Home Blog Page 37

சலனம் பூக்கும் சாலை

0

சம்பத் ஜி

(உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் குறு நாவலை முன் வைத்து)

          ன்பு பூக்கிற நிலம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அதன் வாசம் ஒன்று போலத்தானே இருக்க முடியும். அன்பு தன் அசலான நிலமறிந்து பற்றி  தன்னை படர்த்திக்கொண்டேயிருக்கிறது. ஓசையற்று தத்திப்பறக்கும் வண்ணத்துப் பூச்சியைப்போலவே  வெகுஎளிதாக. ஒட்டுதலும் பின் உதறுதலும் என தழும்பேறி நிற்கிறது வாழ்வு.  மனம் காலியாவதற்கான விதி அறிந்தும் கூட அதற்கான மன  ஒப்புதல் இல்லை. வாசங்களின் திறப்பில் திளைக்கிறது மனம்.  கழுவக்கழுவ கூடிக்கொண்டே போகும் நறுமனக் கமழ்ச்சிதான் காதல். யாவருக்குமே தொடரோட்ட வாழ்வில் இடை நிறுத்தத்திற்கான கையசைப்பு வாய்க்கிறது. அது இளைப்பாறுதலுக்கான நிழல் மாத்திரமல்ல. நமக்கான திசைகளை தெளிவாக்குகிற தருணம். காலத்தின் கையசைப்பையோ இடைநிறுத்தத்தையோ கூர்ந்து பார்க்காமல் மிகுவாழ்வின் பாய்ச்சலில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது  வாழ்வு. பாம்புகளும் கூட தன் முற்றிய வாழ்வின் அடையாளமாய் ரத்தினங்களை கக்குகிறது.  மனிதன் என்ற உயிரி மட்டும்தான் ரத்தம் கக்கிச் சாகிறான். ஞானக்கூத்தில் காதலென்பது ஒரு காட்சி மட்டுமே. ஆனாலும் இக்காதலின் மையத்திலிருந்துதான் பரிபக்குவங்கள் யாவுமே விரிகிறது.

      வாழ்வின் மூன்று முக்கிய இடைநிறுத்தங்களில் இறங்கி இளைப்பாறல் கொள்ளாது தனது  தீராத  ஆற்றாமையை பேசுகிறது உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் என்ற நாவல். “ என் நினைவுகள் உறங்கும் இடத்தில்தான் இப்போது அவர் வசித்து வருகிறார்”  என்ற இந்நாவலின் முதல் வரியே  இந்நூலின் அடிச்சரடை நமக்கு அறிவித்து விடுகிறது.  ”மகிழ்ச்சியாக வாழும் எல்லா குடும்பங்களும் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கிற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன. “ என்று டால்ஸ்டாயின் அன்னா கரினினா நாவல் தொடங்குவதைப் போலவே அந்தரங்க விசாரிப்போடு இந்த நாவலும் தொடங்குகிறது.  நாவலெங்கும் போதாமையின் வெப்ப அலைவு  ஊடாடியபடியே இருக்கிறது. இழந்த காதலின் ஆற்றாமையில் தரைக்கும் அந்தரத்திற்குமான ராட்டினத்தின் மாயச்சுழற்சியில் அலைவுறுகிறது இந்நாவல்.  இவரது சுயசித்திரத்தையே தனது அனுபச்செழுமையால் புனைவாக்கியிருக்கக் கூடமோ என்று ஆழ்ந்துவிடுமளவு முற்றிய எழுத்துகளோடு நகர்கிறது நாவல்.

       எழில்முகத்தையும் கூட கோட்டோவியமாக மாற்றிக் காட்டுகிற வல்லமை காதலின் இழப்புக்கு நேர்கிறது.  அந்த கருங்கோடுகளை வண்ணங்களால் பூர்த்தி செய்துவிடத்தான் எத்தனை பொய்த் தூரிகைகள். இவர்கள்தான் தன் பாதுகாவலின் பொருட்டு எத்தனை சவால்களை அணிய வேண்டியிருக்கிறது. ஆராதனா தனது அலுவலக கைப்பையில் அத்துனை அத்தியாவசியங்களையும் அடைத்துச் செல்லும் போது கூடவே ஸ்க்ரூடிரைவரையும் எடுத்து செருகிச் செல்கையில்,  அதற்கு தன் மகள் கேட்கிற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லாமல் போகிறது. இத்துனை பெண்ணியத் தளர்விலும் ஒரு பெண் ஆணை நம்பாமல் ஆயுத்தைத் தானே நம்பவேண்டியிருக்கிறது என்பதை நுட்பமாக பேசுகிற இடம் இது.  எதற்கும் ஒத்துப்போகிற காதலை ஒற்றைத் துரோகம் ஒவ்வாமையாக மாற்றிவிடுகிறதுதானே. பிரிந்து போன இணையின் தொலைபேசி மறுமுனை உரையாடலும் கூட மரணத்தின் வலியை ஒத்தது என்கிறார்.

        பூக்கள்  நறுமனத்திற்கானது மட்டுமே புசித்தலுக்கானது அல்ல. காதலும் கூட அப்படித்தான். அது வசீகரத்திற்கு மட்டும்தானா. காதல் எல்லா சடங்குகளையும் புறந்தள்ளி விடுகிறது.  அதில் திருமண பந்தமும் அடக்கம்தானோ.  இணையரானதும் கொண்டாட்டத்தின் பெருவெளி தானாகவே மறைந்துவிடுகிறதே.  கொண்டாட்டாத்தில் மட்டுமே அன்பைத் தேடுவோரின் தட்டையான தோல்வியிது. காதலும் காமமும் வெகுளியின் உபரி என்பதை மறுத்தபடியே இருக்கிறது மனம். “நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது”. என்ற சச்சிதானந்தன் வரிகள்தான் எவ்வளவு இயல்பூக்கம் கொண்டது. துரோகத்தின் ரத்தக்கரை மீது சயனித்தபடியேதான் கலவியின் நினைவுகளை  பரிமளமாய் பருகிக் கொள்ள முடிகிறது இவரால்.  கொதி நிலையின் ஊடாகவே ஒரு நறுமனப்பரவலும்  நகர்கிறது.  இந்த வினோத மனநோய்க்கான மாற்றீடுகளையும் தன்னியல்பிலேயே தருகிறார்.  தன் காயங்களை தானே நக்கி ஆற்றிக் கொள்கிற வேட்டை மிருகமாய் இழப்பின் வடுக்கள் சதா அழைத்த படியேதான் இருக்கிறது.  ஆனாலும் அன்பின் அடுத்த பாய்ச்சலுக்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறது மனம்.

       சராசரிகளுக்கும் ஒரு கலைஞனுக்குமான காதல் முற்றிலும் வெவ்வேறானவை. கலைஞனுக்கு காதலில் ஒரு துளிதான் வாழ்வாதாரம். சராசரிகளுக்கோ வாழ்வாதாரத்தில் ஒரு துளிதான் காதல்.  இப்பிறவியில் காதலுக்கும் கலைக்கும் மட்டுமே தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்து வாழ்பவர் ஆராதனாவின்  அப்பா. “ துயரம் ஒரு குற்றம்.  ஒரு சிறை. ஒரு வினோத மனப்பதிவு.  நான் அந்த சாம்பல் கித்தானிலிருந்து எழுந்தாகிவிட்டது ஒரு தாளைபோல” என்று அன்னா அக்மதோவாவின் வரிகளில் வசிக்கும் ஒரு ஆழ்ந்த ஓவியர் ஆராதனாவின் அப்பா.  பொங்கியெழும் பேரலையை கூட தன் வார்த்தைப் பரிவால் ஒற்றைக்குமிழாய் மாற்றி உடைத்துவிடும் வல்லமை கொண்டவர் அவர்.  தன்னை அறிதல் மட்டுமே சிறந்த அறிவு என்றும்,  மகளின் அல்லல் குறித்து “பாம்புடன் ஒரே குடத்தில் இருக்க நேரிடும் வாழ்க்கை அமைந்துவிட்டால் அதிலிருந்து விலகி விடுவதுதான் புத்திசாலித்தனம்” என்று பொறுப்பான வழிகாட்டுதலை கூறுவார். 

       அலைகளை பூசிய படியேதான் அலையற்ற மனத்திற்கு  ஏங்குபவள் ஆராதனா. தன் முதல் திருமணம் முறிவில் முடிகிறது. மகரந்தங்கள் நிறைந்த இளமையை காயடித்துக் கதறுவதில் என்ன அறமிருக்க முடியும்.  வெக்கையேறிய அவளது வாழ்வை  மழையாய் நனைக்கிறான் இரண்டாவதாய் இணைகிற வருண். தீவிர இலக்கிய போக்குள்ளவன் வருண். வெகுஜன ஊடகப்பணியிலோ ஆராதனா. ”தான் விட்டுப்போகும் படைப்புகள் எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒரு எளிய பார்வையாளனை சென்று சேர்வதே தனக்கு போதுமான அங்கீகாரம் என்ற நிறைநிலை கொண்ட படைப்பாளி.  இப்படியான ஆழ்ந்த களைஞனோடுதான் அன்பினால் மிக மிக இறுக்கமாக  மூச்சு முட்டுமளவிற்கு பிணைப்பில் வாழ்கிறாள் ஆராதனா. ”பிறந்து மலரும் பூவினுள் புகுந்து மறுமுறை உடல் பருகுவோம்” எனும் உன்மத்த பிணைப்பு. அவனால் உடலின் அத்துனை புலன்களும் சுறுசுறுப்படைந்தன என்கிறார். வருணின் அன்மை ஆராதனாவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டேயிருந்தது.  “கண்ணா மூச்சு விளையாட்டில் காணாமல் போகிறவர்கள் கொஞ்ச நாளில் கருப்பையின் வழியே வீடு திரும்புகிறார்கள்” என்ற வெய்யிலின் கவிதை வரிகளைப் போலவே காதல்மனத்தின் ஆற்றாமையை பூர்த்தியாக்குகிற சில ஜென்மாந்திர உறவுகளும் மாயமாய்  வாய்த்துவிடுகிறது. அப்படி வாய்த்தவன் தானோ வருண் என்றே திளைக்கிறாள். அதுவும் நிலையற்ற திளைப்பாகிறது. அது பிரசன்னமான உறவல்லவா  வந்த வேகத்தில் வரத்தோடு சாபத்தையும் செருகிவிட்டு மறைகிறது. வருணின் தீவிர இலக்கிய பித்தமும் ஆராதனாவின் வெகுஜன ஊடகப் போக்கும் முரண்படுகிறது. தீவிர இலக்கியவாதியெனினும் அதீத உடைமயுணர்வு கொண்டவனாகவே இருக்கிறான் வருண். பழைய காயத்திலேயே புதிய ஆயுத்ததை செருகிவிட்டு  தன் குழந்தையோடு பிரிகிறான் வருண். “ வாலிப வெறியில் என் வாழ்க்கைத் தூணை இடித்து என் மீதே வீழ்த்திக் கொண்டேன் “. என்று ரசூல் கூறியதைப்போலவே ஆராதனா  சடங்கான பற்றுதலில் மீளவும் பலியாகிறாள்.  அரைத்தூக்க பிதற்றல்தான் காதல்மொழி என அறிவு அறிந்தும் கூட மனம் மட்டும் வியந்து கொண்டேயிருக்கிறது. துரோகத்தின் ரத்தக்கறை மீது சயனித்தபடியேதான் கலவியின் பரிமளத்தை பருகிக் கொள்ள முடிகிறது. உடலுக்குள் கனவா. கனவுக்குள் உடலா என பகுக்க முடியாத பித்தம். உறவறுந்த பதைப்பின் ஆற்றாமை படைப்பெங்கும் உடாடியபடியே இருக்கிறது. “ ஒருவரை உள்ளபடி அவராகவே ஏற்றுக்கொள்வதுதான் உச்சகட்ட அன்பு” என்றும் கூறுகிறார். இந்த அலை மனதை “ நினைவுகள் மனதில் உறங்கும் நித்யத்துயில் என்கிறார்  நூலாசிரியார் உமார்பார்வதி.

       நூலெங்கும் ஒரு அசட்டையான தத்துவச் சிரிப்பு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. பித்தத்தோடு அலையும் சித்தனின் ஒவ்வொரு காலடித்தடத்திலும் ஞானம் பூத்தெழுவதைப் போலவே  நூலெங்கும் கவித்துவம் பூத்த படியே நகர்கிறது. தான் சுருளி அருவியில் குளித்துத் திரும்பும் போது திடீரென ஒரு சித்தர் தோன்றி, திருநீரு இட்டு ஆற்றுப்படுத்தி, மூச்சைக்கவனி என்று ஆசீர்வதித்து மறைகிறார். நிறங்களால் மெருகூட்டப்பட்ட நாட்களின் நினைவும், ஊழியின் வாதையும் இணைந்து நகர்கிறது.  திட்டமிடலற்ற புனைவாகவே இந்நூலை அணுக முடிகிறது.  இது ஒரு தன்னுணர்ச்சிப் புனைவு.   இவரிடம் எவ்வகை குறுக்கீடுமற்ற ஒரு ரகசிய புனைவுச் சுகம் துலங்குகிறது.  ஒரு படைப்பு அசலான தன்னம்சத்தில் மட்டுமே  நிறைவடையும். படைப்பை ஒட்டாத உபரி அம்சங்கள் இதில் ஏதுமில்லை. ”காரணம் தெரியாத புறக்கணிப்பு மரணத்தைவிட கொடுமையானது” என்கிறார். அதேசமயம் “ மிஞ்சி மிஞ்சி போனால் ஏமாற்றுவார்கள், புறம் பேசுவார்கள், துரோகம் செய்வார்கள். செய்துகொள்ளட்டும்” என்றும் அதிர்வற்ற வாழ்வின் அணுகலை கூறுகிறார்.  காதல் மனத்தின் பொதுப்புத்தியை பால் பேதமற்று அலசுகிறார். உடலின்பம்  வெகு நிச்சயமாக ஆன்மாவுடன் தொடர்புடையது என்று நம்புகிறார். வசீகரமான பட்டு நெசவினூடாக திடுமென துயரின்  ஒரு கறுப்பு இழையையும் ஓட விடுகிறார். வாழ்வின் பல்சக்கரங்களில் நசுங்குவோருக்கே மனஅடுக்குகளை நுட்பமாக அணுக முடிகிறது. “எதன் பொருட்டும் என்றும் நான் அதிகம் ஏங்குவதில்லை. எது நம்மை விட்டு போகிறதோ அது உண்மையில் நமக்கு தேவையெனில் நிச்சயம் திரும்ப வரும். இல்லையெனில் அது நமக்கானதல்ல என்பதை சிறு வயதிலேயே புரிந்து கொண்டேன். வெயிலோ நிழலோ, குளிரோ, மழையோ அக்கணம் எதுவோ அதன் தன்மைக்கு ஒத்துப்போவேன். என் பிரியத்துக்குரிய அப்பாவைப்போலவே” என்றும் வாழ்வின் ஒவ்வொரு இடறலின் போதும்  தன் தந்தையின் வார்த்தைகளே வலிமை சேர்க்கின்றன என்று உறுதி படுத்துகிறார். உன்னதமான வாழ்வை நூலெங்கும் மிக எளிதாக அணுகுகிறார். “ சிலவற்றிடம் வாழ்  நாள் முழுவதும் நாம் குட் பைக்களை சொல்லிக்க்கொண்டுதான் இருக்க நேரிடும். ஈகோ அத்தகைய ஒன்று” என்று ரமணமகரிஷியின் கர்வப்பொசுக்கலை தனக்கேயான கொண்டாட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார்.

           தன் இருத்தலின் ஆழத்திலிருந்த புதிர்மைமையை புலர்வாக்கித் தந்திருக்கிறார். பாழ்நிலத்தின் வெக்கையிலிருந்த படியே பழ ரசங்களை நமக்கு பரிசளிக்கிறார். விடுபடலற்ற முத்தம். விசையுறு காமம்.  பிரிவின் கொடுந்தொலைவு. காதலின் பிரும்மாண்டம். என இவரது இயல்பான கவிமொழி இப்புனைவை  வெகுஅழகியலோடு மெருகேற்றுகிறது. காதலைத் தொலைத்தவர்களுக்கு  இந்நூலினூடே  அதை மனதோடு மீட்டுத்தருகிறார்.  நித்தியமான வாழ்வில் நமக்கான இடைநிறுத்தங்கள் மட்டுமே வாழ்வை உயிர்ப்பிக்கிறது என்கிறது உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் என்ற இந்நாவல். தமிழ் கூறும் நல்லுலகில் இழந்த காதலர்களுக்கான காதலை மீட்கிறது இந்நூல்.  இது யாவரும். காம். வெளியீடாக வந்துள்ளது.

 ***

சம்பத்.ஜி     
7904781902
sampathnregs@gmail.com

கலைச்செல்வி சிறுகதைகள்: மனித அறம் பேசும் கதைகள்

0

சுப்பிரமணி இரமேஷ்

லி’, ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது,’ ‘மாயநதி’, ‘கூடு’ என அடுத்தடுத்துச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாக்கிக் கொண்டவர் கலைச்செல்வி. எழுத முடியாமல் மனதில் அசைபோட மட்டுமே சாத்தியமுள்ள பெண்களின் அகப்பிரச்சினைகள் சார்ந்து படைப்பூக்கத்துடன் தொடர்ந்து எழுதி வருகிறார். திருச்சியில் வசித்துவரும் இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றுகிறார். பெண் எழுத்தாளர்களில் இரண்டு விஷயங்களில் இவரது எழுத்துகள் தனித்துவமானவை எனக் கருதுகிறேன். ஒன்று, இவரது புனைவுகளில் வெளிப்படும் அறச்சீற்றத்துடன் இழைந்த பகடி; மற்றொன்று சூழலியல் பிரச்சினைகள்.

இலக்கியப் பின்புலம் இல்லாமல் எழுத வந்தவர் கலைச்செல்வி. யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமாகத் தொடக்கத்தில் இவரது கதைகள் அமைந்திருந்தன. பின்னர் யதார்த்தத்தின்மீது மாயத்தைப் புகையாகக் கசியவிட்டுத் தனக்குத் தெரிந்த மொழியைத் தம் புனைவுகளில் முன்னும் பின்னுமாக ஊடாட விட்டார். பெரும்பாலும் இச்சமூகத்தின்மீது நிகழும் அறமின்மை இவரது கதைகளுக்குப் பின்புலமாக இருந்து வருகின்றன. குறிப்பாக நிலத்தின் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு இவரது புனைவுகள் கவனம் கொடுத்துள்ளன. இந்தப் புள்ளியில் இருந்துதான் கலைச்செல்வியின் பெரும்பான்மைக் கதைகள் உருப்பெறுகின்றன. இது குறித்து உரையாடுவது அவசியம்.

காந்தி என்கிற பிம்பமும் காந்தியம் என்கிற கோட்பாடும் படைப்பாளர்களுக்கு என்றுமே அட்சயப் பாத்திரங்கள். அந்தப் பாத்திரம் இவருக்கும் ஒரு கதையை நல்கியிருக்கிறது. தமிழகத்திலிருந்து காந்தியைப் பேசுபவர்களும் மேற்கு வங்கத்திலிருந்து காந்தியைப் பேசுபவர்களும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். தன்னை விமர்சிப்பவர்களுக்கும் காந்தியே தமது செயல்பாடுகளில் பல ஓட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு. அந்த ஓட்டைகளைச் சூட்சமப் பொருளாகப் பார்ப்பவர்கள் காந்தியவாதிகளாகவும் ஸ்தூலப் பொருளாக அணுகுபவர்கள் காந்தியத்திற்கு எதிரானவர்களாகவும் வரலாறு கட்டமைக்கிறது. காந்தியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் ஆண்கள் பலரும் திலகரின் மனநிலையுடனே பெண்களை நடத்துகிறார்கள். இவரது ‘தங்க நொடிகள்’ என்ற கதை இதுபோன்று பல்வேறு வாசிப்புகளைத் திறந்துவிடுகிறது.

ஆண்கள் பின்பற்றும் கொள்கையும் கோட்பாடும் பொதுவெளிக்குத்தாம்; அகத்தில் அதற்கு நேரெதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கலைச்செல்வியின் கதைகள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுகின்றன. ‘எதிர்வினை’ என்ற சிறுகதையும் ஆண்களின் இரட்டை மனப்பான்மையைப் பேசும் புனைவுதான். பொதுவுடைமைவாதிகள் மீது கடுமையான விமர்சனத்தை இக்கதை முன்வைக்கிறது. அதிகாரத்தைத் தங்களது பலமாகக் கருதும் ஆண்கள் அதனைத் தம் மனைவியர் மீதே அதிகமும் பயன்படுத்துகிறார்கள். இதில் கம்யூனிசம் பேசுபவர்களும் அடக்கம். இதுதான் இவர்களது உண்மை முகம். ஆண்கள் எந்நிலையிலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். வர்க்கச் சுரண்டலைப் பற்றியும் பாலின ஒடுக்குமுறையைப் பற்றியும் பொதுவில் சத்தமாகப் பேசும் இவர்கள்தாம் ‘பொட்டச்சிக்கு இதெல்லாம் வேண்டாத வேல…’ என்று வீட்டுக்குள் பேசுகிறார்கள். கணவன் இறந்தபிறகே தனக்கான வாழ்க்கையை வாழ நினைக்கிறாள் இக்கதையின் ராஜேஸ்வரி. தமிழ்ப் பண்பாட்டின்மீது இக்கதை நிகழ்த்திய குறுக்கீடு இதுதான்.

