Home Blog Page 39

ரேவா கவிதைகள்

0

எழுதாக் குறிப்பு

முடிவுக்கு வராத காரணங்களோடு
பின்னப்படுகிறேன்

சுமக்கும் கனம் இறக்கும் பிம்பத்தின்
அளவில்
முடிந்துவிடாதபடி முன்னுக்கு வருகிற
தொலைவைக் கழிக்க
ஒரே ஒரு கழித்தல் குறி கிடைக்கும் வாழ்விற்கு
நகர

அனுபவத்தில்
இன்னும் எத்தனை மைல்கள்

*

மீள்தல்

அத்தனை எளிதாய் கைவிடப்பட்டபோது
கண்டுணர்ந்த கைவிளக்கினை
கரை கொண்டு வந்து சேர்க்கிறது
ஆழம்

அழியாது ஏற்றிய அதன் ஒளிக்குள்
மெல்ல சுடர் விடுகிற நினைவின் பாதம்
நடந்து நடந்து
கடல் நிழலைப் பெருக்கி
உருவாக்கும் தனிமைக்குள்

ஒற்றைப் படகொன்றை
நிறுத்தி வைக்கிறது இருப்பு

அலைமோதி அடங்கட்டும்
கரை

*

துளை பூணும் லயம்

வளைந்து
திருகி
வசதிக்கு துளை செய்யும் குரல் உனக்கு

நானதை மனத்தால் கேட்கிறேன்

நீ சொல்ல
விரியும் அர்த்தங்களை சபையேற்றும்
சாதுர்யம்
என்னை உன்னிசை செய்கிறது

உள் அழைத்து
உடன் கடந்து
மூளை மடிப்பின் ரகசியம் படித்து
நீ அறிந்துகொண்டுவிட்ட
என்னை
இசைக்க மறுப்பதின் வழி
ஏன் வதைக்கிறாய்

ஏழு மலை
ஏழு கடல்
அவ்வளவுக்கெல்லாம் மதிப்பாய் இல்லை
என் அன்பு

வதைக்காதே

காலத்தை தானே அதிகாரத்தால் களவாடினாய்

கைவசமென மிச்சமாகிறேன்
காத்திருக்க
மீளும் மனம் எந்தன் மூங்கில் வனம்

*

இப்படியும்

உன்னைப் பற்றிய எண்ணத்திலிருந்து
மீண்டு கொண்டிருக்கிறேன்

என் வசமான உளக் குறிப்பின்
அநேக பக்கங்கள்
உன் அர்த்தங்கள்

திருத்தி எழுதவே தீர்ப்பு

இனி
வழங்கப்பட்டதில் வந்து அமர்கிறது
உன் வசதி

***


ரேவா
மதுரையில் வசிக்கிறார். கவனிக்க மறந்த சொல் எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: revaviews252@gmail.com

அடிக்குச்சி

1

சு.சரவணன்

பிஸ்கட் பொட்டலத்துடன் மீனாட்சி வெளியே வந்தார்.

“குழந்தைகளுக்கு கொடுக்க பிஸ்கட் பத்தாது. மார்னிங் வாங்கிட்டு வந்துருங்க. அஞ்சு கிலோ மிச்சர் வாங்கிக்கங்க. இவ்வளவு குழந்தைங்க வருவாங்கனு நினைக்கல. வெரிகுட் சைன். பர்டிகுலர்லி.. பெண் குழந்தைகள்.”

மகிழ்ச்சியாகச் சொன்னார்.

“சரிங்க தோழர்”

அழகு பதில் சொன்னார்.

மீனாட்சி கருப்புதான். ஆனாலும் ரசிக்கும்படியானவர். இருபத்தி எட்டு வயது இருக்கும். அவர் எப்போதும் அணியும் கருப்பு சட்டை அவரை கூடுதல் கம்பீரமாகக் காட்டியது.

“அந்த பொண்ணுதா”

காம்பௌண்ட் சுவர் பக்கம் இருந்து குரல் வந்தது. மீனாட்சி திரும்பி பார்ப்பதற்கும் நான்கு பேர் ஸ்கூல் கேட் வழியாக வருவதற்கும் சரியாக இருந்தது.

“எட்டு மணிக்கு வயசு பொண்ணுங்களும் பசங்களும் எங்க ஊரு ஸ்கூல்ல என்னா பண்றீங்க?”

நான்கு பேரில் ஒருவர் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் தொனியில் கேட்டார். வேறு இடமாக இருந்தால் இந்த மாதிரியான கேள்விக்கு மீனாட்சி வேறு மாதிரியான பதில் தரக்கூடியவர். கேட்டவர்கள் ஏன் இவர்களைப் பார்த்தோம் என்று நினைக்க வைத்திருப்பார். வந்த வேலையை நினைத்து நிதானமாக பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் “இவரு பேரு மணி. பக்கத்து ஸ்டேஷன்ல போலீஸ்.” என்று பார்ப்பதற்கு நடிகர் அப்பாஸ் போல இருந்தவரைக் காட்டினார்.

“பேர் என்னமா?”

போலீஸ் தொனியில் கேள்வி வந்தது.

“மீனாட்சி”

“இங்க என்ன நடக்குது?”

“நாங்க மெய் கலைக்குழு. பசங்களுக்கு கிராமியக்கலை கத்துக்கொடுக்க சென்னைல இருந்து வந்திருக்கோம்”

மீனாட்சி பதட்டமில்லாமல் பதில் சொன்னார்.

“காலைல இருந்து உங்க வேலைய பாத்துகிட்டு இருக்கோம். உங்கள யாரு கூப்டா இங்க? ஊருக்குள்ள எத்தன வீட்டுல பிரச்சன தெரியுமா?”

நான்குபேரில் ஒருவர் கோபமாகப் பேசினார். மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை. நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் நண்பர்கள் “தோழர் எனி ப்ரொப்ளெம்” என்றனர்.

“வெயிட்.. ஐ டீல் இட்” என்று சைகை காட்டினார்.

“சார், எங்களால ப்ராப்ளமா?”

மீனாட்சி நிதானமாக கேட்டார்.

“நீங்க எப்படி ஸ்கூல்க்கு வந்தீங்க?” போலீஸ் கேட்டார்.

“தமிழ் டீச்சர் எங்கள அப்ரோச் பண்ணாங்க. சம்மர் லீவில பசங்களுக்கு கிராமியக்கலை கத்துதர கேட்டாங்க. பெர்மிசன் வாங்கிதா பண்றோம்”
மீனாட்சி சொல்லி முடித்தார்.

“சென்னைல இருந்து வந்து கிராமத்து பசங்களுக்கு கிராமிய கலைய சொல்லிக்கொடுக்க போறீங்களா”?

“எத கத்துக்கணும், எத கத்துக்கக்கூடாதுனு எங்களுக்கு தெரியும் .சொல்லிக்கொடுக்க வந்துட்டாங்க வண்டி ஏறிக்கிட்டு”

வந்தவர்களில் ஒருவர் முணுமுணுத்தார்.

“எங்களால என்ன ப்ரொப்ளெம்?”

“இது ஊரு விவகாரம். டீச்சர்தான உங்கள கூட்டிட்டு வந்தாங்க. டீச்சர் வரட்டும் பேசிக்கிறோம்”

“தோழர் டீச்சருக்கு கால் பண்ணுங்க.. நீங்க போய் கரகத்தை ரெடி பண்ணுங்க. மார்னிங் டைம் இருக்காது”

அருகில் இருந்த நண்பர்களிடம் சொல்லி முடிப்பதற்குள் செழியன் டீச்சர்க்கு போன் செய்தார். வெடிகுண்டை ஆராய்வது போல மீனாட்சியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் போலீஸ்.

மீனாட்சி, “சாப்பாடு ரெடியா இருக்கு. வாங்க சாப்ட்டு போயிடலாம்”
“நான் செழியன். ஸ்கூலுக்கு வாங்க. ஊர் ஆளுங்க போலீஸ் கூட வந்து மீனாட்சி தோழர்கிட்ட பேசிட்டு இருக்காங்க”

செழியன் பேசிக்கொண்டு இருக்கும்போது “டீச்சர் வராங்க. அவங்க கிட்ட பேசி முடிங்க. ரொம்ப வளக்காதீங்க.” என்று அவர்களிடமும் “பிரச்சனை வராம பாத்துக்கோமா” என்று மீனாட்சியிடமும் சொல்லிவிட்டு போலீஸ் கிளம்பினார்.

கேட் வரை போனவர் திரும்பி வந்து நான்கு பேரில் ஒருவரை தனியாக அழைத்துப்போய்..

“நிதானமா, தெளிவா பதில் சொல்றாங்க. பாத்து பேசுங்க.. தினமும் இவங்கள மாதிரி ஆளுங்கள பாக்கறேன். போராட்டம், பேரணினு ரோடுல உக்காந்துகிட்டு தலைவலி. போதாததுக்கு மீடியக்காரனுக வேற, மூஞ்சி முன்னாடி மைக்க நீட்டுவானுக”

கூட இருந்தவர் புரிந்தவர் போல தலையாட்டினார்.

கூட்டமாக இருப்பது டீச்சருக்கு குழப்பமாக இருந்தது. அருகில் வந்தவர், “நடுவில் பேசிக்கொண்டு இருப்பது ஏழாவது படிக்கிற சுரேஷ் அப்பா. மற்றவர்களையும் ஸ்கூலில் பாத்த நியாபகம். வாங்க.. வாங்க” என்றார்.

“நானே காலையில வந்து உங்கள பாக்களானு இருந்தேன்”

பக்கத்தில் வரும்போது டீச்சர் பேசிக்கொண்டு வந்தார்.

“நீங்க இவங்கள கூட்டிட்டு வந்தீங்களா டீச்சர்?”

சுரேஷ் அப்பா கேட்டார்.

“ம்”

“பொண்ணுங்க பசங்களோட உக்காந்து அசிங்கமா பேசிட்டு, சிரிச்சிகிட்டு இருக்காங்கனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க டீச்சர். நான் வந்து பாத்தேன். அப்படித்தா இருந்துச்சி”

மீனாட்சி உட்பட எல்லோர் முகமும் சுருங்கி விரிந்தது. அடுத்த நொடி அசட்டையாக சிரிப்பும் வந்து போனது.

“என்ன இப்படி பேசுறீங்க? இவங்க எல்லோரும் நல்லா படிச்சவங்க. இவங்க மீனாட்சி. நம்ப பசங்களுக்கு கிராமியக்கலை சொல்லித்தர வந்திருக்காங்க”

“ஒன்னாவா தூங்க போறாங்க?” என்று கேட்டதும் இரண்டு கையை இடுப்பிலும், ஒரு காலை அகட்டியும் வைத்து இந்த மாதிரி கேள்விக்கு இவ்வளவு மரியாதை போதும் என்பது போல அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியை டீச்சர் கவனிக்காமல் இல்லை. அவர் கேட்ட கேள்வி டீச்சருக்கு கோபத்தை எழுப்பியது.

ஆனாலும் சமாளித்து “இல்ல, இல்ல பொண்ணுங்களுக்கு நடராஜன் சார் வீட்ல ரூம் தந்திருக்காரு. சாப்பாடும் அங்கதா.. நீங்களும் ஏதாவது பண்ணுங்க நம்ப பசங்களுக்காக வந்திருக்காங்க”

“இவங்க வராங்கனு முன்னாடியே சொன்னீங்களா?”

“பரிச்சைக்கு முன்னாடி கிராமியக்கலை சொல்லிக்கொடுக்க ஆளுங்க வராங்க. விருப்பம் இருக்கறவங்க வீட்டுல அப்பா, இல்லனா அம்மாகிட்ட லெட்டர்ல சைன் வாங்கிட்டுவர சொல்லிதான செய்தேன். நீங்களும் சைன்போட்டு இருக்கீங்க. சுரேஷ் கூட பறை கத்துக்க பேர் கொடுத்திருக்கான்”

“தினமும் சைன் கேக்கறான். எதுக்குன்னு படிச்சி பாத்தா போடறோம்?”
“ஊர் தலைவர்கிட்ட சொல்லிட்டீங்களா?”

“ஹெட்மாஸ்டர் மூலமா சிஇஓ கிட்ட பெர்மிஷன் கேட்டேன். நல்ல விஷயம், பண்ணுங்க நானும் வரேன்னு சொன்னாரு. PTA தலைவருகிட்டயும் சொல்லிட்டேன். நிகழ்ச்சி நடக்கறப்ப வந்து பாக்கறேன். உதவி செய்யறன்னு சொன்னாரு”

“கோணிச்சாக்கு கிட்ட சொல்லுவீங்க. ஊர் தலைவர் கிட்ட கேக்க மாட்டீங்க?”

“ஊரு சம்பந்தப்பட்டது. நீங்க செய்யறதுக்கு முன்னாடி ஊர்த்தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கணுமா இல்லையா? தூரத்துல உக்காந்துகிட்டு எல்லாத்துக்கும் தலைய ஆட்டுவானுக. ஊருக்குள்ள நாங்கதான் வாழணும். இல்லாத வழக்கத்தை செஞ்சிகிட்டு. நீங்க ஒரு வார்த்தை தலைவர் கிட்ட கேளுங்க. அவரு ஒத்துக்கிட்டா தாராளமா பண்ணுங்க. நாங்க தடுக்கல”

நடப்பதை மீனாட்சி கவனமாக பார்த்துக்கொண்டு தான் இருந்தார். நடப்பது புரியவில்லை.

“ஹலோ சார், நிகழ்ச்சி சம்பந்தமா உங்கள காலையில வந்து பாக்கணும்னு இருந்தேன்”

“இப்படி செய்யறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த கேக்கணும் இல்ல? அவங்க வந்ததுல இருந்து உங்க பஞ்சாயத்துதான். பள்ளிக்கூட விஷயத்துல நாங்க தலையிடக் கூடாது. தொந்தரவா இருக்கு. பிரச்சன வராம பாத்துக்கோங்க”

பேசிக்கொண்டு இருக்கும்போது டீச்சர்க்கு ஹெட்மாஸ்டர் அழைப்பு வந்தது.

“சார்”

“ஊருக்குள்ள இருந்து நெறய போன் வருது. நிகழ்ச்சி வேணான்னு சொல்றாங்க”

“சார், உங்ககிட்ட சொல்லிட்டுத்தான..?”

“கிராமியக்கலைனு சொன்னீங்க. பறை கத்துக்கொடுக்க போறத சொல்லவே இல்லையே”

“சார், பறை இசைதான?”

வந்தவர்களின் நோக்கம் இப்பொழுது தான் டீச்சருக்கு முழுமையாகப் புரிந்தது.

“அதெல்லாம் சரிதான்மா.. ஏழாவது படிக்கிற மகேஸ்வரி அப்பா போன் பண்ணாரு. சாயந்திரம் வேலையை முடிச்சுட்டு வரப்ப தப்பு கொட்டு சத்தம் கேட்டுச்சு. ஊர்ல யாரோ செத்துட்டாங்கன்னு பயந்துட்டேன். யாராவது செத்தால் தான் தப்பு அடிப்பாங்க. வீட்ல வந்து கேட்டா, காலையிலிருந்து இப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்க. பசங்களுக்கு நல்லதை சொல்லி கொடுங்க. எதுக்கு தேவையில்லாத வேலைனு கேக்கறாரு என்ன பதில் சொல்றது? பொண்ணுங்களும் காலையில் பறை அடிச்சாங்களா?”

“ஆமா சார், ஒன்பதாவது பொண்ணுங்க நாலு பேரு ஆர்வமா இருக்காங்க”

“அந்தப் பொண்ணுங்க அப்பா ஒருத்தர் போன் பண்ணி ‘வயசு பொண்ணு தோளுல தப்ப கட்டிவிட்டா எப்படி உருப்புடும்னு?’ கேக்குறாரு. பதில் சொல்ல முடியல. தப்ப தவற எத வேணா கத்துக் கொடுங்கன்னு சொல்றாங்க”

“சரிங்க சார்”

போனை வைத்ததும் பெரிதாக டீச்சர் மூச்சை இழுத்துவிட்டார். காலையில் பறை வாசிக்க, வெயிலில் பறையை காயவைக்க மாணவர்கள் காட்டிய ஆர்வம் கண் முன்னே வந்து போனது. மத்தியான சாப்பாட்டுக்கு போன சதீஷ் ஸ்கெட்ச் எடுத்து வந்து பறையில் அவனுடைய பெயரை எழுதி ‘மூனு நாளைக்கு இந்த பறை’ என்னது என்று சொன்னது மனதுக்குள் நிமிர்ந்து நின்றது.

“ஊரு பசங்களுக்கு எதுக்கு தப்பு அடிக்கிற வேல? கம்பு சுத்த சொல்லி கொடுங்க போதும்” என்று சொன்ன சுரேஷ் அப்பா கிளம்பி போனார். அவருடன் வந்தவர்களும் கூடவே போனார்கள்.

‘உங்களுக்கு புடிக்கலைன்னா உங்க பையன கத்துக்காதன்னு சொல்லுங்க. யாருமே கத்துக்க கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்..’ -வாய் வரை வந்ததை சொல்லாமல் டீச்சர் விழுங்கினார்.

“ரெஸ்ட் ரூம் போலாமா மீனா?”

“ம்”

மீனாட்சிக்கு நிறைய கேட்கவும் டீச்சர்க்கு நிறைய சொல்லவும் இருந்ததால் இருவரும் நடக்கத் தொடங்கினர். மீனாட்சி நண்பர்களைப் பார்த்து போய் சாப்பிடுங்க என்று சொன்னார்.

“பற கத்து கொடுக்கிறது தான் அவங்களுக்கு பிரச்சனை”

“ம்..”

பாத்ரூம் இருக்கும் எதிர்திசையில் நடந்து கொண்டிருந்தனர்.

“அது புடிக்காமத்தான் பசங்க பொண்ணுங்கன்னு பேசிட்டு போறாங்க”

“பற இல்லனாலும் அப்படிதான் பேசுவாங்க.. சட்ட போட்ட பொண்ணுங்கள பேசுறது இன்னும் ஈசி. டிபிகல் சொசைட்டி மென்டாலிட்டி”

“பறை ஊர்ல அடிக்க கூடாதாம்”

“ஸ்கூல்ல தானே அடிச்சோம்”

“ஸ்கூலு ஊர்ல தான இருக்கு. அதனால ஸ்கூல்ல அடிக்கக் கூடாதாம்”
“ஏன்?”

“பறை சாவுக்கு அடிக்கிறது. ஊர் பசங்களுக்கு எதுக்குன்னு கேக்கறாங்க?

“பறை தவிர்த்து சிலம்பம், ஒயிலாட்டம், கரகம் கத்துக்கொடுங்கனு ஹெட்மாஸ்டர் சொல்றாரு. வந்தவங்களும் அதேதான் சொல்றாங்க”

“ம்ஹூம்”

”பறை மெய்குழுவின் அல்டிமேட். கண்டிப்பா கத்து தரணும்”

“லோக்கல் டீச்சர்ஸ் வச்சு மூவ் பண்ணுங்க”

“ஈவன்ட் நடக்கறது தெரியும். ஆனா வர மாட்டாங்க. டீச்சர்ஸ் பலருக்கு வந்தவங்க தாட் இருக்கு. சிலருக்கு இப்படி பிரச்சினை வரும்னு ஏற்கனவே தெரியும். நமக்கு எதுக்கு வம்புனு வர மாட்டாங்க”
ஆசிரியர் சமூகத்தை நொந்து கொண்டார்.

“ஸ்கூல் PTAல பேசுங்க”

“ம்” யோசித்தவர்..

“PTA தலைவரை வந்தவங்க மதிக்க மாட்டாங்க. அவரு சொன்னா கேப்பாங்களான்னு தெரியல?”

“ஏன்?”

“ஊர்த் தலைவரா இருந்தப்பவே மதிக்க மாட்டாங்க. மெஜாரிட்டி இவங்க தான். அவர் பேரு கிருஷ்ணசாமி. அவருக்கு சாக்கு வியாபாரம். அதனால அவர கோணிசாக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க. நீ தான் பார்த்தியே”

“ம்”

“ஸ்கூல்ல கொடியேத்த விடமாட்டாங்க. ஃபங்ஷனுக்கு வந்தா ஓரமா உக்காந்துட்டு போயிடுவாரு. பேசலாம். வேற மாதிரி பிரச்சினை ஆயிடுச்சின்னா?”

“பறை இல்லாம பண்ணலாமா?”

“பறை கத்துக்க ஆசையா வருவாங்களே என்ன பண்றது?”

“ஹெட் மாஸ்டர் சொல்படி பார்த்தா பறை கத்துக்க வருவாங்கன்னு தெரியல”

“ஒரு பையன் ஆசையா வந்தாலும் அவனுக்கு மெய் கற்றுக்கொடுக்கும்”
திடமாகச் சொன்னார் மீனாட்சி.

பேசிக்கொண்டே நடராஜன் சார் வீட்டிற்கு வந்தார்கள். ஊர்சனம், தெருசனம், பயிற்சியில் பார்த்த குழந்தைகள் என சின்ன கூட்டம் நடராஜன் சார் வீட்டின் முன்னால் கூடியிருந்தது. மீனாட்சியின் நண்பர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

“சாப்படல”

“என்னாச்சு?”

“ஸ்கூலுக்கு வந்தவங்க உள்ள இருக்கிறாங்க. நைட் சாப்பாடு இல்லனு நெனைக்கிறேன்.. செம்பியன் சொன்னார். நான் போய் பாக்கறேன்”
டீச்சர் உள்ளே போனார்.

“ப்ராப்ளமா தோழர்?”

அருள்மொழிவர்மன் கேட்டார்.

“சொல்றேன் தோழர்”

மீனாட்சி முகத்தில் காலையிலிருந்த மகிழ்ச்சி இல்லை என்பதை உணர்ந்தனர். டீச்சர் உட்பட மூன்று பேரும் வெளியே வந்தனர்.
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நடராஜனின் பக்கத்து வீட்டுப் பெண் மூன்று பேரையும் பார்த்து..

“அவர் வீட்டுக்குள்ள யாரை விடணும் விட கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?”

“சும்மா இருக்கா. உனக்கு தெரியாது”

“பொம்பளைங்களை அடக்கி வைக்கிறது தவிர உங்களுக்கு என்ன தெரியும்?”

“அநியாயத்துக்கு தொண போகாத”
பேசிக்கொண்டிருந்த பெண்ணிற்கு துணையாக இன்னொரு பெண்ணும் பேச ஆரம்பித்தார்.

“நான் அநியாயத்துக்கு தொண போறனா?” கோபமாகக் கத்தினார்.

“லீவு விட்டதிலிருந்து சும்மாதான் சுத்துறாங்க. பாங்கா நாலு விஷயம் கத்துக்கணும்னு டீச்சர் கஷ்டப்படுறாங்க. அதை எதுக்கு கெடுக்கிற?”

“படிக்க அனுப்பிச்சா.. தப்பு அடிக்க கத்துக் கொடுப்பாங்க. நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா?”

கோபமாகக் கேட்டார்.

“எல்லாருக்குமா சொல்லி கொடுத்தாங்க? ஆசைபடுறவங்க கத்துக்கிறாங்க. உனக்கு என்ன?”

தான் மனதில் நினைத்ததை அந்தப் பெண் சொல்லிவிட்டது டீச்சருக்கு நிறைவைத் தந்தது.

“அதானே”

பக்கத்தில் இருந்த பெண் சொன்னார்.

