Home Blog Page 35

அம்பரம் – நூல் பார்வை

0

கணேஷ்பாபு

“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல் முதன்மையாக ஆடையைக் குறிப்பதாகும். “பீதாம்பரம்” (பொன்னாடை அல்லது பட்டாடை), “திகம்பரர்” (திசைகளை ஆடையாகக் கொண்ட துறவிகள்) போன்ற சொற்களை இங்கு நினைவு கூரலாம். “அம்பரம்” என்ற சொல் வானத்தையும் குறிக்கும். அதே பாசுரத்தில் “அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த” என்ற வரியில் அம்பரம் என்பது ‘வானம்’ என்ற பொருளில் வருகிறது. “அம்பரம்” என்ற சொல்லுக்கு ‘கடல்’ என்ற பொருளும் உண்டு. என் மனம் கவர்ந்த கவியன்னை ஆண்டாள் பயன்படுத்திய சொல் என்பதால் இந்த நாவலின் தலைப்பைக் கண்டதுமே நாவலுக்குள் மூழ்கிவிட்டேன்.

பொதுவாகச் சிங்கைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் படைப்புகளில் சொந்த ஊர் அல்லது சிங்கப்பூர் சார்ந்த கதைக்கருக்களைப் பிரதானமாக தேர்வு செய்து எழுதுவது வழக்கம். ஆனால், ரமா சுரேஷ் தன்னுடைய முதல் நாவலிலேயே இந்த வழக்கத்தை உடைத்துப் போட்டிருக்கிறார். தமிழகத்துக்கோ சிங்கப்பூருக்கோ முற்றிலும் அயலான பர்மாவைத் தனது கதைக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கதைநாயகனும் நாயகியும் பர்மாவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள். இஸ்லாமியர்கள். ஆக, தனக்கு முற்றிலும் அந்நியமான பர்மிய வாழ்க்கை, அதன் கலாசாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள். கூடுதலாக, இஸ்லாமியக் கலாசாரப் பண்பாட்டுக் கூறுகள். இவையிரண்டின் ஊடாட்டம். கூடவே, பௌத்த சமய நம்பிக்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், மட்டுமல்லாமல் நாவல் நடக்கும் காலம் என்பது இரண்டாம் உலகப் போர் நடந்த காலம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முந்தைய பர்மா மற்றும் சிங்கப்பூரின் வரலாறு, பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்குள் துல்லியமாகக் கொண்டு வந்து கலைத்தன்மைக்குப் பங்கமேற்படாமல் கதை சொல்வது என்ற சவாலை வெற்றிகரமாகச் சந்தித்திருக்கிறார் ஆசிரியர்.

அம்பரம் நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது எனலாம். முதல் பாகம் முழுவதும் பர்மாவில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது. இரண்டாம் பாகம் சிங்கப்பூர் நிகழ்வுகளைச் சொல்வது. முதல் பாகம் பசுமையும் ஈரமும் கொண்ட அடர்காடு என்றால் இரண்டாம் பாகம் அனலும் வெம்மையும் கண்ணீரின் உப்பும் கொண்டது எனலாம்.

யூசுப் என்ற குத்துச்சண்டைக்காரனின் வாழ்க்கையைச் சொல்கிறது என்ற ஒருவரியில் நாவலைச் சுருக்கிவிட முடியாது. ஒரு வாழ்க்கையைச் சொன்னாலும் நாவல் அந்த ஒரு வாழ்வினூடாக பல்வேறு நிலவெளிகளை, வரலாற்றை, துயரக் காட்சிகளை சொல்லிச் செல்கிறது. இழந்துகொண்டே இருக்கும் ஒரு மனிதனின் கதை மட்டும் அல்ல, இழந்துகொண்டே இருக்கும் பல மனிதர்களின் கதைத்தொகுதி இது. “மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன. துயரப்படும் குடும்பங்கள் யாவும் அதனதன் வழியில் துயருறுகின்றன” என்ற டால்ஸ்டாயின் வரிதான் இந்த நாவலை வாசிக்கையில் நினைவில் எழுகின்றது.

விதி என்ற சூதாட்டப் பலகையின் முன் தம் கைப்பொருட்கள் ஒவ்வொன்றாகப் பணயம் வைத்து யாவற்றையும் இழக்கும் மனிதர்கள் நாவல் நெடுக வந்துகொண்டிருக்கிறார்கள். யூசுப் இழக்காதது என்று எதுவுமில்லை. தாய் தந்தையரை சிறுவயதில் இழக்கிறான், அதன்பின் தன் உயிர் நண்பனை இழக்கிறான், வளர்ப்புத் தந்தை, தன் குத்துச்சண்டைக் கனவுகள், தன் குழந்தை, இறுதியில் தன் மனைவி என யாவற்றையும் இழந்துகொண்டே இருக்கிறான். இழப்பின் சுமைகளால் அவனது வாழ்வுத் தராசின் ஒரு பக்கம் தாழ்ந்தபடியேதான் இருக்கிறது. தராசின் மறுதட்டில் வைப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்ற நிலையில் வாழ்வை வெறுத்து பயணம் கிளம்பி விடுகிறான்.
சொந்த வீட்டையும் உறவையும் நாட்டையும் இழந்து வந்த மனிதர்கள் திசைகள் தோறும் தவித்தலையும் சித்திரம் நாவலின் பக்கங்களெங்கும் நிரம்பியிருக்கின்றன. எனில், வெறும் இழப்புகளின் கூட்டுத்தொகைதான் நாவலாக வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். இந்த நாவல் எந்த அளவிற்கு இழப்பைப் பேசுகிறதோ அதே அளவிற்கு அன்பையும் பேசுகிறது.

எத்தகைய துயரம் வாழ்வைப் பிளந்துபோட்டாலும் அன்பும் ஆதரவும் செலுத்துவதற்கு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தாயை இழந்த யூசுப்பை ஓர் இந்துக் குடும்பம் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கிறது. அந்தக் குடும்பத்தின் சொந்தக் குழந்தையாகவே மாறிவிடுகிறான் யூசுப். அடைக்கும் தாழ் என்ற ஒன்றில்லாத கட்டற்ற அன்பைப் பெறுகிறான் யூசுப். இந்த நாவலில் இழப்புக்கு இணையாகவே அன்பும் நட்பும் விரிந்து பெருகுகின்றன.
சிவராமன், ஆஸிப் இவர்களது நட்பு, யூசுப், சிட்போ இருவரது நட்பு, யூசுப், பாஷிர் நட்பு என நட்பின் கதைகள் நாவலில் தொடர்ந்து வந்தபடியே உள்ளன. நண்பர்கள் இல்லாத எவரும் இந்த நாவலில் இல்லை என்று சொல்லுமளவு நட்பின் முக்கியத்துவத்தை நாவலின் பக்கங்கள் தாங்கியபடி இருக்கின்றன. காசில்லாதவன் என்று ஒருவன் இருக்கலாம், நண்பர்கள் இல்லாதவன் என்று எவனாவது இருக்கிறானா? அப்படி ஒருவன் இருந்தால் உலகிலேயே அவன்தான் மிக வறியவன் என்ற புரிதலை நாவல் அளிக்கிறது. இழப்பும், வலிகளும் ஏற்படும்போதெல்லாம் ஒருவனைத் தாங்குவதற்கு நண்பர்கள்தான் புறப்பட்டு வருகிறார்கள்.

யூசுப்புக்கும் சிட்பொவுக்குமான நட்பு மிகவும் ஆத்மார்த்தமானது. சிட்பொவுக்கு ஏற்படும் முடிவு மனம் பதைக்கச் செய்வது. ஆனால் அதன்பின் யூசுப்பின் இருண்ட மனநிலையை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர். அவர்கள் இருவரும் அடிக்கடி நடந்து திரியும் சாலைக்கு செல்கிறான் யூசுப். சாலை முழுவதும் மறைந்த நண்பன் சிட்பொவின் கால் தடங்கள் பதிந்திருப்பதை அவனால் உணர முடிகிறது. காலம் மெல்ல ஓடி மறைகிறது. தன்னுடைய மகனுக்கு நண்பனுடைய பெயரை இட்டு அவன் நினைவைத் தொடர்கிறான் யூசுப்.

பெண்கள்தான் நாவலின் இதயமாக இருக்கிறார்கள் எனலாம். ஆணின் துயரத்திற்கும் பெண்ணின் துயரத்திற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்? ஆண் துயரத்தில் மூழ்கிவிட்டால் அவனுக்கு மீளும் வழி தெரிவதில்லை. எல்லாத் திசையும் அவனுக்கு இருண்டுவிடுகிறது. ஆனால், ஆணைக் காட்டிலும் அதிகத் துன்பமிருந்தாலும் பெண்கள் சட்டென அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் வெளியேறும் புள்ளி புலப்பட்டுவிடுகிறது. தான் மட்டுமல்லாது குடும்பத்தையே அதன்மூலம் தூக்கி நிறுத்திவிடுகிறார்கள். பிரிந்து போன கணவனை நம்பிக்கையுடன் தேடிச்செல்லும் யூசுப்பின் அம்மா விபத்தில் இறக்கும் தருணத்திலும் மகனுக்கு ஓர் அடைக்கலம் பெற்றுத் தருவது, தந்தைக்குப் பிடிக்குமே என்று பிறந்து வளர்ந்த பர்மாவை விட்டு தந்தையின் தங்கை மகனைத் திருமணம் செய்யத் தமிழகம் வந்து அடிமை வாழ்வு வாழும் காமாச்சி, உன் நிழலில்தான் என்னுடைய வாழ்வின் எல்லாமும் நிகழ வேண்டும் என்று யூசுப்பிடம் சொல்லி கடைசி வரை நிழலாய் அவனுடன் வாழும் காஸியா, சிங்கப்பூரில் அவர்களுக்கு அடைக்கலம் தரும் நேனெக் என நாவல் முழுக்க பெண்களே நம்பிக்கையின் சின்னங்களாக வலம் வருகிறார்கள்.

நாவலில் நிலம் சார்ந்த வரலாற்றுப் பண்பாட்டுக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது நாவலை உள்வாங்குவதற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, பர்மாவின் நிலவியல்: மேல் பர்மா, கீழ் பர்மா, மேல் பர்மாவில் கிளைக்கும் ஐராவதி நதி, கீழ் பர்மாவில் பாயும் ரங்கூன் நதி என ஆங்காங்கே நிலவியல் குறிப்புகள். இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மா இருந்தது, அதன் பின் பர்மாவில் தோன்றிய சுதந்திரப் போராட்ட எழுச்சி, அரசியல் கிளர்ச்சிகள், கீழ் பர்மாவில் இருந்த சதுப்பு நிலங்களை விளைச்சல் நிலமாக்க வெள்ளையர் திட்டமிட்டது, அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பஞ்சத்தில் திண்டாடிய மக்கள் கூலி உழைப்பாளிகளாக பர்மாவுக்கு இடம்மாறியது என்று வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. ரங்கூனின் மையத்தில் உள்ள ஸ்வேடகன் பகோடா பற்றிய குறிப்புகளும் துல்லியமாக உள்ளன, அதன் கட்டுமான அமைப்பும், அதனைச் சார்ந்த நம்பிக்கைகள், பௌத்த சமயத்தினரின் வழிபாடுகள், ஷின்பியு போன்ற சடங்குகள் என விரிந்த சித்திரங்கள் நாவலில் உள்ளன.

பண்பாட்டுச் செய்திகளில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால் இந்நாவலில் உள்ள பண்பாட்டுக் குறிப்புகளை விரும்பி வாசித்தேன். உதாரணமாக, பர்மாவில் வாழும் தமிழ்ச் செட்டியார்கள் பர்மியப் பெண்களை மணம் செய்திருந்தாலும், அவர்களின் கலாசாரம் ஒன்றிணையவில்லை என்பது ஆர்வமூட்டும் செய்தி. அந்த ஆண்களில் பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள், வழிபாடு, பூஜை போன்ற சடங்குகளிலும் அப்பெண்களை ஈடுபடுத்த மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் ஐந்து, ஆறு என பெற்றுத் தள்ளுகிறார்கள். எனில், அப்பெண்களை வெறும் பாலியல் கருவிகளாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையறிந்தும் அப்பெண்கள் இந்த ஆண்களுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியிருப்பதன் நிர்ப்பந்தம் என்ன என்று யோசிக்கையில் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. பர்மியர்கள் சாப்பிடும் ஙப்பி மீன் செய்முறையை யூசுப் விளக்கும் இடம் சுவாரஸ்யமானது. ஙப்பி மீனை என்னால் ஒருபோதும் சாப்பிட முடியாது என்ற போதும், அதன் செய்முறையை வாசிப்பது விருப்பமானதாகத்தான் இருக்கிறது.

நாவலின் இரண்டாம் பாகமான சிங்கப்பூர் கதையிலும் இத்தகைய பண்பாட்டுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, மக்கள் மனதில் நிலவும் பேய் பற்றிய நம்பிக்கைகள். மரத்தை வெட்டாமல் மரத்திலுள்ள ஆவிகளை சமாதானப்படுத்துவதற்காக நடத்தப்படும் பூஜைகள் நாவலில் இடம்பெறுகின்றன. இங்கே மூட நம்பிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்த மனம் வரவில்லை. பண்பாட்டு செய்திகளையெல்லாம் மூட நம்பிக்கை என்று உடனடியாக நிராகரித்துவிடாமல், அதன் பின்னுள்ள மனித மனதின் உளவியலைப் புரிந்து கொள்ள முயல்வதே வாசிப்பை பலப்படுத்தும். சிங்கப்பூரில் இன்றளவும் நிலவும் பேய்கள் குறித்த பயமும் அது சார்ந்த சடங்குகளும் இன்று நேற்றல்ல, நூறாண்டுகளாய் இச்சமூகத்தில் நிலவி வருபவை என்று இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது.

இன்றும் ஜுரோங் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை “பேய் பிளாண்ட்” என்றே அழைக்கப்படுகிறது. அங்கு வேலைக்குச் சென்றவர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். பிறருக்கு எப்படியோ, எழுத்தாளர்களுக்கு இக்கதைகள் யாவும் அமுத சுரபிகள்.

நாவலில் வாழ்வு சார்ந்த அனுபவங்களின் மூலம் சில நடைமுறைத் தத்துவங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. இவை யாவுமே கதைப்போக்கில் வைத்து வாசிக்கும்போது மிகுந்த எடை கொண்டவையாக மாறிவிடுகின்றன. சாதாரணமாக நாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளியேற்றிவிடும் நடைமுறை அறிவுரைகள் கூட அனுபவங்களின் மூலம் அறிந்து கொள்ள நேரும்போது மிகுந்த வெளிச்சம் பெற்றுவிடுகின்றன.

சில உதாரணங்கள் இவை:

செடியை எங்கு எப்படி நட்டு வைத்தாலும் சூரியனை நோக்கித் திரும்பிவிடும். அப்படித்தான் இந்தப் பிறவி. நாம் எங்கு, எந்த நிலையில் வாழ்ந்தாலும் அந்த நிலத்தை நோக்கியே பயணம் செய்யவேண்டும், அந்த நிலம் கொடுக்கும் இன்ப துன்பத்தை உடனே கடந்துவிட நினைக்காதே. நின்று நிதானித்து அனுபவித்து திளைத்த பிறகு துறந்துவிடு. துறப்பது மட்டுமே நீ எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். இடைப்பட்ட அனைத்தும் அதன்படியே நடக்கும். அதை நீ அனுபவி, அப்படியே அனுபவி. அதுதான் இந்தப் பிறவியில் நீ வாங்கி வந்த வாழ்க்கை”

எங்க போயி உக்காந்தாலும் கண்ண மூடித்தான் உக்காரப்போறோம். அது மடமா இருந்தா என்ன? மசூதியா இருந்தா என்ன? எதச் செஞ்சா நீயும் உன்னைச் சுத்தி இருக்கவங்களும் சந்தோசமா இருப்பாங்களோ அதையே செய். அம்புட்டுத்தான் வாழ்க்கை”

ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்பவர்களை முட்டாள் என்றே சொல்வேன். நினைத்த நேரத்தில் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு முன் கண்ணீர் சிந்துவது வரம். தன் எல்லாத் தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக்கொண்டு நான் இவ்வளவுதான் என்று கண்ணீர் சிந்த இந்த ஆண்களுக்கு மட்டும் ஏன் கொடுப்பினை இல்லை

மனிதனின் ஆதாரமான உளவியல் ஒன்றை இந்நாவல் காட்டுகிறது. பர்மாவிலும் சிங்கப்பூரிலும் இடம்பெயர்ந்து பிழைக்க நேர்கிற தமிழர்கள் யாவரும் ஊர் திரும்புதல் குறித்த ஆசையுடன் இருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் எலோருக்கும் தமிழகம் திரும்பும் விருப்பம் இருக்கிறது, அங்குள்ள உறவுகள் மீதான ஏக்கம் இருக்கிறது. சரி, அப்படியானால் தமிழகம் அப்போது எப்படி இருந்தது? இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, பர்மாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் இந்த வாழ்க்கைக்கு பர்மாவே மேல் என்று கண்டு கொள்கிறார்கள்.

தமிழகத்துக்கு வாக்கப்பட்டு வந்த காமாச்சி, பர்மாவில் சுதந்திரமாகவாவது இருந்தோம், இங்கே அடிமை வாழ்வு அல்லவா வாய்த்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறாள். பர்மாவில் சாதி மதம் போன்ற பிரிவினைகள் இல்லாது தமிழர்கள் அனைவரும் அணுக்கமாகவே பழகுகிறார்கள். தமிழகத்தில் நிலவிய இறுக்கமான சாதிக் கட்டுப்பாடுகள் காமாச்சி, சிவராமன் போன்றவர்களை மிரட்சியடைய வைக்கிறது.

யூசுப்பிடம் அவனது மைத்துனன் கேட்கிறான், “நமக்கு எந்த நாடு சொந்தம் மாமா?”

எனில், நிலம் என்பது என்ன? நிலம் என்பது உண்மையில் மனிதர்களின் குணம்தான் என்று அவ்வை சொல்கிறாள்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
“ – இக்கவிதையையே இந்த நாவலும் வழிமொழிகிறது.

இரண்டாம் பாகத்தில் போர்க்காட்சிகளும் மனிதர்களின் கீழ்மைகளும் வாதைகளும் காட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளையும் மனிதர்களையும் தகர்த்தெறிகின்றன குண்டுகள். வெடிகுண்டுகளுக்குப் பயந்து மனிதர்கள் இடம்மாறியபடி இருக்கிறார்கள். ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்ட சிங்கப்பூரின் அடிமை வாழ்வின் சித்திரங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. அதே சமயம் மனிதர்கள் இணக்கமாக வாழ்ந்த கம்போங் வாழ்க்கை, அன்றைய சைனா டவுன் மற்றும் மாரியம்மன் கோயில் தெருக் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

ஜப்பானியர்களால் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் முக்கியப் போர்க்கப்பல்களான பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (Prince of Wales) மற்றும் ரிபல்ஸ்(Repulse)சின் போர்க்காட்சிகளும் நாவலில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியர் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்ட சிங்கப்பூரில் மக்கள் படும் துயரம், ஜப்பானியரின் கொடூரங்கள், பாலியல் அத்துமீறல்கள் யாவும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அதே சமயம் எதற்காகப் போரிடுகிறோம், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் போருக்குள் இழுக்கப்பட்ட சிப்பாய்களையும் பார்க்க முடிகிறது. சிங்கப்பூருக்குள் வந்துவிட்ட ஒரு இந்தியச் சிப்பாய் அங்கிருக்கும் ஒருவரிடம் “இந்தியாவில் இது எந்த இடம்?” என்று கேட்கிறான்.

நாவலின் சுவாரஸ்யமான மொழி அமைப்பே நாவலை விரைவில் வாசிக்கச் செய்தாலும் முதல் பாகமான பர்மாவில் நடக்கும் கதையில் தென்படும் உயிரோட்டமான சித்தரிப்பும் கவித்துவமும் இரண்டாம் பாகமான சிங்கப்பூரில் நடக்கும் கதையில் தென்படவில்லை. ஒப்பு நோக்க இரண்டாம் பாகம் சற்றே நீளமானதாகவும் இருக்கிறது.
நாவலில் எந்தவொரு இடத்திலும் நாடகீயத்தன்மையோ செயற்கையான காட்சி சித்தரிப்போ இல்லை. வெகு யதார்த்தமாகவே மொழி அமைந்திருக்கிறது. அச்சுப் பிழைகளும் புதிய அத்தியாய எண்களுக்குக் கீழே முடியும் முந்தைய அத்தியாய வரிகள் போன்ற பிழைகள் அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்.

முதல் பாகத்தில் ஆசிரியரின் கோணத்தில் அமைந்த கதை சொல்லும் முறை இரண்டாம் பாகத்தில் யூசுப்-இன் கோணத்தில் சொல்லப்படுகிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால் நாவல் மரபான வடிவத்திலேயே அமைந்திருக்கிறது. பிற முக்கியமான பாத்திரங்களின் கோணத்திலும் கதையை நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, காஜியாவின் பார்வையில், அல்லது சிட்பொவின் பார்வையில் சில அத்தியாயங்களை கதை சொல்வதற்காகப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் பல வெளிச்சங்கள் கிடைத்திருக்கும்.

நாவலில் தமிழ் தெரியாதவர்கள் பேசும்போதும் தமிழின் வட்டார வழக்கு தென்படுகிறது. வெள்ளைக்காரரான மார்ஷியல் “வந்திட்டு”, “போயிட்டு” என்று வட்டார வழக்கில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற தருணங்களில் பொதுவான உரைநடைத் தமிழையே பயன்படுத்தியிருக்கலாம்.