அப்பாவும் மோட்டார்பைக்கும்’ என்றொரு கதையும் கணவன் மீதான நுட்பமான விமர்சனம்தான். பெண்களின் காமம் சார்ந்த பிரச்சினைகளை நகரத்திலுள்ள பெண்கள் பேசுவதாகவே அதிகமும் எழுதப்படுகின்றன. இக்கதையின் களம் கிராமம். கணவனின் பலவீனத்தை மனைவி அவளுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் வெளிப்படுத்துகிறாள். கணவர் மோட்டார் பைக் ஒன்றைப் பராமரித்து வருகிறார். அவ்வளவாக ஓட்டத் தெரியாது. ஆண்கள் தங்கள் பலவீனத்தை மறைக்கப் பெண்கள்மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பார்கள். அது உளவியல் பிரச்சினை. அதனைத்தான் இவள் கணவனும் செய்கிறார். மோட்டார் பைக் ஓர் அலங்காரப் பொருள். ‘ஆமா… ஒத்தப்புள்ளைக்கே ஒங்கப்பாருக்கு எம்பாடு ஒம்பாடு ஆயிபோச்சு… எல்லாம் இந்த பைக்கு மாதிரிதான்…’ என்று மகனிடம் பகிரும் கடைசி வரியில்தான் கதையின் மையமே பிடிபடுகிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும் அப்பெண்ணின் இடத்திலிருந்து வாசிக்கும்போது எவ்வளவு பெரிய துயரத்திலிருந்து இவ்வரிகள் வெளிப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அவளது எதிர்வினை நொறுக்கிவிடுகிறது. யதார்த்தவாதக் கதைகளில் பிரச்சாரத் தொனி வெளிப்படாமல் எழுதுவதுதான் பெரும் சவால். கலைச்செல்வி இதனைப் பிரக்ஞையுடன் அணுகியிருக்கிறார்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் கணவனை இழந்துவிட்ட ஒரு பெண் தன் மகள் அவள் கணவனுடன் இருக்கும் ஓர் இரவில் தன் தாம்பத்திய வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கும் கதைதான், ‘இரவு.’ பதினேழு வருடத் துயரங்கள் அவள் நினைவை அலைக்கழிக்கின்றன. மகள், மருமகனுடன் தனித்திருக்கும் தருணங்களில் இவள் ஆற்றாமைக்குள் தள்ளப்படுகிறாள். இளம் விதவையரின் காமம் சார்ந்த துயரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த வகையில் இது குறிப்பிடத்தக்கக் கதை. மகளின் கூடலும் கூடல் சார்ந்த நகர்வுகளும் இவளுக்குள் எரிச்சலை உண்டாக்குகின்றன. அம்மா மகள்மீதே பொறாமை கொள்கிறாள். இந்த நுண்ணுணர்வுதான் கதைக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. சிறிய கதையாக இருந்தாலும் வாசகனுக்கு இக்கதை கடத்தும் ஒரு பெண்ணின் தாப நிலை கவனிக்கத் தகுந்தது.

முற்காலத்தில் பெண்கள் குழந்தை பெறுவதென்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. இன்று பெண்ணிற்கான முக்கியமான பேறுகளில் ஒன்று. இறைவனின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணிற்குக் குழந்தைப்பேறு வாய்க்கும் என்ற புனித நிலைக்குக் குழந்தை பெறுதல் நிகழ்வு இன்று மாற்றப்பட்டிருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு மாதவிடாய் தள்ளிப்போகாத ஒவ்வொரு மாதமும் கணவனும் அவன் குடும்பமும் உருவாக்கும் நெருக்கடியால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். கரு உருவாகும்போது பெண்கள் அடையும் மகிழ்ச்சியைவிட மன நெருக்கடிகளே அதிகம் என்பதையே ‘பிரசவ வெளி’ என்ற கதை பேசுகிறது. பெண்மையையும் ஆண்மையையும் நிரூபிக்கும் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக உறவுகளால் கொண்டாடப்படுகிறார்கள். இக்காலத்தில் குழந்தை உருவானதில் இருந்து பிறப்பது வரை பெண்கள் அடையும் அழுத்தங்கள் சொல்லித் தீராதவை. அன்றாடத்தின் ஒரு பகுதியாக இருந்த மக்கட்பேறு இன்று அரிய நிகழ்வாக மாறிப்போனதன் பின்னணி பற்றி உரையாட வேண்டும். இதன் ஒரு பகுதியையே கலைச்செல்வி இப்புனைவினூடாக எழுதியிருக்கிறார்.

இக்கதை இரண்டு இடத்தில் வாசிப்பவரின் கவனத்தைக் குவிக்கிறது. ஒன்று, ‘அப்டியே மருமகன் மாதிரியே இருக்குதுடீ புள்ள…’ என்று அவள் அம்மா கூறுகிறாள். அவள் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? தன் பெண்ணின் உடல் சார்ந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறாள். அதனால் அப்படிச் சொல்வதுதான் பாதுகாப்பானது. மருமகன் மாதிரி இல்லாவிட்டாலும் அவன் நம்பும்வரை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒழுக்கம் சார்ந்த உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றொன்று பிள்ளைபெறும் பெண்களின் அந்தரங்கம் குறித்துப் புனைவு பேசியிருப்பது. மறைத்து மறைத்து வைத்திருந்த பெண்களின் உடல் பிரசவத்தின்போது காட்சிப் பொருளாகி விடுகிறது. வீட்டில் நடக்கும் பிரசவத்தில் இப்பிரச்சினை இல்லை. ‘நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ’ என்று அம்மா நினைவுபடுத்தும் அளவுக்கு இக்கதையில் இடம்பெற்றுள்ள பெண் கூச்சமற்றுப் போகிறாள். கதையின் உள்ளடக்கம் வெகுசனத்தளத்தில் இருந்தாலும் குழந்தை பெறுவதிலுள்ள பெண்களின் உளவியல் பிரச்சினைகளை எழுதிய வகையில் பொருட்படுத்த வேண்டிய கதையாகிறது.

காட்டின்மீது அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நிகழ்த்தும் வன்முறையினூடாக அலைவுக் குடிகளாக மாறும் பழங்குடிகளின் துயரம் குறித்தும் வனவிலங்குகளின் அழிவு குறித்தும் கலைச்செல்வி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். புத்தகத்திற்கு இரண்டு மூன்று கதைகளாவது இயற்கை மீதான மனிதனின் சுரண்டலைப் பேசக் கூடியதாக இருக்கிறது.

காட்டாளர்களிடமே வனவிலங்கை வேட்டையாடித் தரும் பணியை ஒப்படைக்கும் அரசு அதிகாரிகளின் மீதான கோபம் ‘கூடு’ என்ற கதையாகியிருக்கிறது. அவர்களை எதிர்ப்பதினூடாக நிகழும் பின்விளைவுகள் அனைத்தையும் பூர்வகுடிகளே அறிவார்கள். காடுகள் மீதான சுரண்டலைப் பேசும் மற்றொரு கதை, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது.’ தனியார் நிறுவனங்கள் அரசைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் காடுகளின் கனிம வளங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. பெருமுதலாளிகளின் பல தொழிற்சாலைகள் காடுகளில்தாம் நடத்தப்படுகின்றன; காடுகளின் அமைதியை உடைத்துக் கொண்டும் அறுத்துக் கொண்டும் எந்திரத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பழங்குடியினரும் விலங்குகளும் தந்திரமாகக் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும் அதற்குப் பின்புள்ள அரசியலையும் ஒரு புலியைக்கொண்டு இப்புனைவில் எழுதியிருக்கிறார். இக்கதையில் சித்ரா என்பது ஒரு புலி. ஒவ்வொரு புலிவேட்டைக்குப் பின்பும் பூடகமான ஓர் இலாபக் கணக்கு நிச்சயம் இருக்கும் என்ற பதற்றத்தையும் இக்கதை உருவாக்குகிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் குளிர்பானத் தொழிற்சாலையின் வருகைக்குப் பின் தரங்குறைந்த சுற்றுச்சூழல் மாறுபாட்டைச் சொல்லும் கதை ‘ஆழம்’. விவசாயத்தின் வீழ்ச்சி, ஆழ்துளைக் கிணறுகள் உருவாவதன் பின்னணி, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்ட தன் குழந்தையை மீட்கப் போராடும் ஒரு பெண்ணின் துயரம் என விரிகிறது புனைவு. இப்பிரச்சினைகள் எல்லாவற்றுக்குக் பின்பும் இருப்பது ஒரு குளிர்பானத் தொழிற்சாலை. மயங்கிக் கிடக்கும் அக்குழந்தையின் தாய்க்கு அவள் நிலத்தின் நீரை உறிஞ்சித் தயாரித்த குளிர்பானத்தையே அதிகாரிகள் குடிக்கத் தருகிறார்கள். அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் கலைச்செல்வியின் கதைகள் சுட்டிக்கொண்டே இருக்கின்றன. இக்கதையிலும் அத்தன்மையைக் காணலாம். ‘அறம்’ திரைப்படம் இதே பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டதுதான்.

மூன்று மகன்களுடன் வாழ்ந்த ஒரு குடும்பம் ஊருக்குள் வந்த ஒரு தொழிற்சாலையின் காரணமாகச் சிதைவுக்குள்ளாவதைப் பேசும் கதை, ‘அவை ஊளையிடுகின்றன.’ தொழிற்சாலையின் வருகை மண்ணையும் நீரையும் விஷமாக மாற்றுகிறது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். நாய்கள் ஊளையிடுவது தொழிற்சாலையில் ஒலிக்கும் சங்குக்கான குறியீடு; அப சகுனம். எந்தப் பிரச்சினையிலும் பெண்களே அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இக்கதையும் ஓர் உதாரணம். இக்கதையைக் குறிப்பிட்ட ஒரு நிலத்திற்கானதாகக் கருத முடியாது. கலைச்செல்வி இதனைத் தன் பாணியாகவே கையாள்கிறார். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சத்தம் உடல் சார்ந்த பிரச்சினைகளுடன் மனப்பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எழுதி எழுதித்தான் இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் உள்நாட்டுப்போர் அவர்களைச் சொந்தப் புலத்திலிருந்து வெளியேற்றி அகதிகளாக்கி வருகிறது. ‘கனவு’ என்ற கதை இதன் தீவிரத்தைப் பேசியிருக்கிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களைக் குறித்த புனைவாக இதனைச் சுருக்க முடியாது. எங்கெல்லாம் சொந்த நிலத்தில் வாழமுடியாமல் வேற்றுப்புலத்திற்கு மக்கள் நகர்கிறார்களோ அவர்கள் அனைவருக்குமான துயரத்தை இக்கதை பேசுவதாக வாசிக்கலாம். 1980-களுக்கு முன்புவரை சொந்த நாட்டினராலேயே அகதிகளாக்கப்படுவோம்; வன்புணரப்படுவோம்; கொல்லப்படுவோம் என ஈழத்தைச் சார்ந்தவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்; ஆனால் நடந்தது. பல நாடுகளிலும் இப்பிரச்சினை இருக்கிறது. எந்நிலத்தில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தினரின் துயரங்களுடனும் பொருத்திப் பார்க்கும் வாசிப்பை இக்கதை வசப்படுத்தியிருக்கிறது.

குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டல்கள் பற்றிய கலைச்செல்வியின் கதைகளும் முக்கியமானவை. இளம்வயதில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு மனப்பிறழ்வுக்குள்ளான ஒருவனின் கதை, ‘மாயநதி.’ படைப்புத்தளத்தில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்குள்ளாவது குறித்தே அதிகமும் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்விஷயத்தில் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்தும் கவனப்படுத்தவேண்டி இருக்கிறது. கலைச்செல்வி இந்த இடத்தில் தனித்துத் தெரிகிறார். ‘பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை’ என்பதைத் தன் எழுத்தில் பின்பற்றி வருபவர் கலைச்செல்வி. அப்பா இறந்து போகிறார்; அம்மா வேலைக்குப் போகிறாள். மகனின் தனிமையைப் பயன்படுத்திக்கொள்கிறான் எதிர்வீட்டு இளைஞன். எதிர்க்கவும் முடியாமல் காட்டிக் கொடுக்கவும் இயலாமல் ஏற்படும் பதற்றம் நாளடைவில் மனநிலை பாதிப்பாக மாறுகிறது. அவனுக்குள் ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். இந்த மாய உலகம் புறச்சூழலுக்கு மனப்பிறழ்வாகத் தெரிகிறது. நகர வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் ஒன்று தனிமை. இந்தப் பிரச்சினையைச் சரியான தருணத்தில் கவனிக்கத் தவறும்போது அதன் முடிவு என்னவாக இருக்கும் என்ற எச்சரிக்கையும் புனைவுக்குள் உண்டு. எதார்த்தமும் மாயமும் கலக்குமிடம் வெளிப்படாமல் நகர்கிறது புனைவு.

பிரியாணி’ இவரது குறிப்பிடத்தக்கக் கதைகளுள் ஒன்று. அறிவுக் குறைபாடுள்ள ஒரு பெண்ணைப் பிரியாணி வாங்கிக் கொடுத்துச் சீரழித்த கதை. அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வந்தவனை அண்ணன் என்றே அழைக்கிறாள். அவளது அப்பாவித்தனத்தையும் வயிற்றுப் பசியையும் அவன் பயன்படுத்திக் கொள்கிறான். கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சி இல்லை; திரும்பத் திரும்பப் பிரியாணி ஆசையைக் காட்டி அவளிடம் எல்லை மீறுகிறான். இறுதியில் ஒரு கும்பலுடன் வருகிறான். உடலளவில் பருவம் எய்தியவளாக இருந்தாலும் மனதளவில் அவள் குழந்தை. இச்செயலும் ஒரு குழந்தைமீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வுதான். வந்தவன் ‘குடித்திருந்தான்’ என்ற தகவல் கதைக்குள் இடம்பெற்றுள்ளது. இது கதைக்குப் புறவயமானது; ஆண்களைக் காப்பாற்றும் செயல். நிதானம் தவறியதால்தான் அப்படி நடந்துகொண்டான் என்பதற்குக் கதையில் எவ்வித நியாயமும் செய்யப்படவில்லை. அவன் அடுத்தடுத்து வரும்போது இந்தக் குறிப்பு இல்லை. ‘முத்துபொம்மு’ என்ற கதையையும் இதனுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தில் கூட்டுப்பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட எட்டு வயதுச் சிறுமியை இக்கதை நினைவூட்டுகிறது. இக்கதையில் வரும் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அறத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வு அந்தப் பெண்ணைத் தெய்வமாகப் புனைந்திருக்கிறது. இக்கதையில் உருவாக்கும் நிலக்காட்சியையும் எந்த நிலத்தின் மலைப்பிரதேசங்களுக்கும் பொருத்தி வாசிக்கலாம்.

புத்தரின் தொன்மம் குறித்துச் ‘சவுந்தரி’, ‘ஓசை’ ஆகிய இரு கதைகளை எழுதியிருக்கிறார். முதல் கதை மறைமுகமாகவும் இரண்டாம் கதை நேரடியாகவும் புத்தரின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது. யசோதையின் பக்கம் நின்று சித்தார்த்தனின் நள்ளிரவு வெளியேற்றத்தைப் பார்க்கும்போது அவனது செயல் அறமற்றதாகவே தோன்றுகிறது. அரண்மனைக்குள் மிகப் பாதுகாப்பாக வளர்த்த சுத்தோதனரையும் யசோதை விமர்சிக்கிறாள். இல்லறத்தின் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகும் சித்தார்த்தன்கள் காலந்தோறும் உருவாகிக்கொண்டே தான் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் ‘சவுந்தரி’ கதைக்குள் இருக்கிறது. ‘நீரோசை’, ‘மாயக்கண்ணன்’ ஆகிய கதைகள் கங்கைக்கரையின் தொன்மத்தைத் தாங்கி நிற்பவை. அப்பா, அம்மா, தாய்மாமா என அடுத்தடுத்து அனைவரும் இறந்து போகிறார்கள். கங்கையின் கரையில் அவர்கள் தங்களை எரித்துக் கொள்வதின் மூலம் தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்கிறார்கள் என்பது ஒரு கற்பிதம். அம்மா மரணத்தின் ஈரம் காயும் முன்னே மறுமணம் செய்த அப்பாவையும் அக்காவின் இறப்பிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் அக்காவின் நினைவுகளில் வாழும் மாமாவையும் கங்கைக்கரை சமமாகக் கருதுமா? இக்கதைகளை வாசிப்பவர்கள்தாம் இவை உருவாக்கும் இடைவெளிகளை இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

வெகுசன இதழ்களிலும் இருண்மை நிறைந்த உருவகக் கதைகளைக் கலைச்செல்வி எழுதியிருக்கிறார். புனைவிலிருந்து கதையை வெளியேற்றும் உத்தியை சில கதைகளில் காணமுடிகிறது. சில கதைகள் கதையுடன் சேர்த்து வாசகனையும் வெளியேற்றி விடுகிறது.

எல்லாக் கதைகளிலும் அரசியலைப் போகிற போக்கில் சில வரிகளிலாவது உள்ளிறக்கியிருக்கிறார் கலைச்செல்வி. ‘நாங்கூட பாத்தாங்கிளாசு வரைக்கும் போனேன்… ஜாதி சர்டிட்டு இல்லாம பரிச்ச எழுத முடியில… அவர்கள் குடியிருப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாம். பிறகு நடைபாதைக்கு வந்து விட்டதாகச் சொன்னாள்’ (படித்துறை). இந்தக் கதை சாதியம் குறித்தோ அரச வன்முறை பற்றியோ நேரடியாகப் பேசும் கதையில்லை. இவர் பேசும் அரசியல் அனைத்தும் இலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் காய்களைப் போன்றவை. பூர்வக்குடிகளின் நிலத்தைப் பெரும் பணக்காரர்கள் தங்களின் ஓய்வுக்கான மாளிகைகளாக மாற்றிக் கொள்கிறார்கள். நிலம் பறிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையின் ஒழுங்கும் சிதைவுக்குள்ளாகிறது. இதுபோன்று புறப்பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறார்.

அன்னை’, ‘படித்துறை’ கதைகளில் வெளிப்படும் அரசியல் பெண்ணியம் சார்ந்தது. தங்கள் வீட்டுப் பெண்களின் திருமணங்களில்கூட ஆதாயம் தேடும் ஆண்களின் சுயநலத்தை எழுதியிருக்கிறார். சிலநேரங்களில் அம்மாவே அவளது இருப்பு சார்ந்து அவ்வீட்டு ஆண்களின் பக்கம் நிற்கவேண்டிய சூழலும் இக்கதைகளில் வெளிப்படுகிறது. இவ்விரு புனைவுகளில் வெளிப்படும் பெண்களின் துயரத்தை வாசகனால் எளிதாகக் கடக்க முடியாது. திருமணம் கைகூடாமல் முடிந்துபோகிற காதலின் வலியை இப்பெண்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள். எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தாம் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதேபோல் நாத்தனார்கள் குறித்துப் பல கதைகளில் எழுதியிருக்கிறார். இவர்களால் குடும்பத்திற்குள் நிகழும் இடையீடுகள் எவ்வாறு அந்தக் குடும்பத்தையே கலைத்துவிடுகின்றன என்ற பார்வை இக்கதைகளுக்குள் இருக்கிறது.

கலைச்செல்வி தம் புனைவுகளில் சொல்வதைவிடச் சொல்லாமல் மௌனம் காப்பதும் பிரதானமாக இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் இந்த மௌனம் ஓர் இருட்டைப் போல ஒளிந்திருக்கிறது. சில கதைகளில் ஒளிந்திருக்கும் இந்த அதீத மௌனம் வாசகனை வெறுமைக்குள்ளாக்கிவிடும் சாத்தியமும் இருக்கிறது. எந்த வரியிலும் கதையின் தடம் மாறக்கூடும் மொழிச் சிக்கனம் இவரது புனைவுகளில் கூடிவந்திருக்கிறது. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக் கொள்ளலாம். வெகுசன உள்ளடக்கமாக இருந்தாலும் தம் புனைவுத் திறனால் முக்கியமான ஒன்றாக மாற்றிக் காட்டுகிறார். சில கதைகளில் இது நிகழவில்லை. தொடக்க காலக் கதைகளில் ஒரு தெளிவான படிமமும் கதையும் இருந்தது. பிற்காலத்தில் எழுதிய கதைகளின் மீது ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தன்னையே அவர் கடந்திருக்கிறார். மொழியின் சிக்கனம் கதைகளின்மீது ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

***

சுப்பிரமணி இரமேஷ் – சென்னை இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரிகிறார். ’எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்‘, ‘தொடக்ககாலத் தமிழ் நாவல்கள்’, ‘தற்காலப் பெண் சிறுகதைகள்’ ஆகிய கட்டுரை நூல்களும், ’ஆண் காக்கை’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. மேலும், தமிழ் சிறுகதை வரலாறும் விமர்சனமும், கதைவெளிக் கதைஞர்கள், பெருமாள் முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகை நூல்களையும் தொகுப்பாசிரியராக வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் – ramesh5480@gmail.com

‘டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம்…

0

லட்சுமிஹர்

 சுற்றித் தனிமை மட்டும் குடிகொண்டுள்ள அந்த கூடாரத்தின்  மேல்பரப்பு  காற்றின் வேகத்திற்கு ஏற்ப  தன் பாதையை தேர்வு செய்துகொள்ள மறுத்து அதனோடு போராடிக் கொண்டிருப்பதாகவும், போர்கள வீரர்களாக  தங்களை  கற்பனை செய்துகொண்டு இருவரும் சேர்ந்து நம்முடைய  உறக்கத்தை கிண்டல் செய்வதாக மானசா சொல்லிக்கொண்டே இருந்தாள். 