“காசு கொடுத்து கத்துக்குற எழுத்தா? தலையில எழுதி இருக்கு. இப்படி யாராவது கத்துக் கொடுத்தாதான் உண்டு. அதிலேயும் மண்ண போட வந்துட்டானுங்க. நீங்க மட்டும்தான் ஊரா? கோபமாக அந்தப் பெண் பேசிக் கொண்டிருப்பதை மீனாட்சியும் அவரது நண்பர்களும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஊரு நல்லதுக்கு தான் சொல்றேன்”

“நீயும் தப்பு அடிக்கிற நானும் தப்பு அடிக்கிறேன். ஒரே வேலதானே செய்றோம். உன் பொண்ண கொடுன்னு கேட்பான். அள்ளி கொடுத்துட்டு போங்க”

சொன்னவர் கோபமாகக் கிளம்பி போனார். அவர்கள் கண்ணில் இருந்த கோபத்தை மீனாட்சி கவனிக்காமலில்லை. வேடிக்கை பார்க்க எதுவும் இல்லாததால் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு கூட்டம் கலைந்தது.

சாப்பாட்டின் சுவை கூடுதலாக இருந்தது மீனாட்சிக்கு. சாப்பாட்டின் இடையில் சிரித்துக்கொண்டார். வெளியில் பேசிய பெண்களுக்கு மனதிற்குள் கை தட்டினார். நம்பிக்கையாக உணர்ந்தார்.

“என்ன தோழர்.. இப்படி இருக்கறாங்க”? செம்பியன் கேட்டார்.

“வந்தவங்கள எப்படி தப்பு சொல்ல முடியும்?”

“ம்..ம்…!”

“அவங்களுக்கு பாட்டுன்னா சினிமா பாட்டு. இசை நாதஸ்வரம், தவில் இந்த மாதிரிதான் தெரியும். பறையும் இசைதான். ஒப்பாரியும் பாட்டுன்னு அவங்களுக்கு தெரியாது. சொல்லிக் கொடுக்கல. புதுசா ஒரு வைரஸ் உடம்புக்குள்ள வந்தா நம்ம உடம்பு எதுக்குறது மாதிரி சொல்லிக் கொடுக்காத, வழக்கத்தில் இல்லாதத எதுக்குறாங்க. அதுக்காக அவங்கள நம்ப குத்தம் சொல்ல முடியாது. அவங்களுக்கு பேசிதான் புரிய வைக்கணும்.”

“பறை நமக்கு ஆதி இசை. அவங்களுக்கு சாதி இசை. தொடர்ந்து பேசிதான் புரிய வைக்க முடியும். இக்னோர் பண்ணக்கூடாது”

“ம்”

“நான் முதல்ல பறையை தொட்டப்ப எங்க அம்மா என்ன மூனு நாள் வீட்டுக்குள்ள விடல. தல முழுக சொன்னாங்க”

“…ம்!!”

“சாதி விஷயத்துல நம்ம எல்லாருக்கும் சாதி பாக்குற ஆளுங்க மேல கோபம் வரும். நார்மல். வந்தவங்க மேல உங்களுக்கு கோபம் இருந்துச்சு இல்ல. கோபப்பட வேண்டியது சாதி சித்தாந்தத்து மேல. அத அடிக்காம இவங்கள மாத்த முடியாது. அப்படி மாத்தணும்னு நினைக்கிறது. காத்துல கத்தி வீசுற கத தான்? சாதி ஒழிப்பு. இவங்க இல்லாம எப்படி சாத்தியப்படும்?”

“…………”

“சாப்பிடுங்க”

“ஸ்கூல்ல எத்தனை கிராமிய கலைஞர்கள் மியூசிக் டீச்சரா இருக்கிறாங்க? இருந்தாலும் எத்தனை பேர் பறைய சொல்லி தராங்க? இதுவரை நடக்காதது நடக்கறப்ப கோவம் வருது”

“பறைய விடுங்க. இசைன்னு நம்பிட்டு இருக்கிற.. எந்த இசை பசங்களுக்கு கிடைக்குது? ஏழைகளுக்கு இசை எப்பவுமே தூரம்தான்”
செம்பியன் சொன்னார்.

“பறை இசையை வாரத்துக்கு ஒருமுறை ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தா வழக்கத்தில் பொதுவான இசையா மாறிடாது?”
குழந்தை போல கேட்டார் மீனாட்சி.

“வாரத்துக்கு ஒரு முறையா!”

“அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு முறை?”

“நடைமுறைனு ஒன்னு இருக்கு இல்ல”.

“மாறாத நடைமுறை எதுவுமே இல்ல”

மீனாட்சி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். நண்பர்கள் கை கழுவினர்.

2

ள்ளி புது விழாவிற்கு தயாராக இருந்தது. சினிமா வாடை இல்லாமல் ஒயிலாட்டம், பறை, கரகம் என சத்தமும் இரைச்சலும் கூடுதலாக இருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாகத் தென்பட்டனர். வேடிக்கை பார்ப்பதற்காகவே பள்ளியை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது.

தலைமையாசிரியர் வந்திருந்தார். நடராஜன் சார் வீட்டுக்கு முன்னால் நடந்தது அவரை சற்று ஆசுவாசபடுத்தியது. ‘ஸ்கூல் சரஸ்வதி இருக்கற இடம். அங்க போய் இப்படி அசிங்கம் பண்ணா பசங்களுக்கு எப்படி படிப்பு வரும்?’ என்று ஒருவர் கேட்டதையும் ‘இன்னைக்கு ஈவினிங் அவங்க போயிடுவாங்க இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்’ என்று ஹெட் மாஸ்டர் சத்தியம் செய்வது போல சொன்னதையும் மீனாட்சி அருகில் இருந்த டீச்சரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

டீச்சருக்கு கோபம் வந்தது. சமாளித்துக் கொண்டார்.

“சார், ரெண்டு நாளு லீவு முடிச்சி வந்தா எவ்வளவு பாட்டில் கெடக்கும். லாஸ்ட் டைம் காலாண்டு லீவு முடிச்சி வந்தப்ப காண்டொம் கூட கெடந்திச்சி. அரையாண்டு பரீட்சை லீவில் தண்ணி பைப் எல்லாத்தையும் உடைச்சி போட்டாங்க. லேடீஸ் ரெஸ்ட் ரூம்ல இருந்த நாப்கின் இன்சினீரடோர் ஒடச்சி போட்டாங்க. சிக்ஸ்த் கிளாஸ் ரூம் பக்கம் போய்ப் பாருங்க. அந்த சைடு இருக்கற காம்பௌண்ட்ல எப்படி நாறுதுன்னு. அப்பலாம் தெரியலையா ஸ்கூல் சரஸ்வதி இருக்கற இடம்னு? அவங்களுக்கு பறை அடிக்க கூடாது. அதுக்கு சாமி ஒரு சாக்கு”
டீச்சரின் இரண்டு நாள் அழுத்தத்திற்கு வழிவிட்டார்.

“பறை எத்தனை பேரு கத்துக்கிறாங்க?” ஹெட் மாஸ்டர் கேட்டார்.

“நாலு பேரு சார்”

“ஊர் பசங்களா?”

“இல்ல சார்.. பறை கத்துக்க பேர் கொடுத்தவங்க சிலம்பம் கத்துக்கிறாங்க”

மீனாட்சி சொன்னார்.

நாலுபேரு தான். பறை அடித்தாலும் சத்தம் மைதானம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. மைதானத்தில் ஒயிலாட்ட பயிற்சியில் இருந்த மாணவிகளைக் கடந்து ஹெட் மாஸ்டர் அறையை நோக்கி ஒருவர் வந்தார். தடிமனாக இருந்தார்.

“ஊர் சுத்தி இருக்கு. மத்தியானம் வரைக்கும் சத்தம் போடாதீங்க”
வந்து சொன்னவர் கிளம்பி போனார். மீனாவுக்கு புரியவில்லை.

“ஊர் சுத்தி அப்படினா?”

“ஊர் நல்லா இருக்கணும். நோய் வரக்கூடாது. மழை வரணும். காத்து கருப்பு எதும் வரகூடாதுனு.. ஊர் சனி மூலையா பாத்து கெடா வெட்டி பலி கொடுப்பாங்க. வீட்ல அம்மா சுத்தி போடுவாங்கல்ல அது மாதிரிதான். சில நேரத்துல கோழி, மொளகா.., சோறு கூட சுத்தி போடுவாங்க”

டீச்சர் சொன்னார். திடீரென நடக்கும் ஊர்சுத்தி மீனாட்சிக்கு சந்தேகத்தை அதிகரித்தது.

“நாங்க வந்ததனால?” மீனா கேட்டார்.
“தெரியல”

“ஊர் சுத்தி எங்க பண்ணுவாங்க?”

“ஸ்கூலுக்கு முன்னாடி. ஸ்கூல் தான் இந்த ஊரோட சனி மூலை. நான் வந்த புதுசுல ஒருமுறை பண்ணினாங்க”

“அமைதியா இருக்கிறது நல்லது. இதனால நிகழ்ச்சி நடக்காமல் போய்விடக்கூடாது”

மீனாட்சிக்கும் அதுதான் சரி என்று பட்டது.

சட்டென்று பள்ளி மைதானம் அமைதியானது. எந்த பயிற்சியும் செய்யாமல் மாணவர்கள் நேரத்தை வீணடிப்பது நிகழ்ச்சியை பலவீனப்படுத்தும் என்பதால் மைதானத்தின் ஒரு மூலையில் கதை சொல்லல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.

பறை பயிற்சி கொடுக்கப்பட்ட இடத்திற்கு போனார் மீனாட்சி. மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பறையும் குச்சியும் இருந்தும் அடிக்க முடியாத ஏக்கம் தெரிந்தது. சத்தம் வராமல் பறையை அடித்துப் பார்த்தனர். சத்தம் வந்தது. பறையை ஓரமாக வைத்துவிட்டு தன் முன்னால் வந்து அமரும்படி மீனாட்சி மாணவர்களிடம் சொன்னார்.

“ஒரு வட்டம் போடுங்க”

“இந்த வட்டம் தான் பறை” என்று மீனாட்சி சொன்னதும் நான்கு பேரும் வட்டத்துக்குள் இருந்த மண்ணை வழித்து எடுத்து தூய்மையாக வைத்தனர்.

“நாங்க இன்னிக்கு போயிடுவோம். அதுக்காக நீங்க பயிற்சிய விடக்கூடாது. பயன்படுத்தாத எதுவும் நினைவில் இருக்காது”
மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் போது..

“எங்க கிட்ட தான் பறை இல்லையே” ஒரு மாணவர் கேட்டார்.

“பறை இல்லாமலும் பயிற்சி செய்யலாம்”

”நம்ப வலது கைல இருக்கறது என்ன குச்சி?” மீனாட்சி கேட்டார்.

“அடிக்குச்சி”

“வெரிகுட்”

“கு சத்தம் வரும்” ஒருவன் பதில் சொன்னான்.

“ம்”

“இடது கைல”

“சுண்டுக்குச்சி”

“ம்ம்”

“த சத்தம் வரும்” என்றான் மற்றொருவன்.

“வெரி குட். வெரி குட்.. நேத்து அழகு தோழர் அடி சொல்லிக்கொடுத்தாரு இல்ல. அடி வாயில சொல்லிகிட்டே”

“த வரப்ப லேபிட்”

“கு வரப்ப?”

“ரைட்”

பையனிடம் இருந்து பதில் வந்தது.

“சூப்புரு ஸ்டார்ட். த கு கு த, த கு கு த, த கு கு த வட்டத்திற்குள் மாணவர்கள் கைகளால் அடித்தனர். கொஞ்ச நேரத்தில் மண்புழுதி அதிகமானது. மாணவர்கள் முகத்தில் இருந்த மண்ணிலும் மகிழ்ச்சி அப்பியிருந்தது.

3

மாலை நான்கு மணி. ஸ்கூல் பெஞ்ச் போட்டு மேடை தயாரானது. நிகழ்ச்சியும் தொடங்கியது. தலைமை ஆசிரியர் உட்பட ஊர் பெரிய மனிதர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். கிருஷ்ணசாமி முதல் வரிசையில் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். வந்தவர்களுக்கு கொடுக்க நினைவுப் பரிசு மேடைக்கு பக்கத்தில் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் சனங்கள் கூடியிருந்தனர். பள்ளி விழா பறை இசையுடன் தொடங்கியது.
கருப்பு சட்டையும் நீல கலர் பேண்டும் போட்ட நான்கு மாணவர்கள் பறை அடித்துக்கொண்டு முன்னால் வர, மீனாட்சியும் அவர்களது நண்பர்களும் பின்னால் பறை அடித்துக்கொண்டு மேடை ஏறினார்கள்.
பத்து நிமிடங்கள் மாணவர்கள் பறை அடித்து ஆடினர். ஃபோட்டோ எடுப்பதும் வீடியோ எடுப்பதுமாக கேமராவின் கண்கள் தூங்கவே இல்லை. பட்டாசு வெடிப்பது போல கைதட்டல் இருந்தது. விசில் பறந்தது. கத்தலும் இரைச்சலுமாக இருந்தது. மாணவர்கள் இறங்கியதும் மீனாட்சி தனி ஆளாக, ஒத்தடியாக.. பத்துநிமிடம் பறை அடித்தார். ஆடாதவர்கள் மைதானத்தில் இல்லை.

கூட்டத்தில் மீனாட்சியின் கண்கள் முதல் நாள் பறை பயிற்சியில் இருந்த பெண்களை தேடியது. அவர்கள் தென்படவே இல்லை.

மீனாட்சி இறங்கியதும் நான்குபுறத்திலும் இருந்தும் சிலம்பத்துடன் நான்கு மாணவர்கள் குதித்து குரு வணக்கம் மேடையில் வைத்தனர். எல்லோர் வாயும் ஊஹ்ஹ்ஹ என்றது.

ரிப்பன் கட்டப்பட்ட சிலம்பம் காற்றில் சுழன்று ஆடிக்கொண்டிருந்தது. ஒயிலாட்டம், கரகம் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் தயாராய் நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்த மீனாட்சியின் கையை பிடித்தார் ஒரு மாணவி.

“அக்கா.. நீங்க அடுத்த வருசமும் வருவீங்களா?”

“வரணுமா?”

“ம்”

“வந்து?”

“உங்கள மாதிரி அடிக்க கத்து தரீங்களா?”

மீனாட்சி அந்த மாணவியின் இரண்டு கன்னத்திலும் தன் இரண்டு கைகளையும் அணைத்துப் பிடித்து பேரன்புடன் நெற்றியோடு நெற்றிவைத்து முட்டிப்போட்டு அமர்ந்தார்.

நிகழ்ச்சி நடந்துகொண்டே இருந்தது. கைத்தட்டல் நிற்கவே இல்லை.

***


சு.சரவணன்
சேலம் மாவட்டம் கவர்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் அம்பேத்கரிய, மார்க்ஸிய பார்வையில் இலக்கியத்தை அணுகுபவர். க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020-ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. இவ்விதழில் பிரசுரம் காண்பது இவருடைய இரண்டாவது சிறுகதை. மின்னஞ்சல்: amudhini2017@gmail.com


மீட்சி (தலையங்கம்)

0

மீட்சி

மிகவும் ஆழமான கருத்துள்ள சொல்.. அச்சத்திலிருந்து மீட்சியாகத் தான் மொழியே பிறந்திருக்கிறது. மீட்சியாகத்தான் நிலம் கண்டங்களாகப் பிரிந்திருக்கிறது, மரணம் எனும் விடுதலையே மீட்சி தான்.

அறிவியலும், விடை தெரிய முடியாத விஷயங்களும் பயணிக்கின்ற இலக்குமே மீட்சி தான். நோய்த்தொற்றிலிருந்து உலகமே ஒன்றாய் வேண்டுவது மீட்சியைத் தான்.

மதம் கூட மீட்சியைத் தருவதாகத் தான் போதித்தது.போதனை மீட்சிக்கு எதிர் துருவம்.

போலி என்பதே அசலை மறைத்து நிற்பது. அசலைக் காட்டிலும் நம்பிக்கை தருவது. அதனால் போதிக்கும் மீட்சியை ஆசை கொள்ள வைக்கும். மீட்சி என்பது இலக்கல்ல அது ஒரு விளைவு.

விளைவுகள் பலவற்றை அச்சுருத்தலாக்கி போதனைகள் வலை விரிக்கும் காலம். கலை மட்டுமே வலையறுக்கும் திறன் பெற்றுள்ளது.

**

அண்மையில் நடந்து முடிந்த சென்னை போட்டோ பினல்லே (Chennai Photo binnale), இதன் மூன்றாம் பதிப்பு MAPS OF DISQUIET எனும் தலைப்பில் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இது ஒரு சர்வதேச நிழற்படத் திருவிழா, இந்த நிகழ்ச்சிகளை சென்னை காதே இன்ஸ்டிட் மற்றும் சென்னை போட்டொ பயன்னல்லே அறக்கட்டளை இணைந்து நடத்துகிறது. 34க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் நிழற்படங்களைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். வெவ்வேறு கேலரிகள், அருங்காட்டியம், நூலகங்கள் என ஏழு இடங்களில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அண்மையில் தனது பட்ட மேற்படிப்பிற்காக சென்னை கவின்கலை கல்லூரியில் விண்ணப்பித்து, நுழைவுத்தேர்வின் முடிவை அறிவிக்காமலேயே மேற்படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட கலைஞர் சரண்ராஜ் அவர்களின் நிழற்படத் தொகுப்பும் இந்த பதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால் எப்படியாவது ஒரு இடத்திலாவது கண்காட்சியைப் பார்த்துவிட வேண்டுமெனச் சென்றோம். (தனிப்பட்ட இழப்பினால் எங்கும் செல்ல முடியாத சூழல்) உடன் இளங்கோ வந்திருந்தார். நாங்கள் சென்றது ரோஜா முத்தய்யா நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சி, சஞ்சயன் கோஷ் உருவாக்கியிருந்த நட்டுவைக்கப்பட்ட ஸ்லேடுகளில் அவரது காணொளி லூப்கள் ஊடாடி ஒளிபரப்பப்பட்டிருந்தன.

சரண்ராஜ் தமது கீழடிப் பயணத்தை அத்தொன்மைமிகு நிலத்தில் இன்று வசிக்கும் மக்களை அத்தொல்குடிகளின் உறவினராக்கி நிழற்படத்தொகுப்பை உருவாக்கியிருந்தார். தம் முன்னோர்கள் வாழ்ந்த நிலம் திரிந்திருக்கும் விதத்தையும், அவர்களே தினக்கூலிகளாய் அவர்தம் முன்னோர்களை அகழ்ந்தெடுக்கும் பணியாற்றும் விதத்தையும் அழகுற காட்சிப்படுத்தியிருந்தார். மண்ணுக்கு கீழே இருப்பவர்களை உலகமே வியந்து பார்த்து வருகிறது, அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு அதே பெருமையும் நிலையும் இருக்கிறதா? ஒரு சன்னமான கேள்வியை எழுப்பத் தவறவில்லை அவரது முயற்சி.

இதுபோன்ற கலைஞர்களை கல்லூரிக்குள் அனுமதிக்காததால், கல்லூரிக்கு தான் இழப்பு அதிகம்.


வருகின்ற சென்னை புத்தகக் காட்சியில் யாவரும் பப்ளிஷர்ஸ் கடுமையான இக்கட்டுகளுக்கு மத்தியிலும் உற்சாகமாக களமிறங்குகிறது. அதே உற்சாகமான இளைஞர் படை, புதிய முகங்கள், முக்கிய ஆளுமைகளின் படைப்புகள் என அணிவகுத்து வருகிறது. வாசகர்களாகிய உங்கள் ஆதரவே எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும்.

*
யாவரும் இணைய இதழுக்கும் ஒரு மீட்சி கிடைக்குமென இந்த இதழின் உள்ளடக்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த இதழுக்குக் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் கருத்துகளே அதைத் தொடர்ந்திட துணை நிற்கும்.

படைப்புகளை அனுப்ப editor@yaaarum.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.

அடுத்த இதழை இன்னும் பொலிவுடன் கொண்டு வருவோம்

மாறா அன்புடன்

ஆசிரியர் குழு

யாவரும் இணைய இதழ்

தொடுதிரை முத்தம்

0

க.ரா

முதல் கதை

தியம் மணி இரண்டு ஆகியிருந்தது. சூப்பர் மார்க்கெட்டில் உள்ளே நுழைந்தபோது இரண்டு பில்லிங் கவுண்டர்களில் நின்றிருந்தவர்களைத் தவிர யாரும் அங்கில்லை. அவனுடைய குழந்தைக்கு சர்க்கரையும் விளக்கேற்றும் எண்ணையும் மட்டும் வாங்க வேண்டியிருந்தது. அந்த இரண்டும் இருக்கும் இடம் தெரிந்தாலும் அவனது கண்ணிற்கு தெரிந்த முதல் வரிசையில் நுழைந்தான். அங்கே கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ரேக்குகளில் அடுக்க பிஸ்கட் பாக்கெட்டுகளை தரையில் பரப்பிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டிட முடியாமல் அதற்கு அடுத்த வரிசையில் நுழைய முற்பட அங்கே ஏற்கனவே ஒரு குடும்பம் தள்ளுவண்டியில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

பக்கத்திலேயே இன்னொரு வண்டி நிறைய பொருட்களிருந்தன.  அங்கேயும் அவர்களைத் தாண்டிப்போக முடியாமல் போகவே, பின்னே வந்து இடது புறம் இருந்த முதல் வரிசையில் நுழைந்தான். அந்த வரிசையில் கடைசியில்தான் அவன் வாங்க வந்த இரண்டு பொருட்களும் இருந்தன. ஆனால் எப்போது கடைக்கு வந்தாலும் மொத்த கடையையும் சுற்றிப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறி விட்டது. வேண்டிய இரண்டு பொருட்களையும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு பில்லிங் கவுண்டர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் இருந்த நான்கு கவுண்டர்களில் மூன்றில் ஆளே இல்லை.

முதலில் கடைக்குள் நுழைந்த போது பார்த்த இருவரில் ஒரு பெண் மட்டும் பில்லடித்துக் கொண்டு இருந்தார். அவனுக்கு முன்பு நின்றிருந்த இரண்டு பேரும் முகக்கவசம் அணியவில்லை. அதிலொருவர் அடிக்கடி மூக்கை வேறு சொரிந்து கொண்டிருந்தது அசூயையாக இருந்தது. அவனுக்குப் பின்னால் ஆளே இல்லை.

அந்த இரண்டு பேரும் பணம் கொடுத்துக் கிளம்ப பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. அவர்கள் நகர்ந்ததும் அவனது பொருட்களை அங்கிருந்த மேசை மேல் வைத்தான். அடுத்த சில நொடிகளில் கவுண்டரிலிருந்த பெண் பில்லை அடித்துக் கையில் கொடுத்தாள். பையில் இருந்த பர்சை எடுத்துக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, பொருட்களை எடுத்து கொண்டு வந்த பையில் வைத்துவிட்டு மிச்ச காசை சரியாக இருக்கிறதா என எண்ணிப் பார்த்தான். பின்னர் பர்சை பாக்கெட்டினில் வைத்துவிட்டு.. இன்னொரு பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் இருக்கிறதா என சரிபார்க்க ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டான்.

அதற்குள் பின்னால் இடிப்பது மாதிரி, ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது அந்த குடும்பம். பின்னே திரும்பி பார்த்தான். ஒரு ரெட் கலர் டீ-சர்ட்டும் வேஷ்டியுமாக சற்றே ஒடிசலாக இருந்தவர் அப்பாவோ தாத்தாவோ தெரியவில்லை. பக்கத்தில் ஒரு பெண் குழந்தை நின்றிருந்தது. கூடவே ஒரு பெண். முப்பது வயதிருக்கலாம். அவன் அவர்களைப் பார்ப்பதை அந்த ஆள் முறைத்துக் கொண்டிருந்தான். 