லீ குவான் யூ ஓர் அத்தியாயத்தில் தோன்றுகிறார். ஆயினும் அவரது செயல்பாடுகளை விவரிக்கும்போதெல்லாம் யதார்த்தம் மீறிய வழிபாட்டு உணர்ச்சி தென்படுகிறது. அப்போது அவர் ஜப்பானியர்களின் சோதனை மையத்தில் வரிசையில் நிற்கும் ஒரு சிறுவன். ஆனால் பின்னாளில் நடக்கப்போவதை முன்கூட்டிய அறிந்ததைப் போல யூசுப் “அவன் கால்களின் தடம் மண்ணில் மிக ஆழமாக வேரூன்றிப் பதிந்து, நூறாண்டு காலத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதை நான் பிரமிப்புடன் பார்த்தேன்” என்று சொல்வது நாவலின் யதார்த்தத்துக்குப் பொருந்தி வரவில்லை.

நாவலில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை என்றாலும் இறுதி அத்தியாயம் வரை யாராவது புது கதாபாத்திரம் அறிமுகமானபடி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆலி, சிதம்பரம் போன்ற கதாபாத்திரங்கள் நாவல் முடிவதற்கு சற்று முன்னர் அறிமுகமாகிறார்கள். அவர்களது பாத்திரப் படைப்பும் அவசரமாக உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

அதேபோல் ஆராயியின் பாத்திரமும் சரியாக உருவாகி வரவில்லை என்றே தோன்றுகிறது. சிவராமனுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அத்தனைப் பெண்குழந்தைகளின் தாயான ஆராயிக்குத் தரப்படவில்லை. அவளது மனநிலை நாவலில் ஒருசில பக்கங்களில் சொல்லப்பட்டாலும் அதை இன்னும் விரிவாக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவளது குழந்தைகளில் காமாச்சி மற்றும் முனியம்மா இருவர் மட்டுமே நாவலில் அதிகம் இடம்பெறுகிறார்கள். மற்ற குழந்தைகளைப் பற்றி அதிகம் சொல்லப்படவில்லை.

அதேபோல, நாவலில் பல மொழிகளின் வார்த்தைகள் புழங்கி வருவதால் அவற்றுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். இது வாசகர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்திருக்கும். அடுத்த பதிப்பில் இக்குறை களையப்படுமென நம்புகிறேன்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், முற்றிலும் புதிய கதைக்களத்தில், முற்றிலும் நம்பகமானதொரு மொழியில் ஒரு நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது. சிங்கப்பூரின் தமிழ் நாவல்களில் முக்கியமான நல்வரவாகவும் “அம்பரம்” தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

***


கணேஷ்பாபு –

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.

தொடர்புக்கு : ganeshmodec@gmail.com

ஆனந்த்குமார் கவிதைகள்

0

நட்சத்திரம்

*
திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டது
ஒரு தன்னந்தனி மின்மினி
எல்லோரும் அண்ணாந்து பார்க்க
இருளில்
திரைமூடி விலக்கித்
துவக்கியது
தனது ஒளிக்காட்சிகளை.
ஒவ்வொருமுறை
தோன்றும்போதும்
பெரிய வெண்திரையை
எப்படியோ மறைத்துவிடுகிறது
அந்த சின்னஞ்சிறு மினுக்கம்


சரியாக வை


*
ஐந்தில் வைக்காதே
காற்று
அடித்துவிட்டுப் போய்விடுகிறது,
மூன்றில் வை
அப்போதுதான் அது
ஒரு குழந்தைபோல்
என்மீதேறி அமர்கிறது.
மொத்த உடலும்
பூமியில் வேர்பிடிக்கையில்
ஒரு இசைத்தட்டென
என்னில் பதிந்திருக்கும் பாடல்களை
மென்விரல் தொட்டு கண்டுபிடிக்கிறது
அது
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சியின்
கொம்புகளென மொத்தமாய்
எனை உரிஞ்சும்முன்
சீக்கிரம்
மீண்டும்
பூஜ்ஜியத்தில் வை


உள்வட்டம்


*

அவர்கள் சொன்னது சரிதான்
மிக அழகான ஒன்றைச் சுற்றித்தான்
ஆபத்து இருந்தது
அழகை நெருங்க நெருங்க
ஆபத்து அதற்கு
வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டது
கடைசியில் எப்படியோ

நைஸாக நான்
அழகிற்குள் புகுந்துவிட்டேன்
இப்போது அழகுதான்
ஆபத்திடமிருந்து என்னை
எப்போதும் பாதுகாக்கிறது


எஞ்சுவது


*

மலையை
மலையிடுக்கில் மலர்ந்த
மலைப்பூவின் கீழ்
மறைத்து வைத்தவன்
அவன்தான்
பாடலை
பாடலின் இடைகிடந்த
வார்த்தையிலும் வைத்தான்
சுவைக்குமெதனுள்ளும்
சுவைமிகுந்தவொன்றை வைத்த
அவனேதான் என்காதில் சொன்னான்
நீ சுவைப்பதில் சுவைத்தபின்
எஞ்சுவதே விதை


ஆனந்த்குமார் – ஆனந்த்குமார் (மார்ச் 22, 1984) பிறந்தது நாகர்கோயிலில். புகைப்பட நிபுணராக இருக்கும் இவர், ஆவணப்படம் மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறார். டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு – தன்னறம் வெளியீடு 2021. அண்மையில் தனது முதல் கவிதைத் தொகுப்பிற்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் 2022 விருது அறிவிக்கப்பட்டது. தொடர்புக்கு – ananskumar@gmail.com

வேதநாயக் கவிதைகள்

0

மடி திரும்பல்


நெடிந்துயர்ந்த மா மலை ஏற்றம் போல்தான் இருக்கிறது
ஒரு குழந்தை நம்மேல் உறங்குவதற்கு
மடியில் கிடத்தப்படுகையில் (கவனம்… கவனம்… தொடையசைவுகள் அக்குழந்தை துயில் கலைந்து எழுவதற்கல்ல)
சிகர உச்சிப்பயண முடிவில் அங்கங்கள் அனைத்திலிருந்தும்
கொட்டும் வியர்வைத்துளிகளை ஆதுரமாய் வருடும்
காற்றைப் போன்றதுதான்
அக்குழந்தையை அவளம்மை திரும்ப வாங்கிக் கொள்கையில்

*

நகத்தின் இறுதி வரை குருதி பெருக்கெடுக்கும் வரை
கோதி முடிக்கிறது இப்பற்கள் ஆழ்ந்த யோசனைக்கு பிறகான
முடிவு தருணங்கள்
சொட்டும் சிகப்புநிற நீர்மத்தை வெறித்து பார்த்தபடியும்;
சாட்சியற்ற மனோபாவத்தை சபித்தபடியும்
மின்கம்பியை மிதித்த வினாடியாய்
தீர்வு கண்ட குறுநகையோடு
மின்னல் பளீரிடும் சொடக்காய் அதை முழுமுற்றாய் கைவிடுதல்
எவ்வளவு பெரிய வரம்?


*

ஒரு கலைத்துப் போடப்பட்ட சொல்லின் தொடர்
காற்றில் எதையெதையோ
எழுதிச் செல்கிறது
கவிழ்த்து போடப்பட்ட கரப்பான் பூச்சியாய்

 

அப்பெண்மணி ஜன்னலோரம்
வைக்கப்பட்ட தம் கைப்பையை எடுக்க
தன் பெரும் பிருஷ்டத்தை
அசைத்தசைத்து விரற்கணுக்கள் அளவில் கொஞ்சமாய்ப் பற்றி
வெளியிழுத்து வெற்றிப் பெருமிதத்தோடு
பெருமூச்செறிவதெல்லாம் உங்களுக்கு அசெளகர்யமாய்
தோன்றாமல்
இருப்பதுதான் இங்கு ஆச்சர்யம்


*

மரணித்தலின் கலை எனப்படும் மீட்சி


உருள்வதும் உருட்டப்பெறுவதும்
வெவ்வேறல்ல என்கையில்
உணர்வதும் உணர்த்தப்பெறுவதும்
ஒன்றாகக் துலங்க ஆரம்பிக்கும் கணம்
பிற்பகலின் நினைவுகள் கண்ணடியின் பிரதிபலிப்பாய்
புங்கன் மரத்தின் நிழலில் இருந்தவாறும்
குன்றின் சிகரத்தில் உறைந்த
நிலவின் பௌர்ணமியின் பூரணத்திலும்
முடிந்து விடாமலும் நமது பெயரின் இடை எழுத்திலேயே
நிற்கும் சப்தத்தில் எஞ்சி
நசுங்கி நிற்கிறது சொடக்கு இறப்பு

*

வரிசைக்கிரமம் தம் மூச்சின் எண்ணிக்கையை
ஆழ்ந்து கவனித்தபடி மனதை
ஒருமுகப்படுத்துகிறான்
எண்ணம் சிதறாவண்ணம்
அலையலையாய் பெருகும்
கற்பிதங்களின் கற்பனையை
நசுக்குவதாக சபதம் ஏற்கிறான்

இதோ.. இப்போது கடந்துவிடுமென
மெல்ல மெல்ல பூரகத்தை
கைவிட்டு ரேசிக்கத் துவங்குகிறான்

அங்கோ..

நரகல் நிரம்பி வழிந்தபடி நகராமல் நிறுத்தப் பெற்றிருக்கும்
நான்கு சக்கர வாகன ஓட்டுனன்
மெல்லிய இரும்புத்தகடு வேய்
கூரை கீழ் வாகாய் நின்றபடி
மட்டரகமான ஒன்றை
புகைத்துக் கொண்டிருக்கிறானே..
அவனிடம்தான்..

இரு கால்களில் ஒன்றை இழந்த
பிச்சைக்காரனொருவன்
இடம்விட்டு நகர இயலாமல்
யாசகம் செய்ய முனைகிறானென
அறிவித்துவிடு

*

வேறுபடுத்தி பிரித்துக் கொள்ளலில்
ஒன்று சுயம் மற்றொன்று இன்மை
இல்லாததில் ஏக்கம், ஆக்கத்தின் பால் இறைஞ்சுதல்;
தவறியும் தராமல் போன,
தந்ததில் திருப்தியுறாத;

கொடுவாள் கொண்ட காலதேவனின்  முன்
முகமற்று இதழ்களற்ற உதடுகளைப் பிரித்து
ஈனஸ்வரத்தில் முனகும் உள் குரல் கேட்டாலென்ன? கேட்காவிடில் என்ன?

அவனுக்குத் தெரியும் வாள் வீசும்முன்


*

விரிந்து விரிந்து கருணை பரப்பிய
எல்லா மலர்களும் வீழ்ந்து வீழ்ந்தே இருப்பை
நிச்சயித்துக் கொள்கின்றன

இரத்தம் சிந்துதலை மறக்க வேண்டிய
பொதுவான தேவை குறித்து

சகலவகைகளிலும் ஒத்திருக்கும்
முரண்கூற்று வார்த்தைகள் பற்றி உளறலாம்

அல்லது ஒருவேளை எனது பைத்தியக்காரத்தனமான
நேர்கூற்று போல் த்வனிக்கக்கூடிய
அசாத்தியமானதொரு கலவை சொற்கூட்டங்களை
செவிமெடுக்கலாம்

ஆனாலும்

நாட்டுச் சேவலின் இரைப்பை பிரித்து
கல்லில் உரைத்து
உள்ளுக்குள் கொடுத்துப் பரவும்

யானைத்தீயின் சுவாலையாய் எரிக்கிறது
உன் மேல் யென் காமம் என்று

சொல்லிச் செல்கையில் மட்டும் ஆசுவாசமடைகிறது
எல்லாமும்

*

நிகரின் பெறுமான எடை


எவரது சரிகளையும் தேர்ந்து சீர்தூக்கி
மெல்மலரின் இதழ்களின் மேற்படியும்
தூசு முதலான அழுக்குகளாய் போர்த்தப்பட்டவைகளை 
ஈரத்துணி கொண்டு வாஞ்சையாய் தடவிவிடும்
நளிர் நல்லாள் அவளின் அடர் இருட் கனவின்
புதைசேற்று நிலத்தில்

அவர்களுக்காய்

பொருத்தக் காலணியும் வழிவரைந்து விழிகாட்டவென்று
ஒளி ஊடுருவும் கண்ணாடி பொதிந்த மா விளக்கும்
மேலிருந்து வீசி எறிக
இறையே இப்போது

*

காலாற நடந்து மீன் பிடித்தல்


ஒற்றையடிப் பாதையில் கனவின் படலங்கள், மேற்பரப்பில் படியும் மகோன்னதம்;
விருப்பங்களை வரிசைக்கிரமமாக கேட்டறிந்து
ஆமாம் நானும் என ஒத்துப்பாடி மேலும் மேலும் முன்னேறி
இடையில் நிறுத்தி நேர் கண்கண்டு
முக இலாவண்யம் புகழ்ந்து
ஒரு முத்தத்திற்கான முத்தாய்ப்பு தருணம் எதிர்பார்த்து
இதழ் பூட்டித் திறந்த பின்

மீனும் பறவைகளும் எப்போதும் தடயங்களை
விட்டுச் செல்வதில்லை… உன்னிதழ் அழுந்திய தடம் போல்
கன்றிச் சிவப்பதில்லை காண்
எனச் சொல்லப்படுவதின் தாத்பர்யம் எதுவாக இருக்கக் கூடும்

*

சட்டகத்தின் இருப்பிடமும் குழைந்த சோற்றுப் பருக்கையும்


வெளிப்புறம் அரூபமொன்றுமில்லை

சுண்ணம் பூசியதாகவோ
வர்ணக்கலவை ஏற்றியதாகவோ;

அடுக்கு மாடியின் விசாலமான அறையாகவோ
கீழ்தளத்தின் ஒடுங்கிய அறையிலோ;

கணிசமான பார்வையாளர்களாலோ
தேர்ந்தெடுத்த விமர்சகர்களாலோ;

முன்கூட்டியே வந்தவர்களாலோ
தாமதமாக வந்து சேர்ந்தவர்களினாலோ;

மிகச் சாதாரண மரத்தில் செய்யப்பட்ட சட்டகத்தாலோ
தேவதரு, தேக்கால் ஆக்கப்பட்ட அடைப்புக்குள்ளோ;

உள்ளே பூசப்பட்ட முதல் வண்ணம் காணாமலோ
இறுதி வர்ணம் துலங்குதலாலோ;

காலை கடற்கரைக் காட்சியாலோ
மாலை மலை ஓரஞ்சரியும் சூரியனாலோ;

அடர் வனங்களாலோ
நீர் பசையற்ற வறண்ட பாலைகளாலோ;

யுவதிகளின் அழகு பெருத்தவைகளாலோ
சிறுவர்களின் குறும்புகளினாலோ;

குளிர்நீர்ச் சொட்டும் பழங்களாலோ
விதவிதமான மலர்களினாலோ;

கற்பனை மிருகங்களாலோ
வினோத பறவைகளினாலோ;

தன்னோவியப் படங்களாலோ
நிலக் காட்சிகளாலோ;

கருப்பு வெள்ளையாலோ
அடர் வெவ்வேறுவித நிறங்களாலோ;

போர்க்களக் காட்சிகளாலோ
ஏகாந்த நிலைப் பதிவுகளினாலோ;

சில ஓவியங்கள் உங்களது பார்வைக்குப் பட்டு
விழிகளைத் துளைத்து பின்மண்டை வழியே
வெளியேறி விடத்தான் துடிக்கிறது

ஆயின் நீங்கள் மூளையில் ஏற்றி அசை போட்டவாறே
கனவில் நடப்பதே போல் அவ்வோவியம்
இறுமாந்து கிடப்பதும் நிகழ்கிறது

அதன் மூலங்கொள்ளும் பீதியை மறைக்கவும்
வாயிலெடுக்கும் உணர்வை சட்டென வடிக்கவும்;

கழிப்பறைக் கதவை தேடி ஓடும் வடிவக்கூறுகள்
அங்குமிங்கும் மிதந்து கொண்டிருப்பதனால்தான்
அதைப் பற்றிய விவாதங்களுக்கும்

குறைவில்லாமலிருக்கிறது

***

வேதநாயக் தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: editorialmagazines@gmail.com

பொம்மை

0

தென்றல் சிவக்குமார்

ன்னும் ஒலிபெருக்கி இயக்கப்படவில்லை. தன் மக்கள் புடைசூழ தன் அமைதியில் ஆழ்ந்து செந்நிறப் பருத்திச் சேலையில், படியேறி வருவோரை வரவேற்கிற தோரணையில் பாந்தமாக அமர்ந்திருந்தாள் அருள்மிகு முப்பாத்தம்மன். மூக்குத்தியும் நெற்றிப் பொட்டும் கச்சிதம் அவளுக்கு. இன்றைய அமைதியில் இன்னும் ரசிக்கக் கூடி வந்தது. ஆனால் சலசலப்புக்குப் பழகிய புலன்களுக்கு அமைதி கொஞ்சம் தடுமாற்றம் தந்ததும் உண்மைதான். சுற்றி வருகையில் புற்றினருகில், பொங்கலிடும் மேடையில் என்று எங்குமே கூட்டம் இல்லாதது, இத்தனை உபதெய்வங்கள் சூழ வீற்றிருந்தபோதும், பூசாரிகள் இருவர் இருந்தபோதும், என்னவோ அவளும் நானும் மட்டுமே அங்கிருக்கிறாற் போன்ற உணர்வு. அது பெருமிதமாகவும் இருந்தது, சங்கடமாகவும் இருந்தது. இந்த முரண் கொண்டுவந்த சிரிப்புடன் தெருவுக்குள் இறங்கினேன்.

பனகல் பார்க் சென்று பாரிமுனைக்குப் பேருந்து ஏறுவதாகத் திட்டம். வண்டிப்பாதைச் சாலையின் வலப்புற மத்தியிலிருந்து ஒரு பெண் இரண்டு மூன்று வீடுகள் தாண்டிச் சென்று எதிர்ப்பக்கம் பார்த்து சற்று நின்றுவிட்டு, சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி வருவது தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது அவள் கையில் வைத்திருந்த அலைபேசியைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது, எனில் ஏதோ படம் எடுத்திருக்கிறாள். இவ்வளவு காலையில், உடுத்திய நைட்டியுடன் அப்படி என்ன சுவாரசியமான படமாக அது இருக்கும் என்ற ஆர்வம் உப்பத் தொடங்கியது. ‘க்யூரியாஸிட்டி கில்ட் த கேட்’ என்பாள் ஹேமா. வழக்கம் போல ‘ஹூ கேர்ஸ்’ என்றபடி மனம் உந்தித் தள்ளியது.

நான் அவள் வீட்டை நெருங்கும் முன்பே அந்தப் பெண் உள்ளே சென்றுவிட்டாள். அவள் நின்ற இடத்தில் நின்று, திரும்பிப் பார்த்தேன். க்யூரியாஸிட்டி. எதிர்திசையிலிருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் அலையலையாகப் பசலைக்கொடி இறங்கியிருந்தது, நான் பார்த்த கோணத்தில் அந்தப் பசலைக்கொடிகள் அலை அலையாகச் சுவரேறிக் கொண்டிருந்தன. இந்தப் பசுங்கொடிகள் வளையும் இடத்தில் மெத்தென்று இருத்தியிருந்தார்கள் ஒரு கண்ணன் சிலையை. இடுப்பில் கை வைத்த வாக்கில் கம்பீரமாகத்தான் நின்றிருந்தான். ஆனால் சட்டென்று ஓர் உறுத்தல் புறப்பட்டது. கண்ணனை நிறுத்தும் இடமல்ல அது. எனில், ஏன் அங்கே வைத்திருப்பார்கள்? இது கிட்டத்தட்ட கைவிடல் இல்லையா? சிலைக்கு ஏதும் நேர்ந்திருக்குமோ என்று யோசித்த மாத்திரத்தில் கண்களைத் திருப்பிக்கொண்டு யோசனையையும் வலிந்து திருப்ப முயன்றேன். ப்ளடி க்யூரியாஸிட்டி. ஹேமாவை அழைத்துப் பேசலாமா? இப்போதுதான் காலைப் பரபரப்புக்குள் புகுந்திருப்பாள். வேண்டாம்.

‘கண்ணா’ என்ற குரல் கேட்டது. மண்டைக்குள் இல்லை, வெளியில்தான் கேட்டது. மண்டைக்குள் குரல் கேட்கும் சிக்கல் இருப்பவர்களுக்கெல்லாம் அது உள்ளிருந்து ஒலிக்கிறாற் போலத் தோன்றுமா என்ன? தெரியவில்லையே. இந்தப் புதுக்கவலைக்கு இன்னும் எத்தனை நேரத்தைத் தின்னக் கொடுக்க வேண்டுமோ? ‘கண்ணா’ என்ற குரல், கேஷியர் மாமாவின் குரல். அப்பாவின் நண்பர் வங்கியில் கேஷியர் பணியில் தொடங்கி மேனேஜராக ஓய்வு பெற்றவர். இடையில் அப்பாவுடன் ஏதோ ஊடல், ஆனாலும் வீட்டுக்கு வந்து அவரைத் தவிர்த்துவிட்டு எங்களுடன் பேசிச்செல்வார். வரவுக்கான காரணம் அப்பாவைத் தவிர்ப்பது கிடையவே கிடையாது, எங்களைப் பார்ப்பதுதான். சுத்தமான கோபம், சுத்தமான அன்பு. அவர் போய் ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அவரைப் பற்றிக் கடைசியாக எப்போது யோசித்தேன் என்றே ஞாபகம் இல்லை. திடீரென்று எப்படி அவர் குரல்?

‘எதாவது பாட்டு, எதாவது பாட்டு’ என்று கூக்குரலிட்டது வெளி மனம். உள் மனம் ‘கண்ணன் முகம் காண காத்திருந்தாள்’ என்று எள்ளியது. வேகவேகமாக நடந்ததில் கோவிலை மீண்டும் அடைந்திருந்தேன். ஒலிபெருக்கியை இயக்கியிருந்தார்கள். ‘கற்பூர நாயகியே’ என்று எல்.ஆர்.ஈஸ்வரி நல்லோசை அருளினார். கூடவே முணுமுணுத்தபடி வேகவேகமாக நடக்கத் தொடங்கினேன். பாட்டுச் சத்தம் கேட்கவில்லை என்பதை உணர்ந்து நின்றபோது, ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாய்’ என்று உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. நடக்க வேண்டிய திசையில் அல்லாமல் வேறு திசையில் நடந்து வந்திருந்தது புரிந்தது. துரைசாமி சப்வேயின் முனையில் நின்றிருந்தேன். கால்கள் திடீரென்று கனத்துக் கெஞ்சின. இங்கிருந்து பனகல் பார்க் போவதற்கு ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ ஏற வேண்டுமா? என்ன அபத்தம்.

