஊரெங்கும் பறையடித்துக் கூட்டிச் சென்றான். வெட்டிசக்கி கருவறை முன்னின்று குடும்பத்தில் எல்லா பெண்களும் காப்புக் கட்டி வேண்டினார்கள். பேத்தி திரும்பாமல் வீட்டிற்குள் நுழைவதில்லை என வெட்டிசக்கி கோயிலேயே காத்திருந்தாள் மூத்த கிழவி.

ராணியாகக் கூட்டி வந்தவன் பத்து நாட்களுக்கு ராணியாகத்தான் நடத்தினான். வயிற்றில் இருப்பதை நிச்சயமெனத் தெரிந்தவள் அதைக் கூறியபோது வாய்விட்டுச் சிரித்தவன், “வேணுமுன்னா வச்சுக்கோ, இல்லன்னா கிழிச்சுப் போடுட்டீ” என்று மிகவும் எளிதாகச் சொன்னான். உறுத்தலாகத் தெரிந்ததெல்லாம் உண்மையென அறிந்தவள் அங்கிருந்து எப்படித் தப்பவென்று யோசித்துக் கிடந்தாள். ராணி தொழுவத்தில் அடைந்து கிடக்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழுவத்தில் புகுந்தான் கொச்சங்காடன். மாவிசக்கியிடம் வந்த போதெல்லாம் அவளை விருப்பமின்றி சேர்ந்தான். மீறினால் கட்டிப்போட்டு உடலை வதைத்தான். தனக்கும் கருவுக்கும் தேவையான கஞ்சியின்றி மெலிந்து தள்ளிய வயிற்றுடன் வாடிக்கிடந்தாள் மாவிசக்கி. ஒவ்வொரு தொழுவத்திலிருந்தும் வந்த ஓலங்களுக்கிடையில் வெட்டிசக்கியம்மையை மனதில் இருத்தி வேண்டி அவளுக்கான நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

சித்திரைக் கடைசிச் செவ்வாய். நிறைமாத வயிற்றோடு அம்மையை நினைத்துக் கிடந்தாள் மாவிசக்கி. உளறிக்கொண்டே தொழுவத்திற்குள் வந்தவன் அவளது தலைமுடியைப் பிடித்திழுத்துத் தள்ளினான்.

“அன்னைக்கு கையப் பிடிச்சி இழுத்ததுக்கு என்னடீ செஞ்ச, கண்டாரோளி? காறித் துப்புகியாக்கும். இரிட்டீ இன்னா வாரேன். ஒனக்கு நம்ம யாருன்னு காட்டணும்லா?”
ஊர்க்காட்டில் தன்னை மறித்துக் கைபிடித்து இழுத்தபோது அவன் முகத்தில் காறித் துப்பி, “உயிரோட ஊரு போகணும்னா ஓடிப்போயிரு நாயே, எனக்க அப்பம்மாருக்குத் தெரிஞ்சா கொள்ளிக்குத் தேற மாட்ட, பாத்துக்கோ,” என்று சொன்னது மாவிசக்கியின் நினைவுக்கு வந்தது. ‘அடச்சண்டாளா, இத்தன நாளும் அத மனசுல வச்சிட்டு எனக்க மனசக் கெடுத்துட்டியே? பாவி மனுசா, நீ நெசமாத்தான் பாசம் வச்சிருக்கேன்னு நம்பில்லா ஒங்கூட ஓடிவந்தேன். இப்பிடி என்ன நாசமாக்கிட்டியே, நீ நாசாமாப் போவ. எனக்க வெட்டிசக்கி ஒன்னச் சும்மா விடமாட்டா பாத்துக்கோ’