எல்லாவற்றையும் சரிபார்த்துக் கிளம்ப எத்தனிக்கையில் சரியாக அந்தப் பெண், அவனைப் பார்த்து சொன்னாள்.

“சார் பின்னாடி ஆள் நிக்கிறாங்க.. கொஞ்சம் கிளம்பறிங்களா”

சட்டென்று கோபம் கிளம்ப முணுமுணுத்தான்.

“இங்கயேவா குடும்பம் நடத்த போறாங்க”

அதற்குள் பின்னால் நின்றிருந்த அந்த ரெட் டீ-சர்ட் சொன்னார்.

“லேடிஸ்ட மரியாதையா பேசுங்க”

கோபம் இன்னும் அதிகமாக ரெட் டீ-சர்டையும் பில் கவுண்டர் பெண்ணையும் அவன் கோபமாக முறைக்க “என்னாச்சு சார்?” என்று உள்ளே வந்தார் அந்தக் கடையின் மேனேஜர்.

“கிளம்பச் சொன்னதுக்கு லேடிஸ்ட மரியாதை இல்லாம பேசறான் சார்.  பார்க்கிற பார்வை வேற சரியில்லை”

இது ரெட் டீ-சர்ட்.

அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் கண், வீட்டில் ஒழுகும் குழாயென மாறத் துவங்க.. அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. அவன் அணிந்திருந்த முகக்கவசம் அவனது கண்களையே மறைக்கிறதோ என்று ஒரு சந்தேகம் அவனுக்கு இருக்கையில், ’எவனுக்கோ.. நாம் எங்கே எப்படி என்ன பார்க்கிறோம் என எப்படித் தெரியும்?’ என்று நினைக்கையில்..

“சார் அதெல்லாம் இல்லை.. சார், எங்க ரெகுலர் கஸ்டமர்தான்”

மேனேஜர் சொல்ல ஆரம்பிக்கையில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். பின்னால் அவர் அந்தப் பெண்ணிடம் ஏதோ கோபமாகப் பேசுவது கேட்டது.

கடையை விட்டு வெளியே வந்தான். பாக்கெட்டில் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். ஏதோ ஒரு அனாதை இல்லத்திலிருந்து அழைப்பு. எரிச்சலாக இருந்தது. தான் ஒரு மாதசம்பளக்காரன் எனச் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய் விட்டது. வேறு வேறு நம்பரிலிருந்து ஒரு மாதத்துக்கு குறைந்தது பத்து பதினைந்து அழைப்புகளாவது வந்து விடுகின்றன. இவ்வாறு வருவது அவனைக் குழப்புகிறது, எது உண்மை எது பொய் எனத் தெரியவில்லை என ஒருநாள் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டிருந்தான். அதில் நண்பர்கள் பலபேர் வந்து அப்படி வரும் அழைப்புகளில் முக்கால்வாசி பொய்தான் என கமெண்டு போட்டார்கள். அதற்கப்புறம் அந்த நம்பர்களை எல்லாம் பிளாக் செய்தாலும் வேறு வேறு நம்பர்களிலிருந்து அவனுக்கு அழைப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மொபைல் அடித்தபோது அவன் நான் எதிர்பார்த்ததே வேறு. மனைவிதான் அழைப்பாள் என நினைத்தான்.

*

ரே வீட்டிலிருந்து கொண்டு பேசி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இருவருக்கும் இடையேயான தூது மூன்று வயது மகன்தான். வாட்ஸப்பில் கூட பிளாக் அவனை செய்துவிட்டாள். வழக்கம் போல வரும் சண்டைதான். அவன் இவன் பெரும்பாலும் பேச மாட்டான். அவள் விடாமல் பேசிக்கொண்டே இருப்பாள். அதிலும் எப்படா எதில் தப்பு செய்வான் எனப் பார்த்துக்கொண்டே இருப்பது மாதிரி இருக்கும். அவளுக்குத் தப்பென்று தோன்றிவிட்டால் போதும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டி மாதிரி குத்தும். அவன் சிறிது நேரம் விட்டு விடுவான். பொறுத்திருந்து பார்த்துவிட்டு கொஞ்சம் கெட்ட வார்த்தைகளில் திட்டி விடுவான். அதற்கப்புறமும் விடாமல் அவள் முணுமுணுத்து கொண்டே இருப்பதைப் பார்த்து எரிச்சலில் மீண்டும் கத்துவான். இப்படியே கத்திக்கத்தி ஒரு கட்டத்தில் கையை நீட்டி விடுவான். இந்த தடவை கொஞ்சம் அதிகமாகி ஏறி மிதிக்கப் போனான். நடுவில் குழந்தை வந்து விட்டான். எங்கே கால் குழந்தை மீது பட்டு விடுமோ என்ற பயத்தில் குழந்தையை இழுத்துக்கொண்டு ஒரு மாதிரி சரிந்ததில் சமையல் மேடை தலையில் இடித்து மூன்று நாட்களாக வீட்டில் மௌனம் தான்.

*

வெளிக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறும் சத்தம் கேட்டது. அவன் தான் போகிறான் போல, போகட்டும் என விட்டுவிட்டாள். தினம் ஒருமுறை கிச்சனில் உள்ளே நுழைந்து எல்லாம் இருக்கிறதா எனப் பார்ப்பது அவனது வேலை. எது ஒழுங்காக நடக்கிறதோ இல்லையோ, கடந்த இரண்டு வருடங்களாக இதுவும் சண்டையும் நாள் தவறாமல் நடக்கிறது. எழுந்து போய் கதவை மூடக்கூடத் தோன்றாமல் படுத்தே இருந்தாள். பக்கத்தில் பையன் தூங்கிக் கொண்டிருந்தான். ஓசை எழுப்பாமல் எழுந்து பக்கத்து மேசையில் வைத்திருந்த மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். ஃபேஸ்புக் போனவள் நோட்டிபிக்கேஷனில் போய் பார்த்தாள். நிறைய நண்பர்களின் போஸ்டுகளுக்கு அவன் லைக் போட்டிருந்தான். அதெல்லாம் அவளுக்கு நோட்டிபிக்கேஷனாய் வந்திருந்தன. அவனது ஃபேஸ்புக் புரோஃபைலில் போய் பார்த்தாள். நேற்றைக்கும் இன்றைக்கும் எதுவும் எழுதியிருக்கவில்லை. அதற்கு முந்தின நாள் மட்டும் ஏதோ ஒரு வீடியோவைப் பகிர்ந்து இப்படி எழுதியிருந்தான்.

“ஆண்களோட basic expectation என்ன தெரியுமா.. ஆண்கள் காலைல ஆபிஸ் போறதுக்கு முன்னாடி நீங்க எந்திரிக்கணுங்கிறதுதான்.”

அந்த வீடியோவில் எவனோ ஒருவன் ஏதோ உளறி இருந்தான். அவனின் அந்த போஸ்ட்டுக்கு ஒரு இருபது பேர் சிரிப்பு ஸ்மைலியையும் இன்னும் சிலபேர் வெறும் விருப்பக் குறியையும் இட்டிருக்க ஒரே ஒருவர் மட்டும் ஆர்டின் விட்டிருந்தார். இன்னும் சில போஸ்ட்டுகளைப் பார்த்தாள். எல்லாமே பெண்களைக் கிண்டல் அடித்து போட்டிருந்த போஸ்ட்டுகளாய் இருந்தது. மிகவும் சலிப்பாக இருந்தது. ஆண்களே இப்படித்தானா?

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியே வந்தவள் யூ-ட்யூபில் சாவிஸ் பொட்டிக் என்ற சேனலில் வந்திருந்த வீடியோக்களைப் பார்த்தாள். மொபைலில் சவுண்டை கம்மி பண்ண மறந்துவிட்டாள் போல, யூட்யூப்பில் சவுண்டு வர பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சத்தத்தை கேட்டு அழ ஆரம்பிக்க,  ஒரு கையால் மொபைலில் சவுண்டை கம்மி செய்தவள், மற்றொரு கையால் குழந்தையின் முதுகில் தட்ட குழந்தை தூங்க ஆரம்பித்தது..

*

ப்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தவுடன் மெயில் பாக்ஸில் அவனுக்கு ஏதாவது தபால் வந்திருக்கிறதா எனப் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஜவுளிக்கடையிலிருந்து அவள் பெயருக்கு ஒரு தபால் வந்திருந்தது..  ஒருமுறை எங்கேயோ கீழே விழுந்து எழுந்ததில் ஒரு சிறு காயம்.  வலது கையில் கட்டு போட்டுக்கொண்டு திரிந்தான் என பக்கத்திலிருக்கும் அம்மன் கோயிலுக்குப் புடவை தருவதாக வேண்டியிருக்கிறேன் என்று அவள் சொன்னபோது அந்தக் கடைக்கு அவளைக் கூட்டிப்போய் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்திருந்தான். அந்தக் கடிதத்தைப் பார்த்தபோது எரிச்சலாக வந்தது. ஏற்கனவே எப்போது பார்த்தாலும் மொபலை வைத்துக்கொண்டு புடவை விளம்பரங்களாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதில் இது வேறா என எரிச்சல் வர அதை அங்கேயே கிழித்து எறிந்தான்.

வாசலுக்குப் போய் வெளியே செருப்பைக் கழட்டிவிட்டு, கதவில் கையை வைக்க அது அப்படியே திறந்து கொண்டது. அங்கே இருந்து பார்த்தபோது, அவளும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கதவு திறந்திருந்தது. கட்டிலில் படுத்தபடி ஒரு கையில் மொபலையும் இன்னொரு கையால் குழந்தையையும் தட்டிக் கொண்டிருந்தவள் கண்ணில் பட்டாள். அவனுக்கு மீண்டும் கோபமாக வந்தது. என்ன பொறுப்பற்ற தன்மை இது எனக் கத்த வேண்டும் போல தோன்றியது. மூன்று நாட்களுக்கு முன்னால் போட்ட சண்டை நினைவுக்கு வர அறைக்குள் புகுந்து கொண்டான்.

அந்த அறை என்பது பத்துக்கு பத்து அளவிலான அவனது பிரமாண்டமான உலகம். அங்கேயே ஒரு பக்கம் ஒரு சின்ன கப்போர்டு வைத்து அதில் உடற்பயிற்சி சாதனங்களை அடுக்கி இருந்தான்.  பக்கத்திலேயே இன்னொரு பெட்டி நிறைய குழந்தையின் பொம்மைகள். அதனருகில் ஊரில் இருந்து அவளுடைய அப்பா அனுப்பி வைத்த அரிசி மூட்டைகள் இரண்டு, ஒரு பெரிய பலசரக்கு பெட்டி. இன்னொரு பக்கம் சுவரோடு சுவராக அறையப்பட்ட ஒரு புத்தக அலமாரி. அது நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்கியிருந்தான்.

இது போக மிச்சம் இருந்த இடத்தில்தான் கடந்த இருபது மாதங்களாக வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொரோனாவின் காரணமாய் உலகத்தில் எல்லா தொழில்களும் முடங்கிப் போயிருந்தன. அவன் வேலை பார்த்த நிறுவனம் சேவைத் துறையைச் சார்ந்தது. உலகில் இருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து மென்பொருள் துறையில் அவர்களுக்குத் தேவையான மென்பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாதலால் ஆளுக்குக் கையில் ஒரு மடிக்கணினியைக் கொடுத்து வீட்டிலிருந்தே வேலையைத் தொடர பணித்திருந்தது. அவன் தன் அலுவலகம் போகும்போது, வீட்டிலிருந்து அலுவலகம் முப்பது கிலோமீட்டர் தொலைவு. காலை மாலை பிரயாணமே இந்தப் பெருநகர போக்குவரத்தில்  மூன்று மணி நேரங்களை எடுத்துக்கொள்ள, அலுவலகத்தில் இருக்கும் நேரம் நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரமாக இருந்தது.

இப்போது வீட்டிலிருந்தபடியால் அலுவலக நேரத்துடன் பிரயாணத்துக்குரிய நேரத்தையும் பல நாட்கள் அதையும் தாண்டி வேலை செய்ய வேண்டியிருந்தது.

லேப்டாப்பில் நேரம் மதியம் மூன்று மணி எனக் காட்டியது. உட்கார்ந்திருந்தபடியே திரும்பிப் பார்த்தான். அறையில் இன்னும் வெளிச்சம் வரவில்லை. இன்னும் பதினைந்து நிமிடத்தில் Conflict Management என்ற தலைப்பில் ஒரு பயிற்சி இருந்தது. அவனது அணியினருக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு களைவது என்பதைப் பற்றிய பயிற்சி அது. அதை யோசிக்கையில் வீட்டினுள் இருந்த கருத்தொற்றுமையைப் பற்றி அவனக்குச் சிரிப்பாக வந்தது. இப்போது ஒரு காப்பி குடித்தால் தேவலாம் என அவனுக்குத் தோன்றியது. வெளியே எட்டிப் பார்த்தான்.

ஹால் இன்னும் இருட்டாகத்தான் இருந்தது.

*

மொபலை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நேரத்தைப் பார்த்தவளுக்கு மணி மூன்றரை ஆனது தெரியவர பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிங்க்கில் விழுந்திருந்த பாத்திரங்களைக் கழுவ வேண்டும், குழந்தையின் சாயங்கால சிற்றுணவு, குழந்தையை வெளியே அப்பார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகளோடு விளையாடக் கூட்டிப் போவது என அவளுடைய மனது பரபரப்பானது. எழுந்து வெளியே வந்தவள் தனது அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தாள். அழைத்திருந்தது அவளது அம்மா.

*

லேப்டாப் திரையில் ட்ரைனர் எதையெதையோ விளக்கிக் கொண்டிருந்தார். அவனது மனம் இன்னும் காப்பி வராததில் இருந்தது.  வெளியே வெளிச்சம் இல்லாமல் இருந்து.. ஏதோ பேச்சு சத்தம் குசுகுசுவெனக் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். லாக்டவுனுக்கு முன்னால் வரை அவனது அப்பா அம்மாவுடன் இருக்கும்போது பெரும்பாலும் தொலைபேசியை வெளியே எடுத்துக்கொண்டு தான் போய் பேசுவாள். அம்மா இருக்கும் வரை அவனது பாடு எளிமையிலும் எளிமையாக இருந்தது. எல்லாம் கையில் கிடைத்தது. கொரோனா முதல் லாக்டவுனுக்கு முன்னால் ஏதோ ஒரு உறவினர் வீட்டு விசேஷத்துக்கு ஊருக்குப் போனதுதான் அப்பாவும் அம்மாவும்.. பின்னர் திரும்பும் வழி தெரியவில்லை. இந்தப் பெருநகரத்தில் தொற்று பரவும் வேகத்தைப் பார்த்தவன் அவர்களை அப்படியே அங்கயே இருக்கச் சொல்லிவிட்டான்.

அவர்கள் போன புதிதில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பால், பழம், கறி எல்லாம் வாங்கி வந்து கொடுக்க அவன் மட்டும் தினமும் வெளியே போய் வந்தான். தினமும் மூன்று பேருக்கும் மூன்று விதமான காய்கள் செய்ய வேண்டி இருந்தது. அவன் சாப்பிடும் காயை அவன் சாப்பிடுவது மாதிரி அவளுக்குச் சாப்பிடப் பிடிக்காது. அவள் அவளது முறையில் செய்யும் எதையும் பார்க்கவே அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு கேரட்டை துருவிப்போட்டு வதக்கி தேங்காய் சேர்த்துச் செய்ய வேண்டும். இப்படித்தான் ஒருமுறை, கேரட்டை துருவாமல் காரத்துக்கு பச்சை மிளகாய் தாளிக்காமல், வெறும் மிளகாய் பொடியைப் போட்டுச் செய்து வைத்திருந்தாள்.

அப்படியே தூக்கிக் கொட்டியதில்தான் சண்டைகள் ஆரம்பமானது.

“இவனை கவனிக்கவே நேரம் போதலை எனக்கு. உனக்கு பிடித்த மாதிரி பண்ணணும்னா நீதான் பண்ணிக்கணும்”

அப்படிச் சொன்னவளை அவனால் முறைத்துப் பார்க்கத்தான் முடிந்தது. குழந்தைகளை எந்த அளவுக்குக் கேடயமாய் உபயோகப்படுத்த முடிகிறது பெண்களால்!

*

ட்ரைனிங் முடிந்து ஹெட்போனை கழற்றி வைத்தான். சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தமும் அறையில் ஏதோ ஒரு பஜனைப் பாடல் ஓடும் சத்தமும் கேட்டது. அவளுக்குப் பிடிக்கும் ஆனால் அவனுக்குப் பிடிக்காதவைகளில் இன்னொன்று இது. திருமணத்துக்கு முன்பு பேசுகையில் பேச்சுவாக்கில்..

“உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா?”

“கர்னாட்டிக் ம்யூசிக் கூட நிறையக் கேட்பேன்”

“நான் பாடுவேன்” என்றபடி உரையாடலை முடித்தவளிடம் காதல்.

அவனது கல்லூரியில் கேண்டினில் இலையில் கட்டித்தரும் சூடான தக்காளி சாதத்தின் பொட்டலத்தைப் பிரிக்கும்போது நாசியைத் தாக்கும் வாசனை மாதிரி மனது முழுமையும் நிறைந்திருந்தது.

ஆனால் இப்போது தினமும் ஒலிக்கும் இந்த பஜனைப் பாடல்கள் அவன் ஆன்மாவை அல்லலுறச் செய்கின்றன. முதல் லாக்டவுனில் வீடடைந்த பின்னர் காலை மாலை இரவு என எல்லா வேளைகளும் இதே பாடல்கள்தான்.

ஒருநாள் கேட்டான்.

“பஜனை பாடலுக்கும் கர்னாடக இசைக்கும் என்ன சம்பந்தம்?”

பதிலே சொல்லாமல் நகர்ந்தவள் நகர்ந்தவள்தான். இதில் மகனின் ராஜ்யமும் தொடங்கியது. பாதி நேரம் பஜனைப் பாடல்கள். மீதி நேரம் ரைம்ஸ்.

இந்த வன்முறைக்கு பயந்து அந்த அறையிலேயே ஒடுங்கி கிடந்தான்.

*

மையலறையில் பாத்திரங்களை அலம்பி அடுக்கினவள், அடுத்ததாக குழந்தைக்குத் தர ஆப்பிளின் தோலை நறுக்கிவிட்டு அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி ஆப்பிளை வேகப் போட்டாள். அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் சத்தத்தைக் கேட்டபோது தான் அவனுக்கு இன்னும் காப்பி தராதது ஞாபகம் வந்தது. அடுப்பில் பாலை எடுத்துக் கொதிக்க வைத்தவளுக்குப் படுக்கையில் குழந்தை எழுந்து அழும் சத்தம் கேட்க, கொதிக்கும் பாலை மறந்துவிட்டு குழந்தையைப் பார்க்க ஓடினாள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என நினைத்தவன் எழுந்து வெளியே வந்தான். காலையில் கொடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்து வந்து தரையில் போட்டிருந்தாள்.

“தோய்த்த துணிகளை சேரில் போட முடியாதா?”

பக்கத்திலேயே குழந்தையின் பொம்மைகளும் இறைந்து கிடக்க அறையைத் தாண்டி சமையலறைக்குள் போனால் ஒரு அடுப்பில் பாலும் இன்னொரு அடுப்பில் ஆப்பிளும் கொதித்துக் கொண்டிருக்க, பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான்.

*

குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் சமையலறையில் அவன் நின்றிருப்பதைப் பார்த்து அப்படியே சேரில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் அவனே தனக்குக் காப்பி கலந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆப்பிளைப் பார்க்க அவள் கிச்சனுக்குள் போனாள். வெந்திருந்த ஆப்பிளை மூடி வைத்திருந்தான். சிங்க்கில் மீந்திருந்த சில பாத்திரங்களைத் தேய்த்து கூடையில் அடுக்கி இருந்தான். சமையலறை மேடையில் சீவிப் போட்டிருந்த ஆப்பிள் தோளும் குப்பைக் கூடைக்குப் போயிருந்தன.

ஒரு நிமிடம் நின்று யோசித்து விட்டு அறைக்கு வந்தாள். எடுத்துப் போட்டிருந்த துணிகள் ஒருபுறம் கிடக்க மற்றொருபுறம் குழந்தை இறைத்து விட்டுப் போயிருந்த பொம்மைகள் கிடக்க, முணுமுணுப்பாய்..

“இதெல்லாம் சரிபண்ணி வச்சுட்டு போக முடியாதா!?”

*

காப்பி போட்டு வந்து குடித்துவிட்டு உட்கார்ந்த உடனே அடுத்தடுத்து அவனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டே ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தவன், வழக்கமாக அலைந்து கொண்டிருக்கும் பூனை அமர்ந்திருக்கிறதா என.. எதிரே இருந்த ஜன்னலைப் பார்த்தான் எப்போதும் அந்தப் பூனையை அவனது மேனேஜர் என நினைத்துக் கொள்வான். இன்றைக்கு வந்தமர்ந்த பூனை அவளை மாதிரி தோன்றியது ஒரு கணம்.

எழுந்து முன்னறைக்குப் போனான். சாயங்காலம் எடுத்துப் போட்டிருந்த துணிகள் அங்கேயே இருந்தன, பொம்மைகளும். அவன் வந்து செய்யட்டும் என விட்டுப்போனது மாதிரி தெரிந்தது. முணுமுணுப்பு அவளிடம் இருந்து இப்போது அவனிடம் தொற்றிக் கொண்டது. இந்த நேரத்தில் கத்தினால் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை எழுந்து விடுவான் என நினைத்து சத்தம் வராமல் பிரிட்ஜை திறந்து அடுத்த நாளுக்கான காய்கறிகளை எடுத்து வெட்ட ஆரம்பித்தான்.

*

ஹாலில் ஏதோ சத்தம் கேட்க, வெளிச்சமும் தெரிந்தது.  குழந்தையும் தூங்கியிருந்தான். எழுந்து வெளியே வந்து படுக்கையறை நிலைப்படியில் சாய்ந்து கொண்டு பார்த்தாள். அறையில் உட்கார்ந்து அவன் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான். தோய்த்துப் போட்டிருந்த துணிகளும் மடித்து அடுக்கப்பட்டிருந்தன. முகத்தில் தோன்றிய புன்முறுவலை அவனுக்குத் தெரியாமல் முன்னறையிலயே விட்டுவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

*

வள் வந்து போனது தெரிந்தாலும் நிமிர்ந்தே பார்க்காமல் அவனது வேலையை முடித்துவிட்டுப் போய் படுத்தான். தூக்கம் வராமல் போகவே மொபலை எடுத்து நோண்ட ஆரம்பிக்க, எதை எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மத்தியம் சூப்பர் மார்க்கெட்டில் பார்த்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள்.

ஏனோ அந்த நேரத்தில் “கடைசியாக முத்தமிட்டது எப்போது” என ஒரு நினைப்பு வந்தது. வீடடைந்தே கிடக்கும் இந்த காலத்தில் வெறும் மோதல் மட்டுமே. படங்களில் மட்டும் காலத்துக்கும் காதல் செய்யும் ஜோடிகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நிஜ வாழ்வில் சாத்தியமற்றவைகளே திரைப்படங்களாகின்றன என்று நினைத்துக் கொண்டான்.

மொபைலை பக்கத்தில் போட்டுவிட்டு படுத்தவனுக்கு ’எனது அறைக்கும் அவளிருந்த அறைக்கும் இருக்கும் தூரம் மகனின் வயது’ எனத் தோன்றியது.