“எப்போதிருந்து இந்த கூடாரம் இங்கிருக்கும் ” மேல் நோக்கிய பார்வையுனுடன் அவளின் கேள்வி ரானை  ஆச்சர்யப் படவைத்தது. பயணத்திற்கு  புதியவள் போன்ற அந்த கேள்வியை சரியாக அணுகி விடை சொல்ல இயலாமல் போன நேரத்தை பயன்படுத்திக்கொண்டவள் மீண்டுமொரு கேள்வியை கேட்க அது இன்னும் அவள் மேல் இந்த இரண்டு நாட்களாக எழும் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் அடிகோடிட்டு காட்டியது.

“இது கண்டிப்பா நம்மோடது தான?” என்றாள். பரந்து விரிந்து கிடக்கும் இந்த வானத்தை நம்முடையது தானே என்கிறாள் அவ்வளவு இயல்பாக.

பெரும் வனத்தினுள் எந்த வித அச்சமின்றி மானசி நிம்மதியாக உறங்குவதை ரான் பல நாட்கள் ஆச்சர்யமாக பார்த்திருக்கிறான். உறங்கும் போது சில நேரங்களில் அவளருகில் சென்று மூச்சுக்காற்று இருக்கிறதா என்றெல்லாம் கூட சோதித்திருக்கிறான். ஒரு மரணம் அங்கு நிகழ்த்திய  அமைதி அவளை சுற்றி இருக்கும். அவள் ஞானியா?  இல்லை.. அவள் எதையும் இழக்கவில்லை தன் மொழியின்றி அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறாள் அவ்வளவுதான்.

மேல் நோக்கிய பார்வையை  எடுக்காது , கட்டி அணைத்து கொண்டிருந்தவள் என்னிடமிருந்து விலகி மெல்ல எழுந்தாள். அவளின் உடல் மொழியை கவனிக்காமல் இருக்க முடியவில்லை, கங்காருவின் வயிற்றில் இருக்கும் குட்டியைப் போல ஒரு தீர்க்க பார்வையுடன் எப்போதும் என்னுடன் அவள் பிணைந்திருந்த நாட்களின் மெய்யாய் ஊர்ந்து நழுவித் ததும்பும் பிரியத்தின்  நறுமணம் வெவ்வேறாக  மாறுவதை என்னால் உணர முடிந்தது. இந்த காலக் கட்டம் தான் என்னை என் எண்ணங்களோடிருந்து  பிரித்து அணுக கூடிய நேரமாக மாற்ற  முயன்றேன்.

“உனக்கு ஞாபகம் இருக்கிறதா மானசி, என்னிடம் நீண்ட போதனையை சொன்ன ஒரு வழிப்போக்கன் என்னை பைத்தியம் என்று சொல்லிவிட்டு போனான்…. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அவனுக்காக நான் என்ன பிராத்தனை செய்திருப்பேன் தெரியுமா… சிரிக்காதே மானசி .. அன்றிரவு அவன் உன் மீது ஆழ்ந்திருந்தான் என்று எனக்கு தெரியும்… தெரியும்…எதற்கு உன்னிடம் நான் சொல்லவேண்டும்?.. அது படி அவன் நடந்தேர்வான் அவ்வளவுதான்… அவ்வளவுதான்… அந்த நீர்வீழ்ச்சியில் என்னை பறிகொடுத்த போதே அந்த பிராத்தனையை நிறைவேற்றினேன். பிராத்தனையின் எச்சத்தை முழுவதுமாக என்னிடமிருந்து விலக்கிவிட்டு பெரும் ஆணவத்தோடு பூமியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது..”

இந்த தீவுக்கு  வந்தடைய நாங்கள்  கடலின் பிரயாணியாய் கடந்த மணித்துளிகளை கைமாற்றாக கொடுத்து , அதன் வாழ்க்கையை துறந்தே இந்த சுடு மணலில் பாதத்தை பறிகொடுத்தோம். இந்த தீவிற்கு நாங்கள் நீந்தியே வந்தோம் என்றால் உங்களால் நம்ப முடியாது..

அப்படி எங்களை ஏற்று கொண்ட இந்த நிலபரப்பின் கூரை வானமெனில் மானசி அதை தான் அன்றிரவு முழுவதும் உளறிக்கொண்டிருந்தாள். காற்றினால் மேகத்தை மட்டுமல்ல வானத்தையும் நகர்த்த முடியும் என்றவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.

நேற்றைய கலவியில் அவளின் இன்னொரு கேள்வி இரவின் உறக்கத்தை திருடிக்கொண்டது.

“உனக்கு தெரியுமா ரான்.. மச்சங்கள் நகர கூடியது…”

“விளையாடாதே…மானசி..”

“விளையாட்டல்ல….” என்று அவளின் பின்முதுகை என்னிடம் காட்டினாள் ஞாபகம் இருக்கிறதா என்கிற முக பாவனையில்..?

மானசியை முதன் முதலில் தழுவிய போது அவள் பின் முதுகில் மிக பெரியதாய் ஒரு மச்சம் இருந்தது. அது என்னை தழுவிக்கொண்ட முதல் ஆண் நீதான் என்று என்னிடம் சொல்லியதை எப்படி மறந்திருப்பேன்..

அது அவளுடன் எப்போதும் இருப்பதாய் என்னிடம் கூறியிருந்தாள் , அதில் எனக்கென்ன சந்தேகம் இருந்திருக்க கூடும் சாதாரண மச்சம் தானே என்று இருந்த என்னிடம் விளையாட்டாக பேசுகிறாள் என்று எந்த பதட்டமும் இல்லாமல் தான்  பின்முதுகை  அணுகினேன். என்னுடன் உறையாடலை முதல் கலவியின் போது நிகழ்த்திய அந்த மச்சம் வெட்கப்பட்டு ஓடிவிட்டதாக அதை எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு பின் எத்தனையோ சேர்க்கையிலும் அதனை மறந்திருந்திருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இருட்டினுடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றப் பார்க்கிறாள் என்று அவளை முறைத்தேன். அதற்கு பதிலாய் என் காதை திருவி பலத்த சிரிப்புடன்.. “கண்ணில் ஏன் அவ்வளவு பயம்”

இல்லை என்பது போல தலையசைத்த ரானை தன் வசமாக்கி இன்னும் நெருக்கத்தில் அவனை அணுகினாள்.

மச்சம்..மச்சம்..மச்சம்…

பதிலின்றி அதன் போக்கில் அது எங்கு சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஆவல் எழ எங்ஙனம் அதை விட்டொழிக்க முடியும்.

“எங்கே ஊர் சுற்றி கொண்டிருக்கிறது…” என்றேன்.

“என்னிடம்..கேட்கிறாய்?..”

“விளையாடாதே மானசி..உன்னை என்ன சொல்ல..நீ கேட்கும்..” என்று பாதியிலேயே நிறுத்திக்கொண்டேன்..

“எதையும் முழுங்காதே ரான்..எனக்கு அது பிடிக்காது..நீ நினைத்ததை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம்..நான் எப்போதும் அதை பின்பற்றி இருக்கிறேன்..”

“நீ கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

“கேட்பதையா..?”

“அதான் உன் கேள்விகள்..என்னை கிரங்கடிக்கின்றன மானசி..”

“அது என் கேள்விகள் இல்லை..”

“பின் அவைகள் யாருடையது..?”

‘ என்னுடையது இல்லை ,..அவ்வுளவுதான் எனக்கு தெரியும்…ரான்’

“இதை தான் சொல்கிறேன்…இது மாதிரியான பதில்களை தான் சொல்கிறேன்..”

“இப்போது தான் கேள்விகள் என்றாய்..இப்போது பதில்கள் என்கிறாய்..”

“உன்னிடம் என்ன சொல்ல நான்.”

“எதைப்பற்றி.?”

“அந்த மச்சம்.”

“ஆம்…”

“அதை தான் கேட்கிறேன் உன் முதுகிலிருந்த அதை எங்கு தொலைத்தாய்..”

“நீயே விடையை வைத்திறாயே ரான்…அதை நான் தொலைத்துவிட்டேன்…”

“… தொலைத்துவிட்டாயா…? “.

மானசி , தான் இதுவரை பேசிய அனைத்தையும் விட்டு தூரம் விலகிவிட்டதை போல ரானை இறுக்கமாக அணைத்துக்கொண்டு ரானின் காதருகே சென்று இதமான குரலில் அந்த கேள்விகளை மறந்துவிடு என முனுமுனுத்தாள்..

அவள் முகத்தை பார்க்க பயந்தவன் போல அவள் பிடியினுள் விலகாமல் அடைபட்டுக்கிடந்தான்..

ரானை மானசி முதல் முறையாக பார்த்தது அவள் தோழியின் இல்லத்தில் தான். காரக்பூர் ஐஎம்இ இறுதி ஆண்டு மாணவர்களின் கூடுகை தான் அது. உலகமே தங்கள் கட்டுப்பாடுகளில் வைத்திருக்கும்  பெரும் நிறுவனத்தின் உயர்பதவிகளில் வகிக்க போகிறவர்கள் அவர்கள். மானசி அந்த கூட்டத்துடன் எப்போதும்  அந்நிய பட்டு தான் இருந்திருக்கிறாள். அவள் இங்கு வந்ததே கட்டாயத்தின் பொருட்டுதான். ரானை அங்கு சந்திக்க நேரவில்லை என்றால் மானசி அங்கு சிலரை கொலை கூட செய்திருப்பாள். அப்படி என்ன மானசிக்கு இந்த உலகத்தின் மீது அல்லது இவர்கள் மீது வெறுப்பு என்று கேட்காதீர்கள்..? அதை மானசி மட்டுமே அறிவாள்..

ரான் அவனின் ஆஸ்திரேலிய தந்தையைப் போல. இதுவரை அவனை பார்க்காதது எப்படி என்று யோசிக்காமல் அவனுடன் பேச அவளுக்கு பிடித்த ரெமி மார்டினுடன் முதல் வார்த்தையை பரிமாரிக்கொண்டாள்.

அவளுக்கு ஏன் முதல் வார்த்தை மீது அவ்வளவு விருப்பம் என்று இதுவரை தெரிந்தது இல்லை. சிறுவயது முதல் தான் இதை கடைப்பிடித்து வருகிறாள்.ஒவ்வொருவருடனும் தான் பேசிய முதல் வார்த்தையை ஞாபகம் வைத்திருக்கிறாள்  அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் இதுவரை எத்தனை மனிதர்களை கடந்து வந்திருப்பாள், அனைவருக்குமான முதல் வார்த்தையை அவர்களுக்கும் சேர்த்து இவள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். அதிலிருந்த எவற்றையும் அவள் தவற விட்டதே இல்லை. தன் போக்கில் இவ்வுலகை வசப்படுத்த முயற்சிக்காது பயணிக்க பழகியிருந்தாள்.

ரானுடன் பகிர்ந்து கொண்ட இரண்டு லார்ஜ் ரெமிக்களிலேயே ஒரு நெருக்கத்தை உணரத் தொடங்கினாள். நிலை கொண்டு இவ்வுலகில் அடம் பிடிக்காத மனதை பயணமும் மனிதர்களும் தான் பங்கிட இயலும் முனுமுனுத்துக் கொண்டாள்.

ரான் மானசியை தழுவிக்கொள்ள போதுமான உரையாடல்களாகவே அது அமைந்தது. மீண்டும் சந்திக்க அமைந்தால் இன்னும் நிறைய பேசுவோம் என்று ஒரு முடிவை எட்டியது அந்த முதல் பரிமாற்றம்.

இரவு தங்கிய இடத்தின் சாயலை பகல் களவாடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினர்.

நடையில் அவ்வளவு வேகம் எதுவும் இல்லை ,எதுவும் இலக்கு என்றால் அதை நோக்கி வேகப்படுத்தலாம்..அப்படி எதுவும் இல்லை.. அதை அவர்கள் உருவாக்கி கொண்டவர்களும் கிடையாது.

 இருவரின் இசைவில் தொலைந்து போன ஒன்றை இருவரால் எப்படி கண்டு பிடிக்க முடியும்..?  தனித் தனியாக பிரியும் தருணத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது. ரான் இந்த கணங்கள் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று யோசிக்கதொடங்கியிருந்தான். மானசியை பார்த்த இந்த ஆறு மாத காலத்தில் இதுவரை இப்படியான எண்ணம் வந்ததில்லை.இதுவே முதல் முறை. இவளை பற்றியான ஒரு குறிப்பு கூட இதுவரை அறிந்ததில்லையே என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் ரானை பற்றியான முழு குறிப்பு , இதுவரை வாழ்ந்த வாழப்போகிறவற்றை பற்றி அனைத்தும் மானசி அறிந்திருந்தாள்.

அப்படி தான் ஒரு பெயர் தெரியாத மலை கிராமத்தின் நீரூற்றின் அருகில் அமர்ந்து அங்கு கிடைக்கப் பெறும் தனித்துவம் வாய்ந்த பானத்தை அருந்திக்கொண்டிருந்த போது

 ‘இதற்கு மேல் என்னால் குடிக்க முடியாது ,குடித்தால் அவ்ளோதான் ,இதுதான் லிமிட்’ என்று கூறிய ரானிடம் மானசி

“அது எப்படி உன்னால் உன் எல்லையை வகுத்துக்கொள்ள முடிகிறது “என்றாள்.

“ அது அப்படிதான்..” 

“ அப்படிதான்..” என்று கூறச் சிரித்து விட்டாள். அதுவரை அதன் போக்கில் வீழ்ந்து கொண்டிருந்த நீர்வீழ்ச்சி சில மணித்துளிகள் உறைந்து மீண்டதை மானசியுடன் சேர்த்து ரானும் பார்க்க நேர்ந்தது.

அந்த ஒரு கணம் இங்கு நிகழ்ந்தேரியதை எப்படி இல்லை என்று வாதிட முடியும். நீர்வீழ்ச்சிக்கும் நீங்கள் பேசுவது கேட்கும் என்றார் உடனிருந்த மலை கிராமத்தின் பிரதிநிதி. யார் வகுத்தது ?

முன் நடந்து செல்பவளின் பின் பக்க முதுகை அவளின் நீண்ட கூந்தல் மறைத்திருக்க ஒரு நிமிடம் நின்று இளைப்பாறிய நீர்வீழ்ச்சியை எடுத்து வந்து விட்டாளோ என்பது நினைவில் இல்லை. நகரும் மச்சங்களின் பேச்சை நடுவிலேயே விட்டுவிட்டாள்.இப்படிதான் எண்ணற்ற விசயங்களுக்கு விடை தெரியாமல் ரான் பிதற்றிகொண்டிருப்பான்.இருந்தும் இவள் பின்னால் செல்ல எந்த காரணமும் இல்லை.ரான் பின்தொடரவில்லை என்றாலும் அவள் கால்கள் நின்று ‘ அப்பாவி மனிதா ‘ என்று  இவனை பார்த்து பாவப்பட்டு போகுமே தவிர வருந்தாது. அந்த நடையின் இருப்பு எங்ஙனம் கணக்கில் கொள்ளப்படும் என்கிற எந்த பரிணாமும் இல்லாமல் காலத்தை கேலிசெய்ததற்கான மன்னிப்பை எங்கும் விதையென வீசி விட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி.

“ரான் இப்பொழுது நீ நிறைய வருத்தப்படுகிறாய் , எதனால் என்று கண்டு பிடிக்க முயலவில்லை  , அது உன்னை உருக்கிக்கொண்டிருக்கிறது , அதன் மணத்தை என்னால் உணர முடிகிறது ,ரான் நீ நீங்கி சென்று கொண்டிருந்த பயணம் இப்போது உன் தோல்மீது ஏறி உன்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது , எப்படி உன் எல்லையை நீ வகுத்துக்கொண்டவன் என்ற அறியாமையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த உன்னை அது சிறிய பொம்மையாக்கி வேடிக்கை பார்க்கிறது….பொம்மைக்கு என்ன தெரியும்…படைத்தவனைமீறி என்ன செய்திட முடியும்….அதனால்..ரான்.ரான்…ரான்…”

இளைப்பாறும் நினைவிலும் ரான்  ஒரே இடத்தில் பல மணி நேரங்களாக நின்று கொண்டிருந்ததை  பார்த்துச்  சிரிக்கத் தொடங்கினால் மானசி. எதற்கு இதெல்லாம் என்ற கேள்வி எழுந்தவுடன் உன்னை என்னிடமிருந்து துண்டித்துக்கொண்டாய் ரான் . எந்த அடையாளங்களும் இன்றி கழண்டோடும் மனம் ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால் அவன் இப்படிதான் தன்னை இழக்க நேரிடும் என்று ஒரு முறை  வழிப்போக்கன் சொன்னது நினைவுக்கு வந்தது. ரான் இன்னும் அப்படியே தான் நின்று கொண்டிருக்கிறான். சிறு அசைவு கூட இல்லை. அவன் பார்வை எதிலும் சிதராமல் நேர்கொண்டு இருப்பதை  கவனிக்க தவறவில்லை மானசி. ‘  இப்படியாக உலகை தன்வசபடுத்திக்கொள்ள முயலும் அப்பாவி மானுடன்… ‘.

அந்த வழிபோக்கன் ரானிடம் தான் முதலில் பேச்சுக்கொடுத்தான்..மானசிக்கு தெரியும் அவர் பேசிய எதையும் ரான் உள்வாங்கி கொண்டிருக்க மாட்டான்..அவரின் புகையை தவிர.

“எங்கிருந்து பிடித்தாய் இந்த பைத்தியத்தை..” என்றார் அந்த வழிப்போக்கன்

“ஏன்.?”மானசி.

“அவன் என்னிடம் உன்னை பற்றி என்ன கூறுகிறான் தெரியுமா”

“என்ன?’

“நேற்றிரவு உன்னுடன் கூடும் போது , உன் மச்சங்கள் நகர்வாதாக பிதற்றுகிறான்…மடையன்”

“……”

“போதை தலைக்கேறி விட்டது..இனி இனிமையான மரணம் தான்”

ரானுக்கும் அவளுக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த பின் இருவரும் இதுவரை சேர்ந்து அலைந்த தூரத்தை கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது. எப்போதும் எதன் எல்லைக்கும் ஆட்படாத பறவையாகவே அவளை ரான் பார்த்திருக்கிறான். பெண் பறவை அதன் ஆண் உறவை தேர்ந்தெடுத்துக்கொள்வது போல்  ரான்  மானசி என்னும் பறவையால் தேர்ந்தெடுக்கபட்டிருகிறான்.     அந்த பறவை எதையும் கடந்து போகும் ஆற்றல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை அது வானத்தை தனதாக்கி கொள்ள முயலுவதை ரானால் புரிந்து கொள்ள முடியவில்லை.  

 உறங்கியவளை எழுப்பியது யார் என்று தெரியவில்லை. அசையாமல் நின்று கொண்டிருந்தவன் நிலைத்தடுமாறி விழுந்த தடம் தெரிந்தது.

அதை பின்தொடர்ந்து சென்றாள் மானசி. தடம் மானசியினுடன் பயணிக்க தொடங்கி இன்னும் நின்ற பாடில்லை நீண்டுக் கொண்டே செல்கிறது.அதில் அவனை அவள் மறக்கவும் கூடும் ..

“ரான்..ரான்  ரன் ,,ரான்..ரங்….” கீச்சொலியாய்….

***

லட்சுமிஹர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com

பாலஜோதி ராமச்சந்திரன் கவிதைகள்

0

1

கவிதைகளைத் திருடித்தின்பவன் அவன்
சரிந்த பெருத்த வயிற்றுக்குள்
களவாடியக் கவிதைகள் கொழுப்பென மண்டிக்கிடந்தன
திமிரும் அன்பும் அடங்க மறுத்தலும் ரௌத்திரமுமே கவிதைகளின் குணமென நினைத்திருந்தேன்
அவை கொழுப்பாய் மாறும் ரசவாதம் கொண்டவையென்பதை அவன் தொப்பை அறிவித்தது
ஒமேகா ஒன்று முதல் ஆறு வரை
அறிந்தயெனக்கு முதல்தடவை கவிதைக்கொழுப்பை அறிமுகம் செய்தான்
வலியின்றி.. ரத்தமின்றி… சேதாரமின்றி அவன் வயிறு குலுங்கிற்று
அந்தக் கொழுப்பை தின்பதற்கு கொஞ்சம் வெட்டிக் கொடுத்தான்
சிறு பெண்குழந்தைகள் முதல் இளம்வயதுப் பெண்கள் வரைக்கும் பிடித்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது
‘இதை அப்படியே சாப்பிடலாம். நீயும் என்னைப்போல் மாறு’ என்றான்
சாப்பிட்டு நானும் கவிதைத் திருடியானேன்
அவன் சொல்லாமல் விட்ட ஒன்றுண்டு
‘இதை விரும்பி சாப்பிடுபவனுக்கு வயிறு பெருக்கும். விரும்பாமல் சாப்பிடுபவனுக்கு எது வேண்டுமானாலும் பெருக்கும்’
எனக்கு மார்புகள் பெருத்தது.

