Home Blog Page 38

வேல்கண்ணன் கவிதைகள்

0


ஒன்றுமில்லை

சிலிர்ப்பு

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
குறுகுறுவென்று ஓடும் ஆயிரம் கால்கள்
தங்கு தடையின்றி பயணிக்கும் குறுவாள்
எதிரெதிராய் திகுதிகுவென்று பற்றி எரியும் போர் வாட்கள்

நீலவானம் நோக்கினேன்
ஒன்றுமில்லை

ஓர் அருவி
ஒரு நதி
ஒரு பெருங்கடல்
ஒன்றுமில்லாததை
ஒன்றாக்கிய ஓர்மையின்
தடமெங்கும் பெருகும்
களி

*


தொன்மை

மடித்த பக்கத்திலிருந்து
நழுவிய கவிதையை
முடிவு வாசிக்கப்பட்ட புதினத்தின்
பாதி வாசித்த கதாபாத்திரம்
சிறுகதையாக
சட்டகத்துக்குள் தீட்டியது

சொல்லியதும்
சொன்ன முறையும்
முடிவின் தெளிவின்மையும்
பாத்திரங்களின் மனப்போக்கும்
காற்றின் பக்கங்களில் கேட்கிறது

தெருப்பாடகன் தொடங்கினான்
‘கவிதைகள் வரையறை அற்றவை
கதைகள் முடிவுறுவதில்லை
சாயல்களை விழுங்கும்
முடிவிலி பாம்புகள்’

*


திரும்புதல்

குருடனுக்கு
பேரொளியால் நிரம்பியிருக்கிறது பிரபஞ்சம்
செவிடனுக்கு
தீராத ஒலியால் நிரம்பியிருக்கிறது காலம்
சிறகின்றி முடிவுறாத பயணத்திலிருக்கும்
பறவையினுள் பெருகத் தொடங்கியிருக்கும்
விடுபடல் எளிய செயலன்று
பால்வெளியைத் திறக்கும் இரவு
மற்றுமொரு
பகலே

*


மங்கிய விளக்கொளி

அறையெங்கும்
காலியான மதுப்புட்டிகள்
தாள் குவியல்கள்
சிகரெட் பஞ்சுகள்
ரெனால்ட் நீலத்து வரிகளுடன் பழைய கேசட்டுகள்
பிசுக்கு நிரம்பிய சுவர்
அழுகிய வீச்சமும்
கருந்திட்டுடன் அப்பிக் கிடக்கும் தரை
எத்தப்பட்டு சுருண்டு ஓய்ந்த பாய்
கருங்கல் தலையணை

வெளியேறுவதற்கான
காரணங்கள் பலவிருந்தும்
ஒன்றில் நிற்கிற சகலமும்
ஒருக்களித்த கதவுக்கு அப்பால்
ஆர்ப்பரிக்கும்
கடலோசை

*


முதிர் பருவம்

உதிரிலைகளின் நடுவே
பழுக்கத் தொடங்குகிறது
ஒன்று

திறக்கப்படாத
அந்தக் குறுஞ்செய்தி
‘பிரத்யேக அழைப்பொலி உள்ளவரிடமிருந்து..’
மனப்பட்சி நமைக்கிறது

தொழில் நுட்பக் கோளாறாக
சமாதான நிழலாடுகிறது
அவ்வப்போது
பதிவுக் குரலைக் கேட்கிறேன்
என் பேச்சினைக் குறைத்திருக்கலாம்
காணொளி அழைப்பில்
நீ தவிர்த்த பார்வை
ஒவ்வொரு முறையும்
குறுந்தகவல்கள், தரவிறக்க சுயமிகள் சரிப்பார்த்து அழிக்க
தேய்ந்தலைகிறது
லிங்க விரல்
இன்னும்..

*

அலைவுறுதல்

மிருகங்கள் மிருகங்களாய்
சமயங்களில்
மிருகமாய் இல்லாத
அலைவுறுதலில்
நானும் நீயும்

*

கிழித்தெறிகிறேன்
பக்கம் பக்கமாக
படபடத்து அலைவுறும்
அந்தத் துணுக்கின்
ஒரு சொல்லே
எழுதித் குவிக்கிறது
எண்ணற்ற
பொழுதுகளை

*

ஆற்றில் நீள அகலமாய்
கடலில் அகண்டமாய்
வானத்தில் மேல்கீழாய்
கானகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்
காற்று
அலைவுற்ற காலம்
தீயில் தீண்டும் இன்பமாய்

*

ஏறாத மலை மேல்
ஏதேனும் கோடுகள் கிறுக்கல்கள்
தேடி அலைவுறும் நிகழ்வை
நிர்மூலமாக்குகிறது
சென்றடையும்
வெற்று

***


வேல் கண்ணன்
திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.
இசைக்காத இசை குறிப்புகள், பாம்புகள் மேயும் கனவு நிலம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: velkannanr@gmail.com

வேம்பலையும் இன்றைய உலக சவால்களும்

0

நெடுங்குருதி” பற்றிய பார்வை

சுரேஷ் பாபு

நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges போன்ற ஒரு மாபெரும் அணையை பல நகரங்களையும் ஊர்களையும் பலிகொடுத்து எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சீனாவால் அமைக்க முடிகிறது. அதே சமயம் இந்தியாவில் கடும் எதிர்ப்புகளும் மக்கள் எழுச்சிகளும் இரு தரப்பு உரையாடல்களும் சமரசங்களும் இணைந்தே ஒவ்வொரு பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதே போல இன்னொன்று சொல்வதென்றால் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வு பாஸ்டன் டீ பார்ட்டி. அன்னிய வரிவிதிப்பை எதிர்த்து செய்யப்பட்ட வன்முறையான போராட்டம் அது, கிட்டத்தட்ட அதே போன்ற அன்னிய அதிகாரத்துக்கு எதிரான ஒரு நிலையில் இந்தியாவில் செய்யப்பட்டது உப்பு சத்தியாகிரகம். போலீஸ் அடித்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாங்கி வன்முறையில்லா போராட்டத்தின் ஒரு சான்றாக அந்த நிகழ்ச்சி வரலாற்றில் நிற்கிறது.

ஒரு நிலத்துக்கென்று ஒரு பண்பு எப்போது உருவாகிறது, அது எங்கு உறைகிறது. அது காலச்சூழலில் எப்படி தன்னை மாற்றிக்கொண்டு தாக்குப்பிடிக்கிறது. அந்த மாற்றங்கள் நடக்கும் போதும் அதன் ஆதார குணம் எப்படி கடத்தப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக நம்முன் நிற்கிறது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் நெடுங்குருதி என்ற இந்த நாவல் வேம்பலை என்ற கிராமத்தின் வழியாக இந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு பல வாசிப்புகள் வந்திருக்கும். மாறிவரும் இன்றைய உலகச் சூழ்நிலையில் நிற்கும் ஒரு இலக்கிய வாசகனாக என் பார்வையை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்

வேம்பலை:

கதையில் மைய நிலமான வேம்பலையின் கதை நமக்கு இரண்டு வழிகளில் சொல்லப்படுகிறது. ஒன்று யதார்த்தவாத சம்பவங்கள் வழியாக, இன்னொன்று வேம்பலை பற்றிய தொன்மங்கள் வழியாக. அப்படி ஒரு தொன்மம் இந்த கிராமம் உருவான கதையைச் சொல்கிறது. கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட கூட்டம் ஒன்று காயமுற்று கையறு நிலையில் இருக்கும்போது வேப்ப மரங்கள் சூழ்ந்த இந்த நிலம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அப்படியே அது அவர்கள் வாழும் கிராமம் ஆகிறது.

கொள்ளையடிப்பதற்கும் அதன்பின் உலகத்தின் கண்ணில் படாமல் தனியே மகிழ்ந்து இருப்பதற்கும் வெயிலும் வேம்பின் கசப்பும் இருக்கும் அந்த கிராமம் அவர்களுக்கு பொருத்தமாக அமைகிறது.

வெள்ளையனான வெல்சி துரை அவர்களை வேட்டையாடும் வரை வெற்றியை மட்டுமே பார்த்த அவர்களின் மனத்தில் பயம் என்பதைக் குடியேற்றுவது ஒரு பெரும் நிகழ்வு. 42 வேம்பர்களைக் கொன்று பெண்கள், குழந்தைகள் குரல்வளையை கூட அறுக்கும் கொடும் நிகழ்வு அது. கிட்டதட்ட வெல்சி துரைக்கு முழு வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய அந்தச் சம்பவம் அப்படி முடிவதில்லை, அந்த துரையின் மனத்தில் ஒரு வேம்பனும் அரூபமாக குடியேறுகிறான். உடனடி வெற்றி அதன்பின் பதவியுயர்வு எல்லாம் கிடைத்தாலும் அவர் மர்ம மரணத்துக்கு காரணமாக அவன் மனத்தில் ஏறிய வேம்பன் காரணமாக இருக்கின்றான். வெல்சி துரை வேம்பர்களை வென்றாலும் அவர்களது உக்கிரம் அவனை வெல்கிறது.

வேம்பலையில் சிங்கி ஒரு தனி பாத்திரம். அவன் கொள்ளையடிப்பதில் கில்லாடி. நிறைய மக்கள், மாடுகள் எல்லாம் இருப்பது போல அவனே குரலால் மாயம் உருவாக்கத் தெரிந்தவன். அவன் ஒரு வியாபாரிக் குடும்பத்தை மடக்கி கொள்ளையடிக்க முற்படும்போது தங்கள் நகைகளை பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்கள். எந்த நிலையிலும் அவன் பெண் குழந்தைகளிடம் கொள்ளையடிப்பதில்லை என்பதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவனை வென்று அவர்கள் செல்லும்போது அந்தக் குடும்பப் பெண்கள் இவனை வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் அங்கு வணங்குவது சிங்கி என்ற கொள்ளையனை அல்ல, வேம்பர்களின் அறத்தை.

வேம்பலையின் வேம்பர்களின் முரட்டுத்தனமும் அவரகளுக்கேயான குழு அறமும் இங்கு வெளிப்படுகின்றன. பொதுவாக இயற்கை என்று நாம் நினைக்கும்போது பனி சார்ந்த மலைகளும் ஆறுகளும் நம் மனதில் வரும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வெயிலும் இயற்கை தான். அது நமக்குத் தரும் வாழ்வும் காத்திரமானது என இங்கு காண்கிறோம்.

எந்த அளவு Bird’s eye view முக்கியமோ அதே அளவு Worm’s eye view-ம் முக்கியம். பறவைக்கோணம் ஒரு பெரிய சித்திரத்தை அளித்தாலும்.. வார்ம்ஸ் ஐ எனப்படும் கீழிருந்து பார்க்கும் பார்வை தனிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது. இங்கு கீழிருந்து பார்க்கும் பார்வையான வார்ம்ஸ் ஐ என்பதை எறும்புப் பார்வை என்று கூட நாம் வைத்துக்கொள்ளலாம்.

இந்த நாவலில் நாம் நாகு என்ற சிறுவனின் வழியாக அந்தப் பார்வையை அடைகிறோம். அவனும் எறும்புகள் சாரை சாரையாக ஊரைவிட்டுப் போவதை பார்த்துக் கொண்டிருப்பதாக நமக்கு அறிமுகம் ஆவதே அவன் நமக்கு ஒரு கூரிய பார்வையை தரப்போகிறான் என்று அறிவிப்பதாக இருக்கிறது. கடவுளின் சடையில் இருக்கும் எறும்புகள் பூமிக்கு வரும்வரை பேசிக்கொண்டேயிருக்கும். இப்போதும் மீண்டும் அவை சாமியிடம் போக வழிதேடிக் கொண்டுதான் இப்படி வேக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன என நாகுவும் அவன் தோழி ஆதிலட்சுமியும் சேர்த்து உருவாக்கும் ‘உண்மை’ மிக சுவையானதாக இருக்கின்றது.


பொறுப்பில்லாத அப்பா, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் அம்மா மற்றும் இரு அக்காக்களுடன் வளரும் அவனுக்கு மிக நெருங்கிய நட்பாக இருப்பது ஆதிலட்சுமி தான். கிராமத்தின் மாயங்களை குழந்தை மனம் கொண்டு இந்த இருவரும் உருவாக்குகிறார்கள். இரு அக்காக்களில் நாகுவுக்கு நெருக்கமாக இருப்பது நீலா தான். அப்பா சண்டையிட்டு வீட்டை விட்டு போனபோது அம்மா மற்றும் பெரிய அக்கா வேணி ஆகியோருக்கு நியாயமான கோபம் இருந்தபோதும் அவரிடம் சென்று நீலா பேச நினைப்பது அன்பினால் மட்டுமே. நாகுவும் அவளுக்காக அதை ஏற்கிறான். அவளது திடீர் மரணம் எல்லா சமன்பாடுகளையும் குலைத்துவிடுகிறது. அதுவே வேம்பலையின் விளையாட்டாக இருக்கிறது.

அதன் பின் அந்தக் குடும்பம் கிட்டத்தட்ட சிதைந்து வேம்பலையில் இருந்து வெளியேறினாலும் வேம்பலையின் கைதொடும் துரத்தில் தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சில சமயம் விரும்பி திரும்பி வருகிறார்கள் வருகிறார்கள், சில சமயம் வலுக்கட்டாயமாக.

வேம்பலை கிராமத்தைப் பற்றி இன்னொரு சுவையான நிகழ்வு. வேம்பலைக்கு வழக்கமாக வரும் பரதேசிகள் ஒருமுறை வேம்பலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். பயந்து ஓடுகிறார்கள். பின்னர் தான் தெரிகிறது அது இன்னொரு வேம்பலை என்று தெரிகிறது. இப்போதைய வேம்பலையில் இங்கு அழிந்தவை அங்கு வாழ்கின்றன.

ஒரு நிலத்தில் இருந்து மறைபவை நிஜமாகவே மறைகிறதா. அவை எங்கே வாழ்கின்றன என்ற சிந்தனையை இது அளிக்கிறது. நாம் வாழும் நகரங்களுக்கு உள்ளேயும் இப்படி அழிந்த நகரங்கள் இருப்பதை கவனிக்க முடியும்.

பாத்திரங்கள்:

இந்த நாவலில் வரும் சின்னப் சின்னப் பாத்திரங்களைப் பற்றி கூட, அவர்களுக்கான முழு வாழ்க்கைச் சித்திரத்தை இந்த நாவல் காட்டுகிறது. உதாரணமாக சில பாத்திரங்களைப் பார்க்கலாம்.

நாகுவின் அப்பா – மிகவும் பொறுப்பற்ற தந்தையாக, நம்பி வந்த பக்கீரின் மரணத்துக்கும் காரணமானவராக அறிமுகமாகும் நாகுவின் அப்பா, பின்னர் ராமேஸ்வரத்தில் ஒரு பிச்சைக்காரராக இருந்து இளைஞனான நாகுவால் மீட்கப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் நாகுவின் தாத்தா கோபத்தில் அவரைக் கொல்ல முற்படும்போது தயவு செய்து கொன்றுவிடுங்கள், சாக தைரியம் இல்லாமல் தான் வாழ்கிறேன் என்று முழுத் தோல்வியடைந்த மனிதனான இருக்கிறார். ஆனால் அவரே நாகுவின் மரணத்துக்குப் பின் அவன் மனைவி மல்லிகாவை ஒரு தந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறார். அகால மரணடைந்த நீலா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு மண்புழுவை கையில் எடுத்து வந்து வீட்டில் இருந்துக்கொம்மா என்று வீட்டில் விடும் இடத்தில் அவர் முழு நிறைவை அடைகிறார்.

குருவன் – திருவிழாவுக்கு தாயுடன் செல்லும்போது போலீசால் அவமானப்படுத்தப்படும் சிறுவனாக இருந்து, பெரும் கொள்ளையனாக மாறி, காயம் பட்டு, பின் தெய்வானையின் காதலில் கனிகிறான் குருவன். தெய்வானை இறந்த பின் அவன் அவள் கையில் இருந்து இவன் கைக்கு ஏறும் தேள் ஒரு அபூர்வ அனுபவம். அவன் மரணத்துடன் விளையாடும் ஆடு புலி ஆட்டம் ஒரு புது அனுபவம்.

ரத்னாவதி – பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளுக்கு நாகு மீது இருப்பது உண்மையான காதல். ஆனால் இருவருமே அதைச் சொல்லிக் கொள்வதில்லை. தன் திருமணம் முடிவான போதும் நாகு ரத்னாவதியைத் தேடுகிறான். குழந்தை பெற்ற பின் அவள் நாகுவைத் தேடி வருகிறாள். நாகுவின் மரணத்துக்குப் பின், இன்னொரு திருமணம் அதுவும் அகாலமாக முடிந்த பின், பழைய வாழ்க்கை என அவளது வாழ்க்கை திசைமாறிச் செல்கிறது. முன்பு அறத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தவள் கடைசியில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தாலும் தன் வைராக்கியம் தளராமல் இருக்கிறாள். இந்த நாவலில் பல மரணங்கள் வந்து கொண்டேயிருந்தாலும், துல்லியமாக திட்டமிடப்பட்ட மரணம் ரத்னாவதியின் மரணம் மட்டும் தான்.

மனித பாத்திரங்களுக்கு நிகராகவே உயிரற்ற பாத்திரங்களும் இந்த நாவலைக் கொண்டு செல்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும் வெயில், ஆமை, கொள்ளைக்கு அதிசய சக்தி தரும் ஆட்டு நாக்கு, அணையா விளக்கு, வேம்படி, வனத்துடன் காத்திருக்கும் ஊமை மரம், அரவணைக்கும் வேப்ப மரம் எனப் பல சொல்லலாம்.

வேம்பலையின் வெளியாட்கள்:

என்னதான் வேம்பர்கள் இந்த கிராமத்தை அமைத்திருந்தாலும் அங்கு மாற்றங்களைக் கொண்டு வருவதில் வேம்பலையின் வெளியாட்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. கனவில் வந்த ஒரு தெய்வம் இங்கு கண்டடையப்பட்டு வளரும்போது அதை வைத்து தானும் வளரும் காயம்பு கிட்டத்தட்ட இந்த கிராமத்துக்கு வெளியாள் தான். மின்சாரம் முதன்முதலில் வரும்போது அவனே கிராமத்துக்கு மின்சாரம் வர காரணமாக அமைகிறான். ஆனால் அந்த மின்சார வெளிச்சம் அந்த கிராமத்தின் இயல்பான பிசுபிசுத்த இருட்டை வெளியேற்ற, அந்த கிராமத்தினர் அமைதியிழக்கிறார்கள். அடுத்த கோயில் திருவிழாவில் சாமி கோபமாக இருப்பதை உணர்ந்த காயம்பு தானே அந்த விளக்குகளை அடித்து நொறுக்கி சமநிலையை உருவாக்குகிறான். படிப்படியான மாற்றத்தின் ஒரு படிக்கு அவன் காரணமாக அமைந்தாலும் அவனும் அந்தக் கிராமத்துக்காரன் தான் என்ற உணர்வை அளிக்கிறான்.

இரு பெண் குழந்தைகளுடன் அபலையாக வரும் பக்கீரின் மனைவியும் இன்னொரு உதாரணம். உதவி கேட்டுவரும் அவளே பலருக்கும் உதவியாக இருக்கிறாள். அவளே தன் செலவில் கிராமத்துக்கு மணிக்கூண்டு அமைத்துத் தரும் அளவுக்கு அங்கு வேர்பிடித்து முன்னேறுகிறாள்.

கிராமத்தின் வாழ்விலும் நாகுவின் குடும்ப வாழ்விலும் இவளது பங்கு இதே போல் தொடர்கிறது. காயம்புவின் மனைவியின் தம்பிக்கும் நாகுவின் அக்காவான வேணிக்கும் ஒரு சின்னக் காதல் அரும்பு விடுகிறது. அதையும் அவளே கையாள்கிறாள். நீலாவின் மரணத்தின் பின் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் தெளிவாக முடிவெடுத்து வேணியின் திருமணத்துக்குக் காரணமாக அமைவதும் அந்தப் பக்கீரின் மனைவி தான்.

இந்த அன்னிய பாத்திரங்களும் ஒரு மாய கணத்தில் வேம்பலைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இங்கு குருதி என இந்த நாவல் இதை உருவகிக்கிறது என்ற சிந்தனையைத் அளிக்கிறது. மைய பாத்திரமான நாகுவின் மகன், பின்னர் கம்யூனிசம் எல்லாம் படித்த பின் வேம்பலைக்கு திரும்ப வந்தால் அவனே அன்னியனாக இருப்பானோ என்றும் தோன்றுகிறது. இதுவும் தற்செயலல்ல, அவனது அம்மாவான ரத்னாவதி வேறொரு குருதியின் தொடர்ச்சியாக அவனை வளர்க்க முடிவெடுக்கிறாள் என்று வாசிக்கவும் இடம் இருக்கிறது.

இது எந்த நாடுக்கும் பொருத்திப் பார்க்க முடிவதாக இருக்கின்றது. இன்றைய தமிழ்க் கலாச்சாரத்தை உருவாக்கியதில் விஜயநகரப் பேரரசர்கள் உடட்பட பலரின் பங்கும் இருக்கிறது. ஆன்னிபெசண்ட், பெரியார் தொடங்கி இன்றைய ரஜினி வரை பல “வெளியாட்கள்” பண்பாட்டிலும் அரசியலிலும் கலையிலும் உருவாக்கும் பதிவுகள் கவனிக்கத் தக்கவை.

மனிதகுலத்தின் சவால்கள் – மகிழ்ச்சியும், மரணத்தை வெல்வதும்:

வேம்பின் கசப்பும் சுட்டெரிக்கும் வெயிலும் எந்த நேரத்திலும் மரணத்தைத் தரும் கடும் விஷப்பூச்சிகளும் இருக்கும் இந்தக் கிராமத்தை விட்டு விலகினாலும் ஏன் அதன் மக்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது ஒரு விடை தெரியா கேள்வியாக இருக்கிறது.

இந்த நாவலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வருகிறது. அந்த தூர கிராமத்துக்கு வித்தியாசமான வெளியாள் ஒருவன் வருகிறான். அவன் தூக்கத்தை ஆராய்ச்சி செய்பவன். முதலில் கிராமத்தினர் அவனைச் சந்தேகப்பட்டாலும் பிறகு அவனது ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனை அன்று தூங்க அனுமதிக்கிறார்கள்.

ஒரு நாள் தூங்கி ஆராய்ச்சி செய்த அவன் அதிர்ச்சிடைகிறான். இந்த ஊரில் பகலை விட இரவு மிக உக்கிரமாக இருக்கிறது, களவு செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது போல என்று சொல்லி அதிர்ச்சியாகி ஊரை விட்டு ஓடுகிறான். அது அவனுக்குத் தான் அதிர்ச்சி, அந்த முடிவை கிராமத்தினர் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கே எது மகிழ்ச்சி என்ற ஒரு கேள்வியை இது எழுப்புகிறது
இந்த நூற்றாண்டு மனிதன் முன் இருக்கும் கேள்வியே அது தானே. ஹோமோடியஸ் என்ற முக்கியமான புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி, மனிதன் போன காலகட்ட பிரச்சனைகளான பஞ்சம் போர் மற்றும் பெரும் நோய்களை வென்ற மனிதனின் முன் இருக்கும் முக்கிய இரு சவால்கள் மகிழ்ச்சியும் மரணத்தை வெல்வதும் தான் என முன்வைக்கிறார்.

இந்த நாவல் இந்தப் பிரச்சனைகளை இதன் போக்கில் எதிர்கொள்கிறது.

காட்டில் இருக்கும் மிருகங்களை விட பண்ணை மிருகங்கள் பாதுகாப்பானவை. ஆனால் அவை அதில் மகிழ்ச்சியாக இருக்குமா? பிறந்ததில் இருந்து கூண்டில் இருந்து வெளியே செல்ல முடியாத கால்நடை எத்தனை வருடம் வாழ்கிறது என்பது அதன் வெற்றியாகக் கொள்ள முடியுமா?

இந்தப் பார்வையில் உக்கிரமான வேம்பலை அவர்களுக்கு ஒரு மகிழ்சியைத் தருகிறது என்று கொள்ளலாம். வெயில் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் நிழலும் காத்திரமாக இருக்கிறது. கடுமையான கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் தான் அதிக அன்பின் வெளிப்பாடும் அமைகின்றது. பக்கிரியின் மனைவி, செல்லையா, மல்லிகா, அவளைப் பார்த்துக் கொள்ளும் நாகுவின் அப்பா என காத்திரமான அன்பின் இடங்கள் பல நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

ரத்னாவதி-நாகு காதலுக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.

நடைமுறையில் பாலியல் சார்ந்ததாக இருந்தாலும் இவர்கள் உறவில் அதைத் தாண்டிய தருணங்கள் வெளிப்படுகின்றன. தனது தோழியின் கனவு தனது குழந்தைக்கு முடியிறக்குதல் என அறிந்து, தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற நாகுவுக்கு ஆணையிடுகிறாள். நாகு நிறைவேற்றுகிறான். அந்த தாய் கை கூப்புகிறாள். ஒவ்வொருவரின் அற உணர்வு மட்டுமல்ல காதலின் உச்சமும் அங்கே வெளிப்படுகிறது.