தூக்கம் வராமல் போக மொபைலை மறுபடியும் எடுத்து சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் உலாத்திக் கொண்டிருந்தவனுக்கு மெசெஞ்சரில் அவளது பெயருக்கு பக்கத்தில் ஒளிரும் பச்சை வண்ணம் கண்ணுக்குத்  தெரியவே..

ஒரு ரோஜாப்பூவையும் ஹார்ட்டினையும் தொடர்ந்து ஒரு முத்தத்தையும் அனுப்பியவன் வரப்போகும் பதிலுக்காக மொபைலயே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

***

இராமசாமி கண்ணன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர். சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இணையத்தில் 2010-ல் இருந்து எழுதி வருகிறார். 2015-ல் அகநாழிகை பதிப்பகம் மூலம் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவருடைய முதல் சிறுகதை.
மின்னஞ்சல்: ramasamy.kannan@gmail.com

பாலைவன லாந்தர் கவிதைகள்

0

பிரேதப் பரிசோதனை

என்னிடம் ஓர் உயிரற்ற உடலும்
கத்திரிக்கோலும் கத்தியும்
நூற்கண்டும் ஊசியும்
சில நெளிந்த அலுமினிய பாத்திரங்களும்
தரப்பட்ட போதே தொடங்கியது
தூரத்து பியானோ இசை

முதலில் நடனமாடத்தான் அழைத்தான்
இரு கரங்களும் தோல்களும்
மதுக்கோப்பைகளும் கால்களும்
தடுமாறித் தடுமாறி தனது
இலக்கை நிர்ணயித்தபோது
யுத்தம் சமீபித்திருந்தது

களமென்றால் இரத்தம் மட்டுமில்லை என
சூதாட்டமாடும் தேவதைகளும்
நான்கு கொம்புள்ள சர்ப்பமும்
ஒரு பனிப்பொழிவும் உதிரும் உண்ணிகளும்
தீர்க்கப்படாத மாயைகளும் தீக்கிரையாகுகையில்
பூமி பிளந்துகொண்டது

பிளந்தப் பிளவிலிருந்து தளம் உருவானது
நீயும் நானும் அவர்களும்
யானைகளுக்குத் தீனியிடும் மரங்களும்
நீந்தியே இணைதேடும் மீன்களும்
டைனோசர் முட்டைகளும்
குறுக்கே பாயும் நதிகளும் கற்களும்
கொலைகளும் பிணங்களும்

செய்யத் துணிந்த குற்றங்களின் வாடைகளும்

என்னிடம் ஓர் உயிரற்ற உடலும்
கத்திரிக்கோலும் கத்தியும்

*

அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்
ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்

முத்துக்குளிக்கச் சென்ற மகன்
கை நிரம்ப அள்ளி வருகிறான்
இராசயனக் கழிவுகளை
நிலவை விழுங்கும் சர்ப்பம் போல
நிலமெல்லாம் தொற்று நோய்கள்

அந்தக் காட்டு யானையின் வழிமீதமர்ந்து
என்ன செய்கிறார்கள்
காமத்தின் நீட்சிக்கு ஒப்புக் கொடுக்க இயலாத
தன்னுடலை வானுயர்ந்த மதில் சுவரின் மீது
முட்டி முட்டி சிதைத்துக் கொள்கிறது

நான் பிசாசுவின் எதிரி
ஆனால் ஒருபோதும் உங்களுக்கு நண்பராக முடியாது
இடைப்பட்ட தர்க்க நியாயத்தில்
எங்கேனும் யாருக்கேனும் எப்போதேனும்
பொருந்திப்போய் விடுகிறேன்
நிறைய வாதம் செய்யாதீர்கள்
காலப்போக்கில் சிவப்பு மதுவை அருந்தவாயினும் சந்திப்போம்
பிறப்புக் குறித்த கேள்விகளே ஓயாத போது
இறப்பென்பது இருந்தாலென்ன
இல்லாதிருந்தால் என்ன

உலகம் தொடங்கியதிலிருந்து இப்போது வரை
உயிருடனிருக்கும் ஒரு மரம் பற்றி அறிவாயா
யாரோ ஒருவரின் காதல் தோல்வியை பிரகடனப்படுத்தும்
உடலைத் தொங்க விடுவதற்கா
யாரோ ஒருவரை உயிருடன் கட்டிவைத்து தோலுரிப்பதற்காக
யாரோ ஒருவரின் சலனத்தை கிளர்த்திவிடும் பழங்களுக்காக
யாரோ ஒரு பிள்ளையின் தூளிக்காக
யாரோ ஒருவரை பிணைத்து ஆணிகளால் அறைந்து கொள்வதற்காக

நான் உங்களை மன்னிக்க விரும்புகிறேன்
கடலினும் மலையளவு
மலையினும் கடலளவு
உங்கள் பாவங்களைத் துரிதப்படுத்துங்கள்
இன்னும் இன்னுமின்னும்
அளவுகோல்களின் மீதான வரையறையை தவிர்த்து
பாவம் செய்யுங்கள்
ஒரு தேய்ந்துப்போன தகர டிஸ்க் உங்கள் புற்றுநோயை
பரிபூரணமாக சரிசெய்யும் போது
என்ன தயக்கம்

குடிசைகள் எரிகின்றன
குளங்கள் எரிகின்றன
குடிகள் எரிகின்றன
கருகிய ஈரல்குலையை மென்றுத்தின்னும்
ஆதிக்கப் பிசாசுகளிடமிருந்து
நெற்றியில் பெருக்கலிடும் நானே
உம்மை பாதுகாப்பேனென நம்பும்வரை தொடர்க

குறிகளின் மீது இனத்தின் பெயரை செதுக்குபவர்களே
சிலுவை மரத்தில் அறையப்பட்டவனின் இடையிலிருக்கும்
அந்த ஒற்றைத்துணி விலகுமாயென
காத்துக் கொண்டிருக்கும் உங்கள் கண்களை விலக்குங்கள்
ஆமன்

*

கரப்பான் பூச்சி

ஒன்றை அழித்துவிடும் போது பல்கிப்பெருகும்
மற்றொன்றை எதன் பெயரால் அழைக்கலாம்
காமம்
அல்லது காதல்
கனவுகள் முழுக்க
கரப்பான் பூச்சிகளால் தின்னப்பட்டவனின்
உடல் விழித்தவுடன் சில்லிட்ட பிரேதத்தின் சாயலிலுள்ளது

ஒரு துளி பர்ஃப்யூம் வாசனைக்கு
நிர்வாணமாகக் கிடந்த குவியலை நினைவிருக்கிறதா
அந்த துளி

மீன் சந்தையின் ரத்தக்குடல் கவுச்சியில் தொடங்கியது
இருதுளை நாசி மிகப்பெரிய கண்ணாக உருமாறி
அவர்களின் அந்தரங்கத்தை பருகிச் சூடேற வெடித்துச் சிதறி
கரப்பான் பூச்சிகளாக பறக்கத் தொடங்குகின்றன

தலையை வெட்டிய பிறகும் சில காலம் வாழும்
விதியை உனக்கு பரிசளிக்கவா
உடலிருந்து பிரித்தெடுத்த எலும்புகளைக் கொண்டே
உயிரைப் பறிக்கும் ஆயுதம் செய்
கொலைத்தொழில் புதிதல்ல
அறிந்துகொள்

தந்தையைக் கொல்வதால்
நாம் பிறப்பதிலிருந்து தவிர்க்கப்படுவோம்
தந்தைகளைக் கொல்வதெற்கென புறப்படும் முன்
தந்தையை அடையாளம் காண்பது அவசியம்

எச்சரிக்கும் பொருட்டு நமக்கென பிரத்தியேக
உடல்மொழியைக் கையாள்வோம்
படபடவென சிறகுகளை அடித்துக் கொள்வதால்
வெள்ளை ரத்தத்தை வெளியேற்றுவதால்

இருப்பினும்
கரப்பான் பூச்சிகள் புணர்ந்து கொண்டிருக்கும்போது
விஷவாயுவை தூவச்செய்து
அந்நிலையிலேயே செத்துவிழச் செய்யும் மனிதர்களை
ஒருபோதும் நேசிப்பதற்கில்லை

தன் காதலியின் பிணத்தை தோண்டியெடுத்து
முத்தமிடத் துணிந்தவன்
அவளுடைய சாயலில் கரப்பான் பூச்சியொன்றைக் காண்கிறான்
உணர்கொம்புகள் நெடுகிலும் முத்தமிட்ட பிறகு
தனது மேற்கத்திய ஷூக்களால் மிதித்துக் கொல்கிறான்

பாவம் அவள் பாவம் அவன்
பாவம் அது பாவம் அவை

*

சாபங்களால் சூழப்பட்ட இருள்

பன்றிகளின் கொழுப்பில் உருவான
உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு முத்தமிடுவதற்கு
உதட்டைக் குவிக்கிற போது
கொழுத்த பன்றியொன்று அறுப்புக்குத் தயாராகிறது
நீயென் பாவங்களின் விலை

யுரேனியம் நிரப்பப்பட்ட கருப்பைகளை
சுமந்துக்கொண்ட கப்பல் மிகச்சரியாக
நடுக்கடலில் தன்னை மூழ்கடித்துக் கொண்டது
கடலுரசும் தளமெங்கும் பிரசவகாலப் பெருவலி
நீயென் துரோகங்களின் நிழல்

லாகிரியைப் புகைக்க இருளொன்றைத் தேர்ந்தெடுக்கிறான்
லாகிரி இவனைப் புகைக்க புகைக்க
தகதகவென இருள் தேய
சொக்கப்பனைக்கு இவன் முகம்
நீயென் மன்னிப்புகளின் பிரதிவாதி

மண்டியிட்ட பிறகும் இரத்தம் நிற்கவில்லை
அவர்களும் காயப்படுத்துவதை நிறுத்தவில்லை
இருவருக்கும் மத்தியில் சிதறிக்கிடக்கின்றன
சோற்றுப்பருக்கைகள்

பசியைத் திருடிக்கொண்ட
முதலாளிகள் அவமானத்தை பரிசளிக்கிறார்கள்
நீயென் இயலாமையின் வாக்குறுதி

துருத்திக் கொண்டிருக்கும் நாக்குகளைத் தாண்டி
சிலைகளின் மீது தன் காமத்தை செலுத்துபவனை
வெயில் அங்கீகரித்துவிடுகிறது

புறவூதாக் கதிர்களுக்கு ஜோக்கர்களின் முகமூடி
நீயென் சாபங்களின் சாபம்

சொற்களை கையாளத் தெரிந்த எழுத்தாளனின்
கிழிந்த சட்டைப்பையின் மீது
கார்ப்பெட் உலகம் ஒரு முத்திரையிடுகின்றது

அவன் அதைத் தடவிப்பார்த்துக் கொண்டே
நகைச்சுவை காட்சியை வக்கிரமாக்குகின்றான்
நீயென் ஆகச்சிறந்த தோல்வி.

***

பாலைவன லாந்தர்
சென்னையில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: palaivanam999@gmail.com

“கனவு மெய்ப்பட வேண்டும்” ஃபெலோஷிப்

0

நிருபர் குழு

சென்னை போட்டோ பயன்னல்லே அமைப்பும் ஸ்டூடியோ ஏ-வும் இணைந்து “கனவு மெய்ப்பட வேண்டும்” எனும் ஓராண்டு கால நிகழ்வின் ஒரு பகுதியாகப் பயிற்சி அளிக்கப்பட்ட ஐந்து பெண் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களை தட்சிண சித்ராவில் காட்சிக்கு வைப்பார்கள்.

புவனேஸ்வரி

தேர்வு செய்யப்பட்டக் கலைஞர்கள் –

தனா ஷக்தி

புவனேஸ்வரி – சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு டேட்டா எண்ட்ரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும் நிழற்படத்துறையை கனவாகக் கொண்டிருந்த இவர், ஃபெலோஷிப் நிகழ்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுப்பிரியா

தனா ஷக்தி – அடிப்படையில் கவிஞரான இவர். நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. நிழற்படத்துறை மீதான ஆர்வம், அவரது கவிதைகளையே நிழற்படமாக்க முடியுமா என்கிற கேள்விக்கான விடையாக ஃபெலோஷிப் நிகழ்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மதுப்பிரியா, பயோகெமிஸ்ட்ரியில் துணைப் பேராசியராக வேலை பார்த்தவர். ஊரடங்கு காலத்தில் தனக்கு ஈடுபாடு இருந்த நிழற்படக் கலை மேல் உந்துதல் பெற்று, முழுமையாக தன் மனம் விரும்பிய துறைக்குள் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். இவருக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் ஃபெலோஷிப் வழங்கப்பட்டுள்ளது.

சாந்தினி, இது தான் தன் துறை எனத் தீர்மானம் செய்தவர். அதிலும் தனித்துவமிக்க குழந்தைகளுக்கான நிழற்படகலைஞராக வரவேண்டுமென்று அவ்விதமே தன்னை தகவமைத்துக் கொண்டவர். இத்தகைய ஆர்வத்தோடு பெருநகரங்களில் வசிக்காத ஒருவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது பெரும் நம்பிக்கை அளிக்கிறது. இவரும் அந்த ஐந்தில் ஒருவர். இவர் தன் துறையிள் மிளிர்வார் என்பதில் சந்தேகமேயில்லை

ரேகா விஜயஷங்கர், தக்ஷிணசித்ரா எனும் அருங்காட்சியத்தில் துணை நூலகராகப் பணிபுரிபவர். கலை, கலைப்பொருட்கள் சார்ந்து இவர் ஏற்கனவே தொகுத்து வைத்திருக்கின்ற ஆவணங்கள் மிக முக்கியமானவை. இயற்கையும் பெண்ணும் என்கிற தொகுப்பில் தற்போது அவர் சேகரத்தில் இருக்கின்ற நிழற்படங்கள் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. உலகளவில் கவனம் பெற்ற நிழற்படத்தொகுப்பின் வேறொரு காலவரிசையை அவர் கள ஆய்வு செய்து ஆவணப்படுத்திவருகிறார். இது ரேகாவின் உழைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்

அறிவியல், விமானம், ராணுவம் எனப் பெண்கள் தங்களை நிரூபணம் செய்யாத துறைகளே இல்லை. நிழற்படக்கலை தற்காலப் பெண்களுக்கு மிகவும் சவாலான துறை தான் என்ற போதிலும் இவர்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தங்களது திறன்களை மெருகூட்டவும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத்தரவும் உதவுகின்ற, இந்த சென்னை போட்டோ பயன்னல்லே மூன்றாம் பதிப்பில் ஃபெலோஷிப் பெற்றுள்ள ஐவருக்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒற்றை சம்பவம்

4

ஜா.தீபா

சிதறிக்கிடந்த ரோஜா இதழ்கள் காலில் மிதிபடாமல் நடக்க வேண்டும் என கவனமாக எட்டு வைத்தாள் மணிமாலா. ரோஜாவும் மல்லிகையும் அவளுக்குப் பிடித்தமான மலர்கள். அதன் வாசனைகள் அவளின் கனவுகளில் துரத்தக் கூடியவை. வாசனை துரத்தும் இரவுகளின் விடியலில் அவள் மல்லிகையை சூடிக்கொள்ள நினைத்திருக்கிறாள். இதை அவள் நாதனிடம் சொல்லியதில்லை. சொன்னால் அடுத்த கணமே வாங்கித் தரக்கூடியவன் தான் என்றாலும் மணிமாலாவுக்குச் சொல்லத் தோன்றியதில்லை.

நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான் எத்தனை வசதி என்று மணிமாலா அன்று உணர்ந்தாள். அவள் முன்பாக நடக்கும் சங்கதிகளை அவள் விரும்பாமலேயே கேட்டபடி இருந்தாள்.

“எப்படிடி உனக்கு மனசு வந்தது?” என்று நாதனின் அம்மா அழுது அரற்றினாள். தன்னை நோக்கிய கேள்வி என்று மணிமாலாவுக்குத் தெரியும். இதற்கான பதிலை அவள் தனக்குள்ளாகவே ஆயிரம் முறை கேட்டுத் தெளிந்திருக்கிறாள். நாதன் இருந்திருந்தால் அவன் மணிமாலாவுக்கு ஆதரவாகப் பேசியிருப்பான். நாதன் எப்போதுமே தனக்காகப் பேசியதை மணிமாலா நினைத்துப் பார்த்தாள். அதை அவன் மணிமாலாவின் உவகை எனக் கொண்டான். எந்தவொரு சொல்லையும் செயலையும் மணிமாலாவை முன்வைத்தே செய்து கொண்டிருந்தான்.

மணிமாலாவுக்கு இப்போது புதிதாய் சில கண்கள் தன்னைத் துளைப்பது தெரிந்தது. நாதனின் தூரத்து உறவினர்களாக இருக்க வேண்டும் அல்லது பக்கத்து தெருக்களில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களுக்கு நாதனின் மரணம் ஒரு புதிர்.. இந்தப் புதிரின் விடை மணிமாலாவுக்குத் தான் தெரியும் என்பது போல அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

லோசனி காதின் அருகே வந்து சொன்னாள். ‘மணி.. போலிஸ் வந்துருக்கு. உன்கிட்ட விசாரிக்கணுமாம்..’ மணிமாலா சட்டென்று எழுந்தாள். லோசனி மணிமாலாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அந்த வீட்டில் மணிமாலாவால் ஒவ்வொரு காலடியையும் தயக்கமின்றி எடுத்து வைக்க இயலும். இன்று பொருட்கள் நாதனின் மறைவின் பொருட்டு எங்கெங்கோ சிதறியிருக்கக்கூடும். நாதனின் அம்மா சுத்தத்துக்கு பெயர் போனவள். நாதனின் மரணத்தை எதிர்பார்த்திருந்த அவள் முன்கூட்டியே எந்தப் பொருட்களை இன்றைய தினத்தில் எங்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பாள்.

“நல்லா கேளுங்க.. எல்லாத்தையும் செய்துட்டு தைரியமா இங்க வந்து உக்காந்துருக்கா.. என் பையன் அவளுக்கு எவ்வளவு செய்துருப்பான்” என்று நாதனின் அம்மா உரக்கப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் வந்திருந்த போலீசிடம் தான் பேசியிருந்திருக்க வேண்டும். நாதனின் மரணத்தில் தன்னுடைய பங்கென ஒன்றுமில்லை என்பதாக அவளுக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது. நாதன் எதையோ அறுந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கிடந்தபோது மணிமாலாவை வரவழைத்து ‘என் பையன் உசுருக்கு ஏதாவது ஒன்னுன்னா..இந்த வீட்டை உனக்குத் தரமாட்டேன். அவன் ராவும் பகலுமா நின்னு கட்டித்தந்த வீடு” என்றாள்.

ஒவ்வொரு காலடியையும் நிதானமாக எடுத்து வைத்து பக்கத்து அறைக்குப் போனாள் மணிமாலா. பின்தொடர்ந்தாள் மணிமாலா. இதே அறையில் தான் மணிமாலாவுக்கும் நாதனுக்கும் முதலிரவு நடந்தது. அவள் நாதனிடம் இருந்து மூன்றாவது முத்தத்தைப் பெற்ற இடமும் அதுதான். அந்த அறையில் அவள் வெளிச்சமென பரவி நிழலென வீழ்ந்திருக்கிறாள்.

“உக்காரும்மா”.. என்றார் போலிஸ்.

பெண் போலிஸ்.

‘உக்கார வையுங்க’ என்றாள் போலிஸ் லோசனியைப் பார்த்து.

‘பரவல்ல… நான் உக்காந்துக்கறேன்.. சொல்லுங்க மேடம்’

தன்னருகில் இருந்த நிழல் விலகிப் போனதைக் கவனித்தாள் மணிமாலா. லோசனி அந்த அறையில் இல்லை என்பதை உணர்ந்தாள்.

‘இங்க உங்களையும் என்னையும் தவிர யாருமில்ல மணிமாலா”

“ஆனா எல்லாரும் நம்மள தான் பாத்துட்டு இருக்காங்க மேடம்”

இதற்குள்ளான அர்த்தத்தை இன்ஸ்பெக்டர் அறிவாள். அதனால் அதைக் கடக்க நினைத்தாள்.

‘உங்க ஹஸ்பண்ட் நாதன் தற்கொலை செய்துட்டது உங்களுக்குத் தெரியும்.. எதனால இப்படி முடிவு எடுத்தாரு?”

மணிமாலா கேள்வியை உள்வாங்கிக்கொண்டிருக்கும் போதே பதிலைத் தேடினாள்.

“மேடம்..ஒருத்தர் தற்கொலை செய்துக்க காரணம் நிச்சயமா இருக்கணுமா?”

“என்ன?”

“இப்படி வேணுமானா காரணத்தை சொல்லட்டுமா?.. நாதன் எனக்காக தற்கொலை செய்துட்டாரு.. அவர் தனக்குத்தானே திருப்திபடுத்த முடியாம செத்துப் போயிட்டாரு. ஒவ்வொரு தற்கொலையிலும் யாருக்கான செய்தியோ இருக்கும் மேடம்.. நாதனோட மரணத்துல அவரே அவருக்கான செய்தியை சொல்லிக்கிட்டாரு”

“புரியற மாதிரி சொல்லும்மா.. ஏதாவது சம்பவம் மாதிரி இருந்தா சொல்லு.. உங்களுக்குள்ள சண்டை வந்ததா? நீ எதுவும் அவரை சொன்னியா?”

“சம்பவமா? ஒருத்தர் செத்துப் போறதுக்கு சம்பவங்கள் காரணங்களா இருக்கறதில்ல மேடம்.. மனநிலை தான் காரணம்”

இன்ஸ்பெக்டர் நெற்றி நரம்பு பொறுமையில்லாமல் துடித்து அடங்குதை மணிமாலா அறிந்து கொண்டாள். அவளுடைய விரல்கள் இன்ஸ்பெக்டரின் நெற்றியை வருடாமலேயே மணிமாலா அதை உணர்ந்திருந்தாள்.

“இப்ப என்னோட ரிப்போர்ட்ல உன் வீட்டுக்காரர் இறந்ததுக்கு காரணம் என்னன்னு எழுதறது.. நீ அவரை விட்டுப் போனதால தான் செத்துப் போயிட்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க”

“தெரியும் மேடம்.. இப்படி எல்லாரும் சொல்றதுக்காகவே அவர் செத்துப் போயிருக்காரு”

“ஏம்மா? உன்னை நல்லா பாத்துக்கிட்டாருனு எல்லாரும் சொல்றாங்க.. போன வருஷம் கூட எதோ பெரிய அவார்ட் வாங்கினியாம்.. மேடையில கூட அவருக்குத் தான் நன்றி சொன்னியாம். எதுக்கும்மா அவரை இப்படி பண்ணிட்டே?”

“ஆமாம் மேடம்..உண்மை தான். நீங்க நிறைய கேள்விப்பட்டுட்டு வந்து கேக்கறீங்க. உங்களுக்கு நான் சொல்றதைக் கேக்கற பொறுமை இருக்காது. ஆனா அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஒரு வாழ்க்கையை சொல்லச் சொல்றீங்க.. எங்க ரெண்டு பேரோட மனநிலையை பேசணும்னு சொல்றீங்க.. ஒரு மனுஷன் ஏன் செத்துப் போனான்னு செத்த அவனுக்கேத் தெரியுமான்னு தெரியாது.. ஆனா எங்கிட்ட கேக்கறீங்க.. உங்களுக்கு ஒரு சம்பவம் வேணும்.. அவ்வளவு தான மேடம்.. உங்களுக்காக சொல்றேன்”

சப் இன்ஸ்பெகடர் கொஞ்சம் சுவாரஸ்யமடைவது போல மணிமாலாவுக்குத் தெரிந்தது. சப்இன்ஸ்பெக்டரின் உடல் அசைந்து முன் வந்தது. அவளது நிழல் மணிமாலாவின் கால்களில் அசைந்து கொண்டிருந்தது. வந்திருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கு சற்று கனத்த சரீரம் என்பதை உள்ளுணர்ந்தாள் மணிமாலா.