எதிர்ப்பட்ட ஆட்டோவை அணுகி, “ஸ்டேஷன் போகணும்” என்றேன். அவர் நிதானமாக, “கோடம்பாக்கமா, மாம்பலமாம்மா?” என்று கேட்டார். புன்னகைத்தபடி, “கோடம்பாக்கம்” என்றேன். ஆட்டோ ஓடத் தொடங்கியதும் ஹேமாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவளுடைய அன்றாட வழித்தடத்தில் இன்றைக்கு நான் அவளுக்கு முன்பாகப் பயணிக்கிறேன். அவள் வீடு, கல்லூரி, அலுவலகம் என்று எல்லாமே ரயில் நிலையங்களின் அண்டையில் இருப்பதால் ரயிலுக்குப் பழகியவள். அவளோடு ஐந்தாறு முறை இதே அந்தோணியார் கோவிலுக்கு ரயிலில் வந்திருக்கிறேன். பேருந்து பழக்கத்தில் ஃபோர்ட் ஸ்டேஷன் தாண்டிய உடனேயே எழுந்து வாசலுக்குப் போக எத்தனிப்பேன். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைப்பாள். என் பதட்டத்தை அவ்வளவு ரசிப்பாள். இப்போது இந்தப் பதட்டத்தைப் பார்த்தால் இரண்டே வார்த்தைகளால் அதனை அடக்குவாள். நீண்ட நீண்ட வசனங்களில் நம்பிக்கை இல்லாதவள், என்னைப் போலில்லை.

கோடம்பாக்கத்தில் ரயில் ஏறி, வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, பாட்டுக் கேட்கத் தொடங்கினேன். ஏழாவது பாடலின் மத்தியில்,
‘பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்’
என்று யேசுதாஸ் உறுதி சொன்னபோது ஃபோர்ட் ஸ்டேஷன் வந்துவிட்டது. பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனாலும் பாட்டை முழுக்கக் கேட்டுவிட்டு, மெல்ல இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து வாசல் அருகில் சென்று நின்றுகொண்டேன். பீச் ஸ்டேஷனில் இறங்கி இருபுறமும் பார்த்தேன். எந்தப் பக்கம் நடக்க வேண்டும் என்று திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. இப்போதுதான் படிகளிலும் நடைமேடைகளிலும் மெல்ல கூட்டம் சேரத்தொடங்கியிருந்தது. ஒரு மாதிரியாக இந்தப் பக்கம்தான் என்று முடிவு செய்து நடந்தேன். தண்டவாளங்களுக்கு மறுபுறம் நின்றிருந்த ரயிலில் இரண்டு புறாக்கள் தத்திக்கொண்டிருந்தன. நகரும் ரயிலில் புறாக்களைப் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். நடக்கும் போதே அந்த ரயில் புறப்பட்டது, புறாக்கள் இரண்டும் பறந்து நடைமேடை நிழற்கூரைக்குப் போய்விட்டன.

சரியாகத்தான் வந்திருந்தேன். பிரதான வாசல் வரை போகாமல் பக்கவாட்டில் இருக்கும் சிறிய இடைவெளியின் வழியாகவே வெளியேறினேன். சாலையைக் கடந்து சென்று இடப்புறம் திரும்ப வேண்டும். எத்தனாவது வளைவு என்பது மறந்துவிட்டது. கால்கள் பின்னிப்பின்னி சதி செய்தன. சிற்றுண்டி கடைகளின் காலை நேரப் பெருங்காய, துவரம்பருப்பு வாசனை எல்லாப் புலன்களையும் நிறைத்தது. பசிக்கிறதோ என்று உடலிடம் கேட்டுப் பார்த்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாக பெயர்ப்பலகையைப் பார்த்தபடி கடந்து ஆர்மீனியன் தெருவுக்குள் திரும்பினேன். உடனடியாக அலைபேசியை எடுத்து அதன் ஒலியை அமர்த்தி வைத்துக்கொண்டேன்.

எப்போதும் மெழுகுவத்தி வாங்கும் கடையில் வாங்கியபோது அவர் வழக்கம்போல ஒரு ரோஜாப்பூவைக் கொடுத்தார். எப்போதும் அங்கேயே போவது அந்தப் புன்னகைக்காகவா பூவிற்க்காகவா தெரியவில்லை, ஆனால் உள்ளே செல்வதற்குண்டான அமைதியை அலைபாயும் மனத்தின் மேல் பன்னீரைப் போல அவர் தெளித்து வைப்பார். வரிசை நீண்டு இருந்தது, நேரம் செல்லச்செல்ல இன்னும் நீளும், சீக்கிரம்தான் வந்துவிட்டிருக்கிறேன். வரிசையில் இணைந்துகொண்டு, உள்ளங்கைகளுக்குள் மெழுகுவத்திகளையும் ரோஜாப்பூவையும் வைத்தபடி நகரத் தொடங்கினேன். எதிரே குறுவிளக்குகளின் ஒளியோட்டத்தில் காணக்கிடைத்த பைபிள் வாசகங்களை மனத்துக்குள் வாசித்தேன், எப்போதும் எனக்குப் பிடித்தது அது. எல்லா ஆசீர்வாதச் சொற்களும் என் ஒருத்திக்காகவே பளிச்சிடுவதாக ஓர் உற்சாகம்.

வரிசை திரும்பியவுடன் உடன் நகர்பவர்களை கவனிக்கத் தொடங்கினேன். வெகு சிலர் அலைபேசியில் கவனமாக இருந்தார்கள். பலரும் ரோஸரி மணிகளை விரல்களால் திருப்பியபடி பிரார்த்தனை மனனத்தை சத்தமின்றி உச்சரித்துக் கொண்டிருந்தனர், ஒரே மாதிரி மஞ்சள் கவுனும் வெள்ளை பாசி மணியும் அணிந்த இரண்டு சிறுமிகளை அவ்வப்போது வரிசைக்குள் இழுத்துக்கொண்டபடி, நீலச்சேலையில் முக்காடணிந்த பெண் முழங்காலிட்டு நகர்ந்து கொண்டிருந்தாள், அவளுக்கும் சிறுமிகளுக்கும் முன்பாக ஒரு மனிதன். அவள் கணவனாக இருக்க வேண்டும், இவர்களைத் திரும்பியே பார்க்காமல் நகர்ந்து கொண்டிருந்தான், அவனது ஒரு கரம் மட்டும் அவ்வப்போது பின்னகர்ந்து பிள்ளைகளின் தலையை வருடியது.

என் வரிசை வளைந்து எனக்கு முன் நின்றவர்கள் திரும்பி என்னருகே வருகையில் அவளைப் பார்த்தேன். முழங்கால் வரையில் ஜீன்ஸ், சௌகர்யமான டி-ஷர்ட், தலையைச் சுற்றி சாம்பல் நிற ஸ்டோல், அவள் கையில் ஒரு சிறிய வேண்டுதல் தொட்டில் இருந்தது. நிஜப் பிள்ளையை ஏந்தும் ஜாக்கிரதையுடன் அதைப் பற்றியிருந்தாள். என் கைகளில் ஏந்தியிருந்த மெழுகுவத்திகளையும் ரோஜாப்பூவையும் பார்த்தேன். நானும் அவளைப் போலவேதான் ஏந்தியிருந்தேன். தானே கொதித்து தானே பொங்கும் மனத்தை என்ன செய்ய. என் உள்ளங்கைத் தொட்டிலுக்குள் இளஞ்சிவப்பு மெழுகின் மீது சொட்டிய என் கண்ணீர்த் துளிகள் வழுக்கிக்கொண்டு ரோஜாக்காம்பை நோக்கி இறங்கின.

இதற்குள் நானும் பழைய வரிசைக்குள்ளாகவே திரும்பியிருக்க அவள் தென்படவில்லை. நிமிர்ந்து கலங்கிய கண்களினூடாக விவிலிய வசனம் என்ன ஒளிர்கிறதென்று பார்த்தேன். “உன் பேர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்.” மனம் மேலும் பொங்க, கையிலிருக்கும் ரோஜாப்பூவில் ஒரு துளி கண்ணீர் சொட்டியது. மறுகையால் அதை மூடிக்கொண்டேன். லேசாக இடைவெளி விட்டு எரியும் தீபத்தைப் பாதுகாக்கிறாற் போல. என்னென்னவோ மனத்தில் மோத தோட்டத்து நத்தை நீர்க்கோட்டுடன் நகர்வதைப் போல நெடுந்தூரம் நகர்ந்து கொண்டிருந்தேன். அப்படியே கைகளை உயர்த்தி முழங்கையால் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது மீண்டும் அவள் எதிர்ப்பட்டாள். இப்போதும் அவள் முகத்தைப் பார்க்கவே இல்லை. தொட்டிலுக்குள் பார்த்தேன். பச்சை மயிலிறகுடன் நீலவண்ணக் கண்ணன்.

வரிசை சுழலத் தொடங்கியது. என் உடை காற்றில் குடையைப் போல விரிந்து சுழன்றது. தேவாலயம் மொத்தமும் சுழன்றது. எல்லாம் நின்றபோது அவளும் அவள் கண்ணனும் நானும் என் ரோஜாவும் மட்டுமே எஞ்சியிருந்தோம். நாங்கள் மட்டுமே அந்தோணியாரின் சந்நதிக்குள் நுழைந்தோம். அவர் காலடியைத் தொட்டு வணங்கி அவளை நோக்கி விரைந்தேன். தடுக்கத்தான் யாருமே இல்லையே. கிட்டத்தட்ட ஓடிச்சென்று அவள் கண்ணனின் சிகையில் என் ரோஜாவைச் சூட்டினேன். சட்டென்று ஓசைகள் திரும்பின. ஒரு பயம் வந்து தொண்டையைக் கவ்விற்று. என்ன நினைப்பாளோ தெரியவில்லையே. முகத்தை நிமிர்த்தி, முக்காட்டை லேசாகப் பின்னுக்குத் தள்ளி, கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள், அடைத்த குரலில் சொன்னாள், “தேங்க்யூ.”

அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் வெறுமனே பார்த்துப் புன்னகைத்தேன். அந்தக் கணத்தில் என் கண்களை, அவற்றின் கனிவை நானே பார்க்க விரும்பினேன். தேவாலயத்தின் மறுமுனையிலிருந்த தூய இருதயரை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னுள்ளிருந்து ‘கண்ணா’ என்று மகிழ்ந்து கூவியது கேஷியர் மாமாவின் குரல் இல்லை. சிறிய பனிக்கட்டியின் மீது மெழுகுச் சுடரால் நிரடினாற் போல அந்தக் குரல் என் மௌனத்தின் மீது விழுந்தது. பர்ஸுக்குள்ளிருந்த அலைபேசி உள்ளங்கையில் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

***

தென்றல் சிவக்குமார் – – கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு “எனில்” வெளியானது. தாமரைச்செல்வி எனும் பெயரில் இவர் மொழிபெயர்த்த “முகமூடிகளின் பள்ளத்தாக்கு” நாவல் நல்ல கவனம் பெற்ற ஒன்று. அண்மையில் “ஆவியின் வாதை” எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியானது.

மின்னஞ்சல்: thendralsivakumar@gmail.com

சன் ஆஃப் பிட்ச் மற்றும் சன் ஆஃப் காட்

0

பாலைவன லாந்தர்

*

சன் ஆஃப் பிட்ச் மற்றும் சன் ஆஃப் காட்

செப்புப் பட்டயங்களில் சித்திர எழுத்துக்களை
கூர்மையான எழுதுகோலால் சிரத்தையுடன்
செதுக்கும் தேர்ந்த கலைஞனின்
கண்களும் விரல்களும் பரிபாஷிக்கும் மொழியால்
உன்னை அழைப்பேன்
கத்திகளைப் போன்று
நாக்கும் நகங்களும் கொண்ட பெண்ணே
எரியும் சிம்னியின் ஒளியைச் சிறிதாக்கு

ஒளியாண்டுக்குள் நுழையும் மலையாடுகளின் கண்களும்
சினை முட்டைகளை உமிழும் மீன்களும்
புணர்ச்சிக்கு பிந்தைய வார்த்தைகளும்
ஊடுபாவெனச் சொல்

உறங்கும் போதும் விழித்துக் கொண்டிருக்கும்
நரம்பின் பற்களை வருடி
மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து புறப்படும்
யூகலிப்டஸ் இலைகளின் ஊசிமுனைகளை
குறித்து விசனப்படுகிற
இந்த வனமெங்கிலும் குரங்குகளால் ஆனது
அவைகளுக்கு நீ தீனியிடலாம்
அவைகளுடன் நீ விளையாடலாம்
அவற்றை கொன்றும் விடலாம்
முழுமையாக குரங்காக பரிணாமிப்பதிலிருந்து
உன்னை காத்துக்கொள்வது உனக்கான சாமர்த்தியம்

துரதிர்ஷ்டம் நிறைந்த இரவில்
உடுக்கையின் மேலொலி கீழொலியைப் பிரித்து
கடிகாரம் இசைக்கிற போது
துளைகளால் ஆகிவிட்ட எனது குடுவையில்
உன்னை ஊற்றிக் கொடுக்கிறாய்
வடகோடியில் சாய்த்து வைக்கப்பட்ட யாழ்
தனது நரம்பை பிடிமானத்திலிருந்து பிடுங்கிக்கொள்கிறது

ஈக்கள் மொய்க்கும் மாம்பழத்தினுள்
வண்டுகள் பேசுகின்றன
”தூரப்போ தூரப்போ”
நாபித்துளையின் வழியே கேட்கின்றனவா
“தூரப்போ தூரப்போ”

கடல் பற்றிய நம் பேச்சு ஓய்ந்ததேயில்லை
நீயும் கடலும் காய்ந்துப் போகாத ஈரப்பதங்கள்
எந்தத் துளியில்
எந்தத் துளியாக
வேண்டுமென தீர்மானிக்கிறாய்

இரவுதோறும் “சன் ஆஃப் பிட்ச்” என்றும்
சூரியன் உச்சந்தலைக்கு மேல் நேர்க்குத்தி நிற்கும்போது
“சன் ஆஃப் காட்” என்றும் அழைக்கும்
உன்னைக் குறித்து எழுதுவதற்கு இன்னமும் தயங்குகிறேன்

*

2

இறந்த காலத்து காதலன்

வானதி இறந்துவிட்டாள்
நான் அவளுடைய முந்நாள் காதலன்
அவளை வழியனுப்ப வந்திருக்கிறேன்
அவளுடலின் மீது எனது மாலையைச் சாத்திவிட்டு
ஓர் ஓரமாக நின்றுக் கொண்டேன்
சாவுக்கென மலர்ந்திருக்கும் மலர்களில் இன்று
வானதியே மிக அழகிய மலராகக் கிடந்தாள்

முதன் முதலாக ஒரு மழைப் பொழுதில் சந்தித்தோம்
குளிருக்கு நெருப்பூட்டிய மக்காச்சோளம் வாட்டும் வண்டியினருகே
மின்மினிப் பூச்சிகளைப் போல் தீப்பூக்கள் பறந்தன
பொய் அச்சத்தில் கண்களை மூடிக்கொண்டாள்
அவளை தீக்கிரையாக்க ஏன் அவசரப்படுகிறார்கள்

வானதி
அழகான மஞ்சள் நிறப் புடவையில் சுருட்டிக் கிடத்தப்பட்டிருந்தாள்
முகமெல்லாம் மஞ்சள் பூசப்பட்டிருந்தது
கைகளில் கண்ணாடி வளையல்கள்
கால் கொலுசுகள் எதுவுமே அசையவில்லை
மூக்குத்தியைத் தவிர
இரு பெருவிரலும் கட்டப்பட்டிருந்தன
விறைத்துக் கிடந்தாள்

என்னுடைய என்ஃபீல்ட் வண்டியைத் தவிர
எந்த இருசக்கர வாகனத்திலும் அவள் பயணித்ததில்லை
அவளுக்கு போக்குவரத்து நெரிசலும் வேகப் பயணமும் பிடிக்காது
பேசிக்கொண்டே நாற்பது கி.மீ வேகத்தில் போக வேண்டும்
எப்படி சட்டென விண்ணுக்குப் பறந்துச் சென்றாள்
அதுவும் பேசாமல்

தோல்வியடைந்த காதலர்கள் மீண்டும் இவ்வாறு
சந்தித்திருக்க கூடாது
எல்லோரும் எங்களைக் குறித்து கிசுகிசுக்கிறார்கள்
நாங்கள் பேச மறுத்ததை
நாங்கள் பேச மறந்ததை
சம்பிரதாயங்களைக் கடந்து அவளிடம் நெருங்க நினைக்கிறேன்
சம்பிரதாயங்களைக் கடந்து அவளை முத்தமிட நினைக்கிறேன்
ஆனால் எதுவோ தடுத்தது

எதுவோ நகரவிடவில்லை
எதுவோ நெஞ்சின் மீது பாதங்களை அழுத்தியது
எதுவோ காட்சிகளைப் புரட்டியது
எதுவோ எதுவோ
அந்த எதுவோவின் பக்கமாக சாய்ந்துக் கொண்டேன்
முற்றிலுமாக சாய்ந்தே விட்டேன்

“வானதி எழுந்திரு போகலாம்’ என்று அவள் புதிய காதலன் அழைக்கும் வரை
வானதி என்னுடலை தாண்டிப் போகும் வரை
என் உடல் வானதியின் சாயலிலிருந்து நீங்கும் வரை

***

பாலைவன லாந்தர்

இயற்பெயர் நலிஜத், பிறந்தது காயல்பட்டிணம் தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்தது சென்னை. . உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம்,ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் ஆவணப்படம் ஒன்றை இணையம் வாயிலாக இயக்கியவர். விரைவில் இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் வர இருக்கின்றன.

மின்னஞ்சல் – palaivanam999@gmail.com

திரை யுகத்தில் இலக்கியச் சூழல்

0

ஜீவ கரிகாலன்

டுமையான முறையில் காகித விலையேற்றமும் வரியும் அச்சுத் தொழிலை ஸ்தம்பிக்க வைத்துள்ள காலத்தில்தான் ஒரு பதிப்பாளனாக இந்த கட்டுரையைப் பகிர்கிறேன். டிஜிட்டல் உலகில் பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு பிந்தைய பொருளாதார நசிவு பெருமளவு அச்சு ஊடகங்களைப் பாதித்தும், மின் ஊடகங்களுக்கு ஊட்டமளித்தும் என இரண்டு விதத்திலும் நெருக்கடிகளை உருவாக்கியது. இத்தகைய காலத்தில் திரையுகம் என்று இச்சூழலை விளிப்பதில் ஒரு பொருத்தம் இருக்கிறது.

இந்த தலைப்பைப் பற்றி என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களும் “திரையுகம் எனும் சொல்லாடலை இத்தனை தீவிரமான இலக்கிய மேடையில் ஏன் பயன்படுத்துகிறாய்” என்று கேட்டனர். இந்தச் சொற்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டவை என அவர்களுக்குத் தெரியும். 2000-களின் ஆரம்பத்திலேயே இந்தச் சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001-ல் வெளிவந்த ஒரு கிராஃபிக் நாவலில் நாம் வாழ்கின்ற இந்த காலத்தை இவ்வாறு குறிப்பிடும் ஒரு அருங்காட்சியகம் இருக்கும். அது பனியுகம், கற்காலம், உலோகக் காலம் என பரிணமித்த மனிதகுல வரலாற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியம்.

இணையம் வாயிலாக படைப்புகளை மின்னஞ்சல் செய்யும் வழக்கம் ஆரம்பித்த 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம், வலைப்பூவின் அறிமுகம், சமூக ஊடகங்களின் அறிமுகம், திறன்பேசிகளின் பயன்பாடு, இணைய அலைவரிசைகளின் வசதியால் பெருகிய இணைய இதழ்கள், மின்னணு புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள், காணொளிகள், அதற்கான செயலிகள் எனப் பல்கிப்பெருகி வாசிப்பை, எழுத்தை, இலக்கியச் சூழலை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை அலசிப் பார்ப்பதற்கு இந்தச் சொல் பொருத்தமானது தான் இல்லையா? தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இருபது வருடங்களில் ஒரு நூற்றாண்டுக்கான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதால் நுகர்வு / உற்பத்தி அல்லது வாசிப்பு / படைப்பு என்கிற தன்மைகளில் பாரிய வித்தியாசங்களை அடையாளம் காண முடியும். அதில் பிரதானமான ஒன்று, தீவிர இலக்கியத்திற்கான எல்லைகள் புதைந்து போனவையாகின்றன, ஏற்கனவே இருந்தவர்களுக்கு அது இருந்த தடம் தெரியும் என்பதால் இதில் வாதம் தேவையில்லை.

ஒரு ஊடகத்தின் தாக்கம் இத்தனை தூரம் பொருட்படுத்த வேண்டியதா என்பதை மொழியின் லிபிக்கள் அடைந்த பரிணாமம் குறித்து கவனிக்கையில் புரியும். அச்சு இயந்திரம் வரும்வரை கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்தவையே. அவையே பனையோலைகளில் எழுதப்படுகையில் வட்டெழுத்தாகவும் உருவெடுக்கிறது. அச்சு இயந்திரம் என்ற தொழில்நுட்பம் எழுத்து வடிவத்தை அதற்கு மேற்கொண்டு மாறுதலுக்குட்படுத்தாது நிலைப்படுத்திவிட்டது. அதற்கு பின்னர் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டாலும், சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டாலும் அடிப்படையான எந்த மாற்றங்களும் நிகழவில்லை.

அவ்வகையில் திரையுகம் எனப்படும் டிஜிட்டல் உலகம் ஒரு ஊடகமாக மாற ஆரம்பித்தவுடன் அது இலக்கியச் சூழலில் நிகழ்த்தியிருக்கும் மாற்றம், மாற்றத்தின் வேகம் இரண்டுமே மிகப்பெரியது. அதுவும் கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இதன் தாக்கம் மிகவும் பெருகிற்று. அதில் குறிப்பிடத்தக்க நன்மைகளும் உள்ளன.