இந்த நாவலின் வாழ்வில் மரணங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதைத் தாண்டியும் வாழ்வு சென்று கொண்டேயிருக்கிறது. இன்றைய அறிவியலில் மரணம் என்பதே ஒரு டெக்னிகல் விஷயம் என மூளை மாற்று சிகிச்சை அளவுக்கு பேசப்படுகின்றது. ஆனால் இந்த நாவல் மரணத்தை பல இடங்களில் தன் வழியில் வெல்கிறது.

சாயக்கார சென்னன்மா உடல்குருகி குடுவையில் இட்டபின் அவள் மரணத்தை வெல்கிறாள். திடீர் மரணமடைந்த நீலாவின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவளது அப்பா ஒரு மண்புழுவை கையில் எடுக்கிறார். வீட்டில் இருந்துக்கோம்மா என பாசத்துடன் வீட்டுக்கு கொண்டுவந்து விடுகிறார், நீலா மரணத்தை வென்று வாழ்கிறாள். இன்னும் சொல்லப்போனால் வேம்பலையில் மறந்தவை எல்லாம், பரதேசிகள் பார்க்கும் இன்னொரு வேம்பலையில் வாழ்கின்றன, அந்தக் கிராமமே மரணத்தை வெல்கிறது. நாகுவும் கடைசியில் மரணத்தை வெல்கிறான் அவனது மகளான வசந்தா தனது கணவனின் குழந்தைக்க்கு நாகு என்று பெயர் வைத்து வேம்பலைக்கு திரும்புவதுடன் நாவல் நிறைவடைகிறது.

வசந்தா பள்ளியில் படிக்கும்போதே அவளுக்கு ஜெயக்கொடியுடன் உருவாகும் நட்பு வேம்பலையின் அழைப்பாகத் தோன்றுகிறது. தான் மனம் குழம்பியிருக்கும் நிலையில் வெள்ளைப் பறவைகள் வரும் அனுபவம் நாகுவை நேரடியாகப் பார்த்திராக வசந்தாவுக்கும் வருவதும் அவளே வேம்பலையால் தேர்ந்தடுக்கப்பட்டவள் என்று தோன்றுகிறது. நெடுங்குருதியாக தொடர்ந்து வரும் தொடர்பில், நேரடி குருதித் தொடர்பில்லாத குழந்தை நாகு என்று பெயரிடப்பட்டு திரும்ப வேம்பலை கதை ஆரம்பமாவது குருதி என்பதற்கே அர்த்தம் தருவதை கவனிக்க முடிகிறது.

“வேம்பலை விரிந்த உள்ளங்கை ரேகைகள் போல தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானில் இருந்து வேம்பலையில் இறங்கிக் கொண்டிருந்தன’

கடும் வெயிலும் கசப்பும் பல மரணங்களும் தொடரும் இந்த நாவல் நாவல் நிறைவடையும்போது நாகுவின் பார்வையில் பார்க்கும் நமக்கு மிக நிறைவான வாழ்க்கையாகவே தெரிகிறது.

அத்துடன், நாவல் வெளிவந்து பத்து வருடங்களுக்குப் பின்னரான வாசிப்பில், இன்றைய புதிய உலகம் எதிர்கொள்ளும் பல சவால்களையும் இந்த நாவலில் போட்டுப் பார்க்கும்போது இன்னும் புதியதாக இருப்பதும் நிறைவளிக்கிறது.

***

சுரேஷ்பாபு – மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். மனித இன வளர்ச்சி, அதன் வரலாற்றில் வாசிப்பு கொண்டவர். இவற்றில் இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக எழுதியும் உரையாடியும் வருபவர்.வேழவனம் எனும் இணையதளம் மற்றும் Repairkadai என்ற யுடியூப் தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மின்னஞ்சல்: s.sureshbabu@gmail.com

துளசி

2

சுஷில் குமார்

ப்படி ஒரு கேள்வியை பத்மா கேட்டாள் என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த நொடி சட்டென வியர்த்து விட என் நெஞ்சுக்கூட்டில் சரளைக்கற்கள் உருண்டதைப் போன்ற அதிர்வு. கண்கள் இருட்டிக் கொண்டு வர என் சாய்வு நாற்காலியில் கிட்டத்தட்ட விழுந்தே விட்டேன். அலறியபடி ஓடி வந்த துளசி நான் விழுந்ததும் என்மீது சாய்ந்து விழுந்து, ‘அப்பா, அப்பா’ எனக் கதறினாள். அவள் கைகளில் அப்பியிருந்த பலவித வண்ணங்களால் என் சட்டையில் கலங்கிய ஓர் ஓவியத்தைச் சட்டென உருவாக்கி விட்டாள். அட, என்ன நேரத்தில் என்ன நினைத்திருக்கிறேன்? சற்று நேரத்தில் கண்களைத் திறந்த போது பத்மா பூஜையறை கதவருகே குலைந்து விழுந்து கிடப்பதையும், அவளது கண்ணாடி சில்லுகளாக உடைந்து தெறித்திருந்ததையும் துளசி ஏங்கி ஏங்கி என்னைத் தட்டிக் கொண்டிருந்ததையும் கவனித்தேன்.

“அப்பா.. எந்திரிங்க மொதல்ல, ப்ளீஸ், நா சொல்றத கேளுங்க.”

என்ன சொல்கிறாள்? நான் எதைக் கேட்க வேண்டும்? சற்று முன் என்ன நடந்தது? பத்மா ஏன் இப்படி அழுதுகொண்டு படுத்துக் கிடக்கிறாள்? கடைசியாக அவள் அழுது எத்தனை வருடங்கள் இருக்கும்? துளசியின் சடங்கின் போது அழுகையை அடக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தாளே! ம்‌ம்.. சற்று முன்.. எப்படி என்னைப் பார்த்து அப்படிக் கேட்டு விட்டாள்? நான் என்ன செய்தாலும்..

“அப்பா, எந்திரிங்க”

என் கைகளைப் பிடித்துத் தூக்கினாள் துளசி.

“இரிம்மா, அப்பாக்கு ஒன்னுல்ல, ஒங்கம்மக்கி தண்ணி குடு, போ.”

துளசி ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து பத்மாவின் அருகே சென்று அவளைக் குடிக்குமாறு கெஞ்சினாள். பத்மாவிடம் துளி அசைவில்லை. வீம்பில் அவளது மார்புக்கூடு உறுமியபடி ஏறி இறங்கிக் கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது. அவளது தலைமாட்டில் தண்ணீரை வைத்துவிட்டு என்னை நோக்கித் தலையசைத்தபடி வந்தாள் துளசி.

“அப்பா. நான் சொல்லத கேப்பீங்களா இல்லையா?”

“சொல்லு மக்ளே.”

“மொதல்ல நீங்க எந்திங்க, என்கூட வாங்க.”

“எங்க மக்ளே? ஒங்கம்ம இப்பிடி விழுந்து கெடக்கா, எங்க கூப்பிடுக என்ன?”

பதில் சொல்லாமல் உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள். தன் தலைக்கவசத்தை எடுத்து மாட்டியபடி பூஜையறைக் கொண்டியில் மாட்டியிருந்த அவளது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவள் பத்மாவின் காதருகே சென்று ஏதோ பேசினாள். பத்மாவிடம் பதிலேதும் எதிர்பார்க்கக் கூடிய சூழலில்லை என்பது துளசிக்கு நன்றாகத் தெரியும். அவளருகே குனிந்து முத்தமிட்டு விட்டு எழுந்து என்னை நோக்கி வந்தாள். நான் பத்மாவையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி நடந்து வீட்டு வாசலுக்கு வந்தேன்.

மணி என்ன இருக்கும்? எவ்வளவு நேரம் இப்படிக் கடந்து போயிருக்கும்? இன்னும் கொஞ்சம் நேரத்தில் இருட்டிவிடும் போலவிருந்தது.

“மக்ளே, கருக்கல் நேரமாய்ட்டு..”

“வந்து வண்டில ஏறுங்க,”

நான் செய்வதைப் போலவே வண்டியை விட்டு விட்டு முறுக்கினாள்.

“சரி.. சரி.. ஏறுகேன். ஒங்கம்மய மூஞ்சில காட்டாத. அம்மக்கி பிள்ளன்னு காட்டிட்டே இருக்கணும், என்னா. நா மட்டும் தனி..”

அடுத்த அரைமணி நேரத்திற்கு துளசி எதுவும் பேசவில்லை. வழக்கமாக வண்டியில் அதிவேகமாக செல்லக் கூடியவள் அன்று மிக நிதானமாக ஓட்டினாள். இடையில் சிலமுறை, ‘மக்ளே, எங்கப் போற?’ என்று கேட்டுப் பார்த்தேன். என் முகம் தெரியும்படி திருப்பி வைத்திருந்த கண்ணாடியில் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.

வண்டி நேராகக் கடற்கரைச் சாலையில் சூரியன் மறையும் இடத்திற்கு அருகில் சென்றது. அங்கே நிறுத்தாமல் கடற்கரையை ஒட்டிச்சென்ற மண்பாதையில் வண்டியைத் திருப்பினாள். எனக்கு குழப்பமும் ஆச்சரியமும் சேர்ந்து ஏதேதோ தோன்றியது.

“மக்ளே, இங்க எங்க போற? நல்லா இருட்டப்போகு பாரு. மக்ளே..”

துளசிக்கு எப்படி அந்த இடம் தெரிந்திருக்கும். ஒருவேளை எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்தே தான் இருந்ததா? ஏன் ஒரே நாளில் எல்லாமே இப்படிப் புரள வேண்டும்? நான் ஒன்றும் துரோகி இல்லையே? பார்க்கப் போனால், நானும் பல தியாகங்களைக் கடந்து தானே வந்தேன். பத்மாவிற்கு என்ன தெரியும்? எப்படி என்னைப் பார்த்து அப்படிக் கேட்டாள்? என்னிடம் பதில் ஏதும் எதிர்பார்த்து அவள் கேட்டிருக்க மாட்டாள். கேட்ட மறுநொடியே அதை எப்படி உள்ளே இழுத்துக் கொள்வது என்றுதான் யோசித்திருப்பாள். நான் தான் அவளது கூடு. அதனால்தான் அப்படியொரு கதறல். என் பதிலெல்லாம் அவளுக்குத் தேவையில்லை. ஆனால், இனி எப்படி என்னைப் பார்த்து முன்போலச் சிரிப்பாள்?

நான் நினைத்தபடியே வண்டி அந்தக் குறிப்பிட்ட பாறையருகே சென்று நின்றது. துளசி ஏதும் சொல்லாமல் சரியாகச் சென்று அந்தப் பாறை மேல் ஏறி உட்கார்ந்தாள். அது ஒரு சிப்பி வடிவிலான பாறை. எந்த நொடியிலும் திறந்து அதிலிருந்து முத்துகளாகக் கொட்டும் என எப்போதும் நான் நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படி நம்பியுமிருந்தேன்.

“பாறைல முத்தெல்லாம் கொட்டாது மிஸ்டர் ரோமியோ. இங்க வந்து உக்காருங்க” என்றபடி முறைத்தாள் துளசி.

“மக்ளே.. இரி, மொதல்ல இங்க என்ன நடக்குன்னு சொல்லு. ஒனக்கெப்படி?”

“அப்பா.. போதும். எப்படி? எங்கருந்து? என்னாச்சி? எல்லாம் ரொம்ப போருப்பா. அப்படி என்ன நடந்துட்டு? பத்மா எப்பவுமே ஓவர் ரொமான்டிசைஸ் பண்ணதான் செய்வா. அவ கதறி விழுகதும் நீங்க ஏதோ அட்டாக் வந்த மாதி சீன் போடதும், ஒரு செகண்ட் நானே பயந்துட்டேன்.”

சூரியன் பாதி கடலுக்குள்ளும் மீதி அடிவானிலுமாக சிவந்து நின்றது. பரிசுத்தமான வட்ட முகம். துளி மேகமற்ற வெறும் வானம். பாறைகளில் பட்டுத் தெறித்த சாரலில் சிவந்த கூந்தலாடும் முகமொன்று வந்து வந்து சென்றது.

ன்றும் அப்படியேதான் இருந்தது. அவளது கடைசி சொட்டுக் கண்ணீர் என் கைகளில் விழுந்த போது அந்தப் பாறையின் முத்துகள் என்னைச் சுற்றி உதிர்ந்து கொண்டேயிருந்தன. அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு இடைவெளியும் இத்தனை வருடத்திலும் ஒரு முத்து விடாமல் என்னால் வாய்விட்டுச் சொல்ல முடியும். வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து நான் சொல்லிக் கொள்வது தான்.

“நம்ம கொழந்தைங்களுக்கு ஒரு பேர் சொல்லுங்க. என்ன ஆனாலும் அந்த பேர் தான் வைக்கணும்.”

“ஓ, சூப்பரா வச்சிரலாமே! என் பேரையும் உன் பேரையும் மாத்தி மாத்தி போட்டுப் பாப்போம். என்ன பேரு வருதோ அத வைப்போம் என்ன?”

“அய்யே, ரொம்ப ஓல்ட் ஸ்டைல் அது. இது சம்திங் ஸ்பெஷல். நம்ம சேந்து இல்லாம போறது நம்ம தப்பு இல்ல, விதின்னும் யோசிக்க வேண்டாம். ஆனா, இது ஒரு தோல்வியோ முடிவோ இல்லன்னு எனக்கு தோனிட்டே இருக்கு. எந்த சோகமும் இல்லாம நீங்க எங்கேயோ இருக்கணும், நான் எங்கேயோ இருப்பேன். நம்ம கொழந்தைங்க மொகத்துல நம்மள பாத்துக்கலாம். சவுண்ட்ஸ் கிரேசி?”

“ம்ம்‌.. இல்ல, இன்டரெஸ்டிங். ஆனா நீ ஒரு தனிப்பிறவி தான். எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கிற? நா தான் தாடி வச்சிட்டு சுத்துறேன்.”

“நா எப்பவும் சொல்ற அந்த ஒரு பெர்சென்ட் இதுதான். நீ என்ன புரிஞ்சுக்காத அந்த ஒரு பெர்சென்ட். அது அப்படியே இருக்கட்டும். சரி, ஸ்டோரீஸ் அப்பார்ட். சொல்லு.. என்ன பேர் வைக்கலாம்?”

“ஏய், இரி. பொண்ணா, பையனான்னு தெரியாம என்ன பேரு வைக்க? பேரு செலக்ட் பண்ணப்றம் வைக்க முடியலன்னா என்ன பண்ண?”

“நீங்க எக்ஸாக்ட் 1947 தான்.”

“அப்படின்னா?”

“சுத்தம்..”

“அட சொல்லு.”

“நத்திங். கொஞ்சம் யோசிங்க. பொண்ணோ பையனோ, ஒரே பேரு தான். சம்திங் யுனீக், சம்திங் ஸ்பெஷல்.”

பாறையைச் சுற்றிலும் முத்துகள் குவிந்து நிரம்பி கடல் மணலோடு கலந்து அலைகளில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. சிவந்த அலைகள், சிவந்த சூரியன், சிவந்த வானம். பாறையின் பின்புறமிருந்து சிவந்த கூந்தல் முகம் மெல்லப் புன்னகைத்தது.

“அப்பா. கனவு கண்டது போறும். வீட்ல ஒங்க பொண்டாட்டி சூசைட் பண்ணிக்கப் போறா பாருங்க. இங்க ஒங்களுக்கு டே-டிரீமிங், இல்ல.. இல்ல.. டஸ்க்-டிரீமிங், என்ன? என்ன மனுசன்யா!”

நிஜமாகவே பத்மா ஏதும் விபரீதமாகச் செய்து விடுவாளோ? துளசி எப்படி எல்லாவற்றையும் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறாள்?

“அப்பா, நீங்க செஞ்சதுதான் தப்பு. லிசன்.. ஒங்களுக்கு தேவையான சென்டிமெண்ட நீங்க வச்சது தப்பில்ல. ஆனா, எங்கயும் எதுவும் லீக் ஆகாத மாதிரி பாத்துக்கத் தெரியல. இது வெளையாட்டு இல்லப்பா, ஐ மீன் இட். ஒங்களுக்கு நா எந்த அளவோ அதே மாதிதான அம்மாவுக்கும்? அப்போ உங்க சென்டிமெண்ட மட்டும் நீங்க புனிதமா வச்சிக்கிட்டா போதுமா? நீங்களே ஒலகம்னு பத்மா வந்தால்லா? இன்னிக்கும் அவளுக்கு ஒங்கள விட்டா வேற என்னத்த தெரியும்? காலைல எந்திச்ச நொடில இருந்து ஒறங்கது வர ஒங்க பாடுதான் அவளுக்கு. அவளுக்கு நீங்க பண்ணது தெரிஞ்சா என்ன ஆகும்னு நீங்க யோசிக்கவே இல்லையா? இந்தப் பேரு எனக்கு ரொம்ப இஷ்டம் தான்பா. இது சம்திங் யுனீக், சம்திங் ஸ்பெஷல். ஆனா, அம்மாக்கு துளசின்னா பரிசுத்தம். அவளும் அப்படித்தான? அவ ஒங்கள எப்பிடித் தண்டிச்சாலும் சரிதான்.”

நான் எதுவும் பேச முடியவில்லை. அப்போது பேசிக் கொண்டிருந்தது யார், என்ன பேசிக் கொண்டிருந்தாள், எதுவுமே எனக்குள் சென்ற மாதிரி நினைவில்லை. ஆனால் மிக ஆழமாக உள்ளுக்குள் ஒவ்வொரு வார்த்தையும் செதுக்கப்பட்ட மாதிரியும் இருந்தது. ஒருவேளை நானேதான் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேனா? சட்டெனத் துளசியின் கைகளைப் பிடித்து இழுத்தேன். அவள் என்னருகே தான் இருந்தாள். அவள் தான் பேசியிருக்க வேண்டும்.

“மக்ளே, அம்மக்கி எப்பிடித் தெரிஞ்சிது? ஒனக்கு எப்பிடி? அப்பாக்கு ஒன்னும் புரியல.”

“அப்பா, எப்பிடி வேணாலும் இருக்கட்டும். இப்ப என்ன பண்ணன்னு யோசிங்க, எதாம் உருப்படியா ஐடியா சொல்லுங்க. பத்மா ரொம்ப ஓவரா எமோஷன் ஆயிருக்கா, எப்பவும் போல சமாதானம் ஆவான்னு எனக்குத் தோனல, சொல்லிட்டேன்.”

தன் வலது பெருவிரலால் ஆள்காட்டி விரலை வட்டமாக வருடிக் கொண்டிருந்தாள். நம்ப முடியவேயில்லை. எப்படி அதே மாதிரி செய்கிறாள்! அதெப்படி? இன்றுதான் இதையெல்லாம் நான் கவனிக்கிறேனா?

“என்ன செய்யன்னு ஒன்னும் தெரில மக்ளே. இந்த மாதி பிரச்சன வர வயசா அப்பாக்கு? வெளிய தெரிஞ்சா சிரிப்பா. அம்மாவ விடு, ஒனக்கு இது ஒரு மாதி இல்லையா மக்ளே? அப்பாவ சீ-ன்னு நெனச்சியா?”

துளசி எழுந்து மெல்லக் கீழிறங்கி அலைகளில் கால் நனைத்தபடி நின்றாள். சற்று நேரம் முன் செல்வதும் பின் வருவதுமாக இருந்தவள் என்னை நோக்கிக் கையசைத்துக் கூப்பிட்டாள். முழுவதும் வெண் முத்துகள் சூழ்ந்த சிவந்த தீவின் நடுவே நின்று அவள் என்னை எங்கோயிருந்து அழைப்பதைப் போலத் தோன்றியது.

“அப்பா, இங்க வந்து பாருங்க.”

அந்தப் பாறை என்னை பிடித்து வைத்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாய் இல்லை. ஒருவழியாக எழுந்து இறங்கி அலையில் கால் வைத்தேன். சென்ற வருடம் அந்த நாளில் வந்து கால் நனைத்தது. அதன் பிறகு இப்போதுதான் நனைக்கிறேன்.

“அப்பா, சீக்கிரம் வாங்க. அழிஞ்சிறப் போகுது,”

துளசி கத்தினாள்.

அலை வந்து தொட்டு விடாத தூரத்தில் தரையில் குனிந்து எதையோ வரைந்து கொண்டிருந்தாள். மெல்ல அவளை நெருங்கிச் சென்றேன். அலை மெல்ல மெல்ல ஒவ்வொரு படியாக அவளை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியனை உள்ளிழுத்துக் கொண்ட கடல் சிறிது வெளிச்சத்தை மட்டும் எங்களுக்காக விட்டு வைத்திருந்தது. திரும்பி அந்த சிவந்த கூந்தல் முகம் தெரிகிறதா எனப் பார்க்கலாமா என யோசித்தேன். இல்லை, நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன். எதையும் என் வழியில் முயல்வது இப்போதைக்கு சரியாகப் படவில்லை. துளசி என்ன சொல்கிறாளோ அதுதான். அவள் என்ன வரைந்திருந்தாலும் அழிந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் பத்மாவின் அழுது ஓய்ந்த முகமும் மாறிமாறி என்முன் வந்து கொண்டிருந்தன.

துளசி, தான் வரைந்ததை என்னிடம் மறைக்கும் விதமாக குறுக்கே நின்றாள்.

“வெயிட் மிஸ்டர் ரோமியோ. நான் எழுதுனது அடுத்த பத்து அலைல அழியாட்டா நான் கேக்றத வாங்கித் தரணும். டீல் ஆ?”

கேட்டுக் கண்ணடித்தாள். அவளது ஒவ்வொரு அசைவும் இன்று என்னை அந்த நாளிற்கு இழுத்துச் செல்வது புதிராகவே நீடித்தது.

“சரி.. தள்ளு.. பாப்பம்.”

என் கையைப் பிடித்து முன்னிழுத்தபடி அவள் ஒருபுறம் ஒதுங்கினாள். அந்த நாள் நாங்கள் எழுதியிருந்ததை அச்செடுத்ததைப் போல எழுதியிருந்தாள். சட்டென அதன் முன் மண்டியிட்டு நின்றேன். துளசி என் தோள்களின் மீதாக கைகளைப் போட்டுக்கொண்டு என்னை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

“அட அப்பா.. அப்பா. கமான், சியர் அப். டேக் இட் ஈஸி”

என் கன்னத்தில் முத்தமிட்டாள். சூழ்ந்திருந்த முத்துகள் அனைத்தும் ஒரே நொடியில் காணாமல் போயின. நிலவின் மெல்லிய வெளிச்சம் அந்த எழுத்துகளின் மீது தெறித்து விழுந்தது.

ண்டியில் ஏறியதும் பறப்பதைப் போல வேகமெடுத்தாள்.

“மக்ளே, பாத்துப் போ. சடன் பிரேக் போட்டுறாத. என்ன அவசரம் இப்போ? ஒங்கம்ம வேற என்ன ஆனாளோ தெரில, கோவத்துல மூஞ்சியப் பாக்க சகிக்காது.”

“கடயச் சாத்திருவான். சேலஞ்ச்ல நானாக்கும் ஜெயிச்சேன். ஒரு அல வந்து தொடல்ல பாத்தீங்களா? நம்ம ராசி அப்பிடி.”

நான் சட்டெனச் சிரித்தேன்.

“என்ன மிஸ்டர்? என்ன சிரிப்பு? ஓ.. ஒங்க லவ் அப்பிடின்னு நெனப்போ? பத்து கழுத வயசாச்சு. ஞாபகம் இருக்கட்டும்.”

வண்டி இரயில் நிலையத்திற்கு எதிரான அதே முடுக்கில் சென்றபோது ஒரு நொடி கண் கலங்கி விட்டேன் தான்.

அதே பூக்கடையின் முன் நிறுத்தினாள்.

“அப்பா, நா என்ன கேக்கப் போறேன்னு உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும். ஐ ரியல்லி ரெஸ்பெக்ட் யு அண்ட் ஹெர். நீங்க ரெண்டு பெரும் நம்ப முடியாத மாதிரி ஒரு ஸ்டோரிப்பா. அமேசிங். எங்க இருந்தாலும் ஒங்க ஆள் நல்லா சிரிச்சிட்டே தான் இருப்பாங்க. ஒங்கள மாதிரி இல்ல. பத்மாவுக்கு நா சொல்லி புரிய வச்சிருவேன், விடுங்க”

சொல்லிவிட்டு என்னை இறுகக் கட்டிக் கொண்டாள்.

நான் பூக்கடையின் உள்ளே சென்றபோது பின்னிருந்து அழைத்தாள்.

“மிஸ்டர் ரோமியோ.. அப்படியே பத்மாக்கும். இல்ல.. இல்ல, ஒங்க ஆச பொண்டாட்டிக்கும்..”