“நீங்க சொன்ன அந்த அவார்ட் தர்ற விழாவுக்கு நான் என்ன புடவை கட்டியிருந்தேன் தெரியுமா?”

சப் இன்ஸ்பெக்டர் இயல்பாய் தன் உடலை முன்பக்கத்துக்கு நகர்த்தினாள்.

“சொல்லு”

“எனக்குத் தெரியாது.. அதனால தான் உங்கக்கிட்ட கேட்டேன்.. உங்க பின்னால இருக்கிற மேஜையில் அவார்ட் போட்டோ இருக்கும்… அதுல பார்த்து சொல்ல முடியுமா மேடம்?”

இன்ஸ்பெக்டர் மேஜையினைப் பார்த்தாள். அதன் மேல் அந்த புகைப்படம் சட்டமிடப்பட்டு இருந்தது. அதில் மணிமாலா அந்த சேலையை மிக நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.

“ஆமா போட்டோ இருக்கு.. பச்சையில, பிங்க் பார்டர் போட்ட புடவை கெட்டியிருக்கே”

“இந்த அவார்ட் வாங்கி ஒரு வருசம் ஆவுது.. இன்னிக்குத்தான் என்ன புடவை கட்டியிருந்தேன்ன்னு கேட்டுத் தெரிஞ்சுசுக்கறேன்.”

சப் இன்ஸ்பெக்டருக்கு கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “அந்த புடவையில உடம்பெல்லாம் பிங்க் கலருல சின்ன சின்ன பூ போட்டுருக்கு”

மணிமாலா மெலிதாய் சிரித்தாள்.

“எனக்கு நிறங்கள் தெரியாது மேடம்.. ஆனா எனக்குள்ள சில வண்ணங்கள் இருக்கு.. அந்த வண்ணங்களோட தான் நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கறேன்”

“ஓ!”

“ஸாரி… நான் எதோ சொல்ல வந்து உங்களை குழப்பிட்டேன் மேடம்..சம்பவம் கேட்டீங்கள்ல?”

“சொல்லு”

“இந்த அவார்ட் எனக்கு எதுக்குத் தந்தாங்க தெரியுமா? ஒரு பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலை பாக்கறேன்.என்னை மாதிரி உள்ளவங்க வாசிக்கறதுக்காக புத்தகங்களை ப்ரெய்லில எழுதறேன்.. நிறைய முறை ரத்த தானம் செய்துருக்கேன்.. ஆறு குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைக்கறேன்..”

“பரவாயில்லையே… இவ்வளவு செய்துருக்கியா நீ”

மணிமாலாவுக்கு இது மாதிரியான வார்த்தைகளை உள்வாங்கும்போது ஏற்படுகிற எரிச்சல் இப்போதும் வந்தது. எப்போதும் போல கடக்க நினைத்தாள்.

“மணிமாலா நீ எதோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு..”

“ம்…. இந்த அவார்ட் வாங்கறதுக்கு முந்தைய நாள் நாதன் என்கிட்டே மேடையில என்ன பேசப்போறேன்னு கேட்டாரு.. மனசுல இருக்கறதை பேச வேண் டியது தான் அப்படின்னு சொன்னேன்.. நாதன் ஒரு காகிதத்துல எழுதி வச்சிருந்ததை வாசிச்சாரு.. அதுல கண்கள் இல்லாத நானே சாதிக்க முடியுதுன்னா, நீங்க எல்லாம் எவ்வளவு செய்யலாம்.. அப்படின்னு நான் சொல்லணும்னு எழுதியிருந்தது.. அதைக் கேட்டதும் எனக்கு சுருக்குனு வந்தது மேடம்”

“அவரு எழுதினதுல தப்பேதும் இல்லையே…”

மணிமாலா மௌனமானாள். அந்த நாளை தனக்குள் கொண்டு வந்தாள். அன்றைய தினம் நாதனுக்கும் மணிமாலாவுக்கும் இது குறித்து விவாதம் எழுந்தது. மணிமாலா அன்றைய தினம் மேடையில் பேச வேண்டியதைப் பற்றி யோசித்திருக்கவில்லை. அவளுக்கு அந்த விருது விழாவே ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. அச்சில் தேய்ந்தது போல அனைவரின் வாயிலிருந்தும் வெளிப்படும் சொற்கள் அவள் செவிகளில் முட்டிமோதிக் கொண்டிருந்தன. தன் இயல்பில் வாழப் பிடிவாதம் கொண்டிருந்தாள். இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஓசையின்றி பல ஆயிரம் பேர் செய்து கொண்டிருப்பதைத் தான் செய்கையில் தனக்கு மட்டும் இந்த கௌரவம் எதற்காக என்கிற கேள்வியை அவள் நாதனிடம் முன்வைத்தாள். அவன் அவள் கைபிடித்து மேடைக்கு அழைத்துப் போகும் நொடிகளுக்காக காத்திருந்தான். “விருதுகள் எனக்கல்ல.. இழந்த என் கண்களுக்கானவை” என்றாள் நாதனிடம். அவன் ‘அதனால் என்ன!’ என்றான்.

“இழந்த என் கண்கள் எனக்கு அச்சமயங்களில் அவமானத்தைத் தருகின்றன” என்றாள்.

“ஏன் என்னவெல்லாமோ யோசிக்கிறாய்?.. கைதட்டல்களை புறந்தள்ளாதே” என்றான்.

“உங்களுக்கு என்னைப் புரிவதில்லை” என்றாள்.

பிறகு அப்படி சொல்லுவதையும் நிறுத்திக் கொண்டாள்.

சப் இன்ஸ்பெக்டர் “மணிமாலா…” என்றழைத்தாள்.

“மேடம்… உங்கக்கிட்ட இனிமே எதுவும் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தோனுது.. நீங்க ஒன்னு செய்யறீங்களா? நாதன் இறந்து போனது அவர் மனைவி மணிமாலாவின் மீது கொண்ட வெறுப்பினால் தான் அப்படின்னு உங்க ரிப்போர்ட்ல எழுதிடறீங்களா?”

எரிச்சலடைந்தாள் சப் இன்ஸ்பெக்டர்.

“யம்மா… பொழுது போகாம உன் முன்னாடி வந்து உக்காந்து கிடக்கல.. புரியுதா? எனக்கு சுருக்கமா சொல்லு.. உன் வீட்டுக்காரர் எதனால இறந்து போனாரு?”

“சுருக்கமாத் தானே கேக்கறீங்க.. அவர் செத்து என்னை உயிரோட கொல்றதுக்கு.. போதுமா?” என்று சட்டென எழுந்தாள் மணிமாலா. அடுத்த அறையில் காத்திருந்த லோசனி ஓடி வந்தாள்.

லோசனியிடம் சப் இன்ஸ்பெக்டர், “யம்மா.. இந்தப் பொண்ணு எதையும் உருப்படியா சொல்ல மாட்டேங்குது.. இதுமாதிரி எழவெடுத்த காரியத்துக்குத் தான் என்னை அனுப்புவாங்க.. பாவமே கண்ணு தெரியாத பொண்ணாச்சே பதமா பேசும்வோம்னு பேசறேன்… ரொம்பத் தான் எகிறுது. இதுமாதிரி ஒரு பொண்ணை ஒருத்தன் கல்யாணம் பண்ணதே பெரிய விஷயம்.. அந்த எண்ணம் கூட இந்தப் பொண்ணுக்கு இல்லையே” என்று மூச்சு வாங்கப் பேசிவிட்டு அடுத்த வார்த்தைக்குத் திண்டாடினாள் சப் இன்ஸ்பெக்டர்.

எழுந்த மணிமாலா அப்படியே உட்கார்ந்தாள். சப் இன்ஸ்பெக்டர் இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளின் மௌனமும் கண்களின் அலைபாய்தலும் சப் இன்ஸ்பெக்டருக்குள் தாள முடியாத அவஸ்தையைக் கொடுத்தது. ‘நல்ல கேசு நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு’ என்று தன்னை இங்கு அனுப்பிய இன்ஸ்பெக்டர் மீது பொசுங்கும் சொல்லை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

“மேடம்.. நீங்க என்னென்ன பேசியிருக்கீங்கன்னு உங்களுக்கு மறந்து போகும்.. நான் உங்களுக்கு ஆயிரத்துல ஒருத்தி. ஒரு கேஸ். அவ்வளவு தான்.. ஆனா நீங்க என்ன பேசினீங்க, எங்க மூச்சு விடறதுக்கு இடைவெளி எடுத்துக்கிட்டீங்க, எந்த வார்த்தையில குரலை உச்சத்துக்கு கொண்டு போனீங்க இதெல்லாம் எனக்குள்ள பதிஞ்சு போயிடும் மேடம்.. இனி உங்க குரலை எந்தத் திசையில என்னிக்குக் கேட்டாலும் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், உங்க மூச்சும் சேர்த்துதான் எனக்குள்ள கேக்கும். எனக்கு நீங்க கண்ணு, மூக்கு முகம் கிடையாது. நீங்க ஒரு குரல். ஒரு ஸ்பரிசம்.. ஒரு அசைவு”

இன்ஸ்பெக்டர் மணிமாலாவையே பார்த்தாள். லோசனி இன்ஸ்பெக்டருக்கு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துத் தந்தாள். வேண்டாம் என்று மறுப்பாய் கையை அசைத்தாள் இன்ஸ்பெக்டர். பெருமூச்சினைத் தந்துவிட்டு அமைதியானாள். அவளுடைய கண்கள் தரையில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பூக்கோலத்தை பார்த்துக் கொண்டிருந்தது. மணிமாலா தன்னை ஊடுருவதை உணர்ந்தாள் சப் இன்ஸ்பெக்டர்.

“சரிம்மா.. சொல்லு.. கேக்கறேன்”

“என்ன சொல்லணும் மேடம்? நாலு வருசம் என்கூட வாழ்ந்தவர நான் உணர்ந்துக்கிட்டேன் மேடம்? எனக்கு மூச்சு முட்டிருச்சு. ஒவ்வொரு நிமிஷமும் என் குறையை எனக்கு எடுத்துக் காட்டிட்டே இருந்த அவரோட குரல் எனக்குள்ள வெறுமையை ஏற்படுத்தினது”

இன்ஸ்பெக்டர் லோசனியைப் பார்த்து தலையசைத்தாள். லோசனி அங்கிருந்து அகன்றாள்.

புதிதாய் சில குரல்கள் கூடத்தில் கேட்டன, நாதனின் அம்மா ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்ற மாதிரி தனது குரலை ஏற்றவும் இறக்கவும் பழகியிருந்தாள். இப்போது அவள் குரல் தாழக்கேட்டது. வந்திருப்பது அத்தனை முக்கியமான நபராய் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள் மணிமாலா.

இன்ஸ்பெக்டர் ஒருமுறை எழுந்து உட்கார்ந்தது மணிமாலாவுக்கு தரை கொடுத்த மெல்லிய அதிர்வில் தெரிந்தது.

“மேடம்.. யாராவது யாரையாவது உருவாக்க முடியுமா?”

“என்ன?”

“நீங்க போலிஸ் வேலைக்கு வரணும்னு உங்களுக்கு எப்ப தோனிச்சு?”

“அது.. சின்ன வயசுலேயே.. எங்கப்பா என்னை போலிசாக்கணும்னு நினைச்சாரு”

“ஆனா நான் டீச்சராகணும்னு நினைக்கல.. எனக்கு வரையணும்னு ஆசை.. The job of the artist is always to deepen the mystery” பிரான்சிஸ் பேகன் அப்படின்னு ஒருத்தர் சொன்னது இது. மர்மங்களை கண்டடையறது தான் ஒரு கற்பனைவாதியோட வேலையா இருக்க முடியும் இல்லையா? நான் மர்மங்களை கண்டடைய விரும்பினேன் மேடம்… அஞ்சு வயசுல எனக்கு கண்ணு போச்சு.. அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் உள்ள மர்மங்களை நான் தேட ஆரம்பிச்சேன்.. ஒரு ஓவியரா ஆக முடியலேனாலும் பேகன் சொன்ன மாதிரி மர்மங்களைக் கண்டுபிடிக்க நினைக்கற ஒவ்வொருத்தருமே ஓவியர் தான்..”

தொடக்கத்தில் சிறு குறிப்புகளாக மணிமாலா சொன்னதைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் நேரான பார்வையோடு மணிமாலாவை சந்தித்தாள்.

“நான் நாதனைத் தெரிஞ்சுக்க விரும்பினேன்.. அதுல நான் வெற்றியடையும்போதெல்லாம் அவர் என்னை ஜெயிக்கணும்னு நினைச்சாரு.. ஜெயிக்கணும்னு நினைக்கும்போதெல்லாம் அவர் அடுத்தக் கட்டத்துக்கு என்னை வாழ்க்கையில நகர்த்திக்கிட்டே போனாரு.. நான் யாரு, நான் செஞ்ச வேலைகள் என்ன, என்னோட உழைப்பு என்னன்னு அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதிப் போடுவாரு.. சில பத்திரிகைகள்ல இருந்து என்னை பேட்டி எடுக்க வருவாங்க.. நான் வெறும் சாட்சி.. எனக்கான குரலா அவர்தான் பேசினாரு.. அவங்க எல்லாருமே போகும்போது நாதனை ஒரு உதாரணப் புருஷனா பார்த்தாங்க.. இவளை நான்தான் உருவாக்கினேனு எல்லார்கிட்டயும் அவர் நிரூபிக்க அவர் போராடினதை நான் பார்த்தேன். அது ஒருவிதத்துல என்னைத் தோற்கடிக்கற யுத்தினு எனக்குத் தெரியும்”

“உன்னை அவர் ஜெயிக்கத் தானேமா வச்சாரு”

“எது ஜெயிக்கறது மேடம்? நீ என்னால தான் ஜெயிச்சன்னு சொல்லும்போது அங்க வெற்றிக்கு என்ன மதிப்பிருக்கு?”

தன்னையறியாமல் இன்ஸ்பெக்டர் தலையாட்டினாள். எதையோ நினைத்து மீண்டுமாய் பெருமூச்சினை வீசி எறிந்தாள். அந்த மூச்சின் ஒலியை உள்வாங்கி மணிமாலா அமைதியாக இருந்தாள். அந்தப் பெருமூச்சு தன் காலடியிலேயே சுழல்வதாக மணிமாலாவுக்குப் பட்டது. கால்கள் சற்று உஷ்ணமாயின.

“நாதன் என்னைக் கல்யாணம் செய்துக்க வரும்போது என்னால மறுக்க முடியல. இதுவரை வாழ்க்கையில் எனக்குன்னு எதையும் தேர்ந்தெடுக்கல.. போடற ட்ரெஸ்ல இருந்து சிரிக்கற சிரிப்பு வரைக்கும் நான் மத்தவங்க தயவுல தான் இருக்கணும். நான் உடைக்க நினைக்கறேன் மேடம். எனக்கு இந்த சமூகம் செய்யற ஒவ்வொன்னும் இயல்பா இருக்கணும்னு நினைக்கறேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்கப்படறேன். எப்பவும் எல்லாருக்கும் நன்றியுள்ளவளா இருக்கணும்னு கட்டாயபடுத்தப்படறேன். அது என் வீட்டுல இருந்தே தொடங்கும்போது அதோட வலியை எப்படி மேடம் ஒரு சம்பவமா சொல்ல முடியும்?’

“எனக்குத்தான மேடம் கண்ணு தெரியாது? ஆனா நாதனுக்குத் தெரியுமே.. என் முகம் ஒவ்வொரு முறையும் எப்படி இருக்கும்னு நான் கேட்டுருக்கேன்.. அவர் என்னை நெருங்கும் போதும், கழுத்துல முத்தம் கொடுக்கும்போதும் என் முகம் எப்படி இருக்கும்னு நாலு வருசத்துக்கு முன்னாடி கேட்டேன். முகம் சிவந்துருக்கான்னு கேட்டேன். அவரு சிவப்புன்னா என்னன்னு தெரியுமான்னு கேட்டாரு? உணர்வுகளுக்கு நிறமிருக்கு.. அது எனக்குப் புரியும்னு சொன்னேன்.. அவரு எனக்குப் புரியாதுன்னு முடிவு பண்ணிட்டாரு.. நான் அதுக்கப்புறம் கேக்கறதே இல்லை..”

“இந்த வீடு என்னோட சம்பளத்துல கட்டினது. இதை விட்டு நான் வெளியே போறேன். நீங்க உங்க அம்மாவோட இருங்கன்னு சொன்னேன். அவர் அதை அவமானமா நினைச்சாரு. அவரோட உதவியில்லாம நான் வாழ முடியுங்கறதை அவரால ஏத்துக்க முடியல. இத்தனை நாள் என்னோட வெளிச்சம்னு அவர் எல்லார்கிட்டயும் வாங்கின பேரை, என் சாதனைக்கு பின்னாடி ஒளிவட்டமா அவர் இருந்ததை நிரூபிக்க நான் இல்லாமப் போனதை அவரால தாங்கிக்க முடியல.. என்கிட்டே தோற்றத்தை அவரால ஏத்துக்க முடியல. அவரோட சாவுல என்னைத் தோற்கடிக்க நினைச்சாரு… இதை நான் ஒரு சம்பவமா எப்படி சொல்றது மேடம்?”
என்று மணிமாலா அமைதியானாள்.

மணிமாலா மௌனம் மீள்வாள் என சப் இன்ஸ்பெக்டர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மணிமாலா அசையாமல் அமர்ந்திருந்தாள். சப்இன்ஸ்பெக்டர் இருக்கும் திசைநோக்கி கையெடுத்து கும்பிட்டாள். எழுந்து போனாள்.

சப் இன்ஸ்பெக்டர் அந்த அறிக்கையில் என்ன எழுத வேண்டுமெனத் தீர்மானித்திருந்தாள்.


ஜா.தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. திரைத்துறை சார்ந்த நூல்களும் ஐந்திற்கும் மேற்பட்ட தலைப்பில் வெளிவந்துள்ளன. இவரது மின்னஞ்சல் முகவரி– deepaj82@gmail.com

நிறப்பிரிகை

0

கவிதைக்காரன் இளங்கோ

டிக்  –   டிக்  –   டிக் –   டிக்  –   டிக்  –   டிக்…

மெட்ரோநோம் ஒரு நிமிடத்திற்கு ஐம்பது துடிப்பாகக் குறைக்கப்பட்டிருந்தது. நிமிடத்திற்கு அறுபது துடிப்பு என்கிற வழக்கத்தை விட வேறொரு லயத்தில் அந்த ஆலோசனை அறையை அது நிரப்பிக் கொண்டிருந்தது.

இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்த அவளுடைய உடலுக்குள் இதயம் நன்றாக அழுந்தியபடி திணறிக் கொண்டிருந்தது. அங்கே வெறும் லப் டப் லப் டப் லப் டப்.. மட்டுமே. அதில் பிரபஞ்சத்தின் அடர்ந்து படருகின்ற இருட்டு. அதனுள்ளே கருஞ்சிவப்பு நிறத்தில் சினைமுட்டையின் கவுச்சி வாடை. ஜனன வாயிலின் கடைசி யுகம். முரண்பட்டு குறைந்த வேகத்திலும் தம் ஆதாரத் துடிப்பை இழந்திடாத லப் டப் அது. வெளியே துடிக்கின்ற டிக் டிக் ஒலிக்கும் உள்ளே துடிக்கின்ற லப் டப்பிற்கும் உள்ள சம்பந்தத்தையோ அப்படி அது உருவாகக் காரணமாக இருந்த சந்தர்ப்பத்தையோ ஒரே ஒருமுறை நினைத்துப் பார்த்துக்கொள்ள ப்ரியப்பட்டாள் டிஜோ. இமைகள் கனத்து விடுபட முடியாத ஆழத்துக்குள் பாதங்கள் புதையப் புதைய கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்த சாம்பல் பூத்த புல்வெளியை ஆச்சரியத்துடன் அவதானித்தவாறே மிருதுவான குரலின் கட்டளைக்கு அடிபணிந்து மேலும் மேலும் புதையத் தொடங்கினாள். தாறுமாறான எண்ணக் கலவைக்குள் பிசுப்பிசுத்த வார்த்தைகள் வெளியேறும் வழியற்று எங்கெங்கோ முண்டின. மொழி அலமலந்து அர்த்தங்கள் நீர்த்துப் போயிருந்தன.

அதனாலேயே நினைத்துப் பார்ப்பதற்குரிய அச்சந்தர்ப்பங்கள் அவளுடைய புலனுக்குள் கலங்கின வண்ணத்திலான பிம்பங்களாக பின்னோக்கி அலைந்தபடி இருந்தன.

ஓர் அமர்வுக்கும் அடுத்த அமர்வுக்கும் போதிய அவகாசம் முக்கியம் என ஏற்கனவே  உளவியல் மருத்துவர் புவன மீனாளால் அறிவுறுத்தப்பட்டிருந்தாள். மொத்தமாக தொண்ணூறு நாட்களுக்குள் பதினான்கு அமர்வுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறாள் டிஜோ. அதில் ஏற்கனவே பதினோரு அமர்வுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில் அவளுடைய போக்கில் மாற்றங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறாள்.

ஒருக்களித்தோ குப்புறவோ படுக்கக்கூடாது. மலர்த்தின நிலையில் உடல் மல்லாந்து தான் இருக்க வேண்டும். கைகள் இரண்டும் மடிந்த நிலையில் மார்புக்கூட்டிற்கு கீழே இருக்க வேண்டும். விரல்களை இறுகக் கோர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது. தளர்வுடன் இருக்க வேண்டும். ஆனால்.. உடலிலோ சவ நிலை இருக்கவே கூடாது. மனோவசியம் மூலமாக சிகிச்சை அளிக்கின்ற உளவியல் மருத்துவர், சிகிச்சைக்கு உட்படுகின்ற வாடிக்கையாளரின் புத்தி பேதலிப்பையோ இதயத் துடிப்பின் மாற்றத்தையோ கூர்மையாகக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இது போன்ற எளிய விதிமுறைகள் மனோவசிய சிகிச்சைக்கு அவசியமானவை. உளவியல் மருத்துவர்களில் ஆள் ஆளுக்கு அதன் வரையறை மாறலாம். அதே சமயம் ஓர் உளவியல் மருத்துவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து மனோவசியத்திற்கு உட்படுபவர்கள், பிசகிடாமல் பின்பற்ற வேண்டிய முக்கியமான அடிப்படைகள் அவை.

ஆனால்.. அவற்றை மீறுவதற்கான அனைத்துக் காரணங்களையும் சிறு சிறு குறிப்புகளாக ஏகத்திற்கு எழுதி குவித்திருக்கிறாள் டிஜோ. புவன மீனாளைப் பொறுத்தவரை  அவ்வெழுத்துக்கள் வெறும் காரணங்கள் அல்ல.. ஆனால் காரணங்களாக வரித்துக்கொள்ள போதுமானவை.

சற்று நேரத்திற்கு முன்பு அமர்வு முடிந்து கிளம்பும்போது மேஜைமீது அவள் எடுத்து வைத்துவிட்டுப் போயிருப்பது பதிமூன்றாவது குறிப்புப் புத்தகம். வெறும் அறுபத்தி ஏழு நாட்களில் நூறு பக்க அளவிலான பதிமூன்று குறிப்புப் புத்தகங்கள் என்பது புவன மீனாளுக்கு இந்த உளவியல் துறையில் தன்னுடைய இருபது வருட சேவையில் முதல் அனுபவமாக உள்ளது.