சென்றவன், இடுப்பைச் சுற்றிலும் செஞ்சிவப்பு நிறத்தில் இறுகிப் போயிருந்த கொச்சங்கயிற்றைச் சுற்றிவந்து நின்றான். அதை அவிழ்த்து அவளருகே நெருங்கி, “எச்சித் துப்புன நாய, வா, வா. ஒனக்க பிள்ளைக்கும் சேத்துத் தாரம்ட்டீ.. வா..” என்றான். பாதி போதம் கூட இல்லை. மேலே விழுந்து விடாமல் தன் வயிற்றைப் பொத்தியபடி அங்குமிங்கும் அசைந்தாள் மாவிசக்கி. அவள் முகத்தில் ஓங்கி அறைந்தவன், தன் ஒரு காலால் அவளது கழுத்தை மிதித்தபடி அந்தக் கொச்சங்கயிற்றால் அவளது கைகளைக் கட்டினான். கீழிறங்கி அவளது வலக்காலைப் பிடித்து ஒருபக்கத் தொழுவக் கம்பில் கட்டினான். இடக்காலை மறுபுறம் விரித்திழுத்து மற்றொரு கம்பில் கட்டினான். மாவிசக்கி அரை மயக்கத்தில் அம்மையின் பெயரை முனகிக் கொண்டிருந்தாள்.
வெளியே சென்றவன் இன்னும் குடித்துத் தள்ளாடிக்கொண்டு திரும்பி வந்தான். தன் கையிலிருந்த சாராயத்தை மாவிசக்கியின் மீது காறித் துப்பியபடி ஊற்றினான். வசைச் சொற்களைக் கத்தியபடித் தன் ஆடைகளைக் களைந்தவன் தன் மணிக்கட்டில் சுற்றி வைத்திருந்த கொச்சங்கயிற்றை அவிழ்த்தான். அவளைப் பார்த்து வெறிகொண்டு கத்தியபடி அந்தக் கொச்சங்கயிற்றால் தன் ஆண்குறி முழுவதையும் சுற்றிக் கட்டினான்.

*

“மக்ளே, அம்மா கூடவே இரி, வெளிய போப்படாது என்னா? ராப்பூச முடிஞ்சி நானே வாரேன், செரியா?” என்று சொல்லிவிட்டு புதுக்கோயிலை நோக்கிச் சென்றார் அப்பா.
நேரம் நள்ளிரவு. ஆதிக்கோயிலைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் தங்கள் சேலைகளால் தலையோடு சேர்த்து வாய் மூடி அமர்ந்திருந்தனர். குழந்தைகள் பயத்தோடும் ஆர்வத்தோடும் அம்மாக்களின் முகங்களையும் ஆலமரத்து மூட்டையும் பார்த்தவண்ணம் இருந்தனர். தொண்ணூறைக் கடந்த குடி மூத்தோரான பூசாரியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் அவரது புதல்வர்கள் இருவரும். மூவரும் சிவப்புத் துணியால் வாய்மூடிக் கட்டி ஆதிக்கோயில் கருவறை வாசலில் நின்றனர்.

வில்லுப்பாட்டு உச்சத்தை அடைய கூட்டத்தில் ஆங்காங்கே அலறல் சத்தமும் ஊளையும். இளம் பூசகர் இருவரும் கைகட்டி வெளிநிற்க மூத்தோர் கருவறை நடையில் விழுந்து தரையோடு நெஞ்சுதொட்டு வணங்கிக் கண்ணீர் கொப்பளிக்க எழுந்து உள்ளே சென்றார். உள்ளிருந்து நடைவாசல் பூட்டப்பட்டது. கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு எழுந்தது. பெண்கள் பலரும் கண்ணீர் பெருக, ‘எனக்க அம்மா, தாயே.. வெட்டிசக்கியம்மா..’ என்று கதறினர். குன்றென நின்ற மலர்க்குவியலின் முன்பாக ஒரு மரப்பீடத்தில் உட்கார்ந்திருந்தாள் மாவிசக்கி அக்கா. அருகே அவளது தொடை மீது கைவைத்துக் கண்மூடி இருந்தாள் தெய்வகன்னி.