***

சுஷில் குமார்
சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். மூங்கில், சப்தாவர்ணம் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்
க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com

138 கோடி தலைகளின் மிஸ்டர் பொதுஜனம்

0

கவிதைக்காரன் இளங்கோ

பாலருந்திய சுவையின் ஈரத்தில் பிரபஞ்சத்தின் கருநீல ருசியை கேலக்ஸி என்று உரைப்போம்
வாலறுந்த டார்வீனிய குரங்கு தன் தடம் பற்றிய பிரக்ஞை அற்று
காட்டைத் துறக்க எடுத்த முடிவில் அறிவின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை
புரோகிராம் எழுதப்பட்ட வீடியோ கேம்களில் முடிவற்று ஓடுகிற
அனிமேட்டட் கால்கள் இலக்கற்றவை
வரலாறு குறித்த பார்வையில் சர்ச்சைகள் எழும் பட்சத்தில் மேற்கொள்ளப்படுகிற
ஆய்வுகளின் தீர்வில் கைவிடப்பட்ட விவாத மேஜைகள்
மரத்தின் கனவுகளை வனத்தின் அடர்த்தியில் புதைத்து வைத்திருக்கலாம்
ஒரு விறகு வெட்டியோ அறுத்து இழைத்த தச்சனோ அதற்குப் பொறுப்பேற்க தேவை இல்லை
கதவுகளற்ற குகைகள் மர்மம் நிறைந்தவை ஆனால் குறைந்தபட்ச உணவுக்கு உத்தரவாதம் அளித்தவை
தப்பிப் பிழைத்தல் சேமிப்பைப் பதுக்குதல் இரண்டின் கீழும் உருட்டப்பட காத்திருக்கும் ரேகைகள் சிவப்பு நிறத்திலானவை
அதிகாரத்தின் குரல் இசைத் தட்டுகளில் கீறப்பட்டு திரையரங்குகளில் ஒலிக்கின்றன
எழுந்து நின்று செலுத்த வேண்டிய மரியாதை ஒரு Mandatory
எங்கள் அனிமேட்டட் கால்கள் குறைந்தபட்சம் அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்
அதுவரை துரத்திப் பிடிப்பதற்கு பேருந்துகளும்
நடைப்பயிற்சிக்கு பூங்காக்களும்
பொருள் நுகர ரேஷன் கடைகளும்
வார இறுதிகளுக்கான ஷாப்பிங் மால்களும்
மல்டி ஃப்லெக்ஸ் திரையரங்குகளும்
காற்றாட கடற்கரைகளும் திறந்து கிடக்கின்றன
புனைவின் வழியே நிகழ்த்த விரும்பும் எங்கள் ப்ரியத்தின் கழுத்தை கவ்விக்கொண்டு கனவுகள் தோறும் அலைகிற மனப்பூனையின் முனகலை
பிரதியாக்கும் முயற்சியை பத்திரப்படுத்த ஒரு பழைய டைரியை நடைபாதை கடைகளில் மலிவு விலையில் வாங்கிக்கொள்ளுவோம்
விழுமியங்கள் நேர் செய்யப்பட முடியாத சூழ்நிலையை தொடர்ந்து
பெருகச் செய்வதன் மூலம் ஏதாவது ஒன்றில் முட்டிக்கொண்டு திரும்புவது அவஸ்தை
விடியலை இன்னும் முழுமையாக அனுமதிக்காத இரவின் கைவிரல்
இதுவரை அறிந்திராத உடற்பாகங்களை வருடியபடி காலத்தை
வடிவிழக்கச் செய்கிறது நிதானமாக
யாவற்றையும் சந்தேகி என்ற கார்ல் மார்க்ஸை ஒரு முறையேனும் நினைத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை எந்தவொரு அரசாங்கமும்
குடிமக்களுக்கு வழங்கத் தவறுவதில்லை
தேசத்தின் புன்னகையை ரூபா நோட்டுகளில் அங்கீகரிக்கும் உலக வங்கிகளுக்கு
அடமானமாகக் கணக்குக் காட்ட நூற்றி முப்பெத்தெட்டு கோடித் தலைகள் இங்கு உண்டு
அவை போடும் குட்டிகளுக்கான வட்டிக்கணக்கு அந்நிய செலாவணியாகும்
திராணியுமுண்டு
சதா வானத்தில் ஏற்றுமதியாகும் மூளைகளுக்கு நல்ல கிராக்கி
வெயில் உடைக்கும் தலைக்குள் ராக் / ஹிப் ஹாப் பாடல்களை ஒத்திகையில் ஓடவிட்டு விசாவுக்காக நீண்ட மதிலோரம் கால்களை ஏந்தி நிற்கிற
லீ கூப்பர்களும் வுட்லேண்ட்களும் தாம் டேக் ஆஃப் ஆகப் போகிற ரன்வேயை தியானிக்கின்றன
ஆடம் ஸ்மித்தின் பாதம் தொட்டு சுண்டிவிடப்பட்ட நாணயத்தால் விழுந்ததெல்லாம் தலை மட்டுமே
நாம் சடுதியில் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துவிடுவோமேயானால்
இந்நிலத்தில் சிந்தக் காத்திருக்கும் ரத்தத் துளிகள்
தொடர் அதிருப்தியின் வழியே அசாதாரண வீரியத்தோடு கொப்புளிக்க பழக்கப்படுத்தப்படலாம்
குறி தவறாத ஈயக் குண்டுகள் துப்பாக்கிகளின் வாய்களை அண்ணாந்தபடி கேட்ரிட்ஜ்களில் தவமிருக்கின்றன
தேவையெல்லாம் ட்ரிகரை சுண்டும் விரல்களும் ‘க்ளியர்’ என்று அலற ஓர் அதிகாரக் குரலுமே
மீன்பிடி படகுகளும் கைப்பிடிச் சோறும் தர்க்கக் கேள்விக்கு உள்ளாகும் நாளில்
வீட்டுவாசலில் மண்டையோடு பிளந்து சிதறும் மூளைக்குள் இருந்திருக்கலாம் அடுத்த மாத வாடகைக் குறித்த சொற்ப யோசனை
செய்திகள் ஊமையாக ஸ்க்ரோல் ஆகும் கேட்டட் கம்யூனிட்டியின் ஹாலோபிளாக் உள்ளடுக்குப் பின்னிரவாய் கசிந்திடும் குளிரை மட்டுப்படுத்த ஏஸி ரிமோட்டை இருளில் துழாவி திசை தப்பி விரலில் தட்டுப்படும் விறைத்த மார்புக்காம்பு அறையின் வெப்பத்தை மெல்ல உயர்த்திடும் விந்தையின் சீரற்ற வேகத்தில் திரளும் உன்மத்த காமம்
உடல்களின் சேர்க்கையில் விளைகிற சந்தையின் நுகர்வு பொருட்கள் எண்ணற்றவை
மனம் ஒப்ப தேர்வாகும் பட்டியல்படி அமேஸான் தருவிக்கிறது யாவற்றையும்
வக்கற்று பிறந்துவிட்ட குழந்தைகளின் உலகில் கொஞ்சமாய் உலவுகின்றன கதைகள்
கவனிக்கத் தவறாத சங்கதிகளின் அடர்த்தியில் வெட்டவெளிச்சமாகும் பகிர்தல் ஒவ்வொன்றும் இளம் டி.என்.ஏ வடிவத்தை உருமாற்றுகின்றன
பிடித்தங்களையும் விருப்பமற்றவைகளையும் உளச் சிக்கல்களையும் டவுன்லோட் செய்து சேமித்து வைக்கும் டேட்டாக்களாக ஃபோல்டர் உருவாக்கி குவிக்கிறோம்
மறுபரிசீலனைக்கு நேரமற்று விட்ட இடத்திலிருந்து தொடரும் சண்டைகள்
வார இறுதியை காலாவதியாக்குகிறது
மதுக்கூடங்கள் குறைந்த வெளிச்சத்தில் ரகசியமாக அழுதுகொள்ள கொஞ்சமாக அனுமதிக்கின்றன
தேவையெல்லாம் ஏதாவது ஒரு பிளாட்டினம் கிரெடிட் கார்டும்
முழு கண்ணாடி கூஜாவில் தளும்பும் ஒரு டிராஃப்ட் பீரும் மட்டுமே
தலைப்புச் செய்திகள் சலிப்புறச் செய்யும் அன்றாடத்தை திங்கட்கிழமை காலையில் தொடங்கி
புளியங்கொட்டை அரவைக் கலந்த டீயின் கசப்பை ஏற்று முகஞ்சுழித்து
கெட்ட வார்த்தை உதிர்த்து உதைக்கும் பைக்கில்
சுற்றிவர நகரெங்கும் தன்னிஷ்டத்திற்கு வளைத்துத் திருப்பும் ஒன்வே
மழையில் ஜல்லி பெயர்ந்த நகரச் சாலைகளும் கிளைச் சந்துகளும்
பழுதே ஆகாத ஸ்பீட் பிரேக்கர்களும்
மிச்சமாக
வெள்ளிக்கிழமை வரை புலம்பித் தீர்க்கும் பகல்களும் அதன் நீட்சியில் மசங்கிய அவ்விரவுகளும் இருக்கவே இருக்கின்றன
அதுகாறும் மணிக்கட்டு நரம்பை அழுத்தாத கைக்கடிகாரம் ஓர் உற்றதுணை
ஒவ்வொரு முகத்திலிருந்தும் இன்னொரு முகம் உதிர உதிரப் பெருகும் பாவங்கள்
மரத்தினடியில் மண் பூடமாக முளைப்பதிலிருந்து கோபுரங்களுக்குள் சிலைகளாகி சமைவது வரை கடவுளரின் பயணங்கள் பாதை தொலைந்தவை
இதுவரை சொன்னதற்கும் முன்பிருந்தே இருந்திருந்தாலும்
இப்போது முழங்கால்களுக்கு கீழான மனித எலும்புகள் புல்லாங்குழல்களாகி
திபெத்திய புத்தத் துறவிகளை சென்றடைகின்றன
அதன் துளைகளினூடே நுழைந்து வெளியேறும் மூச்சுக்காற்றில்
மரணத்தின் இசையை முழந்தாளிட்டு வணங்கிக் கேளுங்கள்
சீவப்பட்ட மண்டையோட்டின் மேல்தட்டு
சாம்பிராணி கிண்ணமாகி
மணக்கும் புகை சூழ்ந்த பிரார்த்தனையின் ஆன்மா எதை எழுப்பும்?
அர்த்தம் பொதிய விரும்பும் கனவுகளில் தலைப்புச்செய்தி குறித்த கவலையில்
கச்சா எண்ணெய் தீர்மானிக்கும் ஒற்றை பேரல் விலையே
கறுப்புத் தங்கம்
பங்குச்சந்தை பங்கிட்டு ஏப்பம் விடுவது உடல்களை
கீழ் நோக்கிய சிவப்பு நிற அம்புக்குறி யாரை நோக்கி எய்யப்படுகிறது
அனலிஸ்டுகளின் புள்ளி விபரங்களை சரிபார்த்துக் கொள்ளும் கால்குலேட்டர்
பர்மா பஜார் நடைபாதைக் கடைகளில் சல்லிசான விலையில் கிடைக்கலாம்
பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரையிலா இலக்கங்கள்?
வேடிக்கையானவை
நாம் செய்த தானத்தின் மதிப்பு காலத்தின் குரல்வளையில்
தழும்பாகி
காய்த்துக் கிடக்கிறது
வாதாடும் வலுவற்ற வரலாற்றின் நரை மயிரில் மௌனத்தின் நூலாம்படை
சிலந்தியின் புள்ளிகள் குளோபல் கிராமங்களை சட்டைப் பாக்கெட்டில்
பத்திரப்படுத்தும் வடிவத்திலானவை
அதனூடே கசியும் தகவல்கள் சிறைக்கம்பிகளை பாலீஷ் பிடிக்கின்றன
கொள்கைகளின் கெட்டித்த அட்டை போட்ட புத்தகங்கள்
வடிவம் சிதைந்திடாமல் கிண்டில் கருவிக்குள் டிஸ்கவுண்ட் விலையில்
தரவிறக்கம் ஆகிவிடுகிறது
அனைத்துப் பக்கங்களிலும் வாய்களின் ஓலம்
ஒப்புக்கொள்ள மறுக்கும் தர்க்கங்களின் ஊளை
ஒரு பசி கையேந்தி நிற்கும் இருளடர்ந்த சுரங்கப்பாதையில் பேரமாகப் பேசப்படுகிறது மீண்டும் மீண்டும் மனித உடல்
எங்கோ ஒளி மங்கிய கருணையைச் சீந்திட ஆளில்லாமல் பிச்சையிடப்படுகிற காமம் ஈட்டுத் தருகிற கூலியில் வேறு என்னவெல்லாம் நிரம்பும்?
ஓர் அவலத்தின் நாசி விடைத்துக்கொண்டு நுகர நினைக்கிற பகல்நேர விளையாட்டை உருட்டி உருட்டித் திரட்டுகிறது மானுட கவுச்சி
நிராசைகளைப் பிசைந்து உண்ணும் உத்தரவாதங்களை வாசல் கதவில் ஓட்டிப் போகிறார்கள்
அடையாளமாகிவிட்ட குறியீட்டின் பயங்கரம் அறியாமல் தலை தொங்கி கிடக்கிறது துருப்பிடித்த உரிமைகளின் நீண்ட சாவி
தொடர்ந்து கூட்டம் சேருங்கள் பிரியாணி பொட்டலங்கள் எந்த சந்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிற ரகசியத்தை மட்டும் பத்திரப்படுத்தச் சொல்லுங்கள் உங்கள் தரகனை
லாரிகளை புழுதிப் பறக்க கிளப்பிக்கொண்டு வந்தபடி இருக்கிறது பிரச்சார மேடை
தோள் வலு உள்ளவரை வேறென்ன வேண்டும்
இன்னும் இன்னும் என இரத்தம் பெருக்கும் கடுஞ்சூடு இளகாத உப்புத்துளியும்
சீ நாயே என உறுமலிடும் கட்டளைக்கண் எச்சில் துப்பல் என்பதும் மேலான கவுரவம்
கார்ப்பொரெட் போங்காட்டத்தில் கீழே இறக்கிவைக்க விருப்பமில்லாத உங்களின் சீட்டுக்கட்டை உட்பக்க விசிறியாக விரித்துப் பிடியுங்கள் உங்களுக்கொரு மேஜிக் காட்டுகிறோம்
நுண்கிருமிகள் அதன் விளிம்பிலிருந்து மேலேறி உம் வாய்க்குள் நுழைந்து தமக்குரிய மொழியொன்றை உற்பத்தி செய்து உம் குரலாக அலறி நீவிர் ஓயும்போது உமது படுக்கையறை கண்ணாடியில் நாங்கள் தெரிவோம்
உள்ளும் புறமும் இறைந்து நலியும் பணக் கத்தைகளை தண்ணீரில் மிதக்கவிடும்போது இதுவரை முட்டிமோதிய ஒட்டுமொத்த சித்தாந்தத்தையும் சந்துக்குள் கூட்டிப்போய் யாரிடமாவது படுத்துக்கொள்ள அனுமதிக்கிறீர்கள்
போகம் உச்சம் தொட்டு முகத்தில் பீய்ச்சி அடிக்கும்வரை
கால்கடுக்க நின்று கைகூப்பி கூலிக்கு விளக்குப் பிடிக்க அவை ஏற்றி அனுப்பப்படும் கண்டெயினர் லோடுக்கான கன்சைன்மெண்ட்டில் கைநாட்டு வைக்க உங்களுக்கு யாருடைய ரத்தம் வேண்டும்?
இதோ எங்கள் மஜ்ஜை
இதோ எங்கள் நிணம்
இதோ எங்கள் கருப்பை
இதோ எங்கள் விந்துத்துளி
இதோ எங்கள் மதிப்பு
இதோ எங்கள் கனவு
இதோ எங்கள் உற்பத்தி
இதோ எங்களின் உபரி
இதோ எங்கள் எலும்பு
இதோ எங்கள் மொண்ணைத்தனம்
இதோ எங்கள் நம்பிக்கை
இதோ எங்களின் வரி
சுங்க வரி
வர்த்தக வரி
வீட்டு வரி
தண்ணீர் வரி
கழிவுநீர் வரி
சாலை வரி
விற்பனை வரி
வருமான வரி அவமான வரி தன்மான வரி
இதோ எங்களின் தூக்கம்
இதோ எங்களின் பசி
இதோ எங்களின் பிறப்புறுப்பு
இதோ எங்களின் அறியாமை
இதோ எங்களின் வாக்குரிமை
இதோ எங்களின் சுயமரியாதை
இதோ நாங்கள் நாங்களாக இல்லாமல் போய்விட்ட மிச்சமுள்ள நாங்கள்
எங்களைக் கற்பழியுங்கள் தெருவில் இழுத்து நிர்வாணமாக்கி
செதில் செதிலாக வெட்டி எடுத்துப் போய் உங்கள் உணவு மேஜையில் ஏலம் வையுங்கள்
வெறுமனே பிறந்துகொண்டே இருக்க கடமைப்பட்டிருக்கிறோம்
பொருள் உற்பத்தி இனி எதற்கு?
நூற்றி முப்பெத்தெட்டு கோடியை இனியும் பெருக்குவோம் நீங்கள் வியந்து போகும் அளவுக்கு
பலவண்ண Condom-கள் பலூன்களாக வானெங்கும் நிறைந்து பறக்கும்வரை காத்திருங்கள்
நீங்கள் பார்ட்டி வைத்து குடித்து கும்மாளமடித்து குப்புற விழுந்து எழும்போது மல்டி மில்லியனராய் உங்களின் சதைப்பற்று கூடிப் பார்வை மங்கும்படி பெருக்கிடுவோம் எங்கள் தலையெழுத்தை
என்ன? உலக வங்கியின் கடன் பத்திரங்களை சேமித்து வைக்கும் லாக்கர்களின் கதவுகள் கிறீச்சிட்டு திறக்கும் ஓசை கேட்கிறதா?
ஸ்கேன் செய்ய விரும்புகிறீர்களா இம்முகத்தை?
பிசாசுக்களின் களை ஒளிரும் தேஜஸை கண்டு மிரள வேண்டாம் அது பாஸ்வோர்ட்
புதிய வர்த்தகத்துக்கான புதிய ஒப்பந்தங்களை ஆகாயத்தில் பறந்துகொண்டே கையொப்பமிட்டு களைத்துவிடும் உங்கள் விரல்களுக்கு சொடுக்கெடுக்க புதிய பணியாளரை நியமித்துவிட்டீர்களா
ஒரு கோப்பையை கொண்டுவரச் சொல்லுங்கள் ஊற்றித் தருகிறோம் எங்களின் இழிந்து புளித்த வாழ்வை
தெரியும்தானே அது பன்னெடுங்காலம் இம்மண்ணில் ஊறிய ரசம்
புளித்த ஏப்பத்தோடு நீங்கள் துப்பவிருக்கிற ஆணையை தலைமீது வைத்து சுமந்து ஊர்வலமாக வந்துசேர காத்திருக்கிறோம் உங்களின் வாக்குச் சாவடி நோக்கி
சாவடி
சாவடி
அதுவே அவனை
அதுவே இவனை
அதுவே உவனை தரம் பிரிக்கிறது வீதி வாரியாக வட்டம் வாரியாக உள்வட்டம் வாரியாக கிளைவட்டம் வாரியாக மாவட்டம் வாரியாக
அவசரத்திற்கு மூத்திரச் சந்து வாரியாகவும்
கொள்கைவாத தத்துவங்களை மோனநிலைக்கு உந்தித்தள்ளி தவம் கலைக்காமல் காஜி பிடித்த எதிர்காலத்துளைக்குள் அமுக்கி நுழைத்து அரைப்பத்தாண்டு திட்டத்தின் மீது ஏதோ ஒரு வண்ணத்தை சாயம் பூசி கத்தையாய் ப்ரிண்ட் அவுட் எடுத்துத்தள்ளும் காகிதக் குப்பைகளை கெஸட்டில் அடைத்துப் பூட்டுங்கள்
ஆவணக் குப்பைகள் மண்டி புழுக்கும் குடௌன் குகைகளில் மூர்ச்சையாகிக் கிடக்கிறான் மூத்தக் குடி
என்ன அவனுக்கான அடையாள அட்டையா?
அது அவன் பெற்றுப் புழுத்த ரத்த டி.என்.ஏ வின் கைகால் முளைத்த
ஐந்து தலைமுறை சதைப்பிண்டத்தின் உயிர் நடமாட்டமுள்ள ஒரு சாதாரண கேடுகெட்ட ஃபிராங்கன்ஸ்டைன்
வாங்க
வாங்க
கலாச்சாரப் புனிதத்தின் அளவை இந்த பின்மண்டையில் ஓர் உளிகொண்டு ஓட்டைப் போடுங்க
அங்கேதான் நினைவுகளுக்கான சுரப்பி ஒன்று உகுத்துக்கொண்டு உயிரை வாங்குகிறது
பின்னிரவு பார்டிகளின் காரிடாரில் வழிந்தோடும் இம்போர்டட் சாராயத்தை மண்டியிட்டு நக்கி உய்க்க துணைக்கு இன்னொரு நாக்கு சல்லிசாகக் கிடைக்கிறது
ஃப்ரன்ச்சில் ச்சியர்ஸ் சொல்லிக்கொள்வோம்
ஹோய்..!
கண்விழிக்கும்போது ஒரு பூச்சியாக மாறியிராத அவலத்தை யாருக்காவது மின்னஞ்சல் செய்தாக வேண்டும்
காமத்திலிருந்து கடவுளுக்கு பயணம் செய்யும்போது தலைக்கேறும் போதையில் யார் மீதாவது மோதிவிட வேண்டும்
வீரம் சிரைக்கப்பட்ட மொட்டைத் தலையிலிருந்து சிதறும் நரம்புத்துளிகளை வழித்துச் சுவைக்க காத்திருக்கும் அகாலப் பசியை கார்ப்பொரெட் நிறுவனங்களுக்கு உயில் எழுதி வைத்துவிட வேண்டும்
அதற்குரிய தரகு கமிஷனை பப்ளிக் அன்-லிமிடெட் ஷேர்களாக மாற்றி பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளின் வழியே விநியோகத்திட ஒரு கௌண்ட்டரை திறக்கச் சொல்லி போராட்டங்கள் தொடங்க வேண்டும்
போராட்டத்தில் பத்து லட்சம் பேர் திரள வேண்டும்
கைவிட முடியாது எனச் சொல்லி நூறாவது நாள் வெறும் இரண்டாயிரம் பேர் மட்டும் மண்டை உடைப்பட்டு வீடு நோக்கி ஓடிட வேண்டும்
கொலை பாதகப் பட்டியலின் முடிவில் உரித்தெடுக்கப்படுகிற நூற்றாண்டு மௌனத்தை இன்ஸ்யூரன்ஸ் பண்ணிக்கொள்ள விருப்பப்படும்போது அதில் Nominee-யாக ஏதேன் தோட்டத்திலிருந்து தப்பிவிட்ட முதுகிழவியின் கர்ப்பப்பையை பரிந்துரைத்து மனு எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும்
குழந்தைகள் வளர்கிறார்கள் இளைஞர்கள் முதிர்கிறார்கள் முதியவர்கள் வளைகிறார்கள்
வளைந்தவர் உதிர்கிறார் ஒரு சாதாரண சருகைப் போல
சாக்கடையோரம் நெளியும் புழுவைப் போல துர்வாடையில் தகிக்கிறார்
புதைக்க இடமில்லாமல் பிணங்கள் காத்திருக்கின்றன
பிணங்களை வைத்துக்கொள்ள முடியாமல் உறவுகள் காத்திருக்கின்றன
உறவுகளைக் காத்து வைத்துக்கொள்ள முடியாமல் கிருமிகள் காத்திருக்கின்றன
கிருமித் தொற்றால் அனைத்தும் எடுத்து வீசப்படுகின்றது
பிறிதொரு நாளில் நாய்கள் எச்சில் ஊற கிளறித் தோண்டி கவ்வியெடுத்தோடும் துண்டு எலும்புகளாக எங்கோ தெருவோரம் கைவிடப்பட்டு மக்குகின்றன சந்தைக்கு உதவாத மதிப்பு
மதிப்புக்கு உதவாத ஆதாரம்
ஆதாரம் இழந்துவிட்ட பொருள்
பொருளின் அர்த்தம் அழிந்துபட்ட நியதி
கவலை வேண்டாம்
எண்கள் சுழியிடப்பட்ட வீட்டமைப்புகளுக்குள் வேஸின் பூஸ்டர்கள் பத்திரப்படுத்துகின்றன மாற்று உலகச் சந்தை உற்பத்திக்கான புத்தம் புதிய கொப்பூழ்க்கொடிகளை

***


கவிதைக்காரன் இளங்கோ – சென்னையில் வசிக்கிறார். கணையாழியின் துணையாசிரியராகவும் யாவரும் பதிப்பகத்தில் Content Editor-ஆகவும் பணி புரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் என இரு சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி இரவு, கோமாளிகளின் நரகம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி: elangomib@gmail.com


கருளிடை பொழின் மருது

0

வைரவன்.லெ.ரா

ப்பா.. அம்மா எந்திருக்க மாட்டேங்குது.. அம்மா.. எந்திரிம்மா.. அப்பா சீக்கிரம் வாங்க”

பாயின் நடுவே ஆடைகள் அலங்கோலமாய் சிதறி, சுருண்டுக் கிடந்த உடலில் இன்னும் சூடு இருந்ததை, அவளைத் தொட்டதும் உணர்ந்தேன். என் கைப்பிடித்து தொட்டுக் காட்டிய, பாப்பா உறங்கிக் கொண்டிருந்த அறையில் ஏதோ அசைவது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. அதன் கீழே இரத்தம் இன்னும் சூடாக வெளியேறிக் கொண்டிருந்தது. என்னையறியாமல் கை விரல்கள் அதைத் தொட்டபோது, பிசுபிசுப்பாய் ஒட்டிப் பிடித்தது. அதன் மணம் என்னுள் மெல்ல மெல்ல இறங்கி நுரையீரல் முழுக்க சென்றதில் நாசி அடைத்தது. அப்பா குடிப்போதையில் நான் செய்துக்கொண்டிருக்கும் வினோதங்களை வெறிமிருகம் போல உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

*

வீட்டின் வெளிப்புறத்திண்டு ஏறி எளிதாக இறங்கும்படி இருந்தது. வசதியாய் நுழைந்தவன், கீழ்வீட்டின் விளக்கு அணைந்து இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான். மேல்வீட்டின் படுக்கையறை விளக்கு இன்னும் ஒளிர்வது உடலுக்கு கொஞ்சம் கிளர்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது. இருளில் அலையும் பேயைப்போல ஸ்தூலமாய் கருமையில் நிறைந்து இருந்தான். அவனின் அசைவுகள் வெளியில் எவ்விதச் சலனத்தையும் கொடுக்காது, அவனில்லாத நிழலை அசைக்காதிருந்தது. எங்கோ கூகையின் அகவல் சத்தம், நாய்களின் எல்லைப் பிரிப்பு போராட்டம், அவயான்களின் சுதந்திர ஓட்டம், மனித அரவமற்ற சாலைகளின் நிசப்தம் அவனை இயல்பாக்கி வைத்திருந்தாலும் மேல்வீட்டில் இந்நேரம் எரியும் விளக்கின் வெளிச்சம் மனிதனின் ஊடுபாய்தலை, சதை மேயும் தனத்தைப் பார்க்கத் தூண்டியது.