டிஜிட்டல் ஊடகங்களின் பரிணாமமும் வளர்ச்சியும்

சமூக ஊடகங்களின் தாக்கம் பெருமளவு 2010-க்குப் பிறகுதான் வளர்ச்சியுற்றன. அதற்கு முன்னரே தமிழ் சூழலில் வலைப்பூக்களில், வலைதளங்களில் தீவிரமாக எழுத ஆரம்பித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வாசகர்களைப் (இணைய வசதி கொண்ட வாசகர்களை) பெற்றார்கள். சிற்றிதழ் பரப்பின் வாசக-இணையத்தை வைத்திருக்கும் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் விரிவுபடுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கான சந்தை, வாசக அமைப்புகளை இணையதளங்கள்தான் உண்டாக்கின என்பதை உணர முடியும். 2008-க்குப் பிறகான சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி, ஈழம், ஆஃப்கன், வளைகுடா நாடுகளின் நடந்தேறிய போர் ஆகியன பொழுதுபோக்கு ஊடகங்களை சமூக ஊடகமாக மாற்றின.

தமிழகத்திலும் இன அழிப்பு, சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களை முன்வைத்து சமூக ஊடகமாக உருமாற்றம் கொண்டது.. எந்த எழுத்து மரபிலும், சிந்தனைப் பள்ளியிலும் சேராதவர்கள் அரசியல்படுத்தப்பட்ட அமைப்புகளில் அல்லது சுயமாக வந்தப் புதியவர்கள் பரவலாக ஒரு எழுத்துக் களத்தைக் கண்டடைந்தார்கள்.

திரையுகத்தில் இலக்கியச் சந்தை

வலைப்பூக்களில் இருந்து நூல்கள் பதிப்பிக்கப்படும் காலத்தில்தான் பிரபல புத்தகக்கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வந்தன. சமூக ஊடகம் வளரும்பொழுது தொழில்நுட்பமும் அடுத்த கட்டத்திற்கு வருகையில் குறைந்த எண்ணிக்கையிலும் நூல்கள் அச்சிடும் சாத்தியம் உருவானது. 2010-க்குப் பின்னர் புதிய பதிப்பகங்கள், புதிய எழுத்தாளர்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தார்கள். காணொளி ஊடகங்கள், ஒலிப் புத்தகங்கள் போடும் நிறுவனங்கள் சந்தையை நிறுவ ஆரம்பித்தன.

வாசிப்புக்காக இயங்கும் சமூக ஊடகக் குழுக்களே வாசிப்பை விரிவாக்க ஆரம்பித்து, எழுத வைத்து, பதிப்பித்து, விருது அளிக்கும் வரை போஷிக்கவும் செய்ய ஆரம்பித்துவிட்டன. திருமணத்திற்கான ஒட்டுமொத்த ஒப்பந்த முகமை போல் ஒரு குழுவில் இணைந்தால் எல்லாவற்றுக்குமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்கிற அளவிற்கு.

சந்தையாதல் என்கிற விஷயத்தில் கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் புத்தகச் சந்தையில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மேற்சொன்ன இவ்வாக்கியம் இலக்கியத்தரம் அ மதிப்பீடுகள் எவற்றோடும் தொடர்புடையது அல்ல. ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு என்று பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் சந்தை விரிவடையும் ஆகிருதியோடுதான் இருக்கிறது.

புதிய யுகத்தின் வாசிப்பு

நல்ல விமர்சனங்களின் காரணத்தால் ஒரு நூல் வாசிக்கப்படுவது எப்போதும் ஆரோக்கியமானதுதான். ஆனால் வாசகர்களைக் கவரும் விதத்தில் அமையும் படைப்புகளே அதிகம் வாசிக்கப்படுகின்றன.

கவரும் விதம் எனச் சொல்வது சித்தாந்தத்தையோ, தத்துவத்தையோ, அரசியலையோ முன்னெடுக்கும் படைப்பிலக்கியங்கள் வாசிக்கப்படுவது. அவ்விதமே சமூக ஊடகப் பிரச்சாரங்கள், குழுக்களில் நிகழ்கின்ற பரிந்துரைகள், ட்ரெண்டிங் எனச் சொல்லப்படும் பரபரப்பை உருவாக்கும் படைப்புகள் அதிக அளவு வாசிக்கப்படுதல் ஆரோக்கியம் இல்லாமல் பேசப்பட்டாலும், தற்காலத்தில் வாசிப்பைத் தீர்மானிக்க விமர்சனக் கட்டுரை தவிர்த்து எண்ணற்ற சந்தைப்படுத்தும் காரணிகளே வலுவாக இருக்கின்றன. இது சந்தையின் ஆரோக்கியத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதது.

செய்திகளையே கேலிப்படங்கள் வழி தெரிந்து கொள்ளும் மீம் கல்ச்சர் காலத்தில், தற்காலத்தின் புதிய வாசகர்கள் வாசிப்பதைக் காட்டிலும் கதைகளாகக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். யூ-ட்யூப், ஃபேஸ்-புக் உள்ளிட்ட செயலிகள் வாயிலாகவும் வாட்ஸப் போன்ற பகிரிகள் வாயிலாகவும் வாசிப்பு குறித்த முடிவுகளை எடுக்கிறார்கள். பெரும்பாலான வாசிப்புக்கான தேர்வு இப்படி குழுவாதத்தாலும் ட்ரெண்டிங் மற்றும் அசட்டுப் பரிந்துரைகளின் காரணத்தால் நிகழும் என்றாலும், அதேசமயம் நல்ல நூல்களையும் இதழ்களையும் இவ்வகையான ஊடகத்தில் சரியாகக் கொண்டு சேர்த்ததால் வாசகப் பரப்பு கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகமானதும் கூட. உதாரணம் புதுமைப்பித்தன் முழு சிறுகதைத் தொகுதி தரமான பதிப்பிலும் மலிவு விலையிலும் என கவனம் பெறும்போது, கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் மட்டும் 25000-க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையாகி இருந்தன. அதில் பத்து சதவீத வாசகர்கள் புதிதாக வாசிப்பை தக்க வைத்துக்கொண்டாலே அது ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை என்று சொல்ல முடியும்.

தொலைக்காட்சியில் வந்த ஒரு ரியாலிட்டி தொடரில் வந்த நூல்களின் பரிந்துரைகள் பல ஆயிரக்கணக்கில் விற்பனை ஆனதும் இத்தகையதுதான். இதனால் வரும் பாதகங்களை சாதகங்களைக் கொண்டு மறக்கலாம்.

வாசகர்களைப் பொறுத்தமட்டில் வாசிப்பிற்கான வழிகள் பலவிதத்தில் அனுகூலமாகி விட்டன. கிண்டில் செயலி வந்த பின்னர் தூக்கிச் சுமக்கும் பளு குறைகிறது என மின் புத்தகமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். புதிய தலைமுறையைச் சார்ந்தவர்கள் நேரடியாகவே மின் புத்தகமாகப் படிப்பதில் சௌகரியம் கொள்கிறார்கள். ஆனால் இந்த யுகத்தில்தான் பைரசி என்று சொல்லப்படும் திருட்டு மின்னணு கோப்புகளின் எண்ணிக்கை இந்த துறைக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது எனலாம்.

புது யுகத்தின் தேடலும் படைப்பும்

“தேடல்” இது படைப்பின் மூலப்பொருட்களின் ஒன்று. 21-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை படைப்பிலக்கியத்தில் தேடலுக்கு இருந்த முக்கியத்துவம் முற்றிலுமாக மாறிவிட்டது. தொழில் நுட்பங்களற்ற காலத்தில் நவீன இலக்கியங்கள் செழிப்படைய ஒருபுறம் சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வு, நாட்டாரியல் பதிவு என்று வேலை செய்தவர்கள் ஒருபுறம். மேற்குலகின் தற்கால இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டு, தமது சிற்றிதழ்கள் வாயிலாக மொழிபெயர்ப்புகளைத் தருவித்து, அயல் இலக்கியங்களை வாசித்து அவை குறித்து அறிமுகம் செய்து மாற்றங்களைக் கொண்டு வருபவர்கள் ஒருபுறம் என தேடல்கள் வாயிலாகவே படைப்புகளைக் கொண்டு வந்தவர்கள் அவர்கள். தாம் தேடிச்செல்கின்ற ஒன்று கிடைக்காமல் போகலாம், அந்தத் தேடலில் கிடைத்தற்கரிய வேறு ஒன்று கிடைக்கலாம் – அதுவே வாசிக்க மொழிமாற்றம் செய்யப்பட்டோ, அறிமுகப்படுத்தப்பட்டோ இருக்கக்கூடும்.

இலக்கியத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்ற பின் ‘பாப் டிலன்’ குறித்து முதன்முதலாக அறிமுகம் செய்துகொள்ளும் இதழ்கள், படைப்பாளர்களுக்கு மத்தியில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு சிற்றிதழுக்கு “கடவுளின் குரல்” என்று இசை விமர்சனம் எழுதப்பட்டிருந்த வரலாறு, இலக்கற்ற அல்லது சுதந்திரமான தேடலின் விளைவு என்று பெயர் வைக்கலாம்.

அதே சமயம் புதுயுகத்தின் தேடல் மிக எளிமையாகச் சுருங்கிற்று என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட விசயமோ, தத்துவமோ, வரலாற்றுப் பின்னணியோ, செய்தியோ எதுவாக இருந்தாலும் இன்று அது குறித்த தேடலுக்கு வேண்டிய மெனக்கெடல் எல்லாம் ஒரு வார்த்தை தான் (keyword) அல்லது அதற்குத் தேவையான ஹாஷ் டாக். எது குறித்துத் தேடுகிறோமோ அது குறித்த ஒரு சரியான வார்த்தையைக் குறிப்பிட்டுத் தேடினாலே போதும். நாம் அடைய வேண்டியவற்றை எளிமையான முறையில் காலத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

வாசிப்பின் பரப்பு எப்படி விரிவடைந்து இருக்கிறதோ அவ்வாறே தேடலின் பரப்பும் விரிவடைந்த அதே நேரம் அதற்கு நேர்மாறாக தேடலின் ஆழம் மிகவும் குறைந்து போனதாக மாறிவிடுகிறது. ஒன்றைத் தேடுகையில் வேறு ஒன்று அதைவிட நெருக்காமானதாகவோ ஈர்ப்பதாகவோ தெரிகின்ற அற்புதங்கள் ஏதுமற்ற வாழ்வாக மாறுகிறது.

மாத இதழ்களிலோ, வார இதழ்களிலோ ஒரு புக்கரோ அல்லது நோபல் விருது பெற்ற படைப்பாளியின் படைப்புகளைக் குறித்த கட்டுரை எழுதவோ ஒரு கீ-வேர்ட் போதுமானதாக அமைந்துவிடுகிறது. அதற்கு மீறியும் புதிய நூற்றாண்டில் எழுத வந்த படைப்பாளர்கள், அவர்தம் வாசிப்பு, பொருளாதார ரீதியில் கிடைக்கின்ற வாய்ப்பு, பணி நிமித்தம் கிடைக்கின்ற பயண வாய்ப்பு போன்றவை மிகப்பெரிய வாய்ப்புகளையும் தந்து விடுகிறது.

ஒரு நூல் குறித்து மதிப்புரை எழுதுவது போலவே, அந்த ஆசிரியரோடு காணொளி வாயிலாக நேர்காணல் செய்து பதிப்பிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தச் சாத்தியங்கள் அனைத்தையும் உருவாக்கித் தந்தது இன்றைய டிஜிட்டல் யுகம்தான். உலகின் எந்த மூலையிலும் தயாராகும் இலக்கியப் படைப்புகளையும் கூட இன்று வாங்க இயலும். எந்த மூலைக்கும் படைப்பிலக்கியத்தைக் கொண்டு சேர்க்கவும் இயலும்.

முன்பு உரிமம் பெறுவதற்கு கூட யெர்மனி, பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று முகவர்களை வைத்துப் பேசி படைப்புகளுக்கான உரிமம் வாங்க வேண்டியிருந்தது. இப்போது வர்ச்சுவல் புத்தக்காட்சிகள் வாயிலாக ஊரில் இருந்தபடியே சரவதேச புத்தகக் காட்சிகளில் கலந்துகொள்ள முடியுகிறது.

திரையுகத்தில் பெருந்தொற்றின் பங்கு

பெருந்தொற்று காலத்தில் பல பதிப்புகளை நிறுவனங்களும் எதிர்பாராத அளவு நஷ்டங்களைச் சந்தித்தாலும், பெருந்தொற்று காலம் புதிய சந்தையை உருவாக்கித் தருமளவு நிறைய விஷயங்களை புதிதாகத் தருவித்தது. ஊரடங்கு காலம் என்பது பெரிய அளவிலான செலவழிக்க முடியாத ஓய்வுக் காலத்தை (Leisure) தந்தது. பெருந்தொற்று எனும் அலையால் ஸ்தம்பித்துப் போன பொருளாதார இயக்கம் மக்களைப் பெரிதும் அச்சமூட்டியதில் வியப்பில்லை. அச்சம் என்பது கேளிக்கைகளின் போதாமைகளை வாசிப்பின் பயனாக உணர வைத்தது. இந்த ஓய்வும் அச்சமும் அவர்களுக்கு வாசிப்பை பழக்கப்படுத்தின என்று சொல்ல முடியும்.

பழக்கமே சந்தையை மீண்டும் தக்க வைத்தது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலை முடிந்த காலத்தில் மிகப்பெரிய லாபத்தை புத்தகச் சந்தை ஈட்டுத் தந்தது. ஆனால் அது எல்லாருக்குமானது அல்ல, ஊரடங்கு காலத்தில் மின் ஊடகங்கள் வழி தங்களை, தங்களது படைப்புகளை, ஆசிரியர்களைக் கொண்டு சேர்த்த நிறுவனங்கள் மட்டுமே ஊரடங்கு காலம் ஏற்படுத்திக் கொடுத்த வணிக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

தங்களைத் தகவமைத்துக் கொள்ளாத ஏனைய பாரம்பரிய புத்தக நிறுவனங்கள் தம்மை நிலைநிறுத்த பெரும் போராட்டங்களை எதிர்கொண்டன. ஒருபுறம் மின் துகளி ஊடகங்களின் பெரும் வெற்றியைப் பேசிக் கொண்டிருக்கையில்தான் இடி விழுந்தாற்போல அமேசான் எனும் பெரும் ஆலமரம் தனது அச்சுத் தொழில் எனும் கிளைகளைத் தனக்குத்தானே வெட்டிக் கொண்டது.

திரையுகத்தில்: பதிப்பாளனும் – விற்பனையாளனும்

பதிப்புத்துறையில் இந்த ஆண்டில் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி என்றால் வெஸ்ட் லாண்ட் எனும் அறுபதாண்டு கால பதிப்புலக வணிக அடையாளம் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1962-ல் ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2008-ல் டாட்டா நிறுவனத்தால் கைக்கொள்ளப்பட்டது. பின்னர் 2016-ல் அமேசான் வாங்கியது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிப்புலகத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இத்தனைக்கும் வெஸ்ட்லாண்ட் அண்மையில் வெளியிட்ட சில நூல்கள் மிகவும் கவனிக்கப்பட்ட நூல்களே, அண்மைக்காலத்தில் அமீஷ் எழுதிய மூன்று நாவல்கள் வரிசை (ஷிவா ட்ரையாலஜி, ராம் சந்திர வரிசை) விற்பனையில் அசுர சாதனை படைத்தது. அவ்வகையில் சேத்தன் பகத், அமிஷ் ட்ரிபாதி உள்ளிட்ட பெஸ்ட் செல்லர்களை வைத்துக்கொண்டு ஒரு வணிக நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குள் தன் சேவையை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்? லாபமின்மை மட்டுமா?

அப்படியென்றால் தாக்குப் பிடிக்கின்ற ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் தொழில் மீது வைத்திருக்கின்ற மதிப்பீடுகளுக்கும் ஒரு பெரும் நிறுவனத்தின் மதிப்பீடுகளுக்கும் இருக்கின்ற வித்தியாசம் என்ன? விழுமியங்களின் அச்சில் சுழலும் துறை அல்லவா இது?

மின் புத்தகங்களின் வரவிற்கு பின்னரே பதிப்புலகம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் மின் புத்தகங்களால் வாசிப்பு பழக்கம் அதிகமானதே என்பதை இத்துறையைச் சார்ந்தவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்ட விசயம். கிண்டில் அறிமுகமானதும் திருட்டுப் புத்தகச் சந்தையும் அதற்கு நிகராக தன் எல்லையை விரிவுபடுத்தியது. வெஸ்ட் லாண்ட் போன்ற இந்திய அளவில் மிகப்பெரிய வணிக ப்ராண்ட் ஒன்றை அமேசான் கையகப்படுத்திய காலத்தில் புத்தகச் சந்தை பெருமளவு இணைய வர்த்தகத்திற்கு மாறியிருந்தது. கணிசமான அளவிற்கு Self Publishing portal-கள் (எழுத்தாளர்களிடம் கட்டணம் வசூலித்து புத்தகம் போடும் முறை) உருவாகியிருந்தன. ஒலிப்புத்தகங்கள் வர ஆரம்பித்தன, செட்டாப் பாக்ஸோடு, அகன்ற அலைவரிசை இணைய சேவை நிறுவனங்களோடு புத்தகப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் உருவாகின.

கோவிட் ஊரடங்கு காலம் வாசிப்பிற்கான இந்த வணிகத்தை இணைய வாசிப்பிற்கும் ஒலிப்புத்தக சந்தைக்கும் உள்ள வாய்ப்பைப் பெரிதுபடுத்தியது.

புத்தகக்கடை தவிர்த்து நேரடியாக வாசகர்களைச் சந்தித்து விற்பனை செய்ய இருக்கின்ற வாய்ப்பு புத்தகக் கண்காட்சி. கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடைபெற்று வந்ததும் அதன் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வந்ததும் நாம் அறிந்தது தான். இந்நிலையில் கோவிட் 19-க்கு பின்னான சூழலில் இணைய வழியில் விற்பனை என்பதே மற்ற துறைகளைப் போல பிரதானச் சந்தையாக மாறிவிட்டிருப்பதைக் காண முடியும். இணைய வழி வர்த்தகத்தின் அதிகபட்ச பங்கு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டிற்கு தான். அதிலும் மின்புத்தகங்களில் 90%-க்கும் அதிகமான பங்கு ‘கிண்டிலை’ச் சேர்ந்ததுதான்.

எல்லா பதிப்பகங்களும் தமது நூல்களை பதிவேற்றுவதுடன் சுயமாகப் பதிப்பிப்பவர்கள், குழுமமாகச் செயல்படுபவர்கள் என எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குமிடமாக இது இருப்பதால் சந்தையின் அதிபதியாகிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு நிறுவனமும் தன் சொந்த இணையதளத்துடன் அமேசான், ஃப்ளிப் கார்ட் இணைய தளங்களின் இணைப்பையும் கொடுக்க ஆரம்பித்து விட்டன.

அண்மையில் சில முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் புத்தகக் கடைக்கு பதிப்பகங்கள் கொடுக்கும் தள்ளுபடி விலையை விட மிக அதிகமான தள்ளுபடியில் ஃப்ளிப் கார்ட் (அல்லது இணையச்சேவை) வாயிலாக ஒரு புகழ்பெற்ற அச்சகமே நூல் விற்பனையை அறிவித்திருந்தது. இதன் பெயர் ஒன் புக் மாடல். இதன்படி வாசகர் ஒருவர் கோரும் ஒரேயொரு நூலை மட்டும் அச்சகம் அச்சிட்டு அவருக்கு அனுப்பி வைக்கும். அதற்கு மேற்பட்ட ஒரு பிரதியைக்கூட இருப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக அந்த அச்சகமே பதிப்பகங்களோடு ஒரு ஒப்பந்தத்தைப் போடுகிறது. தாங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலின் மின் கோப்புகளையும் இந்த அச்சகம் வாங்கிக்கொண்டு அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற Multivendor Platform-கள் வாயிலாக நூல் விற்பனை செய்து அதற்கான கமிஷனை பதிப்பகத்திற்கு அளிக்கிறது.

பல பதிப்பகங்களுக்கு இத்திட்டம் லாபகரமானதாகத் தெரியவில்லை என்றாலும், இது நஷ்டத்தை தவிர்க்கும் வாய்ப்பாகத் தெரிகிறது. அதாவது பெராடோ தத்துவம் போல ஒரு பதிப்பகத்தின் இருபது சதவீத புத்தகங்களைக் கொண்டுதான் அதன் எண்பது சதவீத வருமானம் இருக்கின்றது என்கிற உண்மையின் அடிப்படையில் மீதமிருக்கின்ற 80 சதவீத நூல்களை இதைப் போன்ற ஒன் புக் மாடல் எனும் புத்தக இருப்பு வைக்கத் தேவையற்ற வணிகமாக மாற்ற இது உதவுகிறது. அதே வேளையில் ஒரு புத்தகக்கடைக்கே கிடைக்காத விலையில் ஒரு வாசகனுக்கு புத்தகத்தைச் சேர்க்க முடிகிறது என்கிற அளவிலும் இதனை ஒரு நல்வாய்ப்பாக பார்க்க இயலும்.

பொருளாதாரமாக மொத்த வணிக நடவடிக்கைகளின் புள்ளி விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடுவதில் மட்டும் நலன் கிட்டுவதில்லை. மாறாக பல படிநிலைகளில் ஒரு துறையில் ஈடுபடுபவர்களின் பங்கையும் மதிப்பிட வேண்டியிருக்கிறது.