2

வளி வழிந்தோடும்
மண்டலமெங்கும்
அலைந்து திரிகிறான்
புணர்ச்சிக்குறி எப்போதும்
நீர்த்தக்கனவுகளில்
லயித்தின்பம் கொள்கிறது
தேடித்தேடித் தேடியும்
இன்னும் கிடைத்தபாடில்லை
புணர்வதற்கான ஒற்றையிரவு
இடதுகையில் ஆரமாய்
மின்னிக் கொண்டுதானிருக்கிறது
சேகரித்த அமாவாசைகள்
வழியெங்கும் மல்லாந்துக் கிடக்கின்றன தீய்ந்ததான
பௌர்ணமிகள்

***

பாலஜோதி ராமச்சந்திரன் – இவர் தற்போது வசிப்பது புதுக்கோட்டை நகரில்.மூத்தப்பத்திரிகையாளர். விகடன், குமுதம், நக்கீரன் ஆகிய நிறுவனங்களில் சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டச்செய்தியாளராக இருபது வருடங்களுக்கு மேலாகப் பணிபுரி க்கிறார்.இவர் எழுதிய ‘சுழியம்’ நாவலின் ஆசிரியர் (ஜீரோ டிகிரி பரிசுப்போட்டியல் – நெடும்பட்டியலுக்குத் தேர்வானது).

தலையங்கம் ஏப்ரல் – மே 2022

0

வெறுப்புணர்வு மிகுந்த சூழலில் நாம் கலை இலக்கியம் பேசுகிறோம். நமது ஒவ்வொருவரின் காதுகளும் அரசோ இல்லை ஊடகங்களின் எண்ணங்களுக்குத் தக்கவாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. (Customized ears) அதற்குப் பெயர் தான் ட்ரெண்டிங் எனும் குறுகியகால பயிர், அதாவது பிடுங்கி எறியப்பட வேண்டிய களையையே பயிர் செய்வது.


ஒரு வெறுப்பிற்கு இணையாக மற்றொரு வெறுப்பு கண்டுபிடிக்கப்பட்டே இருக்கின்றது. போரும், பஞ்சமும் நாட்டின் வெவ்வேறு எல்லைகளின் மறுபுறம் இருக்க, இங்கே திரைக்கலைஞர்களை சீண்டிவிட்டு அரசியல் பேசும் கலையை பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறோம். சாதியைத் தாண்டியனை சாதியத்தில் கட்டி வைக்கிறோம். மற்றொரு புறம் புனிதப்பட்டம் கட்டுகிறோம்.


அம்பேத்கர் நிழற்படத்தை ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலும் வைத்தாயிற்று, ஆனால் காந்தியை ஏன் கழட்டினோம்? அம்பேத்கர் ஊழியருக்கு உரிமை பெற்றுத் தருவார் என்றால், நுகர்வோருக்கும் வாடிக்கையாளருக்கும் மரியாதையைத் தரச் சொல்லும் காந்தியை ஏன் அகற்றினோம். ஒன்றை சேர்ப்பதால் ஒன்றை கழிக்க வேண்டாம்.
இளையராஜா இல்லையென்றால் திரைப்பாடல் வழியாகவே இந்தி பட்டித்தொட்டிகளில் குடியேறியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தால், அவரது அரசியல் சார்புக்காக அவர் இசையையே துறக்கும் பல்லவி பாடும் ஆத்மாக்கள் எங்கு கொண்டு போய் நிறுத்த ஆசைப்படுகிறார்கள். ஒன்றை மறுப்பதால் ஒட்டுமொத்தமாக மறுப்பது அநீதி.


கலை இலக்கியம் சமகாலத்தை வெறும் தற்கால தற்காலிகமாக அனுகிட வைப்பது ஆபத்தில் தான் முடியும். அதற்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தான் யாவரும் தேட விழைகிறது.


*

இணைய இதழ்கள் எல்லாமே உற்சாகமாய் இயங்குகின்றன. நிறைய சிற்றிதழ்கள் அச்சில் வரத்தொடங்கியுள்ளன, தமிழக அரசின் சிற்றிதழ்களுக்கான நூலக ஆணைக்குப் பின்னர் நிகழ்ந்த அற்புதம் இது. புரவி ஒரு ஆண்டை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது. தமிழ்வெளி, சிறுகதை காலாண்டிதழ்கள் தொடர்ந்து வருகின்றன. மீண்டும் அகநாழிகை இதழ் வருகிறது. “சால்ட், தனிமை” சிற்றிதழ்கள் வர இருக்கின்றன. புதுமைப்பித்தன் முழுத்தொகுப்பு 20000 பிரதிகள் கடந்தும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கோவிட் நெருக்கடிக்குப் பின்னர் மொழியில் இத்தனை சுறுசுறுப்பான வேலைகள் நடைபெறுவது உற்சாகமூட்டும் சூழல் தான்.


மின்னிதழாகத் தொடர்வதிலேயே நிறைய சிக்கல்களைக் கடந்தாலும். ஒவ்வொரு இதழை வலையேற்றும் போதும் ஒரு மலைப் பயணம் முடித்த நிம்மதி கிடைக்கின்றது. பங்களித்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
ஒரு கதையைத் தந்துவிட்டு இதழ் வருவதற்குள் தொகுப்பே வந்துவிடுமளவு மெதுவாக வேலை செய்கிறோம் என்றாலும் ட்ரெண்டிங் போன்ற தற்காலிகங்களுக்கு அப்பாற்பட்டு பேசவேண்டிய அரசியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிடும் மற்றொரு இதழும் கொண்டுவரத் திட்டமிடுகிறோம், தேவையெல்லாம் உங்களது ஊக்கம் மட்டுமே.

அன்புடன்
ஜீவ கரிகாலன்

என் படைப்பில் என் நிலம்

0

ஷக்தி

லாச்சாரங்கள் நிலையாக இருக்கின்ற தன்மை கொண்டவை அல்ல. அவை தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடியவை. அந்த ஓட்டத்தைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சியாக சுவடற்று அழிந்து போகும் மாற்றங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நிலத்தைப் பற்றி எழுதிப் பார்ப்பதுதான் இன்னும் வேகமாகப் பரவும் கலாச்சார மாறுபாடுகளையும் பழைய கூறுகளையும் ஞாபகத்தில் அடுக்கி வைக்க இயலும். பழமை மெல்லத் தணிந்து ஒரு வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் இருந்து மெல்ல தன் தொன்மை சாயத்தை தொலையக் கொடுக்கும் பொழுது அந்த இழப்பை அழுத்தமாகப் பதிந்து வைத்துக்கொள்ள கவிதைகளை நாடி துணைக்கு அழைக்கிறேன். ஒரு சிறிய கவிதை போதுமானது உங்களை புற உலகில் இருந்து துண்டித்து வேறு உலகில் பிரவேசிக்க வைக்க. அதுவும் இந்தக் காவிரி கலாச்சார வழித்தடங்களில் ஒருவித காதல் எனக்குண்டு. காவிரித் தடங்கள் ஒரே கலாச்சாரத்தின் பல வழக்கங்களை கொண்டவை. இந்தப் பார்வை வழியாக எதிர்கொண்டவைகளை எல்லாம் எழுத்துக்களாக உருமாற்ற கவிதைகள் உடன் வருகின்றன.

தமிழக வரலாற்றில் இது ஒரு பகுதி அவ்வளவு தான். இங்கேயும் பொதுவான நிலப்பரப்பில் நிகழும் எல்லா விவகாரங்களும் உண்டு. சாதிகள் துவங்கி சர்வதேச தேவைக்கான சுரண்டல்கள் வரை சொல்லி மாளாது. இங்கும் அழிந்துபோன பயிர் வகைகள் உண்டு. கால்நடை விலங்கினங்கள் உண்டு. மரங்களும் ஆறுகளும் ஓடைகளும் உண்டு. ஒரு கவுளி வெற்றிலையோடு அரசியல் பேசித்தொலைந்த தலைமுறையும் உண்டு. கலயங்களும் கலப்பைகளும் பத்தாயங்களும் கூட தொலைந்து போயிற்று. நெடுவாடைக் காற்று கூட இப்பொழுது பருவம் மாறி விடுகிறது. வைக்கோல் பிரிகள் தென்னை நார் கயிறு திரிக்கும் வாசங்கள் கூட மறந்து போயிற்று. போக்காளி என அல்ப ஆயுளில் போகின்ற இத்தலைமுறையில் எழுதத் துவங்கும் பொழுதெல்லாம் ஞாபகங்களை விட மன அழுத்தம் கூடுகிறது. மூச்சுத் திணற வைக்கும் இந்த மாற்றங்களை எழுத எழுதத் தீராது நீள்கிறது. இன்று இந்த நிலப்பரப்பு நீருக்காக மழையின் கருணைக்கு காத்திருக்கிறது. உயர்நீதி மன்ற அல்லது இடைக்காலக் குழுவின் கருணைக்குக் காத்திருக்கிறது. இந்தக் கேவல நிலை கடந்த தலைமுறைக்கு இல்லை. இந்த விவசாயமும் பால் வளமும் குறைந்து மெல்ல வழக்கொழிந்து வருவதற்கு மனிதர்களின் சுய எண்ணங்களில் சீழ்கோத்ததை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும். இதை முதலாளித்துவத்தின் விளைவு என எடுத்துக் கொள்ளலாமா எனும் கேள்விக்கு எண்ணெய் அரசியல் காரணங்கள் கண்முன் வந்துபோகவும் செய்கிறது. ஒரு செய்தியை, ஒரு துயரை, ஒரு போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது அல்லது அவற்றின் ஆயுளைக் குறைப்பது ஆளும் வர்க்கங்களுக்கு எளிது. இன்னொரு சர்ச்சையை அல்லது ஒரு கருத்தைக் கொண்டு ஒரு விடயத்தை அழகாக இருட்டடிப்புச் செய்வார்கள். ஆனால் இந்த எழுத்துக்கள் ஒரு நூறாண்டிற்காவது இன்னும் உயிர்த்திருக்காதா சொல்லுங்கள். அப்படியிருக்க, ஒரு படைப்பாளனுக்கு இந்த எழுத்துக்கள் தான் வழியும் வாசலும்.

விவசாயக் கூலிகளுக்கு மிகச்சரியான ஊதியம் கேட்டு ஒரு தலைமுறையே அல்லாடிய வரலாறு உங்களுக்கு தெரியுமோ அல்லது தெரிய வாய்ப்பில்லையோ தெரியாது. அம்மக்களின் அவல வாழ்வில் இருந்து மீள ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றது. உரிமைக்காகவும் போராட்டத்திற்காகவும் தொலைந்த உயிர்களும் வடுக்களும் இன்னும் அகலாதவை. இன்னும் பலருக்கு உணவும் வீடும் நிலமும் கனவுகள் தான். அவர்களின் பிள்ளைகளுக்காக உள் மாநிலத்துக்குள்ளேயே புலம் பெயர்கிறார்கள். அந்த வாதையை என்னால் தாங்க இயலவில்லை. ஒரே ஒரு போகம் மட்டும் விளையும் பருவ காலத்தில் பேய் மழை வந்து கொண்டுபோன பொழுதில், விவசாயம் பொய்த்த மழை இல்லா நாளில் உயிரை மாய்த்து கொண்ட வாதையைக் கண்டிருக்கிறேன். அரசு பிடுங்கிக் கொண்ட நிலத்திற்கு இழப்பீடு கேட்டு மாய்ந்த வாதையை ஒருநாள் முழுக்கச் சொல்லி அழுதாலும் மாளாது. நாம் ஒரு வலுவான கட்டமைப்பில் இருந்து கொண்டு காணும் வரை அதை உணரவும் இயலாது. சாலைகளுக்காக, எண்ணெய் கிணறுகளுக்காக, சுத்திகரிப்பு மண்டலங்களுக்காக, எரிவாயு நிலையங்களுக்காக, துறைமுக விரிவாக்கத்திற்காக, மின் நிலையங்களுக்காக இன்ன பிற காரணங்களுக்காகவும் இந்த வழிப்பறி காலங்காலமாக நிகழ்கிறது. இந்த இடத்தை விட்டு நாளை எங்களின் பிள்ளைகள் வெளியேற்றப்படுவார்கள். இன்னொரு நாள் அவர்களின் பிள்ளைகள் ஆயுதங்கள் கொண்டு துரத்தப்படுவார்கள். இனி சாகும் காலம் வரை ஒருமுறை இழந்த இந்த பசுமையை, இனிமேலும் நாங்கள் காணவே முடியாது. வரும் நாளில் எதிர்கொள்ளப் போகும் இடருக்கு இந்த நிலம் சீரழிந்து போகும்.

அப்பொழுதும் கூட மௌனமாக இருக்கக் குரல்வளைகள் விரும்பாது. அவை எழுத்துகளுக்கு எப்பொழுதும் ஒரு கனலைத் தந்துகொண்டே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லா குரலும் ஒருமிக்கும் பொழுது எல்லோருக்கும் இழந்த நிலம் பற்றிய பரிமாணங்களை விளக்கிச் சொல்லவும் அழவும் இந்த எழுத்துக்கள் தான் மீதமிருக்கும். ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கொண்டு தெளிவான நிலப்பரப்பை நுட்பமான அதன் வாழ்வியலை அடிநாதமாகக் கொண்ட எந்த ஒரு படைப்பும் கொண்டாடப்படாமல் போக வாய்ப்பில்லை. இயற்கையின் கருணை பெரியது தான்.

ஆனால் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எழுத வேண்டியதன் அவசியம் உள்ளது. அதன் பொருளும் காரணமும் உணர்ந்து கொள்ள இந்த நிலம் போதுமானதாயிருக்கிறது. அது சொற்களையும் காரணிகளையும் சந்தர்ப்பங்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த சராசரி எழுத்துக்களுக்கு மாற்றாக எழுத நிறைய இருப்பதை கண்களுக்குக் கடத்தி இன்னும் முயன்று காட்ட வேண்டிய கவித்துவம் அதனிடமும் இருப்பதை எழுதித் தீர்த்துவிட முடியாத வலிகள் இருப்பதைக் கொண்டுவந்து நிரப்புகிறது. இந்த காவிரித் தடங்களுக்கு பாமரச் சொற்களும் வட்டார மொழியும் ஓர் அழகுடன் கொண்டாடப்படுவதை எழுதிப் பார்க்க இன்னும் அனுபவமும் அதற்குள்ளாக பயணிக்கும் நிதானமும் அவசியமாகின்றன.

இந்த புவிப்பரப்பில் வாழிடமாக கொண்ட எனக்கும் இந்த மண்ணோடு உறவுண்டு. இந்த நிலம் பற்றி எழுத இலக்கிய மரபின்படி ஊடல் மருத நில இயல்பு. இப்பரப்பின் காதலும் கூட பிரதான பாடுபொருள் தானே. பருவங்கள் தோறும் இந்த நிலம் என்னென்ன அடையாளங்களோடு வந்துபோகும் என்பதை எழுத வேண்டிய அவசியமும் அதைக் கற்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இன்னும் பழைய தஞ்சை மொழியைக் கற்றுணரவில்லை. அது மெல்ல மாறுகிறது. காவிரி என்பது மணல் உற்பத்தி செய்து கொடுக்கும் தலமல்ல. அது ஒரு ஜீவன். அது விவசாயம் கடந்த ஓர் உற்பத்தி மண்டலம். நான் இதைத்தான் எழுதிப் பார்க்கிறேன்.

பழைய நஞ்சையின் சொற்களை தற்போதைய மொழிக்கு மாற்றாமல் எழுதினேன். சிலர் புரியவில்லை எனச் சொன்னது கூட எனக்கு ஒரு குறையாகப் படவில்லை. இந்தச் சிரமம் நாம் மண்ணுக்கு அந்நியமான காரணத்தால் வந்ததாகக் கருதினேன்.

ஒரு படைப்பை இப்படி புரிந்து கொள்ளுங்கள் என நெறிப்படுத்தும் முறையில் எனக்கு உடன்பாடில்லை. அது முறையும் இல்லை. பேராசிரியர் ஜெயராமன் கூற்றுப்படி மொழியால் வருகிறவை மொழிக்குச் சொந்தம். எழுதியவருக்கு இல்லை.

என் வயதிற்கு நான் அடைந்த அனுபவங்களை எழுத்து மூலமாக பகிர்கிறேன். அனுபவம் தான் ஆசான் இல்லையா. எனக்குச் சுயமும் அது தான். எழுதிப் பார்ப்பவற்றுள் நிறைகுறை உண்டு தான். வாருங்கள் இன்னும் வேகமாக எழுத, வாசிக்க நிறைய இருக்கிறது. அவை உன்னதமான அனுபவம். கருத்துகளும் அனுபவமும் இந்த மொழிக்குள், சூழலுக்குள் போதுமானவையாகப் பார்க்கிறேன். அனுபவத்தை நம் மொழி மூலம் ரசித்தால் போதுமானது. அந்த நெருக்கம், ஆயுள் நீளமானது. இன்னும் எழுதுவேன்.

நன்றி!

***

ஷக்தி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இவர் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். மரநாய், அபோர்ஷனில் நழுவும் காரிகை என்ற கவிதைத் தொகுப்புகளும் கொண்டல் என்ற நாவலும் இவரது படைப்புகளாகும். மரநாய் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி வழங்கும் 2019 ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மின்னஞ்சல்: shakthipoet@gmail.com

என் படைப்பில் என் நிலம்

1

கார்த்திக் பாலசுப்ரமணியன்

நான் என் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. முதலில் கல்லூரிப் படிப்பு பின்பு வேலை போன்ற காரணங்களுக்காக என் சொந்த ஊரான இராஜபாளையத்திலிருந்து வெளியேறி கோவை, நொய்டா, சென்னை, சிட்னி போன்ற பெருநகரங்களில் வசித்திருக்கிறேன். தற்போது பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறேன். 

இதுவரையில் வெளியான என் சிறுகதைகளிலும் நாவலிலும் நிலமாக வந்தவை எல்லாம் மேற்சொன்ன இடங்களைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இராசை போன்ற ஒரு சிறு நகரத்திலிருந்து வெளியேறி, பெருநகரங்களின் நெருக்கடிகளாலும் அலைச்சல்களாலும் அழுத்தி வெளியே தள்ளப்பட்டு, பின்பு வாழ்ந்திருத்தலின் பொருட்டு அவற்றுக்குப் பழகி, மெல்ல மெல்ல வேர் பற்றி எழுந்துவரும் ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகவே இக்கதைளில் அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்த மாற்றத்தின் போது நேர்கொண்ட அவமானங்களும் பலவீனங்களும் தோல்விகளும் தொடர்ந்து என் கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தகைய இடப்பெயர்வுகளின் காரணமாய் கிடைத்த பெரும்பாலான அனுபவங்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த ஒரு தலைமுறைக்கே பொதுவானவை. அதனால் தான் நட்சத்திரவாசிகளின் நித்திலன் கதாப்பாத்திரத்தோடு நாவலை வாசித்த பலரும் தங்களை நெருக்கமாகப் பொருத்திக் கொண்டனர். நாம் பிறந்த இடமும் சுற்றியுள்ள மனிதர்களுமே நம்முடைய மனப்போக்கையும் அதன் வழியே உருவாகி வரும் நமது ஆளுமையையும் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றனர். நாவலில் வரும் நித்திலன்-மீராவுடைய அத்தியாயங்கள் அவ்விருவரின் பிரச்சினை மட்டுமல்ல, அவற்றை இருவேறு நிலங்களின் தாக்கத்தால் நிகழும் அகச்சமர்கள் எனவும் கொள்ளலாம். 

சமீபத்தில் தமிழினி மின்னிதழில் வெளியான “கோவா” சிறுகதையில் இப்படி ஒரு வசனம் வரும் “இடம்னா இடம் மட்டுமில்லயே. மனுஷாலாம் சேர்ந்துதானே ஒரு இடம்? இடம் தெரிஞ்சா தானே மனுஷன் தெரியும். சமயங்கள்ல வைஸ் வெர்ஸா.”  

நேரடியாக என் மண் சார்ந்து, சொந்த ஊர் சார்ந்து எழுதிய கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பூர்வீகத்தின் வேரை அறியப் பயணப்படும் ‘முடிச்சு சிறுகதையும் இளம் பிராயத்து அக்காக்களின் மேலிருக்கும் பிள்ளைக் காதலைப் பேசும் முதல் தொகுப்பின் தலைப்புக் கதையான ‘டொரினா’வும் அவ்வகையில் சேர்த்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒளிரும் பச்சைக் கண்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘முன் நகரும் காலம், ‘சக்கரம்’ ஆகியவற்றையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.