மணி பன்னிரண்டை நெருங்க, கூட்டத்தை விலக்கிக்கொண்டு மேளக்காரர்கள் உள்ளே நுழைந்து மெதுவாக அம்மன் விளி வாசிக்க ஆரம்பித்தனர். மேளச் சத்தமும் கூட்டத்தின் அழுகைக் கூக்குரல்களும் சேர்ந்து மொத்த ஆலமரக் கூட்டமும் ஆடிக்கொண்டிருந்தது. புதுக்கோயிலின் வாசல் திறக்கப்பட்டு அங்கிருந்து ஆலமரத்து ஆதிக்கோயில் நடை வரை மக்கள் கூட்டத்தின் நடுவே ஒற்றையடிப் பாதை போல வழி உருவாக்கப்பட்டது. அப்பாதையின் கரையில் உட்கார ஒருவர்மீது ஒருவர் ஏறி விழுந்து அடித்துக் கொண்டனர். மேளச்சத்தம் மெல்ல மெல்ல உச்சத்தை நெருங்க, நாதஸ்வரத்தின் ஒலி ஆலமர விழுதுகளைக் கட்டிக் கோர்த்து ஊஞ்சலாட்டியது. வெளியிருந்த பூசகர் இருவரும் கீழ்விழுந்து வணங்கிப் பின்னகர்ந்து மலர்க்குன்றின் முன்னிருந்த மாவிசக்கி அக்காவின் அருகே வந்து வணங்கி நின்றனர். மெல்லிய புன்னகை வடிய தெய்வகன்னியை எழுந்திருக்கச் செய்து எழுந்து, அம்மலர்க் குன்றிலிருந்து ஒரு கையளவு பூக்களை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்திப் பிடித்தாள் மாவிசக்கி அக்கா. அவள் பார்வை ஆதிக்கோயில் கருவறையைத் துளைத்து உள்ளே சென்றது. கண்கள் அகல புன்னகை விரிய வாய்விட்டுச் சிரித்தபடி முன்னகர்ந்தாள். மக்கள் கூட்டமெங்கும் குலவையொலி. கருவறை நடையின் முன் நின்று வணங்கி தன் கையசைத்து வாவென அழைத்தாள் மாவிசக்கி அக்கா.

சட்டெனக் கருவறைக் கதவு திறக்கவும், உள்ளிருந்து வெளிவந்த மூத்தோர் சிவப்புத் துணியொன்றால் மூடிமறைத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்த ஓர் உருவப் பிண்டத்தைத் தொட்டு வணங்கித் தன் கையிலிருந்த பூக்களைத் தூவினாள் அக்கா. மக்கள் எல்லோரும் தலையிலும் முகத்திலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினர். இளம் பூசகர் இருவரும் மூத்தோரைக் கைத்தாங்கலாத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். மக்கள் குலவையொலி எழுப்பி ‘அம்மா, அம்மா’வெனக் கத்திக் கொண்டிருந்தனர். ஓடிய மூவரும் புதுக்கோவில் கருவறைக்குள் சென்று சிவப்புத்துணிப் பிண்டத்தை வைத்து தீபாராதனை காட்டிவிட்டுப் பின் மீண்டும் அதை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து ஓடி வந்தனர். அவர்கள் கடந்து வந்த பாதை மணலை எடுத்துத் தங்கள் நெற்றியிலும் முகத்திலும் மார்பிலுமாகப் பூசினர் மக்கள். ஓடிவந்த மூத்தோர் நேராக ஆதிக்கோவில் கருவறைக்குள் சென்று அம்மையை வீடு சேர்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியே வந்தார். மேளமும் நாதமும் மக்களின் ஓலமும் எல்லாம் உச்சம் தொட்டு விழ, அப்படியே மயங்கிச் சரிந்தார் மூத்தோர். செம்புக் குடத்து நீரை அவர்மீது விட்டு எழுப்பி அழைத்துச் சென்றனர் இளம் பூசகர். தெய்வகன்னியின் கையைப் பிடித்து மெல்ல நடக்க ஆரம்பித்தாள் மாவிசக்கி அக்கா.

*

தப்பிப் பிழைத்துப் பிறந்த தெய்வகன்னி அம்மையை கைவிட்டாகலாது வளர்ந்து காலெடுத்து வைத்து நடந்தாள். தொழுவத்து வாசமும் அம்மையின் நெஞ்சுப்பால் வாசமும் தவிர உலகென்றேதும் அறியாது வளர்ந்த அவளுக்கு வெட்டிசக்கியம்மையின் கதைசொல்லித் தூங்கவைப்பாள் மாவிசக்கி. உள்ளுக்குள் உறைந்திருந்த வன்மம் பெரும் அனல் கொண்டெழுந்து இரைகொள்ளும் நாளுக்காகக் காத்திருந்தாள். கொச்சங்காடன் தொழுவங்கள் பெருக மாட்டிறைச்சி வீச்சத்தில் பணமும் பொருளும் திரண்டு வர குதிரை மீது ராஜாவாக வலம் வந்தான்.