பதிப்புத் துறையைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளருக்கும் வாசகருக்கும் இடையில் விநியோகஸ்தர், விற்பனையாளர் என்கிற அடுக்குகள் உண்டு. ஒரு நூலின் விலையில் 25-40 சதவீதம் பதிப்பாளருக்கும், 10-15 எழுத்தாளருக்கும், 10 சதவீதம் விநியோகம் செய்பவருக்கும், 30-40 விற்பனையாளருக்கும் எனப் பங்கு இருக்கின்றது. ஒரு பதிப்பாளரின் பங்கிலிருந்து அச்சகம், வடிவமைப்பு, எழுத்தாளர், மார்க்கெடிங் என்கிற செலவுகள் இருக்கின்றன. இதில் நேரடியாக அச்சகமே புத்தக அச்சிலிருந்து மார்க்கெடிங், விற்பனை என எல்லா செலவுகளையும் கைகொள்கையில் இடைநிலையில் அங்கம் வகிப்போரின் நிலை கேள்விக்குறியாகிறது.

ஒரு புத்தகக்கடையோ அல்லது ஒரு விற்பனையாளனோ இந்தத் தொழிலை வெறும் லாபத்திற்காக மட்டுமே செய்வதில்லை. வேறு எந்தத் துறையைக் காட்டிலும் புத்தகம் என்கிற மதிப்பீடு காரணமாக, பெரிய லாப நோக்கை மையமாகக் கொள்ளாமலே பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தனிநபர் புத்தக விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான புத்தகக்கடைகள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் பெரிய இக்கட்டைத் தர இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு புத்தக விற்பனையாளன் அழிவதால் சமூகம் நேரடியாக எவ்விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்று தோன்றும். ஆனால் கதை அத்தோடு முடியாது என்கிற விஷயத்தைத்தான் மேற்சொன்ன வெஸ்ட் லாண்ட் நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூலக ஆணையே இல்லை என்ற போதும் எந்த நம்பிக்கையுடன் இத்தொழிலை நடத்தி வருகிறோம்? கடந்த சில ஆண்டுகளாய் விற்பனை சரிந்துவிட்டது என்று சொல்லி சென்னை புத்தகக்காட்சிக்கு அரங்கு கோராத பதிப்பகங்கள் உண்டா?

இந்தத் துறையை லாபத்தையும் தாண்டி ஓட வைக்கின்ற விசை ஒன்று இருக்கிறது. அந்த விசையின் காந்தப்புலத்தின் மதிப்பீடு தான். ஒரு அறிவியக்கமாக, ஒரு நாகரிகமடைந்த சமூகத்தின் முகமாக, அரசியல் எழுச்சியில் அங்கம் வகிக்கின்ற ஒரு துறை என்பது தான். ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. ஸ்வீகாரம் பண்ணப்பட்ட குழந்தைக்கு இனிஷியல் மாற்றும் வேலையாகத்தான் இப்படியான கை மாறுதல்கள் இருக்கும். நேரடியாக Multivendor Platform வழியாக பதிப்பிக்க முடியும் அல்லது Self Publishing Portal வாயிலாக பதிப்பித்து முதல் பிரதிக்கான செலவோடு குறைத்துக் கொள்வோம் என எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை நம்பியிருப்பதை கைவிடும் காலம் மிக அண்மையில் இருக்கிறது.

ஒரு விற்பனையாளனின் தரவு ஒரு பதிப்பாளனுக்கு எத்தனை முக்கியமானது. அதைக் காட்டிலும் ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளரின் படைப்பு ஒன்றை 180 ரூபாய்க்கும் அதே நூலின் செம்பதிப்பை அழகுற அச்சிட்டிருக்கிற நூல் ஒன்றை 500 ரூபாய்க்கும் விற்பனைக்கு எடுத்து வைக்கின்ற புத்தக விற்பனையாளன் இரண்டையும் யாருக்கு விற்க வேண்டும் என்று தெரிந்தே வைத்திருப்பான். இணைய தளத்தின் அல்காரிதம் வணிகத்திற்கானதே.

டெல்லியின் கான் மார்க்கெட் என்பது புத்தகக்கடைகளால் நிரம்பிய பகுதி. கடந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான கடைகள் மூடப்பட்டு விட்டன. மும்பையில், சென்னையில் புகழ்பெற்ற கடைகள் வணிக மால்களில் இருந்து காலி செய்யப்பட்டன. நிறைய தனிநபர் விற்பனையாளர்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். பெரு நிறுவனங்களின் இலக்கு இப்போது பதிப்பாளர்கள் பக்கம்.

திரையுகத்தின் எதிர்காலம்

அச்சுப் பிரதிகளின் விலையேற்றம் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றுகொண்டே இருப்பதால், முழுமையாக மின்னூடகம் எனும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ஐரோப்பாவில், அமெரிக்காவிலெல்லாம் அண்மையில் அச்சுப் புத்தக வாசிப்பின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எப்படியிருந்தாலும் அச்சுப் புத்தகங்களின் சந்தை மிகக் கடுமையானதாகவும் புத்தக விற்பனை செய்யும் செயலியே எழுத்தாளனிடம் நேரடியாக உரிமம் பெற்று அச்சிட்டு விநியோகம் செய்ய ஆரம்பிக்கையில் பதிப்புலகம் மிகவும் சுருங்கிப்போய்விடும்.

அதே சமயம் விழுமியங்களையும் இலக்கிய மதிப்பீடுகளையும் கொண்டிருக்கின்ற சிற்றிதழ் தன்மையுடைய பதிப்பு நிறுவனங்களை மட்டும் எந்த பொருளாதார மண்டலத்தாலும் போட்டிகளாலும் அழிக்க முடியாது என்பதே நிதர்சனம். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்திவரும் அற்புத ஜோதி. அதுவே எதிர்காலம்.


ஜீவ கரிகாலன்டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது.

மின்னஞ்சல்: kaalidossan@gmail.com

ஃபோகஸ்

0

லட்சுமிஹர்

ப்படி நடக்க வேண்டும் என்று ஒருமுறை மனதில் நினைத்துக் கொண்டார். அதன்படி நடப்பது கண்டிப்பாக முடியாத காரியம் என்று வேலனுக்கும் தெரியும். இருந்தும் அவரின் எண்ணம் அதை செய்துபார்த்து விடுகிறது. எங்கிருந்தோ பதட்டமாக ஓடிவந்த உதவி இயக்குனர் வேலன் மற்றும் அவரின் உடன் இருந்தவர்களிடம் “சார் பேக்ரவுண்டுனு சொன்னதும் நடக்க ஆரம்பிச்சரணும்” என்று சொல்லி முடித்துவிட்டு எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. வேலனுக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக வருவது வழக்கம் அதனாலோ என்னவோ பதட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் வேலனின் அருகிலிருந்த பெண்ணுக்கு முதல் முறை போல அவளின் முகத்தில் இருந்த ஒரு பயம் அதை காட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்தது. வேலன் எவ்வளவோ பேச முற்பட்டும் அருகில் நிற்பவள் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே முடித்துவிட்டு மீண்டும் அந்த பதட்டத்திற்குள் சென்றாள். ஏன் இவள் இவ்வளவு பயம் கொள்கிறாள். பிடித்துதான் வந்திருக்கிறாளா..? இல்லை வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்தவளை உள்ளே இழுத்து போட்டுவிட்டனரா..? எப்படியும் நம் முகம் எந்த ஓரத்தில் வர போகிறதோ.. பிரேமில் இருப்போமா.. மாட்டோமா.. என்றுகூட தெரியாது என்றும் யோசித்துக் கொண்டார். இந்த முறை வேலனுக்கு கணவர் கதாபாத்திரம். அருகில் நின்றிருப்பவளுக்கு அப்படியே எதிராக இருப்பாள் வேலனின் மனைவி. ஏனோ இவளைப் பற்றி யோசிக்கும் போது மனைவியின் ஞாபகமும் உடன் சேர்ந்துவிடுகிறது. இப்போது சுமார் நூறு கிலோவை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். நன்றாக இல்லை கொஞ்சமாவது உடம்பை குறைக்க வழியைப்பார் என்று விளையாட்டுக்கு சொன்னால்கூட கோபித்துக் கொள்கிறாள். இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் என்று மூச்சிரைக்க நடந்தால்தான் ஏதோ பயன் கிடைக்கும். இப்போதெல்லாம் மனைவி என்று சொன்னாலே அவளின் பருத்த உடல் தான் வேலனுக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

காட்சி படமாக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவுற்றதற்கு சாட்சியாக யூனிட் அமைதியாக மாறி டைரக்டரின் குரலுக்கு காத்துக்கொண்டிருந்தது. எப்படி இதை முடித்தோம் என்று தெரிவதற்குள் பதட்டமாக டைரக்டர் பேக்ரவுண்ட் என்று சொன்னதும் வேலனின் கைகளை பிடித்தவள் அவரின் நிஜ மனைவியாகவே ஒரு ஐந்து நிமிடம் வாழ்ந்து, வேலனிடம் அவளின் பெயரை கூட சொல்லாமல் அந்த காட்சி முடிவடைந்ததும் மறைந்து விட்டாள்.

‘என் பொண்ண நான் ஹீரோயினா ஆக்குறேன்’ என்று வேலனின் மனைவி மஞ்சு சொல்லும் போது மனதிற்குள் அப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று யோசித்துக் கொண்டாலும் அது நடந்தேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று நன்றாகவே தெரியும். ஆனால் என்ன சொல்லிவிட முடியும் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டை போடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டார். ஆரம்பத்தில் விளையாட்டாக எல்லா அம்மாக்களும் தன் பிள்ளையின் அழகைப் பற்றி சொல்வதற்கான வெளிப்பாடு என்று நினைத்தவருக்கு மஞ்சு மறுபடி மறுபடி சொல்லும்போது அவள் உண்மையிலேயே அந்த ஆசையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாளோ? என்று அச்சமும் தோன்றியது. அந்த ஆசையை வலு செய்வது போல பிள்ளையும் அம்மா சொல்படி அங்கும் இங்கும் என்று நடந்தும் நடித்தும் காட்டுகிறது இப்போது.

தன்னுடைய மகளுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் வேலனுக்கு தோன்றியது. அதற்கு முன் பரிச்சாத்தமாக ‘அப்பா உன்ன ஷூட்டிங் பாக்க கூட்டிட்டு போறேன்..’ என்றதற்கு அவள் சந்தோச முகத்துடன் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாள். இடைப்பட்ட நேரத்தில் அப்பாவிற்கு மகள் அதை ஞாபகப்படுத்திக் கொண்டும் இருந்தாள் தனது சிறு சிறு செய்கையால்..

வேலன் ஜாலியாக ஆரம்பித்ததுதான் இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் வேடம்.. நடிகனாக வேண்டும் என்ற கனவோ, இதில் காசு பார்த்திட வேண்டும் என்கிற நோக்கோ எதுவும் இல்லாமல்தான் இதில் இறங்கினார். ஆயிரம் விளக்கு ஜெயின் டார்க் லைட்ஸ் கடையில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்துவருகிறார்.

திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் சனிக்கிழமை மாலை ஐந்து வரை கடையில் தான். இடையில் இரவு காட்சிகள் எதுவும் படம் பிடிக்கபட்டால் அதில் கலந்து கொள்வார். இல்லையென்றால் ஞாயிறு அன்று எங்கோ கண்டிப்பாக ஒரு இடத்தில் நடித்துக்கொண்டிருப்பார். ‘எப்போ பெரிய நடிகனாகப்போற..’ என்று ஜெயின் சாப் கேட்கும் போதெல்லாம் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக வைத்திருப்பார். வேலன் பெரிய நடிகனாக வேண்டும் என்றெல்லாம் நினைத்ததுகூட கிடையாது. எப்படி இதெல்லாம் தொடங்கியது என்று நினைவில் இல்லை அவருக்கு. உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நண்பன் எதேச்சையாகக் கடைக்கு வந்திருந்த போது ஷூட்டிங் பார்க்கக் கூட்டிப்போயிருந்தவன் திடீரென்று “உள்ள வந்து நில்லு மச்சான்.. இப்படி சொன்னதும் நீ இங்கருந்து அங்க போ” என்று முதல் முறையாகச் சொல்லிவிட்டுப் போனான். இன்று வேலன் அருகில் நின்றிருந்தவளுக்கு இருந்த அதே பயம்தான் அன்று அவருக்கும் இருந்தது. ஏனோ அன்றிலிருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வேண்டும் என்ற ஆசை அவரை தொற்றிக்கொண்டது. அதற்குமேல் எதுவும் வேலனுக்குத் தோன்றியது இல்லை. இந்த ஆண்டுகள் எல்லாம் அப்படியே கழிந்தது. கடையில் போதுமான வருமானம் வருகிறது, மகிழ்ச்சியாக இருக்கிறோம். போதும் என்கிறபோது மனைவிக்கு மகளை நடிகையாக்கும் கனவுக்கான பேச்சுக்கள் எழும்போது ‘எதுக்கெடுத்தாலும் இருக்குறது போதும்னு இருந்தா… பிள்ளைய வச்சுட்டு பொழைக்க முடியாது’ என்பாள் எதிர் பதிலாய். அப்படின்னா நானே கூட்டிட்டு போறேன் என்றதற்கு ‘என்ன அந்த முன்னுரூவா சம்பளத்துக்கா..’ என்று கேட்க வேலனுக்கு சங்கட்டமாக இருந்தது.

அப்போது தான் இவ்வளவு நாளும் என்னுடன் இவள் போதாமல் தான் வாழ்ந்திருகிறாளோ..? என்ற கேள்வி வேலனுக்கு முதல் முறையாக எழுந்தது. இதில் மட்டுமா இல்லை.. இன்னும் எதில் எதில் இப்படி இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் பின்னர் அது தெரிந்துகொண்டு என்ன நடக்கப்போகிறது. ‘நான் என்ன ஹீரோவா மரத்த சுத்தி டூயட் பாடுறதுக்கு..?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

இன்னைக்கு இங்க ஷூட்டிங் இருக்குனு எப்போதும் சொல்லும் அதே ஜூனியர் ஆர்டிஸ்ட் நண்பன் ஞாபகம்தான் வருகிறது. அவனை மாதிரி நிறைய ஆடிசன் எல்லாம் வேலன் போனது கிடையாது. அந்த நண்பனின் பெயரே வேலனுக்கு முதல் அறிமுகத்திலிருந்து மறக்காமல் இருக்கிறது ‘படத்துக்காக இப்படி வச்சுருக்கீங்களோ’ என்று கேட்டதற்கு இல்லை பெயரே அப்படிதான் என்றார் அந்த கமல்தாஸ். எங்க வெளியூரா என்ற வேலனுக்கு பக்கா சென்னை பாஸு என்றார் நக்கல் தொனியில். அன்று ஆரம்பித்த பழக்கவழக்கம் இந்த பத்து ஆண்டுகள் விடாமல் தொடர்கிறது. எப்போதிருந்து உங்களுக்கு இந்த ஆசை என்றதற்கு ‘பிடிக்கும் பாஸு’ என்று சொன்னார். சினிமா சம்பந்தமான நிறைய விசயங்கள் கற்று வைத்திருந்தார். நடிப்பைத் தாண்டி டெக்னிக்கல் விசயங்களும் நிறைய தெரிந்தது. உலக சினிமா பற்றி அவர் பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. “அங்க இருக்குற அளவுக்கு தெறமசாலிங்க இங்கயும் இருக்காங்க பாஸு. ஆனா இங்கதான் யாரும் கண்டுக்க மாட்டாங்க” என்று சொல்வது அவருக்கும் பொருந்தும் என்று யோசித்திருக்கிறார் வேலன். வேலனை விட வயதில் குறைந்தவர் என்றாலும் இருவரும் நண்பர்களாகவே பழகினர். கமல்தாஸ் சமீபத்தில் தான் நாற்பதைக் கொண்டாடினார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவும் இல்லை. “ஏன்பா சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணு” என்ற கேள்விக்கு கான்ஸ்டன்ட் ஆக சிரித்துக்கொள்வார். அது அவரின் முப்பதாவது சிரிப்பு என்பார்.

எண்கள் அடிப்படையில் எமோஷன்ஸை வைத்திருப்பார். இந்த ஆண்டுகளில் அவருடைய நடிப்பிற்கும் அவரின் ஆசைக்கும் சினிமா தீனி போட்டதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மனிதர் விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். இதற்கு நடுவில் துணை நடிகராக நடித்த அவரது படம் ரொம்ப நாட்களாக வெளிவராமலேயே இருந்தது. “அது வரட்டும் பாஸு.. கோலிவுட்டையே ஒரு ரவுண்டு வரேன்” என்று சொல்லி சிரித்துக்கொள்வார் கமல்தாஸ்.

வேலன் அவரிடம் தன் மகளை நடிக்க வைக்க வேண்டும் என்று முதலில் கூறினார். கமல்தாஸுக்கு முதலில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஏனென்றால் வேலனைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார். வேலன் எதற்கும் ஆசைப்படாத அப்பாவி என்றே கமல்தாஸ் நினைத்திருந்தார். அப்படி இருக்கையில் மகளை நடிக்கவைக்க வேண்டும் என்று அவன் சொல்வது அதிர்ச்சியாகவே இருந்தது.

“என்ன நண்பா யோசிச்சிட்டு இருக்க? நீ கொடுக்குற ஷாக்கத்தான் நானும் வீட்டுல கொடுத்தேன், என் மனைவி பிடிவாதமா இருக்கா, அவள் ஆச இப்போ புள்ளையையும் தொத்திக்கிச்சு.. இப்போ அந்த பொடுசும் வாய் தெறந்தே கேக்க ஆரம்பிச்சிருச்சு…”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நல்ல விசயம் தான்.. நம்ம மேனேஜர் கிட்ட சொல்லி வைப்போம்..” என்று முடித்துக்கொண்டார் கமல்தாஸ்.

அதற்கு பிறகான நாட்களில் கமலதாஸை நேரில் சந்திப்பதற்கான தருணம் அமையவில்லை. போனில் முயற்சி செய்தும் எடுக்கவில்லை. அது சுவிட்ச் ஆப்பா ஆகியே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் கடை வேலை கூடுதலாக இருந்தது. மனைவியின் நச்சரிப்பும் இப்போது கூடிவிட்டதோ என்று தோன்றியது. வீட்டிற்கு போனால் அடுத்து என்ன என்று மஞ்சுவின் கண்கள் வேலனை கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது. இதற்கு நடுவில் இரண்டு மூன்று படங்களுக்கு எப்போதும் போல ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக போய் வந்தார். அங்கெல்லாம் மகள் குறித்தான தகவல்களை எழுதிய போட்டோவையும் கொடுத்துவிட்டு வந்தார்.

அப்போதுதான் மனைவி நமது மகளை யூ-டியூப் சேனலுக்கு நடிக்கக் கேட்கின்றனர் என்று சொன்னாள். அவளும் ஒருவிதத்தில் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்றாள். அதை அவள் அழுத்தியும் சொன்னாள். அதையெல்லாம் பெரிதாக்காமல் யார் என்ன என்று தகவல்களைப் பகிரச் சொன்னார். நம்பும்படியான ஆட்களாகத்தான் இருந்தனர். மகள் நடித்து விடுவாளா..? என்ற பயமும் எழத் தொடங்கியது. அந்த நபர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசினார் வேலன் இதை பற்றி. அவர்கள் ‘பரவால சார்.. ஒன்னும் பிரச்சனை இல்லை. நாங்கள் பார்த்துக்கறோம்’ என்றது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.

இரவு மகள் உறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த வேலனுக்கு கமல் தாஸின் நண்பரிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. கமல் எதிர்பார்த்து காத்திருந்த படம் ட்ராப் என்றும், அவரை ரொம்ப நாட்களாகக் காணவில்லை.. அவரை கோடம்பாக்கத் தெருக்களில் பார்க்கும் பட்சத்தில் எனக்கு தெரிவிக்கவும் என்று அவரின் நம்பரையும் பகிர்ந்திருந்தனர்.

அது கண்டிப்பாக தனிப்பட்ட ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவல் கிடையாது. அது ஒட்டு மொத்தமாக பார்வர்ட் செய்யப்பட்டது. அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருந்தார் வேலன். கமல்தாஸின் அந்த நாற்பது வயது முகம் நினைவில் வந்து நின்றது. வேலனுக்கு சினிமா பற்றியான அடிப்படை புரிதலைச் சொல்லித் தந்தவர். வேலன் கமல்தாஸை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார். கண்டிப்பாக ஒருநாள் ஜெய்ப்பார் என்ற நம்பிக்கையை கமலதாஸனுடன் பழகியவர்கள் அனைவரும் நம்பினர். அவரைப் பற்றியான இந்தக் குறுஞ்செய்தி மனதில் நாளை மகளை படப்பிடிப்பிற்கு கூட்டிப்போக வேண்டுமா..? எதற்கு இந்த உலகத்திற்குள் நம் மகளையும் இழுத்துவிட்டு அவள் சிரமப்படப் போவதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உறங்க விடாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

கமல்தாஸை மீண்டும் பார்க்க முடியுமா என்று மனம் அடித்துக் கொண்டது. நேரில் பார்த்தால் ‘கண்டிப்பாக ஜெயிப்போம் பாஸு’ என எப்போதும் சேர்த்து சொல்லும் வார்த்தைகளுக்காகவே அந்த முகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கமல்தாஸின் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டார். இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருந்தது.

மஞ்சுவிடம் இதெல்லாம் வேண்டாம் என்று எழுந்தவுடன் சொல்ல, பெரிய சண்டையில் தொடங்கியது இந்த நாள். பதிலுக்கு பதில் பேசி சண்டை நின்றபாடில்லை. வேலன் இறுதியாக கூட்டிப்போக முடியாது என்று சொல்லி கடைக்கு கிளம்பிவிட்டார்.

மனைவி சண்டையின் போது வேலனின் அறியாமையையும் இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் தொழிலையும் சொல்லி பேசிய பேச்சுக்கள் மீண்டும் மீண்டும் காதிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தன. இந்த தொழிலை ஏன் செய்தோம் என்று தோன்றும் அளவு அவர் வருத்தப்பட்டார்.