மற்றவையெல்லாம் சொந்த நிலம் என்றில்லாமல் சொந்தமாக்கிக் கொண்ட நிலங்களைப் பற்றி எழுதியவை. அதிலும் குறிப்பாக அக்கதைகள் அப்படியான இடப்பெயர்தல்களின்போது எதிர்கொண்ட முரண்களை, சிடுக்குகளை, இன்னபிறச் சிக்கல்களைப் பேசுகின்றன. ஒரு பக்கத்தில் பாரதூரங்களைச் சுருக்கியும் அதே நேரத்தில் அண்மையிலிருந்தாலும் விலக்கியும் வைக்கும் தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் இராசை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் ஒட்டுமொத்த உலகுமே சந்திக்கும் பிரச்சினைகள் இவை என்று தோன்றுகிறது. 

என்னுடைய ‘மண்’ சிறுகதை, பெயருக்கேற்றாற் போல முற்றிலுமாக நிலம் சார்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களில் பேச முனையும் படைப்பு. உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் சந்திக்க நேரிடும் பல்வேறு அக மற்றும் புறச் சிக்கல்களைப் பேசுகிறது. இன்றைய ஆஸ்திரேலியாவே வெறும் இருநூற்றுச் சொச்சம் வருட வரலாற்றைக் கொண்டது. இங்கிலாந்தின் குற்றவாளிகளை அங்கிருந்து நாடு கடத்திக் குடியேற்றக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தீவு. அதன் பொருட்டு அங்கே கிட்டத்தட்ட 45000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒடுக்கி விரட்டிவிட்டு பிரிட்டிஷ் அரசு தன் காலனியை அங்கு அமைத்தது. பிரிட்டிஷ்காரர்களே அந்நிலத்தைப் பொருத்தவரையில் வந்தேறிகள். இருந்த போதும் பிற்காலத்தில் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து குடியேறியவர்களிடத்தே அங்கிருக்கும் சிலருக்கு ஒருவித கசப்பு மனப்பான்மை புரையோடியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை மைய இழையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையே மண். இக்கதை இப்போது வெளிவந்திருக்கும் ‘ஒளிரும் பச்சைக் கண்கள் தொகுப்பில் இருக்கிறது. இது வெளிவந்த காலத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்ட கதையாகும். 

முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஐபோன் எக்ஸ் கதையும் இப்படியான ஒரு கதை தான். ஜார்கெண்ட் போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலிருந்து வந்த ஒருவன் சென்னை போன்ற பெருநகரத்தின் ஆடம்பரத்தை ஏற்றுக்கொள்ளவியலாத மனநிலையைப் பேசுகிறது இக்கதை. 

கோவா போன்ற ஒரு நகரத்தை செய்திகள் வழியாகவும் பிறருடைய அனுபவங்கள் வழியாகவும் தெரிந்து வைத்திருப்பதற்கும் நேரடியாக அனுபவித்து உணர்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. உற்று நோக்கும் ஒருவனிடத்தில் எந்தவொரு நகரமும் தன்னை அடுக்கக்கடுக்காக திறந்துகொள்ள மறுப்பதில்லை. வேண்டியதெல்லாம் சற்று அதிகமான மெனக்கெடல் மட்டுமே. அப்படியாக நான் சந்தித்த ஓர் எதிர்பாராத அனுபவத்தைக் கதையாக எழுதிப் பார்த்தது தான் ‘கோவா சிறுகதை.

மேற்கத்திய நாடுகளின் குடும்ப அமைப்பு பற்றி இங்கே பொதுவாக கட்டமைக்கும் பிம்பத்துக்கும் உண்மைக்கும் நிறைய இடைவெளி உண்டு. சிட்னியின் ஃபெளமிங்க்டன் சந்தைக்குப் போய் திரும்பும் வழியில் அந்த வாரத்துக்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு தள்ளு வண்டியைத் தள்ளியபடி, ஆதுரமாக ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி நடந்துபோய்க் கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியைப் பார்த்த தருணத்தில் உதித்த கரு தான் பின்பு முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இரு கோப்பைகள் சிறுகதையாக விரிந்தது.

வேறுபட்ட நிலங்களும் அவற்றின் பண்பாட்டுக் கலாச்சார முறைமைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் நம் அனுபவ எல்லைகளை விரிக்கின்றன. அவ்வனுபவங்கள் வாழ்வின் புத்தம் புதியதொரு கோணத்தைத் திறந்து காட்டுகின்றன. உள்ளோடும் படைப்பு மனத்தை அவ்வனுபவங்கள் சந்திக்கும் புள்ளியில் அவை கதைகளாகப் பரிணமிக்கின்றன. என்னுடைய சில கதைகளில் நேரிடையாகவும் பல கதைகளில் மறைமுகமாகவும் நான் அத்தகைய அனுபவங்களையும் அவற்றின் வழி நேர்கொண்ட மனிதர்களையும் பற்றியுமே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் எழுதுவேன்.

***

கார்த்திக் பாலசுப்பிரமணியன்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். டொரினா, ஒளிரும் பச்சைக் கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் நட்சத்திரவாசிகள் என்கின்ற நாவலும் இவரது படைப்புகளாகும். க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது.
தற்போது நட்சத்திரவாசிகள் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் 2022-ஆம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com

மெல்லடகு

0

வேதநாயக்

னது தந்தைக்கு வெற்றிலை மெல்லும் பழக்கம் இருக்கிறது. ஒரு ஏலம், ஒரு சிட்டிகை சருக்கரை, இன்னும் இரண்டு நாட்டு மருந்து கடைச்சரக்குகள் சேர்த்து என நரம்பெடுத்து கிள்ளி இலேசாக பின்புறம் தடவி (முன்புறம் தடவுவதில்லை) மடித்து முதலில் வால் மிளகுடன் கொட்டைப் பாக்கிட்டு மென்று பின் வெற்றிலையைச் சுவைக்கத் தொடங்குவதைக் காண்பதற்கே அலாதியாக இருக்கும்.

வெற்றிலைக்கு வேறு பெயர்களாகத் தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியிலும் வெற்றிலை, வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, திரையல், வேந்தன், இகனி எனத் தமிழிலும் உண்டு.

சங்க காலத்தில் இரண்டு ஆடு மேய்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டு போய் விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும் மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில் செல்வது என்று போட்டி நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான் தான் வெற்றி பெற்றேன் என்றான். வெற்றி பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே சென்று வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகத் தன் கையில் வைத்திருந்த இலையைக் காண்பித்தான். அதைப் பார்த்த பெரியோர்கள் நீ வெற்றி பெற்றதால் வெற்றி+இலை = வெற்றிலை எனக் கூறியுள்ளனர். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு எந்தவொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர் என்றொரு கதை வழக்கிலுள்ளது. ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் தரிக்கும் ஆலிவ் இலைகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

தம்பலம்

சங்ககாலத்தில் தம்பலம் அளித்து உபசரிப்பது வழக்கம். ‘தம்பலம்’ – ‘தாம்பூலம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. இச்சொல் வெற்றிலையைக் குறிக்கும். தாம்பூலம் என்ற சொல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலே இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூலான கலித்தொகை தாம்பலம் தின்பதைப் குறித்திருக்கிறது.

பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி, யார், இவண் நின்றீர்?’
எனக் கூறி, பையெ,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்
(கலித்தொகை-65)

அத்துடன் மூதாய் என்று சொல்லப்படும் ஒருவகைப் பூச்சி வெற்றிலை மென்று துப்பப்படும் போது காணப்படும் நிறத்தை ஒத்தது என்பதை ஒப்பு நோக்கலாம். அப்பூச்சி இந்திர கோபம் என்றும் தம்பலப் பூச்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

கம்பநாடார் ‘வெள்ளிலை தம்பல் கண்டார்‘ (இராமாயணம் பாலகாண்டம் காட்சிப் படலம்) எனக் குறித்துச் சொல்கிறார். கி.பி 9-ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருக்கோவையார் ‘தில்லை நல்லார் பொது தம்பலங் கொணர்ந்தோ‘ எனக் குறிக்கிறது. தம்பலம் என்ற சொல் தமிழில் வழக்குச் சொல்லிலும் பரவியது. நிச்சய தாம்பூலம், தாம்பூல பத்தியம், தாம்பூல நிவேதனம், தாம்பூலத் தட்டு. தாம்பூலம் பரிமாறல், தாம்பூலம் தரித்தல், தாம்பூல எச்சில், என்ற சொற்கள் வழக்கத்தில் உள்ளதைக் காணலாம். தெலுங்கிலும் ‘தம்பலப் பாக்கு‘ என வெற்றிலை பாக்கைக் குறிப்பதுண்டு.

சங்க இலக்கியங்களில் இவ்விலை ‘தம்பலம்’ திரையல்’, ‘அடை’, ‘நீடுகொடி இலை‘ எனக் குறிக்கப்படுகிறதே தவிர வெற்றிலை எனக் குறிக்கப்படவில்லை என்கின்றனர். ஆனால் உரையாசிரியர்கள் இடம் கருதி வெற்றிலை என்றே பொருள் கொள்கின்றனர். வெற்றிலை என அழைக்கப்படும் இவ்விலையைச் (வெறுமை இலை) சமைப்பதற்குப் பயன்படாத இலை என்றும் பொருள் கொள்கின்றனர். வெள்ளிலை என்ற சொல்லை விட வெற்றிலை, வெத்திலை என்ற சொல்லே பெரும்பாலும் வழக்கில் இருகிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் வெற்றிலை என்ற பெயர் இலக்கிய வழக்கிலே காணப்படவில்லை என்போர் உளர். சங்க இலக்கியங்களில் எடுத்தாண்டுள்ள சில காட்சிகள் இக்கூற்றினைப் பொய்யாக்குகின்றன.

சங்க காலத்தில் மதுரை, புகார், வஞ்சி போன்ற நகரங்களின் வீதிகளில் இருந்த நாளங்காடி, அல்லங்காடி போன்ற இடங்களில் இவ்விலை விற்பனை ஆகியிருந்திருக்கிறது. பழைய மதுரை மாநகர் வீதியினைக் குறிப்பிடும் மாங்குடி மருதனார் அவ்வீதிகளில் வெற்றிலை பாக்கு விற்போர் இருந்ததையும் சுட்டுகிறார்.

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்’ (மதுரைக்காஞ்சி 400-401)

பழைய மதுரையில் வெற்றிலையைப் பயிரிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தனர். வெற்றிலை போடும் பழக்கத்தையுடைய மக்களும் வாங்கிப் பயன்படுத்தினர். வெற்றிலை போடும் வழக்கத்தை மேற்கொள்ளும் மக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது புலப்பாடு.

வெற்றிலையின் பொதுத்தன்மையைக் கருதியே மாங்குடி மருதனார் ‘நீடு கொடி இலை‘ என்றார்.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்ட திவ்யப் பிரபந்தத்திலும் ‘வெற்றிலை’ குறிக்கப்படுகிறது.

உண்ணுஞ்சோறும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்
(நாலாயிர திவ்ய பிரபந்தம் – திருவாய் மொழி 6.7)

சிலப்பதிகாரம் – இந்திரவிழா ஊரெடுத்த காதை
சந்த பூக்கச் சாடை பாக்கிலை
கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்
”(157) என்கிறது.

வெள்ளை வெற்றிலை என்கிற கற்பூர வெற்றிலை (சித்த வைத்திய அகராதியில் வெள் வெற்றிலை) – இளம் பச்சை நிறத்தில் இருக்கும். கருப்பு வெற்றிலை – கரும்பச்சை நிறத்தில் இருக்கும். காப்பி வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும். (தங்க நிறத்தில்) பேகருப்பு வெற்றிலை – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும். கொழுந்து வெற்றிலை என்பது தளிராக இருக்கும்போதே பறித்துக் கொள்வது. முத்தின வெற்றிலை நன்றாக உருவான பிறகு பறித்துக் கொள்வது. இளம்பருவ வெற்றிலை கொடியைச் ‘செம்பக்கால்’ என்பார். முதல் ஆறுமாதம் கழித்து வலதுபுறமாகக் கொடி இறக்குவார்கள். அப்போது இவ்வெற்றிலைக் கொடியானது ‘முத்தினக்கால்’ எனப்படுகிறது.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் சொல்லப்படுகிறது

கொடியில் தனியாகக் கிளை வைத்து இருப்பது பாலை வெற்றிலை. அதாவது நல்ல வெற்றிலை. கொடியிலே வெற்றிலை வருவது சக்கை வெற்றிலை. கோணலாகவும் காய்ந்ததும் வேண்டாமென்று ஒதுக்குவதும் ‘கழுவன’ வெற்றிலைகள்.

105 வெற்றிலை (100 – 105 வரை தோரயமாக) – 1 கவுளி, 2 கவுளி சேர்ந்தது – 1 கட்டு; 30 கட்டு (அதாவது 60 கவுளி) – 1 வத்து; 1 முழம் என்பது – 4 கொடி; 200 கொடி சேர்ந்தது – 1 கட்டு; 50 முழம் சேர்ந்தது – 1 கட்டு.

வெற்றிலையில் பலவகை உண்டு. அவற்றுள் வெள்ளை வெற்றிலை ஒன்றாகும். வெள்ளை வெற்றிலை வெளிறிய சிறிது பசு நிறமாகவும் மென்மையாகவும் அழகாகவும் சுவைப்பதற்கு இன்பமாகவும் இருக்கும். கரும் பச்சையாகவும் முரடாகவும் காரமாகவும் இருக்கும் வெற்றிலை உலக வழக்கில் ‘பச்சை வெற்றிலை’ எனப்படுகிறது. சிலர் வெள்ளை வெற்றிலையையே விரும்புவர். புகையிலை போடுவோரும் ஏழை மக்களும் பெரும்பாலும் பச்சை வெற்றிலையே உட்கொள்வர். பச்சை வெற்றிலையினும் வெள்ளை வெற்றிலை விலை கூடுதல் என்பதும் இதற்குக் காரணமாகும். வெற்றிலைக்கு வெள்ளிலை என்னும் பெயரும் பாக்குக்கு அடைக்காய் என்னும் பெயரும் உள்ளமை தெளிவு. பாக்குக் காய்க்கு அடைக்காய் என்னும் பெயர் வந்ததன் காரணம் அடையுடன் வெற்றிலையுடன் போடப்படும் காய் பாக்குக் காய்.

கி.பி 7-ஆம் நூற்றாண்டில் சமணர்களின் அன்றாட வாழ்விலும் இவ்வெற்றிலை பங்கு வகுத்திருக்கிறது. கைகளில் ‘மருதோன்றி’ (அழவணம், மருதாணி) கொண்டு சாயம் பூசிக்கொள்ளுதலும் வெற்றிலை பாக்கும் சுக்கும் தின்னுதலும் சமணத் துறவியரின் வழக்கம் என்பதைத் தேவாரம் கூறுகிறது.

இந்நகரில் வாழும் மக்கள் மட்டுமின்றி இந்திய நாட்டில் வாழும் மக்கள் அனைவருமே ‘தெம்புல்‘ என்னும் ஒருவகை இலையை எப்போதும் வாயில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் ஏதோ ஒரு வேட்கையைத் தணிப்பதற்கு உதவுகிறது. ஆனால் அந்தப் பழக்கம் அவர்களிடம் நிலைத்து நின்று விட்டது. அந்த இலையை அவர்கள் இடையறாது மென்று கொண்டும், அதனால் ஊறுகின்ற எச்சிலை உமிழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

அரசரும் பிரபுக்களும் ஏனைய மனிதர்களும் அந்த இலையோடு கருப்பூரம் முதலிய நறுமணப் பொருட்களையும் சுண்ணாம்பையும் கலந்து வாயிற் போட்டுக் கொள்கிறார்கள். இந்த பழக்கம் உடம்புக்கு மிகவும் நல்லதென்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஒருவனை மிகவும் இழிவாக நடத்த வேண்டுமென்று இன்னொருவன் விரும்பினால் அவன் முகத்தில் தன் வாயில் இருக்கும் இலையையோ அதனுடைய சாற்றையோ துப்பி விடுவான். அவ்வாறு அவமானப்படுத்தப்பட்டவன் நேராக அரசனிடம் ஓடி, தனக்கு நேர்ந்த மானக்கேட்டை எடுத்துச் சொல்லி, அவ்வாறு அவமானப்படுத்தியவனோடு சண்டையிடுவதற்கு அரசனுடைய இசைவைக் கேட்பான். தன் இசைவைத் தருவதோடு அவனுக்குத் தேவையான அரசன் போர்க்கருவிகளையும் தருகிறான். அதாவது ஆளுக்கொரு வாளையும் கேடயத்தையும் தருகிறான். சண்டையைக் காண்பதற்கு மக்கள் திரண்டு விடுகிறார்கள். சண்டை செய்யும் இருவரும் ஒருவருள் ஒருவன் இறக்கும் வரையில் சண்டையிடுகின்றனர். சண்டையிடும்போது அவர்கள் வாளின் முனையைப் பயன்படுத்தக் கூடாது’ – என்று தனது பயணக் கட்டுரையில் மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார்.

அசோக வனத்தில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் சீதையின் மனநிலையைச் சுட்டும் கம்பர், “ராமனுக்கு யார் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள்’ என்று தனது இயலாமையை எண்ணி சீதை நொந்துபோவதாகவும் இராமனுடனிருந்து இன்பம் நுகர முடியாமல் போவதாகவும் சீதையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறார்.

அருந்தும் மெல் அடகு ஆர் இட
அருந்தும் என்று அழுங்கும்

(இராமாயணம் காட்சிப்படலம்-15)

பூவணை பலவுங் கண்டார்;
பொன்னரி மாலை கண்டார்;
மேவருங் கோபம் அன்ன
வெள்ளிலைத் தம்பல் கண்டார்
(49)

என்னும் பாடலில் மலைக்காட்சி காண்பவர் பூ அணையும் பொன்னரி மாலையுங் கண்டனர்; அத்துடன் சிவந்த இந்திர கோபப் பூச்சி போன்ற உமிழ்ந்த வெற்றிலைக் கொத்தைகளையும் கண்டனர் என்கிறது. (தம்பல் என்பது மென்று உமிழ்ந்த சிவப்பான வெற்றிலைச் சக்கை (கொத்தை). தம்பல் என்பதற்கு முன்னால் உள்ள ‘வெள்ளிலை’ என்பது வெள்ளை வெற்றிலை.

அருணாசல புராணத்தில்
விஞ்சிய அடைக்காய் உண்டி வழியிடை
வெறுப்ப தாக்கி

(திருமலைச் சருக்கம்-26) என்ற சொற்றொடரிலும் குறிப்பிடப்படுகிறது.

கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கையள்ளிக்
கொள்ளுகினு மக்நீரிடைத்திளைத் தாடினுங்
குளிர்சந்த வாடைமடவார்
வந்துலவு கின்றதென முன்றிலிடை யுலவவே
வசதிபெறு போதும் வெள்ளை

வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெற வறுசுவையில் வந்ததென வமுதுண்ணும்
வேளையிலு மாலைகந்தம்
வெள்ளிலை யடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
விளையாடி விழிதுயிலினும்
சந்ததமு நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரக்ஷைபுரிவாய்
சர்வபரி பூரண வகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.

(சச்சிதானந்த சிவம்-11 தாயுமானவர் பாடல்கள்)

பூங்கொத்துகள் விரிகின்ற பூஞ்சோலைகளில் நல்ல நிழலிறங்கியிருந்தாலும் குளிர்த்த மதுரமாகிய நீரைக் கையினாலள்ளி உட்கொண்டாலும் அந்நீரினிடத்தில் மூழ்கி விளையாடினாலும் குளிர்ந்த சந்தன மணமுள்ள காற்று மாதர்கள் வந்துலாவுகிறது போல முற்றத்தின்கண் உலாவும் படி, (விசாலமான) வீடுகளையுடையனவாய் ஆகுங்காலத்திலும் வெண்மையாகிய வட்டவடிவுள்ள சந்திரன் பட்டப்பகலைப் போல சந்த்ரிகையை வீசுதலால் மகிழுங்காலத்தும் கடலமுதமானது ஆச்சரியமடைய அறுசுவைப் பண்டங்களில் வந்ததென்னும்படி உணவை உண்ணும் காலத்திலும் பூமாலை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, இவைகளை விரும்பி வேண்டிய வண்ணம் வேண்டியபடி விளையாடி கண்ணுறங்கினாலும் சதாகாலமும், உன்னருளை மறவாத வரத்தைக் கொடுத்து தனியேனைக் காத்தருள்வாய் சர்வ பரிபூரணமே எனத் தாயுமானவர் கூறுகிறார்.

கலிங்கத்துப்பரணி போர்க்களக் காட்சியில் மிகுதியாக உண்டதால் உணவு செரிமானத்திற்காகப் பேய்கள் தாம்பூலம் போட்டுக்கொண்டன என்கிறார் செயங்கொண்டார்.