நாற்பத்தோரு நாட்களில் சித்திரைக் கடைசிச் செவ்வாய். ஆதிக்கோவிலிலிருந்து பிடி மண்ணும் சிவப்புக்கயிறும் ஒளித்து வரவைத்துக் காப்புக்கட்டி, இருமுறை குளித்து இருமுறை உண்டு, நாளெல்லாம் வெட்டிசக்கியை நினைத்து விரதமிருந்தாள் மாவிசக்கி. தொழுவம் தொட்டு தொழுவமாக ஒவ்வொரு பெண்ணையும் வெட்டிசக்கிக் கோயில் கொடைக்குச் செல்ல மனம் மாற்றினாள். தன் மொத்தக் குடியும் வெட்டிசக்கிக்கு விரதமிருப்பதை அறியாமலேயே போதையேறிக் கிடந்தான் கொச்சங்காடன். தன் குடிலில் மூடியிருந்த குழியை அவ்வப்போது திறந்து எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டாள் மாவிசக்கி.

சித்திரைச் செவ்வாய். சுற்றியுள்ள எல்லா ஊர்சனமும் திரண்டுவந்து ஆதிக்கோயிலைச் சுற்றி அலையடித்து நின்றது. கொச்சங்காடனின் பெண்களும் பிள்ளைகளும் அத்தனையும் ஒளிந்து வண்டிகட்டி அம்மையைத் தேடி வந்தனர். குன்றென நின்ற மலர்க் குவியலின் முன் மரப்பீடத்தில் உட்கார்ந்து தன் மகளின் வருகைக்காக வேண்டியழுதாள் மாவிசக்கியைப் பெற்றவள். ஆலமரத்து மூத்த கிழவி பேத்தியின் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல காத்துக் கிடந்தாள். கொச்சங்காடனும் கூட்டுக்காரர்களும் போதையின் உச்சத்தில் தொழுவத்து வாசல்களில் விழுந்து கிடந்தனர். நள்ளிரவு. தொழுவத்து உள்ளிருந்த குழியைத் தோண்டி மறைத்து வைத்தவற்றை வெளியே எடுத்துப் போட்டாள் மாவிசக்கி. தெய்வகன்னியைச் சேலையோடு சுற்றித் தன் மார்போடு சேர்த்துக் கட்டினாள். தொழுவத்து வாசலில் முனகிக் கிடந்த கொச்சங்காடனின் காதருகே குனிந்து, “நாலு வீட்டுக்கார ராணி வந்துருக்கேண்டா, வெட்டியம்மைக்க மவ வந்திருக்கேன். எந்திரி,” என்றாள்.

கொச்சங்காடன் அசைவற்று மல்லாந்து கிடந்தான். அவன் தலைமுடியைப் பற்றியிழுத்து தரையோடு இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள் மாவிசக்கி. தன் இடுப்பைச் சுற்றியிருந்த செஞ்சிவப்புக் கொச்சங்கயிற்றை அவிழ்த்தாள். போதமற்றுக் கிடந்த கொச்சங்காடன் மீது அருகிருந்த குடத்துத் தண்ணீரை ஊற்றிக் கொட்டினாள். அவன் ஆடையைக் கிழித்தெறிந்தாள். மெல்ல அசைந்து ஏதோ முனகிக் கிடந்தான் கொச்சங்காடன். அவனருகே வெட்டிசக்கியம்மையை நினைத்துக் கண்மூடி நின்றாள் மாவிசக்கி.