*

ப்பாவை விட்டு வெளியேறிய நாட்கள் நகரின் வீதிகளில் மனித சந்தையின் ஒரு பண்டமாய் அலையச் செய்தது. யாருடைய விழியும் என்னை நேர்நோக்காது. உணவகங்களின் முன்னே நெடுநேரம் நின்றும் யாரும் கவனிப்பதில்லை. தனியனாய் நெடுநாள் நகரின் எல்லா வீதிகளிலும் அலைந்தேன். அப்பா என்னைத் தேடி அலைவதில் நேரத்தைச் செலவிட மாட்டார். அம்மா உயிரோடிருந்த நாட்களில் கூட வேண்டாத ஒன்றாக வீட்டில் என்னை அனுமதித்திருந்தார். இரவுகளின் நீட்சியில் அருகே கட்டியணைத்து அவளின் சுவாசம் என்மீது படும்படி இறுக்கப் படுத்திருக்கும் வேளையில், அவளை இழுத்து, இரு அறைகள் கொண்ட வீட்டின் அடுக்களைக்குள் செல்வார். நான் விழித்திருப்பேன், அங்கே நடப்பவை என் முன்னே விரியும். அம்மாவின் முனகல், ஒரு வேட்டை நாயின் உறுமல். இரண்டுமே போகப்போகப் பழகிவிட்டது. காலை முழுக்க நகரின் மையத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கின் இடது மூலையில் தப்பி நிற்கும் மரங்களின் நிழலில் கிடப்பேன். எந்நேரமும் குடிநீர் கிடைக்கும் ஒரே குழாய் அங்கேதான் இருந்தது. இரவுகளில் குறிப்பிட்ட உணவகம் மீந்துப்போனதை கொட்டும் குப்பைத் தொட்டியின் விலாசம் தெரியவே இரவில் விழித்தும், பகலில் உறங்கியும் நாட்களைக் கடத்தினேன்.

*

ரண்டு வாரகாலம் இங்கேயே புகையைப் போலச் சுழன்றான். பெரிய வீதியின் ஓரத்தில் ஒட்டிப் போகும் தண்டவாளத்தின் இணையே செல்லும் தெருவில், வீடு ஒன்றுக்கொன்றுமிடையே நாற்பது அடி இடைவெளி இருப்பதாலும் நடுநிசியிலும் ரயில் ஓடுவதாலும் குறித்து வைத்த மூன்று வீடுகளில் இறுதியாய் இப்போது ஜன்னலின் சன்செட்டில் இருளில் படுத்திருக்கும் வீட்டைத் தெரிவு செய்தான். அவனுக்கென்ற சில நெறிமுறைகள் உண்டு. வீட்டில் நுழைவதும் வெளியேறுவதும் வெவ்வேறு பாதையாக இருக்க வேண்டும். அவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். வீடிருக்கும் பகுதியில் கண்டிப்பாய் நாய்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் வீட்டில் நாய் இருக்கக் கூடாது. அவை ராத்திரிகளில் அதிகம் குரைப்பவையாகவும் சண்டையிடும் குழுக்களாகவும் பல பிரிவுகள் இருக்க வேண்டும். இரண்டு மாடி வீடாக, கீழ் வீட்டில் உரிமையாளரும் மேல் வீடு வாடகைக்கும் விடப்பட்டிருக்க வேண்டும். கீழ் வீடுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடு.

மேல்வீட்டில் புதிதாய் குடியேறியவர்களாகவும் அவர்களும் இந்த நகரத்திற்கு அண்மையில் வந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சிறிய குழந்தைகள் இருக்க வேண்டும். வயதான தாய் தந்தையர் கூடவே வசித்தால் இன்னும் நலம். கீழ்வீட்டில் வசிப்பவர்களில் திடகாத்திரமான உடல் கொண்டோர் யாரேனும் உண்டெனிலும் அல்லது நான்கு பேருக்கு மேல் வசித்தாலும் இளைய பெண்களில் ஒருத்தி இருந்தாலும் அந்த வீட்டைத் தவிர்த்துவிட வேண்டும். ரோந்து போகும் காவல் வண்டியில் இருவருக்கு மேல் செல்லும் பகுதியாக இருக்கக் கூடாது. வயதான கூர்க்கா இரவு ரோந்துக்கு நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அன்றைக்கு முழுநிலவு நாளாக இருக்கக் கூடாது. கண்டிப்பாக செடிகொடிகள், மரங்கள் வீட்டின் சுற்றுச்சுவருக்குள் வளர்ந்திருக்க வேண்டும். இந்த வீட்டில் வயதான தம்பதியர் இருவர் மட்டுமே வசிக்கிறார்கள். மேல் வீட்டில் இளைஞன் ஒருவனும், நிறைமாத கர்ப்பிணி ஒருத்தியும் என இருவர் மட்டுமே வசிக்க, நெறிமுறைக்குள் சரிவரப் பொருந்திய வீடாக அமைந்தது. அன்றைக்கு சில மழைமேகங்கள், தாழ மிதக்க எளிதான ஒரு நாளைக் கடக்கும் எத்தனத்தில் குறித்த நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

*

கரை விட்டு தூரமாய் காயலான் கடை தனித்து நின்றது. அது நகரத்தில் திருட்டுப் போகும் இரும்பு, செப்பு, அலுமினியப் பொருட்களுக்கு புகலிடம். அங்கேயே தங்கிக் கொண்டேன். வெளிப்பார்வையில் அங்கேயே தங்கி பணிபுரியும் ஒரு சாதாரண சிறுவன் நான். முதலாளியும் கூட முதலில் அதையே நம்பினார். என் முதல் திருட்டு அதிக பிரயத்தனங்கள் இல்லாமல் எளிதாக அரங்கேறியது. ஒரு கிழவன் தான் அதற்கும் உதவினார். அவரையும் நான் நகரத்தின் வீதிகளில் என்னைப் போலவே உதாசீனப்படுத்தப்படும் சக உயிராகக் கண்டிருக்கிறேன். அன்றைக்கு அரசியல் மாநாட்டில் தகிக்கும் வெயிலில் நிற்க, இறுதியாய் பிரியாணி பொட்டலம் கிடைத்தது. நான் அமர்ந்து பிரியாணியை அள்ளித் தின்னும் சாலையின் மரநிழலில் அவரும் அருகில் இருந்தார். அவரது பொட்டலத்தில் இருந்த கோழிக்காலை என் பக்கம் தள்ளியவர் “சைவம் சாப்புட்டுதான் பழக்கம். நீங்கோ எடுத்து சாப்பிடுங்கோ. அசைவம் ஆகாது” சிரித்தபடி கூறினார். எனக்கு இருந்தது பசியல்ல, தினமும் வயிற்றின் பசி அடங்குகிறது. இது என் நாவின் பசி, அள்ளி அள்ளித் தின்றேன்.

*

மேல்வீட்டின் விளக்கொலி ஒரு விட்டில்பூச்சியைப் போல அவனை இழுத்தது. அங்கே இருப்பவர்கள் கணவனும் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் தான். ஒருவேளை இரவில் பணி புரிபவனாக இருந்தால் படுக்கையறை விளக்கு மட்டும் எரிய வேண்டிய அவசியம் என்ன? காலை வெளியே சென்றவன் பின்னிரவில் தான் வீட்டிற்கு வந்தான். வயதான தம்பதியர் கீழ் வீட்டில் இந்நேரம் அசந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். அதுவரையிலும் மேல்வீட்டைப் பார்ப்பதில் என்ன தவறு நிகழப் போகிறது. ஒரு ஆணும் பெண்ணும் தனியே அந்தரங்கத்தில் பிணையும் வேளையில் மாற்றான் ஒருவன் மறைவாகப் பார்ப்பது தவறில்லையா? எது சரி? எது தவறு?.

*

ம்மாவின் ஈரமுடிப் பின்னலில் சூடியிருக்கும் துண்டு மல்லிக்கு ஒரு மணமுண்டு. பாயில் போர்வையை மூடிக்கொண்டு கிடக்கும் என்னை எழுப்ப அதுவே போதும். எங்கள் வீட்டிலே ஒளி நிறைந்த ஒரு பகுதியுண்டு. அதிலே சிறிய காமாட்சி விளக்கின் திரியில் உக்கிரம் நிறைந்து எரியும் தணலின் சூட்டை எனக்குள்ளே அள்ளி அள்ளித் தள்ளுவேன். கண்ணாடி உடைந்த சட்டகத்தில் கன்னியொருத்தி தவத்தில் நிற்பாள். அம்மா அதன் முன்னே வெகுநேரம் அமர்ந்திருப்பாள். என்ன கிடைக்கிறதோ? அந்த நேரம் நீண்டுக் கொண்டேயிருக்கும். என் கண்கள் துளித்துளியாய் அறை நிரப்பும் நெருப்பின் நிழலில் மேய ஆரம்பிக்கும். எங்களிடையே மொழிகள் உலாவுவது இல்லை. அப்பா வீட்டில் நுழையும் வரை அம்மாவின் வீடாய் இருக்கும் அறைகள், அவர் வந்த பிறகு பிண நாற்றம் எடுக்கும் மயானமாகும். அதன் பிறகு அவள் என்னை விட்டு விலகுவதுமில்லை, கைகளுக்குள் என்னை அடைத்துவிடுவாள். ஆனாலும் இரவில் அப்பாவின் கைகள் என்னை அவளின் கைகளுக்குள்ளிருந்து வெட்டி எறியும். அங்கே நான் வேண்டாதவனாய் தனியே கிடப்பேன்.

*

நேரம் போய்க் கொண்டேயிருந்தது, எழுந்தால் தெரியும் ஜன்னல் காட்சி. ஆனாலும் எழும்பி நிற்க மனம் எனும் விலங்கு விடவில்லை. நாய்களின் குரைப்பு அவனுள் ஒலிக்க, நினைத்த காரியத்தைத் தொடர, கீழே இறங்க எத்தனித்தான். ஜன்னலின் திறந்த கதவு வழியே சிந்திய வார்த்தைகள் அவன் காதுக்குள் ரீங்காரமிட்டன.

“செத்து போ..” ஆணின் குரல்.

“இன்னொரு உயிர கொல்லக் கூடாதுன்னு தான், இத்தன நாள் அமைதியா இருந்தேன்.. நீ எங்க போறன்னு எனக்கு தெரியாதுன்னு நினச்சுட்டு இருக்கியா?.. எல்லா தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணின..” பெண்ணின் குரல்.

“நா ஒன்னும் உன்ன விரும்பி கல்யாணம் பண்ணல.. அது நடந்துச்சு.. பழச பேசி எந்த உபயோகமும் இல்ல.. மெரட்டி மெரட்டி என்ன பயமுறுத்தாதே.. சாவணும்ன்னா சாவு.. அப்படியாவது நிம்மதி கிடைச்சா சந்தோசம் தான்”

“நல்லவன் வேஷம் போட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாத்தி இருக்க.. ஒங்கூட படுத்தேன்னு நினச்சா அசிங்கமா இருக்கு”

“படுத்தேன்.. அதுக்குன்னு இது என்னோட குழந்தை இல்ல.. அதுக்கு முன்னாடியே நீ கர்ப்பம் ஆயிருக்க… உன்னோட மொத புருஷன் ஆக்சிடென்ட்ல செத்துட்டான்.. ஒரு வேள உயிரோட இருந்திருந்தான்னா.. அவனும் இதே தான் சொல்லியிருப்பான்.. செத்து போ”

அதன் பிறகு வார்த்தைகள் அறையில் இருந்து கேட்கவில்லை. அவன் அங்கேயே தொடர்ந்து படுத்து கிடந்தான். சொற்களின் அர்த்தம் அவனை நகரச் செய்யவில்லை.

*

ன் முதல் திருட்டு கிழவனோடு அமர்ந்திருந்த மரநிழலிலிருந்து பத்தடி தள்ளியிருக்கும் சாலையில் நடந்தது. குப்பைத்தொட்டியில் இருந்து பொருக்கியெடுத்த அட்டைகளையும் பாலிதீன் கவர்களையும் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சத்தம் கேட்டது. இருசக்கர வாகனம் இரண்டு ஒன்றோடொன்று மோத, விழுந்த இருவரில் ஒருவனின் மோதிர விரல் தனியே என் காலடியில் விழுந்தது. அதிலே மின்னிய மோதிரம் என்னையும் கிழவனையும் இழுத்தது.

“யோசிக்காத.. எடுத்து பாக்கெட்டில போடு.. ஒரு மாசம் நல்ல சாப்பாடு திங்கலாம்..”

கிழவன் என்னை அதை எடுக்கச் சொல்லி உந்தினான். கூட்டம் கூடிக்கொண்டு இருந்தது. வழக்கம் போல யாரின் பார்வையும் எங்கள் பக்கமில்லை. கீழே குனிந்து விரலை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். மோதிரத்தை விற்ற பிறகு கிடைத்த பணத்தில் ஒரு மாதம் சுவையான சாப்பாட்டை மட்டுமே உண்டோம். அந்த பணம் தீரவே, எனக்கு இன்னும் பணம் வேண்டும் எனும் துடியேறியது.

*

நிசப்தம். சற்று முன்னே கேட்ட இருவரின் குரலும் இல்லை. இங்கே உடல்களின் விளையாட்டு இனியில்லை. காவல் வண்டி ரோந்து போகும் நேரமிது. இரவில் அந்த வீதியில் எந்த நேரம்? என்ன நடக்கும்? என்பதை ஏற்கனவே அவன் நோட்டமிட்டு வைத்திருந்தான். நாய்களின் அடுத்தக் கட்ட எல்லை பிரிப்பு போராட்டம் நடக்க சற்று நேரம் பிடிக்கும். கீழே இறங்கி வீட்டில் நுழைவதற்கு சரியானத் தருணம் இல்லை. இன்னும் அங்கேயே இருளில் படுத்துக்கிடக்க வேண்டும். விசும்பும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மெதுவாக ஜன்னல் தெரியும் பக்கமுள்ள சன்செட்டிற்கு நகர்ந்தான். அவள் மட்டும் படுக்கையறையில் தனியாய் அழுதபடி இருந்தாள். ஹாலில் அவன் அமர்ந்தபடி கையில் மதுக்கோப்பையுடன் இருந்தான்.

*

ரண்டாம் திருட்டு அவ்வளவு எளிதாக அமையவில்லை. தப்பி வந்ததே பெரும்பாடு. கையில் கிடைத்தது பழைய இரும்புச் சாமான்கள் மட்டுமே. இரண்டு வாரத்திற்கு தேவையான பணம் கிடைத்தது. கிழவன் வழக்கமான காயிலான் கடையில் தங்கிக் கொண்டார். நாங்கள் அங்கே தங்குவதை, முதலாளி இரவுக்காவலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். நாங்களும் வாடகையில்லாமல் தங்கிக் கொண்டோம். மூன்றாவது, நான்காவது திருட்டு கோயில்களில் நடந்தது. அதில் தவறுகள் நிகழவில்லை. ஐந்தாவது திருட்டில் நான் காவல் நிலையம் சென்றேன். அது ஒருவகையில் வசதிக்குத்தான், அங்கேதான் திட்டமிட்டு திருடும் பாடத்தைப் படித்தேன். ஆனாலும், பின்னர் மூன்று தடவை காவல் நிலையம் போக நேர்ந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் என் திட்டமிடல் சார்ந்த பட்டப்படிப்பில் நான் தேர்ச்சி அடைந்த காலம் அது. சிறிய திருட்டு எல்லாம் வாரத்திற்கு தான் உபயோகப்படும். ஆனால் நெடுநாள் திட்டமிட்டு பெரிதாகத் திருடும் பணம் மாதக்கணக்கில் உபயோகப்படும். இந்த கால இடைவெளியில் அம்மாவையும் அப்பாவையும் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலகி ஓடிவிட்டன.

*

நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. காவல் வண்டியும் கூர்க்காவும் இந்த வீதியைக் கடந்துபோய் விட்டார்கள். அடுத்த சுற்றுக்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகும். அதற்குள் கீழ்வீட்டில் நுழைந்து தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம். அவன் யோசித்துக் கொண்டே இறங்கப் போனான்.

“சீ.. தேவிடியா.. அழுது அழுது நடிக்காத.. மொகத்த பாக்கவே வெறுப்பா இருக்கு.. என்ன கல்யாணம் பண்ணப் போறன்னு தெரிஞ்ச அன்னைக்கே இத கலச்சு இருக்கலாம்ல்லா.. இப்போ எதுக்கு நடிக்க..”

“மனுஷனா நீ.. ஒரு உயிர கொல்ல வேண்டாம்.. அது பாவம்ன்னு நீதான வேண்டாம்ன்னு சொன்ன.. ஒம்புத்தி அப்போ தெரியலையே.. அஞ்சு மாசம் கழிச்சு கலைக்கச் சொன்னா.. முடியாதுன்னு டாக்டர் தானே சொன்னாங்க.. அஞ்சு மாசம் எங்க போன.. அதுக்கு பொறவும் எங்கூட படுத்தியே.. இப்போ உனக்கு நான் புளிச்சிட்டேன்.. பெரிய வேல மயிரு பாத்தா போதாது.. அறிவு வேண்டாம்”

அவன், அவள் கன்னத்தில் அறைந்தான். அங்கே நடப்பவை நகரவிடாமல் என்னைத் தடுத்தது. அங்கேயே சன்செட்டில் படுத்தவாறே கிடந்தேன். அவள் கதவைச் சாத்தி படுக்கையறைக்கு வந்தவள், கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். மேஜை டிராயரில் இருந்து சிறிய கண்ணாடிச் சட்டகத்தை எடுத்தாள். நான் அது என்னவென்று கூர்ந்து கவனித்தேன். கன்னியொருத்தி தவக்கோலத்தில் நின்றபடியிருந்தாள். வருடங்கள் பல கடந்திருக்க வேண்டும். அந்த கன்னியின் முகம் பார்த்ததில், ஏனோ நான் தவிர்க்கும் அம்மாவின் முகம் தோன்றி மறைந்தது.

*

ப்பாவிற்குச் சொந்தமாக நான்கு கடைகள் சேர்ந்த கட்டிடம் உண்டு. அதுவும் எங்கள் ஊரின் மையத்தில் இருந்தது. அம்மாவுடன் என்னை முதன்முதலில் பார்த்த பொழுது அவர்தான் சொன்னார்.

“என்ன முழிக்க.. என்னய அப்பான்னே கூப்புடு சரியா.. மொகத்துல ஒளியுண்டு.. நல்லா வருவான் பாரு”

அம்மாவின் புதுச்சேலைக்குள்ளில் இருந்து எட்டிப் பார்த்த நான் அம்மாவைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டே அப்பாவைப் பார்த்தபடி நின்றாள். எங்களை சினிமாவிற்கு மாதம் ஒருமுறை அழைத்துச் சென்றார். பிறகு ஒருநாள் அம்மா பாப்பாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். முதலில் அது அரிசி மணியாக கிடந்ததாம், இப்போது பூசணிக்காய் போல அவள் வயிறு முட்டி வெளியே வரப்போகிறதாம். என் கைப்பிடித்து பாப்பாவின் நகர்தலைத் தொட்டுக் காட்டுவாள்.

*

வள் கட்டிலிலிருந்து எழுந்து, அங்கேயும் இங்கேயுமாய் நடக்க ஆரம்பித்தாள். அவளின் செய்கைகள் அம்மாவின் நினைவை இன்னும் வலுவாய்க் கீறிவிட்டது. அலமாரியைத் திறந்து பட்டுப்புடவையொன்றை எடுத்து வெகுநேரம் முகம் புதைத்து அழுதாள். நான் மல்லாந்து படுத்தேன். வானில் நட்சத்திரங்கள் நகர ஆரம்பித்தன. ஒன்றோடொன்று மோதி வெடித்தன, அதன் சிதறிய ஒளிப்பிழம்பில் கண்கள் கூசின. சன்செட் வழியே நகர்ந்து ஹாலைப் பார்த்தேன். அவன் அங்கேயே மதுக்கோப்பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

படுக்கையறையை நோட்டமிட்டேன். அவள் மின்விசிறியில் பட்டுப் புடவையை கட்டித் தொங்க விட்டாள். முனையில் முகம் நுழைத்து வயிற்றை கையால் தாங்கிக்கொண்டு அழுதபடி நின்றாள். அவள் கட்டியிருந்த புடவையை விலக்கி, எம்பி நிற்கும் வயிற்றைத் தடவ, அதில் ஏதோ அசைவது எனக்கு தெரிந்தது. அவள் செய்யப்போகும் காரியம் இதுவரையிலும் என்னைப் பதட்டத்திற்கு ஆட்படுத்தவில்லை. ஒரு சின்ன நகர்வு என்னை அசைத்தது. எதற்கென வந்தேனோ? காரியம் மறந்து போனது. இன்னொரு முறை ஒரு புழுவைப்போல வயிற்றில் நகரும் அசைவு, இத்தனை நாள் நான் ஓடிக்கொண்டிருக்கும் நீண்டப் பாதையை மறித்துப் பார்க்க முயற்சிக்கிறது.

இன்னும் மேல்வீட்டைப் பார்ப்பதில் பயனில்லை. மெல்ல இறங்கினேன். பின்கதைவை கையில் இருந்த கம்பியால் எம்பி திறந்தேன். கெவுளி என் தலைக்கு மேலே கத்திக் கொண்டிருந்தது. அம்மாவின் ஸ்பரிசம் மீண்டும் என்னைக் கட்டி அணைப்பதைப் போல உணர்ந்தேன்.

மேல்வீட்டின் பின்கதவு அவ்வளவு எளிதாகத் திறந்தது. உள்ளே சென்றேன், மிக நிதானமாக நடந்தேன். அறையில் புதிதாக வாங்கிய பொருட்களின் மணமே அடைத்து நின்றது. அவன் ஹாலில் இருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான். படுக்கையறை கதவு திறந்து கிடந்தது. நான் தள்ளவும், மீண்டும் ‘அதே காட்சி’. நகரத்தை விட்டுச்செல்லும் இரயில் மெதுவாக தடதடக்கச் செல்லும் ஒலி கேட்டது.

*

வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் கழித்தே அப்பாவை நேரில் கண்டேன். எங்களை அழைத்துச் சென்ற அதே திரையரங்கில் அவரோடு இன்னொருத்தியும், அவள் புடவையை என்னைப் போலவே நுனிப்பிடித்து சிறுவன் ஒருவனும் நின்று கொண்டிருந்தனர். அவனுக்கு அப்பாவின் சாடை.

*

புடவை முனையில் இறுக்கிய கழுத்து, வெளிப்பிதுங்கிய கண்கள், பற்கள் இடையே கடிப்பட்ட நாக்கு. அவளையே பார்த்தவன் அப்போது தான் கீழே பார்த்தேன். தசைக்கயிறு நீண்டு போய் இரத்தப் பொட்டலம் கீழே கிடந்தது. அவளைத் தொட்டுப் பார்த்தேன், நாடியில்லை. கீழே கிடந்த பொட்டலத்தை எடுத்தேன். என் கைகளின் சூடு பட்டதும் அது அசைந்தது. அம்மாவின் வயிற்றில் அசைந்த அதே பாப்பாவின் நகர்வு. மேலே தொங்கிக் கொண்டிருந்தவளை வெறித்துக்கொண்டே நின்றேன். அவள் முகத்தில் காறி உமிழத் தோன்றியது. அப்பாவின் வெறிமுகம் கண்களில் நுழைய, கையில் பாப்பாவோடு ஹாலுக்கு வந்தேன். அதே வெறிமுகம் சோபாவில் கிடந்தது. மண்டைக்குள் காயிலான் கடையில் இரும்பு அடிக்கும் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும் உக்கிரமாக, வெறியாக, வலியாக, கண்ணீராக, ஆத்திரமாக, பசியாக, அணைப்பாக விடாமல் கேட்டது.