பண்ணு மிவுளிச் செவிச்சுருளும் பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்புங் கலந்து மடித்துத் தின்னீரே.
பெருக்கத் தின்றீர் தாம்பூலம் பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே!
583

குதிரைக்காது–வெற்றிலை; குதிரைக்குளம்பு–பாக்கு; கலிங்கர் கண்-சுண்ணாம்பு – மடித்து வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள் என்கிறது உரை.

சீவக சிந்தாமணியில் காவியத் தலைவன் சீவகன் விமலையாரிடம் புணர்ச்சி வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்காக அவளைத் தொடுகிறான் என்று

பாசிலை சுருட்டி
மைந்தன் கொடுகிய
” என்று சொல்கிறது.

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “வெற்றிலை மடித்துக் கொடுத்தற்கென்றது இடக்கர்” என்று கூறுகிறார். (நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தி அநாகரிமாக இருக்கும் சமயங்களில் அதை மறைமுகமாகச் சொல்லும் முறைமையை தமிழ் இலக்கண நூல்கள் ’இடக்கர்’ என்கிறது)

கணவன் போரில் இறந்த பின்பு மனைவியர் பச்சையிலை முதலியவற்றைத் தின்னாது கைம்மை நோன்பு காத்தல் பண்டைய வழக்கம். இவ்வழக்கைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சித்தரிக்கிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர்ப்புறத்திலே தமக்குள் போரிட்டு வீழ்கின்றனர். அவர்களது குடைகள் தாழ்ந்தன. முரசுகள் வீழ்ந்தன. பாசறைகள் ஒருவரும் எஞ்சி இல்லாதவாறு அழிந்தன. அவர் மனைவியர் பச்சிலையும் தின்னாது நீரும் மூழ்காது இறந்து கிடக்கும் தத்தம் கணவரின் மார்பைக் கட்டியவாறே களத்தில் கிடந்த காட்சியைக் கழாத்தலையார் சித்தரிக்கின்றார்.

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்‘ – (புறநானூறு)
என்ற வரியில் பாசடகு என்பதற்குப் ‘பச்சையிலை (வேளைக்கீரை) முதலாமென்பது’ உரையாசிரியர் கூற்று. பாசடகு என்றால் வெற்றிலை என்றும் பொருள் கொள்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் திரு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இவ்வழக்கத்தைக் கூறும்போது கணவன் போரில் இறந்த பின்பு மனைவியர் வெற்றிலை தின்னார் குளிர்ந்த நீரில் மூழ்கார் எனப் பொருள் கொண்டுள்ளார். வெற்றிலை உணர்ச்சிகளை எழுப்ப வல்லது என்ற மருத்துவ இலக்கியங்களின் கூற்றுகளும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

சுமார் கி.பி.910-ஆம் நூற்றாண்டில் எழுந்த சீவக சிந்தாமணி தாம்பூல வழக்கைப் பற்றி விரித்துக் கூறுகிறது. இவ்விலை ‘பாசிலை‘ என்றும் (1987), ‘பசுந்திரை‘ என்றும் (197), ‘மெல்லிலை‘ என்றும் (815) பல்வேறு பெயர்களில் குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வெற்றிலை பயிரிடும் தோட்டம் ‘மெல்லிலைக்காவு” (826) என்று குறிக்கப்படுகிறது.

வெற்றிலை வைக்கும் பெட்டி வெற்றிலைப் படலிகை என்று கூறப்படுகிறது. வெற்றிலைத்தட்டு, வெற்றிலைச் செப்பு எனவும் குறிக்கப்படுகிறது. இச்செப்புத்தட்டு ‘மணிச்செப்பு‘ என்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை ‘சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பின் ஈந்தான்’ (1055:1-2) ‘கப்புரம் பசுந்தீரை கதிர்செய் செப்பொடு சிலதிய ரேந்த’ (197: 1-2) எனச் சீவக சிந்தாமணி கூறும். அத்துடன் விருந்தினருக்கு வெற்றிலையைச் செப்பிலே வைத்துக் கொடுத்தலையும் பச்சைக் கற்பூரம், வெற்றிலை ஆகியவற்றைச் சுருட்டிப் பெண்கள் ஏந்தி வருதலும் பாக்கையும் வெற்றிலையையும் பறித்துக் கொண்டு வந்து கொடுத்து சண்பக மாலையைப் பெறுதல் போன்ற பண்டைய வழக்கங்களை விளக்குகிறது.

பண்டைத் தமிழகத்தில் அரசருடன் இருந்த “எண்பேராயம்‘ ஒரு குழு என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். “எண்பேராயம்’ என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியருள் ஒருவர்,

சந்துபூக்கச்
சாடை பாக்கிலை கஞ்சுக நெய்
ஆய்ந்த
விவரெண் மராயத்தார்

(இந்திர விழாவூரெடுத்த காதை-157)

என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில் “பாக்கிலை’ வைத்திருப்போரும் ஒருவர். இவரை “அடைப்பைக்காரன்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் வழங்கும் பழமொழிகளிலும் வெற்றிலையின் பங்கைக் காணமுடிகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வெற்றிலையைப் பற்றிய பழமொழி ஒன்று குறிக்கப்படுகிறது.

வெற்றிலை விடினும் வேலாம்‘ (சீவக-815)

விருந்து உபசரித்தலில் தாம்பூலத்திற்குச் சிறப்பான பங்குண்டு. தமிழகத்தில் வீடு தேடி வந்த விருந்தினருக்கு உண்டி கொடுத்து உபசரிப்பதும் வெற்றிலை பாக்கு அளித்து உபசரிப்பதும் வழக்கம். இவ்வாறு வெற்றிலையில்லா விருந்து விருந்தாகாது எனக் குறிக்கிறது வெற்றிலையில்லா விருந்தில்லை பழமொழி. ‘வெற்றிலையில்லா விருந்தும் சீரகமில்லா ரசமும் சீரில்லா பொம்பளையும்’, ‘தம்புடி வெற்றிலை நிச்சய தாம்பூலம் ஒரு துட்டு வெற்றிலைக் கல்யாணம்’ என தமிழில் வெற்றிலை குறித்த பழமொழிகளுக்கு குறைவேயில்லை.

இலை வாணிகன் கதையொன்று

தில்லையில் விழாக் காலங்களில் வழக்கம் போல் ஓடும் தேர் ஒரு சமயம் ஓடவில்லை. தேர் ஓட வேண்டுமானால் நரபலியிட வேண்டுமென்றும் நரபலிக்கிரையாகுபவன் ஒருத்திக்கு ஒரே மகனாகவும் குற்றம் குறை அற்றவனாகவும் இருக்க வேண்டுமென்று அரசனிடம் ஊர் பெரியோர்கள் முறையிட்டனர். மேற்குறித்த தகுதிகள் அனைத்தும் நிறைந்தவனாக வெற்றிலை வணிகன் ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிலை வணிகன் தானே தன் தலையை வெட்டிக்கொள்ள ஒப்புக்கொண்டு அதற்கு முன்பு ஒரு வேண்டுகோளும் விடுத்தான்.

அதாவது தான் இறந்துபட்ட பின்பு தன் இனத்தவரே தில்லைக் கோயில் இடது சிறகில் குடியேற வேண்டுமென்றும் அப்படிக் குடியிருக்கும்போது இறப்பு ஏற்பட்டால் அக்கோயிலைச் சார்ந்தவர்களே அவனுக்கு இறுதி மரியாதையாக வாய்க்கரிசி, கோடித்துணி, வெற்றிலை, பாக்கு முதலியன கொடுத்து மரியாதை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து கீழ்க்கண்டவாறு தம்மைப் பலியிட்டுக் கொள்ளத் தயாரானான். தன்காலின் பெருவிரலில் ஒரு வட்டமான வளையத்தை மாட்டிக் கொண்டு, அதிலிருந்து கழுத்து வரை நீண்ட இரும்பு சங்கிலியை இணைத்து, சங்கிலி முனையில் துரட்டி என்ற கத்தியைக் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு தானாகத் தன் காலை உதைத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தன் உயிரை அர்ப்பணித்துக் கொண்டான். பின்னர் தேர் ஓடியது.

இங்கே அரிகண்டம் என்ற சொல்லை ஒப்புநோக்கலாம்.

‘அரிகண்டம்’ என்பது ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து தன்னைத் தானே பலி கொடுப்பது.

பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி பெறவும் அவர்கள் நலம் பெறவும் தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய நலப்பணித் திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன் தங்களைத் பலியிட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை சிற்பங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் தெரியப்படுத்துகின்றன.

இந்திர விழாவூரெடுத்த காதை(85-88)யில் வரும் வரிகளில் வரும் இடத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு வந்து தங்கி இரவு உணவுக்கு பிறகு வெற்றிலைப் பாக்கு மடித்து கொடுக்கிறாள். அவர்கள் இருவருக்குமான கடைசி உணவும் இறுதி இரவுமான முக்கியமான இக்காட்சியில் வெற்றிலை வருகிறது.

உண்டு இனி திருந்த உயர்பே ராளற்
அம்மென்
திரைலோடு
அடைக்காயீத்த
மையீரோதியை
வருகெனப் பொருந்தி
” (கொலைக்களக் காதை-54-56)
என்று குறிப்பிடப்படுகிறது.

பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் வெற்றிலை சுண்ணாம்பு விற்பவர்கள் மதுரை நகரில் இருந்தனர் என்பதை,

நீடு கொடி
இலையினர் கோடு சுடு
நூற்றினர்
” (401)

என்று குறிப்பிடுகிறது. நச்சினார்க்கினியர் இதற்கு ”வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பை உடையாரும்” என்று விளக்கமளித்துள்ளார்.

உண்ணும் சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்

என்கிறார் திருவாழ்மொழியில் நம்மாழ்வார்.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும்
உண்டாம் தரம் சொன்னோம்
.”

என்று தாம்பூலம் தரிக்கையில் வெற்றிலை மென்று வரும் உமிழ்நீரில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலை சுரப்பு நீர்களின் குணத்தினை ஒரு சித்தர் பாடல் கூறுகிறது.

இரண்டு வெற்றிலையோடு ஐந்து மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாற்றினை மட்டும் இரண்டு மாதங்கள் வரை விழுங்கினால் உடல் எடை குறையும். வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவைகட்கு வெற்றிலை தீர்வு தருகிறது. பசியைத் தூண்டிவிட இரண்டு வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் கலந்து மென்றால் போதும் என்றும் தமிழ் மருத்துவம் வெற்றிலையின் பயனைப் பட்டியலிடும் போது எண்ணிக்கையற்ற வரிசையை தன்னகத்தே வைத்துள்ளது.

மஹாபாரதக் கதையில் தேவலோகத்திற்கு செல்லும் அர்ஜுனன் மேல் ஆசைப்படும் ஊர்வசியிடம் அர்ஜுனன் ‘இந்திரன் எனக்கு தந்தை. நீங்கள் அவருக்கு உகந்தவர். ஆதலின் நீர் எனக்கு தாய்க்கு சமம்’ என்கிறான். “ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவதாக” என்று மோஹித்த ஊர்வசி சாபமிட, இதற்கு பல்காலம் சென்று அஞ்ஞாத வாசத்தில் இச்சாபத்தை வரமாக்கிக் கொள்கிறான் அவன். இச்சம்பவத்தை கேள்வியுற்று ஊர்வசியை பூவுலகு சென்று வாழ் என இந்திரன் மேலிருந்து விரட்டி விடுகிறான்.

என் செய்வாள் பாவம்..? தாம்பூலம் தரிக்கா வாய் என்ன வாயென்றுணர்ந்து அந்தரங்க மறைவுப் பிரதேசத்தில் பதுக்கி ஓரிலை கொண்டு வந்து பூமியில் பயிரிட்டு சுவைக்கத் துவங்குகிறாள்.

பின் நரம்பு கிள்ளி அழுந்தத் தேய்த்து பின் முகர்ந்து பார்த்தால் பெண்களின் அந்தரங்கத்தின் வாசனை உங்களை மயக்கமுறச் செய்யும் என மறைவாய் சொன்ன கதை-யில் கி.ரா-வும் ஒரு கட்டுரையில் நாஞ்சில் நாடனும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


எடுத்தாளப்பட்டுள்ள நூல்கள்: கலித்தொகை, இராமாயணம், மதுரைக்காஞ்சி, நாலாயிர திவ்ய பிரபந்தம், சிலப்பதிகாரம், தேவாரம், மார்க்கே போலோ பயணக் குறிப்பு, கலிங்கத்து பரணி, தாயுமானவர் பாடல்கள், அருணாச்சல புராணம், புற நானூறு, சீவக சிந்தாமணி, சித்த மருத்துவ அகராதி, பத்துப் பாட்டு, சித்தர் பாடல்கள், மறைவாய் சொன்ன கதைகள்

***

வேதநாயக்
தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: editorialmagazines@gmail.com

மாமா

0

ஷான்

ன் பாட்டியோட பிறந்தநாள் இன்னிக்கு. இருந்திருந்தா இப்ப அவளுக்கு நூத்தி எட்டு வயசு” என்றார் பாண்டியன். அவருக்கு வயது நூற்றுப் பன்னிரண்டுதான். அவருடன் பேசிக்கொண்டு சென்னையில் நின்றிருந்த புனீத்தின் திரையில் அவருடைய சுருக்கங்கள் நிறைந்த முகம் தெரிந்தது. ஆனால் அந்தக் கண்களில் குறும்பு மின்னியது. பின்புறத்தில் அவர் தற்போது வாழும் மாளிகை. அது சிம்லாவில் இருக்கிறது. அதிநவீன ரோபாடிக் வசதியுடன் கட்டப்பட்ட வீடு. அவர் தனியாகத்தான் அங்கே வாழ்ந்து வந்தார். அவருக்கு வெளி மனிதர்கள் உதவியோ தொடர்போ தேவையில்லை. நாட்டின் பெரும்பாலான முதியவர்கள் அப்படி ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவரவருக்கு அவரவர் வேலை.

புனீத் தனது முன்புறம் காற்றில் விரிந்திருந்த அவருடைய வீடியோவுடன் பேசிக் கொண்டிருந்தான். ஏர் டிஸ்ப்ளே என்று காற்றில் படம் காட்டும் வித்தை. பாண்டியன் ஒரு தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் நினைக்கும் இடத்துக்கு அது போகும். வேண்டுமென்றால் குரல் கட்டளையிலும் இயக்கலாம். புனீத் அவருடைய பேரன்.

“அழகி வந்துட்டாளா?”

பாண்டியனின் குரலில் இன்னும் அப்படி ஒரு கூர்மை.

“இல்லை.. பத்து நிமிஷம் ஆகும்” என்றான் புனீத்.

அவனுடைய திரையின் ஒரு ஓரத்தில் சென்னை மாநகரத்தின் வரைபடம் ஒன்று தெரிந்தது. அழகி இப்போது வந்து கொண்டிருக்கும் இடமும் நேரமும் அதில் தெரிந்தது. அவனைக் கடந்து பலர் வேகு வேகென்று நடந்து கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குறைந்த தொலைவுக்கு சைக்கிளும் நடையும் விருப்பத்துக்குரிய தேர்வாக மாறிவிட்டன. எந்த வகையில் போக்குவரத்தை மீறினாலும் அதை ஜிபாட் என்ற அரசாங்க செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து அபராதம் விதித்து விடும். சாலை விபத்துகளில் இறப்பு என்பது நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. வாகனங்களை இயக்குவது அனைத்தும் ஏஐ ஓட்டுநர்கள் என்பதால் அப்படி ஒரு துல்லியம். மணிக்கு 250 கிமீ வரை போனாலும் அடுத்தடுத்த வாகனங்கள், டிராஃபிக் சிக்னல் ஆகியவற்றோடு தொடர்ந்து வலைப்பின்னல் தொடர்பில் இருப்பதால் மோதல் என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகியிருந்தது. மனிதர்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று வந்துவிட்டது. ஆசைப்பட்டால் விஆர் உலகத்தில் ஒரு கேம் விளையாடுவது போல ஓட்டிக் கொள்ளலாம்.

“கோவிந்தன் என்ன சொல்றான்?”

கோவிந்தன் பாண்டியனின் மகன். புனீத்தின் அப்பா.

“அவருக்கு நான் மாமா சொன்ன பெண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது தான் விருப்பம்”

“ரொம்ப அடம் பிடிக்கறானா?”

“உன்னோட மகனாச்சே தாத்தா…”

“நான்சென்ஸ். என்னுடைய விந்தணுவிலிருந்து வந்தான் என்பதற்காக அவனுடைய எல்லா பைத்தியக்காரத்தனத்துக்கும் நான் பொறுப்பாக முடியாது”

“நீ ஒரு சைக்கோ ஓல்டு மேன்… இரு அவ வந்துட்டா. நான் அப்புறம் பேசறேன்”

அழகி கண்ணில் தெரியத் தொடங்கினாள். புனீத் எழுந்து நின்றதும் அவன் முன்பிருந்த திரை காற்றோடு கரைந்து போனது.

எளிமையான அதே நேரம் கச்சிதமாகப் பொருந்திய அவளுடைய வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் உடையைப் பார்த்ததும் புனீத் அணிந்திருந்த ஸ்மார்ட் ஆடை சட்டென்று அவளுக்கேற்ப நிறம் மாறிக் கொண்டது. காற்றில் மிதக்கும் இறகு போல ஒரு மின்னணு மிதிவண்டியில் அவன் அருகே வந்து இறங்கினாள் அழகி. காரணப் பெயரல்ல. அவள் பெயரே அழகிதான். அவள் இறங்கியதும் அந்த சைக்கிள் தானாகவே விலகிச் சென்று ஆறு போல் ஓடிக்கொண்டிருந்த போக்குவரத்தில் கலந்து மறைந்தது. வேறு ஒரு பயணி அதைத் தனது செயலி மூலம் அழைத்திருப்பார். அவளிடம் மனதைக் கவரும் ஏதோ ஒரு மலரின் வாசம் வீசியது. கூந்தல் காற்றில் அலைபாய்ந்தது. மேலே இரண்டு பட்டன்களைப் போடாமல் விட்டிருந்தாள். சற்றுப் படபடப்பாக இருந்தாள்.

“ஹாய் புனீத்.. சோ சாரி.. கொஞ்சம் தாமதம்”

மெய்நிகர் முப்பரிமாண உலகத்திலும் ஏற்கனவே சந்தித்ததை விட நேரில் சற்று சிறிதாகத் தெரிந்தாள். ஆனால் அது அவள் அழகை இன்னும் கச்சிதமாக்கிக் காட்டியது.

“பரவால்ல அழகி.. ஜஸ்ட் மூனு நிமிஷம்தான் நீ லேட்…”

சற்றே அசட்டுத்தனமாக. அழகி தலையை மறுப்பாக ஆட்டினாள்.

“மூனு நிமிஷம்.. நேத்து நியூஸ்ல பாத்திருப்பியே… அது எங்க கம்பெனிக்கு ஒரு வீடு கட்டி முடிக்கற நேரம்” என்றாள். நேற்றுதான் ரோபாட்டிக் அசுரர்கள் என்ற நிறுவனம் மூன்று நிமிடங்களில் ஒரு வீட்டைக் கட்டி முடித்து உலக சாதனை புரிந்திருந்தார்கள். அங்கேதான் அழகி வேலை செய்கிறாள்.

இருவரும் மெல்ல நடந்தார்கள். இப்போது சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்கள் ஏரிகளாகவும் அதைச் சுற்றிய பகுதிகள் நடைபாதைகளாகவும் உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும் மாறியிருந்தன. அதைவிட்டால் உணவகங்களும் எக்ஸ்ஆர் கேளிக்கை அரங்கங்களும் நிறைந்திருந்தன. அவற்றினுள் சென்றால் ஒரு கதைக்குள் நுழைந்து நீங்களும் பாத்திரமாகி சிலமணி நேரங்கள் உலவிவிட்டு வரலாம். நிஜத்துக்கு அருகில் இருக்கும் நிழல் அது. ஒரு சிலர் கதையில் நடப்பதை உண்மையாக நம்பி மரணம் அடைந்ததை அடுத்து எக்ஸ்ஆர் சிமுலேஷன்கள் மனிதர்களைப் போலவே நூறு சதவீதம் உருவாக்கப்படுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. திரையின் ஒரு ஓரத்தில் நீங்கள் காண்பது உண்மையான உலகம் அல்ல என்பது மின்னிக் கொண்டே இருக்கும். மது அருந்துதல் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற அறிவிப்பு வருவது போல.

வீடுகளும் அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் நகருக்கு வெளியே அதற்கென ஒதுக்கப்பட்ட சாட்டிலைட் நகரங்களுக்கு முழுதாக நகர்ந்திருந்தன. கட்டிடங்களை இடிப்பதும் கட்டுவதும் மாதங்கள் பிடிக்கும் வேலையிலிருந்து நாட்கள் பிடிக்கும் வேலையாக மாறிவிட்டன. சாட்டிலைட் நகரங்கள் அனைத்தும் ஹைபர் லூப் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு குமிழியினுள் ஏறி அமர்ந்தால் நிமிடங்களில் சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்துவிடலாம் என்பதால் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதனால் நகரங்களில் நெரிசல் குறைந்திருந்தது.