ஆதிக்கோயிலில் மக்கள் கூட்டம் ஓலமிட்டு அழ, மாவிசக்கியைப் பெற்றவள் கருவறை நோக்கி நடந்தாள். வெட்டிசக்கியை வெளியே வரவழைக்கும் நேரம் வந்தது. தொழுவத்து இருளில் அகலக்கண் திறந்து கொச்சங்காடனைப் பார்த்த மாவிசக்கி அவன் கண் திறந்ததைக் கவனித்தாள். பயந்து நடுங்கிய கண்கள். “தள்ளையோளி, அவனுக்க….” என்றபடிப் பாய்ந்து தன் இடக்காலால் அவனது கழுத்தில் மிதித்தேறி நின்றாள். கொச்சங்கயிற்றைக் கொண்டு அவனது கைகளை உடலோடு சேர்த்துக் கட்டினாள். தெய்வகன்னி விழித்து, ‘அம்மா, அம்மா’ என்றழ, “ஒன்னுமில்ல ராசாத்தி, அம்ம இருக்கேன். ஒறங்கு, ஒறங்கு, வாவோ, வாவாவோ..” என்று தாலாட்டு பாடியபடி தன் இடமுலையைத் திறந்து கொடுத்தாள். மெல்லக் கீழிறங்கி கொச்சங்காடனின் கால்களை சேர்த்துக் கட்டினாள். முனகிக் கொண்டிருந்தவன் இப்போது திமிறிக் கொண்டிருந்தான்.

“யாருல கண்டாரோளி? இன்னா வாரம்ல..” என்று சொல்லி அவனது மாடு வெட்டும் கூரையை நோக்கி ஓடினாள் மாவிசக்கி.

சுருட்டி வைத்த சாக்கைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தவள், “தள்ளையோளி, கண்டாரோளி….” என்று கத்திக்கொண்டே உள்ளிருந்து கூரான கத்தியொன்றை உருவினாள். கொச்சங்காடனின் கண்கள் மிரள, தொண்டையிலிருந்து காற்றும் குரலுமாகக் கிரீச்சிட அங்குமிங்கும் உருண்டான். அவனைத் தன் காலால் உந்தித் தள்ளி மல்லாக்கக் கிடத்தினாள்.

“எனக்கம்மோ, எம்மோ, தண்ணி, தண்ணி,” என முனகினான் கொச்சங்காடன்.
மெல்ல நிதானமாக அவனது மேலாக இருபுறமும் தன் கால்களை விரித்து நின்றாள் மாவிசக்கி.

“தண்ணி வேணுமா தண்ணி? ஒனக்கான கடைசித் தண்ணியக் குடில பொட்டப்பயல… பொட்டப்பயல..” என்றவள் ஏதோ யோசித்தவளாய் கத்தியைத் தன் வாயில் கடித்தபடி, தன் மணிக்கட்டில் சுற்றி வைத்திருந்த மற்றொரு கொச்சங்கயிற்றை உருவினாள். உயிரை வெளித்தள்ள விடைத்துக் கொண்டு நின்ற அவனது ஆண்குறியை முழுதாக அக்கொச்சங்கயிற்றால் இறுக்கிக் கட்டினாள். பலம்கொண்டு இழுத்தாள். அவனுள்ளிருந்த மொத்த சத்தமும் தெறித்து சிதைந்து வெளிவந்து ஓயும்வரை இழுத்துக் கொண்டேயிருந்தாள்.

அசைவற்றுக் கிடந்த கொச்சங்காடனின் முகத்தைச் சற்றுநேரம் கூர்ந்து பார்த்தபடி நின்றாள் மாவிசக்கி. அப்படியே அவன் நெஞ்சில் உட்கார்ந்து தலைமுடியைப் பிடித்துத் தூக்கி இழுத்துத் தன்னோடு சேர்த்துக்கொண்டு வாயிலிருந்த கத்தியை எடுத்தாள். மூர்க்கமாக ஓலமிட்டபடி இடம் வலமாக ஆடிக்கொண்டே இருந்தாள்.

*

மீண்டுமொரு சித்திரைக் கொடை விழா முடிந்திருந்தது. அந்த ஞாயிற்றுக் கிழமையும் முதலாக எழுந்தோடி மாவிசக்கி அக்காக் கடையின் வேப்பமூட்டில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தேன் நான். அக்காவிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும். தெய்வகன்னியிடமாவது…


சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பாக “சப்தாவர்ணம்” நூலும் அண்மையில் வெளியானது.

இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”…

மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com