கீழ்வீட்டின் கதவை பலமாகத் தட்டினேன். பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கிறது. பாப்பாவை துணியால் பொதிந்து வீட்டு வாசலில் தெரியும்படி போட்டுவிட்டு, மறைவாய் அமர்ந்துக் கொண்டேன். வந்தவர்கள் பொதியைக் கூர்ந்துப் பார்த்தனர். உள்ளே இருப்பது தெரியவும், கதவைச் சட்டென்று சாத்தி உள்ளே போய்விட்டனர்.

பொதி அசைந்துக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல ஒரு விசும்பலும் கேட்க ஆரம்பித்தது. என்ன நடக்கும் என உத்தேசித்து விட்டேன். பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி இருளில் மறைந்தேன். பல பாதைகள் கண்முன்னே விரிந்தன.

***

வைரவன் லெ.ரா
சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

குளத்துக்கரை

0

லட்சுமிஹர்

வசியைத் தேடி ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்த மாயன் காளை குளத்துக்கரையில் எந்தவித அசைவும் இன்றி அமர்ந்திருந்தது.

*

1

ந்த டவுன் பஸ் மெதுவாக இருபக்கம் இருக்கும் வயல்வெளிகளை பார்த்துக்கொண்டு போவதாகப் பட்டது ரங்கத்துக்கு. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவர் சத்தமாக, “நிப்பாட்டிருடா.. எறங்கி நின்னு பாத்துட்டே போவோம்” என்றார் டிரைவரை பார்த்து.

சட்டெனெ அவன் திரும்பி ஒரு மொறப்பை தூவிவிட்டு எந்தவித மாறுதலும் இல்லாமல் வண்டியை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ரங்கம் அந்தியூர் போய்விட்டு பாப்பநாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். ரங்கத்தை பாப்பநாட்டுக்காரர்கள் ‘அந்தியூர் ரங்கம்’ என்று தான் கூப்பிடுவர். அந்தியூரின் உறவை முறித்துக்கொண்டு பல வருடங்கள் ஆயினும் அம்மாவுக்காக அங்கு போய்விட்டு வருவார். அம்மா இறந்தபோது ரங்கத்திற்கு சின்ன வயசுதான். அதன் பிறகு பல இழப்புகள். பாப்பநாட்டிற்கு கருப்பு மண்டையோடு வந்தவர் இப்போது நரைத்து விட்டது. வண்டியில் ஓடும் பாட்டுச் சத்தம் அவருக்கு பிடித்து இருந்தது. கையில் வைத்திருந்த பைகளை ஒருமுறை பார்த்துக் கொண்டவர் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் பாட்டு கேட்க ஆரம்பித்தார். இன்னும் பாப்பநாடு வர அரைமணி நேரம் ஆகும் என்பதால் தூங்க முற்பட்டார்.

ரங்கம் மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் படு பிரபலம். சினிமா ஸ்டார் போல. அவரின் நடையை அதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவரின் நடை ஓர் ஓட்டத்தைக் கொண்டிருக்கும். பையில் வைத்திருக்கும் பொருட்களுக்குள் இருந்து வரும் சத்தமே ரங்கம் வந்துவிட்டார் என்று அங்கு எல்லோரும் அறிந்திட உதவும்.

ரங்கத்தின் கிராக்கி அங்குள்ளவர்களுக்குத் தெரியும். அவர் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களில் எது சிறந்தது? அதை நம்ம மாட்டுக்கு எடுத்துடணும் என்று ஒரு போட்டி இருக்கும். பெரும்பாலும் விலை சொல்லி வாங்குவதை விட உறவைச் சொல்லி வாங்கிச் செல்பவர்களே அங்கு அதிகம். ரங்கம் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களுக்கு என்று சந்தையில் தனிக்கூட்டம் வரும்.

வாரத்திற்கு ஒருமுறை கூடும் மாட்டுச் சந்தையில் ரங்கத்தைப் பார்க்கலாம். ஒரு பையுடன் தான் வருவார். வேட்டிக்குள் மடித்து வைத்திருக்கும் நியூஸ் பேப்பரை எடுத்து விரித்து மாட்டின் அலங்காரத்திற்குத் தேவையான ஒவ்வொரு பொருளாக எடுத்து வைப்பார். அதற்குள் அங்கொரு கூட்டம் கூடிவிடும். ரங்கம் பேரம் எதுவும் பேசுவதில்லை. அவருக்குச் சரி என்று படுவதைச் செய்வார். சலங்கை, திருகாணி, மணி, கொம்புக்கான கலர் பேப்பர் என்று வியாபாரம் போய்க்கொண்டே தான் இருக்கும்.

ரங்கம் ஆள் கொஞ்சம் பருத்த தேகம் கொண்டவர் தான். முன்பு மாதிரி இப்போது அவரால் நடக்கவும் முடியவில்லை. அது அவருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

கடை விரித்து அலங்காரப் பொருட்கள் விற்றல் ஒரு ரகம் என்றால் சில சமயம் புதிய காளையை வாங்கி இருப்பவர்களின் வீட்டுக்கே போய் அலங்காரம் செய்துவிட்டு வருவார். அதற்கு தனி காசெல்லாம் இல்லை. அது பழக்க வழக்கத்துக்காகச் செய்வது. அலங்காரப் பொருளுக்கு மட்டும் காசை வாங்கிக் கொள்வார்.

ரங்கம் அந்தியூரில் இருந்து பாப்பநாட்டுக்கு வந்தபோது அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தவசி என்கிற ஒருவரின் நட்பு அவரை வேத்து ஆளு என்கிற பார்வையை மாற்றி, வெறும் பேரில் மட்டும் அவரின் சொந்த ஊர் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.

தவசிக்கும் அவருக்குமான முதல் சந்திப்பு எப்படி என்பதெல்லாம் மறந்து இருந்தார் ரங்கம். ஆனால் தவசியும் அவரின் காளை மாயனும் நடந்துவரும் அந்த கம்பீரத் தோற்றம் அவருக்குள் இன்னும் மறையாமல் இருக்கிறது.

எப்போதும் அந்தியூர் சாட்டைனா தனி மௌசு. மூங்கிலை வட்டமா நெருப்பில் வாட்டி, நேராக்கி, அதுல மஞ்சள், எண்ணெய் தடவி தயார் பண்ணிக் கொடுப்பாங்க. கயிறு தயாரிச்சு சாட்டையா செய்யுறதுல அந்தியூர் சாட்டைக்கு எப்பயும் தனிச்செல்வாக்கு. அப்படி ஒருநாள் தஞ்சாவூர் சந்தைக்கு வந்திருந்தப்போ ஏற்பட்ட உறவுதான் இந்த பாப்பநாட்டில் நிலைகொள்ள வைத்தது. அந்தியூரில் இருந்து நகர எந்தவிதக் காரணமும் இல்லாமல் தான் இங்கு வரநேர்ந்தது. அப்பா அம்மாவை இழந்த பிறகு ரங்கத்திற்கு அந்த ஊர் அந்நியப்பட்டு போய் விட்டது. அங்கிருந்து இங்கு மாட்டின் அலங்கார வியாபாரியாக வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். அவருக்கு பாப்பநாடு பிடித்திருந்தது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் திரியும் மனிதக் கூட்டம்.

“ஐயா எறங்கலயா?” என்று தூங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்துக் கேட்ட அருகில் இருந்த பையனிடம் “பாப்பநாடா” என்றார் பதட்டத்துடன்.

“ஆமா”

அங்கிருந்து பையை எடுத்துக்கொண்டு ஆமா என்றதற்கு பதில் சொல்லாமல் கீழிறங்கினார். கீழே இறங்கியவரைக் கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். பையில் இருந்த பொருட்கள் தாங்கள் சரியாக உள்ளோம் என்பது போல ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. முதல் வேலையாக கன்னியன் வீட்டுக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு நடக்கத் தொடங்கியிருந்தார்.

ஒவ்வொரு முறை புது அலங்காரப் பொருட்களுடன் இறங்கும்போது, முன்பே சில ஆட்கள் கேட்ட அலங்காரப் பொருட்களை வாங்கிவந்து அதை முதலில் கொடுத்துவிடுவார். போனமுறை கன்னியன் கேட்ட கொம்புக் கயிறு அதுவும் அவன் கேட்ட அரசியல் கட்சி கலரில் வாங்கி வந்திருந்தார். பையுடன் அவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஊரான் ஒருத்தன், “தாத்தா நான் பைய தூக்கியாறென்” என்றதற்கு..

“கைய விட்றா பொடி பயலே, அப்படியே உதவி பண்றேனு அங்க போறதுக்குள்ள பாதிய இவனே களவாண்டுப்புடுவான் எடு கைய”

அவனை அதட்டி விட்டார்.

நடையில் வேகம் கூடியது. கன்னியன் வீடு திறந்து தான் இருந்தது. வீட்டின் முன்னே இருந்த தொழுவத்தில் சீரான இடைவெளியில் மாடுகள் கட்டப்பட்டிருந்தது. வெயில் மாடுகளுக்கு இறங்கக்கூடாது என்று ஆஸ்பெட்டாஸ் சீட் மீது தென்னை மற்றும் பனை ஓலைகள் பரப்பி வைத்திருந்ததைப் பார்த்தார்.

உள்ளே நுழைந்ததும் இவரின் வாசத்தை உணர்ந்த கன்னியனின் காங்கேயம் காளை ‘மெல்லன்’ ஒரமுறை மூச்சை இழுத்து விட்டது. எப்பா இவ்ளோ தூரமா இருக்குறப்பவே பயமா இருக்கே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

“கன்னியா..! கன்னியா..!”
கூப்பிட்டு விட்டு வாசல் படிக்கட்டில் உட்கார்ந்துக் கொண்டார். கன்னியன் பார்க்க மொரட்டுத்தனமா இருந்தாலும் மாடு வளர்ப்பதில் ‘கில்லாடி’. படிச்சவன் அப்படிதான் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் கன்னியன் அத ஏத்துக்க மாட்டான், “எனக்கு எங்க அப்பன் தான் சொல்லி தந்தாரு, அவரு என்ன படுச்சாரு, உங்க கூட தான சுத்திட்டு இருந்தாரு” என்று பேசுவான்.

கன்னியன் ஊரில் இருக்கும் இளசுகளுக்கு எல்லாம் மூத்தவன். இவர் வீடே கதி என்று சுற்றித்திரியும் இளசுகள். மாடு வளக்குறத சொல்லியா கொடுக்க முடியும்? கூட இருந்து பாத்துக்குறது தான். கன்னியன் உள்ளிருந்து ‘வரேணா’ என்றதும் பையில் கன்னியனுக்கு கொடுக்க வேண்டிய கொம்பு, கயிறை எடுத்து கீழே வைத்துவிட்டு அருகிலிருந்த தொட்டிக்குள் கிடந்த டப்பாவில் தண்ணியை எடுத்து வந்து அந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டின் மேல் ஊற்றத் தொடங்கினார்.

‘வெயிலுக்கு வாடி போயிருதுங்க, போன முறை கோடைக்கு எத்தன மாடு கன்னு செத்துபோச்சு, எங்க கேக்குறாங்க மத்தியான மொட்ட வெயில்ல மேக்க விடாதீங்கடான்னா…’ என்று மேலும் தண்ணியை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டின் எல்லா பக்கமும் சமமாக ஊற்றினார்.

“அண்ணே சொன்ன மாதிரியே டக்கரா வாங்கிட்டு வந்துருக்கியே”

கன்னியனின் குரல்கேட்டு டப்பாவை தொட்டிக்குள் போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்திருந்த கன்னியன் பக்கத்தில் வந்துவிட்டார் ரங்கம். ஒரு சிரிப்பு மட்டும் தான் ரங்கத்திடம் இருந்து. கன்னியன் அவனுக்கான கொம்பு கயிறை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரங்கம், அதற்குள் பையில் வைத்திருந்த பொருட்களை எடுத்து காட்டத் தொடங்கினார். அதில் கயிறு ஐட்டம் தான் நிறைய இருந்தது. மாட்டிற்கு தேவையான ‘தலை கயிறு, கொம்புக் கயிறு, மூக்கணாங் கயிறு, முகரச்செண்டு, பாறைக் கயிறு’ என எடுத்துக் காட்டிக்கொண்டே இருந்தார். கன்னியன் அவனுக்கு தேவையானது ஏதும் இருக்குமா என்று பார்த்துக் கொண்டான். கையில் வைத்திருந்த கயிற்றுக்கு விலையைக் கேட்டு வாங்கிக்கொண்டான் கன்னியன். அவனது ‘மெல்லன்’ காளைக்கு அது சரியாக இருக்கும் என்று சொன்னது ரங்கத்திற்கு பெரும் நிம்மதி. காசை வாங்கி பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். தரையில் எடுத்துக் காட்டிய அனைத்தையும் மீண்டும் பைக்குள் எடுத்துவைத்துக் கொண்டார்.

“புதுசா வண்டி மாடு வாங்கிருக்கே” என்றான் கன்னியன்.

“பாப்போம்” என்றார் ரங்கம் சிரித்துக் கொண்டே.

வண்டிமாடு கட்டியிருக்கும் பின்பக்க வீட்டிற்கு அழைத்துப் போனான். அவனது தொழுவம் சுத்தமாக இருந்தது. மாட்டை காட்டி என்ன ரகம் என்று கன்னியன் சொல்வதற்குள் ரங்கம் “மணப்பாறை காளையா?” என்றார்.

ஆச்சரியப்பட்டு “எப்படி?” என்றான்.

என்ன கன்னியா.. வளக்குறவனுக்கு மட்டும் தான் தெரியணுமா என்ன?”

“இல்லணே அப்படி சொல்லல எப்படி மணப்பாறைனு..” என்று நிறுத்திக் கொண்டான்.

“திமில பாத்தாலே தெரியுதே, மணப்பாறை காளைங்க திமிலு தான் இவ்வளவு பெருசா இருக்கும். வண்டி மாட்டுக்கு சரியான ரகம்யா”

கன்னியனுக்கு ஒருவித சந்தோசம்.

ரங்கம், காளை இன்னும் கம்பீரமாக இருக்கும் என்று அந்த மாட்டிற்கான அலங்காரப் பொருட்களை மனதிற்குள் நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் கன்னியனிடம் அதை சொல்லிக்கொள்ளவில்லை. தேவைக்கு தான் வியாபாரம், அது அவரின் கொள்கை. கன்னியனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நடக்கத் தொடங்கினார்.

மழை பேஞ்சு சொதசொதவென்று இருந்த காவேரி ஆத்துக்கரையில் தான் தவசியை கடைசியாகப் பார்த்தது. அவ்வளவு உற்சாகத்தோடு தான் இருந்தான் தவசி. எப்போதும் முன்நின்று அடிக்கும் வலிமை கொண்டவனாகவே இருந்தான். அவன் வளர்த்த மாயனும் அப்படியே தான். களத்தில் ஒருத்தனையும் நெருங்க விட்டது கிடையாது. அலங்காரமே தேவையில்லாத புலிசாரை ரகக்காளை மாயன்.

ரங்கத்திற்கு ஏதோ போல இருந்தது. நடக்க முடியவில்லை. கைப்பை சட்டென எடை கூடிவிட்டது போல இருந்தது. இன்னும் கொஞ்சதூரம் தான் என்று வேக நடையை இன்னும் வேகப்படுத்தினார்.

தவசி இறந்து விட்டானா என்று தெரியவில்லை. அவன் காணாமல் போன பின் இங்கு ஒரு பெரும் அமைதி நிலவியது. அந்த அமைதி காணாமல் போன தவசியின் மரணத்திற்கு கூட எடுத்துக்கொள்ளலாம். பகை இல்லாத களம் என்று இங்கு எதுவும் இல்லை. அதுவும் வாடியின் பகை கெளரவத்தால் மூடப்பட்டிருக்கிறது. திறந்து அடங்கும் பட்சத்தில் இங்கு இருக்கும் நிலம் அறிய விழும் ரத்தம் மறைக்கப்படுகிறது. அதில் ஒருவன் தான் தவசியும். மாயனை அதன் பிறகு ஒரு பிடிக்குள்ளும் வைக்க முடியவில்லை. வாடியில் அவன் புகழை நெருங்க முடியாது என்ற கூற்றின் நிழல் அவனின் ரத்தத்திற்கு விடையாக ஆகிப்போனது. அலங்காரம் அற்ற அவனின் பழக்கம் ரங்கத்திற்கு அவன் இருப்பை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

வேகமாக நடந்த ரங்கம் வந்து நின்ற இடம் குளத்துக்கரை மாயன் கோயில். தவசியின் ஞாபகத்தில் மூழ்கியிருந்த ரங்கத்தின் கண்களில் ஈரம் கட்டி இருந்தது. பையில் இருந்து சில அலங்காரப் பொருட்களை எடுத்து அருகில் வைத்துவிட்டு, மெதுவாக துணி கொண்டு மாயன் காளையின் சிலையைத் துடைக்கத் தொடங்கினார். இன்னும் தவசியின் ஞாபகம் அவரை விடுவதாக இல்லை. அலங்காரப் பொருட்களை ஒவ்வொன்றாக அணிவிக்கத் தொடங்கினார்.

“ரங்கம்… நம்ம மாயன் தான் உன் அலங்காரம் இல்லாம ஜம்முனு இருக்கானு”

கேலியாக தவசி சொல்வது ஞாபகம் வர அவரால் அங்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை. தன் பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினார். மாயன், வாடிக்கு தயாரான காளை போல இருந்தது. தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ரங்கத்தால் அதன் மூச்சை உணர முடிந்தது.

திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தார்.

1.1

‘அன்றிரவு குளத்துக்கரைக்கு ஏன் நான் போகவில்லை?’ ரங்கம்.

2
மாரியப்பன் தன்னுடைய டெம்போவை தயார் செய்து கொண்டிருந்தார். இன்று மதுரை மாட்டுத்தாவணி வரை போய்வர வேண்டியிருந்தது. கன்னியனும் இன்னும் நாலு பேரும் மாரியப்பனிடம் வண்டிக்கு சொல்லி இருந்தனர். ஒரே வண்டி வாடகை தான். ஐந்து மாடுகளை ஏற்றும் அளவு இடம் இருந்தது. வேதன்யம் மலையிலிருந்து நேற்று இறக்கிய காளைகளை மணியப்பனின் சொற்படியே இரவே சந்தையில் விற்றுவிட்டார்கள். ஆனாலும் மணியப்பன் தான் சோர்வாக இருந்தார். வயதான அயர்ச்சி அப்படியே தெரிந்தது.

“என்னப்பா மூஞ்சியே சரியில்ல?” என்றதற்கு..

“மூஞ்சி இல்லடே” என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டார்.

அவருடைய கிராமத்தில் அவரை இறக்கிவிட்டு சந்தைக்கு போனார்கள்.

மணியப்பன் இருக்கும் கிராமத்தில் இருந்து வரும் காளைகள் எப்போதும் வாடியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.

அப்போது மாரியப்பனுக்கு சின்ன வயசு. வேதன்யம் மலை கிராமத்து மாடு என்றால் வாடியில் பிடி வீரர்கள் குறைந்து போவார்கள். அவர்களின் வளர்ப்புக் காளைகள் வாடியில் அப்படி ஒரு இருப்பைக் கொண்டிருக்கும். களத்தில் வந்து தான்தோன்றித்தனமாக சுத்தும் காளைகள் இல்லை, ஆள் பார்த்து நின்று சுத்தும் காளைகள் அவை. காளைகளின் வேகத்தை விட வளர்ப்பவர்களின் வேகம் இரண்டு மடங்காகக்கூட இருக்கலாம். அப்படித்தான் மணியப்பனின் காளைகள் வாடியில் நின்று சுத்தும் காளைகள். அப்படி நின்று சுத்தும் காளைகள் மனிதக்குடலை எடுக்காமல் நகராது.

இப்போது மணியப்பனின் தளர்ந்த நடையைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தாலும், வயது அப்படிதான் என்று விட்டுப்போக முடியவில்லை. அவர் சொன்னது போல, கவலை மூஞ்சியில் இல்லை. இருபது வருடங்கள் கடந்தாலும் தவசி காணாமல் போன ஏக்கம் அப்படியே இருந்தது.

மணியப்பன் தானாக வந்து காளைகளை வாடியில் அவிழ்ப்பது கிடையாது. அவருக்கு என்று தனி அழைப்பு இருக்க வேண்டும். அவ்வளவு தாட்டியமாக இருக்கக் கூடியவர். ‘வித்த தெரிஞ்சவனுக்கு இறுமாப்பு இருக்கத்தான் செய்யும்’ என்பது அவருக்கு காதில் விழுந்தாலும் அவர் ‘இன்னும் சத்தமா கேக்கணும்’ என்பார். இந்த இறுமாப்பு இங்கு மாடு வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அப்போதிருந்து இப்போதுவரை இருக்கிறது.

வாடியில் ஒரு சுத்து சுத்தி நின்னு விளையாடும் காளை பிடிபடாது, களத்தில் காளையின் ஆட்டத்தை விட இப்போது வெளியில் மணியப்பனின் ஆட்டம் பலமாக இருக்கும். தன் ஒற்றைக்காலை எடுத்து இன்னொரு கால்மேல் போட்டு கையை மேல்தூக்கி வேட்டியின் ஒற்றை நுனியை பல்லில் கடித்துக்கொண்டு போடும் குதியாட்டம் ஒரு ரகம்தான். ‘களத்துல மணியப்பன் மாடு நின்னு தூக்குச்சுனா இங்க இவன் காலு தரைல இல்லையே’ என்பார்கள். மாரியப்பனுக்கு மணியப்பன் நடனம் ஆடுவது சிரிப்பாக இருந்தாலும் அவன் ஜெயித்தது போல ஒருவித பூரிப்பு இருக்கும்.

வசி ஒருநாள் ரங்கம் என்ற ஆளை மாட்டுச்சந்தையில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், மணியப்பனின் காளை ஜெயித்ததற்கு அதை அலங்காரம் செய்யும் பொருட்டுதான் ரங்கத்தை தவசி மணியப்பனின் கிராமத்திற்கு கூட்டி போனார். மாரியப்பன் மணியப்பனின் வீட்டின் முன் உட்கார்ந்து கொண்டான். சந்தையில் தேடிப்பிடித்துக் காளைக்குத் தேவையானவற்றை வாங்கத் தவசி அலைக்கழித்ததால் மாரியப்பனுக்கு நிற்க முடியாத அளவுக்கு கால் வலித்தது. உட்கார்ந்து கொண்டான். தவசி அப்போது எங்கே திரிந்தாலும் மாரியப்பனை தூக்கிக்கொண்டு போவார்.

மாரியப்பன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஜெயித்த காளைக்கு, ரங்கம் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். மணியப்பனின் அதே நடனம் அவருடன் சேர்ந்துகொண்டு தவசியும் ஆடுவதைப் பார்ப்பதற்கு ஒன்றுபோல இல்லை. இருவரும் ஒருவித மகிழ்ச்சியில் இருந்தனர். ஆட்டம் முடிந்தது.

அன்று மணியப்பனின் பசு ஈன்ற காளையை இருவரும் பார்த்தனர். மாரியப்பன் அதன் அருகில் போய் தொட்டுத்தொட்டு பார்த்துக் கொண்டான். அந்த காளையே மாயன். அன்று அங்கிருந்து கிளம்பும்போது மணியப்பன் அந்தக் காளையை தவசிக்குக் கொடுத்தார். அதை வீடுவந்து சேரும்வரை தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்தான் மாரியப்பன்.
அலங்கரித்த பொருட்களோடு அன்றிலிருந்து இங்கேயே தங்கிவிட்டார் ரங்கம். இங்கேயே பெண்ணெடுத்து குழந்தையும் பிறந்தது.

மாரியப்பனுக்கு இளம் வயதில் தவசியுடன் இன்னும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தவசி காணாமல் போவதற்கு முன்னிரவு மாரியப்பனை குளத்துக்கரைக்கு வரச்சொல்லி இருந்தார். ஏன் என்று எல்லாம் கேட்கவில்லை. சரி என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான். ‘என்ன சேதினு கேட்டிருக்கலாமோ’ என்று இப்போது யோசிக்கிறான்.

அன்று பேசும்போது தவசியிடம் சிறு பதட்டம் இருந்தது. அவருடன் ரங்கம்தான் உடன் இருந்தார்.

அந்த ஆண்டு நடந்த வாடியில் பிரச்சனை ஏற்பட்டது என்று நினைவு இருக்கிறது. அப்போது அதில் கலந்து கொண்டவர்கள் பாதி பேர் இப்போது உயிருடன் இல்லை.

தவசி மாரியப்பனுக்கு பெரியப்பா முறை. பக்கத்து வீடு.