அடையாறு நதியின் நீர் பளிங்கு போல் சுத்தமாக இருந்தது. அன்னங்கள் நீந்திக் கொண்டிருந்தன. அவை அனைத்தும் அன்னங்கள் அல்ல. நதியின் நீரை சுத்தம் செய்ய காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து நீரில் கரைக்கும் ரோபாட்கள். கரையோரத்தில் அமர்ந்து பேச நிறைய இடம் இருந்தது. மறுசுழற்சி குப்பைகளால் செய்யப்பட்ட நாற்காலிகளும் மேசைகளும் முன்னிரவு மழையால் சற்று நனைந்திருந்தன. அவசரமாக அதைத் துடைத்து அழகியை அமர வைத்தான் புனீத்.

புனீத் அழகியை விட வசதியான வீட்டுப் பையன். பறக்கும் சோலார் கார்களை மாதம் ஒன்று என வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் தந்தை கோவிந்தன் பெரிய தொழிலதிபர். ஆனால் அவை அனைத்தும் அவன் தாத்தா பாண்டியன் காலத்தில் தொடங்கப்பட்டவைதான். அவர்தான் ஆயிரக்கணக்கான அடுக்குகளில் ரப்பர், ஏலக்காய், காபி தோட்டங்களை இந்தியாவெங்கும் வாங்கிப் போட்டிருந்தார். ஆம் அடுக்குகள்தான். இப்போதெல்லாம் அவை மாபெரும் கட்டிடங்களில் விளைந்து கொண்டிருந்தன. பல பெரிய சுரங்க நிறுவனங்கள். என்னதான் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்திருந்தாலும் அது வேலை செய்ய இயற்கையிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் தேவை. இதை பாண்டியன் எப்போதோ புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலின் அடிப்படையில் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தைத்தான் கோவிந்தன் இப்போது ஆள்கிறார். அந்த இடத்துக்கு புனீத் இப்போது தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவனுக்கு அதற்கான பொறுப்பு வரும் என்று கோவிந்தன் சொல்லிவிட்டார்.

“நீ யாரை வேணா தேடிக்கோ. எனக்கு கவலை இல்லை. ஆனா மாமா ஓகே சொல்லணும். மத்தபடி நான் இதுக்குள்ளே வர மாட்டேன்” என்று தனது கருகரு மீசையை நீவியபடியே சொல்லிவிட்டார்.

இப்போதெல்லாம் காதல் திருமணங்களும் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களும் வழக்கொழிந்து போயிருந்தன. தோல்விகளுக்கான சாத்தியங்களின் புள்ளிவிவரம் அச்சமூட்டுவதாக இருந்ததே காரணம். திருமண முறிவில் இரண்டு பக்கமும் ஏற்படும் சட்டரீதியான சேதங்களுக்கும் அதைத் தொடர்ந்து தரவேண்டியிருக்கும் இழப்பீட்டுக்கும் பயந்து திருமணம் செய்வதையே தவிர்க்கத் தொடங்கியிருந்தார்கள் மக்கள். இதை சரிசெய்ய உருவாக்கப்பட்ட உலகளாவிய ஏஐ செயலிதான் மேட்ச்மேக்கர். சுருக்கமாக மாமா.

மாமா ஓர் அதி நவீன திருமண ப்ரோக்கர். ஓர் ஆளைக் குறிப்பிட்டால் நீங்கள் அவருடன் இணைந்து வாழ எத்தனை பொருத்தம் என்று புட்டுப்புட்டு வைத்து விடும். அப்படி ஆராயும்போது உங்களுக்கு விருப்பமான நிறம், மணம், ஆடை, டிஎன்ஏ ப்ரோஃபைல், உணவுத் தேர்வு, குறட்டை விடும் பழக்கம் என்று ஒன்று விடாமல் பல லட்சம் தரவுகளை ஒப்பிட்டு அலசி ஆராயும். ஏற்கனவே தன்னிடமுள்ள பல கோடிக்கணக்கான தம்பதிகளின் ஓரிரு நூற்றாண்டு வாழ்க்கைத் தரவுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும். உங்கள் கட்டணத்தைப் பொறுத்து விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ ஒரு அறிக்கையைத் தரும். இன்னார் நம் வாழ்வில் இணைய விரும்புகிறார்கள் என்று சொன்னால் விளங்குமா இல்லையா என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் தானே பொருத்தமான வேறு ஆட்களையும் கண்டறிந்து ஒன்று அல்லது இரண்டு பெயர்களை மட்டுமே பரிந்துரைக்கும். அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்க 98% வாய்ப்பு உண்டு. அதன் அல்கரிதம் அவ்வளவு துல்லியமாக தன்னைத்தானே செப்பனிட்டுக் கொண்டிருந்தது.

பல்வேறு விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பமுடையவர்களாக இருப்பதால் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்வார்கள் என்று குத்து மதிப்பாகவெல்லாம் அது பரிந்துரைத்து விடாது. இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதே கூட நீண்டகால அடிப்படையில் சலிப்பை உருவாக்கும் என்று அதற்குத் தெரியும். அதன் அல்காரிதம் இரவு பகலாக வேறு வேறு அன்றாடச் சூழல்களை உருவாக்கி அதில் இருவரையும் பொருத்திப் பார்த்து அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கணிக்கும். சில நொடிகளில் பல கோடி சிமுலேஷன்கள். ஆண் குழந்தை பிறந்தால் என்ன ஆகும், பெண் குழந்தை பிறந்தால் என்ன ஆகும், வீட்டுக்கு கணவன் குடித்துவிட்டு வந்தால் என்ன நடக்கும் என்று அலசி ஆராயும். எனவே மேட்ச்மேக்கர் பரிந்துரைகளை வெறும் கணிதம் என்று எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புனீத்தின் நண்பன் ஒருவனுக்கு அது யாரைக் கொடுத்தாலும் நிராகரித்துக் கொண்டே இருந்தது. மாமாவிடமே பரிந்துரைக்கும்படி கேட்டபோது ஆண்களைப் பரிந்துரைத்தது. முதலில் மறுத்த அவன் நண்பன் அதன் பிறகு தான் ஒரு தன்பாலின ஆர்வமுடையவன் என்று ஒப்புக் கொண்டான்.

மாமா முதலில் இரண்டு பெண்களை புனீத்துக்குப் பரிந்துரைத்தது. அந்த இருவரையும் புனீத் மெட்டாவில் சந்திக்கலாம். அது ஒரு மெய்நிகர் உலகம். நேரில் சந்திப்பது போலவே இருக்கும். ஹேப்டிக்ஸ் முறையில் தொடக்கூட முடியும். இன்னபிற சல்லாபங்களும் நிகழ்த்த வழிகள், சாதனங்கள் உண்டு. அவர்கள் அனைவரும் அவனுக்கு எல்லா வகையிலும் மிகப் பொருத்தமாக இருந்தார்கள். எந்தக் குறைபாடும் இல்லை. அவன் எதிர்பார்த்த அனைத்தும் சொல்லி வைத்தது போல் இருந்தன.

ஆனால் புனீத் அவர்கள் இருவரையும் வேண்டாம் என்று மறுத்தான். மாமாவுக்கு அதிர்ச்சி.

“வாட்… நான் ஒரு வீடியோ போடறேன் பாரு”

புனீத்துக்கு தன் திரையில் என்ன வருகிறதென்று தெரியும். அடுத்து ஸ்ட்ரீம் வழியாக வந்த வீடியோவில் ஒரு பெண் தோன்றி கடந்த ஐம்பது வருடங்களில் மேட்ச்மேக்கர் இணைத்து வைத்த தம்பதிகளில் இரண்டு சதவீதம் மட்டுமே விவாகரத்து செய்தவர்கள் என்றும் அவர்களுக்கிடையே காதல் குறைவதே இல்லை என்பதையும் புள்ளிவிவரம் மூலம் விளக்கினாள். புனீத்துக்கு இவையெல்லாம் ஏற்கனவே பல முறை மாமா படம் காட்டியிருக்கிறது. போரடிக்கும். ஆனால் இந்த வீடியோ மட்டும் அவனுக்குப் பிடித்திருந்தது. வீடியோ முடியும் வரை காத்திருந்தான்.

“அவ யாரு” என்றான்.

“எவ?”

“அந்த வீடியோவுல பேசறாளே அந்தப் பொண்ணு”

“அவ ஒரு பார்ட் டைம் மாடல். ஒரு ரோபாடிக் எஞ்சினியர் கூட. ஆனா மனசுல எதையும் வளத்துக்காதே. அவளுக்கும் உனக்கும் பொருத்தத்துக்கான ஸ்கோர் பாயிண்ட் ஃபைவ். கிட்டத்தட்ட ஜீரோ. எந்த வகையிலும் பொருந்தாத குணநலன்கள், விருப்பங்கள் உடையவர்கள் நீங்க ரெண்டு பேரும்”

அவள்தான் அழகி.

புனீத் மாமா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளுடைய தனித்தகவல்களை தேடிப் படிக்கத் தொடங்கினான். அவளுக்கு பூனை பிடிக்கும். இவன் நாய் வளர்ப்பதில் விருப்பம் உடையவன். அவள் ஐஸ்க்ரீம் காதலி. இவன் சமோசா பிரியன். அவள் உடற்பயிற்சி செய்பவள் அல்ல. புனீத் கட்டுக்கட்டாக உடலைச் செதுக்கியிருந்தான். இப்படித் தொடங்கி நிறைய வேறுபாடுகள். ஆனால் அந்தக் கண்களும் லேசாக விரிந்த இதழ்களும் புன்னகையின்போது பளீரென்று விரியும் தவறாத பல் வரிசையும் அவனைச் சுண்டி இழுத்தன. அந்த வீடியோவை இருநூறு முறை பார்த்திருப்பான். பிறகு அவளைச் சந்திப்பதென்று முடிவு செய்தான். அவளை அவன் தனிச்செய்தியில் தொடர்பு கொண்டதுமே மாமா பதறியபடி வீடியோ அழைப்பில் வந்தது.

“நீ நேரத்தை விரயம் செய்கிறாய். அவள் என் பரிந்துரையை மீறி உன்னை விரும்ப மாட்டாள்” என்றது மாமா.

“ஒரு முயற்சிதான்” என்றான் புனீத்.

என்னவோ செய்து தொலை என்பது போல ஒரு சலிப்படைந்த ஸ்மைலியை அனுப்பிவிட்டு அமைதியானது மாமா. அதைத் தொடர்ந்து தான் இந்த சந்திப்பு.


“சொல்லு புனீத்” என்றாள் அழகி அமைதியைக் கலைத்து. அவன் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருந்தான்.

“ஏதாவது சாப்பிடலாமா?”

“அதெல்லாம் வேணாம். நமக்குள்ள எந்த வகையிலும் செட்டே ஆகாதுன்னு மாமா சொல்லிதான் அனுப்பியது. நான் சும்மாதான் வந்தேன். இப்படி மீட் பண்ணுனா எனக்கு மாமாகிட்ட குட்வில் பாயிண்ட்ஸ் கிடைக்கும். எக்ஸ்ஆர் டிக்கெட், கேமிங் எங்கேயாவது யூஸ் ஆகும். அதுவும் இல்லாம உன் தாத்தா ஒரு பெரிய லெஜண்ட். விஷனரி. அவருக்காகவும் வந்தேன்”

புனீத் அமைதியாக இருந்தான். அவள் தனக்காக வரவில்லை என்பது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அழகி சற்று நேரம் தெளிந்த அடையாறு ஆற்றில் குதித்து நீந்திக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தபடி இருந்தாள்.

“அழகி.. மாமா சொல்ற பொண்ணைக் கட்டிக்கிட்டா என் வாழ்க்கைல பிரச்னை இருக்காதுன்னு எனக்கும் தெரியும். ஆனா அதுலதான் ஒரு சிக்கல்”

“அதுல என்ன சிக்கல்? உலகத்துல எல்லோரும் அதைத்தானே செய்யறாங்க”

“மேட்ச் மேக்கர்னு ஒன்னு இருக்கறதை ரெண்டு பேருமே மறந்துடுவோம். என்னைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாதுன்னு வெச்சுக்குவோம். இப்ப சொல்லு. என்னைப் பாத்தா இவனை ரிஜெக்ட் பண்ணனும்னு தோனுதா?”

அழகி ஒரு வினாடி அவனைக் கண்களால் அளந்தாள். அந்த நொடியில் அவன் முகம் சிவந்ததை கவனித்தாள். அது அவளுக்குப் பிடித்திருந்தது. அருகில் விரிந்த அந்தக் கண்களில் புனீத் மொத்தமாக விழுந்து கொண்டிருந்தான்.

“இல்லை.. ம்ம்… யூ ஆர் ஓகே… ரிஜெக்ட் பண்ற அளவுக்கு எதுவும் தெரியலை”

புனீத் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ட்ரோன் ஒன்று மிதந்து வந்தது. ஒரு அட்டைப் பெட்டியை அவர்கள் மேசையில் இறக்கிவிட்டுப் போனது. பெட்டியைத் திறந்தான் புனீத். சாக்லேட் மில்க் ஷேக், காபி மற்றும் பிரவுனி இருந்தது.

“உட்காரும்போதே ஆர்டர் பண்ணிட்டேன். உனக்குப் பிடிச்ச கடையில்”

அழகி புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். ஆனால் அவளுக்குப் பிடித்த கடை எதுவென்பதை ஏதோ ஒரு டேட்டா நிஞ்சா கள்ள மார்க்கெட்டில் விற்றுக் கொண்டிருப்பான். காபியை எடுத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன செய்யலாம்னு சொல்றே?”

“நாம பழகிப் பாக்கலாம். மாமாவை மறந்துட்டு… காதல் கல்யாணம் எல்லாம் யோசிக்க வேண்டாம். சும்மா தினமும் ஒரு ரெண்டு மணி நேரம். உனக்கு இது ஓகேவா?”

அழகி சற்று சந்தேகத்தோடு தான் ஒத்துக் கொண்டாள்.


ழகினார்கள். முப்பரிமாண வீடியோக்களை பரிமாறிக் கொண்டார்கள். அழகி ஆச்சரியப்பட்டாள். புனீத் அத்தனை இனிமையானவனாக இருந்தான். ஒரு பணக்காரன், செல்வாக்கான குடும்பப் பின்னணி. ஆனால் அது எதுவுமே மண்டைக்குள் ஏறாதவனாக இருந்தான். ஒவ்வொரு நாளும் அவளுக்காக ஏதாவது பரிசு கொண்டு வந்தான். புனீத்துக்கு அவளை அவ்வளவு பிடித்திருந்தது. ஏன் மாமாவின் அல்காரிதம் அவளை அவனுக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவள் என்று சொல்கிறது என்று புரியவில்லை. ஆனால் அவனுக்கு மனதின் ஒரு மூலையில் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.

அன்று பத்தாவது நாள். புனீத் இன்று ப்ரபோஸ் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அவன் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை வைத்துக் கணித்து அழகியிடம் பேசியது மாமா.

“நீ தவறு செய்கிறாய் அழகி”

“எனக்குத் தெரியலை. எனக்கு அவனைப் புடிச்சிருக்கு. அவனுக்கும் என்னைப் புடிச்சிருக்கு. இதுல என்ன தப்பாகிட முடியும்?”

“உணர்வு ஒரு பனிமூட்டம். அதைத் தாண்டி உங்களால பார்க்க முடியாது. எனக்கு உணர்ச்சி இல்லை. எல்லாம் தரவுகளும் கணக்குகளும் தான். அதனால் நான் பார்க்கும் தொலைவும் ஆழமும் அதிகம்”

மாமா அவளுக்கும் வீடியோக்கள் காட்டியது. புள்ளிவிவரங்கள் சொல்லி பயமுறுத்திப் பார்த்தது. அழகி உறுதியாக இருந்தாள்.

“நான் இல்லைன்னா புனீத் செத்துடுவேன்னு நேத்து சொன்னான். உன் லாஜிக்படி புள்ளிவிவரமா பாத்தா அப்படியெல்லாம் யாரும் சாக மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும். அவன் சொன்னது பொய்தான்… ஆனா அதை சொல்றான்ல. அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு”

ஏதோ மறுத்து சொல்ல முயன்ற மாமாவின் உருவத்தை இடது கையால் திரையிலிருந்து கலைத்தாள்.

“அழகி…”

புனீத் அழைத்த குரலுக்கு மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள் அழகி.
நேரம் கடந்த பிறகும் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் அமர்ந்திருந்தாள். புனீத் அவளிடம் காதலைச் சொல்வதா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

“நாளைக்கும் சந்திக்கலாமா?” என்றான் நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே.

அழகி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“ஏன் ஜவ்வா இழுக்கறே? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”.

புனீத் அவளிடமிருந்து இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மகிழ்ச்சியில் குதிப்பான் என்று நினைத்திருந்தாள் அழகி. ஆனால் அவன் உறைந்து போய் அமர்ந்திருந்தான். சில நொடிகள் சங்கடமான மௌனத்தில். அழகி மெல்ல அவன் கைகளை விடுவித்தாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கலையா புனீத்?”

“நோ.. நோ.. நோ.. அப்படி இல்லை. திடீர்னு நீ இதை சொன்னதும் எனக்கு கொஞ்சம் ஷாக் ஆகிடுச்சு”

“சோ?”

புனீத் ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் வார்த்தைகள் அவனையும் மீறி வந்து விழுந்தன.

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அழகி. ஒரே குழப்பமா இருக்கு”

அழகியின் முகம் சிவந்தது. ஏமாற்றப்பட்டது போல் உணர்ந்தாள். கைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.

புனீத் தன்னைத் தானே சபித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டான். என்ன ஆயிற்று அவனுக்கு. அவன் அழகி அதோ போகிறாள். அவள் காதலுக்காக அவன் அத்தனை ஏங்கியிருந்தான். ஆனால் இப்போது ஏதோ ஒரு பயம். உலகத்தை எதிர்த்து ஒன்றைச் செய்துவிட்டு அந்த டென்ஷனிலேயே வாழ்க்கையை வாழ்வதா என்ற குழப்பத்திலேயே மெல்ல நடந்து வீடு வந்து சேர்ந்திருந்தான்.

திடீரென்று அவன் தாத்தா அழைத்திருந்தார்.

“உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும். கிளம்பி வா”.

அவர் எதற்கு அழைக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் அது.

ஹைப்பர் லூப்பில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சிம்லா போய்ச் சேர்ந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்கும் என்று அவர் புரிந்து கொண்டுவிட்டார்.

“நான் ஒரு விஷயம் சொல்லணும்னும் கூப்பிட்டிருந்தேன். ஆனா உன்னைப் பாத்தா நீதான் நிறைய பேசப்போற மாதிரி தோனுது”

“சொதப்பிட்டேன் தாத்தா… நீங்க லவ் மேரேஜ்தானே? நீங்களும் பாட்டியும் எப்படி அத்தனை அன்டர்ஸ்டாண்டிங்கா இருந்தீங்க! பேசாம உங்க காலத்துல பொறந்திருக்கலாம்”

அவர் சிரித்தார். சிரிப்பினூடே இருமினார்.

“காலம்தான் வேற.. மனுசங்க அதேதான்… நானும் உன் பாட்டியும் உருகி உருகி காதலிச்சோம். ஆனால் சாதிப் பொருத்தமில்லைன்னு பிரச்னை வந்துச்சு. ஒரு வழியா பேசி சமாளிச்சு வீட்டில் எல்லோரும் சம்மதிச்சப்போ என் மாமனார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவரோட மாமா ஒருத்தர் பெரிய ஜோசியகாரர். அவர் ஜாதகம் பாத்து ஓகே சொன்னாதான் ஒத்துக்குவேன்னு”

“எல்லாக் காலத்திலும் ஒரு விதமான மாமா தொல்லை இருந்திருக்கு”

“ஆமா… எங்க ஜாதகம் சுத்தமா பொருந்தலை. பத்துக்கு ரெண்டு கூட பொருத்தம் இல்லைன்னுட்டார் அந்த மாமா”

“அப்புறம்?”

“உன் பாட்டி அன்னிக்கு நைட்டே பெரிய பொட்டியோட கிளம்பி வந்துட்டா. அடுத்த நாள் ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”

“ஆனா ஜாதகத்தை எல்லாம் தாண்டி நீங்க சந்தோஷமாதானே இருந்தீங்க?”

மறுபடி சிரித்தார் பாண்டியன்.

“நீ வேற… பல நேரங்கள்ல வெட்டு குத்து நடக்காத குறைதான். பிரச்னை இல்லாத புருஷன் பொண்டாட்டி இருக்க முடியுமா? ஆனா எங்களை எது ஒன்னா வெச்சிருந்தது தெரியுமா?”

புனீத் காத்திருந்தான்.