அத்தனையுமே கைப்பட எழுதியவை. கோழி கிறுக்கல் இல்லாத நைச்சியமான பொடி எழுத்துக்கள். ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடையே விடப்பட்டிருக்கும் வெளி அளந்து வைத்தது போல மில்லிமீட்டர் கனத்தில் இருந்தது. ‘வாட் எ பெர்ஃபெக்ட்!’ என்று நினைத்துக் கொண்டார் புவன மீனாள். குறிப்புப் புத்தகத்தின் எந்தப் பக்கங்களிலும் தேதியையோ நேரத்தையோ குறிப்பிட்டிருக்கவில்லை. அந்தத் துல்லியம் மட்டும் ஏன் தவறுகிறது என்பது ஆச்சரியத்தை வரவழைத்தது. கேட்கவும் தூண்டியது.

ன் என்று கேட்டதற்கு அவள் பதிமூன்றாவது குறிப்புப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைத் திறந்து வைத்துவிட்டுப் போனாள். அந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த பதில்தான் தற்சமயம் புவன மீனாளை இந்த இரவின் குளிர்ந்த தனிமையில் மூன்றாவது பெக் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. வெண்ணிற பகார்டி ரம்மும் மாதுளை பழச்சாறும் நான்கைந்து ஐஸ் கட்டித் துண்டுகளும் சுண்டுவிரல் உயரத்திற்கு லேஹர் சோடாவும் நிதானமாக கலந்தடிக்கப்பட்ட விகிதத்தில் இந்த மூன்றாவது பெக் சுறுசுறுவென புத்தி முழுவதையும் அக்குபங்சர் ஊசியாகக் குத்தி மென்மையாக ஒரு தூக்குத் தூக்கி அவல மனத்தை எங்கெங்கோ மிதவையிடச் செய்திருக்கிறது.

‘இன்று.. நாளையின் வசம் இருப்பதால்.. நேற்றின் சாட்சியங்களை நேற்றே பதிவு செய்கிறேன். அதனாலேயே இன்று என்பது அசைய மறுக்கிறது. அங்கு நேரத்திற்கே இடமில்லை எனும்போது  தேதிக்கு என்ன கேடு?’

டிஜோ அவற்றை மறதியாக விட்டுவிடவில்லை. பிரக்ஞையோடு தான் புறக்கணிக்கிறாள். உச்ச போதை இன்னுமொரு பிரபஞ்சத்துக்குள் நீல நிறமாகச் சுழற்றி ஊற்றியது புவன மீனாளை.

“கிரேஸி பிட்ச்” என்று சொல்லிக்கொண்டார் சிரித்தபடி.

****

பின்னிரவு மூன்றரை மணியிருக்கும்.

இருபது வருடங்களுக்கு முந்தைய தம் கடிதங்களையும் டைரிகளையும் பீரோவுக்குள் இருந்து வெளியே எடுத்து வைத்துக்கொண்ட புவன மீனாள் அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிக் கொண்டிருந்தார்.

போதை மட்டுப்பட்டிருந்தது. எப்போது படுக்கையில் விழுந்தோம் என்கிற பிரக்ஞை இப்போது இல்லை. சிஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ஏழுமணி நேர பிரபஞ்ச இசைத்தொகுப்பு முக்கால்வாசியைக் கடந்திருந்தது. ஸ்பீக்கர் வால்யூமை இன்னும் கொஞ்சம் கீழிறக்கி வைத்திருந்தார். பழுப்பு நிறத்துக்கு மாறிப் போயிருந்த கடிதங்களையும் டைரியின் பக்கங்களையும் மடியில் வைத்துக்கொண்டு அவற்றை நோக்கமற்று புரட்டிக்கொண்டிருந்தார். சம்பவ அடுக்குகளும் அந்தந்த காலத்தின் எண்ண ஓட்டங்களும் மனக்கண்ணிற்குள் வந்து வந்து போயின. புரையோடிவிட்ட புண் பொருக்குத் தட்டிய பிறகு நிரந்தரத் தழும்பாக மாறுவதற்கும் முன்னே வலி ஒன்று மிச்சம் இருக்குமே அப்படியிருந்தது.

பக்கத்து மேஜைமீது டிஜோவின் அனைத்து குறிப்புப் புத்தகங்களும் சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பதிமூன்றாவது குறிப்புப் புத்தகம் மட்டும் தனியாக இருந்தது. அதன் கடைசிப் பக்கம் விரிந்து கிடந்தது. புவன மீனாள் அதை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார். அவரிடமிருந்து ஒரு புன்னகை வெளிப்பட்டு மறைந்தது.

அவருடைய அபிப்பிராயப்படி இன்றையக் காலக்கட்டத்தில் எழுதும் பழக்கத்தை வெகுவாக குறைத்துக்கொண்டுவிட்ட இளந்தலைமுறை எப்பேர்பட்ட விஷயங்களை தவற விடுகிறார்கள் என்பதை அத்தனை லேசில் கூப்பிட்டுப் பேசி புரிய வைக்க முடியாது. தொடர்புச் சாதனங்கள் பெருகிவிட்ட இந்த வாழ்க்கை முறையில் எல்லாமே எளிதாக மாறிக்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தப் பெண் டிஜோ என்ற ஜோஸஃபின் டிஸோசா அப்படியல்ல. அவளைப் பழமைவாதி என்றும் முடிவு செய்துவிட முடியாது. உடன்பிறந்தார் யாரும் இல்லாமல் தனித்து வளர்ந்த யுவதி. நவீன உலகின் சில விஷயங்களை அவளுடைய மனம் வெகு தீவிரமாக நிராகரிக்கிறது. அதனால்.. நட்பு, காதல், குடும்ப உறவு என எல்லாவற்றின் மீதும் கறாரான ஒரு மாற்றுப் பார்வையைச் செலுத்துகிறாள். அவளின் குறிப்புப் புத்தகங்களின் வரிகளில் கிளைப் பரப்பி விரிந்துகிடக்கும் எண்ணங்கள், சம்பவங்கள், கனவுகள், அவதானிப்புகள் என ஒன்றுவிடாமல் அவற்றை சாட்சியப்படுத்துகின்றன. அவளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. இதுவரையிலான அவளுடைய ஒப்புதலின்படி குழந்தைப்பருவ பாலியல் சிதைவுக்கான அடையாளம் கிஞ்சித்தும் இல்லை. அவ்வாறான தொந்தரவுகளை அடைந்திராத பால்யத்தை அவள் கடந்து வந்திருக்கிறாளா என்கிற கேள்வி புவன மீனாளுக்குள் எழாமலும் இல்லை.

இப்போதைக்கு அவள் ஒரு, Exploring the Inner world வகையறா என்கிற முடிவுக்கு வரவேண்டிய அவசியம் புவன மீனாளுக்கு இருந்தது.

ஆனாலும் இப்படியான உளவியல் ஆலோசனைகளின் அளவுகோளின்படி டிஜோவும் ஒரு நோயாளி தான். அந்த நூலைத் தவறவிட்டுவிடக் கூடாது. இல்லையென்றால் சரியான பாதையில் பகுப்பாய்வு பண்ண முடியாமல் போக நேரிடும். அதில் புவன மீனாள் கவனமாக இருந்தார். உளச்சிக்கல்கள் மட்டும் என்றென்றைக்கும் தம் ஆதார வடிவை மாற்றிக்கொள்ள மறுப்பவை என்பது அவரது பாலப்பாடம். அந்த ஆதார வடிவமோ வெவ்வேறு கோணங்ககளைக் கொண்டிருப்பவை. அதில் காலத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

டிஜோவுடைய பொருளாதார சுதந்திரம் அவளைச் சில முடிவுகளைத் தைரியமாகவும் தீர்க்கமாகவும் எடுக்க வைக்கிறது. இச்சமூக முன்னேற்றத்தில் இதுவொன்றும் புதிதல்ல. யாரையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயங்கள் இல்லாத புள்ளியில் இருந்துதான் இதுபோன்ற சுய மாற்றுப் போக்குகள் உற்பத்தி ஆகின்றன. அதன் காரணிகள் யாவற்றையும் உபப்பொருளென மனங்கொள்ள வேண்டிய அவசியம் தன்னைப் போன்ற உளவியல் ஆலோசகருக்கு நிச்சயமாக இருந்தாக வேண்டும். அதன் முக்கியத்துவத்தை தன்னுடைய தனிப்பட்ட சொந்த வாழ்விலிருந்தே கடந்துவந்திருக்கும் காலத்தின் வழியாக புவன மீனாள் நிறையவே அனுபவப்பட்டிருக்கிறாரும் கூட.

இதில் செல்ஃப் ஹிப்னாஸிஸ் எனப்படுகிற சுய மனோவசியத்தை செய்து பழகுவதற்கு புவன மீனாளைத் தொடர்ந்து நச்சரித்து சம்மதிக்க வைத்துவிட்டாள். டிஜோவின் விஷயத்தில் சிகிச்சைக்குரிய வாடிக்கையாளர் என்பதையும் தாண்டி ஏனோ அவருக்கு அவளைப் பிடித்துவிட்டது. விளைவாக அவருடைய வழிக்காட்டுதலில் ஏற்கனவே இரண்டு அமர்வுகளைத் தனியாகத் தொடங்கியும் விட்டாள்.

அக உலகின் அனைத்துவிதமான ஆபத்து விளிம்புகளையும் தொட்டுப் பார்த்துவிடத் துடிக்கும் அந்த இளம் பெண்ணிடத்தில் புவன மீனாள் அவ்வப்போது தன்னையே சில சமயங்களில் அடையாளங் கண்டதுமுண்டு.

அந்த வகையில் தொழில்முறையைத் தாண்டி.. டிஜோவின் புத்தகக் குறிப்புகளின் தொடர் வாசிப்பு புவன மீனாளை தம் இருப்பை, சூழலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கச் செய்துகொண்டிருந்தது. தன்னுடைய கடந்த காலத்தின் மிச்சங்களை சற்றே திரும்பிப் பார்த்துக்கொள்ள ஓர் ஆவலைத் தூண்டியுள்ளது. ரொம்பவும் தனிப்பட்ட ஓர் உளத் தீண்டலாகவும் அமைந்திருந்தது.

புதுவகையான போதையாக மாறிவிட்டிருந்தது.

****

கடிதம் எண் – 1:

1995, நவம்பர் மாதம்.

டியர் மீனாள்!

ன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு நட்பின் அளவை நிர்ணயிப்பது எது என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் போல் அதை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு எனக்குத் திறனும் கிடையாது. நாளைய சமூகத்துக்கு நீ மிக முக்கியமான ஆள். அதை நாங்கள் ஒருங்கே உணர்ந்து இருக்கிறோம். உன்னைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். நீ ஓர் அபூர்வ பிரஜை.

தேவ், ஒன்றுவிடாமல் அனைத்தையும் என்னிடம் சொல்லியிருக்கிறான். நீ அவனுக்கு கொடுத்த முத்தத்தை மட்டும் அல்ல.. அவனுடைய வலது புஜத்தில் சிவந்து இருக்கும் லவ் பைட்டையும் காண்பித்தான். உன்னுடைய இரண்டு பல் தடங்கள் அதில் ஆழப் புதைந்திருக்கிறது. அதில், தேவ் மீதுள்ள உன்னுடைய ப்ரியம் தெரிந்தது. நிறைய பொறாமையாகவும் இருந்தது. அன்றைய இரவு அவனுக்கு லேசான ஜூரம் கூட வந்துவிட்டது. அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவொரு சிறு அனல் கொதி. ஒரே ஒரு பாரஸட்டமைல் கொண்டு மட்டுமே அந்த ஜூரத்தை ஏமாற்றிவிட முடியவில்லை. நான் அவனுக்கு உதவி புரிந்தேன். நாற்பது நிமிடங்களுக்கு ஒருமுறை நன்கு சுட வைத்த வெந்நீர் ஒரு டம்ளர் நிறைய குடிக்க குடிக்க அது ஜூரத்தை மெது மெதுவாக இறக்கியது. அதன் வீரியத்தை கட்டுப்படுத்தியது. ஹோமியோபதி மற்றும் அக்குபங்சர் இரண்டிலும் இந்த சுடுதண்ணீர் பரிந்துரை உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விஷயம் அதுவல்ல.

ஜூர அனத்தலில் அவன் என்னுடைய உள்ளங்கையை தன் உள்ளங்கையோடு கோர்த்துக்கொண்டு அவனுடைய மார்பின்மீது வைத்துக்கொண்டான். அரை கான்ஸியசில் போர்வைக்கு உள்ளே இழுத்துக்கொண்ட அந்த இணைக் கைகளில் அப்போதுதான் சில்லிடத் தொடங்கியிருந்த அவனுடைய உடலின் வியர்வையை நான் ஸ்பரிசித்த நொடியில் முழுமையாக உடைந்தேன். தேவ்வின் மேல் எனக்கு என்னுடைய முதல் ஈர்ப்பு அங்கே தொடங்கியது. அதை அந்நொடி கண்டுபிடித்தேன்.

மீனாள்.. எனக்குத் தேவ்வையும் பிடித்திருக்கிறது. அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. வீ ஆர் இன் லவ். அவன் மனம் ஒரு முனை உன்னை நோக்கியும் இன்னொரு முனை என்னை நோக்கியும் பெண்டுலமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதை நீயன்றி வேறு யார் புரிந்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை.

தேவ் தயங்குகிறான். ஆனால் எனக்கு உன்னிடம் சொல்லியாக வேண்டுமாக இருக்கிறது. இதனை நீ புரிந்துகொண்டாய் தானே?

காதலுடன்

ராகவ்

டைரியிலிருந்து..

கடிதத்தின் நகல் எண் – 2:

1996, ஏப்ரல் மாதம்.

அன்பு மாலினிக்கு..!

நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத ஒன்று நடந்திருக்கிறது. வலி என்றால் என்ன என்று துல்லியமாகத் தெரியும் எனக்கு. எலும்பு வரையில் தாக்கப்பட்டதை போன்ற வலி அது. மஜ்ஜை எல்லாம் நைந்து ரணமாகி லேசில் ஆறிட மறுக்கின்ற குணம் உள்ள வலி. அதை நீதான் எனக்கு வாழ்வில் முதன்முதலாக பரிசாகத் தந்தாய் அன்பே. கொடுமையானது.. இரவும் இரவில் தனிமையும். அதனினும் கொடியது மனம் பொத்தி வைத்து பாதுகாத்து நினைவூட்டுகிற ஆணின் வாசனை. எனக்கு ராகவ்வின்மீது நட்பைத் தாண்டி வேறு அபிப்பிராயங்கள் இருந்ததில்லை. உன்னை மீறி.. உன்னைத் தாண்டி.. தேவ்வை மட்டும் தான் நான் உளமார நேசித்தேன். வேட்கை கூடி மனம் இழைந்து உடலைப் பகிர்ந்துகொண்டேன். அது கொச்சை ஆகின்ற விஷயம் அல்ல. நீ அறிவாய். மனம் புடைத்து தவித்துக்கிடக்கிற காதலின் குவி மையம் அது. எனது ஆழ்ந்த மௌனத்தின் கதகதப்பு. அதை எழுதி மாய முடியாது மாலினி. பல கிலோமீட்டர் தாண்டி இருக்கிற உன்னைச் சொடக்கு போடும் நொடிக்குள் பார்த்திட முடியுமென்றால் உன் மடிக்குள் புதைந்துகொள்ள துடித்துக் கிடக்கிறேன் இங்கே.

அவர்கள் இருவரின் காதலுக்கு நான் எப்படி முட்டுக்கட்டையாக இருக்க முடியும்! ஆனால் மூவரும் ஒருவரென வலம் வர முடியாது அல்லவா. இச்சமூகம் அதற்கான இடைவெளியை இன்னும் உண்டுபண்ணவில்லை. அதற்கு மேற்கு உலகில் அல்லவா பிறந்திருக்க வேண்டும். அவையெல்லாம் இங்கே ஜஸ்ட் லைக் தட் நடந்திட அவற்றைப் பார்க்கவோ அல்லது அனுபவிக்கவோ இன்னும் முப்பது வருஷங்கள் தேவைப்படலாம். நிறைய உயிர் பலிகள் காலக்கணக்கில் சேர்ந்தாக வேண்டும். எனவே.. நான் விலகி விட்டேன்.

என் உடன்பிறந்துவிட்டதால் நீ எனக்கு வெறும் அக்கா அல்ல. உற்ற தோழி. நேசம் குழைத்து எனக்கு அனைத்தையும் ஊட்டம் கொள்ளச் செய்த என்னுடைய அந்தரங்க தாதி. எனக்கே என்னை, என் உடலை அங்கம் அங்கமாய் உணர்ந்திட உதவிய தேவதை. ஆனால் மாலினி! இப்போது இக்கணம்.. இந்தக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த இரவில் நான் அனைத்திலிருந்தும் என்னை விலக்கி கொண்டுவிட்டேன். என் பணி வேறு. பயணம் வேறு. இந்தக் கோடை என்னை சுட்டுப் பொசுக்கட்டும். நான் பாம்பே போகவிருக்கிறேன். இம்முறை நான் சென்னை வரப்போவதில்லை.

அடுத்த குளிர் காலம் தொடங்கும்போது உன்னுடைய அட்வான்ஸ்ட் ஹிப்னாஸிஸ் பிராக்டீஸ் மொத்தத்தையும் தூக்கி கிடாசிவிட்டு என்னை வந்து சேரு. எனக்கு நீ வேண்டும். நீ மட்டுமே வேண்டும் மாலினி. உன்னைப் போல் ஒருத்தி எனக்கு ஆயுசுக்கும் போதும்.

இனி நீ வேறு யாரையும் லவ் பண்ணிவிடாதே ப்ளீஸ்.

பேரன்பின் முத்தங்களுடன்

மீனாள்

*****

பிடிக்குள் சிக்காத காற்றாகப் போக்குக் காட்டி நழுவும் துளியூண்டு சில்லிடலை தேநீரின் ஆவி பறக்கும் எவர்சில்வர் டம்ளரின் விளிம்பில் ஒரு கணம் அனுபவித்தாள் டிஜோ. ஒரே ஒரு கணம் தான். மிக நுண்ணியது அது. ஜென் போல நழுவிக் கொண்டோடிவிட்டது.

மெட்ரோநோமின் டிக் டிக் ஒலி காதோர நரம்பு மண்டலத்துக்குள் நுணுக்கமாக ஒன்றை இசைத்துக்கொண்டே இருந்தது. அந்த ஒன்றை இன்று எட்டிப் பிடித்துவிட விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான ஒத்திசைவு எவ்வளவு சாத்தியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதை அறியாள். அதில்தானே அதற்குரிய கிளர்ச்சி இருக்கிறது என்பதும் அவளுக்குத் தெரியும். அதனை அரைப் பூரணமாகவாவது அனுபவிக்கும் வழக்கத்துக்குள் உடல், மனம், ஆன்மா என மூன்றும் வந்துவிட்டிருந்தது. அவளுக்கு வெறுமனே ஓரிடத்தை நோக்கும்போதே திசைகள் மென்மையாகச் சுழன்றன.

காலி தேநீர் டம்ளரை மேஜையில் வைத்தாள்.

தன் படுக்கை அறையின் ஜன்னல் தாண்டி இறங்கிக் கொண்டிருக்கும் வெயிலின் கிரணங்களை வடிக்கட்டி அறைக்குள் அனுப்பிய அகன்ற திரைச்சீலையில் எம்பிராய்டரியால் தரித்த மலர்கள் நெளிந்தன. ஒரு பகலே நெளிந்ததைப் போலிருந்தது.

“அதெல்லாம் பாம்பு குட்டிகள் இல்லையா?”

“இல்லை”

புவன மீனாளின் குரல் மண்டையோட்டு பரப்பை ஊடுருவி மூளை மடிப்புகளின் அனைத்து மின்னோட்ட கணுக்களிலும் அலையலையாகப் படர்ந்தது. குட்டியூண்டு ப்ளூடூத் பட் அவளுடைய இரு காதுகளுக்குள்ளும் மடல்களின் மடிப்புக்குள் பாந்தமாக புதைந்து இருந்தன. டிஜோவின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து உதவிட புவன மீனாளின் குரல் அவளுக்குள் ஒத்திசைவாகிவிட்டிருந்தது.

மேஜையில் இருந்த மடிக்கணினியின் சிறிய திரையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது உளவியல் மருத்துவர் புவன மீனாளின் துல்லியமான பிம்பம். அதனூடே தெரிந்த அவருடைய தனி அறையின் பின்னணி இளநீல நிறத்தில் இருந்தது.

இந்த ஏற்பாடே ஓர் அபத்தம் தான் என்பதை அவரும் நன்றாகவே உணர்ந்திருந்தார். இது போன்ற தருணங்களில், அமர்வுகளில் எதிர்மறை குணாதிசியம் உள்ள எந்தவொரு மனமும் உடைவுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஒரு குற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் டிஜோவின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இப்படி சுயமாய் ஹிப்னாஸிஸ் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்ட டிஜோவின் அபரிமிதமான அறிவாற்றலுக்கு குறுக்கே நின்று தடுப்பதில் பிரயோஜனமில்லை என்பதை தனிப்பட்ட அனுபவத்தில் தெளிந்திருந்த புவன மீனாள் அவளுக்குரிய சின்னஞ் சிறிய உதவிகளை செய்யத் தீர்மானித்திருந்தார். தொழில்முறை குணத்திற்கும் அப்பாற்பட்டு ஏதோ ஒரு வகையில் அவருக்கும் இந்த அவதானிப்பு தேவையாக இருந்தது. அது தார்மீகத்தைக் கடந்த ஒன்று.

ஒரே ஒருமுறை மாலினியின் நினைப்பு மனத்துக்குள் மௌனமாக வந்து போனதில் அவரிடமிருந்து பெருமூச்சொன்று வெளியேறியது.

இன்றைய காலத்தின் நவ யுவதி ஒருத்தியை முழுமையாக அவதானித்துவிடுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்று பலத் துறை நிபுணர்களும் ஒப்புக்கொண்டுவிட்ட விஷயம். அதில் ஒரு மூத்த உளவியல் சிகிச்சையாளராக, ஆலோசகராக தன்னுடைய பங்கு என்னவென்று மனத்துக்குள் அவ்வப்போது மூளும் கேள்விகளுக்கான பதில் எப்போதும் பூஜ்ஜியம் தான். அவரைப் பொறுத்தவரையில் அனைத்து உளவியல் யூகங்களுமே பூஜ்ஜியத்தன்மையை தான் பூண்டுள்ளன. அதனாலேயே அவற்றால் இறுதி தீர்மானங்களை வழங்க முடிவதில்லை.

“ஆனா பாம்புகள் என்னை வளைச்சு நெரிக்கலை. தலையில என்னை இருத்தி வச்சு இருட்டுக்குள்ள ஒளியூட்டி அங்குமிங்கும் அலையுது. வசியத்துக்கு உள்ளே இருக்கும்போது எனக்கு எப்பவுமே எல்லாமே அசையுது”

“எல்லாமேன்னா?”

“எல்லாமே தான்.. இந்த அறை. அந்த நாற்காலி. திறந்திருக்கற ஜன்னல் இடுக்கு வழியா தெரியிற நகரம்.. இந்தப் பொழுது.. அதன் வண்ணம்ன்னு ஒட்டுமொத்தமாவே அசையுது”

“அவ்வளவு தானா?”

“உங்க குரலும் கூட அசையுது டாக்..”

புவன மீனாளின் கட்டளைக்குரல் ஒரே ஒரு வினாடி திகைத்தது. உடனே சுதாரித்துக்கொண்டு..

“நொடியின் வேகத்தை இன்னும் கொஞ்சம் குறைச்சி பார்ப்போமா?”