2.1

த்த ஆளாக என்னை வளர்த்த அம்மாவுக்கு தவசி பெரியப்பா தான் காவல். அப்போதெல்லாம் தவசி பெரியப்பாவுக்கும் வனம் அத்தைக்கும் குழந்தை இல்லை என்பதால் சண்டை வந்துகொண்டே இருக்கும். அப்போது அவர் நிரம்ப குடித்துவிட்டு உளறத் தொடங்குவார். இறுதியில் காளையை அணைத்துக் கொஞ்சிக்கொண்டு இருப்பார். என் அம்மா என்னை அடிக்கும் போதெல்லாம் நான் ‘தவசி பெரியப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்றுதான் சொல்வேன்.

மாடு வளர்ப்பு பற்றிய புரிதல் தவசி பெரியப்பாவுக்கு நிரம்ப இருந்தது. அதை அவருடன் இருந்த காலங்களில் நானும் கற்றுக்கொண்டேன்.

குளத்துக்கரையின் இரவுக்கு பிறகு எல்லாம் மாறி போனது. அந்த இரவு எப்படியானது என்பதை என்னால் விவரிக்கவே முடியவில்லை

பெரியப்பா சொன்ன நேரத்தில் குளத்துக்கரையில் இருந்தேன். நிலா மறைந்திருந்தது. எதற்கும் சூழலை சமாளிக்க ஒரு கத்தி மட்டும் வைத்திருந்தேன்.

நேரம் போய்க்கொண்டே தான் இருந்தது. பெரியப்பா வர்ற மாதிரி தெரியலை. இங்கிருந்து நகர்ந்து விடுவோமா என்று கூட தோன்றியது.. ஆனால் பெரியப்பா சொன்னது நினைவில் வர, வேறு எந்த சிந்தனையும் இன்றி குளத்துக்கரையிலேயே நின்றிருந்தேன்.

கரையில் நிலவிய அமைதி என் பொறுமையைச் சோதித்தது. ஒரு துளி வெளிச்சம் வந்தாலும் கண்டுபிடித்து விடும் அளவு இருள் அப்பி இருந்தது.

இப்போதும் வனம் பெரியம்மா கேட்கும்..

“அன்னைக்கு உன்கிட்ட பெரியப்பா என்ன சொன்னாரு?”

“கரைக்கு வந்துருனு சொன்னாரு பெரியம்மா”

“கூட யாரு இருந்தா? எப்போ சொன்னாரு? கோவமா இருந்தாரா? வேற எதுவும் சொல்லலையா..?”

நான் பெரியம்மாவின் பேச்சை நிறுத்த சத்தமாக..

“பெரியம்மா..!” என்பேன்.

சொல்லு மாரியப்பா.. உங்க பெரியப்பன கொன்னுட்டாங்கடா” என்று அழுவும்.

பெரியம்மா என்னிடம் கேள்வி கேட்பதை இன்னும் நிறுத்தவில்லை. ஒருவரின் மறைவு இப்படி பாதிக்குமா என்று இருக்கும். தவசி இங்கு பலருக்கு முக்கியமானவராக இருந்தார்.

“நீ அன்னைக்கு குளத்துக்கரையில எப்போ வரைக்கும் இருந்த? சீக்கிரம் வந்துட்டயா? நல்லா பாத்தியா யாரும் இல்லையா..?” என்கிற கேள்விகள் இந்த இருபது ஆண்டுகளில் என்னைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும்.

“நான் விடியற வர இருந்தேன் பெரியம்மா, பெரியப்பா வரவே இல்ல”

“நீ ஒழுங்கா பாத்துருக்கமாட்ட” என அழ ஆரம்பிக்கும்.

எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருப்பேன்.

“பெரியம்மா நான் ராத்திரி முழுக்க அங்கதான் இருந்தேன். பெரியப்பா வரவே இல்ல”

அழுகை மட்டுமே பதிலாக இருக்கும்.

நான் ரங்கத்திடம் “எதுக்காவ அன்னைக்கு பெரியப்பா குளத்துக்கரைக்கு வர சொல்லியிருந்தாரு.. நீங்களும் கூடதான இருந்தீங்க?” என்று கேட்டால்..

“நீ கெளம்புனப்பையே நானும் கிளம்பிட்டேன்” என்று மட்டுமே சொன்னார்.

அதன் பிறகு அவரிடமும் அதைப் பற்றி கேட்கவில்லை.

ஒவ்வொரு இரவும் கண்விழித்து இருக்கும்போதும்..
“மாரியப்பா.. ஒன்னும் இல்லடா, புது சரக்கு நம்ம மிலிட்டரி பெருசு கிட்ட வாங்கியார சொல்லிருந்தேன் அதான் காத்தாட குளத்து பக்கம் உக்காந்து குடிக்கலாம்னு தான் வர சொன்னே”

என தவசி பெரியப்பாவின் குரல் கேக்காதா என்று இருக்கும். சரக்கை குளத்துக்கரையில் உக்காந்து குடித்துவிட்டு தவசி மாமா ஆடியிருக்க மாட்டாரா.. கண்டிப்பாக நானும் அவருடன் சேர்ந்து ஆடியிருப்பேன்..

டெம்போ லாரியை மாயன் கோயிலில் நிறுத்தி.. வாங்கி வந்த மாலையை சாத்திவிட்டு டெம்போவை எடுத்தேன்.

தூரத்தில் வேதன்யம் காடு தெரிந்தது. அங்கிருந்த மணல்மேடான கொண்டக்குடிகல் திமிலாகத் தெரிய.. வேதன்யம் காடு காளையின் வடிவை ஒத்திருந்தது.

***

லட்சுமிஹர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com


வேதநாயக் கவிதைகள்

0

1

காய்கனிகள்
துளிரிலைகள்
பூச்சி, புழுக்கள்
லட்சோப லட்ச பெரு விருட்சங்கள்

தீ தணிக்க.

உண்டு செரித்து கழித்தவைகளுள்

வயிற்றில் உறங்கும் வனத்தை
பொருட்படுத்தாது
நோயுற்று வயதேந்தி
காலத்தின் படகாய் விண்ணில்
மிதந்து செல்கிறது
பெயரறியா அப்பறவை

2

சிக்கிக்கொள்ள விரும்பவில்லை
கடந்த காலத்தில்

கழிந்தவையனைத்தும்
வந்து கதவைத் தட்டுகிறது

காதலொன்றே வழி
இதுவென் விதி

உண்மையிலேயே சென்ற காலங்களை
தன்னுடனேயே
புதைத்துக் கொள்ள விரும்புதல்

எதுவுமில்லை யாருமில்லை
இறந்த காலத்தினை
குழியிட்டு மூட வகையற்றவராய் தான்

சுற்றிலும் காண்பதற்கு
என்னென்ன இருக்கிறது..?

வெறுமையின் நிரப்பலுக்கு
முன்பு அது ஏன் அவ்வளவு
வெட்கித் தலைகுனிய வேண்டும்?

3

ஏனழுகை என்றதற்கு,
‘குட்டி தம்பி செத்துட்டான்ல?
மூனு நாளாச்சு பால்கட்டி. இப்பதான்
மண் செவுத்துல பீய்ச்சிவிட்டு
ஒக்காந்து அவன நெனச்சி அழுது’
சொட்டுகளை ஈர்த்துக்கொண்டு
தாரை தாரையாகியிருக்கும்
சாணி மெழுகிய அச்சுவர்
எட்ட முடியா உயரத்தில் நின்று
நாய் மூத்திரம் பெய்த
சுவரின் சித்திரமாய் தான் தெரிந்தது

அவளது சித்தி
வெகு காலத்திற்கு பிறகு
இரட்டைக் குழந்தைகளுக்கு
தாயாகியிருந்தாள்
சித்தப்பா இல்லாமலே

மல்லட்டை கொடிகளை
போராக்கி வைத்திருந்த
ஈர தரையில் பள்ளம் தோண்டி
புறா முட்டைகளிட்டு
அதன்மேலாய்
பன்னாடையால் மூடி
மண் தூவி வைக்கோல் தாள்களால்
மறைத்திருந்து
அவிக்க தருவாள்

முதல் அறுப்பென
மித வெல்லமிட்ட சோளச்சோற்றை
பின்வாசலில் வந்து
பம்மியபடி கொடுத்துப் போவாள்

முகத்திலறையும் கடும் மழையில்
வலி மறைத்தபடி
தலையிலிருந்து
உதட்டிலிறங்கும் நீர்த்தாரையை
நா நீட்டி ‘கரிக்குதா உனக்கும்’
என்றவள் தனியே
நிற்கையில் கேட்டவள் தான்

குறுக்கு திருப்பங்களில்
நேருக்கு நேர் மோதி
அவளுடையதை பொருட்படுத்தாமல்
என் தலையை தடவி தடவியே
‘முணுக்’கென
கண்ணீர் கசிந்தவள்

குடித்து தெருச்சண்டையிட்டு
கண்ணாடி குப்பியால்
வயிற்றில் குத்தி ஜெயிலுக்கு போன
அவளது கணவன்
கடுஞ் சுரமேறி
உள்ளேயே மாண்டதையடுத்து
சுருக்கிட்டு கொண்ட இவளுக்கு
ஆனை மாதிரி ஒரு மகன்
அழகாய் ஒரு பெண்

*

நீர்த்த அமிர்தம்

முன்னனுமானிக்க இயலாததாகையால்
வார்த்தைப் பற்கள் பதிந்த உடலை,
அவ்வுடலின் முதுகை
திரும்பிப் பார்க்க சுலபமாகயில்லை

தடித்தவை குறித்து கிலேசமில்லை

கீறல்களை எண்ணி நிசிக்கனவொன்று
பீதியூட்டுகிறது

கரிப்பு மண்டிய காலம்
இதோ ஒழுகிக்கொண்டிருக்கிறது

மிஸ்டர் பரமா…
யார் இது?

வானத்தின் துண்டு பலகையாம் இக்கடல்

கடலடிச் சுறாவொன்று வால் சுழற்றி
நீர்புழுதியை கிளப்பிவிடுகிறது
கன்னங்கரேலென புலன் மறைக்குமொரு காலத்தை

பன்றிக்குட்டிகளுக்கு சுந்தரேஸ்வரன் முலையூட்டி
மகிழ்வித்தானே அத்துடன் ஒப்பிட்டு
ஆயாசந் தீர்த்தோம்.

மீதி பதினொரு குட்டிகளாய் உங்களுடன் சேர்த்து
இவ்வரிகளின் மீது இதழ் பதித்து
உறிஞ்சுவோரில் நானும் உண்டு தானே?

5

அனீஸ் ஃபாத்திமா
சுட்டு விரலையும் நடுவிரலையும்
ஒன்றாக்கி
அறிவற்ற என் மண்டையின் மேலழுத்தி
கட்டை விரலை
விசையொடு மேல்தள்ளி
கற்பனை ரவையை டுமீலென
மூளைக்குள் செலுத்தி
திரும்ப தன் O வடிவ
உதட்டருகே வைத்து
புகையை ஊதுவதாய்
பாவம் செய்வாள்

அவளது உதிரப்போக்கின்
நிறமிருக்கும் ஜாம் தடவிய
இரு ஜோடி ரொட்டித் துண்டுகளாய்
டிபன் பாக்ஸில் வைத்து
முகத்தின் முன் திறந்து நீட்டி
காலை உணவென்பாள்

மர ஸ்பூனை முறித்து
உறைந்த வெனிலா ஐஸை
உருகக் காத்திராமல்
வேண்டுமென்றே குத்தி
முகத்தில் தெறிக்கும் பிசுபிசுப்பை
‘டேஸ்ட் பண்றியா’ என
என்னுதட்டைக் கூர்ந்து
கண்ணடித்து கலவரமூட்டுவாள்

மற்றவர்களுக்கெல்லாம்
‘சின்னச் சின்ன வண்ணக் குயிலுக்கு’
நடனம் ஆடிக் காட்டுவாள்.
என் முன்னே அலைநதியின்
ஓட்டக் கையசைவு கூட
தென்படாமல் பார்த்துக் கொள்வாள்.
-‘வெட்கம் பிடுங்கி தின்னுதுடா’

நீட்டப்பெற்ற திருமண அழைப்பிதழுக்கு
மரியாதையாய்
அன்றைய பின்மாலை
ஆர்.கே வைன் ஷாப்பின்
கல்யாணி பியரில்
அவளை சிறுநீராய்
பிரித்து வெளியேற்றியிருந்தேன்

அவளது குலவழக்க
காலை முகூர்த்த நேரத்தில் எப்போதும் போல்
தூங்கிக் கொண்டிருந்தேனென
பல வருடங்கள் கழித்து குறைபட்டு
அழுதுவிட்டாள் நேரில்

அவளுக்காக
அலிஃப் பே தே சே என
உருதின் முதலெழுத்துகளை
கற்றுக்கொள்ள முனைகையில்
ஏற்பட்ட பரவச
குறுகுறுப்பில்லை

கேஸ் சிலிண்டர் வெடித்து
இறந்து போன அவளுக்கு
இரண்டு பெண் குழந்தைகளாம்
என்கையில்

6

சக்கரமே சாம்பலாகுமாம் ததீசி எம்மான் முன்

கோணலற்ற முதுகுத்தண்டு
எரிகிறது பெரு நெருப்பில்
நீட்டிய தங்கம் உருகுவதற்கு
முன்கணத்தில் நீரூற்றி
சட்டெனக் குளிர்விக்கப்படுகிறது

கணக்கற்ற தேவேந்திரன்களுக்கு
வழிவழியாம் அம்முள்ளெலும்புக்கே
தன்னைத் தருதலுக்கே சொல்லாகிற்று

முடிவற்ற நீரோட்டமொன்று உண்டென்றால்
அஃது
ஒவ்வொரு கணமும் புதுப்பிக்கப்படும் வற்றாத
தியாகத்தின் எப்போதைக்குமான சுட்டல் அல்லவா

அப்படியாயின்
விருத்திராசுரன்கள் என்பதும்
பல்கிப் பல்கி பெருகும் எண்ணிக்கை தானே
அறி

7

மரணத்தின் மையத்திலிருக்கும்
தனி ஆசனத்தில்
அழகழகான வேலைப்பாடுகள்
பொதிந்த கொடு வாளொன்று
இருத்தப் பெற்றிருக்கிறது

நடந்து சென்று அருகு காண
துரிதம் மிகக்கொண்டு
நகர்கையில்

நத்தையின் சாயலாய்
உடல் நலிந்து குன்றிப் போய்
இயங்குவது கண்டு பேதலிக்கிறது

இப்பொழுதைக்கு கையளிக்க
இராப்பொழுது அழுத்தங்களும்
சொப்பன ஸ்கலிதமும்
மட்டுமே மீதமிருக்கிறது
எனைப் பார்த்து
காற்றில் கூட்டல் வடிவ மரக்கட்டையை
வனைபவளுக்காய்

8

விரலிடுக்கின்
இரத்தக் கசிவுகளை
சாவதானமாய் உட்கார்ந்து
நக்கிக் கொடுக்க
பியானோ கட்டைகளை
தேர்ந்தெடுத்திருக்கிறது
அம்முட்டாள் பூனை

***

வேதநாயக்

தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: editorialmagazines@gmail.com


சார்லீன்

0

ராகேஷ் தாரா

முதல் கதை

ந்தப் பெட்டியைத் திறக்கும் தலைவிதி ஏற்பட்டது. இல்லையென்றால் காரணங்களுக்கு அப்பால் தன்னிலையற்ற சுவாதீனத்தில் திளைக்கும் கண்ணியமான ஆன்மா என்னுடையதில்லை. காலத்திரியில் நடந்தேறிடக் நடந்தேறிவிடக் கூடிய பல்வேறு சாத்தியங்களை தேவைக்கதிகமாக பொருட்படுத்தக் கூடிய மனிதர்கள் காலத்தில் ஸ்தம்பித்து நின்றுவிடக் கூடியவர்கள். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் எவ்வளவு சிரமம் என்பதை நான் அறிவேன். எத்தனை திசைகளில் பிரிந்து சென்றாலும் சிந்தனைகளை இருமைக்குள் அடக்கினால் ஒழிய அவை செயலில் பொருந்த முடியாது.

நானும் என் காதலியும் வாரத்திற்கு ஒருமுறை கடற்கரைக்குச் செல்வோம். அப்போதெல்லாம் அவள் கண் கலங்குகிறாள். எதை நினைத்து என்று அவளுக்கே தெரியவில்லையாம். நான் கொஞ்சம் ஊகித்து வைத்திருக்கிறேன். இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஒரு விளக்கத்தைக்கூட என்னால் சொல்ல முடியுமென்று நினைக்கிறேன். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். ஆனால் நான் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பதில்லை. அதன் ஒளிக்குவியல் நம்மை பிரித்தறிய முடியாத உணர்வுநிலைக்கு ஆட்படுத்துகிறது. உணர்வுகள் பொதுவாக ஒன்றன்மீது ஒன்று படிந்து கலவையான சுவைகளை தரக்கூடியவை. ஆனால் இத்தகைய புதிய சுவைகளை நாம் ஏற்கனவே அறிந்து பகுத்து வைத்திருக்கும் உணர்வுநிலைகளுடன் ஒப்பிட்டு அவற்றிற்கு அர்த்தம் கொடுக்கவே விரும்புகிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் வயலின் இசை சோகத்திற்கான குறியீடாகவே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் எனக்கு வயலின் இசையை போட்டுவிட்டு குத்துப்பாடல்களைக் கேட்பது பிடிக்கும்.

சென்ற வாரம் இரவு கடற்கரைக்குச் சென்றிருந்தபோது அவள் சூரிய உதயத்தை நினைத்து கண் கலங்க.. நான் அலைகளின் போக்கை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய அலை எங்கள் காலணிகளை அடித்துச் சென்றுவிட்டது. தனது எஞ்சிய ஒற்றை செருப்பை கையில் வைத்துக்கொண்டு நிற்க வைத்துவிட்டு எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அரை கிலோமீட்டர் தொலைவில் அவற்றை நான் கண்டுபிடித்ததை அவள் இன்னும் ஒரு அற்புதம் என்றே நம்புகிறாள். அவளுக்கு எதையோ பரிசளிக்க நினைத்துதான்..

எத்தனை வீடுகள் மாறினாலும் தனக்கென ஒரு மூலையைப் பிடித்துவிடுகிற இந்தப் பெட்டியைத் திறந்திருக்கிறேன்.

அப்பா ராணுவத்தில் இருந்த காலம் முழுவதும் அந்த சின்ன தகரப்பெட்டி எங்களுடன் இருந்து வருகிறது. வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போகும்போதெல்லாம் அதற்கு அப்பா புது பெயிண்ட் அடித்து வைப்பார். அவர் இறப்புக்குப் பின் அதை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை.

வழக்கமாக நான் இவ்வளவு சுதாரிப்பில்லாமல் நடந்து கொள்பவன் இல்லை. பிடிக்காது என்று தெரிந்தும் ஒருவன் முன் நான் சென்று நிற்பது அவன் முகத்தில் நான் உமிழத் தகுதியானவன் என்பதை எனக்கு நானே நிரூபித்துக் கொள்ளத்தான்.

ஆனால் பரிசைக் கொடுத்தவுடன் லீனாவுடன் திட்டமிட்டிருந்த மாச்சோசிஸ்டிக் கற்பனைகள் கொடுத்த கிளர்ச்சியின் திளைப்பில் என்னையும் அறியாமல் இதைத் திறந்துவிட்டிருந்தேன். உள்ளே கிடந்தவற்றில் குறிப்பிட்ட ஒரு பொருளின் மேல் என் பார்வை நிலைகொள்வதற்கு முன் பெட்டியினுள் அடைபட்டுக் கிடந்த வாசனை குப்பென்று என் முகத்தில் மோதியது.

“நினைவுகளின் வழித்தடத்தில் நாம் பயணிக்காத மற்றொரு திசை’ என்கிற, எப்போதும் புரியாமல் எரிச்சலூட்டிய டி.எஸ் எலியட்டின் வரி புலப்பட்டு அடுத்த கணம் மறைந்தும் போனது.

காலத்தில் மிதக்கும் சுதந்திரத்தை நினைவுகள் நமக்கு அளிக்கின்றன. ஆனால் அது எனக்கு தேவையில்லாத சுதந்திரம். நினைவுகளின் மேல் பூசப்படும் அர்த்தங்களின் வண்ணங்களைத் தேர்வு செய்ய நான் அதிக சிரத்தை எடுத்து கொள்வதில்லை. இருந்தும் சில நேரங்களில் நம்மையும் மீறி இறகை போல் எங்கோ ஒரு குறிப்பிட்ட தினத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம் தான். அவற்றிலிருந்து அவரவருக்கான செளகரியமான அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு தான் வெளிவர முடிகிறது. இல்லையேல் ஸ்தம்பித்து நிற்க வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருந்த ஏதோ ஒரு வீட்டின் சமயலறை. அம்மாவிற்கு பின் அவள் சேலை முந்தானையைப் பிடித்து நின்று கொண்டிருக்கிறேன். அம்மா சப்பாத்தி செய்து கொண்டிருந்தார்.

நன்றாக நினைவிருக்கிறது அன்றைய பசி.

“கொஞ்சம் நேரம் அமைதியா இருப்பா” என்று அம்மா சொல்கிறார். குழந்தைமை பொங்க நான் அவளைப் பார்ப்பது ஓர் அழகான காட்சியாயிருக்கிறது. அவளும் என்னைப் பார்த்து சிரிக்கிறாள். இப்போது நான் எனது பின்னங் கழுத்தை இறுக்கிக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஒரு பலமான தும்பிக்கை போன்ற கை வந்து விழப்போகிறது. அம்மா சொன்னது உள்ளறையில் இருந்த அப்பாவிற்கு கேட்டிருக்க வேண்டும்.

ப்போது யோசித்துப் பார்த்தால் அடி பலமானதாக விழவில்லை என்பது எனக்கு அப்போதே தெரிந்தது. ஆனால் அடித்த அப்பாவின் ஆத்திரத்தை திருப்திப்படுத்தவும் அம்மாவிடமிருந்து சற்று கருணையைப் பெறவும் உந்திச்சென்று நான் அம்மாவின் காலடியில் போய் விழுந்தேன். நினைவை அசை போடும் மனது எதிர்வரவிருக்கும் நிகழ்வுகளை அறிந்த போதிலும் முதல் முறையைப்போல் உணர சில நுட்பங்களைக் கையாள்கிறது. அப்படி நான் விழுந்தபோது என்னையும் மீறி சற்று பலமாகவே தரையில் மோதிக்கொண்டேன். கீழுதடு தரையில் பட்டு ரத்தம் வெளிவரத் தொடங்கியது. தெரிந்தும் இப்போது நான் அதை மறந்தது போல் பாவனை செய்ததால் தான் இந்த நிகழ்வு திரும்பி பார்க்கும் ஏற்பை பெறுகிறது.

இதையெல்லாம் தெரிந்துகொண்டு என்ன செய்ய? பெட்டியைத் திறந்து தொலைத்தது தப்பென்பதை வாயைத் திறந்து சத்தமாக மூன்று முறை சொல்லிப் பார்த்தும் அது எவ்வளவு பெரிய தப்பென்பதை எனக்கு நானே உணர்த்த முடியவில்லை. அதிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வாசனை என் வீட்டின் அறைகள் ஒவ்வொன்றிலும் புகுந்துவிட்டிருந்தது. அப்பா உப்யோகித்த சார்லீன் செண்டின் மணம் என்னை எப்பொழுதுமே தொந்தரவு செய்து வந்திருக்கிறது.

அவர் இறந்தது எனக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்ததோ அதே அளவிற்கு அவரை மறப்பது என்பது பல மடங்கு கடினமானதாக இருந்தது. ஆரம்பத்தில் நான் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் என் வருகையை எதிர்பார்த்து அவர் தனது கட்டிலில் கையில் பிரம்புடன் காத்திருப்பார் என்கிற நினைவில் என் மனம் பதற்றம் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கிவிடும். பிறகு அலங்காரமற்று சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்த பிறகுதான் அவர் இறந்து விட்டார் என்கிற நினைப்பே வரும். அதைவிட பெரிய ஆசுவாசம் எனக்கு எப்போதும் கிடைத்ததில்லை. ஆனால் போகப்போக அப்பா இதய சிகிச்சைப் பெற்று வெற்றிகரமாக உயிரோடு திரும்பி வந்துவிட்டது போல் எனக்கு இரவுகளில் கனவுகள் வரத்தொடங்கின. பயந்தடித்துக் கொண்டு நடு ராத்திரியில் எழுந்து நான் அழத்தொடங்கி விடுவேன்.

என்னைச் சமாதானப்படுத்தும் அம்மாவின் மேல் நான் கோபம் கொள்வதற்கு காரணம் இருந்தது. கனவில் அவள் அப்பாவுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பாள். பிறகு வந்த நாட்களில் தூக்கமே இல்லாத இரவுகளாகக் கழியத் தொடங்கின.

என் மாமா என்னை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார்.