முதன் முதலில் தான் வேலை செய்த படத்தைப் பார்க்க அவர் மட்டும் போனார். ஹீரோ பேசிக்கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார் வேலன். அவர் நினைத்தை விட நிறைய நேரம் அந்தக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று மனம் துடித்தது. முதலில் மஞ்சுவிடம்தான் சொன்னார். அவளும் அவருக்கு இணையான சந்தோசத்தை வெளிபடுத்தினாள். அப்படி பெரும்பாலும் நிறைய நேரங்களில் அமைவது இல்லை என்று அடுத்தடுத்த படங்களில் புரிந்து கொண்டார். அவர் இருந்த பல காட்சிகள் அவுட் ஆப் ஃபோகசில்தான் இருந்தது.

அந்த யூ-டியூப் சேனல் நபர்களிடமிருந்து கால் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் அதை எடுக்காமல் தவிர்த்தார். கமல்தாஸின் நம்பருக்கு மறுபடியும் போன் செய்தார். இந்த முறை கண்டிப்பாக ரிங் போகும், கண்டிப்பாக எதிரிலிருந்து பதில் கிடைக்கும். மகளை நடிக்க வைக்கலாமா? இந்த துறையில் உள்ளே நுழைப்பது சரியா என்று மீண்டும் ஒருமுறை கேட்கத்தான் வேண்டும். பாஸு போன எடு என்று அந்த நம்பருக்கு முயற்சி செய்தார். ஆனால் அது மீண்டும் அதே பதிலைத்தான் கொடுத்தது. ஒரு கட்டத்தில் சலித்துப் போனவராய் முயற்சி செய்வதை நிறுத்திக் கொண்டார். எதற்காக இப்படி அடுத்தவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது வேலனுக்கு. சண்டையின் போது மனைவி சொன்ன வார்த்தை வந்து விழுந்தது ‘இப்படி பயந்து பயந்துதான் ஓரமாவே நிக்குறீங்க..” என்றாள். அங்குதான் சண்டையை முடித்த இடம். இல்லை வேலன் மனைவியிடம் பேசுவதை நிறுத்திக்கொண்ட இடம். ஆம்.. இத்தனை நாட்கள் ஓரமாகத்தானே நின்றிருந்தோம்.. படத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் அப்படித்தானே நின்றிருந்தோம் என்று தோன்றியது.

தனக்குள்ளாகவே அதுவரை முயற்சி செய்த படக்குழுவினரிடம் உடனே கூட்டி வந்து விடுகிறேன் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும் “உங்க கமல் தாஸ் தோத்தாருன்னா.. எல்லாரும் தோப்பாங்களா” என்று மனைவி சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமல் கண்டிப்பாக ஜெய்ப்பார் என்று வேலன் இப்போதும் உறுதியாக நம்பினார். இதுநாள்வரை தன்னிடம் உழைப்பு இருந்தது. அதிர்ஷ்டம்தான் இல்லை என்று தோன்ற, ஜெயின் சாப் அழைக்கும் ஓசை கேட்டது. அதற்குப் பணிந்து கூடத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட ராட்சச லைட்டை நாற்பது அடி மேல் ஏற்ற வேண்டிய பணித்தொடங்கியது.

‘எப்போதான் முன்னாடி வர போறீங்க..’ என்று மனைவி சொன்னது நினைவில் வர, இனி பின்னால் நிற்க மட்டும் போகக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தை வழுக்கும் சரடின் சத்தம் மீட்டுக்கொண்டு வந்தது. அவ்வளவு பெரிய ராட்சச லைட் அவரின் மேல் விழப்போகிறது என்பதை உணர்ந்தவர் எல்லாம் கைமீறிப் போனதாகவும் அந்த இருபது அடி உயரத்திலிருந்து விழப்போகும் லைட்டிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தை விடுத்தார் வேலன். சரசரவெனக் கீழிறங்கிக் கொண்டிருந்த லைட் தலைமேல் வந்து விழ ஒரு சாண் அளவில் வந்து நின்றது.. சுதாரித்தவராய் அங்கிருந்து விலகினார். ஜெயின் சாப் ‘அதிர்ஷ்டக்காரன் தான்..” என்றார் பதட்டமாக.

அந்தக் கண்ணாடி லைட் மேலே விழுந்திருந்தால் வேலன் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. மனதை விட்ட ஒருநொடி என்னென்னவோ தோன்றியது. சாவின் பயம் உணர்ந்து வாழக் கிடைத்த நொடிகளை கண்ணீரால் அழுது தீர்த்தார் வேலன். தேம்பித்தேம்பி அழும் வேலனை உடன் பணியாற்றும் ஊழியர்கள் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர். அந்த அழுகை எதற்கு என்று வேலனுக்கு மட்டுமே தெரியும்.

கைக்கு வந்த படப்பிடிப்பு வாய்ப்பை தவறவிட்டோமே என்று தோன்றியது வேலனுக்கு. எப்படி இனி மகளிடமும் மனைவியிடமும் முகத்தை காட்டுவது என்று தெரியாமலேயே வீட்டிற்கு வந்துசேர்ந்தார்.

மனைவியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது விழித்தவர் கண்களில் ஹால் டேபிளின் மேல் இருந்த ஆயிரம் ருபாய் கண்ணுக்குத் தெரிந்தது. அதைச் சுற்றியே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து அம்மாவும் மகளும் வீட்டிற்குள் வந்தனர். கோவிலுக்குச் சென்று வந்ததற்கான சுவடாய் இருவரும் திருநீறு வைத்திருந்தனர். மகள் வேலனைப் பார்த்ததும் அவர் மடியில் உட்கார்ந்துகொள்ள ஓடிவந்தாள். மஞ்சு தடுக்கவில்லை. ஓடியவளை நிறுத்தி அப்பா கிட்ட கொடு என்று திருநீறைக் கொடுத்தாள்.

ஓடிவந்தவள் வேலனின் மடியில் உட்கார்ந்து கொண்டு திருநீறைப் பூசிவிட்டு, ‘இன்னைக்கு ஷூட்டிங் போனோமே..’ என்றாள். மனம் ஏனோ அவ்வளவு சந்தோஷம் கொண்டது. அந்த ஆயிரம் ரூபாய்க்கு பின்னால் இருந்த கதை இப்போது பிடிபட்டது. மனைவி வேலனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ மஞ்சு அவ்வளவு அழகாக இருப்பதாகத் தெரிந்தது வேலனுக்கு…

குறுஞ்செய்தி ஒன்று கமல்தாஸிடமிருந்து வந்திருந்தது.

‘பாஸு…’


லட்சுமிஹர் – பொறியியல் பட்டதாரியான இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக தற்போது வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com

இலங்கைத்தீவின் நெருக்கடி: ரணிலின் பதவியேற்பும் மக்கள் போராட்டத்தின் எதிர்காலமும்

ரூபன் சிவராஜா

லங்கைத் தீவின் அரசியலில் புதிய களம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்டது. அந்தக் களம் அரசியல் மாற்றத்திற்கான களம் அல்ல. ஆட்சி மாற்றத்தைக் கோரிக்கையாக முன்வைத்த களம் என்பது அறியப்பட்ட ஒன்றே. ஈற்றில் அது வெறும் காட்சி மாற்றமாக மட்டுமே ஆகியிருக்கிறது. அந்தக் காட்சியில் புதிய நடிகர்கள்கூட இல்லை. களம்புதிது எனினும் பழைய நடிகர்கள்கதான்.

மார்ச் மாதத்திலிருந்து காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவந்த ‘Gotta Og Home’ போராட்டம் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சிக்கும் அவர்களது அரசியல் எதிர்காலத்திற்கும் சேர்த்துச் சாவுமணி அடிக்கப் போகின்றது என்பதாகச் சில மட்டங்களில் நம்பப்பட்டது. மே 9 அன்று மகிந்த பதவி விலக நிரப்பந்திக்கப்பட்டமை மற்றும் மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட வன்முறை முறியடிக்கப்பட்டமையும் அந்த நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தது. அது மட்டுமல்லாது மக்கள் எழுச்சியும் அது தொடர்பான ஊடகச் சித்தரிப்புகளும் அத்தகைய பிம்பத்தையே கொடுத்திருந்தன. ஆனால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆக்கப்பட்டுள்ளமை களநிலவரங்களின் நகர்வையும் விளைவுகளையும் வேறுதிசைக்கு மாற்றியுள்ளது. மறுவளமாகச் சொல்வதானால் மக்கள் போராட்டத்தினை மந்தமாக்கியுள்ளது.

ரணில் ஒரு தோற்றுப்போன தலைவர்

ரணில் வரவு எந்தவகையிலும் மாற்றம் அல்ல. அதனை ஆட்சிமாற்றம் என்றுகூடக் கூறமுடியாது. ஏற்கனவே 5 தடவைகள் ஆட்சி செய்தவர்தான் அவர். ஆனால் ரணில் அடிப்படையில் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் தலைவர், கட்சித்தலைவர், ஜனவசீகரமற்ற தலைவரும்கூட. கடந்த 2020-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு இடத்தினை அதுவும் தேசியப் பட்டியல் நியமனத்தின் மூலம் பெற்றது அவருடைய ஐக்கிய தேசியக்கட்சி. நாட்டின் பிரதான கட்சி – பலமுறை ஆட்சியிலிருந்த கட்சி – பிரதான எதிர்க்கட்சி என்ற பல்வேறு நிலைகளிலிருந்து சிதைவடைந்து மக்கள் ஆதரவை முற்றிலும் இழந்த ஒரு தோற்றுப்போன கட்சியின் தலைவரான ரணில் இன்றைய நெருக்கடிச் சூழலில் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அது கோத்தபாய ராஜபக்சேவுடனான ஏதோவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிகழ்ந்தேறியிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ராஜபக்சேக்களைப் பாதுகாப்பது என்பதில் சந்தேகங்கள் இருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பது என்பது சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது என்ற நேரடியான அர்த்தத்தைக் குறிக்கின்றது. அத்தோடு மேற்குலகுடன் உரையாடாமல், மேற்கின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாமல் ரணில் இம்முடிவுக்கு வந்திருக்கவும் வாய்ப்பில்லை. ராஜபக்சேக்கள் தமக்கான கால அவகாசத்துடன் மீண்டும் அரசியலுக்குள் மறுபிரவேசம் செய்வது, குறிப்பாக நாமல் ராஜபக்சவின் நாடாளுமன்றத்திற்கும் அரசியலுக்குமான மீள்வருகை சாத்தியமற்றதாகிவிடவில்லை.

அரசியல் மாற்றத்திற்கான சாத்தியம்?

ரணிலின் வருகை மூலம் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தைச் மீளச்சரிப்படுத்தும் நகர்வுகள் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றனவற்றின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுபவராக அல்லது அவற்றுக்கான உத்தரவாதத்தை வழங்குபவராக ரணில் இயங்குவார். உலக நாடுகளும் நிதிநிறுவனங்களும் கடன் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரக்கூடும். ரணில் அடிப்படையில் மேற்கின் செல்வாக்குடையவர். இன்னும் சொல்லப்போனால் மேற்கின் செல்லப்பிள்ளை. பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்குரிய நிதியுதவிகள், கடனுதவிகளைத் துரிதப்படுத்திப் பெறுவதற்கு ரணில் பிரதமராக இருப்பது பயனளிக்கும் என்பதைத் தவிர வேறெந்த அரசியல் மாற்றங்களையும் எதிர்பாக்க முடியாது.

மகிந்தவைப் பதவி விலக வைத்தமை போராட்டத்தின் வெற்றி. மக்கள் போராட்டத்தின் அடிப்படையான சிக்கல் என்பது கோத்தபாயவை பதிவியிலிருந்து அகற்றுவதை அவர்களுடைய முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்தமைதான். ஒரு எடுகோளாக கோத்தாபாய பதவி விலகும்நிலை ஏற்படுவதாக வைத்துக்கொண்டால், ரணில் ஜனாதிபதியாகவும் ஆகின்ற வாய்ப்பும் உள்ளது. அப்படி நேரும்போது போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும். போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துவிடும். ஒட்டுமொத்தத்தில் ரணில் பிரதமராக ஆக்கப்பட்டமையின் மூலம் போராட்டக்காரர்களின் கோரிக்கையும் இலங்கைத்தீவின் நிலவரம் தொடர்பான கவனக்குவிப்பும் திசைதிருப்பப்பட்டுள்ளது. இனி ரணில் தலைமையிலான அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதன் மீதே கவனம் மையம் கொள்ளும்.

‘Gotta Go Home’ கோரிக்கையின் பலவீனம்

‘கோத்தா வீட்டுக்குப் போ’, ‘எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு’ என்பவையே போராட்டத்தின் முக்கிய பதாகைகள், கோஷங்களாக வெளிப்படுத்தப்பட்டன. இது தமது அன்றாட வாழ்வில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் மீதான கூட்டுக்கோபம். ரணிலின் பதவியேற்பும் அதன் விளைவாக குறுகிய கால அடிப்படையில் ஏற்படக்கூடிய புதிய அமைச்சரவைகள், நாடாளுமன்றத் தீர்மானங்கள், பொருளாதார முன்னேற்றங்களாலும் தணித்துவிடக் கூடிய கோபம். தமது பொருளாதார வளங்களைச் சூறையாடிய ஒரு குடும்பத்தின் மீதான எதிர்ப்பு என்பதைத் தாண்டிய அரசியல் கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை அல்லது முன்னுரிமை பெறவில்லை. அடிப்படையான யாப்பு மறுசீரமைப்பு, ஜனநாயக, இனத்துவ பன்மைத்துவம், அதிகாரப் பரவலாக்கல் போன்ற அடிப்படையான அரசியல் மாற்றங்களைக் கோரிக்கைகளாக முன்வைத்திருப்பதாகத் தெரியவில்லை. போராட்டம் ஒரு இனத்துவ, மொழித்துவ பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவில்லை. பெரும்பான்மையாகச் சிங்கள மக்களே இப்போராட்டத்தில் திரண்டிருக்கின்றனர். தமிழ், முஸ்லீம் மக்கள் தூர நின்று அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் ஆங்காங்கே உதிரிகளாகச் சில மட்டங்களில் பங்கேற்றிருந்தாலும் முஸ்லீம் மக்கள் காலிமுகத்திடலில் இணைந்து கொள்ளவில்லை.

மகிந்த ஆதரவாளர்களின் வன்முறைகள்

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் மீது 09.05.2022 அன்று வன்முறையைத் தூண்டிவிட்டிருந்தனர் ராஜபக்சேக்கள். அதன் மூலம் இராணுவ ஆட்சிக்கு தூபமிடப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுந்தன. ‘வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாட்டின் பாதுகாப்பினை நிலைநாட்டவும்’ என்ற போர்வைகளில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவருவதற்கான திட்டம் கோத்தாவிடம் இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அப்படி ஏதும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை. 2009 போரை முடிவுக்குக் கொண்டுவந்த போதான சிறிலங்கா இராணுவத்தின் மோசமான போர்மீறல்கள், மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள், மனிதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தமிழ் மக்களினது மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலான குற்றச்சாட்டுகளுமாகும். இவற்றுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகள் இன்னும் நீர்த்துப் போய்விடவில்லை.

2008-2009 சர்வதேசத்தின் பிரசன்னத்தை முற்றிலும் அகற்றிவிட்டு தமிழர்களுக்கெதிரான போரை நடாத்தி முடித்தது பௌத்த சிங்கள பேரினவாத அரசு. அன்றைய நாட்களில் வன்னியில் போர் முற்றுகைக்குள் இருந்த மக்களிடம் வெளியுலகோடு தொடர்புகொள்ள தொலைபேசியோ, சமூக ஊடக வசதிகளோ இருக்கவில்லை. தற்பொழுது நேரடி ஒளிபரப்புச் செய்யுமளவிற்கு எல்லோர் கைகளிலும் தொழில்நுட்பம் உள்ளது. போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளேயே எத்தனையோ வன்முறைகளின் வீடியோப் பதிவுகளும் நேரடி ஒளிபரப்புகளும் வெளிவந்தன. எனவே இராணுவ இயந்திரம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மக்கள் மீது வன்முறைகளை நடாத்துமாயின், அதன் வன்முறைகளும் அத்துமீறல்களும் உடனுக்குடன் வெளிவரும் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமலிருக்க வாய்ப்பில்லை.

ஆளும் கட்சிப் பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள், சொத்துகள் எரிப்பு

வன்முறைகளைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களால் மகிந்த உட்பட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடைய வீடுகள், வாகனங்கள், சொத்துகள் எரியூட்டப்பட்டன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மகிந்தவின் ஆதரவாளர்களைப் பேருந்துகள் மூலம் கொழும்பிற்கு இறக்கி காலிமுகத்திடலில் அமைதிவியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் சிதைக்கப்பட்டு எரியூட்டவும்பட்டன. 7 பேர் வரையில் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தனர்.

இரண்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். அதில் போராட்டக்கார இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுமுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அமர்கீர்த்தி அத்துக்கொரல. போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட அவர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிகழ்வுகளின் பின்னணியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தினரும் தெருக்களில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர்.

மகிந்த போர்வெற்றியின் முதன்மைக் கதாநாயகன். ஆட்சியின் அதிகாரத் தலைமை. அப்பேர்ப்பட்ட நிலையிலிருந்தவர் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாமல், சொந்த வீடும் சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உயிருக்கு அஞ்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலைக் கடற்படைத்தளத்திற்கு இராணுவத்தின் உயர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

ரணில் அரசாங்கம்

ரணிலின் முடிவுகளுக்குரிய நாடாளுமன்ற அங்கீகாரத்தை வழங்கப் போகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்சே கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களே. அக்கட்சி ரணிலை முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதோடு அமைச்சுப் பொறுப்புகளையும் பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் (UPP) வெளியில் இருந்து நல்ல விடயங்களுக்கு ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆதரவளிப்பதாக கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது. இப்படியாகக் கிட்டத்தட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிகளும், சுயாதீன நாடாளுமன்றக் குழுக்களும், உறுப்பினர்களும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் சரிசெய்யப்படும் போது ரணில் தனது இழந்த செல்வாக்கினை மீண்டும் கட்டியமைக்கின்ற புறநிலை ஏற்படவாய்ப்புண்டு. சாதாரண பொதுமக்கள் பொருளாதார மீட்சியை உணரும் போது திருப்தியடைவர்.

போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்ற போதிலும் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கான கால அவகாசம் என்ற அளவிலும் போராட்டக்காரர்கள் அமைதிகாக்க நேரிடும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் போராட்டத்தின் தீவிரம் குறைந்து போகின்ற புறநிலைகளே ரணில் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் அரசியல் யதார்த்தத்திலும் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள, பௌத்த மனநிலையின் அனுபவங்களிலிருந்தும் பார்க்கும்போது, பொருளாதாரத்தை நிமிர்த்துவது, மீட்பது என்பதைத் தாண்டிய மாற்றங்களுக்கான புறநிலைகள் தென்படவில்லை. அதுகூட எத்தனைதூரம் நிலைகொள் பொருளாதார மீட்பாக அமையுமென்பதுவும் கேள்விக்குரியதே.

மட்டுமல்லாது இந்த நகர்வுகளுக்குப் பின்னால் குறுகிய நோக்குள்ள உட்சக்திகளும் சீனாவின் செல்வாக்கினைத் தீவிலிருந்து அகற்றுகின்ற நோக்குள்ள இந்தியா, அமெரிக்கா போன்ற பிராந்திய மற்றும் சர்வதேச கைகளும் இயங்குகின்றன என்பதையும் நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. போராட்டம் தன்னியல்பாக மக்களால் தொடங்கப்பட்டிருக்கின்ற போதும், குடும்ப ஆட்சி மீதான வெறுப்பு, பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் போன்ற மக்களின் கூட்டுக்கோபம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது. நீதி நியாயம் என்பவற்றைத் தாண்டிய நலன்கள் என்ற நிரந்தர அச்சிலேயே அரசியல் நகர்வுகள் அரங்கேற்றப்படுகின்றன. தத்தமது நலன்களுக்காக போர்களையும் கலவரங்களையும் தூண்டிவிடுகின்ற, தணிக்கின்ற இழிவரசியலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது

பொருளாதார நெருக்கடியின் நதிமூலம்

இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது திடீரென கொரோனா பெருந்தொற்றாலும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட சரிவினாலும், உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் விளைவாலும் மட்டும் ஏற்பட்டதல்ல. மிகச்சொற்ப காலங்களில் நெருக்கடி தீவிரமாகியமைக்கு மேற்சொன்ன அடுத்தடுத்த தொடர்நிகழ்வுகள் காரணிகளாகியுள்ளன. ஆனால் போருக்குச் செலவிடப்பட்ட பெருநிதி போர் முடிவுக்கு வந்த பின்னரும் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, ஆளணியைப் பெருக்கி வந்தமை, அதிகரித்த கடன், உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சி என நீண்டகாலச் சூழல்களின் விளைவுகள் இவை. போரை இத்தனை காலம் மூர்க்கமாக நடாத்தியபோது அது ஒட்டுமொத்த தேசத்தினதும் பொருளாதாரத்தை நீண்டகால அடிப்படையில் சிதைக்கக்கூடியது என்பது எதிர்வுகூறப்பட்ட ஒன்றே.

போருக்குப் பின் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகை கடன்களை வாங்கியது. சீனாவின் கடனுதவிகளில் பாரிய நெடுஞ்சாலை அமைப்பு உட்பட்ட உட்கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுத்திற்கான ஆளணிச் சேர்ப்பு சிங்கள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கும் தந்திரோபாயமாகக் கைக்கொள்ளப்பட்டது. இது ராஜபக்சேக்களின் ஆதரவுத்தளத்தைத் தக்கவைக்கவும் உதவியது.