“ம்.. எவ்வளவு?”

“40-ல் வைச்சிக்கோ”

சொல்லிவிட்டு புவன மீனாள் அங்கே வாடிக்கையாளர் கோப்பில் குறித்துக்கொண்டார். இங்கே டிஜோ தன்னுடைய மெட்ரோநோமில்.. BPM -ஐ 40 ஆக மாற்றி வைத்தாள்.

இப்போது.. டிக்  –  டிக்  –  டிக்  –  டிக்  –  டிக்… ஒலியானது பிரம்மாண்டத்திற்கும் சற்று முன்னதாக எல்லைக் கிழித்து நின்றது போல அங்கேயே நொண்டியடித்தது. அதில் ஒரு தவிப்பு தொனிப்பதை உணர முடிந்தது. மெதுவாக ஓர் உஷ்ணம் ஆனால் இதமான உஷ்ணம் அந்த அறையின் ஏதோ ஒரு மூலையில் அதிரகசியமாக உருக்கொள்ளத் தொடங்கியது. அதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை. அது ஓர் உணர்வு, அவ்வளவுதான் அதன் எல்லை என்பதைப் போல.

மடிக்கணினித் திரையில் புவன மீனாளை சிறிய சதுரத்திற்குள்ளாக்கினாள் டிஜோ. டக்கென்று மடிக்கணினியை எதிர்பக்கமாகத் திருப்பி வைத்துவிட்டாள். அதனால் புவன மீனாளால் டிஜோவை பார்க்க முடியவில்லை. இந்தப் பிரத்யேக சுய மனோவசிய அமர்வில் அவருக்கு அவளுடைய கண்களைச் சந்திக்க வேண்டுமாக இருந்தது. கட்டளைகள் கட்டுக்குள் இருப்பதற்கான வழி அது.

ஆனால்.. இம்முறை ஏனோ டிஜோ அதனைத் தவிர்த்துக்கொண்டாள். அவளுக்கோ புவன மீனாளின் குரல்வழி கட்டளைகளே போதுமானதாகத் தோன்றியது. இரண்டு மனங்களின் தனித்தனி தேவைகளை அந்தப்பொழுது முன்னும் பின்னும் அசைத்தும் அசைக்காமலும் இழுத்துப் பிடிப்பதைப் போல இருந்தது அச்சூழ்நிலை.

இந்த அதிஅற்புத டிஜோ தன்னோடான அமர்வுகளை முடித்துக்கொண்டு சீக்கிரமே காணாமல் போய்விடுவாள் என்பதை புவன மீனாள் யூகித்திருந்தார். ஓர் உளவியல் ஆலோசகர் – வாடிக்கையாளர் என்று பார்க்கும்போது அது இயல்பானதே.

ஆனால்.. ஆனால்.. தன்னுடைய அந்தரங்க மனத்துக்குள் ஒரு துடிப்பு புதிதாக உதயம் ஆகியிருப்பதை சமீபக் காலங்களில் அவதானித்திருந்தார். வாழ்வின் முக்கியமானத் தருணங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்போது தான் நின்றுகொண்டிருக்கும் நிலை என்ன என்கிற கேள்விகள் புதிய முகம் கொண்டு தனிமைகளில் தீ ஜூவாலையைப் போல மூள்கின்றன. அவற்றை எதிர்கொள்ள மனத்தளவில் நிறைய பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. தனி நபர் சார்ந்த ஒரு திறந்த உரையாடல் தேவைப்படுகிறது.

வேறு போக்கில்லாமல் அல்லாடலின் முடிவில் எப்போதும் மதுவே தஞ்சம் என்றே ஆகிவிடுகிறது. இல்லை அதுவல்ல பாதை. அப்படியல்ல அதற்குரிய பதில்கள்.

திருப்பி வைக்கப்பட்ட மடிக்கணினியின் லென்ஸ் புவன மீனாளுக்கு டிஜோவின் படுக்கை அறையின் ஜன்னல் திரைச்சீலையைக் காட்டிக்கொண்டிருந்தது. அத்திரைச்சீலையோ காற்றில் மென்மையாக அசைந்தவண்ணம் இருந்தது. அதன் அசைவையே வைத்த கண் எடுக்காமல், இமைக்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் மஞ்சள் நிற வெளிச்சப் பரப்பு நீளவாக்கில் மடிந்து மடிந்து அடர்த்தியான சாம்பல் நிற நிழல்களைக் கோடுகளாக்கி இருந்தது. அத்திரைச்சீலை, தன்னுடைய  பார்வையை மெல்ல மெல்ல ஓர் அழுத்தத்துடன் ஈர்த்துக்கொள்ளத் தொடங்கியதை உணர ஆரம்பிக்கும்போதே அதில் சிறிய பாம்புக் குட்டிகள் நெளிவதைப் பார்த்தார். ஏதோ சொல்ல நினைத்த நினைப்பு வார்த்தையாக வடிவம் பெற மறுத்தது. உறைந்திருக்கும் பார்வையை அதிலிருந்து அகற்றிக்கொள்ள முடியவில்லை.

டிஜோ தன்னை வசியம் பண்ணுகிறாளோ என்கிற சந்தேக எண்ணம் ஒன்று பட்டென்று  பிரக்ஞைக்குள் வந்து நின்றது. நின்ற வேகத்தில் மறைந்தது. மீண்டும் தோன்றியது. மீண்டும் மறைந்தது. அடுக்கடுக்காக போக்குக் காட்டியது.

அதன்பிறகு டிக் –  டிக் –  டிக் –  டிக் –  டிக்….  ஒலியின் காலவெளி எங்கோ இருள் மண்டிய பாதாளத்திற்குள் பிடித்திழுத்தது. நாற்பது நொடியின் துடிப்பிலுள்ள நிதானம் தாங்கவொண்ணா துயரத்தை அள்ளித் தெளித்தது. மனம் பொங்கியது. துக்கம் ஒன்று பாறாங்கல்லென ஆழத்திலிருந்து மேலேறி வந்து இதயத்தின்மீது மோதியது. பல முகங்கள் நுரைத்துப் பொங்கின. தேவ், ராகவ், மாலினி, சுகன், மைத்ரேயி, ஆண்டனி, சுதா, மாத்தையா, வீராக்குட்டி, சித்ரஞ்சன், மெர்லின் பாவ்லோ, ரஜீவன் மல்ஹோத்ரா, எட்வீன் மச்சோடா, அமர் ஹூஸைனி, அட்டி ஹக்கீய்ன், நளின் சித்தார்த், மாலிகா, ரீத்து, மனோஹர் புனித், ஹர்ஷினி தீப்தா, நீலிக் கண்ணன், தாட்சாயிணி, அம்பிகா, நிகில் சுரேஷ்…

திடீர் காற்று உப்பலில் திரைச்சீலை உயர்ந்து பாம்புக்குட்டிகள் அத்தனையும் தன்மீது சிதறி விழுந்து உடலெங்கும் ஊர்ந்து போவதை இமைக்காமல் உறைந்தபடி பார்த்திருந்தார் புவன மீனாள்.

“மேம்.. மேம்..!”

யாரோ அழைக்கிறார்கள். படுக்கையில் ஆடைகள் நீக்கப்பட்ட தன்னுடல் நிர்வாணமாக கிடப்பதை தெரிந்துகொள்ளும்போதே கண்களில் இருந்து கண்ணீர்த்துளி இரண்டு பக்கமும் வழியத் தொடங்கியது. நானே என்னைப் பார்க்கிறேனா என்கிற குழப்பம் எழுந்தது. கண்ணீர் வழிதல் நிற்காமல் பெருகியது. ஒளி மங்கிக்கொண்டே வந்து புலனுக்கு எதுவும் சிக்காத நிலை உருவாகி இருந்தது. காற்றை மட்டுமே உணர்ந்த உடல் லேசாக வியர்த்தும் இருந்தது. ஜன்னல் வழியே புகுந்து வந்த காற்று மேனியில் படப் பட வியர்வையும் அதற்கு ஈடாக உகுத்த வண்ணம் இருந்தது. இரண்டுமே ஓயவில்லை. மனம் ஊசாலிடியது. அழுகையும் நிற்கவில்லை. விசும்பல் எதுவும் இல்லாத, வாயே திறவாத ஓசையற்ற அழுகை. நினைவில் நிற்க மறுக்கிற அழுகை. காலத்தின் சரடுகளை முன்னும் பின்னுமாக உருட்டித் திரட்டி நைந்து போகச் செய்கிற அழுகை. பாம்புக் குட்டிகள் தலைக்கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறி முகத்தின் குறுக்கே நழுவி இறங்கி உடலையொட்டி கோடு வரைந்ததைப் போலச் சூழ்ந்து கிடந்தன.

“டாக்டர்.. டாக்டர்..! என்னைப் பாருங்க.. இங்கப் பாருங்க.. கேன் யூ ஹியர் மீ? மேம்..!”

டிஜோவின் முகம் மட்டும் அந்த இருளுக்குள் ஒளிர்ந்து சட்டென படுக்கையருகே தோன்றியது. அம்முகத்தில் இருப்பதென்ன? அப்படியொரு சாந்தத்தை இதுவரை எங்குமே கண்டதில்லையே. என்னே ஒரு பேரமைதி! இது அவள்தானா? அவளேதானா? அய்யோ அந்தப் புன்னகையின் கதகதப்பில் இந்த உயிரை விட்டுவிட்டால் தான் என்ன? எங்கிருந்தாய் இத்தனை யுகங்கள்? என்னைத் தேடி அலைந்தாயா பெண்ணே? நீ எனக்கான தேவதை அல்லவா? யூ ஆர் மை ஸ்வீட் பிட்ச் அல்லவா! இந்தப் பாம்புக் குட்டிகள் இதுகாறும் எங்கே மேய்ந்துகொண்டிருந்தன? எனக்காக நீ அள்ளிக்கொண்டு வந்தாயா? அவை என் உடல் முழுவதும் ஓர் இண்டு இணுக்கை விட்டுவைக்காமல் தீண்டித் தீண்டி என்னை மலர்த்துகின்றதே. நானறிந்திடாத எந்த பாதாளத்தின் ரகசியம் அவை? எப்பேற்பட்ட மௌனத்தை அவற்றுக்கு ஊட்டி வளர்க்கிறாய் சொல்? இத்தனை எளிமையாக உன் ஜன்னலின் திரைச்சீலைக்குள் ஒளிந்துகொண்டு அவை வெளிச்சத்தோடு சதா அசைந்துகொண்டே இருக்கின்றதே. அக்காட்சியைக் காட்டத்தான்.. காட்ட தான்.. என்னை அழைத்தாயா? என்னைத் தேடிக் கண்டுபிடித்தாயா? சொல் தாயே நீ தானே என்னை ஆட்கொள்ள வந்திருக்கும் எனது இனிய காமாக்கினி?

ட்டென எல்லாம் வெளிச்சமாகியது. அப்பழுக்கற்ற, நிர்மலமான வெண்ணிற வெளிச்சம். புவன மீனாள் வியர்வையில் குளித்திருந்தார். அவருடைய அறையின் குளுமை தோற்றுப் போயிருந்தது. திரையில் தெரிந்த டிஜோ மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டிருந்தாள். ‘ஆர்.. யூ ஓகே? மேம்! ஆர்.. யூ ஓகே?’ மெல்ல சுதாரிப்புக்கு மீண்ட புவன மீனாள் மனத்துக்குள் பித்தேறி அலைக்கழித்த தோற்றமாயைதனை உடனடியாகத் தொழில்புத்தியிலிருந்து புரிந்துகொண்டவிட்டார்.

மெட்ரோநோமின் டிக் – டிக்.. கட்டுக்குள் இருந்தது.

“ஐ’ம் நாட் ஓகே ஜோஸஃபின்.. எனக்கு உன் உதவி தேவை. இன்னைக்கு சாயந்தரம்  நீ என்னோட சென்டருக்கு வந்துட்றியா? எல்லா அப்பாயின்ட்மெண்ட்ஸயும் கேன்ஸல் பண்ணிடுறேன். இது நமக்காக.. ப்ளீஸ்”

எதிர்முனையில் காணொளி திரைக்குள் சற்றுநேரம் அமைதி காத்தாள் டிஜோ. மறுத்துவிடுவாளோ என்கிற சிறிய பரிதவிப்பு இங்கே புவன மீனாளிடம் இருந்தது.

‘ஓகே டாக்..’ என்று எப்போதும் போல் அவரைச் சுருக்கமாக விளித்து மையமாகத் தலையாட்டினாள் டிஜோ. அப்போது கோடளவு புன்னகை ஒன்று அவளது இதழ்க்கோடியில் உயிர்த்திருந்தது.

“தாங்க் யூ ஸோ மச்”

*****

டைரியிலிருந்து..

கடிதத்தின் நகல் எண் – 1:

1995, டிசம்பர் மாதம்.

ப்ரியம் நிறைந்த தேவ்..!

பிராக்டீஸ் பண்ண நான் பாம்பே போகிறேன். என்னைத் தேட வேண்டாம். டெல்லி குளிரின் கதகதப்பிற்கு நீ இருந்தாய். உனக்கோ நான் மட்டுமே இல்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். ராகவ் எல்லாவற்றையும் விபரமாக எழுதி இருந்தான். ரொம்பவே வலித்தது. இதயம் உடைவதை யார் தான் விரும்புவார்கள்? ஆனால் நேசத்தை அன்பை பங்குப்போட்டு கொள்வது என்பது எனது இயல்புக்கு ஒத்துவராத ஒன்று. சமயங்களில் நான் பாறையைப் போல இறுக்கமாகக் காணப்படுவதாக சில நேரங்களில் நீ சொன்னதுண்டு. அது எனது சுபாவம். அதனைக் கண்டு நீ பயந்துவிட்டாயோ என்னவோ. எனக்கது தெரியவில்லை. என்னுடைய மௌனத்தின் அடர்த்தியை எப்போதும் அறிந்தே வளர்கிறேன். அதன் வெளிப்பாடு உவப்பானதாக இருக்க வாய்ப்பில்லை தான். இதையெல்லாம் தானே நாம் விரும்பி படித்த சைக்காலஜியில் அறிந்து வைத்திருக்கிறோம். சுய பரிசோதனை என்றுமே ஒரு வதை தான் இல்லையா? எனக்கான இணையை இனி நான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அதற்கு முதலில் என்னுடைய பிராக்டீஸை உருப்படியாக முடித்தாக வேண்டும். முடிப்பேன். அதுவரை யாருமே எனக்கு நிரந்தரமாக வேண்டாம் என்றே தோன்றுகிறது. தெரியவில்லை. இந்த எண்ணம் பின்னாட்களில் மாறலாம். யாராவது என்னை ஈர்க்கலாம். உத்திரவாதங்களை நோக்கி கனவு காணக்கூடாது என்பதிலும் உறுதி அதிகமாகி இருக்கிறது.

ஆனால் தேவ்.. இந்தப் பாறைக்குள் கசிந்துருகும் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. வற்றாது. அதனை நான் பாதுகாப்பேன். ஆனால் இனி நீங்கள் இருவரும் எனக்கு வேண்டாம். என்னைத் தேட வேண்டாம். என்னுடைய இருப்பிடம் தேடிவந்து என்னை கன்வின்ஸ் பண்ண முயல வேண்டாம். அடுத்து நான் ஆஸ்திரேலியா அல்லது லண்டன் போய்விடுவேன். நடுவே இந்தியாவுக்குள் எங்காவது செமினார்களில் அகஸ்மாத்தாக காண நேர்ந்தால் கூட ஜஸ்ட் கடந்துவிடவே விரும்புகிறேன். அதையே நீயும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ட்ரேன்ஜ் திங்ஸ் ஹாப்பன்ஸ் இன் ஸ்ட்ரேன்ஜ் வேஸ்.. இல்லையா..? இந்தக் கடிதத்திற்கு எந்த பதிலையும் எழுதி வைத்துக்கொண்டு தனியாக அல்லல்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் அது ரொமாண்டிக்ஸில் வராது.

லெட்ஸ் க்ளோஸ் த புக்.

மனப் பாரங்களுடன்

மீனாள்

                டைரியை மூடிவைத்தார் மீனாள். முகத்தில் யோசனை ரேகைகள் மண்டிக் கிடந்தன. இந்தத் தனிமையில் அவருக்கு மதுவின் போதை தேவையாக இல்லை. இப்பகலின் வெளிச்சம் தன்னைக் குடித்துக் கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருந்தார்.

*****

டிஜோ தன்னுடைய தோள் வரையில் தொங்கிக்கொண்டிருந்த தலைமுடியை பாப் கட் பண்ணியிருந்தாள். ஒரு மதிய வேளைக்கும் இந்த மாலை நேரத்துக்கும் நடுவிலேயே எத்தனையோ மாற்றங்களை நடத்திக்கொள்ள ஒரு சுயம் அனுமதிக்கிறது. கணினி வழி நேரலை அழைப்பின்போது மதியம் அவளிடமிருந்த தோற்றம் இப்போது வேறாக இருந்தது. அவளுடைய உருவ அமைப்பின் பொருட்டு தன் காட்சிப்புலனில் ஒரு தொடர்ச்சியைப் பிடித்துக்கொண்டு பேச்சைத் தொடங்க சற்றே திணறினார் புவன மீனாள். இது வேறு யாரோ. புதியதாக வந்திருக்கிற வாடிக்கையாளர் அல்லது நோயாளி. இல்லவே இல்லை! இது டிஜோ என்ற ஜோஸஃபின் தான். இந்தப் பெண் என்னை என்னவோ செய்கிறாள்.

அவசரமாகக் கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். மீண்டும் வியர்த்துவிடுமோ என்கிற பயமும் நெஞ்சுக்குள் லேசாக அதிர்ந்தது. டிஜோ எப்போதும் போல சாவதானமாக உட்கார்ந்திருந்தாள்.

இவள் ஒரு புதிர்.

“ஏதோ உதவின்னு சொன்னீங்க டாக்..”

புவன மீனாள் சற்றே நிதானத்திற்குள் வர சிரமப்பட்டார். ஆனால் பரிவான அந்தக் குரல். அது பரிவு தானே!

“ஆர் யூ ஆல்ரைட் டாக்..?”

“ம்”

டிஜோ மேலும் அமைதி காத்தாள். அவளுக்கு நிறைய நேரம் கைவசம் இருப்பதான தோற்றத்தில் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவளது முதுகெலும்பு மட்டும் அச்சில் வார்த்தது மாதிரி நேர்க்கோட்டில் இருந்தது. ஆனால் உடற்தசைகள் தளர்வுடன் காணப்பட்டன. அணிந்திருந்த நவீன மேலுடையில் இறுக்கம் இல்லை. அது அவளுடைய உடலைப் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை. அடர் நீல நிறத்தில் ஒரு முக்கால் கை மேலுடை அது. வரிசையில் முதல் பித்தானை போட்டிருக்கவில்லை. வெண்ணிற கழுத்து கீழிறங்கி மார்பு பள்ளங்களுக்குள் ஓடி மறைந்தது. சீரான மூச்சின் ஏற்றத் தாழ்வில் குறைத்துவைக்கப்பட்ட மெட்ரோநோமின் லயம் போல இருந்தது.

“எனக்கு என்ன ஆச்சி டிஜோ?”

“மாலினி யாரு?”

இந்த எதிர் கேள்வியை புவன மீனாள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. சரசரவென ஒரு திணறல் உற்பத்தி ஆயிற்று. தலைக்குள்ளே சுரப்பிகள் கொப்பளித்தன.

“மா.. மாலினி!?”

“நீங்க அந்தப் பெயரைச் சொல்லி ஏதேதோ சொன்னீங்க.. அப்புறம் அழுதீங்க.. மாலினி யாரு?”

“வாட்! அழுதேனா?”

“டூ யூ மிஸ் ஹர்?”

“மை காட்.. மை காட்..! என்ன சொன்னேன் டிஜோ? என்ன சொன்னேன்? மை காட்”

“எனக்கு எந்தக் காரணத்தாலயும் நான் இப்ப ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கற செல்ஃப் ஹிப்னாஸிஸ நிறுத்தக்கூடாதுன்னு தோணுது டாக்டர். நீங்க சொல்லுங்க.. அப்படி ப்ராக்டீஸ் பண்றதுல சர்வ நிச்சயமா சிக்கல்கள் இருக்கு தானே? எனக்கு சிக்கல்கள் இல்லாத விஷயங்கள்ல நாட்டம் கிடையாது”

“அதை கவனம் பண்ணிக்க வேணாம். யூ கோ அஹெட். ஆனா.. நான் என்ன சொன்னேன்? ஏதாவது உளறலா இருந்திருக்கும். ஆனா.. நீ என்னைக் கட்டுப்படுத்தறன்னு செஷன் நடுவுலயே புரிஞ்சுக்கிட்டேன். என்னை நான் விலக்கிக்கலை. என் மனம் உன்னோட வசியத்துக்குள்ள சாய்ஞ்சிருச்சி. ஒரு கட்டத்துல நான் என்னை முழுமையா ஒப்படைச்சிட்டேன்ல..?”

“ம்.. ஆமா..  ஆனா.. உதவி கேட்டீங்களே”

“எனக்கு நீ அதை ஏற்கனவே ஓரளவு பண்ணிட்டன்னு நினைக்கிறேன் டிஜோ”

“எப்படி!?”

புவன மீனாள் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். அறையின் ஜன்னல் அருகே போய் மார்புக்கு குறுக்கே கைக்கட்டி நின்று கொண்டார். திரையை விலக்கி வெளியே பார்த்தார். தலைக்கு மேலேயிருந்து குளிர்ந்த காற்று வழிந்து இறங்கியபடி இருந்தது. இளநீல நிற திரைச்சீலை வெளிச்சத்தை வடிகட்டி அவர் மீது படர்ந்ததில் ஓர் ஓவியம் போல இருந்தார். அவருக்கு படபடப்பு சற்று குறைந்தது மாதிரி இருந்தது. மேஜையில் இருந்த டிஜோவின் நோட்டுகளில் ஒன்றை எடுத்துக் காட்டிவிட்டு அங்கேயே வைத்தார்.

“உன்னோட நோட்ஸ் வழியாவே நீ உன்னை முழுசா எனக்குள்ள இறக்கி வச்சிட்டன்னு நேத்து இரவு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு அப்புறம் எதையுமே புறக்கணிக்க வேண்டாம்னு பட்டுச்சி”

“இந்த மொமெண்ட்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டாக்..”

டிஜோ முதல் முறையாக அகலமாய் புன்னகைத்தாள். உதடுகள் விலகி அழகிய சீரான பல்வரிசை தெரிந்தது.

“ஹ்ம்ம்.. வாழ்க்கையோட ஒரு பெரும் பகுதி ஹ்யூமன் பிஹேவியரல் ரிசர்ச்ல போச்சி. மிச்சம் மீதி கொஞ்சம் சலிப்புல போச்சி. வண்ணமயமான நினைவுகளோட நிறம் பழுப்பேறி போயிருக்கறதை நேத்து ராத்திரி எடுத்துப் புரட்டிக்கிட்டிருந்தேன். மனம் நிலை கொள்ளல. அதுதான் எப்பேற்பட்ட காடு! அதுக்கான பாதைய உன்னோட நோட்ஸ் தான் போட்டுக் கொடுத்திச்சி.. தேங்க் காட்..”

“நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்”

“மாலினி என்னோட அக்கா. அவளை ரொம்ப நேசிச்சேன். டீப் லவ். இப்பவும் இருக்கு. பத்திரமா இருக்கு அந்தக் காதல். அவளோடயே ஒட்டிக்கிட்டு உலகம் பூரா சுத்தி சுத்தி ஒரு நாள் செத்துப் போயிடணும்னு நினைச்சிருந்தேன். ப்ச்..”