“நாங்க எப்படியும் வாழ்க்கைல தோத்து போயிடுவோம்னு எதிர்பார்த்து காத்துட்டு இருந்தவங்க தான். சண்டை உச்சத்துக்குப் போறப்போ அந்த மூஞ்சிங்க நினைவுக்கு வரும். குறிப்பா நாங்க ஒன்னா வாழ்ந்துட்டா ஜோசியத்தை விட்டுடறேன்னு சொன்ன அந்த மாமாவோட மூஞ்சி. நாம அழியணும்னு நினைக்கறவங்களை மட்டும் நாம சந்தோஷப்பட விட்டுடவே கூடாது”

சொல்லிவிட்டு அமைதியில் ஆழ்ந்தார் பாண்டியன். அதன் பிறகு அவர் சில நிமிடங்கள் பேசவில்லை.

“தோத்துடக் கூடாதுங்கற வைராக்கியம்தான் கடைசி வரைக்கும் பல காதலர்களை ஒன்னா வெச்சிருக்கு. அது எந்தக் காலமானாலும் மாறாது”

புனீத் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க?”

“ஓ அதுவா.. இப்படி தனியா எந்திரங்களோட வாழறது போரடிக்குது. என்னை சாக விடேன்டா” என்றார் பாண்டியன் புன்னகைத்தவாறே.

நூறு வயதைத் தாண்டியவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி இறக்க அடிப்படை உரிமை தரப்பட்டிருந்தது. பாட்டி போனதிலிருந்தே பாண்டியன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவார். புனீத் பிடிவாதமாக அவரைப் பேச விடாமல் தடுத்துவிடுவான்.

“தாத்தா.. விளையாடாதீங்க”

“இல்லடா.. எனக்கு நூத்திப் பன்னிரண்டு வயசு. ஏதும் ஸ்பேர் பார்ட் போயிட்டா உடனே வந்து மாத்திடறாங்க. ரெண்டு தடவை கிட்னி மாத்திட்டேன். இதயமே பேட்டரில ஓடுது. சாகவே விடாத அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. என் பையன் என்னை வந்து பாத்து ஆறு ஏழு வருசமாச்சு. அப்பப்போ வீடியோ கால் பேசறதோட சரி. நீ மட்டும் தான் என்னை ஞாபகம் வெச்சிருந்தே… உனக்கும் இப்ப ஒரு அழகி கிடைச்சுட்டா… ஆனா உன் பாட்டி இது எதுக்குமே ஒத்துக்கலை. நூறு வயசை தொடறதுக்கு முன்னாடி போயிடணும்னு உறுதியா இருந்தா. அவ எப்பவுமே என்னை விட புத்திசாலியா தான் இருந்திருக்கா. எனக்கு இப்பதான் உறைக்குது”

“தாத்தா… அப்படியெல்லாம் உங்களை விட முடியாது… என் கல்யாணத்துக்கு உங்க கையால நீங்க தாலி எடுத்துக் கொடுக்கறீங்க.. அவ்வளவுதான்”

பாண்டியன் புன்னகைத்தார்.

“அவ்வளவு தானே உன்னோட ஆசை. இத்தனை நாள் ஸ்பேர்ல ஓடின வண்டி இன்னும் கொஞ்ச நாள் ஓடாதா என்ன? ஆனா அதுக்கப்புறம் அடம் பிடிக்காம என்னைப் போக விட்டுடணும்”

பாண்டியன் தனது சக்கர நாற்காலியைத் திருப்பி நகர்த்தினார். அந்த அழகிய சிட் அவுட்டிலிருந்து மலைச் சிகரங்களும் வேகமாகக் கவிந்து கொண்டிருந்த மாலையும் ஓர் அழகிய ஓவியம் போலத் தெரிந்தன.

“போ.. போய் அழகியைக் கெஞ்சிக் கூட்டிட்டு வா. மாமா சொன்னதெல்லாம் உன் வாழ்க்கைல கண்டிப்பா நடக்கும். உங்களுக்குள்ள சண்டை வரும். ஆனா அதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கைல என்ன இருக்கு நீயே சொல்லு?”

புனீத் அவர் அருகே சென்று நின்றான். பின்னாலிருந்து அவர் இரண்டு தோள்களிலும் கை வைத்தான். அவர் தனது எலும்பும் தோலுமான கையை அவன் கை மீது ஆதரவாக வைத்துக் கொண்டார்.

***

ஷான் கருப்பசாமி
தனியார் இணையவழிக் கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் இருக்கிறார். “வெட்டாட்டம்”, “பொன்னி” பொன்னி-2 என மூன்றுநாவல்களும் சின்ராசு (உரையாடல்கள்), தங்கம் சிறுகதைத் தொகுப்பும் ‘ஆண்ட்ராய்டின் கதை’, ‘எதிரொலிக்கும் அறைகள்’ என்ற இரு கட்டுரைத் தொகுப்புகளும் ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது. திரைத்துறையில் திரைக்கதை ஆசிரியராகவும் இயங்குகிறார். மின்னஞ்சல்: shan.mugavari@gmail.com


ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – 12 செய்தித்தாள் அரங்கு

0

Newspaper Theatre

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

டுக்கப்பட்டோருக்கான அரங்கு பற்றிய தொடரில் அடுத்து நாம் பார்க்க இருப்பது செய்தித்தாள் அரங்கு (Newspaper Theatre). இதன் முதன்மையான அடிப்படை அல்லது ஆதாரம் ‘செய்தித்தாள்’ ஆகும். செய்தித்தாள் எனும்போது சமூக மற்றும் நாட்டு நடப்புகள் தொடர்பான புதினங்கள், தகவல்கள், கட்டுரைகள், அறிக்கைகளைக் குறிக்கின்றது.

செய்தி உள்ளடக்கங்கள் மட்டுமல்லாது புத்தகங்கள், உரைகளையும்கூட மூலமாகக் கொண்டு இந்தவகை அரங்குகளை நிகழ்த்தலாம். சமூக ரீதியான பொருத்தப்பாடுடைய பிரச்சினைகளை அரங்க ஆற்றுகைகளின் ஊடாகப் பிரதிபலித்தல் இவ்வடிவத்தின் நோக்கம். செய்தித்தலைப்புகள், அவற்றின் பேசுபொருட்களை மூலாதாரமாகக் கொண்டு ஆற்றுகையாளர்கள் ஒரு குறுகிய காட்சிபூர்வ நிகழ்த்துகையை வடிவமைப்பார்கள். இந்த வடிவத்திலான அரங்க ஆற்றுகைக்குரிய முன்தயாரிப்புப் பணிகள் பல்வேறு உத்திகளைக் கொண்டனவாக அமையும். பேசுபொருளின் தன்மைக்கேற்ற வெவ்வேறு உத்திகள் கையாளப்படும்.

இதன் முதற்படியாக சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் செய்தித் தலைப்பினை ஆற்றுகையாளர்கள் தெரிவு செய்வர். அதாவது தாம் முன்னெடுக்க விரும்புகிற ஆற்றுகைக்குரிய சமாலப் பொருத்தமுடைய பேசுபொருள் சார்ந்த செய்தித்தலைப்பினை தெரிவு செய்வர். பின்னர் சிறிய குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு வாசிப்பு முறைமைகளில் அச்செய்தியை வாசித்து பழகுவர். வாசிப்பு முறைமைகளிலும் வெவ்வேறு உத்திகள் கைக்கொள்ளப்படும்.

வாசிப்பு முறைமை உத்திகள்

வாசிப்பு முறைமை உத்திகளில் முதலில் (Simple reading) ‘எளிமையான வாசிப்பு’ இடம்பெறும். அதாவது வேறு கருத்துக்களையோ வார்த்தைகளையோ உள்ளீடு செய்யாமல், உள்ளதை உள்ளபடி எளிமையான முறையில் வாசிப்பதாகும்.

அடுத்ததாக செய்தியின் தலைப்புகள் அல்லது ஒரு பகுதிக்குள் மேலதிக வார்த்தைகளை, தகவல்களை, விபரங்களை, அல்லது கருத்துகளை உள்ளீடு செய்து வாசிக்கின்ற அணுகுமுறை கைக்கொள்ளப்படும். இது (Complementary reading)  ‘முழுமைப்படுத்தல் அல்லது நிரப்பு வாசிப்பு’ எனப்படுகிறது.  செய்தியில் தவிர்க்கப்பட்ட தகவல்களைச் சேர்ப்பதனூடே அதனை முழுமைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் இவ்வாசிப்பு முறைமையின் அடிப்படை. பிற மூலாதாரச் செய்திகள், ஆய்வுகள், அல்லது நமது அறிவுத்தேடலின் பார்வையை உள்ளீடு செய்வதன் மூலமும் இந்த நிரப்புவாசிப்பினை முன்னெடுக்கலாம். வாசிப்பிற்குத் தெரிவுசெய்யப்பட்ட செய்தியில் இல்லாத எந்தத் தகவல், எம்வசம் உள்ளது என்பதுவும் உள்ளடக்கத்தின் போதாமை எதுவெனக் கண்டறிதலும் இந்தக்கட்டத்தின் படிநிலையின் முக்கிய அம்சமாகும்.

அசல் தலைப்பு உதாரணம்: ‘Time இதழின் கருத்துப்படி, ஜெர்மனியின் தலைவர் உலகின் அதிக சக்தி வாய்ந்த பெண்மணி’.  ‘அவருடைய சொந்த கட்சியைத் தவிர்த்து..’ என்பதை மேலதிகமாக ஆற்றுகையாளர்கள் சேர்க்கும் போது அது வேறொரு பரிமாணத்தைப் பெறுகின்றது. அதற்கூடாக அசல் தலைப்பு வெளிப்படுத்திய தகவல் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. அசல் தலைப்பு வெளிப்படுத்திய தகவல் கேலியுடன் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.

மற்றுமொரு வாசிப்பு உத்தி (Connecting/Crossed reading) ‘தொடர்புபடுத்தல்/குறுக்குவெட்டு வாசிப்பு’: ஆற்றுகையாளர்கள் வெவ்வேறு செய்தித்தாள்கள், கட்டுரைகளிலிருந்து செய்திகளை வாசிப்பர். வெளிப்படுத்துகின்ற தகவல்களை ஒன்றுக்கொன்று முரணாக முன்னிறுத்துதல், ஒருவரோடொருவர் முரண்படுதல் என அங்கு ஒரு முரண்பாடு கட்டமைக்கப்படும். இரண்டு முரண்பட்ட அல்லது தொடர்புள்ள கதையை / செய்தியை / தகவலை வாசிப்பதன் ஊடாக மேலும் ஆழமான விளக்கத்தையும் பார்வையும் பெறுவதோடு, எடுத்துக்கொள்ளப்பட்ட பேசுபொருளுக்கு புதிய பரிமாணத்தையும் பெறுகின்றது. வார்த்தைகளைக் குறுக்குவெட்டாக வாசிப்பதானது அரங்கத்துக்கான புதிய சாத்தியங்களையும் வழங்குகின்றது.

அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் பயனாக கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறி வருகின்றன’

என்பது ஒரு செய்தி என்றால் அதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தி இப்படியாக அமைகின்றது:

கார்களினால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு பொது சுகாதாரத்திற்கும் சூழலுக்கும் மென்மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது’.

இங்கே ஒரே பேசுபொருள் குறித்த இரண்டு விதமான செய்திகளில் இருவேறு முரண்பாடுடைய தகவல்களும் விளைவுகளும் வெளிப்படுகின்றன. இதனூடு விவாதத்திற்கும் சிந்தனைக்குமான வெளி உருவாக்கப்படுகின்றது.

(Rhythmical reading) ‘தாள லய வாசிப்பு’. இதனூடாக பன்மைத்துவமான எண்ணங்கள், கற்பனைகள், காட்சிச் சித்தரிப்புகள் உருவாக்கப்படுகின்றன.  உதாரணமாக அரசியல் உரை அல்லது அரசியல் அறிக்கையாகவிருந்தால்; அதனைப் பேரணி அல்லது மாநாட்டில் ஓர் அரசியல் உரையை ஆற்றுகின்ற ஒலிப்புமுறை, அதற்குரிய தொனி, ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கலாம். தருணங்களில் தாளத்துடன் ஒரு உரையை வாசிக்கும் போது, அல்லது பாடும்போது, இசை சேர்க்கப்படும்போது புதிய அனுபவமும் வெளிப்பாடும் சாத்தியப்படுகின்றது.

(Mimed Reading) – சைகைகளுடனான வாசிப்பு: இந்த உத்தியில் உள்ளடக்கத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் இடையில் பெரிய ஒரு இடைவெளியை உருவாக்குவதன் மூலம் செய்தியை அல்லது கட்டுரையை ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கமுடியும். உதாரணமாக நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான சூழ்நிலை பற்றி ஆட்சியாளர் ஒருவர் மேசை மீது பல்வேறுபட்ட உணவுவகைகளை நிரப்பிவைத்தபடி அமர்ந்திருந்து பேசுகிறார் என்பதான காட்சிச் சித்தரிப்பினைக் கொண்டு வருதல்.

(Historical Reading) வரலாற்று பிரதிபலிப்பைக் கொண்டு வருதல்: ஒரு செய்தியைக் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்துதல். இந்தச் செயல்முறை வரலாற்று நிகழ்வுகள், தகவல்களை மீட்டுப்பார்ப்பதனூடாக வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறித்த செய்தியை வேறு நாடுகளுடைய சமூக, அரசியல் அமைப்பின் சூழலுக்கூடாகப் பிரதிபலிக்கச் செய்வதனூடும் வரலாற்றுப் பிரதிபலிப்பினைக் கொண்டுவர முடியும்.

(Re-definition) மீள் வரையறைப்படுத்துதல்: செய்தித் தலைப்புகள், சொல்லாடல்கள் பெரும்பாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைக் குறைத்து தகவல்களை மறைபொருளாகக் கொண்டிருப்பன. அத்தகு சொல்லாடல்களின் பின்னால் உள்ள தகவல்களைக் கூர்ந்து பார்க்க வைப்பதோடு அவற்றுக்கு ஒரு மீள்வரையறையை இந்த அரங்க வடிவத்தினூடாகக் கொடுக்கமுடியும். செய்திக்குள் மறைந்துள்ள மற்றும் தேய்வழக்கு அதிகம் காணப்படுகின்ற, அர்த்தம் இழந்த, உண்மைக்குப் புறம்பான சொல்லாடல்கள் அறிக்கையிலோ, செய்தியிலோ உள்ளடக்கப்பட்டிருப்பின் உடல்மொழி மூலம் அவற்றின் உள்ளார்ந்த உண்மையை வெளிக்கொணர முடியும். இதன் மூலம் பன்மைத்துவ எண்ணங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன.

(Reinforcement/Improvisation) வலுவூட்டல்/மெருகூட்டல்: எடுத்துக்கொண்ட பேசு பொருளை வலுவூட்டும் அம்சங்களாக ஒலி, ஒளி, காட்சிகள், இசைத்துணுக்குகள், விளம்பரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வாசிப்பிற்கும் நிகழ்த்துகைக்கும் வலுவூட்டலை மேற்கொள்ளலாம். இத்தகைய வலுவூட்டல்கள் அரங்க வெளிப்பாட்டிற்குப் புதிய அழகியல் பரிமாணங்களையும் ஆற்றுகை வாய்ப்புகளையும் வழங்குகின்றன. மெருகூட்டல்களுடன் ஒரு ஆற்றுகை நிகழ்த்தப்படுகின்றது. மெருகூட்டப்பட்ட காட்சிகளை மேடையில் பரீட்சித்துப் பார்த்து அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்களின் பங்கேற்பிற்கான வெளியை ஏற்படுத்தி, அவர்களுடைய தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்கான புறச்சூழல் உருவாக்கப்படுகின்றது.

(Contextualizing) சூழ்நிலைப்படுத்தல்: சில போலியான செய்திகள், அறிக்கைகள் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தலைப்புச் செய்தியாக பகிர்கின்றன. அவற்றின் உண்மை விவரங்களை வெளிப்படுத்துவதில்லை. இத்தகைய செய்திகளை அரங்க நிகழ்த்துகைகளாகக் காட்சிப்படுத்தும் போது செய்திகளில் குறிப்பிடப்படாத தகவல்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

(Field interviews) கள நேர்காணல்கள் – கையாளப்படுகின்ற பேசுபொருள் சார்ந்த பாத்திரங்களை மேடையில் நேர்காணல் செய்தலைக் குறிக்கின்றது. இதனூடாக மேடையில் ஒரு நேரடியான விசாரணை, விவாதம், ஊடாட்டம் ஏற்படுத்தப்படுகின்றது.

வாசிப்பு – உத்திகளின் தெரிவு – ஒத்திகை – ஆற்றுகை – பிரதிபலிப்பு

ஆற்றுகையாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட உத்திகளில் அடிப்படையில் பொருத்தமான ஒரு அணுகுமுறையை கண்டடைவர். பின்னர் காட்சிகளை உருவாக்கி அதனை ஆற்றுகையாக நிகழ்த்துவர். பேசுபொருளின் தன்மைக்கேற்ப ஆற்றுகையின் நீளம் அமையும்.

அரங்க ஆற்றுகையின்  பின்னர் நிகழ்த்தப்பட்ட காட்சிகள் மீதான பல்வேறு பிரதிபலிப்புகளை (Reflections) வெளிப்படுத்துவதற்குரிய நேரம் ஒதுக்கப்படும். ஆற்றுகை மீதான பிரதிபலிப்பு என்பதைப் பின்வருமாறு நோக்கலாம்:

•     காட்சிகளினூடு வெளிப்பட் அடிப்படைத் தகவல், செய்தி என்ன? அதனை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

•     தலைப்புச் செய்தி கட்டுரை அதன் சொல்லாடல், வாக்கியங்கள் மூலம் வெளிப்படுத்திய கருத்திலிருந்து, அரங்க ஆற்றுகையாக நிகழ்த்தப்பட்ட போது எவ்வாறான கருத்தாக-பார்வையாக மாறியது, மாற்றப்பட்டது?

•     அல்லது மாற்றமின்றி உள்ளபடியே வெளிப்பட்டதா?

•     பார்வையாளர்களிடம் எத்தகைய உணர்வுகள், கருத்துகள், பார்வைகள் கடத்தப்பட்டன?

•     ஆற்றுகை செய்யப்பட்ட கருப்பொருளில் எந்த முக்கிய கூறுகள் திரும்பிப் பார்க்கக் கூடியவை, சிந்திக்கக் கூடியவை, மாற்றத்தை கொண்டுவரக் கூடியவை?

போன்ற விடயங்கள் குறித்த பகிர்வுகள் இடம்பெறும்.

செய்தியை, ஆவணத்தை, சிறுகதையை அல்லது எழுத்தில் உள்ள எதுவாகினும் ஒன்றை விமர்சனபூர்வமாக விசாரணைக்கு உட்படுத்தக் கூடிய உத்திகளும் வெளியும் இந்த அரங்க வடிவத்திற்குள் இருக்கின்றது.

செய்தித்தாள் அரங்கு தொடர்பாக இலகுவாக சொல்வதானால் நாளிதழ் செய்தி, தகவல், கட்டுரை, பதிவு, அரசியல் உரை, அறிக்கை, பிரகடனங்கள் அல்லது ஒரு மதநூலின், வாசகம், நாட்டின் அரசியல் அமைப்பு, மனித உரிமை தீர்மானங்கள் என எழுத்தில் உள்ள எதுவாக இருப்பினும் அதனை முதலில் வெவ்வேறு முறைமைகளிலான வாசிப்பிற்கு உட்படுத்துதலும் பின்னர் அரங்கத்தில் ஆற்றுகையாக நிகழ்த்துவதுமாகும். மேடையில் காட்சிபூர்வ ஆற்றுகைக்கூடாக உருவகங்களை வெளிக்கொணர்தல், விமர்சித்தல், விசாரணை செய்தல், உரையாடலை மேற்கொள்ளுதல், கேலிசெய்தல் எனப் பல்வேறு செயற்பாடுகளுக்கும் விளைவுகளுக்கும் தாக்கங்களுக்கும் உட்படுத்த முடியும். எழுத்தினைக் காட்சிபூர்வமாக மாற்றி, விமர்சன பூர்வமான புரிதலுக்கு உட்படுத்தி, சமூக யதார்த்தத்தில் அதனை பிரதிபலிக்க செய்தல் எனவும் கூறலாம்.

செய்தித்தாள் அரங்குதான் உண்மையில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முதலாவது வடிவமாக உருவாக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் போது பல்வேறு நாடக அரங்க ஆற்றுகைக் குழுக்கள் இந்த வடிவத்தினைக் கையாண்டு சர்வாதிகார ஆட்சி பீடத்தினால் வெளியிடப்பட்ட செய்திகளை விமர்சன பூர்வமான வாசிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. 1971-இல் செய்தித்தாள் அரங்கு பிறந்தது அந்த ஆண்டுதான் Augusto Boal கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சர்வதேச அரங்கப் படைப்பாளிகள் பலர் அவரது விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். மனித உரிமையாளர்களும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான Arthur Miller உட்பட்ட பலர் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்தனர். சர்வதேச படைப்பாளிகளின் அழுத்தங்கள் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என்பது வரலாறு.

***

ரூபன் சிவராஜா
நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். “அதிகார நலனும் அரசியல் நகர்வும்”, “கலைப்பேச்சு” (திரை-நூல்-அரங்கு) என இரண்டு கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளது.
மின்னஞ்சல் – svrooban@gmail.com