குடும்ப ஆட்சியும் ஊழல்களும்

பிரித்தானிய கொலனியாதிக்கத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இருபெரும் குடும்ப ஆட்சிகள் நீடித்த ஆயுளைக் கொண்டிருந்தன. ஒன்று பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சி. அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் கடந்த இரண்டு தசாப்த காலங்கள் ராஜபக்சேக்களின் அதிகாரம் உச்சத்திலிருந்தது. 2005-லிருந்து இன்றுவரை இடையில் ஒரு நான்காண்டுகளைத் தவிர இந்தக் குடும்ப ஆட்சி தனது அதிகாரத்தை விரிவுபடுத்தி நிலைநாட்டி வந்துள்ளது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுடியாது என்ற திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டமையால் 3-வது முறையாக மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவில்லை. கோத்தா நிறுத்தப்பட்டார். கோத்தபாய ஜனாதிபதியாகவிருந்த போதும் மகிந்தவே தீர்மானமெடுக்கும் சக்தியாக இருந்தார். இவர்கள் இருவரைத் தவிர இவர்களின் இன்னுமிரு சதோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் சாமல் ராஜபக்ச ஆகிய இருவரும் முறையே நிதி மற்றும் விவசாயத்துறை அமைச்சர்களாகவும் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராகவும் கடந்த அரசாங்கத்தில் பதவிகளில் இருந்தனர்.

ராஜக்சேக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. 2004-ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அழிவுக்குப் பின்னரான புனர்வாழ்வுக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகளில் ஊழல், 2009-ல் போர்த்தளவாடக் கொள்வனவில் ஊழல், 2016-ஆம் ஆண்டு 75 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிற்குக் (Avant Garde Security Services) கைமாற்றப்பட்டதான குற்றச்சாட்டுகள் போன்றவை கோத்தபாய மீது உள்ளது. அதேவேளை அவருடைய ஏனைய சகோதரர்கள் மீது கறுப்புப் பணத்தினை வெள்ளையாக மாற்றிய மை உட்பட்ட வேறு பல பொருளாதார கிரிமினல் மோசடிகளுக்கான வழக்குகள் உள்ளன.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான முதலீடு

2015-ல் தேர்தலில் மகிந்த தோல்வியுற, மைத்திரி பதவிக்கு வந்தமையும் அதன் பின்னணிகளும் பலரும் அறிந்ததே. போருக்குப் பின்னரான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கொண்டுவரப் போகின்ற அரசாங்கம் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்பப்பட்டது. 2019 ஏப்ரலில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தினை (ஈஸ்ரர் குண்டுவெடிப்பு) முதலீடாக ஆக்கியே மீண்டும் ராஜபக்சே குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சிங்கள மக்களிடமும் உலகிடமும் சித்தரித்து, அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழித்த புறநிலையில் ராஜபக்சேக்கள் போர் வெற்றியின் நாயகர்களாக, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்களாகச் சிங்கள மக்களாலும் இனவாத சக்திகளாலும் கொண்டாடப்பட்டனர். ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பு இருப்பதாக அந்த அமைப்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தது. இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தீவிரவாதக் குழுவை வைத்தே ஐ.எஸ் இந்தத் தாக்குதல்களை நடாத்தியிருந்தது. புலிகள் இல்லாத பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிபீடம் ஏற ராஜபக்சேக்களுக்கு இஸ்லாமியப் பயங்கரவாதம் முதலீடாகியது. இத்தாக்குதல்களுக்கும் கோத்தபாயவிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. அந்த இஸ்லாமியக் குழுவானது நாட்டின் இராணுவத்துடனும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னாள் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்த குழுவிற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ச இரகசியமாக நிதியுதவி செய்ததாக மைத்திரிபால அரசாங்கத்தின் அறிக்கைகள் கூறின.

காலிமுகத்திடல் சாத்தியப்பாடுகள்

கோத்தா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைப் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றனர். அத்தோடு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தினை வழங்கியுள்ள 20-வது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் 13.05.22 ரணில் பதவியேற்ற பின்னர் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் சார்ந்த மூன்று வெவ்வேறு விளைவுகளுக்கான சாத்தியப்பாடுகளை எதிர்வுகூறலாம். ஒன்று கோத்தாவை கற்றும் மக்கள் போராட்டம் நீடிக்கலாம். ஆனால் கடந்த ஒன்றரை மாதத்தின் தீவிரம் தொடர்ந்து நிலவுமா என்பது கேள்விக்குரியது. இரண்டாவது, போராட்டம் வலுவிழந்து படிப்படியாகக் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். மூன்றாவது, புதிய அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுத்து விளைவுகளை அவதானித்து மீண்டும் தொடரலாம். இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்திலும் ரணில் பதவியேற்பின் பின்னணியிலும் முதலாவதற்கும் மூன்றாவதற்குமான சாத்தியப்பாடுகள் குறைவு.

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களும் நெறிப்படுத்தி வழிநடத்தப்பட வேண்டியவை. அதிலும் குறிப்பாக அரசியல் மாற்றங்களைக் கோருகின்ற பெருமெடுப்பிலான இத்தகைய போராட்டங்கள் தொலைநோக்குச் சிந்தனையும் அரசியல் செயல்திட்டமுமுடைய வழிநடத்தலைக் கோரி நிற்பவை. போராட்டக்காரர்களிடம் வெளித்தெரியும் தலைமை எதுவும் இல்லை என்பது இப்போராட்டத்தின் பெரிய குறைபாடுகளில் ஒன்று. ஆட்சி மாற்றம் போருகின்ற மக்கள் போராட்டம் என்பது மாற்றுத் தலைமையை அல்லது புதிய தலைமையை உருவாக்க வேண்டும். அதுவே நாட்டின் உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார, இனத்துவ பன்மைத்துவம் கோருகின்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போதைய போராட்டங்களின் ஆகக்கூடிய விளைவாக மகிந்தவின் பதவிவிலகல் நிகழ்ந்திருக்கிறது. அதன் அடுத்தகட்டமாக ரணில் பிரதமராக ஆக்கப்பட்டிருக்கின்றார். போராட்டக்காரர்களின் அடிப்படைக் கோரிக்கையான ‘கோத்தா வீட்டுக்குப் போ’ இன்னும் சாத்தியப்படவில்லை. எனவே ராஜபக்சேக்களின் வம்ச ஆட்சியை அகற்றுவதென்பது இன்னும் சாத்தியப்படாத ஒன்று. அதற்கான சாத்தியங்கள் இனி உள்ளனவா என்ற கேள்வியும் நிலவுகின்றது. உண்மையில் ரணில் பிரதமராக்கப்பட்டமை ஒரு தீயணைப்பு நடவடிக்கையை ஒத்த நிகழ்வே. அது நிலையான தீர்வுகளுக்கோ, நிலைகொள் மாற்றங்களுக்கோ வழிகோலப் போவதில்லை.


ரூபன் சிவராஜா

நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.

மின்னஞ்சல்: svrooban@gmail.com

உள்ளிருக்கும் சொற்கள்

0

காலத்துகள்

நேர்லயே வந்து ரொம்ப ஆசையா கூப்டாங்க. சண்டே முகூர்த்தம் வேற, நீங்க வரலைனா நல்லாருக்காது’

‘அதுக்கென்ன பண்றது, வேலையிருக்கு. நீங்க போயிட்டு வாங்க’

‘இன்னிக்கென்ன வேலை’

‘லேட்டாகுது கெளம்புங்க’

மனைவியும் மகனும் சென்று விட்டார்கள். அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டார். தன் அறையின் கதவையும் ஜன்னலையும் தாழிட்டுவிட்டு, ரகசியக் காமிராக் கண்கள் எதுவும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மடிக்கணினியை இயக்கி, ஒரு வாரத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் வோர்ட் கோப்பை திறந்து தொடர ஆரம்பித்தார்.

தன்னுடைய அப்பனைப் பற்றிய நினைவு எப்போதேனும் வரும்போது ‘பொறுக்கி, கம்மனாட்டி’ என்றவனை வசை பாடுவதுடன், ‘அந்த நாய் செஞ்ச ஒரே நல்லது என்னை லைப்ரரில மெம்பரா சேர்த்ததுதான்’ என்று அவர் எண்ணிக்கொள்வார். அப்போது அவருக்கு எட்டு வயது. அதற்கு முன்பே வாசிப்பில் ஈடுபாடு இருந்தாலும் வாசிப்பில் வழிநடத்த யாருமில்லாமல் அவராக நூலகத்தில் உள்ள பலதரப்பட்ட நூல்களை படித்தபின் அதீதமாயிற்று. தொடர் வாசிப்பு அவரை இலக்கியத்திற்குள் கொண்டு செல்ல, கல்லூரி நாட்களில் அவருக்கு எழுத்தார்வமும் உண்டாகியிருந்தது. வாசிப்பையே யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழல். இழிபிறவியான அப்பனை திருமணம் செய்து, வாழ்வு முழுதும் சந்தித்த அவமானங்களை போக்க இவனை எதிர்நோக்கி இருக்கும் அம்மா. இதில் வேலை தேடாமல் எழுத ஆரம்பித்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம்.

இருபத்தியொரு வயதில் பணியில் சேர்ந்தார். கீழ் மத்தியத்தர பொருளாதார நிலையிலிருந்து ஒருபடி மேலே செல்ல, அவருடைய வேலையும் ஊதியமும் உதவியது. வாசிப்பைத் தொடர்ந்தார். வார இறுதியில் நூலகத்திற்குச் சென்று நான்கு நூல்கள் எடுத்து வருவார். பணிக்குச் சென்றுவரும் போது, வீட்டிற்குத் திரும்பிய பின் என நான்கையும் படித்து முடித்து அடுத்த வார இறுதியில் இன்னொரு நான்கு நூல்கள்.

இருபத்தியிரண்டு வயதில் முதல் முறையாக சொந்தமாக ஒரு புத்தகத்தை வாங்கினார். நூலகத்திலிருந்து எடுத்து பலமுறை படித்தது தானென்றாலும் தனக்கென்று வாங்கும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ‘பதினெட்டாம் அட்சக்கோட்டை’ தேர்வு செய்தவர், மாதம் ஒரு நூல் வாங்க முயற்சித்தார். அவ்வப்போது நோட்டில் தனக்குத் தோன்றுவதை எழுதிப் பார்க்க ஆரம்பித்ததும் அந்த காலகட்டத்தில் தான். இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் கொண்ட வரிகள் நான்கைந்தை எழுதி, அவற்றை கவிதை என்று எண்ணிக்கொண்டிருந்த மாயையிலிருந்து வெகு விரைவில் விடுபட்டார். புனைவெழுதும் ஆர்வம் மட்டும் இருந்து கொண்டேயிருந்தது. எழுதி சில நாட்கள் கழித்து அந்த தாள்களை கிழித்துப் போடுவதில் பல குறிப்பேடுகள் தீர்ந்தன.

முப்பது வயதில் திருமணம் செய்யும்போது, அவர் சேர்த்திருந்த நூலடுக்கைப் பார்த்து மனைவி வியந்தது பெருமையாக இருந்தது. கணவன் மனைவி எல்லாவற்றிலும் ஒத்த மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற எந்த கற்பனையும் அவருக்கு இல்லாததால் மனைவிக்கு வாசிப்பில் ஆர்வமில்லை என்பது குறித்து அவருக்கு எந்த வருத்தமுமில்லை, ‘புக்கை ஒருவாட்டி படிச்சிட்டீங்கன்னா அப்பறம் எப்படி திருப்பி படிப்பீங்க, ட்ரெஸ்னா பழசாகற வரை போட்டுக்கலாமே’ என்று ஒருமுறை கூறிய அலுவலக நண்பர் போலில்லாமல், தான் புத்தகங்கள் வாங்குவது குறித்து மனைவி எதுவும் சொல்வதில்லை என்பதில் மகிழ்ச்சிதான். வாயில் நுழையாத பெயர் கொண்ட லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களின் ஐநூறு, அறுநூறு பக்கங்களுக்கு மேலிருக்கும் நூல்களை அவர் வாங்கிவரும் போது ‘இவ்ளோ பெரிய புக்கை படிக்க எவ்ளோ நேரமாகும்’ என்றும் ‘அப்பப்ப டஸ்ட்ட தொடச்சி வைங்க’ என்று கூறுவது மட்டுமே அவர் வாங்கும் நூல்கள் பற்றிய அவளுடைய கருத்துக்கள்.

திருமணத்திற்குப் முன் இருந்த தனிமை பொழுதுகள் மனைவி வந்தபின் குறைய, புனைவெழுதும் முயற்சியில் தொய்வு. தான் எழுதுவதைப் அவள் பார்த்து என்னவென்று கேட்டால், என்ன சொல்வது என்ற அவராகவே உருவாக்கிக் கொண்ட தயக்கம். அலுவலகப் பயணத்தின் போது எழுதும் முயற்சி, பஸ்ஸின் குலுங்கலில் தோல்வியடைந்தது. மனதிற்குள் கதைகளை சொல்ல ஆரம்பித்தார். ‘என்ன தனியா முணுமுணுக்கறீங்க’ என்று மனைவி கேட்டதற்கு ‘பாடிட்டிருக்கேன்’ என்று இரண்டு மூன்று முறை கூறினாலும் அதையே தொடர்ந்து சொல்ல முடியாது என்பதால், தன் அக-புனைவெழுதுதலையும் குறைத்துக் கொண்டார். வீட்டில் நூல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன, அவற்றைக் குறித்து பேசத்தான் அவருக்கு யாருமில்லை.

புத்தாயிரத்தின் முதல் தசாப்தத்தின் இறுதியில் இணையத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின், இலக்கியம் குறித்த அவருடைய இணைய தேடலில் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் மின்னஞ்சலில் உரையாடுவது ஆசுவாசமாக இருந்தது. கணினி வாங்கியது எழுதுவதற்கும் உதவியாக இருந்தது, என்ன செய்கிறாய் என்று கேள்வி எழுந்தால் ‘சர்ச் பண்றேன், மெயில் அனுப்பறேன்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் இப்போது வேறு பிரச்சனை. எழுதிக் கொண்டிருக்கும்போது, பல கண்கள் பின்னாலிலிருந்து கவனித்து, தன் எழுத்தைக் கிண்டல் செய்வது போன்ற உணர்வு. எழுதியதை உடனேயே அழித்துவிடுவதும் உண்டு. அப்போது நாற்பதை அவர் தொட்டிருந்ததால், மின்னஞ்சல், நீண்ட வாட்ஸாப் இலக்கிய உரையாடல்களாக மாறிய பின்னரும் நண்பர்களிடம் தன் புனைவெழுதும் ஆர்வம், அதற்கான முயற்சிகள் குறித்து அவர் எப்போதும் சொன்னதில்லை.

சேமிப்பிலிருந்த பணம், நகைகள், வங்கிக்கடன் இவற்றைக் கொண்டு வீடு வாங்கும்போது வயது நாற்பத்தியாறு. ‘என் புக்ஸ நம்ம ரூம்ல வெக்க நல்ல ஷெல்ப் வேணும், மத்ததெல்லாம் நீ உன் சாய்ஸ்’ என்று மனைவியிடம் கூறிவிட்டார். சொந்த வீட்டிற்கு சென்றபின் மடிக்கணினி. இணைய இலக்கிய இதழ்கள் வர ஆரம்பிக்க, அவற்றிற்கு தன் புனைவுகளை அனுப்பலாம் என்று யோசித்து முடிவெடுப்பதற்குள், எழுதும் போதெல்லாம் தன் பின்னால் தோன்றும் முகமற்ற கண்கள் ‘உன் எழுத்து குப்பை’ என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு அந்த எண்ணத்தை அழித்து விடுவார்.

‘ஆஞ்செலாஸ் ஆஷஸ்’ என்ற புலிட்சர் விருது வாங்கிய நினைவுக் குறிப்பை வாசித்து, அதை எழுதிய ப்ரான்க் மக்கோர்ட்டின் முதல் நூல் அதுதான் என்றும், அப்போது மக்கோர்ட்டிற்கு வயது அறுபத்தியாறு என்றும் அறிந்தபோது அவருக்கு ஐம்பத்தியொன்று ஆகியிருந்தது. சாகித்ய அகாடெமி கிடைக்க வேண்டாம், பிரசுரமாகி சிலபல நூறு பேர் படிக்க வேண்டாம், ஆனால் இந்த வயதில் தீவிரமாக எழுத ஆரம்பித்து பிரசுர முயற்சி எடுப்பது ஒன்றும் கேலிக்குரியது அல்ல என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தபோது உலகமே பெருந்தொற்றால் முடங்கியது.

இன்னும் மூன்று வருட ஈஎம்ஐ-யை கட்டும் வரையாவது இந்த வேலை நிலைக்க வேண்டும். இந்த வயதில் புனைவெழுத ஆரம்பிக்கலாம், ஆனால் வேறு வேலை கிடைக்காது. முதலில் உயிரோடு இருக்க வேண்டும் என்ற அச்சத்தோடு இரண்டு ஆண்டுகளைக் கடந்தார். இந்த காலத்தில் அவருடைய புனைவு முயற்சிகள் மரணம், அழிவு, மன உளைச்சல் போன்ற கருப்பொருட்களையே தன்னிச்சையாக தேர்வு செய்ததால், எழுதவே பயந்தார். வாசிப்பு மட்டுமே ஆறுதலாக இருந்தது.

முதலிரு அலைகளைக் கடந்தவர், இந்த வருட ஆரம்பத்தில் மூன்றாவதில் சிக்கினார். ‘ரெண்டு டோஸ் வாக்ஸினும் போட்டிருந்தேன், அதனாலதான் ரெண்டு நாள் மட்டும் பீவர் இருந்தது போல. டோலோபாரே சரணம்’, ‘ஆனா டயர்ட்னெஸ் போக பத்து நாளுக்கு மேலாச்சு. புல் பாடி பெயின்’ என்று நண்பர்களிடம் வாட்ஸாப்பில் கூறினார்.

உடல் முழுதும் வலி நிறைந்திருந்த அந்த நாட்களில்தான் இதுவரை தான் கவனித்திராததை முதல் முறையாக உணர்ந்தார். ஷெல்ஃபில் நிறைய நூல்கள், அவற்றினுள் எண்ணற்ற சொற்கள். ஒன்றுகூட என்னுடையது இல்லை. மூன்றாவது அலையில் நான் இறந்திருந்தால், இப்போது மனைவி, மகனைத் தவிர மற்றனைவரும் என்னை மறந்திருப்பார்கள். இருந்ததற்கான ஒரு சின்ன சுவடைக்கூட விட்டுச்சென்றிருக்க மாட்டேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எட்டு வரிகளை எழுதியவன் இன்றும் நினைவில் இருக்கிறான், நான் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதம். அதன் பின் மனைவியும், மகனும் கூட…

இருப்பு, இருத்தல் குறித்து அவரை பீடித்த பயம் அடுத்த இரு மாதங்களில் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தீவிரமாக எழுத ஆரம்பித்தார். விடுமுறை நாட்கள் முழுதும் எழுத்து தான். வீட்டிலிருந்தே வேலை என்பதால், அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தையும், அலுவலக நேரத்தில்கூட முடிந்தவரை எழுதுவதற்கே உபயோகித்தார். வெளியே செல்வதே இல்லை. உடலெங்கும் தன்னைச் சொற்களாக உணர ஆரம்பித்தார். எலும்புகளைத் துளைத்து, சதையை பிய்த்துக்கொண்டு வரத்துடித்துக் கொண்டிருக்கும் சொற்கள்.

கீபோர்டின் மீது சொல்லொன்று விழ, எழுதிக் கொண்டிருந்த வோர்ட் பைல் நிரம்பி ததும்பிக் கொண்டிருந்தது. மடிக்கணினியின் நினைவகத்தில் இடம் இல்லை. தொடர்ந்து தட்டச்சு செய்ய, மேலும் உதிர ஆரம்பித்த சொற்கள், மேஜையை நிரப்பிய பின் தரையில் குவிய ஆரம்பித்தன. நிறுத்தி விடலாம். இல்லை, இத்தகைய படைப்பூக்க மனநிலை இனி வாய்க்கும் என்று சொல்வதற்கில்லை, நான்காவது அலை எப்போது சுருட்டிக்கொண்டுச் செல்லுமோ? எழுத நினைப்பதை, ஒலியில்லாமல் வாயசைத்துக் கொண்டே தட்டச்சு செய்வதைத் தொடர்ந்தார். தரையை நிறைத்த பின் எழும்ப ஆரம்பித்து அவர் அமர்ந்திருந்த இடத்தைத் தவிர அறையை முற்றிலும் நிரப்பியப் பின், கால்களைச் சுற்றிய சொற்கள் அவர் உடம்பில் பரவ ஆரம்பித்தன. சொற்களாக மாறிவிட்ட தன் விரல்களைப் பார்த்துக்கொண்டே, எழுதிக் கொண்டிருந்தவர், உதட்டின் மீதிருந்த சொல்லிலிருந்து ‘ழ’ உதிர்ந்து தன் வாயினுள் செல்வதை இறுதியாக உணர்ந்தார்.

***

காலத்துகள்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது வசிப்பது பாண்டிச்சேரியில்.

சொல்வனம், பதாகை இணைய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலும் அண்மையில் இவரது சிறுகதைத் தொகுதி “வேதாளத்தின் மோதிரம்” நூலும் யாவரும் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com


சிராய்ப்பு

0

அகராதி

முதல் நாப்கின் அத்தையிடமிருந்துதான் வந்தது. அப்போது ஹோலி கிராஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து 26-BHEL பஸ் பிடிக்கும் வரையில் ஒன்றும் இல்லை. பேருந்தில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் ஒரு மாதிரியாக இருந்தது. வீட்டிற்கு வரும்வரை தாக்குப் பிடித்ததே பெரிது. உடன் வந்த மாதேஷ் தவிர யாரிடமும் சொல்லவில்லை. இயல்பாக இருக்க முடியவில்லை சங்கடமாயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் ஓடிப்போய் ரத்னா அத்தையிடம்தான் நின்றேன். அன்று இரண்டு பெரும் சேர்ந்து விடியவிடிய அத்தை பழைய புத்தகக் கடையில் இருந்து வாங்கி வந்திருந்த லயன் காமிக்ஸின் எதிரிக்கு எதிரி புத்தகத்தைப் பற்றிக் கதை பேசினோம். நான் அந்தச் சங்கடத்தை மறந்திருந்தேன்.