“ஏன்? என்னாச்சு?”

“அவ.. அவ.. ஒரு ஆளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சராசரி பொம்பளையா மாறி குழந்தை பெத்துக்கிட்டா. நார்மலான சிஸ்டத்துக்குள்ள மாட்டிக்கிட்டா. நான் அவளையும் விட்டு விலகி ஓடிக்கிட்டே இருந்தேன். இலக்குகள் இல்ல. நெஞ்சை அடைக்கிற துக்கம் இருந்திச்சி. ஆனா.. சில வருஷம் கழிச்சி அவ எப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு என்கிட்டேயே ஆலோசனை வேணும்னு வந்து நின்னா. பைத்தியக்காரி.. அப்பவும் அவளுக்கு என்கூட அட்டாச் ஆகிக்கணும்னு தோனல. யூ நோ.. சைக்காலிஜில அவ எனக்கும் சீனியர். அதுவும் ஹிப்னாடிக்ஸ்ல.. ப்ச்.. என்ன ப்ரயோஜனம்? ஏனோதானோன்னு ட்ரை பண்ணின செல்ஃப் ஹிப்னாஸிஸ்ல என்னமோ கோளாறு ஆகி.. வெளிய வரமுடியாம அதுக்குள்ளேயே சிக்கிக்கிட்டா..”

ஒரு கணம் நிறுத்தி அவருடைய தலை குறுக்கே அசைந்துகொண்டது.. பார்வை மேஜையின் மீது நிலைக்குத்தி இருந்தது. பின்.. நிதானித்து மேலே தொடர்ந்தார்.

“..இப்ப நான் உன்கிட்ட கேட்ட மாதிரி அவ என்கிட்டே ஹெல்ப் மீன்னு கேட்டா டிஜோ. ஒரு கட்டத்துல கதறினா.. பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்திச்சி. எப்பேற்பட்டவ! என்ன மாதிரியான ஆளு. ச்சே..”

டிஜோ அசையாமல் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இது ஆக்சுவலி ஒரு டையிங் ஆஸிலேஷன்.. லிவ்விங் எமோஷன்ஸ விட கொடூரமானது”

“எப்படிச் சொல்றீங்க?”

“லோன்லிநெஸ் ஒரு டெவில்னு சொல்லுவாங்க. யூ நோ தட்.. அங்கே ஆரம்பிக்கும் எல்லாமே. அதான் டவுன் ஃபால். ரொம்ப நிதானமா மில்லி மீட்டர் அளவுல பரபரப்பே இல்லாம ஒரு கணக்கைத் தொடங்கி வைக்கும். அழுத்தத்தையும் புழுக்கத்தையும் வெக்கையோட அனுபவிக்கிற வயசோட வீரியம் அது. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொன்னு. புதுசு புதுசா. வேற வேறயா அனுபவிக்கத் தவிக்கிற ஆர்வம் அது. சிலருக்கு குடி. சிலருக்கு வீட் மாதிரியான போதை வஸ்து. எனக்கு.. அப்போ செக்ஸ். ஹ்ம்ம்.. அதுலயும் இடிபஸ் காம்ப்ளக்ஸோட சல்லி வேர்.. த இன்செஸ்ட்.. என் உடன்பிறந்தாளோட உடல் மேல எனக்கிருந்த ஈர்ப்பும் வேட்கையும்.. அது புது மாதிரியா இருந்துச்சி.. அந்த ஈர்ப்பு மாலினிக்கு பிற்பாடு என் மேல இல்லாமப் போச்சி. அஃப்கோர்ஸ்.. அத அவத் தான் என்னோட பதின் வயசுல எனக்கு அறிமுகப்படுத்தினா.. உடலை ரகசியமா தீண்டி பார்க்கிறதுல இருக்கற சுகம்.. அப்போ அது வேற மாதிரியான போதையா இருந்துச்சி. படிப்பெல்லாம் அப்புறம் தானே? முதல்ல மனுஷன்.. ரத்தமும் சதையும்ங்கறத தாண்டி அதொரு உணர்ச்சி கிறக்கம். வெறும் விடலைத்தனமான விஷயமா மட்டும் அப்போ அத எடுத்துக்க முடியல.. ஆனா.. ஆனா.. அவ அவளோட இளமைப்பருவத்துக்கு சீக்கிரமா நகர்ந்திட்ட போது என்னை சட்டுன்னு நடு காட்டுல விட்டுட்டா. அப்படித்தான் பட்டிச்சி.. துரோகம் மாதிரி மனசு பூரா வலி. ரொம்பவே திணறிப் போயிருந்தேன். எனக்கு அப்போ மேற்படிப்பு வேற. தொலைவுல இருந்தேன்.. கம்ப்ளீட்லி நார்த் ரீஜன். டெல்லி. அதிகக் குளிர். அநியாயத்துக்கு தனிமை. அதை ஈடுகட்ட அதுக்காகவே வலுகட்டாயமா வரவழைச்சிக்கிட்ட ஒரு காதல் இருந்தது. புடிச்சுப் போயி தான் ஓகே பண்ணிக்கிட்டேன். சரியா ரெண்டு வருஷம் ரொம்ப நல்லாருந்தது. மாலினிக்கு எல்லாமே தெரியும். ஒன்னு பாக்கி வைக்கல அவகிட்ட.. எல்லாத்தையுமே பகிர்ந்துக்குவேன். எனக்காக அவளும் சந்தோஷப்பட்டா.. ஆனா அந்தக் காதல் கைவிட்டுப் போச்சி..”

டிஜோவின் பார்வையில் இமை தாழ்ந்த ஒரு சாந்தம் பெருகியது. புருவச் சுழிப்பில் கவனித்தலின் கூர்மை வெளிப்பட்டது. கண் முன்னே ஒரு சக உயிரியின் பெருவாழ்வு பரந்து விரிந்து தன்னுடைய புத்தியை ஆக்டோபஸ் போல வளைத்துப் பிடிப்பதை நொந்தவளாகக் காணப்பட்டாள்.

புவன மீனாளுக்கோ தனது செய்கை ஆச்சரியத்தைத் தந்திருக்கக் கூடும். ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் கட்டத்தை அவர் தாண்டிவிட்டிருந்தார். மனம் லேசாகிக் கொண்டே வருவதையும் உணர்ந்தார்.

இவள் ஒரு டெவில்தான். மடை திறந்துவிட்டதைப் போல ஒன்று விடாமல் எல்லாவற்றையும் இவளிடம் சொல்லுகிறோமே.. என்றிருந்தது.

“…தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்ல இங்கே எல்லோருக்கும் தேர்வு முறை இருக்குல்ல? பர்ஸப்ஷன்ஸ் இருக்கு. அதைத்தானே படிச்சோம். ப்ராக்டீஸ் பண்ணிணோம். அப்புறம் எதுக்கு அதோடேயே கிடந்து மல்லுக்கட்டணும்னு ஒரு நாள் யோசிச்சேன். அதுவொரு தூக்கம் கெட்ட இரவு. மனசுக்குள்ள எந்த முனைக்கு ஓடிப் போய் நின்னாலும் அங்க ஒரு முட்டு சந்து இருந்தது. கிளிஷேவான பொம்மை வாழ்க்கைய வாழ மனசு கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்லை. ஆனா மாலினிக்கு அதான் வேணும்.. அந்த எண்ணத்தை விட்டு அவளை வெளியே கொண்டு வர என்னால முடியல. அவளாலயும் தானா வெளியே வர முடியல. அட்லாஸ்ட் தற்கொலை பண்ணிக்கிட்டா.. ஹூப்ப்ப்..! குளியல் தொட்டிக்குள்ள மணிக்கட்டு நரம்புகளை ரெண்டு கையிலயும் வெட்டிக்கிட்டு சொட்டு சொட்டா தீர்ந்து போயிருந்தா.. இதெல்லாம் அதுலத்தான் போய் முடியும்னு தெளிவா தெரிஞ்சும் என்னால ஒன்னுமே பண்ண முடியல. அது ஒரு கொடூரமான நைட்மேர்.. பிரியத்துக்கு உரியவங்க அம்போன்னு சாவறத தடுக்க முடியாத கையாலாகத்தனம். அது தர்ற வலி. அது கிளர்த்துற வடு இருக்கே.. ப்பா.. தாங்கி மாளலை..”

அவருக்குள் கேவல் ஒன்று வெடித்து நினைவுகளோடு உள்ளுக்குள்ளே கசிந்தது. மனத்தின் புழுக்கம் ஆவேசமாக முடியாமல் பொங்கி அமுங்கியது. குமுற முடியாமல் தவித்துத் தளும்பியது.

“தப்புத்தானே ஜோஸஃபின்..? நீ சொல்லும்மா தப்புத்தானே?”

“தப்புத்தான்..”

“அவ என்னோட வந்திருக்கணும் தானே? மஹாராணி மாதிரி வச்சி பார்த்திருப்பேனே.. அந்த மாலினி.. என்னோட பாதி, என்னோட கதகதப்பு, என்னோட தாய், என்னோட குழந்தை, என்னோட உடம்பு, என்னோட மூப்பு.. அவ.. அவ.. அந்த நாயி.. அவ என்னோடவே வந்திருக்கணும் தானே டிஜோ..?”

டிஜோ மெல்ல தன் இருக்கையை விட்டு எழுந்து புவன மீனாளை நெருங்கி நின்றாள். அவளிடமும் லேசான ஓர் உதறல் இருந்தது. மெதுவாக அவருடைய வலது கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் பொத்திக் கொண்டு அந்த இணைக் கைகளை தன் மார்பின் மீது கிடத்திக் கொண்டாள்.

“வந்திருக்கணும் தான் மீனாள். வந்திருந்திருக்கணும். இன்னும் கூட கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருந்திருக்கணும்”

அதிர்வே இல்லாமல் அவருடைய கண்களைப் பார்த்து மிக மென்மையாக அதைச் சொன்னாள்.

பெண்டுலம் ஒன்று முன்னும் பின்னுமாக சமநிலையைக் குலைத்துவிட்ட துடிப்பின் மோனத்தோடு அந்தச் சூழ்நிலையின்மீது எதிரொலித்தபடி இப்பிரபஞ்சத்தை கோலி குண்டாக்கி அடர்ந்த இருளுக்குள் அதைச் சுண்டிவிட்டது.

லப் – டப்…   லப் – டப்…  லப்  – டப்…  லப்  – டப்…

*****

விதைக்காரன் இளங்கோ – கணையாழியின் துணையாசிரியராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புகள்: பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: elangomib@gmail.com

நான் சட்டங்களைக் களைந்து…

0

***

அழகான பெண்ணே…

நான் திணை இல்லாதவள்..

உன்னிடம் பேசிய பிறகு மனது மிகவும் கனக்கிறது…

நீ படித்ததும் நான் கண்டதும் ஒன்றேதான். ஆனால்…

நான் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறேன்… தெரிந்துகொள் …

மீன்களுடன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த எனக்கு மறுக்கப்படும் நதிகள்…

குறிஞ்சிக் குன்றுகளுக்காக அலையும் என் தேனீக்கள் தற்கொலைச் செய்கின்றன.

மலைகளைத் தேடும் கடமான்கள் கொம்புகளைக் களைந்து தலைமுறைகளை மறுக்கின்றன.

பாறைச் சிகரங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்ட வரையாடுகள்
இதோ என்னுடன் எங்குச் செல்வதென்று அறியாமல்..?

வரப்புகளில் வீடுவைக்க மண்ணின்றிக் கதறும் வயல் நண்டுகள்…

நான் பஞ்சாக்னி நடுவில் தவமிருக்கிறேன்
எனக்கு ஐம்பூதங்கள் கனவுகளாக..
.
கதிரவனே.. தவத்திற்கு நீ ஐந்தாம் அக்னி.

இமை அசையாமல் உன்னைப் பார்க்கிறேன்.

இவர்களின் நிலங்களில் பெய்யாதே
உன் தங்க நிற உயிரூற்று நின்று விடட்டும்..

நோவாவின் பெட்டகத்தைத் திரும்பத் தந்துவிடு
நானும் அனைத்து உயிர்களும் வற்றாத பிரளயத்தில்…
ஓயாத மழையில்…

பெண்ணே நீ படித்த கோட்பாடுகளில் அடிமைத்தனத்தின் நாற்றம்…

கண்களை மூடியவனின் தெருக்களும் நகரங்களும் வளர்ந்து கொண்டே…

அங்கெல்லாம் வெளிரிய முகங்களை அலங்கரித்தவர்கள்…

அவர்களின் பெண்களின் முலைகள் விந்துகளை வெளியேற்றுகின்றன.
அவை அவர்களின் கர்ப்பத்திலேயே வீழ்ந்து வளர்ந்து
கோரமான உருவம் கொண்ட மனிதர்களைப் போன்ற
விலங்குகளை பெற்றெடுக்கின்றனர்…

கதிரவனே… அந்தக் கோர விலங்குகள் பெண்களைத் தின்று வளர்கின்றன..

பெண்ணே.. அவனிடம் சொல்.. நகரங்களின் மீது கருப்பைகளின் சாபம் வீழ்ந்து விட்டதென்று…

நான் உன் கோட்பாடுகளையும் சட்டங்களையும் களைந்து.


***

மீரா மீனாட்சி – மும்பை

ம்யூட் செய்யப்பட்ட கலைப் பேச்சு – (யாளி பேசுகிறது)

0

ஜீவ கரிகாலன்

டை அடைத்தவுடன். விமானத்திலிருந்து கீழே குதித்த மகர யாளியின் குண்டலமொன்று தரையில் பட்டுத் தெறிக்க, நானும் யாளியும் அது எங்கே உருண்டோடியது எனத் தேடிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்…

அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற விஜய் பிச்சுமணியின் ஓவியக் காட்சிக்கு சென்று வந்தவுடன் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கையில் நிறையவே மனத்தடைகள் இருந்தன. ஒரு படைப்பைப் பற்றி நாம் என்ன புரிந்துகொண்டோம் என்கிற புரிதல் எப்படிக் கட்டுரை ஆகும். அது ஒரு போதாமையெனத் தெரிந்தது. அப்படியே ஒரு திரைப்படம், இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றிலும் அயற்சி. அரசியல், கோட்பாடு, மரபு என்று படைப்புகளை ஆய்வதற்குத் தேவைப்படும் எல்லா ஆடிகளையும் விட நிஜக் கண்கள் என்று எது எனத் தேடிப்பார்க்க முயன்றேன். கண்களில் வைத்திருக்கும் காண்டெக்ட் லென்ஸ் வரை நீக்கப்பட வேண்டும்.

காண்டெக்ட் லென்ஸ் என்று சொல்லப்படும் கண்ணுக்குள் பொருத்தப்படும் ஆடியாக ரசனையைச் சொல்லலாம்.

எனக்காக எழுதிச்சென்ற என் பாட்டனின் குகை ஓவியம் முதலில் என்னவாக இருக்கும் என்பது மட்டும் தான் அசலானதாக இருக்க முடியும்.

செய்தி?

தொடர்பு?

எச்சரிக்கை?

வியாக்யானம்?

வழிகாட்டுதல்?

ஏன் எல்லாமும் தான்..

இந்த விசாரனை கூட நாளை அபத்தமாகப் போகக் கூடும்.

விஜய் பிச்சுமணியைத் தேடிச் செல்ல காரணமாய் இருந்தது, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் காட்சிப்படுத்தியிருந்த பத்து அடி நீளமுள்ள வுட்கட் யானை. யானை எப்படியான பிரம்மாண்டமான உயிரியோ அதேபோன்ற ஒரு பிரம்மாண்ட பதிப்போவியத்தை உருவாக்கியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களில் ஒரு மழைச்சொட்டும், பூவிதழும் யானையைப் போலாகின்றன. அவர் உள்ளே செல்லச் செல்ல விரிகிற பிரம்மாண்டம், யானை காலில் மிதிப்பட்டுக் கிடக்கிற பிரம்மாண்டம் பூக்களின் உள்ளேயும் இருக்கிறது என்றால்…. ?

ஸாந்தல் ஜுமெலெ என்கிற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். அவர் ஒரு ஓவியரும், ஆய்வாளரும், பயணியும் கூட.. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியப் பயணத்தில் வாசல்களில் போடப்படும் புள்ளிக் கோலங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு தன் ஆய்வுகளையும் படைப்புகளை அதைச் சுற்றியே வைத்துக் கொண்டார். அவர் புள்ளிக் கோலங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார், அது எவ்வாறான பரிமாணங்களையெல்லாம் தட்டையாக்கி காட்டுகின்றன என்று புரிந்து கொள்ள முயன்றார்.

பாதங்களை வரையும் கோலங்களின் பரிணாமம் குறித்துப் பேசுகிறார். அந்த கோடுகளைக் கொண்டே சங்க இலக்கிய, வேத கால சித்திரங்களை புதுவிதமான நவீன மொழியில் தொன்மங்களை வரைந்து பார்க்கிறார். இதுவும் உள்ளே பயணிப்பதும், வெளியே நின்று பார்ப்பதுமாக இருவேறு அனுபவங்களைத் தருகின்றன.

 “பூஜை செய்யும் அறையில் திங்கள், செவ்வாய், புதன் என ஒவ்வொரு கிழமைக்கும் (அல்லது கிரஹத்திற்கும்) ஒரு கோலம் என்று போடுவார்கள், அது எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று நினைவை மீட்டிச் சொல்லும் அம்மா காகிதத்தில் வரைந்து காண்பிக்கையில் ஒன்றிரண்டு கோலங்கள் தவறாக இருக்கலாம், இதனால் கிழமையோ கிரகங்களோ மாறியிருக்கலாம் என்று ஒரு எமோட்டிக்கான் கோலத்தை வரைந்துக் காட்டியுள்ளேன்.

அப்போ இது என்னவென்று உணர்ந்து கோலம் போட்ட மூதாதையோ, சூனியக்காரியோ, கலைஞரோ அவர் போட்ட கோடுகள் உள்ளிருந்த ஒன்றின் அல்லது தன்னைச் சுற்றிலுமிருந்த ஒன்றின் காண முடிந்த தட்டை வடிவம் என்று சொல்லலாமா? புரிதல் என்பது இத்தனை லேசானதா?

அப்படியானால்

கலை என்பது ஆடையா? அப்போ அதன் நிர்வாணம் என்ன?

ஒரு கிராமத்தையே நிர்மூலம் ஆக்கிய ஓஹி புயலின் மழைச் சொட்டை மூன்றடிக்கும் நான்கடிக்குமாய் மரத்தில் செதுக்கி விஜய் பிச்சுமணி பிரம்மாண்டப்படுத்தியது தான் மிக இயல்பான ஒன்றா? அல்லது இருபது அடி இருக்கும் சுவர் தான் இவன் யானையை லில்லிப்புட் ஆக்காமல் பார்த்துக்கொண்ட பரிணாமமா?

என்ன புலம்பல் இது?

ஒரு கையடக்க மினியேச்சர் ஓவியத்தில் மஹாபாரதத்தின் அர்ஜுனரின் அஸ்வமேத யாகம் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததை ஒப்பிட்டால் மேலே சொன்னது தவிடுபொடி ஆகாதா?. கங்கை (ஏதோ ஒரு நதி) நதிக்கரையில் நிற்கும் அர்ஜூனனின் பின்னே பலவிதமான சேனைகள் அணிவகுத்து நிற்கும் பிரம்மாண்டம் இதைவிடப் பெரியது தானே.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் சுவர்களோ, பகட்டான கேலரிகளின், மால்களின் சுவரோ, காகிதமோ, சிமெண்ட் தரையோ, இடிந்த வீட்டுச் சுவரோ ஒரு அசலான படைப்பு அதில் வெளிப்படுவதும் அதைத் தாண்டியும், நம்மைத் தொடர்பில் வைத்துமே உருவாகிறது. சிலருக்கு தொடர்பு மட்டும் புரியும், சிலருக்கு வடிவம் மட்டுமே தெரியும், சிலருக்கு ஆனந்தம் மட்டுமே கிடைக்கும், சிலருக்கு பிரதியெடுத்துப் பார்க்கத் தோன்றும், சிலருக்கு கொள்ளையடிக்கத் தோன்றும், சிலருக்கு விற்கத்தெரியும், சிலருக்கு அதனைச் சொல்லி தன்னை விற்கத் தெரியும்.

பஞ்சம் பிழைக்கவோ அல்லது பிழைக்க யாருமேயில்லாத ஒரு வீட்டின் கதவைப் பெயர்த்து வார்னிஷ் செய்து மீட்டிருவாக்கம் செய்து மற்றொரு வீட்டிற்கும் விற்கலாம் அதுவும் ஒரு கலை தான். தன் வாழ்நாளில் உழைக்காத நாட்களை நினைவில் கொள்ளாத எண்ணற்ற கிராமத்து மாந்தர்களுக்கு மத்தியில் பிறந்த ஒரு கலைஞனுக்கு அந்த கதவுக்குள் தெரியும் பிரம்மாண்ட பாதங்களில் அந்த ஊரின் ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கொடுத்த வெடிப்புகளின் texture-ஐ வெளிப்படுத்தத் தெரிந்திருக்கிறது. அவர் அந்த ரப்பர் தோட்டத்து உழைப்பாளிகளின் வெடிப்புகள் என்று சொல்லாவிட்டால் அது மார்க்ஸியத்தின் குரலோடு இருக்கும், அது அப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியில் சில லட்சங்கள் கொடுத்து வாங்கப்பட்ட பெருமையோடு இருக்கும்.

சரி விஜய் பிச்சுமணியை விடு. வேறு ஒன்றைப் பேசுவோம். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் கலையை, இதுவென மட்டும் நிறுவிக் காண்பிப்பது எத்தனைப் பெரிய துரோகம். அதையும் சிலர் துணிந்து செய்கிறார்கள். ஒரு உலகத்திற்கான கலை ஒன்றை செய்ய விரும்பும் கலைஞன், அதற்கு சம்பந்தமேயில்லாத ஒரு குறியீட்டை உருவாக்கி நிறுவி, தான் செய்ய வேண்டிய ஒன்றிற்கு எதிராகவே காட்சிப்படுத்துகிறான் என்பதை நினைக்கையில், கலைப் பார்வை எனும் புலனற்று வாழ்வது மேலானதோ எனத் தோன்றுகிறது.

எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. அதான் அண்ணாத்தே படத்தை இருமுறைப் பார்த்தேன்..

பரவாயில்லை உத்தமம்

மேலும் அது ஸாண்ட் ப்ளாஸ்ட் செய்யப்பட்டு, எந்த டெண்டிஸ்ட்களாலும் காப்பாற்ற அல்லது மீட்டுருவாக்கம் செய்ய முடியாத மொக்கையானப் பற்களைக் கொண்ட யாளிகளைப் போல, சார்புகளால் கூரற்றுப் போன கலையுலகம் மீட்கப்படாத டெரகோட்டாவாகப் புதைந்து கிடக்கிறது.

கி.பி என்று சொல்லதே.. கி.மு என்று சொல்என்கிற அகழ்வாய்வுப் பேச்சிற்கு தொடர்பேயற்ற குண்டும் குழியுமான மெட்ரோ நகரத் தார்ச்சாலை நாகரிகத்தில் கலை இப்படித் தான் போஷிக்கப்படும் என்கிற எரிச்சலோடு விடைபெற்ற யாளி, அபான வாயு முத்திரைக் காட்டிவிட்டு அர்த்த மண்டபத்தினுள் நுழைந்தது.

கீழே தட்டுப்பட்ட மகர குண்டலத்தை அணிச்சையாய் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு என் தலையிலேயே தட்டிக்கொண்டேன்.

(தொடரும்…)