நாங்கள் இருந்த வீட்டை மாற்றினோம். அப்படியிருந்தும் எப்பொழுதும் என்னைச் சுற்றி யாரோ இருக்க வேண்டிய நிலைமை தான். என்மேல் இருந்த பாசத்தால் அம்மா, அப்பாவின் புகைப்படத்தை கூட வாரத்தில் ஒருநாள் மட்டும் வெளியே எடுத்து மாட்டி வைப்பார். அப்பாவின் துணிகளிலிருந்து வரும் சார்லீன் செண்டின் வாசனை என்னை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியது. அந்த வாசனை வீட்டின் எங்கோ ஒரு மூலையில் தேங்கியிருக்கும். அப்போதெல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் சாப்பிட்ட நாவற்பழங்களை அவ்வாசனையின் குமட்டலால் அம்மாவின் கையில் வாந்தி எடுத்து மாட்டிக்கொள்வேன்.

இது தொடர, மனதைக் கல்லாக்கிக்கொண்டு அம்மா, அப்பாவின் துணிகள் முதற்கொண்டு வெளியே வீசி எறிந்துவிட்டாள். வீட்டை மொத்தமாகக் கழுவி துடைத்தாள்.

நான் எப்போது முழுமையாக குணமடைந்தேன் என்று தெரியவில்லை ஆனால் அதற்கு பிறகு நன்றாக சாப்பிட்டேன். அந்த வாசனை உயிர்பெற்று இப்போது வரும்வரை எனக்கு அது மறந்தேவிட்டிருந்தது என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நல்லவேளையாக எனக்கு வாந்தி வரவில்லை. ஆனால் இந்த வாசனையை மறக்க நான் செயலிழக்கச் செய்த நரம்பு இப்போது மறுபடியும் ஆக்டிவேட் ஆகிவிட்டது. அதை செயலிழக்க செய்ய நான் ஏதாவது செய்தாக வேண்டும். எனக்காக எத்தனையோ விஷயங்களை தியாகம் செய்த அம்மா, அப்பாவின் இந்த செண்ட் பாட்டிலை மட்டும் மறைத்து வைத்து கொண்டிருக்கிறாள். அதற்காக நான் அவள் மேல் கோபப்பட முடியாது.

அதை எடுத்து சிவப்பு நிற அட்டைப்பெட்டியில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்த சார்லீன் என்ற பெயரை உச்சரித்தேன். இது பெண்கள் உபயோகிக்கும் பெர்ஃபியூம் என்று அப்பாவிற்கு தெரியாமல் இருந்ததா என்கிற குழப்பம் வந்தது. ஆனால் இதன் அட்டை வடிவமைப்பில் இருக்கும் பெண்ணைப் பார்க்கும் யாருக்கும் இது பெண்கள் உபயோகிக்கும் பொருள் என்பது தெரிந்துவிடும். அதில் தங்க நிற முடிகொண்ட ஒரு வெள்ளைக்காரப் பெண் கண்கள் சொருகிய நிலையில் தனது கழுத்தை தானே நெறித்துக்கொண்டு பரவசமடைகிற ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அவள் நகங்கள் அவள் கழுத்து சதையை அழுத்துவதை நான் சிறுவயதில் பலமணி நேரங்கள் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கழுத்திலிருந்து ரத்தம் வழிவது போல் தோன்றும். என் எல்லா கனவுகளிலும் சார்லீன் ஏதோ ஓர் உருவத்தில் வந்துகொண்டே தான் இருந்திருக்கிறாள்.

அப்பா என்னையும் அம்மாவையும் மாறி மாறி அடிக்க.. கட்டிலில் புகை பிடித்தவாறு சார்லீன் நாடகத்தனமாக சத்தம்போட்டுச் சிரித்துக் கொண்டிருப்பாள். விளையாடிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து என் அம்மாவை கொலை செய்யப் போவதாக என் காதுகளில் கிசுகிசுப்பாள். காலை எழுந்திருக்கும்போது வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பா தனது சட்டையிலும் கழுத்திலும் சார்லீனை பூசிக்கொள்ளும்போது அவள் கழுத்தில் இருந்து வழியும் இரத்தத்தின் மணமாகவே அது இருக்கும். இந்தக் கனவுகளை கட்டுப்படுத்த நான் சில உத்திகளைக் கண்டுபிடித்தேன்.

சார்லீன் என் அம்மாவை பின்னிருந்து கழுத்தை நெறித்துக் கொல்ல வரும்பொழுது என் அம்மா தோசைக்கல்லை எடுத்து அவள் மூக்கிலும் வாயிலுமாக மடார் மடார் என அடித்து விரட்டுவதாக என் கனவுகளை நான் கட்டமைத்து கொள்வேன். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவள் அடிவிழாமல் தப்பிப்பதற்கு சில வழிகளைக் கண்டுபிடித்து வந்தாள். ஒருநாள் அப்பாவின் ஹெல்மெட்டை கூட மாட்டிக்கொண்டாள்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு இதெல்லாம் எதற்கு நினைவிற்கு வரவேண்டும். இவற்றைக் கொண்டு என்ன முடிவுக்கு வருவது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று தெளிவாகிவிட வாய்ப்பிருக்கிறது. ஆக மொத்தத்தில் என் அப்பாவை மயக்கிய சார்லீன் என்னும் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற உண்மையை நான் இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன். இல்லையென்றால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதெல்லாம் எதற்காக என் நினைவிற்கு வரவேண்டும். அப்பா பல நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வந்ததற்கு காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அம்மாவிற்கு முன்பே அப்பா இறந்துவிட்டிருந்தார். இல்லையென்றால் அம்மாவின் இறப்பில் ஏதேனும் சந்தேகப்படும்படியான நிகழ்விருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கலாம்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பதில் கிடைக்காவிட்டால் என்னால் நாளை அலுவலகத்திற்கு சென்று நிம்மதியாக வேலை செய்ய முடியாது. லீனாவுடன் சகஜமாக பேச முடியாது. அதனால் இவற்றிற்கு எல்லாம் நான் நம்பும்படியான அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என் அப்பாவை மயக்கி என்னையும் என் அம்மாவையும் கொலை செய்ய வைத்து என் அப்பாவிடம் இருந்த சிறு பணத்தையும் கைப்பற்றி அவரை ஏமாற்றும் ஆசைக்கொண்ட சார்லீன் என்கிற பெண் இருந்திருக்கிறாள். தனது ஆசைகள் நிறைவேறாமலே அவள் இறந்தும் போயிருப்பாள். திருப்தியடையாத அவள் ஆன்மாதான் என்னை இந்தப் பெட்டியைத் திறக்க வைத்தது. நான் என் காதலிக்கு ஏதோ பரிசைத் தேடத்தான் இதைத் திறந்தேன் இல்லையா. அது என்னவென்றுகூட என்னால் இப்போது நினைவுப்படுத்த முடியவில்லை. அதை நினைவுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. திடீரென்று என்னை யாரோ பின்னிருந்து தொட்டதும் எனக்கு ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.

அது என் லீனா தான்.

முன் வாசல் கதவை எவ்வளவோ தட்டியும் நான் திறக்காததால் பின்கதவு வழியாக உள்ளே வந்திருந்தாள். என்னை தூங்கிவிட்டேன் என நினைத்தவள், நான் நடுவீட்டில் நின்றிருந்தும் கதவைத் திறக்காததால் என்மேல் கோபம் கொண்டு திட்டத் தொடங்கினாள். அவள் பேச்சை திசைமாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன்.

திட்டிக் கொண்டிருந்தவள், என் கையில் இருந்த செண்ட் பாட்டிலைப் பார்த்து என்னிடமிருந்து பிடுங்கி அதைத் திறந்து தனது கழுத்திலும் மணிக்கட்டிலும் தடவிக் கொண்டாள்.

என் அப்பாவை ஏமாற்றி எங்களைப் பழிவாங்க நினைத்து எமாற்றமடைந்த சார்லீன் இப்போது என் வாழ்க்கையில் நுழைந்து என் காதலியை என் கைகளால் கொலை செய்யத் தூண்டுவதற்காக மீண்டும் வந்திருக்கிறாள் என்பதாக இதையெல்லாம் நான் புரிந்து கொள்கிறேன். ஹ்ம்ம்ம்ம்ம்…

***

ராகேஷ் தாரா
போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திரைத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். சில முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மின்னஞ்சல்: rakki.camus@gmail.com

இடுக்கண்

0

அசோக்ராஜ்

குளித்துவிட்டு வருவதற்குள் மெத்தையில் இருந்த செல்ஃபோன் அலமாரிக்கு நகர்ந்திருப்பதைப் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது அதை பூர்ணிமா எடுத்திருக்கிறாள் என்று. செல்ஃபோனுக்கு எந்தப் பூட்டும் நான் போடுவதில்லை. அப்படியே போட்டாலும் பிரயோஜனம் இல்லை. ரகசியம் என்று ஒன்றுமில்லை. ஆனால் சற்று முன்பு அவள் என் செல்ஃபோனை நோண்டியிருக்கும் பட்சத்தில், இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை டென்ஷன்படுத்தப் போகிறாள் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். அனேகமாக அது சாப்பிடும்போதோ, ஷூ மாட்டும்போதோ இருக்கலாம்.

அண்டர்வியரை துண்டோடு சேர்த்து அணிந்தேன். பிறகு துண்டை உருவி தலையைத் துவட்டிக்கொண்டே செல்ஃபோனை பார்த்தேன். அவள் துருவிய சுவடுகள் எதுவும் தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படி ஒன்றும் இல்லை. அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் இந்தப் பயல் சிவா அனுப்பியிருந்த செய்திகளை அவள் பார்த்திருப்பாள் என்றே தோன்றியது. இதன் பொருட்டு என்ன மாதிரி அவள் பிரதிபலிப்பாள் என்று யோசித்தேன். இந்நேரம் என் அம்மாவிடமும் அவள் அம்மாவிடமும் கூட இந்த விஷயத்தைப் பேசியிருப்பாள். என்ன கேட்டால் என்ன சொல்லலாம் என்ற யோசனையிலேயே என் அன்றாட வேகம் தடுமாறியது. கைக்கு வந்த சட்டையை அணிந்து கொண்டு, நேற்றுப்போட்ட பேண்ட்டையே மாட்டிக்கொண்டு, ஆஃபிஸ் போய் இன் செய்து கொள்ளலாம் என்ற நினைப்போடு, அசிரத்தையாக தலையை வாரிக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தேன்.

டைனிங் டேபிளில் இருந்த இட்லியையும் அந்த இட்லியையே வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பூர்ணிமாவையும் பார்த்தபோது அப்படியே நைஸாக நழுவி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன். முடியாது. அவள் இட்லியை வெறிக்கவில்லை. அப்படியான பாவனையில் என் அசைவுகளைத்தான் கவனிப்பாள். நான் இது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதவன் போல் காட்டிக்கொள்ளப் பிரயத்தனப்பட்டேன்.

”இன்னைக்கும் காரச்சட்னியா?” என்றேன்.

இதற்கு முன்பு இப்படிக் கேட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. நேற்று காரச்சட்னியா என்றும் நினைவில்லை. அது பூர்ணிமாவுக்கும் ஒரு பொருட்டாக இல்லை. வெற்றிடத்தில் ஏதோ வார்த்தைகளைப் போடுகிறேன் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.

எந்த பதிலுமே சொல்லாமல் அடுக்களைக்குச் சென்று பொடி டப்பாவுடன் வந்தாள். பொடியைக் கொட்டி ”குழி பண்ணுங்க” என்றாள். அதில் எண்ணெயை ஊற்றினாள். காரச்சட்னியையும் பொடியையும் கலந்து இட்லியின் முதல் விள்ளல் வாயில் போகும்போது ”அவன் வர்றானா?” என்றாள். தட்டில் இருந்த மூன்று இட்லிகளில் எத்தனை விள்ளல் வரும் என்று யோசனை போனது. எவன் என்று கேட்கலாம் என்று தான் நினைத்தேன். அதன் விளைவு எனக்குத் தெரியும். தெளிவான வசவு வந்து விழும்.

”ஆமா.. மெசேஜ் பார்த்தியா?” என்றேன். இந்தக் கேள்வி அனாவசியம் தான் எனினும் கேட்டுத் தொலைத்தேன்.

”மெசேஜ் ஏன் நான் பார்க்கணும். அதான் கார்த்தால பால்கனில கிசுகிசுனு பேசுனீங்களே.. எல்லாம் எனக்கு கேட்டது” என்றவள் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு குடித்துவிட்டு எனக்கு வைத்தாள்.

‘’ஒரு மாசத்துல தர்றேன்னு சொல்லி, இந்த மாசத்தோட ஒரு வருசம் ஆகுது’ – வழக்கமாக இப்படித்தான் ஆரம்பிப்பாள். இறுதியில் என்னைப்போல ஒரு இளிச்சவாயன் யாருமில்லை என்பதில் வந்து முடிப்பாள். நான் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

”மூர்த்தி மாமா உங்க மேல ரொம்ப கோபப்படறார். உன் புருஷன் மாதிரி ஒரு ஏமாளிய பார்த்ததில்லைங்கறார்”

பூர்ணிமா சொல்லும்போது எனக்கு சிவா மேல் அடக்கமாட்டாத கோபம் வந்தது. இவனால் யார் யாரிடமோ ஏச்சுப்பேச்சு வாங்குகிறேன் என்று கடுப்பானது. இன்றைக்கு ஆஃபிஸ் வரும் சிவாவின் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என்று வெறி வந்தது.

அதே வெறியோடு அவளிடம் ”இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன். இதுக்கு மேல பொறுக்க முடியாதுனு சொல்லிடறேன். அதிகபட்சம் ஒரு வாரம். அதுக்கு மேலே போலீஸ்ட்ட போறேன்னு சிவாட்ட சொல்லிடறேன்” என்றேன். இப்படி நான் பேசுவதைக் கேட்டதும் பூர்ணிமா முகம் சற்றே தெளிந்தது. சிவாவை நினைத்தாலே சிவப்பேறிவிடுகிற அவள் முகம் கொஞ்சம் வெளிறியது. அமைதியாகிறாள் என்பது அவள் குரலின் குழைவில் தெரிந்தது.

”அப்படிப் பேசிட்டு வாங்கங்க.. புண்ணியமாப் போகும். சொந்தக்காரங்கள்லாம் உங்களைப் பத்தி சொல்லும்போது எனக்கு எவ்ளோ கடுப்பாகுது தெரியுமா?” என்றாள்.

நீ சொல்லாமல் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று நான் கேட்கவில்லை. அப்படியாகப் பார்த்தேன். நிஜமாகவே சிவா விஷயத்தில் நான் ஒரு முடிவோடு தான் இருந்தேன். பூர்ணிமாவும் அவள் சொல்லும் சொந்தக்காரர்களும் நினைப்பது போல நான் என்ன கடைந்தெடுத்த ஏமாளியா? என் நெற்றியில் இணையில்லா இளிச்சவாயன் என்று எழுதியிருக்கிறதா?

இந்த நினைப்போடேயே பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன். எப்படி இது நடந்தது என்று சிந்தனை சென்றது. அடிக்கடி சிந்தித்தது தான். ஒரு கட்டத்தில் இனி அதுபற்றி சிந்திக்கவே கூடாது என்று தோன்றும். ஆனாலும் சிவாவை நினைக்கும்போதெல்லாம் மனசு அங்கு போய் நின்றுவிடும். லட்ச ரூபாய்க்கு பத்தாயிரம் ரூபாய் பிரதி மாதம் என்றான். நம்பியது என் பிசகில்லை. அவன் என் நண்பன். ஒன்பதாவதிலிருந்து பனிரெண்டாவது வரை ஒன்றாகப் படித்த பால்ய சினேகிதன். ஒரே காலேஜில் அவன் கணிதம். நான் கணினி. அவன் பி.எஸ்ஸியோடு நிறுத்திவிட்டிருந்தான். நான் எம்.சி.ஏ, ஐ.டி கம்பெனி என்று சென்னையில் செட்டிலானேன்.

கல்லூரி இளநிலை முடிந்ததோடு முடிந்துவிட்டிருந்த தொடர்பு திரும்ப அவன் கல்யாணத்தில் தான் மறுபடி அரும்பியது. தொடர்பு தான் அறுந்து இணைந்ததே தவிர நட்பு அப்படியே இருந்தது. என் நண்பர்களில் மற்ற எல்லோரையும் விடவும் எனக்கு அவனைப் பிடிக்கும். அவன் வீட்டில் நானும் என் வீட்டில் அவனும் ஒன்றாகப் படுத்துத் தூங்கியிருக்கிறோம். அவன் அம்மா எனக்கும் அம்மா, என் அப்பா அவனுக்கும் அப்பா என்று வளர்ந்தவர்கள் நாங்கள்.

“என்ன பிஸினஸ்?” – எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் தான் முதலில் கேட்டேன். எனக்கு இப்போதும் தோன்றும், ஒருவேளை அப்படி நான் கேட்டிருக்கவில்லை என்றால் இந்தச் சுழலில் சிக்கியிருக்க மாட்டேனோ? அவன் கல்யாணத்திற்காக முதல் நாளே மண்டபம் சென்றிருந்தபோது மாப்பிள்ளைத் தோழனாக என்னையும் வெங்கட்டையும் அவன் ரூமில் தங்கச் சொன்னான். விடிந்தால் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருந்தவன் அதிகாலை மூன்று மணி வரை மழைக்காலத் தவளை போல அரற்றிக் கொண்டிருந்தான். விழுதிலிருந்து விழுதைப் பிடித்துத் தாவும் குரங்கைப் போல எதிலிருந்து எதையோ பிடித்து பேச்சு சென்று கொண்டே இருந்தது. அப்போது தான் அவனுடைய ட்ரேடிங் குறித்து நான் கேட்டேன். அதன் பிறகு பேச்சு வேறு திசை செல்லவில்லை.

ஷேர் மார்க்கெட், வாரன் பஃபெட், ஜுஞ்சுன்வாலா, அம்பானி, லாபம், கோடி என்று அது ஒரு தினுசான கவர்ச்சியில் இருந்தது. கேட்கக்கேட்கச் சலிக்காத பரப்பை அவன் பேச்சோ அல்லது அவன் சார்ந்திருந்த துறையோ ஒளித்து வைத்திருந்தது. அப்போது எனக்கு நேர்ந்து கொண்டிருந்த மாற்றம் அல்லது மயக்கம், ஏன் வெங்கட்டுக்கு ஏற்படவில்லை என்று நான் இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். அப்போது வெங்கட் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக பதினைந்தாயிரம் சம்பளத்தில் இருந்தான். நான் அப்போதே அவனின் ஆறு மாத சம்பளத்தை ஒரே மாதத்தில் வாங்கினேன். இந்த வித்தியாசம் காரணமாக இருக்கலாம்.

“இப்ப நீ இருக்க.. உனக்கு ட்ரேடிங் தெரிய வேணாம். ஆனா என்கிட்ட இன்வெஸ்ட் பண்ணா மாசாமாசம் ஃபிக்ஸட்டா என்னால பத்து பர்சண்ட் கூட லாபம் எடுத்துக் கொடுக்க முடியும்?”

ஆச்சரியமாக இருந்தது. இது சாத்தியமா? எனில் பத்து மாதத்தில் முதலீடு இரட்டிப்பாகிவிடுமா? பணம் பண்ணுவது அத்தனை எளிதா?

“நஷ்டம் ஆகிட்டா?”

“ஆகாது”

“எல்லாரும் ஆரம்பத்துல இப்படித்தான்டா சொல்வாங்க?”

“நஷ்டம் ஆனா.. நான் பொறுப்பு”

இந்த இடத்தில் நான் யோசித்தேன். இல்லையில்லை. முழுவதுமாக சிவா வசம் விழுந்தேன்.

சுத்தமாக சுவைத்தறியாத ஆனால் சுண்டியிழுக்கும் வாசனையுடன் இருக்கும் ஓர் இரையை அணுகி பொறியில் சிக்கும் எலியைப் போல சிவா வைத்த பொறியில் சிக்கினேன். அதன் பிறகு எவர் செய்த அறிவுரையும் என் மண்டைக்கு ஏறவில்லை. அதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருந்தது. முன்னேறுவதற்கு ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்று கடுப்பு வந்தது. ஜாக்கிரதை என்று எவர் சொன்னாலும் அவர்கள் கண்களில் அக்கறை இருப்பது போல் தெரியவில்லை. பொறாமை இருப்பதாகவேப் பட்டது. பூர்ணிமா சிவாவை அறியாதவள். ஆனால் அவனைப் பற்றி நான் சொல்லும் கதைகளை அறிந்தவள். ஏதோ ஒரு பெரிய பொருளாதார நிபுணர் மாதிரி அவனைப் பற்றி புகழ்ந்து தள்ளினேன். அவனைப் பற்றி, அவன் ஷேர் ட்ரேடிங் பற்றி அவனே சொல்லாததைக்கூட பூர்ணிமாவுக்கு அவன் பொருட்டு நம்பிக்கை வரவேண்டி நான் அளந்துவிட்டேன். அதைத்தான் இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் காட்டி என்னை அவள் அவமானப்படுத்துகிறாள்.

சிவா கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே அவன் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாயை மாற்றிவிட்டேன். அது மட்டும் தான் துருப்பு. கையெழுத்திட்ட காசோலை தருகிறேன் என்றான். பத்திரம் செய்து கொள்ளலாம் என்றான். நான் சிரிப்பை பதிலாகத் தந்தேன்.

“நல்லபடியா செஞ்சு கொடு.. இது ஆரம்பம் தான்”

எந்த நேரத்தில் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை. இன்று வரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முதல் மாதம் சொன்னது போல ஐந்தாம் தேதி ரூபாய் பத்தாயிரம் என் பேங்கில் வந்து விழுந்தது. ஒன்றாம் தேதி விழுந்த சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதிதான் இது என்றாலும், அது கொடுத்த மகிழ்ச்சியை விடவும் இது கொடுத்த மகிழ்ச்சி பத்து மடங்கு ஜாஸ்தி இருந்தது. பூர்ணிமாவிடம் காட்டி குதூகலித்தேன். சிவாவைப் பற்றி என் அலுவலக நண்பர்களிடம் பேச ஆரம்பித்தேன். பூர்ணிமா அவள் பங்கிற்கு மாமா, அத்தை, சித்தி என்று இந்த டிரேடிங் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று பிரயோஜனமே இல்லாமல் இப்போது யோசிப்பதை, அப்போது யோசித்திருந்தால் அடுத்தடுத்து மூன்றே மாதங்களில் சிவாவிடம் மூன்று லட்சத்தை முதலிட்டிருக்க மாட்டேன். அத்தோடு நின்றிருக்கலாம். மூர்த்தி மாமா ஆசைப்படுகிறார் என்று பூர்ணிமா சொல்ல அவரிடமிருந்து இரண்டு லட்சம் வாங்கிக் கொடுத்தேன். அலுவலக நண்பர்கள் சிலரிடமிருந்து ஏறத்தாழ இரண்டு லட்சம் வரை வாங்கிக் கொடுத்தேன். எது செலுத்தியது என்றே தெரியவில்லை. சிவாவின் அசைக்க முடியாத நம்பிக்கை தரும் பேச்சா? எங்களின் பேராசையா? நண்பன் தப்பு செய்யமாட்டான் என்ற தைரியமா? அந்தக் காலங்களில் நான் நானாகவே இல்லை. என் வேலையே எனக்கு வெறுப்பாக இருந்த காலங்கள். பத்து லட்ச ரூபாயை சிவாவிடம் கொடுத்துவிட்டு, ஊர் சுற்றலாம் என்று தோன்றியது. இப்போது நினைத்தால் என் முகத்தில் நானே துப்பிக்கொள்ளத் தோன்றுகிறது.

ஆறு மாதங்கள் கழிந்தன. ஐந்தாம் தேதி சிவாவிடமிருந்து வர வேண்டிய லாபத்தொகை வரவில்லை. இப்படி அதற்கு முன்பு நடந்ததே இல்லை. அதன் பிறகு சிவாவிடமிருந்து இன்று வரை லாபமோ அசலோ எதுவும் வரவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக துருவித்துருவி உள்ளே போகப் போகத்தான் அவன் கிட்டத்தட்ட பத்து லட்சத்துக்கும் மேல் நஷ்டமடைந்திருப்பது தெரிந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ காரணங்கள் சொன்னான். சீனா – அமெரிக்கா வணிகப் போர் தான் அவன் அடைந்த நஷ்டத்திற்குக் காரணம் என்றான். ஏதோ ஒரு முக்கியமான ட்ரேட் எடுத்திருப்பதாகவும் அது தற்காலிகமாக நஷ்டம் கொடுத்தாலும் சற்று காத்திருந்தால் மும்மடங்கு லாபம் வரும் என்று கணக்குகள் சொன்னான். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குப் புரியவில்லை என்பதை விடவும், அதை நான் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ‘இந்த மாதம் அனுப்ப வேண்டிய லாபத்தொகையை எப்படா அனுப்புவ..?’ என்று கேட்டுவிடவே துடித்தேன் எனினும், அவன் சொன்ன அந்த ‘சற்று காத்திருந்தால்’ என்பது எத்தனைக் காலம் என்று தான் கேட்டேன்.