விடிந்து மஞ்சள்நிற ஸ்கர்ட்டில் திட்டுத்திட்டாகப் படர்ந்திருந்தக் கறையைப் பார்த்துப் பதறி அம்மா விவரம் கேட்டுவிட்டுத் திட்டினாள். உடனே ஏன் சொல்லவில்லையென, சத்தம் கேட்டு வந்த அத்தைதான் “இதில் என்ன இருக்கு? இட்ஸ் நேச்சர்” என்று சொல்லி என் முதுகை மென்மையாகத் தட்டிக்கொடுத்து நகர்ந்து விட்டாள். என்ன நினைத்தாளோ அம்மாகூட ஏதும் பேசவில்லை.

“இதோடயே திருச்சி முழுசும் சுத்திருவா போல” என்று முணுமுணுத்ததோடு சரி.

அத்தை அப்படித்தான். எல்லோரும் பெரிய மலை, பெரிய விஷயம் என்று சொல்வதை ஒன்றுமேயில்லை என்று தட்டிவிட்டுச் செல்வாள். அத்தை என்று சொல்கிறேனே தவிர அவளுக்கும் எனக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். அவள் என் அப்பாவின் சித்தப்பா பையனின் தங்கை. எனக்கு அத்தை முறை. அது என்னவோ சிறிய வயதிலிருந்தே எங்கள் சித்தப்பா வீட்டைவிட எங்களுடன்தான் நெருக்கம் அதிகம், பக்கத்து பக்கத்து வீடு வேறு.

நான் கல்லூரிக்கும் அவள் மேற்படிப்பிற்கும் போக ஆரம்பித்தோம். அடிக்கடி புடவை உடுத்திச் சென்றாள். போடும் பிளவுஸ் அத்தனைப் பாங்காய் பொருந்திப் போகும் அவளுக்கு. சில வித்தியாசமான டிஸைன்களில் தைக்கச் சொல்லி அணிந்து கொள்வாள். அம்மா போடுவதிலெல்லாம் முதுகுப்பக்கம் சுருக்கம் தெரியும். அத்தை போடும் ‘V’ நெக் பிளவுஸில் சுருக்கமே இருக்காது. இத்தனைக்கும் டைட்டாகவெல்லாம் போடமாட்டாள். சிலர் போடுவது பார்த்தால் தசை பிதுங்கித் தெரியும். நமக்கு பார்க்கையிலேயே மூச்சு முட்டும். இவள் போடுவது பார்த்து புடவையே பிடிக்காத என் தோழிகள் கூட புடவை அணியும் ஆசைக்கு ஆளாகி இருந்தனர்.

டைலர் கடைக்கு அவளுடன் நானும் சென்றிருக்கிறேன். கறாராகப் பேச மாட்டாள். இந்த மாதிரி தைங்க, இந்த தேதிக்கு கொடுங்க இல்லையா, இவ்வளவு நாளுக்குள் கொடுங்க அவ்வளவுதான். தையற்கடையில் நின்று குறித்த தேதி தாண்டியும் தரவில்லை என்று கூச்சல் போடும் பெண்களைக் கண்டிருக்கிறேன். இவள் முகம் ஒரு தனிக்கவர்ச்சி கொண்டது. அதனால்தானோ என்னவோ டைலர் தானாகவே கச்சிதமாகத் தைத்துக் கொடுத்து விடுவார். அத்தை சுவாரசியம் மிக்கவளாகவே எப்போதுமிருந்தாள். எந்த ஒரு செய்திக்கும் அவள் என்ன ரியாக்ட் செய்வாள் என்று ஆர்வமாகவே இருக்கும். ஒருமுறை பங்காளிகளுக்குள் பெரிய சண்டை நடந்தது. சித்தப்பாவும் பெரியப்பாவும் ஒரேவீட்டுப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இதில் சித்தப்பா லவ் மேரேஜ். இரண்டு குடும்பமும் அவ்வளவு ஒற்றுமையாக விருந்து, கேளிக்கை என்று கும்மாளமாக இருக்கும். அவர்களைப் பார்த்து நானும் இப்படிக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டு.

சித்தப்பா வீட்டு கிரகப்பிரதேசத்தில் மொய் கணக்கு, மரியாதை என்று ஆரம்பித்த சச்சரவு பெரிதாகிக் கொண்டே போனது. சினிமாவிற்குப் போகையில் வாங்கிக் கொடுத்த ஜிகர்தண்டா முதற்கொண்டு பேசி சண்டை வலுத்தது. சித்தப்பா அவர் வீட்டில் எல்லோருக்கும் ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் இனி யாரும் அவர்களுடன் பழகக் கூடாதென்று. இருவீடுகளுக்கும் மாறிமாறி போய் குலவிக் கொண்டிருக்கும் டாமியைக்கூட கட்டிப்போட்டு விட்டார். ரத்னா அத்தை மட்டும் அலட்டிக் கொள்ளவில்லை. தெருவில் நடக்கையில் இரண்டு வீட்டுக்காரர்களில் யார் எதிர்பட்டாலும் எப்போதும் போல் பேசினாள், சிரித்தாள். அரண்டுபோய் இதுபற்றி பேசிய என்னிடம் ‘இதுபற்றி நீ அதிகம் யோசிக்காதே, எல்லாம் சரியாகி விடும் எப்போதும் போல் எல்லோரிடமும் பேசு’ என்றாள். செத்தாலும் முகத்தில் முழிக்காதே என்று புருவங்கள் நெறிக்கப் பேசிய பெரியப்பாவின் முகம் கண்களருகில் பெரிதாக விரிந்தது. பயத்தில் அவள் சொன்னது போல் இருக்க முடியவில்லை. எதிரில் கண்டால் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டேன். அத்தை சொன்னதுதான் நிஜம்.

மெதுவாக இருவீட்டுப் பெண்களும் பிள்ளைகளுக்குப் ‘பிடிக்குமேனு எடுத்து வந்தேன்’ என்று பொரியல், ரசம், குழம்பு என்று கொடுத்துக கொள்ள ஆரம்பித்து, பின்னர் வழமை போல் நெருக்கமாகிக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சமாதானப்படுத்த முயன்ற எங்கள் வீட்டைப் பார்த்து கண்பட்டு விட்டதாகப் பேசி திருஷ்டி சுற்றிக் கொண்டதுதான்.

பின்வீட்டில் புகைந்து கொண்டிருந்த கணவன் மனைவி பிரச்சினை ஒருநாள் பொது ஆட்கள் முன் பஞ்சாயத்து வரை சென்றது. திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேல் கடந்து விட்டிருந்தது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனாலும் டிவோர்ஸ் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். பஞ்சாயத்திற்கு வந்த ஆட்கள் கூட இருவரின் வார்த்தைகளை வைத்து அதுதான் சரி என்னும் முடிவிற்கு வந்து விட்டிருந்தனர். அந்த அளவிற்கு இருவரும் தெளிவாக உறுதியாக நின்றனர். ஆனால் ரத்னா அத்தையோ காதோடு சொன்னாள் ‘எழுதி வச்சிக்கோ.. விவாகரத்து ஆகாது’ பூட்டியிருந்த வீடு ஒருமாதம் கழித்து திறந்தது. அத்தை கூறியது நடந்தது. இதற்காவது பதில் சொல்லு என்று கட்டாயப்படுத்தியதில் காரணம் ‘பணம்’ என்றாள். பல நாட்கள் அவள் கூறியதை அசைபோட்டு ஒவ்வொரு குறிப்பாக முன்வைத்து யோசித்தப் பிறகுதான் புரிந்தது. அவள் கூறியது சரி.

இப்போதும் நாம் பெரியதாக நினைத்து அலட்டிக் கொண்டிருக்கும் விஷயத்தை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட்டு புக்கிற்குள் ஆழ்ந்து விடுகிறாள். அவளிடம் இருந்ததுதான் எனக்கு இந்த காமிக்ஸ் படிக்கும் பழக்கம் வந்தது. ஆனாலும் அவள் அளவிற்கு இல்லை. எனக்கு காமிக்ஸ் புத்தகத்திற்குள் வரும் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் மிகைப்படுத்திய வடிவங்களோடும் சிறிய அளவிலான உடைகளோடும். க்ளிவேஜும் தொடையும் தெரிந்தவண்ணமாக வருவது கிளர்ச்சியைக் கொடுக்கும். கதை இரண்டாம் பட்சம்தான். பக்கம் விடாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எப்போதாவது வாசிப்பேன்.

ரத்னா அத்தை அந்தக் கதைகளை எல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வரிவிடாமல் சொல்வாள். அவள் கதை சொல்லும்போது யாரும் தடை செய்யக் கூடாது. புருவங்கள் எல்லாம் ஏறி ஏறி இறங்கும், நெளியும், சட்டென நேர்க்கோடாக நிற்கும். குரல் மட்டும் மெதுவாக ஒலிக்கும். கண்கள் காட்சிக்கேற்ப மாறும். அவள் ரூமில் இங்கிலீஷ் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ரேக் ரேக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் பொழுது போகாமல் புதியதாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரிசையைத் துழாவிக் கொண்டிருந்தபோது புத்தகங்களுக்கு நடுவில் சிவப்பு நிற பென் டிரைவ் ஒன்று இருந்தது. அதை நான் எடுத்ததைப் பார்த்து ‘உஷ்…..’ என்று மெல்லிய குரல் கொடுத்து ஜாக்கிரதையாக வாங்கிக் கொண்டாள். நான் எதுவும் பேசாமல் நின்றேன். முகத்தைப் படித்தவள் “சரி… சரி.. வா” எனக் கதவைச் சாத்திவிட்டு வந்து லேப்டாப்பில் செருகிப் போட்டுக் காட்டினாள். அதில் அவள் லவ்வர் முதல் நாளில் கொடுத்த கிப்ஃடிலிருந்து இன்றுவரை வந்த மெசேஜ் வரை டாக்குமெண்டாகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

ரத்னா அத்தையின் காதல் எனக்குத் தெரியும். இருவரும் அளித்துக் கொள்ளும் கிஃப்ட்ஸ், தியேட்டர், பிக்னிக் போன்ற அத்தனையும் சொல்லி விடுவாள். கல்லூரி விட்டு வந்ததும் எனக்கும் அவளுக்கும் இதுதான் வேலை. அவ்வளவு அழகு அவளின் காதல்.

அதற்குப் பிறகு இன்னும் நெருக்கமானோம். பிரதீப் அதுதான் அத்தையின் ஆள். அப்படித்தான் நான் சொல்வது வழக்கம். பலமுறை இருவரும் போனில் பேசிக் கொள்கையிலும் மெஸேஜ் செய்து கொள்ளும் போதும் கூடவே இருந்திருக்கிறேன்.

“அத்தை உன் ஆள் இன்னைக்கு என்ன கொடுத்தார் கிஸ்ஸா, கிஃப்டா?” என்று வம்பிழுப்பேன். வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு வந்து இப்பப்பாரு கால் வந்துட்டே இருக்கும் நான்ஸ்டாப்பாக என்பாள்.

”இது விளையாட்டுச் சண்டையா? அப்போ உனக்கு அவர்மேல் கோபமே வராதா?” என்றால் சிரிப்பாள்.

என் தோழிகள் எல்லாம் அவரவர் ஆள் வாங்கிக் கொடுத்த ரோஸ், சாக்லேட் பேப்பர் எல்லாம் காய்ந்து சருகானாலும் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பார்த்திருக்கிறேன். ஆனால் ரத்னா அத்தை அது எதையும் செய்ய மாட்டாள். சாக்லேட்ஸும் ரோஸும் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும் ஒருநாளும் அதுபோல செய்ய நினைக்கவே மாட்டாள். ப்ரதீப்பிற்கு அடிக்கடி கால் செய்து தொணதொணவென்று பேசி தொல்லையெல்லாம் கொடுக்க மாட்டாள். பொழுதிற்கும் மெஸேஜ் கால்ஸ் என்று இல்லாமல் அவரே தேடித்தேடிப் பேசும் வகையிலும் பழக்கப்படுத்தியிருந்தாள். ஆர்வம் அளிப்பவளாகவும் இருந்தாள்.

டெலிபதி உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ரத்னா அத்தை விஷயத்தில் அப்படி அப்படியே நடந்திருக்கிறது நூற்றுக்கு தொண்ணூறு உண்மை. ஒருமுறை ப்ரதீப் ஏதோ அப்செட்டில் இருக்கிறார் என்று இவளே நினைத்துக் கொண்டு கண்கலங்கினாள். அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன். இரவு பேசுகையில் இவள் கண்கலங்கிய அதே நேரத்தில் அவர் வொர்க் ப்ரஷரில் கதிகலங்க நின்றிருக்கிறார். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ஊரிலிருந்து வந்திருந்த அவரை நேரில் சந்தித்துவிட்டு வந்தாள். இது போன்று நிறைய சொல்லலாம். ஃபோனில் அவர் போட்டோக்கு முத்தம் கொடுத்தாலே அவர் ‘உன் முத்த ஞாபகம் உன்மத்தம் ஆகுதடி’ என்று ஏதாவது அனுப்பி விடுவார். ஒருநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து நினைத்துக் கொண்டு தவித்ததை போன் செய்து அவரிடம் நேரப் பிரகாரம் சொன்னாள். “சரி உன் மெசேஜ் பாக்ஸை ஓப்பன் செய்து பார்” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார். எடுத்துப் பார்த்தால் அதே நேரத்தில் அவர் மெஸேஜ் செய்திருந்தார்!!

இருவரும் நேரகாலம் பார்த்துதான் பேசுவார்கள். அவர் அவரது நண்பர்களுடன் சுற்ற, அலுவலைப் பார்க்க எல்லாவற்றுக்கும் நேரம் இருக்கும். ஸ்பேஸ் இருக்கும். அதுவே அவர்களை இன்னும், இன்னும் நெருக்கமாக்கியது என்று நினைக்கிறேன். அவளே சொல்வாள், “என் எல்லா சண்டைக்கும், ஏன்.. விளையாட்டா போடற சண்டைக்கும் காரணம் எப்பவும் அவனுக்குள்ள முத இடத்துல கடைசி ப்ரியமா நான் இருக்கணும். எனக்கு அவன் அப்படித்தான். அவன் இத புரிஞ்சிக்கிட்டான். அதனால்தான் சண்டை போட்டாலும் கோபிக்கவே மாட்டேங்கிறான்.”

கல்யாணமாகி வேறு ஏதேனும் காரணமாகச் சண்டை வந்தால் என்ன செய்வாள் என்று ‘வேறு ஏதேனும்’ என்பதை அழுத்தம் கொடுத்து இழுத்துக் கேட்டதற்கு ஆச்சரியப்படுத்தினாள். அவன் வேறு யாரிடம் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளட்டும் அந்த யாரோவுடைய முகமும் உடலும் நானாகவே இருப்பேன். நான் அதற்கென சண்டையிட மாட்டேன் என்றாள். நான் ஆணாக இருந்து ப்ரதீப் பெண்ணாக இருந்தாலும் இதுவேதான் என்றாள். எல்லாக் காதலர்களும் இப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

நான் ஆணாகப் பிறந்திருந்தால் ரத்னா அத்தை எத்தனைப் பெரியவளாக இருந்திருந்தாலும் அவளைத்தான் கட்டியிருப்பேன். ப்ரதீப் அதிர்ஷ்டம் மிக்கவர்.

மதியம் மொபைல் சார்ஜர் சரியாக வேலை செய்யவில்லை என்று சரிபார்க்க கடையில் கொடுக்கப் போனபோது ப்ரதீப்பின் ஃப்ரண்டை தற்செயலாகப் பார்த்துப் பேசியிருக்கிறாள். பைக் ஸ்டேண்டிடும் போது சமநிலையில்லாத தரையில் தடுமாறிக் கீழே விழுந்து ப்ரதீப் கையில் கொஞ்சம் பெரிய சிராய்ப்பு ஆகியிருக்கிறது. கையில் வலி இருக்கவும் இரண்டு நாட்கள் மட்டும் எல்போவில் கட்டுப் போட்டால் சரியாகும் என்று மருத்துவர் ஆலோசனைப்படி கட்டுப் போட்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.

உடனே வீடு திரும்பி என்னிடம் மட்டும் அவசரமாகச் செய்தியைப் சொல்லிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினாள். முகத்தில் அத்தனை வருத்தம். பெருகிய கண்ணீரை மறைக்க முயற்சித்து கண் சிவந்திருந்தது. கைவிரல்கள் காற்றில் படபடக்கும் திறந்த புத்தகத்தின் தாளைப் போன்று படபடத்தன. எவ்வளவு அன்புமிக்கவள் இந்த அத்தை! காதலுக்கு அழகு என் ரத்னா அத்தை. ப்ரதீப் கொடுத்து வைத்தவர்.

அவரைப் போய் பார்த்து வந்த சாயங்காலத்திலிருந்து அவள் முகம் இறுகிப் போயிருந்தது. நேற்றுக்கூட இனிக்க இனிக்கப் பேசிக்கொண்டிருந்தோம் அவள் காதலைப் பற்றி, ஆனால் இன்று… ப்ரதீப் பற்றிப் பேசுகையில் செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் அசைவதைக் காண்பதைப் போல் ஒரு திருப்தியும் சந்தோஷமும் அவள் முகத்தைக் காண்கையில் வரும். அப்படிப்பட்ட முகம் இன்று கறுத்துப் போயிருந்தது. எதற்கும் பதில் கூறவில்லை. எங்கள் வீட்டிற்குப் போய் நீண்ட நேரம் கழித்து வந்தேன். அவளிடம் மாற்றம் இல்லை. சிரமம் கொடுக்கக் கூடாதென்று அருகிலேயே அமைதியாக இருந்தேன். இந்தப் பழக்கம் கூட அத்தை சொல்லிக் கொடுத்ததுதான். தொடர்ந்து அவளது கறுத்த முகத்தைக் காணச் சகியாமல் கூட்டிலிருந்து முதல் நாள் எட்டிப் பார்க்கும் குருவிக்குஞ்சைப் போல் மெலிதாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினேன்.

நீண்ட அமைதிக்குப் பிறகு வெடித்தது அவள் குரல்.

“நான் அப்போ செக்க்ஷூவல் பார்ட்னரா? ஸோல் மேட் இல்ல அப்படித்தானே? கேட்டா ரொம்ப வருத்தப்படுவேனு சொல்லலனு கூட பொய் சொல்லலாம். ஆனா, அது பொய்தானே? நல்லவேளை அப்படி ஒரு பொய்ய சொல்லல.. அதுவரைக்கும் சந்தோஷம்.”

என்ன நடந்தது, ஏன் இப்படிக் குமுறுகிறாள் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொன்னேன். தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தேன். நாளை பேசலாம் என்றேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, நிதானமாக அவள் என்னிடம் கேட்டாள், “முந்தாநாள் நிலைப்படில இடிச்சிக்கிட்டப்ப, ரெண்டு வாரம் முன்னாடி கணுக்கால் சுளுக்கிக்கிட்டப்ப என்ன செஞ்சேன்?”

இவள் என்ன செய்தாள்.. பெரிதாக யோசித்து விட்டு, “இதுபோல நடக்கற எல்லா சமயமும் என்ன ஏதுன்னு தைலக் கையோட ப்ரதீப்பிடம் சொல்லிக்கிட்டு இருந்த.. இப்ப எதுக்கு இது?”

திட்டுவது போல் வேகமாகக் கூறினேன். அவள் முகம் மாறியது. கண்கள் சிவந்தன. எப்பொழுதும் நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். போனவாரம் நன்றாக எடுத்து பாராட்டு வாங்கின செமினார் முதல் நமக்குத் திடீரென வரும் சிறுவலியும் வேதனையும் கூட நமக்குப் பிடித்தவர்களிடம் பகிர்வதற்கு மனது ஓடும். வலியில் அம்மாவென்று கத்திய அடுத்த நொடி மனது நாம் உயிராய்க் காதலிக்கும் ஜீவனைத் தேடும். வலியைத் தாங்கும் மனோபலம் கூடும். ஆனால் இரண்டு நாட்களாகக் கட்டுப்போட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருப்பவனுக்கு எப்படி என்னிடம் சொல்லத் தோன்றவில்லை. ஏன் உடனடியாகச் சொல்லவில்லை என்று கேட்டாள்.

எப்படி வலித்திருக்கும், விழுந்தவுடன் ஒரு நடுக்கம் வரும், எப்படிச் சமாளித்திருப்பான் என்று நூறு முறை நினைத்திருப்பேன் எனக் கலங்கினாள். அப்படியிருந்தும் போய் பார்த்து சீக்கிரம் சரியாக வேண்டுமென ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்து வந்தது பாதிக்கப்பட்டவன் சரியாக வேண்டும் என்றுதான் மற்றபடி ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, “அவ்வளவுதான் எல்லாம் இனி அவ்வளவுதான்” என்றாள்.

அவள் கூறியதன் அர்த்தம் தாமதமாகப் புரிந்து பழைய நிகழ்வுகள், போட்டோஸ் என்று எதெதுவோ சமாதானம் செய்தேன். ப்ரதீப் மேல் சீரியஸான கோபமே வராது என்று நினைத்தேன். சிறிய சிராய்ப்புதானே இதில் என்ன இருக்கிறது என்று சமாதானம் செய்தேன். நான் ரசித்த இந்தக் காதல் உதிர்ந்து போவதைக் காண முடியாதவளாகப் பிதற்றினேன். நேரம் நடுநிசியைத் தாண்டி இருந்தது. எனக்கே இப்படி என்றால் அவளுக்கு அதிகமாக வலிக்குமே என்று மனது அங்காலாய்த்தது. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தக் காதல் கருமம் என்னவெல்லாம் செய்கிறது. தொடர்ந்து பேசியப் பிறகு மெளனம் கலைந்து திடமாகக் கூறினாள்.

“இப்பவும் எனக்கு அவன்மேல கோபம் இல்ல. வருத்தம்தான். தீராத வருத்தம். இந்தச் சிராய்ப்பு இனி ஆறாது. மருந்து இல்ல இதுக்கு”

அன்றிலிருந்து பேச்சுக் குறைந்தது. பழைய அத்தையைப் பார்க்க முடியவில்லை. மெளனமும் வருத்தமுமாக இறுகிக் கொண்டாள்.

***

அகராதி – aharathi26@gmail.com