“குறிப்பா சொல்ல முடியாதுடா.. ரொம்பப் போட்டுக் குழப்பிக்காதே.. ஒரு மாசம் டைம் கொடு.. எல்லாம் சரியாகிடும். ரெண்டு மாச லாபத்தை சேர்த்துக் கொடுத்துடறேன்’ என்றான்.

எந்த பதிலுமே சொல்லாமல், ஆனால் மொத்தமாகக் குழம்பியும், நிம்மதி இழந்தும் ஃபோனை வைத்தேன்.

ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே சிவாவின் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது. திரையில் ஒளிரும் அவள் பெயரைப் பார்த்தபோதே ஏதோ எனக்கு உவப்பில்லாத விஷயத்தைத்தான் சொல்லப் போகிறாள் என்று தோன்றியது.

நினைத்தது போலவே “இங்கே பயங்கர நஷ்டம்ணா.. என் நகையெல்லாம் வித்து, ட்ரேடிங்ல போட்டு காலி பண்ணிட்டார்… நீங்க கொஞ்சம் என்னான்னு கேளுங்க? நான் ஃபோன் பண்ணிச் சொன்னேன்னு காட்டிக்காதீங்க” என்றாள்.

எனக்கு மயக்கம் வந்தது. அப்படியே வந்து பூர்ணிமாவிடம் சொன்னேன். எனக்கு முற்றிலும் தோன்றாத ஒரு கோணத்தில் பூர்ணிமா சிந்தித்திருந்தாள்.

“சிவா உங்க கிட்ட நேரடியா சொல்றதுக்கு பயந்துகிட்டு, அவர் பொண்டாட்டியை வெச்சு சொல்லச் சொல்லியிருக்கார்… அவளா ஃபோன் பண்ணி உங்க கிட்டச் சொல்லியிருக்க வாய்ப்பில்லைங்க. இது ஒரு டிராமா மாதிரி தெரியுது” என்றாள்.

மேலும் குழம்பினேன் எனினும், நேரே திருச்சிக்கே சென்றுவிட்டேன். ட்ரேடிங் பிரச்சனையைப் பேசுவதற்கு முன்பு, கல்யாணம் முடிந்து இரண்டு மாதத்தில் தனிக்குடித்தனம் வந்தக் கதையைச் சொன்னான். சுவாரஸ்யமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொறுமையிழந்து ஒரு கட்டத்தில் ‘எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லு’ என்றேன். கடந்த ஆறு மாதமாகவே பெரிய லாபம் இல்லாமலும், எங்களுக்கான லாபப் பகிர்வை முதலீட்டிலிருந்தே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதையும் சொன்னான்.

அதன் பிறகு முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்ற கதை தான். மொத்தமாக நஷ்டம் என்று கையை விரித்து நின்றான்.

*

பார்க்கிங் பகுதியில் எனக்காகக் காத்திருந்த சிவாவைப் பார்த்துவிட்டு அவனை மோதிவிடுவது போல பைக்கை நிறுத்தினேன். இரண்டு வார தாடியுடன், முந்தைக்கு இப்போது ஆள் மேலும் இளைத்திருந்தான். அல்லது அப்படியாக பாவித்து நிற்கிறானா என்று தெரியவில்லை. பாவமாக இருந்தது. ஆனால் பாவப்படக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சன்னமாக சிரித்தான். நான் ஹெல்மெட்டை கழட்டிக் கொண்டு கடுகத்தனையும் சிரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

”பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. உள்ளே போயிட்டு உடனே வர்றேன்”

அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு டீமின் அன்றைய வேலையை ஆளாளுக்குச் சாட்டிவிட்டு வரலாம் என்று வந்தேன். வந்தேனே ஒழிய அலுவலில் மனம் லயிக்கவில்லை. வெளியில் நிற்பவனை என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். குதிரை ராட்டினத்தில் ஒருவர் பின் ஒருவராக சுற்றுவதைப் போல பூர்ணிமாவும் அவள் பின்னே மூர்த்தி மாமாவும் என்னை முறைத்துக் கொண்டே சுற்றுவது போல நினைத்துக் கொண்டேன். சற்றுத்தள்ளி நானும் சிவாவும் நிற்கிறோம். விடாதே அவனை என்று சொல்லிக் கொண்டே அடுத்தச் சுற்றுக்குச் செல்கிறார் மூர்த்தி மாமா. ‘இளிச்சுட்டு நிக்காதீங்க’ என்று கண்களாலேயே பூர்ணிமா சொல்கிறாள்.

நின்ற இடத்திலேயே நகராமல் காத்திருந்த சிவாவை மெயின் கேட் அருகே நின்று கைதட்டி அழைத்தேன். தோளில் ஒரு பேக் மாட்டியிருந்தான். நழுவிக் கொண்டிருந்ததை திரும்ப தோளில் செலுத்திக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்தான்.

”என்னடா பேக்? தங்கப் போறியா?” என்றபடி நடந்தேன்.

”ஆமான்டா.. வேளச்சேரில ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். ஒரு வேலை விஷயமா அவனைப் பார்த்துட்டு, நாளைக்கு நைட் தான் திருச்சி கிளம்பறேன்”

ஏதோ பயந்து பயந்து பேசுவது போல் சமீபமாக என்னிடமே அவன் செய்து கொண்டிருக்கிறான். அவன் இப்படிப் பேசுபவன் இல்லை. நஷ்டம் கொடுத்த கூச்சமா அல்லது இப்படியெல்லாம் பாவனை செய்தால் தான் பரிதாபத்தில் நான் அவனை எதுவும் பேசிவிடமாட்டேன் என்று செய்கிறானா? நிஜமாகவே அந்த பலத்த அடி இவனை இப்படி மாற்றியிருக்கிறதா? இதே போன்ற உற்சாகமில்லாத சோர்ந்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுகிறானா? சினிமா பைத்தியமாயிற்றே.. சமீபத்தில் ஏதாவது சினிமா பார்த்திருப்பானா? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே பெட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தேன். அவன் அடிக்க மாட்டான்.

”டீ சாப்பிடறியா?”

அவன் வேண்டாம் என்றதை அசட்டை செய்து ”அண்ணன் ரெண்டு டீ” என்றேன். அங்கிருந்த ஒரே ஒரு ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்தேன்.

பண விவகாரத்தை எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. அவன் இருந்த தோரணைக்கு அவனிடம் ஏழு லட்சம் இல்லை, எழுநூறு ரூபாய் கூட இருக்க வாய்ப்பில்லை. எந்த தைரியத்தில் இப்படி வந்து நிற்கிறான் என்பதை விடவும், இந்த அளவு நஷ்டமடைந்துவிட வாய்ப்பிருக்கிற ஒரு காரியத்தை, எப்படி அடுத்தவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்தான்?

டீ கிளாசை எடுத்து அவனிடம் நீட்டினேன். காலையில் சாப்பிட்டானா என்று கேட்கவில்லை. இல்லை என்று சொல்லிவிட்டால், என் காசில் ஏதாவது வாங்கித் தரும்படி நேரும். அது அவனுடனான எனக்கு இருக்கும் கோபத்தை, அப்படி நான் காட்டிக் கொண்டிருப்பதைத் தளர்த்தும். இந்த டீயே கூட அவனுக்கு ஜாஸ்தியோ என்று தோன்றியது. நண்பன் அப்படி ஒன்றும் தன் பேரில் கோபத்தில் இல்லை என்று அவன் நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நான் நினைத்தக் கணத்தில் ஒரு கோபாவேசம் செய்யத் தோன்றியது.

”சொல்லுடா எதுக்கு நேர்ல பார்க்கணும்னு சொன்னே?”

சற்றே சத்தமாக, முகத்தில் எரிச்சலை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

”மூர்த்தி மாமா வீட்டுக்கு வந்தார்டா..” என்றவன் பள்ளி மாணவன் ஒப்பிக்கும் பாடத்தை மறந்துவிட்டு முழிப்பவன் போல் முழித்தான்.

அவன் சொன்ன சேதி எனக்கும் புதுசு. மூர்த்தி மாமாவுக்கும், அவனுக்கும் இனி தொடர்பில்லை. அவர் முதலீடு செய்திருந்த இரண்டு லட்சத்தை, இவன் திவால் ஆன அடுத்த மாதமே நான் பைசல் செய்திருந்தேன். அது மட்டுமில்லை. அலுவலக நண்பர்களுக்கும் நானே பூர்ணிமாவுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து கடனை கிட்டத்தட்ட அடைத்துவிட்டிருந்தேன். இவை எதுவும் இவனுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் என் பொருட்டு இவனை விட்டு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அவன் சொன்ன விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல் காட்டிக் கொண்டு, அவனிடமிருந்தே சங்கதிகளைப் பெற முயன்று கொண்டிருந்தேன். ”தெரியும். என்ன சொன்னார்?”

”போலீஸ்ட்ட போறதா சொல்றார்டா.. நான் அவருக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை வெச்சுட்டு போலீஸ்ட்ட போறேன்னு சொல்றார். யாரோ உங்க ரிலேஷன் சப் இன்ஸ்பெக்ட்ரா இருக்காங்களாம்ல..”

சிவா இதைச் சொல்லும் போது படு கேவலமாக முகத்தை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட என் காலில் விழாத குறையாக கெஞ்சுபவன் போல குறுகி நின்றான். விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது. மூர்த்தி மாமாவுக்கு இவன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப் பத்திரம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னால் நடந்திருப்பதை சட்டென்று யூகிக்க முடிந்தது. எல்லாம் நிச்சயமாக பூர்ணிமாவின் வேலையாகத்தான் இருக்கும். மூர்த்தி மாமா வந்து சென்றதைப் பற்றித்தான் சிவா பேச வருகிறான் என்பது பூர்ணிமாவுக்கு முன்னமே தெரிந்திருப்பதால் தான் காலையில் அவள் குமைந்திருக்கிறாள்.

அவள் தான் மூர்த்தி மாமாவிடம் பேசி, சிவாவை போலீஸ் பயம் காட்டி மிரட்டியாவது பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் தஞ்சாவூரில் இருப்பதால் இவனை நெருக்க அவர் தான் சரியான் ஆள் என்பது பூர்ணிமாவின் திடமான நம்பிக்கை. மேலும் சிவா அப்படியே திவால் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றும் பூர்ணிமா நம்பினாள். பணத்தை அவன் எங்கோ பதுக்கிவிட்டதாக நினைத்தாள். அவள் சொல்வதெல்லாம் கேட்கும் போது எனக்கே கூட அவ்விதம் தோன்றியிருக்கிறது. ஏன் இதோ இப்போது கூட சிவா என்னிடம் நடிக்கிறானா என்ற சந்தேகம் முதுகில் ஊரும் எறும்பு போல நிரடிக் கொண்டிருக்கிறது.

”எல்லாரும் என்னை மாதிரியே இளிச்சவாயனா இருந்துடுவாங்களா சிவா? எந்த தைரியத்துலடா அவர் கிட்ட பத்திரம்லாம் எழுதிக் கொடுத்தே..? என் கொலீக்ஸ்ட்ட வேற செக் லீஃப் கொடுத்திருக்க.. இப்படி எல்லாம் நஷ்டம் ஆகும்னு உனக்கு ஏற்கனவே தெரியாதா? ஆரம்பத்துல எவ்ளோ பந்தாவா பேசின? நிஜமாக திட்டம் போட்டு கவுத்திருக்கடா நீ..? என் புத்தியத் தான் செருப்பாலேயே அடிக்கணும்”

அவன் மெளனமாக நின்றான். இந்த ஒரு வருடத்தில் ஃபோனிலும் நேரிலும் இதே மாதிரி அவனிடம் நான் நிறைய தடவை பேசியிருக்கிறேன். அவகாசம் கொடுத்துக் கொடுத்து அலுத்துவிட்டது. நாளுக்கு நாள் அவன் கீழே கீழே போய்க் கொண்டிருக்கிறானே ஒழிய தேறி வருவதற்கான, என் பணத்தை பைசல் செய்வதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை.

”இந்தப் பார்றா சிவா.. எப்படியாவது ஒரு மாசத்துல தர்றேன்னு சொன்னே.. நீ நிஜமாவே எல்லாத்தையும் லாஸ் பண்ணியிருந்தா அவ்ளோ பெரிய தொகையை யாராலும் ஒரு மாசத்துல கொடுக்க முடியாது. ஆனா நீ அப்படித்தான் சொன்னே.. அப்போதைக்கு தப்பிக்கலாம்னு சொன்னேங்கறது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்ன தான் பண்றே பார்க்கலாம்னு விட்டேன். அப்படி இப்படி ஒரு வருஷம் ஓடிட்டு.. என்ன தாண்டா பண்றே.. மாசா மாசம் ஒரு அஞ்சாயிரம் கொடுத்திருந்தாக் கூட இப்ப அம்பதாயிரம் கடன் அடைஞ்சிருக்கும். நான் என்ன வட்டியா கேட்கறேன்?”

”அரிசி மில்லுல சூபர்வைசரா இருக்கேண்டா.. மாசம் பன்னெண்டாயிரம். எப்படியுமே மிச்சம் பண்ண முடியலடா.. அவ சைட்லயும் சரி, என் சைட்லயும் சரி யார்ட்டயும் உதவினு நிக்க முடியலைடா..”

”போதும் சிவா. முதல்ல திருப்பிக் கொடுக்கணும்னு மனசுல நினைடா.. அப்பத்தான் கொடுக்க முடியும். சாப்பிடாம இருக்கியா, செல்ஃபோன் இல்லாம இருக்கியா, ரீசார்ஜ் செய்யாம இருக்கியா, செருப்பு போடாம இருக்கியா? அது மாதிரி தான் எனக்கும் கொஞ்சமாவது கொடுக்கணும்னு நினைடா.. எவனாவது உன்னை நம்பி ஒரு பத்தாயிரம் கொடுத்தானா..? நான் மூனு லட்சம் முழுசா கொடுத்துட்டு நிக்கறேன். நான் பத்தாதுனு மத்தவங்க கிட்டயும் வாங்கிக் கொடுத்தேன். உனக்கே உறுத்தலா இல்லை..? எதிர்காலத்துல உன்னால நான் சிக்குவேன்னு உனக்குத் தெரியும். தெரிஞ்சே தான் இதை செஞ்சுருக்கே.. சத்தியமா சொல்றேன், யூ டிஸீவ்ட் மீ”

முன்னெப்போதும் பேசியதை விடவும் இப்போது நான் சிவாவிடம் அதிகம் கோபப்பட்டுக் கொண்டிருப்பது போல எனக்கே தோன்றிக் கொண்டிருந்தது. நிஜமாகவே அவன் மீது ஒருவித சலிப்புத் தட்டிய கோபத்தில் இருந்தேன்.

”அந்த வார்த்தையைச் சொல்லாத.. டா” என்ற சிவாவுக்குத் தொண்டை அடைத்தது. எந்தக் கணத்திலும் அவன் அழுதுவிடக் கூடாது என்பதில் நான் மிக ஜாக்கிரதையாக இருந்தேன். அவன் ஏதாவது கோபமாகப் பேசிவிட்டால் கூட போதும். ‘முடியாது ஆனதைப் பார்த்துக்கோ’ என்றால் கூட ஓங்கி அறைந்துவிட்டு ஒழி என்று நடையைக் கட்டிவிடுவேன். மனதின் மெல்லிய ஓரத்தில் எப்போதும் அவனிடமிருந்து அப்படியொரு பதிலைக் கூட எதிர்பார்த்தே இருந்தேன். எப்போது அப்படிச் சொல்வான் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவன் ஒருநாளும் சொல்பவனாக இல்லை. உண்மையில் சிவாவை என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. முடியாது. இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை என்றே தெரியவில்லை. அவனை நம்பி நான் மோசம் போனேன் எனில், ஷேர் மார்க்கெட்டை செய்யத் தெரியாமல் செய்து அவன் மோசம் போனான். அவனுக்குக் கொடுத்தப் பணம், வாய்க்கரிசி போட்டு வறட்டி வைத்து மூடி எரித்துவிட்ட பிணத்துக்குச் சமம். போனது போனது தான்.

”உன்னை மட்டுமில்லைடா.. யாரையுமே ஏமாத்தணும்னு நான் நினைச்சதில்லைடா. என் மெத்தட் சரியானதுனு நினைச்சேன். ஷேர் ட்ரேடிங் முழு ரூபமும் எனக்குத் தெரியாம அதை கொஞ்சம் ஓவரா நம்பிட்டேன். ஒரே ஒரு தவறான ட்ரேட், ஒரே ஒரு டிஸாஸ்டர் போதும், எப்பேர்பட்ட பணக்காரனும் நடுத்தெருவுக்கு வரமுடியும்னு தெரியாமப் போச்சுடா..”

சிவாவின் வார்த்தைகளில் பொய்யிருக்கும் என்று தோன்றவில்லை. அவன் அழுகிறானோ இல்லையோ நான் அழுதுவிடுவேன் என்று நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்திருந்தது. இப்போது இப்படி நினைக்கிறவன், வீட்டில் பூர்ணிமா இவனைப் பற்றிச் சொன்னால் அது உண்மையோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன். வேறு வழியில்லை. நான் உளவியல் நிபுணன் இல்லை. இந்தக் குழப்பம் எப்போதும் இருக்கத்தான் செய்யும். அது என் பாடு. ஆனால் இன்றோடு இவன் பிரச்சனையை முடித்துவிட வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. எது உண்மை என்ற ஆராய்ச்சிக்கே இனி போக வேண்டாம் என்று திடீரென்று தோன்றியது. பூர்ணிமா சொன்னது உண்மையாகவும், இவன் என்னை ஏமாற்றிவிட்டதாகவுமே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படி ஒருவேளை என்னை ஏமாற்றி ஏழை, கோழை நாடகம் நடத்தி அந்தப் பணத்தைப் பதுக்கி என்ன செய்யப் போகிறான்? தன் மனைவிக்கும் குழந்தைக்கும் தானே செய்வான்? செய்துவிட்டுப் போகட்டும்! ஒழிடா சிவா!

சிகரெட்டின் கடைசி புகையை இழுத்துவிட்டு, கீழே போட்டு ஷூவால் நசுக்கினேன். எழுந்து அவன் அருகே சென்று குனிந்திருந்த அவன் முகத்தை நிமிர்த்தி புகையை ஊதினேன். அவன் கண்களை மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

”பார்றா.. பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் ஒத்துக்காதோ?”

என் இதழோரத்தில் கசியும் புன்னகையை அவன் கவனிக்கவில்லை.

”அப்படியெல்லாம் ஒன்னுமில்லைடா.. இப்படித்தானே காலேஜ் படிக்கும்போது வேணுமின்னே என் மூஞ்சில ஊதுவே.. எனக்கு சிகரெட் ஒத்துக்கலை.. அதனால தான் பழகலை.. மத்தபடி அந்த வாடை எனக்குப் பிடிக்கும்”

சிவா இப்படிச் சொல்லும் போது கீழுதட்டில் மெலிதாகச் சிரித்தான். நாங்கள் நடந்து கொண்டே திரும்ப அலுவலக வளாகத்தை அடைந்தோம்.

‘நீ எங்கே போகணும்னு சொன்னே.. வேளச்சேரியா.. வா நான் டி.நகர் பஸ் ஸ்டாண்ட்ல வந்து விடறேன்”

பைக்கை எடுத்து அவனை பின்னால் ஏற்றிக் கொண்டேன்.

”டேய் ஆஃபிஸ்?” என்றவனிடம் ”எவன்டா கேட்பான்..?” என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

சிவாவுக்கு மட்டுமில்லை, கொளுத்திக் கொண்டிருந்த சூரியனை, திடீரென மேகம் மூடி வானம் மப்பாகிவிடுவதைப் போல மாறிக்கொண்டிருந்த என்னை நினைத்து எனக்கே வியப்பாக இருந்தது. சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தவனை ”விழுந்துறப் போறே.. தள்ளி வாடா.. கேப் விட்டு உட்கார நீ என்ன ஃபிகரா..?” என்றேன். அவன் சிரிப்பதற்கே கூச்சப்பட்டான். பேசுவது நான் தானா என்ற ஆச்சரியம் விலகாமல் சற்று நெருங்கி வந்து என் தோளைத் தொட்டு உட்கார்ந்தான். எப்படியாவது அவனுக்கு சென்னையில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முயற்சி செய்கிறேன் என்றேன்.

”அப்படி மட்டும் நடந்துட்டா.. உன் கடனைக் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடறேன்டா” என்றவனின் குரல் நெகிழ்ந்திருந்தது.

”பார்க்கலாம் பார்க்கலாம்..” என்று சிரித்தேன். டி.நகர் பஸ் ஸ்டாண்டில் அவனை இறக்கிவிட்டு சொன்னேன்.

”உன் விஷயத்துல எனக்கு ஒரு ரிலீஃப் தேவைப்படுதுடா.. இனிமேலும் உன்னை, அந்த பணத்தோட தூக்கி சுமக்க என்னால முடியாது. நிஜத்தைச் சொல்லணும்னா.. ரொம்ப வெறுத்துப் போச்சு. இப்பவும் உன்மேல செம்ம கோபத்துல தான் இருக்கேன். ஆனா உன்னை என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை சிவா. மூர்த்தி மாமாவை நான் பார்த்துக்கறேன். இனி இந்த பணம் விஷயமா உன் கிட்ட நான் எதுவுமே கேட்க மாட்டேன். இது உனக்கு நிம்மதியா இருக்கோ இல்லையோ எனக்கு பெரிய நிம்மதியா இருக்கும். நீயா கொடுத்தாக் கொடு. நான் ஃபோன் அடிச்சாலே பணத்துக்குத்தான் அடிக்கிறேன்னு நினைச்சு ஃபோனை எடுக்காம விடாதே.”

இப்படிச் சொன்ன நொடி என் நெஞ்சில் ஒரு வருடமாக தூக்கிச் சுமந்து கொண்டிருந்த பெரும் பாரம் நீங்கியது போல் இருந்தது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தது போல ஜிவு ஜிவு என்றிருந்தேன். காற்றில் மிதக்கும் தக்கை மாதிரி உணர்ந்தேன்.

வெம்பி வெதும்பி ஒருவாறு அழுவதற்குத் தயாரான சிவாவை அப்படியே தடுத்து நிறுத்தினேன்.

”இரு, இரு.. இப்ப அழுதுடாதே.. நான் கிளம்பினதுக்கப்புறம் எவ்ளோ வேணாலும் அழுதுக்கோ”

தொண்டை வரை வந்த அழுகை அப்படியே சிரிப்பாக மாற, புறங்கையால் கண்களைத் தேய்த்துக் கொண்டு, என் புஜத்தில் குத்தினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பழைய சிவாவைப் பார்த்தேன்.

***


அசோக் ராஜ்
‘நிகழ்தகவு’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்’ என்ற குறுங்கதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. கிண்டிலில் ‘பதுமை’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: asokraj.writer@gmail.com

கௌரி ப்ரியா கவிதைகள்

0

சினைக்குழாய்க்கு நட்சத்திர விரல்கள்

விசேஷம் இல்லையா

விடை தேடித் திரிபவள்
மனதின் பாலையில்
கள்ளிச் செடியொன்றைச்
செல்லமாய் வளர்த்தாள்

சருமம் கெட்டித்து
இடை அகண்டு
அகம் கசந்த பின்னும்
நீர்மையைத் தக்க வைத்தல்
அன்றாடத்தின் போராட்டம்
பாலையின் கள்ளிக்கும்
பதில் வறண்ட
காரிகைக்கும்

நிராசைகளின் நெடுவெளியில்
இருவரும் ஒருநாள்
துளிர்த்தலைத் துறந்து
முட்களைப் பூண்டனர்

செல்லக் கள்ளியின்
நட்சத்திர முட்களின்
பன்முனைகளுள் ஒன்றின்மேல்
படர்ந்து ஒளிர்வதுண்டு
அவள் சுண்டித் தள்ளும்
விழிநீர்த்துளி

அத்தகைய நொடிகளில்தான்
சினைக்குழாயின்
விரல்கள்
அணு ஒன்றினை விழுங்கி
இன்மையை நோக்கி
தள்ளுவதும்

*

வேர்

விரிந்த தோலுடை
அடிவயிற்றை
விரல்களால் நீவுகிறாள் தங்கம்மா..

என்னவென்று கேட்டுவிடுவாளோ

தொப்புள் கொடியெனும்
ஜீவநதியின்
கிளைகளின் பிரதிகள் இவை
எனலாமா

கிளிக்குஞ்சு உன்னை
அடைகாத்த கூட்டின்
இழைகள் இவையென
எடுத்துக் கூறலாமா

ப்ரபஞ்சத்திலிருந்து நீ
வயிற்றுக்குள் குதித்திறங்க
மின்னலொன்று
ஒளிர்ந்து விரிந்ததென்று
கதைகள் சொல்லலாமா

“அம்மாஆஆஆஆ..”

இதோ கேட்கப் போகிறாள்..
தயாராக இரு..

“அம்மா..
இது என்ன வேர் மாதிரி இருக்கு?
வேரா?”
என்கிறாள்

***


கௌரி ப்ரியா
சென்னையில் வசிக்கிறார். மருத்துவராக பணிபுரிகிறார். இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் அவ்வப்போது கவிதைகள் எழுதி வருகிறார்.
மின்னஞ்சல்: ggowripriya07@yahoo.co.in